Maari Maari Pinnum

மாறி மாறிப் பின்னும்

அன்றாடம் என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகள், கேட்டும் படித்தும் அறியும் செய்திகள் ஆகியவற்றின் தூண்டலிலேயே இந்தப் புதினம் உருவாகி இருக்கிறது. அந்நாள், ‘மிஸ் மேயோ’ என்ற பெண்மணி இந்திய நாட்டில் ஓர் ஆய்வுப் பயணம் மேற்கொண்டாள். இந்திய மக்கள் தன்னாட்சி செய்யத் தகுதியானவர்கள் அல்ல என்று தீர்ப்புக் கூறுவதற்காக பிரிட்டிஷ் அரசு ஏற்பாடு செய்ததன் பயனாகவே அந்தப் பெண்மணி அந்த ஆய்வை மேற்கொண்டார் என்று கூறப்பட்டது. அவர்கள் எதிர்பார்த்தபடி அந்த அம்மையார் ஓர் அறிக்கையும் கொடுத்தார். இந்தியப் பெண்களின் குடும்ப, சமூக நிலை அந்த அறிக்கையில் முதன்மைப்படுத்தப்பட்டு, வெளிச்சமாக்கப்பட்டிருந்தது.

- ராஜம் கிருஷ்ணன்

Source: சென்னை நூலகம்
Licesne: Creative Commons

பொருளடக்கம்

முன்னுரை

அன்றாடம் என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகள், கேட்டும் படித்தும் அறியும் செய்திகள் ஆகியவற்றின் தூண்டலிலேயே இந்தப் புதினம் உருவாகி இருக்கிறது. அந்நாள், ‘மிஸ் மேயோ’ என்ற பெண்மணி இந்திய நாட்டில் ஓர் ஆய்வுப் பயணம் மேற்கொண்டாள். இந்திய மக்கள் தன்னாட்சி செய்யத் தகுதியானவர்கள் அல்ல என்று தீர்ப்புக் கூறுவதற்காக பிரிட்டிஷ் அரசு ஏற்பாடு செய்ததன் பயனாகவே அந்தப் பெண்மணி அந்த ஆய்வை மேற்கொண்டார் என்று கூறப்பட்டது. அவர்கள் எதிர்பார்த்தபடி அந்த அம்மையார் ஓர் அறிக்கையும் கொடுத்தார். இந்தியப் பெண்களின் குடும்ப, சமூக நிலை அந்த அறிக்கையில் முதன்மைப்படுத்தப்பட்டு, வெளிச்சமாக்கப்பட்டிருந்தது.

மன்னர்களின் அந்தப்புரங்கலிலும், சாதாரணக் குடும்பங்களிலும் பெண்கள் உடலம்பரமாகவே உறிஞ்சப்படும் உண்மை அதில் தெளிவாக்கப்பட்டிருந்தது. தம் பெண்களை இவ்வாறு குரூரமாக வதைக்கும் ஒரு சமுதாயம் சுதந்தரம் கோருவது நியாயமேயில்லை என்பதுதான் வாதம். காந்தியடிகள் ஒட்டு மொத்தமாக இந்த அறிக்கையை, ‘சாக்கடை இன்ஸ்பெக்டர் ரிப்போர்ட்’ என்று நிராகரித்தார். அதாவது, இந்திய சமுதாயத்தின் குறைபாடுகளையும், சிறுமைகளையும் மட்டுமே முனைப்பாக்கியதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இச்சமுதாயம் சுதந்தரம் பெறத் தகுதியுடையது. ஆற்றலும் திறமையும் பண்டைய பெருமைகளும் இதற்கு உண்டு என்றெல்லாம் ஒப்புக் கொண்டாலும், பெண் மக்களின் அவல நிலையாகிய ஓட்டைகளை வைத்துக் கொண்டு இச்சமுதாயம் எப்படி முன்னேற முடியும் என்பது கேள்வி. சாக்கடைகளை மறைத்து மூடிவிடலாம். சுதந்தரமும் பெற்று நாம் பொன்விழாக் காண ஓடிக் கொண்டிருக்கிறோம்.

அன்றையச் சிறுமைகள் அடியோடு அகன்றுவிட பெண் புதிய சமுதாயத்தின் உரிமைமிகுந்த பிரஜையாகியிருக்கிறாளா? அரசியல் சாசன உரிமையில் இவள் ஆற்றல் மிகுந்த சமத்துவம் எய்தியிருக்கிறாளா?

இந்த வினாக்கள் இன்னும் வினாக்களாகவே இருக்கின்றன என்பதுதான் உண்மை.

அந்நாட்களில் மூன்று வயசிலும் நான்கு வயசிலும் பெண்ணும் பிள்ளையும் திருமண பந்தத்தில் பிணைக்கப் பெற்றார்கள். நான்கு வயசுப் பையனுக்கு ஓர் இரண்டு வயசைப் பிணைத்து, “குழந்தாய், இவள் உன் சொத்து; உன் உரிமை; உனக்குள் இவள் அடக்கம்...” என்று தாரை வார்த்துவிடப் பட்டாள். அவன் பெரியவனாகிப் போய், ‘இவள் கறுப்பு, அழகில்லை’ அல்லது ஏதேனும் காரணம் காட்ட அவசியமில்லாமலே தள்ளிவிடலாம். அல்லது ‘நீ புழுக்கச்சியாய் உழைக்கத்தான் உரிமை பெற்றவள்; மனைவி என்ற உரிமைக்கு - அதாவது பிள்ளை பெற்றுத் தர வேறு ஒருத்தியை உன் முன்னே கொண்டு வைத்துக் கொண்டு உன்னை இகழ்வேன்’ என்றும் வதைக்கலாம். பெண்டாட்டியை அடிப்பது ஒரு குற்றமே இல்லை; இதைப் போய் போலீசில் சொல்வதா என்று இன்றைய ‘காவல்துறையே’ இதைக் குற்றமாக எடுத்துக் கொள்வதில்லை. அந்நாள் இதைப் பற்றிய உணர்வே இருந்திருக்கவில்லை.

என்றாலும், அந்நாளைய நியமங்களில், ‘அவள் ஓர் உடமை’ என்ற நிலையிலும் சில தார்மிக நெறிகள் காப்பாற்றப்பட்டன. அந்த நெறிகளை மீறுவது ‘பாவம்’ என்று கருதும் பயம் இருந்தது. சின்னஞ்சிறு வயசில் திருமண உரிமை வந்தாலும், சாமானியக் குடும்பங்களிலும் அறம் சார்ந்த சில எல்லைக் கோடுகள் காப்பாற்றப்பட்டு வந்தன. கூட்டுக் குடும்பக் கட்டுக்கோப்புகள், அவற்றைக் கலகலக்கச் செய்யவில்லை.

இன்றோ, எந்த வரையறையும், எதற்காகவும் பாதுகாக்கப்படவில்லை. சுயநல ஆதிக்கங்கள் எந்த நிறுவனத்தைச் சார்ந்திருந்தாலும், அறம் சார்ந்த சமுதாயப் பண்புகளை அழிக்கத் தயங்குவதில்லை. சமய நிறுவனங்களானாலும், அரசியல், சமூக நிறுவனங்களானாலும், தனி மனிதர்களை, சமுதாயத்தைத் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வருவதற்கும், ஜனநாயகப் பின்னணியில் அதிகாரம் பெறுவதற்கும் எந்த முறையையும் கையாளலாம் என்று தீர்ந்திருக்கிறது. எத்தகைய அத்துமீறலும் தங்கள் சுய இலட்சியத்தைப் பெற நியாயப் படுத்தப் படுகிறது.

இந்நாட்களில், சாதி, மத, இன அடிப்படையில் மனிதரை மனிதர் நசுக்குவதையும் ஒடுக்குவதையும் தட்டிக் கேட்க, மனித உரிமை கோரும் இயக்கங்கள் உலகு தழுவியதாகவே செயல்பட்டு வருகிறது. மனித உரிமைகள் பாதுகாக்கப்படப் பல சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.

இந்த ‘மனித உரிமைகள்’ என்ற எல்லைக்குள் வராத, அல்லது நினைக்கப்பட்டு, சமுதாயப் பூர்வமாக ஒப்புக் கொள்ளப்படாத இனம், பெண் இனம் என்றால் தவறில்லை.

ஏனெனில் அன்றிலிருந்து இன்று வரை பெண் உடல் பாரமாக, ஆணுக்கு இன்றியமையாத உரிமை கொண்டாடக் கூடிய ஒரு சாதனமாகவே நியாயப்படுத்தப்பட்டு வந்திருக்கிறாள். இதை உணர்வுபூர்வமாக ஒப்புக் கொண்டு, தன்னை ஒருவனுக்கு உரிமையாக்குவதே பிறப்பின் லட்சியம் என்பதே இந்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கருவிலேயே உருவேற்றப்பட்டிருக்கிறது. எந்த நிலையிலும் ஓர் ஆணுக்கு இவளை உத்திரவாதமாக்கித் தீரும் கற்பு நெறி இவள் தன் உடல் மீது தானே உரிமை கொள்ள இயலாதபடி நெருக்கியிருக்கிறது. இந்திய மரபு, இவளைத் தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுந்து, தன் மங்கலச் சின்னங்களான தாலி, பூ, பொட்டு, மெட்டி, வளையல் என்ற உயிரற்ற பொருட்களுக்காக உயிரையே பணயம் வைக்கப் பயன்படுத்தியிருக்கிறது.

இவளுடைய அறிவுக்கண் இந்த உருவாக்கல்களில் குருடாக்கப்பட்டிருக்கிறது எனலாம். மருண்ட விழிகள் அழகு; மெல்லிய இடை அழகு; ஒல்கி ஒசிந்து துவண்டு விழும் மென்மை அழகு; அபயம் என்று ஓர் ஆணிடம் தஞ்சம் அடைவது அந்த அழகின் எல்லை என்றெல்லாம் உடலை வைத்தே அவள் சிறப்பிக்கப்படுகிறாள். இந்நாட்களில் அவள் கருப்பைச் செயல்பாடு கூட கொண்ட ஆணையும் தாண்டி, சமுதாய, தேசிய நலனுக்காக, அரசு உரிமைக்கு விட வேண்டியதாகப் பரிணமித்திருக்கிறது.

எனவே, திருமணம், இல்லறம் என்ற கூட்டுக்குள்ளும், கூட்டுக்கு வெளியேயும் இந்நாள், எந்தத் தார்மிக உணர்வுகளுக்கும் உட்படுத்தப்பட முடியாத ஆதிக்க சக்திகள், இவளை உடல் ரீதியாகக் குலைப்பது, சர்வ சாதாரண நிகழ்ச்சியாகப் போயிருக்கிறது. இந்த வகையில் சட்டங்கள் இருந்தும், எந்த ஓர் ஆணும் இதற்காகத் தண்டனை பெற்றதாக வரலாறு இல்லை. அவள் விபசாரி; வேசி; அவளைக் குலைப்பதும் களங்கம் செய்வதும் நியாயம் என்று எழுதப்படாத ஒரு நீதி குற்றம் இழைத்தோரைக் காப்பாற்றி விடுவதே கண்கூடாகியிருக்கிறது.

சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன் அமரர் வா.ரா. அவர்கள் தம் சுந்தரி என்ற நாவலின் முன்னுரையில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். நாவலை எழுதி முடித்து, ஒரு பெரியவரிடம் அதைப் படித்துப் பார்க்கக் கொடுத்தாராம். அவர் படித்துப் பார்த்துவிட்டு, “சந்நியாசி, குரு மடங்களைச் சற்றே கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறீர்கள். அது உறுத்தலாக இருக்கிறது” என்று கருத்துரை வழங்கினாராம். அதற்கு வா.ரா. அவர்கள், “அப்படியா, ரொம்ப சரி. நன்றாக உறுத்த வேண்டும். அப்படியே இருக்கட்டும்” என்று அச்சுக்குக் கொடுத்தாராம்.

எண்பது ஆண்டுகளுக்குப் பின்னரும், இந்நாள், பெண்ணை உடல், உடல் என்று முடிப்பதில் சமயம் சார்ந்த அனைத்து நிறுவனங்களும் மாறிவிடவில்லை. அரசியல் சக்திகளிலிருந்து அனைத்து நிறுவனங்களும் இந்நாள் வணிகமயமாகித் தீர்ந்திருக்கின்றன. நவீன மின்னணு இயல் சாதனங்களின் வலிமையுடன் பெண்ணுடலை வாணிபப் பொருளாக்கித் தீர்த்திருக்கிறது. உடல் வாணிபம் சட்ட விரோதம். ஆனால் அரசுரிமை பெற்ற வாணிபத்துக்கு பெண்ணுடல் இன்றியமையாதது. உலகளாவிய இந்த வாணிப உரிமைக்கு, அழகுப் போட்டிகள் ஏராளமான பொருட் செலவில் ஆடம்பரங்களுடன் நடத்தப்படுகின்றன. இந்த அப்பட்டமான வாணிபங்களில் பெண் சின்னாபின்னமாக்கப்படுவதை, எந்த மனித உரிமை இயக்கமும் கேட்க முடிவதில்லை.

பல்வேறு நிலைகளில், அவள் உடலும், ஆன்மாவும் சிதைக்கப்பட்டு அழிக்கப்படுகிறாள். பெண் கருவைச் சுமக்கும் பெண், அதை அழிப்பதன் வாயிலாகத் தன்னையே கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொள்கிறாள். இந்தக் கொடுமைகளை எதிர்க்கும் ஒலி சுத்தமாக அமுங்கிவிட்டதா?...

பெண் எங்கே போற்றப்படுகிறாளோ, அந்த மண்ணே செழிக்கும்; அவள் பூமி; அவள் ஜனனி; அவள் நதி; அவள் இயற்கை என்றெல்லாம் அறிவுறுத்தப்பட்ட ஆதி வாக்கியங்கள் இன்றைய அழிவுகளில் மடிந்து போயினவா?

இல்லை. அக்கிரமங்களின் எதிரொலியாகவே, இன்றைய வன்முறைகளும் இயற்கைச் சீர்குலைவுகளும் மனித சமுதாயத்தை உலுக்கிக் கொண்டிருக்கின்றன எனலாம்.

பெண் வெறும் உடலில்லை. அவள் மகாசக்தி. ஒவ்வொரு பெண் உடலிலும் அந்த உயிர்ச்சக்தி இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆண் மேலாதிக்கம், இறைவன் கருணாநிதி, இடப்பக்கம் பெண்ணுக்கு இடம் கொடுத்தான். அதனால் அவள் அவனுள் அடக்கம் என்று தத்துவம் பேசுகிறது. அவளுடைய உரிமையைப் பறிப்பதற்கு நியாயம் கற்பிக்கிறது. ஆனால் அவள் தன்னை ஒடுக்கும் ஓர் இனத்தை, ஒவ்வொரு கனமும் வயிற்றில் வைத்துக் காத்துப் பேணி, உயிரையும் துரும்பாக்கி வளர்த்தெடுக்கிறாள். அத்தகைய தாய்க்குலம் வளரக்கூடாது என்று அழிக்கச் சொல்லிக் கட்டாயப் படுத்தும் ஒரு சூழலை உருவாக்கியிருக்கிறது இன்றைய சமுதாய ஆதிக்கம். எனவே, சீர்குலைவுகளின் உச்சத்தில் ஒரு வழி பிறக்கும் என்ற நம்பிக்கை இன்று தேவையாக இருக்கிறது.

இந்தப் புனை கதை, உண்மையான நிகழ்ச்சிகளின் அடிப்படையில் எழுப்பப் பெற்றதாகும்.

ஓ, இது ‘பெண்ணினம் பேசும் குப்பை’ என்று (ஆண்) திறனாய்வாளர் சலித்துப் போய் ஒதுக்கலாம். ஆனால், நாளுக்கு நாள் அறிவிலும், திறமையிலும் மேம்பட்டு வரும் பெண் குலம் மேலும் மேலும் தனக்கு எதிராக உருவாக்கப்படும் அறைகூவல்களைச் சமாளிக்க எதிர் நீச்சல் போடும் உரிமைக்குரலை எழுப்பிக் கொண்டு தான் இருப்பாள். மேலும் மேலும் பெண் குலத்தைச் சாதுரியமாக ஒடுக்கி உயிர் குடிக்க முனையும் ஆதிக்க நிறுவனங்கள் இருக்கும் வரையிலும் உரிமைக்குரல் ஒலித்துத்தானாக வேண்டும். ஏனெனில் பெண் மூலாதார சக்தி; அவளுக்கு அழிவென்றால் உலகம் அழியும்.

இந்தப் படைப்பை வழக்கம் போல் எனது நூல்களை வெளியிட்டு உதவும் ‘தாகம்’ பதிப்பகத்தார் நூலாக்கி வெளியிடுகின்றனர். அதன் உரிமையாளர் திருமதி மீனா, அகிலன் கண்ணன் ஆகியோருக்கு என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, தமிழ் வாசகர் முன் இதை வைக்கிறேன். குற்றங்குறை தெரிவித்து, இத்தகைய முயற்சிகளில் ஊக்கத்துடன் ஆதரவு நல்குமாறு வேண்டுகிறேன்.

ராஜம் கிருஷ்ணன் 24.7.1996

அத்தியாயம் - 1

அடுப்படியை நன்றாகத் துடைத்து, ஒழிந்த பாத்திரங்களை ரேவு, தொட்டி முற்றத்தில் போடுகிறாள். கணவனும் இரண்டு பையன்களும் சாப்பிட்ட எச்சிற் தட்டுகள், குழம்புக் கற்சட்டி, மாவு கரைத்த பாத்திரம், இன்னும் தொட்டுத் தொடாத தம்ளர், கிண்ணம் என்று எல்லாவற்றையும் சுத்தம் செய்கிறாள். மணி பத்தடித்து விட்டது. காலையில் நாலரை மணிக்கு எழுந்ததிலிருந்து பத்தடிக்கும் வரையிலும் மூச்சு விட முடியாது.

அடுப்புக்கு இரண்டு சிலிண்டர் என்று மாற்றுக் கிடையாது. தோசைக்கு அரைக்க ‘கிரைண்டர்’ சாதனம் இல்லை. ஒரு பழைய மிக்ஸி, கிழட்டுத்தனமாக இயங்கும். சமயத்தில் கைவிட்டு விடும். சூடாகும். இல்லையோ ‘கரண்ட்’ என்ற உயிரும் இருக்காது.

காலையில் பம்படித்துக் கொண்டு வந்து வைத்த தண்ணீர் தீர்ந்து விட்டது. மறுபடியும் சென்று இரண்டு குடம் தண்ணீர் அடித்து வந்து வைக்கிறாள். தோசைக்கு ஊறப் போடுகிறாள்.

அப்போதுதான் இடைக் கதவைத் திறந்து கொண்டு சுதா வருகிறாள்.

“ரேவு மாமி ‘அமிர்தம்’ வந்திருக்கு. பார்க்கிறேளா?...” கையில் பழுப்பு நிறத்தாள் பிரிக்காத பத்திரிகை.

“சாவகாசமாகப் பாருங்கோ! நான் ட்யூட்டிக்குப் போகிறேன். ரகு வந்தால் சாவி கொடுத்திடுங்கள்; ஃபிரிட்ஜில் ஏதானும் வைக்கணும்னா, வச்சுக்குங்கோ...” என்று பத்திரிகை மேல் சாவியை வைக்கிறாள்.

நீல வாயில் புடவையும், பூப்போட்ட மஞ்சள் ரவிக்கையும் அணிந்து இருக்கிறாள். சிரித்துக் கொண்டே, “நாம எழுதிய லெட்டர் வந்திருக்கு, பாருங்கோ!” என்று ஒரு மெல்லிழையை விசிறி விட்டு விடுவிடென்று இவர்கள் வாசல்வழியே போகிறாள்.

ரேவு சில கணங்கள் அந்தப் பத்திரிகையையும் சாவிக் கொத்தையும் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். பிறகு உடனே நினைவு வந்தாற்போல் ஈரக்கையைத் துடைத்துக் கொள்கிறாள். ஸ்டூலின் மேல் இருந்த பத்திரிகையை எடுத்து, பழுப்புக் காகித உறையைக் கிழிக்காமல் பத்திரிகையை உருவி எடுக்கிறாள். நவராத்திரி கொலு அட்டையை அலங்கரிக்கிறது. பெரிய கோலம், குத்து விளக்கு, பூரண கலசம், தாம்பூலத் தட்டு, பூ - என்ற எல்லா மங்களங்களும், இது பெண்கள் பத்திரிகை என்று சொல்கிறது.

ரேவுக்கு வாழ்க்கையில் ஏதேனும் ஓர் ஆறுதல், சுகம் என்றால் இந்தப் பத்திரிகைகள், புத்தகங்கள் படிக்கும் வாய்ப்புத்தான்.

கழுத்தைப் பிடிக்கும் வேலைகள், வீடு நிறைந்த குடும்பத் தொல்லை என்று, வினாத் தெரியாத சிறுமியாக ஒரு புகுந்த வீட்டு இளைய மருமகளுக்குள்ள அழுத்தங்களுடன் உழன்ற நாட்களிலும், இப்படி ஒரு பத்திரிகையைத் திருட்டுத்தனமாகவேனும் பார்த்து விடுவாள். இப்போது, அந்த சம்சார சாகரமில்லை. இந்தச் சொந்த வீட்டின் ஒரு பகுதியில் குடித்தனமாக வந்திருக்கும் சுதா, இவள் மீது அளப்பரிய பரிவு காட்டும் பெண். அவளுக்குப் பிக்குப் பிடுங்கலே இல்லாத குடும்பம். ஒரே பெண், காவேரிக்கரை ஊர் வீட்டில் இருக்கும் தாயாருடன் இருந்து படிக்கிறது. புருஷன் ஏதோ வங்கியில் வேலை செய்கிறான். அவன் தொலைபேசி அலுவலகத்தில் வேலை செய்கிறாள். எல்லாப் பத்திரிகைகளும் வாங்குகிறாள். முதலில் ரேவுக்குப் படிக்கக் கிடைப்பது மட்டுமின்றி, சமயம் கிடைக்கும் போது, இந்த வீட்டுத் தவளைக்கு வெளி உலகச் செய்திகளையும் பேசி கொள்ளவும் முடிகிறது.

ரேவு, பத்திரிகையைப் பிரித்துக் கொண்டு, கூடத்தின் எதிரே உள்ள அறைக்குள் வருகிறாள். புருஷனுமில்லை. பையன்களுமில்லை. இப்போது யாரும் வருபவர்கள் இல்லை என்றாலும், அந்த அளவுப் பாதுகாப்பை நாடுகிறாள். ‘காங்க்ரீட்’ கூரை வராத காலத்தில் போடப்பட்ட மரத்தாங்கலுள்ள கனத்த கூரை. அத்துடன் பழைய சாமான் போடும் பரணும் உள்ள அறை. வாசல் திண்ணையைப் பார்த்த பழைய நாளைய சன்னல்; அங்கிருந்து குறுகலான வாசல் தெருவைப் பார்க்கலாம். முன்பு வெறும் மொட்டையாக இருந்த மூன்றடி அகலத் திண்ணை, வராந்தா போல் மாற்றப்பட்டு, வெளியே ஓர் அழித்தடுப்பும் கதவும் பெற்றிருக்கிறது. பக்கத்தில் உள்ள சிறு சந்தில், தனியாக சுதாவின் பகுதிக்குச் செல்லும் வாசல் இருக்கிறது.

இந்த அறைக்கே தனியானதொரு வாசனை உண்டு. கதவில்லாத இரண்டு அலமாரிகளிலும், பழுப்பேறிய பழைய பஞ்சாங்கங்கள், பைண்டு செய்த தமிழ் கந்த புராணப் புத்தகம், ஸம்ஸ்கிருத சுலோகங்கள், கொண்ட பூச்சி அரித்த புத்தகங்கள் எல்லாம் இடம் பெற்றிருக்கின்றன. பழைய கால ‘ஸ்டீல்’ டிரங்கு பெட்டிகள், ஒரு அரிசி ட்ரம், பழைய வெண்கலப் பானை, ஆசனப் பலகைகள், கயிற்றில் கோர்த்துக் கட்டி ஆணியில் தொங்க விடப்பட்ட பழைய பாலிகை மண் வளையங்கள் என்று விடாமல் நூற்றாண்டுகளின் மிச்ச சொச்சங்களைக் காப்பாற்றி வரும் ஒரு அறை அது.

தன் செய்கைகளை அந்தப் பழைமையில் வைத்து மறைப்பது போன்ற ஒரு பொருந்தாமையுடன் பத்திரிகையைப் பிரிக்கிறாள்.

இந்த மாத பேட்டி நாயகி... நித்ய சுமங்கலி யார்... தாலிக் கயிற்றுக்கு மஞ்சள் ஏன் அவசியம் என்ற முக்கியமான அலசல், வீட்டில் குங்குமம் தயாரித்தால், கடைப்பிடிக்க வேண்டிய விதிகள், அதன் தொழில் நுட்பம் - சினிமா நடிகை ஸ்ரீபர்வதா அரை இலட்சம் கொடுத்து வாங்கிய புடவையின் விவரம், பட்டுச் சேலைகளைப் பாதுகாக்கும் போட்டியில் பரிசு பெற்ற வனிதையர், அந்தப் பரிசுக்காகக் கொடுக்கப்பட்ட பாத்திரக் கூப்பன்களை வாங்கக்கூடிய கடை விவரங்கள்... குப்பாங்குளம் குசலானந்த சுவாமிகளின் இல்லத்தரசிகளுக்கு ஏற்ற அறிவுரைகள் எல்லாவற்றையும் தள்ளுகிறாள். டாக்டரைக் கேளுங்கள் பகுதியில் டாக்டர் கஜகௌரியின் யோசனைகள்... பெண்ணின் சமையலில் மணமா, ஆணின் சமையலில் மணமா என்ற பட்டிமன்ற தொகுப்பு படங்களுடன் -

- இதோ, ஆசிரியர் சகலகலாவல்லியின் - என்னிடம் சொல்லுங்கள், நெஞ்சமர் தோழியரே... பகுதி...

அதில்...

முதலிலேயே அந்தக் கடிதம்..

. இவள் எழுதி, சுதா பார்த்து, யோசனையும் திருத்தமும் வழங்கி அனுப்பி வைத்த கடிதம்...

அன்புள்ள சகோதரி,

வணக்கம். எனக்குத் திருமணமாகி இருபத்து மூன்று வருடங்கள் ஆகின்றன. என் வயசு முப்பத்தாறு. என் கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஸ்டெனோவாக இருக்கிறார். எங்களுக்கு இரண்டு பிள்ளைகள். பெரியவன் ப்ளஸ் 2 படிக்கிறான். அடுத்தவன் ஒன்பதில் நிற்கிறான். அவர் இப்போது, தம் அலுவலக மேலாளராக உள்ள பெண்மணியுடன் தகாத உறவு வைத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிய வருகிறது. இந்த உறவை உறுதி செய்யப் பல சான்றுகள் கிடைத்துள்ளன. ஆனால் மிகவும் நொய்ம்மையான இந்த விஷயத்தைப் பற்றி அவரிடம் கடுமையாகப் பேசவோ சண்டை செய்யவோ நான் விரும்பவில்லை. எங்கள் குடும்பம் மிகவும் வைதிகமான ஆசாரமுள்ள குடும்பம் ஏனெனில் இந்த விஷயம், வளர்ந்துவிட்ட பிள்ளைகளுக்குத் தெரிய வெளியில் அடிபடுவதை நான் விரும்பவில்லை. ஆனால் அப்படியே வெளிக்குத் தெரியாமல் இதை ஏற்றுக் கொண்டு விடவும் மனசு ஒப்பவில்லை. எனவே தாங்கள் என் சிக்கலைப் புரிந்து கொண்டு ஒரு நல்ல தீர்வை எனக்கு அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்... இப்படிக்கு, தங்கள் அபிமான வாசகி... பாமினி...

இந்த பெயரையும் சுதாதான் வழங்கினாள்...

பாமினி...

குபுக்கென்று செவிகளில் உஷ்ண வாயு திரண்டு அடைக்கிறது.

எழுதியதை அப்படியே அச்சில் போட்டு விட்டார்கள்.

பதின்மூன்று வயசில் கல்யாணம்; வைதீகக் குடும்பம் இரண்டு பிள்ளைகள்... புருஷனின் வேலை... கம்பெனி ஸ்டெனோ...

இதெல்லாம் நிசம்.

பதில் என்ன எழுதியிருக்கிறாள்?

“பிரிய நெஞ்சமர் தோழி. உங்களுக்காக வருந்துகிறேன். உங்கள் பிரச்னை சிக்கலானதுதான். பாலியல் உறவு சார்ந்து உங்கள் கணவரை நீங்கள் சந்தோஷமாக வைத்துக் கொண்டிருக்கிறீர்களா என்பதை அவசியமாக அறிய வேண்டியதாகிறது. ஒரு குழந்தை வெளியில் விற்கும் தின்பண்டத்தை நாடிப் போகிறது என்றால், தாய் அதற்குத் தேவையான ஊட்டமும் நிறைவும் அளிக்கவில்லை என்பது வெளிப்படை. சகோதரி, அந்த வகையில் நீங்கள் எந்தக் குறையும் வைக்கவில்லை என்றால் அந்த அதிகாரியையே நீங்கள் தனியே சந்தித்து மனம் விட்டுப் பேசலாமே? மனம் விட்டுப் பேசுவதாலேயே பல பிரச்னைகள் தீர்ந்து விடுமே?...”

ரேவு புத்தகத்தை மூடுகிறாள்.

பார்வை எங்கோ ஒன்றிப் போகிறது.

அந்த அதிகார வருக்கப் பெண்மணியை, அவள் நேரில் சந்திப்பதா? எப்படிச் சந்திப்பது?...

ஒன்பதாவதுக்கு மேல் எட்டிப் பார்க்க முடியாத ஒரு அதிர்ஷ்டம் கெட்ட பெண். பதின்மூன்று வயசுக்குள் எட்டு முடித்து ஒன்பதுக்கு வந்து என்ன பயன்? குடும்ப மானத்தைக் காப்பாற்ற மல்லிநாதன் என்ற ஒரு பத்தொன்பது வயசுக்காரனுக்கு அடிமையாக வேண்டி இருந்தது.

“குழந்தே, நீ பாக்கியமாய் வாழ்வாய்; புகுந்த இடத்தில் நீ பிறந்த இடத்தின் பாவக் கறைகளைத் துடைத்து சிரேயஸுடன் இருப்பாய்! வைதிக வித்து, வேத பரம்பரை, சாமானிய இடமில்லை. அதற்குத் தக்கபடி நடந்து கொள்வாய்” என்று, காஷாய குருபீடம் அட்சதைப் போட்டு ஆசீர்வதிக்க அவள் இந்த வீட்டில் அடி வைத்தாள்.

இவள் இப்படி ஒரு கடிதாசியை முகம் தெரியாமல், முகம் தெரியாதவருக்கு அனுப்பி வைப்பதுதான் சிரேயஸா?

‘ச்ரேயஸ்’னா என்ன?

- ஆபீஸ்... ஆபீஸ்க்கு இவன் போகாத நாளில் இவள் எப்படிப் போய் அவளைப் பார்ப்பாள்?

சரி, சுதா எப்படியானும் ஃபோன் பேசி, ஏற்பாடு செய்கிறாள் என்று வைத்துக் கொள்வோம்...

இவள் போய் நிற்கிறாள்...

அவள் உருவம் பதியவில்லை.

ஆனால் குரல் மின்னுகிறது.

“என்ன விஷயம்?”

“வந்து... வந்து... என்... எங்க வீட்டுக்காரர், மிஸ்டர் மல்லிநாதன்... உங்கள் ஸ்டெனோ...”

“ஓ, மிஸஸ் மல்லிநாதனா?... ரொம்ப அழகாயிருக்கிறீங்களே? உக்காருங்க... என்ன வேணும்?”

என்ன வேணும்? எப்படிச் சொல்ல? அவர் பேண்டைத் துவைக்கப் போட்டிருந்தார். பெங்களூர் போயிருந்தீர்கள். ஹைதராபாத் போயிருந்தீர்கள்... பான்டில்... ஓட்டலில் ஒண்ணாய்த் தங்கி இருப்பீர்கள்... பான்ட் பாக்கெட்டில்... இந்தக் கண்ணராவி எல்லாம் இருந்து சாட்சி சொல்றது. எல்லாரும் கசமுசன்னு உங்களைப் பத்திப் பேசுறாங்களாம்... என்று சொல்லலாமா?

அந்தச் சனியன் பாக்கெட்டை, சுதாவிடம் தான் காட்டினாள். சுதாதான் அது... அது... என்று சொன்னாள்.

இவளுக்குத்தான் இனிமேல் ஒரு இழவும் தேவையில்லையே? பரத் பிறந்த உடனேயே மூணாம் நாள் ஆபரேஷன் பண்ணிக் கொண்டாளே? ஒருவேளை அதனால் தான் அவன் இப்படிப் போகிறானா? அலைகிறானா?

சே, அப்படியே நடுவில் விட்டுவிட்டாளே?

இவள் பேசத் தெரியாமல் மனசு கொட்ட உட்கார்ந்திருந்தால் அவள் என்ன நினைப்பாள்?

“என்னம்மா? மல்லிநாதனுக்கு சீனியர் கிரேட் கொடுத்தாச்சே? உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?”

“பையன்கள், பிளஸ்டூ - நைன்த்...”

“ஓ...வ்! அவ்வளவு பெரிய பையன்கள் இருக்கிறார்களா? உன்னைப் பார்த்தாலும் தெரியவில்லை; அவரைப் பார்த்தாலும் தெரியவில்லை. இப்ப போன மாசம் கல்யாணம் ஆனாப் போல இருக்கிறீர்கள்?... வெல்... இப்ப என்ன வேணும்?”

“ஓ... ஒண்ணுமில்ல... பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்... இத... இத பாருங்கள்... இது... அவர் பான்ட் பாக்கெட்டில் இருந்தது...”

அழுகை வந்து விடுகிறது, அதை மேசை மீது ஆத்திரத்துடன் போடுகையில்.

“வாட்...! என்ன நினைச்சிட்டே! தூ! ப்யூன்! இந்தப் பொம்பிளய எல்லாம் யார் உள்ள விட்டது! கெட் அவுட்! புடிச்சு வெளியே தள்ளுங்க!”

ஒரு கை பனி நீரை வாரி வீசினாற் போல் ரேவு குலுக்கிக் கொள்கிறாள். சீ! என்ன பைத்தியக்காரத்தனம்.

முகம் தெரியாத ஏதோ அநாமதேயம் - கேள்வி - பதில்.

சிறிதும் ஒட்டும் உறவுமில்லாமல் ஆயிரமாயிரம் பேர் இந்த அந்தரங்கங்களை மனசில் போட்டுக் கொள்ள...

ஆனால் நான் இன்றைய பெண்ணின் வாழ்க்கையில் இன்னும் என்ன ஒளிவு மறைவு பாக்கி இருக்கிறது?

ஒருவேளை அவள் கணவன் இந்தப் பத்திரிகையைப் பார்த்துக் கண்டுபிடித்துவிட்டால்?

பிள்ளைகள்...?

அவர்கள் யாரும் இவள் ஆவலோடு படிக்கும் எந்தப் பத்திரிகைகளையும் திருப்பிப் பார்ப்பதில்லை. ராம்ஜி, பரத் இரண்டு பேருமே இங்கிலீஷ் மீடியம் படிக்கிறார்கள்...

ஓர் ஆறுதல்.

இது இப்படியே போய்த் தொலையட்டும்.

ஓ...மணி...? கூடத்தில் உள்ள பழைய நாளைய அடிக்கும் கடிகாரத்தில் மணி பத்தேகாலாகி இருக்கிறது.

கிரசின், சர்க்கரை வாங்க வேண்டும். அரிசியும் கூட புழுத்தலோ, புழுங்கலோ போடுவான். பார்த்து வாங்க வேண்டும்.

காலை எட்டரை மணிக்குக் கலத்தில் நல்ல சோறு விழ வேண்டும். இட்லியோ, தோசையோ கட்டித் தர வேண்டும். அது எப்படி வருகிறது, என்ன விலை என்று அவனுக்குத் தெரியுமா? குழந்தைகளுக்கும் தெரியுமோ?

இரண்டும் ஆண் வருக்கம்... ஒரு பெண் குழந்தை பிறக்கக்கூடாதா?

அவசர அவசரமாகத் தொட்டி முற்றப் பாத்திரங்களைக் கழுவுகிறாள். பிறகு ரேஷன் கார்டு, பை, கிரசின் கேன் சகிதம் வெளியே வந்து வீட்டைப் பூட்டுகிறாள்.

வீதியில் எதிரே நாகபூசணி வீட்டு வேலைக்காரி ஒரு பாமாலின் பையுடன் வருகிறாள்.

“கிரசின் சர்க்கரை ஏதும் இல்லை... பாமாலின் தான் ஒரு கிலோ பாக்கெட் தாரான். கியூ நிக்கிது...”

அதுவும் அப்படியா?...

உள்ளே சென்று கிரசின் கேனை வைக்கிறாள்.

பாமாலின் போடுகிறான் என்றால் சுதாவின் கார்டையும் கேட்டிருக்கலாமே? சாவி இவளிடம் இருந்தாலும், கேட்காமல் புரையில் அவள் வைத்திருக்கும் கார்டை எடுக்கலாமா? கூடாது.

அப்பளத்தைப் பொரித்துத்தான் போட வேண்டும்.

பொரித்து டப்பாவில் வைத்துவிட்டால், அப்பாவும் பிள்ளைகளும் இடது கையால் எடுத்து எடுத்துப் போட்டுக் கொண்டு டப்பாவைக் காலி செய்து விடுவார்கள்!

ரேவு அந்தப் புரட்டாசி வெயிலில் வேகு வேகென்று நடக்கிறாள்.

பெரிய கியூ வரிசையில் சென்று நிற்கிறாள்.

அத்தியாயம் - 2

புழுக்கத்தில் வெந்து குமுறிக் கொண்டு, ஒரு கிலோ பாமாலினுக்காக ஒன்றரை மணி நேரம் நின்றும், இவள் முறை வரு முன் கதவை அடைத்து விடுகிறார்கள். ரேஷன் கடை அராஜகங்களில் அகப்படுபவர்கள் எல்லோருமே அவளைப் போன்ற பூச்சிகள் தாம். ரேவு வெற்றுக் கையுடன் அந்தப் பகல் வெப்பத்தில் திரும்பி வருகையில் பூட்டிய கதவுக்கு முன் வேம்பு நிற்பதைப் பார்க்கிறாள். இவளுக்கு ஐந்து வயது இளைய உடன் பிறந்தான். இப்போதைக்கு ரேவுக்குப் பிறந்த வீட்டுச் சொந்தம் என்ற ஒரு உறவுடன் வருபவன் இவன் ஒருவன் தான். குடும்பம் என்ற ஒன்று, தாயின் நடவடிக்கையால் மூர்க்கத்தனமாகக் குலைக்கப்பட்ட போது, இவளுக்குக் கல்யாண நிழல் கிடைத்தது.

அவன் எங்கோ ஓட்டலில் எடுபிடியாக ஒதுங்கியிருந்தாலும் அன்றிலிருந்து இத்தனை நாட்களில் ஒரு ‘நிரந்தரம்’ என்ற பிழைப்பாக இருந்திருக்கலாம். ஆனால் எங்கோ அநாதை வேதபாடசாலையில் ஒதுங்கினார்கள் தருமபரிபாலன குருமடத்தார். அங்கே சட்டதிட்டங்கள், பசி பட்டினி என்ற நிதரிசனங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓடிப் போனான்.

“அசத்து, சத்தின் வயிற்றில் ஜனித்திருந்தால் தானே வேதம் புண்ணியம் என்று ஒட்டும்? கிணற்றுக்கரை அரிக்கஞ்சட்டியைத் தூக்கிண்டு ராவுக்கு ராவே ஓடிட்டது!” என்ற செய்தியை இவள் நோயாளி மாமியார், நாத்தனார் எல்லாரும் இவளை ஏசுவதற்கு வாகாகக் கிடைத்த எரிபொருளாகப் பயன்படுத்தினார்கள்.

பிறகு எத்தனையோ வருடங்கள் அவனை ரேவு பார்க்கவில்லை. மாமியார் இறந்து, நாத்தனார் திருமணமாகிச் சென்று, இவளும் குழந்தைகளும், புருஷனும் என்று குடும்பம் செய்த நாட்களில், “அக்கா! எப்படி இருக்கே?” என்று வந்தான். நன்றாக வளர்ந்து, முகத்தில் மீசை தாடி பசைத்து, குரலும் கட்டையாகி, ஆளே மாறியிருந்தான்.

“வேம்பு வாடா? அடையாளமே தெரியலியே? இவன் உன் பையனா அக்கா? உன்னாட்டமே அழகா வட்ட முகமா இருக்கான்...” என்று அப்போது எட்டு வயசாகியிருந்த பரத்தின் கையை ஆசையோடு பற்றி இழுக்க முயன்ற போது அவன் கையை விடுவித்துக் கொண்டு திரும்பிக் கொண்டது நினைவில் வருகிறது.

அன்று பை நிறையப் பழமும் வெற்றிலை பாக்கு, பூ, ஒரு ரவிக்கைத் துண்டு என்று கொண்டு வந்திருந்தான். ஒரு மைசூர் பாகு பாக்கெட்டைத் திறந்து வைத்து, “அக்கா, நமஸ்காரம் பண்ணுறேன்!” என்றான் கண்ணீர் மல்க.

அவளுக்கும் அப்போது கண்கள் பனித்தன. அவன் எங்கெங்கோ ரொம்பக் கஷ்டப்பட்டானாம். இப்போது ஒரு ரெடிமேட் துணிக்கடைக்காரரிடம் வேலையாக இருந்ததாகச் சொன்னான்.

அவர் ‘பாயா’ம். ரொம்ப நல்லவராம். அன்பாக நடத்துகிறாராம். ‘உறவு சனங்களை விடக்கூடாது. உன் அக்காளைப் போய்ப் பார்த்துவிட்டு வா’ன்னு சொல்லி அனுப்பினாராம். குழந்தைகள் விவரம் தெரியாததால் சட்டை எதுவும் வாங்கி வரவில்லை. அடுத்த மாசம் லீவு தரும் போது நான் அளவா சட்டை நிஜார் கொண்டு வரேன்க்கா” என்று சொன்னான்.

அதற்குப் பிறகு அவன் மாசம் ஒரு நடை போல் வந்தான்.

அவள் கணவன் இந்த மைத்துனனை மதிக்கவுமில்லை; பேசவுமில்லை. பையன்களும் கூட அண்டமாட்டார்கள்.

ஒரு தடவை நவராத்திரியின் போது வந்தான். “முதலாளி ஊருக்குப் போயிருக்கிறார். நான் நான்கு நாள் தங்கட்டுமாக்கா?” என்று கேட்டான். “எட்டு பேரோடு பிறந்துட்டு இப்படி ஒத்தொருத்தரா மாலை அறுந்து விழுந்தாற் போலானோமேன்னு நினைச்சால் அழுகை வருது. மங்களத்தின் விலாசம் கண்டுபிடிச்சுண்டு. அவாத்துக்கு நாக்பூரில் போனேன். ஒரு மகாராஷ்டிரக்காரங்ககிட்ட மிட்டாய்க்கடை வேலைக்குன்னு கூட்டிட்டுப் போனா. அங்கே விடிய விட்ய வேலை செய்ய இன்னொருத்தன் கிட்ட வித்துட்டா. நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு சொல்ல முடியாது அக்கா. அப்ப, அந்த மங்களம் என்னப் படியே ஏத்தலக்கா? ‘திருட்டுப் படவா, நீ நல்ல வழிய வரணும்னு குருசுவாமியே சேர்த்துவிட்டார். இப்படித் திருடித் தாண்டிப் பிழைக்க ஓடுவியா? உன்னால வெளில தலைகாட்ட முடியல! எனக்குப் பிறந்த வீட்டில் எல்லாரும் செத்தாச்சுன்னு தலை முழுகியாச்சு! போ!’ன்னு அடிச்சே விரட்டினாக்கா!” என்று அழுதான்.

“அது சரி, நீ ஏன் வேதபாடசாலையை விட்டு ஓடிப் போனே?”

“அக்கா, பாடசாலையா அது? வாய்க்குவாய், ‘உன் அம்மா அவிசாரி, தேவடியா’ன்னு சொல்லுவா எல்லாரும். சீ! நம்ம அம்மா ஏனிப்படிச் செஞ்சா? கூத்தரசன் டாக்டர வச்சிண்டு ‘அவ குடும்ப மானத்தையே கெடுத்தா’ன்னெல்லாம் பேசினா. எனக்குப் பாதி நாளும் பழைய சோத்துப் பருக்கைக்கூடக் கிடைக்காது. மெய்தான். திருட ஒண்ணுமில்லை. அருக்கஞ் சட்டிய எடுத்துண்டு விடிகாலம் ஓடி வந்து, ஒரு வீட்டில் அதை அஞ்சு ரூபாய்க்குக் குடுத்திட்டுப் பட்டணம் வந்தேன்...”

அவளுக்குத் துக்கம் நெஞ்சை அடைத்தது.

அந்தத் தடவை - நவராத்திரியில் அவன் எவ்வளவு உதவியாக இருந்தான்? அவளுக்குத் தண்ணீர் அடித்துத் தருவான். கொலு வைப்பதில்லை என்றாலும் அவள் பூஜை, பாராயணம் செய்ய வேண்டும் என்பது கட்டாயம். சமஸ்கிருதம் நன்றாகத் தெரியுது. தமிழ் எழுத்துக்களில் அச்சாகி இருந்த ஒரு பழுப்பேறிய புத்தகத்தில் இருந்து ஸஹஸ்ரநாம பாராயணம் செய்ய வேண்டும். மடியாக ஒன்பது கஜம் உடுத்து, நைவேத்தியம் செய்ய வேண்டும். அவன் குளித்துவிட்டு அவளுக்கு வடைக்கு அறைத்துக் காய் நறுக்கி எல்லா உதவிகளும் செய்தான். அக்கம் பக்கம் நான்கு சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்குக் கொடுப்பது எப்போதும் வழக்கம். அவர்களிடம் தன் தம்பி என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டாள்.

அவனுக்கு ஒரு சட்டைத் துணியேனும் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் ஒவ்வொரு காசுக்கும் கணக்கு உண்டு. அவளால் எப்படிப் பிறந்த வீட்டு உறவைச் சீராட முடியும்?

“அக்கா, நீ அந்த வயசிலேயே ஒம்பதாவது வந்திருந்தே. நான் மூணாவதில் இருந்தேன். நீ அப்பவே எனக்குப் பாடம் சொல்லிக் குடுப்பே. ‘படிக்கணும்டா வேம்பு. நாமெல்லாம் படிச்சித்தான், முன்னுக்கு வரணும். நான் எப்படியானும் டீச்சராவோ நர்சாகவோ ஆயிடுவேன்’னு சொல்லுவியே! இந்த அம்மா கடங்காரி மட்டும் நம்மை எல்லாம் அம்போன்னு விட்டுட்டு ஓடிப் போகாம இருந்தா இந்தக் கதி வருமா? எப்படியோ உன்னை நல்ல இடத்தில் அப்பா கல்யாணம் பண்ணிட்டார்...” என்று அவன் சொன்ன போது ரேவு காதைப் பொத்திக் கொண்டாள்.

“அதெல்லாம் இப்ப எதுக்குடா வேம்பு! பழசெல்லாம் மறக்கக்கூடிய ஒரு நல்ல வரம் ஸ்வாமி நமக்குத் தந்திருக்கிறார். அதை மறந்திடு!” என்றாள் அப்போது.

“எப்படியக்கா மறக்க முடியும்? பழைய முதலாளி என்னைச் சரக்குக் கொண்டு போறப்ப கோயமுத்தூர் கூட்டிண்டு போனார். அங்கே ஒரு ஓட்டல்ல பாலு அண்ணாவைப் பார்த்தேன். சரக்கு மாஸ்டரா இருக்கானாம். கல்யாணம் காட்சி இல்லாம, ஒரு விடோ பொண்ணைத் தொடுப்பா வச்சிட்டிருக்கிறான். ஃபுல்லா குடிச்சிட்டு அவ வீட்டிலேயே உருண்டு கிடக்கிறான். சீ... என்ன குடும்பம்! அப்பா பாகவதர், வேதவித்துன்னு பரம்பரை, தருமம் சொல்லும் குருமடத்தில் காலட்சேபம்... இதெல்லாம் சொல்லுக்கும்படி இல்லியே?”

“வேம்பு, அதெல்லாம் மறந்துடுடா, நீ ஏதோ வந்தே, எனக்கு ஒத்தாசையா இருந்தே. உன்னை உட்கார்த்தி வச்சி, ரெண்டு வேளை சாதம் போடறேன். அதுவே திருப்திதான்டா. வந்துண்டு போயிண்டு இரு” என்று அனுப்பினாள். ஆனால் அவன் வெளியில் சென்ற அடுத்த நாளே அவள் புருஷன் கடுகடுவென்று குதித்தான்.

“திருட்டுப் பயலை என்ன சீராட்ட வேண்டியிருக்கு? என் சட்டைப் பையில் குத்திட்டிருந்த பேனாவை அபேஸ் பண்ணிண்டு போயிட்டான்!” என்று அபாண்டப் பழியைச் சுமத்தினான்.

பிறகு எப்போதாவது அபூர்வமாகவே வருவான். வருஷத்தில் ஒரு தரம் - என்ற மாதிரி. பழம், பூ, ஸ்வீட் பாக்கெட் என்று வருவான்.

“இதெல்லாம் எதுக்கடா வேம்பு செலவழிக்கிறே?” என்று சொல்வான். அவன் வேலை செய்யுமிடமோ விலாசமோ கூடக் கேட்டதில்லை.

இப்போது வெகுநாட்களுக்குப் பிறகு, ஒன்றரை வருஷமிருக்கும் வந்திருக்கிறான். உடம்பு வாடிக் கறுத்து முன்முடி கொட்டிக் காட்சியளிக்கிறான்.

“வாப்பா வேம்பு, ரொம்ப நாழியாச்சோ? பாமாயில் போடுறான்னு நின்னேன், நின்னேன். கடைசியில் இன்னிக்கு கிரசின், சர்க்கரை, எதுவும் போடல. ஊமை வெயில் உருக்கறது...” என்று சாவியை எடுத்துக் கதவைத் திறக்கிறாள்.

“உள்ளே வா! ஏம்ப்பா. எப்படியோ இருக்கே? உடம்பு சரியில்லையா?”

“அதெல்லாம் இல்லக்கா... ஒரு வாரமாவே சாப்பாடு சரியில்ல. பாயம்மா போய் டாக்டர்ட்டக் காட்டிக்கோன்னா. அவன் யூரின் டெஸ்ட் பண்ணிட்டு மஞ்சக் காமாலை இருக்குன்னான். சும்மா சொல்லக் கூடாது. பாய் இருக்கறப்பவே என்னைப் பிள்ளையாட்டந்தான் பாத்துண்டிருந்தார். அவர் போனப்புறம், பாயம்மாக்கு நான் தான் எல்லாமே! அக்கா, பாயம்மா நம்மவங்க. பாய்தான் முஸ்லிம். எனக்கு அம்மாவே தான். அவங்க வீட்ல கறி மீன் எதுவும் கிடையாது. முன்னே வேலை செய்தேனே அவ வீட்டில அதெல்லாம் உண்டு. நமாஸ் பண்ணுவா; துவா சொல்லுவா... ஆனா இவா வீட்டில் ரொம்ப வித்தியாசம்...” என்று விவரிக்கிறான்.

“போதும்டா வேம்பு. நீ பாய் வீட்டிலே சாப்பிட்டுண்டு இருக்கேன்னு சொல்லிக்காதே. ஏண்டா, நா முன்னேயே கேட்கணும்னு இருந்தேன். நீ பூணூல் போட்டுண்டு இருக்கியோ?... சந்தி பண்ணுறியோ இல்லையோ தெரியல...”

“அக்கா அதெல்லாம் வேஷம். இந்த பாய்கிட்ட நான் வந்து ஏழு வருஷம் ஆகப் போவுது. இப்ப அவர் காலமாய் ஆறு மாசம் ஆறது. இவர் பெரிய தேசபக்தர். சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டு ஜெயிலுக்கெல்லாம் போனவர். ஆனால் கம்யூனிஸ்ட். சாமி, தொழுகை அது இதுன்னு வேஷம் போடமாட்டேன் தம்பி. நான் மனிதன்; நீ மனிதன். தெய்வம்னு ஒண்ணை மனுஷன் தான் படைச்சு, தன் பலவீனத்தை அதில் மறைச்சுக்கறான் என்பார். சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டு, ஜெயிலில் கசையடி வாங்கித் தியாகம் பண்ணினவருக்கு, அரசு தியாகி, நிலம், சலுகை எல்லாம் கொடுத்ததை வாங்கிக் கொள்ளவேயில்லை. அவ்வளவு உத்தமர். தொழிலாளர் - பாட்டாளி சங்கங்களுக்கெல்லாம் தலைவர்ன்னாலும் பாட்டாளியாகவே இருந்தார். ‘தையல் கடை’ தான் பிழைப்பு. நானும் மிஷின் ஓட்டறேன். இருக்கும் வீடு கூடச் சொந்தமில்லை. பாயம்மா பதினஞ்சு வயசில் போராட்டத்தில் ஈடுபட்ட காலத்தில், அதாவது இவள் அண்ணன் ரயில்வேயில் வேலை பார்த்த காலத்தில், இவர் வீட்டில் பாய் வந்து தங்கினாராம். அப்போது கல்யாணம் பண்ணிக் கொண்டாராம். குழந்தைகளே பிறக்கலியாம். கடையில் ஏதோ வருது... எல்லோரும் ரெடிமேட்னு போயிடறாங்க...” என்று இப்போது தான் விவரம் கூறுகிறான்.

“சாப்பிட்டாயா நீ? மஞ்சட்காமாலைன்னா? கீழாநெல்லியை அரைச்சு மோரில கலக்கிக் குடுக்கலாம். முன்ன இந்த வீட்டிலே கொல்லை வாசல்னு இருந்தது. எல்லாம் தான் வித்து, மண்ணே இல்லாத சிமிட்டியாயிடுத்து. இந்தச் சைதாப்பேட்டையில் கையகல மண்ணில்லாம வீடு... மோருஞ்சாதம் சாப்பிடுறியா?...”

“பாயம்மாக்கு உடம்பு சரியில்ல. பாவம். அவளால் ஒண்ணும் முடியல. எங்கிட்ட என்ன உடம்புன்னும் சொல்ல மாட்டேங்கறா. ‘எனக்கு ஒண்ணும் இல்ல, வயசாச்சில்ல, நீ போயி உன் அக்கா வீட்ல தங்கி பத்தியமா எதானும் சாப்பிட்டு உடம்பப் பார்த்துக்கப்பா, கடை கிடக்கட்டும்’னு அனுப்பினா. நம்ம குடும்ப உறவெல்லாம் தெரியாது. எனக்கு ஒரே ஒரு அக்கா, நீதான் உறவுன்னு சொல்லிருக்கேன். மோருஞ்சாதம் இருந்தாப் போடு” என்று உட்காருகிறான்.

அவனை உட்கார்த்திவிட்டு, உள்ளே சென்று கை கால்களைக் கழுவிக் கொள்கிறாள். ஒரு தட்டை வைத்துச் சாதமும் மோருமாகக் கரைத்துப் போடுகிறாள். ஒரு உப்பு நாரத்தங்காய்த் துண்டமும் வைக்கிறாள்.

அவன் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டே நிற்கிறாள்.

“ஏன்க்கா, நிற்கிறே? நீ சாப்பிட்டாச்சா...?”

அப்போதுதான் அவளுக்குத் தான் சாப்பிடவில்லை என்ற நினைவே வருகிறது. “சாப்பிடணும்... உனக்கு இன்னும் கொஞ்சம் போடட்டுமா வேம்பு?... சாயங்காலமா கோவில்ல ஒரு குருக்கள் மந்திரிப்பார்னு சொன்னா - முன்ன பரத்துக்கு வந்திருந்தது. அப்படியே அங்கே எங்கானும் கிழாநெல்லி இருந்தா எடுத்துண்டு வரேன். படுத்துக்கோ பேசாம...” என்று கூறுகிறாள்.

அந்தக் கூடம் தாவாரம் - முற்றம் என்று பழைய பாணி வீட்டில், ராம்ஜியும் பரத்தும் படிக்க இரண்டு மூங்கில் பிரம்பு மேஜைகள் கூடத்தில் தான் கிடக்கின்றன. பழைய சுவர் அலமாரிகளில் அவர்கள் புத்தகங்கள். மேலே குக்குக்கென்று சத்தமிடும் பழைய விசிறி. முற்றம் திறந்திருந்தால் பத்திரமில்லை என்று சிமிந்துத் தகடு போட்டு அடைத்திருப்பதால் காற்று கொல்லை வாயிற் புறங்களைத் திறந்தால் தான் வரும். இப்போது ‘கரண்டும்’ இல்லை. ஒரு பாயை ஓரமாகப் போட்டு, கை விசிறி ஒன்றைத் தேடிக் கொடுக்கிறாள்.

பின்னே ஒரு பழைய கிணறு இருந்தது. அதில் எப்போதுமே அவளுக்குத் தெரிந்து நல்ல தண்ணீர் கிடையாது. ஒரே உப்புக் கடலாகக் கரிக்கும். அதைக் குளிக்க, துணி துவைக்கக் கூட உபயோகப்படுத்த முடியாது. அதிலும் தண்ணீரே இல்லாமலான பின் மூடி விட்டார்கள். ஒரு அடிபம்பு போர் போட்டு இறக்கி இருக்கிறார்கள். அதில் அடித்துத் தண்ணீர் எடுக்க வேண்டும். அது சுமாராக நன்றாக இருக்கும். வெளியில் கார்ப்பரேஷன் குழாயில் இருந்து முன்பு தண்ணீர் கொண்டு வருவார்கள். இப்போது, லாரியில் தான் கொண்டு வந்து ஊற்றுகிறான். தண்ணீர் எடுப்பதிலேயே ரேவு தேய்ந்து போகிறாள். அதுவும் மாதம் மூன்று நாள் வந்துவிட்டால், ஆசாரம், வேலைக்குக் குந்தகமாகாதாம். அவன் வைத்திருக்கும் சாஸ்திரம்; தண்ணீரடிக்கலாம்!

சோற்றில் குழம்பை ஊற்றி, உருட்டிப் போட்டு விழுங்குகிறாள்.

இந்தச் சோற்றுக்கு, என்ன உழைப்பு! உழைப்பு மட்டுமா?...

கண்ணீரை விழுங்கிக் கொண்டு தட்டைக் கழுவிவிட்டு சாப்பிட்ட இடத்தைச் சுத்தம் செய்கிறாள்.

வேம்பு படுத்த சுருக்கில் தூங்கி இருக்கிறான்.

அவனைப் பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது. எட்டு வயசுப் பிள்ளை... அவனைக் கொண்டு எங்கோ விட்டுக் கைகழுவின அப்பன்... அப்பன்...!

சட்டென்று பத்திரிகையை அப்படியே வைத்த நினைவு வருகிறது.

அந்த அறையில் ஒரு கட்டை மணையைத் தலைக்கு வைத்துப் படுத்தபடியே ரேவு பத்திரிகையைப் பிரிக்கிறாள்.

“எங்கள் தாம்பத்தியம் பொன்விழாக் கண்டது!” என்ற சிறப்புடன் நித்யசுமங்கலி - பகுதியில் வந்திருக்கும் கட்டுரையில், அறுபதைக் கடந்த சுபலட்சுமியும், அவள் கணவர் எழுபத்திரண்டு வயசுச் சுந்தரராமனும் மாலையுடன் காட்சி தருகின்றனர். என் வாழ்க்கை நிறைவாக இருக்கிறது; எனக்கு நான்கு பெண்கள்; மூன்று பிள்ளைகள். என் பதினான்காம் வயசில் இவரை மணந்து கொண்டு மைத்துனர்கள், நாத்தனார்கள் மாமியார் - மாமனார், கொட்டில் பசு என்று பெரிய குடும்பத்துக்கு வந்தேன்...

“சட்... இதெல்லாம் மேல் பூச்சு! நிசமாக சந்தோஷமாடீ?”

இந்த மாசப் பரிசு பெறும்... சவ்வரிசி டோக்ளா... கேழ்வரகு கட்லெட்...

பெரிய டின்னர் செட் பரிசு பெற்ற பெண்ணின் படம்...

வாழைக்காயில் பர்பியும், போண்டாவும் செய்யலாம்...

குருசுவாமிகள் அருளுரை... அபயஹஸ்தம் - முத்திரைப் பல் சிரிப்பு; முட்டாக்கு. பெண்கள் இக்காலத்தில் வேலை செய்யப் போகிறார்கள். அவர்கள் வீட்டில், பதிக்கேற்ற சதியாக இருப்பதுதான் பாரத தர்மம்.

அம்பாள் இந்த பூலோகத்தையே கர்ப்பத்தில் தாங்கினாள். ஸ்ரீமந்நாராயணன், தன் பத்னியாகிய பூமிதேவிக்கு அந்தச் சிரமம் வரக்கூடாது என்று அந்தப் பளுவைத் தன் உந்திக் கமலத்தில் பெற்று, பிரம்மதேவனை உண்டாக்கினார். பிரும்மா இந்த உலகைப் படைத்தார். பெண்கள் என்றும் எப்போதும் பதிசேவையை மறக்கலாகாது. திருமணமாகாமல் இருப்பதும் இந்து தர்மத்துக்கு விரோதமானது. இதனால் தான் இன்று பூலோகத்தில், வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை உத்பாதங்கள் நிகழ்கின்றன... எனவே அதர்மங்களுக்குப் பெண்கள் காரணமாகிறார்கள். சாஸ்திர விரோதமான காரியங்களில் அவர்கள் ஈடுபடக் கூடாது... நாராயணா...

ரேவு பரக்பரக்கென்று பக்கங்களைத் தள்ளுகிறாள்.

சொர்க்க ஆறுதல் கற்பித்த பத்திரிகை இன்று விஷமாகிறது.

நெஞ்சமர் தோழி - தீர்ப்பாம் தீர்ப்பு! எல்லாம் பொய்!

பத்திரிகையைத் தூக்கிக் கூடப் போட முடியாது. பிறத்தியார் சொத்து...!

பரத் வந்து விட்டான். அதுதான் கதவை இப்படித் தள்ளிக் கொண்டு வரும்!

ரேவு எழுந்து வருகிறாள்.

அத்தியாயம் - 3

பரத் வரவில்லை. பெரியவன் ராம்ஜிதான் வந்து, சமையலறைத் தொட்டி முற்றத்தில் டிபன் டப்பியையும் தண்ணீக் குப்பியையும் வைத்துவிட்டுத் திரும்புகிறான். முகம் மலர்ந்து கோபம் உள்ளூறப் பிதுங்குகிறது.

ராம்ஜி... இவள் சிரமம் உணர்ந்த ஒரே பிள்ளை.

குழந்தைக்கு மூச்சு விட நேரம் இல்லாத படிப்பு. நிறைய மார்க் எடுத்தாலே இலட்சியத்தைக் குறி வைக்க முடியும். மெடிகல் காலேஜ்...! உபயோகமில்லாத ‘பாகவதர்’ பேரன் குருமடத்தின் நிழலில் பூசை செய்பவராகப் பிழைத்த பரம்பரையில், ஒரு இலட்சியவாதி. டாக்டர் ராம்ஜி, எம்.பி.பி.எஸ்., எஃப்.ஆர்.ஸி.எஸ்.! கூத்தரசனைப் போல் எல்.எம்.பி. டாக்டரில்லை.

“ஏண்டா குழந்தே? என்னமோ போல இருக்கே?”

“அம்மா எனக்குக் காலமே ட்யூஷன் மாஸ்டருக்குக் கொடுக்க எழுபத்தஞ்சு ரூபா கொடுத்தாயில்லையா? அதைக் காணோம்மா!”

“சட்டைப் பையிலதானே வச்சிண்டே? நீ அஜாக்கிரதையாகவே இருக்க மாட்டியேப்பா!”

“ஆமாம்மா. மூணு இருபது ரூவா நோட்டு, ஒரு பத்து ரூபா நோட்டு, ஒரு அஞ்சு ரூபா... பர்சில போட்டு, சட்டைப் பையிலே வச்சிட்டுச் சாப்பிட்டேன். பர்ஸ் இருக்கான்னு பார்த்துட்டுப் போட்டுண்டேன். இப்ப ட்யூஷன் மாஸ்டருக்குக் குடுக்கணும்னு பார்க்கறப்ப, வெறும் ரெண்டு ரூபாய் நோட்டும் எட்டணா சில்லறையும் தானிருக்கும்மா...”

அந்தப் பழைய பர்சை எடுத்துக் காட்டுகிறான்.

“ஏண்டா, பரத்கிட்ட கேட்டியா?... உங்கப்பா உங்க மேசைப் பக்கமே வரதில்ல. வேணுன்னா எங்கிட்டத்தான் சண்டை பிடிப்பார்...”

“பரத்தைத் தேடினேன், காணலம்மா...” என்று சொல்லிக் கொண்டு குழந்தை பிரம்பு மேசை, அலமாரி எங்கும் தேடுகிறான். இந்த அமளியில் வேம்பு எழுந்து விடுகிறான்.

“என்னக்கா?...”

“ஒண்ணுமில்லேடா, ட்யூஷன் பணம் குடுக்க - எழுபத்தஞ்சு ரூபா காலம குடுத்தேன். காணலங்கறான். இப்ப... அவர் வந்து கேட்டால் தொம் தொம்னு குதிச்சிட்டு, ஆளுக்கு நாலு அறை வைப்பார்...” உள் மனசு சொல்கிறது... ஆளுக்கு நாலா? உனக்கு மட்டும் தானே அத்தனை அடியும் கிடைக்கும்! பிள்ளைக் குழந்தைகளை அடிக்கமாட்டானே!

வேம்பு அவளையும் பையனையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, கழற்றி மடித்து ஒரு பக்கம் வைத்த சட்டையை எடுக்கிறான். ஒரு நீளப் பிளாஸ்டிக் கவரைத் திறந்து, உள்ளிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து ரேவுவிடம் கொடுக்கிறான்.

“வச்சுக்கோ அக்கா...”

“ஐயோ, நீ எதுக்குடா குடுக்கறே? பாவம் நீயே உன் செலவுக்கு வச்சிருப்பே...”

“எங்கிட்டப் பணம் இருக்கக்கா. எனக்குக் குடுக்க பாத்தியதை இல்லையா? குழந்தையை உடனே பணத்தைக் குடுத்து அனுப்பு!”

ரேவுவுக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. மனம் குழம்புகிறது. இப்படி அடிக்கடி கொஞ்ச நாட்களாக ஐந்து, பத்து காணாமல் போகிறது. தன் ஞாபகத்தின் மீது பழி போட்டுக் கொண்டாள்.

ராம்ஜி அவளிடம் இப்போது உள்ளே வந்து, “அம்மா, பரத்தான் எடுத்திருக்கிறான். அந்த ஃபிரான்ஸிஸ், ராதாகிருஷ்ணன் எல்லோருடன் இவனும் ஸ்கூல் அவர்சிலேயே மரத்தடியில் நின்று ஸ்மோக் பண்றாங்க. எனக்குப் பயமா இருக்கு!”

“நீயே அப்பாட்டச் சொல்லுடா கண்ணா!”

“அப்பாக்கு அவன் தான் பெட். நான் சொன்னா, உங்கம்மா சொல்லிக் கொடுத்தாளோம்பா!”

வேம்பு எழுந்து முகத்தைக் கழுவிக் கொள்கிறான்.

“அக்கா, இந்த முத்தத்து ஷீட்டை எடுத்துட்டு நெருக்கமா வலை போட்டா நல்ல காத்து வரும். புழுங்கறது ரொம்ப...”

“மாமாவுக்கு உடம்பு சரியில்லையாம்மா?”

பணம் கொடுத்ததனால் மதிப்பு வந்து கேட்பது போல் உறுத்தினாலும், “ஆமாண்டா கண்ணா! மஞ்சள் காமாலையோட வந்திருக்கார். நீ இப்ப ட்யூஷன் சார் வீட்டுக்குத்தானே போற? அவங்க வீட்டுப் பக்கம் கீழாநெல்லிச் செடி இருந்தா கொஞ்சம் பறிச்சிண்டு வரியா?”

“சரிம்மா!”

இவனுக்கு சைக்கிள் விடத் தெரியாது என்பதில்லை. கற்றுக் கொள்ளவுமில்லை. பள்ளிக்கூடம் சேர்ந்த நாளிலிருந்து படிப்பு, ஹோம்வொர்க் என்பதற்கு மேல் அதிகமான சிநேகிதர்கள் கூடக் கிடையாது. ஆனால் அவனோ நேர்மாறு.

வீடு திரும்ப ஆறு மணியாகிறது. சைக்கிளை வாசல் வராந்தாவில் கொண்டு வந்து வைக்கவில்லை.

வாசலிலேயே விட்டு விட்டு வருகிறான்.

புத்தகப் பை, சாப்பாட்டுப் பாத்திரம், உள்பட, விசிறி எறியப்படுகிறது.

“துரைக்கு இப்பத்தான் ஸ்கூல் விட்டதாக்கும்! ஏண்டா, சைக்கிளை உள்ளே கொண்டு வைப்பதற்கென்ன?” என்று கேட்டுக் கொண்டு அவன் பையைத் திறந்து சாப்பாட்டு டப்பியை எடுக்கிறாள்.

“ஏண்டா, வாட்டர் பாட்டில் எங்கே காணோம்?”

“ஓ, ஸாரிம்மா, ஃபிரான்ஸிஸ் தண்ணீர் கேட்டான். கொடுத்தேன், மறந்துட்டேன்...”

“அஞ்சு வயசில நீ தொலைச்சாப்பலே இப்பவும் தொலைக்கிற! கொஞ்சமேனும் கருத்து வேண்டாமா. உன்னோடொத்தவன் எப்படி இருக்கிறான் பாரு! ஒரே வயத்துல ஜனிச்சு, ஒரே பால் குடிச்சு ஒரே வீட்டிலேதான் வளர்றேன். ஆமாம், காலம ராம்ஜிக்கு எழுபத்தஞ்சு ரூபாய் ட்யூஷன் ஃபீஸ் கொடுத்தேன். இங்கேதான் பர்சில் வச்சு, சட்டை மாட்டிருந்தான். காணலங்கறான். நீ பார்த்தாயா?”

இதைக் கேட்டதுதான் தாமதம், சோடா பாட்டில் கோலியைக் குத்திவிட்டாற்போல் புஸ்ஸென்று கோபம் சீறி வருகிறது.

“பார்த்தாயா! இந்த வீட்டில் எது காணாமப் போனாலும் என்னைத்தான் கேப்பே! அவன் எது செஞ்சாலும் கரெக்ட். அவன் அப்படி, இது இப்படி! நான் நானாத்தான் இருப்பேன்! டோன்ட் மேக் டர்ட்டி கம்பாரிஸன்! அன்டர்ஸ்டான்ட்!”

அடித்தொண்டையிலிருந்து வரும் கத்தல்.

அவள் திகைக்கிறாள். அப்பன் இப்படித்தான் கத்துவான்! இவள் பேசவே இடம் வைக்கமாட்டான். அந்த நாட்களில், மாமியார், நாத்தனார், கட்டுப்பாடு, வாய் திறக்கக்கூடாது. இன்று, வயிற்றுப் பிள்ளைக்கும் இவள் ஒடுங்கிப் போக வேண்டுமா!

கயிற்றுப் புருஷனே அவன் இப்படித்தான். அவள் பேசவே இடம் வைக்கமாட்டான்! இது வயிற்றில் புருஷப் பிரஜையாக இருந்து உறிஞ்சி உறிஞ்சிப் பால் குடித்தது. பாலில்லையானால் அன்றே ஒற்றைப்பல்லை வைத்துக் கடிக்கும்... இதன் மீது அன்றிலிருந்தே பாசம் இல்லாத வெறுப்புத்தான் மேலிடுகிறது.

ஒரு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று அந்நாளில் ஆசைப்பட்டிருந்தாள்...

“ஏன்? நான் தான் எடுத்தேன்னு அவ்வளவு தீர்மானமாகச் சொல்ற இதோ உன் தம்பி வந்திருக்கானே? அவன் எடுத்திருக்கக்கூடாதா? ஏன், உன் ஆசைப்பிள்ளையே எடுத்துப் போய் ஓட்டல்ல தின்னுட்டு, காசைக் காணலைன்னு பொய் சொல்லக்கூடாதா?...”

“அவன் ஒண்ணும் அப்படிச் சொல்லமாட்டான்!... ஏய், நீ போற போக்கு சரியில்ல. உன் மாமா, தகப்பனாருக்குச் சமானம். அவன் இவன்னு பேசற? உங்கப்பாவும் உன்னைத் தண்ணீரைத் தெளிச்சி விட்டிருக்கிறார். போன மாசமே ஒரு நாள் உன் ட்ரௌசர் பாக்கெட்டில் இருந்து சின்ன நெருப்புப் பெட்டி கண்டுபிடிச்சேன். உன் உதடெல்லாம் கறுத்துக் கிடக்கு. நீ எங்கிட்ட நோட்ஸ் வாங்கணும். அது இதுன்னு பணம் கேட்பதும் அதிகமாயிட்டது. நீ எங்கே போறே, யாரிட்டப் பழகறே, எதுவும் தெரியலே...”

உண்மையில், தன் ஆற்றாமையில் அழுகையே வந்து விடும்போல அவள் புலம்புகிறாள்.

“ஏன், இதெல்லாம் உன் செல்லப் பிள்ளை, அந்தத் தடியன் சொல்லிக் கொடுத்தானா? அவனுடைய உம்மணாம் மூஞ்சித் தனத்துக்கு ஒரு பய பேசமாட்டான். ஒரு பிரண்ட் கூடக் கிடையாது. ரெண்டு வார்த்தை ஒழுங்கா இங்கிலீஷில் பேசத் தெரியாது. பொறாமை. உங்கிட்ட வந்து இல்லாததையும் பொல்லாததையும் கட்டிக் கொடுக்கிறான்.”

“தடியா? செய்யிறதையும் செஞ்சிட்டுப் பிளேட்டைத் திருப்பி அவன் மேலே போடுறியா?” என்று அவனை அடிக்க அவள் கை ஓங்குகிறாள்.

ஆனால் அந்தக் கையை அரக்கத்தனமான ஒரு பிடி இறுக்குகிறது.

“ஆ... ஐயோ! அடபாவி, விடுறா...” என்று அவள் கத்த வேம்பு குறுக்கே அந்தக் கையை விலக்குகிறான்.

“சீ... என்னப்பா பரத்து, அம்மால்லியா? நீ நல்ல பையன் இல்லையா? அம்மா, உன் நல்லதுக்குத்தானே சொல்லுவ...”

“யூ ஷட் அப்? இட்ஸ் நன் அஃப் யுவர் பிஸினஸ்...”

“ஏண்டா நாயே, அவனைத் திட்டறே? இந்த வீட்டில் நான் இருக்கும் வரை அவனுக்கும் சொல்ல உரிமை உண்டு. இன்னிக்கு அப்பா வரட்டும், உனக்கு ஒரு வழி பண்றேன்...”

ரேவது குத்துப்பட்டதன் உணர்வுகளை விழுங்கிக் கொள்கிறாள்.

“...மாமி, சுதா சாவி கொடுத்தாளா...?”

ஓ. கனவுக் குவியல்களிலிருந்து விடுபட்ட நினைவுடன் வாசற்படியில் நிற்கும் சுதாவின் புருஷனுக்குச் சாவியை எடுத்துக் கொடுக்கிறாள்.

வேம்பு, சட்டையை மாட்டிக் கொண்டு, “கவலைப் படாதே அக்கா, நான் காற்றாட வெளியே போய் வரேன்...” என்று வெளியே செல்கிறான். ரேவுவுக்கு உள்ளே வந்து எந்த வேலையும் செய்யப் பிடிக்கவில்லை. பரத்தைப் பற்றிய கவலையே மிக அதிகமாக அமுக்குகிறது. பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும், இச்செய்திகள் இளம்பிள்ளைகளின் போதைப் பழக்கம் குறித்து நிறைய வருகின்றன. ஒரு பெரிய கதையே பத்திரிகைத் தொடராக வந்தது. தொலைக்காட்சிப் பெட்டி முன்பு ஒன்று இருந்தது. அது கெட்டுப் போய்விட்டது. கறுப்பு வெள்ளைதான் - மாமனார் பார்ப்பார். அவர் மூன்று வருஷங்களுக்கு முன் அமெரிக்காவில் ஏதோ ஒரு கோவிலுக்குப் பூசை செய்யப் போய், பெண் வீட்டோடு இருக்கிறார். அதற்குப் பிறகு இங்கே பிள்ளைகள் படிக்கிறார்கள் என்பது மட்டுமில்லை. ரேவு பார்த்துச் சந்தோஷமடையக் கூடாது என்பதற்காகவே அவள் புருஷன் அதை வாங்கவில்லை. அவன் வீட்டில் இருந்து ரசிக்கும் நேரமே மிகக் குறைவு. இரண்டு மூன்று நாட்கள் விடுப்பு, விசேஷம் எதுவானாலும் குருசுவாமிகளைப் பார்க்க திருமடத்துக்குப் போய்விடுவான். அவளும் கூடப் பிள்ளைகளுக்குச் சமைத்து வைத்துவிட்டு, ஒன்பது கஜம் உடுத்திக் கொண்டு, அவனுடன் சென்று ஏவல் பணிகளைச் செய்வதுண்டு. ராம்ஜி வராது; படிப்பு படிப்பு, படிப்பு - நிறைய மார்க், மேல்சாதித் தடைகளை உடைத்துச் செல்லும் உயரத்தை எட்டவேண்டும்.

இப்படி பரத்தை ஃபிரண்ட் வீட்டில் இருக்கிறான் என்று விட்டுச் சென்றதாலோ? கண்களைத் திறந்து கொண்டே பள்ளத்தில் கால் வைத்திருக்கிறார்களா?

உள்ளே வந்து விளக்கேற்றுகிறாள். இரவுக்கு ஒரு சோற்றைக் களைந்து வைக்கிறாள். ஒரு குழம்பைக் காய்ச்சி அப்பளமும் வடகமும் பொரிக்கிறாள். பாலைக் காய்ச்சி விட்டு வெளியே வருகையில், சுதா வீட்டில் தொலைக்காட்சியில் செய்திகள் வருகின்றன.

பரத் பள்ளியிலிருந்து வந்து அந்த கலாட்டாவுக்குப் பிறகு, அறையில் சென்று பாயை விரித்துப் படுத்துக் கொண்டிருக்கிறான்.

“டேய் பரத், என்னடா இது நேரம் காலம் இல்லாமல், படிக்கிற பிள்ளைக்குத் தூக்கம்? எழுந்திரு, எழுந்திரடா? வயிற்றில் ஒன்றுமில்லை; பசி தாங்கமாட்டியே? வா, தோசை வார்த்துப் போடுறேன். தோசையும் மோருஞ்சாதமுமாச் சாப்பிடு, வா!”

ஹ்ம்... அவன் வீம்பில் எழுந்திருக்கவில்லை.

கட்டியவன் எப்போது வருவானோ?

ரேவு, சோர்ந்து போய் வாசலுக்கு வந்து நின்று பார்க்கிறாள்.

