maeganum nagarum paarai marmamum

மேகனும் நகரும் பாறை மர்மமும்

மேகன் மிகவும் மும்முரமாக இருந்தாள். அவள், ஃபிரிட்ஸ் என்னும் பூனை காணாமல் போன மர்மத்தைக் கண்டுபிடித்தாக வேண்டும். பயங்கரமான ஒரு பாறை உருவத்தை வினோதமான ஒரு புதிய உலகத்தில் துரத்திச் செல்ல நேர்ந்தாலும்கூட.

- Livingson Remi

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

“மூன்று இரவுகள் சேர்ந்தாற்போல் வீட்டுக்கு வராமல் ஃபிரிட்ஸ் இருந்ததே இல்லை!” என்றபடி ராகி தன் கிரேயானை இரண்டாக உடைத்து அறையின் குறுக்கே எறிந்தாள்.

“ஃபிரிட்ஸ் அப்படி செய்யக்கூடியவள் அல்ல” என்று மேகனும் ஒப்புக் கொண்டாள். “யாராவது அவளைத் தூக்கிச் சென்றிருக்க வேண்டும்.” ராகியின் பூனையைத் தேடுவதற்காக உதவ வந்திருந்தாள் மேகன்.

மேகனுக்கு செலோ டேப்பும் நடப்பதும் பிடிக்கும். எனவே நகர் முழுக்க சென்று துண்டுப் பிரசுரங்களை ஒட்ட முன்வந்தாள்.

“எங்கள் தெருப் பூனையையும் காணவில்லை” என்றார் கடைக்காரர் பகதூர்.

“எங்கள் தெருவிலிருந்த பூனைகளும் காணாமல் போய்விட்டன!” என்றாள் ஆஷ்னா. “கடைசியாகப் பார்த்தபோது அவை அந்தப் பாறையின் அருகேதான் விளையாடிக் கொண்டிருந்தன.” “அந்தப் பாறையை கடைசியாக எங்கே பார்த்தாய்?” என்று மேகன் ஆர்வமாகக் கேட்டாள்.

“பள்ளத்தாக்கில்” என்று ஆஷ்னா சுட்டிக் காட்டினாள்.

மூன்று மாதங்களுக்கு முன்பு அந்தப் பாறை நகரத்தின் மையத்தில் வந்து நின்றது. அதன் மூக்கில் காலணியின் நாடா கட்டப்பட்டிருந்தது. அது எப்படி அங்கே வந்தது என்று எல்லோரும் வியந்தனர். மேலும் அந்த பாறை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களுக்கு நகர்வதும் எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

“பள்ளத்தாக்கு, பள்ளத்தாக்கு, பள்ளத்தாக்கு” என்று மேகன் முணுமுணுத்துக் கொண்டே பள்ளத்தாக்கை நோக்கி ஓடினாள். பூனைகள் களவு போகவில்லை! அவை அந்தப் பாறையின் மூக்கிலுள்ள காலணி நாடாவோடு விளையாடிக் கொண்டிருந்திருக்கின்றன. பாறை புது இடத்துக்கு நகர்ந்தபோது, பூனைகளும் அதைத் தொடர்ந்து சென்றுவிட்டன!

“களவு போன பூனைகளின் மர்மத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன்” என்று மேகன் அறிவித்தாள்.

அவளது கணிப்பு அதைவிடத் தவறாக இருந்திருக்க முடியாது.

மேகன் உறைந்து போனாள். அவள் கால்கள் நடுங்கின. அவள் உடல் பயத்தில் விதிர்த்தது. “பூனைகளைக் கீழே விடு” என்று மேகன் பயத்தில் கத்தினாள்.

“குர்ர்ர்ர்ர்ர்ர்!” அந்தப் பாறை உயிரினம் தன் பல்லைக் காட்டி உறுமியது. பாறை உயிரினம் நெஞ்சை விரித்து, தன் கல் கைகளால் நெஞ்சில் அடித்துக் கொண்டது.

பாறை உயிரினம் கேபிள் கார்கள் செல்லும் கேபிளை பிடித்துக்கொண்டு சறுக்கத் தொடங்கியது.

“திரும்பி வா!” என்று மேகன் கத்தினாள். ஆனால் அந்தப் பாறை உயிரினம் கேட்கவில்லை. சற்றும் யோசிக்காமல், மேகனும் ஒரு கேபிள் காருக்குள் தொற்றி ஏறினாள். கார் நகர துவங்கியது.

பனிமூட்டம் விலகத் தொடங்கியது. கீழே, நிலம் எலுமிச்சை பச்சை நிறத்தில் இருந்தது. மரங்கள் ஊதா நிறத்தில் அடர்த்தியாக இருந்தன. பறவைகள் விமானங்களைவிடப் பெரியதாக இருந்தன. மேகங்களில் மீன்கள் நீந்தின. வீடுகள் கனவுலகத்தில் இருப்பதைப் போல் காட்சியளித்தன.

ஆனால் மேகன் பாறை உயிரினத்தைவிட்டுத் தன் கண்களை விலக்கவில்லை.

