முதல் பருவம்
இரண்டாம் பருவம்
மூன்றாம் பருவம்
நான்காம் பருவம்
ஐந்தாம் பருவம்
இது என்னுடைய இரண்டாவது சரித்திர நாவல். நான் முதலாவது என்று மனப்பூர்வமாக நினைக்கக் கூடிய இந்த நாவல் படைத்த முறைப்படி வருகிற எண்ணிக்கையில் இரண்டாவது வரிசையில் நிற்கிறது. இந்த நாவலை எழுதத் திட்டமிடுவதற்கு முன்பே சில கொள்கைகளைச் சிறப்பாகவும் சிரத்தையாகவும் வகுத்துக் கொண்டேன் என்பதை நான் இப்போது மீண்டும் நினைவு கூர்கிறேன். வரலாற்றையே முழு நிலைக்களனாக எடுத்துக் கொள்ளாமல் வரலாற்றுப் பின்னணியையும், சூழ்நிலைகளையும் அமைத்துக் கொண்டு அழகும் ஆழமும் மிகுந்த ஒரு கதையைப் புனைய வேண்டுமென்று நான் எண்ணியிருந்த எண்ணம் இந்த நாவலில் ஓரளவு நன்றாகவே நிறைவேறியிருக்கிறது.
நமது இலக்கியங்களில் வரலாற்றுக் காலத்துப் பூம்புகார் நகரம் கம்பீரமான வருணனைகளால் போற்றிப் புகழப்பட்டிருப்பதைப் பலமுறை படித்திருக்கிறோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலண்டன் மாநகரத்தைக் காட்டிலும் நகர்ப் பரப்பினாலும் பிற பெருமைகளாலும் பூம்புகார் நகரம் சிறப்புற்றிருந்ததாகச் சொல்லுகிறார்கள். இலக்கியங்களிலும் காவியங்களிலும் படித்துப் படித்து மனக்கண்ணால் கண்டிருந்த பூம்புகார் நகரம் என்னை ஏற்கெனவே மயக்கியிருந்ததென்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கதையை எழுதியதனால் அந்த மயக்கம் இன்னும் வளர்ந்ததே ஒழியக் குறையவில்லை.
போர்க்களங்களில் வில்லும் வேலும் வாளும் கேடயமும் ஏந்திச் செய்கிற போரைப் போலவே வரலாற்றுக் காலத்துப் பூம்புகாரின் சந்திகளிலும் சதுக்கங்களிலும் பல்வேறு சமயவாதிகள் அறிவுப் போர் நடத்திக் கொண்டிருந்ததாக நூல்களில் படித்திருக்கிறோம். புகழும் பெருமையும் மிக்க அந்த அறிவுப் போரில் இந்தக் கதாநாயகனும் ஈடுபடுகிறான். வெற்றி பெறுகிறான்.
இந்தக் கதாநாயகனின் வாழ்க்கை ஓர் அழகிய தத்துவம். சுரமஞ்சரியிலிருந்து முகுந்தபட்டர் வரை எல்லாரும் கதாநாயகனாகிய இளங்குமரனுக்குத் தோற்றுப் போவதாக அவனிடமே சொல்கிறார்கள். அவனோ யாரையுமே வென்றதாக ஒப்புக் கொள்ள மாட்டேனென்கிறான். இறுதிவரை பிடிவாதமாக அன்பு செய்து அவனை வென்றவளாகிய சுரமஞ்சரியும் கூட தான் வெற்றி பெற்றதை மறந்து அவனுக்குத் தோற்றதாகவே அவனிடம் சொல்கிறாள். உடம்பினாலும் தோற்றத்தாலும் மட்டுமல்லாமல் குணங்களாலும் மிக அழகியவன் இந்தக் கதாநாயகன். குணங்களாலும் அழகுடையவர்கள் காதலிக்கத் தகுந்தவர்கள். இந்தக் கதையில் எல்லாக் கதாபத்திரங்களுமே இளங்குமரனுடைய குண அழகை ஏதோ ஒரு வகையில் ரசிக்கிறார்கள். வீரத்தையே ஒரு தவமாகச் செய்யும் நீலநாகர், பிடிவாதமாக அன்பு செய்து தளரும் முல்லை, தீமைகளின் எல்லையில் போய் நிற்கும் பெருநிதிச் செல்வர் நகைவேழம்பர், இளங்குமரனுடைய முழு வாழ்க்கையையுமே தன்னையறியாமல் தற்செயலாக வரைந்து முடித்து விடுகிற ஓவியன் மணிமார்பன், நல்லவற்றுக்குப் பாதுகாப்பு அளிப்பதே ஒரு தவம் என்று எண்ணும் அருட்செல்வர் எல்லாரும் இதில் உயிர்க்களையோடு நன்கு உரம்பெற்று நடமாடுகிறார்கள்.
ஆனாலும் இந்தக் கதையில் படிப்பவர்கள் எல்லாரையும் ஒருங்கே கவர்கிற கதாபாத்திரம் சுரமஞ்சரியாகத்தான் இருப்பாள். இளங்குமரனுக்காக ஏங்கி ஏங்கி உருகி அவள் எல்லாவற்றையும் இழந்து விட்டுக் கடைசியாக அவனைப் பற்றிய விருப்பத்தை மட்டும் இழக்க இயலாமல் அவன் பாதங்களில் வீழ்ந்து கண்ணீர் பெருக்கி - "இந்தப் பாதங்களைத் தொழுவதைத் தவிர எனக்கு வேறு செல்வங்கள் வேண்டியதில்லை" - என்று அவனோடு கீழிறங்கி நடக்கும் இடம் மெய்சிலிர்க்கச் செய்வது இந்தக் கதைக்கும் கதாநாயகனுக்கும் சுரமஞ்சரி என்ற கதாபாத்திரம் இத்தனை முழுமையாகக் கனிந்த நிலையில் கிடைத்ததற்காக வாசகர்களும், எழுதியவனும் நிச்சயமாகப் பெருமைப்பட முடியும். அவளுடைய பரிசுத்தமான மனச்சாட்சியை மதிப்பதற்கு மண்ணுலகத்து மதிப்பீடுகள் போதாதென்றாலும் முடிந்தவரை மதித்தாக வேண்டிய கடமை நமக்கு உண்டு. "பிறருக்காக நம்மை இழந்து விடுவதில் ஒரு சுகம் இருக்கிறது" என்று இளங்குமரன் தன் கல்வி, தவம் எல்லாவற்றையும் பொருட்படுத்தாது சுரமஞ்சரிக்குத் தன்னைக் கொடுக்கிறான். இவ்வளவு நல்ல கதாபாத்திரமாக வாய்த்ததற்காக இந்தக் கதாசிரியனும் அவளுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்றி செலுத்தியாக வேண்டும். இந்த நாவலை அந்த அழகிய கதாபாத்திரத்திற்குச் சமர்ப்பணம் செய்வதைத் தவிர வேறெந்த வகையிலும் அந்த நன்றியைச் செலுத்த முடியாது என்பதால் இந்த நாவலைச் சுரமஞ்சரி என்ற கதாபாத்திரமே அடைவதாகப் பாவித்துக் கொள்கிறேன். கல்கியில் படிக்கும்போது, பல்லாயிரக்கணக்கான வாசகர்களும் இதையே வரவேற்றார்கள். புத்தகமாகப் படிக்கும் பேறு பெற்றவர்களும் இப்படியே வரவேற்பார்கள் என்று நினைக்கிறேன்; நம்புகிறேன்.
இதைத் தொடர்கதையாக வெளியிடுவதில் பலவிதத்திலும் அன்புடன் ஒத்துழைத்த கல்கி அதிபர். திரு. சதாசிவம் அவர்களுக்கும், காரியாலயப் பெருமக்களுக்கும் என் அன்பையும், நன்றியையும் தெரிவிக்கிறேன். கடைசியாக ஒரு வார்த்தை. இந்த நாவல் பொழுது போக்கிற்கு மட்டுமன்று, சிந்தனைக்கும் சேர்த்துத்தான். இதில் அழகு எவ்வளவு உண்டோ அவ்வளவிற்கு ஆழமும் உண்டு. படிப்பவர்கள் அந்த நோக்குடன் இதைப் படிக்க வேண்டும்.
அன்புடன் நா. பார்த்தசாரதி
சென்னை
1-6-1970
பூரணமான இந்தக் கதை மாளிகையின் தோரணவாயிலில் ஆவல் பொங்க நிற்கும் வாசக அன்பர்களுக்குச் சில வார்த்தைகள்; சற்றே கண்களை மெல்ல மூடிக் கொள்ளுங்கள்! மணிமேகலையும், சிலப்பதிகாரமும் நிகழ்ந்த காலத்துப் பூம்புகார் நகரத்தையும், மதுரையையும், வஞ்சி மாநகரையும் ஒரு விநாடி உருவெளியில் உருவாக்கிக் காணுங்கள். பழைய பெருமிதத்தோடு சார்ந்த எண்ணங்களை நினைத்துக் கொண்டே காணுங்கள்.
அடடா! எவ்வளவு பெரிய நகரங்கள். எத்துணை அழகு! மாட மாளிகைகள் ஒரு புறம், கூட கோபுரங்கள் ஒருபுறம். சித்திரப் பொய்கைகள் ஒருபுறம், செந்தமிழ் மன்றங்கள் ஒருபுறம். பல பல சமயத்தார் கூடி வாதிடும் சமயப் பட்டிமன்றங்கள் ஒருபுறம். கோவில்கள், கோட்டங்கள், ஆற்றங்கரைகள், கடற்கரைகள், பெருந்தோட்டங்கள், பூம்பொழில்கள் - நினைப்பில் அளவிட்டு எண்ணிப் பார்க்க இயலாத பேரழகு அல்லவா அது! சங்குகள் ஒலி விம்ம, மகரயாழும் பேரியாழும் மங்கல இசை எழுப்ப, மத்தளம் முழங்க, குழலிசை இனிமையிற் குழைய, நகரமே திருமண வீடு போல், நகரமே நாளெல்லாம் திருவிழாக் கொண்டாடுவது போல் என்ன அழகு! என்ன அழகு! சொல்லி மாளாத பேரழகு! சொல்லி மீளாத பேரழகு!
நம் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடித்த பழமையை நினைக்கும் போது, எவ்வளவு பெருமிதமாக இருக்கிறது. இன்று அந்தப் பழம்பெரும் நகரங்களையும் அவற்றின் அரச கம்பீர வாழ்வையும் நினைக்கும்போது நீங்கள் உணர்வதென்ன? விழிகளில் கண்ணீரும், நெஞ்சில் கழிவிரக்க நினைவும் சுரக்க, உருவெளியில் அந்த மாபெரும் நகரங்களைக் கற்பனை செய்து காண முயலும் போது உங்கள் செவிகள் அவற்றில் ஒலித்த இன்னொலிகளைக் கேட்கவில்லையா? உங்கள் நாசியில் அகிற்புகை, சந்தனம், நறுமண மலர்கள் மணக்கவில்லையா? உங்கள் சிந்தனை அவற்றின் வளமான பெருவாழ்வை நினைக்கவில்லையா? அத்தகைய பெருநகரங்களின் செழிப்பு நிறைந்த வாழ்வினூடே நமது கதை நுழைந்து செல்கிறது என்பதற்காக நாம் பெருமிதம் கொள்ளலாம் அல்லவா?
தமிழகத்தில் சரித்திர நாவல்கள் என்றால் அரசர், அரசி, படைவீரர், படைத்தலைவர், அமைச்சர் என்று கதாபாத்திரங்களை வகுத்துக் கொண்டு எழுதுவதே இது வரை வழக்கம். இதனால் ஆண்ட வாழ்வின் ஒரு பகுதி ஒளி நிறுவிக் காட்டப்பட்டதே தவிர ஆளப்பட்ட வாழ்வு என்ற பெரும் பகுதி விவரிக்கப் பெறவில்லை. பேரரசர் பலர் போர்கள் செய்து வெற்றி வாகை சூடி வீர வாழ்வு வாழ்ந்தும், அரசவையில் அரியணையில் அமர்ந்தும், பீடுறக் காலங் கழித்த நாளில் அவர்கள் அங்ஙனம் காலங்கழிக்கக் காரணமான மக்களும் பல்லாயிரவர் வாழ்ந்திருக்கத்தானே வேண்டும்?
அந்த மக்களிலும் வீரர்கள் இருந்திருப்பார்கள். பல்வேறு சமயச் சார்புள்ள விதவிதமான மக்கள் விதவிதமாக வாழ்ந்திருப்பார்கள். ஈடு சொல்ல முடியாத அழகர்கள் இருந்திருப்பார்கள். அரச குலத்து நங்கையரை அழகிற் புறங்காணும் பேரழகிகள் இருந்திருப்பார்கள். அவர்களிடையே நளினமான உறவுகள், காதல், களிப்பு எல்லாம் இருந்திருக்கும். வாழ்க்கைப் போராட்டங்கள் இருந்திருக்கும். ஆனால் பெரும்பான்மையானதும், சரித்திரத்தை உண்டாக்கியதும், சரித்திரத்தின் பொன்னேடுகளில் நாயகம் கொண்டாடும் பேரரசர்களை அப்படிப் பேரரசர்களாக ஆக்கியதுமான இந்த மக்கள் கூட்டத்தின் மேல் வரலாற்று நாவலாசிரியர்கள் எந்த அளவு ஒளியைப் படர விட்டார்கள்? எந்த அளவு கவனம் செலுத்த முயன்றார்கள்?
பழைய வாழ்வின் இந்த அழகிய பகுதி மறைந்தே இருக்கிறது. மணிபல்லவம் கதையின் முக்கிய நோக்கங்களில் இந்த அழகிய வாழ்க்கையைப் புனைந்து கூற முயல்வதும் ஒன்று. மணிபல்லவம் கதையின் நாயகன் ஓர் அற்புதமான இளைஞன். காவிரிப்பூம் பட்டினத்துப் பொது மக்களிடையே வாழ்ந்து வளர்ந்து அழகனாய், அறிஞனாய், வீரனாய், உயர்ந்து ஓங்குகிறவன். பருவத்துக்குப் பருவம் அவனுடைய விறுவிறுப்பான வாழ்வில் மாபெரும் மாறுதல்கள் நிகழ்கின்றன. அதனால் இந்தக் கதையின் ஒவ்வொரு பகுதிக்கும் பாகம் என்று பெயரிடாமல் கதாநாயகனின் வாழ்க்கை மாறுதல்களை மனத்திற்கொண்டு பருவம் என்று பெயரிடுகிறேன். கதாநாயகனின் வாழ்வில் நிகழும் பெரிய பெரிய மாறுதல்களுக்கு எல்லாம் மணிபல்லவத் தீவு காரணமாகிறது. அவனுடைய வாழ்வில் இறுதி வரை விளங்கிக் கொள்வதற்கு அரிதாயிருக்கும் மிகப்பெரிய மர்மம் ஒன்றும் மணிபல்லவத்தில்தான் விளங்குகிறது. அந்த மெய் அவன் கண்களைத் திறக்கிறது. தன்னைப் பற்றிய பரம இரகசியத்தை அன்று அங்கே அவன் விளங்கிக் கொள்கிறான்.
இன்னும் இந்தக் கதையில் எழில் நிறைந்த பெண்கள் வருகிறார்கள். ஆனால், அவர்கள் அரசகுல நங்கையரில்லை. காதலும், வீரமும், சோகமும், இன்பமும், சூழ்ச்சியும், சோதனையும் வருகின்றன. ஆனால், அவை அரண்மனைகளையும் அரச மாளிகைச் சுற்றுப்புறங்களையும் மட்டும் சார்ந்து வரவில்லை. போரும் போட்டியும் வருகின்றன. ஆனால் அவை மணிமுடி தரித்த மன்னர்களுக்கிடையே மண்ணாசை கருதி மட்டும் வரவில்லை. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற மாபெருங் காவியங்கள் பிறக்கக் காரணமாயிருந்தோர் இலக்கிய காலச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு அந்தப் பெருங்கதையில் கண்ட மிகப்பெரியதும் அளப்பரியதுமான பூம்புகார் நகரை உங்கள் கண்பார்வையிற் கொண்டு வந்து காட்ட முயல்கிறேன்.
அதோ!
சிறப்பு மிக்க சித்திரை மாதம். காவிரிப்பூம் பட்டினம் இந்திர விழா கொண்டாடத் தொடங்கியிருக்கிறது. எங்கும் இனிய ஒலிகள், எங்கும் அலங்காரப் பேரொளி. எங்கும் மணமலர், அகிற்புகை வாசனை. எங்கும் மக்கள் வெள்ளம். காவிரி கடலோடு கலக்கும் சங்க முகத்தில் விழாக் கூட்டம். எங்கு நோக்கினும் யானைகளிலும், குதிரைகளிலும், தேரிலும், சித்திர ஊர்திகளிலும் விரையும் மக்கள். கடல் முடிந்து கரை தொடங்குமிடத்தில் மற்றொரு கடல் தொடங்கி ஆரவாரம் செய்வது போல் அலை அலையாய் மக்கள் குழுமியிருக்கின்றனர். மஞ்சளும் சிவப்புமாய் வண்ண வண்ண நிறம் காட்டும் மாலை வானத்தில் கோல எழில் குலவும் வேளை, அடங்கிய பொழுது, அமைந்த நேரம். அந்த நேரத்தில் அந்த விழாக் கோலங்கொண்ட கடற்கரையில் ஒரு பரபரப்பான இடத்தில் பரபரப்பான சூழ்நிலையில் நம்முடைய கதாநாயகனைச் சந்திக்கிறோம். கதை தொடங்குகிறது. கதை மாளிகைக்குள்ளே நுழையலாம், வாருங்கள்.
பூம்புகார் நகரம் புது விழாக் கோலம் பூண்டு எழிலுடன் விளங்கிய சித்திரை மாதத்தில் சிறப்பு வாய்ந்த சித்திரை நாள். வானத்தின் கீழ் மூலையில் வெண்மதி முழு நிலா விரித்துக் கொண்டிருந்தது. 'இந்திர விழா தொடங்குகிறது' என்று வச்சிரக் கோட்டத்து முரசம் ஒலி பரப்பிய போதே அந்தப் பேரூர் விழாவுக்கான புதுமையழகுகளைப் புனைந்து கொள்ளத் தொடங்கிவிட்டது. விழாவுக்கான புத்துணர்வும் புது மகிழ்வும் பெற்று விட்டது.
அடடா! அதோ, காவிரி கடலோடு கலக்கும் காவிரி வாயிற் சங்கமத் துறையில் தான் எவ்வளவு பெருங்கூட்டம். கடலுக்கு அது கரை. ஆனால் அந்தக் கரைக்குக் கரையே இல்லாதது போல் மக்கள் திரண்டிருந்தனர். ஆடவரும், பெண்டிரும், இளைஞரும், முதியவரும், சிறுவரும், சிறுமியருமாக அழகாகவும் நன்றாகவும் அணிந்தும், புனைந்தும், உடுத்தும் வந்திருந்தனர். நோக்குமிடம் எங்கும் நிருத்த கீத வாத்தியங்களின் இனிமை திகழ்ந்தது. இந்திர விழாவுக்காக எத்தனை விதமான கடைகள் காவிரிப்பூம்பட்டினத்தில் உண்டோ, அவ்வளவும் கடற்கரைக்கு வந்திருந்தன. இன்ன இன்ன கடையில் விற்கப்படும் பொருள்கள் இவையிவை என்பதை அறிவிக்க ஏற்றிய பல நிறக் கொடிகள் வீசிப் பறந்து கொண்டிருந்தன. பூவும் சந்தனமும் கூவிக் கூவி விற்கும் மணம் நிறைந்த பகுதி, பொன்னும் மணியும் முத்தும் பவழமும் மின்னும் ஒளி மிகுந்த கடைகள், பிட்டு விற்கும் காழியர்களின் உணவுக்கடைகள், பட்டுந் துகிலும் பகர்ந்து விற்கும் கடைகள், வெற்றிலை விற்கும் பாசவர்களின் கடைகள், கற்பூரம் முதலிய ஐந்து வாசனைப் பொருள்களை விற்கும் வாசவர் கடைகள் - எல்லாம் நிறைந்து கொடுப்போர் குரலும், கொள்வோர் குரலுமாகப் பேராவாரம் மிகுந்து கடற்கரை கடைக்கரையாகவே மாறியிருந்தது. செல்வச் செழிப்பு மிக்க பட்டினப்பாக்கத்து மக்களும், மருவூர்ப்பாக்கத்து மக்களும் கழிக்கரைகளில் வசித்து வந்த யவனர்களும், எல்லோரும் கடற்கரையிலே கூடிவிட்டதனால் நகரமே வறுமையடைந்து விட்டாற் போல் வெறுமை பெற்றிருந்தது. நாளங்காடித் தெருவிலுள்ள பூத சதுக்கத்துக் காவற் பீடிகையில் மட்டும் பொங்கலிடுவோர் கூட்டம் ஓரளவு கூடியிருந்தது. அது தவிர, மற்றெல்லாக் கூட்டமும் கடற்கரையில்தான்!
அவ்வழகிய கடற்கரையின் ஒரு கோடியில் மற்போர் நடந்து கொண்டிருந்த இடத்தில் பரபரப்பு அதிகமாயிருந்தது. கூத்து, இசை, சமய வாதம் முதலியனவெல்லாம் நிகழ்ந்து கொண்டிருந்த அரங்கங்களை விட மற்போர் அரங்கத்தில், ஆர்வம் காரணமாக ஆண்களும் பெண்களுமான இளவயதினர் மிகுந்து கூடியிருந்தனர். முழுமதியின் ஒளி பரவும் வெண்மணற் பரப்பில் பலவகைக் கோலங்களைப் பாங்குறப் புனைந்து நின்றிருந்த பட்டினப் பாக்கத்துச் செல்வ நங்கையர் கந்தருவருலகத்து அரம்பையர் போல் காட்சியளித்தனர். எட்டி, காவிதி போன்ற பெரும்பட்டங்கள் பெற்ற மிக்க செல்வக் குடும்பத்து இளநங்கையர் சிலர் பல்லக்குகளில் அமர்ந்தவாறே திரையை விலக்கி மற்போர் காட்சியைக் கண்டு கொண்டிருந்தனர். அவர்கள் செவ்விதழ்களில் இளநகை அரும்பிய போதெல்லாம், எதிர்ப்புறம் நின்றிருந்த பூம்புகார் இளைஞர் உள்ளங்களில் உவகை மலர்ந்தது. பொன்னிறத்துப் பூங்கரங்களில் வளைகள் ஒலித்த போதெல்லாம் அங்கே கூடியிருந்த இளைஞர் நினைவுகளிலும் அவ்வொலி எதிரொலித்தது. அவர்கள் மென்பாதங்களில் மாணிக்கப்பரல் பொதித்த சிலம்பு குலுங்கின போதெல்லாம் இளைஞர் தம் தோள்கள் பூரித்தன. அல்லிப் பூவின் வெள்ளை இதழில் கருநாவற்கனி உருண்டாற் போல் அவர்கள் விழிகள் சுழன்ற போதெல்லாம் இளைஞர் எண்ணங்களும் சுழன்றன. மற்போரும் களத்தில் நடந்து கொண்டு தான் இருந்தது.
ஆனால், இவற்றையெல்லாம் அலட்சியம் செய்தவன் போல் ஒதுங்கி நின்று கொண்டிருந்த தீரன் ஒருவனும் அந்தக் கூட்டத்தில் இருந்தான். கூட்டத்தில் அவன் நின்ற இடம் தனியாய்த் தெரிந்தது. கைகளைக் கட்டியவாறு கம்பீரமாக நிமிர்ந்து நின்று கொண்டிருந்த அந்த அழகிய இளைஞன் பார்வையிலிருந்தும் நின்ற விதத்திலிருந்தும் தான் எதற்கும் அஞ்சாதவன், எதற்கும் கவலைப்படாதவன் என்று தன்னைப் பற்றி அனுமானம் செய்து கொள்ள வைத்தான். அவனுக்குப் பணிந்து வணக்கம் செய்யக் கூடியவர்கள் போல் தோற்றமளித்த நாலைந்து விடலைத்தனமான இளைஞர்களும் அவனைச் சூழ்ந்து நின்றனர். செந்தழல் போல் அழகிய சிவப்பு நிறமும், முகமும் எழில் வடிந்த நாசியும், அழுத்தமான உதடுகளும் அவனுடைய தோற்றத்தைத் தனிக் கவர்ச்சியுடையதாக்கிக் காட்டின. அமைந்து அடங்கிய அழகுக் கட்டு நிறைந்த உடல், அளவான உயரம், மிகவும் களையான முகம், இவற்றால் எல்லோரும் தன்னைக் காணச் செய்து கொண்டு, தான் எதையுமே காணாதது போல் மற்போரை மட்டும் கவனித்துக் கொண்டு நின்றான் அந்த இளைஞன். இணையற்ற அழகுக்குச் சரிசமமாக அவனுடைய விழிகளின் கூரிய பார்வையில் அஞ்சாமையின் சாயல் அழுத்தமாகத் தெரிந்தது. 'இவன் நம் பக்கம் சற்றே விழி சாய்த்துப் பார்க்க மாட்டானா?' என்று முறுவலுக்கும், வலையொலிக்கும் சொந்தக்காரர்கள் ஏங்க, எதற்குமே தான் ஏங்காதவன் போல் மற்போரில் கவனமாக நின்றிருந்தான் அந்த இளைஞன். ஏக்கங்களைப் பலருக்கு உண்டாக்கிக் கொண்டு நிற்கிறோம் என்பதையே உணராதவன் போல் சிறிதும் ஏங்காமல் நின்றான். ஆசைகளுக்கும் ஆசைப்படுகிற அழகாகத் தெரியவில்லை அது! ஆசைகளையே ஆசைப்பட வைக்கிற அழகாகத் தோன்றியது. அவ்வளவிற்கும் ஆடம்பரமான அலங்காரங்கள் எதுவும் அவனிடம் காட்சியளிக்கவில்லை. முத்தும், மணியும், பட்டும் புனைவுமாகச் செல்வத் திமிரைக் காட்டிக் கொண்டு நின்ற பட்டினப்பாக்கத்து இளைஞர்களின் தோற்றத்திலிருந்து வேறுபட்டு எளிமையாகத் தோன்றினான் அவன். அவனைச் சுற்றி சீடர்கள் போல் நின்ற இளைஞர்கள் இடையிடையே மற்போர் பற்றி உணர்ச்சி வசப்பட்டு அவனிடம் ஏதோ கூறிய போதெல்லாம் 'சிறிது பொறுத்திருங்கள்' என்று பதறாமல் மெல்லக் கூறினானே தவிர, அவன் உணர்ச்சி வசப்படவில்லை. ஆனால் மற்போரை நன்கு கூர்ந்து கவனித்து வந்தான். மற்போரை உற்சாகப்படுத்தி நடுநடுவே கூட்டத்தினர் ஆரவாரக் குரலொழுப்பிய போது அதிலும் அவன் கலந்து கொள்ளவில்லை. அலட்சியமான புன்னகை மட்டும் அவனது சிவந்த இதழ்களில் ஓடி மறைந்தது.
மிகவும் வலிமை வாய்ந்த யவன மல்லன் ஒருவன் களத்தில் வெற்றியோடு போர் புரிந்து கொண்டிருந்தான். போர் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து அவனே வென்று கொண்டிருந்தான். அதே களத்தில் மூன்று தமிழ் மல்லர்களையும் நாகர் இனத்தைச் சேர்ந்த இரண்டு மல்லர்களையும் தோற்கச் செய்து அந்த வெற்றியாணவத்தில் மேலும் அறைகூவி ஆட்களை அழைத்துக் கொண்டிருந்தான் யவன மல்லன். அவனுடைய முகத்திலும் தோள்களிலும் வெற்றி வெறி துடித்தது. செருக்கின் சாயல் தெளிவாய்த் தெரிந்தது. காரணம் அவனால் தோல்வியடைந்த மூன்று தமிழ் மல்லர்களும் சோழ நாட்டிலே சிறந்த மற்போர் வீரர்களெனப் பெயர் பெற்றவர்கள். வெற்றியில் பெருமிதம் தான் இருக்கிறது. ஆனால் வல்லவர்களை வெல்லுவதில் பெருமிதத்தைக் காட்டிலும் இன்னதென்று கூற இயலாததொரு பேருணர்வும் இருக்கிறது. அந்தப் பேருணர்வில் திளைத்த யவன மல்லன் அறைகூவல் என்ற பேரில் என்னென்னவோ பேசினான். சோழ நாட்டு ஆண்மையையே குறைத்துக் கூறுகிற அளவு அவனிடமிருந்து சொற்கள் வெளிப்பட்டன. அவனுடைய அறைகூவலில் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த தமிழ் இனத்து ஆண்மை இகழப்படுவதை உணராமலோ அல்லது உணர்ந்தும் வேறு வழியின்றியோ கூடியிருந்த பட்டினப்பாக்கத்துச் செல்வர்களும் செல்வியர்களும் குலுங்கக் குலுங்க நகைத்துக் களிப்படைந்து கொண்டிருந்தனர்.
அப்படிக் களித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் கணீரென்று ஒலி முழக்கி நகைப்புக்களை அடக்கி மேலெழுந்தது அந்த கம்பீரமான ஆண்மைக் குரல்!
"பிதற்றாதே! நிறுத்து!" - பாய்கின்ற புலிபோல் திரும்பி இந்த இரண்டு சொற்களுக்கும் உரியவன் யார் என்று காணக் கண்களைச் சுழற்றினான் யவன மல்லன். அவனுடைய விழிகள் மட்டுமா சுழன்றன? அல்ல. அங்கே கூடியிருந்த வேல்விழி நங்கையர்கள், நாகரிக நம்பியர்கள் அனைவர் பார்வையும் இந்தத் துணிவான சொற்களைப் பிறப்பித்தவனைத் தேடி விரைந்தன! ஆவலோடு பாய்ந்தன.
அவன் தான்! அந்த அழகிய இளைஞன் இயல்பாகச் சிவந்த தன் முகமே மேலும் சிவக்க நின்றான். அவனுடைய வனப்பு வாய்ந்த கூர் விழிகளில் துணிவின் ஒளி துள்ளியது. தோளோடு போர்த்திருந்த ஒரு பழைய பட்டுப் போர்வையை விலக்கிச் சற்றே கிழிந்த மேலங்கியையும் கழற்றிவிட்டுக் கட்டமைந்த செம்பொன் மேனி சுடர்விரிக்க அவன் முன் வந்தான்; அப்போது அவனுடைய தோள்களில் எத்தனை நூறு வேல்விழிகள் தைத்திருக்கும் என்று அளவிட்டு உரைப்பதற்கில்லை. அந்த ஒரு விநாடி வேல்விழி நங்கையர் அனைவரும் கண்கள் பெற்ற பயனைப் போற்றியிருப்பார்கள். பெண்களாகப் பிறந்ததற்காகவும் நிச்சயமாகப் பெருமை கொண்டிருப்பார்கள். யவன மல்லனை நோக்கி வீரநடை பயின்ற அவனை "இளங்குமரா நிதானம்! அவன் முரடன்!" என்று அவன் அருகில் நின்ற இளைஞர்களில் ஒருவன் எச்சரிக்கை செய்து கூவியதிலிருந்து அவன் பெயர் இளங்குமரன் என்பது அங்கிருந்தவர்களுக்குத் தெரிந்தது. அவன் முகத்துக்கும் தோளுக்கும் பரந்த மார்புக்கும் தன் நெஞ்சையும், நினைவுகளையும் தோற்கக் கொடுத்த பட்டினப்பாக்கத்துப் பெருஞ் செல்வ மகள் ஒருத்தி பல்லக்கிலிருந்தவாறே அந்தப் பெயரை இதழ்கள் பிரிய மெல்லச் சொல்லிப் பார்த்துக் கொண்டாள். அவள் இதழ் எல்லையில் அப்போது இளநகை விளையாடியது. நெற்றியிலும், கருநீல நெடுங்கண்களிலும், மாம்பழக் கன்னங்களிலும் நாணம் விளையாடியது. நெஞ்சில் பரவசம் விளையாடிக் கொண்டிருந்தது.
"வசந்தமாலை! எவ்வளவு அழகான பெயர் இது. நீ கேட்டாயல்லவா!" - என்று பல்லக்கில் எதிரேயிருந்த தோழியை வினவினாள் அந்தச் செல்வ மகள். தோழி பொருள் நிறைந்த நகை புரிந்தாள். இதற்குள் களத்தில் அந்த இளைஞனும் யவன மல்லனும் கைகலந்து போர் தொடங்கியதால் எழுந்த ஆரவாரம் அவர்கள் கவனத்தைக் கவரவே, அவர்களும் களத்தில் கவனம் செலுத்தலாயினர். 'இவ்வளவு திறமையாக மற்போர் செய்யத் தெரிந்தவனா இதுவரை ஒன்றுந் தெரியாதவனைப் போல் நின்று கொண்டிருந்தான்?' என்று கூடியிருந்தவர்களை வியக்கச் செய்தது இளங்குமரன் என்று அழைக்கப்பட்ட அந்த இளைஞனின் வன்மை! மின்னல் பாய்வது போல் தன் பொன்நிறக் கரங்களை நீட்டிக் கொண்டு அவன் பாய்ந்து தாக்கிய போதெல்லாம் யவன மல்லனுக்கு விழி பிதுங்கியது. இளங்குமரனை உற்சாகமூட்டி அவனுடன் இருந்த இளைஞர்கள் கைகளை ஆட்டியவாறே ஆரவாரம் செய்து கூவினர்.
இந்தச் சமயத்தில் சித்திரப் பல்லக்கிலிருந்த பட்டினப் பாக்கத்து இளநங்கை தன் தோழி வசந்தமாலையை நோக்கி இனிய குரலில் யவன மல்லனைத் திணறச் செய்யும் அவன் புகழை வாய் ஓயாமல் கூறிக் கொண்டிருந்தாள்.
"நீங்கள் எதையுமே அதிகமாகப் புகழும் வழக்கமில்லையே. இன்றைக்கு ஏனோ இப்படி...?" என்று தொடங்கிய அவள் தோழி வசந்தமாலை, சொற்களில் சொல்ல ஆரம்பித்ததைச் சொற்களால் முடிக்காமல் தன் நளினச் சிரிப்பில் முடித்து நிறுத்தினாள்.
களத்தில் மற்போர் விறுவிறுப்பான நிலையை அடைந்திருந்தது. இருவரில் வெற்றி யாருக்கு என்று முடிவு தெரிய வேண்டிய சமயம் நெருங்கிக் கொண்டிருந்தது. எல்லோருடைய உள்ளமும் அந்த விநாடியை ஆவலோடு எதிர்கொள்ளத் தவித்துக் கொண்டிருந்தது. இன்னாரென்று தெரியாமல் இன்ன காரணம் என்று விளங்காமல் எல்லாருடைய மனத்திலும் அனுதாபத்தைப் பெற்றுக் கொண்டிருந்த அந்தத் தமிழ் இளைஞனே வெல்ல வேண்டுமென்று அனைவரும் எதிர்பார்த்தனர். அவன் தோற்றால் அத்தனை பேருடைய உள்ளமும் தோற்றுவிடும் போலிருந்தது. களத்தில் அவனுடைய கவர்ச்சி வளரும் விழிகளில் சோர்வு தெரிந்த போதெல்லாம் காண்போர் விழிகளில் பதறி அஞ்சும் நிலை தெரிந்தது. பொன் வார்த்து வடித்து அளவாய் அழகாய்த் திரண்டாற் போன்ற அவன் தோள்கள் துவண்ட போதெல்லாம் சித்திரப் பல்லக்கிலிருந்த எட்டி குமரன் வீட்டுப் பெருஞ்செல்விக்குத் தன் நெஞ்சமே துவண்டு போய்விட்டது.
இறுதியாக எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த விநாடியும் வந்தது. வேரற்றுச் சாயும் அடிமரம் போல் யவன மல்லன் விழி பிதுங்கி மணற்பரப்பில் சாய்ந்தான். இளங்குமரன் வென்றான். வெற்றி மகிழ்ச்சியில் கூட்டம் அடங்காத ஆரவாரம் செய்தது! அவனுடைய நண்பர்களோ களத்துக்குள் ஓடிவந்து அவனை அப்படியே மேலே தூக்கிவிட்டனர். இந்திர விழாவுக்காக அங்கே வந்திருந்த மலர்க்கடையிலிருந்து முல்லை மாலை ஒன்றை வாங்கிக் கொணர்ந்து அவன் கழுத்தில் சூட்டினான் உடனிருந்த நண்பர்களில் ஒருவன். வெற்றிக் களிப்போடு அவன் அழகு திகழச் சிரித்துக் கொண்டு நின்ற போது, மலர்ந்த மார்பில் அலர்ந்து நெளிந்த முல்லை மாலையும் சேர்ந்து கொண்டு சிரிப்பது போல் தோன்றியது. அந்தச் சிரிப்பையும் வெற்றியையும் கூட்டத்திலிருந்த சில யவனர்கள் மட்டும் அவ்வளவாக விரும்பவில்லை போல் தோன்றியது. அங்கே கூடியிருந்த கூட்டம் சிறிது கலைந்து போவதற்கு வழி ஏற்பட்ட போது அவனும், அவனுடைய நண்பர்களும் மணற்பரப்பில் நடக்கத் தொடங்கினர். அப்போது வழியை மறிப்பது போல் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது அந்தச் சித்திரப் பல்லக்கு. நுண்ணிய பூ வேலைப்பாடுகள் அமைந்த பல்லக்கின் ஓவியத் திரை விலகியது. வளைகள் குலுங்கும் செந்நிற முன்கை ஒன்று நீண்டது. அந்தக் கையின் மெல்லிய நீண்ட காந்தள் விரல்களில் பேரொளி நிறைந்ததும் விலை வரம்பற்றதும் நவமணிகளால் தொகுக்கப்பட்டதுமான மணிமாலை ஒன்று இலங்கியது. அந்த மாலை ஏந்திய செந்தாமரைப் பூங்கரம் இளங்குமரனுடைய முகத்திற்கு முன் நீண்ட போது அவன் ஒன்றும் புரியாது திகைத்தான். நிமிர்ந்து பார்த்த போது பல்லக்கினுள்ளிருந்து அந்த இளநங்கை முகத்திலும், கண்களிலும், இதழ்களிலும், எங்கும் சிரிப்பின் மலர்ச்சி தோன்ற எட்டிப் பார்த்தாள். பல்லக்கினுள்ளிருந்து பரவிய நறுமணங்களினாலும், திடீரென்று ஏற்பட்ட அந்தச் சந்திப்பினாலும் சற்றே தயங்கி நின்றான் இளங்குமரன். சொல்லைக் குழைத்து உணர்வு தோய்த்த மெல்லினிமைக் குரலில் அவள் கூறலானாள்:
"இந்தப் பரிசை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேணும்."
"எதற்காகவோ...?"
"பெருவீரமும் வெற்றியும் உடையவர்களைப் பரிசளித்துப் போற்றும் பெருமையை அடையும் உரிமை இந்தப் பூம்புகார் நகரத்தில் ஒவ்வொருவருக்கும் உண்டு! எல்லோருக்கும் மகிழ்ச்சி தருகிற இந்திர விழாக்காலத்தில் இப்படிப் பரிசளிக்கும் வாய்ப்பு ஒன்று எனக்குக் கிடைத்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்."
சற்றும் தயங்காமல் துணிவாக இவ்வாறு மறுமொழி கூறிய அந்த எழிலரசியின் வதனத்தைச் சில விநாடிகள் இமையாது நோக்கினான் இளங்குமரன். அவள் இன்னும் நன்றாக, இன்னும் அழகாக, இன்னும் நிறைவாக நகைத்துக் கொண்டே மணிமாலையை அவனுக்கு மிக அருகில் நீட்டினாள். அந்தத் துணிவும், செல்வச் செழிப்பும் அவன் மனத்துக்குப் புதுமையான அனுபவத்தை அளித்தன. பல்லக்கிலிருந்த அடையாளங்கள் அவள் எட்டிப் பட்டம் பெற்ற பெருங்குடியைச் சேர்ந்தவள் என்பதை அவன் உய்த்துணர இடமளித்தன.
பதில் ஒன்றும் கூறாமல் மெல்ல நகைத்தான் இளங்குமரன். அந்த நகைப்பில் எதையோ சாதாரணமாக மதித்து ஒதுக்குகிறாற் போன்ற அலட்சியத்தின் சாயல்தான் அதிகமிருந்தது. அவன் நண்பர்கள் அமைதியாக நின்று கவனித்துக் கொண்டிருந்தார்கள். இளங்குமரன் அதே குறும்பு நகையோடு கேட்டான்:
"அம்மணி! எனக்குச் ஒரு சிறு சந்தேகம்!"
"என்ன சந்தேகமோ?"
"இதை எனக்குக் கொடுத்து விடுவதனால் நீங்கள் பெருமைப்பட இடமிருக்கிறது. ஆனால் இதை உங்களிடமிருந்து வாங்கிக் கொள்வதனால் நான் பெருமைப்பட்டுக் கொள்ளச் சிறிதாவது இடமிருக்கிறதா என்பதுதான் என் சந்தேகம்" என்று நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி இளங்குமரன் கேட்ட போது அவள் மருண்டாள். அவளுடைய மலர் விழிகள் வியந்தது போலகன்றன.
"வாங்கிக் கொள்ளுங்கள், ஐயா! எங்கள் தலைவி நீங்கள் மற்போர் செய்தபோது காட்டிய ஆர்வத்தைக் கண்டு நானே வியப்படைந்து விட்டேன்" - எழிலரசிக்கு எதிரே தோழி போன்ற தோற்றத்தோடு வீற்றிருந்த மற்றொரு பெண் இளங்குமரனை நோக்கி இவ்வாறு பரிந்து கூறினாள். இதைக்கேட்டு இன்னும் பெரிதாக நகைத்தான் இளங்குமரன். அவள் முகம் அந்த நகைப்பொலியால் சுருங்கிச் சிறுத்தது போல் சாயல் மாறியது.
உடனே, "வசந்தமாலை! பத்து நூறாயிரம் பொன் பெறுமானமுள்ள மணிமாலையைப் பரிசு கொடுப்பதற்காக நாம் பெருமைப்படுவது பெரிதில்லையாம். இவர் பெருமைப்படுவதற்கு இதில் இடமிருக்கிறதா என்று சிந்திக்கிறாராம்" என்று அவள் தோழியிடம் கூறுவது போல் அவனுக்குக் கூறிய குறிப்புரையில் கடுமையும் இகழ்ச்சியும் கலந்திருப்பதை அவன் உணர்ந்து கொண்டான். அவன் வதனத்தில் நகைக் குறிப்பு வறண்டது. ஆண்மையின் கம்பீரம் நிலவியது.
"மன்னியுங்கள், அம்மணீ! உங்கள் மணிமாலையின் பெறுமானம் பத்து நூறாயிரம் பொன்னாயிருக்கலாம். அதற்கு மேலும் இருக்கலாம்! ஆனால் என்னுடைய வீரத்தின் பெறுமானமாக அதை நீங்கள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. 'கொள் எனக்கொடுத்தல் உயர்ந்தது; கொள்ளமாட்டேன் என்று மறுப்பது அதை விட உயர்ந்தது' என்று பழைய நூல்களில் படித்திருப்பீர்கள். என்னைப் போல் ஆண்மையும் தன்மானமும் உள்ளவர்கள் பிறருடைய கைகளிலிருந்து அவசியமின்றி எதையும் பெற விரும்புவதில்லை. இந்தப் பெரிய நகரத்திலே *இலஞ்சி மன்றத்திலும், உலக அறவியின் வாயிற்புரத்திலும் (* வரலாற்றுக் காலத்துப் பூம்புகாரில் இருந்த இடங்கள்) கூனும் குருடுமாக, நொண்டியும் நோயுடம்புமாக ஆற்றலும் வசதியுமில்லாத ஏழையர் எத்துணையோ பேர் பிச்சைப் பாத்திரங்களுடன் ஏங்கிக் கிடக்கிறார்கள். அப்படிக் கொடுப்பதானால் அவர்களுக்கு வாரிக் கொடுத்துப் பெருமையடையுங்கள். வணக்கம். மீண்டும் உங்களுக்கு என் நன்றி, போய் வருகிறேன்" என்று விரைவாக விலகி நடந்தான் இளங்குமரன். அவனைப் பின்பற்றி நடந்த நண்பர்களின் ஏளன நகையொலி அவள் செவியிற் பாய்ந்தது. இளங்குமரனின் கழுத்தில் வெற்றிமாலையாக அசைந்த முல்லை மாலையின் நறுமணம் அவன் விரைவாகத் திரும்பி நடந்த திசையிலிருந்து பல்லக்கினுள் காற்றோடு கலந்து வந்து பரந்தது. ஆனால் அந்த மணத்தினால் அவளுடைய கோபத்தையும் ஏமாற்றத்தையும் ஆற்ற முடியவில்லை. பல்லக்குத் தூக்கி நிற்பவர்க்கும் தோழிக்கும் முன்னிலையில் தன்னை எடுத்தெறிந்து பேசி விட்டுப் போன அவன் செல்லும் திசை நோக்கி அவள் கண்கள் சீற்றத்தைப் புலப்படுத்தின. அவள் தன் கைவிரல்களை மணிமாலையோடு சேர்த்துச் சொடுக்கினாள். அவளுடைய பவழ மெல் உதடுகள் ஒன்றையொன்று மெல்லக் கவ்வின.
வேகமாக நடந்த இளங்குமரன் சற்றே நின்று கேட்க முடிந்திருந்தால், அந்தப் பல்லக்கு அங்கிருந்து நகர்ந்த போது, "வசந்த மாலை! இவனை அழகன் என்று மட்டும் நினைத்தேன்; முரடனாகவும் திமிர் பிடித்தவனாகவும் அல்லவா இருக்கிறான்?" என்று சீறி ஒலித்த செல்வமகளின் கோபக் குரலைத் தானும் செவிமடுத்திருப்பான். ஆனால் அந்தச் சீற்றக் குரலில் சீற்றமே முழுமையாக இருந்ததா? இல்லை! கவனித்தால் சீற்றமும் சீற்றமற்ற இன்னும் ஏதோ ஓருணர்வும் கலந்து இருந்தது புலப்பட்டது.
இராப்போது நடு யாமத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. இந்திர விழாவின் ஆரவாரங்கள் பூம்புகாரின் புறநகர்ப் பகுதிகளில் அதிகமாக இல்லை. புறநகரில் சக்கரவாளக் கோட்டத்தை அடுத்திருந்த சம்பாபதி வனம் இருண்டு கிடந்தது. நிலா ஒளியின் ஆற்றல் அந்த வனத்தில் தன் ஆதிக்கத்தைப் படரவிட முடியாது. அடர்ந்து நெருங்கிய மரங்களும் செடி கொடிகளும் பின்னிப் பிணைந்து நெடுந்தொலைவுக்குப் பரந்து கிடந்தது சம்பாபதி வனம். அந்த வனத்தில் மற்றோர் புறம் காவிரிப்பூம்பட்டினத்து மயானமும், சக்கரவாளக் கோட்டமென்னும் அங்கங்களாகிய முனிவர்களின் தவச்சாலையும் கந்திற்பாவை கோட்டமும் உலகவறவியும் இன்னொரு பக்கத்தே இரவின் அமைதியிலே மூழ்கிக் கிடந்தன. மரக்கிளைகளின் அடர்த்திக்கு இடையே சிறு சிறு இடைவெளிகளின் வழியே கருப்புத் துணியிர் கிழிசல்கள் போல் மிகக் குறைந்த நிலவொலி சிதறிப் பரவிக்கொண்டிருந்தது. நரிகளின் விகாரமான ஊளை ஒலிகள், கோட்டாண்களும் ஆந்தையும் குரல் கொடுக்கும் பயங்கரம் எல்லாமாகச் சேர்ந்து அந்த நேரத்தில் அந்த வனப் பகுதி ஆட்கள் பழக அஞ்சுமிடமாகிக் கொண்டிருந்தன. வனத்தின் நடுவே சம்பாபதி கோயில் தீபத்தின் மங்கிய ஒளியினால் சுற்றுபுறம் எதையும் நன்றாகப் பார்த்து விட முடியாது. நரி ஊளைக்கும் ஆந்தை அலறலுக்கும் இணைந்து நடுநடுவே சக்கரவாளக் கோட்டத்து வன்னி மரங்களின் கீழ் கபாலிகர்களின் நள்ளிரவு வழிபாட்டு வெறிக் குரல்களும் விகாரமாக ஒலித்தன.
இந்தச் சூழ்நிலையில் சம்பாபதி வனத்தின் ஒருபகுதியில் இளங்குமரன் அவசரமாக நடந்து சென்று கொண்டிருந்தான். தோளிலும் உடலின் பிற அங்கங்களிலும் மாலையில் கடற்கரையில் அந்த யவன மல்லனோடு போரிட்டு வென்ற களைப்பு இருந்ததாயினும் மிக முக்கியமான காரியத்தை எதிர்நோக்கிச் செல்கிறவன் போல் அந்த அகால நேரத்தில் அங்கு அவன் சென்று கொண்டிருந்தான். கடற்கறையிலும், நாளங்காடிப் பூத சதுக்கத்திலும் இந்திர விழாக் கோலாகலங்களைப் பார்த்து விட்டுத் திரும்பிய போது மருவூர்ப் பாக்கத்தில் நண்பர்களை ஒவ்வொருவராக அனுப்பிவிட்டு, வேண்டுமென்றே தனிமையை உண்டக்கிக் கொண்டு புறப்பட்டிருந்தான் அவன். இந்தச் சம்பாபதி வனமும், சக்கரவாளக் கோட்டமும், பயங்கரமான இரவுச் சூழலும் அவனுக்குப் புதியவை யானால்தானே அவன் பயப்பட வேண்டும்? உயிர்களின் அழிவுக்கு நிலமாக இருந்த இதே சக்கரவாளத்துக்கு அருகில் இருந்த வனத்தில் தான் அவன் வளர்ந்து செழித்துக் காளைப் பருவம் எய்தினான்! இதே சம்பாபதி கோவில் வாயிலிலுள்ள நாவல் மரங்களின் கிழ் விடலை வாலிபர்களோடும், முரட்டு இளைஞர்களோடும், அலைந்து திரிந்துதான் வலிமையை வளர்த்துக் கொண்டான். இங்கே ஒவ்வோரிடமும், ஒவ்வோர் புதரும், மேடு பள்ளமும் அவனுக்குக் கரதலப் பாடம் ஆயிற்றே! எத்தனை வம்புப் போர்கள், எத்தனை இளம்பிள்ளைச் சண்டைகள், எத்தனை அடிபிடிகள், அவனுடைய சிறுபருவத்தில் இந்த நாவல் மரங்களின் அடியில் நடைபெற்றிருக்கும்! அவனுடைய அஞ்சாமைக்கும் துணிவுக்கும் இந்தச் சுழ்நிலையில் வளர்ந்ததே ஒரு காரணமென்று நண்பர்கள் அடிக்கடிக் கூறுவதுண்டு. மனத்தில் அந்தப் பழைய நினைவுகள் எல்லாம் தோன்றிப் படர வேகமாக நடந்து கொண்டிருந்தான் இளங்குமரன்.
'இன்றைக்கு இந்த நள்ளிரவில் நான் தெரிந்து கொள்ளப் போகிற உண்மை என் வாழ்வில் எவ்வளவு பெரிய மலர்ச்சியை ஏற்படுத்தப் போகிறது! என்னைப் பெற்ற அன்னையை நினைவு தெரிந்த பின் முதன் முதலாக இன்று காணப் போகிறேன். அவளுடைய அருள் திகழும் தாய்மைத் திருக்கோலத்தை இந்த இருண்ட வனத்துக்குள் சம்பாபதி கோவிலின் மங்கிய விளக்கொளியில் காணப்போகிறேனே என்பதுதான் எனக்கு வருத்தமாயிருக்கிறது! இன்னும் ஒளிமிக்க இடத்திலே அவளைக் காண வேண்டும். தாயே! என்னை வளர்த்து ஆளாக்கி வாழ விட்டிருக்குமந்தப் புனிதமான முனிவர் இன்று உன்னை எனக்குக் காண்பிப்பதாக வாக்களித்திருக்கிறார். 'சித்திரை மாதம் சித்திரை முழுமதி நாளில் இந்திர விழாவன்று உன் அன்னையைக் காண்பிக்கிறேன்' என்று மூன்றாண்டுகளாக ஏமாற்றி என் ஆவலை வளர்த்து விட்டார் முனிவர். இன்று என் உள்ளம் உன்னை எதிர்பார்த்து நெகிழ்ந்திருக்கிறது. அன்னையே! உன்னுடைய பாதங்களைத் தொட்டு வணங்கும் பேறு இந்தக் காளைப் பருவத்திலிருந்தாவது எனக்குக் கிடைக்கவிருக்கிறதே! இன்று என் வாழ்வில் ஒரு பொன்னாள்' என்று பெருமை பொங்க நினைத்தவனாக விரைந்து கொண்டிருந்தான் இளங்குமரன். தாயும் தந்தையும் எவரென்று தெரியாமல் சக்கரவாளக் கோட்டத்துத் தவச் சாலையிலுள்ள முனிவரொருவரால் வளர்த்து ஆளாக்கப்பட்டவன் அவன். வயது வந்த பின் அவன் தன் பெற்றோர் பற்றி நினைவு வரும் போது எல்லாம் ஏதேதோ சொல்லி ஆவலை வளர்த்திருந்தார் அந்த முனிவர். சித்திரா பௌர்ணமியன்று காட்டுவதாகச் சொல்லி மூன்று முறை இந்திர விழாக்களில் அவனை ஏமாற்றி விட்டிருந்தார் அவர். எத்தனைக்கெத்தனை தைரியசாலியாகவும் அழகனாகவும் வளர்ந்திருந்தானோ, அத்தனைக்கத்தனை தன் பிறப்பைப் பற்றி அறிந்து கொள்ளத் தவிக்கும் தணியாத தாகம் அவனுள் வளர்ந்து கொண்டிருந்தது. அதில் மிகப் பெரிய மர்மங்களும் அதியற்புதச் செய்திகளும் இருக்க வேண்டும்போல் ஓர் அநுமானம் அவனுள் தானாகவே முறுகி வளரும்படி செய்திருந்தார் அந்த முனிவர்.
அன்று இரவு நடுயாமத்திற்கு மேல் சம்பாபதி கோவிலின் பின்புறமுள்ள நாவல் மரத்தின் கீழ் அவனைப் பெற்ற தாயையும் அவனையும் எவ்வாறேனும் சந்திக்க வைத்து விடுவதாக முனிவர் உறுதி கூறியிருந்தார். 'ஆகா! அதோ நாவல் மரத்தடி வந்துவிட்டது. மரத்தடியில் யாரோ போர்த்திக்கொண்டு அடக்கமாக அமர்ந்திருக்கிறார் போலவும் தெரிகிறது. பக்கத்தில் சிறிது விலகினாற்போல் நிற்பது யார்? வேறு யாராயிருக்கும்? முனிவர்தான்! என் அருமை அன்னையை அழைத்து வந்து அமர வைத்துக் கொண்டு என்னை எதிர்பார்த்து ஆர்வத்தோடு நிற்கிறார் போலும்! நான் தான் வீணாக நேரமாக்கி விட்டேன். இன்னும் சிறிதுபோது முன்னாலேயே வந்திருக்கலாமே!'
இவ்வாறு உணர்வுமயமான எண்ணங்களோடு மரத்தடியை நெருங்கிய இளங்குமரன், "சுவாமி! அன் அன்னையை அழைத்து வந்து விட்டீர்களா? இன்று நான் பெற்ற பேறே பேறு" என்று அன்பு பொங்கக் கூறியவாறே முனிவரின் மறுமொழியையும் எதிர்பார்க்காமல் அமர்ந்திருந்த அன்னையுருவை வணங்கும் நோக்குடன் நெடுஞ் சாண் கிடையாக மண்ணில் வீழ்ந்தான். 'அம்மா' என்று குழைந்தது அவன் குரல்.
அம்மாவின் பதில் இல்லை! ஆசி மொழி கூறும் அன்னையின் பாசம் நிறைந்த குரலும் ஒலிக்கவில்லை! மெல்லச் சந்தேகம் எழுந்தது இளங்குமரனின் மனத்தில். 'அன்னையைக் காணும் ஆர்வத்தில் இருளில் யாரென்று தெரியமலே வீழ்ந்து வணங்கிக் கொண்டிருக்கிறோமோ!' என மருண்டு விரைவாக எழுந்திருக்க நிமிர்ந்தான்.
இரண்டு வலிமை வாய்ந்த கைகள் அவனுடைய தோள் பட்டைகளை அமுக்கி மேலே எழ முடியாமல் செய்தன. வேறு இரு கைகள் கால் பக்கம் உதற முடியாமல் தன்னைக் கட்ட முயல்வதையும் அவன் உணர்ந்து கொண்டான்.
அன்னையைக் காணும் ஆர்வத்தில் ஏமாந்து தப்புக் கணக்குப் போட்டு விட்டோம் என்று தீர்மானமாக உணர்ந்து எச்சரிக்கை பெற்ற அவன் துள்ளி எழுந்து திமிர முயன்றான். நாவல் மரத்தில் ஆந்தை அலறியது. மரத்தைப் புகலடைந்திருந்த ஏதோ சில பறவைகள் இருளில் ஓசையெழுமாறு சிறகடித்துப் பறந்தன.
உயிர்க்குணங்களுள் ஏதேனும் ஒன்று மிகுந்து தோன்றும்போது மற்றவை அடங்கி நின்றுவிடும் என்று முனிவர் தனக்கு அடிக்கடிக் கூறும் தத்துவ வாக்கியத்தை அந்த பயங்கரமான சூழ்நிலையில் பகைவர் கரங்களின் கீழே அமுங்கிக் கொண்டே மீண்டும் நினைத்தான் இளங்குமரன். தாயைக் காணப் போகிறோம் என்ற அடக்க முடியாத அன்புணர்வின் மிகுதியால், முன் எச்சரிக்கை, தீரச் சிந்தித்தல் போன்ற பிற உணர்வுகளை இழந்து, தான் பகைமையின் வம்பில் வகையாகச் சிக்கிக்கொண்டதை அவன் உணர்ந்தான். மேலே எழ முடியாமல் தோள்பட்டைகளையும் கால்களையும் அழுத்தும் பேய்க் கரங்களின் கீழ்த் திணறிக் கொண்டே சில விநாடிகள் தயங்கினான் அவன். சிந்தனையைக் கூராக்கி எதையோ உறுதியாக முடிவு செய்தான். மனத்தில் எல்லையற்று நிறைந்து பெருகும் வலிமையை உடலுக்கும் பரவச்செய்வது போலிருந்ததே தவிர அவனது சிறிது நேரத் தயக்கமும் அச்சத்தின் விளைவாக இல்லை!
முதலில் வணங்குவதற்காகக் கீழே கவிழ்ந்திருந்த உள்ளங் கைகளில் குறுமணல் கலந்த ஈரமண்ணை மெல்லத் திரட்டி அள்ளிக் கொண்டான். 'பிறந்த மண் காப்பாற்றும்' என்பார்கள். சிறுவயதிலிருந்து தவழ்ந்தும், புழுதியாடியும் தான் வளர்ந்த சம்பாபதிவனத்து மண் இன்னும் சில கணங்களில் தனக்கு உதவி செய்து தன்னைக் காப்பாற்றப் போவதை எண்ணியபோது இளங்குமரனுக்குச் சிரிப்பு வந்தது. தன் வன்மையை எல்லாம் திரட்டிக்கொண்டு திமிறித் தலையை நிமிர்த்தித் தோளை அமுக்கிக் கொண்டிருந்தவனுடைய வயிற்றில் ஒரு முட்டு முட்டினான். அந்த முட்டுத் தாங்காமல் முட்டப்பட்டவன் நாவல் மரத்தடியில் இடறிவிழுந்தான். அதே சமயம் பின்புறம் காலடியில் கால்களைப் பிணைத்துக் கட்ட முயன்று கொண்டிருந்தவனையும் பலமாக உதைத்துத் தள்ளிவிட்டு, உடனே விரைவாகத் துள்ளி எழுந்து நின்று கொண்டான் இளங்குமரன். முன்னும் பின்னுமாகத் தள்ளப்பட்டு விழுந்த எதிரிகள் இருவரில் யார் முதலில் எழுந்து வந்து எந்தப் பக்கம் பாய்ந்து தன்னைத் தாக்குவார்களென்று அநுமானம் செய்து அதற்கேற்ற எச்சரிக்கையுணர்வோடு நின்றான். அடர்ந்த இறுண்ட அந்தச் சூழலில் கண்களின் காணும் ஆற்றலையும், செவிகளின் கேட்கும் ஆற்றலையும் கூர்மையாக்கிக் கொண்டு நின்றான். அவன் எதிர்பார்த்தபடியே நடந்தது. கால் பக்கம் உதைப்பட்டு விழுந்தவன் எழுந்து இளங்குமரனைத் தாக்கப் பாய்ந்து வந்தான். இருளில் கனல் துண்டங்களைப் போல் தன்னைக் குறி வைத்து முன் நகரும் அவன் விழிகளை கவனித்தான் இளங்குமரன். மடக்கிக் கொண்டிருந்த தன் கைகளை உயர்த்தி. "இந்தா இதைப் பெற்றுக்கொள்; சம்பாபதிவனத்து மண் வளமானது, பழமையும் பெருமையும் வாய்ந்தது" என்று கூறிச் சிரித்துக்கொண்டே, விரல்களைத் திறந்து எதிர்வரும் கனற் கண்களைக் குறிவைத்து வீசினான். கண்களில் மண் விழுந்து திணறியவன் இளங்குமரன் நிற்குமிடம் அறியாது இருளில் கைகளை முன்நீட்டித் தடவிகொண்டு மயங்கினான். அப்போது மற்றொரு எதிரி எழுந்து வரவே, இளங்குமரன் அவனை வரவேற்கச் சித்தமானான். அவன் கைகளிலும் நெஞ்சிலும் வலிமை பெருக்கெடுத்து ஊறியது. தாயையும் முனிவரையும் சந்திக்க முடியாமையினால் சிதறியிருந்த இளங்குமரனின் நம்பிக்கைகள் பகைவனை எதிர்க்கும் நோக்கில் மீண்டும் ஒன்றுபட்டன. நாவல் மரத்தடியிலிருந்து எழுந்து வந்தவனும் இளங்குமரனும் கைகலந்து போரிட்டனர். எதிரி தான் நினைத்தது போல எளிதாக மடக்கி வென்றுவிட முடிந்த ஆள் இல்லை என்பது சிறிது நேரத்துப் போரிலேயே இளங்குமரனுக்கு விளங்கியது. வகையான முரடனாக இருந்தான் எதிரி. இரண்டு காரணங்களுக்காகப் போரிட்டவாறே போக்குக்காட்டி எதிரியைச் சம்பாபதிகோவில் முன்புறமுள்ள மங்கிய தீபத்தின் அருகே இழுத்துக் கொண்டு போய்ச் சேர்க்க விரும்பினான் இளங்குமரன். முதற்காரணம்: 'யார் என்ன தொடர்பினால் தன்னை அங்கே அந்த இரவில் கொல்லுவதற்குத் திட்டமிட்டுச் செய்வதுபோலத் தாக்குகிறார்கள்' என்பதை அவன் நன்றாக இனங்கண்டு அறிந்து கொள்ள விரும்பினான். அப்படி அறிந்து கொள்ளாமல், அவர்கள் தன்னிடமிருந்தோ, தான் அவர்களிடம் இருந்தோ, தப்பிச் செல்லலாகதென்று உறுதி செய்து கொண்டிருந்தான் அவன். இரண்டாவது காரணம், முதலில் தன்னால் கண்களில் மண்தூவப் பெற்ற எதிரியும் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்வை தெரிந்து மற்றவனோடு வந்து சேர்ந்து கொண்டு தன்னைத் தாக்குவதற்குள் ஒருவனை மட்டும் பிரித்துச் சிறிது தொலைவு விலக்கிக் கொண்டு போகலாமே என்பதும் அவன் திட்டமாயிருந்தது.
ஆனால் இளங்குமரன் எவ்வளவுக்குத் தன்னோடு போரிட்டவனைச் சம்பாபதி கோவில் முன்புறமுள்ள தீப ஒளியில் கொண்டு போய் நிறுத்த முயன்றானோ அவ்வளவுக்கு முன்வரத் தயங்கி இருட்டிலேயே பின்னுக்கு இழுத்து அவனைத் தாக்கினான் அவனுடைய எதிரி. இதனால் இளங்குமரனின் சந்தேகமும் எதிரியை இனங்கண்டு கொள்ள விரும்பும் ஆவலும் விநாடிக்கு விநாடி வேகமாகப் பெருகியது. தீப ஒளி இருக்கும் பக்கமாக இளங்குமரன் அவனை இழுப்பதும் இருள் மண்டியிருக்கும் பக்கமாகவே அவன் இளங்குமரனை பதிலுக்கு இழுப்பதுமாக நேரம் கழிந்து கொண்டிருந்தது.
"தைரியசாலிகள் வெளிச்சத்துக்கு வந்து தங்கள் முகத்தைக் காட்ட இவ்வளவு கூசுவது வழக்கமில்லையே!" என்று ஏளனமாக நகைத்துக்கொண்டே இளங்குமரன் கூறியதன் நோக்கம் எதிராளி கூறும் பதிலின் மூலமாக அவன் குரலையாவது கேட்டு நிதானம் செய்து கொள்ளலாம் என்பதுதான். ஆனால் இந்த முயற்சியும் பயனளிக்கவில்லை. எதிரி வாயால் பேசவில்லை. தன் ஆத்திரத்தை யெல்லாம் சேர்த்துக் கைகளால் மட்டுமே பேசினான். மீண்டும் இளங்குமரன் அவன் தன்மானத்தைத் தூண்டிவிடும் விநயமான குரலில் "இவ்வளவு தீவிரமாக எதிர்த்துப் போரிடும் என்னுடைய எதிரி கேவலம் ஓர் ஊமையாக இருக்க முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை" என்று வாயைக் கிளறமுயன்றான். அதற்கும் எதிரியிடமிருந்து பதில் இல்லை. எதிரி தன்னைக் காட்டிலும் முதியவன் என்பதும் வன்மை முதிர்ந்தவன் என்பதும் அவனுடைய வைரம் பாய்ந்த இரும்புக் கரங்களை எதிர்த்துத் தாக்கும் போதெல்லாம் இளங்குமரனுக்கு விளங்கியது. ஏற்கெனவே மாலையில் கடற்கரையில் மற்போரிட்டுக் களைந்திருந்த அவன் உடல் இப்போது சோர்ந்து தளர்ந்து கொண்டே வந்தது. இவ்வாறு அவன் கை தளர்ந்து கொண்டு வந்த நேரத்தில் கண்ணில் விழுந்த மண்ணைத் துடைத்து விழிகளைக் கசக்கிக் கொண்டு தெளிவு பெற்றவனாக இரண்டாவது எதிரியும் வந்து சேர்ந்து விட்டான். இளங்குமரனின் மனவுறுதி மெல்லத்துவண்டது. 'இவர்களென்ன மனிதர்களா, அரக்கர்களா? எனக்குத் தளர்ச்சி பெருகப் பெருக இவர்கள் சிறிதும் தளராமல் தாக்குகிறார்களே!’ என்று மனத்துக்குள் வியந்து திகைத்தான் இளங்குமரன். அவன் நெஞ்சமும் உடலும் பொறுமை இழந்தன. எதிர்த்துத் தாக்குவதை நிறுத்திவிட்டு உரத்த குரலில் அவர்களிடம் கேட்கலானான்.
"தயவு செய்து நிறுத்துங்கள்! நீங்கள் யார்? எதற்காக இப்படி என்னை வழிமறித்துத் தாக்குகிறீர்கள்? நான் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தேன்? முனிவர் அருட்செல்வர் இன்று இந்நேரத்தில் இங்கு என் அன்னையை அழைத்து வந்து காட்டுவதாகக் கூறியிருந்தார். அன்னையையும் முனிவரையும் எதிர்பார்த்துத்தான் இங்கே வந்தேன். அன்னை அமர்ந்திருப்பதாக எண்ணியே வணங்கினேன்"
வேகமாகக் கூறிக் கொண்டே வந்த இளங்குமரனின் நாவிலிருந்து மேற்கொண்டு சொற்கள் பிறக்கவில்லை. அப்படியே திகைத்து விழிகள் விரிந்தகல இருபுறமும் மாறி மாறிப் பார்த்து மருண்டு நின்றான்.
ஆ! இதென்ன பயங்கரக் காட்சி! இவர்கள் கைகளில் படமெடுத்து நெளியும் இந்த நாகப்பாம்புகளை எப்படிப் பிடித்தார்கள்? இளங்குமரனுக்கு இயக்கர் நடமாட்டம், பேய்ப்பூத நிகழ்ச்சி இவற்றில் ஒருபோதும் நம்பிக்கை இல்லை. சம்பாபதி வனத்திலோ, சக்கரவாளக் கோட்டத்துச் சுற்றுப் புறங்களிலோ பேய் பூதங்கள் பழகுவதாகச் சிறு வயதில் அவன் இளம் நண்பர்கள் கதை அளந்தால் அதைப் பொறுத்துக் கொண்டு அவனால் சும்மா இருக்க முடியாது.
"பேய்களாவது பூதங்களாவது? நள்ளிரவுக்கு மேலானாலும் தாங்களும் உறங்காமல் பிறரையும் உறங்கவிடாமல் வன்னி மரத்தடியில் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் காபாலிகர்களும், புறநகர்ப் பகுதிகளில் காவலுக்காகத் திரியும் ஊர்க்காப்பாளர்களும்தான் பேய்கள் போல் இரவில் நடமாடுகிறார்கள். வேறு எந்தப் பேயும் பூதமும் இங்கே இருப்பதாகத் தெரியவில்லை" என்று அத்தகைய நேரங்களில் நண்பர்களை எள்ளி நகையாடியிருக்கிறான் அவன்.
அவனே இப்போது மருண்டான்; தயங்கினான். ஒன்றும் புரியாமல் மயங்கினான். ஆனால் அந்த மயக்கமும் தயக்கமும் தீர்ந்து உற்றுப் பார்த்த போதுதான் உண்மை புரிந்தது. இருபுறமும் தன் தோளில் சொருகிவிடுகிறாற் போல் அவர்கள் நெருக்கிப் பிடித்துக் கொண்டிருப்பவை நாகப் பாம்புகள் அல்ல; பாம்பு படமெடுப்பது போல் கைப்பிடிக்கு மேற்பகுதி அமைந்ததும் அதனுடல் நெளிவதுபோல் கீழ்ப்பகுதி அமைந்ததுமான கூரிய வாள்கள் என்று தெரிந்தது. அந்தக் காலத்தில் சோழ நாட்டில் இத்தகைய அமைப்புள்ள சிறுபடைக்கலங்களைப் பயன்படுத்துகிறவர்கள் காவிரிப் பூம்பட்டினத்திலும் சுற்றுப் புறத்துக் காடுகளிலும் வாழ்ந்த எயினர் எனப்படும் ஒருவகை முரட்டு நாக மரபினர் என்பதும் அவனுக்குத் தெரியும். எயினர் பிரிவைச் சேர்ந்த நாகர்கள் அரக்கரைப்போல் வலிமை உடையவர்களென்றும் உயிர்க்கொலைக்கு அஞ்சாதவர்களென்றும் அவன் கேள்விப்பட்டிருந்தான். சூறையாடுதலும், கொள்ளையடித்தலும் வழிப்பறி செய்தலும் ஆறலை கள்வர்கள்* (* சிறு வழிகளிலும் பெரு வழிகளிலும் போவோரை அலைத்துத் துன்புறுத்தும் கள்வருக்கு அக்காலப் பெயர்.) செய்யும் பிற கொடுமைகளும் எயினர் கூட்டத்தினருக்குப் பொழுது போக்கு விளையாட்டுக்கள் போன்றவை என்றும் அவன் அறிந்திருந்தான். ஒளிப்பாம்புகள் நெளிந்து கொத்துவதற்குப் படமெடுத்து நிற்பது போல் தன்னை நோக்கி ஓங்கப்பட்டிருக்கும் அந்த வாள்களின் நுனிகளில் அவனுடைய உயிரும் உணர்வுகளும் அந்தக் கணத்தில் தேங்கி நின்றன. இத்தகைய குத்து வாள்களைக் 'குறும்பிடி' அல்லது 'வஞ்சம்' என்று குறிப்பிடுவார்கள். 'வஞ்சம் என்பது இப்போது என் நிலையை வைத்துப் பார்க்கும்போது இவற்றுக்கு எவ்வளவு பொருத்தமான பெயராய்ப்படுகிறது. வஞ்சங்களின் நுனியில் அல்லவா என் உயிர் இப்போது இருக்கிறது!’ என்று ஏலாமையோடு நினைக்கும்போது இளங்குமரனுக்குப் பெருமூச்சு வந்தது. காவிரி அரவணைத்தோடும் அப்பெரிய நகரத்தில் எத்தனையோ ஆண்டுகள் வீரனாகவும், அறிஞனாகவும், அழகனாகவும், வாழ்ந்து வளரத் தன் மனத்தில் கனவுகளாகவும், கற்பனைகளாகவும், இடைவிடாத் தவமாகவும், பதிந்திருந்த ஆசைகள் யாவும் அந்த வாள்களின் நுனியில் அழிந்து அவநம்பிக்கைகள் தோன்றுவதை அவன் உணர்ந்தான், ஏங்கினான், உருகினான். என்ன செய்வதெனத் தோன்றாது தவித்துக் கொண்டே நின்றான். ஓர் அணுவளவு விலகி அசைந்தாலும் அருட்செல்வ முனிவர் பரிந்து பாதுகாத்து வளர்த்துவிட்ட தன் உடலின் குருதி அந்த வாள்களின் நுனியில் நனையும் என்பதில் ஐயமே இல்லை என்பது அவனுக்குப் புரிந்திருந்தது. அவன் மனத்தில் நினைவுகள் வேகமாக ஓடலாயின.
'அன்னையே! கண்களால் இதுவரை காணாத உன்னை நினைத்து நினைத்து அந்த நினைப்புக்களாலேயே நெஞ்சில் நீ இப்படித்தான் இருக்க வேண்டுமென்று உள்ளத் திரையிலே எண்ணக் கோலமாய் இழைத்து வைத்திருக்கிறேன். எண்ணக் கோலத்திலே கண்டதையன்றி உன்னை உனது உண்மைக் கோலத்தில் காணும் பாக்கியமின்றி இன்று இந்த வனத்திலே நான் அனாதையாய்க் கொலையுண்டு விழப் போகிறேனா? உன்னைக் காண முயலும் போதெல்லாம் எனக்கு இப்படி ஏதேனும் தடைகள் நேர்ந்து கொண்டேயிருக்கின்றனவே! அப்படி நேர்வதற்குக் காரணமாக உன்னைச் சூழ்ந்திருக்கும் மர்மங்கள் யாவை? அல்லது என்னைச் சூழ்ந்திருக்கும் மர்மங்கள் யாவை?'
'சுவாமி! அருட்செல்வ முனிவரே, தாயாகவும் தந்தையாகவும் இருந்து என்னை வளர்த்து ஆளாக்கி விட்ட தங்களுக்கு நன்றி செலுத்துமுகமாக என் வாழ்நாள் நெடுகிலும் என்னென்னவோ பணிவிடைகள் எல்லாம் செய்ய வேண்டிய உடல் இங்கே கொலையுண்டு வீழ்த்தப்படும் போலிருக்கிறதே.'
அப்போது பூம்புகாரின் அன்பிற்கினிய நண்பர்கள் வெற்றிப் பெருமையோடு முல்லைமாலை சூடிநின்ற போது தன்னுடைய சிரிப்பினால் அவனுடைய நெஞ்சில் மற்றொர் முல்லை மாலையைச் சூடிய அந்தப் பெண், தோற்று வீழ்ந்த யவன மல்லன் - என்று இவ்வாறு தொடர்பும் காரணமுமில்லாமல் ஒவ்வொருவராக இளங்குமரனின் நினைவில் தோன்றினர். அவன் ஏறக்குறைய எல்லா நம்பிக்கைகளையும் இழந்து விட்ட அந்தச் சமயத்தில் சம்பாபதி கோவிலின் கிழக்குப் புறத்திலிருந்து குதிரைகள் வரும் குளம்பொலி கேட்டது. புறநகர்ப் பகுதிகளிலுள்ள இடங்களைக் காக்கும் யாமக் கவலர்கள் சில சமயங்களில் அப்படி வருவதுண்டு. இளங்குமரன் மனத்தில் நம்பிக்கை சற்றே அரும்பியது. ஆனால், எதிரிகளின் பிடி அவனை நெருக்கிற்று. குளம்பொலி அருகில் நெருங்கி வந்து கொண்டேயிருந்தது. இராக்காவலர்கள் எழுப்பும் எச்சரிக்கைக் குரலும் இப்போது குளம்பொலியாடு சேர்ந்து ஒலித்தது. அதில் ஒரு குரல் தனக்குப் பழக்கமான சக்கரவாளக் கோட்டத்துக் காவலர் தலைவன் கதக்கண்ணனுடையதாயிருப்பது கேட்டு இளங்குமரனுக்கு ஆறுதலாயிருந்தது.
வருகிற காவலர்களுடைய தீப்பந்தத்தின் ஒளியும் குதிரைகளும் மிக அருகில் நெருங்கியபோது, "இளங்குமரனே! தெரிந்துகொள். நீயோ உன்னை வளர்த்து ஆளாக்கிய அந்த அப்பாவி முனிவரோ உன் தாயைப் பற்றி அறிந்து கொள்ளவோ, அவளை நேரில் காணவோ முயன்றால் மறுநாள் உன்னையும், அந்த முனிவரையும் இந்த இடத்தில் பிணங்களாகக் காண்பார்கள் பூம்புகார் நகர மக்கள். இது நினைவிருக்கட்டும். மறந்துவிடாதே. மறந்தாயோ மறுபடியும் இதேபோல நினைவூட்ட வருவோம்" என்று புலை நாற்றம் வீசும் வாயொன்று அவன் காதருகே கடுமையாகக் கூறியது. கற்பாறை உடையும் ஒலிபோல் விகாரமான முரட்டுத் தன்மை வாய்ந்து தோன்றியது அந்தக் குரல். இயல்பாகவே பேசாமல் வேண்டுமென்றே மாற்றிக் கொண்டு தமிழ் ஒலி முறைகள் அக்குரலில் நாகர்கள் பேசுவது போல் வன்மை மிகுந்து தொனித்தன.
மறுகணம் வேண்டா வெறுப்பாக அவனை விட்டுச் செல்வது போல் கிழே அலட்ச்சியமாக தள்ளிவிட்டுப் புதரில் பாய்ந்து மறைந்தனர் அந்த முரட்டு மனிதர்கள். தோள்களில் அவர்கள் பிடித்திருந்த இடம் இரத்தம் கட்டி உறைந்து போனாற்போல் வலித்தது. திகைப்படங்காமல் நின்றான் அவன்.
"என்னப்பா, இளங்குமரனா? இந்த அர்த்தராத்திரியில் நகரத்தின் இந்திர விழாக் கோலாகலங்களையெல்லாம் விட்டு விட்டு இங்கே யாரோடு இரகசியம் பேசிக் கொண்டு நிற்கிறாய்?" என்று கையில் தீப்பந்தத்துடனும் இளங்குமரனை நோக்கி மலர்ந்த முகத்துடனும் குதிரையிலிருந்து கீழே இறங்கிய கதக்கண்ணனையும் அவன் தோழனான மற்றொரு காவலனையும் பார்த்துக் கெட்ட கனவு கண்டு விழிப்பவன் போல் பரக்கப் பரக்க விழித்தான் இளங்குமரன்.
அவன் திகைப்பு நீங்கித் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அவர்களோடு கலகலப்பாகப் பேசத் தொடங்குவதற்கே சிறிது நேரமாயிற்று. அருட்செல்வ முனிவர் தாயை அன்றிரவு தனக்குக் காண்பிப்பதாக வாக்களித்திருந்தது, எதிரிகள் போகுமுன் இருதியாகத் தன் செவியில் பயங்கரமாக எச்சரிக்கை செய்துவிட்டு போனது ஆகியவற்றைக் கதக்கண்ணனிடம் கூறாமல் 'யாரோ இரண்டு முரட்டு நாகர்கள் தன்னை வழிமறித்துக் கொல்ல முயன்றார்கள்' என்று மட்டும் பொதுவாகச் சொன்னான் இளங்குமரன்.
"நண்பனே! கவலைப்படாதே. உன்னுடைய எதிரிகள் எனக்கும் எதிரிகளே. அவர்கள் எங்குச் சென்றாலும் தேடிப் பிடிக்கிறேன். இந்தச் சம்பாபதி வனத்திலிருந்து அவ்வளவு விரைவில் அவர்கள் தப்பிவிட முடியாது. நீ அதிகமாகக் களைத்துக் காணப்படுகிறாய். நேரே நம் இல்லத்திற்குச் சென்று படுத்து நன்றாக உறங்கு. இந்திர விழாவுக்காக நகரத்திற்குச் சென்றிருந்த என் தந்தையும் தங்கை முல்லையும் அநேகமாக இதற்குள் திரும்பி வந்திருப்பார்கள். அவர்கள் திரும்பி வந்து உறங்கிப் போயிருந்தால் எழுப்புவதற்குக் கூச்சப்பட்டுக் கொண்டு பேசாமல் தயங்கி நிற்காதே" இவ்வாறு கூறிக் கொண்டே அன்போடு அருகில் நெருங்கி முதுகில் தட்டிக் கொடுத்த நண்பனுக்கு எவ்வாறு நன்றி சொல்வதென்று இளங்குமரனுக்கு அப்போது தோன்றவில்லை. தன்னுடைய எதிரிகளை அவனுடைய எதிரிகளாக பாவித்துக் கொண்டு கதக்கண்ணன் வஞ்சினம் கூறியபோது, 'நண்பன் என்றால் இப்படியன்றோ அமையவேண்டும்' என்று எண்ணி உள்ளூரப் பெருமை கொண்டான் இளங்குமரன்.
கதக்கண்ணனும் அவனுடன் வந்த இன்னோர் ஊர்க்காவலனும் தப்பியோடியவர்களைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டபோது இளங்குமரன் ஓய்வு கொள்வதற்காக வந்த வழியே திரும்பினான். பக்கத்துப் புதரிலிருந்து ஈனக்குரலில் யாரோ மெல்ல வலியோடு முனகுவது போல ஓலி வரவே விரைவாகச் சென்று சம்பாபதி கோவில் தீபத்தை எடுத்துவந்து அந்த இடத்துக்குப் போய்ப் புதரை விலக்கிப் பார்த்தான் இளங்குமரன். யாரோ கையும் காலும் கட்டுண்டு புதரில் விழுந்திருந்த வரை முகம் நிமிர்த்திப் பார்த்தபோது இளங்குமரனின் வாயிலிருந்து 'ஆ' வென்ற அலறல் கிளம்பியது. தன் ஊனுடம்பு முழுவது எவருக்கு இடைவிடாமல் பணிசெய்யக் கடன்பட்டிருக்கிறதென இளங்குமரன் நினைத்து வந்தானோ, அந்த அருட்செல்வ முனிவரைத் தாக்கிக் கையையும் காலையும் கட்டிப் போட்டிருந்தார்கள் பாவிகள். இளங்குமரனுக்கு இரத்தம் கொதித்தது. "கதக்கண்ணா! அந்தப் பாவிகளைத் தேடிக் கண்டு பிடிப்பதாகக் தான் நீ வஞ்சினம் கூறினாய். எனக்கோ அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து என் மதிப்பிற்குரியவரை இப்படிச் செய்ததற்காகச் செம்மையாய் அவர்களை அறைந்துவிட்டு அதன்பின் அவர்களுடைய வஞ்சகக் கொடுவாளுக்கு இரையாகி இறந்தாலும் கவலையில்லை என்று தோன்றுகிறது" என்று ஆவேசத்தோடு தன்க்குத் தானே சொல்லிக் கொண்டான் இளங்குமரன்.
சம்பாபதி வனத்திலிருந்து வெளியேறி அப்பாலுள்ள கோட்டங்களையும் தவச்சாலைகளையும் பலபல சமயத்தார் வழிபாட்டுக்கு மலர் கொய்யும் மலர் வனங்களையும் கடந்து வந்துவிட்டால் புறவீதி நிலா வொளியில் குளித்துக் கொண்டு நீண்டு தோன்றியது.
புறவீதியின் தொடக்கத்தில் மலர்வனங்களின எல்லை முடிவடைந்ததனால் மெல்லிய காற்றோடு அவ்வனங்களில் வைகறைக்காக அரும்பவிழ்த்துக் கொண்டிருந்த பல்வேறு பூக்களின் இதமான மணம் கண்ணுக்குப் புலனாகாத சுகந்த வெள்ளமாய் அலை பரப்பிக் கொண்டிருந்தது. எங்கும் பின்னிரவு தொடங்கி விட்டதற்கு அடையாளமான மென்குளிர்ச் சூழல், எங்கும் மலர் மணக்கொள்ளை, ஆகா! அந்த நேரத்தில் அந்தச் சூழ்நிலையில் புறவீதிதான் எத்தனை அழகாயிருந்தது!.
புறநகரின் இராக் காவலர்களும் சோழர் கோநகரான பூம்புகாரைச் சுற்றி இயற்கை அரண்களுள் ஒன்றாக அமைக்கப்பட்டிருந்த காவற் கோட்டை காக்கும் பொறுப்புள்ள வீரர்களும் அதிகமாக வசிக்கும் குடியிருப்பு வீதி அது. சில பெரிய திண்ணைகளில் வேல்களும், ஈட்டிகளும், சூலாயுதங்களும் சாத்தி வைக்கப்பட்டிருந்தன. சித்திர வேலைப்பாடமைந்த பெரிய மரக்கதவுகளில் சோழப்பேரரசின் புலிச்சின்னம் செதுக்கப்பெற்றிருந்தது. அந்த அமைதியான நேரத்தில் திண்ணை முரசங்களில் அடிக்கொருதரம் காற்று மோத்தியதனால் எழுந்த ஓசை வீதியே உறுமுவது போல் பிரமை உண்டாக்கியது. சிறு சிறு வெண்கல மணிகள் பொருந்திய கதவுகளில் காற்று மோதியது போல் வீதியே கலீரென்று சிரிப்பது போல் ஒரழகு புலப்பட்டுத் தோன்றி ஒடுங்கிக் கொண்டிருந்த்து.
அந்த நிலையில், சம்பாபதி வனத்துப் புதரில் தாக்கப்பட்டு மயங்கிக் கிடந்த முனிவரின் உடலைச் சுமந்தவாறு புறவீதியில் தனியாக் நடந்து வந்து கொண்டிருந்தான் இளங்குமரன். மாலையில் கடற்கரையில் கிடைத்த வெற்றி அனுபவமும் அதன்பின் நினைத்தாலே கதைபோல் தோன்றக்கூடிய சம்பாபதிவனத்து பயங்கர அனுபவங்களும், இப்போது மலர்மணமும் சீதமாருதமும் தவழூம் புறவீதியில் முனிவரின் மெலிந்த உடலைத் தாங்கி நடக்கும் இந்த அனுபவமும், எல்லாம் ஏதோ திட்டமிட்டுத் தொடர்பாக வரும் அபூர்வக் கனவுகள் போல் தோன்றின அவனுக்கு.
புறவீதியின் நடுப்பகுதியில் முரசமும் ஆயுதங்களும் மற்ற வீடுகளில் காணப்பட்டதைவிடச் சற்று மிகுதியாகவே வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய வீட்டில் படியேறி "முல்லை! முல்லை! கதவைத் திற" என்று இரைந்து கூப்பிட்டவாறே கதவைத் தட்டினான் இளங்குமரன். நிசப்தமான வீதியில் அவன் குரலும் கதவைத் தட்டியதனால் நாவசைத்து ஒலித்த மணிகளின் ஒலியும் தனியோசைகளாய் விட்டொலித்தன. சிறிதுநேரம் இவ்வாறு கதவைத் தட்டியும், குரல் கொடுத்தும் உள்ளே இருப்பவர்களைத் தூக்கத்திலிருந்து எழுப்ப முயன்ற அவன் முயற்சி வெற்றி பெற்றது.
உள்ளிலிருந்து யாரோ ஒரு பெண் அளவாய்ப் பாதம் பெயர்த்து நடைபயின்று வருவதை அறிவிக்கும் சிலம்பொலி மெல்லக் கேட்டது. திறவுகோல் நுழைக்கும் துளை வழியே உள்ளிருந்து கதவருகே நெருங்கி வரும் தீப ஒளியும் தெரிந்தது. இளங்குமரன் கண்ணை அருகிற் கொண்டு போய்த் திறவுகோல் நுழைவின் வழியே பார்த்தான். பேதமைப்பருவத்துப் பெண்ணான முல்லை கையில் தீபத்துடன் சுரிகுழல் அசைவுற துயிலெழுமயிலெனப் பரிபுர ஒலி எழச் சித்திரம் நடந்து வருவதுபோல் வந்து கொண்டிருந்தாள். தூக்கம் கலைந்து அழகு செருகினாற்போல் அப்போது அற்புதமாய்க் காட்சியளித்தன முல்லையின் கண்களும், முகமும். துயில் நீங்கிய சோர்வு ஒடுங்கிய நீண்ட விழிகள்தாம் எத்தனை அழகு என்று வியந்தான் இளங்குமரன். விளக்கு ஒளியும், சிலம்பொலியும் நெருங்கி வந்தன. கதவின் தாழ் ஓசையோடு திறக்கப்பட்டது.
தன் கையிலிருந்த பிடிவிளக்கைத் தூக்கி, வந்திருப்பவரின் முகத்தை அதன் ஒளியில் பார்த்தாள் முல்லை. "நீங்களா?" என்ற இனிய வினாவுக்குப் பின் முல்லையின் இதழ்களில் முல்லை மலர்ந்தது.
"யாரையோ தூக்கிக்கொண்டு வந்திருக்கிறீர்களே! யார் அது?"
"ஏதேது? வாயிலிலேயே நிறுத்தி வைத்துக்கொண்டு நீ கேட்கிற கேள்விகளைப் பார்த்தால் உள்ளே வரவிடாமல் இங்கேயே பேசி விடைகொடுத்து அனுப்பிவிடுவாய் போலிருக்கிறதே?"
"ஐயையோ, அப்படியெல்லாம் ஒன்றும் இலலை. உள்ளே வாருங்கள். இந்திரவிழா பார்த்துவிட்டு நகருக்குள்ளிலிருந்து நானும் தந்தையும்கூடச் சிறிது நாழிகைக்கு முன் தான் இங்கே வீட்டுக்குத் திரும்பி வந்தோம்" என்று கூறியபோது முல்லையின் இதழ்களில் மீண்டும் முல்லை மலர்ந்தது. இளங்குமரன் உள்ளே நுழைந்து அங்கிருந்த கட்டில் ஒன்றில் அருட்செல்வ முனிவரின் உடலைக் கிடத்தினான். அவரை அங்கே கிடத்தியவுடனே இப்போது நன்றாகத் தெரியும் இளங்குமரனின் தோளிலும் மார்பிலும் சிறு சிறு காயங்கள் தென்படுவதையும் அவன் சோர்ந்திருப்பதையும் பார்த்து ஒன்றும் புரியாமல் மருண்டு நின்றாள் முல்லை.
"முல்லை! சம்பாபதி வனத்தில் காவலுக்காகச் சுற்றிக்கொண்டுருந்த உன் தமையனைச் சந்தித்தேன். அவன் தான் என்னை இங்கே போகச் சொல்லி அனுப்பினான். அவனை அந்தப் பக்கம் அனுப்பிவிட்டுத் திரும்பினால், இன்னொரு புதரில் இவரை யாரோ அடித்துப் போட்டிருப்பது தெரிந்தது. இவரையும் எடுத்துக் கொண்டு நேராக இங்கு வந்து சேர்ந்தேன்; இனிமேல் கவலையில்லை. நாளை விடிகிறவரை இரண்டு பேரும் முல்லைக்கு அடைக்கலம்தான்."
இதைக் கேட்டு முல்லை சிரித்தாள். "உங்கள் உடம்பைப் பார்த்தாலும், நீங்கள் கூட யாருடனோ பலமாகச் சண்டை போட்டுவிட்டு வந்திருப்பீர்கள் போலிருக்கிறதே?"
"ஒரு சண்டையென்ன? பொழுதுபோனால், பொழுது விடிந்தால் சண்டைகளாகத்தான் இருக்கிறது என் பாடு. அதைப் பற்றியெல்லாம் அப்புறம் விரிவாகப் பேசிக்கொள்ளலாம். முதலில் முனிவருடைய மயக்கத்தைப் போக்கி அவருக்குத் தெளிவுவரச் செய்யவேண்டும், அதற்கு உன்னுடைய உதவிகள் தேவை! உன் தந்தையாரை எழுப்பாதே. அவர் நன்றாக உறங்கட்டும். நீ மட்டும் உன்னால் முடிந்தவற்றைச் செய்தால் போதும்.."
"முனிவருக்கு மட்டுந்தானா? நீங்கள் கூடத்தான் ஊமைக் காயங்களாக மார்பிலும் தோளிலும் நிறைய வாங்கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள். அவைகளுக்கும் மருந்து போட்டுத்தானே ஆகவேண்டும்?"
"மார்பிலும் தோளிலும் காயம் படுவது பெருமைதான் முல்லை! அவற்றை விழுப்புண்கள் என்று புகழின் முத்திரைகளாகக் கணக்கிடுகிறார்கள் இலக்கிய ஆசிரியர்கள்!"
"கணக்கிடுவார்கள் கணக்கிடுவார்கள்! ஏன் கணக்கிட மாட்டார்கள்? புண்ணைப் பெறுகிறவன் பெற்றுக் கொண்டு வந்துவிட்டால் அப்புறம் சோம்பல் இல்லாமல் புகழ்கிறவர்களுக்கு என்ன வலிக்கிறதாம்?" என்று சிரித்தவாறே கூறிவிட்டுப் பம்பரமாகச் சுழன்று காரியங்களை கவனிக்கத் தொடங்கினாள் முல்லை. சிலம்பும் வளைகளும் ஒலித்த விரைவிலிருந்து அவள் எவ்வளவு வேகமாக மருந்தரைக்கிறாள், எவ்வளவு வேகமாகச் சுடுநீர் வைக்கிறாள் என்பதை நினைத்து வியந்தவாறே முனிவரின் கட்டிலருகே இருந்தான் இளங்குமரன். நடுநடுவே முனிவர் முனகினார். கனவில் உளறுவது போல் சொற்கள் அரைகுரையாக வெளிவந்தன. அந்தச் சொற்களை திரட்டி, "பாவிகளே! என்னைக் கொல்லாதீர்கள். உங்கள் தீமைகளுக்கு உங்களை என்றாவது படைத்தவன் தண்டிக்காமல் விட மாட்டான்! பாவிகளே" என்று இளங்குமரன் ஒருவிதமாகக் கூட்டி உணர முயன்றான். முல்லையின் குறுகுறுப்பான இயல்புக்குமுன் எவ்வளவு கடுமையான சுபாவமுள்ளவர்களுக்கும் அவளிடம் சிரித்து விளையாடிப் பேசவேண்டுமென்று தோன்றுமே ஒழிய கடுமையாகவோ துயரமாகவோ இருந்தாலும் அவற்றுக்குரிய பேச்சு எழாது. அவளிடமிருந்த அற்புதக் கவர்ச்சி அது. அதனால்தானோ என்னவோ இளங்குமரனும் சிரிப்பும் கலகலப்புமாக அவளிடம் பேசினானே தவிர உண்மையில் கதக்கண்ணனுடைய வீட்டுக்கு நுழையும்போதும் சரி, நுழைந்த பின்னும் சரி, அவன் மனம் மிகவும் குழம்பிப்போயிருந்தது.
முல்லையும் இளங்குமரனும் செய்த உபசாரங்களை ஏற்றுக் கொண்டு முனிவர் தெளிவு பெற்றுக் கண்விழித்த போது, இரவு மூன்றாம் யாமத்துக்கு ஓடிக்கொண்டிருந்தது. "முல்லை முதலில் நீ போய் உறங்கு. மற்றவற்றைக் காலையில் பார்த்துக் கொள்ளலாம். உனக்கு நிறையத் தொல்லை கொடுத்துவிட்டேன்" என்று இளங்குமரன் அவளை அனுப்ப முயன்றும் அவள் விடுகிற வழியாயில்லை.
"உங்கள் காயங்களை மறந்துவிட்டீர்களே? ஆறினால்தானே விழுப்புண் என்று பெருமை கொண்டாடலாம். பச்சைக் காயமாகவே இருந்தால் அந்தப் பெருமையும் கொண்டாட முடியாதே!" என்று கூறி நகைத்தாள் முல்லை. அதன் பின் அவன் காயங்களுக்கு மருந்து கொடுத்துப் போட்டுக் கொள்வதையும் இருந்து பார்த்து விட்டுத்தான் அவள் படுக்கச் சென்றாள். படுத்தவுடன் அயர்ந்து நன்றாக உறங்கிவிட்டாள். இரண்டு மூன்று நாழிகைத் தூக்கத்துக்குப்பின். அவளுக்கு அரைகுறையாக ஒரு விழிப்பு வந்தபோது மிக அருகில் மெல்லிய குரலில் யாரோ விசும்பி அழுகிற ஒலி கேட்டுத் திகைத்தாள். திகைப்பில் நன்றாக விழிப்பு வந்தது அவளுக்கு. சிலம்பும் வளைகளும் ஒலிக்காமல் கவனமாக எழுந்து பார்த்தாள். இளங்குமரனும், அருட்செல்வ முனிவரும் படுத்திருந்த பகுதியிலிருந்து அந்த ஒலி வருவதாக அவளுக்குத் தோன்றியது. தீபச்சுடரைப் பெரிதாக்கி எடுத்துக் கொண்டு போய்ப் பார்க்கலாமா என்று அவள் உள்ளத்தில் ஆவல் எழுந்தது. அப்படிப் பார்ப்பது அநாகரிகமாகவோ, அசந்தர்ப்பமாகவோ முடிந்துவிட்டால் வீட்டில் வந்து தங்கியுள்ள விருந்தினர்கள் மனம் புண்பட நேருமோ என்று அந்த எண்ணத்தைக் கைவிட்டாள் முல்லை.
அவள் மேலும் உற்றுக் கேட்டதில் அழுகுரல் முனிவருடையதாக இருந்தது.
"இளங்குமரா! அதைச் சொல்லிவிட்டால் நான் உயிரோடு இருக்க முடியாது. உயிரோடு இருக்கவேண்டுமானால் அதைச் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட இரகசியத்தைக் கேட்டுக் கேட்டு என் நிம்மதியும் மனத்தூய்மையும் கெட்டு வேதனைப்படச் செய்வதைவிட உன் கைகளாலேயே என்னைக் கொன்று விடு. வேறு வழியில்லை!"
"சுவாமீ! அப்படிக் கூறாதீர்கள். நான் தவறாக ஏதேனும் கேட்டிருந்தால் என்னை மன்னியுங்கள்."
"மன்னிப்பதிருக்கட்டும்! நீ நெடுங்காலம் உயிரோடு வாழவேண்டும் இளங்குமரா! அது என் இலட்சியம். உனக்கு அந்த உண்மையைச் சிறிது கூறிவிட்டாலும், நாலு புறமும் உன்னையும் என்னையும் பிணமாக்கி விடத்துடிக்கும் கைகள் கிளரும் என்பதில் சந்தேகமே இல்லை" இவ்வாறு சொல்லிவிட்டு முனிவர் சிறுபிள்ளை போல் குலுங்கிக் குலுங்கி அழும் ஒலி கேட்டது.
"சுவாமீ! கெட்ட கனவு கண்டது போல் நடந்ததையும் நான் உங்களிடம் கேட்டதையும் மறந்துவிடுங்கள். நிம்மதியாகச் சிறிது நேரமாவது உறங்குங்கள்."
"நிம்மதியான உறக்கமா? உன்னைச் சிறு குழந்தையாக எடுத்து வளர்க்க ஆரம்பித்த நாளிலிருந்து அதைப் பற்றி நான் மறந்து விட்டேன், இளங்குமரா?"
இருளில் எழுந்து அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த முல்லைக்கு, முதலும் தொடர்பும் முடிவும் இல்லாத இந்த உரையாடலிலிருந்து ஒன்றும் புரியவில்லை. ஆனால் பொதுவில் அவளுக்கு அதைக் கேட்டதிலிருந்து ஏதோ திகைப்பாகவும் பயமாகவுமிருந்தது.
எழிற்பூம்புகார் நகரத்தில் மீண்டும் காலம் அரும்பவிழ்த்துப் பூத்தது ஒரு நாள் மலர். திருவிழாக் கோலங்கொண்ட பேரூர்க்குச் செம்பொன் நிறை சுடர்க்குடம் எடுத்துச் சோதிக்கதிர் விரித்தாற் போல் கிழக்கு வானத்தில் பகல் செய்வோன் புறப்பட்டான். முதல்நாள் இரவில் சற்றே அடக்கமும் அமைதியும் பெற்று ஓய்ந்திருந்த இந்திர விழாவின் கலகலப்பும், ஆரவாரமும் அந்தப் பெருநகரின் ஒவ்வொரு பகுதியிலும் எழுந்தன. காலைப் போதுதானே இந்த ஆரவாரங்களை நகரின் எல்லா இடமும் அடைய முடியும்? மாலையானால்தான் எல்லா அழகுகளையும், எல்லாக் கலகலப்பையும் கடற்கரை கவர்ந்து கொண்டு விடுமே!.
மாபெரும் இந்திரவிழாவின் இரண்டாவது நாட்காலை நேரம் இவ்வளவு அழகாக மலர்ந்துகொண்டிருந்த போதுதான் முல்லையின் பொலிவு மிக்க சிரிப்பும் இளங்குமரனின் பார்வையில் மலர்ந்தது. சிரிப்பினால் முகத்துக்கும், முகத்தினால் சிரிப்புக்கும் மாறி மாறி வனப்பு வளரும் முல்லையின் வளைக்கரங்கள்தாம் அன்று காலை இளங்குமரனை உறக்கத்திலிருந்து எழுப்பின. கண்ணிலும், நகையிலும், நகை பிறக்குமிடத்திலுமாகக் கவர்ச்சிகள் பிறந்து எதிர் நின்று காண்பவர் மனத்துள் நிறையும் முல்லையின் முகத்தில் விழித்துக் கொண்டேதான் அவன் எழுந்தான். பெண்கள் பார்த்தாலும், நகைத்தாலும், தொட்டாலும் சில பூக்கள் மலர்ந்துவிடும் என்று கவிகள் பாடியிருப்பது நினைவு வந்தது இளங்குமரனுக்கு. 'மலர்ச்சி நிறைந்த பொருள்களினால் மற்றவற்றிலும் மலர்ச்சி உண்டாகும் என்ற விளக்கம் எவ்வளவு பொருத்தமானது! பெண்களின் பார்வைக்கும் புன்னகைக்கும் பூக்கள் மலர்வது மெய்யுரையோ புனைந்துரையோ? ஆனால் ஆறறிவு பெற்ற மனிதமனங்களே மலர்ந்து விடுகின்றனவே! எத்தனையோ குழப்பங்களுக்கிடையே இந்தப் பேதைப் பெண் முல்லை தன் நோக்கினாலும் நகைப்பினாலுமே என் மனத்தை மலர வைக்கிறாளே! இந்த அற்புத வித்தை இவளுக்கு எப்படிப் பழக்கமாயிற்று?’ என்று தனக்குள் எண்ணி வியந்தவாறே காலைக் கடன்களைத் தொடங்கினான் இளங்குமரன்.
அருட்செல்வ முனிவர் கட்டிலில் அயர்ந்து படுத்திருந்தார். இளங்குமரனும், முல்லையும் அவரை எழுந்திருக்க விடவில்லை. எவ்வளவு தளர்ந்த நிலையிலும் தம்முடைய நாட்கடன்களையும், தவ வழிபாடுகளையும் நிறுத்தியறியாத அந்த முனிவர் பெருந்தகையாளர், "என்னை எப்படியாவது எனது தவச்சாலையிலே கொண்டுபோய்ச் சேர்த்து விடுங்கள்" என்று அன்றும் பிடிவாதமாக மன்றாடிப் பார்த்தார். இளங்குமரனும், முல்லையும்தான் அவரை வற்புறுத்தி ஓய்வு கொள்ளச் செய்திருந்தனர். உடல் தேறி நலம் பெறுகிறவரை முனிவர் அந்த வீட்டிலிருந்து வெளியேறலாகாது என்று கண்டிப்பாக உத்தரவிட்டதுபோல் சொல்லிவிட்டார் முல்லையின் தந்தையாகிய வீரசோழிய வளநாடுடையார். அநுபவமும் வயதும் நிறைந்த மூத்த அந்தப் பெருங்கிழவரின் குரலில் இன்னும் கம்பீரமும் மிடுக்கும் இருந்தன. சோழநாட்டின் பெரிய போர்களில் எல்லாம் கலந்து தீர அநுபவமும் வீரப்பதவிகளும் பெற்று நிறை வாழ்வு வாழ்ந்து ஓய்ந்த உடல் அல்லவா அது? இன்று ஒடுங்கித் தளர்ந்திருந்தாலும் வெளுத்து நரைத்த வளமான மீசையும், குழிந்திருந்தாலும் ஒளி மின்னும் கண்களும், நெடிதுயர்ந்த தோற்றமும் அவருடைய பழைய வீரவாழ்வை நினைவிற் கொண்டு வருவதற்குத் தவறுவதில்லை. ஒருகாலத்தில் வீர சோழிய வளநாடுடையார் என்ற அந்தப் பெயர் ஆயிரம் வீரர்களுக்கு நடுவில் ஒலித்தாலே ஆயிரம் தலைகளும் பெருமிதத்தோடு வணங்கித் தாழ்ந்ததுண்டு. இன்று அவருடைய ஆசையெல்லாம் தாம் அடைந்த அத்தகைய பெருமைகளைத் தம் புதல்வன் கதக்கண்ணணும் அடைய வேண்டுமென்பதுதான்.
முல்லைக்கும் தன்னுடைய நண்பனுக்கும் தந்தை என்ற முறையினால் மட்டுமல்லாமல் வேறு சில காரணங்களாலும் இளங்குமரன் வீரசோழிய வளநாடுடையர் மேல் பெருமதிப்பு வைத்திருந்தான். ஆனால் அவருக்கு மட்டும் அவனைப் ப்ற்றிய மனக்குறையொன்று உண்டு. வல்லமையும், தோற்றமும், கட்டழகும் வாய்ந்த இளங்குமரன் சோழப்பேரரசின் காவல் வீரர்களின் குழுவிலோ, படைமறவர் அணியிலோ சேர்ந்து முன்னுக்கு வரமுயலாமல் இப்படி ஊர் சுற்றியாக அலைந்து கொண்டிருக்கிறானே என்ற மனக்குறைதான் அது. அதை அவனிடமே இரண்டோரு முறை வாய் விட்டுச் சொல்லிக் கடிந்து கொண்டிருக்கிறார் அவர்.
"தம்பீ! உன்னுடைய வயதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூம்புகாரின் புறநகர்க் காவல் வீரர்களுக்குத் தலைவனாக இருந்தேன் நான். இந்த இரண்டு தோள்களின் வலிமையால் எத்தனை பெரிய காவல் பொறுப்புக்களைத் தாங்கி நல்ல பெயர் எடுத்திருக்கிறேன் தெரியுமா? நீ என்னடா வென்றால் அவிழ்த்து விடப்பட்ட இளங்காளைபோல் இந்த வயதில், மருவூர்ப் பாக்கத்து விடலைகளோடு நாளங்காடிச் சதுக்கத்தில் வம்பும் வாயரட்டையுமாகத் திரிகிறாய்! முனிவர் உன்னைச் செல்லமாக வளர்த்து ஆளாக்கி விட்ட பாசத்தை மீற முடியாமல் கண்டிக்கத் தயங்குகிறார்."
இவ்வாறு அவர் கூறுகிறபோதெல்லாம் சிரிப்போடு தலை குனிந்து கேட்டுக் கொண்டு மெல்ல அவருடைய முன்னிலையிலிருந்து நழுவிவிடுவது இளங்குமரனின் வழக்கம். ஆனால் இன்றென்னவோ வழக்கமாக அவனிடம் கேட்கும் அந்தக் கேள்வியைக்கூட அவர் கேட்கவில்லை. காரணம் முதல் நாளிரவு சம்பாபதி வனத்தில் முனிவருக்கும் தனக்கும் ஏற்பட்ட துன்பங்களை முற்றிலும் கூறாவிடினும் ஒரளவு சுருக்கமாகக் காலையில் அவருக்குச் சொல்லியிருந்தான் இளங்குமரன்.
"தம்பீ! நேற்றிரவு சம்பாபதி வனத்தில் கதக்கண்ணனும் அவன் தோழனும் காவலுக்காகச் சுற்றி வந்தபோது நீ சந்தித்ததாகக் கூறினாயே? விடிந்து இவ்வளவு நேரமாகியும் கதக்கண்ணன் வீடு வந்து சேரவில்லையே, அப்படி எங்கே சுற்றிக் கொண்டிருக்கிறான் அவன்?" என்று வீரசோழிய வளநாடுடையார் கேட்டபோது அவருக்கு என்ன மறுமொழி கூறுவதெனச் சிந்தித்தாற் போல் சில வினாடிகள் தயங்கினான் இளங்குமரன். ஏனென்றால் கதக்கண்ணன் தன்பொருட்டு வஞ்சினம் கூறித் தன்னுடைய எதிரிகளைத் துரத்திக் கொண்டுதான் போயிருக்கிறான் என்ற செய்தியை அவன் கிழவரிடம் கூறவில்லை. தன்னையும் முனிவரையும் சம்பாபதி வனத்தில் யாரோ சிலர் வழிமறித்துத் தாக்கியதாகவும், கதக்கண்ணனும் மற்றொரு காவல் வீரனும் அந்த வழியாக வந்த போது தாக்கியவர்கள் ஓடிவிட்டதாகவும் ம்ட்டும் ஒரு விதமாக அவரிடம் சொல்லி வைத்திருந்தான் இள்ங்குமரன்.
"ஐயா! இந்திர விழாக் காலத்தில் நேரத்தோடு வெளியேறி நேரத்தோடு வீடு திரும்ப வேண்டுமென்று எதிர்பார்க்கலாமா? நீங்களும் முல்லையும் நேற்று மாலை விழாக்கோலத்தை யெல்லாம் பார்த்து வந்து விட்டீர்கள். கதக்கண்ணனுக்கும் விழாக் காண ஆவல் இருக்கும் அல்லவா? நேற்றிரவே நகருக்குள் போயிருப்பான். அங்கே படைமறவர் பாடி வீடுகள் ஏதாவதொன்றில் தங்கியிருந்து விடிந்ததும் ஊர் சுற்றிப் பார்த்து விட்டுத் தானாக வந்து சேர்வான்" என்று அவருக்கு மறுமொழி கூறினான் இளங்குமரன். கிழவர் அவனுடைய அந்த மறுமொழியால் சமாதானம் அடைந்தவராகத் தெரியவில்லை.
"அண்ணன் ஊருக்கெல்லாம் பயமில்லாமல் காவல் புரிகிறேன் என்ற வேலேந்திய கையோடு இரவிலும் குதிரையில் சுற்றுகிறான். அப்பாவுக்கோ அவன் தன்னையே காத்துக் கொள்வானோ மாட்டானோ என்று பயமாயிருக்கிறது!" என்று கூறிச் சிரித்தாள் முல்லை.
"பயம் ஒன்றுமில்லையம்மா எனக்கு. நீ இன்று காலை நாளங்காடிப் பூதசதுக்கத்துக்குப் போய்ப் படையல் இட்டு வழிபாடு செய்யவேண்டு மென்றாயே! நான் இங்கே இந்த முனிவருக்குத் துணையாக இருந்து இவரை கவனித்துக் கொள்ளலாமென்று நினைக்கிறேன். கதக்கண்ணன் வந்திருந்தால் நீ அவனை உடன் அழைத்துக் கொண்டு புறப்பட வசதியாயிருக்குமே என்றுதான் பார்த்தேன்."
"அண்ணன் வராவிட்டால் என்ன, அப்பா? இதோ இவரை உடன் அழைத்துக்கொண்டு பூதசதுகத்துக்குப் புறப்படுகிறேனே. இவரைவிட நல்ல துணைவேறு யார் இருக்க முடியும்?" என்று இளங்குமரனைச் சுட்டிக்காட்டிக் கேட்டாள் முல்லை.
இளங்குமரன் தனக்குள் மெல்ல நகைத்துக் கொண்டான்.
"இவனையா சொல்கிறாய் அம்மா? இவன் உனக்குத் துணையாக வருகிறான் என்பதைவிட வீரசோழிய வளநாடுடையார் மகள் இவனுக்குத் துணையாகச் செல்கிறாள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். ஊர்ச்சண்டையும் தெருவம்பும் இழுத்து, எவனோடாவது அடித்துக்கொண்டு நிற்பான். நீ இவனைச் சமாதானப்படுத்தி அழைத்துக்கொண்டு போக நேரிடும்."
"அப்படியே இருக்கட்டுமே அப்பா! இவருக்குத் துணையாக நான் போகிறேன் என்றே வைத்துக் கொள்ளுங்களேன்" என்று விட்டுக் கொடுக்காமல் சொன்னாள் முல்லை.
"முல்லை! என்னைக் குறைகூறுவதென்றால் உன் தந்தைக்கு விருந்துச் சாப்பாடு சாப்பிடுகிற கொண்டாட்டம் வந்துவிடும். அவருடைய ஏளனத்தை எல்லாம் வாழ்த்துக்காளாக எடுத்துக் கொண்டு விடுவேன் நான்."
இளங்குமரன் புன்னகை புரிந்தவாறே இவ்வாறு கூறிவிட்டு, வீரசோழிய வளநாடுடையாரையும் அவருடைய செல்ல மகளையும் மாறி மாறிப் பார்த்தான்.
"அருட்செல்வ முனிவரே! உங்களுடைய வளர்ப்புப் பிள்ளையாண்டானுக்கு அறிவும் பொறுப்பும் வளர்ந்திருக்கிறதோ இல்லையோ வாய்ப்பேச்சு நன்றாக வளஎர்ந்திருக்கிறது" என்று அது வரை தாம் எதுவும் பேசாமல் அவர்களுடைய வம்பு உரைகளைக் கேட்டுக்கொண்டிருந்த முனிவரை நோக்கிக் கூறினார் வீரசோழிய வளநாடுடையார். இதைக் கேட்டு முனிவர் பதிலேதும் கூற வில்லை. அவருடைய சாந்தம் தவழும் முகத்தில் சிரிப்பு மலர்ந்து அடங்கியது. அந்தச் சிரிப்பின் குறிப்பிலிருந்து கிழவர் கூறியதை அவர் அப்படியே மறுத்ததாகவும் தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு பொருளை உய்த்துணர இடமளித்தது அந்தச் சிரிப்பு.
இளங்குமரனுக்கு, 'குழந்தாய் நீ கவலைப்படாமல் முல்லையோடு நாளங்காடிக்குப் புறப்பட்டுப் போய்விட்டு வா. நேற்றிரவு சம்பாபதி வனத்தில் நடந்தவற்றிலுள்ள இரகசியத்தையோ, அல்லது வேறு இரகசியங்களையோ இந்தக் கிழவரிடம் வரம்பு மீறிச் சொல்லிவிடமாட்டேன்’ என்று அபயமளித்தது அந்தச் சிரிப்பு. முல்லைக்கோ 'பெண்ணே உன் இதயத்தில் இளங்குமரனைப் பற்றி வளரும் இனிய நினைவுகள் புரியாமல் உன் தந்தை அவனை இப்படி உன் முன்பே ஏளனம் செய்கிறாரே’ என்ற குறிப்பைக் கூறியது அந்தச் சிரிப்பு.
'உங்கள் முதுமைக்கும், அனுபவங்களுக்கும் பொருத்தமான வற்றைத் தான் இளங்குமரனுக்கு நீங்கள் சொல்லுகிறீர்கள்’ என்று கிழவரை ஆதரிப்பதுபோல் அந்தச் சிரிப்பு அவருக்குத் தோன்றியிருக்கும். எந்த மனவுணர்வோடு பிறருடைய சிரிப்பையும் பார்வையையும் அளவிட நேருகிறதோ, அந்த உணர்வுதானே அங்கும் தோன்றும்?
முல்லை தன்னை அலங்கரித்துக்கொண்டு புறப்படுவதற்குச் சித்தமானாள். கண்களிலும், முகத்திலும், உடலிலும் பிறக்கும் போதே உடன்பிறந்து அலங்கரிக்கும் அழகுகளைச் செயற்கையாகவும் அலங்கரித்த பின், வழிபாட்டுக்கும் படையலுக்கும் வேண்டிய பொருள்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள் முல்லை. படையலுக்காக நெய்யில் செய்து அவள் எடுத்துக் கொண்டிருந்த பணியாரங்களின் நறுமணத்தை இளங்குமரன் நுகர்ந்தான். முனிவரிடம் சொல்லி விடைபெற்றுக் கொண்ட பின் கிழவரைப் பார்த்தும், "ஐயா! நானும் முல்லையும் நண்பகலுக்குள் பூதசதுக்கத்திலிருந்து திரும்பி விடுவோம். அதற்குள் கதக்கண்ணன் வந்தால் இங்கேயே இருக்கச் சொல்லுங்கள். நான் அவனிடம் சில முக்கியமான செய்திகள் பேசவேண்டும்" என்று கூறினான் இளங்குமரன்.
"ஆகா! வேண்டிய மட்டும் பேசலாம். தம்பீ! கவனமாக அழைத்துக் கொண்டு போய்வா. முல்லையை பூதசதுக்கத்தில் விட்டுவிட்டு நீ உன் போக்கில் மருவூர்ப் பாக்கத்து விடலைகளோடு சுற்றக் கிளம்பிவிடாதே. அவளை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தபின் நீ எங்கு வேண்டுமானாலும் போகலாம்" எனக் கிழவர் எச்சரிக்கை செய்த போது முல்லையும் இளங்குமரனும் சிரித்துக்கொண்டே வெளியேறினார்கள்.
முதல் நாளிரவிலிருந்து தன்னுடைய மனத்தில் மிகுந்து வரும் துன்பங்களையும் தவிப்பையும் அந்தச் சமயத்தில் ஒரு வழியாக மறந்துவிட முயன்ற இளங்குமரன் முல்லையொடு உற்சாகமாகச் சிரித்துப் பேசிக்கொண்டே சென்றான்.
"முல்லை! உன் தந்தையார் என்னைப் பற்றிப் பேசுகிற பேச்செல்லாம் ஒரு விதத்தில் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஊராருக்கெல்லாம் இந்திர விழாவின் தொடக்க நாளில் உற்சாகம் தேடிக்கொண்டு வருகிறதென்றால் என்னைத் தேடிக்கொண்டு அடிபிடி போர் இப்படி ஏதாவது வம்புகள்தாம் வந்து சேருகின்றன. நேற்று மாலை கடற்கரையில் ஒரு யவன மல்லனோடு வலுச் சண்டைக்குப் போய் வெற்றி பெற்றேன். நேற்று இரவு சம்பாபதி வனத்தில் என்னிடம் யாரோ வலுச்சண்டைக்கு வந்தார்கள். வாங்கிக் கட்டிக் கொண்டேன். இந்திர விழாவின் இருபத்தெட்டு நாட்களும் என் பங்குக்கு நேரடியாகவோ, நண்பர்கள் மூலமாகவோ, இப்படி வம்புகள்தாம் எவையேனும் தேடிவரும் போலும்."
"ஒருவேளை நீங்களாகவே வம்புகளைத் தேடிக் கொண்டு போகிறீர்களோ, என்னவோ?"
"பார்த்தாயா? நீயே என்னிடம் வம்புக்கு வருகிறாயே முல்லை; வீரசோழிய வளநாடுடையார் தான் குறும்பாகவும் குத்தலாகவும் பேசுகிறாரென்று பார்த்தால் அவருடைய பெண் அவரையும் மீறிக்கொண்டு குறும்புப் பேச்சில் வளர்கிறாளே? உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பெண்ணே, என் தலையெழுத்தே அப்படி. சில பேர்கள் நல்வாய்ப்புகளையே தேடிக்கொண்டு போகிறார்கள். இன்னும் சில பேர்களை நல்வாய்ப்புகளே எங்கே எங்கேயென்று தேடிக்கொண்டு வருகின்றன். என்னைப் பொறுத்தமட்டில் நானாகத் தேடிகொண்டு போனாலும் வம்புதான் வருகிறது. தானாக என்னைத் தேடிக்கொண்டு வந்தாலும் வம்புதான் வருகிறது."
"வம்பில் யோகக்காரராக இருக்கிறீர்கள் நீங்கள்! இல்லையா?"
"அதில் சந்தேகமென்ன பெண்ணே! இன்றைக்கு வாய்த்த முதல் வம்பு நீதான்"
"இரண்டாவது வம்பு?"
"இனிமேல்தான் எங்கிருந்தாவது புறப்பட்டு வரும்" இதைக் கேட்ட முல்லை கலீரெனச் சிரித்தாள். இப்படி விளையாட்டாகப் பேசிக்கொண்டே நாளங்காடியை நோக்கி விரைந்தார்கள் அவர்கள்.
பூம்புகாரின் செல்வவளம் மிக்க பட்டினப் பாக்கத்துக்கும் பலவகை மக்கள் வாழும் மருவூர் பாக்கத்துக்கும் இடையிலுள்ள பெருநிலப் பகுதியாகிய நாளங்காடியில் மக்கள் வெள்ளம்போல் கூடியிருந்தனர். அங்கே கோயில் கொண்டிருந்த சதுக்கப்பூதம், அங்காடிப்பூதம் என்னும் இரண்டு வானளாவிய தெய்வச் சிலைகள் வெகுதொலைவிலிருந்து பார்ப்போர்க்கும் பயங்கரமாகக் காட்சியளித்தன. பூதங்களுக்கு முன்னாலிருந்த பெரிய பெரிய பலிப் பீடிகைகளில் பூக்களும் பணியாரங்களும் குவித்து வழிபடுவோர் நெருக்கமாகக் குழுமியிருந்தனர். மடித்த வாயும் தொங்கும் நாவும் கடைவாய்ப் பற்களுமாக ஒருகையில் வச்சிராயுதமும், மற்றொரு கையில் பாசக் கயிறும் ஏந்திய மிகப் பெரும் பூதச் சிலைகள் செவ்வரளி மாலை அணிந்து எடுப்பாகத் தோன்றின. 'பசியும் பிணியும் நீங்கி நாட்டில் வளமும் வாழ்வும் பெருக வேண்டு'மென்று பூதங்களின் முன் வணங்கி வாழ்த்துரைப்போர் குரல் நாளங்காடியைச் சூழ்ந்திருந்த அடர்ந்த மரச்சோலையெங்கும் எதிரொலித்து கொண்டிருந்தது. துணங்கைக் கூத்து ஆடுகிறவர்களின் கொட்டோசை ஒருபுறம் முழங்கியது.
நாளங்காடிப் பூத சத்துக்கத்துக்கு முன்னால் நான்கு பெரிய வீதிகள் ஒன்றுகூடும் சந்தியில் வந்ததும், "முல்லை, நீ உள்ளே போய் வழிபாட்டைத் தொடங்கிப் படையலிடு. நான் இந்தப் பக்கத்தில் என் நண்பர்கள் யாராவது சுற்றிக்கொண்டுருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு உள்ளே வருகிறேன்" என்று இளங்குமரன் அவளை உள்ளே அனுப்பிவிட்டுத் தான் மட்டும் அங்கேயே நின்று கொண்டான்.
"விரைவில் வந்துவிடுங்கள். ஏதாவது வம்பு தேடிக் கொண்டு வந்துவிடப் போகிறது." சிரித்துக்கொண்டே அவன் பக்கம் திரும்பிப் பார்த்துச் சொல்லிவிட்டு பலிப்பீடிகையை நோக்கி நடந்தாள் முல்லை.
"படையல் முடிந்ததும் நீ தரப்போகிற நெய்யில் *பொரித்த எள்ளுருண்டையை (* இந்த எள்ளுருண்டைக்கு அக்காலத்தில் 'நோலை' என்று பெயர்) நினைத்தால் வராமலிருக்க முடியுமா, முல்லை?" என்று நடந்துபோகத் தொடங்கி விட்ட இளங்குமரன் அவள் செவிகளுக்கு எட்டும்படி இரைந்து சொன்னான். பின்பு தனக்குப் பழக்கமானவர்கள், நண்பர்கள் எவரேனும் அந்தப் பெருங்கூட்டத்தில் தென்படுகிறார்களா என்று தேடிச் சுழன்றன அவன் கண்கள்.
ஆனால் அவன் தேடாமலே அவனுக்குப் பழக்கமில்லாத புது மனிதன் ஒருவன் தயங்கித் தயங்கி நடந்து வந்து அருகில் நின்றான், "ஐயா!" என்று இளங்குமரனை மெல்ல அழைத்தான். "ஏன் உனக்கு என்ன வேண்டும்!" என்று அவன் புறமாகத் திரும்பிக் கேட்டான் இளங்குமரன்.
"உங்களைப் போல் ஓவியம் ஒன்று எழுதிக்கொள்ள வேண்டும். தயவு கூர்ந்து அப்படி அந்த மரத்தடிக்கு வருகிறீகளா?" என்று அந்தப் புது மனிதனிடமிருந்து பதில் வந்தபோது இளங்குமரனுக்கு வியப்பாயிருந்தது. 'இது என்ன புதுப் புதிர்?' என்று திகைத்தான் அவன்.
தன் அருகே வந்து நின்றவனை நன்றாக உற்றுப் பார்த்தான் இளங்குமரன். ஓவியம் எழுதுவதற்குரிய திரைச் சீலை தூரிகைகளும், வண்ணங்களடங்கிய சிறுமரப் பேழையும் அவனிடம் இருந்தன். அவன் இள வயதினன்தான். கலை அறிவுள்ளவர்களின் முகத்துக்கு அந்தப் பயிற்சியால் வரும் அழகுச் சாயல் தவிர இயல்பாகவேயும் அழகனாக இருந்தான் அவன். ஓவியம் எழுதுவதற்கு வந்ததாகத் தன்னை அறிமுகம் செய்துகொண்ட அந்த இளைஞனே ஓவியம் போல் கவர்ச்சியாக இருப்பதை எண்ணி வியந்தவனாக அவனை நோக்கிக் கேள்விகளைத் தொடுக்கலானான் இளங்குமரன்:
"உன் பெயர் என்னவென்று நான் அறியலாமா, தம்பி!"
"ஐயா! இந்த ஏழை ஓவியனை மணிமார்பன் என்று அழைப்பார்கள்."
"உன் மார்பில் அப்படி ஒன்றும் மணிகளைக் காணவில்லையே அப்பனே?" இளங்குமரன் குறும்பு நகையுடன் இப்படிக் கேட்ட போது, அந்த இளம் ஓவியன் சிறிது நாணமடைந்தது போல் தலைகுனிந்தான். பின்பு மெல்லச் சொல்லலானான்:
"ஐயா! நீங்கள் மனம் வைத்தால் இந்த ஏழையினுடைய மார்பிலும் மணிகள் ஒளிரச் செய்ய முடியும்." இதைக் கேட்டு இளங்குமரன் அலட்சியமாகச் சிரித்தான்.
"என்னைப் பற்றித் தப்புக் கணக்குப் போடுகிறாய், தம்பீ! பட்டினப் பாக்கத்தில் எவரோ பெருஞ்செல்வரின் மகன் என்றோ, வேறு விதமான பெரிய இடத்துப் பிள்ளை என்றோ என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தால் இந்தக் கணமே அந்த நினைவை விட்டுவிடு மணிமார்பா. என் சித்திரத்தை நன்றாக எழுதிக் காண்பித்தால் அதை வாய் நிறையப் புகழ்வதைத் தவிர வேறு எந்தப் பரிசும் தரமுடியாதவன் நான்."
"நீங்கள் பரிசு ஒன்றும் எனக்குத் தரவேண்டியதில்லை, ஐயா! உங்கள் படத்தை நான் வரைந்து போய்க்கொடுத்தாலே எனக்கு உடனே கனகாபிஷேகம் செய்து விடக் காத்திருக்கிறவர்கள் இந்தக் கூட்டத்தில் இருக்கிறார்களே!"
இப்படிக் கூறிவிட்டு நளினமானதொரு மென்னகை இதழ்களில் இழையோட இளங்குமரன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான் மணிமார்பன். இதைக் கேள்வியுற்ற இளங்குமரனுக்குத் திகைப்பும் வியப்பும் ஒருங்கே உண்டாயின.
"மணிமார்பா! இந்தப் பூம்புகார் நகரம் திடீரென்று என்னை அவ்வளவு பெரிய மனிதனாக மதிப்பிடத் தொடங்கி விட்டதா, என்ன? சரிதான் போ! எனக்கு ஏதோ போதாத காலம் ஆரபமாகிறது போலிருக்கிறது? அப்பனே! இந்த மாபெரும் கோநகரத்தில் எனக்கு எதிரிகளும், வேண்டாதவர்களும் நிறைய இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் நேருக்கு நேர் என்னிடம் வந்து சண்டையிட பயம். என்னுடைய சித்திரத்தை எழுதி மகிழலாமென்று அந்த அப்பாவிகளில் யாராவது ஆசைப்பட்டிருக்கலாம். நான் முரடனாக இருக்கிறேனாம். அதனால் என்னிடம் நேரே போருக்கு வர அஞ்சுகிற ஆட்கள் நிறைய இருக்கிறார்கள்."
"ஐயா! இப்போது உங்களை ஓவியமாக்கிக் கொண்டு வரச் சொல்லி என்னை அனுப்பியவர் உங்களுக்கு எதிரியில்லை. தாக்கி மகிழ்வதற்காக உங்கள் ஓவியத்தை அவர் கேட்கவில்லை. நோக்கி மகிழ்வதற்குக் கேட்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது."
"அடடா! வேடிக்கையாக அல்லாவா இருக்கிறது நீ சொல்லுகிற செய்தி. இந்திரவிழாவின் இரண்டாவது நாளாகிய இன்று போனால் போகிறதென்று கொஞ்சம் நல்ல வாய்ப்புகளும் என்னைத் தேடிக்கொண்டு வருகிறாற் போல் இருக்கிறது! என்னை இத்தனை பெரிய பாக்கியசாலியாக்குவதற்குத் துணிந்திருக்கும் அந்தப் புண்ணியவான் யார் அப்பனே?"
மணிமார்பன் பதில் கூறாமல் கண்களை மூடித்திறந்து குறும்பாகவும் எதையோ ஒளிக்கும் குறிப்புடனும் இளங்குமரனைப் பார்த்துச் சிரித்தான்.
"அப்பனே! நீ நன்றாகத்தான் சிரிகிறாய். சிரிப்பிலேயே சித்திர விசித்திர நுணுக்கங்களெல்லாம் காட்டிச் சொல்ல வந்ததை மறைக்காதே. யார் அந்தப் புண்ணியவான் என்பதை மட்டும் முதலில் சொல்!"
"புண்ணியவான் இல்லை ஐயா; புண்ணியவதி!" என்று கூறிக்கொண்டே கிழக்குப் பக்கமாகத் திரும்பி, "அதோ அந்தப் ப்ல்லக்கிலிருந்து இறங்குகிறாரே எட்டிக் குமரன் வீட்டுப் புதல்வியார் அவருக்கு உங்கள் சித்திரம் வேண்டுமாம்" என்று சுட்டிக் காட்டினான் ஒவியன். இளங்குமரன் அவன் காட்டிய திசையில் பார்த்தான். அவனுடைய முகத்திலிருந்து சிரிப்பும் மலர்ச்சியும் விடைபெற்றன. முதல்நாள் மாலை கடற்கரையில் மற்போர் வெற்றிக்காகத் தனக்கு மணிமாலை பரிசளிக்க முன்வந்த அதே அழகி பல்லக்கிலிருந்து இறங்கி ஒளி சிதறிக்கொண்டு நடைபயில்வது போல் தனது அணிமணிகள் சுடரிடக் தோழியோடு பூதசதுக்கத்து வாயிலுக்கு வருவதை அவன் கண்டான்.
"ஐயா! உங்கள் ஓவியத்தை எழுதி முடித்து அவர்கள் இங்கிருந்து திரும்புவதற்குள் கொண்டுவந்து கொடுத்தால் நூறு கழஞ்சு பொன் எனக்குப் பரிசு தருவ்தாகச் சொல்லியும் அடையாளம் காட்டி அனுப்பினார்கள். நீங்கள் என்மேல் கருணை கொண்டு..."
"உன் மேல் கருணை கொள்வதற்கு நான் மறுக்க வில்லை தம்பீ! ஆனால் உனக்கு உலகம் தெரியாது. நீ சிறு பிள்ளை. உன்னுடைய சித்திரங்களின் புனைவிலும் பூச்சிலும் விதம் விதமான வண்ணங்களைக் கண்டு மகிழ்வது போல் பேரின்ப நகரமான இந்தப் பூம்புகாரின் வாழ்விலும் ஒளிதரும் வண்ணங்களே நிறைந்திருப்பாதாக நீ நினைக்கிறாய். சூதும் வாதும் இகழ்ச்சியும் நிறைந்த பூம்புகாரின் வாழ்க்கைச் சித்திரம் உனக்குத் தெரிந்திராது. அங்கே வண்ணங்கள் வனப்புக் காட்டவில்லை. அழுதுவடிகின்றன. வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பிவிடக்கூடாது. செல்வத் திமிர் பிடித்த பட்டினப் பாக்கத்தார் தாம் பூம்புகார் எனும் வாழ்க்கை ஓவியத்தின் மறுபுறம் மங்கியிருப்பதற்குக் காரணமானவர்கள். இவர்களைக் கண்டாலே எனக்கு அந்த நினைவு வந்து விடுகிறது. வெறுப்பும் வந்து விடுகிறது. சில சமயங்களில் இவர்கள் அழகையும் செழுமையையும் கண்டு கவர்ச்சி பெற்றாலும் ஆழ்ந்து சிந்திக்கும் போது என் மனம் கொதிக்கிறது, தம்பீ!"
அதைக் கேட்டபின் ஓவியனுடைய மனத்தில் அவ நம்பிக்கை இருள்தான் கவிந்தது. நம்பிக்கை ஒளி சிறிதும் படரவில்லை.
"ஐயா நீங்கள் கூறுகிற கருத்துக்கள் எல்லாம் மிகவும் நன்றாயிருக்கின்றன். ஆனால் என் போன்ற ஏழைக்கலைஞனுக்கு அவற்றால் ஒரு பயனும் இல்லை. அருள் கூர்ந்து உங்களைச் சித்திரமாக்கி அந்தப் பெண்மணியிடம் அளிக்க அனுமதி தந்தீர்களானால், ஏதோ எனக்கும் அதனால் நூறு கழ்ஞ்சு பொன் பெறுகிற வாய்ப்புக் கிடைக்கும். வெறும் உபதேசத்தினால் என்ன பயன் விளையப் போகிறது?" என்று நைந்து நம்பிக்கையிழந்த குரலில் மணிமார்பன் கூறியபோது இளங்குமரனுக்கு அவன்மேல் சிறிது ஆத்திரம் மூண்டது. என் முன்னால் நின்று கொண்டே என்னை நோக்கி, 'வெறும் உபதேசத்தால் என்ன பயன் விளையப் போகிறது? என்று கேட்கிறானே இந்த இளைஞன், கையாலாகாத ஆளுக்கு உபதேசம் எதற்கு? என்று என்னையே இடித்துக் காட்டுகிறானா இவன்?'
இளங்குமரன் தன் மனத்தின் ஆத்திரத்தை முகத்தில் காட்டாமல் அவனை உற்றுப் பார்த்தான். 'பாவம்! ஏழை ஓவியன். நாம் ஒப்புக் கொள்வதனால் நமக்கு இழப்பு ஒன்றுமில்லை. ஒப்புக் கொள்ளாவிட்டால் இவனுக்கு நூறு பொற் கழஞ்சு கிடைக்காமல் போகும். பிழைத்துப் போகிறான். செருக்கு மிகுந்த அந்தச் செல்வக் குமரிக்காக இல்லாவிட்டாலும் இவனுக்கு ஊதியம் கிடைக்கும் என்பதற்காக இதை நாம் எற்றுக்கொள்ளலாம்' என்று ஆத்திரம் மாறி இரக்கம் உண்டாயிற்று இளங்குமரன் மனத்தில். அடுத்த கணம் அவன் முகம் மலர்ந்தது. பாசத்தோடு அருகில் சென்று அந்த ஓவியன் முதுகில் தட்டிக்கொடுத்தான். "மணிமார்பா! தளராதே அப்பனே. எங்கே நான் கண்டிப்பாக மறுத்து விடுகிறேனோ என்ற பயத்தில் உன் அழகிய முகம் மங்கிய வண்ணம் போல் வாடிவிட்டதே. தம்பீ! வா, என்னை வரைந்து கொள். உனக்கு நான் பயன்படுகிறேன் என்பதுதான் என் இணக்கத்துக்குக் காரணம்."
"ஐயா தனக்காகவே நான் உங்களை வரைகிறேன் என்பதை உங்களிடம் சொல்லாமல் வரைந்து வருமாறுதான் அந்தப் பெண்மணி கூறியிருந்தார். நான் தான் உங்களிடம் மெய்யை மறைக்க முடியாமல் கூறிவிட்டேன். உங்கள் கண்களுக்கு எதிரே நின்று பேசுகிறபோது உண்மையை மறைத்துப் பேசவரவில்லை."
"பார்த்தாயா? அவளுக்காக என்பதை நீ என்னிடம் கூறினால் நான் இணங்க மாட்டேன் என்று அந்த அழகரசிக்கே நன்றாகத் தெரியும் தம்பி!"
"ஏன் ஐயா? உங்களுக்குள் ஏதாவது கோபமா?"
"தம்பீ! இந்தக் கேள்வியெல்லாம் கேட்டு நேரத்தை வீணாக்காதே. நீ வரையத் தொடங்கு!"
இளங்குமரன் மீண்டும் குரலில் கடுமையை வரவழைத்துக் கொண்டு கண்டித்த பின்புதான் ஓவியன் மணிமார்பன் பேச்சைக் குறைத்து வேலையில் இறங்கினான். மரத்தைத் தழுவினாற் போல் படர்ந்திருந்த ஒரு முல்லைக் கொடியைப் பிடித்தவாறு மலர்ந்த முகத்தோடு சித்திரத்துக்கு வாய்ப்பான கோலத்தில் நின்றான் இளங்குமரன். திரைச்சீலையை விரித்து வண்ணப் பேழையைத் திறந்து வரையலானான் மணிமார்பன். நாளங்காடிச் சதுக்கப் பூதத்தின் பலிப் பீடிகையிலிருந்து முல்லை வழிபாட்டை முடித்துக் கொண்டு திரும்புமுன் மணிமார்பனுடைய வரைவுவேலை முடிந்துவிட வேண்டுமென்று துரிதப்படுத்தினான் இளங்குமரன். முல்லை கொண்டு வரப்போகும் நெய் எள்ளுருண்டையை நினைக்கும்போது அவன் நாவில் சுவைநீர் சுரந்தது.
"ஐயா! உண்மையிலேயே நீங்கள் மிகவும் அழகாய்த்தான் இருக்கிறீர்கள்!"
"தம்பீ! அப்படியானால் என்னுடைய அழகைப்பற்றி இது வரையில் உனக்குச் சந்தேகம் இருந்ததா? நான் அழகாயிருப்பது எவ்வளவு பெரிய தவறு என்பது இன்று இந்த நாளங்காடி நாற்சந்தியில் நீ என்னைத் தேடி வந்ததிலிருந்தே தெரிந்துவிட்டது. அழகாயிருப்பதைப் பற்றி நீயும் நானும் நினைத்துப் பார்க்க நேரமேது? பொன்னிலும், யானைத் தந்தத்திலும் யவனப்பாடியிலுள்ள சிற்பிகள் எவ்வளவோ அழகான சிலைகள் செய்கிறார்களே அவற்றையெல்லாம் விலைக்கு வாங்கிச் செல்கிறவர்கள் பட்டினப்பாக்கத்துச் செல்வர்கள்தாம். அதே போல் அழகாயிருக்கிற ஆட்களையும் அன்பு என்கிற விலைக்கு வாங்கிவிடத் துடிக்கிறார்கள் அவர்கள்."
"நீங்கள் அதைவிடப் பெரிய விலை ஏதேனும் எதிர் பார்க்கிறீர்களோ?"
"என் தன்மானமும் தன்னம்பிக்கையும் பட்டினப்பாக்கத்து ஏழு அடுக்குமாடங்களைவிட உயரமானவை தம்பீ!"
"என்ன காரணத்தாலோ பட்டினப்பாக்கத்து ஆடம்பர வாழ்வின் மேலும், செல்வச் சுகபோகங்கள் மேலும் உங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டிருப்பது தெரிகிறது, ஐயா."
இதற்கு இளங்குமரன் பதில் சொல்லவில்லை. மணிமார்பனும் குறிப்பறிந்து, பேசுவதை நிறுத்திக்கொண்டான். கரும்பு வில்லில் மலர்க்கணைதொடுத்த கோலத்தில் மன்மதன் நிற்பதுபோல் முல்லைக் கொடியைப் பிடித்தாற் போல் நிற்கும் இளங்குமரன் திரைச்சீலையில் உருவாகிக் கொண்டிருந்தான்.
அப்போது சிலம்பொலி கிளரச் சீறடி பெயர்ந்து நடந்து வந்தாள் முல்லை.
"உங்களை எங்கே எல்லாம் தேடுவது?" என்று கூறிக் கொண்டே நெய்மணம் கமழும் எள்ளுருண்டைப் ப்ணியாரத்தை முன் நீண்ட அவன் கையில் வைத்துவிட்டு ஒவியனுக்கும் தருவதற்காக் எதிர்ப்பக்கம் நடந்தாள் முல்லை.
பணியாரத்தை வாயிலிடுவதற்காக் மேலெழுந்த இளங்குமரனின் வலக்கரம் பின்னாலிருந்து வேறொரு முரட்டுக் க்ரத்தால் தட்டி விடப்பட்டது! எள்ளுருண்டைகள் அந்தரத்தில் பறந்தன. அடக்க முடியாத சினத்தோடு அழற்சி பொங்கும் விழிகளைப் பின்புறமாகத் திருப்பினான் இளங்குமரன். அங்கே அன்றைய கணக்குக்கு அவனைத் தேடி வர வேண்டிய வம்பு வந்திருந்தது! பயங்கரமாகக் கட்சி கட்டிக் கொண்டு வந்திருந்தது! அவனது புயங்களின் தசை திரண்டது.
வாழ்க்கையில் ஒவ்வோருணர்வுக்கும் மறுபுறம் என்பதொன்றுண்டு. சிலருக்குப் பிறர் மேல் ஏற்படுகிற அன்பின் மறுபுறம் வெறுப்பாக இருக்கும். அல்லது வெறுப்பின் மறுபுறத்தைத் திரும்பிப் பார்த்தால் தவிர்க்க முடியாத பேரன்பாக இருக்கும். ஒன்றாக இருப்பினும் நிறமும் தோற்றமும் வேறுபடும். உள்ளங்கையும் புறங்கையும் போல இந்த உணர்வுகளும் உறவுகளும் அமையும். நேரிற் காணும் போது குத்தலாகவும் ஏளனமாகவும் பேசிவிட்டாலும் இளங்குமரனிடமிருந்து ஏதோ ஒரு கவர்ச்சி வீரசோழிய வளநாடுடையார் மனத்துனுள் அவனை நினைத்து ஏங்கும் பிணைப்பை உண்டாக்கியிருந்தது. இதனால் அந்த அநாதை இளைஞனை 'உறுதியாக வெறுக்க வேண்டும்' என்று நினைத்துக்கொண்டே அந்நினைவின் மறுபுறம் அவன் மேல் அவர் கவலையும் அக்கறையும் காட்டி வந்தார். அதற்குக் காரணமானதும், உணர்வு ஒருபுறம் விரும்பாமல் மனம் மறுபுறம் விரும்பியதுமான அன்புத்தூண்டுதல் அவருள் மிக அந்தரங்கமானதாக இருந்தது.
அன்று காலை முல்லையும் இளங்குமரனும் நாளங்காடிப் பூதசதுக்கத்துக்குப் புறப்பட்டுச் சென்ற பின்னர் வீரசோழிய வளநாடுடையாருக்கும் அருட்செல்வ முனிவருக்கும் தங்களுக்குள் உரையாடுவதற்குத் தனிமை வாய்த்தது.
தாம் அறிவதற்கு ஆவல் கொண்டுள்ள பல செய்திகளைத் தூண்டிக் கேட்கும் விருப்பத்துடன் வந்து அமருகிறவர்போல் முனிவரின் கட்டுலுக்கு மிக அருகில் வந்து அமர்ந்தார் வீரசோழிய வளநாடுடையார். அவர் இவ்வாறு வந்து உட்காரும் நோக்கத்தைப் புரிந்து கொண்டவர்போல் தமக்குள் மெல்லச் சிரித்துக்கொண்டார் முனிவர்.
"உங்களுடைய இல்லத்துக்கு வந்து நீண்ட நாட்கள் ஆகி விட்டனவே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். உடையாரே! எப்படியோ சந்தர்ப்பம் நேற்றிரவு இங்கே வந்து தங்கும்படி செய்துவிட்டது. ஆனால் இப்படி அடி, உதை பட்டுக்கொண்டு வந்து தங்கியிருப்பதை நினைக்கும் போதுதான் என்னவோ போலிருக்கிறது."
"கவலைப்படாதீர்கள் முனிவரே! நானும் கிழவன், நீங்களும் கிழவர். நம் போன்றவர்களுக்கு இந்த வயதில் இப்படிச் சந்தித்து மனம்விட்டுப் பேசுவதைப் போலச் சுவையான அநுபவம் வேறு கிடைக்க முடியாது. எவ்வளவோ செய்திகளைப் பற்றி விரிவாகப் பேசலாம் அல்லவா?"
"ஆகா! நீங்கள் ஆசைப்படும்போது நான் பேசுவதற்கு மறுக்க இயலுமா? ஆனால் உங்களுடைய கருத்தில் ஒரே ஒரு அம்சத்தை மட்டும் நான் மறுக்க வேண்டியவனாக இருக்கிறேன். மூப்பு நெருங்கப் பேசாமைதான் சுவையான அநுபவமாகப் படுகிறது எனக்கு. மூப்புக் காலத்தில் மனத்தினுள் முன்பு வாழ்ந்த நாளெல்லாம் கட்டி வைத்த நினைவுச் சுமைகளையே அவிழ்த்துப் பார்த்து ஒழுங்கு செய்யக் காலம் காணாதபோது பேசிப் பேசிப் புதிய நினைவுச் சுமைகளையும் சேர்க்கலாமா?"
"முனிவர் பெருமானுக்குத் தெரியாத மெய்யில்லை. இன்பமும் துன்பமும் நிறைந்த நினைவுகளைச் சுமப்பதுதானே உயிர்ப் பயணம்? முடிவற்ற அந்தப் பயணத்தில் அவ்வாறு நினைவுகளைச் சுமப்போரைக் கண்டும் நாம் சுமையின்றி நடந்து போகலாமென எண்ணி ஒதுங்கலாமா, அடிகளே."
"ஒதுங்கவேண்டுமென்று நான் கூறவில்லை உடையாரே. இந்தப் பிறவிக்குப் போதும் போதுமென்று சொல்கிறாற் போல அவ்வளவு நினைவுச் சுமைகளை ஏற்கெனவே கனமாகச் சுமந்து கொண்டிருக்கிறேன் நான்."
இவ்வாறு கூறிவிட்டு முகத்தில் ஏக்கமும் ஆற்றாமையும் தோன்ற நெட்டுயிர்த்தார் முனிவர்.
"பிறரிடம் ஒருமுறை மனம் திறந்து பேசினாலாவது உங்கள் நினைவுச் சுமையின் கனம் குறையலாம் என்று எனக்குத் தோன்றுகிறது முனிவரே!"
"செய்யலாம் உடையாரே! ஆனால் எல்லாச் செய்திகளையும் எல்லாரிடமும் மனம் திறந்து பேசிவிட முடிவதில்லை. சில செய்திகளை இதயத்துக்குள்ளேயே இரண்டாம் முறையாகத் திறந்து எண்ணிப் பார்ப்பதற்கும் பயமாக இருக்கிறதே..."
இதைக் கேட்டு வீரசோழிய வளநாடுடையார் இரைந்து வாய்விட்டுச் சிரித்தார்.
"முனிவரே! இந்த மாபெரும் நகரத்தின் புறவீதியில் சாதாரணக் காவல் வீரனாகச் சுற்றிய நாள் தொடங்கிப் பின்பு காவற்படைத்தலைவனாகி இன்று ஓய்வு பெற்றிருக்கும் நாள் வரை உங்களை எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இன்னும் நீங்கள் என்னிடம் சில செய்திகளை மறைத்தே பேசி வருகிறீர்கள். துறவிகளுக்கு ஒளிவு மறைவு கூடாதென்பார்கள். நீங்களோ மிக மிகப் பெரிய செய்திகளையெல்லாம் ஒளித்து மறைத்துக் காப்பாற்றி வருகிறீர்கள். பலமுறை அவற்றை அறிய முயன்றும் தொடர்ந்து நான் ஏமாந்து கொண்டே வருகிறேன். இன்றும் அதேபோல் ஏமாற்றத்தைத் தவிர வேறு மறுமொழி உங்களிடமிருந்து எனக்குக் கிடைக்காது போலத் தோன்றுகிறதே?"
"இந்த வினாடிவரை ஒரு கேள்வியும் கேட்காமலே நான் மறுமொழி கூறவில்லையென்று நீங்களாகக் குற்றம் சுமத்துவது நியாயமாகுமா உடையாரே?"
"நான் எதைக் கேட்பதற்கு நினைக்கிறேன், என்ன கேட்கப் போகிறேன் என்பதொன்றும் உங்களுக்குத் தெரியாதது போல் மறைக்கிறீர்கள் அருட்செல்வரே!"
இதைக் கேட்ட உடனே முனிவர், வீரசோழிய வளநாடுடையார் முகத்தைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தார். மெல்ல அவரை நோக்கி நகை புரிந்தார்.
"இந்தப் பார்வையையும், இந்தச் சிரிப்பையும் தவிர இத்தனை காலமாக என்னுடைய கேள்விக்கு நீங்கள் வேறு மறுமொழி எதுவும் கூறவில்லை, முனிவரே! இந்தப் பிள்ளையாண்டான் இளங்குமரனைப் பற்றி அவன் சிறு பிள்ளையாக இருந்த நாளிலிருந்து நானும்தான் உங்களைத் தூண்டித் தூண்டிக் கேட்டுக்கொண்டு வருகிறேன். இதுவரை என் கேள்விக்குப் பயன் விளையவில்லை."
"இளங்குமரனைப் பற்றி உங்களுக்கு என்ன தெரிய வேண்டுமோ?"
"இதென்ன கேள்வி முனிவரே? என்னென்ன தெரியக்கூடுமோ அவ்வளவும் தெரிந்தால் நல்லதுதான். அந்தப் பிள்ளையை வளர்த்து ஆளாக்கிய உங்களைத் தவிர வேறு யாரிடம் போய் நான் இவற்றையெல்லாம் கேட்கமுடியும்?"
"உடையாரே! ஏதோ ஓர் அந்தரங்கமான எண்ணத்தை மனத்திற் கொண்டு நீங்கள் இளங்குமரனைப் பற்றி விசாரிகிறீர்கள் என்று நினைக்கிறேன். நான் நினைப்பது சரிதானே?"
"ஆமாம் முனிவரே! உங்களுக்குத்தான் எதையும் ஒளித்து மறைத்துப் பேசி வழக்கம். என்னுடைய அந்தரங்கத்தை நீங்கள் இப்போதே தெரிந்து கொள்ளுவதிலும் எனக்கு மறுப்பில்லை. என்னுடைய பெண் முல்லைக்கு இந்தப் பிள்ளையாண்டான் பொருத்தமான கணவனாக இருப்பானென்று வெகு நாட்களாக எனக்கு ஒரு நினைப்பு இருக்கிறது. ஆனால் அந்த நினைப்பு ஒன்றை மட்டுமே தூண்டுதலாகக் கொண்டு அதை நான் செய்து விடுவதற்கில்லை. இளங்குமரனுடைய பிறப்பிலிருந்து எதிர்காலம் வரை ஓரளவு தீர்மானமாகத் தெரிந்துகொண்ட பிறகுதான் முல்லையை அவன் கையில் ஒப்படைக்க நான் துணிய முடியும். இப்படியே இப்போதிருப்பது போல் ஊர் சுற்றும் முரட்டுப் பிள்ளையாக அவன் எப்போதும் இருப்பதானால் முல்லையை இளங்குமரனோடு தொடர்பு படுத்தி நினைப்பதையே நான் விட்டுவிட வேண்டியது தான். செய்யலாமா கூடாதா என்று இந்த எண்ணத்தை மனத்தில் போட்டுக் குழப்பிக் கொண்டிருப்பதனால்தான் உங்களிடம் இளங்குமரனைப் பற்றி அடிக்கடி விசாரிக்க நேர்ந்தது" என்று இந்தச் செய்தியை முனிவரிடம் சொல்லி முடித்த போது மனத்திலிருந்து பாரத்தை இறக்கிவைத்தாற் போலிருந்தது வீரசோழிய வளநாடுடையார்க்கு. அவர் அதற்கு விளக்கமான பதிலை எதிபார்த்து முனிவருடைய முகத்தை நோக்கினார். சிறிது நேரம் முனிவரிடமிருந்து பதில் வரவில்லை. அவர் எதற்கோ சிந்தித்துத் தயங்குவது போலிருந்தது.
"உடையாரே! உங்கள் கேள்விக்கு மறுபடியும் பழைய பதிலைத்தான் கூற வேண்டியிருக்கிறது. சில செய்திகளை இதயத்துக்குள்ளேயே இரண்டாம் முறையாக நினைத்துப் பார்ப்பதற்கும் பயமாக இருக்கிறது. ஒரு மனிதன் உலகத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளுவது ஞானம். ஒரு மனிதனை உலகம் முழுமையாகப் புரிந்துகொள்வது அதிர்ஷ்டம். இளங்குமரன் ஒரு காலத்தில் இவ்விரண்டு பாக்கியங்களையுமே பெறப் போகிறான் என்றாலும் இன்றைக்கு அவன் வெறும் இளைஞன். சக்கரவாளக் கோட்டத்துத் தவச்சாலையிலுள்ள முனிவர் ஒருவரால் வளர்த்து விடப்பட்ட முரட்டுப்பிள்ளை. இதுவரையில் அவனது உடம்பைத் தவிர உள்ளத்தை அதிகமாக வளர்க்க முயலாத நான் இப்போதுதான் சிறிது கலமாக அவன் உள்ளமும் வளர்வதற்கு உரியவைகளைக் கற்பித்துக் கொண்டு வருகிறேன். இவற்றைத்தான் அவனைப் பற்றி இப்போது நான் உங்களிடம் கூறமுடியும்."
"இவற்றில் புதிதாக எந்த உண்மையையும் எனக்கு நீங்கள் கூறவில்லையே, முனிவரே?"
"உண்மை வேறு, வாய்மை வேறு, மெய்ம்மை வேறு, உடையாரே! உள்ளத்துத் தூய்மை உண்மை. சொல்லில் தூய்மை வாய்மை. உடல் ஈடுபட்டு நிகழும் செயலில் தூய்மை மெய்ம்மை. இந்த மூன்றாலும் இளங்குமரனுக்கு ஒருபோதும் நான் தீங்கு நினைத்ததில்லை.
'வாய்மை எனப்படுவது யாதுஎனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்,'
என்றுதான் நம் முன்னோர்கள் வாய்மைக்கு வரையறை வகுத்திருக்கிறார்கள். பிறருக்குத் தீமை தரும் உண்மையைக் கூறுவதும் பொய். பிறருக்கு நன்மை தரும் பொய்யைக் கூறுவதும் வாய்மை! இளங்குமரனைப் பற்றிய சில உண்மைகளை நான் கூறாமல் மறைத்து வருகிறேனென்பதற்குக் காரணம் அந்த உண்மைகள் வெளியாகும்போது அவற்றால் இளங்குமரனுக்கு ஏற்படும் நன்மைகளைக் காட்டிலும் தீமைகள் அதிகமென்பது தான்."
"நான் ஏதோ அந்தப் பிள்ளையைப் பற்றி அவனுக்கு முன்னாலேயே ஏளனமாகப் பேசுகிறேனே என்பதனால் என்னை அவனுக்கு ஆகாதவன் என்று நினைத்து நீங்கள் பயப்பட வேண்டாம் முனிவரே! அந்தரங்கமாக எனக்கு அவன்மேல் நிறைந்த அநுதாபம் உண்டு. இல்லாவிட்டால் என் மகளுக்கு அவனை மணமகனாக்கிக் கொள்ளும் ஆவலை உங்களிடம் கூறியிருப்பேனா, அடிகளே? இளங்குமரன் சோழர் படைக்குழுவிற் சேர்ந்து பெருவீரனாகப் புகழ்மாலை சூடவேண்டுமென்றெல்லாம் எனக்கு ஆசை உண்டு. அந்தப் பிள்ளையின் தோற்றமும் உடலின் வலிமையும் எத்தனையோ பெரிய காரியங்களைச் சாதிக்கும் தகுதி வாய்ந்தவை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன் முனிவரே!"
"அப்படி நீங்கள் உணர்ந்திருப்பது உண்மையானால் அவனைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவலைச் சிறிது காலத்துக்கு அடக்கி வைத்துக் கொள்வதுதான் நல்லது."
"உங்களைப்போல் நிறையப் படுத்த ஞானிகளாயிருப்பவர்களுக்குப் பேசுவதில் ஒரு வசதி இருக்கிறது. எதையும் பிறருக்குப் புரியாமலும், பிறராகப் புரிந்துகொள்ள முடியாமலும் அழகாகப் பேசிவிட முடிகிறது." வீரசோழிய வளநாடுடையார் தம்மைக் குத்திக் காட்டுவது போல் பேசிய இந்தப் பேச்சைக் கேட்ட பின்பும் முனிவர் அமைதியாகவே சிரித்துக் கொண்டிருந்தார். எத்தகைய பேச்சுக்களையும் ஏற்றுத் தாங்கிப் பழகிய அவருக்கு இது பெரிதாக உறுத்தவில்லை. சாதாரணமானவற்றுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டுப் பழக்கமில்லை அவருக்கு.
வீரசோழிய வளநாடுடையாருக்கும் அருட்செல்வ முனிவருக்கும் இன்று நேற்றுப் பழக்கமில்லை. ஆனாலும் அன்று அந்தக் காலை நேரத்துத் தனிமையில் ஒருவருக்கொருவர் ஆழம் பார்க்க முயன்றது இப்படி முடிந்தது. இந்தச் சமயத்தில் வீட்டு வாயிலில் குதிரைகள் வந்து நிற்கும் ஒலி கேட்கவே இருவருடைய பேச்சும் நிற்க நேர்ந்தது. வீரசோழிய வளநாடுடையார் வாயிற்புறம் வந்திருப்பது யாரென்று பார்ப்பதற்காக விரைவாய் எதிர்கொண்டு சென்றார்.
கதக்கண்ணனும் முதல் நாளிரவு அவனுடனே சம்பாபதி வனத்தில் சுற்றிய மற்றோர் ஊர்க்காவலனும் வேறு சில இளைஞர்களும் இல்லத்துக்குள் பரபரப்போடு நுழைந்தார்கள்.
"இராக் காவலை முடித்துக்கொண்டு பொழுதோடு வீட்டுக்குத் திரும்பகூடாதா குழந்தாய்? இப்படிச் சிறிது நேர உறக்கம்கூட இல்லாமல் பொழுது விடிகிறவரை கண் விழித்து ஊர்சுற்றுகிறாயே; உடல் நலம் என்ன ஆவது?" என்று புதல்வனை அன்போடு கடிந்துகொண்டு பேச்சைத் தொடங்கிய வீரசோழிய வளநாடுடையாரை மேலே பேச விடாமல் இடைமறித்து,
"அதெல்லாம் இருக்கட்டும் அப்பா, இப்போது இளங்குமரன் இங்கிருக்கிறானா, இல்லையா? முதலில் அதைச் சொல்லுங்கள்" எனப் பரபரப்போடு விசாரித்தான் அவருடைய அருமைப் புதல்வன் கதக்கண்ணன். அவனுடன் வந்து நின்றவர்களும் அவன் கேட்ட அந்தக் கேள்விக்குத் தம்மிடமிருந்து பதிலை எதிர்பார்த்துப் பரபரப்புக் காட்டுவதை அவர்களுடைய முகச் சாயலிலிருந்து வளநாடுடையார் புரிந்துகொள்ள முடிந்தது.
"உன்னுடைய தங்கை முல்லை அந்தப் பிள்ளையாண்டானைத் துணைக்கு அழைத்துக்கொண்டு பூதசதுக்கத்துக்குப் படையல் இடப் போயிருக்கிறாள். நீ திரும்பி வந்தால் உன்னை இங்கேயே இருக்கச் சொன்னான் இளங்குமரன். அவனுக்கு உன்னிடம் ஏதோ முக்கியமான செய்திகள் பேசவேண்டுமாமே?"
இந்த மறுமொழியை அவர் கூறிவிட்டு எதிரே பார்த்தபோது கதக்கண்ணன் உட்பட, நின்று கொண்டிருந்தவர்களில் ஒருவர்கூட அங்கே இல்லை. வேகமாக ஓடிப்போய்க் குதிரைகளில் தாவி ஏறிக்கொண்டிருந்தார்கள். அடுத்த கணம் வாயிலில் நின்ற குதிரைகள் புறவீதியில் புழுதிப் படலத்தைக் கிளப்பிக் கொண்டு பறந்தன்.
"அப்படி என்ன அவசரம் குடிமுழுகிப் போகிறதோ?" என்று தமக்குள் முணுமுணுத்தபடி வாயிலில் இறங்கிக் குதிரைகள் விரைந்து செல்லும் திசையில் வெறித்து நோக்கினார் அவர்.
கண்மூடித் திறக்கும் நேரத்தில் அந்த நிகழ்ச்சி நடந்து விட்டது. ஓவியன் மணிமார்பன் பயந்துபோய் ஒதுங்கி நின்றான். முல்லை திடுக்கிட்டு அலறினாள். நாலைந்து முரட்டு யவனர்களும் பூதாகாரமான மல்லன் ஒருவனும் இளங்குமரனைச் சூழ்ந்து கொண்டு அவனைத் தாக்குவதற்குத் தொடங்கியிருந்தார்கள்.
"நேற்று மாலை கடற்கரையில் வெற்றி கொண்ட சாமர்த்தியம் இப்போது எங்கே போயிற்று தம்பீ?" என்று கூறி எள்ளி நகையாடிக் கொண்டே இளங்குமரன் மேல் பாய்ந்தான் அந்த மல்லன். இளங்குமரன் கன்னத்தில் அறைந்ததுபோல் பதில் கூறினான், அந்த யவனத் தடியனுக்கு.
"சாமர்த்தியமெல்லாம் வேண்டிய மட்டும் பத்திரமாக இருக்கிறது, அப்பனே! என்னிடம் இருக்கிற சாமர்த்தியத்தை வைத்துக்கொண்டு உனக்கு பதில் சொல்லலாம்; உன்னுடைய அப்பன் பாட்டனுக்கும் பதில் சொல்லலாம். சந்தேகமிருந்தால், தனித் தனியாக என்னோடு மல்லுக்கு வந்து பாருங்கடா. இதோ எதிரே கோவில் கொண்டுருக்கும் சதுக்கப்பூதத்தின் மேல் ஆணையிட்டுச் சொல்லுகிறேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் எத்தனை கடைவாய்ப் பற்கள் என்று எண்ணி உதிர்த்துக் காட்டுவேன். ஆனால் ஐந்தாறு பேராகச் சேர்ந்து கட்சி கட்டிக்கொண்டு வந்து இப்படி முதுகுக்குப் பின்னால் நின்று கொண்டு கையைத் தட்டி விடுகிற செயலைத் தமிழர்கள் வீரமென்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள். கோழைத்தனம் என்பதைவிடக் கேவலமான வார்த்தை வேறொன்று இருந்தால் அதைத்தான் உங்கள் செயலுக்கு உரியதாகச் சொல்ல வேண்டும்."
"சொல்! சொல்! நீ எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டிரு. உன் கை, கால்களை முறித்துப் போடாமல் இங்கிருந்து நாங்கள் கிளம்பப் போவதில்லை."
இப்படி அவர்கள் அறைகூவவும் பதிலுக்கு இளங்குமரன் அறைகூவவும் இருபுறமும் பேச்சு தடித்துக் கைகலப்பு நெருக்கமாகிக் கொண்டிருந்தபோது அவர்களைச் சுற்றிக் கூட்டமும் கூடத் தொடங்கிவிட்டது. இடமோ கலகலப்பு மிகுந்த நாளங்காடிப் பகுதி. காலமோ இந்திர விழாக் காலம். கூட்டம் கூடுவதற்கு என்ன குறை? இந்நிலையில் கையில் படையலிட்டு வந்த பொருள்களடங்கிய பாத்திரத்துடனே இருந்த முல்லை மருட்சியோடு என்ன செய்வதென அறியாது திகைத்துப் போய் நின்றாள். தாக்குவதற்கு வந்தவர்கள் கொதிப்புடனும் அடக்க முடியாத ஆத்திரத்துடனும் வந்திருப்பதாகத் தெரிந்தது. அவர்களுடைய முரட்டுப் பேச்சுக்குச் சிறிதும் தணிந்து கொடுக்காமல் இளங்குமரனும் எடுத்தெறிந்து பேசுவதைக் கண்டபோது முல்லைக்கு இன்னும் பயமாக இருந்தது.
'புறப்படும்போது தந்தையார் எச்சரிக்கை செய்தது எவ்வளவு பொருத்தமாக முடிந்துவிட்டது. இவரைக் கூட்டிக்கொண்டு வந்தால் இப்படி ஏதாவது நேருமென்று நினைத்துத்தானே தந்தை அப்படிக்கூறினார்' என்று நினைத்துப் பார்த்தது அவள் பேதை மனம்.
வரைந்து கொண்டிருந்த ஓவியத் திரைச்சீலையை மெல்ல சுருட்டிக் கொண்டு பயந்தாங்கொள்ளியாக ஒதுங்கியிருந்த ஓவியன் மணிமார்பன் 'கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமற் போகுமோ' என்பது போல நம்பிக்கை இழந்து நின்றான்.
'இந்த முரட்டு மனிதரின் பிடிவாதத்தை இளக்கி ஒரு விதமாகப் படம் எழுதிக்கொள்ளச் சம்மதம் பெற்றேன். நூறு பொற் கழஞ்சுகளை அந்தப் பெண்ணிடம் பெற்று விடலாம் என்று ஆசையோடு ஓவியத்தை வரைந்து நிறைவேற்றப் போகிற சமயம் பார்த்து இப்படி வம்பு வந்து சேர்ந்ததே' என்று நினைத்துத் தளர்ந்து கொண்டிருந்தான் மணிமார்பன். தனக்கு எட்டி குமரன் வீட்டு நங்கையிடமிருந்து கிடைக்கவிருக்கும் பெரிய பரிசை அவ்வளவு எளிதாக இழந்துவிட விரும்பவில்லை அந்த ஏழை ஓவியன். 'இந்த மாபெரும் கோநகரத்தில் எனக்கு எதிரிகளும் வேண்டாதவர்களும் நிறையப் பேர் இருக்கிறாரகள்' என்று தன்னால் ஓவியமாக்கப்பட்டுக் கொண்டிருந்தவர் அதற்குச் சிறிது நேரத்துக்கு முன் தன்னிடம் கூறியிருந்த வார்த்தைகளை மீண்டும் நினைத்துப் பார்த்தான் மணிமார்பன். அவரைக் காப்பாற்றவும், தனக்குப் பரிசு சிடைக்கும் சந்தர்ப்பம் நழுவிப் போகாமல் காப்பாற்றிக் கொள்ளவும் ஏற்ற வழியொன்று அந்தக் குழப்பமான சூழ்நிலையில் மணிமார்பனுக்குத் தோன்றியது. பயந்து நிற்கும் இந்தப் பெண்ணோடுதான் அவர் நாளங்காடிக்கு வந்தார். வழிபாடு முடிந்ததும் இந்தப் பெண் அவருக்கும் எனக்கும் எள்ளுருண்டை கொண்டு வந்து கொடுத்தபோதுதான் இந்த வம்பே ஆரம்பமாயிற்று. ஆயினும் இப்போது இந்தச் சூழ்நிலையிலே என்னைப் போலவே இவளும் அவருக்கு ஓர் உதவியும் செய்ய இயலாமல் பயந்தாற்போல் நிற்கிறாள். ஆனால் அவருடைய ஓவியத்தை வரைந்துகொண்டு வந்து தந்தால் நூறு கழஞ்சு பொன் தருகிறேன் என்று சொன்னாலே, அந்தப் பேரழகியால் இப்போது அவரைக் காப்பாற்ற முடியும். பல்லக்குச் சுமக்கிறவர்களும் படையற் பொருள்களைச் சுமக்கிறவர்களுமாக அவளோடு நிறைய ஏவலாட்கள் வந்திருக்கிறார்கள். அவளிடம் சொல்லி அந்த ஏவலாட்களில் பத்துப் பன்னிரண்டு பேரை அழைத்து வந்தால் இங்கே நம் மனிதரை எதிர்க்கும் முரட்டு யவனர்களை ஒட ஓட விரட்டாலாமே?" என்று மனத்தில் ஓர் உபாயம் தோன்றியது அந்த ஓவியனுக்கு.
உடனே அந்த உபாயத்தைச் செயலாக்கும் நோக்குடன் கூட்டத்தை மெல்ல விலக்கிக்கொண்டு எட்டி குமரன் வீட்டுப் பேரழகியைத் தேடி விரைந்தான் அவன். அப்படி விரைந்து புறப்படுமுன் இளங்குமரனுடன் நாளங்காடிக்கு வந்திருந்த அந்தப் பெண்ணையும் உடனழைத்துச் செல்லலாம் என்று எண்ணி அவள் நின்ற இடத்தைப் பார்த்தான் மணிமார்பன். அவளைக் கூட்டத்தின் முன்புறம் காணவில்லை. கணத்துக்குக் கணம் நெருங்கிக் கொண்டு பெருகிய கூட்டம் அவளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டதோ என்னவோ? தானே எட்டி குமரன் வீட்டுப் பேரழகியைக் காணப்புறப்பட வேண்டியது தான் என்ற முடிவுடன் புறப்பட்டான் ஓவியன். அவள் தன் வேண்டுகோளுக்கு இணங்கித் தன் ஆட்களை உதவிக்கு அனுப்புவாள் என்றே உறுதியாக நம்பினான் அவன். அவனுடைய நம்பிக்கை வீண் போகவில்லை. அவன் ஓவியம் கொண்டு வந்து தரப்போவதை எதிர்பார்த்துத் தன் ஏவலர்கள் புடைசூழப் பல்லக்கில் காத்திருந்தாள் அவள். ஓவியன் பதற்றத்துடனே அவசரமாக வந்து கூறிய செய்தியைக் கேட்ட போது அவளது அழகிய முகம் கோபத்தால் மேலும் சிவந்தது. உடனே ஏவலாட்களை அந்த இடத்துக்கு விரைந்து போய் அவருக்கு உதவச்சொன்னதோடு அல்லாமல் தன்னுடைய பல்லக்கையும் அந்த இடத்துக்குக் கொண்டு போகும்படி கட்டளையிட்டாள் அவள். தன் நினைவு பலித்தது என்ற பெருமிதத்துடன் உதவிக்கு வந்த ஏவலாட்களை அழைத்துக்கொண்டு வேகமாக முன்னேறினான் மணிமார்பன். இதற்கிடையில் அந்த ஓவியனுக்கு இன்னொரு சந்தேகம் ஏற்பட்டது, 'அந்த மனிதர் பிடிவாதக்காரர் ஆயிற்றே; 'பிறருடைய உதவி எனக்குத் தேவையில்லை' என்று முரண்டு பிடித்து மறுப்பாரோ’ என மணிமார்பன் சந்தேகமுற்றான்.
ஆனால் சிறிது பொறுத்துப் பார்த்தபோது தான் நினைத்திராத பேராச்சரியங்கள் எல்லாம் அங்கே நிகழ்வதை மணிமார்பன் கண்டான். செல்வத்துக்கும் செல்வாக்குக்கும் எவ்வளவு மதிப்பு உண்டு என்பது அன்று அங்கே அவனுக்குத் தெரிந்தது. அந்த எழிலரசியின் பல்லக்கு வந்து நின்றதைப் பார்த்ததுமே தாக்குவதற்கு வந்திருந்த யனவர்களில் மூவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஓடிவிட்டார்கள். அவள் பல்லக்கிலிருந்து கீழே இறங்கி வருவதைக் கண்ணுற்றதுமே இளங்குமரனைச் சூழ்ந்து தாக்கிக் கொண்டிருந்த மற்ற நான்கு யவனர்களும் தாக்குவதை நிறுத்திவிட்டு அவளை நோக்கி பயபக்தியோடு ஓடி வந்தார்கள். வணங்கிவிட்டு அவளுக்கு முன் கைகட்டி வாய் பொத்தி நின்றார்கள்.
"அடடா இந்தத் தடியர்கள்தானா?" என்று ஓவியன் மணிமார்பனை நோக்கிக் கேட்டுவிட்டு அலட்சியமாகச் சிரித்தாள் அந்தப் பேரழகி. ஒரு கையை இடுப்பில் ஊன்றிக் கொண்டு வனப்பாக அவள் வந்து நின்ற நிலையும் தன்னைத் தாக்கிய முரடர்கள் அவளைப் பணிந்து நிற்பதும் கண்டபோது இளங்குமரனுக்கு முதலில் திகைப்பும் பின்பு எரிச்சலும் உண்டாயிற்று. 'ஒருவேளை அவளே அவர்களை ஏவித் தன்னைத் தாக்கச் சொல்லியிருக்கலாமோ' என்று ஒருகணம் விபரீதமானதொரு சந்தேகம் இளங்குமரனுக்கு ஏற்பட்டது. நிகழ்ந்தவற்றைக் கூட்டி நிதானமாக சிந்தித்துப் பார்த்த போது 'அவள் அப்படிச் செய்திருக்க முடியாது. முதல்நாள் மாலை கடற்கரையில் நடந்த மற்போரில் தன்னிடம் தோற்று அவமானமடைந்த யவன மல்லந்தான் தன்னை இப்படித் தாக்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும்' என்று தோன்றியது அவனுக்கு.
இளங்குமரனுக்குக் கேட்கவெண்டுமென்றே பேசுகிறவள் போல் இரைந்த குரலில் மணிமார்பனைப் பார்த்துக் கூறலானாள் அவள்: "ஓவியரே! நான் இங்கே வந்து நின்றதுமே இந்த ஆச்சரியங்கள் நிகழ்வதைப் பார்த்து எனக்கு ஏதேனும் மந்திரசக்தி உண்டோ என்று வியப்படையாதீர்கள். காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்திலிருந்து யவனம் முதலிய மேற்குத் திசை நாடுகளுக்குச் செல்லும் பெரிய பெரிய கப்பல்கள் எல்லாம் என் தந்தையாருக்குச் சொந்தமானவை. பட்டினப் பாக்கத்தில் எங்கள் மாளிகைக்கு முன்புறம் நடந்துபோகும் போதுகூட இந்த யவனர்களில் பலர் செருப்பணிந்த கால்களோடு செல்வதற்குக் கூசுவார்கள். எங்கள் குடும்பம் என்றால் இவர்களுக்கு மதிப்புக்குரிய தெய்வ நிலையம் போல் பணிவும் அன்பும் உண்டாகும். நான் சுட்டு விரலை அசைத்தால் அதன்படி ஆடுவார்கள் இந்த தடியர்கள். நீங்கள் அவருடைய ஓவியத்தை எங்கள் மாளிகையில் வந்து வரையலாம். அவரைத் தாக்க வந்த இதே ஆட்களை உங்களையும் அவரையும் பல்லக்கில் வைத்து எங்கள் மாளிகைவரை தோள் வலிக்க சுமந்துவரச் செய்கிறேன், பார்க்கிறீர்களா?" என்று ஓவியனிடம் கர்வமாகக் கூறிவிட்டு அந்த யவனர்களை இன்னும் அருகில் அழைத்து ஏதோ கட்டளையிட்டாள் அவள்.
உடனே அவர்கள் ஓடிப்போய் எங்கிருந்தோ இன்னொரு பல்லக்கைக் கொண்டு வந்து வைத்தார்கள். "நீங்களும் உங்கள் நண்பரும் ஏறிக் கொள்ளலாம்" என்று சிரித்துக்கொண்டே பல்லக்கைச் சுட்டிக் காட்டினாள் அவள். முதல்நாள் மாலை கடற்கரையில் மணிமாலை பரிசளிக்க வந்ததிலிருந்து தொடர்ந்து தன் வாழ்வில் குறுக்கிடும் அந்த அழகியைச் சற்றே வெறுப்போடு பார்த்தான் இளங்குமரன். அவள் வந்து நின்றதும் சுற்றியிருந்தவர்கள் பரபரப்படைந்து பேசிக் கொண்டதிலிருந்து அவளுடைய பெயர் 'சுரமஞ்சரி' என்பதை அவன் தெரிந்து கொண்டிருந்தான். அவ்வளவு பெரியகூட்டத்தில் தன்னுடைய ஆற்றலால் தான் எதிரிகளை வெல்ல முடியாத போது அவளே வந்து அபயமளித்துக் காத்ததுபோல் மற்றவர்கள் நினைக்க இடம் கொடுத்தது அவனுக்கு வருத்தமாக இருந்தது. தான் பெருமையடித்துக் கொண்ட மாபெரும் தன்மானம் அந்த நாளங்காடி நாற்சந்தியில் அவளால் சூறையாடப்பட்டதை அவன் பொறுத்துக் கொள்ள முடியாமல் தவித்தான்.
ஆத்திரம் தீர அந்தப் பெண்ணை அலட்சியமாகப் பேசி விட்டுப் பக்கத்திலிருக்கும் ஓவியன் கையிலுள்ள அரைகுறை ஓவியத்தையும் கிழித்தெறிந்து விடவேண்டும் போல் இளங்குமரனுக்குச் சினம் மூண்டது. ஆனால் அந்த ஏழை ஓவியனுக்கு நூறு பொற் கழஞ்சுகள் கிடைக்கச் செய்வதாகத் தான் வாக்களித்திருந்ததை நினைத்துத் தன் சினத்தை அவன் அடக்கிக்கொள்ளவேண்டியதாயிற்று. எனவே பொறுமையாக ஓவியனோடு பல்லக்கில் ஏறி உட்கார்ந்தான் அவன். அவளுடைய பல்லக்கைத் தொடர்ந்து அவன் பல்லக்கும் பட்டினப் பாக்கத்துக்குள் இருக்கும் எட்டிப் பட்டம் பெற்ற பெருநிதிச் செல்வரின் மாளிகைக்கு விரைந்தது.
ஆனால் அப்படிப் பல்லக்கில் ஏறிப் புறப்படுமுன் முக்கியமான செயல் ஒன்றை அவன் நினைவுகூரவே இல்லை. திடீரென்று அங்கு நடந்த குழப்பங்களால் தான் முல்லையை உடனழைத்து வந்ததையே இளங்குமரன் மறந்து போயிருந்தான்.
நாளங்காடி பூத சதுக்கத்தில் இளங்குமரனுக்கும் அவனைத் தாக்க வந்தவர்களுக்கும் போர் நடந்தபோது பெருகிவந்த கூட்டத்தினால் நெருக்குண்டு பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்த முல்லை, கூட்டம் கலைந்ததும் அருகில் வந்து பார்த்தாள். இளங்குமரனுக்கு என்ன நேர்ந்திருக்குமோ என்று பதறித் துடித்துக் கொண்டிருநதது அவள் மனம். ஓவியன் ஓடிப்போய் இளங்குமரனுக்கு உதவும் நோக்கத்துடன் யாரோ ஆட்களை அழைத்து வந்ததும் பல்லக்குகள் கூட்டத்தை விலக்கிக்கொண்டு உட்புகுந்ததும் அவளுக்குத் தெரியாது. அதனால் அதன் பின் என்ன நிகழ்ந்ததென்பதை அவள் தெரிந்துகொள்ள முடியாமல் கூட்டத்தினர் அவளைப் பின்புறம் தள்ளி விலக்கியிருந்தனர்.
கூட்டம் ஒருவாறு கலையத் தொடங்கியபோது தான் முன்னுக்குப் போய் அவர்களுக்குள் தாக்குதல் நடந்த பகுதியில் இளங்குமரனைக் காணலாமென்றதவிப்பு அவளுக்கு உண்டயிற்று. ஆனால் உரிய இடத்துக்கு வேகமாகச் சென்று பார்த்தபோது தன் தவிப்புக்கும் ஆவலுக்கும் பயன் இல்லை என்று அவள் தெரிந்து கொண்டாள்.
அங்கே இளங்குமரனைக் காணவில்லை. அவனைப் படம் வரைந்து கொண்டிருந்த ஓவியனையும் காணவில்லை. 'அதற்குள் எங்கே போயிருப்பார்கள் இவர்கள்?' என்ற திகைப்புடன் அவள் நின்றபோது அந்த இடத்திலிருந்து பல்லக்குகள் இரண்டு புறப்படுவதைக் கண்டாள். பல்லக்குகளைச் சுற்றி வெண்சாமரங்கள், பட்டுக்குடைகள், ஆலவட்டங்கள், மயிற்கண் பீலி பதித்த தோரணம் இவற்றைத் தாங்கிய ஏவலாட்கள் பணிவாக நின்று கொண்டிருந்தனர். முதற் பல்லக்கைப் பின்தொடர்கிறாற்போல் சென்ற இரண்டாவது பல்லக்கைக் கண்டதும் முல்லைக்கு வியப்பு ஏற்பட்டது. அந்தப் பல்லக்கைச் சுமந்து கொண்டிருந்தவர்கள்தாம் சற்றுமுன் இளங்குமரனோடு சண்டைக்கு வந்த யவனர்கள் என்பதை மிக எளிதாக அடையாளம் கண்டுகொண்டாள் அவள். அதைப் பார்த்ததும் முதலில் அவள் மனம் வீணாக பயங்கரங்களை நினைத்தது. 'இளங்குமரனை அடித்துத் தாக்கி இந்தப் பல்லக்கில் தூக்கிப் போட்டுக் கொண்டு இவர்கள் போகிறார்களோ' என்று நினைத்து மனம் கொதித்தாள் அவள். ஆனால் அப்படி இல்லை என்பது பக்கத்திலிருந்தவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து அவளுக்குத் தெரிந்தது. அடுத்த சில விநாடிகளில் பல்லக்கைச் சூழ்ந்திருந்தவர்கள் சிறிது விலகியதால் இளங்குமரனே அதற்குள் உட்கார்ந்திருப்பதை அவள் பார்த்துவிட்டாள். ஆனால் இளங்குமரனுடைய பார்வை அவள் நின்று கொண்டிருந்த பக்கமாகத் திரும்பவே இல்லை. அவ்வளவில் பல்லக்குகள் விரைந்து செல்லத் தொடங்கியதால் முல்லையின் பார்வையிலிருந்து இளங்குமரன் மறைந்தான். அவளுடைய இதழ்களிலிருந்து முறுவல் மறைந்தது. முகத்திலிருந்து மலர்ச்சி மறைந்தது. நெஞ்சிலிருந்து உற்சாகம் மறைந்தது. எதற்காகவோ இளங்குமரன் மேல் பெரிதாகக் கோவித்துக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது அவளுக்கு. அதே சமயத்தில் அப்படிக் கோபித்துக்கொள்வது எதற்காக என்றும் அவளாலேயே மனத்தில் காரணகாரியத்தை இணைத்துப் பார்க்க முடியவில்லை.
பல்லக்குகள் வெகுதூரம் முன்னுக்குப் போய்விட்டன். பல்லக்குச் சுமப்பவர்கள் சுமை உறுத்துவது தெரியாமலிருப்பதற்காகப் பாடிக்கொண்டு சென்ற ஒருவகைப் பாடல் ஒலி மெல்ல மெல்லக் குரல் நைந்து அவள் செவியில் கேட்டுக் கொண்டிருந்தது.
அப்பொழுதே நாளங்காடியின் இந்திரவிழா ஆரவாரங்களும் அழகும் திடீரென்று இருந்தாற் போலிருந்து குறைபட்டுப் போனது போலிருந்தது முல்லைக்கு. 'இளங்குமரனின் ஓவியத்தை வரைந்து கொள்வதற்காக எட்டி குமரன் வீட்டுப் பேரழகி சுரமஞ்சரி இளங்குமரனையும் ஓவியனையும் முரடர்களிடமிருந்து காப்பாற்றிப் பல்லக்கில் தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போகிறாளாம்’ என்று பக்கத்தில் கூட்டமாக நின்று கொண்டிருந்தவர்கள் தன்னிடம் கூறிய செய்தியைச் செவிகள் வழியே வாங்கி நெஞ்சில் ஏற்றுக்கொண்டு தாங்குவதற்கு வேதனையாயிருந்தது அவளுக்கு.
வீட்டிலிருந்து புறப்படும்போது 'இந்தப் பிள்ளையாண்டானைத் துணைக்குக் கூப்பிடுகிறாயே முல்லை! இவன் ஊர் சுற்றும் முரடனாயிற்றே! இல்லாத வம்புகளையெல்லாம் இழுத்துக் கொண்டு வருவானே!' என்பதைத் தந்தையார் எவ்வளவு குறிப்பாகச் சொன்னார். நான் அப்போதே தந்தையார் சொல்லிய குறிப்பைப் புரிந்து கொள்ளாமல் போனேனே! இந்த நாளங்காடி நாற்சந்தியில் திருவிழாக் கூட்டத்தில் நான் ஒருத்தி கூட வந்திருப்பது நினைவில்லாமல் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிக் கொண்டாவது போகவேண்டுமே என்றும் எண்ணாமல் யாரோ ஒருத்தி கூப்பிட்டாளென்று பல்லக்கில் ஏறிக்கொண்டு போயிருக்கிறாரே! எவ்வளவு இறுகிப் போயிருக்க வேண்டும் இவர் மனம்?' என்று நினைந்து வருந்தினாள் முல்லை. இளங்குமரன் என்னும் எழில் வெள்ளம் தனக்கே சொந்தம்போல் தன்னோடு பாய்ந்து வந்த ஒரே காரணத்தால் நாளங்காடிக்கு வருகிறபோது கர்வப்பட்டுக் கொண்டிருந்தாள் முல்லை. இப்போது அந்த கர்வத்தை அவள் படுவதற்கில்லை. படவும் முடியாது. அவளுக்குக் கிடைத்த அந்த கர்வத்தில் பெருமையடையும் உரிமைக்குப் போட்டியிடப் பெருநிதிச் செல்வர் வீட்டுப் பெண்ணொருத்தியும் வந்து விட்டாள் போலும்! இளங்குமரனின் முகமும், கண்களும், தோற்றமும் அத்தகைய சிறப்பு வாய்ந்தவை. அவன் எவர் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாலும், எவரோடு பேசிக் கொண்டிருந்தாலும், எவரோடு நடந்து கொண்டிருந்தாலும் அப்படி நிற்கப் பெற்றவர்களுக்கும், பேசப்பெற்றவருக்கும், நடக்கப் பெற்றவர்க்கும் தான் உடனிருக்கிறோம் என்பதையே ஒரு பெருமையாக நினைத்து மகிழும் கர்வத்தை அளிக்கும் பேரெழில் தோற்றம் இளங்குமரனுக்கு இருந்தது. அதனாலேயே காவிரிப்பூம்பட்டினத்தில் அவனுக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். அதனாலேயே நண்பர்களைக் காட்டிலும் நிறைய விரோதிகளும் இருந்தார்கள். ஒரு மனிதனுடைய இணையற்ற அழகு இந்த இரண்டையுமே விளைவித்துக் கொண்டிருந்தது. இதைத் தவிரத் தானே தெரிந்துகொள்ள முடியாத பல காரணங்களாலும் தன்னை அழித்துவிடத் துடிக்கும் எதிரிகளும் இருக்கிறார்கள் என்பதை முன்னாள் இரவு சம்பாபதி வனத்தில் நடந்தவற்றால் அவன் தெரிந்து கொள்ள முடிந்திருந்தது. தன்னுடைய வாழ்க்கை சில சமயங்களில் தனக்கே பெரும்புதிராக இருப்பதையும் அவன் உணர்ந்திருந்தான்.
காலைப்போது தளர்ந்து பகல் வளர்ந்துகொண்டிருந்தது. தனக்குப் புதியதும் அடர்த்தி நிறைந்ததுமான காட்டுப் பகுதிக்கு வழி தப்பி வந்துவிட்ட மான்குட்டியைப்போல் நாளங்காடிக் கூட்டத்தில் நின்று கொண்டிருந்தாள் முல்லை. துணைக்குத் தன்னோடு வந்தவன் இன்னொருத்தியோடு துணையாகப் போய் விட்டான் என்பதை நினைக்கும் போது அவளுக்கு ஏக்கமும் ஆற்றாமையும் இணைந்து உண்டாயின. புறவீதியையும் அதனோடு சார்ந்த புறநகரப் பகுதிகளையும் தவிரப் பட்டினப்பாக்கம், நாளங்காடி போன்ற கலகப்புமிக்க அந்நகர்ப் பகுதிகளுக்கு அவள் துணயின்றித் தனியாக வருவதற்கு நேர்ந்ததில்லை. தந்தையோ தமையனோ துணையாக வரும்போதுதான் பூம்புகாரின் ஆரவார மயமான அகநகர்ப்பகுதிகளுக்குள் அவள் வந்து போயிருக்கிறாள். சாதாரண நாட்களிலேயே கூட்டத்துக்குக் குறைவிருக்காது. தனியாக வந்தால் வழி மயங்குவதற்கும், வழி தவறுவதற்கும், வேறு தொல்லைகளுக்கும் ஆளாக நேரிடுமோ என்று அஞ்ச வேண்டிய அகநகரிலும் நாளங்காடியிலும் கோலாகலமாக இந்திர விழாக் காலத்தில் கேட்கவா வேண்டும்? முல்லை சோர்ந்த விழிகளால் நான்கு பக்கமும் திரும்பிப் பார்த்தாள்.
கண்ணுக்கெட்டியதூரம் கடைகளும் மக்கள் நெருங்கிய கூட்டமும், பாட்டும், கூத்தும், யானைகள், குதிரைகள், தேர்கள், சிவிகைகள் போன்ற ஊர்திகளும், அவற்றின் தோற்றம் முடிகிற இடத்தில் ஆரம்பமாகும் நெடுமரச் சோலைகளும் பரந்து விரிந்து தோன்றின. செவிகளிற் கலக்கும் விதவிதமான ஒலிகள். செவிகளைக் கலக்கும் வேறு வேறு பேச்சுக் குரல்கள். கண்ணிற் கலக்கும் பலவிதக் காட்சிகள். கண்ணைக் கலக்கும் அளவிலடங்காத காட்சிக் குவியல்கள். எதையும் தனியாகப் பிரித்துக் காணமுடியாத காட்சி வெள்ளம்! எதையும் தனியாகப் பிரித்த உணர முடியாத ஒலிவெள்ளம்! எதையும் தனியாகப் பிரித்து உணர முடியாத பரபரப்பான நிலை!
தனக்கு எதிர்ப்பக்கத்தே அருகிலிருந்த மரங்களில் கட்டப்பட்டிருந்த யானைகளுக்குக் கரும்பு ஒடித்துக் கொடுக்கும் பாகர்களைப் பார்த்தாள் முல்லை. துதிக்கையை நீட்டிப் பாகர்களிடமிருந்து கரும்புக் கழிகளை வாங்கி வாய்க்குக் கொண்டுபோய் அரைத்துச் சாறு பருகும் அந்தப் பெரிய பெரிய யானைகளை வேடிக்கை பார்ப்பதுபோல் பார்த்தாள் அவள். அவளுக்கு அந்தக் காட்சியைத் தன் நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது. இளங்குமரனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு நாளங்காடிக்கு வருகிறபோது கரும்பின் இனிய சாற்றைப் பருகுவது போல நெஞ்சில் மெல்லிய நினனவுகளைச் சுவைத்துக் கொண்டுவந்தாள் அவள். இப்போதோ சுவைத்து முடித்த பின் எஞ்சும் சக்கையைப் போல் சாரமற்ற நினைவுகள் அவள் மனத்தில் எழுகின்றன. யானைவாய்க் கரும்புபோல தனது இனிய நினைவுகளுக்குக் காரணமானதை எட்டி குமரன் வீட்டு நங்கை கொள்ளை கொண்டு செல்வதை அவள் உணர்ந்தாள்.
பார்வைக்கு இலக்கு ஏதுமின்றிப் பராக்குப் பார்ப்பது போல நாளங்காடியின் ஒருபுறத்தில் நின்று நோக்கிக் கொண்டிருந்த முல்லைக்கு முன்னால் குதிரைகள் வந்து நின்றன. அவளண்ணன் கதக்கண்ணனும் அவனோடு வந்த மற்றவர்களும் தத்தம் குதிரைகள் மேலிருந்து கீழே இறங்கினார்கள்.
"முல்லை! இதென்ன? இப்படிப் பராக்குப் பார்த்துக் கொண்டு இங்கே நிற்கிறாய்! உன்னோடு துணைக்கு வந்த இளங்குமரன் எங்கே போனான்? படையல் வழிபாடு எல்லாம் முடிந்ததோ இல்லையோ?" என்று ஆவலுடனும் அவசரமாகவும் விசாரித்துக் கொண்டே முல்லைக்கு அருகே வந்து நின்றான் கதக்கண்ணன். அவனுடன் குதிரைகளில் வந்த மற்றவர்களும் அடக்க ஒடுக்கமாகப் பக்கத்தில் நின்றார்கள்.
அந்த நேரத்தில் தன் அண்ணனை அங்கே கண்ட பின்பும் முல்லையின் முகத்தில் மலர்ச்சி பிறக்கவில்லை. இதழ்களில் நகை பிறக்கவில்லை. நாவிலிருந்து 'வாருங்கள் அண்ணா' என்பது போலத் தமையனை வரவேற்கும் மகிழ்ச்சி தழுவிய வார்த்தைகளும் பிறக்கவில்லை.
மறுபடியும் அவள் தமையன் அவளைக் கேட்கலானான்:
"இளங்குமரன் எங்கே முல்லை? உன்னை இங்கே தனியாக விட்டுவிட்டு ஊர் சுற்றப் போய் விட்டானா?"
"நான் அவரை எனக்குத் துணையாகக் கூட்டிக் கொண்டு வந்ததே தப்பு அண்ணா! புறப்படும் போது அவரைக் கூட்டிக் கொண்டு போக வேண்டாமென்று அப்பா சொன்னார். நான் அதையும் மீறி அவரைக் கூட்டிக்கொண்டு வந்ததற்கு எனக்கு நன்றாகப் பாடம் கற்பித்துவிட்டார். அவர் என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே போய்விட்டார் அண்ணா!"
"என்ன நடந்தது முல்லை? நடந்தவற்றைச் சுருக்கமாகச் சொல். நாங்கள் மிக அவசரமான முக்கிய காரியத்துக்காக இளங்குமரனைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறோம். உடனே அவனைப் பார்க்க வேண்டும். இந்தச் சமயத்தில் பார்த்து நீயும் அவன்மேல் உன்னுடைய கோபதாபங்களைக் காட்டிக் கொண்டிருந்தால் என்ன செய்வது?"
இப்படித் தன்னை நோக்கிக் கூறிய தமையன் கத்க்கண்ணனின் முகத்தை நன்றாக உற்றுப் பார்த்தாள் முல்லை.
வீரக்களை சுடர் பரப்பும் அந்த முகத்திலும், கண்களிலும், பார்வையிலும், பேச்சிலும் 'அவசரம் அவசரம்' என்று தவித்துப் பறக்கும் ஓருணர்வு முந்திக்கொண்டு நின்றது.
இன்பங்களும், வசதிகளும், கோநகரப் பெருவாழ்வின் சுகபோகங்களும் ஒன்றுகூடி நிறைவு பெற்ற பட்டினப்பாக்கத்து வீதிகளின் வழியே இளங்குமரன் அமர்ந்திருந்த ப்ல்லக்கைச் சுமந்து சென்றார்கள். கரையகன்ற ஆறுபோல் வழியகன்ற பெரு வீதிகளின் இருபுறமும் உயர்ந்த மாடங்களோடு கூடிய மாளிகைகள் தோன்றின. பொதிய மலைக்கும் இமயமலைக்கும், பழைமையான பூம்புகார் நகரத்துக்கும் அடுக்கடுக்காக வளங்கள் பெருகுவ தல்லது ஒடுக்கமோ நடுக்கமோ நிகழ்வதில்லை என்று சான்றோர்கள் புகழ்ந்து பாடியிருப்பதை உறுதிப்படுத்துவது போல் காட்சியளித்தன பட்டினப்பாக்கம் என்னும் அகநகரத்து அழகுகள். போகங்கள் பெருகிப் புகழ் நிலைபெறும் பூம்புகாரின் வளங்களெல்லாம் சேர்ந்து திகழும் செல்வம் மலிந்த பாக்கம் இது. திருமகள் விரும்பி உறையும் பொன்னான பகுதியும் இதுதான்.
அரசி, அமைச்சர்கள், ஐம்பெருங்குழுவினர், எண்பேராயத்தார் அளவிலடங்காத செல்வம் படைத்த வணிகர்கள், மறையோர்கள் முதலியோரெல்லாம் இந்தப் பட்டினப்பாக்கத்து வீதிகளில்தான் வசித்து வந்தார்கள். பெரு நிலக்கிழாராகிய வேளாளர்கள், மருத்துவர்கள், சோதிடர்கள் போன்றோரும் பட்டினப்பாக்கத்து வாசிகளேயாவர். பெருவீதிகளின் திருப்பங்களில் எல்லாம் வண்ண வண்ணக் கொடிகள் பறக்கும். தேர்கள் அங்கங்கே அழகுற அலங்கரிக்கப் பெற்று நின்றன. தங்கள் இல்லங்களில் நிகழவிருக்கும் மண விழாக்களுக்கோ, வேறு பல மங்கல நிகழ்ச்சிகளுக்கோ பிறரை அழைக்கச் செல்லும் பெருஞ் செல்வ நங்கையர்கள் யானைகள் மேல் அம்பாரிகளில் அமர்ந்து மணிகள் ஒலிக்குமாறு சென்று கொண்டிருந்தனர். வீரர்களும், வேறு பலரும் அலங்கரிக்கப் பெற்ற குதிரகளில் ஏறி வீதிகள் நிறையச் சென்று கொண்டும், வந்து கொண்டும் இருந்தனர். எல்லா இடங்களிலும் அகன்றும், ஒரே அளவாயும் இருந்த வீதிகளில் விண்தொட நிமிர்ந்த வியன்பெரு மாளிகைகளின் மேல் மாடங்களிலிருந்து கிளிகளும், மணிப் புறாக்களும் பறந்து செல்வதும், வந்து அமர்வதுமாகக் காட்சியளித்தன. பட்டினப்பாக்கத்து வீதிகளுக்கு இயற்கையாகவே பொருந்தியிருந்த இந்த அழகுகளை இந்திர விழாவும் வந்து சேர்ந்து இருமடங்காக்கியிருந்தது. வீதிகளில் எல்லாம் விழாவுக்காகப் பழைய மணல் மாற்றிப் புதுமணல் பரப்பியிருந்தார்கள். வாழையும் கமுகும் கரும்பும் நாட்டி வஞ்சிக் கொடிகளையும் மற்றும் பல பூங்கொடிகளையும் தோரணமாகக் கட்டியிருந்தார்கள். மங்கல நிறை குடங்களும் வைக்கப்பட்டிருந்தன. வீட்டு முன்புறத் தூண்களில் ஒளிக்கதிர் விரித்துக் குளிர் சுடர் பரப்பும் முத்துமாலைச் சரங்களைத் தோரணங்களாகக் கட்டியிருந்தார்கள். சில இடங்களில் சித்திரப் பந்தல்களும் போட்டிருந்தார்கள்.
மாரிக்காலத்தே புதுவெள்ளம் வந்த ஆறுபோல் வீதிகள் நிறைவாகவும், கலகலப்பாகவும் இருந்தன். ஆனால் பல்லக்கில் அமர்ந்திருந்த இளங்குமரன் உள்ளத்தில் இவற்றையெல்லாம் பார்க்கப் பார்க்கத் தாழ்வுணர்ச்சிதான் அதிகமாயிற்று. அவனுக்கு எதிரே வீற்றிருந்த ஓவியனோ அரும்பெரும் புதையலைக் கண்டெடுத்த ஏழைபோல் பல்லக்குக்கு வெளியே தலையை நீட்டிப் பார்த்து மகிழும் தாகத்தோடு வீதிகளை கவனித்துக் கொண்டிருந்தான். முன்னால் சுரமஞ்சரி என்னும் அந்தப் பெண்ணின் பல்லக்கும் அதைத் தொடர்ந்து இரண்டாவதாக இளங்குமரனும் ஓவியனும் இருந்த பல்லக்குமாகச் சென்று கொண்டிருந்தன. இரண்டு பல்லக்குகளின் முன்புறமும் ஆலவட்டம், சித்திரப் ப்ட்டுக் குடை, தோரணம் முதலிய சிறப்புப் பரிவாரங்கள் சென்றதனால் இவர்கள் வீதியையும் வீடுகளையும் பார்த்தது போக, வீதியிலும் வீடுகளிலுமிருந்து இவர்களைப் பலர் வியப்போடு பார்த்தனர். அரச குடும்பத்துக்கு ஒப்பான பெருஞ் செல்வக் குடியினர் யாரோ பல்லக்கில் போகிறார்கள் போலும் என்ற வியப்பு அவர்களுக்கு.
பல்லக்கில் போகும்போது இளங்குமரனும், ஓவியன் மணிமார்பனும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதற்கு அதிகமாக வாய்ப்பு நேரவில்லை. நாளங்காடியிலிருந்து புறப்பட்டுச் சிறிது தொலைவு வந்ததும், "பூதசதுக்கத்தில் படையலிட்ட பின் உங்களுக்கும் எனக்கும் எள்ளுருண்டை கொண்டுவந்து கொடுத்தாளே, அந்தப் பெண் யார் ஐயா?" - ஓவியன் தற்செயலாகக் கேள்வியெழுப்பின போதுதான் இளங்குமரனுக்கு முல்லையின் நினைவு வந்தது. அதுவரை முல்லைக்குத் துணையாகவே தான் அங்கு வந்திருந்தோம் என்ற நினைவு அவனுக்கு இல்லை. அவன் அதை முற்றிலும் மறந்தே போயிருந்தான்.
'ஆகா! என்ன தவறு செய்துவிட்டேன்! முல்லை உடன் வந்தது எனக்கு எப்படி மறந்து போயிற்று? புறப்படும் போதே அந்தக் கிழவர் வீரசோழிய வளநாடுடையார் என்மேல் சந்தேகப்பட்டது சரிதான் என்பது போலல்லவா நடந்துகொண்டு விட்டேன்! முல்லை யார் துணையோடு இனிமேல் வீட்டுக்குப் போவாள்? நாளங்காடிச் சந்தியில் தனியாக நின்று திண்டாடப் போகிறாளே' என்று எண்ணி இளங்குமரன் தன்னை நொந்து கொண்டாலும், அவனால் உடனடியாகப் பல்லக்கிலிருந்து இறங்கி நாளங்காடிக்கு ஓடிப்போய்விடத் துணிய முடியவில்லை. எதிரே உட்கார்ந்திருக்கும் ஓவியனுக்கு வாக்களித்த உதவியைச் செய்யாமல் இறங்கிப் போவது பாவம் என்று எண்ணினான் அவன். 'முல்லை எப்படியாவது தானாகவே வீட்டுக்குப் போய் விடுவாள்' என்று மனத்தைச் சமாதானப்படுத்திக் கொள்வதைத் தவிர வேரொன்றும் செய்ய அப்போது அவனுக்கு வாய்ப்பில்லாமல் இருந்தது. இந்த மனக் குழப்பத்தால் 'முல்லை யார்?' என்று ஓவியன் கேட்ட கேள்விக்கு பதிலும் கூறவில்லை அவன். அந்த நிலையிலும் மேலும் தூண்டித் தூண்டிக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் இளங்குமரனுக்குக் கோபம் உண்டாகுமோ என்று பயந்து தான் கேட்ட கேள்விக்கு அவனிடமிருந்து பதில் வராமலிருந்தும் மேலே ஒன்றும் கேளாமல் மௌனமாக இருந்து விட்டான் மணிமார்பன்.
இதன் பின்பு இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளாமல் பட்டினப்பாக்கத்து வீதிகளைப் பார்த்துக் கொண்டே சென்றார்கள். பட்டினப்பாக்கத்தின் சிறப்பான வீதி ஒன்றில் புகுந்து அதன் தொடக்கத்தில் வானளாவிக் காட்சியளித்த ஏழடுக்கு மாளிகையின் பிரதான வாயிலில் நுழைந்து, பல்லக்குகளும் பரிவாரங்களும் நின்றன. சுரமஞ்சரியின் தோழி வசந்த மாலை மாளிகைக்குள்ளே போய் இரண்டு இரத்தினக் கம்பள விரிப்புக்களை எடுத்துக்கொண்டு ஓடோடி வந்தாள். மிக நீளமான அந்த விரிப்புக்களைப் பல்லக்குகள் நின்ற இடத்திலிருந்து மாளிகையின் உட்புறத்துக்கு ஏறிச் செல்லும் முதற்படிக்கட்டுவரை நடைபாவாடையாக இழுத்து விரித்தாள் வசந்தமாலை. அந்தப் பெருமாளிகையின் நடைமுறைகளும், உபசார வழக்குகளும் இளங்குமரனையும் ஓவியனையும் வியப்படையச் செய்தன. இரத்தினக் கம்பள விரிப்புகளில் கால் வைத்து நடப்பதற்கு வசதியாகப் பல்லக்குகள் இறக்கி வைக்கப்பட்டன. இளங்குமரனும் ஓவியனும் அந்த விரிப்பின் அழகையும் மென்மையையும் பார்த்து அதில் கால் வைத்து இறங்கலாமா கூடாதா என்று கூச்சத்தோடு பல்லக்கிலேயே இருந்து விட்டனர். அந்த மாளிகையைக் கண்டதும் தாழ்வு மனப்பான்மையும் அதனோடு தோன்றும் ஆற்றாமையின் சினமும் இளங்குமரனுக்கு உண்டாயிற்று.
தன் அன்ன மென்னடைக்குப் பொன் அனைய கால் சிலம்பு தாளமிடப் பூங்கரத்து வளைகளெல்லாம் ஒலி பொங்கச் சுரமஞ்சரி பல்லக்கினுள்ளேயிருந்து இறங்கி விரிப்பின் மேல் கால் வைத்து நடந்தாள். நடந்து வரும் போதே பிறழ்ந்து பிறழ்ந்து சுழலும் கொண்டை மீன் விழிகளால் இளங்குமரனும் ஓவியனும் இன்னும் பல்லக்கிலுள்ளேயே தங்கி வீற்றிருப்பதை அவள் பார்த்துக் கொண்டாள்.
"வசந்தமாலை! அவர்கள் இன்னும் பல்லக்கிலேயே உட்கார்ந்திருக்கிறார்கள், பார். நீ போய் இறக்கி அழைத்துக் கொண்டு வா" என்று தோழியை நோக்கிக் கட்டளை பிறந்தது.
வசந்தமாலை அவர்கள் பல்லக்கின் அருகில் சென்று விநயமான குரலில் பணிவோடு அழைத்தாள்.
"ஐயா, இறங்கி வாருங்கள். உள்ளே போகலாம்."
இளங்குமரன் இறங்கி வந்தான். ஆனால் வேண்டுமென்றே விரிப்பிலிருந்து விலகித் தரையில் நடந்தான். அவர் அப்படிச் செய்யும்போது தான் மட்டும் விரிப்பில் நடந்து போவது நன்றாயிராது என்று எண்ணி இரண்டாவதாகப் பல்லக்கிலிருந்து கீழே இறங்கிய மணிமார்பனும் இளங்குமரனைப் பின்பற்றித் தரையில் நடந்தான்.
இளங்குமரனின் தோற்றத்தையும் கம்பீரமான நடையும் பார்த்தால் பேசுவதற்கு அச்சமும் தயக்கமும் ஏற்பட்டது வசந்தமாலைக்கு. ஆனாலும் அவற்றை நீக்கிக் கொண்டு, "ஐயா, விரிப்பின் மேல் நடந்து வாருங்கள், விரிப்பு உங்களுக்காகத்தான் விரித்திருக்கிறது" என்று மெல்லக் கூறினாள் அவள். எடுத்தெறிந்து பேசுவது போல் இளங்குமரனிடமிருந்து பதில் வந்தது அவளுக்கு, தனக்கே பன்மை மரியாதை கொடுத்துப் பேசினான் அவன்.
"பிறருடைய வழிக்கு அடங்கி நடந்து நமக்குப் பழக்கமில்லை. எந்த இடத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் நாம் எப்படி நடந்து போக வேண்டுமென்று நமக்குத் தெரியும்..."
இளங்குமரனின் இந்த மறுமொழியைக் கேட்டு முன்னால் மெல்ல நடந்து சென்று கொண்டிருந்த சுரமஞ்சரி திரும்பினாள், சிரித்தாள், சற்றே நின்று தலையை அழகுறச் சாய்த்து இளங்குமரனைப் பார்த்தாள். அந்த மயக்கும் நகையும் மகிழ்ச்சிப் பார்வையும் இளங்குமரன் முகத்தில் ஒரு மாறுதலையும் விளைவிக்கவில்லை. உடனே தான் வந்த வழியே திரும்பி நடந்து இளங்குமரனுக்கு மிக அருகில் வந்து நின்று கொண்டு "உங்களை யாருடைய வழியிலும் நாங்கள் அடங்கி நடக்கச் சொல்லவில்லை. எங்கள் வேண்டுகோளை மறுக்காமல் இரத்தினக் கம்பளத்தில் மிதித்து நடந்து வாருங்கள். கால்களுக்கு மென்மையாகப் பூப் போலிருக்கும்!" என்று கூறி முறுவல் பூத்தாள் சுரமஞ்சரி. அவள் சிரிக்கும்போது அவளுடைய மூக்குத்தியின் ஒளி மிகுந்த வைரக் கற்களும் சேர்ந்து சிரிப்பது போலிருந்தது. அப்போது அந்த மூக்குத்தியில் நுண்ணியதோர் அழகும் பிறந்தது.
அவள் அருகில் வந்து தன்னிடம் இவ்வாறு கூறியதும் நடந்து கொண்டிருந்த இளங்குமரன் நின்றான்.
"அம்மணீ! என்னுடைய பாதங்களைப் பற்றி நீங்கள் அதிகக் கவலை கொள்ள வேணடாம். காவிரிப்பூம்பட்டினத்துக் கரடுமுரடான பகுதியெல்லாம் சுற்றிச் சுற்றி வைரம் பாய்ந்த கால்கள் இவை. இந்தக் கால்களுக்கும் இவற்றிற்கு உரியவனின் மனத்துக்கும் எப்போதும் விரிந்த நிலத்தில் விரும்பியபடி நடந்துதான் பழக்கம். முழங்கையகல நடைபாவாடையில் முன்பின் நகரவோ, விலகவோ இடமின்றி நடந்து பழக்கமில்லை! பழக்கப்படுத்திக் கொள்ளவும் இனிமேல் விருப்பமில்லை. அதற்கு அவசியமுமில்லை."
"அழகுக்காகவும் சுகபோக அலங்காரங்களுக்காகவும் சில மென்மையான பழக்கவழக்கங்களை நீங்கள் மறுக்காமல் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்."
"இருக்கலாம்! ஆனால் எனக்குத் தெரியாது. அழகைப் போற்றத்தான் எனக்குத் தெரியும். அழகைக் காலடியில் மிதித்துச் சுகம் காண முயல்வதும் எனக்குப் பிடிக்காது. அழகு நம்மைக் காலடியில் போட்டு மிதித்து அடிமையாக்க முயல்வதற்கும் நான் இடங் கொடுப்பதில்லை, அம்மணீ! அழகையே அடிமையாக்கவும் கூடாது. அழகுக்கே அடிமையாகவும் கூடாது. தேவையா, தேவையில்லையா, அவசியமா, அவசியமில்லையா என்று சிந்தித்துப் பாராமலே பொருத்தமின்றி எத்துணையோ சுகபோக அலங்காரங்களைப் பட்டினப்பாக்கத்துப் பெருஞ்செல்வர்கள் அநுபவிக்கிறார்கள். அவற்றை மதித்து வரவேற்க ஒருபோதும் என் மனம் துணிவதில்லை."
"இந்த மாளிகையைச் சேர்ந்த மதிப்புக்குரியவர்களையும் புதிதாக வருபவர்களையும் வரவேற்பதற்கென்றே இங்கே சில உபசார முறைகள் இருக்கின்றன. அவற்றைப் புறக்கணிக்கலாகாது!"
"உங்கள் உபசாரங்களை ஏற்றுக் கொள்வதற்கு நான் இந்த மாளிகையின் விருந்தினனாக வரவில்லை, அம்மணீ! இதோ என் பக்கத்தில் நிற்கிறானே, இந்த ஏழை ஓவியனுக்கு நூறு பொற் கழஞ்சுகள் கிடைக்க வேண்டுமென்பதற்காகத்தான் வந்திருக்கிறேன். ஓவியம் வரைந்து நிறைவேறியதும் நான் போக வேண்டும்."
"அவ்வளவு அவசரமா உங்களுக்கு?"
"அவசரமில்லாத எதுவுமே என் வழ்க்கையில் இருப்பதாகத் தெரியவில்லை அம்மணீ! என் வாழ்க்கையே ஒரு பெரிய அவசரம். என்னைத் தேடிவரும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவசரம். நான் தேடிக்கொண்டு போகும் செயல்களும் அவசரம். என்னுடைய ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாழிகையும், ஒவ்வொரு விநாடியும் எனக்கு அவசரம்தான். நானே ஒர் அவசரம்தான். தயைகூர்ந்து விரைவாகப் படத்தை வரைந்து கொண்டு என்னை அனுப்பும்படி செய்தால் நல்லது."
"உங்களிடம் நிதானம் குறைவாயிருக்கிறது. பொறுமை சிறிதுமில்லை. பதற்றம் அதிகமாக இருக்கிறது."
"தெரிந்து சொல்லியதற்கு நன்றி! ஆனால் இவற்றையெல்லாம் எடுத்துச் சொல்லித் திருத்தத் தகுதிவாய்ந்த பெரியவர்கள் எனக்கு இருக்கிறார்கள். நீங்கள் இந்தப் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் காரியத்தைப் பார்க்கலாம்."
அவளுக்கு இளங்குமரன் சுடச் சுடப் பதில் கூறினான். எத்துணை முறை சிரித்துச் சிரித்துப் பேசினாலும் தன்னைப் பற்றிய நளினமான நினைவுகளை அவன் மனத்தில் பயிர்செய்ய முடியுமென்று தோன்றவில்லை சுரமஞ்சரிக்கு. இளங்குமரன் அழகுச் செல்வனாக இருந்தான். ஆனால் அந்த அழகு நிலத்தில் அவள் இறைக்க முயன்றும் குன்றாமல் அகம்பாவம் ஊறிக்கொண்டிருந்தது. அது வற்றினால் அல்லவா அங்கே அவள் பயிர் செய்யத் துடிக்கும் இனிய உறவுகளைப் பயிர் செய்ய முயலலாம்? சுரமஞ்சரி அவனிடம் தனக்கு ஏற்பட்ட ஆற்றாமையை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "வசந்த மாலை! இவரை வற்புறுத்தாதே. எப்படி விரும்புகிறாரோ அப்படியே நடந்து வரட்டும்" என்று சொல்லி விட்டு வேகமாக முன்னே நடந்தாள். இளங்குமரன் தன் போக்கில், மணிமார்பன் பின் தொடர கம்பீரமாக வீர நடை நடந்து சென்றான். மாளிகையைச் சூழ்ந்திருந்த பூம்பொழிலில் மயில்கள் தோகை விரித்தாடிக் கொண்டிருந்தன. புள்ளி மான்கள் துள்ளித் திரிந்து கொண்டிருந்தன. சிறு சிறு பொய்கைகளில் அல்லியும், கமலமும், குவளையும் நிறையப் பூத்திருந்தன. அழகுக்காக மரஞ் செடி கொடி வைத்துச் செயற்கையாகக் கட்டப்பட்டிருந்த செய்குன்றுகள் அங்கங்கே பூம்பொழிலினிடையே இருந்தன. மணிமார்பனோடு பூம்பொழிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த இளங்குமரன், "மணிமார்பா! இங்கேயே ஓரிடத்தில் நான் நின்று கொள்கிறேன். நீ ஒவியத்தை நிறைவு செய்யத் தொடங்கு. நமக்கு மாளிகைக்குள் என்ன வேலை? இங்கே வைத்தே படத்தை முடித்துக் கொடுத்து விட்டுப் புறப்படலாம்" என்றான்.
மணிமார்பனும் அதற்கு இணங்கி நாளங்காடியில் இருந்தது போலவே, இங்கே இந்தச் சோலையிலும் ஒரு கொடி முல்லைப் புதரைத் தேடி அதனருகே இளங்குமரனை நிறுத்தி வரையலானான்.
அவன் வரையத் தொடங்கிய சிறிது நேரத்துக்கெல்லாம் சுரமஞ்சரி அங்கு வந்தாள். 'அடடா! செல்வம் இருந்தால் எவ்வளவு வசதியிருக்கிறது. அதற்குள் உடைகளையும் அலங்காரங்களையும் மாற்றிக்கொண்டு புதுமைக் கோலத்தில் காட்சியளிக்கிறாளே' என்று அவளைப் பார்த்ததும் இளங்குமரன் நினைத்தான். 'முல்லைக்கு இப்படியெல்லாம் அலங்காரம் செய்து கொள்ள வாய்ப்பிருந்தால் அவள் இன்னும் எவ்வளவு அழகாக இருப்பாள்?' என்றும் கற்பனை செய்து பார்க்க முயன்றது அவன் மனம்.
ஆனால் அடுத்த கணம் சுரமஞ்சரி அவனை நோக்கிக் கேட்ட கேள்வி திடுக்கிட்டுத் தூக்கிவாரிப் போடச் செய்தது. ஓவியனும் திடுக்கிட்டான். இருவரும் அளவற்ற திகைப்பு அடைந்தார்கள். அவள் கேட்டது இதுதான்: "ஐயா! நீங்கள் யார்? எதற்காக இங்கு வந்தீர்கள்? உங்களை யார் உள்ளே வரவிட்டது? படம் எழுதிக் கொள்ள இவ்வளவு பெரிய பட்டினத்தில் வேறு இடமா கிடைக்கவில்லை?" என்று சினத்தோடு கேட்டாள் அவள்.
'ஒருவேளை அவள் சித்த சுவாதீனமில்லாத பெண்ணோ?' என்று சந்தேகங்கொண்டு இளங்குமரனும் மணிமார்பனும் அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தனர். முகத்தையும் பேச்சையும் பார்த்தால் அப்படியில்லை என்று உறுதியாகத் தெரிந்தது. வேண்டுமென்றே தன்னைப் பழிவாங்கும் நோக்குடன் வம்பு செய்கிறாளோ என்றெண்ணிக் கொதிப்படைந்த இளங்குமரன், 'செல்வர்களுக்கு உடை மாறினால் குணமும் மாறிவிடுமோ அம்மணீ?' என்று சூடாகக் கேட்க வாய் திறந்தான். ஆனால் அப்போது அவனை அதைக் கேட்க விடாதபடி எதிர்ப் பக்கத்தில் இன்னொரு பெரிய அதிசயம் நிகழ்ந்தது.
கதக்கண்ணன் என்ற பெயருக்குச் 'சினம் கொண்டு விரைந்து நோக்கும் ஆண்மையழகு பொருந்திய கண்களையுடையவன்' என்று பொருள். இந்தப் பொருட் பொருத்தத்தையெல்லாம் நினைத்துப் பார்த்துத்தான் வீரசோழிய வளநாடுடையார் தம் புதல்வனுக்கு அப்பெயரைச் சூட்டியிருந்தார் என்று சொல்ல முடியாதாயினும் பெயருக்குப் பொருத்தமாகவே அவன் கண்கள் வாய்த்திருந்தன. தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் துன்பம் நேரும்போது அதைக் களைவதற்கும். அதிலிருந்து காப்பதற்கும் சினந்து விரையும் கதக் கண்ணனின் நெஞ்சுரத்தை அவனுடைய முகத்திலும் மலர்ந்த கண்களிலும் காணலாம்.
இந்திர விழாவின் இரண்டாம் நாளான அன்று நாளங்கடிச் சந்தியில், 'இளங்குமரன் எங்கே போனான் முல்லை?' என்று தன்னை விசாரித்துக் கொண்டு நின்ற தமையனின் முகத்திலும் கண்களிலும் இதே அவசரத்தைத் தான் முல்லை கண்டாள். "அண்ணா! யாரோ பட்டினப்பாக்கத்தில் எட்டிப் பட்டம் பெற்ற பெருஞ்செல்வர் வீட்டுப் பெண்ணாம். பெயர் சுரமஞ்சரி என்று சொல்கிறார்கள். அவள் அவரைப் பல்லக்கில் ஏற்றித் தன் மாளிகைக்கு அழைத்துக் கொண்டு போகிறாள்" என்று தொடங்கி நாள்ங்காடியில் நடந்திருந்த குழப்பங்களையெல்லாம் அண்ணனுக்குச் சொன்னாள் முல்லை. அவள் கூறியவற்றைக் கேட்டதும் கதக்கண்ணனும் அவனோடு வந்திருந்தவர்களும் ஏதோ ஒரு குறிப்புப்பொருள் தோன்றும்படி தங்களுக்குள் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டார்கள். அப்போது அவர்கள் யாவருடைய விழிகளிலும் அவசரமும் பரபரப்பும் அதிகமாவதை முல்லை கவனித்துக் கொண்டாள்.
"என்ன அண்ணா? நீங்கள் அவசரமும் பதற்றமும் அடைவதைப் பார்த்தால் அவருக்கு ஏதோ பெருந்துன்பம் நேரப் போகிறதுபோல் தோன்றுகிறதே! நீங்கள் அவசரப்படுவதையும், அவரைப் பற்றி விசாரிப்பதையும் பார்த்தால் என்க்கு பயமாயிருக்கிறது, அண்ணா!"
"முல்லை! இவையெல்லாம் நீ தெரிந்துகொள்ள வேண்டாதவை. ஆனால் ஒன்று மட்டும் தெரிந்துகொள். நாங்களெல்லாம் துணையிருக்கும்போது இளங்குமரனை ஒரு துன்பமும் அணுகிவிட முடியாது. இளங்குமரன் செல்வம் சேர்க்கவில்லை. ஞானமும் புகழும் சேர்க்கவில்லை. ஆனால் இந்தப் பெரிய நகரத்தில் எங்களைப் போல் எண்ணற்ற நண்பர்களைச் சேர்த்திருக்கிறான். அவனுக்கு உதவி செய்வதைப் பெருமையாக நினைக்கும் இளைஞர்கள் அவனைச் சுற்றிலும் இருக்கிறார்கள் என்பது உனக்குத் தெரியாது."
"தெரியும் அண்ணா! ஆனால் நண்பர்களைக் காட்டிலும் பகைவர்கள்தான் அவருக்கு அதிகமாயிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது."
"இருக்கட்டுமே! பகைகள் யாவும் ஒரு மனிதனுடைய வலிமையைப் பெருக்குவதற்குத்தான் வருகின்றன. பகைகளை எதிரே காணும் போதுதான் மனிதனுடைய பலம் பெருகுகிறது, முல்லை!" என்று தங்கையோடு வாதிடத் தொடங்கியிருந்த கதக்கண்ணன் தன் அவசரத்தை நினைத்து அந்தப் பேச்சை அவ்வளவில் முடித்தான்.
"முல்லை! நாங்கள் இப்போது அவசரமாக இளங்குமரனைத் தேடிக் கொண்டு செல்ல வேண்டும். இந்த நிலையில் உன்னை வீட்டில் கொண்டு போய் விடுவதற்காக எங்களில் யாரும் உன்னோடு துணை வருவதற்கில்லை. ஆனால் நீ வழி மயங்காமல் வீடு போய்ச் சேருவதற்காக உன்னை இந்த நாளங்காடியிலிருந்து அழைத்துப் போய்ப் புறவீதிக்குச் செல்லும் நேரான சாலையில் விட்டுவிடுகிறேன். அங்கிருந்து இந்திர விழாவுக்காக வந்து திரும்புகிறவர்கள் பலர் புறவீதிக்குச் சென்று கொண்டிருப்பார்கள். அவர்களோடு சேர்ந்து நீ வீட்டுக்குப் போய்விடலாம்" என்று தமயன் கூறியதை முல்லை மறுக்காமல் ஒப்புக் கொண்டாள். தமையனுடைய அவசரத்துக்காக அவள் வீட்டுக்குப் போக இணங்கினாளே தவிர உள்ளூரத் தானும் அவர்களோடு செல்ல வேண்டும் என்றும், சென்று இளங்குமரனுக்கு என்னென்ன நேருகிறதென்று அறியவேண்டும் என்றும் ஆசையிருந்தது அவளுக்கு. வேறு வழியில்லாமற் போகவே அந்த ஆசைகளை மனத்துக்குள்ளேயே தேக்கிக் கொண்டாள் அவள்.
"நண்பர்களே! நீங்கள் சிறிது நேரம் இங்கே நின்று கொண்டிருந்தால் அதற்குள் இவளைப் புறவீதிக்குப் போகும் சாலையில் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டு வந்துவிடுவேன். அப்புறம் நாம் இளங்குமரனைத் தேடிக்கொண்டு பட்டினப் பாக்கத்துக்குச் செல்லலாம்" என்று சொல்லி உடன் வந்தவர்களை அங்கே நிற்கச் செய்து விட்டு முல்லையை அழைத்துக் கொண்டு கதக்கண்ணன் புறப்பட்டான். எள் விழ இடமின்றிக் கூட்டாமாயிருந்த பூதசதுக்கத்தில் வழி உண்டாக்கிக்கொண்டு போவது கடினமாக இருந்தது.
போகும்போது இளங்குமரனைப் பற்றி மீண்டும் மீண்டும் சில கேள்விகளைத் தன் அண்ணனிடம் தூண்டிக் கேட்டாள் முல்லை. அந்தக் கேள்விகள் எல்லாவற்றுக்கும் கதக்கண்ணன் விவரமாக மறுமொழி கூறவில்லை. சுருக்கமாக ஒரே ஒரு செய்தியை மட்டும் முல்லையிடம் கூறினான் அவன்.
"முல்லை! அதிகமாக உன்னிடம் ஒன்றும் சொல்வதற்கில்லை. பலவிதத்திலும் இளங்குமரனுக்குப் போதாத காலம் இது. சிறிது காலத்துக்கு வெளியே நடமாடாமல் அவன் எங்கேயாவது தலைமறைவாக இருந்தால் கூட நல்லதுதான். ஆனால் நம்மைப் போன்றவர்களின் வார்த்தையைக் கேட்டு அடங்கி நடக்கிறவனா அவன்?"
"நீங்கள் சொன்னால் அதன்படி கேட்பார் அண்ணா! இல்லா விட்டால் நம் தந்தையாரோ, அருட்செல்வ முனிவரோ எடுத்துக் கூறினால் மறுப்பின்றி அதன்படி செய்வார். சிறிது காலத்துக்கு அவரை நம் வீட்டிலேயே வேண்டுமானாலும் மறைந்து இருக்கச் செய்யலாம்!"
"செய்யலாம் முல்லை! ஆனால் நம் இல்லத்தையும் விடப் பாதுகாப்பான இடம் அவன் தங்குவதற்கு வாய்க்குமா என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் நான். அவனைப் பற்றிய பல செய்திகள் எனக்கே மர்மமாகவும் கூடமாகவும் விளங்காமலிருக்கின்றன. முரட்டுக் குணத்தாலும் எடுத்தெறிந்து பேசும் இயல்பாலும் அவனுக்கு இந்த நகரில் சாதாரணமான பகைவர்கள் மட்டுமே உண்டு என்று நான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போதோ இவற்றையெல்லாம் விடப் பெரியதும் என்னால் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியாததுமான வேறொரு பகையும் அவனுக்கு இருக்கிறதெனத் தெரிகிறது முல்லை! எது எப்படி இருந்தாலும் இதைப்பற்றி நீ அதிகமாகத் தெரிந்து கொள்ளவோ, கவலை கொள்ளவோ அவசியமில்லை. ஆண்பிள்ளைகள் காரியமென்று விட்டுவிடு"
தமயன் இவ்வாறு கூறியதும், முதல்நாள் நள்ளிரவுக்கு மேல் அருட்செல்வ முனிவர், இளங்குமரன் இருவருக்கும் நிகழ்ந்த உரையாடலைத் தான் அரைகுறையாகக் கேட்க நேர்ந்ததையும், முனிவர் இளங்குமரனுக்கு முன் உணர்ச்சி வசப்பட்டு அழுத்தையும் அவனிடம் சொல்லிவிடலாமா என்று எண்ணினாள் முல்லை. சொல்லுவதற்கு அவள் நாவும்கூட முந்தியது. ஆனால் ஏனோ சொற்கள் எழவில்லை. கடைசி விநாடியில் 'ஆண்பிள்ளைகள் காரியம் ஆண் பிள்ளைகளோடு போகட்டும்' என்று அண்ணனே கூறியதை நினைத்தோ என்னவோ தன் நாவை அடக்கிக் கொண்டாள் முல்லை. ஆயினும் அவள் மனத்தில் காரணமும் தொடர்பும் தோன்றாத கலக்கமும் பயமும் உண்டாயின. தன் நெஞ்சுக்கு இனிய நினைவுகளைத் தந்து கொண்டிருக்கும் இளங்குமரன் என்னும் அழகைப் பயங்கரமான பகைகள் தெரிந்தும் தெரியாமலும் சூழ்ந்திருக்கின்றன என்பதை உணரும் போது சற்றுமுன் நாளங்காடியில் அவன் மேற்கோண்ட கோபம்கூட மறந்துவிட்டது அவளுக்கு. நீர் பாயும்போது சாய்ந்து போவதுபோல் அவள் உள்ளத்தில் எழுந்திருந்த சினம் அவனைப் பற்றிய அநுதாப நினைவுகள் பாயும்போது சாய்ந்து படிந்தது; தணிந்து தாழ்ந்தது.
பூதச் சதுக்கத்து இந்திர விழாவின் கூட்டமும் ஆரவாரமும் குறைந்த - நடந்து செல்ல வசதியான கிழக்குப் பக்கத்துச் சாலைக்கு வந்திருந்தார்கள் முல்லையும் கதக்கண்ணனும். விண்ணுக்கும் மண்ணுக்கும் உறவு கற்பிக்க எழுந்தவைபோல் இருபுறமும் அடர்ந்தெழுந்த நெடுமரச் சோலைக்கு நடுவே அகன்று நேராக நீண்டு செல்லும் சாலை தெரிந்தது. விழாக் கொண்டாட்டத்துக்காக நாளங்காடிக்கும், அப்பாலுள்ள அகநகர்ப் பகுதிகளுக்கும் வந்துவிட்டு புறநகர்ப் பகுதிகளுக்குத் திரும்பிச் செல்வோர் சிலரும் பலருமாகக் கூட்டமாயும், தனித் தனியாயும் அந்தச் சாலையில் சென்று கொண்டிருந்தார்கள்.
"முல்லை! நீ இனிமேல் இங்கிருந்து தனியாகப் போகலாம். நேரே போனால் புறவீதிதான். நிறைய மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். ஒரு பயமுமில்லை" என்று கூறித் தங்கையிடம் விடைபெற்றுக்கொண்டு வந்த வழியே திரும்பி விரைந்தான் கதக்கண்ணன். முல்லை தயங்கித் தயங்கி நின்று அண்ணனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே கீழ்ப்புறச் சாலையில் நடந்தாள். அண்ணன் இந்திர விழாக் கூட்டத்தில் கலந்து மறைந்த பின்பு திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போயிற்று. அவள்தான் மெல்ல நடந்தாள். அவளுடைய நெஞ்சத்திலோ பலவித நினைவுகள் ஓடின. 'பட்டினப்பாக்கத்தில் அந்தப் பெண்ணரசி சுரமஞ்சரியின் மாளிகையில் இளங்குமரனுக்கு என்னென்ன அநுபவங்கள் ஏற்படும்? அந்த ஓவியன் எதற்காக அவரை வரைகிறான்? அந்தப் பெண்ணரசிக்காக வரைந்ததாகக் கூட்டத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் பேசிக்கொண்டார்களே! அப்படியானால் அவருடைய ஓவியம் அவளுக்கு எதற்கு?' - இதற்குமேல் இந்த நினைவை வளர்க்க மறுத்தது அவள் உள்ளம். ஏக்கமும், அந்தப் பட்டினப்பாக்கத்துப் பெண் மேல் பொறாமையும் ஏற்பட்டது முல்லைக்கு. அத்தோடு 'தன் தமையனும் மற்ற நண்பர்களும் எதற்காக இவ்வளவு அவசரமாய் இளங்குமரனைத் தேடிக்கொண்டு போகிறார்கள்?' என்ற வினாவும் அவளுள்ளத்தே தோன்றிற்று. இப்படி நினைவுகளில் ஓட்டமும் கால்களில் நடையுமாகப் புறவீதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாள் முல்லை. நுண்ணுணர்வு மயமான அகம் விரைவாக இயங்கும் போது புற உணர்வுகள் மந்தமாக இயங்குவதும் புற உணர்வு விரைவாக இயங்கும்போது அக உணர்வுகள் மெல்லச் செல்வதும் அப்போது அவள் நடையின் தயக்கத்திலிருந்தும், நினைவுகளின் வேகத்திலிருந்தும் தெரிந்து கொள்ளக்கூடிய மெய்யாயிருந்தது. நினைவுகளின் வேகம் குறைந்ததும் அவள் நடையில் வேகம் பிறந்தது.
தான் வீட்டை அடையும்போது தன் தந்தை வீட்டிற்குள்ளே அருட்செல்வ முனிவரின் கட்டிலருகே அமர்ந்து அவரோடு உரையாடிக் கொண்டிருப்பார் என்று முல்லை எதிர்பார்த்துக்கொண்டு சென்றாள். அவள் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக வீட்டு வாயில் திண்ணையில் முரசமும் படைக்கலங்களும் வைக்கப்பட்டுருந்த மேடைக்கருகிலே கன்னத்தில் கையூன்றி வீற்றிருந்தார் வீரசோழிய வள நாடுடையார்.
"என்ன அப்பா இது? உள்ளே முனிவரோடு உட்கார்ந்து சுவையாக உரையாடிக் கொண்டிருப்பீர்கள் என்று நினைத்துக் கொண்டு வருகிறேன் நான். நீங்கள் என்னவோ கப்பல் கவிழ்ந்து போனதுபோல் கன்னத்தில் கையூன்றிக் கொண்டு திண்ணையில் உட்கார்ந்திருக்கிறீர்களே? முனிவர் சோர்ந்து உறங்கிப் போய் விட்டாரா என்ன?" என்று கேட்டுக் கொண்டே வாயிற்படிகளில் ஏறி வந்தாள் முல்லை.
முல்லை அருகில் நெருங்கி வந்ததும், "உறங்கிப்போகவில்லை அம்மா! சொல்லிக் கொள்ளாமல் ஓடிப்போய் விட்டார். நீயும் இளங்குமரனும் நாளங்காடிக்குப் புறப்பட்டுப்போன சில நாழிகைக்குப் பின் உன் தமையன் கதக்கண்ணனும், வேறு சிலரும் இளங்குமரனைத் தேடிக்கொண்டு இங்கு வந்தார்கள். அவர்களுக்கு பதில் சொல்வதற்காக வாயிற்பக்கம் எழுந்து வந்தேன். வந்தவன் அவர்களுக்கு பதில் சொல்லி அனுப்பிவிட்டுச் சிறிது நேரங்கழித்து உள்ளே போய்ப் பார்த்தால் முனிவரைப் படுக்கையில் காணவில்லை. பின்புறத்துக் கதவு திறந்து கிடந்தது. பின்புறம் தோட்டத்துக்குள் சிறிது தொலைவு அலைந்து தேடியும் பார்த்தாகி விட்டது. ஆளைக் காணவில்லை" என்று கன்னத்தில் ஊன்றியிருந்த கையை எடுத்துவிட்டு நிதானமாக அவளுக்குப் பதில் கூறினார் வளநாடுடையார்.
அதைக் கேட்டு முல்லை ஒன்றும் பேசத் தோன்றாமல் அதிர்ந்து போய் நின்றாள்.
பட்டினப்பாக்கத்து ஏழடுக்கு மாளிகையில் பூம்பொழில் நடுவே அப்படி ஓர் அதிசயத்தைச் சிறிதும் எதிர்பார்த்திராதவனான இளங்குமரன் தன் அருகில் நின்று கொண்டிருந்தவளையும் எதிர்ப்பக்கத்திலிருந்து வந்து கொண்டிருந்தவளையும் மாறி மாறிப் பார்த்தான். அவன் மனத்தில் தாங்கமுடியாத வியப்பு ஏற்பட்டது. ஓவியன் மணிமார்பனும் வரைவதை நிறுத்திவிட்டு விழிகள் அகல அந்த அதிசயத்தைக் கண்டான்.
'அவர்கள் உயிரும் உணர்வும் உடைய பெண்களா அல்லது ஒரே அச்சில் வார்த்து அணிந்தும், புனைந்தும், உடுத்தும் அலங்கரிக்கப் பெற்ற இரண்டு பொற்பாவைகளா? அந்த இருவரில் யார் சுரமஞ்சரி? யார் மற்றொருத்தி?' என்று அறிய மாட்டாமல் இளங்குமரனும் ஓவியனும் திகைத்து மயங்கிய போது எதிர்ப்பக்கத்திலிருந்து வந்தவள் அவர்களுடைய திகைப்பைத் தீர்த்து வைத்தாள்! “இவளும் நானும் இரட்டைப் பிறவிகள். இவளுடைய பெயர் வானவல்லி. என்னுடைய பெயர் சுரமஞ்சரி. பெயரளவில்தான் எங்களுக்குள் வேற்றுமை. தோற்றத்தில் வேற்றுமை கண்டுபிடிக்க முயல்கிறவர்கள் பெரும்பாலும் ஏமாந்துதான் போவார்கள்" என்று கூறியவாறே இளங்குமரனுக்கும் ஓவியனுக்கும் பக்கத்தில் நின்று கொண்டிருந்த தன் சகோதரி வானவல்லிக்கு அருகில் வந்து அவளுடைய தோளைத் தழுவினாற் போல் நின்று கொண்டாள் சுரமஞ்சரி. அதன் பின்பு தான் இளங்குமரனுக்கும் ஓவியனுக்கும் மனத்தில் ஏற்பட்ட குழப்பம் ஒருவாறு நீங்கியது.
'வானவல்லி என்று மின்னல் கொடிக்குப் பெயர். வானில் படரும் ஒளிக்கொடி போல் மின்னல் இலங்குவதால் யாரோ கவியுள்ளம் படைத்தவர்கள் தமிழில் மின்னல் கொடிக்கு இந்தப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். ஆனால் விண் மண்டலத்து மின்னற் கொடியைக் காட்டிலும் இந்த மண் மண்டிலத்துப் பூம்புகார் மின்னற் கொடிக்கு எவ்வளவு இயைபாக இருக்கிறது இப்பெயர்!' என்று தனக்குள் நினைத்தவாறே வானவல்லி என்னும் எட்டி குமரன் வீட்டு மின்னல் கொடியை ஓவியனின் அழகு வேட்கை மிக்க தன் கண்களால் நன்றாகப் பார்த்தான் மணிமார்பன்.
"நல்லவேளையாக நீங்கள் வந்தீர்கள் அம்மா! உங்கள் சகோதரியார், 'நீங்கள் யார்? உங்களை யார் இந்த மாளிகைக்குள் வரவிட்டது?' என்று கேள்வி கேட்டு எங்களை வெளியே துரத்துவதற்கு இருந்தார். நீங்கள் வராவிட்டால் அந்தக் காரியத்தைச் செய்தே இருப்பார்" என்று ஓவியன் சுரமஞ்சரியைப் பார்த்துக் கொண்டே கூறிய போது, 'பேச்சும் சிரிப்பும் இப்போது வேண்டாதவை! காரியம் நடக்கட்டும்' என்று குறிப்பும் கடுமையும் தோன்ற அவனை உறுத்துப் பார்த்தான் இளங்குமரன். அந்த வலிய பார்வையே மணிமார்பனை அடக்கியாண்டது. அவன் மௌனமாக மேலே வரையலானான்.
"வானவல்லி! நேற்று கடற்கரையில் அற்புதமாக மற்போர் செய்ததாகக் கூறினேனே, அந்த வீரர் இவர்தான்" என்று தன் சகோதரிக்கு இளங்குமரனைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள் சுரமஞ்சரி. சிறிது நேரத்தில் ஓவியம் நிறைவேறியது. இன்னும் சில நுணுக்கமான வேலைப்பாடுகள் ஓவியத்தில் எஞ்சியிருந்தாலும் 'அவற்றைச் செய்வதற்கு இளங்குமரன் உடனிருக்க வேண்டியதில்லை' என்று மணிமார்பன் சொல்லிவிட்டான்.
ஓவியம் முடிந்ததும் வானவல்லி இளங்குமரனுக்கு முன்னால் வந்து நின்று கொண்டு, “என்னை மன்னிக்க வேண்டும்! என் சகோதரி சுரமஞ்சரி தான் உங்களை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாள் என்பது தெரியாமல் அப்படிக் கேட்டு விட்டேன். நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முன்பே விவரம் தெரிந்திருந்தால் அப்படிக் கேட்டிருக்க மாட்டேன்" என்று மன்னிப்புக் கேட்டாள்.
இளங்குமரன் வானவல்லியின் குயில் மொழிக்குரலைக் காது கொடுத்துக் கேட்காதவன் போல் வேறெங்கோ பார்த்துக் கொண்டு நின்றான்.
"இதோ பாருங்கள் ஐயா! படம் அற்புதமாக வாய்த்திருக்கிறது" என்று ஓவியம் வரையப் பெற்ற திரைச்சீலையை உயரத் தூக்கி நிறுத்திக் காணுமாறு செய்தான் மணிமார்பன். இளங்குமரனிடமிருந்து இதற்குப் பதில் இல்லை.
சுரமஞ்சரி தான் வியந்து கூறினாள்: "படத்திலிருந்து அப்படியே நீங்கள் இறங்கி நடந்து வருவது போல் தத்ரூபமாக இருக்கிறது. ஓவியரை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை."
"பாராட்டு இருக்கட்டும்! அது வாயிலே சொல்லாகப் பிறந்து செவியிலே ஒலியாக மடிவது. அதனால் வயிறும் நிரம்பாது! வாழ்வும் நிரம்பாது! ஓவியம் நன்றாக இருந்தால் நூறு பொற் கழஞ்சுக்கு பதில் நூற்றைம்பது பொற் கழஞ்சாகக் கொடுத்து மகிழுங்கள்" என்று அதுவரை பேசாமலிருந்த இளங்குமரன் அவளுக்குத் துணிவாக மறுமொழி கூறினான்.
"கொடுத்து மகிழ்வதைப் பற்றி எங்களுக்குப் பெருமைதான்! ஆனால் அன்போடும் மதிப்போடும் கொடுப்பதை வாங்கி மகிழ்கிற சுபாவம் சிலருக்கு இல்லாமற் போய்விடுகிறதே! அதற்கு என்ன செய்வது?"
முதல் நாள் கடற்கரை நிகழ்ச்சியைக் குறிப்பாகக் கூறிக் குத்திக் காட்டுவது போல் இளங்குமரனைச் சொற்களால் மடக்கினாள் சுரமஞ்சரி. இந்த வார்த்தைகளைக் கூறும்போது தன் கழுத்தில் அணிந்திருந்த மணிமாலையைத் தொட்டு விளையாடியது அவள் வலக்கரம். சகோதரியின் சாதுரியமான பேச்சைக் கேட்டு வானவல்லி புன்னகை புரிந்தாள்.
இளங்குமரன் அங்கிருந்து புறப்படச் சித்தமானான். "தம்பீ! ஓவியத்தை முடித்துக் கொடுத்துவிட்டு உனக்குச் சேரவேண்டிய பொற்கழஞ்சுகளை வாங்கிக் கொண்டு போய்ச் சேர். நான் வருகிறேன். வாய்ப்பிருந்தால் மறுபடியும் எங்காவது சந்திக்கலாம்" என்று மணிமார்பனிடம் கூறிவிட்டு அவன் தெரிவித்த வணங்கங்களையும் நன்றிகளையும் ஏற்றுக் கொண்டு இளங்குமரன் புறப்பட்ட போது,
"இது இந்திர விழாக்காலம்! இந்த மாளிகைக்கு வந்தவர்களை விருந்துண்ணச் செய்யாமல் அனுப்பும் வழக்கமில்லை. மாளிகைக்குள் வந்து உணவு முடித்துக் கொண்டு போகலாம்" என்று சுரமஞ்சரியும் வானவல்லியும் சேர்ந்து அவனை வற்புறுத்தினார்கள்.
"நான் தான் முதலிலேயே சொல்லிவிட்டேனே! இந்த மாளிகைக்கு விருந்தினனாக நான் வரவில்லை. ஓர் ஏழை ஓவியனுக்கு உதவ நேர்ந்ததற்காகவே வந்தேன்" என்று கூறி அதை மறுத்துவிட்டு, இளங்குமரன் மாளிகையின் பிரதான வாயிலை நோக்கி நடக்க முற்பட்ட போது, "தம்பி! நீ இப்படிக் கண்டிப்பாக மறுத்துச் சொல்லக் கூடாதப்பா. இருந்து ஒரு வேளை உண்டு விட்டுத்தான் போகவேண்டும்!" என்று பின்புறமிருந்து இன்னொரு முதிர்ந்த ஆண் குரல் மிடுக்காக ஒலித்தது.
அந்தக் குரலைக் கேட்டதும் இளங்குமரன் உள்பட எல்லோருமே வியப்போடு திரும்பிப் பார்த்தார்கள். அவர்கள் ஓவியம் வரைந்த இடத்திற்குப் பின்பக்கத்து மரங்களின் அடர்த்தியிலிருந்து உயர்ந்த தோற்றமும் பருத்த உடலும் வலது காலைச் சாய்த்துச் சாய்த்து நடக்கும் நடையுமாக ஒரு முதியவர் வந்து கொண்டிருந்தார். அவர் கையில் ஊன்று கோல் ஒன்றும் நடைக்குத் துணையாக இருந்தது.
"அப்பா! நீங்கள் எப்போது இங்கே வந்தீர்கள்? எங்களுக்குத் தெரியவே தெரியாதே" என்று அவரைக் கண்டதும் சுரமஞ்சரியும் வானவல்லியும் எதிர்கொண்டு சென்றதிலிருந்து அவர்தான் அந்தப் பெருமாளிகையின் உரிமையாளரான எட்டிப் பட்டம் பெற்ற செல்வர் என்பது இளங்குமரனுக்கு விளங்கிற்று.
அவர் எதிர்பாராத விதத்தில் எதிர்பாராத நேரத்தில் அங்கே தோன்றியதற்காகத் தன் திட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை என்று திடமான கருத்துடன் இளங்குமரன் மேலும் வாயிலை நோக்கி நடக்கலானான். ஆனால் அவர் அவனைச் செல்லவிடவில்லை.
"தம்பீ! இவ்வளவு அவசரம் எதற்கு? சற்றே நின்று போகலாமல்லவா?" என்று கூறிக்கொண்டே அவனருகில் வந்துவிட்டார் அவர். சுரமஞ்சரி இளங்குமரனின் மற்போர் வீரத்தைப் புகழ்ந்து சொல்லி அவனைத் தன் தந்தைக்கு அறிமுகம் செய்தாள்.
"நானே இந்தப் பிள்ளையை முன்பு எங்கோ பார்த்திருந்தாற் போல் நினைவிருக்கிறதம்மா!" என்று தான் நடந்து கொண்டிருந்த வழியையே மறிக்கிறாற் போல அவர் தனக்கு முன்னால் வந்து நின்ற போது இளங்குமரனால் மேலே நடக்க முடியவில்லை. நின்றான். அவனைத் தலையிலிருந்து கால் வரை நன்றாக உற்றுப் பார்த்தார் சுரமஞ்சரியின் தந்தை. அவனை எங்கோ பார்த்தாற் போல் நினைவிருப்பதாக அவர் கூறினாலும், அவரைத் தான் எங்குமே அதற்கு முன் சந்தித்ததாக இளங்குமரனுக்கு நினைவில்லை. அவருடைய பார்வையும் தோற்றமும் இளங்குமரனைத் தவிர வேறு சாதாரணமானவர்களுக்குப் பயமூட்டியிருக்கும்.
அவன் மேல் இடித்து விடுகிறாற்போல் அருகில் நின்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அவர், "கருநாவற்பழம் போல் உன் கழுத்து வலது பக்கத்துச் சரிவில் எத்தனை அழகான மச்சம் இருக்கிறது பார்த்தாயா? பிற்காலத்தில் நீ மகா யோகக்காரனாக விளங்கப் போகிறாய் தம்பீ? இது போல் வலது புறத்தில் இவ்வளவு பெரிய மச்சம் எல்லாருக்கும் அமைவது அரிது!" என்று வியந்து கூறியவாறே அவனுடைய கண்களையும் முகத்தையும் கூர்ந்து நோக்கினார்.
இளங்குமரன் அவர் கூறியதையும் பார்ப்பதையும் கவனித்தும் சலனமின்றி அமைதியாக நின்றான். ஆனால் அவர் சிரித்துக் கொண்டே, அடுத்தாற் போல் கேட்ட கேள்வி அவனுடைய சலனமின்மையைக் கலைத்தது. அவன் ஆச்சரியமடைந்தான்.
"தம்பி! அருட்செல்வ முனிவர் நலமாக இருக்கிறார் அல்லவா?" என்று இருந்தாற் போலிருந்து முன்பின் தொடர்பின்றி அவர் கேட்ட போது இளங்குமரன் திகைத்தான். 'முனிவரை இவருக்கு எப்படித் தெரியும்? அப்படியே எந்த வகையிலாவது தெரிந்திருந்தாலும் என்னைக் கண்டவுடனே அதை விசாரிக்கலாமலிருந்து விட்டு இவ்வளவு நேரம் கழித்து நிதானமாக விசாரிப்பது ஏன்?' என்று சிந்தித்துக் குழம்பியது அவன் மனம். முனிவரைப் பற்றி விசாரித்து விட்டு அவர் தன் முகத்தையும் உற்றுப் பார்ப்பதை அவன் காணத் தவறவில்லை.
"என்ன அப்படித் திகைக்கின்றாய் தம்பீ? என்னுடைய முதுமைக்குள் இந்தப் பெருநகரில் எத்தனை கார் காலங்களையும், வேனிற் காலங்களையும் பார்த்திருப்பேன் தெரியுமா? மனிதர்களைப் பார்த்திருக்கவும் பழகியிருக்கவும் முடியாமலா போயிருக்கும்?" என்று மேலும் சொன்னார் அவர்.
பின்னும் அவரிடம் பேச்சை வளர்க்க விரும்பாத இளங்குமரன், "முனிவர் நலமாக இருக்கிறார் ஐயா!" என்று கூறிவிட்டு மேலே நடந்தான். என்ன காரணமோ அவர் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவே விருப்பமாயில்லை அவனுக்கு.
"தம்பீ! இன்றைக்குத்தான் உனக்கு அவசரம். இன்னொரு நாள் ஓய்வாக இருக்கும்போது இங்கே வந்து ஒரு வேளை உண்டு போக வேண்டும்" என்று அவர் கூறியதையும், சுரமஞ்சரியும் வானவல்லியும் தன்னைப் பின் தொடர்ந்து வருவதையும் பொருட்படுத்தாமல் பிரதான வாயிலைக் கடந்து அகலமான வீதியில் இறங்கி நடந்து சென்றான் இளங்குமரன். வீதியில் இறங்கும் போது “பல்லக்கு வருகிறது. ஏறிக் கொண்டு போகலாம்" என்று சுரமஞ்சரி கூவிய குரலுக்காகவும் அவன் நிற்கவில்லை. மிகவும் வேகமாக நடந்தான்.
மிகப்பெரிய அந்த மாளிகையிலிருந்து விலகி வீதியில் வெகு தொலைவு வந்த பின்னும் தன்னை யாரோ கூர்ந்து நோக்கியவாறே பின் தொடர்வது போல் இளங்குமரனுக்கு ஒரு பிரமை உண்டாயிற்று. பின்புறம் யாரோ வந்து கொண்டிருப்பது போல் பிடரியிலும் ஓருணர்வு குறுகுறுத்தது. வீதி திரும்பியதும் திருப்பத்தில் நின்று கொண்டு பின் பக்கம் பார்வையைச் செலுத்தினான்! அவன் சந்தேகப்பட்டது சரியாயிருந்தது. கண்ணெடுத்துப் பார்ப்பதற்கு விகாரமான முகத்தையுடைய ஒற்றைக் கண்ணன் ஒருவன் தயங்கித் தயங்கிப் பின்னால் வந்து கொண்டிருந்தான். அந்த ஒற்றைக்கண்ணனுக்குப் பின்னால் தோழிப்பெண் வசந்தமாலையும் பதுங்கினாற் போல மெல்ல வந்து கொண்டிருந்தாள். அவர்கள் தன்னைத் தொடருகிறார்களா அல்லது தற்செயலாக வருகிறார்களா என்பதனைத் தெரிந்து கொள்வதற்காக நின்றும், வழி மாறிச் சென்றும் சோதனை செய்தான். சந்தேகமில்லாத வகையில் அவர்கள் அவனையே தொடர்வது தெரிந்தது. அவன் நின்றால் அவர்களும் நின்றார்கள். அவன் வழி மாறினால் அவர்களும் வழி மாறினார்கள். 'என்ன வந்தாலும் வரட்டும்! அடுத்து வருகிற வீதித் திருப்பத்தில் மறைந்து நின்று இந்த ஒற்றைக் கண் மனிதனை வழி மடக்கி விசாரிக்க வேண்டியதுதான்' என்றெண்ணிக் கொண்டான் இளங்குமரன். அவ்வாறே செய்வதற்கும் சித்தமானான்.
ஆனால் அவன் நினைத்தபடி செய்ய முடியவில்லை! ஏனென்றால் அந்த வீதி திரும்புமிடத்தில் ஏற்கெனவே நாளங்காடியிலிருந்து தன்னைத் தேடி வந்து கொண்டிருந்த கதக்கண்ணனையும், பிற நண்பர்களையும் அவன் சந்திக்கும்படி நேர்ந்து விட்டது.
கலியருள் அகலக் காவிரியணைந்த மாபெரும் நகர்க்குப் பொலிகதிர் பரப்பிப் பகல் செய்த கதிரவன் மெல்ல மெல்ல மேற்கே மறைந்து கொண்டிருந்தான். விரிநீல மணித்திரையில் விட்டெறிந்த ஒளி மலர்களென விண்மீன்கள் மின்னத் தொடங்கியிருந்தன. திசைமுகங்கள் பசந்து மயங்கி நிறம் பூசிக் கொள்ளலாயின. அகன்ற வான்வெளியில் சந்திரன் அணி நிலா விரித்தான். பொழுதும், பருவமும், காலம் கற்பிக்கும் இயற்கையெழில்களும் எல்லா இடத்திலும் அழகு தருவனவாக இருப்பினும் பூம்புகார் நகரைச் சார்ந்து வரும் போது பன்மடங்கு பேரழகு தருவனவாக இருந்தன. இயற்கை நிகழ்ச்சிகள் தாம் நிகழுமிடத்தைப் பொறுத்தே அழகு பெறுகின்றன. கதிரவன் உதயம் கடற்கரையிற் பேரழகு, தென்றல் சோலைகளின் நடுவே வீசும் போது பேரழகு, அருவி மலை முகடுகளில் இலங்கும் போது பேரழகு - என்று சார்ந்த இடம், சூழ்நிலை ஆகியவற்றால் அழகு பேரழகாவது போல் தன்னைச் சார்ந்து நிகழும் யாவற்றையும் பேரழகாக்கிக் காட்டும் பெரும் பேரழகை முதலீடாகக் கொண்டது பூம்புகார் நகரம்.
வளம் மலிந்த அந்நகரத்தில் காலையும் அழகு, மாலையும் அழகு, நண்பகலும் அழகு, இரவும் அழகுதான். நேரத்துக்கு நேரம் விதம் விதமாக அலங்கரித்துக் கொண்டு நிற்கும் வனப்பும் வசதிகளும் உள்ள அழகிபோல் ஒவ்வொரு பொழுதும் பருவமும் ஒவ்வொரு அழகு தோன்றித் துலங்கும் அரச கம்பீர வாழ்வுள்ள நகரமாயிருந்தது அது. நகரின் எல்லாப் பகுதிகளுக்கும் அழகைச் சுமந்து கொண்டு வந்த அந்தி மாலை நேரம் பட்டினப்பாக்கத்தில் அழகுக்கே அழகு செய்வது போலப் பரவியது. மாளிகையின் முன் புறங்களில் பசுமையழகுக்காகப் படர விட்டிருந்த முல்லையும் மல்லிகையும் அரும்பு நெகிழ்ந்து மணம் பரப்ப, அந்த மணம் அந்த நேரத்தில் வீசிக் கொண்டிருந்த மெல்லிளந் தென்றலிற் கலந்து பரவியது. அந்தி மாலைக்காக இல்லங்களில் முன் பக்கத்து மாடப் பிறைகளில் மங்கல விளக்கேற்றி வைக்கும் பெண்களின் வளையொலியும், சிரிப்பொலியும், கிண்கிணிச் சிலம்பொலியும் வீதியெல்லாம் நிறைந்து ஒலித்தன. முகமே ஒரு மங்கல விளக்காய் அதில் முத்து நகை சுடர் விரிக்க முறுவல் நிகழும் போது விழிகளில் நளினம் ஒளி பரப்பத் தீபம் ஏற்றி வைக்கும் பெண்களே தீபங்களைப் போல் வீதிகளில் தோன்றினர். வீதிகளிலிருந்து யாழிசையும், குழலிசையும், மத்தளம் - முரசங்களின் ஒலியும், பல்வேறு கோவில்களின் மணியோசையும், மறை முழக்கமும், பண்ணிசை ததும்பும் பாடல்களும் கலந்தெழுந்து ஒலிக்காவியம் படைத்தன.
அந்த அற்புதமான நேரத்தில் சுரமஞ்சரியும் அவளுடைய சகோதரி வானவல்லியும், வேறு பணிப்பெண்களும், தங்கள் பெருமாளிகைகளின் ஏழாவது மாடத்துக்கு மேலே நிலா முற்றத்தில் அமர்ந்திருந்தார்கள். மிகவும் உயரமான அந்த நிலா முற்றத்திலிருந்து நான்கு காதச் சுற்றளவுக்குப் பரந்திருந்த பூம்புகார் நகரத்தின் எல்லாப் பகுதிகளும் நன்றாகத் தெரிந்தன. ஒளி வெள்ளம் பாய்ச்சினாற் போல் இந்திர விழாவுக்கான தீபாலங்காரங்கள் நகரத்தை சுடர் மயமாக்கியிருந்தன. நாளங்காடிக்கும் அப்பால் கிழக்கே மருவூர்ப்பாக்கம் முடிகிற இடத்தில் நீல நெடுங்கடல் அலை பாய்ந்து கொண்டிருந்தது. துறைமுகத்திலும், காவிரியின் சங்கம வாயிலிலும் பெரிய கப்பல்களில் வைத்திருந்த விளக்குகள் பல நிறத்தினவாய்ப் பல விதத்தினவாய் நீர்ப்பரப்பில் ஒளிக்கோலம் காட்டிக் கொண்டிருந்தன. மேற்கிலிருந்து கிழக்கு முகமாகப் பாய்ந்து கடலோடு கலக்கும் காவிரி வாயில் சங்கம முகத்தில் கலங்கரை விளக்கத்துத் தீ செந்நாக்குகளை விரித்து எரிந்து கொண்டிருந்தது. தன் மாளிகை நிலா முற்றத்திலிருந்து காவிரிப்பூம்பட்டினத்தின் அந்திமாலைக் காட்சி வனப்பை எத்துணையோ முறை கண்டு வியந்திருக்கிறாள் சுரமஞ்சரி. ஆனால் இன்று மாலையில் காணும் போது அந்தக் காட்சி வனப்பில் புதிதாக வியப்பையும் அழகையும் உணரும் ஏதோ ஓர் உற்சாக உணர்வு அவள் உள்ளத்துள்ளே குறுகுறுத்தது. 'பிணியுற்றுக் கிடந்தவர்களுக்குப் பிறந்தநாள் வந்தது போல் அந்த உற்சாக உணர்வை முழுமையாக அநுபவிக்க முடியாத மனக்குறைவும் சிறிது இருந்தது அவளுக்கு. இளங்குமரனை நினைக்கும் போது அவள் மனம் களிப்படைந்து துள்ளியது. அவனுடைய திமிரையும், அவன் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தையும் நினைத்துப் பார்த்தால் அவள் மனம் வாடித் துவண்டது.