இவர்கள் வீட்டுப் பக்கம் உள்ள பொது விளக்கு எரியவில்லை. இருட்டாக இருக்கிறது. தெருக் கடைசியில் யார் யாரோ விளக்கொளியில் வருவதும் போவதும் தெரிகிறது. வெளியில் இருந்த சைக்கிளை வேம்புதான் வராந்தாவில் வைத்தானோ, சுதா புருஷன் வைத்தாரோ? பூட்டுச் சாவி அதிலேயேயிருக்கிறது.

“ஏம்மா, பரத் வந்துட்டானா?” என்று கேட்டுக் கொண்டு ராம்ஜி வருகிறான்.

மணி எட்டரை.

வேம்புவுக்கு எங்கிருந்தோ கீழாநெல்லி கொண்டு வருகிறான்.

அடுப்படியில் ஒழியாத சொச்சங்கள். ராம்ஜி சாப்பிட்டு விட்டு சுதாவின் பகுதியில் படிக்கப் போய்விடுகிறான். இது ஒரு சலுகை. சுதா வர இரவு ஒன்பதரை ஆகும்.

வேம்புவுக்கும் சாப்பாடு போட்டாயிற்று.

பத்து மணிக்கு அவள் புருஷன் வருகிறான்.

“நான் டின்னர் சாப்பிட்டாச்சு. சாப்பாடு வேண்டாம்...” என்று சொல்லிவிட்டு, மாடிப்படி ஏறுகிறான்.

ரேவுக்கு அய்யோவென்று அழத் தோன்றுகிறது.

சாம்பார், தோசை மாவு... சோறு...

பார்த்துப் பார்த்து கியூவில் நின்று வாங்கிய கடைச் சாமான்கள்.

தோசை மாவை வழித்து ஒரு டப்பாவில் போடுகிறாள். சாம்பாரையும் ஊற்றி ஒரு டப்பாவில் போடுகிறாள். “ராம்ஜி... ராம்ஜி!” என்று அந்த இடை வாசலில் கதவைத் திறந்து குரல் கொடுக்கிறாள்.

“மாமாட்டச்ச் ஒல்லி இது இரண்டையும் ஃபிரிட்ஜில் வைக்கச் சொல்லுடா கண்ணா, வீணாப் போயிடும்...”

அவன் வாங்கிப் போகிறான்.

அவள் புருஷனின் குரல் மேலிருந்து கேட்கிறது.

“ஏய்! பாலெடுத்திட்டு மாடிக்கு வா!”

இது புருஷ மிருகத்தின் ஆணை.

இவனிடம் பேசவா முடியும்? இவனுக்கு... ஹ்ருதயமே கிடையாது... பாலை எடுத்துக் கொண்டு சென்று கட்டிலுக்குப் பக்கத்தில் வைக்கிறாள்.

“... வந்து, பரத் நடவடிக்கை சரியாயில்லை. சிகரெட் புடிக்கிறான். இன்னிக்கு ராம்ஜிக்கு கொடுத்த எழுபத்தஞ்சு ரூபாய் - ட்யூஷன் பணத்தை எடுத்துண்டு போயிருக்கிறான். கேட்டால், என்ன கத்துக் கத்தறது? கோபம், அப்படியே படுத்துண்டு தூங்கறது. எனக்குப் பயமாயிருக்கு. அவன், போதை மருந்து சாப்பிடறானோ என்னமோன்னு...”

“ஆமா, உன் தம்பி வந்திருக்கான் போல?”

அவளை இழுத்துக் கட்டிலில் தள்ளிவிட்டு அவன் கதவைச் சாத்துகிறான்.

அவளுள் சொற்கள் அழுக்குப் புழுக்கள் போல் பொல பொலக்கின்றன. வெட்கம் கெட்ட ஜன்மம். மிருகம், ராட்சசன், நீ நீ செத்தாக்கூட நான் அழமாட்டேண்டா...

அவனுடைய அறுபது கிலோ சரீரமும் அவளை அழுத்துகிறது...

‘நா... நா... ஒருநாள் ஓடிப் போயிடுவேண்டா... பாத்திட்டே இரு...’

அத்தியாயம் - 4

காலையிலேயே எழுந்து வேம்பு தண்ணீரடித்து எல்லா பாத்திரங்களிலும் நிரப்புகிறான். வீடு பெருக்குகிறான். இவளுக்குக் காய் நறுக்கிக் கொடுக்கிறான். மிக்ஸி சத்தம் போடுவதைப் பார்த்து, “இதுக்கு வேற புஷ் போடணும் அக்கா, நான் போட்டுத் தரேன்...” என்று சொல்லிவிட்டு நிமிஷமாகத் தேங்காயை அம்மியில் அரைத்துத் தருகிறான்.

முதல் நாள் மீந்த சாம்பாரைக் கொதிக்க வைத்து இவர்கள் சாப்பிட வைத்துக் கொண்டு, புருஷனுக்கு மட்டும் புதிதாகத் தக்காளிக் குழம்பும் வாழைக்காய் வதக்கலும் செய்கிறாள்.

பரத் ஒன்றுமே பேசாமல் எழுந்து, குளித்துச் சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக்கூடம் போகிறான். புருஷன்காரன் ஒரு வார்த்தை பணத்தைப் பற்றிக் கேட்கவில்லை.

“ஏண்டா, ராத்திரி சாப்பிடாமப் படுத்திட்டாயா? உடம்பு என்னத்துக்காகறது? உங்கம்மா மேல கோபிச்சுக்கோ, சோத்துமேல் கோபிச்சுக்கக்கூடாது. பொட்டைகுட்டிகள் தான் சாப்பாட்டில் கோபம் காட்டி உடம்பை மெலியப் போடணும். உனக்கென்ன, நல்லாச் சாப்பிட்டு வஸ்தாது மாதிரி ஆகணும்... என்ன?...”

“அப்பா, நான் பணத்தைப் பார்க்கவேயில்ல. நான் தான் எடுத்தேன்னு அம்மா என்னை வந்து அடிக்கலாமா?”

“ஏண்டி? குழந்தையை கை நீட்டி அடிச்சியா? என்ன திமிர் உனக்கு?”

“ஆமா, நான் அடிக்கிறேன்! அவன் என்னை அடிக்காமலிருந்தால் போதாதா? பொய்யும் புளுகும் சொல்றான். கேட்டுக்குங்கோ!”

“இத பாருடி... இது மாதிரி ஏதானும் புகார் இனிமேல் வந்தால் நான் கெட்டக் கோபக்காரனா இருப்பேன்! எங்கோ தறிகெட்ட குடும்பத்திலேருந்து உன்னைக் கொண்டு வந்து என் கழுத்தில் கட்டிட்டா! இப்ப உன் தம்பி எதுக்கு வந்து உறவாடறான்! பணம் எங்கேன்னு அவனைக் கேளு!”

அவள் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுக்கிறாள்.

அவர்கள் வெளியே சென்ற பிறகு, அடக்கி வைத்த ஆற்றாமை, கண்களில் வெம்பனியாய்க் கொப்பளிக்கிறது.

“வேம்பு இந்த வீட்டை விட்டு எங்கேயேனும் ஓடிப் போயிடலாம் போல இருக்கு. பதிமூணு வயசில் இந்த வீட்டுக்கு உழைக்க வந்தேன். எங்கேயானும் ரோடில போறப்ப, வீட்டில் இருக்கறச்சே, பொட்டுனு சாவு வரக்கூடாதான்னு இருக்குடா...”

“சீ என்னக்கா இது. உனக்கென்ன குறைச்சல் இப்ப? புருஷன் - சொந்த வீடு, சம்பாத்தியம், குருமடத்து ஆதரவு, ரெண்டு மணியான பிள்ளைக் குழந்தைகள்... நீ எதுக்கு வருத்தப்படறே? உன் வயசில் இன்னிக்குக் கல்யாணமாகாத பெண்கள் அவஸ்தைப் படறா. ஏதோ சம்சாரம்னா இப்படி ஏற்ற இறக்கம் இருக்கத்தானிருக்கும். இதுக்குப் போய் குழந்தை மாதிரி அழறே!...”

இவன் அண்ணனா... தம்பியா?

“சீ, கண்ணத் துடச்சிக்கோ... நீ சொப்பனத்தில் கூட ஓடிப்போறதப் பத்தி நினைக்கக் கூடாது! நம்மைப் பெத்த கடன்காரி இப்படிப் போனதனாலதான் நாம இன்னும் சிறுமைப்படறோம். இப்படிப்பட்ட குடும்பத்திலேருந்து உன்னைத் தாங்கி ஒரு கவுரவமான நிழலில் உனக்கு வாழ்வு குடுத்திருக்காளே, அதுக்கே நீ சந்தோஷப்படணும். என்னை அவர் சொன்னார்னா, நான் வருத்தப்படலே. ஊரிலே எவனெவனோ என்னைத் திருடன்னாங்க. போலீஸ் ஸ்டேஷன்ல கொண்டு போய் அடி வாங்கிக் குடுத்தாங்க. இவர் என் அக்காவுக்கு வாழ்வு குடுத்த அத்திம்பேர். சொல்லிப் போறார். எனக்குக் கிலேசமில்ல. நீ அழாதே. சாப்பிடலாம் வா!” என்று தேற்றுகிறான்.

இந்தக் கௌரவ நிழலைப் பற்றி எப்படி இவனுக்குப் புரியவைக்க? “இல்லைடா வேம்பு. நான் அப்ப எப்படியானும் படிச்சி ஒரு எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சிருக்கணும். ஏதானும் வேலைக்குப் போய், என்னால் என்னைக் காப்பாற்றிக்க முடியும்னு ஆயிருக்கணும். கல்யாணம்னு என்னை இப்படி அடிமைச் சாசனம் பண்ணிக் கொடுக்க வேண்டாம்... கல்யாணம் பண்ணிண்டாலும், அப்ப புருஷன் மதிப்பான். இப்ப சுதாவைப் பாரு, எவ்வளவு ஃபிரியா இருக்கா? அவ புருஷன் அவளை எப்படி மதிக்கிறார், தாங்கறார்? அவர் பழகற விதமே மரியாதையாக இருக்கு. அவள் பகல் வேலை, ராவேலைன்னு போறா. அவரும் பாங்க் ஆடிட்டிங்தானே, பாதி நாள் போவார். ரெண்டு பேருக்கும் கர்வம் கிடையாது. அவாளும் எங்கோ வீடு கட்டிண்டு இருக்கா. காலி பண்ணிட்டா, வேற யார் வருவாளோ!...”

“நீ வெளிலேந்து பார்க்கறப்ப எல்லாம் நன்னாருக்காப்புல இருக்கும். இப்ப உன்னைக் கூட அப்படித்தான் சொல்லுவா... எங்க பாயம்மாவை நினைச்சுப் பார்த்தால் நமக்கு ஒண்ணுமே சொல்லத் தோணாது. நாமெல்லாம் பெத்தவா, உடம்பிறப்புங்கற குடும்பம். ஒரு மாதிரி விட்டே போய் தூக்கி எறிஞ்சாப்புல சிதறிப் போனோம். ஆனா, பாயம்மா, பாய் ரெண்டு பேரும், இந்த தேசத்துக்காக, சமுதாயத்துக்காக, பாட்டாளி, ஒடுக்கப்பட்ட ஏழைகள்னு ஒரு இலட்சியமா வாழ்ந்திருக்கா. பதினாறு பதினஞ்சு வயசில அவரை வீட்டில் வச்சிட்டுச் சாப்பாடு போட்டப்ப, கட்சிக்காரங்க எல்லாருமே, கட்சிக்கு ஒரு கெட்ட பேர் வராமலிருக்கணும். கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு பண்ணினாங்களாம். அப்ப தாலி கீலி ஒண்ணும் கிடையாது. திருச்சிக்குப் பக்கத்தில்தான் கிராமம் சொன்னா. அரசநல்லூர்ல அவநப்பா ஸ்கூல் மாஸ்டர். இங்க வந்து அப்ப, கட்சிக்காரங்க, ஒரு குடும்பமா, எந்த ஆடம்பரமும் இல்லாம, தேவைகளே குறைவா ஒரு வாழ்க்கையாம் அது. சொந்த பந்த உறவுகளே, எனக்குமில்ல; அவருக்குமில்ல. சொந்தக்காரங்க வந்து ஏதானும் சாமான், நகை, பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளக்கூடாதும்பார். ஏனென்றால், அப்ப நாமும் போய், அந்தப் பொருட்களுக்காக உறவு பாராட்ட வேண்டி வரும்; பாசம் வரும் - சுயநலம் வரும்னு சொல்லுவாராம்.”

“சுதந்தரம் வந்த பிறகும் ஜெயிலுக்குப் போயிருக்கிறாங்க. சுத்த லட்சியவாதியாக இருந்ததால, கட்சியிலேயே பிளவு வந்தது பிடிக்காமல், அரசியலே வேணாம்னு ஒதுங்கிட்டாங்க. ஆனால் இப்பவும் அந்தப் பழைய சமுதாய உறவுதான் அவங்களுக்குப் பிடிப்பே. அவங்க - பாயும், பாயம்மாவும் சேர்ந்து எப்படிப் பாடுவாங்க தெரியுமா? ஜயபேரிகை கொட்டடா... கொட்டடா...ன்னு பாடுவாங்க. புல்லரிச்சிப் போகும். காக்கை குருவி எங்கள் சாதி...ன்னு அவர் நிசமாவே ஆடுவார் அக்கா... தெய்வ மனுசர் அவர்.”

“அவங்க வீட்ல சாமி படம் கிடையாது. பாரதி படம், மார்க்ஸ், லெனின், காந்தி படங்கள் தானிருக்கு. தீமையற்ற தொழில் புரிந்து, ஒரு நல்ல வாழ்வு வாழணும் - அடுத்தவர் கெடும்படி பார்க்கலாகாதும்பார். ஆறுமாசம் உடம்பு முடியாம இருமிட்டிருந்தார். ‘வேம்பு, பாயம்மாளைப் பார்த்துக்க. எங்கிட்ட சொத்தில்ல, இந்த மிசின் கடை, நீ வச்சிப் பிழைச்சிக்க. ஒரு கல்யாணம் கட்டிக்க, ஏழையாப் பார்த்து. எளிய வாழ்க்கை வாழுங்க...’ன்னு சொல்லுவார்... அவங்களோட பழகியே நான் பழைய முரட்டுத்தனம் கோபம் எல்லாம் விட்டுட்டேன். இன்னிக்கு அவங்க கட்சியே உடைஞ்சு, இலட்சியம் சிதறி எப்படியோ தத்தளிக்கிறது. ஆனால், அவங்க இன்னமும் அசையாமல் தான் இருக்காங்க... டவுனில் ஒரு பழைய வீட்டின் வாசல்புறம் தட்டி அடைச்ச கடை. ஒழுங்கைச் சந்து, ஒரு சின்னக் கூடம்; சமையலறை; பின்னால் அடி பம்பு, கக்கூஸ்... அவங்க செல்வாக்குக்கு இப்படியா இருக்கணும்?...”

அவன் ஏதோ ஒரு வேகத்தில் தொடர்ச்சியாகப் பேசுகிறான். அவள் கேட்கிறாள். கை சோற்றைப் பிசைகிறது. ஆனால் மனம் எங்கோ தாவுகிறது.

“அவாளுக்குக் குழந்தைகளே பிறக்கலியா வேம்பு?”

“அப்படித்தான் தோணுது. நமக்குன்னு சொந்தமா ஒண்ணும் வேணாம் - நாம் பிழைக்க ஒரு தொழில்... வேணும்னு சொல்லிட்டே குழந்தையும் வேணாம்னு வச்சாங்களோ? அப்படி வைக்க முடியுமா? எனக்குத் தெரியலக்கா...”

“அவா - முஸ்லிமெல்லாம் கட்டுப்பாடு கூடப் பண்ணிக்க மாட்டாங்களே, ஆனா இவதான் ஜாதி மதம் இல்லேன்னியே? எப்படி வேணாம்னு வச்சாளோ, நிம்மதி. அதுக்காக வேணும் அந்தப் பாயைக் கும்பிடணும். நம்ப அம்மா ஓடிப்போனான்னு இன்னிக்கு உலகமும் ஏன், பெத்த பிள்ளை நீயும் கூடத் தூத்தறியே? அவ ஓடிப் போகல. அவளை நம்மப்பன் புடிச்சி வெளில தள்ளினான். கதறக் கதறத் தள்ளினான். இந்தப் புருஷ வர்க்கம்... சீ!”

“ஏக்கா, ஒட்டுமொத்தமா எல்லாரையும் வையறே! நல்லவா எத்தனையோ பேர் இருக்கா... இப்பத்தானே பாயப்பத்திச் சொன்னேன்? நான் முதமுதல்ல இதே மட்றாஸில் ஓட்டல் வாசல்ல நின்னுண்டு போறவா வரவாகிட்ட, சாப்பிட்டு மூணுநாளாச்சி, ஏதானும் வேலை குடுங்கன்னு கெஞ்சினேன். ஒத்தரும் நிமுந்து கூடப் பார்க்கல. திருடினாத்தான் பிழைக்கலாம்னு, பிக்பாக்கெட் அடிச்சி ஓட்டல்ல சாப்பிடப் போனேன். நான் யாரிட்டத் திருடினேனோ, அவரே அங்கே வந்தார். போலீசுக்குக் கூட்டிப் போய் அடிக்கப் போறார்னு நினைச்சேன். ஆனால் அவர் அதைச் செய்யல. சிங்கப்பூர் பாய்க்கு லெட்டர் கொடுத்து அனுப்பினார்...”

“வேம்பு, நீயே பெண்ணாக இருந்தால் அனுபவம் வேறயா இருக்கும்... நம்மப்பான்னு சொல்லிக்கவே எனக்கு வெறுப்பா இருக்கு. வருஷா வருஷம் குழந்தையை சுமக்கக் கொடுத்தாரே, எப்பவானும் அம்மா எப்படிக் கஷ்டப்பட்டான்னு பாத்தாரா? பாகவதர்னு பேரு. அவர் என்னிக்கு வீட்டில உக்காந்து பாடினார்? வாய்ச்சவடால் அடிப்பர். ஊரிலே அஞ்சு ட்யூஷனுக்கு வழியில்லாம போயிட்டது. ஏதோ கல்யாண காலத்தில் அங்கே கதை பண்ணினேன். இங்கே பண்ணினேன்னு சொல்லுவர். அப்ப கிடைச்சாத்தான் அஞ்சு, பத்து, தேங்கா மூடிக்கும் ரவிக்கைத் துண்டுக்கும் தான் அம்மாவுக்குப் புருஷனால வரும்படி எனக்குத் தெரிஞ்சு. அம்மா கன்னம் ஒட்டி, கண் வங்குல போயி, குடுக்கை வயிரோடு நிக்கறாப்பல தான் எப்பவும் இருந்தா; அம்மான்னா அந்த ரூபம் தான் இப்பவும் கண் முன்ன வருது. ஒரு கையகல சமையல் ரூம்; தட்டி மறைக்க அரைக்கூடம். எட்டுக் குடுத்தனம் உள்ள தெலுங்கப்பாட்டி வீட்டை மனசிலேந்து பிடிச்சித் தள்ள முடியல. நம்மை எல்லாம் விட்டுட்டு அடுப்பங்கரையில் உட்கார்ந்து சாப்பிடுவார். இத்தனை குழந்தைகளுக்கு நடுவே, எப்படி அவரால் பெண்டாட்டியை ஆள முடிஞ்சது! தோணித்து! தூ, வெக்கங்கெட்ட ஜன்மம்... நம்பம்மா தெய்வம். இருக்காளோ, செத்துப் போனாளோ?...”

முகிழ்த்த வெம்பனி முத்துக்களைத் துடைத்துக் கொள்கிறாள்.

“அது சரிடா வேம்பு, நீ கல்யாணம் பண்ணிப்பே ஒருநாள், அந்தப் பெண்ணைப் பூப்போல வச்சுக்கணும். அவ இஷ்டம் இல்லாம மிருகமா நடக்கக்கூடாது...”

“எனக்குக் கல்யாணமா? அது எப்படி நடக்கும் அக்கா?...” என்று வேம்பு விரக்தியாகச் சிரிக்கிறான்.

“ஏனிப்படிச் சொல்ற? அந்தப் பாயம்மா பார்த்து உனக்கு ஒரு கல்யாணம் பண்ண மாட்டாளா?”

“அதெப்படி? நீ சித்த முன்ன சொன்னாயே, அது போல எனக்கு ஒரு எட்டாவது படிப்புக்கூட இல்லை அக்கா, ஏதோ பழக்கத்தில் இங்கிலீஷ் பேசுவேன் கொஞ்சம். பாய் எனக்குச் சில புத்தகங்கள் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அதெல்லாம் நடைமுறையில் எனக்குக் கவுரவம் கொடுக்குமா? சாதி - மனுசான்னு கல்யாணமாகாது. படிப்பும் கவுரவமான வேலையும் இல்லை... நான் அதெல்லாம் நினைக்கிறதில்ல. பாயம்மா இருக்கும் இடம், யாரோ சேட்டு, அவங்க இருக்கும்வரை இருக்கலாம்னு விட்டுக் கொடுத்திருக்கிறான்; அவங்களுக்குப் பிறகு, தொழில் மட்டும்தான் எனக்குத் தங்கும்...”

“எப்படியோ, திருடி, குடிச்சு, சீரழியாம, ஒதுங்கி இருக்கே, அதுவே புண்ணியம்தான்” என்று ரேவு தட்டைத் தூக்கிக் கொண்டு போகிறாள். வேம்பு பேசாமல், சாப்பிட்டு முடித்து, முற்றத்துக் குறட்டில் வந்து உட்காருகிறான்.

“ரேவு மாமி? ரேவு மாமி?...”

சுதாதான். இடைக் கதவைத் திறந்திருக்கிறாள்.

“இந்தாம்மா, பத்திரிகை...” என்று ரேவு அதை எடுத்துக் கொடுக்கிறாள்.

“பார்த்தேளா?”

“உம்...”

“நல்ல யோசனை இல்லை...?”

ரேவு உதட்டைப் பிதுக்குகிறாள். “இப்ப ட்யூட்டியா உங்களுக்கு?”

“இல்ல. எனக்கு இன்னிக்கு நைட்தான். ஒரு பர்த்டே பார்ட்டிக்குப் போகணும். போயிட்டு அப்படியே ஆபீஸ் போயிடுவேன். வந்திருக்கிறது யாரு, உங்க பிரதரா? அம்பத்தூரிலோ எங்கோ இருக்காரே...?”

“ஆமாம். சும்மா பார்த்துப் போக வந்தான்...”

இவள் பேச்சைத் தொடரும் மன நிலையில் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு அவள் “வரேன் மாமி!” என்று சொல்லிக் கொண்டு போகிறாள்.

ரேவுவுக்கு, இந்தச் செய்தியை வேம்புவிடம் சொல்லலாமா என்று ஒரு சமயம் தோன்றுகிறது. ஆனால் அப்படிக்கு அவனுடன் ஒட்டுதலாகப் பழக, அவளைப் புரிந்து கொள்ளக் கூடியவனாகவும் தோன்றவில்லை.

“இவா தான் நீ சொன்ன குடித்தனக்காராளா?”

“ஆமாம். நைட் ட்யூட்டிக்கு இப்பவே போறா. இனிமே காலமதான் வருவா. சமைக்கணும் புளியக் கரைக்கணும், தேங்காயரைக்கணும்னு ஒரு தொல்லை. ஒரு ரொட்டியை வாங்கிண்டு வந்து, ஊறுகாயையும் ஜாமையும் வச்சிண்டு சாப்பிட்டுடுவா. புருஷன்னா, அப்படித்தானிருக்கணும்.”

வேம்பு பேசவில்லை.

“நான் ஒரு சமயம் நினைச்சிப்பேன். அப்படி அம்மாவை நடுவீதில அடிச்சி விரட்டித் துரத்தினாரே அப்பா, அம்மா தற்கொலை பண்ணிண்டிருக்கக் கூடாதான்னு தோணும். அந்த வீட்டில் இத்தனை குடுத்தனமும் இருந்ததே, யாரானும் இது அநியாயம்னு வந்து சொன்னாளா? தெருவு... ஊரு, சமுதாயம் இதெல்லாம் யாரு?... நிசமா சொல்றேன் வேம்பு, அப்ப, அம்மா கெட்டுப் போறதுன்னா என்னன்னு தெரியாது. அவிசாரின்னா என்னன்னு தெரியாது... ‘அம்மாவுமில்லை. ஆத்தாளுமில்லை! தலை முழுகியாச்சு! போடி உள்ளே’ன்னு அப்பா கத்தும்படி அவள் என்னதான் செஞ்சான்னு உனக்கு நினைப்பு இருக்கா வேம்பு?”

“எனக்கு ஒண்ணும் தெரியல. காவேரி மணல்ல விளையாடிட்டு வந்தேன். ரொம்பப் பசி. அடுப்பங்கரையிலும் எதிலும் ஒண்ணுமில்ல. நீ அழுதிண்டு உக்காந்திருந்தே. குடித்தனக்காராள்ளாம் குசுகுசுன்னு பேசிண்டு வாசப்படியப் பாத்துண்டு நின்னா... அப்ப, அப்பா என் காதைப் புடிச்சு இழுத்து இரண்டடி வச்சி உள்ளே தள்ளினார். ‘உங்கம்மா செத்துப் போயிட்டா! எங்கியானும் அவளத் தேடிண்டு போய்ப் பேசினே, உன்ன வெட்டிப் பலிபோடுவேன், படவா’ன்னார். செத்துப் போனா, அவ பொணம் இல்ல. அப்புறம் தேடிண்டு எப்படிப் போறதுன்னு தோணித்து. கேட்கல. பயமாயிருந்தது. எனக்கு அங்கே வேத பாடசாலையில் தான், அம்மா கெட்டுப் போனா, அவிசாரி, டாக்டரை வச்சிண்டா, அபார்ஷன் பண்ணின்டான்னெல்லாம் தெரிஞ்சது. அப்பவும் கூட அதுக்கெல்லாம் ஒரு அர்த்தமும் தெரியல...”

“இப்ப நினைச்சுப் பார்க்கறேன். அம்மா வீடு வீடா முறுக்குச் சுத்த, வடாம் போட, ஊறுகாய் போட எதுக்குப் போனா? பாவம் அவ. அப்பாக்கு வீட்டுக்கு வந்த போது, கலத்தில சோறு எப்படி விழுது, காபி திக்கா இருக்கணும்னு ஜம்பம் அடிச்சிண்டு எப்படிக் குடிக்க முடியறதுன்னு பார்த்தாரா? கூத்தரசன் டாக்டர் நல்லவர். இவளுக்கு எப்படியானும் ஒத்தாசை செய்யணும்னு, அவம்மாவை விட்டு இந்தக் காரியங்களுக்கெல்லாம் வரச்சொல்லி, காசு பணம் கொடுத்திருக்கிறார். வருஷா வருஷம் பிரசவம், பாதியும் குழந்தை சாவு... உடம்பு நலிஞ்சு போயிருக்கு. அப்பா என்ன கவனிச்சார்? கூத்தரசன் வீட்டிலே வடாம் புழிஞ்சி எடுத்து வைக்கப் போயிருக்கா, மயக்கம் போட்டு விழுந்திருக்கா. அவர் உடனே ஊசி போட்டுப் படுக்க வச்சிருக்கார். ஆனா மயக்கம் தெளிஞ்சதும் உடனே அவர் வேலைக்காரன் தங்கவேலுவை அனுப்பிப் பார்த்துட்டு வரச் சொல்லியிருக்கார். நான் நினைக்கிறேன்... அம்மாவுக்கு அப்ப அபார்ஷன் ஆயிருக்கும்னு. அந்த நிலையில் அவளை அடிச்சு விரட்டினாரே, மனுஷனா? பிராமணனாம், வேதமாம், சாஸ்த்ரமாம்?... நானெல்லாம் வீட்டு வாசல் தாண்டக்கூடாது. காவேரிக்குப் போகக்கூடாது. தெலுங்குப் பாட்டி தவிர ஒரு மனுஷா இந்த அநியாயம் பத்திப் பேசல. ‘உங்கப்பாக்கு ஏன் இப்படி ராட்சசக் கோபம் வருது? அவ பொம்மணாட்டி என்ன பண்ணுவ? டாக்டர் என்ன கட்சியானா என்ன, நாஸ்திகனானா என்ன? ‘பாட்டி, ஒரு படி வடாம் போட்டா, அஞ்சு ரூபா குடுக்கிறா அவம்மா. நல்ல மாதிரி. இந்தக் குழந்தைகளுக்கு ஜுரமோ, இருமலோ காசு வாங்காம மருந்து தரார். வேம்புக்கு மாந்தம் வந்து இழுத்துதே, அவர் தான் மருந்து குடுத்தார். பாலுவுக்கு சொறி வந்து புழுவய்கிறாப்பல நெளிஞ்சான்... அவா என்ன ஜாதியானா என்ன? வக்கீலாத்துல, பூணூல் முறுக்கு நூறு சுத்தி வெந்தெடுத்தேன் - ஒரே ஆளா. அஞ்சு ரூபாய் நீட்டினா. எனக்கு டாக்டர் வீடுன்னா அதனால் தான் தட்ட முடியல’ன்னு சொல்லுவா, பாவம்...’ன்னா...”

“ஏ கிழவி? சின்னப் பொன் மனசில விஷத்தைப் போடாதேங்கோ? போரும், அடுத்த மாசமே உங்க வீட்டைக் காலி பண்ணிடறேன். குரு சுவாமிகள் மடத்துக்குப் பக்கத்தில், ஒரு வீட்டைப் பார்த்திண்டு ஊரை விட்டே பேந்து கும்மாணம் வந்தார்... அம்மா... அம்மா திரும்பிக் கூத்தரசன் வீட்டுக்குத் தான் போயிருப்பா. என் கண்ணில் படவேயில்லை...”

“போரும் அக்கா, மனசை என்னமோ வேதனை பண்றது. இந்த பாலுத் தடியனக் கோயமுத்தூர்ல பார்த்தேன்னு சொன்னேனா? அவன் சொன்னான். அம்மா சாகலியாம். கூத்தரசன் டாக்டர் அப்பவே செத்துப் போயிட்டாராம். அவர் வீட்டை யாரோ துலுக்கன் வாங்கி இடிச்சுக் கட்டிட்டானாம். அவர் புள்ளை கதிர், உன்னோடு படிச்சானே, அவன் டாக்டர் படிச்சு, அமெரிக்கா போய் செட்டிலாயிட்டானாம். நம்ப அம்மா, தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்டில், கண் தெரியாம பிச்சை எடுத்தாளாம், பார்த்தானாம். அவ மனசறிஞ்சு கட்டின புருசனுக்குத் துரோகம் பண்ணினா, கடவுள் தண்டனை குடுக்கிறார்ன்னான். எப்படிக் கல்நெஞ்சாயிட்டான், பாவி! நான் உடனே பாய்ட்டச் சொல்லிட்டுப் போய்ப் பார்த்துக் கூட்டிட்டு வரலாமான்னு ஊர் முழுசும், கும்மாணம், மாயவரமெல்லாம் கூடத் தேடினேன். பொய், நம்ம அம்மா அப்பவே, சீரங்கத்திலே செத்துப் போயிட்டான்னு கேள்விப்பட்டேன். எனக்கு எப்ப நினைச்சாலும் சங்கடம் பண்றது... பாய் சொல்றாப்பில, இந்த சாமி, மதம், பூசை எல்லாமே பொய்னு கூட நினைக்கிறேன், சில சமயத்துல...”

ரேவுவுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது. வேரோடிப் போன ஒரு நச்சுக்களையை ஆட்டி ஆட்டிப் பிடுங்கிப் போடுவது போல் தோன்றுகிறது.

“கட்டினப் பெண்டாட்டி, கண்ணில உசிரை வச்சிண்டு இவருக்குச் சமைச்சுப் போட்டு, அஞ்சாறு பிள்ளையப் பெத்து, வாயைத் திறக்காமல் தியாகம் பண்ணினாளே, அவளை மனசோடு அடிச்சு விரட்டின ஒருத்தனை நியாயம்னு ஏத்துண்டு பாராட்டும் குருமடம்... என்ன குரு, என்ன சாமி! எனக்கு அங்கே போனாலே ஆத்திரமா வரும். அப்பாவை அங்கே கண்டாலே வெட்டிடணும் போல இருக்கும். இப்பவும் காசி மடத்துல இருக்காராம்.”

“போன வருஷம் அமெரிக்காவிலிருந்து எங்க மாமனார், நாத்தனார் சாவித்திரி, அவ புருஷன் எல்லாரும் வந்திருந்தா. காசி, ஹரித்துவாரம், பத்ரிநாத்தெல்லாம் போயிட்டு வந்தப்ப, அப்பா எல்லா சௌகரியமும் செஞ்சு குடுத்ததைக் கொண்டாடிண்டா. எனக்கு ஒரு காசிப் பட்டுப்புடவை குடுத்தனுப்பிச்சார்னு கொண்டு வந்தா. எனக்குத் தொடப்புடிக்கலே. நாத்தனார்ட்ட நீங்களே வச்சுக்குங்கோ, எனக்கெதுக்கு, எங்கே போறேன், வரேன்னு குடுத்திட்டேன்.”

“அதென்னமோ உன் விஷயத்தில் அப்பா நியாயம் செஞ்சிட்டார். பெரிய மங்களத்துக்கும் நல்ல வேளையா முன்னே கல்யாணம் பண்ணினார். பாலுவும் நானுந்தான் எப்படியோ போயிட்டோம்...”

“என்ன நியாயமோ! அம்மா ஒருவிதமா வதைப்பட்டாள். இது ஒரு ஜெயில் வாழ்க்கை. எப்பப் பாரு, அறுந்து போன குடும்பத்திலேந்து உன்னைக் கொண்டு வந்து எங்காலில் கட்டிட்டான்னு சொல்லிண்டே புழுவப்போல நடத்தறார். பெத்த பிள்ளைகளுக்கு முன்ன என்னைக் காலில் வச்சுத் தேய்க்கிறார்...”

துயரம் தொண்டையை அடைக்கிறது.

“அழாதே அக்கா... அத்திம்பேர்ட்ட சொல்லிட்டு ரெண்டு நாள் எங்கூட வந்திரு. பாயம்மா நல்லவ. எங்கிட்டச் சொல்லி அனுப்பிச்சா...”

“அய்யய்யோ! நீ இங்க வரதுக்கே ஆயிரம் பேசுறார். யாரோ துலுக்கர் வீட்டிலே சாப்பிட்டுண்டிருக்கானாம். அங்கே போய்ச் சீராடுறியோன்னு அப்பவே வெட்டிப் போட்டுடுவார்! உனக்குத் தெரியாது, வேம்பு, மகாமூர்க்கர்! நல்லவேளையில் நல்ல அப்பாவுக்கு ஜனிக்கல. போகட்டும், நீ கூப்பிட்டியே அதுவே பெரிசு. எனக்கும் நீ சொன்னப்புறம் அந்த பாயம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. நீ நம்ப குடும்பம் பத்தி அவாகிட்டச் சொல்லியிருக்கியா?”

“ஒரு மாதிரி தெரியும். அதான் சொன்னேனே, பாலு சொன்னான்னு தேடப் போனேனே...?”

ஏதோ மனச்சுமையைக் கரைத்த மாதிரி ஆறுதலாக இருக்கிறது.

“அக்கா, எங்க வீட்டுக்குப் பக்கத்துல, பவர் லாண்டிரி இருக்கு. நான் ஃபோன் நம்பர் தரேன். எப்பவானும் வரதான்னா ஃபோன் பண்ணு. தையல் கடை வேம்புன்னு சொல்லு; சொல்லுவா. உன்னை வந்து கூட்டிண்டு போறேன்...”

அன்று மாலையே வேம்பு போகிறான்.

‘சரசுவதி பூஜை வருது, இருந்துட்டுப் போயேன்’ என்று சொல்ல நினைக்கிறாள். ஆனால் சொல்லவில்லை.

என்றாலும் நெஞ்சு நெகிழ்ந்து போகிறது.

கூடப் பிறந்த உறவு; இரத்த பந்தம்...

இந்தப் புருஷனை விட, இவன் உறவு பெரிசு...

அத்தியாயம் - 5

அன்று சுதா வீட்டில் இருக்கிறாள். வீடெல்லாம் ஒட்டடை அடித்துப் பெருக்கிச் சுத்தம் செய்கிறாள். வீட்டு அங்கியை மாட்டிக் கொண்டு சேலைகளுக்குக் கஞ்சி போட்டு மாடியில் கொண்டு உலர்த்துகிறாள். இடைக்கதவைத் திறந்து ரேவு எட்டிப் பார்க்கிறாள். வேம்பு வந்து போனபின், மனசில் ஏதேதோ தாபங்கள் கிளர்ந்துவிட்டன. தன் மனப்புண்களை அவள் யாரிடமும் திறந்து காட்டியதில்லை. அக்கம் பக்கம் தெரிந்தவர்களுக்கு அவள் பிறந்த வீட்டைப் பற்றி, தாயைப் பற்றி எதுவும் தெரியக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்திருக்கிறாள். “அம்மா சின்ன வயசிலேயே போயிட்டா. அதனாலேயே எனக்குப் பெரியவளாகு முன்பே, குருசுவாமி சொல்லி, சாஸ்திரப்படி கல்யாணம் பண்ணிட்டா” என்று தான் ரேவு சுதாவிடம் சொல்லி இருக்கிறாள்.

“என்ன சுதா, இன்னிக்குக் கிளீனிங்கா?”

“ஆமாம், ரகு டூர்ல போயிருக்கார். எனக்கு இன்னிக்கு ஆஃப். ஒட்டடை சேர்ந்திட்டது. என்ன மாமி, உங்க பிரதர் போயாச்சா? நீங்க என்ன ரிலாக்ஸ்டா இருக்கீங்க...?”

“ஆமாம்...”

அவர்கள் பகுதியை எவ்வளவு நன்றாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு முன்னறை; அடுத்த அகலமான இடம் படுக்கையறையாகவும் சாப்பிடும் அறையாகவும் தடுக்கப்பட்டிருந்தது. பின்னே சமையலறையும், குளியல் அறையும் நவீனமாக மாற்றப்பட்டிருக்கிறது. போன மூன்றாம் வருஷம், சாவித்திரியும் மாமனாரும் வந்த போது, - அந்த இடங்களை வழுவழுப்பான டைல் பதித்துப் புதுப்பித்தார்கள். பிறகுதான் சுதா குடிவந்தாள். முன் அறையில் சோபாக்கள், டி.வி, கச்சிதமாக ஒரு சுவரோவியமாகக் குழந்தைகளும் பூனைக் குட்டிகளுமாகப் படம்... பூங்கொத்து, ஊதுவத்தி கொளுத்தி வைத்த வாசனை... தரையில், வழவழவென்று இவர்கள் ஷீட் ஒட்டி வசதி செய்திருக்கிறார்கள்.

ராம்ஜி இங்கே தான் படிக்கிறான். அப்படியே நீண்ட சோபாவில் சில நாட்கள் படுத்துத் தூங்கி விடுகிறான்...

இதற்கு வாடகை ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்கள்...

“நீங்கள் வீட்டை அழகா வச்சிட்டிருக்கேள். எங்க வீட்டை இப்பல்லாம் என்னால சமாளிக்க முடியல. வேலைக்கு ஆள் இதுவரை வச்சுக்கல. அவருக்குப் பிடிக்காது. ‘நீ என்ன வேலைக்கா போற? வீட்டு வேலை செய்யதுக்கென்ன?’ என்பார்.”

“அதெப்படி, நாங்க ஆபீசில செய்யற வேலையை விட பத்து மடங்கு நீங்க சம்பளமில்லாம உழைக்கிறேள். வார லீவு, மாச லீவு எதுவும் கிடையாது. நானும் தண்ணீர் அடிச்சு வைக்க மட்டும் தான் குப்பா பாயை வச்சிட்டிருக்கிறேன். ஏன்னா, உள்ளே அவள் வந்து செய்ய வேலையுமில்லை; எங்களுக்கு நேரமும் சரி வராது. நீங்க எத்தனை வேலை செய்யறீங்க? நிச்சயமா தண்ணீரடிக்க வேணும் ஆள் வச்சுக்கலாம்... பேசாம ஒரு மோட்டார் போட்டுக்கங்களேன்?”

“முன்னே வேறொரு இடத்திலே போர் போட்டு மோட்டார் போட்டிருந்தது. அது கெட்டுப் போய், சுத்தமா தண்ணீரும் இல்ல... இப்ப வேற இடத்தில போட்டிருக்கு. மோட்டார் வைக்கல... அவருக்காகத் தோணனும்...”

“காப்பி குடிக்கிறேளா மாமி...?”

“இப்பவா, மணி பதினொண்ணு. ரெண்டுங்கெட்டான் நேரம்... நீ அன்னிக்குப் பத்திரிகையில் வந்ததைப் பத்திக் கேட்டே... அதைப் பேசலாம்னு வந்தேன்...”

“இன்னும் சாப்பிட்டு இருக்க மாட்டேளே?...”

“இல்ல. நவராத்திரி இப்ப. முன்னெல்லாம்னா, ஸ்நானம் பண்ணி லலிதா ஸஹஸ்ரநாமம் வாசிப்பேன். இந்த வருஷம் எனக்கு ஒண்ணும் படிக்கல, இவர் ஊரில இல்ல. பெங்களூரோ எங்கியோ போயிருக்கார். சரஸ்வதி பூசையன்னிக்குத்தான் காலம வரார்?”

“ஓ, அதான் ரிலாக்ஸ்டா இருக்கேள். அப்ப காப்பி சாப்பிடலாம், வாங்க...”

“இரு, வாசக் கதவைத் தாழ்ப்பாள் போட்டுட்டு வரேன்!”

ரேவு மீண்டும் வரும் போது, சாப்பிடும் மேசையில் மொறு மொறுவென்று அடை வார்த்து வைத்திருக்கிறாள். அதற்கு இசைவாக, ஒரு சாம்பார் சுடச்சுட...

“ஐயோ இதென்னம்மா, சுதா காபிதானே சொன்னே?”

“நீங்க அடை பண்ணினால், இங்கே வீடெல்லாம் மணக்கும். உங்கள் சாம்பார் தனி டேஸ்ட். ரகு கூடச் சொல்வார். மாமி தாளித்துக் கொட்டினாலே மணக்கிறது. காலையில் காபிப் பொடி ஃபில்டரில் போட்டுக் கொதிநீர் விடும் போது ஒரு மணம்... உங்களுக்குக் கை மணம் அதிகம்...”

“சரியாகப் போச்சு போ! நீங்க வீட்டை மட்டும் தான் அநுபவிக்கிறேள்ன்னு நினைச்சேன். இதெல்லாமுமா?” என்று ரேவு சிரிக்கிறாள்.

“இதில கீரை போட்டிருக்கியா...?”

“ஆமாம். அரிசி, பருப்பு கீரை, கத்திரிக்காய், வெங்காயம் எல்லாம்... எல்லா சத்தும் சேருது. சாப்பிடுங்கோ மாமி...”

இப்படி இவளை யார் உபசரிக்கப் போகிறார்கள்?

ரேவு நாற்காலியில் உட்கார்ந்து மேசை (எச்சில் மேசை - எச்சில் தட்டு)யில் அந்தப் பண்டத்தைச் சுவைத்துச் சாப்பிடுகிறாள். கிண்ணத்தில் வெங்காயம் போட்டு சாம்பார். குளிக்காமல் கொள்ளாமல் அவள் பண்ணிய பண்டம். “ருசியா இருக்கா மாமி? உங்களுக்குக் காரம் அதிகமோ? கொஞ்சம் சோம்பு வச்சு அரைச்சேன்...” என்றெல்லாம் சுதா சொல்லிக் கொண்டு இன்னொரு அடையையும் கொண்டு வருகிறாள்.

“ஐயோ, போதும் சுதா? நானிப்படி அநாசாரமா... நவராத்திரியும் அதுவுமா காலங்காத்தால அடை திண்ணுண்டிருக்கேன்...”

ஒரு குற்ற உணர்வுடன் அதைச் சாப்பிட்டு முடிக்கிறாள்.

“பரவாயில்ல மாமி, தினம்தான் சாப்பாடு... மெதுவா ரெண்டு மணிக்குச் சாப்பிடுங்கோ. நீங்க சாப்பிடவும் காபி ஆறிச் சூடு பதமா இருப்பதற்கும் சரியாக இருக்கும்...”

“நீ சாப்பிடலியா? எனக்கு உபசாரம் பண்ணுறே?” என்று கைகழுவப் போகிறாள்.

“இதோ சாப்பிடப் போறேன்...”

ரேவு அவள் முன் உட்கார்ந்து காபியைப் பருகிக் கொண்டே,

“சுதா, நான் உபசாரமாகச் சொல்லல. நீ எனக்கு ஒரு தங்கை போல இருக்கே. நான் இவ்வளவு மனசுவிட்டு யாரோடும் பழகினதில்ல...”

“அய்யோ, என்ன மாமி இது. ஒரு பெண்ணுக்குப் பெண், புரிஞ்சு பழகலன்னா அப்புறம் என்ன பிரயோசனம்? எனக்குப் படிக்க முடிஞ்சது; வேலை செய்து, சுயச்சார்புடன் இருக்க முடியிது. இதனால மற்ற பேருக்கும் ஒத்தாசையா இருக்கணுமில்லயா? நீங்கள் படும் சிரமம், நான் பாத்துட்டே இருப்பதால கண்ணில் உறுத்துது... நீங்க... அந்த வளப் பார்த்திருக்கேளா மாமி?...”

“நான் எதுக்கு அவளப் பார்க்கிறேன்? எனக்கு, சுதா, இந்த வீடு, குரு சாமி, மடம், கோவில், இங்கே வந்து யாரேனும் விசேஷம், பூஜை பண்ணினா, ஒன்பதுகஜம் சுத்திண்டு, பூத்தொடுத்து, பரிமாறி, எதானும் வேலை சொன்னாச் செய்யணும். நமஸ்காரம் பண்ணனும். ஆபீஸ் காரா யாருன்னு கூடத் தெரியாது. நான் இப்படி உங்கிட்ட டிரௌசர் பாக்கெட்ல இருக்கு, டூர் டூர்னு போறார்னு சொன்னப்ப நீதானே, ஆபீஸ் மிச்சூடும் இது தெரியுமாம்னு வந்து சொன்னே? நீயும் சொன்னேன்னு துணிச்சலா இப்படி எழுதிப் போட்டாச்சு. எனக்குப் பயமாயிருக்கு சுதா. இது தெரிஞ்சா அவர் என்னைப் பெல்ட்ட உருவி அடிச்சிக் கழுத்தப் புடிச்சி வெளியே தள்ளிடுவார். இத இப்படியே மறுந்துடுவதுதான் நல்லது. என் தலையெழுத்துப் போல நடக்கட்டும்...”

“சே, எனக்கென்னன்னா, அவ்வளவு பெரிய பொஸிஷன்ல இருக்கறவ ஏனிப்பிடி ஒரு கெட்ட பேரை சம்பாதிக்கணும்? சாதாரணமா, ஆம்பிள பாஸ், ஸ்டெனோ பொம்பிளன்னா, மடில வந்து உட்காருடீன்னு சொல்லுவான். இது கேட்டுக் கேட்டு ஊசிப்போன சமாசாரம். ஆனா அது போல ஒரு பெண் தனக்குக் கீழே ஒருத்தனத் தொடர்பு வச்சுப்பாளா?... நீங்க இரு கோடுகள் சினிமா பார்த்திருக்கேளா மாமி? அதுல, அவா ஏற்கெனவே கல்யாணமானவா. ரொம்ப கவுரமா அவ கலெக்டர் நடப்ப. ஆனா ஊரே, ஆபீசே வம்பு பேசும். இங்கே... அப்படியும் தெரியல. எனக்கு இதுல எங்கோ தப்பு இருக்கும்னு படுது... ஆமாம், ரேவு மாமி, நீங்க அவர்கிட்டயே கேட்கலியா? இதென்ன, இதெல்லாம் இருக்கு பான்ட் பாக்கெட்ல, நமக்குத்தான் இதெல்லாம் வேண்டாமேன்னு கேக்கலியா?”

“என்னத்தைக் கேட்கறது? எங்கிட்ட எப்ப முகம் கொடுத்துப் பேசறார்? சுதா! ஆசை, கொஞ்சல் அது இதெல்லாம் கதையில் தான் நான் படிக்கிறேன். நாங்க புருஷன் பெண்சாதி. நான் ஒரு பொம்மை. ரெண்டு புள்ளைப் பெத்திருக்கேன்... நான் இவர் வீட்டுக்கு வரச்சே ஆளாகக் கூட இல்ல. கல்யாணம் கோவில்ல நடந்தது. இங்கே கூட்டிண்டு வந்தா. உங்கிட்ட இன்னிக்குச் சொல்றேன். ஆத்துல எல்லாரும் வேற ஒரு இடத்து விசேஷத்துக்குப் போனப்பா, ஆளாகாத பெண்ணை இழுத்து வச்சு மிருகமா நடந்துண்டார். எங்க மாமனாருக்கு அத்தை ஒரு பாட்டி இருந்தா. பட்டப்பகல், புடவையெல்லாம் ரத்தம். ‘பாட்டி... பாட்டி’ன்னு அழுதேன்... பாட்டி, சித்த நாழி ஒண்ணும் பேசல. “குழந்தே, கொட்டில்ல போயிரு. நீ பெரியவளாயிட்டே!”ன்னா. அன்னிக்குப் பூரா அழுதேன். அப்புறமும் அழுதேன். சீ, இதெல்லாம் எப்படிச் சொல்ல, யாரிடம் கொட்டி அழ?”

ரேவு இறுகிப் போனவளாக, நிறுத்துகிறாள்.

சுதா பேசவேயில்லை.

“அன்னிக்கு ஒரு புத்தகத்தில் பார்த்தேன். நீ குடுத்தது தான். அதில் பதினெட்டு வயசுக்குக் குறைவான பெண்ணை, சொந்தப் பெண்சாதியாக இருந்தாலும் புருஷன் அவளை அணுகக் கூடாது. அப்படிப் பலவந்தம் செய்தால் அதுவும் கற்பழிப்புதான்னு, அவள் சம்மதம் இல்லாமல் நெருங்குவதே அப்படிப்பட்ட குற்றம்தான்னு போட்டிருந்தது. அப்படிப் பார்த்தா, தினம் தினம் எங்க வீட்டில இதுதான் நடக்கிறது; நடந்தது.”

சொல்லுவது என்று தீர்மானித்த பின் எதை விடணும், எதை ஒளிக்கணும்?

“சுதா, எனக்கு அந்த ஆபீசர் மேடம் மேல கோபமே இல்லை. ஆனா இந்த ராட்சசன் அவகிட்ட எப்படி இருப்பான்? அவ எப்படி ஏத்துக்கறா?...”

சுதாவுக்குச் சிரிப்பு வருகிறது; அடக்கிக் கொள்கிறாள்.

“ரேவு மாமி, நீங்க பச்சக் குழந்தையாயிருக்கீங்க... எனக்கு யார் மேலேன்னு தெரியாம கோபம் வருது...”

“இந்தத் தடிமாடுகளுக்கு எப்படித் தண்டனை கொடுக்கலாம்? மாமி, நீங்ன்க டிவர்ஸுக்குப் போட்டு, விடுதலை வாங்கிண்டு, ஜீவனாம்சமா சம்பளத்தில் ஒரு பாதியும் வாங்கிக்கணும். ஹாயாக வாழணும்...”

“வாழறதாவது? வாழாவெட்டிம்பா... அந்தப் பொம்பள பெரிய ஆபீசர்... நான் மட்டி. எனக்கு ஒரெழவும் தெரியாது. எனக்குச் சொந்தமான ஒரு சொத்தைப் பங்கு போட்டுக்க வந்துட்டான்னு நான் கோபமே படல. இவரைத் திருத்தணும், கூட வாழணும்னு தியாகம் பண்ண எனக்குத் திராணி இல்ல. ராம்ஜி மேல தான் சித்த பாசம். பரீட்சை தேறி, மெடிகல் படிக்கணும்னு தவசு பண்ணுறது குழந்தை. வாழணும்னா அவன் மேல கடுகளவு பாசம் இருப்பதாலதான். நீங்க சொல்றாப்பல விடுதலைன்னு கொடுத்து ஏதோ படியளந்தா கிருஷ்ணா ராமான்னு இருந்துட்டுப் போறேன்... கோர்ட்டு கீர்ட்டு எதுக்கு?”

“மாமி விடுதலைன்னு அப்படிப் பேசினால் உங்க பேரில வீணா அவர் பழி சுமத்தலாம். சமூகம் அதைத் தான் ஒத்துக்கும். சட்டப்படி, விடுதலை வாங்கிக்குங்க. அப்பதான் மெயின்டனன்ஸ் கிடைக்கும். எனக்குத் தெரிஞ்ச, குடும்ப கோர்ட் வக்கீல் இருக்காங்க. உங்க கேஸைச் சொல்றேன். எதுக்கு நீங்க இப்படி வதைப்படணும்? அதோட, அவ பொஸிஷன் என்னங்கறதையும் பக்குவமாத் தெரிஞ்சிக்கணும். ரேவு மாமி, எனக்கு உங்களைப் போல் வாய் திறக்காமல் கொடுமைகளைச் சகிக்கும் பெண்களுக்குன்னு எதானும் ‘சர்வீஸ்’ பண்ணணும்ங்கறது. அதுக்காகவே நான் சிநேகிதிங்கற சங்கத்தில் கூட மெம்பராயிருக்கேன். எங்களைப் போல் படிச்சு, வேலை செய்யறவங்க இப்படி மற்ற பெண்களுக்கு உதவனும்னு தான் அந்த சங்கம் செயல்படுது. அதுனால நீங்க பயப்பட வேண்டாம்...”

அவள் பயப்பட வேண்டாம் என்று சொன்னாலும், ரேவுக்குப் பயமாகவே இருக்கிறது.

“சுதா, நான் விடுதலைப் பத்திரமே எழுதிக் குடுத்துடறேன், எதுக்குக் கோர்ட்டு கீர்ட்டுன்னு? அசிங்கம். முதல்ல அவரே என்னைப் பொணம் பெறட்டிடுவார். அடிபடணுமா? பிள்ளைகளுக்கெல்லாம் இந்தச் சண்டை தெரிஞ்சா மானக்கேடு...”

சுதா சிறிது நேரம் பேசவில்லை.

“ஆல்ரைட் மாமி. நீங்க சொல்றதும் சரிதான். ஆனால் நீங்க நினைக்கிறாப்பல அது சுலபமா ஆயிடாது. முதல்ல, உங்க ‘ஸர்வீஸை’ ஒரு காசு செலவில்லாம இப்படிக் குடும்பம்னு உழைக்க எவ வருவா? அதனால உங்க புருஷன் அப்படி விடச் சம்மதிக்க மாட்டான். மேலும், நீங்க இப்ப சந்தேகப்படும் கள்ள உறவு, நிசம்தானாங்கறதை முதலில் ஊர்ச்சிதம் செய்து கொள்ளணும்.”

“அவள் ஒரு பெரிய பதவியில் உள்ளவள். வீணாக ஒரு பெண்ணுக்குப் பெண் சேற்றை வீசி எறியக் கூடாது. நீங்கள் இன்னும் ஒரு வாரம் பத்து நாள் டயம் குடுங்க. நான் இது சம்பந்தமா இன்னும் விசாரிச்சுச் சொல்றேன்...” சுதா ரேவுவின் கையைத் தன் கைக்குள் வைத்து மூடித் தன் அன்பையும் பரிவையும் உணர்த்துகிறாள்.

அடுத்தநாள் நவராத்திரி வெள்ளிக்கிழமை, ரேவுவுக்கு மனப்பாரத்தை இறக்கி வைத்தாற்போல் ஆறுதலாக இருக்கிறது. வீடு துடைத்து, அழகாகக் கோலம் போடுகிறாள். மறுநாள் சரஸ்வதி பூசை. பூசைக்கு வேண்டிய வெள்ளிக் குத்துவிளக்கு, வெள்ளிச் சந்தனப்பேலா, பஞ்ச சாத்திர உத்தரணி, வெற்றிலைத் தட்டு ஆகிய சாமான்கள் ஒரு மரப் பெட்டியில் பரணில் இருக்கின்றன.

ராம்ஜியை அன்று மாலை பரண் மீது ஏற்றி, பெட்டியில் இருந்து குத்துவிளக்குகளையும், சந்தனப் பேலா பஞ்சபாத்திர உத்தரணி முதலியவற்றையும் எடுத்துத் தரச் சொல்கிறாள்.

ராம்ஜி மேலேறி ஒவ்வொன்றாக எடுத்துத் தருகிறான்.

“சந்தனப்பேலா...?”

“இல்லேம்மா...”

“என்னடா இல்லேங்கறே? அதுலதான் இருக்கும். சரியாப்பாரு. வரலட்சுமி பூஜை முடிந்து அதுலதானே எடுத்து குடுத்து வச்சது.”

ராம்ஜி பெட்டியையே கவிழ்த்துக் காட்டுகிறான். பேலா இல்லை. துணுக்கென்றிருக்கிறது. பரணில் உள்ள பெரும்படிப் பித்தளைப் பாத்திரங்களை - அங்கே இங்கே துணி வைக்கும் மர பீரோவில், எங்குமே சந்தனப்பேலா இல்லை. அழகாக முத்துக் கட்டிய பட்டைக் கிண்ணம்.

குருகுருவென்று உள்ளத்தில் ரம்பம் அறுப்பது போல் இருக்கிறது.

“ஏண்டா பரத்! சந்தனப்பேலாவைக் காணோம்டா. நீ பார்த்தியா?...”

அவன் சள்ளென்று விழுகிறான். “என்னம்மா நான்சென்ஸ்? வீட்டில சாமான் காணோம்னா, நானா பொறுப்பாளி? உன் ஆசைத்தம்பி வந்திருந்தானே? எடுத்துண்டு போயிருப்பான்?”

ரேவு அவனைப் பளார் என்று அடிக்கிறாள் கன்னத்தில்.

கை எரிகிறது.

சூயிங்கம் அவள் அறைந்த அறையில் வெளி வருகிறது, இவள் மீதே துப்பினாற் போல்.

“என்னை அடிக்கிறியா? இரு, இரு. அப்பா வந்ததும் சொல்றேன்!” என்று மிரட்டுகிறான். அப்படியே மாடிக்கு ஏறிச் செல்கிறான். என்ன கேவலமான பிழைப்பு!

மறுநாள் அவன் வந்ததுமே இந்த விஷயம் பூகம்பமாக வெடிக்கிறது.

“ஏண்டி, உன் வீடே திருட்டுக் கும்பல், நீ பெட்டி, வீடு, எதையும் பூட்டாமல் விட்டுட்டு வெளிலே போயிருப்பே. வெட்டிண்டு போயிருப்பான். நீ என் பையனைப் போட்டு அடிக்கிறியா? பஜாரி...?” என்று அவளைத் தன் இடுப்புப் பெல்டைக் கழற்றி அவன் அடிக்கிறான்.

“போடி, மரியாதையா உள்ளே போய், உன் வேலையைப் பாரு! இனிமே உன் தம்பி, அண்ணன்னு எவனானும் உள்ளே வந்தால் உன்னைத்தான் அடிப்பேன்!...”

ரேவு மவுனமாகக் கண்ணீர் விடுகிறாள். திருட்டுக் கும்பல் முத்திரை விழுந்துவிட்டது. வாழ்நாளெல்லாம் சுமக்க வேண்டிய முத்திரைகள்...

அவளுக்கு வேலை செய்யப் பிடிக்கவில்லை.

பூசையாம், பூசை!

அவன் குளித்து, உள்ளிருந்து பட்டெடுத்து, பஞ்சகச்ச வேசம் போட்டுக் கொண்டு அந்தப் பழைய ‘புராணப் புத்தகங்களை’ அடுக்கிப் பூசை செய்கிறான்.

“ஏண்டி, என்ன இந்த வேசம்? மடியா ஒன்பது கஜம் உடுத்தறதில்ல? தேவடியா போல வாயில் புடவையா உடுத்திப்பா? ஏன் ஒரு வடை தட்ட என்ன கேடு? ஏண்டி? நீ என்ன நினச்சிண்டு இப்படி ஆடறே? சாமானையும் தொலைச்சிட்டு, சாகசம் பண்ணுகிற?...”

இனியும் இந்த மனசிலும் உடம்பிலும் காயங்கள் சுமக்க முடியுமா? கதவைத் திறந்து கொண்டு சென்று சுதாவைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விட வேண்டும் போல் இருக்கிறது.

அத்தியாயம் - 6

இவளிடம் அநுசரனையாகக் குடித்தனக்காரர்கள் பழகுகிறார்கள் என்ற உணர்வில்தானோ போலும், சுதாவையோ, கணவர் ரகுவையோ அவள் புருஷனுக்குப் பிடிப்பதில்லை. வாடகையையும் கரன்ட் பில்லையும் சுதாதான் அநேகமாக ஒன்றாந்தேதி கதவைத் திறந்து காலையில் அவனிடம் கொடுப்பாள். சில நாட்களில் வீட்டங்கியில் இருப்பாள். அப்படியே கதவைத் திறந்து கொடுப்பாள்.

“கூச்ச நாச்சம் இல்லாத பொம்மனாட்டி. புடவையை உடுத்திட்டா என்ன கேடு?” என்று முகம் சுளிப்பான். “டீ, அவளை இனிமே புடவையை உடுத்திண்டு வரச் சொல்லு? என் எஜமானர் சொன்னார்னு சொல்லு!” ரேவுவுக்கு நா துடிக்கிறது. ‘ஏன், மனசில் கனமும் பயமும் இருக்கோ?’ என்று கேட்கத் துடிக்கிறாள். ஆனால் எதுவும் குரலெழும்பவில்லை. தீபாவளிக்கு ஊரிலிருந்து அவர்கள் பெண், சுருதி வந்திருக்கிறாள். பத்தோ பதினொன்றோ படிக்கிறதாம். நல்ல உயரம் - வளர்த்தி, மாநிறம் தான். ஆனால் சிற்பி செதுக்கினாற் போல் கண்ணும் மூக்குமாக, மிக அழகாக இருக்கிறாள். இடுப்புக்குக் கீழ் விழும் கூந்தல்.

“ஆன்ட்டி, என் தீபாவளி டிரஸ் பார்த்தீங்களா?” என்று கதவைத் திறந்து கபடமில்லாமல் கொண்டு காட்டுகிறது.

ராம்ஜி படித்துக் கொண்டிருக்கிறான். “ஹாய்...” என்று அவளைப் பார்த்துப் புன்னகை செய்கிறது. என்ன படிக்கிறான் என்று குனிந்து பார்க்கையில், முடிந்திராத தலைமுடி நெருங்க விழுகிறது.

ரேவு அவள் காட்டிய அந்த மிடி டிரஸ்ஸைப் பார்த்து “பட்டாம்மா இது?... நன்னாயிருக்கு...” என்று சுருக்கமாகக் கருத்துத் தெரிவிக்கிறாள். அவளை விரட்ட வேண்டும் என்பதே குறி.

“உனக்கு ஸ்டடி ஹாலிடேஸா?... உங்கிட்டே டேலன்ட் எக்ஸாம் கொஸ்டின் பேப்பர் இருக்கா? நான் எழுதப் போறேன்... இங்க மட்றாஸில தான் எல்லாம் கிடைக்கும்னு சொல்றாங்க...”

“என்னிடம் இல்லையே? நான் ஐ.ஐ.டி. பிரிமெடிகள். இதெல்லாம் தான் கான்ஸன்ட்ரேட் பண்ணறேன். எப்படியானும் ராங்க் எடுக்கணும்...” என்று தலை நிமிராமலே ராம்ஜி பேசுகிறான்.

நல்ல வேளையாக, சுதா, “சுருதி!” என்று கூப்பிடும் குரல் விழுகிறது. “வந்துட்டேன்மா?” என்று போகிறாள். ரேவு கதவைத் தாழ் போடுகிறாள்.

தீபாவளிக்குத் துணி எடுக்க அவளைக் கடைக்குக் கூட்டிச் செல்லும் வழக்கமே கிடையாது. அத்துடன் மழை வேறு பிசு பிசு என்று பிடித்துக் கொண்டிருக்கிறது.

ராம்ஜிக்கும் பரத்துக்கும் ‘டெனிம்’ என்று சாக்குப் போல் நிஜார். அதைத் துவைச்சுச் சுத்தம் செய்பவள் அவள் தானே? அடிக்க வரும் சிவப்பிலும், மஞ்சளிலும், பொம்மை போட்ட சட்டைகள்.

அவளுக்கு ஒரு கைத்தறிச் சேலை. அவனுக்கு வேட்டியுடன், ஒரு பட்டு ஜிப்பா போன்ற - கழுத்தில் வண்ண எம்பிராய்டரி செய்த குர்த்தா, வாங்கி வந்திருக்கிறான். வெளியில் எடுக்கும் போதே சென்ட் மணம் மூக்கைக் கவ்வுகிறது.

“யப்பா! சூப்பரா இருக்கு! எனக்கு இப்படி ஒண்ணு வாங்கிக் குடுங்கோப்பா!” என்று பரத் அதைப் பிரித்துப் பார்க்கிறான். முகர்ந்து மணத்தை இழுக்கிறான். “ஃபாரின்ல தச்சதாப்பா?”

“ஆபீஸ்ல ஒருத்தர் சிங்கப்பூர் போனார். இந்த டெனிம், உங்க டிரஸ் கூட அங்கேர்ந்து வாங்கினதுதான். நான் குர்த்தா சொல்லவேயில்லை, அவரே வாங்கிண்டு வந்திருக்கிறார்...”

‘அவள் வாங்கிக் கொடுத்தாளோ’ என்று ரேவு நினைத்துக் கொள்கிறாள்.

தீபாவளியன்று காலையில் அவன் புது வேட்டியுடன் அந்தக் குர்த்தாவையும் அணிந்திருக்கிறான். தீபாவளி விசாரிக்க முதன் முதலில் சுதா, ரகு, சுருதி குடும்பம் தான் வருகிறது.

“ஹாவ்! மிஸ்டர் நாதன், யூ லுக் மச் எங்கர் இன் திஸ் குர்த்தா. அட்டகாசமா இருக்கு. உங்களுக்கு ரெண்டு வளர்ந்த பையன்கள் இருக்கான்னு ஒருவரும் சொல்ல மாட்டாங்க, இல்லையா ரகு...?” என்று சுதா வம்பிழுக்கிறாள்.

“ஸாருக்கென்ன? அவரை அவ்வளவுக்குப் பேணிப் பாதுகாக்கறாங்க வீட்டிலே. வேர் அன்ட் டேரே இல்ல. நம்மப் போலவா? காபி போடணுமே, டிஃபன் பண்ணனுமேன்னு எந்தப் பிராப்ளமும் கிடையாது. பால் வாங்கப் போறதிலேந்து வேலைக்காரி வரலேன்னா தண்ணீர் அடிப்பது வரை ஷேர் பண்ணிக்க வேண்டி இருக்கு...” என்று அவள் கணவன் மறைமுகமாக ரேவுவுக்குப் பாராட்டுதல்களை எடுத்து விடுகிறான்.

இதை அவன் பொறுப்பானா?

“சொல்ல மாட்டீங்க பின்ன? இங்கே இந்த ஒரே இன்ஜின்தான் குடும்ப வண்டிய இழுக்குது. நாளைக்கு வடிக்க அரிசி இல்லேன்னா, இன்னிக்கு ராத்திரி பணம் வேணும்னு நோட்டீஸ் கொடுப்பா. வீட்டில் என்ன சாமான் இருக்கு, என்ன தொலஞ்சு போச்சுன்னு கூடப் பார்க்கும் பொறுப்பு கிடையாது...”

ரேவு அவர்களை ஒரு விரிப்பைப் போட்டுத் தரையில் உட்காரச் சொல்லி, தான் செய்த இனிப்பு - கார வகையறாக்களைக் கொடுத்து உபசரிக்கிறாள்.

அவர்கள் பாராட்டும் மறைமுகப் பேச்சுகளும் உடனே ரேவு எதிர்பார்த்த பலனைக் கொடுத்து விடுகிறது.

“மிஸ்டர் ரகு, திடீர்னு அப்பா ஃபோன் பண்ணினார். வீட்டுப் போர்ஷனை வேகண்டாக வையப்பா. நான் ஊரோடு வந்துடலாம்னு இருக்கேன். வைசாலி பொண்ணுக்கும் ஊருல வந்து கர்நாடக சங்கீதம் கத்துக்கணுங்கறா. குடி இருந்தா காலி பண்ணச் சொல்லுன்னு. நான் சொல்றேன்னு நினைக்கக் கூடாது. உங்க அட்வான்ஸைத் திருப்பித் தந்துடறேன்...” என்று சொல்வது ரேவுவின் காதில் விழுகிறது. சுத்தப் பொய்.

மூன்று வருஷம் முன்பு வந்த போதே அவளுக்கு இந்தியா பிடிக்கவில்லை! வைசாலி பெண் இங்கே வந்து பாட்டுச் சொல்லிக் கொள்கிறாளா? என்ன கற்பனை!

ஆனால் ரகு இந்தப் பொய்களை நம்பிவிடவில்லை.

“என்ன ஸார்! எங்க வீடே ஜூனில் முடிஞ்சுடும். போய் விடுவோம். அதற்குள் ஒரு சட்டி தூக்கணுமா? இதுக்கு நடுவிலே, எனக்கே மதுரை டிரான்ஸ்ஃபர் ஆயிடும் போல இருக்கு. குழந்தையோ திருச்சிலதான் படிக்கிறா. பேசாம சுதாவையும் திருச்சி, மதுரை எங்கானும் டிரான்ஸ்பர் வாங்கிக்கச் சொல்லலாம்னு ஒரு யோசனையும் இருக்கு... ப்ளீஸ், உங்களுக்கு வாடகை இருநூறு முந்நூறு கூட வேணும்னாலும் குடுத்துடறோம். அதுக்காக நீங்க அப்பா இங்கே வரார்னு சொல்ல வேண்டிய அவசியம் இல்ல...” என்று மிக மென்மையாக ஒரு இடி இடிக்கிறார்.

ரேவு உள்ளூறப் பாராட்டிக் கொள்கிறாள்.

நவம்பர் ஓடி டிசம்பர் வந்து விடுகிறது. அவன் பத்து நாள் ஆபீஸ் வேலை என்று வெளியூர் சென்றிருக்கிறான். பரத் இவளை மதிப்பதே இல்லை. நினைத்த போது வருவான்; சாப்பிடுவான்; தூங்குவான்.

அன்று காலையில் அவன் எங்கோ ‘எக்ஸ்கர்ஷன்’ போவதாகச் சொல்லி அவளிடம் இருநூறு ரூபாய் கேட்கிறான்.

“அப்பா என்னிக்கு வராரோ, கைச்செலவுக்கு வச்சிருக்கேண்டா, நீ அவர் இருக்கறப்பவே கேட்டு வாங்கி வச்சிக்கக் கூடாதா?”

“அந்தப் பையன் தான் உனக்கு உசத்தி. அவன் எது கேட்டாலும் உடனே குடுக்கல? என்ன மட்டும் ஏன் கரிக்கறே?”

இது அவள் பலவீனம் என்பதை அவன் நன்றாக உணர்ந்து வைத்திருக்கிறான் போலும்!

பணத்தை எடுத்துக் கொடுக்கிறாள்.

அன்றிரவும், அடுத்த நாளும் அவன் வரவேயில்லை.

“ராம்ஜி, உனக்குத் தெரியுமாடா? எங்கேடா எக்ஸ்கர்ஷன் போயிருக்கா?”

“அவனப் பத்தி என்னைக் கேட்காதேம்மா; அவன் யார் யாரோ ஃபிரன்ட்ஸ் கூடப் போறான். எனக்கும் அவா கூட்டத்துக்கும் சம்பந்தமில்ல. அப்பாவோ, நீயோ ஸ்கூல்ல போய், பிரின்ஸிபாலையும், டீச்சரையும் பாக்கறது, கேட்கிறது!”

ரேவுவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

அப்போதுதான் சுதா, கதவைத் தட்டித் திறந்து கொண்டு உள்ளே வருகிறாள்.

“ரேவு மாமி... எங்க வீட்டுப் பக்கம் கொஞ்சம் வரேளா?”

“என்ன ஆச்சு?...”

உள்ளே சென்றதும் கதவைச் சாத்துகிறாள்.

“மாமி, நான்... விசாரிச்சிட்டேன்...”

நெஞ்சு துடிக்கிறது.

“நீங்க கேள்விப்பட்டிருப்பேள், என்.கே.ஆர்-ன்னு நாடக நடிகர் ரங்கசாமின்னு பேர். முன்ன ராமனின் கனவு, சுப்பனின் கதை, பொன்னாச்சி கல்யாணம்னு முற்போக்கு டிராமால்லாம் எழுதி நடிச்சுப் பேர் வாங்கினவர். சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டு, ஜெயிலுக்குப் போய், கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமா இருந்து, இப்ப டிராமாவும் கூட வேண்டாம்னு ஒதுங்கிட்டவர். ட்யூட்டோரியல் நடத்திட்டிருந்தார். எங்க ‘சிநேகிதி’ சங்கத்தோடு தொடர்பு உண்டு. அவர்கிட்ட நான் இந்தப் பிரச்னையைச் சொன்னேன்... ‘ஓ, ஜயவந்தியச் சொல்றியா?’ன்னு உடனே கேட்டுட்டார். ஜயவந்தியின் அப்பா, இவருடைய நாடக ட்ரூப்பில் இருந்தவர் தானாம். எல்.ஐ.சி.யில் இருந்தார். ஜயவந்தி ஒரே பெண். ரொம்ப கெட்டிக்காரி. ரொம்பவும் செல்லம் கொடுத்து வளர்த்தார்கள். எம்.ஏ. படிக்கிறப்ப ஒரு வரனைப் பார்த்துக் கல்யாணமும் செய்தார்கள். அந்தப் பையன் அப்ப அமெரிக்காவில் பி.எச்.டியோ என்னமோ பண்ணிட்டிருந்தான். இவள் எம்.ஏ. முடிச்சி மேலே ஏதோ படிக்கவோ, குடித்தனம் பண்ணவோ அமெரிக்காவுக்கு செலவு பண்ணி அனுப்பி வச்சார். போன மூணாம் மாசமே திரும்பி வந்துட்டா; ‘அவன் ஒரு மிருகம். அவங்கூட ஷூவைத் துடைச்சு, சட்டை வாஷ் பண்ணனுமாம்? என்ன நினைச்சான்!’ என்றெல்லாம் காரணம் சொல்லிக் கொண்டு வந்துவிட்டாள். உடனே டிவர்ஸுக்கும் ஏற்பாடு பண்ணி, ஆயிட்டது. ஒரு வருஷத்துக்குள்ளே கதை முடிஞ்சாச்சு. எம்.பி.ஏ. பண்ணி வேலையா பம்பாயில் தான் இருந்தாள். வேற கல்யாணம் பண்ணிக்கோன்னாலும் வேண்டாம் என்று சொல்கிறாள். அவளிடம் பேசவே முடியவில்லை. இப்ப இங்க வந்து... என்ன செய்வதுன்னு தெரியல... அந்த அவன் இங்கேயே கூட நிழல் போல வரான். மாடிக்குப் போறான். ஃபைல் எடுத்திட்டுப் போறாங்க. ராத்திரி, பத்து பதினொண்ணுன்னு வீட்டில, என்ன வேலை? நாங்க வாயைத் திறக்க முடியல. மானம் போகுது. ஆபீசே கொல்லுன்னு இருக்குன்னு சொல்றாங்க. இவளே காரை ட்ரைவ் பண்ணிட்டுப் போறா. அவன் தான் என்ன பண்ணுவன், பாவம்! நல்ல குடும்பமாம். குருசுவாமிகள் மடத்தில் இவப்பா - குடும்பம் ஆசார அனுஷ்டானம்னு ஊறினவங்களாம். இப்பத் தோணுது. அந்தப் பையன் ராட்சசன்னு, டிவோர்ஸ் வாங்கிண்டாளே, இப்ப, அவன் உடனே கல்யாணம் பண்ணிண்டு, ரெண்டு குழந்தைகள் இருக்கு. போன ரெண்டாம் வருஷம் எனக்குச் சொந்தக்காரங்க கல்யாணத்துல பார்த்தேன். மாமான்னு கூப்பிட்டுப் பேசினான். அந்தப் பொண்ணும் குழந்தைகளும் நமஸ்காரம் பண்ணினாங்க. ‘இவங்க தாத்தாடா கண்ணு’ன்னு சொல்லிக் கொடுத்த பாங்கே போதும். நமக்குக் குடுத்து வைக்கல; இப்படிச் சீரழியறது...’ன்னு சொல்லி அழுதாராம். ‘அட எப்படியோ உனக்குக் கீழ ஸ்டெனோ கல்யாணம் பண்ணிக்க விருப்பமிருந்து, புடிச்சா, அந்தஸ்து பெரிசில்ல. அவனுக்கு, எதானும் சொந்த பிசினஸுக்கு வழி செய்யலாம். ஆனா, அவனுக்கும் கல்யாணமாய், ரெண்டு பையன்கள் பெரிசா இருக்கறப்ப, ஒரு குடும்பத்தைக் குலைக்கிறாப்பல, இன்னொரு பெண்ணின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கலாமா? அவளுக்கு யார் சொல்றது? நாங்க ரெண்டு பேரும் தனியாக எங்கேனும் காசி, ருஷிகேசம்னு போயிடலாம்னு இருக்கிறோம். பழைய வாழ்க்கை முறை அடியோடு அழிஞ்சு போயாச்சு. குடும்பங்கறது பெண்ணுக்குத் தொல்லை. இது ஃப்ரீடம்...’ன்னெல்லாம் அவர் வெறுத்துப் பேசினாராம்... என்ன சொல்றேள் ரேவு மாமி?”

ரேவுவுக்கு நா எழவில்லை.

கட்டினவன் மிருகம்னு வந்தவள், இன்னொரு மிருகத்தை அடக்கி ஆளுறாளா? உள்ளூற ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது. ஒரு பெண்ணாய்ப் பிறந்தவள், மேல் அதிகார பதவியில் இருந்து, எல்லா வளையங்களையும் தூக்கி எறிந்துவிட்டு... இவனுடைய அகங்காரத்தை அவள் குத்த வேணும். அந்தக் குத்தலை அவன் இவளிடம் வந்து காட்டினாலும் பொறுத்துக் கொள்ளலாம். அவன் குத்துப்பட வேணும். “தன் மேல் விழுவது தூசி, அபகீர்த்தின்னு தெரிஞ்சும் பொருட்படுத்தாமல் தைரியமாக, துணிச்சலாக அவள் நடக்கிறான்னா, அது ஆச்சரியம் தான் சுதா...”

“ரேவு மாமி, நானே உங்களை ஒரு நாள் என்.கே.ஆர். வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன். படிச்சவர், இன்டலெக்சுவல், ரொம்ப முற்போக்கான மனிதாபிமானி. ஒரே ஒரு பெண், கல்யாணமாயி அமெரிக்காவில் இருக்காங்க. அந்தம்மாவும் இப்ப அவகிட்டத்தான் போயிருக்காங்க. அவர் உங்களுக்கு எதானும் யோசனை சொல்லுவார்... உங்க ரெண்டு பேரையும் வச்சுப் பேசி எதானும் தீர்ப்புச் செய்வார்...” என்று கூறுகிறாள் சுதா.

