lassiya icecreamma faloodava

லஸ்ஸியா, ஐஸ்க்ரீமா, ஃபலூடாவா?

மாங்காய் பன்னா சுவையானதா? அல்லது லஸ்ஸியா? அல்லது ஃபலூடா இவற்றையெல்லாம் வென்றுவிடுமா? மீனு மூன்றையும் சுவைத்துப் பார்த்துச் சொல்கிறேன் என்கிறாள். கோடையின்போது நீங்கள் வேறு என்னதான் செய்யமுடியும்?

- N. Chokkan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

"மீனு, மனோஜுக்கு ஒரு தம்ளர் தண்ணீர் கொண்டு வா" என்கிறார் அம்மா. மனோஜ் மாமா என்னை ஊட்டிக்கு அழைத்துச் செல்லபோகிறார். "நாம் ரயிலில் செல்வோம் மீனு" என்கிறார் அவர். ஊட்டியில் கோடைக் காலத்திலும் குளிராகதான் இருக்கும். ஏனெனில், அது "மலைமீது உள்ளது!"

வசந்தத்துக்கும் மழைக்காலத்துக்கும் இடையே உள்ள பருவம்தான் கோடை. சமஸ்கிருதத்தில் ‘க்ரீஷ்மா ரிது’. கோடைக் காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.

என் நண்பர்களும் நானும் மகிழ்ச்சியாக வெளியே விளையாடுகிறோம். ஆனால், நாங்கள் சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் விளையாடுவது எங்கள் பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, நாங்கள் மரங்களுக்குக் கீழே அமர்ந்தபடி பழம் சாப்பிடுகிறோம், கதை சொல்கிறோம்.

நேற்று நாங்கள் புது வருடப் பிறப்பைக் கொண்டாடினோம். ஒரே வருடத்தில் இத்தனை புது வருடப் பிறப்புகள் வருவது ஏன்?

பாட்டி எங்களுக்கு ‘மாங்காய் பன்னா’ செய்தார். அது இனிப்பாகவும் புளிப்பாகவும் இருந்தது. ஜஸ்மித்தின் தாய் லஸ்ஸி செய்தார். அது குளிர்ச்சியாகவும் கெட்டியாகவும் இருந்தது.

சென்ற மாதம் ஃபர்ஹனின் அத்தை அவர்களுடைய புது வருடத்துக்கு ஃபலூடா செய்தார். அது பாலின் வாசனையோடும் இனிப்பான மணத்தோடும் இருந்தது!

அப்பா டெல்லிக்குச் சென்றிருக்கிறார். வெய்யில் அதிகம், தூசியும் அதிகம். முன்பெல்லாம் வீட்டைக் குளிர்ச்சிப்படுத்துவதற்காக மக்கள் வெட்டி வேரில் செய்த பாய்களை ஜன்னல்களில் போடுவார்கள். இப்போது, அப்பா குளிர்க் கண்ணாடியைப் பயன்படுத்துகிறார்.

டெல்லி வெய்யிலில் நிறைய வியர்க்கும். ஆகவே, உடலில் இருந்து ஏகப்பட்ட நீர் வெளியாகிவிடும். அதைச் சரி செய்ய அப்பா அடிக்கடி எலுமிச்சைச் சாறு குடிக்கிறாராம். அவர் அங்கிருந்து வரும்போது அருமையான தாசெரி வகை மாம்பழங்களை வாங்கிவருவதாக அப்பா சொல்கிறார். கோடையில் வெய்யிலும் தூசும் வந்தால்கூட, மாம்பழங்களும் வருகிறதே!

வசந்த காலத்தில் நான் நட்ட சிறு செடியை நினைவிருக்கிறதா? அதுதான் என் தோழி. அது இப்போது வளர்ந்துகொண்டிருக்கிறது. அதில் 17 இலைகள் உள்ளன. கோடையின்போது அந்தச் சிறு மரத்துக்கு நான் தினமும் இரண்டு முறை நீர் ஊற்றுகிறேன்.

என் செடி மழைக்காகக் காத்திருக்கிறது என்று நினைக்கிறேன். அடுத்த கோடையில் இந்தச் செடி எனக்கு ஒரு பழம் தருமா?