laya teacherin arputha motor bikirkku pazhangalai pidikkavillai

லயா டீச்சரின் அற்புத மோட்டார் பைக்கிற்கு பழங்களைப் பிடிக்கவில்லை!

விளையாட்டு ஆசிரியை லயா டீச்சர், பிறருக்கு உதவி செய்வதை விரும்புபவர். அவரும், அவரது அற்புத மோட்டர் பைக்கும் பழங்களுடன் செய்யும் தீரம் மிக்க பயணத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள்! இப்புத்தகம், ‘லயா டீச்சரும், அவரது அற்புத மோட்டர் பைக்கும்' என்னும் கதைத்தொடரின் நான்காவது புத்தகம் ஆகும்.

- Rajam Anand

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அந்த ‘பெரிய மரம் பள்ளி’யில் விளையாட்டு வகுப்பு முடிந்துவிட்டது.

இந்த வாரம், விளையாட்டு ஆசிரியை லயா டீச்சர், சந்திரா என்பவருக்கு

உதவி செய்ய வேண்டியிருந்தது.

சந்திரா, தனது தோட்டத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களைப் பயிர் செய்கிறார்.

அத்துடன், சாமந்திப்பூ மற்றும் ரோஜாப்பூச் செடிகளையும் வளர்க்கிறார். அவர், இந்த வாரத்தில் பழங்கள், பூக்கள் எல்லாவற்றையும் சந்தைக்குக்

கொண்டு போயாக வேண்டும். ஆனால், அவரது ஸ்கூட்டர் பழுதாகிப் போயிருந்தது.

சந்திரா, திங்கட்கிழமையன்று இரண்டு ரோஜாப்பூ மூட்டைகளை

லயா டீச்சரின் அற்புத மோட்டார் பைக்கில் ஏற்றினார்.

அவரது மகன் அனில் மேலும், கீழும் மூன்று முறை குதித்தான் —

தம், தம், தம்!

அவரது மகள் ரஞ்சு கைகளை ஆறு முறை தட்டினாள் —

பட்-பட், பட்-பட், பட்-பட்!

சந்திரா எண்களை பின்னோக்கி சொல்லத் தொடங்கினார் —

‘‘ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து, நான்கு,

மூன்று, இரண்டு, ஒன்று – கிளம்பு!”

ட்ர்ர்ர்ர்ர்...

அற்புத மோட்டார் பைக்  உறுமி விட்டு

ஓடத் துவங்கியது!

அற்புத மோட்டார் பைக்கிற்கு ரோஜாக்களின் வாசனைமிகவும் பிடித்திருந்தது.

வெள்ளிக்கிழமை, சந்திரா ஒரு கனமான மூட்டையை பைக்கில் ஏற்றினார். லயா டீச்சர் சொன்னார், “ஸ்ஸ்! ஏதோ குத்துகிறது!”

அற்புத மோட்டார் பைக், “ஓய்! என்னை யார் குத்துவது?” என்று கேட்க நினைத்தது. மூட்டையில் என்ன நண்டுகளா?

ஓ! சந்திரா இன்று அன்னாசிப் பழங்களை விற்கப் போகிறார்!அவை குத்துகின்றன, உறுத்துகின்றன, குறுகுறுக்கின்றன. “எனக்குப் பழங்களே பிடிக்காது”என்று நினைத்தது அற்புத மோட்டார் பைக்!

சந்திரா சில அன்னாசிப் பழத் துண்டுகளை, லயா டீச்சருக்குக் கொடுத்தார். யம்ம்ம்! சப்புக் கொட்டி சாப்பிட்டார் லயா டீச்சர்.

லயா டீச்சர் , உறுத்தும் மூட்டையின் அடியில் ஒரு

மிருதுவான துணியைப் பரத்தினார்.

இப்போது, அன்னாசிப் பழங்கள் அற்புத மோட்டார் பைக்கை குத்தவில்லை!

அனில் மேலும், கீழும் மூன்று முறை குதித்தான் —

தம், தம், தம்!

ரஞ்சு கைகளை ஆறு முறை தட்டினாள் —

பட்-பட், பட்-பட், பட்-பட்!

சந்திரா எண்களை பினனோக்கி சொல்லத் தொடங்கினார் —‘‘ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து, நான்கு,

மூன்று, இரண்டு, ஒன்று-கிளம்பு!”

அற்புத மோட்டார் பைக் சந்தையை நோக்கி  விரைந்தோடியது!

டுர்ர்ர்ர்ர்ர்!