mandhirappodi miyaanmaarin naattuppurakkathai

மந்திரப்பொடி - மியான்மாரின் நாட்டுப்புறக்கதை

ஐராவதி ஆற்றங்கரைக் கிராமத்தில் தூஸா என்ற பெண்மணி தேய்ங்கி என்ற தன் கணவருடன் மகிழ்வாக வாழ்ந்து வந்தார். ஆனால் அவர்களின் வாழ்வில் ஒரு சிக்கல் - கணவர் மண்ணைப் பொன்னாக்க முயல்வது! தூஸா அவரது சிக்கலை முறிப்பாரா? மண் பொன்னாகுமா? மகிழ்ச்சியூட்டும் இந்த மியான்மார் நாட்டுப்புறக்கதையைப் படித்து கண்டுபிடிக்கவும்!

- இராஜ் குமார்

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

முன்பொரு காலத்தில், ஐராவதி நதிக்கரையில் ஒரு சிறு கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தில் தூஸா என்ற பெயருடைய ஒரு இளம்பெண் வாழ்ந்து வந்தார். அவர் தெய்ங்கி என்பவரை மணந்து மகிழ்வாக வாழ்ந்து வந்தார்.

ஆனால், தூஸாவின் மனதில் ஒரு குறை இருந்துகொண்டே இருந்தது. அதாவது, அவரது கணவர் தன்னைத்தானே ஒரு இரசவாதி என்று எண்ணிக்கொண்டு மண்ணைப் பொன்னாக்குவதைப் பற்றி எப்போதும் காணும் கனவே அது.

நாள் முழுதும், பல நாட்களுக்கும் இது தொடர்ந்தது. தேய்ங்கி தனது ஆராய்ச்சியில் வெற்றி பெற பல மணிநேரங்கள் செலவிட்டார். சீக்கிரமே, அவர்களிடம் இருந்த பணமெல்லாம் கரைந்தது. தூஸா இருவருக்கும் தேவைப்பட்ட உணவுகளை வாங்கவே மிகவும் போராடினார்.

"நீங்கள் சீக்கிரமே ஒரு வேலையைத் தேடிக்கொள்ள வேண்டும், இப்படியே நாம் தொடர்ந்து இருக்க முடியாது" என்று கவலையுடன் தூஸா கணவரைக் கெஞ்சினார்.

ஆனால், தேய்ங்கி கேட்காது, "நான் ஒரு புதிய கண்டுபிடிப்பின் விளிம்பில் உள்ளேன். கனவில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு நாம் பணக்காரர்கள் ஆகப் போகிறோம் என்பதால் ஏன் வேலைக்குச் செல்லவேண்டும். சீக்கிரமே நான் எல்லா மண்ணையும் தங்கமாக்கிவிடுவேனே" என்றார்.

மனமுடைந்த தூஸா, தன் அறிவாளித் தந்தை தேட்டிடம் தீர்வு வேண்டிச் சென்றார். மருமகன் ஒரு இரசவாதி என்றறிந்த தேட் வியப்படைந்தார். சிறிது நேரம் சிந்தித்து விட்டு, தேய்ங்கியைத் தன்னைச் சந்திக்க அனுப்புமாறு தெரிவித்தார். தூஸா தன் அறிவாளித் தந்தை சிக்கலைத் தீர்த்து வைப்பர் என்ற பெரும் நம்பிக்கையில் மகிழ்ச்சியாக வீடு திரும்பினார்.

அடுத்த நாள், திட்டு வாங்க ஆயத்தமாகித் தேய்ங்கி தன் மாமனார் வீட்டுக்கு வந்தார். ஆனால் அவருக்கு ஒரு வியப்பு காத்திருந்தது. தேட் அவரைத் தனியாக அழைத்துச் சென்று, "உங்கள் வயதில், நானும் இரசவாதியாக இருந்தேன்!" என்றார்.

தேய்ங்கியின் ஆய்வுப்பணிகளைப் பற்றி இருவரும் மதியம் முழுவதும் பேசினர். இறுதியில், அந்த முதியவர் எழுந்து சொன்னார், "அட, தேய்ங்கி, உங்க வயதில் நான் செய்த அனைத்தையும் நீங்கள் அப்படியே செய்துள்ளீர். நீங்க வெற்றியின் விளிம்பில் உள்ளீர். வாழ்த்துகள்.

ஆனால், இன்றியமையாத ஒரு ரகசியய் மூலக்கூற்றினை என்னைப் போலவே தவற விட்டுவிட்டீர். அது இருந்தால் தான் மண் தங்கமாக மாறும். நான் அதை அண்மையில் தான் கண்டறிந்தேன். ஆனால், எனக்கோ வயதாகிவிட்டது. அதை முடிக்க பேராற்றல் வேண்டுமே..."

"அப்போ, அதை நான் உங்களுக்காகச் செய்கிறேன், மாமா, அது என்னவென்று சொல்லுங்கள்!" என்று ஆனத்தத்தில் கத்தினார் தேய்ங்கி. அவர் மிகுந்த உற்சாகத்தில் இருந்தார். இறுதியில் அவர் முயற்சி வீணாகாது என்று நம்பினார்.

