laddu kondaattam

லட்டு கொண்டாட்டம்

மிஹிரும் மீராவும் ஒரு பெட்டி நிறைய லட்டுகளை வைத்திருந்தனர். அவர்களிடம் பன்னிரண்டு லட்டுகள் இருந்தன. லட்டைச் சாப்பிடத் தயாராகும் போதெல்லாம், ‘‘டிங்-டாங்!’’ என்று வீட்டின் அழைப்பு மணி அடிக்கும். ஒரு விருந்தாளி வந்திருப்பார். மொத்தம் எத்தனை பேர் சேர்ந்தனர்? ஒவ்வொருவருக்கும் எத்தனை லட்டுகள் கிடைத்தன?

- Anitha Ramkumar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

டிங்-டாங்!

“பீட்டர் மாமா நமக்கு லட்டுகள் அனுப்பிருக்கிறார்!” என்றாள் மீரா.

அவள் சகோதரன் மிஹிர், “எண்ணலாம் வா – 1, 2, 3... 12!” என்று எண்ணி முடித்தான்.

“இந்தப் பன்னிரண்டு லட்டுகளை நாம் இரண்டு பேரும் பிரித்துக்கொண்டால், தலா ஆறு லட்டுகள் கிடைக்கும்!” என்றாள் மீரா.

“சரி, சாப்பிடலாம் வா” என்றான் மிஹிர்.

லட்டு சாப்பிடக் காத்திருக்க மீ்ராவுக்குப் பொறுமையில்லை.

டிங்-டாங்!

ஒ-ஓ! யாரது வந்திருப்பது?

மிஹிரின் தோழி ரியா!

“ஆஹா! எத்தனை லட்டுகள்!” என்றாள் ரியா.

“பன்னிரண்டு லட்டுகளை நாம் மூன்று பேரும் பிரித்துக்கொண்டால், தலா நான்கு லட்டுகள் கிடைக்கும்!” என்றாள் மீரா.

“சரி, சாப்பிடலாம் வா” என்றான் மிஹிர்.

லட்டு சாப்பிடக் காத்திருக்க ரியாவுக்கும் மீராவுக்கும் பொறுமையில்லை.

டிங்-டாங்!

ஒ-ஓ! யாரது வந்திருப்பது?

மீராவின் தோழி ப்ரிஷா!

“ஹைய்யா, லட்டு!” என்றாள் ப்ரிஷா.

“பன்னிரண்டு லட்டுகளை நாம் நான்கு பேரும் பிரித்துக்கொண்டால், தலா மூன்று லட்டுகள் கிடைக்கும்!” என்றாள் மீரா.

“சரி, சாப்பிடலாம் வா” என்றான் மிஹிர். லட்டு சாப்பிடக் காத்திருக்க ப்ரிஷா, ரியா மற்றும் மீராவுக்குப் பொறுமையில்லை.

டிங்-டாங்!

ஒ-ஓ! யாரது வந்திருப்பது?

அனன்யா மற்றும் துருவ்! இருவரும் மீரா மற்றும் மிஹிர் இவர்களின் சித்தப்பாவின் குழந்தைகள்.

“லட்டுகளைப் பார்த்தாலே வாயில் எச்சில் ஊறுகிறதே!” என்றார்கள் அனன்யாவும் துருவும். “பன்னிரண்டு லட்டுகளை நாம் ஆறு பேரும் பிரித்துக்கொண்டால், தலா இரண்டு லட்டுகள் கிடைக்கும்!” என்றாள் மீரா.

“சரி, சாப்பிடலாம் வா” என்றான் மிஹிர். லட்டு சாப்பிடக் காத்திருக்க அனன்யா, துருவ், ப்ரிஷா, ரியா மற்றும் மீராவுக்குப் பொறுமையில்லை.

டிங்-டாங்!

ஒ-ஓ! யாரது வந்திருப்பது?

ரவி மாமா மற்றும் ரீட்டா மாமி!

“எத்தனை லட்டுகள்! எத்தனை குழந்தைகள்!” என்றார் ரவி மாமா.

