lajjovin puthaiyal vettai

லஜ்ஜோவின் புதையல் வேட்டை!

பட்டியலிலுள்ள அனைத்துப் பொருட்களையும் கண்டுபிடித்தால்தான் தாத்தாவுடனான இந்த விளையாட்டில் லஜ்ஜோ வெற்றிபெற முடியும். ஆனால் ஏன் இப்படியொரு விளையாட்டு என்று எல்லோருக்கும் குழப்பம். ஊரே பிரச்சினையில் உள்ளபோது எதற்காக இப்படியொரு விளையாட்டு?

- Nivedha

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

லஜ்ஜோ, கோசி ஆற்றங்கரையிலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கிறாள். அவளுக்கு மழை பிடிக்கும்.

ஆனால், இவ்வருடம் வழக்கத்துக்கு மாறாக கனமழையாகப் பெய்துவிட்டது.

ஒரு வழியாக மழை ஓய்ந்ததும் லஜ்ஜோ நிம்மதியடைந்தாள். ஆனால் திடீரென ஆற்றின் கரைகள் உடைந்துவிட்டன. சட்டென ஆற்றின் சேற்று நீர் கிராமத்தைச் சூழ்ந்துவிட்டது. லஜ்ஜோ பயந்து போனாள்.

“நாம் உடனே இவ்விடத்தை விட்டுச் சென்றாக வேண்டும்! கிளம்பு, லஜ்ஜோ! சீக்கிரம் மேடான பகுதிக்கு போய்விடுவதுதான் நல்லது” என்றார் அப்பா.

லஜ்ஜோவும் அவளது குடும்பத்தினரும் நீரில் தத்தளித்தபடி சென்றார்கள். சில இராணுவ வீரர்களின் உதவியுடன் தங்கள் ஊர்க்காரர்கள் சென்றிருந்த ஒரு மலைக்கு அவர்களும் சென்றனர்.

“அய்யோ! நான் குடியாவை வீட்டிலேயே விட்டுட்டேன்” என்று அழ ஆரம்பித்தாள் லஜ்ஜோ.

தன் பொம்மை இல்லாமல் அவளால் இருக்க முடியாது. ஆனால் நிலைமை ஓரளவு சீரடையும் வரை வீட்டுக்குத் திரும்பப் போகக்கூடாது என்று சொல்லிவிட்டார் அப்பா.

அடுத்த நாள் காலை, குடியாவை போய்ப் பார்க்கலாமா என்று கேட்டாள் லஜ்ஜோ.

“நம்முடைய வீடு ஐந்தடி தண்ணீரில் மூழ்கியுள்ளது, லஜ்ஜோ. இப்போது நம்மிடம் குடிக்கக்கூட தண்ணீர் இல்லை. நீயோ உன்னுடைய பொம்மையைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாயே!” என்று திட்டினார் அம்மா. “கவலைப்படாதே லஜ்ஜோ, குடியாவுக்கு ஒன்றும் ஆகாது” என்று ஆறுதல் சொன்ன அவளது தாத்தா, “நாம் ஒரு விளையாட்டு விளையாடுவோமா?” என்று கேட்டார்.

“ஹைய்யா, விளையாடலாம் டாடூ” என்று ஆர்வமானாள் லஜ்ஜோ.

“நல்லது! வா, புதையல் வேட்டை விளையாடலாம். இந்தப் பட்டியலில் உள்ள எல்லாப் பொருட்களையும் நீ கண்டுபிடிக்க வேண்டும். அதைச் செய்துவிட்டால் உனக்கொன்று காண்பிப்பேன்.”

லஜ்ஜோ தன் டாடூ கொடுத்த பட்டியலைப் பார்த்தாள். “நான் இப்பொழுதே தேட ஆரம்பித்துவிடுகிறேன்” என்று உற்சாகத்தோடு குதித்துக் கிளம்பினாள்.

1. ஒரு வாளி

2. ஒரு பருத்தித் துணி

3. ஜல்லிக்கற்கள்

4. மணல்

5. ஒரு சுத்தியல்

6. ஒரு துளையூசி

லஜ்ஜோ முதலில் அம்மாவிடம் சென்றாள். “என்ன வேண்டும், லஜ்ஜோ? உனக்குத் தாகமாக இருந்தாலும் இங்கு தண்ணீர் இல்லை” என்றார் அம்மா, சற்று வருத்தத்துடன்.

“இல்லை, மாய். பாபு எனக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்துவிட்டார். எனக்கு பருத்தித் துணி வேண்டும். உங்களிடம் இருக்கிறதா?” அம்மாவிடம் மாற்றுத் துணியேதும் இருக்கவில்லை.

தன்னுடைய புடவையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து லஜ்ஜோவிடம் கொடுத்து, “இதோ! இதை வைத்துக்கொள்” என்றார். லஜ்ஜோ அம்மாவைக் கட்டியணைத்தாள்.

லஜ்ஜோவுக்கு அவளுடைய அப்பா ஒரு வாளியைத் தேடி எடுக்க உதவினார். லஜ்ஜோ அதில் மணலை நிரப்பினாள். “ஹைய்யா! மூன்று பொருட்களைக் கண்டுபிடித்தாயிற்று!”

“லஜ்ஜோ, எனக்குத் தாகமாக இருக்கிறது. குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?” எனக் கேட்டான் அவளது நண்பன் பிரதீக். “மன்னித்துவிடு, பிரதீக். எங்களிடமிருந்த குடி தண்ணீர் தீர்ந்துவிட்டது.” “சரி, பரவாயில்லை. நீ எதையாவது தேடிக்கொண்டு இருக்கிறாயா, என்ன?” எனக் கேட்டான்.