“ஐயோ! நான் - உங்க மூலம், இப்படி வெளியில் நியாயம் கேட்கப் போறேன்னு தெரிஞ்சா, அடுத்த நிமிஷமே என்னை வெட்டிப் போட்டாலும் போடுவார்! தெரிய வேண்டாம் சுதா!”

“ஐயோ அப்படி எல்லாம் எடுத்ததும் சொல்வேனா? சாத்தியக் கூறுகளைச் சொன்னேன். இது கவுன்ஸலிங்தான் மாமி, நீங்க... இந்த நாலு சுவருக்குள்ளே எத்தனை நாள் புழுங்குவேள்? வாங்கோ... ஒருநாள் கூட்டிண்டு போறேன். சும்மா தெரிஞ்சவங்க வீட்டுக்குப் போறாப்பல...”

“உங்களை இப்ப கோர்ட்டுக்குப் போகச் சொல்லல. இப்ப பாருங்க ரேவு மாமி, பரத் உங்களுக்குப் பிரச்னையாயிட்டான். புருஷன் பெண்சாதி ஒரு இணக்கமில்லாத சூழல்ல, இதை எப்படி நீங்க சமாளிப்பீங்க? சொல்லுங்க?”

“நீங்க அதை முன்னால நிறுத்திப் பாக்கறப்ப எப்படியும் உங்க ரெண்டு பேருக்குள்ளயும் ஒரு புரிந்து கொள்ளும் ஒத்துமை இருக்க வேணுமில்லையா? நீங்க சுயசம்பாத்தியம், சுயச்சார்பு உடையவராக, இப்ப என்னைப் போல இருந்தால் அந்த மாதிரி வேற, நீங்களே முழுசாப் பொறுப்பை ஏத்துக்கிட்டு, போன்னு தனியே வந்துடலாம். அதுவும் இல்ல... உங்களுக்கு நல்லது இல்லாததை நான் சொல்லமாட்டேன் ரேவு மாமி!”

ரேவுவுக்கும் சரி என்று படுகிறது.

“போகலாம் சுதா!”

அத்தியாயம் - 7

மார்கழி வெயில் வறட்சியாக இருக்கிறது.

சுதா காலையிலேயே இரவு வேலை முடித்து வந்து விட்டாள். ராம்ஜி, பரத் இரண்டு பேருக்கு அப்போது விடுமுறை. ராம்ஜியிடம் வீட்டைப் பார்த்துக் கொள்ளச் சொல்கிறாள். பரத் வீட்டில் இல்லை.

“நான் சுதா ஆன்ட்டியுடன் கொஞ்சம் வெளில போய்ட்டு வரேன். சாயங்காலம் நாலு மணிக்கு வந்துடுவேன். வீட்டைப் பார்த்துக்கறியா?”

“நீங்க போங்கம்மா, நான் இப்படியே உக்காந்திட்டு படிச்சிட்டிருப்பேன்...”

“தோசை வாத்து வச்சிருக்கேன். ஃபிளாஸ்கில் காபி ஊத்தி வச்சிருக்கேன். சாப்பிட்டுக்கோ. பரத் வந்தால் வெளியில் போக வேண்டாம்னு சொல்லு!” எத்தனையோ தடவைகள் அவள் வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறாள். சாமான் வாங்க, கியூவில் நின்று கரண்ட் பில் கட்ட என்று சென்றிருக்கிறாள். ஆனால் இன்று சுதாவுடன் புருஷனுக்குத் தெரியாமல் ஒரு குற்ற உணர்வுடன் வெளியில் இறங்குகிறாள்.

வெளியில் இறங்கிய பிறகுதான் அவளுக்கு ராம்ஜி, அப்பா வந்தால் அம்மா சுதா ஆன்ட்டியுடன் வெளியில் போனால் என்று சொல்லிவிடுமோ என்று அச்சம் மேலிடுகிறது.

தெருக்கோடி சென்று ஓர் ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறிக் கொள்கிறார்கள். அது எந்தப் பக்கம் செல்கிறது என்றே புரியாத குழப்பம். அடுக்கு மாடிகளாக உள்ள ஓரிடத்தில் தெருவில் திரும்பி வண்டி செல்கிறது. இந்தப் பகுதிக்கு அவள் வந்ததாக நினைக்கவில்லை. குரு சுவாமிகள் விசேட பூசை நடக்கும் இடங்கள், அல்லது மிகவும் வேண்டப்பட்டவர் வீட்டு விசேடங்கள் என்று புருசனுக்கு நிழலாக வந்து போன இடங்களில் ஒன்று இல்லை இந்த இடம். வாசலில் கூர்க்கா, “யார் வீடம்மா” என்று கேட்கிறான். “என்.கே.ஆர்.” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு சுதா முன்னே சென்று, இரண்டாம் மாடியில் மணியை அழுத்துகிறாள்.

கதவைத் திறப்பவர்... சிவப்பாக, உயரமாக, நிமிர்ந்து பார்க்கும்படி இருக்கிறார். மேலே கை வைத்த பனியனும் வெள்ளைக் கதர் வேட்டியும் அணிந்திருக்கும் அவர் முகமலர்ந்து, “வாங்க, வாங்க, இப்பத்தான் நினைச்சிட்டேன். உங்களை லஞ்சுக்கே வரச் சொல்லியிருக்கலாமே, நல்ல வெயில் நேரமாக இருக்கேன்னு... வாங்க சுதா... வாங்கம்மா!... உள்ளே நுழைந்ததும் ஒரு பெரிய கூடம் நீள வாக்கிலும், அகலவாக்கிலுமாக ‘ட’ எழுத்துப் போல இருக்கிறது. நீளவாக்குக் கூடத்தில், ஊஞ்சல்... புதுமையாக... அப்பால் சோபாசெட், தொலைக்காட்சிப் பெட்டி, சுவர்க்கடிகாரம், புத்தகம் தெரியும் கண்ணாடி அலமாரி...

“ஊஞ்சல்ல உக்காரலாம்... சுதா... உங்களுக்குப் பிடிக்குமே?...” என்று சொல்பவர், ரேவுவைப் பார்த்து “உங்களுக்கு ஊஞ்சல் பிடிக்காதுன்னா, இப்படி சவுகரியமாக உட்காரலாம்...” என்று சோபா ஒன்றை வசதியாக இழுத்துப் போடுகிறார்.

“நீங்க எங்களுக்கு லஞ்ச் தயார் பண்ணியிருக்கிறீங்களா, என்.கே.ஆர்.ஸார்...?”

“ஓ, ரெடி...!...”

“ஹம்... மசாலா வாசனை மூக்கைத் துளைக்குது ஸார்...” என்று சுதா மூச்சை இழுத்து விடுகிறாள். “நீங்க இன்னும் சாப்பிடாமலா காத்திருக்கிறீங்க? மணி ஒண்ணரையாச்சே?”

“நான் காலைல பிரேக்ஃபாஸ்ட் எடுத்திட்டே இன்னிக்கு. அப்ப, வாங்க இதோ அஞ்சே நிமிஷத்தில் நான் டேபிள் ரெடி பண்ணிடறேன்...” அவர் உள்ளே செல்கிறார்.

ரேவு சுதாவிடம் சங்கடத்துடன், “சாப்பிட வரோம்னு சொல்லலியே சுதா? நான் சாப்பிட்டாச்சம்மா, எனக்கொண்ணும் வேண்டாம். அவர்ட்ட சொல்லிடு பாவம்..” என்று கிசுகிசுக்கிறாள்.

சுதா பின்னே சென்று அவர் என்ன செய்கிறார் என்று பார்க்கிறாள்.

மேசை மீது மூடிய கிண்ணங்கள் மூன்று இருக்கின்றன.

தட்டுக்கள் கரண்டி, எல்லாம் இருக்கின்றன.

ஆரஞ்சு, வாழைப் பழங்கள்.

“ஸார், என்ன இது நிசமாவே லஞ்ச் செஞ்சுட்டீங்களா? நான்... நாங்க சாப்பிட்ட பின் தான் வந்தோம்... நீங்க சாப்பிடுங்க ஸார்.”

“பரவாயில்லே... நிசமாவே நீங்க சாப்பிட்டீங்களா?... நான் பூரி, சப்ஜி, தயிர் சாதம் பண்ணிருக்கேன்... ஷேர் பண்ணிக்கலாம்...”

“ஐ’ம் ஸாரி... நேத்தே பளிச்னு சொல்லாம போயிட்டேன்...”

“அதெல்லாமில்ல...!”

பூரி, கிழங்கு இரண்டையும் எவர்சில்வர் தட்டில் வைக்கிறார்.

“வாங்கோம்மா, ரெண்டு பூரி சாப்பிடலாம். நீங்க ரொம்ப மெலிசாத்தானிருக்கீங்க! கை அலம்பிக்குங்க, இதோ வாஷ்பேஸின்...” ரேவு கூசிப் போகிறாள். என்றாலும் அவர் சொல்வதில் ஏதோ மந்திரக் கவர்ச்சி தோன்றுகிறது...

பச்சைப் பட்டாணி சிவப்புத் தக்காளி காரட் தெரியும் உருளைக் கிழங்கு கூட்டுடன் பூரியை மிக மெதுவாகச் சுவைக்கிறாள்.

“உங்க பேரென்னம்மா?...”

சுதாதான் பதில் சொல்கிறாள். “ரேவதி, நான் ரேவு மாமின்னு கூப்பிடுவேன். ஆனால், அவ உண்மையில் என்னை விட வயசில் சின்னவங்க. அவளுக்கு முப்பத்தெட்டு; எனக்கு நாற்பது...!”

ரேவு சட்டென்று அந்தப் பூரியை முடித்துவிட்டு விடுவிடென்று வாஷ் பேசினில் கழுவித் தட்டை வைத்து விட்டு ஊஞ்சலில் வந்து உட்காருகின்றாள்.

அவரும் சுதாவும் வயசு வித்தியாசம் பற்றி ஏதேதோ பேசுவதைச் செவியில் போட்டுக் கொள்ளவில்லை. இனம் புரியாத பயம், நெற்றி, உள்ளங்கை வேர்க்கிறது. சேலைத் தலைப்பால் ஒத்திக் கொள்கிறாள்.

“அடடா... என்னம்மா, ரேவதி?... ஒரு கரண்டி இந்த பகாளாபாத் ருசிக்கக் கூடாதா? வாங்க? அதுக்குள்ள அலம்பிட்டீங்க...”

“வேண்டாம் எனக்குப் போரும்...”

“நோ... ஒரே ஒரு கரண்டி...”

வற்புறுத்தலாக இன்னொரு தட்டில் ஒரு கரண்டி - மேலே பச்சைத் திராட்சை, கடுகு, இஞ்சி தெரிய தயிர் சோறு.

பச்சைத் திராட்சை போடலாம் என்று ரேவு நினைத்ததில்லை. சாப்பிட்டாக வேண்டி இருக்கிறது.

சுதாவே தட்டுக்களைத் தொட்டியில் கொண்டு போடுகிறாள்.

தண்ணீர் குடித்து வாசனைப் பாக்கையும் எடுத்துக் கொண்டு சுதா ஊஞ்சலுக்கு வருகிறாள்.

“சாப்பாடு எங்கேன்னாலும் நான் தட்டுவதில்லை. சுருதி சொல்லுவாள் - அம்மா, புது வீட்டு வாசப்படியை நாலடி வச்சது போதாது? ஆறடி வைக்கணும்னு!”

ரேவுவுக்கு இப்போதும் சரளமாக இருக்க முடியவில்லை. ஏன் வந்தாள்? எப்போது போகப் போகிறாள்?

அவள் உணர்வுகளை அவர் புரிந்து கொண்டாற் போல், “அந்த ஊஞ்சல் உங்களுக்கு வசதியாக இல்லையோ? இப்படி சோபாவில் உட்கார்ந்துக்கலாம். எனக்கு ஊஞ்சல் பிடிக்காது. ஸ்திர புத்தி வேணும்ன்னா ஊஞ்சல் சரிப்படாது. ஆனா, சொகுசுக் காரங்களுக்கு ஊஞ்சல், ஒரு சுகம். எங்கம்மா, ஊஞ்சல்லதாம் இருப்பா. எங்க தாத்தா, கேரளத்தில் கப்பல் வியாபாரி. டிம்பர் பிஸினஸ், எங்கம்மா ஒரே பொண்ணு. அப்பா, மாமனார் வீட்டு மாப்பிள்ளையாப் போனார். திருச்சூரில் பெரிய வீடு, வழவழன்னு ஊஞ்சல் - அகலமா இருக்கும். நல்ல கருங்காலி மரம். சங்கிலிக்குப் பித்தளையால் குழாய் போல மூடி போட்டு நிகுநிகுன்னு பாலிஷ் பண்ணிருப்பா. அதுக்கு அளவா மெல்லிசா பட்டு மெத்தை. நல்ல பருமன் சிவப்பு. காதில் ப்ளூஜாகர் வைரத்தோடு, மூக்குத்தி... என்னுடைய பெரிய அக்கா பையன் என்னை விடப் பெரியவன். அவன் அவளை ஊஞ்சல் பாட்டிம்பான். கோபம் வரும் எனக்கு. அவ அம்மா - பாட்டில்லம்பேன். எனக்குப் பத்து வயசில் அம்மா செத்துப் போயிட்டா... எல்லாம் பழைய கதை. இந்த ஃப்ளாட் வாங்கறப்ப, எனக்குத்தான் ஒரு ஊஞ்சல் ஆசை... இப்படிப் போடச் சொன்னேன். சாரதாக்குக் கூடப் புடிக்கல. ‘இருக்கிறதே தொளாயிரம் சதுர அடி. அதுல உங்க புஸ்தக பீரோ வேற அடச்சிட்டிருக்கு. இதுல ஊஞ்சல் வேற எதுக்கு!’ன்னா. ஆனா அவ தான் இதுல எப்பவும் ஆடிட்டிருப்பா...”

“...உங்கம்மா ஆடின அந்த ஊஞ்சல்... சங்கிலியில் பித்தளைப்பூண் போட்டு மூடி... அது எப்படி இருக்கும்?...” என்று சுதா கேட்கிறாள்.

“எங்கம்மா எனக்குத் தெரிஞ்சே சீக்கா இருந்தான்னு நினைப்பு. டாக்டர் வருவார். நர்ஸ் இருந்தா. நாங்கள்லாம் அப்பாவோட அக்கா, அத்தை சின்ன வயசில் விடோ ஆனவள். அவளிடம் தான் வளர்ந்தோம்... அம்மா போன பிறகு அப்பா அந்த வீடு, அம்மா ஆண்ட சாமான் எல்லாமே வேணான்னு வச்சிட்டார். நான் காலேஜில படிக்கச் சேர்ந்திருந்தேன். திருச்சியில் ஆனர்ஸ் ரெண்டு வருஷம். படிப்பை விட்டுவிட்டு, காங்கிரஸில் சேர்ந்து, நாற்பத்திரண்டுப் படையில் தீவிரவாதியானேன். அப்பதான் அப்பா செத்துப் போனார். ஏழு வருஷம் ஜெயிலில் இருந்து வந்து பிறகுதான் நான் பார்த்த வீடு, உறவுகள் எல்லாமே மாறிப் போச்சு. பெரியக்கா இரண்டு பேரும் டில்லியில் இருந்தார்கள். அவரவர் புருஷன்மாரெல்லாம் டில்லி சர்க்காரில் உயர்ந்த வேலை. எனக்குச் சமமாக இருந்த, அக்கா பையன் ரங்கநாத், ஃபாரின் சர்வீஸ் பரீட்சை கொடுத்திருந்தான். மூணு அண்ணன்களில் இரண்டு பேர் ஓகோன்னு பிஸினஸில் இருந்தாங்க. ஒருத்தன், ரயில்வே ஸர்வீஸில் பெரிய அதிகாரியாக இருந்தான். நான்... இவங்க எல்லாருக்குமே தீண்டப்படாதவனாயிட்டேன். இப்படி நினைச்சுப் பாப்பேன். அப்பாக்கு அம்மா பேரில் வெறுப்பா?... அவள் பணக்காரி, டாமினன்ட் எல்லாம் என்னால் வந்த வாழ்வுதானேடா? நீ ஊட்டுப்புரையில் சாப்பிட்டுப் படிச்ச ஆள்தானேன்னு நினைச்சிருப்பாளோ என்னமோ... அவ, புடைவை, நகை எல்லாமே ஊஞ்சல் பலகை உட்பட, சாரிடீஸுக்குக் கொடுத்திட்டார்னு கேள்விப்பட்டேன்...”

ஏதோ கேட்க வந்து, சம்பந்தமில்லாமல் தன் கதையைச் சொல்லிக் கொண்டு போகிறாரே என்று தோன்றவில்லை. ரேவு அவளையும் அறியாமல் அந்தப் பேச்சில் - குரலில் மனம் கொடுக்கிறாள். அவரும் அவளைப் பார்த்துக் கொண்டே பேசுகிறார்.

“அப்புறம் தான் லெஃப்ட் மூவ்மென்ட்ல - டிராமா எழுத ஆரம்பிச்சீங்களோ?...” என்று சுதா கேட்கிறாள்.

“ஆமாம். அது எவ்வளவு நம்பிக்கையான உலகமா இருந்தது. வந்து படிப்ப முடிச்சு டிகிரி வாங்கினேன். ட்யூட்டோரியல் - எல்லாம் புதிய கண்ணோட்டம். எனக்கும் ஒரு தனி அந்தஸ்து கவுரவம் கூடி வந்தது... கல்யாணம், குடும்பம்... உலகத்தில் வாழ்க்கையில் எத்தனை கத்துக்கலாம்! மாக்ஸிம் கார்க்கி தன் சுயசரிதையில், இளம் பருவம் தாண்டி வெளி உலகில் அநுபவம் பெற்றதையே ‘மை யுனிவர்சிட்டி’ என்று குறிப்பிடுவார். உலக வாழ்க்கைங்கற அநுபவம் பாடமா இருக்கணும்...

“என்ன, ரேவதிம்மா, நான் போறடிக்கிறேனோ? சொல்லுவா, ‘நீங்க பிறத்தியார் பேச எங்க இடம் குடுக்கறீங்க!’ன்னு...” சிரிக்கிறார்.

“இல்ல, நீங்க பேசறது ரொம்ப சரி...”

ரேவுவுக்கு, ஆச்சரியமாக இருக்கிறது. அவளே பேசுகிறாள்?

“எது சரி? நானே பேசி போரடிப்பதா?...”

மீண்டும் சிரிப்பு. கன்னங்களில் குத்துக் குத்தாக, ஏதோ பருத் தழும்பு போல் இருக்கிறது... மனம் விட்டுச் சிரிக்கும் சிரிப்பில், ரேவதிக்கும் சிரிப்பு வருகிறது.

“சரி, இப்ப நீங்க பேசுங்க...”

“நீங்க ஏன் சார், இப்ப நாடகம் எதுவும் போடறதில்லை?” என்று சுதா தான் கேட்கிறாள்.

“நாடகமெல்லாம் பொழுது போக்குன்னு வந்த பிறகு எனக்கு ஆர்வமில்லைன்னாயிட்டது. அதுக்கு ஒரு பர்ப்பஸ், இலட்சியம்னு எனக்கு இருந்தது. அதுக்காக, சம்பாதிச்சதெல்லாம் செலவழிச்சேன். நிறைய சினிமா ஆஃபர் வந்தது. இப்போதும் கூட நடிப்பு தொழிலா வச்சுக்கலாம். டி.வி. இருக்கு. நான் அதுக்குப் போகல. இப்ப ரெண்டு வருஷமா, சாரதாவும் பெண்ணுக்கு ஒத்தாசை, பேத்தியைப் பாத்துக்கன்னு போன பிறகு, காலம, சாயங்காலம் ரெண்டு வேளை கூடக் கிளாசுக்குப் போறதில்ல... எனக்கும் வயசு எழுபத்து நாலாகுது... இந்த அந்தி வெளிச்சம், ஏதோ ஒரு உபகாரமா, மனசுக்குச் சாந்தி வரும்படி இருக்கணும்... வயசும் அனுபவமும் ஏற ஏற, வாழ்க்கை நோக்கமும் வெளி உலக ஆரவாரங்களில் இருந்து விடுபட்டு, ஆனால் நம்மைச் சுற்றிய உலகை நம்முடையதாக ஒட்டிக் கொள்ள - என்னைச் சுற்றி நான்னு போட்டுக் கொண்ட வட்டம் அழியும்படி... கரைஞ்சு போகணும், யார் மேலும் தப்போ விரோதபாவமோ வராமல் என்னையே நான் பார்த்துக் கொள்ளும் அநுபவம்...”

“இப்பதான் ஸார் போராடிக்கிறீங்க...”

“அப்படியா...?” மீண்டும் பூக்கள் கொட்டினாற் போல் சிரிப்பு.

“ஜயவந்தி தேவியப் பத்தி... நீங்க சொன்னதைச் சொன்னேன். இவ... பயப்படுறா. டைவர்ஸ், கோர்ட்டு அது இதுன்னு வேண்டாம். ஆனா விடுதலைன்னு குடுத்துட்டு எனக்கு ஏதோ மெயின்டனன்ஸ் குடுத்தாப் போதும்ங்கறா...”

“இது ரொம்ப சிக்கலான பிரச்னை. நாடகம், கதைன்னா, ஒரு கிளைமாக்ஸைக் கொண்டு வந்து, ஒருத்தரைச் சாக அடிச்சோ, விலக வச்சோ, முடிச்சிடலாம். ‘தமிழ்ப் பண்பாடு’ இந்தியப் பண்பாடும்பாங்க. கலியாணம் பண்ணிக் குடும்பமாக இருந்தவங்க விலகக்கூடாது. அவதான் விலகிப் போகணும். கோவலனாகிப் போன புருஷனை இவங்கதான் கண்ணகியாக இருந்து ஏற்கணும்...” என்று சிரிக்கிறார்.

உடனே தீவிரமாக, “இது வாழ்க்கை, ரேவம்மா, உங்களுக்கு என்ன வயசு இருக்கும்? முப்பத்தாறு, முப்பத்தேழு இருக்கும், இல்லையா? உள்ளோடு குடும்பம், புருஷன், பிள்ளைகளை விட்டுத் தனியாக இருக்கும் ஆசை வருமா?... கஷ்டங்களினால், இதுவரை குடும்பத்தில் பெற்ற கசப்பான அநுபவங்களினால், அந்த உணர்ச்சிகளில் முடிவு எடுக்கிறீங்க அப்படி... இது ஊசிமுனை முடிவு. முதலில் நீங்கள் உங்களையே புரிஞ்சுக்க வேணும். நிசமாவே, தனியாக ஒதுங்கினால் அமைதியாக சந்தோஷமாக இருக்கலாம்னு நினைக்கிறீங்களா?”

“அதெப்படி சந்தோஷம் வரும் ஸார்?... ஆனால், பிரச்னைக்கு அவளால் வேறு தீர்வு காண முடியல. அந்த ஆளைத் திருத்த முடியாது. ஜயவந்திதேவி பிரச்னை மட்டும் பிரச்னை இல்லை. அந்த ஆள்... ஒரு இன்ஹியூமன்... மனித ஈரமே இல்லாத கொடுமையை இவங்களுக்குச் செய்றான். இதை அவனுக்கு எப்படிப் புரிய வைக்க?”

“புரியிது. அவளும் ஒரு மனுஷ ஜீவி - அவளுக்கும் ஆசை, அபிலாஷைகள், வெறுப்புகள், கோபதாபங்கள் இருக்கும் என்று புரிஞ்சு கொள்ளாம இருப்பதே கொடுமை. அதுக்கும் மேல... இம்சை... ரேவதிம்மா, நீங்க கொஞ்ச நாளைக்கு உங்க புருஷரை விட்டு விலகி, உங்க ஸர்வீஸ் - அதாவது உங்களால கிடைக்கும் சுகங்கள் - அவனுக்கு இல்லாம பார்த்துக்குங்களேன்?... அப்படி உங்களுக்குள் பிரிவு இருந்தால் புரிந்து கொள்ளல் வரலாம் இல்லையா?”

“எனக்குப் போக எந்த இடமும் இல்லை ஸார்...”

இதைச் சொல்லும் போது அழுகையே வந்து விடுகிறது.

“ஓ... ஸாரி...”

ரேவு தன்னை மறந்து விம்மி விம்மி அழுகிறாள்.

“ஓ, நோ... ஷ், ரேவு மாமி? என்ன இது...? நாங்கள்ளாம் இருக்கோம். பத்துநாள் உங்களைப் பார்த்துக்க மாட்டோமா?...”

“இல்ல... சுதா, நான் எத்தனை நாள் சகிக்கிறது? சுமக்கிறது? நான் எங்கே போக? போக முடியாத ஒரு பெரிய பாரத்தை நான் சுமந்து கொண்டு அவதிப்படறேன். குடும்ப நிழலே அத்துப்போய் இந்த நிழல்ல ஒதுங்கியிருக்கேன். இதை முறிச்சிண்டு நான் போகக் கூடாது. உங்களுக்குத் தெரியாது...”

புடைவைத் தலைப்பால் முகத்தை அழுத்திக் கொண்டு ரேவு உணர்ச்சிவசப்படுகிறாள்.

“நீங்க எங்கும் போக வேண்டாம்... உங்க தம்பி இருக்கிறாரே, அவர் வீட்டில் போய் ஒரு நாலஞ்சு நாள் இருக்கலாமே? புருஷன், குழந்தைகள் - அடுப்பு சமையல், அழுத்தங்கள் இல்லாமல்” என்று சுதா கூறுகிறாள். ரேவதி கெட்டியாக முடிந்து கொள்கிறாள்.

‘அக்கா, எப்ப வேணுண்ணாலும் நீ வரலாம்... ஃபோன் நம்பர் தரேன்... என்று வேம்பு சொன்னான். பாயம்மா... சொந்த உறவுகளை எல்லாம் விட்டுப் பெரிய எல்லைக்குள் நிற்கும் ஒரு அம்மா... அவாள்ளாம் எப்படி இருப்பாள்னு பார்க்கலாம். இது தப்பா?...’

“சரி, பார்க்கலாம்...”

“அதைச் செய்யுங்க... உங்களுக்கு ஒரு ஆசுவாசம். நிதானமா முடிவெடுக்க ஒரு ஆறுதல் தோணும். இப்படி நாம பிரச்னையை அவனுக்குப் புரிய வைக்கலாம்...”

“ஆனால், தம்பி வீட்டுக்குப் போவதை அவர் ஏத்துக்க மாட்டார். என் பிறந்த வீடே சாபம் எனக்கு. அவனையும் வரக்கூடாதும்பார்... நான் போனா, பிறகு திரும்பி வரக்கூடாதும்பார், நிச்சயம்...”

“அது ஏன்? ஏன்?...”

அவள் பதில் கூறவில்லை.

“அப்ப, நீங்களே எந்த முடிவுக்கும் வரவேணாம். கஷ்டப்படுறேன்னு ‘கற்பரசி’ப் பெருமையா நினைக்கிறேளா?”

அவள் குரலில் கடுமை இலேசாக இழையோடியது.

“வேற வழியில்லை.”

“வழியிருக்கு. நீங்க நாலஞ்சு நாள் போயிருங்க. பிரச்னை வரட்டும். கலகம் பிறக்கட்டும். வழி வரும், ரேவம்மா? உங்களை இங்கேயே வந்து இருங்கம்பேன். எனக்கு யாரிடமும், எந்த சமுதாய பயமும் கிடையாது. உங்களுக்கு அது ‘புரட்சி’யாத் தோணும்... உங்களுக்கு அப்படித் தைரியம் வரணும்மா... ‘பயம்’ இருக்கவே கூடாது...”

பயம்... பயமாகவே இருக்கிறது அவளுக்கு.

அத்தியாயம் - 8

ரேவு இது வரையிலும் தனியாகச் சென்று ஃபோன் பண்ணியது இல்லை. அவள் ஃபோனில் பேசியதில்லை. இதை சுதாவிடம் சொல்லவும் கூச்சமாக இருக்கிறது.

ஆனால் அவர்... அவர் சொன்னார். பயம் எதற்கு? என்ன கூச்சம்? தைரியம், துணிவு வேண்டும்...

கடைவீதிக்குத் தினமும் போகிறாள். தொலைபேசி எல்லா இடங்களிலும் இருக்கிறது. அவள் சாமான் வாங்கும் கடையில் இருக்கிறது. மருந்துக்கடை, துணிக்கடை, ஏன், இதற்கென்றே ஒரு கால் ஊனமானவர் கடைபோல் வைத்துக் கொண்டிருக்கிறார்.

ரேவு துணிச்சலாக அடுத்த நாள் காலையில் அங்கு சென்று நிற்கிறாள். “...வந்து, எனக்கு ஒரு போன் பண்ணனும். எவ்வளவு?”

“ஒரு ரூபா... நம்பர் சொல்லுங்க...”

இவள் துண்டுச் சீட்டில் எழுதி வந்த நம்பரைக் காட்டுகிறாள். அவரே இலக்கங்களைச் சுற்றிவிட்டு, இவள் பக்கம் கொடுக்கிறார்.

மணி அடிக்கிறது. யாரோ எடுத்து, ‘பவர் லாண்டிரி!’ என்று குரல் கொடுக்கிறார்கள். “...வந்து...ப்ளீஸ் வேம்பு, தையல் கடை வேம்புவைக் கூப்பிடுறேளா?”

இரவெல்லாம் இவள் ஒத்திகை பார்த்துக் கொண்ட உரையாடல்.

‘ஒன் மினிட்’ என்று சொல்லிவிட்டுப் போகிறான். “வேம்பு பையா, வேம்பு பையா!” என்று கூப்பிடும் குரல் கேட்கிறது.

சிறிது நேரம் சென்ற பின், “வேம்பு பையா இல்ல. கடை பூட்டிருக்கு. அம்மாள அழைச்சிட்டு ரிக்க்ஷால போனான்.”

மிக மெதுவாகக் கேட்கிறது. ரேவுவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. “ஹலோ... வேம்பு பையன் இல்லீங்க. நீங்க யாரு கூப்பிட்டான்னு சொல்லுங்க போரும்...”

போனை அவரிடம் கொடுத்து விடுகிறாள்.

“மூணு ரூபாயாச்சும்மா!...”

ஏன் என்று கேட்கவில்லை. பேசியாயிற்று. அதே ஆறுதல். மூன்று ரூபாயைக் கொடுத்துவிட்டு விடுவிடென்று வீடு திரும்புகிறாள்.

மனசில் உள்ளே அமுக்கிக் கிடந்த ஆவல்கள் குறுகுறுவென்று தலைநீட்டுகின்றன. அவள் வேம்புவின் வீட்டுக்கு புதிய மனிதர்களின் நடுவே போகப் போகிறாள். இந்த வீடு - இதன் பொறூப்புகள் அரிசி, உப்பு, புளி, அரையல், கரையல், இலுப்பச்சட்டிக்கரி இதெல்லாம் இல்லாத ஒரு இடம்... வேம்பு பாயம்மாவைக் கூப்பிட்டுக் கொண்டு எங்கே போயிருப்பான்? அவளுக்குப் பிள்ளைபோல என்றான். ஆஸ்பத்திரிக்குப் போயிருப்பானோ?...

இவள் பாயம்மாவைப் பார்த்து, வேம்புவுக்கு எப்படியோ ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்துக் கல்யாணம் செய்து வைக்கச் சொல்ல வேணும். சாதி... எந்த சாதியானால் என்ன?... அவனுக்கேற்ற பெண்...

அந்த அவர் சொன்னாரே, பணக்கார அம்மா அப்பாவைப் பற்றி...

ஒவ்வொரு குடும்பத்திலும் கண்ணுக்குத் தெரியாமல் எத்தனை முடிச்சுகள்!

...ரேவுக்கு மனம் எங்கெங்கோ செல்கிறது. உடம்பு - கைகள் இயந்திரமாக இயங்குகின்றன.

“ஏய்! புத்தி எங்கே ஊர் மேயப் போயிடுத்தா? மோரூத்து! நெய்யைக் கொண்டு வரே” என்று கணவன் கடித்துத் துப்புகிறான்.

“ஐயோடி!” என்று சிரித்துக் கொண்டு ரேவு தலையில் தட்டிக் கொள்கிறாள். இதற்கு முன்பும் இப்படி மறதியாகச் செய்திருக்கிறாள். ஆனால் இப்போது சிரிப்பு வருகிறது.

“என்னடி இளிப்பு இப்ப? எவன நினைச்சிட்டு இளிப்பு? இந்தப் பக்கத்துக் குடித்தனத்தைத் தூக்கி எறிஞ்சாத்தான் நீ வழிக்கு வருவே! நானும் பையன்களும் பகல் முழுதும் இருக்கிறதில்ல. நீ என்ன செய்யறியோ, எங்கே மேயப் போறியோ? யார் கண்டா?”

இப்போது, ரங்கசாமி - அவரை நினைத்துக் கொள்கிறாள்.

‘என்ன பயம்... என்ன பயம் எனக்கு? சிரிப்பேன்... இதைக் கட்டுப்படுத்த நீ யார்? நான் பத்து நாள் உன்னை விட்டு, இந்த வீட்டை விட்டு நிம்மதியாகப் போகப் போகிறேன்...’

சிரிப்பு உதடுகளில் இப்போதும் எட்டிப் பார்க்கிறது.

“ஏண்டி தேவடியா? யாரை நினைச்சிச் சிரிப்பு இப்ப?...”

“ஒண்ணுமில்ல, உங்களத் தவிர யாரிருக்கா எனக்கு. நீங்க கோவலனா இருக்கலாம். நான் கண்ணகிதான்.”

“என்னடீ? ட்யூன் புதிசா இருக்கு? டயலாக் பேசற? இதெல்லாம் அந்தச் சிறுக்கி சகவாசம். கதவை அறைஞ்சு சீல் வச்சிடறேன் பாரு...” என்று கத்திவிட்டுப் போகிறான்.

‘இருடா... நான் மிஷினில்லைன்னு நிரூபிக்கிறேன்...’ என்று கருவிக் கொள்கிறாள். உண்மையில் அவளுக்கு அழுகை வரவில்லை. துணிச்சல் வந்திருக்கிறது. தடை குறுகக் குறுக, அதை மீற வேண்டும் என்ற வேகமே முன் நிற்கிறது.

மூன்று நாட்கள், காலையிலும் மாலையிலும் வேம்பு வருவான் என்று எதிர்பார்க்கிறாள். ஒருகால் பாயம்மாவுக்கு உடம்பு சரியில்லையோ என்னவோ? எனவே, மறுபடியும் அதே ஊனமுற்றோர் - பூத்தில் சென்று ‘போன்’ பேசப் போகிறாள். “...பவர் லாண்டிரியா, வேம்புவைக் கூப்பிடுகிறீங்களா கொஞ்சம்? சைதாப்பேட்டையில் இருந்து அக்கா பேசறேன்...”

அவன் “லைன்ல இருங்க” என்று சொல்லிவிட்டுப் போகிறான். நெஞ்சு வேகமாகத் துடிக்கிறது. “பிள்ளை யாரப்பா. வேம்பு இருக்கட்டும்... வரட்டும்...”

“ஹலோ...”

வேம்புதான். “நான் தாண்டா அக்கா ரேவு பேசறேன். மூணு நாளைக்கு முன்னே இப்படிக் கூப்பிட்டேன். நீ இல்லை...”

“ஆமாம்க்கா, பாயம்மாவுக்குத் திடீர்னு உடம்பு சரியில்லாமப் போயிட்டுது. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போனேன். ரெண்டு நாள் அங்கே இருக்கும்படி ஆயிட்டது. நேத்துத்தான் கூட்டி வந்தேன்... கடையே திறக்கல நாலு நாளா...”

“நான் அங்கு வரேன் வேம்பு. ஒரு பத்து நாள்... உனக்கு ஒத்தாசையாயிருக்கும்.”

அவன் திடுக்கிட்டாற்போல், “நீயா? நீ இங்க வரியா?” என்று திருப்பிக் கேட்கிறான்.

“ஏன், நான் வரக்கூடாதா? சின்ன இடம்னு சொல்றியா?”

“அதெல்லாமில்ல அக்கா, நீ வீட்ட விட்டுட்டு எப்படி வருவே? அத்திம்பேர் உன்ன வீட்ட விட்டு வர விடுவாரா?”

“அவர் என்ன விடறது? அவர் என்ன, எனக்கு ஜெயிலதிகாரியா? எனக்கும் எங்கேனும் போய் நாலஞ்சு நாள் தங்கணும்னு ஆசையிருக்காதா? இந்த சமயத்தில் உனக்கும் ஒத்தாசையா இருக்கும்...”

“நீ வரதப்பத்தி எனக்கொண்ணும் ஆட்சேபம் இல்ல. ஆனா, நாளைக்கு அத்திம்பேர் நான் தான் உன்னை இங்க கூட்டி வந்துட்டேன்னு கன்னா பின்னாவென்று அவதூறு பேசி வம்பு பண்ணினார்னா என்ன பண்ணுறது? நான் ஒரு நாள் வந்ததுக்கு அத்திம்பேர் மட்டுமில்ல, இந்த சின்னப்பையன் பரத் முதற்கொண்டு தூக்கி எறிஞ்சி பேசினான். எனக்கு நீ வரதில சந்தோஷம்தான். ஆனால் அது உனக்கே தீம்பா முடியும். எனக்கு இங்க நிறைய மனுஷா இருக்கா. இப்பவே பாயம்மாவுக்கு உடம்பு சரியில்லேன்னதும், எம்.எல்.ஏக்குத் தெரிஞ்சு வந்து பார்த்தார்...”

அவன் எங்கே உதறி விடுவானோ என்று அஞ்சி, “நான் வரேண்டா வேம்பு. பாயம்மாவை இப்ப நான் பார்க்கணும். எப்படி வர, வழி சொல்லு!” என்று பற்றிக் கொள்கிறாள்.

“அப்படியா? சைதாப்பேட்டைலேர்ந்து அம்பத்தூர் வர பஸ்ஸில் ஏறிக்கோ, பிரிட்டானியா பஸ் ஸ்டாப்பில் இறங்கி வலது கைப்பக்கம் ரெண்டாவது தெரு. ரகுபதி டிரேடர்ஸ்னு ஒரு போர்டு இருக்கும் மூணாவது வீடு. வாசல்ல கடை. உள்ளே சந்து போல போகும் வீடு... ஸ்ரீராம்ஜீயையோ, பரத்தையோ கூட்டிட்டு நாளைக்குப் பத்து மணிக்குமேல் புறப்பட்டு வா. கூட்டம் ரொம்ப இருக்காது!...”

நடுக்கதவை, அவன் பெரிய பூட்டுப் போட்டுப் பூட்டி இருக்கிறான்.

காலையில் வேலைக்காரி தண்ணீர் அடிக்க வரும் போது ரேவு சுதாவைப் பின்னே வரச் சொல்லி அனுப்புகிறாள்.

“சுதா, நான் முடிவு பண்ணிப் பேசிட்டேன். இது, ஃபோன் நம்பர். நீங்க எதானும் பேசணும்னா, பேசலாம். பத்து மணிக்கு மேலே போறேன்...”

“ரேவு மாமி! உங்களுக்கு நல்ல காலம் வந்துடுத்து. கவலைப்படாம போங்கோ! நான் பாத்துக்கறேன்...” என்று அனுப்புகிறாள்.

வழக்கம் போல் சமைத்து, டிபன் பண்ணி, அவர்கள் மூவரையும் அனுப்புகிறாள். ராம்ஜிக்கு ஏதோ பரீட்சையாம்... இரண்டு மணிக்குள் வந்து விடுவேனென்றான். சுதா வீட்டில், ரகுவிடம் சாவியைக் கொடுத்துவிட்டுப் பையுடன் அவள் விடுவிடென்று நடக்கிறாள். துணிந்த பின் துயரில்லை.

பஸ் நம்பரைப் பார்த்து ஏறுகிறாள். கூட்டமில்லை. உட்கார இடம் கிடைக்கிறது. ஏறி உட்காற்ந்த பிறகுதான் வெறுங்கையுடன் போகிறோமே என்று தோன்றுகிறது... இறங்குமிடத்தில் பழம் ஏதேனும் கிடைக்கும், வாங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறாள். பஸ்ஸை விட்டு, பிஸ்கோத்து மணக்கும் இடத்தில் இறங்குகிறாள். தெரு முனையில் தள்ளுவண்டியில் பச்சை வாழைப்பழம் வைத்திருக்கிறான். விலை பேசி ஒரு சீப்பு வாங்கிப் பை மேலாக வைத்துக் கொள்கிறாள். ரகுபதி டிரேடர்ஸ்... மூன்றாவது வீடு...

இதோ, பவர் லாண்டிரி...

மூன்றாவது வீடு... வாயில் தையல் கடை... பூட்டு... சந்து...

உள்ளே ரேவதி நுழைகிறாள். இருட்டான கூடம். பழைய நாளைய மரப்பெஞ்சு - கட்டில் போன்றது... ஒரு சாய்வு நாற்காலி... உள்ளிருந்து ஏதோ... நாற்றம்... முகம் சுளிக்கிறது.

யாரையும் காணோம், வேம்பு...

இதற்குள் உள்ளிருந்து ஒரு பெண் வருகிறாள். வெள்ளையாக இருக்கிறாள். கழுத்தில் கருகமணிச்சரம்; கைகளில் சிவப்பு வளையல்கள் பளிச்சென்று தெருகின்றன.

“வேம்பு, பாயம்மா... இல்ல?”

“ஆமாம், நீங்க யாரு?... பாயம்மாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லாம அவர் ஆஸ்பத்திரில சேர்த்திருக்கிறாரு...”

“நீங்க... நீங்க யாரு?...”

“நீங்க யாருன்னு முதல்ல சொல்லுங்க...”

“நான்... வேம்புக்கு அக்கா, நேத்து, இன்னிக்கு வரேன்னு ஃபோன் பண்ணிருந்தேன். நீங்க யாரு? பாயம்மா உறவா?”

“ஆமா. அவங்க அண்ணன் மக...”

‘அண்ணன் மகளா? அப்படி ஒரு உறவு இருப்பதாகவே சொல்லலியே?’ என்று ரேவு சற்றே திகைக்கிறாள். சுற்று முற்றும் பார்க்கிறாள். பழைய ஜமக்காளப் படுக்கை சுற்றி வைக்கப்பட்டிருக்கிறது. சுவரில் வரிசையாகப் படங்கள் காந்தி... ஒற்றைப்பல் தெரியும் சிரிப்புடன்... ஒரு திறந்த அலமாரியில் பழைய புத்தகங்கள்... இவள் வீட்டில் இருக்குமே அப்படி...

“நீங்கள் என்ன உள்ளேயே வந்துட்டீங்க! நீங்க யாருன்னே எனக்குத் தெரியல. வாசலுக்குப் போங்கோ...”

ரேவுக்குக் கோபமாக வருகிறது.

அந்த அகன்ற கட்டில் போன்ற பெஞ்சில் பையை வைத்துக் கொண்டு உட்காருகிறாள். ‘நான் எதுக்குப் போகணும்...?’

வாசலில் பார்வையைப் பதிக்கிறாள். இவளும்... பாயம்மா சொந்தக்காரியா?... அவா ஒண்ணும் சாப்பிடாதவன்னா, மீனோ எதுவோ நாத்தம் குமட்டுது... ஆண்டவனே, இந்த இடத்துச் சமையல் உள்ளைச் சொந்தமாக்கிட்டுப் பத்து நாள் இருப்பதாக வந்தாளே? வேம்புத் தடியன் அதனால் தான் வராதேன்னு சொல்வது போல் தயங்கினானா?

இவள்... என்ன ஜாதி துளுக்கச்சின்னா - கருமணி... அவாளும் தான் போட்டுப்பா. கல்யாணமானவளா? யாரை...?

அவளிடம் நேராகவே சகஜமாக, “வேம்பு வருவானா இப்ப சாப்பட்டுக்கு?” என்று கேட்கிறாள்.

“உன்ன நான் வெளில போகச் சொன்னேன்!”

“வேம்பு வரட்டும் நான் பாத்துட்டுப் போறேன்... உனக்குக் கல்யாணமாயிட்டுதா?”

அவள் முறைத்துப் பார்க்கிறாள்.

“ஆயிடுத்து, ஆகல்ல, அதைப்பத்தி உனக்கென்ன? நீ முதல்ல இங்கே வெளில போயி உட்காரு! இந்தக் காலத்துல யாரையும் ஒண்ணும் நம்பறதுக்கில்ல. என்னமோ திறந்த வீட்ல நாய் நுழைஞ்சாப்பல திடுதிடுன்னு வந்து உட்காந்திட்டா, கேள்வி கேக்குறா?... ஏய், போ வெளில!”

ரேவுவுக்கு உள்ளூற பயம், கோபம், ஆத்திரம் எல்லாம் மேலிடுகின்றன. பையைத் தூக்கிக் கொண்டு நடை வாசற்படியைக் கடக்கும் முன் தலையில் நிலைப்படி இடிக்கிறது.

‘ஏன்டி, பாவி! இப்படி அவமானம் பண்ணுற? இந்தக் கடங்காரன், வேணுன்னு இப்படிப் பண்ணவா என்னை வரச்சொன்னான்...?’ வாசலில் மூணடி அகல இடம் தான்... கீழே சாக்கடை. வெயில் வேறு நேராக விழுகிறது. ரேவு, குத்துப்பட்ட உணர்வுடன் வலியும் சேர்ந்து கொள்ள, பையை வைத்துக் கொண்டு கண்ணீர் விடுகிறாள்.

சீ... நம் தலைவிதி... எத்தனை நம்பிக்கையுடன் வந்தாள்! ஆனாலும் வேம்புவைப் பார்த்து ஒரு பிடிபிடிக்காமல் நகருவதில்லை என்று உட்கார்ந்து விடுகிறாள்.

மாலை மங்கி இருள் பரவுகிறது.

வேம்பு வேகு வேகென்று வருகிறான்.

திடுக்கிடுகிறான்.

“யாரு, அக்காவா? ஏன், நடையில் உட்கார்ந்திருக்கே! வா...”

அவள் எரிந்து விழுகிறாள். உள்ளிருந்து ஆற்றாமை பொல பொலவென்று வருகிறது.

“நீ என்னைப் பளிச்சினு வராதேன்னு சொல்லியிருக்கலாம். அவ என்னைச் சாக்கடையில் புடிச்சித் தள்ளாத குறையா...” அழுகைக் குடம் உடைகிறது.

“யாரு சாந்தியா? சாந்தி... நீ... அக்காவை விரட்டி அடிச்சியா? உனக்கு அவ்வளவுக்கு வந்துடுத்தா? இடம் குடுத்தா மடம் புடுங்கற கதைதான்! சீச்சீ... என்ன திமிருருந்தா நீ இப்படிச் செய்வே?”

அவன் குரலில் அவள் சுருண்டு போகிறாள்.

“தப்புத்தாங்க மன்னிச்சிக்குங்க, ஸாரி. நீங்க எங்கிட்ட இப்படி அக்கா வருவாங்கன்னு ஒரு வார்த்தை சொன்னீங்களா?... நான், இந்தப் பட்டணக் கரையில எப்படி நம்பி?”

“அதுக்காக மரியாதை இல்லையா? கழுதை! உன்னை விட அவங்களுக்கு இந்த வீட்டில் உரிமை இருக்கு!”

அவள் ஓடி வந்து ரேவுவின் கால்களைத் தொட்டு கண்களில் ஒத்திக் கொள்கிறாள். “ஸாரி அக்கா, எனக்குத் தெரியாம செஞ்சிட்டேன்...”

“உன் ஸாரியும் வேண்டாம், பூரியும் வேண்டாம். போ, எட்டி!... அக்கா, நீ வா... பாயம்மாக்கு ரொம்ப வயத்து வலி சாஸ்தியாயிட்டது. ‘எமர்ஜன்ஸி’ன்னு கூட்டிட்டுப் போயிருக்கு. டெஸ்ட்டெல்லாம் பண்ணிட்டிருக்காங்க. நான் நீ வருவேன்னு நினைப்பு வந்துதா ஓடி வந்தேன். இவ இன்னிக்குக் காலமதான் வந்தா. பாயம்மா ஒத்தாசையாயிருக்கட்டும்னு சொல்லித்தான் முன்னமே கடிதாசி எழுதச் சொன்னா...”

“நீ எப்ப வந்தே?... எதானும் காப்பி கீப்பி சாப்பிட்டிருக்க மாட்டே. பாவம்...”

“பரவாயில்ல வேம்பு... காப்பிக்கென்ன. இங்க ஒரு வாரம் இருந்துட்டுப் போறேன்னுதான் வந்திருக்கேன்...” என்று வாழைப்பழச் சீப்பை வெளியில் எடுத்து வைக்கிறாள்.

கூடத்தில் ஒரு புறம் பழைய நாளைய மர பீரோ இருக்கிறது. அதைத் திறந்து வேம்பு, சட்டைப்பையிலிருந்து பர்சை வைக்கிறான்.

சட்டையைக் கழற்றிக் கையில் எடுத்துக் கொண்டு, “நான் குளிச்சிட்டு வரேன்... ஏ, சாந்தி...?” என்றவன் உள்ளே சமையல் அறையில் எட்டிப் பார்த்து எதற்கோ திட்டுகிறான்.

“இந்த இடம் எல்லாம் சுத்தமாகக் கழுவி விடு... அசத்து! பாயம்மா இல்லேன்னா, உனக்கு... சீ...!”

தலையில் அடித்துக் கொள்கிறான்.

வீடு நீளப் போகிறது. பின்னே அடி குழாய். குளியல் கழிப்பறைகள், ஒரு கதவு, அந்த ஒழுங்கையில், பின் இருக்கும் குடித்தனக்காரர் பகுதியைத் தடுக்கிறது.

அந்தப் பகுதியில் இருந்து ஒரு மூதாட்டி, முஸ்லீம் பெண்மணிதான்...

“உம்... ஒண்ணில்ல. குழா போட்டு வச்சிருக்காங்க. செல்வராசு வந்திருந்தாரு. ஸ்பெஷல் ரூம் எடுத்து வசதியா போட்டு வச்சிருக்கு...”

“இது என் அக்கா... நானி ஜான்... சைதாப்பேட்டையில் இருக்குன்னு சொன்னேன்ல்ல...”

புகையிலை போட்ட பல் கறுப்புடன் பார்த்து மகிழ்ச்சி தெரிவிக்கிறாள். ஸ்டவ்வைப் பற்ற வைத்து அவனே ரொட்டி மா பிசைந்து வைக்கிறான். கிழங்கு வேக வைக்கிறான். சாந்தி பால் வாங்கி வருகிறாள்.

“நான் இட்டுக் குடுக்கறேண்டா...”

“அக்கா, நீ நிங்க ஒரு வேலையும் செய்ய வேண்டாம்; ரெஸ்ட் எடுத்துக்கோ. பாயம்மா, பாவம் உன்னைக் கூட்டிட்டு வரச் சொல்லிட்டே இருந்தா, இப்ப நீ வரப்ப இல்ல. ஏ சாந்தி! ஏ நிக்கிற? தட்டெல்லாம் கழுவி வை. உள்ள ஒரு புதுத் தட்டு இருக்கு பாரு. அதை அக்காக்கு எடுத்து வை! நாளைலேர்ந்து தையல் இலை வாங்கிட்டு வரேன்...”

“எதுக்குப்பா இத்தனை சிரமம், உன் பிரியமே போரும். நீ எதுக்கு பாவம் அவளை இத்தனை கோச்சுக்கறே! சமையல் உள்ளெல்லாம் அலம்பி விட்டிருக்கா!”

“பின்னென்ன? இந்தச் சனியன், பாயம்மாக்கே அதான் புடிக்காது...”

“ஏம்ப்பா வெறுமனே திட்டறே?”

“உனக்குத் தெரியாது அக்கா! இவ தஞ்சாவூர் மராட்டிப் பிராம்மணக் குடும்பம். ஆனா, மீன் குழம்பு வச்சுத் திங்கணும்! பாயம்மா இல்ல, நானில்ல... வச்சுட்டா! உன்ன அதுனாலயே வாசல்ல போன்னு அடிச்சு விரட்டிருக்கு!...”

ரேவுவுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

“சீ... பாவம், குழம்பக் கொட்டச் சொல்லிட்டியா?”

“ஐயோ, அவளா கொட்டுவா? ஓசைப்படாமல் கொண்டுக் குடுத்திருப்பா. சோத்த எடுத்திட்டுப் போய் மொக்கிட்டு வருவா...”

“ஏய், சாப்பிட்டு நீ ஆஸ்பத்திரிக்குப் போ? ராத்திரி நீதான் ரூமில படுக்கணும். நான் காலம காபி எடுத்திட்டு வரேன்! என்ன? போ...!”

ரேவுவுக்கு எல்லாமே புதுமையாக இருக்கிறது.

ஆனாலும் ஓர் ஆறுதலை உணருகிறாள்.

அத்தியாயம் - 9

“ஹார்லிக்ஸ் சர்க்கரை அங்கே இருக்கு. டம்ளரும், ஃபிளாஸ்கில் வெந்நீரும் எடுத்து வச்சுக்கோ. அம்மா ப்ளவுஸும், லூசான பாவாடையும் கேட்டிருக்கா; எடுத்து வச்சிட்டுக் கிளம்பு, நேரமாயிட்டது!”

“சாந்தி, தனியாகப் போயிடுவாளா?”

“அவளா? மட்றாசையே வித்துட்டு வருவா!... ம், கிளம்பு!”

“அங்கே ஓராயா போடுறதாச் சொன்னாங்க நர்ஸம்மா. நீ சீக்கிரம் போயி வேணான்னுடு. நாளைக்கு ஆபரேசன் பண்றாங்களோ என்னமோ... பக்கத்திலேயே கீழ படுத்துக்க...!”

“ஆகட்டும்... வரேன்க்கா!...”

“காலம நான் வந்த பிறகு தான் நீ வர வேண்டி இருக்கும்! அங்கே இங்கே போகாதே! பத்திரம்! ராத்திரி நீ பாட்டுல தூங்கிப் போகாதே!”

அவள் எல்லாவற்றுக்கும் தலையாட்டி, சரி, சரி என்று சொல்லிவிட்டு, வயர் கூடை சாமான்களுடன் படி இறங்குகிறாள்.

அந்தக் கட்டிலில், வேம்பு அவளுக்குப் படுக்கை விரிக்கிறான். ஒரு போர்வை தருகிறான்.

“நான் கீழே படுத்துக்கறேண்டா, வேம்பு. எனக்குக் கட்டிலே வேண்டாம்...”

“எனக்கு அது நீளம் பத்தாது. நீ படுத்துக்கோ. இங்கே குளிராது. கொசுவும் கிடையாது. ஃபான் வேணுண்ணா போட்டுக்கலாம்...”

விளக்கை அணைத்து விட்டுப் படுக்கிறார்கள்.

மணி ஒன்பதுதான் ஆகியிருக்கிறது. ஒரு பெரிய சந்தைக் கடை நடுவே சிறு பெட்டி போல் ஓரிடம்.

எல்லாம் நேர் கோடுகளாகவே இல்லை. ஒருகால் இவள் இன்று வரவில்லை என்றால், அந்தப் பெண்ணும் - வேம்புவும்...

“அக்கா...! தூங்கிட்டியா...”

“இல்ல... புது இடம். தூக்கம் அப்படி வந்துடறாப்பல இல்ல...”

“அக்கா, பாயம்மாக்கு, என்ன உடம்பு தெரியுமோ? பெரும்பாடுன்னு சொல்லுவாளே, அப்படிக் கொட்டறது ரொம்ப நாளாவே இருந்திருக்கு. இங்க பொம்மனாட்டி யாரிருக்கா? பின்னே பார்த்தாயே, காசிம் சாயபு அம்மா நானிஜான் தான் எங்கிட்டச் சொன்னா. அவதா லேடி டாக்டர்கிட்டப் போயி, அஞ்சு மாசத்துக்கு முன்ன காமிச்சா. புள்ளகுட்டிப் பெறல; தீட்டுத் தொடக்கம் போயி ரொம்ப நாளாச்சி. இப்ப இப்படி இருக்கேன்னு காட்டிருக்கா. அவா... இது கான்ஸர்னு சொன்னாப்பல. நான் அப்ப சரஸ்வதி பூசைக்கு முன்ன, இதைச் சொல்லி ஒரு ஒத்தாசை கேக்கத்தான் வந்தேன். என்னப் பெத்த புள்ளக்கி மேல வச்சிட்டிருந்தாங்க. நான் அவாளுக்கு இப்படி ஒரு ஒத்தாசை கூடச் செய்யலேன்னா எப்படி?... ஆனா, என்னமோ நினச்சி, எப்படியோ ஆயிட்டது. பிறகு நானேதான் இந்த சாந்திக்கு எழுதினேன். இது ஒரு நச்சு. பாயம்மாக்கே புடிக்காது. ஆனா, பாவம்... வெகுளி... அவ ஏதோ சொன்னான்னு நீ மனசுல வச்சுக்காதே...”

“அவளுக்குக் கல்யாணமாயிட்டதுன்னு சொல்றா?”

“ஐயோ, அது ஒரு பெரிய கதை அக்கா. இவம்மா இவ தாத்தாக்கு ஒரே பொண்ணு. அந்தக் காலத்துல, ஜாதியில்ல, மதமில்லன்னு, எல்லாரும் தேசத்துக்குன்னு சொத்து சுகமெல்லாம் குடுக்கலியா? அப்படி இவ தாத்தா பெரிய மிராசுதார். சுதந்தரப் போராட்டக்காராளுக்கெல்லாம் ஒத்தாசை செய்தார். அப்ப, இவப்பா, மேல் சாதிக்காரருக்குக் கல்யாணம் பண்ணி, சொத்து சுகமெல்லாம் அவனுக்கேன்னு எழுதி வைச்சார். இவ பிறந்ததும் அம்மா செத்துப் போனா... அப்பா உசந்த சாதி. இந்தப் பெண்ணை அப்பா, மேஜராகுமுன்ன தங்கை பையனுக்குக் கட்டி வச்சி எல்லாம் ஒண்ணா வந்துட்டாங்க. தாத்தாவும் கல்யாணத்துக்குச் சம்மதிச்சார்னு சொல்றா. விஷயம் இதுதான். தாத்தா போயிட்டார். இந்தப் பொண்ணை உருட்டி மிரட்டி, வீடு வாசல் நிலமெல்லாம் அவன் பேருக்கு எழுதி வாங்கிட்டதாச் சொல்றா. திருச்சி - தஞ்சாவூர் வழியில் தான் கிராமமாம். திருச்சில காலேஜில சேர்ந்து படிச்சிருக்கா. ஆனா முடிக்கல. அங்கே யாரோ இவா ஜாதி நாயுடுவோ, முத்தரையரோ பையனுடன் சிநேகம்னு சொல்றாங்க. இப்ப இவ அந்தப் புருசனிடம் இருந்து இருந்து டைவர்சும் எழுதிக் கொடுத்த சொத்தும் ஏமாத்தி வாங்கிட்டான்னு கோர்ட்டில் போட்டிருக்காம். அவன் கொடுப்பானா? ரொம்பச் சிக்கலான கேசு. இப்படிக் கட்சிக்காரங்க - பெரியவங்க வீட்டில வந்து சொல்லுவா, தங்குவா... பாய் இருக்கறப்ப அவரும் எத்தனையோ புத்தி சொன்னார். தப்பு இவ பேரிலா அவா பேரிலா, என்னன்னு தெரியாது. இவ அம்மா நகை நட்டெல்லாம் வித்து இப்படிப் பண்ணிட்டிருக்கு. உள் புகுந்து நியாயம் சொல்லவோ எடுத்துப் போட்டுண்டு செய்யவோ யாருமில்ல...”

ரேவு தன்னைப்பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தாளே!

பெண்ணாகப் பிறந்து விட்டால், எத்தனை சங்கடங்கள்! பெண் வயசுக்கு வந்து நல்லது கெட்டது தெரிந்து, புரிந்து, ஒரு புருஷனோடு வாழும் வாழ்வு யாருக்குக் கிடைக்கிறது?

அந்த ஜயவந்திதேவி... அவள் படித்துத் தன் காலில் நின்றதால், தன்னைப் பூச்சிபோல் நினைத்தவனை ஒதுக்கி விட்டு வந்துவிட்டாள். அது ரொம்பப் பெரிய காரியமாகத் தோன்றுகிறது ரேவுவுக்கு.

பாயம்மா... ஒருத்தரை நம்பி, உறவே இல்லாமல் வந்து... ஏனிப்படி ஆண்டவன் சோதனை செய்ய வேணும்? ஊர் உலகில் எத்தனையோ வியாதிகள் இல்லையா? இப்படியா வரணும்?

இவள் மாமியாருக்கும் இப்படித்தான் ஏதோ ஒரு வியாதி. இராப்பகலாக ரேவு விசிறுவாள்; பணி செய்வாள். வலி தாங்காமல் எரிந்து விழுவாள். குடும்பம் இருந்தது; கட்டிக் காத்தது... பாயம்மா... ஐயோ, நம் அம்மா...!

அடிவயிற்றில் சொரேர் என்ற உணர்வு.

சீ, என்ன ஆயிரம் இருந்தாலும் குடும்பம் என்ற நிழலைப் பெண்ணாப் பிறந்தவள் விட முடியாது. அதுவும் அவளைப் போன்றவர்கள்... நல்லபடியாக நாளை பாயம்மாவைப் பார்த்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பி விட வேண்டும். அவன் மிருகமோ, பேயோ, அவன் நிழலைத்தான் ஊர் ஒத்துக் கொள்ளும். அவள் தேய்ந்து மாய்ந்து, எப்படியோ, அவள் மாமியாரைப் போல், பர்த்தாவும் பாத்திருக்க, புத்திரனும் கொள்ளி வைக்க ‘நற்பெண்டாட்டிக்கு நாற்பது வயசு’ என்று போய்விட வேண்டும். அறுபட்டுப் போன குடும்பத்திலிருந்து, ஒரு நல்ல தலைமுறையுடன் சேர வேண்டும். செத்துப் போன பன்னிரண்டாம் நாள் - இவள் சபிண்டீ கரணத்தன்று மரியாதைப்பட்ட இக்குடும்பத்துத் தலைமுறைகளுடன் இணைக்கப்படுவாள். மூன்று தலைமுறை முன்னோர்கள் - மாமியார் - மாட்டுப்பெண் - அடுத்த மாட்டுப்பெண். மாமியார் தர்ம சம்வர்த்தினி - அடுத்து, இவள் ரேவதி - ரேவதி நாம்னி - மம - மாதவின்னு சொல்றது. மாதரம்... என்று புரோகிதர் மந்திரம் சொல்ல, ராம்ஜி தர்ப்பையை விரலில் மாட்டிக் கொண்டு அவளுக்குக் கருமம் செய்யும் போது...

“அக்கா...! தூங்கிட்டியா?”

“ம், இல்லேடா... என்னென்னமோ நினைப்பு. பாயம்மாக்கு எதானும் ஆச்சின்னா, கர்மம் யார் செய்வா? எந்த ஜாதிப்படி?”

“அதுவா இப்ப பிரச்னை? உயிரோடு இருக்கும் போது, இதமா, அன்பா நடந்தா அதுவே ஆயிரம் கர்மத்துக்குச் சமம். இதிலெல்லாம் அவங்க ரெண்டு பேருக்கும் நம்பிக்கை இல்லை. சொல்லப்போனா பாய்க்கே நான் தான் கொள்ளி வச்சேன். சமாதி கிமாதி கிடையாது; கோவிந்தா கோவிந்தான்னு கொள்ளி போட்டேன். கட்சிக்காரா எல்லாரும் ஊர்கோலமா - கூட்டமா வந்து பேசினா. பெரிய கூட்டமே போட்டுப் பேசினா. குணங்களைச் சொன்னா, பிரிஞ்சி போயிருந்தவங்க கூட அவர் முன்னே ஒண்ணே வந்து நின்னா. அதுதான் பெரிசு...”

“வேம்பு, நம்ம அம்மாவை நினைச்சுத்தான் துக்கம் துக்கமா வருது. நாமெல்லாம் மகாபாவிகள்! அவ எப்படி வயிறெரிஞ்சாளோ?...”

“நம்மம்மா அப்படிச் சாபமிடமாட்டாள். கோழி முதிச்சுக் குஞ்சு சாகுமா? அம்மா நம்மை எல்லாம் நல்ல படியாத்தான் வைப்பாள். அதனால் தான் இன்னிக்கு நான் ஒரு நல்ல சீலமான இடத்துல வந்து சேர்ந்திருக்கேன். பிறத்தியார் என்ன நினைச்சாலும் நீ மனசில் கல்மிஷமில்லாமல் இருந்தா, அதுவே போதும் அக்கா. அத்திம்பேர் - பரத் கூட என்னைக் கேவலமாப் பேசினாலும் நான் பெரிசா நினைக்கல... சரி, நீ தூங்கக்கா... நானும் தூங்கணும். காலம எழுந்திருக்கணும்...”

வெகு நேரம் அதையும் இதையும் நினைத்துத் தூக்கம் வராமல் புரண்டவள், வேம்பு அதிகாலையில் எழுந்து, பால் வாங்கி வந்து, அடுப்புப் பற்ற வைத்தது தெரியாமல் அயர்ந்திருக்கிறாள். அவன் குளித்துவிட்டு வேட்டி கசக்கி உலர்த்தும் போதுதான் குற்ற உணர்வுடன் எழுந்து வருகிறாள்.

“ஏண்டா, என்னை எழுப்பியிருக்கக் கூடாதா? தூங்கிப் போயிட்டேனே?” அடிபம்பில் தண்ணீர் அடித்துப் பாத்திரங்கள், வாளி, ட்ரம் எல்லாவற்றிலும் நிரப்பி வைத்திருக்கிறான்.

குளியலறை செல்ஃபில் லால் தந்த மஞ்சள் பல்பொடி இருக்கிறது; எடுத்துக் கொள்கிறாள்.

“தண்ணீர் எப்பவும் அடிக்கலாமா?”

“இது கிணற்றுத் தண்ணீர்போல எப்பவும் வரும். பின் வீட்டில் நாம் வேலை முடிச்ச பிறகு தான் வருவா... ஸ்டவ்ல வெந்நீர் வச்சிருக்கேன். குளிச்சிடு... நான் இப்ப காலம ஆஸ்பத்திரிக்குப் போய்ச் சாந்திய அனுப்பறேன். நீங்க சமைச்சு சாப்பிட்டுட்டு பத்து பத்தரைக்கு வந்திடுங்கோ. இன்னிக்கு ஆபரேஷன் பண்ணுறாளோ என்னமோ...”

பாலைக் காய்ச்சிக் காபி கலந்து அவளுக்குக் கொடுக்கிறான். ஒரு எவர்சில்வர் திருகு செம்பில், வெந்நீர் மட்டும் ஊற்றி எடுத்துக் கொண்டு அவன் போகிறான்.

போகும் சமயத்தில் யாரோ வருகிறான்...

“வேம்பு தம்பி!...”

“அட... வாங்க ஸார்... வாங்க...”

“வர நேரமில்ல. ராத்திரிதான் தெரியும். செல்வராசு சொன்னாப்பல. ஜெயின் நர்சிங்ஹோமில் சேர்ந்திருக்குன்னாங்க. டாக்டர் வெற்றிச்செல்வி, நல்லா பார்ப்பாங்க. இந்தாங்க - இதில ரெண்டாயிரம் வச்சிருக்கேன். சவுகரியமாப் பாத்துக்குங்க. எனக்குத் தாய் தகப்பன் போல அவங்க!...”

கண் கலங்க நின்று, பணக்கற்றையை வேம்புவிடம் கொடுக்கிறார்.

“என்ன ஸார் நீங்க? செல்வராஜே எல்லா ஏற்பாடும் செய்து நேத்து ரெண்டாயிரம் குடுத்திருக்காரு... இப்ப... எதுக்குங்க, நான் தேவைன்னா கேட்குறேன்...”

“இல்லப்பா, ஒரு அவசரம்னா திண்டாடக் கூடாது... ரெண்டணா மசால்வடையும் ஸ்டேசன் கிழவிகிட்ட தயிர் சோத்துப் பொட்டலமும் வாங்கிட்டு வந்து சாப்பிட்டு நாளை ஓட்டினப்ப கூட, அவங்க என்னை மறக்கல. நாளக்கின்னு வச்சிக்கல. தியாகத்துக்கு விலையான்னு கேட்டவங்க. இன்னிக்கு, எனக்கு ‘பன்னீர் செல்வம்’னு ஒரு பேரும் பிஸினசும் இருக்குன்னா, அது அவங்க போட்ட பிச்சை. நா இப்ப அவசரமா பம்பாய் கிளம்பிட்டிருக்கிறேன். நாள் கழிச்சி வந்து பார்க்கிறேன். பாத்துக்கப்பா!...”

அங்கவஸ்திரம் விசிற விடுவிடென்றூ வாசலில் சென்று நின்ற காரில் ஏறிப் பறக்கிறான்.

ரேவுவுக்கு ஒன்றும் பேசத் தோன்றவில்லை.

“பாத்துக்கோக்கா!... இவன் சிமிட்டி பிஸினஸ், ஷீட் அது இதுன்னு பெரிய கம்பெனி... கறுப்போ வெள்ளையோ, அம்மாக்குச் செய்யணும்னு கொண்டு குடுக்கிறான். அம்மா ஒண்ணு வாங்கமாட்டா... ம்...” என்று அதை அலமாரியைத் திறந்து வைக்கிறான்.

“அக்கா, கிச்சன்ல எல்லாம் எடுத்து வச்சிருக்கேன். பார்த்துக்கோ, அம்மா காஸ் வாங்கல... இந்த கிரேசின் ஸ்டவ்தான்... பதிஞ்சிருக்கு வந்திடும்னா... இதோ குக்கர்... பீன்ஸ் இருக்கு...”

“எல்லாம் நான் பார்த்துக்கிறேன்ப்பா, நீ போ!”

ரேவு சில நிமிடங்கள் திகைத்துப் போய் நிற்கிறாள். இருபத்தைந்து வருடங்கள், குடும்பம் என்று ஒரு மிருகமான மனிதனை முன்னிறுத்தி அவள் உடம்பைத் தேய்த்திருக்கிறாள். அதில் எந்த மணமும் வரவில்லை. தேசம் - மனிதர்கள் என்பது அவ்வளவு உயர்த்தியா? எல்லாம் துறந்து வாழ்பவர்கள்... வெளிக்குத் தெரியாது போனாலும், மணம் கமழ வாழ்கிறார்கள்.

சமையலறையில் எத்தனை சிட்டையாக எல்லாம் எடுத்து வைத்திருக்கிறான்!...

இவள் சமையலை முடிக்குமுன் சாந்தி வந்துவிடுகிறாள்.

“அக்கா, நீங்க உக்காருங்கோ. பாவம் ரெஸ்ட்ன்னு வந்த இடத்துல நீங்க வேலை செய்யக்கூடாது! நான் இத குளிச்சிட்டு வந்திடறேன்...” அதே கூடத்தில், படங்களுக்குக் கீழ் ஒரு தட்டில் இரண்டு ஜோதி விளக்குகளும் ஒரு பீங்கான் யானை ஊதுவத்தித் தட்டும் இருக்கின்றன. ரேவு, அதில் எண்ணெய் ஊற்றி ஏத்தி, ஊதுபத்தி தேடி எடுத்துக் கொளுத்தி வைக்கிறாள். “எல்லோரும் நல்லபடியாக இருக்கட்டும்!” என்று வேண்டிக் கொள்கிறாள்.

சாந்தி குளித்து விட்டு வந்து உயர்ந்த கொடியில் குச்சியில் சேலை பாவாடைகளை உலர்த்துகிறாள்.

வெளுப்பு மட்டுமில்லை. முடியும் கூட சுருட்டையாக, செம்பட்டையாக, தேய்த்தெடுத்த தேங்காய் நார்போல் இருக்கிறது. விழிகளும் கறுப்பில்லை. காதில் ஒரு பச்சை ஸ்டட். முத்து மூக்குத்தி - இடது பக்கம் போட்டிருக்கிறாள். இவளைப் பார்த்துச் சிரிக்கிறாள். பற்கள் கூட மஞ்சள் பூத்திருக்கின்றன.

“ஏனக்கா, நீங்க வேம்பு ஸாருக்கு சொந்த அக்காவா?”

“என்ன சந்தேகமா? எங்களைப் பார்த்தால் சொந்தமாகத் தோணலியா?”

“இல்ல, நீங்க வட்ட முகமா, சின்ன மூக்கோடு அழகா இருக்கிறீங்க... பொம்பிளக்கி அது அழகு. அவுரு நீள முகம் கூர் மூக்கு. சாடை ஒத்துமையாத் தெரியல... அதான் கேட்டேன்...”

“நாங்க ரெண்டு பேரும் ஒரு அப்பா அம்மாக்குப் பிறந்தவங்கதான்... சரி, இப்ப ரெண்டு பேரும் சாப்பிட்டு விட்டுக் கிளம்பலாம். இன்னிக்கு ஆபரேஷன்னு சொன்னாளே, ஆயிடுத்தா?”

“அப்படின்னுதான் சொன்னா. ராத்திரியே டாக்டரெல்லாம் வந்து பாத்திட்டிருந்தா. காலம பத்து மணிக்கு வெற்றிச் செல்விதான் ஆபரேஷன் பண்ணறா. ரொம்ப வீக்கா இருக்கா; ரத்தம் குடுக்கணுமாம்...”

ரேவுக்குப் பரபரப்பாக இருக்கிறது. கொஞ்சம் சாதம், குழம்பு எல்லாம் எடுத்து வைத்துவிட்டு இருவரும் சாப்பிடுகிறார்கள். பிறகு கதவைப் பூட்டிக் கொண்டு கிளம்புகையில், வெளியே பவர் லாண்டிரி வாசலில்... ரேவதிக்கு நெஞ்சுத் துடிப்பு ஒரு கணம் நின்று போகிறது.

அந்த தீபாவளிக்கு வாங்கின கால்சட்டை, அடிக்க வரும் சிவப்பில் தொள தொளவென்று மேல்சட்டை. முடி வாராமல்... பரத்... பரத்தான்.

குபுக்கென்று ஏதோ எழும்பி முகத்தை மறைத்தாற் போலிருக்கிறது. ராம்ஜி பசி தாங்குவான். இது பசி தாங்காது. வீம்பில் படுத்தாலும் இரவில் கூப்பிட்டு அவள் சோறு போடுவாள்; அன்றொரு நாள் தான் போடவில்லை. திரும்பி இவளைப் பார்த்துவிட்டு ஓட்டமாய் வருகிறான்.

“ஏம்மா போயிட்டே? ஏம்மா... ஏம்மா...” என்று அவள் கையை எடுத்து முகத்தில் வைத்துக் கொண்டு விம்முகிறான், தெருவென்றும் பாராமல்.

இவன் இப்படி ஓடி வருவான் என்று அவள் நினைத்திருக்கவே இல்லை. குற்ற உணர்வு, வெட்கம் எல்லாமாக அவளைக் குழப்புகிறது. பூட்டிய வீட்டுக்கதவை சாந்தி திறக்கிறாள். உள்ளே வந்ததும் ஓவென்று அழுகிறது.

“அப்பா உன்னை ஓடுகாலி அது இதுன்னு திட்டுகிறார். நீ திரும்பி வீட்டுக்கு வந்தா, காலை வெட்டிப் போடுவாராம். ராம்ஜி ஒரு சாதம் மட்டும் வச்சிச் சாப்பிட்டுட்டு ஸ்கூலுக்குப் போயிடறான். என்னை அப்பா போட்டு பெல்ட்டால அடிச்சிட்டார், பாரு...”

சட்டையைக் கழற்றுகிறது.

அட... மகாபாவி! இப்படி அடிப்பியா, குழந்தையை? சிவப்பு உடம்பில் நீலமாகக் கன்றிய வீறல்களின் முத்திரைகள்.

“அய்யோ, அக்கா? யாரிப்படி அடிச்சது?” என்று சாந்தி கூவுகிறாள்.

“அவருக்குக் கோபம் வந்துட்டா கண்மண் தெரியாது. நானும் இல்லே...”

“ஐயோ, ரத்தம் கசியிதே?...”

“அக்கா பர்னால்... ஆயின்ட்மென்ட் போடலாமா...?”

அவளே எங்கிருந்தோ ஒரு நசுங்கிய ட்யூபை எடுத்து வந்து அந்தக் காயங்களின் மீது பிதுக்கிப் பிதுக்குத் தடவுகிறாள்.

“அம்மா எனக்கு ரொம்பப் பசிக்குதம்மா... நேத்திலேந்து சாப்பிடல.”

அவளுக்கு எதுவும் செய்யத் தோன்றவில்லை.

“அக்கா, நீங்க வச்சிருக்கிற சாதத்தைப் போட்டுடறேன். வேம்பு ஸார் அப்படியே ஓட்டலில் சாப்பிட்டுப்பார்...” என்று பரபரவென்று சாந்திதான் தட்டு வைத்து அவனுக்கு அந்தச் சாப்பாட்டைப் போடுகிறாள்.

“இத்தனை தூரம் வந்துட்டு பாயம்மாவைப் பார்க்காமல் வீட்டுக்குப் போகக் கூடாது... எதுக்கும், நீ இங்க படுத்திட்டு இரு பரத், நானும் சாந்தியும், ஆஸ்பத்திரிக்குக் கிளம்பிக்கிட்டிருந்தோம். இந்த வீட்டு அம்மாக்கு ஆபரேஷனாம். பார்த்துட்டு, மாமாவுடன் நான் வந்துடுவேன். பிறகு நாம போகலாம்...”

“சரிம்மா; நானும் அதான் நினைச்சேன்... நான் டயர்டாயிட்டேன். படுத்துத் தூங்கிடுவேன்...”

“சரி, நீ கதவை உள்ள தாப்பாள் போட்டுக்கோ... ஆமாம், நான் இங்கே இருக்கேன்னு உனக்கு யார் சொன்னது?”

“ராம்ஜி சுதா ஆன்ட்டிகிட்டக் கேட்டிட்டிருந்தாப்பல... அப்பத்தான் சொன்னா...”

“ஓ!...”

எப்படியானாலும், அவர் காலை வெட்டினாலும் தலையை வெட்டினாலும், அவர் பாரம். குழந்தைகளை விட்டு வந்தது தப்பு... திரும்பிப் போய் விட வேண்டும்... என்று ரேவு முடிவு செய்து கொள்கிறாள்.

அத்தியாயம் - 10

பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மூன்று மாடி வெண்ணிறக் கட்டிடத்தின் முன்வாயிலில், வேம்பு கவலையுடன் நிற்கிறான்.

“ஆபரேஷன் ஆயிட்டுதா வேம்பு ஸார்?”

“தெரியல ஒம்பது மணிக்கே தியேட்டருக்குக் கொண்டு போயிட்டா. ஆபரேஷன் ஆனதும் வந்து சொல்றேன்னு வார்டுபாய் சொன்னான். மணி பன்னண்டரை. இன்னும் ஒண்ணும் தெரியல. அக்கா, அப்படி உள்ள ரிசப்ஷன் பெஞ்சுல உக்காந்துக்கோ... ஆபரேஷன் நல்லபடியானாக்கூட, நாம யாரும் பார்க்க முடியாது. இன்டென்ஸிவ் கேர்ல வச்சிருப்பாளாம். வார்டுக்குக் கொண்டு வர ரெண்டு நாள் கூட ஆகலாம்னு சொல்றா, தெரியல...”