அந்தப் பாறை உயிரினம் கேபிள் வயரிலிருந்து பொத்தென்று விழுந்து ஓடியது. மேகன் கூட்டத்தை முட்டியால் இடித்து விலக்கி ஓடினாள்.

“ஃபிரிட்ஸ்!” என்று அவள் கத்தினாள். பூனை பதிலுக்கு மியாவ் என்றது.

ஒருவழியாக பாறை உயிரினம் நின்றது. அது மூச்சிரைத்து இருமியது. அதனால் மேற்கொண்டு ஓட முடியவில்லை.

“அந்தப் பூனைகளை திருப்பிக் கொடு!” என்றாள் மேகன்.

“குர்ர்ர்ர்ர்” என்று அந்தப் பெரிய உருவம் உறுமியது.

“பூனைகளைத் துன்புறுத்த நான் விடமாட்டேன்!” என்று மேகன் கத்தினாள்.

பாறை உருவம் மென்மையாக பூனைகளைக் கட்டிப்பிடித்தது. பூனைகள் மகிழ்ச்சியில் சிணுங்கின. மேகன் குழம்பிப்போனாள். “பூனைகளுக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. நீ அவற்றைத் தின்னப்போவதில்லையா?”

இல்லை என்று பாறை உருவம் தலையாட்டியது. பூனைகளை இன்னும் நெருக்கமாக அணைத்துக் கொண்டது.

“அவற்றை பத்திரமாக பார்த்துக் கொள்வேன் என்று சத்தியம் செய்து கொடுப்பாயா?” என்றாள். பாறை உயிரினம் ஒத்துக் கொண்டு தலையாட்டியது.

“நீயே பூனைகளை வைத்திருக்கலாம் என்றே நினைக்கிறேன்” என்றாள் மேகன். “அவற்றுக்கும் ஒரு வீடு கிடைத்தது போலாகும். ஆனால் நீ ப்ரிட்ஸை திருப்பித் தர வேண்டும். அவள் இல்லாமல் ராகி சோகமாக இருக்கிறாள்.”

பாறை கொஞ்சம் யோசித்துப் பார்த்தது. பின் மெதுவாக ப்ரிட்ஸை மேகனிடம் திருப்பிக் கொடுத்தது. பாறை உயிரினத்தின் கைகள், நதியோர கூழாங்கற்களைப் போல் மென்மையாக இருந்தன. “நீ திரும்பி வந்து எங்களைச் சந்திக்கலாம்” என்றாள். ஃபிரிட்ஸ் திரும்பக் கிடைத்தபின், மேகன் தன்னைச் சுற்றிப் பார்த்தாள். அது வினோதமான ஒரு புது உலகமாக இருந்தது. பல்வேறு மொழிகள், பலநூறு நறுமணங்கள், பல ஆயிரம் வித்தியாசமான மனிதர்களைப் பார்த்தாள். மேகனுக்கு பயம் வரத் தொடங்கியது.

“நான் எப்படி வீட்டுக்கு திரும்பிப் போவேன்?”

பாறை உருவம் ஒரு அடையாளப் பலகையைக் காட்டியது. “ஒரு மாதமா?” மேகன் வீறிட்டாள். “அய்யோ. இல்ல்ல்ல்ல்ல்ல்லைலை” என்று அலறித் தரையில் விழுந்தாள். விசித்திரமான உருவங்கள் கூட்டமாகக் கூடுவதைப் பார்த்தாள் மேகன். அவை அவளைப் பார்த்து உறுமின, உறிஞ்சுவதைப் போல் சத்தமிட்டன, சிரித்தன, இருமின, கண்களைச் சிமிட்டின, புன்னகைத்தன, கையசைத்தன, கொட்டாவி விட்டன.

“நான் வீட்டுக்குப் போக வேண்டும்” மேகன் தேம்பினாள். ஃபிரிட்ஸ் மென்மையாக முனகியது. அதன் மேலிருந்த முடி, தாத்தாப்பூக் கூட்டத்தைப் போல் காற்றில் அசைந்தது. மேகன் காற்றில் ஆடும் முடியைப் பார்த்தாள். அது நீர்க் குமிழிகளைப் போல் மினுமினுத்தது. மேகன் ஒன்றை தொட்டுப் பார்த்தாள். பிறகு மற்றொன்றை. பிறகு இன்னும் சிலவற்றை. அவள் மனம் அமைதியடையத் தொடங்கியது. மேகனுக்கு இன்னும் பயமாகத்தானிருந்தது. ஃபிரிட்ஸுக்கும்தான்.  ஆனால், எப்படியும் வீட்டிற்கு திரும்பிவிடுவோம் என்று அவர்கள் உள்மனது சொன்னது. அவர்கள் வீடு 99999999999999999 கிலோமீட்டர் தொலைவில் இருந்த போதிலும்.

மேகனும் ஃபிரிட்ஸும் தங்கள் வீட்டை அடைய எப்படி வழி கண்டுபிடித்தார்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டுமா?

மேகனும் மரணத்தின் இளவரசியும் கதையைப் படியுங்கள்.