maaperum tethys kadalin kathai

மாபெரும் டெத்திஸ் கடலின் கதை

பல கோடி வருடங்களுக்கு முன் நமது கோள் வேறுமாதிரி இருந்தது. அப்போது கடல்கள் இருந்த இடத்தில் இப்போது மலைகள் இருக்கின்றன. கண்டங்கள் கூட வேறு வடிவங்களில் இருந்தன! ஆனால், அதெல்லாம் மாறி இப்போதிருக்கும் பூமியாக எப்படி ஆனது?

- I K Lenin Tamilkovan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இவை எல்லாம் புதைபடிவங்கள்.

செடிகள், விலங்குகள் மற்றும் பிற உயிரினங்களின் பதப்படுத்தப்பட்ட மீதங்கள் அல்லது எச்சங்கள்தான் புதைபடிவங்கள். அவை நூறு, ஆயிரம் அல்லது நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்த உயிரினங்களைப் பற்றி அறிய உதவுகின்றன.

இது அமோனைட் என்ற உயிரினத்தின் புதைபடிவம்.

அமோனைட் என்பது 40 கோடி முதல் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வரை கடலில் வாழ்ந்த கணவாய் போன்ற ஓர் உயிரினம்.

தொல்லுயிர் ஆய்வாளர்களும், தொல்பொருள் ஆய்வாளர்களும் பூமியைத்தோண்டி தொல்லுயிர் புதை படிவங்களைக் கண்டுபிடிப்பார்கள்.

அவர்கள் இமயமலையில் தோண்டியபோது நிறைய அமோனைட் புதைபடிவங்களைக் கண்டனர். ஆனால் கடலில் வாழ்ந்த உயிரினங்களின் புதைபடிவங்கள் எப்படி உலகின் உயரமான மலைகளை வந்தடைந்தன?

இந்தக் கேள்விக்கு விடைகாண, நாம் சுமார் 10 கோடி ஆண்டுகள் பின்னால் செல்லவேண்டும். அப்போது பூமி வேறுமாதிரி இருந்தது. அந்தக் காலத்தில் கோண்டுவானாலாண்ட், லோரேசியா என்ற இரண்டு பெரிய கண்டங்கள் மட்டுமே பூமியில் இருந்தன. அவற்றுக்கு நடுவிலே டெத்திஸ் என்ற மாபெரும் கடல் இருந்தது.

லோரேசியா

கோண்டுவானாலாண்ட்

டெத்திஸ் கடல்

இந்த நிலப்பரப்புகள் மற்றும் கடலுக்குக் கீழே பூமியின் புற ஓடு அமைந்திருந்தது. புற ஓடு, நிலத்தட்டுகள் என்னும் பெரிய நகரும் துண்டுகளால் ஆனது. இந்த நகரும் நிலத்தட்டுகள், ஏறக்குறைய 100 கிலோமீட்டர் தடிமன் கொண்ட கடினமான பாறைகளால் ஆனவை. ஆனால் அவற்றின் கீழே உருகிய பாறைக்குழம்புகளால் ஆன அடுக்கு உள்ளது. அதனால் இந்தத் தட்டுகள் மிக மிக மெதுவாக நகருகின்றன.

புற ஓடு

நிலத்தட்டுகள்

உருகிய பாறைக்குழம்பு

மெல்ல இந்தத் தட்டுகள் நகர்ந்து, இரண்டு பெரும் கண்டங்களும் சிறு சிறு துண்டுகளாக உடையத்தொடங்கின.

லோரேசியா

கோண்டுவானாலாண்ட்

டிரையாசிக் காலம்

ஜுராசிக் காலம்

இந்தத் துண்டுகள் அதனதன் போக்கில் நகரத் தொடங்கின. இவற்றில் இரு துண்டுகளின் நகர்வை மட்டும் நாம் பார்ப்போம்.

வட அமெரிக்கா

தென் அமெரிக்கா

அண்டார்டிகா

யூரேசியா

ஆஃப்ரிக்கா

இந்தியா

ஆஸ்திரேலியா

கிரெட்டேசியஸ் காலம்

இந்தியத் தட்டு மிக வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக யூரேசியத் தட்டை நோக்கி நகர்ந்து நகர்ந்து...

...டமார்! அதனுடன் மோதிவிட்டது.

இந்த சக்திவாய்ந்த மோதலால் டெத்திஸ் கடலின் தரைப்படுகை உயர்ந்து இமயமலையாக உருவாகிவிட்டது. கடல் உயிரினங்களும் மேலே வந்துவிட்டன. இவை எல்லாம் நமக்கு எப்படித் தெரியும்? அது... அமோனைட்டுகளை நினைவிருக்கிறதா? கண்டங்களுக்குக் கீழும், கடல்களுக்குக் கீழும் நிலத்தட்டுகள் உள்ளன. அவை நகர்ந்துகொண்டிருக்கின்றன என்பதெல்லாம் அந்தக் கடல்வாழ் உயிரினங்களின் புதைபடிவங்களைக் கண்டுபிடித்த பின்னர்தான் நமக்கு உறுதியாகத் தெரிந்தது.

யூரேசியத் தட்டு

இந்தியத் தட்டு

அது மட்டுமில்லை!

அந்தத் தட்டுகள் இன்னும் நம் கால்களுக்குக் கீழே மிக மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.

(எப்போதாவது அவை திடீரென்று வேகமாக நகரும்போது, பெரிய நிலநடுக்கங்கள் உண்டாகின்றன!)