மேகங்களில்லாத சில இரவுகளில், சிவப்பு நட்சத்திரத்தைப் போன்ற ஒன்று வானத்தில் ஒளிர்வதைக் காணலாம். அதுதான் செவ்வாய் கிரகம்.
மனிதர்கள் தொலைநோக்கியை கண்டுபிடித்த காலத்திலிருந்தே செவ்வாய் கிரகத்தைக் கண்டு வியந்த வண்ணம் இருக்கின்றனர்: அந்த கிரகத்தில் எப்படி இருக்கும்? அங்கு உயிர்கள் உள்ளனவா?
பூமியில் இருந்தபடி செவ்வாயைப் பார்த்து ஊகிக்கலாம். ஆனால் நேரடியாக அங்கே செல்ல முடிந்தால்?
சூரியக் குடும்பத்தில் பூமிக்கு மிக அருகிலிருக்கும் கிரகங்களில் செவ்வாயும் ஒன்று.
இருந்தாலும், பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடைப்பட்ட தூரத்தை காரில் கடக்க வேண்டும் என்று வைத்துக்கொண்டால் 1,200 வருடங்கள் ஆகும்.
விமானத்தில் உச்ச வேகத்தில் பறந்தாலும்கூட 30 வருடங்கள் பிடிக்கும்.
இங்கே பாருங்கள்.
பூமி இவ்வளவு பெரிதாக இருந்தால்...
நிலா இதோ இங்கே இருக்கும்.
செவ்வாய் கிரகம் அரை கிலோமீட்டர் தொலைவில் அங்கே எங்காவது இருக்கும்.
அங்கு செல்ல காரோ விமானமோ பயன்படாது.
செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல விண்கலம் வேண்டும்.
நவம்பர் 5, 2013, இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தை ஏவியது.
அதன் பெயர் மங்கள்யான்.
மங்கள்யானில் மனிதர்கள் எவரும் செல்லவில்லை. மாறாக செவ்வாய் கிரகத்தை அருகிலிருந்து துல்லியமாகப் படம்பிடிக்க சக்திவாய்ந்த ஒரு புகைப்படக்கருவி உட்பட நான்கு உபகரணங்களை அது எடுத்துச்சென்றது.
மங்கள்யான்
நீண்டதூரப் பயணம்தான் மங்கள்யான் சந்திக்க வேண்டியிருந்த முக்கியமான சவால்.
நேராக செவ்வாய்க்குப் பறந்துசெல்ல நிறைய எரிபொருள் தேவை. எரிபொருளின் விலை மிக அதிகம்.
எனவே படைப்பூக்கமிக்க ஒரு முறையை இஸ்ரோ விஞ்ஞானிகள் முயன்றனர். கவணில் கயிற்றின் நுனியில் கல்லை வைத்து சுழற்றி எறிவது போல மங்கள்யானை செவ்வாய் கிரகத்தை நோக்கி “எறிய” முடிவு செய்தனர்.
இங்கு பூமியின் ஈர்ப்பு விசை ஒரு கவண் கயிற்றைப் போல் செயல்பட்டது. மங்கள்யான் முதலில் பூமியைச் சுற்றிவர ஆரம்பித்தது.
பின்னர் அதன் எரிவாயு எஞ்சின் ஆறு முறை இயக்கப்பட்டு படிப்படியாக பெரிய சுற்றுப்பாதைகளுக்கு மாற்றப்பட்டது. ஒவ்வொரு முறையும் அதன் வேகமும் கூடியது.
மங்கள்யான் தனது அதிகபட்ச வேகத்தை எட்டியபின் இறுதியாக ஒரு முறை முடுக்கிவிடப்பட்டு பூமியின் ஈர்ப்புவிசையில் இருந்து விடுபட்டது.
பூமியும் சூரியனைச் சுற்றியபடி இருப்பதால் அதன் வேகமும் மங்கள்யானின் வேகத்துடன் சேர்ந்து கொண்டது. கவண் கயிற்றை சுழற்றியெறியும் கையைப் போன்று இங்கு பூமி செயல்பட்டது.
ஆனால், மங்கள்யான் நேராக செவ்வாய்க்குச் செல்லவில்லை. ஏனெனில், சூரியனைச் சுற்றி செவ்வாயும் ஒரு சுற்றுப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறதல்லவா!
எனவே, மங்கள்யானும் செவ்வாய் கிரகமும் விண்வெளியில் ஒரே புள்ளியில் சந்திக்கும் வகையில், வெகுதொலைவில் ஒரு இலக்கை நிர்ணயித்தனர் விஞ்ஞானிகள்.
1. மங்கள்யான் விண்ணில் ஏவப்பட்டபோது செவ்வாய் இங்கு இருந்தது 2. செவ்வாயை நோக்கிச் செல்லும் மங்கள்யானின் பாதை 3. பத்து மாதங்கள் தொடர்ந்து பயணித்த மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை இங்கு எட்டிப்பிடித்தது 4. சூரியனைச் சுற்றிவரும் பூமியின் சுற்றுப்பாதை 5. சூரியனைச் சுற்றிவரும் செவ்வாயின் சுற்றுப்பாதை
இது ஒரு மிகமிக நீண்ண்ண்ண்ண்ட பயணம்.
300 நாட்கள் விண்வெளியில் பயணித்து 62,00,00,000 கிலோமீட்டர்களைக் கடந்தது மங்கள்யான்.
இந்த நெடும்பயணத்தில் விண்கலம் திட்டமிட்ட பாதையை விட்டு விலகாமல் இருப்பது மிகவும் அவசியம். இல்லையென்றால், அது செவ்வாய் கிரகத்தைத் தவறவிட்டுவிடும். தன்னைச் சுற்றி உள்ள விண்மீன்களின் அமைவிடத்தைக் கொண்டு தனது இருப்பிடத்தை கணிக்கக் கூடியது மங்கள்யான். அது இந்தத் தகவல்களை பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியது.