மாமனாரான தேட் சற்றே சாய்ந்து காதருகே கிசுகிசுத்தார், "தங்கள் உற்சாகத்தைப் பாராட்டுகிறேன். அந்த ரகசிய மூலக்கூறு வாழையிலைகளில் இருந்த் கிடைக்கும் வெள்ளிப்பொடி ஆகும். அதைப் பெற நீங்களே வாழைகளை நட்டு, வளர்க்க வேண்டும்.

அவை வளரும் போது அவற்றின் மீது சில மந்திரவாக்குகளைப் பயன்படுத்தினால் மட்டுமே, இலையில் உள்ள பொடியும் மந்திரசக்திகளை அடையும்"

"எவ்வளவு பொடி தேவைப்படும், மாமா", என்று தேய்ங்கி ஆர்வத்துடன் கேட்டார்.

"ஒரு கிலோ", என்றார் தேட்.

"ஒரு கிலோவா! அப்போ, நூற்றுக்கனக்கான வாழைமரங்கள் தேவைப்படுமே"

"ஆமாம்பா, அதனால் தான் என்னால் அக்காரியத்தை முடிக்க இயலாது என்றேன்", என்றார் வயோதிகர்.

"கவலைப்படாதீங்க மாமா, நான் செய்கிறேன்" என்றார் தியேங்கி.

பின்னர் மாலையில், பல மந்திரங்களை தன் மருமகனுக்குப் பெரியவர் கற்றுக் கொடுத்ததோடு, பணியைத் தொடங்கக் கொஞ்சம் பணத்தையும் கடனாகத் தந்தார்.

மறுநாளே, தேய்ங்கி தன் வீட்டருகே சிறு தோட்டத்தை வாங்கி, அதைச் சுத்தம் செய்தார். அறிவுறுத்தியபடி, அவரே அந்த மண்ணைத் தோண்டி, மந்திரங்களைச் சொல்லி வாழை நாற்றுகளைக் கவனமாக நட்டார்.

ஒவ்வொரு நாளும் நாற்றுகளின் வளர்ச்சியை ஆராய தோட்டம் சென்றார். பயிர்களுக்குக் களைகளாலும் பூச்சிகளாலும் தொல்லை வராதவாறு கவனித்து வந்தார். மரங்கள் வளர்ந்து காய்த்த போது, கவனத்துடன் இலைகளிலிருக்கும் வெள்ளிப்பொடியைச் சேகரித்துப் பெட்டியில் பத்திரமாகச் சேமித்தார்.

ஒவ்வொரு இலையிலும் மிகவும் சிறிய அளவே பொடி கிடைத்தது என்பதால், தேய்ங்கி இன்னும் நிறைய நிலம் வாங்கி வாழைகளைப் பயிரிட்டார். எப்படியாவது, கனவு மெய்ப்பட முழுக்கவனம் செலுத்தினார். அவர் ஒரு கிலோ பொடியினைச் சேகரிக்கப் பல ஆண்டுகள் கழிந்தன. உடனே, அவர் தன் மாமனாரின் வீட்டிற்கு பேரார்வத்துடன் விரைந்து சென்றார். சீக்கிரமே மண்ணைப் பொன்னாக்கும் உத்தி கிடைக்கப்போகிறதே!

"மாமா, இறுதியில்... இதோ ஒரு கிலோ மாய வெள்ளிப்பொடி," என்று ஆனந்தத்தில் கத்தினார்.

வயோதிகரோ பெருமகிழ்ச்சியுடன், "மிகச்சிறப்புங்க, அருமைங்க, நீங்க சாதித்து விட்டீர்கள், தேய்ங்கி. எனக்கு உங்களை நினைக்கவே பெருமையாக இருக்கு என்றார். இப்போது நான் மண்ணைப் பொன்னாக்கும் வித்தையைக் காட்டுகிறேன். ஆனால் முதலில், தூஸாவை அழைத்து வரவும். அவர் உதவியும் தேவைப்படுகிறது." தேய்ங்கி சற்றே வியப்படைந்தார் என்றாலும், நேரத்தை வீணாக்காது, அவர் தன் மனைவியிடம் ஓடிச்சென்று அவரையும் அழைத்து வந்தார்.

வயோதிகர் தன் மகளிடம் கேட்டார், "தூஸா, உன் கணவர் வெள்ளிப்பொடியைச் சேகரித்த போது நீ வாழைப்பழங்களை என்ன செய்தாய்?"

தூஸா, "ஏன் அப்பா, அவற்றை நான் விற்றுவிட்டேன். அப்படித்தான், நாங்கள் வாழ்க்கையை நடத்தினோம்" என்றார்.