“பன்னிரண்டு லட்டுகளை நாம் எட்டு பேரும் பிரித்துக்கொண்டால், தலா ஒரு லட்டு போக நான்கு லட்டுகள் மீதி இருக்கும்!” என்றாள் மீரா.

“சரி, சாப்பிடலாம் வா” என்றான் மிஹிர்.

லட்டு சாப்பிடக் காத்திருக்க ரவி மாமா, ரீட்டா மாமி, அனன்யா, துருவ், ப்ரிஷா, ரியா மற்றும் மீ்ராவுக்குப் பொறுமையில்லை.

டிங்-டாங்!

ஒ-ஓ! யாரது வந்திருப்பது?

அப்பா! “நானும் உங்களோடு சேர்ந்துகொள்ளலாமா?” என்றார் அப்பா.

“என்னை மறந்து விடாதீர்கள்!” என்று தோட்டத்திலிருந்து குரல் கொடுத்தார் அம்மா.

“பன்னிரண்டு லட்டுகளை நாம் பத்துப் பேரும் பிரித்துக் கொண்டால், தலா ஒரு லட்டு போக இரண்டு லட்டுகள் மீதி இருக்கும்!”என்றாள் மீரா.

‘‘சரி, சாப்பிடலாம் வா” என்றான் மிஹிர்.

லட்டு சாப்பிடக் காத்திருக்க அப்பா, அம்மாவுக்கும், ரவி மாமா, ரீட்டா மாமிக்கும், அனன்யா, துருவுக்கும், ப்ரிஷா, ரியாவுக்கும் மற்றும் மீராவுக்கும் பொறுமையில்லை.

டிங்-டாங்!

ஒ-ஓ! யாரது வந்திருப்பது?

தாத்தாவும் பாட்டியும்!

“அட! என்ன கொண்டாட்டம் இங்கே!” என்றார் தாத்தா.

“ஆஹா! இது லட்டு கொண்டாட்டம்!” என்றார் பாட்டி.

“பன்னிரண்டு லட்டுகளை நாம் பன்னிரண்டு பேரும் பிரித்துக்கொண்டால், தலா ஒரு லட்டு கிடைக்கும்!” என்றாள் மீரா.

‘‘சரி, சாப்பிடலாம் வா!” என்றான் மிஹிர்.

லட்டு சாப்பிடக் காத்திருக்க தாத்தா, பாட்டிக்கும், அப்பா, அம்மாவுக்கும், ரவி மாமா, ரீட்டா மாமிக்கும், அனன்யா, துருவுக்கும், ப்ரிஷா, ரியாவுக்கும் மற்றும் மீராவுக்கும் பொறுமையில்லை.

“ஓ! சாப்பிடலாமே!” என்றாள் மீரா.

“அப்பாடி! ஒருவழியாக...’’ என்றாள் ரியா.

“யம்மம்... ம்ம்ம்...” என்று ரசித்துச் சாப்பிட்டான் மிஹிர்.

யம்! யம்ம்! மம்! மம்ம்!

"எனக்கு இன்னொரு லட்டு கிடைக்குமா?’’ என்றாள் ப்ரிஷா.

‘‘எல்லாம் தீர்ந்து போய்விட்டதே!” என்றாள் அனன்யா.

டிங்-டாங்!

ஒ-ஓ! யாரது வந்திருப்பது?

நீட்டா அத்தை, பீட்டர் மாமா மற்றும் அவர்கள் மகள் ஆலிஸ் குட்டி!

“ஆச்சரியம்! இங்கே பாருங்கள்!” என்றாள் ஆலிஸ்.

“ஹைய்யா! நாம் பகிர்ந்து உண்ண இன்னும் அதிகமான லட்டுகள்! எல்லோருக்கும் சந்தோஷமான லட்டு தின்னும் கொண்டாட்டம்!” என்றான் மிஹிர்.

இந்த டப்பாவில் முப்பது லட்டுகள் உள்ளன. இதை பதினைந்து நபர்கள் பகிர்ந்துகொண்டால், தலா எத்தனை லட்டுகள் கிடைக்கும்?

எட்டு பெரிய லட்டுக்களும், நான்கு நபர்களும் இருந்தால், நீ எப்படி அவற்றை சரிசமமாகப் பகிர்ந்து கொடுப்பாய்?