maedai bayam

மேடை பயம்

சம்பாவுக்கு பாட்டுப் பாடப் பிடிக்கும். ஆனால், அவளால் மேடையில் பாட முடியாது. பள்ளி ஆண்டுவிழாவில் மிகப் பெரிய கூட்டத்தின் முன் அவளால் பாட முடியுமா?

- Reena Shalini

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அவள் குளியலறையில் பாடுவாள். மொட்டைமாடியிலும் பாடுவாள். மலைகளைப் பார்த்துப் பாடுவாள். நிலவைப் பார்த்தும் பாடுவாள்.

சம்பாவுக்கு இந்த உலகத்தில் எல்லாவற்றையும்விட பாட்டுப் பாட ரொம்பப் பிடிக்கும்.

அவள் சிங்கம் போலப் பாடுவாள். தேனீ போலவும் பாடுவாள். அவள் மழையில் பாடுவாள். வெயிலிலும் பாடுவாள்.

பாடும்போதெல்லாம், சம்பா ஒரு அற்புதமான மனநிலையில் இருப்பாள்.

ஒருநாள் சம்பா பாடிக்கொண்டிருந்தபோது, பசந்த் கண்களில் மின்னல் வெட்டியது.

“நான் ஒரு யோசனை சொல்லவா?” என்று கேட்டான்.

பசந்த், சம்பாவின் நெருங்கிய நண்பன். அவன் எப்போதும் புதுப்புது யோசனைகள் சொல்வான். சில யோசனைகள் பிரமாதமாக இருக்கும். சில யோசனைகள் மிகவும் மோசமானதாக இருக்கும்.

பசந்த் சொன்னான், “நீ கண்டிப்பா ஆண்டுவிழாவில் பாடணும்!”

“என்ன ஒரு மோசமான யோசனை!” என்றாள் சம்பா.

“உனக்குதான் பாட்டுப் பாட ரொம்பப் பிடிக்குமே.“

ஒரேயொரு முறை பாட்டுப் பாடுவதற்காக மேடையேறியபோது, பயத்தால் கிட்டத்தட்ட மயங்கிவிழப் போனதை சம்பா பசந்த்திடம் சொல்லியிருக்கவில்லை.

“என்னால… என்னால பலபேர் முன்னாடி பாட முடியாது. அவ்வளவு ஏன்? என்னால அப்பா அம்மா முன்னாடிகூடப் பாட முடியாது!”

“என் முன்னாடி பாடுவியே! நீ கொஞ்சம் பயிற்சி எடுத்தா போதும், சம்பா.”

“அப்படியா சொல்ற?”

“ஆமா! ஆமா! ஆமா!”

“அப்போ மஹியும் பரசும் கிண்டல் பண்ணினா?”

“அப்படி கிண்டல் பண்ணினா, அது அவங்களோட முட்டாள்தனம். நீ பிரமாதமான பாடகி.”

கூட்டத்தின் முன்பு பாட வேண்டும் என்று நினைத்ததும் அவளுடைய வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறந்தன. அவளுக்கு ஒரே நேரத்தில் உற்சாகமாகவும் பயமாகவும் இருந்தது.

ஆனால், அவளுக்கு பாட்டுப் பாட ரொம்பப் பிடிக்கும்! அதனால், முயற்சி செய்து பார்க்கலாம் என முடிவு செய்தாள்.

சம்பா நீண்ட நேரம் தீவிரமாகப் பயிற்சி செய்தாள். படுக்கையிலிருந்து எழும்போதே மெல்ல முணுமுணுத்துக் கொண்டு எழுந்தாள்.

பெருக்கல், வகுத்தல் கணக்கு செய்யும்போதும் மெதுவாகப் பாடினாள்.

ஆடுகளை மேய்ச்சலுக்குக் கூட்டிச் செல்லும்போதும் ஏற்ற இறக்கத்துடன் பாடிக்கொண்டே இருந்தாள்.

அவள் வாயால் பாடினாள். மூக்கால் பாடினாள். தலைகீழாக நின்றுகூடப் பாடினாள்.

வீட்டில் எல்லோரும், அந்த முக்கியமான நாளுக்காக ஆர்வமாக இருந்தார்கள். அவளுக்கு அறிவுரைகள் கூறினார்கள்.

“உடைஞ்ச தட்டை கதவுல எறிஞ்சுட்டு 12 திராட்சைகளை சாப்பிட்டா அதிர்ஷ்டம் கிடைக்கும்.”

“பார்வையாளர்களைப் பாத்து நல்லா சிரி. இயல்பா இரு.”

“பாட்டுப் பாடும் முன் மூச்சை நல்லாஆஆஆஆ இழுத்து விடணும்”

ஆண்டுவிழாவுக்கு முந்தைய நாள், சம்பா சிறப்புப் பயிற்சியும் செய்தாள். அது மிகப் பெரிய வெற்றி பெற்றது!

கடைசியாக ஆண்டுவிழா நாளும் வந்தது! அவளுடைய தாத்தா அந்த நாளுக்காகவே பின்னித் தந்திருந்த ஸ்வெட்டரை சம்பா அணிந்திருந்தாள்.

அவள் பாடும் முறை வந்தபோது, சம்பாவின் நாக்கு உலர்ந்துபோனது. மேடையோ மிகப் பெரியது!

விளக்குகளோ மிகப் பிரகாசம்! பார்வையாளர் கூட்டமோ மிக அதிகம்! சம்பாவுக்குத் தொண்டை அடைத்தது. உள்ளங்கைகள் வியர்த்தன.

அவள் பார்வையாளர்களைப் பார்த்துச் சிரிக்க மறக்கவில்லை.

அவள் பாடத் தொடங்கினாள். அது முணுமுணுப்பாக மட்டுமே கேட்டது. யாரோ அவள் குரலை விழுங்கிவிட்டது போல் தோன்றியது!

சம்பா ஆழமாக மூச்சை இழுத்துவிட்டாள். மீண்டும் முயற்சி செய்தாள்...

...ஒரு கீச்ச்ச்ச் சத்தம்தான் வந்தது! பார்வையாளர்கள் பெருமூச்சுவிட்டனர். சம்பாவின் இதயம் சத்தமாக அடித்துக்கொண்டது. டப்! டப்! டப்! அவளுக்குத் தலைசுற்றத் தொடங்கியது.

அப்போதுதான் அவள் பசந்த்தைப் பார்த்தாள். அவன் உற்சாகமாகக் கையசைத்தான்.

அவனைப் பார்த்தது அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அதனால், அவள் திரும்பவும் பாட முயற்சி செய்தாள். முதலில் மெல்ல பாடத் தொடங்கினாள். அவளுடைய குரலில் நடுக்கம் இருந்தது. ஆனாலும், ஓரளவு சரியாகவே பாடினாள்.

கொஞ்சம் கொஞ்சமாக, தடங்கலில்லாமல்,

உறுதியாக, மென்மையான இசை அவளிடமிருந்து வெளிப்படத் தொடங்கியது. மேடையோ மிகப் பெரியது. விளக்குகளோ மிகப் பிரகாசம். பார்வையாளர் கூட்டமோ மிக அதிகம். ஆனால், இப்போது எதுவுமே அவளுக்குப் பொருட்டல்ல.

சம்பா நன்றாக, சத்தமாக, சுதந்திரமாகப் பாடினாள்.

அவள் சாதித்துவிட்டாள். இப்போது, சம்பா ஒரு அற்புதமான மனநிலையில் இருந்தாள்.