maadulai muthin insuvai

மாதுளைமுத்தின் இன்சுவை

ஜூஸ் பாக்கெட் அல்லது ஜாம் பாட்டிலில் மட்டுமே பழங்களின் சுவையை அறிந்த நகரத்தில் வாழும் ஒரு சிறுவன் ராஜு. ஒருநாள் அவனுக்கு, அவனது தாத்தாவின் பழத்தோட்டத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. அங்கே பழ மரங்கள் எல்லாம் நிறைய பழங்களுடன் இருக்கின்றன. அவனுடைய அந்த சுவையான, அற்புதமான பயணத்தில் நீங்களும் பங்கேற்றிடுங்களேன்!

- S. Jayaraman

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ராஜு நகரத்தில் வசித்து வந்தான். ஆனால் கோடைக்காலத்தில், பள்ளி விடுமுறையின் போது, அவனுடைய தாத்தா வசிக்கும் கிராமத்திற்குப் போய்விடுவான்.

ஒரு கோடைக்கால மாலை நேரத்தில், ராஜு தாத்தாவுடன் கிராமத்திற்கு சற்று தள்ளியுள்ள சோலைக்கு நடந்து சென்றான். குளுமையான காற்று வீசியது. சாலையின் இருபுறமும் பச்சை பசேலென வயல் வெளிகள்.

சோலையில் பழ மரங்கள் நிறைந்து இருந்தன. ராஜுவும், தாத்தாவும் இயற்கையை ரசித்தபடி நடந்தனர். சோலையின் ஒரு பக்கமாக பெரிய கால்வாய் ஒன்று சென்றது.

அந்தப் பெரிய கால்வாயிலிருந்து பல சிறிய கால்வாய்கள் பிரிந்து, மரங்களுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்தன. ராஜுவுக்கு அந்த குளுமையான, தெளிவான நீரில் இறங்கி நிற்கும் ஆசையை கட்டுப்படுத்த முடியவில்லை.

அப்போது தாத்தா, “இந்தப் பழச்சோலையில் விதவிதமான பழ மரங்களை நாங்கள் வளர்த்து வருகிறோம்” என்று பெருமையுடன் கூறினார்.

முள் கம்பிகளாலான வேலி தோட்டத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்தது.

“இங்கே என்னென்ன மரங்கள் வளர்க்கிறீங்க? சொல்லுங்க தாத்தா” என்று கேட்டான் ராஜு.

“வா! உனக்குக் காண்பிக்கிறேன்” என்றுப் புன்னகையுடன் ராஜுவின் கையை பிடித்து அழைத்து சென்றார் தாத்தா.

“இதெல்லாம் மாமரங்கள், அது கொய்யா மரம்.. ..” என்று அவர்கள் அந்த பெரிய தோட்டத்திற்குள் நுழைந்து செல்லும்போது, தாத்தா ஒவ்வொன்றாகக் சுட்டிக்காட்டிச் சொன்னார்.

“இந்தப் பகுதியெல்லாம் திராட்சைப்பழ கொடிகள் மற்றும் இவை பலா மரங்கள்.. ..” என்று விவரித்தார் தாத்தா.

மாதுளை மரங்களின் வரிசையை அடையும் வரை, தாத்தாவும், ராஜுவும் நடந்து கொண்டே இருந்தனர்.

அங்கே செம்மஞ்சள் நிற மாதுளம்பழங்கள், சுவைக்கத் தயாராகப் பழுத்து, கிளைகளிலிருந்து தொங்கிக்கொண்டிருந்தன.

ராஜுவுக்கு அதனைக்கண்டு வாயில் எச்சில் ஊறியது. “தாத்தா! இதுதான் உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த பழம்” என்று ராஜு சொன்னான்.

“அப்படியா! உனக்கு எத்தனை பழம் வேண்டுமோ பறித்துச் சாப்பிடு!” என்று தாத்தா சொன்னதோடு, சில பழங்களை பறித்து, சுத்தம் செய்து அவனிடம் கொடுத்தார்.

“ராஜு! மாதுளம்பழங்கள் எங்கிருந்து வந்தன என்று உனக்குத் தெரியுமா?” தாத்தா கேட்டார். “இல்லை தாத்தா! எனக்குச் சொல்லுங்கள்” என ஆவலுடன் கேட்டான் ராஜு.

அவனுக்குத் தாத்தாவின் இயற்கை பற்றிய பாடங்கள் பிடிக்கும். “சொல்கிறேன் கேள், மாதுளை மரங்கள் முதலில் இரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில்தான் விளைந்தன. பின்புதான் இந்தியாவுக்கு வந்தது.

இங்குள்ள மக்களுக்கும் இந்தப் பழங்கள் மிகவும் பிடித்து விடவே, இங்கேயே இதனை விளைவிக்கத் தொடங்கினர்.

இப்பொழுது நமது நாட்டில் எங்கு வேண்டுமானாலும் மாதுளம்பழங்களை வாங்க முடியும்.” பதில் சொன்னார் தாத்தா.

பேசிக்கொண்டே தாத்தா ஒரு மாதுளம்பழத்தை பிளந்தார். உள்ளே வரிசை வரிசையாக, பளபளப்பான சிவப்பு முத்துக்கள் போல், மாதுளைமுத்துக்கள் இருந்தது. இவையெல்லாம் கசப்பான வெள்ளை நிற தோலில் பொதிந்திருந்தன. ஒவ்வொரு முத்திலும் இனிப்பான சுவையான சாறு நிரம்பியிருந்தது.

“ராஜு! உன்னைப்போலவே இந்தப் பழத்தை விரும்பும் மற்றவர்களும் உண்டு. உனக்கு தெரியுமா?” தாத்தா கேட்டார், கண்களைச் சிமிட்டியபடி.

“குரங்குகள்-அவை கடினமான மேல் தோலைக் கடித்துத் துப்பிவிட்டு, கொஞ்சம் பழத்தையும் சாப்பிட்டுவிட்டு, மீதியைத் தரையில் எறிந்துவிடும்.

என்னுடைய தோட்டத்தை எப்படிப் பாழ்படுத்தியுள்ளது! நீயே பார்!” என்றார் தாத்தா. மாதுளை மரங்களின் கீழே பாதி தின்ற பழங்கள் எறியப்பட்டிருந்தன. தாத்தாவின் பொய்க் கோபம் ராஜுவுக்கு சிரிப்பைத் தந்தது.

“வா! வந்து மாதுளம்பழத்தை சாப்பிடு” என்றார் தாத்தா. கசப்பான வெள்ளைத் தோலிலிருந்து, மாதுளம் முத்துக்களைப் பிரித்து எடுத்துக் கொடுத்தார். “இது உன் உடலுக்கு மிகவும் நல்லது. “இது உன் பசியை அதிகப்படுத்தும்” என்றும் தாத்தா சொன்னார்.

ராஜு சந்தோஷமாக பழத்தைச் சாப்பிட்டான். தாத்தாவின் தோட்டத்துப் பழங்களைப் போல, மிகுந்த சுவையான மாதுளம்பழங்களை அவன் இதுவரை சாப்பிட்டதேயில்லை என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்.

உங்களுக்குப் பிடித்த வகையில் வண்ணம் தீட்டுங்கள்.

உங்களுக்குப் பிடித்த வகையில் வண்ணம் தீட்டுங்கள்.