maaya kaditham

மாயக் கடிதம்

இஜாஸின் உயிர்த்தோழன் விக்ரம் அவனுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறான். இஜாஸ், அதைப் படிப்பதற்காக ஆர்வமாக திறக்கிறான்! ஆனால், அந்தக் கடிதத்தில் ஒரு ஆச்சரியம் ஒளிந்திருக்கிறது.

- Thilagavathi

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இஜாஸ் ஹரியானாவிலும், விக்ரம் ஆந்திரப் பிரதேசத்திலும் வசிக்கிறார்கள். ஒருவரிடமிருந்து ஒருவர் வெகுதூரத்தில் இருந்தாலும் இருவரும் உயிர்த்தோழர்களாக இருந்தார்கள்.

சிறிது காலத்திற்கு முன்புவரை இஜாஸும் விக்ரமும் பக்கத்துப் பக்கத்து வீடுகளில்தான் வசித்தார்கள்.

இரண்டு பையன்களுக்குமே கிரிக்கெட் விளையாடவும் புதிர்களை விடுவிக்கவும் பிரியாணி சாப்பிடவும் மிகவும் பிடிக்கும். தங்களுடைய பிறந்த நாட்களிலிருந்து பண்டிகைகள் வரை அனைத்தையும் சேர்ந்தே கொண்டாடினர்.

தன் உயிர்த்தோழன் வேறு ஊருக்கு சென்றுவிட்டதில் இஜாஸுக்கு மிகவும் வருத்தம். ஆனால் விக்ரமின் கடிதங்கள் அவனை எப்போதும் உற்சாகப்படுத்தும்.

விக்ரம் அனுப்பும் புதிர்களை விடுவிப்பது இஜாஸுக்கு ரொம்பப் பிடிக்கும்.

ஈத் பெருநாளன்று விக்ரமிடமிருந்து ஒரு அஞ்சல் உறை வந்தது. இஜாஸ் அதைத் திறந்து வாழ்த்து அட்டையை எடுத்தான்.

ஈத் முபாரக், இஜாஸ்! உனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. கடிதத்தைப் படி!

விக்ரம் என்ன அனுப்பி இருப்பான் என்று யோசித்தபடியே  கடிதத்தைப் பிரித்தான் இஜாஸ். சென்ற முறை ஒரு எண் புதிர் அனுப்பியிருந்தான்.

இருங்கள்! இந்தக் காகிதத்தில் ஒன்றுமே இல்லையே! தவறுதலாக அனுப்பிவிட்டானா?

இந்தக் காகிதத்தை மடித்து ஏதாவது ஒரு வடிவத்தை செய்ய வேண்டுமோ?

இஜாஸ் அதை விதவிதமாக மடித்துப் பார்த்தான். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

இஜாஸ் அந்தக் காகிதத்தை வெளிச்சத்தில் பிடித்துப் பார்த்தான்.

அதனை விரல்களால் தடவியும் பார்த்தான். ஒன்றும் நடக்கவில்லை.

அதைச் சுருட்டிக் குழாயாக்கி அதன் வழியாகப் பார்த்தான்.

இஜாஸ் அந்த வாழ்த்து அட்டையை மறுபடியும் பார்த்தான். அப்போதுதான் அதிலிருந்த ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணச் சுடரைக் கவனித்தான்.

விக்ரம்தான் அதற்கு வண்ணம் தீட்டியிருப்பானோ? இருங்கள்! விக்ரமுக்கு வண்ணம் தீட்டுவது பிடிக்காது!

இஜாஸ் சமையலறைக்கு ஓடினான். “அம்மி! எனக்கு கொஞ்சம் சூடாக ஏதாவது வேண்டும்!” என்றான். அம்மி கைகளைத் துண்டில் துடைத்துக் கொண்டார். ”பிரியாணி இன்னும் தயாராகவில்லை இஜாஸ்! கொஞ்சம் பொறு” என்றார். “எனக்கு இப்போது பிரியாணி வேண்டாம்!” அந்தக் கடிதத்தை சூடாக்க வேண்டும் என்று அம்மியிடம் விளக்கினான் இஜாஸ்.