“அதெல்லாம் பிரெய்ன், ஹார்ட் ஆபரேஷன்னா தான். இது அப்படி இல்ல, நாளைக்கே காலம வார்டில பார்க்கலாம்.”

“இவ பெரிய மேதாவி...”

“இல்ல வேம்பு ஸார். நிசமாலும் பாயம்மாக்கு அப்படி ஒண்ணும் பயப்படும்படி இல்ல. நாம, பத்தாம் நாள் வீட்டுக்குக் கூட்டிப் போயிடலாம்.”

வேம்புவுக்கு ஆறுதலாக இல்லை. கண்களில், நீர் துளிக்கிறது.

“மூணு யூனிட் ப்ளட் வாங்கிட்டுப் போனாங்க... பணம் கொடுத்தேன். ஆ... அக்கா இந்த வெற்றிச் செல்வி டாக்டர் யார் தெரியுமா?... நம்ம கூத்தரசன் டாக்டர் பொண்ணு...”

ரேவுவின் நினைவுகளில் மின்னல் பளிச்சிடுகிறது. “பேரை எங்கோ கேள்விப்பட்டோமேன்னு நினைச்சேன் வேம்பு. நான் எட்டுல படிக்கிறப்ப அவ, ஸிக்ஸ்த்ல வந்து சேர்ந்தாள். சுருட்டையா ரெட்டைப்பின்னல் போட்டுண்டு, அகல நெத்தியுடன் அப்பா ஜாடையாவே இருப்பா... அவளுக்கு ஒரு தங்கை உண்டு. அவள் தாமரைச் செல்வி. நாலில் படிச்சா...”

“ரொம்ப நல்ல பேரு அவளுக்கு. ஒரு நாளைக்கு ரெண்டு மூணு ஆபரேஷன் பண்றா. புருஷன் பாங்க்லயோ எங்கேயோ பெரிய வேலையாம்... நீ பாத்தா புரிஞ்சிப்பே...”

எதற்குப் பார்க்க வேண்டும்?...

பாயம்மாவைப் பார்த்துவிட்டு ஓட வேண்டும். இவள் மேல உள்ள கோபம், அந்தப் பிள்ளைமேல் விடிந்திருக்கிறது. ஒரே நாளில் இத்தனை நாசங்களுக்கு அவள் காரணமாக இருந்திருக்கிறாள்.

முதல் மாடி ஏறி, தியேட்டருக்குச் செல்லும் ஒழுங்கையில் உள்ள பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் நேரம், யுகமாகக் கழிகிறது.

கடைசியில் ஓராள் - பச்சைத் தொப்பி, சட்டை அணிந்தவர் வேம்புவிடம் வந்து, “ஆபரேஷன் ஆயிட்டது... ரெண்டு பேர் மட்டும் பார்க்கலாம்” என்று சொல்கிறார்.

“அக்கா, நீயும் சாந்தியும் மட்டும் போய்ப் பார்த்திட்டு வாங்க. நான்... நான் அப்புறம் பார்க்கிறேன்...”

அழுகிறானா என்ன?...

“நீங்களும் அக்காவும் போய்ப் பாருங்க ஸார். நான் கூடவே இருக்கப் போறேனே?...”

மேல் மாடியில் இருக்கிறது அவளைப் போட்டிருக்கும் அறை.

உள்ளே டாக்டர்கள் இருக்கிறார்கள். நர்ஸ்கள் பரபரக்கிறார்கள்.

வேம்புவுடன் ரேவு இன்னம் அரை மணி நிற்கிறாள்.

‘ரொம்ப ஏதானும் லேவடியாயிருக்குமோ? ஆண்டவா, அவங்க எனக்கு இன்னும் கொஞ்ச காலம் வேணும்.’

கதவைத் திறந்து கொண்டு டாக்டர் வருகிறாள்.

மின்னல் போல்... வெள்ளை கோட் அணிந்த, பூப்போட்ட சேலை தெரிய... வெற்றிச்செல்வி.

ஒருகணம் வேம்புவைப் பார்த்து, “ஷி இஸ் ஆல் ரைட்... டோன்ட் வர்ரி...” என்று சொல்லிவிட்டு, விடுவிடென்று போகிறாள். பின்னால் உதவியாளர், நர்ஸ்கள்...

உள்ளிருந்து ஒரு நர்ஸ், வேம்புவிடம் வந்து, ஒரு சீட்டைத் தந்து, “இந்த மருந்துகளை உடனே வாங்கிட்டு வாங்க!” என்று கொடுக்கிறாள்.

அவன் ஓடுகிறான்.

அவள் உள்ளே எட்டிப் பார்க்கிறாள்.

கால் பக்கம் தூக்கி வைத்திருக்கிறார்கள். ஒரே குழாய் மயம். மூக்கில், கையில், காலில்...

முகம் வெளுத்துச் சுருக்கி... மூச்சு வருவது மட்டுமே தெரிகிறது. நரைத்துப் பட்டுப் போன்ற முடி... நெற்றியில், அழகாகக் குங்குமப் பொட்டு...

ரேவுவின் மனசில் எதுவுமே பதிந்து பாதிப்பைத் தோற்றுவிக்கவில்லை.

அவள் வீடு... பரத்... அடிபட்டு விழுந்த கன்று போல... தூக்கி நிறுத்தித் தடவி... இதம் செய்யும் நிழல், அவள் வீடு... அது ராட்சசனுக்குரியதாக இருந்தாலும் அவள் உரிமை பதிந்த இடம்.

வேம்பு மருந்துகளை வாங்கிக் கொடுத்து விட்டு, இன்னும் சிறிது நேரம் தங்கி பாயம்மா கண் திறக்கப் பார்த்துவிட்டுத்தான் திரும்புகிறான். சாந்தி அங்கேயே தங்கி விடுகிறாள்.

திரும்பி வரும் போது பஸ்ஸில் ஒரே கூட்டம். அப்போது தான் நினைவு வருகிறது. “வேம்பு நீ இங்கேயே எங்காணும் சாப்பிட்டுக்கோ ஓட்டல்ல... உனக்குன்னு வச்ச சாதத்தைப் பரத்துக்குப் போட்டுட்டேன்...”

“என்ன? அவன் வந்திருக்கானா?... அத்திம்பேர் அதுக்குள்ள உன்னைக் கூட்டிண்டு வர அனுப்பிட்டாரா?...”

“ஆமாம். அவனைப் போட்டு அடிச்சிருக்கார். கண் மண் தெரியாம, சாதத்தைப் போட்டு, படுக்க வச்சிட்டு வந்தோம். வேம்பு, நீ தப்பா நினைச்சிக்காதே. நான் இப்ப போயிட்டு அப்புறமா வரேன்... ராம்ஜிக்குப் பரீட்சை சமயம். ப்ளஸ் டூ இலையா? அப்புறமா நான் வந்து பாயம்மா உடம்பு தேற வந்திருக்கேன்...”

அவர்கள் பஸ்ஸை விட்டிறங்கித் தெருவில் வரும் போதே பவர் லாண்டிரிப் பையன் பார்த்து விடுகிறான். “ஆபரேசன் ஆயிடிச்சிங்களா, பாயம்மாக்கு இந்தாங்க, சாவி, அந்தப் பையன் வூட்டப் பூட்டி சாவி குடுத்திட்டுப் போச்சி?” என்று சாவியைக் கொடுக்கிறான்.

ரேவுவுக்கு இனம் தெரியாததொரு அச்சம் கவ்வுகிறது.

சாயங்காலம் நீங்கள் வரும் வரையிலும் தூங்குவேன் என்று சொன்னவன், அவர்கள் வருவதற்கு முன் கதவைப் பூட்டிக் கொண்டு எப்படிப் போனான்?

கதவை வேம்புதான் திறக்கிறான்.

முதலில் உள்ளே சென்றவன், சட்டையைக் கழற்றி மாட்டி விட்டு, அதனுள்ளிருந்த பர்சை எடுத்துப் பணத்தை எண்ணுகிறான். அவள் உள்ளே சென்று, பரத் சாப்பிட்ட தட்டு, சாப்பாட்டுப் பாத்திரங்கள் ஆகியவற்றைப் பின் ஒழுங்கைக்குக் கொண்டு போகிறாள். அடுப்பை மூட்டி ஒரு சாதம் வைக்க, அரிசி கழுவுகையில்,

“அக்கா! அக்கா!...” என்று வேம்பு கத்துகிறான்.

“என்ன வேம்பு?”

பீரோவின் கீழ் அவன் பணம் வைத்த மஞ்சள் துணிப் பையைக் காட்டிக் கொண்டு நிற்கிறான். முகம் இருண்டு போகிறது.

“அக்கா! இதுல அவர் கொண்டு கொடுத்த இரண்டாயிரம் ரூபாயை அப்படியே வைத்துவிட்டுத்தானே போனேன்? கையில் ஏற்கெனவே செல்வராஜ் கொடுத்திருந்த பணத்தை எடுத்திண்டு போனேன். இப்ப... இதுல... வெறும் அஞ்சு நூறு தானிருக்கு. ஆயிரத்தைந்நூறு அபேஸ்...”

ரேவு நொறுங்கிப் போகிறாள்.

“நீ பீரோவைப் பூட்டலியா வேம்பு?”

“பூட்டினேன்... இதுதான். இதென்ன காட்ரேஜ் பீரோ சாவியா? வெறும் மர அலமாரி. எப்பவோ பாய் ஏலத்துல எழுபது ரூபாய்க்கு எடுத்தாராம். அதுக்கு இத... இந்த மூணு ரூபாய் பூட்டுச்சாவி. இது ஆணியப்போட்டு நெம்பினாலே திறந்துக்கும். இந்த வீட்டிலே என்ன இருக்கு கொள்ளையடிக்க! வாடிக்கைக்காரா துணி குடுத்தா வச்சிக்க அலமாரி. இதை நாங்க பூட்டினதே இல்ல. இப்பத்தான் வெளியில போறப்ப நான் பூட்டுறேன்...”

“வேம்பு, என்னைச் செருப்பாலடிடா, அந்தத் தடியன நான் உள்ள சேத்ததே தப்பு. என்ன நாடகம் ஆடினான்! அங்கே வெள்ளிக் கிண்ணம், அது இது எல்லாமே இவன் தான் திருடிருக்கான். நான் என்னடா வேம்பு செய்வேன்...!”

அவள் ஆற்றாமை தாளாமல் அரற்றுகிறாள்.

“பாவி, பாவி...” என்று முகத்தில் அறைந்து கொள்கிறாள்.

உடலும் மனமும் பற்றி எரிகிறது.

காதில் காலே அரைக்கால் வராத தோடு, மூக்குத்தி, தாலிக்கொடி, கைகளில் இரண்டு வளையல்கள்... இருக்கின்றன.

மளுக்கென்று இரண்டு வளையல்களை உருவி அவனிடம் கொடுக்கிறாள் ரேவு.

“இருக்கட்டும்டா, வச்சுக்கோ. கயிற்றுப் புருஷன் தான் பாவின்னாலும் வயத்துலப் பெறந்ததும் சண்டாளனா இருக்கு. வச்சிக்கோ!”

“இருக்கட்டும் அக்கா. நீ போட்டுக்கோ வளையலை, எனக்குப் பணம் சிரமமமில்லை. நீ போட்டுக்கோ!”

வேம்பு வற்புறுத்தி அதைத் திருப்பிக் கொடுக்கிறான். வெந்து நீராகும்படி கொதித்துக் கொண்டு வேம்புவுக்கு ஒரு சோறு வடித்துப் போடுகிறாள். அவன் சாப்பிட்டு விட்டு ஏதோ வேலையாக வெளியே செல்கிறான்.

இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை.

“இப்ப என்னடா பண்ண நான்? எனக்கு ஒண்ணுமே புரியலப்பா...”

“அழாதே அக்கா. எதுக்கும் இன்னிக்கு சாயங்காலமா நீ புறப்பட்டுப் போ. ராம்ஜி சொல்லுவான். உன் சிநேகிதிக்கிட்டே கேள். வருத்தப்படாதே சரியாப் போயிடும். வயசுக் கோளாறு, சகவாசம் சரியில்ல... திருத்திடலாம்...” என்று ஆறுதல் சொல்கிறான்.

காலையில் பத்து மணிக்குள் சமைத்து, சாந்த்க்குச் சாப்பாடும் காபியும் எடுத்துக் கொண்டு, வேம்புவுடன் ஆஸ்பத்திரிக்குச் செல்கிறாள்.

பாயம்மாவுக்கு முகம் தெரியவில்லை. மயக்கத்திலேயே இருப்பதாகத் தோன்றுகிறது. இரவு அதிகமாகிவிட, டாக்டர் பதினோரு மணிக்கு மேல் வந்து ஏதோ பண்ணினாளாம். “ஒரு மணி நேரம் இருந்தாள். இப்ப பயமில்லேன்னு சொல்லிருக்கா. யார் யாரோ ஃபோன் பண்ணி விசாரிக்கிறாங்க...” என்று சாந்தி செய்தி சொல்கிறாள்.

ரேவுவுக்கு எதுவுமே மனதில் உறைக்கவில்லை.

பரத் சின்ன வயசில் துளியூண்டு... சாக்ஸ், ஷூ போட்டுக் கொண்டு, அவள் கையைப் பிடித்துக் கொண்டு பள்ளிக்கூடம் வந்தது இன்று போல் இருக்கிறது. “க்யூட், லிட்டில் பாய்” என்று குளோரிடா டீச்சர் புகழ்வாள். படிப்பை விட, ஓட்டம், ஆட்டம் என்றூ போவான். பரிசுகள் வாங்கி இருப்புக் கொள்ளவில்லை. பகல் மூன்று மணிக்கு சாந்தியிடம் சொல்லிக் கொண்டு கிளம்புகையில் சாந்தி திடீரென்று கேட்கிறாள். “அக்கா, பரத் எப்படி இருக்கு? முதுகுக் காயம் தேவலையா? எதுக்கும் ஒரு ஊசி போடணும். எனக்குப் பாவமா இருக்கு... நீங்க கூட்டிட்டு வரக்கூடாது? இங்கே ஏதானும் மருந்து போடலாமே?”

“...ஓ, இல்லம்மா, அவன் நேத்து சாயங்காலமே போறேன்னு போயிட்டான். அதான் நான் இப்பவானும் போனாத்தான் மரியாதைன்னு போறேன். நான் ரெண்டு நாள் கழிச்சு வரேன்.”

அங்கிருந்து கிளம்பி விடுகிறாள்.

அந்த நேரத்தில் பஸ்ஸில் கூட்டம் இல்லை.

வீட்டில் சுதா இருக்கிறாள். இவர்கள் வீட்டு வெளிக் கதவு பூட்டப் பட்டிருக்கிறது. சுதாவின் வீட்டுக்குள் நுழைகிறாள்.

சுதாவைக் கண்டதும் தன் ஆற்றாமை எல்லாம் கொட்டி விடுகிறாள்.

“முதுகில் ரணகாயம். அவப்பா எதுக்கு இப்படி அடிச்சாரோ? ஒரு நிமிஷமா என்னை ஏமாத்திட்டு பணத்தைத் தூக்கிண்டு வந்திருக்கான். என்னைச் சொல்லிட்டு, பேய் போல இப்படி அடிப்பாரா? சுதா, நான் என்ன செய்யப் போறேன்...? என்ன நடந்தது இங்கே?”

சுதா திகைத்தாள்.

“அப்படி ஒண்ணும் நடந்ததாத் தெரியலியே ரேவு மாமி? நீங்க போனன்னிக்கு ஒன்னரை மணிக்கு ராம்ஜி வந்து சாவி வாங்கிட்டுக் கேட்டுது எங்கம்மா எங்கேன்னு. நான் தான், ‘சமத்தா இருங்க, அம்மா ஒரு நாலு நாள் ரெஸ்ட்னு போயிருக்கா. அம்மாக்கு உடம்பு சரியில்ல...’ன்னு சொன்னேன். பால் காய்ச்சி ஃபிரிஜ்ஜில் வைக்கச் சொன்னான். ரகு வந்து எடுத்துக் கொடுத்தேன்னார். வேறு ஒரு சத்தமும் கேட்கலியே?”

“பின்ன பரத்த எதுக்கு ரத்த விளாரா, பெல்ட்டப் போட்டு அடிச்சிருக்கார்?”

“அப்படியா? ஒண்ணுமே தெரியலியே? நான் பரத்தையே பார்க்கல. மிஸ்டர் நாதனைத்தான் பார்த்தேன். குட்மார்னிங் சொன்னேன். அவர் வழக்கம் போல முகத்தைத் திருப்பிட்டுப் போனார்...”

“வீட்டுச் சாவி குடுக்கலியா?...”

“இல்ல. ஆனா, இந்த நடுக் கதவைத் திறந்து வைன்னேன். ராம்னி, சரி ஆன்ட்டின்னான்...”

கதவு வெறுமே தான் சாத்தப்பட்டிருக்கிறது. சுதா வீட்டுப் பக்கம் தாழ்ப்பாள் போட்டிருக்கிறார்கள்.

திறந்து கொண்டு ரேவு உள்ளே வருகிறாள். ஒரு குளிர்ச்சியான இதம். அவள்... அவள் இடம். அவள் வீடு; அவளுக்கு உரிமையான நிழல். சமையலறைக்குள் செல்கிறாள். ஒரு சிறு பாத்திரத்தில் கொஞ்சம் சாதம் மட்டுமே இருக்கிறது... மற்றபடி துப்புரவாக இருக்கிறது.

“பரத் இங்கே வரவில்லையா? ஏன் சுதா?”

“நான் காலம பார்க்கல. ஸ்கூலுக்குப் போயிருப்பானா இருக்கும்? சைக்கிளக் காணல?” என்று சுதா ஐயப்படுகிறாள்.

ரேவு கீழே பார்த்துவிட்டு மாடிக்குப் போகிறாள்... படுக்கையில் இல்லை. மேல் மாடிக் கதவு திறந்திருக்கிறது.

“இதை யார் திறந்தது...?” என்று நினைத்தவளாக மாடிப்பக்கம் காலெடுத்து வைத்ததுமே, வெறுந்தரையில் குப்புற விழுந்து கிடக்கும் பரத்...

“சுதா...! ஐயோ, சுதா!” என்று அலறலாகக் குரல் ஒலிக்கிறது.

அத்தியாயம் - 11

சுதா ஓடி வருகிறாள்.

முதல் நாள் போட்டிருந்த அதே சட்டை...

ரேவு அலறுகையில், சுதா அவனை மெள்ளப் பிடிக்கச் சொல்லி உள்ளே கொண்டு வருகிறார்கள். முகத்தில் தண்ணீர் அடிக்கிறாள். விழிகள் செருகினாற்போல் கிடக்கிறான்.

“கலவரப்படாதீங்க மாமி, ஒண்ணுமில்ல. நான் போய் ஒரு ஆட்டோ கொண்டு வரேன். டாக்டர்ட்ட கொண்டு போகலாம்...” என்றூ விரைந்து ஓடுகிறாள்.

இவள் உணர்வுகளை நினைவுகள் முறுக்கிப் பிழிகின்றன. ஏனிப்படி வயிறு துடிக்கிறது? பெற்ற பாசமா? கண்கள் துளிக்கின்றன.

ஆட்டோக்காரனும் சுதாவுமாக, அவனைக் கீழே கூட்டி வந்து உட்கார்த்திக் கொண்டு, போகிறார்கள்.

வண்டி எங்கே செல்கிறதென்று தெரியவில்லை. அடையாறு சர்க்கிள் தாண்டிச் செல்கிறது. ஒரு ‘இருபத்து நாலு மணிநேர’ சிகிச்சை நிறுவனம் என்று சிவப்பு அடையாளமும் டாக்டர்களின் பட்டியல் விவரமுமாக மாடிகளாக உயர்ந்து நிற்கும் ஆஸ்பத்திரி.

‘வேங்கடாசலபதி! உன் கோயிலில் வந்து மாவிளக்கு போடுகிறேன். இந்தப் பிள்ளையைப் பிடித்த சனி இத்துடன் போகட்டும். என் வயிற்றில் பால் வார்த்து விடு... சோதனைகள் போதும்!” என்று ஓராயிரம் பிரார்த்தனைகளை மனது எண்ணுகிறது. ஒரு ஸ்ட்ரெச்சரைக் கொண்டு வந்து பிள்ளையைக் கொண்டு செல்கையில், ரேவு ஓடுகிறாள். சுதா, உள்ளே அநுமதிக்கான தேவைகளுக்காகத் தாமதிக்கிறாள்.

கீழே, அவசர சிகிச்சைப் பிரிவில் தான் படுக்க வைத்திருக்கிறார்கள். சிறிது நேரம் சென்ற பின் யாரோ டாக்டரும் நர்சும் போய்ப் பார்க்கிறார்கள். ரேவு இவ்வுலக நினைவே கழன்றாற் போல் - தோன்ற நிற்கிறாள்.

ட்ரிப் கொடுக்க எடுத்துச் செல்வது போல், அந்தச் சாதனங்களை உள்ளே கொண்டு செல்கின்றனர்.

அவள் நேரம், இடம் என்ற வட்டங்களை விட்டு அகன்று அகன்று தூசியாகப் போகிறாள். தூசிக்கு வீடு, வாசல், குடும்பம், மானம், மரியாதை என்பதெல்லாம் இல்லை. தூசிக்கு... எந்தப் பற்றுதலும் இல்லை. நான் தூசி... தூசி... வெறும் தூசி...

“ரேவு மாமி... டாக்டர்ட்ட சொல்லி இருக்கேன். ஏதோ பாய்ஸனிங் போல இருக்குமோன்னு சந்தேகப்பட்டு... உள்ளேருந்து எல்லாம் வெளியே கொண்டு வந்து, ட்ரிப் குடுத்திருக்கா. எனக்கு ட்யூட்டிக்குப் போகணும். நான் வீட்டுக்குப் போய், ரகு வந்ததும் வரச் சொல்லி அனுப்பறேன். நீங்க தைரியமா இருங்கோ மாமி...”

சுதாவின் கைகளை ரேவு கெட்டியாகப் பற்றிக் கொள்கிறாள். கண்ணீர் மளமளவென்று பெருகுகிறது.

சுதா தன் கைகளை விடுவித்துக் கொண்டு அவள் கண்களைத் துடைக்கிறாள். “கவலைப்படாதேங்கோ! அவன் ஏதோ ட்ரக் சாப்பிட்டிருக்கான். இந்த சமயத்தில் கவனமாப் பாத்துக்கணும். ஏதோ அதுவாக வெளி வந்துடுத்து. நாதன் வந்ததும் ரகுவை விட்டுப் பேசச் சொல்றேன். இப்ப போனதும் உங்களுக்கும் பரத்துக்கும் சாப்பாடு குடுத்தனுப்புறேன். ரகு வருவார்... வரட்டுமா?...”

அவளுக்கு மாலை நேர ‘ட்யூட்டி’...

ரேவு மெள்ள வராந்தாவில் நடந்து, பெரிய ஹாலில் வரிசையாகப் போடப்பட்ட படுக்கைகளில், பச்சை ‘ஸ்கிரீன்’ தடுக்கப்பட்ட ஒன்றின் அருகில் வந்து பார்க்கிறாள். அவன் தூங்குபவன் போல் கிடக்கிறான். கைவழி சொட்டுச் சாரம் இறங்குகிறது. அருகில் ஒரு இளம் டாக்டர் கை பிடித்துப் பார்க்கிறான்.

நிமிர்ந்து, “உங்க பையனா?” என்று கேட்கிறான்.

‘ஆம்’ என்று அவள் தலையாட்டுகிறாள்.

“எத்தனை நாளா இந்தப் பழக்கம்னு தெரியுமா?”

“எந்தப் பழக்கம்?...”

“அவன் ஏதோ ட்ரக் - போதை மருந்து சாப்பிட்டிருக்கிறான். அதைக் கூடக் கவனிக்கலியா?”

“அப்படி எதுவும் இருக்காது... நான் ஒரு நாள், அம்மாக்கு உடம்பு சரியில்லன்னு தம்பி வீட்டுக்குப் போனேன். அப்பா கோவிச்சிட்டு அவனை அடிச்சிருக்கார்...”

“நீங்க எதுக்கு இப்ப மறைக்கிறீங்க? பையன் முழுசுமா கைவிட்டுப் போகுமுன்ன டி அடிக்க்ஷன் ட்ரீட்மெண்ட் குடுங்க. இது முத்திப் போகக்கூடிய கேஸ்... ராத்திரி ஒன்பது மணிக்கு மேல நீங்க கூட்டிட்டுப் போகலாம்... கொஞ்ச நேரம் கழிச்சி கண் முழிச்சிப் பசின்னு சொன்னா, இட்டிலியோ பால் கஞ்சியோ குடுங்கோ...” என்று ஈரமே இல்லாத குரலில் கூறிவிட்டுப் போகிறான்.

ரேவுவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. கையில் ஒரு எழுபது எண்பது ரூபாய் போல் பர்சில் பணம் வைத்துக் கொண்டிருக்கிறாள். ஆஸ்பத்திரிக்கு முதலில் சுதா ஐநூறு ரூபாய் கட்டியிருக்கிறாள். புருஷனுக்குத் தெரியாமல் இருக்க முடியுமா?...

இந்தப் பிள்ளைக்கு இட்டிலி எங்கிருந்து வாங்கிக் கொடுக்க? இந்த இடமே புதிது...

அங்கே மேசையருகில் ஏதோ எழுதும் நர்சிடம், “ஸிஸ்டர், இங்கே பக்கத்தில் ஓட்டல் இருக்கா... எதானும்?” என்று கேட்கிறாள்.

“ரோட் திரும்பிப் போனா, முல்லை ரெஸ்டாரண்ட் இருக்குது. அங்கே எல்லாம் கிடைக்குது...”

அவள் நடந்து சென்று, ஓட்டல் கல்லாவில் காத்து, ரவை இட்டிலி ஒரு பார்சல் வாங்கிக் கொண்டு திரும்புகிறாள்.

அவள் வரும்போதே, அவன் விழித்திருக்கிறான்.

“அம்மா... அம்மா...” என்று முனகுகிறான்.

“என்னடா கண்ணா” என்ற குரலில், உள்ளத்தின் ஆழத்தில் புதைந்த வெறுப்பும் கோபமும் பிரதிபலிக்கவில்லை.

அவன் முடியை இதமாகத் தடவிவிடுகிறாள். “நீ இப்படி எல்லாம் கெட்ட சகவாசம் வச்சுக்கலாமா கண்ணா? அப்பா வேற கோவிச்சிட்டு அடிச்சிருக்கார், வேம்பு மாமா பணத்தை, எடுத்துண்டு வரலாமா?”

அவன் செவிகளில் அதெல்லாம் விழுந்ததாகவே தெரியவில்லை.

“அம்மா... அம்மா... பசிக்குதம்மா... ரொம்ப பசி...” அவன் கண்களில் மூக்கில் நீராக வழிகிறது.

துடைக்கிறாள் துண்டெடுத்து.

“அழாதே இந்தா, இட்டிலி பார்சல் வாங்கிட்டு வந்திருக்கேன். ட்ரிப் இறங்குது ஆடாதே...”

நர்ஸ் வருகிறாள். காலியான சொட்டுச்சாரக் குழாயை அப்புறப்படுத்துகிறாள். “சாப்பாடு குடுங்க” என்று கூறிவிட்டுப் போகிறாள்.

மணி ஆறடிக்கும் நேரம். ஆஸ்பத்திரியில் நோயாளிகளைப் பார்க்க வரும் கூட்டம் நெருங்குகிறது.

அவனுக்கு இட்டிலியும் தண்ணீரும் கொடுத்து ஆசுவாசப் படுத்துகிறாள். முதுகில் நர்சிடம் சொல்லி ஏதோ காயத்துக்கு மருந்து தடவி இதம் செய்கிறாள்.

அவள் வராந்தாவில் வந்து நின்று, கூட்டத்தில் கணவனோ, ராம்ஜியோ வருகிறானோ என்று பார்க்கிறாள்.

மாலை மங்கி இருள் வருகிறது. அவசரமான பிரசவ கேஸ் ஒன்று... ஸ்ட்ரெச்சரில் கொண்டு போகிறார்கள்.

என்ன வேதனைகள்!

இந்த பரத்தைப் பெற ஒரு வாரம் சிரமப்பட்டாள். ஈசுவரா, இப்படியே நான் சாகக்கூடாதா என்று அப்போது விம்மி அழுதாள். ஒரு பெண்ணுக்குத் தாய்மையின் தலையாய நோவும், தாயின் இதத்தில் பொறுத்துக் கொள்ளும் மனவலிமையில் கரைந்து போகுமாம். ஈசுவரன் செட்டிப் பெண்ணுக்குத் தாயாக வந்தாராம். தரும ஆஸ்பத்திரி - கோஷா ஆஸ்பத்திரியில் சிவப்பு ரவிக்கை போட்ட ஒரு மலையாள ஆயா... நெற்றியில் பளிச்சென்ற சிவப்புப் பொட்டுடன் இவளுக்கு மருத்துவம் செய்யப்பட்ட அறையில் எவ்வளவு இதமாகப் பேசினாள்! இவள் தான் ஈசுவரனோ என்று நினைத்தாள். ஆயுதம் போட்டுக் குழந்தையை எடுத்த அந்த டாக்டர்... எல்லாம் நினைவில் வந்து முட்டுகின்றன.

இவள் எந்த மலையில், எதற்காக இன்னும் மூச்சு முட்ட ஏறிக் கொண்டிருக்கிறாள்? யாருக்காக? எந்த இலட்சியத்துக்காக? ஏனிப்படி எல்லாம் நடக்கிறது? இந்த வாழ்க்கையில் எந்த நோக்கத்துக்காக இத்தனை துன்பங்கள், வேதனைகள், பொறுத்துக் கொள்ள வேண்டிய அழுத்தங்கள்?... இது என்ன மாசம்? என்ன கிழமை, நாட்கள்...?

இவள் எத்தனை நேரமாக ந்த வராந்தாச் சுவரில் சாய்ந்து நிற்கிறாள் என்ற உணர்வே கரைகிறது.

“...மாமி! ரேவு மாமி...!”

திடுக்கிட்டுப் பார்க்கிறாள், ரகு... ஒயர் பையில் டிபன் காரியர் சாப்பாடு... தண்ணீர், தட்டு...

“அடாடா... நீங்களா...? ராம்ஜி அப்பா வரல?...”

“அவர் நான் வரும் வரையிலும் வீட்டுக்கு வரல; சுதா ஃபோன் பண்ணினாள். அவர் ஆபீசில் இல்லை. ‘மெஸேஜ்’ சொல்லிருக்கேன்னு சொன்னாள்... பரத் எப்படி இருக்கிறான்? இந்தாங்க, சாப்பாடு...” இவளைக் குற்ற உணர்வு குத்துகிறது.

“உங்களுக்கு எத்தனை சிரமம் என்னால்? நீங்க ராம்ஜிட்ட குடுத்து அனுப்பலாமே?...” என்று பையை வாங்கிக் கொண்டு ரூமுக்கு வருகிறாள். அங்கே புதிதாக வந்த ட்யூட்டி டாக்டர், அவனைப் பரிசோதித்துக் கொண்டிருக்கிறாள்.

ரகுவைப் பார்த்ததும், அவரிடம் அவள், “நீங்க வீட்டுக்குக் கூட்டிப் போகலாம். ஆனால் நீங்க, இப்பவே, இந்தப் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கணும்” என்று அவர் தாம் தந்தை என்ற ஊகத்தில் பேசுகிறாள்.

“அவப்பா ஊரில் இல்லை. நான் சொல்றேன். இது மதர்...” என்று காட்டுகிறார்.

“ஏம்மா, பையனிடம் பிரியமாக நடந்துக்குங்க... இப்ப இதுக்கு டி-அடிக்க்ஷன் சென்டர்ல காட்டுங்க ஆமாம்...” என்று கூறிவிட்டுப் போகிறாள்.

“உங்களுக்கு எத்தனை சிரமம்! கூடப் பிறக்காத தோஷம். சுதாவுக்கும் உங்களுக்கும் நான் எப்படிக் கடனை அடைக்கப் போகிறேன்!”

“அப்படியெல்லாம் ஏன் வித்தியாசமாக நினைக்கிறீங்க மாமி! சுதாக்கு சந்தோஷம், எனக்கு சந்தோஷம். சுதா ரொம்ப அருமையானவள். மனுஷாபிமானம் இல்லேன்னா, மனிதராப் பிறந்தாலும் மிருகந்தான்னு சொல்லுவ. நீங்க கவலைப் படாதீங்க. பரத்தை நிச்சயமா இந்தப் பழக்கத்திலிருந்து காப்பாத்திடலாம். ஒரே கஷ்டம், உங்க... அவர், நாதன். கோவாபரேட் பண்ணணும். பிரச்னையே அதனால வந்ததுதான்.”

.....

“ஏம்ப்பா பரத், வளர்ந்து சாதிக்க வேண்டிய பையன், அம்மா, அப்பா, பிரியமா இருக்கறப்ப, இப்படியெல்லாம் கெடுத்துக்கலாமா?”

அப்போது, பகலில் அவனை உள்ளே கொண்டு வந்த போது பார்த்த நர்ஸ் வருகிறாள். வயதான பெண்மணி.

“ஏன் ஸார்? பையனை இப்படி அடிக்கலாமா? மார்க் குறைஞ்சி போகிறதுதான். தப்பு செய்யறதுதான். வளர்ந்த பிள்ளைகளை அடிக்கும் பழக்கம் வைத்துக் கொள்ளக் கூடாது. இப்ப பாருங்க, எத்தனை கஷ்டம்!...”

“ஸிஸ்டர், இவர் அப்பாவுமில்லை. இவர் அடிக்கவுமில்ல. இவர் என் அண்ணன்...” என்று ரேவு முன்னுக்கு வந்து சொல்கிறாள்.

அவனுக்கு அங்கேயே சாப்பாடு கொடுக்கிறாள்.

ஆஸ்பத்திரிக்குத்தான் முன்னமேயே சுதா பணம் கட்டிவிட்டாளே?... அவர் ஓர் ஆட்டோவைக் கொண்டு வருகிறார். “நீங்கள் ரெண்டு பேரும் இதில் போய் இறங்குங்கள் மாமி, நான் பின்னே வரேன்...” என்று அனுப்புகிறார்.

வீட்டில் மேலே விளக்கு எரிகிறது. வாசற் கதவு உட்புறம் பூட்டப்பட்டு இருக்கிறது. ராம்ஜி சுதாவின் வீட்டுப் பக்கம் தான் படித்துக் கொண்டிருக்கிறான். கதவைத் தட்டித் திறக்கச் சொல்கிறாள்.

நடுக் கதவைத் திறந்து உள்ளே வந்ததும், பரத் படுக்கையை விரித்துப் படுத்துக் கொள்கிறான்.

ரேவு சமையலறைப் பக்கம் சென்று பார்க்கிறாள்.

அடுப்படி துப்புரவாக இருக்கிறது. சாப்பாடோ, பாலோ எதுவும் இல்லை. டிபன் கேரியரில் ரகு கொண்டு வந்த சாப்பாட்டில் பாதி... சாதம், குழம்பு, அவரைக்காய், மோர், ஊறுகாய் - எல்லாம் இருக்கின்றன. ராம்ஜி கதவைத் திறந்தானே ஒழிய, ‘அம்மா, சாப்பிட்டாயா? என்ன ஆச்சு, என்ன சமாசாரம்’ என்று எதுவுமே விசாரிக்கவில்லை. எதிலும் தனக்குச் சம்பந்தமே இல்லை என்று அறிவிப்பவன் போல், புத்தகத்தில் தலையைக் கவிழ்த்துக் கொள்கிறான்.

அவள் நிலைப்படியில் நின்று கொண்டு, அவனையே பார்க்கிறாள். முதல் நாள் வரை, அவனை இவள் அந்தரங்கமான அன்புடன் மனசில் போற்றிக் கொண்டிருந்திருக்கிறாள். தன் உடலில் ஒரு பகுதி என்று ஒட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். ஆனால் இன்று...

அப்படி இந்தப் பிள்ளை இன்று விட்டுப் போகும்படி இவள் மன்னிக்க முடியாத எந்தத் தப்பைச் செய்துவிட்டாள்? நிமிர்ந்து பார்த்து, ஒரு வார்த்தை பரிவுடன், பாசத்துடன் கேட்க முடியாதபடி, இவள் என்ன தவறு செய்தாள்? பெற்ற தாய்! இவன் டாக்டருக்குப் படிக்கப் போகிறானாம்!

இவனிடம் மட்டும் தானே நம்பிக்கை வைத்துச் சொல்லிவிட்டுப் போனாள்? ஆத்திரம் பொங்கி வருகிறது.

அணை போடுகிறாள். “சாப்பிட்டியா ராம்ஜி?... அப்பா வந்துட்டாரா?”

“ம்...” நிமிராமல் ஒரே பதில்.

“நீ சமைச்சியா?”

“இல்ல. அப்பாவும் நானும் ஓட்டல்ல சாப்பிட்டோம்.”

“ஓ...? நேத்திக்கு உங்கப்பா ரொம்பச் சண்டை போட்டாரா? பரத்தை எதுக்கு அப்படிப் போட்டு அடிச்சிருக்கார்?”

அவன் இப்போதும் தலை நிமிர்ந்து அவளைப் பார்க்கவில்லை. பிசிறில்லாத உறுதிக் குரலில், “அப்பா ஒண்ணும் அவனை அடிக்கல!” என்று தெளிவு செய்கிறான்.

கடலை உடைபட்டுப் பருப்பு இரண்டாகச் சிதறினாற் போல் இருக்கிறது.

“பின்ன யார்டா அப்படி அடிச்சது?”

“அவன் அப்பா அடிச்சார்னு பழியப் போட்டானே, அவனையேக் கேட்டுப் பார்!”

இவளுக்குப் புரியவில்லை. பின் யார் இப்படி அடித்திருப்பார்கள்...

“பரத்...? அப்பா அடிக்கலன்னா, யார் அடிச்சது? ரத்த விளாறா இப்படி?” அவன் தூங்குவது போல் பாவனை செய்கிறான்.

அவள் மீண்டும் ராம்ஜியிடம் வருகிறாள்.

“யார் அடிச்சதுடா? எதுக்கு இப்படி நாடகம் ஆடுறேள் எல்லாம்?”

“அம்மா, எனக்குப் பரீட்சை. இது எனக்கு வாழ்வா, இல்லையான்ற பிரச்னை லட்சியம். என்னை டிஸ்டர்ப் பண்ணாம போ!” நடுக்கதவைச் சாத்துகிறான்...

முகத்திலடித்தாற் போல் இருக்கிறது.

பின் இவனை யார் அடித்தது? படிக்கவில்லை என்று ஸ்கூலில் அடித்தார்களா? அங்கே நூற்றுக்குத் தொண்ணூறும் பெண் டீச்சர்கள்... எவள் இப்படி அடிச்சிருப்பாள்? பிரின்ஸிபால் ஆண்.... அவர் இப்படி அடிப்பவர் இல்லையே? எங்கேனும் திருடி, அடி பட்டானோ? இந்த வீட்டில் நல்லது, கெட்டது எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்க இவள் ஒருத்திதானா? உழைப்பு, பொறுமை, பாரம் எல்லாம் இவளுக்குத்தானா? தடதடவென்று படியேறிச் செல்கிறாள். அவள் வருவதை அறிந்து வேண்டுமென்றே அவன் விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கிறான்.

அவள் விளக்கைப் போடுகிறாள்.

அன்று பகலில், அவன் காலில் விழுந்து மன்னிப்புக் கோரிக் கெஞ்சி, அந்த நிழலில் தஞ்சம் புக வேண்டும் என்று நினைத்த நினைப்புக்கள் அடியோடு தகர்ந்து போகின்றன.

படுத்த வாக்கில் இருந்த அவன் தோளைப் பற்றி உலுக்குகிறாள்.

அவன் முகம்... மீசை... திறந்த மார்பு, சங்கிலி... லுங்கி... எல்லாம் மேலும் மேலும் வெறுப்பை ஊட்டுகின்றன.

இவனெல்லாம்... உசந்த சாதிப் பிராமணன்... சீ...!

“எதுக்கு இப்படி ஒண்ணும் தெரியாதது போல் பாசாங்கு செய்யறே...? இந்த வீட்டில், இருபத்தஞ்சு வருஷமா உழைச்சுக் கொட்டி, உங்க அக்கிரமம் எல்லாம் சகிச்சிண்டிருந்தேன். எனக்கும் பொறுமை போயிட்டது! அந்தப் பையன், இப்படி அடிபட்டு வந்து எதையோ மருந்தைத் தின்னுட்டுக் கிடந்தான். அவனைத் தூக்கிண்டு ஆஸ்பத்திரிக்குப் போய், ஊரே, தாயேன்னு கெஞ்சிக் கூட்டிண்டு வரேன். உங்க சுகம் ஒண்ணுக்குத்தான் வீடா? ஆபத்துன்னதும் ஓடி வந்து, காசு பணம் பாராம ஒத்தாசை செஞ்ச மனுசாளைக் கூடத் தூக்கி எறியும்படி, அப்படி என்ன உங்களுக்கு?” அவள் பேசி முடிக்கவில்லை.

அவன் பேய் போல் அவள் முகத்திலும் மேலும் அடிக்கிறான். புடைவையை இழுத்துப் போட்டு இம்சிக்கிறான்.

வெறியாட்டம் ஓயுமுன் அவள் முகம் வீங்கிப் போகிறது. ரவிக்கை கிழிந்து தொங்குகிறது.

“...நீ... மனிசன்... மிருகம் கூட இல்லை. பேய், கேடு கெட்ட பேய்.”

“பேய்... பேய்தான். நீ... தேவடியா? அவனும் இவனும் உனக்கு எதுக்குடீ செய்யறா? உன் கூட்டமே ஊர் மேயும் கூட்டம். சொந்தப் புருசனுக்கே கூட்டிக் கொடுக்கும் ஒரு கழுதையக் குடி வச்சிட்டு, போன்னாலும் போகாம என் குடும்பத்துக்கு உலை வைக்கிறத சகிக்கிறேன். என் ஆபீசில் வந்து என்னப் பத்தி விசாரிக்கிறா... நான் ஆம்பள, எப்படி வேணாலும் இருப்பேண்டி! ஆனா பொம்பலயால மானம் போறதச் சகிக்க முடியாது! வீட்டக் காலி பண்ணுன்னா, வாடகை அதிகம் தரேன்னு எந்தத் திமிர்ல சொல்றா!... சீ! அவன் ஒரு ஆம்புள...! நீ எங்கேடி வீட்ட விட்டு ஊர் மேயப் போன? இது... ஒரு கண்ணியமான குடும்பம். தெரியாத்தனமா, என் அப்பா, இப்படி மானம் போக ஒண்ணைக் கட்டி வச்சு, நான் பொறுக்கிறேன்... போடி வெளில! உன்னை இப்படியே அனுப்பிச்சாத்தான் நீ ஒழிஞ்சு போவ. போய் எங்கானும் விழுந்து செத்துத் தொலை!”

கடவுளே!... இவனிடம் எதைப் பேசுவது?

நெஞ்சும் உடலும் எரிகிறது. மொட்டை மாடியில் புடைவையைச் சுற்றிக் கொண்டு வந்து குலுங்கக் குலுங்க அழுகிறாள்.

இவளுக்கு உதவி செய்தவர்களுக்கு இப்படியெல்லாம் கூசாமல் பழி சுமத்துகிறானே!

இந்த வீடு... இவளிடம் பிரியமாக இருப்பான் என்று நம்பிய பிள்ளை... எல்லாம் பொய்...

இந்த நடுநிசியில் இவள் எங்கு செல்வாள்?

பின்னால் சென்று, கிரசினை ஏற்றிக் கொண்டு நெருப்புப் பற்ற வைத்துக் கொள்ளலாமா?... இவள் பெண்ணாய்ப் பிறந்து என்ன லாபம்? யாருக்கு... இவள் செத்தால் யார் வருத்தப்படப் போகிறார்கள்? இவள் இல்லாமல் வீடு... குடும்பம் விழுந்து விடவில்லை.

இது வரையிலும் ரேவு இப்படி நினைத்ததில்லை. தான் இல்லாது போனால் வீடு... நடக்காது என்ற மாதிரியான பொறுப்புணர்வு ஒட்டிக் கொண்டு இருந்தது. அதன் உயிர்ச்சக்தி, ஒளிவிளக்கு, லட்சுமீகரம் என்றெல்லாம் ஒரு பொய்யைச் சுமந்து கொண்டிருந்தாளே?

அந்தப் பொய் எப்படி இவளுள் ஒரு பகுதியாகவே வளர்ந்திருந்தது?

பதின்மூன்று வயசில் இவளைக் கல்யாணம் - என்று கயிற்றைக் கட்டி, மாமியாருக்கும் பாட்டிக்கும் சேவை செய்ய, மலஜலம் எடுக்க, புருஷனுக்கு ஈடு கொடுக்க என்று பூட்டி வைத்தார்களே, அப்போது வந்ததா? நடுத்தெருவில் வந்து விழுந்திருக்க வேண்டிய பூவை, அலையவிடாமல் நிழல் தந்து, அடுத்த வேளைச் சோற்றுக்கு அலையவிடாமல் ‘பாதுகாத்தார்களே’, அதனால் வந்ததா? இவளுக்கு ஒரு குடும்ப ‘அந்தஸ்து’, இன்னார் வீட்டு மாட்டுப்பெண் என்று, தாலியும் குங்குமமுமாக, குருமடத்தில், சாதிக்குரிய சேலைக்கட்டுடன் ‘உயர் சமூகம்’ அங்கீகரிக்கக் கூடியதே, அப்போது வந்ததா? அவனும் பஞ்சகச்சம் உடுத்தி, வேசம் பூண்டு, உத்தம புருசனாக, இவளுக்குப் புரியாத மந்திரங்களைச் சொல்லி இவளுடன் சுவாமிகளை விழுந்து பணியும் போது, இவள் இவன் ‘சகதர்மிணி’யாக, அந்த வீட்டின் ‘தலைவி’ என்ற பொறுப்பில், இன்னமும் தன்னைப் பொறுப்புள்ளவளாக உயர்த்திக் கொண்டாளே! இரண்டு பிள்ளைகளைப் பெற்ற தாய் என்று ஒரு குருட்டு வட்டத்தில் செக்கு மாடாகச் சுழன்றிருக்கிறாள்.

இன்று, இந்தக் குருட்டு வட்டம் தகர்கிறது; தகர்ந்து விட்டது. இந்த அரணை உடைத்தவன் அவன் தான். அவன் தறிகெட்ட மாடாக உடைத்து, அவளுக்கு விடுதலை தருகிறான். ஆனால் அவள் ஏன் சாக வேண்டும்? எதற்காகக் கிரசினை ஊற்றிக் கொண்டு பற்றி எரிய வேண்டும்?

சாக வேண்டாம் என்றால்...

அவள் நினைத்துப் பார்க்கிறாள்.

இத்தனை வயசில்... தனக்கு இன்னது வேண்டும், இன்னது பிடிக்கும் என்று அவளுக்கு ஏதேனும் ஆசை இருந்திருக்கிறதா? அதற்காக அவள் ஏதேனும் செய்திருக்கிறாளா? அவள்... அவளுக்காக, தனக்காக...

புத்தகங்கள்... பத்திரிகைகள்... இவளுக்காக வாங்கப்பட்டிருக்கவில்லை. ஆசையாக, பிரியமாக, ஒரு முழம் பூ, வாங்கித் தந்ததில்லை அந்தக் கணவன். பூசை விசேசம் என்று வாங்கப்பட்ட பூ - இவள் சுமங்கலிக் கோலத்தை நிலைநாட்ட ஈர முடிப்பில் இடம் பெறும்.

படிக்கும் ஆசை, பல விஷயங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை, அது, சுதாவினால் தான் நிறைவேறியிருக்கிறது.

புத்தகங்களை - பத்திரிகைகளைப் புரட்டிப் பார்க்கையில், மின்னல்களாகத் தோன்றுமே! சாதனையாளர் பட்டியல்... அழகானவர்கள், அதிகாரிகள், நடிகையர், வரலாறுகள்...

வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் போன பின்பும், படித்தேன், சுயமுயற்சியில் ஈடுபட்டேன்; இன்னல்களை வென்றேன்... இன்று உயர்நிலை... எனக்குள்ளிருந்த ஆர்வம், என்னை இசைத் துறையில் ஈடுபட வைத்தது. சிறு வயதிலேயே எனக்குக் கணிதத்தில் ஈடுபாடு... இன்று... அத்துறையில் என்னால் உயர்பட்டம் பெற முடிந்தது...

இவளுக்கு என்ன இருக்கிறது? தோட்டக்கலை...? ஏன்? சமையல்... ஊறுகாய் போட்டு முன்னேறியவர்கள்... சீட்டுப் பிடித்து வியாபாரம் செய்பவர்கள்... இவள் ஏன் சாக வேண்டும்?

அதிகாலையில் ரேவு, புதியவளாக அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறாள். அம்பத்தூர் செல்லும் முதல் பஸ்ஸில் இடம் பெறுகிறாள்.

காலைக்காற்று, புத்துயிரளிக்கும் குளிர்ச்சியுடன் முகத்தில் படிகிறது.

அத்தியாயம் - 12

சக்கு, சக்கு என்று ‘பம்ப்’ அடிக்கும் ஓசை கேட்கிறது. காலையின் இயக்க ஒலிகளுக்கெல்லாம் இந்தப் பட்டினத்தில் கேட்கும் சுருது இது.

“தண்ணியடி பெண்ணே தண்ணியடி, தருமம் தலை காக்கும் தண்ணியடி - பண்ணிய பாவம் தொலையும் உனக்கு, பாரில் விடுதலை வந்து விடும், தண்ணியடி பெண்ணே...”

“ஏ அசத்து? என்ன பாட்டு? தண்ணியடின்னா என்ன அர்த்தம், தெரியுமா?”

“என்ன அர்த்தம்? தண்ணியடின்னா தண்ணியடி...”

சக்கு சக்கு சக்கு... சக்கு...

எழும்பி எழும்பித் தோளசைய, சாந்தி பம்படிக்கிறாள். ஓசைப்படாமல் பின்புறம் வந்து நிற்கும் ரேவுவுக்கு, ‘பாரில் விடுதலை வந்துவிடும்’ என்று அடிமனசில் பதிகிறது.

சாந்தி இவள் வேம்புவுக்கு பின்னால் வந்து நிற்பதைப் பார்த்துவிட்டுக் கூவுகிறாள்.

“அக்கா? எப்ப வந்தீங்க? நான் இப்பத்தா நினைச்சிட்டேன். நீங்க அன்னிக்கு சாம்பாரா, வெந்தியக் குழம்பா - ஒரு குழம்பு வச்சிருந்தீங்களே! சூப்பர்! நான் இப்பத்தான் நினைச்சிட்டேன்! நூறு வயசு உங்களுக்கு!”

வேம்பு திடுக்கிட்டாற் போல் பின்னே திரும்பிப் பார்க்கிறான்.

“அக்கா? காலங்காத்தால வந்துட்டே?”

ஏன் வந்தாளென்று பார்க்கிறானா? அந்தக் கண நேரத்தில் அவன் முகத்தில் அந்தக் காலை நேரத்தில் - உணர்வுகள் பிரதிபலிப்பதை ஆராய்வது போல் நிற்கிறாள் ரேவு.

“ஆமாம், காலம்பரவே வந்துட்டேன். அங்கே அவா இருந்துப்பா. வேம்பு, உனக்கு நான் பாரமா இருக்க மாட்டேன், பயப்படாதே!”

“என்னக்கா, என்னென்னவோ பேசறே? யார் யாருக்கு பாரம்? அத்திம்பேர்ட்ட சொல்லிட்டு வந்தியா, அவர் சம்மதிச்சாரான்னுதான் கேட்டேன்?”

“ஏன்? அப்படிச் சொல்லிட்டு வந்தாத்தான் இங்கே வரலாமா?”

“ஐயோ, ஏனக்கா, இப்படி வார்த்தைக்கு வார்த்தை தப்புக் கண்டுபிடிக்கிறே?”

“போதும் நீங்க வரவேற்கிற அழகு. அவர் கிடக்கிறார். நீங்க வாங்கக்கா! உள்ளே வாங்க, காபி கலந்து தரேன்...” என்று சாந்தி தண்ணீர்த் தவலையை இடுப்பிலேற்றிக் கொண்டு உள்ளே வருகிறாள்.

இந்தக் குறுகிய காலத்திலேயே சாந்தி தன் வெகுளித்தனத்தினால், ரேவுவின் மனம் கவருபவளாகிறாள். அன்று பரத் வந்த போதும் இப்படித்தான் நடந்து கொண்டாள். ஆனால் பரத் பணத்தைத் திருடிச் சென்றதை அவள் அறிந்திருக்க மாட்டாள். வேம்பு சொல்லி இருப்பானோ?

காபி கலந்து கொடுக்கிறாள். ஒரு வாழைத்தண்டுக் கட்டையை அவளிடம் கொண்டு வந்து, அரிவாள் மனையுடன் வைக்கிறாள்.

“ரொம்ப நாளாச்சி. நேத்து மார்க்கெட்டில் வச்சிருந்தான். இதை நறுக்கிடுங்கக்கா. வேம்பு ஸார் இப்ப ஆஸ்பத்திரிக்கு ஒன்பது மணிக்குக் கிளம்பு முன்ன, சமையல் பண்ணிடறேன். அன்னிக்கு வச்சிருந்தீங்களே, குழம்பு...”

“ஏய் குழம்பு வய்க்கிறத அப்புறம் கேளு. சரியான வயிற்றுப்பட்டி. என்னமோ பேப்பரெல்லாம் ஜிராக்ஸ் எடுக்கணுமின்னியே? எடுத்துக் குடு! நான் ஆஸ்பத்திரிக்குப் போகு முன்னே எடுத்துத் தரேன்...”

“ஒன்பது மணிக்கு முன்ன எவன் கடயத் துறந்து வச்சிருக்கிறான்? எல்லாம் நானே பண்ணிக்கிறேன்?”

“ஏய், நீதானே நேத்துச் சொன்ன? ஆஸ்பத்திரிக்குப் போகுமுன்ன செஞ்சி தாங்கன்னு?”

“ஆமா, நான் சொன்னேன். அப்படியே கேளுங்க? மண்டையில் எனக்குத்தான் ஒண்ணுமில்ல...”

“ஐயோ, உனக்கா ஒண்ணுமில்ல? இத்தனை கனம், திமிர் அடச்சி வச்சிருக்கு!” என்று வேம்பு கையைப் பெரிதாக அணைத்துக் காட்டுகிறான்.

“திமிர் இருந்துதான், பத்து வேலி சொத்தும் அரண்மனை போல வீடும், தோப்பும் துரவும் வச்சிட்டு லோலுப்படுறேன்!”

இத்துடன் திரை விழுகிறது.

ரேவு வாழைத்தண்டை நறுக்குகிறாள். நாரில்லை.

பேசாமலே, சாந்தி பீரோவின் ஓரம் இருந்த தோல் பெட்டியை எடுத்துத் திறந்து ஏதோ கற்றைக் காகிதங்களை எடுத்து அவனிடம் கொடுக்கிறாள். “இதான்... மூணு காப்பி எடுத்திட்டு வாங்க...”

ஐம்பது ரூபாய் நோட்டும் அதன் மேல் வைக்கிறாள்.

அவன் சட்டையைப் போட்டுக் கொண்டு அவற்றை எடுத்துக் கொண்டு செல்கிறான்.

“அக்கா, பெண் பிறந்தாலும் என்னைப் போல் பிறக்கக்கூடாது! எங்கம்மா எங்க பாட்டி தாத்தாக்கு ஒரே பொண்ணு... சொத்து சுகம் ஒண்ணும் உதவல, அக்கா! சாதி விட்டு சாதி கலியாணம் பண்ணுறதப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று ஒரு வெடியைப் போடுகிறாள் சாந்தி.

ரேவு என்ன பதிலைச் சொல்வாள்?

“இதைப் பத்தி எனக்கு ஒண்ணும் சொல்லத் தெரியலம்மா...”

“என் அநுபவம் அக்கா. சாதிக்குள்ள அறிஞ்சு தெரிஞ்சவங்கதான் கலியாணம் பண்ணனும். எங்கப்பா அந்தக் காலத்துல எங்க தாத்தாவோட காங்கிரஸ் கட்சில இருந்தாரு... சோஷலிஸ்ட் ஆனாருன்னு, அம்மாவைக் கலியாணம் செஞ்சிக் குடுத்து, வீட்டு மாப்பிள்ளையாக்கிட்டாரு. அவரு அவருடைய தங்கச்சி மகனுக்கு, சொத்து வந்திடணும் வெளில போகக் கூடாதுன்னு, இஷ்டமில்லாம டாக்டருக்குப் படிக்கணும்னிருந்த என்ன, ப்ளஸ் டூ வந்ததும் கலியாணம் பண்ணிட்டாரு. அது சரியா? எனக்கு மீன் கறி எல்லாம் பழக்கம். எங்கப்பாக்கு கூடாது. இப்ப, அம்மா, தாத்தா, பாட்டி ஆரும் இல்ல. சொத்தெல்லாம் எப்படி எப்படியோ எழுதி வாங்கிட்டாங்க... அத்தையாம், அந்த ராட்சசி, எங்கப்பாவைக் கைக்குள் போட்டுக்கிட்டு, பெத்த பெண்ணுக்கே விரோதமா பண்ணிட்டா... புருசனாம் புருசன்... எனக்குச் சூடு கூடப் போட்டான். இத பாருங்க அக்கா!” சேலையை விலக்கி, முழங்காலுக்குக் கீழ் தழும்பைக் காட்டுகிறாள் சாந்தி.

‘சேலை இல்லை என்று சின்னாயி வீட்டுக்குப் போக, அவள் ஈச்சம்பாயை உடுத்து எதிரே வந்தாளாம்...’ என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.

“உனக்கு என்ன வயசாறது, சாந்தி?”

“எனக்கா? முப்பத்து நாலாயிட்டது அக்கா!... என்னை மிரட்டி, ‘இந்தப் புருஷனுடன் வாழ இஷ்டமில்லை! வேறு கல்யாணம் பண்ணிக் கொள்ளட்டும்’னு எழுதிக் கையெழுத்துப் போடச் சொன்னான் அந்த அயோக்கியன். நான் பி.ஏ. முடிச்சி, பி.எட்டும்முடிச்சாச்சி. அப்பா போன மாசம் செத்துப் போயிட்டார். எனக்கு வேலையும் கிடைக்கல. இருநூறுக்கும் முந்நூறுக்கும் ட்யூஷன் எடுத்தேன். நான் கேஸ் போட்டிருக்கிறேன். டவுரி செல்லிலே புகார் பண்ணிருக்கிறேன். என் கேசை, டி.வி. சிரியல்ல கூட பேர், ஊர் மாத்திப் போட்டாங்கக்கா... இப்ப கூட ஸி.எம்ம பார்த்து பெடிஷன் குடுக்கணும்னிருக்கேன். பாய் தாத்தா, எங்க தாத்தால்லாம் ரொம்ப தோஸ்து. அவங்க இருந்தா, எனக்கு ஆறுதலா எதும் செய்வாரு... இப்ப... வேம்பு ஸார் தான் எனக்கு தெரிஞ்சி, ஆம்பளங்களில், உத்தமமான ஆளு. ஒரு நேரம் கூட, எங்கிட்ட எக்குத் தப்பாய் பேசி, தப்பா நடந்ததில்ல. யாரிட்டயும் அப்படி நடந்தார்னு பேர் கூடக் கிடையாது. ஆனா சொல்லக்கூடாது. கட்சி, கட்சின்னு சொல்லுற ஆளுங்களக் கூட நம்ப முடியாது.”

தக்கை திறந்து விட்டாற்போல் பேசிக் கொண்டு போகிறாள்.

வேம்புவைப் பற்றிய கருத்தைக் கேட்க, பெருமையாகக் கூட இருக்கிறது.

மணி மூன்றாகிவிட்டது. வேம்பு வரவில்லை.

“அக்கா, உங்க வீட்டுக்காரர், ஏதோ பெரிய கம்பெனியில் வேலையாக இருக்கிறாராமே? அவருக்கு இந்து கட்சியில் கூட ‘புல்’ உண்டுன்னு கேள்விப் பட்டேன்...”

திடுக்கிட்டுப் பார்க்கிறாள் ரேவு.

“அக்கா, நீங்க மனசு வச்சா நடக்கும். பரமானந்தா ஸ்கூலில் கவர்ன்மெண்ட் ஸ்கேல் சம்பளம் தராங்களாம். சிபாரிசு இருந்தா கிடைக்கும்னு சொல்றா... வேலைன்னு கேட்டா, முப்பது நாற்பது குடுத்தால் தான் கிடைக்கும்னு எல்லாரும் சொல்றா. கேசைப் போட்டுட்டு விடியும்னு காத்திருக்கேன். அத்தனை பணத்துக்கு எங்க போக?... அதான் அக்கா, உங்க வீட்டுக்காரர்கிட்டச் சொல்லி ஒரு ரெகமன்டேஷன் லெட்டர் வாங்கிக் குடுத்தா...”

“சாந்தி, உனக்கு உதவி செய்யும் நிலையில் இல்லே நான். நீ உன் கதையச் சொல்லிட்டே. ஒளிவு மறைவு இல்ல. ஆனால் புகார் பண்ண முடியாதபடி புருஷன் கவுரவம். மணியான இரண்டு ஆண் பிள்ளைகள்... இந்தத் தோற்றம்... உள்ளே அவ்வளவும் புழு. அழுகல். அது இனியும் தாங்காது... நீயும் பெண், நானும் பெண்... நான் வேம்புவிடம் கூடச் சொல்லலை. ஏன்னா, இந்த உலகம் எல்லாத் தப்பையும் அவ மேலதான் போடும்...” என்றெல்லாம் சொற்கள் நெஞ்சில் எழும்புகின்றன.

ஆனால் நாவோடு மடிகின்றன.

“ஏக்கா?... இந்த ஹெல்ப் செய்ய முடியாதா?”

“இல்ல சாந்தி, அப்படி ஒரு ‘புல்’ எதுவும் அவருக்குக் கிடையாது...” என்று முற்றுப்புள்ளி வைக்கிறாள்.

தை மாசத்தில் தங்கம் உருக்கித் தழல் குறைத்துத் தேனாக வரும் வெயிலை விழுங்கிவிட்டு, காற்றும் மழையும் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நாட்கள் ஓடுகின்றன.

பாயம்மா வீட்டுக்குத் திரும்பி வரும் எதிர்பார்ப்பே நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஒரு கோளாறு நீக்கப் போய் வேறு சிக்கல் தொடருகிறது. மஞ்சக்காமாலை நீடிக்கிறது.

ரேவுவுக்கு நைந்த நூலிழையில் ஒரு பெரும்பாரத்தைக் கட்டிவிட்டாற் போல் தோன்றுகிறது.

பாயம்மாவைப் பார்த்துத் தன் நிலைமையைக் கூறி ஓர் ஆதரவு தேடலாம் என்று மனப்பால் குடித்தது நடக்கவில்லை. ஆஸ்பத்திரிக்குப் போனாலும், அவளுடன் பேச முடியவில்லை.

பேசாமல் அவளைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். அவளுக்கு நினைவிருந்தாலும் ரேவுவைப் பார்க்கையில் மெலிந்த புன்னகை ஒன்றுக்கு மேல் மனசைக் காட்ட முடியவில்லை. முகத்தைத் துடைக்கும் போதோ, திரவமான உணவாக - ஏதேனும் வாயில் விடும்போதோ, மனம் நெகிழ்ந்து அவள் இவள் கையைப் பற்றிக் கொள்கிறாள். உணர்ச்சி கண்களில் பூக்கிறது.

உன் நிழலில் அண்டி, ஒட்டுத் துணியாக இந்தக் குடும்பத்தில் ஒட்டலாம் என்று நினைத்தாளே... சாந்தி வேம்புவைக் கல்யாணம் செய்து கொள்ளும் நினைப்பு கூட ரேவுவுக்குத் தப்பாகப் படவில்லை. அவள் வேம்புவுக்குக் கொடுத்த நற்சான்றே பெருமைப்படுத்துகிறது. அவள் அவளைக் கல்யாணம் செய்து கொண்டு வாழ்வதில் என்ன தப்பு? அவனுக்கும் யார் பெண் கொடுப்பார்கள்? குலம் கோத்திரம் என்று துருவுவார்கள். இந்த ஒட்டுத்துணிக் குடும்பம்... அவள் உழைப்பில் பிழைக்கட்டுமே... அப்பளம் இடலாம்... அம்மா பேரில் குந்தளா அப்பம். பெயர் விளங்கும். சிறுகக் கட்டிப் பெரிதாக... வீட்டுக்கு வீடு சென்று விற்பார்கள். கடைக்குப் போடுவார்கள். பிறகு வண்டி வாங்குவார்கள். குந்தளா அப்பளம், ஊறுகாய் - சாம்பார் பொடி என்று வியாபாரம் பெருகும்.

அவளுக்கு வீடு... வாசல், காவல் என்று மதிப்பு உயரும்.

ஒருநாள் அவள் புருஷன், இல்லை, பையன்கள், தேடி வருவார்கள், அப்போது...

என்ன ஆயிற்று...?

பாயம்மா எப்படியோ மூச்சு விடுகிறாரே?...

வெளியே மழை கொட்டிக் கொண்டிருக்கிறது.

“ஸிஸ்டர்... ஸிஸ்டர்...?” என்று அவள் கூப்பிடுகிறாள்.

நர்ஸ் வருகிறாள். கையைப் பிடித்துப் பார்க்கிறாள்.

தண்ணீர்... தண்ணீர்... என்று குடிப்பது போல் சாடை காட்டுகிறாள். ரேவு குப்பியில் இருந்த நீரை தம்ளரில் ஊற்றி மெல்ல வாயில் விடுகிறாள்.

அதுதான் கடைசி.

பாயம்மா... பாயம்மா செத்துட்டாங்க.

இவளுடன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. பஸ்ஸில் கூட்டத்தில் இடுபடும்போது, உயரே பற்றிக் கொள்ள கையைத் தூக்கினால், ஒரு பிடி கிடைக்குமே அந்தப் பிடி நழுவிவிட்டது.

பற்று கைக்குப் பிடிபடு முன்பே சரிந்துவிட்டது. உறவுப் பந்தங்கள் எல்லாம் கழன்ற பின், நம்பிக்கை நப்பாசை வைத்தாள். அதுவும் போய்விட்டது. மாலை ஆறு மணிக்குள் வீட்டுக்கு அவளைக் கொண்டு வருகிறார்கள். சற்று நேரத்தில் மழையையும் பாராட்டாமல் கூட்டம் கூடிவிடுகிறது.

‘பாயம்மா... பாயம்மா’ என்று அலறிக் கொண்டு கட்சியின் மாதரணித் தலைவி பார்வதி வருகிறாள். ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என்று வீடு நிரம்பக் கூட்டம். அம்மாவை நீராட்டி, புதிய சிவப்புக் கரையிட்ட வெள்ளைச் சேலை உடுத்து, நெற்றியில் குங்குமமும் கழுத்து மாலையுமாகக் கிடத்துகிறார்கள். ஊதுவத்தி கொளுத்தி வைக்கிறார்கள். மாலைகள், வளையங்கள் வந்து குவிகின்றன. அம்மா, அப்பா... என்று யார் யாரோ கால்களைத் தொட்டுக் கும்பிடுகிறார்கள்.

இவள் யாருக்கும் அம்மா இல்லை. சிவப்புக்கரை வேட்டிகள், கதர்ச்சட்டைகள், கறுப்புச்சிவப்பு வேட்டி, துண்டுகள் என்று இறுதி அஞ்சலி செய்ய வருபவர்கள் அம்மாவின் பண்புகளைச் சொல்லிப் பெருமைப் படுத்துகிறார்கள். இரவு தேய்ந்த காலையில் மழை விட்டு வானம் பளிச்சென்று நிலம் காட்டுகிறது. கூட்டம் தெருவடைக்க நிரம்புவதை ரேவு பார்க்கிறாள்.

அப்போது உயரமாக, கன்னங்களில் குத்துக் குத்தாகத் தெரிய அவர் வருகிறார்.

அவர்... அந்த நாடகக்காரர்... இல்லை, ஊஞ்சல் போட்ட வீட்டுக்காரர்.

“ஓ... என்.கே.ஆர்... வராங்க... என்.கே.ஆர்...”

“ஸார்... அம்மா போயிட்டாங்க...” என்று சாந்தி அவரிடம் சொல்லிப் பெரிதாக அழுகிறாள்.

அவர் காலடியில் மலர் மாலையைப் போட்டுவிட்டு கண்கலங்க நிற்கிறார். அப்போது இன்னோர் அலை...

யாரோ ஒரு அமைச்சர்... வருகிறார். அன்று வந்த பன்னீர்செல்வம்... அப்போது, அம்மாவின் அருகாமையை விட்டு நகர்ந்த அவர் வேம்புவிடம், ரேவுவைக் காட்டி, “உன் ஸிஸ்டரா அவங்க?” என்று கேட்பது தெரிகிறது.

வேம்பு அவரிடம் என்ன சொல்கிறான் என்று தெரியவில்லை. சுதாவுடன் அவள் அவரைப் பார்க்கச் சென்ற செய்திகளை எல்லாம் சொல்லி விடுவாரோ?

புரியவில்லை. பெரிய பெட்டி கொண்டு வந்து அம்மாவின் சடலத்தை வைத்து மூடுகிறார்கள். வண்டியில் அதை வைத்துக் கொண்டு, ஊர்வலமாகப் போகிறார்கள். மாலை ஏழு மணி அப்போது.

சாவு நிகழ்ந்து பன்னிரண்டு நாட்கள், எப்படியோ ஓடி விடுகிறது. ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஒரு கல்யாண மண்டபத்தில் பொதுக்கூட்டமும், சாப்பாடும் ஏற்பாடு செய்கிறார்கள். கூட்டத்துக்குக் கட்சிக்காரர்கள், சிவப்புத் துண்டு, அல்லது சட்டை அணிந்த பலர் வந்திருக்கிறார்கள். அநேகமாக முதியவர்களே அதிகமான பேர். பெண்களிலும் பலர். சாந்தியுடன் பல விஷயங்களைப் பேசுவதும், வந்தவர்களுக்கெல்லாம் காபி வழங்குவதுமாகக் கலகலப்பை ஊட்டுகிறார்கள்.

பெரிய கூடத்தில், ஒருவர் தலைமை வகிக்கிறார். ஒவ்வொருவராக வந்து பாய் பற்றியும், பாயம்மா பற்றியும் அவர்கள் சேவை, தியாகங்கள் பற்றியும் பேசுகிறார்கள். ஆனால், ரேவுவுக்கு எதுவும் மனதில் பதியவில்லை. கயிற்றில் தொங்கும் பை வெறும் காற்றுப் பை - அல்லாமல் வேறு ஒன்றும் கிடையாது என்பதை வேம்புவுக்கு இன்னும் எப்படிச் சொல்வாள்? சுதாவுக்குப் பவர் லாண்டிரி நம்பர் தெரியும். அவள் ஃபோன் பண்ணி விசாரிக்கக்கூடாதா?

போதுமப்பா, இவர்கள் வீட்டுச் சச்சரவில் தலையிட்டது என்று வெறுத்து ஒதுங்கியிருப்பாளோ?

அவள் அம்மா ஒருவகையில் வெளியேற்றப்பட்டாள். இவள் ஒரு வகையில் வெளியேற்றப்பட்டிருக்கிறாள்.

கூட்டம் நடைபெறும்போதே, பெண்கள் சிலர் பேசுவது ரேவுவின் செவியில் விழுகிறது.

“இப்ப செலவெல்லாம் பன்னீர்தான் செய்யிறாரு. வேம்பு, பாவம், கடையில வருமானமே இல்லேன்னு சொன்னான். இப்ப எல்லாம் ரெடிமேட், ஃபாக்டரின்னு வந்து சின்னவங்க தொழிலக் கெடுத்துப்பிட்டதே?...”

“ஆமாம்... காலம ஏழு மணிக்குப் பவர் மிசின்ல உட்காந்தா, ராத்திரி ஏழு மணி வரை வேலை வாங்குறானுவ, ‘எக்ஸ்போர்ட்’ ஐட்டம்னு வொர்க்கிங் கண்டிசன்லாம் ரொம்ப மோசம். சந்திராபுரம் யூனிட்ல தேவகி, ஐநூறு பொண்ணுகள்ள, நாப்பது பேரைக் கூட்டி யூனியன் பண்ணினா; அந்த மாசமே சீட்டுக் குடுத்திட்டான் முதலாளி...” பேச்சு வேம்புவை விட்டு எங்கோ போகிறது.

“நாங்க வர முப்பதாம் தேதி விமன்ஸ் கமிஷன்ல கோரிக்கை மனு கொடுக்கிறோம். கூட்டம் இருக்கு எல்லாம் வந்திடுங்க!” என்று ஓர் இளம் பெண் செய்தி சொல்கிறாள்.

இவளுக்கு அந்தச் சூழலே அந்நியமாக இருக்கிறது.

“என்ன ராஜிக்கா? கிளம்பீட்டீங்க? சாப்பிட்ட பின் போகலாம்?” என்று சாந்தி ஒருத்தியைத் தடுக்கிறாள்.

“இல்லம்மா, வீட்டில விருந்தாளி வந்திருக்கு. பாயம்மா இரங்கல் கூட்டம். கட்டாயம் போய் ரெண்டு வார்த்தை பேசணும்னு வந்தேன். வரேன் சாந்தி! நீ அப்புறமா வீட்டுக்கு வா!”

“சாந்திக்குத்தான் கஷ்டம். அவளுக்கு அந்தந்த சமயத்தில் அட்வைஸ் பண்ண யாருமில்லாமலே தன்னிஷ்டப்படி நடக்கிறா...”

“டிவோர்ஸ் ஆயிட்டுத்தா என்ன?”

“ஐயோ, கட்டினவன் மடையனா? முதல்ல இவங்கப்பா மகளின் நேச்சர் கூடப் புரிஞ்சுக்காம, சொத்துப் பத்துத்தான் முக்கியம்னு மனப்பொருத்தம் பார்க்காம கட்டி வச்சது தப்பு. அந்த ஆளு நல்லவன் தான், பி.எட். எடுத்திட்டு, உள்ளூர் ஹைஸ்கூலில் டீச்சரா இருக்கிறான். தம்பி தங்கச்சி எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணுன்னு குடும்பம். இவ ஊரு வேண்டாம். எங்கானும் வெளிதேசத்துக்குப் போகணும். துபாய் - அங்கே இங்கே போயிச் சம்பாதிக்கணும். எஞாய் பண்ணனும்னு பிடிவாதம் புடிக்கிறான்னு கீர்த்தி சொன்னாரு... கிராமம் குடும்பம்னு கட்டுப்பாடு நல்லதுக்குத்தானே இருக்குது? திடும் திடுமுனு யாரிட்டயும் சொல்லாம அங்கே இங்கே போறது; தங்குறது. அட, நம்ம வீடுங்கன்னா தப்பில்லதான்னாலும், அவம்மா நகை எல்லாம் ஒண்ணொண்ணா, வித்திருக்கா. யாரோ எக்ஸ்ப்ளாய்ட் பண்றான்னுதான் அவப்பாவே சொத்தை அவனுக்குன்னு எழுதிட்டாரு.”

“முதல்ல இவ என்.வி. சாப்பிடுவ. அவங்க பிராமணங்க. அதை ஒத்துக்கல. எப்பவோ சாதி மதம் இல்ல. எளிமையாச் சாப்பாடு. வாழ்வு - அந்தக் காலத்துல இருந்தோம். இப்ப அதெல்லாம் நினைக்கக் கூட முடியாது. அட, அவங்களும், பழக்கம், சாப்பிட்டுப் போகட்டும்னு விடலாம். முதல்ல பழக்க வழக்கம் ஒத்துப் போகணும். இல்ல, ஒருத்தர் விட்டுக் கொடுக்கணும். எல்லாம் குளறுபடி ஆயிடிட்டுது...”

ரேவு தூணோடு சாய்ந்து பிரமை பிடித்தாற் போல் நிற்கிறாள். கூட்டம் முடிந்து எல்லோரும் பின் கூடத்தில் சாப்பிடப் போகிறார்கள்.

“அக்கா! சாப்பிட வா...”

வேம்பு அழைக்கிறான்.

“அவாள்ளாம் சாப்பிடட்டுமே?...”

“அவா, இவா எல்லாரும் ஒண்ணுதான்... ஏங்க்கா அத்திம்பேர் இந்தப் பதினைஞ்சு நாளில் ஒரு போன் கூடப் பண்ணலியே? நான் துக்கக் கடிதாசி அனுப்பினேன். இங்க கூட்டம்னு வந்து உன்னை அழைச்சிட்டுப் போவார்னு...”

மென்று விழுங்குகிறான். இவள் உடலில் குளிர் திரி ஓடுகிறது.

“நீ இருந்தது ஒத்தாசையா இருந்தது. அக்கா... நான் கார்மெண்ட் கம்பெனில சேரலாம்னு முடிவு பண்ணிட்டேன். முதல்ல ரெண்டாயிரம் சம்பளம் தரதாச் சொல்லியிருக்கா. இப்ப வந்து பேசினாரே, முதலில் பராங்குசம்னு அவர் மூலமாத்தான் - அந்த வீடு கூடப் பாயம்மா இருக்கிற வரைக்கும்னு வச்சிருந்தா. இனிமே இடிச்சி எப்படியோ கட்டிடுவா, இல்ல கைமாறும். அதுனால அதையும் காலி பண்ணணும்... நாளைக்கு நானே உன்னை சைதாப்பேட்டைக்குக் கூட்டிண்டு போய் விட்டு மன்னிப்புக் கேட்கிறேன்... ஓ எதுக்கக்கா அழறே? அழாதே!” அவன் அவள் கண்களைத் துண்டால் துடைக்கிறான்.

அவளால் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் பெருகுகிறது.

“வேண்டாம், நானே போயிடறேன் வேம்பு...”

அன்று மாலையே கைப்பையுடன் ரேவு கிளம்பி விடுகிறாள்.

அத்தியாயம் - 13

மணி ஆறடிக்கவில்லை. மஞ்சல் வெயில் அந்தப் பெரிய மாடிக் கட்டிடத்தில் விழுகிறது; அவள் மிகச் சரியாக பஸ்ஸை விட்டு இறங்கி வீடு கண்டுபிடித்திருக்கிறாள். அடி மனதில் புதைந்திருந்த ஆவல், செயல்பட்டிருக்கிறது. பையுடன் படி ஏறுகிறாள். ஞாயிறு மாலை... எல்லோருடைய வீடுகளிலும் தொலைக்காட்சி பார்க்கும் நேரமோ?

அவள் அந்த வீட்டைக் கண்டுவிடுகிறாள். வாயில் மணியை அமுக்குகிறாள்.

உள்ளே டீ.வி. சத்தம் இல்லை. எதிரொலியே இல்லாத நிமிடங்களில், இவள் நெஞ்சு துடிப்பு, இடியோசை போல் கேட்கிறது. கால் ஒன்றை ஊன்றி, இன்னொரு காலைத் தளர்த்தி, வலக்கையைச் சுவரில் வைத்துக் காத்திருக்கையில் கதவு திறக்கிறது. அவர் உயரமாக அன்பும் ஆதரவும் கனியும் முகத்துடன்... ஆச்சரியத்தைக் கொட்டவில்லை.