சுரமஞ்சரியின் சகோதரி வானவல்லிக்கு 'வங்கியம்' எனப்படும் புல்லாங்குழல் வாசிப்பதில் இணையற்ற திறமை உண்டு. அப்போதும் அவள் அதை வாசித்துக் கொண்டு தான் இருந்தாள். அந்த மாளிகையைச் சேர்ந்த மற்றோர் இசையணங்கு மகர யாழிலே இன்னிசை எழுப்பிக் கொண்டிருந்தாள். வேறொருத்தி மத்தளம் வாசித்தாள். நிலா முற்றத்தில் தன்னருகே பரவிப் பாய்ந்து கொண்டிருந்த இந்த இசை வெள்ளத்தில் மூழ்காமல் இளங்குமரனைப் பற்றிய நினைவு வெள்ளத்தில் மூழ்கியிருந்தாள் சுரமஞ்சரி. தந்தத்தில் இழைத்து முத்துப் பதித்த சித்திரக் கட்டிலில் இரத்தினக் கம்பள விரிப்பின் மேல் அமர்ந்து இசை அரங்கு நிகழ்த்திக் கொண்டிருந்தவர்கள், சுரமஞ்சரி தங்கள் இன்னிசையில் ஆழ்ந்து மூழ்கி அனுபவித்துக் கொண்டு தான் எதிரே அமர்ந்திருக்கிறாளென நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சுரமஞ்சரியின் இதயத்தை யாழாக்கி அதன் மெல்லிய உணர்வு நரம்புகளில் இளங்குமரன் என்னும் எழில் நினைவு வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்ததை அவர்கள் அறியவில்லை. 'வெள்ளி வெண்குடத்துப் பால் சொரிவது போல்' தண்மதிக் கதிர் பரவும் நிலா முற்றத்தில், உடலை வருடிச் செல்லும் இதமான காற்றும் வீசும் நிலையில் சுரமஞ்சரி நினைக்கலானாள்:
'இந்திரவிழாக் காலத்தில் இந்த மாளிகைக்கு வந்தவர்களை விருந்துண்ணச் செய்யாமல் அனுப்பும் வழக்கமில்லை. மாளிகைக்கு வந்து உணவை முடித்துக் கொண்டு போகலாம் என்று எவ்வளவு அன்போடும் ஆர்வத்தோடும் அவரை அழைத்தேன்! 'நான் இந்த மாளிகைக்கு விருந்து உண்ண வரவில்லை' என்று சிறிதும் தயங்காமல் முகத்தில் அறைந்தாற் போல் பதில் கூறி விட்டாரே! அதுதான் போகட்டும், தந்தையார் ஏன் அப்படி மரங்களின் மறைவில் ஒளிந்தாற் போல் நின்று அவரையும் எங்களையும் கவனித்தார்? திடீரென்று மறைவிலிருந்து வெளிப்பட்டு, 'இந்தப் பிள்ளையை நான் இதற்கு முன்பு எங்கோ பார்த்தாற் போல் நினைவிருக்கிறதம்மா' என்று கூறி எங்களையும் அவரையும் திகைப்படையச் செய்ததுமல்லாமல் அவரருகில் சென்று அநாகரிகமாக அவரை உற்று உற்றுப் பார்த்தாரே தந்தையார், அதன் நோக்கமென்ன? எவ்வளவோ உலகியலறிவும் நாகரிகமும் தெரிந்த தந்தையார் இன்று தோட்டத்தில் ஏன் அப்படி நடந்து கொண்டார்? தந்தையாரின் எதிர்பாராத வருகையும், பேச்சும், உற்றுப் பார்த்த பார்வையும் அவருக்கு அநாகரிகமாகத்தான் தோன்றியிருக்கும். இல்லாவிட்டால், 'நடந்து போகாதீர்கள், பல்லக்கு வருகிறது, அதில் ஏறிக் கொண்டு போகலாம்' என்று நான் கூவிய போது திரும்பியும் பார்க்காமல் அலட்சியமாக வீதியில் இறங்கி நடந்திருப்பாரா அவர்? நல்ல வேளை! நான் அப்போது காட்டிய குறிப்பைப் புரிந்து கொண்டு என் பக்கத்தில் நின்ற வசந்தமாலை அவரைப் பின் தொடர்ந்து சென்றிருக்கிறாள். என்னுடைய தோழிகளிலேயே வசந்தமாலைக்குத்தான் குறிப்பறியும் திறன் அதிகம். பின் தொடர்ந்து போய் அவரைப் பற்றிய விவரங்களையும், அவர் வசிக்கும் இடத்தையும் நன்றாகத் தெரிந்து கொண்டுதான் திரும்பி வருவாள் அவள்! வசந்தமாலை விரைவில் திரும்பி வந்து அவரைப் பற்றிய எல்லா விவரங்களையும் கூறி விட மாட்டாளா என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் சுரமஞ்சரி. 'ஒருவேளை தனக்குத் தெரியாமலே வசந்தமாலை இதற்குள் திரும்பி வந்திருப்பாளோ?' என்று சுரமஞ்சரிக்கு ஐயம் ஏற்பட்டது. நிலா முற்றத்திலிருந்து கீழே இறங்கிப் போய்ப் பார்த்துவிட்டு வரலாமென்றால் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கும் வானவல்லியும், மற்றவர்களும் தான் இருந்தாற் போலிருந்தது நடுவில் எழுந்து போவதைத் தவறாகப் புரிந்து கொண்டு வருந்தலாகாதே என்று தயங்கினாள் சுரமஞ்சரி.
சிறிது நேரத்தில் நிலாமுற்றத்து இசையரங்கு தானாகவே முற்றுப் பெற்றது. வானவல்லியும் மற்றப் பெண்களும் வேறு பேச்சுக்களைப் பேசத் தொடங்கினார்கள். தான் நிலா முற்றத்திலிருந்து கீழே இறங்கிப் போய் 'வசந்தமாலை வந்திருக்கிறாளா?' என்று பார்த்து விட்டுத் திரும்புவதற்கு இதுதான் ஏற்ற நேரம் என்று தீர்மானம் செய்து கொண்டவளாய் எழுந்தாள் சுரமஞ்சரி.
'வானவல்லி! நீ இவர்களோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிரு. நான் கீழே போய் வசந்தமாலை வந்திருக்கிறாளா என்று பார்த்து விட்டு வருகிறேன்' எனக் கூறிவிட்டு அவள் புறப்பட்ட போது வானவல்லி அவளைத் தடுக்கவில்லை. நிலா முற்றத்திலிருந்து கீழ்ப் பகுதிக்குச் செல்லும் படிகளில் வேகமாக இறங்கினாள் சுரமஞ்சரி.
சம நிலத்திலிருந்து ஓங்கி நின்ற அந்த ஏழடுக்கு மாளிகை அரண்மனை போன்ற ஒரே கட்டடமாக உயர்ந்து தோன்றினாலும் ஏழு மாடங்களும் ஏழு தனி மாளிகைகள் போல் வசதிகள் நிறைந்தவை. நோக்குமிடமெல்லாம் சித்திரங்கள், நுகருமிடமெல்லாம் நறுமணங்கள், அமர விரும்புமிடமெல்லாம் பட்டு விரித்த மஞ்சங்கள், பஞ்சணைகள், பாங்கான இருக்கைகள், எல்லாம் எல்லா இடங்களிலும் பொருந்திய பெருமாளிகை அது. அந்தி நேரங் கழித்து இரவு தொடங்கி விட்டதால் வண்ண வண்ண விளக்குகள் வேறு மாளிகைகளை ஒளிமயமாக்கியிருந்தன. ஏழு நிலை மாடங்களில் கீழிருந்து மூன்றாவதாக அமைந்த மாடமும் அதைச் சார்ந்த அறைகளும் சுரமஞ்சரியின் புழக்கத்துக்கென அவள் தந்தையாரால் விடப்பட்டிருந்தன. 'இளங்குமரனைப் பின் தொடர்ந்து சென்றிருந்த வசந்தமாலை திரும்பி வந்திருந்தால் இந்த மூன்றாவது மாடத்துக்குள் தான் எங்கேயாவது இருப்பாள்' என்பது சுரமஞ்சரிக்குத் தெரியும். அன்று பிற்பகலில் ஓவியனிடம் வரைந்து வாங்கிய இளங்குமரனின் ஓவியத்தை இந்த மூன்றாவது மாடத்துக்குள் அமைந்திருந்த சித்திரச் சாலையில் தான் சுரமஞ்சரி வைத்திருந்தாள். காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த சிறந்த ஓவியர்களிடமிருந்தும், இந்திர விழாக் காலங்களில் பல தேசங்களிலிருந்து பூம்புகாருக்கு வந்து போகும் ஓவியர்களிடமிருந்தும் வகைவகையான அபூர்வ ஓவியங்களையெல்லாம் வாங்கித் தனது சித்திரச் சாலையில் சேர்த்து வைத்திருந்தாள் சுரமஞ்சரி. அவளுடைய சித்திரச்சாலையை ஒருமுறை சுற்றிப் பார்த்தால் போதும், ஓவியங்களில் அவளுக்கு இருக்கும் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு விடலாம்.
'தோழி வசந்தமாலை இன்னும் வந்து சேர்ந்திருக்க வில்லையானால் நமது சித்திரச் சாலையில் போய் அவருடைய ஓவியத்தின் அழகை ஆர்வம் தீரக் கண்டு கொண்டே சிறிது நேரத்தைக் கழிக்கலாம்' என்ற எண்ணத்தோடு மூன்றாவது மாடத்துக்குள் நுழைந்தாள் சுரமஞ்சரி. தனக்குச் சொந்தமான அந்த மூன்றாவது அடுக்கு மாளிகையை மிக அலங்காரமாக வைத்துக் கொண்டிருந்தாள் அவள். மாளிகையின் முன் கூடத்தில் யாரும் இல்லாததால் வசந்தமாலை இன்னும் வந்து சேரவில்லை என்பதை அவள் புரிந்து கொண்டாள். முன் கூடத்தை அடுத்து அவளுடைய இசைக் கருவிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கீதமண்டபமும் அதையடுத்து நாட்டியமாடும் காலத்தில் பயன்படுத்தும் நிருத்திய மண்டபமும் அணிமணிகள் உடைகள் புனைந்து கொள்ளும் தனியான அலங்கார மண்டபமும், இறுதியாகச் சித்திரச்சாலையும் அமைந்திருந்தன. இவ்வளவு இடங்களையும் கடந்து செல்ல வேண்டிய இறுதிப் பகுதியாக அமைந்திருந்த காரணத்தால் சுரமஞ்சரியோ, அவள் தோழியோ உடன் அழைத்துச் சென்றாலன்றி அவளுடைய சித்திரச் சாலைக்குள் பிறர் நுழைவது வழக்கமில்லை. 'வசந்தமாலை திரும்பி வருகிறவரை சித்திரச் சாலையில் பொழுதைக் கழிக்கலாம்' என்ற நினைப்புடன் தனிமை தந்த உல்லாசத்தில் ஒரு பாடலை மெல்ல இசைத்துக் கொண்டே கீதமண்டபத்தைக் கடந்து சித்திரச் சாலைக்குச் செல்வதற்காக மேலே நடந்தாள் சுரமஞ்சரி.
இதழ்களில் மெல்லிசை இழைந்து ஒலிக்க நடந்து சென்றவள் அலங்கார மண்டபம் முடிந்து சித்திரச் சாலைக்குள் இறங்கும் படி அருகிலேயே திகைத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நாவிலிருந்து எழுந்த மெல்லிசை நின்றது. அவள் முகத்தில் வியப்பும் பயமும் நிறைந்தன. காரணம்? சித்திரச் சாலைக்குள்ளிருந்து மெதுவாகவும் மர்மமாகவும் பேசிக் கொள்ளுகிற ஆடவர் பேச்சுக் குரல் அவள் செவிகளை எட்டியது. 'நான் பேணிப் பாதுகாத்து வரும் என்னுடைய சித்திரச்சாலையில் சொல்லி அனுமதி பெறாமல் என் தந்தையார் கூட நுழைய மாட்டாரே? இப்படி நான் இல்லாத வேளையில் துணிந்து இங்கே நுழைந்திருக்கும் இவர்கள் யாராயிருக்கலாம்?' என்ற பயம் கலந்த சந்தேகத்துடன் ஓசைப்படாமல் சித்திரச் சாலைக்குள் இறங்கும் இரண்டாவது படியில் காலை வைத்து மெல்லத் தலையை நீட்டி எட்டிப் பார்த்தாள் அவள்.
அப்படிப் பார்த்த பின் சுரமஞ்சரியின் வியப்பு இன்னும் அதிகமாயிற்று. 'தன்னுடைய அனுமதியின்றி அவரும் நுழைய மாட்டாரே' என்று சற்று முன் யாரைப் பற்றி அவள் பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தாளோ, அவரே தான் அங்கே இளங்குமரனின் ஓவியத்துக்கு முன் நின்று கொண்டிருந்தார்! ஆம், அவளுடைய தந்தையார்தாம் நின்று கொண்டிருந்தார். பிற்பகலில் இளங்குமரன் சென்ற சிறிது நேரத்தில் நூறு பொற் கழஞ்சுகளைப் பெற்றுக் கொண்டு போயிருந்த ஓவியன் மணிமார்பனும் தன் தந்தைக்கு அருகில் இப்போது சித்திரச் சாலைக்குள் நிற்பதைக் கண்டாள் சுரமஞ்சரி. தம் கை ஊன்று கோலால் இளங்குமரனுடைய ஓவியத்தைச் சுட்டிக் காட்டி 'ஏதோ செய்யுமாறு' எதிரே பயந்து நடுங்கி நிற்கும் ஓவியனைத் தன் தந்தை மிரட்டுவதையும் படியில் நின்று கொண்டிருந்த சுரமஞ்சரி கண்டாள். 'பொற் கழஞ்சுகளை வாங்கிக் கொண்டு ஓவியன் போய்விட்டதாக தான் நினைத்துக் கொண்டிருந்ததுதான் தவறு. தந்தையார் ஏதோ ஓர் அந்தரங்க நோக்கத்துக்காக ஓவியனைத் தடுத்துத் தங்க வைத்திருக்க வேண்டு'மென்று அவளுடைய உள்ளுணர்வு அவளுக்குக் கூறியது. ஆனால் அது என்ன அந்தரங்கம் என்பதை மட்டும் அப்போது அவளால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. சித்திரச்சாலையில் மேலும் என்னென்ன நிகழ்கின்றன என்பதை மறைந்திருந்து கவனிக்கலானாள் சுரமஞ்சரி.
'அருட்செல்வ முனிவரைக் காணவில்லை' என்பதால் ஏற்பட்ட திகைப்பும் மலைப்பும் வீரசோழிய வளநாடுடையார் மனத்தில் கலக்கத்தை உண்டாக்கியிருந்தன. அந்தக் கலக்கத்தினால்தான் போகும் போது இளங்குமரனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு போயிருந்த தன் மகள் முல்லை திரும்பி நாளங்காடியிலிருந்து எவர் துணையுமின்றித் தனியே வந்ததைக் கூட அவர் கவனித்துக் கோபம் கொள்ளவில்லை. இல்லாவிட்டால் அவளைத் தனியே அனுப்பிவிட்டு எங்கோ போனதற்காக இளங்குமரனைப் பற்றி வாய் ஓய்வடையும் வரை வசைபாடித் தீர்த்திருப்பார் அவர்.
நாளங்காடியிலிருந்து முல்லை திரும்பி வந்து வீட்டுப் படி ஏறிய போது அவருடைய சிந்தனையாற்றல் முழுவதும் 'முனிவர் எதற்காக என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் திடீரென்று இங்கிருந்து கிளம்பிப் போனார்? அதுவும் ஏதோ சிறைப்படுத்தப் பட்டிருந்தவன் தப்பி ஓடிப் போகிறது போல் பின்புறத்து வழியாகத் தப்பிப் போக வேண்டிய அவசியமென்ன?' என்னும் வினாக்களுக்கு விடை காண்பதில் ஈடுபட்டிருந்தது.
அருட்செலவ முனிவர் தம் இல்லத்திலிருந்து வெளியேறிச் சென்றதற்குக் காரணத்தை அவரால் உறுதியாகத் தீர்மானம் செய்ய முடியவில்லையே தவிர 'இன்ன காரணமாகத்தான் இருக்கலாம்' என்று ஒருவாறு அநுமானம் செய்து கொள்ள முடிந்தது. இளங்குமரனுடைய பிறப்பு வளர்ப்பைப் பற்றி ஏதாவது தூண்டிக் கேட்க ஆரம்பித்தாலே அவர் பயப்படுகிறார். அதில் ஏதோ ஒரு பெரிய மர்மமும் இரகசியமும் இருக்கும் போல் தோன்றுகிறது. இன்றைக்கு நான் அவரிடம் இளங்குமரனைப் பற்றிய பேச்சைத் தொடங்கியிராவிட்டால் இப்படி நேர்ந்திருக்காது. அந்தக் கேள்வியைக் கேட்டதும் அவர் முகம் தான் எப்படி மாறிற்று! 'சில நிகழ்ச்சிகளை இதயத்துக்குள்ளேயே இரண்டாம் முறையாக நினைத்துப் பார்ப்பதற்குக் கூட அச்சமாக இருக்கிறதே, வெளியே எப்படி வாய்விட்டுக் கூறமுடியும்?' என்று பதில் கூறும் போது முனிவரின் குரலில் தான் எவ்வளவு பீதி, எவ்வளவு நடுக்கம்! என்று நிகழ்ந்தவற்றைக் கோவையாக மீண்டும் சிந்தித்துப் பார்த்தார் வளநாடுடையார். இளங்குமரனைப் பற்றி முனிவரிடம் விசாரிக்க நேர்ந்த போதெல்லாம் பல முறைகள் இது போன்ற அனுபவங்களையே அடைந்திருக்கிறார் அவர்.
"இப்படியே முனிவரைக் காணவில்லை என்று பேசாமல் உட்கார்ந்து கொண்டிருந்தால் என்ன செய்வது அப்பா? தேடுவதற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டாமா? இன்னும் சிறிது நேரத்தில் அண்ணனும் முனிவருடைய வளர்ப்புப் பிள்ளையாகிய அவரும் இங்கே வந்து விடுவார்களே? அவர்களுக்கு என்ன பதில் சொல்வது?" என்று முல்லை கேள்வி கேட்ட போது தான் வளநாடுடையாருக்கும் ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்ற உணர்வு வந்தது.
முனிவரைப் பற்றி முல்லை தன் மனத்துக்கு மட்டும் தெரிந்த உண்மை ஒன்றைத் தந்தையிடம் சொல்ல விரும்பவில்லை. அது போலவே தனிமையில் முனிவரிடம் தாம் கேட்ட கேள்விகளைப் பற்றியும் முனிவர் அங்கிருந்து கிளம்பிச் செல்ல அந்தக் கேள்விகளும் ஓரளவு காரணமாயிருக்கலாம் என்பதைப் பற்றியும் தந்தை மகளிடம் சொல்லவில்லை. முதல் நாள் நள்ளிரவில் முனிவருக்கும் இளங்குமரனுக்கும் நிகழ்ந்த உருக்கமான உரையாடலையும், அந்த உரையாடலின் போது முனிவர் துயரம் தாங்காமல் அழுததையும் அறிந்திருந்த முல்லை தன் தந்தையாரிடம் அவற்றைக் கூறியிருப்பாளாயின் அவருக்கு அவற்றைக் கொண்டு முனிவர் மேல் இன்னும் சில சந்தேகங்கள் கொள்ள இடம் கிடைத்திருக்கும். அதே போல் முனிவரிடம் தாம் தனிமையில் பேசிய பேச்சுக்களை வளநாடுடையார் தம் மகளிடம் கூறியிருந்தால் அவளுக்கு முனிவர் ஏன் ஓடிப் போனார் என்ற சந்தேகம் தீர்ந்து போயிருக்கும். இரண்டு காரியங்களுமே அப்படி நிகழாததனால் சந்தேகங்களும் குழப்பங்களும் இன்னும் அதிகமாயின.
"நானும் துணைக்கு வருகிறேன் அப்பா! புறப்படுங்கள், முனிவரைத் தேடிப் பார்க்கலாம்," என்று உடன் புறப்படத் தொடங்கிய முல்லையை வரவேண்டாமென மறுத்துவிட்டார் அவர்.
"நீ வேண்டாம் முல்லை! நானே மறுபடியும் போய் நன்றாகத் தேடிவிட்டு வருகிறேன். நம் வீட்டுப் பின்புறம் ஆரம்பமாகிற நெடுமரச் சோலை, சம்பாபதி வனம், சக்கரவாளக் கோட்டம் ஆகிய இடங்கள் வரை நெடுந்தொலைவு இடைவெளியின்றிப் பரந்து கிடக்கிறதே, இதில் எங்கேயென்று குறிப்பிட்டு அவரைத் தேடுவது?" என்று கூறிக்கொண்டே திண்ணையில் அடுக்கியிருந்த வேல்களில் ஒன்றை உருவினார் வளநாடுடையார். அந்த வேலை ஊன்றுந் துணையாகக் கொண்டு வீட்டின் பின் பக்கத்துத் தோட்ட வழியாக அவர் புறப்பட்ட போது பிற்பகல் நேரம் முதிரத் தொடங்கியிருந்தது.
முடிந்தவரை எல்லா இடங்களிலும் தேடி விட்டு இறுதியாகச் சக்கரவாளக் கோட்டத்திலுள்ள அருட்செல்வ முனிவரின் தவச் சாலைக்கும் போய்ப் பார்த்துவிடலாம் என்பது கிழவர் வீரசோழிய வளநாடுடையாரின் எண்ணமாக இருந்தது. இளமையிலும் நடுத்தர வயதிலும் காவல் வீரனாகவும், காவற்படைத் தலைவனாகவும் அந்தப் பெருவனத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வேலும் கையுமாகச் சுற்றிய நினைவு வந்தது அவருக்கு. அப்போது சுற்றியதற்கும், இப்போது சுற்றுவதற்கும் இடையில் தான் எத்துணை வேறுபாடுகள்! வீரமும், மிடுக்கும், வலிமையும் கொண்டு சுற்றிய அந்தக் காலம் எங்கே? தளர்ந்த உடலோடு வேலை ஊன்றிக் கொண்டு நடக்கும் இந்தக் காலம் எங்கே? முல்லையின் தாயார் காலமாகும் வரையில் அவருக்கு மனத்தளர்ச்சி இருந்ததில்லை. முல்லையின் குழந்தைப் பருவத்தில் 'அவள்' காலமான போது அவருக்கு மனமும் தளர்ந்தது. அந்தச் சமயத்தில் கட்டிளம் காளையாக வளர்ந்திருந்த புதல்வன் கதக்கண்ணனைக் காவற்படை வீரனாகச் சோழ சைன்யத்தில் சேர்த்துவிட்டுத் தாம் வீட்டோடு இருந்து கொண்டார் அவர். அந்த நாளிலிருந்தே அருட்செல்வ முனிவரை அவருக்கும், அவரை அருட்செல்வ முனிவருக்கும் நன்றாகத் தெரியும். அருட்செல்வ முனிவரின் வளர்ப்புப் பிள்ளையாகிய இளங்குமரனும் வளநாடுடையாரின் மூத்த மகனாகிய கதக்கண்ணனும் போர் முறைகளும் படைக்கலப் பயிற்சிகளும் பெறுகிற இளமையிலேயே சேர்ந்து கற்றவர்கள், சேர்ந்து பயின்றவர்கள். மருவூர்ப்பாக்கத்தில் 'நீலநாகர் படைக் கலச்சாலை' என்று ஒன்று இருந்தது. அந்தப் படைக்கலச் சாலையின் தலைவரான நீல நாக மறவர் பூம்புகாரிலேயே பெரிய வீரராகப் போற்றுதல் பெற்றவர். இளங்குமரனும் கதக்கண்ணனும் தங்களுடைய உடல் வலிமையை வளர்த்துக் கொள்வதற்குக் காரணமானவர் அந்த மறவர்தான். அந்த மறவரிடம் இளங்குமரனையும் கதக்கண்ணனையும் கொண்டு போய்ச் சேர்த்தது வள்நாடுடையார்தாம். அருட்செல்வ முனிவரைத் தேடிக் கொண்டு அலைந்த போது வளநாடுடையாருக்கு இந்தப் பழைய நினைவுகள் எல்லாம் உண்டாயின. கந்திற்பாவை கோட்டம், உலக அறவி, சம்பாபதி கோவில் போன்ற இடங்களில் எல்லாம் தேடி அலைந்து விட்டு அவற்றைச் சார்ந்திருந்த சக்கரவாளக் கோட்டத்தின் மதிலருகே வந்து நின்றார் வளநாடுடையார். மாலைப் போது நெருங்கிக் கொண்டிருந்தது. சக்கரவாளக் கோட்டத்துக்குள் நுழைவதற்கு நான்கு புறமும் வாயில்கள் உண்டு. செழுங்கொடிவாயில், நலங்கிளர்வாயில், வெள்ளிடைவாயில், பூதம் நின்ற வாயில் என்னும் நான்கு மாபெரும் வாயில்கள் சக்கரவாளக் கோட்டத்து நாற்புற மதில்களில் அமைந்திருந்தன. அவற்றுள் பூதம் நின்ற வாயில் வழியாக நுழைந்து போனால் அருட்செல்வ முனிவரின் தவச் சாலையை எளிதாக அடையலாம். பூதம் நின்ற வாயில் என்பது விநோதமான அமைப்பை உடையது. பெரிய பூதம் ஒன்று சிலை வடிவில் தன் இரண்டு கால்களையும் அகற்றி நிற்பது போல் அவ்வாயில் கட்டப்பட்டிருந்தது. வானளாவி நிற்கும் அந்த பூதச் சிலையின் இரு கால்களுக்கும் இடையேதான் கோட்டத்துக்குள் போவதற்கான சாலை அமைந்திருந்தது. தைரியமில்லாத மனங் கொண்டவர்கள் பூதம் நின்ற வாயிலில் நடந்து உள்ளே போகும் போது கூட அந்தச் சிலை அப்படியே கைகளை நீட்டித் தங்களை அமுக்கி விடுமோ என்று வீணாகப் பிரமை கொள்ள நேரிடும். அவ்வளவு பிரும்மாண்டமான அமைப்புடையது அந்த வாயில். அதைப் பார்த்துக் கொண்டு நின்றால் கால்களிடையே வழி கொடுத்துக் கொண்டே பூதம் நகர்ந்து வருவது போலவே தொலைவில் தோன்றும். வீரசோழிய வளநாடுடையார் பூதம் நின்ற வாயிலின் வழியே சக்கரவாளக் கோட்டத்துக்குள் நுழைந்தார். அந்த மாலை நேரத்தில் அருட்செல்வ முனிவரின் தவச்சாலையும் அதைச் சூழ்ந்திருந்த மலர் வனமும், ஆளரவமற்ற தனிமையில் மூழ்கித் தோற்றமளித்தன. 'அருட்செல்வ முனிவரே' என்று இரைந்து கூவியழைத்தவாறே தவச்சாலையில் ஒவ்வொரு பகுதியிலும் சுற்றிச் சுற்றி வந்தார் வளநாடுடையார். அவர் உரத்த குரலில் கூப்பிட்ட முனிவரின் பெயர்தான் அந்த வனத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் திரும்பத் திரும்ப எதிரொலித்ததே தவிர, வேறு பதில் இல்லை. தவச்சாலையின் ஒரு பகுதியில் சுவடிகளை விரித்து வைத்து அருகில் தீபமும் ஏற்றி வைக்கப்பட்டிருந்ததால் மாலைப்போது நெருங்குகிற அந்த வேளையில் யாரோ அங்கு வந்திருக்கிறார்களென்பதை வளநாடுடையாரால் புரிந்து கொள்ள முடிந்தது. 'சுவடிகள் தாமாக விரிந்துக் கொண்டு கிடக்கப் போவதில்லை. தீபமும் தானாக ஏற்றிக் கொண்டு ஒளிதரப் போவதில்லை! யாரோ இப்போது இங்கே இருக்கிறார்கள்! ஆனால் என் முன்னால் வரத் தயங்குகிறார்கள்' என்று சந்தேகங் கொண்டார் வளநாடுடையார். 'சுவடிகளைப் படிக்க ஏற்ற முறையில் விரித்துத் தீபமும் ஏற்றி வைத்தவர், தாம் அங்கே வந்து நுழைவதைப் பார்த்து விட்டு வேண்டுமென்றே தமக்காகவே மறைந்திருக்கலாமோ?' என்று தோன்றியது வளநாடுடையாருக்கு. மறைந்திருக்கும் ஆளை வெளியே வரச் செய்வதற்காக மெல்ல ஒரு தந்திரம் செய்தார் வளநாடுடையார்.
"சரிதான் இங்கு எவரையும் காணவில்லை. நாம் வந்த வழியே திரும்பிப் போக வேண்டியதுதான். முனிவரை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்" - என்று சற்று இரைந்த குரலில் தமக்குத் தாமே சொல்லிக் கொள்கிறாற் போல் சொல்லிக் கொண்டு திரும்பி நடந்தார் அவர். நடந்தார் என்பதை விட வேகமாகத் திரும்பிச் செல்வது போல் போக்குக் காட்டினார் என்பதே பொருந்தும்.
வளநாடுடையார் நினைத்தது நடந்தது. அவர் தவச்சாலையின் வாயில்வரை வேகமாக நடந்து போய்த் திடீரென்று நடையை நிறுத்தி மெல்லத் திரும்பவும் அந்தச் சுவடிக்கும் தீபத்துக்கும் அருகில் யாரோ வந்து உட்காரவும் சரியாக இருந்தது. திரும்பியும் திரும்பாமலும் அரைகுறையாக ஓரக்கண்ணால் பார்க்க முயன்ற அந்தப் பார்வையால் வந்து உட்கார்ந்த ஆளை அவரால் நன்றாகக் காண முடியவில்லை.
பட்டினப்பாக்கத்துப் பெருவீதியின் திருப்பத்தில் இளங்குமரனைக் கண்டதும் கதக்கண்ணனும் மற்ற நண்பர்களும் குதிரைகளை நிறுத்திக் கீழே இறங்கிச் சூழ நின்று கொண்டார்கள். எதிர்பாராத நிலையில் அவர்களை அங்கே சந்தித்த வியப்பு அடங்கச் சில வினாடிகள் ஆயிற்று இளங்குமரனுக்கு.
"கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல் என்று பழமொழி கூறுவார்கள். இளங்குமரா! நாங்கள் உன்னைத் தேடித்தான் வந்து கொண்டிருக்கிறோம். அதற்குள் நீயே எதிரே வந்துவிட்டாய். உன்னிடம் அவசரமாகப் பேச வேண்டிய செய்திகள் நிறைய இருக்கின்றன" என்று பேச்சைத் தொடங்கினான் கதக்கண்ணன். அதைக் கேட்டு இளங்குமரன் சிரித்துச் சொல்லலானான்:
"நான் தெய்வமும் இல்லை; நீங்கள் என்னைக் கும்பிடுவதற்காகத் தேடி வரவும் இல்லை. நான் மட்டும் தெய்வமாயிருந்தால் இந்தப் பட்டினப்பாக்கம் என்னும் அகநகரத்தை இப்படியே அடியோடு பெயர்த்துக் கொண்டு போய்க் கிழக்கே கடலில் மூழ்கச் செய்துவிடுவேன். இங்கே பெரிய மாளிகைகளின் அகன்ற இடங்களில் சிறிய மனிதர்கள் குறுகிய மனங்களோடு வாழ்கிறார்கள். இவர்கள் பார்வை, பேச்சு, நினைவு, செயல் எல்லாவற்றிலும் சூழ்ச்சி கலந்திருக்கிறது; சூது நிறைந்திருக்கிறது."
ஆத்திரத்தோடு இவ்வாறு கூறிக் கொண்டே பின்புறம் திரும்பி யாருடைய வரவையோ எதிர்பார்க்கிறாற் போல் நோக்கினான் இளங்குமரன். ஆனால் பின்புறம் ஒன்றன் பின் ஒன்றாக வீதியைக் கடந்து சென்று கொண்டிருந்த இரண்டு மூன்று தேர்களின் தோற்றம் அவன் பார்வையை அப்பால் சென்று காண முடியாமல் தடுத்து விட்டது. கதக்கண்ணனும் மற்ற நண்பர்களும் இளங்குமரனின் பார்வை யாரைத் தேடி ஆத்திரத்தோடு அவ்வாறு பின்புறம் திரும்புகின்றதென்று தெரியாமல் மயங்கினர். அப்போது "வா, அப்பனே! நன்றாகப் பின் தொடர்ந்து வா. ஒரு கண்ணோடு இன்னொரு கண்ணையும் பொட்டையாக்கி முழுக்குருடனாகத் திருப்பி அனுப்பி வைக்கிறேன்" என்று பின்புறம் திரும்பி நோக்கியவாறே இளங்குமரன் மெல்லக் கறுவிக் கொண்டு முணுமுணுத்த சொற்களை அவனுக்கு மிகவும் அருகில் நின்ற கதக்கண்ணன் கேட்க முடிந்தது. பட்டினப்பாக்கத்தில் இளங்குமரனுக்கு ஆத்திரமூட்டக்கூடிய அனுபவங்கள் எவையேனும் ஏற்பட்டிருக்க வேண்டுமெனக் கதக்கண்ணன் நினைத்துக் கொண்டான். இளங்குமரனுக்கு அப்போது நல்ல பசி. பசியின் வேதனையும் ஆத்திரத்தோடு சேர்ந்து கொண்டிருந்தது. நாளங்காடியிலிருந்து தொடர்ந்து ஏற்பட்ட அநுபவங்களால் அவனுக்கு உண்டாகியிருந்த இனம் புரியாத மனக்கொதிப்பும் சேர்ந்து சினமாக மூண்டிருந்தது. பின் தொடர்ந்து வந்த ஒற்றைக் கண்ணன் அருகில் வந்திருந்தால் தனக்கு இப்போதிருந்த சினத்தில் அவனைப் பந்தாடியிருப்பான் இளங்குமரன். அருகில் தென்படாததால் அந்த ஒற்றைக்கண் மனிதன் பிழைத்தான். குதிரைகளையும் அருகில் நடத்திக் கொண்டு இளங்குமரனோடு மேலே தொடர்ந்து நடந்தார்கள் நண்பர்கள். சிறிது தொலைவு சென்றதும், "நேற்று இரவில்" என்று தொடங்கி எதையோ அவசரமாகச் சொல்ல முற்பட்டான் கதக்கண்ணன். ஆனால் இளங்குமரன், "அதைப் பற்றி இப்போது இங்கே சொல்ல வேண்டாம். பிறகு தனியே கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்" என்று கூறி மேலே பேசவிடாமல் கதக்கண்ணனின் நாவை அடக்கி விட்டான். நெருங்கிய நண்பர்களாகிய தாங்கள் உடனிருக்கும் போது இளங்குமரன் இப்படி நடந்து கொண்டதைக் கண்டு நண்பர்கள் சிறிது திகைப்படைந்தனர்.
"இங்கே பட்டினப்பாக்கத்துக்கு நான் வந்திருக்கிறேனென்று உங்களுக்கு யார் கூறினார்கள்?" என்று இந்தக் கேள்வியை இளங்குமரன் கேட்கும் போது வேறு கவனங்களிலிருந்து நீங்கி முற்றிலும் நண்பர்கள் பக்கம் கவனித்தவனாகத் தோன்றினான். நாளங்காடிப் பூத சதுக்கத்தில் முல்லையைச் சந்தித்ததையும், அவளிடமிருந்து விவரமறிந்து கொண்டதையும் கதக்கண்ணன் இளங்குமரனுக்குச் சொன்னான்.
"கதக்கண்ணா! நானும் முல்லையும் நாளங்காடிக்குப் புறப்படும் போதே உன் தந்தையார் கவலை கொண்டார். நான் இறுதி வரையில் முல்லைக்குத் துணையாயிராமற் போய் விடுவேனோ என்று அவர் பயந்ததற்கு ஏற்றாற் போலவே நடந்துவிட்டது. பூத சதுக்கத்தில் நின்று கொண்டிருந்த போது யாரோ ஒரு கலைஞனுக்கு இரக்கம் காட்டப் போய் எப்படி எப்படியோ வம்புகளில் மாட்டிக் கொள்ள நேர்ந்து விட்டது. முல்லையைத் தனியே விட்டுவிட்டு அவளிடம் சொல்லிக் கொள்ளாமலே நான் பட்டினப்பாக்கம் போகும்படி ஆகிவிட்டது. பாவம்! முல்லைக்கு என் மேல் பெருங்கோபம் ஏற்பட்டிருக்கும்; உன் தந்தையாரிடத்தில் போய் நடந்ததையெல்லாம் சொல்லியிருக்கப் போகிறாள். அவர் முனிவரிடம் என்னைப் பற்றிக் குறைப்பட்டுக் கொண்டிருப்பார். என் மேல் ஆத்திரத்தோடு உன் தந்தையார் என்னை எதிர்பார்த்துக் காத்திருப்பார்" என்று வருத்தம் தோய்ந்த குரலில் கதக்கண்ணனிடம் கூறினான் இளங்குமரன்.
"தந்தையார் உன் மேல் சினம் கொள்ளும்படியாக முல்லை ஒன்றும் சொல்லியிருக்க மாட்டாள். இளங்குமரா! உன்னை அவர் கோபித்துக் கொள்ளக் கூடாதென்பதில் உனக்கு எவ்வளவு கவலை உண்டோ, அதைக் காட்டிலும் அதிகமாக முல்லைக்கும் உண்டு என்பதை நான் அறிவேன்" என்று ஆறுதலாக மறுமொழி கூறினான் கதக்கண்ணன். மேலே அவனே கூறலானான்: "இளங்குமரா, இந்திர விழாவின் இரண்டாம் நாளாகிய இன்றைக்கு நானும் நம் நண்பர்களும் உன் நலனைக் கருதி உன்னிடம் ஒரு வேண்டுகோளை விடுக்கலாமென நினைக்கிறோம். நீ அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும்."
"உங்கள் வேண்டுகோள் இருக்கட்டும்! அதை அப்புறம் பார்க்கலாம். இந்தக் கணமே நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய அவசர வேண்டுகோள் ஒன்று எனக்கு இருக்கிறது. அது நிறைவேறா விட்டால் நடந்து கொண்டிருக்கும் போதே எங்கேயாவது மயங்கி விழுந்து விடுவேன் நான். ஒரே ஒரு முறை தான் சொல்வேன். ஒரு விநாடிதான் சொல்வேன். இதோ கேளுங்கள் நண்பர்களே! மறுமுறை கேட்டால் சொல்லமாட்டேன்" - என்று இரைந்து சொல்லிக் கொண்டே வந்த இளங்குமரன் குரலைச் சிறிதாக்கிக் கொண்டு இதழ்களில் குறுநகை இலங்க மெல்ல நண்பர்களைப் பார்த்துக் கூறினான்: "இப்போது அடியேனுக்கு நல்ல பசி. வயிறு பஞ்சாய்ப் பறக்கிறது."
இளங்குமரன் என்ன பெரிய வேண்டுகோள் விடுக்கப் போகிறானோ என்று திகைத்திருந்த நண்பர்கள் இதைக் கேட்டு உரக்கச் சிரித்தார்கள். இளங்குமரனுக்கு நண்பர்களும் உற்சாகமும் சேர்ந்து வந்து சந்தித்து விட்டால் இப்படித்தான் நகைச்சுவை பிறக்கும். புதுமையான பேச்சுக்களும் புறப்படும்.
"கதக்கண்ணா! இன்றைக்கு இந்த வம்பெல்லாம் வந்து சேராமல் நாளங்காடியிலிருந்து நேரே முல்லையோடு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்திருந்தேனானால் மோர்க் குழம்பும், பொரியலுமாக அற்புதமான விருந்து கிடைத்திருக்கும். நான் மிகவும் துர்பாக்கியசாலியாகி விட்டேன் நண்பர்களே! முல்லை கையால் மோர்க் குழம்பும் உணவும் இன்றைக்கு எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. அடடா, முல்லையின் மோர்க் குழம்பு இன்றைக்கெல்லாம் கையில் மணந்து கொண்டிருக்குமே" என்று கூறிக் கொண்டே இளங்குமரன் நாக்கைச் சப்புக் கொட்டின போது நண்பர்களுக்கெல்லாம் நாவில் சுவை நீர் ஊறியது.
"என் தங்கை படைக்கும் மோர்க் குழம்பு நன்றாக இருக்குமோ இல்லையோ; நீ அதைப் பற்றிச் சொல்வது மிக நன்றாக இருக்கிறது. இப்போது இதைக் கேட்ட நண்பரெல்லாம் என் வீட்டுக்கு முல்லையின் மோர்க்குழம்பை நினைத்துக் கொண்டு முற்றுகையிட்டு விட்டால் என் கதி என்ன ஆவது?" என்று கூறிக்கொண்டே இளங்குமரன் முகத்தைப் பார்க்க நிமிர்ந்த கதக்கண்ணன் அவனுடைய பார்வையும் குறிப்பும் வீதியின் பின் பக்கம் சென்று திரும்புவதைக் கவனிக்கத் தவறவில்லை. வெளியில் மிகவும் சர்வ சாதாரணமாகச் சிரித்துப் பேசிக் கொண்டே உள்ளே தீவிரமாக எதையேனும் சிந்தித்துக் கொண்டிருக்கும் தன்மை இளங்குமரனுக்கு உண்டு என்பது கதக்கண்ணனுக்குத் தெரியும். எந்நேரமும் கண்களிலும், பார்வையிலும், இதழ்களிலும் நகை நயம் விளங்க மலர்ந்து தோன்றும் இளங்குமரன் முகத்தில் இப்போது பசி வாட்டமும், சோர்வும் தெரிவதையும் கதக்கண்ணன் கண்டான். சில சமயங்களில் தன்னுள்ளே ஓடும் நினைவுப் புயலின் வேகத்தை வெளியே தெரியவிடாமல் மறைக்கும் சாதனமாக இந்தச் சிரிப்பையும், கலகலப்பான பேச்சையும் பயன்படுத்தும் வழக்கமும் இளங்குமரனுக்கு உண்டு என்பதையும் கதக்கண்ணன் அறிவான்.
"என்னவோ வேண்டுகோள் விடுக்கப் போவதாகச் சிறிது நேரத்துக்கு முன் கூறினாயே, கதக்கண்ணா!"
தன்னுடைய நினைவுகளிலிருந்தும் வேறு கவனத்திலிருந்தும் விடுபட்டு வந்தவனாக உடன் வந்த கதக்கண்ணன் பக்கமாகத் திரும்பி இந்தக் கேள்வியைக் கேட்டான் இளங்குமரன். இதற்கு உடனே பதில் கூறாமலே தன்னுடன் வந்த மற்ற நண்பர்களின் முகங்களைப் பார்த்தான் கதக்கண்ணன். அப்படிப் பார்த்தவுடனே நண்பர்களில் சிலர் கதக்கண்ணனைச் சிறிது தொலைவு விலக்கி அழைத்துக் கொண்டு போனார்கள். பின்பு திரும்பி வந்து மீண்டும் எல்லாருடனும் கலந்து கொண்டார்கள். நண்பர்களின் அந்தச் செயல் இளங்குமரனுக்குப் புதுமையாகவும் வியப்பளிப்பதாகவும் இருந்தது.
"இளங்குமரா! நம் ஆசிரியர்பிரானிடம் இன்று காலையில் நண்பர்கள் உன்னைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்களாம். அவர் உன்னை இன்று பிற்பகலுக்குள் சந்திக்க விரும்புகிறாராம்."
"யார்? நீலநாக மறவரா?"
"ஆம்! இப்போது நாம் நீலநாக மறவருடைய படைக்கலச் சாலைக்குத் தான் போய்க் கொண்டிருக்கிறோம்."
"நீலநாக மறவருடைய படைக்கலச்சாலைக்குப் போவதற்கும் நீ இப்போது என்னிடம் கூறுவதற்கிருந்த வேண்டுகோளுக்கும் என்ன தொடர்பு?"
"அந்த வேண்டுகோளை இப்போது இங்கே பொது இடமான நடுவீதியில் வைத்துக் கொண்டு உன்னிடம் கூறுவதை விடப் படைக்கலச்சாலைக்குச் சென்றபின், நீலநாக மறவரே உனக்குத் தெளிவாக எடுத்துக் கூறும்படி செய்யலாம் என்று நண்பர்கள் கருதுகிறார்கள்."
"நண்பர்கள் கருதுவதைப் பற்றி எனக்கு மகிழ்ச்சிதான். என்னிடம் சொல்லாமலே என்னென்னவோ திட்டமிட்டுக் கொண்டு செய்கிறீர்கள். எனக்குக் கெடுதலாக ஒன்றும் செய்து விட மாட்டீர்கள் என்று நான் உறுதியாக நம்பலாம். ஆனால் ஒன்றுமட்டும் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் கவலைப்பட்டுப் பயந்து கொண்டிருப்பது போல் இந்தப் பெரிய நகரத்தின் இருண்ட வனங்களிலோ, ஆள் பழக்கமற்ற கடற்கரை ஒதுக்கங்களிலோ, 'இளங்குமரனை' யாரும் அவ்வளவு எளிதாகக் கொன்று போட்டு விட முடியாது..."
இப்படி இந்த வாக்கியத்தின் அமங்கலமான கடைசிப் பகுதியை இளங்குமரன் சொல்லி முடிப்பதற்குள் கதக்கண்ணன் அருகில் வந்து அவன் வாயைப் பொத்தி விட்டான்.
"பித்தனைப் போல இதென்ன பேச்சு, இளங்குமரா? உன் மேல் அன்பும் பற்றும் உள்ளவர்கள் உனக்காக அநுதாபப்படுவதற்குக் கூட உரிமையற்றவர்களா? அந்த அநுதாபத்தையும் அக்கறையையும் நீ ஏன் தவறாக எடுத்துக் கொள்கிறாய்?"
"சில சமயங்களில் என் மேல் அநுதாபப்படுகிறவர்களுக்காக நானே அனுதாபப்படும்படி நேர்ந்து விடுகிறது. என்னைக் கோழையாக்க முயல்கிற அனுதாபத்தை நான் ஒப்புக் கொள்ள முடிவதில்லை! என்னைப் பற்றி எனக்கு என் மனத்தில் எவ்வளவு தன்னம்பிக்கையும் உரமும் உண்டோ, அதில் அரைப் பகுதியாவது மற்றவர்களுக்கும் இருக்க வேண்டுமென்று ஆசைப் படுகிறவன் நான். அப்படி இருந்தால் தான் மற்றவர்கள் என்னைத் தைரியமுள்ள மனிதனாக நினைக்கிறார்களென்று நான் பெருமைப்படலாம். நீங்கள் எல்லோரும் என் அன்புக்குரியவர்கள். பெரு வீரராகிய நீலநாக மறவர் என் மதிப்புக்குரியவர். எனக்கும் உங்களுக்கும் படைக்கலப் பயிற்சியும், போர்த்துறைக் கலைகளும் கற்பித்த ஆசிரியர்பிரான் அவர். ஆனால் அதற்காக அவரும் நீங்களும் சேர்ந்து கொண்டு என்னைத் தெருவில் திரியும் சிறு பிள்ளையாக எண்ணி எனக்கு அனுதாபப்படுவதை நான் ஏற்பதற்கில்லை."
வலது கையை மேலே தூக்கி ஆட்டிக் கொண்டே ஆவேசத்தோடு பேசினான் இளங்குமரன். அப்போது அந்த நிலையில் அவனை எதிர்த்துப் பேசி மறுமொழி சொல்வதற்கே தயங்கி அஞ்சினார்கள் நண்பர்கள். இதன்பின் பட்டினப்பாக்கத்து எல்லை கடந்து மருவூர்ப்பாக்கத்துக்குள் நுழைகிற வரை நண்பர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை.
இப்போது அவர்கள் மருவூர்ப்பாக்கத்தில் நீலநாக மறவரின் மிகப்பெரிய படைக்கலச் சாலையை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். மெல்ல மறுபடியும் இளங்குமரனிடம் பேச்சைத் தொடங்கினான் கதக்கண்ணன்.
"பசிக் கோபத்தில் ஏதேதோ பேசிவிட்டாய், இளங்குமரா! ஆசிரியர் பிரானிடமும் அப்படி ஏதாவது ஆத்திரப்பட்டுப் பேசிவிடாதே."
"பசிக் கோபமல்ல நண்பனே! கோபப்பசி என்றே வைத்துக் கொள்" என்று பழைய வேகம் குறையாமல் பதில் வந்தது இளங்குமரனிடமிருந்து.
"எதுவாயிருந்தாலும் இருக்கட்டும். ஆசிரியர்பிரானைச் சந்தித்ததும் உன்னுடைய வயிற்றுப் பசி, பசிக்கோபம், கோபப்பசி எல்லாமே நீங்கி விடுகின்றனவா இல்லையா பார்" என்று நகைத்தபடி சொன்னான் கதக்கண்ணன்.
சித்திரச்சாலைக்குள் அந்த எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத தனிமை நிலையில் இளங்குமரனுடைய படத்துக்கு முன்னால் தன் தந்தைக்கும் ஓவியனுக்குமிடையே நிகழும் பேச்சு என்னவாயிருக்கும் என்பதை அறிந்து கொண்டு விடுவதற்குத் தன்னால் ஆனமட்டும் முயன்றாள், படியோரத்தில் மறைந்து நின்று கொண்டிருந்த சுரமஞ்சரி. தன் செவிகளின் கேட்கும் ஆற்றலை எவ்வளவுக்குக் கூர்மையாக்கிக் கொண்டு கேட்க முடியுமோ அவ்வளவுக்குக் கூர்மையாக்கிக் கொண்டு கேட்க முயன்றாள் அவள். சற்றுமுன் நிலா முற்றத்தில் இருந்த போது தென்றலையும், பால் மழை பொழிவது போல் வெண்மதி தவழும் வானத்தையும், தன் சகோதரியின் இன்னிசையையும் எண்ணி எண்ணி இன்பத்தில் மூழ்கினவளாய் அந்த இனிமை நினைவுகளின் எல்லையாய் இளங்குமரன் என்னும் பேரினிமை நினைவில் திளைத்து மகிழ்ந்த சுரமஞ்சரி இப்போது சித்திரச்சாலையின் படியருகே அச்சமும் திகைப்பும் கொண்டு நின்றாள். என்னென்னவோ நிகழக் கூடாதனவும் நிகழத்தகாதனவுமாகிய நிகழ்ச்சிகள் நிகழத் தொடங்கி விட்டாற் போல் அவள் மனத்துக்குள் ஒரு விதமான திகில் சூழ்ந்தது. வெள்ளை விழியும் கருவட்டமுமாகப் பிறழ்ந்து பிறழ்ந்து கொள்ளையழகோடு பார்க்கும் அவளுடைய மைதீட்டிய நளின நயனங்கள் இப்போது பயத்தால் மிரண்டு விரிந்தன.
பெருமுயற்சி செய்தும் தந்தையாரும் ஓவியனும் பேசிக் கொண்டதை அவள் முற்றிலும் அறிய இயலவில்லை. சில சில சொற்கள் தாம் இடையிடையே கேட்க முடிந்தன. ஆனால் அவள் நின்று கொண்டு பார்த்த இடத்திலிருந்து தந்தையின் விலாப்புறமும் ஓவியனின் முன் தோற்றமும் தெரிந்ததனால் தந்தை ஊன்றுகோலால் இளங்குமரனின் ஓவியத்தைச் சுட்டிக்காட்டி ஏதோ செய்யச் சொல்லித் தூண்டுவதாகவும் அப்படி அவர் எதைச் செய்யச் சொல்லுகிறாரோ அதைச் செய்வதற்கு ஓவியன் அஞ்சித் தயங்குவதாகவும் புரிந்து கொள்ள முடிந்தது. வாயிலோரத்துப் படி விளிம்பில் வலது காற்பெருவிரலை அழுத்தி ஊன்றி அதன் பலத்தில் நின்று கொண்டு தலையை நீட்டிப் பார்ப்பது சிறிது கால் இடறினாலும் தன்னைக் காட்டிக் கொடுத்துவிடும் என்பதை அவள் உணர்ந்திருந்தாள். அப்போது அங்கு வந்து நின்று, தான் மறைந்து கவனித்துக் கொண்டிருப்பது தந்தையாருக்குத் தெரிந்தால் அதன் விளைவு எவ்வளவு விரும்பத்தகாததாக இருக்கும் என்பது அவளுக்குத் தெரியும்.
காற்பெருவிரல் வலிக்காமல் இருப்பதற்காகத் தலையைப் பின்னுக்குத் திரும்பி உட்புறம் எட்டிப் பார்ப்பதை நிறுத்திவிட்டு வாயிலுக்கு இப்பால் விலகி நன்றாக நின்று கொண்டாள் சுரமஞ்சரி. உட்பக்கம் நிகழ்வதைக் காணாமல் இப்படிச் சிறிது நேரம் விலகி நின்று விட்டுப் பின்பு மறுபடியும் அவள் உட்பக்கம் பார்த்த போது ஓவியனின் முகம் முன்னைக் காட்டிலும் பயந்து வெளிறிப் போயிருந்ததைக் கண்டாள். அவனுடைய முகம் அவ்வாறு பயந்து வெளிறிப் போவதற்குக் காரணமாக உட்பக்கத்தில் தான் பார்க்காத போது என்ன நடந்திருக்கக் கூடும் என்பதைச் சுரமஞ்சரியால் அப்போதிருந்த குழப்பமான மனநிலையில் அநுமானம் செய்ய முடியவில்லை. ஆனால், ‘ஏதோ நடந்திருக்கிறது, நடந்திருக்க வேண்டும்’ என்று தேற்றமாகத் தெரிந்தது. ஒன்றும் விளங்காமல் மேலும் குழம்பினாள் சுரமஞ்சரி.
இதற்குள் சித்திரச்சாலைக்குள் நிற்கும் தந்தையும் ஓவியனும் அங்கிருந்து வெளியே புறப்படுவதற்குச் சித்தமாகிவிட்டாற் போல் தெரிந்தது. ‘இனிமேல் தான் அங்கே படியோரமாக நின்று கொண்டிருப்பது கூடாது’ என்று முடிவு செய்து கொண்டவளாக அடிமேல் அடி வைத்து மெல்ல நடந்து தனது அலங்கார மண்டபத்தில் உடை மாற்றிக் கொள்வதற்கென அமைந்திருந்த தனிமையான பகுதிக்குள் புகுந்தாள் சுரமஞ்சரி. அங்கே புகுந்து மறைந்து கொள்வதனால் அப்போது அவளுக்கு இரண்டு விதமான நன்மைகள் இருந்தன. முதல் நன்மை தந்தையார் திரும்பிச் செல்லும் போது அந்தப் பகுதிக்கு வரமாட்டார். இரண்டாவது நன்மை அப்படியே நேரே போக வேண்டிய அவர் அந்தப் பகுதிக்கு வந்துவிட்டாலும் அவள் தனிமையாக அலங்காரம் செய்து கொள்வதற்குரிய பகுதியில் அவள் இருப்பதைப் பார்த்து, ‘இப்போது நீ இங்கே ஏன் வந்தாய்’ என்றோ வேறு விதமாகவோ கேட்டு அவர் அவளைச் சினந்து கொள்ள முடியாது. இவ்வாறு அந்த அணியறைக்குள் புகுவதிலுள்ள இரு நன்மைகளையும் நினைத்தவாறே புகுந்த சுரமஞ்சரிக்கு அங்கே இன்னும் ஒரு பேராச்சரியம் காத்திருந்தது.
அறைக்குள் தோழிப் பெண் வசந்தமாலை ஓசைப்படாமல் திரும்பி வந்து குத்துக்கல் போல் சிலையாக உட்கார்ந்து கொண்டிருந்தாள். அப்போது சுரமஞ்சரியைக் கண்டதில் வசந்தமாலைக்கு வியப்பு அதிகமா, வசந்தமாலையைக் கண்டதில் சுரமஞ்சரிக்கு வியப்பு அதிகமா என்று ஒப்பிட்டுச் சொல்ல முடியாமல் வியப்புக்களே எதிரெதிரில் சந்தித்துக் கொண்டது போல் அமைந்தது அந்தச் சந்திப்பு. தன் வாயிதழ்களின் மேல் ஆள் காட்டி விரலை வைத்துப் ‘பேசாமலிரு’ என்னும் பொருள் தோன்ற வசந்தமாலை சைகை செய்த அதே சமயத்தில் அதே போன்றதொரு சைகையைச் சுரமஞ்சரியும் வசந்தமாலைக்குக் காட்டிக் கொண்டே அருகில் வந்தாள்.
சித்திரச்சாலையிலிருந்து வெளியேறி தந்தையும் ஓவியனும் நடந்து செல்லும் காலடி ஓசை அறைக்குள் அவர்களுக்குத் தெளிவாகக் கேட்டது. அந்தக் காலடியோசை வெளியே நடந்து சென்று ஒலி தேய்ந்து மங்கியது. “நீ எப்போதடி இங்கு வந்தாய்?” என்று வசந்தமாலையைக் கேட்டாள் சுரமஞ்சரி.
“நான் வந்து அரை நாழிகைக்கு மேலாகி விட்டதம்மா. நீங்கள் இருப்பீர்கள் என்று நினைத்துக் கொண்டு உள்ளே வந்தேன். சித்திரச் சாலைக்குள் தந்தையாரையும் ஓவியனையும் பார்த்த பின் எனக்கு பயமாயிருந்தது. வெளியே போகலாமென்றால் அதற்குள் உங்கள் தந்தையார் வந்துவிடுவாரோ என்று அச்சமாயிருந்தது. நடுக்கத்தோடு பேசாமல் இந்த அறைக்குள் வந்து பதுங்கி விட்டேனம்மா” என்று இன்னும் அந்த நடுக்கம் குன்றாமலே பதில் கூறினாள் தோழிப் பெண் வசந்தமாலை.
“நீ போன காரியம் என்ன ஆயிற்று, வசந்தமாலை? அதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே நீ!”
“அதையேன் கேட்கிறீர்கள், அம்மா! நீங்கள் குறிப்புக் காட்டினீர்களே என்று நான் அவரைப் பின் தொடர்வதற்குப் போனேன். ஆனால் எனக்கும் முன்பாகவே உங்கள் தந்தையார் அவரைப் பின் தொடரச் சொல்லி ஆள் நியமித்திருக்கிறாரேயம்மா!”
இதைக் கேட்டதும் சுரமஞ்சரியின் முகம் இருண்டது. ‘தந்தையார் ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்?’ என்ற கேள்வி அவள் நெஞ்சத்தில் பெரிதாக எழுந்தது.
“அவரைப் பின் தொடர்வதற்குத் தந்தையார் அனுப்பியிருந்த ஆள் யாரென்று உனக்குத் தெரியுமா வசந்தமாலை?”
“தெரியாமலென்ன? நன்றாகத் தெரியும் அம்மா! உங்கள் தந்தையார் வாணிகத்துக்காகச் சீனம், யவனம் முதலிய தொலை தூரத்து நாடுகளுக்குக் கடற்பயணம் செய்யும் போதெல்லாம் தவறாமல் உடன் அழைத்துக் கொண்டு போவாரே அந்த ஒற்றைக் கண் மனிதர்தான் அவரைப் பின் தொடர்ந்தார்.”
“யார்? நகைவேழம்பரையா சொல்லுகிறாய்? அவரை இப்படிப்பட்ட சிறிய வேலைகளுக்கெல்லாம் தந்தையார் அனுப்புவது வழக்கமில்லையே!”
“நானென்ன பொய்யா சொல்லுகிறேன்? என்னுடைய இரண்டு கண்களாலும் நன்றாகப் பார்த்ததைத் தானே சொல்லுகிறேனம்மா. அவருக்குப் பின்னால் நானும் தொடர்ந்து வருகிறேன் என்பதை திரும்பிப் பார்த்துத் தெரிந்து கொள்வதற்கு நகைவேழம்பருடைய ஒற்றைக்கண்ணால் முடிந்ததோ இல்லையோ, நான் அவரை நன்றாகப் பார்த்துத் தெரிந்து கொண்டு விட்டேன். அந்த ஒற்றைக்கண் முகத்தின் இலட்சணத்தைத்தான் ஆயிரம் பேர்கள் கூடிய கூட்டத்துக்கு நடுவில் பார்த்தாலும் நன்றாக நினைவு வைத்துக் கொள்ள முடியுமே!”
“அதிருக்கட்டும். நீ திரும்பி வருவதற்கு ஏன் இவ்வளவு நேரமாயிற்று? அவர் வசிக்குமிடம் இங்கிருந்து நெடுந்தொலைவில் இருக்கிறதோ?”
“அதைத்தான் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. நான் பின் தொடர்ந்து சென்று பார்த்த மட்டில் சொல்லுகிறேன், மருவூர்ப்பாக்கத்திலுள்ள படைக்கலச் சாலைக்குள் அவரும், அவருடைய நண்பர்களும் நுழைந்தார்கள். அந்திப்போது வரை காத்திருந்தும் அவர்கள் அங்கிருந்து வெளியே வரவில்லை. அதற்குமேலும் காத்திருப்பதில் பயனில்லை என்று திரும்பி விட்டேன். ஒருவேளை அந்தப் படைக்கலச் சாலையில் தான் அவர் வசிக்கிறாரோ என்னவோ?”
“இருக்கலாம், ஆனால் யாரோ நண்பர்களோடு படைக்கலச் சாலைக்குள் நுழைந்தாரென்று சொல்லுகிறாயே! அவர் இந்த மாளிகையிலிருந்து வெளியேறிச் செல்லும் போது தனியாக அல்லவா சென்றார்?”
“நடுவழியில் அவருடைய நண்பர்கள் போலத் தோன்றிய சிலர் அவரோடு வந்து சேர்ந்து கொண்டார்கள், அம்மா! நண்பர்களில் சிலரை நேற்றுக் கடற்கரையில் மற்போரின் போது அவருடன் சேர்த்துப் பார்த்ததாக எனக்கு நினைவிருக்கிறது.”
“நகைவேழம்பரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றதாகக் கூறினாயே வசந்தமாலை! அவரும் நண்பர்களும் படைக்கலச் சாலைக்குள் நுழைந்த போது நகைவேழம்பர் என்ன செய்தார்? அவர்களைப் பின் தொடர்ந்து அவரும் உள்ளே சென்றாரா? அல்லது உன்னைப் போலவே அவரும் வெளியில் தங்கி விட்டாரா?”
“அதுதானம்மா எனக்குத் தெரியவில்லை! அவர்கள் படைக்கலச் சாலைக்குள் நுழைவதை நகைவேழம்பரும் கவனித்தார். அவர் கவனிப்பதை நானும் பார்த்தேன். ஒரு விநாடி எங்கோ கவனக்குறைவாகப் பராக்குப் பார்த்துவிட்டு மறுபடியும் திரும்பி நான் பார்த்த போது நகைவேழம்பரை அவர் முன்பு நின்று கொண்டிருந்த இடத்தில் காணவில்லை. அதற்குள் எப்படியோ மாயமாக மறைந்து போய்விட்டார் அந்த ஒற்றைக்கண் மனிதர். ஒரு கணப்போதில் அவர் எங்கே மறைந்தாரென்பது எனக்குப் பெரிதும் ஆச்சரியமாயிருக்கிறது அம்மா!”
“ஆச்சரியத்துக்குரியது அது ஒன்று மட்டுமில்லை வசந்தமாலை! எத்தனையோ பேராச்சரிய நிகழ்ச்சிகள் இன்று இந்த மாளிகையில் சர்வ சாதாரணமாக நடக்கத் தொடங்கியிருக்கின்றன. மாலையில் தோட்டத்தில் ஓவியம் வரைந்து கொண்டிருந்த போது தந்தையார் பின்புறத்து மறைவிலிருந்து திடும் பிரவேசம் செய்து பட்டிக்காட்டான் யானை பார்ப்பது போல் அந்த இளைஞரை அநாகரிகமாக உற்றுப் பார்த்தாரே, அது அவருக்கு எவ்வளவு அவமானமாகத் தோன்றியிருக்கும் தெரியுமா? அதுதான் போகட்டும், ஏதோ கொலைக்குற்றம் செய்துவிட்டுப் போகிறவனைப் பின் தொடர்கிறாற் போல் நகைவேழம்பரை எதற்காக அந்த இளைஞரைப் பின் தொடர்ந்து போகச் செய்ய வேண்டும்? நான் உள்ளே இருக்கும் போதே என்னிடம் சொல்லி அனுமதி கேட்காமல் எனது சித்திரச்சாலைக்குள் நுழையத் தயங்குகிற தந்தையார் இன்று நான் இல்லாதபோதே என் சித்திரச் சாலைக்குள் நுழைந்திருக்கிறார். மாலையில் தனக்குச் சேர வேண்டிய பொற்கழஞ்சுகளை வாங்கிக் கொண்டவுடனே அந்த ஓவியன் இங்கிருந்து வெளியேறிப் போய்விட்டானென்று நான் நினைத்திருந்தேன். இப்போது சித்திரச்சாலைக்குள் தந்தையாரோடு அவன் எப்படி வந்தானென்று தெரியவில்லை. இவையெல்லாமே பேராச்சரியங்கள் தான். ஒன்றா இரண்டா, திடீரென்று இந்த மாளிகையே பேராச்சரியமாகி விட்டது” என்று சொல்லிக் கொண்டே வந்த சுரமஞ்சரியின் பவழ மெல்லிதழ்களை முன்னால் நீண்ட வசந்தமாலையின் பூங்கமலக் கை மேலே பேசவிடாமல் மெல்லப் பொத்தியது. திடீரென்று இருந்தாற் போலிருந்து தோழிப்பெண் தன் வாயைப் பொத்தியதைக் கண்டு சுரமஞ்சரிக்கு அடக்க முடியாத சினம் மூண்டது.
“அம்மா! பேச்சை நிறுத்தி விடுங்கள், யாரோ மிக அருகிலிருந்து நாம் பேசுவதை ஒட்டுக் கேட்கிறார்கள்” என்று சுரமஞ்சரியின் காதருகில் ரகசியமாய் முணுமுணுத்தாள் தோழி வசந்தமாலை. இதை முணுமுணுக்கும் போது தோழியின் குரல் அதிர்ச்சியும் நடுக்கமும் விரவியதாயிருந்தது. தோழியின் இந்த எச்சரிக்கைக் குரல் காதில் ஒலித்திருக்கவில்லையானால் திடீரென்று அவள் மதிப்பின்றித் தன் வாயைப் பொத்தியதனால் தனக்கு மூண்டிருந்த கோபத்தில் அவளுடைய கன்னத்தில் பளீரென்று அறைந்திருப்பாள் சுரமஞ்சரி.
“அதோ அந்தப் பட்டுத்திரை காற்றில் அசைகிறதே அதன் கீழ் பாருங்கள் அம்மா!” என்று மறுபடியும் சுரமஞ்சரியின் காதருகில் முணுமுணுத்தாள் தோழி. அவள் சுட்டிக் காட்டிய திசையில் சுரமஞ்சரியின் பார்வை சென்றது. பார்த்தவுடன் அவள் கண்களில் பீதி நிழல் படிந்தது. அவள் திடுக்கிட்டாள்.
அலங்கார மண்டபத்தின் முகப்புத் திரைச்சீலை மேலே எழுந்து தணியும் நீரலை போல் அப்போது வீசிய காற்றில் ஏறி இறங்கியது. திரைச்சீலை மேலெழுந்த போது பூ வேலைப்பாடுகள் பொருந்திய அந்தப் பட்டுத் துணியின் மறுபுறம் யாரோ நின்று கொண்டிருப்பதற்கு அடையாளமாக இரண்டு பாதங்கள் தெரிந்தன. சுரமஞ்சரி பார்த்துக் கொண்டிருந்த போதே அந்தப் பாதங்கள் அங்கிருந்து நகர முற்பட்டன.
உடனே ஏதோ ஒரு தீர்மானத்திற்கு வந்தவளாய் இரவில் படுக்குமுன் தன் பாதங்களுக்கு இட்டுக் கொள்வதற்காக அங்கே அரைத்து வைத்திருந்த வாசனைச் செம்பஞ்சுக் குழம்பில் சிறிது வாரி, நகர்ந்து கொண்டிருக்கும் அந்தப் பாதங்களில் போய்த் தெறிக்குமாறு வீசினாள் சுரமஞ்சரி. அதனால் அப்போது அந்தப் பகுதி முழுவதும் செம்பஞ்சுக் குழம்பின் நறுமணம் கமகமவென எழுந்து பரவியது. தலைவி அப்படிச் செய்ததின் தந்திரக் குறிப்பென்ன என்று புரியாமல் திகைத்து நின்றாள் தோழி வசந்தமாலை.
கையில் வேலையும் மனத்தில் துணிவையும் உறுதியாகப் பற்றிக் கொண்டு மெல்லப் பின்புறம் திரும்ப முயன்றார் வீர சோழிய வளநாடுடையார். புறநகரில் காவற்படைத் தலைவராகத் திரிந்த காலத்தில் இதைப் போலவும் இதைக் காட்டிலும் பயங்கர அனுபவங்கள் பலவற்றைச் சந்தித்திருக்கிறார் அவர். ‘பயம்’ என்ற உணர்வுக்காக அவர் பயந்த காலம் இருந்ததில்லை; ஒரு வேளை பயம் என்ற உணர்வு அவருக்காக பயந்திருந்தால்தான் உண்டு. அத்தகைய தீரர் முதுமைக் காலத்தில் ஓய்வு பெற்று ஒடுங்கிய பின் நீண்டகாலம் கழித்து வெளியேறிச் சந்திக்கிற முதல் பயங்கர அனுபவமாயிருந்தது இது.
கண்பார்வை சென்றவரை கிழக்கிலும் மேற்கிலும் தெற்கிலும் வடக்கிலும் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் காடாகப் பரவிக் கிடக்கும் மரக்கூட்டம். ஓவென்று மரங்கள் காற்றில் ஓடும் ஓசையும் மெல்ல மெல்ல இருண்டு கொண்டு வரும் தனிமைச் சூழலும் தவச்சாலையில் இருப்பது தெரியாமல் யாரோ இருக்கும் மர்மமான நிலையும் சேர்ந்து வளநாடுடையாரைச் சற்றே திகைக்கச் செய்திருந்தன. எதிர்பாராத நிகழ்ச்சிகள் நிகழுவதற்கு முன் நிலவுகிறாற் போன்றதொரு மர்மமான சூழ்நிலையாகத் தோன்றியது அது.
தான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து பின்புறம் நன்றாகத் திரும்பித் தவச்சாலைக்குள் சுவடிக்கும் தீபத்துக்கும் அருகில் வந்திருப்பது யார் என்று பார்க்குமுன் ‘அப்படிப் பார்க்க வேண்டாம்’ என்பது போல் தன் உள்ளுணர்வே தன்னை எச்சரிக்கை செய்து தயங்க வைப்பது அவருக்கு மேலும் திகைப்பளித்தது. செயலுணர்வுக்கு முன்னதாக உள்ளுணர்வு தயங்கும் காரியங்கள் நல்ல விளைவைத் தருவதில்லை என்பது அவர் அனுபவத்தில் கண்டிருந்த உண்மை. அப்போது அந்தத் தவச்சாலையில் அவருக்குத் தெரிய வேண்டியது தம் வீட்டிலிருந்து காணாமற் போன அருட்செல்வ முனிவர் அங்கே வந்திருக்கிறாரா, இல்லையா என்பதுதான். முனிவர் தவச்சாலைக்கு வரவில்லை என்றால் நிம்மதியாக அங்கிருந்து வெளியேறுவதைத் தவிர வேறொன்றும் அவர் செய்ய வேண்டியதில்லை. முனிவர் அங்கே வந்திருக்கிறார் என்றால் தன் இல்லத்திலிருந்து அவர் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறியது ஏன் என்றும், தவச்சாலையில் தன்னைச் சந்திக்கத் தயங்கித் தனக்கு முன் வராமல் மறைந்தது என்ன காரணத்தினால் என்றும அவரையே கேட்டுத் தெரிந்து கொண்டு விட வேண்டும் என்றும் வளநாடுடையார் விரும்பினார். தவச்சாலையில் சுவடியையும் தீபத்தையும் வைத்து வாசித்துக் கொண்டிருந்த முனிவர் தாம் தம் வரவைக் கண்ணுற்றதும் அப்போது தம்மைக் காண விரும்பாமல் ஒளிந்து மறைந்து கொண்டிருக்க வேண்டும் என்று வளநாடுடையார் மனத்தில் சந்தேகப்பட்டார். தமது சந்தேகம் மெய்யாயிருந்து முனிவரும் அப்படி நடந்து கொண்டிருந்தால் தான் ‘என்னைக் கண்டு ஏன் ஒளிந்து கொண்டீர்?’ என்று முனிவரை அவர் கேட்க விரும்பினார். ஆனால் அவர் விரும்பியவாறு எதுவும் அங்கு நடைபெறவில்லை.
‘செயலுணர்வுக்கு முன்னதாக உள்ளுணர்வு தயங்கும் காரியங்கள் நல்ல விளைவைத் தருவதில்லை’ என்று அவர் பயந்ததற்கு ஏற்ப நிகழ்ச்சிகள் அங்கு வேறுவிதமாக நிகழலாயின. அவர் நின்று திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து தவச்சாலையின் உட்பக்கம் ஒன்றரைப் பனைதூரம் இருந்தது. எனவே தீபத்துக்கும் சுவடிக்கும் அருகில் குனிந்து அமர்வது போல் தெரிந்த ஆளை அவர் நன்றாகக் காண முடியவில்லை. ‘அந்த ஆள் அங்கே அமர்ந்து சுவடியைப் படிப்பதற்குத் தொடங்கக்கூடும்’ என்று அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக நடந்தது.
உள்ளே தீபத்துக்கும் சுவடிக்கும் அருகே கீழ் நோக்கித் தாழ்ந்த கைகள் சுடர் அணைந்து விடாமல் தீபத்தை நிதானமாக மேலே தூக்கித் தவச்சாலையின் தென்னோலைக் கூரை இறப்பின் விளிம்பில் நெருப்புப் பற்றும்படி பிடித்தன. காய்ந்த ஓலைக் கீற்றுக்களின் நுனிப்பகுதியில் தீ நாக்குகள் எழுந்தன. வளநாடுடையார் திடுக்கிட்டார். உள்ளே இருப்பவர் முனிவராயிருக்கலாம் என்று தாம் நினைத்தது பிழையாகப் போனதுமின்றி உள்ளே மறைந்திருந்தவர் என்ன தீச்செயலைச் செய்வதற்காக மறைந்திருந்தார் என்பது இப்போது அவருக்கு விளங்கிவிட்டது. மறைந்திருந்தவர் வேற்றாள் என்பது புரிந்து விட்டது.
“அடே, பாவீ! இதென்ன காரியம் செய்கிறாய்? ஒரு பாவமுமறியாத முனிவர் தவச்சாலையில் நெருப்பு மூட்ட முன் வந்திருக்கிறாயே, உன் கையிலே கொள்ளிவைக்க...” என்று உரத்த குரலில் இரைந்து கொண்டே தீ மூட்டும் கையைக் குறிவைத்துத் தம்மிடமிருந்த வேலை வீசினார் அவர். குறியும் தப்பாமல் குறிவைக்கப்பட்ட இலக்கும் தப்பாமல் சாமர்த்தியமாக அவர் எறிந்திருந்தும், அந்த வேல் அவர் நினைத்த பயனை விளைவிக்கவில்லை.
தீபத்தைக் கீழே நழுவ விட்டுவிட்டு அதே கையினால் அவர் எறிந்த வேலைப் பாய்ந்து பிடித்து விட்டான் அவன். தன் கண்களைத் தீச்சுடர் கூசச் செய்யும் நிலையில் எதிர்ப்புறத்து இருளிலிருந்து துள்ளிவரும் வேலை எட்டிப் பிடிக்கத் தெரிந்தவன் சாதாரணமானவனாக இருக்க முடியுமென்று தோன்றவில்லை வளநாடுடையாருக்கு. ஆனால் அவர் அப்போது உடனடியாக நினைக்க வேண்டியது நெருப்பை அணைக்க ஏதாவது செய்ய முடியுமா என்று முயலும் முயற்சியாயிருந்ததனால் எதிராளி வேலை மறித்துப் பிடித்துவிட்ட திறமையை வியப்பதற்கு அவருக்கு அப்போது நேரமில்லை.
தவச்சாலையின் கூரை மேல் நெருப்பு நன்றாகப் பற்றிக் கொண்டு எரியத் தொடங்கியிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நெருப்பு மூட்டியவன் அங்கிருந்து எப்படியோ நழுவியிருந்தான். போகிற போக்கில் அவர் வீசிய வேலையும் பறித்துக் கொண்டு போயிருந்தான் அந்தப் பாவி. எனவே கைத்துணையாக இருந்த வேலையும் இழந்து வெறுங்கையோடு தீப்பற்றிய பகுதியில் புகுந்து தீயை அணைக்கத் தம்மால் ஏதேனும் செய்ய இயலுமா என முயல வேண்டிய நிலையிலிருந்தார் அவர்.
உறுதியும் மனத்திடமும் கொண்டு தீப்பற்றிய பகுதியில் நுழைந்தே தீருவதென்று முன்புறம் நோக்கி நடக்கப் பாதம் பெயர்த்து வைத்த வளநாடுடையார் மேலே நடக்காமல் திகைத்து நின்று கொண்டே தமக்கு இருபுறத்திலும் மாறி மாறிப் பார்த்தார். இருபுறமும் நெஞ்சை நடுக்குறச் செய்யும் அதிசயங்கள் தென்பட்டு அதிர்ச்சி தந்தன. உற்றுப் பார்த்தால், அதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த இடத்தில் அவருக்கு பக்கங்களிலும் முன்னும் பின்னும் சிறிது தொலைவு வேலி போலப் படரவிடப்பட்டிருந்த மாதவிக் கொடிகளின் அடர்த்தியிலிருந்து கூரிய மூங்கில் இலைகள் சிலிர்த்துக் கொண்டெழுந்தாற் போல் பளபளவென்று மின்னும் வேல் நுனிகள் தெரிந்தன. அவசரப் பார்வைக்குச் சற்றுச் செழிப்பான மூங்கில் இலைகளைப் போலத் தோன்றிய அவை உற்றுப் பார்த்தால் தம்மை வேல்முனைகளென நன்கு காட்டின.
வளநாடுடையார், ஒருவேளை மாலையிருள் மயக்கத்தில் காணும் ஆற்றல் மங்கிய கண்கள் தம்மை ஏமாற்றுகின்றனவோ என்ற சந்தேகத்துடன் வலதுபுறம் மெல்லக் கை நீட்டி மாதவிக் கொடியின் இலைகளோடு இலைகளாகத் தெரிந்த அந்த வேல்களில் ஒன்றின் முனையைத் தொட்டுப் பார்த்தார். சந்தேகத்துக்கிடமின்றி இலைகளிடையே தெரிந்தவை வேல் முனைகள் தாம் என்பதை அவர் விளங்கிக் கொள்ள முடிந்தது. அந்த விளக்கமும் போதாமல் இன்னும் ஒரு படி அதிகமாகத் தெரிந்து கொள்ள விரும்பிய அவர் தாம் தொட்டுப் பார்த்த அதே வேல்முனையைப் பிடித்துச் சற்றே அசைத்துப் பார்த்தார். அவ்வளவுதான்! புற்று வளையிலிருந்து சீறிக் கொண்டு மேலெழுந்து பாயும் நாகப்பாம்பு போல் அந்த வேல்முனை முன்னால் விரைந்து நீண்டது! அப்படி அந்த வேல் முனை பாய்ந்து நீளும் என்பதை எதிர்பார்த்தவராக முன்னெச்சரிக்கையுடன் விலகிக் கொண்டிருந்தார் வளநாடுடையார். இல்லாவிட்டால் கூர்மையான அந்த வேல் அவருடைய பரந்த மார்பின் ஒரு பகுதிக்குள் புகுந்து புறப்பட்டிருக்கும். தாம் எத்தகைய சூழ்நிலையில் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது அவருக்குப் புரிந்தது.
எதிர்ப்பக்கம் பார்க்கிறாற் போல் நின்று கொண்டு விழிகள் காது வரையில் நீள, தமக்கு இருபுறங்களிலும் அடர்ந்து இருண்டு படர்ந்திருந்த மாதவிப் புதரை ஊடுருவி நோக்க முயன்றார் வளநாடுடையார். தரையிலிருந்து அவர் நிற்கும் உயரத்துக்கும் மேலாக ஒரு பாக உயரம் வரை கொடிகள் ஓங்கி வீசிப் படர்ந்திருந்ததனால் மாதவிப் புதருக்கு மறுபுறம் இருப்பவர்களை அவ்வளவு எளிதாகக் காண முடியவில்லை. எனினும் கண்கள், மூக்கு, கைகள் என்று தனித்தனியே இலைகளின் அடர்த்திக்கு அப்பால் சிறு சிறு இடைவெளிகள் மூலம் ஆட்கள் நிற்பதற்கான அடையாளங்கள் தெரிந்தன. இருந்தாற் போலிருந்து மாதவிப் புதருக்கு இரும்புக் கரங்கள் முளைப்பது போல் வேல்கள் சிறிது சிறிதாக நீண்டன. இரண்டு பக்கத்திலும் முன்னும் பின்னும் சிறிது தொலைவு வரையில் அணிவகுத்து நீட்டினாற் போல் நீளும் வேல்களைக் கண்டு தீயை அணைக்கும் முயற்சிக்காகத் தாம் முன் செல்லலாமா வேண்டாமா என்று தயங்கி நின்றார் அவர். தீயை அணைப்பதற்காக அவர் முன்சென்றால் அப்படிச் செல்லவிடாமல் அவரைத் தடுப்பது அந்த வேல்களுக்கும், அவற்றுக்குரியவர்களுக்கும் நோக்கமாக இருக்கும் போல் தோன்றியது.
தீயும் இப்போது அவர் ஒருவரே தனியாக அணைத்து விட முடியும் என்ற நிலையில் இல்லை. அங்கு வீசிக் கொண்டிருந்த பெருங்காற்றின் துணையும் சேர்ந்து விட்டதனால் தீ கொண்டாட்டத்தோடு பரவியிருந்தது. அனல் பரவியதனால் அருகிலிருந்த மரங்களிலிருந்து பல்வேறு பறவைகள் விதம் விதமாகக் குரலெழுப்பிக் கொண்டு சிறகடித்துப் பறந்தன. ஓலைக் கீற்றுக்கள் எரியும் ஒலியும், இடையிடையே இணைக்கப் பெற்றிருந்த மூங்கில்கள் தீயில் வெடித்து முறியும் சடசடவென்ற ஓசையும் அவர் செவிகளில் உற்றன. அந்தக் கோரக் காட்சியைக் கண்டு கொண்டே ஒன்றும் செய்ய இயலாமல் நின்றிருப்பது அவருக்கு வேதனையாகத்தான் இருந்தது. ஆயினும் ஒன்றும் செய்வதற்கு விடாமல் அந்த வேல்கள் வியூகம் வகுத்து அவரைத் தடுத்துக் கொண்டிருந்தன.
தீ மிகப் பெரிதாக எழுந்து தவச்சாலைக்கு மேலே வானம் செம்மையொளியும் புகையும் பரவிக் காட்டியதால் அந்த வனத்தின் பல பகுதிகளில் இருந்த வேறு மடங்களையும், மன்றங்களையும், தவச்சாலைகளையும் சேர்ந்தவர்கள் பதறி ஓடி வந்து கொண்டிருந்தனர். தீ வனம் முழுவதும் பரவிவிடக் கூடாதே என்ற கவலை அவர்களுக்கு. அன்றியும் தீப்பற்றியிருக்கும் இடத்தில் யாராவது சிக்கிக் கொண்டிருந்தால் முடிந்த வரையில் முயன்று காப்பாற்ற முனையலாம் என்று கருணை நினைவோடு ஓடி வந்து கொண்டிருந்தவர்களும் இருந்தனர்.
“ஐயோ! தீப்பற்றி எரிகிறதே!” என்று பதறி ஒலிக்கும் குரல்களும், “ஓடி வாருங்கள்! ஓடி வாருங்கள்! தீயை அணைத்து யாரையாவது காப்பாற்ற வேண்டியிருந்தாலும் காப்பாற்றலாம்” என்று விரைந்து கேட்கும் சொற்களும், திமுதிமுவென்று ஆட்கள் ஓடிவரும் காலடி ஓசையும் தவச் சாலையை நெருங்கிக் கொண்டிருந்த போது தமக்கு இருபுறமும் நீண்டிருந்த வேல்கள் மெல்லப் பின்னுக்கு நகர்ந்து மறைந்த விந்தையை வளநாடுடையார் கண்டார். அதையடுத்து மாதவிப் புதரின் அப்பால் இருபுறமும் மறைவாக இருந்த ஆட்கள் மெல்ல அங்கிருந்து நழுவுவதையும் அவர் உணர முடிந்தது. அந்தச் சமயத்தில் இன்னுமொரு நிகழ்ச்சியும் நடந்தது. மாதவிக் கொடிகளுக்கு மறுபக்கத்திலிருந்து ஒரு வேல் பாய்ந்து வந்து வளநாடுடையாருக்கு முன் ஈரமண்ணில் குத்திக் கொண்டு நின்றது. அந்த வேல் வந்து நின்ற அதே நேரத்தில், “பெரியவரே! உங்களுக்கு மிகவும் நன்றி. நீங்கள் வீசி எறிந்த வேலை இதோ திருப்பித் தந்தாகிவிட்டது. எடுத்துக் கொண்டு பேசாமல் வந்த வழியோடு போய்ச் சேருங்கள்” என்று சொற்களை இரைந்து கூறிவிட்டு ஏளனமாகச் சிரித்துக் கொண்டே கொடி வேலிக்குப் பின்புறமிருந்து யாரோ ஓடிச்சென்று மறைவதையும் வளநாடுடையார் கவனித்தார். அப்போது அவருடைய நிலை தவிப்புக்குரிய இரண்டுங்கெட்டான் நிலையாக இருந்தது. இருதலைக் கொள்ளி எறும்புபோல் செய்வதறியாமல் வருந்தி நின்றார் அவர். அங்கே தீயின் நிலையோ அணைக்கலாம் என்று நினைக்கவும் இயலாதபடி பரவிப் பெருகிவிட்டது. இங்கே மறைந்திருந்த ஆட்களோ தப்பிவிட்டார்கள். அந்நிலையில் தீப்பற்றி எரியும் தவச்சாலைக்கு முன் தாம் மட்டும் தனியாக நின்று கொண்டிருப்பது எப்படியெப்படியோ பிறர் தம்மேல் சந்தேகம் கொள்ள ஏதுவாகலாம் என்று தோன்றியது வளநாடுடையாருக்கு. ‘தவச்சாலைக்குத் தீ மூட்டியதே அவர்தான்’ என்று வருகிறவர்கள் நினைத்து விட்டாலும் வியப்படைவதற்கில்லை. அந்தப் பரபரப்பான சூழ்நிலையில், ‘நெருப்பு மூட்டியது தாமில்லை’ என்று மறுப்பதற்கும் அவரிடம் போதிய சான்றுகள் இல்லை. ஓடி வருகிற அக்கம் பக்கத்தார் காலடி ஓசை மிகவும் நெருங்கிக் கொண்டிருந்தது.
தீரச் சிந்தித்த பின் அப்போதுள்ள சூழ்நிலையில் தாம் செய்யக்கூடிய ஒரே நல்ல காரியம் அங்கிருந்து மெதுவாக நழுவிச் சென்று விடுவதுதான் என்ற முடிவுடன் கீழே குத்திக் கொண்டு நின்ற தம் வேலை எடுத்துக் கொண்டு மாஞ்செடி கொடிகளின் மறைவில் பதுங்கி நடந்தார் வளநாடுடையார். ஆனால் அங்கு நின்று கொண்டிருப்பது எப்படித் தவறான அனுமானத்துக்கு இடங்கொடுத்துத் தம்மேல் பழி சுமத்தப்படக் காரணமாகும் என்று அவர் பயந்தாரோ, அப்படி பயந்தது அவர் சென்று கொண்டிருக்கும் போதே நடந்து விட்டது. ஓடி வந்து கொண்டிருந்தவர்களில் யாரோ ஓரிருவர் மறைந்து பதுங்கிச் செல்லும் அவருடைய உருவத்தைப் பார்க்க நேர்ந்துவிட்டதனால், “தீ வைத்தவன் அதோ ஓடுகிறான்! விடாதீர்கள் பிடியுங்கள்” என்று பெருங்குரல் எழுந்தது. உடனே வந்த கூட்டத்தில் ஒரு பகுதி அவர் சென்று கொண்டிருந்த பக்கம் திரும்பிப் பாய்ந்து அவரைத் துரத்தத் தொடங்கிவிட்டது. எந்தப் பழிக்காக அவர் அங்கு நிற்க பயந்து சென்றாரோ, அந்தப் பழி தம்மைத் துரத்திக் கொண்டே வந்து விட்டதே என்று தெரிந்த போது துரத்துபவர்களிடம் அகப்படாமல் ஓடத் தொடங்குவதைத் தவிர வேறு வழி அவருக்கும் தோன்றவில்லை. கால்கள் சென்ற போக்கில் முதுமையின் ஏலாமையையும் பொருட்படுத்தாமல் ஓடலானார் அவர். பின்னால் துரத்திக் கொண்டு வந்தவர்கள் ஆத்திரத்தில் வீசி எறிந்த கற்களும் கட்டைகளும் அவர் மேல் விழுந்து சிராய்ந்து இரத்தம் கசியச் செய்தன. அவருக்கும் அவரைத் துரத்தியவர்களுக்கும் இடையே அந்த முன்னிரவு நேரத்தில் சக்கரவாளக் கோட்டத்தை ஒட்டிய காட்டுக்குள் ஒரு பெரிய ஓட்டப்பந்தயமே நடந்து கொண்டிருந்தது. எல்லாருமே துரத்தி வளைத்துக் கொண்டு விரட்டியிருந்தால் அவர் பாடு வேதனையாகப் போயிருக்கும். நல்ல வேளையாக வந்த கூட்டத்தில் ஒரு பகுதி தீயணைக்கும் முயற்சிக்காகத் தவச்சாலையருகிலேயே தங்கிவிட்டது.
ஓடி ஓடிக் களைத்துப் போன வளநாடுடையார் இனிமேல் ஓடினால் கீழே விழுந்துவிட நேரும் என்கிற அளவு தளர்ந்திருந்தார். துரத்துகிறவர்களும் விடாமல் துரத்திக் கொண்டு வந்தார்கள். அந்நிலையில் அவர் ஒரு காரியம் செய்தார். மேலே ஓடமுடியாமல் சுடுகாட்டுக் கோட்டத்தை ஒட்டியிருந்த பாழடைந்த காளிகோயில் ஒன்றின் இருண்ட பகுதியில் புகுந்து மூச்சு இரைக்க நின்றார்.
“வாருங்கள்!” என்று மெல்லிய அழைப்புக் குரலோடு பின்புறத்து இருளிலிருந்து இரண்டு கைகள் அவருடைய தோளைத் தீண்டின. வளநாடுடையார் இருண்டு பயங்கரமாயிருந்த அந்த இடத்தில் பின்புறத்திலிருந்து ஒலித்த குரல் தமக்குப் பழக்கமாகயிருந்ததை உணர்ந்தாலும் தற்காப்புக்காகத் தோள்மேல் விழுந்த கைகளை உதறிவிட்டு விரைந்து திரும்பி வேலை ஓங்கினார். ஓங்கிய வேலை அந்தக் கைகள் எதிரே மறுத்துப் பிடித்தன.
“வேலை ஓங்குவதற்கு அவசியமில்லை. நான் தான் அருட் செல்வர்! என்னை இவ்வளவு சுலபமாக வேலாலே குத்திக் கொன்று விட ஆசைப்படாதீர்கள். நான் இன்னும் சிறிது காலம் இந்த உலகத்தில் வாழ்ந்து தொலைக்க வேண்டிய அவசியமிருக்கிறது” என்று சிரித்துக் கொண்டே குரல் அடையாளம் தெரியும்படி தெளிவாகக் கூறிவிட்டு வளநாடுடையாருக்கு அருகில் வந்து நின்று கொண்டார் அருட்செல்வ முனிவர். வளநாடுடையாருக்கு வியப்பு அடங்கச் சில கணங்கள் ஆயின.
ஆத்திரமடைந்து துரத்திக் கொண்டு வந்த கூட்டத்தினரிடமிருந்து வீரசோழிய வளநாடுடையார் தப்பி விட்டார். துரத்தி வந்தவர்கள் சிறிது நேரம் காளிகோவில் சுற்றுப்புறங்களில் தேடிப் பார்த்துவிட்டு, அப்பாலுள்ளவை மயானப் பகுதிகளாதலால் அங்கே நுழைந்து போக அருவருப்பும் கூச்சமும் கொண்டு வந்த வழியே திரும்பி விட்டார்கள். அவர்கள் திரும்பிச் செல்கிற வரை மௌனமாய், மூச்சுவிடுகிற ஒலி கூட இரைந்து கேட்டுவிடாமல் இருளில் மறைந்திருந்த முனிவரும் வளநாடுடையாரும் சற்றே வெளிப் பக்கமாக நகர்ந்து வந்து காளிகோவில் குறட்டில் எதிரெதிராக உட்காரந்து கொண்டார்கள். சோகம் மிகுந்து நாத்தழுதழுத்து துக்கம் விசாரிக்கிற குரலில் பேச்சை ஆரம்பித்தார் வளநாடுடையார்:
“முனிவரே உங்களுடைய தவச்சாலை முழுதும்...”
“நெருப்பு வைக்கப் பெற்று அழிந்து போய்க் கொண்டிருக்கிறதென்பதைத் தெரிந்து கொண்டு தான் இந்தக் காளி கோவிலில் இருட்டில் உட்கார்ந்திருக்கிறேன். தவச்சாலை எரிந்ததனால், எனக்கு ஒன்றும் இழப்பே இல்லை. அங்கிருந்து என்னென்ன பொருள்களை நெருப்புக்கிரையாகாமல் காத்துக் கொண்டு வர வேண்டுமோ அவற்றை நான் கொண்டு வந்து விட்டேன். உடையாரே, இதோ பாருங்கள், தவச்சாலையில் எரி மூள்வதற்குச் சிறிது நேரத்துக்கு முன்பே நானும் இந்தப் பொருள்களும் அங்கிருந்து சுகமாகத் தப்பி இந்த இடத்துக்கு வந்தாயிற்று.”
இவ்வாறு கூறிக் கொண்டே அந்தக் கோயிலின் இருண்ட மூலையிலிருந்து சுவடிகள், மான்தோலாசனம், கமண்டலம், யோகதண்டம் முதலிய பொருள்களையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துக் காண்பித்தார் முனிவர்.
“தவச்சாலைக்கு யாரோ தீ வைக்கப் போகிறார்களென்று உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கும் போலிருக்கிறதே, முனிவரே?”
“ஆகா! தெரியாமலென்ன? நன்றாகத் தெரியும். யார் எதற்காக என்ன நோக்கத்துடன் தீ வைக்கப் போகிறார்கள் என்பது கூட எனக்குத் தெரியும் உடையாரே. எந்த நாழிகையில் நெருப்பு வைக்க வருவார்களென்பதும் தெரியும். அதனால் தானே உங்கள் இல்லத்திலிருந்து சொல்லிக் கொள்ளாமல் அவசரமாகப் புறப்பட்டு வந்தேன்.”
“முனிவரே! நீங்கள் பெரிய தவறு செய்துவிட்டீர்கள். முன்பே தெரிந்திருந்தும் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் இருந்து விட்டீர்களே! என்னிடம் சொல்லியிருந்தால் எப்படியாவது முன்னேற்பாடு செய்து இது நடக்காமல் காத்திருக்கலாமே?”
“இருக்கலாம்! ஆனால் இது தான் நடக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருக்கும் போது நீங்கள் எப்படி இதைத் தடுக்க முடியும்? இன்று என்னுடைய தவச்சாலை தீப்பற்றி எரியாமற் போயிருந்தால் தான் நான் வருத்தப்பட நேர்ந்திருக்கும். அப்படியில்லாமல் அது அடியோடு எரிந்து போனதில்தான் எனக்குப் பெருமகிழ்ச்சி.”
இதைக் கேட்டு, முனிவர் தம் நினைவோடுதான் பேசுகிறாரா அல்லது மனம் வெறுத்துப் போய் இப்படிப் பிதற்றுகிறாரா என்று புரியாமல் திகைத்துப் போய்விட்டார் வளநாடுடையார்.
“உங்களைத் தேடிக் கொண்டு தான் நானும் தவச்சாலைக்கு வந்தேன். அங்கே சுவடி விரித்தபடியிருந்தது, தீபமும் எரிந்து கொண்டிருந்தது. ஆகையால் நீங்கள் உள்ளே தான் இருப்பீர்களென நினைத்தேன்” என்று தொடங்கித் தவச்சாலையில் நிகழ்ந்தவற்றையும் தாம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு ஆட்களால் துரத்தப்பட்டதையும் முனிவருக்கு விரிவாகச் சொன்னார் வளநாடுடையார். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு முனிவர் சிரித்தார்.
“துடைத்து வைத்தாற் போல் எல்லாவற்றையும் ஒழித்துக் கொண்டு வந்துவிட்டால் தவச்சாலையில் யாருமே இல்லை என்று நெருப்பு மூட்ட வந்தவர்கள் நினைத்துக் கொண்டு பேசாமல் திரும்பிப் போயிருப்பார்கள். உள்ளே நான் இருப்பதாக அவர்கள் நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு பாவனைக்காக அந்தச் சுவடியையும், தீபத்தையும் அப்படி வைத்துவிட்டு வந்தேன். தீ வைத்தவர்கள் நான் தவச்சாலைக்குள்ளேயிருந்து வெளியேற முடியாமல் தீயில் சிக்கி மாண்டு போக வேண்டுமென்பதற்காகத்தான் இந்தச் செயலிலேயே இறங்கினார்கள். இப்போது அவர்கள் அப்படி நினைத்து நான் தீயில் மாண்டு விட்டதாக மகிழ்ந்து கொண்டுதான் போயிருப்பார்கள். அவர்கள் அப்படி நினைத்துக் கொண்டு போக வேண்டுமென்று தான் எனக்கும் ஆசை!”
“இது என்ன குரூரமான ஆசை? நீங்கள் ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? நீங்கள் உயிருடன் இருக்கும் போது தீயில் சிக்கி இறந்ததாக எல்லாரும் எதற்காக நினைக்க வேண்டும்? அதனால் உங்களுக்கு என்ன ஆக்கம்?”
“நிறைய ஆக்கம் இருக்கிறது உடையாரே! இத்தகையதொரு பொய்யான செய்தி உடனே மிக அவசியமாக அவசரமாக ஊரெங்கும் பரவ வேண்டும். நான் உயிரோடிருப்பதாக வெளியுலகத்துக்குத் தெரிகிற வரையில் இளங்குமரனுடைய உயிருக்குப் பகைகள் நெருங்கிக் கொண்டேயிருக்கும். நான் உயிரோடில்லை என்று உலகம் ஒப்புக் கொள்ளும்படி செய்து விட்டால் இளங்குமரன் உயிரோடிருப்பதற்கு விட்டு விட அவனறியாமலே அவனுக்கு ஏற்பட்டிருக்கும் பகைவர்கள் முன் வரலாம்.”
“எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை! ஒரே குழப்பமாயிருக்கிறது. உங்கள் தவச்சாலைக்குத் தீ வைக்க வந்தவர்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமானால் எனக்கு ஏன் சொல்லக் கூடாது? நீங்கள் உயிருடனிருப்பது உலகத்துக்குத் தெரிகிற வரையில் இளங்குமரனுக்குப் பகைவர்கள் ஏற்படும் என்கிறீர்கள்? இதுவும் எனக்குத் தெளிவாக விளங்கவில்லை. மேலும் தவச்சாலையில் நெருப்புக்கு இரையாகாமல் நீங்கள் தப்பி வந்து இங்கே உயிரோடிருப்பதை நான் ஒருவன் பார்த்துத் தெரிந்து கொண்டு விட்ட பின்பு உங்களால் எப்படி உலகத்தை ஏமாற்ற முடியும்?”
“முடியும்! உங்களை என்னுடைய வேண்டுகோளுக்குக் கட்டுப்படச் செய்துவிடலாம் என்று நான் நம்புவது சரியானால் நிச்சயமாக உலகத்தை ஏமாற்றி விட முடியும். இன்று இரவு இரண்டாம் சாமத்தில் பூம்புகாரிலிருந்து மணிபல்லவத்துக்குப் புறப்படும் கப்பலில் ஏறி யாரும் அறியாமல் சென்று விடலாமென்று நினைக்கிறேன். நான் நேற்று முன் தினம் படைக்கலச் சாலையில் நீலநாக மறவரைச் சந்தித்து இளங்குமரனைப் பற்றிய சில பொறுப்புகளை அவர் ஏற்றுக் கொள்ளும்படி செய்திருக்கிறேன். ஆயினும் நாளைக் காலையில் நான் தீயில் மாண்டுபோனதாகச் செய்தி பரவும் போது நீலநாக மறவரும் அதை மெய்யெனவே நம்புவார். எவரும் மெய்யென்று நம்புவதற்கு ஏற்றாற்போலத்தான் சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறேன். உண்மையில் நான் சாகவில்லை என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். விண்மகள் மண்மகள் சாட்சியாய்க் காலம் வருகிறவரை இந்த உண்மையை இளங்குமரன் உட்பட எவருக்கும் சொல்வதில்லை என்று இப்போது நீங்கள் எனக்குச் சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்.”
“இந்தச் சத்தியத்தை நான் செய்து கொடுக்க மாட்டேனென்று மறுத்தால்...?”
“மறுத்தால் வேறு வழியில்லை, மெய்யாகவே நான் இறந்து போக வேண்டியதுதான். சக்கரவாளக் கோட்டத்து பூதம் நின்ற வாயிலின் மேலே ஏறி பூதச் சிலையின் உச்சியிலிருந்து கீழே ஊரறிய உயிரை விடுவேன். ஏனென்றால் எனக்கு என் உயிரை விட இளங்குமரன் உயிர் பெரிது” என்றார் அருட்செல்வ முனிவர்.
இந்தக் குரலின் உறுதியைக் கேட்டபின் முனிவர் இப்படிச் செய்யத் தயங்கமாட்டார் என்று வளநாடுடையாருக்கு நன்றாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.
“முனிவரே! இளங்குமரனுக்குக் கூட நீங்கள் உயிரோடிருப்பது தெரியக் கூடாதென்கிறீர்களே?” என்றார் வீரசோழிய வளநாடுடையார் வியப்புடன்.
“அப்படியல்ல, ஒரு குறிப்பிட்ட காலம் வருகிற வரை அவனுக்கு இது தெரிய வேண்டாம். அப்புறம் நானே தக்க சமயத்தில் தக்க ஆள் மூலம் உங்களையும் அவனையும் நான் இருக்குமிடத்துக்கு வரவழைத்து உங்கள் இருவரிடமும் இப்போது நீங்கள் தெரிந்து கொள்ளத் தவிக்கும் சில உண்மைகளைச் சொல்வதற்கு நேரிடும். அந்தச் சமயத்தில் ‘நான் இறக்கவில்லை’ என்று இளங்குமரன் தெரிந்து கொள்ளலாம். அது வரையில் அவனுக்கும் இது தெரியாமலிருப்பதே நல்லது.”
“அந்தச் சமயம் எப்போது வருமோ, முனிவரே?”
“அநேகமாக அடுத்த ஆண்டு வைகாசி மாதம் புத்த பௌர்ணமிக்குள் அந்த நல்ல சமயம் வாய்க்கலாம்.”
“இத்தனை வயதுக்கு மேல் இந்த முதுமைக் காலத்தில் என்னை ஒரு பொய்யைக் காப்பாற்றுவதற்காகச் சத்தியம் செய்யச் சொல்லுவது உங்களுக்கு நன்றாயிருக்கிறதா? இது அடுக்குமா முனிவரே...?”
“பொய் மெய் என்பதற்கு நான் இன்று காலை உங்களிடம் கூறிய விளக்கத்தை நினைத்துக் கொள்ளுங்கள், உடையாரே! பின்பு நன்மை பயப்பதற்குக் காரணமான பொய்யும் மெய்தான்! நீங்கள் செய்யப் போகும் இந்தச் சத்தியத்தினால் இரண்டு உயிர்களைக் காப்பாற்றும் புண்ணியத்தை அடைகிறீர்கள்...”
மறுபேச்சுப் பேசாமல் முனிவருடைய வலது கையில் தமது வலது கையை வைத்து “மண்மகள் விண்மகள் சாட்சியாக முனிவர் உயிரோடிருக்கும் மெய்யைக் கூறுவதில்லை” என்று சத்தியம் செய்து கொடுத்தார் வீரசோழிய வளநாடுடையார். அதைக் கேட்டு முனிவர் முகம் மலர்ந்தது.
இளங்குமரனும், நண்பர்களும் மருவூர்ப்பாக்கத்தின் ஒரு புறத்தே அமைந்திருந்த நீலநாகமறவரின் படைக்கலச் சாலைக்குள் நுழைந்த போது அங்கே ஆரவாரமும், சுறுசுறுப்பும் நிறைந்த சூழ்நிலை நிலவியது. பல இளைஞர்கள் தனித்தனிக் குழுக்களாகவும் வேறு வேறு பகுதிகளாகவும் பிரிந்து வாட்போர்ப் பயிற்சியும், விற்போர்-மற்போர்ப் பயிற்சிகளும் பெற்றுக் கொண்டிருந்தார்கள். வாளோடு வாள் மோதும் ஒலியும், வேல்கள் சுழலும் ஓசையும், வில்லிலிருந்து அம்புகள் பாயும் விரைந்த ஒலியும், இளைஞர்களின் ஆரவாரக் குரல்களும் நிறைந்த படைக்கலச் சாலையின் பயிற்சிக் களமே சிறியதொரு போர்க்களம் போல் காட்சியளித்தது. இடையிடையே படைக்கலச் சாலைத் தலைவராகிய நீலநாக மறவரின் கம்பீரமான சிங்கக் குரல் முழங்கி, வீரர்களை ஏவுதல் செய்தும் ஆணையிட்டும் ஆட்சி புரிந்து கொண்டிருந்தது. முழங்கி முடிந்த பின்பும் நெடுநேரம் ஒலித்துக் கொண்டேயிருப்பது போலக் கட்டளையிடும் கம்பீரத் தொனியுள்ள குரல் அது!
பிரும்மாண்டமான அந்தப் படைக்கலச் சாலை, கட்டடங்களும், மாளிகைகளும், யானைகள் குதிரைகளைக் கட்டும் சிறு சிறு கூடங்களும் உள்ளடங்கிய மிகப் பெரிய சோலையில் நான்குபுறமும் சுற்று மதில்களோடு அமைந்திருந்தது. வேல், வாள் போன்ற படைக்கலங்களை உருக்கி வார்க்கும் உலைக் கூடங்களும் அதற்குள் அமைந்திருந்தன. அதனால் உலைக் கூடங்களில் வேல்களையும் வாள்களையும் வடித்து உருவாக்கும் ஒலியும் அங்கிருந்து எழுந்து பரவிக் கொண்டிருந்தது. படைக்கலச் சாலையின் எல்லையாகிய மதிற்சுவருக்கு அப்பால் காவிரிப்பூம்பட்டினத்திலேயே வயது முதிர்ந்ததும் எண்ணற்ற விழுதுகளை ஊன்றி மண்ணின் மேல் உரிமை கொண்டாடுவதுமான பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது.
ஒரு பேரரசன் கோட்டை கொத்தளங்களோடு அரண்மனை அமைப்பதற்குத் தேவையான நிலப்பரப்பைக் காட்டிலும் சற்று மிகுதியான நிலப் பரப்பில் தன் நிழல் பரப்பி வீழ்தூன்றிப் படர்ந்து பரந்திருந்த அந்த ஆலமரத்தை அணுகினாற் போல் சிவன் கோயில் ஒன்றும் இருந்தது. பூம்புகார் மக்களுக்கு பேரருட் செல்வனான முக்கண் இறைவன் கோவில் கொண்டிருந்த அந்த இடத்துக்கு ஆலமுற்றம்* (* ஆலமுற்றத்து இறைவன் கோவில் அந்தக் காலத்துப் பூம்புகாரில் அமைந்திருந்ததை அகநானூறு 181-ஆவது பரணர் பாட்டால் அறிய முடிகிறது) என்ற பெயர் வாய்த்திருந்தது. ‘ஆல முற்றத்து அண்ணலார்’ என்று அந்தப் பகுதி மக்கள் கொண்டாடும் இந்த இறைவனுக்கு அடுத்தபடியாக அங்கே பெருமை வாய்ந்தவர் நீலநாக மறவர்தாம். அவருடைய படைக்கலச் சாலைக்கும், ஆல முற்றத்துக்குக் கோவிலுக்கும் அப்பால் வெண்பட்டு விரித்தாற் போல் கடற்கரை மணல்வெளி நீண்டு அகன்று நோக்கு வரம்பு முடியும் வரை தெரிந்தது. நீலநாக மறவரின் படைக்கலச் சாலையிலும் அதைச் சூழ்ந்திருந்த பகுதிகளிலும் வீரத்திருமகள் கொலு வீற்றிருப்பதைப் போன்றதொரு கம்பீரக்களை எப்போதும் நிலவிக் கொண்டிருந்தது. எப்போதும் கண்ணுக்கு நிறைவாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.
இளங்குமரனும், மற்ற நண்பர்களும் நேராகப் படைக்கலச் சாலையில் மடைப்பள்ளிக்குச் சென்று வயிறு நிறைய உணவருந்தினார்கள். எப்போது வந்தாலும் எத்தனை பேரோடு வந்தாலும், தங்கள் சொந்த இல்லத்தைப் போல் கருதித் தங்கிக் கொள்ளவும், பழகவும் தம்முடைய பழைய மாணவர்களுக்கு உரிமையளித்திருந்தார் நீலநாக மறவர். இளங்குமரன், கதக்கண்ணன் போன்ற சிறப்பும் நெருக்கமும் உள்ள மாணவர்களுக்கு அந்த உரிமை சற்று மிகையாகவே உண்டு. நீலநாக மறவரின் பெருமைக்கும் வீரத்துக்கும் முன்னால் எப்போதும் எல்லோரும் மாணவர்கள் தாம். வீரம் விளைகின்ற வளமான நிலம் அது. அந்த நிலத்தில் அதன் வீர விளைவுக்குக் காரணமான பெருமகனுக்கு முன்னால் இளைஞர்கள் வணங்கியபடி வருவதும், பணிந்து கற்பதும், வணங்கியபடி செல்வதும் பழமையான வழக்கங்கள். ஆலமுற்றத்தின் மாபெரும் ஆலமரத்தைப் போலவே நிறைய வீழ்து ஊன்றிப் படர்ந்த புகழ் பெற்றவர் நீலநாக மறவர். அவருடைய பெருநிழலில் தங்கிப் படைக்கலப் பயிற்சி பெற்றுச் சென்றவர்க்கும் இப்போது பயிற்சி பெறுகிறவர்களுக்கும், இனிமேல் பயிற்சி பெறப் போகிறவர்களுக்கும் ஆல நிழல் போல் பரந்து காத்திருந்தது அவருடைய படைக்கலச் சாலை.
உணவு முடிந்ததும் கதக்கண்ணனும் மற்ற நண்பர்களும் பின் தொடர நீலநாக மறவர் நின்று கொண்டிருந்த பகுதிக்கு விரைந்து சென்றான் இளங்குமரன். எதிரே அவனைக் கண்ட ஊழியர்களும், பயிற்சி பெற வந்திருந்த மாணவர்களும், வேறு பல வீரர்களும் மலர்ந்த முகத்தோடு வணக்கம் செலுத்தி வரவேற்றார்கள். பெரு மதிப்போடு வழி விலகி நின்று கொண்டார்கள். இளங்குமரனை வளர்த்தவர் அருட்செல்வ முனிவர் என்றாலும் நீலநாக மறவருக்கும் அவன் செல்லப் பிள்ளை. எவருக்கும் நெகிழ்ந்து கொடுக்காத இரும்பு மனிதரான நீலநாக மறவர் இளங்குமரனிடம் மட்டும் அன்பு மயமாக நெகிழ்ந்து விடுவதும், சிரித்துப் பேசுவதும் வழக்கம். அதனால் அவனுக்கு அந்தப் படைக்கலச் சாலையின் எந்தப் பகுதியிலும் எவரிடத்திலும் தனிமதிப்பும், அளவற்ற பேரன்பும் அளிக்கப்பட்டு வந்தன.
பெரு வீரராகிய நீலநாக மறவர் இளங்குமரனிடம் சிரித்துப் பேசிப் பழகுவதும் வெளிப்படையாக அன்பு செலுத்துவதும் மற்றவர்களுக்கு வியப்பாயிருந்ததற்குக் காரணம் உண்டு. அவர் வியப்பதற்கும் வணங்குவதற்கும் உரியவரே ஒழிய நெருங்கிப் பழகுவதற்கு உரியவரல்லர். அவராகவே முன்வந்து யாரிடமாவது பழகுகிறார் என்றால் அவ்வாறு பழக்கத்துக்கு ஆளானவனுடைய எதிர்காலத்தை அவர் இப்போதே கணித்தறிந்து உறுதியாக நம்பி மதிக்கத் தொடங்கிவிட்டார் என்று தெரிந்து கொண்டு விடலாம். அருட்செல்வ முனிவர், வீரசோழிய வளநாடுடையார் போன்ற வயது முதிர்ந்த சான்றோர்களிடம் நீலநாக மறவர் நெருங்கிப் பழகிய காரணம் அவ்விருவரும் இணையற்று விளங்கினார்கள் என்னும் மதிப்பீடு பற்றி வந்த பழக்கம் அது.
சிறப்புக்குரிய சோழ அரச குடும்பத்துப் பிள்ளைகளும், புனல் நாட்டில் அங்கங்கே பெருமையோடிருந்த வேளிர்கள் எனப்படும் குறுநில மன்னர் குடியில் வந்த இளைஞர்களும், நீலநாக மறவரிடம் மாணவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் கூடத் தமது கடுமையும் கம்பீரமும் குன்றாமல் அளவோடு பழகிய நீலநாகர் இளங்குமரனைச் செல்லப் பிள்ளையாகக் கருதியது வெளியே தெரியாமல் பலர் மனத்துக்குள் பொறாமை கொள்ளவும் இடமளித்திருந்தது.
எல்லா மாணவர்களுக்கும் உண்ணவும் தங்கவும், படைக்கலச் சாலையில் உள்ள பிற வசதிகளை அனுபவித்துக் கொள்ளவும் பரந்த மனத்தோடு இடம் கொடுத்திருந்தாலும் நீலநாக மறவர் தாமே அருகில் வந்து அன்போடு தோளைத் தழுவி நின்று சிரித்து உரையாடுகிற உரிமையை இளங்குமரனுக்கே கொடுத்திருக்கிறார்.
‘இவரை அடிமை கொண்டு ஆளலாமே’ என்று பெரும் பேரரசனும் அருகில் நின்று நினைக்க முடியாத அரும் பெருந் தோற்றம் நீலநாக மறவருடையது. அவரைக் காட்டிலும் உயரமாக வளர்ந்தவர்கள் காவிரிப்பூம்பட்டினத்து எல்லைக்குள் இருப்பார்களா என்பதே ஐயத்துக்குரியது தான். நல்ல வளர்ச்சியும் கொழுப்பும் உள்ள முதிய ஆண் யானை ஒன்று மதங்கொண்டு வந்து நிமிர்ந்து நிற்பது போல் தோற்றம் வாய்த்திருந்தது அவருக்கு. வாள்நுனிகளைப் போல் இருபுறமும் நீண்டு வளர்ந்திருந்த வளமான மீசை, படர்ந்த முகத்துக்கு எடுப்பாக அமைந்திருந்தது. அடர்ந்த புருவங்களின் கீழே கனமான இமைகளோடு சுழன்று வீழுவனபோல் மேலெழுந்து தோன்றும் சிவந்த பெரிய கண்கள். இரண்டு பக்கத்துக் கன்னங்களிலும் சூட்டுக்கோல் கொண்டு காய்ச்சி இருந்தது போல் பெரிய கறுப்புத் தழும்புகள் வேறு அந்த முகத்தின் கடுமையைப் பெருகச் செய்து காட்டின. அவர் அங்கியைக் கழற்றி விட்டு நிற்கும் போது பார்த்தால் இப்படி எத்தனையோ தழும்புகளையும் புண்பட்ட சுவடுகளையும் அவரது மார்பிலும் தோள்களிலும் காண முடியும். புண்களால் வளர்ந்த புகழ்ச் செல்வர் அவர். பிறரைப் புண்படுத்தி அடைந்த புகழன்று அது; தாமே புண்பட்டு அடைந்த புகழ் அவருடையது. இரும்பில் உருக்கி வார்த்தது போன்ற அந்த உடல் எத்தனையோ போர் முனைகளுக்கும் ஈடுகொடுத்துப் பாடுபட்ட சிறப்புடையது. ஆனால் அதே உடல் தன்னுடைய சொந்தப் புலன்களின் போர் முனைக்கும் இன்று வரையில் தோற்றதில்லை. கடந்த ஐம்பத்தெட்டாண்டுகளாக பிரமசரியம் காத்து மனமும் உடம்பும் இறுகிப் போன மனிதர் அவர். இன்றுவரை வெற்றி கொண்ட புலன்களின் போர்முனையை இறுதிவரை வென்றுவிடும் வீரமும் அவருக்கு இருந்தது. அவர் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கும் இடம் ஒன்று உண்டு. அதுதான் ஆலமுற்றத்து அண்ணல் கோவில். வீரத்தையே ஒரு தவமாகப் போற்றி நோற்றுக் கொண்டிருந்தார் அவர். தம்முடைய வீரத் தவத்தையும் அதன் மரபையும் வளர்க்கும் ஆவலினால் தான் அந்தப் படைக்கலச்சாலையில் பல இளைஞர்களுக்குப் பயிற்சியளித்து வந்தார். அவர் தம்மிடம் வரும் இளைஞர்களைத் தெரிந்து தெளியும் முறையே தனியானது.
படைக்கலப் பயிற்சி பெறத் தம்மை நாடி வரும் இளைஞனை முன்னால் நிறுத்திப் பேசிக் கொண்டிருப்பார். பேசிக் கொண்டிருக்கும் போதே எதிரே இருக்கும் இளைஞன் முற்றிலும் எதிர்பாராதபடி பக்கத்திலுள்ள ஒரு வேலை உருவிக் குத்திவிடுவது போல் அவன் முகத்தைக் குறிவைத்து வேகமாக ஓங்கிக் கொண்டு போவார். அப்போது அவன் கண்களை இமைத்து முகத்தில் பயக்குறிப்புத் தோன்றப் பின்னுக்கு நகருவானானால், “சுகமில்லை தம்பீ! உனக்கும் வீரத்துக்கும் காத தூரம். நீ ஒரு காரியம் செய்யலாம். நாளங்காடியில் போய் ஏதாவது ஒரு மூலையில் பூக்கடை வைக்கலாம். உன்னைப் போன்ற ஆட்கள் வீரத்தை நம்புவதை விடப் பூச்சூடிக் கொள்ளும் பெண்களின் கூந்தலை நம்பினால் நன்றாகப் பிழைக்கலாம். எதிரிலிருப்பவன் உன்னை நோக்கி வேலை ஓங்கும் போது பயத்தினால் உன் கண்கள் இமைத்தாலும் உனக்குத் தோல்விதான். தூய வீரன் அப்படி இமைக்கலாகாது.
‘விழித்தகண் வேல்கொண்டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்கணவர்க்கு!’
என்று நம்முடைய தமிழ்ப் பெரியவர்கள் வீரருக்கு அமைதி கூறியிருக்கிறார்கள். உன்னிடம் அந்தப் பொருத்தம் அமையவில்லை போய்வா” என்று சொல்லித் துரத்திவிடுவார். அக்காலத்தில் மிகவும் அருமையானவையாக இருந்த சில போர் நுணுக்கங்களைக் கற்பிக்க முடிந்தவராக அவர் ஒருவர்தான் இருந்தார். பயங்கரமானதும், பெருந்துணிவுடன் பொறுத்துக் கொண்டு செய்ய வேண்டியதுமான போர்த்துறை ஒன்றுக்கு ‘நூழிலாட்டு’ என்று பெயர். தன்னிடம் போர்க்கருவிகளே இல்லாத போதும் எதிரி தன்னை நோக்கி எறிகிற வேலையே தன் ஆயுதமாகப் பறித்துக் கொண்டு அதனால் தன்னைச் சூழ்கிற பல பகைவர்களைத் தாக்கி அழிக்க வேண்டும். எதிரியின் வேல் தன் மார்பிலே தைத்துள்ளதாயினும் தனக்கு வலியுண்டாகுமே என்று தயங்காமல் அதை உருவியேனும் எதிரிகளைச் சாடி அழிப்பதுதான் நூழிலாட்டு. பல போர்க்களங்களில் நூழிலாட்டுப் புரிந்து அந்த அருங்கலை விநோதத்தையே விளையாட்டாகப் பழக்கப்படுத்திக் கொண்டிருந்தார் நீலநாக மறவர்! ‘வல்வில் வேட்டம்’ என்று வில்லில் அம்பெய்வதில் நுணுக்கமான நிலை ஒன்று உண்டு. ஒரே முறையில் விரைந்து எய்த அம்பு ஒன்று பல பொருள்களிற் பாய்ந்து எல்லாவற்றையும் துளைத்துச் செல்லுமாறு எய்துவதற்குத்தான் ‘வல்வில் வேட்டம்’ என்று பெயர். இப்படி அரியனவும், பெரியனவுமாக இருந்த போர்க்கலை நுணுக்கங்கள் யாவும் பழகிப் பயின்று வைரம் பாய்ந்த கரங்கள் நீலநாக மறவருடையவை.
இல்லற வாழ்வின் மென்மையான அனுபவங்களும், உலகியற் பழக்கங்களும் இல்லாத முரட்டு வீரராக வளர்ந்திருந்ததனால் உணவிலும், நடைமுறைகளிலும், உடம்பைப் பேணுதலிலும் பொதுவான மனித இயல்பை மீறியவராக இருந்தார் அவர். ஐம்பத்தெட்டு ஆண்டுகள் வாழ்ந்து தளர்ந்ததென்று சொல்ல முடியாத கட்டுடல், செம்பினை உருக்கி வார்த்து நிறுத்தி சிலையெனத் தோன்றியது. எட்டிப்பால், எட்டிக்காய் போன்றவற்றை உண்டு வழக்கப்படுத்திக் கொண்டிருந்ததால் உடம்பில் நச்சுத் தன்மை ஏறி இறுகியிருந்தது. எனவே நஞ்சு தோய்ந்த ஆயுதங்களோ, நச்சுப் பிராணிகளோ எந்தவிதமான கெடுதலும் செய்ய முடியாதபடி உறுதிப்படுத்தப் பட்டிருந்தது அந்த உடம்பு. ‘புலன் அழுக்கற்ற அந்தணாளர்’ என்று வெறுந் துறவிகளைப் புகழ்வார்கள். நீலநாக மறவரோ புலன் அழுக்கற்ற வன்கணாளராக இருந்தார். மகாபாரதம் நிகழ்ந்த காலத்தில் ‘துரோணர், வீட்டுமர் போன்ற தீரர்கள் இப்படித்தான் வாழ்ந்திருக்க வேண்டும்’ என்று பூம்புகார் மக்கள் நினைத்துக் கொள்ளவும், பேசிக் கொள்ளவும் தக்கபடி நீலநாக மறவர் ஒப்பற்ற தவவீரராக இருந்தார். மெல்லிய சங்கிலிகளால் பின்னிய இரும்புக் கவசமும் அங்கியும் அணிந்து இளைஞர்க்கு வாளும் வேலும் பயிற்றும் களத்தில் அவர் வந்து நின்று விட்டால் வீரமெனும் பேருணர்வே கம்பீர வடிவெடுத்து வந்து நிற்பது போலத் தோன்றும். பயிற்சிக் காலங்களில் இரும்பு அங்கி அணியாமல் அவரைக் காண்பது அரிது.
அன்று இளங்குமரனும் நண்பர்களும் தேடிக் கொண்டு சென்ற போது படைக்கலச் சாலையின் மரங்களடர்ந்த உட்பகுதியில் சில இளைஞர்களுக்கு விற்பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார் நீலநாகமறவர். அப்போது கற்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது மிகவும் நுண்மையானதொரு விற்கலைப் பயிற்சி. பயிற்சி நடந்து கொண்டிருந்த அந்த இடத்தைச் சுற்றிலும் மாமரங்கள் நிறைந்திருந்தன. நடுவில் தெளிந்த நீரையுடைய சிறு பொய்கை ஒன்றும் இருந்தது. மாமரங்களின் கிளைகளில் கொத்துக் கொத்தாகக் காய்கள் அசைந்தாடிக் கொண்டிருந்தன. காம்புகளின் ஓரமாக இளஞ் சிவப்பும் மஞ்சளுமாக நிறங்கொள்ளத் தொடங்கியிருந்த அந்தக் காய்கள் முதிர்ச்சியைக் காட்டின.
மாமரங்களின் கீழே பொய்கையின் பளிங்கு நீர்ப்பரப்பில் காய்கள் தெரிவதைக் கண்களால் பார்த்துக் கொண்டே வில்லை வளைத்துக் குறி வைத்து மேலே அம்பு எய்து குறிப்பிட்ட ஒரு கொத்துக் காய்களை வீழ்த்த வேண்டும். அங்கே தம்மைச் சுற்றியிருந்த இளைஞர்களுக்கு இப்படி அம்பு எய்யும் விதத்தை முதலில் தாமே ஓரிரு முறை செய்து காட்டிவிட்டுப் பின்பு அவர்களைச் செய்யச் சொல்லி அவர்களால் முடிகிறதா, இல்லையா என்று சோதனை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் நீலநாகமறவர். அத்தகைய சூழ்நிலையில் நடுவே புகுந்து குறுக்கிட்டுத் தன் வரவைத் தெரிவித்துக் கொள்ள வேண்டாம் என்று கருதிய இளங்குமரன் உடன் வந்த நண்பர்களோடு ஒருபுறமாக ஒதுங்கி நின்றான்.
பொய்கை நீரிலே வடிவு பார்த்துக் குறி வைத்து மேலே மரத்திலே உள்ள காய்களை எய்யும் முயற்சியில் அங்கிருந்த இளைஞர்கள் எவருக்குமே வெற்றி இல்லை. அதைக் கண்டு நீலநாகமறவருடைய கண்கள் மேலும் சிவந்து சினக்குறிப்புக் காட்டின. மீசை நுனிகள் துடித்தன. ஆத்திரத்தோடு கூறலானார்: “இளைஞர்களே! ஒரு பொருளைக் குறி வைத்து எய்வதற்கு உடலின் பலமும் கைகளின் வலிமையும் மட்டுமே போதாது. மனம் குவிந்து கூர்மையாக வேண்டும். நோக்கும் நினைவும் ஒன்றில் இலயிக்க வேண்டும். எண்ணங்கள் ஒரே புள்ளியில் இணைய வேண்டும். தியானம் செய்வதற்கு மனம் ஒரு நிலைப்படுவது போல் பொருளைக் குறிவைத்து எய்யும் விற்கலை முயற்சிக்கும் ஒருமைப்பாடு வேண்டும். நாளுக்கு நாள், எண்ணங்களை ஒன்றில் குவியவைத்து முயலும் ஆற்றல் குறைந்து கொண்டே வருகிறது. உங்கள் நிலையைப் பார்த்தால் வருகிற தலைமுறைகளில் வில்வித்தை போன்ற அரிய கலைகளே இல்லாமற் போய்விடுமோ என்று நான் அஞ்சுகிறேன். மனம் வசப்படாமல் கைகள் மட்டும் வசப்பட்டு ஒரு பயனுமில்லை. என் போன்றவர்கள் கற்பிப்பதற்கு விற்குறிகள் வேண்டும். ஆனால் எங்கு நோக்கினும் உங்களைப் போன்ற தற்குறிகளைத் தான் நான் காண்கிறேன்” என்று இடிக்குரலில் முழங்கிக் கொண்டே சுற்றி நின்றவர்களை ஒவ்வொருவராகப் பார்க்கத் தொடங்கிய நீலநாக மறவர் ஒரு மூலையில் அடக்க ஒடுக்கமாய் வந்து நின்றிருந்த இளங்குமரனையும் மற்றவர்களையும் கண்டு கொண்டார். ஒலி ஓய்ந்தும் தொனி ஓயாத அவருடைய கம்பீரக் கட்டளைக் குரலில் சுற்றி நின்ற இளைஞர்கள் எல்லாம் பேச்சடங்கிப் புலனடங்கி நின்ற போது அவர் தம் கையிலிருந்த வில்லைக் கீழே எறிந்து விட்டு முகமலர்ச்சியோடு இளங்குமரனை நோக்கி நடந்து வந்தார்.
“அடடா, நீ எப்பொழுது வந்தாய் தம்பீ? நான் உன்னை கவனிக்கவே யில்லையே! காலையிலிருந்து உன்னைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நேற்று பின்னிரவில் இந்திர விழாவைக் காண்பதற்காக ஊரெல்லாம் சுற்றிவிட்டு இதோ உன்னுடன் நிற்கும் இந்த இளைஞர்களிற் சிலர் இங்கு வந்து தங்கினார்கள். இன்று காலையில் இவர்களிடம் உன்னைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது பிற்பகலுக்குள் நான் உன்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி அனுப்பினேன். உன்னிடம் நிறையப் பேச வேண்டியிருக்கிறது, தம்பீ! நேற்று முன் தினம் அருட்செல்வ முனிவர் இங்கு வந்து நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார். உன்னைப் பற்றி எவ்வளவோ செய்திகளைச் சொல்லி விட்டுப் போயிருக்கிறார் அவர்.”
அன்பு நெகிழும் குரலில் இவ்வாறு கூறிக் கொண்டே இரும்புக் கவசம் அழுத்துமாறு அவனை மார்புறத் தழுவிக் கொண்டார் நீலநாக மறவர்.
“முகம் வாடியிருக்கிறதே தம்பீ! எதற்காக இப்படி ஊர் சுற்றுகிறாய்? உன்னுடைய அழகும், ஆற்றலும், அறிவும் பெரிய காரியங்களுக்குப் பயன்பட வேண்டும். அவற்றை இப்போதே மிகச் சிறிய காரியங்களுக்காகச் செலவழித்துவிடாதே! இன்றைக்கு இந்தப் பூம்புகாரின் அரச கம்பீர வாழ்வுக்கு முன்னால், இருக்குமிடம் தெரியாத மிகச் சிறிய இளைஞனாக நீ இருக்கிறாய். இனி ஒரு காலத்தில் உன்னுடைய கம்பீரத்துக்கு முன்னால் இந்தப் பெரிய நகரமே இருக்குமிடம் தெரியாமல் மிகச் சிறியதாகப் போய் விடலாம். உலகமே அப்படித்தான் தம்பீ! பொருள்கள் பெரியவைகளாகத் தோன்றும் போது வியந்து நிற்கிற மனமும் மனிதனும் குறுகியிருப்பதைப் போல் சிறுமையாய்த் தோன்றுவார்கள். மனத்தையும் தன்னையும் பெரியதாகச் செய்து கொண்டு பார்த்தால் இந்த உலகத்தில் மிகப் பெரும் பொருள்களும் சிறியவையாகக் குறுகித் தோன்றும். இதோ, என்னைச் சுற்றிக் கட்டிளம் காளைகளாக நிற்கும் இந்தப் பிள்ளைகள் எல்லோரும் வில்லுக்கும் அம்புக்கும் தோற்றுக் கல்லைப் போல் அசைவின்றிப் பயந்து நிற்கிறார்களே, ஏன் தெரியுமா? இவர்கள் அந்தக் குறி தங்களுடைய ஆற்றலிலும் பெரிது என்று எண்ணி எண்ணித் தங்களுக்குத் தாங்களே சிறுமை கற்பித்துக் கொண்டு விட்டார்கள். அதனால் அம்பு குறியைத் தீண்டவே இல்லை. வீரம் தனக்குப் பயந்த நெஞ்சில் விளைவதில்லை. தன்னை நம்பும் நெஞ்சில் தான் விளைகிறது. எங்கே பார்க்கலாம், நீ இந்த வில்லை எடுத்து இவர்கள் செய்யத் தவறியதைச் செய்து காட்டு. அதன் பின்பாவது இவர்கள் மனத்தில் தன்னம்பிக்கை உண்டாகிறதா இல்லையா என்று காணலாம்!” என்றிவ்வாறு கூறியபடியே இளங்குமரனை முன்னுக்கு இழுத்துக் கொண்டு வந்து வில்லையும் அம்புக் கூட்டையும் அவன் கைகளில் எடுத்துத் தந்து அன்புடன் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார் நீலநாக மறவர். எல்லாருடைய கண்களும் அவனையே பார்த்தன. வந்ததும் வராததுமாக இளங்குமரனை இப்படி வம்பில் இழுத்து விட்டாரே நீலநாக மறவர் என்று கதக்கண்ணன் நினைத்தான். அப்போது இளங்குமரன் மனநிலை தெளிவாயில்லை என்பதை அறிந்திருந்த காரணத்தால் தான் கதக்கண்ணன் பயந்து தயங்கினான். ‘மனக்கவலைகளால் எல்லோரையும் போல இளங்குமரனும் குறி தவறி அவமானப்பட நேரிட்டு விடுவோ’ என்பதே கதக்கண்ணனின் பயத்துக்குக் காரணமாயிருந்தது.
ஆனால் கதக்கண்ணன் பயந்தது போல் எதுவும் நடக்கவில்லை. எப்படிப்பட்ட கவலைக்கிடமான நேரத்திலும் தன் மனத்தையும் கண்களையும் ஒருமை நிலையில் ஈடுபடுத்த முடியும் என்பதை இளங்குமரன் நிரூபித்துக் காட்டி விட்டான். ஒரே ஒரு விநாடி தான்! அந்த ஒரு விநாடியில் வில்லை வளைப்பதற்காகப் பயன்பட்ட நேரம் எவ்வளவு, நீர்ப்பரப்பில் தெரிந்த காய்களின் பிரதிபிம்பத்தைக் கவனித்துக் குறிபார்த்த நேரம் எவ்வளவு, அம்பை எய்த நேரம் எவ்வளவு என்று தனித்தனியே பிரித்துச் சொல்லவே முடியாது. அவனுடைய வில் வளைந்ததையும் மாங்காயின் கொத்து அறுந்து தனித் தனிக் காய்களாய் நீரிலும் தரையிலுமாக வீழ்ந்ததையும் தான் எல்லோரும் கண்டார்கள்.
“வில்லாதி வில்லன் என்பது உனக்குத்தான் பொருத்தமான பெயர் தம்பீ! உன்னுடைய அம்புகள் மட்டுமல்ல, நினைவுகளும், நோக்கமும், பேச்சும் எதுவுமே குறி தவறாது” என்று கூறியவாறு இளங்குமரனைச் சிறு குழந்தை போல் விலாவில் கை கொடுத்துத் தழுவி, அப்படியே மேலே தூக்கிவிட்டார் நீலநாக மறவர். கூடியிருந்த இளைஞர்களிடமிருந்து வியப்பு ஒலிகளும் ஆரவாரமும் எழுந்தன.
இளங்குமரன் அவருடைய அன்புப் பிடியிலிருந்து விடுபட்டுக் கீழே இறங்கியவுடனே, “எல்லாம் நீங்கள் இட்ட பிச்சை ஆசிரியரே” என்று அவர் கால்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றி வணங்கினான். அவர் கூறினார்:
“பிச்சையாகவே இருந்தாலும் அதைப் பாத்திரமறிந்து இட்டதற்காக நான் பெருமைப்படலாம் அல்லவா? நல்ல கொழுநனை அடைந்து கற்பும் பொற்பும் பெறுகிற அழகிய பெண் போல், ஒவ்வொரு கலையும் தன்னை நன்றாக ஆளும் நல்ல நாயகனைப் பெற்றால்தான் சிறப்படைகிறது தம்பீ!”
அவ்வளவு பெரிய வீராதி வீரர் தன்னை முன்னால் நிறுத்தி வைத்துக் கொண்டு புகழும் போது தான் என்ன மறுமொழி பகர்வதென்று தோன்றாமல் சற்றே நாணினாற் போல் தலை குனிந்து நின்றான் இளங்குமரன்.
“வா போகலாம், உன்னிடம் தனிமையில் சொல்ல வேண்டிய செய்திகள் நிறைய இருக்கின்றன” என்று கூறி அவனைக் கைப்பற்றி அழைத்துக் கொண்டு புறப்பட்டார் நீலநாக மறவர். குலத்துக்கொரு பிள்ளையாய் வந்த குமரனைத் தந்தை பாசத்தோடும் பரிவோடும் அழைத்துச் செல்வது போல இருந்தது அந்தக் காட்சி. ‘மகாமேருமலை போன்ற இந்த வீரவேந்தர் இப்படித் தோள் மேல் கையிட்டுத் தழுவி அழைத்துக் கொண்டு செல்லும் பாக்கியம் தங்களுக்கு ஒரு முறையாவது வாய்க்காதா?” என்று ஏங்கும் இளைஞர்கள் பலர் அப்போது அங்கே இருந்தனர். அப்படி ஏங்கிய பலரில் அரச குடும்பத்துப் பிள்ளைகளும், வேளிர்குலச் செல்வர்களும், பட்டினப் பாக்கத்துப் பெருவணிகர் வீட்டு இளைஞர்களும் இருந்தனர்.
“நண்பர்களே வாருங்கள்! ஆசிரியர்பிரானிடம் பேசிவிட்டு இளங்குமரன் திரும்பி வருகிறவரை நாம் இப்படி இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருக்கலாம்” என்று கதக்கண்ணன் தன்னுடன் வந்தவர்களை அழைத்துக் கொண்டு மாமரத்தடியில் போய் அமர்ந்தான். மற்ற இளைஞர்களும் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து சென்றார்கள். அவ்வாறு பிரிந்து செல்லும் போது சற்றே திமிர் கொண்டவன் போல் தோன்றிய வேளிர்குலத்து இளைஞன் ஒருவன், “பெற்றவர் பெயர் தெரியாத பிள்ளைகளெல்லாம் வில்லாதி வில்லர்களாகி விடுகிறார்கள். ஒருவேளை வில்லாதி வில்லனாகப் பெருமை பெற வேண்டுமானால் பெற்றவர் பெயர் தெரியாத பிள்ளையாயிருக்க வேண்டும் என்பதுதான் தகுதியோ என்னவோ?” என்று சொல்லி ஏளனமாகச் சிரித்ததையும் அவனுடன் சென்ற மற்றவர்களும் இளங்குமரனைப் பற்றித் துச்சமாகச் சொல்லி நகை புரிந்ததையும் மரத்தடியில் உட்கார்ந்திருந்த கதக்கண்ணன் கேட்டுப் புரிந்து கொண்டு விட்டான். உடனே மனங்கொதித்துத் துள்ளி எழுந்தான் அவன். நேராக அந்த இளைஞர் குழுவுக்கு முன் போய் நின்று கொண்டு இளங்குமரனை இகழ்ந்து பேசிய வேளிர் குலத்து விடலையைத் தடுத்து நிறுத்தி ஒரு கேள்வி கேட்டான் கதக்கண்ணன்.
“வேளிர் குலத்து வீரரே! தயை கூர்ந்து சற்றுமுன் கூறிய சொற்களை இன்னும் ஒரு முறை என் காது கேட்கும்படி கூறுவீர்கள் அல்லவா?”
கதக்கண்ணன் தன் முன்னால் பாய்ந்து வந்து தடுத்து நிறுத்திய விதத்தையும் கேள்வி கேட்ட வேகத்தையும் பார்த்து நிலைமையைப் புரிந்து கொண்டு விட்டான் வேளிர் குலத்து வீரன்.
“நானா? நான் சற்று முன்பு தவறாக ஒன்றும் சொல்லவில்லையே. இளங்குமரனாரின் வீரதீரப் பெருமைகளைத் தானே உடன் வருகிறவர்களுக்குச் சொல்லிக் கொண்டு வந்தேன்!” என்று பேச்சை மாற்றி மழுப்பிவிட முயன்றான் அவன். ஆனால் கதக்கண்ணன் அவனை விடவில்லை.
“அப்படியா? மிகவும் மகிழ்ச்சி. வஞ்சகமில்லாமல் பிறருடைய வீர தீரப் பெருமைகளை அவர்கள் இல்லாத இடத்திலும் சொல்லிப் புகழுகிற உங்களைப் போன்றவர்களுக்கு நான் ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன்.”
“ஆகா! நீங்கள் கொடுக்க ஆசைப்படும் பரிசை அவசியம் வாங்கிக் கொள்கிறேன். எனக்கு என்ன பரிசு தரப் போகிறீர்கள் நீங்கள்?”
“என்ன பரிசு என்றா கேட்கிறீர்கள்? சற்று முன் அப்படிப் பேசிய உங்கள் நாவை ஒட்ட இழுத்து அறுக்கலாமென நினைக்கிறேன். அதுதான் நான் உங்களுக்கு அளிக்கப் போகும் பரிசு. புறம் பேசுகிற நாவை வளரவிடக் கூடாது. புறம் பேசுகிற நாவுடையவர்களைப் படைத்ததைக் காட்டிலும் கைதவறின காரியம் ஒன்றைப் படைப்புக் கடவுள் செய்திருக்கவே முடியாது. உலகத்திலுள்ள நஞ்செல்லாம் புறம் பேசுகிறவர்களின் நாவிலிருந்து பிறந்தது. வேறு எல்லாக் கெட்ட மனிதர்களும் சோற்றிலும் தண்ணீரிலும் நஞ்சு தூவுவார்கள். புறம் பேசுகிறவர்களோ காற்றிலும் நஞ்சைத் தூவுவார்கள். காண்பவர், கேட்பவர் நெஞ்சிலும் நஞ்சைக் கலந்து விடுவார்கள்.”
இப்படிக் கொதிப்போடு பேசிய கதக்கண்ணனை உறுத்துப் பார்த்தான் அந்த வேளிர் குலத்து இளைஞன்.
“பார்வையால் மருட்டாதீர். உங்கள் முன்னோர்கள் எல்லாம் சோழப் பேரரசருக்கு வீர உதவிகள் புரிந்து பெருமைப் பட்டிருக்கிறார்கள். அத்தகைய வேளிர் குடியில் புறம் பேசுவதை வீரமாக எண்ணும் கோழைகள் பிறந்திருக்கிறார்கள் என்பதை நினைப்பதற்கு வெட்கமாயிருக்கிறது எனக்கு” என்று கூறிவிட்டு மாமரத்தடிக்குத் திரும்பிச் சென்று நண்பர்களோடு அமர்ந்து கொண்டான் கதக்கண்ணன். தாங்கள் இளங்குமரனைத் துச்சமாகப் பேசி இகழ்ந்த செய்தி நீலநாக மறவர் காதுவரையில் எட்டி விடக்கூடாதே என்று பயந்து கொண்டே அந்த இளைஞர்களும் கூசியபடி மேலே நடந்து சென்றார்கள்.
தனியாக நீலநாக மறவரோடு சென்றிருந்த இளங்குமரன் சில நாழிகைக்குப் பின் மரத்தடிக்குத் திரும்பி வந்தான். கூட்டாக உட்கார்ந்திருந்த நண்பர்களுக்கிடையே அமராமல் கதக் கண்ணனை மட்டும் தனியே அழைத்துக் கொண்டு வேறு பக்கம் சென்ற இளங்குமரன், “பட்டினப் பாக்கத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது நேற்று இரவில் நடந்த நிகழ்ச்சி பற்றி ஏதோ பேச்சுத் தொடங்கினாயே, அது என்ன? அதை இப்போது சொல்...” என்று அவனை வினவினான்.
“ஓ! அதுவா? சம்பாவதி வனத்து இருளில் உன்னைத் தாக்கி விட்டு ஓடிய மனிதர்களை ஆன மட்டும் தேடிப் பார்த்தோம். அவர்கள் அகப்படவில்லை. விடிகிற மட்டும் தேடிவிட்டு நானும் எனது தோழனும் இந்தப் பக்கமாக வந்த போது பிற்பகலுக்குள் உன்னை இங்கே அழைத்து வருமாறு நீலநாக மறவர் அனுப்பிய ஆட்களைச் சந்தித்தோம். உடனே எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு உன்னைத் தேடிப் புறப்பட்டோம்” என்று கதக்கண்ணனிடமிருந்து இளங்குமரன் எதிர்பார்த்ததை விட மிகச் சாதாரணமான பதில் கிடைத்தது.
“ஏதோ வேண்டுகோள் விடுக்கப் போவதாக நீயும் நண்பர்களும் கூறினீர்களே! அது என்ன வேண்டுகோள்?” என்று தன் நண்பன் கதக்கண்ணனைப் பார்த்து மறுபடியும் கேட்டான் இளங்குமரன்.
அதைக் கேட்டுக் கதக்கண்ணன் நகைத்தான். “வேண்டுமென்றே எங்களை ஆழம் பார்க்கிறாயா, இளங்குமரா! அந்த வேண்டுகோளைத்தான் இவ்வளவு நேரம் ஆசிரியர்பிரான் உன்னிடம் விவரித்துக் கூறியிருப்பாரே? ‘இன்னும் சிறிது காலத்துக்கு நீ இந்தப் படைக்கலச் சாலையிலேயே இருக்க வேண்டும். தனியாக நகருக்குள் எங்கும் போக வேண்டாம். என் கண்காணிப்பில் நீ இருப்பது நல்லது’ என்று ஆசிரியர்பிரான் உன்னிடம் சொன்னாரா இல்லையா?”
இதுகேட்டு இளங்குமரன் வியந்தான். ஏனென்றால் இதே வேண்டுகோளைத் தான் மறுக்க முடியாத கட்டளையாக ஆசிரியர் அவனுக்கு இட்டிருந்தார். ‘இது எப்படிக் கதக்கண்ணனுக்குத் தெரிந்தது? இவர்களெல்லோரும் சேர்ந்து தூண்டி ஆசிரியர் மூலம் செய்த ஏற்பாடா இது? அல்லது அருட்செல்வ முனிவர் ஆசிரியரைச் சந்தித்துத் தனியே செய்த ஏற்பாடா? இதன் பொருள் என்ன? இவர்கள் எல்லாரும் என்னைக் கோழையாக்க முயல்கிறார்களா?’ என்று நினைத்த போது ‘சற்று முன் ஆசிரியரிடம், இந்த வேண்டுகோளுக்கு ஏன் ஒப்புக்கொண்டோம்’ என்று தனக்குத்தானே வருந்தி மனங்குமுறினான் இளங்குமரன்.
சுரமஞ்சரியும் வசந்தமாலையும் சில கணங்கள் ஒன்றும் பேசிக் கொள்ளத் தோன்றாமல் அப்படியே திகைத்துப் போய் நின்றார்கள். ஊசி கீழே விழுந்தாலும் ஓசை பெரிதாகக் கேட்கும் படியானதொரு நிசப்தம், அப்போது அந்த அலங்கார மண்டபத்தில் நிலவியது. மோனத்தைக் கலைத்து முதலில் பேச்சைத் தொடங்கியவள் வசந்தமாலைதான். மெல்லிய குரலில் தலைவியை நோக்கிக் கேட்கலானாள் அவள்:
“அது ஏனம்மா அப்படி செம்பஞ்சுக் குழம்பையெல்லாம் வாரி இறைத்து வீணாக்கினீர்கள்? திரைக்கு அப்பால் நின்று ஒட்டுக் கேட்டது யாரென்று தெரிந்து கொண்டிருக்க வேண்டுமானால் மெல்ல நடந்து போய்த் திரையையே விலக்கிப் பார்த்திருக்கலாமே! அப்படிப் பார்த்திருந்தால் ஒட்டுக் கேட்டவர்களுக்கும் ஒரு பாடம் கற்பித்திருக்கலாமே?”
“போடி அசட்டுப் பெண்ணே! பிறர் நாகரிகமாக நமக்குச் செய்கிற பிழைகளைக் கண்டு பிடித்துத் தீர்வு காண முயலும் போது நாமும் நாகரிகமாகவே நடந்து கொள்ளவேண்டும். முன் யோசனை இல்லாமல் திடீரென்று போய்த் திரையைத் திறந்து விட்டு நாம் முற்றிலும் எதிர்பாராத ஆள் அங்கு நிற்பதைக் காண நேர்ந்து விட்டால் நமக்கு வேதனை, அவருக்கும் வேதனை. ஒரு வேளை திரைக்கு அந்தப் பக்கம் நின்றவர் நீயும் நானும் பாடம் கற்பிக்க முடியாதவராக இருக்கலாம். பார்த்த பின், ‘ஐயோ! இவராயிருக்குமென்று தெரிந்திருந்தால் இப்படி அநாகரிகமாகத் திறந்து பார்த்திருக்க வேண்டாமே’ என்று தவிக்கவும் நேரிடுமல்லவா?”
“அதெல்லாம் சரிதான் அம்மா. ஆனால் செம்பஞ்சுக் குழம்பை வீணாக்கி வீட்டீர்களே” என்றாள் வசந்தமாலை.
“ஆ! அப்படிக் கேள் வசந்தமாலை, அதில்தான் இரகசியமே அடங்கியிருக்கிறது. இந்தச் செம்பஞ்சுக் குழம்பு இரண்டு நாட்களுக்குச் சிவப்புக் கறை அழியாதென்று உனக்குத் தெரியுமோ இல்லையோ?” என்று சுரமஞ்சரி இதழ்களில் இளநகை அரும்பக் கேட்டவுடன் தான் வசந்த மாலைக்குத் தன் தலைவியின் தந்திரம் புரிந்தது. சமயத்துக்கும் சந்தர்ப்பத்துக்கும் ஏற்ற விதத்தில் புத்திக் கூர்மையுடனும் தந்திரமாகவும் சுரமஞ்சரி அந்தச் செயலைச் செய்திருக்கிறாள் என்பதை விளங்கிக் கொண்டபோது தன் தலைவியின் நுண்ணுணர்வை வசந்தமாலையால் வியந்து போற்றாமல் இருக்க முடியவில்லை.
“வசந்தமாலை! வா, சித்திரசாலைக்குள் போய்ப் பார்க்கலாம். சற்று முன் தந்தையாரும் ஓவியனும் அங்கே நின்று கொண்டிருந்தார்களே, அந்த ஓவியத்தில் அவர்கள் ஏதாவது மாறுதல் செய்திருக்கிறார்களா என்று பார்க்கலாம்” என்று கூறித் தன் தோழியையும் உடன் அழைத்துக் கொண்டு சித்திரச்சாலைக்குள் புகுந்தாள் சுரமஞ்சரி. வண்ணங்குழைத்து வனப்பு வனப்பாய், வகை வகையாத் தீட்டி வைக்கப்பட்டிருந்த உயிரோவியங்கள் நிறைந்த அந்தச் சாலையில் நடை ஓசையும் கேட்காமல் மெத்தென்ற பட்டுக் கம்பள விரிப்பின் மேல் நடந்து போய் இளங்குமரனின் படத்துக்கு முன் ஆவலுடன் நின்றார்கள் அவர்கள். என்ன மாறுதல் நேர்ந்திருக்கிறதென விரைந்து அறியும் விருப்பத்துடன் தன் கூரிய நோக்கால் அந்தப் படத்தின் ஒவ்வொரு பகுதியாக உற்றுப் பார்த்துக் கொண்டு வந்தாள் சுரமஞ்சரி. ஆனால் அவளையும் முந்திக் கொண்டு வந்தாள் சுரமஞ்சரி. ஆனால் அவளையும் முந்திக் கொண்டு தோழிப் பெண் அந்த மாறுதலைக் கண்டு பிடித்து விட்டாள்.
“அம்மா! படத்தை வரைந்து வாங்கி, இங்கே கொண்டு வந்து வைத்த போது இதோ இந்த கறுப்புப் புள்ளி இல்லை. இது புதிதாகத் தீட்டப்பட்டதாகத் தோன்றுகிறது” என்று படத்தில் இளங்குமரனுடைய கழுத்தின் வலது பக்கத்துச் சரிவில் மச்சம் போல் கழிக்கப்பட்டிருந்த கறுப்புப் புள்ளியைத் தொட்டுக் காட்டினாள் வசந்தமாலை. சுரமஞ்சரியும் அதைப் பார்த்தாள். அந்த மாறுதல் புதிதாகத்தான் செய்யப்பட்டிருக்கிறதென்பதை அவள் உணர்ந்தாள். ஓவியன் மணிமார்பன் படத்தை முடித்துக் கொடுத்த போது அந்தக் கறுப்பு மச்சம் இளங்குமரனின் கழுத்தில் வரையப் பெறவில்லை என்பது அவளுக்கு நன்றாக நினைவிருந்தது. ‘கருநாவற் பழம் போல் உன் கழுத்தின் வலது பக்கத்துச் சரிவில் எத்தனை அழகான மச்சம் இருக்கிறது பார்த்தாயா’ என்று தந்தையார் பிற்பகலின் போது மாளிகைத் தோட்டத்தில் இளங்குமரனுக்கு அருகில் போய் உற்று நோக்கிக் கொண்டே கேட்ட கேள்வியை இப்போது மீண்டும் நினைவிற் கொண்டு வந்து சிந்திக்கலானாள் சுரமஞ்சரி. ‘படத்தின் அழகை இந்தக் கரும்புள்ளி ஓரளவு குறைத்துக் காட்டும் என்பது தந்தையாருக்கும் ஓவியனுக்கும் தெரியாமலா போயிற்று? தெரிந்து கொண்டே இந்த மாறுதலைச் செய்திருந்தார்களானால் இதன் அந்தரங்க நோக்கம் என்ன? தொழில் நயம் தெரிந்த ஓவியன் இப்படிச் செய்து ஓவியத்தைக் கவர்ச்சியற்றதாக்கத் துணிந்தது ஏன்? அவர் கழுத்திலிருக்கிற மச்சம் ஓவியத்திலும் இருந்துதானாக வேண்டுமென்கிற அவசியம் என்ன?’ என்று சுரமஞ்சரி ஆழ்ந்த சிந்தனைகளால் மனம் குழம்பினாள். இன்னதென்று தெளிவாய் விளங்காவிட்டாலும் இதில் ஏதோ சூது இருக்க வேண்டுமென்பது போல் அவள் உள்ளுணர்வே அவளுக்குக் கூறியது. தன் தந்தையார் மேலும், அவருக்கும் மிகவும் வேண்டியவரான நகைவேழம்பர் என்ற ஒற்றைக் கண் மனிதர் மேலும் பலவிதமான சந்தேகங்கள் அவள் மனத்தில் எழுந்தன.
அந்த இரண்டு நாள் பழக்கத்தில் இளங்குமரனிடம் அவ்வளவு அன்பும் பரிவும் தன் மனத்துக்கு எப்படி உண்டாயிற்று என்பதை நினைத்தால் அவளுக்கே விந்தையாயிருந்தது. இளங்குமரன் அவளைப் போல் ஒரு பெண்ணின் மனத்தில் எழும் மென்மையான உணர்வுகளுக்கு உரிய மதிப்போ நெகிழ்ச்சியோ அளிக்கத் தெரியாத முரடனாயிருந்தான். எடுத்தெறிந்து அலட்சியமாகப் பேசினான். தன்னுடைய விழிகளிலும், இதழ்களிலும், உள்ளத்திலும் அவனுக்காக நெகிழும் குறிப்புக்களோடு அவள் அருகே நெருங்கி நின்ற போதெல்லாம் அவன் அதைப் புரிந்து கொண்டு குழையும் மென்மைத் தன்மையில்லாமலே விலகி விலகிச் சென்றிருக்கிறான். ஆயினும் விலக விலக அவனைப் பற்றி நெருக்கமாக நினைக்கத்தான் அவளால் முடிந்தது. அவனை விலக்கி நினைக்கும் ஆற்றல் அவள் மனத்துக்கு வரவில்லை. தான் பேரார்வத்தோடு அளித்த மணிமாலையை மறுத்ததிலிருந்து ஒவ்வொன்றாகத் தனக்கு அவன் செய்த அலட்சியங்களை நினைத்துப் பார்த்தும் அவளால் அவனை வெறுக்க முடியவில்லை. அந்த அலட்சியங்களின் கம்பீரத்தினாலேயே அவன் மீது பரிவும் கவர்ச்சியும் அதிகமாயிற்று அவளுக்கு. நிமிர்ந்து நிற்கும் அவனது திமிர் நிறைந்த தோற்றமும், பரந்து விரிந்த மார்பும், செம்பொன் நிறம் கிளரும் சுந்தரமணித் தோள்களும், கண் நிறைந்து தோன்றும் அழகு முகமும் நினைவில் தோன்றித் தோன்றி, ‘இவற்றையும் இவற்றுக்குரியவனையும் நீ இழக்கலாகாது பெண்ணே! இவனைப் பற்றி நினைப்பதே இன்பம், இவனைப்பற்றித் தவிப்பதே பெருமை, இவனால் அலட்சியப்படுத்தப் பெறுவதை ஏற்பதிலும் கூட இன்பம் இருக்கிறது’ - என்று சுரமஞ்சரியை ஏங்கச் செய்திருந்தன. ஆசைகளுக்கு ஆசைப்படாமல் ஆசைகளை ஆசைப்பட வைக்கும் ஏதோ ஒரு தனித்தன்மை அவனிடமிருந்து அவளைக் கவர்ந்து ஆட்சி புரிந்தது. எதற்கும் அசைந்து கொடுக்காத அந்தத் தனித்தன்மையைத் தன் சிரிப்புக்கும், சிங்கார விழிப் பார்வைக்கும் அசைத்துப் பார்க்க வேண்டுமென்று உள்ளூர உறுதி கொண்டிருந்தது அவள் மனம். இந்தக் கவர்ச்சி காரணமாகத்தான் இளங்குமரன் மேல் அவளுக்கும் பெரும் பரிவு ஏற்பட்டிருந்தது.
‘இதை எனக்கு கொடுத்து விடுவதனால் நீங்கள் பெருமைப்பட இடமிருக்கிறது. ஆனால் இதை உங்களிடமிருந்து வாங்கிக் கொள்வதனால் நான் பெருமைப்பட்டுக் கொள்ளச் சிறிதாவது இடமிருக்கிறதா என்பதுதான் என் சந்தேகம்’ என்று கடற்கரையில் அன்று முனை மழுங்கித் தணியாத முரட்டுத் திமிரோடு பேசிய அதே வாயிலிருந்து ‘சுரமஞ்சரி! உன்னிடமிருந்து எதை வாங்கிக் கொண்டாலும் எனக்குப் பெருமைதான். கற்பனை பிறக்கும் உன் கவிதை நயனங்களின் ஒரு பார்வை கிடைத்தாலும் அதைப் பெருமையாக ஏற்றுக் கொள்வேன். மோகம் பிறக்கும் உனது செவ்விதழ்களின் ஒரு மென்முறுவல் கிடைத்தாலும் பெருமையோடு ஏற்றுக் கொள்வேன்’ என்ற வார்த்தைகளை என்றாவது ஒரு நாள் வரவழைத்துப் பார்த்துவிட வேண்டும் என்ற வேட்கையோடு கூடியதொரு வைராக்கியம் அவள் மனத்தில் முளைத்திருந்தது.
இளங்குமரனின் ஓவியத்தில் செய்யப்பட்டிருந்த அந்தச் சிறு மாறுதலைக் கண்டு சிந்தனையிலாழ்ந்திருந்த தன் தலைவியை நோக்கி வசந்தமாலை கூறலானாள்: “இந்த மாறுதல் ஏன் செய்யப்பட்டது என்பதைப் பற்றி உங்கள் தந்தையாரிடம் நேருக்கு நேர் நின்று கேட்டுத் தெரிந்து கொள்வது முடியாத காரியம். ஆனால் அந்த ஓவியனைக் கண்டு பிடித்துக் கேட்டுப் பார்த்தால் ஒரு வேளை காரணம் தெரியலாம்!”
“வசந்தமாலை இதைப் பற்றி எப்படி முயன்று யாரிடமிருந்து உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமோ அப்படித் தெரிந்து கொள்ள என்னால் முடியும். நீ பேசாமலிரு. உனக்கு ஒன்றும் தெரிந்தது போல் பிறரிடம் காட்டிக் கொள்ளவே வேண்டாம். இவையெல்லாம் உனக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்த செய்திகளாக இருக்கவேண்டும்” என்று தோழிக்கு வற்புறுத்தி எச்சரிக்கை செய்து அங்கிருந்து அவளை அழைத்துக் கொண்டு புறப்பட்டாள் சுரமஞ்சரி.
அப்படி வசந்தமாலையும், சுரமஞ்சரியும் சித்திரச் சாலையிலிருந்து வெளியேறிய அதே நேரத்தில் நிலா முற்றத்திலிருந்து கீழிறங்கி வானவல்லியும் உடனிருந்த பெண்களும் எதிரே வந்து சேர்ந்தார்கள். ‘இவர்கள் யாரிடமும் இங்கு நடந்தது பற்றிப் பேச்சு மூச்சுக் காட்டாதே’ - என்பதை மறுபடியும் கண்களின் பார்வைக் குறிப்பாலேயே தோழிக்கு வற்புறுத்தினாள் சுரமஞ்சரி.
“நீ உடனே திரும்பி வந்துவிடப் போகிறாய் என்று நாங்களெல்லாம் நிலா முற்றத்தில் காத்திருந்தோம் சுரமஞ்சரி! நீ வருகிற வழியாயில்லை. நேரமும் ஆகிவிட்டது. உன்னையும் அழைத்துக் கொண்டு உண்பதற்குப் போகலாம் என்று கீழே இறங்கி வந்துவிட்டோம். தந்தையார் நம்மை எதிர்பார்த்து உண்ணாமல் காத்துக் கொண்டிருப்பார். வா போகலாம்” என்று சுரமஞ்சரியை உணவுக்கு அழைத்தாள் வானவல்லி. உடனே எல்லாரும் மாளிகையின் கீழ்ப்பகுதியை நோக்கி உண்பதற்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.
அந்தப் பெருமாளிகையின் உணவுக் கூடத்தில் பணியாரங்களின் நறுமணமும், அறுசுவை உண்டிகளின் மணமும் கலந்து பரவிக் கொண்டிருந்தன. நெய்யின் கமகமப்பும், பால் நன்றாக வற்றக் காயும் முறுகிய வாசனையும் அந்தப் பக்கமாக வேறு காரியமாய் வர நேர்ந்தவர்களுக்குக் கூட உண்ணும் ஆசையை உண்டாக்கிக் கொண்டிருந்தன.
சுரமஞ்சரியும் வானவல்லியும் வசந்தமாலை முதலிய மற்றப் பெண்களும் உணவுக் கூடத்துக்குள் நுழைந்த போது அங்கே ஏற்கெனவே தந்தையாரும், நகைவேழம்பரும், ஓவியன் மணிமார்பனும் உண்பதற்குச் சித்தமாக வந்து உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். இன்னும் ஒரு பக்கமாகப் பெண்கள் உட்காரும் வரிசையில் சுரமஞ்சரியின் அன்னையும் மாளிகையைச் சேர்ந்த நற்றாய், செவிலித் தாய் முதலிய முது பெண்டிர்களும் அமர்ந்திருந்தார்கள். இந்த இளம் பெண்களின் கூட்டம் உள்ளே நுழைந்தவுடன் நெய்யும், பாலும், பணியாரமும், பல்சுவை மணம் பரப்பிக் கொண்டிருந்த உணவுக் கூட்டத்தில் மல்லிகை மணமும், கூந்தலில் பூசிய தைலமணமும், வேறு பல மென்மணங்களும் புதிதாக எழுந்து உணவு மணங்களோடு கூடிக் கலந்தன. தந்தையார், சுரமஞ்சரி முதலியவர்களை முகமலர்ச்சியோடு உற்சாகமாக வரவேற்றார்.
“வாருங்கள், பெண்களே! இன்று நமது மாளிகையில் நள பாகமே செய்திருக்கிறார்கள். இந்திரவிழா உற்சாகத்தில் சமையற்காரர்கள் தங்கள் அற்புதத் திறமையைக் காட்டியிருக்கிறார்கள். இனிமேல் நாம் நமது உண்ணும் திறமையைக் காண்பிக்க வேண்டியதுதான்.”
“ஆகா! நமது மாளிகை உணவைப் பற்றியா இப்படிச் சொல்கிறீர்கள், அப்பா? என்ன அதிசயம்! என்னால் நம்பவே முடியவில்லையே! ஏதாவது கைதவறிச் செய்திருப்பார்கள். அது நன்றாக வாய்த்துத் தொலைத்திருக்கும். நம் மாளிகைச் சமையற்காரர்கள் அற்புதத் திறமையையும் உற்சாகத்தையும் எப்படி அப்பா காட்டுவார்கள்? அவர்கள் தாம் இந்த மாளிகைக்குள் நுழையு முன்பே அத்தகைய திறமையையும் உற்சாகத்தையும் எங்கோ தொலைத்துவிட்டு வந்து சேர்ந்திருக்கிறார்களே அப்பா!” என்று வானவல்லி வம்புப் பேச்சைத் தொடங்கினாள். அவள் கூறி முடித்ததும் பெண்களின் கிண்கிணிச் சிரிப்புகள் அந்தக் கூடத்தில் அலைஅலையாய் ஒலி பரப்பி அடங்கின. சுரமஞ்சரியையும் வசந்த மாலையையும் தவிர மற்றவர்கள் யாவரும் இந்த நகைச்சுவை மகிழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். சுரமஞ்சரி வானவல்லி ஆகியோரின் அன்னையும் இந்த மகிழ்ச்சியில் கலந்து கொண்டாள்.
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை பெண்ணே! நம் மாளிகைச் சமையற்காரர்களைப் பற்றி நீ வேண்டுமென்றே மிகைப்படுத்திக் குற்றம் சொல்கிறாய். எப்போதாவது கொஞ்சம் உப்பைக் கூடப் போட்டிருப்பார்கள். ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்ற பழமொழி இருக்கிறதல்லவா? நமது மாளிகையில் உண்டு சென்றவர்கள் நீண்ட காலம் நம்மை நினைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்றும், அப்படி நம்மை நினைப்பதற்காகவே அவர்கள் நீண்டகாலம் இருக்க வேண்டுமென்றும் தான் நமது சமையற்காரர்கள் இப்படி உப்பை அதிகமாகப் போடுகிறார்கள் போலிருக்கிறது” என்று அன்னை கூறியபோது சிரிப்பொலி முன்னைக் காட்டிலும் பெரிதாக எழுந்தது. நகைவேழம்பரும் சேர்ந்து கொண்டு சிரித்தார். அந்த மனிதரின் ஒற்றைக் கண்ணோடு கூடிய முகத்துக்குச் சிரிப்பு நன்றாயில்லை. பேய் சிரிக்கிறாற் போல் விகாரமாக இருந்தது. செம்மையில்லாத கெட்ட கண்ணாடியில் முகம் பார்த்தது போல் சிரிக்கும் போது பூத பயங்கரம் காட்டியது நகைவேழம்பரின் முகம். குறும்புக்காரியான வானவல்லி விடாமல் மேலும் அந்த வம்புப் பேச்சை வளர்த்தாள்.
“நீ சொல்வதை நான் அப்படியே ஒப்புக்கொள்ள முடியாதம்மா! ஏனென்றால் காவிரிப்பூம்பட்டினத்துக் கடற்கரையில் உப்புக் காய்ச்சும் உப்பளங்கள் நிறைய இருக்கின்றன என்ற செய்தியையே நம் மாளிகை உணவு மூலமாகத்தான் மிகப் பலர் தெரிந்து கொள்ள நேர்ந்திருக்கிறது. அப்பாவைத் தேடி எத்தனையோ கடல் கடந்த தேசங்களிலிருந்து பெரிய வணிகர்கள், சிற்றரசர்கள் எல்லாம் நம் மாளிகைக்கு வந்து தங்கிச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இங்கு முதன் முறையாக உணவு உண்டு முடிந்தவுடன் அப்பாவைக் கேட்டிருக்கிற முதல் கேள்வி என்ன தெரியுமா? ‘உங்கள் நகரத்தில் நிறைய உப்பளங்கள் இருக்கின்றனவோ?’ என்பதுதான். நான்கு நாட்களுக்கு முன் இரத்தினத் தீவிலிருந்து வந்திருந்த வைர வணிகர் கூட இதே கேள்வியைத் தானே கேட்டார்?” என்று தன் அன்னையிடம் வேடிக்கையாகக் கூறினாள் வானவல்லி. இப்படியே சிரிப்பும் கலகலப்புமாக, உற்சாகமும் உரையாடல்களுமாக உண்ணும் நேரம் கழிந்து கொண்டிருந்தது. சுரமஞ்சரியும், வசந்த மாலையும் மட்டும் சிரிப்போ பேச்சோ இல்லாமல் எதையோ ஆழ்ந்து சிந்திப்பது போல் அமைதியாக அமர்ந்து உண்பதைத் தந்தையார் கவனித்து விட்டார். அந்த மௌனத்தின் காரணத்தைச் சுரமஞ்சரியிடமே நேரில் கேட்காமல் வானவல்லியிடம் கேட்டார் அவர்.
“வானவல்லீ! இன்றைக்கு உன் சகோதரி சுரமஞ்சரி மௌன விரதம் பூண்டிருக்கிறாளா என்ன? பேச்சுமில்லை, சிரிப்புமில்லை. பதுமை போல் அமர்ந்து உண்கிறாளே!” தந்தையார் இப்படித் தூண்டிக் கேட்ட பின்பும், சுரமஞ்சரி ஒன்றும் பேசவில்லை. தன் சகோதரி சுரமஞ்சரியும் அவளுடைய தோழி வசந்தமாலையும் உற்சாகமாயில்லை என்பதை வானவல்லியும் கவனித்தாள். சகோதரி அப்படி அமைதியாயிருக்கும் போது தான் மட்டும் அதிகப் பிரசங்கியாக வம்பு பேசுவது நாகரிகமில்லை என்று உணர்ந்தவளாய் வானவல்லியும் பேச்சை நிறுத்திக் கொண்டு அமைதியாய் உண்ணத் தொடங்கினாள்.
“என்னடி, பெண்ணே! உனக்கு உடல் நலமில்லையா? ஏன் இப்படி இருக்கிறாய்?” என்று தாய் சுரமஞ்சரியை விசாரித்தாள். “அதெல்லாம் ஒன்றுமில்லையம்மா!” என்று பெண்ணிடமிருந்து சுருக்கமாகப் பதில் கிடைத்தது தாயாருக்கு.
ஆனால் தந்தையார் சுரமஞ்சரியை அவ்வளவு எளிதில் விடவில்லை. எப்படியாவது அவளைப் பேச வைத்துவிட வேண்டுமென்று முனைந்தவர் போல் மீண்டும் அவளிடம் நேரிலேயே பேசலானார்:
“சுரமஞ்சரீ! இன்று உனக்குச் சொல்ல வேண்டுமென்பதற்காக மிகவும் நல்ல செய்தி ஒன்று வைத்திருக்கிறேன். இதோ இந்த ஓவியனை நமது மாளிகையிலேயே பணிபுரிவதற்கு நியமித்திருக்கிறேன். எல்லாம் உனக்காகத்தான் பெண்ணே! ஓவியக் கலையில் உனக்கு இருக்கும் பற்று எனக்குத் தெரியும். இவனைப் பயன்படுத்திக் கொண்டு உனது சித்திரச் சாலையின் எஞ்சிய இடங்களையெல்லாம் சித்திரங்களால் நிரப்பி விடலாம்” என்று அவள் முகத்தில் மலர்ச்சியை எதிர்பார்த்துக் கொண்டே கூறிய அவர் அங்கே மலர்ச்சி தோன்றாததைக் கண்டு திகைத்தார். ஒவியன் முகத்தைப் பார்த்தாள் சுரமஞ்சரி. அவன் முகத்தில் பதவிபெற்ற பெருமிதம் இல்லை, ஏதோ பயம் தான் இருந்தது. தந்தையார் நல்ல செய்தி என்று தொடங்கிக் கூறிய இந்தப் பதவி நியமனம் அவள் மனத்தில் பல சந்தேகங்களை உண்டாக்கியது.
மணிமார்பன் என்னும் அந்த ஓவியனைத் திரும்பிப் போகவிடாமல் தன் தந்தையார் மாளிகையிலேயே தேக்கி வைத்துக் கொண்டிருப்பதன் மெய்யான நோக்கம் என்னவாக இருக்கும் என்று சுரமஞ்சரி சிந்தித்தாள். தன்னுடைய சித்திரச்சாலைக்குப் படங்கள் வரைந்து நிரப்புவதற்காகவே அவனை மாளிகையின் ஓவியக் கலைஞனாகப் பதவி தந்து நியமித்திருப்பதாகத் தந்தையார் கூறியதை அவள் அப்படியே நம்பி ஒப்புக் கொள்வதற்கு இயலவில்லை. எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட அந்தரங்க நோக்கம் ஒன்று தந்தையாருக்கு இருக்குமென்று அவள் சந்தேகப்பட்டாள். ஓவியனுக்கு பதவியளித்திருக்கும் செய்தியைத் தந்தையார்தாம் மகிழ்ச்சியோடு கூறினாரே தவிர அதைக் கேட்டுக்கொண்டே அருகில் அமர்ந்திருந்த ஓவியன் முகத்தில் மலர்ச்சியோ மகிழ்ச்சியோ தோன்றவில்லை என்பதையும் அவள் கவனித்திருந்தாள். அது வேறு அவளுடைய சந்தேகத்தை வளர்த்தது.
“அம்மா இந்த ஒற்றைக் கண் மனிதருக்கு நகைவேழம்பர் என்று யார் பேர் வைத்தார்கள்? இவர் சிரிப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லையே?” என்று சுரமஞ்சரியின் காதருகில் மெல்லக் கேட்டாள் வசந்தமாலை. சுரமஞ்சரி உடனே தோழிக்கு மட்டும் கேட்கும்படி, “அது இவருடைய சொந்தப் பெயர் இல்லையடி வசந்தமாலை! கூத்தரங்குகளிலும் நாடக மேடைகளிலும் கூத்து, நாடகம் முதலியன தொடங்குமுன் கோமாளி வேடத்தோடு விதூடகன் ஒருவன் வருவது உண்டல்லவா? எதையாவது சொல்லி அவையிலிருப்பவர்களுக்கு நகைப்பு உண்டாக்கும் கலைஞர்களுக்கு நகைவேழம்பர் என்று தமிழில் பெயர் உண்டு. எங்கள் தந்தையாரோடு வந்து சேர்ந்து கொள்வதற்கு முன்னால் இந்த மனிதர் நம் காவிரிப்பூம்பட்டினத்தில் ஏதோ ஒரு நாடக அரங்கில் நகைவேழம்பராக நடித்துப் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தாராம். அதனால் அந்தத் தொழில் பெயர் இன்னும் இவரை விடாமல் பற்றிக் கொண்டு நிற்கிறது” என்று மறுமொழி கூறினாள்.
“இந்த மனிதருடைய குரூர முகத்தைப் பார்த்தால் வந்த சிரிப்புக் கூடப் போய்விடுமேயம்மா! இவரை எப்படி நாடக அரங்கில் நகைவேழம்பராக வைத்துக் கொண்டு பொறுமையாக நாடகம் நடத்தினார்கள்? பார்த்தவர்களும் தான் எப்படிப் பொறுமையோடு பார்த்தார்கள்? சிரிப்பு மூட்டுகிற முகமா இது? எரிந்த கொள்ளிக் கட்டையைப் போல் விகாரமாக இருக்கிறதே!” என்று மேலும் கேட்ட வசந்தமாலைக்கு, “இவர் நகைவேழம்பராக நடிப்பதைப் பொறுமையாகப் பார்க்க முடியாததனால் தானோ என்னவோ இவருடைய முகத்தைக் கண்டு சிரிப்பு மூள்வதற்குப் பதில் சீற்றம் மூண்டு யாரோ ஒற்றைக்கண்ணைப் பொட்டையாக்கி அனுப்பி விட்டார்கள் போலிருக்கிறது” என்று வயிற்றெரிச்சல் தீர மறுமொழி கூறினாள் சுரமஞ்சரி.
“நாடக மேடையில் ஆடிய கூத்துக்களை விட இவர் வாழ்க்கையில் ஆடும் கூத்துக்கள் அதிகம் போலிருக்கிறதம்மா...”
“தந்தையாரிடம் வந்து சேர்ந்த பின் இவருடைய கூத்துக்கள் மிகவும் அதிகமடி வசந்தமாலை...”
உணவுக்கூடத்தில் எல்லாருக்கும் நடுவே சுரமஞ்சரியும் வசந்தமாலையும் இப்படித் தங்களுக்குள் இரகசியம் பேசுவது போல் பேசிக் கொண்ட பேச்சினால் எல்லாருடைய கவனமும் அவர்கள் பக்கம் திரும்பவே பேச்சை அவ்வளவில் நிறுத்திக் கொண்டனர்.
“என்னவோ நீயும் உன் தோழியுமாக உங்களுக்குள்ளேயே பேசிக் கொள்கிறீர்களே சுரமஞ்சரி! எங்களோடு திடீரென்று உனக்கு என்ன கோபம் வந்துவிட்டதம்மா?” என்று தந்தையார் மறுபடியும் அவளுக்கு உற்சாகமூட்டிப் பேசவைக்கும் முயற்சியைத் தொடங்கினார். அவர் இவ்வளவு தூண்டிக் கேட்ட பின்னும் பேசாமலிருந்தால் நன்றாயிராதென்று பட்டும் படாமலும் ஏதோ பேசினாள் சுரமஞ்சரி.
“சுரமஞ்சரி தேவிக்கு இன்று ஏதோ சில காரணங்களால் மனம் குழப்பமடைந்துள்ளது போல் தோன்றுகிறது, ஐயா!” என்று அதுவரை பேசாமலிருந்த நகைவேழம்பர் முதல் முறையாக வாய் திறந்தார். அந்த நேரத்தில் அங்கே அவரைப் போன்று தன்னால் விரும்பத்தகாத ஒருவர் தன் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியதே சுரமஞ்சரிக்குப் பிடிக்கவில்லை. அழுக்கும் சேறும் படிந்த தரையில் கால் அழுந்தி நிற்க அருவருப்படைந்து கூசுகிறாற்போலச் சிலருடைய பேச்சில் செவிகளும் மனமும் அழுந்தித் தோய்வதற்கு விரும்புவதில்லை. அப்படிப்பட்டவர்கள் பேசும் போது கேட்கிறவர்களுக்கு அருவருப்பும் கூச்சமுமே ஏற்படுகின்றன. நகைவேழம்பரின் பேச்சும் சுரமஞ்சரிக்கு இத்தகைய அருவருப்பைத்தான் உண்டாக்கிற்று. அத்தனைய மனிதர் ஒருவரின் நாவிலிருந்து தன் பெயர் ஒலிக்கும் போது அந்த நாவின் அழுக்கு தனது அழகிய பெயரிலும் தோய்வது போன்று மிகவும் கூச்சத்தோடு கூடியதொரு வெறுப்பைச் சுரமஞ்சரி அடைந்தாள்.
“நகைவேழம்பரே! புதிதாக நம் மாளிகைக்கு வந்துள்ள இந்த ஓவியனை உங்கள் பொறுப்பில் ஒப்படைக்க எண்ணியுள்ளேன். வெளியில் அநாவசியமாக அலைந்து திரியாமல் இவன் மாளிகையிலேயே தங்கிப் பணிகளைச் செய்யுமாறு கண்காணித்துக் கொள்ள வேண்டியது உங்கள் வேலை. இதற்கு மேல் விவரமாக நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. உங்களுக்குக் குறிப்பறியத் தெரியும்” என்று உணவு முடிகிற நேரத்தில் தந்தையார் நகைவேழம்பருக்கு இருபொருள் தொனிக்கும் குறிப்புடன் உத்தரவிட்டதையும் சுரமஞ்சரி கவனித்துக் கொண்டாள். ‘இந்த மாளிகையை விட்டு ஆள் வெளியேறிவிடாமல் ஓவியனைச் சிறை செய்து பாதுகாத்துக் கொள்’ என்று சொல்ல வேண்டியதற்குப் பதில் அதையே கௌரவமான வார்த்தைகளில் கௌரவமான தொனியோடு தந்தையார் நகைவேழம்பருக்குச் சொல்லியிருக்கிறார் என்பதை அவள் உய்த்துணர்ந்து புரிந்து கொள்ள முடிந்தது. தந்தையாருக்கு என்னதான் வயதும் தகுதியும், செல்வமும் இருந்த போதிலும் அந்த ஓவியக் கலைஞனை அவர் ஏக வசனத்தில் குறிப்பிட்டுப் பேசியது சுரமஞ்சரிக்கு என்னவோ போலிருந்தது. நுண்கலைகளை மதிக்கும் நளினமான மணமுள்ளவள் அவள். அவளுடைய கோமளமான சுபாவத்துக்குக் கலைகள் பிறக்குமிடத்தைச் சுலபமாக நினைப்பவர்களைப் பொறுத்துப் பழக்கமில்லை. அதுவும் ஓவியம் இளமையிலிருந்து அவள் மனத்தில் பித்து ஏறிப் பதிந்த கலை. அந்தக் கலைக்கு உரியவர்களைப் பற்றி எளிதாக நினைப்பவர்களையோ பேசுபவர்களையோ அவளால் ஏற்க முடிவதில்லை.
உண்டு முடித்தபின் உணவுக் கூடத்திலிருந்து எல்லாரும் வெளியேறிய போது, “வசந்தமாலை! விரைவாக நடந்து வா. சிறிது முன்னால் சென்று உணவுக் கூடத்தின் வாயிலுக்கு அருகே நின்று கவனிக்கலாம். உள்ளிருந்து ஒவ்வொருவராக வெளியேறிப் படிகளில் இறங்கும் போது நீயும் நானுமாக அவர்கள் பாதங்களை நாம் கவனிப்பதை அவர்கள் அறிந்து கொள்ளாதபடி கவனிக்க வேண்டும்” என்று காதருகில் மெல்லச் சொல்லி அவளை வேகமாக நடக்கச் செய்து அவளுடன் வாயிற் பக்கம் வந்து நின்று கொண்டாள் சுரமஞ்சரி. முதலில் தந்தையாரும், தாயும், வானவல்லியும் பிற பெண்களும் படியிறங்கி வந்தார்கள்.
“என்னம்மா? இங்கே எதற்கு நின்று கொண்டிருக்கிறாய்? போகலாம், வா” என்று தந்தையார் அவளைக் கூப்பிட்டார்.
“வருகிறேன் அப்பா, நீங்கள் முன்னால் செல்லுங்கள்” என்று அவரை முன்னால் அனுப்பிவிட்டு மேலும் படியிறங்கி வருகிற பாதங்களை கவனிக்கத் தொடங்கினாள் சுரமஞ்சரி. ஒவ்வொருவராக எல்லாரும் போய்விட்டார்கள். மணிமார்பனும், நகைவேழம்பரும் தான் வரவில்லை. உள்ளே சமையல்காரர்களோடு ஏதோ பேசிக் கொண்டு நின்றார் நகைவேழம்பர்.
சிறிது நேரத்தில் மணிமார்பனைக் கைப்பற்றி அழைத்துக் கொண்டு நகைவேழம்பர் படியிறங்கி வந்த போது சுரமஞ்சரி தோழியோடு அங்கே நின்று கொண்டிருந்தாள். அவள் அங்கே நின்று கொண்டிருப்பாளென்று அந்த ஒற்றைக் கண் மனிதர் எதிர்பார்க்கவில்லை. அப்போது அங்கே அவள் நின்று கொண்டிருப்பதைக் கண்ட போது சிறிது அதிர்ச்சி கூட அவருக்கு உண்டாயிற்று. சாமர்த்தியமாக அந்த அதிர்ச்சி வெளியே தெரியாமல் மறைத்துக் கொண்டு நடந்து சென்றார். தற்செயலாக நடந்து உடன் வருபவர்களைப் போல் சுரமஞ்சரியும் தோழியும் நகைவேழம்பரோடு கூட நடந்தார்கள். அவர்களும் உடன் வருவதைக் கண்ட நகைவேழம்பரின் நடை இன்னும் துரிதமாயிற்று. ஓவியனும் அதற்கு ஏற்பத் துரிதமாக நடந்தான். விரைவாய்த் தங்களைக் கடந்து அடுத்த கூடத்துக்குள் நுழைந்து முன்னால் போய் விடுவதற்காக அவர் முந்துகிறார் என்பது சுரமஞ்சரிக்கும், தோழிக்கும் புரிந்தது. உடனே அவர்களும் விட்டுக் கொடுக்காமல் தங்கள் நடையையும் வேகமாக்கினார்கள்.
ஆயினும் அவர்களைக் கடந்து பாய்ந்து முந்திச் செல்வது போல் ஓவியனை இழுத்துக் கொண்டு அடுத்த கூடத்துக்குள் காலெடுத்து வைத்துவிட்டார் நகைவேழம்பர். மேலே அவரைத் தொடர்ந்து நடப்பது சாத்தியமில்லை என்றுணர்ந்த சுரமஞ்சரி வார்த்தைகளால் அவரைத் தடுத்து நிறுத்தினாள்!
“ஐயா! ஒரு விநாடி நின்று போகலாமல்லவா? உங்களிடம் சிறிது பேச வேண்டும்.”
முன்புறம் விரைந்து கொண்டிருந்த நகைவேழம்பர் திரும்பி நின்றார். “என்ன பேசவேண்டும் சுரமஞ்சரி தேவீ? சொல்லுங்கள், கேட்கிறேன். எனக்கு அவசரமாகப் போக வேண்டும். நேரமாகிறது.”
“போகலாம்! ஆனால் இவ்வளவு தலைபோகிற அவசரம் வேண்டியதில்லை. ஐயா! நீங்கள் நெடுங்காலத்துக்கு முன் கூத்தரங்குகளில் நடித்துக் கொண்டிருந்த நாட்களில் முகத்துக்கு அரிதாரமும், கண்ணுக்கு மையும், கால்களுக்குச் செம்பஞ்சுக் குழம்பும் இட்டுக் கொண்டு அழகாக இருந்ததாகச் சொல்வார்கள். கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இத்தனை காலத்துக்குப் பின் காலுக்குச் செம்பஞ்சுக் குழம்பு பூசிக் கொள்ளும் ஆசை உங்களுக்குத் திடீரென்று எப்படி ஐயா உண்டாயிற்று? அதுவும் இவ்வளவு நன்றாகச் சிவப்பு நிறம் பற்றும் செம்பஞ்சுக் குழம்பு உங்களுக்கு எங்கேதான் கிடைத்ததோ?” என்று அவருடைய பாதத்தைச் சுட்டிக் காட்டிச் சிரித்துக் கொண்டே கேட்டாள் அவள்.
அதைக் கேட்டு நகைவேழம்பர் மெய் விதிர்விதிர்த்து நடுங்கினாற்போல் நின்றார். அவருடைய ஒற்றைக்கண் மிரண்டு பார்த்தது.
அந்தப் பின்னிரவு நேரத்தில் பூம்புகாரின் துறைமுகம் ஆரவாரமும் ஆள் புழக்கமும் குறைந்து அமைதியாய்க் காட்சியளித்தது. துறைமுகத்தின் அழகுகள் அமைதியில் தோய்ந்து தோன்றும் காரணத்தினால் பகற்போதில் இருந்ததைக் காட்டிலும் புதிய கவர்ச்சி ஏதோ இப்பொழுது சேர்ந்திருப்பது போல் விநோதமாக விளங்கின. நீலவானத்தின் நெடிய பெருவீதியில் மங்கிய நிலவு உலாச் சென்று கொண்டிருந்தது. அந்தரத்தில் சுடர்விரிக்கும் செந்தழல் மண்டிலம் போல் கலங்கரை விளக்கத்துத் தீ எரிந்தது. அந்த ஒளியில், நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்த பெரிய பெரிய கப்பல்கள் கடற்பரப்பெங்கும் தெரிந்தன. மிகப் பெரிய வெண்ணிறப் பறவை ஒற்றைச் சிறகை மட்டும் சாய்த்து விரித்தாற் போல் கப்பல்களின் பாய்மரங்கள் எடுப்பாக இலங்கின.
வேறு ஒலிகளற்ற அமைதியில் கடற்காற்று சுகமாக வீசும் சூழ்நிலையில் துறைமுகப் பகுதியெங்கும் பல்வேறு பொருள்களும், பொருள்களின் மணங்களும் கலந்து நிறைந்திருந்தன. பொதிய மலையிலிருந்து வந்து இறங்கியிருந்த சந்தனக்கட்டைகளும், சீன தேசத்திலிருந்து வந்திருந்த பச்சைக் கற்பூரமும் கடற்கரையைத் திருமணம் நிகழும் வீடு போல் மணக்கச் செய்து கொண்டிருந்தன. எங்கும் அமைதி தங்கி நிற்கும் நேரம். எங்கும் அழகு பொங்கி நிற்கும் தோற்றம். எங்கும் ஒளியடங்கின நேரத்துக்கு உரிமையான ஒலியடங்கின அடக்கம்.
அப்போது அந்தத் துறைமுகத்தின் ஒதுக்கமான பகுதி ஒன்றில் மணிபல்லவத்துக்குப் புறப்படும் சிறிய பாய்மரக் கப்பலின் அருகே அருட்செல்வ முனிவரும், வீரசோழிய வளநாடுடையாரும் நின்று கொண்டிருந்தார்கள். இன்னும் சிறிது நேரத்தில் அந்தக் கப்பல் புறப்படுவதற்கிருந்தது. புத்தர் பெருமானின் பாத பீடிகைகளை தரிசனம் செய்வதற்குச் செல்லும் பௌத்த சமயத் துறவிகள் சிலரும் கப்பலுக்கு அண்மையில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
அன்று அந்தக் கப்பல் புறப்படும் நேரத்தில் அங்கே வழக்கமான கூட்டம் இல்லை. கப்பலில் பயணம் செய்வதற்கு இருந்தவர்களும் மிகக் குறைந்த தொகையினர்தாம். நகரத்தில் வாராது வந்த பேரழகுக் கொண்டாட்டமாக இந்திரவிழா நடந்து கொண்டிருக்கும் போது எவராவது வெளியூர்களுக்குப் போக ஆசைப்படுவார்களா? வெளியூர்களிலிருந்தெல்லாம் காவிரிப்பூம்பட்டினத்துக்கு மனிதர்களை வரவழைக்கும் சிறப்பு வாய்ந்த திருவிழா அல்லவா அது? அதனால் தான் துறவிகள் சிலரையும், இன்றியமையாத கப்பல் ஊழியர்களையும் தவிர பயணத்துக்காகக் கூடும் வேறு கூட்டம் அங்கே இல்லை.
கப்பல் புறப்படப் போகிறது என்பதற்கு அறிகுறியாக மேல் தளத்தில் கட்டப்பெற்றிருந்த மணியை ஒலிக்கச் செய்தான் மீகாமன். கண்களில் நீர் பனிக்க நின்ற வீரசோழிய வளநாடுடையாரை அன்போடு தழுவிக் கொண்டார் அருட்செல்வ முனிவர். உணர்வு மிகுந்து பேசுவதற்கு அதிகம் சொற்களின்றி இருந்தனர் இருவரும்.
“நல்லவர்களோடு நட்பு செய்து பழகிக் கொள்வதில் எவ்வளவு துன்பமிருக்கிறது பார்த்தீர்களா? பேதையர்களோடு பழகுவதே ஒரு வகையில் நல்லது. பேதையர்களுடன் நமது நட்பு அறுந்து போனால் அந்தப் பிரிவினால் நமக்குத் துன்பமே இல்லை முனிவரே!”
“பேயோடாயினும் பழகிவிட்டால் பிரிவது வேதனைதான் வளநாடுடையாரே!”
“ஆனால் உங்களுக்கு இந்தப் பழமொழி பொருந்தாது முனிவரே! நானும் பேயில்லை! நீங்களும் பேயில்லை!”
“தவறு! நான் மனிதனாகவா இப்போது இந்தக் கப்பலில் மணிபல்லவத்துக்குப் புறப்பட்டுப் போகிறேன்? இல்லவே இல்லை. உயிரோடு இருந்து கொண்டே செத்துப் போய்விட்டதாக உலகத்துக்குப் பொய் சொல்லிவிட்டு அந்தப் பொய்யைப் பாதுகாக்க உங்களையும் நியமித்துவிட்டுப் பேயாகப் பறந்து கொண்டு தான் ஓடுகிறேன். உயிர் இருந்தும் அதற்குரிய தோற்றமின்றி மறைந்து நடமாடுவதுதானே பேய்! அப்படியானால் நான் முதல் தரமான பேய்தான் வளநாடுடையாரே!”
மீண்டும் கப்பல் மணி ஒலித்தது. அமைதியில் பிறந்து அமைதியில் வளர்ந்து அமைதியோடு கலக்கும் அந்த மணி ஓசை அப்போது அங்கிருந்த சூழ்நிலையில் தனி ஒலியாய் விரிந்து பரவியது.
“இளங்குமரனை கவனித்துக் கொள்ளுங்கள். அன்பையும், அதைப் போற்றும் பண்புள்ளவர்களையும் நம்பி அவனை விட்டுப் பிரிந்து செல்கிறேன். அன்பும் அன்புள்ளவர்களும் கைவிட்டு விட்டாலும் அந்தப் பிள்ளையின் தன்னம்பிக்கை அவனைக் காப்பாற்றும். தன்னைப் பிறர் வெற்றி கொள்ளவிடாமல் தான் பிறரை வெற்றி கொள்ளும் மனம் அவனுக்கு இருக்கிறது. உலகத்தில் மிகப் பெரிய செல்வம் இப்படிப்பட்ட மனம் தான். இந்த மனம் உள்ளவர்கள் உடம்பினால் தோற்றுப் போனாலும் உள்ளத்தினால் வெற்றி பெறுவார்கள். உயரிய நூல்களைக் கற்று உலக ஞானமும் பெறும்போது இப்போது பெற்றிருக்கிற சில முரட்டுக் குணங்களும் தணிந்து பண்புகள் வளர்ந்து இளங்குமரனின் மனம் பக்குவமடைந்து விடும்...”
இவ்வாறு கூறிக்கொண்டே கப்பலின் மரப்படிகளில் ஏறினார் அருட்செல்வ முனிவர். வளநாடுடையார் முனிவரையே பார்த்துக் கொண்டு கீழே கரையில் நின்றார். உரிய நேரத்துக்கு ஏதோ நினைவு வந்தவர்போல், “அடுத்த ஆண்டு வைகாசி விசாகம் - புத்த பௌர்ணமி நாள் எப்போது வரப்போகிறதென்று காத்துக் கொண்டே இருப்பேன். மறந்து விடாதீர்கள்” என்று கப்பலில் ஏறிக் கொண்டிருக்கும் முனிவருக்குக் கேட்கும்படி இரைந்து கூறினார் அவர். ‘இந்த மனம் இன்றிலிருந்து தாங்க வேண்டிய நினைவுச் சுமையை எப்படித் தாங்கி ஆற்றப் போகிறது’ என்பது போல் பெருமூச்சு வந்தது அவருக்கு. அருட்செல்வ முனிவர் தம்முடைய தவச் சாலையிலிருந்து நெருப்புக்கு இரையாகாமல் காப்பாற்றிக் கொண்டு வந்த சுவடிகளையும் பிற பொருள்களையும் தவிர மனத்தில் இளங்குமரனைப் பற்றிய பேருண்மைகளையும் காப்பாற்றிச் சுமந்து கொண்டு தான் மணிபல்லவத்துக்குக் கப்பல் ஏறியிருக்கிறார் என்பதை வளநாடுடையார் அறிந்திருந்தார். ஆயினும் அந்தப் பேருண்மைகள் புரிவதற்கு அடுத்த புத்த பௌர்ணிமை வரையில் காத்திருக்க வேண்டுமே!
கடற்பரப்பில் கப்பல் சிறிது தொலைவு நகர்கிற வரை கரையில் நின்றுவிட்டு வீடு திரும்பினார் வளநாடுடையார். வீட்டில் கதக்கண்ணன், இளங்குமரன் எல்லோருமே இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு சென்றிருந்தார் அவர். முனிவருடைய தவச்சாலை தீப்பற்றி முனிவரும் தீயுண்டு இறந்து போனாரென்று செய்தியை யாவரும் நம்பத்தக்க விதத்தில் எப்படி விவரிப்பதென்று கூட முன்னேற்பாடாகச் சிந்தித்து வைத்துக் கொண்டே வீட்டை அடைந்திருந்தார் அவர்.
‘உங்கள் கண்காணிப்பில் உங்களுடைய இல்லத்தில் இருக்கச் செய்துவிட்டுப் போன முனிவரை நீங்கள் எப்படித் தப்பிச் செல்ல விட்டீர்கள்? நீங்கள் கவனமாக இருந்தால் அவர் தவச்சாலைக்குத் தப்பிச் சென்று அங்கே தீக்கிரையாக நேர்ந்திருக்காதே!’ என்று இளங்குமரன் தன்னையும், முல்லையையும் கேட்பான் என்றும் அதற்கு என்ன பதில் சொல்லலாம் என்று கூட அவர் நினைத்து வைத்திருந்தார். ஆனால் அவற்றுக்கெல்லாம் அவசியமில்லாமல் போயிற்று. வீட்டில் முல்லையைத் தவிர வேறு யாருமே அப்போது இல்லை. அவர் வீட்டை அடைந்த போது விடிவதற்குச் சில நாழிகைகளே இருந்தன.
“என்னப்பா, முனிவர் அகப்படவில்லையா? நீங்கள் மட்டும் தனியாக வந்திருக்கிறீர்களே...?” என்று தூக்கக் கலக்கத்திலும் நினைவாகக் கேட்டாள் முல்லை. சக்கரவாளக் கோட்டத்தில் தம்மைத் துரத்தியவர்கள் கல் எறிந்தால் தமது உடலில் உண்டாகியிருந்த சிறு சிறு காயங்களை அந்த இருளில் தம் மகள் கண்டு விடாமல் மறைத்துக் கொள்வதற்கு முயன்றார் அவர்.
“உறக்கம் கெடாமல் நீ தூங்கம்மா. எல்லாம் பொழுது விடிந்ததும் சொல்கிறேன். இப்பொழுது என் மனமே சரியாயில்லை” என்று பெண்ணின் கேள்விக்குப் பிடி கொடுக்காமல் மறுமொழி கூறித் தப்பித்துக் கொண்டார் வளநாடுடையார்.
“முல்லை! இளங்குமரனும், உன் தமையனும் காலையிலிருந்து இதுவரை எங்கேதான் சுற்றுகிறார்களோ? விடிகிற நேரம் ஆகப் போகிறது. இந்திர விழா வந்தாலும் வந்தது, இவர்களுக்கு ஊர் சுற்ற நேரமும் காலமும் இல்லாமலே போய்விட்டது. பாவம்! நீ இவ்வளவு நேரம் தனியாக வீட்டில் இருந்திருக்கிறாயே!” - என்று மகளிடம் வருந்திக் கூறிவிட்டுப் படுக்கச் சென்றார் வளநாடுடையார். ‘தூங்குகிறோம்!’ என்று பேருக்குப் படுக்கையில் புரண்டாரே ஒழிய மனத்தைக் குடையும் நினைவுகளை மீறி உறக்கம் அவரை அணுக மறுத்தது. பொழுது புலர்ந்ததும் இளங்குமரன் முகத்தில் விழித்துச் சிறிதும் தடுமாறாமல் அந்தப் பொய்யை மெய்போல் உறுதியாக எப்படிக் கூறலாம் என்று சொற்களை மனத்தில் வரிசைப்படுத்தும் முயற்சியில் தான் மீண்டும் அவரால் ஈடுபட முடிந்தது. அதோடு அடுத்த புத்த பௌர்ணிமை வரையுள்ள கால வெளியின் நீண்ட தொலைவையும் அவர் தம் நினைவுகளால் அளக்க முற்பட்டார். முடிவும், விடையும் கிடைக்காது மேலும் மேலும் நீளும் அளவாக இருந்தது அது. மனம் அறியத் தவிக்கும் உண்மைகளுக்கும் தமக்கும் நடுவிலிருந்த காலவெளி பெரிதாகவும் மலைப்பாகவும் தோன்றியது அவருக்கு.
முல்லை தனக்குக் கதவைத் திறந்து விடுவதற்காக எழுந்திருந்து விட்டு இப்போது நன்றாக உறங்குவதாக நினைத்துக் கொண்டிருந்தார் அவர். முல்லை படுத்திருந்த இடத்திலிருந்து தெளிவான குரலில், “நாளைக்குக் காலையில் அவர் இங்கு வந்து விடுவாரா, அப்பா?” என்று கேள்வி புறப்பட்ட போதுதான் தனக்குக் கதவு திறந்துவிட்டதனால் கலைந்த தூக்கத்தை அவள் இன்னும் திரும்பப் பெறவில்லை என்று அவருக்குப் புரிந்தது. தான் தூங்கிப் போய்விட்டதாக அவள் நினைத்துக் கொள்ளட்டுமென்று முதலில் அவளுக்குப் பதில் பேசாமலிருந்து விட எண்ணினார் அவர். ஆனால் மகள் விடவில்லை. மீண்டும் அவரைக் கேட்டாள்.
“உங்களைத்தான் கேட்கிறேனப்பா! நாளைக் காலையில் அவர் இங்கு வந்துவிடுவாரா?”
கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த பெண்ணை ஏமாற்றும் துணிவு இரண்டாம் முறையும் அவளிடமிருந்து கேள்வியெழுந்த போது தளர்ந்து விட்டது. மௌனத்தைக் கலைத்துவிட்டு வாய் திறந்தார் அவர்.
“எவரைச் சொல்கிறாய் முல்லை?”
”அவரைத்தான் அப்பா, அருட்செல்வ முனிவரின் வளர்ப்புப் புதல்வர். நாளைக் காலையில் இங்கு வருவாரா?”
“ஓகோ, இளங்குமரனைப் பற்றிக் கேட்கிறாயா? நாளைக்கு அவசியம் இங்கே வருவான் அம்மா. வராவிட்டாலும் நானே அவனைத் தேடிச் சென்று பார்க்க வேண்டிய காரியம் இருக்கிறது.”
“அப்படித் தேடிச் சென்று பார்த்தால் அவரை மறவாமல் இங்கே அழைத்து வர வேண்டும் அப்பா! இன்றைக்குத்தான் அண்ணனுக்கும் அவருக்கும் செய்து வைத்திருந்த விருந்துணவெல்லாம் வீணாகி விட்டது. நாளைக்காவது அவரை இங்கே விருந்துண்ணச் செய்ய வேண்டும்.”
பெண்ணின் ஆவலைக் கேட்டு வளநாடுடையார் தமக்குள் சிரித்துக் கொண்டார்.
மறுநாள் காலை இளங்குமரன் தங்கள் இல்லத்துக்கு வந்தால் துணிவோடு அவனை வாயிலிலே எதிர்கொண்டு சென்று ‘நீங்கள் இந்த வீட்டுக்கெல்லாம் வந்து விருந்து உண்ணுவீர்களா? பட்டினப் பாக்கத்துச் செல்வக் குடும்பத்து நங்கையர் எவரேனும் பல்லக்கில் ஏற்றிக் கொண்டு பகட்டாக அழைத்துப் போனால் போவீர்கள். இந்த முல்லைக்கு மனத்தைத் தவிர வேறு செல்வம் கிடையாது ஐயா! அவள் இந்தச் செல்வத்தைத்தான் உங்களுக்குத் தரமுடியும். பல்லக்கும் பரிவாரமும் வைத்துப் பாங்காக அழைத்து விருந்தளிக்க இந்த ஏழை மறவர் குடும்பத்துப் பெண்ணுக்கு இயலாது. உடன் வந்தவளை மறந்து ஊர் சுற்றப் போன பின்பும் உங்களை என்னால் மறக்க முடியவில்லையே?’ என்று குத்தலாகப் பேச வேண்டுமென்று நினைத்துக் கொண்டு, அப்படி அவரிடம் இடுப்பில் கையூன்றி எதிர் நின்று தான் பேசுவது போன்ற காட்சியையும் கற்பனை செய்து பார்த்துக் கொண்டாள் முல்லை. அவ்விதமாகக் கற்பனை செய்வது வெப்பமும் தட்பமும் கலக்கும் அந்தப் பின்னிரவுப் போதில் மனத்துக்கும் உடம்புக்கும் சுகமான அநுபவமாக இருந்தது அவளுக்கு.
உணவுக் கூடத்திலிருந்து வெளியேறிய நகைவேழம்பர் ஓவியனையும் இழுத்துக் கொண்டு விரைவாக முன்னால் சென்றுவிட முயன்றபோது சுரமஞ்சரி அவரைத் தடுத்து நிறுத்திக் கேட்ட கேள்வி அவருடைய தோற்றத்தில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிற்று. அந்த அதிர்ச்சி நிலையை சுரமஞ்சரியும் வசந்தமாலையும் நன்றாக உற்றுக் கவனித்துக் கொண்டார்கள்.
அருகில் வந்து சுரமஞ்சரி அவருடைய பாதத்திலிருந்த செம்பஞ்சுக் குழம்பின் கறையைச் சுட்டிக் காட்டி அந்தக் கேள்வியைக் கேட்ட போது அவர் உடல் பாதாதிகேச பரியந்தம் ஒருதரம் குலுங்கி அதிர்ந்து ஓய்ந்தது. அப்பப்பா! அந்தச் சமயத்தில் அவர் முகம் அடைந்த விகாரமும், குரூரரும், பயமும் வேறெந்தச் சமயத்திலும் அடைந்திராதவையாயிருந்தன. அதைக் கவனித்துக் கொண்டும், கவனிக்காதவள் போன்ற நடிப்புடனே சுபாவமாகச் சிரித்துக் கொண்டே, “இதைத் தெரிந்து கொள்ளத்தான் கூப்பிட்டேன். வேறொன்றுமில்லை. இனி நீங்கள் போகலாம்” என்று கூறிவிட்டுத் தன் தோழியோடு திரும்பிச் சென்று விட்டாள் சுரமஞ்சரி. திரும்பிச் சென்றவள் நேராகத் தன்னுடைய அலங்கார மண்டபத்தை அடைந்தாள். அங்கே ஒரு பக்கத்தில் மறுநாள் அதிகாலையில் அவள் சூடிக் கொள்வதற்கான பூக்கள் வாடாமல் ஈரத்தோடு பதமாக வைக்கப்பட்டிருந்த பூக்குடலை இருந்தது. அதை எடுத்துப் பிரித்து வெண் தாழம்பூவிலிருந்து மிகத் தெளிவான உள்மடல் ஒன்றை உதிர்த்துத் தனியாக்கினாள். தாழம்பூவின் நறுமணம் மற்றெல்லாப் பூக்களின் மணத்தையும் விஞ்சிக் கொண்டு எழுந்து அலங்கார மண்டபத்தில் பரவியது. காம்பு மழுங்காமல் கூரியதாய் இருந்த பிச்சியரும்பு ஒன்றில் செம்பஞ்சுக் குழம்பைத் தேய்த்துக் கொண்டு வெள்ளியில் வார்த்துத் தீட்டினாற் போன்ற தாழை மடலில் முத்து முத்தாக எழுதத் தொடங்கினாள் சுரமஞ்சரி. எழுதுவதற்காகவும் எழுதப்படுகிறவருக்காகவும் அவளுடைய நெஞ்சுக்குள் மணந்து கொண்டிருந்த நினைவுகளைப் போலவே பிச்சியும், தாழையும், செம்பஞ்சுக் குழம்பும் கலந்து உருவான கையெழுத்துக்களும் கம்மென்று மணம் கிளர்ந்தன. அப்போது சுரமஞ்சரியின் நெஞ்சமே ஒரு பூக்குடலையாகத்தான் இருந்தது. நறுமண நினைவுகள் என்னும் தேன்சுமைப் பூக்கள் அவளது நெஞ்சு நிறையப் பூத்திருந்தன. மண்டபத்துப் பூக்குடலையிலிருந்து மலரும் மடலும் எடுத்து நெஞ்சுப் பூக்குடலையிலிருந்து நினைவுகளைத் தொடுத்து அவள் எழுதலானாள். பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த வசந்த மாலை தனது அறிந்து கொள்ளும் ஆவலை அடக்க முடியாமல், “என்னம்மா எழுதுகிறீர்கள்?” என்று கேட்டாள்.
“மடல் எழுதுகிறேன்.”
“மடல் எழுதுவது தெரிகிறது! ஆனால் யாருக்கு?”
“இதென்ன கேள்வி! உன்னைப் போல் எதையும் குறிப்பாக அறிந்து கொள்ளத் தெரியாத பெண் எனக்குத் தோழியாக வாய்த்திருக்கக் கூடாது வசந்தமாலை!” என்று சொல்லிச் சிரித்தாள் சுரமஞ்சரி. வசந்தமாலைக்குப் புரிந்தது. தலைவியின் குறிப்பு மட்டுமல்லாமல் குதூகலமும் சேர்த்துப் புரிந்தது. “நெஞ்சுளம் கொண்ட அன்பருக்கு” என்று சுரமஞ்சரி தன் மடலைத் தொடங்கியிருப்பதையும் வசந்தமாலை பார்த்தாள். மடல் தீட்டும் அந்த நிலையில் தன் தலைவியின் கையும் விரல்களும் குவிந்து குழைந்து நளினமாகத் தோன்றின தோழிக்கு. நிலவில் முளைத்த தளிர்கள் போல் அழகிய விரல்கள் அவை. நிலவிலிருந்து தளிர்ந்த கொழுந்து போன்ற முன் கை விரல்களில் சுடர் விரியும் மோதிரங்கள். அந்த மடலைத் தீட்டும் போது சுரமஞ்சரி மணப்பெண் போல் அழகு கொண்டு தோன்றினாள் வசந்தமாலைக்கு. அந்த மடலில் எழுதுவதற்காக அவளுள்ளத்தே எழும் இங்கிதமான நினைவுகளின் சாயல் முகத்திலும் தோன்றியதினால் வட்டப் பொற்பேழையில் வண்ணநிலாக் கதிர்களின் ஒளி படிந்தது போல் அவள் முகம் புதுமையழகு காட்டியது. கண்கள், பார்வை, இதழ்கள், சிரிப்பு, பளிங்குத் தரையில் தோகை விரித்துச் சாய்ந்த மயில்போல் அவள் சாய்ந்து அமர்ந்து மடல் தீட்டும் கோலம் எல்லாம் புதுமைதான்; எல்லாம் அழகுதான். வசந்தமாலை தன் தலைவியையே கவனித்துக் கொண்டிருந்தாள். ஒரு செயலை மனம் நெகிழ்ந்து விரும்பிச் செய்யும் போது அப்படிச் செய்வதனாலேயே மனிதர்களின் முகத்துக்குத் தனிமையானதொரு மலர்ச்சியும் அழகும் உண்டாகும். பருவ காலத்துப் பூவைப்போல் தோற்றமும் மணமும் செழித்துக் கிளரும் நிலை அது. அந்த வெண் தாழை மடலில் முத்து முத்தாய்ச் சித்திரம் போல் எழுத்துக்களை எழுதும் போது சுரமஞ்சரி அதற்கு முன்னில்லாததொரு தனி அழகுடன் காட்சியளித்தாள். இணையற்ற உற்சாகத்தை அவள் முகமும் கண்களும் காட்டின. தலைவியின் அந்தப் பேரழகு நிலையைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது வசந்தமாலைக்கு. கார்காலத்து முல்லைப் புதர்போல் தலைவியிடம் ஏதோ பூத்துக் குலுங்கி மணப்பதையும் அவள் புரிந்து கொண்டாள்.
கீழே குனிந்து எழுதிக் கொண்டிருந்த சுரமஞ்சரி எழுதுவதை நிறுத்திவிட்டுத் தலை நிமிர்ந்து, “வசந்தமாலை! நீ போய் நகைவேழம்பரோடு தங்கியிருக்கும் அந்த ஓவியனை அழைத்துக் கொண்டு வா. இந்த மடலை ‘அவரு’க்குக் கொடுத்தனுப்புவதற்கு அவன் தான் தகுதியான மனிதன்” என்றாள்.
“அது எப்படியம்மா முடியும்? உங்கள் தந்தையார்தான் ஓவியனை நகைவேழம்பருடைய பொறுப்பில் விட்டிருக்கிறாரே. அவரிடம் நீங்கள் எப்படி மடல் கொடுத்து அனுப்ப முடியும்? சற்று முன்புதான் நகை வேழம்பரை அலட்சியமாகப் பேசி அனுப்பியிருக்கிறீர்கள். உங்கள் மேல் அவருக்குச் சினம் மூண்டிருக்குமே? உங்கள் வார்த்தையை அவர் எப்படிக் கேட்பார்?”
“மடல் எழுதுகிறேன் என்றோ, மடலைக் கொடுத்து ஓவியனை வெளியே அனுப்பப் போகிறேன் என்றோ நகைவேழம்பரிடம் சொல்லாதே. ஓவியனை நான் அழைத்து வரச் சொன்னதாக மட்டும் சொல்லு, அவர் அனுப்ப மறுக்க மாட்டார். மறுத்தால் நானே நேரில் வருகிறேன்.”
“என்னவோ, அம்மா! நீங்கள் சொல்வதற்காகத்தான் போகிறேன். எனக்கு அவருடைய ஒற்றைக்கண் முகத்தைப் பார்க்கவே பயமாயிருக்கிறது” என்று சொல்லிவிட்டு ஓவியனை அழைத்து வருவதற்காக நகைவேழம்பர் இருந்த பகுதிக்குள் சென்றாள் வசந்தமாலை. நகைவேழம்பர் அந்த மாளிகையின் கீழ்ப்புறத்தில் தோட்டத்துக்குள் அமைந்திருந்த தனிப்பகுதி ஒன்றில் வசித்து வந்தார். தந்தையாருடைய கப்பல் வணிகத்தோடு தொடர்புடைய அலுவல்களைக் கவனிப்பதற்காக அந்தப் பகுதி அமைந்திருந்தது. அந்தப் பகுதியின் ஆட்சி அதிகாரங்கள் எல்லாம் நகைவேழம்பருடைய ஆதிக்கத்துக்கு மட்டுமே உட்பட்டவை.
தான் கூப்பிட்டனுப்பியதற்கு இணங்கி நகைவேழம்பர் ஓவியனை அனுப்புகிறாரா இல்லையா என்பதைத் தெரிந்து கொண்டு விடுவதற்காகவே சுரமஞ்சரி வசந்த மாலையை அனுப்பினாள். தான் சந்தேகப்படுவது போல் ஓவியன் கௌரவமான முறையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறானா என்பதையும் சுரமஞ்சரி இந்த அழைப்பின் மூலமாகத் தெரிந்து கொண்டுவிட எண்ணியிருந்தாள். தவிர, அந்த இரவு நேரத்தில் மருவூர்ப்பாக்கத்திலுள்ள நீலநாக மறவர் படைக்கலச் சாலைக்குப் போய் இளங்குமரனைச் சந்தித்துத் தனது மடலைக் கொடுப்பதற்கு ஓவியன் மணிமார்பன் தான் தகுதியான ஆள் என்று நினைத்தாள் அவள்.
அவள் இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போதே வசந்தமாலை திரும்பி வந்தாள்.
“அம்மா! ஓவியனைச் சிறிது நேரத்தில் அனுப்பி வைப்பதாக நகை வேழம்பர் ஒப்புக் கொண்டு விட்டார். ஆனால் இந்த மாளிகைக்கு வெளியே எங்கும் அவனை அனுப்பிவிடக் கூடாதென்று உங்களிடம் சொல்லி விடுமாறு என்னிடம் தனியாகக் கூறியனுப்பினார். ஓவியர் இப்போது வந்துவிடுவார்” என்று வசந்தமாலை வந்து கூறியதிலிருந்து சுரமஞ்சரிக்கு ஓர் உண்மை மிகத் தெளிவாகப் புரிந்தது. தந்தையாரும் நகைவேழம்பரும் ஓவியனை எதற்காகவோ மாளிகைக்குள்ளேயே பாதுகாக்க நினைக்கிறார்கள் என்பதுதான் அந்த உண்மை.
சிறிது நேரத்தில் ஓவியன் தயங்கித் தயங்கி நடந்து வந்தான். சுரமஞ்சரி, “வாருங்கள் ஓவியரே” என்று முகம் மலர வரவேற்றாள். ஆனால் அவன் அவளுடைய வரவேற்பையும் பொருட்படுத்தாமல் அணையை உடைத்துக் கொண்டு வரும் வெள்ளம் போல் சொற்களைக் குமுறலோடு வெளியிட்டான்:
“அம்மணீ! உங்களுக்குக் கோடி முறை வேண்டுமானால் வணக்கம் செலுத்துகிறேன். உலகத்தில் என்னென்ன நன்மைகள் உண்டோ அத்தனையும் கடவுள் உங்களுக்கு அருளட்டும். நூறு பொற்கழஞ்சுகளுக்கும் உங்கள் வார்த்தைகளுக்கும் ஆசைப்பட்டுத் தெரியாத்தனமாய் இந்த மாளிகையில் வந்து மாட்டிக் கொண்டு விட்டேன். இங்கே தோற்றத்தினால் தான் மனிதர்களாயிருக்கிறார்கள். மனத்தினால் மனிதர்களாயிருப்பவர்களைக் காண முடியவில்லை. நான் ஏழை. வயிறு வளர்க்கவும் கலை வளர்க்கவும் சேர்த்து ஒரே சமயத்தில் ஆசைப்படுகிறவன். இங்கே என் மனம் காரணமின்றிப் பயப்படுகிறது. தயவு கூர்ந்து என்னை விட்டு விடுங்கள்! என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றி செலுத்திக் கொண்டேயிருப்பேன்.”
சுரமஞ்சரியை எப்போது சந்திக்கப் போகிறோம் என்றே காத்துக் கொண்டிருந்தது போல மனம் விட்டுக் கதறினான் அந்த இளம் ஓவியன். நெஞ்சிலிருந்து குமுறிக் கொண்டு வந்தன அவன் சொற்கள். சூதுவாது, கள்ளங்கபடறியாத, இனி அறியவும் விரும்பாத அப்பாவி என்பது அவனுடைய பால் வடியும் முகத்திலேயே தெரிந்தது.
சுரமஞ்சரி அவனுக்கு ஆறுதலாகச் சொல்லலானாள்: “பயப்படாதீர்கள், ஓவியரே! உங்களுக்கு ஒரு கெடுதலும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.”
“கெடுதல் என்று தனியாக ஏதாவது வெளியிலிருந்து இங்கே வர வேண்டுமா, அம்மணீ! போதுமான கெடுதல்கள் இங்கேயே இருக்கின்றன. இந்த ஒற்றைக் கண்ணர் ஒருவர் போதுமே!”
கடைசியில் நெடுநேரம் பேசி ஓவியனை அமைதி கொள்ளச் செய்த பின் இளங்குமரனுக்குத் தான் எழுதிய மடலை அவனிடம் கொடுத்து யாரும் கண்டுவிடாமல் பரம இரகசியமாக அவனை அங்கிருந்து வெளியே அனுப்பினாள் சுரமஞ்சரி.
“நகைவேழம்பர் இவரை வெளியே அனுப்பலாகாதென்று நிபந்தனை சொல்லியிருந்தாரே, அம்மா! நீங்களாக இப்படிச் செய்து விட்டீர்களே!” என்று பதறிய தோழிக்கு, “நிபந்தனை இருக்கட்டும், அதை மீறியதற்காக என்னை அவர் என்ன செய்கிறார் என்று தான் பார்க்கலாமே!” என்று பரபரப்பில்லாமல் பதில் சொன்னாள் சுரமஞ்சரி.
சுரமஞ்சரியிடம் சென்ற ஓவியன் நெடுநேரமாகியும் திரும்பாததைக் கண்ட நகைவேழம்பருக்குச் சந்தேகம் மூண்டது. அவர் ஓவியன் திரும்பி வருவதை எதிர்பார்த்துத் தோட்டத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடைபோட்டுக் கொண்டிருந்தார். நாழிகைகள் ஒன்றன்பின் ஒன்றாய் வளர்ந்தன. அவருடைய கோபமும் வளர்ந்தது. சுரமஞ்சரியிடமே நேரில் போய்க் கேட்டுவிடலாம் என்று புறப்பட்ட அவர் எதிர்ப்புறமிருந்து வந்த அவள் தோட்டத்துப் புல்வெளியில் அமர்ந்தாள். நகைவேழம்பர் கோபத்தோடு அவளருகில் சென்று, “சுரமஞ்சரி தேவி, இது சிறிதும் நன்றாயில்லை. உணவுக்கூடத்திலிருந்து வெளியே வரும்போது எவனோ ஒரு நாடோடி ஓவியனையும் வைத்துக் கொண்டு என்னை அவமானப்படுத்திப் பேசினீர்கள். அதையும் பொருட்படுத்தாமல் உங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி அந்த ஓவியனை அனுப்பி வைத்தேன். நீங்கள் என் நிபந்தனையை மீறி அவனை எங்காவது வெளியே அனுப்பியிருக்கலாமோ என்று இப்போது எனக்குச் சந்தேகம் உண்டாகிறது. அப்படி அவனை வெளியே அனுப்பியிருந்தால் அது உங்கள் தந்தையாருக்கே பிடிக்காத காரியமாயிருக்கும். நீங்கள் தொடர்ந்து நெருப்புடன் விளையாடிக் கொண்டேயிருக்கிறீர்கள். அதன் விளைவு உங்களுக்கு நிச்சயமாக நல்ல முடிவைத் தராது. என்றாவது ஒருநாள் நெருப்பு சுடாமல் விடாது” என்று ஆத்திரத்தோடு கூறவும்,
“விளையாடுவது நானா? நீங்களா? ஐயா நகைவேழம்பரே! உங்களுக்கு ஒரு கண்ணாவது நன்றாகத் தெரியுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த நினைப்புக் கூடத் தப்புப் போலிருக்கிறது. இப்போது நீங்கள் சுரமஞ்சரியிடம் பேசுவதாக நினைத்துக் கொண்டு வானவல்லியிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்! ஒருவரிடம் பேச வேண்டியதை இன்னொருவரிடம் பேசுவது கூட நகைவேழம்பரின் திறமையோ?” என்று வானவல்லியிடமிருந்து சீற்றத்தோடு பதில் கிடைத்தது. அன்று இரண்டாம் முறையாக அதிர்ந்து போய் நின்றார் நகைவேழம்பர் என்னும் அந்தத் திறமையாளர்.
இளங்குமரன் சிந்தித்தான். நீலநாகமறவரின் அந்த வேண்டுகோளுக்குத் தான் எப்படி இணங்கினோம் என்பதை நினைத்துப் பார்த்தபோது அவனுக்கு மிகவும் வருத்தமாயிருந்தது. மறுத்துச் சொல்ல முடியாமல் தன்னை அந்த வேண்டுகோளுக்கு ஒப்புக் கொள்ளச் செய்த நீலநாகமறவரின் திறமையை வியந்தான் அவன். அவருடைய பேருருவம் நினைவுக்கு வந்தபோதே அவனுக்குப் பணிவும் அடக்கமும் உண்டாயிற்று.
‘இதனால் சிறிது காலத்துக்கு நீ இந்தப் படைக்கலச் சாலைக்குள்ளேயே எனது கண்காணிப்பில் இருக்க வேண்டும். தனியாக நகருக்குள் எங்கும் போக வேண்டாம்’ என்று அவர் கட்டளையிடுவது போல் வேண்டிக் கொண்டபோது தன்னால் அதை மறுத்துச் சொல்ல முடியாமற் போன காரணம் என்ன என்பது நீண்ட நேரச் சிந்தனைக்குப் பின்பே அவனுக்குப் புரிந்தது.
‘தூய்மையான மனமும் தோற்றமும் உடைய சில பெரியவர்கள் நமக்கு முன்னால் உட்கார்ந்து பேசுகிற போது நம்முடைய மனம் அகங்கார வெம்மை அழியப்பெற்று மழை பெய்த நிலம் போலக் குளிர்ந்து குழைந்து விடுகிறது. அப்போது நம்முடைய மனத்தில் பயங்களும், குழப்பங்களும், வாழ்க்கை ஆற்றாமைகளும் இருந்தால் கூட அவை நீங்கிவிடுகின்றன. அந்தத் தூய்மைக்கு நமது மனம் தோற்றுப் போகிறது! நீலநாகமறவரை எதிர்த்துப் பேச முடியாமல், தான் அடங்கி நின்றதும் இப்படித்தான் நேர்ந்திருக்க வேண்டும்’ என்று இளங்குமரன் உணர்ந்தான். தனக்கு ஏதோ பயங்கரத் துன்பங்கள் வரப்போவதாக நினைத்துக்கொண்டு மற்றவர்கள் அஞ்சி முன்னேற்பாடாகத் தன்னைப் பாதுகாப்பதை அவன் விரும்பவில்லை. ‘பிறருடைய இரக்கத்தையும் அனுதாபத்தையும் எதிர்பார்த்துத் தவித்து அவற்றுக்காகவே ஏங்கிக் கொண்டிருப்பவன் கோழை! பிறர் மேல் அனுதாபமும் இரக்கமும் செலுத்துவதற்குத் துணிந்து நிற்பவன் தான் ஆண்மையுள்ள வீரன். அநுதாபத்தையும் இரக்கத்தையும் தன்னிடமிருந்து பிறருக்கு வழங்குவதுதான் வீரம்! அவற்றைத் தான் பிறரிடமிருந்து வாங்கிக் கொள்வது வீரமன்று’ என்பதுபோல் ஒரு முரட்டுப் பிடிவாதம் சிறு வயதில் இருந்தே இளங்குமரனுக்குப் பொருந்தியிருந்தது.
அவனைத் தனியாக அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்த சமயத்தில் அவன் வாய் திறந்து கேட்காமலிருக்கும் போதே அவனது மனத்தில் இருந்த சில கேள்விகளைத் தாமாகவே புரிந்து கொண்டு கூறுகிறவர் போல் குறிப்பாகச் சில கருத்துக்களைக் கூறியிருந்தார் நீலநாக மறவர். அவற்றையெல்லாம் இப்போது இரண்டாம் முறையாக நினைவின் விளிம்புக்குக் கொண்டு வந்து எண்ணிப் பார்த்தான் இளங்குமரன். அவ்வாறு எண்ணிப் பார்த்த போது அவர் சொல்லியிருந்த ஒவ்வொரு கருத்தும் விடையறியாக் கேள்விகளாகத் தன் மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்த ஒவ்வொரு வினாவுக்கும் விடைபோல் அமைவதும் அவனுக்கு விளங்கிற்று.
“தம்பீ! மனத்தை வீணாகக் குழப்பிக் கொள்ளாதே. மனமும் நினைவுகளும் வளர்ந்து வளம் கொள்ளுகிற வயதில் கவலைகள் புகுந்து அழிக்க விடக் கூடாது. கவலைகளுக்கு அழிந்து போய் விடாமல் கவலைகளை அழித்து விட வேண்டிய வயது இது! கடலும், மலையும், வானமும், சூரியனும், சந்திரனும், தங்களுக்குத் தாயும் தந்தையும் யாரென்று தேடித் துயர் கொள்வதில்லை. பூமிக்குத் தாய் வானம்; வானத்துக்குத் தாய் பூமி. பிரகிருதியே ஒரு தாய்தான் தம்பீ! ஆகாயத்தை உடம்பாகவும், திசைகளைக் கைகளாகவும், சூரிய சந்திரர்களைக் கண்களாகவும், மலைகளை மார்பாகவும், தரையைத் திருவடிகளாகவும் கொண்ட விசுவ ரூபமே தாயின் வடிவம் தான். அதையே நீயும் தாயாக நினைத்து வணங்கி விடு” என்று அவர் சொல்லியதற்குப் பொருள் ‘தாயை நினைத்து வீணாகக் கலங்காதே’ என்று தனக்கு அறிவுறுத்துவதுதான் என்பதை அவன் தெளிந்தான்.
“நீ செய்வதற்கு இருக்கும் செயலைக் காட்டிலும் உன்னுடைய நோக்கம் பெரிதாக இருக்க வேண்டும். அதைத்தான் இலட்சியம் என்கிறோம். நினைப்பதையெல்லாம் பெரிதாக நினைப்பதற்குப் பழகிக் கொள். நினைவின் எல்லை விரிவாக இருக்கட்டும்” என்று இப்படிப் பல அறிவுரைகள் கூறிய பின்னே அந்த வேண்டுகோளையும் கூறியிருந்தார் நீலநாகமறவர். நினைக்கும் போதெல்லாம் புதிதாகவும் நினைப்புக்கேற்ற விதமாகவும் மணக்கும் மனோரஞ்சிதப் பூவைப் போல் அவருடைய அறிவுரையில் குறிப்பாகப் பலவற்றை அவன் புரிந்து கொண்டான். எண்ணிப் பார்த்தால், திட்டமிட்டுத் தேவையறிந்து வேண்டிய அறிவுரையை வேண்டிய அளவு வேண்டிய காலத்தில் அவர் தனக்குத் தந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது. மறுபடியும் அவருடைய முன்னேற்பாட்டை வியந்தான் அவன்.
கதக்கண்ணன் முதலிய நண்பர்களோடு அன்று மாலையில் ஆலமுற்றத்துச் சிவன் கோயிலுக்குப் போனான் இளங்குமரன். வானத்தை மறைத்து வீழ்துகளைக் காலூன்றிப் பசுமைப் பந்தல் வேய்ந்தது போல் பெரிய ஆலமரமும் அதனருகே கோவிலும் மாலை நேரத்தில் மிக அழகாயிருந்தன. மணற் பரப்பைக் கடந்து கடல் என்னும் நீலமேனி நீர்ச்செல்வி நித்திய யௌவனத்தோடு அலைக் கைகளை அசைத்துக் கொண்டிருந்தாள். மேலைத்திசை வானத்தில் குங்கும வெள்ளம் பாய்ந்திருந்தது. இளங்குமரனும் நண்பர்களும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் அமைதியாக நடந்து கொண்டிருந்தார்கள். ஆலமுற்றத்துக் கோவில் படைக்கலச் சாலையைச் சேர்ந்த பகுதியாய் அதற்கு மிகவும் அருகில் இருந்ததால் தான் நண்பர்களின் துணையோடு இளங்குமரனைப் போக விட்டிருந்தார் நீலநாகமறவர். கோவிலில் வழிபாட்டை முடித்துக் கொண்டு கடற்கரை மணற்பரப்பில் நண்பர்களுடன் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு இளங்குமரன் மீண்டும் படைக்கலச் சாலைக்குத் திரும்பிய போது அங்கே அவனை எதிர்பார்த்து ஓவியன் மணிமார்பன் வந்து காத்துக் கொண்டிருந்தான். தான் அப்போது நீலநாக மறவரின் படைக்கலச் சாலையில் வந்து தங்கியிருப்பதை அந்த ஓவியன் எப்படித் தெரிந்து கொண்டான் என்பது இளங்குமரனுக்கு ஆச்சரியமாயிருந்தது.
“நீ மறுபடியும் என்னைத் தேடிக் கொண்டு வந்திருப்பதைப் பார்த்தால் இன்னும் யாராவது என்னுடைய ஓவியத்தை வரைந்து கொண்டு வரச் சொல்லி உன்னை இங்கே அனுப்பியிருக்கிறார்களோ என்று சந்தேகமாயிருக்கிறது, அப்பனே! என்ன காரியமாக இப்போது என்னிடம் வந்தாய்?” என்று இளங்குமரன் அவனை விசாரித்தான்.
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, ஐயா! ஒருமுறை உங்கள் ஓவியத்தை வரைந்து கொடுத்துவிட்டு நான் படுகிறபாடு போதும். ஏழேழு பிறவிக்கும் இப்படி அநுபவங்கள் இனிமேல் எனக்கு ஏற்படவே வேண்டாம்.”
விளையாட்டாகப் பேசுவது போல் சிரித்துப் பேசத் தொடங்கியிருந்த இளங்குமரன், ஓவியன் கூறிய மறுமொழியில் வேதனையும் துயரமும் இருந்ததைக் கேட்டுத் திகைத்தான். ஓவியன் அச்சம் கொள்ளும்படியான நிகழ்ச்சிகள் எவையேனும் நிகழ்ந்திருக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. அவன் ஓவியனைக் கேட்டான்:
“பதற்றப்படாமல் நிதானமாகச் சொல், மணிமார்பா! என்னுடைய ஓவியத்தை வரைந்து கொடுத்ததனால் இப்படி என்னிடமே வந்து அலுத்துக் கொள்கிறாற் போல் உனக்கு என்ன துன்பங்கள் நேர்ந்து விட்டன?”
இதற்கு மணிமார்பன் மறுமொழி கூறவில்லை. இளங்குமரனைச் சூழ்ந்து நிற்கும் நண்பர்களைப் பார்த்துத் தயங்கினான். அந்தக் குறிப்பு இளங்குமரனுக்குப் புரிந்தது. ஓவியன் தன்னிடம் தனியாகப் பேசுவதற்கு விரும்புகிறான் என்று உணர்ந்தவனாக அவனை மட்டும் தனியே அழைத்துக் கொண்டு படைக்கலச் சாலையின் வேறு பகுதிக்குச் சென்றான் இளங்குமரன்.
“பிறருக்காக நான் துன்பப்படும்படி நேர்ந்தால் அதைப் பொறுத்துக் கொள்வேன் மணிமார்பா! ஆனால் என்னால் பிறர் துன்பப்பட நேருவதை நான் ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது. விவரமாக நடந்ததைச் சொல். நான் வெளியேறி வந்த பின் பட்டினப்பாக்கத்தில் அந்த மாளிகையில் என்ன நடந்தது? உனக்கு அந்தப் பெண் தருவதாக ஒப்புக் கொண்டிருந்த நூறு பொற்கழஞ்சுகளைத் தந்தாளா இல்லையா?”
“அதையெல்லாம் அப்புறம் சொல்கிறேன். முதலில் இந்த மடலை வாங்கிக் கொள்ளுங்கள். இதைப் படித்து விட்டுப் பின்பு பேசலாம்” என்று சுரமஞ்சரியின் மடலை எடுத்து நீட்டினான் மணிமார்பன். அவர்கள் நின்று பேசிக் கொண்டிருந்த பகுதியெல்லாம் தன் மணத்தைப் பரப்பியது அந்த நறுமண மடல்.
“ஆயிரங் காலம் பழகி அன்பு கொண்டவளைப் போல் எனக்கு மடல் எழுத இவள் எப்படி உரிமை பெற்றாள்?” என்று அருகிலிருந்த தீபத்தில் மடலைப் படித்துவிட்டுக் கோபத்தோடு கேட்டான் இளங்குமரன். அதைக் கேட்டு மணிமார்பன் மெல்லச் சிரித்தான்.
“எதற்காகச் சிரிக்கிறாய்? சிரிப்பதற்கு இதில் என்ன இருக்கிறது?”
“ஒன்றுமில்லை! ஆனால் சற்றுமுன் நீங்கள் கூறியதை மறுபடியும் நினைத்துப் பார்த்தால் எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. உலகத்திலேயே கட்டுப்பாட்டுக்கும் கட்டளைக்கும் அடங்காமல் தன்னிச்சையாகப் பிறந்து வளரும் உணர்வு அன்பு ஒன்றுதான். அதற்குக் கூட உரிமை தர மறுக்கிறீர்களே நீங்கள்?”
“மறுக்கவில்லை மணிமார்பா! இரண்டு நாள் சந்தித்துப் பேசி விட்டோம் என்ற செருக்கில், ‘நெஞ்சுகளம் கொண்ட அன்பருக்கு, அநேக வணக்கங்களுடன் அடியாள் சுரமஞ்சரி எழுதும் மடல். நான் உங்களை மிக விரைவில் சந்திக்க விரும்புகிறேன். கூடுமானால் உடனே சந்திக்க விரும்புகிறேன். இந்தச் சந்திப்பில் என் நலனை விட உங்கள் நலன் தான் அதிகம். உங்களிடம் சில செய்திகளை மனம் விட்டுப் பேசித் தெரிந்து கொள்ள வேண்டும். எங்கே எப்போது நாம் சந்திக்கலாமென்று இந்த மடல் கொண்டு வரும் ஓவியரிடம் அருள் கூர்ந்து சொல்லியனுப்புங்கள்’ என்று எழுதியிருக்கிறாளே அப்பனே! இவள் கூப்பிட்ட நேரத்துக்கு கூப்பிட்ட இடத்திலெல்லாம் வந்து சந்திக்க இளங்குமரன் இவளுடைய ஏவலாளனில்லையே!” என்று சொல்லிக்கொண்டே மணம் நிறைந்த அந்த வெண் தாழை மடலைக் கசக்கி எறியப் போனான் இளங்குமரன். அப்போது அவன் அப்படிச் செய்து விடாமல் ஓவியன் அவனுடைய கைகளைப் பற்றிக் கொண்டு விட்டான்.
“பூக்களைக் கசக்கி எறிவது மங்கலமான செயல் அல்ல, ஐயா! மென்மையான மனம் படைத்தவர்கள் அதை விரும்ப மாட்டார்கள்.”
“எனக்கு மென்மையான மனம் இல்லையென்றே வைத்துக் கொள்! அதற்காக நான் வருத்தப்பட மாட்டேன். இந்தா, இதை அவளிடமே திருப்பிக் கொண்டு போய்க் கொடு” என்று தானே கசக்கி எறிவதற்கிருந்த அந்த மடலை மணிமார்பனுடைய கைகளில் திணித்தான் இளங்குமரன். மணிமார்பனின் நிலை தவிப்புக்குரியதாகி விட்டது. என்ன செய்தாலும், எவ்வளவு தெளிவாக எடுத்துச் சொன்னாலும் இளங்குமரனின் மனத்தை நெகிழச் செய்வதற்கு இயலாதென்று தோன்றியது ஓவியனுக்கு. அதைப்பற்றி மறுபேச்சுப் பேசாமல் அவன் திருப்பிக் கொடுத்த மடலை வாங்கிக் கொண்டு பேச்சை வேறு திசையில் திருப்பினான் மணிமார்பன். இளங்குமரன் பட்டினப்பாக்கத்து மாளிகையிலிருந்து வெளியேறிய பின் தனக்கு அங்கு ஏற்பட்ட அச்சமூட்டும் அநுபவங்களை மணிமார்பன் அவனுக்கு விரிவாகச் சொன்னான். தன்னை அந்த மாளிகையிலேயே ஓவியனாக நியமித்திருப்பதையும் சொன்னான். சுரமஞ்சரியின் தந்தையும், நகைவேழம்பர் என்னும் ஒற்றைக்கண் மனிதரும் பல வகையிலும் சந்தேகத்துக்கும் பயப்படுவதற்கும் உரியவர்களாயிருந்ததையும், அவர்கள் இருவரும் இளங்குமரன் மேல் என்ன காரணத்துக்காகவோ கவனம் செலுத்திக் கொண்டிருப்பதையும் விவரித்துக் கூறிவிட்டான் மணிமார்பன்.
இவற்றையெல்லாம் கேட்ட பின்னர் இளங்குமரனின் மனத்தில் மேலும் சந்தேகங்கள் உண்டாயின. அந்த மாளிகையிலிருந்து தான் வெளியேறிய போது அதே ஒற்றைக் கண் மனிதர் தன்னைப் பின் தொடர்ந்து வந்ததையும் அவன் நினைவு கூர்ந்தான். ஒற்றைக் கண்ணரைப் போலவே சுரமஞ்சரியின் தோழி வசந்தமாலையும் தன்னைப் பின் தொடர்ந்து வந்ததனால் தான் நீலநாக மறவரின் படைக்கலச் சாலையில் தான் தங்கியிருப்பது அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதையும் இப்போது இளங்குமரனால் அனுமானம் செய்ய முடிந்தது. பட்டினப்பாக்கத்து எட்டிப் பட்டம் பெற்ற பெருநிதிச் செல்வரும், அவரிடம் இருக்கும் ஒற்றைக்கண் மனிதரும் எதற்காகவோ தன்னைப் பிடித்து அழிக்கக் கண்ணி விரிக்கிறார்கள் என்று தோன்றியது அவனுக்கு. ‘ஒருவேளை அவர்கள் விரிக்கும் அந்த வலையில் தன்னைச் சிக்க வைப்பதற்கு இந்தப் பெண் சுரமஞ்சரியும் உடந்தையாயிருக்கலாமோ?’ என்றும் சந்தேகமுண்டாயிற்று இளங்குமரனுக்கு. சுரமஞ்சரியைப் பற்றிய தன்னுடைய சந்தேகத்தை மணிமார்பனிடம் வெளியிட்டு, ‘அப்படியும் இருக்கலாமோ?’ என்று வினவினான் இளங்குமரன். ஆனால் மணிமார்பன் அதை மிகவும் வன்மையாக மறுத்துச் சொல்லிவிட்டான்.
“ஒரு போதும் அப்படி இருக்காது ஐயா! அந்தப் பெண் உங்கள் மேல் மெய்யாகவே அன்பு செலுத்துகிறாள். தன் தந்தையாரும் நகைவேழம்பரும் உங்களைப் பற்றி அப்படி நடந்து கொள்வது அவளுக்கே பிடிக்கவில்லை. அந்தப் பெண் நிச்சயம் உங்களுக்குத் துரோகம் செய்யமாட்டாள். எப்போதாவது அந்த ஏழடுக்கு மாளிகையிலிருந்து உங்களுக்குப் பேராபத்து வருவதாயிருந்தால் அப்போது உங்களைக் காப்பாற்றுவதற்கு அவள் தான் முன் நிற்பாள். பெண்களின் உள்ளம் அன்பு மயமானது. தங்களால் விரும்பப்படுகிறவர்களுக்கு வஞ்சகமிழைக்க அன்பு இடந்தராது, ஐயா!”
“அப்படி எல்லாப் பெண்களையும் நம்பி விட முடியாது, அப்பனே! பெண்களின் வஞ்சகத்தால் உலகத்தில் பிறந்த மகா காவியங்கள் பல.”
“ஆனால் பெண்களின் அன்பினால் பிறந்த மகா காவியங்கள் அவற்றைக் காட்டிலும் பன்மடங்கு அதிகம் ஐயா!”
“அப்படி மகாகாவியங்களைத் தோற்றுவிக்கிற அன்பை அந்த ஏழடுக்கு மாளிகையிலிருந்து நாம் எதிர்பார்க்க முடியாது, மணிமார்பா!”
“மாளிகை என்ன செய்யும், ஐயா? மனம் கொண்டதுதான் மாளிகை. அன்பின் சக்தி அளப்பரியது. அதற்கு முன் சாதாரண உணர்வுகள் தோற்று விடுகின்றன. ஒரு காலத்தில் இதே பெண்ணின் சிரிப்புக்கு நீங்கள் தோற்றுப் போனால் கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன்.”
ஓவியன் மேலே பேசுவதற்குள் பளீரென்று அவன் கன்னத்தில் ஒரு பேயறை விழுந்தது.
“நாவை அடக்கிப் பேசு, அப்பனே! இப்படி இன்னொருவர் பேசியிருந்தால் பல்லை உதிர்த்துக் கையில் கொடுத்திருப்பேன். போய்விடு... இனி ஒரு கணமும் இங்கே நிற்காதே” என்று கொதிப்போடு கூக்குரலிட்டுக் கொண்டே அந்தக் கணமே மணிமார்பனைப் பிடரியில் கைவைத்துத் தள்ளி வாயில் வரையில் சென்று துரத்தி விட்டு வந்தான் இளங்குமரன்.
‘பிறரால் எனக்குத் துன்பம் வந்தாலும் பொறுப்பேன். பிறர் என்னால் துன்புற விடமாட்டேன்’ என்று கூறிய அதே மனிதனின் கைகள்தாம் தன்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளின என்பதை ஓவியனால் நம்பவே முடியவில்லை. இளங்குமரன் இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு நடந்து கொள்வான் என்று கனவிலும் மணிமார்பன் எதிர்பார்க்கவில்லை.
கசக்கித் திருப்பியளிக்கப்பட்ட தாழை மடலைப் போலவே அவனும் மன வேதனையுடன் கசங்கிய நினைவுகளோடு அந்த அகால நேரத்திலேயே தனியாகப் பட்டினப்பாக்கத்துக்குத் திரும்பினான்.
தான் சுரமஞ்சரியின் மடலைக் கொடுப்பதற்காக மாளிகையிலிருந்து வெளியேறி மருவூர்ப்பாக்கத்துக்கு இளங்குமரனைக் காணச் சென்று திரும்புவது ஒருவருக்கும் தெரியாமல் இருக்க வேண்டுமென்று நினைத்திருந்தான் ஓவியன். ஆனால் அதுவும் அவன் நினைத்தபடி நடக்கவில்லை. நினைத்திருந்ததற்கு நேர் மாறாகவே ஒரு விபரீதம் நடந்தது.
பயந்து கொண்டே திரும்பி வந்த ஓவியன் பிரதான வாயிலில் நுழையும் போது மாளிகை அமைதியாயிருந்தது. சுரமஞ்சரி முன்னேற்பாடாகச் சொல்லி வைத்திருந்ததனாலோ என்னவோ வாயிற் காவலர்கள் எவரும் அவனைத் தடுக்கவில்லை. அவன் திரும்பி வருவதை எதிர்பார்த்துக் காத்திருப்பதற்கு அடையாளமாகச் சுரமஞ்சரியின் மாடத்தில் மட்டும் தீபங்களின் ஒளி தெரிந்தது.
‘நல்ல செய்தியாயிருந்தால் உடனே சுரமஞ்சரியின் மாடத்துக்கு ஓடிப்போய்த் தெரிவிக்கலாம். நீங்கள் கொடுத்தனுப்பிய மடலை அந்த முரட்டு இளைஞர் வாங்கிப் படித்துவிட்டு என்னிடமே திருப்பிக் கசக்கி எறிந்துவிட்டார் என்று தயங்காமல் அவளிடம் போய் எப்படிச் சொல்வது? அவ்வளவு நேரமாக இனிய கனவுகளோடு காத்திருக்கும் அந்தப் பெண் மனம் இதைக் கேட்டால் என்ன பாடுபடும்!’
மென்மையான மனம் படைத்த அந்த ஓவியன் தயங்கினான். ஒளி நிறைந்து தோன்றும் சுரமஞ்சரியின் மாடத்திலும் மனத்திலும் இருள் சேர்க்கும் சொற்களைத் தான் போய்ச் சொல்லலாமா, வேண்டாமா என்று தவித்தான். ‘கலைஞர்களுக்கு அவர்களிடம் அமைந்திருக்கும் மென்மையான கலைத்திறமையைப் போலவே, பிறர் கூசாமற் செய்யும் முரட்டுக் காரியங்களைத் தாங்கள் நினைக்கவும் கூசுகிற மென்மையான மனத்தையும் கடவுள் கொடுத்துத் தொலைத்திருக்கிறாரே’ என்று வருந்தினான் அவன்.
தன்னைப் போன்ற கலைஞர்களுக்கு இந்த மென்மைதான் பெரிய பலவீனமென்று தோன்றியது அவனுக்கு. இந்த ஒரு பலவீனம் மட்டும் இல்லாவிட்டால் தயக்கமின்றிச் சுரமஞ்சரியின் மாடத்துக்கு ஏறிச் சென்று, ‘உங்கள் மடலை அவர் கசக்கி எறிந்துவிட்டார் அம்மணீ’ என்று உடனே சொல்லி விடலாமே என்னும் இத்தகைய தயக்கத்தோடு சுரமஞ்சரியின் மாடத்துக்குச் செல்வதற்கான படிகளின் கீழே நின்றான் மணிமார்பன்.
மாளிகையே அமைதியில் ஆழ்ந்திருந்த அந்த அகால வேளையில் தான் மட்டும் தனியாய் அங்கே நிற்கிற சூழ்நிலையே ஓவியனுக்கு பயமூட்டுவதாயிருந்தது, மூச்சுவிட்டாலும் இரைந்து கேட்கக் கூடிய அந்த அமைதியில் ஓசையெழாமல் படிகளில் ஏறி மேலே மாடத்துக்குச் செல்வது எவ்வாறு என்று அவனுக்குப் புரியவில்லை.
கீழிருந்து மேலே போகும் படிகளில் முதல் பத்துப் பன்னிரண்டு படிகள் வரை ஒரே இருட்டாயிருந்தது. அப்பாலுள்ள படிகளின் மேல் மாடத்து விளக்கொளி இலேசாக மங்கிப் பரவியிருந்தது. தயங்கியபடியே சிறிது நேரம் நின்ற பின், ‘விளைவு என்ன ஆனாலும் சரி! நான் மேலே சென்று சுரமஞ்சரியைப் பார்த்து இளங்குமரன் மடலைத் திருப்பியளித்து அவமானப்படுத்திய விவரத்தைச் சொல்லிவிட வேண்டியதுதான்’ என்று உறுதி செய்து கொண்டு படிகளில் ஏறினான் மணிமார்பன்.
முதற்படியிலிருந்து இரண்டாவது படிக்கு அவன் ஏறிய போது படியோரத்து இருளிலிருந்து யாரோ அவன் வாயை இறுகப் பொத்தி மோதித் தரையில் தள்ளுவது போல் கீழ்ப்புறம் இறக்கி இழுத்துக் கொண்டு வரவே, அவன் உடலில் இரத்தம் உறைந்து உணர்வு மரத்துப் போகத் தொடங்கியது. அவன் திமிறிக் கொண்டு ஓடவோ கூச்சலிடவோ இடங்கொடுக்காத முரட்டுக் கைகளாக இருந்தன அவை.
சிறிது தொலைவு கொலைத் தழும்பேறினவை போன்ற அந்தக் கைகளின் பிடியில் இறுகிக் கொண்டே வந்தபின் சற்றே ஒளி பரவியிருந்த ஓரிடத்தில் கண்களை அகலத் திறந்து பார்த்த போது, நகைவேழம்பரின் முகம், “கூச்சலிட்டாயானால் அநாவசியமாக இப்போது இந்த இடத்தில் ஒரு கொலை விழ நேரிடும்” என்று அவன் காதருகே குனிந்து வாய் திறந்து கூறியது. வாயைப் பொத்தியிருந்த கையை எடுத்துவிட்டு இடுப்பிலிருந்து குறுவாள் ஒன்றை எடுத்து அவன் கழுத்தின் மிக அருகில் சொருகிவிடப் போவது போல் பிடித்துக் காட்டினார் அவர். பகலிலேயே பூத பயங்கரம் காட்டும் அந்த முகம் இப்போது இரவில் இன்னும் குரூரமாகத் தோற்றமளித்தது. மணிமார்பனுக்கு சப்தநாடிகளும் ஒடுங்கி விட்டன. ‘வெளியேறிச் சென்று விடுவதற்கு ஓர் அற்புதமான வாய்ப்புக் கிடைத்திருந்தும் பயன்படுத்திக் கொண்டு தப்பிப் போகாமல் மறுபடியும் திரும்பி இந்த மாளிகைக்கு ஏன் வந்து தொலைத்தோம்?’ என்று வருந்தினான் அவன். நகைவேழம்பருடைய பிடி இழுத்த இழுப்புக்கு மீறாமல் அவன் சவம் போல் இழுபட்டுக் கொண்டு போனான்.
மாளிகைத் தோட்டத்தின் அடர்த்தியான ஒரு பகுதிக்குச் சென்று அடித்துப் போடுவது போல பிடியை உதறி அவனைக் கீழே தள்ளினார் அவர். ஓவியன் நடுங்கினபடியே தட்டுத் தடுமாறி மெல்ல எழுந்து நின்றான்.
“எங்கே போயிருந்தாய் இவ்வளவு நேரம்? உண்மையை மறைக்காமல் அப்படியே சொல்.”
“சொல்லாவிட்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டான் ஓவியன்.
“புதிதாக ஒன்றும் செய்துவிட மாட்டேன். இதோ இந்த இரண்டு கைகளின் பிடியில் இவற்றுக்கு உரியவனை இதுவரை எதிர்த்திருக்கிறவர்கள் எத்தனை பேரோ அத்தனை பேருடைய உயிர்களும் எப்படித் துடிதுடித்துச் செத்திருக்கின்றன என்பது உனக்குத் தெரியாது. நீ விரும்பினால் அந்த அனுபவத்தை உனக்கும் அளிப்பதற்கு எனக்குச் சம்மதம்தான்!”
“கொலைகாரனுக்குத் தற்புகழ்ச்சி ஒரு கேடா?”
“போர்க்களங்களில் நிறைய கொலைகள் செய்தவர்களை வீரர் என்றுதானே சொல்கிறார்கள்? அப்படியானால் இன்று உன்னையும் சேர்த்து நான்...”
“போதும் உங்கள் கொலைப் பெருமை! தெரிந்துதானே கடவுள் உங்கள் முகத்தின் இலட்சணத்தைக் கொலை செய்து வைத்திருக்கிறார்!”
“சந்தேகமென்ன? என் கைகளில் அகப்பட்டிருந்தால் அந்தக் கடவுளையும்...” என்று குரூரமாகச் சிரித்தார் நகைவேழம்பர். அந்த விகார மனிதர் நாத்திகத் தழும்பேறிய மனத்தையுடையவர் என்று தோன்றியது மணிமார்பனுக்கு. எதையும் செய்யக் கூசாத கொடூர சித்தமுடையவர் என்பது அவரைப் பார்த்தாலே தெரிந்தது.
“மறுபடியும் கேட்கிறேன். எங்கே போயிருந்தாய்? யாரைக் கேட்டுப் போயிருந்தாய்?”
“பெரிதாகப் பயமுறுத்துகிறீர்களே! என்னை அடிமையாக விலைக்கு வாங்கியிருக்கிறீர்களா, என்ன? எல்லாம் கேட்க வேண்டியவர்களைக் கேட்டுக் கொண்டு, போக வேண்டிய இடத்துக்குத்தான் போயிருந்தேன். என்னைப் பாதுகாக்கச் சொல்லித்தான் உங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறார்கள்.”
“யார் அப்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்களோ?”
“வேறு யார்? இந்த மாளிகைக்கு உரியவர்தான்!”
“அடடா! அதைச் சொல்கிறாயா? உனக்கு இந்த மாளிகைக்கு உரியவரைத் தெரியாது. அவர் கட்டளையிட்டிருக்கும் சொற்களை மட்டும் தான் உனக்குத் தெரியும். எனக்கு அந்தச் சொற்களின் பொருளும் தெரியும், அவரையும் தெரியும். இந்த மாளிகையில் சொற்களுக்காக அர்த்தம் கிடையாது. அர்த்தத்துக்காகத்தான் சொற்கள் உண்டு.”
“இங்கேதான் எல்லாம் தலைகீழாக இருக்கிறதே...?”
“இன்னும் சிறிது நேரத்தில் நீ என் கைகளினால் துடிதுடித்துச் சாகப்போவது உள்பட! ஏனென்றால் இங்கே தலைகீழாகக் கட்டப்பட்ட பின்புதான் கொலையைக் கூடச் செய்வது வழக்கம். சந்தேகமாயிருந்தால் என்னோடு வா. உனக்குக் காட்டுகிறேன்” என்று மறுபடியும் அவனை இறுகப் பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தார் அவர்.
ஒரு கையில் ஓவியனையும், இன்னொரு கையில் தீப்பந்தமொன்றையும் பிடித்துக் கொண்டு அந்த மாளிகையின் கீழே பாதாள அறையாக அமைக்கப்பட்டிருந்த பொதியறைக்குச் செல்லும் சுரங்க வழிப்படிகளில் இறங்கினார் நகைவேழம்பர். அந்தப் பாதாள அறையில் முடை நாற்றம் குடலைப் பிடுங்கியது. கொடிய வனவிலங்குகளான புலி சிங்கங்கள் இருக்கும் பகுதியில் அப்படி நாற்றம் வருவதுண்டு. கீழே பொதியறைக்குள் இறங்கிப் பார்த்தபோது மெய்யாகவே அவ்விடத்தில் பக்கத்துக்கு ஒன்றாக புலிகள் அடைக்கப்பெற்ற இரும்புக் கூண்டுகள் இருந்தன. கொள்ளி போல் மின்னும் செந்தழற் கண்களுடன் செவ்வரிக் கோலங் காட்டும் வாட்டசாட்டமான வேங்கைப் புலிகள் இரண்டு கூண்டிலும் பசியோடு உலாவிக் கொண்டிருந்தன. அந்த இருளில் அவை பயங்கரமாய்த் தோன்றின.
“பார்த்தாயா?” என்றார் நகைவேழம்பர். ஓவியனுக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டு விட்டது. பேச வரவில்லை. தீப்பந்தத்தைத் தூக்கிக் காட்டிக் கொண்டே கூறினார் அவர்: “அதோ இரண்டு புலிக்கூண்டுக்கும் நடுவே மேல்விட்டச் சுவரில் ஒரு பெரிய இரும்பு வளையம் தொங்குகிறது பார்த்தாயா? அதில் தண்டனைக்குரிய மனிதனைக் கயிற்றில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு மேலே போய் நின்று கொண்டு இரண்டு புலிக் கூண்டுகளின் கதவிலும் இணைக்கப்பட்டிருக்கும் இரும்புச் சங்கிலியை இழுத்துக் கதவுகளைத் திறந்து விட்டுவிடுவோம். பின்பு புலிகளுக்கு விருந்து கொண்டாட்டம் தான். அதோ பார், சுற்றிலும் எத்தனையோ மனிதர்கள் இங்கு அழிந்திருக்கும் சுவடுகள் தெரிகின்றன” என்று தரையில் சுற்றிலும் சிதறிக் கிடந்த எலும்புகளையும் மண்டை ஓடுகளையும் காண்பித்தார் அந்தக் கொடிய மனிதர். மணிமார்பனுக்கு எலும்புக் குருத்துக்களில் நெருப்புக் குழம்பு ஊற்றினாற் போல் உடம்பெங்கும் பயம் சிலிர்த்தது. “உனக்குச் சந்தேகமாயிருந்தால் இதோ பார்! ஆட்களை எப்படித் தலைகீழாய்த் தொங்கவிடுவதென்று காண்பிக்கிறேன் என்று சொல்லித் தீப்பந்தத்தை அவன் கையில் கொடுத்து விட்டுக் கீழே இறங்கி ஆடையை வரிந்து கட்டிக்கொண்டு மேல் உள்ள இரும்பு வளையத்தில் பாதங்களை நுழைத்துக் கோத்தபடி இரண்டு கணம் தாமே தலைகீழாகத் தொங்கிக் காண்பித்தார் நகைவேழம்பர். அப்போது நரவாடை கண்ட அந்தப் புலிகள் உறுமியதையும் வாலைச் சுழற்றி அடித்துக் கொண்டு கூண்டிலிருந்து வெளியே பாய முயன்றதையும் பார்த்த போது ஓவியனுக்கு குடல் குலுங்கி நடுங்கியது.
ஒரே ஒரு விநாடி அந்த மென்மையான கலை உள்ளத்திலும் கொலை வெறி கன்றிய ஆசை ஒன்று உண்டாயிற்று. ‘அப்படியே தீப்பந்தத்தோடு மேலே ஓடிப்போய்ப் புலிக்கூண்டுக் கதவுகளை இழுக்கும் சங்கிலியைப் பிடித்திழுத்து நகைவேழம்பரைப் பழி வாங்கிவிட்டால் என்ன?’ என்று நினைத்தான் ஓவியன்.
பாதாள அறையில் கூண்டினுள் இருந்த புலிகள் பயங்கரமாக உறுமின. நகைவேழம்பர் வளையத்தில் பாதங்களை நுழைத்துத் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தார். ஓவியன் தன் கருத்தை நிறைவேற்றிக் கொள்வதற்குச் சூழ்நிலையும் நேரமும் பொருத்தமாகவேயிருந்தன. கள்ளிச் செடியைப் பிடுங்கி எறியலாம் என்று கைகளால் தீண்டினாலும் அதன் நச்சுப்பால் கைகளில் படுவது போல் கெட்டவர்களோடு பழக நேரிடும் போதே கெட்ட காரியங்களைச் செய்ய விருப்பமில்லையாயினும் அவற்றைச் செய்வதற்குரிய வழிகள் மனத்தில் நெருங்கித் தோன்றுகின்றன. அப்பாவியான ஓவியன் மணிமார்பனுக்கும் நகைவேழம்பர் போன்ற கொடுமையே உருவான ஒருவர் அருகில் இருந்ததனாலோ என்னவோ தானும் கொடுமையாக ஏதாவது செய்து பார்க்கலாமா என்ற நினைப்பு உண்டாயிற்று.
ஆனால் அவன் இப்படி நினைத்துக் கொண்டிருந்த போதே, நகைவேழம்பர் வளையத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு கீழே இறங்கி வந்துவிட்டார். அவர் இறங்கி அருகில் வந்து அவன் கையிலிருந்த தீப்பந்தத்தைத் தாங்கிக் கொண்டதும், அவனைக் கேட்ட முதல் கேள்வியே தூக்கி வாரிப் போடச் செய்தது.
“சற்று முன் நான் வளையத்தில் தொங்கிக் கொண்டிருந்த போது மேலே ஓடிப்போய்ப் புலிக் கூண்டுகளின் கதவைத் திறந்து விடலாமென்று நினைத்தாய் அல்லவா?”
“அப்படி ஒரு போதும் நான் நினைக்கவில்லையே ஐயா!”
“புளுகாதே! நீ நினைத்தாய். எனக்குத் தெரியும். இன்னும் சிறிது நேரம் நான் வளையத்தில் தொங்கியிருந்தால் நீ நினைத்ததைச் செய்யும் துணிவு கூட உனக்கு உண்டாகியிருக்கும்.”
“இல்லவே இல்லை...” என்று சிரித்து மழுப்ப முயன்றான் ஓவியன். நகைவேழம்பர் ஒற்றை விழி அகன்று விரியக் குரூரமாகச் சிரித்தார்.
“நீ என்னை ஏமாற்ற முடியாது தம்பி. என் போன்றவர்களுக்குப் பிறருடைய மனத்தில் என்னென்ன நல்லெண்ணங்கள் தோன்றுகின்றன என்பதை அநுமானம் செய்ய முடியாவிட்டாலும் என்னென்ன கெட்ட எண்ணங்கள் தோன்ற இயலும் என்பதை அநுமானம் செய்ய முடியும். நீ சோழ நாட்டுத் தண்ணீரை மட்டும் தான் குடித்திருக்கிறாய் தம்பீ! ஆனால் நான் எத்தனை எத்தனையோ தேசங்களின் தண்ணீரைக் குடித்திருக்கிறேன். நீ வண்ணங்களில் உருவாகும் அழகான சித்திரங்களோடு மட்டுமே பழகியிருக்கிறாய்; நானோ அழகும், அசிங்கமும், நல்லதும், கெட்டதும், சூழ்ச்சியும், சூதும் நிறைந்த எண்ணற்ற மனிதப் பயல்களோடு பழகியிருக்கிறேன். என்னைப் போல் பலருடைய வெறுப்புக்கு ஆளாகிய ஒருவன் இப்படிப் புலிக் கூண்டுகளின் இடையே உயிரையும் மரணத்தையும் அருகருகே வைத்துக் கொண்டு சோதனை செய்வது போல் தொங்கிய போது உன்னைப் போல் என்னைப் பிடிக்காத ஒருவனுடைய மனத்தில் என்ன நினைவு எழும் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நான் மூடனில்லை.”
தன் மனத்தில் தோன்றியதை அவர் கண்டு பிடித்துச் சொல்லிவிட்டாரே என்று தலைகுனிந்தான் மணிமார்பன். “ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டால் நீயும் ஒருநாள் இங்கே தலைகீழாய்த் தொங்குவாய்; இந்தக் கொடும் புலிகளுக்கு இரையாவாய்” என்று கூறியவாறே ஓவியனை இழுத்துக் கொண்டு மேலே படியேறினார் நகைவேழம்பர்.