“எனக்கு கொஞ்சம் ஜல்லிக்கற்கள் வேண்டும்” என்றாள் லஜ்ஜோ. “அதோ பார், அங்கே! எடுத்துக்கொள்.” இன்னும் இரண்டு பொருட்களை மட்டுமே லஜ்ஜோ கண்டுபிடித்தாக வேண்டும்.

லஜ்ஜோ, தன்னுடைய கிராமத்து தச்சரைத் தேடிச் சென்றாள். “கார்பென்ட்டர் பாபா, உங்கள் சுத்தியலையும் துளையூசியையும் கொஞ்ச நேரம் எனக்குத் தருவீர்களா? “எதற்கு லஜ்ஜோ?”

“டாடூவுடன் விளையாடத் தேவைப்படுகிறது” என்றாள் அவள். “விளையாட்டா? ஊரே குடிக்கத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும்போது உங்களுக்கு விளையாட்டு வேறா?” முணுமுணுத்துக் கொண்டே லஜ்ஜோ கேட்டதையெல்லாம் கொடுத்தார் அவர்.

லஜ்ஜோ, தான் சேகரித்ததை எல்லாம் டாடூவின் முன் வைத்துவிட்டு, “முடித்துவிட்டேன்” என்று பெருமிதத்துடன் கூறினாள். டாடூ சிரித்துக்கொண்டே வாளியை எடுத்துக் கவிழ்த்து வைத்தார். துளையூசியையும் சுத்தியலையும் வைத்து அதில் ஒரு துளையிட்டார்.

லஜ்ஜோ அதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். டாடூ, பருத்தித் துணியை வாளியின் அடிப்பக்கத்தில் விரித்து வைத்தார்.

பின்னர், அதன் மீது மணலைக் கொட்டினார்.

“லஜ்ஜோ, இந்த வாளியில் ஜல்லிக்கற்களை நிரப்ப உதவுகிறாயா?” என்றார் டாடூ.

லஜ்ஜோ, முதலில் சிறுசிறு கற்களைப் பொறுக்கி டாடூவிடம் தந்தாள். அவர் அவற்றையெல்லாம் வாளியில் நிரப்பினார். பின்னர் பெரிய கற்களை நிரப்பினார்.

ஒரு பாட்டிலில் இருந்த கலங்கலான ஆற்றுநீரை வாளிக்குள் ஊற்றினார், டாடூ. குழப்பமடைந்த லஜ்ஜோ, “டாடூ! இதை ஏன் வாளியில் ஊற்றுகிறீர்கள்?” என்றாள்.

டாடூ பதில் சொல்லாமல் புன்னகைத்தார். சிறிது நேரம் கழித்து தெளிந்த நீர் வாளியின் அடியில் இருந்த சிறு துளையின் வழியாக சொட்டு சொட்டாக விழ ஆரம்பித்தது.

அதனை ஒரு குவளையில் பிடித்தார் டாடூ.

“லஜ்ஜோ, கலங்கலான நீரைத் தெளிந்த நீராக மாற்றும் வடிகட்டியைத்தான் நாம் உருவாக்கியிருக்கிறோம்” என்றார் டாடூ. “இதைக் கொண்டுபோய் மாய், பாபுவிடம் கொடு” என்றார். அம்மாவிற்கும் அப்பாவிற்கும் மிகுந்த மகிழ்ச்சி! அவர்கள் அந்தத் தண்ணீரைக் கொதிக்கவைத்து, ஆறிய பின்னர் குடித்தனர்.

சிறிது நேரத்தில் பிரதீக், கார்பென்ட்டர் பாபா, அம்மா, அப்பா என அனைவரும் அந்த வாளியைச் சூழ்ந்து கொண்டனர். “நல்ல வேலை செய்திருக்கிறீர்கள், லஜ்ஜோ!” எனப் பாராட்டினர்.

அடுத்த நாள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக ராணுவத்தினர் படகுகளில் வந்தார்கள். லஜ்ஜோவின் குடும்பத்தினர் ஆறுதலடைந்தனர்.

அவர்கள் படகில் லஜ்ஜோவிற்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது!

தண்ணீர் வடிகட்டி - செய்து பாருங்கள்

வேண்டிய பொருட்கள்:

- ஒரு பிளாஸ்டிக் பாட்டில்

- ஒரு கத்திரிக்கோல்

- சுத்தமான பருத்தி துணி

- மணல்

- ஜல்லிக்கற்கள் (சிறிதும் பெரிதுமாக)

எப்படிச் செய்வது?

- கத்திரியை வைத்து பாட்டிலின் அடிப்பக்கத்தை வெட்டிவிடவும்.

- பாட்டிலின் மூடியில் கத்திரிக்கோலின் முனையைப் பயன்படுத்தி சிறிய துளையிடவும்.

- இப்போது பருத்தித் துணியை பாட்டிலின் அடிப்பகுதியில் நுழைத்து வைக்கவும்.

- ¼ பகுதி வரை மணலைக் கொட்டி நிரப்பவும்.

- பாட்டிலின் ½ பகுதி வரை சிறிய கற்களையும் ¾ பகுதி வரை பெரிய ஜல்லிக்கற்களையும் நிரப்பவும்.

- மேலிருந்து மெதுவாக நீரை ஊற்றவும். இப்போது, பாட்டிலின் அடியிலிருந்து தெளிந்த நீர் சொட்டுவதைப் பார்க்கலாம்.

குறிப்பு: நீரிலுள்ள கிருமிகளை அழிக்க நீரைக் கொதிக்க வைத்த பின்னரே பருகவும்.