“வாம்மா... வாங்க... வாங்க...” என்று உள்ளே அழைக்கிறார்.

ரேவு பையுடன் உள்ளே செல்கிறாள். ஊஞ்சலின் மீது பையை வைத்துவிட்டு உட்காருகிறாள்.

இத்தனை நேரமாக அடக்கி வைத்திருந்த உணர்வுகள் உடைந்து விம்மல்கள் மோதுகின்றன. அவள் அழுவதைச் சிறிது நேரம் அவர் நின்று பார்க்கிறார். அவை அடங்கவில்லை.

அவர் பரிவுடன் குனிந்து, முதுகில் மெல்லத் தட்டுகிறார்.

“ஓ, நோ... அழாதேம்மா... வேண்டாம். அழாதேம்மா. இனிமேல் உங்களுக்கு என்ன கஷ்டம் வந்தாலும் நானிருக்கேன்... போதும்...” சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைக்கத் துடைக்கப் பழம் பிழிந்தாற் போல் ஆற்றாமை வடிகிறது.

“நான் என்ன பண்ணுவேன்? இங்கே வரது பாவம். கட்டின புருஷன விட்டுட்டு ஓடிவரக் கூடாது. பரபுருஷன் இரக்கப்படும்படி நான் வரக்கூடாது. ஆனா... நான்... நான் என்ன பண்ணுவேன்? எனக்கு எந்த வழியும் இல்ல, வந்துட்டேன். எனக்குச் செத்துப் போகவும்... தைரியம் இல்ல.”

“ம்... நோ... இப்படி நினைக்கவே கூடாது. நீ இங்க வந்தது பாவமில்ல. செத்துப் போக நினைச்சதுதான் பாவம்.”

குரல் அடைகிறது.

“நான் என்ன பண்ணட்டும்? என்னை வெளில புடிச்சித் தள்ளிட்டார். எனக்குப் போக்கிடம் இல்ல.”

வார்த்தைகள் வெந்த கூழில் அகப்படும் குறுணைகள் போல வருகின்றன.

“இந்த உலகத்தில் வாழ உரிமையில்லைன்னு சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. புருஷன்னு இருப்பவனுக்கு நிறைய கடமைகள் உண்டு. அதில் ஒண்ணு, பெண்டாட்டியைக் கண்கலங்காமல் பார்த்துக் கொள்வது. அதை எப்ப அவன் செய்யலியோ, அவனுக்கு எல்லா உரிமையும் அப்போதே போயிடுது. இத பாரம்மா நீ இடமில்லேன்னு நினைக்காம எப்ப இங்க வந்தியோ, அப்போதே, உனக்குக் கஷ்டம் போச்சுன்னு நினைச்சிக்க. இனிமேல் உன்னை நல்லபடியா, புது நம்பிக்கையுடன் புது மனுஷியா ஆக்கறது என் பொறுப்பு. பழசெல்லாம் குப்பை, விட்டுத் தள்ளும்மா... கம் ஆன்... நீ இப்ப என்ன சாப்பிடறே? காப்பி சாப்பிடறியா? ஷூர் நல்ல காப்பி ஒண்ணு போட்டுண்டு வரேன்... யூ’ல் ஃபீல் குட்...”

ரேவு, கண்ணீர் காய், சுற்றும் முற்றும் பார்க்கிறாள். எதிரே, டி.வி. அலமாரி நிறைய புத்தகங்கள்... அலமாரி மேல், வெள்ளி யானை - ஒரு புத்தர் சிலை, ஒரு நடராச சிற்பம் படம் போல் மாட்டப் பெற்றிருக்கிறது. குருகுருவென்று ஒரு இரண்டு வயசுப் பெண் குழந்தையின் வண்ணப்படம்... ஒரு இளம் தம்பதி.

இதெல்லாம் யாரோ?

ஆனால், இந்த வீடு அந்நியமாக இல்லை. இங்கே தன் துயரங்களைக் கொட்டி விட்டாள். வேலிகளைத் தாண்டி விட்டாள். முட்கள் கிழிக்கவில்லை. சுதா, சுதா புருஷன்... அவள் முட்கள் அவர்களையும் குத்தின. இங்கு... ஒரே தாவாய்த் தாண்டிவிட்டாள். இவர் மீது முட்கள் குத்தாது.

இது இவள் வீடா இனி? சாத்தியமா? நீ இங்கே இருக்கலாம்; உன் கஷ்டங்கள் தொலைந்தன; புது மனுஷி... இதற்கெல்லாம் உட்பொருள் காண்பாளா? ஐயோ, உட்பொருள் என்று ஒன்று இருக்குமா?... பெண்டாட்டி இல்லை. இரண்டாம் பேர் இல்லை... சீ...! இவர்... நிச்சயமாக அப்படிக் கபடமுள்ளவர் அல்ல. கூத்தரசன் டாக்டரை அவளால் இப்போதும் எப்போதும் நினைக்க முடியவில்லை அப்படி, இவர்... இவளுக்கு ஒரு தந்தையைப் போன்றவர்... தந்தை... தந்தை...! அவர் எப்படி இருப்பார்?... அப்பா...!

சீ... அப்பா... புருஷன்... அவாளைப் போல் இவரை நினைக்க வேண்டாம். அப்பா இல்லை; புருஷர் இல்லை; பிள்ளைகளும் இல்லை. துரௌபதை மானம் பறி போகும் வேளையில் கிருஷ்ணா அழைச்சாளே, அப்படி கிருஷ்ணனா?

டவரா தம்ளரில் காபியை ஆற்றிக் கொண்டு வருகிறார்.

மணக்கிறது... “உனக்கு எவ்வளவு சர்க்கரை, பால் வேணும், பாரும்மா!”

அவள் கையில் காபியை வாங்கிக் கொண்டு அவரையே பார்க்கிறாள். அந்த முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில், கூச்சம் தயக்கங்கள் கழன்று விட்டாற் போல் இருக்கிறது.

அவர் ஏதோ புரிந்து கொண்டு விட்டாற் போல் சிரிக்கிறார். குத்துக்குத்தாகக் கன்னங்களில் - குழி விழுகிறது.

“என்னம்மா? என்ன பார்க்கிறே? கன்னத்தில் வடு தெரியறதேன்னா? நான் பார்த்தசாரதி! உனக்குத் தெரியுமா? திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்ல சிலைக்குக் கன்னத்தில் இப்படிக் குத்துக்குத்தாக இருக்கும். ஏன் தெரியுமா? அர்ச்சுனனுக்குத் தேர் ஓட்டிய போது, அம்பு பாய்ந்து அப்படி வடுவாயிட்டதாம். எப்படி சிலை வடிச்சாலும் குத்துக்குத்தாகத்தான் விழுமாம்... நானும் அதே பார்த்தசாரதி வேஷம் கட்டியிருக்கேன்... அட்டைத் தேரில் அட்டகாசமா பாடிட்டு வரப்ப என்ன ஆச்சு தெரியுமா?”

அவர் நிறுத்திவிட்டு அவள் சுவாரசியமாகக் கவனிக்கிறாளா என்று பார்க்கிறார்.

“என்ன ஆச்சு? அட்டைத் தேர் மேல விழுந்திட்டதா?” அவளுக்கும் சிரிப்பு வருகிறது.

“அட்டைத் தேர் விழல, திரை விழுந்துடுத்து. ஏன்னா கீதைக்குப் பதிலா, கீதோபதேசம் பண்ண வேண்டிய கண்ணன், வள்ளிப் பாட்டை எடுத்துட்டார். திரை விழலன்னா, சரசரன்னு கல் வந்து விழுந்திருக்கும்!”

ஒரே சிரிப்பு.

“காபி எப்படி இருக்கு?...”

“நன்னாயிருக்கு. எனக்கு இப்படி யாருமே காபி குடுத்ததில்ல. சுதா கூப்பிடுவ... ஆனா... பயம்...”

“நீ பயப்படவே கூடாது. நீ பயப்படும்படி ஒண்ணும் செய்யல. சிரிக்கணும். சிரிச்சிக்கிட்டே இருக்கணும். இடுக்கண் வருங்கால் நகுகன்னு யார் சொன்னது தெரியுமோ?”

“தெரியும். திருக்குறள் ஒப்பிச்சு நான் புஸ்தகம் பிரைஸ் வாங்கினேன் - ஃபிப்த் கிளாசில...”

“அப்ப, இனிமே, இப்படி சந்தோஷமா இருக்கப் பழகணும். என்ன வேணுன்னாலும் வரட்டும். நாம், யாருக்கும் மனசறிஞ்சு தப்புப் பண்ணல. பேராசைப் படல; திருடல; எந்தக் குத்தமும் பண்ணல. எதுக்குப் பயப்படணும்? இப்ப நீ எதுக்கும் கவலைப்படாதே... டி.வி. போடட்டுமா? சினிமா பார்க்கிறாயா?”

அவர் விசையை அழுத்துகிறார். துப்பாக்கி, வில்லன், ஒரு பெண் இடையில் போராடிக் கொண்டு...

அவரே அதை அணைக்கிறார்.

“உனக்குப் பாட்டுப் பிடிக்குமா? இல்ல அந்த சினிமா தேவலையா?”

“பாட்டு வையுங்கள்...”

வீணை இசை வருகிறது. ரகுவம்ச சுதாம்... கதன குதூஹலம்... பாட்டு... இதன் பதங்கள் துல்லியமாகத் தெரியவில்லை. நாடி நரம்புகளில் உற்சாகம்... இனிமை... சந்தோஷம் என்று புத்துயிரூட்டுகிறது. கார்வை... சுரங்கள் துள்ளிவரும் நேர்த்தி...

ஊஞ்சலில் இருந்து எழுந்து சோபாவில் உட்கார்ந்து கொள்கிறாள் ரேவு. மெல்லக் கண்களை மூடி அதை அனுபவிக்கிறாள். இந்தப் பாட்டை, அவள் சின்னவளாக இருந்த போது, கோயிலில் ராமநவமிக் கச்சேரி செய்ய வந்த சின்னப்பெண் ஒருத்தி வயலினில் வாசித்தாள். அப்போது நானும் அப்படி வாசிக்க வேண்டும் என்ற ஆசை கிளர்ந்தது. சங்கீத பாகவதர் என்ற பெயரில் உலவிய அப்பாவிடம், “அப்பா, எனக்கும் அது மாதிரி ‘பிடில்’ கற்றுக் கொண்டு வாசிக்க ஆசையாயிருக்கு...” என்றாள். அவள் அப்பா முழித்துப் பார்த்தார். அவள் சுருண்டு போனாள்.

இப்போது... அந்த பாசபந்தங்கள் அறுந்துவிட்டன. அவளை அந்தத் துன்பமான காலத்தோடு பிணைத்த இழைகள் கரைந்து விட்டன. ரேவு... ரேவு... ரேவு... யார்?

ரேவு... புருஷனிடம் அடிபட்ட, மிதிபட்ட, ரேஷன் கடையில் காத்து நின்ற, பம்படித்துக் கையும் மெய்யும் சோர்ந்த, இரண்டு பிள்ளைகள் என்று அருவி நீர் குடித்த, ராம்ஜி, ராம்ஜி என்று கரைந்துருகிய, ரேவு... மாமியார்க்காரி தனக்கு வயிர மூக்குத்தியைப் போடுவாளா என்று ஆசைப்பால் குடித்த ரேவு... எண்ணெய் இறங்கிய வெள்ளைக்கல் தோடும், மூக்குத்தியும் போட்டுக் கொண்டு உழக்குப் போல் மடிசாருப் புடவையைச் சுற்றிக் கொண்டு குருசுவாமிக் கூட்டத்து வயிரத்தோடு அம்மாமிகளின் இகழ்ச்சிப் பார்வையில் கூனிக்குறுகிப் போன ரேவு... எத்தனை சந்தர்ப்பங்கள்! மென்மையாகத் துடித்துத் துடித்து நொந்து வெந்து அமுங்கி அடங்கிப் போன ரேவு...

அவள் இல்லை... அவள் இல்லை... இவள்...

ஆகா... என்ன ஆறுதல்! என்ன ஆறுதல்...

அம்மா...! ரேவதியம்மா...

யார் தன்னை மென்மையாகத் தொட்டுக் கூப்பிட்டு...

பட்டென்று கண்களை விழித்துக் கொள்கிறாள்.

“ஏம்மா? பயந்துட்டியா? நான் தான் எழுப்பினேன். மணி ஒன்பதடிக்கப் போறது. சோபாவிலேயே தூங்கிப் போயிட்டே. சாப்பிட வேண்டாமா?”

ஏதோ ஓர் உணர்வில் விலுக்கென்று எழுந்து சுற்றுமுற்றும் பார்க்கிறாள்.

“நான்... இங்கே இப்படிப் படுத்துண்டு தூங்கிட்டேனா?...”

எதிரே அவர்... கண் கூசாத இதமான வெளிச்சம்...

“என்னம்மா? நான் தான். பயப்படாதே. சாப்பிடாம தூங்கக்கூடாது. போய் முகத்தை அலம்பிட்டு வா...”

பரத், ராம்ஜி தூங்கினால் எழுப்பிச் சாப்பாடு போடுவாளே? அப்படி, அவள் குழந்தையாகி விட்டாளோ?

மேசையில்... சாதம், ரசம், அப்பளம், கத்தரிக்காய் வதக்கல்... பேசாமலே சாப்பிடுகிறாள்... தட்டைக் கழுவுகிறாள்.

“நீ... இதோ இந்த ரூம்ல படுக்கறியா?...”

அந்த அறையிலும் புத்தக அலமாரி... ஒரு கட்டிலில் சுத்தமான விரிப்பு. ஒரு பூப்போட்ட தலையணை... கொசுவத்தி கொளுத்தி விசிறியைப் போட்டு...

திடீரென்று ஒரு நடுக்கம்.

“எனக்குப் பயமாயிருக்கு...”

“எதுக்கு?”

“இங்க... யாரானும் ஏதும் சொல்லமாட்டாளா?”

“யார் என்ன சொல்ல இருக்கு? எதுக்குச் சொல்லணும்?”

“நா இங்க வந்து, ஒரு வேத்துப் புருஷன் கூட சாப்பிட்டு, இங்க தங்கி... ராத் தூங்கி...”

“அதுக்கு யார் எதைச் சொல்வது? நீ ஒரு மனுஷி. கஷ்டப்படும் மனசோட வந்தே. அதை நான் மாத்தணும். நான் மனிஷன். இதுல யார் என்ன சொன்னாலும் நாம ஏன் அதுக்குப் பயப்படணும்?...”

“நா... நா அப்படி ஊஞ்சல்லியே படுத்துக்கட்டுமா?”

“ஊஞ்சல் ஆடும். இதுதான் கம்ஃபர்ட்டபிளா இருக்கும். நீ கதவைச் சாத்திக்க. ஏதானும் வேணுன்னா தட்டி என்னைக் கூப்பிடு... இங்க பாரு, நிறைய புத்தகம் இருக்கு. இன்னும் ஒரு ரூம் நிறையப் புத்தகம். அதோ நான் அந்த ரூம்ல தான் படுத்துப்பேன். உனக்குப் பயமே வேண்டாம். தண்ணீர் இங்க வச்சிருக்கேன். பெட்ரூம் பல்ப் எரியும். பாத்ரூம் போக வழி தெரியணும்னு...”

“...”

“இன்னும் பயமா?”

“இல்ல... வந்து... நான் ஒண்ணு கேக்கட்டுமா?”

“கேளும்மா...”

“முன்ன போட்ட மாதிரி, ஏதானும் பாட்டுப் போடுங்களேன். கேட்டுண்டே... நான் எல்லாம் மறந்துடறேன்...”

“ஓ... ஷூர்...”

பாட்டு... இசை... புல்லாங்குழல் ஒலி வருகிறது.

அதே மாதிரி ஊஞ்சலுக்குப் பக்கத்தில் உள்ள டூ இன் ஒன்னில் இருந்துதான் வருகிறது.

இது என்ன பாட்டு...? என்ன ராகம்...?

...ம்... நானொரு விளையாட்டுப் பிள்ளையா... ஜகன்நாயகியே... உமையே உந்தனுக்கு...

அவளுடைய இதய வீணையையே மீட்டும் ஒலிக்குழைவு. தீயும், தேனும் என்று எங்கோ எந்தப் பத்திரிகையிலோ படித்த நினைவு மோதுகிறது. படுத்துக் கண்களை மூடுகிறாள் ரேவு.

‘பாவம்’ பற்றிய தன்னுணர்வெல்லாம் கரைந்து உருகுகின்றன. அவள் இந்தத் துன்ப நிழல்களே விழாத உலகில் சஞ்சரிக்கச் செல்கிறாள்.

விழிப்பும் தூக்கமும் இல்லாத நிலை... மெல்லிய வீணை இசைத்து யாரோ பாடும் சன்னக்குரல். வார்த்தைகள் புரியவில்லை... ஆழத்திலிருந்து மேலே திடமாக வரும் குரலொலி... ஆ... டெலிஃபோனில் யாரோ பேசுகிறார்கள்... சுதாவோ?...

டக்கென்று விழிப்பு வந்து விடுகிறது. அடிமனதிலிருந்து அந்த ஆவல் குத்திக் கொண்டு வருகிறது. இவள் வந்துவிட்டாளே, வீட்டில்... அந்த வீட்டு நிலவரம்... எப்படி?... கதவைத் தாழிடவில்லையோ?...

“குட்மார்னிங்! எழுந்தாச்சா?... எப்படி, தூக்கம் வந்துதா?” என்று கேட்டுக் கொண்டு அவர் வருகிறார்.

“டெலிஃபோனில் யார் பேசினா? சுதாவா?”

“இல்லை... நான் தான் சாருவுடன் பேசினேன். வாரா வாரம் அவள் கூப்பிடாட்டாலும் நான் கூப்பிட்டுப் பேசுவேன். நீ வந்திருக்கேன்னு சொன்னேன்...”

“நான்... நானா?...” என்று கேட்க நினைத்துக் கேட்க முடியாமல் எழுந்து வெட்கத்துடன் படுக்கை விரிப்பைச் சரி செய்கிறாள்.

அவரிடம் எதுவுமே பேச முடியவில்லை. பாவம், பாவம் என்று ஒருபுறம் உள்மனம் அறுக்கிறது.

“பல்தேய்ச்சு முகம் அலம்பிண்டு வாம்மா, காபி போட்டிருக்கிறேன்...” மெல்லிய குரலில் வரும் இசை... “என்னை பரிபாலனை புரி... பர்வதகுமாரி...”

அந்தக் குரலுடன் அவரும் பாடுகிறாரோ? பால்கனியில் பூந்தொட்டிகளுக்குத் தண்ணீர் விடுகிறார். செம்பருத்தி - நீண்ட மிளகாய்ப்பழம் போல், அலர்ந்தும் அலராமலும், சூரியனிலிருந்து கதிர் வருவது போல் ஒவ்வொரு கிளையிலும் செம்பிழம்பு. துளசிமாடம்... அது மண்ணால் சுட்ட துளசிமாடம். புது மாதிரியாக, முகமுள்ள முகப்புடன் இருக்கிறது. துளசி பூரித்துப் பசுமையாக விரிந்திருக்கிறது. அண்டையில் உள்ள சுற்றுச்சுவர் தாண்டி வரும் அடுத்த கட்டிடத்துக்குச் சொந்தமான மா புதிதாகப் பூத்திருக்கிறது.

“என்னைப் பரிபாலனை புரி... பர்வதகுமாரி பராசக்தி...”

அவர் முதுகைக் காட்டிக் கொண்டிருக்கிறார். மேலே போர்த்திருந்த துண்டு விலகி, வெற்று முதுகைக் காட்டுகிறது. பின் முடி ஒட்ட வெட்டப்பட்டிருந்தாலும், ஓரங்களில் நரை பூத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. அதற்குள் நீராடி விட்டாரோ?...

ரேவு... நீ பாவம் செய்கிறாய்? இவரை ஏன் இப்படிப் பார்க்கிறாய்? உன் மனம் ஏன் சந்தோஷமடைகிறது... கூடாது... ஏற்கெனவே இவர் வீட்டில் ஓரிரவு தங்கி பாவக்கறை படிய இடம் கொடுத்து விட்டாய். சுதாவுக்குப் போன் செய்து, யோசனை கேள். அவள் மூலமாக எங்கேனும் உன் மீது மாசு படியாத நிழலில் தங்க இடம் பிடி! இது தகாது. உன் தாய் எதைச் செய்தாளோ, அதையே செய்யாதே! கண்களைத் திறந்து கொண்டு குழியில் விழாதே!

“ஏம்மா! உடம்பு சரியில்லையா? இன்னும் கொஞ்சம் நேரம் தூங்க வேணும் போல் இருக்கா?... சுதா வருவா இன்னிக்கு... காபி குடிச்சிட்டு, வேணும்னா இன்னொரு தூக்கம் போடு... வா...”

அவள் பால்கனியில் நின்றவாறு அந்த மாங்கொத்துக்களை வெறித்துப் பார்க்கிறாள்.

‘அந்த வீட்டுக்குச் சொந்தமான நீ இங்கே வந்து பூக்கலாமா?’

‘அங்கே வெளிச்சமில்ல. நீண்டு போக இடமில்ல. காத்துக்கும் வெளிச்சத்துக்கும் வேலி போடலாமா?’

ஆமாம். ஒரு பெண்ணாய்ப் பிறந்தவள், கொட்டிக் குதறும் புருஷனிடம் தான் மடிய வேணுமா? முள்ளின் வாசனைகளுடன் அவனுக்கே உழைக்கும் சட்டம் யார் ஏற்படுத்தியது? இந்த மனசு, அன்பாக, தன்னிடம், தன்னை மதித்து, ஆதரவும் பரிவுமாகக் கண்ணீர் துடைக்கும் ஒர் புருஷனின் வசம் இலயிப்பது குற்றமா? தப்பா? ஒரு பெண், ஓர் ஆணிடம் உடம்பைக் காட்டத்தான் எப்போதும் நிற்பாளா? சீ...! இந்த உடம்பு, பெண் உடம்பு, இதை எதற்குக் கொடுத்தாய் ஆண்டவனே!

கண்ணீர் கன்னங்களில் வழிவதைக் கண்ட அவர் திடுக்கிட்டுத் தன் மேல் துண்டின் நீண்ட நுனியால் துடைக்கிறார்.

“ஓ, இன்னும் உனக்கு... மனசு பயம் போகலியா? அழாதேம்மா...”

அந்தத் துண்டை அப்படியே பறித்து முகத்தில் அழுத்திக் கொள்ளும்படி ஒரு புனிதமான மணம் மூக்குச் சுவாசத்தில் இழைகிறது. புனிதம்... காவேரித் தண்ணீர்... அதை ஆற்றிலிருந்து எடுத்துக் குடிக்கும் போது... உலகத்து அழுக்கெல்லாம் கரைந்துவிட்ட தூய்மையாக உள்ளே புதுமை பரவும். அப்படி... இந்த வாசனை, ஓர் ஆணின் பொருளுக்குரியது.

இதுவரையிலும் இப்படி எந்த ஆணின் தூய்மையான வாசனையையும் அவள் உணர்ந்ததில்லை. அகங்கார, ஆணவ, அதிகார அழுக்குகள் நாறும் நெருக்கங்களில் தான் அவள் குளித்திருக்கிறாள். காவேரியில் குளித்தாலும், மந்திரங்களைச் சொன்னாலும், அவற்றுக்கும் அந்த மனுஷ வடிவிலான மிருகங்களுக்கும் எந்த ஒட்டுதலும் இல்லை. இவள் வயிற்றில் ஊறிப் பெற்றெடுத்த குஞ்சுகளுக்கும் கூட இந்த வாசனை இல்லை.

பல் துலக்கி முகம் கழுவிக் கொண்டு, அவர் கொடுக்கும் காபியைப் பருகுகையில் வாயில் மணி ஒலிக்கிறது.

இந்த மணி ஒலி - குக்கக்கென்று கிளி கூவுவது போல் இருக்கிறது.

“யாருமில்ல. தாயிதான்... ரேவம்மா, தாயி வேலை செய்யட்டும். நான் கொஞ்சம் வெளியில் போய் வந்திடறேன்... வரட்டுமா?”

உம் என்று தலையாட்டுகிறாள்.

ஊஞ்சல் பலகையின் ஓரம் சுவரில் சாய்ந்து நின்றவாறே தாயி சமையலறைக்குச் சென்று சாமான்களைத் துலக்குவதைப் பார்க்கிறாள்.

கடிகார ஓசை, தாயி பாத்திரங்களைக் கழுவும் ஓசை தவிர வேறு அரவமே இல்லை.

தாயி பாத்திரங்களைத் துலக்கிக் கவிழ்த்துவிட்டு வீடு பெருக்குகிறாள்; வாளியில் தண்ணீருடன் மணக்கும் சொட்டுத் திரவம் ஊற்றி வீடு துடைக்கிறாள். பிறகு கைகளைக் கழுவிக் கொண்டு மேசை மீது வைத்திருக்கும் ஃபிளாஸ்கைத் திறந்து தம்ளரில் காபியை ஊற்றிக் கொள்கிறாள். ஒரு பொட்டலத்திலிருந்து ரொட்டித் துண்டுகளைப் பிய்த்துக் கொண்டு ஊஞ்சலில் வந்து உட்காருகிறாள்.

எள்ளும் அரிசியுமாகத் தலை நரைத்திருக்கிறது. சிறுகூடான உருவம். கழுத்தில் பெரிய பவழமாலை.

“ஏம் மாமி நின்னிட்டே இருக்கே? நானு வந்தப்பலேந்து பார்க்குறேன்... உனுகுன்னா கஸ்டமோ, பொம்பளயாப் பொறந்திட்டா எல்லாம் பொறுத்துக்கிட்டுத்தான் போவணும்னு ஆயிட்டது... அப்பன் குடிச்சிட்டு அடிக்கிறது பத்தாதுன்னு, புள்ளாண்டான் குடிச்சிட்டு ஆத்தாள வந்து அடிக்கிறான். இந்த அக்குறும்பு எங்க உண்டு சொல்லு!...” அநுதாப நரம்பைத் தொட்டுவிட்டாள்.

அழுகை வருகிறது.

“அட, ஏன் தாயி? அழுவாத! நான் இன்னாமோ பேசிப்புட்டேன். ஒலகத்துல இது நடக்குதுன்னு. ஆனா இது சத்தியமான ஆளு. மனசு தெய்வம் போல... ஏம்மா, நா கேக்குறனேன்னு நினைச்சுக்கிறாதே... தாலி போட்டுருக்கே. நெல்ல குடும்பப் பெண்ணாத் தெரியிது. இதும் சொந்தக்காரங்க யாரும் இதும் வூட்டுக்கு வாரதில்ல. ஏ, நாடகத்துல நடிச்சிருந்தவள வூட்டுல கொண்டு வச்சிட்டான்னு ஊரிலே பார்க்கிறங்க சொல்லுவாங்க. ஆனா, உள்ள நடந்தது எனக்குத் தெரியும். நா இந்த வூடு கட்டி, இங்க பதிமூணு வருசமா இருக்கிறே... நா வந்து இவுரு நாடகம் வேசம் கட்டுறதில்ல. காலேஜிக்குத்தாம் போவாரு... ஆனா, ஒரு பொம்புள, புருஷனுக்கு சம்பாதிச்சுப்போட, நாடகத்துல வேசம் கட்டுனா. அவன் குடிச்சா, கூத்தியா வச்சிட்டா, அவனுக்கு சீக்கு வரல. இவ... சீக்குன்னு தெரிஞ்சதும் அல்லாம் ரோடுல கடாசிட்டாங்க... இதுதாங் கொண்டு வச்சிட்டு, தண்ணீ ஊத்திச்சி. செத்திட்டா. நெல்ல மனசும்மா... ஊரு ஆயிரம் சொல்லும்! நம்ம மனசுக்கு உணுமையா நடக்கணும்...”

பேசிக் கொண்டே, சில விதைகளைத் தூவி விட்டு, ரொட்டி காபியைத் தாயி முடித்துக் கொள்கிறாள்.

“துணி எதுனாலும் போடுறதுன்னா போட்டு வையிம்மா, நா வந்து தோச்சித் தாரேன்.”

“...இல்லம்மா, நானே தோச்சிப்பேன்...”

“அப்ப... கதவப் போட்டுக்க... அது எட்டு மணிக்கு மேல வரும்.”

அவர் எங்கே போவார். இந்த வீட்டு அம்மா ஏன் இங்கு இல்லை, என்ற விவரங்களை அவள் கேட்க வேண்டும் என்று நினைத்திருப்பாளோ?... அவள் கதவைச் சாத்தும்போதே, அவர் கையில் ஒரு கீரைக்கட்டுடன் படியேறி வருகிறார்.

“தாயி வேலை முடிச்சாச்சா? காபி குடிச்சியா?”

“எடுத்திட்டேம்பா... வாரேன்.” தாயி போகிறாள்.

“ரேவு... ரேவம்மா... கீரையை நறுக்குறியா? எனக்கு அது மட்டும் சரியா வராது.”

அவள் எதுவும் பேசாமல் கீரையை ஆய்ந்து அலசிய பின் நறுக்குகிறாள். அவர் தக்காளி அரிந்து சாம்பார் வைப்பதையும், வாழைக்காயை உப்புக் காரம் தடவி எண்ணெயில் வறட்டுவதையும் பார்த்துக் கொண்டே நிற்கிறாள்.

இவர் சம்சாரம் ஏன் தனியாகப் போனாள்? நாடகக்காரியை ஏன் கொண்டு வைத்துக் கொண்டார்?

இப்போது இவள்... இவளாக வந்திருக்கிறாள்...

“ஏம்மா, ஒண்ணுமே பேசமாட்டேங்கறே? தாயி ஏதானும் சொன்னாளா?” அவள் பதிலே சொல்லாமல் அவரைப் பார்க்கிறாள்.

“சரஸ்னு ஒரு நாடகக்காரியக் கூட்டி வந்து வச்சிருந்தார்னு சொன்னாளா?”

....

“சாரு அதனால கோவிச்சிட்டு மக கிட்டப் போயிட்டான்னு சொன்னாளா?”

....

“எனக்குத் தெரியுமே?... அப்படித்தான் இந்த ஃபிளாட் முச்சூடும் சொல்லுவா. இப்ப உன்னையும் சொல்லுவா. நீ பயப்படாதே. இதெல்லாம் நம்ம மேல ஒட்டாது. நம்ம மடியில் கனமில்ல... நிறைய புத்தகம் இருக்கு. நீ சும்மா படிக்கலாம். படிச்சு பரிட்சை எழுதலாம். நீ சுதந்தரமான பறவை. இது உனக்குக் கூடு அல்ல. இது உனக்கு வீடு... வீடுன்னா தெரியுமா?”

‘ஓ... எவ்வளவு இதமாகப் பேசுகிறார்?’

“வீடுன்னா... விடுதலைன்னு அர்த்தம். மோட்சம், விடுதலை. அறம், பொருள், இன்பம், வீடு. அறம், தருமமும் தருமம் மட்டும் வாழ்க்கையில் சோறு போடாது; பொருளைத் தேட வேண்டும்; பிறகு இன்பம், இல்லற வாழ்வு... வீடு... மோட்சம்... ஔவைப்பாட்டி அழகாகச் சொல்வார். ஈதலறம்; தீவினை விட்டீட்டல் பொருள்; கதலிருவர் கருத்தொருமித்து ஆதரவு பெற்றதே இன்பம்; இம் மூன்றும் விட்டதே வீடு...”

ரேவுவுக்குத் தன்னை மீறிச் சிரிப்பு இதழ்க்கடையில் மலருகிறது.

“...என்ன ரேவம்மா சிரிக்கிறே. தப்பாச் சொல்லிட்டேனா?”

“இல்ல ஸார், நீங்க சொன்னது முதல் மூணும் எனக்குப் பொருந்தறதோ இல்லையோ தெரியாது. மூன்றும் விட்டதே வீடு... அந்த மூன்றும் விட்டு, இது வீடுன்னு விடுதலைன்னு சொல்றேளே, அதுதான் சிரிப்பு வந்தது ஸார்!”

அவரும் சிரிக்கிறார். சத்தமாகச் சிரிக்கிறார்கள்.

“அதுசரி, இந்த ஸார் மோர்னு நீ கூப்பிட்டாப் பொருத்தமா இல்ல ரேவம்மா.”

“பின்ன எப்படிக் கூப்பிடட்டும்? சுதா சொல்றாப்பல என்.கே.ஆர். ஸார்ன்னா?”

“என் பேர் ரங்கநாதன். தாத்தா பெயர். நான் ஆர்.ஏ. போடாமல் ரென்கன்னு வராப்பல ஆர்.இ. போட்டுப்பேன். பிறகு, ரெங்கப்பான்னு வச்சிட்டேன். என் அத்தை என்னை ரெங்கப்பான்னுதான் கூப்பிடுவா. ஸ்கூல் சர்ட்டிபிகேட்ல, பேரை மாத்தி, ரெங்கப்பான்னு வச்சிட்டேன். ஆனா, எல்லா இடத்திலும், நான் என்.கே.ஆர்னுதான் தெரியும். நீ என்னை ரெங்கப்பான்னு கூப்பிடு. நான் உன்னை ரேவம்மான்னு கூப்பிடறேன். நீ அப்பான்னு கூப்பிடுவது சரிதானே?”

ரங்கப்பா... ரெங்கப்பா... வாய்விட்டுச் சொல்லக் கூச்சமாக இருக்கிறது. இவ்வளவு பெரியவரைப் பேர் சொல்லிக் கூப்பிடுவதா?

“நான் உங்களை அப்பான்னு கூப்பிடறேன்...”

“சரிம்மா... அத்தையாவாயோன்னு பார்த்தால், இல்ல, பொண்ணுன்னு சொல்லுற. தீபாக்கு ரொம்பப் பொறாமை, அப்பாவை இன்னும் ஒருத்தர் அப்பான்னு கூப்பிடறான்னா பொறுக்கமாட்டா...”

இதுவும் மெதுவாகச் சிரித்துக் கொண்டே சொல்கிறார்.

அவர்கள் சாப்பிடும் நேரத்தில் மணி ஒலிக்கிறது.

அவரே போய்க் கதவை திறக்கிறார்.

சுதா... கத்திரிப்பூ நிறச் சேலை... ஒட்டிய ப்ளவுஸ். காதோரம் ஒரு வெல்வெட் ரோஜாப்பூ. காதுகளில் வளையம்...

“ஹாய், சாம்பார் வாசனை மூக்கில வந்து சாப்பிடு, சாப்பிடுன்னுது...”

“ஓ, சாப்பிடலாம், இன்னொரு ப்ளேட் எடுத்திட்டு வாங்க...”

“வாணாம் ஸார். நீங்க சாப்பிடுங்க. ரேவு மாமி, எப்படி இருக்கீங்க? இனிமேல் உங்களை ரேவு மாமின்னு கூப்பிடக் கூடாது. நான் ரேவதின்னுதான் கூப்பிடப் போறேன்...” என்று உட்காருகிறாள்.

“நீங்க லஞ்ச் இனிமேதான் எடுக்கப் போறீங்க? சாதம் சாம்பார் எல்லாம் இருக்கு!”

“இல்ல ஸார், லஞ்ச் இன்னிக்குப் பத்து மணிக்கே முடிச்சாச்சு. ரகு டூர்ல போயிருக்கார்... நாங்க வீட்டை நேத்துக் காலி பண்ணிட்டோம்...” ரேவதி கையில் எடுத்த கவளத்தை வாயில் போடாமல் அவளையே பார்க்கிறாள்.

“சாமானை எல்லாம் பாக் பண்ணி, அநுசுயா வீட்டுல போட்டுட்டோம். நான் நாளைக் கால வண்டில திருச்சி போறேன். ஒரு வாரம் லீவ்.”

“இதெல்லாம் என்னால் வந்ததுதான்...”

ரேவுவுக்குத் துக்கம் தொண்டையைக் கட்டுகிறது.

“...சே, உங்களால வரல. வீடு முடிய இன்னும் ரெண்டு மூணு மாசம் ஆகும். நான் மாத்தல் கேட்டிருக்கேன். ரகுவுந்தான். திருச்சிக்கு மாத்தல் கிடைச்சால் - யார் ஒருத்தருக்கேனும் கிடைச்சாலும் போயிடுவோம். அடுத்த வருஷம் சுருதி எங்கே படிக்கிறாளோ அதைப் பொறுத்தது... இதெல்லாம் சின்ன விஷயம்... நீங்க எப்படி இருக்கீங்க? ஸார் மெஸேஜ் அனுப்பியிருந்தார்னு, காலம ட்யூட்டோரியல்லேந்து ஆபீசுக்குப் போன் பண்ணினாங்களாம். நான் கொஞ்சம் சாமானெல்லாம் பாக் பண்ணி திருச்சிக்கு ரகுவிடம் அனுப்பிட்டேன். ஸ்டேஷனுக்குப் போயிட்டு ராத்திரி வீட்டுக்குப் போகல. அநுசுயா வீட்டுல தங்கிட்டேன். எங்க வீட்டுப் பக்கம் கன்ட்ராக்டரப் பார்த்துட்டு வரப்ப ஆபீசுக்குப் போன் பண்ணினேன்... இங்க ரேவதி வந்திட்டான்னு தெரிஞ்சது.”

“அப்ப...”

அந்த வீட்டைப் பற்றி உனக்கு இனி என்ன ஒட்டு? கவலை? அதை விட்டு வந்தாயிற்று. இது புதிய வாழ்வின் படிக்கல்...

ரேவதியின் மன ஓட்டங்களை சுதா புரிந்து கொண்டாற் போல் பேசாமல் இருக்கிறாள்.

ரங்கப்பா, “நீங்கள் பேசிக் கொண்டிருங்கள். இதோ நான் வந்திடறேன்” என்று பனியன் மீது ஒரு சட்டையை அவசரமாக மாட்டிக் கொண்டு போகிறார்.

சாப்பாட்டுத் தட்டுக்களைக் கழுவி, மேசையை ரேவதி ஒழுங்கு செய்கிறாள்.

“ரேவதி, இப்ப ‘ரிலாக்ஸ்டா’ இருக்கிறீங்களா? என்.கே.ஆர். ஸார் என்ன சொன்னார்?”

“சுதா, நான் பண்ணுவது பாவம்னு தெரிஞ்சும் வேற வழி தெரியல. பாயம்மா செத்துப் போயிட்டா. உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். இவர் அங்க வந்திருந்தார். அங்கே பத்துப் பன்னிரண்டு நாள் இருந்தப்புறமும், அங்கே நான் புதுப் பிரச்னையாவேன்னு தோணித்து. வேம்பு நான் புருஷனை விட்டு வரதை ஆதரிக்க மாட்டான்... அப்படியும் சொல்லிடறதுக்கில்ல. அவனுக்கே இப்ப ஒரு பிடிப்பும் இல்ல. அதோட, அந்த சாந்தி வேற. உலகத்தில் நாம் தான் கஷ்டப்படுறோம்னு நினைச்சேன். ஒவ்வொருத்தருக்கும் கஷ்டம் இருக்கு. என் பிரச்னையை நான் தான் சமாளிக்கணும். சரியோ தப்போ, இங்க வந்துட்டேன். பொண்ணு பேரிலதான் குத்தம் விழும். ஆனா, நான் எப்படின்னாலும் படிச்சி, பரீட்சை எழுதி முன்னுக்கு வரணும்னு ஆசை இருக்கு. அதிலும்...”

ரேவு அந்த ஆசையின் நடைமுறைச் சிக்கல்களிடையே நிற்கிறாள்.

“இவர் வீட்டில், இவர் ஆதரவில், நான் இன்னும் மூணு நாலு வருஷம் படிச்சி, பாஸ் பண்ணுவது, வேலை தேடுவதுங்கறது சாத்தியமா சுதா? பனமரத்தின் கீழிருந்து பாலைக் குடிச்சாலும், கள்ளுன்னுதான் எல்லாரும் சொல்லுவா. அதுனால, நீங்கதான் எனக்கு ஒத்தாசை செய்யணும்.”

“சொல்லுங்க ரேவதி. நீங்க சொல்றதெல்லாம் நியாயந்தான். என்.கே.ஆர் தங்கமானவர். நீங்க அக்கினி. ஆனாலும் ‘மிஸஸ்’ எதுக்கு அமெரிக்காவில் போய் உட்கார்ந்திருக்கா? இவர் இங்கே ஏன் தனியே இருக்கார்!ன்னெல்லாம் பலமா கேள்வி வந்தா உங்க நிம்மதிய பாதிக்கும். படிக்க முடியாது...”

“அதான்... எனக்கு எங்காணும் ஹோம், ஹாஸ்டல்ல சமையல் வேலை கிடைச்சால் கூடப் போதும். நான் அதிலிருந்தே படிச்சிப்பேன்... ஆமா கேட்கக்கூடாதுன்னாலும் இருபத்தஞ்சு வருஷம் அந்த வீட்டு உப்பத் தின்ன தோஷம், கேக்கச் சொல்றது... என்ன தான் செய்யறான்? பிள்ளைகள் எப்படி இருக்கா?”

“பரத்தை எங்கோ ஆசிரமமோ, எதுவோ கொண்டு விட்டுட்டான். ராம்ஜி இந்தப் பக்கமே வரதில்ல... ரேவு... யாரோ ஒரு பொண்ணு வந்து வீட்டில இருக்கா; சமையல் பண்றா... நான் பின்பக்கம் ரெண்டொரு நாள் பார்த்தேன். கறுப்பா, மெல்லிசா... உங்க புடவை வாயில் புடவை ஒண்ணு... நீலமும் மஞ்சளுமா அதை உடுத்திட்டிருந்தா...”

நெஞ்சில் சரக் சரக்கென்று எதையோ தேய்ப்பது போல் இருக்கிறது.

“ஆனா, ஒரு மாதிரி செட்டிலானதும் நாம் கேஸ் போடத்தான் வேணும்; ஸாரிடம் கன்சல்ட் பண்ணலாம். நீங்க கேட்ட மாதிரி நான் இந்த ஊரில்லாம, வேற சேலம், திண்டுக்கல் போல ஊரில கூட முயற்சி செஞ்சு பார்க்கிறேன். இப்போதைக்கு இவர் தான் சரி... எனக்குப் பெண்களை விட, ஆண்கள் மேலதான் இப்ப நம்பிக்கை...”

ரேவு அவள் கைகளை உணர்ச்சியுடன் பற்றிக் கொள்கிறாள். ஒரு சீப்பு புள்ளிப்பழத்துடன் அவர் உள்ளே வருகிறார்.

அத்தியாயம் - 14

புதிய வாழ்க்கையின் சுவாரசியங்கள் காலையில் எழுந்திருக்கும் போதே அவளுக்குச் சுறுசுறுப்பைக் கொடுக்கின்றன. புதிய நம்பிக்கை; முகத்தில் புதிய தெம்பு; பழைய பயங்களைக் காலில் மிதித்துக் கொண்டு வாழ்க்கையை நேராக எதிர்நோக்கும் துணிவு.

இவற்றுக்கெல்லாம் காரணமாக இருந்தவை... அந்த வீட்டுச் சூழலும், அங்கே அலமாரிகளில் அடுக்கடுக்காக இடம் பெற்றிருந்த புத்தகங்களும் தாம்.

எத்தனை நூல்கள்! இவள் படிக்க ஆசைப்பட்டு விட்டுப் போன கதைகள், நாவல்கள், வரலாறுகள், கட்டுரைகள் என்று புதையல் அவள் முன் இருந்தது. நாள் முழுவதும் அவளுடையது தான். படுக்கும் போதும் புத்தகம், எழுந்திருக்கும் போதும் அதே நினைவு. காலையில் இவள் எழுந்து காபி போடுவாள்; சில நாட்களில் அவர் முந்திக் கொள்வார். முன் பக்க பால்கனியில் பூந்தொட்டிகளைப் பார்ப்பார்கள். பிறகு இருவரும் நேர் நடையாக நடந்து, கடற்கரைக்குச் செல்வார்கள். திரும்பி வந்த பின் குளியல். காலை உணவு இன்னதுதான் என்ற வரையறை கிடையாது. சில நாட்களில் அவள் சமைப்பாள்; அவர் உதவி செய்வார். ஒன்பதுக்கு அவர் ட்யூட்டோரியலுக்குச் சென்றுவிடுவார். நேரடி வகுப்புக்கள் கிடையாதாம். அந்த இடம் நடந்து செல்லும் தொலைவுதான். அங்கே இவரைப் போல வயதான கே.ஜி.கே. என்ற பெரியவர் இவளுக்குப் பரிச்சயமானவர். வீட்டுக்கு வருவார். கண்டிப்பானவர்.

இவள் இன்னும் என்ன பரீட்சை, என்ன பாடம் என்று தீர்மானம் செய்யவில்லை.

ஆனால் அந்தத் தீவிரம் வரவில்லை; ஒரு கற்பனையான உலகில் புதிய சிந்தனைகள் அவளுக்கு ரங்கப்பாவுடன் மனம் விட்டுப் பேசவும் அவர் கருத்துக்களைக் கேட்கவும் ஊக்கம் தருகின்றன. சமைப்பதும் சாப்பிடுவதுமான அன்றாட நியமங்கள் முன்பிருந்த முக்கியத்துவத்தை இழக்கின்றன.

“அப்பா, நீங்க சொல்லுங்க, நீங்க இங்கே இத்தனை கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக்கள்னு இவ்வளவு வச்சிருக்கேளே, இதெல்லாம் படிச்சிருப்பேள்... இல்லையா?”

“சொல்லு, இப்ப எதுக்கு இவ்வளவு நீளமா பீடிகை போடறே? படிக்காம இருக்கறதுக்கா வாங்கி வச்சேன்?”

“மாமி இதெல்லாம் படிப்பாங்களா?”

“அவ, எதானும் வாரப் பத்திரிகை படிப்பதோட சரி. ஆரம்ப காலத்துல, இங்க இருந்த புஸ்தகமெல்லாம் அவளுக்கு வெறும் வறட்சி. எல்லாம் கம்யூனிச சித்தாந்தம், அந்தக் கோட்பாடு உள்ள வெளிநாட்டு ஆசிரியர் புத்தகங்கள் தான் தமிழில் - அதோ மூலை பீரோவில் இருக்கே, அதுதான். நான் முதல்ல, தலைசிறந்த நாவல்கள் - இங்கிலீஷ், தமிழ் மொழிபெயர்ப்புன்னு வாங்க ஆரம்பிச்சேன். இப்படிச் சேர்ந்து போச்சு...”

“இல்ல... இதில் பல நாவல்கள் - நான் படிச்சதில்ல, பெண் தான் ஓர் ஆணைக் குப்புறத் தள்ளி, அவனைக் கெடுக்க வைக்கிறாள்னு ஒரு கருத்தைச் சொல்லறது. அவன் பேரில குற்றமே கிடையாது. கட்டின பெண்சாதியை விட்டு வெளியே போனால், அதற்கும் அந்தப் பெண் தான் காரணம், ஒருத்தன் குடிக்க ஆரம்பிச்சா, அதற்கும் அவள் தான் காரணம். அவள் வீட்டில் வேதவித்தான புருஷனை வச்சிண்டு, இன்னொருத்தனுக்கு மூணு பிள்ளை பெத்தாளாம். பிறகு பிராயச்சித்தமா, அந்தப் பிள்ளையை வேதம் படிக்க விட்டாளாம். காசிக்குப் போனாளாம். பிறகு... அந்தப் பிள்ளை, வேதம் படிக்க வந்தவனை, ஒரு புருஷனில்லாதவள் இழுத்துப் போட்டுக் கொண்டாளாம். இதென்ன இப்படியெல்லாம் அபாண்டம் எழுதியிருக்கான்னு தோணுறது.”

மின்னல் ஓடுவது போல் அவர் முகத்தில் உணர்வுகள் பிரதிபலிக்கின்றன. சட்டென்று பேசவில்லை.

“ஏன், நான் தான் கேட்கிறேன். ஏன் இப்படி அபாண்டமா வாழ்க்கையில் பொண்ணுதான் காரணம்னு கூசாம சொல்றா? நாங்க குடியிருந்த அந்த கிராமத்து ஸ்டோர்ல எத்தனை விதமா மனுஷா இருந்தா? எனக்குக்கூட இதெல்லாம் தப்புன்னு எழுதணும்னு தோணறது. ஒரு வீட்டில தடுத்துத் தடுத்து, அப்ப இருபதுக்கும் பதினஞ்சுக்கும் குடி வச்சிருந்தா; எந்த வீட்டிலும் புருஷன் நியாயமா நடக்கல. ஒரு பொண்ணு, சிரிச்சாலே போச்சுன்னு வரம்பு கட்டியிருக்கிற சமுதாயத்தில், ஒருத்தன் கூடப் போறதுங்கறது அத்தனை சின்னக் காரியம் இல்ல. எங்க ஸ்டோரில, நாலாம் சம்சாரம் கட்டின ஒரு கிழம், உடம்பெல்லாம் வியாதி. ஏதோ சோசியம் சொல்லிப் பிழைக்கும் கால் அரைச் சம்பாத்தியத்துக்கு, பிள்ளை பிறக்கலன்னு இவளை மூணு பேர் மூணு பெண்ணைப் பெத்து வச்சிட்டுப் போனப்புறம் கல்யாணம் பண்ணி அவளுக்கும் ஒரு பொண்ணு... படிப்பு கிடையாது. என்ன வேலை செய்வ? அந்தக் காலத்துல ஓட்டலுக்கு அறைக்கப் போயிண்டிருந்தா. அதும், மிஷின் வந்து வேலையில்லன்னு ஆயிட்டது. ஒரு பொண்ணை ஒரு எலிமென்டரி ஸ்கூல் வாத்தியான் - குடிகாரன், கட்டி தினம் அடிச்சி விட்டுடுவான்... ஒரு பெண்ணை யார் வீட்டிலோ குழந்தை சுமக்க பம்பாய்க்கு அனுப்பிச்சா... இத்தனை கஷ்டம். தண்ணீர் சுமந்து துணி தோச்சு, கரிப்பத்துத் தேச்சி... சீ...? இப்படி பொண்ணு திமிரெடுத்துப் போய், கூசாம பாவம் பண்ணினான்னு எழுதறத பாராட்ட வேறு பாராட்டறாங்க!” ரேவு அவரையே பார்க்கக் கூசுகிறாள். முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள்.

“...ரேவம்மா, உனக்குள்ள இருக்கிற மனுஷத்தன்மையப் பார்த்து நான் பெருமைப்படறேன். இதுல... ஒண்ணுதான் முக்கியம். அவரவர் எப்படி உலகத்தைப் பார்க்கிறாங்களோ, எந்த சுய அநுபவத்தின் மேல ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கறாங்களோ, அந்த அடிப்படையில் தான் அவங்க எழுதறாங்க. கருத்துச் சொல்றாங்க. ஒரு பொண்ணை ‘ஸெக்ஸ்’ங்கற கண்ணோட்டத்தில் பார்க்கிறவன் இப்படித்தான் தன் கருத்தை வலிமையாகக் காட்டுவான். அந்தக் கதையில் வரமாதிரி எங்கேனும் ஒருத்தி இருப்பா. ஆனா, அவ ஏன் அப்படி இருக்கான்னு யாரும் பாக்கிறது இல்ல. ‘தாசின்னு’ ஒரு வகுப்பையே ஏற்படுத்தி, ஆணின் வக்கிரங்களுக்கு வடிகால் அமைச்சு அவனை நியாயப்படுத்தும் ஆதிக்க சமுதாயம் இது...”

“எனக்கு முக்கால்வாசி ஆம்பிளைகளும் ராட்சசனாத்தான் தோணறது...” என்று ரேவு கடித்துத் துப்புகிறாள்.

“பொய்... இது சரியில்ல... ஒரு கூண்டுக்குள் ரெண்டு பிராணிகளை அடைச்சுப் போட்ட சூழ்நிலையில், ஒண்ணுக்கு மத்தது இப்படித்தான் தோணும். நீ ஒரு கோழியைப் பார்க்கிற பார்வைக்கும், கோழியை அறுத்துச் சாப்பிடுபவன் பார்க்கும் பார்வைக்கும் வித்தியாசம் உண்டு. பெண்ணாகப்பட்டவள் தாய், சக்தி, அவள் உலகை வாழ்விக்கும் தெய்வம் என்று கற்பிக்கப்பட்ட நாகரிகப் பண்பாடுகளெல்லாத்தையும் மீறிட்டு அந்த மிருக உணர்வுப் - பார்வை ஒத்தருக்கு வரப்ப, தன் பலவீனத்தை மறைக்க, அவள் தான் மாயப் பிசாசுன்னு பழி போடறது ரொம்ப எளிசு. சங்கராச்சாரியரின் பஜகோவிந்தத்தில், பெண் வெறுப்பு ரொம்ப வருது. ஒரு படி மேல போய், உன் பொண்டாட்டி யாரு, பிள்ளை யாரு, இதெல்லாம் பொய்னு வருது. எல்லா நீதியும் ஆத்மானுபாவ அநுபவங்களும், ஆம்பிள்ளைக்குத்தானா? ‘பெண்சாதி யார்?’ மாயைன்னா, தாயே மாயைதான். அப்ப நீயும் மாயைதான்; உன் சாமி, கோவிந்தனும் மாயைதான். பெண்ணை வெறுக்கணும்னு சொல்லும் இந்தக் கருத்தைக் கொடுக்கும் சந்நியாசிதான் அம்பாள்னு பெண்ணின் ரூபத்தை அணுஅணுவாகப் புகழறாங்க. இதுவும் வேடிக்கைதான் ரேவம்மா!”

“ஆமாம், இந்தக் குருமடத்தில், நவராத்ரி பூஜை பண்ணுவா. அம்பிகையை பாலா, குமாரி, அப்படின்னு வெவ்வேறு பருவத்தில் வழிபடறதாக, அந்தந்த வயசுப் பெண்ணை அப்படியே பாவிச்சு, எல்லா உபசாரமும் பண்ணி பூசை பண்ணுறதாச் சொல்லுவா. ஆனா, அந்த சந்நியாசி சுவாமி, மாலைய நேராப் போடமாட்டார். குங்குமத்தை சந்தனத்தை நேரா வைக்க மாட்டார். சின்னக் குழந்தைக்கு கூட, மடியில் வச்சிட்டிருக்கும் தாய் தான் பூவை, சந்தனத்தை வாங்கி வைப்பா. நான் அப்ப நினைச்சிப்பேன் - அம்பாள் - கடவுள்னு பாவம் அப்ப இல்லைன்னுதானே ஆறது? அப்ப எதுக்கு இந்தப் பூசை, அது இது எல்லாம்? உள்ளே இருக்கும் அந்த ‘பாவம்’ மாறலன்னா, அது கபடம்னுதானே ஆறது?”

“எல்லாப் பெண்களும் அம்பாள் சொரூபம். தாயார்ன்னு தத்துவம் பேசறவா உண்மையாக இருந்தால், புருஷன் போயிட்டான்னா, அவாளைப் பூச்சிக்கும் கேவலமா நசுக்கலாமா? மொட்டையடிச்சிட்டாத்தான் பார்க்கலாம்னு சொல்றப்ப, அவா அந்த அம்பாளையே கேவலப்படுத்தலியா? புருஷன் முகம் தெரியாத வயசிலே எங்க பாட்டியோட தங்கை ஒருத்தி அப்படியாயிட்டா. அவா மாதிரி ஒருத்தரை அம்பாள் சொரூபம்னு ஏன் பூஜை பண்ணக்கூடாது. அவ தவசியில்லையா? சொல்லப்போனால் புருஷனின் வதையை உள்ளூற அநுபவிச்சிட்டு, வெளிலே சுமங்கலின்னு குங்குமத்தை அப்பிண்டு, அழுக்குச்சரட்டில் மஞ்சளைப் பூசிண்டு, இவா காலில் விழுந்து கும்பிடணும். சொல்லப் போனா, இவாள்ளாம் பரபுருஷங்கதானே? இவங்களுக்கு, எல்லா உயிரிலும், எல்லாப் பெண்களிலும் அந்த ஈசுவர சொரூபம் தெரியலன்னா, இவா அவளுக்குப் பரபுருஷன் தானே? என்ன சாஸ்திரம் இதெல்லாம்? இந்தச் சந்நியாசி மடத்தில் முதல்ல பேதமில்லாத பார்வை இருக்கா? பணம் பதவின்னு பெரிய மதிப்புள்ளவா, சர்க்கார் ஆளுங்க வந்தா, அவாளுக்கு ஒரு உபச்சாரம். வயிரத்தோடும், பட்டுப் பஞ்சக்கச்சங்களுமா வந்தா, அதுக்கு ஒரு தனி மரியாதை. குருசுவாமி சொல்லியிருக்கான்னு, அந்த நிமிஷத்துக்குன்னு ஒரு கைத்தறிப் புடவையை உடுத்திட்டு வந்து வேஷம் போட்டு நாடகம் ஆடுவா. வெளியில் சாப்பாட்டுக்கு இல்லாத பஞ்சைக் கூட்டம் காத்துக் கிடக்கும். இவாளுக்கு உள்ள தனி மரியாதைப் பந்தியில் சாப்பாடு... சீ...! சமம் சமம்னு சொல்றதெல்லாம் வெறும் வேஷம்! இவாதான் உபதேசம் பண்றா...!”

அவர் வியப்புடன் இவள் கொட்டுவதைப் பார்க்கிறார்.

“எங்கேயோ ஆரம்பிச்சி எங்கேயோ வந்திட்டேன்ல” என்று வெட்கத்துடன் சிரிக்கிறாள் ரேவு.

“இல்ல. நீ பெரிய ரேடிகலாயிட்ட...”

“அதென்ன, ரேடிகல்னா?”

“அறிவுவாதி, பகுத்தறிவுவாதி. இந்தப் பேச்செல்லாம் அவங்க பக்கம் இருந்துதான் வந்தது. மதத்தின் பேரைச் சொல்லி சமுதாயத்தைப் பேதம் பண்ணிப் பிழைக்கும் வருக்கம் தான் குருவர்க்கமே. செத்த பிராணித் தின்னு, சேற்றிலே உழைச்சு, மேல்சாதிக்காரனுக்கு ஊழியம் பண்ணன்னு ஒரு சாதி; அவன் நால் வருணத்துக்கு அப்பாற்பட்டவன். அவனுக்கு மனிதனாப் பிறந்ததால் உள்ள எந்த உரிமையும் இல்லை. ஆடு மாடு கூட குளம் குட்டை ஊருணியில் தண்ணி குடிக்கலாம். இவன் தொடக்கூடாது. இதுனாலதான் அம்பேத்கார், பெரியார் எல்லாரும் இங்கே அருமருந்து போல் தோன்றினார்கள். அன்னிக்கு அஞ்சாயிரம் ஆறாயிரம் வருஷத்துக்கு முன்ன, வேதப் பாடல்கள் தோன்றின. அதெல்லாம் என்ன சொல்றது, அன்றைய சமுதாயம் எப்படி இருந்ததுன்னெல்லாம் புரிஞ்சுக்காமலே அவங்கவங்க, தங்கள் சுயநலங்களை நியாயம் பண்ண சாஸ்திரங்கள், தரும நீதிகள் எழுதி வச்சிட்டாங்க. அதை ஏன்னு கேட்க இடமில்லாமலே, தங்கள் ஆதிக்கம் இழைவிடாமல் அமுல்படுத்தினார்கள். அதைப் ‘பகுத்தறிவு’ப் பிரசாரம் உடைச்சாச்சு. ஆனால், மனுஷன், ‘மனுஷ தர்மத்தை’ இப்பவும் காண முடியல. அன்னிக்கு வருணாசிரமம், இன்னிக்கு அந்தத் தர்மத்தின் மிச்ச சொச்சங்களோடு, ‘அரசியல்’ குட்டையில் சாதி, மதம், நிறம் பல்வேறு சித்தாந்தங்கள் எல்லாம் குழம்பிச் சாக்கடையாயிடிச்சி. இதில் தேர்ந்த அரசியல்வாதி சுயநல மீன் பிடிக்கிறான். ஜனநாயகங்கற பேரில், எல்லாவற்றையும் தன் வழிக்குக் கொண்டுவரத் தெரிஞ்சிட்டிருக்கிறான்... பகுத்தறிவு பெரியார் சொன்னதை எல்லாம் இங்கே யார் நடத்தறாங்க?... பெண்களைச் சுத்தியுள்ள மௌட்டீகங்கள் எதுவும் போகல...”

அவர் நிறுத்துகிறார்.

ரேவுவுக்குப் பகுத்தறிவுவாதி என்றதும் கூத்தரசன் டாக்டர் நினைவுதான் வருகிறது. குருமடத்தின் வாசலில் கறுப்பு மசியில் அசிங்கமாக எழுதியிருப்பார்கள். ஏதோ ஒரு வருஷத்தில், பிள்ளையாரை உடைத்தார்களாம்; பூணூலை அறுத்தார்களாம். சுவாமி படத்துக்குச் செருப்பு மாலை போட்டார்களாம். ஆனால் கூத்தரசன் டாக்டர் மேல எந்தக் கறுப்பையும் அவளால் கற்பித்துக் கொள்ள முடியவில்லை. அவர் அன்பானவர்; ஹ்ருதயமுள்ளவர். ஆனால் அவரும் கூட பிராம்மண துவேஷி, துஷ்டர் என்று தான் இவர்கள் பார்வையில் கற்பிக்கப்பட்டிருந்தார்.

“என்ன ரேவம்மா? யோசனை செஞ்சு பார்க்கிறியா?”

“இல்ல... நீங்க மட்டும் வித்தியாசமா இருக்கேளேன்னு நினைச்சுப் பார்க்கிறேன்...”

ஊசி குத்தினாற்போல் முகம் சுருங்குகிறது.

உடனே புன்னகை செய்து கொள்கிறார்.

“எங்க தாத்தாக்குத் தம்பி பையன், ஒரு மாமா இருந்தார். ரொம்பக் கெட்டிக்காரர்; அறிவாளி. அதனால, அவர் ஒரு காலேஜிலும், சேர்ந்து படிச்சுப் பட்டம் வாங்கப் பிரியப்படல. நிறையப் புஸ்தகம் படிப்பார். பல பாஷைகள் பேசுவார். அந்தக் காலத்தில் பத்ரிக்கு நடந்து போன அநுபவத்தைக் கதை போல் சொல்வார். எங்க சின்னத் தாத்தாக்குச் சொந்தமா பாலகாட்டு, ராமநாதபுரத்தில் ஒரு பெரிய வீடு உண்டு. பின்னால் காடு மாதிரிச் செடி கொடிகள் இருக்கும். இவர் கசப்பாயிருக்கிற கோவைப்பழ விதைகளை எடுத்து, சாணியிலும் பசு மூத்திரத்திலும் பாலிலும் ஊற வைத்துப் பக்குவங்கள் செய்து, அதை விளைத்துப் புதிய பயிரை உருவாக்கினார். அதில் காய்த்த காய், கசக்கவேயில்லை. நீள நீளமாகப் பச்சையாகத் தின்னும்படி, வெள்ளரிக்காய் போல அருமையாக இருந்தது... பாம்பு கடிச்சா உடனே விஷகடி வைத்தியம் செய்து ஆளை நடக்க வைத்துவிடுவார். அவர் படிச்சுப் பட்டம் வாங்கல. சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டு ஒரு தரம் ஜெயிலுக்குப் போயிட்டு வந்தார். பிறகு ‘லூமினால்’ மாத்திரைக்கு அடிமையாகி, அகாலத்தில் ஒருநாள் கயிற்றில் தொங்கி வாழ்க்கையை முடித்துக் கொண்டார். எனக்கு அப்போது இப்படி அவரை நினைத்துப் பார்க்க முதிர்ச்சி இல்லை. ஆனாலும், அவர் நிசமாகப் பெரிய மனிதர். இந்த நடைமுறைகளை எதிர்த்துப் புரட்சி செய்தவர்னு நினைப்பேன். இந்தக் கதை இப்ப எதுக்குன்னு கேட்கிறாயா?... கசப்புக் காயை நல்ல காயாக மாற்ற முடிந்தது போல் சமுதாய நடைமுறைகளை மாற்ற முடியவில்லை - என்றாலும் அந்த ஆர்வம் விடவில்லை.”

“நானும் ஏறக்குறைய இப்படித்தான்... ஜெயிலில் இருந்து வந்து பட்டம் வாங்கி வேலையில் சேர்ந்து சம்பாதிப்பான்னு, அத்தை, அவள் உறவில் சாருவைக் கல்யாணம் பண்ணி வச்சா. சமுதாயத்தை ஒரே நாளில் திருத்திவிடும் ஆர்வம். டிராமா, ஆராய்ச்சி வகுப்புகள் அது இதுன்னு வெளியில் தான் இருப்பேன். சாருவுக்குப் பிடிக்கும் சினிமா, கொச்சையான ஹாசியம் இதெல்லாம் எனக்குப் பிடிக்காது. அத்தையுடன் அவள் அம்மாவும் கூட வீட்டில் இருந்தாள். கோயில், குளம், கல்யாணம், கச்சேரி - என்று போவார்கள். இரண்டு மூன்று தடவைகள் சாருவுக்குக் கர்ப்பம் தரித்து, குழந்தை நிற்கல. வளைகாப்பு செய்தார்கள். நான் சீமந்தம் அது இது எல்லாம் தேவையில்லைன்னு நினைச்ச காலம் அது. குழந்தை கோஷா ஆஸ்பத்திரியில் மாசம் ஏழு ஆகுமுன் பிறந்து, ஒருநாள் இருந்து இறந்து போச்சு. இதெல்லாம் என்னைப் பாதிக்கல. ஆனால் அவளை எப்படிப் பாதிச்சதுன்னும் புரிஞ்சுக்க முயற்சி கூடப் பண்ணல. ரேவம்மா... என் பக்கத்தில், என்னை நம்பி வந்த ஒரு பெண்ணைக் கூட என்னைப் போல் மதிக்காதவன், சமுதாயத்தைச் சரி பண்ண நினைச்சதுதான் அபத்தம்.”

“அத்தை போனாள். அவள் அம்மா இருந்தாள். நாடகம், ஒத்திகை, நடுராத்திரிக்கு மேல் வீடு வருவேன். அப்ப, ராயப்பேட்டையில் இருந்தோம். வரிசையாக வீடுகள்... பக்கத்தில் ஒரு பள்ளிக்கூட வாத்தியார் குடும்பம் இருந்தது. அவருக்கு மூன்று குழந்தைகள். பெரிய பையன் காலேஜில் படித்த நாட்களில், பதினாறு வருஷம் கழிச்சு, ஒரு பெண். அதற்கும் பிறகு, ஒரு பெண் குழந்தை. சுருட்டை முடியுடன் குழந்தை மிகக் கவர்ச்சியாக இருக்கும். நாற்பதும் ஐம்பதுமாக நிற்கும் காலத்தில் ஒரு பெண்ணான்னு அவங்களுக்கு ஒரு சுணக்கம் இருந்திருக்கும். ஆனால் சாரு, தீபாவைத் தன்னிடமே வச்சிட்டா. முதலில் இது ஏதோ அபிமானம்னுதான் தோணித்து. சாருவுக்கு அவம்மாவும் போன பிறகு, தீபா பெண்ணாவே ஆயிட்டுது. சாருதான் அம்மா; நான் அப்பா.”

“எனக்கு இது... அவள் விருப்பத்தை சுவீகரித்து சந்தோஷப்படுத்தும் திருப்தியான ஒரு ஏற்பாடாகவே ஆயிட்டுது.”

“தீபாவின் அப்பா ரிடயர் ஆனதும், பையனுக்குப் பெங்களூரில் வேலையாகிக் குடும்பம் அங்கே பெயர்ந்தது. பெரிய பெண்ணைத் தும்கூரில் கல்யாணம் செய்து கொடுத்தார்கள்.”

“நானும் சாரதாவும், தீபாவுடன் போனோம்.”

“தீபா, ஸ்டெல்லாவில் படித்தாள்; சாருவின் சிநேகிதி பையன் தான் பரத். சின்ன வயசிலிருந்து பழக்கம். ஒரே பையன். அம்மா ஸ்கூலில் டீச்சர். அப்பா செகரடேரியட்ல கிளார்க். சார்ட்டர்டு அகௌண்டன்ட், எம்.பி.ஏ. படிச்சான். அமெரிக்காவில வேலைன்னு போனான். கல்யாணம் பண்ணினோம். சாரு தன் நகை எல்லாம் கழட்டிப் போட்டாள். கல்யாணம் பெரிசா பண்ணினோம். தீபாவின் சொந்த அப்பா இறந்து போய் விட்டார். அதனால் அம்மா வரவில்லை. அண்ணன் மட்டும் வந்து தலை காட்டிவிட்டுப் போனான்.”

“அடுத்த ஆறாம் மாசம் தீபாவும் அமெரிக்கா போய்விட்டாள்.”

“இப்போதுதான் சூனியமான எங்கள் வாழ்க்கையின் கோரம் தெரிந்தது. சாரு என்னிடம் பேசமாட்டாள். இந்த ஃபிளாட்டுக்கு அப்போதே வந்துவிட்டோம். சில நாட்கள் சமையல் எதுவும் செய்யமாட்டாள். நான் எழுந்து சமைப்பேன். எனக்கு அவள் மீது கோபமோ, வெறுப்போ வந்திருந்தால் வாழ்க்கை வேறு மாதிரிப் போயிருக்கும். அவள் மீது தப்பு இல்லை என்று நானும் அவள் மீது தப்பு இல்லை என்று அவளும் புரிந்து கொண்டதாலேயே, எங்கள் எதிர்ப்பு வெறுப்புகளுக்கு வடிகால் அமையவில்லைன்னு நினைக்கிறேன்...”

“...ரேவம்மா, தீபாவே உலகம்னு அந்தப் பிடிப்பு எனக்கு வரல. நான் ஏன் பொய் சொல்லணும்? கிளாசுக்குப் போவேன். பேப்பர் திருத்தல், அது இதுன்னு வேலை. ஸ்டூடன்ட்ஸ், சிநேகிதர்கள், இலக்கியம், டிராமா எனக்கு வீடே தேவையில்லைன்னாலும், சாரு பழைய ஃபோட்டோக்களை, ஆல்பத்தைப் பார்த்துண்டே மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பாளே, அது மனசை அறுக்கும்.”

“அடுத்தது உடனே நடந்தது. கர்ப்பம்னு தெரிஞ்சதும் எப்படி எப்படியோ நச்சரிச்சு, அலைய வச்சு, பிரசவத்துக்கு யு.எஸ். போயிட்டா. போன வருஷம் அஞ்சு மாசக் குழந்தையை எடுத்துண்டு, இங்கே எல்லாரும் வந்தா. அவங்க ஒரு பத்து பதினஞ்சு நாள் இருந்திட்டுத் திரும்பிப் போனா. அதே நினைவா இவளும், ஆறு மாசம் இங்க தங்கிட்டு, தீபா வேலைக்குப் போறா - குழந்தை பார்த்துக்கணும்னு போயிட்டா...”

“ஏன், உங்களுக்கு அங்கெல்லாம் போகணும்னு தோணலியா?”

“இல்ல. இங்கே இல்லாத சந்தோஷம் எனக்குப் புதிசா அங்கே வரப்போறதில்ல. ஒரு பெண்ணுக்குப் புருஷன் மீது இயல்பான அக்கறை அல்லது சிநேகம், ஒரு குழந்தை பெற்று வளர்ப்பது வரைதான். அதுதான் உண்மை. அவள் அதற்குப் பிறகு விடுதலையானவளாகவே இருப்பாள். அவளை மேலும் மேலும் உப்புத் தண்ணீரைக் குடிக்கச் செய்பவன் புருஷன் தான். அவனுக்குத்தான் அவள் எப்போதும் வேண்டி இருக்கிறது. காபி கொடுத்து, சமைத்துப் போட்டு, துணி துவைத்துப் போட்டு சின்னச் சின்ன வசதிகள் செய்து நகையையும் ஆதாரமாக்கிக் கொண்டு அவளைப் பற்றிக் கொள்கிறான். இதுதான் நிசம் ரேவம்மா. உண்மையில் அந்த ஆதிக்கம் செலுத்தப் பெறும் சார்பில் இருந்து நாங்கள் தான் சுயச்சார்படையணும். அப்ப அவங்களுக்கும் மதிப்பும் மரியாதையும் விடுதலையும் வரும்...”

‘நிசமா, நிசமா...’ என்று ரேவு கேட்டுக் கொள்கிறாள்.

“...நான் கேட்கிறேன்னு நினைச்சுக்காதேங்கோப்பா. நீங்க உங்க மாமிக்குத் துரோகம் பண்ணிருக்கேளா?”

அவர் கையெடுத்துக் கும்பிடுகிறார்.

யாரையோ?

“அந்தப் பாவம் நான் பண்ணல ரேவம்மா... அதான் நான் இன்னிக்குத் தைரியமா நடமாடுறேன். சாரு உள்ளூற என்னைக் குற்றவாளியாக்கினாலும் நான் தலை நிமிர்ந்து நடக்கிறேன்.”

“நான் ஒரு காலத்தில் சிகரெட் பிடிச்சேன்; குடிச்சிருக்கேன். வெத்திலை பாக்கு புகையிலை போட்டேன். ஆனால் அதெல்லாம், ஏதோ ஓடும் மேகம் போல் வந்து போயிட்டது. பிடிக்கல. ஆனா, சாருவுக்கு நினைப்பில் கூட நான் துரோகம் பண்ணல. ஆனா, உலகம் என்னை அப்படி நினைக்கல ரேவம்மா...”

குரல் கரகரத்துக் கட்டிப் போகிறது.

“விசாலி; சரஸ் - நீ கேட்ட விஷயம். தாயி சொன்னாளே அவ. பன்னண்டு வயசில அமெச்சூர் டிராமாவில நடிக்கவிட்டவன், அவ மாமா. அவன் தான் பின்னாடி அவளைக் கல்யாணமும் பண்ணிட்டான், ரெண்டாந்தாரமா. பஞ்சமா பாதகங்களும் பண்ணுபவன். அவள் எங்க ட்ரூப்பில் நாலஞ்சு நாடகத்தில் என்னுடன் நடிச்சுருக்கா. ரொம்ப இயற்கையாக நடிப்பா. வீட்டுக்கு வருவா. தீபாவைத் தூக்கித் தூக்கி வச்சிக் கொஞ்சுவ. சாருவ அக்கான்னு கூப்பிடுவ. பிறகு நான் நாடகம் எல்லாம் விட்டதும் அவள சினிமாவிலும் விட்டு புருஷன்காரன் பணம் பண்ண நினைச்சான். ஆனா அங்கே இங்கே தலை நீட்டி துணிப் பாத்திரமாத்தான் வர முடிஞ்சிது. ஆர்ட் ஃபிலிம்ல நல்லாவே நடிச்சிருக்கா. ‘ஊஞ்சல்’னு ஒரு ஷார்ட் ஃபிலிம். மனநோயாளிய வச்சி எடுத்தது. அதில அவதான் நாயகி... அவார்ட் கிடைக்கும்னு பார்த்தாங்க. கிடைக்கல... வயசாச்சி. பிழைப்பில்ல; புருஷன் சீக்காயிட்டான். பிள்ளைகள் யாரும் சரியில்ல... அவளுக்குப் போய் வியாதி வரலாமா? வயிற்றில் புற்று. சாரு தீபா பிரசவத்துக்குப் போனான்னு சொன்னேனா? அந்த சமயத்துல, ஒரு நா, அப்படியே எலும்பும் தோலுமா வந்து இறங்கினாள். எனக்கே பக்குன்னுது. முகமெல்லாம் தேஞ்சு, வெளுத்து... கண் உள்ளே போய்... காரைக்காலம்மையார் பாடல் போல், ‘கொங்கை திரங்கி நரம்பெழுந்து, குண்டு கண், வெண்பற்குழி...’ன்னு இருந்தாள். தடால்னு என் கால்ல விழுந்து, “ஸார், எனக்குச் சாகக் கூட இடமில்லேன்னிட்டா... தற்கொலை பண்ணிட்டுப் பேயா அலையக்கூடாதென்னு பார்க்கறேன்”னு அழுதா. எனக்கு மனசு கேக்கல. சரஸ்னு கேரக்டரில் நடிச்சு பிரபலமானதால சரஸ்னு சொல்லுவா. இந்த வீட்டிலே வச்சிட்டிருந்தேன். டெர்மினல் கேஸ், ஆஸ்பத்திரி எதிலும் இடமில்ல; எடுத்துக்க மாட்டா... நான் அப்படியும், பணம் நிறையக் கட்டி, எங்கெங்கோ முயற்சி பண்ணினேன்.”

“இங்கதான் ரெண்டு மாசம் போல இருந்தா. அந்த சமயத்தில் தான் சாரு, தீபா, மாப்பிள்ளை, குழந்தை எல்லாரும் வந்தது. நான் ஃபோன்ல ஒரு மாதிரி விஷயத்தைச் சொல்லிட்டு, இங்கேயே, கே.ஜி.கே. ஃப்ளாட்டை அவங்க தங்க ஏற்பாடு பண்ணிருந்தேன். சாருக்குக் கோபம்னாலும் கோபம். இதுல தப்பு சொல்ல முடியாது. அவகிட்ட நான் ரொம்ப எதிர்பார்க்க முடியாது. ஆனா, குறைஞ்ச பட்சம், மனுஷ ஈரம், ஒரு அபலைப் பெண்ணுன்னு ஈரம்... ஊஹும், இந்த வீட்டுக்கே வரல. பெண் மாப்பிள்ளைய அழைச்சிட்டுப் பெங்களூர்ப் போயிட்டா. அவங்கள்ளாம் ஊருக்குப் போன பிறகு, இங்க வந்து... அந்தத் துர்ப்பாக்கியமான விசாலிய எப்படியெல்லாம் விஷச் சொல்லால் நோகடிச்சா தெரியுமா? நோ... அதெல்லாம் நான் இப்ப நினைவுக்குக் கொண்டு வர விரும்பல. ஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏனிப்படிப் பார்க்கிறாள்ங்கறதுதான் கொடுமை... சாருவின் அந்தச் சொல், நடப்பெல்லாம் பொறுத்தேன். ஒருவேளை அவள் இடத்தில் நானிருந்தாலும் அப்படித்தான் நடந்திருப்பேனாக இருக்கும். ஏன்னா, உலகம் அப்படித்தான் ஒரு பெண் இன்னொரு பெண்ணைப் பார்ப்பதை நியாயப்படுத்துகிறது. அஞ்சாறு நாளைக்கெல்லாம் விசாலி போயிட்டா. அவ வீட்டுக்கு நான் சொல்லல. பழைய நடிகர்கள், தெரிஞ்சவங்க, வந்தாங்க. முடிஞ்சி போச்சி. சாரு மறுபடி புறப்பட்டுப் போனப்ப, நான் வழியனுப்பக் கூடப் போகல. தீபாவோட அண்ணன் வந்தான். புறப்பட்டுப் போனாள். சாருவுக்கும் எனக்கும் இடையே மனம் திறந்த பேச்சே இல்லை. “...நா... போயிட்டு வரேன். உடம்பைப் பாத்துக்குங்கோ. ஃபோன் பண்ணுங்கோ...” இப்படிச் சொல்லிட்டுப் போனாள். ஆனால் நான் ஒண்ணும் ஒளிக்கிறதில்ல. அவளுக்கும் வயசு அறுபதுக்கு மேல ஆச்சி. ஒவ்வொரு சமயம் நினைச்ச மனசு ரொம்பக் கஷ்டப்படும் ரேவம்மா...”