படிகளில் ஏறி மேலே வந்தவுடன் நகைவேழம்பர் அவனைத் திகைக்க வைக்கும் மற்றொரு கேள்வியையும் கேட்டார்:
“தம்பீ! நானும் நீ வந்ததிலிருந்து கவனிக்கிறேன், உன்னிடம் தாழம்பூ மணம் கமழ்கிறதே? இத்தனை வயது வந்த இளைஞனாகிய பின்பும் பூ வைத்துக் கொள்ளும் ஆசை இருக்கிறதா உனக்கு?” என்று கூறிச் சிரித்துக் கொண்டே மணிமார்பனின் இடுப்புக் கச்சையிலிருந்து வாள் நுனிபோல் சிறிதளவு வெளியே தெரிந்த வெண்தாழை மடலை உற்றுப் பார்த்தார் நகைவேழம்பர்.
‘ஐயோ! இதையும் இந்தப் பாவி மனிதர் பார்த்துவிட்டாரே’ என்று உள்ளம் பதறி நின்றான் மணிமார்பன்.
“ஒன்றுமில்லை, ஐயா... மணத்துக்காக எடுத்துச் சொருகிக் கொண்டிருக்கிறேன்” என்று கூறித் தப்ப முயன்றும் அவர் அவனை விடவில்லை.
“எங்கே பார்க்கலாம், அந்த நறுமணத்தை நானும்தான் சிறிது மோந்து பார்க்கிறேன்” என்று சொல்லிச் சிரித்தபடியே அவன் இடையிலிருந்து அந்த வெண்தாழை மடலை உருவி எடுத்துவிட்டார் அவர். என்ன செய்வதென்று தோன்றாமல் அப்படியே மலைத்துப் போய் நின்றுவிட்டான் மணிமார்பன். ‘ஐயா! இதை நீங்கள் பார்க்கக் கூடாது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றும் இந்த மடலில் இல்லை’ என்று கடிந்து கூறி அவரை விரைந்து தடுக்கும் ஆற்றல் அவனுக்கு இல்லை.
நகைவேழம்பர் தீப்பந்தத்துக்கருகில் மடலை நீட்டி ஒற்றைக் கண்ணைப் பக்கத்தில் கொண்டு போய் உற்றுப் பார்க்கலானார். அந்த மடலைப் படிக்கும் போது, அவர் முகம் என்னென்ன உணர்ச்சிகளைக் காட்டுகிறது, எப்படிக் கடுமையடைகிறது என்பதையெல்லாம் கவனித்துக் கொண்டு நிற்பதைத் தவிர ஓவியனால் வேறொன்றும் செய்வதற்குத் துணிய முடியவில்லை. அதைப் படித்துவிட்டுத் தலைநிமிர்ந்தார் நகைவேழம்பர்.
“தாழை மடலில் வெறும் நறுமணம் மட்டும் கமழவில்லையே! காதல் மணமும் சேர்ந்தல்லவா கமழ்கிறது!” என்று கூறிக் கொண்டே தீப்பந்தத்தைக் கீழே எறிந்து விட்டு எலும்பு முறிகிறாற் போல் அவன் கையை அழுத்திப் பிடித்து இறுக்கினார் அவர். ஓவியனின் மெல்லிய கையில் இரத்தம் குழம்பிச் சிவந்தது. கைப்பிடியால் இறுக்குவது போதாதென்று கேள்வியாலும் அவனை இறுக்கினார் அவர்.
“இந்த மடலை ஏன் இதற்குரியவனிடம் சேர்க்கவில்லை?”
“உரியவருக்கு இதைப் பெற விருப்பமில்லை” என்று சுருக்கமாகப் பதில் கூறினான் ஓவியன். அதற்கு மேல் அவர் அவனை ஒன்றும் கேட்கவில்லை. அந்த மடலையும் அவனிடம் திரும்பித் தரவில்லை. அவனை இழுத்துக் கொண்டு போய் மாளிகைத் தோட்டத்தில் தாம் வசிக்கிற பகுதியில் இருண்ட அறை ஒன்றில் தள்ளிக் கதவுகளை வெளிப்புறம் தாழிட்டுக் கொண்டு போனார் நகைவேழம்பர். ஓவியனைச் சுற்றிலும் இருள் சூழ்ந்தது. அவன் மனத்திலும் தான்.
தன்னுடைய மாடத்தில் தோழி வசந்தமாலையோடு ஓவியன் திரும்பி வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்த சுரமஞ்சரிக்கு நேரம் ஆக ஆகக் கவலை பிறந்தது. ஓவியன் மேல் சந்தேகம் உண்டாயிற்று. அந்த மாளிகையிலிருந்து தப்பிப் போக வேண்டுமென்ற ஆசையில், தான் வெளியே அனுப்பிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்படியே ஓவியன் எங்கேயாவது ஓடிப்போய் விட்டானோ என்று நினைத்தாள் அவள். அப்படி அவள் சந்தேகப்படுவதற்கும் நியாயமிருக்கிறது.
அந்த மாளிகையில் தொடர்ந்து இருப்பதற்குத் தான் விரும்பவில்லை என்ற கருத்தை அவளிடம் மடலை வாங்கிக் கொண்டு புறப்படுமுன்பே அவன் தான் சொல்லியிருந்தானே!
சிறிது நேரத்துச் சிந்தனைக்குப் பின்பு ஏதோ தீர்மானமாக முடிவு செய்து கொண்டவள் போல் உட்கார்ந்தபடியே உறங்கிப் போயிருந்த தன் தோழி வசந்தமாலையை எழுப்பினாள் சுரமஞ்சரி.
“என்னம்மா? மடல் கொடுக்கப் போன ஓவியன் திரும்பி வந்தாயிற்றா?” என்று கேட்டுக் கொண்டே எழுந்து நின்றாள் வசந்தமாலை. “ஓவியன் திரும்பி வரவில்லை வசந்தமாலை. இனிமேல் அவனை எதிர்பார்த்துக் காத்திருப்பதிலும் பயனில்லை. நீ புறப்படு, நாமே போக வேண்டியதுதான்!” என்று அந்த அகாலத்தில் தலைவியிடமிருந்து பதில் வந்த போது வசந்தமாலை திகைத்துப் போனாள்.
“ஓவியன் வராவிட்டால் நாளைக் காலை வரையில் அவனை எதிர் பார்க்கலாம். அதற்காக இந்த வேளையில் நாம் எப்படி அங்கே போக முடியும்? போவதுதான் நன்றாயிருக்குமா? ஏறக்குறைய பொழுது விடிவதற்கே சில நாழிகைகள் தான் இருக்கும். இப்போது அங்கே போக வேண்டுமானால் நடந்து போக முடியாது. பல்லக்கில் போகலாமென்றால் தூக்கி வருவதற்குப் பணியாட்களை எழுப்ப இயலாது. பேசாமல் படுத்துக் கொள்ளுங்கள். எல்லாம் காலையில் பார்த்துக் கொள்ளலாம்” என்று வசந்தமாலை தடை செய்ததை சுரமஞ்சரி பொருட்படுத்தவில்லை.
“சொன்னால் சொன்னபடி கேள். இந்தக் காரியத்தை இப்போதே செய்து தீர வேண்டுமென்று என் மனத்தில் தோன்றுகிறது. நீ என்ன தடை சொன்னாலும் நான் கேட்கப் போவதில்லை. பல்லக்கிலே போக வேண்டாம். கீழே வா, எப்படிப் போகலாமென்று தெரிவிக்கிறேன்” என்று வசந்தமாலையையும் இழுத்துக் கொண்டு வேகமாகக் கீழே இறங்கி வந்தாள் சுரமஞ்சரி.
கீழே தன் தலைவி விரைவாகச் செய்த ஏற்பாடுகளைப் பார்த்த போது வசந்தமாலைக்கே அதிசயமாக இருந்தது. குதிரைகள் கட்டியிருந்த கொட்டாரத்துக்குப் போய் வேகமாகச் செல்லவல்ல வெண்புரவிகள் இரண்டை அவிழ்த்து வந்து மாளிகையின் ஒரு புறத்தே நிறுத்தியிருந்த அழகிய அலங்காரத் தேரில் தன்னுடைய வளைகள் ஒலிக்கும் கைகளாலேயே பூட்டினாள் சுரமஞ்சரி. தேரைச் செலுத்தும் சாரதியின் இடத்தில் அவள் தானே ஏறி நின்று கடிவாளக் கயிறுகளைப் பற்றிக் கொண்டாள்.
“வசந்தமாலை! உள்ளே ஏறிக்கொள்” என்று அவள் கட்டளையிட்ட போது மறுத்துச் சொல்லத் தோன்றாமல் அப்படியே ஏறிக் கொள்வதைத் தவிரத் தோழியால் அப்போது வேறொன்றும் செய்ய முடியவில்லை.
வேளையில்லாத வேளையில் மாளிகையின் இளவரசி தானே தேரைச் செலுத்திக் கொண்டு வெளியேறுவதைப் பார்த்து வாயிற் காவலர்கள் வியந்து நின்றனர்.
இரவின் அமைதி கவிந்த பட்டினப்பாக்கத்து அகன்ற வீதிகளில் சுரமஞ்சரியின் தேர் ஓசையெழுப்பிக் கொண்டு விரைந்தது. நிசப்தமான தெருக்களில் மத்தளத்தை அளவாக வாசிப்பது போல் குதிரைக் குளம்பொலி எழுந்து ஒலித்தது. வேகமாக ஓடும் தேரும் அதை விட வேகமாக முந்திக் கொண்டு ஓடும் மனமுமாகச் சுரமஞ்சரி நீலநாகர் படைக்கலச் சாலைக்குச் சென்று கொண்டிருந்தாள்.
“அம்மா! தேரை நான் செலுத்துகிறேன். நீங்கள் உள்ளே உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று வசந்தமாலை நடுவழியில் கூறிய வார்த்தைகளுக்குச் சுரமஞ்சரி செவி சாய்க்கவே இல்லை.
நாளங்காடியின் அடர்ந்த மரக் கூட்டங்களுக்கிடையே உள்ளே சாலையைக் கடந்து தேர் மருவூர்ப்பாக்கத்துக்குள் புகுந்த போது, தேரை நிறுத்தாமலே பின்பக்கமாகத் திரும்பி, “அவர் தங்கியிருக்கிற படைக்கலச் சாலைக்குப் போகும் வழியைச் சொல்லிக் கொண்டு வா” என்று தோழிக்கு உத்தரவு பிறப்பித்தாள் சுரமஞ்சரி. தோழி வசந்தமாலை வழியைக் கூறினாள். தேர் அவள் கூறிய வழிகளின்படியே மாறியும் திரும்பியும் விரைந்து சென்றது.
விடிவதற்குச் சில நாழிகைகள் இருக்கும் போதே நீலநாக மறவருக்கு உறக்கம் நீங்கி விழிப்புக் கொடுத்து விடும். படைக்கலச் சாலையின் எல்லையில் முதன் முதலாகக் கண்விழிக்கிறவர் அவர் தான். எழுந்தவுடன் இருள் புலருமுன்பாகவே ஆலமுற்றத்தை ஒட்டிய கடற்கரை ஓரமாக நெடுந்தொலைவு நடந்து போய் விட்டுத் திரும்பி வருவார் அவர். கடற்காற்று மேனியில் படுமாறு அப்படி நடந்து போய்விட்டு வருவதில் அவருக்குப் பெரு விருப்பம் உண்டு. கதிரவன் ஒளி பரவுமுன்பே தமது உடல் வலிமைக்கான எல்லாப் பயிற்சிகளையும் முடித்துக் கொண்டு நீராடித் தூய்மை பெற்று விடுவார் அவர். நீலநாகமறவர் நீராடிவிட்டுப் புறப்படுவதற்கும், ஆலமுற்றத்து அண்ணல் கோயிலில் திருவனந்தல் வழிபாட்டு மணி ஒலி எழுவதற்கும் சரியாயிருக்கும்.
வழக்கம் போல் அன்று அவர் துயில் நீங்கிக் கடற்கரையில் தனியே உலாவி வருவதற்காகப் புறப்பட்டுப் படைக்கலச்சாலையின் வாயிலுக்கு வந்த போது அங்கே வெண்புரவிகள் பாய்ந்து இழுத்துவரும் அலங்காரத் தேர் ஒன்று அழகாக அசைந்து திரும்பி வந்து நிற்பதைக் கண்டு வியப்படைந்தார்.
அந்தத் தேரிலிருந்து இரண்டு பெண்கள் இறங்கி வருவதைக் கண்ட போது நீலநாகமறவரின் வியப்பு இன்னும் மிகையாயிற்று. படைக்கலச் சாலைக்குள் நுழைகிற வாயிலை மறித்துக் கொண்டாற் போல் அப்படியே நின்றார் அவர். தேரிலிருந்து இறங்கி முன்னால் வந்த பெண் அரசகுமாரி போல் பேரழகுடன் தோன்றினாள். உடன் வந்தவள் அவள் தோழியாக இருக்கலாமென்று அவர் புரிந்து கொள்ள முடிந்தது.
சிலம்பொலி குலுங்க அன்னம் போல் பின்னிப் பின்னி நடந்து வரும் மென்னடை, சூடிய பூக்களும் பூசிய சந்தனமும் அவர்களிடமிருந்து காற்றில் பரப்பிய நறுமணம் இவற்றால் சற்றும் கவரப் படாமல் கற்சிலை போல் அசையாமல் நிமிர்ந்து கம்பீரமாக நின்றார் நீலநாகமறவர். அவரருகில் வந்ததும் அவர்கள் இருவரும் தயங்கி நின்றார்கள். இரண்டு பெண்களும் தங்களுக்குள் ஒருவரையொருவர் மருண்டு பார்த்துக் கொண்டார்கள். நீலநாகமறவர் அவர்களை நோக்கிக் கேட்டார்:
“நீங்கள் இருவரும் யார்? இங்கே என்ன காரியமாக வந்தீர்கள்? இது படைக்கலச்சாலை. ஆண்களும், ஆண்மையும் வளருமிடம். இங்கே உங்களுக்கு ஒரு காரியமும் இருக்க முடியாதே?”
“இங்கே இளங்குமரன் என்று ஒருவர் இருக்கிறாரே, அவரை அவசரமாக நாங்கள் பார்க்க வேண்டும்” என்று அவருக்குப் பதில் கூறினாள் முன்னால் நடந்து வந்த பெண். நீலநாகமறவருடைய முகபாவம் மாறியது.
“இளங்குமரனை உங்களுக்குத் தெரியுமா, பெண்களே?”
“நன்றாகத் தெரியும்.”
“எப்படிப் பழக்கமோ?”
“எங்களை அவருக்கு நன்றாகத் தெரியும். இன்று பகலில் பட்டினப்பாக்கத்திலிருக்கும் எங்கள் மாளிகைக்குக் கூட அவர் வந்திருந்தார்.”
“எதற்காக வந்திருந்தான்?”
அவர்களிடமிருந்து பதில் இல்லை. நீலநாகமறவருடைய கடுமையான முகத்தில் மேலும் கடுமை கூடியது.
“இப்போது நீங்கள் அவனைப் பார்க்க முடியாது.”
“அவசரமாகப் பார்த்தாக வேண்டுமே...”
“இந்த அகால நேரத்தில் ஓர் ஆண்பிள்ளையைத் தேடிக் கொண்டுவர வெட்கமாக இல்லையா உங்களுக்கு?” என்று சற்றுக் கடுமையான குரலில் கேட்டுவிட்டுத் திறந்து கிடந்த படைக்கலச் சாலையின் பெரிய கதவுகள் இரண்டையும் இழுத்து அடைத்தார் அவர். அந்தக் கதவுகளை இழுத்து அடைக்கும்போது, அவருடைய தோள்கள் புடைப்பதைப் பார்த்தாலே பெண்கள் இருவருக்கும் பயமாயிருந்தது. தழும்புகளோடு கூடிய அவர் முகமும், பெரிய கண்களும், ‘இவரை நெகிழச் செய்ய உங்களால் முடியவே முடியாது’ என்று அந்தப் பெண்களுக்குத் தெளிவாகச் சொல்லின. அவர்கள் நம்பிக்கையிழந்தார்கள். கதவை மூடிக்கொண்டு நிற்கும் அவர் முன் இரண்டு பெண்களும் அவரது முகத்தை ஏறிட்டுப் பார்க்கும் துணிவின்றித் தலைகுனிந்தபடியே தேருக்குத் திரும்பிப் போய் ஏறிக் கொண்டார்கள். தேர் திரும்பியது. வெண்புரவிகள் பாய்ந்தன.
“நான் புறப்படும் போதே சொன்னேனே அம்மா! இந்த அகாலத்தில் நாம் இங்கே வந்திருக்கக்கூடாது.”
“வாயை மூடடி வசந்தமாலை! நீயும் என் வேதனையை வளர்க்காதே” என்று தேரைச் செலுத்தத் தொடங்கியிருந்த சுரமஞ்சரி, கோபத்தோடு பதில் கூறினாள். தேர் மறுபடியும் பட்டினப்பாக்கத்துக்கு விரைந்தது. சுரமஞ்சரியின் முகத்தில் மலர்ச்சியில்லை; நகையில்லை. யார் மேலோ பட்ட ஆற்றாமையைக் குதிரைகளிடம் கோபமாகக் காட்டினாள் அவள். வெண்பட்டுப் போல் மின்னும் குதிரைகளின் மேனியில் கடிவாளக் கயிற்றைச் சுழற்றி விளாசினாள். அடிபட்ட புரவிகள் மேலும் வேகமாகப் பாய்ந்தன. வந்ததை விட வேகமாகத் திரும்பிக் கொண்டிருந்தது அவர்கள் தேர்.
தேர் மாளிகைக்குள் புகுந்து நின்றது. சுரமஞ்சரியும் வசந்த மாலையும் கீழே இறங்கினார்கள். “குதிரைகளை அவிழ்த்துக் கொட்டாரத்தில் கொண்டு போய்க் கட்டிவிட்டு வா” என்று தலைவி உத்தரவிட்டபடியே செய்தாள் வசந்தமாலை.
பின்பு இருவரும் மாளிகையின் மூன்றாவது மாடத்துக்குச் செல்லும் படிகளில் ஏறி மேலே சென்றார்கள். சுரமஞ்சரியின் மாடத்தில் தீபங்கள் அணைக்கப்பெற்று இருள் சூழ்ந்திருந்தது. தாங்கள் வெளியே புறப்பட்ட போது தீபங்களை அணைத்ததாக நினைவில்லை சுரமஞ்சரிக்கு. “எதற்கும் நீ கீழே போய்த் தீபம் ஏற்றிக் கொண்டு வா! தீபத்தோடு உள்ளே போகலாம். அதுவரை இப்படி வெளியிலேயே நிற்கிறேன்” என்று வசந்தமாலையைக் கீழே அனுப்பினாள் சுரமஞ்சரி. சிறிது நேரத்தில் வசந்தமாலை தீபத்தோடு வந்தாள். தீப ஒளி உள்ளே பரவிய போது மாடத்தின் முதற்கூடத்துக்கு நடுவில் தன் தந்தையாரும், நகைவேழம்பரும், தங்கள் இருவர் வரவையும் எதிர்பார்த்தே காத்திருப்பது போல் அமர்ந்திருப்பதைச் சுரமஞ்சரியும் வசந்தமாலையும் கண்டு திடுக்கிட்டார்கள்.
“உள்ளே போகலாமா? இப்படியே திரும்பி விடுவோமா?” என்று பதறிய குரலில் தலைவியின் காதருகே மெல்லக் கேட்டாள் வசந்தமாலை.
“நம்மை ஒன்றும் தலையைச் சீவி விட மாட்டார்கள். வா, உள்ளே போவோம்” என்று தோழியையும் கைப்பற்றி அழைத்தவாறு துணிவுடன் உள்ளே புகுந்தாள் சுரமஞ்சரி.
ஓவியனின் அந்த வார்த்தைகளை மறுபடி நினைத்தாலும் மனம் கொதித்தது இளங்குமரனுக்கு. ‘எவ்வளவு துணிவு இருந்தால் அவன் என்னிடம் அப்படிக் கூறியிருப்பான்.’
“ஒரு காலத்தில் இன்று அலட்சியம் செய்யும் இதே பெண்ணின் சிரிப்புக்கு நீங்கள் தோற்று நின்றால் கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன்...”
‘யாரைப் பார்த்து யார் சொல்லுகிற வார்த்தைகள் இவை? மணிமார்பனுடைய வயதென்ன? நிலை என்ன? என்னுடைய அநுதாபத்தைப் பெற்றவன் எனக்கே அறிவுரை கூற முன் வருவதா? சுரமஞ்சரி என்னும் பெண் காவிரிப்பூம்பட்டினத்திலேயே பேரழகியாக இருக்கலாம். வேறெவருக்கும் இல்லாத பெருஞ் செல்வத்துக்கு உரிமை பூண்டவரின் மகளாக இருக்கலாம். ஆனால் அவளுடைய அழகுக்கு மயங்கி நிறையிழக்கும் ஆண்பிள்ளையாக நான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லையே! அழகையும் அதனால் ஏற்படும் கவர்ச்சி மயக்கத்தையும் அனுபவித்துப் பார்ப்பதில் ஒரு சுகம் இருக்கிறதென்று வைத்துக் கொண்டாலும் அந்தச் சுகத்தைப் பெண்ணின் சிரிப்பிலும், கண்களிலும் தான் தேட வேண்டும் என்பதில்லையே! பூக்களின் மலர்ச்சியிலும், கடலின் அலைகளிலும், மேகந்தவழும் மழைக்காலத்து வானத்திலும், முழுமதி மறைந்தும் மறையாமலும் உலா வருவதிலும் அழகைத் தேடி அநுபவித்துக் கொள்ளத் தெரியும் எனக்கு. உலகத்தைப் படைத்தவன் வஞ்சகமில்லாமல் எல்லாப் பொருள்களிலும் தான் அழகை வைத்திருக்கிறான். மனிதர்கள்தான் அந்த அழகு மிகச் சில பொருள்களில் மட்டும் இருப்பதாக நினைத்துத் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். நானும் அப்படித் தவிப்பவன் என்று இந்த ஓவியன் நினைத்துக் கொண்டான் போலிருக்கிறது. ‘அப்பாவி ஓவியனே! பெண்ணின் சிரிப்பில் மட்டும்தான் உலகத்து அழகுகளெல்லாம் ஒளிந்து கொண்டிருப்பதாக நீ வேண்டுமானால் நினைத்துக் கொண்டிரு. ஆனால் இளங்குமரனையும் சேர்த்து அவ்விதமாக நினைக்காதே. நான் இவ்வளவு சிறிய மயக்கங்களுக்காக என் மனத்தை இழந்து விடச் சித்தமாயில்லை! வாழ்க்கையில் பெரிய இலட்சியங்கள் எனக்கு இருக்கின்றன. இப்போது நான் தவித்துக் கொண்டிருப்பது சுரமஞ்சரியின் அழகு முகத்துக்காகவும் சிரிப்புக்காகவும் அல்ல; என் தாயின் அன்பு முகத்தையும் சிரிப்பையும் காண்பதற்காகத்தான் நான் அல்லும் பகலும் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன். மற்றவர்களைத் தெரிந்து கொண்டு அவர்கள் சிரிப்புக்கு மயங்குவதற்கு முன்பே ‘நான் யார்’ என்று எனக்குத் தெரிய வேண்டும். இவ்வளவு வலிமையான உடலையும் மனத்தையும் வைத்துக் கொண்டு, ‘நான் யார்? எனக்கு அன்னையும் தந்தையுமாக இருந்து என்னை உலகுக்கு அளித்தவர்கள் யார்?’ என்பவற்றைக் கூட நான் இன்னும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறேனே. என்னிடம் வந்து பெண்ணின் சிரிப்புக்குத் தோற்பதைப் பற்றிப் பேசுகிறாயே, அப்பனே?’
இளங்குமரன் இவ்வாறெல்லாம் மீண்டும் நினைத்துப் பார்த்தபோது தான், ஓவியனை அறைந்து அவமானம் செய்து அனுப்பியதில் தவறு ஒன்றுமில்லை என்றே தோன்றியது. ‘விவரம் தெரிந்த பிள்ளையாயிருந்தால் இப்படி அசட்டுத்தனமாகப் பேசி என் ஆத்திரத்தை வளர்த்து அறை வாங்கிக் கொண்டு போயிருக்க வேண்டாம்’ என்று ஓவியனிடம் சிறிது இரக்கமும் கொண்டான் அவன்.
இன்னும் அவனுடைய வலது கையில் தாழம்பூ மணம் கமழ்ந்து கொண்டிருக்கிறது. அந்தக் கையால்தான் சுரமஞ்சரியின் மடலை அவன் தீண்டினான். படித்த பின் கசக்கி எறியவும் முயன்றான். நீலநாகர் படைக்கலச் சாலையின் மரங்களடர்ந்த முற்றத்தில் கடல் காற்றின் சுகத்தை நுகர்ந்து கொண்டே இளங்குமரன் கட்டிலின் மேல் சாய்ந்து உறங்க முயன்று கொண்டிருந்த சமயத்தில் புரண்டு படுக்கும் போதெல்லாம் கையிலிருந்த இந்தத் தாழம்பூ மணம் பரவி அவன் உறக்கத்தைத் தடை செய்தது. வெறுப்போடு எழுந்து சென்று கைகளை நன்றாகக் கழுவிவிட்டு வந்து படுத்துக் கொண்டான் அவன். அவளைப் பற்றிய நினைவு நெஞ்சில் மட்டுமல்லாமல் கைகளிலும் மணக்கக்கூடாதென்று வெறுப்போடு அவற்றைத் தன்னிலிருந்து பிரித்தான் அவன்.
ஆனால் மறுநாள், முதல் நாளிரவு மனத்திலிருந்தும், கையிலிருந்தும் சேர்த்துக் கழுவிய இதே நினைவுகளை மீண்டும் இளங்குமரனை நினைக்கச் செய்துவிட்டார் நீலநாகமறவர். வானம் கண்விழிக்கும் வைகறைப் போதில் இளங்குமரனின் பவழச் செஞ்சுடர் மேனியில் இளம் பொன் வெய்யில் பட்டு அவன் கண்கள் மலர்ந்த போது அந்த விழிப்பையே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு நிற்பவர் போல் அவனுடைய கட்டிலருகில் நீலநாகமறவர் நின்று கொண்டிருந்தார். கண்களைத் திறந்ததும் அவர் முகத்தில்தான் விழித்தான் இளங்குமரன். உடனே வாரிச் சுருட்டிக் கொண்டு துள்ளியெழுந்து அடக்கமாக நின்றான். தான் விழித்துக் கொள்வதற்கு முன்பே அவர் தனக்காகத் தன் கட்டிலருகே வந்து நின்று கொண்டிருக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. நீராடி ஆலமுற்றத்துச் சிவன் கோயிலின் வழிபாட்டையும் முடித்துக் கொண்டு மாணவர்கட்குப் படைக்கலப் பயிற்சி அளிப்பதற்கேற்ற கோலத்தில் இருந்தார் நீலநாகமறவர். சிரிப்பும் இன்றிச் சீற்றமும் இன்றி வெறுப்பும் இன்றி வேட்கையுமின்றி இளங்குமரனின் முகத்தையே இமையாமல் உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றார் அவர். அவருடைய கைகள் வேலைப்பாடு அமைந்ததும் புதியதாகப் படைக்கலச் சாலையிலே வடிக்கப் பட்டதுமாகிய சிறிய வேல் ஒன்றைப் பற்றி அலட்சியமாகச் சுழற்றிக் கொண்டிருந்தன.
அவர் தன்னிடம் ஏதோ கேட்கப் போகிறாரென்று எதிர்பார்த்துக் கொண்டு நின்றான் இளங்குமரன். அவருக்கு முன் நிற்கும் போது இருக்க வேண்டிய பணிவும் குழைவும் அவன் நின்ற தோற்றத்திலேயே தெரிந்தன.
“தம்பீ! இந்த வேலின் நுனி இளம் பெண்ணொருத்தியின் அழகிய கண்போன்று இருக்கிறதல்லவா?” என்று தொடர்பில்லாமல் பேச்சைத் தொடங்கினார் அவர். இளங்குமரன் சிறிது நேரம் அவருக்கு என்ன மறுமொழி கூறுவதென்று தோன்றாமல் தயங்கி நின்றான். அவர் அவனை விடவில்லை. மீண்டும் தூண்டிக் கேட்கலானார்:
“உன்னைத்தான் கேட்கிறேன் தம்பீ! வார்த்து வடித்து கூர்மையாகத் தோன்றும் இந்த வேலின் நுனி இளநங்கை ஒருத்தியின் நீள்விழியை நினைவூட்டுகிறது இல்லையா?”
“கவிகள் அப்படிச் சொல்லித் தங்களையும் உலகத்தையும் சேர்த்து ஒன்றாக ஏமாற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள். வேல் விழி, மீன் விழி, மான் விழி என்று உவமை சொல்லி வேலையும், மீனையும், மானையும் பார்க்க நேர்ந்த போது கூட, பெண்களின் கண்களைத் தவிரத் தங்களுக்கு வேறெதுவும் நினைவு வரவில்லை என்கிற சொந்த பலவீனத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். பாடியும் நிரூபித்திருக்கிறார்கள்.”
இளங்குமரன் இவ்வாறு கூறியதும் சலனமற்றிருந்த நீலநாக மறவரின் முகத்தில் சிரிப்பின் சாயல் தென்படலாயிற்று. அந்தச் சிரிப்பை ஒளித்து மறைக்க அவர் முயன்றும் அதன் சாயல் முகத்தில் வெளிப்பட்டுவிட்டது. மேலும் அவர் அவனைக் கேட்கலானார்:
“உவமை கூறுவதைக் கவிகளின் பலவீனமென்று நீ சொல்கிறாய், தம்பீ! ஆனால் கவிகள் அதையே தங்களுடைய பலம் என்கிறார்கள். கவிதையின் அணிகளில் ஒன்றாகவும் உவமையைக் கணக்கிடுகிறார்களே! உவமை இல்லாவிட்டால் வருணனை அமையுமா?”
“வேறொரு விதமாகக் கணக்கிட்டால் அதிகமான பலமே பலவீனமாக முடியும். அளவுக்கு மீறின பலமே ஒரு பலவீனம் தான்! வேலின் நுனியில் வீரம் பிறக்கிறது. பெண்ணின் விழிக்கடையில் வீரமும் ஆண்மையும் அழிகின்றன. வீரத்தையும், ஆண்மையையும் அழிக்கின்ற இடத்தை வீரமும், ஆண்மையும் பிறக்கின்ற இடத்துக்கு உவமை சொல்வது எப்படி ஐயா பொருந்தும்?”
“ஆண்மை என்ற வார்த்தைக்கு நீ என்ன பொருள் புரிந்து கொண்டிருக்கிறாய் தம்பீ?”
“ஆளும் தன்மை என்று பொருள் புரிந்து கொண்டிருக்கிறேன்.”
“எதை ஆளும் தன்மையோ? உடம்பையா, மனத்தையா, புலன்களையா? அல்லது வேலையும், வாளையும், வில்லையும் எடுத்து ஆளும் தன்மையா? உன்னிடமிருந்து நான் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் தம்பீ!” என்றார் நீலநாகமறவர்.
“எல்லாவற்றையும் ஆளும் தன்மையைத்தான் நான் சொல்லுகிறேன்.”
“அதாவது வீரம் அல்லது ஆண்மை என்பது வில்லையும் வேலையும் எடுத்து ஆள்வது மட்டுமன்று, எல்லாவற்றையும் தன் வசப்படுத்தி ஆளுவது என்பதுதானே உன் கருத்து?”
“ஆமாம் ஐயா!”
“அப்படியானால் இதைக் கேள், இளங்குமரா! இப்போது இந்தப் படைக்கலச்சாலையில் எனக்கு மிகவும் வேண்டியவனும் கண்ணைக் கவரும் அழகனுமான இளைஞன் ஒருவன் இருக்கிறான். அவனுக்கு உடல் வலிமையும் வேண்டிய அளவு இருக்கிறது. வில்லையும், வேலையும் ஆள்வதற்கு மட்டும்தான் அவனுக்குத் தெரிகிறது. மனத்தையும் புலன்களையும் ஆள அவனுக்குத் தெரியவில்லை போலிருக்கிறது. கூரிய வேலையும், வாளையும் பிடித்து வளர்த்துக் கொள்ள வேண்டிய ஆண்மையை பெண்ணின் கண்களுக்குத் தோற்றுப் போகும்படி செய்து கொண்டிருக்கிறான் அவன். இன்னும் கேள். அழகிய இளம்பெண்கள் அவனைத் தேடிக் கொண்டு அகாலமான இரவு நேரங்களில் இங்கே இரதத்தில் வருகிறார்கள். அந்தப் பெண்களை விசாரித்தால் அவன் தங்களைத் தேடிக் கொண்டு தங்கள் மாளிகைக்கு அடிக்கடி வழக்கமாய் வருவது உண்டென்றும் சொல்கிறார்கள். அந்த இளைஞன் வீரமும் ஆண்மையும் உள்ளவன் என்று தான் நினைப்பதா? இல்லாதவன் என்று நினைப்பதா?”
“இதில் சந்தேகமென்ன? வீரமும், ஆண்மையும் இருந்தால் அவன் ஏன் இப்படிப் பெண்களின் சிரிப்புக்கும், பார்வைக்கும் தோற்றுப் போய் அலைகிறான்?”
இதைக் கேட்டு நீலநாகமறவர் பெரிதாகச் சிரித்தார். அவர் ஏன் அப்படிச் சிரிக்கிறார் என்று இளங்குமரன் திகைத்து நின்ற போது தம் கைகளிலிருந்த வேலைக் கீழே எறிந்துவிட்டு வலது கையை உயர்த்தி ஆள்காட்டி விரலை அவன் முகத்துக்கு நேரே நீட்டியபடி கூறலானார் நீலநாகமறவர்:
“தம்பீ! அப்படிப் பெண்களின் சிரிப்புக்கும், பார்வைக்கும் தோற்றுப் போய் அலைபவன் வேறெங்கும் இல்லை. இதோ என் எதிரே இளங்குமரன் என்ற பெயரோடு நின்று கொண்டிருக்கிறான் அவன்...”
தீயை மிதித்தாற் போலிருந்தது இளங்குமரனுக்கு. எங்கோ சுற்றி வளைத்துப் பேசித் தன் பேரில் கொண்டு வந்து முடித்ததைக் கண்டு திடுக்கிட்டான் அவன். நேற்றிரவு இதே போல் ஒரு கேள்வியைக் கேட்டதற்காகத்தானே அவன் ஓவியனை அறைந்து அனுப்பியிருந்தான்? இன்றும் விடிந்ததும் விடியாததுமாக இப்படி ஒரு பழியா?
“என்ன தம்பீ! திருடனுக்குத் தேள் கொட்டினாற் போல் இப்படி விழிக்கிறாய்? உன்னுடைய ஆண்மையை அழித்துத் தன்னுடைய பெண்மைக்கு வெற்றிப் பெருமிதம் சேர்த்துக் கொண்ட அந்தப் பட்டினப்பாக்கத்து நங்கையின் வேல்விழிகளை நேற்றிரவு நானே பார்த்தேன்.”
“நீங்கள் சொல்வது எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை ஐயா! எதையோ தப்பாகப் புரிந்து கொண்டு என் மேல் பழி சுமத்துகிறீர்களே...?” என்று தொடங்கிய இளங்குமரனை மேலே பேச விடாமல் தடுத்து அவர் பேசத் தொடங்கினார்:
“இன்னும் புரியும்படியாக விளக்கிச் சொல்ல வேண்டுமானால், இதோ கேள் தம்பீ” - என்று தொடங்கி முதல் நாள் பின்னிரவில் தேரேறி அவனைத் தேடிக்கொண்டு வந்த பெண்களைப் பற்றிக் கூறினார் நீலநாகமறவர். அவர் கூறியதிலிருந்து, வந்தவர்கள் சுரமஞ்சரியும் அவள் தோழி வசந்தமாலையுமாகத்தான் இருக்க வேண்டுமென்பது இளங்குமரனுக்குப் புரிந்தது. மடலோடு அறைவாங்கிக் கொண்டு திரும்பிப் போன ஓவியன் சுரமஞ்சரியையே நேரில் போகச் சொல்லி இங்கே அனுப்பியிருக்கலாம் என்று நினைத்தான் அவன். சுரமஞ்சரியின் மேல் அவனுக்கு ஏற்பட்டிருந்த வெறுப்பு இப்போது ஆத்திரமாக மாறியது. “எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் நீங்கள் நினைக்கிறாற்போல் ஒரு நெருக்கமும் இல்லை. அவள் எதற்காக என்னைத் தேடி வந்தாள் என்பதே எனக்குத் தெரியாது” என்று எவ்வளவோ சொல்லி, அவருடைய தவறான கருத்தை மாற்ற முயன்றான் இளங்குமரன். நீலநாகமறவர் அவ்வளவு எளிதாக அதை நம்பவில்லை.
“எனக்கு விளக்கம் தேவையில்லை, தம்பீ! உன்னுடைய வாழ்க்கையில் நீ பெரிய காரியங்களைச் சாதிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். இனிமேலாவது உன்னைத் திருத்திக் கொள். என்னைப் போல் ஆயுதங்களை எடுத்துக் கொள்வதுடன் புலன்களையும் ஆளத் தெரிந்து கொண்ட வீரனாக நீ உருவாக வேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன். உன்னை வளர்த்து ஆளாக்கிய அருட்செல்வ முனிவரின் நோக்கமும் அதுதான். அதிலிருந்து நீ விலகக் கூடாது” என்று கோபமாகச் சொல்லிவிட்டு மாணவர்களுக்குப் படைக்கலப் பயிற்சி கற்பிப்பதற்காகச் சென்றுவிட்டார் நீலநாகமறவர்.
ஏதோ நினைப்புடன் அவர் கீழே எறிந்து விட்டுப் போன வேலைக் குனிந்து கையிலெடுத்தான் இளங்குமரன். அந்த வேல் சுரமஞ்சரியின் மயக்கும் விழியாக மாறி அவனை நோக்கி ஏளனமாகச் சிரிப்பது போலிருந்தது.
‘முடியாது! முடியவே முடியாது. இந்த மயக்கும் விழிகளுக்கும் இதற்குரியவளின் சிரிப்புக்கும் ஒரு போதும் நான் தோற்க மாட்டேன்’ என்று தனக்குத்தானே பித்தன் போல் கூறிக்கொண்டே அந்த வேலை வெறுப்புடன் தூரத்தில் வீசி எறிந்தான்.
பொழுது விடிந்ததும் நடந்த இந்த நிகழ்ச்சியால் இளங்குமரனின் உள்ளம் சொல்ல முடியாத வேதனையை அடைந்திருந்தது. உடனே பட்டினப்பாக்கத்துக்கு ஓடிச் சென்று சுரமஞ்சரி, அவளுடைய தோழி, மணிமார்பன் மூவரையும் படைக்கலச் சாலைக்கு அழைத்துக் கொண்டு வந்து நீலநாகமறவருக்கு உண்மையை விளக்கிவிட்டால் நல்லதென்று எண்ணினான் இளங்குமரன். அவர் மனத்தில் பதிந்து ஊன்றிப் போன சந்தேகத்தைக் களைந்தெறிந்து விட விரும்பினான் அவன். ஆனால் அதற்கும் தடையிருந்தது. படைக்கலச் சாலையின் எல்லையிலிருந்து வெளியேறக் கூடாது என்று அவர் அவனுக்குக் கட்டளையிட்டிருந்தார். இரண்டு காரியங்களுக்காக அப்போது அவன் அங்கிருந்து வெளியே போய் வரவேண்டிய அவசியம் இருந்தது. சுரமஞ்சரி முதலியவர்களை நேரில் அழைத்து வந்து நீலநாக மறவரின் சந்தேகத்தைப் போக்குவதற்காக அவன் வெளியேறிச் செல்வதன்றி, வீரசோழிய வளநாடுடையாரிடம் ஒப்படைத்துவிட்டு வந்த அருட்செல்வ முனிவர் எப்படி இருக்கிறாரென்று பார்த்து வருவதற்காகவும் போக வேண்டியிருந்தது. தன்மேல் கோபத்தோடிருக்கும் நீலநாகமறவரிடம் போய் அங்கிருந்து வெளியேறிச் சென்று வருவதற்குத் துணிந்து அனுமதி கேட்பது எப்படி என்று அவன் தயங்கினான்.
இவ்வாறு அவன் தயங்கிக் கொண்டிருந்த போது அந்தப் படைக்கலச் சாலையில் இருந்தாற் போலிருந்து வழக்கமாகக் கேட்கும் ஒலிகளும் வீரர்களின் ஆரவாரமும் ஓய்ந்து அமைதி நிலவியது. திடீரென்று என்ன ஆகிவிட்டதென்று புரியாமல் இளங்குமரன் மருண்டான். சென்ற விநாடி வரையில் வீரர்களுக்குப் பயிற்சியளிக்கும் நீலநாகமறவரின் கம்பீரக் கட்டளைக் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. இந்த விநாடியில் அதுவும் ஒலிக்கவில்லை. வாளோடு வாள் மோதும் ஒலி, போர்க்கருவிகள் செய்யும் உலைக்களத்திலும் பட்டறையிலும் இரும்பு அடிபடும் ஓசை, வீரர்களின் பேச்சுக்குரல் எல்லாம் ஓய்ந்து மயான அமைதி நிலவியது. காற்றுக்கூட பலமாக வீசப் பயப்படுவது போன்ற அந்த அமைதி ஏன் நேர்ந்ததென்று காண்பதற்காக முற்றத்திலிருந்து படைக்கலச் சாலையின் உட்பகுதிக்கு விரைந்தான் இளங்குமரன்.
அங்கே பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த வீரர்கள் அமைதியாய் மூலைக்கு மூலை ஒதுங்கித் தலைகுனிந்தவாறு நின்று கொண்டிருந்தார்கள். நடுவில் நீலநாக மறவரும் வீரசோழிய வளநாடுடையாரும் கண்கலங்கி நின்றார்கள். இருவருடைய தோற்றத்திலும் துக்கத்தினால் தாக்குண்ட சோர்வு தெரிந்தது.
இளங்குமரனைப் பார்த்ததும் வீரசோழிய வளநாடுடையார் ‘கோ’வென்று கதறியழுதபடி ஓடிவந்து அவனைத் தழுவிக் கொண்டார். நீலநாகமறவர் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு நின்ற இடத்திலிருந்து அசையாமல் அப்படியே நின்றார்.
“உனக்கு இதுவரை நிழல் தந்துகொண்டிருந்த நெடுமரம் சாய்ந்து விட்டது, தம்பீ! தவச்சாலை தீப்பற்றி எரிந்து முனிவர் மாண்டு போய் விட்டார்” என்று துயரம் பொங்கும் குரலில் கூறினார் வளநாடுடையார். இளங்குமரனுக்கு அந்தச் செய்தியில் நம்பிக்கை ஏற்படவில்லை. “முனிவர் தவச்சாலைக்கு எப்படிப் போனார்? அவரை உங்கள் வீட்டில் அல்லவா விட்டு வந்தேன்...” என்று பதறிப் போய்க் கேட்டான் இளங்குமரன்.
கண்ணீர் பொங்கத் துயரம் அடைக்கும் குரலில் நடந்தவற்றை அவனுக்குக் கூறினார் வளநாடுடையார். இளங்குமரனுக்கு கண்கள் இருண்டன. உலகமே சுழல்வது போலிருந்தது. ‘அப்படியும் நடந்திருக்குமா? நடந்திருக்க முடியுமா?’ என்று நினைக்க நினைக்க துக்கம் பெருகியது அவனுக்கு.
பெற்றோரும் உற்றாரும் இல்லாத காலத்தில் தன்னை வளர்த்து ஆளாக்கித் தாயாகவும் தந்தையாகவும் இருந்து காத்து வந்த உத்தமர் தீயில் மாண்டு போனார் என்று அறிந்த போது அவனுக்கு அழுகை குமுறிக் கொண்டு வந்தது. வலிமையும் வீரமும் பொருந்திய அவன், பேச்சு வராத பருவத்துப் பச்சைக் குழந்தைபோல் குமுறி அழுத காட்சி அங்கிருந்த எல்லோரையும் மனமுருகச் செய்தது. இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு அழுதழுது சோர்ந்து போய் அவன் தரையில் சாய இருந்த போது அதுவரையில் பேசாமல் நின்று கொண்டிருந்த நீலநாகமறவர் விரைவாக ஓடி வந்து அவனைத் தாங்கிக் கொண்டார்.
“இந்தப் பாவியை மன்னிப்பாயா தம்பீ? என்னிடம் அடைக்கலமாக இருந்த போதில், அவருக்கு இப்படி நேர்ந்து விட்டதே என்பதை நினைத்தால் என்னால் துக்கத்தைத் தாங்க முடியவில்லையே!” என்று வீரசோழிய வளநாடுடையார் தமது ஆற்றாமையைச் சொல்லிப் புலம்பி அழுதார்.
அப்போது நீலநாகமறவர் வளநாடுடையாரை நோக்கிக் கையமர்த்தி அவருடைய அழுகையை நிறுத்தச் செய்தார்.
“அழுது ஆகப் போவதென்ன? மனிதர்களின் மரணம் காலத்தின் வெற்றிகளில் ஒன்று. புகழும், செல்வமும், பலரால் மதிக்கப்படுதலும் உலக வாழ்க்கையில் பெருமையாக இருப்பதைப் போல் நேற்று இருந்த ஒருவரை இன்றில்லாமல் செய்துவிடுவது காலத்துக்குப் பெருமை. காலத்தின் இந்தப் பெருமையால் நமக்கு துக்கம். தன்னுடைய ஆற்றலால் காலம் தான் இந்த விதமான துக்கங்களையும் மாற்ற வேண்டும். அழுது புலம்பிக் கொண்டிராமல் இறந்தவருக்குச் செய்ய வேண்டிய நீத்தார் கடன்களைச் செய்யப் புறப்படு” என்று நீலநாகமறவர் ஆறுதல் கூறினார். சற்றுமுன் தன்னைக் கடுமையாகக் கோபித்துக் கொண்டவர்தானா இப்போது இப்படி ஆறுதல் கூறுகிறார் என்று வியப்பாயிருந்தது இளங்குமரனுக்கு. பெரிய துக்கத்தில் மனிதர்களுக்கு இடையே உள்ள சிறிய கோபதாபங்கள் கரைந்து விடுகின்றன. கலங்கிய கண்களோடு தன் மேல் சாய்ந்து கொண்டே தன் முகத்தை நிமிர்ந்து பார்த்த இளங்குமரனின் தலையைக் கோதிக் கொண்டே, “அருட்செல்வ முனிவர் எப்படி உனக்கு நிழல்மரமாக இருந்தாரோ, அப்படி இனிமேல் நான் இருப்பேன். நீ தவறாக நடந்து கொள்வதாகத் தெரிகிறபோது நான் கடிந்து கொண்டால் அதை நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு தந்தைக்குத் தன் மகனைக் கடிந்து கொண்டு நல்வழிப்படுத்த உரிமை உண்டு அல்லவா?” என்று பாசத்தோடு கூறினார் நீலநாகமறவர்.
“உலகத்துக்கெல்லாம் பொழுது விடிந்து கொண்டிருக்கிற இந்த நேரத்தில் எனக்கு மட்டும் இப்படி ஒரேயடியாக இருண்டு விட்டதே” என்று நீலநாகமறவரின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு இளங்குமரன் துன்பத்தை ஆற்ற முடியாமல் மேலும் பொங்கிப் பொங்கி அழலானான். கதக்கண்ணன் முதலிய நண்பர்களும் கண்களில் நீர் மல்க அருகில் வந்து நின்றார்கள்.
“நினைத்து நினைத்து வேதனைப்படாதே, தம்பீ! மனத்தை ஆற்றிக் கொள். துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளத் தெரியாதவர்களுக்குத்தான் பகலும் இரவு போல் இருண்டு தோன்றும். நீ வீரன். அப்படி உனக்குத் தோன்ற விடலாகாது” என்று மீண்டும் அவனுக்கு இதமாக எடுத்துச் சொல்லி ஆற்ற முயன்றார் நீலநாகமறவர்.
தான் வெளியே சொல்லிக் கொள்ள முடியாமல் தன் மனதுக்குள்ளேயே அழவேண்டிய பெருங்குறை ஒன்றையும் இளங்குமரனால் அப்போது நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அருட்செல்வ முனிவர் தீயில் சிக்கி மாண்டபோதே அவனுடைய பிறப்பையும், பெற்றோரையும் பற்றிய உண்மையும் எரிந்து அழிந்து போய் விட்டது. அந்த இரகசியத்தைத் தெரிந்து கொண்டிருந்த ஒரே மனிதரும் மாண்டு போய்விட்டார் என்று அறிந்த போது அவனுக்கு உலகமே இருண்டு போனாற் போல் துயரம் ஏற்படத்தான் செய்தது. எதை அறிந்து கொள்ளும் ஆவலினால் அவனுக்கு வாழ்க்கையில் சுவையும், விருப்பமும் நிறைந்திருந்தனவோ அதை இனிமேல் அவன் யாரிடமிருந்து அறிந்து கொள்வான்? அவனுடைய அருமைத் தாயை அவனுக்கு யார் காட்டுவார்கள்? நீலநாகமறவர் கூறியதுபோல் உலகத்தையே தாயாக எண்ணி மகிழ வேண்டியதுதானா? அவ்வளவுதான் அவனுக்குக் கொடுத்து வைத்ததா?
“இப்படி நின்று அழுதுகொண்டே இருந்தால் நேரமும் கண்ணீரும்தான் செலவாகும். வா, இறந்தவருக்குச் செய்ய வேண்டிய நீத்தார் கடன்களைச் செய்யலாம்” என்ற நீலநாகமறவர் அவனைக் கைப்பற்றி அழைத்துக் கொண்டு போனார்.
‘உயிரோடிருந்து கொண்டே காரியத்துக்காகச் செத்துப் போனதாகப் பொய்யைப் பரப்பிட ஏற்பாடு செய்தவருக்கு மெய்யாகவே இறந்தது போல் நீத்தார் கடனாற்ற விடலாமா?’ என்று மனத்துக்குள் தயங்கினார் வீரசோழிய வளநாடுடையார். ஆனால் அவர் இளங்குமரனைத் தடுத்து நிறுத்தவில்லை. தடுத்தால் பொய்ம்மை நாடகம் வெளியாகிவிடுமோ என்ற அச்சத்தால் மௌனமாயிருந்து விட்டார்.
நீலநாகமறவர் இளங்குமரனைச் சக்கரவாளக் கோட்டத்துக்கு அழைத்துப் போய் நீத்தார் கடன்களைச் செய்து கொண்டிருந்த அதே நேரத்தில் வீரசோழிய வளநாடுடையார் ஆலமுற்றத்துக் கோயிலில் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.
“இறைவா! இந்த இரகசியத்தை உரிய காலம் வரை காப்பாற்றும் மனத்திடத்தை எனக்குக் கொடு! எல்லாம் நலமாக முடிந்தபின் இறுதியில் என் அருமைப் பெண் முல்லை அந்தப் பிள்ளையாண்டானுக்கு மாலை சூட்டி அவனுக்கு வாழ்க்கைத் துணையாகும் பாக்கியத்தையும் கொடு” என்று வேண்டிக் கொண்டிருந்தார். இப்படி இறைவனை வேண்டிக் கொண்டே கண்களை மூடியவாறே தியானத்தில் ஆழ்ந்த போது இளங்குமரன் புன்னகை தவழும் முகத்தோடு தன் பெண் முல்லையின் கழுத்தில் மாலை சூட்டுவது போல் ஒரு தோற்றம் அவருக்கு மானசீகமாகத் தெரிந்தது. அந்தத் தோற்றத்தை மெய்யாகவே தம் கண்கள் காணும் நாள் விரைவில் வரவேண்டுமென்ற ஆவலோடு ஆலமுற்றத்திலிருந்து திரும்பினார் வளநாடுடையார்.
அவர் வீட்டுக்கு வந்ததும் முல்லை அருட்செல்வ முனிவரின் மரணத்தைப் பற்றி அவரைக் கேட்டாள்:
“என்னப்பா அருட்செல்வரின் தவச்சாலையில் தீப்பற்றி எரிந்து அவர் இறந்து போனாராமே? புறவீதியெல்லாம் எங்கும் இதே பேச்சாக இருக்கிறது. நேற்றிரவு நீங்கள் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லையே?” என்று பரபரப்புடன் பதறிக் கேட்ட மகளுக்குச் சுருக்கமாய்ப் பதற்றமின்றி பதில் சொன்னார் வளநாடுடையார்:
“நேற்றிரவே எனக்குத் தெரியும், முல்லை! ஆனால் நடு இரவில் உன்னிடம் அதைச் சொல்லி உன் மனத்தை வருத்த விரும்பவில்லை. இப்போதுதான் இளங்குமரனுக்கே அந்தச் செய்தியைச் சொல்லிவிட்டு வருகிறேன்” என்று நிதானமாகக் கூறினார் வளநாடுடையார்.
‘நெருங்கிய தொடர்புள்ள ஒருவரின் மரணத்தைப் பற்றி அதிக துக்கமில்லாமல் இப்படி இயல்பான விதத்தில் அறிவிக்கிறாரே’ - என்று தந்தை அருட்செல்வரின் மரணத்தைக் கவலையின்றி அறிவித்த விதத்தை எண்ணித் திகைப்படைந்தாள் முல்லை.
தோழி வசந்தமாலை தீபத்தை ஏற்றிக்கொண்டு உடன்வர மாடத்துக்குள் நுழைந்த சுரமஞ்சரி அங்கே முன்கூடத்தில் சினத்தோடு வீற்றிருந்த தன் தந்தையாரையும் நகைவேழம்பரையும் கண்டும் காணாதவள் போல் அவர்களைப் புறக்கணிக்கும் குறிப்புடன் விலகி நேரே நடக்கலானாள். வேளையில்லாத வேளையில் அவர்கள் அங்கே வந்து அமர்ந்திருப்பது முறையில்லை என்பதை அவர்களுக்கே உணர்த்த வேண்டுமென்பதற்காகத் தான் சுரமஞ்சரி அப்படிப் புறக்கணித்தாற்போல் பாராமுகமாக நடந்து சென்றாள்.
ஆனால் அவளும் தோழியும் முன் கூடத்தைக் கடந்து, அலங்கார மண்டபம், சித்திரச்சாலை முதலிய பகுதிகளுக்குச் செல்லும் இரண்டாம் கூடத்து வாயிலை நெருங்கிய போது தந்தையாரின் குரல் பின்புறமிருந்து அவர்களைத் தடுத்து நிறுத்தியது. அந்தக் குரலில் சினமும், கடுமையும் மிகுதியாயிருந்தன.
“சுரமஞ்சரி! இப்படி வந்துவிட்டுப் போ. உன்னை எதிர்பார்த்துத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம்.”
அவள் திரும்பி நின்றாள். தந்தையார் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறாற் போல் ஆத்திரத்தோடு காட்சியளித்தார். நகைவேழம்பர் என்னும் கொடுமையின் வடிவமும் அவர் அருகில் இருந்தது.
“உன்னைத்தான் கூப்பிடுகிறேன், இப்படி வா மகளே!”
அமைதியான அந்த இரவு நேரத்தில் சுரமஞ்சரியின் மாடத்துச் சுவர்களில் அவளுடைய தந்தையாரின் இடி முழக்கக் குரல் இரண்டாம் முறையாக எதிரொலித்து அதிர்ந்தது. பயத்தினால் வசந்தமாலை நடுங்கினாள். அவளுடைய கையிலிருந்த தீபமும், தீபத்தின் சுடரும் சேர்ந்து நடுங்கின. சுரமஞ்சரி பதில் கூறாமல் நின்ற இடத்திலேயே நின்றாள். ஊன்றுகோலை ஊன்றிக் கொண்டே வலது காலைச் சாய்த்து சாய்த்து நடந்து அவரே அவளருகில் வந்தார். அவருடைய ஊன்றுகோலின் கைப்பிடியில் ஒரு யாளி வாயைப் பிளந்து கொண்டிருப்பது போன்ற சிங்கமுகத் தோற்றம் செதுக்கப் பெற்று அதன் கண்களுக்கு இரத்தக் குமிழிகள் போல் இரண்டு சிவப்பு இரத்தினக் கற்களும் பதிக்கப்பட்டிருந்தன. அவர் சுரமஞ்சரியை நோக்கிக் கோபத்தோடு பாய்ந்து, பாய்ந்து நடந்து வந்த வேகத்தில் அவருடைய முகமே, ஊன்றுகோலின் சிங்க முகத்தை விடக் கடுமையாகத் தோன்றுவது போலிருந்தது. கைப்பிடியின் சிங்க முகத்தில் கண்களுக்காகப் பதித்திருந்த இரத்தினக் கற்கள் தீ மொட்டுக்களைப் போல் விளக்கின் ஒளியில் மின்னின. அசையாமல் நின்று கொண்டிருந்த சுரமஞ்சரிக்கு அருகில் வந்து சாய்ந்தாற்போல் ஊன்றுகோலை ஊன்றிக் கொண்டு நின்றபின் அவர் கேட்டார்:
“பொன்னையும், மணிகளையும், முத்துக்களையும் கப்பலேற்றி வணிகம் செய்து செல்வம் குவித்துக் கொண்டிருப்பதாக நேற்று வரையில் நான் பெருமைப்பட்டதுண்டு மகளே! ஆனால் இன்றுதான், உன்னைப் போல் குடிப்பெருமையையும், மானத்தையும் சேர்த்துக் கப்பலேற்றும் மகள் ஒருத்திக்கு நான் தந்தையாக இருக்கிறேன் என்ற சிறுமையை முதல் முதலாக உணர்கிறேன்.”
இதைக் கேட்டுச் சுரமஞ்சரியின் அழகிய கண்கள் சிவந்தன. பவழ மொட்டுக்களைப் போன்ற இதழ்கள் கோபத்தினால் துடித்தன. பிறை நிலாவைப் போல் மென்மையும், தண்மையும் ஒளிரும் அவளுடைய நெற்றி மெல்லச் சுருங்கியது. சிவந்த கண்களும், துடிக்கும் இதழ்களும், சுருங்கிய நெற்றியுமாக நிமிர்ந்து தந்தையாரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் சுரமஞ்சரி. பார்த்துக் கொண்டே அவரைக் கேட்டாள்:
“மானம் கப்பலேறும்படி கெடுதலாக நான் என்ன செய்து விட்டேன், அப்பா?”
“இன்னும் என்ன செய்ய வேண்டும் மகளே? இதுவரை செய்திருப்பது போதாதா? இதோ இந்த மடல் நீ எழுதியதுதானே?” என்று கேட்டுக் கொண்டே பின்புறம் நின்றிருந்த நகைவேழம்பர் பக்கமாகத் திரும்பினார் அவர். உடனே நகைவேழம்பர் முன்னால் வந்து தம் இடுப்புக் கச்சையிலிருந்து சற்றே கசங்கினாற் போல் இருந்த வெண்தாழை மடல் ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தார். அவர் அதை வாங்கிச் சுரமஞ்சரியிடம் நீட்டினார். அதை வாங்கிப் பார்த்ததும் சுரமஞ்சரி தலைகுனிந்தாள். திருட்டைச் செய்கிறபோதே அகப்பட்டுக் கொண்ட திருடன் போல் நாணி நின்றாள் அவள். தான் இளங்குமரனுக்காக எழுதி மணிமார்பனிடம் கொடுத்தனுப்பிய மடல் தந்தையாருக்கும், நகைவேழம்பருக்கும் எப்படிக் கிடைத்ததென்று விளங்கிக் கொள்ள முடியாமல் தவித்தது அவள் மனம். ஓவியன் தனக்கு மிகவும் வேண்டியவனைப் போல் நடித்துத் தன்னையே ஏமாற்றி விட்டானோ என்று சந்தேகம் கொண்டாள் அவள். அந்த ஒரு கணம் அவள் மனத்தில் உலகமே சூழ்ச்சியாலும், சந்தேகங்களாலும், ஏமாற்றுக்களாலும் உருவாக்கப்பட்டது போல் ஒரு பயம் ஏற்பட்டது.
“ஏன் தலைகுனிகிறாய் மகளே? நாணமும் அச்சமும் இருந்தால் நடு இரவுக்கு மேல் எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தேரில் வெளியேறிச் சென்று அப்பன் பெயர் அம்மை பெயர் தெரியாத ஆண்பிள்ளையைச் சந்தித்து வரத் துணிவு ஏற்படுமா? சந்திப்பிற்கு வரச்சொல்லி மடல் எழுதத்தான் துணிவு ஏற்படுமா? இந்த மாளிகையின் பெருமை, நமது குடிப்பிறப்பு, செல்வநிலை, தகுதி எல்லாவற்றையும் மறந்து எவனோ ஊர் சுற்றும் விடலைப் பயலுக்கு, ‘நெஞ்சு களம் கொண்ட அன்பரே’ என்று மடல் எழுத நீ எப்படித்தான் துணிந்தாயோ?”
நகைவேழம்பரையும் அருகில் வைத்துக் கொண்டு தந்தையார் தன்னை இப்படிப் பேசியது சுரமஞ்சரிக்கு வேதனையாகவும், அவமானமாகவும் இருந்தது. ‘அவரையும் வைத்துக் கொண்டு தந்தையார் தன்னை இப்படிக் கண்டித்துப் பேசினால் நாளைக்கு அவர் எப்படித் தன்னை மதிப்பார்?’ என்று நினைத்து மனங்குன்றிப் போய் நின்றாள் சுரமஞ்சரி.
“இந்த வேளையில் இதற்குமேல் அதிகமாக எதையும் உன்னிடம் பேசிக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை மகளே! ஆனால் ஒன்றை மட்டும் நன்றாக நினைவு வைத்துக்கொள். இந்த ஏழடுக்கு மாளிகையைக் கல்லினாலும் மரத்தினாலும் மட்டும் இவ்வளவு பெரிதாக நான் ஆக்கவில்லை. இந்த மாளிகையின் கல்லோடு கல்லாய், மரத்தோடு மரமாய்ப் பன்னெடுங்காலம் பரிந்து பயந்து சம்பாதித்த குடிப்பெருமையையும், செல்வாக்கையும், புகழையும் சேர்த்துத்தான் இவ்வளவு உயரமாக இதை நிமிர்ந்து நிற்கச் செய்திருக்கிறேன். இந்த உயரம் சரிந்து போக நீயே காரணமாகிவிடக் கூடாது! போ, போய்ப் படுத்துக் கொள். மற்றவற்றை நாளைக்குப் பேசிக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டு நகைவேழம்பரையும் உடன் அழைத்துக் கொண்டு தந்தையார் கீழே இறங்கிச் சென்று விட்டார்.
அவர் அந்த இடத்திலிருந்து சென்ற பின்பும் சிறிது நேரம் அங்கேயே அப்படியே தலைகுனிந்து நின்று கொண்டிருந்தாள் சுரமஞ்சரி. தந்தையார் குடிப்பெருமையைப் பற்றிக் கூறிய சொற்களுக்காக அவள் கவலைப்படவில்லை. கப்பல் வணிகத்திலும் பிறவற்றிலும் பல்லாண்டுகளாகப் பழகிப் பழகிச் சூழ்ச்சிகளும், சாதுரியமாகப் பேசும் ஆற்றலும் பெற்றிருந்ததைப் போலவே எதிராளியைத் தம் கருத்துக்கேற்ப வளையச் செய்ய எந்த வார்த்தைகளை எப்படி இணைத்துப் பேச வேண்டுமோ அப்படிப் பேசி விடுவதிலும் தந்தையார் தேர்ந்தவர் என்பது அவளுக்குத் தெரியும். மாளிகையையே குடிப்பெருமையால் நிமிர்ந்து நிற்கச் செய்திருப்பதாக அவர் கூறியவிதம் அழகாகவும், உருக்கமாகவும் இருந்தது அவளுக்கு. ஆனால் அவர் அப்படிக் கூறிவிட்டதற்கு ஏற்பத் தான் இளங்குமரனுக்கு மடல் எழுதியதோ, இரவில் அவனைச் சந்திப்பதற்காகத் தேடிக் கொண்டு சென்றதோ, குடிப்பெருமைக்குக் குறைதேடும் காரியங்கள் என்று அவள் ஒருபோதும் நினைக்கவோ ஒப்புக் கொள்ளவோ சித்தமாயில்லை. இளங்குமரனைக் கண்களாற் காணும்போதும் நெஞ்சினால் நினைக்கும் போது தான் உணரும் பெருமை, வேறெந்த நினைவினாலும் எய்துவதற்கு அரிதாயிருந்தது அவளுக்கு. தான் எவற்றையும் வேண்டித் தவிக்காமல், தன்னுடையவை என்றிருக்கும் எல்லாவற்றுக்காகவும் எல்லாரும் ஏங்கவும் தவிக்கவும் செய்துவிடுகிற ஓர் ஒளி அவன் முகத்திலும் கண்களிலும் இருக்கிறதே! அதற்கு முன் அவள் குடிப்பெருமை எம்மாத்திரம்? அவள் தந்தையின் அரசபோக ஆடம்பரங்களும், மலைபோல் குவிந்த செலமும் எம்மாத்திரம்? விழியிலும், மொழியிலும், இதழிலும், நகைப்பிலுமாக ஆண்மையைச் சூறையாடுவதற்கு அவள் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும் எழில் நுணுக்கங்கள் எம்மாத்திரம்? இளங்குமரனின் மனத்தையும், அந்த மனத்தின் விருப்பத்தையும் வெற்றி கொள்வதை விட உயர்ந்த பெருமை இந்த உலகத்தில் வேறொன்றும் இருக்க முடியாது என்பதை இந்திர விழாவின் முதல் நாள் மாலை கடற்கரையில் அவனைச் சந்தித்துப் பேசிய சில விநாடிகளிலேயே அவள் உறுதி செய்து கொண்டு விட்டாள். அந்த உறுதியையும், முடிவையும் அவள் இனிமேல் யாருக்காகவும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை. இளங்குமரனின் இறுமாப்போடு கூடிய அழகை வெற்றி கொள்வதற்காகத் தன்னுடைய இறுமாப்பை இழந்துவிட நேருமானாலும் அவள் அந்த இழப்பை ஏற்றுக் கொள்ளத் துணிந்திருந்தாள். காதலில் இழப்பதும், தோற்பதும், விட்டுக்கொடுப்பதும் கூட வெற்றிகள்தானே?
இவ்வாறு கையில் கசங்கிய தாழை மடலும், நெஞ்சில் மணக்கும் நினைவுகளுமாக நின்று கொண்டிருந்த சுரமஞ்சரி, ‘படுத்துக் கொள்ளப் போகலாமே அம்மா’ என்று வசந்தமாலை அழைத்தபோதுதான் தன் நினைவு பெற்றாள்.
மென்மையான பூக்களைக் குவித்து அவற்றின்மேல் படுத்துறங்குவது போல் பட்டு மெத்தை விரித்த மஞ்சத்தில் பஞ்சணைகளிற் சாய்ந்து படுத்த போது சோர்ந்து களைத்த அவள் உடல் சுகம் கண்டது. ‘இதே வேளையில் படைக்கலச் சாலையின் கரடு முரடான தரையில் எங்காவது ஒரு மூலையில் இளங்குமரனின் பொன்னுடல் புரண்டு கொண்டிருக்கும்’ என்று நினைத்த போது தானும் மஞ்சத்திலிருந்து கீழிறங்கி வெறுந்தரையில் படுத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது அவளுக்கு. இளங்குமரன் எங்கெங்கே எந்தெந்த நேரங்களில் என்னென்ன வசதிக் குறைவுகளை அனுபவித்துத் துன்பப்பட்டுக் கொண்டிருப்பானோ அவ்வளவையும் தானும் தனக்கு ஏற்படுத்திக் கொண்டு துன்பத்தை அனுபவிக்க வேண்டும்போல மனத்துடிப்பு அடைந்தாள் சுரமஞ்சரி.
அருகில் வசந்தமாலை இருந்ததனால் வெறுந்தரையில் படுக்கும் எண்ணத்தை அன்றிரவு அவள் நிறைவேற்றிக் கொள்ள இயலவில்லை. வெறுந்தரையில் படுத்தால் வசந்தமாலை ‘ஏன்’ என்று கேட்பாள். ‘இளங்குமரன் அங்கே வெறுந்தரையில் படுத்திருப்பார். அதனால்தான் நானும் இங்கே வெறுந்தரையில் படுத்துக் கொள்கிறேன்’ என்று வெட்கத்தை விட்டு அவளுக்குப் பதில் சொல்ல முடியுமா? ‘பெண்ணுக்கு நாணமும், அந்த நாணத்துக்கு ஓர் அழகும் இருப்பதற்குக் காரணமே அவளுடைய மனத்துக்கு மட்டுமே சொந்தமான சில மெல்லிய நினைவுகள் வாய்ப்பதுதானே? அந்த நினைவுகளை எல்லாரிடமும் எப்படிப் பங்கிட்டுக் கொள்ள முடியும?’ இதை நினைத்த போது சுரமஞ்சரி தனக்குத்தானே புன்னகை புரிந்து கொண்டாள்.
சிறிது நேர மௌனத்துக்குப் பின் இருந்தாற் போலிருந்து தனக்கு அருகில் கீழே தரையில் படுத்திருந்த வசந்தமாலையிடம் ஒரு கேள்வி கேட்டாள் சுரமஞ்சரி.
“ஏனடி வசந்தமாலை! செல்வத்தைச் சேர்ப்பதும், சேர்த்து ஆள்வதும் பெருமைக்கும் கர்வப்படுவதற்கும் உரிய காரியமானால், செல்வத்தையே அலட்சியம் செய்கிற தீரன் அதைவிட அதிகமாகப் பெருமையும் கர்வமும் கொண்டாடலாம் அல்லவா?”
“இப்போது திடீரென்று இந்தச் சந்தேகம் உங்களுக்கு எப்படி முளைத்தது அம்மா?”
“சந்தேகத்துக்காகக் கேட்கவில்லையடி; அப்படிப் பெருமை கொண்டாடுகிற ஒருவரை எனக்குத் தெரியும். இப்போது அவர் நினைவு வந்தது, அதனால்தான் கேட்டேன்.”
இவ்வாறு சொல்லிச் சுரமஞ்சரி சிரித்தபோது வசந்தமாலையும் எதையோ புரிந்து கொண்டவள் போல் தலைவியோடு சேர்ந்து சிரித்தாள். அப்போது தான் இருந்த மஞ்சத்துக்கு எதிரே சாளரத்தின் வழியே விண்மீன்களும், சந்திரனும் திகழும் வானத்தைக் கண்டாள் சுரமஞ்சரி. விண்மீன்கள் சாதாரண ஆண்பிள்ளையாகவும், சந்திரன் பேராண்மையாளனாகிய இளங்குமரனாகவும் மாறி அவள் கண்களுக்குத் தோன்றினார்கள்.
காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது. மாபெரும் காவிரிப்பூம்பட்டின நகரத்தின் தோற்றத்துக்கே புதிய மகிழ்ச்சியையும் கொண்டாட்டமான ஆரவாரங்களையும் அளித்துக் கொண்டிருந்த இந்திரவிழாவின் நாட்களில் இன்னும் ஒன்றே ஒன்றுதான் எஞ்சியிருந்தது. இருபத்தேழு நாட்கள் இருபத்தேழு வினாடிகள் போல் வேகமாகக் கழிந்துவிட்டன. நாளைக்கு எஞ்சியிருக்கும் ஒரு நாளும் முடிந்துவிட்டால் மறுபடியும் இந்திரவிழாவின் இனிய நாட்களை நுகரப் பன்னிரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். வெறும் நாளிலேயே திருநாள் கொண்டாடுவது போலிருக்கும் அந்த நகரம் திருநாள் கொண்டாடும்போது இன்னும் சிறப்பாக இருக்கும். விழா முடிந்த மறுநாளிலிருந்து நாளங்காடியின் கடைகள், பட்டினப்பாக்கத்தின் செல்வ வளமிக்க வீதிகள், மருவூர்ப்பாக்கத்தின் நெருக்கமான பகுதிகள் ஆகிய எல்லா இடங்களிலும் இந்திர விழாவின் புதுமை ஆரவாரங்களெல்லாம் குறைந்து, வழக்கமான ஆரவாரங்களோடு அமைதி பெற்றுவிடும்.
இந்திர விழாவின் இறுதி நாள் சிறப்பு வாய்ந்தது. அன்று தான் காவேரியின் நீராடு துறைகளில் சிறந்ததும், நகரத்திலேயே இயற்கையழகுமிக்க பகுதியுமாகிய கழார்ப் பெருந்துறையில் பூம்புகார் மக்கள் நீராட்டு விழாக் கொண்டாடுவது வழக்கம். காவிரிப்பூம்பட்டினத்தின் மேற்குப் பகுதியில் காவிரி அகன்றும் ஆழ்ந்தும் பாயும் ஓரிடத்தில் கழார்ப் பெருந்துறை என்னும் நீராடு துறை அமைந்திருந்தது. நீராட்டு விழாவுக்கு முதல்நாள் மாலையிலேயே நகரமக்கள் காவிரிக்கரையிலுள்ள பொழில்களிலும், பெருமரச் சோலைகளிலும் போய்த் தங்குவதற்குத் தொடங்கி விட்டார்கள். நகரமே வெறுமையாகிக் காவிரிக் கரையில் குடியேறிவிட்டது போல் தோன்றியது. கடுமையான வேனிற்காலத்தில் குளிர்ந்த பொழில்களிலும், நதிக்கரையிலும் வசிக்கும் வாய்ப்புக் கிடைத்தால் நகர மக்கள் அதை அநுபவிக்காமல் விடுவார்களா? காவிரிக்கரையில் சித்திரக் கூடாரங்களும், கூரை வேய்ந்த கீற்றுக் கொட்டகைகளும் அமைத்துத் தங்கி மறுநாள் பொழுது விடிவதையும் நீராட்டுவிழா இன்பத்தையும் ஒருங்கே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் நகர மக்கள்.
கழார்ப் பெருந்துறைக்குச் செல்லும் சோலைசூழ் சாலையின் இருபுறமும் தேர்களும், பல்லக்குகளும், யானைகளும், வேறு பல சித்திர ஊர்திகளும் நிறைந்திருந்தன. குளிர்ச்சியும் பூஞ்சோலைகளின் நறுமணமும் மிகுந்து விளங்கும் இந்தச் சாலையைத் தண்பதப் பெருவழி என்றும், திருமஞ்சனப் பெருவழி என்றும் இதன் சுகத்தையும் இன்பத்தையும் உணர்ந்த பூம்புகார் மக்கள் பேரிட்டு அழைத்துப் போற்றி வந்தார்கள். காவேரியின் நீரோட்டத்தைத் தழுவினாற் போல் அமைந்த காரணத்தினால் எக்காலத்திலும் சில்லென்று தண்மை பரவித் தங்கிய சாலையாயிருந்தது இது. அதனால்தான் ‘தண்பதப் பெருவழி’ என்று பெயரும் பெற்றிருந்தது. திருமஞ்சனம் என்றால் மங்கல நீராடல் என்று பொருள். பலவிதமான மக்கள் நீராடல்களுக்கும் இந்தத் துறை இடமாக இருந்தது. காவிரித் துறைக்குப் போய் நீராடுவது ஒருபுறமிருக்க நீராடுவதற்காக இந்தச் சாலையின் வழியே நடந்து போகும்போதே உடம்பு நீராடின சுகத்தை உணர்ந்துவிடும். அத்துணைக் குளிர்ச்சியான இடம் இது.
நகரின் கிழக்குப் பகுதியாகிய மருவூர்ப்பாக்கத்து மக்கள் மேற்குப் பகுதியாகிய காவிரித்துறையிற் சென்று தங்கிவிட்டதனால் மருவூர்ப் பாக்கமும் கடற்கரைப் பகுதிகளும் வழக்கத்துக்கு மாறான தனிமையைக் கொண்டிருந்தன. கடல் அலைகளின் ஓலமும் காற்றில் மரங்கள் ஆடும் ஓசையையும் தவிர மருவூர்ப் பாக்கத்தின் கடலோரத்து இடங்களில் வேறு ஒலிகள் இல்லை. எப்போதும் ஆள் பழக்கம் மிகுந்து தோன்றும் நீலநாகர் படைக்கலச் சாலையில் கூட அன்று பெரும் அமைதி நிலவியது. படைக்கலச் சாலையைச் சேர்ந்த இளைஞர்கள் எல்லாரும் கழார்ப் பெருந்துறைக்குப் போய்விட்டார்கள். நீலநாகமறவரும் அன்று ஊரில் இல்லை. காவிரிப்பூம்பட்டினத்துக்கு அருகில் சிற்றரசர் குடியினரான வேளிர்களின் நகரம் ஒன்று இருந்தது. அந்த நகரத்துக்குத் திருநாங்கூர் என்று பெயர். சிறப்புக்குரிய குறுநில மன்னர் மரபினரான நாங்கூர் வேளிர்களின் தலைநகராகிய அவ்வூரில் நீலநாகமறவருக்கு ஞான நூல்களைக் கற்பித்த முதுபெரும் புலமை வாய்ந்த ஆசிரியர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்த முதுபெரும் புலவருக்கு நாங்கூர் அடிகள் என்று பெயர். ஆண்டு தோறும் சித்திரைத் திங்களில் இந்திர விழா முடியும் போது நாங்கூர் அடிகளைச் சந்தித்து வணங்கி வாழ்த்துப் பெற்றுக் கொண்டு வருவது நீலநாகமறவரின் வழக்கம். பூம்புகார் மக்கள் காவிரியின் குளிர் புனலாடிக் களிமகிழ் கொண்டு திரியும் இந்திரவிழாவின் இறுதி நாட்களில் நீலநாகமறவர் நாங்கூரில் வயது முத்துத் தளர்ந்த தன் ஆசிரியருக்குப் பணிவிடைகள் புரிந்து கொண்டிருப்பார் அவ்வாறு தம் ஆசிரியருக்குப் பணிவிடைகள் புரியும் காலத்தில் தாம் சோழ நாட்டிலேயே இணையற்ற வீரர் என்பதையும், தம்முடைய மாபெரும் படைக்கலச் சாலையில் தாம் பல மாணவர்களுக்கு ஆசிரியர் என்பதையும் அவர் மறந்துவிடுவார். தம்மை ஆசிரியராக்கிய ஆசிரியருக்கு முன்பு தான் என்றும் மாணவ நிலையில் இருக்க வேண்டுமென்ற கருத்து அவருக்கு எப்போதும் உண்டு. அந்தக் கருத்திலிருந்து அவர் மனம் மாறுபட்டதே கிடையாது.
அந்த ஆண்டிலும் இந்திர விழாவின் இறுதி நாளுக்கு முதல் நாள் காலையிலேயே படைக்கலச் சாலையைச் சேர்ந்த தேரில் திருநாங்கூருக்குப் புறப்பட்டுப் போயிருந்தார் நீலநாகமறவர். நீராட்டு விழாவுக்கு முந்திய நாள் பகலிலேயே படைக்கலச்சாலை ஆளரவமற்று வெறிச்சோடிப் போய்விட்டது. நீலநாகமறவர் திருநாங்கூர் நோக்கிப் புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் அங்கிருந்த மற்ற இளைஞர்களும் கூட்டம் கூட்டமாக காவிரித்துறைக்குப் போய் நீராட்டு விழாக் கோலாகலத்தில் மூழ்கி மகிழச் சென்று விட்டார்கள். நாளைக்குத்தான் விழா நாள் என்றாலும் உற்சாகத்தை அதுவரை தேக்கி வைக்க முடியாமல் இன்றைக்கே புறப்பட்டுச் சென்றிருந்தார்கள் அவர்கள்.
ஆனால் அதே நாளில் அதே வேளையில் வெளியே சென்று நகரத்தில் இந்திர விழா மகிழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பாமல் படைக்கலச் சாலையின் எல்லைக்குள்ளேயே தனிமையும் தானுமாக இருந்தான் இளங்குமரன்.
கடந்த இருபது நாட்களில் ‘இளங்குமரன் படைக்கலச் சாலையில் எல்லைக்குள்ளிருந்து வெளியேறலாகாது’ என்ற கட்டுப்பாட்டையும் படிப்படியாகத் தளர்த்தியிருந்தார் நீலநாகமறவர். அருட்செல்வமுனிவரின் மறைவால் இளங்குமரன் அடைந்திருந்த துக்கமும், அதிர்ச்சியும் அவனை ஒரே இடத்தில் கட்டுப்படுத்தி அடைத்து வைத்திருப்பதனால் இன்னும் அதிகமாகி விடக்கூடாதே என்று கருதித்தான் அப்படிச் செய்திருந்தார் அவர்.
“இளங்குமரன் படைக்கலச் சாலையிலிருந்து வெளியேறி எங்காவது சென்றாலும் தடுக்க வேண்டாம். ஆனால் நீங்கள் யாராவது அவனோடு துணை போய் வருவது அவசியம்” என்று திருநாங்கூருக்குப் புறப்படுவதற்கு முன்பு கூடக் கதக்கண்ணன் முதலிய இளைஞர்களிடம் அவர் சொல்லிவிட்டுப் போயிருந்தார். அப்படி இருந்தும் இளங்குமரன் தானாகவே வெளியில் எங்கும் செல்வதற்கு விருப்பமின்றிப் பித்துக் கொண்டவன் போலப் படைக்கலச் சாலைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்தான்.
நீலநாகமறவரைத் திருநாங்கூருக்கு வழியனுப்பி விட்டுக் கதக்கண்ணன் இளங்குமரனிடம் வந்து அவனை நீராட்டு விழா நடக்குமிடத்துக்குப் போகலாமென அழைத்தான்.
“இன்று என் மனமே சரியில்லை. வெளியில் எங்கும் போய் வர வேண்டுமென்று உற்சாகமும் எனக்கு இல்லை. முடிந்தால் நாளைக்குக் காலையில் வந்து கூப்பிடு! உன்னோடு காவிரித் துறைக்கு வந்தாலும் வருவேன்” என்று கதக்கண்ணனுக்கு மறுமொழி கூறி அவனை அனுப்பினான் இளங்குமரன்.
நீராடு துறைக்கு எல்லாரும் புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள். இருள் மயங்கும் நேரத்துக்குப் படைக்கலச் சாலையின் முற்றத்தில் இருந்த மேடையில் வந்து காற்றாட உட்கார்ந்து கொண்டிருந்தான் இளங்குமரன். அருட்செல்வ முனிவரின் மறைவுக்குப் பின் அவனுடைய மனமும், நினைவுகளும் துவண்டு சோர்ந்திருந்தன.
நீலநாகமறவர் அவ்வப்போது ஆறுதல் கூறி, அவன் மனத்தைத் தேற்றிக் கொண்டிருந்தார். அன்று அவரும் ஊரில் இல்லாததனால் அவன் மனம் மிகவும் வருந்திக் கொண்டிருந்தது.
‘என்னுடைய கைகளில் வலிமை இருக்கிறது. மனத்தில் ஆவல் இருக்கிறது. ஆனால் இந்த வலிமையைப் பயன்படுத்தி என் பெற்றோரை அறியவும், காணவும் துடிக்கும் ஆவலை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லையே! என் ஆவலைத் தக்க சமயத்தில் நிறைவேற்றுவதாகச் சொல்லிக் கொண்டிருந்த முனிவரும் போய்விட்டார். அவர் இருந்தவரை ஆவல் நிறைவேறாவிடினும், என்றாவது ஒருநாள் அவரால் அது நிறைவேறுமென்று நம்பிக்கையாவது இருந்தது. இப்போது அதுவும் இல்லையே’ என்று நினைத்து நினைத்து, அந்நினைவு மாறுவதற்கு ஆறுதல் ஒன்றும் காணாமல் அதிலேயே மூழ்கியவனாக அமர்ந்திருந்தான் இளங்குமரன்.
மாலைப் போது மெல்ல மெல்ல மங்கி இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. படைக்கலச் சாலையின் பெரிய வாயிற் கதவுகள் மூடப்பெற்று நடுவிலுள்ள சிறிய திட்டிவாயிற் கதவு மட்டும் திறந்திருந்தது. அதையும் மூடிவிடலாம் என்று இளங்குமரன் எழுந்து சென்ற போது, காற்சிலம்புகளும் கைவளையல்களும் ஒலிக்க நறுமணங்கள் முன்னால் வந்து பரவிக் கட்டியங் கூறிடச் சுரமஞ்சரியும் மற்றோர் இளம்பெண்ணும் அந்த வாயிலை நோக்கி உள்ளே நுழைவதற்காகச் சிறிது தொலைவில் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். அவன் மனத்தில் அவள் மேல் கொண்டிருந்த ஆத்திரமெல்லாம் ஒன்று சேர்ந்தது. ‘இப்படி ஒருநாள் வேளையற்ற வேளையில் இங்கே இந்தப் பெண் என்னைத் தேடி வந்ததனால்தானே நீலநாகமறவர் என்மேல் சந்தேகமுற்று என்னைக் கடிந்து கொண்டார்’ என்பது நினைவுக்கு வந்தது அவனுக்கு.
கதவுக்கு வெளியிலேயே நிறுத்தி அவர்களைக் கடுமையாகக் கண்டித்துத் துரத்திவிட வேண்டுமென்று இளங்குமரன் முடிவு செய்து கொண்டான். ஆனால் அவனுடைய ஆத்திரமும் கடுமையும் வீணாகும்படி அந்தப் பெண்கள் நடந்து கொண்டு விட்டார்கள். அவர்கள் படைக்கலச் சாலையின் திட்டி வாயிற் கதவருகே அவன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவனருகில் வராமலே நேராக ஆலமுற்றத்துக் கோவிலுக்குப் போகும் வழியில் திரும்பி நடக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களை எப்படியும் கோபித்துக் கொண்டு ‘இனிமேல் என்னைத் தேடி இங்கே வராதீர்கள்’ என்று கடிந்து சொல்லிவிடவும் துணிந்திருந்த இளங்குமரனுக்கு இது பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.
‘அவள் எங்கே போனால்தான் என்ன? சிறிது தொலைவு பின் தொடர்ந்து சென்றாவது அவளைக் கோபித்துக் கொண்டு தன் ஆத்திரத்தைச் சொல்லித் தீர்த்துவிட வேண்டும்’ என்ற நினைப்புடன் இளங்குமரனும் அந்தப் பெண்களைப் பின் தொடர்ந்தான்.
ஆனால் என்ன மாயமோ? ஆலமுற்றத்தில் பெரிய மர வீழ்துகளின் அடர்த்தியில் அந்தப் பெண்கள் வேகமாக எங்கே மறைந்தார்கள் என்று அவனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அதை விளங்கிக் கொள்ள முடியாமல் ஆத்திரமும் திகைப்பும் மாறி மாறித் தோன்ற அவன் ஆலமரத்தடியில் நின்ற போது அவனால் அப்போது அங்கே முற்றிலும் எதிர்பார்க்கப்படாத வேறு இரண்டு மனிதர்கள் அவனுக்கு முன்னால் வந்து நின்றார்கள்.
அன்று பட்டினப்பாக்கத்திலிருந்து அவனைப் பின் தொடர்ந்த ஒற்றைக் கண் மனிதனும், சுரமஞ்சரியின் தந்தையும் அவன் எதிரே வந்து வழியை மறித்துக் கொள்கிறாற் போல நின்றார்கள்.
“என்ன தம்பீ! மிகவும் உடைந்து போயிருக்கிறாயே? அருட் செல்வமுனிவர் காலமான துக்கம் உன்னை மிகவும் வாட்டி விட்டது போலிருக்கிறது” என்று விசாரிக்கத் தொடங்கிய சுரமஞ்சரியின் தந்தைக்கு பதில் சொல்லாமல் வெறுப்போடு வந்த வழியே திரும்பி நடக்கலானான் இளங்குமரன். “சிறிது பேசிவிட்டு அப்புறம் போகலாமே தம்பீ!” என்று கூறிக்கொண்டே உடன் நடந்து வந்து பிடி நழுவாமல் இளங்குமரனின் கையை அவனே எதிர்பாராத விதமாக அழுத்திப் பிடித்தார் அவர்.
ஆத்திரத்தோடு திரும்பிச் சுரமஞ்சரியின் தந்தையை உறுத்துப் பார்த்தான் இளங்குமரன். அவனுடைய கையை அழுத்திப் பற்றியிருந்த அவர் பிடி இன்னும் தளரவில்லை.
“கையை விடுங்கள் ஐயா!” என்று அவன் கூறிய சொற்களைக் கேட்டு அவர் மெல்ல நகைத்தார். அந்த நகை இளங்குமரனின் கோபத்தை இன்னும் வளர்த்தது. உடனே விரைவாக ஓங்கி உதறித் தன் கையை அவருடைய பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டான் அவன். சுரமஞ்சரியின் தந்தை கோபப்படாமல் அதே பழைய நகைப்புடன் அவனை நோக்கிக் கேட்டார்.
“யாருக்கும் பிடி கொடுக்காத பிள்ளையாயிருப்பாய் போலிருக்கிறதே?”
“பிடித்தவர் பிடியில் எல்லாம் சிக்கிச் சுழல்வதற்கு நான் அடிமையில்லை. நீங்கள் ஆண்டானும் இல்லை.”
“நீ பொதுவாகப் பேசுவதற்கு வாய் திறந்தாலே உன் பேச்சில் ஒரு செருக்கு ஒலிக்கிறது, தம்பீ! ஆத்திரத்தோடு பேசினால் அதே செருக்கு மிகுந்து தோன்றுகிறது. ஆனால் இப்போது யார் முன்னால் நின்று பேசுகிறோம் என்று நீ கவனமாக நினைவு வைத்துக் கொண்டு பேசுவதுதான் உனக்கு நல்லது.”
“எங்களைப் போன்ற அநாதைகளுக்குச் செல்வமில்லை. சுகபோகங்கள் இல்லை. இந்தச் செருக்கு ஒன்று தான் எங்களுக்கு மீதமிருக்கிறது. இதையும் நீங்கள் விட்டு விடச் சொல்கிறீர்களே? எப்படி ஐயா விட முடியும்?”
அப்போது அந்த இருள் மயங்கும் வேளையில் எந்தச் சூழ்நிலையில் எவர் முன்பு நின்று பேசிக் கொண்டிருக்கிறோம் என்பது இளங்குமரனுக்கு நன்றாகப் புரிந்துதான் இருந்தது. தனிமையான ஆலமுற்றத்து மணல் வெளியில் சுரமஞ்சரியின் தந்தையும் அவருக்குத் துணைபோல் வந்திருந்த ஒற்றைக்கண் மனிதனுமாக எதிரே நிற்கும் இருவரும் தனக்கு எவ்வளவு பெரிய தீமையையும் செய்யத் தயங்காதவர்கள் என்பதை உணர்ந்திருந்த இளங்குமரன் அதற்காக அஞ்சவில்லை. ஊன்றிச் சிந்தித்துப் பார்த்த போது அன்று மாலை வேளையில் தொடக்கத்திலிருந்து அங்கு நடந்தவை அனைத்துமே திட்டமிட்டுக் கொண்டு செய்யப்பட்ட சூழ்ச்சியாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டான் இளங்குமரன்.
சற்றுமுன் படைக்கலச் சாலையின் திட்டி வாயிற் கதவருகே சுரமஞ்சரியும் அவள் தோழியும் வருவது போல் போக்குக் காட்டி விட்டு மறைந்தது கூடத் தன்னை உள்ளிருந்து வெளியே வரவழைப்பதற்காகச் செய்யப்பட்ட தந்திரமாக இருக்குமோ என்றும் இளங்குமரன் எண்ணினான். இவ்வாறு எண்ணிக் கொண்டே அந்தப் பெண்கள் எங்காவது தென்படுகிறார்களா என்று மீண்டும் நான்குபுறமும் தன் கண் பார்வையைச் செலுத்தினான் அவன். அப்போது சுரமஞ்சரியின் தந்தை ஏளனமாகச் சிரித்துக் கொண்டே அவனை நோக்கிக் கேட்டார்:
“எதற்காக இப்படிச் சுற்றுமுற்றும் பார்க்கிறாய் என்று எனக்குத் தெரியும் தம்பீ! பெண்களுக்குப் பின்னால் துரத்திக் கொண்டு வந்து இப்படி இந்த ஆண்களுக்கு முன்னால் வகையாக மாட்டிக் கொண்டு விட்டோமே என்று தானே பார்க்கிறாய்?”
“இன்னும் ஒரு முறை அப்படிச் சொல்லாதீர்கள் ஐயா! பெண்களுக்குப் பின்னால் துரத்திக் கொண்டு போகிற வழக்கம் எனக்கு இல்லை. அநாவசியமாக உங்கள் பெண் தான் எனக்குப் பின்னால் விடாமல் என்னைத் துரத்திக் கொண்டு வருகிறாள். நான் அதை விரும்பவில்லை, வெறுக்கிறேன். என்னைத் தேடிக் கொண்டோ, துரத்திக் கொண்டோ உங்கள் பெண் இனிமேல் வரக்கூடாது என்று கண்டித்துச் சொல்வதற்காகத்தான் இப்போது நான் வந்தேன்.”
“அதற்கு இப்போது அவசியமில்லை தம்பீ! நீ யாரை கண்டிக்க வேண்டுமோ, அவள் இப்போது இங்கே வரவில்லை. அவள் இங்கு வரும்போது நன்றாகக் கண்டித்துச் சொல்லி அனுப்பு. நீ அப்படிக் கண்டிப்பதைத் தான் நானும் வரவேற்கிறேன்” என்று அவர் பதில் கூறிய போது இளங்குமரன் பொறுமையிழந்தான்.
“ஏன் ஐயா இப்படி வாய் கூசாமல் பொய் சொல்லுகிறீர்கள்? உங்கள் பெண் சுரமஞ்சரி தன் தோழியுடன் இப்போது இந்த வழியாக வந்ததை நான் நன்றாகப் பார்த்தேனே? ‘வரவில்லை’ என்று நீங்கள் பொய் சொல்லுகிறீர்களே...?”
“நான் பொய் சொல்லுவதற்குப் பல சமயங்கள் நேர்ந்திருக்கின்றன, தம்பீ! சில சமயங்களை நானே ஏற்படுத்திக் கொண்டதும் உண்டு. அவற்றுக்காக நான் வருத்தமோ, வெட்கமோ அடைந்ததில்லை. இனியும் அப்படி பொய் கூறும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டாலும் ஏற்படுத்திக் கொண்டாலும் அவற்றுக்காக நான் வெட்கமடையப் போவதில்லை. நான் பெரிய வாணிகன். மலை மலையாகச் செல்வத்தைக் குவித்துக் கொண்டிருப்பவன். உண்மையை நினைத்து, உண்மையைப் பேசி, உண்மையைச் செய்து செல்வம் குவிக்க முடியாது.
‘நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.’
என்று செல்வம் செய்வதற்கு வகுத்திருக்கும் விதியே தனி வகையைச் சேர்ந்தது, தம்பீ! இந்த நகரில் எவரும் பெறுவதற்கு அரிய எட்டிப் பட்டமும், எண்ணி அளவிட முடியாத பெருஞ்ச் செல்வமும் பெற்று, மாபெரும் சோழ மன்னருக்கு அடுத்தபடி வசதியுள்ள சீமானாயிருக்கிறேன் நான். ஆனால் என்னுடைய இந்தச் செல்வத்துக்கு அடியில் நியாயமும் நேர்மையும், உண்மையும் தான் தாங்கிக் கொண்டிருக்க வேண்டுமென்று நினைத்தால் அது பொய். நான் குவித்திருக்கும் செல்வத்தின் கீழே பலருடைய நியாயம் புதைந்து கிடக்கலாம். அதைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை. வெட்கமும் இல்லை. ஆனால் வாய் தவறி நான் சில உண்மைகளையும் எப்போதாவது சொல்வதுண்டு. அவற்றில் இப்போது சிறிது நேரத்துக்கு முன் உன்னிடம் கூறியதும் ஒன்று.”
“எதைச் சொல்கிறீர்கள்?”
“என் மகள் சுரமஞ்சரியும் அவள் தோழியும் இன்று இப்போது இங்கு வரவேயில்லை என்பதை மறுபடியும் உனக்கு வற்புறுத்திச் சொல்வதற்கு விரும்புகிறேன். இது தான் உண்மை.”
“அந்தப் பெண்கள் இருவரும் இந்தப் பக்கமாக வந்ததை என் கண்களால் நானே பார்த்துவிட்ட பின் நீங்கள் சொல்கிற பொய்யை மெய்யாக எப்படி ஐயா நான் நம்ப முடியும்?”
இளங்குமரனின் இந்தக் கேள்வியைக் கேட்டதுமே படர்ந்து முதிர்ந்த தமது முகத்தில் குறும்பும் விஷமத்தனமும் பரவச் சிரித்தார் சுரமஞ்சரியின் தந்தை. அருகிலிருந்த நகைவேழம்பரும் அதே போலச் சிரித்தார்.
“நான் சொல்வதை நீ நம்ப வேண்டாம். ஆனால் மறுபடியும் உன் கண்களால் நீயே பார்த்தால் நம்புவாயல்லவா?” என்று சொல்லிக் கொண்டே பக்கத்து ஆலமரத்தை நோக்கித் திரும்பிக் கைதட்டி, “மகளே! இப்படி வா” என்று இரைந்து கூப்பிட்டார் அவர். அடுத்த கணம் பருத்த ஆலமரத்தின் அடிமரத்து மறைவிலிருந்து இளங்குமரன் கண் காணச் சுரமஞ்சரி மெல்லத் தலையை நீட்டினாள். அவள் பக்கத்தில் உடன் வந்த தோழிப் பெண்ணும் இருளில் அரைகுறையாகத் தென்பட்டாள். இளங்குமரன் அதைக் கூர்ந்து நோக்கி விட்டு அவர் பக்கம் திரும்பிக் கேட்கலானான்:
“நன்றாகப் பாருங்கள். அதோ ஆலமரத்தடியில் சுரமஞ்சரியும் அவள் தோழியும் தானே நிற்கிறார்கள்? சுரமஞ்சரி இங்கு வரவில்லை என்று நீங்கள் கூறியது பொய்தானே? ஏன் ஐயா இப்படி முழுப் பூசணிக்காயைச் சேற்றில் மறைக்கப் பார்க்கிறீர்கள்?”
இப்படிக் கேட்ட இளங்குமரனுக்குப் பதில் ஒன்றும் கூறாமல் அவன் முகத்தையே இமையாமல் பார்த்தார் சுரமஞ்சரியின் தந்தை.
“எதற்கும் இன்னொருமுறை நன்றாகப் பார்த்து விட்டு சொல்லுங்களேன்” என்று கூறியவாறே இளங்குமரனுக்குப் பக்கத்தில் வந்து நின்று கொண்டு ஒற்றைக் கண்ணரும் அவன் பொறுமையைச் சோதிக்கவே, இவனுக்குக் குழப்பத்தோடு கோபமும் மூண்டது.
“நிறுத்துங்கள், ஐயா! ஒற்றைக் கண்ணால் உலகத்தைப் பார்க்கிற நீங்கள் எப்படி இரண்டு கண்களாலும் நன்றாகப் பார்த்துத் தெரிந்து கொள்வது என்பது பற்றி எனக்கு அறிவுரை கூற வேண்டாம். உங்கள் இரண்டு பேருக்கும் ஏற்பட்டிருக்கிற குழப்பத்தை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். என்னையும் சேர்த்துக் குழப்பாதீர்கள். வேண்டுமானால் ஆலமரத்தடியிலிருந்து அவளை இங்கே இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தி ‘அவள்தான் சுரமஞ்சரி’ என்று நான் உங்களுக்கு விளக்க வேண்டியதுதான்.”
“அப்படியெல்லாம் விளக்குவதற்கு அவசியம் ஒன்றுமில்லை தம்பீ! ஆலமரத்தடியில் நிற்பவள் என்னுடைய மற்றொரு மகள் வானவல்லியாகவும் இருக்கலாமே? உனக்கு ஏன் அந்தச் சந்தேகமே எழவில்லை?” என்று சுரமஞ்சரியின் தந்தை வெளிப்படையாகச் சொல்லிவிட்டுச் சிரித்தபோதும் இளங்குமரன் அதை நம்ப மறுத்துவிட்டான்.
“உங்கள் பெண்கள் இரட்டையர் என்பது எனக்குத் தெரியும் ஐயா! ஆனால் இன்று இங்கு வந்திருப்பது வானவல்லியல்லள், சுரமஞ்சரியேதான். அவர்கள் வரும்போது திட்டி வாசலிலிருந்து நான் தான் நன்றாகப் பார்த்தேனே! நீங்களிருவரும் ஏதோ காரணத்துக்காக என்னை ஏமாற்றிச் சுரமஞ்சரியை வானவல்லியாகக் காண்பிக்க முயல்கிறீர்கள். வானவல்லி இங்கு வரவேண்டிய காரணமேயில்லை. வந்தால் சுரமஞ்சரிதான் இங்கு என்னைத் தேடி வந்து எனக்குக் கெட்ட பெயரும் வாங்கி வைப்பாள். எப்படியாவது போகட்டும். யாராக வேண்டுமானாலும் இருந்து தொலைக்கட்டும். எனக்கென்ன வந்தது? சுரமஞ்சரி வந்தால் என்ன? வானவல்லி வந்தாலென்ன? இவர்கள் யாரும் என்னைத் தேடி எனக்காக இங்கு வரக்கூடாது என்பதுதான் என் கவலை. நீங்கள் பொய் கூறுகிறீர்களே என்பதற்காகத்தான் இவ்வளவு நேரம் வீணாக என் ஆற்றலையும் பேச்சையும் செலவழித்து மறுக்க முயன்றேன்” என்று மேலும் தன் கருத்தில் பிடிவாதமாக இருந்தே பேச்சை முடித்தான் இளங்குமரன்.
அருகில் நெருங்கிச் சிரித்துக் கொண்டே மறுபடியும் அவன் கைகளைப் பற்றினார் சுரமஞ்சரியின் தந்தை. முன்பு பிடித்தது போலன்றி அன்புப் பிடியாக இருந்தது இது. ஆனால் இந்த அன்புப் பிடியிலும் ஏதோ வஞ்சகம் இருப்பதை இளங்குமரன் உணர்ந்தான்.
“நீ சாதுரியமானவன் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை தம்பீ! இப்போது நாங்கள் இருவரும் உண்மையை ஒப்புக் கொண்டு விடுகிறோம். அதோ நிற்கிறவள் சுரமஞ்சரியேதான். உன்னுடைய திறமையைப் பரிசோதிப்பதற்காகத்தான் இவ்வளவு நேரம் என்னென்னவோ சொல்லி உன்னை ஏமாற்ற முயன்றோம். நீ இறுதிவரை உறுதியாக இருந்து உண்மையை வற்புறுத்தி விட்டதால் உன்னுடைய நினைவாற்றலைப் பாராட்டுகிறேன்” என்று தன் கையைப் பிடித்துக் கொண்டே தழுவிக் கொள்கிறாற்போல் அருகே நெருங்கிக் குழைந்தபோது இளங்குமரன் அவர் பிடியிலிருந்து விலகித் தன்னை விடுவித்துக் கொண்டான்.
“கையை விடுங்கள் ஐயா! நான் யாருக்கும் பிடி கொடுக்காதவன் என்று நீங்களே ஒப்புக் கொண்டிருக்கிறீர்களே?” என்று அவரிடமிருந்து விடுவித்துக் கொண்டு இளங்குமரன் திரும்பி நடந்த போது, “நீ யாருக்கும் பிடிகொடுக்காதவன் தான் தம்பீ! ஆனால் இப்போது என்னிடம் சரியாகப் பிடி கொடுத்திருக்கிறாயே!” என்று சூழ்ச்சிப் புன்னகையோடு மர்மமான குரலில் கூறினார் அவர். வேறு பொருள் செய்து கொள்ள இடமிருந்தும் இந்தச் சொற்களை அவ்வளவுக்கு பெரியனவாக மனத்தில் ஏற்றுக் கொண்டு சிந்தனையை வளர்க்காமல் வந்த வழியே திரும்பி படைக்கலச் சாலையை நோக்கி நடந்தான் இளங்குமரன்.
“பட்டினப்பாக்கத்துப் பக்கமாக வந்தால் மாளிகைக்கு அவசியம் வந்து போ, தம்பீ!” என்று அவர் கூறிய உபசாரச் சொற்களையும் அவன் இலட்சியம் செய்யவில்லை. ஆனாலும் பெரிய சூழ்ச்சி ஒன்றின் அருகில் போய்விட்டு மீண்டு வந்ததுபோல் அவன் மனத்தில் ஒரு குழப்பம் இருந்தது.
இளங்குமரன் படைக்கலச் சாலைக்குள் புகுந்து திட்டி வாசற்கதவை அடைத்துக் கொள்கிற ஒலியையும் கேட்ட பின்னர், ஆலமுற்றத்தில் நின்று கொண்டிருந்த நகைவேழம்பர் தம் எதிரே நிற்கும் எட்டிப்பட்டம் பெற்ற பெருநிதிச் செல்வரிடம் இப்படிக் கேட்டார்:
“வாழ்நாளிலேயே ஒரே ஒரு தடவை உண்மையைச் சொல்ல முன் வந்திருக்கிறீர்களே என்று பார்த்து வியந்து கொண்டிருந்தேன். கடைசி விநாடியில் அதையும் பொய்யாக மாற்றி எப்படியோ பயனுள்ளதாக முடித்து விட்டீர்களே?”
“நான் வணிகம் செய்பவன், ஊதியம் கிடைப்பதாயிருந்தால் எதையும் எப்படியும் மாற்றிச் சொல்ல வேண்டியதுதானே? வானவல்லியைச் சுரமஞ்சரி என்று தவறாகப் புரிந்து கொண்டு சாதித்தான் அந்தப் பிள்ளை. நானும் மறுத்துதான் பார்த்தேன். நான் மறுக்க மறுக்க அவன் தன் பிடிவாதத்தை உறுதியாக்கினான். கடைசியில் அவன் சொல்லியதே மெய் என்று ஒப்புக் கொண்டுவிட்டது போல நடித்து நானும் பாராட்டினேன். என்ன காரணம் தெரியுமா நகைவேழம்பரே? அவன் கண்களில் வானவல்லி சுரமஞ்சரியாகத் தென்படுவதைப் பயன்படுத்திக் கொண்டு நாம் சில காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம். அந்த அளவில் அது நமக்கு ஊதியம் தானே?” என்றார் அவர்.
“உங்கள் திட்டமெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்தப் பிள்ளையாண்டானை இவ்வளவு எளிதில் ஏமாளியாக்கி விடமுடியுமென்று எனக்குத் தோன்றவில்லை” என்றார் நகைவேழம்பர்.
மறுநாள் பொழுது புலர்வதற்குச் சில நாழிகைகள் இருக்கும் போதே கதக்கண்ணன் படைக்கலச்சாலைக்கு வந்து இளங்குமரனை நீராட்டு விழாவுக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டான். இளங்குமரனுக்கும் அன்று தனியாகப் படைக்கலச் சாலையிலேயே அடைந்து கிடக்க விருப்பமில்லை. எனவே கதக்கண்ணன் வந்து அழைத்தவுடன் மறுப்புச் சொல்லாமல் உடன் புறப்பட்டு விட்டான்.
பூம்புகாரில் வழக்கமாக இந்திரவிழா நிறைவுநாளில் மழை பெய்வதுண்டு. சில ஆண்டுகளில் சாரல் போல் சிறிதளவு மழையோடு ஓய்ந்துவிடும். இன்னும் சில ஆண்டுகளில் மேக மூட்டத்தோடு வானம் அடைத்துக் கொண்டு தோன்றுமே தவிர மழை பேருக்குத் தூறி ஓய்ந்துவிடும். மிகச் சில ஆண்டுகளில் மட்டும் இந்திரவிழா இறுதியில் தொடங்குகிற மழை பெருங் கோடை மழையாக மாறி வளர்ந்து சில நாட்களுக்குத் தொடர்ந்து பெய்யும். ஒவ்வொரு பருவ காலத்துக்கும் அதன் சூழ்நிலைக்கும் ஏற்பத் தங்கள் வாழ்க்கையை அழகுற அமைத்துக் கொண்டிருந்த பூம்புகார் மக்கள் இதற்கு ‘இந்திரவிழா அடைப்பு’ என்று பெயர் சூட்டியிருந்தார்கள்.
அன்று காலை இந்திரவிழா அடைப்பு பூம்புகாரின் மேல் வானவெளியை அழகிய மேக நகைகளால் அணி செய்திருந்தது. அலங்காரக் கோலத்துடன் தலையைக் கவிழ்ந்து கொண்டு நாணி அமர்ந்திருக்கும் புதுமணப் பெண்ணைப் போல் வானம் முகில்கள் நிறைந்து கவிந்து காட்சியளித்தது. பூஞ்சிதறலாக அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிறு தூறல் தூறிக் கொண்டிருந்தது. பொற் பட்டறையில் தான் உருக்கிய விலைமதிப்பற்ற பொன் உருக்குக் குழம்பைக் கரிபடிந்த தன் உலைக்களத்துத் தரையில் வெப்ப நடுக்குடன் தாறுமாறாக ஊற்றும் கொல்லனைப் போல் வெள்ளியுருக்கி வீசிய மின்னல்கள் கரியவானில் நீண்டு ஓடிச் சரிந்து மறைந்து கொண்டிருந்தன. கோடையிடிகள் வேறு கொட்டி முழங்கின. வானமும் திருவிழாக் கொண்டாடியது.
போது விழித்தும் புலரி விழியாத வானின் கீழ் இரவு விடிந்தும் இருள் விடியாத அந்த நேரத்தில் இளங்குமரனும், கதக்கண்ணனும் குதிரையில் சென்று கொண்டிருந்தார்கள். குளிர்ந்த சூழலும் மழைச்சூல் கொண்ட வானமும், அந்த நேரத்தின் அழகும், மக்களெல்லாம் காவிரி முன் துறைக்குப் போயிருந்ததனால் நகரமே அதிக ஒலிகளற்றிருந்த சூழலும் காவிரிப்பூம்பட்டினத்தைக் கண் நிறைந்த கனவு நகரமாகக் காட்டின. அந்த அழகை இளங்குமரன் ஆழ்ந்த சிந்தனையுடன் அநுபவித்துப் பார்த்து மகிழ்ந்தான்.
“மனிதக் கும்பலும், அவர்களின் ஓசைகளும், பூசல்களும் பிரிந்து தனியாகத் தெரியும்போது இந்த நகரம் எவ்வளவு அழகாக இருக்கிறது பார்த்தாயா கதக்கண்ணா?” என்று மனம் நெகிழ்ந்த குரலில் கூறினான் இளங்குமரன். இயக்கமும் ஓசை ஒலிகளுமற்றிருந்த கோலத்தில் நகரமே வானத்திலிருந்து நீள நெடுந்திரை கட்டிச் சுற்றிலும் தொங்கவிட்ட ஓர் பெரிய ஓவியம் போல் தோன்றியது அவனுக்கு.
அவர்களுடைய குதிரைகள் நகரின் ஒரு பகுதியில் இருந்த ‘உலக அறவி’ என்னும் பொது மன்றத்தைக் கடந்த போது அந்த மன்றத்தின் இருபுறமும் அகன்ற திண்ணைகளில் முடங்கிக் கிடந்த பல நூறு பிச்சைக்காரர்களைக் கண்டு வருந்தினான் இளங்குமரன். காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்வதற்கு வேறு வழியின்றி யாசிப்பதையே தொழிலாகக் கொண்டு வயிறு துடைக்கும் பாமரர்களின் உறைவிடம் தான் இந்த உலக அறவி. ‘சோறூட்டும் விழாவுக்குத் தவிக்கும் இவர்களுக்கு நீராட்டு விழா ஏது?’ என்று எண்ணிய போது ‘உலகம் முழுவதிலும் ஏழைகளே இல்லாதபடி செய்துவிட வேண்டும்’ போல் அந்தக் கணமே அவன் மனத்திலும் தோள்களிலும் ஒரு துடிப்பும் ஏற்பட்டது. குதிரையை நிறுத்திக் கீழே இறங்கி உலக அறவியின் திண்ணையை ஒட்டினாற் போலச் சிறிது தொலைவு நடந்தான் இளங்குமரன். முன்னால் சென்றிருந்த கதக் கண்ணனும் குதிரையைத் திருப்பிக் கொண்டு வந்து இறங்கி இளங்குமரனோடு பின்னால் நடந்து சென்றான்.
தங்கள் பிச்சைப் பாத்திரங்களையே தலைக்கு அணையாக வைத்துக் கொண்டு உறங்குபவர்களையும், பாத்திரமுமில்லாமல் வெறும் முழங்கையை மடித்து வைத்துக் கொண்டு உறங்குபவர்களையும் வரிசையாகப் பார்த்துக் கொண்டே நடந்தான் இளங்குமரன். “என்னைப் போல் செல்வம் சேர்ப்பவர்களுக்கு வகுத்திருக்கும் விதியே தனி வகையைச் சேர்ந்தது. நாங்கள் உண்மையைப் பொய்யாக்குவோம்; பொய்யை உண்மையாக்குவோம்” என்று முதல் நாள் மாலை தன்னிடம் ஆலமுற்றத்தில் திமிர் கொண்டு பேசிய செல்வரையும், இப்போது கண்டு கொண்டிருக்கும் உலக அறவிப் பிச்சைக்காரர்களையும் சேர்த்து நினைத்துப் பார்த்தான் இளங்குமரன். படைத்தவனே கைத் தவறுதலாக ஏதோ பிழை செய்து விட்டது போல் உணர்ந்து மனம் கொதித்தான், அவன். சிறிது நேரத்துக்கு முன் கனவு நகரம் போல் அழகு கொண்டு தோன்றிய காவிரிப்பூம்பட்டினத்தின் தோற்றம் இப்போது அப்படித் தோன்றவில்லை அவனுக்கு. அந்த அழகின் மறுபுறம் வேதனைகள் நிறைந்திருப்பதாகத் தோன்றியது.
“என்ன பார்க்கிறாய், இளங்குமரா? இங்கே படுத்திருப்பவர்களில் யாரையாவது தேடுகிறாயா?” என்று கேட்டான் கதக்கண்ணன்.
“படைத்தவனின் அநியாயத்தைப் பார்க்கிறேன். நியாயத்தைத் தேடுகிறேன். இவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சோறும், துணியும், வீடும், வாழ்வும் வேறு எவர்களிடம் இருக்க முடியுமென்று பார்க்கிறேன்” என்று குமுறியபடி பதில் வந்தது இளங்குமரனிடமிருந்து. கதக்கண்ணனுக்கு இவையெல்லாம் புதிய பேச்சுக்களாயிருந்தன. எதை விளங்கிக் கொண்டு எப்படி மறுமொழி கூறுவதென்றும் அவனுக்குத் தெரியவில்லை. ஆகவே அவன் மௌனமாக இளங்குமரனைப் பின் தொடர்ந்தான். அவர்கள் உலக அறவிக்கு அப்பாலிருந்த சக்கரவாளத்தையும், சம்பாபதி கோவிலையும் கடந்து மேலே சென்றார்கள்.
“என் தந்தையும், முல்லையும் நம் வரவை எதிர்பார்த்து அங்கே கழார்ப் பெருந்துறையில் காத்துக் கொண்டிருப்பார்கள். நாம் விரைவாகச் செல்வது நல்லது” என்று நடுவில் ஒருமுறை இளங்குமரனை அவசரப்படுத்தினான் கதக்கண்ணன்.
பூம்புகார் வீதிகளில் மீண்டும் அவர்கள் குதிரைப் பயணம் தொடர்ந்தது. ‘இலஞ்சிமன்றம்’ என்னும் பெரிய ஏரியின் கரையருகே வந்ததும், இளங்குமரன் மீண்டும் குதிரையை நிறுத்திக் கீழே இறங்கினான். அந்தக் குளத்தின் கரையிலுள்ள அம்பலத்தின் மேடைகளிலும், திண்ணைகளிலும் காவிரிப்பூம்பட்டினத்தின் அநாதை நோயாளிகள் நிறைந்து கிடந்தார்கள். மண்ணின்மேல் மனிதர்களுக்கு எத்தனை வகைக் கொடிய நோய்கள் எல்லாம் வரமுடியுமோ, அத்தனை வகை நோய்களும் வந்த நோயாளிகள் இலஞ்சி மன்றத்தில் இருந்தார்கள். தூக்கம் வராமல் அலறித் தவிக்கும் நோயாளி, தூக்கமிழந்து வலியினால் துடிக்கும் நோயாளி, தொழுநோயாளி, புழு நோயாளி, நொண்டி, கூன், குருடு, இன்னும் சொல்லில் அடங்காத நோயாளிகளையெல்லாம் சேர்த்துப் பார்க்க முடிந்த இடம் இலஞ்சி மன்றம். அழுகை ஒலி, வேதனைக் குரல், அலறல், அரற்றல் நிறைந்த அந்தக் குளக்கரையில் நின்று சிந்தித்த போது இளங்குமரனுக்கு உலகமே இருண்டு தோன்றியது. உலகமே நோய் மயமாகத் தோன்றியது.
“சொப்பனபுரியாகவும், கந்தர்வ நகரமாகவும் இந்தப் பட்டினத்தை வருணனை செய்து பாடியிருக்கிற கவிகளைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய், கதக்கண்ணா?”
“நினைப்பதற்கு என்ன இருக்கிறது? உள்ளவற்றில் நல்லவற்றைச் சிறப்பித்து மட்டும் பாடியிருக்கிறார்கள் அவர்கள். மரபும் அதுதானே?”
“மரபாக இருக்கலாம்! ஆனால் நியாயமாக இருக்க முடியாது. சோழ மன்னரும் அவருடைய அரண்மனையும் சுற்றியிருக்கும் எட்டிப்பட்டம் பெற்ற செல்வர்களும் தான் காவிரிப்பூம்பட்டினம் என்றால் இந்தக் காவிரிப்பூம்பட்டினம் மிகவும் சிறியதாகக் குறுகி விடும். செல்வமும் வீடும் தவிர வறுமையும் நோயும் தானே இங்கு மிகுதியாக இருக்கின்றன? அவற்றை ஏன் மறைக்க வேண்டும்?”
கதக்கண்ணன் இதற்கு மறுமொழி சொல்லி மேலே பேச்சைத் தொடர இடங்கொடுக்காமல் குதிரையில் தாவி ஏறினான். இளங்குமரனும் தன் குதிரையில் ஏறிக் கொண்டான். அவன் மனத்தில் பல வினாக்கள் ஏறிக் கொண்டு துளைத்தன. அவற்றுக்கு விடை கேட்கவும், விவாதம் செய்யவும் கதக்கண்ணன் ஏற்புடையானாகத் தோன்றாததால் மனத்திலேயே அவற்றைச் சிந்தித்துக் கொண்டு செல்வதைத் தவிர வேறு வழி அவனுக்குப் புலப்படவில்லை.
அவர்கள் காவிரியின் கழார்ப் பெருந்துறைக்குப் போகும் திருமஞ்சனப் பெருவழியில் நுழைந்த போது நன்றாக விடிந்து ஒளி பரவத் தொடங்கியிருந்தது. முன்பு பூஞ்சிதறலாக இருந்த மழைத் தூற்றல் இப்போது சாரலாகப் பெய்து கொண்டிருந்தது. காவிரித் துறை நெருங்க நெருங்கச் சாலையில் கூட்டமும், தேரும், யானையும், குதிரையும் மிகுந்து நெருக்கமான போக்குவரவு இருந்ததனால் அவர்களால் தங்கள் குதிரைகளை விரைந்து செலுத்த முடியவில்லை. மெல்ல செலுத்திக் கொண்டு சென்றார்கள்.
காவிரியில் நீராடுவதற்காகத் தோழிகள் வாசனைத் தைலங்கள் பூசவும், ஆலவட்டம் வீசவும், பட்டுக்குடை பிடிக்கவும், பணிப்பெண்கள் புடை சூழச் செல்வக்குடி நங்கையர்கள் அலங்காரமான சூழ்நிலையின் நடுவே விளங்கித் தோன்றினர். தங்களுக்கு நீந்தத் தெரியாததனால் தோழிகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஒருவரோடொருவர் கரங்கோத்தபடி நீரில் இறங்கின செல்வப் பெண்களைக் கரையிலிருந்த நீந்தத் தெரிந்த பெண்கள் நகைத்து ஏளனம் செய்தனர். தண்ணீரில் இறங்க மனமின்றிச் சாரலில் நனைந்து கொண்டே கரையில் நின்று கொண்டிருந்தவர்களை அவர்கள் நண்பர்கள் பின்புறமாக வந்து பிடித்துத் தள்ளி வேடிக்கை பார்த்தார்கள். மற்றொரு புறத்தில் ஆண்களும் பெண்களுமாக இளம் பருவத்தினர் சிறு சிறு படகுகளை விரைந்து செலுத்தி எவரால் வேகமாகப் படகு செலுத்த முடிகிறதென்று தங்கள் திறமையைச் சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். தண்ணீர்ப் பரப்பிலேயே மிதக்கும் சிறு வீடுகளைப் போல் அணி செய்து அமைக்கப்பட்டிருந்த நீரணி மாடம் என்னும் படகு இல்லங்களில் மிதந்து சென்று நீராட்டு விழாவை அநுபவித்துக் கொண்டிருந்தார்கள் சிலர்.
*வாயில் நிறைய அவலை அடக்கிக் கொண்டு வாயையும் திறக்காமல் நீரையும் குடிக்காமல் உள்ளே அவலை மென்று தின்று கொண்டே வேகமாக நீந்தும் விளையாட்டு ஒன்றைப் பெண்கள் கூடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்படி நீந்தி முதலில் வருகின்றவருக்கு வெற்றி என்று முடிவு செய்வது வழக்கம். இந்த விளையாட்டு நிகழ்ந்து கொண்டிருந்த துறையில் பெண்களின் கூட்டம் கணக்கற்றுக் கூடியிருந்தது. துறையருகிலும் மணற் பரப்பிலும் எங்கும் அவல் சிதறிக் கிடந்தது. ஆவலும் பரவித் தெரிந்தது.
(* இப்படி மகளிர் விளையாடும் ஆடல் ஒன்று அக்காலத்திலிருந்ததைப் புறநானூறு 63-ஆவது பாடல் கூறும்.)
எல்லாருடைய உற்சாகத்தையும் ஆர்வத்தையும் தூண்டும் இந்த விளையாட்டு நிகழ்ந்து கொண்டிருந்த துறையருகே வந்ததும் இளங்குமரனும், கதக்கண்ணனும் தத்தம் குதிரைகளை நிறுத்திக் கொண்டு அவற்றில் அமர்ந்தபடியே பார்க்கலாயினர்.
அவலை வாய் நிறைய அடக்கிக் கொண்டு பெண்கள் கூட்டம் ஒன்று காவிரி நீர்ப் பரப்பில் வரிசையாக அணிவகுத்துப் புறப்பட்டு நீந்தியது. அந்த வரிசையில் பன்னிரண்டு பெண்கள் நீந்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சிறிது தொலைவு சென்ற பின் இளங்குமரன் மறுபடியும் எண்ணிப் பார்த்த போது பதினொரு பெண்கள் தான் தெரிந்தனர். ‘யாரோ ஒருத்தி நீரில் மூழ்கியிருக்க வேண்டும் அல்லது சுழலில் சிக்கிக் கொண்டிருக்க வேண்டும்’ என்று தோன்றியது. தனக்குத் தோன்றியதைக் கதக்கண்ணனிடம் கூறினான் இளங்குமரன். “நீரில் மூழ்கியிருந்தாலுமே நாம் என்ன செய்ய முடியும்?” என்று கதக்கண்ணன் பதில் சொன்னான். “என்னால் அப்படி நினைத்துப் பேசாமல் இருக்க முடியாது! அப்புறம் நானும் ஆண் பிள்ளை என்று நிமிர்ந்து நடக்க என்ன இருக்கிறது?” என்று கூறிக் கொண்டே, குதிரையிலிருந்து கீழே குதித்து விரைந்தான் இளங்குமரன். ‘வேண்டாம் போகாதே’ என்று நண்பன் தடுத்துக் கூறியதை அவன் கேட்கவில்லை.
பூம்புகாரின் ஆரவாரமும், வாழ்க்கை வேகமும், சோழர் பேரரசின் தலைநகரமென்ற பெருமையும் நாங்கூருக்கு இல்லாவிட்டாலும் அமைதியும் அழகுங் கூடியதாயிருந்தது அந்தச் சிறு நகரம். எங்கு நோக்கினும் பசும்புல் வெளிகளும், வெறுமண் தெரியாமல் அடர்ந்த நறுமண மலர்ச் சோலைகளும், மரக்கூட்டங்களுமாகப் பசுமைக் கோலங் காட்டியது அந்த ஊர். வெயில் நுழையவும் முடியாத பசுமைக்குள் மறைந்திருந்த அழகு காரணமாக நாங்கூருக்குப் ‘பொழில் நகரம்’ என்று சோழ நாட்டுக் கவிஞர்கள் புகழ்ப் பெயர் சூட்டியிருந்தார்கள்.
நாங்கூரின் வீரப் பெருமைக்குக் காரணமாயிருந்தவர்கள் அங்கு வாழ்ந்து வந்த வேளிர்கள் என்றால் ஞானப் பெருமைக்குக் காரணமாயிருந்தவர் ‘பூம்பொழில் நம்பி’ என்னும் பெரியவரே ஆவார். பூம்பொழில் நம்பியைத் திருநாங்கூர் அடிகள் என்ற பெயரில் சோழநாடெல்லாம் அறியும். சமய நூல்களிலும், தத்துவ ஞானத்திலும் பழுத்துப் பண்பட்ட குணக்குன்று அவர். காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து தொடங்கி நாங்கூருக்குச் செல்லுகிற பெருவழி அவ்வூர் எல்லையுள் நுழையுமிடத்தில் பூம்பொழில் என்றொரு குளிர்ந்த சோலை இருந்தது. அந்தச் சோலையில்தான் முதுபெருங் கிழவரும், துறவியுமாகிய நாங்கூர் அடிகள் வசித்து வந்தார். வயதும் உடலும், அறிவும் முதிர்ந்தாலும் கபடமில்லாத குழந்தை மனம் கொண்டவர் திருநாங்கூர் அடிகள். சோழ நாட்டில் அந்த நாட்களில் சென்ற இடமெல்லாம் வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருந்த சமயவாதிகளும், அறிஞர்களும், புலவர் பெருமக்களும் தம்முடைய மாணவர்கள் என்பதை உணர்ந்திருந்தும் அதற்காக அடிகள் இறுமாப்பு அடைந்ததேயில்லை. நேரில் தம்மைப் புகழுவோரிடம் எல்லாம், “இயற்கைதான் பெரிய ஆசிரியன்! அதனிடமிருந்து நான் எவ்வளவோ கற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பூம்பொழிலில் எத்தனையோ நாட்களாகச் செடிகள் தளிர் விடுகின்றன, அரும்புகின்றன, பூக்கின்றன. ஆனாலும் ஒவ்வொரு நாளும் இவை எனக்குப் புதுமையாகவே தோன்றுகின்றன. கண்களிலும், மனத்திலும் சலிப்புத் தோன்றாமல் பார்த்து நினைத்து உணர்ந்தால் இயற்கையே பெரிய ஞானம்தான்” என்று குழந்தையைப் போல் சிரித்துக் கொண்டே கூறுவார். தமது பூம்பொழிலில் ஏதாவது ஒரு செடியில் புதிய தளிரையோ, புதிய அரும்பையோ பார்த்துவிட்டால் அவருக்கு ஏற்படுகிற ஆனந்தம் சொல்லி முடியாது. வித்தூன்றியிருந்த புதுச்செடி முளைத்தாலும் அவருக்குத் திருவிழாக் கொண்டாட்டம் தான். அப்படிப் புதுத் தளிரையும், புது அரும்பையும், புதுச் செடியையும் பார்த்துத் தாம் பேரானந்தம் அடைகிற போது அருகில் இருப்பவர்கள் பேசாமல் வாளாவிருந்தால், “உலகத்துக்குப் புதிய அழகு ஒன்று உண்டாக்கியிருக்கிறது! அதைப் பார்த்து ஆனந்தப்படத் தெரியாமல் நிற்கிறீர்களே? உலகம் உம்முடைய வீடு ஐயா! உம்முடைய வீட்டில் அழகுகள் புதிது புதிதாகச் சேர்ந்தால் உமக்கு அவற்றை வரவேற்று மகிழத் தெரிய வேண்டாமா?” என்று உணர்ச்சியோடு கூறுவார் அவர். இயற்கை இயற்கை என்று புகழ்ந்து போற்றுவதுதான் அவருக்குப் பேரின்பம்.
எண்ணிலாத மலர்கள் மலரும் அவ்வளவு பெரிய பூம்பொழிலில் அடிகள் ஒரு பூவைக் கூடக் கொய்வதற்கு விடமாட்டார். யாரும் எதற்காகவும் அங்கேயுள்ள பூக்களைப் பறிக்கக் கூடாது. “பூக்கள் இயற்கையின் முகத்தில் மலரும் புன்னகைகள். அந்தப் புன்னகைகளை அழிக்காதீர்கள். அவை சிரிக்கட்டும். சிரித்துக் கொண்டே மணக்கட்டும்” என்று அழகாக உருவகப்படுத்திக் கூறுவார். எத்தனை அரும்பு கட்டினாலும், எத்தனை பூப்பூத்தாலும், எத்தனை முறை மணந்தாலும், ஒரே அளவில் அரும்பு கட்டி ஒரே வித உருவில் மலர்ந்து, ஒரே வகை மணத்தைப் பரப்பும் தனித்தனிப் பூக்களைப் போல் எப்போது பேசினாலும், எதைப் பற்றிப் பேசினாலும் சொற்கள் மலரக் கருத்து மணக்கப் பேசும் வழக்கமுடையவர் அடிகள். பட்டு நூலில் துளையிட்ட முத்துக்கள் ஒவ்வொன்றாய் நழுவி இறங்கிச் சேர்ந்து கோத்துக் கொண்டு ஆரமாக ஒன்றுபடுவது போல் அவருடைய வாயிற் சொற்கள் பிறப்பதும், இணைவதும், பொருள்படுவதும் தனி அழகுடன் இருக்கும். மல்லிகைச் செடியில் பூக்கும் எல்லாப் பூக்களுக்கும் மல்லிகைக்கே உரியதான மணம் இருப்பதைப் போல் நாங்கூர் அடிகளின் ஒவ்வொரு சொல்லுக்கும் அவருடைய நாவில் அது பிறந்ததென்பதாலேயே ஓர் அழகு இருப்பதுண்டு.
சிறப்பு வாய்ந்த இத்தகைய ஆசிரியர் பெருமகனாரைச் சந்திக்கச் செல்வதில் எந்த மாணவருக்குத்தான் இன்பமிருக்காது? நீராட்டு விழாவுக்கு முதல் நாள் காலையிலேயே காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து நாங்கூருக்குப் புறப்பட்டிருந்த நீலநாகமறவர் அந்தி மயங்கும் போதில், நாங்கூர் அடிகளின் பூம்பொழிலை அடைந்து விட்டார். கூட்டையடையும் பறவைகளின் ஒலியும், நாங்கூர் அடிகளின் மாணவர்கள் பாடல்களை இரைந்து பாடி மனப்பாடம் செய்யும் இனிய குரல்களும் அப்போது பூம்பொழிலில் ஒலித்துக் கொண்டிருந்தன.
நீலநாகமறவர் பொழிலுக்கு வெளியிலேயே தம்முடைய தேரை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கி மேலாடையை இடுப்பில் கட்டிக் கொண்டு பயபக்தியோடு உள்ளே நடந்து சென்றார். கவசமும், வாளும் அணிந்து படைக்கலச்சாலையின் எல்லைக்குள் கம்பீரமாகக் காட்சியளிக்கும் நீலநாக மறவர் இப்போது எளிய கோலத்தில் தம் ஆசிரியரைத் தேடி வந்திருந்தார். அவர் உள்ளே சென்ற போது ஆசிரியராகிய நாங்கூர் அடிகள் அந்தப் பொழிலிலேயே இருந்ததொரு பொய்கைக் கரைமேல் அமர்ந்து நீர்ப் பரப்பில் மலர்ந்து கொண்டிருந்த செங்குமுத மலரைப் பார்த்துக் கொண்டிருந்தார். நீரின் மேல் தீ மலர்ந்தது போல் செந்நிறத்தில் அழகாக மலரும் அந்தப் பூவின் மேல் அவருடைய கண்கள் நிலைத்திருந்தன.
தமக்குப் பின்னால் யாரோ நடந்து வரும் ஓசை கேட்டும் அவர் கவனம் கலைந்து திரும்பவில்லை. அவருக்கு ஒவ்வொரு அநுபவமும் ஒரு தவம் தான். எதில் ஈடுபட்டாலும் அதிலிருந்து மனம் கலையாமல் இணைந்து விட அவருக்கு முடியும். பூவின் எல்லா இதழ்களும் நன்றாக விரிந்து மலர்ந்த பின்பு தான் அவர் திரும்பிப் பார்த்தார். அதுவரையில் அவருக்குப் பின்புறம் அடக்க ஒடுக்கமாகக் காத்து நின்ற நீலநாகமறவர், “அடியேன் நீலநாகன் வந்திருக்கிறேன்” என்று கூறிக்கொண்டே அவருடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.
“வா அப்பா! வெகு நேரம் காத்துக் கொண்டிருந்தாயோ? நான் இந்தப் பூவில் தெய்வத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படியே தியானத்திலும் ஆழ்ந்து விட்டேன். பூ, காய், பழம், மரம், செடி, கொடி, மலை, கடல் எல்லாமே தெய்வம் தான்! அவைகளை தெய்வமாகப் பார்ப்பதற்குப் பழக்கப்படுத்திக் கொண்டால் நிற்குமிடமெல்லாம் கோவில்தான். நினைக்குமிடமெல்லாம் தியானம்தான். பார்க்குமிடம் எல்லாம் பரம்பொருள்தான். இவையெல்லாம் உனக்கு வேடிக்கையாயிருக்கும் நீலநாகா! இத்தனை முதிர்ந்த வயதில் இப்படி நேரமில்லாத நேரத்தில் மரத்தடியிலும் குளக்கரையிலும் கிடக்கிறேனே என்று நீ என்னை எண்ணி வருத்தப்பட்டாலும் படுவாய்! ஆனால் எனக்கென்னவோ வயதாக ஆக இந்தப் பித்து அதிகமாகிக் கொண்டு வருகிறது. எங்குப் பார்த்தாலும், எதைப் பார்த்தாலும் தெய்வமாகத் தெரிகிறது. எந்தச் சிறு அழகைப் பார்த்தாலும் தெய்வத்தின் அழகாகத் தெரிகிறது. தளிர்களில் தெய்வம் அசைகிறது. மலர்களில் தெய்வம் சிரிக்கிறது. மணங்களில் தெய்வம் மணக்கிறது.”
இவ்வாறு வேகமாகச் சொல்லிக் கொண்டு வந்த அடிகள் முதுமையின் ஏலாமையால் பேச்சுத் தடையுற்று இருமினார்.
“இந்தக் காற்றில் இப்படி உட்கார்ந்திருந்தது உங்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை, ஐயா! வாருங்கள் உள்ளே போகலாம்” என்று அவருடைய உடலைத் தாங்கினாற் போல் தழுவி உள்ளே அழைத்துக் கொண்டு சென்றார் நீலநாகமறவர்.
அடிகளின் தவக்கூடத்துக்குள் சென்று அமர்ந்த பின் அவர்கள் உரையாடல் மேலே தொடர்ந்தது. நீலநாக மறவர் அடிகளிடம் வேண்டிக் கொண்டார்:
“ஐயா சென்ற ஆண்டு இந்திர விழாவின் போது தங்களைச் சந்தித்த பின் மறுபடியும் எப்போது காண்போம் என்ற ஏக்கத்திலேயே இத்தனை நாட்களைக் கடத்தினேன். பூக்களிலும், தளிர்களிலும் தெய்வத்தைக் கண்டு மகிழ்கிற உங்களிடமே தெய்வத்தைக் காண்கிறேன் நான். எனக்கு என்னென்ன கூறவேண்டுமோ அவ்வளவும் கூறியருளுங்கள். அடுத்த இந்திரவிழா வருகிறவரை இப்போது தாங்கள் அருளுகிற உபதேச மொழியிலேயே நான் ஆழ்ந்து மகிழ வேண்டும்.”
இதைக் கேட்டு நாங்கூர் அடிகள் நகைத்தபடியே நீலநாக மறவரின் முகத்தை உற்றுப் பார்த்தார்.
“இத்தனை வயதுக்குப் பின்பு இவ்வளவு மூப்பு அடைந்தும் நீ என்னிடம் உபதேசம் கேட்க என்ன இருக்கிறது நீலநாகா? உனக்கு வேண்டியதையெல்லாம் முன்பே நீ என்னிடமிருந்து தெரிந்து கொண்டு விட்டாய். உன்னைப் போல் பழைய மாணவர்களுக்கு இப்போது நான் கூறுவதெல்லாம் நட்புரைதான். அறிவுரை அல்ல. ஆனால் ஒரு பெரிய ஆசை எனக்கு இருக்கிறது. என்னுடைய எண்ணங்களையெல்லாம் விதைத்துவிட்டுப் போக ஒரு புதிய நிலம் வேண்டும். அந்த நிலம் மூப்படையாததாக இருக்க வேண்டும். நெடுங்காலம் விளையவும், விளைவிக்கவும் வல்லதாக இருக்க வேண்டும்.”
“எனக்குப் புரியவில்லை ஐயா! இன்னும் தெளிவாகக் கூறலாமே?”
“காவியத்துக்கு நாயகனாகும் குணங்கள் நிறைந்த முழு மனிதனைக் கவிகள் ஒவ்வொரு கணமும் தேடிக் கொண்டிருப்பது போல் என் ஞானத்தை எல்லாம் நிறைத்து வைக்கத் தகுதிவாய்ந்த ஓர் இளம் மாணவனைத் தேடிக் கொண்டிருக்கிறேன் நான்.”
இதைச் சொல்லும் போது நாங்கூர் அடிகளின் குழிந்த கண்களில் ஆவல் ஒளிரும் சாயல் தெரிந்தது. ஏக்கமும் தோன்றியது.
அடிகளிடம் வெகு நேரம் தத்துவங்களையும், ஞான நூல்களையும் பற்றிப் பேசிவிட்டு இறுதியாகக் காவிரிப்பூம்பட்டினத்து நிகழ்ச்சிகளையும் கூறினார் நீலநாகமறவர். அருட்செல்வ முனிவர் மறைவு, அவர் வளர்த்த பிள்ளையாகிய இளங்குமரன் இப்போது தன் ஆதரவில் இருப்பது, எல்லாவற்றையும் அடிகளுக்கு விவரித்துக் கூறிய போது அவர் அமைதியாகக் கேட்டுக் கொண்டே வந்தார். நீலநாகமறவர் யாவற்றையும் கூறி முடித்த பின், “நீ இப்போது கூறிய இளங்குமரன் என்னும் பிள்ளையை ஒரு நாள் இங்கு அழைத்து வர முடியுமா நீலநாகா?” என்று மெல்லக் கேட்டார் நாங்கூர் அடிகள்.
அவர் என்ன நோக்கத்தோடு அப்படிக் கேட்கிறார் என்று விளங்கிக் கொள்ள இயலாவிடினும், நீலநாகமறவர் இளங்குமரனை ஒரு நாள் அவரிடம் அழைத்து வர இணங்கினார்.
மறுநாள் இரவு நீலநாக மறவர் திருநாங்கூரிலிருந்து காவிரிப்பூம்பட்டினம் திரும்பும் போது அடிகள் மீண்டும் முதல் நாள் தாம் வேண்டிக் கொண்ட அதே வேண்டுகோளை வற்புறுத்திக் கூறினார்.
“என்ன காரணமென்று எனக்கே சொல்லத் தெரியவில்லை நீலநாகா, அந்தப் பிள்ளை இளங்குமரனை நான் பார்க்க வேண்டும் போல் ஒரு தாகம் நீ அவனைப் பற்றிச் சொன்னவுடன் என்னுள் கிளர்ந்தது. மறந்துவிடாமல் விரைவில் அவனை அழைத்து வா.”
இளங்குமரனுடைய வீரப் பெருமைக்கு ஆசிரியரான நீலநாக மறார், இப்போது இந்த இளைஞனின் வாழ்வில் இன்னும் ஏதோ ஒரு பெரிய நல்வாய்ப்பு நெருங்கப் போகிறதென்ற புதிய பெருமை உணர்வுடன் திருநாங்கூரிலிருந்து திரும்பினார்.
நீரில் மூழ்கிவிட்ட அந்தப் பெண் யாராயிருந்தாலும் அவளைக் காப்பாற்ற வேண்டும் என்னும் உறுதியான எண்ணத்துடன், இரு கரையும் நிரம்பிடப் பொங்கிப் பெருகி ஓடும் காவிரிப்புனலில் இளங்குமரன் தன்னுடைய நீண்ட கைகளை வீசி நீந்தினான். கரையிலிருந்து பார்த்தபோது அவள் இன்ன இடத்தில் மூழ்கியிருக்க வேண்டுமென்று முன்பு குறிப்பாகத் தெரிந்த சுவடும் இப்போது தெரியவில்லை. மூழ்கிய பெண்ணைப் பற்றிக் கவனமே இல்லாமல் வாயில் அடக்கிய ஆவலோடும் தங்கள் திறமையை நிரூபிக்கும் ஆசையோடும் மற்றப் பெண்கள் நீரில் முன்னேறிக் கொண்டிருந்தார்கள்.
மிக அருகில் நேர் கிழக்கே கடலோடு கலக்கப் போகும் ஆவலுடன் ஓடிக் கொண்டிருந்த காவிரியில் நீரோட்டம் மிகவும் வேகமாகத்தான் இருந்தது. தேங்கி நிற்கும் நீர்ப் பரப்பாயிருந்தாலாவது மூழ்கியவளின் உடல் மிதந்து மறைவதை எதிர்பார்க்கலாம். ஒரு வேளை நீரோட்டத்தின் போக்கில் கிழக்கே சிறிது தொலைவு அந்தப் பெண் இழுத்துக் கொண்டு போகப்பட்டிருப்பாளோ என்ற சந்தேகம் இளங்குமரனுக்கு ஏற்பட்டது. உடனே அவள் மூழ்கின துறைக்கு நேரே கிழக்குப் பக்கம் சிறிது தொலைவு வரை நீந்தினான் இளங்குமரன். நினைத்தது வீண் போகவில்லை. அவன் நீந்திக் கொண்டிருந்த இடத்திலிருந்து ஒரு பனைத் தூரத்தில் விரிந்த கருங்கூந்தலோடு எழுந்தும் மூழ்கியும் தடுமாறித் திணறும் பெண்ணின் தலை ஒன்று தெரிந்தது. கணத்துக்குக் கணம் அந்தத் தலைக்கும் அவனுக்கும் இடையிலிருந்த நீர்ப்பரப்பின் தொலைவு அதிகமாகிக் கொண்டு வந்தது. அவன் தன் ஆற்றலையெல்லாம் பயன்படுத்தி எவ்வளவோ வேகமாக நீந்தியும் கூட விரைந்தோடும் நீரின் ஓட்டம் அவனை இன்னும் கிழக்கே இழுத்துச் சென்று கொண்டிருந்தது.
கடலும் காவிரியும் கலக்குமிடம் நெருங்க நெருங்க, ஆழமும் அலைகளும் அதிகமாயிற்றே என்று தயங்கினாலும் இளங்குமரன் தன் முயற்சியை நிறுத்திவிடவில்லை.
‘பூம்புகார் போல் பெரிய நகரத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதற்கே வாய்ப்புக்கள் குறைவு. அப்படியிருந்தும், அரிதாக ஏற்பட்ட ஓர் உதவியைச் செய்யாமல் கைவிடலாகாது’ என்பதுதான் அப்போது இளங்குமரனின் நினைப்பாக இருந்தது. முகம் தெரியாத அந்தப் பெண்ணைக் காப்பாற்றிக் கரை சேர்த்து அவளுடைய பெற்றோரிடம் ஒப்படைக்கும் போது அவர்கள் அடையும் மகிழ்ச்சியைக் கற்பனை செய்து கொண்டே, பாய்ந்து நீந்தினான் அவன். நகரத்து மக்களெல்லாம் மகிழ்ச்சியோடு நீராட்டு விழா முடிந்து திரும்பும் போது, பெண் காவிரியில் மூழ்கி மாண்டதற்காக அழுது புலம்பும் பெற்றோருடைய ஓலம் ஒன்றும் காவிரிக் கரையில் இருந்து ஒலிக்கக் கூடாது என்பதுதான் அவன் ஆசை.
இதோ அந்த ஆசையும் நிறைவேறி விட்டது. அருகில் நெருங்கி அவளுடைய கூந்தலை எட்டிப் பிடித்துவிட்டான் இளங்குமரன். அவளுடைய கூந்தல் மிகப் பெரிதாக இருந்ததனால் அவளை இழுத்துப் பற்றிக் கொள்ள இளங்குமரனுக்கு வசதியாயிருந்தது. தன் உடலோடு இன்னோர் உடலின் கனமும் சேரவே நீந்த விடாமல் நீரோட்டம் அவனை இழுத்தது. மேகக் காடுபோல் படர்ந்து நறுமணத் தைலம் மணக்கும் அந்தப் பெண்ணின் கூந்தல் அவளுடைய முகத்தை மறைத்ததோடன்றி அவனுடைய கண்களிலும் வாயிலும் சரிந்து விழுந்து தொல்லை கொடுத்தது. எதிரே பார்த்து நீந்திப் பயனில்லை. நீரோட்டத்தை எதிர்த்து மேற்குப் பக்கம் நீந்தினால்தான் காவிரித்துறைகளில் ஏதாவதொன்றின் அருகே கரையேறி மீள முடியும். கிழக்கே போகப் போகக் கடல் நெருங்கிக் கொண்டிருந்தது. நீரும் உப்புக் கரிக்கத் தொடங்கியது. ஆழம் அதிகமாவதோடு அலைகளினால் பெரும் எதிர்ப்பும் கிழக்கே போகப் போக மிகுதியாகி விடுமே என்று எண்ணி நடுக் காவிரியில் தத்தளித்தான் இளங்குமரன். செய்வதற்கு ஒன்றும் தோன்றவில்லை.
இந்தச் சமயம் பார்த்து மழையும் பெரிதாகப் பெய்யத் தொடங்கியிருந்தது. நாற்புறமும் பனி மூடினாற் போல மங்கலாகத் தெரிந்ததே தவிர ஒன்றும் தெளிவாகக் காண முடியவில்லை. மேகங்கள் தலைக்குமேல் தொங்குவது போலக் கவிந்து கொண்டன. காற்று வெறி கொண்டு வீசியது. அலைகள் மேலெழுந்து சாடின.
உயிர்களை எல்லாம் காக்கும் காவிரி அன்னை தன் உயிரையும், அந்தப் பேதைப் பெண்ணின் உயிரையும் பலி கொள்ள விரும்பி விட்டாளோ என்று அவநம்பிக்கையோடு எண்ணினான் இளங்குமரன். நீரோட்டம் இழுத்தது. உடல் தளர்ந்தது. பெண்ணின் சுமை தோளில் அழுத்தியது. கால்கள் நிலை நீச்சும் இயலாமல் சோர்ந்தன. நம்பிக்கை தளர்ந்தது.
ஆனால் காவிரி அன்னை இளங்குமரனைக் கைவிட்டு விடவில்லை. சிறிதளவு சோதனைதான் செய்தாள். கிழக்கு நோக்கி நீரோட்டத்தோடு நீரோட்டமாக கவனிப்பாரின்றி மிதந்து வந்த படகு ஒன்று இளங்குமரனுக்கு மிக அருகில் நெருங்கிச் சென்று கொண்டிருந்தது. படகில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. நீராட்டு விழா ஆரவாரத்தில் படகுக்குரியவர்களின் கவனத்தை மீறி அறுத்துக் கொண்டு வந்த அநாதைப் படகு போல் தோன்றியது அது. பலங்கொண்ட மட்டும் முயன்று ஒரு கையால் அந்தப் பெண்ணின் உடலைப் பற்றிக் கொண்டு இன்னொரு கையை உயர்த்திப் படகைப் பற்றினான் இளங்குமரன். நீரின் வேகம் அவனையும் படகையும் சேர்த்து இழுத்தது. அவனும் விடவில்லை. படகும் அவன் பிடித்த சுமை தாங்காமல் ஒரு பக்கமாகச் சாய்ந்தது. அரை நாழிகை நேரம் படகோடும் நீரோட்டத்தோடும் போராடி முயன்று எப்படியோ தன்னையும், அந்தப் பெண்ணையும் படகுக்குள் ஏற்றிக் கொண்டான் இளங்குமரன். படகுக்குள் ஏறிக்கொள்ள மட்டும் தான் அவனால் முடிந்ததே ஒழிய கடலை நோக்கி ஓடும் படகை எதிர்த் திசையில் காவிரித் துறையை நோக்கி மறித்துச் செலுத்த முடியவில்லை. அப்போதிருந்த காற்றிலும், மழையிலும், நீர்ப் பிரவாகத்தின் அசுர வேகத்திலும் அப்படி எதிர்ப்புறம் படகைச் செலுத்துவது முடியாத காரியமாக இருந்தது. காவிரி கடலோடு கலக்கும் சங்க முகத்தை நோக்கி வெறி கொண்ட வேகத்தில் இழுத்துக் கொண்டு போயிற்று அந்தப் படகு. படகு சென்ற வேகத்தினாலும், அலைகளின் அசைப்பினாலும் உள்ளே கிடத்தியிருந்த பெண்ணின் தலை படகின் குறுக்கு மரச் சட்டத்தில் மோதி இடிக்கலாயிற்று. இளங்குமரனின் உள்ளம் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் வருந்தியது. அந்தப் பெண்ணின் தலையை மெல்லத் தூக்கித் தன் மேலங்கியைக் கழற்றி மடித்து அவள் தலைக்கு அணைவாக வைத்தான். அவள் தலை மோதி இடிப்பது நின்றது.
பெருமழை பெய்யவே மழைநீர் படகில் சிறிது சிறிதாகத் தேங்கலாயிற்று. மிகச் சிறிய அந்தப் படகில் இருவர் சுமையுடன் நீரும் தேங்குவது எவ்வளவு பயப்படத்தக்க நிலை என்பதை எண்ணியபோது இளங்குமரன் தனக்கிருந்த சிறிதளவு நம்பிக்கையையும் இழக்கத் தொடங்கினான். மனம் உறுதி குன்றியது.
காவிரி கடலோடு கலக்குமிடம் நெருங்க நெருங்கப் படகின் ஆட்டம் அதிகமாயிற்று. அலைகளும் சுழிப்புக்களும் படகை மேலும் கீழும் ஆட்டி அலைத்தன. படகினுள்ளே தேங்கிய நீரை முடிந்தவரை அப்புறப்படுத்த முயன்றும் மேலும் மேலும் நீர் சேர்ந்து கொண்டிருந்தது. புயலில் உதிர்ந்த அரசிலையாகப் படகு அலைபட்ட போது, மனித நம்பிக்கைகள் குன்றியவனாக இரண்டு கைகளையும் மேலே தூக்கிக் கூப்பினான், இளங்குமரன். “பூம்புகாரைக் காக்கும் தெய்வமே! சம்பாபதித் தாயே! என்னையும் இந்த அபலைப் பெண்ணையும் காப்பாற்று. நான் இன்னும் நெடுங்காலம் வாழ ஆசைப்படுகிறேன். என்னை அழித்துவிடாதே, என் ஆசையை அழித்து விடாதே” என்று மனமுருக வேண்டிக் கொள்வதைத் தவிர, வேறு முயற்சி ஒன்றும் அப்போது அவனுக்குத் தென்படவில்லை.
ஊழிக் காலமே நெருங்கி வந்து விட்டதோ என அஞ்சினான் இளங்குமரன். கீழே அலை அலையாக நீர்க் கடல். மேலே அலை அலையாக மேகக் கடல். நெடுந்தொலைவுக்கு அப்பால் இருப்பது போல் தெரிந்து இல்லாததாய் முடியும் தொடுவானம் இப்போது தெரியவில்லை. தன்னையும், தன்னால் காப்பாற்றப்பட்டவளையும், இருவருடைய உயிர்களையும் பற்றிய நம்பிக்கையையும், அதன் விளைவுகளையும் தெய்வத்தினிடம் ஒப்படைத்து விட்டுப் படகினுள் சோர்ந்து ஒடுங்கிப் போய் வீற்றிருந்தான் இளங்குமரன். காலையா, நண்பகலா, மாலையா என்று பொழுதைப் பற்றியே தெரிந்து கொள்ள இயலாதபடி மழை மூட்டத்தில் சூழ்ந்த பொய்யிருள் ஏமாற்றிக் கொண்டிருந்தது. பொழுதும் அந்தப் பொய்யிருளில் மறைந்திருந்தது.
இளங்குமரன் இருந்த படகு சங்குமுகத்தைக் கடந்து பழ நாழிகைத் தொலைவு கடலுக்குள் அலைந்து திரிந்தாகி விட்டது. காவிரியின் சங்கமுகத்துக்குக் கிழக்கே தொலைவில் நடுக் கடலுள் ‘கப்பல் கரப்பு’ என்ற ஒரு திடல் இருந்தது. மண் திடலாகச் சிறிய மலை போன்று உயர்ந்து தோன்றும் மேட்டு நிலத்தீவு அது. தென்னை மரங்கள் நெருக்கமாகச் செழுத்து வளர்ந்து தோன்றும் அந்தத் தீவுக் குன்றம் நீலக் கடலின் இடையே மரகதப் பச்சை மலைபோல் அழகாய்த் தெரியும். சங்க முகத்திலோ, அதற்கு அருகிலுள்ள பகுதிகளிலோ நின்று கடலுள் பார்த்தால் நன்றாகத் தெரியக் கூடிய அந்தத் தீவும் மழை மூட்டத்தினால் இன்று தெரியவில்லை. காவிரியிலும் கடற்பரப்பினுள்ளும் இவ்வாறு அமைந்திருந்த நிலத் திடல்களுக்குத் ‘துருத்தி’ என்று பெயரிட்டிருந்தார்கள். இத்தகைய தண் மணல் துருத்திகளும், தாழ்பூந்துறைகளும், நீர்ப்பரப்பைச் சூழ்ந்த பெரிய பெரிய சோலைகளுக்கு நடுவே அமைக்கப்பட்ட ‘படப்பை’ என்னும் வேனில் காலத்து வீடுகளும் காவிரிப்பூம்பட்டினத்தைச் சுற்றி மிகுதியாக இருந்தன. அவற்றில் ஏதாவது ஒன்றின் அருகேயாவது தன் படகு ஒதுங்காதா என்று எண்ணித் தவித்தான் இளங்குமரன். படகு நெடுங் கடலுக்குள் சென்றுவிட்ட பின் இப்படி எண்ணித் தவிப்பதற்கு வழியில்லாமற் போயிற்று.
‘இனிமேலும் நாம் தப்பி உயிர்பிழைக்க வழியிருக்கிறது’ என்று அவன் இறுதியாக நம்பிக் கொண்டிருந்த ஒரே இடம் ‘கப்பல் கரப்பு’ என்னுடம் தீவுத்திடல் தான். கடற்கரையோரங்களில் வசிக்கும் பரதவர்களும், துறைமுகத்துக்கு வந்து போகும் கப்பல்களின் மீகாமர்களும் ஒரு காரணத்துக்காக அந்தத் தீவைக் ‘கப்பல் கரப்பு’ என்று அழைத்தார்கள். காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து புறப்பட்டுச் செல்கிற கப்பல்களைக் கரையிலிருந்து பார்க்க முடிந்த கடைசி எல்லை அந்தத் தீவுதான். அதற்குப் பின் தீவின் தோற்றமே கப்பல்களைக் கண்பார்வைக்குத் தென்படாமல் மறைத்து விடும். அதுபோல வெளிநாடுகளிலிருந்து காவிரிப்பூம்பட்டினத்துக்குள் நுழையும் கப்பல்களும் கப்பல் கரப்புத் தீவுக்கு இப்பால் புகுந்ததும் அந்தப் பக்கத்திலிருந்து காண்பவர்களுக்குத் தோற்றம் மறைந்து விடும். அப்படிக் கப்பல்கள் கண்பார்வைக்கு மறையக் காரணமாயிருந்த தீவு ஆகையினால் தான் கப்பல் கரப்பு என்று அழைக்கப்பட்டு வந்தது அந்தத் தீவு.
நடுக்கடலில் தன் போக்காக விழுந்து மிதக்கும் மரகத மணியாரம் போன்ற அந்தத் தீவின் ஓரமாக ஏதாவதொரு பகுதியில் படகு ஒதுங்க வேண்டும் என்பதுதான் இளங்குமரனின் சித்தத்தில் அப்போதிருந்த ஒரே ஆசை. மழையும் புயலுமாயிருந்த அந்தச் சமயத்தில் கப்பல் கரப்பினருகே ஒதுங்கினால் மற்றொரு பயனும் கிடைக்கும். துறைமுகத்துக்கு வரும் கப்பல்களும், துறைமுகத்திலிருந்து போகும் கப்பல்களும் கப்பல் கரப்பை ஒட்டியே செல்வதினால், தீவிலிருந்து மீண்டும் நகர் திரும்ப எந்தக் கப்பலிலாவது சொல்லி உதவியை நாடலாம் என்று நினைத்திருந்தான் இளங்குமரன்.
அருட்செல்வ முனிவரின் மறைவு பற்றிய வேதனையையும் படைக்கலச் சாலையின் தனிமையையும் மறந்து காவிரித்துறை நீராட்டு விழாவில் ஆரவாரத்தில் கலந்து திரியலாம் என்று தான் கதக்கண்ணனோடு வந்திருந்தான் அவன். ஆனால் நினைத்தபடி நடக்கவில்லை. நினையாதவையெல்லாம் நடந்துவிட்டன. ‘எந்தப் பெண் தண்ணீரில் மூழ்கினால் எனக்கென்ன வந்தது? அது அவளுடைய தலையெழுத்து’ என்று கதக்கண்ணன் நினைத்ததைப் போலவே தானும் நினைக்க முடிந்திருந்தால் இளங்குமரனுக்கு இந்தத் துன்பங்களெல்லாம் ஏற்பட்டிருக்கப் போவதில்லை. என் செய்வது? மனிதர்களை நினைத்தால் அவனுக்கு இரக்கமாயிருக்கிறது. அவர்களுடைய குணங்களைப் புரிந்து கொண்டால் கோபம் வருகிறது. முதன்முதலாக ஓவியன் மணிமார்பனுக்கு உதவ நேர்ந்ததை நினைத்துக் கொண்டான் அவன். பிறருக்காகத் துன்பப்படுகிறவர்கள் தங்களுக்காகவும் சேர்த்துத் துன்பப்பட வேண்டியிருக்கிறதென்பதை இளங்குமரன் பல அனுபவங்களால் விளங்கிக் கொண்டிருந்தாலும், பிறருக்கு உதவப் போனதன் காரணமாகத் தனக்கு வம்பிழுத்து விட்டுக் கொள்ளும் சம்பவங்களே தொடர்ந்து ஏற்படுவதனால் அவன் மனம் சற்றே இறுகியிருந்தது எனினும் அது அடிக்கடி நெகிழும் சம்பவங்களும் நேர்ந்தன.
அன்று காவிரிக்கரையில் நின்று கொண்டிருந்த போது அந்தப் பெண் நீரில் மூழ்கியதைக் கண்டு அவனுடைய இறுகிய மனமும் இளகியது. வரும் போது உலக அறவியையும் இலஞ்சி மன்றத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு வந்திருந்ததனால் காவிரித் துறையில் நிற்கும்போது உலகத்து இன்ப துன்பங்களை எண்ணி வியந்து நெகிழ்ந்த சிந்தனையிலாழ்ந்த மனத்தினனாக இருந்தான் அவன். காவிரியில் ஒரு பெண் மூழ்கியதைக் கண்ட போது அவன் தன் மனத்தில் “என்னுடைய தாயும் ஒரு காலத்தில் இப்படி இளம் பெண்ணாக இருந்திருப்பாள். இது போன்ற நீராட்டு விழா நாளில் அவல் அடக்கிக் கொண்டு காவிரியில் நீந்தியிருப்பாள்” என்று எண்ணிக் கொண்டிருந்தான். ‘எவ்வளவுதான் திறமையாக நீந்தத் தெரிந்தவளாக இருந்தாலும் அவல் விக்கியாவது மூச்சடக்க முடியாமல் தவறிக் குடித்த நீருடன் புரையேறியாவது, நீந்த முடியாமல் தளர்ந்து விடுவது இயல்புதானே’ என்று நிலைமையைப் புரிந்து கொண்டுதான் உதவ முன் வந்திருந்தான் அவன். அது இவ்வளவு பெரிய உதவியாக நீண்டுவிடும் என்று அப்போது அவன் எதிர்பார்க்கவில்லை.
இங்கே தான் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இதே நேரத்தில் கழார்த் துறையில் கதக்கண்ணன், முல்லை, வளநாடுடையார் மூவரும் தன்னைப் பற்றி என்ன நினைத்து எப்படி உரையாடிக் கொண்டிருப்பார்கள் என்று கற்பனை செய்ய முயன்றது அவன் சிந்தனை. மழையினாலும், காற்றினாலும் நீராட்டு விழாவே சீர் குலைந்து மக்களெல்லாம் தாறுமாறாகச் சிதறி நகரத்துக்குள் திரும்பிப் போயிருப்பார்களோ என்று அவன் ஐயமுற்றான்.
‘இதோ படகில் துவண்டு கிடக்கும் இந்தப் பெண்ணுக்கு உதவ நேரும் என்பதற்காகவே இன்று நான் நீராட்டு விழாவுக்கு வர நேர்ந்திருக்க வேண்டும். என்னுடைய ஒவ்வொரு நாளும், நிகழ்ச்சிகளும், திட்டமும் தொடர்பில்லாமல் கழிவதாக நான் நினைப்பதுதான் பிரமை. தொடர்பில்லாமல் தோன்றும் ஏதோ ஒரு தொடர்பு திட்டமிட்டுத்தான் எல்லாம் செய்கிறது போலும்’ என்று நினைத்து மனத்தைத் தேற்றிக் கொண்டு கப்பல் கரப்புத் திடலின் கரை தென்படுகிறதா என்பதை ஆவலோடு கவனிக்கலானான் இளங்குமரன். கரை தெரியவில்லை. ஆனால் கரையை நெருங்கும் அறிகுறிகள் தெரிந்தன. கடல் அலைகளில் அழுகின தென்னை மட்டைகளும், சிறுசிறு குரும்பைகளும், வேறு பல இலை தழைகளும் மிதந்து வந்தன. இந்த அடையாளங்களைக் கண்டு அவன் முகம் சிறிது மலர்ந்தது. கப்பல் கரப்பில் இறங்கி அந்தப் பெண்ணின் மயக்கத்தைத் தெளியச் செய்து அவளையும் அழைத்துக் கொண்டு அவ்வழியாகத் துறைமுகத்துக்குச் செல்லும் கப்பல் ஒன்றில் இடம்பிடித்து நகருக்குள் சென்று விடலாம் என்று அவன் தீர்மானம் செய்து கொண்டான். நகருக்குள் சென்று அந்தப் பெண்ணை அவள் இல்லத்திற் கொண்டு போய்ச் சேர்த்த பின் நேரே புற வீதியை அடைந்து கதக்கண்ணனையும், முல்லையையும், அவர்கள் தந்தையையும் சந்திக்கலாமென எண்ணிக் கொண்டிருந்தான் அவன். நீராட்டு விழாவிலிருந்து மழையினால் கலைந்து போய்க் கதக்கண்ணன் முதலியவர்கள் வீடு திரும்பியிருப்பார்களென்று அவன் அநுமானம் செய்து கொண்டிருந்ததனால் அவர்களைப் புறவீதியிலேயே தான் திரும்பிச் சென்று சந்திக்கலாமென்பது அவன் தீர்மானமாயிருந்தது.
சிறிது தொலைவு சென்ற பின் ‘கப்பல் கரப்புத் தீவு’ மங்கலாகத் தெரிந்தது. காற்றில் அங்குள்ள தென்னை மரங்கள் பேயாட்டமே ஆடிக் கொண்டிருந்தன. அந்தத் தீவின் கரையைக் கண்டதும் தான் சம்பாபதித் தெய்வம் தன்னைக் காப்பாற்றி விட்டதென்ற நம்பிக்கை இளங்குமரனுக்கு ஏற்பட்டது. படகிலிருந்து இறங்கிக் கரை ஏறுவதற்காக அந்தப் பெண்ணை அவன் தூக்கியபோது அவலும், நீருமாகக் குமட்டிக் குமட்டி வாந்தி எடுத்தாள் அவள். இளங்குமரனின் பொன்நிறத் தோள்களில் அவள் உமிழ்ந்த அவலும் நீரும் ஒழுகி வடிந்தன. ஓர் உயிரைக் காப்பாற்றுகிறோம் என்ற பெருமிதத்தில் அவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டான் இளங்குமரன். ‘அழுக்குப் படாமல் பிறருக்கு உதவி செய்துவிட நினைத்தால் உலகத்தில் உதவிகளே இல்லாமற் போய்விடும்’ என்று நினைத்த போது அவனுக்கு அவள் வாந்தி எடுத்தது வெறுப்பதற்குரியதாகப் படவில்லை.
கப்பல் கரப்புத் தீவின் ஈரமான செம்மண் தரையில் அந்தப் பெண்ணைத் தூக்கிக் கொண்டு நடந்த போது இளங்குமரனின் மனம் கருணை மயமாக நெகிழ்ந்திருந்தது. பிறருக்கு உதவி செய்வதில் இருக்கிற மகிழ்ச்சி பிறரிடமிருந்து உதவியைப் பெறுவதில் இருக்க முடியாதென்று எப்போதும் அவனுக்கு ஒரு கருத்து உண்டு. அதையே மீண்டும் நினைத்துக் கொண்டு மகிழ்ந்தான் அவன்.
அந்தச் சமயத்தில் கப்பல் ஒன்று அவ்வழியே பூம்புகாரின் துறைமுகத்தை நோக்கி வருவதை அவன் கண்டான். உடனே தான் சுமந்து கொண்டிருந்த பெண்ணின் உடலை ஒரு மரத்தடியில் கிடத்திவிட்டுக் கப்பலை அழைப்பதற்கு விரைந்தான். மழையும், காற்றுமான அந்த நேரத்தில் தான் உதவி கோருவது கப்பலிலிருப்பவர்களுக்குத் தெரிய வேண்டுமென்பதற்காகத் தீவிலேயே மிகவும் மேடான ஓர் இடத்தில் போய் நின்று கூவினான் அவன். கூவியும் கைகளை ஆட்டியும் வெகுநேரம் முயன்றும் அந்தக் கப்பலில் இருந்தவர்கள் கவனம் அவன் பக்கம் திரும்பவில்லை. அவனுடைய கூக்குரலைக் காற்று அடித்துக் கொண்டு போய்விட்டது. தோற்றத்தைத் தொலைவும் மழையும் தெரியவிடாமற் செய்துவிட்டன. ‘இன்னும் ஏதாவது கப்பல் வருகிறதா’ என்று கவனித்துக் கொண்டு அங்கேயே நின்றான் இளங்குமரன். கப்பல்கள் வந்தன, போயின. ஆனால் ஆதரவு தேடிக் கூக்குரலிட்ட அவனைத்தான் அவை கவனிக்கவில்லை. வெகு நேரத்துக்குப் பின்பு, ‘இனியும் கப்பல்களை நம்பிக் காத்திருப்பதில் பயனில்லை!’ என்ற முடிவுடன் அந்தப் பெண்ணை விட்டு வந்த இடத்துக்குத் திரும்பினான் இளங்குமரன். மழை மூட்டப் பொய்யிருளோடு மெய்யிருளாகிய இரவின் கருமையும் கலந்த தீவினுள் ஒளி மங்கி அந்தகாரம் கவிந்து கொள்ள முற்பட்டிருந்தது. ‘இன்னும் சிறிது நேரத்தில் நன்றாக இருட்டிவிடுமே’ என்ற கவலையோடு திரும்பி வந்த இளங்குமரன் அங்கே அந்தப் பெண் தானாகவே மயக்கம் தெளிந்து எழுந்து நின்று கொண்டிருப்பதைப் பார்த்து வியந்தான். அவளுடைய நிலை அவன் கவலையை ஓரளவு குறைத்தது. அவன் அருகில் வந்த போதும் அவள் அவனைக் கவனிக்கவில்லை. எதிர்ப்பக்கமாகக் கடலைப் பார்த்தவாறு கூந்தலை அள்ளிமுடித்துக் கொண்டிருந்தாள் அவள். நீரில் நனைந்து வெளுத்திருந்ததனால் வெண் தாமரைப் பூப்போன்ற அவளுடைய சிறிய பாதங்களில் செம்பஞ்சுக் குழம்பு தீட்டினாற்போல் தீவின் ஈரச் செம்மண் நிறம் பூசி அலங்காரம் செய்திருந்தது. தெப்பமாக நனைந்த நிலையில் குளிரில் உதறும் மணிப்புறாவைப் போல் அவள் பொன்னுடல் நடுங்கிக் கொண்டிருந்தது. வெண் சங்கு போல் நளினமாகத் தோன்றிய அவள் கழுத்துப் பின்புறம் பிடரியில் முத்து முத்தாக நீர்த்துளிகள் உருண்டு ஒட்டியும் ஒட்டாமலும் சிதறின. அவை முத்தாரம் போல் தோன்றின. இளங்குமரன் மெல்லிய குரலில் அவளிடம் கூறினான்:
“பெண்ணே உன்னைக் காப்பாற்றியதற்காகப் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பவனை நீ சிறிது திரும்பிப் பார்க்கலாமே...”
தோகை பொலியத் தோற்றமளிக்கும் பெண் மயில் போல் அவள் திரும்பினாள். அவள் முகத்தில் நகை மலர்ந்தது.
அந்த முகத்தைப் பார்த்து இளங்குமரன் அதிர்ந்து போய் நின்றான். அவன் முகத்தில் வெறுப்பும் கடுமையும் பரவின.
“நீயா?... உன்னையா நான் இவ்வளவு சிரமப்பட்டுக் காப்பாற்றினேன்?”
“ஏன்? நான் காப்பாற்றுவதற்குத் தகுதியுடையவளில்லையா?” என்று கேட்டாள் சுரமஞ்சரி. அவள் முகத்திலும், கண்களிலும், இதழ்களிலும் குறும்புச் சிரிப்புக் குலவித் தெரிந்தது. அவளுடைய இன்ப விழிகள் இரண்டும் அவனை விழுங்கிவிடுவது போல் பார்த்தன.
கப்பல் கரப்புத் தீவு இருளில் மூழ்கிவிட்டது. மழையும் காற்றும் முன்பிருந்த கடுமை குறைந்திருந்தன. பகைவர்களைப் போல் ஒன்றும் பேசிக் கொள்ளாமல் இருளில் எதிரெதிரே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள் சுரமஞ்சரியும் இளங்குமரனும். கடல் இருந்த இடம் தெரியாவிட்டாலும் கப்பல்கள் போவதும் வருவதுமாக இருந்ததனால் தொலைவில் ஒளிப் புள்ளிகள் தெரிந்தன.
நடுங்கும் குளிர். இருவர் உடலிலும் ஈர உடைகள். இருவர் வயிற்றிலும் பசி. இருவர் மனத்திலும் எண்ணங்கள். இருவர் எண்ணங்களிலும் துயரங்கள். அமைதியில்லை; உள்ளும் இல்லை - புறத்திலும் இல்லை. நீண்ட நேர மௌனத்துக்குப் பின் சுரமஞ்சரியின் கேள்வி இளங்குமரனை நோக்கி ஒலித்தது.
“என்னைக் காப்பாற்றியதை நீங்கள் விரும்பவில்லைதானே?”
“...”
இளங்குமரனிடமிருந்து பதில் இல்லை.
“நான் கடலோடு சீரழிந்து இறந்து போயிருந்தால் உங்களுக்குத் திருப்தியாகியிருக்கும் இல்லையா?”
“...”
“என் கேள்வியை மதித்து எனக்குப் பதில் சொல்வது கூட உங்களுக்குக் கேவலம் போலிருக்கிறது?”
“...”
சுரமஞ்சரி எழுந்து நின்றாள். மெல்லிய விசும்பல் ஒலி அவள் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து ஒலித்தது. இளங்குமரன் அதைக் கேட்டும் அசையாமல் கற்சிலை போல் அமர்ந்திருந்தான்.
எழுந்து நின்ற அவள் கடலை நோக்கி வேகமாக நடக்கலானாள். நடையில் பாய்ந்தோடும் வெறி. நெஞ்சில் தவிப்புக்கள். அதைக் கண்டு இளங்குமரனின் கல் நெஞ்சில் எங்கோ சிறிது கருணை நெகிழ்ந்தது. எழுந்து நின்று அவளைக் கேட்டான்:
“நில்! எங்கே போகிறாய்?”
“எங்கேயாவது போகிறேன்? எங்கே போனால் உங்களுக்கென்ன? உங்கள் மனத்தில்தான் எனக்கு இடம் கிடையாது! கடலில் நிறைய இடமிருக்கிறது.”
“இருக்கலாம்! ஆனால் நான் உன்னைச் சாக விட மாட்டேன். நீ என்னால் காப்பாற்றப்பட்டவள். தெரிந்தோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ உன்னைக் காப்பாற்றி விட்டேன். என்னுடைய அன்பை நீ அடைய முடியாது; ஆனால் கருணையை அடைய முடியும்.”
சுரமஞ்சரி நின்றாள். அவனுக்குக் கேட்கும்படி இரைந்து சிரித்தாள்:
“அன்பில்லாமல் கருணையில்லை. எல்லையை உடையது அன்பு, எல்லையற்றது கருணை. அன்பு முதிர்ந்துதான் கருணையாக மலர வேண்டும். அன்பேயில்லாத உங்கள் கருணையை நான் அங்கீகரிப்பதற்கில்லை.”
“உன்னிடம் தர்க்கம் புரிய நான் விரும்பவில்லை. உன் சிரிப்புக்கும் பார்வைக்கும் நான் தோற்று நிற்பதுதான் அன்பு என்று நீ நினைப்பதாயிருந்தால் அதை ஒரு போதும் என்னிடமிருந்து அடைய முடியாது. எனக்கு பொதுவான இரக்கம் உண்டு. பொதுவான கருணை உண்டு. அது உன் மேலும் உண்டு. ஈ, எறும்பு முதல் எல்லா உயிர்கள் மேலும் உண்டு.”
“அப்படிக் கருணையையும், இரக்கத்தையும் பொதுவாகச் செலுத்தக் கடவுள் இருக்கிறார். நீங்கள் தேவையில்லை. மனிதர்கள், மனிதர்களிடமிருந்து, மனித நிலையில் எதிர்பார்க்கும் ஈரமும் பாசமும் இணைந்து குழைந்த உலகத்து அன்புதான் உங்களிடமிருந்து எனக்கு வேண்டும்.”
“அந்த அன்பை நான் உனக்குத் தருவதற்கில்லை.”
“வேறு யாருக்குத் தருவதாக உத்தேசமோ?”
“யாருக்குமே தருவதற்கில்லை. அந்த அன்பை என் தாயின் கால்களில் விழுந்து கதறுவதற்காகச் சேர்த்துக் கொண்டு வருகிறேன் நான். உலகத்திலேயே நான் அன்பு செலுத்துவதற்கு ஒருத்திதான் பிறந்திருக்கிறாள். அவள் யாரென்று எனக்கே தெரியவில்லை. அவளுக்காகத்தான் என் இதயத்தில் அன்பு தேங்கியிருக்கிறது. அவளுக்கு முன்னால்தான் நான் கண்ணில் நீர் நெகிழ ‘அம்மா’ என்று குழைய முடியும். துரதிர்ஷ்டவசமாக அவள் யாரென்று இதுவரை எனக்குத் தெரியவில்லை. அவளைப் பார்க்கிற வரை நான் பார்த்துக் கொண்டிருக்கிற பெண்களெல்லாம் என் கண்களுக்கு அவளாகவே தெரிகிறார்கள்.”
“எனக்குத் தாய் இருக்கிறாள். ஆகவே அந்த வகையிற் கருணைக்குக் குறைவில்லை. ஆனால் தாயும், தந்தையும் செலுத்துகிற அன்பு மட்டும் இப்போது என் மனத்தை நிறைவு செய்யவில்லையே! உங்களைப் போல் ஒருவருடைய மனத்திலிருந்து என்னைப் போல் ஒருத்தியின் மனம் எதையோ வெற்றி கொள்வதற்குத் தவிக்கிறதே!”
அவள் இப்படிச் சிரித்துக் கொண்டே கேட்ட போது மறுபடியும் இளங்குமரனின் குரல் சினத்தோடு சீறி ஒலித்தது:
“அந்த வெற்றி உனக்கு கிடைக்குமென்று நீ கனவிலும் நினைக்காதே. பெண்ணே! உன் தந்தையார் சேர்த்துக் குவித்திருக்கிற செல்வத்துக்கு ஆசைப்பட்டுச் சோழநாட்டு இளவரசனே உன்னை மணந்து கொள்ள முன்வந்தாலும் வரலாம். ஆனால் இளங்குமரன் வரமாட்டான். உன் தந்தையார் பொன்னையும் மணியையும் தான் செல்வமாகச் சேர்த்திருக்கிறார். ஆனால் இளங்குமரன் தன்மானத்தையும், செருக்கையுமே செல்வமாகச் சேர்த்திருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்க.”
எதிரே தள்ளி நின்றிருந்த சுரமஞ்சரி இளங்குமரனுக்கு மிக அருகில் வந்தாள். அழுகையும், சிரிப்புமின்றி உறுதியான எண்ணம் மட்டுமே வெளிப்படும் குரலில் ஏதோ சபதம் போடுவதுபோல் அவனிடம் கூறலானாள்:
“ஐயா! இந்த இருளும், மழையும், காற்றும், கடலும் சாட்சியாக உங்களுக்குச் சொல்கிறேன். தன்மானத்தையும் செருக்கையும் உங்களை விடக் குறைவாக நான் சேர்க்கவில்லை. உங்களிலும் பல மடங்கு அதிகமாகச் சேர்த்திருந்தேன். அதை அழித்து என் மனத்தை பலமில்லாமல் நெகிழ்ந்து போகச் செய்தது யார் தெரியுமா?”
“யார்...?”
“கேள்வியைப் பார்! சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா? நீங்கள் தான்!... நீங்களே தான்.”
“நான் என்னுடைய தன்மானத்தையும், செருக்கையும் வளர்ப்பதற்கு முயல்வது உண்டே தவிரப் பிறருடைய தன்மானமும் செருக்கும் அழிவதற்கு முயன்றதாக எனக்கு நினைவில்லையே?”
“எப்படி நினைவிருக்கும்? உங்கள் செருக்கு வளரும் போதே என் செருக்கு அழிந்து உங்களுக்கு உரமாகிக் கொண்டிருக்கிறதே! பூ அழிந்து தானே கனி?”
இளங்குமரன் திகைத்துப் போனான். அவளுடைய சாமர்த்தியமான பேச்சில் அவனது உணர்வுகளின் இறுக்கம் சிறிது சிறிதாக உடைந்து கொண்டிருந்தது.
“சோழ இளவரசன் மட்டுமில்லை. அகில உலகிலுமுள்ள எல்லா இளவரசர்களும் வந்தாலும் என் மனத்தைத் தோற்கவிட மாட்டேன். என் தந்தையாரின் செல்வம் எனக்குத் தூசியைப் போலத்தான். பதவி, குடிப்பெருமை எல்லாம் அப்படியே! ஆனால் நான் என் மனம் அழிந்து ஏங்கி நிற்கும் நிலை ஒன்று உண்டு. அது இப்போது என் எதிரில் நின்று கொண்டிருப்பவரின் அழகிய கண்களுக்கு முன் தோன்றும் நிலை தான்.”
உணர்வுமயமாகிவிட்ட அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தோன்றாமல் தயங்கி நின்றான் இளங்குமரன். கப்பல் கரப்புத் தீவில் எங்கோ புதரில் மலர்ந்து கொண்டிருந்த தாழம்பூ மணம் காற்றில் கலந்து வந்து அவன் நாசியை நிறைத்தது. இந்த மணத்தைத்தான் அன்றொரு நாள் கைகளிலிருந்தும் மனத்திலிருந்தும் கழுவித் தீர்த்திருந்தான் அவன். இன்று அதே மணம் மிக அருகில் கமழ்கிறது.
கீழே குனிந்து அவன் பாதங்களைத் தன் பூவிரல்களால் தீண்டி வணங்க முயன்றாள் சுரமஞ்சரி. இளங்குமரன் தன் பாதங்களைப் பின்னுக்கு இழுத்து விலகிக் கொண்டான். அவன் இழுத்துக் கொண்ட வேகத்தையும் முந்திக் கொண்டு வந்து பாதத்தில் அவளுடைய கண்ணீர் முத்து ஒன்று சிந்திவிட்டது. அவள் ஏமாற்றத்தோடு எழுந்தாள்.
“நீங்கள் என்னைக் கடுமையாகச் சோதிக்கிறீர்கள்.”
“தெய்வம் எனக்கு என் தாயைக் காண்பிக்காமல் இதைவிடக் கடுமையாகச் சோதிக்கிறது பெண்ணே!” என்று கூறிக்கொண்டே மரத்தடியில் உட்கார்ந்தான் இளங்குமரன். அவள் நின்று கொண்டேயிருந்தாள். இருவருக்குமிடையே அமைதி நிலவியது.
சிறிது நாழிகையில் சோர்வு மிகவே அப்படியே ஈரத் தரையில் சாய்ந்து படுத்துக் கொண்டு விட்டான் இளங்குமரன். அவள் மட்டும் முன்போலவே நின்று கொண்டிருந்தாள்.
“ஏன் நின்று கொண்டேயிருக்கிறாய்?”
“நிற்காமல் வேறென்ன செய்வது?”
“விடிவதற்கு முன் ஒன்றும் செய்வதற்கில்லை! விடிந்த பின் ஏதாவது கப்பலில் இடம் பிடித்து ஊர் திரும்பலாம்! அதுவரை இப்படியே நிற்கப் போகிறாயா?”
அவன் தலைப்பக்கத்தில் வந்து அவள் மெல்ல உட்கார்ந்து கொண்டாள். அந்த உரிமையும், நெருக்கமும் சற்று மிகையாகத் தோன்றின அவனுக்கு. “அதோ அந்த மரத்தடியில் போய்ப் படுத்துத் தூங்கு” என்று பக்கத்திலிருந்த வேறொரு மரத்தைக் காண்பித்தான் இளங்குமரன்.
“அங்கே போகமாட்டேன். பயமாயிருக்கும் எனக்கு.”
“பயப்படுவதற்கு இந்தத் தீவில் ஒன்றுமில்லை.”
‘நீங்கள் இருக்கிறீர்கள்’ என்று குறும்புத்தனமாகச் சொல்லிச் சிரிக்க நினைத்தாள் சுரமஞ்சரி. ஆனால் அப்படிச் சொல்லவில்லை. பயத்தினால் நாவே சொல்லுக்குத் தடையாகிவிட்டது.
“பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பதே எனக்கு ஒரு பயமாகி விடும். ஈரத் தரையில் தலைக்கு ஒன்றும் வைத்துக் கொள்ளாமல் படுத்துத் தூங்கிப் பழக்கமில்லை எனக்கு. நான் இப்படியே நிற்கிறேன்” என்று மறுபடியும் எழுந்திருக்கப் போனவளைக் கைப்பற்றி உட்கார வைத்தான் இளங்குமரன். அவன் கை தன் கையைத் தீண்டிய அந்த விநாடி அவள் நெஞ்சில் பூக்கள் பூத்தன. மணங்கள் மணந்தன. மென்மைகள் புரிந்தன. தண்மைகள் நிறைந்தன.
“இதோ இப்படி இதன் மேல் தலை வைத்து உறங்கு” என்று தன் வலது தோளைக் காட்டினான் இளங்குமரன். சுரமஞ்சரி முதல் முதலாக அவனுக்கு முன் நாணித் தலை கவிழ்ந்தாள்.
“ஏன் பேசாமல் இருக்கிறாய்? உனக்குத் தலையணை இன்றி உறக்கம் வராதென்றால் என் கையை அணையாகத் தருகிறேன். இது பொதுவாக உன் மேல் எனக்கு ஏற்படும் கருணையைக் கொண்டு நான் செய்யும் உதவி. விரும்பினால் ஏற்றுக் கொள். இல்லாவிட்டால் நின்று கொண்டே இரு” என்றான் கடுமையாக.
செம்பொன் நிறத்துச் செங்கமலப் பூவினைப் போன்ற அவன் வலது தோளில் தலை சாய்த்தாள் சுரமஞ்சரி. அவள் மனத்தில் நினைவுகள் மிக மெல்லிய அரும்புகளாக அரும்பிக் கொண்டிருந்தன.
அப்போது, “பெண்ணே! இப்படி இன்றிரவு என் தாயோடு இந்தத் தீவில் தங்க நேர்ந்து அவளுக்குத் தலையணை இல்லாமல் உறங்க முடியாது போயிருந்தாலும், இதே வலது தோளைக் கருணையோடு அவளுக்கு அளித்திருப்பேன் நான். பிறருக்கு உதவுவதே பெருமை, அதுவும் இயலாதவர்களுக்கு உதவுவது இன்னும் பெருமை” என்று நிர்மலமான குரலில் கூறினான் இளங்குமரன்.
“நான் ஒன்றும் இயலாதவளில்லை. எனக்கு உங்களிடமிருந்து அன்பு வேண்டும்; கருணை வேண்டியதில்லை” என்று சீற்றத்தோடு தோளைத் தள்ளி விட்டுத் துள்ளி எழுந்தாள் சுரமஞ்சரி. அவள் இதயத்து ஆசை அரும்புகள் வாடி உதிர்ந்தன.
பரிவும், ஏக்கமும், பசியும், குளிருமாகக் கழிந்த அந்த நீண்ட இரவுக்குப் பின் கப்பல் கரப்புத் தீவில் பொழுது புலர்ந்த பொழுது மங்கல நீராடி எழுந்த கன்னிகை போல் தீவு முழுவதும் புத்தழகு பூத்திருந்தது. மழை இரவுக்குப் பின்னர் விடியும் காலை நேரத்துக்கு எப்போதுமே மிகுந்த வனப்பு உண்டு. தண்மையும் மலர்ச்சியுமாக விடிந்த அந்தக் காலைப் போதில் இளங்குமரனும் சுரமஞ்சரியும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. வெளியே எங்கும் குளிர்ச்சி, எங்கும் மலர்ச்சி. அவர்கள் இருவர் நெஞ்சங்களில் மட்டும் வெம்மையும், பிணக்கும் விளைந்திருந்தன. முதலில் இளங்குமரன் தான் துயில் நீங்கிக் கண்விழித்து எழுந்திருந்தான். அப்போது சுரமஞ்சரி எதிர்ப்புறமிருந்த வேறொரு மரத்தடியில் உட்கார்ந்தபடியே சாய்ந்து கண்மூடித் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை எழுப்புவதற்காக அருகில் சென்று நின்று கொண்டு இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டி ஓசையுண்டாக்கினான் இளங்குமரன். அந்த ஓசையைக் கேட்டு வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து நின்றாள் அவள். எதிரே அவனைப் பார்த்ததும் கோபத்தோடு முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டாள். சிறு குழந்தையைப் போல் சீற்றம் கொண்டாடும் அந்தப் பெண்ணின் நிலையைக் கண்டு தனக்குள் மெல்லச் சிரித்துக் கொண்டான் அவன்.
அவளுடைய கோபத்தையும், பிணக்கையும் பொருட்படுத்தாமல் நகரத்துக்குச் செல்லும் கப்பல்களைக் கூவியழைத்து ஏதாவதொரு கப்பலில் இடம் பெற்றுக் கொள்ள முயல்வதாக மேட்டில் ஏறினான். இளங்குமரன். விரைவில் அவனது முயற்சி பயனளித்தது. பச்சைக் கற்பூரத்தையும் வளைகளையும், பட்டுக்களையும் ஏற்றிக் கொண்டு சீன தேசத்திலிருந்து பூம்புகார்த் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்த சீனத்துக் கப்பல் ஒன்று இளங்குமரனின் கூப்பாட்டுக்குச் செவி சாய்த்தது. மாதக் கணக்கில் கடல்பயணம் செய்து துறைமுகத்தை அடைவதற்கிருந்த அந்தக் கப்பலில் சுரமஞ்சரிக்கும் இளங்குமரனுக்கும் இடம் கிடைத்தது. இளங்குமரனும், சுரமஞ்சரியும் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு தான் இருந்தார்கள். கப்பல் நிறையக் கற்பூரம் மணந்து கொண்டிருந்தது.
கப்பலின் தலைவன் மிகவும் இளகிய மனமுள்லவனாக இருந்தான். நனைந்தும், கசங்கியுமிருந்த அவர்கள் ஆடைகளைக் கண்டு மனம் இரங்கி, “இவற்றை அணிந்து கொண்டு பழைய ஆடைகளைக் களைந்தெறியுங்கள்” என்று புத்தம் புதிய பட்டாடைகளைக் கொண்டு வந்து அவர்களிடம் அளித்தான் அந்தச் சீனத்துக் கப்பலின் தலைவன்.
“பட்டுக்களின் மென்மையை அனுபவித்துச் சுகம் காணும் பழக்கம் இதுவரை எனக்கு இருந்ததில்லை. இனிமேலும் இருக்கப் போவதில்லை. தயை கூர்ந்து என்னை விட்டுவிடுங்கள். ஆனால் இதோ என் அருகில் நிற்கும் இந்தப் பெண்ணுக்குப் பட்டாடை என்றால் கொள்ளை ஆசை. இவளுடைய வீட்டில் மிதித்து நடந்து செல்வதற்குக் கூடப் பட்டு விரிப்பைத் தான் பயன்படுத்துவார்கள். இவளுடைய உடலுக்குப் பட்டாடையும் கைகளுக்குப் புதிய வளையல்களும் நிறையக் கொடுத்தால் காவிரிப்பூம்பட்டினத்திலேயே பெருஞ்செல்வராகிய இவள் தந்தையின் நட்பும் உங்களுக்குக் கிடைக்கலாம்” என்று புன்னகையோடு கப்பல் தலைவனுக்கு மறுமொழி கூறினான் இளங்குமரன். அப்போது சுரமஞ்சரி கண்களில் சினம் பொங்க இளங்குமரனை எரித்து விடுவது போலப் பார்த்தாள்.
சுரமஞ்சரியின் தந்தையைப் பற்றியும், அவருடைய கப்பல் வாணிகத்தின் பெருமையைப் பற்றியும் இளங்குமரன் இனஞ் சொல்லி விளக்கிய பின்பு கப்பல் தலைவனின் மனத்தில் அவள் மேல் மதிப்பு வளர்ந்தது. உடனே விதவிதமான பட்டு ஆடைகளையும், வளையல்கள், ஆரங்கள் ஆகியவற்றையும் அவளுக்கு முன்னால் கொண்டு வந்து குவித்து, “இதைப் பாருங்கள், அதைப் பாருங்கள்” என்று வேண்டிக் கொள்ளத் தொடங்கி விட்டான் அவன்.
“நான் ஒன்றையும் பார்க்க வேண்டாம். முதலில் நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்” என்று சுரமஞ்சரி சீற்றத்தோடு கூறிய பின்பே அந்தக் கப்பல் தலைவனின் ஆர்வம் நின்றது.
கப்பல் காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்தை அடைந்த போது அதன் தலைவனுக்கு நன்றி கூறிவிட்டுக் கீழே இறங்கினா இளங்குமரன். அவனை அடுத்துக் கீழே இறங்கிய சுரமஞ்சரி அவனிடமோ, கப்பல் தலைவனிடமோ சொல்லி விடைபெற்றுக் கொள்ளாமலே வேகமாக முன்னால் நடந்து செல்லலானால். இளங்குமரனும் விரைவாக அவளைப் பின் தொடர்ந்து அருகில் சென்று நின்று கொண்டு, “பெண்ணே! இப்படிச் சினத்தோடு முகத்தை முறித்துக் கொண்டு போவதனால் ஒரு பயனுமில்லை. என்னுடைய உதவியை இப்போதும் நான் உனக்கு அளிப்பதற்குச் சித்தமாயிருக்கிறேன். நீ விரும்பினால் உன்னுடைய மாளிகை வரை உனக்குத் துணை வருவேன்” என்றான். இதைக் கேட்ட பின்பும் சுரமஞ்சரியின் முகம் மலரவில்லை; மனம் நெகிழவில்லை.
“என் மேல் அன்பு செலுத்துகிறவர்களின் உதவிதான் எனக்கு வேண்டும். என்னை ‘எவளோ ஓர் அப்பாவிப் பெண்’ என்று நினைத்து வெறும் கருணையை மட்டும் காண்பிக்கிறவர்களிடம் நான் உதவியை எதிர்பார்க்கவில்லை. என்னுடைய மாளிகைக்குப் போய்ச் சேர்வதற்கு வழி எனக்குத் தெரியும்” என்று அவன் முகத்தை நிமிர்ந்து பாராமலே எடுத்தெறிந்து பேசிவிட்டு முன்னைக் காட்டிலும் வேகமாக நடந்தாள் சுரமஞ்சரி. அவள் அவனிடம் இப்படிக் கடுமையாகப் பேசிவிட்டுச் செல்வதைக் கண்டு அருகில் நின்ற சிலர் பெரிதாகச் சிரித்தனர். தன்னை ஏளனம் செய்கிற தொனியில் அவர்கள் சிரிப்பு ஒலித்தாலும் இளங்குமரன் அதைக் கேட்காதவன் போல் வேறு பக்கமாகத் திரும்பி நடந்தான். ஏற்றுமதி செய்வதற்குக் குவித்த பொருள்களும், இறக்குமதி செய்து குவித்த பொருள்களுமாக அம்பாரம் அம்பாரமாய்ப் பல்வேறு பண்டங்கள் நிறைந்திருந்த துறைமுகப் பகுதிகளைக் கடந்து வெளியே வந்தான் இளங்குமரன். அன்று காலையிலிருந்தே அவன் மனமும், எண்ணங்களும் சுறுசுறுப்பாயிருந்தன. அங்கே துறைமுக வாயிலில் இருந்த ‘பார்வை மாடம்’ என்னும் மேடையில் ஏறி நின்று பார்த்தால் பூம்புகாரின் அக நகரும், புறநகரும், கடலுக்குள் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை உள்ள காட்சிகளும் தெரியும். பெரிதும் சிறிதுமான கப்பல்களும் காட்சியளிக்கும். துறைமுகத்தில் வந்து இறங்கும் வெளிநாட்டு மக்கள் ஏறிப் பார்ப்பதற்காகவே அமைந்திருந்த மாடமாளிகை யாகையால் அது பார்வை மாடம் என்று அழைக்கப்பட்டு வந்தது. பார்வை மாடத்தில் ஏறி நின்று பார்த்த இளங்குமரனுக்கு முதல் நாள் மழையில் நனைந்திருந்த நகரும், சுற்றுப் புறங்களும் அற்புதமாய்த் தோன்றின. எல்லையற்ற பெருநீர்ப் பரப்பினிடையே குளிர்ந்த வைகறைப் போதில் பனித்துளி புலராது தலைதூக்கி மலர்ந்து கொண்டிருக்கும் பெரும் பூவைப் போல் மழையில் நனைந்திருந்த நகரத்தில் பகல் பிறந்து விரிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த போது இளங்குமரன் மனத்தில் விசித்திரமானதோர் ஆவல் அரும்பியது. அப்போதே நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கால் போகும் போக்கில் நடந்து சுற்றிவிட்டு வரவேண்டும் போலிருந்தது அவனுக்கு. இப்படிப் பல சமயங்களில், மழையிலும் வெயிலிலும் காரணமும் நோக்கமுமின்றி அநுபவத்தைத் தேடும் அநுபவத்திற்காக ஊர் சுற்றியிருக்கிறான் அவன். கப்பலிலிருந்து இறங்கி வந்த போது புறவீதியில் வளநாடுடையார் வீட்டுக்குச் சென்று சிறிது நேரம் தங்கிய பின் அங்கிருந்து நேரே படைக்கலச் சாலைக்குப் போய்விட வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த அவன் இப்போது அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டான். உற்சாகத்தோடு ஊர் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டான். ஒவ்வொரு இடமாகப் பார்த்து விட்டுப் பௌத்தப் பள்ளியும் புத்தர் பெருமானுக்குரிய ஏழு பெரிய விகாரங்களும் அமைந்திருந்த இடமாகிய ‘இந்திரவிகாரம்’ என்னும் பகுதிக்கு வந்து சேர்ந்திருந்தான் அவன். தூபிகளோடு கூடிய வெண்ணிற விமானங்கள் ஏழும் தோட்டத்துக்கு நடுவே தூய்மையின் வடிவங்களாகத் தோன்றின. புத்த விகாரங்களுக்கு முன்னால் அங்கங்கே சிறு சிறு கூட்டங்களுக்கு நடுவே நின்று கொண்டு பௌத்த சமயத்தைச் சார்ந்த துறவிகள் அறிவுரைகளைப் பகர்ந்து கொண்டிருந்தார்கள். இன்னும் சில துறவிகள் ‘எங்களை எதிர்த்துச் சமய வாதம் புரியும் திறமையுள்ளவர்கள் வரலாம்’ என்று அழைப்பது போல் தத்தம் கொடிகளைக் கம்பங்களின் உயரத்தில் பறக்க விட்டுக் கொண்டு வெற்றிப் பெருமிதத்தோடு நின்று கொண்டிருந்தார்கள்.
அந்த புத்த விகாரங்களுக்கு முன்னால் சமயவாதிகளின் திறமையான பேச்சில் மயங்கிக் கூடியிருந்த கூட்டத்துக்குள் இளங்குமரனும் புகுந்து நின்று கொண்டான். இலைத்த தோற்றத்தையுடைய நெட்டையான பௌத்த சமயத் துறவி ஒருவர் புத்த ஞாயிறு தோன்றும் காலத்தில் உலகுக்கு விளையும் நன்மைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.
“புத்த ஞாயிறு தோன்றும் காலத்தில் கதிரவனும் சந்திரனும் தீங்கின்றி விளங்குவார்கள். நாளும், கோளும் நலிவின்றி நல்லனவாய் நிகழும். வானம் பொய்க்காது, வளங்கள் குறையாது. உலகத்து உயிர்கள் துன்பமின்றி இன்பமே நுகரும். மலைகளும், கடலும் பெரும்பயன் நல்கும். பசுக்கள் கலம் நிறையப் பால் பொழியும். உலகத்தில் நோய்களே இல்லாமற் போய்விடும். கொடிய விலங்குகளும் பகை நீங்கி வாழும். கூனும், குருடும், ஊமையும், செவிடும் இன்பமயமாக மாறிவிடும்...” என்று தாமரை மலர் போன்ற வலக் கையை ஆட்டி உயர்த்திப் பேசிக் கொண்டிருந்த அந்தத் துறவிக்கு மிக அருகிற் சென்று அவருடைய வலது கையை எட்டிப் பிடித்துக் கொண்டு கேட்டான் இளங்குமரன்: “எனக்கு ஒரு சந்தேகம். அருள்கூர்ந்து அதைத் தெளிவாக விளக்கிய பின் நீங்கள் மேலே பேசலாம்.”
“ஆகா! அப்படியே செய்கிறேன் அப்பா. முதலில் உன் சந்தேகத்தைச் சொல்” என்று அவன் பிடியிலிருந்து தம் கையை விடுவிடுத்துக் கொள்ளாமலே கேட்டார் அவர். அவனுடைய செய்கையால் அவர் சிறிதும் அதிர்ச்சியோ, அச்சமோ அடைந்ததாகவே தோன்றவில்லை. அமைதியாக நகைத்துக் கொண்டே நின்றார்.
“புத்த ஞாயிறு தோன்றுங் காலத்தில் உலகத்தில் பசி, பிணி, துன்பம் ஒன்றுமே இல்லாமற் போகும் என்று சற்று முன் நீங்கள் கூறியது மெய்தானா அடிகளே?”
“மெய்தான்; இதில் உனக்குச் சந்தேகம் ஏன்?”
“அப்படியானால் இப்போது என்னோடு நான் கூப்பிடுகிற இடத்துக்கு வாருங்கள், அடிகளே!” என்று கூறிக் கொண்டே அவரைப் பரபரவென்று இழுத்துக் கொண்டு விரைந்து நடந்தான் இளங்குமரன். அவனுடைய வேகத்துக்கு ஈடுகொடுத்து நடக்க இயலாத துறவி அவனுடன் இழுபடுவது போல் தட்டுத் தடுமாறி விரைந்தார். இந்த வம்பு எதில் போய் முடிகிறதென்று காணும் ஆவலினால் கூட்டத்தில் சிலரும் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள். இளங்குமரனுக்கும், துறவிக்கும் பின்னால் ஒரு பெரிய கூட்டமே தொடர்ந்து நடந்து வரத் தொடங்கியிருந்தது. உலக அறவியின் பொது அம்பலத்துக்குள் நுழைந்து அங்கே பசிப் பிணியாலும், வறுமை வேதனைகளாலும் நொந்து கூடியிருந்த ஏழ்மைக் கூட்டத்தை அந்தத் துறவிக்குச் சுட்டிக் காண்பித்தான் இளங்குமரன்.
“இவர்களைப் போன்றவர்களைக் கண்டு. இவர்களைப் போன்றவர்களின் துன்பங்களிலிருந்துதான் உங்கள் புத்தருக்கு ஞானம் பிறந்தது. ஆனால் இவர்களைப் போன்றவர்களின் பசியும், நோவும் தீர வழிதான் இன்னும் பிறக்கவில்லை. இவர்களைப் போன்றவர்கள் தலைமுறை தலைமுறையாக இன்னும் உலகத்தில் இருக்கிறார்கள். நோயும், நொடியும், பசியும், பாவமும் இவர்களோடு வழிமுறை வழிமுறையாக இருக்கின்றன. நீங்களோ இந்திரவிகாரத்து வாயிலில் நின்று கொண்டு புத்த ஞாயிறு தோன்றும் காலத்தில் உலகமே சுவர்க்க பூமியாக மாறிவிடும் என்று கதை அளந்து பாமரர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது சொல்லுங்கள், இவர்களுடைய இருண்ட வாழ்க்கையில் புத்த ஞாயிறு தோன்றிப் புத்தொளி பரப்பாதது ஏன்? இவர்களுடைய குழிந்த வயிறுகளில் சோறு குவியாதது ஏன்? ஒளியிழந்த கண்களில் ஒளி தோன்றாதது ஏன்?” என்று ஆவேசம் கொண்டவன் போல் உணர்வு மயமாக மாறி அவரைக் கேட்டான் இளங்குமரன். அவர் அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கினார். பதில் கூறாமல் மெல்லச் சிரித்தார். தம்மையும் அவனையும் சுற்றிக் கூடியிருந்த கூட்டத்தை நன்றாக நிமிர்ந்து பார்த்தார்.
சிறிது நேரம் ஏதோ சிந்திப்பவர் போல் அமைதியாக நின்றார். பின்பு இளங்குமரனை நோக்கிக் கூறலானார்:
“தம்பீ! உன் கேள்விகள் மிக அழகாக இருக்கின்றன. சார்வாக மதத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் இவ்வளவு அழகாகப் பேச வரும். அவர்கள் தாம் இப்படிப் பொருளற்ற கேள்விகளைக் கூட அழகான சொற்களால் கேட்பார்கள். இறைவன் என ஒருவன் இல்லை என்பார்கள். நல்வினை தீவினைகளின் விளைவை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். தங்கள் இன்ப துன்பங்களுக்குத் தங்களுடைய வினைகளே காரணமென்று புரிந்து கொள்ளாமல் இறைவனே காரணமென்று மயங்கி அவனைப் பழிப்பார்கள்.”
“அடிகளே! நான் யாரையும் எதற்காகவும் பழிக்கவில்லை. இவர்கள் இப்படி வாழ நேர்ந்ததன் காரணத்தைத் தெரிந்து கொள்ள மட்டுமே ஆசைப்படுகிறேன்” என்றான் இளங்குமரன்.
“நல்லது! அதைத் தெரிந்து கொள்வதற்கு நீயும், நானும் சிறிது நேரம் விரிவாகப் பேசி வாதமிட வேண்டும். இதோ இங்கே என்னையும், உன்னையும் சுற்றிக் கூடியிருக்கும் காவிரிப்பூம்பட்டினத்துப் பொதுமக்கள் சாட்சியாக உன்னைக் கேட்கிறேன். சமயவாதம் புரிகிற இருவரும் ஒத்த அறிவுடையவராக இருக்க வேண்டியது நியாயம். என்னோடு சமயவாதம் புரிவதற்கு நீ கல்வியினால் தகுதி உடையவனா என்று முதலில் நான் தெரிந்து கொண்டு விடுவது நல்லது. நீ எந்தெந்த நூல்களைக் கற்றிருக்கிறாய் என்று சொல் பார்க்கலாம்.”
“வில்வித்தை, யானையேற்றம், குதிரையேற்றம், வாட்போர்...” என்று சில பெயர்களை வரிசையாக அடுக்கினான் இளங்குமரன். துறவியும், கூடியிருந்தவர்களும் கொல்லென்று சிரித்துக் கைகொட்டி ஏளனம் செய்தார்கள்.
“தம்பீ! உன்னுடைய வாட்டசாட்டமான உடம்பையும் முரட்டுத் தோற்றத்தையும் பார்த்தாலே நீ பெரிய வீரன் என்பது தெரிகிறது. ஆனால் நான் இப்போது கேட்கும் கேள்வி உன் உடம்பின் வளர்ச்சியைப் பற்றி அன்று; மனத்தின் வளர்ச்சியைப் பற்றித்தான் கேட்கிறேன். மனம் வளர்வதற்காக நீ என்னென்ன நூல்களைக் கற்றிருக்கிறாய்? சமயங்களையும் தத்துவங்களையும் பற்றி என்னென்ன தெரிந்து கொண்டிருக்கிறாய்? என்னென்ன புரிந்து கொண்டிருக்கிறாய்?” என்று நிமிர்ந்து நின்று கை நீட்டி வினாவும் அந்தத் துறவிக்கு முன் இளங்குமரனின் தலை தாழ்ந்தது. வாழ்க்கையிலேயே முதல் முறையாக உடலின் பலத்தால் எதிர்க்க முடியாத ஓர் எதிரிக்கு முன் தாழ்ந்து தளர்ந்து போய்த் தலை குனிந்து நின்றான் அவன். என்ன பதிலை அவருக்குக் கூறுவதென்று அவனுக்குத் தெரியவில்லை. சர்வநாடியும் ஒடுங்கித் தளர்ந்து போர் தொடங்குமுன்பே எதிரியிடம் தோற்றுப் போய் நிற்கும் பேதை போல் நிற்பதைத் தவிர வேறொன்றும் செய்யத் தெரியவில்லை அவனுக்கு.
“புத்தமதத்தைப் பற்றியாகிலும் உனக்கு ஏதாவது தெரியுமா?”
‘உங்களைப் போன்ற மொட்டைத்தலைச் சாமியார்கள் அந்த மதத்தில் நிறைய இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரியும்’ என்று முரட்டுப் பதிலாகக் கூறி அவரை மடக்கலாமா என நினைத்தான் இளங்குமரன். ஆனால் உடலும் மனமும் குன்றிப் போய் அத்தனை பேருக்கு முன் அவமானப்பட்டு நின்ற அந்தச் சூழ்நிலையில் வாய் திறந்து பேசும் துணிவையே இழந்திருந்தான் அவன்.
‘உனக்கு என்ன தெரியும்? உனக்கு எதைப் பற்றி ஞானம் உண்டு?’ என்று அவன் உள்ளத்தில் பெரிதாய் எழுந்து இடையறாமல் ஒலிக்கலாயிற்று ஒரு கேள்வி. அந்தக் கேள்வியில் அவன் உள்ளத்தின் செருக்கெல்லாம் துவண்டு ஒடுங்கியது.
சுற்றிக் கூடியிருந்த கூட்டத்திலிருந்து வாய்க்கு வாய் தன்னை ஏளனம் செய்து இகழ்ந்து பேசும் குரல்கள் ஒலிப்பதை அவன் செவிகள் கேட்டன. அந்தக் கணத்தில் அவன் உடம்பும் மனமும் அதற்கு முன் எப்போதுமே அடைந்திராத கூச்சத்தை அடைந்தன. வெட்கத்தை உணர்ந்தன. வேதனையை அனுபவித்தன.
இந்திர விகாரத்தின் வாயிலில் இருந்து அந்தத் துறவியைக் கைப்பிடித்து இழுத்துக் கொண்டு வந்த போது தன்னிடமிருந்த மிடுக்கும், கம்பீரமும் இப்போது போன இடம் தெரியாமல் பொலிவிழந்து நின்றான் இளங்குமரன்.
“மறுபடி எப்போதாவது என்னிடம் கேள்வி கேட்க வந்தால் இப்படி வெறுமையான மனத்தோடு, வெறுங்கையை வீசிக் கொண்டு வராதே தம்பி! மனம் நிறைய ஞானத்தோடு வலது கையில் சமயவாதம் புரிவதற்கான கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு ஞான வீரனாக வந்து சேர். மற்போர் வீரனைப் போல் உடம்பை மட்டும் வலிதாகக் காண்பித்துக் கொண்டு வந்து நிற்காதே” என்று அவனுக்குக் கேட்கும்படி உரத்த குரலில் கூறிவிட்டுக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு திரும்பி நடந்தார் அந்த பௌத்த சமயத்துறவி.
உலக அறவியல் பௌத்த சமயத்துறவியிடம் தோற்று அங்கே கூடியிருந்தவர்களின் ஏளனத்தையும் இகழ்ச்சியையும் ஏற்க நேர்ந்த பின், நடைப்பிணம் போல் தளர்ந்து படைக்கலச் சாலைக்குப் புறப்பட்டிருந்தான் இளங்குமரன். மனமும் நினைவுகளும் தாழ்வுற்று வலுவிழந்திருந்த அந்த நிலையில் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் எவரையும் எதிரே சந்திக்காமல் இருந்தால் நல்லதென்றெண்ணி ஒதுங்கி மறைந்து நடந்தான் அவன். முதல் நாள் இரவு கப்பல் கரப்பு தீவின் தனிமையில் சுரமஞ்சரி என்னும் பேரழகியைச் சிறிதும் பொருட்படுத்தாமல் நிமிர்ந்து நின்ற செருக்கும், தன்மானமும் இன்று எலும்பும் தோலுமாய் இளைத்துப் போன துறவி ஒருவருக்கு முன் தோற்றுத் தாழ்ந்து போய் விட்டதென்பதை நினைத்த போது அவன் மனம் தவித்தது.
‘என் மனம், என் மனம்’ என்று அவன் மற்றவர்களிடம் பெருமை பேசித் தருக்கிய அதே மனத்தில் ‘என்ன இருக்கிறது?’ என்று கேட்டு விட்டார் அந்தத் துறவி. முரட்டுத் திமிரையும், வறட்டு ஆணவத்தையும் தவிர அங்கே இருப்பது வேறு ஒன்றுமில்லை என்றும் நிரூபித்து விட்டார். பலர் நகைத்து இகழும்படி நிரூபித்து விட்டார்.
‘அப்படியில்லை! ஒரு போதும் அப்படியில்லை. என் மனத்தில் கருணையும் இருக்கிறது. ஓவியன் மணிமார்பனுக்கும், சுரமஞ்சரி என்ற பெண்ணுக்கும் துன்பம் நேர்ந்த காலங்களில் நான் கருணை காட்டியிருக்கிறேன். உலக அறவியிலும் இலஞ்சிமன்றத்திலும் உள்ள ஏழைகள் மேலும், இளைத்தவர் மேலும் இரக்கம் கொண்டிருக்கிறேன். இயலாதவர்களுக்கு உதவுவதில் இன்பம் கண்டிருக்கிறேன்.’
‘இருக்கலாம்! ஆனால், நம்மால் பிறரிடம் கருணை காட்ட முடியும் என்ற ஆணவ நினைப்புத்தான் உன்னுடைய கருணைக்குக் காரணம். ‘இரக்கப்பட முடியும்’ என்ற பெருமைக்காகவே இரக்கப்படுகிறவன் நீ! கருணைக்காகவே கருணை செலுத்தவும் இரக்கத்துக்காகவே இரங்கவும் உனக்குத் தெரியாதுதானே?’
இப்படி அவன் மனத்துக்குள்ளேயே அவனைப் பற்றி வாதப் பிரதிவாத நினைவுகள் எழுந்தன. தன்னைப் பற்றிய நினைவுகளைத் தானே தனக்குள் எண்ணி மெய்யின் ஒளியைத் தேட முயன்று தவிக்கும் ஆத்மாநுபவத் தூண்டுதலை அவன் அடைந்தான். அந்தத் தூண்டுதல் ஏற்பட ஏற்பட மனத்தின் கனங்களெல்லாம் குறைந்து மனமே மென்மையானதொரு பூவாகி விட்டது போலிருந்தது அவனுக்கு. தன் மனத்தின் குறிக்கோள் இப்போது புதிய திசையில் திரும்புவதையும் அவன் உணர்ந்தான்.
பதினெட்டு வயதில் இளமையின் நுழைவாயிலில் அவன் மனதில் ஏற்பட்டு ஆறிய ஆசைப் பசிகள் இரண்டு. ஒன்று உடம்பை வலிமையாகவும் வனப்பாகவும் வைத்துக் கொண்டு எல்லாருடைய கவனத்தையும் கவர வேண்டுமென்பது. மற்றொன்று விற்போரும், மற்போரும் போன்ற படைக்கலப் பயிற்சிகளில் எல்லாம் தேறித் தேர்ந்த வீரனாக விளங்க வேண்டுமென்பது. இந்த இரண்டு ஆசைகளும் நிறைவேறி மறந்து போன பின், தன்னுடைய தாய் யார், தந்தை யார், தனக்கு உறவினர்கள் யார் என்று அறியும் ஆசை எழுந்தது. நிறைவேறாத அந்த ஆசையில் நைந்து நைந்து அது இறுதியில் தாயை மட்டுமாவது காணும் விருப்பமாகக் குறைந்தது. அருட் செல்வ முனிவரின் மறைவுக்குப் பின் அந்த ஆசையும் நிறைவேறும் வழியின்றித் தவிப்பாக மாறி மனத்திலேயே தங்கிவிட்டது.
இன்றோ, முப்பதாவது வயதுக்கு இன்னும் சிறிது காலமே எஞ்சியிருக்கக் கூடிய முழுமையான இளமையின் கனிவில் நிற்கிறான் அவன். அவனுடைய சுந்தர மணித்தோள்களிலும், பரந்த பொன்நிற மார்பிலும், ஏறு போன்ற நடையிலும், எடுப்பான பார்வையிலும் மெல்லியலார் சொல்லிப் புகழுகிற இளநலம் மலரும் பருவம் இது. இந்தப் பருவத்தில் இன்று அவனுக்கு ஏற்பட்ட ஆசையோ விசித்திரமானதாயிருந்தது. இலக்கண இலக்கியங்களையும், சமய சாத்திரங்களையும், தத்துவங்களையும் முற்றிலும் முறையாகக் குறைவின்றிக் கற்றுக் காலையில் இந்திரவிகாரத்தில் சந்தித்த துறவியைப் போல் ஞான வீரனாக நிமிர்ந்து நிற்க வேண்டுமென்னும் ஏக்கம் அவன் மனத்தில் ஏற்பட்டிருந்தது. வெறும் ஏக்கமாகத் தோன்றிய இது அவன் வாழ்க்கையில் புதிய திசையில் பிறந்த புது வழியாகவும் அமையும் போலிருந்தது. உடம்பை வலிமையாகவும், வனப்பாகவும் வளர்த்ததைப் போலவே மனத்தையும் வளர்க்க ஆசைப்பட்டான் அவன். ‘சோற்றுக்கு இல்லாமையும் துணிக்கு இல்லாமையும் பெரிய ஏழ்மையல்ல. மெய்யான ஏழ்மை அறிவின்மைதான்; மெய்யான செல்வம் அறிவுடைமை தான்’ என்ற புதிய உணர்வு என்றுமில்லாமல் இன்று தன் மனத்தில் ஆழ்ந்து தோன்றுவதற்குக் காரணமென்ன என்பது இளங்குமரனுக்கே புரியாத பெரும் புதிராயிருந்தது.
இந்திர விகாரத்தில் அந்தத் துறவியைச் சந்தித்து அவரோடு வம்புக்குப் போக நேர்ந்திராவிட்டால் இப்படியொரு தவிப்பைத் தான் உணர இடமில்லாமற் போயிருக்குமோ என்று சிந்தித்தான் அவன். அந்தச் சிந்தனையின் போது தன் வாழ்வில் மலர்வதற்கிருந்த அல்லது மலர வேண்டிய வேறு ஓர் அழகிய பருவத்துத் தூண்டுதல் போலவே இந்திர விகாரத்துத் துறவியின் சந்திப்பு வாய்த்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் மனத்தில் உறுதிப்பட்டது.
மனம் சென்ற போக்கில் சிந்தித்தவாறே கால்கள் சென்ற போக்கில் சுற்றிவிட்டு அவன் படைக்கலச் சாலையை அடைந்த போது நேரம் நண்பகலுக்கு மேல் ஆகியிருந்தது. நீலநாக மறவர் திருநாங்கூரிலிருந்து திரும்பி வந்திருந்தார். ஆனால் மீண்டும் எங்கோ புறப்படுவதற்குச் சித்தமாயிருக்கிறார் என்பதற்கு அடையாளமாக வாயிற்புறத்தில் அவருடைய தேர் குதிரைகள் பூட்டப் பெற்றுப் பயணத்துக்குரிய நிலையில் நின்று கொண்டிருந்தது. வழியனுப்புவதற்கு நிற்பது போல் படைக்கலச் சாலையின் மாணவர்களும் சூழ்ந்து நின்று கொண்டிருந்தார்கள். களைப்புத் தீர நன்றாக நீராடித் தூய்மை பெற்ற பின் உண்பதற்காகப் படைக்கலச் சாலையின் உணவுக் கூடத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த இளங்குமரனை நீலநாக மறவர் உடனே கூப்பிடுவதாக ஒரு பணியாள் வந்து தெரிவித்தான். வயிற்றில் மிகுந்த பசியாயிருந்தாலும், அவரைச் சந்தித்து விட்டுப் பின்பு உண்ணச் செல்லலாமென்று அந்தப் பணியாளுடன் நீலநாகரைச் சந்திக்கச் சென்றான் இளங்குமரன்.
“உன்னை எதிர்பார்த்துத்தான் காலையிலிருந்து காத்துக் கொண்டிருக்கிறேன், இளங்குமரா! நேற்றிரவுதான் திருநாங்கூரிலிருந்து நான் திரும்பினேன். மறுபடியும் இப்போது திருநாங்கூருக்கே புறப்படுகிறேன். நீயும் என்னுடன் அங்கே வரவேண்டும். நாங்கூர் அடிகள் உன்னைக் காண்பதற்கு மிகவும் ஆவலோடிருக்கிறார். உடனே புறப்படலாம் அல்லவா?” என்று நீலநாக மறவர் கேட்ட போது, ‘நான் இன்னும் உண்ணவில்லை’ என்பதைச் சொல்லுவதற்குக் கூசிக் கொண்டு, “புறப்படலாம் ஐயா! நானும் வருகிறேன்” என்று கூறி உடனே இணங்கினான் இளங்குமரன்.
நீலநாக மறவர் தேரில் ஏறுவதற்கு முன் தேர்த்தட்டின் படியில் ஒரு காலும் தரையில் ஒரு காலுமாக நின்று கொண்டு மீண்டும் இளங்குமரனிடம் கூறினார்:
“தம்பீ! சோழ நாட்டிலேயே சான்றாண்மை மிக்கவரும் பெரிய ஞானியுமாகிய அடிகளின் அருள் நோக்கு உன் பக்கம் திரும்பியிருக்கிறது. முக்காலமும் உணரவல்ல அருமை சான்ற பெரியவர்களுடைய அன்பும் ஆதரவும் வலுவில் ஒருவனைத் தேடிக் கொண்டு வருவது பெரும் பாக்கியம். அந்த பாக்கியம் இப்போது உனக்குக் கிடைக்க இருக்கிறது! அதை நன்றாகப் பயன்படுத்திக் கொள்வது உன் பொறுப்பு.”
நாத்தழுதழுக்க அவர் இவ்வாறு கூறியதைக் கேட்ட போது இளங்குமரனுக்கு என்ன காரணத்தாலோ மெய் சிலிர்த்தது. அவரை உள்ளே அமரச் செய்து தேரை அவனே செலுத்திக் கொண்டு சென்றான். தேர் புற வீதிக்குள் நுழைந்து வளநாடுடையார் இல்லத்தைக் கடந்த போது வாயிலில் நின்று கொண்டிருந்த முல்லை கையை உயரத் தூக்கி ஏதோ சொல்லிக் கூப்பிட்டதை இளங்குமரன் கவனித்தும் அப்போது அவளுக்காகத் தேரை நிறுத்தவில்லை. அதே போல் நாள்காடியின் திருப்பத்தில் எதிரே மிக அருகில் வந்த மற்றொரு தேரில் சுரமஞ்சரியும், வானவல்லியும், வசந்தமாலையும் அமர்ந்திருந்ததைக் கண்டும் அவன் தேரை நிறுத்தவில்லை. ஆனாலும் விநாடியில் தேர்களின் வேகத்தையும் மீறிச் சுரமஞ்சரியின் முகத்தில் தன்னைப் பார்த்ததால் ஏற்பட்ட சிறிது மலர்ச்சியை அவன் கவனிக்கும்படி நேர்ந்தது. காலையில் துறைமுகத்தில் தன்னிடம் கோபித்துக் கொண்டு பிணங்கி ஓடிய போது அவள் இருந்த நிலையையும், இப்போது எதிரே தேரில் சந்தித்த போது இருந்த நிலையையும் ஒப்பிட்டு நினைத்தான் இளங்குமரன். மிகவும் அழகிய பெண்களின் மனத்துக்கு அழகைப் போலவே பலவீனங்களும் மிகுதி என்று தோன்றியது அவனுக்கு. தேர் காவிரிப்பூம்பட்டினத்தின் அழகிய பகுதிகளை ஒவ்வொன்றாகக் கடந்து திருநாங்கூருக்குச் செல்லும் வழியில் இளங்குமரனுக்குப் பல அறிவுரைகளைக் கூறிக் கொண்டு வந்தார் நீலநாக மறவர். நாங்கூர் அடிகள் என்ன நோக்கத்தோடு இளங்குமரனை அழைத்திருக்கக் கூடும் என்பதையும் விளக்கிக் கூறினார். இளங்குமரனுக்கு அவற்றைக் கேட்டு மிகவும் பூரிப்பு உண்டாயிற்று. “ஐயா! ஊழ்வினை என்பது ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் நிகழ்ச்சிகளை எத்துணைத் தொடர்பாகக் கோவைப்படுத்துகிறது பார்த்தீர்களா? இன்று காலையில் தான் தற்செயலாக நேர்ந்த ஒரு அநுபவத்தினால் எனக்கே ஞான நூல்களைக் கற்க வேண்டுமென்ற தீராப் பசி எழுந்தது. உடனே யாரோ சொல்லி வைத்தது போல் நீங்கள் என்னைத் திருநாங்கூருக்கு அழைத்தீர்கள். எல்லாம் எவ்வளவு இயைபாகப் பொருந்தி வருகின்றன, பாருங்கள்!” என்று நன்றியோடு அவரிடம் கூறினான் இளங்குமரன். தான் இந்திர விகாரத்துத் துறவியிடம் அவமானப் பட்டதையும் மறைக்காமல் சொல்லிவிட்டான் அவன்.
“இதையெல்லாம் அவமானமாக நினைக்கலாகாது தம்பீ! நோயும், மூப்பும், மரணமுமாக உலகில் மனிதர்கள் நிரந்தரமாய் அடைந்து கொண்டிருக்கிற அவமான இருளில் தான் புத்த ஞாயிறு பிறந்து ஒளி பரப்பியது” என்று அவர் மறுமொழி கூறினார்.
அவர்களுடைய தேர் நாங்கூர் அடிகளின் பூம்பொழிலை அடைந்த போது தற்செயலாக நிற்பவர் போல் நாங்கூர் அடிகளே வாயிலில் வந்து நின்று கொண்டிருந்தார்.
ஆயிரம் கதிர் விரிக்கும் ஞாயிற்றொளி அலைகடற் கோடியில் மேலெழுவது போல் அலர்ந்திருந்த அடிகளின் முகத்தைப் பார்த்த போது இளங்குமரனின் உள்ளத்தில் பணிவு குழைந்தது. அவன் அவருடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். நீலநாகமறவரும் வணங்கினார். அடிகளின் கண்கள் இளங்குமரனையே பார்த்துக் கொண்டிருந்தன.
சிறிது நேர அமைதிக்குப் பின், “நீ மிகவும் பசித்துக் களைத்துப் போயிருக்கிறாய்” என்று இளங்குமரனை நோக்கிச் சிரித்தவாறே கூறினார் நாங்கூர் அடிகள். அவருடைய சிரிப்பில் எதிரே இருப்பவர்களின் அகங்காரத்தை அழித்து விடும் ஆற்றல் இருப்பதை இளங்குமரன் உணர்ந்தான்.
“அவன் பசித்திருப்பது மெய்தான்; ஆனால் அந்தப் பசி சோற்றினாலும் நீரினாலும் தீராத பசி, ஞானப்பசி. நீங்கள் தான் அந்தப் பசியைத் தீர்த்தருள வேண்டும்” என்றார் நீலநாகமறவர். அடிகள் முகம் மலர நகைத்தார். பின்பு மெல்லக் கேட்டார்:
“பசி தீர்க்கிறவர்களுக்கு இந்தப் பிள்ளை என்ன விலை கொடுப்பானோ?”
“மனம் நிறைய அறியாமையையும், ஆணவத்தையும் தவிரக் கொடுப்பதற்கு வேறொன்றும் நான் கொண்டு வரவில்லையே ஐயா!” என்று அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே பதில் கூறினான் இளங்குமரன். அப்போது அவன் கண்களில் நீர் நெகிழ்ந்தது. அழுகிறாற் போல் குரல் நைந்து ஒலித்தது.
அடிகள் இளங்குமரனுக்கு அருகில் வந்து அவனைத் தழுவிக் கொண்டார்.
“நீ வேறு ஒன்றும் விலை தரவேண்டாம். உன்னையே எனக்குக் கொடு. என்னுடைய ஞானத்தைப் பயிர் செய்யும் விளை நிலமாக நீ இரு. அதுவே போதும்.”
“என் பாக்கியம்” என்று கூறியவாறே மீண்டும் அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான் இளங்குமரன்.
“இந்தப் பாதங்களை நன்றாகப் பற்றிக் கொள். இவற்றை விட்டு விடாதே. உன் அறியாமையும் ஆணவமும் இவற்றின் கீழ்த் தாமே கரைந்து போகும்” என்று கூறிவிட்டுத் தேரில் ஏறினார் நீலநாக மறவர். மறுகணம் அவருடைய தேர் திரும்பி விரைந்தது. நாங்கூர் அடிகள் இளங்குமரனின் கைகளைப் பற்றிக் கொண்டார். மகிழ்ச்சியோடு அவனிடம் கூறலானார்:
“என்னுடைய மனத்தில் உதயமாகும் காவியம் ஒன்றிற்கு நாயகனாவதற்கு முழுமையான மனிதன் ஒருவனை நான் தேடிக் கொண்டிருந்தேன். அவன் இன்று எனக்குக் கிடைத்து விட்டான்! அந்தக் காவியம் உருவாக இனித் தடையில்லை.”
மனத்தின் எல்லையில் அறிவு பெருகப் பெருக அதுவரையில் அந்த இடத்தை நிறைத்துக் கொண்டிருந்த அறியாமையின் அளவு நன்றாகத் தெரிகிறது. இந்தக் கதையின் நாயகன் உடலின் வனப்பைப் போலவே மனத்தின் வனப்பையும் வளர்க்க விரும்பி அறிவுப் பசியோடு புறப்பட்டு அந்தப் பசி தீருமிடத்தை அடைந்த சில தினங்களிலேயே அவனுடைய அக உணர்ச்சிகள் மலர்ந்து மணம் பரப்புகின்றன. வில்லினும், மல்லினும் போர் தொடுத்து வென்றும் வீரமுரசறைந்தும் பெறும் புகழ் போல் சொல்லினும், சுவையினும் அடைகிற அறிவின்பம் அவனுக்கு மிக்கதாகத் தோன்றுகிறது. அறிவு என்பதே பேரின்பமாக இருக்கிறது. ‘நல்லதின் நலனும் தீயதின் தீமையும் உள்ளவாறு உணர்தல்’ என்று அறிவுக்கு வரையறை கூறியிருக்கிறார்கள் பெரியவர்கள். ஒவ்வொரு பொருளிலும் அதனதன் மெய்யைத் தெரிவதில் ஓரின்பம் இருக்கத்தான் செய்தது என்பதை இந்தக் கதையின் நாயகனான இளங்குமரன் பரிபூரணமாக உணர்கிறான். வீரமும், உடல் வலிமையும் கைகளால் முயன்று வெல்லும் வழியை அவனுக்குக் கற்பித்திருக்கின்றன. ஞானமோ, மனத்தினாலேயே உலகத்தை வெல்ல வழி கூறுகின்றது. வயிற்றுப் பசிபோல் உண்டதன் பின்னும் தீர்தலின்றி உண்ண உண்ண மிகுவதாக இருக்கிறது ஞானப்பசி. ‘இன்னும் உண்ண வேண்டும். இதுவரை உண்டது போதாது’ என்று மேலும் மேலும் மனத்தைத் தூண்டும் புதிய ஞானப் பசியை அவன் மிகவும் விரும்புகிறான். அந்தப் பசி ஏற்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டுமென்று அவன் தணியாத தாகத்துடன் பெருவேட்கை பெறுகிறான்.
எனவே அவனுடைய பெருவாழ்வில் இந்தப் பருவம் அறிவு மயமாக மலர்கிறது; வளர்கிறது; மணம் விரிக்கிறது. மனிதர்களுக்கு உடலின் செழுமையாலும், தோலின் மினுமினுப்பாலும், அவயவங்களின் அழகாலும் வருகின்ற கவர்ச்சி நிலையற்றது, ஆனால் அறிவினால் வருகிற அழகு நிலையானது; உயர்ந்தது; இணையற்றது. ஏற்கெனவே பேரழகனான இளங்குமரன் இப்போது அறிவின் அழியா அழகையும் எய்தப் போகிறான். அந்த அறிவழகின் மலர்ச்சியில் அவன் முழுமையான மனிதனாக எழுச்சி பெற்று நிற்கும் நிலையை அடையப் போகிறான். அந்தப் புதிய எழுச்சியின் பயனாக அவன் வாழ்வில் மலரும் இரண்டாவது பருவம் இது.
நிலத்தைப் போல் தன்னை அடைந்தவர்களைத் தாங்கும் பொறுமையையும், மலையைப் போல் நிலை கலங்காமல் தன்னிடமிருந்து கொள்ளக் குறையாத வளமும், மலரைப் போல் மென்மையும், துலாக்கோலைப் போல் நடுநிலை பிறழாத தன்மையும் உடையவர்கள் தாம் பிறருக்குக் கற்பிக்கும் ஆசிரியராக தகுதியுடையவர்கள் என்று இளங்குமரன் பலமுறை பலரிடம் கேட்டிருக்கிறான். ஆனால் அத்தகைய முழுமையான ஆசிரியப் பெருந்தகை ஒருவரை நேற்று வரை அவன் சந்திக்க நேர்ந்ததில்லை. நீலநாகமறவர் அவனுக்குப் போர்த்துறைக் கலைகளைக் கற்பித்த ஆசிரியரானாலும் அவரிடம் நாங்கூர் அடிகளிடமிருந்ததைப் போன்ற மென்மையையும் குழந்தையுள்ளத்தையும் அவன் கண்டதில்லை. நீலநாக மறவர் வீரத்தின் ஆசிரியராக அவன் கண்களுக்குத் தோன்றினாரேயன்றி ஞானாசிரியராகத் தோன்றியதில்லை. கல்லைப் போல் உடம்பும் மனமும் இறுகிப் போன மனிதரான அவரிடம் நாங்கூர் அடிகளின் மென்மையை எதிர்பார்க்க இயலாது என்பதையும் அவன் இன்று தன் மனத்துள் ஒப்பிட்டுப் பார்த்து உணர்ந்தான். அப்படிப்பட்ட இரும்பு மனிதரும் நாங்கூர் அடிகளின் மாணவர் தாம் என்பதை நினைக்கும் போது அவனுக்கு வியப்பாயிருந்தது.
அருட்செல்வ முனிவர் பெரிய ஞானியாயிருந்தாலும் அவரிடமே வளர்ந்ததனால் அவர் மேல் அவனுக்கு அன்பும் பாசமும் தான் உண்டாயின. அவரிடமிருந்து அன்புக்காகவும், பாசத்துக்காகவும் அவன் மனம் ஏங்கியதே அல்லாமல் ஞானத்துக்காக ஏங்கியதே இல்லை! ஞானத்துக்காக ஏங்குகின்ற மனப் பக்குவம் அப்போது அவனுக்கு இல்லை. ஆயிரம் கதிர் விரிக்கும் ஞாயிற்றொளி அலைகடற்கோடியில் மேலெழுந்து விரிவது போல் நாங்கூர் அடிகளின் முகத்தில் கண்டு கனிந்த ஞான மலர்ச்சியை இதற்கு முன் தான் யாரிடமும் கண்டதாக நினைவே இல்லை இளங்குமரனுக்கு. “அறியாமையையும் ஆணவத்தையும் தவிர என்னோடு வேறெவற்றையும் நான் கொண்டு வரவில்லையே, ஐயா!” என்று அந்தப் பேரறிஞருக்கு முன் தலைவணங்கி ஒடுங்கித் தளர்ந்து தான் கூறிய போது அவர் தனக்கு மறுமொழியாகக் கூறிய வார்த்தைகளை நினைத்து நினைத்து மகிழ்ந்தான் இளங்குமரன். நம்பிக்கையளிக்கும் அந்தச் சொற்கள் அவன் மனத்திலேயே தங்கி ஒலித்துக் கொண்டிருந்தன.
“உன்னையே எனக்குக் கொடு; என்னுடைய ஞானத்தைப் பயிர் செய்யும் விளைநிலமாக இரு. இதுவே போதும்” இந்தச் சொற்களை எவ்வளவு குழைவாக எவ்வளவு தணிவாக வெளியிட்டார் அந்த ஞானச் செல்வர்! அவர் வாய் திறந்து நிதானமாகப் பேசிய போது இந்தச் சொற்களில் தான் எத்துணை நிறைவுடைமை!
உலகத்தையெல்லாம் விலை கொள்ளும் பெரிய ஞானமும், கள்ளங்கபடமில்லாத பச்சைக் குழந்தை போன்ற மனமும், பழுத்த சொற்களாகத் தேர்ந்து முத்துத் தொடுப்பது போல் கவிதை நயமுள்ள பேச்சும் கண்டு இளங்குமரன் அவருக்கு ஆட்பட்டான். அவர் கேட்டுக் கொண்டாற் போல் தன்னையே அவன் அவருக்குக் கொடுத்துவிட்டான். காவிரிப்பூம்பட்டினத்தில் நேற்று வரை கழிந்த தன் நாட்கள், அந்த நாட்களோடு தொடர்புடைய மனிதர்கள், அவர்களுடைய உறவுகள் - எல்லாம் மெல்ல மெல்ல நீங்கி நாங்கூர் அடிகள் என்னும் ஞானக்குழந்தைக்கு வீரவணக்கம் புரியும் மற்றொரு ஞானக்குழந்தையானான் அவன்.
இளங்குமரன் அங்கு வந்து சேர்ந்த மறுநாள் வைகறையில் போது விடிகையிலேயே அவனுடைய புது வாழ்வும் விடிந்தது. பறவைகள் துயில் விழித்துக் குரல் எழுப்பும் பனி புலராத காலை நேரத்தில் நாங்கூர் அடிகள் அவனை எழுப்பினார். அவர் அருகில் வந்து நின்றதுமே அவன் விழித்து எழுந்து விட்டான்.
அந்தப் பெரியவர் அருகில் வந்து நின்றாலே விழிப்பும், எழுச்சியும் தானே உண்டாகும். அவர் நிற்கிற இடத்தில் பச்சைக் கர்ப்பூரமும் பவழமல்லிகையும் சேர்ந்து மணப்பது போல் ஒரு புனித மணம் நிலவும். மூப்பும், தளர்ச்சியும் ஒடுக்கியிருந்த அந்த உடம்புக்கே அத்தனை காந்தியானால் பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் எப்படி விளங்கியிருப்பார் என்று கற்பனை செய்தான் இளங்குமரன்.
விலகும் இருளும், புலரும் ஒளியும் சந்திக்கும் சிற்றஞ்சிறு காலை நேரத்தில் இளங்குமரனை எழுப்பி, “என்னோடு வா!” என்று அழைத்துக் கொண்டு மலர் வனங்களிடையே நடந்து புறப்பட்டார் அவர். இளங்குமரன் அடக்கமாக அவரைப் பின் தொடர்ந்து சென்றான். இரண்டு பக்கங்களிலும் வழியை ஒட்டி மலர்ப் பொழில்களாதலால் காற்றே மண மண்டலமாகி வீசியது. அந்த நேரத்தில் அந்த வழியில் காற்று, பனி, ஆகாயம், பூமி எல்லாமே மணந்தன. பக்கத்துச் சிற்றோடைகளில் நீர் சிரித்தது. வாகை மரக்கிளைகளில் காகங்கள் கரைந்தன. கீழே நடந்து செல்லும் வழியில் மண் ஈர மணம் கமழ்ந்தது.
சிறிது தொலைவு அமைதியாக நடந்து சென்ற பின், “உன்னுடைய மனமும் இப்போது இந்த நேரத்தைப் போல் இருக்கிறதல்லவா! இருளை அழித்துப் போக்கி விடுவதற்கும் ஒளியை வளர்த்துப் பெருக்கிக் கொள்வதற்கும் தானே தவிக்கிறாய் நீ” என்று இளங்குமரனைக் கேட்டார் அடிகள். இளங்குமரன் சிரித்தவாறு பதில் கூறினான்:
“ஆனால் ஒளியின் அருகே ஒளியைப் பின்பற்றித்தான் நான் இப்போது நடந்து கொண்டிருக்கிறேன் ஐயா!”
“நல்லது தம்பீ! முதலில் நீ ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். என்னிடமே என்னைப் பற்றி அடிக்கடி நீ புகழ்ந்து சொல்லக் கூடாது. உலகத்தில் நல்ல அறிவாளிகள் எல்லாரும் முதலில் தாங்கள் அத்தகைய பேரறிவைச் சுமந்து கொண்டிருப்பவர்கள் என்ற நினைவே இன்றிக் குழந்தைகள் போல் இருக்கிறார்கள். பாமரர்கள் அவர்களிடமே அவர்களைப் புகழ்ந்து சொல்லிச் சொல்லி இழக்கக் கூடாத அந்தக் குழந்தைத் தன்மையை அவர்கள் இழக்கும்படி செய்துவிடுகிறார்கள். புகழைக் கேட்டுக் கேட்டு மனம் மூப்படைந்து விடுகிறது. அதனால் நான் அதை விரும்புவதே இல்லை. என்னுடைய ஞானத்துக்காக எல்லாரும் என்னைப் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டுமென்று நான் நினைப்பதேயில்லை. நான் வெறும் வாய்க்கால் தான். ஏரியிலிருந்து வாய்க்கால் வழியாகப் பாய்ந்து நிலத்துக்கு நீர் போவதில்லையா? ஞானம் எங்கோ நிரம்பியிருக்கிறது. அதைப் பாய்ச்ச வேண்டிய விளை நிலம் வேறெங்கோ கிடக்கிறது. அந்த விளைநிலத்தைத் தேடி அதில் போய்ப் பாயும்படி செய்யும் வாய்க்காலுக்குத் தனிப் பெருமை கொள்ள என்ன இருக்கிறது? எங்கிருந்தோ வருகிற நீர் எங்கோ பாயப் போகிற நீர்! வாய்க்காலுக்கு ஏது பெருமை?”
ஞானப்பசியோடு வந்திருந்த இளங்குமரனுக்கு முதல் பாடம் கிடைத்துவிட்டது. ‘தன்னை வியந்து கொள்ளும் மனத்திலிருந்து குழந்தைத் தன்மை போய்விடும். புகழுக்கு ஆட்பட்டுத் தவிக்கிற மனத்தில் இளமை குன்றி மூப்புச் சேரும்.’
இருவரும் மறுபடி சிறிது தொலைவு வரை மௌனமாக நடந்தனர். சிறிது சிறிதாக ஒளிபரவி விடிந்து கொண்டிருந்தது. நாங்கூர் அடிகள் மீண்டும் அவனை நோக்கிக் கூறினார்:
“தம்பீ! உன்னையும், என்னையும் சுற்றி இத்தனையாயிரம் பூக்கள் மலர்ந்து மணம் பரப்புகின்றனவே, இவ்வளவு அழகையும் இவ்வளவு மணத்தையும் இவற்றுக்கு அளித்திருப்பவனை யார் புகழ முடியும்? எப்படிப் புகழ முடியும்?”
அவர் கூறுவனவற்றைக் கேட்கக் கேட்க இன்பமாக இருந்தது இளங்குமரனுக்கு. போகிற வழியில் ஒரு பெரிய தாமரைப் பொய்கை வந்தது.
“வா! நீராடி விட்டுச் செல்லலாம்” என்று இளங்குமரனையும் உடனழைத்துக் கொண்டு நீராடச் சென்றார் நாங்கூர் அடிகள். படிகம்போல் தெளிந்த அந்தப் பொய்கையின் நீர்ப்பரப்பில் சிறுபிள்ளை போல் நீந்தி விளையாடிக் குளித்தார் அடிகள். இருவரும் நீராடி முடித்தபின் வந்த வழியே திரும்பி நடந்து சென்றார்கள். அடிகள் தம் பூம்பொழிலை அடைந்ததும், “இங்கே நீ கற்க வேண்டிய சுவடிகளை எல்லாம் காண்பிக்கிறேன் வா. என்னுடைய பூம்பொழிலில் மலர்களுக்கு அடுத்தபடி அதிகமாக இருப்பவை ஏட்டுச் சுவடிகள் தாம். இங்குள்ள மலர்களுக்கு மணம் அதிகம். திருநாங்கூர் மண்ணுக்கே மணம் மிகுதி. இங்குள்ள ஏட்டுச் சுவடிகளிலோ அறிவின் மணம் கொள்ளக் குன்றாமல் நிறைந்திருக்கிறது” என்று இளங்குமரனைத் தம்முடைய ‘கிரந்த சாலைக்கு’ (சுவடிகள் நிறைந்திருந்த சாலை) அழைத்துச் சென்றார் அவர். உடலில் ஈரம் புலராத ஆடையும், நீராடிய பவித்திரமுமாகக் கிரந்த சாலைக்குள் அவரோடு நுழைந்தான் அவன். வரிசை வரிசையாய்ப் பிரித்து அடுக்கியிருந்த ஆயிரக்கணக்கான சுவடிகளைப் பார்த்ததும், ‘இவற்றையெல்லாம் கற்று ஞானப் பசிக்கு நிறைவு காண என்னுடைய வாழ்நாள் போதுமா?’ என்ற மலைப்பு அவன் உள்ளத்தில் உண்டாயிற்று.
“இவை எழுத்திலக்கணச் சுவடிகள், இவை சொல்லிலக்கணச் சுவடிகள், இவை பொருளிலக்கணச் சுவடிகள், இவை செய்யுளிலக்கணச் சுவடிகள். இதோ, இவையெல்லாம் தர்க்கம், இவையெல்லாம் சமய நூல்கள், இவை வைத்திய நூல்கள், இவை அலங்கார நூல்கள்” என்று ஒவ்வோர் அடுக்காகக் காண்பித்துச் சொல்லிக் கொண்டே போனார் அடிகள். அவர் முகத்தில் அவற்றையெல்லாம் கற்பிக்கத் தகுதியான மாணவன் கிடைத்துவிட்ட உற்சாகம் தெரிந்தது.
அப்போது அந்தக் கிரந்த சாலையில் தூபப்புகை நறுமண அலைகளைப் பரவச் செய்து கொண்டிருந்தது. நெய்யிட்டு ஏற்றிய தீபங்களின் ஒளி அங்கங்கே பூத்திருந்தது. தணிவாகக் கூரை வேய்ந்திருந்த சாலையாதலால் அங்கே எப்போதும் தீப ஒளி தேவையாயிருந்தது போலும்.
“இவ்வளவு சுவடிகளுக்கும் மீறி அறிவைப் பற்றிய சிந்தனைத் தலைமுறை இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது, தம்பீ. இவ்வளவையும் எந்தக் காலத்தில் கற்று முடிப்பது என்று நீ மலைப்பு அடையாதே! தைரியத்தை அடைவதற்காகத்தான் கல்வி. துணிந்து கற்க வேண்டும். கற்றுத் துணிய வேண்டும்.”
“அந்தத் துணிவைத் தாங்கள் தான் எளியேனுக்குத் தந்தருள வேண்டும்” என்று கூறியபடியே அவருடைய கால்களில் வீழ்ந்து வணங்கினான் இளங்குமரன். ‘இந்தப் பாதங்களை விட்டு விடாதே! இவற்றை நன்றாகப் பற்றிக் கொள்’ என்று போகும் போது நீலநாகமறவர் கூறிய சொற்களை இப்போதும் நினைத்துக் கொண்டான் அவன். அவனைத் தம் கைகளாலேயே எழுப்பி நிறுத்தி, “இந்தா இதைப் பெற்றுக் கொள்” என்று முதற்சுவடியை அளித்தார் அடிகள்.
சீனத்துக் கப்பலிலிருந்து இறங்கி நடந்த போது, ‘உங்கள் கருணை எனக்குத் தேவையில்லை. என் மாளிகைக்குப் போய்ச் சேரும் வழி எனக்குத் தெரியும்’ என்று சீற்றத்தோடு அலட்சியமாக இளங்குமரனிடம் பேசியிருந்தாலும் சுரமஞ்சரியின் மனம் அதன் பின்னரும் அவனுக்காகவே ஏங்கியது. அவனுக்காகவே தவித்தது. அதை அவளால் தவிர்க்க முடியவில்லை.
அவள் அவனைப் பிரிந்து சிறிது தொலைவு செல்வதற்குள்ளேயே அந்தப் பக்கத்தில் துறைமுக வாயிலின் அருகே கூடி நின்று கொண்டிருந்த அவளுடைய தந்தையாரின் கப்பல் ஊழியர்கள் பயபக்தியோடு ஓடி வந்து அவளைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் முகங்களில் ஆர்வ வெள்ளம் பாய்ந்தது.
“எல்லார் வயிற்றிலும் பாலை வார்த்தீர்கள் அம்மா! நேற்று நீராட்டு விழாவில் நீங்கள் காணாமற் போனதிலிருந்து நமது மாளிகையே கவலையில் ஆழ்ந்திருக்கிறது. நீங்கள் காணாமற் போன செய்தி தெரிந்த உடனே நேற்று மாலை கழார்ப் பெருந்துறையிலிருந்து காவிரியின் சங்க முகம் வரை தேடிப் பார்ப்பதற்காகப் பல படகுகளை அனுப்பினார் உங்கள் தந்தையார். வெகுநேரம் தேடி விட்டுப் படகுகள் எல்லாம் திரும்பிவிட்டன. உங்களைத் தேடுவதற்காக நம் ஆட்கள் எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பப் பட்டிருக்கிறார்கள். உங்கள் வரவை இப்போதே ஓடிப் போய் மாளிகையில் தெரிவிக்கிறோம். தெரிவித்து விட்டு உங்களை அழைத்துச் செல்வதற்குத் தேரும் கொண்டு வருகிறோம். அதுவரை இதோ இங்குள்ள நமது பண்ட சாலையில் அமர்ந்திருங்கள்” என்று கூறிச் சுரமஞ்சரியை அழைத்துப் போய்த் துறைமுக வாயிலின் பக்கத்திலிருந்த அவள் தந்தையாரின் பண்டசாலையில் அமரச் செய்துவிட்டு மாளிகைக்கு விரைந்தார்கள் அந்த ஊழியர்கள்.
அப்போது, ‘என்னை அழைத்துச் செல்வதற்காக எனது மாளிகையிலிருந்து வரப்போகும் தேரிலேயே இளங்குமரனையும் ஏற்றிக் கொண்டு போய் அவர் தங்கியிருக்கும் ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் விட்டுச் சென்றால் என்ன?’ என்று நினைத்தாள் சுரமஞ்சரி. உடனே எழுந்திருந்து போய் ‘அவர் நிற்கிறாரா?’ என்று துறைமுக வாயிலிலும் பார்த்தாள். அங்கே ‘அவரைக்’ காணவில்லை. ‘அவர் நடந்து புறப்பட்டிருப்பார்’ என்று நினைத்துக் கொண்டு சுரமஞ்சரி ஏமாற்றத்தோடு திரும்பிப் பண்டசாலைக்கு மீண்டும் வந்து அமர்ந்தாள். அவள் கண்கள் எங்கும் இளங்குமரனைத் தேடின. பண்டசாலையில் வந்து அமர்ந்த பின்பும் எதிர்ப்புறம் தெரியும் துறைமுக வீதியையே கவனித்துக் கொண்டிருந்தாள் அவள்.
‘பெண்ணே! என்னுடைய கருணையை நீ அடைய முடியும். ஆனால் அன்பை அடைய முடியாது’ என்று அவன் திரும்பித் திரும்பி இரண்டு மூன்று முறை தன்னிடம் வற்புறுத்திக் கூறிய அந்தச் சொற்கள் இன்னும் அவன் செவிகளில் ஒலித்துக் கொண்டு தான் இருந்தன. கப்பலிலிருந்து இறங்கியதும், அவள் தான் அவனிடம் கோபித்துக் கொண்டு விலகி வந்தாளே தவிர, அவள் மனம் அவனிடமிருந்து விலகி வரவில்லை. அவள் மனத்தின் நினைவுகளும் கனவுகளும் அவனைப் பற்றியே இருந்தன. அவள் சிந்தனைகளுக்கு இளங்குமரனே இடமாகவும், எல்லையாகவும் இருந்தான். பண்டசாலையின் முன்புறம் இரண்டு அலங்காரத் தேர்கள் வந்து நின்ற ஒலியில் சிந்தனை கலைந்து நிமிர்ந்து பார்த்தாள் சுரமஞ்சரி.
ஒரு தேரிலிருந்து நகைவேழம்பரும் அவள் தந்தையாரும் இறங்கினார்கள். மற்றொரு தேரிலிருந்து அவளுடைய தாயார், சகோதரி வானவல்லி, வசந்தமாலை ஆகியோர் இறங்கினார்கள்.
“பாவிப் பெண்ணே! இப்படி எங்களையெல்லாம் கதிகலங்கச் செய்யலாமா?” என்று நெஞ்சம் கதறியவாறே ஆவலோடு ஓடி வந்து தழுவிக் கொண்டாள், சுரமஞ்சரியின் அன்னை. “என்ன நடந்தது? எப்படித் தப்பிப் பிழைத்தாய்? யார் காப்பாற்றினார்கள்?” என்ரு எல்லாருமே அவளைத் தூண்டித் தூண்டிக் கேட்டார்கள்.
யாரோ ஒரு படகோட்டியின் உதவியால் கப்பல் கரப்புத் தீவை அடைந்ததாகவும், காலையில் அங்கிருந்து ஏதோ ஒரு கப்பலில் இடம் பெற்றுத் துறைமுகத்தை அடைந்ததாகவும் உண்மையைச் சற்றே மாற்றிக் கூறினாள் சுரமஞ்சரி. தந்தையாரையும் நகைவேழம்பரையும் அருகில் வைத்துக் கொண்டு, இளங்குமரன் தன்னைக் காப்பாற்றியதைச் சொல்வதற்கு அவள் விரும்பவில்லை. அந்தச் சமயத்தில் அவள் கூறியதில் யாரும் அவநம்பிக்கை கொள்ளவும் இல்லை.
“எப்படியானாலும் மறுபிறப்புப் பிறந்தது போல நீ உயிர் பிழைத்து வந்தாயே, அதுவே போதும். காவிரித்தாய் உன்னைக் காப்பாற்றியிருக்கிறாள்! அந்தப் படகோட்டியும், கப்பல் தலைவனும் யாரென்று சொன்னால் உனக்கு உதவியதற்காக அவர்களுக்கு வேண்டிய பரிசுகளை வாரி வழங்கச் சித்தமாயிருக்கிறேன், மகளே!” என்றார் தந்தையார்.
“சமயம் வாய்க்கும் போது அவர்களை உங்களுக்குக் காண்பிக்கிறேன், அப்பா!” என்று பதில் கூறினாள் சுரமஞ்சரி.
“சந்தர்ப்பம் எப்படி நேர்கிறது பார்த்தாயா? பெரிய பெரிய கப்பல்களுக்கு உரிமையாளனான என்னுடைய மகள் எவனுடைய கப்பலிலோ இடத்துக்குப் பிச்சையெடுக்க வேண்டியதாய் நேர்ந்திருக்கிறதே” என்று தம் மனைவியிடம் கூறினார் எட்டிப் பட்டம் பெற்ற பெருநிதிச் செல்வர். அவருக்கு எப்போதுமே தம்முடைய பெருமைதான் நினைப்பு.
சிறிது நேரத்தில் பண்டசாலையிலிருந்து எல்லாரும் மாளிகைக்குப் புறப்பட்டார்கள். தந்தையாரோடு தேரில் ஏறிக் கொண்டிருந்த நகை வேழம்பர் தேர் புறப்படுவதற்குச் சில விநாடிகளுக்கு முன்பு தேரிலிருந்து கீழே இறங்கி விட்டதைச் சுரமஞ்சரி மற்றொரு தேரிலிருந்து பார்த்தாள்.
“ஏன் இறங்கி விட்டீர்கள்? நீங்கள் எங்களோடு மாளிகைக்கு வரவில்லையா?” என்று தந்தையார் கேட்டதற்கு, “நான் துறைமுகத்துக்குள் சென்று வர வேண்டும். அங்கே போய் இன்று காலையில் துறை சேர்ந்த கப்பல்கள் எவை எவை என்று அறிந்து, அவற்றில் உங்கள் தவப் புதல்வியாருக்கு உதவி செய்த கப்பல் எது என்றும் தெரிந்து கொண்டு அப்புறம் மாளிகைக்கு வருகிறேன். வரும் போது சுரமஞ்சரிதேவிக்கு உதவி செய்த கப்பலின் தலைவனையும் கண்டுபிடித்து என்னோடு அழைத்து வருகிறேன். இன்றே அவனுக்கு நம் நன்றியைத் தெரிவித்துப் பரிசும் அளித்து விடலாம்” என்று நகைவேழம்பரு கூறிச் செல்வதைக் கேட்டுத் திகைத்தாள் சுரமஞ்சரி.
‘ஐயா, நகைவேழம்பரே! அதற்கு இப்போது அவசரம் ஒன்றுமில்லை’ என்று சொல்லி அவரைத் தடுக்கவும் அந்தச் சமயத்தில் அவளுக்குத் துணிவில்லை. அதற்குள் தேர்களும் மாளிகைக்கு புறப்பட்டு விட்டன. நகைவேழம்பர் துறைமுகத்துக்குள் நுழைவதையும் விரைந்து செல்லும் தேரிலிருந்தே அவள் பார்த்தாள். கலக்கம் கொண்டாள். ‘சீனத்துக் கப்பல் தலைவனை நகைவேழம்பர் சந்தித்து மாளிகைக்கு அழைத்து வந்து விட்டால், தன்னோடு ஓர் இளைஞரும் கப்பலில் வந்ததை அவர் கூறுவார். அதையே அவர் வேறுவிதமாகப் புரிந்து கொண்டிருக்கும் பட்சத்தில் ‘உங்கள் பெண்ணும் உங்கள் பெண்ணின் காதலர் போல் தோன்றிய ஓர் இளைஞரும் கப்பல் கரப்புத் தீவிலிருந்து இன்று காலை என் கப்பலில் இடம் பெற்று வந்தார்கள்’ என்று தந்தையிடம் வந்து கூறினாலும் கூறுவாரே! அப்படிக் கூறிவிட்டால் நாம் என்ன செய்வது?’ என்று எண்ணி அச்சம் கொண்டாள் சுரமஞ்சரி.
தன்னைக் காப்பாற்றியது இளங்குமரனே என்பது தந்தையாருக்கும், நகைவேழம்பருக்கும் தெரிய நேர்ந்து அதன் காரணமாக இளங்குமரனுக்குத் துன்பம் வரக்கூடாதே என்பதுதான் சுரமஞ்சரியின் பயமாக இருந்தது. அந்த பயத்துடனேயே துறைமுகத்திலிருந்து தேரில் புறப்பட்டு மாளிகைக்குச் சென்றாள் அவள்.
அன்று பகலில் சுரமஞ்சரியின் தாய் ஆலமுற்றத்து ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி வருமாறு அவளை வேண்டினாள்.
“பெரிய கண்டத்திலிருந்து தப்பி உயிர் பிழைத்து வந்திருக்கிறாய். கோவிலுக்குப் போய் இறைவனை வணங்கிவிட்டு வா. வானவல்லியையும், உன் தோழியையும் உடன் அழைத்துக் கொண்டு போ” என்று தாய் கூறியபடியே கோவிலுக்குப் புறப்பட்டாள். சுரமஞ்சரி, சகோகதரியும், தோழியும் உடன் வர அவள் தேரில் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த போது நாளங்காடியின் அருகே இளங்குமரன் எதிர்புறமிருந்து இன்னொரு தேரைச் செலுத்திக் கொண்டு விரைவாக வருவதை கவனித்தாள். அவனை நோக்கி அவள் முகம் மலர்ந்தது. ஆனால் அவனுடைய தேர் அவளுக்காக நிற்கவே இல்லை. அவளுடைய தேருக்கு எதிரே இளங்குமரனின் தேர் விரைந்து விலகிச் சென்ற போது கடிவாளக் கயிற்றைப் பற்றியிருந்த அவனது வலது கையும் தோளும் அவள் கண்களில் தோன்றி நிறைந்தன. அவனுடைய அழகிய தோள்களிலிருந்து அவளுடைய மனத்தில் நளின நினைவுகள் பிறந்தன. அந்த நினைவுகளில் மூழ்குவதில் தனியானதொரு களிப்பு அவளுக்கு இருந்தது.
‘கண்ணைக் கவரும் இந்தச் சுந்தரமணித் தோள்களில் ஒன்றின் மேல் நேற்றிரவு ஒரு விநாடி என் தலையைச் சாய்ந்திருக்கிறேன்’ - என்று நினைக்கும் போது, அந்த நினைப்பிலேயே அவள் மனத்துக்கு ஒரு பெருமிதம் ஏற்பட்டது. செல்வச் செழிப்பு மிகுந்த பட்டினப்பாக்கத்தில் எத்துணையோ அழகிய இளைஞர்களைச் சுரமஞ்சரி பார்த்திருக்கிறாள். தன்னுடைய பார்வைக்காக எத்துணையோ இளைஞர்கள் நினைவழிந்து தவிப்பதையும் உணர்ந்திருக்கிறாள். ஆனால் அவர்களுக்காகவும், அவர்களுடைய பார்வைக்காகவும் அவள் ஒருபோதும் நினைவிழந்தது இல்லை. இறுமாப்பினால் இறுகிப் போயிருந்த அவள் மனம் நினைவழிந்து நிறையிழந்து நிற்கும்படி செய்த அழகும் ஆண்மையும் இளங்குமரனுடையவையாக இருந்தன.
இளங்குமரன் தொடர்ந்து அவளை அலட்சியம் செய்தான். எந்த அழகினால் தன் மனம் கர்வப்பட்டதோ, அந்த அழகையும் பொருட்படுத்தாமல் தன்னை அலட்சியம் செய்யவும் ஓர் ஆண்பிள்ளை இருக்கிறான் என்பதையும் முதன்முறையாக அவள் கண்டாள். அவளால் அவனை அலட்சியம் செய்ய முடியவில்லை. தனக்கும் தோற்காத பேராண்மைக்கு முன் அவள் தானே தோற்றுப் போய் நின்றாள். ஆனால் அவளுடைய தோல்வியைத் தன்னுடைய வெற்றியாக ஏற்கவும் அவன் சித்தமாயில்லை. ‘ஈடு இணையில்லாத பேராண்மையாளருக்கு நான் மனம் தோற்றேன். அவ்வாறு தோற்றதனால் என் மனம் பெருமைப்படுகிறது’ - என்ற நினைப்பை அவள் அடைவதற்குக் கூட அவன் வாய்ப்பு நல்கவில்லை. அதனால்தான் அவள் அவனிடம் பிணக்குக் கொள்ள நேர்ந்தது. ஆற்றாமையால் விளைந்த இந்தப் பிணக்கும் அவள் உள்ளத்தில் அதிக நேரம் நிலைத்திருக்கவில்லை.
அவளால் கப்பலில் சில நாழிகைகள் தான் அவனோடு பேசாமல் இருக்க முடிந்தது. சிரிப்பையும், முகமலர்ச்சியையும் செயற்கையாக மறைத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் எப்போதும் அப்படி இருக்க முடியவில்லையே!
எவ்வளவு காலம் காத்திருந்தாலும் இளங்குமரனின் சுந்தரமணித் தோள்களுக்கு உரிமை கொண்டாடும் பெருமையைத் தானே அடைய வேண்டும் போல் அந்தக் கணத்தில் அவளுக்கு ஒரு தாகம் ஏற்பட்டது.
“எதிரே அவருடைய தேர் போயிற்றே, பார்த்தீர்களா அம்மா?” என்று வசந்தமாலை சிரித்துக் கொண்டே கேட்டாள்.
“பார்த்தேன், அதற்கென்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கிறது?” என்று அவளைக் கடிந்து கொள்வது போல் மறுமொழி கூறினாள் சுரமஞ்சரி.
