பிட்டு, அந்த 'பெரிய மரம் பள்ளி'யில் லயா
டீச்சரின் விளையாட்டு வகுப்பின்போது
முழங்காலில் அடிபட்டுக் கொண்டான்.
“வே! என்னால் வீட்டிற்கு நடந்து போக முடியாது. வே!”
என்று கத்திக் கொண்டே அழுதான்.
லயா டீச்சர், உடனே முதலுதவி சிகிச்சைக் குழுவை வரவழைத்து,
பிட்டுவுக்கு கட்டுப் போட்டார். பின்னர், அவனைத் தனது
அற்புத மோட்டார் பைக்கில் உட்கார வைத்தார்.
அவனது கையில் ஒரு பெரிய பெட்டியைக் கொடுத்தார்.
அந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது?
பிட்டுவுக்குத் தெரியாது!
அதைப் பற்றிய ஆச்சரியத்தில்,
அவன் அழுவதற்கு மறந்து விட்டிருந்தான்!
அனில் மூன்று முறை குதித்தான் —
தம், தம், தம்!
சலீம் கைகளை ஆறு முறை தட்டினான் —
பட்-பட், பட்-பட், பட்-பட்!
குருஜித் எண்களை பின்னோக்கி சொல்லத் தொடங்கினான் —
‘‘ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து, நான்கு,
மூன்று, இரண்டு, ஒன்று – கிளம்பு!”
ட்ர்ர்ர்ர்ர்...
அந்த அற்புத மோட்டார் பைக் உறுமி விட்டு ஓடத்துவங்கியது.
அவர்கள் அந்தப் பெட்டியுடன் எங்கே போகிறார்கள்?
அவர்கள் ஒரு கிராமத்தை அடைந்தார்கள். நிறையக் குழந்தைகள் லயா டீச்சரை நோக்கி ஓடி வந்தனர். “ஹைய்யா! லயா டீச்சரும் அவரது அற்புத பைக்கும் அந்தப் பெரிய பெட்டியோடு வந்தாச்சு!” என்று கூவினார்கள்.அந்தப் பெட்டியில் என்னதான் இருக்கிறது?
லயா டீச்சர் பெட்டியைத் திறந்தார். ஆஹா! எல்லாம் புத்தகங்கள்! குழந்தைகள் ஆளுக்கொரு புத்தகத்தை எடுத்துக் கொண்டனர்.
சில குழந்தைகள் சென்ற முறை எடுத்த புத்தகங்களைத் திருப்பிக் கொடுத்தனர்.
பிட்டுவும் ஒரு கதைப் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான்.
தனது முழங்கால் வலியை மறந்தான்!
அட! என்ன ஒரு மாயாஜாலப் பெட்டி அது!
லயா டீச்சரும் அவரது அற்புத மோட்டார் பைக்கும்,
அடுத்ததாக எங்கே செல்வார்கள்?
அடுத்த வாரம் தெரிந்து கொள்ளுங்கள்!