அவர் கண்கள் பளபளக்கின்றன.

“வருத்தப்படாதீங்கப்பா. நான் வந்து மாமியை எப்படியானும் இங்க சேத்துடுவேன்னு நினைக்கிறேன்... மனச்சாட்சின்னு ஒண்ணு எல்லாருக்கும் இருக்கு. அது எப்பவானும் ஒரு தடவை சுத்தமா அவ அவ மனசுக்குத் தெரியும். இப்பக்கூட எனக்குக் கொடுமை செஞ்ச அவனுக்கு என்னிக்கானும் ஒரு நாள் என் சுத்தமான மனசும் உண்மையும் தெரியும்னுதான் நம்பறேன்... வருத்தப்படாதீங்கப்பா!”

“...இல்லம்மா, இப்பவும் இந்தச் சுத்தி இருக்கிற உலகம், ஒருத்தியேனும் இப்படி ஒரு நிராதரவா ஒரு பெண் பிள்ளை உசிருக்குப் போராடிட்டு வந்திருக்கான்னு பார்த்ததா? அத்தனை பேரும் சாருவைத்தான் நியாயப்படுத்தினா...”

ரேவு பேசவில்லை. அன்று தன் தந்தை தாயை விரட்டி அடித்த போது, ஒரு பூச்சி கூட அவளுக்கு வராமல் பதுங்கிக் கொண்டதை நினைவுபடுத்திக் கொள்கிறாள்.

இப்போதும் இந்தச் சூழலில் இவளுக்கு ஆதரவாக ஒருவரும் இல்லை என்பது வெளிச்சம். இவள் அவருடன் வெளியே செல்லும் போதும், வரும்போதும், நேருக்கு நேர் சந்திக்கும்படி வந்துவிட்டாலும் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள். ஒரு பெண்ணும் ஓர் ஆணும் தனித்து இருந்தால்... உடனே உடல் வாணிபம் தானா? அன்று கூத்தரசன் பேரில், அவள் அம்மா பேரில் இப்படிப் பழி சுமத்தினார்களே?

அன்று ரேவு, மூடி வைத்திருந்த தன் இளமைக்காலம் தாய், தந்தை, சகோதரன் என்று எல்லாச் செய்திகளையும் அவரிடம் சொல்லி விடுகிறாள். பாரங்கள் குறைந்து மனம் இலேசாகி விடுகிறது. உறவுகள் வெறும் உடல்பரமானதல்ல. அது உள்ளங்களில் பிறக்கும் உண்மையான ஆர்வங்களைச் சார்ந்தது என்று உணருகிறாள். இதை உணர்ந்த பின், மற்றவர் என்ன சொல்வார்களோ என்று வதைத்த பயம் கரைகிறது. ரேவு அவரிடம் குழந்தை போல் பேசிப் பழகுகிறாள். தான் பட்டம் பெற வேண்டும், புருஷனிடம் விவாகரத்து வாங்கிக் கொண்டு ஏதேனும் பெண்கள் விடுதியில் தன் காலத்தைக் கழிக்க வேண்டும் என்ற இலட்சியங்களும் கூட முக்கியமாகப் படவில்லை.

வாழ்க்கையில் சமையல், சாப்பாடு, புருஷன், குழந்தைகள் சுகம், சமுதாய வரம்புகள் இவற்றுக்கெல்லாம் அப்பாலும் ஏதோ பொருள் உண்டு என்ற உணர்வு அவளுள் முகிழ்க்கிறது.

அத்தியாயம் - 15

ரேவு புத்தகக் குவியலிடையே உட்கார்ந்திருக்கிறாள்.

ஒரு நீள நோட்டுப் புத்தகத்தில், புத்தகங்களை வரிசைப்படுத்தி எழுதி அட்டவணை போட்டு ஒழுங்கு செய்வதில் ஈடுபட்டிருக்கிறாள்.

அழகாகக் கோடுகள் போட்டு, நூலின் பெயர் - ஆசிரியர் பெயர் - வெளியீட்டாளர் என்று எழுதித் தலைப்பிடுகிறாள்.

முத்துக் கோத்தாற் போல் எழுத்துக்கள்...

நேரம் போவதே தெரியவில்லை. நாட்கள் செல்வதே தெரியவில்லை. பாரதியார் கவிதைகள்; தோத்திரப் பாடல்கள், தேசிய கீதங்கள், பாஞ்சாலி சபதம், என்று தனித்தனியாகச் சிறு பிரசுரங்கள். பிறகு எல்லாப் பாடல்களும் அடங்கிய வெளியீடுகள், பெரிய ‘பைண்டு’ புத்தகம் கையடக்கமான ‘பாக்கெட்’ பிரசுரம்; மலிவுப் பதிப்பு...

இதே போல பாரதிதாசன் நூல்கள்... நாமக்கல் கவிஞர், தேசிகவிநாயகம் பிள்ளை; சுத்தானந்த பாரதி; கவிஞர் ச.து.சு.யோகி...

ஒவ்வொரு நூலையும் பிரித்துப் பார்த்துக் கண்களைப் பதிக்கிறாள். அதிலேயே பொழுது போய்விடுகிறது.

அகல்யை கதை... மூன்று விதமான வரலாறுகள்.

வால்மீகி அவளைக் கற்பிழந்ததற்காகக் கல்லாக்க வில்லை.

“நீ செய்த குற்றத்துக்காகப் பல வருஷங்கள் கடுந்தவம் புரிய வேண்டும். காற்றையே பருகி, அன்ன ஆகாரம் இல்லாமல், உள்ளம் கசிந்து உருகிப் பச்சாதாபப்பட்டு, யார் கண்ணிலும் படாமல் இங்கே வசிப்பாயாக. இந்த இடத்துக்கு ராமன் வருவான். அப்போது உன் தீவினை அகலும்...” என்று கூறிவிட்டுக் கௌதமர் தவம் செய்ய இமயமலைக்குச் சென்றார்.

ரேவுவுக்கு இந்த வரலாறு புதிதாக இருக்கிறது.

அகலிகை கல்லாகவில்லையா?...

ச.து.சு.யோகி அவர்களின் அகலிகை கற்பரசியாகவே படைக்கப்பட்டிருக்கிறாள். முதலில் ஒரு தரம் இந்திரன் வருகிறானாம். அவள் அவனை, “கற்புக்கனல் நான்; காமச் சிறு புழு நீ!” என்று ஒதுக்குகிறாளாம்...

கம்பர் இவளைக் கல்லாக்கி விடுகிறார். ஏனெனில் கௌதமர் உருவில் வந்தவன் கணவனில்லை என்றரிந்தும் அவள் விலக்கவில்லையாம்.

ஒரு கதாநாயகி கூட, மாசு இல்லாதவளாகத் திகழ வேண்டும் என்ற கருத்து வலிமையாக்கப்பட்டிருக்கிறது.

அந்த வரலாற்றைப் படித்துக் கொண்டு உட்கார்ந்து விடுகிறாள்.

மணி ஒன்றரை. பகலுணவுக்கு அப்பா வந்து விட்டார். மணி அடிக்கிறது.

“நின்னைச் சில வரங்கள் கேட்பேன். அதை நேராய் எந்தனுக்குத் தருவாய்...” என்று பாடிக் கொண்டு வந்து, இவள் புத்தக ஒழுங்குச் சேவையைப் பார்த்தபடி நிற்கிறார்.

“அஞ்சுநாளா நான் இந்த ஒரே பீரோவில் இருக்கேன்... இந்த ரேட்டில் எனக்கு ஒரு மாசம் போதாது போல இருக்கு, இதெல்லாம் ஒழுங்காக்க...”

“ஏன்? புத்தகத்தைப் பிரிச்சுப் பார்த்து ரசிச்சிட்டு அப்படியே உட்கார்ந்துடுவே, இலை நிறைய விதவிதமாய்ப் பண்டம் வச்சா, ஒண்ணொன்னையும் ரசிக்கிறாப்பல...”

“அதேதான்... இத பாருங்கள் நான் ஒரு பாட்டுச் சொல்வேன். டக்குனு, அது யாருடையதுன்னு சொல்லணும்.

திக்குகள் எட்டும் சிதறித் திடுக்கிடக்

கெக்கலி கொட்டிடுவாள்

பொக்கென ஓர் கணத்தே அண்டம் யாவையும்

பொட்டென வெட்டிடுவாள்...

சட்டச் சடசடக் கொட்டும் இடிக்குரல்

சத்தத்தில் வீற்றிருப்பாள்

வெட்டி யடித்திடும் மின்ன வெறியினில்

மெட்டி மினுக்கிடுவாள்...”

“சொல்லட்டுமா?... சொல்லிவிடுவேன்...” என்று இவள் புத்தகக் குவியலைப் பார்க்கக் குனிகிறார்.

“ம்... பார்க்கக் கூடாது. பார்க்காமல் சொல்லணும் ஸார்?”

“சரி... பார்க்கல... பாரதி...”

“ஹே... ஹே... இல்ல... எனக்குத் தெரியும். நீங்க இப்படிச் சொல்லுவீங்கன்னு...” கைகொட்டிக் குழந்தை போல் சிரிக்கிறாள்.

அவர் குரலைச் செவியுறுவதே மந்திரநாதமாக இருக்கிறது. இப்படி ஒரு குடும்பம் தன் வாழ்நாளில் எந்த ஒரு தடைக்குத்தும் இல்லாமல், குற்ற உணர்வுகள் கழல, தனக்கு மனம் நிறையும் வாழ்க்கையாக நாட்கள் விடியும் என்று அவள் நினைத்திருக்கவில்லை.

தொலைபேசி மணி ஒலிக்கிறது.

அவர் தான் எடுக்கிறார்... சத்தமாகப் பேசுகிறார். வெளியூரா? ஆனால் அமெரிக்கா என்றால் கூட இப்படி உற்சாகக் குரல் வராதே?

“ஹா... ஷி இஸ் ஆல்ரைட். நீங்களே கேளுங்க... ரேவம்மா! சுதா பேசுறாங்க...”

அவள் ஓடி வருகிறாள். வாங்கியைக் கையில் பிடித்துக் கொள்கையில் நடுங்குவது போல் இருக்கிறது. “ஹலோ... ம், நல்லா இருக்கேன். சந்தோஷமா... ஆமா, அதெல்லாம் மறந்துட்டேன்...”

அவள் திருச்சியில் இருந்துதான் பேசுகிறாள். ரகுவுக்குச் சேலத்துக்கு மாற்றல் ஆகியிருக்கிறதாம். தனக்கும் அங்கே முயற்சி செய்வதற்கில்லையாம். ஏனென்றால் திருச்சிக்கு இப்போதுதான் மாற்றல் கேட்டு கிடைக்கும் என்று நம்புகிறாளாம். சுருதி அங்கேயே ஸோஒஷியாலஜி மெயின் எடுத்துச் சேர்ந்திருக்கிறாளாம். காவேரியில் நிறையத் தண்ணீர் ஓடுகிறதாம்... அவளுக்கு சேலத்தில் ஒரு பெண்கள் விடுதியில் வேலைக்குச் சிபாரிசு செய்யலாமா என்று கேட்கிறாள்... குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.ஸி. கூட இல்லாத நிலையில் வார்டன் போன்ற பதவி கிடைக்காதாம். பாடங்களைப் படித்து, பரீட்சை எழுதத் தயார் செய்து கொள்கிறாளா என்று அக்கறையுடன் கேட்கிறாள். நேராக எம்.ஏ. கூட எழுதலாமாம். ஏன், அவர் சொல்லவில்லையா என்று கேட்கிறாள்... அந்த வருஷம் எழுத வேண்டும் என்று வற்புறுத்திவிட்டு ஃபோனை வைக்கிறாள்.

முகம் சுண்டிப் போகிறது. வாழ்க்கை நிதரிசனம் இதுதான். குடும்பம் புருஷன் என்ற சார்பில்லாதவள் முதலில், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளச் சம்பாதிக்கும் தகுதியைப் பெற வேண்டும். இவள் பெண்கள் விடுதியில் பத்துப் பதினைந்து பேருக்கோ - அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கோ சமைத்துக் காபி போட்டு, டிபன் செய்து, பரிமாறி... அந்தப் படித்த பதவியிலுள்ள பெண்களுக்குக் கீழ்ப்பணிந்து...

வாழ்க்கை, ரங்கப்பா வீட்டில் இருப்பது போல் இருக்காது. இந்த ஃபிளாட்டிலேயே இன்னொரு பெண்மணி இவளை விசாரிப்பது இல்லை.

“என்ன ரேவம்மா? சாம்பார் ரெடி! சுதா என்ன பேசினாங்க? அப்படியே நின்னிட்டீங்க! எனிதிங் ராங்?”

“இல்லப்பா... பரீட்சைக்குப் படிக்கணும்னு டீச்சரம்மா ஞாபகப்படுத்தினாங்க” பளிச்சென்று சிரிப்பு வருகிறது.

“ஏன், உனக்குப் படிக்கப் பிடிக்கலியா?”

“படிக்க ஆசையாக இருக்கு. ஆனா, அந்த அல்ஜிப்ரா, ஜாமட்ரி அது இது எல்லாம் மண்டையில் நுழையுமோன்னு சந்தேகமாயிருக்கப்பா. சிலநாள் நான் ராம்ஜி, பரத் புத்தகங்களை எடுத்துப் பார்ப்பேன். இங்கிலீஷ், தமிழ், ஹிஸ்டரி எல்லாம் படிக்க நன்னாயிருக்கும். ஆனால்... மத்த விஷயம் வேண்டாம்னு தோணும். இனிமே எதுக்கு நமக்குப் படிப்புன்னு நினைச்சிப்பேன். இந்த அல்ஜிப்ரா ஜாமட்ரி - தீரம் அது இதுன்னு இல்லேன்னா...”

அவர் சிரிக்கிறார்.

“அதெல்லாம் இல்லேன்னா எப்படி ரேவம்மா! கணக்கு இன்னிக்கு ரொம்ப முக்கியமாச்சே! கம்ப்யூட்டர் யுகம் வேற?... எங்க இன்ஸ்டிட்யூட்ல பார்கவின்னு ஓரம்மா இருக்கா... அவங்க எப்பேர்ப்பட்ட மக்கையும் கணக்குப் பாடத்தில் தேறப் பண்ணிடுவாங்க. அவங்ககிட்ட ஸ்பெஷல் கோச்சிங்...”

அவள் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை.

தட்டைப் போட்டுச் சாப்பிட உட்காருகிறார்கள்.

மனதில் ஏதேதோ எண்ணங்கள் மோதுகின்றன. முப்பத்தெட்டு வயசில் மறுபடியும் பள்ளிச் சிறுமியாகி, பதினான்கு, பதினைஞ்சு வயசுக்காரர்களுக்குச் சமமாகப் பாடம் படித்து, உருப்போட்டு, பரீட்சை எழுதி... ஆமாம், சமையலையும் செய்து கொண்டு பரீட்சைக்குப் படிக்கப் போகிறாளா? படிக்க வேண்டாம்; சமையற்காரியாகவே அடுப்படியில் முடிவாளா?

இங்கு வருவதற்கு முன்பு அவள் சுதாவிடம் அப்படித்தான் சொன்னாள். ஆனால் சுதா, அவளைப் படித்து, கௌரவமாகப் பிறர் கருதக்கூடிய ஏற்றம் பெற வேண்டும் என்று யோசனை கூறுகிறாள். முப்பத்தொன்பதில் எஸ்.எஸ்.எல்.ஸியோ, மெட்ரிகுலேஷனோ முடித்து, மேலே கல்லூரிப் பட்டமும் எடுக்கலாம். நாற்பது நாற்பத்தைந்து வயசில் சுயச்சார்புடன் தலை நிமிர்ந்து நடக்கலாம்.

“ஆனால் நான் இனியும் எத்தனை நாள் இங்கே இருக்கலாம் அப்பா? சேலத்திலே ஏதோ ஹோம்ல சமையல் வேலை காலி இருக்காம். அதை ஒத்துக்கிட்டுப் படிக்கலாம்னு சொல்றா... அதுதான் எப்படின்னு தெரியல...”

“சமையல் வேலை செஞ்சிட்டு நீங்க படிக்கணும்ங்கறது இல்ல, ரேவம்மா. நீங்க இங்க இருக்கிறது எனக்கும் சந்தோஷமா இருக்கு. இந்த வீட்டில இப்பதான் கலகலப்பு - ஒளி எல்லாம் வந்திருக்கு. தீபா காலேஜில் படிச்சா. என் புத்தகங்கள் எதிலும் அவளுக்கு ஈடுபாடு இல்லை. ஈவ்ஸ் வீக்லி - டெபோனீர், ஃபெமினா, இது போல பத்திரிகைகள் தான் இறையும். அட்லீஸ்ட், ஒரு நல்ல பாட்டும் கூட ரசித்ததில்லை. ஏதோ சினிமாப் பாட்டுக்கள் தான் கத்தும். இடுப்புக் குலுக்கும், அடித்தொண்டைக் கேவல்கள், எனக்குச் சொல்ல முடியாது. கோ-எக்ஸிஸ்டன்ஸ் - சமாதான சகவாழ்வு - ரேவும்மா! நீங்க சமைக்கல்லாம் போக வேண்டாம். நீங்கள் இங்க இருந்து, எங்கள் இன்ஸ்டிட்யூட்டிலேயே படிக்கலாம். கே.ஜி.கே. பாடம் எடுப்பார். என்னை விடக் கிழவர். பார்கவி அம்மா உங்களைக் கணக்கு மேதையாக்கிடுவா. கல்லை வயிரமணியாக்கல்... வெறும் புல்லை நெல்லெனப் புரிதல்... அடிதாயே உனக்கரிய துண்டோ! ஓம் காளி வலிய சாமுண்டி...”

“தப்பு தப்பு... தப்பு...”

“என்ன தப்பு?”

“கல்லை வயிரமணியாக்கல் - செம்பைக் கட்டித் தங்கமெனச் செய்தல்னு வரணும். அது சரி ஸார், முன்ன சொன்ன பாட்டு பாரதின்னேளே?”

“திக்குகள் எட்டும் சிதறித் தடுக்கி கெக்கலி கொட்டிடுவாள்...ங்கற பாட்டு பாரதி இல்ல...”

“அப்படியா?...”

விரலை மோவாயில் வைத்து யோசிக்கிறார்.

“யாரு?... சுத்தானந்த பாரதி?...”

“இல்ல...”

“...அப்ப, நாமக்கல் கவிஞர்?”

“இல்ல, தோல்வின்னு ஒப்புத்துக்குங்கோ. மூணு சான்ஸ் குடுத்தாச்சு.”

“...அதெல்லாம் ஒத்துக்க முடியாது. நீங்க புத்தகங்களைப் பிரிச்சு வச்சிண்டு, எப்பவோ படிச்சவங்கிட்ட சவால் விட்டா எப்படி?”

“நான் ஒம்பதில படிப்ப விட்டவ. நீங்க... பெரிய எம்.ஏ. எல்லாம் முடிச்சி, புரொபசர் வேலை பண்ணுறவர். எப்படி ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி வைக்க முடியும்?”

“ப்ளீஸ்... இன்னொரு க்ளூ குடுங்கம்மா, ப்ளீஸ்...”

“ம்... சரி... அவர் அகல்யா, மேரி மக்தலேனா, உமார் கய்யாம் எல்லாம் கூடப் பாடியிருக்கிறார்.”

அவர் கண்கள் பளிச்சிடுகின்றன. “ஓ... கவிமணி?”

அவள் சிரிக்கிறாள். “இல்லே...”

“என்னது?... எனக்கு மறந்து போயிட்டுதா? யாரு?... சுத்தானந்த பாரதி இல்ல... யாரு...!”

“சரி இன்னொரு க்ளூ... இந்தப் புஸ்தகத்தை உங்களுக்கு அவரே கொடுத்திருக்கிறார். வாழ்த்துக்களுடன்... கையெழுத்து இருக்கு...”

“அய்யடா... எஸ்.டி.எஸ். யோகி. அவருடைய தமிழ்த்தாய்ப் பாடலை நாடக ஆரம்பத்தில் கோரஸாகப் பாடுவோம்... புஸ்தகத்தை வாங்கி அவரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு வந்தேன்... அப்ப அந்தப் புஸ்தகத்தின் விலை ஒண்ணரையோ, ஒண்ணே முக்காலோ...”

புத்தகத்தைக் கையில் வாங்கிப் பார்த்துக் கொண்டு அவர் தன்னை மறந்து நிற்கிறார்.

“எனக்கு பசி கிண்டுதப்பா... வாங்க... சாப்பிடலாம்...”

அத்தியாயம் - 16

தபால்காரன் மேலே வரமாட்டான்.

கீழே அவருக்குரிய பெட்டியில் தபாலைப் போட்டு விட்டுப் போய்விடுவான். ரங்கப்பா மதியம் வீடு வரும்போது, தபால்பெட்டியைப் பார்த்துத் தபால்களை எடுத்துக் கொண்டு வருவது வழக்கம். அன்று ஏதோ நினைவில் அவர் தபாலைப் பார்க்கவில்லை போலும்! பூட்டு ஒன்று போட்டிருந்தார். அது பழுதாகிவிட்டது. எனவே யார் வேண்டுமானாலும் திறந்து எடுக்கலாம்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மணி அடிக்கிறது.

அவள் எழுந்திருக்க முற்படுகிறாள்.

“நீ இரு...” என்று கையமர்த்திவிட்டு அவர் கையைக் கழுவிக் கொண்டு கதவைத் திறக்கிறார்.

கீழ்த்தளத்தில் குடியிருக்கும் சம்பூர்ணா, கையில் ஒரு அழைப்பிதழ் போன்ற கடிதத்துடன் நிற்கிறாள்.

“முன்னெல்லாம் மாமிட்டேந்து தீபாட்டேந்து கடிதாசி வரதான்னு ஒரு நாளைக்கு அஞ்சாறு தடவை போஸ்ட் பாக்ஸை பார்ப்பீங்க. இப்ப... இது வந்து மூணு நாளாக் கிடக்கு. அநாதையாக் கிடக்கேன்னு எடுத்திட்டு வந்தேன்...” என்று குத்தலாக மொழிந்து, பார்வையை நீட்டி, எதிரே ரேவு மேசையின் பக்கம் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டே நகருகிறாள். அவர் கடிதத்தை மறந்து அவளையே பார்த்துக் கொண்டு நிற்பவர், அவள் அகன்றதும் கதவைச் சாத்தித் தாழிடுகிறார்.

ரேவுவுக்குக் கடிதம் என்றாலே ஒரு துடிப்பு வந்து விடுகிறது. அது அச்சமா, கவலையா என்று சொல்லத் தெரியாத உணர்வு. உள்ளூற இந்த இடம், மகிழ்ச்சிகரமான வாழ்க்கை, எந்த நிமிடத்திலும் கவிழ்ந்து விடலாம் என்பது போன்ற பதைபதைப்பு உயிர்க்கிறது.

சாப்பாடு ருசிக்கவில்லை. அவர் அலட்சியமாக எறிந்த அந்தத் தபால்... ஓர் அழைப்பிதழ் - கடிதம் ஊஞ்சலின் மேல் இருக்கிறது.

“இது... என்ன, இன்விடேஷன்?...”

“எடுத்துப் பாருங்களேன்?”

“லெட்டர் கூட இருக்காப்பல இருக்கு?...”

“நீங்க பார்க்கலாம்...”

குமரிக்கோட்ட நாடகக் குழுவினர் நடத்தும் நாடகப் பட்டறை. அதன் துவக்க நாள் - முக்கிய விருந்தினர் புரொபசர் தோழர் என்.கே.ஆர்... என்று கொட்டை எழுத்தில் போட்டிருக்கிறது... நான்கு நாட்கள், கன்னியாகுமரியில் நடக்கும் புதுமை நாடக விழா - பல்வேறு குழுக்கள் ‘நிஜ’ நாடகங்களை நடத்துகிறார்கள். கடிதத்தில் விரிவான விவரங்கள் - நான்கு நாட்களும் தங்கி, விரிவுரைகள், விமரிசனங்கள், வகுப்புகள் என்று நிகழ்ச்சி விவரங்களுடன், அவரை நாகர்கோயிலில் சந்திப்பதாகவும், தங்குமிடம் வசதி செய்திருப்பதாகவும்.

“...நீங்கள் எனக்குச் சொல்லவேயில்லையே அப்பா?” குரலிலேயே கவலை.

“உனக்கு திடீர்னு தெரியணும்னுதான் சொல்லல.”

“நீங்க ஊர் போய்த் திரும்ப ஒரு வாரம் ஆகும் இல்ல...?”

“மேல ஆகும். போறதுக்கு மட்டும்தான் டிக்கெட் ரிஸர்வ் செஞ்சிருக்கு. வரப்ப, அப்படியே குற்றாலம், பாபநாசம், மதுரைன்னு ஒரு ட்ரிப் அடிச்சிட்டு வரதா உத்தேசம்...”

அவள் இப்போதே தான் கட்டிய வீடு நிலைகுலைந்து விட்டதாக நினைத்து விடுகிறாள். கண்களில் வெம்பனி...”

“நீங்க... நான் இங்கே தனியாக இருக்கலாம்னு நினைக்கிறீங்களாப்பா?”

“அப்படின்னு நான் சொன்னேனா?”

“பின்ன... நான் எங்கே போறது?”

“எங்கே போகணும்? நீங்களும் என்னோடு வரீங்க. நாடக விழா - பிறகு குற்றாலம், மதுரை எல்லாம் போய் விட்டு வரோம்...!”

மகிழ்ச்சியில் கண்ணிதழ்கள் கட்டுப்படுத்த இயலாமல் துடிப்பது போல் இருக்கிறது. சரி, தப்பு, நாலு பேர் பார்வை என்ற எந்தக் குறுக்குக்கோடும் விழவில்லை. தான் கவலையறியாத சிறுமியாக ஊருக்குப் போகும் சந்தோஷத்தை அநுபவிப்பது போல் திளைக்கிறாள். பயணத்துக்கான ஏற்பாடுகள்.

இவள் நாலே நாலு சேலைகளுடன் உள்ளாடைகளுடனும் இங்கு வந்திருக்கிறாள். புதிதாக இரண்டு கைத்தறிச் சேலைகளும் தேவையான துணிமணிகளும் அவரே கடைக்கு அழைத்துச் சென்று வாங்கிக் கொடுக்கிறார். வித்தியாசமே தெரியவில்லை. உரிமையுடன் பழைய காலணி தேய்ந்து விட்டதென்று புதியது வாங்கிக் கொள்கிறாள்.

“எனக்குத் தெரியாமலே எனக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கி எப்படி ஏமாத்தினீங்க?...”

“இது ஏமாத்தலா? திடீர் ஸர்ப்ரைஸ். அப்பதான் உங்களுக்குக் கூடுதல் சந்தோஷம் இல்லையா?...?”

“ஆமா, நீங்க இப்பல்லாம் முதல்ல போல இல்லாம நீங்க, வாங்கன்னு ஏன் சொல்றீங்க? எனக்கு அது எப்படியோ இருக்கு. இதெல்லாம் பொய் - உனக்கும் இந்த மனிதருக்கும் ஒட்டும் இல்ல, உறவுமில்லன்னு உள் மனசு இடிக்கிறதப்பா?”

“அப்படியே எனக்குப் பழக்கமாயிடுத்து ரேவம்மா. சின்னவங்க, பெரியவங்கன்னு இல்ல. தாயம்மா, ஆயா யாராக இருந்தாலும் இப்படித்தான் பேசுவேன்.”

“உங்க மாமிய? உங்க... தீபாவ?”

“சாருவக்கூட பல சமயங்களிலும் நான் ‘இங்கே வரேளாம்மா!’ன்னு பேசித்தான் பழக்கம். தீபாவ அப்படிச் சொல்லலன்னு வச்சுக்குங்க...”

“அப்ப, நானும் அப்படி இல்லையா? என்னை நீங்க வேறயா நினைக்கிறீங்கதானே?...”

“இல்லம்மா... அப்படி நினைச்சிருந்தா, நான் இங்க உங்கள இருக்கச் சொல்லி இருப்பேனா?...”

“எனக்கு என்னமோ, ஒரு சொர்க்கம் கிடைச்சாப்பல இருக்கு. இது எப்படி கைநழுவிப் போயிடுமோன்னும் பயமா இருக்கு. ஒரு பெரிய அலையடிக்கிற சமுத்திரத்து நடுவிலே, இருக்கிறேன். ஆனால் அலையடிக்கும் சமுத்திரம்னு தோணவேயில்ல. பல சமயங்களிலும், இது உண்மையா, கனவான்னு என்னையே கேட்டுப் பார்த்துக்கிறேன்.”

“ஏன் அப்படிச் சந்தேகம் வருது? சந்தேகத்தினால், நீ இப்போது உணரும் சந்தோஷமும் போகிறது. சந்தோஷங்கறது, மனசைப் பொறுத்ததுன்னு தத்துவவாதிகள் சொல்லுறாங்க. ஆனால் ரேவம்மா, உங்க வாழ்க்கையை நீங்க மனச்சந்தோஷத்தோடு எப்படி கழிச்சிருக்க முடியும்? ஆனால் ஒரு பக்கம் பார்த்தால், தன் சந்தோஷத்தைப் பற்றிய உணர்வே இல்லாமல், ஏதோ ஒரு வீட்டில், உடல் பொருள் ஆவின்னு சொல்லுறாப்போல எல்லாத்தையும் கொடுத்தும் எந்த விதமான பிரதிபலனும் இல்லாதது மட்டுமில்லாமல், அநியாயமாக இம்சிக்கிறவங்க கிட்டேந்து பொறுக்க முடியாமல் வரணும்னா, அங்கே ‘மனநிலை’ எப்படி வர முடியும்? இந்த உடம்புக்கும் மனசுக்கும், எப்படித் தொடர்பு இல்லாம இருக்க முடியும்? நீங்க சந்தேகமில்லாம சந்தோஷமா இருங்கள். இந்தச் சந்தோஷம், அநீதியாகவோ, அநியாயமாகவோ வரல. எந்தத் தப்பும் யாருக்கும் பண்ணல. ரேவம்மா... யாரைப் பத்தியும் எதற்கும் கவலைப்படக்கூடாது...”

தாயியிடம் கூறிவிட்டு, பால்காரருக்குச் சொல்லிவிட்டு, கே.ஜி.கே.யிடம் சாவி கொடுத்துவிட்டு, அவர்கள் கிளம்புகிறார்கள்.

இதற்கு முன் ரேவு இப்படி ஒரு வண்டிப் பிரயாணம் அநுபவித்ததேயில்லை. நெல்லையில் இறங்கி வண்டி மாறி, நாகர்கோவில் வரும்போதே, குமரிகோட்டக் குழுவினர், இளைஞர்கள், ஏழெட்டுப்பேர், இரண்டு பெண்கள் உடபடக் காத்திருக்கிறார்கள். ஓட்டலில் காலையுணவு. ரேவுவுக்கு மிகவும் கூச்சமாக இருக்கிறது. ஆனால் வந்திருந்த இரண்டு பெண்களும் கல்லூரி மாணவிகள் என்றும், நாடகக் குழுவில் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். “இந்த இலை அடை, எங்கள் ஊர் ஸ்பெஷல் சாப்பிடுங்கள்” என்று சாப்பிட வைக்கிறார்கள்.

“ஸார், உங்க ரெண்டு பேருக்கும், குமரி ஹோட்டலில் ரூம் போட்டிருக்கு, சரியா...?” என்று ஒட்டு மீசை வைத்துக் கொண்டு ஒல்லியாக இருந்த ஓர் இளைஞர் தெரிவிக்கிறான்.

“எதுக்கப்பா ஸ்டார் ஓட்டலெல்லாம்? நீங்க தங்கி இருக்கும் ஹால் போதும் எனக்கு. ரேவம்மா, இந்த கர்ள்ஸ் கூட ஃப்ரீயாக இருப்பாங்க. ஏம்மா, ரேவம்மா?”

மனசுக்குள் ஆயிரம் தரம் நன்றி செலுத்துகிறாள்.

ஏதோ ஒரு பெரிய பள்ளிக்கட்டிடத்தில் அவர்கள் அனைவரும் தங்கி இருக்கிறார்கள். பெண்கள் ஐந்தாறு பேர் தனியாக ஒரு விடுதியில் இரண்டு அறைகளில் தங்கியுள்ளனர். பள்ளிச் சுற்றுக்கு அருகில் ஒரு வீடு போல் இருக்கிறது அந்த விடுதி. இரு அறைகளுக்கும் ஒரு பொதுவான குளியலறை வசதி இருக்கிறது.

“என் பேர் மாலதி. என் பேர் ஷீலா, நான் தங்கச்சி” என்று அவர்கள் ஒவ்வொருவரும் சிரித்துக் கொண்டு அறிமுகம் செய்து கொள்கிறார்கள்.

மாலதி, சிவப்பாக, நீண்ட முடியைப் பின்னல் போடாமல் விட்டுக் கொண்டிருக்கிறாள். சந்தனக் கீற்றூம் குங்குமப் பொட்டும், ஜிமிக்கியும் தங்க வளையல்களும் மெல்லிய செயினும் அணிந்து இருக்கிறாள். எம்.ஏ. படித்து விட்டு, நாகர்கோயிலில் ஆசிரியையாக இருக்கிறாளாம். ஷீலா சுருண்ட முடியைச் சேர்த்து ஒரு வளையம் போட்டு இருக்கிக் கொண்டு நுனியில் பம்மென்று விட்டிருக்கிறாள். செவிகளில் வளையங்கள், நெற்றியில் குத்தாக ஒரு சாந்துப் பொட்டு, மேனியில் வேறு அணிமணிகள் இல்லை. தங்கச்சி வயதானவளாக இருக்கிறாள். முன் வரிசைப் பற்கள் இரண்டு தூக்கி இருக்கின்றன. நல்ல உயரம். கிள்ளி எடுக்கச் சதையில்லை. ஷீலா மார்த்தாண்டத்தில் ஏதோ அலுவலகத்தில் வேலை செய்பவள். தங்கச்சி இவர்களைப் போல் படித்தவளில்லை. ஏதோ முந்திரித் தொழிற்சாலையில் முன்பு வேலை செய்தாளாம். இப்போது, முழு நேரமாக நாடக சங்கத்தில் இருக்கிறாளாம். இவளாக அவர்களைப் பற்றி எதுவுமே கேட்கவில்லை.

“நீங்க... புரொபசர் ஸ்டூடண்டா?”

“ஆமாம்...”

“முன்ன ரெண்டு மூணு தடவைக் காம்புக்கு வந்திருக்கிறார். முன்ன குற்றாலத்தில் வெச்சு நடந்தப்ப வந்தாரில்லை, ஷீலா?”

“ஆமாம். போன மூணாம் வருஷம் இவங்க வந்ததில்ல...”

“நான் இப்பத்தான் வந்திருக்கேன்...” என்று ரேவு சிரிக்கிறாள்.

“புரொபஸர் ஸார் சொல்லியிருக்கிறார். உங்களை, கோயில் கடற்குளியல், சுசீந்திரம், எல்லா இடத்துக்கும் கூட்டிக் கொண்டு காட்டச் சொல்லி, நான் உங்க கூட வருவேன்... என்ன?” என்று தங்கச்சி தோழமையுடன் கையைப் பற்றுகிறாள்.

“...உங்களுக்கெல்லாம் இப்ப ஒரு புரோகிராமும் இல்லையா?”

“ஓ, அங்கே பேச்சு, கிளாஸ், டிஸ்கஷன்னு இருக்கும். நாங்கள் ராத்திரிதான். டிராமாவில் பங்கெடுப்போம்...”

“என்ன கிளாஸ், என்ன டிஸ்கஷன்...?”

ரேவுவுக்கு ஒன்றும் புரியத்தானில்லை. அன்று குளியலறையில் நீராடிப் புத்துணர்வு பெறுகிறாள். வெயிலுமில்லாமல் மழையுமில்லை.

கசகசவென்று மக்கள் மொய்க்கும் கடைகள், தெருக்கள், ஊர்திகள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு நடக்கிறார்கள். தங்கச்சி, முன்னெல்லாம் கன்யாகுமரி எவ்வளவு அமைதியாக இருக்கும் என்றும், தன் பாட்டியுடன் சிறுமியாக மணலில் வந்து விளையாடியதையும் சொல்கிறாள். பவுர்ணமி நிலாவில், பால் வெண்மையில் மணல் பரப்பு விரிந்திருக்கும். அவள் பாட்டன் திருவிதாங்கூர் பங்களாவில் காவல்காரனாக இருந்தாராம். பாட்டி பக்கத்தில் சிறு வியாபாரம் செய்ததுண்டாம். காந்தி மண்டபம் வந்தது தெரியும் என்று பழைய கதைகள் சொல்கிறாள். இப்போது கோயில் அருகில் கடைகள், குப்பைகள், நான், பன்றி கூட வருவதைப் பார்த்து சேய், சேய் என்று பரிதவிக்கிறாள். அங்கே... சாராயக்கடையும் கூட இருக்கிறது.

இந்திய நாட்டின் பல்வேறு மொழிகள், உடைகள், பலபல வெளிநாட்டு சாமான்களைப் பரப்பி வைத்துக் கொண்டு கூவும் வியாபாரிகள் எதுவுமே ரேவுவுக்கு மனசில் பதியவில்லை. ‘நான் எங்கே வந்திருக்கிறேன்? எதற்காக வந்திருக்கிறேன்? எனக்கும் இவர்களுக்கும் என்ன ஓட்டு? என்ன காரணத்துக்காக இப்படி ஒரு சந்திப்பு...?’

அவள் கண்கள் எதிலும் நிற்காமல் சூனியத்தில் இலயிக்கிறது. விடுதியிலேயே அவர்களுக்குச் சாப்பாடு தயாராகிறது.

அங்கேயே சாப்பிடுகிறார்கள். தாழ்ந்த ஓட்டுக் கூரை, மர மேசைகள், கொட்டையான புழுங்கலரிசிச் சோறு, ஒரு குழம்பு - வாழைக்காயோ, சேனையோ ஒரு கூட்டு - மோர்த்தண்ணீர்...

“நீங்க நாடகத்தில் நடிப்பீங்களோ?”

“இல்லை...”

“வேலை செய்யிறீங்களோ, ஸ்கூல்ல, காலேஜில...?”

“இல்லை...”

“பின்ன...”

“இப்பதான் பரீட்சை எழுதப் போறேன்...”

“ஓ...!”

“கல்யாணம் கழிச்சி... பின்ன படிக்கிறேளோ?...”

“ஆமாம்.”

ஒரே வரி பதிலில் முடங்கிக் கொள்கிறாள். அவர்களுக்கு இவள் மீது ‘தெரிந்து கொள்ளும்’ ஆர்வம் விழுந்து விட்டது. ஆனால் அவளுக்கோ எதுவும் வேண்டாம் போல் இருக்கிறது. ரங்கப்பாவுடன் புறப்பட்டு வரும் போது எத்தனை சந்தோஷமாக ஆவலாக இருந்தது? அவரும் அவளும் மட்டும் தனியாக, அவர்களைப் பற்றி எதுவும் தெரியாத ஒரு சூழலில், அந்தத் தோழமை நெருக்கத்தை அநுபவிக்கும் வாய்ப்பு இல்லை.

“இப்ப அவங்கல்லாம் என்ன செய்வாங்க? நாமும் போய்ப் பார்க்கலாமே?” என்று கேட்கிறாள்.

“ஓ, இப்ப சாப்பிட்டு ரெஸ்ட் எடுப்பாங்க... மூணு மணிக்கு பகல் செஷன் நடக்கும் போகலாம்...”

மூன்று மணி வரை அவர்கள் நாடகத்தைப் பற்றிச் சிறு குரலில் பேசிக் கொண்டு கீழே படுத்திருக்கிறார்கள். அங்கிருக்கும் ஒரே கட்டில் - படுக்கை, ரேவுவுக்கு....

அவள் அவர்களுடைய ஒரு புத்தகத்தை எடுத்துப் பிரித்துப் பார்க்கிறாள்.

அது ஆங்கிலப் புத்தகம்.

வெய்ட்டிங் ஃபார்...

என்று போட்டிருக்கிறது. புரியவில்லை. அதேசமயம், அவர்கள் தன்னை விடப் படித்தவர்கள், மேலானவர்கள் என்ற எண்ணம் அவர்களை அவளிடம் இருந்து பிரிக்கும் மதில் சுவராக எழுகிறது.

எப்படியேனும் பறந்து அந்த வீட்டுக்குப் போய்விட மாட்டோமா என்று தோன்றுகிறது. ‘நான் தனியாக இருக்கிறேன். நீங்கள் போய் வாருங்கள்’ என்று சொல்லி இருக்கலாமே?... அல்லது...

இந்த ரங்கப்பா ஏனிப்படி நடந்து கொள்கிறார்?

புத்தகத்தைப் பார்த்துக் கொண்டே அவள் சூனியத்தில் இலயிக்கிறாள். அவர்கள் இவளை இலட்சியம் செய்ததாகவே தெரியவில்லை. அப்படியே தூங்கி விடுகிறார்கள். ஐந்து மணிக்கு எழுந்து முகம் கழுவி, புதுமை செய்து கொள்கிறார்கள். நீலா தேநீருக்குச் சொல்ல, பையன் ஒருவன் கொண்டு வருகிறான்.

ஐந்தரை மணிக்குப் பள்ளி வளைவுக்குள் செல்கிறார்கள். அங்கே மாடியில் ஒரு ஹாலில் சுமார் நாற்பது ஐம்பது பேர் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒரு தாடிக்காரர் பேசிக் கொண்டிருக்கிறார். மேடை நாற்காலிகளில் ஒன்றில் ரங்கப்பா இருக்கிறார்.

அவர் தமிழில்தான் பேசுகிறார். ஆனால் என்ன பேசுகிறார் என்று ரேவுவினால் புரிந்து கொள்ள முடியவில்லை மாலதி, நீலா இருவரும் பின்வரிசை இளைஞர்களுடன் பேசப் போகிறார்கள். சற்றைக்கெல்லாம் அவர்கள் எழுந்து வெளியே செல்வதையும் ரேவு பார்க்கிறாள்.

சமுதாய உற்பத்தி, அமைப்பியல், தனிமைப்படுத்தப்படுதல்... என்றெல்லாம் சொற்கள் வருகின்றன.

ரேவுவுக்கு அந்தப் பொருள் விளங்காத போதிலும் ‘தனிமைப் படுத்தப்படுதல்’ என்ற பதம் மட்டும் தன்னையே சுற்றியதாகத் தோன்றுகிறது. கூட்டத்தில் இன்னும் சில பெண்கள் இருக்கிறார்கள்.

அவர் பேசி முடித்ததும் ஓர் இளைஞன் வந்து கவிதை படிக்கிறான்.

விழித்தெழு... விழித்தெழு...

என்று குதித்துக் கொண்டு கைக் காகிதத்தைப் பார்த்துக் கவிதை படிக்கிறான். அப்போது ரங்கப்பா அவளைப் பார்க்கிறார். புன்னகை செய்கிறார். ஆனால் அவளால் சிரிக்க முடியவில்லை. கோபம் வருகிறது.

அவரிடம் கோபம் கொள்ள அவளுக்கு என்ன உரிமை இருக்கிறது? ஏன் கோபம் வருகிறது? இதெல்லாம் ஆராய மனம் தெளிவு காணவில்லை. கோபம் மட்டும் வருகிறது. இப்போதே இந்த இடத்தை விட்டுப் போய்விட்டால் தேவலை என்று தோன்றுகிறது... இது ஏன்?

அவள் அந்தக் கோபத்தைக் காண்பிப்பது போல் விருட்டென்று எழுந்து படி இறங்கிக் கீழே வருகிறாள். வளைவை விட்டு வெளியே... இருட்டு வரும் நேரம், ஒளி விளக்குகள் பூத்திருக்கின்றன. ஓரிடத்தில் வட்டமாகச் சிலர் தெரிகின்றனர். அருகில் போய்ப் பார்க்க மனமில்லை. வாசலில் நிற்கிறாள். பஸ் நிறைய மக்களுடன் விளக்கைப் போட்டுக் கொண்டு போகிறது... தான் என்ற உணர்வு கழன்று... எங்கோ புரியாத உலகில் பூச்சி போல் பறப்பதாகத் தோன்றுகிறது... யாருமில்லை. அம்மா, அப்பா, தம்பி, அண்ணன், புருஷன், மாமனார், குருமடம், அக்கம்பக்கம், கடைக்கண்ணி, கல்லுரல், அடுப்பு, குழாய், பத்திரிகை, சுதா, எல்லாப் பந்தங்களும் விடுபட்டுவிட்டன. இதோ இந்த மனிதர், இவரும் விடுபட்டு விட்டார். இவள்... ரேவு... இந்தப் பெரிய பிரபஞ்சத்தில் ஒரு சிறு பூச்சி. இதற்கு முகமில்லை. வர்ணமில்லை, எதுவுமில்லை. பூச்சி... ஆம்... பூச்சி... இங்கே நடப்பதெல்லாம் எனக்குச் சொந்தமில்லை... இங்கே நான்... நான் மட்டும் தனி...

தோளில் யாரோ கை வைக்கிறார்கள்.

சிலிர்த்துப் போய்க் குலுங்குகிறாள்.

“ரேவம்மா என்ன?... ஏனிங்கே உட்கார்ந்திருக்கேம்மா?”

அவளுக்கு உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. முகம்புரியாத இனம்புரியாத உணர்வுகள்.

“சீ, எதுக்கு இப்ப அழறே? ம், ஷ்... ரேவம்மா, அங்கே நாடகம் போடறாங்க. வா போகலாம்.”

‘வாங்க’ என்று நின்ற சுவர் விழுந்து விட்டது. அவள் கைபற்றி அழைத்துச் செல்கிறார். அந்த வட்டத்தைச் சுற்றிய கும்பலில்...

அத்தியாயம் - 17

ரேவு இதற்கு முன் நாடகம் பார்த்திருக்கிறாள். ராம்ஜி, பரத் படித்த பள்ளிக்கூடத்தில் கட்டிட நிதிக்காகப் போட்ட நாடகத்துக்கு இருபது ரூபாய்க்கு டிக்கெட் வாங்கியிருந்தார்கள். கணவனுடன் அவளும் நாடகத்துக்குப் போயிருந்தாள். ‘தனிக்குடித்தனம்’ நாடகம். பிறகு இன்னொரு முறை பள்ளிக்கூடப் பிள்ளைகளே துருவன் நாடகம் போட்டார்கள். ஆனால் இந்த நாடகத்துக்கு மேடையுமில்லை, திரையுமில்லை. பளபளவென்று மின்னும் உடைகளோ, சாய மேக்கப்போ கிடையாது. ஆண் நடிகர்கள், வெற்று உடம்பும், கச்சையுமாக இருந்தார்கள். தோளில் ஒரு சிவப்புத் துண்டு அல்லது, தலையில் கட்டிய துண்டுடன் குதித்துக் குதித்து நடந்தார்கள். மாலதியும் ஷீலாவும் கட்டம் போட்ட ஒரு சாதாரணப் புடைவையை, பின் கொசுவம் வைத்து, கச்சம் பாய்ச்சாமல் உடுத்தியிருந்தார்கள். முடிச்சுப் போட்ட ஒற்றை இரவிக்கை. முடியை வாரி அள்ளிச் செருகி இருந்தார்கள். தங்கச்சி வம்பு பேசுபவளாக, மருமகள் மேல் கோள் சொல்லும் மாமியாக நடித்தாள். நாடகம் என்று கதையே இல்லை. தலையைக் கவிழ்த்து, முட்டிக்காலிட்டு உட்கார்ந்து இருக்கும் பெண்... குடித்து விட்டு வரும் புருஷன். அவன் ஆட்டம் ஒரு புறம் இருக்க, மாமியார்க்காரி, மருமகளையே ஏசுகிறாள். பேச்சு மிகக் குறைவு. உடல், முக அசைவுகளும், பின்னணியாகப் பறைக் கொட்டுப் போன்ற தாளமும் தான் அந்த நடிப்பை முழுமையாக்குகிறது. பிறந்த வீட்டிலிருந்து சீதனம் கொண்டு வரவில்லை; ஆண் குழந்தையைப் பெற்றுத் தரவில்லை. வந்தவுடன் மாமனை விழுங்கினாள்; எனவே தான் அவன் குடிக்கிறான் என்று நியாயம் பேசுகிறாள். அவன் குடித்துவிட்டு இரவில் விழுந்து இரத்தம் கொட்டக் கிடக்கையில், தன் வளையலையும் கம்மல்களையும் விற்று வைத்தியம் செய்கிறாள். சிறுமைப் படுகிறாள். ஆனால், மாமி அவனுக்கு வேறு பெண் பார்த்து, மணம் செய்து வைக்கிறாள். நாயகியாக நடிக்கும் ஷீலா தலைவிரிகோலமாக, சுற்றி இருந்து நாடகம் பார்க்கும் கூட்டத்தினரிடம் நியாயம் கேட்கிறாள்...

பிள்ளை பெறுவதும் பெண் பெறுவதும் பெண் கையில் இல்லை... என்று விளக்க உரை தொடருகிறது.

இப்படியே எழுத்தறிவுக்கான நாடகம் - குடியின் தீமை நாடகம் - சீதனக் கொடுமை நாடகம் என்று போடுகிறார்கள்.

அவளுக்குப் பொருந்தவில்லை. இரவு முழுவதும் இப்படித் தொடருமா? ஆமாம்... அவரவர் வெளியே சென்று சாப்பிட்டுவிட்டு வருகிறார்கள். ரேவுவுக்குப் பசியில்லை. ஆனால், ரங்கப்பாவுடன் நடந்து சென்று கடலைப் பார்த்துக் கொண்டு மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ரங்கப்பா யார்? அவர், அவளுக்கு... உயிரினும் மேலான ஓர் உறவு போல் உணருகிறாள். அவர் அவளை விட்டு மற்றவர்களுடன் நேரத்தைக் கழிப்பதே பொறுக்கவில்லை. இது சரியா, தவறா என்று நின்று நிதானித்து ஆராயும் தயக்கமே அவளுக்கு அப்போது இல்லை. எழுந்து வெளியே வருகிறாள். ரங்கப்பா அவளையே பார்க்கிறார். எழுந்து வருகிறார்.

“ரேவம்மா, பசிக்கிறதா? போய்ச் சாப்பிடலாமா?”

“...ம்...”

“இங்கே இட்டிலிதான் போட்டிருக்கிறான். நாம் வெளியே ஓட்டலில் சாப்பிடலாமா?”

“ம்...”

அவரை எப்படியேனும் அழைத்துக் கொண்டு போய் விட வேண்டும். கொட்டையான புழுங்கலரிசிச் சோறும் குழம்பும் ருசிக்கவில்லை. கோயில் வாசலில் கூட்டம்... வண்ணங்கள்... ஒளி விளக்குகள்...

“நாடகம் பார்க்க வேண்டாமா?...”

“எனக்கு... உங்கக்கூட அப்படி மணல்ல உட்கார்ந்து கடலைப் பார்த்துக் கொண்டிருக்க வேணும் போல் இருக்கு...”

“சரி...”

அவருக்கு இஷ்டமில்லை என்று தோன்றினாலும், அந்தக் கருத்துக்கு இடம் கொடுக்காமலே ரேவு பற்றிக் கொள்கிறாள்.

இருவரும் உயரமான ஓர் இடத்தில் சென்று அமருகிறார்கள். கடலலைகள் - இரவில் கரும் சுருள் போல் ஓசையுடன் வருகின்றன. வானில் நட்சத்திரங்கள் இந்த அலைகளைப் பார்த்து ஏளனம் செய்வது போல் ஒளி சிந்துகின்றன.

“நீங்கள் எத்தனை எழும்பினாலும், எங்களைப் போலாக முடியுமான்னு நட்சத்திரங்கள் கேட்கிறாப்போல இல்லை, அப்பா?”

உற்சாகமில்லை. ஒருவகைத் தன்னிரக்கம் அக்குரலில் எதிரொலிக்கிறது.

“அப்படியில்ல. வானந்தான் அதைக் கவர்ந்து இழுக்குது. கடல் போ, போ, உன் ஜம்பம் இங்கு செல்லாதுன்னு சிரிக்குது ரேவம்மா!”

“இல்ல, இல்ல. நான் சொல்றதுதான் சரி. அத்தனை உறுதியும் வலுவும் இங்க... இல்லப்பா...”

குரல், தழுதழுக்க, ரேவு முழங்காலில் தலையைக் கவிழ்த்துக் கொள்கிறாள். அவள் குலுங்குவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

“ஷ்... ரேவம்மா? என்ன இது?... நீ தைரியசாலி, கெட்டிக்காரப் பெண், எதுக்கு இப்ப?...”

அந்த உணர்வுகள் கரைய நேரமாகிறது. அவர் அவள் முகத்தைத் தூக்கிக் கண்ணீரைத் துடைக்கையில் இன்னும் பெருகி வருகிறது.

“ஷ்... ரேவம்மா, யாரானும் பார்த்தால் என்ன நினைப்பாங்க!”

“எனக்கு... எனக்குப் பயமா இருக்கப்பா... நா... மலை உச்சி விளிம்பில நின்னுண்டிருக்கேன் போல இருக்கு... நா... நான் செத்துப் போயிருக்கக் கூடாதா?...”

அவர் கைக்குட்டையால் கண்ணீரைத் துடைக்கிறார்.

“இப்படியெல்லாம் ஏன் நினைக்கிற?... உனக்கு நான் இருக்கேன். பயப்படாம இரு; உன்னை இங்க யாரேனும் ஏதேனும் கேட்டாங்களாம்மா?”

“கேட்கல. என் அந்தராத்மா கேட்கறது. கொல்லுது. நீ கட்டின புருஷன விட்டுட்டு இப்படி இன்னொரு புருஷன் கூட தனியாக இருக்கணும், பேசணும், சிரிக்கணும்னு ஆசைப் படலாமா? பாவம் பண்ணுறியேன்னு இடிக்கிறது. எனக்கு எப்பவும் உங்க கூடவே இருக்கணும் போல தாபமா இருக்கு. நான் ஏன் இப்படியானேன்...? எனக்கு அப்பா சுகம் தெரியாது; அகமுடையான் சுகமும் தெரியாது. பிள்ளை மேல் கொஞ்சம் பிடிப்பு இருந்தது. அதுவும் பொய்யாயிடுத்து. கூடப் பிறந்தவாளும் எனக்கு இல்லேன்னு ஆயிட்டுது. அப்பா... அப்பா... நீங்களும் என்னை ஒதுக்கினால்... நான் தாங்க மாட்டேன். அதுக்கு முன்ன நீங்களே என்னைக் கொன்னு போடலாம். ரெண்டுக்கு நாலு தூக்கமாத்திரையைக் கரைச்சுக் குடுத்துட்டு...”

அவர் அவள் வாயைப் பொத்துகிறார்.

“என்னைப் பேச விடுங்க ஸார்!”

“வேண்டாம் உனக்குப் பேசத் தெரியல...”

அப்படியே அவள் உட்கார்ந்திருக்கிறாள். இரைச்சலுக்கு நடுவே மௌனம். கண்ணீர் காய்ந்து போகிறது. சில்லென்று சாரல் வீசினாற் போல் குளிர்ச்சி படிகிறது.

மணி எத்தனை ஆகியிருக்கும் என்று தெரியவில்லை.

“ரேவம்மா... அவங்கல்லாம் எனக்காகக் காத்திருப்பாங்க...”

அவள் பதில் கூறவில்லை.

“அந்த நாடகங்களெல்லாம் பார்த்துட்டு, நான் பேசணும் தாயே!”

“இப்படியே மணல்ல சரிஞ்சு, தண்ணிலே விழுந்திட்டா, சாவு சுகமாக இருக்குமாப்பா!”

“உனக்கு சுகமா இருக்கலாம். ஆனா, போலீசு என் கையில் விலங்கை மாட்டிக் கூட்டிட்டுப் போய் அடைக்கும். அப்படி ஒரு நல்லது எனக்குச் செய்ய ஆசைப்படுறியா?”

“நான் இனிமேல் படிச்சுப் பாஸ் பண்ணி, கவுரவமா வேலை செய்வேன்னு நீங்க நம்பறேளா?”

“நம்பறேன்...”

“ஆனா நான் நம்பலியே?”

எப்படியேனும் அவரைத் தடுக்க வேண்டும் என்பது ஒன்றுதான் குறியாக இருக்கிறது.

“ரேவம்மா, நீ ஏன் இப்ப இப்பிடி அடம்பிடிக்கிற தெரியுமா?”

“உம்...?”

“ஒரு பொண்ணு, ஓர் ஆணை எப்போதும் சார்ந்திருக்க... நெருங்கியிருக்க ஆசைப்படுகிறாள். அது இதுவரைக்கும் உனக்குக் கிடைக்கல; இதை நான் புரிஞ்சிட்டிருக்கேன். இதே போலத்தான் ஒரு ஆணும் பெண்ணைச் சார்ந்திருக்க ஆசைப்படுகிறான். அதனாலேயே அவளைக் கொடுமைப்படுத்தறான். எப்படின்னு கேட்கிறியா? ஒரு பெண் ஆணைச் சுமக்கிறாள்; பெறுகிறாள்; பால் கொடுக்கிறாள். முதலில், அந்தத் தாய்ச் சார்பில் கண் முழிக்கும் ஆண் எப்போதும் அதற்கு அடிமையாவது போலாகிறான். ஒரு குழந்தையும் பால் குடியை விடாது. ஆனால் பலவந்தமாக அவனைப் பிரிக்க வேண்டி இருக்கு. அந்த வன்மம் அவன் பெரியவனாகி, ஒரு பெண் தனக்கு உரிமையாகும் வரை இருக்கு. கஷ்டப்படுத்துறான்...”

“அப்படிப் பார்க்கப் போனால் ஒரு பெண் குழந்தையும் இப்படித்தானே சார்ந்து இருக்கணும்...?”

“ஆமாம். அதனால் தான் எந்த ஒரு பெண்ணும் இன்னொரு பெண்ணைப் புரிஞ்சுக்கறதில்ல. பொறாமைப் படுறா...”

தன்னையே குத்துவது போல் இருக்கிறது.

“நான் பொறாமைப் படுறேனாப்பா?” சுருதி இறங்கிப் போகிறது.

“இல்லம்மா, இதெல்லாம் இயற்கையில் ஏற்படுவதுதான். இயற்கை இரண்டு பாலாரையும் ஒருவருக்கொருவர் அனுசரணையாக, ஆதரவாக இருக்கத்தான் படைச்சிருக்கு. ஒருத்தரை ஒருத்தர் வீணாக மனத்தாபப்பட்டுக் குதறிக்கிட்டா வாழ்க்கை நரகமாயிடும். நீ ஒரு தப்பும் பண்ணல. எழுந்து வா. ரூமில படுத்துத் தூங்கு... ரேவம்மா...” கனிந்த ஆதரவுடன் அவள் கைகளைப் பற்றி எழுப்புகிறார்.

மறுநாள் காலை கடலில் நீராட, மாலதியும் ஷீலாவும் தங்கச்சியும் கூட்டிச் செல்கிறார்கள். வரிசையில் நின்று கன்னியாகுமரி அம்மனைத் தரிசிக்கிறார்கள். காந்தி மண்டபம், விவேகானந்தர் மண்டபம் செல்கிறார்கள். கடலுக்கு நடுவில் பாறையில் - தியான மண்டபம், கடலிரைச்சலுக்கு மேல் மனித இரைச்சல், ஓம் என்ற அடையாளமும் விவேகானந்தரின் சிலையும், பார்க்கும் சில நிமிடங்களுக்கப்பால் மனசில் எந்தப் பாதிப்பையும் கொடுக்கவில்லை.

சுசீந்திரத்துக்குத் தங்கச்சி மட்டுமே வருகிறாள். பெரிய குளத்தில் நீராடுவது சுகமாக இருக்கிறது. ‘கோயில் முழுதும் கண்டேன்... தெப்பக்குளம் கண்டேன்... தேரோடும் வீதி கண்டேன்... அந்த தேவாதி தேவனை நான் தேடியும் காண்கிலேனே...’ என்று மனம் மந்திரிக்கிறது. தங்கச்சியோ பரம பக்தையாக, ஒவ்வொரு சந்நிதியிலும் கும்பிடுகிறாள். நெடிதுயர்ந்த ஆஞ்சநேயரின் சிலைக்குப் பன்னீர் வாங்கிக் கொடுத்துச் சேவை செய்கிறாள். வழிநெடுகிலும் அவள் பேசவேயில்லை.

அன்று ஆண்கள் பெண்கள் எல்லோருமாகப் பொதுப் பந்தியாக உணவு கொள்கிறார்கள். “ரேவம்மா, சுசீந்திரம் ஆஞ்சநேயர் பார்த்தாயோ?”

“ஓ, பார்த்தேனே?...”

“அதில் ஒரு விசேசம் கண்டாயா?”

“என்ன... என்ன விசேசம்?”

புரியவில்லை. மிக உயரம். ஏணிப்படிகளில் ஏறி பன்னீர் அபிடேகம் - மாலை சாத்தல் எல்லாம் நடத்தினார்கள்.

“பெரிதாக உயரமாக இருந்தது...?”

“தங்கச்சி ஒன்றும் சொல்லலியோ?”

ரேவு தங்கச்சியைப் பார்க்கிறாள்.

“எந்தப் பக்கம் நின்னு பார்த்தாலும் நம்மையே பார்க்கும்.”

ரேவுவுக்கு வெட்கமாக, கோபமாக வருகிறது.

தன்னை மட்டம் தட்டுகிறாரா? இதை முன்பே ஏன் சொல்லவில்லை? ஏன் எதிலும் தனக்கு மனம் பற்றவில்லை?

இறுதி நாள் உபசாரம், வரவேற்பு உபசாரம் போல் இல்லை. அவரவர் மூட்டை கட்டுகிறார்கள்.

விடைபெற்றுக் கொண்டு திரும்ப பஸ்ஸுக்கு வரும் போது, ரேவுவுக்கு மனம் லேசாக இருக்கிறது. தெரிந்தவர் அறிந்தவர் என்ற பந்தம், பயம் இல்லை. காற்றிலே மிதந்து வரும் பூவிதழ் போல் மனசு சந்தோஷப்படுகிறது.

“எனக்கு ஓரத்து ஸீட்...!”

“சரி உட்காரு...”

“இல்ல, நீங்களே உட்காருங்கோ!”

அவளுக்கென்று ஒரு பயணப்பை... அவருக்கென்று ஒரு பயணப்பை.

“நாம் நேராக மட்றாஸ் போறமா?”

“பொறுத்திருந்து பாரேன்!”

அவளுக்குப் பரபரப்பாக இருக்கிறது. எங்கோ தெரியாத இடத்துக்குப் போகிறார்களா? முன்பின் தெரியாத இடத்துக்கு...

“எந்த இடம் அப்பா? சொந்தக்காரங்க, சிநேகிதங்க வீடுன்னா, நான் வரமாட்டேன்...”

“நீ எனக்குச் சொந்தமா, சிநேகமா?”

“ரெண்டுக்கும் மேல...” மெதுவாகச் சொல்கிறாள்.

அவர் கையைத் தன் கைக்குள் வைத்து அழுத்திக் கொள்கிறாள்.

பஸ் போகும் போது, அந்தக் காலை நேரத்தில், மிக இனிமையாக இருக்கிறது. ஓரிடத்தில் குழந்தை குட்டிகளுடன் நிறையப் பெண்கள் ஏறுகிறார்கள்... அலுவலகம் செல்லும் ஆண்களும் ஏறுகிறார்கள். குழந்தையுடன் நிற்கும் ஒரு பெண்ணுக்கு இடம் கொடுக்க ரங்கப்பா எழுந்து நிற்கிறார்.

ரேவுவுக்குப் பிடிக்கவில்லை. தடுக்கவும் முடியவில்லை.

பத்து மணிக்கு நெல்லை வந்து சேர்ந்த பின், மீண்டும் பயணம் தொடருகிறது. ஓ... மலைகள் அருகே வருகின்றன. கோயில், குளம், வளைந்த பாதை...

“மிக்க நலமுடைய மரங்கள் - எந்தப் பக்கத்தையும் மறைக்கும் வரைகள்... அங்கு பாடி நகர்ந்து வரும் நதிகள்...”

அவர் தாம் அவள் காதருகே மெல்லப் பாடுகிறார்.

புல்லரிக்கிறது.

கோயிலின் முன் வண்டி நிற்கிறது. பதினோரு மணி வெயில் ஏறும் கடுமை. மரங்களிலிருந்து வால் குரங்குகள் இவர்களைக் கண்டதும் சூழ்ந்து கொள்கின்றன. ரேவு அஞ்சி அவரைப் பற்றிக் கொள்கிறாள்.

“பயப்படாதே ரேவம்மா... போயிடும் அதெல்லாம்.”

“பை, பர்சைக் கண்டா வரும்... தா...” என்று ஒருவன் ஓட்டுகிறான். மலைப்பாறைகளை உருட்டிக் கொண்டு ஆறு பளிங்காய்ப் பாய்ந்து செல்கிறது.

ஆற்றில் முழுகி எத்தனை... நாட்களாயின?

காவேரி - அகன்று மணலாக இருக்கும். இதுவோ... சுழித்து வேகமாகப் பாய்கிறது... பாறைகள்...

“இதிலே குளிக்கலாமாப்பா?...”

அவள் பரவசமாகிறாள்.

“ஆமாம்...” என்று மண்டபத்தில் பைகளை வைக்கிறார் அவர்.

அத்தியாயம் - 18

மலைப்பாதையில் பஸ் ஏறுகையில், ரேவு சுவர்க்கத்துக்கே சென்று கொண்டிருப்பதாக நினைக்கிறாள்.

இருமருங்கிலும் பசுமைகள்... இன்னதென்று சொல்லத் தெரியாத பூக்கள்; செடிகள்; கொடிகள்... மொட்டை மொட்டையாகப் பாறைகள்; இங்கே, வெள்ளி மின்னும் மின் கோபுரந்தாங்கிகள்.

ரேவு இந்தச் சொர்க்க சுகத்துக்கு ஊறு செய்ய விரும்பவில்லை. குரலே எழும்பவில்லை. மனமோ, ‘சுவாமி, நீங்கள் எத்தனை கருணையுள்ளவர்! நான் இத்தனை நாட்கள் நடந்து வந்த வெப்பம் தீர, என்னைக் குளிர் சுனையில் முழுக்காட்டுகிறீர்! எனக்கு இப்போது பந்த பாசம் எதுவுமில்லை. என்னை இதே நிலையில் இதே உணர்வில் நிலைத்து விடச் செய்யுங்கள்... எனக்கு வேறொன்றும் வேண்டாம்...’ அந்தி நெருங்கி வரும் நேரத்தில், ஓரிடத்தில் அவர்கள் இறங்குகிறார்கள். கானகத்தில் மக்கள் வாழும் குடியிருப்பு அது.

நுழைவாயிலை ஒட்டி, கெட்டியாகக் கூரை வேயப்பட்ட நீண்ட தாழ்வரை உள்ள பள்ளிக்கூடம் விளங்குகிறது. குழலெங்கும் வாழை, பலா, மா என்று கனி கொடுக்கும் மரங்கள். அகன்ற இலைகள் உள்ள தேக்கு மரங்கள். தரையில் படர்ந்த பூசணிக் கொடிகள். ஆங்காங்கு தனித்தனியான மண் சுவர்களும் கீற்றுக் கூரையுமாக விளங்கும் குடில்கள்... சிறுவர் சிறுமியர்... விளையாடும் முற்றங்கள்... கோழிகள்... நாய்கள்...

அரைமுண்டும், மேல் முண்டுமாக மூங்கில் சீவும் ஓர் இளைஞன் இவர்களைப் பார்த்து நிற்கிறான்.

“தர்மராஜ் மாஸ்டர்...”

“வாங்க...” என்று அவன் கூட்டிச் செல்கிறான்.

குடியிருப்புக்கு வெளியே, பள்ளியைக் கடந்து, சோலை நடுவே சிறு வீடு தெரிகிறது. சுற்றி வேலி. ரோஜாச் செடிகளில் ஒன்றில் பெரிய மலர் விளங்குகிறது. கொய்யாப் பூவும் பிஞ்சுமாகக் கத்திரி, வெண்டை, பாகல்.

கம்பிக் கொக்கி போட்ட வேலிக்கதவை நீக்கும் போதே ஒரு நாய் வந்து குலைக்கிறது ஒட்டு மீசையும், முன்புறம் உள்ளடங்கிப் போன கிராப்புத் தலையுமாக ‘மாஸ்டர்’ வருகிறார். லுங்கியும் மேல்சட்டையும் அணிந்திருக்கும் அவர் கண்கள் அகலுகின்றன.

விரித்த கைகளுடன் ஓடி வந்து ரங்கப்பாவின் கையிலிருந்து பையை வாங்கிக் கொள்கிறார்.

“வாங்க... வாங்க, புரொபசர் சார்!” என்று உள்ளே கூட்டிச் செல்கிறார். “வாங்கம்மா, வாங்க...”

முன்னறைத் தரை வழுவழுவென்று மண் பூசப்பட்டுக் கறுப்பாகப் பளபளக்கிறது. புதிதாக வெள்ளை பூசப்பட்ட சுவரில் மரமுளைகளில் சட்டை, சராய் துண்டு மடித்துப் போடப்பட்டிருக்கிறது. மெழுகுவர்த்தி விளக்கு, ‘அன்பே கடவுள்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ஒரு ஜிகினாப்படம். அவருடைய பெற்றோர் போல் விளங்கும் ஒரு படத்தில் பட்டு நூல் மாலை விளங்குகிறது. நாடா பின்னப்பட்ட கட்டிலில் பாயை விரித்து உபசரிக்கிறார். அந்த இளைஞனிடம், “இவர் என் அப்பா போல, அவருடன் சிறையில் இருந்தவர்...” என்று கூறி, ஒரு செம்பை உள்ளிருந்து எடுத்து வந்து, “இதில் கொஞ்சம் பால் வாங்கி வா... பவர் அவுஸ்க்கு அந்தால போயிப் பாரு...” என்று கொடுக்கிறார்.

“உங்க மக இல்ல...?”

“அது கட்டிக் குடுத்தாச்சு சார், நாலு வருசமாச்சு. இப்ப ஆறுமாசப் புள்ள இருக்கு. இங்கதா, இந்த மலைக்கு அந்தப் பக்கம், எஸ்டேட் ஸ்கூல்ல வேலை செய்யிது. மருமகன் டிரான்ஸ்போர்ட் பஸ் டிரைவரா இருக்கிறான்...”

“அட... ரெட்டைப் பின்னல் கவுன் போட்டுட்டு நான் முன்ன நீ அங்க கூட்டிட்டு வந்தப்ப பார்த்த மகதானே? அதுக்குள்ளவா?...”

“நீங்க பாத்து ஒம்பது வருசம் ஆச்சு ஸார்... வீட்டில் அம்மா சுகமா? இவங்கதா மகளா?”

“ஆமா, டிராமா கேம்ப்னு வந்தோம். நீங்க போன வருஷம் வந்தப்பக்கூட, அட்ரஸ் குடுத்து வாங்கன்னு கூப்பிட்டீங்க. இந்தக் காடு, மலை, ஆறு, அருவி எல்லாம் நல்லாருக்கும்னு, இவளைக் கூட்டிட்டு வந்தேன்...”

“இவங்கதா அமெரிக்காவில் இருக்காங்களா?”

“இல்ல, இது தங்கச்சி மக... ஏங்கூடதா இருக்காங்க இப்ப...”

“ரேவம்மா, தர்மனின் அப்பா, அந்தக் காலத்தில் இந்தப் பக்கம் ஒரு பிரைமரி ஸ்கூலில் மாஸ்டராக இருந்தார். இங்க இந்த ஆதிவாசிகளுக்கு அவர் எத்தனையோ சேவை செய்திருக்கிறார். இவம்மாவும் டீச்சர் தான். ரெண்டு பேருமே சுதந்தரப் போராட்டத்தில் ஜெயிலுக்குப் போனவங்க. இவரைத்தான் கைக்குழந்தையாத் தூக்கிட்டு சிறைக்குப் போனார் அம்மா...”

தர்மராஜா சிரிக்கிறார்.

“அப்பாவ மாஸ்டர்ன்னது, எனக்கும் அந்தப் பேராயிட்டது...”

“நீங்க பவர் அவுஸ்லதான வேலை செய்யிறீங்க?...”

“ஆமா ஸார். முதல்லல்லாம் மாத்திட்டே இருந்தாங்க. ஜோதி கீழதான் செயின்ட் மேரிஸ்ல படிச்சி, டீச்சர் டிரெயினிங் எடுத்திச்சி. இப்ப முத்தாறு எஸ்டேட்ல வேலைக்குப் போயி மூணு வருசமாச்சி. எனக்குப் பக்கத்துல இருக்கு. அங்க லயன்ல வீடு குடுத்திருக்காங்க. என், ஒரே கஷ்டம், மருமகனுக்கும் தாய், தகப்பன் மனுசா இல்ல. இங்கியும் யாரும் இல்ல. அது புள்ளய வச்சிட்டு ஒத்தையில சிரமப்படுது. ஆளு யாரும் இங்கேந்தும் போறதுக்கில்ல. அங்கியும் இல்ல...”

அவர் உள்ளே சென்று ஒரு தட்டு நிறைய முறுக்கும், ஒரு வாழைப்பழச் சீப்பும் எடுத்து வருகிறார்.

“சாப்பிடுங்க ஸார்! சாப்பிடுங்கம்மா!”

ரங்கப்பா முறுக்கை எடுத்துப் பிட்டவாறே, “சாப்பிடு ரேவம்மா!” என்று சொல்கிறார். ரேவு ஒரு முறுக்கை எடுத்து விண்டு வாயில் போடுகிறாள். பொரபொரவென்று மிக ருசியாக இருக்கிறது. சீரகமும் ஓமமும் மணக்கிறது.

“இது... எப்படிப் பண்ணுறாங்க?”

“மக கொடுத்தனுப்பிச்சிச்சம்மா. மாப்பிள மேலுக்கும் கீழுக்கும் பஸ்ல போறவர்தானே? இந்தப் பக்கம் வர பஸ்ல இப்படி எதிம் குடுத்தனுப்புவாரு. நல்ல பையன். ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. அப்பா தெரியாது. அம்மா இங்க டாம் ஸைட்ல கூலி வேலை செஞ்சிட்டிருக்கையில் யானை மிதிச்சி செத்துப் போனா. இவன நான் தான் அரிஜன் ஆஸ்டலில் சேர்த்துப் படிக்க வச்சது. ஜோதிக்கு இஷ்டமாயிருந்திச்சி. கட்டிக் குடுத்திட்டேன். உங்களுக்கு சிரமம் இல்லேன்னா, நாளைக்கிப் போகலாம் ஸார். அம்மாவும் பாத்தாப்பில இருக்கும். அது சந்தோசப்படும்...”

“ஓஷூர். போகலாமே? நாங்க இங்க தங்கி எல்லாம் பார்க்கணும்னுதான் வந்திருக்கிறோம்...”

“லைன்ல வீடு சவுரியமாயிருக்கு. மூணு டீச்சர் இருக்காங்க. ஒரு டீச்சர் கல்யாணமாகாதவங்க. இன்னொரு டீச்சர் புருஷன் பொஞ்சாதியா இருந்தாங்க. அவுரு ரிடயர் ஆயிட்டாரு. மாப்புள்ள ஒரு நா மேல தங்குவாரு. ரெண்டு ட்ரிப் போக வேண்டியிருந்தா கீழ தங்கிடுவாரு... கிரீச்ல வுட்டுட்டுப் போவுது. ஸ்கூல் மேல இருக்கு. தாய்ப்பால் கூடக் குடுக்கறதுக்கில்ல...”

‘குழந்தைப் பார்த்துக் கொள்ள ஆளில்லாக் குறையைச் சொல்கிறாரே? இவர் மனைவி இல்லையா?’

ரேவுவுவின் மனசில் வினா எழுகிறது. ஆனால் ரங்கப்பா கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்த வீடும், இயற்கையோடிணைந்த சுற்றுப்புறமும் மிக நன்றாக இருக்கின்றன. ஓர் அலுமினியம் குண்டானில் சோறு வடித்து, சட்டியில் காய்களைப் போட்டு ஒரு குழம்பு அவரே காய்ச்சுகிறார்.

“இங்கே இருக்கும் ஆதிவாசிகள் உழைப்பாளிகள். இப்போதெல்லாம் இங்கு படிக்காதவர்களே இல்லை. கபடம் இல்லாதவங்க. எனக்கு இங்கேயே இருந்த பின் கீழே போனாலும் பிடிப்பதில்லை...” என்று கூறுகிறார் தருமர்.

ரேவு இந்தச் சூழலில் வாழ்வதைப் பற்றிக் கற்பனை செய்கிறாள்.

‘இங்கே ஆண் பெண்ணை ஒடுக்கமாட்டானா? ஒருவரைப் பற்றி மற்றவர் வம்பு பேசமாட்டார்களா? சண்டை கிடையாதா?’

வாழை இலையில் மூவரும் உணவு கொள்கிறார்கள். அவள் இலையை எடுக்க முற்படுகிறாள்.

“நீங்கள அதெல்லாம் செய்ய வேண்டாம். கை கழுவிக்கிங்கம்மா!” என்று பின்பக்கம் மறைவிடம் செல்ல ஒரு டார்ச் விளக்கை அவளிடம் கொடுக்கிறார் தருமர்.

வாசல் குறட்டில் உட்கார்ந்து ரங்கப்பாவிடம் பல விஷயங்கள் பேசுகிறார். அரசியல், தேசியக் கல்வி, ஆதிவாசி நலம் என்று பல செய்திகள்.

ரேவுவுக்குக் கன்னியாகுமரியில் இருந்த போது ஏற்பட்ட பொருந்தாமையும் பரபரப்பும் இங்கு இல்லை.

அவர்கள் பேசும் போது, அவள் எதிரே தெரிந்த கானகங்களைப் பார்த்தவாறு அமர்ந்திருக்கிறாள். வானில் இரண்டொரு நட்சத்திரங்கள் தெரிகின்றன. காடு... அமைதி...

எங்கோ மெல்லிய குரலில் யாரோ பாடும் ஒலி கேட்கிறது.

கரும் பாய் விரித்தாற் போன்ற அமைதி. அதன் பின்னணியில் ஒலிப்பூக்கள்... மெல்லிய கோலங்கள்...

மனம் அப்படியே ஒட்டிக் கொள்கிறது. பகலில் பார்த்த கோலங்கள் உயிர்க்கின்றன. இறையும் அருவிகள் காடுகள்... தன்னிச்சையாக இவள் எந்த பந்தமுமின்றி உலவுகிறாள். பசி, தாகம், உடல் என்ற உணர்வு, எதுவும் எதுவுமில்லாமல்... மரத்துக்கு மரம் தாவும் திறன், மலை முகட்டில் சாய்ந்து காலம் என்ற எல்லை கடந்து ஒன்றும் சுகம்... எதை எதையோ கற்பனை செய்கிறது.

“ரேவம்மா? குளிரல உனக்கு? வெளியில் நிற்கிறாயே?...”

“உம்...? இல்லப்பா... இங்க ரொம்ப நல்லாயிருக்கு.”

“படுக்கப் போகலாமா? தூக்கம் வரல? என்ன மணியாச்சு?”

“பத்தரை இருக்கும். இங்கே ரேடியோ, டி.வி. எதுவும் கிடையாது. அங்கே என்ன பாட்டுச் சத்தம் போல கேட்குது?”