சுரமஞ்சரி, வானவல்லி முதலியவர்கள் அமர்ந்திருந்த தேர் ஆளமுற்றத்துக் கோயிலுக்குச் செல்வதற்காகப் புறவீதியைக் கடந்து கொண்டிருந்த போது, முல்லையும் வளநாடுடையாரும் தங்கள் இல்லத்திலிருந்து புறப்பட்டு எதிரே நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.
சிறிது நேரத்துக்கு முன் புறவீதி வழியாக இளங்குமரன் தேரைச் செலுத்திக் கொண்டு சென்ற செய்தியைத் தன் தந்தையிடம் கூறியிருந்தாள் முல்லை. தான் வீட்டு வாயிலில் நின்று கைநீட்டி அழைத்த அழைப்பையும் பொருட்படுத்தாமல் இளங்குமரன் தேரை விரைவாகச் செலுத்திக் கொண்டு போய் விட்டதைக் கண்டு முல்லை மனம் நொந்திருந்தாள்.
“அப்பா! நேற்று நீராட்டு விழாவில் தான் அவரைச் சந்திக்க முடியாமற் போயிற்று. யாரோ ஒரு பெண்ணைக் காப்பாற்றுவதற்காகக் காவிரியில் குதித்துச் சென்றாராம். அதன் பின்பு அவரை மீண்டும் தான் சந்திக்க முடியவில்லை என்று அண்ணன் வருத்தத்தோடு தேடிக் கொண்டு போயிருக்கிறார். அதைக் கேள்விப்பட்டதிலிருந்து, அவர் மழையிலும் புயலிலும் காவிரியில் நீந்திக் கரையேறினாரோ இல்லையோ என்று நீங்களும் நானும் துயரப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அவரானால் இந்த வழியாகத் தேரில் போகும் போது என்னைப் பார்த்தும் பாராதவர் போல் போகிறார். நாமும் அப்படிக் கல் மனத்தோடு இருந்து விடலாம் என்றால் முடியவில்லையே அப்பா! அவர் இப்போது கூடப் பட்டினப் பாக்கத்திலிருக்கும் அந்தப் பெண்ணின் மாளிகைக்குத் தான் தேரில் போகிறார் போலிருக்கிறது. அங்கே போயாவது அவரை அழைத்து வரலாம்; வாருங்கள்” என்று கூறிப் பிடிவாதமாக வளநாடுடையாரை உடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டிருந்தால் முல்லை.
ஆனால் எந்தப் பெண்ணின் மாளிகைக்கு இளங்குமரன் போயிருப்பாளென நினைத்துக் கொண்டு அவள் தந்தையுடன் புறப்பட்டிருந்தாளோ அந்தப் பெண்ணே அப்போது அதே சாலையில் எதிரில் தேரேறி வருவதைக் கண்டதும் வழியை மறித்தாற்போல் வீதியில் நின்று கொண்டு, “தேரை நிறுத்துங்கள்” என்று இரைந்து கூவினாள் முல்லை. தேர் நின்றது.
“அன்று இந்திர விழாவின் போது பூதசதுக்கத்தில் அவருடைய ஓவியத்தை வரைந்து வாங்கிக் கொள்வதற்காக அவரைத் தன் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பெண் இவள் தான் அப்பா! இவள் பெயர் ‘சுரமஞ்சரி’ என்று சொல்லிக் கொண்டார்கள். எனக்கு இவளிடம் பேசத் தயக்கமாயிருக்கிறது. நீங்களே இவளைக் கேளுங்கள். இவளைக் கேட்டால் அவர் இப்போது எங்கே போகிறாரென்று தெரிந்தாலும் தெரியலாம்” என்று தந்தையிடம் மெல்லிய குரலில் கூறினாள் முல்லை. தேரின் முற்பகுதியிலிருந்த சுரமஞ்சரி மட்டும்தான் முல்லையின் கண்களுக்குத் தென்பட்டாள். உயர்ந்த தோற்றத்தையுடைய வளநாடுடையாரோ பின்புறம் வேறு இரண்டு பெண்கள் இருப்பதையும் அவர்களில் ஒருத்தி முன்புறமிருப்பவளைப் போலவே தோற்றமளிப்பதையும் கண்டு யாரிடம் கேட்பதென்று திகைத்தார். “கேளுங்கள் அப்பா” என்று முல்லை மறுபடியும் அவரைத் தூண்டினாள்.
அதற்குள் தேரின் முன்புறம் இருந்த பெண் வளநாடுடையாரை நோக்கி, “நீங்கள் யார் ஐயா? இந்தப் பெண் எங்கள் தேரை எதற்காக நிறுத்தச் சொல்லிக் கூப்பிட்டாள்?” என்று சற்றுக் கடுமையாகவே வினவினாள். எனவே ஒருவிதமாகத் திகைப்பு அடங்கி அவளிடமே தமது கேள்வியைக் கேட்டார் வளநாடுடையார்.
“இளங்குமரனைப் பார்ப்பதற்காக நாங்கள் புறப்பட்டுப் போய்க் கொண்டிருக்கிறோம் பெண்ணே! அந்தப் பிள்ளை இப்போது பட்டினப் பாக்கத்தில் உங்கள் மாளிகையில் இருக்கிறானா என்பது எங்களுக்குத் தெரிய வேண்டும். அதைச் சொன்னால் எங்களுக்கு உதவியாயிருக்கும். உன் பெயர் தானே சுரமஞ்சரி என்பது? உன்னைக் கேட்டால் இதற்கு மறுமொழி கிடைக்குமென்று இதோ அருகில் நிற்கும் என் மகள் சொல்கிறாள்.”
“நல்லது ஐயா! சுரமஞ்சரி என்பது என் பெயர்தான். ஆனால் உங்களுக்கும் உங்கள் மகளுக்கும் இப்போது இவ்வளவு அவசரமாக அவரைத் தேடிக் கொண்டு போக வேண்டிய காரியம் என்னவோ?”
தேரின் முன்புறம் இருந்த சுரமஞ்சரி தன் தந்தையிடம் இப்படிக் கேட்டவுடன் அவருக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த முல்லைக்குச் சினம் மூண்டது.
“முடியுமானால் கேள்விக்கு மட்டும் பதில் கூறுங்கள். அவருக்கும் எங்களுக்கும் ஆயிரமிருக்கும். அதையெல்லாம் உங்களிடம் சொல்ல வேண்டியதில்லை” என்று நேருக்கு நேர் அவளிடம் சீறினாள் முல்லை. முல்லையின் கோபத்தைக் கண்டு சுரமஞ்சரி பதற்றமடையவில்லை. அந்தக் கோபத்தையே சிறிதும் பொருட்படுத்தாதவளைப் போல் சிரித்தாள்.
“பெரியவரே! புறவீதியிலுள்ள பெண்கள் வீரம் மிக்க மரபைச் சேர்ந்தவர்கள் என்பதை உங்கள் மகள் இவ்வளவு கோபத்தோடு என்னிடம் நிரூபித்திருக்க வேண்டாம். நீங்கள் கேட்கிற மனிதர் எதிரே தேரில் போவதை மட்டும் தான் வரும் போது நாங்களும் பார்த்தோம். அதைத் தவிர வேறு ஒன்றும் அவரைப் பற்றி எங்களுக்குத் தெரியாது. உங்கள் வீரப்புதல்வியார் நினைப்பது போல் அவரை நாங்கள் எங்கள் மாளிகையிலேயே சிறைவைத்துக் கொண்டிருக்கவில்லை. வழியை விடுங்கள். தேர் போக வேண்டும்” என்று கடிவாளக் கயிற்றைப் பற்றி இழுத்தாள் சுரமஞ்சரி. குதிரைகள் பாய்வதற்குத் திமிறின.
முல்லையும் வளநாடுடையாரும் விலகி நின்று கொண்டார்கள். சுரமஞ்சரியின் தேர் புறவீதி மண்ணை வாரித் தூற்றிவிட்டு விரைந்தது. அந்தத் தேர் சென்ற திசையில் வெறுப்பை உமிழும் கண்களால் பார்த்தாள் முல்லை.
“மனம் இருந்தால் தாமே தேடி வருகிறார்! நாம் எதற்காக அலைய வேண்டும்? திரும்பிப் போகலாம் வாருங்கள்” என்று வெறுத்தாற் போல் கூறிக் கொண்டு தந்தையுடன் வீடு திரும்பினாள் முல்லை. அவள் மனத்தில் இளங்குமரன் மேலும், இறுமாப்பின் இருப்பிடமாகத் தெரிந்த அந்தப் பட்டினப்பாக்கத்து நங்கையின் மேலும் எல்லையற்ற ஆத்திரம் கிளர்ந்திருந்தது. இளங்குமரன் என்னும் அழகை நினைத்து இன்புறும் உரிமையில் தனக்கு ஒரு விரோதியும் இருக்கிறாள் என்பதை முல்லை இப்போது உணர்ந்து கொண்டாள். அந்தப் பேரழகை நினைத்து மகிழும் உரிமையை இன்னொருத்திக்கு விட்டுக் கொடுக்கவும் அவளால் முடியாது. செல்வத்தையும் அலங்கார அழகுகளையும் கொண்டு அவனை நினைத்தும், கண்டும், பழகியும் மகிழ்வதற்குச் சுரமஞ்சரி என்னும் வேறொரு பெண் இருப்பதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சுரமஞ்சரி தேரில் நின்று கொண்டு பேசிய பேச்சும் அவளது கர்வம் மிகுந்த அழகும் முல்லையின் மனத்தில் அமைதி குலைந்து போகச் செய்திருந்தன. அமைதியிழந்த மனத்துடனே அவள் வீடு திரும்பிய போது வீட்டில் கதக்கண்ணன் வந்து காத்துக் கொண்டிருந்தான். முல்லையும் தந்தையையும் கண்டதும் அவன் ஆவலோடு கூறலானான்:
“முல்லை, இளங்குமரனை நீலநாகமறவர் சிறிது நேரத்துக்கு முன்புதான் திருநாங்கூருக்கு அழைத்துக் கொண்டு புறப்பட்டுப் போயிருக்கிறாராம். நல்லவேளை! நேற்று மழையிலும், புயலிலும் காவிரியிலிருந்து மீண்டும் மறுபிறப்புப் பிறந்தாற் போல் அவன் பிழைத்து வந்திருக்கிறான். அதுவே பெரிய காரியம். படைக்கலச் சாலையில் போய் விசாரித்துத் தெரிந்து கொண்டு வந்த பின்பு தான் எனக்கு நிம்மதி ஏற்பட்டது.”
“எனக்கு நிம்மதி போய்விட்டது அண்ணா!” என்று அழுகை நெகிழும் குரலில் முல்லையிடமிருந்து பதில் வந்தது.
துறைமுகத்தில் நீண்ட நேரம் அலைந்து திரிந்து கொண்டிருந்த நகைவேழம்பருக்கு இறுதியில் வெற்றியே கிடைத்தது. சீனத்துக் கப்பல் தலைவனை அவர் சந்தித்து விட்டார். எடுத்துக் கொண்ட காரியத்தை முறையாகத் திட்டமிட்டு முயன்று சூழ்ச்சித் திறனோடு முடிப்பதுதான் அவர் வழக்கமாயிற்றே. அன்று காலை துறை சேர்ந்த கப்பல்களைப் பற்றித் தெரிந்து கொண்டு ஒவ்வொரு கப்பல் தலைவனிடமும் சென்று, “இன்று காலை கப்பல் கரப்புத் தீவிலிருந்து யாராவது ஒரு பெண்ணை உங்கள் கப்பலில் ஏற்றி வந்து கரை சேர்த்தீர்களா? அப்படிக் கரை சேர்த்தவர் நீங்களானால் அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் உங்களுக்கு நன்றி செலுத்திப் பரிசளிக்கக் காத்திருக்கிறார்கள்” என்று சொல்லிக் கொண்டே வந்தார். சீனத்துக் கப்பல் தலைவனிடம் அதையே சொல்லிய போது நகைவேழம்பருக்கு வேண்டிய செய்தி அவனிடமிருந்து கிடைத்தது.
“ஐயா! நீங்கள் கேட்பது போல் ஒரு பெண்ணும் அவளுடைய அன்புக்குரிய காதலர் போல் தோன்றிய ஓர் இளைஞரும் கப்பல் கரப்புத் தீவிலிருந்து எங்கள் கப்பலில் இடம் பெற்றுக் கரை சேர்ந்தார்கள். அந்தப் பெண் கப்பலில் வரும் போது உடன் வந்த இளைஞரிடம் பிணக்குக் கொண்டது போல் கோபமாக இருந்தாள். அவள் இந்த நகரத்தில் உள்ள பெரிய கப்பல் வணிகரின் பெண் என்று உடனிருந்த இளைஞர் எங்களிடம் கூறினார். அதனால் விருப்பத்தோடு எங்களுடைய கப்பலில் கொண்டு வந்த பட்டுக்களையும் மற்ற அலங்காரப் பொருட்களையும் அவளிடம் எடுத்துக் காண்பித்தேன். அவள் அவற்றில் எதுவும் தனக்குத் தேவையில்லை என்று மறுத்துவிட்டாள்! நீங்கள் கூறுவது போல் அவளையும் அந்த இளைஞரையும் கரை சேர்த்ததற்காக அவள் பெற்றோரிடம் பரிசு எதுவும் வாங்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. உதவி செய்வதில் இருக்கிற ஒரே பெருமை கைம்மாறு கருதாமல் உதவி செய்தோம் என்பதுதானே! பரிசு வாங்கிக் கொண்டால் அந்தப் பெருமையை நான் அடைய முடியாது” என்று சீனத்துக் கப்பல் தலைவன் நகைவேழம்பரிடம் கூறினான். அவன் கூறிய அடையாளங்களிலிருந்து அவனுடைய கப்பலில் வந்தது சுரமஞ்சரியாகத்தான் இருக்க வேண்டுமென்பது உறுதிப்பட்டது. உடன் வந்ததாகச் சொல்லப்படும் இளைஞன் இளங்குமரனாகத்தான் இருக்க முடியும் என்பதிலும் நகைவேழம்பருக்குச் சந்தேகம் ஏற்படவில்லை.
‘இளங்குமரன் எப்படி அங்கே அவளைச் சந்தித்தான்? கப்பலில் அவன் உடன் வந்ததைச் சுரமஞ்சரி ஏன் எல்லோரிடமும் சொல்லாமல் மறைத்தாள்?’ என்ற சிந்தனையில் மூழ்கியது நகைவேழம்பர் மனம். ‘யாரோ ஒரு படகோட்டி தன்னைக் கப்பல் கரப்புத் தீவுவரை காப்பாற்றிக் கரை சேர்த்ததாகக் கூறினாளே? அந்தப் படகோட்டிதான் கப்பலில் அவள் கூட வந்தானோ’ என்று முதலில் சிறிது மனம் குழம்பினார் அவர். ஆனால் கப்பல் தலைவன் இளைஞனைப் பற்றிக் கூறிய அடையாளங்கள் இளங்குமரனுக்கே பொருந்தின. எண்ணங்களை ஒன்றோடொன்று பின்னிச் சூழ்ச்சிமயமாக முனைந்து உண்மையைக் கண்டுபிடிக்கும் வேகம் அவருக்கே உரிய சாதுரியமாகும். அவர் அச்சாதுரியத்தை எப்போதும் இழந்ததில்லை. இப்போதும் இழக்கவில்லை.
“சீனத்துக் கப்பல் தலைவரே! நீங்களே சற்றே சிரமத்தைப் பாராமல் என்னுடன் பட்டினப்பாக்கத்துக்கு வரலாம் அல்லவா? அந்தப் பெண்ணையும், இளைஞரையும் நேரில் பார்த்தால் அடையாளம் சொல்லி விடுவீர்களென நினைக்கிறேன். சீனத்துக் கப்பல் தலைவராகிய செல்வர் ஒருவரை அறிமுகம் செய்து கொண்டாற் போலவும் இருக்கும். என்னோடு இப்போதே புறப்படுங்கள்” என்று துணிந்து அவனை அழைத்தார் நகைவேழம்பர்.
மறுக்காமல் அவனும் உடனே அவரோடு புறப்பட்டு விட்டான். இருவரும் பட்டினப்பாக்கத்து மாளிகையை அடைந்த போது சுரமஞ்சரி முதலியவர்கள் கோவிலுக்குப் போயிருந்தார்கள்.
சுரமஞ்சரியின் தந்தையாரிடம் அந்தக் கப்பல் தலைவனை அறிமுகம் செய்து வைத்தார் நகைவேழம்பர். அவன் துறைமுகத்தில் தன்னிடம் கூறிய விவரங்களையும் அவரைத் தனியே அழைத்துப் போய்க் கூறினார்:
“உங்கள் பெண்ணரசி நம்மையெல்லாம் ஏமாற்றியிருக்கிறாள். தன்னுடன் கப்பலில் வந்த இளங்குமரனைப் பற்றிச் சொல்லாமலே மறைத்து விட்டாள்.”
“உடன் வந்தவன் அந்தப் பிள்ளைதான் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“இதோ, அதையும் நிதர்சனமாகத் தெரிந்து கொண்டு விடுகிறேன்” என்று கூறிவிட்டுச் சுரமஞ்சரியின் மாடத்துக்குப் போய் அங்கேயிருந்த இளங்குமரனின் சித்திரத்தை எடுத்துக் கொண்டு வந்து சீனத்துக் கப்பல் தலைவனிடம் காண்பித்தார் நகைவேழம்பர். கப்பல் தலைவனின் முகம் அந்தச் சித்திரத்தைக் கண்டதுமே மலர்ந்தது.
“இதே இளைஞன் தான். இதே அழகிய கண்கள் தாம். எனக்கு மிக நன்றாக நினைவிருக்கிறது.”
இதைக் கேட்டவுடன் சுரமஞ்சரியின் தந்தைக்கு அடங்காத சினம் மூண்டது. ‘பெண் உயிர் பிழைத்து வந்தாளே; அதுவே போதும்’ என்று காலையில் உண்டாகியிருந்த மகிழ்ச்சி கூட இப்போது ஏற்பட்ட இந்தச் சினத்தில் ஒடுங்கிவிட்டது. அந்நியனான அந்தக் கப்பல் தலைவனுக்கு முன் தம் குடிப் பெருமையை விட்டுக் கொடுக்கலாகாதே என்ற நினைவு மட்டும் தடுத்திராவிட்டால் அவர் இன்னும் கடுமையாக உணர்ச்சி வசப்பட்டிருப்பார்.
சீனத்துக் கப்பல் தலைவன் அவர் நிலையைக் கண்டு ஒன்றும் புரியாமல் மருண்டான். ‘பெண்ணைக் காப்பாற்றியதற்காக அவள் பெற்றோர் தனக்கு நன்றி சொல்லப் போவதாய்க் கூறியல்லவா இந்த ஒற்றைக் கண் மனிதர் நம்மை அழைத்து வந்தார்? நடப்பதென்னவோ வேறு விதமாக இருக்கிறதே’ என்று எண்ணி வியந்தான் அவன்.
‘சுரமஞ்சரி நீராட்டு விழாவில் நீந்துவது போல் தப்பிச் சென்று முன்பே இளங்குமரனைப் படகுடன் ஆற்றில் காத்திருக்கச் செய்து அவனுடன் புறப்பட்டுப் போயிருப்பாளோ?’ என்று தம் மனம் எண்ணிப் பழகிய கெட்ட வழியிலேயே எண்ணினார் நகைவேழம்பர். அதைச் சுரமஞ்சரியின் தந்தையிடம் காதருகில் சென்று மெல்லக் கூறினார். தன்னை வரவழைத்து உட்கார வைத்துக் கொண்டு அவர்கள் இருவரும் தங்களுக்குள்ளேயே ஏதோ பேசிக் கொள்வதும், எதற்காகவோ கோபப்படுவதும் கண்டு சீனத்துக் கப்பல் தலைவன் வருந்தினான். அவர்கள் பண்புக் குறைவாக நடந்து கொள்வதாகத் தோன்றியது அவனுக்கு. இனிமேலும் தான் அங்கே இருப்பதில் பயனில்லை என்ற எண்ணத்துடன் மெல்ல எழுந்து நின்றான் அவன். “நான் போய் வருகிறேன், ஐயா!” என்று கூறி அவர்களிடம் விடைபெற்றான்.
அந்த நேரத்தில் கோவிலுக்குச் சென்றிருந்த தேர் திரும்பி வந்து வாயிலிலே நின்றது. சுரமஞ்சரியும், வசந்த மாலையும் தேரிலிருந்து இறங்கிச் சேர்ந்தாற் போல நடந்து வந்து உள்ளே புகுந்தார்கள். உள்ளே அந்தக் கப்பல் தலைவனையும், இளங்குமரனின் ஓவியத்தையும் சேர்த்துப் பார்த்தபோது சுரமஞ்சரி திடுக்கிட்டாள்.
“உங்கள் கப்பலில் வந்தது இந்தப் பெண் தானே?” என்று சுரமஞ்சரியின் பக்கம் கைநீட்டிக் காண்பித்துச் சீன வணிகனைக் கேட்டார் நகைவேழம்பர்.
அவர்கள் தன்னிடம் பண்புக் குறைவாக நடந்து கொண்டதில் சிறிது மனம் குழம்பியிருந்த சீனத்துக் கப்பல் தலைவன் ஒரே விதமான தோற்றத்தில் தெரிந்த இரண்டு பெண்களையும் கண்டு இப்போது இன்னும் குழப்பமடைந்து தன் கப்பலில் வந்தது யாரென்று சொல்லத் தெரியாமல் மருண்டான். மாறி மாறி இருவரையும் மருண்டு போய்ப் பார்த்தான்.
“இவள் தானே?” என்று சுரமஞ்சரியைச் சுட்டிக் காண்பித்து அவனை இரண்டாம் முறையாகக் கேட்டார் நகைவேழம்பர்.
அவசரத்திலும், குழப்பத்திலும் அங்கிருந்து உடனே வெளியேறிப் போக வேண்டுமென்ற பதற்றத்திலும் அந்தக் கப்பல் தலைவன் திகைத்து, “இவள் இல்லை! அவள் தான் என் கப்பலில் வந்தவள். சந்தேகமே இல்லை. அந்தப் பெண் தான்” என்று வானவல்லியைச் சுட்டிக் காண்பித்துவிட்டு வேகமாக வெளியேறிச் சென்று விட்டான்.
சீனத்துக் கப்பல் தலைவன் கூறிவிட்டுச் சென்றதைக் கேட்டு நகைவேழம்பர் பெரிதாக வாய்விட்டுச் சிரித்தார். அவர் அதைச் சிறிதும் நம்பவில்லை என்பதை அந்த சிரிப்பு எடுத்துக் காட்டியது.
“இவர்கள் இரட்டைப் பிறவி என்பது அந்தக் கப்பல் தலைவனுக்குத் தெரியாது? ஐயோ பாவம்! போகிற போக்கில் ஏதோ பிதற்றிவிட்டுப் போகிறான் அவன். அவனுடைய கப்பலில் வந்தவர்கள் சுரமஞ்சரி தேவியும் அந்தப் பிள்ளையாண்டான் இளங்குமரனும் தான் என்பதைப் பற்றி உங்களுக்குச் சிறிதும் சந்தேகமே வேண்டாம். இதோ உங்களுக்கு முன் சுரமஞ்சரி தேவியார் திகைத்துத் தலைகுனிந்து நிற்பதே இதற்குச் சான்று” இவ்வாறு நகைவேழம்பர் கூறி விளக்கிய போது சுரமஞ்சரியின் தந்தை சீற்றத்தோடு அவளை நிமிர்ந்து பார்த்தார். அவள் நாணி நடுங்கித் தலை தாழ்ந்து நின்றாள். தந்தையார் சுரமஞ்சரியைக் கோபித்துக் கொள்ளும் போது தாங்கள் அருகிலிருப்பது நாகரிகமல்ல என்று கருதிய வானவல்லியும் தோழி வசந்தமாலையும் அங்கிருந்து மெல்ல விலகி உள்ளே சென்று விட்டார்கள். சுரமஞ்சரி தனியே நின்றாள். நகைவேழம்பர் இவ்வளவு விரைவாக அந்தச் சீனத்துக் கப்பல் தலைவனைத் தேடி அழைத்து வருவாரென்றோ அவனிடம் தனது மாடத்திலுள்ள இளங்குமரனின் ஓவியத்தைக் காண்பித்துத் தன்னுடன் இளங்குமரனும் கப்பலில் வந்ததைக் கண்டுபிடித்து விடுவாரென்றோ அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. கோவிலிலிருந்து திரும்பி மாளிகைக்குள் நுழைந்ததுமே தான் இவ்வளவு விரைவில் எதிர்பாராத இந்த நிகழ்ச்சி தன்னை எதிர்கொண்டதைக் கண்ட பின் திகைப்பிலிருந்தும் அச்சத்திலிருந்தும் அவளால் விடுபட இயலவில்லை. தந்தையாரின் குரல் சீற்றத்தோடு அவளை நோக்கி ஒலித்தது:
“நமது குடிப்பெருமைக்கு மாசு தேடும் செயல்களையே தொடர்ந்து நீ செய்து கொண்டு வருகிறாய்!”
“அப்படியானால் நான் உயிர் பிழைத்து வந்ததே உங்கள் குடிப் பெருமைக்கு மாசு தேடும் செயல்தான். என்னைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவருக்கு நன்றியும் பரிசும் தந்து மகிழ வேண்டிய நீங்கள் அவரைப் பற்றி இப்படி நினைப்பது சிறிதும் நன்றாயில்லை அப்பா!”
“இப்போது இப்படி நினைக்கிற நீங்கள் முதலில் உங்களைக் காப்பாற்றியவரைப் பற்றிய உண்மையை ஏன் பொய் சொல்லி மறைத்தீர்கள்? யாரோ ஒரு படகோட்டி உங்களைக் கரை சேர்த்ததாகவும் அங்கிருந்து சீனத்துக் கப்பலில் இடம் பெற்று வந்ததாகவும் கூறி உங்களோடு வந்த உதவியாளரை ஏன் மறைத்தீர்களோ?” என்று குறுக்கிட்டுக் கேள்வி கேட்டார் நகைவேழம்பர்.
“உங்களுக்கெல்லாம் அவரைப் பிடிக்காது என்று தெரிந்துதான் கூறவில்லை” என்று சுரமஞ்சரியும் இந்தக் கேள்விக்குத் தயக்கமின்றி மறுமொழி கூறினாள்.
“நீங்கள் கூறாவிட்டால் என்னம்மா? நாங்கள் கண்டுபிடித்துத் தெரிந்து கொண்டோமா, இல்லையா? சொந்த மகளிடமே ஏமாந்து போய் நிற்கிற அளவுக்கு உங்கள் தந்தை ஆற்றல் குறைந்தவரில்லை. அவரும், அவரைச் சுற்றியிருப்பவர்களும் ஏழு உலகத்தை ஏமாற்றி விட்டு வருகிற சாதுரியம் படைத்தவர்கள்” என்று நகைவேழம்பர் தற்பெருமை பேசிச் சிரித்த போது, தன் தந்தையும் அவரோடு சேர்ந்து சிரித்ததைக் கண்டு சுரமஞ்சரி தன் மனத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் பொறுமையிழந்து கொதிப்படைந்தாள்.
“என் தந்தையார் பெருமைப்படுவதற்கு மற்றவர்களை ஏமாற்றுகிற திறமை அவரிடம் இருப்பது ஒன்றுதான் காரணமென்று அவருக்கு முன்பே துணிந்து கூறுகிற அளவுக்கு அவர் உங்களுக்கு இடமளித்திருப்பதை எண்ணி வெட்கப்படுகிறேன்” என்று சுரமஞ்சரி குமுறிப் பேசத் தொடங்கிய போது, “பேசாதே; நீ உள்ளே போ!” என்று அவளை நோக்கி இரைந்தார் அவள் தந்தையார். தலை குனிந்தபடி உள்ளே செல்வதைத் தவிர சுரமஞ்சரியால் அப்போது வேறு ஒன்றும் பேச முடியவில்லை. தன் தந்தையார் நகைவேழம்பருக்கு அளவு மீறித் தகுதி மீறி இடங் கொடுப்பதன் காரணம் என்ன என்பது அவளுக்கு விளங்காத மர்மமாயிருந்தது.
மாளிகையும், மதிப்பும், செல்வமும், சிறப்பும் உள்ளவருக்கு மகளாகப் பிறந்திருக்கிற தன்னைக் காட்டிலும் புறவீதியில் கிழத் தந்தையோடு தன் தேருக்கு முன் வந்து நின்ற அந்த வீரக்குடிப் பெண்ணே எவ்வளவோ விதத்தில் கொடுத்து வைத்தவள் என்று எண்ணும் தாழ்வு மனப்பான்மையை அப்போது சுரமஞ்சரி அடைந்தாள்.
அந்த வீரக்குடிப் பெண்ணின் தந்தை ஆதரவாக அவளோடு தெருவில் நடந்து வந்ததையும், தன் தேருக்கு முன் நின்று இளங்குமரனைப் பற்றி அறிய முயன்றதையும் நினைத்துப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள் சுரமஞ்சரி. புறவீதியின் வீரக் குடும்பங்களில் ஏதாவதொன்றில் தானும் பிறந்திருக்கக் கூடாதா என்று நினைத்துத் தவித்தது அவள் உள்ளம். செல்வமும் செல்வாக்கும் நினைத்தபடி வாழ முடியாமற் செய்யும் தடைகளாக அந்தக் கணத்தில் அவளுக்குத் தோன்றின. ‘புறவீதியிலுள்ள ஆயிரக்கணக்கான மறவர் குடும்பங்களில் ஏதாவதொன்றில் யாராவதோர் அன்பு நிறைந்த தந்தைக்கு மகளாய்ப் பிறந்திருந்தால் தேரையும், பல்லக்கையும் எதிர்பாராமல் மனம் விரும்பியவரைச் சந்திக்கக் கால்களால் நடந்தே புறப்படலாம். வான்வெளிப் பறவை போல் தன்போக்கில் திரியலாமே!’ என்று எண்ணிய போது புறவீதியிற் சந்தித்த மறக்குலத்து நங்கை மேல் சுரமஞ்சரி சிறிது பொறாமையும் கொண்டாள். தன்னை விட அந்தப் பெண்ணே வசதிகள் நிறைந்தவளாக அந்நிலையில் அவளுக்குத் தோன்றினாள்.
அன்று மாலை சுரமஞ்சரி மேலும் கலக்கமடையும்படியானதொரு செய்தி தோழியின் மூலம் அவளுக்குத் தெரியவந்தது. இளங்குமரனின் ஓவியத்தைக் கொடுத்து அவன் பூம்புகாரிலும், அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் எங்கே தென்பட்டாலும் அவனைத் தேடிக் கண்டுபிடித்து உடனே தன் மாளிகைக்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்று நாலைந்து முரட்டு யவன ஊழியர்களைத் தன் தந்தையாரும் நகைவேழம்பரும் சேர்ந்து இரகசியமாக அனுப்பி வைத்திருக்கும் செய்தியை வசந்தமாலையின் வாயிலாக அறிய நேர்ந்த போது சுரமஞ்சரியைப் பெருங் கவலை சூழ்ந்தது.
‘இந்த செய்தியை முன் அறிவிப்புச் செய்து ‘அவரை’ எங்காவது பாதுகாப்பாக இருக்கச் செய்யலாமே’ என்ற எண்ணத்துடன், “வசந்தமாலை! ஓவியன் மணிமார்பன் எங்கிருந்தாலும் நான் கூப்பிட்டேன் என்று உடனே அழைத்து வா. ஓவியன் மூலமாக அவருக்கு முன்பே இந்தச் செய்தியைக் கூறி எச்சரிக்கை செய்யலாம்” என்றாள்.
“ஓவியன் சில நாட்களாக இந்த மாளிகையில் எங்குமே தென்படவில்லை அம்மா! திடீரென்று காணாமற் போனதன் காரணமும் எனக்குப் புரியவில்லை. ஆனாலும் தேடிப் பார்க்கிறேன்” என்று புறப்பட்டாள் வசந்தமாலை.
முன்பு தான் இளங்குமரனுக்கு எழுதிய அன்பு மடல் நகைவேழம்பர் கைக்குக் கிடைத்ததைக் கண்டதிலிருந்தே ஓவியன் மேல் ஐயங்கொண்டு வெறுப்பாயிருந்தாள் சுரமஞ்சரி. ஆயினும் இப்போது இரண்டாம் முறையாகவும் அவன் உதவியை நாடுவது தவிர வேறு வழி அவளுக்குத் தோன்றவில்லை. அவன் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தாள் அவள்.
திருநாங்கூர் அடிகளின் பூம்பொழிலில் அவரிடமிருந்து முதற் சுவடியை வாங்கிக் கொண்ட அந்தக் கணத்தில் இளங்குமரன் மனம், நாள் தவறாமல் ஊர்வம்புகளையும் அடிபிடி சண்டைகளையும் ஏற்றுக் கொண்டு முரட்டுப் பிள்ளையாகக் காவிரிப் பூம்பட்டினத்தில் சுற்றிக் கொண்டிருந்த தன் பழைய நாட்களைச் சற்றே நினைவு கூர்ந்தது. அந்தப் பழைய நாட்களின் நிகழ்ச்சியில் ஒன்றைத் தனியே பிரித்து இப்போது தான் சுவடியைத் தாங்கிச் சுமந்து நிற்கும் நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டான் அவன்.
அந்த நாளில் காவிரிப்பூம்பட்டினத்தின் அம்பலங்களிலும், பொது மன்றங்களிலும் இளைஞர்கள் தங்கள் பலத்தைப் பரீட்சை செய்வதற்காகத் தூக்கிப் பார்க்கும் ‘இளவட்டக்கல்’ என்னும் கனமான உருண்டைக் கற்கள் இருந்தன. இவற்றைத் தூக்க முடிகிறதா, இல்லையா என்பதைப் பொறுத்து இளைஞர்களின் தோள் வலிமையைக் கணக்கிட முடிந்தது.
பூம்புகாரின் புறநகரமாகிய மருவூர்ப்பாக்கத்தின் தெரு முனைகளிலும், நாளங்காடிச் சதுக்கத்திலும், மறக்குடி மக்கள் மிகுந்த புற வீதிகளிலும் இத்தகைய இளவட்டக் கற்கள் கிடக்கும். இவற்றைச் சுற்றி எப்போதும் இளைஞர்களின் கூட்டத்தைக் காணலாம். பொன் திணித்தாற் போன்ற அழகிய தோள்கள் புடைக்க, நெற்றியில் குறுவியர் முத்தரும்பக் கல்தூக்கும் காளையர்களின் எழிலைக் காண்பதற்காக அந்தந்த வீதிகளின் மேன் மாடங்களில் அங்கங்கே தாமரை பூத்துத் தயங்கினாற் போல் பெண்களின் மலர்ந்த முகங்கள் தோன்றும். தன் விடலைப் பருவத்தில் நகரத்திலுள்ளவற்றிலேயே மிகவும் பெரியவை என்று கருதப்பட்ட இளவட்டக் கற்களையெல்லாம் அலட்சியமாகத் தூக்கி அருகிலிருந்தவர் முகங்களில் வியப்பை மலரச் செய்திருக்கிறான் இளங்குமரன். தீரர்களின் செயல்களைக் கண்டு வியப்படைகிற பருவத்து இளைஞர்களிடையே அவன் வியப்புகளைச் செய்துகாட்டும் தீரனாக இருந்த காலம் அது!
‘வலிமை வாய்ந்த இந்தக் கைகளில் இப்போது இந்தச் சுவடி ஏன் அதிகமாக கனப்பது போல் ஒரு பாரத்தை உணர்த்துகிறது? மெல்லிய இந்தச் சுவடியைத் தாங்கிச் சுமக்கும் போது என் கைகள் ஏன் இப்படி நடுங்குகின்றன? திடீரென்று நான் இளைத்துப் போய்விட்டேனா? என்னிடமிருந்து இந்த ஒரே ஒரு நாள் போதுக்குள் ஏதோ ஒரு வலிமை குறைந்திருக்கிறதே! அது எங்கே குறைந்தது? யார் முன்னிலையில் குறைந்தது? விதையிடுவதற்கு உழுது வைத்த நிலம் போல் என் மனம் எதை எதிர்பார்த்து இப்படி இறுக்கம் நெகிழ்ந்து குழைந்து போயிருக்கிறது?’ என்ற நினைவுகளுடன் கையில் சுவடியேந்தியபடி தயங்கி நின்றான் இளங்குமரன். சற்றே நிதானமாக எண்ணிப் பார்த்த போது தானும் தன் உணர்வுகளும் இளைத்த இடம் அவனுக்கு மீண்டும் நினைவு வந்தது.
“மறுபடியும் எப்போதாவது என்னிடம் கேள்வி கேட்க வந்தால் மனம் நிறைய ஞானத்தோடு வலது கையில் சமயவாதம் புரிவதற்கான கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு ஞான வீரனாக வந்து சேர்! மற்போர் வீரனைப் போல் உடம்பை மட்டும் வலிதாகக் காண்பித்துக் கொண்டு வந்து நிற்காதே!” என்று உலக அறவியின் வாயிலில் அந்த பௌத்த சமயத் துறவி சிரித்துக் கொண்டே கூறினாரே; அவர் அப்படிக் கூறியதைக் கேட்டுத் தான் தலை குனிந்து நின்ற அந்தக் கணமே தன் வலிமையும் தானும் இளைத்துப் போய்விட்டது போன்று ஒரு பிரமையை இளங்குமரன் உணர்ந்திருந்தான். அவனுடைய தயக்கத்தை அடிகள் கவனித்தார்.
“எதை நினைத்துத் தயங்குகிறாய், இளங்குமரா? உன் கைகள் ஏன் இப்படி நடுங்குகின்றன? இந்தச் சுவடி அவ்வளவு பெரிய சுமையல்லவே?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் நாங்கூர் அடிகள்.
“அறிவின் உலகமாகிய இந்தச் சுவடிகளையெல்லாம் பார்க்கும் போது இவற்றின் அருகே நான் மிகவும் இளைத்துப் போய்த் தளர்ந்து விட்டாற் போல் எனக்குத் தோன்றுகிறது ஐயா!”
“உடம்பிற்கு அப்பாற்பட்டதாய், உடம்பைக் காட்டிலும் வலியதாய் உள்ள உணர்வுகளுக்கு அருகில் நிற்கிற போது உடம்பு சிறியதாய்த் தோன்றுவது இயல்புதான். அப்படிப்பட்ட சமயங்களில் மனத்தைப் பெரிதாக்கி மலரச் செய்துகொண்டு பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும். கல்விக்குக் கரை இல்லை. கற்பவருக்கு நாளும் இல்லை. இருக்கிற நாட்களிலும் அவலக் கவலைகளுக்கும் நோய் நொடிகளுக்கும் கழிகிற நாட்கள் பல. சுருள் சுருளாகப் பிடரியில் படரும் கரிய முடியும், பட்டுக் கரையிட்ட ஆடைகளும், பொன்னுருக்கினாற் போன்ற மேனி நிறமும் உடம்புக்குத்தான் அழகு தரமுடியும். மனத்துக்கு அழகும், வலிமையும் தருவது கல்விதான். இதை இன்று தான் நீ அடையத் தொடங்குகிறாய். தளர்ச்சியையும், சோர்வையும் விலக்கிவிட்டு மலர்ந்த மனத்தோடு என் முன்பாக இப்படி உட்கார்ந்து கொள்.”
கைகளில் சுவடியை விரித்து வைத்துக் கொண்டு அடிகளுக்கு முன்னால் அடக்க ஒடுக்கமாக அமர்ந்திருந்தான் இளங்குமரன். கிரந்தசாலையைச் சுற்றியிருந்த பூம்பொழிலில் மலர்ந்திருந்த பூக்களின் மணமும், தூபப் புகையின் வாசனையும், காலைப் பொழுதின் தூய்மையும், கற்பதற்காக நெகிழ்ந்திருந்த மனமும், எதிரே சிரித்துக் கொண்டே அமர்ந்திருந்த ஆசிரியன் தோற்றமும் இளங்குமரனுக்குப் புனிதமான எண்ணங்கள் பிறக்கும் சூழ்நிலையைத் தந்தன.
தமக்கே உரிய கோமளமான குரலில் பாடத்தைத் தொடங்கினார் அடிகள்: “ஒவ்வொரு மொழிக்கும் ஆதி வடிவம் ஒலி வடிவம் தான். கண்ணுக்குப் புலனாகாத பரம்பொருளைக் காட்டுவதற்காகக் கண்ணுக்குப் புலனாகிற தெய்வ விக்கிரகங்களைப் படைத்துக் கொண்டு வழிபடுவதுபோல் தோற்றமில்லாத ஒலிக்குத் தோற்றமளிக்க ஏற்பட்ட வரிவடிவங்களே எழுத்துக்கள். ஓசை வேறு; ஒலி வேறு. பண்படாமலும் வரையறை பெறாமலும் வழங்குவன வெல்லாம் ஓசை. பண்பட்டும் வரையறை பெற்றும் வழங்குவன எல்லாம் ஒலி, ஒலியிலிருந்து எழுத்துக்கள் பிறந்தன. எழுத்துக்களிலிருந்து மொழிக்கு உருவம் பிறந்தது. எழுத்துருவத்திலிருந்து சொற்கள் பிறந்தன. சொற்கள் பொருள்களை அடைந்தன. பல பொருள்களை அடைந்த ஒரு சொல்லும் ஒரே பொருளை அடைந்த பல சொற்களுமாக மொழி நிலத்திற் பதங்கள் விளைந்தன. ஒற்றைத் தனி மலர் போல் ஓரெழுத்தில் விளைந்த சொற்களும், தொடுத்து மலர்கள் போல் பல எழுத்துக்களிணைந்து விளைந்த சொற்களுமாக மொழி வளர்ந்தது. சொல் செவிக்குப் புலனாகும் போது ஒலி வடிவில் இலங்குகிறது. கண்ணுக்குப் புலனாகும் போது எழுத்து வடிவில் இலங்குகிறது. பூ என்ற தோற்றமும், மணம் என்ற உணர்வும் தனித்தனி நிலைகளாயினும் இரண்டும் ஒன்றிலிருந்து எழுகிற உணர்வுகள் அல்லவா? அதுபோல் சொல்லும் பொருளும் வேறு வேறு உணர்வுகளாயினும் மலர் மணம் போல் சொற் பொருளுணர்ச்சி ஓரிடத்திலிருந்து எழுவதே...”
“சொற்பொருளுணர்ச்சி என்பது என்ன ஐயா?” என்று இளங்குமரன் ஆர்வத்தோடு அவரிடம் குறுக்கிட்டுக் கேட்டான்.
“இன்ன சொல்லால் இன்ன பொருள் தான் உணரப்படும் எனப் பழகிய வழக்குக்குச் சொற்பொருளுணர்வு என்று பெயர். பாம்பு என்ற சொல்லைக் கூறினால் உடனே பாம்பு என்னும் பொருளும், பாம்பு என்ற பொருளைப் பார்த்தால் உடனே பாம்பு என்ற சொல்லும் இடையீடு இன்றி ஒருங்கே நினைவு வருகிறதல்லவா? உலகத்து மொழிகளில் எல்லாம் உணர்த்தப்படும் பொருள்களிடையே வேறுபாடு இல்லை. உணர்த்தும் சொற்களில் தான் வேறுபாடு உண்டு. இனிமை என்கிற உணர்வு புல்லாங்குழல், யாழ் முதலிய எல்லா இசை வகைக்கும் பொதுவாவது போல் ‘பொருளுணர்த்துதல்’ என்பது எல்லா மொழிச் சொற்களுக்கும் பொதுவான குறிக்கோள். ஒன்றாகிய பரம்பொருளை ஒவ்வொரு சமயமும் வேறு மார்க்கங்களில் வந்து முடிவு காண முயல்வது போல் ஒரே பொருளை வேறுவேறு சொற்களால் உணர்த்துவது மொழிகளின் மதம். மொழியுணர்வை ஒட்டிச் சமயவுணர்வும் இறையுணர்வும் இணைந்து வளர்வது நமது தமிழ்நாட்டில் வழக்கமாயிருக்கிறது இளங்குமரா!”
“ஐயா! தமிழ் என்ற சொல்லால் நம்முடைய மொழியையும், நாட்டையும் இணைத்துப் பேசி வருகிறோம். இந்தச் சொல்லுக்கு என்ன பொருள்?”
“ஆகா! நீ இப்படியல்லவோ தொடர்ந்து தூண்டிக் கேட்க வேண்டும்! நீ கேட்கக் கேட்க எனக்கு உற்சாகம் வளருகிறது அப்பனே! தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை என்று பொருள். இந்தத் தெய்வத் திருமொழியின் ஒலி செவிக்கு இனியது. எழுத்து கண்ணுக்கினியது. சொற்கள் வழங்குவதற்கு இனியன. பன்னூறு ஆண்டுகளாகப் பண்பட்டு வளர்ந்த மொழியைப் பேசும் பாக்கியம் செய்தவர்களாயிருக்கிறோம் என்பதே நமக்கெல்லாம் பெருமை. தலைமுறைகள் செய்த தவத்தால் வளர்ந்து வளர்ந்து சொற்களெல்லாம் மந்திரமாய் ஆற்றல் பெற்ற மொழி இது” என்று பெருமிதத்தோடு பதில் கூறினார் அடிகள்.
இதைக் கேட்ட அந்த விநாடியில் தான் ஒரு தமிழ்மகன் என்பதனால் இளங்குமரனுக்கு மனத்தில் ஏற்பட்ட பெருமை ஒப்பற்றதாயிருந்தது.
எழுத்திலக்கணத்தைப் பற்றிய சிறந்த கருத்துக்கள் பலவற்றை நுணுக்கமாக இளங்குமரனுக்குக் கூறி விளக்கினார் அடிகள். அவற்றையெல்லாம் கேட்கக் கேட்கப் புதிய உலகம் ஒன்றைத் திறந்து காண்பித்தாற் போலிருந்தது இளங்குமரனுக்கு.
பாடம் முடிந்ததும் அடிகள் வேடிக்கையாகச் சிரித்துக் கொண்டே இளக்குமரனிடம் இப்படிக் கூறினார்:
“கடவுள் மனிதர்களின் தலையெழுத்தை நிர்ணயித்து அவர்களை உலகத்துக்கு அனுப்பினார்! அவர்கள் உலகத்தில் எத்தனையோ எழுத்துக்களையும் மொழிகளையும் நிர்ணயித்துக் கொண்டு வாழப் பழகி விட்டார்கள். உலகத்தில் தலையெழுத்தைக் கணக்கிடுகிற அளவுக்கு வளர்ந்து விட்டார்கள். தங்கள் தலையெழுத்தை மாற்றிக் கொள்ள வழி தெரியாவிட்டாலும் காலத்தின் தலையெழுத்தைப் புறங்காணும் காவியங்களையும், இலக்கிய இலக்கியங்களையும் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். எவ்வளவு விந்தையான உலகம் இது! தெய்வம் விதியை வகுத்து எழுதிப் படைத்தது. மனிதர்கள் எழுதிப் படைத்து விதி வகுத்திருக்கிறார்கள். ‘சொல்லையும் பொருளையும் போல் சக்தியும் சிவமுமாய் இணைந்திருக்கும் சொற்பொருட் காரணமான பெருமானைச் சொல்லும் பொருளுமாக இணைத்துப் பாவித்துச் சொற்பொருளால் வணங்குகிறேன்’ என்று பரம்பொருளை வணங்குகிற அளவுக்கு பெருமை படைத்திருக்கிறார்கள். மண்ணுலகத்துக்கு மொழி படைத்துக் கொடுத்த மனிதர்கள், தாங்கள் வகுத்த விதிக்கு இலக்கணம் என்ற பெயரும் சூட்டியிருக்கிறார்கள். விதியின் எழுத்துக்கு வடிவம் தெரியவில்லை, பொருளும் தெரியவில்லை. மனிதர்கள் படைத்த எழுத்துக்கு வடிவும் பொருளும் வகையும் எல்லாம் இருக்கிறது அல்லவா?”
இளங்குமரன் ஆவல் மீதூரக் கேட்டுக் கொண்டிருந்தான். அப்போது அவர்கள் இருவரும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த கிரந்தசாலையின் வாயிற் பக்கமிருந்து “தாத்தா! நான் உள்ளே வரலாமா?” என்று பெண் குரல் ஒன்று வினாவியது.
“யார்? விசாகையா? வா, அம்மா! இரண்டு மூன்று நாட்களாக உன்னை இந்தப் பக்கமே காணவில்லையே, எங்கே போயிருந்தாய்?” என்று அடிகள் அந்தக் குரலுக்குரியவளை வரவேற்றுக் கூறிக் கொண்டே வாயிற்பக்கம் திரும்பினார்.
தலையில் நிறுத்திய சங்குபோல் எடுத்துக் கட்டிய சடைமுடியும், எளிய தோற்றமும், அட்சய பாத்திரம் ஏந்திய கைகளுமாக மேக மண்டலத்திலிருந்து தூய்மையே வடிவாய் இறங்கிவரும் மின்னல்போல் உள்ளே நுழைந்தாள் துறவுக்கோலம் பூண்ட புத்த சமயப் பெண் ஒருத்தி. அழல்கொண்டு செய்தாற் போன்ற நிறமும், துறவிக் கோலத்துக்குரிய சீவர ஆடையும், நடந்து வருகிற போதே தன்னைச் சுற்றிலும் தூய்மை சூழச் செய்கிற தனித் தன்மையுமாக அந்தப் பெண்ணைக் கண்டதுமே இளங்குமரனின் மனம் வணங்கியது. பேதமை மாறாத இளம் வயது நிலவைக் கறை துடைத்தாற் போன்ற தூயமுகம். அதில் உணர்ச்சியலைகள் படியாது அமைதி திகழும் கண்கள். சிவந்த இதழ்களில் நிறைந்த சாந்தம். சாந்தத்திலிருந்து தனியே பிரிக்க முடியாததொரு புன்னகை. தோற்றம் நிறையப் பாதாதிகேச பரியந்தம் வார்த்தைகளார் சொல்ல முடியாதொரு பேரமைதியோடு அந்தத் துறவி நின்றாள். அவளுடைய வெண்கமலப் பூங்கைகளில் அட்சய பாத்திரம் ஏந்திய கோலமும் நின்ற நிலையும் மின்னலிற் செய்து நிறுத்திய சிற்பமோ எனக் காண்பார் கண்களைத் தயங்கச் செய்தன. பெரியதாய், அழகாய், அளவாய்த் தொடுத்துத் தொங்கவிட்டிருந்த முல்லை மாலை சரிந்து நழுவுவது போல் தரையில் மெல்ல அமர்ந்தாள் விசாகை.
“இளங்குமரா! இந்தப் பெண்ணின் பெயர் விசாகை. உன்னைப் போலவே என்னிடம் கற்றவள். இவள் இந்தக் கோலம் பூண நேர்ந்தது ஒரு விந்தையான வரலாறு. தெய்வம் விதியின் எழுத்தை வகுத்தது; மனிதன் எழுத்துக்கு விதி வகுத்தான் என்று சிறிது நேரத்துக்கு முன் உன்னிடம் கூறியது உனக்கு நினைவிருக்கிறதல்லவா? விதி வகுத்த வாழ்வை மீறித் தான் வகுத்த வாழ்வுக்கு விதி அமைத்துக் கொண்ட பெண் இவள். இத்துணை இளம் வயதில் இவள் மனத்துக்குக் கிடைத்திருக்கிற வைராக்கிய முதிர்ச்சி அற்புதமானது; பிறர் வியக்கத் தக்கது” என்று நாங்கூர் அடிகள் இளங்குமரனுக்கு அந்தப் பெண்ணைப் பற்றிக் கூற ஆரம்பித்தார்.
“விந்தை! விந்தை! என்று பார்க்கிறவர்களிடமெல்லாம் சொல்லி மகிழ்கிற அளவுக்கு என் வாழ்வில் அப்படி என்ன இருக்கிறது, தாத்தா? துர்பாக்கியங்களும் ஏமாற்றங்களும் நிறைந்த பழங் கதையை மறுபடியும் நினைவூட்டுவதில் உங்களுக்கு என்ன தான் இன்பமோ?” என்று சொல்லிச் சிரித்தாள் விசாகை. அந்தச் சிரிப்பில் பாவ நினைவுகளை அழிக்கும் தெய்வீகத் தூய்மை தெரிந்தது. துன்பம், பயம், சோர்வு, சிறுமை எல்லாமே அந்தச் சிரிப்பில் எரிந்து பொசுங்கின.
“ஓகோ! நீ விரும்பவில்லையானால் உன்னைப் பற்றிச் சொல்வதை நிறுத்திக் கொள்கிறேன் விசாகை! உன்னுடைய கதை இந்தப் பிள்ளைக்கு அவசியம் தெரிய வேண்டுமென்பதற்காகத்தான் சொல்ல நினைத்தேன்...” என்று தயங்கினாற் போலக் கூறி நிறுத்தினார் அடிகள்.
“நன்றாகச் சொல்லுங்கள், தாத்தா! எனக்கு மறுப்பேயில்லை. ஆனால் கதைக்கு உரியவளாய்க் கதைக்கு ஆளாகிக் கதையாகி விட்ட எனக்கு என்னவோ அதில் அப்படிப் பெருமைப்பட ஒன்றுமில்லை என்பது போல் தோன்றுகிறது.”
“கதாபாத்திரங்களே தங்கள் கதையை நினைத்துப் பெருமைப்பட்டால் கதை சொல்கிறவன் கதி என்ன ஆவது? நீ பேசாமல் கேட்டுக் கொண்டிரு விசாகை! இந்தப் பிள்ளை உன் கதையைக் கேட்டதும் எவ்வளவு பெருமைப்படுகிறான் என்பதைப் பார்க்கலாமே!” எனச் சிரித்துக் கொண்டே கூறியபடி இளங்குமரன் முகத்தைப் பார்த்தார் அடிகள். அந்த முகத்தில் நிறையத் தெரிந்து கொள்ளும் ஆவல் நிறைந்திருந்தது.
சுரமஞ்சரியின் வேண்டுகோளுக்கு இணங்கி அவசரமாக ஓவியன் மணிமார்பனைத் தேடிக்கொண்டு புறப்பட்டாள் தோழி வசந்தமாலை. சில நாட்களாக அவள் அறிந்த மட்டில் ஓவியன் மணிமார்பன் அந்த மாளிகையின் எல்லையில் இருப்பதாகவே தெரியவில்லை. ஓவியன் சொல்லாமல் கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறி எங்காவது ஓடிப்போயிருக்க வேண்டும் அல்லது நகைவேழம்பருடைய குடியிருப்புப் பகுதியிலிருந்து வெளியேற முடியாமல் சிறை வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
நகைவேழம்பருடைய கட்டுக்காவலில் அவன் இருக்கிறானா, இல்லையா என்பதை அறிந்து கொள்வது அவ்வளவு எளிய காரியமில்லை என்பதை வசந்தமாலை உணர்ந்திருந்தாள். அந்த மாளிகையின் எல்லைக்குள் நகைவேழம்பர் இருக்கும்போது அவருடைய பகுதிக்குள் நுழைந்து ஓவியனைத் தேடுவதென்பது இயலாத காரியம். அவர் இல்லாத நேரங்களிலும் காவல் உண்டு. நகைவேழம்பரின் மனத்தைப் போலவே அவருடைய குடியிருப்பு மாளிகையில் பாழடைந்த பகுதிகளும், இருண்ட கூடங்களும் அதிகமாக இருந்தன.
தன் தலைவியிடமிருந்து இளங்குமரனுக்கு மடல் வாங்கிக் கொண்டு போன நாளுக்குப் பின் ஓவியன் மணிமார்பனைத் தானும் தன் தலைவியும் மீண்டும் சந்திக்கவே இல்லை என்பதை நினைத்த போது வசந்தமாலைக்குப் பல விதமான சந்தேகங்கள் உண்டாயின. ‘அந்த மடலைக் கொண்டு போனபின் அவன் திரும்பி வராமலே ஓடியிருக்கலாமோ’ என்று எண்ண இடமில்லை. ஏனென்றால், அந்த மடல் நகைவேழம்பர் கையில் சிக்கியிருக்கிறது. மடலோடு அதைக் கொண்டு சென்றவனும் அகப்பட்டிருக்கத்தான் வேண்டும். முடிவாக ஓவியன் மாளிகையிலிருந்து வெளியேறிச் சென்றிருக்க முடியாது என்ற உறுதியே வசந்தமாலையின் உள்ளத்தில் வளர்ந்தது. பெருமாளிகைத் தோட்டத்தின் ஒரு மூலையில் இருந்த நகைவேழம்பரின் பகுதியை அவள் அடைந்த போது, அது இருளில் மூழ்கியிருந்தது. அதன் பெரிய கூடத்தில் சிறிய தீபம் ஒன்று காற்றுடன் போராடிக் கொண்டிருந்தது. வாயிற்புறம் ஒரு காவலன் உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்தான். நகைவேழம்பர் எங்கோ வெளியே போயிருந்தார் போலிருக்கிறது. வசந்தமாலை ஓசைப்படாமல் அடிமேல் அடிவைத்து அந்த மாளிகைக்குள் நுழைந்தாள். கூடத்திலிருந்து தீபத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பகுதியாகத் தேடினாள். வெளிப்புறம் தாழிட்டிருந்த இருட்டறை ஒன்றைத் திறந்த போது அவள் எதிர்பார்த்துத் தேடிய மணிமார்பன் அங்கே தளர்ந்து ஒடுங்கிப் பொழிவிழந்து அமர்ந்திருப்பதைக் கண்டாள். தன் பின்னால் புறப்பட்டு வருமாறு அவனுக்குக் குறிப்புக் காட்டிவிட்டு முன்னாள் நடந்தாள் அவள். ஓவியன் பயந்து நடுங்கினான்.
“வந்த வழியே திரும்பிப் போய்விடுங்கள் அம்மா! அந்தக் கொலைகார மனிதர் இப்போது வந்து பார்த்தால் உயிரையே வாங்கிவிடுவார். இந்த மாளிகையின் பாதாள அறைகளில் கூண்டிலகப்பட்ட கொடும் புலிகள் இருப்பது தவிர, மாளிகைக்குள்ளேயே கூண்டிலடைபடாத புலிகளாய் மனிதர்களே இருக்கிறார்கள். இங்கு ஒன்றுமே புரிந்து கொள்ள முடியவில்லை. நான் இன்னும் சிறிது காலம் உயிரை மட்டுமாவது காப்பாற்றிக் கொள்கிறேன். நீங்கள் எனக்கு உதவுவதாக முயன்று அதையும் அந்தக் கொடுமைக்காரர் கைகளினால் அழியச் செய்து விடாதீர்கள்” என்று பேசத் தொடங்கிய ஓவியனின் வாயைத் தன் வலது கையால் பொத்தி மேலே பேசவிடாமற் செய்தாள் வசந்தமாலை.
“உங்களுக்கு ஒரு கெடுதலும் வராது. பேசாமல் என் பின்னால் வாருங்கள்” என்று அவன் காதருகில் கூறிவிட்டு, அவனுடைய மறுமொழியை எதிர்பாராமலே அவன் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு நடந்தாள் அவள். மென்மையான அவள் பிடியிலும் ஓவியனின் கை நடுங்கியது. நகைவேழம்பரது மாளிகையின் பின்புறமுள்ள தோட்டத்துக்குள் வந்து சேர்ந்ததும் ஓவியனைப் பிடித்துக் கொண்டிருந்த கைப்பிடியை விட்டாள் வசந்தமாலை.
“பார்த்தால் பயந்த மனிதரைப் போல் நடந்து கொள்கிற நீங்கள் செய்கிற காரியங்களெல்லாம் பயமில்லாத காரியங்களாகச் செய்து விடுகிறீர்களே, ஐயா! எங்கள் தலைவி கொடுத்தனுப்பிய தாழை மடலை அதற்குரியவரிடம் சேர்க்காமல் நகைவேழம்பரிடம் கொடுத்திருக்கிறீர்களே; அது எப்படி நேர்ந்தது? உங்களை நம்பிக்கையான மனிதர் என்று எண்ணி மடலைக் கொடுத்தனுப்பிய எங்களுக்கு நல்ல பாடம் கற்பித்து விட்டீர்களே!” என்று வசந்தமாலை கடுமையான குரலில் கேட்ட போது,
“அம்மணீ! அது என் பிழையில்லை. உங்கள் மடலை அதற்குரியவர் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். மாளிகைக்குத் திரும்பி உங்கள் தலைவியைச் சந்தித்து மடலைத் திருப்பிக் கொடுக்கும் எண்ணத்தோடு வந்தவனை அந்தக் கொடுமைக்கார மனிதர் வழிமறித்துப் பயமுறுத்தி மடலையும் பறித்துக் கொண்டு இந்த இருட்டறையில் கொண்டு வந்து தள்ளிவிட்டாரே! என்ன செய்வது?” என்று தன் இயலாமைக்குக் காரணத்தை ஓவியன் விளங்கினான். அவன் குற்றமற்றவன் என்பது வசந்தமாலைக்குப் புரிந்தது. ஒரு பாவமும் அறியாத அந்த அப்பாவி ஓவியன் சிறைப்பட்டுக் கிடந்து ஒளியிழந்து போயிருப்பதைப் பார்த்து அவள் மனம் இளகினாள்.
“கவலைப்படாதீர்கள். மறுபடியும் நீங்கள் அந்த இருட்டறைக்குப் போகும்படி நேராது. அந்தக் கொடுமைக்காரருடைய முகத்திலும் விழிக்க வேண்டிய அவசியமிராது. இன்னும் சிறிது நேரத்தில் எங்கள் தலைவி ஒரு காரியமாக உங்களை இந்த மாளிகையிலிருந்து வெளியே அனுப்பப் போகிறாள். வாருங்கள், தலைவியை சந்திக்கப் போகலாம்” என்று ஓவியனை அழைத்துக் கொண்டு சுரமஞ்சரியின் மாடத்துக்குச் சென்றாள் வசந்தமாலை. நகைவேழம்பரோடு தந்தையாரும் எங்கோ வெளியே போயிருந்ததனால் அவர்கள் திரும்புவதற்குள் ஓவியனிடம் செய்தியைச் சொல்லி அவனை அங்கிருந்து அனுப்பிவிட வேண்டுமென எண்ணினாள் சுரமஞ்சரி. ஓவியனைப் பற்றிய எல்லா செய்திகளையும் கூறி அவன் குற்றமற்றவன் என்பதையும் வசந்தமாலை தன் தலைவிக்கு விவரித்தாள்.
வசந்தமாலையிடமிருந்து இதைக் கேட்ட பின் சுரமஞ்சரியின் உள்ளத்தில் ஓவியன் மேல் ஏற்பட்டிருந்த வெறுப்பு மாறி அநுதாபமே நிறையப் பெருகிற்று. ஆறுதலாக அவனை நோக்கிக் கூறலானாள் சுரமஞ்சரி:
“உங்களைப் போன்றவர்கள் கலைத்திறமையோடு மன உறுதியையும், துணிவையும் சேர்த்து வளர்த்துக் கொள்ள வேண்டும். கொடுமைகளுக்கு அஞ்சி அடங்கிவிடக் கூடாது. கொடுமைகளை எதிர்த்துக் கொடுமைகளிலிருந்து மீளவும் மீட்கவும் தான் அறிவு, கலை எல்லாம் ஏற்பட்டிருக்கின்றன.”
“இருக்கலாம், அம்மா! ஆனால் கொலை செய்யும் கைகளுக்கு முன்னால் கலை செய்யும் கைகள் வலுவிழந்து நடுங்குகின்றனவே! நான் என்ன செய்வது? வெள்ளையுள்ளம் படைத்தவனாகவே வளர்ந்து விட்டேன். மாறமுடியவில்லை. அன்று இந்திர விழாவின் போது நாளங்காடிப் பூத சதுக்கத்தில் உங்களைச் சந்திக்க நேர்ந்த போதே என்னுடைய போதாத காலத்தையும் சேர்த்துச் சந்தித்து விட்டேனோ என்னவோ?”
“இப்படி இன்னொரு முறை சொல்லாதீர்கள், ஓவியரே! உங்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று உங்களிடம் அவரது ஓவியத்தை வரையும் பணியை ஒப்படைத்தேனே தவிர இப்படியெல்லாம் நீங்கள் உங்களுடைய துணிவின்மையால் அடையும் துன்பங்களுக்கு என்னைக் காரணமாகச் சொல்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் வரைந்தளித்த ஓவியம் அழியாச் சித்திரமாக எனது ஓவியச்சாலையில் எக்காலத்தும் இருக்கும் என்று கனவு கண்டேன். இன்று பிற்பகல் நான் கனவு கண்டு கொண்டிருந்ததற்கு நேர்மாறான விதத்தில் பயன்படுவதற்காக அந்த ஓவியம் பறிபோய்விட்டது. அந்த ஓவியத்திலுள்ள மனிதரைத் துன்புறுத்திச் சிறைப்பிடித்துக் கொண்டு வருவதற்காக அதையே அடையாளமாகக் கொடுத்தனுப்பியிருக்கிறார்கள். எப்பாடு பட்டாயினும் அதைத் தவிர்த்து அந்த மனிதருக்குக் கெடுதல் நேராமல் தடுப்பதற்கு உங்கள் உதவியை நாடவேண்டியவனாக இருக்கிறேன் ஓவியரே!”
சுரமஞ்சரி கூறிய இந்தச் செய்தியைக் கேட்டு மணிமார்பன் திடுக்கிட்டான். ஆனாலும் சிறைப்பட்டு அடங்குகிற அளவுக்கு இளங்குமரன் வலிமையற்றவனில்லை என்ற உறுதியான நம்பிக்கை அவனைப் பதற்றமடைவதிலிருந்து தவிர்த்தது.
“ஓவியத்தை இங்கிருந்து எடுத்துக் கொண்டு போய்விட்டார்களே என்பதற்காக வேண்டுமானால் நீங்கள் கவலைப்படலாம் அம்மா! ஆனால் அதை வைத்து அவரைத் தேடிப்பிடித்துத் துன்புறுத்துவார்களோ என்று நினைத்துக் கவலைப்படுவதற்கு அவசியமில்லை! சிறைப்பட்டு அடங்குகிற வலிமைக் குறைவுள்ள மனிதரில்லை அவர். தேடிப் போகிறவர்கள் அவரிடம் சிறைப்படாமல் மீண்டு வந்தால் போதும்! வலிமையான சூழ்நிலையில் வலிமை வாய்ந்த மனிதர்களுக்கிடையே வலிமையோடு தான் இருக்கிறார் அவர்” என்று ஓவியன் சமாதானம் கூறிய பின்னும் சுரமஞ்சரி நிம்மதியடையவில்லை.
“ஐயா, ஓவியரே! என்னை உங்கள் சகோதரியாக எண்ணி மறுக்காமல் எனக்கு இந்த உதவியைச் செய்யுங்கள். அவர் எங்கிருந்தாலும் உடனே சந்தித்து இதைக் கூறி முன்னெச்சரிக்கை செய்த பின் நீங்கள் உங்கள் விருப்பம் போல் எங்கு வேண்டுமானாலும் போகலாம். கொடுமைக்காரர்கள் நிறைந்த இந்த மாளிகைக்கு மறுபடியும் திரும்பி வரவேண்டுமென்று அவசியங்கூட இல்லை. வெளியேறிப் போகிற போக்கில் எனக்காக நீங்கள் இந்த உதவியைச் செய்துதானாக வேண்டும்.” “நீங்கள் என்னவோ அந்த மனிதருக்காக உயிரையே விடுகிறீர்கள். உங்களைப் பொறுத்த வரையில் அந்த மனிதர் நெகிழ்ச்சியே இல்லாத கல்லாயிருக்கிறாரே அம்மா. அன்றைக்கு அந்த மடலை ஏற்றுக் கொள்ளாமல் என்னைத் திருப்பியனுப்பி அவமானப்படுத்தியது போதாதென்ற் இன்றைக்கு இன்னொரு முறையும் அவரிடம் போய் அவமானப்படச் சொல்கிறீர்களே!” என்று அதுவரை சொல்வதற்குத் தயங்கிக் கூசியதை அவளிடம் மாம் விட்டுச் சொன்னான் ஓவியன்.
இதைக்கேட்டுச் சுரமஞ்சரி ஓவியனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். ஒரு கணம் சுட்டெரித்து விடுவது போலிருந்தது அந்தப் பார்வை. மறுகணம் நிதானமாய் அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கூறலானாள் அவள்.
“அவர் என்னை மதிக்காமல் இருக்கிறார் என்பதற்காக நானும் அவரை மதிக்காமலிருக்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்ப்பது தவறு, ஒவியரே! அவர் என்னிடமிருந்து விலக விலக நான் அவருடைய அண்மையை நாடித் தவிக்கிறேன். இன்னதென்று உங்களுக்குச் சொல்லி விளக்க முடியாததொரு நுண்ணிய உணர்வு இது!... இதைப் பற்றி மேலும் என்னிடம் தூண்டிக் கேட்காமல் நான் உங்களிடம் கோரும் உதவியைச் செய்ய முடியுமா, இல்லையா என்பதற்கு மட்டும் மறுமொழி கூறுங்கள்.”
அந்த அன்புப் பிடிவாதத்தைக் கேட்டு ஓவியன் திகைத்துப் போனான். என்ன பதில் கூறுவதென்று தோன்றாமல் தயங்கினான் அவன். அவளுடைய பார்வை அவனைக் கெஞ்சியது.
“நீங்கள் கூறியபடி அவரைச் சந்தித்து இந்தச் செய்தியைக் கூறி எச்சரிக்கை செய்கிறேன், அம்மா! ஆனால் நான் மறுபடியும் இந்த மாளிகைக்குத் திரும்பி வருவேனென்று நீங்கள் எதிர்பார்க்கலாகாது. இந்த ஒற்றைக்கண் மனிதர் நான் இங்கிருந்தால் எளிதில் வாழவிடமாட்டார். இன்று நள்ளிரவுக்குள் உங்களுடைய செய்தியை உரியவரிடம் கூறிக் கவனமாக இருக்கச் சொல்லிவிட்டு நான் புறப்பட்டு விடுவேன்.”
“எங்கே புறப்படப் போகிறீர்கள்?”
“எங்காவது நல்லவர்கள் இருக்கிற இடத்தைத் தேடிப் புறப்பட வேண்டியதுதான்!”
“அப்படியானால் நாங்களெல்லாம் கெட்டவர்களா ஓவியரே?”
“நீங்கள் நல்லவர்களாயிருந்தால் மட்டும் போதுமா? உங்களுக்கும் இப்போதிருந்தே இந்த மாளிகையில் பல துன்பங்கள் வரத் தொடங்கிவிட்டனவே! உங்கள் மனதுக்குப் பிடித்தவரை உங்கள் தந்தையாருக்குப் பிடிக்கவில்லை! உங்கள் தந்தையாரையும் அவருடன் சூழ்ந்திருப்பவர்களையும் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.”
“அது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் ஓவியரே! நான் இந்த மாளிகையில் வாழப் பிறந்தவள். இங்கு விளைகின்ற எல்லா இன்ப துன்பங்களையும் அநுபவித்துத்தான் ஆகவேண்டும்! நீங்கள் மகிழ்ச்சியோடு போய் வாருங்கள். போகுமுன் எனக்கு இந்த உதவியைச் செய்துவிட்டுச் செல்லுங்கள்.”
ஓவியன் வணங்கிவிட்டுப் புறப்பட்டான்.
“இதோ இதைப் பெற்றுக் கொண்டு செல்லுங்கள்.” ஓவியன் திரும்பினான். தன் கழுத்தில் அணிந்திருந்த மணிமாலையைக் கழற்றி அவனிடம் நீட்டினாள் சுரமஞ்சரி. ஓவியன் அதைப் பெற்றுக் கொள்ளத் தயங்கி நின்றான்.
“இவ்வளவு பெரிய பரிசுக்குத் தகுதியானவனா நான்?”
“தகுதி என்பது கொடுக்கிறவர்களுக்கு இருந்தால் போதும். வாங்குகிறவர்களுக்கு மறுக்காமல் வாங்கிக் கொள்வதுதான் பெரிய தகுதி. இப்போது நீங்கள் எந்த மனிதரைத் தேடிக் கொண்டு போகிறீர்களோ, அந்த மனிதர் ஒருமுறை என்னிடமிருந்து ஏற்றுக் கொள்ள மறுத்த பரிசு இது! நீங்களும் இதை மறுத்தால் என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியாது.”
“அவர் இதை மறுத்த காரணம் என்னவோ?”
“அவர் காரணங்களைக் கடந்த மனிதர். எதையுமே பிறரிடமிருந்து ஏற்றுக் கொள்ள விரும்பாதவர்?”
“உங்கள் அன்பு உள்பட...”
கேட்க வேண்டாததைக் கேட்க நேர்ந்து விட்டதுபோல் சுரமஞ்சரியின் முகம் சுருங்கிச் சிறுத்தது. போகிற போக்கில் ஓவியன் தன்னைக் குத்திக் காட்டிப் பேசிவிட்டு போகிறானே என்று அவள் மனம் புண்பட்டது. அதை மறைக்க முயன்றவாறே மணிமாலையை அவன் கைகளில் கொடுத்துவிட்டு வணங்கினாள் அவள். அவன் வாங்கிக் கொண்டான்.
வசந்தமாலை மாளிகையின் வாயில் வரை துணை வந்து ஓவியனை வழியனுப்பினாள். அதே சமயம் அவர்கள் வெளியே போயிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த நகைவேழம்பர் என்ற ஒற்றைக்கண் புலி வேறொரு பக்கமாக வெளியேறித் தன்னைப் பின் தொடர்ந்து விரைந்ததை ஓவியன் கவனிக்கவில்லை. வசந்தமாலை கவனித்தாள். ஆனால் அவனால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் ஓவியனை அனுப்பிவிட்டு மாளிகைக்கு உள்ளே திரும்பும்போதுதான் கவனித்தாள்.
வானளாவி நின்ற அந்தப் பெருமாளிகையிலிருந்து வெளியேறிப் பட்டினப்பாக்கத்தின் அகன்ற வீதியில் விரைந்து நடந்த போது ஓவியன் மணிமார்பனின் உள்ளத்தில் துன்பங்களின் கோட்டையிலிருந்து விடுதலையடைந்து வந்துவிட்டாற் போன்ற மகிழ்ச்சி நிறைந்திருந்தது. வீதியின் இருபுறமும் இரவின் அழகுகள் விவரிக்க இயலாத சோபையுடன் திகழ்ந்தன. இரவு கண் விழித்துப் பார்ப்பது போல் எங்கு நோக்கினும் விளக்கொளிகள் தோன்றின. மாளிகையின் முன்புறங்களில் படர்ந்திருந்த ‘இல்வளர்முல்லை’ என்னும் வகையைச் சேர்ந்த முல்லைக் கொடியில் பூக்கள் பூத்துக் குலுங்கி வீதியில் வீசிய காற்றையே மணக்கச் செய்து கொண்டிருந்தன.
மணிமார்பனுக்கு மணங்களிலிருந்து எண்ணங்கள் பிறந்தன. எண்ணங்களிலிருந்து புதிய எண்ணங்கள் கிளைந்தன. மணங்களைத் தூண்டுதலாகக் கொண்டு பிறந்த எண்ணங்களும் எண்ணங்களைத் தூண்டுதலாகக் கொண்டு பிறந்த வாசனைகளும் மணந்தன, நெஞ்சிலும் உடம்பிலும். வாழ்க்கையைப் பற்றிய துணிவுகளும், நம்பிக்கையும் அப்போதுதான் புதியனவாகப் பிறப்பதுபோல் தோன்றின. மணங்கள், இனிய இசைகள், குளிர்காற்று இவற்றின் அருகில் இவற்றை உணரும் போது ‘வாழ்க்கையில் மகிழ்வதற்கு ஏதோ இருக்கிறது, எங்கோ இருக்கிறது. அதைத் தேடு!” என்பது போல் ஒரு நம்பிக்கையுணர்ச்சியை மணிமார்பன் பலமுறை அடைந்திருக்கிறான். மடியில் முடிந்து வைத்துக் கொண்டிருந்த மணிமாலையைப் பற்றி நினைத்து மகிழ்ந்தான் அவன். சிறிது நேரத்துக்கு முன்பு அந்த மாளிகையிலிருந்து அவன் வெளியேறிய போது சுரமஞ்சரி அவனுக்கு மனம் விரும்பிக் கொடுத்த பரிசு அல்லவா அது? அவ்வளவு பெரிய பரிசை அவளிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை அவன். தான் அந்த மணிமாலையை வாங்கிக் கொள்வதற்குத் தயங்கிய போது அவள் கூறிய வார்த்தைகளை மறுபடியும் நினைத்துக் கொண்டான் அவன். தகுதி என்பது கொடுக்கிறவர்களுக்கு இருந்தால் போதும், வாங்கிக் கொள்கிறவர்களுக்கு மறுக்காமல் வாங்கிக் கொள்வதுதான் பெரிய தகுதி என்று கூறினாளே அவள்! செல்வர்கள் வார்த்தைகளைக் கூட பெருந்தன்மையாகச் செலவழிக்கிறார்களே என்று அவளுடைய வார்த்தைகளை எண்ணியபோது அவனுக்கு ஒரு வியப்பு உண்டாயிற்று. சுரமஞ்சரி மணிமாலையளித்ததில் எவ்வளவு பெருந்தன்மை இருந்ததோ, அவ்வளவுக்குச் சிறிதும் குறையாத பெருந்தன்மை அவள் அதை அளிக்கும்போது கூறிய வார்த்தைகளிலும் இருந்ததை அவன் உணர்ந்தான்.
“அடடா! மனத்துக்குப் பற்றுதல் இல்லாத சூழ்நிலையிலிருந்தும், ஒட்டுதல் இல்லாத உறவுகளிலிருந்தும் விடுபட்டு வெளியேறிச் செல்வது எத்துணை மகிழ்ச்சியாயிருக்கிறது. இங்கே அமரலாமோ, அங்கே நிற்கலாமோ, கூடாதோ என்றெல்லாம் பெருஞ்செல்வர் இல்லத்தில் கூசிக்கொண்டே பழகும் வறுமையாளனாக நான் இனி வாடித் தவிக்க வேண்டியதில்லை. நாளையிலிருந்து என்னுடைய நல்ல காலம் தொடங்குகிறது. மீண்டும் இனிமேல் இந்தப் பட்டினப்பாக்கத்து மாளிகைக்குத் திரும்பி வர வேண்டிய தீவினை எனக்கு இல்லை. இதோ என் மடியிலிருக்கும் இந்த மணிமாலையை விற்றால் கவலையில்லாமல் வாழ்க்கை நடத்துவதற்குப் போதுமான பொற்கழஞ்சுகள் கிடைத்துவிடும். நானும் என்னுடைய ஓவியக்கலையும் வளர்ந்து பெருகி வாழலாம். ஆனால், அதற்கு முன் இன்னும் ஒரே ஒரு துன்பம் எனக்கு இருக்கிறது. சுரமஞ்சரி தேவியின் மெல்லிய உள்ளத்தைக் கவர்ந்த அந்த முரட்டு மனிதரைச் சந்தித்து அவள் கூறியவற்றைச் சொல்லி, எச்சரிக்கை செய்துவிட்டுப் போக வேண்டும். அந்த மனிதரைச் சந்தித்து இரண்டாம் முறையாக அவமானப்பட நேர்ந்தாலும் பட்டுக் கொள்ள வேண்டியதுதான். அந்த மனிதரிடமிருந்து அடைகிற கடைசி அவமானமாக இருக்கட்டும் அது” என்று இவ்வாறெல்லாம் எண்ணிக் கொண்டே வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தான் மணிமார்பன்.
வெளியே சென்றிருக்கும் நகைவேழம்பர் எதிரே திரும்பி வர நேர்ந்து தான் கண்களில் தென்பட்டுத் துன்புறும்படி ஆகிவிடக் கூடாதே என்று அஞ்சியே அவன் வேகமாகச் சென்று கொண்டிருந்தான். ‘நாளங்காடியின் அடர்த்திக்குள் புகுந்துவிட்டால் அப்புறம் கவலை இல்லை. பெரிய தெருக்கள் தவிர குறுகிய வழிகளும், சிறிய முடுக்குகளும் மருவூர்ப்பாக்கத்தில் அதிகமாக இருப்பதனால், நாளங்காடியைக் கடந்து மருவூர்ப்பாக்கத்துக்குள் செல்லும் போது பிறர் கவனத்துக்கு ஆளாகாமல் மறைந்து சென்று விடலாம். மருவூர்ப்பாக்கத்தில் ஆலமுற்றத்துப் படைக்கலச்சாலையில் அந்த மனிதரைச் சந்தித்துவிட்டு இரவோடு இரவாக இந்த நகரத்திலிருந்து வெளியேறி விட வேண்டும்’ - என்று திட்டமிட்டிருந்தது அந்த ஏழை ஓவியனின் மனம். தன் தாய்நாட்டையும் தாயையும் ஏக்கத்தோடு நினைத்தான் அவன்.
வைகை வளநாடாகிய பாண்டிய நாட்டில் தமிழ் மதுரைக் கோநகரில் ஆற்றின் வடகரைமேலே திருமருத முன்துறை என்னுமிடத்தில் மருத மரங்களின் நடுவே அமைந்திருந்த தனது சிறிய வீட்டையும் மூப்படைந்த தன் பெற்றோர்களின் நிலையையும் மனக் கண்களால் நினைத்துப் பார்த்துக் கொண்டான் ஓவியன் மணிமார்பன். இரண்டு திங்களுக்கு முன், இந்திர விழாவைக் காண்பதற்காக மதுரையிலிருந்து பூம்புகாருக்கு புறப்பட்ட யாத்திரைக் குழுவினருடன் தானும் சேர்ந்து புறப்பட்ட அந்த நாளில், வீட்டு வாயிலில் கிழப் பெற்றோர் தனக்கு விடை கொடுத்த துயரக் காட்சியும் மணிமார்பனுக்கு நினைவு வந்தன. ‘காவிரிப்பூம்பட்டினத்து இந்திர விழாவில் நிறைய ஓவியங்கள் எழுதி விற்றும், பரிசு பெற்றும் தான் பெரும் பொருளோடு திரும்பி வரப் போவதனைக் கற்பனை செய்தபடி நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கும் தன் பெற்றோரைப் பற்றி நினைத்த போது மணிமார்பனுக்கு மனம் நெகிழ்ந்தது. கண்கள் கலங்கின. அப்போதே அந்த விநாடியே பறந்து சென்று மதுரையில் வைகைக் கரையில் குதித்துத் தன் வீட்டுக்குப் போய், கிழப் பெற்றோரை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கச் செய்ய வேண்டும் போல் ஆசையாயிருந்தது மணிமார்பனுக்கு.
தனக்குச் சுரமஞ்சரி அளித்திருந்த மணிமாலையை நாளங்காடிச் சதுக்கத்திலுள்ள பொன் வணிகர் எவரிடமாவது விற்றுப் பொற்கழஞ்சுகளாக மாற்றிக் கொண்டு மதுரைக்குப் புறப்படலாமென எண்ணினான் அவன். நீலநாகர் படைக்கலச்சாலைக்குப் போய்ச் சுரமஞ்சரி கூறியனுப்பியிருந்த செய்தியை அதற்குரியவரிடம் கூறி விட்டுத் திரும்பி வந்து மணிமாலையை விற்கலாம் என்றால் நாளங்காடிக் கடைகளை அதற்குள் அடைத்து விடுவார்கள். இரவு நேரத்தில் அல்லங்காடிக் கடைகள் திறந்திருக்குமாயினும், இவ்வளவு மதிப்பீடு உள்ள அரிய மணிமாலையை விலை பேசி விற்கிற அளவுக்குப் பெரிய கடைகள் அங்கு இல்லை. நாளங்காடி நாற்சந்திக்கு வந்தவுடன் பூதசதுக்கத்துக்கு எதிரே தயங்கி நின்றான் மணிமார்பன். இந்திர விழாவின் இரண்டாம் நாள்தான் அந்த இடத்தில் சுரமஞ்சரி என்னும் செல்வக் குடும்பத்துப் பெண்ணைச் சந்திக்க நேர்ந்ததும், அவளுக்காக இளங்குமரனை நிற்கச் செய்து ஓவியம் வரைந்ததும், அதன் காரணமாகப் பின்பு தனக்கு ஏற்பட்ட நிகழ்ச்சிகளும் அவன் நினைவில் படர்ந்தன. அவன் நினைப்பிலும் நோக்கிலும் காவிரிப்பூம்பட்டின நகரம் இப்போது கூட அழகும் பெருமையும் நிறைந்ததாகத்தான் தோன்றியது. ஆனால் நகைவேழம்பர் என்னும் குரூரமான மனிதரையும், அவரை வைத்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் எட்டிப் பட்டம் பெற்ற பெருநிதிச் செல்வரையும் நினைத்த போதுதான் காவிரிப்பூம்பட்டினம் பயங்கரமும் சூழ்ச்சியும் மிகுந்த நகரமோ என்ற அச்சம் அவன் மனத்தில் எழுந்தது.
பூம்புகாரின் மாபெரும் துறைமுகத்துக்கு, நெடுந்தொலைவிலுள்ள நாடுகளிலிருந்தெல்லாம் கப்பல்கள் வந்து போவதனால் பலநாட்டு வணிகரும் நிறைந்து வாணிகமும் செழிப்பும் சிறப்புமாக நடைபெற்று, வாழவும் பொருள் சேர்க்கவும் வழிகள் அதிகமாயிருந்தன. அதை நினைத்துக் கொண்டு தான் மணிமார்பன் அந்த நகரத்துக்கு வந்திருந்தான். ஆனால் அவன் அங்கு வந்ததிலிருந்து நடந்த நிகழ்ச்சிகள் என்னவோ வேறு விதமாக அமைந்து விட்டன. ‘உடும்பைப் பிடிக்க வேண்டாம். உடும்புப் பிடியிலிருந்து கைகளை விடுவித்துக் கொண்டு ஓடினால் போதும்’ என்ற மனநிலையை அடைந்து விட்டான் அவன்.
எதிரே நாளங்காடிப் பூதங்கள் இரண்டும் பாசக் கயிற்றையும், கதாயுதத்தையும் ஓங்கிக் கொண்டு இருளில் பயங்கரமாகக் காட்சியளித்தன. ‘பொய்த் தவவேடம் பூண்டோர், நிறையிலாப் பெண்மணிகள், கீழ்மைக் குணமுள்ள அமைச்சர்கள், ஒழுக்கமற்ற ஆடவர்கள், பொய்ச் சாட்சி சொல்வோர், புறம் பேசுவோர் இவர்களையெல்லாம் எங்கள் பாசக் கயிற்றால் பற்றிப் புடைத்து உண்போம்” என்று நள்ளிரவு நேரங்களில் நான்கு காத தூரம் கேட்கும்படி இடிகுரலில் அந்தப் பூதங்கள் முழக்கமிடுவதாகப் புனைந்து கூறிப் பொல்லாத குழந்தைகளைப் பெற்றோர் அடக்குவது வழக்கம். அந்த நகரில் குழந்தைகளைப் பயமுறுத்தும் வழக்கம் இதுதான்.
‘இந்த பாவி நகைவேழம்பர் எத்தனையோ முறை நள்ளிரவு நேரங்களில் தனியாக இதே வழியாக வருகிறாரே, பூத சதுக்கத்துப் பூதங்கள் இன்னும் இவரைப் புடைத்து உண்ணாமல் ஏன் விட்டு வைத்திருக்கின்றனவோ?’ என்று கொதிப்போடு எண்ணினான் அவன். பொற்கடைக்குப் போய் மணிமாலையை விற்பதற்கு முன்னால் யாரும் காணாத தனிமையில் தான் மட்டும் அதை ஒரு முறை நோக்கி மகிழ வேண்டுமென்று விரும்பினான் ஓவியன். ஆனால் மக்கள் புழக்கமும் நெருக்கடியும் நிறைந்த அந்த நாளங்காடிச் சதுக்கத்தில் அவன் எதிர்பார்த்த தனிமை கிடைக்குமென்று தோன்றவில்லை. சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தான் மணிமார்பன். பூதச் சிலையைச் சுற்றி ஓரளவு இருண்டிருந்தது. திருவிழா முடிந்திருந்ததால் பூதங்கள் இரண்டும் அடுத்த ஆண்டின் திருவிழாவை எதிர்பார்த்து இருளின் அமைதியில் தவம் செய்து கொண்டிருந்தன போலும். இருட்டைப் பிசைந்து இயற்றியவை போலத் தோன்றிக் கொண்டிருந்த அந்தக் கரும்பூதச் சிலைகளின் கீழே மின்மினிப் பூச்சி போல் ஒரு சிறு விளக்கும் எரிந்து கொண்டிருந்தது. விளக்கைச் சுற்றிலும் பல காரணங்களுக்காக வேண்டுதல் செய்து கொண்டவர்கள் காணிக்கையாக வைத்திருந்த மண் பிரதிமைகள் நின்றன. உடைத்த தேங்காய் மூடியின் உட்புறம் போன்ற குழிந்த கண்களும், கோரப் பற்களும், பயமூட்டும் தோற்றமுமாகச் சூழ்ந்திருந்த இம்மண் உருக்கள் பெரும் பூதத்தைச் சூழ்ந்து படை திரண்ட குட்டி அசுரகணம் போலக் காட்சியளித்தன.
முதலில் ஓவியன் அந்த இடத்துக்குப் போவதற்குப் பயந்தான் என்றாலும் ஆசை வளர்ந்து துணிவாயிற்று. நாளங்காடியைப் போலக் கூட்டம் அதிகமான பகுதியில் நல்ல மனிதர்கள் மட்டும் தான் சூழ்ந்திருப்பார்கள் என்று நினைக்க முடியாது. நல்லவர்களும் இருக்கலாம், கெட்டவர்களும் இருக்கலாம். அப்படிக் கெட்டவர்களும் நல்லவர்களும் கலந்திருக்கும் இடத்தில் பெறுமானமுள்ள பொருளாகிய மணிமாலையை எடுத்துப் பலர் காண நோக்குவது அறிவுக்கு அழகன்று என முடிவுக்கு வந்தவனாகப் பூதச்சிலைக்கு அருகே சென்றான் மணிமார்பன்.
வாடிக் காய்ந்த பூக்களின் வெதும்பிய மணமும் பூதச் சிலையிலிருந்து வழிந்திருந்த எண்ணெய் வாடையுமாக அந்த இடத்துக்குத் தனிச் சூழ்நிலையை நல்கின. தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று சுற்றிலும் பார்த்துவிட்டுப் பூதச் சிலையின் கீழே விளக்கின் அடியிலிருந்த மண் பிரதிமைகளுக்கு நடுவே முழந்தாளை மண்டியிட்டு அமர்ந்தான் ஓவியன். சுற்றியிருந்த எல்லாப் பிரதிமைகளின் கோரக்கண்களும் கொள்ளிவாய்களும் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது போல் அவனுக்கு ஒரு பொய் உணர்வு தோன்றிக் கணநேரம் மருட்டியது. வேகமாக அடித்துக் கொள்ளும் நெஞ்சுடன் நடுங்கும் கைகளால் மடியிலிருந்து அந்த மணிமாலையை எடுத்து விளக்கருகில் பிடித்தான் அவன். ஒளிக்குலம் முழுவதும் ஒன்றுபட்டு வளைந்து ஆரமாகித் தொங்கினாற் போல் சுடர் வெள்ளம் பாய்ச்சியது அந்த மாலை. மாலையிலுள்ள மணிகள் மின்னும் போதெல்லாம், ‘இந்த உலகில் எங்களுக்கு விலை ஏது? விலை கொடுப்பார் தாம் எவர் இருக்கின்றனர்? எங்கு இருக்கின்றனர்?’ என்று தன் ஒளி வீச்சுக்கள் முழுவதும் கேள்விகளை நிறைத்துக் கொண்டு மின்னுவது போல் ஓவியனுக்குத் தோன்றியது. ‘இவ்வளவு பெரிய பரிசுக்கு நான் தகுதியானவனா?’ என்று மறுபடியும் தனது மன எல்லையில் கேள்வி எழுந்த போது இந்த மாலையின் ஒளிவட்டத்துக்கு நடுவே சுரமஞ்சரியின் பேரழகு முகம் தோன்றித் ‘தகுதி என்பது கொடுக்கிறவர்களுக்கு இருந்தால் போதும்’ என்று கூறிச் சிரிப்பதுபோல் ஓவியன் உணர்ந்தான்.
‘ஒருவிதத்தில் நான் கொடுத்து வைத்தவன் தான்! காவிரிப்பூம்பட்டினத்துக்கு வந்து சில நாட்கள் துன்பமும், கொடுமையும் அநுபவித்து விட்டாலும் திரும்பிச் செல்லும் போது மிகவும் மகிழ்ச்சியோடு பெரும் பரிசு பெற்றுச் செல்கிறேன்’ என்று நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டான் ஓவியன்.
அப்போது பின்னால் ஏதோ ஓசை கேட்டாற் போலிருந்தது. ஓவியன் மணிமாலையை மறைத்துக் கொண்டு பதற்றத்தோடு திரும்பிப் பார்த்தான். வரிசையாக நிறுத்தியிருந்த மண் பிரதிமைகள் தாம் கண்களை உருட்டி விழிப்பது போல் தோன்றின வேயன்றி வேறு ஒன்றும் தெரியவில்லை. ‘தன் மனத்தில் ஏற்பட்ட பிரமையினால் அப்படி ஓசை கேட்டது போல் தானாக எண்ணியிருக்க வேண்டும்’ என்று பயம் நீங்கிச் செல்வதற்காக எழுந்தான் மணிமார்பன். மறுபடியும் முன்பு கேட்ட அதே ஓசை கேட்பது போலிருந்தது. நெஞ்சத் துடிப்பு மேலிட நடுக்கத்துடன் ஓடிவிடுவதற்கும் சித்தமாகி அவன் தன் கால்களை வேகத்துக்குரிய நிலைக்குக் கொண்டு வர முற்பட்ட போது பூதச்சிலையில் அடிப் பக்கத்து இருளிலிருந்து யாரோ மெல்லக் கனைப்பது போல் கேட்டது. பயந்தவாறே பார்த்தான்.
அவனுக்குக் கண்கள் விரிந்து வெளிறின. எதிரேயிருந்த பூதப் பிரதிமை ஒன்று குரூரக் கண்களை விழித்துக் கொண்டு கோர வாய் பிளந்து அவனருகே நகர்ந்து வந்து கொண்டிருந்தது. மண் பிரதிமை நடக்குமா? இப்படி பயமுறுத்துமா?
அந்தப் பூதம் அருகில் வந்ததும் தான் அதற்கு ஒரே கண் என்பதும் அது நகைவேழம்பர் என்கிற மனிதப் பேய் என்பதும் ஓவியனுக்குப் புரிந்தது. தன் கால்களின் வலிமையை எல்லாம் ஒன்று திரட்டி ஓட்டமெடுத்தான் மணிமார்பன். அவன் ஓடிய வேகத்தில் தள்ளிய மண் பிரதிமைகள் சில கீழே விழுந்து உடைந்தன.
பெருமாளிகையின் வெளிப்புறம் முதல் தலைவாயில் வரை உடன் வந்து, ஓவியன் மணிமார்பனை வழியனுப்பிவிட்டு உள்ளே திரும்பிச் சென்ற வசந்தமாலை, நகைவேழம்பர் ஓவியனைப் பின் தொடரும் செய்தியைச் சுரமஞ்சரியிடம் போய்க் கூறினாள்.
“நடப்பதெல்லாம் நாம் நினைத்ததற்கு மாறாக இருக்கிறது அம்மா! நகைவேழம்பர் மாளிகைக்குள் இல்லையென்று நினைத்துக் கொண்டு இவ்வளவு ஏற்பாடும் செய்தோம். கடைசி விநாடியில் புற்றுக்குள்ளிருந்து பாம்பு புறப்பட்டது போல் இந்த மனிதர் எங்கிருந்தோ வந்து பாய்ந்து விட்டாரே! இனிமேல் என்னம்மா செய்வது? ஓவியர் இவர் கையில் சிக்கிக் கொண்டு விட்டால் நீங்கள் கூறியனுப்பியிருக்கும் செய்தி உரிய இடத்துக்குப் போய்ச் சேராதே!”
இதைக் கேட்டுச் சுரமஞ்சரி அதிர்ச்சியடைந்து உட்கார்ந்து விட்டாள். “இப்படி நடக்குமென்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை வசந்தமாலை! இந்த மாளிகையில் நினைத்தபடி எந்தக் காரியத்தைத்தான் செய்ய முடிகிறது? ஒவ்வொரு முயற்சியும் தொடங்கும்போதே அதற்கு எதிர் முயற்சியும் எங்காவது ஒரு மூலையிலிருந்து தொடங்கிவிடுகிறதே! நமது முயற்சிகளும், எண்ணங்களும் தோல்வியடைந்து முறியும் போது தான் நீயும் நானும் நிராதவானவர்கள் என்பதை நாமே புரிந்து கொள்ள முடிகிறது. இன்று நேற்று ஏற்பட்ட கெடுதல் அன்று இது. இந்த மாளிகையின் வரலாற்றில் என்றோ, எங்கோ ஏற்பட்டிருக்கிற கெடுதல் இது. இந்தக் கெடுதலுக்குத் தந்தையாரும் துணையிருக்கிறார் என்றே தெரிகிறது.”
சற்றும் மகிழ்ச்சியின்றிச் சலிப்போடு பேசினாள் சுரமஞ்சரி. அவள் சிறிது நேரம் கழித்து வசந்தமாலையையும் அழைத்துக் கொண்டு தன் மாடத்திலிருந்து கீழிறங்கித் தேரில் குதிரைகளைப் பூட்டச் சொல்லிப் பணியாட்களுக்கு உத்தரவிட்டாள். தேர், புறப்படுவதற்குரிய நிலையில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இருவரும் தேரில் ஏறிக் கொண்டு புறப்பட்டார்கள்.
சுரமஞ்சரியும், வசந்தமாலையும் இருந்த தேர் மாளிகை வாயிலைக் கடந்து வெளியேறு முன் பெருநிதிச் செல்வராகிய தந்தையார் சிரித்தபடி விரைந்து வந்து தேருக்குக் குறுக்கே வழிமறித்தாற் போல் நின்றார். சுரமஞ்சரி தேரை நிறுத்திவிட்டுக் கோபத்தோடு தன் தந்தையைக் கடுமையாகப் பார்த்தாள்.
“சுரமஞ்சரி! நான் எப்போதும் உன் வழியில் குறுக்கிட்டு வந்து கொண்டிருக்கிறேன் என்று தானே இப்படிக் கோபப்படுகிறாய்?”
கேட்டுவிட்டு மர்மமாகச் சிரித்தார் அவர். அவளும் விடவில்லை. கோபத்தில் சுடச்சுட பதிலளித்தாள்:
“பிறருடைய வழிகளில் குறுக்கிடாமல் வாழ்வதற்குச் சிலரால் முடியாது அப்பா!”
“அப்படிப்பட்டவர்களில் நானும் ஒருவன் என்பதைத்தானே இப்படிக் குறிப்பாய் மறைத்துச் சொல்ல வருகிறாய்? நல்லது. என் மகள் சாதுரியமாகப் பேசினால் நானும் பெருமை அடைய வேண்டியதுதானே? ஆனால் நீ சொல்வதைச் சிறிது மாற்றிச் சொன்னால் தான் நான் ஒப்புக் கொள்ள முடியும். நான் என்னொருவனுடைய வழியில் இயல்பாக நடந்து போனாலே அது பல பேருடைய வழிகளில் குறுக்கீடாக முடிகிறது. நான் நடந்து போகிற வழியே அத்தகையதென்பதா, அல்லது வேறுவிதமான வழியில் நடந்து போக என்னால் முடியாதென்பதா? எப்படிச் சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை, மகளே!”
“எதற்காகப் பேச்சை வளர்க்கிறீர்கள் அப்பா? இப்போது நாங்கள் வெளியே புறப்பட்டுப் போகலாமா, கூடாதா? அதை முதலில் சொல்லுங்கள்.”
“போகலாம் சுரமஞ்சரி! ஆனால் எங்கே புறப்பட்டுப் போகிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?”
சுரமஞ்சரி இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லத் தயங்கினாள். தந்தையார் அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்துச் சிரித்தார்.
“அதனால் என்ன? எங்கே போகிறாயென்று என்னிடம் சொல்ல வேண்டாம். நீ எங்கே போக வேண்டுமானாலும் போய்விட்டு வா. ஆனால் இந்த இரவு வேளையில் தனியாகப் போக வேண்டாம். இதோ இவனை உங்களோடு துணைக்கு அனுப்புகிறேன்” என்று வாயிற்பக்கம் காவலுக்கு நின்று கொண்டிருந்த ஓர் ஊழியனைக் கூப்பிட்டுத் தேரைச் செலுத்துகிறவனாக அமரச் சொன்னார் அவர்.
உடனே சுரமஞ்சரி தேரோட்டியின் இடத்தை அவனுக்காக விட்டு உள்ளே அமர வேண்டியதாயிற்று. தந்தையின் தந்திரமான ஏற்பாடு அவளுக்கு நன்றாகப் புரிந்தது. தன்னுடன் துணைக்கு ஆளனுப்புவது போல் தன்னைக் கண்காணிக்கவே அவர் ஏற்பாடு செய்திருக்கிறார் என்பதை அவள் விளங்கிக் கொண்டாள்.
தன் மனத்தில் அவள் நினைத்துக் கொண்டு புறப்பட்ட காரியம் பின் தொடர்ந்து செல்லும் நகைவேழம்பரால் ஓவியனுக்குத் துன்பம் ஏற்பட்டு விடாமல் தடுக்க வேண்டுமென்பதாயினும் இப்போது அதை மாற்றிக் கொண்டாள்.
“நெய்தலங்கானல் கடற்கரைக்குப் போய்ச் சிறிது நேரம் காற்றாட இருந்து வரலாம்” என்று வசந்தமாலையிடம் சொல்லுவது போல் தேரோட்டுவதற்கு அமர்ந்திருந்தவனுக்கும், தந்தையாருக்கும் நன்றாகக் கேட்கும்படி இரைந்து சொன்னாள் சுரமஞ்சரி. ‘நெய்தலங்கானல்’ கடற்கரையை நினைத்தவுடன் சிறு வயதில் தானும் வானவல்லியும் தாயுடன் அங்கே சென்று விளையாடிய நாட்களெல்லாம் சுரமஞ்சரிக்குத் தோன்றின. மருதநிலம் முடிந்து நெய்தல் நிலம் ஆரம்பமாகும் அழகிய கடற்கரை அது. அங்கே ஒரு பக்கம் தாமரைப் பூக்கள் நிறைந்த குளங்களும், இன்னொரு பக்கம் புதராக அடர்ந்த தாழை மரங்களும் சேர்ந்து காட்சியளிக்கும். நடுநடுவே உப்பங்கழிகள் சிற்றாருகளைப் போல் மணல் வெளியைப் பிளந்து பாய்ந்து கொண்டிருக்கும். மனத்தில் யாரைப் பற்றியோ, எதைப் பற்றியோ கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று அந்தக் கடற்கரையின் அழகுகளையெல்லாம் தன்னால் அனுபவிக்க முடியாதே என்று சுரமஞ்சரி எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தாள். தேர் சென்று கொண்டிருந்தது.
சுரமஞ்சரி எந்த இடத்துக்கோ புறப்பட நினைத்து வேறு எந்த இடத்துக்கோ போக நேர்ந்து விட்ட அந்த இரவில் மருவூர்ப்பாக்கத்தின் குறுகிய தெருக்களில் நகைவேழம்பர் ஓவியனை ஓட ஓட விரட்டிக் கொண்டிருந்தார். ஓவியனுக்கு எப்படியாவது அந்த மனிதப் பேயிடமிருந்து தப்பிவிட வேண்டுமென்று தவிப்பு ஏற்பட்டிருந்ததால் அவன் பூத சதுக்கத்திலே தொடங்கிய ஓட்டத்தை இன்னும் நிறுத்தவில்லை. அதேபோல் ஓவியனைப் பிடித்துவிட வேண்டுமென்ற பிடிவாதம் நகைவேழம்பருக்கு இருந்ததனால் அவர் பின்பற்றித் துரத்துவதையும் நிறுத்தவில்லை. ஏமாற்றி ஏமாற்றி இன்பம் கண்ட மனமுடைய அவர் எந்த நிலையிலும் தாமே ஏமாந்து போக விரும்பியதில்லை; நேர்ந்ததும் இல்லை. அப்படியே தப்பிவிடுவதாயிருந்தாலும் அந்த அரும் பெரும் மணிமாலையோடு அவன் தப்புவதை அவர் பொறுத்துக் கொள்ள முடியாது. ஓவியனுடைய போதாத காலமோ என்னவோ நடுவழியில் நகைவேழம்பரோடு அவனைத் துரத்துவதற்கு இன்னும் நாலைந்து பேர் சேர்ந்து கொண்டுவிட்டார்கள். அப்படிச் சேர்ந்து கொண்டவர்கள் வேறு யாருமில்லை, மாலையில் இளங்குமரனின் ஓவியத்தோடு அவனைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வருவதற்காகப் பெருமாளிகையிலிருந்து புறப்பட்டுப் போன முரட்டு யவன ஊழியர்களேதான். தற்செயலாக இளங்குமரனைத் தேடி மருவூர்ப்பக்கத்துப் பகுதிகளில் சுற்றிக் கொண்டிருந்த அவர்கள் இப்போது நகைவேழம்பரோடு சேர்ந்து கொண்டு துரத்தவே ஓவியன் மிகவும் அச்சம் கொண்டு தலைதெறிக்கிற வேகத்தில் ஆலமுற்றத்தை நோக்கி ஓடலானான். எப்படியாவது படைக்கலச் சாலைக்குள் போய் நுழைந்துவிட வேண்டுமென்பது அவன் வேகத்தின் இலட்சியமாக இருந்தது. படைக்கலச் சாலைக்குள் போய் நுழைந்து கொண்டால் அங்கே இளங்குமரன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனக்குப் பாதுகாப்புத்தான் என்று எண்ணினான்.
‘இளங்குமரன் இருந்தால் அவரிடம் அடைக்கலம் புகுந்து விடுவேன். அவர் இல்லாவிட்டால் அவரைத் தேடி வந்ததாகச் சொல்லி அங்கிருப்பவர்களிடம் அடைக்கலம் புக வேண்டியதுதான்’ என்று நினைத்து அவசரமும், அவசியமும் உண்டாக்கியிருந்த சக்தி மீறிய விரைவுடன் முன்னேறிக் கொண்டிருந்தான் மணிமார்பன்.
பின்னால் துரத்திக் கொண்டு வந்தவர்கள் அவனைச் சூழ்ந்து நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.
“திருட்டுப் பயலே! இன்று நீ அகப்பட்டால் உன்னை உயிரோடு விடுகிற உத்தேசம் இல்லை. உன்னால் முடிந்த வரை ஓடு, எதிரே இனிமேல் கடல் தான் இருக்கிறது” என்று பின்னாலிருந்து நகைவேழம்பர் சீறுவது ஓவியன் செவிகளில் ஒலித்து அவனை நடுநடுங்கச் செய்து கொண்டிருந்தது. ‘இவ்வளவு தொலைவு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிவந்த பின்பு இந்தக் கொடுமைக்காரரிடம் அகப்பட்டுக் கொள்வதைப் போல் பேதமை வேறு இருக்க முடியுமா?’ என்று எண்ணி எண்ணி அந்த எண்ணத்தினால் இன்னும் சிறிது நம்பிக்கையை உண்டாக்கிக் கொண்டான் மணிமார்பன். படைக்கலச் சாலையின் வாயில் தென்பட்டதும் அடைத்து மூடியிருந்த அதன் பிரம்மாண்டமான மரக்கதவுகளைப் பார்த்துத் தன் உயிர் தப்புவதற்கு உதவுமென்று தான் நம்பிக்கை கொண்டு வந்த ஆசையின் வழியே அடைபட்டுப் போய் விட்டது போல் பரிதவித்துப் பதைபதைத்து நின்று விட்டான் அவன்! அந்தப் பக்கம் ஆலமுற்றத்துக் கோவிலுக்கு அப்பால் அலைபாய்ந்து ஆர்ப்பரிக்கும் கடல், இந்தப் பக்கம் கொல்லப் பாய்ந்து வரும் கொடும் புலிகளைப் போல் எதிரிகள், எதிரே அடைத்த கதவுகள் - மணிமார்பன் நம்பிக்கையிழந்து விட்டான். அவன் கண்களுக்கு முன்னால் உலகம் முழுவதுமே இருண்டு சுழன்று கொண்டிருந்தது.
அவனுக்கு நினைவு தப்புவதற்கு முன் மிக அருகில் வேகமாக வரும் தேரின் மணிகள் ஒலித்தன. எதிர்ப்பக்கமிருந்து படைக்கலச் சாலையின் வாயிலை நோக்கி ஒரு தேர் விரைந்து வருவதைப் பார்த்தான் மணிமார்பன். தள்ளாடி விழுவதற்கிருந்தவன் தன்னை உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றான். திருநாங்கூரிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த நீலநாகமறவரின் அந்தத் தேர் நின்றதும் அவர் கீழே இறங்கினார். மணிமார்பன் ஓடிப்போய் அவர் அருகே நின்று கைகூப்பி, “ஐயா! நான் இளங்குமரனுக்கு மிகவும் வேண்டிய நண்பன். உங்களுக்கு அடைக்கலமாக ஏற்றுக்கொண்டு என்னை இந்தக் கொடுமைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுங்கள். இவர்கள் இளங்குமரனைச் சிறைப்பிடித்துக் கொண்டு போவதற்காக அவனுடைய ஓவியத்தோடு அவனைத் தேடிக்கொண்டு திரிகிறார்கள். என்னையும் பிடித்துக் கொண்டு போய்க் கொன்றுவிடலாமெனத் துரத்துகிறார்கள். நல்லவேளையாக தெய்வமே வந்தது போல் நீங்கள் தேரில் வந்தீர்கள்.” அவன் மூச்சிறைக்கப் பதறி நடுங்கிப் பேசுவதை அநுதாபத்தோடு பார்த்தார் நீலநாகமறவர். அவர் அவனைக் கைப்பற்றிக் கொண்டு கூறலானார்:
“நான் உனது தெய்வம் இல்லை, தம்பீ! தெய்வம் அதோ அங்கே ஆலமுற்றத்துக் கோவிலில் இருக்கிறது. உனக்கும், எனக்கும் மிக அருகில் தான் இருக்கிறது.”
“ஆனால் நீங்கள் அதை விட மிகவும் அருகில் இருக்கிறீர்களே ஐயா!” என்றான் ஓவியன்.
“பயப்படாதே! உன்னையும், என்னையும் போலத் தேடித் தவிப்பவர்களுக்குத் தெய்வம் எங்கிருந்தாலும் மிக அருகில் தான் இருக்கிறது. இதோ நிற்கிறார்களே இவர்களைப் போல் கருணையும், அன்பும் இல்லாத கொடியவர்களுக்காகத்தான் அது வெகு தொலைவில் இருக்கிறது” என்று சொல்லி ஓவியனைப் பின்னால் நிறுத்திவிட்டு வளைத்துக் கொண்டாற் போல் முன்புறம் நின்றிருந்த அந்த எதிரிகளை நெருங்கினார் நீலநாக மறவர்.
“உங்களுக்கு என்ன வேண்டும்?”
பெருமலை நகர்ந்து வந்தது போல் முன் வந்து நின்று கொண்டு இப்படிக் கேட்ட அந்தத் தோற்றத்தை நகைவேழம்பரும் அவருடனிருந்த முரட்டு மனிதர்களும் அண்ணாந்து பார்த்தார்கள். நகைவேழம்பர்தான் துணிந்து பதில் பேசினார்:
“உங்களுக்குப் பின் ஒளிந்து கொண்டு அடைக்கலம் கேட்கிறானே, அந்தப் பிள்ளையாண்டான் திருடன். பட்டினப்பாக்கத்துப் பெரு மாளிகையிலிருந்து மணிமாலையைத் திருடிக் கொண்டு ஓடிவந்து விட்டான். அவனை எங்களிடம் விட்டு விட வேண்டும்.”
“நீங்கள் சொல்வதை நான் நம்பவில்லை. இந்தப் பிள்ளையின் பயத்தையும் நடுக்கத்தையும் பார்த்தால் இவனைத் திருடும் தொழிலுக்குத் துணிந்தவன் என்று திருடர்களே ஒப்பமாட்டார்களே! நியாயமாகப் பார்க்கப் போனால் இந்தப் பிள்ளைதான் தைரியத்தை உங்களிடம் திருட்டுக் கொடுத்து விட்டு நிற்கிறான் இப்போது!” என்று கூறிக்கொண்டே நகைவேழம்பருக்கு அருகிலிருந்தவன் கையில் வைத்திருந்த இளங்குமரனின் ஓவியத்தை வலிந்து அவனிடமிருந்து பறித்தார் நீலநாகமறவர். அவன் படத்தை விடாமல் இறுகப் பற்றினான்.
“ஓகோ! அவ்வளவு பலமிருக்கிறதா உன் உடம்பிலே” என்று படத்தை ஓங்கி இழுத்தார் நீலநாகர். படம் அவர் கைக்கு வந்ததும், படத்தை விட்டுவிட்ட அதிர்ச்சியில் அதை வைத்துக் கொண்டிருந்தவன் தடுமாறிக் கீழே விழுந்தான். நகைவேழம்பர் ஒற்றைக் கண்ணில் சினம் பொங்க, இடுப்பிலிருந்து குறுவாளை உருவிக் கையை ஓங்கிக் கொண்டு நீலநாக மறவர் மேல் பாய வந்தார்.
ஓங்கிய கையை நீலநாகர் தமது இடது கையால் அலட்சியமாகப் பிடித்து நிறுத்தினார். பின்பு மெல்லச் சிரித்துக் கொண்டே ஏக வசனத்தில் விளித்துக் கேட்டார்: “அப்பனே, கண்களில்தான் ஒன்றை இழந்துவிட்டாய்! உயிரையும் இப்போது என்னிடம் இழக்க விரும்புகிறாயா நீ?”
பெண்மை என்னும் தமிழ்ச் சொல்லுக்குக் ‘கண்ணிற் புலனாவதோர் அமைதித் தன்மை’ என்று இளங்குமரன் பலரிடம் பொருள் விளக்கம் கேட்டு அறிந்திருந்தான். இன்று ‘விசாகை’ என்னும் பெண்ணைப் பார்த்தபோது கேட்டு அறிந்திருந்த அந்தப் பொருளைக் கண்டு அறிந்தான். கண்களின் பார்வையில், முகத்தின் சாயலில், இதழ்களின் சிரிப்பில் எங்கும் எதிலும் அமைதி திகழ அமர்ந்திருந்தாள் விசாகை.
திருநாங்கூர் அடிகள் இளங்குமரனை நோக்கிப் புன்னகை புரிந்தவாறு கூறலானார்:
“இளங்குமரா! விசாகையின் கதை அழிவற்றது. ‘மனிதர்களால் இவ்வளவுதான் முடியும்’ என்று வரையறை செய்திருக்கும் அளவுக்கும் அப்பாற்பட்டது. ‘இன்ன காரணத்தினால் இப்படிச் செய்தாள்’ என்று இணைத்து விளக்குவதற்குத் தொடர்பும் அற்றது. அழிவு அற்றதை அழிவைக் கொண்டும், அளவு அற்றதை அளவைக் கொண்டும், தொடர்பு அற்றதைத் தொடர்பைக் கொண்டும் எப்படி விளக்கிச் சொல்ல முடியும்? விசாகையின் வாழ்க்கையிலிருந்து ஒரு புதிய தத்துவமே மலர்ந்திருக்கிறது. பெண்ணில் இவள் ஒரு புதுமை! வாழ்வில் அறம் செய்கிறவர்கள் பலர். ஆனால் வாழ்வையே அறமாகச் செய்கிறவர்கள் விசாகையைப் போல் சிலரினும் சிலர் தான் தோன்றுகிறார்கள்.
இந்தப் பெண் இங்கு வந்து சேர்ந்த முதல் நாளை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி அது. கார்த்திகை மாத நடுப்பகுதி, அடைமழை பெய்து கொண்டிருந்த காலம். தொடர்ந்து வானம் கண்விழிக்கவே இல்லை. ஆறுகளும், வாய்க்கால்களும், குளங்களும், ஓடைகளும் கரை நிமிரப் புனல் நெருங்கிப் பொங்கிப் பாய்ந்து கொண்டிருந்தன. ஊரே நீர்ப்பெருக்கில் மூழ்கியெழுந்ததுபோல் குளிர்ந்து போயிருந்தது. பூக்கள் வாடவில்லை. செடிகள் கொடிகள் துவண்டு சோரவில்லை. கார்காலம் என்னும் தம்முடைய பருவத்தைக் கொண்டாடிக் குலவுவதுபோல முல்லைப் புதர்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன.
இப்போது நான் அமர்ந்து கொண்டிருக்கிற இதே கிரந்த சாலையில் இதே இடத்தில் தான் அன்றும் அமர்ந்து கொண்டிருந்தேன். நாலைந்து மாணவர்கள் என்னைச் சுற்றிலும் இருந்து ஏதோ ஒரு நூலைப் பாடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். வெளியில் மின்னலும் இடியுமாகப் பெருமழை பெய்து கொண்டிருந்தது. பாடத்தின் இடையே என்னுடைய மாணவர்களில் ஒருவன், ‘இன்ன செயலை இந்த நேரத்தில் இப்படிச் செய்ய வேண்டும் என்னும் ஊக்கம் மனித மனத்தில் எப்படி எழுகிறது? எப்படி வளர்கிறது? எப்படி நிறைவேறுகிறது?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டு என்னிடமிருந்து விடையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது கிரந்த சாலையின் வாயிற்புறத்து மறைவிலிருந்து ஒரு பெண் குரல், ‘உலகத்தார்க்குப் பண்பின் வழியே ஊக்கம் நிகழும். ஊக்கமாவது செயலைச் செய்வதற்குரிய நினைவைத் தூண்டும் முனைப்பு. ஊக்கத்தின் வழியே இதை இப்படித்தான் செய்ய வேண்டுமென்று துணிகிற ஒழுக்கம் நிகழும். கற்று அடங்கி அமையாத மனத்தில் பண்பு இல்லை. பண்பில்லாத மனத்தில் ஊக்கம் இல்லை. ஊக்கமில்லாத மனத்தில் ஒழுக்கம் இல்லை’ என்று பதில் கூறியது. உடனே நானும் மாணவர்களும் திகைப்படைந்து எழுந்து போய் வாயிற்புறம் பார்த்தோம். சொட்டச் சொட்ட மழையில் நனைந்தவளாய்ப் பால்வடியும் வதனத்தில் அமைதியே புன்னகையாய்ச் சாயல் காட்டக் கைகளில் அட்சய பாத்திரம் ஏந்திக் கொண்டு துறவுக் கோலத்தில் அந்தப் பெண் நின்றாள். என்னைக் கண்டவுடனே அட்சய பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு வணங்கினாள்.
‘இந்த மழையில் யாராவது பிட்சைக்குப் புறப்படுவார்களா? புறப்பட்டு வந்ததுதான் வந்தாய்; எதற்காக வெளியே நனைந்து கொண்டு நிற்கிறாய்? உள்ளே வரலாமே?’ என்றேன். துறவு நெறி மேற்கொண்ட எவளோ ஒரு புத்த சமயப் பெண் பிட்சைக்கு வந்திருக்கிறாள் என்று எண்ணியே நான் அப்படிக் கேட்டேன். இவளுடைய பேதைமை மாறா இளமையைக் கண்டு ‘இந்தப் பருவத்திலேயே இப்படி ஒரு துறவா?’ என்று எண்ணி வியந்து கொண்டிருந்தது என் மனம். அதற்குள் என்னுடைய மாணவன் ஒருவன் எங்கள் பூம்பொழிலின் மடைப்பள்ளிக்குச் சென்று நெய்யிட்ட வெண்சோறும், சில காய்கனிகளும் கொண்டு வந்து இவளுடைய பிட்சைப் பாத்திரத்தில் இடுவதற்குப் போனான். சிரித்தபடியே தான் அதற்காக வரவில்லை என்று குறிப்பினாற் புலப்படுத்துகிறவளைப் போல் தன்னுடைய பிட்சைப் பாத்திரத்தைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு விலகி நின்றாள் இவள்.
‘நான் ஏற்க வந்திருக்கிற பிட்சைக்கு நானேதான் பாத்திரம். இது அன்று’ என்று சொல்லி அட்சய பாத்திரத்தை ஒதுக்கி வைத்தாள். பின்பு தான் மழைக்கு ஒதுங்கினாற் போல் நின்ற இடத்தினருகே வைத்துக் கொண்டிருந்த துணி முடிப்பை அவிழ்த்து அதிலிருந்து இரண்டு மூன்று ஓலைகள் அடங்கிய திருமுகம் ஒன்றை எடுத்து என்னிடம் நீட்டினாள். மனத்தில் இன்னதென்று விளங்காமல் பெருகும் வியப்புடன் இவள் கொடுத்த ஓலையை வாங்கிப் படித்தேன். ஓலை பாலி மொழியில் எழுதப்பட்டிருந்தது. மணிபல்லவத்தீவுக்கு அருகில் சமந்தகூட மலையில் வாழ்ந்த துவந்த புத்ததத்தர் என்னும் துறவி எனக்கு நெருங்கிய நண்பர். பலமுறை காவிரிப்பூம்பட்டினத்துக்கும், திருநாங்கூருக்கும் வந்து பழகியவர். சமயவாதம் புரியுமிடங்களில் எல்லாம் இருவரும் சந்தித்திருக்கிறோம். இரண்டொரு சமயங்களில் நானே அவரை வாதத்தில் வென்று ‘நாவலோ நாவல்’* என்று வெற்றி முழக்கமிட்டுக் கூவியிருக்கிறேன். அவர் பாலி மொழியில் எனக்கு எழுதியிருந்த ஓலையில் அந்தப் பெண்ணைப் பற்றிய வரலாற்றைக் கூறி அறிமுகப்படுத்தியிருந்தார். அப்படியே தமிழில் இன்று உனக்கு விவரித்துச் சொல்கிறேன் இளங்குமரா!
(* அந்தக் காலத்தில் சமயவாதம் செய்ய விரும்புவோர் ஒரு நாவல் மரக்கிளையை நட்டுப் பிறரை வாதுக்கு அழைப்பதும், எதிர்வாதம் புரிய வருவோர் வாதத்தில் வென்ற பின்பே அக்கிளையைப் பறித்து எறிய வேண்டுமென்பதும் வழக்கு. வாதத்தில் வென்றவர் ‘நாவலோ நாவல்’ என வெற்றிக் குரல் முழக்குவதும் உண்டு.)
‘முற்றா இளமையும் முதிராப் பருவமுமாக உங்களிடம் வந்து நிற்கும் இந்தப் பெண்ணின் பெயர் விசாகை. உடம்பும் பருவமும் முதிர்ச்சியடையா விட்டாலும் மனத்தில் முதிர்ச்சியும் செம்மையும் பெற்றவள் இவள். மற்றப் பெண்கள் பாவையும், அம்மானையும் கொண்டு கன்னி மாடங்களில் பிள்ளைப் பருவத்து விளையாட்டுக்களை விளையாடிப் பொழுது போக்கிக் கொண்டிருந்த வயதிலேயே இவள் அறநூல்களையும் ஞானநூல்களையும் தக்க ஆசிரியரிடம் பாடங்கேட்கத் தொடங்கிவிட்டாள். சில செடிகள் முளைக்கும் போதே தமக்குரிய மணத்தை மண்ணுக்கு மேலே பரவச் செய்து கொண்டு முளைக்கும். அதைப் போல், விட்ட குறை தொட்ட குறையை நிறைவு செய்யப் பிறந்தவளோ என்று பெற்றவர்களே மருண்டு அஞ்சும் புண்ணியப் பிழம்பாயிருந்தாள் இவள்.
இவளைப் பெற்றவர்களும் சாதாரணமானவர்கள் அல்லர். சாவகநாட்டுச் சிற்றரசர்களில் சிறந்தவனும், பெருஞ் செல்வத்துக்குரியவனுமாகிய சூடாமணிவர்மனின் ஒரே மகளாக இவள் பிறந்தாள். உலகின் நிலையாமையும், துன்பங்களும் இளம் வயதிலேயே இவள் மனத்தில் உறைந்து பதிந்து விட்டன. மற்றவர்கள் பாக்கியங்களாக நினைத்த அரசபோக ஆடம்பரங்கள் இவளுக்கு துர்ப்பாக்கியங்களாக உறுத்தின. ‘இவற்றிலிருந்து விடுபட்டுச் செல்! துன்ப விலங்குகளிலிருந்து விடுபட அறியாமல் தவிக்கும் மக்களுக்கெல்லாம் விடுபடும் வழியை விளக்கு’ என்று இவள் மனதில் இடைவிடாத தூண்டுதல் ஒன்று பெருகி வந்தது. நினைவு வாராப் பருவத்திலேயே இவள் தன் தாயை இழக்கும்படி நேர்ந்தது.
இவளுடைய ஒப்பிலா அழகையும், அறிவையும் பார்த்து இவள் தந்தை சூடாமணிவர்மன் என்னென்னவோ கனவுகள் கண்டு கொண்டிருந்தான். சுயம்வர ஏற்பாடுகள் நடந்தன. விசாகையின் அழகைக் கேள்விப்பட்டிருந்த இளவரசர்கள் எல்லாரும் சூடாமணிவர்மனின் சுயம்வர மண்டபத்தில் கூடினார்கள். கடல் கடந்த நாடுகளிலிருந்தும் விசாகையின் அழகைக் கேட்டு மயங்கியவர்கள் வந்திருந்தார்கள். ‘எந்தப் பிறவியிலோ செய்த தவப்பயன் இந்தப் பிறவியில் எனக்கு இப்படி ஒரு பெண்ணாய்ப் பிறந்திருக்கிறது’ என்று சூடாமணிவர்மன் கர்வப்பட்டுக் கொண்டிருந்தான். விசாகையின் சுயம்வர நாள் விழாவைச் சாவக நாடே களிப்புடன் கொண்டாடிப் போற்றிக் கொண்டிருந்தது. அறிவும், திருவும், வனப்பும், செல்வமும் ஒருங்கு வாய்ந்த நாயகன் விசாகைக்கு வாய்க்க வேண்டுமென்று மனத்தில் தெய்வத்தை வேண்டிக் கொண்டிருந்தான் சூடாமணிவர்மன்.
சுயம்வர மண்டபத்துக்கு வெளியே இனிய மங்கல வாத்தியக்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. அரண்மனையெங்கும் வாசனை வெள்ளம் பாய்ந்து பரவிக் கொண்டிருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் பொன்னும், முத்தும், மணியும், அரசர் தம் முடிகளும் ஒளிர்ந்தன. பெண்களிற் பேரழகியாக வந்து பிறந்தவளைச் சொந்தமாக்கிக் கொள்ள ஆண்களிற் பேரழகர்களாக வந்து பிறந்தவர்கள் எல்லாம் கூடியிருந்தார்கள்.
தோழிகளும், பணிப் பெண்களும் அழகுக்கே அழகு செய்வது போல் விசாகையை அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள். விசாகை பொம்மையைப் போல் வீற்றிருந்தாள். பட்டுச் சிற்றாடையும், பவழ மணிமாலைகளும், பொன்னும், பூவுமாகத் தன் உடம்பைச் சிறை செய்து கட்டுவதாகத் தோன்றியது இவளுக்கு. ‘நீ இதற்காகவா பிறந்தாய்?’ என்று உள் மனத்தில் முள் குத்துவது போல் ஒரு கேள்வி நீங்க மாட்டாமல் குத்தி உறுத்திக் கொண்டிருந்தது. கோலக் குழல் முடித்துக் குங்குமத் திலகமிட்டு, நீலப் பட்டுடுத்தி, நித்தில மாலையிட்டுப் பணிப்பெண்கள் விசாகையின் தோற்றத்தில் கவர்ச்சியைப் பிறப்பிக்க முயன்று கொண்டிருந்த போது இவள் கண்களில் நீர் பிறந்தது. நெஞ்சினுள் எதிலிருந்தோ, எதற்காகவோ விடுபட்டுப் பறக்க வேண்டும் போலத் தவிப்புப் பிறந்தது. எப்போதோ, எங்கேயோ, ஏதோ ஒரு செயலை அரைகுறையாக விட்டு வந்திருப்பது போலவும், அதை நிறைவு செய்ய எழுந்து போக வேண்டிய நேரம் நெருங்குவது போலவும் உணர்வு பிறந்தது. விசாகையின் பின்புறம் இவள் கூந்தலில் பூச்சூடிக் கொண்டிருந்த பணிப்பெண்கள் எதிரேயிருந்த கண்ணாடியில், மௌனமாகக் கண்ணீர் வடித்தவாறு தெரியும் தங்கள் தலைவியின் முகத்தைக் கண்டு திகைத்தார்கள். ‘மனத்துக்கு விருப்பமான கணவனைத் தேர்ந்தெடுப்பதற்காக மாலையேந்திச் செல்லும் போது யாராவது இப்படி அழுவார்களா?’ என்று எண்ணிக் காரணம் புரியாமல் அஞ்சினார்கள் பணிப்பெண்கள்.
‘நம் தலைவி அழவில்லையடி; கண்களுக்கு மை தீட்டும் போது அதிகமாகத் தீட்டிவிட்டார்களோ என்னவோ? மை கண்களில் கரிந்து உறுத்துகிறது போலிருக்கிறது. அதனால் தான் கண்களிலிருந்து நீர் வடிகிறது’ என்று காரணத்தை ஆராய்ந்து கண்டவள் போல் சொல்லிச் சிரித்தாள் ஒரு பணிப்பெண். விசாகை ஒன்றும் பேசாமல் சிலையாக அமர்ந்திருந்தாள். பேசவராத பருவத்து சிறு குழந்தை தனக்கு உற்ற நோவு இன்னதெனச் சொல்லவும் மொழியின்றித் தாங்கவும் ஆற்றலின்றித் தாய் முகம் தேடி நோக்கி அழுவது போலத் தன் தவிப்பைக் கூற இயலாமல் பணிமகளிர் புனையும் அலங்கார விலங்குகளைத் தாங்கியவாறே கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள் விசாகை. கண்களைப் போல் இவள் மனமும் அழுதது. உணர்வுகளும் அழுதன. எதிரே கண்ணாடியில் தெரியும் தன் முகத்தைத் தானே பார்த்தாள் விசாகை. கண்ணீரைத் துடைத்துக் கொள்வதற்காக இவள் கை மேலே எழுந்த போது, ‘உன் கண்ணீரைத் துடைத்துக் கொள்வதற்கு முன்னால் உலகத்தின் கண்ணீரைத் துடைக்க வேண்டாமா, அம்மா? நீ இன்று அபூர்வமாக அழும் இதே அழுகையை ஏற்கெனவே பலர் தினந்தோறும் அழுது கொண்டிருக்கிறார்களே; அழுகைக்குக் காரணமான துக்கத்தையும், அந்தத் துக்கம் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பதையும், அதைப் போக்குவதையும் போக்குவதற்கான வழியையும் நீ காண வேண்டாமா அம்மா?’ என்ற தெய்வீகக் குரல் ஒன்று தன் மனத்துள்ளும் செவிகளுக்குள்ளும் ஒலிப்பதை விசாகை கேட்டாள். தன்னுடன் பிறந்து தன் உணர்வுடன் ஒன்றிப் பயின்று தன்னினும் வளர்ந்துவிட்ட தனது மனமே அந்தக் குரலை ஒலிக்கிறதென்று இவளால் விளங்கிக் கொள்ள முடியாவிட்டாலும் இவள் அதற்கு வசப்பட்டாள். ஒரு குறிப்பிட்ட காலத்தில் உடலின் அங்கமான மனம் உடலைக் காட்டிலும் பெருமையுடையதாய் நுண்மையுடையதாய் வளர்ந்து விடுகிறது. அப்படி வளர்வதால்தானோ என்னவோ, மனச்சான்று என்ற ஒருணர்வு உடம்பின் செயல்களிலேயே நல்லது கெட்டது தேர்ந்து நல்லதை ஏற்கவும், தீயதை இடித்துரைக்கவும் துணிகிறது.
கண்ணீர் வடியும் தன் முகத்தின் பிரதிபிம்பத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டே, ‘எங்கோ விடுபட்டுச் செல்ல வேண்டும்’ என்ற தவிப்பை உணர்ந்தும் உணராமலும் தவித்த போது விசாகை என்ற உடம்பின் வலிமையை மீறிக் கொண்டு விசாகை என்ற மனத்தின் வலிமை ஓங்கி வளர்ந்து ஆட்கொண்டது. பணிப்பெண்கள் விசாகையை எழுந்திருக்கச் செய்து சுயம்வர மாலையைக் கையில் கொடுத்தார்கள். கண்ணீரைத் துடைப்பதற்காக அருகில் வந்தாள் ஒரு தோழி. அப்போது மறுபடியும் அந்தக் குரல் இவள் உள்ளத்திலிருந்து ஒலித்தது:
‘உன் கண்ணீரைத் துடைத்துக் கொள்வதற்கு முன் உலகத்தின் கண்ணீரைத் துடைக்க வேண்டாமா, அம்மா? இன்று அபூர்வமாக நீ அழும் இதே அழுகையை ஏற்கனவே பலர் தினந்தோறும் அழுது கொண்டிருக்கிறார்களே!’
தன் கண்ணீரைத் துடைப்பதற்காக முகத்தருகே நெருங்கிய தோழியின் கையை விலக்கி ஒதுக்கினாள் விசாகை.
‘தலைவிக்கு விருப்பமில்லையானால் கண்ணீரைத் துடைக்க வேண்டாம், விட்டுவிடு. சுயம்வரத்துக்கு வந்திருக்கிற அரச குமரர்கள் எல்லாம் நம் தலைவி ஆனந்தக் கண்ணீர் சிந்துவதாக நினைத்துக் கொள்ளட்டுமே’ என்று வேடிக்கையாகக் கூறினாள் குறும்புக்காரியான பணிப்பெண் ஒருத்தி.
‘ஆனந்தக் கண்ணீராமே, ஆனந்தக்கண்ணீர்! கண்ணீரே ஆனந்தம்தானே? பிறருடைய துன்பத்தினால் நம்முடைய மனம் நெகிழுகிறது என்பதற்கு அடையாளம்தானே கண்ணீர்? அன்பு செலுத்துவதிலும், மனம் நெகிழ்வதிலும் ஆனந்தமில்லாமல் துக்கமா உண்டாகும்? ஒருவர் இருவருக்காக மனம் நெகிழ்ந்து அழுவதிலேயே இவ்வளவு ஆனந்தமானால், பிரபஞ்சத்தையே எண்ணிப் பிரபஞ்சத்தின் துக்கத்துக்காகவே மௌனமாக அழுதவர்கள், தவம் செய்தவர்கள், சிந்தித்தவர்கள், மதம் கண்டவர்கள் எல்லாரும் எவ்வளவு ஆனந்தத்தை அடைந்திருக்க வேண்டும்!”
இப்படி எண்ணியவாறே சுயம்வர மண்டபத்துக்குள் நுழையும் வாயிலுக்கு இந்தப் பக்கத்தில் மாலை ஏந்திய கைகள் நடுக்க, மனம் நடுங்க, நினைவுகள் நடுங்க, கண்களில் நீர் நடுங்க விசாகை நின்றாள்.
அளவற்ற துக்கத்தையும், எல்லையற்ற அநுதாபப் பெருக்கையும் குறிப்பதற்கே தமிழில் ஆனந்தம் என்று ஒரு சொல் இருப்பது விசாகைக்கு நினைவு வந்தது. தமிழ்ப் புறப்பொருள் இலக்கணத்தில் போரின்போது வீரக்கணவனை இழந்த மனைவி அவன் நினைவில் மெலிந்து வருந்தும் வருத்தத்தைக் கூறும் பாடலுக்கு ‘ஆனந்தம்’ என்று பெயர் வைத்திருப்பதை இவள் நினைத்தாள். எல்லையற்ற துக்கம் உண்டாகிறது. ஆனந்தத்துக்கும் துக்கத்துக்கும் ஆனந்தமே காரணமாவது பற்றித்தான் தமிழ்ப் புறப்பொருள் இலக்கண ஆசிரியர்கள் துயரத்துக்கும் ஆனந்தம் என்று பெயரிட்டிருக்க வேண்டுமென எண்ணினாள் விசாகை. சிந்தனை பெருகப் பெருக இவள் கண்களில் நீரும் பெருகிற்று.
கூட்டுக்குள்ளிருந்து வெளியே தலைநீட்டி எட்டிப் பார்க்கும் கிளிக்குஞ்சு போல், தான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து சுயம்வர மண்டபத்துக்குள் செல்லும் வாயிலில் எட்டிப் பார்த்தாள் விசாகை.
மண்டபத்தில் வரிசை வரிசையாய் அரச குமாரர்கள் வீற்றிருந்தார்கள். இயற்கையாகவே அழகுடையவர்கள் சிலர். செயற்கையாகப் புனைந்து அழகுப்படுத்திக் கொண்டு வந்திருந்தவர்கள் சிலர். நம்பிக்கையோடு வந்தவர்கள், ஆசைப்பட்டு வந்தவர்கள், நம்பிக்கையும் அவநம்பிக்கையும் கலந்த மனத்தோடு வந்தவர்கள் எல்லாரும் இருந்தார்கள். எல்லாருடைய கண்களும் இவள் மண்டபத்திற்குள் நுழையப் போகிற வழியையே பார்த்துக் கொண்டிருந்தன. இவளோ எல்லாருடைய கண்களிலும் ஆசை ஒன்றே நிறைந்திருந்ததைப் பார்த்தாள். இவள் கைகளும் கைகளிலிருந்த மாலையும் முன்னிலும் அதிகமாய் நடுங்கின.
சுயம்வர மண்டபத்தில் முதன்மையான இடத்தில் அமைச்சர் பிரதானிகள் புடைசூழ இவள் தந்தை சூடாமணிவர்மன் இருந்தார். மண்டபத்தின் நடுவில் வெண்பளிங்குக் கல்லில் செய்த புத்தர் சிலை ஒன்று அமர்ந்த கோலத்தில் காட்சியளித்தது. அந்தச் சிலையின் சாந்தம் திகழும் முகத்தில் வாயிதழ்கள் எப்போதும் மெல்லச் சிரித்துக் கொண்டே இருப்பது போல் ஒரு பாவனை அமைந்திருந்தது.
சாதாரண மனிதர்களுடைய அழுகையிலும் ஆனந்தம் இருக்கிறாற்போல் ஞானிகளுடைய சிரிப்பிலும் துக்கம் இருப்பதை அந்த புத்தர் சிலையின் முகம் விசாகைக்குக் கூறியது.
இரண்டு தோழிப் பெண்கள் பக்கத்துக்கு ஒருவராக விசாகைக்கு அருகில் வந்து நின்று கொண்டு இவளைச் சுயம்வர மண்டபத்துக்குள் நடத்தி அழைத்துச் சென்றார்கள். இரண்டு கண்களின் அழகைக் காண்பதற்காக எத்தனையோ கண்கள் மலர்ந்தன. ஆனால் அத்தனை பேருடைய ஆவலையும் கிளரச் செய்த அந்த இரண்டு கண்களில் நீர் நெகிழ்ந்திருந்தது.
தோழிகளின் துணையோடு கைகால் நடுங்கிய நிலையில் விசாகை தளர்ந்தாற் போல் மெல்ல நடந்து வந்து சுயம்வர மண்டபத்தில் வீற்றிருந்தவர்களையெல்லாம் பார்த்தாள்.
‘தன் மகள் எந்த நாட்டு இளவரசனுக்கு மாலையிடப் போகிறாள்’ என்று ஆர்வம் பெருகும் விழிகளால் இமையாது பார்த்துக் கொண்டிருக்கும் தந்தை சூடாமணிவர்மனையும் நிமிர்ந்து நோக்கினாள். பெண்ணின் கண்கள் ஏன் கலங்கியிருக்கின்றன என்பது தந்தைக்குப் புரியவில்லை. தீவினைகளின் விளைவுகள் சூழ்ந்து வரும் போது என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறி நிற்கும் உயிர் போல் விசாகை தயங்கி நின்றாள். மருண்டு பார்த்தாள். கண்ணீர் பெருக்கினாள். ‘குழந்தை ஏன் அழுகிறாள்?’ என்று தோழிகளை அருகில் அழைத்துக் கேட்டான் சூடாமணிவர்மன். ‘கண்ணுக்கு இட்ட மை கரிந்து நீர் வழிகிறது. அழவில்லை’ என்று தங்களுக்குத் தோன்றியதைக் கூறினார்கள் அவர்கள். அரசனும் அப்படித்தானிருக்கும் என நம்பினான். உலகத்தின் கண்ணீரைத் துடைப்பதற்காக அவள் கண்ணில் நீர் பிறந்திருக்கிறதென்று அவர்களுக்கு எப்படித் தெரியும்? பாவம்! உண்மையைத் தெரிந்து கொள்ள இயலாதவரை தங்களுக்குத் தெரிந்ததைத் தானே உண்மையாகக் கொள்ள வேண்டும்?
சுயம்வர மண்டபத்திலிருந்து எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தயங்கி நின்ற விசாகை விரைந்து நடந்தாள். தோழிகள் இவளைப் பின் தொடர முடியாத வேகத்தில் நடந்தாள். மண்டபத்தின் நடுவில் சிரித்துக் கொண்டிருந்த புத்தர் சிலையை நெருங்கினாள். சுற்றிலும் ஒரு முறை நிமிர்ந்து பார்த்த பின் தன் கைகளிலிருந்த மணமாலையை அந்தச் சிலையின் பாதங்களில் பயபக்தியோடு வைத்துவிட்டு வணங்கினாள். இவள் கைகளிலிருந்த மாலையைப் பெற்ற பின் அந்தச் சிலையின் முகத்தில் சாந்தமும், சிரிப்பும் இன்னும் அதிகமானாற் போல் ஒரு தோற்றம் ஏற்பட்டது. சூடாமணிவர்மன் இருக்கையிலிருந்து எழுந்து மகளை நோக்கி ஓடி வந்தான்.
‘இது என்ன காரியம் செய்கிறாய் மகளே! நீ வாழ்க்கைப்பட வேண்டியவருக்குச் சூட்டும் மாலையை வணங்கப்பட வேண்டியவருடைய பாதங்களில் சூட்டுகிறாயே?’
‘எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் இவருடைய கொள்கைகளுக்கு வாழ்க்கைப்பட்டு விட்டேன் அப்பா. வேறு விதமாக மனிதருக்கு வாழ்க்கைப்படும் ஆசை எனக்கு இல்லை. ‘அப்படி வாழ நான் பிறக்கவில்லை’ என்று என் மனமே எனக்குச் சொல்கிறது! வாழ்க்கைப்படுவதற்கு ஒருவரும் வணங்கப்படுவதற்கு ஒருவருமாக இருவரிடம் பக்தி செலுத்த எனக்கு விதியில்லை. என்னை விட்டு விடுங்கள் நான் விடுபட்டுப் போகவேண்டும்!’
‘எங்கே போக வேண்டும், மகளே?’
‘உலகத்தின் கண்ணீரைத் துடைப்பதற்குப் போக வேண்டும்.’
‘நீ போனபின் என்னுடைய கண்ணீரை யார் துடைப்பார்கள்?’
இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று விசாகைக்குத் தெரியவில்லை. தந்தையின் பாதங்களைப் பற்றிக் கொண்டு மேலும் கண்ணீர் பெருக்கினாள். தந்தையின் பாதங்களையும், பாசங்களையும் விலக்கி விட்டு இவள் எழுந்த போது தந்தை வேரற்ற பெருமரம் போல் மயக்கமுற்றுக் கீழே விழுந்தார். அழுக்குகளை நீக்குவது போலத் தன் உடம்பிலிருந்து பொன்னையும், மணியையும், பட்டையும் வேறாக்கி விட்டு விசாகை புறப்பட்டாள். உலகத்தின் கண்ணீரைத் துடைப்பதற்காகத் தன் சுகங்களிலிருந்து விடுபட்டுப் புறப்பட்டாள்...”
விசாகையின் கதையை முற்றிலும் கேட்டு முடித்ததும் தான் மீண்டும் இளைத்துப் போய்விட்டதாக உணர்ந்தான் இளங்குமரன். மனத்தின் வலிமையால் உலகத்தை வென்று நிற்பவர்களைப் பற்றி அறிந்தாலும், நினைத்தாலும் அந்தக் கணத்தில் தான் குன்றி ஒடுங்கிப் போனதாக ஏற்படும் மனத்தாழ்வை அவனால் மீற முடியவில்லை.
‘உலகில் மிகச் சிறந்த வலிமை மனத்தின் வலிமைதா. மிகச் சிறந்த விடுதலையும் மனத்தின் விடுதலைதான். புலன்களிலிருந்து விடுபட்டுச் சிந்திக்கும் தூய மனம் தான் பெரிய சுதந்திரம். புலன்களுக்கும், உணர்வுகளுக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கிறவர்கள் உடம்பினால் விடுதலை பெற்று என்ன பயன்?’ என்றெல்லாம் விசாகையின் வரலாற்றைக் கேட்டிருந்த கிளர்ச்சியில் எண்ணினான் இளங்குமரன். அவள் வரலாறு அவன் மனத்தில் தூய்மைக் கிளர்ச்சியைத் தூண்டியிருந்தது.
உலகத்தின் கண்ணீரைத் துடைப்பதற்காகத் தாமும் கண்ணீர் சிந்திய அந்த விழிகளை இன்னொரு முறை தரிசனம் செய்ய வேண்டுமென்று நிமிர்ந்தான் அவன். விசாகையின் அழகிய கண்களில் இப்போதும் நீர் நெகிழ்ந்திருந்தது. பழைய நிகழ்ச்சிகளைக் கேட்க நேர்ந்ததால் சிறிதளவு அவள் கலங்கியிருந்தாள்.
அடிகள் இளங்குமரனைக் கேட்டார்:
“இவளுடைய வாழ்க்கையைப் பற்றி என்ன நினைக்கிறாய் இளங்குமரா?”
“நினைப்பதற்குரிய வாழ்க்கை அன்று இது! வணங்குவதற்குரிய வாழ்க்கை ஐயா! இந்த அம்மையாருடைய மனத்தின் வலிமையைப் பற்றிக் கூறிய போது என்னுடைய மனத்தின் ஏழ்மையை நான் உணர்ந்தேன்.”
“நல்லது! இவளுடைய கதையை எந்த விளைவுக்காக உன்னிடம் சொல்ல வேண்டுமென்று விரும்பினேனோ அந்த விளைவு உன்னிடம் நிகழ்ந்திருக்கிறது. மேலும் கேள். சாவக நாட்டிலிருந்து இவள் மணிபல்லவத்திற்கு வந்தாள். அங்கே புத்தபீடிகையைத் தரிசனம் செய்தாள். கோமுகிப் பொய்கையைக் கண்டாள். சமந்தகூட மலைக்குச் சென்று அங்குள்ள என் நண்பரான புத்த தத்தரிடம் சமய ஞானம் பெற்றாள். ‘மண் திணிந்த இவ்வுலகத்தில் வாழ்கிறவர்களுக்கு உணவு கொடுத்து உதவுகிறவர்கள் உயிர் கொடுப்பதற்கு இணையான செயலைச் செய்பவர்கள்’ என்ற கருத்துடன் தன் அட்சய பாத்திரத்தைப் பலரிடம் ஏந்தி உணவை நிரப்பி வந்து, நிரம்ப வழியின்றி தவிக்கும் ஏழை வயிறுகளுக்கு அளித்து மீந்ததைத் தான் உண்ணும் தியாக வாழ்வை இவள் தொடங்கினாள். சமயவாதத்திலும், இன்னும் சில நுணுக்கமான ஞான நூல்களிலும் இவள் நன்கு தேர்ச்சி பெற வேண்டும் என்று கருதிப் புத்த தத்தர் சமந்த கூட மலையிலிருந்து இவளை இங்கு அனுப்பியிருக்கிறார். புத்த தத்தரின் அறிமுக ஓலையோடு மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு கார்த்திகை மாதத்து அடைமழை நாளில், ‘உலகத்தார்க்குப் பண்பின் வழியே ஊக்கம் நிகழும்’ என்று அரும் பெரும் தத்துவ வாக்கியத்தை ஒலித்துக் கொண்டே இவள் இந்தக் கிரந்த சாலைக்குள் முதன்முதலாக அடியெடுத்து வைத்தாள். இன்று சோழ நாட்டிலே இவள் பாதங்கள் பட்ட இடமெல்லாம் ஏழைகளுக்குப் பசி தீர்கிறது. நோயாளிகளுக்கு நோய் தீர்கிறது. துன்பப் படுகிறவர்களுக்கு ஆறுதல் கிடைக்கிறது...”
“மற்றவர்கள் உங்களிடம் உங்களைப் பற்றியே புகழும் போது அதை விரும்பாத நீங்கள் இப்போது நான் எதிரே இருக்கும் போதே என்னை இப்படி மிகையாகப் புகழ்கிறீர்களே தாத்தா” என்று விசாகை குறுக்கிட்டாள்.
“இந்தப் புகழ் எல்லாம் உனக்கு அல்ல, விசாகை! நீ செய்கிற அறங்களுக்கு மட்டுமே உரியது. உலகத்தின் கண்ணீரைத் துடைப்பதற்காக உன் கண்களில் நீரைச் சுமக்கிறாயே, அந்தப் பண்புக்கு உரியது...” என்று பொருத்தமான மறுமொழி அடிகளிடமிருந்து வந்தது.
“அதுதான் ‘உலகத்தார்க்குப் பண்பின் வழியே ஊக்கம் நிகழும்’ என்று நீங்களே தத்துவம் சொல்லியிருக்கிறீர்களே” என்று முதன் முறையாக விசாகையிடம் பேசினான் இளங்குமரன்.
“தத்துவம் என்னுடையதன்று, நியாய நூல்களிலிருந்தும் பெரியவர்களிடமிருந்தும் நான் கற்றது.”
“தத்துவங்களைக் கண்டுபிடிக்கிறவர்களை விடக் கடைப்பிடிக்கிறவர்கள் தான் பெரியவர்கள். கடைப்பிடிக்கிறவர்கள் வாழும் தத்துவமாக உயிருடன் நிற்கிறார்கள். கண்டுபிடிக்கிறவர்கள் ஏட்டளவில் மட்டுமே நிற்கிறார்கள். நீங்கள் வாழும் தத்துவமாக என்முன் இருக்கிறீர்கள்” என்றான் இளங்குமரன்.
“வாழும் தத்துவம் என்று என்னைச் சொன்னால் பொருந்தாது ஐயா! நமக்கெல்லாம் ஞானப் பசி தீர்த்து வாழும் அடிகள் தான் மிகப் பெரிய தத்துவம். அடிகளைச் சுற்றியிருக்கிற ஒவ்வொருவருடைய வாழ்வும் ஒரு சிறிய காவியம். அவர் இவற்றையெல்லாம் உள்ளடக்கிக் கொண்டிருக்கும் மகாகாவியத்தைப் போன்றவர்” என்று விசாகை இளங்குமரனிடம் தன்னைப் புகழ்ந்து சொல்லியதைக் கேட்டுச் சிரித்தபடி இருந்தார் நாங்கூர் அடிகள்.
“நான் உன்னைப் புகழ்ந்ததற்கு நீ என்னைப் பழிவாங்குகிறாயா, விசாகை?”
“இந்தப் புகழ் எல்லாம் உங்களுக்கு அல்ல தாத்தா! உங்களுடைய ஞானத்துக்கு மட்டுமே உரியது. பலருடைய ஞானப் பசியைத் தீர்ப்பதற்காக உங்களுடைய மனமாகிய அட்சய பாத்திரத்தில் ஞானத்தை நிறைத்துக் கொண்டிருக்கிறீர்களே, அந்த நிறைவுக்கு உரியது.”
அவர் தனக்குக் கூறிய பழைய சமாதானத்தை அவரிடமே திருப்பினாள் விசாகை. அவர் குழந்தையைப் போல் சிரித்தவாறு தலைகுனிந்தார். பல நூறு பட்டிமண்டபங்களில் பல நூறு சமயவாதிகளை வென்று அவர்கள் நாட்டிய நாவல் மரக்கிளைகளைப் பறித்து ‘நாவலோ நாவல்’ என வெற்றி முழக்கமிட்டிருக்கிற அந்தப் பெரியவருக்கு விசாகையிடம் விளையாட்டுக்காகத் தோற்றுப் போனதைப் போன்று விட்டுக் கொடுப்பதில் ஒரு திருப்தி உண்டு.
இளங்குமரன் சிரித்தான்.
‘இணையிலாத அழகின் வலிமையால் என்னை நெகிழச் செய்திட முயன்ற சுரமஞ்சரியிடம் நான் தோற்கவில்லை. நான் தன்னுடைய உடைமை என்று பேதைத்தனமாக நினைத்துக் கொண்டிருக்கும் வீரசோழிய வளநாடுடையார் பெண் முல்லையிடம் நான் தோற்கவில்லை. அவர்களெல்லாம் என்னுடைய காதலைக் கூடச் சம்பாதிக்க முடியவில்லை. எண்ணெயின்றீ முடிந்த சடையும், துறவுக்கோலமுமாக இப்போது என் எதிரே இருக்கும் விசாகை என்ற இந்தப் பெண்ணோ என்னைத் தன்மேல் பக்தி செலுத்துவதற்கே தூண்டுகிறாளே! இது என்ன விந்தை!’ உடம்பும், மனமும், புலன்களும், எல்லாமே வலிமையாக இருக்க வேண்டுமென்று கூறும் விசாகை, வாழும் தத்துவமாகத் தோன்றும் பூம்பொழில் நம்பியாகிய நாங்கூர் அடிகள், எல்லாரையும் இணைத்து நினைத்தது இளங்குமரனின் மனம். தான் கற்பதற்கிருந்த சுவடிகள் தவிர உலகமே பக்கத்துக்குப் பக்கம், ஏட்டுக்கு ஏடு வேறுபாடுள்ள மாபெருஞ் சுவடியாகத் தோன்றியது அவனுக்கு.
சிறிது நேரம் கழித்து நாங்கூர் அடிகள் பூம்பொழிலில் உலவச் சென்றார். கிரந்தசாலையில் விசாகையும் இளங்குமரனும் மட்டுமே இருந்தார்கள். அப்போது விசாகை, இளங்குமரன் சற்றும் எதிர்பாராத காரியமொன்றைச் செய்தாள்.
“இதில் ஏதேனும் இடுங்கள்! இன்றைக்கு முதல் பிட்சை உங்களுடையதாக இருக்கட்டும்” என்று அட்சய பாத்திரத்தை அவனுக்கு முன் நீட்டினாள். கையில் சுவடிகளைத் தவிர இளங்குமரனிடம் அப்போது வேறு ஒன்றும் இல்லை. இளங்குமரன் எழுந்து நின்றான், அவனுக்கு மெய் சிலிர்த்தது.
“என் இதயத்தில் உங்கள் மேல் எல்லையற்றுப் பெருகும் தூய்மையான பக்தியையே இந்த அட்சய பாத்திரத்தில் இடுகிறேன். அதை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறி பிட்சைப் பாத்திரத்தின் விளிம்பைத் தொட்டு வணங்கினான் அவன்.
விசாகை கண்கள் மலர அவன் முகத்தைப் பார்த்தாள்.
“அவ்வளவு பெரிய பொருளை ஏற்றுக் கொள்கிற சக்தி இந்தப் பாத்திரத்துக்கு இல்லை ஐயா!”
“பாத்திரமறிந்து பிச்சையிடு என்று சொல்லியிருக்கிறார்கள், அம்மையாரே! இந்தப் பாத்திரத்தில் இடுவதற்கு ஏற்ற பொருள் பக்திதான்.”
இதைக் கேட்டு விசாகை சிரித்தாள். பொய்ம்மையைச் சிதைக்கும் அந்தச் சிரிப்பில் சத்தியம் ஒளிர்ந்தது.
“உங்களை இதற்கு முன்பே நான் ஒரு நாள் பார்த்திருக்கிறேன் ஐயா! ஆனால் அப்போது உங்களிடம் இவ்வளவு பணிவையும், பண்பையும் விநயத்தையும் என்னால் பார்க்க முடியவில்லையே?”
“எங்கே பார்த்தீர்கள் அம்மையாரே?”
“காவிரிப்பூம்பட்டினத்து இந்திர விகாரத்து வாயிலில், ஒரு துறவியை முரட்டுத்தனமாக நீங்கள் கைப்பற்றி இழுத்துப் போன போது பார்த்தேன். இன்று பாத்திரமறிந்து இடும் பக்திப் பிச்சையில் சிறிது அன்றும் அவருக்கு இட்டிருக்கலாமே?” இளங்குமரன் முதல் அநுபவமாக ஒரு பெண்ணின் கேள்விக்கு முன் நாணித் தலைகுனிந்தான்.
சினங்கொண்டு பாய்ந்த நகைவேழம்பரை எதிர்த்துத் தடுத்த போது ‘சிங்க நோக்கு’ என்று இலக்கிய ஆசிரியர்கள் சிறப்பித்துச் சொல்லியிருக்கும் நேராய் நிமிர்ந்த கம்பீரப் பார்வையை நீலநாகமறவரிடம் கண்டான் ஓவியன் மணிமார்பன். பக்கங்களிலும், பின்புறமும் விலகவோ, திரும்பவோ செய்யாமல் எதிரே மட்டும் பார்க்கும் நீலநாகரின் அந்தப் பார்வையே வாளாகவும், வேலாகவும் கூர்மை பெற்றுச் சென்று நகைவேழம்பரைத் தாக்குவதையும் அவன் கவனித்தான்.
தான் ஓர் ஓவியன் என்ற முறையில் விலங்குகளின் அரசனாகிய சிங்கத்தின் உருவத்தைப் பன்முறை தன் கையால் வரைந்திருக்கிறான் அவன். கம்பீரமான அரசர்களின் உருவங்களையும் வீரர்களின் உருவங்களையும் கூட வரைந்திருக்கிறான். ஆனால் குறுவாளை ஓங்கிக் கொண்டு சீறி வந்த நகைவேழம்பரை இடது கையால் அலட்சியமாகத் தடுத்து நிறுத்திய நீலநாகமறவரின் கம்பீரத்தை ஓவியத்தில் வரைவதற்கு முடியுமா என்று மலைத்தான் அவன். கொடுமைக்காரராகவும் கொலைகாரராகவும் தோன்றித் தன்னைப் பயமுறுத்தி நடுங்கச் செய்த அதே ஒற்றைக் கண் மனிதர், கையை அசைக்கவும் முடியாமல் நீலநாகமறவரின் இரும்புப் பிடியில் திணறுவதை இப்போது அவன் கண்டான். அழுத்திப் பிடிக்கப் பெற்ற எதிரியின் பிடியில் நரம்புகள் புடைத்து இரத்தம் குழம்பும் தமது கை வலுவிழந்து உணர்வு குன்றுவதை நகைவேழம்பர் புரிந்து கொண்டாலும் ஆற்றலின்றி இருந்தார். அவர் கை நடுங்கியது. விரல்கள் பிடி நழுவி விரிந்தன. குறுவாள் கீழே நழுவி விழுந்து ஈரமண்ணில் குத்திக் கொண்டு நின்றது.
நீலநாகமறவர் பிடியை விட்டு முறிந்த வாழை மட்டையை உதறுவது போல அந்தக் கையை உதறினார். விடுபட்டதும் குபீரென்று கீழே குனிந்து மீண்டும் வாளை எடுக்க முயன்ற நகை வேழம்பரை அவர் அப்படிச் செய்ய முயல்வார் என்றே எதிர்பார்த்தவர் போல் எச்சரிக்கையாயிருந்த நீலநாகமறவர் பின்னுக்குப் பிடித்துத் தள்ளினார். மலைமோதியது போன்ற அந்தத் தள்ளுதலால் தடுமாறி மண்ணில் மல்லாந்து சாய்ந்தார் நகைவேழம்பர். இதற்குள் படைக்கலச்சாலையின் கதவைத் திறந்து கொண்டு அங்கிருந்த இளைஞர்களெல்லாம் கூட்டமாக வெளிவரவே, நகைவேழம்பரோடு கூட வந்திருந்த யவன ஊழியர்கள் மெல்லப் பின்வாங்கினார்கள். நகைவேழம்பரும் மண்ணைத் தட்டி விட்டவாறு எழுந்து நின்றார். அளவற்ற கோபத்தால் அவருடைய உதடு துடித்தது.
“இப்படிச் செய்ததற்கு உங்களைப் பழிவாங்காமல் விடப் போவதில்லை. நான் யாரென்று உங்களுக்குத் தெரியாது! சமயம் வாய்க்கும்போது தெரியச் செய்கிறேன்” என்று நீலநாகமறவரை நோக்கி இரைந்து கூக்குரலிடுவதுபோல் முழங்கினார் நகைவேழம்பர். அதைக் கேட்டு நீலநாகர் நகைத்தார்.
“பேசிப் பயனில்லை. முடியுமானால் செய்துகொள். கீழே விழுந்து விட்ட இந்த வாளையும், உன் தைரியத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டு மதிப்பாக வந்த வழியே போவதுதான் இப்போது நீ செய்யவேண்டிய செயல்!”
குறுவாளை எடுத்துக் கொண்டு திரும்புவதற்கு முன்னால் ‘நீதானே இவ்வளவுக்கும் காரணம். என்றாவது மறுபடியும் என்னிடம் அகப்பட்டால் உன்னை நீர்மூலமாக்கி விடுவேன்’ என்று குறிப்பிடுவது போலக் கடுமையாக ஓவியனைப் பார்த்துவிட்டுச் சென்றார் நகைவேழம்பர். நீலநாகரின் முதுகுக்குப் பின்னால் மறைந்து கொண்டு அந்தப் பார்வையின் தாக்குதலிலிருந்து தப்பினான் ஓவியன்.
“ஒற்றைக் கண்ணினாலேயே இப்படி நஞ்சைக் கக்குகிறானே! இந்தக் கொடியவனுக்கு இரண்டு கண்களும் இருந்து விட்டால் எதிரே தென்படுகிற நல்லவர்களையெல்லாம் இவன் பார்வையே சுட்டெரித்துவிடும். திட்டிவிடம் என்று பார்வையாலேயே கொல்கிற பாம்பு ஒன்று உண்டு” என்றார் நீலநாகமறவர்.
ஓவியன் நாத் தழுதழுக்க அவருக்கு நன்றி சொல்லலானான்:
“என் உயிரையும், என் நம்பிக்கைகளையும் அழியாமல் காப்பாற்றி எனக்கு அடைக்கலம் அளித்த கருணை வள்ளல் நீங்கள். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை.”
“தெரியாத காரியத்தைச் செய்யாமல் விட்டுவிடுவதே நல்லது தம்பி! நீ நன்றி சொல்லவேண்டுமென்பதற்காக நான் உனக்கு உதவி செய்யவில்லை. உள்ளே போகலாம் வா. இன்றிரவு இங்கேயே என்னுடன் தங்கிவிட்டுப் போ. உன்னைப் பார்த்தால் மிகவும் பயந்த சுபாவமுள்ளவனாகத் தெரிகிறாய். இந்த நேரத்துக்கு மேல் இத்தனை எதிரிகளையும் வேறு வைத்துக் கொண்டு நீ வெளியே போவது நல்லதல்ல” என்று கூறி இளங்குமரனின் ஓவியத்தோடு, மணிமார்பனையும் அழைத்துக் கொண்டு படைக்கலச்சாலைக்குள் சென்றார் நீலநாகமறவர்.
“இந்த ஓவியம் இளங்குமரனே நேரில் நின்று கொண்டிருப்பது போல் நன்றாக வரையப்பட்டிருக்கிறது தம்பீ! இதை வரைந்தவர் யாராயிருந்தாலும் பாராட்டுக்குரியவர்” என்று அந்த ஓவியத்தைப் பார்த்துக் கொண்டே கூறினார் நீலநாகமறவர். உடனே ஓவியன் மணிமார்பன், தான் அந்த ஓவியத்தை வரைய நேர்ந்த நிகழ்ச்சியையும், தானும் இளங்குமரனும் சந்தித்த பின் ஒவ்வொன்றாக நிகழ்ந்த சம்பவங்களையும் நீலநாக மறவருக்கு விவரித்துச் சொன்னான்.
அவர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு நெட்டுயிர்த்தார். “ஓகோ! இவ்வளவும் நடந்திருக்கிறதா? இளங்குமரன் இவற்றில் ஒன்றையுமே என்னிடம் கூறவில்லையே?”
“இப்போது அவர் எங்கே போயிருக்கிறார் ஐயா?”
“எந்த இடத்துக்குப் போனால் அவன் நிம்மதியாகவும் அமைதியாகவும் இருக்க முடியுமோ, அங்கே அவனை அனுப்பியிருக்கிறேன். நீ பாண்டிய நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும் திருநாங்கூர் அடிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பாய் என்று நினைக்கிறேன். ஞான நூல்களைக் கற்பதற்காக அவருடைய பூம்பொழிலில் அவரோடு போய்த் தங்கியிருக்கிறான் இளங்குமரன்.”
“எங்கள் மதுரை மாநகரத்து வெள்ளியம்பல மன்றத்தில் நாங்கூர் அடிகளின் சமயவாதச் சொற்பொழிவுகளை நானும் கேட்டிருக்கிறேன். அற்புதமான மனிதர் அவர்...”
“அவரிடமிருக்கும் அற்புதங்களைக் கற்றுக் கொண்டு வருவதற்குத்தான் இளங்குமரன் போயிருக்கிறான்.”
“இப்போதுள்ள சூழ்நிலையில் அவர் இங்கே காவிரிப்பூம்பட்டினத்தில் இருப்பதைக் காட்டிலும் திருநாங்கூரில் இருப்பதே நல்லது ஐயா! என்ன காரணத்துக்காகவோ பட்டினப்பாக்கத்துப் பெருநிதிச் செல்வரும், இப்போது இங்கே துரத்திக் கொண்டு வந்தாரே இந்த ஒற்றைக்கண் மனிதரும் அவரை அழித்து ஒழித்து விடுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதோ இப்போது நீங்கள் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே, இந்த ஓவியத்தில் அவருடைய கழுத்தின் வலது பக்கத்துச் சரிவில் வரையப்பட்டிருக்கிற கறுப்பு மச்சத்தை முதலில் நான் வரையவில்லை. படத்துக்கு அது அழகாயிராது என்று தான் நான் வரையாமல் இருந்தேன். ஆனால் இந்த ஒற்றைக் கண்ணரும் இவரை வைத்துக் காப்பாற்றுகிற பெருநிதிச் செல்வரும் என்னைப் பயமுறுத்தி வற்புறுத்தி அவருடைய கழுத்தில் இந்த மச்சத்தை வரையச் செய்தார்கள். அவரைப் பற்றிப் பேசிக் கொள்ளும் போதெல்லாம் அந்த இருவருடைய கண்களிலும் ஏதோ பழி வாங்கத் துடிப்பது போல் வெறி தோன்றுவதை நான் சில நேரங்களில் கவனித்திருக்கிறேன். அதனால் தான் எனக்கு அச்சமாயிருக்கிறது. அப்பப்பா! இப்போது நினைத்தாலும் எனக்குக் குடல் நடுங்குகிறது, ஐயா! அந்த மாளிகையில் இந்த ஒற்றைக்கண் மனிதருடைய பாதுகாப்பில் நான் இருந்த ஒவ்வொரு கணமும் சாகாமலே செத்துப் போய்க் கொண்டிருந்தேன். நல்லவேளையாக அந்தப் பெண்ணரசி எனக்கு விடுதலையளித்துப் பரிசும் கொடுத்து வெளியே அனுப்பினாள். அவ்வளவு பெருஞ் செல்வத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஏன் தான் அப்படிச் சூழ்ச்சிக்காரர்களாகவும், கொடியவர்களாகவும் இருக்கிறார்களோ?”
“உலகத்தில் இரண்டு வகையான செல்வர்கள் இருக்கிறார்கள் என்பதை நீ அறிந்திருக்க நியாயமில்லை மணிமார்பா! தங்கள் செல்வச் செழுமைக்காக மட்டும் பெருமையும் செருக்கும் கொள்கிற செல்வர்கள் ஒருவகை, தங்கள் செழுமைக்காக மட்டுமின்றி பிறருடைய அழிவுக்கும் குறைவுக்கும் சேர்த்துப் பெருமைப்பட விரும்புகிற செல்வர்கள் ஒருவகை. இந்த இரண்டாவது வகைச் செல்வர்களுக்குத் தாங்கள் வளர்ந்து வாழ்வில் அடைகிற மனத்திருப்தியோடு பிறர் தளர்ந்து சீரழிவதைக் கண்டு கிடைக்கிற மிருகத்தனமான மகிழ்ச்சியும் அடையக் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மனம் நிறையாது.”
“ஆனால் இந்தக் கொடுமைக்காரர்களுக்கிடையிலே ஓர் அன்பு மலரும் மலர்ந்து மணந்து கொண்டிருக்கிறது, ஐயா! அந்தப் பெண் சுரமஞ்சரி உங்கள் மாணவர் இளங்குமரன் மேல் உயிரையே வைத்திருக்கிறாள். உங்கள் மாணவரோ அந்தப் பெண்ணின் பெயரை எடுத்தாலே சீறி விழுகிறார். இளங்குமரனின் இந்த ஓவியத்தை வரைந்ததற்காக அவள் எனக்குக் கொடுத்த பரிசைப் பார்த்தாலே அவளுக்கு அவர் மேலிருக்கும் அன்பை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இதோ பாருங்கள்...” என்று சொல்லிவிட்டுத் தன் மடியிலிருந்த மணிமாலையை எடுத்து நீலநாக மறவருக்கு முன் நீட்டினான் ஓவியன்.
நீலநாகர் அதைக் கையில் வாங்கவில்லை. அவ்வளவாக விரும்பிப் பார்க்கவுமில்லை. ஏதோ சிறுபிள்ளை விளையாட்டைப் பார்த்துச் சிரிப்பது போல் மெல்லச் சிரித்தார்.
“தம்பீ! நீ உன்னுடைய கலைத்திறனைக் காட்டி அதற்குச் சன்மானம் பெற்று வாழ்கிறவன். உனக்கு எவ்வளவு அதிகப் பெறுமானமுள்ள பொருளைப் பரிசு கொடுக்கிறார்களோ, அதையே அளவுகோலாகக் கொண்டு மனிதர்களின் பண்பை அளந்து பார்க்கிறாய். நானாகவோ இளங்குமரனாகவோ இருந்தால் இத்தகைய பரிசுப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளவே இணங்கியிருக்க மாட்டோம். நம்முடைய திறமையைப் பாராட்டுகிறவர்கள் அப்படிப் பாராட்டுவதற்குத் தகுதியுடையவர்கள்தானா என்று சிந்திப்போம். பிறரிடமிருந்து பரிசு என்று எதையாவது வாங்கிக் கொண்டால் அது காரணமாகவே அவர்களுடைய சிறிய தகுதிகளும் நமக்கு மிகப் பெரியவையாகத் தோன்றத் தொடங்குகின்றன. நடுநிலை பிறழ்ந்து நமக்குக் கொடுத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு வசப்பட்டு விடுகிறது நம் மனம். ஏதாவது ஒரு பொருளைப் பெற்றுக் கொண்டு அதற்காக மனத்தைத் தோற்கக் கொடுப்பதைக் காட்டிலும் எதையுமே பெற்றுக் கொள்ளாமல் மனத்தை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லதென்று நாங்கள் நினைக்கிறோம்.”
அவருடைய சித்தாந்தம் மணிமார்பனுக்குப் புரியவில்லை. ஆனால் இளங்குமரனிடமிருந்து பிடிவாதமும், முரட்டுக் குணமும் யாரிடமிருந்து அவனுக்கு வந்திருக்க வேண்டுமென்று இப்போது புரிந்தது. இந்த மணிமாலையை இளங்குமரன் ஒரு முறை தன்னிடமிருந்து வாங்கிக் கொள்ள மறுத்ததாகச் சுரமஞ்சரி கூறியதும் நினைவு வந்தது.
“எனக்குப் பரிசு கொடுத்திருக்கிறாள் என்பதற்காக அந்தப் பெண் சுரமஞ்சரியை நான் புகழவில்லை ஐயா! இளங்குமரன் மேல் அவளுக்கு இருக்கும் அன்பு மெய்யானது. இல்லையானால் தன் தந்தை இளங்குமரனைத் தேடிப் பிடித்துச் சிறை செய்ய எண்ணியிருப்பதை என்னிடம் சொல்லி, ‘அவரை முன் எச்சரிக்கையோடு இருக்கச் செய்யுங்கள்’ என்று என்னை இங்கே அனுப்புவாளா?” என்று மணிமார்பன் மறுத்துக் கூறியதைக் கேட்ட பின்பும் அவர் அதை ஒப்புக் கொண்டதாகத் தெரியவில்லை.
“அப்படி இவர்கள் வந்து சிறைப்பிடித்துக் கொண்டு போகிற அளவு வாயில் விரலை வைத்தாலும் கடிக்கத் தெரியாத பருவத்துப் பிள்ளையல்ல அவன். ஒருவேளை அவனை இவர்கள் சிறை செய்தாலும் நாங்களெல்லாம் தூங்கிக் கொண்டிருக்க மாட்டோம்.”
அவருடைய இந்த உறுதிமொழிகளைக் கேட்டபின் இளங்குமரனைப் பற்றிய பயத்தையும் கவலையையும் விட்டுவிட்டு, தான் எப்படி ஊர் போய்ச் சேருவதென்ற சிந்தனையில் ஆழ்ந்தான் மணிமார்பன். மறுநாள் பொழுது விடிகிற வரை அந்த நகரத்தில் தங்கியிருந்து மணிமாலையை விற்றுப் பொற்கழஞ்சுகளாகக் கொண்டு போகவேண்டும் என்ற எண்ணம் இப்போது அவனுக்கு இல்லை. போது விடிவதற்குள் பாண்டிய நாட்டுப் பயணத்தை இருளோடு இருளாகத் தொடங்கிவிட வேண்டுமென்று எண்ணினான் அவன்.
தன்னையும் தன்னிடமிருக்கும் மணிமாலையையும் சேர்த்துக் கைப்பற்றி விடுவதற்கு கறுவிக் கொண்டு வந்த நகைவேழம்பர் நீலநாகமறவரிடம் தோற்றுப் போய்த் திரும்பியதோடு அடங்கிப் போய் இருந்து விடுவாரென்று அவனால் நினைக்க முடியவில்லை. இடைவழியில் எங்காவது மீண்டும் தன்னை அவர் மறித்துக் கொண்டு விட்டால் என்ன செய்வதென்ற பயம் அவனை வாட்டியது. சில நாட்களுக்கு முன்பு வரையிலாவது பூம்புகாரின் இந்திர விழாவுக்கு மதுரையிலிருந்து வந்தவர்கள் கூட்டம் கூட்டமாகத் திரும்பியிருப்பார்கள். அவர்களோடு சேர்ந்து போயிருக்கலாம். இப்போது எங்கே போய், யாரை வழித்துணை தேடுவது? இங்கிருந்து பாண்டிய நாட்டின் தலைநகரம் நினைத்தவுடன் போய்ச் சேர முடிந்த இடமில்லை. திருவரங்கத்தில் ஒருநாள், உறையூரில் ஒருநாள், தென்னவன் சிறுமலைத் தொடர்களைக் கடந்து திருமால் குன்றத்தில் ஒருநாள் என்று இடையிடையே ஓய்வுக்காகத் தங்கிப் பல நாட்கள் பயணம் செய்து வைகையின் வடகரையைக் காண வேண்டும்.
பயணத்தைப் பற்றிய தன் கவலையை நீலநாகமறவரிடம் வெளியிட்டான் அவன். “கவலைப்படாதே, மணிமார்பா! இந்த நகரில் இலவந்திகைச் சோலையின் மதிலுக்குப் பக்கத்தில் சைன சமயத்தைச் சேர்ந்த இல்லறத் துறவிகளாகிய சாவகர்கள் தங்கும் மடம் ஒன்று இருக்கிறது. அந்த மடத்திலிருந்து பாண்டிய நாட்டிற்குப் போகிறவர்களின் கூட்டம் அநேகமாக நாள்தோறும் புறப்படும். விடிவதற்கு முன்னாலேயே உன்னை அங்கே கொண்டு போய் விட்டுவிடுகிறேன். அவர்களோடு புறப்பட்டுச் செல்வது உனக்குப் பாதுகாப்பாக இருக்கும்” என்றார் நீலநாகமறவர்.
அடுத்த நாள் போது விடிவதற்கு நாலைந்து நாழிகைகள் இருக்கும் போதே தமது வழக்கம் போல் துயில் நீங்கி எழுந்துவிட்ட அவர் மணிமார்பனையும் எழுப்பி அழைத்துக் கொண்டு இலவந்திகைச் சோலைக்குப் புறப்பட்டார். அங்கே மணிமார்பன் மதுரை செல்வதற்கு வழித்துணை கிடைத்தது.
“மறந்து விடாதே, தம்பீ! எல்லையற்ற வாழ்க்கைக் கடலில் சந்தர்ப்ப அலைகள் மறுபடி உன்னையும், என்னையும், இளங்குமரனையும் சந்திக்கச் செய்யலாம், சந்திக்கச் செய்யாமலும் போகலாம். நீ வரைந்த இளங்குமரனின் ஓவியம் என்னிடம் இருப்பதால் அதைக் காணும் போதெல்லாம் உன் நினைவு வரும்” என்று விடைகொடுத்தார் நீலநாகர். ஓவியன் கண்ணில் நீர் நெகிழ அந்த கம்பீர மனிதரை நோக்கிக் கைக்கூப்பினான். பின்பு வழித்துணையாக வாய்த்த சாவகர்களோடு யாத்திரையைத் தொடங்கினான் மணிமார்பன்.
மணிமார்பனைச் சாவகர்களின் வழித்துணையோடு மதுரைக்கு அனுப்பிவிட்டு நீலநாகமறவர் புறவீதி வழியே ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். விடிவதற்கு இன்னும் நிறைய நேரம் இருந்தது. பகல் நேரத்தில் இது போன்ற பொது விதிகளில் பலரும் காண நடந்து சென்று பழக்கமில்லை அவருக்கு. அவருடைய வாழ்க்கை முறை தனிப்பட்டதாக இருந்ததனால் விலகியும், ஒதுங்கியும் வாழ வேண்டியிருந்தது. அவர் வீரர்களுக்குள் துறவியாகவும், துறவிகளுக்குள் வீரராகவும் விளங்கி வந்தார். எனவே ஒளி பரவி விடிவதற்குள் பொது வீதிகளைக்கடத்து சென்று ஆலமுற்றத்தை அடைந்துவிடவேண்டும் என்று வேகமாக நடந்துகொண்டிருந்தார் அவர். வானத்தில் விடிவெள்ளி மின்னிக் கொண்டிருந்தது. விடிகாலையின் அமைதியில் தூரத்தே கடற்கரையின் அலை ஒசை ஒடுங்கியும், ஒடுங்காமலும் விட்டு விட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. தென்னை ஒலைகளும் வேறு மரங்களின் இலைகளும் வைகறைக் காற்றில் சலசலவெனஒலியெழுப்பி இலக்கணத்தில் அடங்காத தொரு அழகிய மொழியைப் பேசிக் கொண்டிருந்தன. கொண்டைச் சேவல்கள் வீடுகளின் மாடங்களில் ஏறி விடிவதற்குமுன்பே விடிவுக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. வாயிற்புறங்களைத் தெளிப்பதற்காக வந்திருந்த பெண்களின் கைவளைகளும் காற்சிலம்புகளும், ‘இந்த வீதியின் இருளில் கண்ணுக்குப் புலப்படாமல் கந்தர்வப் பெண்கள் நடனமாடிக் கொண்டிருக்கிறார்களோ’ என்று நினைப்பதற்கேற்ற விதத்தில் கொஞ்சிக் கொஞ்சி ஒலித்தன.
தம்முடைய வழக்கப்படி ஒவ்வொரு நாளும் இந்த நேரத்தில் ஆலமுற்றத்துக் கடலருகில் நடந்து கொண்டிருப்பார் நீலநாக மறவர். கடற்கரையில் அலையோசையும் கரையோரத்துத் தாழம்புதரில் மடல்கள் காற்றில் மோதி அடித்துக் கொள்வதும் தவிர வேறு ஒசைகளை அவர் கேட்டதில்லை. இன்றோ நடந்துசெல்லும் இடமும், சூழ்நிலையும் ஒலிகளும் வழக்கத்துக்கு மாறான புதுமைகளை அவர் உணரும்படி செய்தன. நீலநாகமறவர் புறவீதியிலிருந்த வீரசோழியவளநாடுடையார் விட்டு வாயிலுக்கு எதிரே நடந்து சென்றபோது, அங்கே ஒலித்துக் கொண்டிருந்த வளையொலியும், சிலம்பொலியும் சில கணங்கள் ஒலிக்காமல் நின்றன.
“தாத்தா!” என்று மிக இனிய பெண்குரல் ஒன்று அந்த இடத்திலிருந்து கூவியழைத்தது. அவர் திரும்பி நின்று பார்த்தார். நாள் புலரும் நேரத்தின் வைகறை அழகுகளேஒன்றுசேர்ந்து ஒரு சின்னஞ்சிறு பெண்ணாகிக் குடம் நிறைய நீருடன் கை நிறைய ஏந்திக்கொண்டு நிற்பது போலத் தூக்கத்தில் சரிந்த குழல் துவள, குழலில் சரிந்த பூவுந் துவளப் பெண்ணொருத்தி நின்றாள்.
அரைகுறை இருளில் முகம் நன்றாகத் தெரியாமல், “யார் அம்மா நீ?” என்று நின்ற இடத்திலிருந்தே வினவினார் நீலநாகமறவர்.
“நான்தான் தாத்தா, வீரசோழிய வளநாடுடையாரின் மகள் முல்லை” என்று பதில் சொல்லிக்கொண்டு அவருக்கு அருகில் வந்தாள் அந்தப் பெண். குடத்துள் நீர்த்தரங்கம் குலுங்கி ஒலித்தது.
“என்னவேண்டும் உனக்கு?”
“என் தந்தை இன்று காலை உங்களைக் காண்பதற்காகப் படைக்கலச், சாலைக்கு வரவேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தார்.”
“என்னகாரியமாகப் பார்க்க வேண்டுமோ?”
“உங்கள் படைக்கலச் சாலையில் இருக்கிறாரே அருட்செல்வ முனிவரின் வளர்ப்புப் பிள்ளை, அவரைப் பற்றி உங்களிடம் ஏதோ பேசுவதற்காக, உங்களைப் பார்க்க வேண்டுமென்று சொல்லிக்கொண்டிருந்தார்.”
“ஆகா! நன்றாகப் பேசலாம். நான் இப்போது ஆலமுற்றத்துக்குத்தான் போய்க்கொண்டிருக்கிறேன். சிறிது நேரங் கழித்து உன் தந்தையைப் புறப்பட்டு வரச் சொல்லேன்” என்றார் நீலநாகமறவர். அவரிடமிருந்து இளங்குமரன் அப்போது எங்கிருக்கிறான் என்ற செய்தியை வரவழைத்து விடலாமென்றுதான் முல்லை அவரோடு பேச்சுக்கொடுத்தாள். ஆனால் அவருடைய மறுமொழிகள் அவளுக்கு ஏமாற்றத்தைத்தான் தந்தன. அவரோ ஒளி பரவுவதற்குள் திரும்பிப் போய்விடவேண்டுமென்ற அவசரத்தில் இருந்தார். கேள்வியைச் சிறிது நெருக்கமாகத் தொடுத்தால் தான் எதிர்பார்க்கிற பதில் கிடைத்தாலும் கிடைக்கலாமென்று எண்ணியவளாய், “உங்களை அமரச் செய்து இந்த வீதி வழியாக ‘அவர்’ தேரைச் செலுத்திக்கொண்டு போனபோதுகூட நான் பார்த்தேன் தாத்தா” என்று சிறு குழந்தை பேசுவதுபோல பன்னிப் பன்னிப் பேசினாள் முல்லை.
அப்படியும் அவரிடமிருந்து அவள் எதிர்பார்த்த செய்தி வரவில்லை. அதற்குள், வாயிலில் பெண் யாருடனோ பேசுகிற குரல் கேட்டு வளநாடுடையாரே வெளியே வந்துவிட்டார். “விடிந்ததும் விடியாததுமாக யாரோடம்மா பேசிக்கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டவாறே வெளியே வந்த தந்தையை எதிர்கொண்டு ஓடிச் சென்று, “இதோ ஆலமுற்றத்து தாத்தா வந்திருக்கிறார் அப்பா” என்று உற்சாகமாகக் கூவினாள் முல்லை. ‘ஆலமுற்றத்துத் தாத்தா’ என்று தங்கை கூறிய குரல் கேட்டுக் கதக்கண்ணனும் உள்ளேயிருந்து விரைந்து வந்தான். வராதவர் வந்திருப்பதைக் கேள்விப்பட்ட ஆர்வம் அவனுக்கு.
அதன்பின் நீலநாகமறவரால் இத்தனை பேரையும் மீறிக் கொண்டு உடனே அங்கிருந்து போக முடியவில்லை.
“இளங்குமரனை நீங்கள் திருநாங்கூருக்கு அழைத்துக் கொண்டு போயிருப்பதாகக் கதக்கண்ணன் படைக்கலச் சாலையிலிருந்து தெரிந்து கொண்டு வந்து சொன்னான். இன்று நீங்கள் வரும் போது உங்களோடு அவனையும் திரும்ப அழைத்து வந்து விட்டீர்களல்லவா? நேற்றிலிருந்து இந்தப் பெண் முல்லைக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அந்தப் பிள்ளையோடு வம்புப் பேச்சுப் பேசி அவனைச் சண்டைக்கு இழுப்பது இவளுக்கு விருப்பமான பொழுதுபோக்கு. இப்போது சில நாட்களாக அவன் இந்தப் பக்கமே வரவில்லை. அதனால் முல்லைக்கு அவனிடம் பெரிய கோபமே மூண்டிருக்கிறது” என்று வளநாடுடையார் தம் ஆவல் மேலீட்டால் பேசிக்கொண்டேயிருந்தார்.
நீலநாகமறவர் அமைதியாகவும், அழுத்தமாகவும் இருந்தார். அவரிட மிருந்து வார்த்தை பெயரவில்லை. அவர் என்ன பதில் கூறப் போகிறாரென்று அறிவதற்காகவே முல்லையும் அங்கிருந்து போகாமல் ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டிருந்தாள். வளநாடுடையார் விடாமல் மேலும் பேச்சை வளர்த்தார்.
“திருநாங்கூருக்குப் போயிருக்கிறீர்கள் என்று கேள்விபட்டவுடன் உங்கள் ஆசிரியர்பிரானாகிய பூம்பொழில் நம்பியடிகளின் நினைவுதான் எனக்கு உண்டாயிற்று. நீங்களும், இளங்குமரனும் அடிகளைக் கண்டு வணங்கி விட்டுத்திரும்பியிருப்பீர்கள்.”
“அடிகளைக் காண்பதற்குத்தான் போயிருந்தோம். ஆனால் திரும்பியது நான் மட்டும்தான், வளநாடுடையாரே!”
“ஏன்? இளங்குமரன் வரவில்லையா?”
“இல்லை! அவன் இன்னும் சிறிது காலத்திற்கு எங்கும் வரமாட்டான். நாங்கூர் அடிகள் தமது ஞானத்தைப் பயிர் செய்யும் விளைநிலமாக அவனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.”
என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அப்படியே திகைத்துப்போய் இருந்தார் வளநாடுடையார். பிள்ளைப் பருவத்திலிருந்து வேலும், வாளும் சுமந்து வீரனாகத் தன்னோடு தோழமை கொண்டு திரிந்த இளங்குமரன் வேறு வழிக்குத் திரும்பி விட்டான் என்பதைக் கேட்டதும் கதக்கண்ணனுக்கு என்னவோ போலிருந்தது. “எந்தத்துறையிலும் எல்லை மீறிய ஆழத்துக்கு உணர்வு பூண்டிருப்பவர்கள் விரைவில் இப்படி மாறிவிடுவார்கள்போலும்” என்று எண்ணினான் அவன். முரட்டுப்பிள்ளையாய் அடக்க முடியாத காட்டாறு போலக் காவிரிப்பூம்பட்டினத்து வீதிகளில் தன்னையொத்த இளைஞர்களுடன் சுற்றித் திரிந்த பழைய இளங்குமரனை நினைத்தான். கடைசியில் நீராட்டு விழாவுக்குப் போன தினத்தன்று உலக அறவியிலும், இலஞ்சி மன்றத்திலும் மனமுருகி நின்ற இளங்குமரனை நினைத்தான். ‘என்னைப் போல் அகன்று போகும் உணர்ச்சி கொண்டவர் எப்படியாவது வாழ்ந்து கொண்டே இருப்போம். ஆனால் இளங்குமரனைப்போல் ஆழ்ந்து போகும் உணர்ச்சி கொண்டவர்கள் ‘இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்ற எண்ணத்தால் தாங்கள் வாழும் உயரத்தை மேலே மேலே ஓங்கச் செய்யாமல் இருக்கமாட்டார்கள் என்று தெரிகிறது’ என நினைத்தான் கதக்கண்ணன்.
‘இளங்குமரன் சுரமஞ்சரியின் மாளிகைக்குப் போயிருப்பானோ?” என்று நினைத்து நிம்மதியிழந்திருந்த முல்லை இப்போது இதைக் கேட்டு அதிர்ச்சியே அடைந்தாள்.
“அவன் திருநாங்கூருக்குப் போனது உங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி, தரவில்லையென்று தோன்றுகிறது” என்று அவர்களிருந்த மௌன நிலையைக் கண்டு கூறினார் நீலநாகர்.
“இங்கே அடிக்கடி வந்து போய்ப் பழகிக்கொண்டிருந்த பிள்ளையைத் திடீரென்று இனிமேல் இந்தப் பக்கம் காண முடியாதென அறியும் போது, மனத்திற்குத் துன்பமாக இருக்கிறது. வேறு ஒன்றுமில்லை.”
சற்றே உடைந்துதளர்ந்த குரலில் இவ்வாறு கூறினார் வளநாடுடையார்.
“எனக்கு நேரமாகிறது. நான் புறப்படுகிறேன். முடிந்தால் மாலையில் ஆலமுற்றத்துப் பக்கம் வாருங்கள், பேசலாம்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் நீலநாகர்.
வளநாடுடையாரும், நீலநாகமறவரும் வேண்டிய உறவும் நெருக்கமும் உள்ளவர்களானாலும் மனத்தினாலும் நோக்கங்களாலும் அடிப்படை வேறுபாடுடையவர்கள். வளநாடுடையார் வீரருக்குள் வீரராக மட்டும் வளர்ந்து பெருமை பெற்றவர். நீலநாகரோ வீரருக்குள் மாவீரராகவும் துறவியாகவும் உயர்ந்தவர். நாங்கூர் அடிகளை அடைந்தது இளங்குமரனின் நல்ல காலம் என்று அவர் நினைத்ததைப் போல் வளநாடுடையாராலோ, கதக்கண்ணனாலோ, முல்லையாலோ நினைக்க முடியாததற்கு இவர்கள் இயல்பான மானிட நிலைகளைக் கடந்து சிந்திக்க முடியாதவர்களாக இருந்தது தான் காரணம்.
‘இந்த மனிதர் என்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் இளங்குமரனைத் திருநாங்கூர் பூம்பொழிலிற் கொண்டு போய்ச் சேர்த்து விட்டாரே? சோழ நாட்டிலேயே வலிமைமிக்க வீரன் என்று பேர் வாங்கும்படி அவனை ஆக்கி விட வேண்டுமென்று நான் கனவு கண்டதெல்லாம் இனி வீணாக வேண்டியதுதானா? வருகிற புத்த பெளர்ணமியன்று அவனை மணிபல்லவத்துக்கு அழைத்து வருவதாக அருட்செல்வரிடம் தா" நான் வாக்களித்திருப்பது என்ன ஆவது? என் பெண்ணை அவனுக்கு மணம் செய்து கொடுக்க எண்ணியிருக்கும் எண்ணம் என்ன ஆவது?’ என்று மனதுக்குள் நினைத்துக் குழப்பமடைந்து கொண்டிருந்தார் வளநாடுடையார்.
முல்லையை அவள் நின்று கொண்டிருந்த இடத்தில் காணாததால் கதக்கண்ணன் வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்துக்குச் சென்று தேடலானான். புற வீதியின் பின்னால் மரங்களடர்ந்த வனத்தின் நடுவே காவிரியிலிருந்து பிரிந்து வரும் வாய்க்கால் ஒன்று உண்டு.
முல்லையைக் கதக்கண்ணன் தேடிச் சென்றபோது நன்றாக விடிந்துவிட்டது. அவள் காவிரி வாய்க்காலின் கரைமேல் குடத்தோடு அமர்ந்து தனிமையில் மெல்ல அழுது கொண்டிருந்ததைக் கண்டான் அவன். தங்கையின் நிலை அவனுக்குப் புரிந்தது.
“எதற்காக அழுகிறாய், முல்லை?”
“அழுகிறேனா? இல்லையே!” என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவனிடம் தன்னுணர்வை மறைக்க முயன்றாள் அவள். “இல்லையாவது! என்னிடம் ஏன் மறைக்கிறாய்? நீ அழுவதன் காரணம் எனக்குத் தெரியும்!” என்று சொல்லியபடி ஆதரவாகத் தங்கையின் அருகில் அமர்ந்தான் அவன். முல்லை தலைகுனிந்தாள். அவளுடைய கண்ணீரின் கடைசி இரண்டு துளிகள் காவிரிக் காலில் விழுந்து கலந்தன.
“கலக்கமடையாதே, முல்லை! உன்னை நானே திருநாங்கூருக்கு அழைத்துப் போகிறேன். நாம் இருவரும் இளங்குமரனைச் சந்திக்கலாம்” என்று தமயனின் குரல் அவள் காதருகே ஆறுதலாக ஒலித்தது.
தந்தையார் உடன் அனுப்பியிருந்த ஊழியன் நிழலைப் போல் விடாமல் அருகிலேயே இருந்ததனால் நெய்தலங் கானலின் அழகிய கடற்கரையில் சுரமஞ்சரியும், வசந்தமாலையும் தங்களுக்குள் மனம் விட்டுப் பேசுவதற்காகத் தவித்துக் கொண்டிருந்தவற்றில் எதையும் பேச முடியவில்லை.
சுரமஞ்சரி இளங்குமரனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள். பெண்ணின் மனம் சந்தனப் பேழையைப் போன்றது. சந்தனப் பேழையில் சந்தனம் இருந்தாலும் மணக்கும். சந்தனம் இல்லாவிட்டாலும் அது இருந்ததற்கு அடையாளமான மணம் கமழும். மனத்துக்குப் பிரியமானவர் அருகில் இருந்தாலும் விலகி இருந்தாலும் அவரைப் பற்றிய இனிய நினைவுகளை எண்ணாமலிருக்கப் பெண்ணால் முடிவதில்லை. சுரமஞ்சரியின் மனத்திலும் சந்தனப் பேழையைப் போல் இளங்குமரனின் நினைவுகள் மணந்தன.
‘பின்னால் துரத்திக் கொண்டு சென்ற நகைவேழம்பரால் ஒவியனுக்கு ஒரு துன்பமும் ஏற்பட்டிருக்காததனால் அவரிடம் தெரிவிப்பதற்கென நான் சொல்லியனுப்பிய செய்தி அவரை எட்டியிருக்கும்’ என்று நினைத்தாள் அவள்.
“நான் இடைவிடாமல் இளங்குமரனையே நினைத்துக் கொண்டிருப்பது ஏன்? எப்படி இந்தப் பித்துக் கொண்டேன்?” என்று தனக்குத் தானே ஒரு கணம் விலகி நினைக்கும்போது அவளுக்கு வெட்கமாகக்கூட இருந்தது.
‘தன்னுடைய நெஞ்சத்தில் எனக்குச் சிறிதும் இடமளிக்காமல் என்னைக் கடிந்து ஒதுக்கும் அவர் என்னுடைய நெஞ்சில் புகுந்து இப்படி நினைவுகளாகத் தங்கி வேதனைப் படுத்துகிறாரே; வெட்கமில்லையா அவருக்கு?’ என்று காதலனைப் பிரிந்த காதலி துயரப்படுவதாக வள்ளுவர் பெருமான் எழுதியுள்ள அழகிய குறள் ஒன்று சுரமஞ்சரிக்கு நினைவு வந்தது.
“தம்நெஞ்சத்(து) எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.”
இந்தக் குறளின் தலைவியாகத் தன்னையும், தலைவனாக இளங்குமரனையும் கற்பனை செய்து பார்த்துக் கொண்டாள் சுரமஞ்சரி, கற்பனை மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் அது உண்மையல்ல; கற்பனை மட்டுமே என்பதால் துயரமும் அதிலிருந்தே பிறந்தது. ‘என்னைப் பற்றி நினைத்து மகிழாதவருக்கு என் நினைவில் மட்டும் அடிக்கடி நுழைய உரிமை ஏது?’ என்று குறளில் வந்ததைப் போல் எண்ணினாலும் அவரைக் கடிந்து கொள்ளத் தனக்கு என்ன உரிமையிருக்கிறதென்ற வினாவும் அவள் மனத்திலேயே எழுந்தது. அவர்கள் உட்கார்ந்திருந்த அதே நெய்தலங் கானற் கரையின் கோடியில்தான் காவிரி கடலோடு கலக்கும் இடமும் இருந்தது. அந்த இடத்தில் சோமகுண்டம், சூரிய குண்டம் என்று இரண்டு ஏரிகளும் அவற்றின் கரையில் காமவேள் கோட்டம் என்னும் கோயிலும் அமைந்திருந்தன. இந்தப் பிறவியில் இன்பத்தையும் மறுமையில் போக பூமியையும் தரக்கூடிய புண்ணியப் பயன் வாய்ந்த இந்த ஏரிகளுக்குப் பூம்புகார் மக்கள் இருகாமத் திணை ஏரி என்று பெயர் வழங்கினார்கள். மனம் விரும்பிய நாயகனை அடைவதற்கும், அடைந்த நாயகனைப் பிரியாமல் இருப்பதற்கும், இந்த ஏரிகளில் நீராடிக் காமவேள் கோட்டத்தை வணங்கி வலங்கொண்டு வழிபடுவது பூம்புகார்ப் பெண்களின் வழக்கமாயிருந்தது. இதனால் இருகாமத்திணை ஏரிகளின் கரையிலும் காமவேள் கோட்டத்திலும் இளம் பெண்களின் பெருங்கூட்டத்தை எப்போதும் காணலாம். இரண்டு பிறவிகளிலும் நுகர்வதற்குரிய ஆசைகளை இணைத்தலால் இருகாமத்து இணை ஏரி என்ற பெயரைத் தாங்கிக் கொண்டிருக்கும் இந்த இடத்துக்கு இதற்கு முன் சுரமஞ்சரி பல முறை சென்றிருக்கிறாள். ஆனால், தன் மனத்துக்குள் ஒரு விருப்பத்தையோ, அந்தரங்கமான குறிக்கோளையோ அமைத்துக் கொண்டு அதற்கு வேண்டுதலாக இதுவரை அவள் சென்றதில்லை. இப்போது அப்படிப் போக வேண்டிய அவசியம் வந்திருப்பதை அவள் உணர்ந்தாள். நீராடியும், வலம் வந்தும், வழிபட்டும், இன்னொருவருடைய மனத்தை நம் பக்கம் இழுத்து விடுவதற்கு இயலுமோ, இயலாதோ, அப்படிச் செய்கின்ற சடங்குகளால் செய்யப்படுகிற செயலின் மேல் நமக்குள்ள பக்தியும் சிரத்தையும் வளர்ந்து விடுகிறது. அதற்காகவாவது எல்லாரையும் போல நானும் அவற்றை விட்டு விடாமல் செய்ய வேண்டும்’ என்று மனத்துக்குள் முடிவு செய்து கொண்டாள் சுரமஞ்சரி.
“வந்து வெகு நேரமாகிவிட்டதே, புறப்படலாமா?” என்று வசந்தமாலை மாளிகைக்குத் திரும்புவதை நினைவூட்டினாள்.
“இப்போது திரும்பலாம்; ஆனால் நாளைக்கு மறுபடியும் நாம் இந்தப் பக்கமாக வரவேண்டிய காரியமிருக்கிறது” என்று கூறிக்கொண்டே சுரமஞ்சரி எழுந்தாள்.
இருவரும் தேரில் ஏறிக்கொண்டதும் ஊழியன் தேரைச் செலுத்தினான். மணிகளை ஒலித்துக் கொண்டு தேர் விரைந்தது. சுரமஞ்சரியும், வசந்தமாலையும் மாளிகையை அடைந்தபோது முன் கூடத்தில் தந்தையார் அமர்ந்திருந்தார். மாலையில் பாண்டிய நாட்டுக் கொற்கையிலிருந்தும், சேரநாட்டு விழிஞத்திலிருந்தும் வாணிகக் கப்பல்கள் வந்து துறை சேர்ந்திருந்தன போலும். தந்தையாருக்கு முன்னால் முத்துக் குவியலும் முற்றிப் பருத்து நீண்ட யானைத் தந்தங்களும் காட்சியளித்தன. அவற்றைத் துறைமுகத்திலிருந்து சுமந்து வந்த கப்பல் ஊழியர்கள் சுற்றிலும் அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டிருந்தார்கள். தந்தையார் அவர்களிடம் ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார்.
இவற்றில் ஒன்றும் புதுமை இல்லை. அடிக்கடி அந்த மாளிகையில் தென்படுகிற காட்சிதான். சுரமஞ்சரியும், வசந்தமாலையும் உள்ளே போய்த் தங்களுக்காகக் காத்திருந்த தாயுடனும், வானவல்லியுடனும் உண்பதற்குச் சென்றார்கள்.
“இன்றைக்கு முத்துக் கப்பல் வந்திருக்கிறது அம்மா! நல்ல முத்துக்களாகத் தேர்ந்தெடுத்து எனக்கு ஒரு மாலை செய்துகொள்ளப் போகிறேன்” என்று வானவல்லி தாயிடம் கூறினாள்.
“உனக்குத்தான் நாலைந்து முத்து மாலைகள் இருக்கின்றனவே. இன்னும் எதற்கு?”
“முத்துக்களில் ஒவ்வொன்றும் ஒரு சாதி அம்மா. இந்தக் கப்பலில் இன்றைக்கு வந்திருக்கிற முத்துக்கள் எல்லாமே நன்றாக விளைந்தவை. பொதிகளை இறக்கிப் பிரித்துக் குவித்தவுடனே நான் போய்ப் பார்த்தேன்.”
“முத்துக்களைப் புகழ்ந்து நீ இவ்வளவு பேசுகிறாயே வானவல்லி! உன் பக்கத்தில் அமர்ந்து உண்ணுகிற சுரமஞ்சரியும் அவள் தோழியும் ஏன் இப்படிப் பேசாமல் அமைதியாயிருக்கிறார்கள்?” என்று சொல்லி நகைத்துக் கொண்டே சுரமஞ்சரியையும் வசந்தமாலையையும் உற்றுப் பார்த்தாள் அன்னை.
“சுரமஞ்சரிக்கு இப்போது எதற்குமே நேரமில்லையம்மா! முன்பெல்லாம் மாலை வேளைகளில் மேல் மாடத்துக்குச் சென்று என்னை வேய்ங்குழல் வாசிக்கச் சொல்லி எதிரே அமர்ந்து நேரம் போவது தெரியாமல் கேட்பாள். இப்போதோ அவளும் அவள் தோழியும் என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே வெளியே கடற்கரைக்கும், காவிரித்துறைக்கும் போகத் தொடங்கிவிட்டார்கள். திடீரென்று மெளனமாகி விடுவதற்கும், திடீரென்று சிரிப்பதற்கும் அவளுக்கு ஏதேதோ புதுப்புதுக் கவலைகளும், புதுப்புது மகிழ்ச்சிகளும் ஏற்பட்டிருக்கின்றன அம்மா” என்று முத்து மாலையில் தொடங்கிய பேச்சு சுரமஞ்சரியைப் பற்றித் திரும்பியது.
தாங்கள் பழகுகிற முறையில் தாயும் சகோதரியும் மேலும் வேறுபாடு காணலாகாதே என்பதற்காகச் சுரமஞ்சரி அவர்களோடு சிரித்துப் பேச முயன்றாள். தோழியும் பேசினாள். ஆனால் சுரமஞ்சரியும் தோழியும் பேசிய பேச்சிலும், சிரித்த சிரிப்பிலும், இயற்கையான உற்சாகம் இல்லை என்பதைத் தாயினால் தெரிந்து கொள்ள முடிந்தது. ‘இந்தப் பெண் எதையோ மனத்துக்குள் வைத்துக் கொண்டு கலங்குகிறாள்’ என்பது பெற்ற உள்ளத் துக்குப் புரிந்தது. சமயம் பார்த்துப் பெண்ணிடமிருந்து அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று எண்ணினாள் தாய். அந்த மாளிகையில் அவளுக்கு இருக்கிற ஒரே மன நிறைவு, நம்முடைய பெண்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்பதுதான்! அதை இழக்க அந்தத் தாயுள்ளம் விரும்பாததில் வியப்பில்லை. தான் பெற்றவர்களின் மகிழ்ச்சியிலிருந்து தன்னுடைய மகிழ்ச்சியைத் தேடிப் பெறுகிறவள் தாய். அவள் தேடுகிற உள்ளங்களிலெல்லாம் மகிழ்ச்சியில்லையானால் அவளுக்கும் மகிழ்ச்சி இல்லை.
உணவு முடிந்ததும் முத்துக் குவியலிலிருந்து நல்முத்துக்களைப் பொறுக்கி எடுக்கத் தாயையும் துணைக்கு அழைத்தாள் வானவல்லி. தான் மட்டும் தனியாகப் போனால் தந்தையார் சீறி விழுவார் என்பது அவளுக்குத் தெரியும். தாயோ சுரமஞ்சரியையும் வசந்தமாலையையும் உடனழைத்தாள்.
“நீயும் வா, சுரமஞ்சரி! உனக்கும், உன் தோழிக்கும் கூட மாலைக்கு முத்துக்கள் தேர்ந்தெடுக்கலாமே! ஏன் இப்படி மகிழ்ச்சியில்லாமல் காணப்படுகின்றாய்? என்னிடம் மனம் திறந்து சொல்லக்கூடாதா?” என்று கேட்டாள் தாயார்.
“அதெல்லாம் ஒன்றுமில்லையம்மா. களைத்துப் போயிருப்பதால் உங்களுக்கு அப்படித் தோன்றுகிறேன் போலிருக்கிறது. நீங்கள் போய் முத்துக்களைப் பாருங்கள். என்னிடம் வேண்டிய முத்து மாலைகள் இருக்கின்றன. நான் உறங்கப் போகிறேன். தளர்ச்சியாயிருக்கிறது” என்று கூறித் தோழியோடு தன் மாடத்துக்குப் புறப்பட்டு விட்டாள் சுரமஞ்சரி.
மாடத்தை அடைந்து தானும், தன் தலைவியும் தனிமை பெற்றதும் வசந்தமாலை, “ஏனம்மா, நாளைக்கு மறுபடியும் நெய்தலங்கானலுக்குப் போக வேண்டுமென்றீர்களே? எதற்காக அங்கே போக வேண்டும்?” என்று கேட்டாள்.
“கடற்கரையிலேயே உன்னிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்தேனடி, வசந்தமாலை! தந்தையார் தேர் ஓட்டுவதற்காக நம்மோடு அனுப்பியிருந்த ஊழியன் நாம் எப்போது வாய்திறந்து பேசப்போகிறோம் என்று செவிகளைக் கூர்மையாக்கிக் கொண்டு பக்கத்திலேயே பழி கிடந்தான், அதனால் அந்தரங்கமாக ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை. நாளைக்குக் காலையில் விடிவதற்கு முன்பே துயிலெழுந்து யாரிடமும் சொல்லிக் கொள்ளர்மல் நடந்தே நெய்தலங்கானலுக்குப் புறப்பட்டு விட வேண்டும். கதிரவன் உதயமாவதற்கு முன்பே, சோம குண்டம், சூரிய குண்டம், இரண்டு ஏரிகளிலும் நீராடிக் காமன் கோவிலை வலம் வந்து வணங்கிவிட்டுப் போனது தெரியாமல் மாளிகைக்குத் திரும்பிவிட வேண்டும்.”
இதைக் கேட்டு வசந்தமாலை நளினமாகச் சிரித்தாள். சிரித்துக்கொண்டே சுரமஞ்சரியின் கண்களைப் பார்த்தாள்.
“அந்த இரண்டு ஏரிகளிலும் பொதுவாக எல்லாரும் நீராடுவதில்லையே, அம்மா! மனத்துக்குள் ஏதாவதொரு ஆசையை உருவேற்றிக் கொண்டு அது விளையவேண்டு மென்று அல்லவா அங்கு நீராடிக் காமன் கோவிலை வலம் வருவார்கள்? உங்களுக்கும், எனக்கும் இப்போது உடனே அந்த ஏரிகளில் நீராடித் தீரவேண்டிய அவசரம் ஒன்றுமில்லையே?”
“அப்படியானால் நீயும், நானும் ஆசைகளே இல்லாத மனத்தையுடையவர்களென்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா வசந்தமாலை?”
“அதற்குச் சொல்லவில்லையம்மா. இருகாமத்திணை ஏரியில் நீராடிக் காமன் கோவிலை வலம் வருகிற ஆசை வேறு வகையைச் சேர்ந்தது. அங்கே நம்மைக் காண்கின்றவர்கள் குறும்பு பேசி நகைப்பார்கள்.”
“குறும்புப் பேச்சுக்கும் நகைப்புக்கும் பயந்து நாணுவதாயிருந்தால் எந்தப் பெண்ணும் அங்கே போகாமல் அல்லவா இருக்க வேண்டும்? பொழுது புலர்ந்தால் நகரில் உள்ள பெண்களின் கூட்டமெல்லாம் அங்கேதான் போய்க் கூடுகிறது.”
வசந்தமாலை பதில் கூறாமல் சிரித்துக் கொண்டே தலைவியின் மேல் பதியவிட்ட பார்வையை மீட்காமல் இருவிழிகளையும் மலர விரித்துப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அந்தப் பார்வை தாங்காமல் சுரமஞ்சரி நாணிக் குழைந்தாள்.
“என்னடி வசந்தமாலை? எதற்காக இப்படிப் பார்க்கிறாய்?”
“ஒன்றுமில்லை! உங்களுடைய ஆசைகளிலும், தோற்றத்திலும் புதுமைகள் பிறந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறேன் அம்மா! நீங்கள் எவ்வளவோ மாறிவிட்டீர்கள். உங்களுடைய பிடிவாதமான உறுதிகளையும், செருக்கையும், எங்கேயோ தோற்கக் கொடுத்துவிட்டீர்கள்.”
இதைக் கேட்டு சுரமஞ்சரி மேலும் நாணமடைந்தாள். அவள் கைகள் பக்கத்தில் வைத்திருந்த பூக்குடலையிலிருந்த ஒரு செந்தாமரைப் பூவை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தன. தாமரைப் பூவின் மெல்லிளஞ் செவ்விதழ்களுக்கும் அவளுடைய கைகளுக்கும் வேறுபாடு தெரியாத விந்தை எழிலைப் பார்த்துக் கை எது தாமரைப் பூ எது என்று தெரியாமல் மயங்கிக் கொண்டிருந்த வசந்த மாலை விரல்களிலிருந்த மோதிரங்களைக் கொண்டு கையை அடையாளம் கண்டாள். தன் தலைவியிடம் வியந்து கூறலானாள் அவள்:
“கமலத்தைப் பற்றியிருக்கும் இந்தக் கர கமலங்களைப் பிடிக்கப் போகிறவர் பாக்கியசாலியாகத்தான் இருக்க வேண்டும் அம்மா.”
“இல்லையே தோழி! அந்தப் பாக்கியசாலி இந்தக் கைகளையும் உதறிவிட்டுச் செல்கிற கல்நெஞ்சுக்காரராக அல்லவா இருக்கிறார்?” என்று கூறிப் பெருமூச்சு விட்டாள் சுரமஞ்சரி.
அப்போது கீழே மாளிகையின் முன்புறத்தில் ஒரு நாளுமில்லாத புதுமையாய் நகைவேழம்பர், தந்தையாரிடம் இடிமுழக்கம் போன்ற குரலில் உரக்கப் பேசும் ஓசை மேன்மாடத்தையும் எட்டியது. தந்தையாரின் பதில் குரல் கேட்கவில்லை. ஆனால் எல்லை கடந்து சீறி ஒலிக்கும் நகைவேழம்பரின் குரலோ மாளிகையையே அதிரச் செய்து கொண்டிருந்தது.“இந்த இரவு நேரத்தில் இவர் எதற்காக இப்படிப் பேய்க் கூப்பாடு போடுகிறார்? யாருடைய குடி முழுகி விட்டது இப்போது? என் தந்தையை எதிர்த்துப் பேசுகிற அளவுக்கு இவரிடம் துணிவு வளர்ந்து விட்டதா? கீழே போய் என்னவென்று பார்த்து வா, வசந்தமாலை!” என்று தன் தோழியை அனுப்பினாள் சுரமஞ்சரி. தானும் தன் தோழியும் பேசிக் கொண்டிருந்த பேச்சின் இனிய நினைவுகளிலிருந்து கீழே எழுந்த கூப்பாடு தங்களைக் கலைத்து விட்டதே என்ற வருத்தத்தால் நகைவேழம்பர் மேல் சுரமஞ்சரிக்கு ஏற்கெனவே இருந்த சினம் பெரிதாய் மூண்டது.
கீழே சென்ற வசந்தமாலை சிறிது நேரத்தில் திரும்பி வந்து கூறினாள்:
“பிரளய காலமே முன்னால் வந்து சீறிக் கொண்டு நிற்பதுபோல் உங்கள் தந்தையாருக்கு முன் கூப்பாடு போட்டுக் கொண்டு நிற்கிறாரம்மா நகைவேழம்பர். அவரைப் பார்க்கவே பயங்கரமாயிருக்கிறது. எங்கேயோ செம்மையாகத் தோல்வியடைந்து பூசைக்காப்பு வாங்கிக் கொண்டு வந்திருப்பார் போலிருக்கிறது. அடிபட்ட புலி போலச் சீற்றம் கொண்டு அலைபாய்கிறார். இவ்வளவுக்கும் அசைந்து கொடுக்காமல் உங்கள் தந்தையார் கட்டுப்பட்டு அடங்கி நிற்கிறார். அந்த அரைக்குருட்டு அவலட்சணத்துக்குப் பணிந்து பேசுகிறார்.”
“என்ன அநியாயமடீ இது? நான் போய்ப் பார்க்கட்டுமா?” என்று கேட்டாள் சுரமஞ்சரி.
“உங்களால் பார்க்க முடியாதம்மா! தந்தையார் அவரை இழுத்துக் கொண்டு தமது அந்தரங்க மண்டபத்துக்குப் போய்க் கதவை அடைத்துவிட்டார்.”
“ஐயையோ! அந்த ஒற்றைக்கண் வேங்கை தனிமையில் தந்தையாரை என்ன செய்தாலும் கேள்வி கேட்பார் இல்லையே?” என்று பதறினாள் சுரமஞ்சரி.
“என்ன ஆனாலும் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை அம்மா! அவர்கள் இருவருமே எவரையும் நெருங்கவிடாமல் தனித்துப் பேசப் போயிருக்கிறார்களே! நாம் என்ன செய்வது?” என்றாள் தோழி.
அமைதியான இரவு நேரத்தில் பட்டினப்பாக்கத்து மாளிகையில் பெருநிதிச் செல்வரின் தனிமையான அந்தரங்க மண்டபத்தில், அவரும் நகை வேழம்பரும் நேருக்கு நேர் நின்றார்கள். பெருநிதிச் செல்வரின் அளவிட முடியாத நிதிச் செல்வமும் அந்த மண்டபத்தில் தான் இரத்தினக் குவியலாகவும், முத்துக் குவியலாகவும், தந்தங்கள், பட்டுப் பீதாம்பரங்கள், அணிகலன்களின் குவியலாகவும், பொற்காசுகளாகவும் குவிந்து கிடந்தன.
மண்டபத்துக்குள் கீழே கிடந்த இரத்தினக் குவியலிலிருந்து ஒரே ஒரு பெரிய சிவப்புக்கல் நகைவேழம்பருடைய முகத்தில் போய்ப் பதிந்துகொண்டு மின்னுவது போல் அவரது ஒற்றைக்கண் சிவந்து குரூரமாக மின்னியது. பெருநிதிச் செல்வர் தணிந்த குரலில் அவரிடம் கேட்டார்:
“இன்றைக்கு என்ன இவ்வளவு சீற்றம்? பிரளயம் புகுந்ததுபோல் புகுந்து மாளிகையையே ஒரு கலக்குக் கலக்கி விட்டீர்கள்?”
“எனக்கு உங்கள் மேல் அடக்க முடியாத கோபம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மாளிகையையும், உங்களையும், இங்கு குவிந்து கிடக்கும் செல்வத்தையும் அழித்தொழித்து விட்டுப் போய்க் காவிரியில் தலை முழுக வேண்டும்போல் அவ்வளவு ஆத்திரத்தோடு வந்தேன்!”
“காரணம் என்னவோ?”
“காரணமா? இதோ இந்தக் கையைப் பாருங்கள், தெரியும்!” நகைவேழம்பர் தமது வலது கையைத் தூக்கிக் காண்பித்தார். மணிக்கட்டுக்குக் கீழே முழங்கையின் நடுவே ஒரு சுற்றுச் சிவந்து தடித்து வீங்கியிருந்தது அந்தக் கை.
“இந்தக் கை ஒத்துழைக்கவில்லையானால் நீங்கள் இவ்வளவு செல்வத்தைக் குவித்திருக்க முடியுமா?”
“முடியாது.”
“இந்தக் கையின் துணையில்லையானால் பல்லாண்டு பெரிய மாளிகை வாழ்வும் எட்டிப் பட்டமும், பெருநிதிச் செல்வர் என்ற பீடும் நீங்கள் அடைந்திருக்க முடியுமா?”
“முடியாது.”
“இந்தக் கையின் துணையில்லையானால் பல்லாண்டுகளாக நீங்கள் செய்து வரும் கொலைகளும் பாதகங்களும், சூழ்ச்சிகளும் உலகத்துக்குத் தெரியாமல் காப்பாற்றியிருக்க இயலுமா?”
“இயலாது”
“நீங்கள் செய்திருக்கிற கொடுமைகளும், துரோகங்களும் வெளியானால் சுட்ட செங்கல்லைத் தலையில் வைத்து ஊர் சுற்றச் செய்து அவமானப்படுத்தி நாடு கடத்துவார்கள்* என்பதில் சிறிதும் சந்தேகமில்லையே.”
* குடிப்பெருமை மீறிப் பெருங்குற்றஞ் செய்தாரை இப்படி அவமானப்படுத்துதல் அந்தக் காலத்து வழக்கம்.
“சந்தேகமில்லைதான்.”
நகைவேழம்பரின் குரல் உரத்து ஓங்க ஓங்கப் பெருநிதிச் செல்வரின் குரலும், தோற்றமும் ஒடுங்கி நலிந்து கொண்டிருந்தன. ஒரு காலை நன்றாக ஊன்ற முடியாததால் ஏற்கெனவே சாய்ந்து கோலூன்றி நின்ற அவர் இந்தக் கேள்விகளால் தாக்குண்டு இன்னும் சாய்ந்தாற் போல் தளர்ந்து நின்றார். அவருடைய முகத்திலும், கண்களிலும் நடுக்கமும் பீதியும் தோன்றின. எதிரே நகைவேழம்பர் பாய்ந்து கிழிக்கப் போகிற புலியைப் போல் வலது கையைத் தூக்கிக் கொண்டு நின்றார். அவருடைய மெளனம் பேச்சைக் காட்டிலும் பயமூட்டுவதாயிருந்தது. மெளனத்தை உடைத்து விட்டு அவரே பேசத் தொடங்கினார்.
“இந்தக் கை ஓங்கிய வாள் இதுவரை தவறியதில்லை என்பதும் உங்களுக்குத் தெரியுமல்லவா?”
“நன்றாகத் தெரியும்?”
“இதே கை இன்று தவறிவிட்டது என்பதைத்தான் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.”
“எங்கே தவறியது? எதற்காகத் தவறியது? யாரிடம் தவறியது? சொல்லுங்கள். நாளைக்குச் சூரியோதயத்துக்குள் உங்கள் கையை இப்படி ஆக்கிய கை எதுவோ அதை உணர்வு செத்துப் போகச் செய்துவிடுகிறேன்” என்று பரபரப்போடு வினாவிய பெருநிதிச் செல்வரை நகைவேழம்பர் சொல்லிய பதில் திடுக்கிட வைத்தது.
“அந்தக் கையை உணர்விழக்கச் செய்வதற்கு உங்களாலும் முடியாது! உங்கள் பாட்டனார் வந்தாலும் முடியாது!”
“ஏன் முடியாது? என்னையும் உங்களையும் போலச் சூழ்ச்சியும் திறனும் உள்ளவர்களால் அழிக்க முடியாத வலிமைகூட இந்த நகரத்திலே இருக்கிறதா?”
“இருப்பதாகத்தான் தெரிகிறது. இல்லாவிட்டால் என்னுடைய இந்தக் கை இப்படி வீங்குமா?”
“யார் என்றுதான் சொல்லுங்களேன். நடந்ததை ஒன்றும் சொல்லாமல் ஆத்திரமாகப் பேசிக் கொண்டே போவதில் என்ன பயன்?”
நகைவேழம்பரின் குரல் சிறிது ஒலி குன்றியதும் பெரு நிதிச் செல்வரின் குரல் பெரியதாய் ஒலித்தது. சுரமஞ்சரியும் அவள் தோழியும் முயற்சி செய்து ஓவியனை விடுவித்து மணிமாலை பரிசளித்ததிலிருந்து தொடங்கித் தான் ஒவியனைப் பின் தொடர்ந்து சென்ற பின் ஆலமுற்றத்தில் நிகழ்ந்தது வரை, எல்லாவற்றையும் கூறினார் நகை வேழம்பர். நீலநாகமறவர் தம்முடைய கையைப் பற்றியதையும், தாம் அவரால் கீழே பிடித்துத் தள்ளப் பட்டதையும், மேலும் ஆத்திரம் மூளும் விதத்தில் விவரித்துச் சொன்னார் அவர்.
“நமக்கு எதிரிகள் வேறெங்கும் இல்லை. நம்முடைய மாளிகையிலேயே இருக்கிறார்கள்” என்று குறிப்பாகச் சொல்லிப் பெருநிதிச் செல்வரின் கோபமெல்லாம் சுரமஞ்சரியின் மேல் திரும்புமாறு செய்ய முயன்றார் அவர்.
ஆனால் பெருநிதிச் செல்வரோ, நீலநாக மறவருடைய பெயரைக் கேட்டதுமே அதற்குமேல் நகைவேழம்பர் கூறிய எதிலுமே கவனம் செலுத்த முடியாதபடி தளர்ந்து தரையிலே உட்கார்ந்திருந்தார்.
“ஆலமுற்றத்து மலையை நம்மால் அசைக்க முடியாதென்று தெரிந்தாலும் பழிக்குப் பழி வாங்குவதாகச் சபதமிட்டு வந்திருக்கிறேன்! நேர் வழியில் முடியாவிட்டாலும் ஏதேனும் சூழ்ச்சி செய்தாவது என் சபதம் நிறைவேற நாம் இருவரும் பாடுபட வேண்டும்” என்று நகைவேழம்பர் ஆவேசமாகச் சொல்லிய போதும் பெருநிதிச் செல்வர் தலையில் கையூன்றியபடி மெளனமாகவே அமர்ந்திருந்தார். நகைவேழம்பர் மறுபடியும் சீறினார்.
“ஏன் இப்படி உட்கார்ந்து விட்டீர்கள்? என் பேச்சு இலட்சியமில்லையா உங்களுக்கு...?”
“பதில் பேசுவதற்கு ஒன்றுமே தோன்றவில்லை நகைவேழம்பரே! இந்தப் பெரிய நகரத்தில் எந்த மனிதருக்கு முன்னால் அரச குடும்பத்துப் பிள்ளைகளும் வாளுடன் நிற்பதைக் கூட மதிப்புக் குறைவாக நினைத்துப் பயப்படுவார்களோ அந்த மனிதரோடு மோதிவிட்டு வந்திருக்கிறீர்களே நீங்கள்?” பெருநிதிச் செல்வரின் குரல் சோர்ந்து ஒலித்தது.
ஆலமுற்றத்துப் பெருவீரரான நீலநாகமறவரிடம் அவமானமடைந்து வந்திருந்த நகைவேழம்பரை ஆறுதல் அடையச் செய்வதற்குப் பெருநிதிச் செல்வர் அரும்பாடுபட வேண்டியிருந்தது. பல பேர்களை அடிமையாக வைத்துக் கொண்டு ஆள்கிற அளவுக்குப் பெருஞ்செல்வராக இருந்தும் தவிர்க்க முடியாத காரணங்களால் நகைவேழம்பர் என்னும் ஒரே ஒரு மனிதருக்கு முன் தாமே அடிமை போல் நின்று தணிந்துபோக வேண்டிய நிலை அன்று இரவில் அவருக்கு நேர்ந்துவிட்டது.
வெளிப்படையாக நேருக்கு நேர் அந்த ஒற்றைக்கண் மனிதரிடம் பணிந்தாற் போலவும், பயந்தாற் போலவும் நடந்து கொண்டிருந்தாலும் பெருநிதிச் செல்வருடைய மனத்தில் அவர்மேல் தாங்க இயலாத கொதிப்பு விளைந்திருந்தது. நீண்ட நேரத்து விவாதத்துக்குப் பின்னர், நகை வேழம்பரை அமைதி கொள்ளச் செய்திருந்தார் பெருநிதிச் செல்வர்.
“நீலநாக மறவரை எதிர்த்து நேரடியாக ஒன்றும் செய்வதற்கில்லையென்பது உங்களுக்குத் தெரிந்த செய்தி தான் நகைவேழம்பரே! அவருடைய வலிமை உங்களையே தளரச் செய்து விட்டதென்று ஒப்புக் கொள்கிறீர்கள். அவருடைய கைகளை உணர்விழக்கச் செய்வதற்கு என்னாலும் முடியாது. என் பாட்டனாலும் முடியாது என்று என்னிடமும் மறுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். இந்த இரவு நேரத்தில் நமக்குள் வீண் விவாதம் எதற்கு? நீலநாக மறவரை வீழ்த்துவதற்கு மறைமுகமாக ஏதாவது செய்ய இயலுமா என்று நிதானமாகச் சிந்திக்கலாம். இப்போது நீங்கள் உணவுக் கூடத்துக்குச் சென்று பசியாறிவிட்டு நிம்மதியாகப் போய் உறங்குங்கள்” என்று ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லி நகைவேழம்பரை உறங்க அனுப்பியிருந்த பெருநிதிச் செல்வர் தம்முடைய உறக்கத்தை இழந்திருந்தார்.
‘இந்த மாளிகையையும் உங்களையும் இங்கு குவிந்து கிடக்கும் செல்வத்தையும் அழித்தொழித்துவிட்டுப் போய்க் காவிரியில் தலைமுழுக வேண்டும்போல் அவ்வளவு ஆத்திரத்தோடு வந்திருக்கிறேன்’ என்று நகைவேழம்பர் குமுறலோடு கூறியிருந்த சொற்களை நினைத்து நினைத்துக் கொதிப்படைந்தார். நச்சுப் பாம்பு வளர்ப்பது போல் நகை வேழம்பரை வளர்த்ததின் பயன் தம் மேலேயே அந்த நஞ்சு பாய்ந்து விடுமோ என்று அஞ்சுகிற நிலைக்கு இன்று வந்திருப்பது அவருக்குப் புரிந்தது. இந்த நிலைக்கு ஒரு முடிவு கண்டு இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டுமெனத் துணிந்துவிட்டார் பெருநிதிச் செல்வர்.
இத்தனை ஆண்டுகளாகத் தம்மிடமிருந்து அவரும், அவரிடமிருந்து தாமும் விலகியோ, பிரிந்தோ செல்ல முடியாமல் இருவரையும் பிணைத்துப் பின்னியிருந்த அந்தரங்கம் உடைந்து வெளிப்பட வேண்டிய காலம் நெருங்கிவிட்டதோ என்ற பயமும், நடுக்கமும் இன்று அவருக்கு ஏற்பட்டன. பெருநிதிச் செல்வர் தமது அந்தரங்க மண்டபத்தில் குறுக்கும் நெடுக்குமாகத் தனிமையில் நடந்து கொண்டே சிந்தித்தார். அவருடைய நெற்றி யில் வியர்த்தது. இடையிடையே ஊன்றுகோலைப் பற்றியிருந்த கை பிடியை இறுக்கியது. சிந்தனையில் ஏதோ ஒரு முடிவை ஊன்றிப் பதித்துக் கொள்வதைப் புறத்தே காட்டுவதுபோல் நடந்து கொண்டிருக்கும் போதே சில இடங்களில் வேண்டுமென்றே ஒசையெழும்படி ஊன்று கோலை அழுத்தி ஊன்றினார் அவர். வேகமாகக் கால்கள் நடந்தபோது சிந்தனை மெதுவாகவும், சிந்தனை விரைந்த போது கால்கள் மெதுவாகவும் அவர் நடந்த விதமே சிந்தனையின் சுறுசுறுப்பையும், துவண்ட நிலையையும் மாறிமாறிப் புலப்படுத்தின.
அரை நாழிகைக்குப் பின் நமது அந்தரங்க மண்டபத்துக்குள்ளிருந்து அவர் வெளியேறினபோது உறுதியான திட்டத்துடன் புறப்படுகிறவரைப் போலக் காட்சியளித்தார். அந்த உறுதி புலப்பட ஊன்றுகோலை இறுகப் பற்றி அழுத்தி ஊன்றி நடந்து மாளிகையின் உணவுக் கூடத்தை அடைந்தார். அவர் உணவுக் கூடத்தில் நுழைந்த அதே நேரத்தில் அவருக்குக் கொடுக்க வேண்டிய பால் நிறைந்த பொற்கலத்தோடு பரிசாரகர் எதிர்ப்பட்டார். பச்சைக் கருப்பூரம், ஏலம் முதலியனவும், பருகுவதற்குச் சுவையூட்டும் பிற பொருள்களும் இட்டுக் காய்ச்சப் பெற்ற பால் மணம் பரப்பியது.
மாளிகையின் தலைவரே எதிரில் வருவதைக் கண்டு பரிசாரகர் வணக்கமாகத் தயங்கி நின்றார். அந்த நேரத்தில் அவரை அங்கே கண்டதனால் பரிசாரகரின் மெய்யில் ஏற்பட்ட நடுக்கம் கைகளிலும் கைகளில் ஏந்தியிருந்த பொற்கலத்திலும், பொற்கலத்தில் நிறைந்திருந்த பாலிலும் கூடத் தோன்றியது.
“நகைவேழம்பர் உண்பதற்கு வந்திருந்தார் அல்லவா?” என்று பெருநிதிச் செல்வரிடமிருந்து கேள்வி பிறந்தபோது, “ஆம்! இப்போதுதான் உணவை முடித்துக் கொண்டு சென்றார். அவருக்கு உணவு பரிமாறி முடித்ததும்தான் உங்களுக்குப் பாலைக் காய்ச்சி எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்” என்று பரிசாரகர் கூறிய மறுமொழியிலும் பதற்றமிருந்தது.
வயது மூத்த அந்தப் பரிசாரகரின் முகத்தையே உற்று நோக்கியபடி சில விநாடிகள் அமைதியாக நின்றார் பெருநிதிச் செல்வர். பரிசாரகர் ஒன்றும் புரியாமல் திகைத்து மேலும் நடுங்கினார்.
“பாலைக் கீழே வைத்துவிட்டு வா.”
பரிசாரகர் பாலைக் கீழே வைத்துவிட்டு பெருநிதிச் செல்வரைப் பின்தொடர்ந்து நடந்தார். இருவரும் அந்தரங்க மண்டபத்தை அடைந்து கதவைத் தாழிட்டுக் கொண்ட பின்னும் பயந்த குரலில் இரகசியம் பேசுவது போல் பரிசாரகரிடம் ஏதோ காதருகில் பேசினார் பெருநிதிச் செல்வர். அவர் கூறியதைக் கேட்டு பரிசாரகரின் முகம் வெளிறியது. பேயறை பட்டதுபோல் பதில் சொல்லத் தோன்றாமல் மருண்டு நின்றார் பரிசாரகர்.
“இதைச் செய்ய இத்தனை தயக்கமா உனக்கு?” என்றார் பெருநிதிச் செல்வர்.
“மிகவும் கசப்பான காரியத்தைச் செய்யச் சொல் கிறீர்களே!”
“கசப்பும் அறுசுவைகளில் ஒன்றுதான்.”
“இருக்கலாம்... ஆனால்... இப்போது நீங்கள் செய்யச் சொல்வது எல்லை மீறிய கசப்பாயிருக்கிறதே?”
“எல்லை மீறிய கசப்புக்குச் சுவைகளில் இட மில்லையோ?”
“இடமிருக்கிறது! நஞ்சு என்ற பெயரில்...”
“எல்லை மீறிய கசப்புடன் பழகத் தொடங்கிவிட்டவர்களுக்கும் எல்லை மீறிய சுவையை அளிக்க வேண்டியது தானே? போ, போய் நான் சொன்னபடி செய்துவிட்டு நிம்மதியாய்த் துாங்கு.”
“ஒருநாளுமில்லாத வழக்கமாய் இன்று நான் அவருக்குப் பால் கொண்டு போய்க் கொடுத்தால் சந்தேகம் ஏற்படுமே? அந்த மனிதருடைய முகத்துக் கண் ஒன்றாயினும் சிந்தனைக் கண்கள் மிகுதியாயிற்றே?”
“பயப்படாதே. பழியை என் தலையிற் போட்டுவிடு. நான் கொடுத்தனுப்பியதாகப் பாலை அவரிடம் கொடு. வாங்கிக் கொள்வார். காரியம் முடிந்ததும் வந்து சொல். கட்டிலோடு தூக்கிக் கொண்டு போய்ப் புலிக் கூண்டிலே தள்ளிவிடலாம்.”
பெருநிதிச் செல்வரின் இந்தக் கட்டளையை மீற முடியாமலும், மீறினாலும் தம் கதி என்ன ஆகுமோ என்ற பயத்துடனும் பரிசாரகர் பாலில் மயக்கமூட்டி உயிரிழக்கச் செய்யும் நச்சு மருந்தைக் கலந்து கொண்டு நகைவேழம்பர் இருக்கும் பகுதியை நோக்கி நடந்தார்.
அவர் பாலை எடுத்துக் கொண்டு போகிறாரா, இல்லையா என்பதைப் பெருநிதிச் செல்வர் மற்றோர் இடத்தில் மறைவாக வந்து நின்று கண்காணித்துக் கொண்டார். சிறிது நேரத்தில் திரும்பி வந்த பரிசாரகரை எதிர் கொண்டு சந்தித்து “என்ன ஆயிற்று” என்று அடக்க முடியாத ஆவலோடு கேட்டார்.
“நகைவேழம்பர் பொற்கலத்தோடு பாலை வாங்கி வைத்துக் கொண்டு, உங்களுக்கு நன்றியும் தெரிவிக்குச் சொன்னார். சிறிதும் சந்தேகம் கொண்டதாகுத் தெரியவில்லை. இன்னும் சில விநாடிகளில் பருகிவிடுவார்” என்று பரிசாரகரிடமிருந்து பதில் வந்தது.
“அங்கே வேறு யாராவது உடனிருந்தார்களா?”
“அந்நியர் யாருமில்லை. வழக்கமாக அவருடைய பகுதியில் காவலுக்கு இருக்கும் காவலன் மட்டும் இருந்தான்.”
“நல்லது! நீ உறங்கப் போ. இப்படி ஒரு பெரிய காரியத்தை இன்றிரவு சாதித்ததாக நினைத்துக் கொண்டே தூக்கத்தை விட்டுவிடாமல் உடனே மறக்கப் பழகிக் கொள். நாளைக்குப் பொழுது விடிந்ததும் ‘நகைவேழம்பர் எங்கே?’ என்று யாராவது கேட்டால் பதறாமல் நீயும் அதே கேள்வியைத் திருப்பிக் கேட்க முற்படுகிற துணிவையும் பெற்றுக் கொள்” என்று சொல்லிக் கொடுமை தோன்றச் சிரித்தார் பெருநிதிச் செல்வர்.
அப்போது நள்ளிரவுக்கு மேலும் சிறிது நாழிகை ஆகியிருந்தது. பெருமாளிகையின் எல்லா மாடங்களிலும் தீபங்கள் அணைக்கப் பெற்று இருள் சூழ்ந்திருந்தது. பெருநிதிச் செல்வர் தம்முடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான சில ஊழியர்களோடு நகைவேழம்பர் படுத்திருந்த பகுதிக்குச் சென்றார். இருண்டு போயிருந்த அந்தப் பகுதியில் மயான அமைதி நிலவியது. அந்த இருளின் நடுவே திசைக்குத் திசை, மூலைக்கு மூலை நகைவேழம்பரின் கோரமான முகம் தோன்றி ‘என்னை இப்படியா செய்தாய்’ என்று பயங்கரமாக அலறுவதுபோல் பெருநிதிச் செல்வர் பிரமை கொண்டார். அவரும் அவருடன் துணைக்கு வந்திருந்த ஊழியர்களும், இருளில் தட்டுத் தடுமாறி நடந்து நகைவேழம்பரின் கட்டிலை நெருங்கினார்கள். கட்டிலுக்கு அருகில் எங்கிருந்தோ சிறகடித்துப் பறந்த வெளவால் எழுப்பிய ஓசையைச் செவியுற்று இயல் பான பயத்தின் காரணமாக நடுங்கிப் பின்புறம் நகர்ந்தார் பெருநிதிச் செல்வர். வியர்வையால் சொட்டச் சொட்ட நனைந்திருந்த அவருடைய பெரிய உடலின் சிறிய இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. கை, கால்கள் நடுங்கின. காலடியில் பரிசாரகர் பால் கொண்டு வந்திருந்த பொற்கலம் இடறியது. உதறல் எடுத்து வலுவிழந்திருந்த கை விரல்களால் அவர் கட்டிலில் தடவினார். பொற்கலத்து நச்சுப் பாலைப் பருகியிருந்த உடல் கட்டிலில் தாறுமாறாக உணர்விழந்து கிடந்தது. போர்வையை இழுத்து அந்த உடலைத் தலை முதல் கால்வரை மூடினார் பெருநிதிச் செல்வர்.
“ஒற்றைக் கண்ணும் மூடி விட்டது” என்று பயத்தினாற் குழறும் குரலில் உடனிருந்தவர்களிடம் சிரிக்க முயன்று கொண்டே கூறினார் அவர். சிரித்துக் கொண்டே கூற முயன்றாரே தவிரச் சிரிக்கும்போது தேகமே பற்றி எரிவது போல் வெம்மையுற்றது. தன்னுடைய சிரிப்பைச் சாடுவதைப் போல் வேறொரு பயங்கரச் சிரிப்பும் அந்த இருட்டில் எங்கிருந்தோ ஒலிப்பதாகக் கற்பனை செய்து கொண்டு தவித்தது அவர் மனம். கொடுமையும், சூழ்ச்சியும், அளவற்றுப் புரியும் திறமை வரம்பும் கடந்து தம் உடம்பிலும், மனத்திலும் இயல்பாக எவ்வளவு கோழைத்தனம் கலந்திருக்கிறது என்பதை அந்த இருட்டில் அவர் புரிந்து கொண்டார்.
“கட்டிலை இப்படியே தூக்கிக் கொண்டு போய்ப் பாதாள அறையில் புலிக் கூண்டுகளுக்கு நடுவில் வையுங்கள்” என்று உடன் வந்திருந்த ஊழியர்களுக்குக் கட்டளையிட்டார் அவர். அச்சத்தினால் தன்னியல்பான ஒலியும் கம்பீரமும் அவருடைய குரலிலிருந்து பிரிந்து போயிருந்தன. ஊழியர்கள் அவருடைய கட்டளையைச் செய்ய முற்பட்டனர். இருட்டில் கட்டில் தூக்கப் பெற்றுப் புறப்பட்டது.
“இனிமேல் இந்தப் பகுதி பகலிலும் இப்படி இருண்டு கிடக்க வேண்டியதுதான். அந்தப் பாவியின் ஆவி குடியிருக்கிற இடத்துக்கு ஒளி வேறு வேண்டுமா?” என்று தனக்குத்தானே கூறிக் கொள்வதுபோல் அவர் இரைந்து கூறியபோது மீண்டும் அதே பேய்ச் சிரிப்பு ஒலிப்பதாக அவருடைய மனம் கற்பனை செய்தது. கட்டிலைத் தூக்கிக் கொண்டு போனவர்களைப் பின் தொடர்ந்து பெருநிதிச் செல்வரும் பாதாள அறைக்குச் சென்றார். அவருடைய முன்னேற்பாட்டின்படியே அங்கே தீப்பந்தங்கள் பொருத்தி வைக்கப்பட்டிருந்தன.
வாலைச் சுழற்றி அனல் விழி காட்டி உறுமும் புலிகளின் கூண்டுகளுக்கு நடுவே போர்த்தப்பட்டிருந்த உடல் கட்டிலில் வைக்கப்பட்டிருந்தது. “என் தலையில் சுட்ட செங்கல்லை ஏற்றி ஊர் சுற்றிவரச் செய்வதாகத் திமிரோடு பேசினாயே! இப்போது திமிர் நிறைந்த உன் உடலின் சதையைக் கிழித்து விளையாடும் புலிகளைக் கண்டு நான் வெற்றிச் சிரிப்புச் சிரிக்கப் போகிறேன் பார்” என்று கட்டிலை நோக்கி யாரும் எதிர்ப்பதற்கு இயலாத அறைகூவல் விடுத்தார் பெருநிதிச் செல்வர்.
கட்டிலைச் சுமந்து வந்தவர்கள் மேலும் அவரிடமிருந்து என்ன கட்டளை பிறக்கப் போகிறதோ என்று எதிர்பார்த்துக் காத்து நின்றனர். மிக விரைவிலேயே அவர்கள் எதிர்பார்த்திருந்த செயலைச் செய்யும்படி பெருநிதிச் செல்வர் அவர்களை ஏவினார்.
“போர்வையை விலக்கிவிட்டு உடலைத் தூக்கி மேலேயுள்ள வளையத்தில் தலைகீழாகக் கட்டுங்கள்” என்று அவர் கட்டளையிட்ட குரல் ஒலித்து அடங்கு முன் மேலே பாதாள அறைக்குள் வருவதற்கான படியருகிலிருந்து குரூரமானதொரு பேய்ச் சிரிப்பு எழுந்தது.
திகைப்புடனே எல்லாரும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தனர். பார்த்தவர்கள் சிலைகளானார்கள். அங்கே முதற்படியில் நகைவேழம்பர் நின்றார். உடனே முன்னால் பாய்ந்து கட்டிலை மூடியிருந்த போர்வையை விலக்கிப் பார்த்த பெருநிதிச் செல்வர் தாம் முற்றிலும் ஏமாந்து போயிருப்பதைப் புரிந்து கொண்டார். கட்டிலில் நகை வேழம்பர் வசிக்கும் பகுதியிற் காவலிருந்த ஊழியனின் உடல் கிடந்தது.
“தீட்டிய இடத்திலேயே பதம் பார்க்கிறீர்களே, ஐயா! இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் யாரிடமிருந்து கற்றுக் கொண்டீர்களோ, அவனிடமே சோதனை செய்து பார்க்கத் துணிந்து விட்டீர்களே? இன்றிரவு இப்படி எனக்கு ஏதாவது கெடுதல் செய்ய வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றுமென்பதை நானே எதிர்பார்த்துக் கொண்டுதானிருந்தேன். அப்படியே செய்துவிட்டீர்கள். நீங்கள் அன்புடன் அனுப்பிய பொற்கலத்துப் பாலை எனக்குக் காவலிருந்த ஊழியனைக் குடிக்கச் செய்து பார்த்த பின்புதான் உங்கள் நோக்கம் புரிந்தது. இப்போது நான் விரும்பினால் உங்கள் அத்தனை பேருடைய உயிரையும் சூறையாடலாம். இதோ இப்படிச் சிறிது பாருங்கள்” என்று கூறிக் கொண்டே தன் கைக்கு எட்டுகிறபடி இருந்த புலிக் கூண்டுக் கதவுகளைத் திறப்பதற்குரிய இரும்புச் சங்கிலியைப் பிடித்துக் குலுக்கினார் நகை வேழம்பர். அப்படிக் குலுக்கியபோது அந்தச் சங்கிலி குலுங்கியதாலும் அவருடைய சிரிப்பினாலும் சேர்ந்து எழுந்த விகார ஓசை பாதாள அறையில் பயங்கரமாக எதிரொலித்தது. அவர்களுடைய உயிர்கள் எல்லாம் அவர்களை வெறுக்கத் தொடங்கிவிட்ட நகைவேழம்பருடைய கையில் இருந்தன.
தரையில் நீர்த்துளி விழுவதற்கு முன் மண்ணுலகத்து வண்ணமும் சுவையும் கலவாத மேக மண்டலங்களிலேயே அவற்றைப் பருகும் சாதகப் புள்ளைப்போல் விசாகையின் ஞானம் உலகத்து அழுக்கையெல்லாம் காணாத பருவத்தில், முன் பிறவி கண்ட தொடர்பினால் அவளுக்கு வாய்த்த தென்பதை உணர்ந்தபோது இளங்குமரன் அவளைத் தவப்பிறவியாக மதித்துக் காணத் தொடங்கினான். அத்தகைய மதிப்பு அவள்மேல் ஏற்பட்டதனால்தான். இந்திர விகாரத்துத் துறவியிடம் தான் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதைப் பற்றி அவள் குறிப்பிட்டபோது அவன் மனம் குன்றி நாணமடையும்படி நேர்ந்தது. சுரமஞ்சரியிடம் குன்றாமல் வளர்ந்திருந்த அவனுடைய அதே மனத்தின் இறுமாப்பு விசாகையிடம் குன்றித் தளர்ந்ததோடன்றிப் பக்தியாகவும் மாறியிருந்தது.
‘விசாகையின் கதை தனக்குத் தெரிய வேண்டியது அவசியம்’ என்று நாங்கூர் அடிகள் வற்புறுத்திக் கூறியிருந்த காரணத்தை இப்போதுதான் இளங்குமரன் நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது. மற்போர்களில் எதிர்த்து வந்தவர்களை முதுகுக்கு மண்காட்டி வென்றதற்காகவும், இளவட்டக் கற்களைத் தூக்கியதற்காகவும், குறிதவறாமல் அம்பு எய்ததற்காகவும், பெருமைப்பட்ட நாட்களை நினைவின் அடிமூலையிலிருந்து புரட்டிக் கொணர்ந்து இன்று எண்ணினால் அவை சிறுமை நிறைந்தவையாகத் தோன்றின. வேறு பெரிய செயல்களைச் செய்வதற்குக் கையாலாகாத காலத்தில் செய்த சிறுபிள்ளைச் செயல் களாக நினைத்துக் கொள்ள முடிந்ததே தவிர, இன்று அவனாலேயே அவற்றை மதிக்க முடியவில்லை.
ஞானப் பசியோடு திருநாங்கூருக்கு வந்த அன்றே அவன் மனத்தில் மதிப்பிழந்திருந்த அந்தப் பழம் பெருமைகள், விசாகை என்னும் புதுமையை அறிந்தபின் இன்னும் மதிப்பிழந்தன. நீண்ட சாலையில் பார்வைக்குள் பிடிபடாத தொலைவுக்குச் சென்றுவிட்ட உருவங்களைப் போல் அவை மனத்திலிருந்தே விலகலாயின.
இனி எதிர்வரும் காலத்தைப் பற்றி அவன் மனத்தில் எழுகின்ற கற்பனைகள் ஓங்கித் தொட முயன்று கொண்டிருந்த உயரம் வேறுவிதமாக இருந்தது.
உலகெங்கும் உள்ள பேரறிஞர்கள் ஒன்று கூடி வரிசையாய் - அந்த வரிசைக்கு முடிவே தெரியாமல் - நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நிற்கிறார்கள். அவர்கள் அப்படி நிற்பதால் நின்றபடியே தானாக நிறுவிக் கொண்ட வீதி ஞான வீதியாகி இளங்குமரனின் கண்களுக்குத் தோன்றுகிறது. வீதியின் நடுவில் நின்று இரு புறமும் பார்க்கிறான் அவன். அவனுடைய வலது கையில் ஞானக்கொடி அசைந்தாடுகிறது. அந்த வீதியின் நெடுமை அவன் மனத்தில் மலைப்பை உண்டாக்குகிறது. வீதியின் இருபுறமும் ஒளிமயமாய் நிற்கும் ஞானி களுக்கு முன்னால் ஒவ்வொன்றாய் நாவல் மரக்கிளை ஊன்றப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஞானியின் கையிலும் அந்த ஞானத்தின் வெற்றிச் சின்னம்போல் ஒரு கொடியும் காட்சியளிக்கிறது. அவர்களோடெல்லாம் அறிவு வாதம் புரியவேண்டுமென்று இளங்குமரனுக்கு ஆசையாயிருக்கிறது.
வாதிட்டு வென்றபின் அத்தனை பேருடைய கொடிகளையும் வீழ்ச்சியுறச் செய்து நாவற் கிளைகளையும் பறித்து எறிந்துவிட்டு, நாவலோ நாவல் என முழங்கிக் கொண்டே தான் அந்த வீதியின் முடிவு தெரிகிறவரை நடந்து சென்றாக வேண்டுமென்று இளங்குமரனுக்கு ஆசையாயிருந்தது, அதே சமயத்தில் தனக்கு அவ்வளவு சக்தியிருக்கிறதா என்ற பயமும், தயக்கமும் தடையாயிருக்கின்றன. ஆனால் மனமோ, ‘துணிந்து முன்னால் நடந்து போ’ என்று தூண்டுகிறது.
அன்று அந்த மாலை வேளையில் திருநாங்கூர் பூம்பொழிலின் தனிமையான பகுதி ஒன்றில் அமர்ந்து இளங்குமரன் இப்படித் தன் எதிர்காலத்தைக் கற்பனை செய்து கொண்டிருந்தபோது தற்செயலாய் அந்தப் பக்கம் வந்த விசாகை அவனிருந்த நிலையைக் கண்டு அவனிடமே கேட்டாள்.
“எந்தக் கோட்டையைப் பிடிப்பதற்கு இவ்வளவு ஆழமான சிந்தனையோ?”
சிறிது நேரத்திற்குப் பின் இளங்குமரனிடமிருந்து இதற்குப் பதில் கிடைத்தது.
“ஞானக் கோட்டையைப் பிடிப்பதற்கு.”
“பெரிய ஆசையாக அல்லவா இருக்கிறது இது?”
“மன்னிக்க வேண்டும் அம்மையாரே! ஆசைகளை எல்லாம் மிக எளிதாக நீக்கிவிட்டு வந்திருக்கிற உங்களிடம் ஆசையைப் பற்றிச் சொல்வதற்காகக் கூசுகிறேன் நான்.”
“அப்படியில்லை, கூசாமல் சொல்லுங்கள். இப்போது நீங்கள் கூறியது புதுமையான ஆசையாகத் தோன்றுகிறதே!” என்றாள் விசாகை.
இளங்குமரன் தன்னுடைய கற்பனையில் தோன்றித் தோன்றி மறைந்து கொண்டிருக்கும் இலட்சியத்தைத் தயங்கிய மொழிகளால் விசாகைக்குச் சொன்னான். அதைக் கேட்டு அவளுடைய முகம் அதில் ஏற்கெனவே அளவற்று நிறைந்திருக்கும் புனிதத் தன்மையே மேலும் பெருகினாற் போல் மலர்ந்தது. அவள் சிரித்தவாறே அவனை நோக்கி வினாவினாள்:
“உங்களுடைய இந்த ஆசையை யார் கேட்டால் மெய்யான பெருமகிழ்ச்சி ஏற்படுமென்பதை சொல்லட்டுமா?”
“ஏன்? அப்படியானால் உங்களுக்கு மகிழ்ச்சி தர வில்லையா என்னுடைய இந்த ஆசை” இளங்குமரன் அவளிடம் பதிலுக்குக் கேள்வி தொடுத்தான்.
“ஞானக் கோட்டையைப் பிடிக்கும் உங்களுடைய ஆசையைக் கேட்டு நானும், அடிகளும், எங்களைப் போன்ற பிறரும் அடைய முடியாத மகிச்சியைக் காட்டிலும் அதிகமான மகிழ்ச்சியை வேறொருவர்தான் அடைய முடியும்”
“யார் அவர்?”
“உங்களைப் பெற்று உலகுக்கு அளித்த தாய்.
'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.’
என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உங்களுடைய இந்த ஆசையை அறிந்து உலகம் உங்களைச் சான்றாண்மை உள்ளவராக ஏற்றுப் புகழ்வதை உங்கள் தாய் கேட்க வேண்டும். உங்களைப் பெற்றபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட அதிகமான மகிழ்ச்சியை நீங்கள் புகழைப் பெறுகிற போது உங்கள் அன்னை ஒருத்தியால்தான் அடைய முடியும்..!”
இளங்குமரன் திருநாங்கூருக்கு வந்ததிலிருந்து எந்தக் கலக்கத்தை அடையாமல் மறந்திருந்தானோ, அந்தக் கலக்கத்தை விசாகை நினைவூட்டி விட்டாள். அவளுக்கு மறுமொழி கூறத் தோன்றாமல் கண்கலங்கினான் அவன். அவனுடைய கலக்கத்தை விசாகையும் கவனித்தாள்.
“ஏன் இப்படிக் கண் கலங்குகிறீர்கள்?”
“கண் கலங்காமல் வேறென்ன செய்வது? என்னைப் பெற்று மகிழ்ந்தவளைப் பார்த்தும் மகிழாத பாவி நான்.”
‘இளங்குமரன் தாயில்லாப் பிள்ளையாக வளர்ந்திருப் பானோ?’ என்று நினைத்தாள் விசாகை. அதை அவனிடம் அப்போது கேட்டால் அவனுடைய கலக்கம் அதிகமாகுமோ என்றெண்ணிக் கேட்காமல் அடக்கிக் கொண்டாள்.
“உங்கள் தாயைப் பற்றி உங்களுக்கு நினைவுண்டாக்கியது இப்படி ஒரு துயர விளைவைத் தரும் என்பது தெரிந்திருந்தால் செய்திருக்க மாட்டேன்” என்று மன்னிப்பைக் கோரும் குரலில் கூறினாள் விசாகை. அதற்கும் இளங்குமரனிடமிருந்து பதில் இல்லை.
“அம்மா உன்னைக் காணும் மகிழ்ச்சியை உனக்கு அளிக்காமல், காணவில்லையே என்ற துயரத்தையே மகிழ்ச்சித் தாகமாகப் பெருக்கிக் கொண்டிருக்கிறாயே!” என்று தாயை எண்ணி ஏங்கினான் இளங்குமரன்.
அந்த நிலையில் இளங்குமரனைத் தனிமையில் விட்டுச் செல்வதே நல்லதென்றெண்ணி விசாகை அகன்றாள்.
மனம் கலங்கி வீற்றிருந்த இளங்குமரன் விசாகை சென்றதை அறியாமல் அவள் அங்கிருப்பதாகவே எண்ணி ஏதோ சொல்லத் தலை நிமிர்ந்தபோது நேர் எதிர்ப்புறம் பூம்பொழிலின் வாயிலில் முல்லையும், கதக்கண்ணனும் நுழைந்ததைக் கண்டான். அவன் விழிகளில் வியப்பு மலர்ந்தது.
அப்போது அந்த பாதாள அறையில் நிலவிய சூழ்நிலையில் கூண்டுக்குள் இருந்த புலிகளைக் காட்டிலும் கொடுமையான புலியாக மாறிப் பாய்வதற்கு முற்பட்டுக் கொண்டிருந்தவர் நகைவேழம்பர்தாம் என்பதை அங்கே இருந்த எல்லாரும் உணர்ந்தார்கள். எல்லாருடைய மனத்திலும் அடுத்த கணம் என்ன நிகழப் போகிறதோ என்ற பயம் தான் நிரம்பியிருந்தது. புலிக் கூண்டுகள் அமைந்திருந்த இடத்துக்கு மேலே முதற்படியில் தோன்றிப் பேயாக நகைத்துக் கொண்டிருந்த நகைவேழம்பருடைய கைகளில் அங்கே நின்ற அத்தனை பேருடைய உயிர்களும் இருந்தன. புலிக்கூண்டுகளைத் திறப்பதற்கு இணைத்திருந்த சங்கிலியை அவர் இழுத்தால் கீழே அந்தக் கூண்டுகளுக்கு நடுவே நிற்பவர்களின் கதி அதோகதிதான்.
தனக்குரிய செல்வங்களாலே கிடைக்கிற எல்லா வகைப் பெருமைகளையும் மீறி எந்தச் செல்வமும் இல்லாத அரைக் குருடன் ஒருவனுக்கு இரகசியங்களால் அடிமைப்பட்டுக் கிடந்து தவித்த பெருநிதிச் செல்வர் ‘அந்த இரகசியங்களையும் அவற்றை மனத்தில் சுமந்து கொண்டிருந்தவனையும் சேர்த்து ஒழித்து விட்டோம்’ என்று திம்மதியோடு தலை நிமிர்ந்தபோது ‘நான் ஒழிய வில்லை’ என்று முன் வந்து நின்று மீண்டும் அவர் தலையைக் குனியச் செய்துவிட்டார் நகைவேழம்பர்.
தாம் இரையிட்டு வளர்த்த புலிகளுக்கு இன்று தாமே இரையாகும் நிலை வந்துவிட்டதே என்று மெய்நடுங்க நின்றார் பெருநிதிச் செல்வர். அவரை விளித்து நகை வேழம்பர் சிறிதும் நெகிழ்ச்சியில்லாத குரலில் பேசினார்:
“நஞ்சு கலந்த பாலைப் பருகி நான் அழிந்தொழிந்து போயிருப்பேன் என்று நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தீர்கள். உங்கள் பெருமை நீடிக்க வழியின்றி நானே முன்னால் வந்து நிற்கிறேன். ஒன்று நாமிருவரும் நண்பர்களாயிருக்க வேண்டும். அல்லது பகைவர்களாயிருக்க வேண்டும். ஆனால் நல்லதற்காகவோ, கெட்டதற்காகவோ, எதற்கென்று தெரியவில்லை; இப்போது நாமிருவருமே எப்படியிருக்கிறோமோ அப்படி இதற்கு முன்பு இருக்க நேர்ந்ததில்லை. நட்பின் நெருக்கத்தைக் குறித்து உயிர் நண்பர்கள் என்று சொல்வார்கள். ஆனால் நீங்களும் நானுமோ, இப்போது ஒருவருக்கொருவர் உயிரைக் கவர்ந்து கொள்ளத் துணிந்துவிட்ட நண்பர்களாயிருக்கிறோம். உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் நெருக்கத்தில் முன்பு இந்த நட்புத் தொடங்கிற்று என்பதை நீங்கள் மறந்து போயிருக்கலாம். இப்போது உயிர்களை அழிக்கும் ஆத்திரத்தில் முடிவதற்கிருக்கிறது. இந்த உறவு இப்படித்தான் முடிய வேண்டுமா, அல்லது வேறுவிதமாகவும் முடிய இடமிருக்கிறதா என்று சிந்திக்க வேண்டிய விநாடிகளில் நிற்கிறோம் நாம்...”
பெருநிதிச் செல்வர் தலைநிமிர்ந்து எதிராளியைப் பார்ப்பதற்கு வேண்டிய சுறுசுறுப்போ, ஆர்வமோ, சிறிதுமில்லாமல் சோர்ந்து போயிருந்தாலும் இந்தப் பேச்சைக் கேட்டதும் அடிபட்ட நாகம் படத்தைத் தூக்குகிறாற் போலத் தலைநிமிர்ந்து நகைவேழம்பரைப் பார்த்தார். பின்பு இயல்பாகப் பேசும் பேச்சின் விரைவு இல்லாமல் ஒவ்வொரு வார்த்தையாகத் தயங்கித் தயங்கி நிறுத்திக் கேட்டார்.
“நீங்களும் நானும் சிந்திக்க வேண்டிய விநாடிகளில் இவர்களைப் போன்ற ஊழியர்களும் உடனிருக்க வேண்டியது அவசியம்தானா?”
“அவசிய அநாவசியங்களைச் சிந்தித்துச் செயல்படுகிற நிலையில் இப்போது நான் இல்லை. நீங்கள் என்னை அப்படி இருக்கவும் விடவில்லை. ‘என்னைப் போல் ஒருவன் உங்களுக்கு அவசியமா இல்லையா?’ என்று நீங்களே சிந்தித்து உடனடியாக முடிவுகட்டி விட்ட பின் நான் சிந்திக்க என்ன இருக்கிறது? நான் அநாவசியமென்று நீங்கள் தீர்மானம் செய்தபின் நீங்கள் எனக்கு அவசியம் என்று நம்பி என்னை நானே ஏமாற்றிக் கொள்ளலாமா!”
இந்தக் கேள்வியின் பிடியிலிருந்து விடுபட்டுத் தாம் என்ன மறுமொழி கூறுவதென்று தெரியாமல் திகைத்தார் பெருநிதிச் செல்வர். உயிர்ப் பயமும், ஏவலுக்குத் தலை வணங்கும் ஊழியர்களுக்கு முன் இப்படி அவமானப் பட்டுக் கொண்டிருக்கிறோமே என்ற நாணமும் சேர்ந்து அவரை ஆட்கொண்டு அவருக்குப் பேசுவதற்கு வார்த்தைகள் கிடைக்காதபடி ஆக்கியிருந்தன.
பேசவராத உணர்ச்சிகளுக்கும் பேச வேண்டிய சொற்களுக்கும் நடுவே அகப்பட்டுக் கொண்டு அவர் திணறுவதை நகைவேழம்பர் கண்டு கொண்டார். தமக்கும் பெருநிதிச் செல்வருக்கும் இடையே உள்ள நட்பு, பகை, இரகசியங்கள் எல்லாம் ஊழியர்களும் விளங்கிக் கொள்ளும்படி தெரிவது நல்லதல்ல என்பதை அவராலும் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஒரு கையால் சங்கிலியைப் பற்றிக் கொண்டு மற்றொரு கையால் ஊழியர்களை மேலே வருமாறு குறிப்புக் காட்டினார். கிழே பெருநிதிச் செல்வர் நின்ற இடத்திலிருந்து சிறிது விலகி ஒதுங்கி நின்றிருந்த ஊழியர்கள் நகைவேழம்பர் தங்களை மேலே வரச் சொல்லிக் குறிப்புக் காட்டுவதைப் புரிந்து கொண்டாலும் தங்களுக்குப் படியளப்பவராகிய பெருநிதிச் செல்வரின் ஆணையின்றி எப்படி மேலே செல்வதெனத் தயங்கினர். அவர்களுடைய இந்தத் தயக்கத்தைக் கண்டு மேலே நின்ற நகைவேழம்பர் சிரித்தார்.