கணித வல்லுனர்கள் அவற்றை ஆராய்ந்து விண்கலம் சரியான பாதையில் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொண்டனர். தேவைப்பட்டபோது சமிக்ஞைகள் அனுப்பி விண்கலனின் எஞ்சினை இயக்கி பாதையைத் திருத்தினர்.
1. பூமியுடன் தொடர்புகொள்ள ஒரு அலைவாங்கி
2. எரிபொருள் கொள்கலன்
3. விண்கலத்தில் உள்ள மின்னணுக் கருவிகளுக்கு சக்தி அளிக்க சூரிய மின்கலம்
விண்வெளியில் பல மாதங்கள் பயணித்த பின் செவ்வாய் கிரகத்தை நெருங்கியது மங்கள்யான்.
இன்னும் சில நாட்களே மீதமிருந்தபோது செவ்வாயின் ஈர்ப்புவிசை, மங்கள்யானை அதை நோக்கி இழுக்க ஆரம்பித்தது.
சிவப்பு கிரகத்தை நெருங்கியதும், அதன் சுற்றுப் பாதைக்குள் நுழைவதற்காக விண்கலத்தின் வேகம் குறைக்கப்பட வேண்டியிருந்தது.
இப்பணியில் சிறிது கவனம் பிசகினாலும் அது செவ்வாயில் மோதி நொறுங்கிவிடும் அல்லது விண்வெளியில் பறந்துகொண்டே இருக்கும்.
அனைவருக்கும் அதுவொரு பதட்டமான தருணம்.
இறுதியாக, 2014ஆம் ஆண்டு, செப்டம்பர் 24 அன்று வெற்றிகரமாக செவ்வாயின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது மங்கள்யான்.
இன்றும் அது செவ்வாயை வலம் வந்தபடி படங்கள் பிடித்து பூமிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது.
இது மங்கள்யான் எடுத்த படம்.
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருக்கிறதா அல்லது முன்பு இருந்தனவா என்பது குறித்து இதுநாள் வரையிலும் நமக்கு உறுதியாகத் தெரியாது. ஆனால் அவ்வளவு நெடுந்தூரத்தில் இருக்கும் ஒரு இலக்கைச் சென்றடைவது அற்புதம் அல்லவா?
அடுத்தகட்டமாக நாம் அங்கு மனிதர்களை அனுப்புவது குறித்து யோசிக்கலாம். மனிதர்களைத் தாங்கிச் செல்லும் விண்கலம் ஒன்றுக்கான திட்டத்தை இஸ்ரோ ஏற்கனவே தொடங்கிவிட்டது. அதன் பெயர் ககன்யான்.
மூன்று பேர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ககன்யான் இன்னும் சில ஆண்டுகளில் விண்ணில் பாயும். உங்களுக்கும் ககன்யானில் பயணம் செய்ய வேண்டுமா?
ஈர்ப்புவிசை என்றால் என்ன? பொருட்களுக்கிடையே இயங்கும் கவர்ச்சி விசையைத்தான் ஈர்ப்புவிசை என்கிறோம். நிலவும் பூமியும் ஒன்றையொன்று கவர்கின்றன. அதுபோலவே பூமியும் சூரியனும். பொருட்களின் எடை அதிகமாக இருக்கையில் ஈர்ப்புவிசையும் அதற்கேற்ப அதிகமாக இருக்கும். இதனால்தான், இக்கல்லைப் போன்ற சிறிய பொருட்கள் தரையில் விழுந்துவிடுகின்றன.
பூமி அதிக எடையுடன் இருப்பதால் அக்கல்லை வலுவாக தன்னை நோக்கி ஈர்க்கிறது. கல்லும் தன் எடைக்கேற்ப ஒரு விசையை பூமியின் மீது செலுத்துகிறது. ஆனால் கல்லின் விசை மிகவும் சிறியதாக இருப்பதால், பூமி மிகமிகக் குறைவாக, நம்மால் கவனிக்க முடியாத அளவே நகர்கிறது.
சுற்றுப்பாதை என்றால் என்ன?
நான் ஒரு கல்லை வீசினால் அது சிறிது தூரம் பயணித்து பின்னர் புவியீர்ப்பின் காரணமாக கீழே விழுகிறது.
இன்னும் வேகமாக வீசும்போது சற்றே அதிக தூரம் பயணித்து தரையில் விழுகிறது.
சரி, ஒருவேளை நான் அதீத விசையோடு கல்லை எறிந்தால் என்ன நடக்கும்?
மிகச்சரியானதொரு வேகத்தில் வீசப்படும் போது அந்தக் கல் தொடர்ந்து பூமியைச் சுற்றிவர ஆரம்பிக்கும். அதாவது, தனக்கென ஒரு சுற்றுப்பாதையில் நுழைந்திருக்கும்.
இப்படித்தான், மங்கள்யான் முதலில் பூமியின் சுற்றுப்பாதையிலும் பின்னர் செவ்வாயின் சுற்றுப்பாதையிலும் செலுத்தப்பட்டது.
விண்வெளியில் உள்ள லேசான பொருட்கள், கனமான பொருட்களின் ஈர்ப்புவிசை காரணமாக அவற்றைச் சுற்றிவரும்.
சந்திரன் பூமியையும், சூரிய குடும்பத்தில் உள்ள பிற கோள்கள் சூரியனையும் இவ்வாறுதான் சுற்றிவருகின்றன. இந்தச் சுற்றுப்பாதைகள் பொதுவாக நீள்வட்ட(முட்டை வடிவ) பாதைகளாக இருக்கும்.