“அதுவா, உள்ளே பெருமாள் காணி பாடிட்டிருப்பார்... பரம்பரையாக, இவங்களில் தெய்வ பூசை, பேய் பிசாசு ஓட்டும் சடங்குப் பாடல் எல்லாம் தெரிஞ்சவங்களில் ஒரு பெரியவர். இப்ப தலைமுறைகள் மாறிப் போச்சு... அவர் சும்மாவும் பாடிட்டிருப்பார். சடங்காகவும் பாடலாம்...”

“அவங்க சமுதாயத்தில் சில சட்டதிட்டங்கள் இருக்கு. வெளியே எதையும், யாரையும் சாராமல் தங்கள் தேவைகளைத் தாங்களே பூர்த்திச் செய்து கொண்டு இயற்கையுடன் வாழ்ந்த சுதந்தரமான பழங்குடிகள். காட்டில் ஒரு மரம் விழுமுன் இன்னொரு மரம் வைத்து, செல்வத்தை பெருக்கியவர்கள். சுள்ளிகள், வீழ்ந்த மரக்கிளைகளை எரிபொருளாக எடுத்துக் கொண்டார்கள்; தேன் எடுத்தார்கள். காயும், கனியும், திணை போன்ற தானியங்களையும் நிலத்தில் உழைத்துப் பெற்றார்கள். ஆற்றில் மீன் உணவு கிடைத்தது. உணவு, இருப்பிடம் எல்லாமே காடு கொடுத்தது. வனவிலங்குகளையும் அழித்ததில்லை. முற்காலத்தில் வில் அம்பைப் பயன்படுத்து, சிறு மான், பன்றி போன்ற விலங்குகளை உணவுத் தேவைக்குப் பெற்றாலும், பெண் விலங்குகளை அவர்கள் கொல்ல மாட்டார்கள். இப்போது வில் நம்பு நாகரிகம் போய்விட்டது. துப்பாக்கி வெடி மருந்துகளும் இல்லை. எனவே அத்தகைய விலங்குகள் பயிரை அழிக்க வரும் போது சிக்கினாலே அபூர்வமாக இரையாகும். கோழி வளர்க்கிறார்கள். ஆடு மாடுகளும் அபூர்வமாகவே வளர்க்கிறார்கள். ஏனென்றால் வனத்துறைக் கட்டுப்பாடுகள் இப்போது மிக அதிகம். கீழே படிக்கப் போய், நாகரிகம் பெற்ற சிலர், பெண்களும் கூட வேறு சமூகத்தில் திருமணம் செய்து கொண்டு விடுகிறார்கள். அவர்களை இவர்கள் உள்ளே அநுமதிப்பதில்லை. சமூக விலக்கு இருக்கிறது.”

“ஒருவகையில் இது சரின்னு படுது ஸார்...”

“ஏன்?”

“ஏன்னா, அவன் தேவை அதிகமாகுது. உழைக்காமல் ஊதியம் பெறும் வாழ்க்கை பழக்கமாவதால், இங்கே அநாகரிம்னு நினைக்கிறான். கூசுறான். டி.வி., சினிமா, பகட்டான ஆடைகள், ஆடம்பரங்கள் நாகரிகச் சின்னங்களாக நினைக்கிறார்கள். கிழங்கு வெட்டுவதும், மீன் பிடிப்பதும், மூங்கில் வலை பின்னுவதும், தட்டி முடைவதும், மண் வெட்டுவதும் அவனுக்கு நாகரிகங்களாக இல்லை. இப்போது ஆணும் பெண்ணும் சமமாக இருக்கிறார்கள். சீதனம், வரதட்சணை எதுவும் இல்லை. பெண் சிசுக்கொலை, அது இது என்று எந்த அதீதமான ஒழுக்கக் குலைவுக்கும் இடமில்லை. இதெல்லாம் நம் படிப்பும் நுகர்பொருள் நாகரிகங்களும் வரும்போது கூட வருமே?...”

“அப்படியானால் கல்வியே வேண்டாமா? என் பையன் சினிமா பார்த்துக் கெட்டுப் போகிறான். அதனால் அவனுக்குக் கண்பார்வையே வேண்டாம்னு ஒருத்தன் வரம் கேட்டானாம். அப்படியல்லவா இருக்கு?”

“இல்ல, இவங்க எல்லாரும் எழுதப் படிக்கத் தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறாங்க. சிறார் படிப்பை நிறுத்தி, தேயிலைத் தோட்டத்துக் கூலிக்கு அனுப்புறதில்ல. இவங்களுக்குள்ளே பச்சிலை மருந்து, பாரம்பரியமான வழக்கு, வைத்தியம், பஞ்சாயத்து நீதி - எல்லாம் இருக்கு. அவங்க பிரச்னைகளை அவங்களே தீர்த்துக் கொள்ளும் நெறிமுறைகள் இருக்கு. இதனால் இங்கே எந்தப் பிரச்னையுமில்ல. முற்போக்கான கொள்கைகளை அவங்க ஏத்துக்கறாங்க. அவங்க என்ன செய்வாங்களோ, எப்படியோ, மூன்று, இரண்டு குழந்தைகளுக்கு மேல் இல்லை. நாளைக்குப் போய் பாருங்கள், ஆரோக்கியமாகவே பெண்கள் இருக்கிறாங்க...”

ரேவுவுக்குக் கேட்கக் கேட்க வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது. அன்றிரவுக்கு அவள் கட்டிலிலும் அவர்கள் இருவரும் கீழே சற்று எட்டியும் படுத்து உறங்குகிறார்கள்.

மறுநாட் காலையில் குடியிருப்புகள் சென்று இயற்கை வாழ்வு வாழும் பழங்குடிகளைப் பார்க்கிறார்கள். ‘மாஸ்டரின் மாஸ்டர்’ என்ற அறிமுகத்தில் தேனும், தினைமாவும், பழங்களுமாக விருந்தோம்பலை ஏற்கிறார்கள். அருவியோரம் தங்களை மறந்து அமைதி இன்பத்தில் திளைக்கிறார்கள்.

அடுத்த நாள் அதிகாலையிலேயே அவர்கள் மூவரும் மகள் வாழும் தேயிலைத் தோட்டச் சூழலுக்குப் புறப்படுகிறார்கள்.

கீழே இறங்கி, வேறொரு ஊரில் இருந்து மீண்டும் மலையேற வேண்டும். பஸ் நிறுத்தத்தில் காலை ஒன்பது மணிக்கு இவர்களைப் பார்த்ததும், நடத்துனராக இருக்கும் ஒருவர் விரைந்து வந்து மாஸ்டரை வணங்குகிறார். “மாஸ்டர் ஸார்? மக வீட்டுக்கா? இந்த ட்ரிப்லதா மணியும் நானும் வாரோம்...?”

“நா நேத்து பாண்டியன் கிட்ட லெட்டர் குடுத்தனுப்பிச்சேன்...”

“வாங்க...”

கசகசவென்று மக்கள் நெருங்கி, மூட்டையும் கூடைகளுமாக மேல் குடியிருப்புக்குச் சாமான் ஏற்றுகிறார்கள்.

அப்போது ஓரத்து மருந்துக் கடையில் இருந்து ஏதோ மருந்து வாங்கிக் கொண்டு ஓடி வரும் காக்கிச் சட்டைக்காரர் அவர் தாம் மருமகப்பிள்ளையோ?... சிவப்பாக, அரும்பு மீசையுடன், சினிமாக் கதாநாயகன் போல் காட்சியளிக்கிறான்.

“வணக்கம் மாமா, இப்பதா சைகிள் ஷாப்பில் தேவாவைப் பார்த்தேன். பாண்டியன் லெட்டர் குடுத்ததைச் சொல்லிக் கொடுத்தான். ரொம்ப சந்தோஷம். வாங்க... முன்சீட்டில் வந்து உட்காருங்கம்மா... முன் பக்கமா வாங்க...”

மாத்திரைகள், மருந்து அடங்கிய பையை, ஓட்டுனர் இருக்கைக்கு அருகில் உள்ள துணிப்பையில் வைக்கிறான்.

மூட்டையின் மீது கால் வைத்து, முன் பக்கம் இருக்கையில் மூவரும் வசதியாக உட்காருகிறார்கள்.

“இங்கே இருந்துதான் மலை மேல் உள்ள குடியிருப்புக்களுக்குச் சாமான்கள் போக வேண்டும். அதனால் எல்லாமும் ஏற்றிக் கொண்ட பின் புறப்படும்...”

வண்டி கிளம்ப அரைமணியாகிறது.

மாமனாரும், அவர் சிநேகிதர்களும் அபூர்வமாக விருந்தாளிகளாக வருகிறார்கள் அல்லவா?

இனிப்பு, கார வகைகள், அப்பளம், அபூர்வமாகக் கிடைக்கும் பழங்கள், பால்பொடி என்று சாமான்களை நிறைத்து விட்டான்.

வண்டி கிளம்பி சமதளத்தில் ஓடி அணைக்கட்டுப் பக்கம் பாறையில் ஏறுகிறது. அங்கே அருவி கொட்ட, நீராட வசதி தெரிகிறது.

“இங்க குளிக்கலாம். திரும்பி வாரப்ப, நீங்க இங்க இறங்கிக் குளிச்சிட்டு, அடுத்த பஸ்ல ஏறிட்டு டவுனுக்குப் போயிடலாம்...” என்று கூறுகிறார்கள்.

அந்த மலை ஏற்றத்தில் இல்லாத வளமையை ரேவு பார்க்கிறாள். குளிர்ந்த காற்று சுகமாக வருகிறது. இங்கு மொட்டைப் பாறைகளே தெரியாத அடர்ந்த பசுமை. மூங்கில்கள்... பெரிய பெரிய இலைகளுடன் தேக்கு கீழே ஏதோ ஆறோ அருவியோ ஓடுவது தெரியாத பசுங்காடு, அகல அகலமான தழைகள் கொண்ட புதர்கள்... தாழை போன்ற புதர்கள்.

கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தாக விரிகின்றன.

“இந்தக் காடுகளில் புலிகள் இருக்குமோ?”

“இருக்கும். சிங்கம் தவிர எல்லா விலங்குகளும் உண்டு.”

“யானைகள்?”

“உண்டு. கீழே பாருங்கள். அடர்த்தியாக, பள்ளம் - தண்ணீர் தெரியல? யானைகள் இருந்தால் தெரியாது. இங்கே முன்பெல்லாம் இரவிலும் ஒரு ட்ரிப் பஸ் வருவதுண்டு. இப்போது வனவிலங்குகளுக்கு இடைஞ்சலாகும்னு, இரவு ஏழரையுடன் பஸ் மேலே நின்றுவிடும். காலையில் தான் எடுப்பார்கள்.”

“அதான் நம்ம டிரைவர் சாருக்கு வசதி. வீட்டில் தங்க முடியும்...”

முழு வனங்கள் முடிந்து பசும்பாயலாக தேயிலைத் தோட்டங்கள் விரிகின்றன. இடை இடையே வெள்ளி போல் தோகை மினுக்கும் மரங்கள், பரந்த பாவாடையை விரித்துக் கொண்டு அமர்ந்து தோற்றும் தேயிலைச் செடிகளுக்குக் காவலர் போல் நிற்கின்றன. குறுகிய பாதையில் முக்கி முனகி பஸ் மெல்ல ஏறுகிறது.

சரிவுகளிலும், பள்ளங்களிலும், அங்கிங்கெனாதபடி தேயிலைச் செடிகள். ரேவு இப்படி ஓர் உலகம் இருக்கும் என்று கற்பனை கூடச் செய்ததில்லை. பஸ் விளிம்பில் வளைந்து திரும்பி, மேலே ஏறும் போது, அந்த ஓட்டுனரை அவள் பார்க்கிறாள். இத்தனை மனிதர்களையும் இவர்கள் குடும்பங்களின் வாழ்க்கை இலட்சியங்கள், ஆசை அபிலாஷைகள் எல்லாவற்றையும் அவன் தம் பொறுப்பாய் ஏற்று இந்த வண்டியை ஓட்டுகிறான். எத்தனை உயர்வான வேலை!

ஓரிடத்தில் வண்டி நிற்கிறது. அஞ்சல் அலுவலகம், சிறு தேநீர்க்கடை... பயணிகள் இறங்குகிறார்கள். சாமான்கள் இறங்குகின்றன... தேநீரருந்த இறங்குபவர்களும் இருக்கிறார்கள்.

“மணி, மெடிஸின் வாங்கிட்டு வந்திருந்தா, டீச்சரம்மா வாங்கிட்டு வரச்சொன்னாங்க...” ஒரு கிழவர் வந்து நிற்கிறார்.

அவன் தன் துணிப்பையில் கைவிட்டுத் தேடி இரண்டு மாத்திரைப் பரல்களையும் சிறு புட்டிச் சொட்டு மருந்தையும் தருகிறான். பில்லும் பணமும் கைமாறுகின்றன.

“நல்லவேளையப்பா... புள்ள மூச்சுத் திணறிட்டிருக்கு. இந்த மருந்து கிடக்கலன்னா, என்ன செய்வமோ? ஆண்டவன் உன்னிய நல்லா வைக்கட்டும்!”

பஸ் இவர்களை அந்தக் குடியிருப்பில் இறக்குகையில் பகல் இரண்டு மணி.

“மாமா, இன்னிக்கு எனக்கு ட்ரிப்பாயிட்டுது, நாளைக்கி ஃப்ரீ... ஜோதிகிட்டச் சொல்லுங்க!” என்று சாமான்களை எல்லாம் எடுத்துக் கொடுக்கிறான் மருமகன். பாதையில் பஸ் வளைந்து செல்கிறது.

தேயிலைச் செடிகளுக்கு நடுவே படிகள். பார்க்குமிடமெல்லாம் பசுமை. கீழே பளிங்காய் ஓர் ஓடை செல்கிறது. சிறிய மரப்பாலத்தில் அதைக் கடக்கையில், ரேவு அதில் உள்ள மீனைப் பார்த்தவண்ணம் நிற்கிறாள். ஓடையின் பக்கங்களில், புனல்போல விரியும் வெள்ளைப் பூக்கள்... கூர்ச்சாய்த் தெரியும் சிவப்பு மொட்டுக்கள்... அவள் இத்தகைய பூக்களைப் பார்த்ததேயில்லை. நடக்க மட்டும் இடம் விட்டு, தேயிலைச் செடிகளை பயிராக்கி இருக்கின்றனர்.

மேலே வரிசையாக நாலைந்து வீடுகள் தெரிகின்றன.

மறுபடியும் படிகளேறி, ஓங்கி உயர்ந்த மரங்களுக்கு இடையே, அந்த வீடுகளுள்ள சுற்றுக்குள் செல்கிறார்கள்.

ஒரே ஒரு வீடுதான் திறந்திருக்கிறது. வாசலில் கொய்யா மரம்... பல நிறங்களில் பூக்கும் செம்பருத்தி இனச் செடிகள்... கீழே அடர்த்தியான புல்... வேலைகளில் படர்ந்த ரோஜாக் கொடிகள்...

ரேவு அங்கு நின்று அந்த அழகை அப்படியே பார்த்துக் கொண்டிருக்கையில் மாஸ்டரின் மகள் ஓடி வருகிறாள்.

“அப்பா...! ஆண்டவனே உங்களை இங்கு அனுப்பினார்” என்று கண்ணீர் துளும்பக் கூறுகிறாள்.

“என்ன... என்ன ஆச்சு, மகளே?... ஓ... ஏம்மா?...”

அவள் வந்தவர்களையே பார்க்காமல் அவரை உள் அறைக்கு அழைத்துச் செல்கிறாள். ரேவுவை ஏதோ ஓர் உந்தல் உள்ளே அவரைத் தொடரச் செய்கிறது.

கட்டிலில் பூங்குழந்தை ஒன்று படுத்திருக்கிறது. கம்பளிச்சட்டை, குல்லா... காய்ச்சல்... முச்சுத் திணறுகிறதோ? வயிறு உப்பி இருக்கிறதோ?

“அவங்க நேத்து ஷிஃப்ட் அங்க நைட். கீழே தங்கிட்டாங்க. நேத்து புள்ள நல்லா விளையாடிட்டிருந்திச்சு. ஆனா சாயங்காலத்துக்கப்புறம் உடம்பு சுட்டிச்சி. நா... வச்சிருக்கிற மருந்தைக் குடுத்தேன். ராவெல்லாம் தூங்கல. அழுதிட்டே இருந்திச்சி. காலயிலேந்து பால் குடிக்கல. கண்ணு முழிக்காம இருக்கு. இன்னிக்கி ஸண்டே. டாக்டரும் இருக்க மாட்டாங்க, கீழ கூட... அப்பா... புள்ளையப் பாருங்க...”

குழந்தை போலிருக்கிறாள்... இவளுக்கு ஒரு குழந்தை.

ரேவு அருகில் செல்கிறாள். அதன் வயிற்றைப் பார்க்கிறாள்.

“கவலைப்படாதேம்மா, ஒண்ணில்ல. குழந்தை வெளிக்குப் போச்சா?”

“அது... தினம் போறதில்லீங்க. ஒண்ணு விட்ட ஒரு நாள் தான் போகும். இப்ப... முந்தாநா நான் ஸ்கூலுக்குப் போகுமுன்ன புள்ளக் கொட்டடில போச்சு. அதுனாலதா இப்பிடியா?...”

ரேவு குழந்தையை எடுத்து வைத்துக் கொள்கிறாள். ஏழெட்டு மாசம் இருக்கும். சுருட்டையான முடி. தகப்பனைப் போல் நல்ல நிறம். அழகான பெண் குழந்தை.

“பயப்படாதீங்க... காய்ச்சின வெந்நீரும், பாலும் கலந்து சர்க்கரை போட்டுக் கொண்டாங்க...”

“குடுத்தேன். பாட்டிலே வாயில் வைக்க விடலீங்க...”

“பாட்டில் வாணாம். ஒரு ஸ்பூன் போட்டுக் கொண்டாங்கோ.” ரேவு அதை எப்படியோ புகட்டுகிறாள்.

“விளக்கெண்ணெய் மாதிரி ஏதேனும் வச்சிருக்கிறீங்களா?”

“...இருக்குங்க...”

வெற்றிலை... நல்லவேளையாக வாங்கிக் கொடுத்தனுப்பியுள்ளார் மருகர்.

வெற்றிலைக் காம்பில் விளக்கெண்ணெய் தொட்டு, குழந்தையின் மலமிளக்கும் வைத்தியத்தை ரேவு செய்கிறாள். பரத் இப்படித்தான் இருப்பான். கடன்காரன்...

சிறிது நேரத்தில் குழந்தையின் சிக்கல் நீங்கி, சிரிக்கிறது.

“தாய்ப்பால், குடுக்கிறீங்கல்ல?”

“இல்லம்மா. ஸ்கூலுக்கும் கிரீச்சுக்கும் கிட்டத்தில் இல்ல. மலை ஏறி வரணும். எனக்கு வர்றதுக்கு நேரம் இருக்கிறதில்ல. சில நாளைக்கிக் கட்டிப் போவும். மேலே கொண்ஆந்து புள்ளயக் கொடுக்க வசதி இல்லீங்க; அதனால் அதுக்குப் புட்டிப்பாலேதான் மூணு மாசமா பழக்கப் பண்ணிருக்கிறேன்...”

“கூட யாருமே இல்லியா?”

“பிரசவம் கழிச்சி, இங்கதா சவுரியம்னு வந்திட்டேன். அப்ப ஸ்கூல் லீவு இருந்திச்சி. கீழ எஸ்டேட் ஆஸ்பத்திரி இருக்கு. ஒரு கிழப் பொம்புள அப்ப இருந்தாங்க. அவங்க மக வீட்டுக்குப் போகணும்னு போயிட்டாங்க. இங்க ஆளு கிடய்க்கிறது கஷ்டம்... நீங்க... தெய்வம் போல வந்தீங்கம்மா, எனக்கு ஒண்ணும் தெரியறதில்ல. இங்க இருக்கிற இன்னொரு டீச்சர், கலியாணமே ஆகாதவங்க. ஆம்புள ஆளுகதா வருவாங்க. புள்ளக்கி என்னன்னு அவங்க எப்படிச் சொல்வாங்க?”

.....

ரேவு குழந்தையைப் பார்த்துக் கொஞ்சி விளையாடுகிறாள். சுற்றுச் சூழலே மறந்து போகிறது. மாஸ்டரும், ரங்கப்பாவும், சமையல் செய்வதையும், ரொட்டி பழம் என்று கொண்டு வைத்து ஜோதி உபசரிப்பதையும் ஒவ்வாததாகவே நினைக்கவில்லை.

“சின்னப்பொண்ணு...? குஞ்சுக்குட்டி?... தொப்பை வலிச்சிச்சா?” என்று கொஞ்சி முத்தமிடுகிறாள். அதன் செப்பு வாயை, குஞ்சுக் கைகளைத் தொட்டு ஆட்டி மகிழ்கிறாள்.

“இனிமே இவள நான் பாத்துக்கறேன். ஆமா... நான் பார்த்திக்கிட்டு, மரமே, செடியே, மலையே, பூவேன்னிருப்பேன். ஆமாம்... ஆமாம்...” இவள் சொல்லச் சொல்லக் குழந்தை கலகலவென்று சிரிக்கிறது.

“உங்கள மாதிரி யாரானும் இருந்துட்டா, நான் தெய்வமேன்னு இருப்பேன்மா! நாங்க பேரும் அதிர்ஷ்டக்கட்டைங்க... சாப்பிடுங்கம்மா...” என்று ஜோதி பழங்கள், முறுக்கு, பிஸ்கோத்து எல்லாவற்றுடனும் காபியையும் வைத்து உபசரிக்கிறாள்.

“இந்தக் குட்டி தேவதையை வச்சுக்கக் கசக்குமா? ஜோதிம்மா! எனக்கு இவளப் பாத்துக்கிற ஆயா வேலை குடுத்திடுங்க. இவளுக்குப் பால் குடுக்க, நான் அஞ்சு மலை ஏறிக் கொண்டு வருவேன். என்ன மாஸ்டர்?”

ரங்கப்பா அவளை வியப்புடன் பார்க்கிறார்.

இப்படி ஒரு வாய்ப்பு நடக்க முடியாததாகவே தோன்றவில்லை. இந்த உலகில் கபடம் படியாத - அழுக்கு ஒட்டாத இடங்களும் இருக்கின்றன. அந்தப் பிள்ளை, இவளை வேண்டாம் என்று சொல்லமாட்டான். எங்கோ பெண்கள் விடுதியில் சமைத்துப் போட்டுக் கொண்டு, படித்து...

‘சை! அழகான பெண் குழந்தை. ஒரு பெண் குழந்தை வேண்டும்’ என்று அந்நாள் பரத்தைச் சுமந்த போது ஆசைப்பட்டாள். இப்போது மார்பில் பால் சுரப்பது போல் இன்ப அநுபவம் உண்டாகிறது.

‘ரங்கப்பா என்ன நினைப்பார்? மாஸ்டர்...’

‘ஆமாம்? மாஸ்டரின் மனைவி, இவளுடைய தாய் இறந்து போய்விட்டாளா? ஒரு படம் கூட இல்லையே?’

திருச்செந்தூர் முருகன், ஒரு பிள்ளையார், ஒரு சரஸ்வதி, லட்சுமி படங்கள் இருக்கின்றன. குத்துவிளக்கு ஏற்றி இருக்கிறாள். பின்னே, அருவி நீர் குழாயில் எப்போது கொட்டுகிறது. சில்லென்று இருக்கிறது. விறகடுப்பில் சமையல் செய்கிறார்கள். அலுமினியம் குண்டான், சட்டி போன்ற கலங்களையே அடுப்பில் வைக்கிறார்கள்.

“உங்க டவுன் போல இருக்காதுங்க. இங்க விறகு கிடைக்கும். சமையல் செய்ய இதுதானுங்க சரி. ஸில்வர் பாத்திரம் இருக்குங்க... ஆனா, சாப்பிட, கொள்ள... மட்டும்தான்” என்று ஜோதி சொல்லும்போது, வெட்கப்படுவது போலிருக்கிறது.

“இதுதாம்மா நல்லது. நான் சின்னவளா இருக்கறப்ப, எங்கம்மா கல்சட்டியில் தான் குழம்பு காச்சுவாங்க, மோர் வைப்பாங்க. மண்சட்டியில் சோறு வடிச்சாலும் குழம்பு காய்ச்சினாலும் வாசனையாக இருக்கும்...” என்று ரேவு உற்சாகமாகச் சொல்கிறாள்.

ஏழரை மணிக்கு மணி வேலை முடிந்து வந்து விடுகிறான்.

சாப்பிட்டு முடித்த பின் வெகுநேரம் நெடுநாள் பிரிந்து வந்த உறவினர் போல் பேசுகிறார்கள். மணி தன் வண்டியோட்டும் அநுபவங்களைச் சொல்கிறான். யானைக் கூட்டம் கடந்து போனது, சிறுத்தைப்புலி, காட்டுப்பன்றி எதிர்ப்பட்டது, காடுகளில் திருட்டுத்தனமாக மரம் வெட்டிச் செல்லும் பெரிய கைகள், தந்தங்களுக்காக யானை வேட்டையாடப்படும் விவரங்கள் என்று சுவாரசியமாகப் பேசுகிறான்.

“ஆன்ட்டி, இவர் சொல்றது எல்லாம் உண்மைன்னு நம்பிடாதீங்க, பாதி ரீல் விடுவாரு...” என்று ஜோதி கிண்டுகிறாள்.

“இல்லங்க... இவகிட்டச் சொன்னா பயந்துப்பான்னு சொல்றதில்ல. இந்த வேலை வேணாம், விட்டுப்போட்டு, எதுனாலும் வியாபாரம் பண்ணிப் பிழைக்கலாம்பா. அது ஒரு வாழ்க்கையா?... வியாபாரம்னா, ஏமாத்துப் பிழைப்புத்தான். இப்ப... எவ்வளவு அர்த்தமிருக்குது இந்த வாழ்க்கையில்? நாலு பேருக்கு நாம் ஒத்தாசை பண்ண முடியிது. சும்மா சொல்லக் கூடாதுங்க. நம்ம துரை அண்ணனும் ரொம்ப நேர்மை. கண்டும் காணமயும் மூட்டைக்காரங்ககிட்ட சம்பாதிச்ச துட்டைக் குடிச்சிட்டுக் கொண்டாட்டம் போடும் ஆளுங்க போல கெடையாது. இந்த அபாயத்தில், தருமந்தாங்க நம்மக் காப்பாத்துது...?”

அந்த வரிசையில் இருக்கும் இன்னொரு ஆசிரியர் வீட்டைத் திறந்து, அவர்களுக்குப் படுக்க வசதி செய்கிறார்கள்.

சில்லென்ற - நிசப்தமான அமைதி. குளிர் தெரியாத கதகதப்பான பத்திரமான அறை. படுக்கை.

ரேவுக்கு மனக்கிளர்ச்சியில் உறக்கம் பிடிக்கவில்லை.

துன்பத்தின் நிழல்படியாத கற்பனைகள்.

இங்கேயே... இங்கேயே அவள் தங்க வேண்டுமே!...

இந்தப் புள்ளியில் மனம் உறுதியாக நிலைக்கிறது.

அத்தியாயம் - 19

“இங்கே பத்து நிமிஷம் நிற்கும். காபி சாப்பிடறவங்க போகலாம்...” என்று அறிவித்து விட்டு நடத்துனர், பஸ்ஸை விட்டு இறங்கிச் செல்கிறார்.

பஸ்ஸே காலியாகும்படி பயணிகள் இறங்குகிறார்கள்.

காலை மணி எட்டு.

“அருப்புக்கோட்டையா?... எதானும் சாப்பிடலாமா...?”

அவர் கேட்கவேண்டும் என்றே காத்திருந்தாற் போல் ரேவு காலடியில் இருந்த பையை நகர்த்திவிட்டு எழுந்திருக்கிறாள். நான்காவது வரிசை. இவள் இறங்கியதும், அவரும் இறங்குகிறார். திரும்புவதற்கு இரயில் பயணச்சீட்டு கிடைக்காததால், இப்படி ஒரு பஸ் பயணம் மேற்கொண்டிருக்கின்றனர். அதிகாலையில் எழுந்து நெல்லையில் புறப்பட்டிருக்கின்றனர்.

ரேவுவின் உற்சாகம் இப்போது தன் வாழ்வைப் பற்றிய ஒரு முடிவில் நிலைப்பட்டதன் பிரதிபலிப்பு எனலாம்.

சுதா சொன்ன விடுதி, ரங்கப்பாவுடன் நெருக்கமாக வாழவேண்டிய நிலையில் ஏற்படும் சிக்கல்கள்... இதெல்லாம் இல்லை.

இரண்டு நாட்கள் மாஸ்டர் ஊர் திரும்பிய பின்னும் தங்கி ஜோதியுடன் உறவாடியதில், அவர்களுக்கும் ஆழ்ந்த பிடிப்பை ஏற்படுத்தியிருக்கிறாள்.

‘பிள்ளைக் காப்பகத்திலிருந்து என்ன, வீட்டிலிருந்தே குழந்தையைத் தூக்கி வருவேனே’ என்று கொண்டு போனாள். இயற்கையின் சூழலில் கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்கள் இல்லாமல், இந்த ஒட்டுறவு கிடைத்து விட்டது என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.

ரங்கப்பாவின் சகோதரி மகள் - புருஷன் வைத்துக் கொள்ளவில்லை என்று ஒரு இழை பின்னப்பட்டதால், அவர்களும் அளவற்ற மகிழ்ச்சியுடன் ஊருக்குச் சென்று திரும்பும்படி விடை கொடுக்கிறார்கள்.

“ஆன்ட்டி, நான் கறி மீனு தொடமாட்டேன், ஏன்னா, நான் படிச்ச ஸ்கூல் ஆஸ்டல்ல, வெறுஞ்சோறுதான். எனக்கு சிநேகிதங்கல்லாமே பிராமின்ஸ்தா. அந்த சாப்பாடு, சாம்பாரு, ரசம், மோரு இதெல்லாந்தான். அவங்கதா கறி மீனு தொடுறவங்க. போயி வெளில சாப்பிட்டுக்குவாங்க, எங்க புள்ள அதிர்ஷ்டக்காரி...” என்றெல்லாம் மகிழ்ந்து கரைந்திருந்தாள் ஜோதி.

அவன் மட்டும் என்ன? “அவ சும்மாச் சொல்றாங்கம்மா! அவளுக்குத் தெரியாம நான் எதும் சாப்புடறதில்ல. மத்தவங்க, சாப்பிட்டுத் தண்ணியடிப்பாங்க. நாம செய்யிற வேலை தருமமான, பொறுப்பான வேலைங்க. அத்தினியும் கன்ட்ரோல்ல இருக்கணும்...” என்று கோடு கிழித்து அவளை வரவேற்றிருக்கிறான்.

வெளிப்படையாக ரங்கப்பாவிடம் அவள் பேசவில்லையே ஒழிய, இந்தக் குடும்பத்தைக் கண்டதும், அவள் பயம், ஆதரவற்ற நிலையின் நிச்சயமற்ற உணர்வு, மெல்லக் கரைந்திருக்கிறது.

மேசையின் முன் உட்கார்ந்திருக்கிறார்கள்.

“என்ன சாப்புடுறே ரேவம்மா?”

“நீங்க என்ன சாப்பிடுறீங்களோ, அது...”

“யப்பா, ஒரு செட் இட்லி வடை கொண்டு வா” என்று பணிக்கிறார்.

அவள் அவர் சொல்வதைக் கவனிக்கவில்லை. ஒரு குழந்தையுடன் உட்கார்ந்திருக்கும் தம்பதியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஒரு செட் மட்டுமே வருகிறது.

“சாப்பிடம்மா!...”

“நீங்க...? உங்களுக்கு வரல...?”

“எனக்கும்மா, சாப்பிடணும் போல இல்ல. நீ சாப்பிடு. கொஞ்சம் காயப் போட்டால் நல்லதுதானே!”

“...அப்ப எனக்கு மட்டும் ஏன் கொண்உ வரச் சொன்னீங்கப்பா?”

“...இது நல்லாருக்கே? தாய் பிள்ளையானாலும் வாய் வயிறு வேறம்மா! நீ சாப்பிடு. திருச்சியில்தான் சாப்பாடு. இதை முடித்து ஒரு தோசை அல்லது பொங்கலும் சாப்பிடலாம், நீ...”

“அதெல்லாம் முடியாது. நீங்கள் அட்லீஸ்ட் ஒரு இட்லி... இட்லி ஒண்ணும் பண்ணாது, சாப்பிடுங்கள். நேத்துக்கூட அதிகமா ஒண்ணும் சாப்பிடலியே?... ஏன்?”

அவர் நெற்றியில் கை வைத்துக் கவலையுடன் பார்க்கிறாள்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல ரேவம்மா... என்ன இது...?”

“உங்களுக்கு உடம்புக்கு எதானும்னா, நான் செத்திடுவேன், அப்பா!”

“அதைப் பற்றி நீ கவலையே படாதே. எனக்கு ஆயுசு நூத்து இருபது வயசுன்னு, எங்கப்பாவே ஜோசியம் பாத்துச் சொல்லிருக்கார். நீ படிச்சு, பிரின்சிபாலாகி, ரிடயர் ஆறதை நான் பார்ப்பேன்!”

பொங்கலும் சட்டினியும் வருகிறது.

அவர் காபி கூடச் சாப்பிடவில்லை.

“ஹாட்டா வெந்நீர் கொஞ்சம் கொண்டு வாப்பா” என்று பணிக்கிறார்.

பொங்கல் முழுவதையும் அவளால் சாப்பிட முடியவில்லை. காபியைக் குடிக்கையில் அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

அவர் பற்றியிருக்கும் தூண்...

“தலை வலிக்குதாப்பா?...”

“அட ஒண்ணுமில்லம்மா, கவலைய விடு... இப்ப மதுரை போனதும் கபகபன்னு பசியெடுக்கும். உன்னை விட்டுட்டு நான் ஒரு பிடி பிடிப்பேன்... ஓ, டோன்ட் வொரி, மை டியர் கர்ள்!”

திரும்ப பஸ்சில் வந்து ஏறுகையில், ரேவு ஓரத்து இருக்கையில் உட்கார்ந்து கொள்கிறாள்.

“இங்க வெயில் விழுது. நீங்க இப்படி உட்கார்ந்துக்குங்க!”

“சரி, குழந்தை ஓரத்து சீட்டில் உட்கார்ந்து வேடிக்கை பாரு...!”

அவர் பேச்சில் வழக்கமான ஆர்வமோ கலகலப்போ இல்லை. “நான் தான் ஓரம்...” என்று வேண்டுமென்று அவளிடம் சீண்டி வேடிக்கை பார்ப்பார். முதுமையின் மேடு பள்ளங்களை மறந்து, சிறுவர் சிறுமியராகி விடுவார்கள். இன்று... ‘அப்பாவுக்கு என்ன?’

அவர் கையைத் தன் மடியில் வைத்துக் கொள்கிறாள். அவர் மறுக்கவில்லை. ஏதோ ஒரு நிழல் கவிகிறதா?

‘...ஜோதியின் குடும்பத்துடன் ஒட்டிக் கொள்ள வேண்டாமா?... அப்பா... அப்பா...! ஆண்டவனே இவருக்கு ஒன்றும் ஆகவேண்டாம்!’

“அப்பா... எனக்குக் கவலையாயிருக்கு. நீங்க... உங்களுக்கு ஒரு நாள் கூட நான் வந்த பிறகு தலை வலித்ததில்லை...”

“இப்பவும் ஒண்ணுமில்லம்மா...”

அவர் சொல்லி முடிக்கவில்லை.

என்ன நிகழ்ந்ததென்று தெரியவில்லை. ரேவு தூக்கிவாரிப் போடக் குலுங்குகிறாள். அப்பா... இரண்டு சீடு வரிசைகளுக்கும் இடையில் குப்புற முட்டியபடி கவிழ்ந்திருக்கிறார்.

கையால் அழுந்தப் பற்றிக் கொண்டதால் மணிக்கட்டில் அடிபட்டாற் போல் வலிக்கிறது.

“என்ன? என்ன ஆச்சு?”

ஒரே கூக்குரல். பலர் அலையக் குலைய வீழ்ந்திருக்கிறார்கள். ஒரே சோக ஓலங்கள். “பாவி, குறுகலான ப்ரிட்ஜில், எதிரே வண்டி வாரது தெரியாம கொண்டு மோதிட்டிருக்கிறான்!”

“நான் நினைச்சிட்டே இருந்தேன். நேரா மோதிட்டான்!”

“குடிச்சிட்டிருப்பானுவ... பாவிங்க. குடிச்சிட்டுத்தான் வண்டி ஓட்டுறானுக!”

ரேவுவின் செவிகளில் இச்சொற்கள் அம்புகள் போல் பாய்கின்றன. கட்டிய கோட்டைகள் முடியுமுன்னே தகர்ந்துவிட்டனவா?

“அப்பா... அப்பா! பஸ் மோதிவிட்டது அப்பா...” என்று அலறி, குப்புறக் கிடக்கும் அவரை மெல்லத் தூக்க முற்படுகிறாள். “அய்யோ விழுந்திட்டார், யாரேனும் உதவிக்கு வாங்களேன்!” அவள் கத்துகிறாள். ஒருவர் மற்றவரைக் கவனிக்கும் நிலையில் இல்லை. குறுகலான பாலத்தில் இரு வண்டிகள் முட்டிக் கொண்டு...

பஸ்ஸைச் சுற்றி யார் யாரோ நிற்கின்றனர். இவர்களுடைய பயணப் பைகளையும் யாரோ ஒருவன் தூக்குகிறான்.

“இருங்க இருங்க. ஏன் தூக்குறீங்க?”

“என்னம்மா, வண்டி மோதிட்டிருக்கிறது. சாமான்களை இப்படித்தான் எடுக்கணும்! எறங்க எடமில்ல...”

“அய்யோ, யாரோ சாமானைத் தூக்கிட்டுப் போக... கடவுளே!”

அப்போது அவர் மெல்லத் திரும்பிப் பார்க்கிறார். நெற்றியில் சிவந்து வீங்கி... கண்கள் இடுங்க...

“ஆக்ஸிடென்டா?...”

“ஆமாம். நம்ம சாமானை எல்லாம் நான் சொல்லச் சொல்லக் கேட்காமல் வெளியில் எறிஞ்சிட்டாங்க அப்பா... அப்பா... இப்படி அடிபட்டிடிச்சே!...”

ஓர் இளைஞன், கிராமத்துக்காரன் போலிருக்கிறான்.

“புடிம்மா, பெரியவருக்கு அடிபட்டாப்பல இருக்கு. புடிச்சி வெளியே கொண்டாருவோம்...” என்று உதவிக்கு வருகிறான்.

வாய் அடக்க முடியாமல் ஆற்றமையைக் கொட்டுகிறது.

கீழே ஒரே துன்ப ஓலம். டிரைவருக்கு நல்ல அடியாம். இரத்தம் கொட்டக் கிடத்தியிருக்கிறார்கள்.

“இனி போலிசுக்கு ஆள் போய், சடங்கெல்லாம் நடந்த பிறகல்ல ரிலீஸ் பண்ணுவாங்க?...”

தங்கள் பயணப் பைகளைப் பார்த்து எடுத்து வருகிறாள்.

ரங்கப்பாவுக்குக் கால் கைகளில் அடி இல்லை. மெல்ல நடத்தியே ஒரு மரத்தடியில் - அற்ப நிழல் விழும் கருவேல மரத்தடி... கொண்டு சாய்த்தாற் போல் உட்கார்த்தி வைக்கிறார்கள்.

‘எல்லாம் கனவு... கனவு! நேற்று முன்தினம் மகிழ்ந்ததெல்லாம் பொய்; இன்று இது மெய்...’

வலுக்கட்டாயமாய் உண்ட காலை உணவு மேலுக்கு வர முட்டுகிறது.

“அப்பா, என் மடியில் தலைவச்சிச் சித்தப் படுத்துக்குங்க...”

அவசரமாகப் பயணப் பையைத் திறந்து ஒரு விரிப்பை எடுக்கிறாள். அதை அந்தக் கல்லும் முள்ளுமான இடத்தைத் துடைத்து விரிக்கிறாள். உட்கார்ந்து மடியில் தலையைச் சாத்திக் கொள்கிறாள்.

புரட்டாசி மாச வெயில் தீட்சணியமாய் ஏறுகிறது.

அவர் நெற்றியை - முடியை மெல்லத் தடவிக் கொண்டிருக்கிறாள். கூட்டத்தில் அடிபட்டவர்கள் ஏழெட்டுப் பேர் - இரண்டு பெண்கள், ஒரு வயதானவர் - குழந்தை ஒன்றுக்கு மூக்கிலிருந்து இரத்தம் கொட்டுகிறது.

சைக்கிளில் இரண்டு போலீஸ்காரர்கள் வருகிறார்கள்.

யார், யாரிடம் போய் உதவி கேட்க?

“விருதுநகர் பஸ் அந்தால போகும். அடிபட்டவங்கள ஆசுபத்திரிக்குக் கொண்டு போவாங்க...” என்று அவரவர் பேசிக் கொள்கிறார்களே தவிர, நிச்சயமாக என்னவென்று தெரியவில்லை.

முன்பு சாமான்களை எடுத்து வைத்த இளைஞன் பார்த்துக் கொண்டே, அவளிடம் வருகிறான்.

“யம்மா, ஒரு வண்டி கொண்டாறேன். மாட்டு வண்டி. ஆசுபத்திரிக்குப் போகலாமா?...” என்று கேட்கிறான்.

ரேவுக்கு ஒன்றும் புரியவில்லை. பேசாமல் மற்றவர்களைப் பார்க்கிறாள்.

“அப்பா... அப்பா...”

குரல் தழுதழுக்கிறது. கட்டுப்படுத்திக் கொள்கிறாள். அப்பா... மெல்லக் கண் திறந்து பார்க்கிறார். தண்ணீர் கேட்கிறார். தண்ணீர்க் குப்பியை எடுத்துத் திறந்து வாயில் விடுகிறாள்.

‘வெந்நீர் வைத்துக்கொள்ள ஒரு ஃபிளாஸ்க் எடுத்து வரமாட்டார்களா?... எழுபதுக்கு மேல் வயதானவர். அவரை இழுத்துக் கொண்டு பத்து நாட்களாய் இவள் உல்லாசப்பயணம் செல்லலாமா? கடவுளே? இந்த விபத்து இதில் இவள் போயிருக்கலாகாதா?’

இன்னதென்று கூறமுடியாத பீதி கவ்வுகிறது. அடி வயிறு கலக்குகிறது. என்ன செய்தாய் என்று நெஞ்சுத் துடிப்பு இடிக்கிறது. ஆண்டவனே என்று மனம் பற்றிக் கொள்கிறது.

நேரம் எப்படிப் போயிற்றென்று புரியவில்லை. எங்கிருந்தோ ஒரு டாக்ஸி கொண்டு வருகிறார்கள். டிரைவர் உட்பட, மிக மோசமான நிலையில் உள்ள சிலரை அதில் ஏற்றிக் கொண்டு போகிறார்கள்.

போலீசு இன்ஸ்பெக்டர் வருகிறார்.

நேராக எதிர் வண்டி... மோதிய வண்டிக்காரரிடம் போகிறார்.

ஒருவர் மூலை மூலையாக நின்று படம் பிடிக்கிறார்.

“போலீசா? இவனுவ, அது பிரைவேட் வண்டி. பணம் கழட்டிப்பாங்க... மோசமான ஆளுவ... தாயே? எங்கிட்டுப் போவணும்?” என்று ஒரு கிழவன் கேட்கிறான்.

“மட்றாசு...”

“உங்கப்பாரா?”

“ஆமாம். விருதுநகர் ஆசபத்திரி ரொம்ப தொலவா?”

“தா ரெண்டு கல்லு போனா விருதுநகர் ரோடு வரும். அந்தால போனா எதுனாலும் காரு, பஸ்ஸுல இப்படி ஆக்ஸிடன்டுன்னு ஏத்தீட்டுப் போவலாம்...”

“இப்படி சர்க்கார் பஸ் மோதி விழுந்திருக்காங்க. அவங்க பஸ்ஸே கொண்டு வரமாட்டாங்க?”

“எங்கே! இவனுவ இந்த வண்டிய எப்ப எடுப்பானுவ? பாலத்துல திரும்ப முடியாதபடி மோதியிருக்கு. அந்தால வரவன் எல்லாம் பின்னே திரும்பிப் போறான்... பெரியவருக்கு மண்டயில அடிபட்டாப்பல இருக்கு. அந்த மொதக் காருல இவுரயும் வச்சிட்டுப் போவலாமில்ல?”

“எடமில்ல தாத்தா...” என்று சொல்கிறாள்.

பக்கத்தில் செங்கற்சூளையில் மண் குழைக்கும் பெண் ஒருத்தி ஓடி வருகிறாள். அவள் கை டிபன் பாத்திரத்தில் காபி வாங்கி வந்திருக்கிறாள். “காபி கொஞ்சம் வாங்கி ஊத்தும்மா...”

அவள் இந்த இடத்தில் காபி வியாபாரம் செய்ய வந்திருக்கிறாளா, அல்லது உண்மையில், அடிபட்டவருக்குக் கொடுக்க வேண்டும் என்று வந்திருக்கிறாளா?...

கேட்க நா எழவில்லை. ஒரு டம்ளரில் அதை வாங்கிக் கொள்கிறாள். அந்தச் சமயத்தில் அவர்கள் பரிவு புண்ணுக்கு இதமாக இருக்கிறது.

“அப்பா, கொஞ்சம் காபி குடியுங்க... அப்பா...”

“ஆமாய்யா, கொஞ்சம் தெம்பாருக்கும், பசும்பால் காபிதா... பஸ் வுழுந்திருக்குன்னதும் போட்டு எடுத்திட்டு ஓடியாந்தேன்...”

அவர் வாயைத் திறக்கிறார். இரண்டு மிடறு விழுங்குகிறார். இதே நிலையில் பகல் ஒரு மணி வரையிலும் மனம் அலைபாய்கிறது. பிறகு அடுத்த பஸ் அங்கே வருகிறது. அவரை மெள்ள ஏற்றி முன்பக்கம் உட்கார்த்தி வைக்கிறாள்.

விருதுநகர் அரசினர் பொது மருத்துவமனையில் அவரைப் பரிசோதிக்கிறார்கள்.

அவர் கண்விழித்து நினைவுடன் பதில் கூறுகிறார்.

“ஒன்றும் பயமில்லை...” என்று சொல்லி, அந்தப் பெண் மருத்துவர் ஒரு ஊசி போடுகிறாள். பிறகு சில மாத்திரைகளைக் கொடுக்கிறாள்.

சென்னையை விட்டுக் கிளம்பிய இரயில் பயணம் எத்தனை நம்பிக்கையுடையதாக இருந்தது? உச்சியில் பறக்கும் அநுபவமல்லவா அது? இப்போது, அவரைத் தோளில் சார்த்திக் கொண்டு சிலையாக அமர்ந்திருக்கிறாள். பசி, தாகம் இயற்கை உணர்வுகள் எதுவும் இல்லை.

‘ஈசுவரா, இதுவும் ஒரு கனவு போலாகட்டும்... இவருக்கு ஒன்றுமில்லாம ஆனதும், மேலும் பழிச்சொல் ஏற்காமல், நான் இந்த இடத்தை விட்டு, வந்தது போலவே அகன்று போவேன்!’ என்று சங்கற்பம் செய்து கொள்கிறாள்.

இந்த பஸ் மதுரையில் ஆள் ஏற்றிக் கொள்ளத்தான் நிற்கிறது. திருச்சியிலும் இறங்கிப் போக நிற்கவில்லை. வேறு ஏதோ இடத்தில் நிறுத்துகிறான். இளநீர் வைத்திருக்கிறார்கள்.

அவர் கண்களை விழித்துக் கொண்டு நிமிர்ந்து உட்காருகிறார்.

“ரேவு, நீ எதானும் சாப்பிட்டு வாம்மா, எனக்கு ஒண்ணுமில்ல கவலைப்படாதே...”

“நீங்க எதானும் சாப்பிடுங்கப்பா, இளநீர் சாப்பிடுறீங்களா?” கீழிறங்கிச் சென்று ஒன்று வாங்கி வருகிறாள்.

“நீயும் சாப்பிடு...”

விழுப்புரம் வந்த போது ஒன்பதாகிறது. மெள்ள சென்று இயற்கைக் கடன் கழித்து வருகிறார். நல் நீர்க் குப்பி ஒன்று வாங்கிக் கொள்கிறார்கள். பிஸ்கோத்துப் பொட்டலத்தைப் பிரித்து இரண்டு எடுத்துக் கொடுக்கிறாள்.

பஸ் நிறுத்தம் - சென்னை திரும்பும் போது நள்ளிரவைத் தாண்டி ஓடிவிட்டது நேரம். வெள்ளத்தில் போராடி அடிபட்டுக் குற்றுயிரும் குலையுயிருமாகத் திரும்புவது போல், ரேவுவே முடிவெடுக்க வேண்டி இருக்கிறது. பஸ்ஸில் இருந்து இறங்கி, அந்த நேரத்தில் ஆட்டோக்காரனின் அடாவடிக்கு உட்பட்டு, வீடு திரும்புகிறார்கள்.

காவற்காரன் வீட்டு வாயிலில் வந்து நிற்கிறான்.

“யாரு? யாரது?...”

“வாட்ச்மேன், நாங்கதாம்பா, கதவத் திறப்பா...”

“நாங்கன்னா? நடுராத்தில வந்து நின்னு?...”

முணுமுணுத்துக் கொண்டு ‘டார்ச்’ அடித்துப் பார்க்கிறான். அக்கம் பக்க நாய்கள் குரைக்கின்றன. கதவைத் திறக்கிறான்.

அப்பாடா... வீடு வந்து விட்டார்கள். ‘ஆண்டவனே நன்றி!’

அத்தியாயம் - 20

அந்த இரவு நேரத்தில் எந்த வீட்டாரும் எழுந்து வரவில்லை.

“வாட்ச்மேன், வரப்ப பஸ் ஆக்ஸிடென்ட் ஆயிட்டது. ஐயாவுக்கு அடிபட்டிருக்கு. உடம்பில இல்ல. தலையிலன்னு சொன்னாங்க. நீங்க எதுக்கும் கிருஷ்ணசாமி ஐயா வீட்ல கொஞ்சம் கதவு தட்டிக் கூட்டிட்டு வாங்களேன்!”

அவர் படுக்கையைத் தட்டிப் போட்டுப் படுக்க வைத்துவிட்டு, ரேவு பின்பக்கம் சென்று முகத்தைக் கழுவிக் கொள்கிறாள்.

“ஏம்மா? என்ன ஆச்சு? என்ன நடந்திச்சி?” கே.ஜி.கே. வந்து விட்டார்.

“வாங்க ஸார். எல்லாம் நல்லா, நல்லாத்தான் இருந்தது. ரிடர்ன் ஜர்னி ரயில் டிக்கெட் கிடைக்கல. காலை பஸ்ஸில் கிளம்பினால் போயிடலாம் எட்டு மணிக்குன்னாங்க... காலம... ரெண்டு பஸ் மோதி ஆக்ஸிடன்ட் ஆயிட்டது...”

விவரங்களெல்லாம் கூறுகிறாள்.

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஸார். டாக்டரை கூப்பிட்டுப் பார்க்கணும் உடனே... காலமயே அவர் சுரத்தா இல்ல. டிபன் கூட சாப்பிடல. அதோட...” துயரம் உடைபடுகிறது.

“நீங்க கன்னியாகுமரியை விட்டு எங்க போனீங்கன்னு தெரியல. இங்கே முந்தாநாள் பெங்களூர்லேந்து அந்தப் பையன் வந்தான்... அதான் தீபாவின் அண்ணன். எங்கே போயிருக்கான்னு கேட்டான். தெரியாதுன்னு சொன்னேன். அவுங்க சொல்லிச் சாவி குடுத்திட்டுப் போகலன்னேன். எங்கிட்ட சாவி இருக்குன்னாலும், அவன்... ஒரு மாதிரி, ரங்குவுக்கு அவனைப் பிடிக்காது. எதானும் இரண்டுங் கெட்டானா ஆயிடப்படாது பாரு?”

அவள் மருண்டு போகிறாள்.

அவர் கட்டிலருகில் வந்து, கூப்பிடுகிறார்.

“ரங்கு...? ரங்கு ஸார்?...”

“தூங்கறார் போல இருக்கு. ஆனால் மூஞ்சியே வீங்கினாப்பல இருக்கு. எதுக்கும் விடியட்டும், டாக்டர்ட்டப் போகலாம்...”

“என்னமோ, ஆக்ஸிடன்ட்ல நீங்க இந்த மட்டும் தப்பிச்சேளே?... குடிச்சிப்புட்டு பட்டப்பகல்ல லாரியக் கொண்டு மோதுறான். ஏதோ யாரோ செஞ்ச தருமத்திலதான் நாலுக்கொண்ணுன்னு ஓடுது! கதவைத் தாழ்ப்பாள் போட்டுட்டு தைரியமா இரும்மா, காலம நான் வரேன்...”

அவர் அங்கிருந்து அகன்ற பிறகு, அவள் பித்துப் பிடித்தாற் போல் அமர்ந்திருக்கிறாள். அடுப்பில் வெந்நீர் வைத்து ஃபிளாஸ்கில் கொட்டி வைக்கிறாள். அவருடைய உறவுகள், அவளைச் சும்மா விடுவார்களா?

அவர் அலமாரிகள்... அவள் பெரிதும் விரும்பி உறவாடிய புத்தகங்கள் எல்லாம் அவளைக் கேலி செய்கின்றன.

‘ஹே ஹே... அந்நிய புருஷன் மீது உறவு கொண்டாடினாயா? இதுதான்... இதுதான்...’ என்று யார் யாரோ இடிப்பது போல் பிரமை.

சுவாமி படம் என்று இல்லாத போனாலும், அங்கே தெய்வீகம் கமழும் விளக்கு இருக்கிறது. எண்ணெய் வார்த்து அதை ஏற்றுகிறாள். “எனக்கு என்ன செய்யணும்னு தெரியல. ஸ்வாமி, மனம் போன போக்குன்னு போய்விட்டேன். நல்லது கெட்டது தெரியல. என்னை மன்னிச்சிடுங்கோ...” என்று துயரம் வெடிக்க முறையிடுகிறாள். கீழே விழுந்து வணங்குகிறாள். அவர் படுத்திருக்கும் அறையிலேயே கீழே படுக்கிறாள்.

கண்களைக் கொட்ட முடியவில்லை.

“ஆண்டவனே, அவருக்கு ஒன்றுமில்லாமல் செய்து விடுங்கள். நான் என் உயிரையும் கொடுக்கிறேன். என்ன தண்டனை வேண்டுமானாலும் ஏற்கிறேன். என்னைக் காட்டிக் கொடுத்து விடாதீர்... நான் எந்தத் தப்பும் செய்யல...”

திடீரென்று அவர் தொண்டையைச் செருமிக் கொள்வதைப் போல் இருக்கிறது. டக்கென்று விளக்கைப் போடுகிறாள். அவர் எழுந்து உட்கார முயற்சி செய்கிறார். வாந்தி... வாந்தி வருகிறதா? இருமலா? ஓடிச்சென்று ஒரு தட்டை எடுத்து வருமுன், குபுக்கென்று... இரத்தம்... மூக்கிலும் நூலாக...

கையில் பிடிக்கும் தட்டு நழுவுகிறது.

“என்னப்பனே? எனக்கு இப்படிச் சோதனையா?...”

“போகட்டும்... ஒண்ணுமில்ல...”

பிளாஸ்கில் இருந்து வெந்நீர் எடுத்து, முகம் வாய் எல்லாம் துடைக்கிறாள்.

“அப்பா... எதானும்... ஆர்லிக்ஸ் இருக்கு, கரைச்சித் தரட்டுமா?”

கரைத்து இரண்டு வாய் மெள்ள விடுகிறாள்.

அவர் அவள் கையைக் கெட்டியாகப் பற்றுகிறார். பேச்சு வரவில்லை. கண்களில் நீர் வழிகிறது.

“உஹூம்... ஒண்ணுமில்ல. உங்களுக்குச் சரியாப் போயிடும். காலம டாக்டர்ட்டக் கூட்டிப் போறோம். அழக்கூடாது...” சொல்லும்போதே கண்ணீர் பெருகுகிறது.

“உஹும்” என்று அவர் அவளைத் தேற்ற முற்படுகிறார்.

அதிகாலையில் தொலைபேசி மணி ஒலிக்கிறது.

ஒருவேளை... அமெரிக்காவில் இருந்தோ? அவள் என்ன பதிலைச் சொல்வாள்? நடுங்குகிறவளாக வாங்கியை எடுக்கிறாள்.

“நாந்தாம்மா, கே.ஜி.கே... ரங்கு எப்டி இருக்கிறார் தூங்கினாரா?...”

“...அப்படியேதானிருக்கார். பாருங்க ஸார் ஒரு தரம் கொஞ்சம் ரத்தமா வாந்தி மாதிரி வந்திருக்கு. மூக்கிலேந்து கூட. எனக்கு ரொம்பப் பயமாக இருக்கு... நீங்க... இப்ப வந்து பாருங்க ஸார். நானே எப்படிக் கூப்பிடறதுன்னு இருந்தேன்...”

அப்பாடா சிறிது நிம்மதியாக இருக்கிறது.

வாயிற்கதவைத் திறந்துவிட்டு அடிச்சத்தத்தை எதிர் பார்க்கிறாள். கே.ஜி.கே. மட்டும் வரவில்லை. அவருடன் ஒட்டு மீசை வைத்துக் கொண்டு, லுங்கிச் சட்டையும் ஜீன்சுமாக ஒருவன் வருகிறான். அவன்...

இவளை ஒரு மாதிரிப் பார்த்துக் கனைத்துக் கொண்டே உள்ளே வருகிறான்.

“தீபாவோட ப்ரதர். இப்ப காலம வந்தான். அதான் ஃபோன் பண்ணினேன்...”

அவர்கள் உள்ளே செல்கிறார்கள்.

அவர்கள் பார்க்கும் போது கூட மூக்கிலிருந்து நூலாக இரத்தம் வந்திருப்பது தெரிகிறது.

வெளியே வருகிறார்கள்.

“மிஸஸுக்குச் சொல்லிவிடலாம். ஏதோ இன்டர்னல் ஹெமரேஜ் ஆனாப்பல இருக்கு. நான் எதுக்கும் இப்ப டாக்டர் நரசிம்மனை வந்து பார்க்கச் சொல்றேன். ஆஸ்பத்திரிக்குத் தான் கொண்டு போகணும்...”

அவர் முகம் ஏற்கெனவே வருமாங்காய் போல சுருக்கம் விழுந்து வற்றி இருக்கும். இப்போது இன்னமும் இறுகிப் போகிறது. விடிந்த பின் பால்காரர், தாயி, அக்கம்பக்கம் என்று எல்லோருக்கும் இந்தச் செய்தி பரவியாயிற்று.

“ஐயோ, சிரிப்பும் பாட்டுமா இருப்பாரேடி மனுஷன்?... ஒருநாள் தலைவலின்னு படுக்கமாட்டாரே?”

“இல்லம்மா, பஸ் ஆக்ஸிடன்ட்டாம்? தலையில அடிபட்டிருக்கு...”

“ரத்தவாந்தி எடுத்திருக்கார். இது கல்லுளி மங்கியாட்டம் உட்கார்ந்திருக்கு! கே.ஜி.கே. அவரான்னா காலம போன் பண்ணினாராம்?”

“நேத்து வந்த உடனே ஆஸ்பத்திரில சேர்த்திருக்க வாண்டாமா? பஸ்ஸில வச்சிக் கூட்டிண்டு வந்திருக்கா, மாபாவி?”

“முன்ன ஒருத்தி வந்து படுகிடையாக் கிடந்து வயித்தெரிச்சலைக் கொட்டிட்டா, சாரு மாமி பாவம். இப்ப அவளுக்கு ஆடுமா, இந்தப் புறம் போக்குக்கு ஆடுமா?”

“இப்ப என்ன உல்லாசப் பயணம் வேண்டி இருக்கு?”

“உங்களுக்குத் தெரியுமோ? இதுக்குப் புருஷன் இருக்கான். ரெண்டு குழந்தைகள், மணியா, ஜோசஃப் கான்வென்ட்ல படிக்கிறதாம். குருசுவாமிகள் மடத்துக்காரா புள்ளதான் அகமுடையான்!”

“இப்படி எடுபட்டு வருதுகளே! சிவசிவா! உலகம் கெட்டுப் போச்சும்மா!”

ரேவு காது கேட்கவே பேசுகிறார்கள்.

தன் கபடமில்லா வெண்மையை இவள் எப்படி நிரூபிக்கப் போகிறாள்?

அவருடைய பர்சில், எவ்வளவு எடுத்து வந்தாரோ? ஆயிரத்துச் சொச்ச ரூபாய் மிச்சம் இருக்கிறது. அதை கே.ஜி.கே.யிடம் அவள் கொடுத்து விடுகிறாள்.

எட்டு மணிக்குள் டாக்ஸி வந்து அவரை அழைத்துச் செல்கிறது. அவளை யாரும் ஒப்புக்குக்கூட ஒரு சொல் கேட்கவில்லை. அந்தப் பையன் சாவி எடுத்து அலமாரியைத் திறந்து அவருடைய வேஷ்டி, சட்டை ஏதோ எடுக்கிறான். போகும்போது, “வீட்டைப் பத்திரமாகப் பார்த்துக் கொள். போய்விடாதே!” என்று கே.ஜி.கே. சொல்கிறார்.

ஒரு விநாடி யுகமாகக் கழிகிறது.

காலையில் பால் காய்ச்சி அவர்களுக்குக் காபி போட்டாள். இப்போது சமைக்க வேண்டுமா, யாருக்கு? அவளுக்கா?

ஏன் இப்படியெல்லாம் வருகிறது...?

எதையும் செய்யப் பிடிக்கவில்லை; நினைக்கப் பிடிக்கவில்லை. ஆண்டவன் ஆண்டவன் என்று நம்பினாளே! ஆண்டவனும் அவளை ஏன் கைவிட்டு விட்டார்?

ஆண்டவன் என்பது பொய்... எவ்வளவு உள் நம்பிக்கையுடன் கதறுகிறாள்?

இந்தத் தாயி... இவள் கூட வந்த அன்று எவ்வளவு ஒட்டுறவாகப் பேசினாள்? இன்று...

இவள் பற்றியிருந்த நிலை ஆடிப் போகிறதே?

பவர் லாண்டிரிக்கு போன் போட்டு, வேம்புவை வரச் சொல்லலாமா? சீ!

அவனும் வந்து ஏசுவான்.

சுதா...?

சுதா எங்கிருக்கிறாளோ?

எப்படியேனும் ஜோதியிடம் போய்விடலாம். ஆனால் அதற்குள் ரங்கப்பா உடல் குணமாகி நல்லபடியாகச் சொல்லிக் கொண்டு போக வேண்டும்... இந்தச் சூழலை விட்டே போக வேண்டும். இங்கே மனிதர்களும் விஷம்; சூழலும் விஷம்.

இங்கே சாகப் போனால் கூட விஷ அம்பைப் பாய்ச்சி, துடிதுடிக்கச் செய்வார்கள்.

பகல் மூன்று மணிக்கு, கே.ஜி.கே. ஃபோன் பண்ணுகிறார். “ஏம்மா எப்படி இருக்கே? அவரை டாக்டர் எல்லாம் செக் அப் பண்ணிட்டா. இன்டர்னல் ஹெமரேஜ்ங்கறா. மாமிக்கு ரெலிபோன் பண்ணிச் சொல்லியாச்சு. அவர்களின் உறவில் ஒருத்தி இங்கே இருக்கா. அவளைக் கூட்டிண்டு வர மாருதி போயிருக்கிறான். நீ ஜாக்கிரதையா வீட்டப் பாத்திட்டிரும்மா!...”

“சரி ஸார்...”

கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.

ஒரு சோற்றைப் பொங்குகிறாள்; ரசம் வைத்து அப்பளத்தைச் சுட்டு வைக்கிறாள்.

மாலை ஏழு மணியிருக்கும்.

மாருதி, அகலமான குங்குமப் பொட்டுடன் பருமனான ஒரு பெண்மணியுடன் வந்திறங்குகிறான்.

அவளைப் பார்க்கையிலே சூட்டுக்கோலைத் தீண்டினாற்போல் தோன்றுகிறது. இந்தப் பொட்டும் வயிரத்தோடும், காஞ்சிப்பட்டும் சங்கிலிகளும், குருசுவாமிகளின் மடத்தில் பார்த்த முகமாக, வருக்கமாக இருக்கிறது. இவள்... இவள்...

அவள் உள்ளே வந்ததும் வராததுமாக வெறுப்பை உமிழ்கிறாள்.

“யார்டி நீ?”

எண்சாணும் ஒரு சாணாகக் குறுகுகிறது.

“நான் அனாதை... மன்னிச்சுக்குங்கோ...?” கண்ணீர் கொப்புளித்து வருகிறது.

“என்னத்தை மன்னிக்கிறது? அந்தக் காலத்துலதான் நாடகம் நாடகம்னு வயிற்றெரிச்சல் கொட்டிண்டான். அவ மனசு வெறுத்துப் போனாள். என்ன குடும்பம்? எந்தக் கழுதைகளோ வீட்டுல வந்து உக்காந்து திட்டம் போடுறது...!”

“ஒண்ணும் சொல்லிக்கிறதுக்கில்ல! வயசான காலத்துல இவனுக்கு இப்படிப் புத்தி போகணுமா? இப்ப எதுக்கு ஊர்ப் பிரயாணம்? ஹனிமூனா?”

சுரீல் சுரீலென்று பழுக்கக் காய்ச்சிய இரும்புக் குச்சிகள்...

“ஏண்டி எங்கிருந்து வந்தேடீ? இடத்தைக் காலி பண்ணிட்டுப் போ! அநாதையாம்! இதென்ன சத்திரமா...”

அப்படியே புகைந்து போய்விட மாட்டாளா? பூமி தேவி பிளந்து விழுங்காதா?

“போடீ! ஒட்டுறவில்லாத நாய் போல் வந்து உக்காந்துண்டு...? எதையேனும் சுருட்டிண்டு போகாதுன்னு என்ன நிச்சயம்?”

“...அப்படியெல்லாம் சொல்லாதேங்கோம்மா? அவர் எனக்குப் பெத்த தகப்பனாருக்கு மேல. என்ன விதி சதிக்கிறது. நான் ஒரு தரம் அவர ஆஸ்பத்திரில பார்த்து சொல்லிண்டு நாளைக்குப் போயிடறேன்...”

“நீ என்னடி அவர ஆஸ்பத்திரில போய்ப் பார்க்கறது, சொல்லறது? இப்பவே இடத்தக் காலி பண்ணு?...”

“அவர் என்னை இருக்கச் சொல்லிருக்கார். நான் அந்த வார்த்தைக்கு மதிப்புக் குடுத்துட்டுப் போறேன். நிச்சயமா நான் உங்களுக்கு - அவருக்கு எந்தத் தப்பும் செய்யமாட்டேன். பெத்த பொண்ணு மாதிரி எங்கிட்ட பிரியம் காட்டினார். நான் நன்னிக் காட்டணும்...” என்று அவள் காலைப் பிடிக்காத குறையாகக் கெஞ்சுகிறாள். பயனில்லை.

“நீ என்னடி, நாய் நன்னி காட்டறது? இப்படிப் பத்தினி வேஷம் போடறதுகள்ளாம் குடும்பத்தைக் குலைக்கற தொழில்ல கூசாத வந்துடறதுங்க! போடி... நான் சொல்றேன்...”

அப்போது மாருதி அவளுக்கு ஆதரவாக வருகிறான்.

“மாமி, விடுங்கோ... நாளைக்கி நானே மாமாக்கிட்டக் கூட்டிட்டுப் போயிட்டு அனுப்பிச்சுடறேன். இப்ப இருந்துட்டுப் போகட்டும்.”

‘நீ நன்றாக இரப்பா...’ என்று உள்ளம் வாழ்த்துகிறது. இருக்கட்டும். கைகளில் ஒவ்வொரு வளையல், தோடு, மூக்குத்தி தாலிச்சங்கிலி இருக்கின்றன. எந்த சேட்டுக் கடையிலும் அதற்குப் பணம் கிடைக்கும். எடுத்துக் கொண்டு மலைக்காட்டுக்குப் போவாள். அவரிடம் சொல்லிவிட்டு...

தன் வெள்ளைத் தன்மையை உலகுக்கு நிரூபிக்க அவள் சாகக்கூடாது.

அவர்... ரங்கப்பா நல்லபடியாகக் குணமாக வேண்டும். அவர் சாருவிடம் பத்திரமாய்ச் சேர வேண்டும்.

என்றைக்கேனும் அவர்கள் மலை மேல் தம்பதியாக வருவார்கள்.

இப்போது இவள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால் இவள் மனசில் கள்ளம் இருந்ததாகவே தோன்றும். இவள் தெய்வமாக நினைக்கும் அப்பா சங்கடப்படுவார்.

அப்பா...! உங்களுக்கு ஒன்றும் வராது. நீங்கள் நூறு வயசு இருப்பீர்கள்! அவர்களை சாப்பிடச் சொல்லிவிட்டு அவள் முன்னறையில் வந்து உட்காருகிறாள்.

மறுநாள் காலையிலேயே தன் துணிமணி பையைத் தனியாக எடுத்துக் கொண்டு பயணத்துக்குச் சித்தமாகிறாள். சில புத்தகங்கள் தனக்கு வேண்டும் என்று நினைத்திருந்தாள். ஆனால் அதற்கு இப்போது சமயமில்லை.

“சீக்கிரமாகச் சமை. நாங்கள் காலையில் சாப்பிட்டு விட்டு ஆஸ்பத்திரிக்குப் போய் வரோம். நாங்க திரும்பி வந்ததும், நீ போகலாம்!” என்று மாருதி கூறுகிறான். காயொன்றுமில்லை. அவர்களிடம் கேட்கவும் அச்சமாக இருக்கிறது. ஒரு பருப்புக் குழம்பு வைத்து, வற்றல் வடகம் பொரித்து வைக்கிறாள். அவர்கள் சாப்பிட்டு விட்டு காபி, ஹார்லிக்ஸ், வெந்நீர் என்று எடுத்துக் கொண்டு போகிறார்கள். “வீட்டைப் பத்திரமாப் பாத்துக்கோ! சாயங்காலம் நாங்க யாரானும் வந்ததும் போயிடனும்!” என்று கூறிவிட்டுப் போகிறார்கள்.

நண்பகல் கழிந்து மாலையும் தேய்கிறது. அவர்கள் வீடு திரும்பவில்லை. அவள் கே.ஜி.கே.க்குப் ஃபோன் செய்து விசாரிக்கிறாள்.

“தெரியலியேம்மா? நேற்று நான் பார்த்ததுதான். இன்டர்னல் ஹெமரேஜ். மூக்கில் குழாய் வச்சிருக்கா. ஆகாரம் அப்படித்தான் போறது. ஆழ்ந்த தூக்கம் தூங்கறாப்பல இருக்கு. டாக்டர் தட்டித் தட்டிக் கூப்பிட்டார். ‘ஆ’...ன்னு கேட்டார். ரெஸ்பான்ஸ் இருக்கு... சுவாமியை வேண்டிக்கோம்மா. இன்னிக்கு எனக்குப் போக நேரமில்லை. ஏகப்பட்ட குழாய் வச்சிருக்கிறதால பக்கத்துல உட்கார்ந்திருக்க ஒருத்தரும், அவசரமா மருந்துக்கு அதுக்கு இதுக்குனு ஒருத்தருமா வேண்டிருக்குமா இருக்கும். நீ பத்திரமா இருந்துக்கோ!” என்று ஆறுதலாகக் கூறுகிறார்.

இரவு எட்டு மணி இருக்கும்.

வாயில் மணி ஒலிக்கிறது.

ரேவு கதவைத் திறக்கிறாள்.

யாரோ ஒருவன், முப்பது முப்பத்தைந்து வயதிருக்கும். வாராத கிராப்புத் தலை. ஜீன்ஸ் சராயும், ஒரு பனியன் போன்ற மேல் சட்டையும் போட்டு இருக்கிறான்.

அவன் கையிலிருந்து சீட்டொன்றைக் காட்டுகிறான். அதில் அவள் பெயர் போட்டு, விலாசம் எழுதியிருக்கிறது.

“உங்களைக் கங்கப்பா நர்சிங்ஹோமில் ஒரு பெரியவர் படுத்திருக்கிறாரே, அவரைப் பார்க்கக் கூட்டி வரச் சொன்னாங்க. அவர் உங்களைப் பார்க்கணும்னு சொன்னாராம். கிரிட்டிக்கலா இருக்காராம்...”

மடை உடைபடுகிறது.

ஒன்றுமே தோன்றவில்லை. கதவைப் பூட்டிவிட்டுத் தன் பையுடன் அவன் கொண்டு வந்த ஆட்டோவில் ஏறுகிறாள்.

“அவங்க... ஒரு அம்மாளும், ஐயாவும் உன்னை அனுப்பினாங்களாப்பா?...”

“ஆமாம்மா” என்று அவன் ஆட்டோவைக் கிளப்புகிறான்.

ஆம்... அப்பாவைப் பார்த்துவிட்டு, இந்த ஆட்டோவிலேயே அவள் எழும்பூர் சென்றுவிடலாம்... அல்லது...

அவள் பர்சில் ஏதோ பத்துப் பதினைந்து ரூபாய் இருக்கும். அது போதுமா?...

ஒன்றும் யோசனை செய்ய முடியவில்லை.

ஆட்டோ தடதடவென்று செல்கிறது. வேகமாகச் செல்கிறது.

“ஏம்ப்பா? ஆஸ்பத்திரி எங்கே இருக்கு? அடையாறிலயா?...”

அவன் பதிலே பேசவில்லை. மிக வேகமாகக் கடற்கரைச் சாலையில் ஓட்டுகிறான்.

“ஏம்ப்பா...? ரொம்ப தூரம் போறியே?... எங்கே ஆஸ்பத்திரி?” அவளுக்கு அடிமனதில் அச்சம் பூதாகரமாக ஆட்கொள்கிறது.

“நிறுத்து, நிறுத்தப்பா? என்ன எங்கே கொண்டு போறே?...” வீடுகள், கடைகள், வெளிச்சம் இல்லாத பிரதேசங்களில் அது ஓடுகிறது. தன்னந்தனியாகச் சவுக்குக் காட்டுக்கு இடையே விளக்கெரியும் ஒரு வீட்டின் முன் நிற்கிறது.

“இறங்கு...!”

“மாட்டேன். இதுவா ஆஸ்பத்திரி?”

“இறங்குடீன்னா?”

ஒரு பலாட்டியன் அவளைப் பற்றி இறக்குகிறான்.

கத்த முடியாமல் வாயில் துணியடைத்து உள்ளே இழுத்துச் செல்கிறார்கள்...

அத்தியாயம் - 21

அவர்கள் அவளை இழுத்துச் செல்கிறார்கள்.

யார்... யார் இவர்கள்? யமகிங்கரர்கள் இவர்கள்தானா? எங்கே இழுத்துச் செல்கிறார்கள்?

ஐயோ... துணியை உரிக்கிறார்கள்... நெருப்புத் தூணைக் காட்டி, “கட்டிக் கொள்ளடி...” என்று வசைபாடி அடிக்கிறார்கள். காறி உமிழ்கிறார்கள். இது நெருப்புத்தூண் இல்லை, சுண்ணாம்பு காளவாயில் தள்ளி இருக்கிறார்களா?

“பிற புருஷன் வீட்டுக் கட்டிலில் படுத்துக் கொண்டாயேடீ? எப்படி இருந்தது? கட்டின புருஷனை விட்டு என்ன தைரியமாக வேறு ஒரு புருஷனோடு சிரிக்கப் பேசி, தொட்டுப் பழகினாயே? எப்படியடி இருந்தது? பக்கத்தில் உட்கார்ந்து, வேடிக்கை விண்ணாளம் பேசி, மடியில் தலை வைத்துப் படுத்து... சீச்சீ! வேசி, நாய் கூட இப்படி இருக்காது!”

“உனக்கு இந்தச் சுண்ணாம்புக் காளவாயில் வெந்து நீராவதுதான் தண்டனை. நளாயினி, அருகில் புருஷனைக் கூடையில் வைத்துத் தாசி வீட்டுக்குத் தூக்கிச் சென்று அவன் ஆசையைப் பூர்த்தி செய்தாளடீ? அவர்களெல்லாரும் கற்பரசிகள். நீ பதிதை. உன் அம்மா அவப் பெயரைத் தேடித் தர எவன் வீட்டிலோ புகுந்து கெடுத்தாள். உனக்கு அப்படியும் புத்தி வரலியே? நெருப்புத்தூணைக் கட்டு! உடம்பில் பாம்பும் தேளும் ஊறட்டும். இந்த உடம்பு சொகுசுக்குத் தானே பிறபுருஷன் வீடு தேடிப் போனே?...”

ஐயோ... ஐயோ வேண்டாம் என்னை விட்டுடுங்கோ நான் செத்துப் போறேன்... செத்து... செத்துப் போறேன்! என்னை விடுங்கள், உங்களுக்குப் புண்ணியமாப் போறது. நான் சமுத்திரத்தில் விழுந்து போறேன்... இல்லாட்டா நீங்களே கொன்னுடுங்கோ... இவளால் குரல் எழுப்ப முடியவில்லை... கைகால்களைப் பிணித்திருக்கிறார்கள்.

சொட்டுச் சொட்டாக உயிர்ச்சரம் இறங்கும் குழாய் குலுங்குகிறது. யாரோ ஓடி வருகிறார்கள்.

“...அசையாதேம்மா... அசையாதே?...”

“நான்... என்னைச் சாக விடுங்கோம்மா... சாக...”

“ஷ்... இத பாரம்மா, ட்ரிப் இறங்குது. கைகால் அசைக்காம இரு...”

“ட்ரிப்... ட்ரிப்... ட்ரிப்னா... நரகத்தில்...”

ரேவு கண்களை மலர்த்திப் பார்க்கிறாள்.

எதிரே... வெளிர் கனகாம்பரச் சேலை உடுத்திய ஒரு பெண்... முகம்... இதமாக இருக்கிறது. கண்கள் கனிய அவள் முகத்தைக் கண்களைப் பஞ்சால் துடைக்கிறாள். சில்லென்று இதமாக இருக்கிறது.

“என்னைச் சுண்ணாம்புக் காளவாயில் போட்டுட்டாங்களா...!”

அவள் புரியாமல் பார்க்கிறாள். இதமாகப் புன்னகை செய்கிறாள்.

“எனக்கு உள்ளு வெளியெல்லாம் எரியுதே? நான் செத்துப் போகலியா? எத்தினி நேரம் இதில வச்சிருப்பாங்கம்மா...”

“அழாதேம்மா... அழாதே... உனக்கு நல்லாயிடும்... நீ எதுக்குச் செத்துப் போகணும்... உயிர் ஆண்டவன் தந்தது... அவரா எடுக்கற வரையிலும் நாம் செத்துப் போக முடியாது.”

“உஹும்...”

ஆண்டவன் அப்படி ஒழித்து இருந்தா இப்படி நான் நரகம் அனுபவிப்பேனா? நான் மனசறிஞ்சி எந்தத் தப்பும் பண்ணலைன்னு அந்த ஆண்டவன் உண்மையாக இருந்தா நம்பமாட்டாரா? ஹும்...