“உங்களுக்குக் கட்டளையிட வேண்டியவரே இப்போது என்னுடைய கட்டளையை எதிர்பார்த்து நிற்கிறார். இந்தச் சமயத்தில் நீங்கள் அவரை எதிர்பார்த்துத் தயங்குவதில் பயனில்லை. நீங்கள் எல்லாரும் வெளியேறினால் நானும் அவரும் பேசிக் கொள்வதற்குத் தனிமை வாய்க்கும்.”
நகைவேழம்பர் இப்படிக் கூறிய பின்பும் அவர்கள் தயங்கியபடியே நின்றார்கள். பெருநிதிச் செல்வரே இந்தத் தயக்கத்தைத் தவிர்ப்பதற்கு முன் வந்தவராய், “அவர் சொல்கிறபடியே செய்யுங்கள்” என்று ஊழியர்கள் பக்கம் திரும்பி மெல்லக் கூறினார்.
ஊழியர்கள் படியேறி மேலே வந்தனர். “நில்லுங்கள்! நீங்கள் செய்ய வேண்டிய வேலையொன்று மீதமிருக்கிறது” என்று அவர்களைத் தடுத்து நிறுத்திக் கீழே வைக்கப்பட்டிருந்த கட்டிலில் கிடந்தவனைச் சுட்டிக் காட்டினார் நகைவேழம்பர். என்ன செய்ய வேண்டுமென்று கேள்வி தோன்ற ஊழியர்கள் அவர் முகத்தைப் பார்த்தனர். அவருடைய நாவிலிருந்து அளவில் சுருக்கமாகவும் அர்த்தத்தில் பெரிதாகவும் இரண்டே இரண்டு சொற்கள் ஒலித்தன.
“வழக்கம் போல் செய்யுங்கள்.”
இதற்குப்பின் அங்கு நடந்த நிகழ்ச்சிகள் விரைவுடையனவாகவும், மாறுதல் உள்ளவையாகவும் இருந்தன. நகைவேழம்பர் படிகளில் இறங்கிக் கீழே வந்து தனியாக நின்று கொண்டிருந்த பெருநிதிச் செல்வருக்கு எதிரே கம்பீரமாக நடந்து கொண்டே பேசினார்:
“இந்த மாளிகையில் இதே சூழ்நிலையில் நின்று உங்களோடு பேச எனக்கு விருப்பவில்லை. இருவருமே ஒருவர் மேல் மற்றவருக்கிருந்த நம்பிக்கையை இழந்து விட்டோம். நீங்கள் என்னைக் கொல்லவும் துணிந்து விட்டீர்கள் என்பது எனக்கே புரிந்துவிட்டது. இனிமேலும் நான் உங்களை நம்ப வேண்டுமானால் நாம் நம்முடைய நம்பிக்கைகள் பிறந்து வளர்ந்த இடத்துக்குப் போக வேண்டும். நீங்கள் இனிமேல் என்னை நம்புவீர்களா என்பதை அறிந்துகொள்வதற்கு ஒரு சோதனைப்போல் உங்களை இப்போது அழைக்கிறேன். பூம்புகார் நகரம் முழுவதும் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிக் கிடக்கிற இந்த நேரத்தில் எந்த விதமான பாதுகாப்பும் இல்லாமல் தனியாக என்னோடு நீங்கள் வரவேண்டும். தேரிலோ குதிரையிலோ வரக்கூடாது. என்னைப்போல் நடந்துவர வேண்டும்.”
“எங்கே வரவேண்டும்? எதற்காக வரவேண்டும்? வேண்டியதை இங்கேயே பேசலாமே! நாமிருவரும் தனியாகத்தானே இருக்கிறோம்.”
“முடியாது இது உங்களுடைய எல்லை. இங்கே நான் எந்த விநாடியும் துன்புறுத்தப்படலாம். இன்னும் உங்கள் மேல் பழைய நம்பிக்கை எனக்குத் திரும்பவில்லை. அந்த நம்பிக்கை திரும்புவதும் திரும்பாததும் நீங்கள் என்னை நம்புகிறீர்களா, இல்லையா என்பதைப் பொறுத்தது.”
“நான் உங்களை நம்புகிறேன் என்பதை மீண்டும் எப்படி நிரூபிக்க முடியும்?”
“ஏன் முடியாது? என் அழைப்புக்கு இணங்கினாலே என்னை நம்புவதை ஒப்புக் கொண்டாற்போலத்தானே?”
“ஒப்புக் கொள்கிறேன் என்றே வைத்துக் கொள்ளுங்கள் நகைவேழம்பரே! இந்த நள்ளிரவில் ஒரு துணையுமின்றி வெறுங்கையனாக உங்களோடு வந்தால் நீங்கள் தனிமையில் என்னிடம் எப்படி நடந்து கொள்வீர்களோ என்று நான் சந்தேகப்பட இடமிருக்கிறதல்லவா?”
“சந்தேகத்துக்கு இடமிருப்பதைப் போலவே சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளவும் இடமிருக்கிறது. சற்று முன் நான் எந்த நிலையில் இருந்தேன் என்பதை நினைத்துப் பாருங்கள். உங்களையெல்லாம் கூண்டோடு எமபுரிக்கு அனுப்பும் வாய்ப்பு என் கைகளில் இருந்தது. ஏன் அந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை? அதுதான் போகட்டும். இப்போது இந்த விநாடியில்கூட நீங்கள் தன்னந்தனியாகத்தான் என் எதிரில் நிற்கிறீர்கள். நான் உங்களை ஏன் விட்டு வைத்திருக்கிறேன்? நம்பிக்கையை உண்டாக்கிக் கொள்ள ஒரே வழிதான் இருக்கிறது. அதை நீங்கள் செய்ய வேண்டும்.”
“என்ன செய்ய வேண்டும் நான்?”
“பெரிதாக ஒன்றும் செய்யவேண்டாம். அவநம்பிக்கை கொள்ளாமல் இருக்க வேண்டும். நம்பிக்கை வளர அதுவே போதும்.”
பெருநிதிச் செல்வர் நகைவேழம்பரின் ஒற்றைக் கண்ணில் அந்த நம்பிக்கையைத் தேடுகிறவர் போல் அவரையே பார்த்துக் கொண்டு நின்றார். நகைவேழம்பர் அவருடைய சஞ்சலத்தைக் கண்டு சிரித்தார்.
“நான் பழைய நாட்களில் நடிகன். முகத்திலும், கண்ணிலும் எந்த உணர்ச்சியின் சாயலையும் என்னால் மறைத்தும், மாற்றியும் காண்பிக்கச் செய்யமுடியும். என் முகத்தையும் கண்ணையும் பார்த்த நீங்கள் ஒன்றும் தெரிந்து கொண்டுவிட முடியாது. என் மனத்தையும் நான் கூறிய சொற்களையும் நம்பினால் என்னோடு வாருங்கள்.”
“அவற்றிலும் நடிப்பு இருக்க முடியாதென்பது என்ன நிச்சயம்?”
“இப்படி வாதம் புரிந்தால், இதற்குப் பதிலே சொல்ல முடியாது! மறுபடியும் முன்பு சொல்லியதையே திருப்பிச் சொல்கிறேன். நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கு ஒரே வழி அவநம்பிக்கைப் படாமல் இருப்பதுதான்.”
நெடுநேரத் தயக்கத்துக்கும், சிந்தனைக்கும் பின்பு பெருநிதிச் செல்வர் அந்த நடுநிசிப் பொழுதில் நகை வேழம்பருடனே தனியாகப் புறப்பட்டுச் சென்றார்.
நடந்து போகும்போது இருவரும் பேசிக் கொள்ள வில்லை. ஒரு காலைச் சாய்த்துச் சாய்த்து நடக்க வேண்டியிருந்ததனால், பெருநிதிச் செல்வர் வேகமாக நடக்க முடியாமல் திணறினார். எங்கே போகிறோம் என்பதே தெரியாமல் நகைவேழம்பரைப் பின்பற்றி நடப்பதனால் உண்டான பயம் வேறு அவர் மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்தது. அக நகர எல்லையைக் கடந்து காவிரி கடலோடு கடக்குமிடத்தை நெருங்கி வந்திருந்தார்கள் அவர்கள். மக்கள் பழக்கமே இல்லாத இரவு நேரமாகையினால் பகலில் இயற்கையழகு பொலியும் அந்த இடம் இப்போது பயப்படுவதற்கு உரியதாயிருந்தது. நதிக்கரைப் படுகையில் ஆள் நடந்தால் தோற்றம் மறைந்து போகிற உயரத்துக்கு நாணற்காடு புதர் மண்டியிருந்தது. பஞ்சு பூத்ததுபோல் வெண்மையான நீண்ட நாணற் பூங்கதிர்கள் இருளில் மங்கலாகத் தெரிந்தன. நாணற் புதரில் காற்று ஊடுருவுவதால் உண்டான சரசரப்பு ஓசையும், நீரலைகளின் சப்தமும், விட்டு விட்டு ஒரே சுருதியில் கேட்கிற தவளைக் குரலும், சூழ்நிலையின் பயங்கரத்துக்குத் துணை கூட்டின. ஊளையிட்டுக் கொண்டே நரிகள் புதரில் விழுந் தடித்துக் கொண்டு ஓடுகிற ஓசையும், நதி நீருடன் கரைசரிந்து தணியுமிடத்தில் நீர் நாய்கள் துள்ளும் சப்தமும், அவ்வப்போது எழுந்து அந்தப் பக்கமாக நடப்பவர்களுக்கு அச்சமூட்டிக் கொண்டிருந்தன.
அந்த நாணற் காட்டின் நடுவே பெருநிதிச் செல்வரை அழைத்துக் கொண்டு சென்றார் நகைவேழம்பர்.
“இங்கே என்ன காரியம்? இவ்வளவு பெரிய காவிரிப் பூம்பட்டினத்தில் நீங்களும் நானும் பேசுவதற்கு இடமில்லயென்றா இங்கே அழைத்துக் கொண்டு வந்தீர்கள்?”
மேலே நடப்பதை நிறுத்திவிட்டுச் சந்தேகமுற்ற மன நிலையில் இந்தக் கேள்வியைக் கேட்டார் பெருநிதிச் செல்வர்.
“காரியம் இல்லாமலா அழைத்துக் கொண்டு வருவேன்? பயப்படாமல் நடந்து வாருங்கள்” என்று உள் நோக்கத்தை வெளிப்படுத்தாத அடங்கிய குரலில் கூறி விட்டு நகைவேழம்பர் மேலே நடந்தார்.
“என்னால் நடக்க முடியவில்லை; கால் தளர்ந்து வருகிறது” என்று சொல்லிக் கொண்டே மேலே செல்லாமல் நின்று கொண்டார் பெருநிதிச் செல்வர்.
‘மேலே போக வேண்டாம் - போவது நல்லதற்கல்ல’ என்று அவருடைய மனக்குரல் சொல்லிற்று.
“அடடா! நீங்களே இப்படி அதைரியப் படலாமா?” என்று கூறியவாறே அருகில் வந்து பெருநிதிச் செல்வரின் கையைப் பற்றினார் நகைவேழம்பர். அவருடைய கை நடுங்கிக் கொண்டிருந்தது. பிடியை விடுவித்துக் கொண்டு திரும்பி நடக்கலானார் பெருநிதிச் செல்வர். எந்த நினைப்பினாலோ தெரியவில்லை; அவருக்கு நடக்கும்போதே கைகால்கள் நடுங்கின.”
“அவசரப்படாதீர்கள்! கொஞ்சம் இப்படித் திரும்பிப் பார்த்துவிட்டுப் போகலாம் அல்லவா?” என்று மிக அருகே பின்னாலிருந்து நகைவேழம்பரின் குரல் கேட்டதைத் தொடர்ந்து தம் தோளில் அவர் கை தீண்டித் தடுப்பதையும் பெருநிதிச் செல்வர் உணர்ந்தார்.
அவர் அப்படிப் பார்த்தபோது நகைவேழம்பர் இருந்த கோலம் அவரைச் சிலிர்ப்படையச் செய்தது.
குறுவாளை ஒங்கிக்கொண்டு கொலை வெறியராகப் பாய்வதற்கு நின்று கொண்டிருந்தார் அவர்.
“இப்போது இந்த இடத்தில் நான் உங்களைக் கொன்று போட்டால் என்னை ஏனென்று கேட்பாரில்லை...!”
வார்த்தைகளைத் தொடர்ந்து பேய்ச் சிரிப்பு ஒலித்தது. ஓங்கிய வாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு கணமும் ஒரு யுகமாக நகர்ந்தது. பெருநிதிச் செல்வர் தாம் மோசம் போய்விட்டதை உணர்ந்தார்.
கடைசி விநாடி! அவருடைய உயிருக்கும் அந்த வாளின் கூர்மைக்கும் நடுவிலிருந்த காலத்தின் ஒரே ஓர் அற்ப அணு அது. அப்போது ஒர் அதிசயம் நடந்தது. நகை வேழம்பரின் ஓங்கிய கை தானாகவே தணிந்தது, வாளை இடுப்பிலிருந்த உறையிற் சொருகிக் கொண்டு இயல்பாக நகைத்தார் அவர்.
“இவ்வளவு பெரிய பயந்தாங்கொள்ளியாக இருக்கிறீர்களே? உங்களைச் சோதனை செய்து பார்த்தேன். உங்களிடம் சேர்ந்திருக்கும் செல்வம் உங்களுக்கு அளித் திருக்கிற தைரியத்தைத் தவிர, உங்களுடைய மனத்தில் உங்களுக்கென்று இயல்பிலே அமைந்திருக்கும் தைரியம் எவ்வளவு என்று தெரிந்து கொள்வதற்காகவே இப்படிச் செய்தேன். பாவம்! நீங்கள் அநுதாபத்துக்குரியவர். பயப் படாதீர்கள், உங்களை ஒன்றும் செய்துவிட மாட்டேன். ஆனால் ஒன்றைமட்டும் நினைவில் நன்றாகப் பதித்துக் கொள்ளுங்கள். எப்போதாவது என்னுடைய உயிருடன் விளையாட ஆசைப்பட்டீர்களோ, தொலைந்தீர்கள். நான் நன்றியுள்ளவனாக இருக்க வேண்டுமென்று ஆசைப் பட்டால் முதலில் நீங்கள் நன்றியுள்ளவராக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். இதை மறந்து செயல்படத் தொடங்கினால் முதலில் சாகிற உயிர் என்னுடையதாக இராது" என்றார் நகைவேழம்பர்.
எல்லாவற்றையும் கேட்டபடி பெருநிதிச் செல்வர் குனிந்த தலை நிமிராமல் இருளோடு இருளாக நின்றார். அவர் நின்ற நிலையே எதிரியிடம் மன்னிப்புக் கேட்பது போல் இருந்தது.
நகைவேழம்பரும் பெருநிதிச் செல்வரும் அன்றிரவு அந்த நாணற்காட்டில் ஒருவரையொருவர் சோதனை செய்து கொண்டபின் திரும்பவும் நண்பர்களாக மாற வேண்டிய நிலைதான் ஏற்பட்டது. அவர்களுடைய நட்பிலும் பகையுண்டு. பகையிலும் நட்பு உண்டு. பகை, நட்பு என்னும் நேர் முரணான குணங்கள் அவர்களைப் பொறுத்தவரை நேர்முரணாகவும் இருப்பதில்லை; நேர் நெருக்கமாகவும் இருப்பதில்லை. அவர்களுக்கு நடுவே உறவைப் பின்னியிருந்த இரகசியங்களைப் பொறுத்த அந்தரங்கம் அது.
அன்று அதே இடத்தில் காவிரிப் படுகை மணலில் விடிகிறவரை அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். பல பழைய சம்பவங்களை ஒருவருக்கொருவர் நினைவுபடுத்திக் கொண்டார்கள். ஓர் உண்மையை மனம் நெகிழ்ந்து ஒப்புக் கொண்டார் பெருநிதிச் செல்வர்.
“நகைவேழம்பரே! நீங்கள் கூறிய பின்பு என்னுடைய தைரியத்தின் எல்லை எனக்கே புரிகிறது. ஏழடுக்கு மாளிகையையும், செல்வத்தையும், எட்டிப் பட்டத்தையும், ஏவலாட்களையும் விட்டு விலகித் தனியாய் நிற்கும்போது நான் பலவீனமாகி விடுவது உண்மைதான்.”
“பலவீனம் எல்லாருக்கும் உண்டு ஐயா! நான் கூட ஒரு சமயம் உங்கள் பெண் சுரமஞ்சரிக்கு முன்னால் நடுங்கி நின்றிருக்கிறேன். அவளுடைய அலங்கார மண்டபத்தில் அவள் தன் தோழியோடு பேசிக் கொண்டிருந்த செய்தி ஒன்றை நான் திரைமறைவிலிருந்து கேட்க முயன்றேன். அவள் அதைத் தந்திரத்தால் கண்டு கொண்டாள். அப்போது நான் தலைகுனிய வேண்டியதாயிற்று. கோழைத்தனத்தால் தலைகுனியவில்லை. ஒட்டுக்கேட்க வேண்டுமென்ற ஆசையால் ஒரு பெண்ணின் அலங்கார மண்டபத்துக்குள் நுழைந்தது தவறுதான் என்று உள்ளுற எனக்கே பயமாயிருந்ததுதான் காரணம். நான் அப்படிச் செய்ததைப் பற்றி நீங்களோ உங்கள் பெண்ணோ என்னைக் கூப்பிட்டுக் கண்டித்திருந்தால் கூட நான் தலை குனியத்தான் செய்வேன். ஆனால் அந்த நாணத்தை நீங்களோ உங்கள் பெண்ணோ என்னுடைய அதைரியமாக நினைத்துவிட்டால் என்னால் பொறுக்க முடியாது.”
“நீங்களும் உங்கள் பேச்சும் எப்போதும் புதிராகவே இருக்கிறது.”
“இருக்கலாம். ஆனால் பாலில் நஞ்சு கலந்து கொடுப்பதால் அந்தப் புதிருக்கு விடை கிடைத்துவிடாது.”
“பார்த்தீர்களா! நண்பரான பின் மறுபடியும் பகையை உண்டாக்கிப் பேசுகிறீர்களே?”
“பேச்சில் என்ன இருக்கிறது? நண்பர்களைப் போல் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் பகைமையான செயலைச் செய்வதும், பகைவர்களைப் போலப் பேசிக் கொண்டிருந்து விட்டு நட்புக்கான காரியத்தை நடத்துவதும் நமக்குள் புதுமை இல்லையே?” என்று மேலும் ஆழமாக நெஞ்சில் இறங்கும்படி குத்திப் பேசினார் நகைவேழம்பர். பெருநிதிச் செல்வருக்குச் சுருக்கென்று தைத்தது இந்த வார்த்தை.
“நான் வேண்டுமானால் உங்களுக்குச் சத்தியம் செய்து தருகிறேன். பக்கத்திலுள்ள கடலும், காவிரியும் சாட்சியாக நாமிருவரும் இனிமேல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதில்லை என்று வைத்துக் கொள்ளலாமே?”
“வேண்டவே வேண்டாம். சத்தியம், சபதம் இப்படிப்பட்ட வார்த்தைகளின் பொருளை உங்களாலும் காப்பாற்ற முடியாது. என்னாலும் காப்பாற்ற முடியாது. தொடக்க நாளிலிருந்தே நியாயத்திலிருந்து வெகுதூரம் வழி விலகி வந்துவிட்டோம் நாம். எல்லாரும் நியாயமாகச் செல்கிற வழிக்கு நாம் இனிமேல் திரும்புவதைவிட நாம் வந்துவிட்ட வழிதான் நமக்கு நியாயம் என்று வைத்துக் கொள்வது நல்லது.”
பொழுது புலரும் வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. இருளில் மங்கலாகத் தெரிந்து கொண்டிருந்த நாணற் பூக்கள் வெண்பனிப் பாய் விரித்தாற்போல நெடுந்தொலைவுக்குத் தோன்றின. நகைவேழம்பரும், பெருநிதிச் செல்வரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். நண்பகல் வானம் போல் இரண்டு பேருடைய முகங்களிலும் எந்த உணர்ச்சியும் அதிகமாகத் தெரியாத அமைதி நிலவியது. நேற்றிரவு இதே நாணற் புதரில் பெருநிதிச் செல்வருடைய முகம் எப்படித் தோன்றி யிருக்கும் என்று நகைவேழம்பர் தமக்குள், கற்பனை செய்து பார்க்க முயன்றார்.
மேலே நடக்க வேண்டிய செயல்களைப் பற்றிப் பேசிக் கொண்டே இருவரும் எழுந்து நடந்தார்கள். நீலநாக மறவருடைய உதவியால் ஓவியன் தப்பிவிட்டதையும், இளங்குமரனின் சித்திரம் படைக்கலச் சாலையில் பறித்து வைத்துக் கொள்ளப் பட்டதையும், சுரமஞ்சரியின் மணி மாலை ஓவியனிடம் இருப்பதையும் விவரித்துச் சொல்லிக் கொண்டே நடந்தார் நகைவேழம்பர்.
“அருட்செல்வ முனிவருடைய தவச்சாலை தீக்கிரையான பின்பு இளங்குமரன் ஆதரவிழந்து போவான் என்று நினைத்தோம். இப்போதோ முன்னைவிடப் பலமான ஆதரவாக நீலநாக மறவரின் துணையில் அவன் இருக் கிறான்” என்றார் பெருநிதிச் செல்வர்.
“நீலநாக மறவர் மட்டுமில்லை. புறவீதியிலிருக்கும் அந்தக் கிழவர் வீரசோழிய வளநாடுடையாரும் அவர்களையெல்லாம் விடப் பெரிய ஆதரவாக அவனுக்கு உங்கள் பெண் சுரமஞ்சரியும் வேறு இருக்கிறாள்” என்று சுரமஞ்சரியின் உள்ளம் இளங்குமரனுக்கு வசப்பட்டிருப்பதையும் நினைவூட்டினார் நகைவேழம்பர்.
அவர்கள் பேசிக்கொண்டே நெய்தலங்கனாலுக்கு அருகே வந்திருந்தனர்.
“இனிமேல் சுரமஞ்சரி மாளிகையிலிருந்து வெளியேற முடியாதபடி தடுத்துவிட்டால் நல்லது என்று தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று எங்கோ வேறுபக்கம் பார்க்கத் தொடங்கியிருந்த நகைவேழம்பரைக் கேட்டார் பெருநிதிச் செல்வர்.
இந்தக் கேள்விக்கு மறுமொழி கூறாமல், “அதோ காமன் கோவில் வாயிலில் குளக்கரையில் நிற்கிறவர்களைப் பாருங்கள்” என்று பெருநிதிச் செல்வரின் கவனத்தைத் திருப்பினார் நகைவேழம்பர். பெருநிதிச் செல்வர் பார்த்தார்.
இரு காமத்திணையேரியின் கரையில் நீராடிய கோலத்தோடு கையில் காமன் கோவிலில் வழிபடுவதற்குரிய பொருள்களை ஏந்தியவளாய்ச் சுரமஞ்சரியே தன் தோழியுடம் நின்று கொண்டிருந்தாள்.
“காமன் கோவில் வழிபாடு யாருக்காகவோ?” என்று மெல்ல சொல்லிச் சிரித்தார் நகைவேழம்பர். பெருநிதிச் செல்வருக்கு எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தது போலிருந்தது அந்தச் சிரிப்பு.
‘ஒலிகள் ஒலியின்மையிலிருந்து பிறக் கின்றன. ஒலியின்மை, ஒலியுண்மையால் உணரப்படுகிறது’ என்று தருக்க நூற் பாடத்தின் போது அடிகள் தனக்குச் சொல்லியிருந்த உண்மையை நினைத்துக் கொண்டு எதிரே பார்த்தான் இளங்குமரன். முல்லை அவனையே வைத்த கண் வாங்காமல் கவனித்துக் கொண்டு நின்றாள். அவளுடைய கண்கள் எவ்வளவோ பேசித் தீர்ப்பதற்குத் தவிப்பது தெரிந்தது. ஆனால் வாய் திறந்து எதுவும் பேசாமல் நின்றாள் அவள். இளங் குமரனுக்கும் தான் அவளிடம் என்ன பேசுவதென்று தோன்றவில்லை. வாய் திறந்து பேசுவதைவிடச் சுவை நிறைந்த பேச்சை மெளனத்தினால் பேச முடிந்த சமயங்களும் உண்டு. நீண்ட மெளனத்துக்குப் பின் பிறக்கிற ஒரே ஒரு சொல்லுக்கும் ஆயிரம் சொற்களின் பொருளாற்றல் அமையும். அப்படி ஒரு சொல் தங்களில் யாரிடமிருந்து முதலில் பிறக்கப் போகிறதென்று இருவருமே ஒருவரை யொருவர் எதிர்பார்த்துத் தயங்கிய நிலையில் நின்றார்கள். இருவர் நெஞ்சிலும் கொள்ளை கொள்ளையாக நிறையப் பேச வேண்டும் என்று நினைத்தும், ஒன்றுமே பேச வராததொரு நிலை.
அங்கே பூம்பொழிலில் மலர்ந்திருந்த மாலைப் பூக்களின் நறுமணமெல்லாம் ஒன்று சேர்ந்து உருப்பெற்றுக் கண்ணும், சிரிப்பும், முகமுமாய் எதிரே வந்து நிற்பதுபோல் முல்லை நின்றாள். ஒப்புக்குச் சிறிது நேரம் பேசிவிட்டுக் கதக்கண்ணன் அவர்கள் இருவரையும் தனிமையில் விட்டுச் சென்றிருந்தான். கதக்கண்ணன் இவ்வாறு தங்களை விட்டுச் சென்றிராவிட்டால் இந்த நிலை ஏற்பட்டிருக்காதென்று எண்ணினான் இளங்குமரன். முல்லையின் பார்வையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பராக்குப் பார்ப்பதுபோல் மேலே அண்ணாந்து நோக்கினான் அவன். சிறுசிறு வெண்மணல் திட்டுக்களைப் போல் சரிவு சரிவாய் வானில் மேக அடுக்குகள் மிகுந்தன. அனைத்தை யும் அளாவி நிற்கும் அந்த எல்லையற்ற பெருவெளியிலே சலனத்தைக் காட்டி இயங்குவதுபோலக் கூட்டமாக வெண்ணிறப் பறவைகள் சில பறந்தன. பூம்பொழிலின் வாய்க்கால்களில் நீர்பாயும் ஒலியும், காற்றில் இலைகள் அசையும் ஒரே விதமான சலசலப்பும் தவிர எங்கும் ஒரு நிதானமாகப் பரவி அழகு சேர்க்கும் மாலைப் போதின் மயங்கிய சூழ்நிலை. அங்கே வானுயர வளர்ந்திருந்த நாகலிங்க மரத்தின் பூக்கள் தரையில் உதிர்ந்திருந்தன.
ஒரே நிலையில் கற்சிலை போல் நிற்க இயலாமல் முல்லை பாதங்களை இடம் பெயர்த்து நின்றதனால் சிலம்பொலி கிளர்ந்தது. அந்தச் சிலம்பொலியும் கலைக்கக் கூடாத மெளனத்தை அநாவசியமாகக் கலைத்து விட்டதற்காக அஞ்சுவதுபோல மெல்லத்தான் ஒலித்தது. சிலம்பிலிருந்து பிறந்த ஒலியும் ஒலியிலிருந்து பிறந்த இனிமையும் பரவி அடங்கிய பின் மீண்டும் பழைய மெளனமே நீடித்தது. இலைகளின் அசைவு, நாகலிங்கப் பூவின் தெய்விக நறுமணம், நீரின் ஒலி, மேகக்கணங்கள் நகர்ந்து செல்லும் வானம், காலங்கணங்கள் நகர்ந்து செல்லும் பூமி, நகராமல் நீடிக்கும் பெரிய மெளனம்.
முல்லை பொறுமையிழந்தாள். நீண்ட மெளனத் துக்குப் பின் பிறக்கும் சொற்கள் அவளுடையவையாக இருந்தன.
“வானத்திலும் மேகங்களிலும் யாரும் கால் கடுக்க நின்று கொண்டிருக்கவில்லை. நீங்கள் பார்க்க வேண்டிய பேதைப் பெண் இங்கே பூமியில்தான் உங்கள் எதிரே நின்று கொண்டிருக்கிறாள்.”
இந்தச் சொற்களைக் கேட்டு இளங்குமரனின் கவனம் திரும்பியது. அவன் அவளுடைய முகத்தைப் பார்த்தான். சிரித்தான்.
“பூமியில் இருப்பதை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்று நீ சொல்கிறாய். அதற்கு மேலே உள்ளவற்றையுமே கண்டு உணர நான் விரும்புகிறேன்.”
“விரும்புவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அதற்காக என்னை மறந்துவிட முயலாதீர்கள்.”
“முயற்சி செய்வதனால் உலகில் எந்த நினைவையும் மறந்துவிட முடியாது. முல்லை! மறக்க வேண்டும் என்று முயல்வதனாலேயே மறக்க இயலாதபடி நினைவில் ஆழமாகப் பதிந்துகொள்ளும் நினைவுகளும் இருக்கின்றன. ஒன்றை ஒழுங்காகவும், தொடர்பாகவும் நினைக்கத்தான் முயற்சி வேண்டும். பிடிவாதமாக ஒரு பொருளைத் தொடர்ந்து நினைப்பதை முனிவர்கள் தவம் என்கிறார்கள். மனிதர்கள் சிந்தனை என்கிறார்கள். மறதி என்பது நினைவில் தானாக வரும் சோர்வு. அதற்கு முயல வேண்டியதே இல்லை.”
“அந்தச் சோர்வு என்னைப் பொறுத்தவரையில் முயலாமலே உங்கள் மனத்தில் ஏற்பட்டுவிட்டது போலிருக்கிறது.” முல்லையின் இந்தக் கேள்விக்கு இளங்குமரனிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. அவள் முகத்தில் பதிந்த தன் பார்வையை மீட்காமல் அவன் நின்று கொண்டிருந்தான்.
மேலேயிருந்து உருண்டையாய்ப் பெரிதாய்ச் செழுமையான நாகலிங்கப் பூ ஒன்று இளங்குமரனின் காலடியில் உதிர்ந்து விழுந்தது. முல்லையே பேச்சை மேலும் தொடர்ந்தாள்:
“நீராட்டு விழாவன்று கழார்ப் பெருந்துறையில் உங்களைச் சந்திக்க முடியாமல் ஏமாந்தேன். அடுத்த முறை புறவீதியில் எங்கள் வீட்டு வாயில் வழியே நீங்கள் தேரைச் செலுத்திக் கொண்டு கைநீட்டிக் கூவியழைத்தேன். பார்த்தும் பாராதவர் போலத் தேரைச் செலுத்திக் கொண்டு போய்விட்டீர்கள். அப்போதும் ஏமாற்றமே அடைந்தேன். இப்போது கண் முன்னால் நேர் எதிரே வந்து நிற்கிற போதும் எவர் முன்பு நின்று கொண் டிருக்கிறேனோ, அவரிடமிருந்து எதையோ பெறமுடி யாமல் தவித்துக் கொண்டிருக்கிறேனோ, அதை வேறு யாரோ உங்கள் இதயத்திலிருந்து பெற்றுக் கொண்டு விட்டார்கள் என்று என் மனத்தில் சந்தேகமும் உண்டாகிறது. தேருக்கும் சிவிகைக்கும் சொந்தக்காரர்களான பெருமாளிகைப் பெண்கள் பூம்புகாரின் பட்டினப் பாக்கத்தில் நிறைய இருக்கிறார்கள். அவர்களில் எவரேனும் உங்களுடைய அன்பைப் பெற்றிருக்கலாம்...”
மிக விரைவாகப் படபடவென்று சீற்றம் உற்றவளைப் போலப் பேசிக் கொண்டே வந்த முல்லையின் குரலில் விம்மலும், ஏக்கமும் கலந்து அழுகையின் சாயல் ஒலித்தது.
இளங்குமரன் கீழே குனிந்து காலடியில் விழுந்திருந்த நாகலிங்கப் பூவை எடுத்துக் கொண்டு நிமிர்ந்தான். இதயத்தில் சேர்த்து வைத்திருந்த உணர்ச்சித் தவிப்பைச் சொற்களாகக் கொட்டித் தீர்த்தது போதாதென்று கண்ணீராகவும் கொட்டித் தீர்ப்பதற்கு இருந்தாற்போல் விழி கலங்கி நின்றாள் முல்லை. அவள் முகத்தை நேரே பாராமல் தன் வலது உள்ளங்கையில் நாகலிங்கப் பூவை வைத்து அதைப் பார்த்துக் கொண்டே அவளிடம் பேசினான் இளங்குமரன்:
“உன்னைப் போன்ற உலகத்துப் பெண்களின் மனங்களையெல்லாம் சந்தேகத்தையும், ஆசையையும் இணைத்துப் படைத்திருக்கிறார் படைப்புக் கடவுள். நீங்கள் எல்லாரும் என்னைப் போன்ற ஆண்மகனிடமிருந்து எதிர்பார்க்கிற பொருள் ஒன்றே ஒன்றுதான். அந்த ஒன்றையும் உங்களுக்கே சொந்தமாக்கி வெற்றி கொள்ள விரும்புகிறீர்கள். எந்த ஒன்றை முதலாகக் கொண்டு உலகத்தின் மற்றப் பொருள்களையெல்லாம் நாங்கள் வெற்றி கொள்ள வேண்டுமோ அந்த முதலையே நீங்கள் கொள்ளையிட்டு வென்றுவிட முயல்கிறீர்கள்.”
“அப்படியா? நாங்கள் கொள்ளையிட்டு வெற்றி கொள்ளத்தக்கதாக உங்களிடமிருக்கும் அந்த விசித்திரப் பொருள் என்னவென்று நான் தெரிந்து கொள்ளலாமோ!”
“இதுவரை உனக்குத் தெரியாமலிருந்தால் தெரிந்து கொள்ள வேண்டியதுதான். உண்மையாகவே தெரியாதா? அல்லது தெரிந்து கொண்டே வாயைக் கிளறுகிறாயா?”
“மெய்யாகவே தெரியவில்லை, சொல்லுங்கள் அந்த விந்தைப் பொருள் எது?”
“வேறெதுவுமில்லை! ஆண்பிள்ளையின் மனம். ஒவ்வொரு பெண்ணும் அதை வெற்றிகொண்டு ஆள்வதற்குத்தான் ஆசைப்படுகிறாள். ஆசை நிறைவேறாத போது சந்தேகப்படுகிறாள். கண் கலங்கி நின்று மனம் கலங்கச் செய்கிறாள். என்னைப் பொருத்தவரையில் ஞானத்தைப் பயிர் செய்யும் விளைநிலமாக என் மனத்தை அளித்திருக்கிறேன்.”
“மிக்க மகிழ்ச்சி. அதே மனத்தின் ஒரு கோடியில் அன்பைப் பயிர் செய்து கொள்ளவும் சிறிது இடம் வேண்டி நிற்கிறேன் நான்.”
“முல்லை! நீ அதை வேண்டுவது தவறில்லை! சுரமஞ்சரியும் அதைத்தான் வேண்டினாள். எனக்காக உங்களுடைய மனத்தைத் தோற்கக் கொடுப்பதாய்த்தான் நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் உங்களுடைய அந்தத் தோல்வியை, என்னுடைய வெற்றியாக அங்கீகாரம் செய்து கொள்ள நான் துணிய முடியாதவனாயிருக்கிறேன். காவிரிப்பூம் பட்டினத்துப் புறவீதியில் செருக்கு மிகுந்த இளைஞனாக உன்னுடைய சிரிப்புக்கும், நீ அளித்த சுவையான விருந்து உணவுகளுக்கும் ஆட்பட்டிருந்த பழைய இளங்குமரனை மறந்துவிட வேண்டும்.”
“முயற்சி செய்வதனால் உலகின் எந்த நினைவையும் மறந்துவிட முடியாது. மறக்க வேண்டும் என்று முயல் வதனாலேயே மறக்க இயலாதபடி நினைவில் ஆழமாகப் பதிந்து கொள்ளும் நினைவுகளும் இருக்கின்றன” என்று அவன் சற்றுமுன் தன்னிடம் கூறியிருந்த தத்துவத்தையே அவனுக்குத் திருப்பிச் சொல்லிச் சிரித்தாள் முல்லை.
நல்ல நேரத்தில் தன்னை அவள் வகையாகப் பேச்சில் மடக்கி விட்டாளே என்ற மலைப்பினால் சில கணங்கள் என்ன பேசுவதென்று தோன்றாமல் நின்றான் இளங்குமரன். உலகத்தின் கண்ணிரைத் துடைப்பதற்காகத்தான் கண்களில் நீரைச் சுமக்கும் விசாகையும், ஓர் ஆண்பிள்ளை யின் அன்பு தங்களுக்குக் கிடைக்கவில்லையே என்பதற்காகக் கண்கலங்கும் சுரமஞ்சரி, முல்லை போன்ற பெண்களையும் மனத்தில் நினைத்து நிறுத்துப் பார்த்தான் அவன்.
இளங்குமரன் தன்னைப் பார்க்காமல் இருந்த அந்த நேரத்தில் தன் இரு கண்களும் நிறைய அவனை நன்றாகப் பார்த்தாள் முல்லை. முன்பிருந்ததைவிட இளைத்திருந்தாலும் அந்த இளைப்பினாலேயே அவனுடைய அழகு வளர்ந்திருப்பதுபோல் தோன்றியது. காவிரிப்பூம் பட்டினத்தில் முரட்டுத் தனமாகச் சுற்றிக் கொண்டிருந்தவன் பூம்பொழிலுக்கு வந்த பின் மேனி நிறம் மாறி நளினமாகக் காட்சியளித்தான். பவழச் செஞ்சுடர் மேனியில் வைகறைக் கதிரவனின் வண்ணம் மின்னியது. முகத்தில் அறிவின் அடக்கமும் நிறைந்த ஒளியும் தெரிந்தன. அழகிய கண்களில் துணிவினாலும் உடல் வலிமையாலும் தோன்றும் பழைய செருக்கு மறைந்து பேரமைதி - எதையோ பருகக் காத்திருக்கும் அமைதி தென்பட்டது. நாகலிங்கப் பூவை ஏந்தியிருந்த வலது உள்ளங்கை அந்தப் பூவின் நிறத்தைக் காட்டிலும் அதிகமாகச் சிவந்து காட்சியளித்தது. பொன்னில் வார்த்துப் பொருத்தினாற் போன்ற சுந்தர மணித் தோள்கள் காண்பவர் உள்ளத்தைக் கவர்ந்தன.
தான் இளங்குமரனுடைய சொற்களையே அவனிடம் திருப்பிச் சொல்லியதனால் அவன் மனம் நொந்து போயிருக்குமோ என்று வருந்திய முல்லை பேச்சை வேறு வழியில் மாற்றினாள்.
“நானும் அண்ணனும் இங்கு வரும்போது நீங்கள் கூடக் கண்கலங்கி வருத்தத்தோடு உட்கார்ந்திருந்தீர்களே? உங்கள் வருத்தத்தின் காரணத்தை நான் தெரிந்து கொள்ள லாமோ?”
“என்னுடைய தாயைப் பற்றி நினைவு வந்தது. கண்ணிலும், மனத்திலும் கலக்கமும் வந்தது.”
“மறக்க வேண்டியவர்களை நினைத்துக்கொண்டு வருந்துவதும், நினைக்க வேண்டியவர்களை மறந்துவிட்டு மகிழ்வதுமாகச் சிறிது காலத்துக்குள் எப்படி எப்படியோ மாறிவிட்டீர்கள் நீங்கள். தோற்றத்திலும் மாறிவிட்டீர்கள்? சிந்தனையிலும் மாறிவிட்டீர்கள்.”
“இன்னும் ஒன்றையும் அவற்றோடு சேர்த்துக் கொள். விருப்பங்கள், ஆசை, அன்பு இவற்றில் கூட மாறிவிட்டேன்.”
“இல்லை! மாற்றிக் கொண்டு விட்டீர்கள்.”
“எப்படியானால் என்ன? திருநாங்கூரில் இந்தப் பூம்பொழிலில் பழைய இளங்குமரனை நினைத்துத் தேடிக் கொண்டு வந்திருந்தால் உனக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும்.”
முல்லை எந்த வழியிலிருந்து பேச்சை மாற்றினால் இருவருடைய மனமும் நோகாமல் உரையாடல் வளரும் என்றெண்ணினாளோ அந்த வழிக்கே திரும்பி வந்தது பேச்சு. முகத்தில் அறைவதுபோல் எடுத்தெறிந்து அவன் சொல்லிய ஒவ்வொரு சொல்லும் அவளை இரண்டாம் முறையாக அழுதுவிடுகின்ற நிலைக்குக் கொண்டு வந்தன.
அவள் முகம் வாடிவிட்டதைக் கண்டும் இளங்குமரன் புன்னகை புரிந்தான். “முல்லை ! உன்னுடைய நிலையைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாயிருக்கிறது.”
“பரிதாபத்தை உண்டாக்கியவரே அதைப் பார்த்து நகைப்பதில் பொருள் இல்லை” என்று இதழ்கள் துடிக்க சினத்தோடு பதில் கூறிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள் முல்லை. அந்தச் சமயத்தில் பூம்பொழிலைச் சுற்றிப் பார்க்கப் போயிருந்த கதக்கண்ணன் திரும்பி வந்து சேர்ந்ததனால் அவர்களுடைய பேச்சு மேலே வளராமல் நின்றது. வளநாடுடையாருக்கு தன் அன்பையும் வணக்கங்களையும் தெரிவிக்கச் சொன்னான் இளங்குமரன்.
“வருகிற பெளர்ணமியன்று முல்லைக்குப் பிறந்த நாள் மங்கலம். அன்றைக்கு நீ காவிரிப்பூம் பட்டினத்துக்கு வர வேண்டும். முல்லை உனக்கு விருந்து படைக்கப் போகிறாள். எங்கள் தந்தையாரும் உன்னைக் காண்பதற்கு ஆவலாயிருக்கிறார். எங்களால் உன்னைக் காணும் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உன்னையும் பார்த்தாயிற்று. முல்லையின் பிறந்தநாள் மங்கலத்துக்கு வரவேண்டுமென்றும் அழைத்தாயிற்று” என்று கதக்கண்ணன் மறுமொழி கூறியதைக் கேட்டு இளங்குமரன் சிறிது திகைத்தான். அந்தத் திகைப்பைப் பார்த்துவிட்ட கதக்கண்ணன், “ஏன் திகைக்கிறாய்? உன்னால் வர முடியாதா?” என்று சந்தேகத்தோடு கேட்டான்.
“கதக்கண்ணா! நீங்கள் இருவரும் என்னை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். குருகுலவாசம் முடியும் வரை நான் திருநாங்கூர்ப் பூம்பொழிவிலிருந்து எங்கும் வெளியேறுவதற்கு இயலாது” என்று இளங்குமரன் உறுதியாக மறுமொழி கூறியபோது, முல்லையின் முகம் மேலும் வாட்டம் கண்டது.
“இவரை ஏன் அண்ணா தொல்லைப் படுத்துகிறீர்கள்? இவரால் இப்போது எதுவுமே இயலாது. அன்பு, ஆசை, பாசம் ஒன்றுமே இல்லாத இரும்பு மனிதராகி விட்டார் இவர். நீலநாகமறவருடைய மாணவர் அல்லவா? அதே வழியில் வளர்கிறார்” என்று சினம் மாறாத குரலில் குமுறிப்போய்ப் பேசினாள் முல்லை.
அப்போது அவளுடைய பூ நெற்றியில் சினம் பரவியிருக்கும் செம்மையைக் கண்டு சிரிப்பைத் தவிர இளங்குமரனுக்கு வேறு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை. கதக்கண்ணனும் ஏதேதோ பழைய உறவுகளையும், நட்பையும் கூறி இளங்குமரன் மனத்தை நெகிழச் செய்ய முயன்றான். முடியவில்லை. முல்லையின் பிறந்தநாள் மங்கலத்துக்கு காவிரிப்பூம் பட்டினம் வர இயலாதென்று கண்டிப்பாக மறுத்துவிட்டான் அவன்.
அவ்வளவு தூரம் பயணம் செய்து வந்ததற்கு அருட் பயனாவது கிடைக்கட்டும் என்று முல்லையும், கதக்கண்ணனும் தவச்சாலைக்குள்ளே போய் நாங்கூர் அடிகளை வணங்கி வாழ்த்துப் பெற்றுக் கொண்டு வந்தார்கள். அவர்கள் சென்ற போது விசாகை ஏதோ ஒரு சுவடியை விரித்து வைத்துக்கொண்டு அடிகளிடம் தம் சந்தேகங்களைக் கூறி விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தாள். விசாகையைப் பற்றி அவர்களுக்கும், அவர்களைப் பற்றி விசாகைக்கும் சுருக்கமாகக் கூறி அறிமுகம் செய்து வைத்தார் நாங்கூர் அடிகள்.
பூம்பொழிலிலே மேற்கு வானத்துப் பொன் வெயில் தங்க ஓடையாய் உருகித் தகதகத்துக் கொண்டிருந்த நேரம் முல்லையும், கதக்கண்ணனும் புறப்படுவதற்கிருந்தார்கள். நாகலிங்க மரத்தின் அருகே முன்பிருந்தபடியே இளங்குமரன் இருந்தான். மனத்துக்கு மனம் ஒட்டுதல் இல்லாமல் விட்டுப் போயிருந்தாலும் விடை பெற்றுக் கொள்ள வேண்டிய முறைக்காகப் போய் விடை பெற்றுக் கொண்டு பூம்பொழிலின் வாயிலை நோக்கி நடந்தார்கள் அவர்கள். சிறிது தொலைவு நடந்ததும், தன் பின்னால் யாரோ தொடருவது போலக் காலடி ஓசை கேட்டுத் திரும்பினாள். வேறு யாருமில்லை; இளங்குமரன்தான். அவன் கண்களில் நீர் நெகிழ்ந்திருந்தது.
“முல்லை! இவற்றை உன்னுடைய பிறந்தநாள் மங்கலத்துக்கு நான் அளிக்கும் பரிசாக ஏற்றுக்கொள்.”
ஒற்றை ஓலையான ஒரே ஓர் ஏட்டையும், சற்று முன் கையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்த நாகலிங்கப் பூவையும் அவளுக்கு அளித்தான் அவன். முல்லையின் கைகள் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு முன் நீண்டிடாமல் தயங்கின. அந்த ஒலையை அவன் அப்போது தான் எழுதியதற்கு அடையாளம் போல் எழுத்தாணியும் கையில் இருந்தது.
“வாங்கிக்கொள், முல்லை!”
அவள் தயங்கியபடியே வாங்கிக் கொண்டாள். கதக்கண்ணன் முன்னால் விரைவாக நடந்து போயிருந்தான். ஏட்டில் முத்து முத்தாகக் கீறப்பட்டிருந்த எழுத்துக்களை ஆர்வத்தோடு படிக்கலானாள் அவள்.
‘சித்தம் தடுமாறச் செய்கை நினைவழியப் பித்தம் தலைகிறங்கப் பார்க்குமே - இத்தரையில் சித்திரம்போற் சேர்ந்த விழிநோக்கும் முல்லையெழில் முத்துநகை பூக்கும் முகம்’
என்று அழகாகக் கீறப்பட்டிருந்த அந்த வெண்பாவின் பொருளும், அதனோடு இருந்த நாகலிங்கப் பூவின் நறுமணமும் முல்லையைக் கனவுகளில் மூழ்கச் செய்தன. ஆனால் அக்கனவுகள் நீடிக்கவில்லை. அதன் கீழே ‘ஒரு காலத்தில் இந்தச் சிரிப்புக்குச் சற்றே ஆட்பட்டிருந்தவனின் வாழ்த்து’ என்று எழுதப்பட்டிருந்த வாக்கியத்தைப் படித்து விட்டு, ‘அதற்கென்ன அர்த்தம்?’ என்று அவனையே கேட்டு விடுவதற்காகச் சீற்றம் கொண்டு முல்லை தலை நிமிர்ந்தபோது, அவள் நின்ற இடத்திலிருந்து நீண்ட தொலைவுக்கு தவச்சாலையை நோக்கி விரைவாக நடந்து போய்க் கொண்டிருந்தான் அவன். மாலை வெயிலில் அவனுடைய பவழச் செஞ்சுடர் மேனி அக்கினியே நடந்து போவதுபோல் மின்னியது.
பொழுது புலர்ந்து கொண்டிருந்த அந்த வைகறை நேரத்திலே இருகாமத்திணை ஏரியின் கரையும் காமவேள் கோயிலும் தனிமையின் அழகில் அற்புதமாய்த் தோற்றமளித்துக் கொண்டிருந்தன. கிழக்கு வானத்தில் வைகறைப் பெண் செம்மண் கோலம் இட்டுக் கொண்டிருந்தாற்போல ஒரு காட்சி. காமவேள் கோயில் விமானத்திற் பொற் கலசங்கள் மின்னிக் கொண்டிருந்தன. விடிகாலைக் காற்றினால் ஏரி நீர்ப் பரப்பிலே பட்டுத் துணியில் மடிப்புக்கள் விழுவது போலச் சிற்றலைகள் புரண்டன. நீர்ப் பரப்பின் தெளிவு கண்ணாடி போலிருந்தது. அந்தத் தெளிவுக்கு மாற்றாகச் செங்குமுதப் பூக்கள்.
மேகக்காடு போல நீராடிய கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு நின்றாள் சுரமஞ்சரி. தோழி வசந்தமாலையும் அப்போதுதான் நீராடி முடித்துவிட்டுக் கரையேறிக் கொண்டிருந்தாள். அவளை நோக்கிக் குறும்புநகை குலவக் கேட்டாள் சுரமஞ்சரி:
“நீ யாரை நினைத்துக் கொண்டு நீராடினாய் வசந்த மாலை?”
“நான் ஆண்பிள்ளை யாரையும் நினைத்துக் கொள்ள வில்லையம்மா. விடிந்ததும் விடியாததுமாக இந்தக் குளிரில் என்னை நீராடுவதற்காக இங்கே இழுத்து வந்த உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன்.”
“கொடுத்து வைத்தவளடி நீ. உலகத்தில் மிகவும் துன்பமான முயற்சி நம்மிடம் அன்பு செலுத்தாதவர் மேல் நாம் அன்பு செலுத்திக் கொண்டு வேதனைப்படுவதுதான். உன்னைப் பொறுத்தவரையில் உனக்கு அப்படி ஒரு வேதனையும் இல்லையே?”
“உங்களுக்கும் இந்த வேதனை மிக விரைவிலே தீர்ந்து விடும் அம்மா! சோமகுண்டம், சூரியகுண்டம் துறைகளில் நீராடிக் காமவேள் கோட்டத்தை வலங்கொள்ளும் அளவுக்குப் பெரிய முயற்சிகளைச் செய்கிறீர்களே, இவற்றுக்கு வெற்றி ஏற்படத்தான் செய்யும்.”
“தீர்த்தமாடுவதும், கோட்டம் வலங்கொண்டு சுற்றுவதும் நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்குத்தான். காமன் என்று தனியாக யாருமில்லை. நம்முடைய மனத்தின் உள்ளே ஊற்றெடுத்துப் பாயும் நளினமான ஆசைகளுக்கு உருவம் கொடுத்தால் அவன்தான் காமன். அவன்தான் ஆசைகளின் எழில் வாய்ந்த வடிவம், அவன் தான் அன்பின் பிறவி.”
“இந்தக் கற்பனை மெய்யானால் நீங்கள் வணங்கி வழிபட வேண்டிய காமன் இங்கே இல்லை” என்று கூறிச் சிரித்தாள் வசந்தமாலை. இருவரும் காமவேள் கோட்டத்தைச் சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஈர ஆடையும் நெகிழ முடிந்த கூந்தலும், ஆசையும், ஏக்கமும் தேங்கி நிற்கும் விழிகளுமாகச் சுரமஞ்சரி அன்றைக்குப் புதிய கோலத்தில் புதிய அழகோடு விளங்கினாள். மோகன நினைவுகளைக் கிளரச் செய்யும் நறுமணங்கள் அவள் பொன்னுடலிலிருந்து பரவிக் கொண்டிருந்தன. பூக்கள் சூட்டப்படுவதனால் பூக்களுக்கே இந்தக் கூந்தலிலிருந்து மணம் கிடைக்குமோ என்று எண்ணத்தக்க வாசனைகள் அவள் குழற் கற்றைகளிலிருந்து பிறந்தன. கரும்பாம்பு நெளிவது போலத் தழைத்துச் சரிந்த கூந்தலில்தான் என்ன ஒளி!
சுரமஞ்சரி ஈரம்பட்டு வெளுத்திருந்த தன் அழகிய பாதங்களினால் மணலில் நடக்கும் வேகத்தைப் பார்த்து வசந்தமாலை வியந்தாள். புகை மண்டலத்தினிடையே கொழுந்துவிட்டு தழல் கதிர்போல் ஈரப் புடவையின் கீழே பொன்னொளி விரிக்கும் அந்தப் பாத கமலங்கள் மணலில் பதிந்து பதிந்து மீளும் அழகை அதிசயம் போலப் பார்த்துக்கொண்டே உடன் சென்றாள் வசந்தமாலை.
“என்னடி பார்க்கிறாய் வசந்தமாலை?”
“உங்களுடைய பட்டுப் பாதங்கள் இன்னும் எவ்வளவு நாள் இந்தக் காமன் கோவிலை இப்படி வலம் வந்து வெற்றிபெறப் போகின்றனவோ என்று நினைத்துப் பார்த்தேன் அம்மா!”
“என்னுடைய வேதனை மிக விரைவில் தீர்ந்துவிடும் என்று நீதான் முதலிலேயே வாழ்த்துக் கூறிவிட்டாயே, இனிமேல் எனக்கென்ன கவலை?” என்று தோழிக்குப் பதில் கூறிவிட்டு மேலும் வேகமாக நடந்தாள் சுரமஞ்சரி.
வழிபாடு முடிந்ததும் வந்ததைப் போலவே யாரும் அறிந்து ஐயம் கொள்ள இடமின்றி மாளிகைக்குப் போய் விட வேண்டுமென்று இருவரும் புறப்பட்டார்கள். வசந்த மாலை தன் தலைவியைத் துரிதப்படுத்தினாள்.
“நாம் திட்டமிட்டிருந்ததை விட அதிக நேரமாகி விட்டதம்மா. ஆள் புழக்கம் ஏற்படுவதற்கு முன் இங்கிருந்து திரும்பிவிட வேண்டுமென்று வந்தோம். சிறிது நாழிகைக்கு முன்பு கூட இந்த நாணற் புதரருகே யாரோ நடந்து போனார்கள். விடிகிற நேரத்தில் புதர்களிலிருந்து நரிகளைக் கலைத்துவிட்டு வேட்டையாடுவதற்காகப் பரதவ இளைஞர்கள் இங்கே கூட்டம் கூட்டமாக வருவார்களென்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தக் கூட்டமெல்லாம் வருவதற்குள் நாம் இங்கிருந்து போய்விட வேண்டும்.”
“போகலாம். அதற்காக இறக்கை கட்டிக்கொண்டு பறக்க முடியுமா என்ன? விடிந்ததும் நரி முகத்தில் விழிக்கிற உரிமை பரதவ இளைஞர்களுக்கு மட்டும் சாசனம் இல்லையே? வாய்த்தால் நாமும் நரி முகத்தில் விழிக்கலாமே தோழி!” என்று விளையாட்டுப் பேச்சில் இறங்கினாள் சுரமஞ்சரி. பேச்சு விளையாட்டாயிருந்தாலும் நடை வேகமாகவே தான் இருந்தது. என்ன இருந்தாலும் யாருக்கும் தெரியாமல் வந்திருக்கிறோம் என்ற பயம் பயம்தானே? காமன் கோவிலிலிருந்து அவர்கள் மாளிகையை அடைந்தபோது யாருடைய சந்தேகத்திற்கும் இலக்காகவில்லை. மாளிகை அமைதியாயிருந்தது. பெருமாளிகைத் தோட்டத்தில் நகைவேழம்பரும் தந்தையாரும் தோளோடு தோள் இணைந்தபடி கனிவாகப் பேசிக் கொண்டிருந்ததையும் தன்னுடைய மாடத்தி லிருந்தே சாளரத்தின் வழியே சுரமஞ்சரி பார்க்க நேர்ந்தது.
“வசந்தமாலை! இங்கே வந்து இந்த விந்தையைப் பாரேன்” என்று தன் தோழியைக் கூப்பிட்டு அவர்களுக்கும் இதைக் காண்பித்தாள் சுரமஞ்சரி.
“நேற்றிரவு இரண்டு பேரும் பயங்கரமான கருத்து மாறுபாடு கொண்டு கடுமையாகப் பேசினார்கள் என்றாயே? இப்போது என்ன சொல்கிறாய், தோழி?”
தோழி பதில் ஒன்றும் சொல்லாமல் சிரித்தாள். “நல்ல வேளை, தோழி! தோட்டத்தில் நின்று பேசிக் கொண்டிருந்ததனால் இவர்கள் பார்வையில் தென்படாமல் உள்ளே வந்தோம். இவர்கள் பார்வையில் பட்டிருந்தால் நாமிருவரும் நிறைய பொய்கள் சொல்ல நேர்ந்திருக்கும். சொன்னாலும் நம் பொய்யை இவர்கள் நம்பியிருக்க மாட்டார்கள்.”
“உங்கள் தந்தையார் நம்பினாலும் நம்புவார். நகைவேழம்பர் இருக்கிறாரே, அவர் உண்மைகளையே நம்பாத மனிதர். பொய்களை எப்படி நம்புவார் என்று எதிர் பார்க்க முடியும்!” என்றாள் வசந்தமாலை. யாருக்கும் தெரியாமல் செய்ய நினைத்த செயலை நினைத்தபடி செய்துவிட்டோம் என்று சுரமஞ்சரி அன்று மிகவும் மகிழ்ச்சியாயிருந்தாள்.
அன்றைக்கு மாலை ஆலமுற்றத்துக்குப் போய்வர வேண்டுமென்றும் அவள் நினைத்திருந்தாள். தந்தையாருக்கு சந்தேகம் ஏற்படாமலிருப்பதற்காகத் தன் தோழியோடு சகோதரி வானவல்லியையும் உடன் அழைத்துப் போகத் திட்டமிட்டிருந்தாள். ஓவியன் மணிமார்பன் தான் கூறியனுப்பியிருந்த செய்திகளை ஆலமுற்றத்தில் உரியவரிடம் போய்த் தெரிவித்திருப்பானென்றே சுரமஞ்சரி நம்பினாள். அன்றியும் இளங்குமரன் ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் இருப்பதாகவே அவளுக்கு எண்ணம்.
தன் எண்ணப்படி மாலையில் ஆலமுற்றத்துக்குப் புறப்படுமுன் அவள் அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். வசந்தமாலை அணிகலன்கள் ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுத்த வண்ணமிருந்தாள்.
தன் அலங்காரம் முடிந்ததும் “நீ போய் வானவல்லியையும் புறப்படச் சொல்லு” என்று தோழியை அனுப்பிவிட்டுக் காத்திருந்தாள் சுரமஞ்சரி. தோழி திரும்புவதற்கு வழக்கத்தை மீறிய நேரமாயிற்று.
தோழி திரும்பி வந்தபோது அவள் முகம் வாட்டம் கண்டிருந்தது.
“ஏன் இவ்வளவு நேரம்?”
“ஒன்றும் புரிந்துகொள்ள முடியவில்லை அம்மா! நமக்குத் தெரியாமலே இங்கே என்னவெல்லாமோ நடக்கிறது.”
“புரியும்படியாகத்தான் சொல்லேன்!”
“நீங்களே என்னோடு வந்து பாருங்கள், புரியும்...” உடனே சுரமஞ்சரியும் தோழியோடு எழுந்து சென்றாள்.
அங்கே தன்னுடைய மாடத்திலிருந்து வெளியேறிச் செல்லும் வாயிலில் புதிய ஏற்பாடாக இரண்டு யவனக் காவலர்கள் நிற்பதைக் கண்டு திகைப்போடு தோழியின் முகத்தைப் பார்த்தாள் சுரமஞ்சரி.
“அங்கே பார்த்துப் பயனில்லை. என்னுடைய முகத்தைப் பாருங்கள். நான் சொல்கிறேன். உங்களுடைய அலங்கார மண்டபத்தில் நீங்கள் அரும்பெரும் சித்திரங்களைச் சிறை செய்து வைத்திருக்கிறீர்கள் அல்லவா? அதே போல் இந்த மாளிகையின் உயிர்ச் சித்திரமாகிய உங்களைத் தந்தையார் இந்த மாடத்திலிருந்து வெளியேறி விடாமல் பாதுகாக்க விரும்புகிறார்” என்று தூண் மறைவிலிருந்து வெளிவந்த நகைவேழம்பர், வன்மம் தீர்க்கிற குரலில் அவளை நோக்கிச் சொல்லிக் கொடுமையாகச் சிரித்தார்.
காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து தனக்காகவே திருநாங்கூர் வந்திருந்த முல்லையினிடமும் கதக்கண்ணனிடமும் மனம் நெகிழ்ந்து பழகாமல் அவர்களுடைய அன்பையும் ஆர்வத்தையும் புறக்கணித்துத் திருப்பியனுப்பியதை நினைத்தபோது இளங்குமரனுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. அன்று மாலை தூய நினைவுகள் பொங்கும் மனத்தோடு உலகத்துப் பேரறிஞர்கள் எல்லாம் அணி வகுத்து நிற்கும் ஞானவீதியில் தனியொருவனாக நடந்து தான் வெற்றிக் கொடி உயர்த்திச் செல்வதாக எண்ணியபடி அவன் இருந்த கனவு நிலையை முதலில் விசாகை வந்து கலைத்தாள். தாயைப் பற்றி நினைவூட்டிக் கலங்கச் செய்தாள். அந்தக் கலக்கத்திலிருந்து நீங்கு முன்பே முல்லையும், அவள் தமையனும் வந்து வேறொரு வகைக் கலக்கத்தை உண்டாக்கிவிட்டுப் போயிருந்தார்கள். தன்னுடைய கல்வி கலக்கத்திலிருந்து விலகி நிற்கும் தெளிவை இன்னும் அடையவில்லை என்பதை அவன் இப்போது உணர முடிந்தது.
‘கலக்கங்களில் இருந்துதான் தெளிவு பிறக்க வேண்டு’ மென்று அடிகள் பலமுறை கூறியிருந்தாலும், பழைய சார்புகளும் நினைவுகளும் தன்னை வழி. மாற்றிக் கொண்டு போய் விடலாகாதே என்ற பயம் அவனுக்கு இருந்தது. பருகி விடுவது போன்ற தாகத்தோடு தன் நீலோத்பல விழிகளை அம்புகளின் கூர்மையுடையன வாக்கிக் கொண்டு முல்லை பார்த்த பார்வையை நினைத்துக் கொண்டான் இளங்குமரன். அந்தக் கண்களின் வனப்புக்குத் தான் அளித்த காணிக்கையான கவிதையையும் நினைத்துக் கொண்டான்.
இயல்பாகவே எழும் பாசங்களைப் போக்கிக் கொள்வதென்பது தேர்ந்த மனித மனத்துக்கும் அரியது என்று அன்றைக்கு அவன் உணர்ந்தான். ‘நெல்லுக்குள் உமியும், செம்பிற் களிம்பும் போலப் பாசங்கள் மனத்துடனேயே பிறந்தவை’ - என்று அவன் கற்றிருந்ததன் அநுபவம் அவனுக்கே விளங்கிற்று. முல்லை வந்து எதிரே கண் கலங்கி நின்றிராவிட்டால் காவிரிப்பூம்பட்டினமும் பழைய சார்புகளும் அவனுடைய நினைவில் வந்திருக்கப் போவதில்லை. பாடல் எழுதப்பெற்ற அந்த ஏட்டையும், நாகலிங்கப் பூவையும் முல்லையின் கையில் கொடுக்கும் போது பேதைச் சிறு பெண்ணாய் அவள் தன் முன்னால் சிரித்துக் கொண்டு நின்ற பழைய நாட்கள் எல்லாம் நினைவு வந்து அவனையே மனம் நெகிழ்ந்து உருகும்படி செய்து விட்டன. அடுத்த நாள் பொழுது புலரும் வரை அவன் தன் மனத்தில் அவளை மறக்க முயன்று கொண்டே நினைத்துக் கொண்டிருந்தான். பொழுது புலர்ந்த பின் நீராடித் தூய்மை பெற்றுப் பாடம் கேட்பதற்காக அடிகளின் கிரந்த சாலைக்குள் அவன் நுழைந்த போது விசாகை பளிரென்று மின்னும் புதிய சீவர ஆடை புனைந்து கையில் அட்சய பாத்திரமும் ஏந்தியவளாய் எங்கோ புறப்பட்டுக் கொண்டிருந்தாள். நிர்மலமான புனிதப் பூ ஒன்று பொன் நிறத்தில் பூமியையே காம்பாகக் கொண்டு பூத்து நிற்பது போல அந்த வைகறையில் தோன்றினாள். அவள் எங்கேயோ யாத்திரை போகிறாள் போலத் தோன்றியது.
இளங்குமரனை எதிரே பார்த்ததும் விசாகை நின்றாள். இளங்குமரனும் நின்றான். “இந்தப் பாத்திரத்தில் நிறைவதைக் கொண்டு ஏழைகளின் வயிற்றை நிறைப்பதற்காக ஊர் சுற்றப் புறப்பட்டு விட்டேன். மறுபடியும் விரைவில் நாம் சந்திப்போம். ஞான நூல்களைக் கற்கும் போது மனத்தில் எந்தக் கலக்கமும் இருக்கக் கூடாது. இரும்பில் தோன்றும் துரு வளர்ந்து பெருகி இரும்பையே அழித்துவிடுவது போலச் சஞ்சலம் மன உறுதியை அழித்து விடும். மந்தையில் ஊரார் பசுக்களைக் கணக்கிட்டு எண்ணி மேய்க்கின்ற ஆயனைப்போல, நமக்குப் பயன் கொள்ளாமல் நூல்களை எண்ணிப் படிப்பதில் உறுதியில்லை. இன்றிலிருந்து உங்களுடைய ஒவ்வொரு நாளும், தெய்வ நாளாகக் கழிய வேண்டும்” என்று விசாகை கூறியபோது மனமும், மெய்யும் சிலிர்த்து அந்தப் பரிசுத்தவதியைக் கைகூப்பி வணங்கினான் இளங்குமரன்.
தூய்மையே வடிவமாகி ஒரு மின்னல் நகர்ந்து செல்வது போல விசாகை மேலே நடந்தாள். நேற்று மாலை ஒரு பெண் தன்னுடைய மோகம் நிறைந்த வார்த்தைகளால் எனக்குக் கலக்கத்தை உண்டாக்கினாள். இன்று காலையில் இன்னொரு பெண் தன்னுடைய ஞானம் நிறைந்த வார்த்தைகளால் என் கலக்கத்தைப் போக்கினாள் என்று நினைத்து வியந்த வண்ணமே தன் நாட்களைத் தெய்வ நாட்களாக்குவதற்காகக் கிரந்த சாலைக்குள் நுழைந்தான் இளங்குமரன். விசாகையின் வார்த்தைகள் அவனுக்குப் புதிய உறுதி அளித்திருந்தன.
அன்றைய தினத்துக்குப்பின் கால ஓட்டத்தைப் பற்றிய நினைவே அவனுக்கு இல்லை. அவன் மூழ்கிப் போன உலகத்தில் ஒரே ஒரு காலம்தான் இருந்தது. அதற்குப் பெயர் அழிவின்மை. அவன் கற்ற நூல்களில் காலத்தின் சிற்றெல்லை பற்றியும், பேரெல்லை பற்றியும் கருத்துக்கள் வந்தன. காலத்தின் மிகக் குறுகிய சிற்றெல்லைக்குக் கணிகம் என்று பெயர். காலத்தின் மிகப் பெரிய பேரெல்லைக்குக் கல்பம் என்று பெயர். ஏழு செங்கழுநீர்ப் பூவின் இதழ்களை வரிசையாய் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிப் பலசாலியான மனிதன் ஒருவன் மிகவும் கூரிய உளியைக் கொண்டு துளையிட்டால் ஆறு இதழ்களைத் துளைசெய்து முடித்துவிட்டுப் பின்பு ஏழாவது இதழிலும் புகுவதற்கு ஆகிற நேரம் ஒரு கணிகம். ஒரு யோசனைத் தொலைவுக்கு உயர்ந்து இறுகிய வச்சிரமலை ஒன்று கருக்கொண்ட பெண்டிர் உடுத்து நைந்த பட்டுத் துணியினால் தேய்க்கப்பட்டு முற்றிலும் தேய்ந்து போவதற்கு ஆகிற காலம் கல்பம். ‘ஆசீவக சமயத்தைச் சேர்ந்தவர்கள் இந்த உலகமும் இதில் வாழும் உயிர்களும் எண்பத்து நான்கு லட்சம் மகா கல்ப காலம்தான் வாழ்வார்கள்’ என்று கருத்துடையவர்கள். அந்தச் சமயத்தின் கொள்கைகளையும், தத்துவங்களையும் இளங்குமரனுக்குக் கற்பிக்கிறபோது அடிகள் காலத்தைப் பற்றிய இந்த அளவுகளையும் கற்பித்திருந்தார். பசித்து உண்பவன் அங்ஙனம் உண்பது பின்னும் பசிப்பதற்காகவே என்று ஒரு சித்தாந்தம் உண்டு. அந்தச் சித்தாந்தத்தைப் போலவே இளங்குமரனுடைய ஞானப் பசியும் தீரத்தீர வளர்ந்து கொண்டிருந்தது. எவ்வளவு கற்றாலும் அடங்காத பசியாக இருந்தது அது. எத்தனை திங்கட் காலம் வேறு உலக நினைவுகளே இல்லாமல் ஞான வேட்கையில் மூழ்கினாலும் ஒரு கணிக நேரம் தான் கற்றது போல் குறைவாகத் தோன்றியது. தன்னை நுகர்வதில் சோர்வு தராத அநுபவம் எதுவோ அதுவே தெய்வீகமானது. அதில் ஈடுபடும் நாட்களும் தெய்வ நாட்களே! உயரிய தத்துவங்களையும் சமயங்களின் நெறிகளையும், வாதிட்டு வெற்றி கொள்ளும் தருக்க முறைகளையும், கற்கக் கற்க இன்னும் கற்க வேண்டுமென்ற ஆர்வம் பெருகியது இளங்குமரனுக்கு.
ஒரு காலத்தில், மாமிசப் பர்வதம் போல எதிர்த்து வந்த மல்லர்களையெல்லாம் இடது கையால் சுழற்றிக் கீழே தள்ளக் கூடிய வலிமை பெற்றிருந்த தன் உடம்பு இப்போது கொடி போன்று இளைத்து வெளுத்திருப்பதையும், ஆனால் அந்தக் காலத்தில் ஞானபலமில்லாமல் இளைத்ததாயிருந்த தன் மனம் இப்போது அந்த வலிமையினைப் பெற்றுப் பெருத்து வருவதையும் சேர்த்து நினைத்தான் அவன்.
இனிமேல் கண் பார்வையின் ஒளியினாலும் இதயத்தின் ஆழத்திலிருந்து பிறக்கும் கனிந்த சொற்களாலும் ஆன்மாவின் பலத்தினாலுமே இந்த உலகத்தில் எதையும் வெற்றி கொண்டு நிற்க முடியும்போல் ஒரு நம்பிக்கை அவனுக்கு உண்டாயிற்று. அவன் மனத்திற்குள்ளே தொடங்கிய இந்த ஞான யாத்திரையில் பல மாதங்கள் கழிந்து போயிருந்த போதிலும் கற்றது குறைவே என்னும் உணர்வினால் கழிந்த காலம் எல்லாம் மிகச் சில நாட்களைப் போலவே அவனுக்குத் தோன்றின. ஐந்திரம், பாணினியம், தொல்காப்பியம் போன்ற இலக்கணக் கடல்களில் நீந்துவதற்குக் கழிந்த காலமும் தருக்கத்திற்காக வேத வியாசரின் பத்து அளவைகளையும் கிருத கோடியின் எட்டு அளவைகளையும் சைமினியின் ஆறு அளவைகளை யும் ஆழ்ந்து கற்ற காலமும், தெய்வத் திரு நாட்களாக அவன் வாழ்வில் வந்தவை. பெளத்தர்களின் திரிபிடக நெறியையும் பிற கருத்துக்களையும் அவன் கற்ற காலத்தில் விசாகை அவனுக்குப் பெருந்துணையாக இருந்தாள். வேதநெறிக்கு உட்பட்ட ஐந்து வகைச் சமயங்களின் வாதங்களையும், வேதநெறிக்குப் புறம்பான ஐந்து வகைச் சமயங்களின் வாதங்களையும், அவன் ஞானக்கடலாகிய நாங்கூர் அடிகளாரிடம் கற்று அறிந்து தெளிந்த காலம் மறக்க முடியாத பொற் காலமாயிருந்தது. இப்படிக் கழிந்த தெய்வ நாட்களினிடையே காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து நீலநாக மறவரும் வீரசோழிய வளநாடுடையாரும் அடிக்கடி திருநாங்கூருக்கு வந்து இளங்குமரனைச் சந்தித்துவிட்டுச் சென்றார்கள். விசாகை இடையிடையே யாத்திரை செல்வதும் மீண்டும் திருநாங்கூருக்கு வந்து தங்குவதுமாக இருந்தாள். காலம் அடக்குவாரின்றி ஒடிக் கொண்டிருந்தது.
இளங்குமரன் திருநாங்கூருக்கு வந்த பின் ஓராண்டுக் காலம் கழித்து வைசாக பெளர்ணமிக்குப் பத்து நாட்கள் இருக்கும்போது வீரசோழிய வளநாடுடையார் மட்டும் தனியாக அவனைத் தேடிவந்தார். அவர் தேடி வந்த போது பிற்பகற் போதாயிருந்தது. “தம்பி! இன்றே நீ என்னோடு புறப்படவேண்டும். இருட்டுவதற்குள் நாமிருவரும் காவிரிப்பூம்பட்டினத்தை அடைந்து அங்கே பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துவிட்டு இன்று பின்னிரவில் மணிபல்லவத் தீவுக்குக் கப்பலேற வேண்டும்” என்று அவசரமும், பதற்றமும், கலந்த குரலில் வேண்டினார் வளநாடுடையார். இளங்குமரன் அதற்கு இணங்கவில்லை. “உன் வாழ்வில் நீ அடைய வேண்டிய பெரும் பயன் இந்தப் பயணத்தில்தான் இருக்கிறது. மறுக்காமல் என்னோடு புறப்படு” என்று வற்புறுத்தினார் அவர்.
“என் வாழ்வில் நான் அடைய வேண்டிய பெரும் பயனை இந்தத் திருநாங்கூர்ப் பூம்பொழிலில் அடைந்து கொண்டு தானே இருக்கிறேன்” என்று சொல்லிப் பிடிவாதமாக மறுத்தான் இளங்குமரன். அடிகளிடமே நேரில் சென்று இளங்குமரனைத் தன்னோடு மணிபல்லவத்துக்கு அனுப்ப வேண்டுமென்று மன்றாடினார் வளநாடுடையார். அடிகளும் சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டார். உண்மையைச் சொல்லிக் கூப்பிடலாம் என்றால் சக்கரவாளக் கோட்டத்துக் காளி கோயிலில் அருட்செல்வ முனி வருக்குச் செய்து கொடுத்த சத்தியம் நினைவு வந்து வளநாடுடையாரைத் தடுத்தது. நாங்கூர் அடிகளிடம் கோபமாகவும் கேட்டுப் பார்த்தார் அவர்.
“எப்போதுதான் இந்தப் பிள்ளையாண்டானை உங்களுடைய ஞானச் சிறையிலிருந்து விடுதலை செய்யப் போகிறீர்கள்?”
“இன்னும் சிறிது காலத்துக்குப் பொறுத்துக் கொள்ளுங்கள் ஐயா! அவனே சிறைக் கதவுகளைத் திறந்து கொண்டு புறப்பட்டு விடுவான்” என்று சிரித்தபடியே கூறி அவரை அனுப்பிவிட்டார் அடிகள். வளநாடுடையார் ஏமாற்றத்தோடு திரும்பினார். அவர் மட்டும் அன்று இரவு மணிபல்லவத்துக்குப் புறப்பட்டுப் போய் வந்தார்.
உலகம் எங்கும் ஒரேவிதமாக ஓடிக் கொண்டிருந்த காலம் திருநாங்கூரில் இளங்குமரனுக்குத் தெய்வ நாட்களாகவும், காவிரிப்பூம்பட்டினத்தில் வளநாடுடையார் முல்லை முதலியவர்களுக்கு நைந்த நாட்களாகவும், எங்குமே வெளியேறிச் செல்ல முடியாமல் செல்வச் சிறையிலே அடைபட்டுக் கிடந்த சுரமஞ்சரிக்கும் அவள் தோழிக்கும் காலமே இயங்காதது போலவும் தோன்றின. சுரமஞ்சரி அளவிட்டுக் கொண்டு வந்த காலக் கணக்குப் பார்த்தால் அவள் நெடுங்காலம் அப்படி அடைபட்டபடியாயிருந்தாள் என்றே சொல்ல வேண்டும். அவள் நெஞ்சிற்குள்ளேயோ இளங்குமரனைப் பற்றிய நினைவு அடைபட்டிருந்தது.
வெயிலும் மழையும் காற்றும் பனியுமாகப் பருவங்களால் விளையும் அழகுகள் பூம்புகாரில் மாறி மாறி விளைந்து கொண்டிருந்தன. காலம் இயங்கிக் கொண்டிருந்தது. மனிதர்களின் நினைவுகளையும் ஆசைகளையும் ஏக்கங்களையும். சுமந்து இயங்கிக் கொண்டேயிருந்தது.
நகைவேழம்பரும் பெருநிதிச் செல்வரும் வாணிக நிமித்தமாக அடிக்கடி கப்பல்களில் கடற்பயணம் செய்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தனர். காவிரியில் புதுப் புனல் பெருகியது; தணிந்தது. மறுபடி பெருகியது! தணிந்தது. ஆண்டுகள் ஓடின. பூம்புகார்வாசிகள் மேலும் இரண்டு இந்திர விழாக்களை அனுபவித்து மறந்து விட்டார்கள். மூன்றாவது இந்திரவிழாவும் நெருங்கி வந்து கொண்டிருந்தது.
திருநாங்கூர்ப் பூம்பொழிலின் ஒரு மேடையில் அடிகளும் இளங்குமரனும் வீற்றிருந்தனர். சாயங்கால வேளை உலகம் பகல் என்னும் ஒளியின் ஆட்சியை இழந்து போய்விட்டதற்காகச் சோக நாடகம் நடத்துவதுபோல விளங்கும் மேற்கு வானம். போது ஒடுங்கும் அந்தி மாலைக்குச் சொந்தமான மேலைத்திசை மூலையிலே இந்தச் சோக நாடகத்துக்குத் திரையெழுதினாற் போன்ற காட்சிகள். மேற்கு நோக்கி அமர்ந்திருந்த அடிகளுக்கு முன்புறம் கிழக்கு முகமாகப் பார்த்தவாறு இளங்குமரன் இருந்தான். அவரிடமிருந்து ஏதோ நிறையக் கேட்டு அறிந்து கொள்வதற்கு இருப்பதுபோல அமைந்து அடங்கி இருந்தான் இளங்குமரன். அவரும் அவனுக்குக் கூறுவதாக மனத்துக்குள் சிந்தனைகளை வரிசைப்படுத்திக் கொண்டிருப்பது போன்ற முகபாவத்தோடு இருந்தார். மேற்கு வானத்தில் காட்சிகள் மாறிக் கொண்டிருந்தன.
இதே போன்ற ஒரு மாலைநேரத்தில் முதன் முதலாக நீலநாக மறவர் தன்னை அங்கே அழைத்துக் கொண்டு வந்த நாளை நினைத்தான் இளங்குமரன். இறந்த காலத்தின் நிகழ்ச்சியாக எங்கோ ஒரு கோடியில் நெடுந் தொலைவு நடந்து வந்த பின்னால் காலவிதியின் அந்தப் பழைய திருப்பத்துக்குப் பாவனைகள் மூலமாகவே பின்னோக்கி யாத்திரை போய்விட்டுத் திரும்பினான் அவன்.
அடிகளின் குரல் அவனை அழைத்துப் பேசத் தொடங்கியது:
“இளங்குமரா! இன்று காலை நீ கற்கவேண்டிய கடைசி சுவடியின் கடைசி வாக்கியத்தையும் கற்று முடித்து விட்டாய். அடிக்கடி உன்னைத் தேடிக் கொண்டு இங்கே வருவாரே, அந்தப் பெரியவர் வீரசோழிய வளநாடுடையார் - அவர் எப்போதோ ஒருநாள் கோபத்தில் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். அதை நான் இந்த விநாடி வரை மறக்கவில்லை. ‘இளங்குமரனை உங்களுடைய ஞானச் சிறையிலிருந்து எப்போது விடுதலை செய்யப் போ கிறீர்கள்?’ என்று என்னை அவர் கேட்டிருந்தார். அந்தக் கேள்விக்கு நான் விடை சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது. அதாவது உன்னை இந்த ஞானச் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டிய நேரத்துக்கு வந்தாயிற்று. விடுபட வேண்டிய தகுதி உனக்கும் வந்துவிட்டது.
“இந்த உலகத்தில் எல்லாச் சிறைகளிலிருந்தும் எல்லாத் தளைகளிலிருந்தும் விடுபடுவதுதான் ஞானம் என்று நான் பல்லாண்டுகளாக நினைத்தும் கற்பித்தும் உணர்ந்தும் வந்ததை ஒரே ஒரு கணத்தில் மாற்றி ‘ஞானச் சிறை’ - என்று சொல்லிய தைரியத்தை அந்தக் கிழவரிடம் தான் கண்டேன் அப்பா!” என்று அடிகள் சொல்லிச் சிரித்தபோது -
“அதை அடிகள் பொறுத்தருள வேண்டும். அவர் ஏதோ உணர்ச்சி வசப்பட்டு அப்படிக் கூறியிருப்பார்” என்று இளங்குமரன் குறுக்கிட்டுக் கூறினான்.
“பொறுத்தருளாவிடில் இதுவரை இக்கேள்வி என் மனத்திலேயே தங்கியிருக்குமா? நான் பொறுத்துக் கொள்வதற்குக் கடமையும் உண்டு. என்னிடம் நீலநாகன் உன்னைப் பற்றி எப்போது முதல் முறையாகச் சொன்னானோ அப்போதிருந்து நானே உன்னைக் காண்பதற்குத் தவித்தேன் என்ற இரகசியத்தை இன்று நீ தெரிந்து கொள்வதனால் தவறில்லை. என்னுடைய ஞானத்தைப் பயிர் செய்ய ஏற்ற விளை நிலமாவதற்கு முழுமையான மனிதன் ஒருவனை நான் தேடிக் கொண்டிருந்தேன். என் போன்றவர்களுக்கு ‘அவதிஞானம்’ என்று ஓருணர்வு உண்டு. முன்பின் தொடர்பின்றி இன்னதை இப்படிச் செய்தால் வெற்றிதான் கிடைக்கும் என நாங்கள் அவ்வப்போது மனத்தில் தோன்றும் தோற்றத்தால் உறுதி கொள்ளும் செயல்களும் மங்களமாகவே அமையும். நடந்ததையும் நடக்கப் போவதையும் நினைவினாலேயே உணர்ந்து கணிக்கும் அவதி ஞானத்தைப் பற்றி உனக்கும் கற்பித்திருக்கிறேன். மனம் கனிந்தால் அந்த அபூர்வ ஞானம் எளிது.
“இளங்குமரா! உன்னைப் பற்றிக் கேள்விப்படுதற்கு முன், காண்பதற்கு முன், என்னுடைய நினைவுகளிலும் சங்கல்பத்திலும் நெடுங்காலமாக நான் பாவனை செய்து கொண்டு வந்த பரிபூரணமான மாணவன் எவனோ, அவனாகவே நீ விளைந்து வந்தாய். நீலநாகன் உன்னை இங்கே அழைத்து வந்த நாளில் நம்முடைய முதற் சந்திப் பின்போது நான் கூறிய வார்த்தைகளை நீ இன்னும் மறந்திருக்க மாட்டாய். சந்திக்கின்றபோது உண்டாகிற உறவு பிரிகிறபோது நினைவு வருவதைத் தடுக்க முடியுமானால் உலகத்தில் துக்கம் என்ற உணர்வே ஏற்பட்டிருக்காது. என்னைப் போலவே அந்தப் பழைய நினைவுகளை நீயும் இப்போது திரும்ப எண்ணிக் கொண்டிருப்பாயானால் நான் அப்போது கூறிய வார்த்தைகளையும் மறந்திருக்க மாட்டாய். ‘அறியாமையையும் ஆணவத்தையும் தவிர உங்களிடம் கொடுப்பதற்கு வேறொன்றும் கொண்டு வரவில்லை’ என்றாய் நீ. ‘உன்னையே எனக்குக் கொடு’ என்று வாங்கிக் கொண்டேன் நான். இன்னும் சில வார்த்தைகளும் அப்போது உன்னிடம் கூறினேன்.
‘என்னுடைய மனத்தில் உதயமாகும் காவியம் ஒன்றிற்கு நாயகனாக ஏற்ற முழுமையான மனிதன் ஒருவனை நான் தேடிக் கொண்டிருந்தேன். அவன் இன்று எனக்குக் கிடைத்துவிட்டான்’ என்று பூரிப்போடு உன் கைகளைப் பற்றிக் கொண்டு நான் மகிழ்ச்சிக் கூத்தாடியதையும் நீ மறந்திருக்க மாட்டாய். அவற்றை எல்லாம் திருப்பிக் கூறுவதன் நோக்கம் இளங்குமரன் காவியத்தின் நிறைவெல்லையாக நான் எதைக் கற்பனை செய்து கொண்டிருக்கிறேனோ அதைப் பொய்யாக்கி விடாதே என்று வற்புறுத்துவதுதான்.”
இப்படி இந்தச் சொற்கள் உணர்ச்சி தோய்ந்து அவரிடமிருந்து ஒலித்தபோது முகத்தை நன்றாகப் பார்க்கும் ஆவலோடு நிமிர்ந்து இளங்குமரன் அப்போது தான் கிழக்கே உதயமாகிக் கொண்டிருந்த சந்திரனையும் அவருடைய முகத்தையும் சேர்த்துப் பார்த்தான். நாளைக்கு விடிந்தால் சித்திரா பெளர்ணமி என்பதும் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திர விழா என்பதும் அவனுக்கு நினைவு வந்தன. தான் திருநாங்கூரில் குருகுல வாசம் செய்த காலத்தில் எத்துணை இந்திர விழாக்கள் நடந்திருக்கும் என்று கழிந்த ஆண்டுகளை எண்ணியது அவன் மனம், தான் நகரத்தில் இருந்தபோது நடந்த இந்திர விழாக்களையும் நாளைக்குப் புதிய மனிதனாகப் புதிய கண் பார்வையோடு சென்று காண்பதற்கிருக்கும் இந்திர விழாவையும் இணைத்து நினைத்தான் அவன். அடிகளின் பேச்சு மீண்டும் அவன் கவனத்தை ஈர்த்தது. அவன் அவருடைய சொற்களைக் கேட்கலானான்.
“இளங்குமரா! நீ எங்கிருந்தாலும் திருநாங்கூரின் இந்தப் பூம்பொழிலிலிருந்து இரண்டு கண்கள் உன்னை இடைவிடாமல் பார்த்துக் கொண்டிருப்பதாகப் பாவனை செய்து கொண்டிரு. அந்தப் பாவனை நீ செல்லுமிடங்களில் எல்லாம் உனக்கு வெற்றியை அளிக்கும். குருகுல வாசத்தை முடித்துக் கொண்டு எண்ணற்ற மாணவர்கள் உன்னைப் போல் இங்கிருந்து பிரிந்து போயிருக்கிறார்கள். அவர்கள் யாவரும் குருவைப் பிரிந்து போவதற்காகக் கவலைப்பட்டிருப்பார்கள். அவர்களைப் பிரிய நேருவதற்காக சாமான்ய மனிதரைப் போலக் குரு கவலைப்பட்டதில்லை. இன்றைக்கு உன்னுடைய குருவுக்கு நீதான் அப்படிப்பட்ட கவலையைத் தருகிறாய்” என்று சொல்லிக் கொண்டே வந்தவர் குரல் நெகிழ்ந்து அதற்கு மேல் சொற்களே வராமல் கண்கலங்கி அவனைப் பார்த்தார். அவனிடமிருந்து பதில் இல்லை; பார்வையும் இல்லை.
இளங்குமரன் கீழே குனிந்தவாறு இருந்தான். அடிகள் அருகில் வந்து அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தார். அவன் மெளனமாகக் கண்ணிர் வடித்துக் கொண்டிருந்ததைக் கண்டார்.
“நீ எதற்காக அழுகிறாய்?”
“சுவாமி! நான் உங்களுடைய பேரறிவுக்கு முன்னால் அற்பமானவன். சுகதுக்கங்களினால் சிறிதும் சலிப்படையாமல் உபசாந்தி நிலை பெற்றவராகிய நீங்களே எனக்கு விடை கொடுக்கக் கண் கலங்குகிறீர்கள். உங்களைப் போன்ற ஞான தேசிகரைப் பிரிந்து புறப்படும் நான் அழாமல் தாங்கிக் கொள்ள இயலுமா? இதுவரை நான் கற்றதெல்லாம் இதற்கு முன்பு கல்லாதிருந்த காலத்து அறியாமையின் அளவைத் தெரிந்து கொள்ளும் அளவு தான். அற்பனாகிய எளியேனுடைய பிரிவு உங்களைக் கண்கலங்கச் செய்யுமானால் அடியேன் நிறையப் பாவம் செய்தவனாக இருக்க வேண்டும்.”
இளைத்த உடல் நடுங்கிட எழுந்து நின்ற இளங்குமரன் அழுது கொண்டே அடிகளுடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கி அவற்றைப் பற்றிக் கொண்டான். அவனுக்குத் தெரியாமல் தம்முடைய கண்ணிரைத் துடைத்துக் கொண்டு அவனுடைய கண்ணிரைத் துடைப் பதற்காக அவனை எழுப்பி நிறுத்தித் தோளோடு தோள் தழுவிக் கொண்டார் அந்தப் பெரியவர். கலங்கியறியாத அவர் மனமும் அன்று கலங்கியிருந்தது.
ஞானக் கடலும் ஞான ஆறும் கலப்பது போன்ற இந்தத் தூய்மையான ஞான சங்கமத்தைப் பார்க்கக் கூசியவனைப்போல் என்றும் களங்கமுடைய சந்திரன் தன்னை மேகத்தில் மறைத்துக் கொண்டான். தன்னுடைய ஆணவம் மெய்யாகவே அழிந்துவிட்டதா, இல்லையா என்பதைச் சோதிப்பதற்காகவே அடிகள் இந்தக் கடைசி நாளில் இப்படி விநயமாகப் பழகுகிறாரோ என்று இளங்குமரன் அஞ்சினான். அந்த அச்சத்தினால்தான் அவன் உடலே நடுங்கியது. அவனுடைய வீணான அச்சத்தை அடிகள் தம் பேச்சினாலேயே போக்கினார்.
“பாசங்களை விட்டுவிட வேண்டும் என்று இவ்வளவு காலமாக உனக்குக் கற்பித்து வந்த எனக்கு உன்னிடமிருந்து கிடைத்தது என்ன தெரியுமா?”
“என்ன சுவாமி?”
“என்றும் விடமுடியாத பெரிய பாசம்.”
அவனுக்குத் தெரியாமல் மறுபடியும் கண்களில் அரும்பிய நீரைத் துடைத்துக் கொண்டார் அவர். அன்றிரவு விடிய விடிய இளங்குமரனுக்கு அவர் பல அறிவுரைகளைக் கூறிக் கொண்டிருந்தார். அடுத்த நாள் விடிந்து சில நாழிகைக்குப் பின் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து நீலநாகமறவர் இளங்குமரனை அழைத்துப் போவதற்கு வந்துவிட்டார். தம்முடைய மனத்தை ஆட் கொண்ட புதிய மாணவனைப் பழைய மாணவனாகிய நீலநாகனிடம் திரும்ப ஒப்படைக்கும்போதும் நாங்கூர் அடிகள் உணர்ச்சி வசப்பட்டார். இளங்குமரன் ஞானமலையாகிய தன் குருவை வணங்கிவிட்டுச் சமயவாதம் புரிவதற்கு அவர் ஆசியுடன் தனக்கு அளித்த ஞானக் கொடியை வலது கையில் தாங்கியபடி பூம்பொழிலுக்கு வெளியே பாதங்களைப் பெயர்த்து வைத்து நடந்தபோது யாத்திரை போயிருந்த விசாகை எதிரே திரும்பி வந்து கொண்டிருந்தாள்.
“என்னுடன் வாதிடுங்களேன். முதல் வெற்றியை நான் உங்களுக்கு அளிக்கிறேன்” என்று சொல்லிச் சிரித்தபடி நின்றாள் விசாகை, நீலநாகமறவர் திகைத்தார். இளங்குமரன் சிறிது தயங்கியபின், “அம்மையாரே! தொடக்க நாளில் என்னுடைய பயபக்தியையே பிட்சையாக ஏற்றுக் கொண்ட வகையில் நீங்களும் எனக்கு ஒரு குரு ! உங்களோடு வாதிட மனம் ஒப்பவில்லை. உங்களை வணங்குகிறேன், வாழ்த்துங்கள்” என்று வணங்கினான். விசாகை அவனை வாழ்த்திவிட்டுச் சொன்னாள்: “இந்தக் கொடி வெற்றிக் கொடியாக உயரட்டும்.”
இளங்குமரன் நீலநாகமறவரோடு தேர் நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி நடந்தான். அவனைப் பூம்புகாருக்கு அழைத்துச் செல்லத் தேர் காத்திருந்தது. தன்னுடைய ஞான குருவின் கண்களை மானசீகமாகப் பாவனை செய்து கொண்டே நடந்தான். எதிரே அவனுடைய வழி நீண்டு விரிந்து கிடந்தது.
கலந்து நிறைவடைய வேண்டிய கடலைச் சார்வதற்கு முன்னால் தமக்கெனத் தனிப்பெயரும் தனித் தனித் துறைகளும் ஓட்டமும் கொண்டு அலைந்துவரும் ஆறுகளைப்போல உணர்ந்திருப்பதற்கும் உணர வேண்டிய நிறைவுக்கும் நடுவிலுள்ள இடைவெளி தான் மனித வாழ்க்கை. பாயும் நதிகள் கடலோடு கலந்து நிறைந்த பின் தனிப் பெயரும் இல்லை துறையும் இல்லை. நிறைவுக்கு அளவும் இல்லை. எழுவாயாகிய தொடங்குமிடமும் இல்லை. இறுவா யாகிய முடியுமிடமும் இல்லை. குறைவைத் துணைக் கொண்டு நிறைவை அளக்க இயலுமோ? பின்னமும், சிதைவும் உடையதனைக் கொண்டு பின்னமும் சிதைவும் இல்லாத முழுமையை அளப்பது எப்படி? கணிப்பதுதான் எப்படி?
தனியே பிரித்துப் பார்த்தால் ஒன்றாகி விடுவதும், ஒன்றாக்கிப் பார்த்தால் தனியே பிரிந்து விடுவதுமாக இந்த உலகத்தில்தான் எத்துணைத் தத்துவங்கள்! நீர் இல்லாத வெறுங்குடத்தில் வெறுமை என்று சுட்டிச் சொல்லப்படுவதும் ஆகாயமே. குடம் உடைந்து போனால் உடைகிறவரை குடத்துள்ளே இருந்த சிறு வெளியும் பெருவெளியாகி ஆகாயத்தில் கலந்துவிடுகிறது. ஓடுகின்ற ஆற்று நீரிலும், எரிகின்ற தீபத்திலும், பாயும் தண்ணிரும். எரியும் சுடரும் ஒன்றாகவே தெரிந்தாலும், அத்தந்த வினாடிகளில் பாய்வதும் எரிவதுமான நீரும் சுடரும் வேறு வேறுதான். உயிரியக்கமும், இப்படிப் புடை பெயர்வது தெரியாமல் மாறிக் கொண்டிருப்பதுதான் என்பதை ஞானப்பசி தீர்ந்தவனாகத் திருநாங்கூர்ப் பூம்பொழிலிலிருந்து புறப்பட்டு காவிரிப் பூம்பட்டினத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது இளங்குமரன் நினைத்தான். அதிகாலைப் பூவைப்போல் இப்போது அவன் மனம் தூயதாக இருந்தது. கூர்மையான ஊசியின் முனையிற் மிகச் சிறிய கடுகும் தங்கி நிற்க முடியாதது போல ஞானத் தெளிவினாலே துணுகிச் சிந்திக்கப் பழகியிருந்த அவன் மனத்தில் சிறிது எண்ணங்களும் குறுகிய ஆசைகளும் தங்க இடமின்றி நழுவி முன்பு உடல் வலிமையோடு பார்த்த உலகத்துக்கும், இன்று மனவலிமையோடு பார்க்கிற உலகத்துக்கும் நடுவேதான் எவ்வளவு வேறுபாடுகள்! அந்த வலிமையோடு பார்த்த உலகத்தில் தானே எல்லாவற்றையும் அழிக்க முடியும் என்ற தன் ஆணவமே மிகுந்து தோன்றியது. இந்த வலிமையோடு பார்க்கிற உலகத்தில் தானும் எல்லாவற்றையும் வளர்க்கவும் வாழ்விக்கவும் முடியும் என்று தோன்றுகிறது. உலகத்தில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிற எல்லாருடைய துன்பங்களும் நீங்கிச் சமமான மகிழ்ச்சி எங்கும் பரவ வேண்டுமென்று இதயத்தில் எல்லையற்ற கருணை பொங்குகிறது. எல்லையற்ற அனுதாபம் பெருகுகிறது. தன் முதுகு நிறையச் சுமையைத் தாங்கிக் கொண்டு நடக்கிறவன் அந்தச் சுமையால் கூனிக் குறுகி நடப்பதைப்போல் ஆசைகள் கனத்து அழுத்தும்போது அறிவும் தயங்கி மந்தமடைவதுண்டு. வினையின் நீங்கி விளங்கிய அறிவினால் மனத்தில் ஆசைச் சுமைகளேயின்றிக் குறைத்துக் கொண்டு புறப்பட்டிருந்த இளங்குமரன் பூம்பொழிலின் வாயிற்புறம் விசாகை தன்னை வாழ்த்திய விதத்தை நினைத்துக் கொண்டான். ‘இந்தக் கொடி வெற்றிக் கொடியாக உயரட்டும்’ என்று அவன் வலக் கரத்தில் தாங்கியிருந்த ஞானக்கொடியைக் காண்பித்து வாழ்த்தியிருந்தாள் அவள்.
விசாகையின் வாழ்த்தை நினைத்துக் கொண்டு தன் கையிலிருந்த கொடியைத் தானே உற்றுப் பார்க்கிறான் இளங்குமரன். ஞானத்தின் ஒளிக்கு அடையாளம் போல் ஒரு தீபம், சில ஏடுகள் - இவை அந்தக் கொடியில் இலங்கும் உருவங்களாய் வரையப் பெற்றிருக்கின்றன. எது வெற்றி? எது தோல்வி: ஓர் எல்லையில் நின்று பார்க்கும்போது வெற்றியாகத் தெரிவது, மற்றோர் எல்லையில் நின்று பார்த்தால் தோல்வியாகத் தெரி கிறதே! மனிதர்களின் நியதிப்படி பார்த்தால் தங்கள் மனம் நினைத்தது நினைத்தவாறே, விரும்பியது விரும்பிய வண்ணமே விளைந்தால் அது வெற்றி, அல்லாதது தோல்வி. ஒரு விளைவை வெற்றியாகவும் தோல்வியாகவும் எடுத்துக் கொள்வது அந்த விளைவை அனுபவிக்கும் மனப்பக்குவத்தைப் பொறுத்ததுதான்.
காவிரிப்பூம்பட்டினத்தை நெருங்க நெருங்கச் சாலைகளில் கூட்டம் நிறைந்திருந்தது. நீலநாகமறவர் தேரை மெல்லச் செலுத்தினார். தீபாலங்காரங்களும் வாண வேடிக்கைகளுமாக எதிரே மாபெரும் கோநகரம் தெரிந்தது. கடல் அலைகளின் ஓசையோடு இந்திரவிழா ஆரவாரங்களும் கேட்டன. நகரத்தின் ஒளி அலங் காரங்கள் நீர்ப்பரப்பில் பிரதிபலித்து மேலும் அழகு உண்டாக்கிக் கொண்டிருந்தன. இனிமையான இசை ஒலிகள் காற்றில் மிதந்து வந்தன. பூம்புகாரின் எல்லைக்குத் தேர் வந்ததும் இளங்குமரன் தன் மனத்தில் ஒரு சங்கல்பம் செய்யத் தொடங்கினான்:
‘இந்த ஆரவாரங்களுக்கு நடுவே என் அறிவைக் காப்பாற்று. இந்த வேகத்துக்கு நடுவே எனக்கு நிதானத்தைக் கொடு. இந்தக் கூட்டத்துக்கு நடுவே என்னுடைய தியானத்துக்குத் தனிமையைக் கொடு. தேன் பாத்திரத்துள் சுவைப்பதற்கு இறங்கும் வண்டு அதனுள்ளேயே மூழ்கி மாண்டு போவது போல் கண்ணுக்கினியனவும் செவிக்கினியனவும் நாவுக்கினியனவும் வாசனைக்கு இனியனவும் ஆகிய சுவை வெள்ளங்களில் மூழ்கி அழிந்து விடாமல் நீந்திக் கரையேறுகிற ஆற்றலை எனக்குக் கொடு. நினைவின் அருவங்களாகிய கனவுகளிலிருந்து என் மனம் விலகி நிற்கட்டும். மெய்யொளியை மறைக்கும் பொய்யொளிகளை என் கண்கள் காணக் கூசட்டும். வெற்றுரைகளைக் கேட்காமல் என் செவிகள் மூடிக் கொள்ளட்டும். வெற்றுரைகளைப் பேசாமல் என் நா அடங்கட்டும்.’
தங்கள் தேர் செல்லும் வழியின் இரு புறமும் நடந்து போய்க் கொண்டிருந்தவர்கள் தேருக்குள்ளே நோக்கிக் கை கூப்பி வணங்குவதையும் முகம் மலர்வதையும் நீலநாக மறவர் பார்த்துக் கொண்டே குதிரைகளைச் செலுத்தினார். தாமே அடிக்கடி பின்புறம் திரும்பி இளங்குமரனைப் பார்த்தார் அவர். பவழச் செஞ்சுடர் மேனியும் பன்மடங்கு பெருகிய அழகோடு காந்தி திகழும் கனிந்த முகமண்டலமுமாகக் கொடியேந்தி நிற்கும் குமரக்கடவுளைப் போலத் தேரில் நின்று கொண்டிருந்தான் இளங்குமரன். பிறரால் வணங்கப்படும் தன்மை அல்லது பிறரை வணங்குவிக்கும் தன்மை எதுவோ அது அவன் தோற்றத்திலேயே இரண்டறக் கலந்திருந்தது. புனிதமான சகல சக்திகளும் வாய்ந்த இளந்துறவியொருவனை வணங்குவதாக நினைந்து அவனை வணங்கினார்கள் வழிப் பயணம் செய்த மக்கள்.
அவன் பயணம் செய்த தேர் ஆலமுற்றத்தில் வந்து நின்றபோது, அவனுடைய வாழ்க்கைத்தேர் மூன்றாவது பருவத்தில் வந்து நின்றது. வலது பாதத்தை முன் வைத்து கீழே இறங்கினான் இளங்குமரன். கடற்காற்றிலே அவன் கரத்திலிருந்த கொடி அசைந்தாடியது. மேலே வாகை மரத்திலிருந்து தற்செயலாக உதிர்ந்த பூக்கள் அந்தக் கொடியின் மேலே விழுந்தன.
“இந்தப் பூக்கள் போரைத் தொடங்கும் முன்பே உனது கொடிக்கு வெற்றிவாகை சூடுகின்றன” என்றார் நீலநாக மறவர்.
“இந்த விநாடியில் இங்கே உதிர்ந்த இதே பூக்களை மானசீகமாக எடுத்துக் கொண்டு போய் என் குருவின் பாதங்களில் உதிர்க்கிறேன் நான்” - என்று சொல்லி வணங்கினான் இளங்குமரன், அவன் கண்கள் குருவின் உருவத்தை பாவனை புரிய மூடின.
அவ்வளவு காலம் திருநாங்கூரில் இருந்த பின் இன்று மறுபடியும் வந்து பார்க்கிறபோது காவிரிப்பூம்பட்டினம் முன்பிருந்ததைக் காட்டிலும் பெரிய நகரமாக வளர்ந்திருந்தது போல் காட்சியளித்தது இளங்குமரனுக்கு. நீலநாக மறவருடைய படைக்கலச் சாலையில் அன்று மாணவர்களாக இருந்த பலர் இன்று பயிற்சி முடிந்து வெளியேறி யிருந்தார்கள். இன்று புதிய மாணவர்கள் வந்தி ருந்தார்கள். படைக்கலச் சாலையில் அன்று செடிகளாயிருந்த மாங்கன்றுகள் இன்று மாமரங்களாகிப் பூத்திருந்தன. ஆலமுற்றத்து மரத்தில் ஏற்கனவே இருந்த எண்ணற்ற வீழ்துகள் தவிர இன்னும் புதிய வீழ்துகள் மண்ணில் இறங்கி ஊன்றிக் கொண்டிருந்தன. படைக்கலச் சாலையின் தோட்டத்தில் அன்று சின்னஞ்சிறு குட்டிகளாகத் தாவித் திரிந்து கொண்டிருந்த மான்கள் இன்று கொம்பு கிளைபடரக் குட்டிகள் துணைபடரத் தோன்றின.
அவனுடைய மனத்தைப் போலவே உலகமும் வளர்ந்திருந்தது. மாறியிருந்தது. ஒரு பக்கத்தில் கொல்லர்கள் பழைய வேல்களுக்குத் துரு நீக்கியும் புது வேல்களை வார்த்தும் - பணி புரிந்து கொண்டிருந்தார்கள். அவற்றைப் பார்த்தவுடன் வேலையும் பெண்ணின் விழியையும் ஒப்பிட்டுக் கூறிய நீலநாகமறவர் தனக்கு அறிவுரை சொல்லிய நாளை நினைத்துக் கொண்டான் இளங்குமரன்.
படைக்கலச் சாலையில் நீலநாக மறவருடைய இருக்கையில் தன்னுடைய ஓவியம் இருப்பதைக் கண்டு அது அங்கே எப்படி வந்தது என்று அவன் வியந்தபோது நீலநாகமறவரே அது படைக்கலச் சாலைக்கு வந்து சேர்ந்த நிகழ்ச்சியை அவனுக்குக் கூறினார்:
“நல்ல வேளையாக அந்தச் சமயத்தில் நீ திருநாங்கூருக்குப் போய்ச் சேர்ந்திருந்தாய். இந்தப் படத்தை எடுத்துக் கொண்டு வந்தவர்கள் உன்னைக் கொலை செய்யும் நோக்கத்தோடு தேடி வந்ததாக அந்த ஓவியன் எனக்குச் சொன்னான்” என்றார் நீலநாகமறவர். அதைக் கேட்டு அவன் அதிர்ச்சி கொள்ளவில்லை. பழைய நாட்களாயிருந்தால், “என்னைக் கொலை செய்யும் மனிதர்கள் இருக்கிறார்களா?” என்று திமிரோடு எண்ணியிருக்கும் அவன் மனம். இன்றோ, ‘நான் என்றால் எனது உடல் அன்று. நான் என்பது எனது ஆன்மா. ஆன்மாவை எவராலும் கொலை செய்ய முடியாது’ என்று சிந்தித்தது அவன் மனம்.
இளங்குமரன் இந்திரவிழாவின் முதல் நாளாகிய அன்று மாலை படைக்கலச் சாலையை சேர்ந்த பெரிய யானை ஒன்றில் ஏறிக் கொண்டு வாதிடுவதற்காக உயர்த்திய கொடியுடனே புறப்பட்டபோது அவனால் வெற்றி கொள்ள முடியாத வாதத்தையும் முல்லையையும் உடன் கொண்டு வாயிலில் வந்து வழி மறித்தார் வீரசோழிய வளநாடுடையார்.
“நலமாக இருக்கிறீர்களா ஐயா? உங்களோடு கதக்கண்ணன் வரவில்லையா?” என்று புன்முறுவல் பூத்தவாறு விசாரித்த அவனை நோக்கிச் சீறினார் அவர்.
“நலத்துக்கென்ன கேடு? சாகாததுதான் பெரிய குறை தம்பீ! நீ இன்னும் சிறிது காலம் என்னையும், இந்தப் பெண்ணையும் ஏமாற்றிக் கொண்டு திரிந்தால் அந்தக் குறையும் தீர்ந்துவிடும்.”
அந்தக் கிழவர் தன்மேல் பெருங்கோபத்தோடு வந்திருக்கிறார் என்பது இளங்குமரனுக்குப் புரிந்தது. நிர்விகாரமான நோக்குடன் அவன் பக்கத்தில் நின்ற முல்லையைப் பார்த்தான். அவள் வளர்ந்து நிறைந்திருந்தாள். அவன் பார்வையில் நாணிக்குழைந்து முல்லை தலைகுனிந்தாள். இளஞ்சூரியனின் ஒளியோடு திகழும் இளங்குமரன் முகத்தையும் கண்களையும் காணக்கூசின அவள் கண்கள். உலகில் உள்ள அறிவின் பரிசுத்தங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து எதிரே யானை மேல் அமர்ந்திருக்கக் காண்பதுபோல் அவளுக்குப் பயமாகவும் இருந்தது. இப்போது கொடியை ஏந்திக் கொண்டிருக்கும் அவனுடைய இதே கையில் எத்தனையோ புண்களுக்குத் தன் கைகளால் மருந்து தடவி ஆற்றிய நாட்களை நினைத்துக் கொண்டாள் முல்லை. இந்தக் கைகளையும் தோளையும் தொடுவது விளையாட்டாக இருந்த காலம் போய், தொட நினைப்பது தயக்கத்துக்குரிய காரியமாகி விட்ட நிலையில் தான் இருப்பதை அவள் உணர்ந்தாள்.
வளநாடுடையார் முன்பிருந்ததை விடத் தளர்ந் திருந்தார். தலை நாணற் பூவைப்போல் நரை கண்டு வெளுத்திருந்தது. ஆயினும் எரிந்தாலும் போகாத சந்தனக் கட்டையின் மணம்போல் குடி வழி வந்த வீரக்களை சுருங்கிய முகத்தில் இன்னும் ஒடுங்காமல் விரிந்து தெரிந்தது. சண்டைக்குக் கொடி கட்டிக் கொண்டு வந்து நிற்கும் அவரிடம் இளங்குமரன் அமைதியான முறையில் பேசினான்.
“ஐயா! பட்டி மண்டபத்தில் சமயவாதம் புரிவதற் காக நான் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த நகரத்தில் பல நாட்டு அறிவாளிகள் சந்தித்துப் போரிடுவதற்கு இந்திரவிழா நாட்கள்தாம் வாய்ப்பு ஏற்படுத்துகின்றன. நம்முடைய சொந்த விவாதத்தை என்றைக்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாமே? நானும் குருகுல வாசம் முடிந்து காவிரிப்பூம்பட்டினத்துக்கே திரும்பி விட்டேன். இனிமேல் நாம் சந்தித்துக் கொள்வதும் அரிய காரியம் இல்லையே...”
“உன்னைச் சொல்லிக் குற்றமில்லை தம்பீ! அந்தத் திருநாங்கூர்க் கிழவனும் இந்த ஆலமுற்றத்து மனிதனும் சேர்ந்து உன்னைச் சரியான பித்தனாக மாற்றியிருக்கிறார்கள். உன்னிடம் மிக முக்கியமான செய்தியொன்று பேச வேண்டும்.இந்திரவிழா முடிந்ததும் ஒரு நாள் தனியாக வந்து சேர்” என்று வேண்டா வெறுப் புடன் கூறிவிட்டு முல்லையோடு திரும்பிச் சென்றார் வளநாடுடையார். ஆலமுற்றத்துக் கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தபோது, தான் வந்திருப்பது தெரிந்து தந்தையும் மகளும் படைக்கலச் சாலைக்குள்ளும் வந்து சென்றிருக்க வேண்டும் என்று அவர்கள் வரவைப் பற்றி அதுமானம் செய்தான் இளங்குமரன்.
யானையைச் செலுத்திக் கொண்டு இரண்டு மூன்று வீதிகளைக் கடந்து நாளங்காடியை நோக்கித் திரும்பிய போது அவனுடைய பழைய நண்பர்கள் சிலர் கை கோர்த்தபடி எதிரே வந்து கொண்டிருப்பது தெரிந்தது. இப்போது அவர்கள் யாவரும் வளர்ந்து உடற்கட்டும் பெற்றிருந்தனர்.
அவர்கள் தன்னை அடையாளம் தெரிந்து கொள்வார்கள் என்ற நினைப்போடு யானையின் நடையை மெதுவாக்கி நிற்கச் செய்தான் இளங்குமரன். ஆனால் அவர்கள் அவனை யாரோ பெரிய ஞானி என்ற வழக்கமான மதிப்புக்காக உற்றுப் பாராமல் மேல் நோக்கிக் கைகூப்பிவிட்டு முன்னே நடந்து சென்றார்கள். அவனுக்கு அவர்கள் எல்லாரையும் எல்லாவற்றையும் நினைவிருந்தது. அவனை அவர்கள் எல்லாருக்கும் நினைவில்லை. அவன் மாறியிருந்தான். எதிரே வருகிறவர்கள் செலுத்திய வணக்கங்களையும் மதிப்புகளையும் தன் குருவின் பிரதிநிதியாயிருந்து அவர்கள் சார்பில் வாங்கி அவற்றை அவருக்கே அனுப்பி வைக்கப் பட்டதாகப் பாவித்துக் கொண்டு சென்றான் அவன்.
தெருத் திருப்பங்களிலும், நான்கு வீதிகள் சந்திக்கும் சதுக்கங்களிலும் இளைஞர்கள் பலப்பரீட்சை செய்து கொள்வதற்காகக் கிடந்த இளவட்டக் கற்களைக் கண்ட போது மனத்துக்குள் சிரித்துக் கொண்டான் இளங்குமரன்.
யானை நாளங்காடியை அடைந்தபோது வானில் நிலா எழுந்தது. ஒரு கையில் மதுக் கலயத்தையும் இன்னொரு கையில் இளம் பருவத்தினளான ஆடல் மகள் ஒருத்தியையும் பற்றிக் கொண்டிருந்த களி மகன் ஒருவன் வந்து இளங்குமரனை வளைத்துக் கொண்டான்.
“இந்த உலகம் பொய். உயிர்கள் பொய். இதை எவரும் படைக்கவில்லை. மதுவினால் உண்டாகும் மயக்கம் போலப் பஞ்ச பூதங்களின் மயக்கம் இது. இதற்குக் காரணமும் இல்லை. காரணனும் இல்லை” என்று மது வெறியில் உளறிய அந்தப் பூதவாதிக்குப் பதில் சொல்லாமல் சிரித்தான், இளங்குமரன். இந்திர நீலம்போல் இருண்ட கூந்தலும், வெறியிற் சிவந்த கண் களுமாக அந்தக் களிமகனின் பிடியிலிருந்த கணிகைப் பெண், “நீ என் அன்பனுக்குப் பதில் சொல்ல முடியாமல் தோற்றாய்!” என்று இளங்குமரனை நோக்கிக் கைகொட்டிச் சிரித்தாள்.
‘தன் உணர்வோடு பேசாதவர்களுடைய வாதத்தைச் செவிமடுத்து மறுப்பதுதான் தோல்வி. உங்கள் வாதத்துக்கு நான் மறுமொழி கூறாமலிருப்பதனாலேயே நீங்கள் எனக்குத் தோற்றீர்கள்’ என்று எண்ணிச் சிரித்துக் கொண்டே மேலே சென்றான் இளங்குமரன். அந்தப் பெண்ணும், களிமகனும் முகத்தைக் கோணிக் கொண்டு அவனுக்கும் அவன் அமர்ந்திருந்த யானைக்கும் அழகு காண்பித்துச் சிரித்தார்கள். இப்படி விடரும், தூர்த்தருமான களிமக்கள் பலர் நாளங்காடியில் சுற்றிக் கொண்டிருப்பது வழக்கம்தான். இந்திரவிழா நாட்களில் இந்தக் கீழ் மக்களைச் சாதாரண நாட்களிலும் அதிகமாகக் காணலாம்.
நாளங்காடியிற் முன்பு ஒரு காலத்தில் தன்னை நிற்கச் செய்து மணிமார்பன் என்ற பாண்டிய நாட்டு ஓவியன் சித்திரம் தீட்டிய மரத்தருகில் வந்ததும், அந்த நினைவால் கவரப்பட்டு அங்கே யானையை ஒரு கணம் நிறுத்தினான் இளங்குமரன். அன்றிருந்தது போலவே அந்த மரத்தில் முல்லைக்கொடி புதராகப் படர்ந்திருந்தது. அதன் கீழே ஓர் அழகிய இளைஞன் மனைவியோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.
யானை அருகே வந்து நின்றதும் பயந்தாற்போல் எழுந்தார்கள் அவர்கள். அப்படி எழுந்தபோது அந்த இளைஞனின் முகத்தை நன்றாகப் பார்த்த இளங்குமரன். சற்றே வியப்புடன் “மணிமார்பா” - என்று மெல்லக் கூப்பிட்டான். திகைப்போடு அண்ணாந்து பார்த்தனர் அந்த இளைஞனும் அவன் மனைவியும். இளைஞனுக்கு யானை மேலிருந்த இளங்குமரனைப் புரிந்து கொள்ளச் சிறிது நேரமாயிற்று. புரிந்ததும் அவன் ஆவல் மேலிட்டவனாகப் பேசலானான்: “ஐயா! வணங்குகிறேன். இவள் என் மனைவி. ஊர் திரும்பிய சில நாட்களில் எனக்குத் திருமணமாகிவிட்டது. மனைவியோடு மீண்டும் இந்திரவிழாப் பார்க்க இங்கே வந்தேன். இந்த இடத்துக்கு வந்ததும் பழைய நினைவுகள் எல்லாம் எழுந்தன. அந்தப் பழைய கதையைத்தான் இப்போது இவளிடம் கூடச் சொல்லிக் கொண்டிருந்தேன். நீங்கள் எப்படியோ மாறிவிட்டீர்களே! முதலில் எனக்கு அடையாளமே தெரியவில்லை. இவ்வளவு குறிப்பாக நம் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது யார் என்று பார்த்தால் நீங்கள் யானைமேல் உட்கார்ந்திருக்கிறீர்கள்.”
“சித்திரக்காரனுக்குக் கூடப் பழகிய முகம் மறப்பதுண்டோ, மணிமார்பா? பார்த்த முகங்களையெல்லாம் நினைவிலும் கண்ணிலும் பதிய வைத்துக் கொள்கிற கலை அல்லவா உங்களுடையது.”
“மறந்தது என் தவறு இல்லை ஐயா, இவள் வந்த பின்புதான் இப்படி ஆகிவிட்டது. தன் முகத்தைத் தவிர வேறு எதுவும் எனக்கு நினைவில் தங்காமல் செய்து விட்டாள் இந்தப் பொல்லாத பெண்” - என்று மனைவியை வம்புக்கு இழுத்தான் மணிமார்பன். அந்தப் பெண்ணின் அழகிய கன்னங்களில் நாண ரேகைகள் நளினமாக ஓடின. இளங்குமரன் சிரித்தபடி மணிமார்பனை மேலும் கேட்டான்:
“மறுபடியும் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பு பயப்படாமல் இந்த நகரத்துக்குள் நுழையும் தைரியம் உனக்கு எங்கிருந்து கிடைத்தது அப்பனே?”
“இவளுடைய கண்களிலிருந்து” என்று மனைவியைச் சுட்டிக் காண்பித்தான் மணிமார்பன். சித்திரக்காரனுக்கென்றே பிறந்த எழிலோவியம் போன்ற அந்தப் பாண்டி நாட்டுப் பெண் மேலும் நாணமடைந்தாள்.
“இவரை வணங்க வேண்டும். பெண்ணே! ‘உன் பெயருக்குப் பொருத்தமாக மார்பில் மணிமாலை அணியச் செய்கிறேன்’ -என்று இந்த மனிதர் அன்றைக்கு என்னை வாழ்த்திய வாழ்த்துக்கள்தாம் எனக்கு இன்று இந்த வாழ்வை அளித்திருக்கின்றன” என்று தன் மனைவியிடம் உணர்ச்சி பொங்கக் கூறினான் மணிமார்பன். அந்தப் பெண் தரை மண் தோய வீழ்ந்து இளங்குமரனை வணங்கினாள். மணிமார்பனும் சேர்ந்து வணங்கினான். கொடியைச் சற்றே இடக்கரத்துக்கு மாற்றிக் கொண்டு யானை மேலிருந்தே அவர்களை வாழ்த்தினான் இளங்குமரன். வாழ்த்திவிட்டு வாழ்த்திய கையை அப்படியே வைத்துக் கொண்டு, “என்னுடைய மனத்திலும் உடம்பிலும் சத்துவ குணமும், சத்துவ குணத்துக்குரிய தூய இரத்தமும் ஓடாத காலத்தில் இதே கையினால் உன்னை ஒரு முறை அறைந்தனுப்பியிருக்கிறேன். மணிமார்பா! அதை நீ மறந்து என்னை மன்னித்திருப்பாய் அல்லவா?” என்று கேட்டான் இளங்குமரன்.
“பழைய புண்ணைக் கீறாதீர்கள். அது முன்பே ஆறிவிட்டது” என்று கைகூப்பினான் ஓவியன். அந்த இளங் காதலர்களுடைய மகிழ்ச்சி உரையாடலைத் தான் தலையிட்டு அழித்திட விரும்பாமல் மேலே புறப்பட்டான் இளங்குமரன்.
அப்போது, “ஐயா! இந்திரவிழா முடிந்து ஊருக்குப் போவதற்குள் நானும் என் மனைவியும் ஆலமுற்றத்துக்கு ஒருநாள் வருகிறோம். அந்தப் பெரியவர் அன்று என்னைக் காப்பாற்றித் தக்க வழித்துணையோடு பாண்டிய நாட்டுக்கு அனுப்பியிராவிட்டால் இன்று நான் இப்படி மங்கல வாழ்வு வாழ முடிந்திராது. அவரையும் பார்த்து வணங்க வேண்டும்” என்றான் மணிமார்பன்.
“ஆகா, அவசியம் வாருங்கள்” என்று கூறிவிட்டு யானையைச் செலுத்திக் கொண்டு சென்றான் இளங்குமரன். பூதச் சதுக்கத்துக்கு எதிரே வந்தபோது கூட்டத்தின் நெருக்கடியினால் ஒரு தேரும் அவனுடைய யானையும் ஒன்றிற்கொன்று விலகி வழிவிட முடியாமல் எதிரெதிரே நின்றன. நெருக்கடி தீரட்டும் என்று சிறிது நேரம் காத்திருந்தான் அவன். வழி விலகலாம் என்ற நிலை ஏற்பட்ட பின்பும் எதிரேயிருந்த தேர் விலகாமல் நிற்பதைக் கண்டு அதிலிருந்தவர்களைப் பார்த்தான் இளங்குமரன். அதிலிருந்தவர்கள் தேரை நிறுத்திக்கொண்டு தன்னைச் சுட்டிக் காட்டிப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்களை யாரென்று இன்னும் நன்றாகப் பார்த்தான். அவர்கள் யாரென்று விளங்கிக் கொண்டுகூட அவன் மனம் அமைதி யிழக்கவில்லை. முகம் மலர்ச்சி இழக்கவில்லை.
“வழியை விடுகிறீர்களா? போக வேண்டும்?” என்றான் இளங்குமரன்.
“நன்றாகப் போகலாமே! உங்கள் வழியை நாங்கள் ஒன்றும் இடுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கவில்லையே?”
இந்தப் பதிலைக் கேட்டு இளங்குமரன் சிரித்தான். “இரண்டு கண்களாலும் நன்றாகப் பார்க்க முடிந்தாலும் நீங்கள் பிறர் வழியை மறித்துக் கொண்டிருப்பது உங்களுக்கே தெரியும். ஆனால் உங்களுக்குத்தான் ஒரு கண் இல்லையே?”
இதைக் கேட்டுக் கீழே தேரின் முன்புறம் நின்று கொண்டிருந்த நகைவேழம்பரின் ஒரு கண்ணும், பின்புறமிருந்த பெருநிதிச் செல்வரின் இரண்டு கண்களும் சினத்தால் சிவந்தன.
இடையீடின்றி நெருங்கி வளர்நத பசும் புல்வெளியில் பால் குடம் சரிந்தது போல் நாளங்காடியின் அடர்ந்த மரக் கூட்டங்களுக்குள்ளே நிலவு கதிர் பரப்பிக் கொண்டிருந்தது. எதிர்ப் பக்கத்தே வழியை மறித்தாற் போல் நின்ற தேரிலிருந்து தன்னைச் சினத்தோடு நோக்கிய நகைவேழம்பரையும் பெருநிதிச் செல்வரையும் சிரித்துக் கொண்டே பார்த்தான் இளங்குமரன். அந்தப் பார்வையும் சில கணங்கள்தான். அதன் பின் கூட்டம் விலகி வழி ஏற்பட்டிருந்த வேறு பக்கமாக யானையைத் திருப்பிச் செலுத்திக் கொண்டு சென்றான் அவன். நாளங்காடியில் இன்று சந்தித்த இந்த இருவரும் அவனுடைய மனத்தில் கடுமையான வெறுப்புக்கும் குரோதத்துக்கும் உரியவர்களாக இருந்த காலமும் உண்டு. இன்றோ அவனுடைய மனத்திற்குள் எவர் மேலும் வெறுப் பில்லை; எவர் மேலும் குரோதமில்லை. உருவுடன் கூடிய ஆசைகளும் உருவமற்ற ஆசைகளும் எதுவுமே இல்லை. மேலே மிக உயர்ந்த வானப் பரப்பில் பறக்கும் பறவை சிறகுகளைத் தவிர வேறெந்தப் பாரமும் இல்லாமல் பறந்து செல்வது போல் அவனுடைய நினைவுகளின் போக்குக் கீழேயிருந்து மிக உயரமான இடத்தில் மிக உயரமான மார்க்கத்தில் சென்றது. விருப்பு வெறுப்புக்களில் சாயாத நிலையான மனத்தைச் ‘சமசித்தத்துவம்’ என்று கூறியிருந்தார் நாங்கூர் அடிகள். சமசித்தத்துவத்தை அடைய முயன்று கொண்டிருந்தான் இளங்குமரன். அப்படிப்பட்ட சித்தத்தோடு பார்க்கிற போது உலகமே விசித்திரம்தான்.
சாயவும் கோணவும் செய்யாமல் ஒருநிலைப்பட்ட மனத்தோடு இன்னதைக் காணலாம், இன்னதைக் காணக் கூடாது என்ற சம்பிரதாய எல்லைகளையும் கடந்து பார்த்தால் கண்ணுக்குத் தெரிவன எல்லாம் அநுதாபத்துக்கும், பரிதாபத்துக்கும் உரியனவாகவே தென்படுகின்றன. துன்பப்படுகிறவர்கள், இன்பப்படுகிறவர்கள், துன்பமும் இன்பமும் கலந்து படுகிறவர்கள் எல்லாரும் இந்த உலகத்தில் நெஞ்சில் சுகமோ, துக்கமோ எதையோ சுமந்து கொண்டு திரிகிறார்கள். உடம்பையும் பொருட் சுமைகளையும், தேரிலோ, குதிரையிலோ பிறரிடம் கொடுத்தோ சுமக்கச் செய்வது போலச் சுமக்கச் செய்ய முடியாதது நெஞ்சின் சுமை. நினைப்பதைச் சொல்ல இயலாமல் சுமப்பதைத் தவிர்க்க முடியாமல் குழந்தையின் துன்பம் போல் தனக்குற்றதைச் சொல்ல மொழியின்றிச் சொன்னாலும் அவற்றுக்கு உணர்த்தும் ஆற்றலின்றித் தவிப்பது ஒப்ப இந்திர விழாக் கூட்டத்தில் தெரிந்த முகங்களில் எல்லாம் தான் இரங்குவதற்கான ஏதோ ஒர் உணர்வைத் தேடிக் கொண்டிருந்தான் இளங்குமரன். சுகத்தைச் சுமந்தால் என்ன? துக்கத்தைச் சுமந்தால் என்ன? சுமை என்னவோ சுமைதானே? சுமைக்கு உள்ளடங்கிய பொருள் உப்பானாலும் வெல்லமானாலும், சுமக்கிறவனுக்குக் கனமான சுமையாவது போலத்தானே நினைவுகளும்? உப்புச் சுமையை விட வெல்லச் சுமை அதிகமாகக் கனத்தாலும் கனக்கலாம்.
‘மதுவிலிருந்து பிறக்கும் மயக்கம் போல ஐம்பெரும் பூதங்களின் மயக்கமே இந்த உலகம்’ என்று வெறியுடன் கூறிக் கொண்டு வந்த அந்தக் களிமகனிலிருந்து, கனல் பொறி பறக்கும் பார்வையால் தன்னை எரித்துவிடுவது போலப் பார்த்த நகைவேழம்பர், பெருநிதிச் செல்வர் வரை எல்லாருடைய நெஞ்சிலும் சுமை இருப்பது இளங்குமரனுக்கு விளங்கிற்று. ஆசையாக இருக்கிறவரை அதுவே ஒரு சுமை. ஆசை நிறைவேறி விட்டால் ‘நிறைவேறி விட்டது’ என்று நினைத்து நினைத்துப் பூரிக்கும் திருப்தியே ஒரு சுமை. எண்ணியது நிறைவேறா விட்டால் நிராசையும், அதனால் ஏமாற்றம் உண்டாவதும் சுமையே. ஆகாயத்தில் பறக்கும் பறவையைப் போல நெஞ்சில் சுகதுக்கச் சுமையில்லாத நாங்கூர் அடிகளைப் போன்றவர்களே உயர்ந்த நினைவுகளில் சஞ்சரிக்க முடிகிறதென்று எண்ணினான் இளங்குமரன். அவருடன் பழகிய பயனாலே தனக்கும் அந்த நிலை ஒரளவு வந்ததெனவும் நம்பினான்.
இப்படிச் சிந்தனையில் ஆழ்ந்த மனத்தோடு யானையைச் செலுத்திக்கொண்டு நான்கு பெரிய வீதிகள் சந்திக்கும் நாளங்காடிச் சதுக்கத்துக்கு வந்திருந்தான் அவன். அந்த இடத்தில் அவன் வெற்றி கொள்ள வேண்டிய போர்க்களம் காத்திருந்தது. அங்கே பல்வேறு சமயங்களைச் சேர்ந்த அறிஞர்கள் பிறரை வாதத்துக்கு அழைக்கும் கோலத்தில் கொடி கட்டிக் கொண்டு கூடி யிருந்தார்கள். எங்கும் அறிவொளிரும் கண்கள். சுவடிகள் நிறைந்த கைகள். எதிர்த்து வாதம் புரிவதற்காக மற்றவர்களை அழைக்கும் கொடிகள். வாதிடுபவர்களின் திறமையைக் காண்பதற்காகக் கூடியிருந்தவர்களின் முகங்களில் எல்லையில்லாத ஆர்வம் தெரிந்தது. யானையிலிருந்து கீழிறங்கி கொடியும் கையுமாக, அந்த ஞான வீதிக்குள் நுழைந்தான் இளங்குமரன். அங்கிருந்த வயது மூத்த அறிஞர்களுக்கு நடுவே பேரெழில் நம்பியாகிய இளைஞன் ஒருவன் கொடி ஏந்திய கையினனாக நுழைந்தவுடன் கூடியிருந்த காவிரிப்பூம்பட்டினத்துப் பொது மக்களுக்கு ஆர்வம் பெருகிற்று. இனிமேல் இங்கே சுவையான நிகழ்ச்சிகளைக் காணப்போகிறோம் என்பது போன்ற உற்சாகமும் அவர்களுக்கு உண்டாயிற்று.
“இந்தப் பெரிய உலகம் முழுவதும் படைப்புக்கு முழு முதற் காரணனாகிய தேவன் ஒருவன் இட்ட முட்டை. படைப்புக்கு நல்வினை தீவினைகள் காரணமில்லை; தேவன் ஆணை ஒன்றே போதும்” என்று தனது கொடிக்குக் கீழே நின்று இரைந்து கூவிக் கொண்டிருந்த ஒரு பிரமவாதிக்கு முன்னால் போய் நின்றான் இளங்குமரன்.
ஒளிமயமான உடலோடு கந்தருவருலகத்து இளைஞன் ஒருவன் போல எதிரே வந்து கொடியை ஊன்றிக் கொண்டு நிற்கும் இளங்குமரனைக் கண்டவுடன், அந்தப் பிரமவாதி தான் திரும்பத் திரும்பக் கூறிக் கொண் டிருந்தவற்றை நிறுத்திவிட்டு அவனை உற்றுப் பார்த்தார். அவருடைய பார்வையைக் கண்டு இளங்குமரன் புன்னகை பூத்தான்.
“உச்சந் தலையில் இருந்து உள்ளங் கால் வரை தேடுவதுபோல என்னிடம் எதைப் பார்க்கிறீர்கள், ஐயா?”
“எதையா? பார்க்க வேண்டியதைத்தான் பார்க்கிறேன். நீயோ இளம் பிள்ளையாகத் தோன்றுகிறாய். காற்றாடியைப் பறக்கவிட்டு மகிழ வேண்டிய கைகளில் கரையில்லாத ஞானத்தின் சின்னமாகிய இந்தக் கொடியை ஏந்திக் கொண்டு வந்து நிற்கிறாய். என்னைக் காட்டிலும் குறைந்த அறிவுள்ளவர்களோடு நான் வாதிடுவது ஏகதேசம்* என்னும் தருக்கக் குற்றமாகி விடுமே?”
* வாதி - பிரதிவாதி இருவரில் ஒருவரது பலக்குறைவு
“ஞானத்தின் நிறைவையோ குறைவையோ தோற்றத்திலிருந்தும் பருவத்திலிருந்துமே தெரிந்து கொண்டுவிட முடியுமா? முடியுமானால் காட்சியைத் தவிர மற்ற அளவைகள் எல்லாம் பொய்யாகி விடுமே? காட்சியே அளவையும் துணிவும் ஆனால் எனக்கு நீங்கள் சொன்ன அதே தருக்கக் குற்றத்தை உங்களுக்கும் நான் சொல்லலாமே. ஊன்றுகோலை ஊன்றித் தொண்டு கிழவராய்த் தள்ளாடி நடக்க வேண்டிய முதிய வயதிலே தளர்ந்த கைகளில் கொடியோடு நிற்கிறீர்களே? ஊக்கமும் உற்சாகமும் கற்ற நூல்களின் எந்தப் பகுதியிலும் எந்த விநாடியிலும் மனத்தை இணைத்து கொள்ள முடிந்த ஞாபகமும் உள்ள இளைஞனாகிய நான், மூப்பினால் இவற்றையெல்லாம் இழந்திருக்கும் உங்களோடு வாதம் புரிய விரும்புவதும் ஏகதேசம் என்னும் தருக்கக்குற்றம் ஆகுமே. பசுவின்கால் குளம்பைக் காட்டிலும் அதற்குப் பின்னால் முளைத்த கொம்பு வலியதாவதுபோல் முன் தோன்றியதனினும் பின்தோன்றியது வலிமையுடையதென்னும் நியாயமும் உங்களுக்குத் தெரிந்திருக்குமே...?”
இதைக் கேட்டபின் கண்களை அகலவிரித்து இளங்குமரனை வியப்போடு பார்த்தார் அந்தப் பிரமவாதி. ‘யாரோ சிறுபிள்ளை, தன்னை வம்புக்கு இழுக்க வந்திருக்கிறான்’ என்று நினைத்ததற்கு முற்றிலும் மாறாக எதிரே நிற்பவன் பழுத்த ஞானமும் தருக்க நியாய வழிகளில் நல்ல தேர்ச்சியும் உள்ளவன் என்று அறிந்ததும் தன்னுடன் அறிவுப் போரிட வந்திருப்பவன் தனக்குச் சரியான எதிரிதான் என்ற நிறைவோடு அவர் வாதிட முன் வந்தார்.
“பால் தயிராவது போலப் பிரமமே உலகமாகத் திரிந்து ஆக்கம் பெற்றிருக்கிறது. உயிர்களுக்கு நல்வினை, தீவினை இரண்டும் முதல்வனாகிய இறைவன் ஆணையினால் வருமென்பது பொருந்தாது. உலகத்து மக்கள் ஒன்றைச் செய்வதற்குக் கருவியும், துணைக் கருவிகளும் வேண்டி நிற்றல் போல இறைவனுக்கு இவ்வுலகைப் படைக்கும் காலத்தில் துணைக் கருவிகள் வேண்டியதில்லை. வேண்டும் என்றால் முழு முதலாகிய இறைவனின் சுதந்திரத்திற்கு அது இழிவாகும் அல்லவா?” என்று பரிணாம விவாதத்தைத் தொடங்கினார் பிரமவாதி.
“நீங்கள் கூறுவது பொருந்தாது. இருவினைகள் துணைக் கருவிகளாகவே அமையும். பிறவி வினையினால் வந்தது, வினைக்கு விளைவாகியது. நல்வினைக்குப் பயன் இன்பம்; தீவினைக்குப் பயன் துன்பம். பயன்களை நுகர்வதற்குப் பிறந்தே ஆக வேண்டும். பழத்தினுள் அடங்கிய வித்துக்கள் மீண்டும் முளைப்பது போல வினைகள் பழுத்த பின் பயன் தோன்றுவது தவறாது. புனருற்பவமாகிய மறுபிறப்பில் வினைவித்துக்கள் முளைக்கும். ஒரு நகரத்து அரசன் தன் நகரத்தைக் காப்பதற்குக் காவலர்களை நியமிப்பதுபோல இறைவனுடைய நியமனம் பெற்று இரு வினைகள் ஆணை நடத்தும். ஆகையினால் உங்களுடைய பரிணாம வாதத்துக்குப் பொருள் இல்லை. எந்தவிதமான பயனும் இல்லை.”
“நல்லது! அப்படியானால் நீ இதற்குப் பதில் சொல்! வினைகள் உண்டு என்பதற்கும் அவை உயிர்க்குப் பயனாகத் தொடரும் என்பதற்கும் அவை முதல்வன் ஆணையால் நடக்கும் என்பதற்கும் சான்று என்ன? உள்ள பொருளானால் அப்பொருள் தோன்ற வேண்டும். வினைகளுக்குத் தோற்றம் ஏது?”
“தோற்றமற்றவையெல்லாம் இல்லாப் பொருள்கள் என்பது உங்களுடைய முடிவானால் இந்த உலகமாகிய முட்டையை இட்டவனாக நீர் கூறும் தேவன் தோன்றாமையின் இல்லாதவனாவான். இல்லாப் பொருள்கள் எல்லாம் தோற்றமுடையனவும் அல்ல, தோன்றாப் பொருள்களெல்லாம் இல்லாதனவும் அல்ல. உள்ளதாவதொரு பொருளை மறுப்பதற்கே இல்லை என்னும் சொல் பயன்படும். ஆகையினால் நீர் இல்லையென்று மறுப்பதனாலேயே அது உள்ளதாகின்றது. பொருள் தோன்றிய பின்பே அதற்குக் குணந்தோன்றும் என்பது தருக்க நூல் முடிவாதலால் ‘வினைகள் இல்லை’யென அவற்றுக்கு இன்மையாகிய குணத்தை நீர் கற்பிக்கத் தொடங்கியதனாலே அதற்கு முன்பே அவை உள்ளனவாகக் கருதி உடன்பட்டீர். முற்பிறவியில் சேர்த்த வினைகளில் அப்போதே நுகர்ந்தவை போக எஞ்சிய வினைகள் ‘சஞ்சிதம்’ எனப் பெயர் பெறும்.
“ஆசைப்பட்டு அடைந்த இன்பமும் இன்பப்பட்டு அடைந்த ஆசைகளுமாக விருப்பம் அடங்காமல் வளர்வதைப் போலத் துன்பப்படுவதனால் பெற்ற ஆசைகளும் ஆசைப்படுவதனால் பெற்ற துன்பங்களுமாக வினைகள் உயிருக்குப் பயனாகத் தொடரும் இயல்பின. சூதாடுகிறவர்கள் சூதில் பொருளை இழக்க இழக்க, இழந்தவற்றைப் பெறுவதற்காக மேலும் அவ்விளையாட்டின் மேல் பெருங்காதல் கொள்வர். இழந்தவற்றைப் பெற்ற பின்பும் மேலும் மேலும் பெறுகிற ஆசையால் காதல் பெருகும். ஆகவே சூதாடுகிறவர்களுக்குத் தோற்றுத் துன்பப்படுகிற போதும் ஆசை; வென்று இன்பப்படுகிற போதும் ஆசையே. ஆசையாகிய துன்பமும், துன்பமாகிய ஆசையும் மாறி மாறி நிலவும் சூதாடுமிடம்போல உயிர்கள் ஏதாவதொரு வினை எஞ்சி நிற்கும் படியே தொடரும்.
‘இழத்தொறு உம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழந்தொறுஉம் காதற்று உயிர்’
என்ற ஆன்றோர் வாக்கை நீரும் கேள்விப்பட்டது உண்டு அல்லவா? காந்தத்துக்கு நேராக இரும்பைப் பிடிக்கும் போது அந்தக் காந்தமே இரும்பை வலித்து இழுத்துக் கொள்ளுதல் போல இறைவன் துகர்வித்தலாலே வினைப் பயனை உயிர்கள் நுகரும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்...”
என்று இளங்குமரன் கூறி விளக்கியபோதில் மேலே அவனிடம் என்ன கேட்பது என்று தோன்றாமல் தடு மாறினார் அந்தப் பிரமவாதி. அவர் தலை குனிந்தார். ஏதேதோ சுவடிகளைப் புரட்டினார். மீண்டும் சுவடிகளைக் காட்டிவிட்டு நிமிர்ந்தார். ஏதோ கேட்கத் தொடங்கிவிட்டுக் கேள்வியை முடிக்காமலே மறுபடி தலைகுனிந்தார். அப்போது குனிந்த அவருடைய தலை மீண்டும் நிமிரவே இல்லை. சுற்றிலும் கூடியிருந்த பெரு மக்களிடமிருந்து நாவலோ நாவல் என வெற்றிக் குரல் முழக்கம் எழுந்தது. அந்த முழக்கம் மேலே எழுந்து ஒலிக்கத் தொடங்கிய அதே நேரத்தில் அவருடைய கொடி கீழே விழுந்தது.
இளங்குமரன் அந்த வெற்றியின் செருக்கில் தன் மனம் கனத்துப் போகாமல் குருவை தியானித்துக் கொண்டு சுற்றிலும் ஒலித்த வாழ்த்தொலிகளைக் கேட்பதிலும் உணர்வதிலும், உதாசீனனாகி மேலே நடந்தான்.
உலகத்துப் பொருள்களின் பொதுத்தன்மை, சிறப்புத் தன்மை, கூட்டத்தன்மை ஆகியவற்றை விவரித்துக் கொண்டே ‘வைசேடிகன்’ ஒருவன் இளங்குமரனுக்கு முன்னால் வந்து தன்னுடைய கொடியை நட்டான். காது செவிடுபடும்படி உரத்த குரலில் பேசினான் அவன்..
“பொருள்களிலே நீர், ஒலி, ஊறு, உருவம், சுவை ஆகிய நான்கு குணங்களை உடையது. தீ ஒலி, ஊறு, உருவம் ஆகிய மூன்று குணங்களை உடையது. காற்று, ஒலி, ஊறு ஆகிய இரண்டே குணங்களை உடையது. ஆகாயம் ஓசைக் குணம் ஒன்றே உடையது” என்று செவிகளைத் துளைக்கிறாற் போன்ற பெருங்குரலில் ஒரே வாக்கியத்தைத் திரும்பத் திரும்பக் கத்தினான் அந்த வைசேடிகன். அவனைப் பார்த்து, “இப்போது இந்தக் கணமே ஆகாயம் தனது ஓசைக் குணத்தை இழந்து விட்டது, ஐயா!” என்று சொல்லி மெல்லச் சிரித்தான் இளங்குமரன். “ஏன்? எப்படி இழந்தது?” என்று வைசேடிகன் வெகுண்டு கேட்டபோது, “ஆகாயத்தின் ஓசைக் குணம் அவ்வளவும் இப்போது உங்களுக்கே வந்துவிட்டது. இல்லாவிட்டால் இவ்வளவு பலமாகக் கத்துவீர்களா?” என்று நிதானமாகச் சொல்லிக் கூட்டத்தில் சிரிப்பலைகளை எழச் செய்தான் இளங்குமரன்.
இந்திரவிழாவின் காரணமாக அறிஞர்கள் ஒன்று கூடியிருந்த நாளங்காடிச் சதுக்கத்தில் தன்னை எதிர்ப்பவரைத் தலைகுனியச் செய்யும் இணையில்லாத ஞானத்தோடு இளங்குமரன் சமயவாதம் புரிந்து கொண்டிருந்த இதே சமயத்தில் பூம்புகாரின் வேறொரு பகுதியில் அவனை அழித்து ஒழிப்பதற்குச் சமயத்தைத் தேடி வாதம் புரிந்து கொண்டிருந்தனர் இரண்டு மனிதர்கள்.
புறநகரில் சக்கரவாளக் கோட்டத்து மதிலருகே நகைவேழம்பரும், பெருநிதிச் செல்வரும் தாங்களிருவரும் ஏறி வந்திருந்த தேரை நிறுத்திவிட்டுப் பேசியவாறே நடந்து கொண்டிருந்தார்கள். பூதம் நின்ற வாயிலில் மேல் நோக்கி வானளாவ நிற்கும் பூதச் சிலையின் தலையிலே சூட்டினாற்போல் நிலவின் ஒளி பரவிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் அவர்கள் இருவரையும் தவிர வேறு மனித சஞ்சாரமே இல்லை. நகரமே மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் மாபெரும் திருவிழா தொடங்கியிருக்கும் போது சுடுகாட்டுக் கோட்டத்துக்குப் போகிற பாதையில் வேறு யார்தான் வருவார்கள்?
பெருநிதிச் செல்வர் ஆத்திரம் அடைந்தாற் போன்ற கண்டிப்பான குரலில் நகைவேழம்பரிடம் பேசிக் கொண்டு வந்தார்.
“உலகத்தையெல்லாம் ஏமாற்றுகிற சாமர்த்தியத்தை வைத்துக் கொண்டு நீரே சில சமயங்களில் பிறரிடம் ஏமாந்து விடுகிறீர் நகைவேழம்பரே! இந்தப் பிள்ளையாண்டான் துறவியாகி எங்கோ கண்காணாத நாடுகளுக்குச் சென்றுவிட்டதாகக் கூறினிரே. இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின் இப்படிக் கொடி சுமந்த தோற்றத்தோடு யானைமேல் அமர்ந்து இவன் இங்கே வருவானென்று நீர் எதிர்பார்க்கவில்லையோ? சாதுரியமாக வாழ விரும்புகிறவன் தங்களுடைய வழிகளில் வேண்டாதவர்களுடைய குறுக்கீட்டை எந்தக் கணத்திலும் எதிர்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
“உமக்கும் எனக்கும், நிர்ப்பயமான வாழ்க்கை சாகின்ற வரையில் இருக்க முடியாது. பயமுறுத்தி வாழ வழி செய்து கொண்டவர்கள் பயந்து பயந்து வாழ்வது தான் நியதி. பிறரை அலற அலற, அழ அழப் பயமுறுத்திய நாட்களை நீரும் மறந்திருக்க மாட்டீர்; நானும் மறக்கவில்லை. உம்முடைய திறமையை யெல்லாம் செலவழித்து இரண்டு முறை இந்தப் பிள்ளையாண்டானைக் கொலை செய்ய முயன்றீர். முடியவில்லை. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இதே இந்திர விழாவின் முதல்நாள் இரவில் சம்பாபதி வனத்தில் இவனையும் இவன் வளர்ப்புத் தந்தையையும் சேர்த்து அழித்துவிடுவதற்காக முரட்டு நாகர்கள் இருவரை ஏவினோம். முடியவில்லை. பின்பு இவனும் இவனை வளர்த்த அருட்செல்வரும் தங்கியிருந்த தவச்சாலைக்குத் தீ வைக்க ஏற்பாடு செய்தோம். அந்த ஏற்பாட்டிலும் அருட்செல்வ முனிதான் எரிந்து சாம்பலானார். இந்தப் பிள்ளை அப்போது தவச் சாலையில் இல்லாததால் தப்பிவிட்டான். இவன் சாகாமல் வளர்ந்து நமக்குத் தொல்லை கொடுக்க வேண்டுமென்பது தான் தெய்வ சித்தம் போலி ருக்கிறது!” என்று பெருநிதிச் செல்வர் கூறியதைக் கேட்டு நகைவேழம்பர் சிரித்தார்.
“தெய்வ சித்தம் என்று ஒன்று இருப்பதாக நம்புகிற அளவு நீங்கள் தளர்ந்து விட்டீர்களே. நம் சித்தபடி இவ்வளவும் நடந்திருப்பதைக் கண்ட பின்பும் உங்களுக்கு எப்படி இந்தப் பிரமை ஏற்பட்டது? எல்லா ரகசியமும் தெரிந்த அந்தக் கிழட்டு முனிவனே மண்ணோடு மண்ணாகிப் போனபின் இந்தப் பிள்ளையாண்டானைப் பற்றிக் கவலைப்படுகிறீர்களே? முன்பாவது நாலுபேரை அடித்துத் தள்ளுகிற வலிமை இவன் உடம்பில் இருந்தது. இப்போது வெறும் ஏட்டுச் சுரைக் காயாகி விட்டான். தெய்வமில்லை, சித்தமுமில்லை. எல்லாம் நாம் ஆசைப்படுகிற விதமே நடக்கிறது. நடத்துகிறோம், இனியும் நடக்கும்.”
“அப்படித் தடையில்லாமல் நடப்பதனால் தான் எனக்குப் பயமாயிருக்கிறது, நகைவேழம்பரே! யாருக்கும் தெரியாத நேரம் என்று நிச்சயமாகத் தெரிந்து கொண்டு திருடினாலும் திருடனுக்குத் தன் செயலில் அதிகமான பயம்தான்! நீடித்து நிலைக்க வேண்டிய காரியத்துக்கு ஒரு தடையும் இல்லாமல் போவதே பெரிய தடை என்பார்கள். நிற்கவும் நிலைக்கவும் ஆசைப்படுகிற காரியத்துக்குத் தடையின்மையே அவலட்சணம். யாரும் சந்தேகப்படாமல் இருப்பதைப் பார்த்தே எனக்குச் சந்தேகமாயிருக்கிறது. யாரும் எதிர்த்து வராமல் இருப்பதே எனக்குப் பெரிய எதிர்ப்பாகப்படுகிறது. யாரும் பயமுறுத்தாமல் இருப்பதே எனக்குப் பெரிய பயத்தைத் தருகிறது. போதாத குறைக்கு இந்தப் பிள்ளையாண்டானுக்கு நீலநாக மறவருடைய ஆதரவு வேறு இருக்கிறது. வீட்டுக்குள் அடைத்து விட்டதனால் என் மகள் சுரமஞ்சரியின் ஆதரவு இனி இவனுக்குக் கிடைக்க வழியில்லை.”
“ஒருவேளை வானவல்லியின் ஆதரவு கிடைத்தாலும் கிடைக்கலாம்” என்று ஒரு வார்த்தைக்காகச் சொல்கிறவர் போலச் சொல்லிச் சிரித்தார் நகைவேழம்பர். பெருநிதிச்செல்வர் கடுமையாக அதனை மறுத்தார்.
“அது ஒருகாலும் சாத்தியமில்லை, நகை வேழம்பரே!”
“சாத்தியமில்லை என்று உறுதியாகச் சொல்ல முடியாது. எவனுடைய கண்களில் தன்னுடைய ஆசைகள் பிறவாமல் பிறருடைய ஆசைகளைப் பிறப்பிக்கும் ஆற்றல் நிறைந்திருக்கிறதோ அவனுடைய கண்களின் முன் பெண்கள் நிறையிழத்தலைத் தவிர்க்க இயலாது! இந்தப் பிள்ளையின் கண்கள் அத்தகையவை...” என்றார் நகைவேழம்பர்.
இருவருக்கும் வேண்டாத வழியிலிருந்து அந்தப் பேச்சைத் திருப்பினார் பெருநிதிச் செல்வர். “இப்படிப் பார்த்தாலும் இன்னும் இந்தப் பிள்ளையை அழிக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. அதை வற்புறுத்தத்தான் இவ்வளவு சொன்னேன் நகைவேழம்பரே!”
“அழிப்பது பெரிய காரியமில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த முயற்சியின் அருகில் போகும் போது எப்படியோ நான் தோற்றுவிடுகிறேன். கடைசியாக இவனை அழிக்கும் எண்ணத்துடன் இவனது ஓவியத்தைப் பலரிடம் கொடுத்தனுப்பிய போதும் இப்படியேதான் ஆயிற்று. ஆலமுற்றத்து முரடனிடம் நான் அடி வாங்கிக் கொண்டு வந்ததுதான் மீதம்.”
“அதெல்லாம் பழைய கதை. இப்போது என்ன செய்யப் போகிறீர் என்று சொல்லும்.”
இதற்குச் சிறிது நேரம் மறுமொழி கூறாமல் இருந்தார் நகைவேழம்பர். அவர் ஏதோ சிந்திப்பது போலிருந்தது.
“உமக்குக்கூட இப்படிச் செயல்களுக்கு எல்லாம் யோசனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதா?”
“யோசனை ஒன்றுமில்லை. இந்த முறை எப்படியும் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்று திட்டமிட்டேன். தேர் இங்கேயே நிற்கட்டும். வாருங்கள் நடந்தே உட்பக்கம் போய் வரலாம். இந்தக் காரியத்தைப் ‘பைரவி’ மூலமாகச் செய்தால் நினைத்தபடி முடியும். இப்போது போனால் சுடுகாட்டுக் கோட்டத்தில் வன்னி மன்றத்தின் அருகே அவளைச் சந்திக்கலாம்” என்றார் நகை வேழம்பர்.
பைரவி என்ற பெயரைக் கேட்டதும் பெருநிதிச் செல்வரின் முகம் பயத்தினால் இருண்டது.
“பைரவியா, அந்தப் பைசாசத்தையா இப்போது பார்க்க வேண்டுமென்கிறீர்கள்?” என்று தயங்கினார் பெருநிதிச் செல்வர்.
“கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பதுபோல் இருந்தால் ஒன்றும் முடியாது. இந்த அகாலத்தில் சுடுகாட்டுக் கோட்டத்தைக் கடந்து போகக் கூசுகிறீர்கள். நீங்கள் கூசினால் கூசிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.”
“நான் ஒன்றும் கூசவில்லை. இதோ வருகிறேன். புறப்படுங்கள்” என்று உறுதியானதொரு தீர்மானத்துக்கு வந்தவரைப்போல முன்னால் நடந்தார் பெருநிதிச் செல்வர். நகைவேழம்பரும் தொடர்ந்தார். சக்கரவாளக் கோட்டத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி நீண்ட தொலைவு நடந்துபோன பின் அடர்ந்த வன்னிமரங்கள் நிறைந்த ஓரிடத்தை அடைந்ததும் இருவரும் நின்றார்கள். அங்கே சுற்றிலும் கபாலங்கள் கிடந்தன. அருவருக்கத்தக்க முடை நாற்றம் வீசியது. சுற்றிலும் எரிந்து கொண்டிருந்த கொள்ளித் தீயில் எலும்புகளும் கபாலங்களும் அச்சுறுத்தும் விதத்தில் தெரிந்தன. வன்னிமரங்களின் கீழே அங்கங்கே கபாலிகர்கள் தனியாகவும் கூட்டமாகவும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய வெறிக் கூப் பாடுகள் ஒலிப்பதும் அடங்குவதுமாக இருந்தன. மயானத்தின் கோரச் சூழ்நிலை நிலவிய அந்தப் பகுதியின் ஒருமூலையில் தரையோடுதரையாகத் தாழ்ந்து முள் நிறைந்த கொடிகளால் குடிசையைப் போலப் படர விட்டிருந்த வன்னி மரப்பந்தல் ஒன்றின் வாயிலருகே சென்று ‘பைரவி’ - என்று விநயமாகக் குரல் கொடுத்தார் நகைவேழம்பர். முதலில் உள்ளேயிருந்து மறுமொழி இல்லை. பின்பு முன்னிலும் உரத்த குரலில் அதே பெயரைச் சொல்லிக் கூப்பிட்டார் அவர். பாய்ந்து வெளியே வரும் அவசரத்தில் வன்னி முட்கள் கீறிய குருதி சாம்பர் பூசிய உடலில் செந்நிறம் காட்டிடக் கையிலிருந்த கபாலம் பயத்தைக் காட்டிட முரட் டுப் பேய்ப் பெண் ஒருத்தி வந்து நின்றாள். அந்தக் கபாலிகப் பெண்ணுக்கு முன் பெருநிதிச் செல்வர் மெய் நடுங்கி நிற்க நகைவேழம்பர் சிரித்தபடியே சுபாவமாகப் பேசுவதற்குத் தொடங்கினார். “நீண்ட நாட்களுக்குப் பின் உன்னைச் சந்திக்க வந்திருக்கிறோம் பைரவி! வந்திருக்கிற காரியமும் அவசியமானதுதான்.”
“அது இரண்டு பேரும் சேர்ந்து வந்திருப்பதைப் பார்த்தாலே தெரிகிறதே” என்று சொல்லிக் கோரமாகச் சிரித்தாள் பைரவி.
வாழ்நாளெல்லாம் அறிவுப்போரிலேயே செலவிட்டு வெற்றிமேல் வெற்றிபெற்ற பெரு மக்கள் ஒவ்வொருவராகத் தனக்குத் தோற்பதைப் பார்த்தபோது இளங்குமரனுக்குத் தயக்கமாக இருந்தது. வெற்றியை மெய்யின் வெற்றியாகவும் தோல்வியைப் பொய்யின் தோல்வியாகவும் நினைத்து மனம் விகாரமடையாமல் காத்துக் கொண்டான். வாதத்தில் அவன் வென்று முன் னேற முன்னேற ‘நாவலோ நாவல்’ என வெற்றி முழக்கமிடும் புகழ்க் குரல்கள் மிகுந்து ஒலித்தன. கண்களை அகல விழித்து அவனையே தெய்வீக ஆற்றலாகக் கருதிப் பார்க்கும் முகங்கள் அதிகமாயின. பார்க்கிற கண்களில் எல்லாம் பார்க்கப்படுகிற கண்களின் மேல் பக்தி பிறந்தது.
‘அலை அலையாகப் புரண்டு வரும் இந்தப் புகழ் வெள்ளத்தில் நான் நிற்க வேண்டிய எல்லையில் கால்களும் என் மனம் நிற்க வேண்டிய எல்லையில் நினைவுகளும் தரித்து நிற்க முடியாமல் மிதந்து போகும் படி ஆகிவிடக் கூடாது. எல்லையற்ற இந்தப் புகழைப் பார்க்கும்போது எனக்குப் பயமாயிருக்கிறது. படிப்பினால் அழிந்த ஆணவத்தைப் படிப்பின் பயனாகப் பெற்றால், மறுபடியும் அதை எப்படி அழிக்க முடியும். புகழை உணர்வதற்கும், உணர்ந்ததை நினைத்து அநுபவிப்பதற்கும் மனத்தில் பழகியும், பழக்கியும், புகழுக்கே அடிமையாகிவிடாமல் நான் விழிப்பாயிருக்க வேண்டும். புகழில் அழிந்தால் நான் விரைவாக மூப்படைந்துவிடுவேனோ என்று நடுங்குகிறேன். புகழில் மிதந்தாலோ நான் சோம்பற் குணமுடையவனாகி விடுவேனோ என்று அஞ்சுகிறேன். புகழ் என்னுடைய முயற்சிகளை ஒடுக்கிவிடலாம். என் மனம் இலக்கு வைத் திருக்கின்ற குறிக்கோள்களை மறைத்துப் பொய்யான இலக்குகளையும் காட்டிவிடலாம்...
‘புகழ் வெள்ளத்தின் அலைகளே! சூழ்ந்திருப்பவர் முகங்களிலும் கண்களிலும் என்னை நோக்கி மலரும் பிரசித்திகளே! பிரதாபங்களே! நான் நிறுவிய உண்மைகளைப் போய்ச் சார்ந்து கொள்ளுங்கள்? என்னை விட்டு விடுங்கள்’ என்று, புகழில் மனம் நனைந்து போகாமல் ஆணவத்துக்குக் காரணமான நினைவுகளை விலக்கி விட்டு அவன் நடந்தபோது அவன் விலக்கிய ஆணவங்களே ஓருருவம் ஆனாற் போன்று எதிரே வந்து அவனை வாதத்துக்கு அழைத்தான் ஓர் இளைஞன். அந்த இளைஞனுடைய உருவமும் அவன் பேசிய சொற்களும் நின்ற நிலையுமே இளங்குமரனைத் தடுத்து நிறுத்தின. அவனுடைய தோற்றத்தைப் போலவே சொற்களும் அழகாயிருந்தன.
“உயிர் என்றும் ஆன்மா என்றும் தனியாக எதுவும் இல்லை. என்னுடைய உடம்பே உயிர். அதுவே ஆன்மா. நான் இளைத்தேன். நான் பருத்தேன். நான் கறுத்தேன் - என் உடம்பைச் சுட்டிக் காட்டியே குணங்களும், தொழில் நிகழ்ச்சிகளும் கூறப்படுகின்றன. எனவே தேகமே ஆன்மா என்று நான் கூறுகிறேன். இந்த முடிவை நீ எப்படி மறுக்க இயலும்?” - இப்படித் திமிரோடு பேசினான் அந்த இளைஞன்.
அந்த இளைஞனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே சொன்னான் இளங்குமரன்: “தம்பீ! உன்னுடைய முடிவே உன் கருத்துக்குப் பெரிய மறுப்பாக இருக்கிறதே, நான் வேறு மறுக்க வேண்டுமா? நீ எந்தக் கருத்தைச் சொல்வதற்குத் துணிகிறாயோ, அந்தக் கருத்துக்கே மாறான முடிவைத் தருகிறது உன்னுடைய சித்தாந்தம். இப்படி வாதத்தைத் தொடங்குவதே ‘அவ சித்தாந்தம்’ என்னும் தருக்கக் குற்றம். ஆனாலும் கேள். உன்னையும் உன் உடம்பையும் இணைத்து வார்த்தையால் கூற வேண்டுமானால் நீ எப்படிக் கூறுவாய்?”
“இது என்ன கேள்வி? ‘எனது உடம்பு’ என்று கூறுவேன், அல்லது ‘என்னுடைய உடம்பு’ என்று கூறுவேன்” என்றான் அந்த இளைஞன்.
“கூறுவாய் அல்லவா? நீயே உடம்பாகவும் உடம்பே ஆன்மாகவும் இருப்பாயானால் என் உடைய - உடம்பு என்று ஏன் உடைமையும் உடையவனும் வேறாக இருப்பதைத் தொடர்புபடுத்திக் கூறுவது போல் பேசுகிறாய்? உன் பேச்சிலிருந்தே உயிர் வேறு உடம்பு வேறு என்பது தெரிகிறதே? உடையவனையும் உடைமையையும் சம்பந்தப்படுத்துகிற தொடர்பு இரண்டு வகை யானது. உடையவனிலிருந்து பிரித்தால் தனித்தும் இயங்குகிற உடைமை, பிரித்தால் தனித்தும் இயங்காத உடைமை என்பனவே அவை. ‘எனது உடம்பு’ என்கிறாய். இதில் உன்னையும் உடம்பையும் தனித்தனியாகப் பிரிக்க இயலாது. எனது வீடு என்று சொல்கிறாய். இதில் உன்னையும் வீட்டையும் தனித்தனியே பிரிக்க இயலும். பிரிக்க முடியாமல் தன்னோடு தானாகவே இணைந்த சம்பந்தத்துக்குத் தற்கிழமை என்றும், பிரிக்க முடிந்த சம்பந்தத்துக்குப் பிறிதின் கிழமை என்றும் பெயர். உடம்போடு ஆன்மாவுக்கு உள்ள சம்பந்தம் தற்கிழமை. இதே நீயே உன்னுடைய சொற்களால் ஒப்புக்கொண்டவன் ஆகிறாய் தம்பீ! சாருவாக மதத்தில் மிக இளம் பருவமாகிய இந்த வய திலேயே உனக்குப் பெரும் பற்று ஏற்பட்டுவிட்டது போலிருக்கிறது. இளமையில் உன்னைக் கவர்வன வெல்லாம் என்றும் உன்னைக் கவர முடியும் என்று நினைக்காதே. சாருவாகர்கள் அழகிய சொற்களை மட்டுமே காதலிக்கிறார்கள். சொற்களுக்கு அப்பால் அவற்றின் பயனாக உள்ளவற்றைப் பற்றி அவர்கள் நினைப்பதே இல்லை. இரண்டு சொற்களில் விளக்க வேண்டிய கருத்தை இருபது சொற்களால் அடுக்கி விளக்குவது வாதமுறைக்கு முரண்பாடான பிழைகளில் ஒன்று. தேவைக்கு அதிகமான சொற்களைக் கொண்டு எந்தப் பொருளை வற்புறுத்த முயல்கிறாயோ அந்தப் பொருள் அப்படி வற்புறுத்துவதனாலேயே நைந்து போகும். எல்லையை மீறி உண்டாகும் பலமே ஒரு பலவீனம். அதிகமாக முறுக்கப்பட்ட கயிறு அதனாலேயே அறுந்து போவதைப் பார்த்திருப்பாய். ‘சொற் பல்குதல்’ என்பது தருக்கத்தில் குற்றம். அந்தக் குற்றத்தை உன் போன்ற சாருவாகர்கள் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறீர்கள்.”
இவற்றையெல்லாம் கேட்டதும் அந்தப் பிள்ளை எவ்வளவு வேகமாக எதிர்த்து வந்து நின்றானோ அவ்வளவு வேகமாகத் துவண்டு போனான். “தம்பீ! நிறைவடையாத அறிவுக்குப் ‘புல்லறிவு’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். புல்லறிவினால் ஏற்படுகிற ஆண்மை உறுதியானது என்று நம்பி அதையே வாதத்துக்குப் பலமாகக் கொண்டு வாதிடுவதற்கு வரக் கூடாது. மேட்டு நிலத்தில் உள்ள முற்றாத இளம் புல்லைக் கிழட்டுப் பசு மேய்ந்தது போல் நிறைவடையாத நுகர்ச்சியால் வந்த புல்லறிவாண்மை வாதத்துக்குப் பயன் படாது” என்று போவதற்கு முன் அவனுக்கு அறிவுரை சொல்லி அனுப்பினான் இளங்குமரன்.
அந்தக் கூட்டத்தில் இப்போது இளங்குமரனுக்கு முன்னால் வந்து நிற்பதற்கே பயப்படுகிறவர்கள் அதிகமானார்கள். இவன் ஞானத்தை நிறைத்துக் கொள்வதற்கான நூல்களை மட்டும் கற்றுக் கொண்டு வரவில்லை. மற்றவர்களை வெல்வதற்கான தவவலிமையையும் சேர்த்துப் பெற்றுக் கொண்டு வந்திருக்கிறான். இவனுக்கு முன்னால் நிற்கும் போதே நம்மடைய கல்வி குறைபாடு உடையதாக நமக்குத் தோன்றுகிறதே என்று தயங்கினார்கள். வைதிக சாத்திரங்களாகிய மீமாஞ்சை, நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், வேதாந்தம் ஆகிய ஆறு தரிசனங்களிலும் வல்லவர்கள் பலர் அந்தக் கூட்டத்தில் இருப்பது இளங்குமரனுக்கு விளங்கிற்று. ‘நீருட் கிடப்பினும் கல்லிற்கு மெல்லென்றல் சால அரிதாவதை’ப் போல நூல்களைக் கற்றிருந்தும் அவற்றில் மனம் தோயாத காரணத்தால்தான் அவர்களெல்லாம் மலைத்து நிற்கின்றார்களென்று அவனுக்குப் புரிந்தது. எதிரே வந்து தன்முன் கொடியை நடுவதற்கு இன்னும் யாராவது தென்படுகிறார்களா என்று பார்த்துக் கொண்டு நின்றான் அவன். யாரும் வருவதாகத் தோன்றவில்லை. இரவு வளர்ந்து நேரமாகிவிட்ட படியால் கூட்டம் மெல்ல மெல்லக் கலையத் தொடங்கியது. நெருங்கி நின்ற பெருங்கூட்டம் கலைந்ததனால் இளங்குமரன் தனது யானையை நிறுத்திவிட்டு வந்த இடத்துக்குப் போவதற்கு வழியில்லை. தேரும் சிவிகையும் குதிரைகளுமாக முந்திக் கொண்டு விரைந்த அந்தக் கூட்டத்தில் இருந்தாற்போல் இருந்து பரிதாப கரமான துயரக்குரல் ஒன்று எழுந்தது. கூட்டத்தில் மிக அருகிலிருந்து எழுந்த அந்தக் குரலை கேட்டு இளங்குமரன் திரும்பினான். கண் பார்வை மங்கி முதுகு கூன் விழுந்து மூதாட்டி ஒருத்தி கூட்டத்தில் திணறிக் கொண்டிருந்தாள். ஊன்றுகோலையே கண்ணாகக் கொண்டு நடந்து கொண்டிருந்த அவள் அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கூட்டத்தினால் நெருக்குண்டு தடுமாறி விழுந்தாள். ஏதோ ஒரு பல்லக்கின் முன் பக்கத்துக் கொம்பைச் சுமந்து கொண்டு வந்த யவனன் ஒருவன் கீழே குனிந்து பாராததனால் கவனக் குறைவாய் அந்த மூதாட்டியை மிதிப்பதற்கிருந்தான்.
அவளைக் கைதூக்கி நடத்திக் கொண்டுபோய் நேரான வழியில் விடுவதற்காக இளங்குமரன் ஓடினான். அந்த முதுமகள் விழுந்த இடத்திலிருந்தவர்களே அதற்குள் அவளைத் துரக்கி விட்டிருக்கலாம், ஏனோ செய்யவில்லை. மிதிப்பதற்கிருந்த பல்லக்குத் தூக்கிக் கூட கீழே பார்த்துவிட்டு அருவருப்போடு துள்ளி விலகுவதையும் இளங்குமரன் கண்டான். சுற்றிலும் இருந்தவர்கள் கூசி விலகுவதையும், கீழே விழுந்திருப்பவளைப் பார்த்து ஏதோ இரைவதையும் கவனித்து இன்னும் வேகமாக நடந்து அவளை அணுகினான் அவன். அருகிற் போனதும் மற்றவர்கள் அவனைத் தடுத்தார்கள்.
“தொடாதீர்கள், அவளுக்குப் பெரு நோய்” என்று பல குரல்கள் இளங்குமரனை எச்சரித்தன. தன் உடம்பின் அழகால் தானே பெருமிதப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் இப்படி ஓர் உதவி செய்ய நேர்ந்திருந்தால் அவன் பயந்து பின் வாங்கியிருப்பானோ, என்னவோ? இப்போது அப்படிப் பயந்து பின்வாங்கவில்லை. கையை முன் விரித்துக் குனிந்தான் அவன். அப்படிக் குனிந்தபோது, “ஐயோ! வேண்டாம். கீழே கிடக்கிறவள் உங்களைப் பெற்ற தாயாக இருந்தாலும் தீண்டத்தகாத நோய் இது” என்று இனிய குரல் ஒன்று மேலே பல்லக்கிலிருந்து ஒலித்தது. ஒரு விநாடி அந்தக் குரலுக்குரியவளைப் பார்ப்பதற்காக நிமிர்ந்தான் இளங்குமரன். பார்த்தபோது பார்க்கப்பட்ட முகத்தினால் தானே சிறிது வியப்பு அடைவதை அவனால் தவிர்க்க முடியவில்லை. சுரமஞ்சரியா என்று அவன் நாவிலிருந்து மிகவும் மெல்ல ஒலித்த பெயர் அவளுக்குக் கூடக் கேட்டுவிட்டது போலிருக்கிறது. “சுரமஞ்சரி இல்லை. அவளுடைய சகோதரி வானவல்லி” என்று அந்தப் பெண் மறுமொழி கூறினாள். அப்படி மறுமொழி கூறும்போது அவள் முகத்தில் பயத்தின் நிழல் படிந்து மறைவதைக் காண முடிந்தது. அந்த உணர்ச்சி நிழலில் அவள் வேறு எதையோ மறைத்துக் கொள்ள முயல்வது தெரிந்தது. இளங்குமரன் சிரித்துவிட்டு அவளை நோக்கி சொன்னான்:
“அம்மணி! நீங்கள் இதைப் பெருநோய் என்று சொல்லிப் பயப்படுகிறீர்கள். பயப்படுத்துகிறீர்கள்! இதை விடக் கடுமையான பெருநோய் ஒன்று இருக்கிறது. அதை உங்களுக்குச் சொல்லட்டுமா? பிறருடைய துன்பத்தைக் கண்டு மனம் இரங்காமல் தன்னுடைய கெளரவத்தையே நினைத்துக் கூசுகிற மனத்தில், அந்தக் கூச்சம்தான் பயங்கரமான பெருநோய். நெடிய வார்த்தைகளைச் சொல்லிப் பிறரை ஏவியும் கட்டளையிட்டும் ஆள்வதையோ, வேகமாகத் தேரிலும் சிவிகை யிலும் ஏறிப்போவதையோ தான் செல்வத்தின் இலட்சணங்களாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் செல்வமாக நினைப்பது துன்பப்படுகிறவர்கள் மேல் உண்டாகிற அதுதாபத்தையும் உதவி செய்யும் ஆவலையும்தான். மனத்தை அரித்தெடுக்கின்றதனால் ஆசைதான் ‘பெருநோய்’ என்கிறேன் நான். என் கண்களுக்கு முன்னால் இந்தப் பிரபஞ்சத்தில் என்னிலிருந்து அந்நியமாகவும் அயலாகவும் தெரிகிற எல்லா உயிர்களும் எந்தக் கணமும் சிறிது கூடத் துன்பப்படாமல் இருக்க வேண்டும் என்று - மற்றவர்களுக்குத் துன்பம் வரக்கூடாது என்பதற்காக எனக்குள்ளேயே நான் மனப்பூர்வமாக அஞ்சி அநுதாபப்படுகிற உணர்வு தான் பெரிய செல்வமென நம்புகிறேன். பெற்ற தாயாயிருந்தாலும் தீண்டத் தகாத நோய் இது என்று பயமுறுத்துகிறீர்கள். நான் இந்த உலகத்தை இப்போது பார்க்கிற பார்வையில் எல்லாப் பெண்களிலும் தாயைக் காண்கிறேன். எல்லாத் தாய்களிலும் பெண்ணைக் காண்கிறேனில்லை. எல்லாப் பெண்களிலும் என் தாயைக் காண்கிறேன். என் தாய்மையையே உணர்கிறேன்...”
அவனுடைய தத்துவத்தை இதற்கு மேல் கேட்க விருப்பமில்லாதது போல் அந்த அழகிய முகம் பல்லக்குக்குள் மறைந்தது. உடனே பட்டுத் திரையும் விழுந்து பல்லக்கை மூடியது.
உலகத்திலேயே அதைக் காட்டிலும் பெரிய மகிழ்ச்சியைத் தரக்கூடிய காரியம் வேறொன்று இல்லாதது போல் சிரத்தையோடு அந்த மூதாட்டியைத் தொட்டுத் தூக்கி ஊன்றுகோலைக் கையில் எடுத்துக் கொடுத்துச் சிறிது தொலைவு தழுவினாற் போலத் தாங்கி நடத்திக் கொண்டு போய், நெருக்கமில்லாத வழியில் அனுப்பி விட்டுத் திரும்பினான் இளங்குமரன். திரும்புமுன் அந்த முதுமகள் கூறிய நன்றியுரை இன்னும் தன் செவிகளில் ஒலித்துக் கொண்டேயிருப்பதாக உணர்ந்தான் இளங்குமரன்.
“பழுத்துத் தளர்ந்த பாகற் பழம்போல் இமைகள் தொங்கிப் பார்வையை மறைக்கிறதப்பா. நீ யாராயிருந்தாலும் உன்னை ஒருமுறை கண்குளிரப் பார்க்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறது. ஆனால் பார்க்க முடியவில்லை. என்னால் உன்னுடைய முகத்தைப் பார்க்க முடியவில்லையானாலும் அகத்தைப் பார்க்க முடிகிறது. பிறர்மேல் கருணை கொள்வதையே பெரு நிதியாகக் கருதும் நெஞ்சுக்கு உரியவன் எப்படி இருக்க முடியுமென்று நினைத்து நினைத்து - அந்த நினைப்பு களையே கோடுகளாக இழுத்து என் நெஞ்சில் உன் உருவத்தை எழுதிப் பார்க்கிறேன். அப்படி எழுதிப் பார்க்கும்போது சாந்தம் திகழும் கண்களை அகல விழித்து அவற்றில் பெருகும் கருணையையே அழகாகக் கொண்டும் நித்திய செளந்தரியத்தின் எல்லைகளாய் இரண்டு கைகளை நீட்டிக் கொண்டும் நீ உருவாகி நிற்கிறாய்!” என்று அந்த முதுமகள் நாத் தழுதழுக்கச் சொல்லியபோது அவளுடைய சொற்களில் மனமும் உணர்வுகளும் குழைந்து பரிவு பெருக நின்றான் இளங்குமரன். அவளுக்கு ஏதாவது பதில் சொல்ல வேண்டு மென்று அவன் நினைத்ததும் சொல்ல வரவில்லை. அவள் பேசியதைக் கேட்ட பின்பு அவனுக்குப் பேசவே வரவில்லை.
அந்த முதுமகள் நிறைய கற்றவளாய் இருக்க வேண்டுமென்று அவளுடைய சொற்களிலிருந்து புரிந்தது. அவளுடைய சொற்களுக்குப் பின் தன்னுடைய சொல் லாமையே - மெளனமே மதிப்பு நிறைந்ததென்று எண்ணிக் கொண்டு யானை நின்ற இடத்துக்குத் திரும்பி நடந்தான் அவன்.
அவ்வாறு நடக்கும்போது தன்னுடைய பழைய சொற்களையே மறுபடியும் நினைத்துக் கொண்டான். எல்லாருடைய தாய்களிலும் என்னுடைய தாய் இருக்கிறாள். என்னுடைய தாயாரைத் தெரிந்து கொள்கிற வரை எல்லாப் பெண்களையும் தாயாகவே பார்க்கிறேன் நான், தாயாகவே உணர்கிறேன்.
‘இன்று இந்த மூதாட்டிக்கு உதவினோம் என்று திரும்பத் திரும்ப நினைத்து இப்படி நினைப்பதாலேயே மனத்தில் கர்வச் சுமை ஏறிவிடுமோ’ என்ற பயத்தை உணர்ந்தவனாக யானைமேல் ஏறினான் இளங்குமரன்.
மீண்டும் புகழில் நனைந்து விடாமலும், மிதந்து விடாமலும் தன்னைத் தன் நிலையில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென்ற விழிப்பு அவனுக்கு ஏற்பட்டது.
‘மறுபடியும் நாளைக்கு இந்த அறிவுப் போர்க்களத்தில் வந்து எதிரிகளைச் சந்திக்கலாம். இன்று இவ்வளவில் திரும்புவோம்’ என்ற தீர்மானத்தோடு யானையை ஆலமுற்றத்து வழியில் செலுத்துவதற்கு இருந்தான் இளங்குமரன். அப்போது அவனுடைய யானைக்கு முன்னால் கபாலிகப் பெண் ஒருத்தி வந்து நின்றாள். பொது இடங்களில் இப்படித் துணிந்து புறப்பட்டு வந்து பழகும் வழக்கம் இல்லாத கபாலிக சமயத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியை எதிரே கண்டதும் இளங்குமரன் சிறிது திகைப்படைந்தான். சம்பாபதி வனத்திலும் சக்கரவாளக் கோட்டத்தைச் சுற்றியிருந்த காடுகளிலும் விடலைப் பிள்ளையாய் நண்பர்களோடு சுற்றித் திரிந்த காலத்தில் அவன் கபாலிகர்களை நிறையப் பார்த்திருக்கிறான். அந்தச் சமயங்களில் எல்லாம் எலும்பு மதம் என்றும் மண்டையோட்டு மதம் என்றும் அவனும் நண்பர்களும் வேடிக்கையாகச் சொல்லி அந்தச் சமயத்தைப் பற்றி எள்ளி நகையாடுவதும் உண்டு.
இப்போது அதே மண்டையோட்டு மதத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி எதிரே வந்து நிற்கிறாள்.
“உங்களுக்கு என்ன வேண்டும் அம்மணீ? இந்த நாளங்காடிச் சதுக்கத்திலும், இதன் அழகிய சுற்றுப் புறங்களிலும் நீங்கள் விரும்புகிற விதமான பொருள்களில் எதுவும் கிடைக்க வழியில்லையே? எலும்புகளும், சுடலைச் சாம்பலும் இல்லாத இடத்துக்குக்கூட நீங்கள் வருவதுண்டோ?” என்று அவளை நோக்கிக் கேட்டான் இளங்குமரன்.
அவன் தங்கள் சமயத்துக் கொள்கைகளை இகழ்ந்தாற் போன்ற தொனியில் பேசியதால் சிறிதே சினம் கொண்டவளாகி அவனை உறுத்துப் பார்த்தாள் அவள்.
“நாங்கள் எங்கும் வருவோம். பயப்படுவதற்கு நாங்கள் கோழைகள் அல்ல. கொடிய வீரத்தையே சிவமாகக் காண்கிற எங்களால் எந்த இடத்திலும் நாங்கள் விரும்பியவாறு சென்று செயற்பட முடியும்.”
“அம்மணீ! நீங்கள் எப்போதும் பயப்படுவதில்லை; ஆனால் உங்களைப் பார்க்கிறவர்கள் பயப்படாத நேரமும் இல்லை. ‘எந்த இடத்திலும் நாங்கள் விரும்பிய சூழ்நிலையை உண்டாக்கிக் கொள்ள முடியு’மென்று கூறினீர்களே - அது மட்டும் மறுக்க முடியாத உண்மை என்று நானும் ஒப்புக் கொள்கிறேன், அம்மணீ! இவ்வளவு நேரம் வரை இந்திரவிழாக் கோலம் பூண்டு மங்கல வினை நிகழும் வீடுபோலத் தோன்றிக் கொண்டிருந்த இந்த இடத்தில் நீங்கள் ஒருவர் வந்து நின்றவுடனேயே மயானத்தின் சூழ்நிலை உண்டாகி விட்டது பாருங்களேன்! இதிலிருந்தே நீங்கள் சொல்லியது மெய்யென்று தெரிந்து கொள்ள முடிகிறதே” என்று நகை விளைக்கும் சொற்களாலேயே அவளை வாதில் நலியச் செய்தான் இளங்குமரன். ஆனால் அவளோ, அவனிடம் வேறு வேண்டுகோள் விடுத்தாள்:
“நானே உன்னை வாதுக்கு அழைக்க வரவில்லை, அழைத்துக் கொண்டு போவதற்குத்தான் வந்தேன்.”
“எங்கே அழைத்துக் கொண்டு போக வந்தீர்கள்? ‘அழைத்துக் கொண்டு’ என்று நீங்கள் சொற்களை உச்சரித்த போது ‘அழைத்துக் கொன்று’ என்பதுபோல் அல்லவா என் செவிகளில் ஒலித்தது. கபாலிகர்கள் அசைவர்களாயிற்றே? அதனால்தான் சிந்திக்க வேண்டியிருக்கிறது, அம்மணீ.”
“இதில் சிந்திப்பதற்கும் தயங்குவதற்கும் ஒன்றுமில்லை. இந்த நகரத்திலேயே மிகவும் குறைவானவர்கள் நாங்கள்? சக்கரவாளக் கோட்டத்தில் சுடுகாட்டுக்கு அருகிலுள்ள வன்னி மரங்களின் நிழலிலேயே எங்கள் உலகம் அடங்கிப் போய்விடுகிறது. அதற்கு இப்பால் அகநகரிலும் புறநகரிலுமகாகப் பரவிக் கிடக்கும் இந்தப் பட்டினத்தின் விதவிதமான வாழ்க்கை வளங்களைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது.”
“அகநகரிலும் புறநகரிலும் வாழ்ந்தவர்கள் தலையெல்லாம் உங்கள் கையிலிருக்கும்போது நீங்கள் கவலைப்படுவானேன்?”
“எதைச் சொல்கிறாய் நீ?”
“இறந்தபின் இந்தப் பட்டினத்தின் மக்கள் அத்தனை பேருடைய கபாலங்களையும் நீங்கள்தானே ஆளுகிறீர்கள்?”
“இகழ்ச்சியை வளர்க்காதே, தம்பீ! வன்னி மன்றத்தில் எங்கள் குரு காத்துக் கொண்டிருப்பார். நீ உடனே என்னுடன் அங்கு வந்து அவரோடு வாதம் புரிய வேண்டும்.”
“இந்த நள்ளிரவில்தான் வாதம் புரிய வேண்டுமா? நாளைக்குப் பகலில் வரலாமென்று பார்க்கிறேன். எல்லா வாதங்களும் நடைபெறும் இந்த இடத்துக்கே உங்கள் குரு வந்தாலும் நல்லதுதான். அவர் என்னைச் சந்திப்பதோடு மற்றவர்களையும் சந்தித்து வாதிடலாம்.”
“அது சாத்தியமில்லை, அப்பனே! எங்கள் குரு வயது மூத்தவர்; எங்கும் வர இயலாதவர். நள்ளிரவுக்குப் பின்புதானே எங்களுடைய உலகமே உதயமாகிறது. பகலில் வாதம் புரிய வந்து என்ன பயன்?”
“உண்மைதான், அம்மணி! உங்கள் சமயமே இருண்ட சமயத்தில்தான் தன் செயல் முறைகளைத் தொடங்குகிறது.”
“அதனால்தான் இந்த இருண்ட சமயத்தில் உன்னை வந்து அழைக்கிறேன். யார் வந்து வாதுக்கு அழைத்தாலும் மறுக்காமல் வருவதுதான் மெய்யாகவே ஞானபலம் பெற்றவனுக்கு இலட்சணம். ஞானிக்கு இருள் என்ன? ஒளி என்ன? உன்னுடைய மனத்தில் தைரியமிருந்தால் என்னோடு வா. இல்லையானால் முடியாதென்று சொல்!”
இதைக் கேட்டு இளங்குமரன் யானை மேலிருந்து கீழே இறங்கினான்.
“அழைத்துச் செல்லுங்கள் வருகிறேன்” என்றான் அவன்.
அந்த முரட்டுக் காபாலிக நங்கை பிசாசு போல் முன் நடந்தாள். பூதகிக்கு அருகில் கண்ணபிரான் சென்றது போல் கொடியேந்திய கையினனாக இளங்குமரன் அவள் நடந்த வழியே தொடர்ந்து சென்று கொண்டிருந்தான். அவள் தன்னை அழைத்துச் சென்ற சக்கரவாளக் கோட்டத்து வழிகள் ஒரு காலத்தில் தான் பழகிய வழிகள் என்பதை நினைத்துக் கொண்டே சென்றான் அவன். இருந்தாற்போல் இருந்து எதையோ நிறுத்திக் கொண்டு கேட்பவள் போல் அவள் நடப்பதை நிறுத்தி விட்டு அவனை நோக்கித் திரும்பி, “நீ கபாலிகர்களைப் பற்றி என்ன நினைக்கிறாய் அப்பனே?” என்று கேட்டாள். இளங்குமரன் பதில் சொல்லாமல் நின்றான்.
“அதற்குள் நீ ஊமையாகி விட்டாயா? எனக்குப் பதில் சொல்! உன்னைத்தான் கேட்கிறேன் நான். கபாலிகர்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”
“இப்போது உங்களுடைய குருவோடு வாதம் புரிவதற்கு என்னை அழைத்துச் செல்கிறீர்களா? நீங்களே என்னோடு வாதம் புரிய விரும்புகிறீர்களா?”
“நானும் சிறிது வாதம் புரிவதற்கு ஆசைப்படுகிறேன் என்றுதான் வைத்துக் கொள்ளேன். கபாலிகர்களைப் பற்றி உன் கருத்து என்ன?”
“அதுதான் சொன்னேனே! ‘இருண்ட சமயத்தில் தான் எங்கள் உலகம் உதயமாகிறது’ என்று நீங்கள் கூறிய சொற்களே உங்களுக்கு உரிய இலட்சணம். எல்லாருடைய நினைவுகளும் - எல்லாச் சமயத்தாருடைய நினைவுகளும் மயானத்தில் போய் அழி கின்றன. ஆனால் கபாலிகர்களாகிய உங்களுடைய நினைவுகளோ மயானத்திலிருந்துதான் பிறக்கின்றன. வாழ்ந்து அழிகிறவர்களிடையே அழித்து வாழப் பார்க்கிற இலட்சியம் உங்களுடைய சமயத்துக்கு வாய்த்திருக்கிறது.”
“எங்கே, இன்னொரு தரம் அதையே சொல்.”
“வாழ்ந்து அழிகிறவர்களிடையே அழித்து வாழ முயல்வது உங்கள் இலட்சியம்.”
“அந்த இலட்சியத்தை இப்போது நான் நிறைவேற்றலாம் என்று பார்க்கிறேன் அப்பனே!” இப்படிக் கூறியவாறே வெறிநகையில் பயங்கர ஒலி அந்தச் சக்கரவாளத்துக் காடு எங்கும் எதிரொலிக்கப் பேய்த் தோற்றமாகிய விசுவரூபமெடுத்தாற் போல அந்தக் கபாலிகை வாளை ஓங்கிக்கொண்டு சூறாவளியாக மாறி அவன் மேல் பாய்ந்தாள்.
“வாதம் புரிவதற்கு அழைத்து வந்தீர்களா? இப்படி வதம் புரிவதற்கு அழைத்து வந்தீர்களா?” என்று சற்றே விலகி நின்றுகொண்டு நிதானமாகக் கேட்டான் இளங்குமரன்.
“கபாலிகர்களாகிய எங்களுக்கு வாதம், வதம் இரண்டுமே ஒன்றுதான்” என்று முன்னிலும் கடுமையான வெறியோடு அந்தப் பூதகி அவன்மேற் பாய்ந்த போது பின்னாலிருந்து கற்குன்றுகள் விழுந்ததுபோல இரண்டு கைகள் அவளுடைய பிடரியில் விழுந்து அவள் கழுத்தை அழுத்தி நெரிக்கத் தொடங்கின. அந்தப் பிடியைத் தாங்க முடியாமல் அவளுக்கு விழியும் நாக்கும் பிதுங்கின. சுடுகாட்டு நரி ஊளையிடுவதைப் போல் கோரமான வேதனைக் குரல் அவள் தொண்டையிலிருந்து புறப்பட்டது.
நாளங்காடியில் நெருங்கி நின்ற பெருங்கூட்டம் கலைந்தபோது யவனர் சுமந்து நின்ற அந்தப் பல்லக்கும் மெல்ல நகர்ந்தது. ஆனால் பல்லக்குக்கு உள்ளேயிருந்தவர்களின் சிந்தனை மட்டும் அந்த இடத்தை விட்டுச் சிறிதும் நகரவே இல்லை. கூட்டத்தில் தடுமாறி விழுந்த கிழவியைக் கண்டதும் அவளைத் தூக்கி விடுவதற்காக அதிராமல், பதறாமல், பூ உதிர்வது போல் அவன் நடந்த நிதான நடையையும், புன்னகையுடனே தலை நிமிர்ந்து மனத்தை அரித்தெடுக்கின்றதனால் ஆசைதான் பெருநோய் - என்று எண்ணத்திலே தைக்கும்படி வார்த்தைகளைச் சொல்லிய துணிவையும் நினைத்து நினைத்து, நினைவு அந்த இடத்திலிருந்து நகராதபோது பல்லக்கு மட்டும் நகர்ந்து முன்னேறிச் சென்றது. அதுவரை உட்கார்ந்திருந்த தோழி வாய்திறந்து மெல்லக் கேட்டாள்:
“அது ஏனம்மா அப்படிப் பொய் சொன்னிர்கள்? ‘சுரமஞ்சரியா’ என்று அவர் கேட்டபோது இவ்வளவு நீண்டகால இடைவெளிக்குப் பின் முதல் முறையாக அவரைச் சந்திக்கிற நீங்கள் ஆர்வத்தை மறைக்காமல் ‘ஆம்’ என்று ஒப்புக் கொண்டிருக்கலாமே? எதற்காக வானவல்லியின் பெயரைச் சொல்லி உங்களை நீங்களே மறைத்துக் கொண்டீர்கள்...?”
“மாளிகையிலிருந்து வெளியேறி வருவதற்கே வாய்ப்பில்லாமல் என்னைத் தந்தையார் சிறை வைத்திருக்கிறார் என்பதை அதற்குள் மறந்துவிட்டாயா? இந்திர விழாவின் முதல்நாளாகிய இன்றைக்கு நகரத்தைச் சுற்றிப் பார்க்கும் ஆசையை அடக்க முடியாமல் அங்கே வானவல்லியைச் சுரமஞ்சரியாக நடிக்கச் செய்துவிட்டு இங்கே நான் வானவல்லியாக நடிப்பதாய் ஒப்புக்கொண்டு புறப்பட்டதைக் கூடவா அதற்குள் மறந்துவிட்டாய்?” என்று இரகசியம் பேசு கிறாற் போன்ற மெல்லிய குரலில் கேட்டாள் சுரமஞ்சரி.
“ஒன்றும் மறக்கவில்லை. மறப்பதற்கு எனக்குப் பித்துப் பிடித்துவிட்டதா? என்ன? நான் சுரமஞ்சரி தான் என்று நீங்கள் அவரிடம் ஒப்புக் கொள்வதனால் உங்கள் இரகசியம் ஒன்றும் வெளியாகிவிடப் போவதில்லையே? இவ்வளவு காலத்துக்குப் பின்பும் உங்களை நினைவு வைத்துக்கொண்டு கேட்டவரிடம் ஏமாற்றமளிக்கும் மறுமொழியை நீங்கள் கூறியிருக்க வேண்டாமே என்றுதான் சொன்னேன், அம்மா.”
“என்னுடைய மறுமொழி அவருக்கு ஏமாற்றம் அளித்திருக்கும் என்றா நீ நினைக்கிறாய்?. அப்படி நீ நினைப்பதாயிருந்தால் உன்னைப் போல் உலகம் தெரியாதவள் வேறு யாரும் இருக்க முடியாது. எல்லாப் பெண்களிலும் தாயைக் காண்கிறேன். எல்லாத் தாய்களிலும் பெண்ணைக் காண்கிறேனில்லை என்று நெகிழ்ச்சியும் நெருக்கமும் இல்லாமல் முகத்தில் அறைந்தாற்போல் பேசுகிற மனிதரிடத்தில் ‘நான்தான் சுரமஞ்சரி’ - என்பதைச் சொல்வதனால் என்ன பயன் விளைந்துவிடப் போகிறது?”
“பயன் விளைய வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டே எல்லாக் காரியங்களையும் செய்ய முடியுமா? பெரு நோய்க்காரியான அந்தக் கிழவியைத் தொட வேண்டாமென்று நீங்களாகத்தானே வலுவில் அவரை எச்சரித்தீர்கள். என்ன பயனை எதிர்பார்த்து அந்த எச்சரிக்கையைச் செய்தீர்கள், அம்மா?”
வசந்தமாலையின் இந்தக் கேள்விக்குச் சுரமஞ்சரியால் பதில் சொல்ல முடியவில்லை. அவள் நாணித் தலைகுனிந்தாள்.
“ஒரு பயனையும் எதிர்பார்த்து எச்சரிக்கை செய்யவில்லை. ஏதோ மனத்தில் தோன்றியது, செய்தேன்” என்று வெட்கத்தினால் ஒடுங்கிய குரலில் அவளிடமிருந்து பேச்சுப் பிறந்தது.
“ஏதோ தோன்றியதென்று சொல்லிவிட்டுத் தோன்றியிருப்பதை உங்களுக்குள்ளேயே அந்தரங்கமாக வைத்துக்கொள்ள முயல்கிறீர்களே? ஏதோ தோன்றியதென்றுதான் காமன் கோவிலை வலம் வந்தீர்கள். ஏதோ தோன்றியதென்றுதான் அன்றைக்கு அந்த ஓவியனிடத்தில் மடல் எழுதிக் கொடுத்து அனுப்பினர்கள். ஏதோ தோன்றியதென்றுதானே முதன் முதலாக அவரைச் சந்தித்த இந்திர விழாவின்போது மணிமாலையைக் கழற்றிப் பரிசளிக்கத் துணிந்தீர்கள். இப்படியே அவரைப் பார்க்கும்போதும் நினைக்கும் போதும் உங்களுக்கு ஏதோ தோன்றிக்கொண்டே இருக்கிறது.”
இதைக் கேட்டு சுரமஞ்சரி சிரித்தாள். அவளுடைய கண்களில் மென்மையான உணர்வுகளின் சாயல்கள் மாறி மாறித் தோன்றின. வெளிப்படலாமா வேண்டாமா என்று தயங்குவது போல் இதழ்களில் ஏதோ ஒரு கனிவு நிறைந்து நின்று தயங்கியது.
“நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் முகத்தில் சிரிப்பைப் பார்க்கிறேன் அம்மா! பூமியின் வறட்சியைத் தணிப்பதற்காக மேகங்கள் கனியும் வானத்தைப்போல் உங்கள் வதனத்திலே எதற்காகவோ நளினமான உணர்வுகள் கணிகின்றனவே! நீங்கள் இந்தச் சில விநாடிகளில் அதிகமான அழகைப் பெற்றுவிட்டாற் போல் தோன்றுகிறீர்கள், அம்மா! நான் சொல்வதில் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் இதோ என் தலைக்கு மேல் பல்லக்கிற் பதித்திருக்கும் கண்ணாடியில் நீங்களே உங்களுடைய முகத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்.”
சுரமஞ்சரி தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். வசந்தமாலை கூறியது மெய்தான், தன் முகத்தில் மலர்ச்சி உண்டாகியிருப்பதைச் சுரமஞ்சரி தானே உணர்ந்தாள். தனக்கு அந்த மலர்ச்சியைத் தந்தவனைப் பற்றி அவளுடைய சிந்தனைகள் படர்ந்தன. இப்போது கொடிபோல் இளைத்திருந்த அவன் தோற்றமும், தீயில் உருகி ஓடும் மாற்றுக் குறையாத பொன்னின் நிறமும், படிப்பினால் ஒளி பெற்றிருக்கும் முகமும் கண்களும் அவள் நினைவில் ஒவ்வொன்றாகத் தோன்றின. ஒவ்வொரு புள்ளியாக வைத்துக் கொண்டு இறுதியில் எல்லாப் புள்ளிகளையும் கோடுகளால் இணைத்துக் கோலமாக்குவதுபோல அவனுடைய தனித்தனி அழகுகளையும் தனித்தனிச் சிறப்புகளையும் ஒவ்வொன்றாக எண்ணிக் கூட்டி மனதுக்குள்ளேயே அந்த ஆண்மைக் கோலத்தை வரைந்து பார்த்தாள் அவள். நாளுக்கு நாள் அவன் தன்னிடமிருந்து நீண்ட தொலைவு விலகிப் போய்க் கொண்டிருக்கிறான் என்பதை எண்ணியபோது துக்கத்தினால் நெஞ்சை அடைத்தது. கண்களில் நீர் நெகிழ்ந்தது. மனத்தை அடைத்த துக்கத்தை வார்த்தைகள் வெளிக் கொணர முடியவில்லை. நினைத்தாள் - சில ஆண்டுகளுக்கு முன் இதேபோல் இந்திரவிழாவின் முதல்நாள் ஒன்றில் மற்போரில் வென்ற வீரனாக அவனைச் சந்திக்க நேர்ந்ததையும் இன்று மீண்டும் சொற்போரில் வெல்லும் வீரனாகச் சந்திப்பதையும், இந்த இரண்டு சந்திப்புக்களுக்கும் நடுவில் எப்போதோ ஒரு கணத்தில் தன் மனத்தையே அவன் வெற்றி கொண்டதையும் அதன்பின் கணம் கணமாகத் தன் மனமே அவனுக்குத் தோற்றுப் போய்க் கொண்டு வருவதையும் - சேர்த்து நினைத்தாள் சுரமஞ்சரி. முதற் பார்வையிலேயே தன் கண்களில் நிறைந்து கொண்ட அந்தச் சுந்தர மணித் தோள்களை நினைத்தபோது அவள் நெட்டுயிர்த்தாள்.
‘மழையும் புயலுமாகக் கழிந்த ஏதோ ஓர் இரவில் கடலின் நடுவே கப்பல் கரப்புத் தீவில் நான் சாய்ந்து கொள்வதற்கு அணையாக நீண்ட கை இது. இந்த அழகிய கைகள் உதவி செய்வதற்கு மட்டுமே முன் விரிகின்றன. அன்புடன் தழுவிக்கொள்ள நீள்வதில்லையே என்று எண்ணி எண்ணி நான் பெருமூச்சு விடுவதுதான் கண்ட பயன். துன்பப்படுகிறவர்களின் துன்பத்தைக் களை வதற்காக விரைந்து முன் நீளும் இந்தக் கைகள் அன்பு செலுத்துகிறவளுடைய அன்பை ஏற்றுக் கொள்வதற்கு மட்டும் ஏன் தயங்குகின்றனவோ? உடம்பெல்லாம் அழுகி நாறும் பெருநோய் பிடித்த கிழவியைத் தீண்டுவதற்கும் கூசாத கைகள் தன்னையே நினைத்துத் தனக்காக ஏங்கிக்கொண்டும் தவித்துக் கொண்டுமிருக்கும் பெண்ணுக்கு முன்னால் மட்டும் ஏன் துவண்டு போய் விடுகின்றனவோ? ‘துன்பப்படுகிறவர்களுக்கு உதவும் அது தாபத்தையே செல்வமாக நினைக்கிறேன்’ என்கிறாரே. நான் இவரையே எண்ணி ஏங்கித் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேனே. எனக்கு இவரிடமிருந்து என்ன அநுதாபம் கிடைத்தது? எதிர்பார்க்கிற இடத்திலிருந்து கிடைக்க வேண்டிய அன்பைப் பெற முடியாமல் வேதனைப்படுகிற என்னுடைய காதலும் ஒரு துன்பந் தானே?’
தனக்குள் தானே சுரமஞ்சரி இப்படி நினைத்துக் கொண்டிருந்தபோது பல்லக்கின் திரையை விலக்கி வெளியில் பார்த்துக் கொண்டிருந்த வசந்தமாலை, “அம்மா! அம்மா! அதோ அங்கே பாருங்கள்” என்று பரபரப்போடு கூறிக் கவனத்தை வெளிப்புறமாகத் திரும்பினாள். சுரமஞ்சரி வெளியே தலை நீட்டிப் பார்த்தாள். கூட்டத்தில் ஓவியன் மணிமார்பனும் ஓர் அழகிய இளம் பெண்ணும் கைகோர்த்தபடி நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
நெடுங்காலத்துக்குப் பின் அவனைக் கண்ட ஆவலை அடக்க முடியாமல் “வசந்தமாலை! மணிமார்பனைக் கூப்பிடடி. அவரைப் பற்றிய விவரங்களை யெல்லாம் மணிமார்பனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்” என்றாள் சுரமஞ்சரி, வசந்தமாலை கூப்பிடுவதற்குள் மணிமார்பனும் அவனுடன் சென்ற பெண்ணும் கூட்டத்தில் எங்கோ மறைந்துவிட்டார்கள். வசந்தமாலை “ஐயா ஓவியரே!” என்று விளித்த குரல் கூட்டத்திலிருந்த வேறு பலரைப் பல்லக்கின் பக்கமாகத் திரும்பிப் பார்க்கச் செய்ததைத் தவிர வேறு ஒரு பயனும் விளையவில்லை. வசந்தமாலை ஏமாற்றத்தோடு சுரமஞ்சரியிடம் அலுத்துக் கொண்டாள்:
“எப்போதுமே திழவிழாக் கூட்டத்தில் இந்தத் தொல்லைதான். நாம் யாரையோ அழைத்தால் வேறு யாரோ திரும்பிப் பார்க்கிறார்கள்.”
“வாழ்க்கையே திருவிழாக் கூட்டத்தில் அழைப்பது போல்தான் இருக்கிறதடி வசந்தமாலை! நாம் யாரை அழைக்கிறோமோ அவர்கள் திரும்பிப் பார்ப்பதில்லை. யாருடைய செவிகளில் கேட்க வேண்டும் என்பதற்காக நம்முடைய இதயத்திலிருந்து ஆசையும் நாவிலிருந்து சொற்களும் பிறக்கின்றனவோ, அவருடைய செவி களுக்கு அவை எட்டுவதே இல்லை. யாரை நினைத்தோ கூவுகிறோம். நினைவுக்குக் காரணமாகாத யாரோ பதிலுக்குத் திரும்பிப் பார்க்கிறார்கள். யாருக்காகவோ கண் திறக்கிறோம். ஆனால் திறந்த கண்களுக்கு முன்னால் வேறு யாரோ தென்படுகிறார்கள். என்ன உலகமோ? என்ன வாழ்க்கையோ? எல்லாமே சாரமில்லாமல் தெரிகிறதடீ!” என்று தன் தலைவி கூறியபோது அவளுடைய வார்த்தைகள் இதயத்தின் ஆழத்தில் குவிந்து கிடக்கும் சோகத்தையெல்லாம் திரட்டிக் கொண்டு வந்து கொட்டுவதை வசந்தமாலை உணர்ந்தாள்.
“மாளிகையிலிருந்து வெளியேற முடியாமல் இத்தனை காலம் சிறைப்பட்டுக் கிடந்தபோதும் இதே வார்த்தைகளைத்தான் சொல்லிக் கொண்டிருந்தீர்கள். இன்று வெளியே வந்து சுதந்திரமாகச் சுற்றிப் பார்க்கும் போதும் இதே வார்த்தைகளையே சொல்லுகிறீர்களே?”
“அடி அசடே! உடம்பைக் கட்டிப் போடுவதுதான் சிறை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? மனம் விரும்புவதையும் நினைப்பதையும் அடைய முடியாமையே ஒரு சிறைதான்.” இப்படிக் கூறித் துயரத்தைத் தவிர வேறெந்த உணர்வையும் காட்டாத வறட்சியான தொரு நகை புரிந்தாள் சுரமஞ்சரி. தலைவியின் மனம் அளவற்று நொந்து போயிருப்பது தோழிக்குப் புரிந்தது. அவள் பேச்சைத் திருப்பி வேறு வழிக்குக் கொண்டு போனாள்: “விரைவில் மாளிகைக்குத் திரும்பிவிடுவது நல்லதம்மா! உங்கள் தந்தையாரும் நகைவேழம்பரும்கூட இந்தப் பக்கமாகத்தான் தேரில் புறப்பட்டு வந்திருக்கிறார்களாம். எங்கேயாவது அவர்கள் பார்வையில் நாமிருவரும் தென்பட்டால் வம்பு வந்து சேரும்” என்று தலைவியிடம் மெல்லக் கூறிவிட்டு வெளியே பல்லக்குத் தூக்குகிறவர்களுக்குக் கேட்கிறபடி இரைந்த குரலில் வேகமாகச் செல்வதற்கான கட்டளையை இட்டாள் வசந்தமாலை. பல்லக்குத் தூக்குகிறவர்கள் நடையைத் துரிதமாக்கிக் கொண்டு முன்னேறினார்கள்.
“இந்திர விழா முடிவதற்குள் மணிமார்பனை எப்படியும் சந்தித்துவிட முயற்சி செய்ய வேண்டுமடி, வசந்தமாலை.”
“முயற்சி செய்வதைப் பற்றித் தடையில்லை. ஆனால் முயற்சி நிறைவேறுவதும், நிறைவேறாமற் போவதும் நம் கையில் இல்லை.”
“எதற்கும் முயன்று பார்க்கலாமே! இந்திர விழா முடிவதற்குள் இன்னும் ஒருநாள் வானவல்லி சுரமஞ்சரியாகவும் சுரமஞ்சரி வானவல்லியாகவும் நடித்தால் போயிற்று?”
“நம்முடைய சாமர்த்தியத்தை நகைவேழம்பரும் உங்கள் தந்தையாரும் புரிந்துகொள்ளவோ, சந்தேகப்படவோ செய்யாதவரை எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் அம்மா! திருவிழாக் கூட்டத்தில் நடப்பது போல நாம் சிறிதும் எதிர்பாராமல் அவர்கள் இருவரும் நம் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டால் எல்லாம் சீரழிந்து போகுமே?” என்று பயத்தோடு பதில் சொன்னாள் வசந்தமாலை.
தன் கழுத்தை நெரிக்கும் வலிய கைகளின் பிடியில் சிக்குண்டு அந்தக் கபாலிகை விகாரமாகக் கூக்குரலிட்ட மரண ஒலம் சக்கரவாளத்தைச் சூழ்ந்திருந்த காடெல்லாம் எதிரொலித்தது. இளங்குமரன் வியப்படைந்து பார்த்தான். கபாலிகைக்குப் பின்புறம் நீலநாகமறவருடைய முகம் தெரிந்தது. அவள் கழுத்தை இறுக்கும் கரங்கள் அவருடையவை என்று கண்டான்.
“ஐயா! விட்டுவிடுங்கள்... பாவம்... இவள் நமக்கு என்ன கொடுமையைச் செய்வதற்கிருந்தாளோ அந்தக் கொடுமையையே இவளுக்கு நாம் செய்து பழி சுமக்க வேண்டாம்” என்றான் இளங்குமரன்.
“கொலை வெறி பிடித்த பேய் மகளே! இனி இத்தகைய செயலைச் செய்யவும் நினைக்காதே. செய்ய நினைத்தாயோ நீ செய்ய நினைத்தது உனக்கே செய்யப்படும். இதோ இப்படி ஒரு விநாடி என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டுப் போய்த் தொலை...” என்று இடி முழக்கக் குரலில் எச்சரித்துவிட்டுக் கீழே தள்ளுவது போலக் கைகளின் பிடியிலிருந்து அவளை உதறினார் நீலநாக மறவர்!
நிலைகுலைந்து விழுந்த பைரவி எழுந்து ஓடுவதற்கு முன்னால் தன்னை ஒடுக்கிய பெருவலிமை எது என்று காண்பவள் போல் ஒருகணம் திரும்பி நிமிர்ந்து பார்த்தாள். ஆகாயத்துக்கும் பூமிக்குமாக நின்ற அந்தக் கம்பீர ஆகிருதியைப் பார்த்தாளோ இல்லையோ, அலறி யடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓட்டமெடுத்தாள் அவள்.
“ஒடிப் போய்விடு!... மறுபடி திரும்பிப் பார்த்தாயோ எல்லாக் கபாலங்களுக்கும் நடுவே உன்னுடைய கபாலமும் கிடக்கும்” - நீலநாகருடைய இந்த வார்த்தைகள் அவளை இன்னும் வேகமாக விரட்டின. குதிகால் பிடரியில் படுகிறாற்போல் ஓடி மறைந்தாள் கபாலிகை.
“நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?” என்று இளங்குமரன் தன்னைக் கேட்ட கேள்விக்குப் பதில் கூறாமல் இடியிடித்து ஓய்ந்ததெனப் பெரியதாய்ச் சிரித்தார் நீலநாக மறவர். அவரிடம் மேலும் கூறினான் இளங் குமரன்:
“என் மனத்தில் இப்படியெல்லாம் நடக்கும் என்று சிறிதும் சந்தேகமே உண்டாகவில்லை, ஐயா! ஏதோ இவள் வந்து சொன்னாள், நம்பிவிட்டேன். சுடுகாட்டுக் கோட்டத்தில் வன்னி மன்றத்தின் அருகே தன்னுடைய குரு காத்துக் கொண்டிருப்பதாகவும், அவருடனே சமயவாதம் புரிவதற்கு நான் வரவேண்டும் என்றும் அழைத்தாள். உடனே புறப்பட்டு விட்டேன்.”
“நீ புறப்பட்டது தவறில்லை, இளங்குமரா! அறிவின் முடிந்த எல்லை கருணை. பிறர் மேல் இரக்கம், எவ்வளவு தீயவுண்மை பொதிந்ததாயிருந்தாலும் நல்லதாகவே பாவித்தல் இவைதாம். ஆனால் சூழ்ச்சியின் முடிந்த எல்லையோ சந்தேகம் மட்டும்தான். நீயும் நானும் இப்போது வேறு எல்லைகளில் வந்து நிற்கிறோம், நீ ஞானத்தையே வீரமாகக் கொண்டு ஞானவீரனாக வந்து நிற்கிறாய். நான் எப்போதும் போல் வீரத்தையும் ஞானமாகவே கொண்டு நிற்கிறேன். எதையும் எதிர் மறையாக எண்ணிப் பார்த்துவிட்டுப் பின்புதான் உடன்பாடாக எண்ணிப் பார்க்க வேண்டுமென்பது வீரனின் சிந்தனைச் சூழ்ச்சிகளில் முதன்மையானது. உடன்பாடாகவே எண்ணிப் பார்ப்பது ஞானியின் பாவனை. கொடியும் கையுமாக யானைமேல் ஏறிக் கொண்டு நீ படைக்கலச் சாலையிலிருந்து புறப்பட்ட சிறிது நாழிகைக் கெல்லாம் நானும் உன்னைப் பின்தொடர்ந்து புறப் பட்டேன் என்பது உனக்குத் தெரியாது. நாளங்காடியில் நீ நின்ற இடங்களிலும் சென்ற இடங்களிலும் மறைந்து மறைந்து, தோன்றாத் துணையாக உன்னைப் பின் தொடர்ந்தேனென்பதும் உனக்குத் தெரிந்திருக்க முடியாது. நீ எதையும் சத்தியமாகவே உடன்பட்டுப் பாவனை செய்து கொண்டிருப்பதால் அங்கிருந்து புறப்படுகிறபோது சமயவாதம் புரியப் போவதையும் வேறுபட்ட கருத்துடைய அறிஞர்களைச் சந்திக்கப் போவதையும் மட்டும்தான் நினைத்துக் கொண்டு. புறப்பட்டாய். நானோ உன்னுடைய பகைவர்கள், உன்னைக் கொல்ல நினைத்துத் திரிந்து கொண்டிருப்பவர்கள், எல்லாரையும் எண்ணிப் பின் தொடர்ந்தேன். நீ உன்னுடைய அறிவுக்குப் பகைவர்களாக எதிரே வந்து கொடி நடப் போகிறவர்களை மட்டும் எதிர்பார்த்து வந்தாய். நானோ உன்னுடைய உயிருக்குப் பகைவர்களை எதிர்பார்த்தும், எதிர்த்துப் பார்க்கவும் வந்தேன். நீ பிரமவாதியைச் சொற்களால் மடக்கி வென்றதையும் சாருவாகனனின் செருக்கை வேரோடு சாய்த்து வென்றதையும், ‘கருணைதான் செல்வம்’ என்று அந்தப் பல்லக்குச் செல்லக் குமரிக்குப் பதில் சொல்லிவிட்டுக் கீழே விழுந்த முதுமகளைத் தூக்கி வழியனுப்பியதையும் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த நான் கடைசியில் இந்தக் கபாலிகையின் பொய்யான வேண்டுகோளுக்கு நீ செவி சாய்த்தபோது தான் மகிழ்வதை நிறுத்திக் கொண்டு சந்தேகப்படத் தொடங்கினேன். இவள் உன்னிடம் பேசிய விதமும், அந்த அகாலத்தில் வன்னி மன்றத்துக்கு அழைத்த முறையும் எனக்குச் சந்தேகமூட்டின. நீ இவளோடு புறப்பட்டால் நானும் பின்தொடர்வதென்று முடிவு செய்தேன். அப்படியே நடந்தது.”
“ஐயா! எதிர்மறையாக எண்ணிப் பார்ப்பதற்கும் சந்தேகப்படுவதற்கும் எனக்குத் தோன்றவே இல்லையே? கையைக் கூப்பி வணங்கினாற் போன்ற மதிப்போடு இவள் கூப்பிட்டவுடனே மெய்யென்று நம்பிவிட்டேன்.”
“ஞானம் உலகத்தை நம்பிக்கை மயமாகவும் கருணை மயமாகவும் பார்ப்பதற்கு உன்னைப் பழக்கியிருப்பது நல்லதுதான். ஆனால் கையை ஓங்கிக்கொண்டு அறைய வருகிற பகைவர்களைக் காட்டிலும் கைகூப்பிக் கொண்டு மனம் கூசாமல் வருகிற பகைவர்கள் பயங்கர மானவர்கள். உலகத்தில் கையைக் கூப்பிக்கொண்டு நண்பர்போல் வரும் பகைவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். ‘தொழுத கை உள்ளும் படை நடுங்கும் ஒன்னார் அழுத கண்ணிரும் அனைத்து’ என்று படித்திருப்பாயே?”
“படித்திருக்கிறேன். ஆனால் அது அரச தந்திரிகளுக்கும் மதி அமைச்சர்களுக்கும் சொன்ன உண்மை அல்லவா?”
“ஒவ்வொரு மனமும் ஓர் அரசுதான். அது அரச தந்திரமும் அமைச்சும் இருந்தால் மனத்தையும் மனோ ராச்சியத்தையும் அற்புதமாக ஆளலாம்.”
“எல்லாவற்றையும் விட வேண்டுமென்று நான் கற்று வந்திருக்க, எல்லாவற்றையும் ஆள்வதற்கு நீங்கள் வழி சொல்லிக் கொடுக்கிறீர்கள் ஐயா!” என்றான் இளங்குமரன்.
இதைக்கேட்டு நீலநாக மறவர் புன்னகை புரிந்தார். “ஒன்றைப் பற்றிக் கொள்ள முடியாமல் மற்றொன்றை விட முடியுமா, இளங்குமரா? கவலையில்லாமல் உன்னுடைய அறிவுப் போராட்டத்தை நடத்து. அறிவுடையவனுக்கு அந்த அறிவே பெரிய அரண். வேறு பாதுகாப்பு அவசியமில்லை. ஆனால் கண்ணுக்கு அழகாயிருக்கிறதென்று மற்றவர்கள் புகழும் மையைக் கண்ணே கண்டு அநுபவிக்க முடியாதது போல அறிஞனுக்கும் மயக்கங்கள் வருவதுண்டு. இதுபோல் உயிர் போகிற ஆபத்துக்களும் அப்படி மயங்கி வரும். இன்று நீ இந்தக் கபாலிகையிடம் சிக்கிக்கொண்டதற்கும் அப்படிப் பிறழ்ந்த அநுமானம்தான் காரணம்! இந்த நகரத்து எல்லைக்குள் நான் ஒருவன் உயிரோடு இருக்கிற வரை உன்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது. வா, போகலாம்” என்று அவனை அழைத்துக் கொண்டு புறப்பட்டார் நீலநாக மறவர். இருவரும் யானைமேல் ஏறிக்கொண்டு படைக்கலச் சாலைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அப்போது பின்னிரவு தொடங்கும் நேரமாகியிருந்தது. மேகங்களே இல்லாத தெளிந்த வானத்தில் ஆலமுற்றத்துக் கோவிலுக்கு அப்பால் முழுநிலா அற்புதமாகத் தோன்றிக் கொண்டிருந்தது. வானில் ஊர்ந்து திரிந்து வந்து அலுத்ததுபோல் அந்தப் பின்னிரவு நிலாவில் சற்றே ஒளிமங்கியுமிருந்தது.
ஏமாற்றத்தால் அன்று யாரிடமோ சாவதற்கிருந்த தன் உயிரைக் காத்த திருவருளை எண்ணி ஆலமுற்றத்தை நோக்கிக் கைகூப்பி வணங்கினான் இளங்குமரன். அந்த நேரத்துக்குப் பின்பும் நீலநாக மறவர் சில நாழிகைகள் உறங்கினார். இளங்குமரனுக்கு உறக்கம் வரவில்லை. கண்களை மூடியபடி அன்று காலையிலிருந்து நடந்த நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக நினைவுக்குக் கொண்டு வந்து சிந்தித்தவாறே படுத்திருந்தான் அவன். விடிகிற நேரம் நெருங்கியது.
ஆலமுற்றத்து மரத்தில் காகங்கள் கரைந்தன. எங்கோ கோழி ஒன்று விடிகாலைக் குரல் எழுப்பியது. விடிவதற்கு இன்னும் இரண்டு மூன்று நாழிகைகள் இருக்கும் என்று தோன்றியது. அப்போது நீலநாக மறவர் அவனை எழுப்பி அழைத்துக் கொண்டு ஆலமுற்றத்துக் கடற்கரை ஓரமாக உலாவப் புறப்பட்டுவிட்டார். கரையோரத்து நெய்தற் கழிமுகங்களில் பூத்திருந்த தாழம்பூக்களின் நறுமணம் வெள்ளமாய்ப் பரவிக் கொண்டிருந்தது. “பூக்களுக்கு மணம்தான் பாஷை, மணம்தான் அர்த்தம். மணம்தான் இலக்கணம். மணம்தான் கவி, மணம்தான் அலங்காரம்” என்று பூம்பொழிலில் குருகுல வாசம் செய்த காலத்தில் திருநாங்கூர் அடிகள் அடிக்கடி கூறிய வாக்கியங்களை இன்றும் இளங்குமரன் நினைவு கூர்ந்தான். திருநாங்கூரில் இருந்தபோது அடிகளும் இதேபோல வைகறையில் அவனை அழைத்துக்கொண்டு உலாவப் புறப்பட்டு விடுவார். அப்படிப் பனிபுலராக் காலையில் அடிகளோடு புறப்பட்டுப் போகும்போது இப்படி எத்தனை எத்தனையோ அழகிய சிந்தனைகள் அவரிடமிருந்து பூத்து அவன் செவிகளில் உதிர்ந்திருக்கின்றன.
தாழம்பூக்களின் மணத்தை உணர்ந்தபோது அவனுக்கு ஏதேதோ பழைய நினைவுகள் எல்லாம் உண்டாயின. அந்த நினைவுகளும் புதரில் பூத்த தாழம்பூக்களைப் போலப் பூத்திருக்கும் இடம் தெரியாமல் மணத்தையே பாஷையாகக் கொண்டு அவனிடம் பேசின.
போது நள்ளிரவையும் கடந்து விட்டது. வெறி ஒடுங்கிச் சோர்வு மிகுந்ததால் வன்னிமன்றத்தில் கபாலிகர்களும் உறங்கிப் போய்விட்டார்கள். மரக்கிளைகள் ஆடி உராயும் மர்மச் சப்தமும் காற்று சுழித்துச் சுழித்து வீசும் ஒசையும் இடை இடையே - அந்த ஒசைகளைக் கலைத்துக் கொண்டு ஆந்தையும், கோட்டானும் அலறுகிற விகாரமும், கூகை குழறும் குரலும் சேர்ந்து வன்னி மன்றத்துக்குக் கணம் கணமாகப் பயங்கரச் சூழ்நிலையைப் படைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தன. தொடங்கினால் முடிவதற்குச் சிறிது நேரமாகும்படி நீண்டு இழுபட்டுக் கேட்கும் நரியின் ஊளைக் குரல்வேறு. ஆண்டலை என்னும் பிணம் தின்னிப் பறவைகள் உயரமும் தோற்றமுமாக ஆள் நடந்து வருவது போலப் பறவை உடலும் மனிதத் தலைபோன்ற சிரமும் கொண்டு சுற்றித் திரிந்தன. இரவில் நெருப்புக் கனிகளாகத் தோன்றும் அவற்றின் கண்கள் காண்பதற்கு அச்ச மூட்டுவனவாயிருந்தன.
இந்தச் சூழ்நிலையில் நகைவேழம்பரும், பெருநிதிச் செல்வரும் பைரவியின் குடிசை வாயிலில் காத்துக் கொண்டிருந்தார்கள். பைரவி இன்னும் திரும்பவில்லை. பெருநிதிச் செல்வருக்குப் பயத்தினால் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. கைகள் எதையும் செய்யாம லிருக்கும் போதே நடுங்கின. மெளனமாக இருக்கும் போது பேசிக் கொண்டிருந்தால் பயம் தீரும் போலவும், பேசிக் கொண்டிருக்கும் போது பேச்சை நிறுத்திவிட்டு மெளனமானால் பயம் தீரும் போலவும் மாறி மாறிப் பேசியும், பேசாமலும் பயந்து கொண்டே இருந்தார் அவர்.
“இப்படிப்பட்ட செயல்களுக்குப் பைரவிதான் முற்றும் பொருத்தமானவள். அவளை இத்தகைய செயலுக்கு அனுப்பினால் நிச்சயமாக வெற்றியை எதிர்பார்க்கலாம். அவளுடைய கைகளுக்கு முடியாத காரிய மென்று எதுவும் இல்லை” என்று நகைவேழம்பர் புகழ் பாடிக் கொண்டிருந்த போதே பைரவி அலறிப் புடைத்தவாறு விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தாள். மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கி இரைத்துக் கொண்டு நின்றாள். பதற்றத்தில் நிகழ்ந்ததைத் தொடர்பாகச் சொல்ல வர வில்லை அவளுக்கு. தயங்கித் தயங்கி ஏதோ சொன்னாள். சொல்லில் தெளிவில்லை. சொல்லப்பட்டவற்றிலும் துணிவில்லை. சொற்களை முழுமையின்றி அரற்றினாள்.
கொடுமையே வடிவான அவளும் தோற்றுப் போய் வந்தாள் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டியிருந்தது. “நிற்கவும் நிலைக்கவும் வேண்டிய காரியத்துக்குத் தடையின்மையே பெரிய அவலட்சணம் என்று சற்று முன் கூறினீர்களல்லவா அந்த அவலட்சணம் ஏற்பட்டுவிடாமல் தடை நேர்ந்துவிட்டது” என்று குத்தலாகச் சொல்லிச் சிரித்தார் நகைவேழம்பர். இதைக் கேட்டுப் பெருநிதிச் செல்வருக்கு அடக்க முடியாத கோபம் வந்துவிட்டது. “என் சித்தப்படியே எல்லாம் நடக்கிறதென்று வீறாப்பு பேசினர்களே! உங்கள் சித்தப்படி, இதுவும் நடப்பது தானே?” என்று நகைவேழம்பரைப் பதிலுக்குச் சாடினார் அவர். இருவரும் ஒருவரையொருவர் சொற்களால் சாடிக்கொண்டே திரும்பினார்கள். சக்கர வாளத்தைக் கடந்து மதிற்சுவருக்கு இப்பால் பூதம் நின்ற வாயிலுக்கு வெளிப்புறம் அவர்களிருவரும் வந்தபோது எங்கிருந்தோ ஒர் ஆந்தை ஒற்றைக் குரல் கொடுத்தது.
“ஆந்தை ஒற்றைக்குரல் கொடுக்கிறது. நல்ல சகுனம்தான். இன்று தோல்வி அடைந்து விட்டாலும் நம் முயற்சிக்கு என்றாவது வெற்றி கிடைக்கும்” என்று தேரில் ஏறிக்கொண்டே சொன்னார் நகைவேழம்பர்.
“உமக்குப் பட்சி சாத்திரம் கூடத் தெரியுமோ நகைவேழம்பரே” - பெருநிதிச் செல்வர் இயல்பாக இப்படி வினாவுகிறாரா, ஏளனம் செய்யும் குரலில் வினாவுகிறாரா என்பைதப் புரிந்து கொள்ள முயன்று சில வினாடிகள் ஒன்றும் புரியாமல் திகைத்தார் நகைவேழம்பர். பின்பு திகைப்பு நீங்கியவராக “ஆகா! பட்சி சாத்திரம் மட்டுமில்லை. பட்சிகளுக்கு வலை விரிக்கும் சாத்திரமும் தெரியும். ஆந்தை ஒற்றைக் குரல் கொடுத்தால் சாவு என்று பொருள். நாம் யாரைக் கொல்ல முயன்று கொண்டிருக்கிறோமோ அவனுக்குச் சாவு நெருங்குகிறது என்பதைத்தான் இந்த ஆந்தை சொல்கிறது” என்றார்.
“நீர் விளக்கம் சொல்வது போல் அல்லாமல் ஆந்தையின் குரலைக் கேட்ட உமக்கோ, எனக்கோ அது சகுனம் சொல்லியிருந்தால்...”
“சொல்லியிருந்தால் இந்தக் கணமே அந்த ஆந்தைக்குச் சாவு என்று பொருள். சகுனங்களை நமக்கு ஏற்றாற்போல் இணைத்துப் பார்க்க வேண்டுமே தவிரச் சகுனங்களுக்கு ஏற்றாற்போல் நாம் மாற்றிக்கொண்டு வேதனைப்படலாமோ...?”
“ஓகோ! எதையும் உமக்கு ஏற்றாற்போல வளைத்து மாற்றிப் பார்க்கிறவரா நீர்...?”
பெருநிதிச் செல்வரின் இந்தக் கேள்விக்கு நகைவேழம்பரிடமிருந்து மறுமொழியில்லை. அவர் விழிப்படைந்தார். தேர் விரைந்து போய்க் கொண்டிருந்தது. அமைதியான அந்த நேரத்தில் தேர்ச் சக்கரங்களின் ஒசையே எங்கும் பரவி நிறைவது போல் அதுவே பெரிய ஒசையாகக் கேட்டுக் கொண்டிருந்தது. சிறிது தொலைவு சென்றதும் ஒரு தாழம் புதரருகே புற்றுக்களின் நடுவே மகுடி வாசித்துக் கொண்டிருந்த பாம்புப் பிடாரன் ஒருவனை அவர்கள் கண்டார்கள். தேரிலிருந்தபடியே நிலவொளியில் அந்த நாகரினத்துப் பாம்பாட்டி மகுடி வாசிப்பதை அவர்கள் கண்டுகொண்டே செல்ல முடிந்தது. இந்த இடத்திலிருந்து தேர் சிறிது தொலைவு சென்றபின் எதையோ அவசரமாக நினைத்துக் கொண்டவர் போல் தேரை மறுபடியும் திருப்பி அதே இடத்துக்குச் செலுத்தினார் நகைவேழம்பர். எதற்காகத் தேர் திருப்பப்படுகிறது என்பதைப் பெருநிதிச் செல்வரிடமும் கூறவில்லை. தம்மிடம் கூறாமலே தேர் திருப்பப்படுவதைக் கண்டு அவர் பயமும் திகைப்பும் ஒருங்கு அடைந்தாலும், பயத்தைச் சற்றே மறைத்துக் கொண்டு திகைப்பு மட்டும் வெளிப்படுகிற குரலில், “ஏன்? எதற்காகத் தேரைத் திருப்புகிறீர்கள் நகைவேழம்பரே! வன்னி மன்றத்தில் எதையாவது மறந்து வைத்துவிட்டீர்களா?” என்று கேட்டார்.
அவருடைய கேள்விக்குப் பதில் கூறாமல் குதிரைகளை விரட்டியடித்துக் கொண்டு போனார் நகைவேழம்பர். நாகர் இனத்துப் பாம்புப் பிடாரன் மகுடி வாசித்துக் கொண்டிருந்த புற்றருகே போய்த் தேர் நின்றது. அதற்குள் குதிரைகளுக்கு வாயில் நுரை தள்ளியிருந்தது. அவ்வளவு வேகத்தில் விரட்டியிருந்தார் அவர். அந்த இடத்துக்கு வந்ததும் தாம் தேரிலிருந்து முதலில் கீழே குதித்து நின்றுகொண்டு “இறங்கி வாருங்கள்! இவனிடத்தில் ஒரு காரியம் இருக்கிறது” என்று பாம்பாட்டியைச் சுட்டிக் காண்பித்துப் பெருநிதிச் செல்வரை அழைத்தார் நகைவேழம்பர். ‘எதற்காகத் தேரைத் திருப்புகிறாய் என்று நான் கேட்டபோது என்னை மதித்துப் பதில் சொல்லாத இவனுடைய அழைப்பை மதித்து நான் ஏன் கீழே இறங்க வேண்டும்’ என்று நினைத்தவராய்ச் சில கணங்கள் நகைவேழம்பருடைய வார்த்தைகளையே கேட்காதவர் போலத் தேரிலேயே இருந்தார் பெருநிதிச் செல்வர். பின்பு நகைவேழம்பரைப் போலக் கொடுமையானவர்களை நேருக்கு நேர் அலட்சியம் செய்வது சமயோசிதமாகாது என்று தமக்குத்தாமே உணர்ந்தவராகத் தேரிலிருந்து கீழே இறங்கினார்.
“இவனுடைய மகுடி ஒசையால் இந்தப் பகுதியில் மூலைக்கு மூலை நாகங்கள் புறப்பட்டு ஊர்ந்து கொண்டிருக்குமே? இங்கு எதற்காகத் தரையில் இறங்க வேண்டுமென்கிறீர்கள்? தாழம் புதரும், புற்றுக்களும், பிடாரனும் பார்த்தாலே பயமாக இருக்கிறதே...?” என்று வார்த்தைகளை நீட்டி இழுத்த பெருநிதிச் செல்வரை ஏறிட்டுப் பார்த்தார் நகைவேழம்பர். விஷமமாகச் சிரித்துக்கொண்டே பார்த்தார். பார்த்துவிட்டுப் பதறாத குரலில் உள்ளர்த்தமாகப் பல செய்திகளையெல்லாம் நிறைத்து நிறுத்திய வார்த்தைகளால் சுருக்கமாக ஒரு கேள்வி கேட்டார்.
“பயப்படுகிற எதையும் நீங்கள் செய்வதே இல்லையோ?”
பெருநிதிச் செல்வர் இதைக் கேட்டு அப்படியே வெலவெலத்துப் போனார். இந்தக் கேள்வியின் மூலமாக நகைவேழம்பர் எதை நினைவுபடுத்துகிறார் என்று பழைய நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்க்கவும் முயன்றார். எதையும் நினைவுபடுத்துகிறாற் போலவும் இல்லை. எல்லாவற்றையும் நினைவுபடுத்திக் குத்திக் காட்டுவது போலவும் இருந்தது. எல்லாவற்றிலும் பயங்கரமான ஏதோ ஒன்றை மட்டும் நினைவுறுத்துவது போலவும் இருந்தது. இந்தக் கேள்வியைக் கேட்கிறபோது நகைவேழம்பரின் பேச்சும் வன்மையாகவே இருந்தது. மனத்தில் ஏதேதோ அதிர்ச்சிகள் பேசிட, வாய் ஒன்றும் பேசாமல் நகைவேழம்பரைப் பின்பற்றிப் பாம்புப் பிடாரன் இருந்த இடத்துக்கு நடந்தார் பெருநிதிச் செல்வர். கொடி கொடியாய்க் கிளை விட்டு வளர்ந்திருந்த அந்தப் புற்றுக்களின் நுனித் துவாரங்களைப் பார்த்தவாறே கவனம் கலையாமல் மகுடி ஊதிக் கொண்டிருந்தான் அந்த முரட்டுப் பிடாரன். தனக்குப் பின்னால் மிக அருகில் யாரோ இருவர் வந்து நிற்பதை அறிந்து கொண்டானாயினும் அவன் திரும்பிப் பார்க்க வில்லை. பயத்தினால் புற்று நுனிகளெல்லாம் பெருநிதிச் செல்வருக்குச் சர்ப்பங்களாகவே தோன்றின. நெருப்பில் காட்டிய தருப்பைப் புல்லின் அழலோடிய துணிகளைப் போல் செக்கச் செவேலெனப் பிளந்த நாக்குகள் நெளிய ஒரு படம் புற்றிலிருந்து வெளி வந்து தெரிந்தது. பெரு நிதிச் செல்வர் பயந்து பதுங்கி நகைவேழம்பரைத் தழுவிக் கட்டிக்கொள்வதுபோல அவரோடு அவராக ஒண்டினார். சாதிக்காயின் மேல் நரம்போடிப் படர்ந்த சாதிப் பத்திரிபோல் நச்சு நாவுகள் நெளியப் புற்றுத் துளையிலிருந்து பொங்கி ஒழுகிப் பெருகி வழியும் கருமையாய் ஒரு பெரிய கருநாகம் வெளிவந்தது. மகுடியை ஒரு கையாலேயே வாசித்துக் கொண்டு மற்றொரு கையால் சர்ப்பத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த வேரைப் பிடித்தான் பிடாரன். தரையில் அவனைச் சுற்றிலும் பாம்பைச் சிறைப் பிடித்து அடைத்துக் கொண்டு போகும் பேழைகள் கிடந்தன. பயத்தின் மிகுதியால் நகைவேழம்பரையும் இழுத்துக் கொண்டு பின்னுக்கு நகர்ந்தார் பெருநிதிச் செல்வர்.
கூடை போலப் பிரம்பினால் நெருக்கமாய்ப் பின்னிய வட்டப் பேழையில் சாமர்த்தியமாக அந்தச் சர்ப்பத்தை அடைத்து மூடி அதன்மேலே சிறு கல் ஒன்றையும் தூக்கி வைத்தான் பிடாரன். பின்பு விலகி நிற்கும்படி அவர்களுக்குச் சொல்லிவிட்டு மேலும் மகுடி ஊதலானான். புற்றில் இன்னொரு படம் தெரிந்தது. தொடர்ந்து வேறு வேறாக அடுத்த இரண்டு துவாரங்களிலும் படங்கள் தெரிந்தன. பிடாரன் சாதுரியமாய் வேலை செய்தான். அவனிடம் மீதமிருந்த பேழைகளும் நிரம்பின. கிடைத்த பாம்புகளையெல்லாம் சிறைப்படுத்திக்கொண்டு அவன் மகுடியை நிறுத்திவிட்டு எழுந்தான். நகைவேழம்பர் அவனைப் பற்றி அவனிடமே விசாரித்தார். இந்திர விழாவில் வேடிக்கை விளை யாட்டுக்கள் செய்து பாம்பாட்டிக் காட்ட வந்திருப் பதாகவும் அது தன் தொழில் என்றும் அவன் சொன்னான். நகைவேழம்பர் அவனிடமே மேலும் கேட்டார். “இந்த நச்சுப் பாம்புகளை எப்படிப் பொது இடங்களில் வைத்து ஆட்டுவாய்? இவற்றைக் கண்டாலே மக்கள் பயப்படுவார்களே?”
“ஆட்டுவதற்குக் கொண்டு போகும் முன்பே நச்சுப் பல்லைப் பிடுங்கி விடுவோம் ஐயா! பிடுங்கா விட்டாலும் இவற்றை ஆட்டும் வேர் எங்களிடம் உண்டு” என்றான் பிடாரன். நகைவேழம்பர் மிக அருகில் சென்று குழைவான குரலில் அவனிடம் வேண்டினார்:
“நீ எங்களுக்கு ஓர் உதவி செய்ய வேண்டும்...”
“என்ன செய்ய வேண்டும் ஐயா?”
“நீ உன் பாம்புப் பேழைகளுடன் எங்களோடு எங்கள் தேரில் வரவேண்டும்..” என்றார் நகைவேழம்பர்.
பிடாரன் எதற்காகவோ தயங்கினான்.
“இந்திர விழாவின் எல்லா நாட்களிலும் சேர்த்து நீ எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாத்தியத்தை விட அதிகமாகச் சம்பாதிக்கும் வாய்ப்பைச் சில நாழிகைகளிலேயே உனக்கு நான் ஏற்படுத்தித் தர முடியும்.”
பாம்புகளைச் சிறைப்படுத்திய தைரியசாலி ஆசைக்குச் சிறைப்பட்டான். நச்சுப் பாம்புகளே தன்னை தீண்டாமல் பிடித்தவன் ஆசைப் பாம்புக்குக் கடிபட்டான். “ஐயையோ! தேரிலா? பாம்புப் பேழைகளும் இவனும் வந்தால் நாம் எப்படிப் போவது?” என்று பதறிய பெருநிதிச் செல்வரின் காதருகே சென்று. மந்திரம் போட்டது போல ஏதோ சொன்னார் நகைவேழம்பர். அவ்வளவுதான். பெருநிதிச் செல்வர் முகம் மலரச் சம்மதம் தந்துவிட்டார். பாம்புப் பிடாரன் பேழைகளும் தானுமாகத் தேரின் பின் பக்கத்துச் சட்டத்தில் ஏறிப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தான். பேழைகளைக் கவனமாகப் பற்றிக் கொள்ளும்படி அவனை எச்சரித்துவிட்டு நகைவேழம்பரும் பெருநிதிச் செல்வரும் தங்கள் இடங்களில் ஏறிக்கொண்டனர். தேர் பட்டினப் பாக்கத்துக்கு விரைந்தது.
மாளிகைக்குத் திரும்பியதும் பெருநிதிச் செல்வரை மட்டும் உறங்குவதற்கு அனுப்பிவிட்டுப் பிடாரனை அழைத்துக் கொண்டு தம் பகுதிக்குச் சென்ற நகைவேழம்பர் பணியாட்களை எழுப்பி மாளிகைத் தோட் டத்திலிருந்தும் வெளியேயுள்ள பூங்காக்களிலிருந்தும் குவியல் குவியலாகப் பூக்களைக் கொண்டு வரச் செய்தார். பூக்கள் குவிந்தன. பொழுதும் புலர்ந்தது.
பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகையில் பூக்கள் குவிந்து பொழுது விரிந்து கொண்டிந்த இதே வேளையில்தான் இளங்குமரன் ஆலமுற்றத்துக் கடல் ஓரமாக நீலநாக மறவருடன் நடந்து கொண்டிருந்தான். அங்கே நெய்தல் நிலத்துக் கழி முகங்களில் மலர்ந்திருந்த தாழம்பூக்களின் மணத்தை நுகர்ந்தபோது, இந்தத் தாழம்பூக்களின் மணத்தையே நான் அடிக்கடி உணர நேர்கிறதே என்று நினைத்துத் தனக்குத்தானே மெல்லச் சிரித்துக் கொண்டான் அவன். உலகத்துப் பூக்களிலும் அவற்றின் மணத்திலும் நாங்கூர் அடிகள் தெய்வத்தையே பார்க்கிறார். நானோ ‘இவ்வளவு நாள் கற்ற பின்னும் பழைய மனிதர்களையும் பழைய உறவுகளையும் பழைய நினைவுகளையும் தவிர வேறெதையும் இவற்றின் மணத்தில் காண முடிய வில்லையே’ என்று எண்ணியபோது இளங்குமரனுக்கு ஏக்கமாகத்தான் இருந்தது. வாசனையின் வழியே மனம் போகக் கூடாதென்பதைத்தான் அவன் கற்றிருந்த தத்துவங்கள் அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தன. அவனோ கால்கள் நடந்த வழி மனமும், மனம் நடந்த வழியே கால்களும் செல்லாமல் இரண்டும் வேறு வேறு வழிகளுக்கு முரண்டிக் கொண்டு போகிற வேதனையை இன்று அதிகாலையில் உணர்ந்தான். நீராடித் தூய்மை பெற்றுத் திரும்பிய போது மனமும் கால்களும் ஒரே வழியில் நடக்கும் ஒருமை நிலையோடு அவன் நீலநாகமறவருடன் படைக்கலச் சாலைக்குள் நுழைந்தான். புனலாடிக் குளிர்ந்த உடம்பினாலும் தியானத்தினாலும் மனம் தூய நினைவுகளிலும் மூழ்கியிருந்தது. பழைய கலக்கம் இல்லை.
அவர்களை எதிர்பார்த்து அப்போது ஓவியன் மணிமார்பனும், அவன் மனைவியும் படைக்கலச் சாலையில் வந்து காத்துக் கொண்டிருந்தார்கள். நீலநாகமறவர் மணிமார்பனைக் கண்டதுமே அடையாளம் புரிந்து கொண்டார்.
“பாண்டிய நாட்டுப் பிள்ளையாண்டானா? எப்பொழுது வந்தாய்?” என்று அன்போடு அவனை விசாரித்தார் நீலநாகமறவர். மனைவியோடு இந்திர விழாக் காண வந்திருப்பதை இவரிடம் கூறினான் மணிமார்பன். “எங்கே தங்கியிருக்கிறாய் தம்பீ?” என்று மேலும் கேட்டார் அவர். இலவந்திகைச் சோலையின் மதிற்புறத்தில் உள்ள ஓர் அறக்கோட்டத்தில் தங்கியிருப்பதாகக் கூறினான் அவன். அதைக் கேட்டதும் அவர் முகம் கலக்கத்தைக் காட்டியது.
“இந்த ஊரில் உனக்குப் பழைய பகைவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டிருந்தும் நீ இப்படியெல்லாம் பொது இடங்களில் தங்கலாமா? முன்பாவது நீ தனிக்கட்டை, இப்போது உன்னைப் பற்றி கவலைப்படவும் நீ கவலைப்படவும், இந்தப் பெண்ணும் இருக்கிறாளே, முதலிலேயே இங்கு வந்து தங்கியிருக்கக் கூடாதோ? இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. இலவந்திகைச் சோலைக்குப் போய் உங்கள் பொருள் களையெல்லாம் எடுத்துக் கொண்டு இன்று மாலைக்குள் இருவரும் இங்கே வந்துவிடுங்கள். இந்திர விழா முடிந்து ஊர் திரும்புகிற வரை இங்கேயே தங்கலாம்” என்றார் நீலநாகமறவர். அப்படியே செய்வதாக இணங்கினான் மணிமார்பன். சிறிது நேரம் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்து விட்டு இளங்குமரனும், நீலநாகரும் அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினர்.
செய்யவேண்டிய வழிபாடுகளையும் நியமங்களையும் முடித்துக் கொண்டு அன்று காலையிலேயே சமய வாதத்துக்குப் புறப்பட்டு விட்டான் இளங்குமரன்! புறப்படும்போது நீலநாகர் எச்சரித்தார்: “நேற்றைய அனுபவத்தை மறந்துவிடாதே, கவனமாக நடந்து கொள். ஒவ்வொரு விநாடியும் நான் உனக்குத் துணையாயிருப்பதென்பது இயலாத காரியம். நான் ஒரு விநாடி சோர்ந்திருந்தால் அந்த ஒரு விநாடியைப் பயன்படுத்திக்கொண்டு உன் பகைவர்கள் உனக்கு எவ்வளவோ செய்துவிடலாம்.”
இதைக்கேட்டு இளங்குமரன் மெல்லச் சிரித்தான். “அறிவுடையவனுக்கு அந்த அறிவே பெரிய அரண் என்று நீங்கள்தானே நேற்றுக் கூறினிர்கள்! அதை நம்பித்தான் தனியே போகிறேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான். இன்று நடந்தே புறப்பட்டுச் செல்வதென்று தனக்குள் நினைத்திருந்தபடியே செய்தான் அவன்.
வேடிக்கை, விளையாடல், கலை, களிப்பு என்று இந்திர விழாக் கூட்டம் பலவிதமான நுகர்ச்சிகளில் சிதறியிருந்தாலும் அறிவில் இன்பம் காணுகிற கூட்டம் நாளங்காடியில் ஒரு மூலையிலிருந்த அந்த அறிவுப் போர்க்களத்தில் கூடியிருந்தது. இந்திர விழாவின் இரண்டாவது நாட் காலையாகிய அன்று பூத சதுக்கத்தில் படையலிடுவோர், பாடுகிடப்போர் கூட்டம் மிகுதியாயிருந்தது. அதனால் நேரம் காலையாயினும் சமயவாதிகளைச் சுற்றிலும் கூடக் கூட்டம் அதிகமாயிருந்தது. இளங்குமரன் அந்தக் கூட்டத்தில் நுழைந்து தன் கொடியை ஊன்றியபோது கூடியிருந்தவர்களிடம் பெரிதும் ஆர்வம் பிறந்தது. அவர்களிற் பலர் முதல்நாள் அவனுடைய வாதத்தில் திறமை கண்டதின் காரணமாக இன்றும் இதைக் காணலாம் என்னும் ஆவலால் வந்தவர்கள். கூட்டத்தில் ஒரு பகுதியினர் இளங்குமரன் உள்ளே நுழைந்து கொடி ஊன்றியதும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து அவனை வரவேற்றதிலிருந்தே அந்த ஆர்வம் புலப்பட்டது. அன்றைக்கு இளங்குமரனுக்கு வாய்த்த முதல் எதிரி ஒரு சாங்கியனாக அமைந்தான். தத்துவங்களில் மிகவும் வல்லவனாகிய அந்தச் சாங்கியன் மிடுக்காக நடந்து சிரித்துக் கொண்டே இளங்குமரனுக்கு எதிரில் வந்து தன் கொடியை நட்டான். அவனுடைய சிரிப்பு ‘நீ என் தத்துவங்களுக்கு முன்னால் வெறும் சிறுபிள்ளை. உன்னை வெல்வதற்கென்று எனக்குத் தனி முயற்சி எதுவும் வேண்டியதேயில்லை’ என்று இளங்குமரனை எள்ளி நகையாடுகிற விதத்தில் தெரிந்தது. சாங்கியன் கூர்மையான அம்பைக் குறிவைத்து எய்வது போல் தன் முதல் கேள்வியைத் தொடுத்தான்: “உலகம் உள்ள பொருளாகச் சொல்லப்பட்டது. தானே தோன்றி தானே அழியப்போகிற உலகத்துக்கு முதற் காரணமே போதுமே? நிமித்த காரணமாக ஒரு செய்பவன் எதற்கு?” இந்தக் கேள்வியிலும் அவன் தோற்றத்தில் இருந்தாற் போலவே மிடுக்கு இருந்தது. இளங்குமரன் தெளிவான முறையில் அவனுக்கு மறுமொழி தந்தான்: “செய்வோர் இல்லாமல் வினை செய்யப்படுவது முடியுமோ? செய்பவன் செய்து உண்டாக்கிய பின்பு தானே பொருள் உள்ளதாகும்? உத்தேசம் பண்ணிக் கொள்ளாமல் இலக்கணம் பண்ணுவது தருக்கத்தில் குற்றமல்லவா? நான் ‘மலடியீன்ற மகன்’ என்பதுபோல் உத்தேசமும் இல்லாமல் இலக்கணமும் இல்லாமல் வீணான வார்த்தைகளைச் சொல்கிறீர்களே? உள்ளதை உள்ளதென்று உணரும் அறிவுக்கு உபலத்தி என்று பெயர். இல்லதை இல்லதென்று உணரும் அறிவுக்கு அநுபலத்தி என்று பெயர். கண்முன் தெரிகிற உலகத்தை உபலத்தியாக உணரும் நாம் அதற்குச் செய்தவன் உண்டு என உணருவதே நியாயம். செய்யப்பட்ட பொருள் உபலத்தியாகும்போது செய்தவன் மட்டும் அநுபலத்தியாவது எப்படிப் பொருந்தும்? பொருந்துமானால் ‘வாக்கிய பேதம்’ என்னும் குற்றமுடைய பேச்சை நீங்கள் பேசுகிறீர்கள். கவிகள் அலங்காரத்துக்காக வாக்கிய பேதம் செய்யலாம். தருக்கத்தில் சிறு சொல்லுக்கும் மதிப்பு அதிகம். நெருப்புக் காய்வது போல் நெருங்காமலும் விலகாமலும் சொல்லை அளவாகத் தொடுத்து வாதிடவேண்டும். ஒளியைக் கண்டு உணர்வது உபலத்தி. இருளைக் கண்டு உணர்வது அநுபலத்தி. ஆலம்பழத்தின் அளவுள்ள சிறு நெருப்பைக் கொண்டு ஏழு எட்டு வேள்விக் குழிகளில் பெருநெருப்பை வார்க்க முடிவதுபோல் தருக்கத்தில் சிறு சொல்லுக்கும் பெரும்பயன் விளைய வேண்டும். சிறியதில் இருந்து பெரியவற்றைப் பயனாக விளைத்துக் காட்ட வேண்டும்.”
இதைக் கேட்டுச் சாங்கியன் சிறிதும் அயரவில்லை. தனது அடுத்த கேள்வியைத் தொடுத்தான். “நீர் தன் மேல் உருண்டு அலைந்து ஆடினாலும் நான் பற்றின்றித் தாங்கி இருக்கும் தாமரை இலைபோல் புத்தி ஐம்பொறிகள் வழியாக நுகர்ச்சியை ஏற்றுக் கொள்ளும், புத்திக்கும் அப்பால் வேறொருவன் எதற்கு?”
“உமது கேள்வி நன்றாயிருக்கிறது. அழகாகப் பதில் சொல்ல முடியாதவர்கள் கேள்விகளையாவது அழகாகக் கேட்க முடியும். சாங்கியராக இருந்த நீர் அறிந்தது அழகாகக் கேள்வி கேட்கும் அறிவு ஒன்றுதான் போலி ருக்கிறது. ஆன்மா ஒன்றித்து நின்று காட்டாவிடின் புத்தியும் ஐம்பொறிகளும் நுகரமாட்டா என்பதை நீர் தெரிந்து கொள்ளவில்லையா? உமக்குக் கண்கள் இருக்கின்றன. அவற்றுக்குப் பார்க்கும் ஆற்றலும் இருக்கிறது. ஆயினும் செறிந்து மண்டிய இருளில் உம்முடைய கண்களால் ஏன் எதையும் பார்க்க முடிவதில்லை? கண்களும், பார்க்க ஆற்றலும் தவிர உம்முடைய விழிகளையும் - கானும் ஆற்றலையும் நீர் காணவேண்டிய பொருளோடு ஒன்றிப்பதற்கு அவற்றின் வேறாகிய ஒளியும் வேண்டுமா, இல்லையா?”
மேலே என்ன கேட்பதென்று தயங்கிய சாங்கியன் விழித்தான். ஆனால் இன்னும் ஏதோ கேட்பதற்கு அவனுடைய உதடுகள் மட்டும் துடித்தன. அதற்குள் கூட்டத்தில் இளங்குமரனைப் புகழும் வெற்றிக் குரல்கள் முழங்கத் தொடங்கிவிட்டன. கொடியும், மிடுக்கான பார்வையோடு கூடிய முகமும் தாழத் திரும்பி நடந்தான் சாங்கியன்.
அப்போது கூட்டத்தில் ஏதோ பரபரப்பு ஏற்பட்டது. யாரோ வழி விலகிக்கொண்டு உள்ளே வருவதற்கு முயல்வது போலத் தோன்றியது. இளங்குமரன் பார்த்தான். இரண்டு மூன்று பெண்களும் அவர்களுக்குப் பின்னால் பெரிய கூடையைச் சுமந்து கொண்டு யவனப் பணியாளன் ஒருவனும் உள்ளே வந்து கொண்டிருந்தனர். அருகில் வந்ததும் அவர்கள் யாரென அவனுக்குத் தெரிந்தது. பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகைப் பெண்கள். ஒரேவிதமான கோலத்தில் விளங்கிய இருவரில் ஒருத்தி சுரமஞ்சரியாகவும், இன்னொருத்தி வானவல்லியாகவும் இருக்க வேண்டும் என்று அவன் அதுமானித்தான். மூன்றாவதாகக் கடைசியில் வந்தாள் வசந்தமாலை,
அவர்களுடைய அழகு அலங்கார ஒளியினாலும் அவர்கள் பரவவிட்ட மணத்தினாலும் கூட்டமே அவர்கள் பக்கம் கவரப்பட்டது. இளங்குமரன் மட்டும் சலனமின்றி நின்றான். மூன்று பெண்களும் அவனுக்கு மிக அருகில் வந்து தலை தாழ்த்தி அவனை வணங் கினார்கள். மூவரிலும் முதலில் நின்ற பெண் வணங்கிய படியே நிமிர்ந்து “என்னைத் தெரியவில்லையா? நான் தான் சுரமஞ்சரி” என்று மெல்லச் சொன்னாள். சலனமின்றி நின்ற இளங்குமரன், “நேற்று நீங்கள் வானவல்லியாக இருந்தது மெய்யா? இன்று நீங்கள் சுரமஞ்சரியாக இருப்பது மெய்யா? இரண்டில் எது மெய்?” என்று பதறாமல் கேட்டான்.
அந்தப் பெருங்கூட்டத்தின் இடையே அப்படி ஒரு சூழ்நிலையில் இளங்குமரனிடமிருந்து சுரமஞ்சரி இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. நேற்று மாலை இதே நாளங்காடியில் தன்னைக் கண்டு ‘சுரமஞ்சரியா?’ என்று கேட்டபோது, ‘நான் சுரமஞ்சரி இல்லை. அவள் சகோதரி வானவல்லி’ என்று தான் கூறியிருந்த பொய் அவன் மனத்தில் சிறிதும் சந்தேகத்தை உண்டாக்கியிராது என்றே அவள் எண்ணியிருந்தாள். ஆனால் அவன் ஒன்றை மெய்யென்று உணர்வதால் ஏற்படுகிற மகிழ்ச்சியையோ பொய்யென்று உணர்வதால் ஏற்படுகிற காழ்ப்பையோ முகத்தில் தெரிய விடுகிற சாமானிய இளைஞனாக இப்போது இல்லை என்பதை நினைத்தபோது நேற்று அவனை ஏமாற்றி விட்டதாக நினைத்துக் கொண்டு தானே ஏமாந்து போயிருப்பது அவளுக்கு இன்று விளங்கியது.
கேள்வியைக் கேட்டவன் பதறாமல் கேட்டுவிட்டுச் சலனமின்றி நின்று கொண்டிருந்தாலும் கேட்கப்பட்டவளால் அப்படிப் பதறாமல் நிற்க முடியவில்லை. சந்தனக் கல்லில் அரைத்த சந்தனம் சரிவு சரிவாய் இழைத்து மடிந்தாற்போல் அவள் முகம் சுருங்கியது. வாட்டமும் கண்டது. ஆனால் அந்த வாட்டமும் பதற்றமும் தன்னிடம் நீடிக்க விடவில்லை அவள். எதிரே படிப்பினாலும் தவத்தினாலும் இளைத்து வெளுத்துத் தூய்மையால் செழித்து அவன் நிற்கும் தோற்றம் என்ன மறுமொழி கூறுவதென்ற திகைப்பை அவளுக்கு உண்டாக்கினாலும் மெல்லிய குரலில் அவள் பேசினாள்:
“மன்னிக்க வேண்டும். நேற்றிருந்த சூழ்நிலையில் நான் எதை எப்படி மாற்றிக் கூறியிருந்தாலும் அதை இன்று மறந்து விடுங்கள். நேற்று நிகழ்ந்ததைப் பற்றி இன்று பேச்சு எதற்கு? நேற்றைக்கு நானும் வசந்த மாலையும் இங்கு வந்திருந்த சூழ்நிலை வேறு. இன்றைக்கு நாங்கள் எல்லோரும் இங்கு வந்திருக்கிற சூழ்நிலை வேறு. இப்போது இந்த இடத்தில் அந்த வேறுபாட்டை விளக்கிக் கூற முடியாமல் இருப்பதற்காக அருள்கூர்ந்து எங்களைப் பொருத்தருள வேண்டும்” என்று அவள் கனி இதழ்களில் இருந்து வார்த்தைகள் பிறந்தபோது இளங்குமரனுடைய இதழ்களில் நிர்விகாரமான் புன்னகை ஒன்று அரும்பியது.
“நேற்று நிகழ்ந்ததை இன்று பேசக்கூடாது. ஆனால் ‘என்னைத் தெரியவில்லையா?’ என்று நீங்கள் பேச்சைத் தொடங்கியதே தவறாயிற்றே அம்மணீ! ‘தெரிய வில்லையா?’ என்று நீங்கள் கேட்டதனால்தான், ‘உங்களை எப்படித் தெரிந்துகொள்வது? நேற்றுத் தெரிந்தது போலவா, இன்று தெரிவது போலவா?’ என்று நானும் கேட்க நேர்ந்தது.”
“நீங்கள் கேட்க நேர்ந்ததைப் பற்றி மகிழ்ச்சி. இன்று தெரிவது போலவே என்றும் நான் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பது தான் என் விருப்பம். யாருக்கு எப்படித் தோன்றினாலும் உங்களுக்கு நான் சுரமஞ்சரி யாகவே தெரிய வேண்டுமென்றுதான் விரும்புகிறேன்.”
“உங்கள் விருப்பம் அப்படி இருக்கலாம். ஆனால் இந்த உலகத்தில் சித்திரங்களிலும், சிலைகளிலும், மகாகவிகளின் காப்பியங்களிலும்தான் இன்றுள்ளது போன்ற குணத்தை என்றும் காண முடிந்த வகையைச் சேர்ந்த உத்தம மனிதர்களைப் பார்க்க முடிகிறது. வாழ்வில் கண்முன் காண்கிற மனிதர்களின் குணம் என்னவோ மாறிக் கொண்டேதான் இருக்கிறது. தீ சுடுமியல்பை உடையது. நீர் குளிர்ந்தே இருப்பது என இயற்கைப் பொருள்களின் பொதுக் குணத்தை உறுதிப் படுத்திச் சொல்ல முடிந்தாற்போல மனிதர்களுடைய குணத்தை எப்படி உறுதிப் படுத்திச் சொல்ல முடியும்? அந்தந்த விநாடிகளின் நினைவுகளே அந்தந்த விநாடி களுக்குரிய குணங்களாகவும் சத்தியங்களாகவும் கொண்டு எந்த விநாடியில் இருந்தது சொந்தக் குணமென்று தெரியாமல், எந்த விநாடியில் எண்ணியது எல்லா விநாடிகளுக்கும் சத்தியம் என்றும் தெரியாமல் வாழ்கிறவர்களுக்கு நிலையான குணம் இது என்று எதைச் சொல்வது?”
“இப்பொழுது கூறிய வார்த்தைகள் யாருக்காகவோ?”
