'லட்டு' லோகு மாமாவிற்கு பலகாரங்கள் என்றால் கொள்ளை பிரியம். அவர் பார்ப்பதற்கு கொழுகொழுவென உருண்டையாக லட்டை போலவே இருப்பார்.அவர் தினந்தோறும் தன் வீட்டிற்கு அருகே உள்ள பலகாரக் கடைக்குச் சென்று லட்டு, ஜிலேபி, ஆத்திரசம் போன்ற இனிப்புப் பதார்த்தங்களை சுவைத்துப் பார்ப்பார்.
ஒரு நாள் இரவு உண்டபின் இளைப்பாரிக் கொண்டிருந்த 'லட்டு' லோகு மாமாவிற்கு லட்டு தின்ன ஆசையாய் இருந்தது.உடனே எழுந்து அருகில் இருக்கும் பலகாரக் கடைக்கு ஓடிச் சென்றார்.
ஆனால் இரவு நேரமாகி விட்டதால் அந்த கடை மூடியிருந்தது.அதை கண்ட 'லட்டு' லோகு மாமா மிகவும் வருத்தப்பட்டு வீடு திரும்பினார். சோகத்தில் அவரது வயிறும் உறுமிக் கொண்டிருந்தது.
பின்னர் அவர் தூங்கச் சென்றுவிட்டார்.உறங்கிக்கொண்டிருக்கும் போதும் கூட அவரது கனவில் பலகாரங்கள் தோன்றின.
கனவில் அவர் ஒரு லட்டு மலை மீது நின்றுக் கொண்டிருப்பது போலவும், மலையைச் சுற்றி ஜிலேபிகள் கொட்டிக் கிடப்பது போலவும், கொஞ்சம் தொலைவில் ஆத்திரசங்கள் சிதறிக் கிடப்பதுப் போலவும் தோன்றியது அவருக்கு.
ஆத்திரசங்களைக் கண்டதும் அவரது நாக்கில் எச்சில் ஊறியது.உடனே தான் நின்றுக் கொண்டிருந்த லட்டு மலையில் இருந்து ஆத்திரசங்கள் இருக்கும் இடத்திற்கு ஒரே பாய்ச்சலில் தாவிச் செல்ல முயன்றார்.
பிறகு என்ன ஆயிற்று?தடார்ர்ர்ர்!!! என அவர் தனது படுக்கையில் இருந்து கீழே விழுந்தார்."அய்யோ!!" என்று வலியில் உரக்கக் கத்தினார்.'லட்டு' லோகு மாமாவின் 'இனிப்பான' கனவு உடைந்து போனது. அதே போல அவரது வலது கையும் உடைந்து போனது.