ரேவு வெறுப்புடன் கண்களை மூடிக் கொள்கிறாள்.

அவள் மெல்லக் கையைத் தடவி, “உன் பேரென்னம்மா?” என்று கேட்கிறாள்.

“என் பெயர் தெரியாமலா, நரகத்துக்குக் கொண்டு வந்தாங்க? நான் செத்துப் போன பிறகு தானே வேணும்?...”

“இதபாரம்மா, நீ எதுக்கு சாகணும்? உன்னை யாரோ படுபாவிங்க நாசம் பண்ணிப் போட்டிருக்காங்க. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க, நீ உதவணும்மா...”

அவள் கண்களை மூடிக் கொள்கிறாள்.

ரங்கப்பா... ரங்கப்பா...

திக்குத் தெரியாத காட்டில் பாடுவீங்களே!

நான் திக்குத் தெரியாம அலையறேன். என் உசிரை இன்னமும் எதுக்கு எடுக்காம யமன் விட்டு வச்சிருக்கான்?

ரங்கப்பா நான் இப்படிச் சாகாம சித்திரவதைப் படுறேனே, நீங்க... நீங்க... எப்படி இருக்கீங்க? நீங்க ஒருகால் என்னை ஏமாத்திட்டுப் போயிட்டீங்களா?...

மூடிய கண்களிலிருந்து தாரையாக வழிகிறது.

அவள் பரிவாகத் துடைக்கிறாள். மூக்குக் கிண்டிப் போன்ற பீங்கானில் இருந்து வாயில் அமுதமாகச் சில்லென்று கனிச்சாற்றை ஊற்றுகிறாள். சிறிது நேரத்தில் ஆசுவாசமடைகிறாள்.

“இதபாரம்மா... நீ அழக்கூடாது. உன் அழுகையைப் போக்கத்தான் நாங்க இங்க வச்சிருக்கிறோம்... இன்னும் கொஞ்சம் ஃப்ரூட் ஜூஸ் சாப்பிடும்மா...”

“...இது ஆஸ்பத்திரியா ஸிஸ்டர், நான் எப்படி இங்க வந்தேன்?”

“...நீ பீச் பக்கம், கிடந்தே. உன்னை நாசம் செய்து யாரோ வீசியிருந்தாங்க. துளசிதேவின்னு கேள்விப்பட்டிருக்கியா? பெரிய டாக்டர். அவங்க இங்க பெரிய சோஷியல் வொர்க்கர். அவங்க ஆஸ்பத்திரிதான் இது. அவங்க காலம பீச் பக்கம் வாக்கிங் போறப்ப உன்னைப் பார்த்தாங்க. இன்னிக்கு மூணு நாளாவது. நீ வலி வலின்னு கத்திட்டிருந்தே. அலறினே. உனக்கு செடிடிவ் கொடுத்து, காயமெல்லாம் டிரஸ் பண்ணி ட்ரிப் குடுத்து, வச்சிருக்கிறோம்...”

“ஓ... கடவுளே, என் உசிரை எடுத்திட்டு” சொல்ல வந்தவள் சட்டென்று மூடிக் கொள்கிறாள்.

“நான் ரொம்ப பாவம் பண்ணிருக்கேன்னு தோணுது, நான் செத்துப் போயிருக்கணும் ஸிஸ்டர்...”

“பாவ புண்ணியம் எல்லாம் நமக்கு நாமே தீர்மானிக்கிறதில்ல. நீயாவும் செய்திருக்க முடியாது. ஏன்னா, பெண்ணாகப் பிறந்தவங்க யாருமே பாவம் செய்ய முடியாது. அது ஆம்புளங்க வரைஞ்சு வச்ச அநீதியான வரமுறை. அவங்கதான் இப்ப உனக்குக் குரோமாக் கொடுமை செய்து பாவம் பண்ணியிருக்காங்க. நீ மட்டும் கொஞ்சம் ஒத்துழைச்சா, இந்தக் கொடுமைக்குக் காரணமானவங்களைப் பிடிச்சித் தூக்கில் மாட்டலாம்...”

ரேவு அவளை உறுத்துப் பார்க்கிறாள்.

கட்டின புருஷன் காரணமாயிருந்தா?... அவந்தானே இத்தனை அவலத்துக்கும் மூல காரணம்?

ஆனால் தாரை வார்த்து அவன் கையில் அவளைப் பிடிச்சுக் கொடுத்த பிறகு, அவள் அவன் சொத்து. சில பேர் தலைவிதி நல்லவர்களாக இருப்பார்கள். ஆடை வாய்ப்பதும் அகமுடையான் வாய்ப்பதும் அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. இவள் தலைவிதி இப்படி.

இப்போது... பேசக்கூட முடியவில்லை. உதடு - உதட்டில் என்ன... தடிப்பாகத் தெரிகிறது. கன்னம், கழுத்து, மார்பு, அடிவயிறு... எங்கும் எங்கும் வேதனை...

உள்ளே யாரோ வருகிறார்கள்.

“ஏஞ்ஜலா, பேசுறாளா?”

அருகில், வயதான, மெலிந்த மூதாட்டி ஒருத்தி வருகிறாள். நரைத்த தலை, பாப் செய்திருக்கிறாள். முன் மண்டை தெரிகிறது. நல்ல வெளுப்பு. தூய வெள்ளைச் சேலையும் ரவிக்கையும் அணிந்திருக்கிறாள். ரேவு கூசிக் கண்களை மூடிக் கொள்கிறாள்.

துணிப் போர்வையை விலக்கி, காயங்களைப் பார்க்கிறாள்.

“புவர் கேர்ள்... இப்படிப்பட்ட பொறுக்கிக் கயவாளிகள் மலிஞ்சிருக்காங்க. ஷி ஸீம்ஸ் டு பி எ குட் ஃபாமிலி லேடி...”

ரேவு குறுகிக் குறுகி அற்பத் துளியாகிறாள்.

“எதானும் பேசினாளா?”

“ம்... பேர் கூடச் சொல்லமாட்டேங்குது. செத்துப் போறேன்... பாவம் பண்ணினேங்குது... மேல் சாதின்னு தெரியுது. ஆனா தாலி, வளையல் எதுவுமே இல்லே...”

“எல்லாத்தையும் புடுங்கிட்டுத்தான் இந்த கோலம் பண்ணிருக்காங்க. ஏஞ்ஜலா, போலீஸ் ஸ்டேஷன்ல கேட்டு வழக்கமாக சேதி போடுறாப்புல இப்படி எலியட்ஸ் பீச் பக்கம் கிடந்திச்சின்னு மட்டும் செய்தி போட்டிருக்கிறாங்க பேப்பரில். இதைப் பார்த்து இவளைத் தேடிட்டு வர்றவங்களுக்குத் துப்புக் கொடுக்க நான் ஃபோன் நம்பர் குடுத்திருக்கிறேன். மத்தப்படி மீடியா ஆளுக யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம். நான் கனகாகிட்டேயும் கண்டிப்பா சொல்லிட்டேன். இந்த மாதிரி நியூஸ்னா ஸென்ஸேஷனலாக அலைவாங்க... நமக்கு ஒரு ஒத்தாசையும் இருக்காது...”

ரேவு கண்களை இடுக்கிக் கொண்டு பார்க்கிறாள்.

தனக்கு இந்தக் கொடுமையைச் செய்தவர்... துணிந்தவர்... அவன் மாருதிதானா? அந்தப் பாவி... ரங்கப்பாவின் ‘கஸின் ஸிஸ்ட்டர்’ என்றாரே, அவள் ஏற்பாடா? இவளை விரட்ட அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லையா?... ரங்கப்பா... அப்பா?... புழுவாய்த் துடிக்கிறாள். அந்த உள் வேதனையை எப்படி வெளியிட?

உலகத்தின் தலையாய நோவு பிரசவ வலி என்பார்கள். மூக்கு அம்மா மூக்கு... மூக்கு என்று முகமறியாத நர்ஸ் சொன்னாள். இவளுக்கு வேதனை தெரியவில்லை. அது மறந்து போயிற்று. ஒவ்வொரு நாளும் கட்டியவன் குலைத்தான். வேதனை மறந்து போயிற்று.

உடம்பு... உடம்பு... உடம்பு... இந்த உடம்புத்தான் நானா? என்னை இந்த உடம்பை அழிப்பதால் அழிக்கலாமா? ஒரு பெண்ணாகப் பிறந்து, இந்த உடம்புக்காகவே சாப்பிட்டு, குளித்து, உழைத்து, எல்லாத் துன்பங்களுக்கும் அடக்கு முறைகளுக்கும் ஈடுகொடுத்து...

எல்லையம்மன் கோவில் தேரில் ஆடு வெட்டுவார்கள். கோழி காவு கொடுப்பார்கள். அதைக் கொழுக்க வைத்து குளிப்பாட்டி, மஞ்சள் நீர் தெளித்து பூமாலை சாத்தி வெட்டுவார்கள். அந்த மரியாதை கூட இல்லை. வாழ்க்கை என்பது இதுதானா? ஆனால் என்னை அழிக்க முடியவில்லை இதுகாறும் யாராலும்.

“ஏம்மா... உன் பேரென்ன?”

அவள் எங்கோ பார்க்கிறாள்.

“உங்க வீடு எங்கே இருக்கு?...”

பதிலில்லை.

“உன் புருஷன் உன்னைக் கஷ்டப்படுத்தினாரா?”

அவள் காதில் விழுந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை.

“சரி, சொல்ல இஷ்டமில்லேன்னா வேண்டாம். உன்னைக் கட்டாயப்படுத்த மாட்டோம்...”

அவர்கள் இருவரும் மெதுவான குரலில் பேசிக் கொண்டு போகிறார்கள்.

இன்னும் இரண்டு நாட்கள் செல்லுகின்றன. அவளுடைய உட்காயங்களும் வெளிக்காயங்களும் ஆறி வருகின்றன. ஏஞ்சலா அவளைப் பார்த்துக் கனிவாகச் சிரிக்கிறாள். அவளைத் தவிர வேறு நர்சுகள் அந்த அறைக்கு வரவில்லை.

ஏதோ ஒரு பூகம்பம் வந்து ஆறின பின் இப்படித்தான் சிறியதாக இருக்கும். இடிபாடுகள், எரிவுகள், கழிவுகள்...

இவள் நிலை அதுதான்.

நகை நட்டு, துணி எதுவுமே இல்லை. பற்றியிருந்த அனைத்து ஆதரவுகளும் சரிந்துவிட்டன. இனியும் ஏதேனும் மிச்சம் அகப்படுமா?

ஒவ்வொரு சிதிலமாக ரேவு தேடிப் பார்க்கிறாள். ஏஞ்சலாவின் பரிவு ஒன்று தான் மிஞ்சி இருக்கிறது. இல்லை, ஒரு துரும்பாக வந்து ஒட்டி இருக்கிறது.

“நீ நல்லா நினைச்சுப்பாரு - உன் பேர் நினைவில்ல?”

“...இல்லையே?...”

“நீ எப்படி அங்க வந்தே? உன் வீடு... கல்யாணமானா உன் புருஷர்...”

“ஸிஸ்டர் எனக்கு ஒண்ணும் நினைப்பில்ல, எங்கியோ இருட்டில நடக்கிறாப்பல நெனப்பு வருது...”

“சரி... பிறகு...? நல்லா நினைச்சிப் பாரம்மா!...”

ரேவு யோசித்துக் கொண்டே இருக்கிறாள். வெளியே துப்புத் தெரிந்துவிட்டால் ரங்கப்பாவுக்கும் குடும்பத்துக்கும் அது கேவலமாகப்படும். அந்தத் துரோகம் அவள் செய்யலாகாது. எனவே, இப்படியே இருப்பதுதான் சரி... சுதாவைப் பற்றியும் சொல்லலாகாது.

இதுவரையிலும் அவளுக்கென்று வகுக்கப்பட்ட பாதை அவளுக்கே தெரியாமல் திருப்பங்களைக் கண்டிருக்கிறது... அவள் அநுபவித்த துயரங்கள், சந்தோஷங்கள் எல்லாமே சுத்தமாகத் துடைக்கப்பட்ட ஒரு வெறுமையில் அவள் நிற்கிறாள்... அதனால் அவர்கள் கேட்கும் எந்தக் கேள்வியும் அவளைப் பாதிக்கவில்லை.

பத்து நாட்களில் அவள் நடமாடுமளவுக்குத் தேறுகிறாள். அவளுக்குச் சேலை ஜாக்கெட் கொடுத்து, காரில் ஏற்றிக் கொண்டு அவள் கிடந்த இடத்துக்குக் கூட்டிச் செல்கிறார்கள்.

“நீ இங்கதாம்மா கிடந்தே...”

“இப்ப நினைச்சிப் பாரும்மா, எப்படி இங்கே வந்தே?”

ரேவு கல்லாக இருக்கிறாள். தொலைவில் தெரியும் கடலைப் பார்க்கிறாள்.

“தண்ணீருக்குப் போகலாமா?”

போகிறார்கள்.

அலைகள் வந்து கால்களை, அவள் உடுத்தியிருக்கும் சேலையை நனைக்கின்றன.

குழந்தைப் போல் சிரிக்கிறாள்.

“சந்தோஷமா இருக்கா? நல்லா இருக்கா?...”

“உம்...” என்று தலையசைக்கிறாள்.

“நாம் இப்ப கடைக்குப் போய் உனக்குப் புடிச்ச மாதிரி சேலை, ரவிக்கை வாங்கிட்டு வரலாமா?”

அவளுக்கு உள்ளூற நடுக்கம் பற்றுகிறது.

“நீங்களே வாங்கிட்டு வாங்க. நா வரமாட்டேன்...”

“ஏன்...?”

“எனக்குப் புடிக்கல.”

“ஏன்...?”

பதிலில்லை.

ஏஞ்சலா அவளை அழைத்துக் கொண்டு வண்டிக்குத் திரும்புகிறாள்.

“ஒண்ணும் தெரியல. யாரும் தேடிண்டும் வரல... தற்கொலை பண்ணிக்க வந்திருப்பாளோன்னு சந்தேகம் வருது. இங்கதா இந்த மாதிரி எலிமன்ட்ஸ் நடமாடுதே?” என்று பெரியவள் முணுமுணுக்கிறாள்.

“காதுத்தோடு, மூக்குத்தி எல்லாம் கழட்டியிருக்காங்க. காதப் பிச்சிருக்காங்க. ஏம்மா, நீ கழுத்தில காதுல நகை ஏதும் போட்டிருந்தே?”

“எல்லாம் போச்சு! ஆமாம்... போயே போச்சு...”

“எப்படிப் போச்சு? யார் கழட்டினாங்க?”

“தூக்கி எறிஞ்சிட்டே...”

மறுபடியும் சிரிப்பு.

“ஏன் தூக்கி எறிஞ்சே? தங்க நகையெல்லாம் தூக்கி எறியலாமா?”

பதிலில்லை.

மனநிலை சரியில்லாத பெண்... ஓடி வந்திருக்கிறாள். இவளை யாரோ கயவர் இந்த நிலைக்கு ஆட்படுத்தியிருக்கக் கூடும்.

“ஒரு சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட இவளைச் சோதனை செய்யலாம், ஏஞ்ஜலா?...”

“நான் ரேவதியை வரச் சொல்றேன்...” என்று துளசிதேவி சொல்லும் போது அவள் முகத்தில் பரபரப்பு ஏற்படுகிறது.

“வே... வேண்டாம்? யாரும் என்னைப் பார்க்க வர வேண்டாம்?”

என்று அவள் பீதியுடன் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொள்கிறாள். அவர்கள் தட்டவில்லை.

அத்தியாயம் - 22

டாக்டர் ரேவதி... சைக்கியாட்ரிஸ்ட்!

அவள் வந்தால், இந்தப் பொய் அம்பலமாகிவிடும். இந்தக் கண்டத்தில் இருந்து எப்படித் தப்புவது? இரவெல்லாம் சுறுசுறுப்பாக மனம் யோசிக்கிறது.

இவர்கள் பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றி அம்பலத்துக்குக் கொண்டு வந்து நியாயம் கோர வேண்டும் என்று முனைபவர்கள். அவள் அன்று அப்படிக் கிடந்த போது தூக்கி வந்து, பரிவாக அவளை மறுபிறப்பு என்று சொல்லும்படி உயிரூட்டி இருக்கிறார்கள். இந்தக் கொடுமையைப் போலீசிலும் தெரிவித்துப் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இவளால் எல்லா விவரங்களையும் எப்படி வெளியிட முடியும்? ரங்கப்பாவுக்கும் அவளுக்கும் உள்ள ஒட்டுறவை இவர்கள் எப்படி எடை போடுவார்களோ?

பத்திரிகைக்காரர்கள் வரவேண்டாம் என்று தடுக்கும் பெரிய டாக்டர், தலைவி, வழக்கு என்று கூறும் போது வெளியிடாமல் மறைப்பது சாத்தியமா?...

ரேவு குழம்பிப் போகிறாள்.

உடல் தேறி, நீண்ட ஆசுபத்திரி அங்கியுடன் மெல்ல வெளியில் தலைநீட்டிப் பார்க்கிறாள். ஆறு அறைகள் கொண்ட சிறு விடுதிதான். பிரசவம் என்று வருபவர்கள் தாம் அதிகம். பிரசவம் சிக்கலானால் இங்கேயே ஆபரேஷன் செய்து குழந்தையை எடுக்க வசதி இருக்கிறது. முக்கியமாக, இது போன்ற ‘பெண் கலைப்பு’ கேஸ்களை துளசிதேவி எடுத்துக் கொண்டு பார்க்கிறாள். ஒரு பெரிய மாதர் சமூக அமைப்பின் ஒரு தூணாகவும் இருக்கிறாள் என்பதும் புரிகிறது.

ஒரு வாரத்துக்குப் பிறகு ஒருநாள், ரேவு அறையில் இருந்து தலைநீட்டிப் பார்த்த போது, வராந்தாவில் இரண்டு பெண்மணிகள் பேசுவது கேட்கிறது.

“ஆமாம், இதுவரை எந்த கேஸில் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்? சின்னஞ்சிறுசுகளை வெளியில் விடவே பயமா இருக்கு. இப்ப பாருங்க, பத்து நாளைக்கு முன்ன ஒரு கேஸ் வந்து கோடி ரூம்ல இருக்கு. நான் எட்டிப் பார்த்திட்டேன்... மூஞ்சியெல்லாம் குதறி... பெரிய வயசான பொம்பள... பீச்ல போட்டுட்டுப் போயிட்டாங்க. இன்ஸ்பெக்டர் அருணா ரெண்டு நாளா வந்தா பார்த்தேன். ஒரு துப்பும் துலங்கலயாம். அவளுக்கு நெனவே போயிட்டுதாமே? பேர் கூடத் தெரியலியாம்!”

ரேவு தலையை உள்ளே இழுத்துக் கொண்டு விம்மி விம்மி அழுகிறாள். எத்தனை மூடி வைத்தாலும் மூட முடியுமா? இங்கே ஆயாக்கள், நர்ஸ், வார்ட் பையன் முதல், பொசிந்ததை வெளியே கொண்டு தான் செல்வார்கள்.

கையிலொரு காசுமில்லை... உடுப்பு புடவை கூட இல்லை. இந்த அறையில் தூக்குப் போட்டுக் கொள்ளக்கூட வழி இல்லை. தூக்க மாத்திரை அவளுக்குக் கிடைக்குமோ?

செத்த பிறகு... யார் மானம் போனால் என்ன, போகாவிட்டால் என்ன? இந்தக் குழப்பத்தில் இருந்தும் சித்திரவதையில் இருந்தும் விடுபட்டுவிடலாம்.

அப்போது அங்கு... ஏஞ்ஜலாவுடன், சுதா... சுதா வருகிறாள்.

“ரேவு மாமி! ரேவு மாமி! உங்களுக்கு உங்களுக்கா?...” ரேவுவின் உள்ளத்தில் கடல் பொங்கி அலைக்கிறது.

‘பெண்களால் என்ன செய்யமுடியும், அழுவதைத் தவிர? இவர்கள் உணர்ச்சிப் பிண்டங்கள்’ என்று எந்தக் கதையிலோ யாரோ எழுதிய வரிகள் மின்னுகின்றன. சுதா பரிவுடன் வந்து அவளை அணைத்துக் கொள்கிறாள். ஏஞ்ஜலா கதவைத் தாழிடுகிறாள்.

“சுதா... சுதா... எனக்குக் கொஞ்சம் தூக்க மாத்திரை மட்டும் கொடுக்கச் சொல்லுங்கோ... வேற ஒண்ணும் வேண்டாம். நான் ஒரேயடியாகத் தூங்கிப் போனால் தான் நிம்மதி...”

“...ஷ்... இதுக்கா இத்தனை பாடுபட்டோம்?”

“நான் எங்க வீடு முடிஞ்சி பாக்க வந்தேன். ரகுவை மகாராஷ்டிராவுல சாங்லிக்குத் தூக்கிப் போட்டுட்டாங்க. நான் அப்படியும் இப்படியுமா திருச்சிக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டேன். சுருதி பிலானில போய் சேர்ந்துடுத்து. ஆக குடும்பம் ஒவ்வொரு இடமா இருக்கு. நான் வழக்கம் போல் மெட்ராஸ் வந்ததும் என்.கே.ஆர். வீட்டுக்கு ஃபோன் பண்ணினேன். ரிங் போயிட்டே இருந்தது. ரெண்டு நாள் ட்ரை பண்ணிட்டு விசாரிக்கணும்னு போனேன். கே.ஜி.கே. தான் சொன்னார். ஆஸ்பத்திரியில தான் இருக்கார். மூளையில் ப்ளட் க்ளாட் இருக்குங்கறா. தேவலைன்னாலும் ஒரு பக்கம் சுவாதீனம் இல்ல. அவர் கஸின் ஒருத்தி இருக்கா. அமெரிக்காவிலேந்து மகளும் அம்மாவும் வராங்கன்னார்... நான் உங்களைப் பத்தி விசாரிச்சேன்...”

“அவ அன்னிக்கே போயிட்டாளாமே? எங்கிட்டக் கூடச் சொல்லல. எட்டு மணிக்குத் தன் சாமானை எடுத்திட்டு ஆட்டோவில போயிட்டாங்கறா. எனக்கு அது விஷயம் சரியாத் தெரியல...ன்னார். ஸம்திங் ஸம்வேர் ராங்னு பட்டுது. நான் ஆஸ்பத்திரிக்குப் பார்க்கலாம்னு போனேன். அவரைப் பார்த்தேன். பழைய என்.கே.ஆரா? எப்படியோ முகம் இருக்கு. பேச்சே வரல. காட்டான் மாதிரி ஒருத்தனும், பெரிய குங்குமப் பொட்டோட ஒரு அம்மாவும், அங்க என்ன பார்க்கவே விடல... இன்னிக்கு வந்திருப்பா, அவர் மிஸஸ்... அப்புறம் இன்னிக்குக் காலம, எனக்கு யதேச்சையா சாலினி இப்படிச் சொன்னா... வந்தா... ஓ, காட்!...”

“சுதா... சுதா...! என்னென்னவோ நடந்திட்டது. இங்கேருந்து இப்ப விடுதலை... விடுதலை வேணும்... என் பொருட்டு இன்னும் யாரும் கஷ்டப்படக் கூடாது...”

ஏஞ்ஜலா மெள்ளக் கதவைத் திறந்து கொண்டு, அவர்களைத் தனியே விட்டுப் போகிறாள்.

“என்ன ஆச்சும்மா? எப்படி... தனியா போனீங்களா? இல்ல யாரானும் கூட்டிட்டுப் போனாங்களா?”

ரேவு உடைய உடைய நடந்தவை அனைத்தையும் கூறுகிறாள்.

“அந்தக் கடங்காரன் எட்டரை மணிக்கு வந்து கூப்பிடறப்ப எனக்குத் துளி சந்தேகம் தெரியல சுதா! இது... அவா திட்டம். கே.ஜி.கே. ஸார் வந்தன்னிக்கே, அவருக்கு இவர்களைக் கண்டாலே பிடிக்காது. நான் சாவி வச்சிருந்தும் குடுக்கலன்னாரே! அவ என்னென்ன பேசினா என்ன? கட்டினவன் நிழல விட்டு வந்ததுக்கு, நான் அணு அணுவாத் தண்டனை அனுபவிக்கிறேன். ஒரு ஆண்பிள்ளை வருஷக்கணக்கில் எங்கெங்கோ அலைஞ்சு மேஞ்சு குற்றவாளியா ஊர் திரும்பினா, அவனைத் திட்டாது.”

“சுதா... எனக்கு இங்க யார் முகத்திலும் முழிக்க இஷ்டமில்ல. ஒரே ஒரு நம்பிக்கைதான் இருக்கு. எனக்கு அந்த மலைக்கு மேல போகணும்...” என்று அந்தக் குடும்பம், குழந்தை தன் புகலிடம் என்று கடைசி எண்ணத்தை வெளியிடுகிறாள்.

“இவா ஆளைத் தேடி, கோர்ட்டு வழக்குன்னா எத்தனை கேவலம்? இதெல்லாம் நடக்கிற காரியமில்ல; எனக்கு இந்த உடம்பு செத்துப் போச்சு. உசிர்... உசிர் இருக்கு. உசிர் ஏன் போகலன்னு தெரியல. அவா என்னைக் கொலை பண்ணாப்பலதான் குலைச்சுப் போட்டிருக்கா. அந்த நினைப்பு வேண்டாம். எனக்குக் கொஞ்சம் பண உதவி பண்ணி, அங்க மலைக்கு அனுப்பி வையுங்கோ. நான் எப்படியானும் உங்க கடனை அடைச்சிடுவேன்!” சுதா விசித்திரமாகப் பார்க்கிறாள்.

“நர்ஸ் கிட்ட இதெல்லாம் சொல்ல வேண்டாம். என்னை அழைச்சிட்டுப் போறதாச் சொல்லுங்கோ... நான் பிழைச்சிருந்து ரங்கப்பாவும் பிழைச்சு நல்லபடியாய், ஈசுவரனுக்கொப்ப நான் எந்தக் குத்தமும் செய்யாதவன்னு நிரூபிக்கணும். அவர் நல்லபடியா எழுந்திருக்கணும்...”

சுதா யோசனை செய்கிறாள்.

“உங்களைத் தனியே எப்படி அனுப்ப?...”

“அதெல்லாம் நீங்க பயப்பட வேண்டாம் எனக்கு வழி, அட்ரஸ் எல்லாம் தெரியும். அந்தக் குழந்தைகள் தங்கமானனவர்கள். சுற்றிலும் மலை, காடு வம்பு சொல்பவர் இல்லை. இப்படிக் குரூரம் பண்ணுபவர்கள் இல்லை. ரேவுமாமின்னு உங்களுக்குத் தெரிஞ்சவ செத்துப் போயிட்டான்னு வச்சுக்குங்கோ. என் உள் மனசு அங்கே தானன் இடம் இடம்னு சொல்லறது. அங்கே அந்த இடமெல்லாம் எனக்கு ஜன்ம ஜன்மமாப் பழக்கமானாப்போல இருக்கு. அன்னிக்கு அந்த ஆட்டோவில் நான் அவரைப் பார்த்துட்டு அப்படியே எந்த வண்டியாயினும் ஏறிப் போயிடலாம்னுதான் இருந்தேன். நடுவில் நடந்த பாதகங்களை அழிச்சிட்டு இப்ப போறேன். என்னை எப்படி பரிவா, பாசமா இவா பிழைக்க வச்சிருக்கா?... மறக்கவே மாட்டேன் சுதா...!”

“ஏன் துளசிதேவி, ஏஞ்ஜலாவிடம் சொல்லக் கூடாதுன்னு சொல்றீங்க? அவங்க பொறுப்பா ஏத்துக்கிட்டு ஒரு நியாயம் கேட்க இருக்கறப்ப, நான் முடிவு செய்யறது சரியா? நாங்க எதுவும் குழுவாக் கூடித்தானன் தீர்மானிப்போம்...”

ரேவு யோசனை செய்கிறாள்.

“நான் கடமைப்பட்டவதான். ஆனால் நான் களைச்சுப் போனேன். என் புருஷனை எதுத்துப் போராட அன்னிக்குத் துணிவில்லை. இன்னிக்கு இந்த சமூகத்தை எதிர்த்து நியாயம் கேட்கவும் எனக்குச் சக்தியில்லை. கோர்ட்டில் என்ன இழவெல்லாம் கேட்பாங்களோ? அதோட பத்துப்பேரைக் கொண்டு நிறுத்தி, இவனா, இவனான்னு கேட்பாங்க; நான் அந்தச் சம்பவத்தையே நினைவுக்குக் கொண்டுவரக் கூசுறேன். செத்துப் போறேன்; நான் பிழைச்சு இருக்கணும்னா, என்னை நீங்க இப்படியே விட்டுடணும், சுதா எனக்கு ரெண்டு செடி துணி, கையில் கொஞ்சம் ரூபாய் கொடுத்து, ரயில் ஏத்தி விட்டுடுங்கோ. அதுதான் எனக்குப் பெரிய உபகாரம்.”

“சரி, நீங்க போற இடத்து அட்ரஸ் சொல்லுங்கோ?”

“மிஸஸ் ஜோதிமணி, எஸ்டேட் ஸ்கூல் டீச்சர், முத்தாறு எஸ்டேட், தேன்மலை போஸ்ட்...”

சுதா அவளை ஊடுருவப் பார்க்கிறாள்.

“டாக்டர்கிட்டயும், ஏஞ்ஜலாகிட்டயும் சொல்லாம நான் உங்களை அனுப்புவது சரியில்லை. நியாயமான எதையும் அவர்களிடம் ஏன் மறைக்கணும்? நான் அவர்களிடம் சொல்லி, ஒப்புக் கொள்ளச் செய்கிறேன். ஆனால் இனிமேல் உங்களுக்கு யாருமில்லைன்னு நீங்க நினைக்கக்கூடாது. உங்களுக்கு, ஒரு பெரிய நிறுவனமே வாய்க்காலாக இருக்கு. உங்களுக்கு எப்போது என்ன பிரச்சனைன்னாலும் நீங்க எங்களுக்கு எழுதலாம்... சரியா?...”

ரேவு தலையாட்டுகிறாள்.

ஒரு வாரம் செல்கிறது.

அன்று ஞாயிற்றுக்கிழமை.

ஏஞ்ஜலா அவளுக்கென்று நான்கு சேலைகள், உள்ளாடைகள், ரவிக்கைகள் அடங்கிய பயணப்பை ஒன்று கொண்டு வந்து வைக்கிறாள்.

“மலைமேல் டீ எஸ்டேட் சூழல் மனசுக்கு ஆறுதலாக இருக்கும் நான் ரெண்டு வருஷம் குன்னூர் பக்கம் மெடிகல் ஆபிசராக இருந்தேன்... நீ எங்களுக்கு இந்தக் கேஸ் விஷயமா துப்புக் கிடைச்சா உதவியாக இருக்கணும். இது உன் தனிப்பட்ட கேஸ் இல்லை. சமூகப் போராட்டம்... போன உடன் எங்களுக்கு விவரம் எழுத வேணும் சரியா?”

அவளிடம் அவர்கள் முகவரியிட்ட ஒரு கடிதம் கொடுக்கிறார்கள். ரயிலடியில் சுதாவும் ஏஞ்ஜலாவும் வந்து ஏற்றி விடுகிறார்கள்.

அத்தியாயம் - 23

அந்த வண்டியில் ஏதோ வங்கியாளர் குடும்பங்கள் உல்லாசப் பயணம் செய்வதாகத் தோன்றுகிறது. வண்டியில் இடம் பெற்றவர்கள், காத்திருப்போர் பட்டியல்கள் சரி செய்யப்பட்டு அவர்கள் அமருவதற்கு விழுப்புரம் வரை செல்ல வேண்டியிருக்கிறது. பிறகு சோற்றுக்கடை பரப்புகிறார்கள். கூட்டிலிருந்து விடுபட்ட உணர்வுடனும், ஆடை அணி அலங்காரங்களுடனும் பெண்கள் ஒரு பெஞ்சியில் இருந்து இன்னொரு பெஞ்சுக்குத் தக்காளி சட்னி, புளியஞ்சாதம், வருவல், இட்டிலி, பூரி என்று பரிமாறிக் கொள்கின்றனர்; ரேவுக்கு இதெல்லாம் அவள் சம்பந்தப்படாத உலகில் நடக்கிறது. அவள் இருக்கை மேல் தட்டு சென்று படுத்துவிடுகிறாள். அமைதியாகத் தனக்குள் ஓர் உலகைக் கற்பித்துக் கொள்கிறாள். மல்லிகைப் பூவாய் ஒரு நம்பிக்கை அது மணக்கிறது. சுமையே இல்லாத சுமை. காடு - மலை - பசுமை - பளிங்காய் அருவிகள் - ஆறுகள் - பாறைகள்...

மனிதர்களையே அவள் தன் உலகில் விடவில்லை.

“என்னைக் கண்டு பயந்து ஓடினாயே? இப்ப வந்துட்டியா?” என்று ஒரு குரங்கு கேட்கிறது.

“முட்டாள்... முட்டாள்! நான்...”

“இப்போது புத்தி தெளிந்த விட்டது. நீங்கள் என்னை சேர்த்துக் கொள்வீர்கள் தானே?”

“அதெப்படி? இந்தக் காட்டுக்கள் இரண்டு கால்காரர்கள் யாரையும் வரவிட எங்களுக்குள் விருப்பமில்லை. இரண்டு கால் பிராணிகளாகிய நீங்கள் வஞ்சகர்கள்; மோசக்காரர்கள். நாங்கள் வாழும் இடங்களையெல்லாம் பற்றிக் கொண்டீர்கள். இரண்டு கால் பிராணிகள் என்றால் எங்கள் எல்லைக்குள் ஓர் எறும்புகூட உசாராகிவிடும்.”

“நீங்கள் அப்படி எல்லாரையும் ஒரே மாதிரி எடை போடக்கூடாது. உங்களிலும் வஞ்சகர், ஏமாற்றுக்காரர் இல்லையா? உதாரணத்துக்கு நரி... நரி...”

அந்தக் குரங்கு ஹி... ஹி... ஹி... என்று சிரிக்கிறது.

“நரி வஞ்சகமா? யார் சொன்னது? இந்த இரண்டு கால் வஞ்சகர்களாகிய நீங்கள் சொல்வது உங்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ள உங்களிடம் இருந்தே நாங்கள் படிப்பதுதானன் அது. எங்கள் உலகில் உள்ளத்தில் ஒன்று வெளியில் ஒன்று கிடையாது. எங்களில் எதிரிகள் என்று பகை உணர்வைச் சுமந்து கொண்டு இம்சைப் படுத்தும் எந்த வழக்கும் கிடையாது. பசியில்லாமல் யாரையும் எதற்கும் துரத்தமாட்டோம், புரிந்ததா?”

“புரியுது, குட்டியை இப்படி மடியில் வச்சுக்கிட்டிருக்கியே? அது உன்னிடம் அன்பாக இருக்குமா?”

“ஐயையே! குட்டி சின்னது. அதற்கு வலுவில்லை. எங்களைப் போல் வேகமாகத் தாவி ஓட முடியாது. அது பால் குடிக்கும். அப்பாவும் அதைக் கூட்டிப் போகும். அது பின்னால் நம்மைச் சொகுசா வைக்கணும்னுதான் நீங்கள் பிள்ளைக்குப் பால் குடுப்பீங்களா?...”

“ஓ... நாங்க அப்படி நினைக்கிறோம். இப்ப நீ சொல்லும்போது தான் இது புரியிது. நம்மை அம்மா சுமக்கல? பால் குடுக்கல? அப்படித்தான்...”

“இந்த நவா மரத்துப் பழம் எவ்வளவு ருசியாயிருக்கு?... நாங்க எப்பவும் எல்லாத்தையும் மொட்டையடிக்க மாட்டோம். அப்படி, சாப்பிட்டுக் கொண்டே தாவித் தாவிப் போவோம்; விளையாடுவோம்; நாளைக்கு இருக்குமோன்னு கவலையே நாங்க பட்டதேயில்லை; மரமும் அப்படிக் கவலைப்படல! நமக்கு உண்ண முடியாத பழத்தை நாம் ஏன் சக்தியைக் கொடுத்துச் சுமக்கிறோம். பெறுகிறோம்னு நினைக்கிதா? ஆறும் அப்படித்தான்... நாளைக்குத் தண்ணி கிடைக்குமோ என்னமோ எல்லாத்தையும் கொண்டுபோய்க் கொட்டிடுறோமேன்னு நினைக்குதா?...”

“உங்கூடப் பேசுறது எனக்கு ரொம்பச் சுகமாயிருக்கு. நான் உங்க கூடவே என் வாழ்நாளைக் கழிக்க முடிவு பண்ணிட்டேன். அன்னிக்கு அந்த ஆதிவாசி சொன்னார். நாங்க ஒரு மரத்தை வெட்ட மாட்டோம். ஒடிஞ்சு காஞ்சு விழுந்ததே ஏராளமாக இருக்கும். அதுதான் கொண்டு வருவோம், உபயோகத்துக்குன்னார். உடனே ஒரு மரம் வச்சுப் பயிர் பண்ணுவோம். முன்ன எந்தக் காலத்திலோ அம்பு, வில் வச்சிருந்தாங்களாம் எங்ககிட்ட இப்ப அதுவும் கிடையாது. துப்பாக்கி தோட்டாவும் இல்ல... ஆத்துல மூங்கில் கூடு மாதிரி கட்டிவிட்டு மீன் பிடிப்போம். எப்பவானும் செந்நாய், மந்தை மான், பன்னி புடிச்சிப் போட்டதைக் கண்டா, எடுத்து வந்து சாப்பிடுவோம். இதைக் கண்டு நாங்க காட்டை அழிக்கிறோம்னு... அடிக்கிறாவ, சிறுமைப்படுத்துறாவ... நாங்க வாழவைக்கிற காட்டை, ஏங்க அழிக்கிறோம்? இவுங்க, நாட்டில இருந்து வரவங்கதா, ஆனையெல்லாம் அக்கிரமமாக் கொல்லுறாங்க, தந்தத்தை உருவி எடுக்கிறாங்க. புலியக் கொல்லுறாங்க, மானக் கொல்லுறாங்க. ஆத்தோரம் ‘மலை மொங்கான்’ பறவைகள் காலை நேரத்தில எப்படிச் சத்தம் போடும்? அத்தைப் பாத்துச் சுடுறாங்க...ன்னெல்லாம் வருத்தப்பட்டாரு. எனக்கு அப்படி வர கூட்டத்தைக் கொல்லணும்னு இப்பத் தோணுது. என்னை வித்தியாசமா நினைக்காதே? எங்கள்ள எல்லாரும் இப்படி இல்ல... அதுனால எல்லாரும் இப்படித்தான்னு முடிவு கட்டக்கூடாது, தெரியுமில்ல?...”

“அது சரி, நீ வந்து பார்த்தால்ல புரியும் அது?...”

“ரங்கப்பா... நான் காட்டுக்கு வரேன்... காடு... சந்தோஷமா இருக்கப் போகும் காடு... காடு...”

தனக்குள்ளே சிரித்துக் கொள்கிறாள்.

காலை பத்தரை மணிக்கு இலக்கை அடைகிறது வண்டி.

அவள் இறங்கி, அங்கிருந்து பஸ் நிறுத்தத்துக்கு நடந்து வருகிறாள். பத்தே முக்கால் பஸ் புறப்பட்டுப் போயிருக்கிறது. இனி இரண்டரைக்குத்தான் அடுத்த வண்டி... அதுவரையிலும்...

பஸ் நிறுத்தத்தில் காத்து நிற்பதா? முகம் கழுவிக் கொண்டு ஏதேனும் சாப்பிடலாமா? எங்கு?

பதினொன்றே காலுக்கு அருவியடி வரையிலும் வண்டி வருகிறது.

ஆகா... அருவியடி சென்று நீராடலாம். பிறகு அங்கிருந்து மலை மேல் செல்லும் அடுத்த வண்டி.

அருவியடிக்குச் செல்வது மிக நல்ல துவக்கம்.

வண்டியில் ஏறியாயிற்று.

வண்டியில் ‘வனஸ்பதி பாபா சமிதி’ என்ற இலச்சினை குத்திக் கொண்டு நிறைய ஆண் பெண்கள் இருக்கிறார்கள்.

அவளிடம் ஒரு முதியவர் “நீங்களும் சமிதிக்காரங்கதானே?” என்று கேட்கிறார்.

“...தெரியலியே? என்ன சமிதி?”

“காடு - மலை - சூழலில் ஒரு சாமியார் வெகுநாட்களுக்கு முன் இருந்தாராம். அவர் நினைவில், சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் தூய அன்புத் திருக்கூட்டம் என்று ஆங்காங்கு சென்று வழிபடும் சமிதியாம் அது. இது வடநாட்டில் இருந்து வருபவர் கிளையைச் சார்ந்ததாம். அருவியடியில் சென்று நீராடி, அங்கேயே பஜனை, தியானம் செய்வார்களாம். அங்கேயே பொங்கிச் சாப்பிட்டுத் திரும்புவார்களாம்.”

ரேவுவுக்கு மிக உவப்பாக இருக்கிறது.

முத்தாறு அணையைக் கடந்து, மலை ஏறும்போதே, அருவியடி தெரிகிறது. அணைத்தேக்கத்தில், நீர் மிகக் குறைவாக இருக்கிறது.

பழைய மண்டபம் ஒன்றைச் சுத்தம் செய்து அவர்கள் தங்கள் சாமான்களை வைக்கிறார்கள்.

இந்த இடத்தில் ரங்கப்பாவுடன் அவள் மலையில் இருந்து இறங்குகையில் நீராடினாள்.

இப்போது பையை ஒரு பாறையடியில் வைத்துவிட்டு ரேவு அருவியில் சென்று நிற்கிறாள்.

சட சட சட் சட் சட சட...

கட்டுக் கட... கட்டுக் கட... கட... கட... சட... சட... சட...

நீர் அவள் மீது ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறது. ஆனந்தத் தாண்டவம். இந்த உடலின் மாசுகளை மிதித்து ஆடும் தாண்டவம்.

புதிய வாழ்வின் நுழைவாயில் இது... புதிய ஜன்மம். அந்தக் காலத்தில் இல்லறம் முடித்து வானப்பிரஸ்தம் வருவார்களாமே? இது வானப்பிரஸ்தத்தின் துவக்கம். ரேவு... ரேவு, உன் பாவப்பட்ட நாட்கள் இதோ துவம்சம் செய்யப்படுகின்றன. நீ... புனிதமாகிறாய். உடலும் உள்ளமும் புனிதமாகிறாய்.

உனக்குள் மகாசக்தி விளங்கப் போகிறாள். நீ மேலே மேலே போகப் போகிறாய்...

அவள் எத்தனை நேரம் இந்த அருவி இன்பத்தில் திளைக்கிறாள் என்று உணர்வில்லை. வந்தவர்கள் அங்கே கூட்டமாக அமர்ந்திருக்கிறார்கள். புல் பரப்பில், பாறைத் தடத்தில்... இருபது பேருக்குமேல் இருப்பார்கள்.

“உயிரே... உயிரே... உயிரே...

எண்ணியதை இயக்கி, உணர்த்துவதும் உயிரே...

எண்ணிய உணர்வை, உடலாக்குவதும் உயிரே...

உடலில் விளைந்த உணர்வின் ஆற்றலை

தன்னுடன் எடுத்துச் சென்று மறு உடலை

உருவாக்குவதும் உயிரே...?

உயிரே கடவுள்! நீ எண்ணிய உணர்வே இறைவன்!

நீ எண்ணிய உணர்வின் செயலே தெய்வம்!

உயிரே... உயிரே... உயிரே...”

ஒருவர் சொல்ல மற்றவர் திருப்பிச் சொல்ல அவர்கள் சேர்ந்து இசைக்கிறார்கள்.

அந்த நாத ஒலி அவன் உள்ளத்தில் ஒரு புதிய உணர்வைத் தோற்றுவிக்கிறது.

அதில் ஐயங்கள் கரைகின்றன. சஞ்சலங்கள் மடிகின்றன.

உயிரே... உயிரே... உயிரே... என்று சொல்லிக் கொள்கிறாள்.

“தன் மனப்பகையைக் கொன்று...

தமோ குணத்தை வென்று,

உள்ளக் கவலை யறுத்து,

ஊக்கத் தோனிற் பொறுத்து

மனதில் மகிழ்ச்சி கொண்டு,

மயக்கமெலாம் விண்டு,

ஸந்தோஷத்தைப் பூண்டு

உயிரே... உயிரே...

உயிர் வாழ்க...

நீயே தெய்வம்”

உயிரே, நீ காற்று, நீ தீ, நீ நிலம், நீ நீர், நீ வானம்... நீயே இந்த வனங்கள்... நீயே நான்.

பறக்கின்ற பூச்சி, கொல்லுகின்ற புலி, ஊர்கின்ற புழு எண்ணில்லாத உயிர்கள், உயிர்த் தொகைகள்... இவையெல்லாம் நினது விளக்கம்... ரேவுவைத் தூக்கிக் கொண்டு மலைப்பாதையில் ஏறுகிறாள்.

மலை... மலை ஏறுகிறாள். இருபுறமும் பசுமைகள்... மரங்கள்... சரிவுகள்... செம்மண் தெரியும் வெட்டப்பட்ட சரிவுகள்.

எல்லோரும் ‘ஓம்’ என்று எழுப்பும் நாதம் அந்த ஏற்றத்தோடு செவியில் வந்து இணைகிறது. அவள் அவர்களை விட்டு வெகு தொலைவில் வந்து விடுகிறாள். மேலே... மேலே...

ஒலி... ரீம்... என்ற ஒலி... பசுமை... பல வண்ணப் பொருட்களாய் வழி நெடுகப் பூக்கள் தெரிகின்றன.

அவள் அங்கே நின்று அந்தக் காட்சியைப் பார்க்கிறாள்.

ஓ... பஸ்... பஸ் வருகிறது.

பஸ்... அவளை மேலே கொண்டு செல்லக்கூடிய பஸ்... கை காட்டி நிறுத்துகிறாள்.

மனம் துள்ளுகிறது... மணியோ? அந்தப் பழைய நடத்துவர் மணி ஜோடி இல்லை. வேறொருவர் சற்றே வயதானவர். அவளை வண்டியை நிறுத்தி ஏற்றிக் கொள்கிறார்கள். சாமான்களைத் தாண்டி, ஒரு வரிசையில் கைக்குழந்தைக்காரி ஒருத்திக்கு அருகில் இடம் பெறுகிறாள்.

“எங்கேம்மா?...”

“முத்தாறு எஸ்டேட், டீச்சர் காலனி...”

அவன் சீட்டுக் கிழித்துக் கொடுத்துப் பணம் வாங்கிக் கொள்கிறான்.

“டெய்சி டீச்சர் வீட்டுக்கா?”

ஓ, இவர்களுக்கு இங்கு எல்லோரையும் தெரிந்திருக்கும் போலும்?

“இல்ல... ஜோதிமணி... டீச்சர்...”

“...அவங்க... அவசரமா நேத்து பஸ்ல கீழே போனாங்களே! நீங்க அவங்க உறவா, வேணுங்கறவங்களா?...”

“ஓ...?”

“வந்திடுவாங்க. மணி அவங்க மாப்பிள ஒரு வாரம் தான் லீவு. இது அவங்க ட்ரிப்தானன்... ஏதோ அவசரமா தந்தி வந்து போனாங்க...”

“...”

ரேவு சற்றே திகைக்கிறாள்.

“பரவாயில்ல... டெய்சி டீச்சர் வீட்டுல சாவி இருக்கும். நீங்க தங்கிக்கலாம்...”

ரேவு புன்னகை செய்து கொள்கிறாள்.

மலை ஏறுகிறது வண்டி. வளைவில் மெல்லத் திரும்பி கவனமாகச் செல்கிறது.

சக்தி சக்தி சக்தி என்று சொல்லு... சஞ்சலங்கள் இல்லை என்று சொல்லு...

ரீம்... ரீய்ங்... ரீய்ங்... என்று ஏறும் பஸ்... கீழே பசுமை அடர்ந்த காடு. புதர்கள் பளபளக்கத் தெரியும் தண்ணீர்.

சற்றே சரிவில் இறங்கியும், ஏறியும் செல்லும்போது பஸ்ஸில் எவரும் பேசவில்லை. மோனத்திருக்கும் ஒரு மனிதக்கூட்டம். மனம் மட்டும் சிறகடித்துப் பறக்கிறது.

ஒரே பசுமையாய்ப் புல்வெளியின் நடுவே வண்டி இறங்குகிறது. ஆங்காங்கு கறவைப் பசுக்கள் மேய்கின்றன.

மீண்டும் ஏற்றம்... காடுகள்... காடுகளைத் திருத்திய தேயிலைத் தோட்டங்கள். இந்தத் தோட்டங்களுக்கப்பால் மலைகள்... அடர்ந்த காடுகள்.

தொழிலாளர் வீட்டு வரிசைகளின் முன் பாதையில் வண்டி நிற்கிறது. மீண்டும் ஏற்றம்...

வானில் வெய்யோன் மறைந்து, கார்மேகம் பரவுகிறது. கரும் புகைகள் போல், தொலைவிலுள்ள மலை மடிகளை மறைத்தும் காட்டியும் விளையாடுகின்றன.

மூன்று இடங்களில் மக்களையும், சாமான்களையும் இறக்கியபின், இவள் இறங்க வேண்டிய இடம் வருகிறது.

“இதோ கீழே இறங்கி மேலே வரிசையாகத் தெரியும் லயன்தாம்மா டீச்சர் காலனி...” என்று பரிவுடன் நடத்துனன் வழிகாட்டுகிறான்.

ரேவு நிறைந்த மனதுடன் படிகளில் இறங்கி நடக்கிறாள்.

அத்தியாயம் - 24

சரிவில் இறங்கி, வளைந்து நெளிந்து ஓடும் அருவியின் மேலுள்ள மரப்பாலத்தைக் கடந்து...

தன் கால் செருப்பைக் கழற்றிவிட்டு, ஈரம் தோய்ந்த புல் மெத்தையில் பாதங்களைப் பதிக்கிறாள். ஆயிரமாயிரமாக ரோமக் கால்களில் அந்தச் சில்லிப்பும் சுகமும் வந்து உடலெங்கும் உள்ளமெங்கும் பரவுகிறது.

சின்னச் சின்னப் பூம்பந்துகள் போல் மேலே அந்த வரிசையின் முன் இளம் பிள்ளைகள். ஆம். பள்ளியில் பாடம் படித்தாலும், சரியாகத் தெரிந்து கொள்ளாத பிள்ளைகளுக்குத் ‘தனிப் பாடம்’ எடுப்பார்கள். அங்கு தங்கியிருந்த போது, தானும் அந்தப் பிள்ளைகளின் பாடங்களைக் கேட்டு மகிழ்ந்ததெல்லாம் நினைவில் இனிக்கிறது.

ஒவ்வொரு படியாக எடுத்து வைத்து மேலே ஏறுகின்றாள். பெரிய பெரிய யூகலிப்டஸ் மரங்கள்...

இந்த வரிசைக்கு மேல் காடுகள்... அடர்ந்த காடுகள். தேயிலை கிள்ளும் பெண்கள்... நீள மூங்கில் கழிகளை எடுத்துக் கொண்டு அணியணியாகப் பெண்கள் பாதையில் நடந்ததைப் பார்த்து அன்று அவள் கேட்டாள்.

“இவர்கள் எதற்குக் கம்புகள் கொண்டு போறாங்க?”

“சரிவில் இதை ஊன்றித்தான் நடக்க முடியும்.”

கையில் பெட்டிக் கத்திரிகள்... டீச்சர் வீட்டுக்கு வந்து செல்லும் அவர்களைப் பார்த்துப் புன்னகை செய்தார்கள்.

பாதுகாப்புக்குள், சாமான் வாங்கப் பொருள் தேடும் கவலை இல்லாமல் ஒரு வாழ்வுச் சுமையே அவள் கொடுமையாக நினைத்தாள். இது... இவர்கள் எல்லோரும் எப்படி வாழ்கிறார்கள்? உடல் அலுத்து, வாழ்வின் தேவைகளை மூச்சைப் பிடித்துக் கொண்டு அன்றாடம் தேடிக் கொள்ள வேண்டும். இவர்களின்... ஆண்கள், எப்படி இருப்பார்கள்? அவர்களும் இந்த அத்துவானங்களில் உழைப்பதால் முரடர்களாகத் தானிருப்பார்கள்.

மேல் பாதையில் சாரியாக, தேயிலைச் சுமையைச் சுமந்து கொண்டு செல்லும் பெண்களைப் பார்த்தவாறே நிற்கிறாள்.

ஓடிப்போய், அவர்களைத் தழுவிக் கொண்டு, “நான் இங்கே வந்துவிட்டேன்” என்று சொல்வதாகப் பாவனை தோன்றுகிறது.

இவளை அந்த எல்லைக்குள் கண்டதும், அங்கிருக்கும் சிறுவர் சிறுமியர், “வணக்கம் டீச்சர்!” என்று கோரசாக வரவேற்கின்றனர்.

இந்தக் குரலைக் கேட்டுத்தான் போலும், உள்ளிருந்து ஓர் ஆண்... வயசானவர் தாம், வருகிறார். அவளை “யார் நீங்கள்?” என்று கேட்பதைப் போல் நிமிர்ந்து பார்க்கிறார்... “நீங்க... புது அபாயின்ட்மென்ட்டா?”

“இல்லீங்க... நான்... இங்கே ஜோதி டீச்சர் வீட்டுக்கு வரேன். முன்னக் கூட வந்திருந்தேன்...”

“ஓ... வாங்க... என்.கே.ஆர். ஸாரும் அவர் மகளும் வந்தாங்கன்னு சொன்னாங்க... வாங்கம்மா... அவங்க இப்ப ஊரில இல்ல. ஒரு வாரம் லீவுல போயிருக்காங்க. புள்ளக்கி ரொம்ப உடம்பு சுகமில்லாம போச்சு, காச்சல் வந்து சளி, இருமல்னு வுடல. கீழ போயி ஸ்பெஷலிஸ்ட் கிட்டக் காட்டிட்டு, அப்படியே நேர்ச்சைக் கடன் முடிச்சிட்டு வாரதா சொன்னாங்க... நீங்க வீட்டில தங்கிக்கலாம். சாவி எங்கிட்டத்தான் இருக்கு...”

என்ன இதம்! என்ன பரிவு!

“நீங்க மட்டும் தான் வந்தீங்களா? அப்பா வரலியாம்மா?”

“இல்ல...”

இதற்குள் குரல் கேட்டு டெய்சி டீச்சர் வந்து விடுகிறாள்.

“அடா... வணக்கம், வாங்கம்மா...! ஜோதி டீச்சர் புள்ளக்கி உடம்பு சரியில்லாதப்ப சொல்லிட்டே இருந்தாங்க. ‘அவங்க கைபட்டதும் அன்னக்கி எவ்வளவு சீக்கிரமா புள்ளக்குக் கலகலன்னு ஆயிடிச்சி!... அவங்களுக்குப் புள்ள மேல ரொம்ப இஷ்டமாப் போச்சி... அஞ்சு மல ஏறி பால் குடுக்கக் கொண்டு வருவேன்னாங்க... அவங்க இங்க வந்தா எவ்ளோ நல்லாருக்கும்! ஆனா, எப்படிம்மா கேக்க! அவங்களைப் போயி... கேட்டா என்ன நினைக்கமாட்டாங்க!’ன்னு சொல்லிட்டே இருப்பாங்க. டிரைவர் சார் கூடச் சொல்வாரு, ‘நீ ஒரு லெட்டர் எழுதிப் போடு. அவங்களுக்கு நாம தனியா சமையல் பண்ணிக்க வசதியா ஒரு பக்கம் ஒழிச்சிக் குடுப்போம்... அவங்க... புருசன் விட்டுப் போட்டு வேற கட்டிட்டாப்ல. அப்பா வீட்டோடுதா இருக்குன்னு படுது...’ன்னெல்லாம் சொன்னாரு. கடிதாசி போட்டாங்களாம்மா?”

டெய்சி டீச்சர், மடை திறந்தாற்போலப் பேசுகிறாள்.

“அட, உங்கள நிக்க வச்சிட்டுப் பேசுறேன், நீங்க உள்ளாற வாங்க. அம்மாதான் இருக்கு... இங்கே வேற யாரும் இல்ல. டீச்சர் வரும் வரையிலும் இங்கே தங்கிக்கலாம். நீங்க எப்ப சாப்பிட்டீங்களோ என்னமோ...?”

மனம் உருகுகிறது.

“நான் கீழ சாப்பிட்டுத்தான் வந்தேன். நீங்க எவ்வளவு பிரியம் வச்சிருக்கீங்க. எனக்கு இந்த இடம் அமைதியாக, ரொம்பப் பிடிச்சிப் போச்சு. அதனாலதான் கடிதாசி கண்டதும் ஓடி வந்துட்டேன். அப்பாக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்ல... இல்லாட்டி கொண்டு விட வருவாரு... நீங்க சிரமப்பட வேண்டாம். எனக்கு நல்லா வழி தெரியும். போயிடறேன்னு சொல்லிட்டு வந்தேன்... உடனே கடிதாசி எழுதணும்னு விலாசம் எழுதிக் கவர் குடுத்திருக்காங்க!”

ஓ... பிரச்னைகள் எவ்வளவு சுளுவில் தீருகின்றன!

டெய்சியின் தாய்... முதியவள். கண்பார்வை சரியில்லை. என்றாலும், மிகப் பரிவுடன் தனியாகச் சோறு பொங்கி சாம்பார் வைக்கிறாள்...

“நாளைக்கிக் கொஞ்சம் தயிர் பண்ணிடுவோம். சாம்பார் நல்லாயிருக்குங்களா...?”

“எனக்காக... ஏம்மா இவ்வளவு சிரமம்? உங்க பரிவான பேச்சிலேயே எனக்கு ரொம்ப நிறைவாயிருக்கு. அம்மா, பெண் பிறந்தாலே சுமை சுமக்கணும்னு ஏன் வச்சிருக்காங்க? இதை மாத்த முடியாதா?... உங்களை எல்லாம் பாக்கறப்ப...” முடிக்கவில்லை. கண்ணீர் பொங்குகிறது. துடைத்துக் கொள்கிறாள்.

அந்த வீட்டில் ஒரே அகலக் கட்டில்தானிருக்கிறது. தாயும் மகளும் அடக்கமாகப் படுக்க முடியும்.

“நான் அந்த வீட்டில் போய்ப் படுக்கிறேன், டீச்சர் இங்கே நீங்க வசதியாகப் படுக்கலாம்...”

டெய்சியும் கூட வருகிறாள். பூட்டைத் திறந்து உள்ளே வருகிறார்கள். விளக்கைப் போடுகிறார்கள்.

அந்த வீடு... அந்த அகலக் கட்டில்... அந்த அகல பெஞ்சு அவள் முன்பு படுத்த பெஞ்சு. அது நிரந்தரமாக அவளுக்கே செய்யப்பட்டது போல்... அதன் மேல் அளவாக பெரிதாக ஒரு மெத்தை...

டெய்சி உள்ளே சென்று குழாயைத் திறந்து மூடுகிறாள். பின் கதவு பூட்டியிருக்கிறதா என்று பார்க்கிறாள்.

“உங்களுக்கு ஏதாவது தேவையிருக்குமா?... தனியாக இருக்கப் பயமாக இருக்குமானால், தோட்டத்துப் பிள்ளை அந்தால இருக்கு, வந்து படுக்கச் சொல்லட்டுமா?”

“வாணாம், வாணாம்மா, எனக்குப் பயம் ஒண்ணும் கிடையாது... நீங்க போங்க... எனக்குச் சவுரியமா இருக்கு...”

அவள் இவளுக்காக ஒரு ‘டார்ச்’ விளக்கை மேசை மீது வைத்துவிட்டுப் போகிறாள்.

அவளை அனுப்பிவிட்டு, அந்தப் பெஞ்சில் வந்து உட்காருகிறாள். நெஞ்சு நிறைந்திருக்கிறது. இரு கைகளையும் நீட்டிக் கொண்டு சிறுமி தட்டாமாலை ஆடுவது போல் சுற்றுகிறாள். வாய்விட்டுச் சிரிக்கிறாள்.

நான்... நான்... யார்? ரேவு... ரேவு என்ற உடலுக்குரியவளா? இல்லை... அவள் கீழ் மண்ணிலேயே மடிந்து விட்டாள்.

இங்கே... புதியவள். இங்கு யாரும் இவளை அந்தப் பெயர் சொல்லிக் கூப்பிடமாட்டார்கள். ஜோதி ஆன்ட்டி என்றாள். அவள் புருஷன் அத்தை என்றான்... குழந்தைக்கு இவள்... அது கூப்பிடும் உறவாகப் பெயருக்குரியவளாவாள். இங்கே யாரும் இவளைப் பெயர் கேட்கவில்லை.

அந்தத் திரையை விலக்குகிறாள்.

ஹா... இன்று என்ன பௌர்ணமியா?...

மேகங்கள்... அலையலையாக விளங்க, ஏதோ ஓர் அமுதகலசம் போல் நிலவு பாதி எழும்பினாற் போல் பாலை விசிறிக் கொண்டிருக்கிறது. என்ன அற்புதம் இது!

ஒரே அமைதி... தேயிலைச் செடிகள் மரங்கள்... கண்களுக்கெட்டிய வரை...

வெகுநேரம் அந்த மேகங்கள் மெல்ல விலகுவதையும் மூளியான நிலவை மறைத்து விளையாடுவதையும் பார்க்கிறார்ன். நட்சத்திரங்கள் இல்லாத மூட்டம்...

இதுபோல் இரவில் அவள் என்றேனும் வெளியே பார்த்திருக்கிறாளோ? மெல்லக் கதவைத் திறந்து கொண்டு அந்தச் செடிகளுக்கு நடுவில் நடந்தால்?

- நடக்கலாமா?

பயம்...?

என்ன பயம்? யாருக்குப் பயம்? எதற்காகப் பயம்? எதையேனும் இழப்போம் என்ற பயமா?...

ஆஹாஹா... என்று சிரிக்கத் தோன்றுகிறது.

கதவை மெல்லத் தாழ் நீக்கிக் கொண்டு, வெளியேறுகிறாள். இந்த வீடு இந்தப் பக்கம் கடைசி வீடு.

மெல்ல எல்லைப் படலைத் திறந்து பக்கத்துச் சரிவில் தேயிலைச் செடிகளின் ஓரத்தில் நடக்கிறாள்.

செருப்பு இல்லை. சில்லென்று ஈரம் சேலை நுனியில் படிகிறது. ஊசி ஊசியாகச் சாரல் துளிகள் படிகின்றன. உள்ளம் குதூகலிக்கிறது.

மேலே... மேலே... அடர்ந்த கானக விளிம்பில் வந்து நிற்கிறாள்.

ஒற்றையடிப் பாதை போல், காட்டையும் தேயிலைச் செடிகளையும் பிரிக்கும் எல்லைக் கோடு செல்கிறது. அதில் நடக்கிறாள்.

எல்லைகள், காலவரையறை எல்லாம் கழன்று போகின்றன.

அவள்... அவள் இந்தப் பெரிய பிரபஞ்சத்தின் ஒரு துளி.

அச்சமில்லை, இச்சையில்லை, துன்பமில்லை... எதுவுமில்லை.

உயிரே, உயிரே... உயிரே.

எண்ணியதை இயக்கி உணர்த்துவதும் உயிரே...

எண்ணிய உணர்வை உடலாக்குவதும் உயிரே...

எண்ணிய உணர்வை உடலில் வளர்ப்பதுவும் உயிரே!

உயிரே... உயிரே... உயிரே...

ரேவு... இல்லை... அவள்... உயிர்... உடலில் விளைந்த உணர்வின் ஆற்றலை தன்னுடன் எடுத்துச் செல்கிறாள். அந்த நிசியில் அந்த வனத்தினிடையே அவள் புகுகிறாள். மூங்கில் முட்கள் உராயும் புதர்கள். சரசர சத்தம்... சோக்... சோக்... நிசிப்பறவைகளின் சிறகடிப்புக்கள்...

பாதை தெரியாத பாதை. ஐம்புலன்களும் ஒரே இலக்கில் இலயிக்கும் பாதை. உடலில் விளைந்த உணர்வின் ஆற்றலைத் தன்னுடன் எடுத்துச் செல்கிறாள். உயிரே கடவுள் நீ எண்ணிய உணர்வே, எண்ணிய உணர்வின் செயலே தெய்வம்.

ஆயிரம் முட்கள் குத்துகின்றன. ஓராயிரம் கருந்தேட்கள் கொட்டுகின்றன. பிட்டுக்கு மண் சுமக்க வந்த பெம்மானை, பாண்டிய அரசன் பிரம்பால் அடித்ததும், அந்தப் பிரம்படி உயிர்க்குலங்கள் அனைத்தின் மீதும் பட்டதாமே? வானத்துச் சந்திரனின் ஒரு கிரணம், ஊடே நுழைந்து கீழே அந்த இடத்தை அவளுக்குக் காட்டுகிறது.

நேர் கீழே கசமாய்ப் பள்ளம். சிதிலங்களாய் அசையும் பிராணிகளும் அசையா உயிர்களும் சிதறிக் கிடக்கும் களரி. ஒரு மாமலைத் துண்டு போல் மத்தகஜம் ஒன்றின் முண்டம்... ஒரு கரிய உருவம் - அரக்க உருவம், வெள்ளியாய் நீட்டியிருக்கும் தந்தத்தை ஆட்டிப் பிடுங்குகிறது. ஹ்... ஹ்ய்...

இது பேய்க்காற்றா? ஊழிக் காற்றா? பூமி குலுங்குகிறதா?

எண்ணியதை, இயக்கு! உன் உடலில் விளையும் உணர்வின் ஆற்றலை உன்னுடன் எடுத்துச் செல்! எழும்பு, எழும்பு!... நீ பேராற்றல்! நீ மகாகாளி! நீ பெருஞ்சக்தி! தோட்டைப் பிளந்து எழும்புகிறது அந்த ஆற்றல்.

அவள் அவன் பிடரியில் அமர்ந்து அழுத்துகிறாள்.

ஒரு ஹுங்காரத்துடன் மேலே மேலே எழும்புகிறாள்.

பெருஞ்சக்தியாய்... அண்டமெங்கும் பரவியுள்ள பெருஞ்சக்தியாய்... அவள்... அவள்...

அவள் சிரிக்கிறாள். கட்டுக் கட கடவென்று சிரிக்கிறாள்.

நிசிப்பறவைகள் சடசடவென்று சிறகுகளை அடித்து ஆமோதிக்கின்றன.

ஓடைகள் சலசலவென்று சிரிக்கின்றன.

கானக மரங்கள் அசைந்தாடி மகிழ்ச்சியில் ஒன்றோடொன்று இதமாய்த் தழுவிக் கொள்கின்றன.

சந்திரவொளியில் அந்தக் குரூர மனிதன் வெறும் பூச்சி போல் நசுக்குண்டு கிடக்கிறான்.

அத்தியாயம் - 25

அவளைச் சிறை வைத்திருந்த தோடு கழன்று விட்டது. மென் முனையாக எழும்பி எல்லையற்ற பெருவெளியில் சஞ்சரிக்கின்றன.

காற்றுப்போல் இருந்தாலும் பேராற்றல் கூடி இருக்கிறது. ஆனந்த ரூபிணியாக மகிழ்கிறாள். உயிர்களைச் சுமப்பவள்; உயிர்களைப் பேணுபவள்; உயிர்களைக் காப்பவள்; ஒவ்வொரு பெண்ணுடலிலும் மகாசக்தியான விந்துவாக அவள் திகழ்கிறாள். அந்தச் சக்தியை அழிப்பதாக எண்ணிப் பதர்கள் அந்த உடலை மாசுபடுத்துகிறார்கள்; குதறுகிறார்கள். ஆனால் அழிக்க முடியுமோ? அந்த உயிர் மூலாதார சக்தி. அது இயற்கையின் மாற்றங்களில் உயிர்த்துக் கொண்டே இருக்கிறது. சலித்துக் கொண்டே இருக்கிறது. கானகத்தில் அது நிலை கொள்கிறது. மலை முடிகளில் அது விளங்குகிறது. முட்டைக் குஞ்சு பொரிந்து கண் விழிக்கும் போதும், தாய்ப் பிராணியின் மடியில் சிறு செப்புவாய் பாலருந்தும் போதும் அவள் பரிபூரண மோன சுகமாய் இலங்குகிறாள்.

துப்பாக்கியோ தோட்டாவோ சுமந்து வருபவர் பிடரியில் குந்தி ஒரே அழுத்தல். இரைக்காக ஓர் உயிர் மற்ற உயிரில் பாயும்போது, அது அவள் கண்மூடி சுகமனுபவிக்கும் பிள்ளை விளையாட்டாகிறது.

செந்நாய்கள் மானைப் பற்றி இரையெடுத்துவிட்டு மீதியை விட்டுப் போகின்றன. வில் - அம்போ, துப்பாக்கி தோட்டாவோ இல்லாத எளிய வனவாசி, அதை அம்மை தந்த பிரசாதம் என எடுத்து ஆற்றில் கழுவித் துண்டு போடுகையில் எங்கிருந்தோ வருகிறான் ஒரு பேராசை மனிதன். அவன் வனக்காவலனா?

ஆகாகா... யாருக்கு யார் காவல்?

அந்த எளியனை இழுத்துச் சென்று வனவிலங்குகளை, காட்டை, அழிப்பாயா... அழிப்பாயா என்று அடித்து இம்சைப்படுத்துகிறான்; விடுகிறான். அவன் வினையே அவனை அழிக்கிறது.

அந்தக் காவலன் காரணம் தெரியாமல் மறுநாளே மடிந்து போகிறான்.

மலைமுடிகளில் தங்கும் மேகங்கள் சூலுற்று, மழையைப் பொழிகின்றன. பச்சை; எங்கும் பூரிப்பு; மங்களம்...

கானாறுகள் நிரம்பி வழிகின்றன. தேயிலைச் செடிகள் புதிய தளிர்கள் அரும்பக் குலுங்குகின்றன.

பெண்கள்... அணியணியாகத் தேயிலை கிள்ளுகிறார்கள். அப்போது அந்த மலைப்பாதையில் பஸ் வருகிறது.

பத்து நாட்களாய்ப் பாதை தடைப்பட்ட பின் செப்பனிடப்பட்டு வருகிறது. அந்த வண்டியில் ஜோதி, புருஷண் மணி, குழந்தை எல்லோரும் வருகிறார்கள். ஓட்டுபவன் மணிதான். நடத்துனன் துரை, வளைவில் திருப்புவதைக் கவனமாகக் கண்காணிக்கிறான்.

எதிரே, ஒரு சிறு கார் வருகிறது. அது எளிய பெண்களை, உழைப்பாளிகளை மேய்க்கும் ஓர் அநியாய அதிகாரியைச் சுமந்து வருகிறது. அவன் நின்று நிதானித்து ஏறும் பஸ்ஸுக்கு இடம் விடாமல் வருகிறான்.

விளிம்பில் நிலைநிறுத்த முடியாமல் சக்கரம் நழுவ, கண நேரத்தில், தொண்ணூறு உயிர்களையும் மூட்டை முடிச்சுகளையும் சுமந்து வரும் பஸ்...

ஓ... அதில் ஜோதி... அவள் குழந்தை, அவள் தகப்பன்... பெங்களூரில் மனநல மருத்துவமனையில் இருந்த அவள் அன்னை... எல்லோரும் வருகிறார்கள்.

‘ஆண்டவனே! தாயே! வனமாதா! காப்பாற்று... கீழே கிடுகிடு பள்ளத்தில் மல்லாக்கச் சரியும் அந்தப் பெரிய வண்டியை, துருத்திக் கொண்டிருந்த சிறு பாறை அப்படியே தாங்குகிறது.

ஒரு சிறு குஞ்சுக்குக்கூடக் காயமில்லை. அந்தச் சிறு பாறை, தாயின் பெருங்கருணையாய், அந்தப் பஸ்ஸை, சக்கரங்கள் மேல் நோக்கி இருக்க, மல்லாந்த பஸ்ஸை வலிய கரங்கள் ஒரு மலரை ஏந்துவது போல் ஏந்தி நிற்கிறது. கதவு வழியும், சன்னல் வழியும் எப்படி அவர்கள் வெளி வருகிறார்கள்?

ஏதோ ஓர் தாயின் கைகள் அத்தனை மக்களையும் பத்திரமாக மேலே ஏற்றுகின்றன.

மாஸ்டர்... மாஸ்டர் குழந்தையைச் சுமந்து கொண்டு ஏறுகிறார். தேயிலைச் சரிவுகளில் ஏறி இறங்கிப் பழகிய முத்தம்மா, வில்சன், மேரி இவர்கள் மற்றவர்களைப் பத்திரமாக மேலே ஏற்றிவிடுகிறார்கள். ஆனால் இந்த அதிசயம் இங்கு நிகழ்கையில், இவர்களை ஓரத்தில் ஒதுக்கிவிட்டு முன்னே இறங்கிய கார், அடுத்த திருப்பத்தில் நிலைகுலைய, நானூறடி பள்ளத்தில் சரிந்து வீழ்கிறது.

....

என்ன அதிசயம்?...

இந்த பஸ் எப்படித் தப்பியது?...

இந்தப் பாறை தெய்வம்ங்க. இது இல்லேன்னா... ஒரு சிறு குஞ்சுகூடத் தப்பாது!

ஜோதி குழந்தையை உயிர் பிழைத்த சந்தோஷத்தில் அணைத்து முத்தமிடுகிறாள். குழந்தை கக்குப் பிக்கென்று சிரிக்கிறது.

“ஆமாங்க, அந்தக் கார் வுழுந்திற்று. குட்ச்சிப் போட்டு ஓட்டுனா, யாரை யார் ஏமாத்துறது? மலை தெய்வம், அத்தை ஏமாத்த முடியுமா? மனசில வஞ்சம் வச்சிட்டோ, பொய்ய வச்சிட்டோ இங்க யார் நடந்தாலும் ஒரு நா... அதுக்குத் தண்டனை கிடைக்கும். கிடைச்சுடுதுங்க. தந்தத்துக்காக யானையைக் கொன்ன ஆளு ஒருத்தன, அங்கியே செத்து அழுகிக் கிடந்தான்னு சொல்லிட்டாங்க...”

“எங்ஙன?”

“அதா மேமலைப் பள்ளத்துக் கசத்துல... அது எத்தினி நாளாச்சோ? ஃபாரஸ்டுக்காரங்க சொல்லிட்டாங்க... நமக்கென்னப்பா தெரியும்?”

“வேறல்ல சொல்லிட்டாங்க! ஒரு ஃபாரஸ்டு காவல், ரொம்பத்தா கெடுபிடு பண்ணிட்டு அடிச்சி இமிசை பண்ணிட்டிருந்தா... வெறவு பொறுக்க எந்தப் பொம்பிளயேனும் தனிச்சு வந்திட்டா இழுத்திட்டுப் போயிடுவானாம். அவங்கூட எப்பிடின்னு தெரியாம செத்துக் கெடந்தானாம், வூட்டு வாசல்லியே...”

“அதில்லப்பா, அவந்... துப்பாக்கியத் துடச்சிட்டுருந்தானாம். தவறுதலா கைபட்டுக் குண்டு வெடிச்சிட்டதாம். ஆள் குளோஸ்னு சொல்லிக்கிறாங்க.”

“அதென்னமோ, இந்த மலங்காட்டுல நாம உழச்சிப் புழைக்கிறோம். அடுத்தவரைக் கெடுக்கிறதோ, உறிஞ்சிப் புழக்கிறதோ, மோசம் நினைக்கிறதோ, ஒரு நாளும் நல்லபடியா சீவிக்கத் தோதாயிருக்காது...”

நடத்துனரையா, அவர்களைப் பார்க்கிறான்.

“ஏம்ப்பா, வாரியளா, பொடி நடயா நடந்து முத்துக்காடு எஸ்டேட்ல போயிச் சேதி சொல்லிட்டு, எதுனாலும் வண்டிக்கு வழி பண்ணுவம். பொம்புளக, சின்னப்புள்ளகள மட்டுமாணும் ஏத்தி பத்திரமாக் கொண்டிட்டுப் போவலாம். இனி கீழே சேதி சொல்லி டிரான்ஸ்போர்ட் வண்டி வர நேரமாவும்...” என்று அழைக்கிறான்.

தோட்டக்காரர்கள் இசக்கி, வின்சென்ட், மாரிமுத்து ஆகியோர் விரைவாக நடக்கின்றனர். மாஸ்டர் சாமான்களை ஒதுக்கி எடுப்பதில் ஈடுபடுகிறார்.

வானில் மேகங்களை விலக்கிக் கொண்டு கார் காலத்துச் சூரியன் எட்டிப் பார்க்கிறான்.

பூமித்தாய் பரவசமாகிறாள்.

பசுங்குவியலிடையே, ஒரு கரும்புள்ளியாய், கீழ்ப் பள்ளத்தில், அந்தக் கார் - உருத் தெரியாமல் - அற்பப் பதர்கள்...

பறவைகள் சிறகடித்துச் சிலிர்க்கின்றன.

ஒரு மான் கூட்டம் பசுமைகளிடையே நகருகிறது. வயிரக்கால்களாக வானவனின் சுடர் அந்தப் பொன்னுடலின் புள்ளிகளைக் காட்டுகின்றன. முதல் தலை மருண்டு மருண்டு பார்த்து நகர, கூட்டமும் தொடருகிறது. கானக அரசி... குளிர்ந்து எந்த மனிதனின் உறுப்பும் படாதபடித் தன் செல்வங்களைக் காக்கிறாள். அவளுடைய ஆட்சியின் நறுமணம், புல்லிலும் பூண்டிலும் முள்ளிலும் புதரிலும் வீசுகிறது. உயிர்க்குலமே... அச்சமில்லை...

அவள்

“வாலை உமாதேவி, மாகாளி, வீறுடையாள்
மூலமாசக்தி மூவிலை வேல் கையேற்றாள்
.....

சிங்கத்திலேறிச் சிரிப்பாலுலகழிப்பாள்;
சிங்கத்திலேறிச் சிரித்தெவையுங் காத்திடுவாள்
நோவுங் கொலையும் நுவலொணாப் பீடைகளும்,
சாவுஞ்சலிப்பு மெனத்தான் பல்கணமுடையாள்
.....

மங்களஞ் செல்வம் வளர் வாழ்நாள் நற்கீர்த்தி,
துங்கமுறு கல்வியெனச் சூழும் பல்கணத்தாள்
ஆக்கந்தானாவாள் அழிவு நிலையாவாள்
போக்கு வரவெய்தும் புதுமை யெலாந்தானாவாள்
மாறி மாறிப் பின்னும், மாறி மாறிப் பின்னும்
மாறி மாறிப்போம் வழக்கமே தானாவாள்...

மாசத்தி - பராசத்தி...”*

(* மகாகவி பாரதி - பாஞ்சாலி சபதம்)

பெருமாள் காணி கொக்கறை*யின் இழுகார்வை ஒலியோடு இசைந்து மெய்ம்மறந்து பாடுகிறார். கானகமே அந்த ஓசையில் இலயிக்கிறது.

(* கொக்கறை - கைச்சிலம்பு போன்றதொரு இசைக்கருவி)