“தனியாக யாருக்கென்று சொல்வது? உனக்காக, உங்களுக்காக, எனக்காக, எல்லாருக்காகவும்தான். ஓடுகின்ற ஆற்று நீர் போல் சென்ற கணத்தில் இங்கு நின்றது அடுத்து கணத்தில் எங்கு நிற்பதெனத் தெரியாத தாய் எங்கும் நில்லாமல் ஓடிக்கொண்டே எல்லா இடத்திலும் நிற்பது போல் தெரிவதனால் குணம் ஓர் இயக்கம். இயக்கமில்லாத நிலையான சத்துவ குணத்தை அருட்கவிகளின் தெய்வீகமான காப்பியங்களில் வரும் உத்தமமான பாத்திரங்களிடம்தான் காண முடியும். மனம் சத்துவ குணமே நிரம்பியதாகும் போது உலகம் சுகரூபமாகவும், இராஜச குணமே நிரம்பியதாகும் போது அதே உலகமே துக்க ரூபமாகவும், தாமத குணமே நிரம்பியதாகும் போது மோக ரூபமாகவும் தெரிகிறது. ஒரு சமயம் சுகமாய்த் தோன்றியது மற்றொரு சமயம் துக்கமாகவும், துக்கமாகத் தோன்றியது சுகமாகவும், மனத்துக்கும் அங்கு நிற்கும் குண நிலைக்கும் ஏற்ப மாறித் தோன்றுவதை எப்படி வரையறுக்க முடியும்?”
“வரையறைகளையும் இலக்கணங்களையும் பற்றி நீங்கள் என்னிடம் பேசுவதைப் பார்த்தால் என்னையும் உங்களோடு வாதிட வந்தவளாக நினைத்துக் கொண்டு விட்டதாகத் தெரிகிறது. நானும், என்னோடு வந்திருப்பவர்களும் உங்களை வாதுக்கு அழைக்க வரவில்லை. வணங்கிச் செல்வதற்கே வந்தோம்.”
“அப்படியா? மற்றவர்கள் என்னை வணங்குவதையும் சேர்த்து என்னால் வணங்கப்படுகிறவர்களுக்குப் பாவனையால் அனுப்பிவிடுகிறவன் நான். இப்படி வணக்கங்களையும் கூட ஏற்று மகிழ முடியாதவனைத் தேடி வந்து வணங்குவதில் உங்களுக்கு என்ன தான் சுகம் கிடைக்கப் போகிறது?”
“உலகத்தில் சுகம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தே எல்லாக் காரியங்களையும் செய்ய முடியுமோ? தொடர்ந்து துக்கமும், வெறுப்பும், அலட்சியமும் கிடைக்கிற இடத்தில் வந்து நிற்கும்போது அங்கே சுகம் கிடைக்காதென்று உணர்ந்திருந்தும் மனம் அந்த அவநம்பிக்கையிலே தான் சுகம் ஒளிந்திருப்பது போல துரத்திக் கொண்டு வந்து நிறுத்துகிறதே...?”
சுரமஞ்சரி இந்தச் சொற்களைச் சொல்லும்போது அவள் விழிகளில் நீர் சுழன்று ஈரம் மின்னுவதை இளங்குமரன் கண்டும் அமைதியாகவே நின்றான். நன்றாக நிமிர்ந்து அதுவரை இவ்வளவையும் பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தைத் தானும் பார்த்தான் அவன். சுரமஞ்சரி நெகிழ்ந்த குரலில் மேலும் கூறலானாள்.
“இன்று நாங்களாக வரவில்லை. எங்கள் தந்தையாருடைய வேண்டுகோளின்படி இங்கே உங்களைத் தேடி வந்தோம்.”
“உங்கள் தந்தையார் என்ன வேண்டுகோள் விடுத்தார்?”
“‘நாளங்காடியில் யாரோ ஓர் இளைஞர் காண்போர் வியந்து வணங்கும்படி அழகாக வாதிடுகிறார். அவரை இந்த நகரத்து அறிவுடைப் பெருமக்கள் எல்லோரும் போற்றுகிறார்கள். புண்ணிய சீலராகிய அந்த இளைஞரை வணங்கி வாழ்த்துப் பெறுவது பெரும் பேறு எனக் கருதுகிறார்கள். நீங்களும் இன்று போய் அவர் பாதங்களில் பூக்களைக் குவித்து வணங்கி வாழ்த்துப் பெற்று வாருங்கள்’ என்று எங்கள் தந்தையார் எங்களிடம் கூறியனுப்பினார்.”
“உங்கள் தந்தையார் பிறரை வணங்கவும் விரும்புவது உண்டு போலும். மற்றவர்களை வணக்குவித்து மகிழ்கிறவர்களால் வணங்கி மகிழவும் முடியுமோ, அம்மணீ?”
இளங்குமரனின் இந்தக் கேள்வி தனக்குக் கொடுக்கப்பட்ட சூடு என்பதைச் சுரமஞ்சரி உணர்ந்தாலும் இதற்குப் பதில் கூறாமல், பின்புறம் சற்றே விலகி நின்ற யவனப் பணியாளனிடமிருந்து பூக்கூடையை வாங்குவதற்காகத் தன் பூங்கரங்களை வளைகள் குலுங்க நீட்டினாள். கூடியிருந்தவர்கள் அந்தப் பெரிய பூக்கூடையைப் பார்த்து வியப்பில் மூழ்கினார்கள், அடடா! எவ்வளவு பெரிய பூக்கூடை இது!
“இவ்வளவு பெரிய கூடை நிறையப் பூக்களைக் கொண்டு வந்திருக்கிறவர்களுக்கு இந்த இளைஞர்மேல் எவ்வளவு மதிப்பு இருக்க வேண்டும்!“ என்று கூட்டத்தில் யாரோ வியந்த குரல் இளங்குமரனுடைய செவிகளில் இலேசாக ஒலித்தது. பக்தியின் அளவைப் பூக்களின் அளவால் கணக்கிடும் பேதமையை எண்ணி மனதுக்குள் சிரிக்கும் உணர்வு பிறந்தது அவனுக்கு. பட்டினப் பாக்கத்துப் பெருமாளிகைச் செல்வர் தன்னை நேற்று நாளங்காடி வழியில் தேரிலிருந்தபடியே சந்தித்ததையும் தான் போக வழியில்லாமல் மறித்ததையும் நினைத்து இன்று அவரே தன்னை வணங்கி வருமாறு கூறிப் பெண்களைப் பூக்கூடையுடன் அனுப்பியிருப்பதைத்தான் எப்படி நம்புவது என்றும் நினைத்துச் சிலகணங்கள் சிந்தனையில் சந்தேகங்கள் பட இருந்தான் இளங்குமரன். ‘உலகம் முழுவதும் சத்தியமும் நம்பிக்கையுமே நிறைந்திருப்பதாகப் பாவித்த ஞானம்’ நினைவில் மேல் நின்ற காரணத்தால் நீரில் எழுதினவை போல் அந்தக் கீழான சந்தேகங்கள் மிக விரைவில் அவன் மனத்திலிருந்து அகன்று பழக்கப்பட்டு இருந்த சத்துவ குணமே விஞ்சி நின்றது. அதனால் மகா கவிகளின் காவியங்களில் பிறந்த உத்தம குணமே நிறைந்த உன்னதமான கதாபாத்திரங்கள் என்று அவன் சற்றுமுன் சுரமஞ்சரியிடம் கூறியிருந்தாற்போலத் தானே ஓர் உத்தம கதாபாத்திரமாகி நின்றான். அவளுடைய கைகளும் பூக்களும் குவிந்து வணங்கப் போவதை எதிர்பார்த்தும் அந்த மென்மையான வணக்கத்தில் விருப்போ வெறுப்போ இல்லாமல் உதாசீனனாகக் கண்களை மூடித் தன் ஆசிரியரை நினைத்துத் தியானத்தில் மூழ்கினான்.
ஆனால் பூக்கூடைக்குக் கைகளை நீட்டிய சுரமஞ்சரியிடம் பணியாளன் கூடையை தர மறுத்தான்:
“நீங்கள் விலகி இருங்களம்மா! இவ்வளவு பெரிய கூடையைத் தூக்கித் திறந்து பூக்களைக் கொட்டுவதற்கு உங்களால் முடியுமா? நானே கூடையைத் திறந்து பூக்களை இவர் பாதங்களில் படைக்கிறேன்” என்று பணிவான குரலில் கூறிவிட்டுத் தானே கூடையோடு முன் வந்து இளங்குமரனை நெருங்கினான் பணியாளன்.
“நீ பூக்கூடையைக் கொடு! நான்தான் இவர் பாதங்களில் பூக்களைப் படைக்க வேண்டும். புண்ணியத்தையெல்லாம் நீ பெற்றுக் கொள்ளலாம் என்று பார்க்கிறாயா அது முடியாது” என்று வேடிக்கையாகவும் பிடிவாதமாகவும் கூறிப் பணியாளனை மறித்து சுரமஞ்சரி கூடையைப் பிடித்தாள். அவன் உடனே சற்றுப் பயந்து பதறினாற்போன்ற குரலில், “வேண்டாம் அம்மா! விட்டுவிடுங்கள்” என்று சொல்லிக் கூடையை இறுகப் பற்றிக் கொண்டான். அவள் அவன் கூறியபடி கேட்காமல் கூடையைத் தன் பக்கமே இழுத்தாள்.
உயரமும் அகலமுமான அந்தப் பெரிய பூக்குடலையை இருவரும் மாறி மாறித் தம் பக்கம் இழுத்ததனால் குடலையே இருவருக்கும் மாறி பொதுவில் கீழே விழுந்து சரிந்தது. பூக்கள் சிதறின. அவ்வளவில் யாரும் எதிர்பாராத குடல்நடுக்கும் காட்சியொன்றைக் கூடியிருந்தவர்கள் கண்டார்கள்.
ஆ! இதென்ன? சரிந்த பூக்களோடு குடலைக்குள்ளிருந்து கருநாகம் ஒன்று சீறிக்கொண்டு வருகிறதே! கரி பூசிய அரசிலை போல அதன் படம் இளங்குமரனின் பாதங்களுக்கு மேலே உயர்கிறதே! ஐயோ!
கூட்டம் நிலைகெட்டு ஓடியது. சுரமஞ்சரி ஒன்றும் புரியாமல் ‘வீலெ’ன்று அலறிப் பின்வாங்கினாள். பூக்களின் அடியிலிருந்து முடிவற்ற நீளமாய்க் கருமை பெருகிவரச் சர்ப்பம் தன் முழு உருவமும் தெரிய வெளியேறிப் பொன் மெருகிட்டாற் போன்ற அவன் பாதங்களில் நெளிந்து படத்தைத் தூக்கிக் கொண்டு நின்றது. சுரமஞ்சரி பயங்கரமாக அலறிவிட்டு மூர்ச்சையாகித் தான் நின்ற இடத்திலேயே மயங்கிச் சுருண்டு விழுந்தாள்.
இந்த உலக நினைவே இல்லாதவனாகி இளங்குமரன் சிலையாய் நின்றான். அவனுடைய கண்கள் மூடிய நிலை மாறாமல் அப்படியேயிருந்தன. பிளந்த நுனி நாக்குகள் இரண்டும் அக்கினிக் கொழுந்தாய் நெளிய ‘என் நஞ்சையெல்லாம் இந்த அழகிய பாதங்களில் அர்ப்பணம் செய்துவிட்டு நான் தூய்மை யடைந்து விடட்டுமா?’ என்பது போல் படந்தூக்கி நின்றது நாகம். யாருடைய பாதங்களில் அந்தப் படம் நின்றதோ? அவன் மனத்தில் வேறொரு படம் அதாவது அவனை இப்படி ஆக்கிய ஞான குருவின் படம் நின்றது.
நெஞ்சுக்குள்ளேயே கிடைத்த குரு தரிசனத்தை முடித்துக்கொண்டு அவன் கண்களைத் திறந்தபோது அங்கே அவனெதிரில் நீலதாகமறவர் நின்று கொண்டிருந்தார். அவர் கைகளில் ஒரு கருநாகம் படத்தோடு சேர்த்து இறுக்கிப் பிடிக்கப்பட்டிருந்தது. கீழே சுரமஞ்சரி மயங்கி விழுந்து கிடந்தாள். சுற்றிலும் கூட்டத்தினர் மிரண்ட கண்களோடு பார்த்துக் கொண்டிருந்த போதே அந்தச் சர்ப்பத்தைக் கீழே எறிந்து படத்தை மிதித்துக் கொண்டு நின்றார் நீலநாகமறவர். “தொழுத கையுள்ளும் படையொடுங்கும் என்று நேற்று நான் கூறியிருந்ததை இவ்வளவு விரைவில் நீ மறந்துவிடுவாயென்று நான் நினைக்கவில்லை இளங்குமரா! இந்தச் சமயத்தில் நான் இங்கு வந்து சேர்ந்திருக்கவில்லையானால் இதற்குள் நீ பாம்பு கடித்து இறந்துபோயிருப்பாய்” என்று சினத்தோடு அவனைக் கடிந்து கொண்டார் நீலநாகர். அதற்குள் வானவல்லியும், வசந்தமாலையும் ஓடிவந்து சுரமஞ்சரியின் மயக்கத்தைத் தெளிவித்திருந்தார்கள். அவர்களோடு வந்திருந்த யவனப் பணியாளனை மட்டும் காணவில்லை. அவன் எங்கோ ஒடிப் போயிருந்தான்.
கூடியிருந்த கூட்டத்தினரும் நீலநாகரும் அந்தப் பெண்களைச் சுட்டெரித்து விடுவது போலப் பார்த்தார்கள்; முணுமுணுத்தார்கள். “இவள் பெரிய வஞ்சகப் பெண் பேய்! இல்லாவிட்டால் இவர் மேல் பெரும் பக்தியுள்ளவளைப் போல் நடித்துப் பூக்குடலைக்குள் பாம்பை மறைத்துக் கொண்டு வந்து இவரைக் கொலை செய்ய முயலுவாளா? என்ன அநியாயம்? பூம்புகார் நகரம் எவ்வளவோ கெட்டுப் போய்விட்டது ஐயா! ஒரு பாவமுமறியாத இந்த இளைஞரைக் கொன்று இவளுக்கு என்னதான் ஆகப்போகிறதோ?” என்று கூட்டத்திலிருந்து தன்னைப் பற்றிப் பலவிதமாக எழுந்த குரல்களைக் கேட்டுச் சுரமஞ்சரி நெருப்பைக் கொட்டினாற்போல் துடித்தாள். இளங்குமரனோ புன்முறுவல் மாறாத முகத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“எனக்கு ஒரு பாவமும் தெரியாது, ஐயா! எங்கள் தந்தை கூறியபடி மலரிட்டு வணங்க வந்தேன்...” என்று தொடங்கி உணர்ச்சிகரமாக நெகிழ்ந்து வாய்விட்டு அழுதுகொண்டே ஏதோ சொல்ல வந்த சுரமஞ்சரியை நோக்கி இடி முழக்கக் குரலில் தூற்றிப் பழித்துவிட்டு வெறும் பழிப்பால் மட்டும் அடக்க முடியாத சினத்தில் என்ன செய்கிறோம் என்ற உணர்வே இன்றிக் கீழே கிடந்த கல் ஒன்றை எடுத்து அவள்மேல் எறியப் பாய்ந்தார் நீலநாகமறவர். அவ்வளவுதான்! அந்தப் பெரிய கூட்டத்துக்கு உணர்ச்சித் தீயை மூட்டிவிட்டாற் போல் ஆயிற்று அவர் செயல். எல்லாரும் அவரவர்களுக்குத் தோன்றியபடி கல்லையும், கட்டையையும் எடுத்து எறியத் துணிந்து விட்டார்கள். தாங்கள் உயிர் பிழைத்துப் பட்டினப்பாக்கத்துக்குத் திரும்பப் போவதில்லை என்று அந்த மூன்று பெண்களும் உணர்வு செத்து உயிர் மட்டும் சாகாமல் மருண்டு நின்றபோது ஒரு விந்தை நிகழ்ந்ததைக் கண்டார்கள். யாரும் எதிர்பாராதவிதமாக “எல்லாவற்றையும் இந்த உடம்பில் எறியுங்கள்!” என்று இளங்குமரன் அவர்களுக்கு அருகில் வந்து முன்புறம் நின்றுகொண்டான். அவர்களை நோக்கி எறியப் பெற்றுப் பாய்ந்து வந்த சில கற்கள் அவன்மேல் விழுந்தன. அடுத்த கணம் கூட்டத்தினரும், நீலநாகரும் ஒன்றுமே செய்யத் தோன்றாமல் திகைத்து நின்றார்கள். கற்கள் அவர்கள் கைகளிலிருந்து நழுவின.
“வேறு பூக்களை நம்பாமல் என்னையே உயிர்ப் பூவாக உங்கள் பாதங்களில் சமர்ப்பணம் செய்கிறேன்” என்று கண்ணிர் மல்க இளங்குமரன் பாதங்களில் வீழ்ந்தாள் சுரமஞ்சரி. நீலநாகர் புயலாக மாறினார்; இடியாக இடித்தார்: “விலகிப் போ. உனக்கு அந்தப் பாதங்களை வணங்குவதற்கு என்ன தகுதி இருக்கிறது ? குடலைக்குள் நாகப்பாம்பைக் கொணர்ந்தது போல உன் இதயத்தில் நீ என்னென்ன நச்சு எண்ணங்களை அடைத்துக் கொண்டு வந்திருக்கிறாயோ?” என்று இரைந்து கத்திக் கொண்டே ஓடி வந்து அவளை அவன் பாதங்களிலிருந்து அவர் விலக்க முயன்றபோது அவள் தானாகவே விலகுவதற்காக நிமிர்ந்தாள். அப்படி அவள் விலக நிமிர்ந்தபோது கல்லெறிபட்டு இளங்குமரன் நெற்றியில் காயமாயிருந்த இடத்திலிருந்து இரத்தத்துளி ஒன்று சிவப்பு இரத்தின மணிபோல் உருண்டு சரிந்து நழுவி, அவளுடைய நெற்றியில் திலக மிட்டாற் போல் உதிர்ந்தது. அவனுடைய அந்த நெற்றிக் காயத்தைத் தன் கைகளால் தானே துடைக்க வேண்டு மென்று சுரமஞ்சரியின் இதயம் தவித்தது.
“உத்தம குணமே நிறைந்து சத்திய தரிசனம் தரும் உன்னதமான மனிதர்களைக் காவியங்களில்தான் காண முடியும் என்று நீங்கள் கூறியது தவறு. இதோ வாழ்விலேயே என் கண்முன் உங்களை அப்படி உத்தமராக நான் காண்கிறேனே!” என்று அவனிடம் சொல்வதற்கு அவள் நாவு துடித்தது, ஆனால் சொல்வதற்கு வேண்டிய வார்த்தைகள் வரவில்லையே, அவள் தவித்தாள்.
“இதென்ன அநியாயமடி, வசந்தமாலை? பூக்கூடையில் பாம்பு எப்படி வந்தது?” என்று பேயறைந்தாற்போல் அரண்டுபோய் நின்று கொண்டிருந்த வானவல்லி வசந்தமாலையின் காதருகே மெல்லக் கேட்டாள்.
“ஏதோ சூழ்ச்சி நடந்திருக்கிறது, அம்மா. யார் செய்ததென்றுதான் சொல்ல முடியவில்லை. நான் இதை அப்போதே நினைத்தேன். ஒரு நாளும் இல்லாத திருநாளாய் உங்கள் தந்தையார், இங்கே போய் வருமாறு நம்மை அனுப்பிய போதே இதில் ஏதோ சூது இருக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியது” என்று மெல்லிய குரலில் அவள் செவியருகே முணுமுணுத்தாள் வசந்தமாலை.
இடது கையை நெற்றிக் காயத்தின் மேல் வைத்து அடைத்துக் கொண்டு, புன்னகை குன்றாத மலர்ச்சி முகமெங்கும் முன்போலவே இலங்க இளங்குமரன் சுரமஞ்சரியைப் பார்த்தான். மெல்ல வலது கையை உயர்த்திச் செந்தாமரைப் பூவின் உள் இதழ் போன்ற அகங்கையை அசைத்து நீங்கள் போகலாமே என்று குறிப்பைப் புலப்படுத்தினான். அவள் அதைப் புரிந்து கொண்டாலும் தயங்கி நின்றாள். கண்களிலும் இதழ்களிலும் எதையோ பேசவேண்டுமென்ற உணர்வும் தயங்கி நின்றது.
“நான்... நான்... ஒரு பாவமும் அறியாதவள்... இப்படி யாரோ சூது செய்திருக்கிறார்கள்... என்னை மறுபடியும் மன்னிக்க வேண்டும்” - அவள் சொற்களைக் குழறினாள். தண்ணிரில் நனைந்த புதிய பட்டுப்போல் முழுமை தோயாமல் சொற்களைப் பேசியது அவள் சோகம். அவன் நன்றாக வாய்விட்டுச் சிரித்தான். நீண்ட நாட்களுக்குப் பின் இன்று தான் முதன் முறையாக இப்படிச் சிரிக்கிறான் அவன்.
“நான் இதைக் குற்றமாக எடுத்துக் கொண்டு வேதனைப் பட்டால்தானே உங்களை மன்னிக்கலாம். நான் இதை அப்படி எடுத்துக் கொள்ளவில்லையே?”
“நீங்கள் மகாகவிகளுக்கும் உத்தம நாயகனாகக் காவியங்களில் வாழவேண்டிய பேராண்மையாளர். அதனால் எதையும் பிறர் குற்றமாக எடுத்துக்கொள் வதில்லை. ஆனால் நான் சாதாரணப் பெண். நான் செய்தது குற்றமென்று என் மனமே உறுத்துகிறது.”
இதற்கு அவனிடமிருந்து பதிலே இல்லை. மெளனம் தான் நிலவியது. சிரித்துக்கொண்டே பழையபடி அவளை நோக்கி கையை அசைத்தான் அவன்.
சுரமஞ்சரி கூட்டத்தினரின் வசை மொழிகளைச் செவிகளில் நிரப்பிக்கொண்டு பல்லக்குத் தூக்கிகள் காத்துக் கொண்டிருந்த இடத்துக்கு நடைப் பிணமாகச் சென்றாள். வசந்தமாலையும் வானவல்லியும் பின் தொடர்ந்தனர். கூட்டத்தில் சிலர் அவர்களைக் கண்டு வெறுப்புடனே வேறு புறமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு காறியுமிழ்ந்தனர். கைகளைச் சொடுக்கி முறித்தனர்.
“இப்படிக் கெட்ட குணம் படைத்த பெண்களை ஏழு செங்கல் தலையிட்டுக் கழுதை மேலேற்றிப் பூம்புகார்த் துறைமுகத்துக்கு எதிரேயுள்ள வெள்ளிடை மன்றத்தைச் சுற்றிவரச் செய்ய வேண்டும்” என்று அந்த ஊர் வழக்கமான தண்டனையை அவர்களும் கேட்கும் படி இரைந்து கத்தினான் கூட்டத்தில் ஒருவன். கலகலப்பிலிருந்து விலகிப் பல்லக்கின் அருகில் வந்ததும் சுரமஞ்சரி சூறாவளியானாள்.
“அடி வானவல்லி! இந்தப் பல்லக்கு பரிவாரம் எடுபிடியாட்கள் பொன்னும் மணியுமாக மின்னும் அணிகலன்கள் எல்லாவற்றையும் இடித்து நொறுக்கிக் கொண்டுபோய் நேர்கிழக்கே கடலில் கொட்டுங்கள்! என்னை விட்டுவிடுங்கள். இந்தப் பல்லக்கு நரகத்துக்குப் போகும் வாகனம். நான் இதில் ஏறி வர மாட்டேன். இந்தா! எப்போதோ செய்த பாவங்களைப் போல் என் உடம்பைச் சுற்றிக் கொண்டிருக்கும் இந்தப் பொன்னரிமாலை, மின்னிடை ஒட்டியாணம் முன் கை வளையல்கள் எல்லாவற்றையும் கொண்டுபோ, என் தந்தையாகிய கொடும்பாவியிடம் கொடு” என்று வெறியோடு அறைகூவியவளாய்த் தன் உடம்பில் அங்கங்கே இருந்த அணிகலன்களைத் தாறுமாறாகக் கழற்றிப் பல்லக்கில் எறியலானாள் சுரமஞ்சரி. “அம்மா! அம்மா! இதென்ன காரியம்? பொது இடத்தில் எல்லாரும் காண இப்படி?” என்று தன்னைத் தடுக்க முன்வந்த வசந்தமாலையைப் பிடித்துத் தள்ளினாள் அவள்.
இந்திர விழாவின் இரண்டாவது நாள் காலையில் நாளங்காடியில் இவ்வளவு நிகழ்ச்சிகளும் பரபரப்பாக! நிகழ்ந்து கொண்டிருந்தபோது இவற்றுக்குக் காரணமான இருவரோ பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகையிலிருந்தே வெளியேறாமல் தங்களுக்குள் அந்தரங்கமாகப் பேசி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.
வெயில் குறைவாக இருந்த அந்தக் காலை நேரத்தில் மேக மூட்டத்தினால் கவிந்திருந்த வானத்தின் கீழே பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகையின் ஏழாவது மாடத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள் பெருநிதிச் செல்வரும், நகைவேழம்பரும். தாங்கள் நின்று கொண்டிருந்த உயரத்திலிருந்து பார்த்தபோது கடல், காவிரிப் பூம்பட்டின நகர் ஆகியவற்றின் தோற்றம் கீழே அவர்களுக்கு மிகத் தாழ்ந்து தெரிந்தது. தொலைவில் நீலநிறம் கன்றிப் பாளம்பாளமாக மின்னும் கடல் அலைகள் வரை நீண்டு படரும் பார்வையைத் திருப்பிக் கொண்டு பக்கத்தில் நின்ற நகைவேழம்பரைப் பார்த்துக் கேட்டார் பெருநிதிச் செல்வர்:
“சமய நூல்களின் முடிந்த பயன் மோட்சத்துக்குப் போவதுதானே? அந்தப் பயன் இதற்குள் அவனுக்குக் கிடைத்திருக்கும். பூக்குடலைக்குள் சிறைப்பட்டுக் கிடந்த கருநாகம் குடலை கவிழ்ந்ததும் சீறிக்கொண்டு பாய்ந்தி ருக்கும். நாம் எதிர்பார்த்த காரியத்தையும் தவறாமல் செய்திருக்கும்.”
“ஆனால் பூக்குடலையைச் சுமந்துகொண்டு போனவனைத் தவிர மற்றவர்கள் ஒன்றும் புரியாமல் திடுக்கிட்டுப் போயிருப்பார்கள். பாவம்! உங்கள் பெண் சுரமஞ்சரி நன்றாக ஏமாந்து போயிருப்பாள். தன் மனத்தைக் கவர்ந்தவனுடைய பாதங்களில் மலர்களைக் குவிக்கப் போவதாய் எண்ணிக் கொண்டு சென்றிருப்பாள்.”
“எல்லாம் உங்களுடைய சூழ்ச்சிப் பயன்தான் நகை வேழம்பரே. அழிப்பதற்கும் கெடுப்பதற்கும் பாழாக்குவதற்கும் வேண்டிய சிந்தனைகளை நயமாக உருவாக்கிச் சொல்வதில் உங்களுக்கு இணைதான் இல்லவே இல்லையே?” என்று பெருநிதிச்செல்வர் கூறிய வார்த்தைகளில் பாராட்டோடு சிறிது குத்தலும் இருப்பதை நகைவேழம்பர் உணர்ந்தார். அதாவது, ‘உன்னை வைத்து ஆதரித்து வளர்த்துக் கொண்டு வரும் என்னைக் கவிழ்க்க வேண்டுமென்று உனக்குத் தோன்றினால்கூட அதற்கும் இப்படி ஏதாவது நயமான சூழ்ச்சியைச் செய்வதற்கு நீ தயங்கமாட்டாய்’ என்று அவருடைய வார்த்தைகளில் தனக்கும் ஒரு தொனி இருப்பதை நகைவேழம்பரால் ஊடுருவிக் காணமுடிந்தது.
“சூழ்ச்சிகளைக் கேட்பதற்கும், செயலாக்குவதற்கும் உங்களைப்போல் துணிந்த கட்டைகள் இருக்கும்போது நான் சொல்லிக் கொடுப்பதுதானா பெரிய காரியம்?” என்று தொனிப் பொருள் உள்ளடங்குகிற விதத்திலேயே பதிலும் கூறினார் நகைவேழம்பர். ‘துணிந்த கட்டை’ என்ற பதச் சேர்க்கைக்கு மட்டும் ‘துணிவில்லாத கட்டை’ என்கிற குறிப்புக் கொடுத்து ஒலித்தாற் போலிருந்தது.
தங்கள் இருவருக்கும் இடையே உரையாடல் தொடங்கியதும் தொடர்வதும் விரும்பத்தக்க வழியில் அமைந்ததாகப் படாததனால் பேச்சை நிறுத்திக் கொண்டு மறுபடியும் பார்வையைத் தொலைவில் கடல் அலைகள் வரை படர விட்டார் பெருநிதிச் செல்வர். ஆனால் நகைவேழம்பர் அவரை அப்படியே விடவில்லை. உரையாடலைத் தொடர்வதன் மூலமாக அவருடைய கவனத்தை மறுபடியும் தம் பக்கமாகத் திருப்பினார்.
“இப்போது செய்திருக்கும் சூழ்ச்சியில் இரண்டு வகையிலும் பயன் உண்டு. யார் கடியுண்டு சாக வேண்டுமென்று பாம்பை மலர்களில் சிறை செய்து அனுப்பினோமோ, அவனைக் கடிக்காமலே அது அடிபட்டு இறந்து போனாலும், வேறு ஒரு பயன் நாம் நினைத்தது போல் விளையும். அந்தப் பயல் உங்கள் புதல்வி சுரமஞ்சரியை இனிமேல் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டான். சுரமஞ்சரி மிகக் கொடியவள் என்று இந்த நிக்ழ்ச்சி அவனை எண்ணச் செய்யும்.”
“எப்படிச் செய்யுமோ? எப்படிச் செய்யாமற் போகுமோ? பாம்போடு விளையாடுவது என்று கேள்விப் பட்ட தில்லையா? என்ன நடந்ததென்று முடிவாகத் தெரிகிற வரை என் நெஞ்சு அடித்துக் கொண்டுதான் இருக்கும். அந்தப் பூக்குடலையைச் சுமந்துகொண்டு போன யவனத் தடியனிடம் நன்றாகச் சொல்லியிருக்கிறீரோ இல்லையோ? அயர்ந்து மறந்து குடலையை அவன் இந்தப் பெண்களில் யார் கையிலாவது கொடுத்துத் தொலைக்காமல் இருக்க வேண்டுமே என்பதுதான் என் கவலை...”
“எதை எதிர்பார்த்துச் செய்கிறோமோ அதுவே நடக்குமென்று பிடிவாதமாக நம்புவதோடு சிந்தனையை நிறுத்திக் கொள்ளுங்கள். அதற்கு மேலும் ஒருபடி அதிகமாகப் போய் ‘இப்படியும் இது நடக்கலாமே?’ என்று நினைத்தாலே வம்புதான். வேறு வேறு கோணங்களில் மாறிச் சிந்திக்கும் போது கவலையும் பயமும்தான் அதிகமாகும். அதிகமாகச் சிந்தனை செய்தால் அதிகமாகக் கவலைப்பட வேண்டிய அவசியம் உண்டாகும்.”
“இது நீர் அடிக்கடி சொல்கிற வார்த்தைதான் நகைவேழம்பரே, ஆனால் எதை எதிர்பார்த்துச் செய்கிறோமோ அதுவே நடக்கும் என்று எதிர்பார்த்து இரண்டு மூன்று முறை ஏமாந்து விட்டோம் நாம்! சுடுகாட்டுக் கோட்டத்து பேய்மகளாகிய பைரவியே எதிர்பார்த்ததைச் செய்ய முடியாமல் அலறிக் கொண்டு ஓடி வந்ததை அதற்குள் மறந்து போய்விட்டீரா?” என்றார் பெருநிதிச் செல்வர்.
மேகமூட்டம் கலைந்து மேல்மாடத்தில் வெயில் பரந்தது. நகைவேழபர் மறுமொழி கூறாமல் இருந்தார். தொலைவில் கடல் அலைகள் வெள்ளியம் உருகினாற் போல நன்றாக மின்னின. நகரத்தின் நாற்புறமும் மரங்களிலும் மன்றங்களிலும் சிறு வீடுகளிலும், பெரு மாளிகைகளிலும், அரண்மனைகளிலும் ஆலயங்களிலும் இந்திர விழாவுக்காக ஏற்றிய கொடிகள் வெயிலில் பட்டொளி வீசின. தனித்தன்மை தெரியாமல் கலப்புற்ற பலவகை ஒலிகள் காற்றில் மிதந்து வந்தன. கண்களுக்கு எட்டின. தொலைவில் தென்பட்ட நாளங்காடி மரக் கூட்டத்தின் மேற்பரப்பைப் பார்த்தபோது அவற்றின் கீழேயிருந்து பாம்பு கடிக்கப் பெற்று அலறும் இளைஞன் ஒருவனுடைய குரல் பெரிதாய் எழுந்து ஒலித்தது. நகரத்தின் நான்கு காதமும் பரவுவது போன்ற பிரமையை உணர்ந்தார் பெருநிதிச் செல்வர். நாளங்காடியில் ஒலிக்கின்ற குரல் அந்த மரக்கூட்டத்தைக் கடந்து இவ்வளவு தொலைவுக்குக் கேட்காதென்று நிச்சயமாகத் தெரிந்திருந்தும் அப்படிக் கேட்பது போல அவர் நினைத்துப் பார்க்க விரும்பியதாலோ அல்லது செய்த கொடுமையின் பயத்தினாலோ அந்தப் பிரமை உண்டாக்கியது. பூம்புகார் நகரத்திலேயே உயரமான ‘நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றம்’ என்ற சதுக்கத்தின் தூண், நகர் பரப்பின் ஒரு பகுதியில் தனியாகத் தெரிந்தது. இன்னொரு பக்கம் தரை வழியாகப் பூம்புகாருக்கு வருவோர் நுழையும் கட்டளை வாயில் தொலைவில் தோன்றியது. ‘இந்த இடத்துக்கு உள்ளே இனிமேல் சோழ நாட்டுக் கோபுரத்தின் கட்டளைக்கு உட்படுகிறீர்கள்’ என்று வருகிறவர்களுக்கு எல்லாம் தன் பெயராலேயே சொல்லுவது போலக் கட்டளை வாயில் என்று அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தது அது. வேறு எதைப் பேசி நகைவேழம்பரோடு உரையாடலை வளர்ப்ப தென்று தோன்றாமல் முன்பு பார்த்துக் கொண்டிருந்த திசையிலிருந்து திரும்பி நெடுந்துண் நின்ற மன்றத்தையும், வெளிப் பக்கம் போகிறவனுக்கு அந்தக் கோநகரத்தின் கட்டளைகள் முடிகிற இடமாகவும், உள்ளே வருகிறவனுக்கு அதே கட்டளைகள் தொடங்கு கிற இடமாகவும் இருந்த கட்டளை வாயிலையும் மாறிமாறிப் பார்த்தார் பெருநிதிச் செல்வர்.
‘உண்மைகள் எல்லாம் வெளிப்படுமானால் இவ்வளவு உயரமான மாளிகையின் மேலிருந்து இந்த அழகிய நகரத்தைப் பார்க்க முடியாதவனாகப் போய் விடுவேன் நான்’ என்று ஒருகணம் நினைக்க, வேண்டாததும், நினைத்தாற் கசப்புத் தருவதுமான ஞாபகம் ஒன்று தன்னைப் பற்றியே அவருக்கு உண்டாயிற்று. மேல்மாடத்திலிருந்து கீழே இறங்கிப் போனாலொழிய அந்த ஞாபகத்தை மறக்க முடியாது போலிருந்தது. கண்ணுக்கு முன்னால் தென்படும் விரிவான காட்சி களிலிருந்து பார்வையைக் குலுக்கிக் கொண்டு விரிவாக எதுவும் தென்படாத இடமாகத் தேடி மாளிகையின் கீழ்ப்பகுதிக்குப் போய்விட்டால் நிம்மதியாக இருக்கலாமென எண்ணினார். பூனை கண்ணை மூடிக்கொள்வது போல் மனத்தில் எண்ணமாய் இறுகியிருந்த புற்றுக்களை உடைத்துக் கொண்டு கிளர்ந்த பழைய பாவ உணர்வுகளை ஒளித்து வைக்க ஏதோ ஓர் இருள் அந்தச் சமயத்தில் அவருக்குத் தேவையாக இருந்தது. பார்வையையும் பார்க்கப் படுகிறவற்றையும் குறுக்கிக் கொண்டு விட்டாலே அந்த இருள் கிடைக்கும் என்று நம்பியவராய், “வெப்பம் மிகுதியாகிவிட்டது. கீழே போகலாம், வாருங்கள்” என்று நகைவேழம்பரையும் அழைத்துக் கொண்டு படிகளில் இறங்கினார் பெருநிதிச் செல்வர். அப்படி இறங்கிக் கீழே செல்லும் சமயத்தில் சுடுகாட்டுக் கோட்டத்திலிருந்து திரும்பிக் கொண் டிருக்கும்போது நகைவேழம்பர் தன்னைக் கேட்ட கேள்வியொன்றை மீண்டும் நினைவு கூர்ந்தார் அவர்.
‘பயப்படுகிற எதையுமே நீங்கள் செய்வது இல்லையோ?’
இந்தக் கேள்வியைத் தொடர்ந்து ஒற்றைக்கண் கொலைகாரன் இதைச் சொல்லியதன் மூலமாகத் தனக்கு எதை ஞாபகப்படுத்த விரும்பினான் என்ற சந்தேகம் மீண்டும் வந்தது. தன்னுடைய வாழ்க்கை இரகசியம் மட்டுமல்லாமல் வேறு பல இரகசியங்களையும் இந்தக் கேள்வி அடக்கிக் கொண்டிருக்கிறது என்பதை அவர் உணர்ந்தார். அந்த இரகசியங்களில் பெரும் பகுதி அவரைப் போலவே நகைவேழம்பருக்குத் தெரிந்தவை என்பதனால்தான் கேள்வியினால் ஞாபகப்படுத்தப் பெறுகிற ‘பயங்கர நிகழ்ச்சி’ - எதுவாக இருக்குமென்று அவர் சந்தேகப் பட்டார். நகைவேழம்பரும், பெருநிதிச் செல்வரும் கீழே இறங்கி, மாளிகையின் முன்பகுதிக்கு வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் பூக்குடலையைச் சுமந்துகொண்டு போன யவனப் பணியாளன் வேர்க்க விறுவிறுக்க ஓடிவந்து அவர்களுக்கு முன்னால் நின்றான்.
நெஞ்சு வேகமாக அடித்துக் கொள்ள மனமும், கை கால்களும் நடுங்கிப் பதற, “போன காரியம் என்ன ஆயிற்று” என்று அவனைக் கேட்டார் பெருநிதிச் செலவர். அவன் நாளங்காடியில் நடந்ததை எல்லாம் சொன்னான். சுரமஞ்சரி, வானவல்லி முதலியவர்கள் பூக்குடலை கீழே விழுந்ததும் ஏற்பட்ட பரபரப்பிலேயே அந்தப் பணியாளன் ஒடிவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தாலும், அவன் அதற்கு அப்புறமும் நடந்தவற்றை அங்கிருந்து கவனித்துவிட்டே வந்திருந்தான். பூக்குடலையுடன் அங்கே போனதிலிருந்து சுரமஞ்சரி பல்லக்கின் அருகே வந்து தன் அணிகலன்களைக் கழற்றி எறிந்து, ‘மாளிகைக்கு வரமாட்டேன்’ என்று இப்போது முரண்டு பிடித்துக் கொண்டிருப்பது வரை எல்லாவற்றையும் அவருக்குச் சொன்னான் யவனப் பணியாளன்.
“பாம்பாட்டிக்குக் கொடுத்தனுப்பிய பொற்கழஞ்சுகள் தண்டமாகப் போனதுதான் கண்ட பயன்” என்று நகைவேழம்பருக்கு உறைக்கிறாற்போல அவரைப் பார்த்துச் சினத்தோடு இரைந்து சொன்னார் பெருநிதிச் செல்வர்.
“நான் என்ன செய்வேன்? எல்லா இடத்திலும் அந்த ஆலமுற்றத்து முரடன் உதவிக்கு வந்து நின்று காரியத்தைக் கெடுக்கிறானே!” என்று பதிலுக்குச் சீறினார் நகைவேழம்பர். “தேரில் குதிரையைப் பூட்டிக் கொண்டு வாரும். அந்தப் பெண் எதையாவது உளறி, அங்கே நாளங்காடிக் கூட்டத்தில் என் மானத்தைக் கப்பலேற்றி வைக்கப் போகிறாள். உடனே போய் அவளைச் சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு வரலாம்” என்று அப்போது நாளங்காடிக்குப் போவதற்குப் பறந்தார் பெருநிதிச் செல்வர். அவர் அவசரப் படுத்தியதற்குச் செவி சாய்த்தும் அவசரம் அடையாதது போல - அதே சமயத்தில் அந்தக் கட்டளையை மறுக்கவும் துணியாதவராக நகைவேழம்பர், தனது இயல்பான நடையிலேயே தேரில் குதிரைகளைப் பூட்டிக் கொண்டு வருவதற்காகச் சென்றார். வந்து நிற்கும் பணியாளனுக்கு முன்னால் அவர் இப்படி அலட்சியமாக நடந்து கொண்டது பெருநிதிச் செல்வரைத் திகைக்கச் செய்தது.
கெட்ட கனவு கண்டதுபோல் இவ்வளவும் நடந்து முடிந்ததும் சுரமஞ்சரி முதலியவர்கள் பல்லக்கை நோக்கிச் சென்ற பின்னர் கூட்டத்தில் இருந்தவர்கள் இளங்குமரனை மிக அருகில் நெருங்கி மொய்த்துக் கொண்டு விட்டார்கள். நெற்றிப் பொருத்தில் இரத்தம் கசிய நின்று கொண்டிருந்த அவன் நீலநாக மறவர் மேல் சாய்ந்தாற்போல் இருந்தான். அன்று காலை படைக்கலச் சாலையிலிருந்து நாளங்காடிக்குப் புறப் பட்டபோது தண்ணீரும் பருகாத வெறும் வயிற்றோடு புறப்பட்டிருந்தான் அவன். பசிச் சோர்வும் சேர்ந்து கொண்டது. நெற்றியில் இரத்தம் கசிவதைத் தமது மேலாடையால் துடைத்து விட்டார் நீலநாகமறவர். கூட்டமே இளங்குமரனுக்காக அலமந்தது, பரிந்தது, பதறியது.
“பாவீ! இத்துணைப் பொறுமை ஆகுமாடா உனக்கு? இவ்வளவு கெட்ட எண்ணத்தோடு வந்தவர்களைச் சுகமாகத் திரும்பிப் போக விட்டுவிட்டாயே? அப்படியே கழுத்தை முறித்துப் போட்டிருக்க வேண்டாமா?” என்று அவன் மேலுள்ள அன்பை அவனுக்கு வேண்டாதது செய்தவர்களிடம் வைரம் பாராட்டுவது மூலமாகக் காட்டிக் குமுறிக் கொண் டிருந்தார் நீலநாக மறவர்.
சில நாழிகைக்கு முன் இளங்குமரனோடு சமய வாதம் புரிந்து தோற்ற சாங்கியன் கூட இப்போது அநுதாபம் பொங்க அருகில் நின்றான். அவன் நீலநாகரைப் பார்த்துச் சொல்லலானான்:
“ஐயா! ஒளிமயமான இந்த அழகிய இளைஞரோ ஓர் அதிசய புருடர். அதுதான் சான்றாண்மை. ‘எல்லா உயிரும் இரங்கத்தக்கவை. எந்த உயிரையும் கொல்லக் கூட்டாது’ என்பதுதான் தவம். ஆனால் பிறர் தீமையை வாய் திறந்து சொல்வதும் கூடக் கொலை போன்றதென்று தயங்கும் தயக்கமே சான்றாண்மை. தவத்தைக் காட்டிலும் உயர்ந்ததான அந்தச் சான்றாண்மையையே இவரிடம் பார்க்கிறேன். பிறருடைய உடம்பைப் புண்ணாக்குவது மட்டும் உயிர்க்கொலை என்று நினைப்பதற்கும் அப்பால் போய்ப் பிறருடைய மனத்தைப் புண்ணாக்குவதும் கொலை என்று கருதி வார்த்தைகளைச் சொல்லும்போதும் கடுமையைத் தவிர்த்து விரதம் காக்கிறவர்களான சான்றோர்களின் சாயலை இந்தச் சுந்தர இளைஞரிடம் காண்கிறேன்” என்று இளங் குமரனைப் புகழ்ந்து சாங்கியன் இந்த வார்த்தைகளைக் கூறியபோது ‘ஆகா! ஆகா!’ என்ற குரல்கள் சுற்றியிருந்தவர்களிடமிருந்து உருக்கமாக எழுந்து ஒலித்தன!
கண்களில் விழிகள் சொருகுவதும், திறப்பதுமாக இளங்குமரன் நீலநாகமறவரின் மார்பில் முன்னிலும் தளர்ந்து சாய்ந்தான். உயரமும் பருமனும் இறுகி வைரம் பாய்ந்த அந்த முரட்டு உடலில் ஒளிமயமான இளங்குமரன் சரிந்த காட்சி மலை முகட்டில் மின்னல் சரிந்து நெளிவது போல் தோன்றியது.
“ஐயோ பசி மயக்கம் போலிருக்கிறது” என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் பதறினார்கள். “விலகி நில்லுங்கள். காற்றுப் பட்டாலே தெளிவு வரும்” என்றார் நீலநாகர். கூட்டம் விலகியது. காற்று வந்தது. ஆனால் தெளிவு வரவில்லை. அப்போது தற்செயலாக பூத சதுக்கத்தில் படையலிடுவதற்குத் தன் மகள் முல்லையோடு வந்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த வீரசோழிய வளநாடுடையார் யாரிடமோ அரைகுறையாக இந்தச் செய்தியைக் கேள்வியுற்றுப் பதறிப் போய் ஓடிவந்தார். அவரோடு அவர் மகள் முல்லையும் வந்தாள். கேள்விப்பட்ட செய்தி அரைகுறையானது என்றாலும் மனத்தில் சந்தேகங்களுடனும், துடிப்புடனும் பறந்து பதறித் தவித்துக் கொண்டே வந்திருந்தார்கள் முல்லையும் வளநாடுடையாரும். இதற்குள் கூட்டத்தில் யாரோ ஒருவர் பக்கத்தில் இருந்த ஒரு முதிய முனிவரிடமிருந்து தண்ணீர்க் கமண்டலத்தை வாங்கி வந்து இளங்குமரன் முகத்தில் தெளித்தார். பொற் பேழையில் வெண்முத்துக்களாக நீர்த்துளிகள் அந்த நெற்றியில் உருண்டன. அதில் சில துளிகள் காயம்பட்ட இடத்து இரத்தத்தைக் கலந்துகொண்டு மாணிக்கங்களாகவும் உருண்டன.
எதிரே நெஞ்சம் பதற நினைவுகள் பதற நின்ற முல்லையின் வலது கை அந்தக் காயத்தை நோக்கி உயர்ந்து தீண்டுவதற்கும் நெருங்கி விட்ட விநாடியில் அவனுக்குத் தெளிவு வந்து கண்களை மலர்த்தி முன்னால் பார்த்ததனால் அவளுடைய கை பின்வாங்கி விட்டது. தேவருலகத்துக் கற்பகப் பூவைத் திருட்டுத் தனமாகப் பறிக்க உயர்ந்த மனிதக் கையை அந்தப் பூவே கற்பக மரத்துக்குச் சொந்தக்காரனின் கண்கள் போலத் தோன்றிப் பயமுறுத்திப் பின்வாங்கச் செய்யும் பிரமையைப் போல் இளங்குமரனின் நெற்றியைத் தீண்டும் ஆசையும், தீண்டலாமா என்ற பயமுமாகப் பின்னால் நகர்ந்தாள் முல்லை.
“என்ன ஐயா இது? நான் கேள்விப்பட்டது மெய் தானா? தருமத்திற்கும் நியாயத்திற்கும் பெயர் பெற்ற சோழர் கோநகரத்தில் கூட இப்படி அநியாயங்கள் நடக்குமா? இந்தக் கொடுமை செய்தவர்களைப் புடைத்து உண்ணாமல் பூதசதுக்கத்துப் பூதங்கள் ஏன் இன்னும் தங்கள் கைகளில் பாசக் கயிற்றை வைத்துக் கொண்டு வீணுக்கு உட்கார்ந்திருக்கின்றன? கொடுமைகள் அதிகமாகிவிடும் போது தெய்வங்கள் கூடச் சோம்பி இருந்து விடுகின்றனவோ?” என்று கொதித்தார் வளநாடுடையார்.
“மனிதர்களே சோம்பிப் போயிருந்துவிட்டு அதற்குச் சான்றாண்மை என்று பெயர் சூட்டிப் பெருமையும் கொண்டாடுகிறபோது தெய்வம், என்ன செய்யும் ஐயா?” என்று அதே கொதிப்போடு பதில் சொன்னார் நீலநாகர். ஆத்திரத்தில் அவர் சான்றாண்மையையே சோம்பலாகச் சொல்வதைக் கேட்டுப் பக்கத்தில் நின்ற சாங்கியன் மெல்லச் சிரித்துக் கொண்டான்.
முல்லையின் கைகளில் இருந்த தட்டில் கனிகளைப் பார்த்துவிட்டு, “இதிலிருந்து ஏதாவது பழங்களைக் கொடுத்து அவரை உண்ணச் சொல்லுங்களேன் அம்மணீ! பசி மயக்கமாவது தணியும்” என்றான் சாங்கியன். அப்படியே தட்டோடு கனிகளை இளங்குமரனுக்கு முன்னால் நீட்டி, “எடுத்துக் கொள்ளுங்கள்” என்றாள் முல்லை. அப்போதும் இளங்குமரனின் முகத்தை நேரே ஏறிட்டுப் பார்க்கும் தெம்பு அவளிடம் இல்லை. ‘என்னைப் பார்’ என்று துாண்டும் ஆசையும் ‘பார்க்காதே’ என்ற பயமுறுத்தலும் சேர்ந்தே அவன் கண்களில் இருப்பதுபோல உணர்ந்தாள் அவள். அந்தக் கண்களின் அழகு அவளை அவன் முகம் பார்ப்பதற்குத் தூண்டியது. தூய்மை பார்க்க விடாமல் அவளைப் பயமுறுத்திப் பின்னால் நகரச் செய்தது.
எங்கோ பார்த்தாற்போல் அவனையே பார்க்க முயன்றவளாய்க் கனிகளை அவனுக்குமுன் நீட்டினாள் முல்லை. எல்லாக் கனிகளையும் பார்த்துவிட்டுத் தட்டின் ஒரு மூலையிலிருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை மட்டும் எடுத்துக்கொண்டு போதுமே என்ற பாவனையில் கையசைத்தான் இளங்குமரன்.
“இன்னும் எடுத்துக்கொள். காலையிலிருந்து தண்ணீர் கூடப் பருகவில்லையே நீ” என்றார் நீலநாகர். முல்லை மறுபடியும் தட்டை அவன் அருகில் நீட்டினாள். அவன் சிரித்தபடியே மறுத்துவிட்டான்.
“மனம் நிறைந்திருக்கிற சமயங்களில் வயிறு நிறையாதது ஒரு குறையாகத் தெரிவதில்லை ஐயா! இந்த நகரத்தில் உலக அறவியிலும், இலஞ்சி மன்றத்தின் கரைகளிலும் பசித்து கிடப்பவர்களைப் பற்றி நினைத்து நினைத்து என் பசியை நான் மறந்துபோன நாட்கள் பல. உலகத்தில் மற்றவர்களுடைய பசிகளையெல்லாம் உணர முடியுமானால் ஒவ்வொரு நியாயமான மனிதனுக்கும் தன் பசி மறந்துதான் போய்விடும் அப்படி மறந்து போவதற்கு விசாகையின் மனம் வேண்டுமே” என்று இளங்குமரன் சொல்லிக் கொண்டே வந்த போது சொல்லுவதைச் சில கணங்களுக்கு நிறுத்திக் கொண்டு விசாகையின் முகத்தை மன நினைவுக்குக் கொண்டுவர முயன்றான்.
அவனுடைய மனக்கண்ணில் உலகத்தின் கண்ணீரைத் துடைப்பதற்காகத் தன் கண்களில் நீரைச் சுமந்துகொண்டு அட்சய பாத்திரமும் கையுமாக விசாகை தோன்றினாள். நாவில் நெல்லிக்கனியின் சுவையும், நெஞ்சில் விசாகையைப் பற்றிய நிர்மலமான நினைவுகளும் புரள நின்றான் இளங்குமரன்.
“போகலாம் வா! நீ திருநாங்கூரிலேயே மேலும் சிறிது காலம் இருந்தால் கூட நல்லதுதான். இங்கே உன்னை அழித்து விட முயல்கிறவர்கள் இன்னும் ஊக்கத்தோடு முனைந்து திரிகிறார்கள். ஓவியன் மணிமார்பன் முன்பு என்னிடம் கூறியது பொய்யல்ல” என்று அவ்வளவு நேரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்த எதையோ வெளியிடுகிறவர் போலப் பேசினார் நீலநாக மறவர்.
“ஐயா! ஒரு காலத்தில் என்னுடைய உடல் வலிமைக்கு எதிரிகளாக வருகிறவர்களையே நான் தேடினேன். அப்போது அவர்கள் மிகக் குறைவாகத்தான் எனக்குக் கிடைத்தார்கள். இப்போதோ நான் ஞான வீரர்களையே எதிரிகளாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் முன்பு என்னிடம் வந்திருக்க வேண்டியவர்கள் பலர் இப்போது வந்து தொல்லை கொடுக்கிறார்கள்” என்று இளங்குமரன், நீலநாகர் வளநாடுடையார் இருவரையும் பார்த்துச் சொல்லிவிட்டு ஊன்றியிருந்த ஞானக் கொடியைக் கையிலெடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
‘இப்போது ஞான வீரர்களையே எதிரிகளாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் முன்பு நான் உடல் வலிமையை நம்பிக்கொண் டிருந்த காலத்தில் எதிரிகளாக வந்திருக்க வேண்டியவர்கள் பலர் இப்போது வந்து தொல்லை கொடுக்கிறார்கள் - என்று சொல்லிவிட்டு வளநாடுடையார், நீலநாகர் ஆகியோரோடு இளங்குமரன் புறப்பட முற்பட்ட சமயத்தில் சிறிதும் எதிர்பாராத சந்திப்பொன்று அங்கே நிகழ்ந்தது.
“எதிரே வருகிறவர்கள் எல்லாம் எதிரிகளானால் இதோ உங்களுக்கு ஒரு புது எதிரி” என்று கூறிக் கொண்டே விசாகை அவனுக்கு முன்னால் தோன்றினாள். இளங்குமரன் முகம் மலர்ந்து வியப்புடன் அவளைப் பார்த்தான். ‘என்ன அற்புதம்! சில விநாடி களுக்கு முன்னால்தானே இவளை நினைத்தேன்? மனக் கண்களுக்குத் தோன்றியவள் உடனே புறக்கண்களுக்கும் தோன்றுகிறாளே! திருநங்கூரிலிருந்து இவள் எப்போது இங்கே வந்தாள்?’ என்று எண்ணிக் கொண்டே எதிரே நடந்து வரும் விசாகைக்குத் தன் பார்வையே வணக்கத்தை சுமந்து செல்லும் விதத்தில் நோக்கினான் இளங்குமரன்.
இவ்வளவு பரிசுத்தத்தைத் தாங்கிக்கொள்ள இந்த உலகத்தில் இடமில்லை, இடமில்லை என்பது போல்இந்த மண்ணுக்குத் தகுதியில்லை, தகுதியில்லை என்பது போல் ஒதுங்கி நடந்து கால்களை அதிர ஊன்றாமல் அசைந்து அசைந்து வந்து கொண்டிருந்தாள் விசாகை. பூமாலை சரிந்து நழுவுகிறாற் போல் மண்ணிற் பதியாது மிதக்கும் நடை அது. தெளிந்த நீரில் பால் கலப்பது போல் அவள் வந்ததுமே அந்த இடத்தில் பிரகாசம் பரவியது. ‘இந்த மண்ணில் ஊன்றி நடக்க மாட்டேன்’ - என்பது போலவும், பிரவாகத்தில் மிதக்கும் பூவைப் போலவும், விசாகை வருகிற தூய்மையிலேயே மனம் தோய நின்றான் இளங்குமரன். ‘இரும்பில் தோன்றும் துரு இரும்பையே அழித்து விடுவது போலச் சஞ்சலம் மன உறுதியை அழித்துவிடும்’- என்று விசாகை என்றோ தனக்குக் கூறிய சொற்களை இப்போது நினைத்துக் கொண்டான் அவன். அப்படிச் சஞ்சலம் எனக்கு ஏற்படும் போதெல்லாம் இவள் எதிரே தோன்றுகிறாளே என எண்ணியவனாக, “திருநாங்கூரிலிருந்து எப்பொழுது புறப்பட்டீர்கள், அம்மையாரே? சிறிது நேரத்திற்கு முன்னால்தான் உங்களை நினைத்துக் கொண்டேன். நீங்களே வந்து விட்டீர்கள்” என்று கேட்டான் இளங்குமரன்.
“இங்கு நான் வந்த நேரம் நல்ல நேரமில்லை போலும்! நீங்கள் காயமுற்ற நெற்றியும் கலங்கிய கண்களுமாக எங்கோ புறப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே?” என்றாள் விசாகை.
“காயம் பட்டதும், கலங்கியதும் உண்மை. ஆனால் உங்கள் முகத்தைப் பார்த்ததும் என்னுடைய கலக்கங்கள் அழிந்து பழைய தெளிவை நான் உணர்கிறேன்” என்றான் இளங்குமரன்.
அங்கே அட்சய பாத்திரத்தோடு வந்த விசாகையைக் கண்டதும் வளநாடுடையாரும், முல்லையும் என்ன நினைத்துக் கொண்டார்களோ தெரியவில்லை. படைக்கலச்சாலைக்கு வந்து அப்புறம் சந்திப்பதாகக் கூறி நீலநாக மறவரிடமும், இளங்குமரனிடமும் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டுப் போய்விட்டார்கள் அவர்கள்.
விசாகை, தான் அன்று அதிகாலையில்தான் திருநாங்கூரிலிருந்து புறப்பட்டதாகவும், இந்திரவிழா முடிகிறவரை காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கியிருக்கப் போவதாகவும் கூறினாள். ஒதுங்கி நின்றிருந்த நீலநாகர் அன்போடு அருகில் வந்து, “சுகமாய் இருக்கிறாயா, அம்மா?” என்று விசாகையை விசாரித்தார்.
“எல்லாரும் சுகமாயிருக்கிறவரை என்னுடைய சுகத்துக்கு ஒரு குறையும் இல்லை ஐயா?” என்று அவரை நோக்கிக் கைகூப்பினாள் அவள்.
“நீயும் எங்களோடு வந்து ஆலமுற்றத்திலேயே தங்கிக் கொள்ளலாமே அம்மா! திருநாங்கூர்ப் பூம்பொழிலிலிருந்து யார் வந்தாலும் இங்கே ஆலமுற்றத்து விருந்தாளிகளாயிருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை” என்றார் நீலநாகர். விசாகை புன்னகை பூத்தாள்.
“இல்லை ஐயா! இந்த நகரத்தில் எங்கள் சமயத்தாருக்கு உரிய இந்திர விகாரம் என்னும் பெளத்தப் பள்ளியில் நான் போய்த் தங்கிக் கொள்வேன். நாளைக்குக் காலையில் மீண்டும் உங்கள் இருவரையும் நாளங்காடியில் இதே இடத்தில் சமயவாதிகளின் கூட்டத்துக்கு நடுவே சந்திப்பேன். இப்போது எனக்கு விடை கொடுங்கள்” என்று வணங்கினாள் விசாகை. அன்று காலையில் நாளங்காடியில் இளங்குமரனுக்கு ஏற்பட்ட துன்பங்களைப் பற்றி விசாகையிடம் சொல்லலாமென நினைத்திருந்த நீலநாகர் இப்போது அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டார். அவரும் இளங்குமரனும் அவளுக்கு விடை கொடுத்தனுப்பினார்கள்.
காவிரிப்பூம்பட்டினத்துக்கு வந்ததும் வராததுமாக அந்தத் துன்பச் செய்திகளை அவள் அறிய வேண்டாமென்றே நீலநாகர் அவளிடம் இவற்றைக் கூறாமல் தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். விசாகை விரைவாக விடைபெற்றுக் கொண்டதற்குக் காரணமும் இப்படிப்பட்டதுதான். இளங்குமரனும் நீலநாகரும் ஏதோ கவலை நிறைந்த சூழ்நிலையில் இருப்பதாக அவள் அநுமானம் செய்து கொள்ள முடிந்ததனால் அவர்களைத் தனியே விட்டுவிட்டுப் புறப்படுவதுதான் நல்லதென்று புறப்பட்டிருந்தாள் அவள்.
“புறப்படு தம்பீ! இந்தக் கோலத்தோடு இன்னும் இங்கே நிற்க வேண்டாம். இப்படிக் கலகலப்பான பொது இடங்களுக்கு அதிகமாக வந்து பழகுவதை விரும்பாத என்னை நீதான் உன் பாதுகாப்புக்காக இங்கே அடிக்கடி வரச் செய்கிறாய். நேற்று உன் பொருட்டு இங்கே வந்து கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தேன். இன்றைக்கு வரவேண்டா மென்று நினைத்திருந்தேன் உன்னைத் தனியே இங்கு அனுப்பிய பின் எனக்கு மனம் கேட்கவில்லை. பிள்ளைப் பூச்சி குடைவதுபோல் மனத்தில் ஏதோ வேதனை குடைந்தது. சிறிது நேரத்தில் நானும் புறப்பட்டு வந்துவிட்டேன். தெய்வ சித்தம் எவ்வளவு பெரிய உயிர் உதவிக்காக என்னை இங்கே புறப்படுவதற்குத் தூண்டியிருக்கிறது, பார்த்தாயா? நான் வந்திரா விட்டால் என்ன நிகழ்ந்திருக்கும், என்று நினைவை நிகழாததோடு இணைத்துப் பார்த்தால் உடல் சிலிர்க்கிறது தம்பீ!”
“வருந்தி அழைத்தாலும் வாராதன வாரா, பொருந்துவன போமின் என்றால் போகா. நம் கைகளில் என்ன ஐயா இருக்கிறது? விதிக்கு ஊழ் என்று தமிழில் பெயரிட்டிருக்கிறார்கன். ஊழ் என்றால் வரிசை, முறை என்று பொருள். செய்த வினைகளை நிறுத்தி நிறுத்து நிறுவைக்கு நோந்தபடி பயன்கள் வரிசையாக வருவதற்கு எவ்வளவு பொருத்தமாகப் பெயர் அமைந்திருக்கிறது, பார்த்தீர்களா?” என்றான் இளங்குமரன். முன்பு அவனைத் தழுவினாற்போல் அவனருகில் நடக்கிற இந்தச் சமயத்திலும் அவன் உடம்பிலிருந்து கற்பூரத்தின் நறுமணம் கமழ்வதுபோல் நீலநாகர் உணர்ந்தார்.
இப்படிப் பேசியவாறே இவர்கள் நடந்து கொண்டிருந்தபோது, செவிகளில் மகர குண்டலங்கள் அசைய மார்பில் புலமையைப் பாராட்டி மன்னர்கள் அளித்த இரத்தின கண்டிகைகள் ஒளிரத் தங்கநிறப் பட்டு ஒரு தோளைத் தழுவினாற் போலச் சரிந்த இலங்கப் பிராகிருத மொழியிலும் பாலி, வடமொழிகளிலும், வல்லவரான பண்டிதர் ஒருவர் எதிரே வந்து இளங்குமரனின் கையிலிருந்து ஞானக் கொடியைப் பார்த்து விட்டுப் பசி கொண்டிருந்த சிங்கம் கண்முன் இரை கண்டாற் போன்ற ஆவலோடு நின்றார். அவர் வலக் கையில் ஏட்டுச் சுவடிகள் இருந்தன.
கம்பீரமான தோற்றமும் தோலாலும் சதையாலும் மட்டுமின்றி அறிவாலும் மிகுந்து தோன்றிய ஒளியும் அழகும் கொண்டு அந்தப் பெரும் புலவர் வந்து நின்றதும் இளங்குமரன் அவரை வணங்கினான். அவ்வாறு வணங்கும்போது ‘இவருடைய அறிவுக்கு என் வணக்கமும் அகம்பாவத்துக்கு என் அநுதாபமும் உரியனவாகுக’ என்று மனத்தில் இரண்டையும் நினைத்துக் கொண்டே அவன் வணங்கினான். அந்த வணக்கத்துக்குப் பதில் வணக்கமும் செலுத்தாமல் ‘என்னடா சிறுபிள்ளையே’ என்கிற விதத்தில் சிரித்தது ஞான சிம்மம். “நெற்றியில் இரத்தக் காயமும் மனத்தில் கலக்கமுமாகப் பசித்துத் தளர்ந்து இருக்கிறாயே! இப்போது எதற்கு வம்பு? இவரிடம் நாளைக்குச் சந்தித்து வாதிடலாம் என்று சொல்லிவிட்டுப் புறப்படு. இன்று காலைப் போதுக்கு இத்தனை வம்புகள் போதும்” என்று இளங்குமரனின் காதருகில் மெல்லச் சொன்னார் நீலநாகமறவர்.
“ஐயா! நீங்கள் கூறுவது நல்லதானாலும் இப்போது இந்தப் புலவரை நான் அலட்சியம் செய்வதற்கில்லை. நோயாளிக்கு மருந்தளித்து அந்த நோயைப் போக்க வேண்டிய மருத்துவன் நோய் கண்ட போதெல்லாம் நோய் கண்ட இடமெல்லாம் தயங்காமல் உதவுவதில் தான் தொழிலால் கிடைக்கிற மெய்யான மன நிறைவு அவனுக்கு உண்டு. அறிவும் மருந்தைப் போன்றதுதான். இப்போது இந்தப் புலவருக்கு வந்திருப்பது அகங்கார நோய், இதை நேர் எதிரே கண்டு உணர்ந்த பின்பும் இவரை இந்த நோயோடு இப்படியே நலியவிட்டு நான் மேலே செல்வது நல்லதன்று. ஞானத்தை அடக்கி வைத்துக் கொள்ளாமல் மலர்ந்த பூவைப்போல் எல்லார்க்கும் நுகரப் பயன்பட்டுக் கற்பூரம் போல மணந்துகொண்டே பிரகாசிக்க வேண்டும்” என்று மெல்லிய குரலில் நீலநாகருக்குச் சொல்லிவிட்டு எதிரே நின்றவரை அதுதாபத்தோடு பார்த்துக் கொண்டே “புலவர் பெருந்தகையே! உங்கள் போரைத் தொடங்கலாம்“ என்றான் இளங்குமரன்.
முன்பு அவன் சரீரத்திலிருந்து உணர்ந்த கற்பூர நறுமணத்தை இப்போது அவன் சொற்களிலிருந்தும் உணர்வது போன்ற பிரமையை நீலநாகர் அடைந்தார்.
அவனை அழைத்த முதற் சொல்லிலேயே ஏளனம் ஒலிக்க அலட்சியமாக அழைத்தது அந்த அறிவுச் சிங்கம்.
“குழந்தாய்! ஒன்று இரண்டு மூன்று எனப்படும் எண்கள் எண்ணுவதற்கு மட்டும் பயன்படும் குறிகளா? அல்லது அவைகள் குணங்களாதலும் உண்டா?”
“ஐயா! எண்கள், ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணுவதற்குரிய குணத்தைப் பெற்றுப் பொருள்களை எண்ணும் தொழிலைச் செய்யும்போது குறியீடுகள். ஒருமை, இருமை, மும்மை என எண்ணும் தன்மையாகிய மூலப் பண்பாகவே நிற்கும்போது குணங்கள். எண்ணுவதைக் குணமாகச் சொல்லும்போது சங்கை என்று சொல்கிறார்கள் தருக்க நூலார். அணியாகச் சொல்கிறார்கள் அலங்கார நூலார், கருவிகளாகச் சொல்கிறார்கள் கணித நூலார். எண்களில் ஒருமைதான் அழிவில்லாதது என்பது தருக்க நூல்களின் முடிவு. ஒருமைக்குமேல் யாவும் எல்லையற்றவை. எல்லையற்றவை யாவையோ அவை அளக்க முடியாதவை. ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணத் தொடங்கி ஒவ்வொன்றாக வளர்ந்து வளர்த்துக் கொண்டு போய் எண்ணும் ஆற்றல் இறுதியாகச் சோர்ந்து முடங்கிய முடிவான மூலைக்குக் ‘கோடி’ என்று பெயரிட்டு விட்டுத் தளர்ந்து போனார்கள். தெரு முடிகிற இடத்திற்குத் தெருக்கோடி என்று பெயர் சொல்கிறாற்போல் எண் முடிகிற இடத்துக்கும் கோடி என்று பெயர். ஒருமை, அல்லாதது எல்லாம் பன்மை என்பது எங்கள் தமிழ் வழக்கு. ஒருமை, இருமை பன்மை என்பது வடமொழி வழக்கு. எண்களில் ஒன்றுதான் நித்தியம். ஏனையவை அநித்தியம் என்ற கருத்து காத்தியாயனர், தொல்காப்பியர், பாடியகாரர் எல்லோருக்கும் உடன்பாடு. பதினொன்று என்பதை ஒன்றை மிகுதியாக உடைய பத்து என்றும், முப்பத்தி ஒன்று என்பதை ஒன்றை மிகுதியாக உடைய முப்பது என்றும் காத்தி யாயனர், தொல்காப்பியர் ஆகியோர் பிரிப்பர். எண்ணால் அளக்க முடியாதவற்றை அளப்பதற்குத் தான் தருக்கத்தில் பரிமாணம் என்று மற்றொரு குணம் வகுத்தார்கள். ஒன்று, இரண்டு, என எண்ணி அளக்க முடியாமல் நுண்மை பெருமை, குறுமை, நெடுமை எனக் கருதியே அளக்க முடிந்தவற்றை பரிமாணத்தால் அளக்க வேண்டும்.”
“நல்லது! நீயும் ஏதோ விவரங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறாய். இதோ, இந்தக் கேள்விக்குப் பதில் சொல். ஒருமை அல்லாதன எல்லாம் பன்மை என்பது தவிர ஒருமையிலும் பன்மை உண்டோ?”
“உண்டு! ஒன்றில் இரண்டு அரைப் பகுதிகளும் நான்கு கால் பகுதிகளும், எட்டு அரைக்கால் பகுதிகளும் கூறுபடுத்தினால் இன்னும் பல பகுதிகளும் அடங்கியிருக்கின்றன. ஒருமையிலும் பின்ன வகையால் பன்மை காணலாம். ஆனால் பின்னப்படும்போது பொருளின் குணம் சிதையுமாதலால் முறைப்படி அவற்றைப் பன்மை என ஒப்புக்கொள்ள இயலாது. குணம் பொருளுக்கு உரியதாகச் சொல்லப்பட்டது. ஒன்றாயிருந்த பொருள் இரண்டாகவும், நான்காகவும், எட்டாகவும் சிதைந்தபின் அவற்றை எண் என்னும் குணத்தால் அளப்பது நியாயமாகாது ஐயா! தருக்கத்தில் பொருள் சொல்லி பின்புதான் குணம் சொல்லியிருக்கிறார்கள்.”
பக்கத்தில் நின்ற நீலநாகருக்கு ஒரே ஆச்சரியம். ‘இந்தப் பிள்ளையை நாங்கூர் அடிகள் மறுபிறவி எடுக்கச் செய்து அனுப்பினாற்போல அறிவின் அவதாரமாய் ஆக்கி அனுப்பிவிட்டாரே!’ என்று எண்ணி எண்ணி வியந்தார் அவர்.
பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் மாமரத்துக் காய்களின் சாயலைக் கீழே நீர்ப்பரப்பில் பார்த்துக் கொண்டே குறி தவறாமல் இளங்குமரன் அம்பெய்து வீழ்த்திய நாளில், ‘குறி தவறாமல் பார்க்கும் கண்களுக்கு வில்லாற்றல் வளர்வதைப்போல் குறி தவறாமல் நினைத்து நினைத்து அடைய வேண்டிய இலட்சியம் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அதற்கருகில் போய்விடுகிற மனம் உடையவனுக்குத் தவத்தினால் சித்திகள் எல்லாம் கிடைக்கும். அந்தத் தவம் இந்தப் பிள்ளையிடம் இருக்கிறது’ என்று இளங்குமரனைக் காண்பித்து மற்ற மாணவர்களுக்கு முன்னால் தான் அவனைப் புகழ்ந்த வார்த்தைகள் இன்று தன் முன்னாலேயே நிதரிசனமாக அர்த்தம் பெற்று விளங்குவதை நீலநாகர் உணர்ந்தார்.
அந்தப் பன்மொழிப்புலவர் தமது தோளிலிருந்து வழுகி நழுவும் பட்டுப் போர்வையையும், மனத்திலிருந்து வழுகி நழுவப் பார்த்த அகம்பாவத்தையும் இவ்வளவு விரைவாக விட்டுவிடத் துணியாமல் ஒரே சமயத்தில் இழுத்து நிறுத்திப் போர்த்திக் கொண்டவராக மேலும் இளங்குமரனைக் கேட்டார்.
“பாகதமும், பாலியும், தெய்வ மொழியும் உலகமெல்லாம் புகழ்பெற்றிருக்கின்றன. வேங்கடத்துக்கும் குமரிக்கும் நடுவிலுள்ள சிறிது நிலப்பகுதியில் மட்டும் தானே உங்கள் தமிழ் வழங்குகிறது! பெளத்த சமய கிரந்தங்கள் பாலியில் மிகுதியாயிருக்கின்றன. தரிசனங்கள் தெய்வமொழியில் இருக்கின்றன. இப்படியெல்லாம் இருக்கும்போது தமிழ் மொழிக்கென்று தனியாக எழுத்து, இலக்கணம் எல்லாம் எதற்கு? பாலி வடிவிலோ, தெய்வ மொழி உருவிலோ, தமிழையும் எழுதிவிட்டால் என்ன?”
“சுவாமி! என்னிடம் இந்தக் கீழ்மை நிறைந்த கேள்வியைக் கேட்பதற்காகத் தெய்வங்கள் உங்களை மன்னிக்க வேண்டும் என்று உங்கள் அறியாமைக்காக உங்கள் பொருட்டு நான் பிரார்த்தனை செய்கிறேன். எழுத்து என்பது சப்தத்தின் ஆடை. அது இல்லா விட்டால் சப்தம் நிர்வாணமாக நிற்கும். ஒவ்வொரு மொழிக்கும் அதன் எழுத்துக்கள் ஆடை, அவற்றை நீக்குவது மானபங்கம் செய்வதற்கு ஒப்பானது, அகத்தியரும், தொல்காப்பியரும், திருவள்ளுவரும் எந்த எழுத்துக்களைத் தங்கள் தெய்வக் கைகளால் எழுத்தாணி பிடித்து எழுதினார்களோ அந்த எழுத்துக்கள் கண்ணில் தெரிவதாலேயே இன்றும் என் கண்கள் சூரிய ஒளியில் குளித்தது போல் புனிதமடைகின்றன. இந்த நகரின் ஆலமுற்றத்துக் கோவிலில் இருக்கிற தெய்வ பிம்பம் எப்படிப் பல ஆயிரம் ஆண்டுகளாக வணங்கப்பட்டு வணங்கப்பட்டு ஒவ்வொரு தலைமுறையின் பக்தியையும் வணக்கத்தையும் ஏற்றுத் தாங்கிக் கொண்டு தன் தெய்வ சக்தியை வளர்த்துக் கொண்டிருக்கிறதோ, அப்படியே தமிழும் பல கோடித் தலைமுறைகளின் பழக்கத்தில் எழுத்தும் சொல்லுமாக வணங்கப்பட்டு, வணங்கப்பட்டு மந்திரமாக நிறைமொழியாக வளர்ந்து நிற்கிறது! அதன் எழுத்துக்களை மாற்றலாமென்று நினைப்பதே பல தலைமுறைகளாக வணங்கப்பட்டு வரும் தெய்வ பிம்பத்தைக் கோவிலுக்குள்ளிலிருந்து வெளியே எடுத்து எறிய நினைப்பதற்கு ஒப்பாகும்.”
இளங்குமரன் எவ்வளவோ சான்றாண்மையையும் சம்சித்தத்துவத்தையும் பெற்றிருந்தும் அந்த வட தேசத்துப் புலவரின் இந்தக் கேள்விக்கு இப்படி மறு மொழி கூறியபோது சற்றே கண்கள் சிவந்து முகம் சிவந்து உதடுகள் துடித்திட உணர்ச்சி வசப்பட்டு விட்டான்.
“கோபப்படாதே குழந்தாய்! வாதம் செய்கிறவன் சுயமாக உணர்ச்சி வயப்பட்டால் அந்தக் கணமே வாதத்துக்குரிய விஷயம் உணர்ச்சியிழந்து போகும் என்பது தருக்கத்தின் முறைகளில் ஒன்றல்லவா? வாதி தன்பலம் காட்டினால் வாதம் பலமில்லாதது என்றாகிவிடும். இப்போது உன்னை வேறொரு கேள்வி கேட்கிறேன். இதிகாச நாயகர்களாகிய இராமன், தருமன், கண்ணன், இவர்களைக் காவியக் குணங்களுக்காக வணங்குகிறாயா? அற்புதச் செயல்களைச் செய்தவர்கள் என்பதற்காக வணங்குகிறாயா?”
“அற்புத செயல்களைச் செய்கிறவர்கள் வணங்கத் தகுதியுடையவர்களானால் இதோ இந்த நாளங்காடியில் இந்திரவிழாக் கூட்டத்திலே வயிற்றுப் பிழைப்புக்காகத் கண் கட்டி வித்தை காட்டிக் கொண்டிருக்கும் சாதாரண மாந்திரீகர்களையும் வித்தைக்காரர்களையும் கூட நான் வணங்க வேண்டியிருக்கும். வியாசரும், வான்மீகியும் காவியக் குணங்களால் தூய்மையாய் வரைந்து நம்முன் நிறுத்தும் நாகர்கள் சுயமாகவே தங்களுக்குள்ள தெய்வீக ஆற்றலையும் பெற்றுப் பால் வைத்திருந்த பேழையில் தேன் வைத்திருந்த பேழை கவிழ்ந்தாற்போல் இரட்டைச் சுவைகள் இணைந்து தேர்ந்த தெய்வங்களாய்த் தோன்றுகிறார்கள். ஆனால் பாமரர்களுக்குக் கதை சொல்லும் பெளராணிகர்களுடைய இராமனை என்னால் வணங்க முடியவில்லை. வியப்பதற்கு மட்டும்தான் முடிகிறது. காவியத்தில் வருகிற இராமன் வில்லை ஒடிப்பதற்கு ஒரு கணத்தில் நூற்றுள் ஒரு பங்கு நேரம்கூட ஆகவில்லை என்று கவி சொல்கிறார். வில்லை எடுத்ததையே காண முடிந்ததாகவும் ஒடித்ததைக் கேட்க மட்டுந்தான் முடிந்ததாகவும் கூறிய கவியைக் கற்கும்போது ஒடிப்பதற்கு ஆகிய நேரத்தை உணரவும் முடியவில்லை, உணரவும் முடியாத சிறிய அணு அளவு நேரம் அது என்று எண்ணி அதைச் செய்த காவிய நாயகனை என்னால் வணங்க முடிகிறது. பெளராணிகருடைய இராமனோ வில்லை ஒடிப்பதற்கே மூன்று நாள் ஆகிறது. முடிசூட்டு விழாவுக்காகக் கதை கேட்பவர்களிடமிருந்து பெளராணிகருக்குக் கிடைக்க வேண்டிய கணையாழியும் பிறவும் செய்யப் பெற்று வருகிறவரை அவருடைய இராமன் தாமச ராமனாய் வில்லைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒடித்துக் கொண்டே இருக்கிறான். காவிய குணங்களைப் பெற்ற தெய்வ கணங்களாக இருப்பதனால்தான் இதிகாச நாயகர்களை அவர்களுடைய காவிய குணங்களுக் காகவே ‘பாவிகம்’ என்று பெயர். அவை எல்லார்க்கும் பொதுவான ஞான நிதி. அவை எந்த ஒரு தனிக் காவிய கருத்தாவுக்கும் தனிச் சொத்து இல்லை. பாரதத்தில் தருமன் வந்தபின் தருமம் செய்கிற மனிதனைக் காவிய நாயகனாக வைத்து யாருமே காவியம் செய்யலாகாதென வாதிடுவது பேதைமை.”
எதிரே மகர குண்டலங்கள் அசைய, மணிமாலை சுடர் விரிக்க நின்றவருடைய கண்களில் நீர் மல்கிற்று. அவருடைய கம்பீரமான உடல் நடுங்குவதையும், சிலிர்ப்பு அடைவதையும் பார்த்து இளங்குமரனுக்கும் நீலநாகருக்கும் ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் வியப்புடனேயே அவரைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இன்னும் வியப்பானதொரு காரியத்தைச் செய்யத் தொடங்கினார்.
இளங்குமரனும் நீலநாகரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே எதிரே குன்றுபோல் நின்று கொண்டிருந்தவருடைய கைகளில் இருந்து ஏடுகள் நழுவி மண்ணில் வீழ்ந்தன. பூகம்பம் நிகழ்கிற காலத்து மரம் போல் அவர் உடல் ஆடியது. நடுங்கும் கைகளால் தம் செவிகளில் இருந்த குண்டலங்களை ஒவ்வொன்றாகக் கழற்றினார். அவர் மார்பில் மின்னிய இரத்தின கண்டிகைகளையும் கழற்றினார். தோளில் பொன் மின்னலாய்ச் சரிந்து மடிந்து வழிந்து கொண்டிருந்த பட்டுப் பீதாம்பரத்தை எடுத்து மடித்து அதன்மேல் குண்டலங்களையும், இரத்தின கண்டிகைகளையும் வைத்துக் கொண்டு கீழே குனிந்து...
அவர் செய்கையைப் புரிந்துகொள்ள முடியாமல் இளங்குமரன் பயந்து பின்னுக்கு நகர்ந்து கொண்டான். நீலநாகர் திகைத்து விலகினார்.
அறிவு மலையாகிய அந்தப் பன்மொழிப் புலவர் இளங்குமரனுக்கு முன்னால் மண்டியிட்டு அமர்ந்து கொண்டார்.
“சுவாமி இதென்ன் காரியம்?” என்று பதறினான் இளங்குமரன். அந்தப் பெரும் புலவருடைய கண்களிலிருந்து நீரும், நாவிலிருந்து சொற்களும் நெகிழ்ந்தன:
“என் பெயர் முகுந்த பட்டர். இன்றைக்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் காசியிலிருந்து புறப்பட்டு ஒவ்வோர் அரச சபையாகப் போய்த் தங்கி அந்தந்த நாட்டு அறிவாளிகளுடன் வாதம் புரிந்து வாகை சூடினேன். கடைசியாக இந்த ஆண்டு இந்திர விழாவின் போது இங்கு வந்தேன்...” என்று தம் கதையைத் தொடங்கினார் முகுந்த பட்டர். இப்படிக் கண்களில் நீர் மல்க ஒவ்வொரு சொல்லாக அவர் நாவிலிருந்து கழன்றபோது சொற்களோடு சொற்களாக இன்னும் ஏதோ ஓருணர்வும் அவர் மனத்திலிருந்து கழன்று கொண்டிருந்தது. அவர் பேசினார்:
“கலிங்க தேசத்திலும், உச்சயினியிலும், அயோத்தியிலும், குயிலாலுவத்திலும், விதர்ப்ப நாட்டிலும், பாஞ்சால தேசத்திலும் வெற்றிக்கொடி நாட்டிப் பலப்பல ஞானிகளுக்கு நான் குருவானேன். அந்தந்த தேசத்து அரசர்கள் மனமுவந்து புகழுரைகளும், பொற்கடகங்களும், மகர குண்டலங்களும், இரத்தின கண்டிகைகளும், பட்டுப் பீதாம்பரங்களும் அளித்து இந்தச் சரீரம் நிறைய அகம்பாவங்களைப் பூட்டிவிட்டார்கள். எத்தனையோ விதத்தில் முயன்றும் என் அகங்காரத்தை என்னாலேயே அடக்க முடியவில்லை. உண்ணும் உணவுகளைக் குறைத்து உடற் கொழுப்பையும் குறைத்து உடலை வாட்டிப் பார்த்தேன். தெய்வ பக்தியை வளர்த்துக் கொண்டு இறுமாப்பை அடக்க முயன்றேன். என்னைப் பிடித்த அகங்காரமோ மருந்தினால் தீராத பெரு நோயாய் வதைத்தது. காய்ந்த தருப்பைப் புதரில் பற்றிய நெருப்பைப் போல்... மூங்கில் உரசி மூங்கிலே எரிவது போல் என்னுள்ளே உண்டான அகம்பாவத்தால் நானே எரிந்து எரிந்து சிவப்பாகிக் கொண்டிருக்கிறேன். ‘தயைகூர்ந்து என் அறிவுக் கொழுப்பை அடக்கி என்னுள் எரியும் அகம்பாவ நெருப்பை அவித்து யாராவது என் இதயத்தைக் குளிர வைக்க மாட்டார்களா? என்று இந்தப் பத்து ஆண்டுகளாக அதைச் செய்யவல்ல மேதைகளைத் தேடித் திரிந்தேன். கால் போன போக்கில் வந்த தேச தேசாந்தரங்களில் எல்லாம் திரிந்தேன். நேற்று அதிகாலையில் இந்த நகரத்தை அடைந்து காவிரியில் நீராடிவிட்டு நான் நிமிர்ந்த போது கரை மேலுள்ள மரத்திலிருந்து நல்ல சகுனம் போல் பூக்கள் என் தலையில் உதிர்ந்தன. என்னுடைய அகம்பாவத்தை அழித்து என்னைத் தடுத்தாட் கொள்ளப் போகிற ஞானம் இந்தக் காவிரியின் கரையில் எங்கோ இருக்கிறது என்று என் மனம் புரிந்து கொண்டு மகிழ்ச்சியால் துள்ளியது. என்னுள்ளே தகித்துக் கொண்டிருக்கும் நெருப்பு விரைவில் தணிய வேண்டுமே என்ற தவிப்பில் இன்று இங்கே உன்னோடு வாதத்தைத் தொடங்கிய சில நாழிகைகளில் பொருத்தம் இல்லாமல் கேள்விகளையெல்லாம் கூட நான் உன்னிடம் கேட்க முற்பட்டு விட்டேன். அப்படிக் கேட்டதற்கு அந்தரங்கமான காரணம் எப்படியாவது நான் உனக்குத் தோற்றுப் போக வேண்டுமே என்ற என் ஆசைதான். ஆனால் பொருத்தமில்லாமல் நான் கேட்க முற்பட்ட கேள்விகளுக்குக்கூட நீ அழகான மறுமொழி கூறினாய். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நான் காசியில் கங்கைக் கரையிலிருந்து புறப்பட்டபோது என்னுடைய இலட்சியம் எதுவாயிருந்ததோ அது இன்று காவிரிக்கரையில் வந்து நிறைவேறியது. தெய்வகுமாரா! அருள்கூர்ந்து உன் பாதகமலங்களை ஒருமுறை வணங்கி என்னுடைய இந்த ஐசுவரியங்களை அவற்றில் படைக்க எனக்கு அனுமதி கொடு...”
முகுந்தபட்டர் தரையில் மண்டியிட்டு அமர்ந்தவராய் இப்படி அவனை வணங்குவதற்குக் கெஞ்சிக் கொண்டிருந்தபோது நீலநாகர் ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்திக் கொண்டு ஆச்சரியத்தில் மூழ்கினார்.
‘இந்த முகுந்தபட்டர் இப்போதுதானே இவ்வளவு விவரமும் சொல்கிறார்! இளங்குமரன் இவரை எதிரே பார்த்தவுடனேயே ‘இந்தப் புலவருக்கு வந்திருப்பது அகங்கார நோய். இதை நேர் எதிரே கண்டு உணர்ந்த பின்னும் இவரை இந்த நோயோடு இப்படியே நலிய விட்டுவிட்டு நான் மேலே செல்வது நல்லதன்று’ என்று தீர்க்க தரிசனம் போலச் சொல்லி விட்டானே! அவ்வாறு சொல்ல அவனால் எப்படி முடிந்தது’ என்று நினைந்து நினைந்து அந்த நினைப்புக்கு ஒரு முடிவும் தெரியாமல் பக்தி மலரும் கண்களால் இளங்குமரனைப் பார்க்கலானார் நீலநாகமறவர்.
ஆனால், அவனோ ஒன்றும் அறியாத குழந்தை போலக் காலடியில் மண்டியிட்டுக் கொண்டிருக்கும் முகுந்தபட்டரையும், பக்கத்தில் நின்றுகொண்டு கண்கள் மலர வியந்து தன்னையே நோக்கும் நீலநாகரையும் மாறிமாறிப் பார்த்தான்.
முகுந்தபட்டர் அவன் விழிகளை நிமிர்ந்து பார்த்து இறைஞ்சினார்.
“என்னை அங்கீகரித்துக் கொள்ள வேண்டும்!”
“சுவாமி! நீங்கள் நிறைகுடம்! உங்களை அங்கீகரித்துக்கொள்ள நான் யார்! நோயுற்றவன் ஒருவன் அடர்ந்த காட்டு வழியாக நடந்தபோது தற்செயலாய் அவன் உடம்பில் உராய்ந்த செடி ஒன்று உயரிய மருந்துச் செடியாக இருந்து, அந்த நோயைச் சில நாட்களில் தணித்தாற்போல, இந்த நிகழ்ச்சியை நீங்கள் தற்செயலாக எடுத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய நான் உங்கள் அகம்பாவத்தைத் தணித்ததாக எண்ணிக் கொள்ளக்கூடாது. இது தன் போக்கில் நேர்ந்ததே ஒழிய என்னால் உங்களுக்கு நேரப்பட்டது அன்று. காட்டில் நடந்துபோன மனிதனுடைய நோயைத் தீர்க்க வேண்டு மென்ற கருத்து அவன்மேல் உராய்ந்த பச்சிலைக்கு இல்லை. பச்சிலையை உராய்ந்தவனுடைய கருத்திலும் ‘அதனால் நோய் தீரும்’ என்ற ஞாபகமும் நோக்கமும் இல்லை. இன்ன இடத்தில் இன்ன சமயத்தில் இன்ன பொருளால் இன்னது நேரவேண்டுமென்ற தெய்வ சித்தம்தான். இதில் காரணம், காரியம், கருத்து, கருமம், எல்லாம். அதற்குமேலே நினைக்க ஒன்றும் இல்லை.”
“நீ இப்போது கூறியது தான் மெய்யான ஞானம்! ஆனால், நானோ நீ இப்போது சொல்வதற்கு நேர் மாறாக நினைத்து நினைத்து இந்தப் பத்து ஆண்டுகளாக அறிவு மதம் பிடித்து அலைந்து விட்டேன். நான் நினைத்துப் பெருமைப் படும்படியாக இந்த உலகத்தில் என்னுடைய அறிவைத் தவிர வேறொன்றும் இல்லை என்ற ஒரே எண்ணம் தான் என் மனத்தில் இன்றுவரை நிலைத்திருந்தது.”
“செருக்கு எப்படி ஏற்படுகிறது என்றே புரிந்து கொள்ள முடியவில்லை ஐயா! அதிக அறியாமையிலும் செருக்குப் பிறக்கிறது! அதிக அறிவிலும் செருக்குப் பிறக்கிறது! புயல் காற்றில் சிறிய அகல்விளக்கை அணைந்துவிடாமல் காக்க முயல்வதுபோல் இந்த உலகத்தில் மனிதன் தன் இதயத்தைச் செருக்கு இல்லாமல் காப்பது எவ்வளவு அருமையான காரியமாயிருக்கிறது. பார்த்தீர்களா? அறிவு வரம் பெற்று மற்றவர்களை அழிக்க முயன்றால் தானே அழிந்துபோக வேண்டியதாகத்தான் நேரும் என்று ஒவ்வொரு அறிவாளியும் ஒவ்வொரு கணமும் தனக்குள் நினைத்துத் தன்னைத்தானே அடக்கிக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பஸ்மாசுரனுடைய கதையாகத்தான் முடியும். நம்முடைய தத்துவ குணம் தான் நம் மனத்துக்கு அங்குசம். மனத்தில் மதம் பிடிக்கும்போது அடக்கப் பயன்படும் ஆயுதமும் அதுதான்.”
“அந்த ஞானம் இன்றுதான் எனக்குக் கிடைத்தது. அது கிடைக்கக் காரணமாக இருந்த நீ இவற்றையெல்லாம் என் காணிக்கைகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.”
இப்படிக் கூறிக்கொண்டே அவர் தன் பாதங்களில் இடுவதற்கு முற்பட்ட அணிகலன்களைப் பார்த்து இளங்குமரன் சிரித்தான்.
“எந்தெந்த அணிகலன்கள் உங்களுடைய உடம்பில் கர்வத்தீயை எரிய விட்டனவோ, அவற்றையே இப்போது என் பாதங்களில் இடுகிறீர்களே?”
“உன் சக்தி பெரிது. அதை இவற்றினாலும் எரிக்க முடியாது. நீ தெளிந்தவன். வீங்கவும், ஏங்கவும் விடாமல் மனத்தைக் காக்கத் தெரிந்தவன்.”
“இருக்கலாம்! ஆனால் இவை எனக்குத் தேவையில்லை. யாராவது ஏழைகளைத் தேடி இவற்றைக் தானமாக அளியுங்கள். எனக்கு வேண்டாம்.”
“அப்படிச் சொல்லக்கூடாது. குரு தட்சிணையாகவாவது...”
“யார் யாருக்கு குரு? தாங்கள் எங்கே? நான் எங்கே? இந்த உலகத்தில் இல்லாப் பிழையும் பொல்லாப் பிழையும், எல்லாப் பிழையும் செய்து, நோயும் வறுமையும் கொண்டு ஏழையாக இருக்கிறவர்கள்தாம் என்னுடைய குருவும் வணங்குகிற குருக்கள். அவர்களுடைய பசியிலிருந்துதான் என்னுடைய சிந்தனைகள் பிறந்து வளர்ந்தன. அவர்களுடைய துக்கங்களிலிருந்துதான் என்னுடைய ஞானம் பிறந்தது. இன்றைக்குச் சில ஆண்டுகளுக்கு முன்னால் இதே நகரத்தில் இந்திர விகாரம் என்ற பெளத்த மடத்தின் வாயிலில் வயது முதிர்ந்த துறவி ஒருவரிடம் பேசியபோதுதான் என் மனமே அகங்கார இருள் நீங்கி ஒளி பெற்றது. அருள்கூர்ந்து உலக அறவியிலும், இலஞ்சி மன்றத்திலும் நோயும் பசியுமாகக் கிடப்பவர்களைத் தேடிப் போய் இந்த அணிகலன்களை அளித்து மகிழுங்கள். என் வழியை எனக்கு விடுங்கள். என்னுடைய இவ் வழியில் பொன் கிடந்தாலும், மண் கிடந்தாலும், ஓடு கிடந்தாலும் எல்லாம் எனக்கு ஒன்றுதான்? இது மண், இது பொன் என்று பிரித்து வேறுபாடு உணர்கிற காலத்தை நான் இழந்துவிட்டேன். தயை கூர்ந்து என் வழியை எனக்கு விடுங்கள்.”
முகுந்தபட்டர் தலை நிமிர்ந்து நன்றாக இளங்குமரனின் முகத்தைப் பார்த்தார். தம் கண்களின் அந்தப் பார்வையாலேயே ஐம்புலனும், எட்டு அங்கமும் தோய அவனை வணங்குகிறாற் போன்ற பாவனையின் சாயலைச் சுமந்தவராக வணங்கினார் அவர். இளங்குமரன், மதம் அடங்கப்பெற்ற அந்த அறிவுமேதையைப் பதிலுக்கு வணங்கிவிட்டு விடை பெற்றான். நீலநாகர் வியப்பும் திகைப்பும், மெல்ல மெல்ல நீங்கியவராக அவனைப் பின்தொடர்ந்தார்.
பூக்கூடையைச் சுமந்து சென்ற யவனப் பணியாளன் திரும்பி வந்து கூறிய செய்திகளைக் கேட்டுப் பதற்றமடைந்தவராய் நகைவேழம்பரோடு தேரில் நாளங்காடிக்கு விரைந்து கொண்டிருந்தார் பெருநிதிச் செல்வர். அப்படி வேகமாகத் தேரில் போய்க் கொண்டிருக்கும்போது அவருடைய உடம்பு மட்டுமின்றி நினைவுகளும் மனமும் கூடப் பதறின, நடுங்கின. திரும்பி வந்த யவனப் பணியாளன் கூறிய செய்திகளிலிருந்து சுரமஞ்சரி தன்மேல் கடுஞ் சிற்றம் கொண்டிருக்க வேண்டும் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் அவருக்குப் புரிந்தது. நகைவேழம்பர் கூறியதுபோல் இந்தச் சூழ்ச்சியால் தாங்கள் நினைத்த பயன் விளையாவிட்டாலும் சுரமஞ்சரியைப் பற்றி இளங்குமரன் மிகக் கேவலமாக எண்ணும்படியான சூழ்நிலை உருவாயிருக்கும்.
இவர்களுடைய பழக்கமும், உறவும் சிதைவதற்கு இந்த நிகழ்ச்சியே போதும். ஆனால் இதன் காரணமாக என் மகள் சுரமஞ்சரிக்கு என் மேலும் நகைவேழம்பர் மேலும் பெருங்கோபம் மூண்டிருக்கும். ஏற்கெனவே அவளுக்கு எங்கள் மேல் இருந்த சந்தேகம் இன்று பெருகி வளர்ந்திருக்கும். அந்த ஆத்திரத்தினால் பெருங் கூட்டம் கூடியிருக்கிற நாளங்காடி நாற்சந்தியில் என் கெளரவமும் பெருமையும், பாழ்பட்டுப் போகும்படி எதையாவது சொல்லிவிட்ப் போகிறாளே என்று எண்ணித் தேர்ச் சக்கரங்களைவிட வேகமாக உருண்டு கொண்டிருக்கும் பதறிய நினைவுகளோடு போய்க் கொண்டிருந்தார் அவர். இந்தச் சந்தேகங்களையும் பதற்றங்களையும் தேரில் உடன் வந்து கொண்டிருந்த நகைவேழம்பரிடம் மனம் விட்டுப் பேசலாம் என்றால் சற்றுமுன் அவருக்கு ஏற்றபட்டிருந்த பிணக்கினால் அவர் பேசுவதற்கே விருப்பமில்லாதவர் போல வேறு புறம் பார்த்துக் கொண்டிருந்தார். பல்லக்கின் பின்புறச் சட்டத்தில் பணிவாக முழந்தாளிட்டு உட்கார்ந்து கொண்டிருந்த யவன ஊழியனிடம் பேசலாமென்று மனம் தவித்தாலும் இதையெல்லாம் அவனைப் போன்ற ஊழியனிடம் பேசுவது கெளரவக் குறைவு என்ற எண்ணம் குறுக்கிட்டுத் தடுத்தது. எல்லா ஆத்திரத்தையும் சேர்த்துத் தேரோட்டியிடம் காண்பித்தார் அவர். “இதென்ன ? ஆமை ஊர்வதுபோல் தேரைச் செலுத்துகிறாயே, குதிரைகளை விரட்டு, என் பொறுமையைச் சோதிக்காதே.” தேரோட்டி சாட்டையைச் சொடுக்கினான். குதிரைகள் தாவிப் பாய்ந்தன. நாளங்காடி நெருங்க நெருங்கப் பயத்தினால் அவர் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. அவர்களுடைய தேர் நாளங்காடியை அடைந்து குறிப்பிட்ட இடத்தினை அணுகி நின்றபோது ஆத்திரத்தின் பிரதிபிம்பமாகப் பெண்மையின் ஊழிக் காலம் போல சுரமஞ்சரி அங்கிருந்த கோலத்தை அவரே தம் கண்களால் கண்டு அஞ்சினார். அப்போது அவளுக்கு முன்னால் கீழே இறங்கிப்போய் நிற்க வேண்டுமென்று நினைப்பதற்கே பயமாக இருந்தது அவருக்கு. தலைவிரி கோலமாக நகைகளையெல்லாம் கழற்றி எறிந்துவிட்டுத் திமிறிக்கொண்டு ஓட முயலும் சுரமஞ்சரியை வானவல்லியும், வசந்தமாலையும் பக்கத்துக்குப் பக்கம் கைகளைப் பற்றித் தடுத்துக் கொண்டு நின்றார்கள். பல்லக்கிலும் தரையிலுமாக அவள் கழற்றிச் சிதறிய அணிகலன்கள் கிடந்தன. வெறி கொண்டவள் போல எதையோ சொல்லிக் கூக் குரலிட்டுக் கொண்டிருந்தாள் சுரமஞ்சரி.
“இது நரகத்துக்குப் போகும் வாகனம். நான் இதில் ஏறிவரமாட்டேன்” என்று பல்லக்கைச் சுட்டிக் காட்டித் திரும்பத் திரும்பக் கத்தினாள் அவள். நிலைமையின் பயங்கரம் அவருக்குப் புரிந்தது. தானோ, நகைவேழம்பரோ அப்போது அவளுக்கு முன்னால் போய் நிற்பதால் நல்ல விளைவு எதுவும் ஏற்படாதென்று உறுதியாகத் தோன்றியது அவருக்கு. கெளரவத்தைக் காப் பாற்றிக் கொள்வதற்காக அவளைச் சமாதானப்படுத்தப் போய் அதனாலேயே அந்தக் கெளரவம் நாற்சந்தியில் சிதறும்படி ஆகிவிடக் கூடாதே - என்று மனத்தில் முன்னெச்சரிக்கை ஒன்றும் எழுந்தது.
“பக்கத்தில் கொண்டுபோய் நிறுத்தாதே! தேரைச் சற்று ஒதுக்குப்புறமாகவே விலக்கி நிறுத்து” என்று தேரோட்டிக்கு உத்தரவிட்டார் அவர். தேர் ஒதுக்கி நிறுத்தப்பட்டது.
மீண்டும் தேரோட்டிக்குக் கட்டளையிட்டார் அவர். “நீ போய் வானவல்லியை மட்டும் இங்கே அழைத்து வா... நான் வந்திருப்பதை எல்லாரும் கேட்கும்படி சொல்லாமல் வானவல்லிக்கு மட்டும் குறிப்பினாற் புலப்படுத்திவிட்டு அவளைக் கூப்பிடு.”
தேரோட்டி அவருடைய கட்டளையை நிறைவேற்றுவதற்குச் சென்றான். மெளனம் கலக்கத்தைத் தவிர்க்கும் - என்பதற்கு மாறாக ஏதோ ஒரு கலக்கத்தைப் பிறப்பிப்பதற்குக் காரணமாகப் போகிற அசாதாரண மெளனத்தோடு தேரில் இருந்தார் நகைவேழம்பர், பட்டினப்பாக்கத்திலிருந்து புறப்பட்டது தொடங்கி அவருடைய இந்த மெளனத்தைக் கவனித்தவராய் இது என்ன விளைவுக்கு அடிகோலுமோ என்று தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே வந்தார் பெருநிதிச் செல்வர். இப்போது, தேரோட்டியை அனுப்பிவிட்டுக் காத்திருந்த இந்தச் சில விநாடிகளிலும் நகைவேழம்பரிடம் இதே மெளனத்தையே கவனித்து அவர் உணர்ந்தார்.
இதற்குள் தேரோட்டி வானவல்லியையும் அழைத்துக் கொண்டு வந்து எதிரே நிற்கவே அவருடைய கவனம் முழுவதும் செய்ய வேண்டிய காரியத்தின் அவசரத்தில் திரும்பியது. வானவல்லியே தன்னை வெறுப்போடு பார்ப்பதைக் கண்டு அவளிடம் என்ன சொல்வதென்று தயங்கினார் அவர். நடந்த நிகழ்ச்சிகள் அவள் மனத்தை எவ்வளவு தூரம் பாதித்திருந்தால் செல்வத் தந்தையாகிய தன்னையும் இப்படி வெறுப்போடு பார்க்கும் துணிவை அவளுக்கு அளித்திருக்க வேண்டும் என எண்ணிப் பார்த்துக் கொண்டு பின்பு பேசினார்: "வானவல்லி! உன் முகத்தைப் பார்த்தால் சுரமஞ்சரியைவிட நீதான் அதிகமாகக் கோபம் அடைந்திருக்கிறாற் போல் தோன்றுகிறது. நடந்ததை யெல்லாம் உங்களோடு பூக்கூடை சுமந்து வந்த பணியாளன் எனக்குச் சொன்னான். என்னிடம் ஒரு தவறும் இல்லை. நமக்குப் பூக்களைக் கொண்டு வந்து கொடுத்தவர்கள் தாம் ஏதோ சூழ்ச்சி செய்திருக்கிறார்கள். உலகத்தில் யாரையும் நம்ப முடியவில்லை அம்மா. யாருக்கு, எங்கே, எதன் மூலம் எதிரிகள் இருக்கிறார்கள் என்றே புரிந்து கொள்ள முடிவதில்லை. சுரமஞ்சரியைக் காட்டிலும் உன் தந்தையிடம் உனக்கு அநுதாபம் அதிகமென்று நான் நம்பிக் கொண்டிருப்பதைப் பொய்யாக்கிவிடாதே, மகளே! எப்படியாவது நீயும், வசந்தமாலையுமாக முயன்று சுரமஞ்சரியைப் பல்லக்கில் ஏற்றி உட்காரச் செய்து மாளிகைக்கு அழைத்து வந்துவிடுங்கள். நம்முடைய குடும்பத்தின் பெருமையும், பீடும், இப்படி இந்த நாளங்காடி நாற்சந்தியில் சிதற வேண்டாம் என் அருமைப் பெண்ணே! உன்னை மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகிறேன். இன்று இந்த விநாடியில் நீ என்னுடைய மானத்தைக் காப்பாற்றி உதவி செய்” - பெருநிதிச் செல்வர் தம் மகள் வானவல்லியிடம் இவ்வாறு கூறி வேண்டிக் கொள்ளும்போது தேரோட்டியும், பணியாளனும் குறிப்பறிந்து விலகி நின்று கொண்டிருந்ததனால் நகைவேழம்பர் மட்டுமே மூன்றாம் மனிதராக இருந்து இவற்றைக் கேட்க நேர்ந்தது.
அன்று நடந்த நிகழ்ச்சியிலிருந்து தந்தையார் மேல் எவ்வளவோ சந்தேகங்களும், பயமும் ஏற்பட்டிருந்தாலும் அவர் இப்போது வேண்டிக்கொண்ட விதம் வானவல்லியின் மனத்தை குழையச் செய்துவிட்டது. வந்த போது இருந்த ஆத்திர வேகம் தணிந்தவளாய் அவள் அவரைக் கேட்டாள்:
“இப்போது என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள், அப்பா?”
“செய்வதற்கு முடியாத எதையும் செய்யச் சொல்லவில்லை அம்மா. செய்ய முடிந்ததைத்தான் சொல்கிறேன். நீயும் வசந்தமாலையுமாகச் சேர்ந்து சுரமஞ்சரியை வலுவில் பிடித்துத் தூக்கியாவது பல்லக்கில் உட்கார்த்தி மாளிகைக்குக் கொண்டு வந்துவிட வேண்டும், வீட்டுக்கு வந்து அவள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். ஏசட்டும். நான் பொறுத்துக் கொள்வேன். குடிப்பெருமையை நடுத்தெருவில் விலை பேச விடக்கூடாது மகளே! உனக்குத் தெரியாததில்லை!” என்று குழைந்து பணிந்து வேண்டினார் பெருநிதிச் செல்வர்.
அவருடைய வேண்டுகோள் தன் மனத்தில் உறைத்துத் தான் அதை ஏற்றுக் கொண்டு இணங்கிச் செயல்படுத்தப் புறப்படுவது போல் திரும்பிச் சென்றாள் வானவல்லி. தம்முடைய தந்திரப் பேச்சுக்கு வெற்றி கிடைத்து விட்டது என்ற நம்பிக்கை பெருநிதிச் செல்வருக்கு ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் வசந்தமாலையும், வானவல்லியும் சுரமஞ்சரியைத் திமிர விடாமல் தூக்கிப் பிடித்துக் கொண்டு போய்ப் பல்லக்கில் ஏற்றும் காட்சியைத் தம் கண்களால் தாமே கண்ட பின்புதான் அவருக்கு முழு நம்பிக்கையும் வந்தது. சுரமஞ்சரி பல்லக்கிலிருந்து குதித்து விடாமல் மற்றப் பெண்கள் இருவரும் அவளைப் பிடித்துக் கொண்டதையும், கழற்றி எறியப்பட்டுக் கிடந்த அணிகலன்களை எல்லாம் பல்லக்குத்துக்கிகள் எடுத்துப் பல்லக்கினுள்ளேயிருந்த வானவல்லியிடம் பத்திரமாக அளித்ததையும் அதன்பின் பல்லக்கு அங்கிருந்து புறப்பட்டதையும் பார்த்துவிட்டுத்தான் பெருநிதிச் செல்வர் நிம்மதியடைந்தார். இவ்வளவும் நிகழ்வதை நகைவேழம்பரும் கண்டு கொண்டிருந்தாலும் அவர் மெளனமாகவே இருந்தார்.
பல்லக்கை முன்னால் சிறிது தொலைவு போக விட்ட பின் தேரைப் பின்னால் செலுத்திக் கொண்டு போகுமாறு தேரோட்டிக்கு உத்தரவிட்டார் பெருநிதிச் செல்வர். மாளிகையை அடையும்போது பிற்பகல் நேரமும் முடிந்திருந்தது. பல்லக்கைப் பின்தொடர்ந்து தேர் மாளிகைக்குப் போனதும் சுரமஞ்சரியையும், அவள் தோழியையும் மட்டும் தந்திரமாகத் தனியே அழைத்துப்போய் அவர்கள் வழக்கமாய்த் தங்கும் மாடத்துக்குள்ளேயே முன்போலச் சிறை வைத்தார் பெருநிதிச் செல்வர். தம்மை நேரில் அவள் காணும்படி விடாமலே இதைச் செய்தார் அவர். முன்பு இப்படி அவர் சிறை வைத்தபோது அவளும் அவள் தோழியும் குமுறியதுபோல் இப்போது குமுறவில்லை. சோர்ந்து துவண்டு அழுதபடியே தரையில் சாய்ந்து கிடந்தாள் சுரமஞ்சரி. வசந்தமாலைக்கு அந்த நிலையில் தன் தலைவியோடு பேசவே பயமாயிருந்தது. நேரம் சிறிது சிறிதாக வளர்ந்து கொண்டேயிருந்தது.
மாலை முற்றி இருட்டியது. அந்த மாடமும் தீபமின்றி இருண்டிருந்தது. இருட்டே மெல்ல யாருக்காகவோ அழுவது போல் அந்த மாடத்தில் இருந்து விசும்பலும் அழுகையும் கேட்டுக் கொண்டே இருந்தன. பேச்சு மட்டும் இல்லை.
இன்னும் நேரமான பின் இரண்டாம் நாள் நிலா வானில் அந்த மாடத்துக்கு நேரே வந்து மிதந்தது. ஒரு கணம் தானே அந்த நிலாவாக மாறிக் கீழே மண்ணில் எங்கோ இருக்கும் இளங்குமரனின் முகத்தைத் தேடுவ தாகக் கற்பனை செய்துகொண்டாள் சுரமஞ்சரி. அந்தக் கற்பனையாலும் அழுகை நிற்கவில்லை. பல நாழிகை மெளனத்துக்குப்பின் அந்த மாடத்தில் வசந்தமாலையும் தன்னோடு சிறைப்பட்டிருப்பதை அப்போதுதான் நினைத்துக் கொண்டவள்போல் அவள் இருளில் எங்கோ இருப்பதாகப் பாவித்துக் கொண்டு கதி கலங்கச் செய்யும் ஒரு கேள்வியை அவளிடம் கேட்டாள் சுரமஞ்சரி. அந்தக் கேள்வியைச் செவியுற்ற வசந்தமாலைக்கும் பாதாதிகேச பரியந்தம் மயிர்க் கூச்செறிந்து நடுங்கியது.
தன் தலைவி, அந்தக் கேள்வியைத் தன்னிடம் கேட்பதற்குக் காரணமாக அவள் மனத்தில் பெருகி முதிர்ந்திருந்த உணர்வு துணிவா, விரக்தியா, பயமா, சோகமா என்று புரிந்து கொள்ளவே இயலாமல் மயங்கினாள் வசந்தமாலை. தலைவியிடமிருந்து எந்த உணர்வை மூலமாகக் கொண்டு அந்தக் கேள்வி பிறந்திருந்தாலும் தோழிக்குப் பயம் ஒன்றே முடிவாக அதிலிருந்து ஏற்பட்டது.
அகன்ற வீதியில் சோழர் கோநகரத் தின் இராக் காவலர்கள் அளவாக அடிபெயர்த்து நடக்கும் ஓசை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகையில் இருளும் மௌனமுமே தங்களுக்குள் பரம இரகசியமாகக் கலந்து பேசிக் கொண்டு ஏதோ சதி செய்வது போலப் பயங்கர அமைதி நிலவியது. சுரமஞ்சரி தன் மாடத்தில் தன்னோடு இருளில் சிறை வைக்கப் பட்டிருந்த வசந்தமாலையைக் கேட்டாள்.
“வசந்தமாலை! வாழ்வதில் எதுவும் சுகமாகத் தெரியவில்லையானால், சாவதில் அந்தச் சுகம் இருக்கலாமோ என்று எண்ணிச் சாகத் தவிக்கும் துடிப்பு உனக்கு எப்போதாவது ஏற்பட்டிருக்கிறதோ...?”
வசந்தமாலை திடுக்கிட்டாள். அப்பால் என்ன இருக்கிறதென்று புரிந்து கொள்ள முடியாது சுற்றிலும் மூடியிருந்த இருளைப் போலவே இந்தக் கேள்வியும் இருந்தது. இந்தக் கேள்வியில் நிரம்பியிருக்கும் வார்த்தைகளுக்கு என்ன பொருள், ஒரு பொருளும் அமையாமல் வார்த்தைகள் இருக்க முடியாது. சில சமயம் வார்த்தைகளிலே தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்குக் கனமான பொருள் இருப்பதும் உண்டு. அப்படி ஏதோ ஒரு கனமான துயரம் தன் தலைவியின் சொற்களில் இருப்பதை மெல்ல மெல்ல உணர்ந்தாள் வசந்தமாலை. அழுகை ஒலியை அடையாளமாகக் கொண்டு இருளில் தலைவி இருந்த இடத்தை அநுமானம் செய்தவாறு வசந்தமாலை நெருங்கி வந்தாள். அருகில் மண்டியிட்டு அமர்ந்துகொண்டு மெல்லக் கேட்டாள்.
“சாவதைப் பற்றிய நினைவு. உங்களுக்கு இப்போது எதற்காக அம்மா வந்தது?”
“நைந்துபோன மனத்துக்கு எதை நினைப்பது, எதை நினையாமலிருப்பது என்ற எல்லைகளே இல்லையடி தோழி! ஒவ்வொரு விநாடியும் அணுஅணுவாகச் செத்துப்போய்க் கொண்டிருப்பதை விட ஒரேயடியாகச் சாவது சுகம்தானே? பூக்குடலையிலிருந்து புறப்பட்ட அந்தப் பாம்பு என்னைத் தீண்டியிருக்கக் கூடாதோ?” என்றாள் சுரமஞ்சரி.
வசந்தமாலை இப்போதும் தன் தலைவியிடம் பேசுவதற்குத் தகுதியான சொற்கள் தனக்குக் கிடைக்காமல் தவித்தாள். அவளுடைய அநுபவத்தில் பலமுறை இப்படிச் சொற்கள் கிடைக்காமல் தவிக்க நேர்ந்திருக்கிறது. எதிர்பாராத உணர்ச்சிகளை ஏற்று மறுமொழி கூறுவதற்குச் சொற்கள் துணை செய்யாமற் போய் நீந்தத் தெரியாதவள் வெள்ளத்தினிடையே குதித்தது போல் மயங்கினாள் அவள். ‘துக்கம், பயம், தவிப்பு, காதல், வேட்கை போன்ற சில உணர்ச்சிகளை முழுமையாகப் பேசுவதற்கு ஏற்ற முழுமையான மொழி ஒன்று உலகத்தில் இன்னும் ஏற்படவில்லை போலிருக்கிறது, தோழி!’ என்று தன் தலைவி எப்போதோ தன்னிடம் சொல்லியிருந்த வாக்கியத்தை நினைத்துக் கொண்டாள் வசந்தமாலை. அவளுடைய மெளனத்தைக் கலைத்துக் கொண்டு மீண்டும் சுரமஞ்சரியின் கேள்வி எழுந்தது.
“என்னடி வசந்தமாலை? நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீ பதில் சொல்லாமல் இருக்கிறாய்?”
“என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை, அம்மா. உங்களுடைய இந்தக் கேள்விக்கு மறுமொழி சொல்வதற்கு என்னிடம் சொற்கள் இல்லை. அதற்குத் தகுந்த சொற்களை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். ‘உணர்ச்சிகளைப் பரிபூரணமாக பேசுவதற்கென்று முழுமையான மொழி, எதுவும் உலகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை!’ என்று நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே! அதைத்தான் இப்போது நான் உங்களிடம் சொல்ல வேண்டியிருக்கிறது.”
“சில வெண்கல மணிகளுக்கு நடுவிலுள்ள நாவு அறுந்து போகும். அப்படி நாவறுந்த பின்பு அவற்றில் இருந்து நாதம் பிறவாது. உற்சாகம் அற்றுப்போன என் மனமும் இப்போது அப்படித்தான் நாக்கிழந்த மணியைப் போல இருக்கிறது. என்னுடைய வேட்கை சிறிது சிறிதாக வளர்ந்து தணியாத் தாகமாகியும் அதை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் ஏமாந்து நிற்கிற காரணத்தால் என் வேட்கை தீரவேண்டும் அல்லது நானே தீர்ந்து விட வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்தாயிற்றடி வசந்தமாலை?”
“தன்னையே அழித்துக் கொள்ளத் துணியும் அளவுக்கு அப்படி ஒரு வேட்கையும் உண்டா அம்மா!”
“உனக்குத் தெரியாதடி வசந்தமாலை! வேட்கை என்ற தமிழ்ச் சொல்லுக்கு ‘எதை அநுபவிக்கத் தவிக்கிறோமோ அதை அடைந்தாலன்றித் தீராத உணர்வு’ என்று பொருள் விரியும். இரண்டு மனங்களுக்கு நடுவில் ஒன்றை மற்றொன்று தழுவ நெருங்கும் வேட்கைக்கு ‘ஒருவர் ஒருவரை இன்றி அமையாமை’ என்று அகப் பொருள் நூல்களில் பதசாரம் சொல்லியிருக்கிறார்கள், தோழீ.”
“எந்தப் பதத்துக்கு எந்த நூலில் எப்படிப் பொருள் சொல்லியிருந்தால் என்ன அம்மா? மனத்தில் முதிர்ந்து முற்றி முறுகியவைகளாகக் கன்றிப்போன உணர்ச்சி களின் ஆழத்தை அளப்பதற்கு ஒரு மொழியிலும் சரியான பதங்கள் இருப்பதாகத் தெரியவில்லை என்று நீங்கள் பலமுறை சொல்லியதுதான் நிலைத்த உண்மையாக நிற்கும்போல் இருக்கிறது.”
“வசந்தமாலை! இந்த வேட்கை முள் மனத்தில் தைத்த நாளிலிருந்து நான்தான் எல்லா வேதனைகளையும் பட்டுக் கொண்டிருக்கிறேன். இதற்குக் காரணமானவர் என்னவோ இந்த வினாடிவரை ஒரே விதமாகத் தான் இருக்கிறார். எதற்கும் அடிமைப்படாத இரும்பு மனிதர்களைக்கூட அன்புக்கு அடிமைப்படுத்தலாம் என்று அறநூல் ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், என்னுடைய மனத்தில் வேட்கையைப் பிறப்பித்தவராகவும், வேட்கையாகவும், வேட்கையைத் தீர்க்கும் மருந்தாகவும் - எல்லாமுமாகவும் அமைந்திருக்கிற சுந்தர இளைஞரோ, அன்பைக்கூடப் பிறரிடமிருந்து ஏற்றுக் கொள்ளத் தயங்கும் அளவுக்குத் தன்மானம் உள்ளவராக இருக்கிறாரே! இன்றைக்கு நாளங்காடியில் நடந்த நிகழ்ச்சி அவருடைய தன்மானத்தில் கோபத்தையும் கலந்திருக்கும் - என் தந்தையாரின் சதிக்கு உடந்தையாக இருந்துகொண்டு நானே அவரைச் சூழ்ச்சியால் கொல்ல விரும்புகிறேன் என்றுகூட அவர் நினைத் திருக்கலாம்...”
“நிச்சயமாக அவர் அப்படி நினைத்திருக்க மாட்டார் அம்மா! உங்கள் மனம் அளவற்றுக் கலங்கிப் போயிருக்கிற காரணத்தால் நீங்களாகவே அவருடைய குணத்தை மாற்றி மாற்றி நினைத்துக்கொண்டு வீணாக வருந்துகிறீர்கள். கோபதாபங்களுக்கு ஆட்படுகிற சிறிய மனிதராக அவர் இப்போது தோன்றவில்லை. அப்படி ஆட்படுகிறவராயிருந்தால் நாளங்காடிக் கூட்டத்தில் உங்கள் மேல் எறியப்பட்ட கற்களைத் தம் உடம்பில் தாமே தாங்கிக் கொண்டிருக்க மாட்டார் அவர். வேகமாக மலையுச்சிக்கு ஏறிச்சென்றவன் அதற்கு அப்பால் பயங்கரமான பள்ளத்தாக்கைத் தவிர வேறொன்றுமில்லை என்று அறிந்துகொண்டு மறுபடியும் சமநிலைக்கே திரும்பி வந்தாற் போல் உடல் வலிமையால் ஒரு காலத்தில் அகங்கார ஆடம்பர ஆணவங்களின் உச்சிக்குப் போய்விட்டு எளிமைக்குத் திரும்பிய அநுபவ ஞானியாகத்தான் இப்போது தோன்றுகிறாரம்மா அவர்! உங்களைக் கருவியாகப் பயன்படுத்திக்கொண்டு அவருக்கு இந்தக் கெடுதல் செய்தவர்கள் ஒருநாளும் நன்றாகயிருக்கமாட்டார்கள். அந்த நச்சுப்பாம்பு நாளங்காடியில் ஒருவரையும் தீண்டவில்லையானாலும் உங்கள் மனதில் அவருக்காக அவரையே பொருளாகக் கொண்டு பிறந்திருக்கும் வேட்கையைத் தீண்டி அதில் இழைந்திருக்கும் உறவினுள் நஞ்சைக் கலந்ததைப் போல ஆக்கிவிட்டது.”
“வசந்தமாலை! அந்த உறவு பிறந்த முதல் நாளிலிருந்து இன்றுவரை அவரிடம் ஒரே தன்மையுடைய தாய் மாறாமலே இருக்கும் குணம் ஒன்றை நான் தொடர்ந்து கவனித்துக்கொண்டு வருகிறேன். என்னிட மிருந்து எதையும் ஏற்றுக் கொள்ளாமை என்ற குணம் தான் அது. அவர் யவனமல்லனை வெற்றிகொண்டு தோளில் முல்லை மாலை அசைய என் பல்லக்கெதிரே நின்றுகொண்டே நான் பரிசளித்த மணிமாலையை ஏற்றுக்கொள்ள மறுத்தார். பின்னொரு நாள் வெள்ளியை யுருக்கி வார்த்து நீட்டினாற் போன்ற வெண்தாழை மட லில் செம்பஞ்சுக் குழம்பையும் என் உள்ளத்து உணர்வின் நளினங்களையும் குழைத்துக் குழைத்து எழுத்துக்களாய்த் தீட்டி நான் எழுதிய மடலையும், மடலின் விருப்பத்தையும் சேர்த்தே ஏற்றுக் கொள்ள மறுத்தார்.
“அதன்பின் புயலும் மழையுமாயிருந்த பயங்கர இரவு ஒன்றில் கப்பல் கரப்புத் தீவின் நடுவே என்னுடைய மனத்தின் மெல்லிய உணர்வுகளையே காணிக்கைகளாக ஏந்திக்கொண்டு நான் மலர்ந்து மணம் பரப்பி நின்ற போது ஏற்றுக்கொள்ள மறுத்தார். இப்படித் தொடர்ந்து மறுத்து கொண்டே இருப்பதற்கு எவ்வளவு நெஞ்சு உரம் வேண்டும் என்று நினைத்துப் பார்க்கும் போது அவருடைய அந்த மனவலிமைக்கு முன்னால் நானும் என்னுடைய வேட்கையும் அணுவாகத் தேய்ந்து சிறுத்துப் போய்விட்டதுபோல் தோன்றுகிறதடீ. ‘மனத்தை இடைவிடாமல் அரித்தெடுக்கின்ற காரணத்தினால் ஆசைதான் பெருநோய்’ என்று எனக்கு முன்பே நிமிர்ந்து நின்றுகொண்டு துணிவோடு சொல்கிற ஞான வீரரிடம் போய் என்னுடைய ஆசையை நான் சொல்வதற்கான வார்த்தைகள் எந்த மொழியிலாவது இருக்க முடியுமா என்பதுதான் இப்போது என் பயமாயிருக்கிறதடீ வசந்தமாலை!”
சுரமஞ்சரி ஒவ்வொரு சொல்லிலும் அழுகை தேங்கி நிற்க - ஒவ்வொரு சொல்லுமே தனித்தனியாகவும் வாக்கியமாகவும் பிரிந்தும் சேர்ந்தும் அழுவது போலவே பேசினாள். பக்கத்தில் இருளோடு இருளாக மண்டியிட்டு அமர்ந்திருந்த வசந்தமாலையிடமிருந்து தன்னுடைய இந்தப் பேச்சுக்குப் பதில் இல்லாமற் போகவே சுரமஞ்சரி பேச்சை நிறுத்தினாள்.
“என்னடி வசந்தமாலை! நான் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டு வருகிறாயோ, இல்லையோ?”
“...”
இந்தக் கேள்விக்கும் வசந்தமாலையிடமிருந்து பதில் இல்லாமற் போகவே சுரமஞ்சரி தன் முகத்தை வசந்தமாலையின் முகத்தருகே கொண்டு போய் மூச்சுக் காற்றோடு மூச்சுக் காற்றுக் கலக்க முடிந்த அண்மையில் தோழி அப்போது அந்த மாடத்தின் இருளில் எதை அப்படி உற்றுக் கவனிக்கிறாள் என்று துழாவினாள். தலைவியாகிய தன் பேச்சையும் பொருட்படுத்தாமல் உதாசீனம் செய்துவிட்டு உற்றுக் கவனிக்கும் அளவுக்கு அப்படி முக்கியமாக வசந்தமாலையின் பார்வைக்கு என்ன கிடைத்திருக்க முடியும் என்ற சந்தேகத்தோடு தோழியின் பார்வை சென்ற திக்கிலேயே தன் பார்வையையும் பின்தொடரவிட்டாள் சுரமஞ்சரி. அப்படிச் சென்ற பார்வை தனக்கு இலக்காக வாய்ந்த இடத்தில் போய் நின்றதும் அங்கே தென்பட்ட காட்சியிலிருந்து பயமும் நடுக்கமும் பிறந்தன. வசந்தமாலைக்கு வாய் அடைத்துப்போன காரணம் இப்போது சுரமஞ்சரிக்கும் புரிந்தது. சுரமஞ்சரியும் வாய் அடைத்துப் போனாள். பேசும் முயற்சிக்காக நாக்குப் புரள மறுத்தது. கண்கள் நிலைகுத்தி இமைக்கவும் மறுத்தன.
பார்வை சென்ற திக்கிலே இருளின் நடுவில் அந்தரத்தில் தொங்கும் நெருப்புப் பொறிகளைப் போல் இரண்டு சிவப்பு இரத்தினங்கள் பளீரென்று மின்னிக் கொண்டிருந்தன. கறுப்பு உடம்பில் இரத்தம் வழிவது போல் செவ்வொளி விரிந்து இருளின் கடுமையைத் துளைத்துக் கொண்டு பாயும் ஆற்றல் வாய்ந்த அத்தகைய இரத்தினங்கள் அந்தப் பெரு மாளிகையில் தன் தந்தையாரின் ஊன்றுகோல் பிடியான யாளி முகத்தில் மட்டுமே உண்டென்பதைச் சுரமஞ்சரி நினைத்தாள், உணர்ந்தாள். அதன் விளைவாகப் பயந்தாள்.
ஆலமுற்றத்துப் படைக்கலச்சாலைக்குத் திரும்பி வந்த பின்னும் நெடுநேரம்வரை முகுந்தபட்டரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான் இளங்குமரன். ‘அறிவின் மிகுதி காரணமாக மனத்தில் உண்டாகிற செருக்கை இழக்கக்கூடாது என்று எண்ணி எண்ணி அந்த இறுமாப்பையே வளர்த்து மேலும் மேலும் பெருக்கிக் கொள்ள ஆசைப்படும் அறிவாளிகளைத் தான் நேற்று வரை இந்த நாளங்காடியில் நான் சந்தித்தேன். தான் தனக்குப் பெருமையாக விரும்பி வளர்த்துக் கொண்ட அகங்காரமே ஒரு நிலைக்குமேல் தனக்கும் அடங்காதபடி மதமாகப் பெருகிவிடும்போது அதை அந்த விநாடி வரை வளர்த்து வந்தவன் பரிதாபத்துக்கு உரியவனாகி விடுகிறான். கல்வியின் மிகுதி காரணமாகவும் மனித மனத்தில் பெருமிதம் உண்டாகலாம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். வீரத்துக்குத்தான் ‘பெருமிதம்’ என்பது மற்றொரு பெயர். பெருமிதமாவது மற்றவர்களினும் உயர்ந்துதான் பேரெல்லையில் நிற்றல். அறிவாளியாக இருப்பவன் பேரெல்லையில் நிற்பதை மற்றவர்கள் உணர்ந்து அவன் உயரத்தையும் தங்கள் தாழ்வையும் நினைத்து வியப்பதுதான் நியாயமான பெருமிதம். அப்படி இல்லாமல் ‘நான் பேரெல்லையில் உயர்ந்து நிற்கிறேன்’ - என்று பெருமிதத்துக்குச் சொந்தக்காரனே தன்னை வியந்துகொள்ள முற்படும் போதுதான் பெருமிதம் மெல்ல மெல்லப் பெருமதமாக மாறுகிறது’ - என்று எண்ணியவனாக நெருப்புப் பிடித்த வீட்டுக்குள் சிறைப்பட்டிருந்தவரைப் போன்ற அகங்கார மதத்திலிருந்து விடுபடத் துடித்த முகுந்தபட்டரின் முகத்தை நினைவுக்குக் கொணர்ந்து வந்தபடியே சிரித்துக் கொண்டான் இளங்குமரன்.
மருள் மாலை நேரத்துக் கடற்காற்று ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் மரங்களையும், செடி கொடிகளையும் அவற்றின் காய், கனி, பூங்கொத்துக்களையும் ஆட்டி அசைத்துக் கொண்டிருந்தது. இளங்குமரன் படைக்கலச் சாலையின் தோட்டத்தில் நினைவுகள் வரிசையாய் அடுக்கும் மனநிலையோடு உலாவிக் கொண்டிருந்தான். மண்ணில் கூந்தலைப்போல் தரையில் சுருண்டு கொடியோடிப் பரந்து படர்ந்திருந்த அறுகம்புல் வெளியில் புள்ளி மான்கள் உலாவிக் கொண்டிருந்தன. அந்த மான்கள் தலை நிமிரும்போது தற்செயலாய் அவற்றின் கண்கள் மட்டும் தனியாக நகர்ந்து முன் வருவன போல் தோன்றும் அழகை இளங்குமரன் கண்டான். இன்னொரு புறம் இந்த மண்ணின் எண்ணற்ற அழகுகளைக் காண்பதற்காகவே தன் வண்ணத் தோகையெல்லாம் கண்ணாகி நின்றாற் போல் மயில் ஒன்று கலாபம் விரித்து ஆடிக் கொண்டு இருந்தது. ஆலமுற்றத்துக் கோயில் மதிலுக்கும் அப்பால் கடல் நீலநிறத்துக் கோல எழிற் கொள்ளையாக எல்லையற்றுப் பரந்து தெரிந்தது. தோட்டத்தில் உலாவிக் கொண்டே தன்போக்கில் நிமிர்ந்த இளங்குமரன் முல்லை தன்னை நோக்கி வருவதைக் கண்டு திகைத்து நின்றான். மாலையில் படைக்கலச் சாலைக்கு வந்து தன்னைக் காண்பதாகத் தன்னிடம் நாளங் காடியில் வளநாடுடையார் கூறியிருந்தது இப்போது தான் அவனுக்கு நினைவு வந்தது. புறப்படும் போது வளநாடுடையாரும் அவர் மகளும் சேர்ந்து புறப்பட்டு வந்திருக்க வேண்டுமென்றும், வளநாடுடையார் நீலநாக மறவரோடு பேசச் சென்றபின் முல்லை தனியாகத் தன்னைத் தேடிக் கொண்டு தோட்டத்திற்கு வருகிறாள் என்றும் இளங்குமரன் இப்போது புரிந்து கொண்டான்.
முல்லை தொலைவில் வரும் தோற்றத்தைக் கொண்டே அன்று அவள் அதிகமான சிரத்தையோடு தன்னை அலங்காரம் செய்து கொண்டு வந்திருக்கிறாள் என்பதை இளங்குமரன் அறிந்து கொள்ள முடிந்தது. எதிரே தன்னை நோக்கி அவள் ஒவ்வொரு முறை சிலம்பு ஒலிக்கும் பாதங்களைப் பெயர்த்து வைக்கும் போதும் அப்படிப் பாதம் பெயர்த்து மிதித்து நடக்கின்ற மண்ணின்மேல் ஒரு புதிய அழகை ஊன்றிக் கொண்டே நடந்து வருவதுபோல இருப்பதை இளங்குமரன் கண்டான். உடனே காரணமின்றியோ அல்லது காரணத்துடனோ அவனுக்கு விசாகையின் நடை நினைவுக்கு வந்தது. ‘இந்த மண்ணில் ஊன்றி நடக்கமாட்டேன்’ என்பதுபோல் பிரவாகத்தில் மிதக்கும் பூவாக நடந்து வரும் விசாகையையும், இந்த மண்ணில் ஒவ்வோர் அடி பெயர்த்து வைக்கும்போதும் ஒரு புதிய அழகை ஊன்றிக் கொண்டு நடப்பதுபோல நடந்து வரும் முல்லையையும் ஒப்பிட்டு எண்ணி, அந்த எண்ணத்துக்கும், நிறுவைக்கும் மனத்துக்குள்ளிருந்து, கிடைக்கும் முடிவை அவன் பெறுவதற்குள்ளேயே முல்லை அவனுக்கு மிக அருகில் வந்துவிட்டாள்.
“என் தந்தையும் நானும் வந்தோம். ஆலமுற்றத்துத் தாத்தாவும் தந்தையும் பேசிக்கொண்டே கடற்கரைப் பக்கமாகப் போய்விட்டார்கள். நான் மட்டும்...”
பலமில்லாதவன் வீசி எறிந்த கல் குறிவைத்த இலக்குக்கு முன்னாலேயே தளர்ந்து கீழே விழுந்து விடுவதைப் போல் முல்லையின் பேச்சும் தைரியமாகத் தொடங்கப்பட்டுத் தைரியம் நடுவிலேயே தளர்ந்து போனதால் இப்படித் தயங்கி நின்றது.
இளங்குமரன் அவள் முகத்தை உற்றுப் பார்த்து விட்டுப் புன்னகை செய்தான். அவனுடைய பார்வையைத் தாங்கிக்கொள்வதற்கே பயமாயிருந்தது அவளுக்கு. அவனோ பார்வையோடு விட்டுவிடாமல் அவளைத் தன் வார்த்தைகளையும் தாங்கிக்கொள்ள வைத்தான்.
“நீயும் கடற்கரைப் பக்கமாகப் போயிருக்கலாமே முல்லை! உனக்கு மட்டும் கடற்கரைக் காற்றின் மேல் திடீரென்று இவ்வளவு வெறுப்பு இன்றைக்கு எப்படி ஏற்பட்டது?”
“முதன்மையான விருப்பமாக எதை விரும்பு கிறோமோ அதுவே கை நழுவிப் போகிறபோது இரண்டாம் பட்சமான எல்லாவற்றையும் வெறுக்க வேண்டியதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?” என்று இளங்குமரனுக்குப் பதில் சொல்லிவிட்டுத் தான் சிறிது தைரியமாகவே பேசிவிட்டதாக உள்ளூறப் பெருமையும் பட்டுக் கொண்டாள் முல்லை. நாளங்காடியில் அவனுக்கு நெல்லிக்கனியளிக்கும் போது பயந்தது போல அவன் முகத்தைப் பார்ப்பதற்குப் பயப்படாமல், இங்கே இப்போது தான் சற்றுத் துணிந்தே அவனுடன் பேசலாமென்று தோன்றியது அவளுக்கு. அவனும் துணிவாகவே அவளைக் கேட்டான்:
“நீ முதன்மையாக விரும்பியது எது? இரண்டாம் பட்சமாக விரும்பியவை எவை? முதன்மையாக விரும்பியது ஏன் கிடைக்கவில்லை? அதற்காக இரண்டாம் பட்சமாக விரும்பியவற்றை நீ வெறுப்பானேன்? என்று தெரியாமல் நான் உன்னுடைய கேள்விக்கு மறுமொழி சொல்வது சாத்தியமில்லை முல்லை!” என்றான் இளங்குமரன்.
“சாத்தியமிராதுதான். என்னுடைய இந்த இரண்டு கைகளாலும் எனக்கு மிகவும் வேண்டிய ஒருவருடைய தோள்களில் புண்பட்ட போதெல்லாம் மருந்து தடவிக் காயத்தை ஆற்றினேன் நான். இப்போது இவ்வளவு காலத்துக்குப்பின் அந்தத் தோள்களில் காயம் பட்ட தழும்பும் தெரியவில்லை. அவை சுந்தரமணித் தோள்களாகப் பொன்நிறம் பெற்று மின்னுகின்றன. ஆனால் ஒரு காலத்தில் அந்தத் தோள்களுக்கு மருந்திட்டு அவற்றைக் காத்தவளுடைய கைகளுக்கு இன்றுவரை அந்தத் தோள்கள் நன்றி மறந்தவையாகவே இருக்கின்றன என்பதை நினைப்பதுதான் எனக்குத் தாங்கிக் கொள்ள முடியாத வேதனையாக இருக்கிறது ஐயா.”
முல்லை இப்படி இன்னும் குழந்தைத் தன்மை மாறாமல் தான் சொல்ல வந்த விஷயத்தைச் சிறு பிள்ளைக் கதை போலப் பின்னிப் பின்னிச் சொல்லியதைக் கேட்டு இளங்குமரன் மேலும் சிரித்தான்.
“முல்லை! இன்று நீ யாரைக் குறை சொல்லுகிறாயோ அந்த மனிதன், மார்பிலும் தோளிலும் காயம் படுவதைக் கவிகள் விழுப்புண்கள் என்று கூறிப் புகழின் முத்திரைகளாகப் போற்றியிருக்கிறார்கள்; ஆகவே ‘நீ இவற்றை மருந்திட்டு ஆற்ற வேண்டாம்’ என்று சொல்லி அந்த நாளிலேயே உனக்கு எச்சரிக்கை செய்தது உண்டா, இல்லையா? அன்று நீ அவன் தனக்கு மருந்திட வேண்டாமென்று மறுத்ததையும் பொருட் படுத்தாமல் அவனுக்கு மருந்திட்டுக் காயங்களை ஆற்றிவிட்டு இன்று இவ்வளவு காலத்துக்குப் பின்பு வந்து மறுபடியும் உன் சொற்களால் அதே மனிதனுடைய மனத்தைக் காயப்படுத்தலாமா? இது உனக்கு நியாயமா? அன்று ஆற்றிய காயத்துக்கு நீ இன்று வந்து பயனை எதிர்பார்ப்பதும் பண்பில்லையே? பிரதிபலனை எதிர்பார்த்துச் செய்யும் காரியங்கள் உயர்ந்தவைகள் அல்லவே? அப்படிப் பயனை எதிர்பார்த்துச் செய்யும் நோன்புகளைச் ‘சீல விரதங்கள்’ என்று பெயரிட்டுச் சமய நூல்கள் கூடக் குறைவாகத் தானே மதிப்பிடுகின்றன?”
“நான் சமய நூல்களைப் படிக்கவில்லை. இந்த உலகத்தில் நான் படித்துத் தெரிந்து கொண்டிருக்கிற ஒரே விஷயம் அன்புதான். அந்த அன்பை உங்களோடு வாதிட்டுத் தோற்கவும் நான் விரும்பவில்லை.” நாளங்காடியில் சமயவாதிகளின் பெரிய பெரிய கேள்விகளையெல்லாம் அழகாகவும் ஆணித்தரமாகவும் கூறிய மறுமொழிகளின் மூலம் வென்ற இளங்குமரன் பேதமை ஒன்றைத் தவிர வேறெதுவும் கற்றறியாத முல்லை என்னும் இளம்பெண்ணுக்கு முன்னால் இப்போது தயங்கினான். திகைத்தான்.
‘இந்த உலகத்தில் நான் பகுத்துத் தெரிந்து கொண்டிருக்கிற ஒரே விஷயம் அன்புதான்!’ என்று சொல்லிக்கொண்டே, கண்ணீரும் அழுகையும் பொங்க எதிரே வந்து நிற்கும் இந்தப் பெண்ணுக்கு இன்று நான் என்ன பதில் சொல்வது? என்று அவன் மனத்தில் பெரிதாய் ஒரு கேள்வி எழுந்தது.
அன்புக்குச் சமயம் ஏது? வாதம் ஏது? தர்க்கம் ஏது? எந்தப் பிரமாணத்தைச் சொல்லி அதை எப்படி மறுப்பது? எதிரே நிற்கும் முல்லையின் மனத்தைப் போலவே மேலே நிர்மலமாய்க் களங்கமற்றிருந்த ஆகாயத்தைப் பார்த்தான் இளங்குமரன். யாருக்குச் சொல்வதற்குப் பதில் கிடைக்காமல் அவன் ஆகாயத்தில் அதைத் தேடிக் கொண்டிருந்தானோ, அவள் தன்னுடைய சுந்தரமணித் தோள்களை, அவை தனக்குப் பதில்கள் என்பதுபோலப் பார்க்கலானாள். கடற்காற்று ஆனந்தமாக வீசிக்கொண்டிருந்தது. மயில் இன்னும் நன்றாகத் தோகை விரித்து ஆடிக்கொண்டிருந்தது. முல்லைக்கும் இளங்குமரனுக்கும் நடுவில் நின்ற குட்டிப் புள்ளிமான் ஒன்று தலைநிமிர்ந்து மை தீட்டினாற்போல் ஓரங்களில் கருமை மின்னும் தன் அழகிய நீள்விழிகளால் இருவரையும் மாறிமாறிப் பார்த்தது. குனிந்து அந்த மானின் கண்களைப் பார்த்த இளங்குமரன் முல்லையைப் பார்க்கவில்லையானாலும் அவள் கண்களிலும் அதே மருட்சி கலந்த அழகுதான் அப்போது இருக்குமென உணர்ந்தான்.
முல்லையின் முகத்தையும் அந்த முகத்திலிருந்து பருகுவது போன்ற ஆர்வத்தோடு தன்னை இமையாமல் பார்த்துக் கொண்டிருக்கும் கண்களையும் எதிரே நேருக்கு நேர் நிமிர்ந்து காணத் தயங்கியவனாகத் தங்கள் இருவருக்கும் நடுவில் நின்று கொண்டிருந்த மானின் கண்களை நோக்கியபடியே அவளோடு பேசினான் இளங்குமரன்.
“முல்லை! பூக்களைப்போல சில பருவ காலங்களில் மலர்ந்து பொலிவதும் பின் வாடி உதிர்ந்து தளர்வதும் குறைவதும்தான் மனித உடம்பின் அழகு, கவர்ச்சி இவை எல்லாம். பூக்கள் பூப்பதற்குப் பருவம், நேரம் முதலியன காரணமாவதுபோல இந்த உடம்பில் அழகு பூக்கும் பருவங்களும் சில உண்டு. உடம்பை வாகனமாகக் கொண்டு இயங்கும் நீண்ட வாழ்க்கைப் பயணத்தில் அழகும் கவர்ச்சிகளும் பூத்துப் பொலிகின்ற பருவங்கள் மிகவும் குறுகியவை. பூக்களுக்கும், நேரத்திற்கும் சேர்த்துத் தமிழில் ஒரே சொல்லாக வாய்த்திருப்பது ‘போது’ என்ற பதம். நேரத்தோடு மலரும் பண்பைக் குறிப்பதற்காகவே பூக்களுக்கும் போது என்று பெயரிட்டார்கள் போலிருக்கிறது, பவழமல்லிக்கை இரவிலேயே பூத்து விடுகிறது. தாமரை கதிரவனைப் பார்த்த பின்பே முகம் மலர்கிறது. குமுதப்பூ மாலையில்தான் மலர்கிறது. ஒவ்வொரு மலரும் தன்னுடைய போது தவறாமல் பூக்கும் இயல்பை நினைத்துக் கொண்டு பார்த்தால்தான் இரண்டு பொருளுக்கும் உரியதாக வாய்த்த போது என்ற சொல்லின் அழகு புரியும். சமயம் அறிந்து, இடம் அறிந்து, பொருத்தம் அறிந்து மலரும் அறிவின் மலர்ச்சியைப் பூக்களுக்கு இணை சொல்வது இதனால்தான் முல்லை! உன்னைப் போன்ற பெண்களுக்கோ ஆசை நேரும்போதுதான் அறிவும் மலர்கிறது. ஆசையைச் சொல்வதற்கு வேண்டிய சொற்களை மட்டும்தான் நீங்கள் தேடுகிறீர்கள்...”
“அதை மறுப்பதற்குத் தேவையான அழகிய சொற்களைத் தேடாமலே தெரிந்து சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்...”
இப்படி வெடுக்கென்று உடனே அவனுக்குப் பதில் சொன்னாள் முல்லை. அவளுடைய சொற்கள் உணர்ச்சி வசப்பட்டுப் பிறந்ததைக் கண்டு இளங்குமரன் புன்முறுவல் பூத்தான். எதிரேயிருப்பவர் கூறிய கருத்து எதுவோ அதை உடனே மறுத்துவிட வேண்டுமென்ற அவசரமும் அவளுடைய இந்தச் சொற்களில் தொனித்தது. முல்லையின் மனத்தில் இப்போது இன்னொரு சந்தேகமும் ஏற்பட்டது. ‘பூக்களைப் போல் சில பருவ காலங்களில் மலர்ந்து பொலிவதும் பின்பு வாடி உதிர்ந்து தளர்வதும், குறைவதும்தான் மனித உடம்பின் அழகு, கவர்ச்சி இவை எல்லாம்’ என்று இளங்குமரன் கூறியது தன்னைப் பற்றியா, அவனைப் பற்றியா எனச் சந்தேகத்தை இரண்டு கூறாகப் பிரித்து மனத்தைக் குழப்பிக் கொண்டாள் அவள். இந்தச் சந்தேகத்தை அவனிடமே கேட்டுப் புரிந்து கொள்ளலாம் என்றால் இதை அவனிடம் எப்படிக் கேட்பது என்றும் அவள் விளங்கிக்கொள்ள முடியாமல் பயந்தாள்.
இளங்குமரனோ தன் எதிரே நிற்பவளுடைய பெண் இதயத்தின் எல்லா வேதனைகளையும் உணர்ந்திருந்தும் ஒன்றுமே உணராததுபோல இளநகை தயங்கும் முகத்தினனாக நின்றான். அவன் இதழ்களிலும் முகத்திலும் தோன்றிய அந்தப் புன்னகையும் கூட பிறருடைய வேதனைகளுக்கு இரங்கும் அருளாளன் ஒருவனுடைய கருணை நகையாகவே இலங்கிற்று.
இவர்கள் இரண்டு பேரும் இப்படிப் பேசத் தயங்கி நின்ற சமயத்தில் இந்தக் குழப்பத்திலிருந்து இரண்டு மனங்களையுமே விடுவிக்க வந்தாற்போல ஓவியன் மணிமார்பனும் அவன் மனைவியும் படைக்கலச் சாலைக்கு வந்து சேர்ந்தார்கள். இலவந்திகைச் சோலையில் வந்து தங்கியிருந்த ஓவியனை ‘இந்திர விழா முடிகிறவரை நீ படைக்கலச் சாலையிலே வந்து தங்கிக் கொள்ளலாம்’ என்று நீலநாக மறவர் வேண்டிக் கொண்டதற்கு இணங்கித் தன் மனைவியோடு அப்போது அங்கு புறப்பட்டு வந்திருந்தான். முல்லையின் கேள்விகளுக்கும், ஆசைகளுக்கும் மறுமொழி சொல்லியும் சொல்லாமலும் இரண்டு விதமான நிலைகளுக்கு நடுவே தவித்துக் கொண்டிருந்த இளங்குமரனுக்கும் மணிமார்பனுடைய வரவு இப்போது நிறைந்த நிம்மதியை அளித்தது.
விலங்குகளை மாட்டிக் கொண்டு அவற்றால் பூட்டுண்டு கிடக்கும் கைகளே அவற்றைக் களைந்து கழற்ற முடியாமல் தவிக்கும்போது வேறு கைகள் வந்து கழற்றினாற் போலத் தன் மனத்தின் திண்மைகளை இளக்கும் நளினமான சூழ்நிலைகளோடு முல்லை எதிரே வந்து நின்றுகொண்டு ஒவ்வொரு வார்த்தை யாலும் தன்னை வளைத்து இறுக்கிச் சொல் விலங்கு பூட்டிக் கொண்டிருந்த சமயத்தில் மணிமார்பன் வந்து விடுவித்ததாகத் தோன்றியது, இளங்குமரனுக்கு. ஆனால் முல்லைக்கோ தன் மனத்தின் இரகசியங்களையெல்லாம், சொல்லித் தீர்த்துவிடுவதற்கிருந்த கட்டுக்காவலற்ற சுதந்திரமான சமயத்தில் திடீரென்று யாரோ வந்து தன் மனத்துக்கும் நாவுக்கும் விலங்கு பூட்டிவிட்டாற்போல் இருந்தது. அழகிய கண்களைத் திறந்து மருள மருளப் பார்க்கும் அந்தப் புள்ளிமானையொப்ப, இருந்தாற் போலிருந்து தானும் பேச முடியாதவளாகவே மாறி விட்டதாக உணர்ந்தாள் முல்லை. அவள் மனத்திலும் நாவிலும், நினைவாகவும் சொல்லாகவும் விளையாடிய தனிமை என்ற சுதந்திர உணர்வின் மேல் இப்போது கூச்சமும் பயமுமாகிய விலங்குகள் விழுந்து இறுக்கின.
ஓவியன் மணிமார்பனும் அவன் மனைவியும் அவர்களுக்கு மிக அருகில் வந்தார்கள்.
“பாதுகாப்பான இடத்துக்கு வந்துவிட்டாய் மணிமார்பா! இனிமேல் இந்திரவிழா முடிகிற வரையில் நீ இந்த நகரத்தில் கவலையில்லாமல் இருந்துவிட்டுத் திரும்பலாம்” என்றான் இளங்குமரன்.
நான்கு பேரும் புல்தரையில் அமர்ந்து கொண்டார்கள். இங்கு உட்கார முல்லைக்கு விருப்பமில்லை என்றாலும் நீலநாக மறவரோடு போயிருக்கும் தன் தந்தை கடற்கரையிலிருந்து வந்தாலன்றித் தான் வீடு திரும்ப முடியாதென்ற காரணத்தால் வேண்டா வெறுப்பாக அங்கேயே உட்கார்ந்து கொண்டாள். புதுமணப் பொலிவு குன்றாமல் திருமணத்துக்குப் பின் இன்னும் அதிகமாயிருந்த பேரழகோடு அருகில் உட்கார்ந்திருந்த மணிமார்பனின் மனைவியைப் பார்த்தாள் முல்லை. அப்படி அவளைப் பார்த்தவுடன் இன்னதற்கு என்று புரியாத எதற்காகவோ தான் அவள்மேல் பொறாமைப் படுவதற்கு இடமிருக்கிறதென்று தோன்றியது முல்லைக்கு. இந்த உலகத்தில் அழகிய நாயகனை மணந்து கொண்டு வாழும் அழகிய பெண்ணாயிருக்கும் எவளைப் பார்த்தாலும் அவள் மேல் தான் பொறாமைப் பட வேண்டியது நியாந்தான் என்று நினைத்தாள் முல்லை. அவளுடைய மனக்குமுறல்களை முகமே கண்ணாடியாயிருந்து பிரதிபலித்தது. சிறிது நேரம் நால்வரும் என்ன பேசுவதென்றே தோன்றாமல் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மணிமார்பன் அந்த மெளனத்தைக் கலைத்தான்.
“ஐயா! இன்று பகலில் உங்கள் பூம்புகார் நகரத்தின் துறைமுகத்துக்கு அருகிலுள்ள வீதிகளையும் யவனப் பாடியின் வளம் மலிந்த கடைத் தெருக்களையும் என் மனைவியோடு சுற்றிப் பார்த்தேன். சென்ற முறை நான் இந்த நகரத்துக்கு வந்திருந்தபோது கூட இவ்வளவு விரிவாய் இந்த நகரத்தை நன்றாகச் சுற்றிப் பார்க்கவில்லை. அப்போது இங்கே எனக்கு ஏற்பட்ட துன்ப அநுபவங்களால் நான் இந்த அழகிய நகரத்தின் ஒவ்வொரு பகுதியையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதற்குப் பதிலாக இங்கிருந்து எப்போது வெளியேறி என்னுடைய சொந்த ஊருக்குப் போவேனோ என்று முள்மேல் நிற்பதைப் போலத் தவித்துக் கொண்டிருந்தேன். இந்த முறை வந்த போதுதான் உங்கள் நகரத்தை ஒரு கலைஞனுடைய கண்களால் பார்த்து நான் அநுபவிக்க முடிந்தது. யவனர்கள் கடைத்தெருவில்தான் எத்தனை எத்தனை நுணுக்கமான பொருள்கள்! எங்கெங்கிருந்தோ கடல் கடந்து வந்து உங்கள் சோழ நாட்டு மண்ணில் பரவி விளங்கும் கலைகளைப் பார்த்தால் எனக்குத் திகைப்பே ஏற்படுகிறது. பாண்டி நாட்டின் தலைநகராகிய எங்கள் மதுரையில்கூட வேற்று நாட்டுக் கலைகளும் பண்பாடுகளும் இவ்வளவு அழகாக வேரூன்றவில்லை ஐயா!” என்று மணிமார்பன் வியந்து சொல்விக்கொண்டே வந்தபோது இளங்குமரன் அவன் பேச்சில் குறுக்கிட்டுச் சில வார்த்தைகள் சொன்னான்:
“மணிமார்பா! உன்னுடைய கருத்துக்களில் ஒரு பகுதியை மட்டும் நான் மறுக்கிறேன். இந்த நகரத்திலுள்ள யவனப் பாடியின் செழிப்புமிக்க கடை வீதிகளையும் அங்கு மலிந்துள்ள பிறநாட்டுக் கலைகளின் வளத்தையும் பார்த்து நீ வியப்பது இயல்புதான். ஆனால் வேற்று நாட்டுக் கலைகள் இந்த நகரத்தில் வந்து வேரூன்றியிருப்பதாக நீ சொல்வதுதான் பிழை. நியாயமாகப் பார்த்தால் எந்தக் கலையும் தான் தோன்றிய மண்ணில் வேரூன்றுவதைப் போல் இன்னொரு நாட்டில் வேரூன்ற முடியுமா என்பது சந்தேகம்தான். மிக உன்னதமான தொரு கலை எந்த நாட்டிலும் போய்ப் பரவலாம். ஆனால் அதனுடைய ஆணிவேர் அது பிறந்த மண்ணில் தான் ஊன்றிக் கொண்டிருக்க முடியும் என்று பெரியவர்கள் சொல்லி யிருக்கிறார்கள்.”
“அந்தத் தத்துவம் எல்லாம் எனக்கு விளங்காது ஐயா! கிழக்குக் கடலின் தென்பகுதியில் நாவலந்தீவுக்கே நுழைவாயில் போல் அமைந்திருக்கிறபடியால் பூம்புகாரின் வீதிகளில் பல நாட்டுக் கலைவளத்தையும், மொழி வழக்கையும் காண முடிகிறது. எங்கள் மதுரை நகரம் தமிழகத்தின் நடுநகரமாக அமைந்து விட்டதனால் இதற்கு வாய்ப்பில்லை. மேலும் இந்திர விழாவைப் போல இவ்வளவு பெரிய விழா எதுவும் எங்கள் நகரத்தில் நடைபெறுவதில்லை. பங்குனி மாதத்தில் வில் விழா என்று ஒன்று நடைபெறும். காமனுக்காகக் கொண்டாடப்படுகிற அந்த விழாவில் மதுரை மாநகரத்து இளைஞர்களின் உற்சாகத்தை மட்டுமே காணலாம்...!”
“காமனுக்கென்று தனியாக விழா எதற்கு மணிமார்பா? இளைஞர்களும் முதியவர்களுமாக உயிர் வாழும் மனிதர்களுடைய மனத்தில் ஆசைகள் அள வற்றுப் பொங்கும் ஒவ்வொரு விநாடியும் காமனுக்குத்தான் கொண்டாட்டம்! காமனுக்குத்தான் திருவிழா ஆசைகளின் முடிவுதான் காமதகனம். வைராக்கியம் வாய்ந்த மனம் இருந்தால் அந்த மனதுக்கு உரியவன் எவனோ அவன் ஒவ்வொரு விநாடியும் தன் மனத்தில் மேலெழுந்து நிற்கும் ஆசையைத் தன்னுடைய வைராக்கிய நெருப்பினால் தகனம் செய்துவிட்டு வெற்றிப் பார்வை பார்க்கலாம்” என்று சிரித்தபடியே தத்துவம் சொன்னான் இளங்குமரன்.
அப்போது படைக்கலச் சாலையின் வாயிற் பக்கமிருந்து சிரிப்பும் ஆரவாரமுமாக நாலைந்து இளைஞர்களோடு கதக்கண்ணன் அங்கே வந்து சேர்ந்தான். அவர்கள் யாவரும் அருகில் வந்தபோதுதான் கதக் கண்ணனோடு உடனிருந்தவர்கள் தன்னுடைய பழைய பூம்புகார் நண்பர்கள் என்பது இளங்குமரனுக்குப் புரிந்தது. அவர்களை எப்படி வரவேற்பது என்று அவன் அப்போது திகைக்க நேர்ந்தது.
கூட்டமாக ஆடவர்கள் வருவதைப் பார்த்ததும் பெண்கள் இருவரும் எழுந்து விலகி நின்று கொண்டார்கள். தன் தமையன் கதக்கண்ணனைப் பார்த்தவுடனே முல்லைக்கு ஒரு விதத்தில் ஆறுதல் பிறந்தது. நீலநாக மறவரோடு பேசிக்கொண்டே உலாவப் போயிருக்கும் தன் தந்தை திரும்பி வருவதற்குச் சிறிது தாமதமானால் தான் தன் அண்ணனோடு வீடு திரும்பி விடலாமென்று எண்ணிக் கொண்டாள் முல்லை. புதிய சிந்தனைகளோடு கூடிய தன் மனத்தைக் கொண்டு பழைய நண்பர்களிடம் எப்படி எதை உள்ளம் திறந்து பேச முடியுமென்ற தயக்கம் அப்போது இளங்குமரனுக்கு ஏற்பட்டது.
ஆலமுற்றத்துக் கடற்கரையில் நடந்தவாறே மிக முக்கியமான செய்திகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள் வளநாடுடையாரும் நீலநாக மறவரும். வளநாடுடையார் ஆத்திரமாக மீசை துடிதுடிக்கப் பேசலானார்.
“ஒவ்வொரு கணமும் நீங்கள் அந்தப் பிள்ளைக்குக் காவலாயிருக்க வேண்டும் ஐயா! நாளங்காடியில் இன்று காலையில் நடந்த சூழ்ச்சியை நினைத்துப் பார்த்தால் இப்போதுகூட என் மனம் கொதிக்கிறது. நடந்தவற்றை ஒவ்வொன்றாக இணைத்துத் தொடர்புபடுத்திப் பார்க்கும்போது இவற்றுக்கெல்லாம் காரணமாக ஏதோ ஒரு வலிமையான சூழ்ச்சி பின்னாலிருந்து இயங்குவதாகத் தெரிகிறது.”
“வலிமையாவது சூழ்ச்சியாவது? ‘நான்தான் உன்னுடைய எதிரி!’ என்று நேர் எதிரே முன்னால் வந்து நின்றுகொண்டு கையை ஓங்குவதற்குத் துணிவில்லாத வலிமையும் ஒரு வலிமையா? சூழ்ச்சியை நாடி அதற்குள்ளே தன்னை மறைத்துக் கொண்டுதான் செயற்பட முடியுமென்று இருந்தால் அந்த வலிமைக்கு இதுவே பலவீனம் அல்லவா, வளநாடுடையாரே? தன் கைகளின்மேல் தனக்கே நம்பிக்கையில்லாமல் எவளோ ஒரு கபாலிகையின் கைகளில் அந்த வலிமை இருப்பதாக நம்பிக்கொண்டு அவளைத் தூண்டிவிடுகிற சுய பலமில்லாத எதிரியை என்ன செய்ய முடியும்?” என்று நீலநாகர் கேட்டதும் வளநாடுடையார் இந்தச் செய்தியில் தொடர்புபடுத்திக் கூறப்படும் கபாலிகை யார் என்று அறிந்து கொள்ளும் ஆவலினால் துண்டப் பெற்றவராக அவரை வினவினார்:
“அது யார் ஐயா கபாலிகை?”
“யாரா? அவள்தான் வளநாடுடையாரே, இந்தச் சூழ்ச்சி நாடகத்தின் புதிய கதாபாத்திரம்” என்று தொடங்கி முன் நாள் இரவில் இளங்குமரனை ஏமாற்றி அழைத்துக் கொண்டுபோய் அந்தக் கபாலிகை சுடு காட்டுக் கோட்டத்துக்குப் போகிற வழியிலே வைத்து அவனைக் கொலை செய்ய முயன்றதையும் பின் தொடர்ந்து சென்றதால் தக்க சமயத்தில் உதவி அவனைக் காப்பாற்றி அழைத்துக் கொண்டு வந்ததையும் வளநாடுடையாருக்கு விவரித்துச் சொன்னார் நீலநாகர்.
“எப்படியோ, இந்த வைகாசி விசாகம் வரை இளங்குமரனைக் காப்பாற்றுங்கள். வைகாசி விசாகத்துக்கு முன்னால் இளங்குமரனை அழைத்துக் கொண்டு நான் மணிபல்லவத்துக்கு யாத்திரை போகத் திட்டமிட்டுள்ளேன். அதற்கு அப்பால் எல்லாத் துன்பங்களுக்கும் விடிவு பிறந்துவிடும்.”
“விடிவு எங்கிருந்து பிறக்கும்? இன்னதென்று புரியாமல் எங்கோ, எப்போதோ தொடங்கிய மூலமான துன்பம் புரிகிறவரை இதற்கு விடிவு இல்லை வளநாடுடையாரே!”
“புண்ணிய பூமிகளை மிதித்து அந்த மண்ணின் மேல் நடப்பதனாலேயே தீயினில் தூசு, போலச் சில துன்பங்கள் விலகும் ஐயா! மணிபல்லவம் அப்படிப் பட்ட புண்ணிய பூமி” என்று இளங்குமரனை தான் மணிபல்லவத்துக்கு அழைத்துச் செல்லும் அந்தரங்க நோக்கத்தை இந்தப் பொதுவான தத்துவத்தில் மறைத்துக் கொண்டு பேசினார் வளநாடுடையார்.
“இப்போதுதான் நினைவு வருகிறது வளநாடுடையாரே. நான் இன்றிரவு தனியாகப் புறப்பட்டுப் போய் சுடுகாட்டுக் கோட்டத்தில் அறியவேண்டுமென்று திட்டமிட்டிருந்தேன். நீங்கள் வந்து பேசிக்கொண்டிருந்ததில் அது மறந்துவிட்டது. வாருங்கள், உங்களைப் படைக்கலச்சாலையில் கொண்டுபோய் விட்டு விட்டுச் சிறிது நேரம் கழித்து நான் சக்கரவாளக் கோட்டத்துக்குப் புறப்பட வேண்டும்.”
“செய்யுங்கள்! கபாலிகர்கள் முரட்டுக் குணம் கொண்டவர்கள். நயமாகவும் பயமாகவும் வார்த்தைகளைக் கூறி உண்மையை அறிய முயலுங்கள்.”
“வார்த்தைகளுக்குக் கட்டுப்படுகிறவர்கள் சான்றோர்கள் மட்டும்தான். கயவர்களையும் வெறும் முரடர்களையும் வார்த்தைகளால் கட்டுப்படுத்த முடியாது. கரும்பை அறைத்துப் பிழிவதுபோல் அறைந்து பிழிந்தால் தான் கயவர்களிடமிருந்து பயன் கொள்ள முடியும் வளநாடுடையாரே! சுடுகாட்டுக் கோட்டத்துக் கபாலிகையிடம் போய் நயமான வார்த்தைகளைப் பேசி இரகசியத்தை வரவழைக்க முடியாது. கயமை நிறைந்த மனிதர்களிடம் வாயால் பேசிப் பயனில்லை. கைகளால் பேசவேண்டும். அதைத்தான் இன்று செய்யப் போகிறேன். நான்” என்று ஆவேசத்தோடு பேசினார் நீலநாக மறவர்.
பேசிக்கொண்டே அவர்கள் இருவரும் ஆலமுற்றத்துக் கடற்கரையிலிருந்து படைக்கலச் சாலைக்குத் திரும்பியபோது இருட்டியிருந்தது. முல்லையைத் தம்மோடு அழைத்துக்கொண்டு இல்லத்துக்குத் திரும்பினார் வளநாடுடையார். மணிமார்பனும் அவன் மனைவியும் படைக்கலச் சாலையின் ஒரு பகுதியில் தங்கி ஓய்வு பெறச் சென்றார்கள். நீண்ட காலத்துக்குப் பின்பு முதல் தடவையாகச் சந்தித்த காரணத்தினால் கதக்கண்ணன் முதலிய நண்பர்கள் மட்டும் நெடுநேரமாகியும் பிரிந்து செல்வதற்கு மனமின்றி இளங்குமரனோடு பேசிக் கொண்டிருந்தார்கள். உரையாடலில் இளங்குமரனை நோக்கி அவர்கள் கூறிய வார்த்தைகள் அதிகமாகவும் அவர்களை நோக்கி இளங்குமரன் கூற நேர்ந்த வார்த்தைகள் குறைவாகவும் இருந்தன.
நிலா உச்சி வானத்துக்கு வந்திருந்தது. இளங்குமரனோடு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்த குரல் ஒலிகளையும் மிக அருகில் இருந்த காரணத்தால் கடலின் அலை ஒசையையும் தவிரப் படைக்கலச் சாலையும் சுற்றியிருந்த தோட்டமும் அமைதியடைந்தாயிற்று. குறிப்பிட்ட இந்த அமைதியையே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது போல் நீலநாகர் தமது இருக்கையிலிருந்து புறப்படுவதற்கு எழுந்தார். தலைப்பாகையைக் கழற்றி வைத்தார். மூலையில் குவித்திருந்த படைக்கலங்களின் குவியலில் இருந்து நீண்ட ஈட்டி ஒன்றை எடுத் துக் கொண்டு இரவில் தாம் அங்கிருந்து வெளியேறிச் செல்லுவது பிறரறியத் தெரியாமலிருப்பதற்காகத் தம்முடைய பாதக் குறடுகளையும் கழற்றிவிட்டு நடந்தார்.
இயல்பாகவே அவருடைய கால்களுக்கு வேகம் அதிகம். எஃகினால் செய்தவை போன்று நீண்டு வைரம் பாய்ந்த இறுகிய அந்தக் கால்களில் பாதக் குறடுகள் என்ற சிறிய சுமையும் இல்லாமற் போகவே இப்போது இன்னும் வேகமாக நடக்க முடிந்தது. முடியை மறைத்திருந்த தலைப்பாகையைக் கழற்றியிருந்ததால் உற்றுப் பார்த்தாலன்றி முதல் பார்வையிலேயே அடையாளம் கண்டுகொள்ள முடியாத தோற்றத்தோடு இப்போது விளங்கினார் அவர். நிலா ஒளியின் கீழே இருட்டு மலை ஒன்று தன் வலிமை சிதறாமல் விரைந்து பாய்வதுபோல சக்கரவாளக் கோட்டத்துப் பாதையில் அவர் சென்று கொண்டிருந்தார். அவருடைய வலது கரத்தில் அந்த ஈட்டியை அவர் பற்றியிருந்த அலட்சிய பாவத்திலேயே ‘இது எனக்கு ஓர் ஆயுதமல்ல; இதைப் பற்றியிருக்கும் வலிமை வாய்ந்த என் கைதான் எனக்கு இதைவிடப் பெரிய ஆயுதம்’ என்பது போன்ற திடமான எண்ணத்தின் உறுதி தெரிந்தது.
‘ஒரு கபாலிகை மட்டுமென்ன? இந்தச் சக்கரவாளக் கோட்டத்து வன்னி மன்றத்திலுள்ள கபாலிகர் குலத்தையே வேரோடு அழிக்க என்னுடைய ஒரு கை போதும் எனக்கு!’ - இப்படிப் பெருமிதமான நினைவுகள் அவருடைய மனத்திலும், கால்கள் கரடு முரடான மயானத்து மண்ணின் மேலும் புகுந்து நடந்து கொண்டி ருந்தன. உயிருடனிருப்பவர்களை மயானத்துக்குக் கொண்டு வரும் கூற்றுவனே தன் தொழில் சுதந்திரமாக நிகழ்கிற பூமியில் தற்பெருமையோடும் மதத்தோடும் புகுந்து நடக்கிறாற்போல் வீராப்போடு நடந்து போய்க் கொண்டிருந்தார் நீலநாகர். தன் எல்லையில் புகுந்து நடக்கிறபோது பொதுவாக மனிதர்களுக்குத் துணிவு மிகும் என்பார்கள். நீல நாகருக்கோ தம் எல்லை அல்லாத இடத்தில் புகும்போது துணிவு பெருகிய மன நிலையே இருக்கும்.
அடர்ந்து பின்னி முட்கொடி படர்ந்த வன்னி மரங்கள் தென்பட்டன. கபாலிகர்கள் வெறிக்குரல்கள் நெருங்கிக் கேட்டன. முடை நாற்றம் நாசியைத் துளைத்தது. ஆள் நடந்து வருகிற அரவத்தால் கலைந்த இரவுப் பறவைகளின் குரல் மேலே மரக் கிளை களிலிருந்து ஒலித்தது. கிழிந்த துணியால் போர்த்தியிருந்த ஊன் தொகுதியைப் போல வன்னி மரங்களின் அடர்த்திக்கிடையே அங்கங்கே நெருப்பு எரிவது துண்டு துண்டாகத் தெரிந்தது.
அந்த இடம் நெருங்கியதும் அன்று இளங்குமரனை ஏமாற்றி அழைத்துப் போய்க் கொல்ல முயன்ற கபாலிகையின் தோற்றத்தையும் முகத்தையும் நினைவுக்குக் கொண்டு வர முயன்றார் அவர். கரிய பாறை களுக்கிடையே வாய்ந்த குகையின் சிறிய வாயிலைப் போன்ற வன்னி மன்றத்துப் புதரின் வழியில் தம்முடைய உடம்பைக் குறுக்கிக் கொண்டு குனிந்து நுழைந்தார் நீலநாகர். தாங்கள் உபாசனை செய்து கொண்டிருக்கிற பயங்கரத் தெய்வமே திடீரென்று தங்களுக்கு எதிரே தோன்றினாற் போலிருந்தது, அங்கே மூலைக்கொருவராகத் திரிந்து கொண்டிருந்த கபாலிகர்களுக்கு வந்து நிற்கும் மனிதரின் ஆகிருதியையும் வலிமையையும் தோற்றத் திலேயே கண்டு உணர்ந்தவர்களாகப் பயந்தபடியே ஒவ்வொருவராக மெல்ல அருகில் வந்தார்கள். சிலர் அருகில் வராமல் விலகியே நின்றார்கள். அவர்களில் ஒருவனிடம் தாம் தேடி வந்தவளைப் பற்றிய அடையாளங்களைச் சொல்லிக் கேட்டார் நீலநாகர். அவரால் கேட்கப்பட்ட கபாலிகன் அவருக்கு உடனே மறுமொழி கூறாமல் தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு கபாலிகனுடைய முகத்தைப் பார்த்தான். அவன் வேறொருவனுடைய முகத்தைப் பார்த்தான். நீலநாகர் பொறுமையிழந்தார். சீற்றம் அடைந்தார்.
“அவள் எங்கேயிருக்கிறாள் என்று சொல். சொல்லப் பயமாயிருந்தால் இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டு, இரண்டும் முடியாவிட்டால் உன் கழுத்தைக் காட்டு. அதை அப்படியே பனங்காய் பறிப்பது போலத் திருகிக் கீழே வைக்கிறேன்” என்று நீலநாகர் சீறிய குரல் வன்னி மன்றத்தையே அதிரச் செய்தது.
முன்பு இயற்கையிலேயே பயமாயிருந்த அந்த இரண்டு கபாலிகர்களின் முகங்களும் இப்போது இன்னும் பயமாக மாறின. நீலநாகருடைய வலதுகை ஈட்டியைப் பிடித்திருந்த பிடி இறுகுவதைப் பார்த்த போது அவர்கள் பயம் அதிகமாகிப் பின்னுக்கு நகர்ந்தனர். ஓடவும் சித்தமாயினர்.
இதற்குள் பக்கத்தில் செடிகொடிகள் பின்னிப் புதரைப் போலிருந்ததொரு குடிசைக்குள்ளிருந்து பைரவியே தலையை நீட்டி எட்டிப் பார்ப்பதை நீலநாகர் கண்டுவிட்டார். அவளும் அவரைப் பார்த்து விட்டாள். முதற் பார்வையில் அவரை அவளுக்கு அடையாளம் புரியவில்லையாயினும், தன்னைக் கண்டவுடன் அடித்துக் கொல்ல வரும் வேங்கைப் புலி போல் அவர் ஈட்டியை ஓங்கிக்கொண்டு பாய்ந்து வருவதைக் கண்டு ஆள் யாரென்று இனம் புரிந்து கொண்டுவிட்டாள். தூக்கம் கலைந்து விழித்த அவள் கண்கள் இரத்தப் பழங்களாகச் சிவந்திருந்தன. நீலநாகரிடமிருந்து தப்புவதற்காக அந்த இடத்தின் பின்புறத்து வழியாக வன்னிப்புதரை நோக்கி விழுந்தடித்துக் கொண்டு ஓடத் தலைப்பட்டாள் பைரவி. இதே மனிதர் முன் தினத்தில் தன் கழுத்தைப் பற்றி விழி பிதுங்கிட நெரித்த வலி இன்னும் நினைவிலிருந்தது அவளுக்கு. அவள் ஓடிய போது புதரில் பசியெடுத்துக் காத்திருந்த நரி ஒன்று படுவேகமாகப் பாய்ந்து அவள் முழங்காலின் ஆடு சதையைக் கவ்வியது. வலி பொறுக்க முடியாத பைரவி குரூரமாக அலறினாள். நரியிடமிருந்து காலை விடுவித்துக் கொண்டு குருதி சிந்தியவாறே அவள் மேலும் ஓடினாள். நீலநாகரும் விடவில்லை. அவள் ஓடாமல் நின்றிருந்தால் எவ்வளவு கொதிப்படைந்திருப்பாரோ அதைப்போல் நான்கு மடங்கு கொதிப்போடு இப்போது அவளைத் துரத்திக்கொண்டு பாய்ந்தார்.
அந்தரத்தில் இருந்து தயங்கித் தயங்கிச் சிறிது சிறிதாக இருளில் உதிரும் நெருப்புத் துண்டங்களைப் போல் எதிரே தெரிந்து கொண்டிருந்த அந்தச் சிவப்பு இரத்தினங்களையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர் சுரமஞ்சரியும் அவள் தோழியும். தந்தையின் கைப்பிடியிலுள்ள அந்த யாளி முகம் விநாடிக்கு விநாடி பெருகி விரிந்து அகலமும் நீளமுமாகிப் பூதாகாரமாக வளர்ந்து கவிந்துகொண்டு தன்னை அமுக்குவது போல் பயமாகியிருந்தது சுரமஞ்சரிக்கு.
‘தந்தை இரகசியமாக அங்கே வந்து இருளில் ஊன்றுகோலுடனே நின்றுகொண்டு தானும் வசந்த மாலையும் அதுவரை பேசிக் கொண்டிருந்தவற்றை யெல்லாம் கேட்டவாறே இருக்கிறார்’ - என்று உணர முற்படும்போது அந்த உணர்ச்சியால் தன் உடல் முழுவதும் கருந்தேள் விழுந்து ஊர்கிறாற் போலச் சிலிர்த்து நடுங்கினாள் அவள்.
தன் வார்த்தையும் தான் அதை ஒலித்த குரலும் நடுங்கிட ‘வசந்தமாலை’ என்று மெல்ல அழைத்தாள் சுரமஞ்சரி. அந்த அழைப்புக்குப் பதில் குரல் கொடுக்காமலே ‘பேச வேண்டாம்’ என்று சொல்வது போல் தன் வலக்கரத்தால் தலைவியின் பவழ மெல்லிதழ்களை இலேசாகப் பொத்தினாள் வசந்தமாலை. தோழியும் அப்போது மிகவும் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறாள் என்பதைத் தன் இதழ்களை மூடிய அவள் விரல்கள் நடுங்கிய விதத்திலிருந்து சுரமஞ்சரி புரிந்து கொள்ள முடிந்தது. அண்மைக் காலத்து நிகழ்ச்சிகளால் தன் தந்தையை விடை காண முடியாத விடுகதையாக நினைத்துப் பயப்பட வேண்டிய சூழ்நிலை ஒவ்வொரு விநாடியும் அவளுக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. யாருக்கும் அடிமையாகக் கூடாதென்று செல்வம் சேர்க்கத் தொடங்கியவர்கள் கடைசியில் அந்தச் செல்வத்துக்கே முழு அடிமையாகப் போய்விடுவதுதான் முடிவாகும் என்பதற்கு தன் தந்தையையே நிதரிசனமான உதாரணமாகக் கண்டாள் சுரமஞ்சரி. செல்வத்துக்கு அடுத்தாற் போல அவர் நகைவேழம்பருக்கும் சிறிது அடிமைப்பட்டிருப்பது போலத் தோன்றியது அவளுக்கு. செல்வத்துக்கு அடிமைப்படுவதைப் போலவே இரகசியங்களுக்கு அடிமைப்படுவது பயங்கரமானதுதான். இரகசியங்களுக்கு அடிமைப்படுகிறவன் அதை உடையவனுக்கும் அடிமைப்பட வேண்டியதிருக்கும். ஒரே சம்யத்தில் இந்த இரண்டு வகையிலும் அடிமைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவருக்குத் தான் மகளாயிருப்பதை எண்ணியபோது அவளுக்குப் பயத்துடனே சிறிது பரிதவிப்பும் உண்டாயிற்று. செல்வத்தைக் குவிப்பதில் கவலையும் அக்கறையும் காட்டுவதற்கு அடுத்தபடியாக அதே அளவு கவலையும், அக்கறையும், நகைவேழம்பரோடு பழகுவதில் தன்னுடைய தந்தைக்கு இருக்கிறதென்பது அவளுக்குப் புரிந்தது. யாருடைய வாழ்வை வளர்த்து அதில் தானும் இரண்டறக் கலந்துவிட வேண்டுமென்று அவள் தவித்துக் கொண்டி ருக்கிறாளோ அவருடைய வாழ்வையே அழித்துவிடத் தந்தை முயல்வதும் இலை மறை காய்போல் அவளுக்குப் புரிந்தது, அந்த விநாடி வரையில் தனக்குப் புரிந்திருக்கிற பயங்கரங்களை விட இனிமேல் புரிய வேண்டிய பயங்கரங்கள்தாம் அதிகமாக இருக்கும் போலச் சுரமஞ்சரியின் மனக்குரல் அவளுக்குச் சொல்லியது. இந்தக் கொடுமைகளை யெல்லாம் நினைத்த போது தான் அங்கிருந்து ஓடிப்போய்க் கடலில் விழுந்தாவது உயிரைப் போக்கிக் கொண்டு விட வேண்டும் போலத் தவிப்பு அடைந்தாள் அவள். அந்தத் தவிப்பின் விளைவு தோழி வசந்தமாலையிடம் ஒரு கேள்வியாகவும் பிறந்தது.
இப்போது தன் தந்தையே மறைவாக அங்கு வந்து நின்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று அறிந்தபோது அந்தத் தவிப்பு மேலும் முறுகி வளர்ந்தது.
சுரமஞ்சரியின் கண்கள் அந்தச் சிவப்புப் புள்ளிகளையே பார்த்துக் கொண்டிருந்தன. அவை இருளில் அசையாமல் ஓரிடத்திலேயே இருப்பதைக் கண்டு அந்த இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற ஊன்றுகோலை ஊன்றிக் கொண்டு அப்போது அங்கே நிற்பவர் முன்னுக்கும் நகராமல், பின்னுக்கும் நகராமல் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்க வேண்டுமென்று அநுமானம் செய்துகொண்டாள் சுரமஞ்சரி.
அவள் மனத்தில் அப்போது பலவிதமான சந்தேகங்கள் உண்டாயின. அந்தச் சந்தேகங்களில் இரண்டொன்றையாவது வசந்தமாலையின் காதருகே மெல்லக் கேட்கலாம் என்றால் தோழி, அந்த நிலையில் தன்னோடு பேசுவதற்கே பயப்படுவது போலிருந்தது. அரை நாழிகை போனதுக்குப் பின் தோழியே வலுவில் வந்து சுரமஞ்சரியின் காதருகே தன்னுடைய சந்தேகம் ஒன்றைக் கூறினாள்: “அம்மா இதோ தெரிகிறதே சிவப்பு இரத்தினங்களோடு கூடிய ஊன்றுகோலைப் பிடித்துக் கொண்டு உங்கள் தந்தையார் இங்கு மறைந்து நிற்பதாக இதுவரை நீங்களும் நானும் நினைத்துக் கொண்டிருந்தது சாத்தியமில்லை. ஒரு காலைச் சாய்த்துக் கொண்டே அவரால் இவ்வளவு நேரம் அசையாமல் நிற்க முடியாது. கால் மாற்றி ஊன்றியிருந்தாரானால் அந்தச் சிறு ஒலியையும் ஊன்றுகோல் அசைவதையும் இதற்குள் நாம் கேட்டும் கண்டும் இருக்கலாம். ஊன்றுகோல் அசையாமல் தெரிவதனால் நிற்பது வேறு ஆளாக இருக்க வேண்டும்.”
தோழி சொல்வது நியாயம்தான் என்று சுரமஞ்சரிக்கும் தோன்றியது. அவள் தந்தையால் இவ்வளவு நேரமாகக் கால் மாற்றி ஊன்றிக் கொள்ளாமலோ, அசையாமலோ நிற்க முடியாது. அந்தப் பயங்கரமான விநாடிகளில் தன்னைவிட வசந்தமாலை சுய உணர்வோடு சிந்தித்திருக்கிறாள் என்பதை அவள் கூறிய நுணுக்கமான செய்தியிலிருந்து புரிந்துகொண்டாள் சுரமஞ்சரி. அங்கே தன் எதிரே இருளில் நின்று கொண்டிருப்பவர் தன்னுடைய தந்தை இல்லை என்ற அநுமானம் பெரும்பாலும் உறுதியானவுடன் அவர்களுக்குச் சற்றே தைரியம் வந்தது. உமிழ் நீரைக் கூட்டி விழுங்கி நாவை ஈரமாக்கிக் கொண்டு “யார் அங்கே நிற்பது?” என்று இரைந்து கேட்டாள். அவள் கேட்ட சொற்கள் அந்த மாடத்தின் சுவர்களிலே எதிரொலித்து விட்டு அவளிடமே திரும்பி வந்தன. சிவப்பு இரத்தினங்கள் மின்னிய திசையிலிருந்து அந்த இரத்தினங்களின் செவ் வொளி மட்டும்தான் பளிரென்று பாய்ச்சியது போலப் பாய்ந்து வந்ததே தவிர, அவள் கேட்ட கேள்விக்குப் பதில் வரவில்லை. எதிரொலிதான் இன்னும் சுழன்று சுழன்று மங்கிக் கொண்டிருந்தது. “யார் அது” என்று இரண்டாவது கேள்வியாக வசந்தமாலை சினத்தோடு கேட்டாள். அதற்கும் எதிரொலிதான் விளைவாயிற்றே அன்றி மறுமொழி வரவில்லை. எலும்புக் குருத்துக்களில் சுடச்சுட ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினாற்போல இருவருடைய கால்களும் உதறலெடுத்து நடங்கின.
இந்திரவிழாவின் கலகலப்பில் திட்டமிட்டு இப்படி ஒரு பயங்கர நாடகம் நடத்த வேண்டும் என யார் முன் வந்திருக்க முடியும் என்று மனத்தைக் குழப்பிக் கொண்டார்கள் அவர்கள். நாடகம் என்று நினைத்தவுடனே நகைவேழம்பருடைய ஞாபகம் வந்தது சுரமஞ் சரிக்கு. அவர்தானே இந்த மாளிகைக்கு வந்து தந்தையாருடன் பழகுவதற்கு முன் மேடைகளிலும், வந்து பழகிய பின் வாழ்க்கையிலும் அற்புதமாக நடித்துக் கொண்டு வருகிறவர். ஒருவேளை அவரே தன் தந்தையாருடைய ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு வந்து இந்த இருளில் நின்றபடி தங்களைப் பயமுறுத்துகிறாரோ என்றும் சுரமஞ்சரிக்கு ஒரு சந்தேகம் உண்டாயிற்று. ஆனாலும் இப்படி நள்ளிரவில் பெண்கள் வாழும் பகுதியில் வந்து நிற்கிற அளவு நகைவேழம்பரும் துணிய மாட்டார் என்ற எண்ணம் பலமாக எழுந்து முன்னைய சந்தேகத்தை அடித்துவிட்டது.
‘ஒருவேளை வானவல்லி தந்தையாருடைய ஊன்று கோலை எடுத்துக் கொண்டு வந்து விளையாட்டுக்காகத் தங்களைப் பயமுறுத்துகிறாளோ’ என்று இறுதியாக நினைத்தாள் சுரமஞ்சரி. கையிலுள்ள வளையல்கள் ஒலிக்காமல் இவ்வளவு நேரம் ஊன்றுகோலைப் பற்றிக் கொண்டிருக்க அவளாலும் முடியாதென்று தோன்றவே இயல்புக்கு மிகுதியான தைரியத்தை வற்புறுத்தி ஏற்படுத்திக் கொண்டவளாக அந்த இரத்தினங்களின் ஒளியைக் குறி வைத்து நடந்தாள். பயத்தினாலும், செயற்கையான தைரியத்தினாலும் இந்த ஊன்று கோலை வைத்திருக்கும் கைகள் அதை இறுக்கிப் பற்றிக் கொண்டிருப்பதாகப் பாவித்துக் கொண்டு அதை இழுத்து வேகமாகப் பறித்தாள். ஒருவிதமான பிடிப்பும் இல்லாமல் செலவழித்த பலத்தைவிடக் குறைவான வலிமையில் இலகுவாகவே அந்த ஊன்றுகோல் அவள் கைக்கு வந்துவிடவே கீழே இடறி விழுந்துவிட இருந்தாள் அவள். நல்லவேளையாகப் பின்னால் வந்து நின்று கொண்டிருந்த வசந்தமாலை சுரமஞ்சரியை அப்படி விழுந்துவிடாமல் தாங்கிக் கொண்டாள். எதிராளி தனக்கு மறுதலையாக இறுக்கிப் பிடித்திருப்பதாக நினைத்து வலிய இழுத்தபோது எந்த எதிராளியும் இன்றிப் பூக்கொய்வதுபோல எளிதாக ஊன்றுகோல் கைக்கு வந்துவிட்டதனால் அதற்காக அவள் செலவழித்த அதிக வலிமை அவளையே பின்னால் தள்ளிவிட இருந்தது.
“இந்த ஊன்றுகோலை யாருமே பிடித்துக் கொண்டு இருக்கவில்லையடி!” - என்று சுரமஞ்சரி வியந்து கூறிய அதே சமயத்தில் பெருமாளிகையின் முன்புறம் வாயில் அருகே யாரோ யாரையோ பளிரென்று அறைகிற ஓசை கேட்டது. மாடத்தின் முன்பகுதியிலிருந்து பார்த்தால் கீழே யாரை யார் அறைந்தார் என்று தெரியுமாதலால் சுரமஞ்சரி, தன் கையிலிருந்த ஊன்றுகோலுடனும் தோழியுடனும் மேல் மாடத்திலிருந்தே அதைக் காண்பதற்காக முன்பக்கம் விரைந்தாள். விரைந்து போய்ப் பார்த்தவள் பெரிதும் வியப்பு அடைந்தாள்.
நள்ளிரவுக்கு மேலாகியும் அந்த அமைதியான நேரத்தில் பெருமாளிகையின் முன்புறத்தில் தன் தந்தையும் நகைவேழம்பரும் தனியாக நின்றுகொண்டு இருப்பதை அப்போது அவள் பார்த்தாள். இருவரில் யார்மேல் யாருக்குக் கோபம் என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. யார் யாரை அறைந்தார்கள் என்று அநுமானம் செய்துகொள்ள முடியவில்லை. ஆனால் இருவரும் நின்ற நிலை, நிற்கும் நேரம் ஆகியவை உறவுக்குரியதாகவும் படவில்லை. நாடகத்தில் நடிப்பவர்கள் ஒப்பனையைக் கலைத்ததும் நடித்தபோது இருந்த உறவுகள் மாறிவிடுகிறாற்போல் ஒரு விநாடிக்குப் பின் யாரால் யார் அப்படிப் பேயறை அறையப்பட்டார்கள் என்பதை இப்போது இருவர் முகங்களிலுமுள்ள உணர்வுகளைக் கொண்டு உய்த்துணர்வதற்கு இயலாமல் தவித்தாள் சுரமஞ்சரி. வெறுப்பும் ஏளனமுமாக, அவள் தன் தோழியிடம் கூறலானாள்:
“தோழி! இவ்வளவு பெரிய பூம்புகார் நகரத்தில் எத்தனையோ நாடக அரங்குகள் இருக்கின்றனவே! அவற்றில் எதிலாவது இத்தனை அற்புதமாக நடிக்கிற திறமையை நீ பார்த்திருக்க முடியுமா? ஒரு விநாடி கோபம், மற்றொரு விநாடி நட்பு, ஒரு விநாடி குரோதம், மற்றொரு விநாடி உறவு என்று விநாடி நேரத்துக்குள் உணர்ச்சிகளை மாற்றிக் கொள்ளத் தொழிலில் பழக்கப்பட்ட வேழம்பர் மரபைச் சேர்ந்த நடிகர்களால்கூட முடியாதே! இங்கேயோ என் தந்தையும் நகைவேழம்பரும் ஒரே ஒரு விநாடிக்குள்ளே நூறாயிரம் உணர்ச்சிகளில் மாறி மாறித் தோய்கிறார்கள். மாறி மாறி நடிக்கிறார்கள், வாழ்கிறார்கள். செல்வத்துக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறவர்களுக்கும், இரகசியங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறவர்களுக்கும் தங்கள் வாழ்க்கையே ஒரு நாடகம்தான் போல் இருக்கிறதடீ!” என்று கூறிப் பெருமூச்சு விட்டாள் சுரமஞ்சரி.
பின்னால் துரத்திக்கொண்டு வருகிறவருடைய வலிமையை எண்ணித் தன் உயிருக்குப் பயந்து ஓடுகிற ஓட்டத்துக்கு இணை சொல்ல வேண்டுமானால் இந்த உலகத்தில் இப்படி இணை சொல்வதற்கு எதுவும் உப மானமாகக் கிடைப்பது மிகவும் அருமைதான். உயிரைப் பணயமாக வைத்து விளையாடுகிற எந்த விளையாட்டிலும் அதை விட அதிக மதிப்புள்ளதாகப் பணயம் வைப்பதற்கு வேறு உயர்ந்த பொருள் எதுவும் இருக்க முடியாதென்பது தேற்றமான உண்மை. முரட்டுக் காபாலிகையான பைரவியின் உயிர் அப்பொழுது அவளுடைய குதிகால்களில் மட்டும்தான் இருந்தது. கால்கள் ஓடுவதற்குப் பயன்படுகிறபோது அந்த ஓட்டத்திற்குத் தூண்டுதலாக இருக்கிற உயிர்த் துடிப்பு மெய்யானால் அப்போது பைரவியின் உயிர் உடம்பிலிருந்து கீழே நழுவி விழுவதுபோல் சிறிது சிறிதாக இறங்கிக் குதிகால்களுக்குத் தாழ்ந்து, அங்கு மட்டுமே பயன்பட்டு, அவளை வாயு வேகத்தில் ஓட வைத்துக் கொண்டு இருந்தது. இப்படி உவமை சொல்வதுகூடப் பொருந்துமோ பொருந்தாதோ அவள் ஓடிய வேகத்திற்கு அதுவே இணை.
அப்போது அவளைத் துரத்திக் கொண்டிருந்த நீலநாக மறவருக்கோ உயிர்க் குணமே வீரம்தான். அந்த உயிர்க் குணத்தின் முழுத் தன்மையும் ஓட்டம் என்ற ஒரே இயக்கமாகப் பொங்கினாற் போலப் பாய்ந்து பாய்ந்து துரத்திக் கொண்டிருந்தார் அவர். அந்த அரக்கியிடமிருந்து தான் தெரிந்து கொள்வதற்கு விரும்பும் இரகசியங்களைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால் ஓடி ஓடிக் களைத்து அவளே மாண்டு போய் விடுவாளோ என்று சந்தேகப்படத் தொடங்கி விட்டார் நீலநாகமறவர். அவர் சில இரகசியங்களைக் கேட்டு அறிந்து கொள்வதற்காகத்தான் அவளைத் துரத்தினார். அவளோ தன் உயிரைத் தேடியே தன்னை அவர் துரத்துவதாக எண்ணிக் கொண்டு வேகமாக ஓடினாள்.
ஓடி ஓடி இறுதியில், பயந்து ஓடுகிறவளும் பயமுறுத்தி ஓட்டுகிறவரும் சக்கரவாளத்து வனம் முழுவதையும் கடந்து அதற்கப்பால் எதைக் கடந்து போகிறோம் என்ற உணர்வோ நினைப்போ இல்லாத சில இடங்களையும் கடந்து, கடைசியில் கடலோரமாக வந்து சேர்ந்திருந்தார்கள். துரத்தியவர், துரத்தப்பட்டவள் இருவருக்குமே மணற்பரப்புக்கு வந்ததும் ஓட்டத்தில் வேகம் குன்றியது. சுங்கப் பொருள் தண்டும் காவலர்களை ஏமாற்றி விட்டுக் கள்ளத்தனமாகப் பூம்புகாருக்குள் நுழைய முயலும் பிறநாட்டுப் பாய்மரக் கப்பல்களையும், வங்கம் எனப்படும் சிறு கப்பல்களையும் கண்காணித்துச் சிறைப்பிடிப்பதற்காக ஆள் நடமாட்டமற்ற அந்தக் கடற்பகுதி ஓரமாகக் காவலும், உயரமான கலங்கரை விளக்கும் அமைந்திருந்தது. கலங்கரை விளக்கின் உச்சி யிலிருந்த மாடத்தில் வேலேந்திய கையினனாக நின்று கெண்டிருந்த காவலன் கடற்பரப்பைக் கூர்ந்து நோக்கியவாறிருந்தான். தவம் செய்கிறவனுடைய நோக்கத்தைப் போல அவனுடைய முயற்சி ஒரே திசையில் சென்று கொண்டிருந்தது. தீ பெரிதாய் எரிவதற்காகக் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் நெருப்பு மூட்டப் பெற்றிருக்கும் காய்ந்த கட்டைகள் படர்ந்து கொழுந்துவிட்டுக் கொண்டிருந்தன.
தனக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்த பைரவி கலங்கரை விளக்கத்துப் படிகளில் தாவி ஏறுவதைப் பார்த்துத் திகைத்து நின்றார் நீலநாக மறவர். அப்படியே அவள் கழுத்தைக் குறிவைத்து ஈட்டியை வீசி அவளால் தீபத்தின் படிகளில் ஏறுவதற்கு முடியாமல் செய்து விடலாமா என்று தோன்றியது அவருக்கு. நினைப்பதற்கும், செயல்படுவதற்கும், நடுவே கணநேரமும் மந்தப்படுவதலை அறியாத அவர் கைகள் ஈட்டியையும் ஓங்கிவிட்டன. ஓங்கிய கைகள் செயல்படுவதற்கு முன்பாகவே, பின் விளைவைத் தீர்மானம் செய்த புத்தியின் நிதானம் அப்போது அவருக்குப் பயன்பட்டது. ஈட்டி பாய்ந்தவுடன் பைரவி அலறுவாள். அந்த அலறலைக் கேட்டுக் கலங்கரை விளக்கத்தின் உச்சி மாடத்தில் நிற்கிற காவலனின் கவனம் நிச்சயமாகத் தன் பக்கம் திரும்பும். அப்படி அவன் திரும்பினால் தான் குற்றவாளியாக மாறி அந்தக் காவலனுக்கு முன்னால் நிற்க நேரும். அந்தக் காவலன் தன்னுடைய படைக்கலச் சாலையில் பயிற்சி பெற்று வெளியேறிய வீரவேளிர்களில் ஒருவனாகத்தான் இருக்க முடியும் என்பதில் சந்தேகமற்ற திடநம்பிக்கையும் அவருக்கு இருந்தது. தம்மால் கற்பிக்கப்பட்ட மாணவனுக்கு முன் தாமே குற்றவாளியாகி நிற்கும் நிலையைப் போல் இழிவானது வேறு எதுவும் இருக்க முடியாது. பேராண்மையாளராகிய நீலநாக மறவர் அப்போது தாம் இருந்த நிலையை இந்தக் கோணத்தில் திருப்பி எண்ணிப் பார்த்த கணத்திலேயே வெட்கமடைந்தார். வல்லவராகிய அந்த நல்லவருக்கும் சிறிது நாணம் விளைந்தது. இலக்குத் தவறாமல் ஈட்டியை எறிந்து படியேறி ஓடும் பைரவியை அவர் வீழ்த்தியபின் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் நிற்கும் காவலன் ஓடிவந்து அவரைப் பிடித்துக் கொண்டாலும், அவர் இன்னாரெனக் கண்டு தெரிந்து கொண்டதும் அவருடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கி அவரிடம் மன்னிப்புப் பெற்றுக்கொண்டு பயபக்தியோடு கைகட்டி வாய் பொத்தித் தலை தாழ்ந்து நிற்பானானாலும், அதைச் செய்யவும் அவனுக்கு ஓர் சந்தர்ப்பம் அளிப்பானேன் என்று தயங்கி நாணினார் அவர். ஒடி வந்த வேகத்துக்குப் பொருத்தமில்லாமல் அந்த வேகம் நடுவிலேயே தயங்கி முறிந்து நின்ற நீலநாகர் பைரவியைத் துரத்திக் கொண்டு கலங்கரை விளக்கத்துப் படிகளில் ஏறாமல் வந்த வழியே மெல்லத் திரும்பி நடந்தார். ஈட்டியை எறியாமல் அவளைப் பின் தொடர்ந்து படியேறிப் பிடித்துவிடலாம் என்றாலோ அவள் அவருக்கு அகப்படாமல் கலங்கரை விளக்கத்துப் படிகளிலிருந்தே கடலில் குதித்துவிடவும் கூடும். அவள் கடலில் குதித்தாலும் அந்த ஒசையால் காவலனுடைய கவனம் கவரப்பட்டு அவன் கீழே நிற்கிற அவரைப் பார்க்கும்படிதான் நேரும். தன்னுடைய படைக்கலச் சாலையில் தான் ஒழுக்கமும் வீரமும் கற்பித்து உருவாக்கிய இளைஞன் ஒருவனே தன்னை எதிரே நிறுத்திக்கொண்டு, ‘நம் மதிப்பிற்குரிய ஆசிரியர் பிரான் இந்த அகாலத்தில் இப்படி யாரோ ஒரு பெண்ணைத் துரத்திக்கொண்டு இங்கே வந்தது ஏன்?’ என்று தன்னைப்பற்றி அவன் நினைப்பதும் மானக் குறைவு என்று அந்த ஞான வீரருக்கு அப்போது தோன்றியது. அப்படி அந்த மாணவன் தன்னைப்பற்றி நினைக்க நேர்ந்து விட்டாலோ, அல்லது தன் முகத்தை அருகில் வந்து காணுமுன் வாய் திறந்து சொல்லவே நேர்ந்து விட்டாலோ, அதற்குப்பின் தான் உயிர் வாழ்வது மானமில்லை என்று எண்ணினார் அவர். ‘தன்நிலையில் தாழாமை தாழும்படி நேர்ந்துவிட்டால் அப்புறம் உயிர் வாழாமை’ - என்று தான் நீலநாகர் தன் மனத்தில் மானத்தைப் பற்றி உறுதியானதொரு இலக்கணம் வகுத்துக் கொண்டிருந்தார். மானம் அழிந்து சிதறும் படியான சூழ்நிலையை அப்போது அங்கே விளையாட்டுக்காகவும் கூட உருவாக்கிப் பார்க்க விரும்பவில்லை அவர். இடமோ காவலும், கண்காணிப்பும் ஏற்படுத்திக் கொண்டு சுங்கம் தண்டுகிறவர்கள் பாதுகாக்கும் இடம். நேரமோ நடு இரவு. தன்னால் துரத்தப்படுகிறவளோ பெண். காவலுக்கு நிற்கிறவனோ தன் மாணவன். இவை எல்லாவற்றையும் தீரச் சிந்தித்துப் பார்த்த பின் பைரவியைத் துன்புறுத்தி இரகசியங்களைத் தெரிந்துகொள்ள முயல்வதைவிட அப்போது, தன் மானத்தைக் காத்துக்கொண்டு திரும்புவது புத்திசாலித் தனமான காரியமாகத் தோன்றியது அவருக்கு. மறைவிற் போய் நின்று, பைரவி கலங்கரை விளக்கப் படிகளில் உச்சிவரை ஏறுவதைப் பார்த்துக்கொண்டே அமைதியாகப் படைக்கலச் சாலைக்குத் திரும்பிவிட்டார் அவர். திட்டமும் ஒழுங்கும் நிறைந்த கட்டுப்பாடான வாழ்க்கைக்கு இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களின் குறுக்கீடு நிலையான கெடுதல் என்பதை நீலநாக மறவர் நன்றாக உணர்ந்தார். நல்ல பசி நேரத்தில் கிடைக்கிற சத்துள்ள உணவைப்போல் இந்த உணர்வு ஏற்ற சமயத்திலே தம்முடைய மனத்துக்குக் கிடைத்ததற்காகத் தெய்வத்துக்கு அவர் நன்றியும் கூறினார்.
நீலநாக மறவர் பைரவியைத் துரத்திக் கொண்டு சென்றபோது, எவ்வளவு பரபரப்போடு சென்றாரோ அவ்வளவிற்குச் சிறிதும் குறைவில்லா நிதானத்தோடு படைக்கலச் சாலைக்குத் திரும்பியிருந்தார். அவர் படைக்கலச் சாலைக்குத் திரும்பியபோது விடிவதற்குச் சில நாழிகைகளே இருந்தன. அந்த நேரத்தில் அந்தப் படைக்கலச் சாலையின் மகிழமரமும் பவழ மல்லிகையும் தங்களை வளர்த்து அரும்பிப் பூக்கச் செய்த மண்ணுக்கு அர்ச்சனை புரிந்துவிடுவன போலத் தத்தம் மலர்களை உதிர்த்திருந்தன. விடிவை நோக்கி ஓடுகிற நேரத்துக்கே உரிய இங்கிதமான குளிர்ச்சியும் பூக்களின் கன்னி கழியாத புது மணமும், இந்த உலகத்தில் நிரந்தரமாக நேர்ந்து நிலைத்துவிட்ட ஏதோ ஓர் அநியாயத்துக்காக நிரந்தரமாக ஓலமிட்டுக் கொண்டிருப்பது போன்ற கடல் அலைகளின் ஓசையும் சேர்ந்து இயற்கையின் சங்கேத சப்தங்களே மொழியாக மாறி வழங்கும் மெளனத் தீவு ஒன்றிற்கு வந்துவிட்டாற் போன்ற சூழ்நிலையை அடைந்தார் நீலநாகமறவர். இப்படிச் சூழ்நிலை இந்த வைகறை நேரத்தில் எல்லா நாளிலும் நிலவுமாயினும் அவருடைய இன்றைய மனநிலைக்கு இது முகவும் இதமாயிருந்தது. ஆழ்ந்த தூக்கமும் இல்லாமல் ஆழ்ந்த விழிப்பும் இல்லாமல், பூக்கள் உதிர்ந்திருந்த அந்த மரத்தடியிலேயே அமர்ந்து நடந்தவற்றை ஒவ்வொன்றாகச் சிந்தித்துக் கொண்டிருந்தார் அவர்.
சுனைநீரில் மூழ்குவது போலக் காற்று உடம்பில் உராய்ந்து கொண்டிருந்தது. அன்று பைரவியைச் சந்தித்து இரகசியங்களை அறிய முடிந்திருந்தால் அவளிடமிருந்து அறிய முடிந்த இரகசியங்களுடன் படைக்கலச் சாலைக்குத் திரும்பி அங்கே தூங்கிக் கொண்டிருக்கும் ஓவியன் மணிமார்பனை எழுப்பி அவனையும் அழைத்துக் கொண்டு பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகைக்குச் செல்ல வேண்டுமென்று திட்ட மிட்டிருந்தார் நீலநாக மறவர். முதலில் இருந்தே திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை. எல்லாம் வேறுவிதமாக மாறியிருந்தன. பெருந்தன்மையும் நல்லவர்களுக்கு இருந்தே தீரவேண்டிய நாணமும் சேர்ந்து தன்னுடைய தீர்மானங்களையெல்லாம் மாற்றி விட்டதை எண்ணிப் பார்த்து நெட்டுயிர்த்தார் அவர். மாலையில் வீரசோழிய வளநாடுடையார் தம்மிடம் கூறியிருந்த செய்தி இப்போது மீண்டும் நினைவு வந்தது அவருக்கு.
‘எப்படியோ இந்த வைகாசி விசாகம் வரை இளங்குமரனைக் காப்பாற்றுங்கள். வைகாசி விசாகத்துக்கு முன்னால் இளங்குமரனை அழைத்துக்கொண்டு மணிபல்லவத்துக்கு யாத்திரை போகத் திட்டமிட்டுள்ளேன். அதற்கு அப்பால் எல்லாத் துன்பங்களுக்கும் வழி பிறந்துவிடும்’ என்று வளநாடுடையார் கூறியது, பொதுவாக இருந்தபோதிலும் இந்தச் செய்திக்குள் அடங்கியிருக்கும் வேறு செய்தி ஒன்றும் இலைமறை காயாக நீலநாகருடைய சந்தேகத்தில் புலப்பட்டது. வீரசோழிய வளநாடுடையார் தன்னைச் சந்திக்க நேருகிறபோதெல்லாம் இளங்குமரனை மணிபல்லவத்துக்கு அழைத்துக்கொண்டு போவது பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பதைக் கூர்ந்து உணர்ந்து அந்தச் செய்திக்கு ஏதோ ஒரு முக்கிய விளைவு இருக்க வேண்டுமென அநுமானித்துக் கொண்டிருந்தார் நீலநாகமறவர். இப்போது அந்த அநுமானமே மேலும் வலுப்பெற்றது. மகிழம், பவழமல்லிகை ஆகிய மரங்களின் கீழே இவ்வாறு சிந்தித்துக்கொண்டே மிகுதியான எண்ணங்களிலும் குறைவான உறக்கத்திலும் மூழ்கி இருந்த நீலநாகர் தாம் வழக்கமாகக் காலைக்கடன்களைத் தொடங்கும் நேரம் நெருங்கியதை உணர்ந்து உள்ளே போய் இளங்குமரனையும் எழுப்பி அழைத்துக் கொண்டு புறப்பட்டார். முதல் நாள் இரவு படைக்கலச் சாலைக்குத் தன்னைத் தேடிக்கொண்டு வந்த நண்பர்களிடம் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்த காரணத்தால் அப்போது இளங்குமரன் மிகவும் சோர்ந்து போயிருந்தான். களைப்பாகவும் இருந்தான். அதனால் அன்று பகலில் அவன் நாளங்காடிக்குச் செல்லவில்லை. அவன் தேடிக்கொண்டு போக வேண்டிய சமயவாதிகளின் கூட்டம் ஒன்று அவனையே தேடிக்கொண்டு, படைக்கலச் சாலைக்கு வந்திருந்தது. உறையூருக்கு அருகில் இருந்த சமதண்டம் என்ற ஊரிலிருந்து இந்திர விழாவுக்காக காவிரிப்பூம் பட்டினத்துக்கு வந்திருந்த ஆசீவகர்களின் கூட்டம் ஒன்றை அவனோடு வாதிடுவதற்காக விசாகை அங்கே அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். விசாகை தனக்கு இருக்கும் ஞானத்தினால் தானே அந்த ஆசீவர்களை வென்றிருக்க முடியு மாயினும், அவர்களை வெற்றிகொள்ளும் பெருமையை இளங்குமரனுகே அளிக்க வேண்டுமென்று கருதியது போல அங்கே கூப்பிட்டுக் கொண்டு வந்திருந்தாள். இளங்குமரனை வாதத்தில் வென்றால், அந்த ஆண்டு பூம்புகாரின் இந்திரவிழாவில் கூடிய அத்தனை சமயவாதிகளையும் வென்றாற்போன்ற பெருமையை அடையலாம் என்ற ஆசையோடு வந்திருந்தனர். சமதண்டத்தைச் சேர்ந்த ஆசீவக அறிஞர்கள் பலரைத் தோற்கச் செய்த ஒருவனை வெல்வதில் இரண்டு விதமான நன்மைகள் உண்டு. வெற்றி வீரனான இளங் குமரனை வெல்வதினால் அவனால் ஏற்கெனவே வெற்றி கொள்ளப்பட்டவர்களையும் சேர்த்து வென்று விடும் பெருமையை எதிர்பார்த்தனர் சமதண்டத்தார்.
மேலைச் சோழ மண்டலத்தினரான சமதண்டத்து அறிஞர்களின் வாதத் திறமையைப் பற்றி இளங்குமரன் நிறையக் கேள்விப்பட்டிருந்தான். எதிராளி பேசும் சொற்களில் ஒரு மாத்திரை மிகுந்து ஒலித்தாலும் குறைந்து ஒலித்தாலும், அந்த ஒலி மிகுதிக்கும் குறைவுக்கும் கூடக் காரணம் கற்பித்து வாதமிடும் நுணுகிய வாதத்திறமையுடைய சமதண்டத்து ஆசீர்வகர்கள் ஐம்பதின்மர் அவனிடம் வந்திருந்தனர். ‘இந்த ஐம்பது பேரும் வலுவில் தேடிக் கொண்டு வாதுக்குப் போவது அருமை. இன்றியமையாத காரணம் இருந்தால்தான் வாதத்துக்குரிய எதிராளியை அவர்கள் தாங்களே நேரில் தேடிக்கொண்டு வருவார்கள். அவர்கள் ஐம்பதின்மரையும் தனித்தனியே வாதிட்டு வெல்ல வேண்டும். அப்படி வெல்வதற்குக் குறைந்த பட்சம் நூறு நாட்களாவது செலவழியும்’ என்று இளங்குமரன் பலரிடம் பலமுறை கேள்விப்பட்டிருந்தான்.
‘இந்த ஐம்பது பேரறிஞர்களையும் இவர்களுடைய திறமையைப் பற்றிக் கேள்வியுற்றிருப்பதையும் எண்ணுகிறபோது என் மனத்தில் இப்போது தோன்றி விடுவதற்குப் பார்க்கிற ஆற்றாமையை நீக்கிக்கொள்ளும் வலிமையை உடனே எனக்கு அளியுங்கள்’ என்று நினைத்தபடியே தன் ஆசிரியரைத் தியானம் செய்து கொண்டான் இளங்குமரன். படைக்கலச் சாலையின் முற்றத்தில் அந்த அறிவுப் போர் தொடங்கியது. விசாகை, நீலநாகமறவர், மணிமார்பன் அவனுடைய மனைவி ஆகியவர்கள் இளங்குமரனோடு அருகில் நிற்கும் துணைகளாக இருந்தனர். ஆசீவகர்களின் தலைவர் தங்கள் சுமய நூலாகிய நவகதிர் என்னும் கிரந்தத்திலிருந்து சான்றுகளைக் கூறி வாதத்தைத் தொடங்கினார். இளங்குமரன் அவர் கூறுவனவற்றையெல்லாம் கவனித்துக் கேட்கலானான்.
“இன்னவாறு இன்ன காரணத்தால் தோன்றுமென இல்லாமல் வானத்தில் இந்திர வில் தோன்றுவதுபோல் தோன்றிக் காரணமின்றி விளங்கும் மற்கலிதேவன் எங்கள் இறைவன். நில அணு, நீர் அணு, தீ அணு, காற்று அணு, உயிர் அணு என்னும் ஐந்து அணுக்களும் இவ்வுலகு நிகழ்வதற்கும் காரணமாக நாங்கள் கருதும் அணுக்கள். உள்ளது கெடாது. இல்லாதது தோன்றாது. எல்லாப் பொருள்களின் நிகழ்ச்சியும் ஆழ்தல், மிதத்தல் என்னும் இரு தொழிலில் அடங்கும் என்பதும் எங்கள் சமயத்தின் கருத்து.”
இவ்வாறு தொடங்கி நவகதிர் நூலிலிருந்து வேண்டிய மேற்கோள்களைச் சொல்லி தன்னுடைய வாதத்துக்குப் பூர்வபட்சமாக வலுவான தோற்றுவாய் செய்தார் ஆசீவக முதல்வர்.
“ஐயா தாங்கள் கூறும் உவமை தங்களுடைய கருத்துக்கு அரண் தருவதாயில்லை. இந்திர வில்லாகிய வானவில் காரணமும் பிறப்பும் அற்றது என்று தாங்கள் கருதுவது பிழை. சூரிய கிரணங்கள் மேகபடலத்தில் படுவதால்தான் வானவில்லும் அதில் நிறங்களும் பிறக்கின்றன. எனவே தாங்கள் கூறும் காரணம் பிறழ்வுடையதாகிறது. பிறழ்வுடைய காரணம் ‘அநைகாந்திகம்’ என்னும், தருக்கக் குற்றமாய் அடங்கும்...” என்று இவ்வாறு பல காரணங்களையும் சொல்லி நவகதிரின் முரண்பாடுகளை விளக்கினான் இளங்குமரன். அவனுக்கும் அவருக்கும் நிகழ்ந்த வாதம் மட்டும் முடியவே ஆறு நாட்கள் கழிந்தன. ஏழாவது நாள் சூரியோதயத்தில் அவர் இளங்குமரனுக்குத் தாம் தோற்றதாக ஒப்புக் கொண்டார்.
இளங்குமரன் அடுத்த மூன்று நாட்களில் அந்தக் கூட்டத்தில் மேலும் நான்கு ஆசீவகர்களை வென்றான். கருத்துக்களில் முரண்பாடு இருந்தாலும் சமதண்டத்தாருக்கு உரிய தருக்க ஞான நுணுக்கத்தால் வாதத்துக்குரியவற்றை வளர்த்து வளர்த்து இளங்குமரன் விரைவில் முழுவெற்றியும் பெற்றுவிட முடியாதபடி செய்து கொண்டிருந்தார்கள் அவர்கள். நூற்றுக்கணக்கான போர் வீரர்களைத் தனியே எதிர்த்து நின்று வெற்றி கொள்ள முடிந்த இரும்பு மனிதரான நீலநாகமறவர் ஐம்பது முதிய அறிஞர்களை வெற்றி கொள்ள ஓர் இளம் அறிஞன் படுகிற துன்பத்தைக் கண்டு வியப்பு அடைந்தார். ஒவ்வோர் அறிஞனையும் நாட்கணக்கில் செலவழித்து வெற்றி கொள்ளும்படி நேர்ந்து வருவது அவருக்குத் திகைப்பை அளித்தது.
ஆசீவக வாதம் தொடங்கிப் பத்தாவது நாளும் வந்துவிட்டது. வாதம் ஒரு முடிவுக்கு வராமல் தொடர்ந்து வளர்ந்து கொண்டேயிருந்தது.
“எங்கள் இறைவனான மற்கலிதேவன் முழுதும் உணர்ந்து பேச்சின்றி மெளனமே உருவாயிருப்பவன்” என்று அன்றைய வாதம் தொடங்கப்பட்டது.
“பேச்சின்றி மெளனமாயிருக்கும் உங்கள் இறைவனே வாய்திறந்து ‘நான் முழுதும் உணர்ந்தேன்’ என்று கூறியிருந்தாலொழிய அவன் முழுதும் உணர்ந்தவன் என்பதை நீங்கள் அறிந்திருக்க இயலாது. அவன் வாய் திறந்து அப்படிக் கூறியிருப்பானானால் அவன் மெளனமாயிருப்பான் என்று நீங்கள் கூறுகிற இலட்சணம் பொய்யாய் முடியும். முழுவதும் உணர்வதை அநுமானம் பண்ணிக் கொள்வதற்கு மெளனமாய் ஓசையின்றி இருப்பதே தன்மையானால் பேசாப் பருவத்துக் குழந்தைகளும் ஊமைகளும் மலையும் கல்லும் கட்டையும் முழுவதும் உணர்ந்தவை என்பதாக முடிவு செய்ய நேரிடும்” என்று அந்த வாதத்தைச் சாதுரியமாக மறுத்தான் இளங்குமரன்.
இதற்கு அடுத்த பத்து நாட்களில் ‘உள்ளது கெடாது இல்லாதது தோன்றாது’ என்னும் ஆசீவக தத்துவத்தை நிறுவ முயன்ற வாதத்தை மறுத்து வென்றான் இளங்குமரன். “விழுதாய் உறைந்துள்ள நெய் நெருப்புப் பட்ட போது கெட்டு இளகுதலும், நெய்யில் இல்லாத நெருப்பு வேள்விக் குழியில் நெய் பட்டபோது நெய்யால் வளர்ந்து தோன்றுதலும் காண்கிறோம். எனவே உள்ளது கெடாது, இல்லாதது தோன்றாது என்று கூறுவது எப்படிப் பொருந்தும்?” என்று தன் கருத்தை இளங்குமரன் நிறுவினான். உள்ளது கெடாது, இல்லாதது தோன்றாது என்னும் தத்துவத்தை மறுப்பதற்கு மட்டும் புத்தி பூர்வமாகவும், யுக்தி பூர்வமாகவும் இளங்குமரன் எத்தனையோ வாதங்களைச் செய்ய வேண்டியிருந்தது. கையாய்த் தோன்றிய வழி விரல்களாய்த் தோன்றாமையும், விரல்களாகத் தனித்தனியே பிரிந்து தோன்றிய வழிக் கையாய்த் தோன்றாமையும் - எனக் கைக்கே இரு நிலைமையும் உள்ளதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி இளங்குமரன் யுக்தி வாதம் புரிந்தான். மொழி எழுத்துக்களாகத் தனித்தனியே பிரிந்த போது சொல் ஆகாமையையும் சொல்லாய்க் கூடிய வழி எழுத்தாகாமையையும் விளக்கினான். ஆசீவகர்களுடைய பிடிவாதம் சிறிது சிறிதாகத் தளர்ந்தது.
சமதண்டத்திலிருந்து இந்திர விழாவுக்கு வந்திருந்த ஆசீவகர்கள் இந்திர விழா முடிந்த பின்னும் சில நாட்கள் வரை இளங்குமரனை விடவில்லை. சித்திரைத் திங்கள் முடிந்து வைகாசித் திங்களின் முதற்கிழமை வரை இளங்குமரன் அவர்களோடு செலவழிக்கும்படி ஆகிவிட்டது. அந்த ஐம்பது முதியவர்களையும் வென்று முடிக்கிறவரை படைக்கலச் சாலைக்கு அப்பால் இருந்த உலகத்தை இளங்குமரன் மறந்து போய்விட்டான் என்றே கூற வேண்டும். அவர்களை வாதத்தில் வெல்ல வேண்டுமென்கிற முயற்சி ஒன்றுதான் அப்போது அவனுடைய உலகமாயிருந்தது. நூற்றுக்கணக்கான நாட்கள் செலவழித்து வாதிட்டாலும் வெற்றி கொள்ள முடியாத சமதண்டத்து அறிஞர்களை மிகச் சில நாட்களிலேயே அவன் வென்ற பெருமையை உடனிருந்த விசாகை வெகுவாகப் பாராட்டினாள்.
“இந்தக் கொடி வெற்றிக் கொடியாக உயரட்டும் என்று நான் அன்று வாழ்த்தியதின் பயனை இன்றுதான் கண்ணாரக் கண்டேன் ஐயா!” என்று ஆவல் பொங்கும் குரலில் விசாகையினிடமிருந்து இளங்குமரனை நோக்கிச் சொற்கள் பிறந்தன. இணையிலாத் தருக்க ஞானிகளாகிய சமதண்டத்து ஞான வீரர்களை வென்று விசாகையின் மனம் நிறைந்த வாழ்த்துக் களையும் ஏற்றுக் கொண்ட நல்ல நாளாகிய அன்று மாலையில் அவளோடு காவிரிப் பூம்பட்டினத்து இந்திர விகாரத்துக்குச் சென்று தன் வாழ்வு இப்படி மாறி அமைவதற்குக் காரணமாயிருந்த பழைய பெளத்த சமயத் துறவியைச் சந்தித்தான் இளங்குமரன்.
அவனை அடையாளம் புரிந்து கொண்டு புன்முறுவல் பூத்தார் அவர். இவ்வளவு ஆண்டுகளுக்குப் பின்பு தோற்றத்தால் மேலும் முதுமையடைந்திருந்த அந்தத் துறவியின் புன்முறுவல் மட்டும் மூப்படையாமல் பழைய அழகோடு - அறிவின் அழகோடு அன்றிருந்தாற் போலவே விளங்கிற்று. அன்பிலே குழைந்த குரலோடு அவர் அவனை நோக்கிக் கூறினார்:
“நீதான் அப்பா மெய்யான ஞானி! ஒரு நல்ல உண்மை அதன் முழு ஆற்றலுடன் மனத்தில் உறைத்து அதைச் செயற்படுத்தத் தவிப்பதுதான் புத்தி என்பார்கள். ‘இப்படி உடம்பை மட்டும் மற்போற் வீரனைப் போல் வலிதாக்கிக் கொண்டு வந்து நின்று பயனில்லை. மனத்தை வலியதாக்கிக் கொண்டு வா’ என்று நான் என்றோ உன்னிடம் கூறியதைச் செயற்படுத்தி விட்டாய். என்னுடைய சொற்களைச் செயலாக்கிய உன் மானத்திற்கும் அதன் விளைவாகிய உன் ஞானத்திற்கும் இப்போது நான் தலை வணங்குகிறேன் அப்பா!”
இளங்குமரன் அவரைப் பதிலுக்கு வணங்கிவிட்டுச் சிறிது நேரத்து உரையாடலுக்குப் பின் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு படைக்கலச் சாலைக்குத் திரும்பினான். விசாகையும் அவனோடு திரும்பினாள். படைக்கலச்சாலையில் வளநாடுடையார் ஆவலோடும் அவசரத்தோடும் அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அவர் வந்திருக்கிற காரியம் முக்கியமானதென்று அவரிருந்த நிலைகண்டு அவனாலேயே புரிந்துகொள்ள முடிந்தது.
அவனைச் சந்திப்பதற்காகப் படைக்கலச் சாலையில் வந்து காத்திருந்த வீரசோழிய வளநாடுடையார் ஏதோ நிறையப் பேசுவதற்குச் சேர்த்துக் கொண்டு வந்திருப்பவர் போலத் தோன்றினார். அவர் வந்திருக்கிற வேகத்தையும், அந்த வேகத்தோடு இணைந்து தெரிந்த உறுதியையும் கண்டு, எதைச் சொல்ல வந்திருக்கிறாரோ அதைத் தோற்கவிட மாட்டார் என்று உணர்ந்து புன்னகை பூத்தான் இளங்குமரன். வந்திருப்பவர் இளங்குமரனோடு தனியாகப் பேசு வதற்காக வந்திருக்கிறார் என்பதை அங்கு நிலவிய குறிப்புக்களால் புரிந்துகொண்ட விசாகை அவர்களைத் தனிமையில் விடுத்துச் சென்றாள்.
“இப்போது நீங்கள் நான் வெற்றி கொள்ள முடியாத ஏதோ ஒரு வாதத்தைக் கொண்டு இங்கு வந்திருப்பதாக என் உள்ளுணர்வு கூறுகிறது ஐயா!” என்று சொல்லிக் கொண்டே அவர் அருகில் போய் நின்றான் இளங்குமரன். அவர் சற்றே சிரித்தார். மிகுதியாகச் சிரித்துவிட்டால் தான் சொல்லுவதற்கு வந்திருக்கும் உறுதியான செய்தியை அந்தச் சிரிப்பே பலவீனப்படுத்தி விடுமோ என்று பயந்துகொண்டே அவர் சிரிப்பது போலிருந்தது.
“தம்பீ! நான் இப்போது தொடங்க வந்திருக்கும் வாதத்துக்கு இரண்டு விதமான முடிவுகள் இல்லை. ஒரே முடிவுதான். இந்த வாதம் என் பக்கம் வெற்றியாக முடியுமா? உன்பக்கம் வெற்றியாக முடியுமா? என்ற ஐயத்துக்கு இடமே இல்லை. என் பக்கம்தான் வெற்றியாக முடிய வேண்டும் என்று நான் புறப்படும்போதே தீர்மானம் செய்துகொண்டு விட்டேன். அதை நீ மறுப்பதற்கில்லை.”
“நல்லது, ஆனால் மாறுபாடும் வேறுபாடும் இல்லாமல் என்றும் ஒரேவிதமாக - ஒரே பக்கமாக முடியத்தக்க ஒருமை முடிவே உள்ள செய்திகள் வாதத்துக்குப் பொருளாகா என்பதை மறுமொழியாகக் கூறி உங்களை எடுத்த எடுப்பிலேயே நான் மறுத்து விடலாம் ஐயா! ‘நித்தியை காந்தபட்சம்’ எனப்படும் ஒருமை முடிவே உள்ள செய்திகளை இரு கூறாக்கி வாதிட முடியாது. ‘தண்ணீர் குளிர்ந்திருக்கும்’ என்றும் ‘தீ சுடும்’ என்றும் வருகிற வாக்கியங்களை அவற்றிற்கு மாறாகத் தண்ணீர் சுடும், தீ குளிர்ந்திருக்கும் என வேறு முடிவும் காட்டிப் பிரதிவாதம் செய்தற்கில்லையே? நீங்கள் என்னிடம் கூற வந்திருக்கும் செய்தியும் அப்படி மறுப்பதற்கில்லாத ஒருமை முடிவே உள்ளதாயின் உடனே ஒப்புக்கொள்ளுவதைத் தவிர நான் வேறு மாற்றம் சொல்ல வழி ஏது?” என்றான் இளங்குமரன்.
“ஆகா! நீ படித்திருக்கிற தருக்கத்தை இன்றைக்கு மட்டும் பாராட்டுகிறேன் தம்பீ! நான் கூறுவதை மறுக்காமல் நீ உடனே ஒப்புக் கொள்ளுவதற்கும் உன் படிப்பு இடந்தருகிறது என்ற ஒரே காரணத்துக்காக இந்தப் படிப்பைப் பாராட்ட வேண்டியதுதான். ஆனால் வாதம் செய்வதற்கும் மாற்றம் சொல்லி மறுப்பதற்கும் இது பொருள் ஆகாது. இப்போது இங்கே நான் பேச வந்திருக்கும் செய்திக்குப் பொருள் வேறு எதுவும் அல்ல, உன்னுடைய வாழ்க்கைதான். அதற்கு ஒரே ஒரு முடிவுதான் உண்டு...”
“தவறு ஐயா! ஒரே முடிவுதான் உண்டு என்பது என்னுடைய வாழ்க்கைக்கு மட்டும்தான் உண்மை என்பதில்லை. பொதுவாக எல்லாருடைய வாழ்க்கைக்கும் ஒரே முடிவுதான் உண்டு.”
“நீ குதர்க்கம் பேசுகிறாய் தம்பீ?”
“தர்க்கமல்லாததுதான் குதர்க்கம். இன்னொரு விதமாகக் கூறினால் தர்க்கம் ஆகாததும் குதர்க்கம். தர்க்கத்துக்குப் பொருளாகாத ஒரே முடிவுடைய செய்தியைத் தொடங்கியவன் நான் இல்லையே ஐயா?” என்று சிரித்தபடி நிதானமாக அவருக்குப் பதில் சொன்னான் இளங்குமரன். இதைக்கேட்டு, அதுவரை விளையாட்டாகப் பேசிக்கொண்டே வந்த வளநாடுடையார் சீற்றமடைந்தார். பேச்சில் சிறிது சினமும் கலந்தது.
“நான் தர்க்கம் பேச வரவில்லை. உன் வாழ்க்கையைப் பற்றிப் பேச வந்திருக்கிறேன்.”
“அப்படியானால் என் வாழ்க்கையே தர்க்கத்துக்குரிய பொருளாக இருந்ததாக முதலில் நீங்கள் எண்ணியிருக்க வேண்டும்.”
“அப்படி நான் எண்ணியிருந்தாலும் அது பிழையில்லை தம்பி! ஆனால் மறுபடியும் ஒன்று சொல்கிறேன். இங்கே இந்தத் தர்க்கத்துக்கும் ஒரு முடிவுண்டு. நீ திருநாங்கூரில் போய்க் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் இதேபோல் ஒரு வைசாக பெளர்ணமிக்கு முன் உன்னைத் தேடிக்கொண்டு வந்ததும், அதன்பின்பு சென்ற திங்களில் நீண்டகாலத்துக்குப் பின் நீ இந்த நகரத்தில் காலடி வைத்து நுழைந்த முதல் நாளில் இதே படைக்கலச் சாலையின் வாயிலில் என் மகளும் நானும் உன்னைச் சந்தித்ததும் உனது வாழ்க்கைத் தர்க்கத்துக்கு முடிவு காணும் நோக்கத்தோடுதான்.”
“உங்கள் நோக்கத்தைப் போற்றுகிறேன் ஐயா! ஆனால் அதற்காக இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?”
“செய்ய முடியாதது எதையும் நாங்கள் சொல்லவில்லை தம்பீ! நீலநாகரும் நானும் சொல்வதை நீ செய்ய வேண்டும். அது அவசியமானது, பயனுள்ளது...”
“வாழ்க்கையில் பயனுள்ளவை, பயனில்லாதவை என்று எவற்றை எப்படிப் பிரிப்பது என்றே சில சமயங்களில் விளங்குவதில்லை ஐயா! பயனில்லாதவற்றைச் செய்த பின்பும்கூட அவை பயனில்லாதவை என்று புரிந்துகொள்வதற்கு ஒரு சந்தர்ப்பமாக நேர்ந்த பயன் அவற்றுக்கு இருப்பதாகப் படுகிறது. நீங்களும் நீலநாகரும் மூத்தவர்கள். என்னை நீங்கள் இப்போது என்ன செய்யச் சொல்லுகிறீர்களோ அதைச் செய்தவன் முடிவு எதுவாயிருந்தாலும் அதிலிருந்தும் ஏதாவதொரு அநுபவத்தின் ஞானம் எனக்குக் கிடைக்கத்தான் போகிறது. அதையும்தான் நான் இழப்பானேன்.”
“இப்போது உனக்குக் கிடைக்கப் போகிற அநுபவம் இணையற்றது. உன்னைப் பற்றியது. அதை அறிவதற்கு இங்கிருந்து தெற்கே முப்பது யோசனை தூரம் கடற் பயணம் செய்ய வேண்டும். நெருங்கி வந்து கொண்டிருக்கிற வைகாசி பெளர்ணமி தினத்தன்று நாம் மணிபல்லவத்திற்குப் போய்ச் சேர்ந்துவிட வேண்டும்.”
“என்னைப் பற்றி அறிய நான் எனக்குள்ளேயே அல்லவா பயணம் செய்ய வேண்டும்? என்னைப் புரிந்து கொள்ள நானே முயல வேண்டுமானால் என் மனத்தின் நினைவுகளில் நான் பயணம் செய்வது மட்டும் போதாதோ?” என்று கேட்டான் இளங்குமரன்.
“போதாது! நாளைக்கு நீ என்னோடு மணிபல்லவத்துக்குப் புறப்படுகிறாய். இதை நீலநாக மறவரிடமும் சொல்லிவிட்டேன். அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். தியானம் செய்வதற்கும், ஞானம் பெறுவதற்கும் நீ உன் மனத்துக்குள் நினைவுகளிலேயே பயணம் செய்யலாம். வாழ்க்கையை அறிந்துகொள்ள அப்படி நினைவுகளில் மட்டும் பயணம் செய்து பயனில்லை தம்பி?”
“பயனின்மையிலும், இன்னதிலே இன்ன காரணத்தாலே பயனில்லை என்று பயனில்லான்மயைப் புரிந்து கொள்ளுவதாகிய ஒரு பயன் உண்டு என்று அப்போதே சொன்னேனே?” என்று சொல்லி மறுபடியும் புன்முறுவல் புரிந்தான் இளங்குமரன். அப்போது நீலநாகர் உட்புறமிருந்து அந்தப் பக்கமாக வந்து சேர்ந்தார். அவரும் இந்தத் திட்டத்துக்கு உடன்பாடென்பது இளங்குமரனுக்கு அந்தச் சமயத்தில் புரிந்தது.
“இந்தப் பெரியவர் சொல்வதைக் கேட்டு இதன்படி வைசாக பெளர்ணமிக்குப் போய் வா தம்பி! இந்தப் பயணத்தில் உனக்கு நிறையப் பயனிருக்கிறது” என்று வளநாடுடையாரைக் காண்பித்து இளங்குமரனிடம் சொன்னார் நீலநாகர். தன் சம்மதத்துக்கு அறிகுறியாக இருவரையும் வணங்கிவிட்டு அப்பால் சென்றான் இளங்குமரன். நீலநாகர் மகிழ்ச்சியோடு சென்றார். பயண ஏற்பாடுகளைக் கவனிக்க வளநாடுடையாரும் சென்றார்.
பூம்புகாரில் மறுநாள் பொழுது புலர்ந்தபோது பூம்புகார் துறைமுகத்திலிருந்து அவர்களுடைய பயணமும் தொடங்கியது. மணிபல்லவத் தீவைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலால் ஓவியன் மணிமார்பனும் அவர் மனைவியும்கூட அவர்களோடு அதே கப்பலில் புறப்பட இருந்தார்கள். பெளத்த மடத்தைச் சேர்ந்த இந்திர விகாரத்துத் துறவிகளுக்கென்றே புத்த பூர்ணிமைக்கு மணிபல்லவ யாத்திரை செய்வதற்குத் தனியாகச் சென்றுகொண்டிருந்த வேறொரு கப்பலில் விசாகையும் அன்றைக்கே புறப்பட்டிருந்தாள்.
நீலநாகர், முல்லை, கதக்கண்ணன் ஆகியோர் கப்பல் துறைக்கு வழியனுப்ப வந்திருந்தார்கள். வளநாடுடையாரும் இளங்குமரனும் புறப்படுகிற நேரம் நெருங்க நெருங்க இறுகிய மனம் படைத்தவரான நீலநாகரும் அந்தப் பிரிவில் தம் உள்ளம் குழைந்து நெகிழ்வதை உணர்ந்தார். இதே இளங்குமரனைப் பல ஆண்டுகள் திருநாங்கூரில் விட்டிருந்தபோது இந்த வேதனை அவருக்கு இல்லை. இப்போது இருந்தாற் போலிருந்து அவருடைய மனத்தில் ஏதோ ஓர் உணர்வு தவித்து உருகியது.
இளங்குமரன் கப்பலில் ஏறுமுன் அருகிற் சென்று அவரை வணங்கினான். “போய் வா! ஆலமுற்றத்தில் உடம்பின் வலிமையைக் கற்றுத் தெரிந்துகொண்டாய். மணிபல்லவத்தில் போய் உன்னைத் தெரிந்துகொண்டு வா!” என்று அன்பு நெகிழ்ந்த குரலில் அவனிடம் கூறி வாழ்த்தினார் நீலநாகர்.
இளங்குமரன் கப்பலில் ஏறுமுன் கடைசி விநாடி வரை அவனுடைய கண்களிலிருந்து எதையோ தன்னுடைய கண்களால் முல்லை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தாள். அவள் எதிர்பார்த்தது அவளுக்குக் கிடைக்கவில்லை. கதக்கண்ணன் முதலியவர்களிடமெல்லாம் அருகில் சென்று விடை பெற்றுக் கொண்ட இளங்குமரன் முல்லைக்கு அருகில் வராமலே போய்க் கப்ப லில் ஏறிக்கொண்டு விட்டான். ஆனால் அதே நேரத்தில் அவள் சிறிதும் எதிர்பாராத விடைபெறுதல் ஒன்று அவளுக்குக் கிடைத்தது. ஓவியன் மணிமார்பனுடைய மனைவி முல்லையின் அருகில் வந்து அவளிடம் விடை பெற்றாள். ஆத்திரம் ஆத்திரமாக வந்தது முல்லைக்கு. வெளிப்பட்ட அந்த ஆத்திரத்தைக் காண்பித்து கொள்ளாமல் மணிமார்பனின் மனைவிக்கு வேண்டா வெறுப்பாய் விடை கொடுத்தாள் முல்லை.
காலையிளங் கதிரவனின் பட்டொளி பட்டுப் பாய் மரம் மின்னிடக் கப்பல் நகர்ந்தது.
இளங்காற்றும் இளவெயிலும் சேர்ந்து நடுக்கடலில் பிரயாணம் செய்வதற்கு உற்சாகமான சூழ்நிலையை உண்டாக்கியிருந்தன. தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட ஒவ்வொரு பெரிய திருப்பமும் பூம்புகாரில் ஏதாவது ஒர் இந்திர விழா முடிந்த பின்போ அல்லது தொடங்கிய போதோ ஏற்பட்டிருப்பதை இப்போது நினைவு கூர்ந்தான் இளங்குமரன். அவனுக்கு நினைவு தெரிந்த பருவத்துக்குப் பின்பு வந்த முதல் இந்திர விழாவின் போதுதான் அருட்செல்வ முனிவர் அவனை நீலநாக மறவருடைய படைக்கலச் சாலையில் சேர்த்தார். அதற்குப் பின்பு சில ஆண்டுகள் கழித்து அவன் படைக்கலப் பயிற்சியெல்லாம் முடித்துவிட்டு முரட்டு இளைஞனாகத் திரிந்து கொண்டிருந்த போதுதான் சித்திரா பெளர்ணமி இரவில் சம்பாதி வனத்தில் அவனை யாரோ கொலை செய்ய முயன்றார்கள். திருநாங்கூருக்குச் சென்றபின் அங்கு ஞானப்பசி தீர்த்துக் கொண்டிருந்த சமயத்தில் சில இந்திர விழாக்களைத் தன் அறிவு வேட்கையில் அவனே மறந்திருந்தான். அதன் பின்பு மீண்டும் அவன் பூம்புகாருக்குள் நுழைந்தபோது வந்த இந்த ஆண்டின் இந்திர விழாவோ அந்த மாபெரும் நகரத்துக்கு அவனை அறிவுச் செல்வனாக அறிமுகம் செய்து வைத்தது. அவனுடைய ஞானக்கொடி வெற்றிக் கொடியாக உயரவும் வாய்ப்பளித்தது. இந்திர விழா முடிந்ததும் இப்போது மற்றொரு திருப்பமாக மணிபல்லவ யாத்திரையும் வாய்த்தது.
இனி வரப்போகும் அடுத்த இந்திர விழாவைக் கற்பனை செய்துகொண்டே கதிரொளியில் மின்னிச் சரியும் அலைகளைப் பார்த்தான் இளங்குமரன். ஓவியனும் வளநாடுடையாரும் கப்பலில் அவன் அருகில் வந்து நின்றுகொண்டிருந்தார்கள். இளங்குமரன் தன்னுடைய நினைவுகள் கலைந்து அவர்கள் பக்கம் திரும்பினான்.
“புறப்படும்போது நீ முல்லையிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை போல் இருக்கிறதே தம்பி!” என்று அந்த விநாடிவரை அவனிடம் கேட்பதற்குத் தவித்துக் கொண்டே கேட்கவும் கூசி அடக்கிக் கொண்டிருந்த ஒரு கேள்வியைத் துணிந்து கேட்டார் வளநாடுடையார்.
“ஐயா! நீங்கள் கூறுவது வியப்புக்குரிய செய்தியாய் இருக்கிறது. நான் பேசாமல் இருப்பதற்குக் காரணம் ஒன்றும் இல்லை. என்னுடைய மெளனத்தை முல்லையோ நீங்களோ உங்கள்மேல் எனக்கிருக்கும் வெறுப்பை நான் காட்டுவதாக எடுத்துக்கொண்டு வேதனைப்படக் கூடாது. நான் முல்லையிடம் பேசியிருந்தால் அந்தப் பேச்சுக்கு எப்படித் தனியான அர்த்தம் இருக்க முடியாதோ அப்படியே பேசாமலிருந்ததற்கும் தனியான அர்த்தம் எதுவுமில்லை.”
“நீ இப்படிச் சொல்லிப் பதில் பேச முடியாமல் என் வாயை அடக்கிவிடலாம். ஆனால் என்னுடைய பெண் நீ சொல்கிறாற்போல் நினைத்துக்கொண்டு போகவில்லை. நாம் புறப்படுகிற போது முல்லையின் முகம் எப்படி இருந்ததென்று. நான் பார்த்தேன். நீ பார்க்கவில்லை. ஒரு வேளை நீயும் பார்த்தி ருந்தால் அவள் மனநிலை உனக்குத் தெரிந்திருக்கும்.”
அதைக் கேட்டுத் தன்னையறியாமல் தான் யாரையோ புண்படுத்தியிருப்பதுபோல உணர்ந்து வருந்தினான் இளங்குமரன். இந்தப் புதிய வருத்தத்தோடு அவன் மறுபடி கரையைப் பார்க்க முயன்றபோது கரை வெகு தொலைவில் மங்கியிருந்தது. அதோடு சேர்ந்து யாருடைய முகமோ அப்படியே மங்கித் தோன்றுவது போலவும் இருந்தது. நெருங்கிப் பழகிய பிறருடைய துக்கங்களைக் கரையிலேயே விட்டுவிட்டுத் தான் மட்டும் இறங்கி முன்னேறுவதுதான் வாழ்க்கைப் பயணமோ? என்று எண்ணியபோது அந்த எண்ணத்தின் வடிவிலே இளங்குமரனின் மனச்சான்றே அவனைக் குத்திக் காட்டியது. பூம்புகாரின் கரைக்கும் தனக்கும் நடுவிலுள்ள தொலைவிலே தான் செய்த பயணத்தின் எல்லையெல்லாம் தன்னால் தனக்காகக் கரையில் விடப்பட்ட துக்கங்களின் பரந்த அளவாகத் தோன்றி யது அவனுக்கு.
“கடவுளே! நான் எந்தவிதமான நோக்கமும் இல்லாமல் மெளனமாக இருந்து யாருடைய மனத்தையோ துன்புறுத்தியிருக்கிறேன்! இப்படி என்னை அறியாமல் யாரையும் துன்புறுத்தும் சந்தர்ப்பங்கள் கூட நான் பயணம் செய்யும் வாழ்க்கை வழியில் இனிமேல் நேராமலிருக்கட்டும்...” என்று இரு கண்களையும் மூடிச் சில விநாடிகள் இறைவனை எண்ணினான் இளங்குமரன். பயணம் தொடர்ந்தது. இப்போது கரை முற்றிலும் மங்கித் தொலைவில் நீண்ட பச்சைக் கோடாகச் சிறுத்துப்பின் தங்கிவிட்டது.
இளங்குமரன் என்னும் அழகிய அறிவு வாழ்க்கை தன்னுடைய வாழ்வு நாடகத்தின் மூன்றாவது பருவத்திலிருந்து அடுத்த மாறுதலுக்குப் புறப்பட்டது. கடலில் அலைகள் தாளமிட்டன. கரையில் முல்லை தன்னோடு உடனிருப்பவர்களுக்குத் தெரியாமல் தன் கண்ணிரை மறைத்து விடுவதற்கு அரிய முயற்சி செய்து கொண்டிருந்தாள். அவனுடைய வாழ்க்கைப் பயணத்திற்குத் தன்னுடைய கண்ணிரால் விடை கொடுத்தாள் அவள்.
பொருள்களில் பொன்னுக்கு மட்டும் தனித்தன்மை ஒன்றுண்டு. தன்னுடைய பிரகாசம் பிறரைச் சுடாமல் தனக்குப் பெருமையும் பிறர்க்கு ஒளியும் தருகிற ஒரே ஒரு திரவியம் தங்கம். தருக்க நூல்களில் பொருள்களுக்கு இலட்சணம் சொல்லும்போது தங்கத்தை நெருப்பு என்றே சொல்கிறார்கள். தான் ஒளிமயமாக இருத்தல், தன்னை அணுக முடியாமை, தன்னிடமிருந்து ஒளி பெறுதல், தான் சார்ந்த இடத்தைத் தூயதாக்குதல் - ஆகிய இவை நான்கும் தங்கத்துக்கும், நெருப்புக்கும் ஒத்த குணங்கள். நெருப்பு என்பது சுடுகின்ற பொன். பொன் என்பது சுடாத நெருப்பு. வெதும்பி வாடி இளக இளகத் தம் ஒளி வளருதல் என்பது இரண்டுக்கும் பொதுத் தன்மை. சுடுவதும், சுடாமலிருப்பதும்தான் நெருப்புக்கும் பொன்னுக்குமுள்ள ஒரே வேற்றுமை.
தொட்டால் சுடுகின்றது என்ற ஒரே காரணத்தால் பொன்னைவிடப் பிரகாசமுள்ள நெருப்புக்கு மதிப்பும் விலையும் இல்லை. சுடாதது என்ற ஒரே காரணத்திற்காக நெருப்பினும் குறைந்து குளிர்ந்த பிரகாசமுள்ள பொன்னுக்கு மதிப்பு விலை எல்லாம் உண்டு. பொன்னுக்கும் மணிக்கும் முத்துக்கும் வைர வைடுரியங்களுக்கும் - அவற்றைச் சார்ந்துள்ள பிரகாசத்தின் காரணமாகத்தான் மதிப்பு என்றால் பிரகாசத்தையே மூலவடிவமாகக் கொண்ட அக்கினிக்கு இவற்றைவிட அதிகமான மதிப்பு இருக்க வேண்டும். நெருப்பாகிய சுடுகின்ற பொன்னுக்கு விலை இல்லை. பொன்னாகிய சுடாத நெருப்புக்கு விலை உண்டு. நிலம், நீர், தீ, காற்று, காலம், திக்கு, ஆன்மா, மனம் என்று உலகத்துப் பொருள்களை ஒன்பது வகையாகப் பிரித்திருக்கிறது தருக்கம். இந்த ஒன்பது வகைகளில் தங்கம் என்னும் ஒளிமிக்க உலோகம் எவ்வகைக்குள் அடங்குமென்று ஆராய்ந்தால் நெருப்பில் அடங்கும். நெருப்பாய் அடங்கும். நெருப்பினாலே அடங்கும்.
என்றும் தான் ஒளிமயமாக இருத்தல், தன்னை அணுகுவதற்கு அருமை, தன்னிடமிருந்து பிறர் ஒளி பெறுதல், தான் சார்ந்த இடத்தைத் தன்னுடைய சார்பால் தூயதாக்குதல் - ஆகிய பொன்னின் குணங் களோடு தன் கண்களின் நோக்கத்தாலேயே தீமைகளை எரிக்கும் சுடரின் குணத்தையும் சேர்த்துப் பெற்றிருக்கிற காரணத்தினால் இந்தக் கதையின் நாயகனாகிய இளங்குமரனின் நான்காம் பருவத்து வாழ்வைப் பொற்சுடராகவே உருவகம் செய்யலாம் என்று தோன்றுகிறது. பொன்னுக்கு விலையும் மதிப்பும் எப்போது ஏற்பட்டிருக்கும்? யாரால் ஏற்படுத்தப் பட்டிருக்கும்: பொன்னின் ஒளியில் மதிப்பு வைக்கத் தெரிந்து கொண்ட ஒரு முதல் மனிதனும் அதைத் தொடர்ந்து அதன்மேல் அதே மதிப்பை வைக்கப் பழகி விட்ட முடிவற்ற பல மனிதர்களும் பொன்னைப் பற்றி எண்ணி எண்ணிச் சுமந்துவிட்ட எண்ணத்தின் கனம்தான் பொன்னின் கனம், பொன்னின் விலை! இவற்றை நீக்கி விட்டுப் பார்த்தால் பொன்னுக்கு விலை இல்லைதான்.
“அப்படியானால் பொன்னை மதித்து மதித்துப் பொன்னின் ஒளிக்கும் அடிமையாகி இருண்டு விட்ட மானிட இனத்தின் கண்களுக்குப் பொன்னை விடப் பிரகாசமான எதுவும் இன்றுவரை படவே இல்லையா?”
“இல்லை.”
“பொன்னைவிடப் பிரகாசமான ஒரு பொருளிலிருந்துதான் பொன்னே பிறந்தது!”
“அப்படியா? பொன்னுக்கும் முன் மூலமான அந்தப் பொருள் எது என்று தெரிந்தால் அதைப் பொன்னைக் காட்டிலும் அதிகமாக மதிக்கத் தொடங்கி விடலாமே?”
“இனிமேல்தான் தொடங்க வேண்டும் என்பதில்லை! அதை நாம் மதிக்கத் தொடங்கிய போதுதான் நமது மறைகளின் முதற் குரல் திசைகளின் செவிகளில் முதற் கேள்வியாகி ஒலித்தது. அதை நாம் மதிக்கத் தொடங்கிய போது தான் நமது வேள்விச் சாலையில் அது முதல் தெய்வமாய் வளர்ந்து எரிந்து கொழுந்து விட்டது. அதை நாம் மதிக்கத் தொடங்கிய போது தான் நம்முடைய மதிப்பு உண்மையான ஒளியைப் புரிந்து கொண்டு மதித்துப் போற்றியது.”
“அதற்குப் பெயர்?”
“சுடர்.”
“அந்தச் சுடர் பொன்னின் ஒளியிலும் இருக்கிறது அல்லவா?”
“இருக்கிறது! ஆனால் நெருப்பின் சுடரில் பொன்னிலிருப்பதைக் காட்டிலும் அதிகமான ஒளி இருக்கிறது. இயற்கைப் பொருள்களில் ஒன்றாகிய நெருப்பின் ஓர் ஒளிக்கீற்றுதான் தங்கத்திலும் தங்கமாக இருக்கிறது. தங்கமில்லாமலும் உலகில் ஒளி உண்டு. உலகில் ஒளி இல்லாவிட்டால் தங்கமே இல்லை. ஒளி இன்றேல் தங்கத்தை இப்போது புரிந்து கொண்டிருக்கிறாற் போலத் தங்கமாக மதித்துப் புரிந்து கொண்டிருக்க முடியாது.”
“தங்கத்திலிருந்து சுடரை மட்டும் பிரித்து விட்டால்?”
“சுடரிழந்த தங்கம் அப்படி அதை இழந்து விட்ட காரணத்தால் மண்ணாயிருக்கும்.”
“அதாவது மண்ணில் சுடர் கலவாது தங்கம் இல்லை! தங்கம் கலவாத சுடர் உண்டு.”
“தங்கம் மண்ணாயிருந்தால் அதைத் தங்கமாக மதிக்கக் காரணமாயிருக்கும் ஒளியை இதில் காண முடியாது. மண் கலவாத தனி ஒளியாயிருந்தால் அதுவே சுடும்! தங்கம் ஒளியாயிருக்கிறது. சுடவும் இல்லை. அதனால்தான் சுடுகின்ற ஒளியைக் காட்டிலும் தங்கமாகிய சுடாத ஒளிக்கு அதிக மதிப்பு.”
இந்தக் கதையின் தலைவனும், திருநாங்கூரடிகள் உருவாக்கிய காவிய நாயகனுமாகிய இளங்குமரன் ஞானப் பசி தீர்ந்தும் தீர்த்தும் வெற்றிக் கொடி நாட்டிய பின் மணிபல்லவத்துக்குப் புறப்படுகிற சமயத்தில் பொன்னாகவும் இருந்தான், சுடராகவும் இருந்தான். முழுமையான பொற்சுடராகவே இருந்தான்.
தான் ஒளிமயமாக இருத்தல், தன்னை அணுகுவதற்கு அருமை, தன்னிடமிருந்து பிறர் ஒளி பெறுதல், தான் சார்ந்த இடத்தைத் தன்னுடைய சார்பால் தூயதாக்குதல் ஆகிய பொன்னின் குணங்களைப் பெற்றுத் தானே பொன்னாகி ஒளிரும் ஒருவன் வேறு பொன்னின் மேல் ஆசைப்பட என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை தான்! அவன் எல்லா ஆசைகளையும் உதிர்த்துவிட்டு நின்றபோது எல்லாருடைய ஆசைகளும் அவனைச் சூழ்ந்தன. இளங்குமரன் என்ற அந்தப் பொற்சுடருக்காக முல்லை ஏங்கினாள். சுரமஞ்சரி தவித்தாள். தன்னுடைய பெருமாளிகை நிறையக் குவிந்திருந்த அவ்வளவு பொன்னிலும் காணாத சுடரை இளங் குமரனுடைய கண்களில் கண்டு தவித்துக் கொண்டிருந்தாள் அந்தப் பட்டினப்பாக்கத்துப் பெண்.
தான் சார்ந்த இடங்களை ஒளியுறச் செய்யும் பொன்னைப் போல் அவர்கள் இருவருடைய ஆசை யிலும் தான் இருந்து - தன்னுடைய ஆசையில் அவர்கள் இருவரும் இல்லாமல் - அவர்களுக்கு ஒளி தந்து கொண்டிருந்தான் இளங்குமரன்.
யாரை அல்லது எதை ஆசைப்படுகிறோமோ அவர் அல்லது அது பரிசுத்தமாக இருந்தால் அந்த ஆசை விளைந்து வளர இடமாக இருப்பதன் காரணமாகவே அவை நிகழ்கின்ற மனத்துக்கும் முகத்துக்கும் அழகும் ஒளியும் உண்டாகும்! தெய்வத்தை ஆசைப்படுகிற பக்தனின் முகம், குழந்தையை ஆசைப்படுகிற தாயின் முகம், மெய்யான மாணவனை ஆசைப்படுகிற குருவின் முகம், இவைகளுக்கு வரும் அழகைப்போல் இளங்குமரனை ஆசைப்பட்டு ஆசைப்பட்டு அவனுடைய ஒளியையும் தங்களுடைய ஒளியையும் சேர்த்தே வளர்த்துக் கொண்டிருந்தார்கள் இவர்கள்.
உலகத்தில் பொன்னுக்குப் பொன்னாசை இல்லை. இளங்குமரனும் அப்படிப் பொற்சுடராக இருந்தான். தன்னுடைய மிகுந்த ஒளியினால் பிறருடைய ஆசைகளையும் தன்னையறியாமலே எரித்துச் சுத்தமாக்கிக் கொண்டிருந்தான் அவன். பூம்புகார்த் துறைமுகத்திலிருந்து கப்பல் நகர்ந்தபோது தன்னையறியாமலே தான் முல்லையை மனம் வெதும்பச் செய்திருப்பதை உணர்ந்த சில கணங்களில் மட்டும் சுடுகின்ற நெருப் பாகவும் தான் இருந்து விட்டது போல் தோன்றியது இளங்குமரனுக்கு. அதற்காகத் தனக்குள் வருந்தினான் அவன்.
‘வாழ்க்கையில் பிறரோடு பழகும்போது கோடைக் காலத்து வெயில்போல் பழகினாலும் துன்பம்; குளிர் காலத்துச் சுனை நீர் போலப் பழகினாலும் துன்பம். கோடைக் காலத்தில் குளிர்ந்த நீர் போலவும், குளிர் காலத்தில் நல்ல வெயில் போலவும், பொருந்திச் சூழ்ந்துள்ளவர்கள் மனம் வெதும்பாமலும் ஒருகால் தன் மனத்தைச் சூழ்ந்துள்ளவர்கள் வெதும்பச் செய்து விட்டால் அதைத் தாங்கிக்கொண்டு மறந்தும் - வாழத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்...’ என்று பொது வாழ்வுக்கு வேண்டிய ஒப்புரவு பற்றித் திருநாங்கூர் அடிகள் பலமுறை கூறியிருந்த பழைய அறிவுரையை எண்ணிக்கொண்டான் இளங்குமரன்.
முரடனாயிருந்து ஒளியற்றவனாகத் தோன்றினா லும் பிறர் வெறுப்பையும் - தூய்மையோடு பொற்சுடராயிருந்து ஒளிபரப்பினால் - பிறருடைய ஆசைகளையும், மோகங்களையும் எதிர்பார்த்து விலக்கிச் சுடாத நெருப்பாகவும் சுடுகின்ற நெருப்பாகவும் மாறிமாறி வாழ நேரும் விந்தையை எண்ணியபடியே கப்பலின் மேல் தளத்திலிருந்து வானத்தைப் பார்த்தான் இளங்குமரன். அவனுடைய முகத்திலும், தோளிலும், மார்பிலும் காலை வெயில் பட்டது. அவை தங்கங்களாகிய அங்கங்களாய் மின்னிப் பொற்சுடர் பரப்பின. உலகப் பொருள் யாவற்றுக்கும் ஒளி தரும் கதிரவனை வணங்கினான் ஒளிச் செல்வனாகிய இளங்குமரன்.
கடலில் தென்திசை நோக்கி விரைந்து கொண்டிருந்த அதே கப்பலில் இளங்குமரன் நின்றுகொண்டிருந்த அதே மேல் தளத்தில் பாய்மரத்தின் மறு பக்கமாக ஓவியன் மணிமார்பனும், அவன் மனைவியும் நின்றுகொண்டிருந்தார்கள். இளங்குமரன் சிந்தனையில் ஆழ்ந்த மனத்தினனாக அமைதியாய் நின்று கொண்டிருந்ததனால் அவன் அங்கு இருப்பதையே மறந்து கீழே இறங்கிப்போய் விட்டதாக எண்ணிக்கொண்டு மணிமார்பனின் மனைவி தன் மனத்தில் இருந்த சில கருத்துக்களைக் கணவனிடம் பேசத் தொடங்கினாள்:
“என்ன இருந்தாலும் உங்கள் நண்பருக்கு இந்தக் கல்மனம் ஆகாது. துறைமுகத்திலிருந்து புறப்பட்டுக் கப்பலில் ஏறிக்கொள்ளும்போது அவர் வேண்டு மென்றே அந்தப் பெண்ணைப் புறக்கணித்ததை நான் கவனித்தேன். அவர் விரும்பியிருந்தால் ‘போய் வருகிறேன் முல்லை!’ என்று அந்தப் பெண்ணிடமும் இரண்டு வார்த்தைகள் பேசியிருக்கலாமே.”
“பெண்ணே! முதலில் நீ இளங்குமரனை என்னுடைய நண்பர் என்று சொல்வதை இந்தக் கணமே மாற்றிக் கொள்ள வேண்டும். நான் அவரை என்னுடைய நண்பராக நினைத்துக் கொண்டிருந்த காலமும் உண்டு. இப்போது அப்படி நினைப்பதற்கே பயமாயிருக்கிறது எனக்கு. சிலவற்றிற்குக் குருவாகவும், இன்னும் சிலவற்றுக்குத் தெய்வமாகவும் இப்போது அந்த மனிதரை நான் பாவிக்கிறேன். அவரிடம் குற்றம் இருப்பதாக நினைப்பதற்கே நான் பயப்படுகிறேன். நீயோ குற்றம் இருப்பதாக வாய்திறந்து சொல்வதற்கே துணிகிறாய்! வீரசோழிய வளநாடுடையார் மகள் முல்லையிடம் அவர் பேசாமலே வந்ததற்கு நீயாகவே விளைவு கற்பிக்கிறாய்! எல்லாவற்றிலுமே குணம்தான் நிரம்பியிருக்கிறதென்று முற்றிலும் குணமாகவே பாவிப்பது எப்படிக் கெடுதலோ, அப்படியே முற்றிலும் குற்றமாவே பாவிப்பதும் கெடுதல். அவர் அந்தப் பெண்ணிடம் பேசாமலிருந்தது குற்றமென்று நீ எப்படிச் சொல்ல முடியும்? மெளனத்துக்குப் பொருள் விரோதமென்று கொண்டால், நான் உன்னிடம் பேசாமல் இருந்த சமயங்களில் எல்லாம் கூட உன்னோடு விரோதமாயிருந்திருக்கிறேன் என்று நீ நினைக்கலாம்.”
“நான் அப்படி நினைத்தால் தவறென்ன? கலகலப்பாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தவர் மெளனமாகி விட்டால் அந்த மெளனத்திற்குக் காரணம் இல்லாமற் போகாது. பேச்சுக்குக் காரணமும், அர்த்தமும் இருப்பதுபோல் பேசாமைக்குக் காரணம், அர்த்தம் எல்லாம் இருந்தே ஆக வேண்டும்.”
