இரண்டாம் வகுப்பு ஆ பிரிவில் ஒருநாள் காலை...
“ஏய், ஸ்ஸ்ஸ்... அஞ்சலி! இந்தக் குறிப்பை ரித்விக்கிடம் கொடு” என ராகுல் மெல்லிய குரலில் சொல்கிறான்.
அஞ்சலி குறிப்பை மதுவிடம் கொடுக்கிறாள்.
மது அன்வரிடம் கொடுக்கிறாள்.
அன்வர் சான்யாவிடம் கொடுக்கிறான்.
சான்யா ரித்விக்கிடம் கொடுக்கிறாள்.
ரித்விக் குறிப்பைப் படித்தான்— பாட்டி லட்டு செய்திருக்கிறாள்! சாப்பிடும் இடத்துக்குப் பின்னால் சந்திக்கலாம்.
ஆனால் அஞ்சலி, மது, அன்வர் மற்றும் சான்யாவும் அதைப் படித்துவிட்டனர்!
“ஹை! பாட்டி செய்த லட்டு!”
“ஐயோ, எனக்கென்னவோ நமக்கு இன்று எதுவும் கிடைக்காது...”
எல்லோரும் லட்டுகளின் மீது பாய்ந்தனர்.
விரைவில், ஒரு லட்டு கூட மீதமிருக்கவில்லை.
அடுத்த நாள்...
“அஞ்சலி, இதை ரித்விக்கிடம் கொடுக்கிறாயா?”
அஞ்சலி இந்த முறையும் குறிப்பைப் படிக்க முயற்சி செய்தாள். ஆனால், அவளுக்குப் புரியவில்லை.
மதுவாலும் அதைப் படிக்க முடியவில்லை. அன்வராலும் சான்யாவாலும் முடியவில்லை.
ஆனால் அதை எப்படிப் படிக்கவேண்டும் என ரித்விக்குக்கு நன்றாகத் தெரியும்.
எழுதும்போது ராகுல் செய்ததைப் போலவே, ரித்விக் தனது பென்சிலைச் சுற்றி அந்தச் சின்ன காகிதத்தைச் சுற்றுகிறான். இரகசியம் வெளியாகிவிட்டது!
குறியீட்டை உருவாக்குவதும் உடைப்பதும்
மற்ற யாரும் படிக்க முடியாதபடி, ராகுல் தன் செய்தியை இரகசியக் குறியீடாக மாற்றினான். தகவலை மறைக்கும் இந்த முறையைத்தான் மறையாக்கம்(Encryption) என்று சொல்வார்கள்.
செய்தியை வெளிப்படுத்துவதற்கு, ராகுலின் குறிப்பை பென்சிலின் மீது சுற்றினான் ரித்விக். மறைக்கப்பட்ட தகவலை, படிக்கக்கூடிய எழுத்துகளாக மாற்றும் முறை மறைவிலக்கம்(Decryption) எனப்படுகிறது.
தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக கணினிகளும் மறையாக்கத்தையும் மறைவிலக்கத்தையும் பயன்படுத்துகின்றன.
ராகுல், ரித்விக்கைப் போல இரகசியச் செய்திகளை அனுப்ப வேண்டுமா?
உங்கள் பென்சிலைச் சுற்றி ஒரு துண்டுக் காகிதத்தைச் சுற்றிவிட்டு, உங்கள் செய்தியை அதில் எழுதவும். காகிதத்தை பென்சிலில் இருந்து பிரித்தெடுத்து உங்கள் நண்பரிடம் கொடுக்கவும். அவர், மீண்டும் இன்னொரு பென்சிலின் மீது அந்த காகிதத்தைச் சுற்றி அந்த செய்தியைப் படிக்கமுடியும்.