அம்மி, அடுப்பில் காட்டி மெழுகுவர்த்தியை பத்தவைக்க உதவினார். இஜாஸ் அந்தக் காகிதத்தை மெழுகுவர்த்தியின் அருகில் கொண்டு சென்றான். “சுடருக்கு ரொம்ப பக்கத்தில் கொண்டு சென்றால், காகிதம் எரிந்து விடும்” என அம்மி எச்சரித்தார்.

மெழுகுவர்த்தியிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் அந்த காகிதத்தைப் பிடித்துக்கொண்டு, பொறுமையின்றி கால்களால் தாளம் போட்டான். என்னதான் நடக்கப் போகிறது?

சிறிது நேரத்தில், மாயாஜாலம் போல காகிதத்தில் பழுப்பு நிற வரிகள் தோன்றின. “அடடே! அம்மி, இதைப் பாருங்களேன்!” என இஜாஸ் கத்தினான்.

இஜாஸுடன் சேர்ந்து அம்மியும் அந்த வார்த்தைகளை சத்தமாகப் படித்தார். “நாம் கோலி விளையாடும் இடம்.”

அந்தச் செய்தியால் அம்மி குழப்பமடைந்தார், ஆனால் இஜாஸ் உற்சாகத்தில் குதித்தான்.

“எங்கு போக வேண்டும் என எனக்குத் தெரியுமே!” என்று இஜாஸ் கத்தினான். இரண்டிரண்டு படிகளாகத் தாவி இறங்கிச் சென்று, வாகனங்கள் நிறுத்துமிடத்தைத் தாண்டி ஒரு பெஞ்ச் முன்பு வந்து நின்றான்.

ஆனால் அங்கே ஒன்றுமே இல்லை!

இஜாஸ் வருத்தமடைந்தான். அங்கே தனக்கு இன்னொரு குறிப்பு இருக்குமென உறுதியாக நம்பியிருந்தான்.

திரும்பிப் பார்த்த இஜாஸ் திகைத்துப் போனான். “விக்ரம்! நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” இஜாஸால் தன் கண்களையே நம்ப முடியவில்லை.

இதுதான் இருப்பதிலேயே சிறந்த ஆச்சரியம்! “நீ யூகிக்கவில்லையா?” என கண்கள் மின்ன விக்ரம் கேட்டான்.

”உன் அம்மியின் பிரியாணி நினைப்புதான் என்னை இங்கே வரவைத்தது.” இஜாஸ் சிரித்தபடி விக்ரமை அணைத்துக் கொண்டான்.

சரியாக அதே நேரம், அம்மி இஜாஸை அழைத்தார். “பிரியாணி தயார்!”

முக்கியமான இரகசியம்!

உங்களது இரகசியக் கடித்தை உருவாக்க இந்த பொருட்கள் எல்லாம் தேவை:

எலுமிச்சம்பழம்

ஒரு கிண்ணம்

ஒரு வெற்றுக் காகிதம்

வண்ணமடிக்கும் பிரஷ்

தண்ணீர்

செய்முறை: 1. பாதி எலுமிச்சம்பழத்தின் சாற்றினை பிழிந்து ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். 2. அதில் சில துளிகள் தண்ணீரைச் சேர்த்து நன்கு கலக்கவும். 3. வண்ணமடிக்கும் பிரஷ்ஷை அதில் நனைத்து உங்கள் செய்தியை அந்த வெற்றுக் காகிதத்தில் எழுதவும். 4. கண்களுக்குத் தெரியாத அந்த மை உலரும் வரை காத்திருக்கவும். 5. உங்களது இரகசிய செய்தியை நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்! அந்தக் காகிதத்தை மெழுகுவர்த்தியை அல்லது சூடான பல்பை வைத்து சூடாக்கும்போது மட்டுமே அந்த செய்தி தெரியும். விளையாடி மகிழுங்கள்!