“பேச்சுக்கும், பேசாமைக்கும் ஆகிய இரண்டுக்குமே அர்த்தம் இல்லை என்று அவரே சற்றுமுன் வளநாடுடையாரிடம் கூறியதைக் கேட்கவில்லையோ நீ? மெளனத்திற்கு ஒரே அர்த்தம் மெளனமாயிருப்பது என்பதுதான்...”
“அந்தப் பெண் அவருடைய மெளனத்தை அப்படி எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லையே! கப்பல் புறப்படுவதற்கு முன் நான் அவளிடம் விடை பெறுவதற்குச் சென்றேன். அப்போது அவள் எனக்கு விடை கொடுப்பதில் அசிரத்தையும், அவர் தன்னிடம் விடை பெறுவதற்கு வரமாட்டாரா என்று கவனிப்பதில் சிரத்தையும் காண்பித்தபடி நின்றிருந்தாள். அவளுடைய கண்களிலும் முகத்திலும் நம்பிக்கை அழிந்து - அது அழிந்த இடத்தில் ஏமாற்றம் குடிகொள்ளத் தொடங்கியிருந்தது.”
“அப்படியா? நீ சொல்வதைக் கேட்டால் முல்லை அப்போது நின்ற நிலை சித்திரத்திற்கு நல்ல காட்சியாக அமைந்திருக்கும் போல் தோன்றுகிறதே. ஒருணர்வு அழிந்து இன்னோர் உணர்வு பிறக்கின்ற காலத்து முகபாவத்தை அப்படியே சித்தரிக்க முடிந்தால் அது ஒவியத் துறையில் ஈடுபட்டிருப்பவனுக்கு மாபெரும் வெற்றி பெண்ணே! இருள் அழிந்து ஒளி பிறக்கிற நேரத்தையும், ஒளி அழிந்து இருள் பிறக்கிற நேரத்தையும் இயற்கை வரைந்து காட்டுகிறாற்போல் முழுமையாய் வரைந்து காட்டுகிற ஓவியனோ, கவிஞனோ உலகத்தில் இதுவரை ஏற்படவில்லை!”
“இந்தக் கலைஞர்களே இப்படித்தான். பிறருடைய துக்கத்திலிருந்து தேடி தங்கள் கலையைப் பிறப்பிக்கிறார்கள். ‘அவர் தன்னிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லிக் கொள்ளாமல் புறக்கணித்தது போலப் போகிறாரே’ என்று அந்தப் பெண் முல்லை துயரக் கோலத்தில் நின்றாள் என்று சொன்னால், அந்தக் கோலம் சித்திரத்திற்கு நன்றாக இருக்குமே என்று வாய் கூசாமல் நீங்கள் பதில் சொல்லுகிறீர்களே? இப்போது நீங்கள் கூறியதை அந்தப் பெண்ணின் தந்தை கேட்டால் எவ்வளவு வருத்தப்படுவார்!”
“பெண்ணே! இப்படி நினைப்பதாயிருந்தால் நீ என்னைப்போல் ஒரு கலைஞனுக்கு மனைவியாக வாய்த்திருக்கக் கூடாது. ஒவ்வொரு கலைஞனுடைய மனமும் பேசாத யாழ். பிறருடைய துன்பங்களாகிய இளைத்த கைகளின் மெலிந்த விரல்கள் அந்த யாழை வருடும்போதுதான் அது பேசுகிறது. அதில் கலைப் பண்கள் பிறக்கின்றன. திருமாலும், திருமகளும், இராமனும், சீதையுமாக மண்ணில் பிறந்து மனிதர்களாக வாழ்ந்து மனிதர்களின் துன்பத்தை மனிதர்களுக்கே உரிய குறைந்த பலத்தோடு தாங்கியிராவிட்டால் எந்தக் கவியின் கையாவது இராமாயணம் எழுதத் துடித்திருக்குமா பெண்ணே?”
“சிறிது காலமாக உங்கள் நண்பரோடு இருந்து அவர் பேசிய பேச்சுக்களையும், புரிந்த சமய வாதங்களையும் கேட்டாலும் கேட்டீர்கள் - இப்போது நீங்களே அவரைப்போலப் பேசத் தொடங்கிவிட்டீர்கள்.”
“என்ன செய்வது? கண்ணாடி எல்லா உருவத்தையும் தனக்குள் வாங்கிக் காட்டுகிறாற் போலப் பரிசுத்தமானவர்கள் தங்களோடு பழகுகிறவர்களை யெல்லாம் சார்ந்து தன் வண்ணமாகச் செய்து விடுகிறார்கள்!”
இதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் தலை குனிந்தாள் மணிமார்பனின் மனைவி.
“பதுமை! இதோ இப்படி என்னைப் பார்! உனக்கு ஒரு பெரிய உண்மையைச் சொல்லித் தருகிறேன்“ என்று தன் மனைவியை அவளுடைய அழகிய பெயரைச் சொல்லி அழைத்தான் மணிமார்பன். பிடரியில் வேர்க் கும்போது எங்கிருந்தோ தற்செயலாகக் குளிர்ச்சியை வீசிக் கொண்டு சில்லென்று பாய்ந்து வந்த தென்றலைப் போல அவன் தன்னைப் பெயர் சொல்லி அழைத்த மகிழ்ச்சியில் குழைந்து நிமிர்ந்து பார்த்தாள் பதுமை. ஓவியன் மணிமார்பன் சிரித்துக்கொண்டே அவளை நோக்கிச் சொன்னான்:
“பதுமை! நீங்கள் பெண்கள். எந்த விஷயத்தையும் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை தான் உங்களால் நினைத்துப் பார்க்க முடியும். அதற்கு அப்பால் நினைக்க முடியாது. அல்லது நினைக்க விரும்ப மாட்டீர்கள். எல்லாப் பூக்களும் மென்மை என்பது பொதுக் குணமாகி நிற்பது போல் பெண்களாகிய நீங்கள் அன்பை மட்டும் மையமாக வைத்துக் கொண்டே யாவற்றையும் சிந்திக்கிறீர்கள். ஒற்றைத் தூணில் நிற்கிற மண்டபத்துக்குப் பலம் குறைவு. தூணுக்கும் சுமை அதிகம்.”
“எப்படியோ பேச்சைத் தொடங்கி எப்படியோ வளர்த்து முடிவில் பெண்களெல்லாம் உணர்ச்சி இல்லாத குத்துக்கற்கள் என்று முடிக்கிறீர்களே; இது உங்களுக்கே நன்றாயிருக்கிறதா?”
“அவசரப்படாதே பதுமை! நான் சொல்ல வந்தது வேறு. நீ புரிந்து கொண்டது வேறு. கோபமோ தாபமோ, ஊடலோ, உவகையோ, எல்லா உணர்ச்சிகளையும் அன்பு என்ற ஒரே அடிப்படையில்தான் அடைகிறீர்கள் பெண்களாகிய நீங்கள். எல்லா விளைவுகளுக்கும் ஒரே காரணத்தைத் தவிர வேறு மாற்றமில்லாத வாழ்வு விரைவில் சலித்துப் போய்விடும் என்பார்கள். ஆனால் உலகத்துப் பெண் குலத்துக்கு அந்த அன்பு என்ற ஒரே காரணம் இந்த யுகம் வரை சிறிதும் சலித்ததாக எனக்குத் தெரியவில்லை. நேர் மாறாக அந்த ஒரே காரணத்தில் இன்னும் உறுதியாகக் காலூன்றிக் கொண்டுதான் நிற்க முயல்கிறீர்கள் நீங்கள். பல விளைவுகளுக்குக் காரணமாயிருக்கிற ஒரு காரணம் பல காரணங்களுக்கும் விளை வாயிருப்பது நியாயந்தான். வீரசோழிய வளநாடுடையார் மகள் முல்லை ‘இளங்குமரன் தன்னிடம் சொல்லி விடைபெற வேண்டும்’ என்று எதிர்பார்த்ததற்கும் அவளுடைய அன்புதான் காரணம். அவர் அப்படிச் சொல்லி விடைபெறாத போது அவளுடைய முகத்தில் நம்பிக்கை அழித்து ஏமாற்றம் பிறந்ததற்கும் அந்த அன்பு தான் காரணம். மண்ணுலகத்தில் உயிரை வளர்க்கும் அமுதம் இல்லை என்றார்கள் விவரம் தெரியாதவர்கள். மண்ணுலகத்தில்தான் மெய்யான அமுதம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது பதுமை : இந்த உலகத்தில் அன்புதான் அமுதம் என்று வைத்துக் கொள்ளலாம். அந்த அமுதத்தை வைத்துக் கொண்டே உயிர் உறவுகளை நீண்ட காலத்துக்கு அழியாமல் வளர்த்துக் கொண்டு போகலாம்.”
“ஆனால் சலிப்பு ஏற்படாத அந்தக் காரியத்தைப் பெண்களாகிய நாங்கள்தான் செய்யமுடியும் என்று ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லவா! குணங்கள் எல்லாம் தாய்மையிலிருந்து பிறக்கின்றன என்று நீங்கள் ஒப்புக் கொள்வீர்களோ? உங்கள் கலைக்குத் தொடர்புடைய உதாரணத்தையே சொல்லுகிறேன். நிறங்கள் நிறமில் லாமையிலிருந்து பிறக்கின்றன. ஏழு நிறங்களிலும் அடங்காதது என்ன நிறம்?”
“சூன்ய நிறம் என்று வைத்துக் கொள்ளேன்.”
“சூன்ய நிறம் என்று நீங்கள் சொல்கிற அந்த நிறமின்மையிலிருந்து எல்லா நிறங்களும் கிளைக்க முடியுமானால் எங்கள் அன்பு என்ற ஒரே காரணத்திலிருந்து எல்லா அன்புகளும் ஏன் விளைய முடியாது?”
“விளைய முடியும் என்று நான் ஒப்புக்கொள்கிறேன் பதுமை! என் நிலை வேறு, இளங்குமானுடைய நிலை வேறு. நான் அன்பை எதிர்பார்க்கிறவன். அன்பு செலுத்துகிறவன். அவர் தம் அன்பைப் பலர் எதிர் பார்த்து ஏங்கும்படி செய்கிறவர். அருளாளர், அன்பு செய்கிறவனுக்கும் அருள் செய்கிறவனுக்கும் வேற்றுமை உண்டு. குணங்களிலே அன்புதான் தாய்க்குணம். அருட்குணம் அன்பினின்று தோன்றிய குழந்தை. தொடர்புடையவர்கள் மேல் மட்டும் நெகிழ்கிற உறவுதான் அன்பு. தொடர்பு, தொடர்பின்மை எதையும் கருதாது எல்லா உயிர்கள் மேலும் செல்கிற பரந்த இரக்கம்தான் அருள். பரந்த எல்லையில் நின்று பார்க்கிற ஒருவரைக் குறுகிய எல்லைக்குக் கொண்டுவர முயல்வது நல்லதுதானா என்று நினைத்துப்பார்! முல்லை இளங்குமரனுடைய அன்பைத் தன்னுடைய எல்லைக்குக் கொண்டு வந்து விட முயல்கிறாள். அதே முயற்சியைச் சுரமஞ்சரியும் செய்கிறாள். பரந்த அருளாளராக உயர்ந்து விட்டவரைத் தங்களுடைய அன்பின் குறுகிய எல்லைக்குள் சிறை செய்துவிட முயல்கிற இவர்கள் இருவரில் யாருக்கு வெற்றி கிடைக்குமென்றும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை பதுமை!”
“சுரமஞ்சரி என்பது யார்? உங்களுக்கு மணிமாலை பரிசளித்ததாகக் சொல்வீர்களே? அந்தப் பெண்ணா?”
“அவளேதான்! அவளால்தான் இளங்குமரன் என்னும் இந்த அற்புத மனிதரை நான் என்னுடைய வாழ்க்கை வீதியில் சந்திக்க நேர்ந்தது. இந்திர விழாக் கூட்டத்தில் துாரிகையும் கையுமாகத் திரிந்து கொண்டிருந்த என்னை கூப்பிட்டு நாளங்காடியில் அவருடைய ஓவியத்தை வரைந்து தரச் சொல்லிக் கேட்டது அவள் தான். அவருடைய அழகிய சித்திரத்தை என்னுடைய கைகளால் வரையத் தொடங்கிய நாளிலிருந்தே அவருடைய குணச்சித்திரத்தை என்னுடைய மனம் வரைந்து கொள்ளத் தொடங்கி விட்டது. செல்வத்தையும் சுகபோக ஆடம்பரங்களையும் காட்டி அவற்றால் அவரைக் கவர முடியாது. செல்வத்தின் மதிப்பு மிகுதி யானால் அதைப் புறக்கணிக்கிற மனத்தின் மதிப்பு அதைவிட அதிகமென்று நினைக்கிறவர் அவர். மதிப்பு நிறைந்த பொருளைக்கூட மதிக்காமல் நிமிர்ந்து நிற்கிறவருடைய சொந்த மதிப்பை எப்படி அளக்க முடியும்? பதுமை! அவருடைய மதிப்பை அளக்க முடியாமல் தான் அந்தப் பட்டினப் பாக்கத்துப் பெண் அவருக்கு மனம் தோற்றாள்.”
“பிறருடைய தோல்வியை ஒப்புக்கொண்டு தான் பெருமிதம் அடைகிறவன் வீரன். அவரோ, சுரமஞ்சரி தனக்குத் தோற்று விட்டாள் என்பதை ஒப்பி அவளுடைய தோல்வியைத் தம்முடைய வெற்றியாகக் கூடக் கொண்டாடாமல் அலட்சியம் செய்கிறார். ‘தன் தோல்வியை - தன் மனத்தின் நெகிழ்ச்சியை அவர் அங்கீகாரம் செய்துகொள்ள வேண்டும்’ - என்பது தான் இப்போது சுரமஞ்சரியின் தவிப்பு. அவரோ நாளங்காடியில் பலப்பல அறிஞர்களின் தோல்வியை ஒப்புக் கொள்கிறார். பிறருடைய அறிவின் தோல்வியை ஒப்புக் கொள்கிறவர் பிறருடைய அன்பின் தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்குகிறார், பதுமை!”
“விசித்திரமான உண்மையாயிருக்கிறதே?”
“உண்மை விசித்திரமானதாயில்லை! விசித்திரம் தான் உண்மையாயிருக்கிறது” என்று மூன்றாவது குரல் ஒன்று ஒலித்ததைக் கேட்டவுடன் மணிமார்பனும் அவன் மனைவி பதுமையும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். பாய் மரத்தின் மறுபுறத்திலிருந்து சிரித்தபடியே இளங்குமரன் அவர்களுக்கு முன்னால் தோன்றினான்.
அவர் அங்கே இல்லை என்று நினைத்துக் கொண்டு தான் பேசியவற்றை யெல்லாம் அவரும் கேட்டிருக்கிறார் என்று தனக்கே புரிந்துவிட்ட அந்த விநாடியில் மணிமார்பனுடைய மனைவி சொல்லிலடங்காத அளவு நாணமும், கூச்சமும், அடைந்தாள். அவளுடைய கண்கள் இளங்குமரனை நேருக்கு நேர் எதிரே பார்ப்பதற்குக் கூசின. மலையுச்சியைக் கடந்து மேலே பறந்துவிடலாம் என்று முயன்ற சிட்டுக்குருவி அந்த மலையுச்சியின் உயரம் மேலும் மேலும் உயர்ந்து கொண்டு போவதைக் கண்டு அயர்ந்தாற் போலிருந்தது பதுமையின் நிலை.
“சகோதரீ! உங்கள் பேருக்கு ஏற்றாற் போல் நீங்கள் பேசாமலே இருக்கிறீர்களே என்று நேற்று வரை சிந்தித்துக் கொண்டிருந்தேன். இன்று வட்டியம் முதலுமாகச் சேர்த்து உங்கள் கணவரிடம் பேசித் தீர்த்து விட்டீர்கள்” என்று இளங்குமரன் முதன்முதலாக மணிமார்பனுடைய மனைவியை நோக்கிப் பேசினான். அவள் பதில் சொல்லவில்லை. அந்தக் குரலின் ஒலியில் பயந்து தயங்கி நின்றாள்.
“பேர்தான் பதுமை! இந்தச் சொல்லரசியின் வார்த்தைகளுக்கு இவள் கணவனாகிய நானே அவ்வப் போது பதில் கூறத் திணறிப் போகிறேன் ஐயா” என்று மணிமார்பன்தான் சிரித்தவாறே இளங்குமரனுக்குப் பதில் கூறினான். இதைக் கேட்டு இளங்குமரன் புன்னகை புரிந்தான்.
“நான்... ஏதாவது... தப்பாகப் பேசியிருந்தால்... பொறுத்தருளி என்னை மன்னிக்க வேண்டும்...” என்று தயங்கித் தயங்கி ஒவ்வொரு வார்த்தையாகக் குனிந்து தலை நிமிராமலே சொன்னாள் பதுமை.
“தப்பாகப் பேசியிருப்போமோ என்று இப்போது நீங்கள் நினைத்துப் பயப்படுவதுதான் பெரிய தப்பு சகோதரீ! உங்களுடைய சில கேள்விகளுக்கு உங்கள் கணவரே பதில் கூறத் திணறியதையும் நான் கவனித்தேன். நான் முல்லையிடம் கப்பலேறு முன்பு சொல்லி விடை பெற்றுக்கொள்ளாதது மூன்று பேருடைய மனங்களைத் துன்புறுத்தியிருக்கிறதென்று எனக்கே இப்போது தெரிகிறது. முல்லை துன்புற்றதைத் தவிர நீங்கள் வேறு இதற்காக மனம் வருந்தியிருக்கிறீர்கள் போலும். முல்லையின் தந்தையும் மனம் வருந்தியிருக் கிறார். அருளாளன் அன்பில்லாதவனாகத் தான் இருக்க வேண்டுமென்பதில்லை. அருளாளனுடைய அன்புக்குக் காரணமும், விளைவும், தனியாக இல்லை என்பதுதான் முக்கியம். நான் தன்னிடம் சொல்லி விடைபெற்றுக் கொள்ளாததை எண்ணி முல்லை வருந்தியிருப்பாளானால் அதுவும் அறியாமைதான்” என்று இளங்குமரன் கூறிக்கொண்டே வந்தபோது பதுமையிடமிருந்து நடுவே சில சொற்கள் ஒலித்தன.
“அன்பைத் தவிர வேறெதையும் அறியாமல் இருப்பதனால்தான் பெண்களுக்கு அறியாமையையும் ஒரு குணமாகச் சொல்லிவிட்டார்கள். மற்றவற்றை அறியா மலிருப்பது என்ற பேதமையைப் போர்வையாகப் போர்த்தி எங்கள் அன்பாகிய அறிவை நாங்கள் காப்பாற்றிக் கொள்கிறோம்.”
“ஏதேது? நீ இவருக்கே தத்துவம் சொல்லிக் கொடுப்பாய் போலிருக்கிறதே, பதுமை?” - என்று தன் மனைவியைக் கடிந்து கொள்வது போலக் குறுக்கிட்டான் மணிமார்பன்.
“உலகத்தில் எந்தத் தத்துவத்தையும் யாரும் முடிந்து வைத்து விட்டுப் போய் விடவில்லை மணிமார்பா! உன்னுடைய மனைவியின் பேச்சிலிருந்து நான் புதிதாக ஏதாவது தெரிந்து கொள்ள முடியுமானால் அதுவும் நான் அவசியமாகக் கற்றுக் கொள்ள வேண்டிய தத்துவம் தான். என்னையறியாமலே நான் பிறரைப் புண்படுத்தி விடுகிற சந்தர்ப்பங்கள் நேரிடாமல் எனது சான்றாண் மையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றுதான் நானும் ஆசைப்படுகிறேன். பிறர் கவனத்தை அவசியமின்றிக் கவர்ந்து நம் புறமாகத் திருப்ப வேண்டாமென்று நாம் மெளனமாக இருந்து விடுவது சில சமயங்களில் பிறரைத் துன்புறுத்தி விடுகிறது. அதற்கென்ன செய்யலாம்?” என்று இளங்குமரன் பேசிக் கொண்டிருந்தபோது, ஏதோ காரியமாகக் கப்பலின் கீழ்த் தட்டுக்குப் போயிருந்த வளநாடுடையார் மரப்படிகளில் பலத்த ஓசையெழுப்பிக் கொண்டு மேலே அதிர நடந்து வந்தார்.
அவர் மேலே வந்த விதமும் அவர்களைப் பார்த்த பார்வையும் அவசரத்தையும் பரபரப்பையும் மூட்டுவன வாயிருந்தன.
“அதோ பின்னால் நம்மைத் துரத்திக் கொண்டு வருவதுபோல் தொடர்ந்து வரும் அந்தப் படகைப் பார்த்தாயா, தம்பீ? முதலில் யாரோ எங்கோ படகுப் பயணம் செய்கிறார்கள் என்றெண்ணி நானே அசிரத்தையாகத்தான் இருந்தேன். அந்தப் படகில் இருப்பவர்களில் ஒருவர் அடிக்கடி ஊன்றுகோலை நம்முடைய இந்தக் கப்பல் செல்லும் திசையில் நீட்டி மற்றவர்களிடம் ஏதோ சொல்வதையும் அவர்கள் அதைக் கேட்டுப் படகின் வேகத்தை மிகுதிப்படுத்துவதையும் அந்தப் படகு நம்மை நெருங்குவதையும் கூர்ந்து கவனித்த பின்புதான் எனக்கே சந்தேகம் ஏற் பட்டது” என்று சொல்லிக் கொண்டே கரைப் பக்க மாகக் கையைக் காட்டினார் வளநாடுடையார். மணிமார்பனும், இளங்குமரனும் அவர் காட்டிய திசையில் விரைந்து திரும்பிப் பார்த்தார்கள். உண்மைதான்! பின்னால் வந்துகொண்டிருந்த படகு துரத்துவதைப் போலத்தான் நெருங்கிப் பாய்ந்து வந்துகொண்டிருந்தது.
“நீ கீழே போய்விடு அம்மா!” என்று வளநாடுடையார் மணிமார்பனுடைய மனைவி பதுமையைத் துரிதப்படுத்திக் கீழே அனுப்பிவிட்டுக் கணத்துக்குக் கணம் நெருங்கும் படகைக் கவனிக்கலானார். படகு அதன் உள்ளே அமர்ந்திருக்கின்றவர்களின் முகம் நன்றாகத் தெரிகிற அளவு நெருங்கிவிட்டது. மணிமார்பனுடைய பார்வை விரைந்து சென்று அந்தப் படகில் சந்தித்த முதல் முகத்தில் ஒரே ஒரு கண்தான் இருந்தது. பார்த்த அவசரத்திலும் பார்க்கப்பட்ட முகம் உண்டாக்கிய பரபரப்பிலும் ஒரு கண் இருந்தது தெரிந்ததா அல்லது ஒரு கண் இல்லாதது தெரிந்ததா என்று உணர முடியவில்லை. ஏற்கெனவே பழகிய அந்த முகத்தின் பயங்கரம் தெரிந்தது. ஒரே கண் மட்டும் இருந்ததனாலோ அல்லது ஒரு கண் இல்லாமையினாலோ படகிலிருந்தவர்களின் தோற்றத்தில் பளிரென்று பார்வையில் பதிந்த முகம் நகைவேழம்பருடையதாகத்தான் இருந்தது. அவரை இளங்குமரனும் பார்த்தான்.
“ஐயா! இவன் நல்ல எண்ணத்தோடு வரவில்லை. இந்தப் பாவி பின் தொடர்வதில் ஏதோ சூழ்ச்சியிருக்கிறது” என்று பயத்தில் சொற்களைக் குழறினான் மணிமார்பன். தன்னுடைய வாழ்வின் எங்கோ ஒரு மூலையில் பழைய நாட்கள் சிலவற்றில் அந்த ஒற்றைக் கண் கொலைகாரனிடம் அகப்பட்டுக் கொண்டு தான் பட்ட வேதனைகள் இந்த விநாடியில் மணிமார்பனுக்கு நினைவு வந்துவிட்டன போலும்.
“பயப்படாதே! படகில் வருகிறவன் எவனாக இருந்தாலும் அவன் உயிருக்குத்தான் ஆபத்து. நாம் மூன்று பேர் - கப்பல் ஊழியர்கள்-எல்லாருமாகச் சேர்ந்தால் அந்தப் படகைப் பொடிப் பொடியாகச் செய்து கடலில் கரைத்துவிடலாம் அப்பனே?” என்று சொல்லியபடி கையில் வேலை எடுத்துக் குறி பார்க்கத் தொடங்கி விட்டார் வளநாடுடையார். மணிமார்பனும் ஒரு வேலை எடுத்துக் கொண்டான். இளங்குமரன் மட்டும் கைகட்டி நின்றவாறே முகத்தில் மெல்லிய நகை மலர இருந்தான்.
“என்ன ஐயா நிற்கிறீர்கள்?. நீங்களும்...?” என்று சொற்களைத் தொடங்கிய மணிமார்பன் இளங்குமரனுடைய முகபாவத்தை நோக்கிவிட்டுப் பேச்சை நிறுத்திக் கொண்டு விட்டான்.
“மணிமார்பா! இந்த விநாடிகள்தான் எனக்கு மெய்யான சோதனை. ‘நான் அருளாளனாக இருப்பதா? அருள் என்ற விரிந்த எல்லையிலிருந்து என்னைக் குறைத்துக் கொண்டு அன்புடையவர்களுக்கு அன்பும் விரோதிகளுக்கு விரோதமும் காட்டுகிற வெறும் மனிதனாகக் கீழே இறங்கிவிடுவதா?’ என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் நான்” என்றான் இளங்குமரன்.
மணிபல்லவ யாத்திரைக்காகத் திட்டமிட்டுக் கொண்டு இளங்குமரனும் வளநாடுடையாரும் பூம்புகார்த் துறைமுகத்தில் கப்பல் ஏறுவதற்கு வந்திருந்த அதே காலை நேரத்தில் பெருநிதிச் செல்வரும் நகைவேழம்பரும் துறைமுகத்தில் மற்றொரு பகுதியில் வந்து நின்று நங்கூரம் பாய்ச்சிக் கொண்ட வேறொரு கப்பலிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதை எவரும் கவனிக்கவில்லை.
பொருள்களை ஏற்றிவரும் கப்பல்கள் பண்டக சாலைகளை ஒட்டிய பகுதியில் நங்கூரம் பாய்ச்சப் படுவது வழக்கம். ஆயினும் பண்டக சாலைகளை ஒட்டித் துறை கொள்ளும் கப்பல்கள் மிகவும் பெரியவைகளாக இருந்தால் அவற்றின் மேல் தளத்தில் நின்று கொண்டிருப்பவர்களால் பூம்புகார்த் துறைமுகத்தின் எல்லாப் பகுதிகளையும் நன்றாகப் பார்க்க முடியும். அப்போது வந்த கப்பல் மிகவும் பெரியது. பச்சைக் கற்பூரம், குங்குமம், பனி நீர் முதலிய நறுமணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு சீன தேசத்திலிருந்து பல மாதக் கணக்கில் பயணம் செய்து வந்த மிகப் பெரிய மரக்கலம் அது. சீன தேசத்திலிருந்து வந்த கப்பலில் நகைவேழம்பரும் பெருநிதிச் செல்வரும் எப்படிப் போய்ச் சேர்ந்தனர் என்பதை இப்போது கவனிக்கலாம்.
அந்த ஆண்டின் இந்திர விழாவில் சமயவாதம் புரிந்து வெற்றிமேல் வெற்றியாகப் புகழ் பெற்றுக் கொண்டிருந்த இளங்குமரனைத் தன்னுடைய மகளைக் கருவியாகப் பயன்படுத்தி பெருநிதிச் செல்வர் கொல்ல முயன்றதும், அந்த முயற்சியும் தோற்றபின் மகள் சுரமஞ்சரியை அவள் தோழியோடு மாடத்திலேயே சிறைவைத்ததும் பரம இரகசியமாக நடந்த சூழ்ச்சிகள். சுரமஞ்சரியை அவளது மாடத்திலிருந்து வெளியேற முடியாமல் சிறைப்படுத்திய இரண்டு சந்தர்ப்பங்களிலும் தான் அவளைச் சிறைப்படுத்தியிருப்பதாக மற்றவர்கள் அநுமானம் செய்யும் இடமில்லாதபடி சாமர்த்தியமாக அதைச் செய்திருந்தார் அவர். தன்னையும் நகைவேழம்பரையும் தவிர மற்றவர்களுக்கு உண்மைக் காரணத்தைத் தெரியவிடக்கூடாது என்பதில் அவர் மிக உறுதியாக இருந்தார். சுரமஞ்சரியின் தாயார், சகோதரி, பெரு மாளிகைப் பெண்கள் ஆகியோர்களிடம் எல்லாம் சுரமஞ்சரியின் ஜாதகப்படி கிரகநிலை சரியில்லாத சில காலங்களில் அவள் எங்கும் வெளியேறிச் செல்லாமல் தன் மாடத்திலேயே விரதமிருந்து பரிகாரங்கள் செய்ய வேண்டுமென்று வருவதறிந்து கூறுவதில் வல்ல பூம்புகார்க் கணிகள் கூறியிருப்பதாகவும் அதன்படி அவளைத் தனிமையில் இருக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும், வேறு எவரும் அவளைச் சந்திக்கலாகாதென்றும் கூறி நம்பச் செய்திருந்தார் பெருநிதிச் செல்வர். பெருமாளிகைப் பெண்களும், பிறரும் நம்பும் விதத்தில் அவருக்கு இந்த அற்புதமான பொய்யைச் சொல்லிக் கொடுத்தவர் நகைவேழம்பர்தான்.
இந்திர விழாவில் நாளங்காடியின் பொது இடத்தில் சுரமஞ்சரி தான் அணிந்துகொண்டிருந்த அணிகலன்களை யெல்லாம் கழற்றி எறிந்துவிட்டு ‘இந்தப் பல்லக்கு நரகத்துக்குப் போகும் வாகனம்! நான் இதில் ஏறி வரமாட்டேன்’ - என்று அடம்பிடித்த தினத்தில்தான் ‘தன்னுடைய குடும்ப இரகசியங்கள் அந்த நாளங்காடி நாற்சந்தியில் சிதறிவிடுமோ?’ - என்று முதன் முதலாக அவர் அஞ்சினார். அதே நாளில் நகைவேழம்பர் வேறு ஏதோ ஒரு கலக்கத்தைப் பிறப்பிப்பதற்குக் காரணமான மெளனத்தோடு அவரிடம் வன்மமாயிருந்தார். தன் பெண் சுரமஞ்சரி அன்று இருந்த நிலையைக் கண்டு அவளிடம் அவருக்கே பயமாகிவிட்டது. இருளில் மாடத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டு விடுவாளோ என்றுகூட அன்றைக்கு அவளைப் பற்றி பயந்தார் பெருநிதிச் செல்வர். அவள் அப்படி ஏதேனும் அசட்டுக் காரியம் செய்யாமல் தடுக்க நினைத்துத் தான் அவளுடைய மாடத்தின் இருளில் தானே அவளை ஒவ்வொரு கணமும் பார்த்துக்கொண்டு நிற்பது போலத் தோன்றும்படி தன்னுடைய ஊன்றுகோலை வைத்து அரட்டினார். அதே இருளில் இன்னொரு பெரிய அவமானமும் அவருக்கு ஏற்பட்டது. பகல் முழுவதும் வெயில் நெருப்பாய்க் காய்கிற நாளில் பகல் முடிந்ததும் மழை கொட்டுவதுபோல் அன்று காலையில் தொடங்கிய அளவு மீறின அமைதியோடு இருந்த நகைவேழம்பர், இரவில் அவரிடம் ஏதோ பேசச் சென்றபோது பெருநிதிச் செல்வரிடம் எரிமலையாகக் குமுறிவிட்டார்.
அதன் விளைவாக எல்லோரும் உறங்கிப் போன அந்த நள்ளிரவில் நகைவேழம்பரிடமிருந்து பெருநிதிச் செல்வர் வீனில் பெற்ற அவமானம் மறக்க முடியாதது. அந்த அவமானத்துக்குப் பதிலாக அப்போதே பெருநிதிச் செல்வர் உணர்ச்சி வசப்பட்டிருந்தால் நகைவேழம்பரைக் கழுத்தை நெரித்துக் கொன்றிருப்பார். ஆனால் அவர் உணர்ச்சி வசப்படவில்லை. திட்டமிட்டு நிதானத்தோடு நடந்துகொண்டார். யாருக்கும் தெரியாதென்று தான் அடக்கிக் கொண்ட அந்த அவமானத்தை மேலேயுள்ள மாடத்திலிருந்து தன் மகளே பார்த்து விட்டாள் என்பதும் அவருக்குத் தெரியாது.
“பகல் முழுவதும் மெளனமாயிருந்து நீங்கள் சேர்த்துக் கொண்ட ஆத்திரத்தின் விளைவு இதுதான் என்றால் இதற்காக நான் மகிழ்கிறேன் நகை வேழம்பரே!” என்று அவருக்குப் பணிந்து கொடுத்துப் பேசினார் பெருநிதிச் செல்வர். இயல்புக்கு மாறான இந்த நிதானம் நகைவேழம்பருக்கே அதிர்ச்சியை அளித்தது.
நகைவேழம்பர் நிமிர்ந்து ஒற்றைக் கண்ணால் பார்த்தார். எதிரே நின்ற பெருநிதிச் செல்வருடைய இடது கன்னத்தில் ஐந்து விரல்களின் தடமும் பதிந்திருந்தது. “உங்களுடைய ஆத்திரம் இன்னும் மீதமிருந்தால் அதை மற்றொரு கன்னத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் நண்பரே. அதற்காக நான் வருந்த மாட்டேன்” என்று நகைவேழம்பரை நோக்கிச் சொல்லிவிட்டு வஞ்சகமாகச் சிரித்தார் பெருநிதிச் செல்வர். இதைக் கேட்டதும் நகைவேழம்பருக்குச் சற்றே பயம் பிறந்தது, உடலில் மெல்ல நடுக்கம் கண்டது.
“மன்னிக்க வேண்டும்! அப்போது நான் மிகவும் கோபமாயிருந்தேன். அது என்னை நிதானமிழக்கும்படிச் செய்துவிட்டது.”
“அதைப் பற்றிக் கவலையில்லை! நீர் நிதானத்தை இழந்துவிட்ட அதே நேரத்தில் உம்மால் இழக்கப்பட்ட நிதானமும் சேர்ந்து எனக்கு வந்துவிட்டது. ஒரே சமயத்தில் இரண்டு பேருமே நிதானம் இழந்திருந்தால் தான் கெடுதல்!... வாருங்கள். வேறு முக்கியமான காரியத்துக்காக இப்போது நமக்கு இன்னும் நிறைய நிதானம் தேவைப்படுகிறது நகைவேழம்பரே!”
சோறிட்டு வளர்ப்பவனுக்குப் பின்னால் வால் குழைத்துச் செல்லும் நாய்போல் தலைகுனிந்தபடி பெருநிதிச் செல்வரைப் பின்பற்றி நடந்தார் நகைவேழம்பர். இருவரும் பெருமாளிகைத் தோட்டத்தில் தனிமை யானதோர் இடத்தை அடைந்ததும் பெருநிதிச் செல்வர் பேசலானார்:
“நம்முடைய பண்டசாலைக்கு இன்றைக்கு நான்கு நாட்களுக்கு முன்பே வந்து சேர்ந்திருக்க வேண்டிய கப்பல் ஒன்று இன்றுவரை வந்து சேரவில்லை. நீரும் அதை மறந்து விட்டீர். பச்சைக் கற்பூரமும் குங்குமமும், பனிநீரும் ஏற்றி வருவதற்காகச் சீனத்து வணிகன் ஒருவனிடம் பல மாதங்களுக்கு முன்னால் ஆயிரம் பொற் கழஞ்சுகள் கொடுத்து ஓலை மாற்றிக் கொண்டோமே, அதை மறந்துவிட்டீர்களா? இந்த ஆண்டு இந்திரவிழாவின் முதற் கிழமைக்குள் கப்பல் இங்கு வந்து சேருமென்று அந்த வணிகன் வாக்குக் கொடுத்தான். இன்றுவரை அந்தக் கப்பலைப் பற்றி ஒரு செய்தியும் தெரியவில்லை...”
“அந்தச் சீனத்து வணிகன் நம்மிடம் தவறு செய்ய மாட்டான்! இன்று அல்லது நாளைக்குக் கற்பூரக் கப்பல் துறைமுகம் வந்து சேர்ந்துவிடும்...”
“வணிகனுக்குத் தவறு செய்ய வேண்டாம் என்ற மனச்சாட்சியே இருக்கலாகாது நகைவேழம்பரே! ஒவ்வொரு கணமும் தவறு செய்ய வேண்டிய சந்தர்ப்பங்களைத் தேடிக்கொண்டே இருப்பவன்தான் சாமர்த் தியமான வணிகன். கற்பூர வணிகனாயிற்றே. எல்லாம் நறுமணமாகத்தானிருக்கும் என்று நம்பலாகாது. மணம் கற்பூரத்துக்குத்தான் சொந்தம். அதை விற்கிறவன் கெட்ட நாற்றமுடையவனாகவும் இருக்கலாம்.”
“வேண்டுமானால் நாம் அந்தக் கப்பலை எதிர் கொண்டு புறப்பட்டுத் தேடலாமே?” என்று மறுமொழி கூறினார் நகைவேழம்பர். இந்த ஏற்பாட்டின்படி மறுநாள் காலையில் வந்து சேர வேண்டிய கற்பூரக் கப்பலைத் தேடிக்கொண்டு புறப்பட்டு விட்டார்கள் பெருநிதிச் செல்வரும் நகைவேழம்பரும். வந்து சேர வேண்டிய நாளில் எதிர்பார்த்த பொருளுடன் ஒரு கப்பல் வரவில்லையானால் அதைத் தேடி வேறு கப்பலில் எதிர்கொள்வது அந்தக் காலத்துக் காவிரிப் பூம்பட்டினத்து வணிகர்களிடையே வழக்கமாயிருந்தது. மிகப் பெரிய கப்பல் வணிகராகிய பெருநிதிச் செல்வருக்கு அடிக்கடி இந்த வேலை ஏற்படுவதுண்டு. அப்படி ஏற்படும் போதுகளில் அவரோடு நகை வேழம்பரும் அவருக்குத் துணை போவார்.
இளங்குமரன் ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் சமதண்டத்து, ஆசீவகர்களோடு வாதம் புரிந்து கொண்டிருந்த நாட்களில் பெருநிதிச் செல்வரும் நகை வேழம்பரும் பூம்புகாரின் சுற்றுப்புறக் கடலில் கற்பூரக் கப்பலைத் தேடி அலைந்து கொண்டிருந்தார்கள். பதினைந்து யோசனை தூரம் வரை அலைந்து திரிந்தபின் சீனத்துக் கப்பல் எதிரே வருவது தென்பட்டது. கடற் காற்றுப் பயணத்துக்கு வசதியான திசையில் இல்லாத தால்தான் இவ்வளவு தாமதமென்று காரணம் கூறினான் அக்கப்பல் தலைவனான சீனத்து வணிகன். பெருநிதிச் செல்வரும் நகைவேழம்பரும் தாங்கள் தேடுவதற்காக ஏறிச் சென்ற கப்பலைத் துறைக்குத் திருப்பிக் கொணரும் பொறுப்பை அதன் மீகாமனிடம் ஒப்படைத்துவிட்டுக் கற்பூரக் கப்பலிலேயே ஏறிக்கொண்டு பூம்புகாருக்குத் திரும்பினார்கள். அவர்கள் பூம்புகார்த் துறைமுகத்துக்குத் திரும்பிய அதே தினத்தின் காலையில்தான் இளங்குமரனும் மணிபல்லவத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான்.
பண்டசாலைக்கு எதிரே துறை கொண்ட சீனத்துக் கப்பலின் மேல் தளத்திலிருந்து முதலில் இளங்குமரனைப் பார்த்தவர் நகைவேழம்பர்தான். அவருடைய ஒற்றைக் கண்ணில் தென்பட்டபோது இளங்குமரன் நீலநாகரை வணங்கி விடைபெற்றுக் கொண்டிருந்தான்.
“நான் ஒன்றைத் தேடிக்கொண்டு வந்தால் தேடி வராத வேறு காரியங்களும் அதே வழியில் எளிதாக வந்து மாட்டிக்கொள்கின்றன ஐயா! அதோபாருங்கள்...” என்று கூறிப் பெருநிதிச் செல்வருக்கு அந்தக் காட்சியைக் காட்டினார் நகைவேழம்பர்.
“என்னுடைய இரண்டு கண்கள் பார்க்கத் தவறி விடுவதைக் கூட உம்முடைய ஒரு கண்ணால் நீர் சில சமயங்களில் பார்த்து விடுகிறீர்” - என்று அதைக் கண்டு கொண்டே நகைவேழம்பருக்குப் பாராட்டு வழங்கினார் பெருநிதிச் செல்வர். இவர்கள் இருவரும் இவ்வாறு பார்த்துப் பேசிக் கொண்டிருந்த போதே அந்தக் கப்பலின் ஊழியர்கள் பெரிய படகு ஒன்றில் பண்ட சாலைக்குக் கொண்டு போவதற்காகக் கற்பூரத்தை இறக்கிக் குவித்துக் கொண்டிருந்தார்கள். இடமகன்று குழிந்த படகின் உட்புறம் ஓலைப் பாய்களை விரித்துக் குவிக்கப்பட்ட கற்பூரம் அந்தப் பகுதியெல்லாம் மணத்தைப் பரப்பியது. சீனத்துக் கப்பலில் இருந்து பணியாளர்கள் கூடை கூடையாக எடுத்துக் கொடுத்த கற்பூரத்தைத் துறைமுகத்துப் பண்டசாலை ஊழியர்கள் நால்வர் படகில் இருந்து வாங்கிக் குவித்துக் கொண்டிருந்த அந்த நிலையில் துறையின் மற்றொரு பகுதியில் இளங்குமரன் முதலியவர்களை ஏற்றிக் கொண்ட கப்பல் புறப்பட்டு விட்டதைக் கண்டுவிட்ட பெருநிதிச் செல்வர் நகைவேழம்பரிடம் ஏதோ சைகை செய்தார். உடனே நகைவேழம்பர் பரபரப்போடு கீழிறங்கித் தங்கள் படகுக்குள் சென்றார். சீனர்களும் சோனகர்களுமாகிய முரட்டுக் கப்பல் ஊழியர்களையும் ஏற்றிக் கொண்டு குவித்த கற்பூரத்தைப் பண்டசாலையில் கொண்டு போய் இறக்கவும் விடாமல் அப்படியே புறப்பட்டு விட்டார் நகைவேழம்பர். தமது படகில் கற்பூரம் இறக்கிக் குவிக்கப்பட்டிருப்பதையே மறந்திருந்தார் அவர். முன்னால் போகும் மணிபல்லவத்துக் கப்பலைப் பின் தொடர வேண்டும் என்றும், அதே சமயத்தில் இன்னும் சிறிது தொலைவு சென்று கரை மறைகிறவரை தாங்கள் அந்தக் கப்பலைத் துரத்துவது போல் அதிலிருப்பவர்களுக்குத் தெரியலாகாதென்றும் படகைச் செலுத்துகிறவனுக்குக் கட்டளையிட்டிருந்தார் நகைவேழம்பர். தற்செயலாகச் செலுத்துகிற படகு போலவே, அந்தக் கப்பலை நெருங்காமல் விலகியபடியே பின்தொடர்ந்து கொண்டிருந்தது கற்பூரப் படகு. இதனால் வளநாடுடையாரும், அவர் இளங்குமரனை அழைத்துக்கொண்டு சென்ற கப்பல் மீகாமனும் முதலிலேயே இந்தப் படகைக் கண்டிருந்தும் அவ்வளவாக இதன்மேற் கவனம் செலுத்தவில்லை. சந்தேகமும் படவில்லை.
“ஏதோ படகில் சிறு வணிகர்கள் பொருள் ஏற்றிக் கொண்டு செல்லுகிறார்கள்” என்று நினைத்து விட்டு விட்டார்கள்.
கரை மறைந்து தனிமையான நடுக்கடலுக்கு வந்த பின்புதான் நகைவேழம்பர் தம்முடைய சுயரூபத்தைக் காட்டினார். முன்னால் செல்லும் கப்பலை நெருங்கித் துரத்துமாறு படகு செலுத்துகிறவனுக்கு ஆணை யிட்டார். அருகில் நெருங்கியதும் தீப்பந்தங்களைக் கொளுத்தி அந்தக் கப்பலில் எறிய வேண்டுமென்றும் தம்முடன் இருந்த முரட்டு ஊழியர்களுக்கு அவசரம் அவசரமாக உத்தரவிட்டார்.
கப்பலின் மேலே தீப்பந்தங்களை எறிய வேண்டுமென்ற அந்த உத்தரவைக் கேட்டவுடனே படகோட்டி பதறிப்போய் ஏதோ சொல்ல வாய் திறந்தான். ஏற்கெனவே அவன் பாய்மரப் படகை வேகமாகச் செலுத்தவில்லை என்று அவன் மேல் அளவற்ற கோபத்தோடிருந்த நகைவேழம்பர் இப்போது அவன் தன்னிடம் பேச வந்ததையே விரும்பாதவராக, “வாயை மூடு ! உன் பேச்சு யாருக்கு வேண்டும்? காரியத்தைக் கவனி...” என்று இரைந்து அவனை அடக்கிவிட்டார். அவன் தான் கூற வந்த மிக முக்கியமான விஷயத்தைச் சொல்ல முடியாமல் அடங்கிப்போய் விட்டான். படகின் பாதுகாப்பானதொரு பகுதியில் வைத்துத் தீக்கடைக் கோல்களைக் கடைந்து விரைவாய்ப் பந்தங்களைக் கொளுத்தவும் தொடங்கி விட்டார்கள் ஊழியர்கள். கப்பலில் இருந்தவர்கள் தங்களை நோக்கி வேலை ஓங்குவதையும் நகைவேழம்பர் கவனித்தார். உடனே தீப்பந்தங்களை எறியத் தொடங்கும்படி உத்தரவு பிறந்தது. கப்பலை நோக்கிப் பந்தங்கள் பாய்ந்து பறந்தன. அப்போதிருந்த ஆத்திரத்தில் நகைவேழம்பர் முன் விளைவு, பின் விளைவைச் சிந்திக்கிற நிதானத்தை முற்றிலும் இழந்திருந்தார். ஏறக்குறைய அடிமைகளுக்குச் சமமான அந்த ஊழியர்களும் அவர் கட்டளை யிட்டதைச் செயலாக்க முனைந்தார்களே ஒழிய அந்த கட்டளைக்குக் கீழ்ப்பணிந்து செயல்படுவதால் வரும் விளைவுகளை நினைக்கவில்லை. கப்பலின் மற்றொரு மூலையில் கற்பூரம் குவிக்கப்பட்டிருப்பதை படகோட்டி ஒருவனைத் தவிர மற்றவர்கள் மறந்தே விட்டனர். அடிமைகளாயிருப்பவர்களுக்கு ‘நாம் அடிமைப்பட்டிருக்கிறோம்’ என்று நினைப்பதற்கே நேரமும் சுதந்திரமும் இல்லாதபோது மற்ற விளைவுகளை நினைக்க நேரம் ஏது? அந்தக் கூட்டத்தில் அடிமையல்லாதவனாகிய படகோட்டி மட்டும் ஒரு கணம் பின்விளைவை நினைத்து நகைவேழம்பரை எச்சரிப்பதற்கு வாய் திறந்தான். அவருடைய கூக்குரலையும் பயமுறுத்தலையும் கண்டு ‘நமக்கு ஏன் வம்பு?’ - என்று இறுதியில் அவனும் அடங்கிப்போய் விட்டான். இளங் குமரனை ஒடுக்கி அடக்கி இல்லாமற் செய்துவிடும் முயற்சியில் இரண்டு மூன்று முறை தாம் தோற்றுப் போய்ப் பெருநிதிச் செல்வருக்கு முன் தலைகுனிந்து நின்ற சமயங்களை இப்போது நினைத்துக் கொண்டு விட்டார் நகைவேழம்பர். அப்படித் தலைகுனிந்து தான் நிற்க நேர்ந்த சமயங்களில் புழுவைப் பார்ப்பதுபோல் பெருநிதிச் செல்வர் தன்னை அலட்சியமாகப் பார்த்த பார்வைகளும் நினைவுக்கு வந்து அவரைக் கொலை வெறியில் முறுகச் செய்தன. செய்வதன் விளைவை நினையாமற் செயற்பட்டார் அவர். இளங்குமரனைக் கப்பலோடு கடலில் கவிழ்ந்து மூழ்கச் செய்துவிட்டு அந்த வெற்றியோடு பெருநிதிச் செல்வருக்கு முன் போய் நிற்க வேண்டுமென்ற ஒரே ஆசைதான் அவருக்கு இப்போது இருந்தது.
துரத்திக் கொண்டு வந்த படகில் இருப்பவர்கள் தீப்பந்தங்களைக் கொளுத்தித் தங்கள் கப்பலின் மேல் எரியும் அளவுக்குத் தாக்குதல் வளர்ந்து விட்டதைக் கண்டு அமைதியாகக் கைகட்டிக் கொண்டு நிற்கும் இளங்குமரனைப் பார்த்துப் பெரும் சீற்றமடைந்தார் வளநாடுடையார். “பகைவர்களுக்கு முன்னால் இரக்கம் காட்டுவது பேதமை தம்பீ! பகைக்கு முன்னால் காட்ட வேண்டிய ஒரே அறம் பகைதான். அருள் என்றால் விலை என்ன என்று கேட்கிறவர்களிடம் நீ அருள் காட்டிப் பயனில்லை. உன் மனத்தை மாற்றிக்கொள். கைகளை உதறிக்கொண்டு இந்த எதிர்ப்பை ஏற்றுக் கொள்ள முன் வா! பறந்து வருகிற தீப்பந்தங்கள் இந்தக் கப்பலின் பாய்மரத்தில் பட்டுவிடாதபடி மறித்துப் பிடி. நமது பாய்மரம் தீப்பட்டு எரிந்து போனால் பின்பு இந்தக் கப்பல் எந்தத் திசையில் போகுமென்று சொல்ல முடியாது. அநாதைக் கப்பலாகிக் கடலிலேயே கிடந்து அலைக்கழியும். நமது பாய்மரத்தைக் காப்பாற்று, நம்முடைய இந்தக் கப்பல் கவிழ்ந்தால் இதனோடு என்னுடைய எல்லா நம்பிக்கைகளுமே கவிழ்ந்துவிடும்” - என்று ஆவேசத்தோடு கூறியபோது வளநாடுடை யாரின் கண்கள் கோவைப் பழமாகச் சிவந்துவிட்டன. அந்தக் கிழட்டு உடல் தாங்கமுடியாத ஆவேசத்தைத் தாங்கிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது. அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அந்தப் பாய்மரக் கப்பலின் மீகாமன் வளநாடுடையாருக்கு அருகில் வந்து கூறினான்.
“பதறாதீர்கள், பெரியவரே! நமக்கு இது ஓர் எதிர்ப்பே அல்ல; கடலில் கவிழப்போவது அவர்களுடைய படகுதான். நம்முடைய பாய்மரம் தீப்பற்றுவதற்கு அவர்கள் இன்னும் பல தீப்பந்தங்களை வீசி எறிய வேண்டும். இப்போது நான் இங்கிருந்து நேரே ஒரு சிறிய தீப்பந்தத்தை வீசி எறிந்தால் போதும். அந்தப் படகே குபிரென்று பற்றிக்கொண்டு எரியும். அவர்களுடைய படகு எரிவதற்குத் தேவையான நெருப்பு அந்தப் படகுக்குள்ளேயே இருக்கிறது. சந்தேகமாயிருந்தால் இதோ பாருங்கள்...” என்று இவ்வாறு கூறியபடியே ஒரு சிறிய தீப்பந்தத்தை எடுத்து அந்தப் படகில் ஓர் இலக்கைக் குறிவைத்து வீசினான் கப்பல் தலைவன். குறி தவறாமல் பாய்ந்தது அந்தத் தீப்பந்தம். என்ன அதிசயம்! கப்பல் தலைவனுடைய தீப்பந்தம் அந்த இடத்தை நெருங்கு முன்பே படகுக்குள் தீப்பற்றி விட்டாற்போலச் சோதி மயமான மாபெரும் தீ நாக்குகள் அந்தப் படகிலிருந்து எழுந்தன. அதிலிருந்து கற்பூர மணத்தைச் சுமந்த புகைச் சுருள்கள் எங்கும் பரவின. படகில் பற்றிய நெருப்புச் சுடருக்கு நடுவே யிருந்து, “அடப்பாவி! படகில் கற்பூரம் இருப்பதை முன்பே என்னிடம் சொல்லித் தொலைத்திருக்கக் கூடாதா?” என்று குரூரமாக ஒரு குரல் வினாவியது. அந்தக் குரூரக் குரல் நகைவேழம்பருடையதென மணிமார்பன் புரிந்துகொண்டான். “ஐயா! அதைச் சொல்ல வந்தபோதுதான் நீங்கள் என்னை அடக்கிப் பேசவிடாமல் தடுத்து விட்டீர்களே!” - என்று ஏளனச் சிரிப்போடு ஒரு குரல் அதற்குப் பதிலும் கூறியது. நெருப்புக் கொழுந்துகளுக்கிடையே பயங்கரமாகத் தெரிந்த நகைவேழம்பருடைய முகத்தைத் தங்கள் கப்பலின் மேல்தளத்திலிருந்தே பார்த்தான் மணி மார்பன். அந்தக் காட்சியைக் கண்டு பயத்தினால் உடல் சிலிர்த்தது அவனுக்கு. அருவருப்போடு அவன் தன் கண்களை மூடிக்கொண்டான். “இந்த நெருப்பினால் அவியாமலிருக்கிற இவனது மற்றொரு கண்ணும் அவிந்து போய்விடும் போலிருக்கிறது...” என்று சொல்லிக் கொண்டே வளநாடுடையார் தம் கையிலிருந்த வேலைப் படகுக்குள்ளிருந்த நகைவேழம்பரின் முகத்துக்குக் குறி வைத்தபோது மீகாமன் பாய்ந்து அவரைத் தடுத்து விட்டான்.
“வேண்டாம்! புனிதமான புத்த பூர்ணிமைக்கு யாத்திரை செய்யும்போது இத்தகைய முரட்டுச் செயல்களைச் செய்வது நம்முடைய யாத்திரையின் தூய்மையைக் கெடுக்கும். அந்தப் படகில் கற்பூரம் குவிந்திருப்பதை நான் முதலிலேயே பார்த்து விட்டேன். கூடியவரை அவர்களை ஒன்றும் துன்புறுத்தாமலேயே திரும்பிப் போகச் செய்து விடலாமென்றுதான் முதலில் நான் எண்ணினேன். அவர்கள் தீப்பந்தங்களை எறிந்து நமது பாய்மரத்தை எரிக்க முயல்வதைக் கண்ட பின்பு தான் நானும் அவர்களை எரித்துவிட முன் வந்தேன். இவ்வளவு பழி வாங்கியது போதும். இனி அவர்களை விட்டுவிடுங்கள்” என்று கப்பல் தலைவனாகிய மீகாமன் கூறியது நியாயமாகவே தோன்றியது. உடனே அப்போது மீகாமன் கூறியபடியே செய்தார் வளநாடுடையார். மறுபடியும் அவர்கள் கப்பல் மேல் தளத்திலிருந்து திரும்பிப் பார்த்தபோது அந்தப் படகு தீயோடு மூழ்கிக் கொண்டிருப்பதையும் அதிலிருந்தவர்கள் அலைகளில் தத்தளித்தபடியே நீந்திக் கொண்டிருப்பதையும் கண்டனர். அந்தப் பகுதிக் கடற் காற்றில் எல்லாம் கற்பூரம் கருகிய மணம் மணந்து கொண்டிருந்தது.
“கடல் தெய்வத்துக்குக் கற்பூர ஆரத்தி எடுத்து முடித்தாயிற்று, பதுமை! ஐயோ பாவம்! தங்கள் படகு நிறையக் கற்பூரத்தைக் குவித்துக் கொண்டு அடுத்தவர்கள் கப்பலில் தீப்பந்தங்களை எறியத் துணிந்த அறியாமையை இவர்கள் எங்கே கற்றுக் கொண்டார் களோ? ‘தன்வினை தன்னைச் சுடும்’ என்பார்களே, அந்தப் பழமொழிதான் இப்போது எனக்கு நினைவு வருகிறது பதுமை” - என்று தனியே தன் மனைவியிடம் கூறிக் கொண்டிருந்தான், மணிமார்பன்.
“முதல்முறை இந்திர விழாவுக்கு வந்திருந்தபோது ஏதோ ஒருநாள் இரவில் உங்களைப் புலிக்கூண்டில் தள்ளிக் கொன்றுவிட முயன்றதாகச் சொன்னிர்களே, அந்த ஒற்றைக்கண் மனிதர்தானா இவர்: அம்மம்மா! இந்த முகத்தைப் பார்த்தாலே இன்னும் பத்து நாளைக்குத் தூக்கத்தில் எல்லாம் கெட்ட சொப்பனம் காணும் போலிருக்கிறதே" என்று பயத்தில் தன் கயல்விழிகள் அகன்று விரிந்திடப் பேசினாள் மணி மார்பனுடைய மனைவி பதுமை.
“ஆமாம்! ஆமாம்! ஒரு கண் இல்லாத இந்தப் பாழ் முகத்தைப் பார்த்துத் தொலைக்கிற போதெல்லாம் அப்படி ஒவ்வொரு முறை பார்த்தவுடனும் ஒரு புண்ணிய தீர்த்தத்தில் போய் மூழ்கிவிட்டு வந்துதான் அந்தப் பாவத்தை போக்கிக்கொள்ள வேண்டும் பதுமை ! சித்திரக் கலையில் எப்போதும் ஒரு தத்துவம் நிலையான தாக உண்டு. பார்க்கவும் நினைக்கவும், அழகான முகங்கள், அழகான பொருள்கள், தோற்றங்கள், சூழ்நிலைகள் கிடைத்தால் - சைத்திரீகன், படைப்பதிலும் வரைவதிலும் அதே அழகு பிரதிபலிக்கும் என்பார்கள். பாவமே கண் திறந்து பார்ப்பது போன்ற இப்படிப்பட்ட குரூர முகங்களையே தினம் தினம் பார்த்துக் கொண்டி ருந்தால் அழகு என்கிற நளின குணமே நம் நினைப்புக்குள் வராது விலகிப் போய்விடும் பதுமை!”
“பாவம்! நாம் மணிபல்லவத்துக்குப் புறப்பட்டுப் போய்க் கொண்டிருக்கிற இந்தக் கப்பலையே நெருப்பு மூட்டி எரியச் செய்து கவிழ்த்துவிடலாம் என்று கெட்ட எண்ணத்தோடு தேடிவந்து அவர் தானே கவிழ்ந்து போய்விட்டார்.”
“அவர் மட்டும் கவிழ்ந்து போகவில்லை பதுமை! அவருடைய நம்பிக்கைகளும் தூண்டிக் கொண்டு வருகிறவருடைய எல்லா நம்பிக்கைகளும் கற்பூரத்தோடு சேர்ந்தே எரிந்து போய்க் கடலில் கவிழ்ந்துவிட்டன. பதுமை! ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் என்று சொல்வார்களே. அது இன்று தான் என் வரையில் மெய்யாயிற்று. பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகையில் இந்தப் பயங்கர மனிதருடைய மேற்பார்வையில் நான் கொடுமைப் படுத்தப்பட்ட நாட்கள் என் வாழ்விலேயே இனி என்றும் வரமுடியாத துரதிஷ்டம் நிறைந்தவை. அந்த துரதிர்ஷ்டம் நிறைந்த நாட்களில் இந்தக் கொலைகார மனிதரை என்னென்ன வெல்லாமோ செய்துவிட வேண்டும் என்று என் கைகள் துடித்தது உண்டு; இரத்தம் கொதித்ததும் உண்டு. ஆனால் அப்போது என் கைகள் இவ்வளவு வலிமையற்றவையாக இருந்தன.”
“இப்போது மட்டும் என்னவாம்? சித்திரக்காரர்களுக்குக் கைகள் விரல்கள் மனம் எல்லாமே எப்போதும் மென்மையானவையாகத்தானே இருக்க வேண்டும்?”
“அப்படியல்ல, பதுமை ! அன்றிருந்ததைவிட இன்று நான் அதிகமான பலத்தைப் பெற்றிருக்கிறேன். அன்று என்னுடைய இரண்டு கைகளின் வலிமைதான் எனக்கு உண்டு. இன்றோ நான்கு கைகளின் வலிமைக்கு நான் உரிமையாளன்.”
“எப்படி?”
“எப்படியா? இதோ இந்தப் பூங்கைகளும் சேர்த்து என் கைகளில் புதியவனாக இப்போது பிணைக்கப் பட்டிருக்கின்றன. இவற்றுக்காகவும் சேர்த்து நான் பொறுப்பு அடைந்திருக்கிறேன்” என்று சொல்லிப் பதுமையின் வளை குலுங்கும் பெண்மைக் கரங்களைத் தன்னுடைய மென்மைக் கரங்களால் பற்றினான் ஓவியன் மணிமார்பன்.
“ஏற்கெனவே மென்மையான கைகளிலே இன்னும் இரண்டு மெல்லிய கரங்கள் வந்து சேர்வதால் வலிமை கூடுவதற்கு வழி ஏது?”
“வழி இருக்கிறது.! உன்னைப்போல் மெய்யான அன்பைச் செலுத்துகிற அழகு வாய்ந்த மங்கல மனைவி ஒருத்தியே தன் கணவனுக்கு ஆயிரம் யானைகளின் பலத்தைத் தர முடியும். பதுமை!”
கணவனுடைய புகழ்ச்சியைக் கேட்டுப் பதுமை நாணிக் கண் புதைத்தாள். குனிந்த தலை நிமிராமல் கடலைப் பார்த்துக் கொண்டே கணவனை ஒரு கேள்வி கேட்டாள் பதுமை:
“ஒரு பெண்ணின் அழகும் மங்களமுமே உங்களைப் பலசாலியாக்கி யிருப்பதாக நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களே. பூம்புகார் நகரம் முழுவதும் தேடினாலும் கிடைக்காத இரண்டு பேரழகிகளின் அழகிய கைகளைப் புறக்கணிக்கிறவருக்கு அந்தப் புறக்கணிப்பால் நான்கு கைகளின் வலிமையல்லவா கிடைக்காமல் வீணாகப் போகிறது?”
“நீ யாரைப் பற்றிச் சொல்கிறாய், பதுமை?”
“அதோ அந்தக் கோடியில் நின்று கொண்டு உச்சி வானத்தில் கதிரவனின் ஒளியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாரே அவரைப் பற்றிச் சொல்கிறேன்” - என்று கப்பல் தளத்தின் மற்றொரு கோடியில் நின்று கொண்டிருந்த இளங்குமரனைக் காண்பித்தாள் பதுமை, அப்போது அவள் இதழ்களில் குறும்புப் புன்னகை முகிழ்த்தது. மணிமார்பன் தனது வலது கையால் அவள் முகத்தை நிமிர்த்தி அந்த மதி முகத்தின் கண்களில் வண்டு பறப்பது போல் சுழன்ற குறுகுறுப்பைப் பார்த்துக்கொண்டே அவளைக் கேட்டான்.
“பதுமை! உலகத்தில் அத்தனை குறும்புகளும் பெண்களாகிய உங்கள் பேச்சிலிருந்துதான் கிடைத்திருக்க வேண்டும். இதில் சந்தேகமே இல்லை. நீ ஒப்புக் கொள்கிறாயா இதை?”
“ஏன் அப்படி?”
“ஏனா? நான் எதையோ சொல்லத் தொடங்கினால் நீ எப்படியோ கொண்டு வந்து முடிக்கிறாய், பதுமை! பற்பல ஆறுகளுக்கு நீர் அளிக்கும் ஒரே மலையைப் போல் இளங்குமரன் தன்னுடைய பார்வையால், பேச்சால், நினைப்பால் பலருக்கு வலிமையை அளிக் கிறவர். முல்லையும் சுரமஞ்சரியும் அவரைப் பற்றி நினைப்பதனாலேயே தங்கள் அழகை வளர்த்துக் கொள்ள முடியும். தன்னைச் சேர்கின்ற கைகளுக்குத் தானே வலிமையளிக்கவல்ல அந்தப் பொற்கரங்கள் மற்றவர்களுடைய கைகளுக்கு ஆசைப்பட வேண்டியது அநாவசியம்! அவருடைய கைகள் ஆசைப்படுகின்றவை அல்ல. ஆசைப்படச் செய்கிறவை!”
“நீங்கள் எப்போதுமே உங்கள் நண்பருக்காக - தவறு தவறு. உங்கள் குருவிற்காக விட்டுக் கொடுக்காமல் பேசுகிறீர்கள்.”
“நீ மட்டும் என்னவாம்! உங்கள் பெண் இனத்துக்காக விட்டுக் கொடுக்காமல் பேசுகிறாயே.”
பதுமை சிரித்தாள். சித்திரத்தில் திட்ட முடியாத அந்தச் சிரிப்பின் நளினத்தில் தானே தூரிகையாகிக் குழைந்து இணைந்தான் மணிமார்பன் அவள் தன் முகத்தை மீண்டும் கடலின் பக்கமாகத் திருப்பிக் கொண்டாள். இருந்தாற் போலிருந்து. “அதோ.. அங்கே பாருங்கள்...” என்று பயத்தினால் முகம் வெளிறியபடி பதுமை சுட்டிக் காட்டிய திசையில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான் மணிமார்பன், அலைகளில் மிதக்கும் மரக் கட்டையொன்றில் மேலே சாய்ந்து படுத் தாற்போல் பற்றிக்கொண்டு செல்லும் மனித உருவம் ஒன்றைக் கண்டான். ஒரே ஒரு கணம் அந்த உருவம் அவர்களுடைய கப்பலின் பக்கமாக முகத்தைத் திருப்பிய போது “அவர்தான்! அவரேதான்” என்ற குரல் பதுமையின் இதழ்களிலிருந்து பயத்தோடு ஒலித்தது.
இருளில் தந்தையாரின் ஊன்று கோலைப் பார்த்து நடுங்கிய அதே இரவில் சுரமஞ்சரி தானும் வசந்தமாலையுமாகச் சிந்தித்துச் சிந்தித்து ஒரு முடிவு கிடைக்காமல் கலங்கும் படியாக நேர்ந்த மற்றொரு நிகழ்ச்சியும் நிகழ்ந்திருந்தது. அந்த நாளின் இரவு அவளால் மறக்கமுடியாதது. தானும் தோழியுமாகத் தங்கள் மாடத்தின் உட்புறம் நின்று பேசிக்கொண்டிருந்த போது பெருமாளிகையின் முன்புறம் வாயிலருகே யாரோ யாரையோ பளிரென்று அறைகிற ஒசை கேட்டதை உணர்ந்து விரைந்து சென்று பார்த்ததை எண்ணி எண்ணி மனம் குழம்பிக் கொண்டிருந்தாள். சுரமஞ்சரியின் சிந்தனையில் அப்போது சுழன்று கொண்டிருந்த எண்ணங்கள் யாவும் விடுவிக்க முடியாத புதிர்களாக இருந்தன. புதிர்களிலிருந்து விடுவிப்பதற்கு முன் தானே அங்கிருந்து விடுபட்டு ஓடிவிடலாம் போலத் தோன்றியது அவளுக்கு. அதுவும் இயலாமல் தான் காவலில் வைக்கப்பட்டிருப்பதை நினைத்தபோது தான் அவளுடைய வேதனை அடங்காமல் வளர்ந்தது. வேதனை வளரும்போது சிந்தனையும் வளர்ந்தது. பொதுவாகத் தங்களுக்குள் பலவீனமுடைய இருவர், பலமும் வலிமையும் கொண்டு எதையும் சந்திக்க முடிந்த ஆற்றல்கள் நிறைந்தவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்வதற்காக ஒன்று சேருவதுண்டு. நகைவேழம்பரை முற்றிலும் அடக்கியாள முடியாதபடி தந்தையாரிடம் உள்ள ஆற்றாமை என்ன? தந்தையாரை முற்றிலும் புறக்கணித்து விட்டுத் தனித்தவராக நிமிர்ந்து நிற்க முடியாதபடி நகைவேழம்பரிடம் உள்ள ஆற்றாமை என்ன? இரண்டு ஆற்றாமைகள் ஒன்றுபடுவதால் ஏதேனும் ஓர் ஆற்றல் தோன்ற முடியுமென்று அரசியல் நுணுக்கங்களைக் கூறும்போது திருவள்ளுவரைப் போன்ற புலவர்கள் தங்கள் நூல்களில் தெரிவித்திருப்பதை நினைத்துக் கொண்டாள் சுரமஞ்சரி. இந்தச் சிந்தனைப் புதிர்களுக்கு மேல் மற்றொரு புதிரும் மறுநாள் காலை அந்த மாளிகையில் அவளுக்காகக் காத்திருந்தது. தந்தையாரையும் நகைவேழம்பரையும் மறுநாள் காலையிலிருந்து அங்கே காணவில்லை. அவர்களை வசந்தமாலையோ தானோ நேரில் பார்க்க முடியாவிட்டாலும் மாளிகையில் ஏதாவதொரு பகுதியிலிருந்து அவர்கள் இருவரும் பேசுகிற குரலையாவது சுரமஞ்சரி கேட்பாள். மறுநாள் விடிந்ததிலிருந்து மாளிகையின் எந்தப் பகுதியிலும் தனியாகவோ, சேர்ந்தோ நகைவேழம்பர் - தந்தையார் இருவருடைய குரலும் கேட்கவில்லை. அந்த இரண்டு குரலும் கேட்காததனால் மாளிகையே மாறிப்போய்த் திடீரென்று புதுமை பெற்றுவிட்டாற் போலிருந்தது. முதல்நாள் இரவில் கண்டதையும் மறுநாள் காலையில் அவர்கள் இருவரும் காணாமற் போனதையும் சேர்த்து எண்ணி இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் ஏதேனும் காரண காரியத் தொடர்பு இருக்குமோ என்று நெஞ்சம் குழம்பினாள் சுரமஞ்சரி. நூலில் சிக்கல் விழுவதுபோல் ஒரு புதிரை அவிழ்க்கும் முயற்சியில் இன்னொரு புதிர் தோன்றிக் குழப்பத்தை மிகுதியாக்கியதே ஒழியத் தெளிவு பிறக்கவில்லை; புதிரும் விளங்கவில்லை.
“வசந்தமாலை! பார்த்தாயோ, இல்லையோ? இந்த மாளிகையின் இன்றைய நாடகத்தில் காட்சி மாறி விட்டது. நடிப்பும் மாறிவிட்டது. அவர்களுடைய பேச்சுக் குரலே கேட்கவில்லை. இன்னும் என்னென்ன கெடுதல்களுக்கு ஏற்பாடு நடக்கிறதோ, தெரியவில்லை” என்று தன் தோழியிடம் சொன்னாள் சுரமஞ்சரி. யாரிடமாவது ஒரு நோக்கமுமின்றிப் பேச்சுக் கொடுத்தாலும்கூட அப்போதுள்ள சூழ்நிலையில் அதுவே தன் மனதுக்கு ஆறுதலாயிருக்குமென்று அவள் எண்ணினாள்.
“இன்னும் சில நாட்களுக்கு இந்தப் பெரு மாளிகையில் இரைந்து கேட்கிற குரல்கள் எவையும் ஒலிக்காது அம்மா. உங்கள் தந்தையாரும் நகைவேழம்பரும் இன்று அதிகாலையிலேயே கடற் பயணத்துக்காகப் புறப்பட்டுப் போய்விட்டார்களாம். சீனத்திலிருந்து வந்து சேரவேண்டிய கற்பூரக் கப்பல் ஏதோ இதுவரை வரவில்லையாம். அதைத் தேடி எதிர்கொண்டு போயிருக்கிறார்களாம், திரும்பி வருவதற்குச் சில நாட்களாகும் போலத் தோன்றுகிறது. காலையில் மாளிகையின் கீழ்ப்புறத்திலிருந்து இங்கு வந்திருந்த பணிப் பெண்ணைக் கேட்டு இதைத் தெரிந்து கொண்டேன்” என்றாள் தோழி.
“அப்படியா? இதை என்னால் நம்ப முடியவில்லை! ஆனால் இதில் நம்பவும் இடமிருக்கிறது வசந்தமாலை. நேற்று இரவு நடுச்சாமத்துக்கு மேல் இதோ இப்போது நாம் நின்று கொண்டிருக்கிறோமே, இந்த இடத்திலிருந்து கீழே முன்புறத்து வாயிலருகே என்ன காட்சியைக் கண்டோம் என்பதை நினைவூட்டிக்கொள். தந்தையாரும் நகைவேழம்பரும் எதிரெதிரே எப்படி நின்றார்கள் என்பதையும் சிந்தித்துப் பார். இன்றைக்குக் காலையில் பொழுது விடிந்ததும் இவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து கப்பலில் புறப்பட்டுப் போயிருக்கிறார்கள் என்றால் யாராவது நம்புவார்களா?”
“நம்புவார்களோ, மாட்டார்களோ நடந்திருக்கிறது. இன்று வைகறையில் இங்கு வந்து இந்தச் செய்தியை எனக்குக் கூறிய பணிப்பெண் மிகவும் தன்மையானவள். நமக்கு மிகவும் வேண்டியவள். அவள் பொய் சொல்லியிருக்க மாட்டாள்.”
“வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்பதை வைத்துக் கொண்டு, நம்பிக்கையையும் அவநம்பிக்கையையும் தீர்மானம் செய்ய முடியுமானால் என்னுடன் பிறந்த வானவல்லியும், என்னைப் பெற்று வளர்த்த நற்றாயும்கூட இப்போது இந்த மாடத்திற்குள் எட்டிப் பார்க்காமல் இப்படிப் புறக்கணிப்பாக இருப்பார்களா? இந்தப் புறக்கணிப்பை என்னவென்று சொல்லுவது? இந்த மாளிகையில் நான் ஒருத்தி உயிரோடு இருப்பதை எல்லாருமே மறந்து போய்விட வேண்டுமென்று திட்டமிட்டுக் கொண்டவர்களைப் போல நிச்சயமாக மறந்தே போய்விட்டார்களடி வசந்தமாலை! இந்த மாளிகைக்கு உள்ளே தான் இப்படி என்றால் வெளியிலாவது என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பவர்கள் உண்டோ? அதுவும் இல்லை. நான் எதற்காக இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று எனக்கே விளங்கவில்லை தோழி! இந்த மாளிகை, இதிலிருக்கிறவர்கள் எனக்குத் தருகிற புறக்ககணிப்பு எல்லாவற்றையும் நான் இடைவிடாமல் நினைத்துக் கொண்டிருக்கிற ஒருவர் என்னைப் பற்றியும் சிறிது நினைக் கிறார் என்று நான் அறிய நேரும்போது இந்த உலகத்திலேயே நம்பிக்கை நிறைந்தவளாக நீ என்னைக் காணலாமடி வசந்தமாலை! நாம் வாழ்வதற்கு என்று தனியாக நமக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். அல்லது நம்முடைய வாழ்க்கையைக் கவனத்தோடு நோக்கிக் கொண்டிருப்பதற்குத் தனியாக ஒரு மனிதர் வேண்டும். இரண்டுமே இல்லாவிட்டால் உயிர் வாழ்வதில் பயன் என்ன? ஒன்றின் மறதி என்பது மற்றொன்றின் ஆழமான நினைவுதான்! மறப்பதற்கும் முடியாமல், நினைப்பதற்கும் பயனின்றி இப்போது நான் எப்படியோ வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”
“உங்கள் வேதனை எனக்குப் புரிகிறது, அம்மா! ஆனால் நான் என்ன செய்ய முடியுமென்றுதான் எனக்கும் தெரியவில்லை. உங்கள் தோழிக்கு உங்களிடம் நிறைந்த அநுதாபம் இருந்தும் அவள் வாயில்லாப் பூச்சியாயிருக்கிறாள் என்பதை நீங்களே அறிவீர்கள்.”
“நீ என்ன செய்வாய்? என்னைப் போலவே நீயும் சிறைப்பட்டிருக்கிறாய்! உனக்கு என் மேல் கனிவும், அநுதாபமும் இருப்பதே நீ எனக்கு இதயபூர்வமாகச் செய்யும் உதவிதான். அந்த அநுதாபத்தைக் கூட என் தாயும் சகோதரியும் எனக்கு அளிக்க முடியவில்லை போலிருக்கிறது, வசந்தமாலை! நீ எனக்கு அளித்துக் கொண்டு வருகிற பொருள் விலை மதிப்புக்கு அப்பாற்பட்ட பெறுமானமுடையது. மனத்தில் ஆழத்திலிருந்து கிடைக்கிற மெய்யான அநுதாபத்துக்கு விலையே யில்லையடீ...”
“உங்கள் தாயும், சகோதரியும் இயல்பாகவே இப்படி இருப்பார்களென்று என்னால் நம்பமுடியவில்லை. அம்மா! இதில் ஏதோ சூழ்ச்சி இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. உங்கள் தாயும் வானவல்லியும் வந்து உங்களைக் காணமுடியாதபடி ஏதேனும் பொய் சொல்லியிருப்பார்களோ என்று நான் சந்தேகப் படுகிறேன். வெறும் ஊன்றுகோலை நிறுத்தி வைத்தே இருட்டில் உங்களையும் என்னையும் பயமுறுத்தி விடலாமென்று கருதியவர், மற்றவர்களை வேறுவிதமாகப் பயமுறுத்தியிருக்க மாட்டாரென்பது என்ன அம்மா நிச்சயம்? ஒன்று உங்கள் தாயும் சகோதரியும் பயமுறுத்தப்பட்டு உங்களைப் பார்க்க வராமல் இருக்க வேண்டும். அல்லது ஏமாற்றப்பட்டு உங்களைப் பார்க்க வராமல் இருக்க வேண்டும். வேறுவிதமாக நினைப் பதற்கு என்னால் முடியவில்லை.”
“உண்மையில் இப்படி இருக்குமோ என்னவோ? ஆனால் உன்னுடைய பதில் எனக்கு ஆறுதலளிப்பதாயிருக்கிறது. நாம் எதையாவது நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அது முடியாவிட்டால் யாராலாவது நினைக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இரண்டுமில்லாமல் நடைப்பிணமாக வாழ்வதற்கு நம்மைப் போன்ற பெண்களால் ஆகாது. நான் அதியற்புதமான பேரழகு படைத்தவளென்று நீங்களெல்லாம் வாய்க்கு வாய் என்னைப் புகழுகிறீர்கள். இதோ இந்த மாடத்திலிருக்கும் நிலைக்கண்ணாடியும் என்னையே பிரத்தியட்சமாகக் காட்டி எனக்கே என் அழகை நிரூபிக்கிறது. ஆனால் நான் அழகாயிருக்கிறேன் என்பதை நீங்களும் இந்தக் கண்ணாடியும், இதற்கெல்லாம் மேலாகப் பூம்புகார் நகரமும் சொன்னால் கூட அவற்றுக்காக நான் பெருமைப்பட மாட்டேன். என்னுடைய அழகை யார் உணரவேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேனோ, அவர் உணர வேண்டும், அவர் நினைக்க வேண்டும். அவர் பாராட்ட வேண்டும். ஆகாயத்தை நோக்கி நிமிர்ந்து பெரிதாக எதையோ இலக்கு வைத்துக்கொண்டு பார்க்கும் அந்த நளின நயனங்களின் ஆண்மை திகழும் கம்பீரமான பார்வை கீழே குனிந்து என்னைப் பார்க்க வேண்டும். என்னைத் தேட வேண்டும், என் அதிகை நாட வேண்டும். இந்த ஆசை நிறைவேறாதவரை நான் நினைக்கிறவள்தான்; நினைக்கப்படுகிறவள் இல்லை. வசந்தமாலை ஒரு செய்தியை நான் எப்படி நினைக்கிறேனோ, அப்படியே உனக்குப் புரிய வைப்பதற்கு முடிந்த வார்த்தைகளை இப்போது நான் என்னுடைய பேச்சுக்காகத் தேடிக் கொண்டிருக்கிறேன். யாருடைய அழகில் நான் மனந் தோய்ந்திருக்கிறேனோ அவருடைய சொற்களாலேயே என்னுடைய அழகு அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன்...”
இவ்வாறு சொல்லிக்கொண்டே வந்த சுரமஞ்சரி சொற்களை நிறுத்திக்கொண்டு வசந்தமாலையின் கண்களை உற்றுப் பார்த்தாள். அந்தக் கண்களில் குறும்பு தெரிந்தது. எதையோ சொல்ல விரும்பும் ஆவலும் தெரிந்தது.
“நீங்கள் எதைச் சொல்லத் தவிக்கிறீர்களோ, அதையே உங்கள் சொற்களைக் காட்டிலும் நயமாக உங்களுடைய கண்கள் பேசுகின்றனவே அம்மா?”
“வாய் திறந்து பேசியே புரியாதவர்களுக்குக் கண்களால் பேசியும் பயனில்லை, தோழி! இரண்டு வகையான பேச்சிலும் இதுவரை எனக்குத் தோல்வி தான். தொடர்ந்து தோற்றுப் போய்க்கொண்டே வருகிறவள் ஆசைப்படும்படியாக இந்த உலகத்தில் என்ன மீதமிருக்கிறது?”
“வெற்றி மீதமிருக்கிறதே; அது போதாதா அம்மா? எதில் நிறையத் தோற்றுக் கொண்டிருக்கிறோமோ அதில் நிறையத் தாகம் கொள்வதும் தவிர்க்க முடியாதவை என்று நீங்களே சொல்வீர்களே...”
“பார்க்கலாம்! நான் சொல்லிக் கொண்டிருப்பதில் நானே தோற்றுப் போய்விட முடியாதென்பது என்ன உறுதி” என்று சொல்லிச் சிரிக்க முயன்று கொண்டே முதல்நாள் இரவிலிருந்து அந்த மாடத்தில் கிடந்த தந்தையாரின் ஊன்றுகோலைத் தன்போக்கில் கையிலெடுத்துச் சுழற்றினாள் சுரமஞ்சரி. ஒரு நோக்கமுமில்லாமல் தற்செயலாக அவள் செய்த இந்தச் செயலுக்கு முற்றிலும் எதிர்பாராத விளைவு ஒன்று ஏற்பட்டது. அந்த விளைவும் அதில் அடங்கியிருந்த உண்மையும் சுரமஞ்சரி வசந்தமாலை இருவரையுமே பெரு வியப்பில் ஆழ்த்தியது.
ஒன்றையும் செய்ய வேண்டிய குறிப்பில்லாத போது கைத்தினவாகத் தானே செய்யும் நோக்கமில்லாத காரியமாகத்தான் சுரமஞ்சரி ஊன்றுகோலின் பிடியைப் பற்றிச் சுழற்றினாள். இரத்தினக் கற்கள் பதிக்கப் பெற்றிருந்த அந்த யாளி முகப்பிடியோ மரைமரையாகக் கழன்று ஊன்றுகோலிலிருந்து தனியே பிரிந்து அவள் கைக்கு வந்துவிட்டது. பிடியும் ஊன்றுகோலும் தனித் தனியே கழன்றதற்காக மட்டும் சுரமஞ்சரியோ, வசந்தமாலையோ வியப்படையவில்லை. அவை தனித் தனியே கழன்றபோது அவற்றினிடையே சிறைப்பட்டுக் கிடந்த உண்மை ஒன்றும் கழன்று, வெளியேறித் தனியே தரையில் வீழ்ந்தது.
யாளி முகப்பிடி தனியே கழன்றபின் நீண்ட குழல் போலிருந்த ஊன்றுகோலின் உள்ளேயிருந்த சங்கு, சக்கரம், வில், வாள், கதை ஆகிய ஆயுதங்களைப்போல் சிறுசிறு பொன் வடிவங்களால் கோவை செய்யப்பட்ட ஆரம் ஒன்று வெளிவந்து கீழே விழுந்தது.
“இது ஐம்படைத்தாலி என்னும் ஆரம் அம்மா!” என்று சொல்லிக்கொண்டே கீழே குனிந்து அந்த ஆரத்தை எடுத்துத் தலைவியிடம் நீட்டினாள் வசந்தமாலை.
“சிறு குழந்தைகளுக்குக் காப்பிடும் போதல்லவா இதையும் அணிவார்கள்? இதை எதற்காக இந்த ஊன்று கோலுக்குள் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்?” என்று கேட்டுக்கொண்டே அதை வாங்கி வியப்புடன் பார்க்கலானாள் சுரமஞ்சரி.
“ஒருவேளை இந்த ஊன்றுகோலையே சிறு குழநதையாக நினைத்து உங்கள் தந்தையார் இதற்குக் காப்பிட்டிருக்கலாமோ, என்னவோ?” என்று நகை பாடினாள் வசந்தமாலை. சுரமஞ்சரி பதிலுக்கு நகைக்கவில்லை. அவள் சிந்தனையில் ஆழ்ந்தாள். அந்த ஊன்று கோல், அதன்பிடி, உள்ளேயிருந்த ஐம்படைத்தாலி யாவும் விடுபடாத புதிர்களாயிருந்தன அவளுக்கு. தந்தையாரும் நகைவேழம்பரும் கடற் பயணித்திலிருந்து திரும்புகிற வரை அந்தப் புதிர்களை விடுவிக்கும் தனது முயற்சிக்குத் தடையில்லை என்ற ஒரே ஆறுதல் மட்டும் அவளுக்கு இருந்தது.
மணிபல்லவத்துக்குச் செல்லும் கப்பலைப் பின் தொடர்ந்து படகில் சென்ற நகைவேழம்பரை எதிர்பார்த்துச் சீனத்துக் கப்பலின் தளத்திலேயே உச்சிப்போது வரை காத்திருந்தார் பெருநிதிச் செல்வர். பின்பு வெயிலின்.கொடுமையைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் கீழ்த்தளத்துக்கு வந்து அங்கிருந்தபடியே நகைவேழம்பர் திரும்பி வருவதை எதிர்பார்த்துச் சில நாழிகைகள் காத்திருந்தார். கற்பூரக் கப்பலின் உள்ளே கமழ்ந்த நறுமணம் ஏதோ ஒரு பெரிய கோவிலுக்குள் இருப்பது போன்ற சூழ்நிலையை உண்டாக்கிற்று. வேறு ஒரு படகின் துணை கொண்டு கப்பலில் இருந்து கற்பூரம், பனிநீர், குங்குமம் முதலிய நறுமணப் பொருள்களை முழுவதும் பண்டகச் சாலைக்குள் இறக்கி முடிக்கும் போது கதிரவன் மறையும் தருணம் ஆகிவிட்டது. நகைவேழம்பர் சென்றிருந்த படகு திரும்பி வருகிறதா என்று பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்துப் போயிற்று அவருக்கு. மேலும் சிறிது நேரம் பொழுதைக் கடத்துவதற்காக அந்தக் கப்பலின் தலைவனாகிய சீனனோடு அவர் பேச்சுக் கொடுத்தார். அதில் சிறிது நேரம் கடந்தது.
மருள் மாலை நேரம் முதிர்ந்து மெல்ல மெல்லப் போது இருட்டியது. கடற்கரையிலும், துறைமுகத்திலும் தீபங்கள் தென்பட்டன. கலங்கரை விளக்குகளின் உச்சி யில் நெருப்பு மூட்டினார்கள். கடலுக்குள் சென்றிருக்கும் பரதவர்கள் திரும்பி வருவதற்கு அடையாளம் போல் கரையோரத்துப் பெருவீடுகளின் மாடங்களில் விளக்கு வரிசைகள் தோன்றின. பல்வேறு திசைகளின் நாடுகளிலிருந்து நீண்ட நாட்கள் கடற் பிரயாணம் செய்து கரையடைந்திருந்த கப்பற்காரர்களின் களியாட்டங்கள் தொடங்கி வளரும் நேரமாதலால் அப்போது பூம்புகார்த் துறைமுகம் இரவில் கொலுவிருக்கும் பேரரசிபோல் பொலியத் தொடங்கியிருந்தது. கப்பல்களின் தளங்களில் இருந்து இனிய இசைக் கருவிகள் ஒலித்தன. களிப்பில் மூழ்குவோர் கூவும் ஆரவாரக் குரல்கள் துறைமுகப் பரப்பில் எங்கும் எதிரொலித்தன. நடன நங்கையர்கள் ஆடும் நளின பாதசரங்களின் இனிய ஒலிகள் எங்கும் கிளர்ந்தன. துறைமுகத்தின் எதிரே கடற்பரப்பில் தொலைவிலிருந்து வரும் ஒளிப் புள்ளிகளை இதுவாக இருக்குமோ, அதுவாக இருக் குமோ என்று எண்ணி எண்ணி அநுமானம் செய்தபின் அவை ஒன்றுமே அதுவாக இல்லாததை அறிந்து ஏமாந்து கொண்டிருந்த பெருநிதிச் செல்வர் இறுதியில், சீனத்துக் கப்பல் தலைவனிடமிருந்து ஒருவாறு விடை பெற்றுக் கொண்டு பெரு மாளிகைக்குப் புறப்பட்டு விட்டார். மணிபல்லவத்துக் கப்பலைத் துரத்திக் கொண்டு போன நகைவேழம்பர் திரும்பி வந்தால் அவரிடம் தான் பெருமாளிகைக்குப் போய் விட்டதாகக் கூறி அவரையும் அங்கு அனுப்புமாறு சொல்லி ஏற்பாடு செய்துவிட்டுத் தாம் மட்டும் தனியாகவே திரும்பினார் பெருநிதிச் செல்வர்.
‘இந்த அரைக் குருடனுக்காக இவ்வளவு நேரம் காத்திருந்ததே அதிகம். கப்பலில் வந்த களைப்புத் தாங்க முடியவில்லை. பெருமாளிகைக்குப் போய் உடலுக்கு இதமாகக் காய்ச்சிய தைலத்தைப் பூசிக் கொண்டு வெந்நீரில் ஆடவேண்டும். யாராவது ஒரு முரட்டு யவனப் பணியாளனைத் தைலம் தேய்த்துவிடச் சொன்னால் பயணம் செய்துவிட்டு சோர்வோடு வந்த உடலுக்குப் பரம சுகமாயிருக்கும். வெவெதுப்பாக அவி சுழலும் வெந்நீரில் குளித்துவிட்டு வயிறார உணவும் முடித்தால் இந்த உலகத்தையே விலையாகக் கொடுக்கலாம் போல் அவ்வளவு நல்ல உறக்கம் இரவில் வந்து கொஞ்சும். நன்றாக உறங்கிவிட்டு நாளைக்குப் பொழுது விடிந்ததும் மற்றவற்றைக் கவனிக்கலாம்! நகைவேழம்பர் திரும்பி வந்தாரா, வரவில்லையா என்பதைப் பற்றிக்கூட இனிமேல் நாளைக்குப் பொழுது விடிந்து கண் விழித்த பின்புதான் கவலைப்பட முடியும். வேறு எந்தக் கவலையும் குறுக்கிட்டு இன்று இந்தத் தூக்கத்தைக் கெடுத்து விடக்கூடாது. இன்று இப்போது நான் படுகிற கவலைகள் இரண்டே இரண்டுதான். ஒன்று நல்ல உணவு, இரண்டு ஆழ்ந்த தூக்கம். கவலைதான் உறக்கத்துக்குப் பெரும் பகை’ என்று சுகபோகங்களைப் பற்றிய சுவையான சிந்தனையுடனே பெருமாளிகைக்குத் திரும்பியிருந்தார் பெருநிதிச் செல்வர். சொந்தச் சுகபோகங்களைப் பற்றிச் சிந்திப்பதற்குக் கூடத் தாம் தனியாயிருக்கும் போதுதான் அவருக்குச் சுதந்திரம். நகைவேழம்பர் கூட இருந்தால் சில பயங்களால் சொந்தச் சுகபோகங்களை நினைக்கக் கூடத் தோன்றாது அவருக்கு, தாம் சுகபோகங்களை ஆள முடிந்தவர் - என்றோ சுகபோகங்களுக்கு அதிபதி - என்றோ நினைப்புக்களை நினைத்துப் பெருமி தப்படுவதைக்கூட நகைவேழம்பர் தம் அருகிலிருக்கும் போது செய்வதற்குத் தயக்கமாகவோ அருவருப்பாகவோ இருக்கும் அவருக்கு. அதற்கு எத்தனையோ இரகசியக் காரணங்கள் இருந்தன. அவை பெருநிதிச் செல்வரே இரண்டாவதுமுறை சிந்தித்துப் பார்ப்பதற்கு அஞ்சுகிறவை. இன்று நகைவேழம்பர் அருகில் இல்லாததனால் தம் சுகபோகங்களைப் பற்றிய நினைவு அவருக்கு வந்தது. மனிதர்களில் சிலர் பக்கத்திலிருந்தால் தாங்கள் அப்படி யார் பக்கத்தில் நிற்கிறார்களோ அவர்களுடைய சிந்தனையே சுதந்திரமாக வளராதபடி செய்து கொண்டிருப்பார்கள். பேய் பிடித்துக் கொண்டு ஆட்டுவது போல் பிறருடைய சிந்தனை தன்னிச்சையாக வளர முடியாமல் பிடித்துக் கொண்டு ஆட்டுகிற இத்தகைய மனிதர்களும் பேய்த்தன்மை பெற்றவர்களே. நகைவேழம்பரும் இப்படிப் பெருநிதிச் செல்வரைப் பேயாகப் பற்றிக் கொண்டு ஆட்டியவர்தான்.
இன்று இப்போது இந்த விநாடியில் அந்தப் பேய் தன் அருகில் இல்லை என்பதை உணர்ந்தபோதுதான் தாம் சற்றே சுதந்திரமாக இருப்பது போலத் தோன்றியது பெருநிதிச் செல்வருக்கு. சுதந்திரமாகத்தான் இருக்கிறோம் என்பதைத் தனக்குத்தானே நிரூபித்துக் கொள்வதற்காகவாவது தன்னிச்சையாய் எதையேனும் செய்து பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டார் அவர்.
ஒளிமிக்க கருங்கல்லில் செதுக்கிய மல்லனின் சிலை போலிருந்த வலிய ஊழியன் ஒருவன் அவரை அமரச் செய்து மருந்துப் பொருள்கள் இட்டுக் காய்ச்சிய தைலத்தை உடம்பில் நன்றாக அழுத்தித் தேய்த்து விட்டான். தம்முடைய உடம்பின் தசைத் தொகுதியை அந்த ஊழியனின் கைகள் அழுத்திப் பிடித்துப் பிசையும் போது கடற்பயணத்தினால் ஏற்பட்ட சோர்வு பஞ்சாய்ப் பறந்து போனது போலிருந்தது அவருக்கு, வெந்நீரில் குளித்து முடித்தபின் விதவிதமான வகைகளில் சுவையோடு சமைத்திருந்த உணவை, உடனே தூக்கம் வந்து விடுவதற்கான பெருஞ் சோர்வு ஏற்படும்படி அவர் நிறைய உண்டார். கண்ணிமைகளில் வந்து கொஞ்சும் உறக்கத்தோடு பஞ்சணையில் போய் விழுந்தார். அதற்குப் பின்பு மறுநாள் போது விடிந்ததைக்கூட அவர் காணவில்லை. அவ்வளவு சுகமான உறக்கம்.
உறக்கம் கலைந்து அவர் கண்விழித்து எழுந்து பள்ளியறை வாயிலுக்கு வந்த போது பொழுது விடிந்திருப்பதுடன் எதிர்ப்புறமிருந்து எதிர்பாராத பகை உதயமாகித் தம்மை நோக்கி வந்து கொண்டிருப்பதையும் கண்டார்.
தீக்காயம் பட்டிருந்த முகமும் நடுநடுவே கசங்கிக் கடல் நீரில் நனைந்ததால் முடை நாற்றமடைந்து சில இடங்களில் கருகியிருந்த ஆடையுமாகப் பொழுது விடிந்ததனால் எங்கோ போய்விட்ட இருளே விடிந்ததைப் பார்க்கும் ஆசையோடு ஒர் உருவமாகி வந்தது போல நகைவேழம்பர் எதிரே வந்துகொண்டிருந்தார். முற்றிலும் கனியாமல் காய் நிலைமை மெல்ல மாறி கனியத் தொடங்கியிருந்த நாவற்காய் போல் அவருடைய ஒற்றைக் கண் செக்கச் செவேலென்று கனன்று கொண்டிருந்தது. கடலில் நீண்ட தொலைவு நீந்தி வந்த துன்பம் அவர் நின்ற கோலத்திலிருந்தே தெரிந்தது.
முதல்நாள் இரவு தான் அநுபவித்த அற்பச் சுகங்களைப் பறித்துக்கொண்டு போக வந்த பூதம் போல் எதிரே பாய்ந்து வருகிற இந்த இருளைப் பெருநிதிச் செல்வர் மருட்சியோடு பார்த்தார்.
எதிர்ப்புறமிருந்து இடி முழக்கம் கேட்டது: மின்னல் சிறியது. செங்காய் போலக் கனன்று மின்னும் ஒற்றைக் கண் பாயும் புலிப்பார்வை பார்த்தது. சொற்கள் ஊழிப் பெரும் புயலாய் ஒலித்தன.
“நான் சாகவில்லை! உயிரோடு பிழைத்துத்தான் வந்திருக்கிறேன்! ஆனால் இப்போது என் நெஞ்சும் கைகளும் துடிக்கிற துடிப்பைப் பார்த்தால் யாரையாவது சாகவைக்க வேண்டும்போல் எனக்கு ஆசையாயிருக் கிறது. இப்போது என் உடம்பில் ஊறும் கொலை வெறியை எதைச் செய்தாவது நான் தணித்துக் கொண்டு தான் ஆக வேண்டும். நான் யாரையாவது கொல்ல வேண்டும். அல்லது என்னையே நான் கொன்றுகொள்ள வேண்டும்!. என்ன சொல்லுகிறீர்கள் பெருநிதிச் செல்வரே?...”
பெருநிதிச் செல்வருக்குச் சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. கண்கள் மட்டும் விரிய விரிய விழித்துக் கொண்டு எதிரே பயத்தோடு பார்த்தன.
சொப்பனம் கண்டது போல் சிறிது போதுக்கு மட்டும் வாய்த்திருந்த முதல் நாள் சுகங்கள் மறைந்த இடம் தெரியாது போக எதிரே வந்து நிற்கும் துன்பத்தை எப்படி ஆற்றி வழிப்படுத்த முடியும் என்று சிந்திக்கலானார் பெருநிதிச் செல்வர். கோபத்திற்கு பதில் கோபம் என்கிற முறையில் தாமும் சீறினால் காரியம் கெட்டுவிடும் என்று அவருக்குத் தோன்றியது. எதிரிகளை வெல்லும் தந்திரங்களில் தலையாய தந்திரம் எதிரி சீறும்போது நாம் பயப்படுவதுபோல் சிரித்துக் கொண்டே நிதானமாயிருந்து விடுவதுதான்! எதிரியின் கோபத்தைக்கூட அலட்சியம் செய்ய வேண்டிய நிலையில் அப்போது இருந்தார் அவர்.
எதிரே வந்து நிற்கிற பகைவனிடமிருந்து வெம்மையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் உடனே வேர்த்து விதிர்விதிர்க்கும் படியான சொற்களை அடைந்தாலும் அந்த வெம்மையில் அப்போதே அழிந்து விடாமல் தாங்கிக் கொண்டு நிற்க வேண்டும். அப்படி நிற்பதுதான் - திண்மை என்று எண்ணித் தம்மைத் தாமே திடப்படுத்திக் கொள்ள முயன்றும், பயந்து பயந்து பழகிவிட்ட காரணத்தால் வழுக்கு மரம் ஏறினாற்போல் இடையிடையே தாம் மேற்கொண்டிருந்த உறுதியைப் பற்றிக்கொள்ள முடியாமல் கீழே நழுவினார் பெருநிதிச் செல்வர்.
‘பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த் துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.’
என்ற அரசியல் நூல் நுணுக்கம் நினைவு வந்து மனத்தைப் பலப்படுத்தியும்கூட அரிய முயற்சியின் பேரிலேயே எதிரியின் கோபத்தை அவரால் அலட்சியம் செய்ய முடிந்தது.
எரிகின்ற நெருப்பு மலையொன்று கனன்று கொண்டே வந்து எதிரே நிற்பதுபோல் நிற்கும் நகை வேழம்பரைக் கண்டு அவருடைய அந்தக் கோபத்தை எப்படி வரவேற்று ஒடுக்குவதெனச் சிந்தித்தார் பெருநிதிச் செல்வர். எந்த வகைக் கோபத்திற்காக அதை எதிரே காணும்போதே வேர்த்து விதிர்விதிர்க்கக் கூடாதோ அந்த வகைக் கோபம்தான் அது! பின்னால் ஏற்ற சமயம் வரும்போதுதான் அந்தக் கோபத்திற்காக வேர்க்க வேண்டும் - என்று பொருள் நூல் சிந்தனைகளைத் தனக்கு அரணாக ஏற்படுத்திக் கொண்டு பாதிப் பயமும் பாதித் துணிவும் கலந்த நிலையில் பெருநிதிச் செல்வர் எதிராளியைப் பார்த்துச் சிரிக்க முயன்றார். தம்முடைய சிரிப்பு எதிரியின் முகத்தில் எந்தவிதமான விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று கண்டதும் களத்தில் வெற்றியும் இன்றி வீரமரணமும் எய்தாமல் உயிரோடு தோற்றுப்போய் நிற்பதுபோல் தாமும் அப்போது தயங்கி நிற்பதாக உணர்ந்தார் அவர். அவருடைய சிரிப்பு நகைவேழம்பரின் சினத் தீயை ஆற்றுவதற்குப் பதில் வளர்த்தது.
“என் கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லவில்லை. என் நெஞ்சின் சூடு விநாடிக்கு விநாடி வளர் கிறது. எதையாவது உடனே அழித்தொழிக்க வேண்டும் என்று என் கைகள் ஊறுகின்றன. என் எதிரே வந்து நின்றுகொண்டு நீங்கள் சிரிக்கிறீர்கள்!”
“முதலில் உங்கள் கோபத்தை அழித்தொழியுங்கள்! இப்போது உடனடியாக நீங்கள் அழிக்க வேண்டிய பொருள் அதுதான். தனக்குத் தோல்வி வருகிறபோது கோபப்படுகிறவன் உண்மையான பலசாலியில்லை. நம்முடைய வாயிலின் வழியே தோல்வியும் கோபமும் சேர்ந்து உள்ளே நுழைகிறபோது தோல்வியை மட்டும் அழைத்துக் கொண்டு கோபம் உள்ளே புகுவதற்கு முன்னாலேயே கதவை அடைத்துவிட வேண்டும். இரண்டையுமே சேர்த்து உள்ளே வரவேற்றுக் கொண்டால் அதற்காகப் பின்னால் வேதனைப்பட நேரும். வெற்றியின்போது வெளிப்படையாக மிதமிஞ்சிய மகிழ்ச்சி கொள்வது எப்படிக் கெடுதலோ, அப்படியே தோல்வியின்போது கோபப்படுவதும்கூட கெடுதல்” என்று தம் நிலையை உயர்த்திக் கொண்டதுபோல் பாவித்துக்கொண்டு தமது இயல்போடு ஒட்டாத அறிவுரையைப் போலியாகக் கூறினார் பெருநிதிச் செல்வர். ஆனால் மனத்திலிருந்து சுயமாக எழாத அந்த போலி அறிவுரையாலும் எதிராளி வந்து நிற்கும் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வலையில் சிக்காமல் திமிறிக் கொண்டு வலையையே அறுக்க முயலும் முரட்டு மீனைப்போல் கட்டறுத்துக் கொண்டு மீறும் உணர்ச்சிகளோடு நின்றார் நகைவேழம்பர்.
“ஐயா! பெருநிதிச் செல்வரே! மன்னிக்க வேண்டும், நீங்கள் உண்மையை மாற்றிச் சொல்கிறீர்கள். இது என்னுடைய தோல்வி அல்ல. உங்களுடைய தோல்விதான். நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்.”
“அது எப்படி?”
“அந்த மணிபல்லவத்துக் கப்பலைத் துரத்திக் கொண்டு சென்று நடுக்கடலில் தீ வைத்து மூழ்கச் செய்துவிடுமாறு கூறி நீங்கள் என்னை அனுப்பியபோது உள்ளுற என்ன நினைத்துக் கொண்டு அனுப்பினீர்கள் என்கிற இரகசியத்தை இப்போதாவது என்னிடம் சொல்வீர்களா?”
“அதில் உங்களுக்கும் எனக்கும் தெரியாத புது ரகசியம் வேறு என்ன இருக்கிறது?”
“இல்லை என்றுதான் நீங்கள் சொல்வீர்கள். ஆனால் இருக்கிறது, இருப்பதாக நான் புரிந்துகொண்டேன்.”
“நீங்கள் புரிந்துகொண்டதைச் சொல்லுங்களேன்.”
“நான் துரத்திக் கொண்டுபோன படகுக்குள் கற்பூரம் குவிந்திருந்தது எனக்குத்தான் மறந்துவிட்டது. நீங்களாவது அதை நினைவுபடுத்தி என்னை வேறு படகில் ஏற்றி அனுப்பியிருக்கலாம். வேண்டுமென்றே இப்படி அனுப்பினர்கள் போலும். படகோட்டியும் அதை என்னிடம் கூறவில்லை. நான் படகிலிருந்து தீப்பந்தங்களை வீசும்போது கப்பலில் இருந்து எதிரிகள் பதிலுக்கு நெருப்பிட்டால் என் படகு பற்றி எரிந்து நான் மாண்டுபோய்விட வேண்டும் என்பதுதானே உங்கள் இரகசியத் திட்டம்? ஆனால் நான் நீங்கள் திட்டமிட்டு நினைத்தபடி மாண்டு போகவில்லை. தீக்காயம் பட்டுச் சிதைந்த படகின் மரச் சட்டத்தைப் புணையாகப் பற்றிக்கொண்டு மிதந்தும் நீந்தியும் அரும்பாடுபட்டுக் கரை சேர்ந்துவிட்டேன். இது என் உயிருக்கு வெற்றி. உங்கள் முயற்சிக்குத் தோல்வி. அண்மையில் சில ஆண்டுகளாக நீங்கள் என்னை ஒழித்துவிட முயலும் சந்தர்ப்பங்கள் அதிகமாகிக் கொண்டே வருவதை நானும் உணர்கிறேன்.”
“ஒருபோதும் அப்படி இல்லை! நீங்கள் தப்புக் கணக்குப் போடுகிறீர்கள், நகைவேழம்பரே...”
“புதிதாகத் தப்புக் கணக்குப் போடவில்லை. தொடக்கத்திலிருந்தே நாம் தப்பாகத்தான் கணக்குப் போட்டுக் கொண்டு வருகிறோம் ஐயா! தொடக்கத்தி லிருந்தே தப்பாகத் தொடங்குகிற கணக்கில் முடிவுவரை தப்புக்கள் பெருகிக் கொண்டுதான் இருக்கும்.”
“இந்தப் பேச்சுக்கு அர்த்தம்?”
“பழைய அர்த்தம்தான். புதிதாக ஒன்றும் இல்லை. நாம் ஒருவரையொருவர் நம்பவில்லை. நம்புவதாக நடிக்கிறோம். இருவரும் தனித்து வாழ முடியாது. சேர்ந்து வாழ முயல்கிறோம். அதுவும் முடியாது போலிருக்கிறது.”
“ஏன் முடியாது என்று நினைக்கிறீர்கள்?”
“அதற்கான அறிகுறிகள் உங்களிடமிருந்து எனக்குத் தென்படுகின்றன. நான் ஒவ்வொரு கணமும் உங்களைக் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். என் சந்தேகம் சிறிது சிறிதாக வளர்கிறது.”
“சந்தேகம் என்பது கண்ணாடியில் முகம் பார்ப்பதைப் போல. நீங்கள் எந்த உணர்வோடு நிற்கிறீர்களோ அதுதான் எதிரேயிருந்து உங்களுக்குத் தெரிகிற உணர்வாகவும் இருக்கும். நீங்கள் என்னைச் சந்தேகப்படுவதாகத் தோன்றினால் அதே உணர்வுதான் எதிரேயிருக்கிற என்னிடமிருந்தும் உங்களுக்குத் தெரியும்! சீனத்துக் கப்பலில் இருந்து பண்டம் இறங்கிக் கொண்டிருந்த படகில் உங்களை அனுப்பியபோது நீங்கள் எந்தக் கப்பலை அழிக்க வேண்டும் என்று அனுப்பப்பட்டீர்களோ அந்தக் கப்பலை அழித்து விட்டுச் சுகமாகத் திரும்பி வருவீர்கள் என்ற நல்ல எண்ணத்தோடுதான் உங்களை அனுப் பினேன் நான். நீங்கள் எந்தப் படகில் புறப்பட்டீர்களோ அதன் ஒரு பகுதியில் கற்பூரம் குவிக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்று நீங்களல்லவா புறப்படுமுன் கவனித்திருக்க வேண்டும்? வேறு எந்தக் கெட்ட நினைப்பும் உங்களைப் பொறுத்தவரை எனக்குக் கிடையாது. நீங்கள் இப்போது திரும்பி வந்திருக்கிற கோலத்தையும் கோபத் தையும் பார்த்தால் உங்கள் படகு தீப்பற்றி கவிழ்ந்த பின் துன்புற்று நீந்தி வந்திருப்பதாகத் தெரிகிறது. நீங்கள் உயிர் பிழைத்து வந்திருப்பதால் மகிழ்ச்சியும், உங்களுக்கு நிறையத் துன்பங்கள் ஏற்பட்டிருப்பதனால் வருத்தமும் அடைகிறேன் நான். காரணமின்றி நீங்கள் என்மேல் கோபமும் சந்தேகமும் கொள்வதைப் பற்றி அநுதாபமும் அடைகிறேன், நகைவேழம்பரே!”
“நீங்கள் இப்போது அடைகிற மகிழ்ச்சி, வருத்தம், அநுதாபம் எல்லாம் மெய்யானவைதாமா என்று நினைக்கிறேன். காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காக அவ்வப்போது ஏற்படுகிற சந்தர்ப்ப உணர்வுகளில் இவையும் சேருமானால் நான் இவற்றை நம்பிப் பயனில்லை.”
“நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வதற்கு ஒரே வழி அவநம்பிக்கைப் படாமல் இருப்பதுதான் என்று இரு காமத்திணை ஏரியருகே காமன்கோட்டத்தை ஒட்டியிருந்த நாணற் படுக்கையில் பல நாட்களுக்கு முன்பு நீங்களே என்னிடம் கூறியது உங்களுக்கு மறந்து போய்விடவில்லையே?”
இவ்வாறு பெருநிதிச் செல்வர் கேட்டபோது இந்தக் கேள்வியால் நகைவேழம்பரின் மனத்தில் எந்த உணர்வு கிளர்ந்ததோ தெரியவில்லை! குபிரென்று நெருப்புப் பற்றினாற் போல் மீண்டும் முதலில் அங்கு வந்து நுழைந்த போதிருந்த சிற்றத்தை அடைந்தார் அவர். ஆத்திரத்தில் நெடுநேரமாகச் சொல்வதற்குத் தயக்கப்பட்டுக் கொண்டிருந்த செய்தி ஒன்றை உடனே சொல்லிவிடும் துணிவு வந்து விட்டாற்போல் அப்போது பேசலானார் நகைவேழம்பர்.
“நினைவூட்டக் கூடாத நிகழ்ச்சியை இப்போது உங்களுக்கு நினைவூட்டுகிறேன்! இனி நான் பொறுமையிழந்துவிட்டேன். எனக்கு அந்தப் பயங்கரமான இரவு நினைவு வருகிறது. நீங்களும் நினைத்துக் கொள்ளுங்கள். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த நிகழ்ச்சி யானாலும் நினைக்கும்போது இன்றே நடந்ததுபோல் குடல் பதறவில்லையா உங்களுக்கு? சக்கரவாளக் கோட்டத்து வன்னி மன்றத்துக்குப் பின்னால் உள்ள கொடி வழியில் பல ஆண்டுகளுக்கு முன்னால் பேரிருட் பக்கமாகிய கிருஷ்ணபட்சத்து அமாவாசை இரவில் அரும்பு மீசையும் புன்னகை வடியும் முகமுமாக வந்து நின்ற காலாந்தகனை எப்படித் துடிக்கத் துடிக்கக் கொலை செய்தோம் என்பதை நினைக்கும்போது உங்களுக்கு உடல் சிலிர்க்கவில்லையா? வன்னி மன்றத்துக்கு அப்பால் கொடி வழியின் அருகே கொன்றைப் புதருக்குள் யாரையோ பிடித்து அறையக் காத்திருப்பது போல் பாய்ந்து கொண்டு நிற்கும் அந்தப் பூதச்சிலையின் கீழே பைரவிப் பேய் மகள் ஒரு கையையும் நான் ஒரு கையையும் பற்றித் திமிறிவிடாமல் காலாந்தகனை அடக்கிக் கொண்டபோது, ஆந்தையும் கோட்டானும் அலறிய அலறலில் அந்த உயிரின் அலறலும் கலந்து கேட்டு ஒடுங்கும்படி நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை இந்தக் கணத்தில் நினைத்துப் பாருங்கள்! கொன்றைப்புதரின் பள்ளத்தில் நின்ற போதும் பூதச்சிலையின் முழங்கால் வரை உயரமாயிருந்த அந்தக் கம்பீரமான ஆண்மகனை அழிப்பதற்காக அவன் கழுத்துப் பிடரி உங்கள் கைக்கு எட்ட வேண்டும் என்று நீங்கள் பூதச் சிலையிருந்த மேடையில் அதன் பீடம் வரை ஏறி நின்றுகொண்டு உங்களுடைய கைகள் நடுங்கவும் அவனுடைய உடம்பில் உயிர் துடி துடிக்கவும் செய்தீர்களே; அதே காரியத்தை உங்களுக்கு நானே செய்துவிடும்படி நேர்ந்த சமயங்களில் எல்லாம் ‘இப்போது வேண்டாம். பின்னால் இன்னும் நல்ல சமயம் வரும்’ என்று எண்ணி எண்ணித் தள்ளிக் கொண்டே வந்திருக்கிறேன் நான்! கதிரவன் உதயமாகிற இந்த வைகறை வேளையில் இதைக் கேட்டு ஏன் இப்படி நடுங்குகிறீர்? சக்கரவாளக் கோட்டத்துக் கொன்றைப் புதருக்கும், அந்தப் பூதச் சிலைக்கும் வாயிருந்தால் காலாந்தகன் துடிதுடித்து இறந்த வேதனையை இன்னும் உலகத்துக்குச் சொல்லுமே? பைரவியும் நானும் உயிருள்ளவர்களாயிருந்து அந்தக் கொலைக்கு ஒத்துழைத்துவிட்டு இப்போது சொல்லவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் வார்த்தைக்குக் கட்டுப்பட்ட ஊமைகளாய் நிற்கிறோம். நீங்களோ எனக்கு நம்பிக்கையையும், நிதானத்தையும் பற்றி இன்றைக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.”
காலாந்தகன் கொலையைப் பற்றி நகைவேழம்பர் வாயிலாகக் கேட்க நேர்ந்தபோது பெருநிதிச் செல்வர் தீக்குழியில் நிற்பதுபோல் வெந்து வேர்த்து நடுங்கினார். சற்றுமுன் யாருடைய முன்னிலையில் வேர்க்கலாகாது என்று அவர் எண்ணினாரோ, அது இயலவில்லை. குரலிலும் அந்த நடுக்கம் தோன்றி அவர் மெல்லப் பேசினார்:
“அன்றைக்கு, அந்த இரவில் காலாந்தகனைக் கொன்றிருக்கவில்லையானால் இன்றைக்கு நீங்களும், நானும், பைரவியும் எமபுரியில் இருப்போம்.”
“நான் சொல்ல வந்தது அதற்கல்ல, பெருநிதிச் செல்வரே! காலாந்தகனுக்கு நீங்கள் நடத்திய உபசாரத்தையே உங்களுக்கும் நான் செய்ய அதிக நாழிகை ஆகாது. நானும், பைரவியுமே அதைச் செய்வதற்குப் போதும்” என்று நகைவேழம்பர் சுடச்சுடச் சொல்லிய போது அவர் தன்னைச் செய்வதாகச் சொல்லியதையே உடன் செய்துவிட்டதுபோல் இருந்தது பெருநிதிச் செல்வருக்கு. ‘காலாந்தகன்... காலாந்தகன்’ என்று நெருப்பை நாவினால் தீண்டுவதுபோல் அந்தப் பெயரை வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டே அப்படி முணுமுணுக்கும் ஒவ்வொரு முறையும் தன் நெஞ்சில் தானே கத்தியால் குத்திக் கொள்வதுபோல் வலிகண்டு துடித்தார் பெருநிதிச் செல்வர்.
“உங்கள் தந்தையார் கடற் பயணத்திலிருந்து திரும்பி வந்துவிட்டார் போலிருக்கிறதம்மா! கீழே அவருடைய பேச்சுக் குரல் கேட்கிறது” என்று வசந்தமாலை அன்று சாயங்காலம் கூறியபோது சுரமஞ்சரி தான் அதற்காக எந்தவிதமான மனக் கிளர்ச்சியும் அடைந்ததாகக் காண்பித்துக் கொள்ளவில்லை. அதைக் கேட்காது போலவே இருந்துவிட்டாள். ஒளி சாய்ந்து இருட்டுத் தொடங்கியிருந்த பொழுதாகையால் தலைவியின் முகத்தையும் அப்போது வசந்தமாலையால் பார்க்க முடியவில்லை. தோழி மறுபடியும் பேச்சுக் கொடுத்தாள்:
“தந்தையாரோடு கூடப் போயிருந்த நகைவேழம்பர் திரும்பி வரவில்லையாம் அம்மா! தந்தையார் மட்டும் மிகவும் களைப்போடு திரும்பி வந்திருக்கிறாராம். வழக்கமாக வந்து போகிற பணிப்பெண்தான் இதையும் சொன்னாள். நெடுந்தொலைவு கடற் பயணம் செல்லும் போதெல்லாம் இருவரும் சேர்ந்து போவதைப் போல் திரும்பும் போதும் சேர்ந்தே திரும்பி வருவார்கள். இந்தப் பயணத்தின்போது முதன் முறையாக இன்றுதான் அந்த வழக்கம் மாறியிருக்கிறது. உங்கள் தந்தையார் மட்டும் தனியே திரும்பி வந்திருக்கிறார்! பல நாட்களுக்குப் பின்பு பெருமாளிகையில் மீண்டும் அவருடைய குரல் தனியாகக் கேட்கிறது.”
“போதுமடி வசந்தமாலை ! இவர்கள் இரண்டு பேரையும் தவிர வேறு யாரையாவது நல்லவர்களைப் பற்றிச் சிறிது நேரம் பேசு. குழப்பங்களையும், கவலைகளையும் உண்டாக்கும் மனிதர்களைப் பற்றியே எல்லா நேரங்களிலும் பேசிக்கொண்டிராதே!” என்று வேதனை யோடு சலித்துக் கொண்டாள் சுரமஞ்சரி. தலைவியின் இந்த வார்த்தைகளில் இருந்த கசப்பை உணர்ந்தபின் சிறிது நேரத்துக்குத் தான் எதுவுமே பேசாமல் மெளனமாக இருந்துவிட்டால் மிகவும் நல்லது என்று உணர்ந்தாள் வசந்தமாலை.
ஒரு நோக்கமுமின்றி மாடத்தின் முன்புறமாகப் போய் மின்னத் தொடங்கியிருந்த வானத்து நட்சத் திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சுரமஞ்சரி. சற்றைக்கெல்லாம் ஏதோ திடுமென்று நினைத்துக் கொண்டவள் போலத் தோழியிடம் மறுபடியும் திரும்பி வந்து அவளே பேசலானாள்:
“வசந்தமாலை! ஒரு காரியம் எனக்கு மறந்தே போயிற்று. முதல் வேலையாக ஐம்படை அணிகளும் கோத்த இந்தப் பொன் ஆரத்தை ஊன்றுகோலின் குழலில் இட்டு யாளி முகப்பிடியையும் திருகிக் கீழே கொடுத்து அனுப்பிவிடு. தந்தையார் ஊர் திரும்பி விட்டார். இந்தப் புதிர் இங்கே இருக்கிறவரை நமக்கு நிம்மதியில்லை. தந்தையார் கடற்பயணம் போன மறுநாளிலிருந்து இன்று வரை நானும் நீயும் எப்படி யெப்படியெல்லாமோ முயன்று சிந்தித்துப் பார்க்கிறோம். நமக்கு இதில் அடங்கியிருக்கும் உண்மை விளங்கவில்லை. இந்த ஐம்படைத்தாலி யாருடையது? இதை ஊன்றுகோலில் இட்டு வைத்திருக்க வேண்டிய காரணம் என்ன? என்று நமக்குப் புரியவே இல்லை. என் தந்தையாருக்கு மக்களாக வாய்த்த நாங்கள் இருவருமே பெண்கள். பெண் குழந்தைகளுக்கு இந்த ஐம்படை ஆரத்தைக் காப்பாகக் கட்டமாட்டார்கள். பொன்னும், மணியும், முத்துமாக இந்த மாளிகை முழுவதும் செல்வம் இறைந்து கிடக்கிறது. இவ்வளவு பெரிய செல்வக் குவியலின் மேல் வீறுடன் நிமிர்ந்து நிற்கிற என் தந்தைக்கு இந்தச் சின்னஞ்சிறு பொன் ஐம்படைத்தாலியை இப்படிப் பாதுகாத்து ஒளித்து வைத்துப் போற்ற வேண்டிய அவசியம் என்னவென்பதுதான் எனக்குப் புரியவில்லை.”
“ஒன்றா, இரண்டா? இந்த மாளிகையில் இப்படிப் புரியாதவை எத்தனையோ? ஆனால் இதைப் பற்றி புரிந்துகொள்ள மட்டும் நாம் ஆவல் காட்டுவது பொருத்தமானதுதான் அம்மா! இந்த ஊன்றுகோலை உங்கள் தந்தையார் இங்கே வைத்ததிலேயே நமக்குப் பலவிதமான சந்தேகங்கள். தற்செயலாக இதன் பிடி சுழன்ற பின்போ இன்னும் பல புதிய சந்தேகங்கள். இதைப்பற்றி வலுவில் நாம் முயற்சி செய்யாமலே நமக்குச் செய்திகள் தெரிய வேண்டுமானால் அதற்காக ஒரு தந்திரம் செய்யலாம்” என்று வசந்தமாலை கூறிய வற்றில் சுரமஞ்சரி அக்கறை கொள்ளாதவள் போல மறுத்துவிட்டாள்:
“நாம் ஒரு தந்திரமும் செய்ய வேண்டாம்! மற்றவர்கள் தந்திரத்துக்கு நாம் ஆளாகித் தவிப்பதே இன்னும் ஏழு பிறவிக்குப் போதுமடீ! நம்முடைய தந்திரத்துக்கும் வேறு சிலர் ஆளாகித் தவிக்க வேண்டாம். தந்திரங்களால் வருகிற குழப்பங்களையும், துன்பங்களையும் பார்க்கும்போது இந்த உலகத்தில் கடவுள் எல்லா மனிதர்களையும் வெள்ளை மனம் கொண்டவர்களாகவே படைத்திருக்கக் கூடாதா என்றுதான் தோன்றுகிறது. மறுபேச்சுப் பேசாமல் அந்த ஐம்படை ஆரத்தை ஊன்றுகோலின் உள்ளே முன்பு இருந்ததைப் போலவே இட்டுப் பிடியையும் நன்றாகத் திருகி யாராவது பணிப்பெண் இங்கு வருகிறபோது கொடுத்துத் தந்தையாரிடம் சேர்க்கச் சொல்லிவிடு. இது இங்கிருந்து போனால் நம்மைப் பிடித்த தொல்லை முக்கால் பங்கு தீர்ந்தது போலத்தான்.”
தன்னுடைய தலைவியின் குரலில் இருந்த கண்டிப்பு வசந்தமாலையையே வியக்கச் செய்தது, ஆனால் அவள் தன் வியப்பை மறைத்துக்கொண்ட குரலில் பேசினாள்; “அதற்கில்லை, அம்மா! செல்வக் குவியலின் மேல் நிமிர்ந்து நிற்கும் உங்கள் தந்தை, கேவலம் இந்தச் சின்னஞ்சிறு பொன் ஆரத்தை ஒளித்துப் பாதுகாப்பதன் காரணம் விளங்கவில்லை என்று சற்று முன்னால் நீங்களே மருண்டீர்களே! உங்களுடைய அந்த மருட்சியைப் பார்த்துத்தான் இதன் காரணம் விளங்குவதற்கு நாம் ஏதாவது தந்திரம் செய்யலாமா என்று கேட்டேன்.”
“அவசியமில்லை! தந்திரத்தால் வாழ்பவர்களைப் பார்த்து வியந்துகொண்டே தாமும் தந்திரத்தில் இறங்குவது நியாயமாகாது. இந்த மாளிகையின் வாழ்க்கையைப் பார்த்துச் சில சமயங்களில் நான் பயப்படுகிறேன். சில சமயங்களில் நான் வியக்கிறேன். வேறு சில சமயங்களில் நான் எனக்குள்ளேயே சிரிக்கிறேன். அதுவும் முடியாத போது புத்தரைப்போல் மனத்துக்குள்ளேயே அழுகிறேன். இதற்கெல்லாம் காரணம் தேடி அலைவதற்குத் தந்திரங்கள் செய்யத் தொடங்கினால் நாம் செய்ய வேண்டிய தந்திரங்கள் நூற்றுக்கணக்கில் இருக்கும், வசந்தமாலை! நானும் சமய ஞானம், தத்துவ ஞானம் எல்லாம் கற்காமல் போனது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா? அவற்றையெல்லாம் கற்றிருந்தால் இளங்குமரனை காதலிக்க முடியாவிட்டாலும் அவருடைய எதிரியாயிருந்து வாதம் புரிகிற பாக்கியமாவது எனக்குக் கிடைத்திருக்கும் என்று இப்போது தோன்றுகிறது. ஒருவருக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பதைப்போல் நல்ல எதிரிகள் கிடைப்பதும் கூடத் தவப் பயன்தான். இராவணனுக்கு இராமன் கிடைத்தது போல் கல்யாண குணங்கள் நிரம்பிய அழகிய எதிரியை அடைவதும் முற்பிறவியின் நற்பயன் போலும், காதலராக அடைய முடியாது தவிப்பதற்குப் பதில் நான் இளங்குமரனை எதிரியாகவாவது அடைந்திருக்கலாம். ஆயிரம் குரூரமான நட்பையும், அழகில்லாத உறவையும் பெறுவதைவிட ஓர் அழகிய எதிரி கிடைப்பது மிகப் பெரும் பாக்கியமென்று நினைக்கிறேனடி வசந்தமாலை! உனக்கு என்ன தோன்றுகிறது?”
“இப்போது நீங்கள் சொல்வது நியாயம் என்று மட்டும் தோன்றுகிறது.”
“மெய்யாகத்தான் சொல்கிறாயா, வசந்தமாலை! நான் பித்துக் கொண்டு விட்டேனோ என்று என் மேல் சந்தேகப்பட்டு என் பேச்சுக்கு மாறுபடாமல் என்னோடு ஒத்துப் பாடுகிறாயா?”
“இல்லை! இல்லை! மெய்யாகவேதான் சொல்லுகிறேன் அம்மா!”
தலைவியிடம் பதில் பேசிக்கொண்டே முன்புறம் வந்து கீழே வீதியைத் தற்செயலாகப் பார்த்த வசந்த மாலை அங்கே அந்த வழியாக அப்போது நடந்து போய்க் கொண்டிருந்த இருவரைச் சுட்டிக் காட்டி. “அதோ பாருங்கள்” என்று தலைவியிடம் கூறினாள். சுரமஞ்சரி முன்னால் வந்து அவர்களைப் பார்த்ததும் வியந்தாள்.
தெருவில் வசந்தமாலை சுட்டிக் காட்டியவர்களைப் பார்த்ததும் சுரமஞ்சரி சற்றே வியப்பு அடைந்தாள். “முன்பு ஒரு சமயம் புறவீதியில் நம் தேரை வழி மறித்துக் கொண்டு நின்று இளங்குமரனைப் பற்றிக் கேள்வி கேட்டாளே, அந்த மறக்குடிப் பெண்தான் அவள். உடன் போகிறவன் - அவளுடைய அண்ணனாக - இருப்பான் போல் தெரிகிறது” என்று வசந்தமாலைக்குப் பதில் கூறிக்கொண்டே அவளைத் தன்னருகில் காணாமல் சுரமஞ்சரி பின்னால் திரும்பியபோது வசந்தமாலை ஊன்றுகோலின் யாளி முகப்பிடியை அதன் தண்டிலே வேகமாகப் பொருத்தித் திருகிக் கொண்டிருந்தாள். ஒரு கணம் அந்தச் செயலால் தன் கவனம் கவரப்பட்டு நின்ற சுரமஞ்சரி, தான் அப்போது சொல்ல வந்ததை நிறுத்திக் கொண்டு தோழியிடம் வேறு ஒரு கேள்வியைக் கேட்டாள்.
“வசந்தமாலை! அந்த ஐம்படை ஆரத்தை உள்ளே வைத்துத்தானே திருகுகிறாய்?” என்று கேட்டாள் சுரமஞ்சரி.
தலைவியின் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லுவதென்று சில விநாடிகள் தயங்கியபின்... “ஆமாம்” என்ற பதில் வசந்தமாலையிடமிருந்து வந்தது. ஆனால் இந்தப் பதிலைக் கூறும்போது அவளுடைய முகம் இயல்பான உணர்வுடன் இல்லை. எதையோ பேச நினைத்துக் கொண்டே அந்த நினைப்புக்கு மாறான வேறொன்றைப் பேசும்போது தெரிகிற இரண்டுங் கெட்ட நிலையையே தோழியின் முகம் காட்டியது. அந்த முகத்தையும் தன் பேச்சையும் சேர்த்தே வீதிக்குத் திருப்பினாள் தோழி.
“சில நாட்களுக்கு முன்னால் புறவீதியில் விசாரித்துத் தெரிந்து கொண்டேனம்மா! இப்போது வீதியில் போய்க் கொண்டிருக்கிறாளே அந்த மறக்குடிப் பெண்ணின் பெயர் முல்லை என்று சொல்லுகிறார்கள். இந்த இரவு நேரத்தில் இங்கே பட்டினப்பாக்கத்து வீதியில் அவளுக்கும் அவள் தமையனுக்கும் என்னதான் காரியமிருக்குமோ, தெரியவில்லை...”
“நீ சொல்வதைப் பார்த்தால் உன்னையும், என்னையும் தவிர வேறு யாருக்குமே இந்தப் பட்டினப்பாக்கத்து வீதியில் எந்தக் காரியமும் இருக்கக் கூடாதென்பதுபோல் அல்லவா பேசுவதாகப் படுகிறது! அவளுக்குப் பட்டினப்பாக்கத்தில் என்ன காரியமோ? எத்தனை காரியமோ?” என்று சிறிது கடுமையாகவே பதில் சொன்னாள் சுரமஞ்சரி. காரணமின்றித் தலைவியின் குரலில் கடுமை பிறந்ததைப் புரிந்துகொள்ள முடியாமல் ஊன்றுகோலைக் கீழே கொடுத்து அனுப்புவதற்காகப் பணிப் பெண்ணைத் தேடிக்கொண்டு செல்வது போல அங்கிருந்து விலகிச் சென்றாள் வசந்த மாலை. தலைவி ஐம்படைத் தாலியைப் பற்றிக் கேள்வி கேட்டபோது தான் வீதியில் போகிற முல்லையைப் பற்றிச் சொல்லிப் பேச்சை மாற்றியதால் அவளுக்கு கோபம் வந்திருக்கலாமோ என்ற சந்தேகம் அப்போது வசந்தமாலையின் சிந்தனையில் படர்ந்தது. ‘தான் எதற்காகப் பேச்சை மாற்றுவதற்கு முயற்சி செய்தோம்’ என்பதை நினைத்தபோது வசந்தமாலைக்குப் பயம் பிடித்துக்கொண்டது. தலைவிக்கு அப்போது தெரிய வேண்டாமென்று தான் மறைவாகச் செய்த தந்திரத்தை வெளிப்படையாகவே தெரிவித்துவிடலாமா என்றுகூட எண்ணினாள் அவள். தந்திரங்களிலும் சூழ்ச்சிகளிலும் மனம் வெறுத்தது போலச் சுரமஞ்சரி சற்றுமுன் பேசிய பேச்சையும் இப்போது நினைத்துக் கொண்டாள் வசந்தமாலை. இதை நினைத்தபோது இந்த நினைவுக்கு முரணான காரியத்தைத் தானே சற்றுமுன் செய்திருப்பதை எண்ணி நடுங்கினாள் அவள். தான் செய்த தந்திரமே சுரமஞ்சரியின் பார்வைக்கு இலக்காகி யிருக்குமோ என்று சந்தேகமும் கொண்டாள் அவள். இந்தச் சந்தேகம் ஏற்பட்ட மறுகணம் ஊன்றுகோலை அப்போது கீழே கொடுத்து அனுப்புகிற எண்ணத்தைக் கைவிட்டாள் வசந்தமாலை. ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவள்போல் திரும்பவும் தன் தலைவியின் அருகே சென்று நின்றாள் அவள். ஊன்றுகோலைத் தந்தை யாரிடம் கொடுத்தனுப்புவதாகச் சொல்லிவிட்டுச் சென்ற வசந்தமாலை மறுபடியும் ஊன்றுகோலுடனேயே திரும்பி வந்து நிற்பதைக் கண்டு சுரமஞ்சரி கேட்டாள்:
“என்னடி வசந்தமாலை? ஏன் ஊன்றுகோலைத் திரும்பக் கொண்டு வந்துவிட்டாய்?”
“இதோ பாருங்கள் அம்மா” என்று ஊன்றுகோலை அப்படியே தலைவியின் கைகளில் கொடுத்தாள் தோழி வசந்தமாலை.
“இன்னும் நான் பார்க்க இதில் என்ன இருக்கிறது! இதை மறுபடியும் பார்க்க வேண்டாமென்றுதானே இதை உன்னிடம் கொடுத்து அனுப்பினேன். மறுபடி எதற்காக என்னிடமே கொண்டு வந்து கொடுக்கிறாய்? இன்று நீ ஏன் இப்படித் திடீர் திடீரென்று மாறி மாறி நடந்து கொள்கிறாய்?”
“மீண்டும் ஒருமுறைதான் இதைப் பாருங்களேன் அம்மா! இப்போது பார்க்கச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. முன்பு பார்த்ததில் இப்போது ஏதாவது குறைகிறதா என்றும் பாருங்கள்...” என்று தன் இதழ்களில் சிரிப்பை வரவழைக்க முயன்று கொண்டே வசந்த மாலை மறுமொழி கூறியபோது சுரமஞ்சரி அவள் முகத்தைக் கூர்ந்து நோக்கிவிட்டுப் பின்பு மெல்ல மெல்ல ஊன்றுகோலின் யாளிமுகப் பிடியைக் கழற்றினாள்.
ஊன்றுகோலை அவள் ஒவ்வொரு மரையாகக் கழற்றக் கழற்றப் பிடியோடு சேர்த்துத் தன் நினைவும் ஒவ்வொன்றாகத் திருகப்படுவது போல உணர்ந்தாள் வசந்தமாலை.
சுரமஞ்சரி பிடியை நன்றாகக் கழற்றிக் குழலைக் கவிழ்த்தாள். முகத்தில் சந்தேகமும் பயமும் விளைந்திட மறுபடியும் ஆட்டி அசைத்துக் கொட்டுவது போல் ஊன்று கோலின் குழலைக் கவிழ்த்தாள். கவிழ்க்கப்பட்ட இடத்தில் எந்தப் பொருளும் கவிழவில்லை, சூனியம் தான் இருந்தது. அதே இடத்தின் வெறுமையைப் பார்த்துக்கொண்டே கண்களில் கோபம் பிறக்கத் தலைநிமிர்ந்து வசந்தமாலையின் முகத்தைச் சந்தித்தாள் சுரமஞ்சரி.
“வசந்தமாலை! முன்பு இருந்ததில் இப்போது ஏதாவது குறைகிறதா என்று கேட்டாய் அல்லவா? கேட்டுக்கொள். குறைவது ஒன்றல்ல. ஒரே சமயத்தில் இரண்டு பொருள்கள் குறைகின்றன. முதலில் எனக்கு உன்மேலிருந்த நம்பிக்கை குறைகிறது. இரண்டாவதாக இதில் என்ன குறைகிறதென்று உனக்கே நன்கு தெரியும்!”
இதைக் கேட்டு வசந்தமாலை சிரித்தாள். சிரித்துக் கொண்டே இடுப்பிலிருந்து அதுவரை அங்கே ஒளித்து வைக்கபபட்டிருந்த அந்த ஐம்படைத் தாலியை எடுத்தாள்.
“நம்பிக்கை குறையும்போதே உங்களுக்குக் கோபம் பெருகுகிறதே அம்மா? நாம் தெரிந்துகொள்ளத் தவிக்கும் உண்மைகள் நமக்கு விரைவில் தெரிய வேண்டுமானால் இந்த ஐம்படை ஆரத்தை உள்ளே வைக்காமலே ஊன்று கோலைத் தந்தையாருக்குத் திருப்பிக் கொடுத்தனுப்ப வேண்டும். ஒரு பொருள் இன்றியமையாததா அல்லவா என்பதையும் அந்தப் பொருளைத் தன்னிடம் வைத்திருப்பவருக்கு அது எவ்வளவு அவசியமென்பதையும் அறிய வேண்டுமானால் அவை அவரிடமிருந்து பிரித்து அவர் வசம் இல்லாமற் செய்து பார்த்தால்தானே அறிய முடியும்? உங்கள் தந்தையார் இந்த ஐம்படைத்தாலியை இவ்வளவு பத்திரமாக வைத்திருப்பதன் இரகசியத்தை நீங்களும் நானும் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அதற்கு ஒரே வழி இதை அவரிடம் இல்லாமற் செய்வது தான் அம்மா! உங்களிடம் சொன்னால் கோபித்துக் கொள்வீர்களோ என்று பயந்துதான் நானாகவே இந்த வேலையைச் செய்தேன்.”
“எந்த வேலையைப் பிறர் செய்வதால் குழப்பங்கள் வளருகின்றன என்று நான் வருந்தினேனோ அதே வேலையை நீயும் செய்கிறாயடி வசந்தமாலை!”
“அப்படியல்ல அம்மா! ‘இது என்ன இரகசியம்’ என்று ஒன்றும் புரியாமல் மனத்தில் எண்ணி எண்ணிக் குழப்பம் அடைவதைக் காட்டிலும் நம்முடைய குழப்பங்களைத் தந்திரத்தினாலேயே தீர்த்துக்கொள்ள முயல்வது நல்லதுதானே?”
சுரமஞ்சரி பதில் பேசாமல் மெளனமாகத் தோழியின் கையிலிருந்த அந்தப் பொன் ஆரத்தைப் பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தாள்.
“நாளைக்கு விடிந்ததும் இந்த ஊன்றுகோலை மட்டும் தந்தையாரிடம் சேர்த்துவிடும்படி கொடுத்தனுப்புகிறேன். ஆரத்தை இங்கேயே வைத்துக்கொள்கிறேன். மற்ற இடங்களில் தேடித்தேடித் தவித்தபின் அவர் இங்கேயும் வருவார். அப்போதுதான் இது அவருக்கு எவ்வளவு அவசியமென்று நமக்குத் தெரியும்” என்றாள் வசந்தமாலை.
“எப்படியோ உனக்குத் தோன்றுவதுபோல் செய்” என்று வேண்டா வெறுப்பாகக் கூறிவிட்டு உறங்கச் சென்றாள் சுரமஞ்சரி. மறுநாள் வைகறையில் அவள் கண் விழித்தபோது அவள் செவிகளில் ஒலித்த வார்த்தைகள் தோழியுடையனவாக இருந்தன.
“அம்மா போது விடிந்ததும் முதல் வேலையாக ஐம்படை ஆரத்தை உள்ளே வைக்காமலே அந்த ஊன்று கோலைக் கொடுத்து அனுப்பிவிட்டேன். நகைவேழம்பரும் இன்று காலையில் கடற்பயணத்திலிருந்து வந்து விட்டாராம், உங்கள் தந்தையாரும் நகைவேழம்பரும் கீழே ஏதோ கடமையாகப் பேசிக் கொண்டிருந்ததனால் உள்ளே போவதற்குப் பயந்து தந்தையாருடைய பள்ளியறை வாயிலிலேயே அவர் பார்வையில் படுகிற இடமாகப் பார்த்து ஊன்றுகோலை வைத்துவிட்டு வந்த தாகப் பணிப்பெண் கூறினாள்” என்றாள் வசந்தமாலை. சுரமஞ்சரி அதைக் கேட்டுவிட்டுத் தான் எந்தவிதமான உணர்வும் அடைந்ததாகக் காண்பித்துக் கொள்ளவில்லை.
“வசந்தமாலை! இன்றிலிருந்து என்னிடம் இத்தகைய குழப்பமான எண்ணங்களைப் பற்றியே பேசாதே. நேற்றிரவு நீண்ட நேரம் சிந்தனை செய்தபின் நான் ஒரு புதிய முடிவுக்கு வந்திருக்கிறேன். இன்று இந்த விநாடியிலிருந்து என்னுடைய வாழ்க்கையில் எனக்குப் புதிய நாள் விடிகிறது. புதிய நோக்கம் புலர்கிறது. தந்தையாருடைய ஊன்றுகோலுக்குள் இருந்த ஐம்படைத் தாலியின் இரகசியத்தைத் தெரிந்துகொள்வதைவிட அதிக ஆவலோடு தெரிந்துகொள்ள வேண்டிய வேறு துறைகளில் இப்போது என் மனம் செல்கிறது.”
“அப்படி உங்கள் ஆவலைக் கவர்ந்த துறைகள் என்ன?” என்று கேட்கும் விருப்பமும் ‘இப்போது நம் தலைவி இருக்கும் நிலையில் இதைக் கேட்கலாமா வேண்டாமா’ என்று பயமுமாகச் சுரமஞ்சரியைப் பார்த்தாள் வசந்தமாலை. அப்போது சுரமஞ்சரியின் முகமானது பொழுது புலர்கின்ற நேரத்தில் அழகுகள் யாவும் ஒன்று சேர்ந்து மங்கலமாய் நிறைந்தாற் போல அமைதியாயிருந்தது. எதற்காகவும் பரபரப்புக் காட்டாதது போன்ற நிறைவு அவளுடைய கண்களில் தெரிந்தது.
அதிகாலையில் தோன்றி வளர்கின்ற நேரத்து ஒளிக்கே உரிய சுறுசுறுப்போடு மாடத்தில் நுழையும் செங்கதிர்க் கற்றைகளிலே பட்டு அவளுடைய முகமும் கைகளும், பாதங்களும் நெருப்பிலே குளித்து இளகும் பொன் வெள்ளமாய்த் தெரிந்தன.
“மன்னிக்க வேண்டும் அம்மா! போது விடிந்து எழுந்ததும் எழுந்திராததுமாகச் சொல்லி மனத்தைப் புண்படுத்தி விட்டேன் போலிருக்கிறது. நீங்கள் ஆசைப் படுகிற புதிய துறைகளில் உங்கள் நாட்கள் பெருக வேண்டும். வளர்ந்து பொலிக உங்கள் ஆவல். உங்கள் மனத்துக்கு விருப்பம் இருக்குமானால் தயை கூர்ந்து எனக்கும் அதைப்பற்றிச் சொல்லுங்கள். இப்போது விருப்பமில்லாவிட்டால் விருப்பம் வருகிறபோது என்னிடம் சொன்னால் போதும்” என்று பணிவாகக் கூறி வணங்கிவிட்டு அப்பாற் சென்றாள் தோழி வசந்தமாலை.
மாலை மயங்கி இருள் சூழ்ந்து கொண்டு வரும் நேரத்துக்கு முல்லையும் கதக்கண்ணனும் வீதியில் அந்தப் பெருமாளிகையைக் கடந்து சென்ற போது அதன் மாடத்தில் தென்பட்ட சுரமஞ்சரியையும், அவள் தோழியையும் பற்றித் தங்களுக்குள் சிறிது தொலைவுவரை பேசிக்கொண்டே போனார்கள்! அவர்கள் அப்போது பட்டினப்பாக்கத்து அரசர் பெருந்தெருவுக்கு அப்பால் உள்ள செவ்வேள் கோயிலுக்குப் போக வேண்டியிருந்தது.
“இந்தப் பெண்தான் அண்ணா அன்றொரு நாள் நாளங்காடியில் அவர் சமயவாதம் புரிந்து கொண்டிருந்த போது குடலை நிறைய மலர்களைக் குவித்துக் கொண்டு வந்து அதில் மறைத்து வைத்திருந்த நச்சுப் பாம்பினால் அவரையே கொன்றுவிட முயன்றாள். இவள் பொல்லாத சூனியக்காரியாய் இருப்பாள் போல் தோன்றுகிறது. கூட்டத்தில் இருந்தவர்கள் தடுத்து விட்டார்களாம். இல்லாவிட்டால் ஆலமுற்றத்துத் தாத்தாவும் மற்றவர் களும் அங்கேயே இவள் கழுத்தைத் திருகிக் கொன்றிருப்பார்கள்...” என்று ஆத்திரத்தோடு பேசிக்கொண்டே வந்தபோது முல்லையின் முகம் போன போக்கைப் பார்த்துக் கதக்கண்ணன் மெல்ல நகைத்தான்.
“ஏதேது, அந்தப் பெண்ணின் மேல் உனக்கு இருக்கும் ஆத்திரத்தைப் பார்த்தால் அவளைக் கொல்ல நீ ஒருத்தியே போதும் போலத் தோன்றுகிறதே!”
“தோன்றுவது என்ன? அப்படி ஒரு சமயம் நேர்ந்தால் அதைச் செய்வதற்கும் என் கைகளுக்கு வலு உண்டு அண்ணா! நிச்சயமாக அந்தப் பெண்ணை விட நான்தான் பலசாலியாயிருப்பேன். ஒருவேளை தோற்றத்திலும் அழகிலும் வேண்டுமானால் அவள் என்னைக் காட்டிலும் சிறந்தவளாக இருக்கலாம்.”
“அதுசரி! ஆனால் தோற்றத்தில் அழகாயிருப்பவர்களுக்கு அப்படி அழகாயிருப்பதும் ஒரு பெரிய பலம் ஆயிற்றே முல்லை?” என்று சொல்லிக் குறும்பாகச் சிரித்தான் அவள் தமையன்.
“அழகாகவும், மணமாகவும் இருக்கிற பூக்களில் எல்லாம் முள்ளும் அதிகமாக இருக்கும் அண்ணா! தாழம்பூவில் மடல் முழுவதும் முள்ளாயிருப்பதைப் போலத் தோற்றம் நிறைய அழகையும், மனம் நிறையக் கெட்ட எண்ணத்தையும் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதையே பலம் என்று எப்படிச் சொல்ல முடியும்?”
“முடியுமோ, முடியாதோ? அந்தப் பட்டினப் பாக்கத்துப் பெண்ணிடம் மற்றவர்கள் அழகாக நினைக்கக்கூடிய அம்சங்கள் இரண்டு மூன்று இருக் கின்றன. முதலில் அவளுடைய செல்வமே அவளுக்கு ஓர் அழகு. அப்புறம் அவளிடம் இயற்கையாக அமைந்திருக்கிற அழகு அவளுக்கு இன்னொரு செல்வம். அந்த அழகில் அமைந்திருக்கிற வசீகரத்தன்மை மற்றொரு செல்வம். ஆனால் இவற்றையெல்லாம் நீ ஒப்புக் கொள்ள மாட்டாய். தன்னைத் தவிர இன்னொரு பெண்ணும் அழகாயிருக்கிறாள் என்று ஒப்புக்கொள்கிற பெண்கள் இந்த உலகத்தில் மிகவும் குறைவு. இந்த விஷயத்தில் பெண்களும் கலைஞர்களைப் போன்றவர்களே. பிறருடைய திறமையில் பொறாமை காணாத உண்மைக் கலைஞனைத் தேடியும் கண்டு பிடிக்க முடியாததுபோல் பிறருடைய அழகில் பொறாமை கொள்ளாத பெண்ணையும் உலகில் காண முடியாது போலிருக்கிறது, முல்லை!”
முல்லையின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போல் கொதிப்புத் தெரிந்தது. சீற்றத்தோடு, வீதியில் நடப்பதை நிறுத்திவிட்டுத் தன் தமையனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
“சீற்றமடையாதே, முல்லை! உன் மனத்தில் இருக்கிற எல்லாக் கோபத்தையும் உள்ளே சிறிதும் தங்கி விடாமல் அப்படியே முகத்தில் வரவழைத்துப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆசையாயிருந்தது. அதற்காகத்தான் வேண்டுமென்றே இப்படிப் பேசினேன்.”
கதக்கண்ணன் தங்கையை நோக்கிக் கைகொட்டிச் சிரித்தான். உடனே பதிலுக்குப் பதில் கேட்டுவிடத் துடிப்பவள் போல் சீறிக்கொண்டே அவனைக் கேட்டாள் முல்லை.
“பெண்களை மட்டும் குறை சொல்ல வந்துவிட்டீர்களே? இன்னொருவனுடைய வீரத்தில் பொறாமைப் படாத வீரன், இன்னொருவனுடைய அறிவிலே பொறாமைப்படாத அறிவாளி உலகத்தில் எங்காவது இருக்கிறானா? நீங்கள் எல்லாம் உங்களையொத்த வீரர்களை வெற்றி கொள்ளத் தவிக்கிறீர்கள். அவரைப் போன்றவர்கள் தம்மை ஒத்த அறிவாளிகளை வெற்றி கொள்ளத் தவிக்கிறார்கள்.”
“எவரைப் போன்றவர்களைச் சொல்கிறாய் முல்லை!”
“அவர்தான்! அன்றைக்குச் கப்பலில் ஏறும்போது ‘போய்விட்டு வருகிறேன் முல்லை’ - என்று என்னிடம் ஒரு வார்த்தை சொல்வதற்குக் கூடத் தோன்றாமல் முகத்தைத் தூக்கிக்கொண்டு போனாரே, அந்த மனிதரைத் தான் சொல்கிறேன் அண்ணா” - என்று பேசிக் கொண்டே குனிந்து தரையைப் பார்த்தாள் முல்லை. அந்த நேரத்தில் தன் முகத்தைத் தமையன் பார்த்து விடலாகாது என்று தோன்றியது அவளுக்கு. ஆனாலும் அவன் பார்த்துவிட்டான்.
“புரிகிறது முல்லை! இப்போதுகூட நீயும் நானும் அவருடைய கோவிலுக்குத்தானே வணங்குவதற்குப் போய்க் கொண்டிருக்கிறோம். முருகக் கடவுளாகிய செவ்வேளுக்குத்தானே இளங்குமரன் என்று மற்றொரு பெயர் கூறுகிறார்கள்? அவருடைய ஞாபகம் வந்ததனால்தானோ என்னவோ இன்று மாலை நீ ஒரு நாளுமில்லாத திருநாளாய்ப் பட்டினப்பாக்கத்துக்கு வந்து இளங்குமரக் கடவுளாகிய செவ்வேள் திருக்கோவிலை வணங்க வேண்டும் என்றாய்! உன்னுடைய திருட்டுத்தனமான மனக்குறிப்பு இப்போதல்லவா எனக்குப் புரிகிறது?” - என்று கதக்கண்ணன் அவளை வம்புக்கிழுக்கத் தொடங்கியபோது, இந்த வம்பு தன்னிடம் படிப்படியாய் விளைவிக்கும் நாணங்களை மறைக்க விரும்புகிறவள் போல் அரசர் பெருந்தெருவின் அகன்ற சாலையில் விரைந்து நடந்தாள் முல்லை. கதக்கண்ணனும் தொடர்ந்து அவள் வேகத்திற்கு இணையாக நடந்தான். மாபெரும் அரண்மனையும் அதைச் சுற்றிலும் கண் பார்வைக்கு எட்டும் தொலைவு வரை அரண்மனையைப் போலவே தெரிந்த வேறு பல பெருமாளிகைகளுமாகத் தோன்றின. பூம்புகார் நகரத்தின் இதயம் போன்ற ஆரவாரமான பகுதிக்குள் புகுந்து வந்திருந்தார்கள் அவர்கள். இன்னும் சிறிது தொலைவு சென்று அடுத்த வீதியில் திரும்பினால் ஆறுமுகச் செவ்வேளாகிய முருகப் பெருமானின் அணிதிகழ் கோவில் தென்படும். கோவிலின் மேலே ஒளிவீசிப் பறக்கும் சேவற்கொடி அப்போது அவர்கள் நடந்து கொண்டிருந்த இடத்திலிருந்தே நன்றாகத் தெரிந்தது. அரண்மனையின் முரச மண்டபத்தில் மாலை நேரத்து மங்கல வாத்தியங்கள், முழங்கிப் பரவிக் கொண்டிருந்தன.
பல்வேறு பூக்களின் நறுமணமும், தீப வரிசைகளின் ஒளியும், தேரும், குதிரையும், யானையும், சிவிகையும் நிறைந்த இராசவீதியில் கலகலப்பும் இந்திரனுடைய தேவருலகத்துத் தலைநகரமாகிய அமராபதியின் வீதிகளில் நடந்து போய்க் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வை முல்லையின் மனத்தில் ஏற்படுத்தின. செவ்வேள் கோவில் மாடத்தின்மேல் தெரிந்த சேவற் கொடி இளங்குமரன் அன்று நாளங்காடியில் ஏந்தி நின்ற ஞானக்கொடியாக மாறி அதைப் பற்றிக்கொண்டு அவனே நிற்பதுபோல அவள் கண்களுக்கு மட்டும் தெரிவது போலிருந்தது. தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இளங்குமரனுடன் தான் பழக நேர்ந்த காலத்து நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாகத் தன் மனக்கண்களில் அவளுக்குத் தெரிந்தன. அவள் அப்போது உணர்ச்சி மயமாக நெகிழ்ந்த மனத்துடனிருந்தாள். அறுமுகச் செவ் வேளாகிய குமரக் கடவுளின் அணிதிகழ் கோவிலுக்குள் நுழைந்தபோது அதற்கு முன்பே தன் மனத்தில் நுழைந்து கோவில் கொண்டுவிட்ட மற்றொரு குமரனையும் வணங்கிக் கொண்டிருந்தாள் முல்லை. அப்போது அவளுடைய மனநிலைக்குப் பொருத்தமான உற்சாகப் பேச்சு ஒன்றை அவளுடைய தமையனும் தொடங் கினான்:
“முல்லை! அந்த இளங்குமரன்மேல் ஆசைப்படுகிற பெண்கள் மட்டும்தானே உன்னுடைய பொறாமைக்கும் பகைமைக்கும் உரியவர்கள்? இந்த இளங்குமரனைத் தேடி வருகிறவர்களையும் அப்படி நினைத்துவிடாதே. இவன் இந்தக் காவிரிப்பூம்பட்டினத்திலுள்ள எல்லாரும் ஆசைப்படுவதற்கு உரியவன். இவனையாவது எல்லோரும் நினைக்கவும் ஆசைப்படவும் நீ உரிமை தருவாயோ இல்லையோ?” என்று கோவிலுக்குள் இருந்த குமரக் கடவுளைக் காட்டி நகைச்சுவையாகக் கதக்கண்ணன் கூறிய சொற்கள் முல்லையின் மனத்தில் மணமிக்க மலர்களை அள்ளிச் சொரிந்தாற்போல் பதிந்தன.
அப்போது செவ்வேள் கோவிலில் மணி ஒலித்தது. கண்முன் தெரிந்த கோவிலில் காவிரிப்பூம்பட்டினத்துத் தெய்வமான இளங்குமரனையும் - தன் மனத்தில் கோவில் கொண்டு தனக்குத் தெய்வமாகிவிட்ட இளங்குமரனையும் சேர்த்தே வணங்கினாள் முல்லை.
“உன்னுடைய இளங்குமரன் கப்பலில் ஏறி மணிபல்லவத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறான் முல்லை! இந்த இளங்குமரனோ எங்கும் நகரவே முடியாமல் இந்தப் பட்டினப்பாக்கத்துக் கோவிலில் பெரிய பெரிய செல்வர்களின் வணக்கங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு இங்கேயே நிற்கிறான்” என்று கதக்கண்ணன் விளையாட்டாகக் கூறியபோது அந்த இளங்குமரனும் இந்தச் செவ்வேளைப் போலவே தான் மட்டும் வணங்க முடிந்த கோவில் ஒன்றில் நகராமல் தெய்வமாக நின்றுவிட்டால் எவ்வளவு நலமாக இருக்குமென்று விநோதமானதொரு கற்பனை நினைப்பில் மூழ்கினாள் முல்லை.
“அடடா! இந்தக் குமரனையும் உனக்கே தனியுரிமையாக்கிக் கொண்டு விடுவாய் போலிருக்கிறது முல்லை. நாம் வந்து நேரமாகிவிட்டது. திரும்பலாம் அல்லவா?” என்று தமையன் நினைவூட்டிய போது தான் செவ்வேள் கோவிலிலிருந்து திரும்பி வீட்டுக்குப் புறப்படும் நினைவு வந்தது.
“நீங்கள் ஆசைப்படுகிற புதிய துறைகளில் உங்கள் நாட்கள் பெருக வேண்டும்” என்று தன் தலைவி சுரமஞ் சரியை வாழ்த்திவிட்டு அப்பாற் சென்ற வசந்தமாலை, சில நாழிகைகள் கழித்து மீண்டும் திரும்பி வந்த போது சுரமஞ்சரியை முற்றிலும் புதிய சூழ்நிலையில் புதிய கோலத்தில் பார்த்தாள். அவளைச் சுற்றிலும் அந்தப் பெருமாளிகையிலிருந்த பழைய ஏட்டுச்சுவடிகள் குவிந்து கிடந்தன.
சுரமஞ்சரியின் மாடத்தில் விதம்விதமான ஓவியங்கள், வகைவகையான காவியங்களின் ஏட்டுச் சுவடிகள், சீனத்துப் பட்டுக்கள், யவனக் கைவினை, நயம் மிக்க நுண் பொருள்கள், பாண்டி நாட்டுச் சிற்பிகள், ஐம்பொன்னிற் செய்த அழகிய சிற்பங்கள் எல்லாம் நிறைய இருந்தன. ஒவ்வொரு வகைப் பொருளை ஒவ்வொரு காலத்தில் விரும்பித் தேடிச் சேர்த்திருந்தாள் அவள். இந்த வகையில் அவள் ஆசையோடு தேடிச் சேர்த்த கடைசிப் பொருள் அல்லது பொருளோடு தேடிச் சேர்த்த கடைசி ஆசை இளங் குமரனின் ஓவியம்தான். அந்த ஓவியத்துக்கு ஆசைப்பட்ட பின் வேறு எதையும் தேடிச் சேர்க்கிற ஆசையே அவளுக்கு ஏற்படவில்லை. தொடர்ந்து வேறு ஆசைகளுக்கு மனம் தாவி விடாதபடி தன் எல்லையிலேயே மனத்தை நிற்கச் செய்யும் பரிபூரணமான ஆசைகளும் உலகத்தில் உண்டு. மலை உச்சியிலிருந்து உருண்டு விழுகிற கல் கடைசியாக ‘இனிமேல் இதற்கு அப்பால் உருள முடியாது’ என்பதுபோல ஒரு நிலையாகத் தங்கி விடுகிற எல்லையும் உண்டு அல்லவா? இளங்குமரன் என்ற எல்லையில் சுரமஞ்சரியும் அப்படித்தான் கடைசியாகவும் நிறைவாகவும் தன் நினைவைத் தங்க விட்டுவிட்டாள்.
அந்த எல்லைக்கு அப்பால் அதைவிட நிறைவாகவோ அதைவிட அழகாகவோ ஆசைப்படுவதற்கு வேறு எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. அவளுக்கு. பண்ணோடு கலந்து நின்று இனிமை தரும் இசையைப் போல் அதற்கப்பால் விலகாமல் அதிலேயே பொருந்தி விட்டது அவள் ஆசை. தன்னுடைய பேதைப் பருவத்தில் உடம்பை அழகு செய்யும் பட்டுக்களுக்கும், அணிகலன்களுக்கும் வகை வகையாக ஆசைப்பட்டிருக்கிறாள் அவள். நினைவு தெரிந்து அறிவு வளர்ந்தபின் சுவடிகளுக்கும் ஓவியங்களுக்கும் ஆசைப்பட்டிருக்கிறாள். இந்த ஒவ்வொரு வகை ஆசையிலும் மனம் பித்தேறி அழுந்தியதைப் போலவே ஓரொரு சமயங்களில் சோர்ந்து சலித்துப் போகிற அநுபவமும் அவளுக்கு ஏற்பட்டிருக்கிறது. வீதியெல்லாம் சுற்றிவிட்டு நிலைக்கு வந்த தேரின் சக்கரத்தில் அப்போது தரையைத் தீண்டிக் கொண்டு இருக்கிற பகுதி எதுவோ அதுவே அதற்கு நிற்குமிடமாகி விடுவதுபோல் முன்பு சேர்த்த சுவடிகளையெல்லாம் ஊன்றிக் கற்க வேண்டுமென்ற ஆவலை அன்று அவள் அடைந்திருந்தாள். இளமையில் காவிரிப்பூம் பட்டினத்திலேயே புகழ்பெற்ற பெரும்புலவர் ஒருவரைக் கொண்டு தந்தையார் அவளுக்கும் வானவல்லிக்கும் இலக்கியங்களையும், காவியங்களையும் கற்பிக்க ஏற்பாடு செய்திருந்தார். அப்போது அவள் அவற்றைக் கற்ற காலமும் குறைவானது. கற்பிக்கப்பட்ட சுவடிகளும் குறைவானவை. தகடாக அறுத்து இழைத்த யானைத் தந்தத்திலும் மெல்லிய சந்தனப் பலகைகளிலும் உறையிட்டுப் பட்டு நூல்களால் இறுக்கிக் கட்டி அடுக்கப் பட்டிருந்த அந்த ஏட்டுச் சுவடிகளின்மேல் இன்று மறுபடியும் சுரமஞ்சரியின் கவனம் சென்றது. பெரு மாளிகையின் சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் மறந்து விட்டு நினைவுகளின் தரத்தையும் எண்ணங்களின் உயரத்தையும் வளர்த்துக் கொள்வதற்காகக் காவியங் களிலும் இலக்கியங்களிலும் தன்மனத்தைச் செலுத்த வேண்டுமென்று தோன்றியது சுரமஞ்சரிக்கு. தான் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறவருடைய மனத்தின் உயரத்துக்குச் சமமாக இல்லாவிட்டாலும் மிகவும் குறைவாயில்லாமல் தன்னுடைய எண்ணங்களை வளர்த்துக் கொள்வதற்கு நினைத்தாள் அவள்.
மிகச் சிறிய கிளையில் தொங்கும் கனமான பெரிய பழத்தைப்போல் அவள் மனம் தாங்கிக் கொண்டிருக்கிற ஆவல் அவளுடைய ஆற்றலைக் காட்டிலும் பெரிதா யிருந்தது. அந்த ஆசைக்கு உரியவனோ, ‘பெண்ணே! உன்மேல் கருணை செலுத்த முடியும். அன்பு செலுத்த முடியாது’ என்று இறுமாப்போடு மறுமொழி சொல்லுகிறவனாக இருக்கிறான். அந்த இறுமாப்பை இளக்கு வதற்குத் தன்னால் முடியுமா என்று அவள் பயந்த காலமும் உண்டு.
முதன் முதலாகக் காவிரிப்பூம்பட்டினத்துக் கடற்கரையில் யவன மல்லனை வெற்றி கொண்ட வீரனாக அவனைச் சந்தித்தபோது காவிரிப்பூம்பட்டினத்திலேயே திமிர் மிகுந்த அழகனாக அவனை உணர்ந்தாள் அவள். அடுத்தமுறை கப்பல் கரப்புத் தீவில் தனிமையில் சந்தித்த போது தன்மானம் நிறைந்த இளைஞனாக உணர்ந்தாள். அதற்குப் பின்பு நெடுங்காலத்துக்கு அப்புறம் நாளங்காடியில் சமய வாதம் புரியும் ஞானச் செல்வனாகச் சந்தித்தபோது, பிறருடைய துக்கத்துக்கு இரங்கும் மனம் தான் செல்வம் என்று கூறி அருள்நகை பூக்கும் கருணை மறவனாகச் சந்தித்தாள். அதற்கும் அப்புறம் தன்னுடைய பூக்குடலையிலிருந்து அவனைக் கொல்லப் புறப்பட்ட பாம்பைக் கண்டு எல்லாரும் தன்மேல் சீறியபோது புன்னகையோடு தன்னைப் பொறுத்த அவனிடம் ‘நீங்கள் மகாகவிகளுக்கு உத்தம நாயகனாகிக் காவியங்களில் வாழ வேண்டிய பேராண்மையாளர்’ என்று, தானே அவனைப் புகழ்ந்து கூறியதையும் நினைத்துக் கொண்டாள், சுரமஞ்சரி. அந்தக் கருணை மறவன் மேல் தான் கொண்டிருக்கிற காதல், காவியங்களில் வருகிற அன்பைப்போல் அழியாததாகவும் நிலையான தூய்மை உடையதாகவும் இருக்க வேண்டும் என அவள் மனத்தில் உறுதி பிறந்திருந்தது. அந்த உறுதி ஒன்றுதான் அவள் மனத்தின் ஆசை நிரந்தரமாக நின்ற கடைசி எல்லையாக அவளை ஆக்கியிருந்தது.
இலக்கியங்களையும், காவியங்களையும் தங்கள் உறவையும் எண்ணிப் பார்த்துப் பழகிய காரணத்தால் ஏட்டுச் சுவடிகளில் வாழும் அந்த உணர்வுகளின் மணத்தில் திளைத்துத் திளைத்துத் தன் மனம் நிற்கும் எல்லையைத் தனது தவமாகவே ஆக்கிக் கொண்டுவிட வேண்டும் என்ற பிடிவாதம் பிறந்தது அவளுக்கு. இந்தப் பிடிவாதம் பிறந்த பின்னால் தான் இருக்கும் மாடம், தன்னோடு துணையிருக்கும் வசந்தமாலை, தன் தந்தை, நகைவேழம்பர் எல்லாரும் எல்லாமும் அவளுக்கு மறந்தே போயினர்.
அன்று காலையில் சுரமஞ்சரியின் கையிற் கிடைத்த முதற் சுவடியில் அவள் மனத்தின் தவிப்புக்களையே மேலும் வளர்ப்பதுபோல் ஒரு பழைய பாடல் வந்து வாய்த்தது.
“வைகல் தோறும் இன்பமும் இளமையும் எய்கணை நிழலின் கழியும், இவ் உலகத்துக் காணீர் என்றலோ அரிதோ அதுநனி பேணிர் ஆகுவீர்.”
ஒரு தலைவனிடம் அவனாற் காதலிக்கப்படும் காதலியின் தோழி ஒருத்தி சொல்வதாக இப்பகுதி அமைக்கப்பட்டிருந்தது. “வேகமாகத் தொடுக்கிற அம்பின் நிழல்போல் இந்த வாழ்க்கையும் இதன் இளமைப் பருவத்துச் சுகங்களும் உண்டாகிய வேகம் தெரிவதற்கு முன்பே மறைந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய உலக வாழ்வின் நிலையை நீங்கள் காணாதவர் இல்லை. இதை உணர்ந்து என் தலைவியை விட்டுப் பிரியாமல் அவள் மேல் நீங்கள் அன்பு செலுத்த வேண்டும்” என்று தன் தலைவியின் சார்பில் அந்தப் பாடலில் வருகிற தோழி தலைவனிடம் கூறி வேண்டிக் கொள்வதாக இருந்த இப்பகுதியை ஏட்டிலிருந்து சுரமஞ்சரி படித்துக்கொண்டிருந்த போதுதான் வசந்தமாலையும் அவளருகே வந்து நின்றாள்.
‘வில்லில் நாணேற்றி வேகமாகத் தொடுக்கப்பட்டுச் செல்கிற அம்பின் நிழலைப் போல் இந்த வாழ்க்கையும் இதன் இளமைப் பருவத்துச் சுகங்களும் வேகமாக உண்டாக்கிய சுவடு தெரிவதற்கு முன்பே அழிந்து கொண்டிருக்கின்றனவே!’ என்ற கருத்துள்ள பகுதியை இரண்டாம் முறையாகப் படிக்கும்போது சுரமஞ்சரிக்குக் கண் கலங்கிவிட்டது. ‘இதை இப்படியே அவரிடம் யாராவது போய்ச் சொல்ல மாட்டார்களா? இதையும் சொல்லி, என் துக்கத்தையும் விவரித்து அவரை என் மேல் அநுதாபமும் கொள்ளச் செய்யும் திறமை வாய்ந்த தோழிகள் யாருமே எனக்கு இல்லையா?’ என்று எண்ணி எண்ணி அந்தப் பகுதிக்கு மேல் பாடலில் மனம் செல்லாமல் இளங்குமரனுடைய முகத்தை நினைத்துக் கொண்டாள் சுரமஞ்சரி.
மூன்றாவது முறையாக இதே பகுதியைத் தன் தோழி வசந்தமாலைக்கும் படித்துக் கூறிவிட்டு, “இப்படித் திறமையாக அவரிடம் பேசி என் உணர்ச்சிகளை யெல்லாம் அழகான உவமானத்தினால் விளக்குவதற்கு உன்னைப் போல் ஒரு தோழியால் முடியுமோ, வசந்த மாலை?” என்று ஏக்கத்தோடு அவளைக் கேட்டாள் சுரமஞ்சரி.
வசந்தமாலை இதற்கு என்ன மறுமொழி கூறுவதென்று அறியாமல் திகைத்தாள்; சுரமஞ்சரி அவளுடைய திகைப்பைப் பார்த்துவிட்டு, “நான் சொல்லியதே உனக்குப் புரியவில்லை போலிருக்கிறதே வசந்தமாலை!” என்று தன் தோழியைக் கேட்டாள்.
“புரிகிறது அம்மா! ஆனால் உங்கள் துன்பத்தை அவரிடம் திறமையாக எடுத்துச் சொல்வதற்காகவாவது நான் ஒரு கவியாகப் பிறந்திருக்க வேண்டும். ஏனெனில் துன்பங்களையும் தப்புக்களையும் ஏக்கங்களையும் கூட அழகாகச் சொல்லுகிற திறமை கவிகளுக்கு மட்டும்தான் இருப்பதாகத் தெரிகிறது. அடுத்த பிறவியிலாவது உங்களுக்குத் தோழியாகப் பிறந்து கவியாகவும் விளங்கி நீங்கள் அன்பு செலுத்துகிறவரிடம் போய் உங்களுக்காக உவமைகளையும், உருவங்களையும் கூறி, அவருடைய மனத்தை இளக்க வேண்டும்போல எனக்கு ஆசையாயிருக்கிறது.”
“போடீ வேலையற்றவளே. இந்தப் பிறவியின் ஆசைகளே இன்னும் தீர்ந்தபாடில்லை. அதற்குள் நீ அடுத்த பிறவிக்குப் போய்விட்டாயே?” என்று தோழிக்குப் பதில் கூறியபோது சுரமஞ்சரியின் கண்களில் தெரிந்த அழுகை குரலிலும் ஒலித்தது. அப்போது அவள் கைகளிலிருந்த அந்த ஏடு கண்ணிரில் நனைந்து கொண்டிருந்தது. தன் தலைவியை அழச் செய்த அந்த ஏடுகளின் மேல் கோபம் கோபமாக வந்தது வசந்தமாலைக்கு. அதே சமயத்தில் தலைவி எதற்காக அழு கிறாள் என்ற சந்தேகமும் அவளுக்கு ஏற்பட்டது. ஏட்டிலே கண்ட பாட்டுக்காக அழுகிறாளா, பாட்டிலே திகழும் கருத்தால் தன் மனம் எவனை நினைவு கூர்ந்ததோ அவனுக்காக அவனை எண்ணி அழுகிறாளா என்று ஒன்றும் தெளிவாகப் புரியாமல் மருண்டாள் வசந்தமாலை. இதுவரை என்றும் ஏற்பட்டிருக்க முடியாத நிறைந்த அநுதாபம் அன்று வசந்தமாலைக்குத் தன் தலைவியின்மேல் ஏற்பட்டது.
பொழுது புலர்ந்ததும் புலராததுமாக வந்து நகைவேழம்பர் நினைவுபடுத்திய பழைய நினைவுகளால் பெருநிதிச் செல்வர் சாகின்ற காலத்து வேதனை களையெல்லாம் உயிருடனேயே அப்போது அடைந்தவராக நடுங்கி நின்றார். ஆந்தை விழிப்பதுபோல அவருடைய கண்கள் புரண்டு உருண்டு விழித்தன. முகத்திலும் பிடரியிலும் வேர்த்துக் கொட்டியிருந்தது. மனத்தின் கருத்தோடு ஒத்துழைக்காத நலிந்த குரலில் அவர் நகைவேழம்பருக்குப் பதில் கூறினார்:
“புரிந்துகொள்ளாமலே நான் இத்துணை நாட்களாகப் பாம்புக்குப் பால் வார்த்துவிட்டேன்.”
“கடைசி கடைசியாக அந்தப் பாலில் நஞ்சைக் கலந்து வார்த்துக் கொடுத்த நாளையும் சேர்த்துத்தான் சொல்கிறீர்களென்று நினைக்கிறேன். நஞ்சுடையதனைக் கொல்வதற்கு இன்னொரு நஞ்சு பயன்படாது என்பதை நீங்கள் மறந்திருக்கக்கூடாது. சொந்த உயிரையும் அந்த உயிரின் நம்பிக்கைகளையும் உங்களிடம் கொடுத்துவிட்டு ஏமாறுவதற்கு எல்லாருமே காலாந்தகனாக இருக்க மாட்டார்கள் ஐயா! மேலும் நஞ்சுடைய பொருளுக்குப் புதிய நஞ்சைக் கலந்து கொடுப்பதனால் நலிவு ஏற்படுவதற்குப் பதில் பலம்தான் பெருகும்.”
“உண்மைதான்! பலம் பெருகியிருப்பதை இதோ இப்போது நீங்கள் எனக்கு முன்னால் வந்து நிற்கிற விதத்திலிருந்தே நான் தெரிந்து கொள்கிறேன், நகை வேழம்பரே!”
இதைக்கேட்டு நகைவேழம்பர் அந்தப் பெரு மாளிகைக் கட்டிடமே அதிர்ச்சி அடைகிறாற்போல் இடிஇடியென்று சிரித்தார்.
“தெரிந்து கொள்ளுங்கள்! தெரிந்து கொள்ளுங்கள்! நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். இன்னும் நான் உங்களைத் தெரிந்து கொள்ளச் செய்ய வேண்டியவை நிறைய மீதமிருக்கின்றன. கொலையும் கொள்ளையும், குரோதமும், வஞ்சகமும் குறைவில்லாமல் புரிந்து உங்களுடைய நிலவறையில் நீங்கள் தேடிக் குவித்திருக்கிறீர்களே அந்தச் செல்வம் ஒன்று மட்டும்தான் உங்களுடைய வலிமை.”
“ஒப்புக்கொள்கிறேன். ஆனால் உன்னைப்போல ஓர் அசுரப் பிறவியின் கொடிய நட்பு எனக்குக் கிடைத் திருக்கவில்லையானால் நான் நியாயமானவனாகவும், இந்த வஞ்சகமான வலிமை இல்லாது ஏதோ ஒருவகையில் பலவீனனாகவும் எல்லாரையும் போல வாழ்ந் திருக்கலாம்.”
எதிரே நிற்கிற ஒற்றைக் கண்ணனிடம் பெருநிதிச் செல்வருக்கு மதிப்புக் குறைந்து போய்விட்ட காரணத் தினால் ‘நீ, உன்னை’ என்று ஏகவசனத்தில் அலட்சியமாகப் பேசத் தொடங்கிவிட்டார். அதனால் இந்தப் பேச்சு எதிராளியை இன்னும் கொதித்தெழச் செய்தது.
“இந்த அசுரப் பிறவியின் சூழ்ச்சிகள் கற்பித்த வழியில் போய்த்தான் சோழ மன்னரிடம் பெருமதிப்புக்குரிய எட்டிப்பட்டம் பெற்றீர்கள். இந்த அசுரப் பிறவியின் சூழ்ச்சியைக் கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொண்ட வழிகளில் போய்த்தான் உங்களுடைய அந்தரங்க நிலவறையில் தாழி தாழியாகப் பொன்னும் மணியும் முத்தும் சேர்த்துக் குவித்திருக்கிறீர்கள். இந்த ஒற்றைக் கண்ணால் நான் உலகத்தைப் பார்த்துத் தெரிந்துகொண்ட அநுபவங்களிலிருந்துதான் இரண்டு கண்களால் கூடப் பார்த்து முடிக்க இயலாத அவ்வளவு செல்வத்தை உங்களுடைய நிலவறையில் நிறையக் குவித்திருக்கிறேன்.”
எதிரி திரும்பத் திரும்பத் தன்னுடைய செல்வத்தைப் பற்றியே நினைவூட்டிப் பேசியதைக் கேட்டுப் பெருநிதிச் செல்வருக்குப் பொறுமை போய்விட்டது. அளவற்ற ஆத்திரம் பிறந்தது அவருக்கு.
“பேயே! செல்வம் செல்வமென்று பறக்கின்றாயே! நிலவறையைத் திறந்து விட்டு விடுகிறேன். உனக்கு வேண்டியதை அதிலிருந்து வாரி எடுத்துக்கொண்டு போய்விடு. மறுபடி நீ என் முகத்தில் விழிக்காதே...” என்று கூறியவராகத் தம்முடைய பள்ளியறையிலிருந்தே நிலவறைக்குள் போவதற்குரிய வழியாகக் கீழே இறங்கும் படிக்கட்டில் நகைவேழம்பரையும் கைப்பற்றி இழுத்துக் கொண்டு வேகமாகப் பாய்ந்து இறங்கினார் பெருநிதிச் செல்வர்.
“கையை விடுங்கள். நான் வாரிக்கொண்டு போவதற்கு உங்களுடைய அநுமதி எதற்கு? நானே அதைச் செய்து கொள்கிறேன்!” என்று தன் கையைப் பெருநிதிச் செல்வருடைய பிடியிலிருந்து உதறிக்கொண்டு அவரைப் பின்தொடர்ந்தார் நகைவேழம்பர். நிலவறைக்குச் செல்லு வதற்காக ஒவ்வொரு படியாய் மிதித்துக்கொண்டு கீழே இறங்கியபோது, தாம் மிதிக்கின்ற ஒவ்வொரு மிதியும் நகைவேழம்பருடைய கழுத்தில் படுவதுபோல் பாவித்துப் பல்லைக் கடித்துக் கொண்டு சென்றார் பெருநிதிச் செல்வர். பெருநிதிச் செல்வரையே அழுத்தி மிதிப்பதாக நினைத்துக் கொண்டு சென்றார் நகைவேழம்பர். கீழே நிலவறை வந்தது. செல்வம் குவிந்திருக்கிற இடத்துக்கே மணமும் உண்டு போலும். சந்தனமும் அகிற் புகையும், பச்சைக் கற்பூரமும் அந்தப் பகுதியிற் குவிந்திருக்கிற செல்வத்தின் மிகுதியை எடுத்துச் சொல்லுவன போல் நறுமணம் பரப்பிக் கொண்டிருந்தன. தரையில் விலை மதிப்பற்ற சீனத்துப் பட்டுக்கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது.
என்றாலும் அப்போது அந்த நிலவறைக்குள் புகுந்த இருவருக்கும் நறுமணத்தை உணர்கிற எண்ணமோ, பட்டுக் கம்பளத்தில் மென்மையை உணர்கிற நளின உணர்வோ சிறிதும் இல்லை. அந்த இருவருடைய நிலையையும் கண்டு சந்தர்ப்பம் தெரியாமல் பெரியவர்கள் முன்னால் சிரித்து அவர்களுடைய கோபத்தைக் கிளறிவிடுகிற சிறு பிள்ளைகளைப் போல் அங்கே குவிந்திருந்த முத்துக்களும், மணிகளும், பொற்காசுகளும் ஒளி மின்னிச் சிரித்தன. அந்த இரண்டு பேருடைய கோபத்துக்கும் நடுவே அவை இயல்பாக மின்னுவதுகூட அதிகமான துடுக்குத் தனமாகத் தோன்றுவது போலிருந்தது.
அவர்கள் இருவருக்கும் வழக்கமான நெஞ்சுத் துடிப்பைவிட அதிகமான விரைவோடு மூச்சும் இதய மும் அடித்துக்கொண்டன. விநாடிக்கு எத்தனை முறை துடிக்கிறது என்று நினைக்கவும் முடியாத வேகத்தோடு இதயம் துடித்தது. அறையில் மூலைக்கு மூலை இறைந்து கிடந்த தனித்தனி மாணிக்கக் கற்கள் எல்லாம் செக்கச் செவேரென்று மின்னியபோது அவை அத்தனையும் தனித்தனியே நகைவேழம்பரின் ஒற்றைக் கண்ணாகத் தோன்றின பெருநிதிச்செல்வருக்கு. ‘நிலவறையின் நான்கு புறமும் எவராவது முரட்டுக் கொலையாளிகளை மறைவாக இருக்கச் செய்துவிட்டுத் தம்மைத் தீர்த்து விடுகிற அந்தரங்க எண்ணத்தோடு அங்கே அவர் அழைத்து வந்திருப்பாரோ?’ என்று சந்தேகம் கொண்டவராய் ஒற்றைக் கண்ணினால் நான்கு புறமும் கூர்மை யாகப் பார்த்துக்கொண்டே, ஒவ்வோர் அடியாகப் பாதம் பெயர்த்து வைத்து உள்ளே நடந்தார் நகைவேழம்பர். ‘பாம்பின் கால் பாம்பறியும்’ என்பது போல் பெருநிதிச் செல்வரின் சூழ்ச்சிகள் நகைவேழம்பருக்கு மனப்பாடம். எப்போதும் இயல்பிலேயே வேறு வழியின்றி நிரந்தரமான கோழையாக இருப்பவனைக் கண்டு பயப்பட வேண்டுவதில்லை. சில சந்தர்ப்பங் களைச் சமாளிப்பதற்காக மட்டும் கோழைபோல நடித்து விட்டுப் பின்பு எதிரியைக் கறுவறுக்க நேரம் பார்க்கும் நடிப்புக் கோழைகளை நம்பக்கூடாது. இத்தனை ஆண்டுகள் பழகியும் பெருநிதிச் செல்வர் முதல் வகைக் கோழையா, இரண்டாவது வகைக் கோழையா என்பதை முடிந்த முடிவாக அறிந்து கொண்டுவிட முடியாமல் திணறினார் நகைவேழம்பர். காரணம் அவர் இரண்டு வகைக் குணங்களையும் மாற்றி மாற்றிச் செயல்படுத் தியிருக்கிறார். அதில் எது மெய் எது போலி என்று புரிந்துகொள்வது, தந்திரத்தில் தேர்ந்தவராகிய நகைவேழம்பருக்கே அரிதாயிருந்தது. அதனால்தான் அன்று காலை நேரத்தில் அவரோடு நிலவறைக்குள் புகுந்த போது மிக நுணுக்கமான தற்காப்பு நினைவுடனேயே அங்கு நுழைய வேண்டியிருந்தது நகைவேழம்பருக்கு.
செல்வக் களஞ்சியமான காவிரிப்பூம்பட்டினத்தையே சோழ மன்னனிடமிருந்து விலைபேசி வாங்கினாலும் அதற்கு அப்புறமும் மீதமிருக்கக்கூடிய அவ்வளவு செல்வம் வேறு வேறு வடிவில் அங்கே குவிந்து கிடந்தது. இருவரும் அவற்றை எதிரெதிர்த் திசைகளிலே இருந்து பார்த்தபடி இருந்தனர். இருவருடைய நெஞ்சுத் துடிப்பையும் கேட்டு முத்துக்கள் மின்னுவதற்குப் பயந் தனவோ என இருந்தன. இருவரும் மூச்சு விடுகிற ஒலி வெகுண்டெழுந்த சர்ப்பங்கள் சீறுவதுபோல் ஒலித்தது.
ஒவ்வொரு விநாடியும் தன்னைக் கொல்லப் பாயும் முரட்டுக் கரங்களையே நான்கு புறத்திலிருந்தும் எதிர்பார்க்கிற தற்காப்போடு நின்றார் நகைவேழம்பர். பல விநாடிகள் ஒரு விளைவும் இல்லாமல் மெளனமாகக் கழியவே தான் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கிற சூழ்நிலை அங்கு இல்லை என்று அநுமானம் செய்து கொண்டு தைரியம் அடைந்தார் நகைவேழம்பர். மெல்லத் தொண்டையைக் கனைத்து விட்டுக்கொண்டு கை விரல்களைச் சொடுக்கினார். அப்போது எதிரேயிருந்து பெருநிதிச் செல்வருடைய குரல் ஒலித்தது.
“செல்வம் செல்வம் என்று நீ பறந்த பேராசை தீரும் படி உனக்கு வேண்டியதை வாரிப் போகலாமே இங்கிருந்து?”
“என்ன சொல்கிறீர்கள்?”
தனக்குக் காது கேட்காததுபோல் அதை மீண்டும் சொல்லும்படி இரண்டாம் முறையாகப் பெருநிதிச் செல்வரைக் கேட்டார் நகைவேழம்பர்.
தான் கூறியதைக் காதில் வாங்கிக் கொள்ளாதது போல் , எதிரி இரண்டாவது முறையாகவும் அதைச் சொல்லும்படி தன்னை அழுத்திக் கேட்கவே, பெருநிதிச் செல்வருக்குக் கலக்கம் ஏற்பட்டது. ‘இதை எதிராளி. நம்புவானோ, மாட்டானோ’ என்று தானே பயந்தபடி சொல்கிற வார்த்தைகளை எதிராளியே இன்னொரு முறை சொல்லும்படி திருப்பிக் கேட்டுவிட்டால் பொய்யைப் படைத்துச் சொல்லியவனுக்கே தான் படைத்த பொய்யில் நம்பிக்கையும் பற்றும் குன்றிப் போய்விடுகிறது. இயல்பாக ஏற்படாமல் போலியாக ஏற்படுத்திக் கொண்ட ஆத்திரத்தினால், “செல்வம் செல்வம் என்று நீ பறந்த பேராசை தீரும்படி உனக்கு வேண்டியதை இங்கிருந்து வாரிக்கொண்டு போகலாமே?” என்று பொருளையும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் பேசிவிட்டாலும் அதே பேச்சையே இன்னும் ஒருமுறை பேசும்படி நகைவேழம்பர் கேட்டபோது பழைய கொதிப்போடும், பழைய வேகத்தோடும் பேச வரவில்லை. ஏதோ பேசினோம் என்று பேர் செய்வது போல் பேசினார் அவர்.
“இங்கிருந்து உங்களுக்கு வேண்டியதை வாரிக் கொண்டு போகலாம் என்று சொன்னேன்.”
“வேண்டியதை என்றால்...?”
“எதை வேண்டுமானாலும் வாரிக்கொண்டு போகலாம் என்று சொல்கிறேன்.”
“இன்னும் ஒருமுறை நன்றாகச் சிந்தித்துவிட்டு அப்புறம் சொல்லுங்கள். ‘எதை வேண்டுமானாலும்’ என்று நீங்கள் சொல்லுகிறபோது அதில் எல்லாமே அடங்கிவிடுகிறது. ஒன்றும் மீதமில்லை.”
“நீ நஞ்சினும் கொடிய வஞ்சக அரக்கன், எதையும் மீதம் வைக்கமாட்டாய் என்று உணர்ந்துதான் அப்படிச் சொல்கிறேன்.”
“உணர்ந்துதானே அப்படிச் சொல்கிறீர்கள். நன்றி ஐயா நன்றி! நான் இப்போது இங்கிருந்து எனக்கு வேண்டிய மிக முக்கியமானதொரு பொருளைத்தான் வாரிக் கொண்டு போக எண்ணுகிறேன். அந்த முக்கிய மான பொருள் இங்கே குவிந்திருக்கிற செல்வங்களை விடப் பெரியது. அதாவது நான் வாரிக் கொண்டு போக வேண்டிய பொருள் இதோ இங்கேதான் இருக்கிறது” என்று உள்ளடங்கிய கொதிப்போடு சொல்லிக் கொண்டே வந்த நகைவேழம்பர் குபிரென்று எரிமலையாய்ச் சீறிப் பாய்ந்து பெருநிதிச் செல்வரின் நெஞ்சுக் குழியில் கையை மடக்கி வைத்து அழுத்தினார். நெஞ்சுக்குழியில் பாராங்கல்லைத் துரக்கி வைத்ததைப் போலப் பாரம் நிறைந்ததாயிருந்தது அந்தக் கை.
“நான் வாரிக் கொண்டு போக வேண்டிய பொருள் இதோ இங்கே இருக்கிறது.”
இந்த வார்த்தைகளை மீண்டும் நகைவேழம்பர் கூறியபோது உலகம் அழிகிற ஊழியன் கடைசிக் குரல் போல் அவை பயங்கரமாய் ஒலித்தன. பெருநிதிச் செல்வரின் நெஞ்சு வெடித்துச் சிதறிவிடுவதற்குத் துடிப்பதுபோல் அவ்வளவு பரபரப்போடு அடித்துக் கொண்டது.
“இதோ புடைத்தும், தணிந்தும் இந்த இடத்தில் மூச்சு விட்டுத் துடிக்கிறதே! இந்த உயிரை முதலில் இங்கிருந்து நான் வாரிக்கொண்டு போக வேண்டும்.”
காற்று சீறிக் கடல் பொங்குகிற ஊழிக் காலத்தின் கொடுமையை நினைவூட்டுகிற சீரழிவின் சொல்லுருவமாய் இந்த வார்த்தைகள் மறுபடியும் நகைவேழம் பருடைய நாவிலிருந்து ஒலித்தன. இப்போது அவருடைய குரல் ஒலி முன்னைக் காட்டிலும் உரத்திருந்தது. சொற்கள் தடுமாறி உடைந்த குரலில் அவருக்கு மறுமொழி கூறினார், பெருநிதிச் செல்வர்.
“என்னிடமிருந்து நீ எடுத்துக்கொண்டு போக வேண்டிய பொருள் இதுதான் என்று உன் மனத்தில் உறுதி செய்து கொண்டு விட்டாயானால் உன்னை நான் மறுக்கவில்லை. இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் இந்த உடம்புக்குள்ளிருந்து இது வாழ்வதற்குக் காரணமாயிருக்கிற விலைமதிப்பற்ற உயிர்ப் பொருளைக் கொள்ளை கொண்டு போகிறவன் நீயாகத்தான் இருப்பாய் என்று எனக்குத் தெரியும்! இது நான் எதிர் பார்த்ததுதான்.”
“அப்படியானால் மிகவும் நல்லதாகப் போயிற்று. இதை நாம் இன்னாரிடம் இழந்துவிடுவோம் என்று எதிர்பார்த்து முன்பே இழப்பதற்கு ஆயத்தமாகிவிட்ட பொருளை இழப்பது வேதனைக்கு உரியதாக இராது.”
“பேசு. நன்றாகப் பேசு. உனக்குத் தோன்றியதையெல்லாம் பேசு. இந்த மாளிகையின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வளர்ந்து நான் உனக்கு அளித்த சோற்றுச் செருக்கு எல்லாம் தீரும் மட்டும் பேசிக் கொண்டிரு. இப்போது என் நெஞ்சை அழுத்திக் கொண்டு நிற்கிறாயே. இந்த முரட்டுக் கையில் ஓடுகிற வலிமை இதே பெருமாளிகையில் தின்று கொழுத்த வலிமை என்பதை நீ மறந்து போயிருக்கலாம். ஆனால் நான் மறந்து விடுவதற்கு இயலாது. உலகத்தில் உதவிகளைப் பெற்றவர்கள் நன்றி மறந்து போய்விடும் கொடியவர்களாயிருக்கலாம். ஆனால் உதவி செய்தவர்கள் அப்படிச் செய்தோம் என்பதை மறந்து விட முடியாது.”
“இருக்கலாம். ஆனால் நன்றி பாராட்டுவதும் பழைய உதவிகளை எண்ணிக்கொண்டு புதிய கெடுதல் களுக்கு அடிமைப்படுவதும் கோழைகள் செய்ய வேண்டிய காரியங்கள்.”
“உதவியும் பயனும் தந்தவர்களைக் கொலை செய்ய வேண்டியதுதான் வீரன் செய்யும் காரியங்கள் போலிருக்கிறது.”
“உங்கள் மனத்தை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வியை என்னிடம் எதற்காகக் கேட்கிறீர்களோ தெரியவில்லை. பலமுறை நீங்கள் அந்தக் காரியத்தைச் செய்திருக்கிறீர்கள். ஒரு காரியத்தையே நீங்கள் செய்யும்போது அது வீரதீர சாதனையாகி விடுகிறது. அதே காரியத்தை நானும் செய்ய முன் வந்தால் அப்போது மட்டும் அதைக் கோழைத்தனம் என்கிறீர்களே, ஏன்? ஏழையின் திறமையை மட்டும் ஏன் இருட்டில் வைத்த ஓவியமாக்குகிறீர்கள்?”
இந்தக் கேள்விக்குப் பெருநிதிச் செல்வர் மறுமொழி கூறவில்லை. நகைவேழம்பரும் தமது பிடியை விடவில்லை. இருவருக்கும் இடையே அச்சமூட்டத்தக்க மெளனம் நிலவிய அந்த நேரத்தில் நிலவறைக்குள்ளே இறங்கும் படிகளில் சிலம்பொலியும் வளைகளின் ஒலியும் மெல்லக் கிளர்ந்து ஒலிக்கும்படி யாரோ நடந்து இறங்கி வருகிற ஒலி கேட்கவே, நகைவேழம்பர் பெருநிதிச் செல்வரைத் தம்முடைய முரட்டுப் பிடியிலிருந்து விடுதலை செய்துவிட்டுத் திரும்பினார். வருவது யார் என்று அறிந்துகொள்ளும் ஆவலில், பெருநிதிச்செல்வரின் கண்களும் படியிறங்குகிற பகுதியில் திரும்பின.
வானவல்லி மெல்ல அடிமேல் அடி வைத்துப் படியிறங்கி வந்து கொண்டிருந்தாள். அவளுக்குப் பின் அவளுடைய அன்னையும் பெருமாளிகைப் பணிப் பெண்கள் இருவரும் ஆக நான்கு பெண்கள் நில வறைக்கு வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன காரியத்துக்காக அப்போது அங்கே இறங்கி வந்து கொண்டிருந்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், தனக்கு ஒருவிதத்தில் மிகவும் அருமையான பயனை விளைவிக்கத் தக்கதாக, அவர்களுடைய குறுக்கீடு அமைவதை எண்ணி எண்ணி வியந்தார் பெருநிதிச் செல்வர். அவர் வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த நிகழ்ச்சியில் அவரை முற்றிலும் கைவிட்டு விடுகிறாற் போல் ஒரு மாறுதல் நிகழ்ந்துவிட இருந்தது. நிலவறைக்குள் நின்றுகொண்டிருந்த நகைவேழம்பரையும் அவரையும் பார்த்து விட்டு ‘இப்போது இங்கே நுழைய வேண்டாம் என்று குறிப்போடு, திரும்புகிற எண்ணத்துடன் அந்தப் பெண்கள் தயங்கி மேலே மீண்டும் போக இருந்தபோது பெருநிதிச் செல்வரே முந்திக் கொண்டார். “வானவல்லி! நீயும் உன் அன்னையும் ஏன் அங்கேயே நின்றுவிட்டீர்கள்? நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோமே என்பதற்காக நீங்கள் தயங்கித் திரும்ப வேண்டியதில்லை. உங்களுக்கு ஏதாவது மாலையில் கோப்பதற்கு முத்துக்கள் வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். வாருங்கள் உங்களுக்கு வேண்டிய முத்துக்களைப் பொறுக்கிக் கொள்ளலாம். நகைவேழம்பர் வேறு துணையிருக்கிறார். முத்துக்களை பொறுக்கித் தேர்ந்தெடுப்பதில் இணையற்ற திறமையுடையவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே யாராவது அப்புறம் பார்த்துக் கொள்ளலாமென்று திரும்பிப் போவார்களோ? வேண்டிய முத்துக்களைத் தேர்ந்தெடுக்கலாம் வாருங்கள்” என்று நிறைந்த உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு அவர்களை அழைத்தார். அவர்கள் இறங்கி வந்தார்கள்.
“நகைவேழம்பரே! எங்கே உங்களுடைய திறமையைக் காட்டுங்கள், பார்க்கலாம். இவர்களுக்கு ஒளியிற் சிறந்த நல்ல முத்துக்கள் வேண்டும்” என்று பெருநிதிச் செல்வர் அவரை முதுகில் தட்டிக் கொடுத்தபோது அவருக்கு உள்ளே சினம் கொதித்தாலும் வெளிப்படையாக விட்டுக் கொடுக்க முடியவில்லை. முத்துக்களைத் தேர்ந்தெடுப்பதற்காகக் குவியலுக்கருகே அவர் அமர்ந்து குனிந்தார். அந்தப் பெண்களும் அருகில் வந்து அவரைச் சூழ்ந்து நின்றுகொண்டார்கள்.
அரை நாழிகைக்குப் பின் அவர்களுக்கு வேண்டிய முத்துக்களைப் பொறுக்கி அனுப்பிவிட்டு, பெருநிதிச் செல்வர் நிலவறையில் நின்றிருந்த தூணருகே அடக்க முடியாத ஆத்திரத்தோடு நகைவேழம்பர் திரும்பிப் பார்த்தபோது அங்கே அந்தத் தூண்தான் நின்றது. அதனருகே நின்றவரைக் காணவில்லை; வஞ்சக எண்ணத்தோடு அவர் தூணின் மறுபுறம் ஒளிந்திருக்கலாமோ என்று கைகளை ஓங்கிக்கொண்டு தூணின் பின்புறம் பாய்ந்தார் நகைவேழம்பர். தன்னால் ஆத்திரத்தோடு தேடப்பட்டவர் அப்போது அந்த நிலவறையின் எல்லையிலிருந்தே தப்பிப் போய்விட்டார் என்று நகை வேழம்பருக்குத் தீர்மானமாகத் தெரிந்தபோது தலை போகிற வேகத்தோடு பதறிப் பறந்து நிலவறையிலிருந்து வெளியேறும் படிகளில் தாவியேறினார் அவர். கடைசிப் படிக்கு அப்பால் கனமான இரும்புக் கதவு அடைக்கப்பட்டு, அது அடைக்கப்பட்டதனால் அந்த இடத்தில் இருளும் கனத்திருந்தது. தாம் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார். அதற்கு அப்பால் அவர் செல்ல வேண்டிய வழி மூடப்பட்டு இருண்டு போயிருந்தது.
நீலநாகருடைய வாழ்க்கையில் சந்திப்புக்கும், பிரிவுக்கும், அதிகமான வாய்ப்புக்கள் ஏற்பட்டதில்லை. யாரையாவது சந்திக்க வேண்டும் என்று தவித்துத் தவித்து அவர் வருந்தியதுமில்லை. அப்படித் தன்னைத் தவிக்கச் செய்தவரை எதிரே சந்தித்து அதனால் மகிழ்ந்ததுமில்லை. பிரிந்து துக்கப்பட்டதும் இல்லை. ஊசியின் நுனிபோல் வீரனுடைய வாழ்க்கை, குறி வைப்பதில் தைத்துப் பாய்கிற தன்மை ஒன்றே ஆற்றல். எஃகுபோல் இறுகிய உடலும் உள்ளமும் கொண்டு நெடுங்காலமாகச் சிறந்து விளங்கி வரும் ஆலமுற்றத்து மரம்போல் படர்ந்து நிமிர்ந்து தனி நின்ற பெரு வீரராகிய அவர் இப்போது முதன் முதலாக ஒரு பிரிவை உணர்ந்தார். இன்னதென்று கூற முடியாத ஏதோ ஒரு உணர்வு தம் மனத்தில் கலங்குவதையும் கலக்குவதையும் அறிந்தபோது அதுதான் பிரிவாயிருக்க வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது. யாருடைய பயணத்தினால் இப்போது அவருடைய மனம் பிரிவை உணர்கிறதோ அவனுடைய வாழ்வின் தொடக்க நாளிலிருந்தே அவனைச் சில நாட்கள், பல நாட்கள், திங்கள்கள் காணவும் பேசவும் நேராமல் பிரிந்திருக்கிறார் அவர். அப்போதெல்லாம் அதைப் பிரிவென்று உணரவோ அதற்காகக் கலங்கவோ தோன்றியதில்லை அவருக்கு. படைக்கலப் பயிற்சியை எல்லாம் முடித்துக் கொண்டு இளங்குமரன் ஆல முற்றத்திலிருந்து அருட்செல்வருடைய தவச்சாலையிலேயே போய் வசிக்கத் தொடங்கியபோதோ அவன் திருநாங்கூரில் தங்கியிருந்த போதோ காவிரிப்பூம் பட்டினத்தில் அவன் இல்லை என்பதை மட்டும் அவர் உணர்ந்திருந்தாரே ஒழிய அதற்காகச் சிறிதும் வருந்தியதில்லை. இன்று அவனை மணிபல்லவத்துக்குக் கப்பலேற்றிய பின்போ அதற்காக வருந்தவும், அந்தப் பிரிவை உணரவும் வேண்டும்போல அவர் தவித்தார். திருநாங்கூரில் பெற்ற கல்வியோடு. அந்தக் கல்வியால் அழகு பெற்று, அகமும் முகமும் ஒளிர வந்து நின்று பூம்புகாரில் பேரறிஞர்களையெல்லாம் வென்று வாகை சூடிய வெற்றியோடு அவன் மணிபல்லவத்துக்குப் புறப்பட்டுச் சென்றபோது தன் பக்கத்திலேயே தன்னோடு இருக்க வேண்டிய அரும் பொருள் ஒன்று தன்னிடமிருந்து பிரிந்து செல்லுவது போல எண்ணி ஏங்கினார் அவர். ‘வாளையும் வேலையும் எடுத்து ஆள்வதுதான் ஆண்மை என்று எண்ணிக் கொண்டிராதே. மனதை நன்றாக ஆளவேண்டும் அதுதான் ஆண்மை’ என்று எப்போதோ இளங்குமரனுக்கு அறிவுரை சொல்லியிருந்தார் அவர். ஆனால் தன்னுடைய மனத்தையே ஆள முடியாமல் அவர் இப்போது தவித்தார். மூப்புக் காலத்தில் தன் ஒரே புதல்வனைப் பிரிய நேர்ந்த தந்தையின் தளர்ந்த மனநிலையோடு இருந்தார் அவர்.
இந்த இளங்குமரனுக்கும், தனக்கும் முன் பிறவி தொடர்பு ஏதேனும் விட்டகுறை தொட்ட குறையாக இருக்க வேண்டுமென்று தோன்றியது அவருக்கு. ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் அந்த விநாடியிலும் அவரைச் சுற்றி அவருடைய மாணவர்களாக நூற்றுக் கணக்கான இளைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லாரும் தன்னைத் தெய்வமாக மதித்து வணங்குகிறவர்கள் என்றும் அவருக்குத் தெரியும். ஆனாலும் அவர் மனம் இளங்குமரன் ஒருவன் மேல்தான் பாசம் கொண்டது. தான் கற்பித்த படைக்கலப் பயிற்சியையும் விட அதிகமாக மனத்துக்கு வளந்தர முடிந்த பயிற்சியை அவன் திருநாங்கூரில் பெற்றுக் கொண்டு வந்திருப்பதாகவும் அவருக்குத் தோன்றியது. அவன் மனத்தினாலும் சிந்தனைகளாலும் முதிராதவனாக உடலினால் மட்டும் வலிமை முதிர்ந்து நின்றபோது இதே ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் தான் அவனுக்கு அறிவுரை கூற நேர்ந்த சந்தர்ப்பங்களையும் திருநாங்கூரிலிருந்து திரும்பியபின் மனத்தினாலும் சிந்தனைகளாலும் முதிர்ந்து அவனே பலருக்கு அறிவுரை கூற நேர்ந்த சந்தர்ப்பங்களையும் இணைத்து நினைத்துப் பார்த்தபோது நீலநாகருடைய விழிகளில் ஆனந்தக் கண்ணிர் அரும்பிற்று. ஒரு காலத்தில் தனக்குக் கற்பித்தவற்றைக் காட்டிலும் அதிகமானவற்றைத் திருநாங்கூர் அடிகள் இளங்குமரனுக்குக் கற்பித்திருப்பதாகத் தெரிந்தும் தன்னுடைய ஆசிரியரிடம் அவருக்குக் கோபமோ, பொறாமையோ வரவில்லை.
“அவருடைய தத்துவங்கள் நிலைத்து வாழ்வதற்குத் தகுந்த உரமான மனநிலம் எது என்று தேடி உணர்ந்து அதில் அவர் அவற்றைப் பயிர் செய்திருக்கிறார்” என்று திருப்தி கொண்டாரே தவிரச், சிறிதும் பொறாமைப் படவில்லை. மாறாகப் பலமுறை அதற்காகப் பெருமைப் பட்டிருக்கிறார் அவர்.
“நீலநாகா! நான் இவ்வளவு காலம் தவம் செய்து கொண்டிருந்ததன் பலனே இப்போது இந்த மாணவனாக விளைந்து என்னிடம் வந்திருப்பதாக எண்ணுகிறேன். பெண்களுக்கு நல்ல நாயகர்கள் கிடைப்பது போல் கலைகளுக்கும் அவற்றை ஆள்பவர்கள் தகுதி நிறைந்தவர்களாகக் கிடைக்க வேண்டும். இந்த இளைஞனுடைய மனம் எதையும் ஆள்வதற்கு உரிய பக்குவம் பெற்றிருக்கிறது. ‘நான் குருவாகக் கிடைத்ததற்கு முற்பிறவியில் தாங்கள் தவம் செய்திருக்க வேண்டும்’ என்று எத்தனையோ இளைஞர்கள் என்னிடமே என்னை வியந்திருக்கிறார்கள். நானோ இளங்குமரன் என்னும் ஒரு சிறந்த மாணவன் என்னிடம் வந்து சேர்வதற்காக இத்தனை நாள் எனக்குள்ளே தவம் செய்து கொண்டிருந்ததாக உணர்கிறேன்” என்று முன்பு எப்போதோ திருநாங்கூரடிகள் தன்னிடம் மனம் நெகிழ்ந்து கூறியிருந்ததை நினைத்துக் கொண்டார் நீலநாகர். திருநாங்கூர் அடிகள் யாரைப் பற்றியும் எதற்காகவும் மிகைப்படப் புகழ்ந்து பேசாதவர். பிறருடைய தகுதிகளைக்கூடப் புரிந்து மனத்தில் நினைத்துக் கொள்வதுதான் அவருடைய வழக்கம். அப்படிப்பட்டவருடைய சொற்களாலேயே இளங்குமரன் புகழப்பட்டதை நினைத்தபோது மெய்சிலிர்த்தார் நீலநாக மறவர். தன்னைப் புகழ்வதாலும் கூட அப்படிப் புகழ்கிறவர்களை இன்பமடையச் செய்யும் பவித்திரமான பிறவியாக அவன் தோன்றியிருப்பதை இந்தச் சம்பவத்தின்போது நீலநாகர் புரிந்துகொண்டார்.
இளங்குமரன் காவிரிப்பூம்பட்டினத்துச் சம்பாபதி வனத்தில் விடலைப் பருவத்து இளைஞனாகத் திரிந்து முரட்டுச் செயல்களைப் புரிந்தபோதுகூட அப்படியும் ஒரு காட்டாற்று வாழ்க்கையைச் சிறிது காலம் வாழ்ந்து பார்த்துவிட்டுப் பின்பு அதில் ஒன்றுமில்லை என்று கைவிட்டு விடுவதற்காகவே அவன் அப்படி வாழ்ந்தது போலத் தோன்றியது நீலநாகருக்கு. அவனுடைய இளமைப் பருவத்து வாழ்வை எண்ணியபோது பயனில்லாத காரியத்தைச் செய்வதிலும் இன்னதிலே இன்ன காரணத்தினால் பயனில்லை என்று பயனின்மையைப் புரிந்து கொள்வதாகிய ஒரு பயன் உண்டு என்று மணிபல்லவத்துக்குக் கப்பலேறிப் புறப்படுவதற்கு முந்திய நாள் அவனே வளநாடுடையாரிடம் கூறிக்கொண்டிருந்த சொற்களைத்தான் இப்போது நினைத்துக்கொண்டார் நீலநாகர். அப்படிப் பயனின்மையைப் புரிந்துகொள்வதற்கு வாழ்ந்த வாழ்க்கைதானோ அந்தப் பருவத்தில் அவன் வாழ்ந்தவை என்று நினைந்து வியக்க முடிவது தவிர அதைப் பற்றிப் பிழையாக எண்ணுவதற்கு வரவில்லை அவருக்கு. ‘இந்த உடம்பின் வலிமையை எதிர்ப்பதற்குத் துணிவுள்ளவர்கள் யாராவது இருக் கிறார்களா?’ என்று எதிரே வருகிறவர்களையெல்லாம் கேள்வி கேட்பது போன்ற உடம்போடு அப்போது மதர்த்துத் திரிந்த அதே இளங்குமரன்தான் இப்போது நாளங்காடியில் அந்தப் பட்டினப்பாக்கத்துப் பெண்ணின் மேல் இந்திர விழாக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் கடுஞ் சீற்றமடைந்து கல்லெறிய முற்பட்டபோது அந்தக் கல்லெறியை எல்லாம் தன் உடலில் தாங்கிக்கொள்ள முன்வந்து அருள்நகை பூத்தவன் என்பதை நினைத்துக் கொண்டார் நீலநாகர்.
அதே நாளங்காடியில் இளங்குமரன் பசி மயக்கத்தினால் சோர்ந்து தன் மார்பில் சாய்ந்தபோது அவனுடைய அந்தப் பொன்னுடல் தன்மேல் கற்பூர மணம் கமழச் செய்ததையும் முகுந்தபட்டரை வாதத்தில் வென்று அந்த வெற்றியாலும் அகங்காரம் அடையாமல் தன்னடக்கமாக அவருக்கு மறுமொழி கூறியதையும், வார்த்தைகளை அளவாகவும் ஆற்றலுள்ளவையாகவும் பயன்படுத்தி எதிரியை விநாடி நேரத்தில் வீழ்த்தி விடவல்ல சமதண்டத்து ஆசீவகர்களைக் கூட்டமாக வென்றதையும் எண்ணி எண்ணிப் பூரித்தார் நீலநாக மறவர்.
இளங்குமரனுடைய வாழ்க்கையில் வீரம் இருந்தது. அழகு இருந்தது; காதல் இருந்தது; அறிவு இருந்தது; அருள் இருந்தது. இன்னும் மகாகவிகள் எவ்வெவ்வற்றை யெல்லாம் காவிய குணங்கள் என்று தேர்ந்தெடுத்துத் தலைமுறை தலைமுறையாகக் கொண்டாடிப் போற்றிக் கவிதையாகவும், காவியமாகவும் எழுதி வைத்திருக்கிறார் களோ அவையெல்லாம் அவனுடைய வாழ்வில் இருப்பதாகப் புரிந்து கொண்டார் நீலநாகர். பெண்ணின் செவிகளில் போய்ப் பொருந்திய பின்பு குண்டலங்களுக்கு அப்படிப் பொருந்திய இடத்தால் அழகு வருவதாகப் பொற்கொல்லர்கள் கூறுவதை நீலநாகர் வன்மையாக மறுத்திருக்கிறார். ‘குண்டலத்தால் பெண்ணுக்கு அழகு வளர்வதாக வேண்டுமானால் சொல்லலாம். பெண்ணால் குண்டலத்துக்கு அழகில்லை’ என்று முரட்டுத்தனமாக ஆலமுற்றத்துப் பொற்கொல்லர்களிடம் பலமுறை வாதிட்டிருக்கிறார் அவர். அவரே இப்போது அந்த உவமையை வேறு விதமாக மாற்றி இளங்குமரனோடு பொருத்தி நினைக்கத் தொடங்கி யிருந்தார். இளங்குமரன் காவிய குணங்களைப் பெற்றதனால் அழகு கொண்டான் என்பதற்குப் பதிலாகக் காவிய குணங்கள் தமக்கு நாயகனாக அவனைப் பெற்றதனால் அழகு கொண்டிருக்க முடியும் என்று மாற்றி நினைத்தார் அவர். ‘நான் நினைத்துக் கொண்டிருக்கிற எண்ணங்களை விதைப்பதற்கு எனக்கு காவிய நாயகன் வேண்டும்’ என்று முதன் முதலாக இளங்குமரனைத் திருநாங்கூருக்கு அழைத்துக் கொண்டு போனபோது தம்மிடம் அடிகள் கூறியது இப்போது மீண்டும் நினைவு வந்தது அவருக்கு. மலை பொங்குவது போல் அவருடைய உடம்பு பெருகி நெட்டுயிர்த்தது. ஆலமுற்றத்துக் கடற்பரப்பும், அதன் கோடியில் தொடு வானமும் கடலும் இணைவதுபோலத் தெரிந்த பொய்யழகும் அவருடைய கண்களில் தெரியாமல் மறைந்து அந்த இடமெல்லாம் இளங்குமரனே தெரிந்தான்.
உலகத்தில் ஏதாவது ஒரு பொருளின்மேல் மட்டும் அதிகமாக ஆசைப்படுகிறவன் வீரனாக இருக்க முடியாது. நிறைந்த வீரன் என்பவன் ஒருவகையில் துறவியாகவும் இருக்க வேண்டும். எல்லாவற்றையும் வென்று கைப்பற்றி நிமிர்ந்து நிற்கும் ஆற்றலைப் போல் எல்லாவற்றையும் விட்டுவிடுகிற தைரியமும் வீரனுக்கு இருக்க வேண்டும். ஆசைப்பட்டுச் சேர்ப்பதற்கு ஒரு பங்கு ஆற்றல் போதுமென்றால், ஆசைப்பட்டுச் சேர்த்த பொருளையும் அதைச் சேர்க்கக் காரணமாயிருந்த ஆசையையும் விடுவதற்கு இரண்டு பங்கு ஆற்றல் வேண்டும். உயர்ந்த தரத்து வீரம் என்று இதைத்தான் நீலநாகர் எண்ணிக் கொண்டிருந்தார். அவருடைய அந்தரங்கமான வாழ்க்கை நோக்கமும் இதுதான். அடித்துப் பிடித்துச் சேர்த்து வைக்கும் வீரத்தைவிட ‘இதை இழக்கக் கூடாது’ என்கிற வகையைச் சேர்ந்த சிறந்த செல்வத்தையும் மனம் ஒப்பி இழக்கத் துணிகிற வீரன்தான் தேர்ந்தவன் என்ற குறிக்கோள் அவ ருடையது. ஆனால் அவராலேயே இப்போது இளங்குமரனைப் பற்றிய நினைவை இழப்பதற்குத் துணிய முடியவில்லை. அந்நினைவுகளை எல்லாம் ஒவ்வொன்றாக மனத்தில் எண்ணி எண்ணித் திரும்பத் திரும்பச் சேர்த்து வைக்க முயலுகிற பேராசைக்காரராக மாறிக் கொண்டிருந்தார் அவர்.
ஏமாறக்கூடாது ஏமாறக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தும் அந்த நினைப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாத காரணத்தாலேயே தான் ஏமாந்து போய்விட்டதை உணர்ந்தார் நகைவேழம்பர். பெருநிதிச் செல்வர். இயல்பாகவே கோழையா, நடிப்புக் கோழையா என்று புரிந்துகொள்ள முடியாமல் நீண்ட காலமாகத் தான் கொண்டிருந்த மனக்குழப்பம் இன்று தெளிவாகிவிட்டதாக தோன்றியது அவருக்கு. தானாகவே வருகிற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்வதிலும், சில சந்தர்ப்பங்களைத் தனக்காகவே வரும்படி செய்துகொள்வதிலும் பெருநிதிச் செல்வர் வல்லவர் என்பதைப் பலமுறை உடனிருந்தே அறிந்திருந்த நகைவேழம்பர் இன்று அதைத் தனது சொந்த அனுபவத்திலும் புரிந்துகொண்டார்.
பெருநிதிச் செல்வரை வெற்றி கொள்வதற்கு இதற்கு முன் தனிமையிலே தனக்கு வாய்த்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தான் நழுவ விட்டிருப்பதையும் நினைத்துக் கொண்டார். பொருளையும் செல்வத்தையும் இழப்பதை விடச் சந்தர்ப்பங்களை இழப்பது மிகவும் பரிதாபகரமானது. அந்த வகையில் தன்னுடைய இறுதிச் சந்தர்ப்பத்தையும் இப்போது தான் இழந்துவிட்டதாக உணர்ந்தார் அவர். அந்த உணர்ச்சியைத் தாங்கிக் கொள்வது வேதனை மிக்கதாயிருந்தது.
நிலவறைக்கு மேலே ஏறிச் செல்வதற்கு வழி இல்லாமல் அடைக்கப்பட்ட கதவின் கீழே இருளில் அமர்ந்து சிந்தித்தார் நகைவேழம்பர். ‘சாவதற்கு நான் கவலைப்படவில்லை. என்றாவது ஒருநாள் எல்லாரும் சாகத்தான் வேண்டும். அது இதற்கு முன்னாலும் எனக்கு நேர்ந்திருக்கலாம். ஏனோ நேரவில்லை. எனக்கு அளிக்கப்பட்ட பல சந்தர்ப்பங்களில் வளரவும் பயன் படாமல், அழியவும் பயன்படாமல், வீணாய்ப் போன சந்தர்ப்பங்களை வரிசையாக நினைத்துக் கொண்டால் நான் நிறைய வீணாகியிருப்பதாய்த்தான் எனக்கே தெரிகிறது. நான் இனிமேலும் வீணாகக் கூடாதென்று முயன்று கொண்டிருக்கும்போது என் முயற்சியே வீணாகிவிட்டது. எனக்கு மீதமிருக்கிற இந்த ஒரு கண்ணால்கூட நான் பார்ப்பதற்கு இனி ஒன்றுமில்லைதான். இனிமேல் என்னுடைய வழி நிச்சயமாக இருண்டு போய்விட்டது. இனி நான் எந்த வழியைப் பார்ப்பதென்று எனக்கே விளங்கவில்லை. இதோ இப்போது இங்கே என் வழி அடைக்கப்பட்டு இருண்டு போயிருப்பதைப்போல் நான் என்னுடைய எதிரியின் வழியை அடைத்துவிடுவதற்கு நேர்ந்த சந்தர்ப்பங்களையெல்லாம் நழுவ விட்டிருக்கிறேன். நானும் பெருநிதிச் செல்வரும் நண்பர்களாக இருந்து எங்களுக்கு வேறு எதிரிகளைத் தேடிக் கொண்ட காலம் மலையேறிவிட்டது. மற்றவர்கைளை எதிர்ப்பதற்காகவும் கெடுப்பதற்காகவும் தங்களுக்குள் நண்பர் களாகச் சேர்ந்த இருவர் அதே கெடுதலையும் எதிர்ப்பையும் தங்களுக்குள் சொந்தமாகவே அநுபவிக்க நேரிட்டால் இப்படித்தான் ஆகும் என்கிற விளைவு இன்று எனக்குத் தீர்மானமாக விளங்கிவிட்டது.’
இருளில் கன்னத்தில் கையூன்றியபடியே அமர்ந்து இப்படியெல்லாம் நினைத்தபோது நகைவேழம்பருடைய மனத்தில் உணர்ச்சிகள் மாறி மாறிப் பொங்கின. சில விநாடிகள் எதற்காகவோ தான் ஆத்திரப்பட வேண்டும் போலவும், இன்னும் சில விநாடிகள் எந்த ஏமாற்றத் திற்காகவோ தான் வருத்தப்பட வேண்டும் போலவும் தோன்றியது அவருக்கு. கைத்தினவு தீர அந்த நிலவறையின் எல்லைக்குள் குவிந்து கிடக்கும் பொற்காசுகளை எல்லாம் வாரி இறைத்துவிட வேண்டும்போல, அவருடைய கைகளின் விரல்கள் துடித்தன. இப்படிச் சிறைப்பட்டதைப் போல நிலவறையில் அடைக்கப்பட்டு அவமானமடைவதற்குப் பதில் கடலில் தீப்பிடித்த அந்தக் கற்பூரப் படகிலேயே நான் மாண்டு போயிருக் கலாம் என்று நினைத்தார். பொழுது விடிகிற நேரத்தில் பெருநிதிச் செல்வருடைய வாழ்க்கையை ஒரேயடியாக இருளச் செய்துவிடலாமென்று திட்டமிட்ட மனத்தோடு தான் வந்ததையும் அவரைப் பயமுறுத்தியதையும் இறுதியில் நிகழ்ச்சிகள் எப்படியெப்படியோ மாறித் தன்னுடைய வாழ்க்கையே இருண்டுபோய் விட்டதையும் நினைத்தபோது இப்படித்தான் இது நடந்துவிட்டது என்று நடந்ததை முடிவாக நம்ப முடியாதது போலிருந்தது. அவ்வளவு வேகமாகவும் அது நடந்திருந்தது. தன்னுடைய அநுமானத்தால் தொட முடிந்த எல்லைக்கு அப்பாலும் பெருநிதிச் செல்வரின் சூழ்ச்சித் திறன் அதிகமாய்ப் பெருகி வளர்ந்திருப்பதை இன்று நிதரிசனமாகப் புரிந்து கொண்டார் அவர்.
‘சற்று முன் முத்துக்களைத் தேர்ந்தெடுக்கும் போதே என் போதாத காலத்தையும் நான் தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டேன்! ‘இவர்களுக்கு முத்துக்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுங்கள்’ என்று அவர் என் முதுகில் தட்டிக் கொடுத்தபோது நான் என்னுடைய ஆத்திரத்தை மறைத்துக் கொண்டு அந்தக் கணமே அவருடைய பணியாளனாக மாறிவிட்டது எவ்வளவு பெரிய அறியாமை!’ - என்று தன்னுடைய தவற்றை எண்ணியபோது அந்த நிலவறையில் கருங்கற் சுவர்களும், தளமும் இற்று விழுகிற பெருங்குரலில் பயங்கரமாகக் கதறி அழ வேண்டும் போலத் தோன்றியது அவருக்கு. அந்த இருளடைந்த நிலவறையில் அடைபட்டுக் கிடக்கிறவரை பொற்காசுகளும், முத்தும் மணியும் எப்படித் தம் பயனையும், மதிப்பையும் பெறுவதற்கு முடியாதனவாகிப் பெறுமானமின்றி முடங்கிவிட்டனவோ அப்படியே தன்னுடைய ஆற்றலும் முடங்கிவிட்டதாகத் தெரிந்தது அவருக்கு. பயன்படுத்துகிற வரையிலும் ஆற்றல் மதிப்பு ஒன்றுமில்லாமல் போகிற காசுகளைப் போலவே தானும் ஒன்றும் செய்ய முடியாமல் அடைபட்டுப் கிடக்க நேர்ந்த போதாத காலத்தை எண்ணி எண்ணி நொந்தார் அவர். படிகளில் இறங்கிக் கீழே சென்றார். கால் வைத்த இடங்களில் எல்லாம் பொன்னும், மணியும் மிதிபட்டன. தான் நடக்கும் ஓசையே தன்னால் கேட்பதற்குப் பொறுமையற்ற ஒலியாக எதிரொலிப்பது போல் ஒரு பிரமை அவருக்கு உண்டாயிற்று. சக்கரவாளக் கோட்டத்து வன்னி மன்றத்துக்கு அருகில் காலாந்தகனைக் கொன்ற இரவை இப்போது அவர் மீண்டும் நினைத்துக் கொண்டார். வாழ்நாளிலேயே எதற்கும் நடுங்கியறியாதவருக்கு இந்தச் சமயத்தில் அந்தப் பழைய நிகழ்ச்சியை நினைக்க நேர்ந்ததால் உடம்பு புல்லரித்தது.
“அடடா! ஓர் ஆதரவும் எட்டமுடியாத அநாதையாக அல்லவா இங்கே அடைபட்டு விட்டேன். நான் இப்படி அடைபட்டிருப்பது பைரவிக்குத் தெரிந்தால் அவளிடமிருந்து எனக்கு ஏதாவது உதவி கிடைக்கலாம். வன்னி மன்றத்திலிருக்கும் கபாலிகர்களையெல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு நள்ளிரவில் இந்த மாளிகையின்மேல் படையெடுத்து வந்தாவது என்னைக் காப்பாற்றிவிடுவாள். ஆனால் அவளுக்கு இதை யார் போய்த் தெரிவிப்பார்கள்! இனிமேல் இந்த நிலவறைக்கு வெளியே உள்ள உலகத்துக்கு நான் செத்துப் போய் விட்டதுபோலத்தான். ‘நான் இன்னும் வாழ்கிறேன் சாகவில்லை’ - என்பதை உலகத்துக்கு நிரூபிப்பதற்கு இனி என் கையில் என்ன இருக்கிறது?’
இப்படித் தனக்குள் என்னென்னவோ எண்ணியபடியே சிறைபட்ட புலியைப் போலச் சுற்றிச் சுற்றி அந்த நிலவறையில் நடந்தார் அவர். எது நடக்கவில்லையோ அது நடந்திருந்தால் என்னவென்று எண்ணிப் பார்க்கும் பொய்க்களிப்பிலும் அவருடைய மனம் ஈடுபட்டது, பெருநிதிச் செல்வரின் மனைவியும் வானவல்லி முதலிய பெருமாளிகைப் பெண்களும் அப்போது முத்துக்களுக்காக நிலவறைக்குள் வந்திராவிட்டால், தானே பெருநிதிச் செல்வரை இப்போது தன்னை அவர் அடைத்துப் போட்டிருப்பது போல அடைத்துப் போட்டு விட்டோ அழித்துப் போட்டுவிட்டோ வெளியேறியிருக்கலாம் என்று எது நடக்கவில்லையோ அதை நினைத்தார் நகைவேழம்பர். அப்படி அவரைத் தான் அடைத்து விட்டுத் தப்பியிருந்தால் இந்த நிலவறையின் இருண்ட மூலையில் அவர் என்னென்ன எண்ணித் தவிப்பார் என்று எதிரிக்குத் துன்பங்களைப் புனைவித்துக் கற்பனை செய்யும் பொய்ச் சுகத்தில் சிறிது நேரம் வரை தன்னில் மறந்திருந்தார் அவர். குருட்டுக் கற்பனையாகக் கண்ணை மூடிக்கொண்டு இப்படி எண்ணியவாறே நிலவறையில் இருளில் நடந்தபோது எதிரே ஆள் உயரத்திற்கு நின்ற ஐம்பொன் சிலையில் தன் நெற்றிப் பொட்டு இடித்து விண் விண் என்று தெரிக்கும் வலியோடு அலறினார் அவர். அந்தக் குரூரமான அலறல் ஒலி சுழன்று சுழன்று செய்த பாவங்கள் செய்தவனையே திரும்ப அணுகுவது போல் நிலவறைக்குள்ளேயே எதிரொலித்தன. நெற்றியில் இரத்தம் கசிந்தது. புருவ மேடுகள் வலி பொறுக்க முடியாமல் துடித்தன. இரண்டு கைகளாலும் நெற்றியை அப்படியே அழுத்திக் கொண்டு கீழே உட்கார்ந்தார் அவர்.
தான் அப்படி எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தோம் என்று அவருக்கே தெரியாது. நடுவில் ஒரே ஒருமுறை நிலவறையின் மேற்பக்கத்தில் கதவு திறக்கப்பட்டு திறக்கப்பட்ட வேகத்திலேயே மூடப்படுவது போல் ஓசை கேட்டது. அப்போது அவருக்கிருந்த வலியின் வேதனை களில் அந்த ஓசையையும் பொருட்படுத்தத் தோன்றவே இல்லை. அப்படியே கதவு திறக்கப்பட்ட ஓசையைப் பொருட்படுத்தத் தோன்றியிருந்தாலும் அவர் அதைப் பொருட்படுத்துவதற்குள் கதவு மூடப்படுகிற விரைந்த ஓசையும் கேட்டிருக்கும். அவர் பொருட்படுத்தியதற்குப் பயன் ஒன்றும் கிடைத்திராது.
சிலையில் மோதி இடித்த இடத்தில் நெற்றிமேடு அப்பமாக வீங்கியிருந்தது. தளர்ந்த நடையில் ஒவ்வொரு படியாக மேலே ஏறி மீண்டும் கதவருகே அவர் சென்ற போது சிறிது நேரத்திற்கு முன் கதவு விரைவாகத் திறந்து மூடுவதுபோல் ஓசை கேட்டதன் காரணம் அந்த இடத்தில் அவருக்கு விளங்கிற்று. அங்கே கதவுக்குக் கீழே இருந்த முதற்படியின் மேல் ஒரு மண் மிடா நிறையச் சோறும் பக்கத்திலேயே இன்னொரு மண் கலயத்தில் குடிப்பதற்குத் தண்ணிரும் வைக்கப்பட்டிருந்தன. அவற்றையும் அவை அங்கு அலட்சியமாக வைக்கப்பட்டிருந்த சூழ்நிலையையும் பார்த்தபோது நகைவேழம்பருக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.
“எனக்குச் சோறு ஒரு கேடா?” என்று கத்திக் கொண்டே படிமேல் ஏறி நின்று அந்த மண் கலயத்தையும் மிடாவையும் காலால் ஓங்கி உதைத்தார் அவர். அவை படிகளில் உருண்டு உடைந்து சிந்திச் சிதறின. அந்த சமயத்தில் மேலே பெருநிதிச் செல்வர் யாரிடமோ பேசிவிட்டு இரைந்து சிரிக்கிற ஒலியைக் கேட்டு அவருடைய கொதிப்பு இன்னும் அதிகமாகியது. அந்தச் சிரிப்பு தன் செவிகளில் கேட்க முடியாத தொலைவுக்கு ஓடிப்போய்விட வேண்டுமென்று அவர் நிலவறைப் படிகளில் கீழே இறங்குவதற்குத் தாவியபோது உடைந்த மிடாவிலிருந்து அங்கே சிதறியிருந்த சோறு அவர் காலில் பட்டு நன்றாகச் சறுக்கிவிட்டது.
நகைவேழம்பர் நிலவறைக்குள்ளே படிப்படியாய் வீழ்ந்து கொண்டிருந்த அதே நேரத்தில் பெருநிதிச் செல்வர் மேலே மாளிகைக்குள் தன் மகள் வானவல்லியிடம் மிக உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
“நீ நல்ல காரியம் செய்தாய் பெண்ணே! என் குறிப்பைப் புரிந்துகொண்டு நீ திரும்பிவிடாமல் நிலவறைக்குள் இறங்கி வந்ததனால்தான் நான் இவ்வளவும் செய்ய முடிந்தது. சுருக்கமாகச் சொன்னால் நீதான் இன்று என்னைக் காப்பாற்றியிருக்கிறாய்.”
“எங்களுக்காக நகைவேழம்பர் முத்துக்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தபோது நீங்கள் நிலவறை யிலிருந்து ஒசைப்படாமல் வெளியேறுவதற்கு முன் ‘நான் போகிறேன். நீங்களும் முத்துக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு தாமதமின்றி உடன் மேலே ஏறி வந்துவிடுங்கள்’ என்பதுபோல் எனக்குச் சைகை செய்தீர்களே; அப்போது தான் உங்கள் குறிப்பும் நோக்கமும் எனக்கு நன்றாகப் புரிந்தது அப்பா. நீங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக அப்போது அந்த மனிதரிடமிருந்து விலகித் தப்பிச் சென்றுவிட எண்ணுகிறீர்கள் என்று நான் ஒருவாறு அனுமானித்துத் தெரிந்துகொள்ள முடிந்தது. என்னோடு வந்திருந்த தோழிப் பெண்களையும், அம்மாவையும் இழுத்துக்கொண்டு நான் படியேறி மேலே திரும்பி வருகிறவரை எனக்கும் பயம்தான். நாங்கள் எல்லாரும் மேலே வந்து சேர்ந்தவுடன் கதவருகே காத்திருந்த நீங்கள் நிலவறையை மூடிய பின்புதான் எனக்கு நிம்மதியாக உயிர்ப்பு வந்தது அப்பா!”
“நிலவறைக்குள் நீங்கள் எல்லாரும் முத்துத் தேர்ந்தெடுக்க நுழைகிறவரை அங்கே எனக்கு உயிர்ப்பே இல்லை வானவல்லி! நான் எதையோ நினைத்து அந்தக் குருடனை நிலவறைக்குள் அழைத்துக்கொண்டு சென்றேன். கடைசியில் அது வேறுவிதமாக மாறி என் உயிரையே நான் இழக்கும்படி நேரும்போல ஆகிவிட்டது. இத்தகைய சந்தர்ப்பங்களில் அவனுடைய கோபத்தை அவன் இழக்கும்படி செய்ய வேண்டுமானால் அதைவிட அதிக மதிப்புள்ளவற்றையும் நான் அவனுக்காக இழந்துவிடத் துணிவதுபோல அவனுக்கு எதிரே ஒரு போக்குக் காட்ட வேண்டும். அவன் ஆத்திரப்படும்போது எல்லாம் நான் இப்படிப் போக்குக் காட்டித்தான் அவனுடைய ஆத்திரத்தைத் தனித்துப் பழையபடி அவனை என்னுடைய நன்றிக்கு அடிமை யாக்கிக் கொள்வது வழக்கம். இன்றும் அதே முறையை மேற்கொள்ளத்தான் அவனை இந்த மாளிகையின் செல்வங்கள் எல்லாம் குவிந்திருக்கும் நிதியறையான நிலவறைக்குள் அழைத்துக் கொண்டு சென்றேன். ஆனால் இன்று அவனுடைய ஆத்திர நோய்க்கு என்னுடைய பழைய மருந்து பொருந்திக் குணம் தரவில்லை. என்னுடைய தந்திரங்களே தம் ஆற்றலில் நலிந்து போய் மிக நல்ல சமயத்தில் என்னைக் கைவிட்டு விட்டன. நான் விழிப்பாயிருக்கத் தவறிவிட்டேன். ‘நம்முடைய வழக்கமான பழைய தந்திரங்களில் அவற்றுக்கு ஆளாகிறவர்கள் சந்தேகப்படத் தொடங்கி விட்டார்கள் என்று அறியும்போதே நாம் புதிய தந்திரங்களுக்கு மாறிவிட வேண்டும்’ என்று அரச தந்திரிகளுக்குச் சொல்லியிருக்கிற இரகசியத்தை என்னைப் போன்ற வாணிகர்களும் கடைப்பிடிக்கலாம் பெண்ணே! நான் எதற்காக இப்படியெல்லாம் சூழ்ச்சிகளைப் புரிந்துகொண்டும் சூழ்ச்சிகளுக்கு ஆளாகியும் துன்பங்களையும் அடைகிறேன் என்று புரியாமல் உங்களுக்கெல்லாம் என்மேல் சந்தேகம் உண்டாகலாம். ஆனால் என் வாழ்க்கை இவற்றில்தான் கிடக்கிறது. இவற்றால் தான் நடக்கிறது. இவற்றால்தான் முடியவும் போகிறது” என்று மகளிடம் உணர்ச்சி குமுறக் குமுறப் பேசினார் பெருநிதிச்செல்வர்.
அதுவரை எதிரே நின்று கேட்டுக்கொண்டிருந்த வானவல்லிக்கு இப்போது தந்தையாருடைய முகத்தைப் பார்ப்பதற்கே பயமாக இருந்தது. தான் அவரிடமிருந்து கேட்கக் கூடாததும், கேட்க வேண்டாததுமாகியவற்றைக் கேட்பதாக உணர்ந்து அஞ்சினாள் அவள். ஆனால் அவரோ நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தார்.
“சிறு வயதில் நீ கற்றிருக்கிற அற நூல்களும், நீதி நூல்களும் இவற்றையெல்லாம் பாவம் என்று உனக்குக் கற்பித்திருக்கும். ஆனால், உலகத்தில் தோன்றியிருக்கிற அறநூல்கள் எல்லாம் எவை எவைகளைப் பாவங்களாகச் சொல்லியிருக்கின்றனவோ அவைகளோடு மட்டும் உலகிலுள்ள பாவங்களின் எண்ணிக்கை முடிந்து விடுவதாகத் தெரியவில்லை. எத்தனை எத்தனையோ புதிய பாவங்கள் வளர்கின்றன. பெண்ணே! நான் எல்லாவகைப் பாவங்களிலும் அழுந்தி நிற்கிறேன். இன்னும் விரும்பிச் செய்வதற்குப் புதிய பாவங்களைத் தேடிக் கொண்டேயிருக்கிறேன். அப்படித்தான் என்னால் இருக்க முடியும். ஆனால் இந்தக் குருடனைப் போல் எனக்கே பாவங்களைச் செய்கிறவனை என்னால் மன்னிக்க முடியாது. உலகில் கழுத்து வரை பாவங்களில் அழுந்திக் கொண்டு நின்றாலும் - நான் தான் பிறரை அழித்துக்கொண்டு நிற்க வேண்டும். என்னை யாரும் அழித்துவிட முயலக்கூடாது. இது என் வாழ்க்கையின் இரகசியம்.”
வெறி முற்றுவதுபோல் பேச்சு வளர வளரத் தந்தையின் முகம், கண்களில் குருதியை உமிழ்ந்து கொண்டே எதிரே வந்து நிற்கும் பேயின் முகம் போல மாறித் தெரிவதைக் கண்டு வானவல்லி அங்கிருந்து உடனே ஓடிவிட வேண்டும்போல அவ்வளவு அதிகமாக அச்சமடைந்தாள். அவர் கூறிக்கொண்டு வருகிறவைகள் எல்லாம் தனக்கு எச்சரிக்கையா, பயமுறுத்தலா, அல்லது ஆத்திரத்தில் விளைகிற வெறும் பேச்சா என்று புரிந்துகொள்ள முடியாமல் மனம் குழம்பினாள் அவள். இதற்கு முன்பு என்றும் அவளிடம் அவர் இப்படிப் பேசியதில்லை. இப்படித் தன்னிடம் பேசுவதில் அவருடைய பலம் தெரிகிறதா, பலவீனம் தெரிகிறதா என்பதும் அவளுக்குத் தெரியவில்லை. கேட்கிறவரைச் சிந்திக்கவிடாத விரைவுடன் வெள்ளமாகப் பாய்ந்து வருகிற முரட்டுப் பேச்சாக இருந்தது அது. பேச்சு நிற்கிற இடைவெளியாக வாய்க்கும் சில கணங்களிலும் இடியிடியென்று கொடிய பேய்ச் சிரிப்புச் சிரித்தார் அவர். தன் தாயும் தோழிகளும் அந்தப்புரப் பகுதிக்குச் சென்றபோது தானும் அவர்களோடு வெளியேறிப் போய்விடாமல் அவரோடு தங்கியது தவறு என்று இப்போதுதான் வானவல்லி உணர்ந்தாள்.
அவர் எவனோ ஒரு ஊழியனை வரவழைத்துச் சோறும் நீரும் கொண்டு வரச்செய்து நிலவறைக் கதவை மெல்லத் திறந்து உள்ளே வைத்துவிட்டு மூடியபோதும் அவள் அவரருகே தான் இருந்தாள். அடுத்துச் சிறிது நாழிகைக்குப் பின் உள்ளே நிலவறையில் சோற்று மிடாவும் நீர்க்கலயமும், உடைபடுகிற, ஒசையும், தொடர்ந்து வேறு பல ஓசைகளும் கேட்டபோதும் கூட அவள் அவரோடுதான் இருந்தாள். நிலவறையிலிருந்து அந்த ஒசை மேலே ஒலி மங்கிய விதத்தில் கேட்கும் போதெல்லாம் தந்தையின் முகத்தில் உணர்ச்சிகள் மாறிவருவதையும் வானவல்லி கூர்ந்து கவனித்தாள். அவரைப் புரிந்துகொள்ள அவளால் முடியவில்லை. விதம் விதமாக மாறினார் அவர்.
“அடிபட்ட நாயாய் உள்ளே சிறைப்பட்டுக் கிடந்து உடம்பில் கொழுப்பு வற்றி எலும்பும் தோலுமாய்க் காய்ந்துபோய் மறுபடி இந்த நிலவறையிலிருந்து வெளியேறும்போது, இவன் நான் விடுகிற மூச்சுக் காற்றில் தடுமாறி விழ வேண்டும். மறுபடி என்னிடம் ஆத்திரப்பட்டு என்னை எதிர்ப்பதற்கு இவனிடம் ஆத்திரமோ, வலிமையோ மீதமிருக்கக் கூடாது. அப்படிக் காய வைத்தால்தான் புத்தி வரும் இந்தக் குருடனுக்கு!”
இவ்வாறு பேசிக்கொண்டே வந்த தந்தையார் தாம் நின்று பேசிக்கொண்டிருந்த இடத்தின் வாயில் நிலையருகே இருந்த தமது ஊன்றுகோலைப் பார்த்து விட்டு அதை எடுப்பதற்காகக் காலைச் சாய்த்து நடந்து விரைந்ததைக் கண்டு தானே முந்திச் சென்று எடுத்து வந்து அதை அவர் கையில் கொடுத்தாள் வானவல்லி. அதைப் பெற்றுக்கொள்ளும்போது அவருடைய கைகள் நடுங்கின. அப்படி நடுங்குவதை அவர் மறைத்துக் கொள்ள முயன்றும் வானவல்லி கூர்ந்து பார்த்துத் தெரிந்துகொண்டாள்.
“இந்த ஊன்றுகோல் ஒன்றுதான் நான் மெய்யாக நம்ப முடிந்த துணை பெண்ணே! சில சமயங்களில் மனிதர்களை மட்டும் நம்பிக்கொண்டு காலூன்றி நிற்க முடிவதில்லை. முதல் வசதி மனிதர்களைப் போல் இதற்கு மனம் இல்லை. மனம் இருந்தால் இதுவும் எனக்கு எதிராக முயன்று ஏதாவது செய்து என் காலை இடறிவிட முயன்றாலும் முயலலாம்” என்று வான வல்லியிடம் சொல்லிக்கொண்டே வேறு புறமாகத் திரும்பி அந்த ஊன்றுகோலின் பிடியை மெல்லத் திருகினார் பெருநிதிச்செல்வர். அதுதான் சமயமென்று வானவல்லி அங்கிருந்து நழுவிவிட முயன்றாள். அவள் அங்கிருந்து வெளியேறிப் போய்விடுவதற்குத் தவிக்கிறாள் என்பதை ஏற்கெனவே தெரிந்து வைத்துக் கொண்டிருந்தது போல் “இரு போகலாம்” என்றார் அவர். தந்தையார் ஊன்றுகோலின் கைப்பிடியை ஏதோ செய்துகொண்டு தன் பக்கம் திரும்பிப் பார்க்காமலே இப்படிக் கூறியதைக் கேட்டபோது அவருடைய கட்டளையை மீறிப் பயந்து அங்கேயே நின்றுவிடுவதா என்று சிந்தித்தபடி நின்ற இடத்திலேயே சிறிது தயங்கினாள் வானவல்லி.
அப்போது அவரே ஊன்றுகோலின் பிடியைத் திருகி அழுத்திக்கொண்டு அவள் பக்கமாகத் திரும்பினார்.
“பெண்ணே! நில், நீ போவதற்கு ஒன்றும் அவசரமில்லை. சற்று முன்பு இந்த ஊன்றுகோலைப் போல மனமும் சிந்தனையும் இல்லாத பொருள்கள் யார் காலையும் இடறிவிடாமல் ஊன்றி நின்றுகொள்ளத் துணை புரியுமென்று கூறினேனே! அதுவும் தவறான கருத்துத்தான். இப்படிப் பொருள் கூடச் சில சமயங்களில் நிற்கத் துணை புரியாது காலை இடறி ஏமாற்றி விடுகின்றன. இதோ பார்!” என்று கூறி, அந்த ஊன்று கோலை வீசி எறிந்தார். அது பிடி வேறு, தண்டு வேறாகக் கழன்று பிரிந்து விழுந்தது. அப்போது வானவல்லி சீற்றம் கொதிக்கும் அவருடைய முகத்தில் பாவங்களின் நிழலை எல்லாம் பார்த்தாள்.
ஏக்கறுதல் என்ற தமிழ் வார்த் தைக்குப் பொருள் ஆசையால் தாழ்தல் என்று இளமையில் தனக்கு இலக்கியங்களைக் கற்பித்த புலவர் கூறியிருந்ததை இன்று நினைத்துக் கொண்டாள் சுரமஞ்சரி. நன்றாக முற்றிக் கனிந்த முழுமையான கனியைப்போல இந்த வார்த்தையில் நிரம்பியிருக்கும் பொருளை எல்லாம் இன்று அவள் உணர்ந்தாள். ஆசைக்கு உரிய பொருள் மேலே மேலே எட்ட முடியாத உயரத்துக்கு விலகிப் போகும் போது அதன்மேல் ஆசை வைத்தவர்கள் கீழே தாழ்ந்துதான் போய் விடுகிறார்கள். முன்பு இருந்த இடத்தினின்று தணிந்து கீழே சரிவது தான் தாழ்வு என்பதில்லை. இது நமக்குக் கிடைக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படும் இலக்கு எதுவோ அது நம்மினும் மேலே உயர்ந்து விட்டாலே நமக்குத் தாழ்வு தான் என்று தன் குறையை உணர்கிற மனநிலையோடு கையிலிருந்த ஏடுகளையெல்லாம் பட்டு நூலில் கட்டிச் சுற்றி வைத்து விட்டு ஏக்கப் பெருமூச்சு விட்டாள் சுரமஞ்சரி.
அவளுக்கு எதிரே மேற்குப் புறத்துப் பலகணியின் முன் மாடத்துக்கு அப்பால் அந்தி வானம் செந்தழல் பரந்து, அதில் சிறிது சிறிதாய் மஞ்சளும் கலந்து கொண்டிருந்தது. நான்கு காத தூரம் பரந்து கிடக்கும் அந்தப் பெரிய பூம்புகார் நகரத்தில் ஒவ்வொரு மாலைப் போதும் யார் யாருடைய வாழ்க்கையில் என்னென்ன மாறுதல்களை எல்லாம் உண்டாக்குகின்றனவோ! அவளைப் பொறுத்தவரை ஒரு மாறுதலும் இல்லை. அவளுடைய காலை நேரம் அந்த மாடத்தின் கிழக்குப் பக்கத்துப் பலகணியில் பிறக்கிறது. மேற்குப் பக்கத்துப் பலகணியில் முடிந்துவிடுகிறது. இவற்றுக்கு இடையே தான் அவளுடைய ஆசைகளும் அவளும், ஏங்கி ஏக்கற்றுக் கொண்டிருக்கும்படி நேர்ந்துள்ளது. காலையில் தான் கற்ற கவிதையில் வந்த உவமை இப்போது அவளுக்கு மீண்டும் நினைவு வந்தது.
வில்லில் இருந்து புறப்பட்டுப் பாய்ந்து கொண்டிருக்கிற அம்பின் நிழலைப்போல இந்த வாழ்வின் வேகத் திற்கு இடையே சுகங்களும் தோன்றித், தோன்றிய வேகத்திலேயே அழிந்து கொண்டிருக்கின்றன.
‘தோன்றுவதாவது, அழிவதாவது? தோன்றினால் தானே அழிய முடியும்? என்னுடைய வாழ்க்கையில் நான் ஆசைப்படுகிற சுகங்கள் இன்னும் தோன்றவே இல்லையே! கிழக்குப் பக்கத்திலிருந்து தெரியும் ஒளி மேற்குப் பக்கத்தில் ஓடி மறைவதற்குள் இந்தச் செல்வச் சிறைக்குள் எத்தனை சுகங்கள் தோன்றிட முடியும்? ‘நான் மட்டும் கவியாகப் பிறந்திருந்தேனானால் இப்போது உங்களுடைய துக்கங்களை யாரிடம் போய்ச் சொல்ல வேண்டுமோ அவரிடம் போய் அழகிய உவமை உருவங்களோடு சொல்லிவிடுவேன் அம்மா!’ என்று வசந்தமாலை குறைப்பட்டுக் கொள்கிறாள். இங்கே எனக்குச் சுகம் இல்லை. சுகத்தைப் பற்றிய நினைவுகளும் ஏக்கங்களுமே நிறைய இருக்கின்றன. நினைவே அநுபவமாகிவிடாது. ஏக்கமே, எதற்காக ஏங்குகிறோமோ அதை அடையும் முயற்சியாகி விடாது. நினைப்பதும் ஏங்குவதும், மனத்தின் பசிக்கு அடை யாளங்கள். அவற்றாலேயே மனம் நிரம்பிவிடாது’ என்று எண்ணியபடியே எழுந்துபோய் நகரத்தின் பல பகுதிகள் கண் பார்வையில் படுகிறாற்போல் மாடத்தின் முன்புறம் நின்றுகொண்டு நோக்கினாள் சுரமஞ்சரி.
அவளுடைய பார்வையில் தன்னைப் போலவே யாருக்காகவோ ஏங்கி அழுவது போலத்தான் அந்த நேரத்தில் மேற்குத் திசை வானமும் தெரிந்தது. பக்கத்து வீதியாகிய அரச வீதியின் மாளிகை ஒன்றிலிருந்து யாரோ ஓர் இசைக் கலைஞன் வேய்ங்குழலில் சோகத்தைப் பேசும் நோதிறப் பண்ணை வாசித்துக் கொண்டிருந்தான். தன் மனத்தில் ஏங்கி ஏக்கற்றுத் தவிக்கும் சோகத்தையும், மேற்கு வானில் காட்சியாய்ப் புலப்பட்ட சோக அழகையும், அந்தக் கலைஞனுடைய குழலிசை சாட்சியாய் நின்று பேசுவது போல் தோன்றியது சுரமஞ்சரிக்கு. மாடத்தின் உட்புறம் தூப கலசங்களில் நெருப்பிட்டு அகில் தூவிக் கொண்டிருந்தாள் வசந்தமாலை. அந்த நறுமணப் புகைச்சுருள்களும் காற்றில் கலந்து வந்தன. முல்லையும் மல்லிகையுமாகத் தான் சூடிக் கொள்ள வேண்டும் என்று கொடுத்தனுப்பப் பட்டிருந்த பூக்களைச் சூடிக்கொள்ளும் விருப்பமில்லாமல் அப்படியே மஞ்சத்தின் ஒரு மூலையில் வீசி எறிந்திருந்தாள் அவள். அந்தப் பூக்களின் நறுமணமும் எழுந்து பரவிற்று இப்போது.
போர்க்களத்தில் நிராயுதபாணியாக நிற்கும் இளம் பருவத்து வீரனைப் பல ஆயுதங்களோடு பல முரட்டு எதிரிகள் ஒன்று சேர்ந்து கொண்டு தாக்குவதுபோல் அந்த இசையின் சோக இனிமையும், மாலையின் அந்தி மயக்கமும், பூக்களும் அகிலும் பிறப்பித்த நறுமணமும், சொந்த மனத்தின் பசிகளும் ஒன்று சேர்ந்து தன்னைத் துன்புறுத்துவதை அவள் உணர்ந்தாள், தவித்தாள், பின்பு உருகினாள்.
அப்படியே அந்த மாடத்தின் கோடியில் அது முடியும் இடத்திலிருந்து பறந்துபோய் அதற்கு அப்பால் உள்ள உலகத்தில் தன் மனம் விரும்புகிற ஒர் இடத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. பேதைப் பருவம் முடிந்து நினைவு தெரிந்த பெண்ணாய் வளர்ந்துவிட்ட பின் தன் மனத்தில் அழுத்தமாய் ஏற்பட்டிருந்த பொதுவான கர்வமும், செல்வச் செருக்கும், அழகுத் திமிரும் இன்று படிப்படியாகக் குறைந்து, ‘தானும்கூட ஆசைப்பட்டு நிறை வேற்றிக்கொள்ள வேண்டிய குறை ஒன்று உண்டு’ என்று ஏங்குகிற அளவுக்குத் தன் மனம் தாழ்ந்திருப்பது அவளுக்கே புரிந்தது. ஆசையால் தாழும்போது கர்வத்தால் உயர முடியாதென்றும் இந்த அநுபவம் அவளுக்குப் புரிய வைத்திருந்தது.
‘பெண்ணின் அழகு பற்றிய செருக்கு அவளுடைய காதலால் அழிந்துபோகிறது. ஆணின் பெருமிதம் பற்றிய செருக்கு அவனுடைய மெய்யுணர்வாலும் பக்தியாலும் அழிந்து போகிறது’ என்று சொல்லப்படுகிற தத்துவத்தை முன்பெல்லாம் சுரமஞ்சரி ஒப்புக்கொண்டதில்லை. ‘வீரமும் செல்வமும் பற்றிய காரணங்களால் ஆண் பிள்ளைக்கு வருகிற செருக்கு வேண்டுமானால் பக்தியால் அழியலாம். பெண்ணின் அழகு பற்றிய செருக்கு அவளிடமிருந்து என்றும் அழியாது’ என்று சுரமஞ்சரி எண்ணிக் கொண்டிருந்த எண்ணம் இப்போது மெல்லத் தேய்ந்து போய்விட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பழைய இந்திர விழாவின்போது கடற்கரை மற்போரில் இளங்குமரனைச் சந்தித்த நாளிலிருந்து இந்த வருடத்து இந்திர விழாவில் அவரையே மீண்டும் நாளங்காடிச் சொற்போரில் சந்தித்தது வரை உள்ள நீண்ட காலத்தில் தன்னுடைய செருக்குப் படிப்படியாகத் தேய்ந்திருப்பது அவளுக்குத் தெரிந்தது.
காற்றில் வந்த வேய்ங்குழலிசை அவளுடைய சோகத்தை மேலும் வளர்த்தது. துயரங்களை மறப்பதற்காகத்தான் அவள் காவியங்களையும், இலக்கியங்களையும் கற்க விரும்பினாள். அவற்றிலிருந்தும் அதே துயரம் பிறந்த போதுதான் அவள் பொறுமை இழக்கும்படி ஆயிற்று. தன்னுடைய கண் பார்வை செல்ல முடிந்த தொலைவு வரை நகரத்தின் தோற்றத்தைப் பார்த்தாள் சுரமஞ்சரி. மாலைப் போதின் இருள் கவிழ்ந்த அழகு நகரின் தோற்றத்தில் தெரிந்தது. அந்த நகரத்தில் ஏறக்குறைய எல்லா இடங்களையும் தன்னுடைய இளம் வயதிலிருந்து அவள் திரும்பத் திரும்பப் பலமுறை பார்த்திருக்கிறாள். கவேரவனம் என்ற சோலையையும், உய்யான வனம் என்னும் தோட்டத்தையும் தவிர மற்ற எல்லா இடங்களையும் பார்த்திருக்கிறாள். உய்யான வனமும், கவேர வனமும் பார்க்கக்கூடாதவை என்று தடுக்கப் பட்டவை. இல்லாவிட்டால், அவற்றையும் சுற்றிப் பார்க்கிற வாய்ப்பை அவள் முன்பே அடைந்திருக்க முடியும். அப்படியெல்லாம் பலமுறை பார்த்துப் பார்த்துச் சலித்துப் போயிருந்தாலும் இன்று இப்படி அடைபட்டுக் கிடக்கிறபோது இன்னும் எதையோ பார்ப்பதற்கு விட்டு வைத்திருப்பது போலவும், அதை உடனே போய்ப் பார்த்துவிட வேண்டும் போலவும் அவள் மனம் குறுகுறுப்பு அடைந்தது. இந்தக் குறுகுறுப்புத் தன் மனத்தில் அப்போது ஏற்படுவதன் காரணம்தான் அவளுக்கே விளங்கவில்லை.
‘எந்தப் பொருளின் மேலாவது அளவுகடந்து ஆசைப்படும்போது இப்படி விடுபட்டுப் பறக்க வேண்டும் போலத் தவிப்பது மனத்தின் இயல்பா? அல்லது ஏக்கத்தின் விளைவா?’ என்று முடிவு கிடைக்காத சிந்தனையில் அழுந்தி நின்றாள் அவள்.
‘நினைவுகளால் மனத்தின் பசி தணிவதில்லை. நினைவுகள்தாம் பசியை வளர்க்கின்றன. நினைவுகளே பசியாகவும் செய்கின்றன. நினைவுகள் எதை அடையத் தவிக்கின்றனவோ, அதை அடைகிற அநுபவம்தான் மனத்தின் பசிக்கு உணவு என்று எண்ணிக் கொண்டே இருள் பரவத் தொடங்கியிருந்த நகரிலிருந்து தன் கண்களையும், சோகம் பரப்பிக் கொண்டிருந்த குழலிசை யிலிருந்து தன் செவிகளையும் விடுவித்து மீட்டுக் கொண்டு அவள் உள்ளே திரும்பியபோது பூக்களின் மணமும், அகிற்புகையின் வாசனையும் முன்னைக் காட்டிலும் அதிகமாக நெருங்கிக் கொண்டு பரவி அவளைத் தாக்கின.
‘பரிபூரணமான இசையின் விளைவு அழுகையாயிருக்கிறது. நல்ல மணங்களை உணரும்போது ஆழ்ந்த துயரங்கள் நினைவு வருகின்றன. உயர்ந்த கவிதைகளின் பொருள் புரியும் போது மனத்தில் ஏக்கம் பிறக்கிறது. மறைகின்ற கதிரவனையும் மேற்கு வானத்தையும் காணும்போது உலகத்தின் கடைசிக் காட்சியைப் பார்ப்பதுபோல் எண்ணங்களில் ஒர் அநுதாபம் பொங்குகிறது. நான் இன்று மட்டும் இவற்றை உணர்கிறேன். எல்லாக் காட்சியிலிருந்தும், எல்லா உணர்விலிருந்தும் ஆழ்ந்த துயரத்தைத் தவிர வேறொன்றையும் பெற முடியாத துர்ப்பாக்கியவதியாக இப்படி நான் எப்போது மாறினேன்?’
சிந்தனையில் இப்படி ஆயிரம் எண்ணங்கள் சேர்ந்தும் பிரிந்தும் தவித்திட விளக்குச் சுடர்களைத் தணித்துவிட்டு மங்கலான இருளைப் பரவச் செய்து கொண்டபின் மஞ்சத்தில் சாய்ந்து படுத்தாள் சுரமஞ்சரி. பொற்பேழை நிறைய நெய் அதிரசங்களும், பல்சுவைப் பணியாரங்களும், பழங்களும், வற்றக் காய்ச்சிய பாலும் கொண்டு வந்து வைத்துக்கொண்டு சுரமஞ்சரியை உண்ணுவதற்கு அழைத்தாள் தோழி வசந்தமாலை.
“தோழி! நீ கொண்டு வந்திருக்கும் உணவுகள் என் மனத்தின் பசியை ஆற்றுவதற்குப் பயன்படாதவை. இவற்றைக் கொண்டுபோய்விடு. எனக்கு இவற்றில் விருப்பமில்லை. இந்த மஞ்சத்தில் சாய்ந்துகொண்டு இப்படியே ஏதாவது மனதிற்குப் பிரியமான நினைவு களை எல்லாம் நினைக்க வேண்டும் போல் இருக்கிறது எனக்கு. நன்றாகத் தூங்கியும் விடாமல் நன்றாக விழித்துக் கொண்டுமிராமல் எவையேனும் நினைவுகளில் மிதக்க ஆசைப்படுகின்றேன் நான்” என்று தோழிக்கு மறுமொழி கூறினாள் சுரமஞ்சரி. தோழி இதைக் கேட்டு மறுபேச்சுப் பேசாமல் திரும்பிப் போய்விட்டாள்.
சுரமஞ்சரி இரண்டு புறக்கண்களையும் மூடிக் கொண்டு மனக்கண்களால் தான் விரும்பிய முகத்தையும் எண்ணங்களையும் காணலானாள். சில நாழிகைகளில் அப்படியே சோர்ந்து போய்த் தூங்கியும்விட்டாள். அவளுடைய அந்தத் தூக்கத்தில் அதற்கு முந்திய நினைவுகளோடு தொடர்புடைய கனவு ஒன்று நிகழ்ந்தது.
ஆலமுற்றத்துக் கோவிலில் முல்லையும் இளங்குமரனும் அருகருகே நின்று கொண்டிருக்கிறார்கள். முல்லை இளங்குமரனுடைய கழுத்தில் மணமாலை சூட்டுவதற்காகத் தன் பொற்கரங்களை உயர்த்துகிறாள். அப்போது தொலைவிலிருந்து தானும் ஒரு மணமாலையோடு சுரமஞ்சரி இளங்குமரனை நோக்கி ஓடி வருகிறாள். முல்லையின் கைகள் இளங்குமரனை நெருங்க நெருங்கச் சுரமஞ்சரியின் இதயம் வேகமாகத் துடிக்கிறது. இளங்குமரனுக்கும் முல்லைக்கும் நடுவே தான் ஆற்றல் குறைந்து சிறியவளாகி விட்டதுபோல் நம்பிக்கை தளர்ந்தும், ஆசை தளராமல் நெஞ்சம் பதற ஓடி வருகிறாள் அவள்.
முல்லை சூட்டுவதற்கு இருக்கும் மாலை அவனுடைய தோள்களில் படியும் முன்பு அவன் சற்றே திரும்பித் தான் ஓடி வருவதை ஒருமுறை பார்க்கவாவது வேண்டும் போலத் தவித்தாள் சுரமஞ்சரி.
இளங்குமரனின் அழகிய கண்களைச் சந்திக்க அவளுடைய கண்கள் விரைந்து முந்துகின்றன.
அவளுடைய ஆசை வீண் போகவில்லை. முல்லை யின் மாலையை ஏற்றுக் கொள்ளுவதற்கு முன்பு இளங்குமரனே திரும்பிச் சுரமஞ்சரி ஓடி வருவதைப் பார்த்துவிடுகிறான். அப்படி பார்க்கும்போது அவனுடைய கண்களே சிரிப்பது போன்ற குறிப்புடன் அவளைப் பார்க்கின்றன. அந்தக் கண்களின் பார் வையைச் சந்தித்ததும் மேலே ஓடுவதற்கு முடியாமல் அவள் அப்படியே நாணி நிற்கிறாள். அவளுடைய ஆசைக் கனவுகளை அவனுடைய அந்தக் கண்களே வளர்க்கின்றன. இந்தச் சமயத்தில் யாரோ வந்து சுரமஞ்சரியின் தோளைத்தொட்டு அவளை எழுப்பி னார்கள். அவளுடைய கனவு கலைந்தது.