வயோதிகர் தொடர்ந்தார், "அப்போ, நீ கொஞ்சம் பணமும் சேமித்திருப்பாயே. ஏன் கேட்கிறேன் என்றால், தேவைக்கும் அதிகமான வாழைப்பழங்களை தேய்ங்கி வளர்த்தாரே..."

வயோதிகர் தொடர்ந்தார், "அப்போ, நீ கொஞ்சம் பணமும் சேமித்திருப்பாயே. ஏன் கேட்கிறேன் என்றால், தேவைக்கும் அதிகமான வாழைப்பழங்களை தேய்ங்கி வளர்த்தாரே..."

"ஆமாம் அப்பா" என்றார் தூஸா. "நாங்க அதைப் பார்க்கலாமா" என்று கேட்டார் தேட். "கண்டிப்பாக அப்பா, பணத்தை பத்திரமாக வீட்டில் வைத்துள்ளேன்" என்று பெருமையாகச் சொன்னார் தூஸா.

"ஆமாம் அப்பா" என்றார் தூஸா.

"நாங்க அதைப் பார்க்கலாமா" என்று கேட்டார் தேட்.

"கண்டிப்பாக அப்பா, பணத்தை பத்திரமாக வீட்டில் வைத்துள்ளேன்" என்று பெருமையாகச் சொன்னார் தூஸா.

மூவரும் தேய்ங்கியின் வீட்டை அடைந்தனர். அங்கு தூஸா பரணில் பத்திரப்படுத்திய பல மூட்டைகளை இறக்கி வைத்தார்.

தேட் மூட்டைகளுக்குள் எட்டிப்பார்த்து புன்னகை பூத்தார். அவற்றில் ஒரு மூட்டையை மட்டும் அவிழ்த்துக் கொட்டினார்.

மின்னியபடி தங்க நாணயங்கள் ஒரு குவியலாக விழுந்தன. பின்னர் தோட்டம் சென்று கைப்பிடி அளவிற்கு மண்ணை அள்ளி வந்து தங்கக்குவியலின் அருகில் கொட்டினார்.

பின்னர் தன் மருமகன் பக்கம் திரும்பிச் சொன்னார், "இதைப் பார்த்தீரா தேய்ங்கை, நீங்க மண்ணைப் பொன்னாக்கி விட்டீங்க!"

அந்த நாளுக்குப் பின்னர் எப்போதுமே தேய்ங்கி மாயப்பொடியைச் சேகரிப்பதில்லை. ஆனால், தொடர்ந்து வாழைமரங்களைப் பயிரிட்டார்.

அவரது "இரசவாதி"யான மாமனார் மண்ணைப் பொன்னாக்கும் மிகச்சிறந்த வழியை அவருக்கு சொல்லிக்கொடுத்து விட்டாரே! ஆகையால், அவருக்கு இனி மாயப்பொடியின் தேவை இருந்ததில்லை.

வாழை மந்திரம்:

தேய்ங்கியின் வாழை மாயப்பொடியை அடுத்து, மாயவாழைகளைக் கொண்டு தங்கள் நண்பர்களுக்கு ஆச்சரியமூட்டுகிறீர்களா? அவர்களிடம், வளரும்போது தானே துண்டுகளாக வளரும் புதிய வகை வாழையைக் கண்டுபிடித்துள்ளீர் என்று சொல்லுங்கள்.

மாய வாழைக்குத் தேவையான பொருட்கள்

(1) சில பழுத்த வாழைப்பழங்கள்

(2) ஒரு பல்குத்தும் குச்சி (ஈர்க்குச்சி) அல்லது தையல் ஊசி

செயலாக்கம்:

1. குண்டூசியையோ ஈர்க்குச்சியையோ பழத்தின் தண்டின் விளிம்பில் குத்தவும்.

2. ஊசியை வெளியில் எடுக்காது, வலதுபுறம் மற்றும் இடது புறமாக குச்சியை கவனமாகச் சுத்தவும். பழத்தின் ஊடே செலுத்த வேண்டும்,

ஆனால், தோலைக் கிழித்து விடாமலிருக்க வேண்டும். மேலும், ஊசித்துளை எவ்வளவு சிறியதாக உள்ளதோ, அவ்வளவு எளிதாகத் துளை கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும்.

3. ஊசியை வெளியேற்றிவிட்டு, இன்னொரு இடத்தில் இதே போல் செய்யவும். ஒரு இஞ்ச் அளவிற்கு இடைவெளியில் மேற்கூறிய 2 செயல்களையும் மீண்டும் மீண்டும் செய்யவும்.

அவ்வளவு தான். மாயவாழை உண்ணத் தயாராகி விட்டது. உங்கள் கண்டுபிடிப்பை ஒரு பெரிய கதையாகச் சொல்லி இப்புதுப் பழவகையை நண்பருக்குத் தாருங்கள்.

நண்பர்கள் தோலை உரித்தவுடன் தோல் பாதிக்காது துண்டுகள் மட்டும் உள்ளதைக் கண்டு எப்படி வியக்கின்றனர் என்று கண்டு மகிழ்வீர். வாழைமாயை எப்படி?