படிப்படியாக வீழ்ச்சி என்று சொல்வார்களே அந்த வீழ்ச்சியை இன்று ஒரே நாளில் நகைவேழம்பர் அடைந்து விட்டார். சறுக்கி விழ நேர்வது உண்டுதான். ஆனால் இவ்வளவு உயரத்திலிருந்து சறுக்கி விழுந்திருக்கக்கூடாது. முழங்கால்களிலும், கைமூட்டுகளிலும் பலமான அடிகள் பட்டிருந்தன. இடுப்பிலோ, காலிலோ எங்கோ மிகவும் பலமான அடிபட்டிருந்ததென்றும் அவரால் உணர முடிந்தது. உடலில் வார்த்தைகளால் அளவிட்டு உரைக்க முடியாத சோர்வு தெரிந்தது. நிலவறையின் கடைசிப் படிக்கும் கீழே நிலைகுலைந்து உருண்டு விழுந்த போது அவருடைய கண்முன் எல்லாம் தலைகீழாகச் சுழல்வது போலத் தெரிந்தது. வலது கால் பாதத்தை அழுத்தி ஊன்றிக்கொண்டு உந்தி எழுந்திருக்க முயன்றார் அவர். எழ முடியவில்லை.
ஆண்டுக் கணக்கில் பிணியுற்று முடங்கிக் கிடந்தது போல் உடம்பு வலித்தது. இரண்டு கால்களில் ஏதோ ஒன்றில் எலும்பு முறிந்திருக்குமோ என்று பயமும் நடுக்கமும் பிறந்த போது கருங்கல்லாய் இறுகிப் போயிருந்த அந்தக் கொடியவருக்குக் கூடக் ‘கோ’வென்று கதறி அழுதுவிட வேண்டும் போல் வருத்தமாக இருந்தது. முழங்கால்களில் இரத்தமும் கசியத் தொடங்கி விட்டது. இதே பெருநிதிச் செல்வரின் மாளிகைக்குக் கீழே உள்ள இரகசியச் சிறைக்கூடங்களிலும், கொடிய விலங்குகள் அடைக்கப்பட்டிருக்கும் காராக்கிருகங்களிலும் இப்போது தான் வைக்கப்பட்டிருப்பது போலப் பலரைப் பல சமயங்களில் முன்பு தன் கைகளாலேயே தள்ளி அடைத்ததையெல்லாம் வரிசையாக நினைத்துப் பார்த்தார் நகைவேழம்பர். நாய்க்குச் சோறு வைப்பது போல் இன்று தனக்குச் சோறும் நீரும் வைக்கப் பட்டதைத் தான் கேவலமாக எண்ணுவது போலத் தானே அவர்களும் அன்று எண்ணித் துடித்திருப்பார்கள் என்று ஞாபகம் உண்டாயிற்று அவருக்கு.
அப்போது தான் நிதியறையின் படிகளிலிருந்து மட்டும் சறுக்கியிருப்பதாக அவர் நினைக்கவில்லை. வாழ்க்கையில் தன்னுடைய எல்லா நம்பிக்கைகளி லிருந்துமே சறுக்கியிருப்பதாகத் தோன்றியது. மனைவி, மக்கள், உள்ளம், உறவு எதுவுமே இல்லாமல் யாருக்காக இவ்வளவு கொடுமையாக வாழ்ந்தோம் என்று நினைத்துப் பார்க்க முயன்றார் அவர். கொடுமையாக வாழ்ந்தோமா அல்லது பொய்யாக வாழ்ந்தோமா என்று தனக்குத்தானே அவர் கேட்டுக்கொண்ட கேள்வி இரண்டு பிரிவுகளாகக் கிளைத்தது. இந்த விநாடி வரையில் என்னென்ன பாவங்களையும், கொடுமை களையும் நான் செய்திருக்கிறேன் என்று தனக்குத் தானே பிரித்து எண்ணிப் பார்க்க வேண்டிய அவசியமே அவருக்கு ஏற்படவில்லை. காரணம் தான் செய்யாமல் எஞ்சிப் போகும்படி விட்ட பாவம் ஒன்றுமில்லை என்று அவருக்கே தெரிந்திருந்தது!
அவர் தன் மனத்தில் தனக்குத்தானே கேட்டுக் கொண்ட இரண்டு கேள்விகளுக்கு விடையே கிடைக்க வில்லை. ‘இதுவரை நல்லதாக என்ன செய்தோம்? கெட்டதாக என்ன செய்யவில்லை’ இந்த இரண்டு கேள்விகளுக்கும், ‘ஒன்றுமில்லை! ஒன்றுமில்லை!’ என்பதைத் தவிர வேறு பதில் ஏதும் அவருடைய மனத்திலிருந்து எழவே இல்லை.
தன்னுடைய பெயரின் பொருளுக்குச் சிறிதுகூடப் பொருத்தமில்லாமலே தான் வாழ்ந்திருப்பதாக நினைவு வந்தது அவருக்கு. நகைவேழம்பர் என்றால் பிறருக்குச் சிரிப்பும் மகிழ்ச்சியும் உண்டாக்குகிற பரியாசகர் என்று தான் காவிரிப் பூம்பட்டினத்துக் கூத்தரங்கங் களிலும், நாடகக் கலைஞர்களிடையேயும் பொருள் படுவது வழக்கம். தானும் எப்போதோ ஒரு காலத்தில் அப்படிச் சில ஆண்டுகள் இருந்ததைக் கடந்த காலத்துக் கழிவிரக்கமாக அவரால் நினைத்துக்கொள்ள முடிந்தது. இப்படி மாறியபின்பு தன் பழைய பெயருக்கு ஏற்பத் தான் யாருக்கும் சிரிப்போ மகிழ்ச்சியோ ஏற்படுத்தியதாக அவருக்கு ஞாபகம் இல்லை.
பூம்புகாரின் பட்டினப்பாக்கமும், மருவூர்ப்பாக்கமும் சந்திக்கிற நாளங்காடியின் கலகலப்பான இடத்தில் கூத்தரங்கம் ஒன்றில் அவர் புகழ்பெற்ற நகைச்சுவை வேழம்பராக இருந்த காலம், அதிலிருந்து மாறியபோதே பொய்யாய்ப் போய்விட்டது. பெருநிதிச் செல்வரோடு தொடர்பும் பழக்கமும் ஏற்பட்ட பின் வஞ்சகப் பேயாய்த் தான் வாழ்ந்த கொடிய வாழ்க்கையும் இன்று இப்படி அடைபட்ட பின்னர் இந்த விநாடியிலிருந்து பொய்யாய்ப் போய்விட்டது.
இப்படி எத்தனை எத்தனை பொய்கள்? படியிலிருந்து உருண்டு விழுந்ததும் காலை ஊன்றி எழ முடியாமல் போனபோது சென்ற விநாடிவரை கால் ஊன்றி நடந்ததும் பொய்யாய்ப் போய்விட்டது. நடந்தவை எல்லாம் பொய்யாகவும் நடக்கின்றவை யெல்லாம் உண்மையாகவும், நடக்க இருப்பவை யெல்லாம் சந்தேகங்களாகவும், தன் வாழ்க்கையே மாற்றிக்கொண்டு தாம் என்றிருந்தோ கெட்டுப்போய் விட்ட கொடுமையை நினைத்து நினைத்துக் கண்ணிர் வற்றுகிறவரை அழ வேண்டும்போல் இருந்தது அவருக்கு. இந்த ஏலாமையும் பயமும்கூடச் சில கணங்கள்தான் நீடித்தது. மனம் சபலப்பட்டு மாறி மறுபடியும் கொடுமையில் நம்பிக்கை வந்த கணத்தில் காலை ஊன்றி எழுந் திருந்துவிட முயல்வதும், ‘எழ முடியவில்லை. எலும்பு முறிந்துதான் போயிருக்கிறது’ என்று உணர்கிற கணத்தில் அழுது விடுவதுபோல் தளர்வதுமாக அந்த நேரத்தில் அந்த நிலவறையில் கணத்திற்குக் கணம் பொய்யா யிருந்தது நகைவேழம்பருடைய காலம்.
இனிமேலும் தனக்கு சமயமும் பொருத்தமாக வாய்த்து உடம்பிலும் வலிமையிருந்தால் அந்த வாய்ப்பைத் தவறவிடாமல் எதிரியைத் தீர்த்துக் கட்டிவிட வேண்டும் என்று இப்போது கூட வைரமாகவும் கொடுமையாகவும் நினைப்பதற்கு அவரால் முடிந்தது. ஆனால் எரியுண்டு போன படகில் பட்ட தீக்காயங்களும், கடலில் நெடுந்தொலைவு நீந்தி வந்த களைப்பும், பசியும், படிகளில் பயங்கரமாகச் சறுக்கி விழுந்த வேதனையும் சேர்ந்து தனக்குக் கெடுதல் செய்ய வேண்டிய கெட்ட கோள்கள் எல்லாம் இனி உன்னை இப்படியே விடமாட்டோம் என்று ஒன்றாகச் சேர்த்து வந்து வளைத்துக் கொண்டு விட்டாற்போல் அவரை மலைப்பு அடையச் செய்திருந்தன. அவர் வீழ்ந்து விட்டார். இப்போது நிச்சயமாக வீழ்ந்தே விட்டார்.
நிதியறையின் எதிர்ப்புறத்திலிருந்து இருளடைந்த சுவர் திடீரென்று பிளப்பது போலவும் அந்தப் பிளவிலிருந்த ஒரு புலி பயங்கரமாகப் பாய்ந்து கொண்டு வருவது போலவும், அந்தப் புலியே அருகில் வரும்போது பெருநிதிச் செல்வராக மாறிவிடுவது போலவும் பிரமையான பொய்க் காட்சிகள் அவர் கண்ணில் தெரிந்தன. தானும் புலியாக மாறி எதிர்த்துப் போராடுவதுபோலக் கற்பனை செய்ய முயன்றார் அவர்.
‘மரணாவஸ்தை மரணாவஸ்தை என்று சொல் கிறார்களே, அது இப்படித்தான் இருக்குமோ?’ என்று அப்போது நினைக்கத் தோன்றியது நகைவேழம்பருக்கு. இப்படி நினைத்தபோது தன்னைச் சுற்றிலும் காலனின் கொடிய பாசக் கயிறுகள் சுழன்று சுழன்று வீசப்பட்டு விழுவது போலவும், தான் அந்தக் கொடிய பாசத்தில் சிக்கிக்கொண்டு விடாமல் தப்பித்துவிட உடனே முயல வேண்டும் போலவும் அவருக்குத் தோன்றியது. பதறி எழுந்து அங்கிருந்து ஓடிவிடும் நோக்கத்துடன் வலது கால் பாதத்தைப் பதித்து ஊன்றி மேலே எழ முயன்று மறுபடி கீழேயே விழுந்தார் அவர்.
அப்படி விழுந்ததும் அவருக்கு முன்னைவிடத் தளர்ச்சி பெருகியது. முழங்கால்களைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார். தொட்ட இடத்தில் இரத்தம் பச்சையாகப் பட்டுக் கை நனைந்தது. பாவத்தைத் தொடுவதுபோல் அவருக்கே அருவருப்பாக இருந்தது அப்போது.
‘உன் உயிரைக் கொடுத்துவிடு! இனிமேல் நீ வாழ்வதைக்கூடப் பொய்யாக்கி விட வேண்டும்’ என்று யாரோ பேய்க் கூச்சல் இட்டுக்கொண்டே வந்து தன் கழுத்தை இறுக்குவது போல் இருந்தது அவருக்கு.
அந்த விநாடியில் தான் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது மெய்யா, பொய்யா என்று புரியாமல் அவர் உடல் நடுநடுங்கி, நினைவிழப்பது போலத் தலை சாய்ந்தார். இருட்டில் அடைபட்டுக் கிடந்த வெளவால் ஒன்று தன் சிறகுகளைப் படபடவென்று அடித்துக் கொண்டு அவருடைய தலைக்குமேல் பறந்துவிட்டு மீண்டும் தன்னுடைய பழைய இடத்தில் போய்த் தலைகீழாகத் தொங்கியது.
தந்தையார் கீழே எறிந்த ஊன்றுகோல், பிடி வேறு, தண்டு வேறாகக் கழன்று விழுந்தபோது, ‘இப்படிப் பொருள் கூடச் சில சமயங்களில் நிற்கத் துணை புரியாது. இடறி என்னை ஏமாற்றி விடுகின்றன’ என்று அவர் கூறிய வார்த்தைகளுக்கு நேரான பொருள் வானவல்லிக்குப் புரிந்தது. ஆனால் அந்த வார்த்தைகளில் அடங்கியிருப்பதாக அவள் சந்தேகப்பட்ட ஏதோ ஒரு குறிப்புப் பொருள் மட்டும் அவளுக்குப் புரியவேயில்லை.
‘ஊன்றி நிற்பதற்குப் பயன்படவில்லை என்பதை அப்படிச் சொல்லுகிறாரா? அல்லது அதில் இருப்பதாக அவர் நம்பிக்கொண்டிருந்த வேறு பயன் ஒன்று இல்லாமற் போய்விட்டதை அப்படிச் சொல்கிறாரா?’
ஒன்றும் புரியாமல் மருண்டு நின்ற வானவல்லி முதலில் நினைத்தது போலக் கூடிய விரைவில் அவர் முன்னிலையிலேயிருந்து தப்பிச் சென்றுவிட வேண்டு மென்றுதான் மீண்டும் நினைத்தாள். சுற்றிலும் நெருப்புக் கனலும் நீற்றறையில் நிற்பது போல இப்போது அங்கே நின்றாள் அவள். அவருடைய கோபத்துக்கு அப்படி ஓர் ஆற்றல் உண்டு என்பதைப் பலமுறை கண்டு உணர்ந்திருக்கிறாள் அவள். அந்தக் கோபம் சூழ்நிலையையே மாற்றி அமைத்துவிடும். கோடை வெயிலைப் போல் அதற்கு ஆளாகிற எல்லாரையும் வாட்டிவிடும். கொடுமையான வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு வெயிலில் நிற்கிறவர்கள் அங்கிருந்து நிழலைத் தேடி உடனே ஓடிப்போய் விடுவதற்குத் தவிப்பதுபோல் அவர் கனன்று சீறும்போது அதற்கு ஆளாகிறவர்களும், சுற்றி இருப்பவர்களும், அதிலிருந்து விலகி ஓடிவிடத் தவிப்பது உண்டு.
அவருக்கு முன்னால் இப்போது வானவல்லியும் அப்படித்தான் தவித்துக்கொண்டு நின்றாள். அவளு டைய தவிப்பைப் புரிந்து கொள்ளாமலோ, அல்லது புரிந்துகொண்டே புரியாதது போலவோ அவர் மேலும் பேசினார்.
“மகளே, நான் நம்பிக் கொண்டிருக்கிற ஒவ்வொரு பொருளுக்கும் என்மேல் அவநம்பிக்கை உண்டாவதைப் போன்ற அறிகுறிகள் சிறிது காலமாக எனக்குத் தெரிகின்றன. இதே நிலைமை இப்படியே வளருமானால் நான் இனிமேல் எப்படி மாறுவேன் என்று உறுதி சொல்ல முடியாது. என்றாவது ஒருநாள் இப்படியே இந்தப் பெருமாளிகைக்கு நெருப்பிட்டுக் கொளுத்திவிட்டு இங்குள்ள எல்லாரும் அழிந்தது தெரிந்தபின் நானும் அழிந்து சாக வேண்டியதுதான். எல்லாவற்றையும் அழித்து ஒழித்து நிர்மூலமாக்கிவிட்டு நானும் அழிய வேண்டும். நான் அழியும்போது இங்கு எதுவும் அழிக்கப் படாமல் மீதமிருக்கக் கூடாது. இன்ன பொருளை இன்ன இடத்தில் வைத்திருக்கிறோம் என்று நான் நம்பிக் கொண்டிருந்தவை எல்லாம் எனக்குத் தெரியாமலே இடம் மாறியிருக்கின்றன. யாரிடத்தில் எல்லாம் பொதியமலை சரிந்தாலும் சரியாதென்ற உறுதியோடு நான் நம்பிக்கை வைத்திருந்தேனோ அவர்களிடத்திலேயே அது இல்லை என்று இப்போது தெரிகிறது. எங்கெல்லாம் மிகவும் மதிப்பும் பெறுமானமும் உள்ள பொருள்களைப் பொதிந்து வைத்திருந்தேனோ அங்கெல் லாம் அவற்றைக் காணவில்லை. இதோ கீழே சுழன்று விழுந்து கிடக்கின்றதே, இந்த ஊன்றுகோலின் தண்டுக்கும், பிடிக்கும் நடுவே உள்ள குழலில் நான் வைத்திருந்த அரும் பெரும் பண்டம் ஒன்றையுமே இப்போது இதில் காண முடியவில்லை மகளே!”
ஆத்திரமாகப் பேசிக் கொண்டே வந்தவர் அதையெல்லாம் சொல்வதற்கும் கேட்கச் செய்வதற்கும் அவள் தகுதியுடையவள் இல்லை என்பதைத் திடீரென்று உணர்ந்து கொண்டு விட்டதைப் போலப் பேச்சை நடுவிலேயே நிறுத்தினார். அதுவரை தாம் பேசியிருந்த பேச்சுக்களால் மகளுடைய முகத்தில் என்னென்ன உணர்வுகள் விளைந்திருக்கின்றன என்பதை அவளே பார்த்துவிட முடியாத வேகத்தில் அவளுடைய முகத் திலிருந்து தான் பார்த்துத் தெரிந்து கொண்டு விரைவாய்க் கீழே குனிந்து ஊன்றுகோலையும் பிடியையும் எடுத்துத் திருகினார் அவர்.
வானவல்லி அந்த நேரத்தைத் தான் வெளியேறிச் செல்வதற்கு அவர் கொடுத்த அரிய சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு அங்கிருந்து மெல்ல நழுவினாள். அவரும் அவளைத் தடுக்கவில்லை. அப்போது அவருக்கும் வேறு வேலைகள் அவசரமானவையாகவும் அவசியமானவையாகவும் செய்வதற்கு இருந்ததனால் அவள் அங்கிருந்து போவது பற்றி நினைக்கவோ கவலைப்படவோ விரும்பவில்லை அவர்.
அவள் சென்றதும் ‘ஊன்றுகோலில் பொதிந்து வைக்கப்பட்டிருந்த ஐம்படைத் தாலியை யார் அதிலிருந்து எடுத்திருக்க முடியும்?’ என்ற சிந்தனையில் அவர் மூழ்கினார். அந்தப் பொருள் அவ்வளவு பத்திரமாக அதற்குள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும் உண்மை தன்னைத் தவிர இன்னும் ஒரே ஒருவருக்குத் தான் தெரியும் என்ற ஞாபகம் அவருக்கு வந்தது. என்னுடைய வாழ்க்கையையே மாற்றித் தள்ளிவிடக் கூடிய பெரிய இரகசியங்களுக்கு அடையாளமான அந்த ஐம்படைத் தாலி இந்த ஊன்றுகோலுக்குள் வைக்கப்பட்ட போது நான் என் இரு கண்களால் பார்த்ததைத் தவிர இன்னும் ஒரு கண் மட்டும் பார்த்திருக்கிறது. அந்தப் பொருள் இதனுள் வைக்கப்பட்டிருப்பதை நினைவு கூர்ந்து இப்போது திருடியிருக்க முடியுமானால் அப்படித் திருடியவன் அந்த ஒரு கண்ணுக்கு உரியவனா கத்தான் இருக்க வேண்டும். கற்பூரக் கப்பலைத் தேடிக் கொண்டு கடற்பயணம் செல்வதற்குமுன் சுரமஞ்சரியை பயமுறுத்தி மருட்டுவதற்கு ஓர் அடையாளமாக இதை என்னிடமிருந்து வாங்கிக் கொண்டு போய் இருட்டில் அவள் மாடத்திலே வைத்து விட்டு வந்தவனும் அந்த ஒற்றைக் கண்ணுக்கு உரியவன்தான். ஏதோ திட்டமிட்டு என்னைக் கவிழ்த்துவிடும் எண்ணத்தோடுதான் அவன் அந்த ஐம்படைத் தாலியை இதற்குள்ளேயிருந்து வெளியேற்றியிருக்க வேண்டும். அதை இதிலிருந்து வெளியேற்றுவதற்கும் என் உயிரையே உடம்பிலிருந்து வெளியேற்றுவதற்கும் அதிக வேறுபாடில்லை. இந்த ஊன்றுகோல் யாரை மருட்டுவதற்காக அந்த மாடத்தில் இதுவரை வைக்கப்பட்டிருந்ததோ அந்த மாடத்திலிருந்தவர்களுக்கு இதைப் பிடி வேறு தண்டு வேறாகக் கழற்ற முடியும் என்பதே தெரிந்திருக்க நியாயமில்லாதபோது அவர்கள் அதை இதிலிருந்து வெளியே எடுத்திருப்பார்களோ என்று நான் சந்தேகப்படுவதற்கும் இடமில்லை.
‘சந்தேகமில்லாமல் இது நகைவேழம்பருடைய வேலைதான். இந்த ஐம்படைத் தாலியும் அதைப் பற்றிய உண்மைகளும் அவரால் வெளிப்படுத்தப் பெறுவதற்கு முன்னால் அவருடைய உயிரையே இந்த உலகத்தி லிருந்து நான் முதலில் வெளிப்படுத்தி விட்டால் என்ன?’ என்று கொடுமையாகவும், குரூரமாகவும் முதிர்ந்து நின்று நினைத்தார் பெருநிதிச் செல்வர். இப்போது அந்த ஒற்றைக்கண் வேங்கை தன்னிடம் வகையாக மாட்டிக் கொண்டு அடைபட்டிருப்பதால் தான் நினைப்பதைச் செய்வது சாத்தியமானதே என்று நம்பினார் அவர்.
இந்த அவசரமான தீர்மானத்திற்கு வந்தவுடனே பெருமாளிகையில் தம்முடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான காவலன் ஒருவனைக் கூப்பிட்டு, “நீ இப்போது உடனே புறப்பட்டுப்போய் மருவூர்ப் பாக்கத்து அலைவாய்க் கரையில் உள்ள யவனப்பாடியில் இருக்கும் நாகர்குலத்து மறவனான அருவாளனை இங்கே அழைத்துக் கொண்டு வரவேண்டும். இன்று கதிரவன் மறையும் போதுக்குள் நீ அவனோடு திரும்பி இங்கே வர முடியாவிட்டால் உன்னால் எனக்கு ஒரு பயனும் இல்லை. சம்பாபதி வனம், சக்கரவாளத்துக் காடுகள், காவிரிக்கரை நாணற் புதர் எங்கெல்லாம் தேட முடியுமோ அங்கெல்லாம் தேடி அருவாளனைக் கண்டு பிடித்து இங்கே திரும்பி வரும்போது அவனோடு வா. அவன் இல்லாவிட்டால் வராதே...” என்று உறுதியான கட்டளையாகச் சொல்லி அனுப்பினார் பெருநிதிச் செல்வர். அவருக்கு அந்தரங்கமானவனாகிய அந்த காவலன் உடனே அதைச் செய்வதற்குப் புறப்பட்டான்.
அவனை அனுப்பிவிட்டுச் சிந்தனைக்குரிய பல சந்தேகங்களை மாற்றி மாற்றி நினைத்துப் பாதி பயமும் பாதி அவநம்பிக்கைகளுமாகக் குழம்பினார் அவர். நிம்மதி சிறிதும் இல்லாமல் என்னென்னவோ எண்ணிப் பரபரப்படைந்திருந்தன அவருடைய உணர்வுகள்.
‘என் பயம் வீணானது. காரணமற்றது. பொய்யானது. இன்னும் ஆயிரம் நகைவேழம்பர்கள் எனக்கு எதிராக மாறினாலும் அந்தக் காலாந்தகன் மறுபடி உயிரோடு பிழைத்து வந்தாலும் என்னை என்ன செய்து விட முடியும்? செத்தவர்கள் பேயாக மாறி வேண்டுமானாலும் வரலாம். பிழைத்து வர முடியாது. இது தெரிந்தும் நான் ஏன் பதறுகிறேன்? என் உடல் எதற்காக நடுங்குகிறது?’ என்று எண்ணி எண்ணி மாய்ந்தபடியே வெளியே சென்றிருக்கும் காவலன், நாகர் குலத்து அருவாளனை அழைத்து வருவதையே எதிர்பார்த்துக் காத்திருந்தார் அவர். அப்போது வேறு எந்த வேலையையும் செய்வதற்குப் பொறுமை இல்லை அவருக்கு. பட்டினப் பாக்கத்தில் வானளாவ நிமிர்ந்து நிற்கும் தன்னுடைய அந்த மாளிகை ஒவ்வோரடுக்காகச் சரிவது போல் அவருடைய மனக்கண்ணில் அழிவைக் குறிக்கிற பொய்த் தோற்றங்கள் வரிசையாய்த் தோன்றின.
அன்று மாலை இருட்டுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்னால் அவர் அனுப்பியிருந்த காவலன் நாகர் குலத்து அருவாள மறவனோடு திரும்பி வந்துவிட்டான். இறைச்சி மலையாக வளர்ந்திருந்த அந்த முரட்டு நாகன் பெருநிதிச் செல்வருடைய அந்தரங்க அறையில் நுழைந்து அவரை வணங்கிவிட்டுப் பணிவாக எதிரே நின்றான். அவனை அழைத்து வந்த காவலனை அங்கிருந்து வெளியே போய்விடுமாறு குறிப்புக் காட்டினார் பெருநிதிச் செல்வர். காவலன் வெளியேறியதும் மாச பர்வதமாக வந்து நின்ற அருவாளனை நெருங்கி மெல்லிய குரலில் அவனை வேண்டிக்கொண்டார் அவர்.
“அருவாளா! நீண்ட நாட்களுக்கு முன்னால் ஓர் இந்திர விழாவில் நானும் நகைவேழம்பரும் உன்னை ஒரு காரியத்துக்குத் துண்டிவிட்டு அனுப்பினோம். சம்பாபதி வனத்து இருளில் அந்த முனிவரையும் அவருடைய வளர்ப்புப் பிள்ளையையும் எமனுலகுக்கு அனுப்பிவிடச் சொல்லி நாங்கள் உன்னை அனுப்பிய காரியம் அன்று உன்னால் நடைபெறவில்லை. இருந்தும் இன்று இவ்வளவு காலத்துக்குப் பின்பு உன்னை நான் மீண்டும் இங்கே அழைத்திருக்கிறேன். இன்று நான் உன்னைச் செய்யச் சொல்லி வேண்டிக்கொள்ளப் போகிற செயல் உன் நிலையில் உனக்கு மிகவும் சிறியது தான். ஆனால் என் நினைப்பில் அது மிகவும் பெரியது, அவசியமானது. அவசரமானது. அதை நீ செய்வதற்கு மறுக்கக்கூடாது.”
அருவாளன் தன்னுடைய பயங்கரமான உருட்டு விழிகளால் விழித்து அவரைப் பார்த்துவிட்டுச் சிறிது நேரம் தயங்கியபின் ஒவ்வொரு வார்த்தையாக யோசித்து மறுமொழி கூறினான்.
“ஐயா! என்னுடைய இந்த உடம்பில் இருக்கிற செருக்கு எதுவோ அது நீங்கள் எனக்கு அளித்தது. நீங்கள் வளர்த்தது. உங்களுடைய சோற்றுச் செருக்கால் நிமிர்ந்து நிற்கிற நான் உங்கள் கட்டளையை மறுப்பேனா?”
“நீ நான் சொல்லுவதற்கு ஒப்புக்கொண்டால் மட்டும் போதும். என்னுடைய உதவிகளுக்கு என்னிடமே நன்றி சொல்ல வேண்டாம். என்னால் உதவி பெற்றவர்கள் என்மேல் நன்றியுடையவர்களாகத்தான் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை நான் சமீப காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிட்டேன் அருவாளா! என்னுடைய சோற்றை நான் யார் யாருக்கு எல்லாம் இட்டேனோ அவர்கள் என்னை எதிர்க்கும் செருக்கைத்தான் அடைந்திருக்கிறார்களே ஒழிய என்னைக் காக்கும் செருக்கை அடைந்திருப்பதாக நானே நம்பவில்லை. நான் இட்ட சோறு அதைத் தின்பவர்களிடம் நன்றியை வளர்த்திருக்கும் என்பதில் எனக்கே நம்பிக்கை இல்லை. நீ மெய்யாகவே என்னைப் புகழ்ந்தாலும் இப்போதுள்ள என் மனநிலையில் உன் புகழ்ச்சியை நான் போலியானதென்றே நினைப்பேன். இன்று காலையிலிருந்து எனக்கு என் மேலேயே நம்பிக்கை இல்லை...”
“நிறைய மனக் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள் போல் தோன்றுகிறது ஐயா! இப்படிப்பட்ட நிலையில் உங்களை நான் இதற்கு முன்பு சந்தித்ததே இல்லை. உங்கள் அந்தரங்க நண்பர் நகைவேழம்பர் அருகில் இருந்தால் இப்படி உங்களைக் கவலைப்பட விட் டிருக்கமாட்டாரே? அவர் இப்போது எங்கே?” என்று அருவாளன் கேட்டான்.
“இப்போது என்னுடைய கவலையே அவர் இங்கு இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதைப் பற்றிய கவலைதான் அருவாளா! அவர் இருப்பதுதான் எனக்குக் கவலை. என் கவலை தீர வேண்டுமானால் அவர் இல்லாமல் தொலைய வேண்டும்!” என்று கூறிவிட்டு அந்தக் கூற்றைக் கேட்கிறவனின் முகத்து விளைவை அறிவதற்காக அருவாளனுடைய கொடிய முகத்தைக் கூர்ந்து பார்த்தார் அவர். அருவாளனுடைய முகத்தில் திகைப்பும் சந்தேகமும் தெரிந்தன.
“நான்தானா இப்படிப் பேசுகிறேன் என்று என்மேல் சந்தேகப்படாதே, அருவாளா! இன்று இரவு நடு யாமம் முடிவதற்குள் இந்த நகரத்தில் ஓர் உயிர் உன் கையால் குறைய வேண்டும். அப்படிக் குறைகிற உயிர் என் கவலையைத் தீர்க்கிற உயிராகவும் இருக்க வேண்டும். அந்த உயிர் போகும்போது என் கவலையும் போய்விட வேண்டும்.”
அருவாளன் மெளனமாக அவரையே பார்த்துக் கொண்டு நின்றான். இரும்புப் பலகை போன்ற அவனுடைய பரந்த மார்பு மேலெழுந்து விரிந்து விம்மி தணிந்தது. அவர் அவனுடைய அந்த மெளனத்தைப் பொறுக்க முடியாமல் அவனைச் சீறிக் கோபித்துக் கொண்டார்.
“ஏன் இன்னும் மெளனமாக இருக்கிறாய்? இப்போது மட்டும் நான் அளித்த சோற்றுச் செருக்கு உன்னிடமிருந்து எங்கே போய் ஒளிந்து கொண்டது?”
இந்தக் கேள்வியைச் செவியுற்றதும் அவன் தலை தாழ்ந்தது. இந்தக் கேள்வியினால் அவன் மடக்கப்பட்டு விட்டான் என்பதைச் சொல்வது போல அவனுடைய முகபாவமும் மாறியது.
“செய்கிறேன், ஐயா! செய்கிறேன். நீங்கள் எதைச் சொல்லுகிறீர்களோ அதைச் செய்து உங்களிடமிருந்து நான் பெற்ற சோற்றுச் செருக்குக்கு நன்றி செலுத்தி விடுகிறேன்...” என்று ஆவேசத்தோடு அவருக்குப் பதில் கூறினான் அவன்.
அருவாளனுடைய சம்மதம் பெருநிதிச் செல்வருக்கு நிறைந்த நிம்மதியை அளித்தது. அவர் விருப்பத்தைச் செயலாக்க அவன் முன் வந்ததில் அவருக்குப் பரம திருப்தி ஏற்பட்டிருந்தது.
“நல்லது! உன்னுடைய நன்றி யிலாவது நான் நம்புவதற்கு இன்னும் இடம் இருக்கிறது. என்னிடம் நீ தின்ற சோறு என்னை ஆதரிக்கும் செருக்கைத்தான் உனக்குத் தந்திருக்கிறது. என்னையே எதிர்க்கும் செருக்கைத் தரவில்லை. போய்விட்டு உன் கூட்டாளியோடு இன்றிரவு நடு யாமத்துக்கு இரண்டு நாழிகை இருக்கும்போது திரும்பவும் இங்கே வா. முதலில் உன் கையில் ஒப்படைத்து அப்புறம் எமன் கைக்கு மாற்ற வேண்டிய உயிரை இப்போது இந்த மாளிகையின் நிதியறையில்தான் அடைத்து வைத்திருக்கிறேன். இன்றிரவு அந்த உயிருக்கு அதன் உடம்பிலிருந்து விடுதலை அளித்துவிடலாம்” என்று கூறி அருவாளனுக்கு விடை கொடுத்து அனுப்பினார் பெருநிதிச் செல்வர். அவர் கூறியபடி நள்ளிரவுக்கு முன்னால் மறுபடி அங்கே வருவதாக ஒப்புக் கொண்டு புறப்பட்டுச் சென்றான் அருவாளன்.
அங்கிருந்து அவன் புறப்பட்டுப் போன சிறிது நேரத்தில் தன்னுடைய இன்னொரு சந்தேகத்தையும் உடனே தீர்த்துக் கொண்டுவிட எண்ணியவராய்ச் சுரமஞ்சரியைச் சிறை வைத்திருந்த மாடத்துக்கு ஏறிச் சென்றார் அவர். அப்போது அந்த மாடமும் அதன் பகுதிகளும் வழக்கத்தை மீறிய அமைதியோடு இருந்தன. மாடத்தின் உட்பக்கம் சுரமஞ்சரியோ வசந்தமாலையோ பேசிக்கொள்ளும் ஒலிகூடக் கேட்கவில்லை. இருவரும் அந்த முன்னிரவு வேளையிலேயே தூங்கியிருக்கலாம் என்று எண்ணிக்கொண்டு அவர் கதவைத் தட்டினார். சிறிதுநேரம் வரை அவருக்கு ஒரு பதிலும் இல்லை. மறுபடியும் அவர் முன்னைவிடப் பலமாகத் தட்டிய போது வளைகுலுங்கும் ஒலியோடு யாரோ நடந்து வந்து கதவைத் திறந்தார்கள்.
கதவைத் திறந்தவள் தோழிப் பெண்ணாகிய வசந்த மாலை என்று தெரிந்ததும் “சுரமஞ்சரி அதற்குள் உறங்கி விட்டாளா பெண்ணே?” என்று அவர் அவளிடம் கேட்டார். தன்னை அந்த நேரத்தில் அங்கே கண்டு அந்தத் தோழிப் பெண் பயந்து நடுங்குவதை அவர் பார்த்தார். தனக்குப் பதில் சொல்வதற்குக் கூட நா எழாமல் அவள் அச்சம் கொண்டு திகைத்துப் போய் நிற்பதைப் பொறுக்க முடியாமல் மறுபடி அதே கேள்வியை முன்னினும் உரத்த குரலில் கேட்டார் பெருநிதிச் செல்வர். அந்தக் குரல் அவளை மேலும் நடுநடுங்கச் செய்தது.
“இதோ தலைவியை எழுப்புகிறேன்” என்று கூறிக் கொண்டே சுரமஞ்சரி தூங்கிக் கொண்டிருந்த மஞ்சத்தருகே சென்று மெல்ல அவளுடைய தோளைத் தொட்டு எழுப்பினாள் வசந்தமாலை. அப்படி எழுப்புவதற்கு முன் தூங்கும் தன் தலைவியின் முகத்தை அவள் பார்த்த போது அந்த முகம் உறக்கத்திலும் சிரித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அச்சிரிப்புக்குக் காரணமான ஏதோ ஒர் இனிய கனவு தலைவிக்குக் கிடைத்திருக்க வேண்டும் எனப் புரிந்தது வசந்தமாலைக்கு. அப்படிப்பட்ட கனவிலிருந்து அவளை வலிய எழுப்பும் துன்பமான செயலைத் தன் கைகளால் தானே செய்ய வேண்டியிருக்கிறதே என்ற வருத்தத்தோடு தலைவியை எழுப்பினாள் தோழிப் பெண். தூக்கத்திலிருந்து விழித்து எழுந்த சுரமஞ்சரி முற்றிலும் விழிப்புக் கொள்ளாத அரைகுறை உறக்கத்தில், “வசந்தமாலை! அவருடைய கண்களில் என்னுடைய கனவுகள் வளருகிறதடீ” என்று வாய் சோர்ந்து எதையோ முன்னும் பின்னும் தொடர்பின்றி அரற்றினாள். தலைவி அரற்றும் அந்தச் சொற்கள் கதவருகே வந்து நிற்கும் பெருநிதிச் செல்வரின் செவிகளில் கேட்டுவிடக் கூடாதே என்று பயந்த வசந்த மாலை “அம்மா! கனவைப் பற்றி அப்புறம் பேசிக் கொள்ளலாம். முதலில் நன்றாக விழித்துக் கொள்ளுங்கள்! இப்போது வாயிலில் உங்கள் தந்தையார் வந்து நின்றுகொண்டிருக்கிறார்” என்று தலைவியின் காதருகே குனிந்து பதற்றத்தோடு மெல்லச் சொன்னாள். தந்தையின் பெயரைக் கேட்டதும் அந்த நேரத்தில் கேட்கக் கூடாத பேய் பூதங்களைப் பற்றிக் கேட்டுவிட்டது போலத் திடுக்கிட்டு எழுந்து நின்றாள் சுரமஞ்சரி. அவளுடைய கண்கள் பயத்தினால் மருண்டு பார்த்தன. வாயிலில் தந்தை ஊன்றுகோலுடன் வந்து குரூரமான பார்வையோடு நின்று கொண்டு, “ஒன்றுமில்லை! உனக்கு என்மேல் இருக்கிற கோபத்தில் இந்த நேரத்துக்கு நான் இங்கே தேடி வருவதே தவறு என்று நீ சீறினாலும் சீறுவாய். நான் வந்த காரியம் அவ்வளவு பெரிய சீற்றத்துக்குக் கூடத் தகுதியானது இல்லை. அது மிகவும் சிறியது! இதோ இப்படி என் பக்கமாகப் பார்! இந்த ஊன்றுகோலை உனக்கு நினைவிருக்கிறதோ?” - என்று அந்த ஊன்றுகோலை முன்னால் காண்பித்தபடி வாயிற்புறத்திலிருந்தே அவர் அவளைக் கேட்டார்.
அந்தக் கேள்வியைச் சிறிதும் இலட்சியம் செய்யாதவளாய் நின்றாள் சுரமஞ்சரி. ‘தான் அப்போது அவருக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை என்றாற் போல ஒரு வெறுப்பு அவள் முகத்தில் தெரிவதை வசந்தமாலையும் பார்த்தாள். தானும் தன் தலைவியும் தெரிந்துகொள்ள வேண்டிய அருமை உண்மை ஒன்றை இந்தச் சமயத்தில் தெரிந்து கொண்டுவிட விரும்பினாள் வசந்தமாலை. உடனே அவள் மெல்ல மறுபடியும் தன் தலைவியின் காதருகே சென்று, “அம்மா! அந்த ஐம்படைத் தாலியைக் காணாமல் தவித்துக் கொண்டு தான் இப்போது இவர் பதறிப்போய் இங்கே வந்திருக்கிறார். நாம் அதைப் பற்றிய இரகசியத்தைத் தெரிந்து கொள்ள இதுதான் ஏற்ற சமயம். சிறிது நேரம் தேடிப் பார்ப்பது போல் இந்த மாடத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் சுற்றிவிட்டு என்னிடமே இருக்கும் இந்த ஐம்படைத் தாலியை எடுத்து இங்கு ஏதோ ஒரு மூலையில் கிடைத்தததாகச் சொல்லி இவரிடம் கொடுத்து விடுகிறேன். அப்படிக் கொடுப்பதற்கு முன்னும் கொடுத்த பின்னும் இவர் அடைகிற உணர்ச்சிகளை நாம் இருவருமே கூர்ந்து கவனிக்க வேண்டும்” என்று கூறினாள். தந்தையின் வார்த்தைகளுக்கு மறுமொழி கூறாமல் அலட்சியம் செய்ததைப் போலவே தோழியின் இந்தத் தந்திர முயற்சியையும் அவள் அலட்சியம் செய்தாள். தலைவியின் அலட்சியத்தைத் தனக்குச் சம்மதமாகப் புரிந்துகொண்ட தோழி தன் திட்டப் படியே செய்தாள். சிறிது நேரம் பெருநிதிச் செல்வரின் பொறுமையைச் சோதித்தபின், “ஐயா! எங்களுடைய மாடத்தில் உங்கள் ஊன்றுகோல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் கீழே இந்தப் பொருள் கிடந்தது. இதை உங்களிடம் கொடுத்துவிட வேண்டுமென்று பத்திரமாக நான் எடுத்து வைத்திருந்தேன்” என்று அந்த ஐம்படைத் தாலியை அவரிடம் பயபக்தியோடு கொடுத்து விட்டாள் வசந்தமாலை. அப்போதும் சுரமஞ்சரி ஒன்றும் பேசாமல் தன் தந்தையையும், வசந்தமாலையையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டுதான் நின்றாள். மனத்திற்கு விருப்பமான கனவு கலைக்கப்பட்டு நனவுலகத்தின் துன்பமயமான அநுபவங்களை அந்த நேரத்திலே தான் அடைய நேர்ந்ததை வெறுத்தாள் அவள்.
பெருநிதிச் செல்வரோ அவர்கள் இரண்டு பேர்களும் தன் முகத்திலிருந்து தெரிந்து கொள்வதற்குக் காத்திருந்த உணர்ச்சிகளைச் சிறிதளவும் தன்னிடம் தெரியவிடாமல் சர்வசாதாரணமாக அந்த ஐம்படைத் தாலியைத் தன் கையில் வாங்கிக்கொண்டு நின்றார். வாங்கிக் கொண்ட விதத்திலும் வாங்கிக் கையில் வைத்துக் கொண்ட விதத்திலும் எந்த அவசியமும் தெரியாத அலட்சிய பாவம் திகழ நின்றுகொண்டு ஓரிரு கணங்களுக்கு அந்தப் பொருளைப் பற்றிய நினைவையே அவர்களிடமிருந்து மறைப்பதற்காக, “இது என்ன? இந்தப் பொற் பேழை நிறையக் கொண்டு வந்து இங்கே வைத்த பணியாரங்களும் உணவும் அப்படியே இருக்கின்றன? நீங்கள் இருவருமே ஒன்றும் உண்ண வில்லையா?” என்று கவனத்தில் பட்ட வேறொரு காட்சியைப் பற்றித் தேவையைவிட அதிக அக்கறை எடுத்துக் கொண்டவர் போலக் கேட்டார். அவர் தங்களை அப்போது திட்டமிட்டுக் கொண்டு ஏமாற்றுகிறார் என்று சுரமஞ்சரிக்கும் வசந்தமாலைக்கும் ஓரளவு புரிந்தது. தொலைந்துபோன ஐம்படைத் தாலி திரும்பக் கிடைத்ததால் தனக்கு ஏற்படுகிற மகிழ்ச்சியைத் தெரியவிடாமல் செய்வதற்காகத்தான் கவனம் செலுத்தி விசாரிக்க வேண்டாத சிறிய விஷயமான இந்த உணவுப் பேழையைப் பற்றி அவர் விசாரிக்கிறார் என்றும் அவர்கள் புரிந்துகொண்டார்கள். நொடிப்போதில் எதிரே நிற்கிறவர்களுடைய ஆவலையும் மனப்போக்கையும் புரிந்துகொண்டு தாம் அதற்கேற்ப விரைந்து மாறிக்கொண்டு எதிரேயிருப்பவர்களின் உணர்வைத் தாங்கி நிற்கும் அந்தத் தந்திரத்தைப் பார்த்து வியப்பதா, பயப்படுவதா என்றே புரியாமல் மலைத்து நின்றார்கள் தோழியும் அவளுடைய தலைவியும். அப்போது அவருடைய குரல் இருந்தாற் போலிருந்து திடீரென்று உரம் பெற்று மிக வலிமையாக அவர்களை நோக்கி ஒலித்தது:
“பெண்ணே! உன்னைக் காட்டிலும் உன்னுடைய தந்தைக்குப் புத்தி அதிகமாக இருக்கும் என்பதை நீ ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. சில ஆண்டுகளுக்கு முன் ஏதோ ஒர் இந்திரவிழாவின் இரண்டாவது நாள் பூத சதுக்கத்துக் கூட்டத்தில் யாரோ பிள்ளையாண்டானைக் கண்டுபிடித்து அழைத்து வந்து அவனுடைய ஓவியத்தை வரைந்து வாங்கினாய் அல்லவா? அந்த நாளிலிருந்து இன்று இந்த ஐம்படைத் தாலியைக் கீழே கிடந்ததென்று சொல்லி என்னிடம் தோழி மூலமாக எடுத்துக் கொடுக்கச் செய்யும் இந்த விநாடி வரை உன் தந்தைக்கே விருப்பமில்லாத பல காரியங்களை நீ வரிசையாகச் செய்திருக்கிறாய் என்பதைப் புரிந்துகொள். இந்த நிலையைத் தெளிவுபடுத்தி விவரமாக உனக்கு இப்போது சொல்ல முடியாதவனாக இருக்கிறேன் நான். ஆனால் சுருக்கமாக உனக்கு ஒன்று சொல்ல முடியும். இன்று உன் தந்தையின் எல்லா நினைவுகளும் எவை எவற்றை எண்ணிக் கவலையும் குழப்பமும் அடை கின்றனவோ அவற்றையெல்லாம் அப்படி உயிர்த்து எழச் செய்தவள் நீதான் என்பதைப் படிப்படியாகக் காரண காரியங்களோடு உன்னிடம் விளக்கலாம். ஆனால் அப்படிச் செய்ய எனக்கு இன்று நேரமில்லை. இப்படிப் பெற்று வளர்த்துப் பேணி உனக்கு நான் தந்த வாழ்வு என்னுடைய சாவுக்கு நானே இட்டிருக்கிற வித்தோ என்று நினைத்துக் கொண்டு பயப்பட வேண்டிய காலமும் வந்துவிட்டது” என்று வாயிலுக்கு அப்பால் ஒரு காலும் இப்பால் ஒரு காலுமாகப் போகிற போக்கிலே பேசுவதுபோல் அவர் பேசிவிட்டுப் போன வார்த்தைகள் சுரமஞ்சரியும் அவள் தோழியும் தீர்த்துக் கொண்டு தெளிவு பெற விரும்பிய குழப்பங்களைப் போலப் பலமடங்கு புதிய குழப்பங்களை அவர்களுக்கு இப்போது அளித்துவிட்டன.
அந்த ஐம்படைத் தாலி திரும்பக் கிடைத்த நிகழ்ச்சியையே ஒரு சாதாரணமான நிகழ்ச்சியாக்கி விடுகிறவரைப்போல் அதற்குச் சில கணங்கள் இடைவெளியளித்து அதை மிகவும் அலட்சியம் செய்து தாங்களும் அதைச் சாதாரணமாகக் கருதத் தொடங்கி விட்ட நேரத்தில், ‘உனக்கு நான் தந்திருக்கிற வாழ்வால் எனக்கு நீ தரப் போவது சாவுதான்’ என்று துணிந்து அவர்களிடம் புதிர் போட்டுவிட்டுப் போயிருந்தார் அவர்.
அங்கிருந்து அவர் தலை மறைந்ததும், “பத்துப் பன்னிரண்டு பேரரசர்களுக்குச் சூழ்ச்சிகளைக் கற்பித்துச் சொல்லிக் கொடுக்கும் ஒரே ஓர் அமைச்சராக இருக்கிற அளவு அற்புதமான சூழ்ச்சிகளைப் பாடம் பண்ணி வைத்துக் கொண்டிருக்கிற ஒருவர் உங்கள் தந்தையாயிருக்கிறார் என்பதற்காக நீங்களும் பெருமைப் படலாமே அம்மா” என்று சுரமஞ்சரியிடம் மெல்லச் சொல்லி சிரித்தாள் வசந்தமாலை.
நள்ளிரவு நெருங்க நெருங்கப் பூம்புகாரின் பட்டினப்பாக்கத்து வீதிகளில் ஓசை ஒலிகள் சிறிது சிறிதாக அடங்கி மெளனம் கவிந்து கொண்டிருந்தது. தொலைவில் எங்கோ ஒரு கூத்தரங் கத்தில் பதினாறு மாத்திரைக் கால அளவு ஒலிக்கும் மிகப் பெரிய பார்வதிலோசனம் என்ற தாளத்தை யாரோ ஆர்வம் மிக்க கலைஞன் ஒருவன் வாசித்துக் கொண்டிருந்தான். ஆளரவமற்று வெறிச்சோடிக் கிடந்த அகலமான தெருக்களில் ஏதோ பயங்கரமான காரியத்திற்குச் சங்கேதம்போல இந்தத் தாளத்தின் ஓசை எதிரொலித்து அதிர்ந்து கொண்டி ருந்தது. ‘திடுதிம்’ ‘திடுதிம்’ என்று குடமுழாவில் இந்தத் தாளம் வாசிக்கப்படும் ஒலியைக் கேட்டபடியே இதற்கேற்ப வேகமாகப் பாதம் பெயர்த்து நடந்து பெரு மாளிகைக்குச் சென்றுகொண்டிருப்பது போல் தனிமை யான வீதியில் அருவாளனும் அவனுடைய கூட்டாளியும் மிக விரைந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
‘நள்ளிரவுக்கு இரண்டு நாழிகை இருக்கும்போதே வந்துவிடுகிறேன்’ என்று பெருநிதிச் செல்வருக்குக் கொடுத்துவிட்டு வந்திருந்த வாக்கைக் காப்பாற்று வதற்காகத் தன் மனம் அப்போது நினைத்துக் கொண்டு தவிக்கிற வேகத்திற்கு ஏற்பக் கால்களால் நடக்க முடியவில்லையே என்ற பரபரப்போடு போய்க் கொண்டிருந்தான் நாகர் குலத்து அருவாள மறவன்.
‘பிறரைப் பயமுறுத்துவதற்காகவும், கொலை செய் வதற்காகவும் நான் எத்தனையோ முறை கருவியாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறேன். ஆனால் இன்று மாலை என்னைக் கூப்பிட்டனுப்பி என்னிடம் பெருநிதிச் செல்வர் வேண்டிக் கொண்ட காரியமோ என்னையே பயமுறுத்திவிட்டதே!’ என்று அப்போது அருவாள மறவனுடைய மனம் எண்ணியது. கொடுமைக்கு எல்லாம் பெரிய கொடுமையாகிச் சூழ்ச்சிக்கு எல்லாம் பெரிய சூழ்ச்சியாகித் தங்களைப் போன்றவர்களுக்கு வழிகாட்டும் மாபெரும் கொடிய சக்தியாயிருந்த நகைவேழம்பரையே கொன்று தீர்த்துவிடச் சொல்லித் தன்னை அவர் துண்டுவதை எண்ணியபோதே அருவாளனுக்கு உடம்பு சிலிர்த்தது. வாழ்க்கையில் எதற் காகவும் பயப்படுகிற நிலை அருவாளனுக்கு இன்றுவரை ஏற்பட்டதில்லை. இவ்வளவு பெரிய பூம்புகார் நகரத்தில் இரண்டே இரண்டு பேர்தான் அவனுக்கு வியப்பையும், மலைப்பையும் உண்டாக்கியிருக்கிறார்கள். அந்த இருவரில் ஒருவரை அவன் இன்றிரவு தன் கையாலேயே கொல்லப் போகிறான். இந்தக் கொலையைச் செய்வதன் மூலமே மற்றொருவருக்கு நன்றி செலுத்தப் போகிறான். கடைசியில் இந்த நகரில் இனிமேல் அவனுடைய மலைப்புக்குரியவராக ஒரே ஒருவர்தான் மீதமிருக்கப் போகிறார். அந்த ஒருவர் யாரோ அவருக்கு இனி அவன் ஆட்பட்டுத்தான் ஆகவேண்டும். ஏனென்றால், நீண்ட நாட்களாக அவன் அவருக்குச் செஞ்சோற்றுக் கடன்பட்டிருக்கிறான். சோற்றுக் கடனும் நன்றிகடனும் படுவது பொருட்கடன் படுவதைவிட வேதனையானது என்று, இந்த விநாடியில் தான் செய்வதற்குப் போய்க் கொண்டிருந்த காரியத்தினால் நன்றாக உணர்ந்திருந்தான் அருவாளன். இந்த அருவருப்பும், உணர்ச்சியும் அவன் மனத்தினுள் ஏற்பட்ட கணத்தில் தொலைவாக எங்கோ ஒலித்துக் கொண்டிருந்த பார்வதிலோசனம் என்ற தாளம் குபிரென்று முன்பு ஒலித்ததை விடக் கடுமையாகிப் பெரியதாய் அதிர்ந்து பூம்புகார் நகரத்தையே கிடுகிடுக்கச் செய்வது போலப் பிரமையை உண்டாக்கிற்று. அருவாளனால் அந்த நேரத்தில் கேட்டுப் பொறுத்துக் கொள்ள முடியாத கொடுமையான ஒலியாயிருந்தது அது.
அந்த இராப்போதில் அருவாளனும் அவனுடைய கூட்டாளியும் பெருமாளிகையை நெருங்கியபோது அது நிசப்தமாயிருந்தது. அன்று மாலையில் அருவாளனை அழைத்துப் போவதற்காக வந்திருந்த அதே காவலன் பெருமாளிகை வாயிலில் இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அருவாளனையும் அவனோடு வந்தவனையும் தன்னைப் பின்தொடர்ந்து வருமாறு சைகை செய்து அழைத்துக் கொண்டு போய் ஓசையற்ற இருண்ட மாளிகையின் முன்கூடங்களைக் கடந்து பெருநிதிச் செல்வருடைய அந்தரங்கமான பகுதியில் கொண்டு சேர்த்தான் அந்தக் காவலன்.
ஏதோ பெரிய விளைவை எதிர்பார்த்துக் காத்திருக்கிற பரந்த மெளனம்தான் அங்கு நிலவியது. அருவாளனோடு உடன் வந்திருந்த மற்றொரு நாகனை வெளியே இருக்கச் செய்துவிட்டுப் பெருநிதிச் செல்வரும் அருவாளனும் தனியே சிறிது நேரம் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள். சிறிது நாழிகைக்குப் பின்பு முன்னேற்பாடாகத் திட்டமிட்ட கொலை எண்ணத்தோடு நகைவேழம்பர் அடைக்கப்பட்டிருந்த நிதி யறைக்குள் அவர்கள் மூவரும் இருண்ட நிழல்களே இருளில் படியிறங்கிச் செல்வது போலச் சென்றபோது அந்தக் காரியத்தைப் பார்க்க இரவுக்கே வெட்கமாக இருந்ததோ, என்னவோ? எங்கும் அடர்ந்து செறிந்து கொண்டு, இருளே, நாணத்தோடு இந்தச் செயலைக் கூர்ந்து கவனிப்பது போலிருந்தது அது.
அருவாளனும், பெருநிதிச் செல்வரும் தத்தம் கைகளில் உருவிய வாளுடனும் உள்ளே அடைபட்டுக் கிடக்கிறவனுடைய வரம்பில்லாத எதிர்ப்பை எந்தக் கணமும் தங்களுக்கு மிக அண்மையில் எதிர்பார்க்கிற கவனத்துடனும் நிலவறையில் இறங்கியபின் மூன்றாமவன் அவர்கள் செய்யப் போகிற காரியத்துக்கு ஒளி தருவதற்காகத் தன்னிடம் அவர்களே சொல்லி ஏற்பாடு செய்திருந்தபடி நிலவறைக்காகக் கீழே இறங்கும் வழியில் மூன்றாவது படியிலோ நான்காவது படியிலோ நின்று கொண்டு தீப்பந்தத்தைக் காண்பித்தான்.
ஆனால் அந்தத் தீப்பந்தத்தின் ஒளி நிலவறைப் படிகளுக்குக் கீழே பரவிக் கண்களுக்குப் புலப்பட வைத்த காட்சியைப் பார்த்த பின்புதான் அருவாள னுக்கும், பெருநிதிச் செல்வருக்கும் அப்போது தாங்கள் செய்ய வேண்டிய காரியத்துக்காக எடுத்துக் கொண்ட கவனமும், அடைந்திருந்த பரபரப்பும் அனாவசியமானவை என்று புரிந்தது. அந்தச் சமயத்தில் அவ்வளவு மிகையான முயற்சி செய்து தாங்க வேண்டிய எதிர்பையோ, தாக்குதலையோ அங்கிருக்கும் எதிரியிடமிருந்து பெற வழியில்லை என்று அந்த எதிரி கிடந்த சூழ்நிலையிலிருந்தே தெரிந்துகொள்ள முடிந்தது. பெருநிதிச் செல்வர் அருவாளனின் காதருகே மெல்லச் சொன்னார்:-
“இந்த ஒற்றைக் கண்ணனை எதிலும் முழுமையாக நம்பி விடுவதற்கு இல்லை. நீயும் நானும் அருகில் வருகிறவரை இப்படிச் சோர்ந்து சுருண்டு விழுந்து கிடப்பது போலப் பொய்யாகக் கிடந்துவிட்டு நாம் இருவரும் பக்கத்தில் நெருங்கியதும் திடீரென்று எழுந்திருந்து பாய்ந்தாலும் பாய்வான்; உலகத்தில் உள்ள தீமைகள் எல்லாம் இவன் நினைவிலிருந்துதான் தொடங்க முடியும் என்பதை நீ மறந்துவிடாதே அருவாளா!”
அப்போது அவருடைய இந்தச் சொற்களைக் கேட்டுவிட்டு ‘யாரைத்தான் இந்த உலகில் நம்ப முடிகிறது!’ என்று தன் மனத்திற்குள்ளேயே நினைத்துச் சிரித்துக் கொண்டான் அருவாளன்.
“இவர் விழுந்து கிடக்கிற நிலையைப் பார்த்தால் எனக்கு அப்படித் தோன்றவில்லை ஐயா! அடிபட்டு விழுந்திருப்பது போல்தான் தெரிகிறது. அதோ பாருங்கள் குருதி கசியும் காயங்கள் தெரிகின்றன. தரையிலும் குருதி வடிந்திருக்கிறது. நீங்கள் கூறிய விவரங்களிலிருந்து கடலில் கற்பூர மரக்கலம் தீப்பற்றியதால் நீந்திக் கடந்து வந்தது தொடங்கி இவர் இந்த விநாடி வரை பட்டினி கிடக்கிறார் என்றும் தெரிகிறது. ஆகவே பொய்யாக நடித்து ஏமாற்ற வேண்டிய அவசியம் இப்போது இவருக்கு இல்லை. உங்களுக்குச் சந்தேகமாக இருந்தால் நீங்கள் விலகி நிற்கலாம். இவரை நான் கவனிக்கிறேன்” என்று பெருநிதிச் செல்வரிடம் கூறிவிட்டுக் கீழே குனிந்து நோக்கினான் அருவாளன். பெருநிதிச் செல்வர் விலகியே நின்றார். அருவாளன் பார்த்ததில் நகை வேழம்பர் பிரக்ஞையின்றித் துவண்டு கிடந்தார். உடலில் பல பகுதிகளில் ஆழமான காயங்களும், ஊமை அடிகளும் பட்டிருந்தன. முழங்கால் முட்டியில் இரத்தம் பெருகி வடிந்து தணிந்திருப்பதைப் பார்த்துப் புரிந்து கொண்டான் அருவாளன்.
நகைவேழம்பருடைய முழங்காலில் அந்த இடத்தை அருவாளன் தொட்டபோது கிணற்றுக்குள்ளிருந்து மரண வேதனையோடு பேசுகிறாற் போன்ற நலிந்த குரலில் வலியோடு அவர் முனகினார். மூச்சு இன்னும் இருக்கிறது என்பதைத் தவிர அதிகமான பலம் எதுவும் அந்த உடம்பில் அப்போது இருந்ததாகத் தெரியவில்லை. கற்பூரத் தீயினால் காந்திப்போய்க் கருகி, எரிந்த புண்களும் அங்கங்கே அந்த உடலிலே தெரிந்தன. மூடி அவிந்து போகாமல் பார்ப்பதற்கு மீதமிருந்த ஒரே ஒரு கண்ணும் கூடத் தளர்ந்து குழிந்து வாடிச் சொருகி இமையின் கீழ் இடுங்கியிருந்தது. புண்ணைப் பார்ப்பது போல் விகாரமாகத் தோன்றிய அந்தப் பூத உடம்பின் அருகேயிருந்து விலகி மெல்ல எழுந்து நின்று கொண்டு இன்னதென்று விளக்கிச் சொல்ல முடியாத ஏதோ ஒரு மாற்றம் தன்னுடைய குரலில் ஒளிப்பதைத் தானே தவிர்த்துக் கொள்ளவோ, மாற்றிக் கொள்ளவோ, முடியாமல் பெருநிதிச் செல்வரிடம் பேசினான் அருவாளன்.
“எந்த உயிரை இந்த உடம்பிலிருந்து நீக்கிவிட வேண்டும் என்று இவ்வளவு முன்னேற்பாடும் திட்டமும் செய்தீர்களோ, அந்த உயிருக்குரியவர் இப்போதே முக்கால்வாசி இறந்துபோய் விட்டார் போலத் தோன்றுகின்றதே ஐயா...”
அருவாளன் கூறிய இந்தச் சொற்களைக் கேட்டு இவற்றுக்காகப் பெரிதும் மகிழவேண்டும் போல ஆசை யாயிருந்தும் கூட அருவாளனுக்குத் தெரியும்படி இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது நல்லதல்ல என்று தந்திரமாக மாற்றிக்கொண்டார் அவர்.
“அப்படி முடிந்த முடிவாகச் சொல்லிவிடாதே அருவாளா! இப்படிப்பட்ட மனிதர்களுக்குச் சாவதற்கு விநாடி நேரம் இருக்கும்போதுகூட ஆவேசம் வருவதுண்டு.”
“முக்கால்வாசி தனக்குத்தானே செத்துப்போய் விட்ட உயிரை மேலும் வலிந்து கொல்ல வேண்டு மென்று கருதி வாளெடுப்பது வீரமுள்ளவர்களுக்குத் தகுமா என்றுதான் நான் தயங்குகிறேன் ஐயா!” என்று கூறிவிட்டுப் பதிலை எதிர்பார்த்துத் தன் முகத்தை நோக்கிய அருவாளனைத் தனது பார்வையாலேயே அளந்தார் பெருநிதிச் செல்வர். அவருடைய சந்தேகத்தைப் புரிந்துகொண்ட அருவாள நாகன் அதை மாற்றிவிட வேண்டும் என்ற தீர்மானத்தோடு மேலே படியில் தீப்பந்தத்துடனே நின்ற தன் தோழனை இன்னும் கீழிறங்கி மிக அருகே வந்துவிடுமாறு கையை ஆட்டி அழைத்தான்.
‘சந்தேகமும் அவநம்பிக்கையும் இரட்டைப் பிறவிகள். இரண்டும் மனத்தின் பலவீனத்திலிருந்துதான் பிறக்கின்றன’ என்று எதிரேயிருந்த பெருநிதிச் செல் வருடைய முகத்தில் காணும் உணர்வுகளைக் கொண்டு நினைத்தான் அருவாளன்.
எதிர்த்துப் போரிடவோ, பாய்ந்து தாக்கவோ, நகைவேழம்பருடைய உடலில் அப்போது சிறிதளவுகூடத் தெம்பில்லை என்பதை அருவாள நாகன் அவருக்கு நிதரிசனமாக நிரூபித்த பின்புதான் அவனை நோக்கி வேறு ஒரு கட்டளையிட்டார் அவர்.
“அருவாளா! இது இந்த மாளிகையின் நிதி அறை! இவரைப்போல் மிகக் கொடிய ஒருவர் இங்குதான் இறந்து போனார் என்ற கெட்ட நினைப்போடு இந்த இடத்திற்குள் நுழையும் போதெல்லாம் எனக்கோ என்னுடைய இந்தச் செல்வத்தை ஆளப்போகும் வழி முறையினருக்கோ சிறிதும் பயமோ அமங்கலமான எண்ணமோ ஏற்படக்கூடாது. நீயும், உன் கூட்டாளியும் பாவப் புண்கள் நிறைந்த இந்த உடம்பை இங்கிருந்து கடத்திக்கொண்டு போய்ச் சக்கரவாளத்தைச் சுற்றியிருக்கும் காடுகளில் எங்காவது போட்டுவிட்டால் நல்லது. ஆனால் அப்படிப் போட்டுவிட்டு உடனே திரும்பி வந்துவிடாதே. இந்த மனிதரின் உடம்பில் இருந்த உயிர் பிரிந்து நீங்கிவிட்டது என்று முடிவாய் அறிந்துகொண்டு வந்து நீ எனக்குத் தெரிவித்த பின்புதான் என் மனத்தின் எல்லையிலிருந்து கவலைகள் பிரிந்து நீங்கும். விடிகிறவரை எவ்வளவு நேரமானாலும் நீ வந்து சொல்லப்போகிற செய்திக்காகக் காத்துக் கொண்டிருப்பேன் நான்.”
இதைக் கேட்ட பின்பு தன் மனம் எந்த உணர்வுகளையும் சிந்திக்க முடியாதபடி தான் அவருக்குப் பட்டிருந்த சோற்றுக் கடனைத் தீர்ப்பதற்கு முற்படுவது போல் எந்திரமாக மாறினான் அருவாளன். அவர் சொல்லியதைச் செயற்படுத்துகிறவனாகித் தன் வலிமையை எல்லாம் பயன்படுத்தி நகைவேழம்பருடைய உடம்பைத் தூக்கித் தோளில் சார்த்திக் கொண்டான். தீப்பந்தத்தை அங்கேயே வைத்துவிட்டுத் தன்னோடு பின் தொடருமாறு தன் கூட்டாளியிடம் கூறிவிட்டுப் படிகளில் ஏறினான் அருவாளன். திண்மை வாய்ந்த அவனுடைய தோள்களின் பலம் நகைவேழம்பருடைய உடம்பாகிய சுமையைத் தாங்குவதனால் குறையவில்லை. அந்தச் சமயத்தில் தன் மனம் சுமந்து கொண்டிருந்த நினைவுகளின் சுமைதான் தனது பலத்தைக் குறைக்கும் பெருந்துன்பமாயிருந்தது அருவாளனுக்கு.
நகைவேழம்பரைச் சுமந்துகொண்டு அருவாளனும் அவனுடன் வந்தவனும் பெருமாளிகையிலிருந்து வெளி யேறுமுன், “அருவாளா! நினைவு வைத்துக் கொள். நாளைக்குப் பூம்புகாரின் கதிரவன் உதிக்கும்போது இந்த ஒரு கண்ணுக்கும் பார்க்கும் ஆற்றல் இருக்கக்கூடாது” என்று தம் கையிலிருந்த ஊன்றுகோலின் நுனியினாலேயே அலட்சியமாக அவன் தோளில் சுமையாகியிருந்த நகைவேழம்பரின் உடம்பைச் சுட்டிக் காட்டினார் பெருநிதிச் செல்வர்.
“செய்கிறேன் ஐயா! நாளைக்கு உங்களுக்கும் எனக்கும் பொழுது விடியும். இவருக்கு மட்டும் விடியவே விடியாது. அவ்வளவு செய்தால் போதும் அல்லவா?” என்று ஒரு முறை திரும்பி அவரிடம் கேட்டுவிட்டு மேலே நடந்தான் அருவாளன். அதன்பின் அவன் அங்கிருந்து நடந்த வேகத்தை நடையா, ஓட்டமா என்று பிரித்துச் சொல்ல முடியாது.
நான்கு நாழிகைக்குப் பின் சக்கரவாளக் கோட்டத்துக் காட்டின் உள்ளே பாழடைந்த காளிக்கோட்டம் ஒன்றில் போய்த்தான் தன்னுடைய தோள் சுமையை அவனால் இறக்குவதற்கு முடிந்தது. நரிகள் குறுக்கும் நெடுக்கும் பாய்ந்தோடும் அடர்த்தியான புதர்கள் சூழ்ந்த அந்தக் காளிக் கோட்டத்தின் முன்புறத்தில் தான் சுமந்து வந்த உடலைக் கிடத்திவிட்டு, முடிந்து போய்க் கொண்டிருக்கிற இந்த உயிரை தாமே இன்னும் விரைவில் முடித்துவிட்டு அறிவிக்க வேண்டியவரிடம் போய் அறிவித்துவிடலாமா? அல்லது தானே முடிகிற வரை இதைக் கவனித்துக் கொண்டிருந்து விட்டுப் போகலாமா? என்று தயங்கியபோது வேறு ஒரு புதிய யோசனையும் அவனுக்கு உண்டாயிற்று.
‘இவரோ இன்று நிச்சயமாகச் சாகப் போகிறார். அதற்கு முன்னால் இவரைக் கொஞ்சம் வாழச்செய்து பார்த்தால் என்ன! அப்படிச் செய்தால் சாவதற்கு முந்திய இவரது எண்ணங்களையாவது நான் அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுமே?’ என்று நினைத்தான் அருவாளநாகன். தான் நினைத்ததைச் செயற் படுத்துவதற்கு அந்த இடத்துச் சூழ்நிலை ஏற்றதுதானா என்று அறிந்துகொள்ள முயல்வது போலச் சுற்றும் முற்றும் பார்த்தான் அவன்.
‘நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள்; எனக்கு என்ன வந்தது?’ என்று அவனுக்குத் தன் மொழியில் எடுத்தெறிந்து பதில் சொல்வதைப் போலக் காளிகோட்டத்துத் திரிசூலத்தின் நுனியில் உட்கார்ந்திருந்த கோட்டான் ஒன்று நாலைந்து முறை தொடர்பாகக் கத்தி விட்டு விருட்டென்று எழும்பிப் பறந்து சென்றது. மனிதத் தலைபோல் தலையும் பருந்து உடலும் கொண்டு மயானங்களில் திரியும் ஆண்டலை எனப்படும் கொடிய பறவைகள் நாலைந்து காளிக் கோட்டத்து இடி சுவரில் இருந்தன. பிரம்மாண்டமான மண் பிரதிமை ஒன்று கோட்டத்துக்குள் நுழைகிற இடத்தின் வலது பக்கமாகத் தன் குழிந்த கண்களை உருட்டி விழித்தபடியிருந்தது. வேறு எந்த அந்நிய மனிதர்களின் அரவமும் அப்போது அங்கே இல்லை.
“தம்பி! காளி கோட்டத்தின் உட்பக்கம் யாராவது இருக்கிறார்களா என்று போய் பார்த்து வா” என உடனிருந்த தோழனை ஏவினான் அருவாளன். அவன் போய்ப் பார்த்துவிட்டு உடனே வந்து காளி சிலையைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்பதாகச் சொன்னான்.
அப்போது கீழே கிடத்தியிருந்த நகைவேழம்பரின் உடல் மெல்ல அசைந்தது. ஈனசுவரத்தில் அவர் ஏதோ முனகுவதும் கேட்டது. அவரருகே சென்று மண்டியிட்டு அமர்ந்துகொண்டே அருவாளன், “தம்பீ! இப்போது இவருக்குச் சற்றே சக்தியூட்டிச் சிறிது நேரம் இவரைப் பேசச் செய்தால் ஏதாவது பயனுள்ள செய்திகள் இவரிடமிருந்து நமக்குத் தெரியலாமென்று நான் எண்ணுகிறேன். நீ போய்ப் பக்கத்தில் எங்காவது தண்ணிர் இருந்தால் கொண்டு வா. தண்ணிர் மட்டும் போதாது. இதோ இந்தத் திரிசூலத்துக்கு மேலே உள்ள நெல்லி மரக்கிளையில் அம்மானைக் காய்களைப் போல் முற்றிக் கனிந்த பெரிய பெரிய நெல்லிக்கனிகள் சரம் சரமாய்த் தொங்குகின்றன. அவற்றில் நாலு கனிகளைப் புறித்துக் கல்லில் தட்டி நீரில் கலந்து, அந்தச் சாற்றை இவருடைய வாயில் ஊற்றிப் பார்க்கலாம். இந்த இடத்தில் அதைவிட அதிகமாகச் சத்துள்ள உணவு எதையும் இப்போது நாம் இவருக்குத் தருவதற்கு வழியில்லை” என்று அங்கே அருகில் தன்னுடன் இருந்தவனை ஏவினான். ‘பெருநிதிச் செல்வருக்கும் நகைவேழம் பருக்கும் என்ன காரணத்தினால் இத்தனை பெரிய முறிவு ஏற்பட்டது? இவரைக் கொன்று தீர்த்து விட்டுத் தாம் மட்டும் தனியே நிமிர்ந்து நிற்க வேண்டுமென்று ஆசைப்படும் அளவுக்கு அவர் இவர்மேல் வைரம் கொண்டது ஏன்?’ என்பன போல் தன் மனத்தினுள் விடைபெறாத மலட்டு வினாக்களாய் நிற்கும் பல சந்தேகங்களைச் செத்துப் போவதற்கு இருக்கும் இந்த ஒற்றைக் கண் மனிதர் உயிருடன் இருக்கும் போதே இவரிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டுவிட வேண்டு மென்று அந்தரங்கமாக உண்டான நைப்பாசையை அருவாளனால் அடக்கிக் கொள்ள முடியவில்லை.
‘கொடுமையின் இலக்கணமாக விளங்கிய இந்த ஒற்றைக் கண் மனிதருக்கு இப்படி ஒரு பரிதாபமான சாவா?’ என்று எண்ணும் போதே இதன் இரகசியத்தை அறிந்து கொண்டு விட வேண்டும் என்ற ஆவல் அவனுடைய மனத்தில் உந்தியது.
நகைவேழம்பரது முகத்தில் தண்ணிர் தெளித்தும் வாயில் இனிய நெல்லிக்கனிச் சாற்றோடு கலந்த நீரை ஊற்றியும் அந்த முகத்திலிருந்த ஒற்றைக்கண் விழித்துக் கொண்டு தன்னைக் காணச் செய்வதற்காக அருவாளன் செய்த முயற்சிகள் வீண் போகவில்லை. அவர் கண் திறந்தார், மெல்ல மெல்ல வாய் திறந்து பேசவும் செய்தார். தன் எதிரே நிற்கிற கொலை மறவர்கள், தான் அப்போது கிடத்தப்பட்டிருந்த இடம், தன் நிலை, எல்லாவற்றையும் பார்த்துக் கேள்வி கேட்டு ஒவ்வொன்றாகத் தெரிந்து கொள்ளாமல், தனக்குத் தானாகவே புரிந்துகொண்டு ஒரு நிதானத்துக்கு வந்தபின் கிடத்தப்பட்ட இடத்தில் இருந்தே தலையை மட்டும் மெல்ல நிமிர்த்தி, “நீ அலைவாய்க்கரை யவனப்பாடியைச் சேர்ந்த நாகர் குலத்து அருவாள மறவன் அல்லவா?” என்று அவனை நோக்கி அவன் பெயரோ, ஞாபகமோ சிறிதும் குன்றாமல் தம் குரல் மட்டும் குன்றிப்போய்க் கேட்டார் அவர். ‘ஆமாம்’ என்பதற்கு அறிகுறியாக அவரை நோக்கித் தலையாட்டினான் அருவாளன். அடுத்தகணம் அவனை நோக்கி வேகமாக அவரே மேலும் சொல்லலானார்:
“நான் இப்போது எந்த நிலையில் இங்கே கொண்டு வந்து எதற்காகக் கிடத்தப்பட்டிருக்கிறேன் என்பதைப் பற்றி நீ எனக்கு விளக்கிச் சொல்லுவதற்கு ஆசைப் படாதே அப்பனே! அதற்கு அவசியமே இல்லை. சொல்லாமல் எனக்கே எல்லாம் புரிகிறது. இந்த ஒரே ஒரு கண்ணுக்கு உலகத்தைப் பார்க்கும் ஒளி எந்தக் கடைசி விநாடி வரை இருக்கிறதோ, அதுவரை எல்லாமே புரியும். கண்ணெதிரே பார்ப்பவற்றில் எல்லாம் ஒருவன் தன்னுடைய சாவை மட்டுமே காண்பதுபோல் தவிக்கின்ற தவிப்புத்தான் மரண வேதனையாக இருக்குமானால், அதையே இப்போது நான் அடைந்து கொண்டிருக்கிறேன் என்று நீ புரிந்து கொள்ளலாம். இந்த வேதனையை மீறிக்கொண்டு எழுந்து நிற்க இப்போது எனக்கு வலிமை இல்லை. காலிலும் எலும்பு முறிந்திருக்கிறது. என்னுடைய இயல்பைப் பற்றி உனக்கும் நன்றாகத் தெரியும். தெரியாதவற்றைக் கேள்விப்பட்டும் இருப்பாய். என்னைப் போன்ற ஒருவனுக்கு இந்த நிலை ஏன் ஏற்பட்டதென்றாவது தெரிந்துகொள்ள நீ ஆசைப்படலாம். அப்படி ஆசைப் படுவது மனித இயற்கைதான். நானோ என்றும் என்னை மனிதனாகவே நினைத்துக் கொண்டதில்லை. என்னை ஒரு பெரிய அரக்கனாகப் பாவித்துக்கொண்டு அந்தப் பாவனையினாலேயே நான் பலமுறை பெருமைப்பட்டு இருக்கிறேன். கடைசியாக இப்போதும் எனக்கு அந்தப் பெருமை இருப்பதைத்தான் நான் உணர்கிறேன். பலபேரைத் துடிக்கத் துடிக்கக் கொன்று பழகிய எனக்கு நான் சாகவேண்டும் என்றும் செத்துப்போய்க் கொண்டிருக்கிறேன் என்றும் உணர்வதுகூடப் பெரிதாக எதையும் இழக்கப் போவதுபோல் ஒரு மலைப்புக்குரிய விஷயமாகத் தோன்றவில்லை. சாக வேண்டியதுதான். ஆனால் இப்படி நான் வஞ்சகமாக ஏமாற்றப்பட்டு செத்துப்போக வேண்டாம்போல என்னுள் நானே வளர்த்துக் கொண்டிருக்கிற அரக்கத்தன்மை எனக்கு நினைவூட்டுகிறது. பலபேரை கொன்ற போது கூட இப்படி வஞ்சகமாக ஏமாற்றித்தான் கொன்றிருக்கிறேன். என்றாலும் நானே இப்படிச் சாக வேண்டிய அவசியம் எனக்கு வந்திருக்கக் கூடாது தான். நான் பிறருக்குத் தீமைகள் புரிவதற்காகக் கடைப்பிடித்த வழிகளை என்னைத் தவிரப் பிறர் புரிந்துகொண்டு என்னிடமே செயற்படக்கூடாது என்று நினைக்கிற பேராசைக்காரனாகவே இதுவரை வளர்ந்துவிட்டேன் நான். இன்னும் சிறிது காலம் வாழவேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. காரணம் என்ன தெரியுமா? அப்படி வாழ்ந்தால் இப்போது இப்படி நான் சாவதற்கு ஏற்பாடு செய்தவரை வாழ விடாமல் எமனுலகுக்கு அனுப்பியிருப்பேன். அதுவும் முடியாமல் போய்விட்டது. முடியவில்லையே என்பதற்காகவும் நான் வருத்தப்படக் கூடாது. இன்னும் வாழ்வதற்கு முடியவில்லையே என்பதற்காகவே வருத்தப்படாமல் மிகவும் தைரியமாகச் சாக வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். ஆனால் என் நினைப்பில் இப்போது ஏதோ ஒன்று குறைகிறது அப்பனே! நான் அரக்கனாகவே என்னை இது வரை பாவித்துக் கொண்டிருந்தது தவறு! நானும் ஏதோ ஒரு வகையில் வெறும் மனிதன்தான் என்று பொல்லாத குறும்புக்குரல் ஒன்று என் மனத்திலிருந்து இந்தச் சாவு வேளையிலே எனக்குக் கேட்டுக் கொண்டே இருக்கிறது!
“இதோ இந்தக் காளி கோட்டத்தின் பாழடைந்த கதவுகளைப் பார்! எவ்வளவு பழமையடைந்து விட்டன இவை! சாகும்போது நானும் இப்படித்தான் ஆகி விட்டேன். என்னால் எல்லாவற்றையும் மூடி மறைக்க முடியவில்லை. என் மனத்தில் இறுகிப் போயிருந்த பல எண்ணங்கள் இப்போது உடைகின்றன... என்னால் எதையும் பாதுகாக்க முடியவில்லை! இந்தப் பழைய கதவுகளைப் போலவே எதையும் மறைத்துக் காக்க முடியாமல் நான் உடைந்திருக்கிறேன்.”
தொடர்ந்து பேசிக்கொண்டே வந்தவர் பேச்சை நிறுத்திவிட்டு அருவாள மறவனையும் அவனுடைய தோழனையும் உற்றுப் பார்க்கலானார்.
சில கணங்கள் மூன்று பேர்களுடைய கண் பார்வையும் ஒன்றிலொன்று இணைந்து பிரியாமல் இலயித்திருந்தது. காற்றின் ஓசை மட்டும்தான் அப்போது அப்பகுதியில் கேட்டது.
மறுபடியும் அவரே பேசத் தொடங்கினார்:
“தெரிந்தோ தெரியாமலோ இப்போது இந்தக் காளி கோவிலில் நீ என்னைக் கிடத்தியிருக்கும் இடம் நான் சாவதற்கு மிகவும் பொருத்தமானது. சந்தேகமாயிருந்தால் நீயே மறுபடி பார்! இப்போது நான் சாய்ந்து கொண்டிருக்கிற இடம் இந்தக் கோவிலின் பலிபீடம்.
“இதில் ஒரு காலத்தில் நிறைய இரத்தக்கறை படிந்திருக்கும். மறுபடி இன்னும் படியப்போகிறது. அப்படிப் படியப்போகிற இரத்தம் என்னுடைய பாவ இரத்தமாக இருக்கும்.
“என்னைப் பலிகொடுத்துவிட வேண்டியதுதான். ஆனால் பலி வாங்கிக் கொள்ள வேண்டியவர் மட்டும் ஏனோ இங்கு வரவில்லை. இந்தக் காளிகோட்டத்துப் புதரைச் சுற்றிலும் இப்போது ஊளையிடுகின்ற சுடுகாட்டு நரிகள் எல்லாம் என்னுடைய இரத்தத்துக்காகவும் இறைச்சிக்காகவும் ஊளையிட்டுக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்து பார்க்க ஆசையாயிருக்கிறது எனக்கு. இந்தக் கற்பனையை எண்ணுவதில் எனக்குப் பயமே இல்லை.”
சோர்ந்து தளர்ந்து சாகக் கிடக்கிற அந்தக் கோலத்திலும் கூட அவருடைய காட்டாற்றுப் பேச்சில் குறுக்கிட்டு நடுவே பேசுவதற்குப் பயமாக இருந்தது அருவாளனுக்கு. அவருடைய தோற்றத்தில் ஏதோ ஓர் அம்சத்துக்கு இப்படிப் பயமுறுத்துகிற ஆற்றல் இருப்பதாக அவன் உணர்ந்தான். ‘விடிவதற்குள் இவரைத் தீர்த்துவிடாமல் திரும்பினால் பெருநிதிச் செல்வர் என்னைத் தீர்த்து விடுவாரே’ என்ற நினைப்பு வேறு இடையிடையே தோன்றி அருவாள மறவனுக்குத் தன் நிலையை உணர்த்திக் கொண்டிருந்தது. உடனே தான் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கவும் அவனால் முடியவில்லை. அவரோ அந்தப் பழைய பலி பீடத்தில் சாய்ந்துகொண்டு உயிரைக் கொடுப்பதற்கு முன்னால் உணர்ச்சிகளை வாரி வாரிக் கொடுத்துக் குமுறிக் கொண்டிருந்தார். அவர் பேச்சுக் குறையவுமில்லை. நிற்கவுமில்லை. தொடர்ந்தது.
“அருவாளா! என்னுடைய நினைவுகளையெல்லாம் காலம் தேய்த்துச் சிதைத்து விட்டது. நானே கால ஓட்டத்தில் சிதைந்து போய் விட்டேன். இந்தப் பட்டினப்பாக்கத்தில் எட்டிப் பட்டமும் ஏனாதிப் பட்டமும் பெற்று வாழும் பெரிய பெரிய செல்வர்களுக்கு நீயும் நானும் நம்மைப் போன்றவர்களும் வெறும் கதவுகளைப் போலத்தான் பயன்படுகிறோம். கதவுகளால் எவை எவை மறைக்கப்பட வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவற்றை மறைக்க ஆற்றலின்றிக் கதவுகள் சிதைத்து போனால் பழைய கதவு களைக் கழற்றி எறிந்துவிட்டுப் புதிய கதவுகளை மாற்ற வேண்டியதுதானே? பெருநிதிச் செல்வருடைய எல்லா இரகசியங்களுக்கும் நான் பலமான கதவாயிருந்த காலத்தில் அவர் என்னை நன்றாகப் பேணினார்! எதை எதை நான் மறைத்துப் பாதுகாத்தேனோ அவற்றை நானே வெளிப்படுத்தி விடுவேனோ என்று அவர் நம்பிக்கை இழந்த காலத்தில் நான் இப்படி அழிக்கப்பட்டு விட்டேன். பிறருக்குப் பயன்பட்டு அழிகிற எல்லாரும் கடைசியில் இப்படிக் கதவுகளைப் போலத் தான் ஆகிறார்கள். போகட்டும் உடைந்த கதவினால் பயனும் பாதுகாப்பும் இருக்க முடியாது தான். உன்னிடமிருந்து எனக்குச் சில செய்திகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
“நான் மிக உயர்ந்த இடத்திலிந்து உருண்டு விழுந்து விட்டேன் அருவாளா! அந்தப் பெருமாளிகையின் நிலவறையிலேயே நான் இறந்துபோய் விடுவேனோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் என்னுடைய சாவு கூட அந்த மாளிகையின் எல்லைக்குள்ளே நடக்ககூடாது என்று பெருநிதிச்செல்வர் கருதி விட்டாற்போல் இருக்கிறது...” என்று நலிந்த குரலில் நகைவேழம்பர் கூறிக்கொண்டு வந்த அவருடைய சொற்களால் மனம் மாறியிருந்த அருவாளன் அவர் மேல் சிறிது இரக்கமும் கொள்ளத் தொடங்கியிருந்தான்.
‘பிறரைக் காப்பதற்குப் பயன்பட்டுப் பின்பு தன்னையே காத்துக் கொள்ள முடியாமல் அழிந்து போகிற எல்லாருடைய கதையும் என் நிலையில்தான் இருக்கும்’ என்று அவர் கூறியிருந்த வாக்கியம் அவன் மனத்தில் இனம் புரியாததோர் ஊமைக் கிளர்ச்சியை உண்டாக்கியிருந்தது. அந்தக் கிளர்ச்சியினால் அவரிடமே சிறிது தைரியமாகப் பேசினான் அவன்.
“ஐயா! நாம் பிறருக்குப் பயன்படலாம். ஆனால் நமக்கும் ஓரளவு பயன்படுகிறவராகப் பார்த்துத்தான் நாம் பயன்படவேண்டும். நீங்கள் அந்த மாளிகையின் எல்லையில் இருந்தாலே உங்கள் உயிர் பேயாகி அங்கே உலாவும்; அப்படி உலாவுவதுகூடக் கெடுதல் என்று எண்ணிப் பயந்து ஒதுங்குகிறவருக்குப் போய்ப் பயன் பட்டு வீணாகி விட்டீர்கள் நீங்கள்.”
இந்தச் சொற்களைக் கேட்டதும் பலிபீடத்தில் சாய்ந்து கொண்டிருந்த நகைவேழம்பர் தலையை நிமிர்த்திக் கண்ணில் வெறியும், தவிப்பும் மாறி மாறித் தெரிய, “அப்படியும் சொன்னானா அந்தப் பாவி? தெரிந்துகொள், அருவாளா! உனக்கும் ஒருநாள் அவனிடம் இந்தக் கதிதான். அந்த பட்டினப்பாக்கத்துப் பெருநிதிச் செல்வனுக்கு நன்றிக் கடனும், சோற்றுக் கடனும் பட்டிருப்பதாக மயங்கி வீணில் அடிமையாகப் போய்விடாதே. ஏழையாயிருந்து பட்டினி கிடப்பது கூடச் சுகம். அடிமையாக இருந்து வயிறார உண்பது கூட நோய் என்று இந்த மரணாவஸ்தை நிறைந்த கடைசிக் கணத்தில் என் மனத்தின் குருட்டுத்தனம் நீங்கி எனக்கு ஒரு ஞானம் வருகிறது. இனிமேல் வந்து பயன் என்ன! நான் அடிமையாயிருந்து கொண்டே சுதந்திரமாய் இருப்பதாய் எண்ணிக் கொண்டு தப்பான நம்பிக்கையோடு கொடிய வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன். எவ்வளவு சுதந்திரமாக இருந்தாலும், எல்லாரும் என்றைக்காவது ஒருநாள் மரணத்துக்கு அடிமையாகித் தீர வேண்டியது தான் போலிருக்கிறதென்று இப்போது புதிதாகப் புரிந்து கொண்டவன் போலக் கடைசியாக இந்தப் பலிபீடத்தில் வந்து வீழ்ந்துவிட்டேன் பார். என் வாழ்வு இவ்வளவு தான். இனிமேல் எனக்கு என்ன இருக்கிறது? ஆனால்...”
சிறிது நேரம் தயங்கிவிட்டு அவர் மேலும் பேசினார்: “இனிமேல் ஒன்றுமில்லை என்றும் கை விடுவது முடியாது. கடைசியாக நான் செய்வதற்கு இன்னும் ஏதோ இருக்கிறது. பெருமாளிகையில் செத்துப் போனால் கூட நான் பேயாயிருந்து பின்னால் பய முறுத்துவேனோ என்று அஞ்சிப் பெருநிதிச் செல்வன் என்னை இங்கே தூக்கிக் கொண்டு வந்து கொல்லச் சொன்னான் அல்லவா? நான் பேயாயிருந்து அந்தக் கொடியவனுக்கு கெடுதல் செய்ய முடியுமானால் அதைச் செய்யத்தக்க விதத்தில் சாவதற்கு இப்போதும் என்னால் முடியும். அப்பனே! இப்படியே என்னைத் தூக்கிக் கொண்டு போய்க் கடலில் போட்டுவிடு. நான் கடலிலேயே சாகிறேன். பூம்புகாரின் கடற்பரப்பில் எல்லாம் நான் இறந்தபின் பேயாக உலவுகிறேன். அந்தப் பாதக மனிதனுடைய கப்பல்களையெல்லாம் அறைந்து கடலில் கவிழ்க்கிறேன். அவருடைய பெரும் கடல் வாணிகத்தையே கவிழ்த்து விடுகிறேன். அந்தக் கப்பல்களில் ஏதாவதொன்றில் எப்போதாவது அந்தப் பாதகனும் பயணம் செய்துகொண்டு வருவான் அல்லவா? அப்போது அவனை இந்த இரண்டு கைகளாலும் பிடித்து பேயறை அறைந்து கழுத்தை நெரித்து அப்படியே கடலில் தள்ளி...!”
சொல்லிக் கொண்டே வந்தவர் உணர்ச்சித் துடிப்பில் எதிரே யாருடைய கழுத்தோ தன்னுடைய பிடியில் உண்மையாகவே இருப்பதாகக் கருதிக் கொண்டு இரண்டு கைகளாலும் நெரிக்க முயன்றபடி எழுந்திருக்க முற்பட்டுக் கால் ஊன்றி நிற்க முடியாத காரணத்தால் மறுபடி பலிபீடத்திலேயே முடங்கிச் சாய்ந்து விழுந்தார்.
விழுந்தவருக்கு மூச்சு இரைத்தது. கண் சொருகிச் சொருகி விழித்தது. அந்த இரும்பு நெஞ்சு விம்மி விம்மித் தணிந்தது. அருவாளன் மறுபடி அவரருகே மண்டியிட்டு அமர்ந்து அந்த நெஞ்சைத் தடவிக் கொடுத்தான். அவருடைய அநுபவங்களைப் பார்த்து அவனுக்குப் பரிதாபமாக இருந்தது. பயமாகவும் இருந்தது. தனக்கே அவற்றிலிருந்து தேவையான பாடங்கள் கிடைப்பது போலவும் இருந்தது.
‘இவரைப்போல் கொடுமையாகவும் பயங்கரமாகவும் இனி ஒருவர் வாழ முடியாது. இவருக்கு இப்போது கிடைத்துக் கொண்டிருப்பது போல் கொடுமையான சாவும் இன்னொருவருக்குக் கிடைக்கக் கூடாது. கிடைக்கவும் வேண்டாம். இன்னொருவர் தாங்கிப் பொறுத்துக் கொள்ள முடியாதது இந்த விதமான சாவு’ என்று எண்ணி எண்ணி மலைத்தான் அருவாளன். இன்னும் கொஞ்சம் நெல்லிக்கனிச் சாறு கலந்து நீரை அவர் வாயில் ஊற்றும்படி தன் தோழனுக்குச் சைகை செய்தான் அருவாளன்.
அவனும் அதைச் செய்தான். மீண்டும் சில விநாடிகள் மரண வேதனை. மீண்டும் சில விநாடிகள் தெளிவு. அந்த நிலையில் அவர் அருவாளனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். விரக்தியினாலும் இனி நாம் ‘சாகத்தான் போகிறோம்’ என்ற உறுதியினாலும் அப்போது மிகமிக மனத் தெளிவுடன் அவர் அவனிடம் ஒளிவு மறைவின்றிப் பேசினார். “அருவாளா! நீ இப்பொழுது என்னைப் பார்த்து பரிதாபப்படுவது போல் நான் சாவது ஒன்றும் அவ்வளவு வேதனையான காரியமில்லை எனக்கு. ஏனென்றால் இந்த உலகத்தில் நாளைக்கு வாழ்வதற்காக என்று நான் எதையும் சேர்த்து வைத்திருக்கவில்லை. பெருநிதிச் செல்வனைப் போலச் செல்வத்தை மலை மலையாகக் குவித்து வைத்திருந்தால் அதைக் காக்கவும் அநுபவிக்கவும் ஆசைப்பட்டாவது நாளைக்கும் அதற்கு அப்புறமும் நான் வாழ்வதற்கு விரும்ப வேண்டும். பாவங்களைத் தவிர வேறு எவற்றையும் இனிமேல் அனுபவிப்பதற்காக என்று நான் சேர்த்து வைக்கவில்லை. என்னுடைய கணக்கில் இப்போது நிறையப் பாவங்கள் இருக்கும். ‘அந்தப் பாவங்களை எல்லாம் அநுபவிப்பதற்கு நான் மீண்டும் பிறக்க வேண்டியிருக்குமே’ என்று நீ சந்தேகப்படுவாய். பிறந்தால் இன்னும் புதிதாக நிறையப் பாவங்கள் செய்து அடுத்த பிறவியிலும் இப்படியே கெட்டவனாக வாழ்ந்து விடுவேனோ என்று தான் நான் மறுபடி பிறக்கவே பயப்படுகிறேன். இப்படித்தான் வாழ வேண்டும் என்று நியாயமோ வரம்போ உள்ள எந்த ஒரு வாழ்க்கையையும் இந்தப் பிறவிலேயே பழகிக் கொள்ள முடியாதவன் அடுத்த பிறவியில் மட்டும் எப்படி ஒழுங்காக வாழமுடியும் என்று நானே என்னைப் பற்றிச் சந்தேகப்படுகிறேன். உனக்கு நன்றாக என்னைப் பற்றித் தெரியும். நான் நிறையக் கொலை செய்திருக்கிறேன். நிறையக் கொள்ளையடித்திருக்கிறேன். நிறையப் பொய் சொல்லியிருக்கிறேன். நிறையச் சூழ்ச்சி செய்திருக்கிறேன். ஆனால் அவ்வளவும் எனக்காக மட்டும் அல்ல! யாருடைய மாளிகையிலோ நிதியறையை நிரப்புவதற்காக நான் என்னுடைய கணக்கில் பாவங்களை நிறைத்துக் கொண்டு கெட்டுப் போய்விட்டேன்.
“நான் இப்படிச் சுகமாக நலிந்து மந்தமாக மெல்ல மெல்லச் சாவது எனக்கே பிடிக்கவில்லை. யாராவது நாலைந்து பேராகச் சேர்ந்து கொண்டு கணம் கணமாகத் துடிக்கத் துடிக்கச் சித்திரவதை செய்து என்னைக் கொல்ல வேண்டும் போல் இப்போது எனக்கே ஆசையாக இருக்கிறது. மந்தமாக நோயாளியைப் போலச் சாவது சோம்பேறித்தனமான சாவு. என்னைப் போல் அப்படி வாழ்ந்தவன் சோம்பேறித்தனமாக இப்படியா சாவது? நீயே சொல் அருவாளா? என்னைச் சித்திரவதை செய்தாலும் என்னுடைய வாய் அலறாது! கண்களில் நீர் நெகிழாது. அப்படி உடம்பையும் மனத்தையும் கல்லாகவும் இரும்பாகவும் நான் பழக்கியிருக்கிறேன். நீயும் உங்கள் உலகமும் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் நான் இப்படி வாழ்ந்தது கூட ஒருவகைத் துறவுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் என்னைப் போலவே இவற்றைத் துறவாக ஒப்புக் கொள்கிறவள் ஒருத்தி இதே சக்கரவாளத்துக் காட்டில் இன்னும் சிறிது தொலைவிலுள்ள வன்னி மன்றத்தில் இருக்கிறாள். சாவதற்கு முன் அவளை நான் ஒருமுறை பார்த்துவிட்டுச் சாக வேண்டும். நீயும் உன் தோழனும் போய் எனக்காக அவளை இங்கே அழைத்து வர முடியுமா? அவள் பெயர் பைரவி. கபாலிகர்களுடைய வன்னி மன்றத்திலே போய் யாரிடம் அவள் பெயரைச் சொல்லிக் கேட்டாலும் தெரியும். எனக்கு ஒரே ஓர் ஆசை. நிராசையோடு நான் சாக விரும்பவில்லை. என்னை இக்கதிக்கு ஆளாக்கியவனைப் பற்றிய எல்லா இரகசியங்களும் எனக்குத் தெரிந்திருப்பது போலவே அந்தக் கபாலிகைக்கும் தெரியும். அந்தக் கொடும்பாவியைப் பழிவாங்கும் பொறுப்பை இன்று அவளிடம் நான் ஒப்படைக்கப் போகிறேன். அந்தப் பொறுப்பை அவள் ஏற்றுக் கொண்டுவிட்டால் பின்பு நான் நிம்மதியாகச் சாகலாம்.”
இவ்வாறு அவர் விடுத்த வேண்டுகோளைப் புறக்கணிக்க முடியாமல் அருவாளனும் அவ னுடைய தோழனும் கபாலிகையாகிய பைரவியை அழைத்துக் கொண்டு வருவதற்காக வன்னிமன்றத்துக்குச் சென்றனர். அவர் பலிபீடத்தில் தலையைச் சாய்த்து உறங்குவது போல் கண்ணை மூடினார். கண்ணை மூடு முன் கடைசியாக அவர் பார்த்த பொருள் காளி கோட்டத்தின் சிதைந்த பழங்கதவாயிருந்தது.
சில கணங்களுக்குப்பின் அரை குறைப் பிரக்ஞையுடனே அவர் மெல்லக் கண் திறந்து பார்த்தபோது சுற்றிலும் ஒரே நரிக் கூட்டமாகத் தெரிந்தது. இறைச்சி தின்று பழகிய சுடுகாட்டு நரிகள் பயங்கரமாக ஊளை யிட்டுக் கொண்டு அவர் கிடந்த பலிபீடத்தைச் சூழ்ந்தன.
அப்போது நகைவேழம்பருடைய மனத்துக்குள்ளே முன்பு கணத்துக்குக் கணம் பொய்யாய் அழிந்து கொண்டிருந்த வாழ்வு இனி நிலையாகவே அழிந்துவிடப் போகிறதென்று வாழ்வைப் பற்றிய அவநம்பிக்கைகளும், மரணத்தைப் பற்றிய நம்பிக்கையும் ஒன்றாகவே சூழ்ந்து கொண்டிருந்தன. நெருங்கி வந்து கொண்டிருக்கும் சாவைத் தைரியமாகவும், உற்சாகமாகவும் வரவேற்க வேண்டும் என்று போலியாக அவர் ஏற்படுத்திக் கொள்ள முயன்ற வைராக்கியம் பயன்படவில்லை.
அவர் சிரிக்க முயன்றார். ஆனால் அழுகை தான் வந்தது. துணிவாக இருக்க முயன்றார். ஆனால் இந்த உலகத்தையும் இதன் நாட்களையும் இனி இழந்து விடப் போகிறோமே என்று தளர்ச்சி தான் பெருகிற்று. சாவின் பயங்கர ஓலம்போல் விகாரமான நரிக் கூப்பாடுகள் அவரைச் சூழ்ந்தன. பெரிய நரி ஒன்று கோரமாக வாய் திறந்து கத்திகளின் நுனிகளை அடுக்கியது போன்ற பல் வரிசை தெரியப் பாய்ந்து வந்து அவரது தொடையில் வாய் வைத்தது. மற்றொரு நரி பலி பீடத்தை ஒட்டினாற் போலத் தாவி அவருடைய தோளில் பற்களைப் பதித்தது. அவர் எந்த வகையான மரணத்துக்கு ஆசைப்பட்டாரோ அதுவே அவருக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது. அவரே அதிலிருந்து தப்பித்துக் கொண்டு ஓட முயன்றாலும் முடியாதபடி சாவின் கரங்கள் அவரை இறுக்கிப் பிடித்து விட்டன. எழுந்து ஓடிவிடலாம் என்றால் முறிந்துபோன காலுக்கு மேலே எழுந்து நிற்கின்ற ஆற்றலும் இல்லை. கூட்டம் கூட்டமாகச் சிறுத்தைப் புலிகளைப் போல் வந்து மேலே பாய்ந்து சதையைக் கவ்விக் குதறும் கொடிய நரிகளை எதிர்த்துப் போராடுகிற வலிமை அவரது கைகளிலும் உடம்பிலும் அப்போது இல்லை.
தனது உடலில் சதையைக் குருதி சிந்தக் கவ்வி இழுத்துக் குதறும் காட்சியைத் தன்னுடைய கண்ணி னாலேயே பார்க்கும் அநுபவம் விசித்திரமாகத்தான் இருந்தது. அதுவே குரூரமாகவும் இருந்தது.
‘என்னை நாலைந்து பேராகச் சூழ்ந்து கொண்டு அணுஅணுவாகச் சித்திரவதை செய்தாலும் என்னுடைய வாய் அலறாது. கண்ணில் நீர் நெகிழாது. அப்படி என் உடம்பையும், மனத்தையும் கல்லாகவும் இரும்பாகவும் நானே பழக்கியிருக்கிறேன்’ என்று தானே சிறிது நேரத்துக்கு முன் அருவாளனிடம் கூறிய சொற்களை இப்போது நினைத்துக் கொண்டு சிரிக்க முயன்றார் அவர். நரிகள் மேலே விழுந்து தாறுமாறாகப் பிடுங்கிய வலியினாலும், வேதனையினாலும் அவருக்குச் சிரிப்பும் வரவில்லை.
‘எப்படி வாழ வேண்டாமோ அப்படி இதுவரை வாழ்ந்துவிட்டேன். அப்படி வாழக்கூடாது என்று தெரிந்திருந்தும் அப்படியே வாழ்ந்தேன். அந்த வாழ்வு இப்போது இப்படி முடிகிறது’ என்று உயிர் வேதனை யோடு உடம்பில் வலி துடிக்கத் துடிக்க அவர் நினைத்த கடைசிக் கணத்தில், சிவந்து போய்த் தனியாய் முகத்துக்கே புண்போல் இருந்த அந்த ஒற்றைக் கண்ணின் மேல் குறிவைத்துப் பாய்ந்தது ஒரு நரி, கண்ணின் பார்வை அவியும்போதே உயிரின் கடைசிப் பார்வையையும் முடித்துவிட விரும்புவதுபோல் அவருடைய குரல் வளையைக் கவ்வியது மற்றொரு நரி! அதற்குப் பின் அந்த முகத்தில் கண்ணே இல்லை, கண்ணிருந்தாலும் பார்ப்பதற்கு உயிருணர்ச்சி இல்லை. அவ்வளவு ஏன்? அந்த உடம்பே முழு உருவமாக இல்லை.
அருவாள மறவனும் அவனுடைய தோழனும் வன்னி மன்றத்துக்குப் போய்க் கபாலிகையாகிய பைரவியை அழைத்துக் கொண்டு காளிகோட்டத்துக்குத் திரும்பி வந்தபோது அங்கே நகைவேழம்பர் என்ற பெயரைத் தாங்கிக் கொண்டிருந்த மனித உடம்பை முழுமையாகக் காண முடியவில்லை. பலிபீடத்தின் மேலும் அதைச் சுற்றிலும் ஒரே நரிக் கூட்டமாகச் சூழ்ந்திருந்தது. அருவாளனும், அவன் தோழனும் பைரவியும் இறைச்சி நெடியிற் கூடியிருந்த அந்த நரிக் கூட்டத்தை அரும்பாடு பட்டு விரட்டிவிட்டுப் பார்த்த போதுகூட அவருடைய உடம்பில் நரிகளுக்குப் பறிகொடுத்து இழந்த பகுதிகளைத் தவிர எஞ்சியவை மட்டுமே கிடைத்தன. அப்படி இழந்து போயிருந்த பகுதிகளில் மிக முதன்மையானது அவருடைய உயிராயிருந்தது.
சொல்ல முடியாத துயரமும் இரக்கமும் வந்து நெஞ்சை அடைக்க அருவாளன் உடைந்து தளர்ந்த குரலில் தன் நண்பனையும் கபாலிகையையும் பார்த்துச் சொன்னான்.
“மனிதர்கள் கெட்டவர்களாக இருக்கலாம். பாவிகளாகவும் பாதகர்களாவும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் உலகத்தில் சாவது பயங்கரமானதுதான். பொதுவாகச் சாவதே பயங்கரமானது என்றால் பயங்கரமாகவே சாவதென்பது எவ்வளவு வேதனையானது? இவர் தமது கடைசி ஆசையையும் நிறைவேற்றிக் கொள்ளாமலே செத்துப்போய் விட்டார். வாழும்போது நகைவேழம்பர் என்ற பெயருக்கேற்ப இவர் முகத்தில் நான் சிரிப்பையே பார்த்ததில்லை. ஆனால் சாவதற்கு முன்போ ‘மரணத்தைக்கூடச் சிரித்தபடியே என்னால் சந்திக்க முடியும்’ என்று என்னிடமே சிரித்துக்கொண்டு சொன்னார் இவர். செத்த பின்போ இவருடைய சாவே இப்படி சிரிப்புக் குரியதாகிவிட்டது.”
“இருக்கலாம்! ஆனால் இவரைப்போல் ஒருவர் துணையாக நின்று உதவியிராவிட்டால் இவர் யாருக்குத் துணை நின்று உதவினாரோ அவருடைய செல்வச் செழிப்பு நிறைந்த பெருவாழ்வே இதற்குள் ஊர் சிரித்துப் போயிருக்கும்” என்றாள் பைரவி. இயல்பாகவே விகாரமாயிருந்த அவள் முகம் இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது இரத்த வெறி கொண்டு குமுறுவது போல் இன்னும் கொடுமையாகத் தோன்றியது. பெருநிதிச் செல்வரைப் பழிவாங்கும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைப்பதற்காகத்தான் உன்னை அவர் இங்கே கூப்பிட்டனுப்பினார் என்னும் உண்மையை அந்தப் பேய் மகளிடம் இப்போது தானே கூறி விடலாமா என்று எண்ணினான் அருவாளன். ஆனால் தானே அதைக் கூறுவது பொருந்தாது என்று நினைத்து உடனே அடக்கிக் கொண்டான். கண்களில் நீர் கலங்க அந்தப் பேய் மகள் காளிகோட்டத்துப் பலிபீடத்தின் அருகே கன்னத்தில் கை ஊன்றி அமர்ந்து விட்ட சமயத்தில் மெல்ல மெல்ல இருள் வெளி வாங்கிக் கிழக்கு வெளுக்கத் தொடங்கியிருந்தது.
தாங்கள் பெருநிதிச் செல்வருக்குக் கொடுத்துவிட்டு வந்திருந்த வாக்கு நினைவு வரவே அருவாளனும், அவன் தோழனும் மெல்ல அங்கிருந்து நழுவினர். காளிகோட்டத்தில் நகைவேழம்பருடைய கோர மரணத்தைக் கண்டுவிட்டுப் பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது அருவாளனுடைய மனம் மிகவும் தளர்ந்து போயிருந்தது. தான் இன்றுவரை வாழ்ந்ததும் இனிமேல் வாழப் போவதுமாகிய வாழ்க்கையின் மேலேயே அவனுக்கு வெறுப்பாயிருந்தது. நகைவேழம்பருடைய சாவை அவர் ஒருவருடைய சொந்த அழிவாக மட்டும் அவனால் நினைக்க முடியவில்லை. அந்த ஒருவருடைய சாவில் தன்னைப் போன்ற பலருடைய நம்பிக்கைகளும் சேர்ந்து செத்து அழிந்திருப்பதாக அவன் எண்ணினான். சாவதற்கு முன்னால் அந்த ஒற்றைக் கண் மனிதர் அவனிடம் பேசிய பேச்சுக்களால் அவனுடைய மனத்தில் பெருநிதிச் செல்வர் மேலேயே வெறுப்பும் அவநம்பிக்கையும் பெருகுமாறு செய்துவிட்டுப் போயிருந்தார். சாவதற்கு முன் அவர் பேசியிருந்த பேச்சுக்கள் இன்னும்கூட அவன் செவிகளில் ஒலிப்பன போலிருந்தன. அவன் நினைக்கலானான்:
‘அந்தச் செல்வருக்கு நான் சோற்றுக்கடன் பட்டிருக்கிறேன், நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இன்று இப்போது என்னுடைய உடலில் இருக்கிற சோற்றுச் செருக்கு அவர் அளித்தது. ஆனாலும் இந்த விநாடியே அவருடைய வழிகளிலிருந்து நான் விலகிவிட வேண்டும் போல் எனக்கு அவர் மேல் வெறுப்பாக இருக்கிறது. அடிமையாக இருந்து அடைகிற சுகம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அது நோய்தான் என்று சாவதற்கு முன் அவர் கூறினாரே! எனக்கும் ஒருநாள் இந்த கதி நேரலாம் என்று கூடச் சொன்னாரே!’ என்று பலவிதமாகச் சிந்தித்துக் கொண்டே சென்றபோது அருவாளனுடைய மனத்தில் பெருநிதிச் செல்வரைப் பற்றிய மதிப்பு சிறிது சிறிதாகத் தேய்ந்து அழிந்து விட்டது. பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகையை அடைகிறவரை அருவாள மறவன் தன் தோழனிடம் அப்போது தன் மனத்தில் கிளர்ந்த எண்ணங்களை உணர்ச்சி வசப்பட்டுப் பேசிக்கொண்டே போனான். அப்படிப் பேசாமல் தனக்குள்ளேயே தன் சிந்தனைகளை அடக்கிக் கொண்டு போவதற்கு அப்போது அவனால் முடியவில்லை.
அருவாளனும் அவன் தோழனும் பெருமாளிகைக்குள் நுழைந்தபோது பூம்புகாரின் கிழக்கு வானத்தில் பகல் பிறந்து கொண்டிருந்தது. விடிய விடியத் தங்களை எதிர்பார்த்து விழித்திருந்த சோர்வைப் பெருநிதிச் செல்வரின் முகத்திலும் சிவந்து போயிருந்த விழிகளிலும் அவர்கள் கண்டார்கள். அப்போதிருந்த மனநிலையில் அருவாளனுக்கு அவர் முகத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை.
‘போன காரியம் என்ன ஆயிற்று?’ என்பதைக் கண் பார்வையில் குறிப்பாலேயே அவர்களிடம் வினவினார் பெருநிதிச் செல்வர். வார்த்தைகளை செலவழிக்காமலே பிறந்த குறிப்புக் கேள்வியாயிருந்தது.
“உங்கள் கவலை தீர்ந்துவிட்டது” என்று அவர் முகத்தைப் பார்க்க விரும்பாதவன் போலத் தரையைப் பார்த்துக் கொண்டே மறுமொழி கூறினான் அருவாளன். அப்போது அவனுடைய சோர்வையும் தளர்ச்சியையும் உற்சாகமின்மையையும் அவரே கண்டு புரிந்துகொண்டு விட்டார்.
“நீயும் உன் தோழனும் நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருந்த படியே காரியத்தை முடித்துக் கொண்டுதான் வெற்றியோடு திரும்ப வந்திருக்கிறீர்கள். அப்படி இருந்தும் உங்கள் இருவர் முகங்களிலும் நான் உற்சாகத்தையோ பெருமையையோ காண முடியவில்லையே? அது ஏன்?”
சிறிது தயங்கியபின் அருவாளன் அவருடைய இந்தக் கேள்விக்கு விடை கூறினான்:
“ஐயா! சில காரியங்களைச் செய்தபின் அப்படிச் செய்ததற்காக எந்த விதத்திலும் பெருமிதப்பட முடிவ தில்லை. மேலும் அந்த மனிதருடைய சாவு இயல்பாகவே நேர்ந்துவிட்டது. நாங்கள் ஏதும் செய்வதற்கு முயலு முன்பே அவர் தாமாகவே அழிந்து போய்விட்டார்” என்று தொடங்கிக் காளிகோட்டத்தில் நடந்தவற்றை எல்லாம் அவரிடம் சொன்னான். அப்படிச் சொல்லிய போது நகைவேழம்பருடைய கடைசி ஆசையையும் அதற்காகத் தாங்களே வன்னி மன்றத்துக்குப் போய்ப் பைரவியை அவரிடத்திற்கு அழைத்துக் கொண்டு வந்ததையும் மட்டும் அவரிடம் கூறாமலே மறைத்து விட்டான் அருவாளன்!
“சிறிது நேரம் இரு, அருவாளா! இதோ வருகிறேன்” என்று கூறி அவர்களை அங்கேயே நிறுத்திவிட்டு உட்பக்கமாகச் சென்றார் பெருநிதிச் செல்வர். அவர் எதற்காக அப்போது உள்ளே செல்கிறார் என்பது அருவாளனுக்கும் ஏறத்தாழ அநுமானமாகத் தெரிந்தது. அவன் தன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டான். இந்த முறை அவரிடம் தான் எதற்காகவும் நன்றிக் கடன் படக்கூடாதென்று தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு அவன் தலை நிமிர்ந்த போது கைநிறையப் பொற் காசுகளோடும் வாய் நிறைய வாணிகச் சிரிப்புடனும் பெருநிதிச் செல்வர் உள்ளேயிருந்து வெளியே வந்து அவனெதிரே நின்று கொண்டிருந்தார்.
“இந்தா, இவற்றைப் பெற்றுக்கொள்..”
அவருடைய கைகள் பொற்காசுகளோடு அவனுக்கு முன் நீண்டன. அவன் அவற்றைப் பெற்றுக் கொள்ளவில்லை. அவர் சிறிதும் எதிர்பாராத வேறு ஒரு காரியத்தை அருவாளன் அப்போது செய்தான்.
“ஐயா! பல ஆண்டுகளுக்கு முன் நீங்கள் என்னுடைய இடுப்புக் கச்சையில் அணிவித்த இந்தக் கொடுவாளை இன்று உங்களிடமே திருப்பி அளித்து விடுகிறேன். இத்தகைய காரியங்களைச் செய்யும் துணிவு நேற்றிலிருந்து என்னைக் கைவிட்டு விட்டது. தயை கூர்ந்து என்னை விட்டுவிடுங்கள். மறுபடியும் உங்களிடம் நன்றிக் கடன் படச் சொல்லாதீர்கள்” என்று கூறியவாறே தன் வாளை உறையிலிருந்து கழற்றி அவர் காலடியில் இட்டான் அருவாளன். தொடர்ந்து அவனுடன் அருகில் நின்ற தோழனின் வாளும் அதே போலக் கழற்றப்பட்டு அவருடைய காலடியில் வந்து விழுந்தது.
இப்படிச் செய்துவிட்டு அருவாளனும் அவன் நண்பனும் கைகட்டிப் பணிவாக அவரெதிரே நின்ற போது அவர் பெருஞ்சீற்றம் கொண்டார். காசுகளைக் கீழே எறிந்துவிட்டுத் தம் ஊன்றுகோலைப் பற்றியது அவர் கை. அவருடைய கால் செருப்பின் கீழ் அவன் எறிந்த வாள் ஓங்கி மிதிபட்டது. அந்த ஊன்றுகோலை ஓசையெழும்படி தரையில் அழுத்தி ஊன்றிக் கொண்டே அருவாளனிடம் சினமாகப் பேசினார் அவர்.
“என்னைப் பற்றி நீ என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நான் விரும்பியபடி நடந்து கொள்ளத் தவறுகிறபோது நீ என் எதிரியாகிறாய் என்பதை மறவாதே...?”
“நாங்கள் யாருக்கும் எதிரியாக விரும்பவில்லை ஐயா? அடிமையாக இருந்துவிடவும் ஆசைப்படவில்லை. எங்களுக்கு விடை கொடுங்கள்” என்று இப்படிச் சொல்லிவிட்டு அருவாளனும், அவன் தோழனும் அவருடைய விடையை எதிர்பாராமலே விரைந்து அங்கிருந்து வெளியேறி விட்டார்கள். இந்தச் செயல் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எதிர்பாராத இந்த அதிர்ச்சியால் விடிந்து பிறந்து கொண்டிருந்த பகற்போதே திடீரென்று இருண்டு போய்விட்டாற் போலிருந்தது பெருநிதிச் செல்வருக்கு. அவருடைய நெஞ்சில் கவலைகள் இன்று மீண்டும் பிறந்தன.
கப்பலில் காலைக் கதிரவனின் பொன்னொளி பாய்ந்து பரவிக் கொண்டிருந்தது. நீலக் கடற்பரப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காலை வெயிலில் மின்னும் பசுமையான தீவுகள் தென்பட்டன. உடலில் அருவி நீர் சிதறிப் பாய்ந்து நீராட்டுவது போல் காற்று சுகமாக வீசிக் கொண்டிருந்தது. அப்போதுதான் துயில் நீங்கியெழுந்த பதுமை தனக்கும் முன்பாகவே எழுந்திருந்து தளத்தில் நின்றுகொண்டு கடலையும் கதிரவன் உதிக்கும் காட்சியையும் கவனித்துக் கொண்டிருந்த தன் கணவனருகே சென்றாள். அவளுடைய கை வளைகளும் கால் சிலம்புகளும் கப்பலின் ஆட்டத்தில் நளினமாய் ஒலித்தன. கிழக்கு வானத்தில் இளஞ் சிவப்பும், கடல் நீரின் நீல நிறமும் வண்ணச் சித்திரங்களாய் ஒன்றுபட்டுக் கலக்கும் அழகில் ஈடுபட்டிருந்த மணிமார்பன் தனக்குப் பின்னால் வளையொலியும், சிலம்பொலியும் மெல்லக் கிளர்ந்து ஒலிக்கக் கேட்டுத் திரும்பினான். பதுமை வந்துகொண்டிருந்தாள். கிழக்கே சூரியன் உதயமாவதைப் பார்ப்பதற்காகச் சந்திரன் உதயமாகி எழுந்து வருவதைப் போலவும் பதுமையின் முகம் அப்போது மிகவும் அழகாயிருந்தது. தன்னுடைய கற்பனையைத் தன் மனைவி பாராட்ட வேண்டும் என்ற ஆவலோடு அவளிடம் பேச்சுக் கொடுத்தான் அவன்.
“இங்கே கதிரவன் உதயமாகும் அழகைப் பார்க்கலாம் என்று நான் எழுந்து வந்து நின்றேன் பதுமை. இப்போது பின் பக்கம் திரும்பிப் பார்த்தால் குளிர் நிலவு பொழியும் கதிர்களோடு சந்திரன் உதயமா யிருக்கிறான்! இது என்ன அதிசயமோ!”
அவன் கூறியது புரியாமல், “எங்கே? எங்கே?” என்று கேட்டு நாற்புறமும் நோக்கி மருண்டாள் பதுமை.
“எங்கேயா? இதோ... இங்கே!” என்று தன் அருகே வந்து நின்ற அவள் முகத்தைத் தொட்டுக் கொண்டே சொல்லிச் சிரித்தான் மணிமார்பன். பதுமை நாணத்தோடு அந்தப் பேச்சை உடனே வேறு கருத்துக்கு மாற்றினாள்.
“இரண்டு மூன்று நாட்களாக எனக்கு நல்ல உறக்கமே இல்லை. உறக்கத்தில் கூட அந்த ஒற்றைக் கண் மனிதரைப் பற்றிய கெட்ட சொப்பனங்கள்தான் காண்கின்றன. அன்றைக்குக் கற்பூர மரக்கலத்தில் தீப்பற்றிய பின் கட்டையைப் பற்றிக்கொண்டு அவர் மிதந்தபோது அவரைப் பார்த்ததனால் வந்த வினை இது. நேற்றிரவு மட்டும் அவரைப் பற்றிய கனவில் ஒரு மாறுதல் எற்பட்டது. அந்த ஒற்றைக் கண் மனிதரைப் பற்றிய கனவில் நேற்றைய அனுபவம் மட்டும் எனக்கு ஒரு புதுமை. காட்டு வழியில் ஓர் இடத்தில் நாலைந்து முரட்டு மனிதர்களாகச் சேர்ந்துகொண்டு அவரை அடித்துக் கொன்று விடுகிறாற் போலக் கனவு கண்டேன்.”
“கனவில் தானே அப்படி நடந்தது? உண்மையாகவே அப்படி நடந்திருந்தால் கூட நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் பதுமை! அப்படி அடிபட்டுச் சாக வேண்டிய பெரிய கொடும்பாவிதான் அவன். ஆயினும் இதற்குள் சாகமாட்டான் அவன். சாவையே ஏமாற்றி அனுப்பிவிடக் கூடிய கொடுந்துணிவும் அவனுக்கு உண்டு. அன்று நீயும் நானும் அவன் கடலில் மிதந்து சீரழிந்ததைப் பார்த்தோம் அல்லவா? அப்படி மிதப்பதும், நீந்துவதும் கூட அவனுக்குத் துன்பமில்லை. அவனும் அவனை வைத்து ஆளும் பெருநிதிச் செல்வரும் தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கடல் பயணத்திலும், கடல் கடந்து வாணிகம் செய்வதிலுமே கழித்தவர்கள். இந்த இரண்டு மூன்று நாட்களாய்க் கப்பல் பயணம் செய்துகொண்டு வருகிற நாமே இத்தனை யோசனை தூரம்தான் கடக்க முடிந்திருக்கிறது. ஆனால் அந்த ஒற்றைக் கண் வேங்கையோ இதற்குள் நீந்தியே பூம்புகாரின் கரைக்குள் போய்ச் சேர்ந்திருக்கும்” என்றான் மணிமார்பன்.
“போதும்! இரையாதீர்கள். அதோ இந்தக் கப்பலின் கோடியில் அவர்கள் ஏதோ ஆழ்ந்த ஈடுபாட்டுடன் தங்களுக்குள் தனியாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாம் இரைவது, அவர்களுடைய பேச்சுக்கு இடையூறாக முடியலாமோ, என்னவோ?” என்று சொல்லிக் கொண்டே தன் மனைவி பதுமை அப்போது சுட்டிக் காண்பித்த பகுதியில் பார்த்த மணிமார்பன் பெரிதும் வியப்பு அடைந்தான்.
குளிர்ந்த காற்று வீசும் இந்த வைகறை வேளையில் இளங்குமரனும் வளநாடுடையாரும் எதைப்பற்றி இவ்வளவு ஈடுபட்டுத் தனிமையில் பேசிக்கொண்டிருக்க முடியும் என்று அவனுக்கே புரிந்துகொள்ள முடியவில்லை.
வீரசோழிய வளநாடுடையாரின் முகபாவத்தி லிருந்து அவர் இளங்குமரனிடம் ஏதோ கடுமையான விஷயத்தை வற்புறுத்திச் சொல்லிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. இளங்குமரனின் முகமோ மலர்ச்சி குன்றாமலே அவர் கூறுவனவற்றைத் தாங்கிக் கொண்டிருக்கும் சாயலைக் காட்டியது. இடையிடையே அவர் கோபமாகக் கூறுவனவற்றைத் தாங்கிக் கொண்டிருக்கும் சாயலைக் காட்டியது. இடையிடையே அவர் கோபமாகக் கூறுவனவற்றைக் கேட்டு அவன் புன்முறுவல் பூப்பதையும் மணிமார்பன் கவனித்தான். தன் ஆவலை அவனால் அடக்கிக் கொள்ள முடியவில்லை. “பதுமை நீ இங்கேயே இரு” என்று கூறிவிட்டு வளநாடுடையாரும் இளங்குமரனும் பேசிக் கொண்டிருந்த பகுதிக்கு மிக அருகில் ஒரு பாய் மரத்தின் மறைவில் போய்த் தனக்கு அவர்கள் தெரியும் படியாகவும் தன்னை அவர்கள் பார்த்துவிட முடியாதபடியும் நின்று கொண்டான் மணிமார்பன். அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை அவன் அங்கிருந்து நன்றாகக் கேட்க முடிந்தது. வளநாடுடையார் ஆத்திரத்தோடு இளங்குமரனைக் கேட்டுக் கொண்டிருந்தார்:
“நீ இவ்வளவு பெரிய கோழையாக மாறியிருப்பாய் என்று நான் கனவில்கூட நினைத்ததில்லை தம்பீ! நீ சென்று கொண்டிருக்கிற கப்பலையே தீக்கிரையாக்கி அழித்து விடும் திட்டத்தோடு வந்து கொடியவர்கள் தீப்பந்தங்களை வீசும்போது நான் அருளாளன் என்னிடம் இதற்கு எதிர்ப்பு இல்லை என்று நீ எனக்கு மறுமொழி கூறுகிறாய். நடந்து மறந்துபோன நிகழ்ச்சியை மறுபடியும் நினைவூட்டிப் பேசுகிறேனே என்று நீ என்மேல் வருத்தப்பட்டுக் கொள்ளக்கூடாது. எதிர்ப்புக்கு முன்னால் துறவியாக நின்றுவிடுவது கருணை மறம் என்று நீ எண்ணிக் கொண்டிருக்கிறாய் போல் தோன்றுகிறது. ஏலாதவர்களிடமும், இயலாதவர்களிடமும் அன்பு செலுத்திக் கருணை காட்டுவதுதான் கருணை மறம். கொடியவர்களை எதிர்க்க வேண்டிய வேளையில் கைகட்டி நிற்பதும் கருணை மறம் காட்டுவதும் உன் ஆண்மைக்கு அழகில்லை...”
“பெரியவரே! நீங்கள் சொல்வதை நான் மறுக்கவில்லை. ஆனால் அறிவினாலும் மனத்தினாலும் வாழ விரும்புகிறவர்கள் உலகில் புதிய ஆண்மை ஒன்றைப் படைத்திருக்கிறார்கள். அதுதான் சான்றாண்மை. சால்பை ஆள்வதுதான் சாற்றாண்மை. சான்றாண்மைக் குணத்தை நம்புகிறவர்கள், எதையும் எதிர்ப்பதை வீரமாகக் கொள்வதில்லை. பொறுத்து நிற்பதைத்தான் வீரமாகக் கொள்கிறார்கள். எதையும் எதிர்த்துக் குமுறி நிற்பதுதான் வீரமென்று நம்பிக் கொண்டு நான் வாழ்ந்த காலமும் உண்டு. அப்போது உடல் வலிமையை மட்டும் நம்புகிற பேராண்மையாளனாக இருந்தேன் நான். இப்போதோ உடல் வலிமையில் பெரிது என்று எண்ணுகிற சான்றாண்மையாளனாக என்னை மாற்றி விட்டார் திருநாங்கூர் அடிகள். இப்படி நான் சான்றாண்மை வீரனாக மாறியதைத் தானே நீங்கள் பெரிய கோழைத்தனம் என்று குறிப்பிடுகிறீர்கள்?” எனச் சிரித்தபடியே இளங்குமரன் அவருக்கு மறுமொழி கூறினான். வளநாடுடையார் மீண்டும் அவனைக் கேட்டார்.
“உடம்பின் வலிமையால் நீ பலரை எதிர்க்க வேண்டிய அவசியம் மறுபடியும் உன் வாழ்வில் எப்போதாவது நேர்ந்தால் நீ என்ன செய்வாய்?”
“அப்படிப்பட்ட துன்பங்களினால் என்னுடைய சான்றாண்மை வலுவடையுமே ஒழியக் குன்றாது. துக்க நிவாரணம் தேடும்போதுதான் மனித மனம் பிரகாசித்து ஒளிரும் என்று நான் நம்புகிறேன், பெரியவரே! சுடச்சுட ஒளிரும் பொன்போல் கோபமூட்டத்தக்க வெம்மையான அனுபவங்களிலும், கவலைப்படத் தகுந்த துக்கங்களிலும் வெதும்பி, வெதும்பி இறுதியில் உணர்ச்சிகளைக் கடந்து போய் நின்று ஒளிர்வதற்குப் பழகிக் கொள்ள வேண்டும் என்று என் ஆசிரியராகிய திருநாங்கூர்த் தவச் செல்வர் எனக்கு அருளுரை கூறியிருக்கிறார். கருணை மறமும்கூட அகங்காரத்துக்கு இடமுண்டாக்கலாம். ‘நாம் நிறையக் கருணை செலுத்துகிறோம்’ என்று நினைத்து அதனாலேயே மனம் வீங்குவதுகூடப் பாவம்தான். கருணை மறவனிலும் மேலே உயர்ந்து சான்றாண்மை மறவனாக எல்லையற்ற நிதானத்தில் போய் நின்றுகொண்டு இந்த உலகத்தைப் பார்த்துச் சிரிக்க வேண்டும்போல் ஆசையாக இருக்கிறது எனக்கு. திருநாங்கூரில் கற்று நிறைந்த பின் பூம்புகாரின் வீதிகளிலும் சமயவாதிகளின் பட்டி மண்டபங்களிலும், இப்போது, உங்களோடு இந்தக் கப்பலிலும் நான் திரிந்து கொண்டிருப்பது கூட உலக அநுபவத்தில் தோய்ந்து தோய்ந்து அதிலிருந்தும் ஞானத்தைக் கற்பதற்காகத்தான். சேற்றில் பிறந்தும் சேறு படாமல் மேலெழுந்து மலர்கிற தாமரையைப் போல் இந்த உலகியல்கள் என்னை மேல் நோக்கி மலர்விக்கத் துணை புரிய வேண்டுமே ஒழியக் கீழே தள்ளி மறுபடியும் அழுக்கில் புரட்டி எடுத்துவிடக் கூடாது.”
இவற்றைச் சொல்லும்பொழுது நேர்கிழக்கே உதித்துக் கொண்டிருந்த சூரியனின் கதிர்கள் எல்லாம் இளங்குமரனின் முகத்தில் பட்டு அந்த அழகிய முகத்தைத் தெய்வீகப் பொற் சுடராக்கின. அந்தக் கணத்தில் அப்படியே கைகூப்பி வணங்கி விடலாம் போலத் தூய்மையாய்த் தெரிந்த அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்த வளநாடுடையாருக்குக் கோபம் வரவில்லை. இனம் புரியாத தயக்கத்தோடு அவர் அவனை நோக்கி மேலும் சிலவற்றை வற்புறுத்திக் கூறினார்.
சான்றாண்மை வீரம் என்று இளங்குமரன் எதைச் சொல்லிப் பெருமைப்பட்டானோ அதை அவனிடமே மீண்டும் மீண்டும் மறுத்துப் பேசினார் வீரசோழிய வளநாடுடையார்:
“தம்பீ! உன்னுடைய சொற்கள் என்னால் மறுக்க முடியாதவையாயிருக்கின்றன. ஆனால் நான் இந்த உலக வாழ்க்கையில் உன்னைவிட மூத்தவன். அதிக அநுபவங்களை உடையவன். நீ உடல் வலிமையைப் பயன்படுத்திப் போரிட வேண்டிய சந்தர்ப்பம் மீண்டும் உன் வாழ்வில் வரலாமென்றே எனக்குத் தோன்றுகிறது.”
இதைக் கேட்டு இளங்குமரன் மறுமொழி கூறாமல் சிரித்தான். அவனுடைய இந்தச் சிரிப்பினால் வளநாடுடையாரின் நெஞ்சில் ஆத்திரம் பொங்குவதை அவருடைய முகமும் கண்களும் காட்டின. மறுபடி அவர் அவனிடம் பேசிய சொற்களிலும் ஆத்திரம்தான் தொனித்தது.
“எனக்கென்ன வந்தது? இந்தத் தள்ளாத வயதில் இப்படியெல்லாம் கடலிலும், கப்பலிலும் உன்னை வற்புறுத்தி அழைத்துக்கொண்டு நான் அலைவதை நீயே விரும்பவில்லையானால் இந்தக் கணமே என் முயற்சி களை நான் கைவிட்டு விடலாம். ஆனால் இப்படிச் செய்வதாக வேறொருவருக்கு வாக்குக் கொடுத்து விட்டதன் காரணமாக இதை நான் செய்தாக வேண்டியிருக்கிறது. நீயோ என் வார்த்தைகளைச் செவியேற்றுக் கொள்ளாமலே என்னைப் பார்த்துச் சிரிக்கிறாய்.”
கேட்கிறவர் பரிதாபம் கொள்ளத்தக்க சொற்களில் அவர் இப்படிக் கூறியபோது இதைக் கேட்ட இளங்குமரனுக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. காரணமின்றி அந்த முதியவருடைய மனத்தைப் புண்படுத்தும் சொற்களைத் தான் பேசி விடலாகாது என்று எண்ணிக் கொண்டே பரிவுடன் அவரருகிற் சென்று மறுமொழி கூறினான் அவன்:
“உங்களோடு பயணம் புறப்பட்டு வந்ததற்காகவோ, அலைவதற்காகவோ நான் வருந்துவதாக நீங்கள் எண்ணிக் கொள்ளக்கூடாது ஐயா! வலிமை என்று நீங்கள் கூறினர்களே, அதைப்பற்றி மட்டும்தான் நான் உங்களோடு கருத்து வேறுபாடு கொண்டு சிரித்தேன். கொன்று குவிப்பதையும் பிறரை அழித்தொழிப்பதையும்தான் வலிமை என்று நீங்கள் கருதிப் பேசியதாகத் தோன்றியது. நான் அவற்றை வலிமையாகக் கருதாததனால் தான் சிரித்தேன். தன் காலடியில் அடைக்கலம் என்று வந்து விழுந்த புறாவைத் துரத்திக் கொண்டு தொடர்ந்த வேடனைத் தன் உடல் வலிமையாலும் ஆட்சியின் படை வலிமையாலும்தானே ஓட ஓட விரட்ட முடியும் என்று தெரிந்திருந்தும், அந்த வேடன் அப்போது எதைத் தன்னுரிமையாக முன் நிறுத்தி வாதிட்டானோ அந்தக் கருத்தின் வலிமையை மறுக்க முடியாமல் உடம்பிலிருந்து சதையை அரிந்து கொடுத்த சிபிச் சக்கரவர்த்தியின் வலிமை மெய்யான வீரம் அல்லவா? போரிடுவதும், எதிர்ப்பதும், அழிப்பதும்தான் மனிதனுடைய வலிமை என்று சொல்லிப் புகழுவீர்களானால் பிறருக்காக உயிரையும் உடம்பையும் அழித்துக் கொள்வதற்குக் கூடத் துணிகிற சிபி போன்றவர்களை இன்னும் அதிகமான ஆற்றலுள்ள வார்த்தையால் அல்லவா புகழ வேண்டும்? நான் அதை எண்ணித்தான் சிரித்தேன்...”
“சிரிப்பாய் தம்பீ! சிரிப்பாய், நீ ஏன் சிரிக்க மாட்டாய்? இப்படிப் பேசுவதைத் தவிர வேறெதையும் திருநாங்கூரில் போய் நீ கற்றுக்கொண்டு வரவில்லை போலிருக்கிறது? நல்ல பிள்ளையாயிருந்து என் சொற்படி கேட்டு இரண்டு மூன்றாண்டுகளுக்கு முன்னால் உன்னை நான் திருநாங்கூரில் வந்து முதல் முறை அழைத்தபோதே என்னோடு இந்தத் தீவுக்குப் புறப்பட்டு வந்திருந்தால் உன்னுடைய வாழ்க்கையில் இதற்குள் எவ்வளவோ நல்ல மாறுதல்கள் எல்லாம் ஏற்பட்டிருக்கும்”
“என்னென்ன நல்ல மாறுதல்கள் எல்லாம் ஏற்பட வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேனோ, அவையெல்லாம் என் வாழ்வில் இப்போதே நிறைந்த அளவில் ஏற்பட்டு விட்டன ஐயா! என் மனம் நிறைய எல்லையற்ற கருணை எப்போதும் பெருகி நிற்கும்படி நான் வாழ வேண்டும். அந்தக் கருணைதான் வீரம் என்று எனக்குத் தோன்றுகிறது. அறிவின் முடிந்த பயன் எல்லா உயிர்களையும் சமமாகப் பாவித்துக் கொண்டு எல்லா உயிர்களுக்கும் எப்போதும் எங்கும் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என்று நினைப்பதுதான். அவ்வாறு நினைக்கும் வலிமைதான் இப்போது என்னிடம் மீதமிருக்கிறது. மற்ற வலிமைகளை எல்லாம் ‘இவற்றை இனி இழந்துவிடத் தான் வேண்டும்’ என்று திட்டமிட்டுக் கொண்டு இழந்தாற்போல நானே படிப்படியாய் இழந்துவிட்டேன். இப்படி அவற்றையெல்லாம் இழந்து விட்டு வெறும் கருணை மறவனாக நிற்கும் என்னிடம் வந்து, ‘மறுபடி உடல் வலிமையைக் காட்டிப் போரிட வேண்டிய காலம் உன்வாழ்வில் வரலாம்’ - என்று நீங்கள் கூறிய வார்த்தைகளே எனக்குச் சிரிப்பு மூட்டின.”
இவ்வாறு இளங்குமரன் வளநாடுடையாருக்கு மறுமொழி கூறிக்கொண்டிருந்தபோது கப்பல் தலைவனு டைய எச்சரிக்கைக் குரல் குறுக்கிட்டுப் பெரிதாக ஒலித்தது. அலைகளின் நெருக்கமும் குமுறுலும் அதிகமாயிருப்பதனால் எல்லாரும் கீழ்த்தளத்துக்கு வந்து பாதுகாப்பாயிருக்க வேண்டுமென்று கப்பல் தலைவன் உரத்த குரலில் கட்டளையிட்டான். குடை சுற்றி ஆடுவதுபோல் மரக்கலம் இரண்டு பக்கமும் சாய்ந்து சாய்ந்து நிமிரத் தொடங்கியிருந்தது. கப்பல் தலைவன் அவர்களருகே வந்து மேலும் விளக்கமாகக் கூறினான்:
“ஐயா! இந்த இடத்திலிருந்து இன்னும் சிறிது தொலைவுவரை இது ஒரு பெரிய நீர்ச்சந்தி. நாக நாட்டுப் பெருந்தீவின் ஆட்சிக்கு அடங்கிய ஏழு சிறு தீவுகளை ஊடறுத்துக் கொண்டு கடல் ஒன்று சேருகிற இடம் இது. ஏழாற்றுப் பிரிவு என்றும் ஏமாற்றுக் கடவு என்றும் சொல்லிச் சொல்லிக் கப்பல்காரர்கள் பயந்து கொண்டே பயணம் செய்து கடக்க வேண்டிய பகுதியில் இப்போது நாமும் நுழைந்துவிட்டோம். மிகவும் கவன மாக இந்த ஏழாற்றுத் துறையைக் கடந்துவிட்டால் நாக நாட்டுப் பெருந்தீவகத்தின் நுனியை அடையலாம். பெருந்தீவகத்தின் நுனியில் மேற்குக் கரையைச் சார்ந்த சங்குவேலி என்னும் அழகிய துறைமுகத்தில் இறங்கி மிக அருகிலுள்ள மணிநாகபுரத்தில் சில நாழிகை தங்குவது புத்த பூர்ணிமைக்கு யாத்திரை செய்பவர்கள் எல்லாரும் அனுசரிக்க வேண்டிய வழக்கம் ஆகும்.
“மணிநாகபுரம்* நாகநாட்டுத் தலைநகர். அது இரத்தினங்களும் முத்துக்களும், மணிகளும் நிறைந்து செல்வ வளம் கொழிக்கும் நகரம். நாகர்கள் வழிபாடு செய்யும் இரத்தின மயமான நாகதெய்வக் கோட்டம் ஒன்றும் அந்த நகரத்தின் நடுவே உண்டு. அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகிய மணிபீடமாக அதைச் சொல்லுவார்கள். மணிநாகபுரத்தின் மேற்குக் கரை மிகவும் அழகானது. கரைநெடுகிலும் வேலியிட்டாற் போல் சங்குகளும், பவழக் கொடிகளும் ஒதுக்கப்பட்டுக் கிடப்பது கண்கொள்ளாக் காட்சியாயிருப்பதை நீங்களே காண்பீர்கள். சங்குவேலி என்று அந்தத் துறைக்குப் பெயர் வாய்த்த காரணமே இதுதான். இங்குள்ள ஆரவாரமான கடல் நிலையும் அலைகளின் மிகுதியும்தான் அந்தக் கரையில் வேலியிட்டாற் போலச் சங்குகள் ஒதுங்கக் காரணம் என்று சொல்லுகிறார்கள். சங்குவேலியிலிருந்து பிற்பகலில் புறப்பட்டால் அதே கரையை ஒட்டினாற்போல நாலைந்து நாழிகைப் பயணத்துக்குள் மணிபல்லவத் தீவை அடைந்து விடலாம். பெருந்தீவகத்தி லிருந்து சற்றே பிரிந்து கடலில் மிதக்கும் அழகிய பசுந்தளிர்போல் மணிபல்லவத்தீவு தெரியும். நாளைக்குப் பொழுது புலர்ந்ததும் புத்த பூர்ணிமையாயிருப்பதால் இன்று மாலை நாம் போய்ச் சேரும்போது அந்தத் தீவு கோலாகலமாயிருக்கும்” என்று அந்த இடத்தின் அழகுகளைத் தான் சொல்லி வருணித்துக் கொண்டிருந்த திறமையால், மரக்கலம் அப்போது கடந்து சென்று கொண்டிருந்த ஏழாற்றுப் பிரிவின் பயங்கரத்தில் அவர்கள் கவனம் செல்லாமல் காத்தான் கப்பல் தலைவன்.
*ஆதாரம்: யாழ்ப்பாணச் சரித்திரம், யாழ்ப்பான வைபவ விமரிசனம், மகாவமிசம்.
“புத்த பூர்ணிமைக்காகப் பூம்புகாரிலிருந்து முன்பே புறப்பட்டிருக்கும் கப்பல்களைக் கூடச் சங்குவேலியில் நாம் சந்திக்கலாம் அல்லவா?” என்று இளங்குமரன் கப்பல் தலைவனைக் கேட்டான்.
“மணிநாகபுரம் நாகநாட்டுத் தீவகத்தின் பெரிய பட்டினம். மரபுக்காக, அந்தத் தீவில் கப்பலை நிறுத்தி இறங்காதவர்கள் கூட அந்த நகரத்தின் அழகைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்றாவது சில நாழிகை அங்கு இறங்கித் தங்குவார்கள். அதனால் நீங்கள் பல நாட்டு மரக்கலங்களையும் மக்களையும் சங்குவேலியிலும் மணி நாகபுரத்து வீதிகளிலும் சந்திக்க முடியும். மணிபீடத்தை வணங்குவதற்காகச் சிலரும், ஏமாற்றுப் பிரிவைத் துன்பமின்றிக் கடந்ததற்காக நாகர் கோட்டத்தில் வழிபாடியற்றி வணங்குவதற்குச் சிலரும், நாகர்களின் இரத்தின மயமான பட்டினத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காகச் சிலருமாக அங்கே எல்லாவிதமான நோக்கங் களையுடைய எல்லாரும் இறங்கி விட்டுத்தான் அப்புறம் புத்த பூர்ணிமைக்காகப் போவார்கள்” என்று கப்பல் தலைவன் தனக்கு மறுமொழி கூறியதைக் கேட்டபின் விசாகையையும் அவளோடு காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கும் இந்திர விகாரத்து துறவிகளையும் மணிநாகபுரத்தில் தான் சந்திக்கலாம் என்ற நம்பிக்கை இளங்குமரனுக்கு ஏற்பட்டது.
கப்பல் தலைவனுடைய எச்சரிக்கையின் காரணமாக ஏழாற்றுப் பிரிவைக் கடக்கும்போது எல்லாரும் ஒன்று சேர்ந்து நடுத்தளத்தில் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்த மணிமார்பனும் பதுமையும் மணிநாகபுரத்தின் அழகுகளைப் பற்றிக் கப்பல் தலைவன் கூறியவற்றைக் கேட்டபின் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்து மெல்லச் சிரித்துக் கொண்டனர். பதுமை தன் கணவன் காதருகில் வந்து குறும்புத்தனமான பேச்சு ஒன்றைத் தொடங்கினாள்: “அன்பரே! இந்த மணிநாகபுரத்தில் பெண்கள் எல்லோரும் பேரழகிகளாக இருப்பார்களாம். மகாபாரதத்தில் அருச்சுனன் இந்தத் தீவுக்கு வந்தபோது சித்தித்ராங்கதை என்ற நாகநாட்டுப் பேரழகியின் எழிலில் மயங்கி அவளை மணந்து கொண்டு விட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன் நான். இங்கே இரத்தினங்களுக்கு அடுத்தபடி மதிப்புள்ளவர்கள் அழகிய பெண்கள்தானாம். எனக்கு உங்கள்மேல் கோபம் வராமலிருக்க வேண்டுமானால் தயைகூர்ந்து இந்த மணிநாக்புரத்தில் இறங்கிச் சுற்றிப் பார்த்துவிட்டுக் கரை ஏறுகிறவரை நீங்கள் உங்களுடைய ஓவியக் கண்களை மூடிக்கொண்டிருக்க வேண்டும். இல்லா விட்டால் நீங்களும்கூட அருச்சுனனாகி விடுவீர்கள்...”
“கவலைப்படாதே பதுமை! உன்னைவிடப் பேரழகி இந்த உலகத்திலேயே கிடையாது என்று நான் என் மனத்தில் முடிபோட்டுக் கொண்டாகிவிட்டது. அப்படி எல்லாம் ஒன்றும் இனிமேல் நேர்ந்துவிடாது. ஆனால் நான் ஓர் ஓவியன் என்ற முறையில் உலகத்து அழகுகளைப் பார்க்கும் உரிமையை நீ என்னிடமிருந்து பறிக்கலாகாது” என்று சிரித்துக்கொண்டே சொன்னான் மணிமார்பன்.
“பார்த்தாலே மனம் பறிகொடுக்காமல் இருக்க முடியாதாம். நாக நங்கையர்கள் அப்படிப்பட்ட அழகுடையவர்களாம்.”
“பூம்புகாரின் அரச மரபினர். பலமுறை இந்தத் தீவுக்கு வந்து திரும்பும் போதெல்லாம் நீ கூறுகிற நிலைக்கு ஆளாகி மனம் பறிக்கொடுத்திருப்பதாகக் கதை கதையாகச் சொல்லுவார்கள் பதுமை! ஆனால் நான் வெறும் ஓவியன்தான். எந்த அரச மரபையும் சேர்ந்தவன் இல்லை...”
“இருப்பினும் ஆசைகள் எல்லோருக்கும் உண்டே ஐயா?”
“இதோ இவரைத் தவிர” என்று சொல்லியபடியே மணிமார்பன் யாரும் பார்த்துவிடாமல் தன் மனைவிக்கு இளங்குமரனைச் சுட்டிக் காட்டினான். பதுமை சிரித்துக் கொண்டே மேலும் கூறினாள்:
“மணிநாகபுரத்திலிருந்து வெளியேறுகிறவரை இந்த ஏழாற்றுப் பிரிவில் கப்பல் பயந்து கொண்டே போவதைப் போல் உங்கள் மனத்தையும் கண்களையும் நீங்கள் இங்கே கவிழ்ந்து விடாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.”
“என் மனமாகிய கப்பலைச் செலுத்தும் தலைவியாக நீதான் இருக்கிறாயே?” என்று சொல்லிச் சிரித்தான் ஓவியன்.
பயப்பட்டதற்கு ஏற்ப எந்தத் தீய விளைவும் இல்லாமலே மெல்ல மெல்ல ஏழாற்றுப் பிரிவின் ஆரவாரம் மிக்க கடற்பகுதியைக் கடந்து முன்னேறியிருந்தார்கள் அவர்கள். தூரத்தில் நேர் எதிரே மரகதப் பசுமை மின்னிடத் தெரிந்த தீவை எல்லாருக்கும் சுட்டிக் காண்பித்தான் கப்பல் தலைவன்.
“அதோ பாருங்கள்! எவ்வளவு ஆனந்தமான காட்சி! சங்குவேலித் துறையும் அப்பால் மணிநாகபுரமும் தெரிகின்றன! துறையை நோக்கிச் சாரி சாரியாகக் கப்பல்களும் படகுகளும் நெருங்கும் காட்சி கடற்பரப்பில் வியூகம் வகுத்தாற் போலத் தோன்றுகிறதே!” என்று வியந்து கூறியபடியே அவன் காண்பித்த காட்சியை எல்லாரும் கண்டார்கள். அந்தக் காட்சியைக் கண்டபின் இளங்குமரன் கண்களை மூடிக்கொண்டு சிந்தனையை உள்முகமாகத் திருப்பித் தியானத்தில் மூழ்கினான்.
‘இவ்வளவு அழகான கடலும் அதனிடையே இத்துணை வனப்பு வாய்ந்த தீவும் தோன்றக் காரணமா யிருந்த முழுமுதற் பேரழகு எதுவோ அதை என் நெஞ்சும் உணர்வுகளும் இந்தக் கணமே வணங்கு கின்றன’ என்று தூய்மையான அழகுணர்ச்சியில் தோய்ந்து நின்றான் அவன். தொடுவானமாகத் தொலைவில் தெரிந்த கடலும் தீயும் ஆகாயமும் சந்திக்கிற கோட்டில் மயில் கழுத்து நிறம்போலத் தெரிந்த எழுதாத வண்ணத்தை மூடிய கண்களுடனேயே தன் நினைவுக்குக் கொணர்ந்து தந்து கொண்டு எண்ணத்தில் ஆழ்ந்தான் அவன்.
அவனிடம் சற்று முன் பேச்சில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக விலகியிருந்த வளநாடுடையார் இப்போது மீண்டும் அவன் அருகே வந்தார். அவனோடு ஏதோ பேசுவதற்கு நிற்கிறவர் போல் தயங்கிக் காத்து நின்றார். இளங்குமரன் கண்கள் திறந்து பார்த்ததும் அவர் அங்கு வந்து நிற்பதையும் நிற்கும் நோக்கத்தையும் புரிந்து கொண்டான்.
“தம்பீ! இப்போதாவது என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாமல் நான் சொல்வதைக் கவனமாகக் கேள். வீரம் என்பது உடம்பின் வலிமையாகிய ஆற்றலா, மனத்தின் வலிமையாகிய கருணையா என்பதைப் பற்றி இப்போது நான் உன்னிடம் வாதிட வரவில்லை. அதைப்பற்றி நாம் இதுவரை பேசியவற்றைக் கூட நீ இந்தக் கணத்திலேயே மறந்துவிடலாம். இப்போது நான் சொல்லப் போவது இங்கே பயணம் செய்து வந்ததன் அவசியத்தைப் பற்றியே ஆகும். பூம்புகார்த் துறையிலிருந்து நாம் புறப்படுவதற்கு முன் நீலநாக மறவர் உன்னிடம் கூறியவற்றை இப்போது மீண்டும் நினைவூட்டிக் கொள்.
‘இந்தப் பயணத்தினால் உனக்கு நிறைய நன்மையிருக்கிறது. நீ ஆலமுற்றத்தில் உடம்பின் வலிமையைக் கற்றுத் தெரிந்து கொண்டாய். திருநாங்கூரில் அறிவின் வலிமையைக் கற்றுத் தெரிந்துகொண்டாய். இப்போது மணிபல்லவத்தில் போய் உன்னைத் தெரிந்துகொண்டு வா’ - என்று அவர் கூறியதை நீ என்னவென்று புரிந்து கொண்டாய்?” என்று வளநாடுடையார் தன்னைக் கேட்டபோது அவருக்கு என்ன மாற்றம் கூறுவது என்று சிந்தித்துச் சிறிது நேரம் தயங்கினான் இளங்குமரன். பின்பு அவருக்கு மறுமொழி கூறலானான்:
“எல்லாரும் அந்த வார்த்தைகளிலிருந்து என்ன புரிந்துகொள்ள முடியுமோ அதைத்தான் நானும் புரிந்து கொண்டேன். பொதுவாக மணிபல்லவத்துக்குப் போகிறவர்களுக்குப் பழம் பிறவியைப் பற்றிய ஞானம் உண்டாகும் என்று பூம்புகாரில் நீண்ட காலமாக ஒரு புனித நம்பிக்கை இருந்து வருகிறது. இதை நினைவில் வைத்துக் கொண்டுதான் அவரும் என்னை அப்படி வாழ்த்தி வழியனுப்பியிருக்க வேண்டும் என்று நான் எண்ணினேன். என்னுடைய வாழ்வில் இதுவரை ஏற்பட்டிருக்கிற ஒவ்வொரு பெரிய மாறுதலும் பூம்புகாரில் ஏதாவதொரு இந்திரவிழாத் தொடங்கும் போதாவது முடிந்த உடனேயாவது நேர்ந்திருக்கிறது. இந்த யாத்திரையிலும் அப்படி ஏதேனும் நேரலாமென்றுதான் புறப்பட்டபோது என் மனத்தில் அவதி ஞானமாக ஓர் உணர்வு பிறந்தது. அந்த ஒரு கணம் மட்டும்தான் அதைப்பற்றி நான் நினைத்தேன். அப்புறம் இப்போது மறந்துவிட்டேன். எது நேர்ந்தாலும் தாங்கிக் கொண்டு அந்த அநுபவத்தினாலும் வளர்ந்து நிற்க வேண்டும் என்று உறுதி செய்துகொண்டு விட்டேன். மணிபல்லவத்துக்குப் பயணம் புறப்பட வேண்டும் என்று நீங்கள் ஆலமுற்றத்தில் வந்து என்னை அழைத்த போதுகூட நான் அப்படி நினைத்துக் கொண்டுதான் புறப்பட்டேன்.”
இப்படி இந்த வார்த்தைகளை வெகு நிதானமாகத் தன்னிடம் பேசிவிட்டு நின்ற இளங்குமரனைப் பார்த்து அவனுக்கு அப்போது தான் சொல்லியாக வேண்டிய ஓர் உண்மையை எப்படித் தொடங்கி எந்த விதமாகச் சொல்லி முடிப்பதென்று மலைத்துத் தயங்கினார் வளநாடுடையார். அவர் சொல்ல வேண்டிய விஷயத்துக்கு அவருக்கே தொடங்கும் விதமும், முடிக்கும் விதமும் புலப்படவில்லை.
இளங்குமரனுக்கு முன் அவர் இவ்வாறு தயங்கி நின்றிருந்த போது கரை நெருங்கியிருந்தது. கப்பல் தலைவனும் ஊழியர்களும் மரக்கலத்தைக் கரை சேர்த்து நிறுத்தி நங்கூரம் பாய்ச்சுவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். மணிமார்பனும் அவர்களுக்கு உதவியாகச் சென்றிருந்தான். அவன் மனைவி பதுமை கப்பல் தளத்தின் ஒரு பகுதியில் நின்று மணிநாகபுரத்தின் மாடமாளிகை களையும் அவற்றின் மேற்பகுதிகளில் தெரிந்த படநாகக் கொடிகளையும், வரிசையாய்ச் சங்கு ஒதுங்கிய கரையையும் பார்த்து வியந்து கொண்டிருந்தாள். கரையருகே ஆழம் குறைவாயிருந்ததினால் சிறிது தொலைவிலேயே கப்பலை நிறுத்த வேண்டியிருந்தது.
இந்த நிலையில் வளநாடுடையாருக்கும் இளங்குமரனுக்கும் கப்பல் தளத்தில் போதுமான தனிமை வாய்த்திருந்தது. நாகநாட்டுப் பெருந்தீவில் இறங்கிக் கரை சேருவதற்கு முன்பே தனது நினைவிலிருப்பதை அந்தப் பிள்ளையாண்டானிடம் சொல்லத் தொடங்கிவிட் வேண்டுமென்று தவித்தார் அவர். அவருடைய மனமோ நினைவில் மூடுண்டு கிடக்கும் அந்த இரகசியத்தை உடனே அவனிடம் சொல்லிவிடப் பறந்தது. அப்படி உடனே சொல்லிவிடுவதும் பொருத்தமானதாக அமையாதென்று மெதுவாக அந்த விநாடியில் எப்படித் தொடங்க வேண்டுமென்று தோன்றியதோ அப்படியே தொடங்கிச் சொல்லலானார் அவர்:
“தம்பீ! நீ பூம்புகாரிலிருந்து திருநாங்கூருக்குப் புறப்படுவதற்கு முன்பு நிகழ்ந்த பழைய இந்திர விழாவை உனக்கு நினைவிருக்கிறதல்லவா? அந்த இந்திர விழாவிற்கு முதல் நாள் பின்னிரவில்தான் சம்பாபதி வனத்தில் அடிபட்டுக் கிடந்த அருட்செல்வ முனிவரை நீ எங்கள் வீட்டுக்குத் தூக்கிவந்து தங்கச் செய்து காப்பாற்றினாய். அன்றைக்கு ஒருநாள் காலையில் உன்னை என் மகள் முல்லையோடு பூத சதுக்கத்துக்குத் துணையாக அனுப்பிய பின்பு புறவீதியில் என் இல்லத்தில் நானும் உன்னை வளர்த்து ஆளாக்கிய அருட்செல்வ முனிவரும் தனியாக இருந்தோம். அப்படி தனியாயிருந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு அன்று நான் அவரிடம் அந்தரங்கமாக ஒரு கேள்வி கேட்டேன். அது வேறு எந்தக் கேள்வியுமில்லை. உன்னைப் பற்றிய கேள்விதான்.
‘துறவிகளுக்கு ஒளிவு மறைவு கூடாதென்பார்கள். நீங்களோ மிகமிகப் பெரிய செய்திகளையெல்லாம் ஒளித்து மறைத்துக் காப்பாற்றி வருகிறீர்கள், இன்று வரை நீங்கள் வளர்த்து ஆளாக்கிய இந்தப் பிள்ளை இளங்குமரனுடைய பிறப்பு வளர்ப்பைப்பற்றி என்னிடம் ஒன்றும் சொல்லாமல் ஏமாற்றிக் கொண்டே வருகிறீர்களே?’ - என்று கேட்டேன். ‘என் இதயத்துக்குள்ளேயே நான் இப்போது இரண்டாவது முறையாக எண்ணிப் பார்ப்பதற்குக்கூட பயப்படுகிற செய்திகளை உங்களிடம் எப்படிச் சொல்ல முடியும்’ என்று அருட்செல்வ முனிவர் அன்று எனக்கு மறுமொழி கூறினார். நான் மேலும் தூண்டிக் கேட்டபோது அந்த உண்மைகளையெல்லாம் இப்போது வெளியிடுவதனால் இளங்குமரனுக்குப் பகைவர்களை அதிகமாக உண்டாக்க நேரிடும் என்று மறுத்துவிட்டார்.”
வளநாடுடையார் இவ்வளவில் பேச்சை நிறுத்தி விட்டு இளங்குமரனுடைய முகத்தைக் கூர்ந்து கவனித்தார். அருட்செல்வ முனிவருடைய ஞாபகத்தினால் அவன் கலங்கித் தலைசாய்த்து நின்று கொண்டிருந்தான். நாத் தழுதழுத்து நெகிழ்ந்த குரலில் குனிந்து தலை நிமிராமலே அவன் வளநாடுடையாரிடம் சொன்னான்.
“ஐயா! அந்த முனிவர் என்னுடைய தெய்வம். என்னை வளர்த்து ஆளாக்கியதற்காக நான் அவருக்கு எவ்வளவோ நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவருடைய முதுமையில் அவருக்கு நிறையப் பணிவிடைகள் புரிந்து அந்த நன்றிக் கடனையெல்லாம் தீர்த்துக் கொள்ள எண்ணியிருந்தேன். ஆனால் எப்படியோ முடிந்துவிட்டது அவர் வாழ்க்கை. உங்களிடம் அந்தப் பழைய இந்திரவிழாவின் இரண்டாம் நாள் பகலில் என்ன மறுமொழி சொல்லியிருந்தாரோ அதையேதான் அதற்கு முந்திய நாள் இரவு அவர் எனக்கும் சொல்லியிருந்தார். என் தாயைப் பற்றி நான் அவரிடம் கேட்ட போதெல்லாம் அவர் எனக்குப் புதிராகவே இருந்தார். இறுதியாக அந்த ஆண்டு இந்திரவிழா இரவின்போது நான் அறிய விரும்பியதை எனக்குக் கூறுவதற்காக நள்ளிரவில் சம்பாபதி வனத்து நாவல் மரத்தடிக்கு என்னை வரச் சொல்லியிருந்தார். அங்கே போய்ச் சேர்ந்தபோதுதான் அன்று எனக்கும் அவருக்கும் அப்படி பயங்கர அநுபவங்கள் ஏற்பட்டன. அப்புறம் அவரும் தம் தவச்சாலை தீப்பட்டதனால் மாண்டு போய்விட்டார். கடைசி கடைசியாக நானும் இந்தப் பூமியையே என் தாயாகவும், வானத்தையே தந்தையாகவும் நினைத்துக்கொண்டு மன அமைதி அடைந்துவிட்டேன்” என்று இளங்குமரன் கூறினான். இதற்குள் கப்பலை நங்கூரம் பாய்ச்சியிருந்தார்கள். படகுகளில் இறங்கிக் கரையை அடைய வேண்டு மென்றான் தலைவன். மற்றவர்களையெல்லாம் வேறு படகுகளில் அனுப்பிவிட்டு இளங்குமரனை மட்டும் தனியாக ஒரு படகில் அமரச் செய்து கரைக்கு அழைத்துக் கொண்டு போனார் வளநாடுடையார். படகில் போகும்போது இளங்குமரன் ஆவலோடு எதிர்பார்த்த வேறு ஒரு சந்திப்பும் அவனுக்குக் கரையிலிருந்து கிடைத்துவிட்டது. கரையில் வரைவரையாய்க் குவிந்திருந்த சங்குக் குவியல்களுக்கு அப்பால் விசாகையும் கூட்டத்தினிடையே நின்றிருப்பதை அவன் பார்த்து விட்டான்.
நாக நாட்டுப் பெருந்தீவுக்கு முதல் முனையாகிய மணிநாகபுரத்துத் துறையில் இளங்குமரன் இறங்கி நின்றபோது சிறிது தொலைவில் நின்ற விசாகை அவனருகே வந்து நலம் விசாரித்தாள். அவன் மணிநாகபுரத்து மண்ணில் நின்ற வேளை அவனுடைய வாழ்வில் மிக நல்ல வேளை என்று அவனிடம் அந்தக் கடலே குறிப்பாய் சொல்வதுபோல் புரண்டு வந்த அலையொன்று நாலைந்து பொன்னிறச் சங்குகளை அவன் பாதங்களில் கொணர்ந்து இடுவதென ஒதுக்கியது.
“தம்பீ! இந்த மண்ணில் இறங்கியபின் இழந்துவிட்ட நம்பிக்கைகளையெல்லாம் நீ அடையப் போகிறாய். மணி பீடகமும், புத்த பீடிகையும், பழம் பிறவி ஞானத்தைத் தரும் என்கிறார்கள். உனக்கோ இந்தப் பிறவியைப் பற்றிய ஞானமே இந்தத் தீவிலிருந்துதான் கிடைக்கப் போகிறது” என்று வளநாடுடையார் அவன் காதருகே வந்து ஆவலோடு கூறினார்.
“கடற்கரையில் நிற்கிறபோது காலடியில் தானாகவே சங்கு வந்து ஒதுங்குவது மிகப் பெரிய நற்சகுனம் எனச் சொல்வார்கள்” என்றான் ஓவியன் மணிமார்பன். இளங்குமரனுடைய மனம் அந்த மண்ணில் நின்றபோது எதற்காகவோ ஏங்கியது. எதற்காகவோ நெகிழ்ந்தது. எந்த நிறைவையோ எதிர்பார்த்துக் குறைபட்டு நின்றது. அவன் தன் கண்களை மலர விழித்து நிமிர்ந்து பார்த்தான். மறுபடியும் ஒரு பெரிய அலை கடற்கரையோரத்துச் செடியிலிருந்தோ மரத்திலிருந்தோ உதிர்ந்த செந்நிறப் பூங்கொத்து ஒன்றையும் நாலைந்து முத்துச் சிப்பிகளையும் அவன் பாதங்களில் கொணர்ந்து குவித்தது. ‘நிறைக நிறைக’ என்று விசாகை அப்போது அவனை மனம் நிறைய வாழ்த்தினாள்.
நான்காம் பருவம் முற்றும்
திரு என்ற சொல்லுக்குக் ‘கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம்’ என்ற பொருள் விரிவு கூறியிருக்கிறார்கள் உரையாசிரியர்கள். தத்துவ ஞானிகளோ இன்னும் ஒரு படி மேலே போய், பொருள் உடைமையும் பொருள் சேர்த்து நுகர்வதுவும் திரு அல்ல, அழகு கருணை முதலிய உயர் குணங்கள் இடையறாமல் எண்ணங்களில் நிறைந்திருக்கும் மன நிகழ்ச்சி தான் திரு என்று பொன்னும் பொருளும் சேர்வதைத் திருவாகக் கருதாமல், நிறைந்த மனத்தையே திருவாகக் கூறினார்கள். பெரியவர்களும் அரியவர்களும் கண்ட இந்த நிறை வாழ்வைத் தான் இளங்குமரன் இறுதியாக அடைகிறான். மங்கலமான நற்குணங்களையே நிதியாகக் கொண்டு நிற்கும் போது வாழ்வில் தனக்கு வரும் சோதனைகளை வெல்ல வேண்டிய அவசியமும் அவனுக்கு ஏற்படுகிறது. கொலை என்பது பிறருடைய உயிரையோ, உடல் உறுப்புக்களையோ கொல்வது மட்டுமல்ல, பிறர் அறிவையும் புகழ் முதலாயினவற்றையும் கொன்றுரைப்பது கூடக் கொலை தான் என்றெண்ணிச் சொல்லிலும், நினைப்பிலும் செயலிலும் சான்றாண்மை காத்து வந்த இளங்குமரன் அவற்றைக் கைவிட வேண்டிய சோதனைகளை யெல்லாம் சந்திக்க நேரிடுகிறது. செல்வம் என்பது சிந்தையின் நிறைவே என்று எண்ணி எண்ணி அந்த எண்ணமே செல்வமாகி நிற்கத் தொடங்கி விட்ட அவன் மனத்திலும் உலகியல் வாழ்வின் சலனங்கள் குறுக்கிடுகின்றன. அறிவின் வலிமையாலும் சேர்த்து வைத்துக் கொண்ட தத்துவ குணங்களின் நிதியாலும் அந்தச் சலனங்களையும் வென்று நிற்கிறான் அவன்.
தன்னுடைய காலடியில் வந்து ஒதுங்கிய சங்குகளையும் பூங்கொத்துக்களையும் குறிப்பிட்டு வளநாடுடையாரும், ஓவியன் மணிமார்பனும், விசாகையும், மணிநாகபுரத்து மண்ணின் பெருமையைச் சொல்லி மங்கல வாழ்த்துக் கூறிய போதும் அவனுடைய உணர்வுகள் தன் வாழ்வில் ஏதோ சில புதிய அநுபவங்களை எதிர் பார்த்தனவேயன்றி எந்த விதமான செருக்கும் அடையவில்லை. பிறருடைய வாழ்த்தும், புகழ் வார்த்தைகளும் தன் மனத்தைக் கிளர்ச்சி கொள்ளச் செய்ய முடிந்த அளவு தனது எண்ணங்களையோ, நம்பிக்கைகளையோ மலிவாக வைத்துக் கொண்டிருக்கும் பலவீனமான வேளைகள் தன் வாழ்வில் வரலாகாது என்று அவன் உறுதியாயிருந்தான். உலகத்தில் தூய்மையான புகழ் என அவன் நம்பியது, ‘நான் பழி வருவன எவற்றையும் எண்ணுவதில்லை; செய்வதில்லை; பேசுவதில்லை’ என்று ஒவ்வொரு மனிதனும் தனக்குத்தானே சத்யத்தில் மனப்பூர்வமாக நம்பிக்கை வைத்துத் தன்னைச் சோதித்துக் கொள்கிறானே அதுதான்! மெய்யான புகழ் ஒரு மனிதனுடைய ஏதாவதொரு திறமையை மட்டும் சார்ந்து நிற்பதில்லை. அந்தத் திறமையை ஆள்கின்றவன் தன் வாழ்வில் எவ்வளவுக்கு நியாயமான குணங்களைச் சார்ந்து நிற்கிறான் என்பதையும் பொறுத்துத் தான் இருக்கிறது. ‘பழிக்கு அஞ்சுவது தான் பெரும் புகழ். புகழுக்கு ஆசைப் பட்டுத் தவிப்பதுதான் பெரும்பழி’ என்று தொல்காப்பியருடைய மெய்ப்பாட்டியலில் புகழ் என்னும் பெரு மிதத்தைப் பற்றி இளங்குமரனுக்குக் கற்பிக்கும்போது திருநாங்கூரடிகள் கூறியிருந்தார். அறிவினால் வலிமையடைந்து மனம் வளர்த்த பின் நிறைவு குறைவுகளைப் பற்றிய இந்தப் புதிய தத்துவத்தை உணர்ந்திருந்தான் அவன்.
ஆசைகள் குறைவதே பெரிய நிறைவு. ஆசைகள் குறைந்தால் அவற்றைச் சூழ்ந்திருக்கும் பல துன்பங்களும் குறைந்து விடுகின்றன. மலைமேல் ஏறுகிறவன் கனமான பொருள்களைத் தலைச் சுமையாகச் சுமந்து கொண்டு மேலே போக முடியாதது போல் மனத்தில் ஆசைகளைச் சுமந்துகொண்டு எண்ணங்களால் உயரத்துக்குப் போக முடிவதில்லை. ஆசைகளுக்கு நடுவிலும் ஆசைகளால் குறைந்து நிற்கும் வாழ்வே பண்புகளால் நிறைந்து நிற்கிறது. குறைவில்லாத வாழ்வு எதுவோ அதுவே நிறை வாழ்வு. அந்த வாழ்வுக்கு திரு நிறைந்த மனம் வேண்டும். அது இளங்குமரனுக்கு வாய்த்திருந்தது. குறைகளை முடிக்கத் தவித்துத் தவித்து அதற்காக மனத்தில் எழும் முனைப்பே ஆசை, பற்று, விருப்பம் எல்லாம். ஆசைகள் தேவையில் தொடங்கிக் குறைகளாலே வளர்ந்து துன்பங்களோடு முடிகின்றன. நெடுநாட்களாய் மண்ணில் கிடக்கிற கல்லைப் புரட்டினால் அதன் மறுபுறம் தேளும், பாம்பும், பூரானும் போன்ற நச்சுப் பிராணிகள் இருப்பதை ஒப்ப ஆசைகள் மறுபுறத்தைப் புரட்டிப் பார்த்தால் அந்த மறுபுறத்தில் எத்தனையோ துன்பங்கள் தெரிகின்றன. எனவே ஆசைகள் நிறைந்த வாழ்வை நிறைவாழ்வு என்று இளங்குமரன் நம்பவில்லை.
எல்லையற்ற திரு நிறைந்த மனம், திரு நிறைந்த எண்ணங்கள், ‘உலகமே அன்பு மயமானது - அந்த அன்பே இன்பமயமானது’ என்ற பாவனையுடன் வாழ்தல், இவையே நிறை வாழ்வு என்று நம்பினான் அவன். தன் வாழ்க்கையின் நம்பிக்கைகள் நிறைந்த வேளையில் மங்கலமான சுப சகுனங்களோடு மணிநாகபுரத்து மண்ணில் இறங்கி நின்ற இளங்குமரன் ‘நிறைக! நிறைக!’ என்று விசாகை தன்னை வாழ்த்திய வாழ்த்துக்களை இப்படிப் பட்ட நிறைவாகவே பாவித்துக் கொண்டான். ஆசைகளால் குறைந்து குணங்களால் நிறைந்த வாழ்வுக்கு அவன் ஆசைப்பட்டான்.
அந்த விநாடியில் அவன் மனம் இடைவிடாமல் ‘என் எண்ணங்களில் திரு நிறைய வேண்டும்’ என்று உருவேற்றிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு முறை ஆசைப்படும் போதும் மனம் ஒருவிதத்தில் எதற்காகவோ எரிந்து அழிந்து போகிறது. ஆசை என்பது என்றும் நிறைவில்லாத இயல்பையுடையது. நிறைந்த வாழ்வு வேண்டுமானால் நிறைவில்லாத இயல்புகளை நீக்கி விட வேண்டும். மனம் எதற்காகவும் அழியாமல் நிறைந்தே நிற்க வேண்டும் என்ற உறுதியுடனும் அப்படியே அழிந்தாலும் அந்த அழிவானது தங்கம் நெருப்பில் அழிவதைப் போல முன்னிலும் நிறைந்து ஒளிரும் அழிவாக வளர வேண்டும் என்ற எண்ணத்துடனும், உடன் வந்தவர்களோடு மணிநாகபுரத்து மண்ணில் நடந்து சென்றான் இளங்குமரன். புண்ணியப் பேராற்றல் நிறைந்த நாகநாட்டு மண்ணில் இறங்கியபோது அவனுடைய வாழ்வில் ஐந்தாவது பருவம் பிறந்தது. ‘கவலைப்படாதே தம்பீ! உன்னுடைய வாழ்வில் இனிமேல் தான் எல்லாம் இருக்கிறது’ என்று வளநாடுடையார் கூறிய சொற்களில் ஏதோ பெரிய விளைவுக்கான அர்த்தம் இருக்க வேண்டுமென்று தோன்றினாலும் அது என்ன என்று அவரிடமே கேட்கும் துடிப்பு அப்போது அவனுக்கு ஏற்படவில்லை. ஏதோ வரவிருக்கிறதென்று அவன் மனத்திலேயே ஒருவாறு புரிந்தது. தன்னுடைய வாழ்வில் இப்போது வரவிருக்கும் அனுபவங்கள் எவையோ அவை தன்னை முழுமையாகக் கனிவிக்கப் பயன்படப் போவ தாக உணர்ந்து தன்னுடைய உள்ளத்தையும் உணர்வுகளையும் அவற்றுக்குப் பக்குவமான பாத்திரமாக்கிக் கொண்டிருந்தான் அவன்.
‘என்னுடைய எண்ணங்களில் இதற்கு முன்பும் இனியும் நீ ஒரு காவிய நாயகனாக உருவாகிக் கொண்டிருப்பவன்’ என்று திருநாங்கூர் அடிகள் என்றோ அவனை வாழ்த்திய வாழ்த்துக்கு விளக்கமாய் நிறைகிற வாழ்வு இந்தக் கதையின் ஐந்தாம் பருவத்தில் இளங்குமரனுக்கு எய்துகிறது.
தான் ஒளிமயமாக இருத்தல், தன்னை அணுகுவதற்கு அருமை, தன்னிடமிருந்து பிறர் ஒளிபெறுதல் தான் சார்ந்த இடத்தைத் தன்னுடைய சார்பில் தூயதாக்குதல் ஆகிய பொற்குணங்கள் இந்தப் பருவத்தில் இளங்குமரனின் வாழ்வில் நிறைந்து விளக்கமாகத் தோன்றுகின்றன. எல்லையற்ற நிதானத்தில் போய் நின்று கொண்டு இந்த உலகத்தைப் பார்த்துச் சிரிக்க வேண்டும் என்ற அவனது எண்ணமும் இந்தப் பருவத்தில் முழுமையாக நிறைகிறது.
மறுநாள் பொழுது விடிந்தால் புத்த பூர்ணிமையாதலால் அன்று மணிநாகபுரத்துத் தெருக்கள் நன்றாக அலங்கரிக்கப் பெற்றிருந்தன. கரையோரங்களில் முத்துக் குளித்தெடுக்கும் முத்துச் சலாபங்களும், உள்நிலப் பகுதிகளில் நாகரத்தினங்களும், வேறு பல்வகை மணிகளும் வளமாக நிறைந்துள்ள அந்தத் தீவின் தலைமையான நகரமாயிருந்ததனால் மணிநாகபுரம், நோக்கிய திசையெல்லாம் செல்வச் செழிப்புக் கொண்டு விளங்கியது. அந்த நகரத்து வீதிகளில் புலிநகக் கொன்றை மரங்கள் பூத்துக் குலுங்கின. அல்லியும் குவளையும் அலர்ந்த அழகுப் பொய்கைகள் அங்கங்கே தோன்றின. தரையை ஒட்டித் தாழ்ந்து வளர்ந்த புன்னை மரங்களும், மடல் விரித்து மணம் கமழும் தாழை மரங்களும் கடற் காற்றில் ஒரே சீராக ஒலித்துக் கொண்டிருந்தன. வெள்ளியைப் பொடி செய்து குவித்தாற் போல வெள்ளை வெளேரென்று மின்னும் மணற்பரப்பும், சிற்சில இடங்களில் கருமை நிறம் மின்னும் மணற்பரப்புமாக வாழ்க்கைக் கடலின் அலைகளில் சுகமும் துக்கமும் மாறி மாறி ஒதுக்கப்பட்டுக் குவிவதைப் போல வெண்மையும் கருப்புமாகக் குவிந்திருந்தன. மிக அருகில் தென்படும் அலைவளமும் தீவுக்குள்ளே தொலைவில் உள்ளடங்கித் தென்படும் மலைவளமுமாக இயற்கையின் ஆழத்தையும், உயர்த்தையும் அழகுற விளக்குவதுபோல் தென்பட்ட அந்த நாட்டின் காட்சியில் இளங்குமரனின் மனம் ஈடுபட்டது. மணிமார்பனோ ஓவிய ஆர்வத்தோடு இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான்.
தழைத்து நீண்டு வளர்ந்து கருமை நிறத்தில் சிற்றலையோடிச் சரிந்து மின்னுகிற கூந்தலை மூன்று நாகப் படங்கள் போலவும், ஐந்து நாகப்படங்கள் போலவும், ஏழு நாகப்படங்கள் போலவும், பகுத்து அலங்காரமாகப் பின்னிக் கொண்டிருந்த நாக நங்கையர்கள் சிலர் கூட்டமாக எதிர்ப்பக்கத்து வீதியிலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். இருந்தாற் போலிருந்து வீதியில் எல்லா விதமான இனிய இசைக் கருவிகளும் மிக நளினமாக ஒன்று சேர்ந்து கொண்டு இங்கிதமான குரலில் ஒலிப்பது போல அந்த நாக நங்கையர்களின் காலணிகளும், வளை களும் ஒலித்தன. அந்தக் கூட்டத்திலேயே அழகு மிக்கவளும், ஏழு பிரிவாகத் தன் கூந்தலை வகிர்ந்து சடைவில்லை போல நாகணி அணிந்து அலங்கரித்துக் கொண்டிருந்த வளுமாகிய ஒருத்தியை ஏறிட்டு நோக்கிய மணிமார்பன் கண்களை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டே இருந்தான்.
“என்ன? இந்த ஏழாற்றுப் பிரிவில் உங்கள் கப்பல் கவிழ்ந்து விடும் போல் இருக்கிறதே! நான் ஒருத்தி உங்கள் பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருப்பதை மறந்துவிட வேண்டாம்” என்று கணவனின் தோளைத் தொட்டுத் திருப்பினாள் பதுமை. மணிமார்பன் தன் மனைவியின் பக்கமாகத் திரும்பிப் பார்த்து நாணத்தோடு நகைத்தான்.
“இல்லை பதுமை! அவள் தன் கூந்தலை ஏழு பகுப்பாகப் பிரித்துப் புனைந்து கோலம் செய்திருக்கிற அழகைச் சித்திரத்தில் அப்படியே தீட்ட முடியுமா என்று தான் கூர்ந்து நோக்கினேன்!”
“அதுதான் முன்பே சொல்லியிருக்கிறேன், அன்பரே! ஏழாற்றுப் பிரிவில் கப்பல் கவிழ்ந்து விட்டால் மீள்வது அருமை...” என்று பதுமை மறுமொழி கூறியபோது தன் மனைவியின் சொற்களில் சிலேடையாக வந்த ‘ஏழாற்றுப் பிரிவு’ என்ற இரு பொருள் அழகை உணர்ந்து புரிந்து கொண்டு பெருமைப்பட்டான் மணிமார்பன். அவளை மேலும் வம்புக்கு இழுக்க வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. “நீ கூடச் சில சமயங்களில் அழகான வாக்கியங்களைப் பேசிவிடுகிறாய், பதுமை! பார்வையிலும் தோற்றத்திலும் பிறக்கும் போதே பிறந்த அலங்காரங்களாலும், பிறந்து வளர்ந்த பின் பிறப்பிக்கப்பட்ட அலங்காரங்களாலும் பெண்களுக்கு வாய்த்திருக்கிற அழகு போதாதென்று பேச்சிலும் அழகு வந்துவிட்டால் இந்த உலகம் அதைத் தாங்காது பெண்ணே!”
“உலகம் தாங்காவிட்டால் போகிறது! நீங்கள் இப்படிப் பேசி என்னை ஏமாற்றி ஏழாற்றுப் பிரிவில் கவிழ வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டே அவனுடைய விலாப்புறத்தில் வந்து நின்று அவன் பார்வை பதிந்திருந்த திசையை மறைத்தாள் பதுமை. மணிமார்பன் கண்களின் பார்வையை முழுமையாகத் தன் மனைவியின் மேல் திருப்பிக் கொண்டு அவளைக் கேட்டான்:
“சித்திரக்காரனுக்கு இப்படிப்பட்ட மனைவி வாய்த்து விட்டால் தொழில் பெருகினாற் போலத்தான்.”
“மனத்தில் பெருகட்டும்! இப்படி வீதியில் பெருக வேண்டாம்” என்று விட்டுக் கொடுக்காமல் குறும்புச் சிரிப்போடு மறுமொழி கூறினாள் பதுமை. மணிமார்பனும் அவன் மனைவியும் மற்றவர்களை முன்போக விட்டு விட்டுப் பின்னால் மெல்ல மெல்லத் தயங்கி நடந்து சென்று கொண்டிருந்ததனால் தங்களுக்குள் கலகலப்பாகச் சிரித்துப் பேசிக்கொண்டு செல்வதற்கு வசதியாக இருந்தது. இந்திர விகாரத்துத் துறவிகளும் பிறரும் உடன் வந்திருந்ததனால் விசாகை மணிநாகபுரத்துப் பெளத்த விகாரத்துக்கு விடை பெற்றுக் கொண்டு போயிருந்தாள். மறுநாள் காலை மீண்டும் மணிபல்லவத்தில் சந்திப்பதாக விடைபெற்றுப் போகும் போது அவள் இளங்குமரனிடம் கூறியிருந்தாள்.
வீரசோழிய வளநாடுடையாரும் இளங்குமரனும் வீதியில் முன் பகுதியில் நாகதெய்வக் கோட்டத்தை நோக்கி விரைந்து போய்க் கொண்டிருந்தார்கள். மணிநாகபுரத்துக் கரையில் இறங்கி நிற்பதற்கு முன்னும், இறங்கி நின்ற பின்னும், தான் இளங்குமரனிடம் கூறியிருந்த செய்திகள் எந்த விதமான பரபரப்பையும், ஆவலையும் அவனிடம் உண்டாக்காமற் போகவே வளநாடுடையாருக்கு வியப்பாயிருந்தது.
‘இந்தப் பிறவியைப் பற்றிய ஞானமே உனக்கு இந்தத் தீவிலிருந்துதான் கிடைக்கப் போகிறது’ என்று தன்னால் சற்றுமுன் இளங்குமரனிடம் கூறப்பட்ட வார்த்தைகளிலிருந்து அவன் எதையுமே எதிர்பார்த்துப் புரிந்து கொண்டு வியப்படையாமல் அமைதியாக நடந்து வருவதைக் கண்டு வளநாடுடையார் திகைத்தார். எல்லாப் பரபரப்பும் எல்லா ஆவலும் அவருக்குத் தான் ஏற்பட்டனவே தவிர அவன் உணர்ச்சிகளைக் கடந்த அமைதியோடும் நிதானத்தோடும் நடந்து வந்து கொண்டிருந்தான். அவனுடைய நிதானத் திலும் அமைதியிலும் சிறிது கழிவிரக்கமும் கலந்திருந்ததைக் கூர்ந்து பார்த்தால் தெரிந்து கொள்ள முடிந்தது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் அருட்செல்வ முனிவருடைய ஞாபகத்தைத் தான் உண்டாக்கிப் பேசிய தாலேயே அவனுக்கு அந்தத் துயரம் தோன்றியிருக்க வேண்டும் என்று வளநாடுடையார் புரிந்து கொண்டார். படிப்படியாக முயன்று தன்னுடைய உட்கருத்தை அவன் விளங்கிக் கொள்வதற்கேற்ற மன நிலையை அவனிடம் தோற்றுவிக்கும் நோக்கத்தோடு மீண்டும் பேச்சுக் கொடுத்தார் அவர்:
“தம்பி! இழந்த பொருள்களையும், இழந்த நல்லுணர்வுகளையும் திரும்பவும் அடைகிறவனுடைய பெருமையைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”
முன்பின் தொடர்பில்லாமல் கோடை மழையைப் போல் அமைதியை கலைத்துக் கொண்டு திடீரென்று இப்படிப் பேச்சைத் தொடங்கிய அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டுப் பின்பு மெல்லப் பதில் கூறினான் இளங்குமரன்.
“பொருள்களை இழப்பதற்காகத் துயரப்படுவதும், அடைவதற்காக மகிழ்வு கொள்ளுவதும் சிறிய காரியங்கள். நம்மோடு பற்றும் பாசமும் வைத்து நீண்ட உறவாகப் பழகி விட்ட ஒருவரது உயிர் நம் கண் காண அழிந்தால் அதற்காக நாம் குமுறித் துக்கப்படுவதை மட்டும் தான் கைவிட முடிவதில்லை. அப்படி உயிர்த் தொடர்புடையதாக வரும் பற்றுப் பாசங்களைக் கூட வென்று நிற்க வேண்டுமென்று பெரியவர்கள் சொல்கிறார்கள். சில சமயங்களில் ஞானத்தின் பலமிருந்தும் அத்தகைய துக்கங்களை வெல்ல முடியாமல் நாமே இருண்டு போய்க் கண் கலங்கி மலைத்து மேலே நடக்க முடியாமல் நின்று விடுகிறோம்.”
இந்த வார்த்தைகளைச் சொல்லும் போது இளங்குமரனும் தான் நடப்பதை நிறுத்திக் கொண்டு கண் கலங்கிப் போய் இருந்தான். அவனுடைய சொற்கள் நலிந்து உணர்ச்சி வசப்பட்டிருந்தன. அவன் மேல் நிறைந்த அநுதாபத்தோடு அருகில் சென்று தழுவிக் கொண்டார் வளநாடுடையார்.
“எவ்வளவு பெரிய ஞானியாயிருந்தாலும் நெகிழ்ந்த உணர்ச்சிகளை எதிரெதிரே சந்திப்பது இயலாத காரியம் தம்பி. மனைவி தூங்கும்போது எழுந்து வெளியேறி உலகத்திற்குத் துக்க நிவாரணம் காண வந்த புத்தனும், காதற் கிழத்தி காட்டில் உறங்கும் போது எழுந்திருந்து ஓடிப்போன நளனும் உணர்ச்சிகளை எதிரே சந்திப்பதற்குப் பயந்து கொண்டுதானே அப்படிப் புறப்பட்டிருக்க வேண்டும்?” என்று அவர் கூறியதை அவன் ஏற்றுக் கொண்டானா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் அருட்செல்வ முனிவருடைய ஞாபகமே அவனைக் கண்கலங்கச் செய்திருக்கிறது என்று தெரிந்தது. அந்தக் கலக்கத்தையே வாயிலாகப் பயன்படுத்திக் கொண்டு தன் மனத்தில் இருப்பதை அவனுக்குச் சொல்லிவிட எண்ணினார் வளநாடுடையார்.
“இழந்த பொருள்களைத் திரும்பப் பெறுவதே இன்பமானால் இழந்த உயிரையே திரும்பப் பெறுவது இணை கூற முடியாத பேரின்பமாக அல்லவா இருக்கும்?” என்று கூறிவிட்டு அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கினார் அவர். அதில் தவிப்பும் ஏக்கமும், தெரிவதற்குப் பயந்து கொண்டே தெரிவதுபோல, மெல்லத் தெரிந்தன.
“ஐயா! அருட்செல்வ முனிவருடைய ஞாபகத்தை இன்று நீங்கள் என்னிடம் உண்டாக்கியிருக்க வேண்டாம். எந்தவிதமான உணர்ச்சிகளை எதிரே சந்திப்பது தாங்க முடியாததென்று கருதுகிறீர்களோ அதே விதமான உணர்ச்சிகளை நான் இன்று சந்திக்கும்படி செய்து விட்டீர்கள். அருட்செல்வ முனிவருடைய நினைவு வரும் போது அதைத் தொடர்ந்து வேறு பல நினைவுகளும் என்னைச் சூழ்கின்றன. முள்ளில் வீழ்ந்த ஆடையை மேலே எடுக்க இயலாதது போல் இப்போது என்னைச் சூழ்ந்திருக்கும் பழம் பாசங்களிலிருந்து மனத்தை மேலே கொண்டு போக முடியாமல் தவிக்கிறேன் நான். இப்படி ஒரு நிலையை இவ்வளவு தொலைவு அழைத்துக் கொண்டு வந்து நீங்கள் எனக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டாம்.” அவனுடைய வார்த்தைகளைக் கேட்டு என்ன மறுமொழி கூறுவதென்று சில கணங்கள் வளநாடுடையார் தயங்கினார்.
“பாசங்கள் உன்னை நெருங்குவதாய் நீயாக எண்ணிக் கலங்காதே, இளங்குமரா! உன்னுடைய பாசமும் இரக்கமும் எவை காரணமின்றித் தோன்றி உன்னை வருத்து கின்றனவோ, அவற்றையே மீண்டும் நீ காணப் போகிற வேளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. எவற்றுக்காக இத்தனை ஆண்டுகளாய் மனத்திற்குள்ளேயே துக்கம் கொண்டாடினாயோ அவற்றை மீண்டும் மறுபிறவியாகக் காண்பது போல் எதிரே கண்டு இழந்த நம்பிக்கைகளை யெல்லாம் அடையப் போகிறாய்! நாளைக்குப் புத்த ஞாயிற்றின் ஒளி மட்டுமின்றி உன் வாழ்விலும் நம்பிக்கைகளின் ஒளி பரவப்போகிறது” என்று அவர் இளங் குமரனிடம் கூறிக் கொண்டிருந்தபோது அந்த வீதியின் மேற்புறத்து மாளிகையிலிருந்து காற்றில் நழுவினாற் போல ஒளிமிக்க முத்துமாலை ஒன்று அவன் தோளில் நழுவி வந்து விழுந்தது. அவனும், வளநாடுடையாரும் மேலே நிமிர்ந்து பார்த்தார்கள்.
அப்படிப் பார்த்தபோது நாகதெய்வக் கோட்டத்தின் அருகேயிருந்து மிகப்பெரிய மாளிகை ஒன்றின் மாடத்திலிருந்து ஓர் இளைஞன் கீழே குனிந்து அவர்களையே கவனித்துக் கொண்டு நின்றான். அவனுடைய வலது கையில் சரம்சரமாக இன்னும் பல முத்து மாலைகள் இருந்தன. அவன் அந்த மாளிகையின் மதலை மாடமாகிய கொடுங் கையின் முன்புறம் விழா நாளுக்காகச் செய்யும் அலங்காரங்களைச் செய்து கொண்டிருந்தான் போலிருக்கிறது. மாடத்தின் முன்புறம் நல்ல நாட்களில் மங்கள அடை யாளமாகக் கட்டப்படும் நாட்கொடிகளும் முத்துத் தாமங்களும் தொங்கின. அந்த மாடத்தையும் அதைப் போலவே அலங்கரிக்கப்பட்ட வேறு பல மாடங்கள் அடங்கிய அதன் முழுத் தோற்றத்தையும் பார்த்தால் அது ஏதோ பெரிய இரத்தின வணிகருடைய இல்லம் போல விளங்கியது. முத்துமாலை கை நழுவி வீதியில் சென்று கொண்டிருந்த அவர்கள் தோளில் விழுந்து விட்டதற்காக அந்த இளைஞனும் தன்னைத்தானே கடிந்து கொள்கிறவனைப் போல முகத்தில் நாணம் தெரிய நின்றான். பின்பு விரைவாகக் கீழே இறங்கி வந்தான். நாகநாட்டு இளைஞர்களுக்கே உரிய ஒளிமிக்க தோற்ற முடையவனாயிருந்தான் அவன். யாரோ புத்த பூர்ணிமை நாளுக்காகத் தனது மாளிகை மாடங்களை முத்துத் தோரணங்களால் அலங்காரம் செய்து கொண்டிருந்தபோது கையிலிருந்த முத்துத் தாமங்களில் ஒன்றைக் கீழே நழுவ விட்டு விட்டார்கள் போலிருக்கிறது என்று எண்ணி அந்த முத்துச்சரத்தை அதற்குரியவனிடம் சேர்ப்பதற்காகத் தயங்கி நின்றான் இளங்குமரன். ஆனால் இப்போது அவன் நினையாத வேறொரு காரியத்தைச் செய்தார் வளநாடுடையார். மேலே மதலை மாடத்திலிருந்து முத்துமாலையை வாங்கிக் கொண்டு போவதற்காகக் கீழிறங்கி வந்த இளைஞன் அருகில் வந்ததும், “குலபதி, நாங்கள் உள்ளே வரலாம் அல்லவா?” என்று சுபாவமாக அவனிடம் வினவினார் வளநாடுடையார்.
குலபதி என்று அழைக்கப்பட்ட அந்த அழகிய நாக இளைஞனுடைய முகத்தில் வளநாடுடையாரின் கேள்வியைச் செவியுற்ற பின் புன்முறுவல் மலர்ந்தது. அந்தப் புன்முறுவல் இன்னும் நன்றாக மலர்ந்து பெருமுறுவலாகிய முகபாவத்துடன் இளங்குமரனையும் அவரையும் நோக்கிக் கைகூப்பினான் அவன்.
“நன்றாக வரலாம் ஐயா! ஒவ்வொரு கணமும் உங்களுடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறோம்” என்று மறுமொழி கூறினான் குலபதி என்று கூப்பிடப்பட்ட அழகன்.
“இதோ உங்களுடைய முத்துமாலை” என்று இளங்குமரன் அவனிடம் தன் மேல் நழுவி விழுந்த முத்து மாலையைத் திருப்பிக் கொடுக்க முற்பட்டதும், “அந்த மாலை இனிமேல் உங்களுடையதுதான். எப்போது உங்கள் தோளில் விழுந்துவிட்டதோ அப்புறம் உங்களுக்குரியது தானே?” என்று சிரித்தபடி மறுத்து விட்டுக் குலபதி அவர்களை அந்த மாளிகைக்குள்ளே அழைத்துக் கொண்டு போனான்.
தானும் இளங்குமரனும் குலபதியின் மாளிகைக்குள் அவனோடு செல்வதற்கு முன்னால் முன்னேற்பாடாக வளநாடு டையார் வேறொரு காரியம் செய்தார். பின்புறம் வீதியில் தங்களைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த ஓவியன் மணிமார்பனையும் அவன் மனைவி பதுமையையும் தங்களிடமிருந்து பிரித்துத் தனியே அனுப்பிவிட்டார்.
“மணிமார்பா! நீயும் உன் மனைவியும் உங்கள் மனம் விரும்பியபடி இன்று மாலைப் போது வரை இந்த நகரத்தைச் சுற்றிப் பார்த்து விட்டுக் கப்பலுக்கு நேரே திரும்பிப் போய்விடலாம். இந்த இரத்தின வணிகருடைய மாளிகையில் எங்களுக்குச் சில அவசரமான காரியங்கள் இருக்கின்றன. எங்களோடு வந்தால் நீயும் உன் மனைவியும் இந்த நகரத்தைச் சுற்றிப் பார்க்க முடியாமலே போய்விடலாம். மேலும் இந்த மாளிகையில் நாங்கள் கவனிக்க வேண்டிய காரியங்களுக்கு எவ்வளவு போதாகும் என்று உறுதியும் சொல்ல முடியாது. கப்பல் தலைவன் இன்று மாலையே பக்கத்திலிருக்கும் மணிபல்லவத் தீவுக்குப் புறப்பட்டுவிட வேண்டுமென்று சொல்லியிருக்கிறான். நாங்கள் இருவரும் குலபதியின் இந்த மாளிகையிலிருந்து புறப்படுவதற்கு இரவு நடுயாமத்துக்கு மேலும் ஆனாலும் ஆகிவிடலாம். ஒருவேளை புத்த பூர்ணிமைக்காக மணிபல்லவத்துக்கே நாளைக்குக் காலையில் நாங்கள் புறப்பட்டு வந்து சேரும்படி ஆகலாம். நீயும் எங்களோடு காத்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, நாங்கள் வருவதற்குத் தாமதமானாலும் நீ முன்னால் புறப்பட்டுப் போய்விடுவது நல்லது,” என்று தன்னிடம் வளநாடுடையார் சொல்லி வேண்டிக் கொண்டபோது ஓவியன் மணிமார்பனுக்கும் தான் அவ்வாறு செய்வதே நல்லதென்று தோன்றியது. மணிநாகபுரத்தின் அழகிய வீதிகளையும், காட்சிகளையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு அவனும் விடைபெற்றுக் கொண்டு தன் மனைவியோடு சென்றான்.
முதலில் மாளிகை மாடத்திலிருந்து கீழே இறங்கி வந்த குலபதியோடும் இளங்குமரனோடும் உள்ளே போகத் தொடங்கியிருந்த வளநாடுடையார் பின்னால் ஓவியனும் அவன் மனைவியும் வந்து கொண்டிருப்பதை நினைவு கூர்ந்தவராகத் தான் மட்டும் மறுபடி வீதிக்குத் திரும்பிச் சென்று இவ்வாறு அவர்களைத் தங்கள் குழுவிலிருந்து பிரித்து அனுப்பி விட்டார். அவரது அந்தச் செய்கைக்காக இளங்குமரன் தனக்குள் வருந்தினான். எனினும், தனக்குப் புதியவனான குலபதி என்னும் இளைஞனை அருகில் வைத்துக் கொண்டு வளநாடுடையாரைக் கடிந்து பேசுவது நாகரிகமாயிராது என்று கருதி இளங்குமரன் தன் வருத்தத்தை மனத்துள்ளேயே புதைத்துக் கொண்டு விட்டான். மனிதர்களையும் அவர்களுடைய உணர்வுகளையும் சமமாகப் பாவித்து மதிக்கத் தெரியாதவர்கள் உலகப் படைப்பையும் படைத்தவனையுமே அவமானப் படுத்துவதாக எண்ணி வேதனைப்படுவது அவன் வழக்கம். பழைய நாட்களில் தனக்கு முன் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருந்தால் சிறு குழந்தையின் துன்பத்தைப் போல் சொல்லிலும் உணர்வுகளிலும் வெளிப்படுத்திக் குமுறி யிருப்பான். மனம் முதிர்ந்து பக்குவப்பட்டு விட்டது என்பதற்கு ஒரே பயன் கணந்தோறும் கண்களுக்கு முன் தென்படுகிற உலகத்துத் துன்பங்களுக்காக இதயத்திலேயே அழுது புலம்புவதுதான். எப்போதும் விடலைப் பருவத்துப் பிள்ளையைப் போல் மனத்தினால் குமுறிக் கண்களால் எதிர்க்க முடிவதில்லை. ஆனால் கண்களால் அழுகிறவர்களைத்தான் உலகம் துக்கம் உடையவர்களாகப் புரிந்து கொள்கிறது. மனத்தினால் அழுது கொண்டிருப்பவர்களைப் புரிந்துகொள்ள உலகத்திற்கு நீண்ட காலமாகிறது. இப்படி ஒவ்வொரு கணமும் ஒவ்வோர் இடத்திலும் கண்முன் தெரியும் உலகத்துத் துன்பங்களுக்காக மனத்தினால் அழுது தனக்கே அந்தத் துன்பம் வந்தாற்போல் முடிவு தேடித் தவிக்கும் பரந்த சோக அநுபவத்தை இளங்குமரன் பலமுறைகள் அடைந்திருக்கிறான்.
நாளங்காடிப் பூத சதுக்கத்தில் முதல் முதலாக இதே ஏழை ஓவியனைச் சந்தித்தபோது இவனுக்கு இரங்க வேண்டும் என்று தன் மனம் நெகிழ்ந்ததை இந்தக் கணத்தில் நினைக்கத் தோன்றியது இளங்குமரனுக்கு. இலஞ்சி மன்றத்துப் பொய்கைக் கரையிலும், உலக அறவியின் நிழலிலும் நிறைந்து கிடந்து உழலும் ஏழை களையும் நோயாளிகளையும் பார்க்க நேரிடும் போதும் நினைக்க நேரும் போதும் மனத்தினால் அழுது வருந்தியிருக்கிறான் அவன். இந்திர விழா நிறைவு நாளில் கழார்ப் பெருந்துறை நீராடலின் போது சுரமஞ்சரியைக் காப்பாற்றிக் கப்பல் கரப்புத் தீவில் அவளிடம் கருணை கொண்ட போதும், திருநாங்கூரில் குருகுலவாசம் செய்து கொண் டிருந்த போது தன்னுடைய பிறந்தநாள் மங்கலத்துக்காக அழைத்துச் செல்வதற்கு வந்திருந்த முல்லையிடம் மனம் நெகிழ்ந்து பேச முடியாமற் போனபோதும், ‘உங்களுடைய ஞானத்தையும், சான்றாண்மையையும் பார்த்துப் பெருமைப்பட உங்களைப் பெற்றவள் இப்போது அருகில் இருக்க வேண்டும்’ என்று விசாகை பூம்பொழிலில் ஒருநாள் தன்னிடம் கூறியபோதும், இளங்குமரன் மனம் நிறையக் கண்களாய் மாறிக் கலங்கி அழுதிருக்கிறான். அறிவு முதிர்ந்த வழியில் நடந்து போகிறவனின் ஞான யாத்திரையில் கடைசியாகக் கால்கள் நிற்குமிடம் மனத்தின் அழுகையாகிய இந்தக் கருணைதான். எல்லார் மேலும் பரிவும் பாசமும் கொண்டு எல்லாருடைய துக்கத்திற்காகவும் மனத்தால் அழுது தவிக்கும் இந்தப் பரந்த தாய்த் தன்மையே மனிதனுக்கும் அவன் வணங்கும் பரம்பொருளுக்கும் நடுவிலிருப்பதாகச் சொல்லப்படும் தொலைவைக் குறைத்து இருவரையும் அருகருகே நெருங்கச் செய்கிறது. தன்னுடைய மனத்தின் எல்லை யெல்லாம் நிறைந்திருந்த இந்தப் பரந்த கருணையை அழ வைத்துப் புண்படுத்துவது போல் வளநாடுடையார் மணிநாகபுரத்து வீதியில் ஓவியனைத் தனியே பிரித்து அனுப்பிய போது இளங்குமரன் பெரிதும் புண்பட்டான். ஓவியனிடம் தனக்குள்ள கருணையை அப்போது வெளிப் படுத்துவதனால் குலபதியும் வளநாடுடையாரும் வருந்த நேரிடுமே என்று எண்ணி அழுது புலம்பும் மனத்தோடு சிரித்து மகிழும் முகத்தோடும் நின்றான் இளங்குமரன். அந்த நிலையில் குலபதி அவனிடம் தானே பேசலானான்.
“ஐயா! இந்த முத்துமாலை மேலேயிருந்து உங்கள் தோளில் விழுந்தபோது காண்பதற்கு அந்தக் காட்சி எவ்வளவு நன்றாயிருந்தது தெரியுமா? பொன்னிற் செய்து பின்பு மெருகிட்டுப் புனைந்தாற் போன்ற உங்கள் தோள்களிலேயே மறுபடி இதைக் காண வேண்டுமென்று ஆசையாயிருக்கிறது எனக்கு. தயைக்கூர்ந்து இந்த மாலையை இப்படிக் கையில் வைத்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாகக் கழுத்தில் அணிந்துகொள்ள வேண்டும் நீங்கள்...”
அப்போது அந்த விநாடி வரை வீதியில் வளநாடுடையார் மணிமார்பனிடம் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்துக் கொண்டிருந்த இளங்குமரன் குலபதியின் இந்தச் சொற்களைக் கேட்டுத் திரும்பினான். இம்முறை தான் முதன் முதலாய்க் கூர்ந்து கவனிப்பதுபோல் அந்த மணிநாகபுரத்து இளைஞனை அவன் நன்றாகப் பார்த்தான். நீண்டு வளர்ந்திருந்த குடுமியை முடிப்பாக அள்ளிச் செருகியிருந்த தோற்றம் அந்த நாகநாட்டு இளைஞனின் முகத்துக்கு மிகவும் அழகாயிருந்தது. இளமை அரும்பும் பருவத்து முக அழகு தவிர நீண்டு வடிந்த அளவான செவிகளில் நாகரத்தினங்கள் பதித்த காதணிகளையும் அழகுற அணிந்திருந்தான் அவன். ஆண் மகனாக இருந்தாலும் அவன் சிரிக்கும்போது முத்துதிர்வது போல நளினமானதொரு கவர்ச்சியும் அந்த முகத்தில் வந்து பொருந்தியது. தோற்றத்தில் அதிக உயரம் இல்லா விட்டாலும் அவனுக்கு அமைந்த உயரமே அவனை அழகனாகத் தான் காண்பித்தது. சில நிழல் மரங்களைப் பார்த்தால் உடன் அங்கே உட்கார வேண்டும் என்று ஆசை வருவதைப் போல் குலபதியின் முகத்தை ஒருமுறை பார்க்கிறவர்களுக்குச் சிறிது நேரம் வேறு காரியங்களை மறந்து அந்த முகத்தை மட்டும் பார்க்கலாம் என்று தோன்ற முடியும் எனப் புரிந்துகொண்டான் இளங்குமரன். தன் முகத்தை இளங்குமரன் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் குலபதி சுறுசுறுப்பாக வேறு ஒரு காரியம் செய்தான். இளங்குமரனுடைய கையிலிருந்த முத்து மாலையை அவனது விரல்களின் பிடியிலிருந்து சிரித்துக் கொண்டே மெல்ல விடுவித்துத் தன் கைகளாலேயே அவனுடைய கழுத்தில் அணிவித்தான். இளங்குமரனால் அந்தப் பிள்ளையின் செயலை மறுக்க முடியவில்லை.
“வாருங்கள்! இனி. நாம் உள்ளே போகலாம்” என்று சொல்லிக் கொண்டே அப்போது வளநாடுடையாரும் வீதியிலிருந்து திரும்பி வந்தார். மீண்டும் மூன்று பேருமாக அந்த மாளிகைக்குள் துழையும் போது வளநாடுடையார் கூறினார்:
“இளங்குமரா! இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நீ திருநாங்கூரில் இருந்த காலத்தில் நான் வந்து உன்னை மணிபல்லவத்துக்கு அழைத்த போதே, நீ இங்கு வந்திருந்தால் நம்முடைய குலபதிக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும். அப்போது நீ வராததனால் நான் மட்டும் தனியாக இந்தத் தீவுக்கு வந்திருந்தேன். குலபதியையும் அவனுக்கு மிகவும் வேண்டியவராகிய மற்றொருவரையும் இங்கே சந்தித்தேன். அப்படிச் சந்தித்தபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைச் சொற்களில் அடக்க முடியாது. அதே மகிழ்ச்சியை இன்னும் சிறிது நேரத்தில் நீயும் அடையப் போகிறாய்.”
இப்படிப் பேசிக்கொண்டே அவர்கள் மாளிகையின் நடுக்கூடத்தை அடைந்திருந்தார்கள். தளத்தில் எங்கு நோக்கினும் முத்தும், மணியும், பவழமுமாகப் பதித்திருந்ததனால் அந்த மாளிகையின் ஒவ்வொரு அணுவிலும் அது ஓர் இரத்தின வணிகருடையது என்பதை நினைவூட்டும் அழகு அமைந்திருந்தது. இரத்தின வாணிகன் குலபதியைப் பற்றியும், மணிநாகபுரத்தில் அவனுக்குள்ள பெருமைகளைப் பற்றியுமே, வளநாடுடையார் விவரித்துச் சொல்லிக் கொண்டு வந்தாரே ஒழிய இன்ன வகையில் அவனுக்கும் தனக்கும் நட்பு ஏற்பட்டது என்றோ, அவன் இன்னான் என்றோ விவரமாகக் கூறவில்லை. குலபதியின் அந்த மாளிகையைச் சுற்றிப் பார்த்தபோது தன்னோடு மணிமார்பனும் அங்கு வந்திருக்க வேண்டும் என்று அதன் அழகுகளை நோக்கிக்கொண்டே எண்ணினான் இளங்குமரன். ஓர் ஓவியன் தன்னுடைய கண்கள் நிறையக் கண்டு மகிழ வேண்டிய பேரெழில் மாளிகையாயிருந்தது அது. மணிமார்பன் தன் உடனில்லையே என்பதை ஒவ்வொரு கணமும் இளங்குமரன் அங்கு உணர முடிந்தது.
அந்த மாளிகையின் முற்றத்தில் உள்ள பூங்காவிலிருந்தே நாகதெய்வக் கோட்டத்துக்குள் போவதற்கான வழி ஒன்றும் அமைந்திருந்தது. இளங்குமரனும், வளநாடு டையாரும் நீராடித் தூய்மை பெற்ற பின் அவர்களை நாகதெய்வ வழிபாட்டுக்கு அழைத்துக் கொண்டு போனான் குலபதி, அந்த வழிபாட்டை முடித்துக் கொண்டு மாளிகைக்குத் திரும்பியதும் குலபதி இளங்குமரனுக்கும் வளநாடுடையாருக்கும் அறுசுவை விருந்து படைத்தான். பொன்னும், மணியும், முத்துக்களும், இரத்தினமுமாகப் பார்க்கும் இடமெல்லாம் ஒளி நிறைந்து தோன்றினாலும் அந்த மாளிகையில் ஏதோ ஒரு குறை இருப்பதாய்ப் புறத் தோற்றத்தில் தெரிந்தும், தெரியாததான ஒரு நிலையை இளங்குமரன் உணர்ந்தான். அந்தக் குறையைப் பற்றி அவன் சிந்திக்கத் தொடங்கிய நேரத்தில் “இளங்குமரா! இந்த உணவு விருந்தைக் காட்டிலும் பெரிய விருந்து ஒன்றை இன்னும் சிறிது நாழிகையில் குலபதி உனக்கு அளிக்கப் போகிறான். பலநாள் பசியைத் தீர்க்கப் போகிற உணவு அது!” என்று பேச்சைத் திருப்பிப் புதிய கவனத்திற்கு மாற்றினார் வளநாடுடையார். அதுவரை மெளனமாய் அமர்ந்து பசியாறிக் கொண்டிருந்த இளங்குமரன், “அது என்ன அப்படிப் புதுமையான உணவு?” என்று அவரைக் கேட்டான். அவனுடைய கேள்விக்கு வளநாடுடையார் மறுமொழி கூறவில்லை. அதற்குள் குலபதியே முந்திக்கொண்டு கூறினான்.
“விருந்து என்றாலே புதுமையானதென்று தான் பொருள். உண்ணும் பொருளும் பசியும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள பழைய பழக்கம் தான். அதுவே பழகிய பழக்கமும் ஆகிறது. ஆனால் உண்கிற இடமும் உபசாரம் செய்கிற மனிதர்களும் புதுமையாக இருந்தால் அதை விருந்து என்கிறோம். நானோ இன்று புதுமையான பொருள்களையே உங்களுக்குக் காட்டப் போகிறேன். அந்தப் புதிய பொருள்கள் உங்களுடைய பழைய விருப்பங்களைத் தீர்க்கிறவையாகவும் அமையலாம். இந்தப் பழம் பெரும் மாளிகையில் ஓவிய மாடம் என்று ஒரு பகுதியிருக்கிறது. அதில் இந்த மாளிகைக்குள் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமாக வாழ்ந்து முடிந்தவர்களின் ஓவியங்களும் வாழ்க்கை நிகழ்ச்சிகளும், வாழும்போது புனைந்து கொண்ட பொருள்களும் சேர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாளிகையின் ஓவிய மாடத்தில் ஓவியங்களாக இருப்பவர்களில் ஒருவர் கூட இந்தத் தீவின் எல்லையில் இறந்ததில்லை. துயரம் நிறைந்த வாழ்க்கையின் பழைய தலைமுறை நினைவுகளையும், பழையவர்கள் சேர்த்து வைத்த செல்வத்தையும் நுகர்ந்து கொண்டு இந்தக் குடிசையின் கடைசித் தளிராக நான் மட்டும்தான் மீதமிருக்கிறேன். உங்களைப் போன்ற ஞானிகள் அந்த ஓவிய மாடத்தைப் பார்ப்பதானால் எனக்கு ஏதேனும் புதிய நற்பயன் நேரலாமோ என்னவோ?” என்று குலபதி கூறும்போது அவனுடைய இனிமையான குரல் நலிந்திருந்தது. சொற்கள் துயரந் தோய்ந்து பிறந்தன.
“ஐயா! நீங்கள் உங்களை அறியாமலே மிகப் பெரிய தவறு செய்துவிட்டீர்களே! சற்று முன்பு எங்களைப் பின் பற்றித் தன் மனைவியோடு இந்த வீதியில் வந்தாரே; அவர் பாண்டிய நாட்டின் சிறந்த ஓவியர். உங்கள் ஓவிய மாடத்தை அவர் பார்ப்பதானால் எவ்வளவோ நன்மைகள் ஏற்படும். அவரை ஊர் சுற்றிப் பார்க்க அனுப்புமுன் இங்கே அழைத்து வந்து உங்கள் ஓவிய மாடத்தைக் காண்பித்திருந்தால் நான் மகிழ்ச்சி கொண்டிருப்பேன். இந்தக் கலை விருந்தை உண்பதற்கு ஏற்றவன் நான் இல்லை. அந்த ஓவியர் தான்! அவரை வீதியிலிருந்தே, இந்த மாளிகைக்குள் அழைக்காமல் அனுப்பிவிட்டு இப்போது என்னை மட்டும் உங்கள் ஓவிய மாடத்துக்கு அழைக் கிறீர்களே?" என்று கேட்டான் இளங்குமரன்.
அவனுடைய இந்தக் கேள்வியைச் சிரித்தவாறே ஏற்றுக் கொண்ட குலபதி, “விருந்தை உண்பதற்கு ஏற்றவர் யார் எனத் தீர்மானம் செய்ய வேண்டிய பொறுப்பு விருந்திடுகிறவனுக்கு உண்டாயின், நான் உங்களை மட்டுமே இதற்குத் தேர்ந்தெடுக்கிறேன்” என்று மறுமொழி பகர்ந்தான். குலபதியின் இந்த மறுமொழியே ஒரு விதத்தில் புரிந்தும் பலவிதத்தில் புரியாமலும், ஏதோ ஒரு புதிர் போலிருந்தது இளங்குமரனுக்கு.
“நம்முடைய குலபதி உன் கழுத்தில் முத்துமாலையை அணிந்த போதே உன்னைத் தன்னுடைய நெருக்கமான உறவினனாகவும் தேர்ந்தெடுத்து வரித்துக் கொண்டாயிற்றே, தம்பி!” என்று சொல்லி அதையே இன்னும் பெரிய புதிராக்கினார் வளநாடுடையார்.
“கையிலேயே வைத்துக் கொண்டிருந்த அரும்பொருள் எங்காவது தானாக நழுவி விழுகிறாற்போல் நான் மாடத்தில் நின்றபோது என் கையிலிருந்த முத்துமாலையோடு எனது மனமும் உங்களிடம் நழுவி விட்டது ஐயா!” என்று மேலும் உயர்வாகச் சொல்லி அந்த விருந்தைச் தன் சொற்களின் மதிப்பினாலும் சுவையுடையதாக்கிச் சிறப்பித்தான் குலபதி.
அந்த அன்பையும் ஆவலையும் மறுக்க முடியாமல் உண்ணும் விருந்து முடிந்ததும், காணும் விருந்தாகிய ஓவிய மாடத்தைக் காண்பதற்காக அவர்களோடு சென்றான் இளங்குமரன். என்ன காரணத்தாலோ அந்த மாளிகையின் ஓவியமாடத்தை அவன் கண்டிப்பாய்க் காண வேண்டுமென்பதில் வளநாடுடையாரும் குலபதியும் பிடிவாதமாக இருந்தார்கள் என்பது மட்டும் அவனுக்கே புரிந்தது.
மணிநாகபுரத்து இரத்தின வாணிகனாகிய குலபதியின் ஓவிய மாடத்துக்குள் நுழைந்த பின்புதான் அதன் பெருமை இளங்குமரனுக்குப் புரிந்தது. அந்த ஓவிய மாடமே ஒரு தனி உலகமாயிருந்தது. அதில் ஒரு பெரிய காலமே சித்திரங்களாக முடங்கிக் கிடந்தது.
“வழிவழியாக இரத்தின வாணிகம் புரிந்து வரும் எங்கள் குடும்பத்தின் துன்பமயமானதொரு வாழ்க்கைத் தலைமுறையை நீங்கள் இங்கே ஓவியங்களில் காண்கிறீர்கள் ஐயா! இந்தக் குடும்பத்தின் புகழை உலகத்துக்குச் சொல்ல வேண்டிய சக்தி ஒன்று இதிலிருந்து தவறி எப்படியோ எங்கோ வெளியேறிப் போய்விட்டது. மறுபடி அதைத் தேடிக் கண்டுபிடித்து இங்கே சேர்க்கிற வரை எனக்கு இவ்வளவு செல்வமிருந்தும் நான் மனத்தினால் ஏழைதான்!” என்றான் குலபதி.
“பழியில்லாமல் வாழ்வதே புகழ்தான்! புகழுக்கென்று தனியாக வேறு ஆசைப்படாதீர்கள். அந்த ஆசையாலேயே பழி வந்தாலும் வரலாம்...” என்று குலபதிக்குப் பதில் கூறியபடி அந்த மாடத்தில் வரிசையாகத் தீட்டப் பட்டிருந்த ஓவியங்களைப் பார்த்துக் கொண்டே மெல்ல நடந்தான் இளங்குமரன்.
சில ஓவியங்களுக்கருகே கீழே பலவிதமான அணிகலன்களும், அந்த ஓவியத்தில் இருந்தவர்கள் வாழ்ந்த காலங்களில் பயன்படுத்திய பொருள்களும் குவிக்கப்பட்டிருந்தன. இன்னும் சில ஓவியங்களுக்குக் கீழே உள்ள மாடப்பிறையில் ஏடுகள் மட்டுமே இருந்தன. அந்த ஏடுகளில் நாள்தோறும் இட்டப் பூக்களும் சிதறி வாடி யிருந்தன.
அப்படி ஏடுகள் மட்டுமே இருந்தவற்றைச் சுட்டிக் காட்டிக் கூறும்போது, “இந்த ஓவியங்களில் இருப்பவர்கள் எல்லாம் கடல் வாணிகத்தின் போதும், யாத்திரையின் போதும், புறப்பட்டுப்போன இடங்களிலும் இறந்தவர்கள். இவர்களைப் பற்றிய நினைவை இப்போது எங்களுக்குத் தருகிறவை இந்த ஏடுகள் மட்டும்தான்” என்றான் குலபதி.
அவனே மீண்டும் அந்த மாடத்திலே அணிகலன்கள் குவிந்து கிடந்த இடத்தில் இருந்த சில பொன் அணிகளை எடுத்துக்காட்டி “இந்தக் குடும்பத்துக்குச் சொந்தமான எல்லா அணிகலன்களிலும் அடையாளமாக இப்படி மூன்று தலை நாகப்படம் செதுக்கியிருக்கும்” என்றான். அவற்றைப் பார்த்துக்கொண்டே வந்த இளங்குமரன் அங்கு மிக அற்புதமாக வரையப்பட்டிருந்த ஓர் ஓவியத்தருகே நெருங்கியதும் கண்களை அதன் மேலிருந்து மீட்கத் தோன்றாமல் அப்படியே நின்றுவிட்டான். உத்தமமான கவிகள் வருணிக்கும் அழகுகள் எல்லாம் பொருந்திய இளநங்கை ஒருத்தி நாணத்தோடு கால் விரலால் தரையைக் கீறிக்கொண்டு நிற்பதாகவும் அவள் எதிரே வீரலட்சணங்கள் யாவும் அமைந்த வீரன் ஒருவன் தோன்றி அவளைக் காண்பதற்காகவும் அந்த ஓவியம் வரையப்பட்டிருந்தது.
அங்கிருந்த மற்ற எல்லாவற்றிலிருந்தும் தனியாகப் பிரிந்து அந்த ஒற்றை ஓவியத்தில் மட்டுமே தன் கவனம் செல்லும்படி அதில் என்னதான் இருந்தது என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அதில் ஏதோ இருந்தது. மண்ணுக்குள் முறிந்து போய்க் கிடந்த கோரைக் கிழங்கு சரத் காலத்து மழை ஈரத்தின் மென்மையில் நனைந்து நனைந்து மெல்ல மண்ணுக்கு வெளியே தன் பசுந் தலையை நீட்டி இந்த உலகத்தைப் பார்த்துக் குருத்து விடும் முதல் பச்சையைப் போல் அவன் மனத்தில் முறிந்து நின்ற ஆர்வமொன்று அந்த ஓவியத்தைக் கண்டதும் பெருகிற்று. ஆனால் அந்த ஆர்வத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை போலவும் பிரமிப்பாக இருந்தது. அவதி ஞானம் என்று அவன் கேள்விப்பட்டு உணர்ந்திருந்த உணர்வின் வரையறையில்லாத தொடர்பாய் இப்போதும் இதில் ஏதோ ஒன்று புரிந்தது. புரியாமலும் மயங்கிற்று. இப்படி நெடுநேரம் தன் பார்வையை மீட்க முடியாமல் அந்த ஓவியத்தையே பார்த்துக் கொண்டிருந்த இளங்குமரன் இறுதியாகப் பார்வை மீண்டும் அது இருந்த இடத்தின் கீழே பார்த்தபோது அங்கே அணிகலன்களோ வேறு வகைப் புனைபொருள்களோ சிறிதும் காணப்பட வில்லை. அதனருகேயிருந்த மாடப் பிறையில் இரண்டு மூன்று ஏட்டுச் சுவடிகள் மட்டும் முடிந்து வைக்கப்பட்டிருந்தன. இளங்குமரன் அந்த ஏட்டு முடிப்பை எடுத்து அவிழ்த்து ஏதோ ஓர் ஆவல் தூண்ட நடுவாக அப்போது தன் பார்வைக்கு தெரிந்த இடத்திலிருந்து அதை படிக்கலானான்.
“நவரசங்கள் உன்னுடைய கண்களிலிருந்து தான் பிறந்தன. உன் கண்கள் என் பார்வையிலிருந்து மறைந்த பின் என்னுடைய நினைவிலிருந்து நவரசங்களும் மறைந்து விட்டன. அலங்காரங்கள் எல்லாம் உன்னுடைய பேச்சிலிருந்துதான் பிறந்தன. உன் பேச்சைக் கேட்க முடியாத தொலைவுக்கு நான் வந்துவிட்ட பின் அலங்காரங்களை மறந்து போய்விட்டேன். தாளங்களுக்கும் அவற்றையுடைய வாத்தியங்களுக்கும் உன்னுடைய நடையிலிருந்துதான் இனிமைகள் பிறந்தன. உன் கால்களில் ஐம்பொன் மெட்டி ஒலிக்கும்போது என் நாவிலே கவிதையும் பிறந்து ஒலித்தது. உன்னுடைய நடையைக் காணமுடியாத தொலைவுக்கு நான் வந்து விட்ட பின் அவையும் எனக்கு நினைவில்லை. உன்னை மீண்டும் எப்போது சந்திக்கப் போகிறோம் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக நகருவது போல மந்தமாகி ஏதோ நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”
இந்த வாக்கியங்களைப் படித்ததும் இளங்குமரனுக்குக் காரணம் புரியாத வேதனை ஒன்று பிறந்தது. இந்த வாக்கியங்கள் தோன்றக் காரணமாயிருந்த காதலர்களாக அந்த ஓவியத்தில் இருப்பவர்களை நினைத்துப் பார்த்தான் அவன். அந்தக் காதலர்களை அப்படியே அப்போதே உமையாகவும், சிவனாகவும் பக்தி பாவித்துக் கொண்டு வணங்க வேண்டும் போலப் புனிதமான உணர்ச்சியடைந்தான் அவன். ஏடுகளை முடிந்து வைத்துவிட்டுக் கடைசியாக மறுபடியும் அந்த ஓவியத்தைப் பார்த்தபோது அதில் தலை குனிந்து நாணி நின்ற நங்கையின் கண்களிலிருந்து நவரசங்களுக்குப் பதில் கருணை ஒன்றே தன்னை நோக்கிப் பெருகி வருவதுபோல் அவனுக்குத் தெரிந்தது. இளங்குமரனுக்கு அருகில் வளநாடுடையாரும் நின்று அந்த ஓவியத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
அவ்வளவில், “ஐயா! இந்தக் குடும்பத்தின் புகழ் பெற்ற பல தலைமுறைகளுக்குப் பின்பு துன்ப மயமானதொரு தலைமுறை இந்தப் பெண்ணின் காதலிலிருந்து தொடங்குகிறது. இவளுடைய அழகு இந்தக் குடும்பத்தின் பெரிய இரத்தினமாக இருந்து சுடர் பரப்பியதென்று என் தந்தை எனக்கு அடிக்கடி கூறியிருக்கிறார். இந்த ஓவியத்திலிருக்கிற பெண் என் தந்தைக்கு உடன் பிறந்தவளாக வேண்டும். எனக்கும் அத்தை முறை” என்று குலபதி நாத் தழுதழுக்கச் சொன்னான். அவன் கண்களில் அப்போது நீர் பணித்திருந்தது. இளங்குமரனும் கண்கலங்கினான்.
“இந்த ஓவியத்தினால் உன் மனம் கலங்குகிறாற்போல் தோன்றுகிறதோ?” என இளங்குமரனைக் கேட்டார் வளநாடுடையார்.
“கலங்குகிறது. ஆனால் ஏன் கலங்குகிறதென்று தான் எனக்கே தெரியவில்லை” என்று சொல்லிவிட்டு மேலே நடந்தான் இளங்குமரன். இதன்பின் அந்த ஓவிய மாடத்தில் எஞ்சியிருந்த எல்லாப் பகுதிகளையும் பார்த்துவிட்டு வளநாடுடையாரை நோக்கி, “இன்று மாலையிலேயே மணிபல்லவத்திற்குக் கப்பல் புறப்பட்டுவிடும் என்று நாம் இறங்கி வந்தபோது கப்பல் தலைவன் கூறியிருந்தானே? இன்னும் சிறிது நேரத்தில் நாம் திரும்பிவிட வேண்டும் அல்லவா?” என்று கேட்டான் இளங்குமரன்.
“போகலாம் இளங்குமரா! போவதற்குமுன் குலபதியின் மாளிகையில் இன்னும் நாம் பார்க்க வேண்டிய இடம் ஒன்று எஞ்சியிருக்கிறது! இதுவரை ஓவியங்களில் வாழ்கின்ற இந்தக் குடும்பத்தின் பழம் தலைமுறையினரை யெல்லாம் பார்த்தாய்! இனிமேல் நீ பார்க்க வேண்டியவர் இந்தக் குடும்பத்தின் கண்கண்ட தெய்வத்தைப் போன்றவர். இந்தக் குடும்பத்தின் இரண்டு தலைமுறை மனிதர்கள் நன்றி செலுத்த வேண்டியவர்கள். அவரைப் பார்த்து விட்டுப் பின்பு நாம் புறப்படலாம்” என்றார் வளநாடுடையார்.
“அவர் எங்கிருக்கிறார்?” என்று குலபதியை நோக்கிக் கேட்டான் இளங்குமரன். உடனே, “இதோ அவர் இங்கேயேதான் இருக்கிறார்” என்று குலபதி அந்த மாடத்தின் ஒரு பகுதியில் போய்த் திறந்த கதவுக்கு அப்பால் மான்தோல் விரிப்பில் அமைதியாக வீற்றிருந்தவரைப் பார்த்தபோது இளங்குமரனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. திடீரென்று உலகமே விந்தை மயமாக மாறி மிக வேகமாகச் சுழல்வது போலிருந்தது அவனுக்கு.
“நான் இப்போது என் கண்களுக்கு முன்னால் யாரைக் காண்கிறேன் வளநாடுடையாரே?” என்று அவன் மருண்டுபோய் வினவினான். இந்தக் கேள்விக்கு வளநாடுடையார் மறுமொழி ஒன்றும் கூறாமல் புன்முறுவல் பூத்தார்.
ஆனால் இவ்வளவு வியப்புக்கும் காரணமாக உள்ளே அமர்ந்திருந்தவரே இதற்கு மறுமொழியும் கூறிவிட்டார்:
“இனிமேல் என்றுமே யாரைச் சந்திக்க முடியாதென்று சென்ற விநாடி வரை நினைத்து நம்பிக்கை இழந்து விட்டாயோ அவரைத்தான் நீ இப்போது சந்திக்கிறாய் குழந்தாய்!” என்று அருட்செல்வ முனிவரின் குரல் எதிரேயிருந்து ஒலித்தபோது, தாய்ப்பசுவின் குரலைக் கேட்டுப் பாயும் இளங்கன்று போல் அந்த அறைக்குள் தாவிப் பாய்ந்தான் இளங்குமரன். அந்த ஒரே கணத்தில் அவன் சிறு குழந்தையாகி விட்டான். “கவலைப்படாதே! இதுவரை நான் காரியத்திற்காக மட்டும்தான் செத்துப் போயிருந்தேன். உண்மையில் நான் செத்ததாக நீ கேட்டு நம்பிய பொய் நானே படைத்துப் பரப்பியதாகும்..” என்று சொல்லி அருள்நகை பூத்த வண்ணம் தன்னை நோக்கிப் பாய்ந்து வந்த அவனை எதிர்கொண்டு மார்புறத் தழுவிக் கொண்டார் அருட்செல்வ முனிவர்.
“இது என்னுடைய வாழ்க்கையில் மிக மிகப் பெரிய பாக்கியம் நிறைந்த நாள். மீண்டும் தங்களை இப்படி இந்தத் தோற்றத்தோடு இதே பிறவியில் சந்திக்கும் நாள் ஒன்று என் வாழ்வில் வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த நல்ல நாளுக்கு நான் நிறைந்த நன்றி செலுத்த வேண்டும்...” என்று கூறிவிட்டு மேலே பேசுவதற்குச் சொற்கள் பிறவாத பரவசத்தோடு அருட் செல்வ முனிவரை நோக்கிப் பயபக்தியால் நெகிழ்ந்து நின்றான் இளங்குமரன். அவருடைய கண்களிலிருந்து அவன் கண்கள் எதையோ தேடின.
“குழந்தாய்! வீரனுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய சாதனைகளுக்கு அப்பால் கூட முழுமையான பரவசம் வருவதில்லை. ஏனென்றால் இந்த உலகத்தில் அவன் தன்னுடைய வாழ்க்கையின் கடைசி விநாடி வரை சாதிக்க வேண்டிய காரியங்கள் மீதமிருக்கின்றன. தன்னுடைய வழியிலும் தன்னைச் சூழ்ந்துள்ள பிறருடைய வழிகளிலும் எதிர்த்துக் கிடக்கிற தடைகளைக் களைந்தெரிந்து நிமிர்கிற வரையில் க்ஷத்திரியனுடைய கைகள் ஓய்ந்திருக்கக் கூடாது. துன்பச் சுமைகளை எல்லாம் மெய்யாகவே களைந்து தீர்க்கிறவரை க்ஷத்திரியனுக்குச் சுயமான பெருமிதம் இல்லை. கற்பிக்கப்பட்ட ஒருமை நெறியிலிருந்து குறையாமல் நிறைந்த எல்லையில் நிற்பது பெண்ணுக்குக் கற்பாவது போல பெருமையையே தன் ஒழுக்கமாகக் கொண்டு நிற்பவன்தான் வீரன். குன்றவிடாத நிறைந்த பெருமைதான் வீரனுக்குக் கற்பு. ஒவ்வொரு மனிதனுடைய வழியிலும் உறவினர்களையும் நண்பர்களையும், வேண்டிய வர்களையும் கூடத் துணிந்து எதிர்க்க வேண்டிய குருக்ஷேத்திரப் போர் ஒன்று எப்போதாவது குறுக்கிடுகிறது. அப்போது சிறிய உறவுகளினால் தயங்கவோ, மயங்கவோ கூடாது!
“சில ஆண்டுகளுக்கு முன் பூம்புகாரின் சக்கரவாளத்துக் காட்டில் என்னுடைய தவச் சாலைக்குத் தீ வைக்கப்பட்டபோது அதில் நான் எரியுண்டு மாண்டு போகாமல் உயிரோடு தப்பி வந்துவிட்டேன் என்பது வீர சோழிய வளநாடுடையாருக்கு மட்டும்தான் தெரியும். அப்படித் தெரிந்திருந்தும் நான் இறந்து போய் விட்டதாகப் பொய் கூறி உன்னை அவர் ஏன் ஏமாற்றினார் என்று நீ இன்று மனம் கலங்கக் கூடாது. காலம் வருகிறவரை இந்த உண்மையைப் பரம இரகசியமாகக் காப்பாற்ற வேண்டும் என்று நான் இவரிடம் வாக்குப் பெற்றுக் கொண்டிருந்தேன். எனக்குக் கொடுத்த வாக்கை இவர் இறுதி வரை காப்பாற்றி விட்டார். ஆனால் நானும் இவரும் காரியத்திற்காகத் தீர்மானம் செய்து வைத்திருந்த காலத்தில் இது நடைபெறாமல் தவறிவிட்டது. நான் இங்கே புறப்பட்டு வந்து தங்கிய மறு ஆண்டில் வைகாசி விசாகத்தின் போதே உன்னை அழைத்துக் கொண்டு வீரசோழிய வளநாடுடையார் இங்கே வருவார் என்று எதிர்பார்த்தேன். நான் எதிர்பார்த்தபடி நடைபெறவில்லை. இவர் வந்து திருநாங்கூரில் உன்னை அழைத்தபோது நீயே வர மறுத்து விட்டாயாம். திருநாங்கூரடிகளும் உன்னை அனுப்புவதற்கு விரும்பவில்லையாம். சென்றமுறை இங்கு இவர் தனியே வந்தபோது திருநாங்கூர் அடிகளின் மேல் மிகவும் கோபத்தோடு வந்தார். நான்தான் இவரைச் சமாதானப் படுத்தினேன்.
“குழந்தாய்! எவ்வளவுதான் வளர்ந்து பெரியவனாகி விட்டாலும் இன்னும் நீ எனக்குக் குழந்தைதான்! நாளங்காடியில் மாபெரும் ஞான வீரர்களையெல்லாம் வென்று நீ ‘நாவலோ நாவல்’ என வெற்றி முழக்க மிட்ட புகழ்ச் செய்திகள் யாவற்றையும் வீரசோழிய வளநாடுடையார் அவ்வப்போது தக்கவர்கள் மூலமாக எனக்குச் சொல்லியனுப்பிக் கொண்டிருந்தார். அவற்றை யெல்லாம் கேள்வியுற்றபோது நாம் வளர்த்த பிள்ளை இப்படிப் புகழ் வளர்க்கும் பிள்ளையாகத்தானே வளர்ந்திருக்கிறதென்று எண்ணி எண்ணிப் பூரித்தேன் நான். ஆனால் நீ அடைய வேண்டிய மிகப் பெரிய வெற்றி இனிமேல்தான் இருக்கிறது. புகழுக்காக அடைகிற வெற்றிகள் என்றும் உனக்கு உரியவை. குடிப்பெருமையை நினை வூட்டுவதற்காக அடைகிற வெற்றிகளும் சில உண்டு” என்று அருட்செல்வர் சொல்லிக்கொண்டே வந்த போது, சொற்களிலும் கண்களிலும், அழுகை பொங்க உணர்வு நெகிழும் குரலில் இளங்குமரன் அவரை ஒரு கேள்வி கேட்டான்:
“எப்போது எந்தக் குடியில் பிறந்தோம் என்றே தெரியாமல் வாழ்கிறவனுடைய வாழ்க்கைக்கு நீங்கள் கூறுகிற வகையைச் சேர்ந்த வெற்றிகள் அவசியம் தானா?”
“இன்று நீ என் முன்னால் இப்படி அழக்கூடாது இளங்குமரா! உன் வாழ்க்கையில் இது சிறந்த நாள். இன்று நீ மிகவும் மகிழ்ச்சியாயிருக்க வேண்டும். கடைசியாக நீயும் நானும் ஒருவரையொருவர் வளநாடுடையார் இல்லத்தில் சந்தித்துக் கொண்ட பழைய இந்திரவிழா நாளில் இரவை நீ மறந்திருக்க மாட்டாய் என்றெண்ணுகிறேன். அன்று நீ என்னிடம் தாங்க முடியாத தவிப்போடு எந்தக் கேள்வியைக் கேட்டாயோ அதே கேள்வியைத்தான் இப்போது வேறு சொற்களில் வேறு விதமாக அடக்க முடியாத அழுகையோடு கேட்கிறாய்! அறிவும், தத்துவ ஞானங்களுங் கூட மனிதனுடைய மனத்தில் ஆணி வேர் விட்டுப் பதிந்துவிட்ட பழைய துக்கத்தைப் போக்க முடியுமா என்ற சந்தேகம் உன் நிலையைப் பார்த்ததும் எனக்கு உண்டாகிறது!”
“அப்படியில்லை ஐயா! துக்கங்களுக்காக வாய்விட்டுக் குமுறாமல் மனத்திலேயே அழுது விடுவது என் வழக்கம். ஆனால் இறந்து போனதாக நம்பிவிட்ட உங்களை மீண்டும் உயிரோடு பார்த்தபோது நான் குழந்தையாகி விட்டேன். உங்கள் பாவனையில் நான் என்றும் குழந்தையாக இருப்பதாகத்தானே நீங்களும் சற்று முன் கூறினர்கள்? உயிரோடு உங்களைக் கண்டதும் எனக்கு அழுகை வருகிறது. எல்லையற்ற ஆனந்தத்தின் விளைவு அழுகை என்றுதானே ஞானிகள் சொல்கிறார்கள்?”
“ஞானிகள் அப்படிச் சொல்லியிருக்கலாம்! ஆனால் இனிமேல் உன்னுடைய வாழ்க்கையில் அழுகைக்கு இட மில்லை குழந்தாய்! இந்தக் கணம் முதல் உன்னுடைய மனமாகிய தேர்த் தட்டில் நான் ஏறி நின்றுகொண்டு உன்னைச் செலுத்தி வழி நடத்திக் கொண்டு போக வேண்டிய காலம் வந்துவிட்டது. நீ மறுபடியும் கோபமும் குமுறலும், மானமும், கொதிப்பும் நிறைந்தவனாக மாறிக் கையில் வில்லை நாணேற்றிக் கொண்டு க்ஷத்திரியனாக நின்று என் வழியில் நடக்க வேண்டும்.”
“இப்படி ஒரு வேண்டுகோளை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை, சுவாமி! கப்பலில் வரும்போது மறைத்து மறைத்து இதே வேண்டுகோளைத்தான் வளநாடுடையாரும் என்னிடம் கூறினார். ‘மனத்தின் வலிமை தான் மெய்யான வீரம்’ என்று வாதாடிவிட்டு நான் மறுத்து விட்டேன். அதே வேண்டுகோளைத்தான் நீங்களும் இப்போது என்னிடம் கூறிகிறீர்கள்.”
“காரண காரியங்களோடுதான் இந்த வேண்டுகோளை விடுகிறேன் குழந்தாய்! உன் தாய், தந்தை, உற்றார், உறவினர், குடும்பம் எல்லாரும் அழிந்தொழிந்து சீர்கெட்ட கதையை உனக்கு நான் விளக்கும் காலம் வந்திருக்கிறது. அதைக் கேட்டுவிட்டு நீ என்முன் வெறும் கண்ணிர் சிந்துவதை மட்டும் நான் விரும்ப மாட்டேன். கேட்டவுடன் நீ க்ஷத்திரியனாக எழுந்து நிற்க முடியுமானால் நான் தயங்காமல் அவற்றை உனக்கு விளக்கலாம்” என்று ஆவேசத்தோடு கூறினார் முனிவர்.
தன் தாய் தந்தை உற்றார் உறவினர் எல்லாரும் அழிந்தொழிந்து காலமாகி விட்டார்கள் என்று அருட்செல்வ முனிவர் கூறிய தாங்க முடியாத அந்தத் துக்கச் செய்திக்காகக் கதறி அழுவதா, அல்லது ‘நீ அழுவதை நான் விரும்பவில்லை. நீ வீரனாக எழுந்து நிற்க வேண்டும்’ என்று அவர் கேட்கும் வேண்டுகோளுக்கு இணங்கி நிற்பதா என்று புரியாமல் மருண்டான் இளங்குமரன். ‘நெகிழ்ந்த உணர்ச்சிகளை எதிரேதிரே சந்திப்பதற்கு ஞானிகளாலும் கூட முடியாது’ எனக் கப்பலிலிருந்து இறங்கி வரும்போது வளநாடுடையார் கூறியிருந்த அநுபவம் நிறைந்த சொற்களை இப்போது மீண்டும் நினைக்கத் தோன்றியது அவனுக்கு. கண்களை இமையாமல் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த அருட்செல்வ முனிவரை நோக்கிக் கூறலானான் இளங்குமரன்:
“சுவாமீ! மதம் பிடித்த யானையைப் போல் என்னுடைய இந்த இரண்டு கைகளுக்கும் நான் எதிர்ப்பை தேடிக் கொண்டு திரிந்த காலத்தில் எந்தச் செய்தியை உங்களிடம் பலமுறை தூண்டித் தூண்டிக் கேட்டேனோ அதை அப்போது சொல்வதற்கு மறுத்தும் மறைத்தும் என்னை ஏமாற்றிவிட்டு, உணர்வுகளாலும், இலட்சியத் தாலும் நான் மாறிவிட்ட இந்தக் காலத்தில் இப்போது இப்படி அதைச் சொல்வதற்கு முன்வருகிறீர்களே?”
அருட்செல்வரிடம் இப்படி இந்தக் கேள்வியைக் கேட்டபோது கண்ணும் மனமும் கலங்கிய நிலையில் இளங்குமரன் வேதனைப் படுவதை அருகில் நின்ற வளநாடுடையாரும் குலபதியும் கவனித்தார்கள். இளங்குமரனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அருட்செல்வ முனிவர் தம்முடைய மறுமொழியால் போக்கினார். அந்த மறுமொழியை அவர் கூறும்போது அடக்கம் நிறைந்த அவருடைய இயல்பையும் மீறிக்கொண்டு அவர் பேசும் சொற்களில் கணத்திற்குக் கணம் ஆவேசம் வளர்வது புலப்பட்டது. தம்முடைய சொற்களின் மூலம் அவன் மனத்தில் ஏதோ ஒரு கனலைப் பற்ற வைப்பதற்கு முயன்றார் அவர்.
“இளங்குமரா! நீ உணர்ச்சி வசப்பட்ட விடலைப் பிள்ளையாகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் உன்னிடம் பல செய்திகளை நான் சொல்லாமல் மூடி மறைத்துக் கொண்டிருந்ததற்குக் காரணம் உண்டு. காவிரிப்பூம் பட்டினத்திலே நான் உன்னை வளர்த்து ஆளாக்கிய போது உன்னையும், என்னையும் அழித்து விடுவதற்கு ஒவ்வொரு கணமும் சூழ்ந்து கொண்டிருந்த பகைகளைப் பற்றி நீ அறிந்திருக்க மாட்டாய். அந்தக் காலத்தில் ஒற்றர்களைப் போல் உன்னையும், என்னையும் சுற்றித் திரிந்து கொண்டிருந்த பயங்கரமான மனிதர்களைப் பற்றியும் அறிந்திருக்க மாட்டாய். அப்படிப்பட்ட சூழ்நிலையில் உன் உயிரையும் காப்பாற்றி வளர்த்துக் கொண்டு என் உயிரையும் பகைவர்கள் பறித்துக்கொண்டு விடாமல் நான் வாழ்ந்த வாழ்க்கையை இப்போது நினைத்தாலும் எனக்கு மெய் சிலிர்க்கிறது. கடைசி கடைசியாக நான் எதற்குப் பயந்து கொண்டிருந்தேனோ அந்த விளைவே உன்னையும் என்னையும் மிக நெருக்கமாகச் சூழ்ந்தது. அப்போதுதான் நான் இந்தத் தந்திரத்தைச் செய்தேன். உன் எதிரிகளைப் பழி வாங்கி அவர்களிடமிருந்து நீ மீட்க வேண்டிய செல்வங்களை மீட்பதற்காக உன் உயிர் காப்பாற்றப்பட வேண்டும். உன்னுடைய குலப் பகைவர்கள் யார் என்பதைக் காலம் பார்த்து உனக்குச் சொல்லி உன்னைத் தூண்டுவதற்காக நானும் காப்பாற்றப்பட வேண்டும். நாம் இரண்டு பேருமே அந்த நோக்கத்திற்காக உயிரைக் காத்துக் கொண்டு வாழ்கிறோம் என்று நம்மை அழிக்க விரும்புகிறவர்களுக்குத் தெரிவதும் உடனடியாக இருவருக்கும் கெடுதலைத் தரும். இப்படித் தீர்மானமாகச் சிந்தித்த பின்புதான் நான் சிறிது காலம் இறந்து போய் விட முடிவு செய்தேன். இறப்பது என்றால் ‘எல்லை கடந்து போவது’ என்றும் ஓர் அர்த்தம் உண்டு அல்லவா? அந்தப் பொய்ச் செய்தியை உலகத்திற்குப் பரப்பிவிட்டு நான் பூம்புகாரின் எல்லையைக் கடந்து இங்கே வந்த போது வளநாடுடையாரிடம் முன்பு ஒப்படைத்துவிட்டு வந்த கடமையை அவரும் இன்றைக்கு இங்கே உன்னை அழைத்து வந்ததன் மூலம் நிறைவேற்றிவிட்டார். உன்னையும் என்னையும் காப்பாற்றிக் கொண்டு நான் சக்கரவாளக் கோட்டத்துத் தவச்சாலையில் வாழ்ந்தபோது வளநாடுடையாரும், ஆலமுற்றத்து நீலநாக மறவரும் பலவகையில் எனக்கு உதவியாயிருந்தார்கள். அப்படி அவர்கள் என்னிடம் அந்தரங்கமாகப் பழகியும் அவர்களிடம் கூடச் சில இரகசியங்களை நான் சொல்ல முடிந்ததில்லை. சூழ்நிலை அப்படியே என் வாயைப் பேசவிடாமல் அடக்கியிருந்தது.
“குழந்தாய்! நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்ட காரியமானாலும் அந்தக் காரியத்தைத் தொடங்குவதற்கு முன் இருள் தீர எண்ணித் தொடங்க வேண்டும். உனக்கு ஆவல் வந்த போது இந்தக் காரியத்தைச் செய்யக் காலம் வரவில்லை. இப்போது ஏற்ற காலம் வந்திருக்கிறது. ஆனால் உன் மனத்தில் மானமும், உணர்வுகளில் கொதிப்பும் வரவில்லை. தீக்கடையும் அரணிக்கோலில் கடைகிறவரை நெருப்பு ஒளிந்திருப்பதைப் போல க்ஷத்தியரியனுடைய மனத்தில் மானம் நிறைந்திருக்க வேண்டும். உராய்ந்து பார்க்கும் போது தீக்கடைக் கோலிலிருந்து நெருப்புப் பிறப்பதைப் போலத் தான் பிறந்த குடிக்கு உற்ற துன்பங்களை உணர நேரும்போதே வீரனுடைய நினைவுகளில் சூடு பிறக்க வேண்டும். சூழ்நிலையிலும், உணர்வுகளிலும் எவ்வளவுதான் அமைதியடைந்திருந்தாலும் நீ உன்னுடைய உள்ளக் கனலை ஒருபோதும் அவிய விட்டு விடக்கூடாது. தன்னுடைய பகைக் குலத்தின் கடைசி மூச்சுத் துடித்துக் கொண்டிருக்கிறவரை வீரனின் மனத்தில் கனல் நிறைந்திருக்க வேண்டும்” என்று கூறிக் கொண்டே வந்த முனிவரின் பேச்சில் இளங்குமரன் நடுவே குறுக்கிட்டான்:
“சுவாமீ! உங்களுடைய பேச்சின் ஆவேசத்தில் நான் இடையே குறுக்கிடுவதற்காகத் தாங்கள் என்னைப் பொறுத்தருள வேண்டும். நானோ என் எண்ணங்களில் திரு நிறைய வேண்டும் என்று இடைவிடாமல் பாவனை செய்து கொண்டு அமைதியில் மூழ்க ஆசைப்படுகிறேன். நீங்களோ ‘உன் மனத்தில் கனல் நிறைய வேண்டும்’ என்கிறீர்கள். மனத்தின் எல்லையில் அருளையும், சான்றாண்மையையும் நிறைத்துக் கொண்டு நான் கருணை மறவனாக வாழ ஆசைப்படுகிறேன். நீங்களோ, கொடுமை மறவனாக என்னை, வில்லும் வாளும் எடுத்துக் கொண்டு உங்கள் வழியில் எழுந்து நிற்கச் சொல்லுகிறீர்கள்.”
“அப்படி எழுந்து நிற்க நீ கடமைப் பட்டிருக்கிறாய்! அதோ அந்த ஓவிய மாடத்தைப் பார். அந்த ஓவியங்களில் உயிரற்று வாழ்கிறவர்களுக்கும், உயிரோடு வாழ்கிற உனக்கும் என்ன வேறுபாடு? உன்னுடைய உடம்பில் இரத்தம் ஒடுகிறது. அது வீரக்குடியின் புகழ்பெற்ற குருதி. இன்று உன் குடும்பத்துக்கு நீ பயன்பட வேண்டிய காலமும் வந்துவிட்டது.
‘பொருள்கருவி காலம்வினை இடனோ(டு) ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.’
என்று செயலுக்கு இலக்கணம் கூறியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். நம்மைச் சூழ்ந்திருந்த இருள் தீர்ந்து விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் சம்பாபதி வனத்து நாவல் மரத்தடியில் இந்திர விழாவின் முதல் நாள் இரவு உன் தாயை உனக்கு காண்பிப்பதாக நான் கூறியிருந்தேனல்லவா? அதற்கு முன்பே இரண்டொரு இந்திர விழாக்களின் போது அப்படிக் கூறி உன்னை ஏமாற்றி ஏங்க வைத்தேன். அப்போதெல்லாம் நீ என்மேல் கோபப்பட்டிருப்பாய். ஆனால் உண்மை என்ன தெரியுமா? நீ வளர்ந்து பெரியவனாவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே உன்னுடைய தந்தையும் தாயும் இந்த உலகத்தை விட்டுப் போய்விட்டார்கள். நீ பெரியவனான பின்பு உன்னிடம் சொல்வதற்காக என்னிடம் உன் தாய் கூறி விட்டுப் போன செய்தி ஒன்று உண்டு. அது வேறொன்றுமில்லை, உன் தந்தையும் தாயும் அழிந்து போகக் காரணமாயிருந்தவர்களை நீ உன் கைகளால் பழிவாங்க வேண்டு மென்ற கட்டளைதான் அது. அதை இவ்வளவு காலங்கடந்து உன்னிடம் சொல்வதற்காக நீ என்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் கொடுமை நிறைந்த செய்திகளைக் கேட்டு நீ ஏங்கி நலிந்து வளர்ச்சி குன்றலாகாதே என்பதற்காகச் சிறிது காலம் அவற்றை நீ அறிந்து விடாமல் மறைத்தேன். நீ வலிமையோடு உணர்ச்சி வசப்பட்டு நின்ற காலத்தில் அந்த உணர்ச்சி வேகத்தினாலேயே எல்லாத் திட்டமும் கெட்டுப் போகுமோ என்றும் சிறிது காலம் அவற்றை உன்னிடமிருந்து மறைத்தேன். அப்படி மறைத்த தெல்லாம்கூட உன்னுடைய நன்மைக்காகத்தான். கடைசியாக, உன்னைச் சம்பாபதி வனத்திற்கு வரச் சொல்லி அங்கு உன் தாயைக் காண்பிப்பதாகக் கூறியிருந்தேனே - அன்று நான் உனக்குக் காட்ட நினைத்திருந்தது உன் தாயின் அருமையான ஓவியத்தையும், அவள் இறந்து போன இடத்தையும்தான். அவற்றை நீ பார்த்துவிட்டு உண்மையைப் புரிந்துகொண்டு ஆவேசமாயிருக்கும் சமயத்தில் இன்று உன்னுடைய உள்ளத்தில் நான் மூட்டுவதற்கு முயன்று கொண்டிருக்கிற இதே கனலை அன்றே மூட்டி விட விரும்பியிருந்தேன். ஆனால் அன்றிரவில் நான் எதிர்பார்த்தபடி எதுவுமே நடக்கவில்லை. உன் தாயின் ஓவியம் ஒன்றும் அவள் சாவதற்கு முன்பு அணிந்திருந்த விலை வரம்பற்ற அணிகலன்கள் பலவும் நீ இன்ன குடியிலே இன்னாருக்கு மகனாகத் தோன்றியவன் என்பதை நினைவூட்டும் அடையாள மாலை ஒன்றும் பூம்புகாரில் ஓரிடத்தில் ஒரு கொடிய மனிதருடைய பாதுகாப்பில் ஒளிக்கப்பட்டுக் கிடக்கின்றன. அவை தன்னிடத்தில் ஒளிக்கப்பட்டுக் கிடப்பதை நான் ஒருவன் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறேன் என்பதும் அந்தக் கொடியவனுக்குத் தெரியும். உனக்கு நினைவு தெரிந்து நான் உன்னுடைய வளர்ப்புத் தந்தையே தவிர உன்னைப் பெற்ற தந்தையில்லை என்பதையும் நீ அறிந்துகொண்ட பின் உன் பெற்றோரைப் பற்றி என்னிடம் கேட்ட போதெல்லாம் நான் அந்தக் கொடியவனிடம் போய் இரகசியமாக அவனைச் சந்தித்து உன் தாயின் ஓவியத்தையும் பிற பொருள்களையும் என்னிடம் கொடுத்து விடுமாறு உன் சார்பாக மன்றாடிய போதெல்லாம் அவன் என் வேண்டு கோளுக்குச் சிறிதும் செவிசாய்க்கவில்லை. என்னை அலட்சியப்படுத்தினான். ஏளனம் செய்தான். பயமுறுத்தினான்.
“இறுதி முறையாக நீயும் நானும் பிரிவதற்கு முந்திய இந்திர விழாவன்று முதல் நாள் காலையிலும் அந்தக் கொடியவனைச் சந்தித்து மன்றாடினேன். ‘இன்று நடு இரவுக்கு மேல் சம்பாபதி வனத்து நாவல் மரத்தடியில் காத்திருந்தால் அவற்றை என் பணியாட்கள் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுவார்கள்’ என்று உறுதி கூறி அன்று என்னைத் திரும்பி அனுப்பியிருந்தான் அந்தக் கொடியவன். அன்றிரவு அனுப்பிய பணியாட்கள் செய்ய வந்த பணி என்ன தெரியுமா? சம்பாபதி வனத்துப் புதரில் வைத்து உன்னையும் என்னையும் கொன்று விட முயன்ற பணிதான். தெய்வ சித்தத்தால் அன்று நீயும் நானும் உயிர் தப்பி விட்டோம். அதன் பின்புதான் நான் அதிகமான விழிப்பையும் கவனத்தையும் அடைந்தேன். என் மனத்தில் இடைவிடாமல் சிந்தித்து இப்படி மிகவும் தந்திரமாகத் திட்டமிட்டேன்.
“வளநாடுடையாரின் இல்லத்திலிருந்து வெளியேறி நானே என்னுடைய தவச் சாலைக்குத் தீ வைத்து விட்டு நகரில் நான் இறந்து போனதாகப் பொய்ச் செய்தியைப் பரப்பிய பின் இந்தத் தீவுக்குப் புறப்பட்டு விடலாம் என்றும் அப்படி புறப்படு முன் நீலநாகரிடமோ வள நாடுடையாரிடமோ மட்டும் உண்மையைக் கூறிக் காலம் வருகிறவரை அந்த உண்மையை அவர்கள் வெளியிடக் கூடாதென்று வாக்கும் வாங்கிக் கொண்டு விடவேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தேன். இந்த எண்ணத்தோடு நான் வளநாடுடையாரின் வீட்டிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் இரகசியமாக வெளியேறிச் சக்கரவாளத்துக்குள் நுழைந்த போது வன்னி மன்றத்திற்குப் போகிற வழியில் ஒரு புதரருகே நமக்கு ஆகாதவர்களின் பேச்சுக் குரல் கேட்டு நின்று கவனித்தேன். முதல் நாள் இரவு சம்பாபதி வனத்து நாவல் மரத்தடியில் நம்மைக் கொன்று விட முயன்றவர்களே இந்திர விழாவின் இரண்டாம் நாளாகிய மறுநாளன்று இருள் மயங்கும் மாலையில் என் தவச்சாலைக்குத் தீ வைத்துவிடத் திட்டமிட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது, எதைச் செய்வதற்காக நான் போலியாய்த் திட்டமிட்டுக் கொண்டிருந்தேனோ அதை மெய்யாகவே செய்வதற்குத் திட்டமிடுகிறவர்களைப் பற்றி அறிந்தபின் எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. அவர்கள் வைக்கிற நெருப்பில் சிக்கி அழிந்தது போலத் தோன்றும்படி பொய் செய்துவிட்டு நான் யாரும் அறியாமல் தப்பி வளநாடுடையாரைச் சந்தித்து அவரிடம் கூறவேண்டியதைக் கூறிய பின் இரவோடிரவாகப் புறப்பட்டு இந்தத் தீவுக்குப் பயணத்தைத் தொடங்கிவிடுவதென்று இருந்தேன். எல்லாம் அப்படியே நடந்தது. ‘இருட்டியபின் நகர் அரவம் அடங்கி ஓய்கிறவரை சுடுகாட்டுக் கோட்டத்தின் பாழடைந்த காளிகோயிலில் மறைந்திருந்து விட்டு அப்புறம் வளநாடுடையாரைச் சந்திக்கப் போகலாம்’ என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் தற்செயலாக வளநாடுடையார் நான் ஒளிந்திருந்த அந்த இடத்துக்கே வந்து என்னைச் சந்திக்கும்படி நேர்ந்துவிட்டது. நானும் அவரும் பேச வேண்டியவற்றையெல்லாம் எங்களுக்குள் பேசிக் கொண்டு விட்டோம்.
“அன்று பின்னிரவு நேரத்தில் பூம்புகார்த் துறையில் நான் இந்தத் தீவுக்குக் கப்பலேறு முன்பு வளநாடுடையாரிடம் உன்னைப்பற்றிக் கூறிய சொற்கள் எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கின்றன. ‘அந்தப் பிள்ளையின் தன்னம்பிக்கை அவனைக் காப்பாற்றும். தன்னைப் பிறர் வெற்றி கொள்ள விடாமல் தானே பிறரை வெற்றி கொள்ளும் மனம் அவனுக்கு இருக்கிறது. உலகத்தில் மிகப் பெரிய செல்வம் இப்படிப்பட்ட மனம்தான். இந்த மனம் உள்ளவர்கள் உடம்பினால் தோற்றுப் போனாலும் உள்ளத்தினால் வெற்றி பெறுவார்கள்!’ என்று உன்னைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அன்று அப்படிச் சொல்லிய நானே இன்று நீ உடம்பினாலும் தோற்றுப் போகக் கூடாதென்று கருதுகிறேன். நான் நீண்ட காலமாக உனக்குக் காண்பிப்பதாகச் சொல்லியிருந்த உன் தாயின் உருவத்தை இன்று நீயே இந்த ஓவிய மாடத்தில் பார்த்து விட்டாய். ஒருவேளை இங்கு நீ பார்த்த ஓவியங்களில் எது உன்னுடைய தாயின் ஓவியம் என்று புரியாமலே அதை உன் கண்கள் பார்த்திருக்கலாம். என்னுடன் மறுபடியும் வா! இப்போதே உனக்கு மீண்டும் அந்தப் புண்ணிய வதியைக் காண்பிக்கிறேன்” என்று பூப்போல மென்மையாயிருந்த அவன் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு போய் ஓவிய மாடத்திலே ஓரிடத்தில் அவனை நிறுத்தி வைத்தார்.
இத்தனை காலமாகத் தன்னைப் பெற்றவளைக் காண வேண்டுமென்று நிலைத்த ஏக்கமாக அடிமனத்தில் அழுந்திப் போயிருந்த இணையில்லாத பேருணர்வு இன்று இந்த ஒரே ஒரு கணத்தில் விசுவரூபமாய்ப் பெருகி மனத்தின் எல்லையெல்லாம் வியாபித்து நிற்க, இந்த ஒரு கணத்துக்காகவே இத்தனை நாளும் காத்துக் கொண்டிருந்ததைப் போலப் பரிவு பெருக இளங்குமரன் கண் மலர்ந்தான். எதிரே பார்த்தான். அந்தக் கணத்தை வாழ்த்தினான். அந்தக் கணத்துக்காகவே வாழ்ந்து கொண்டி ருந்ததைப் போலவே வாழ்த்தினான். அது அவன் சற்று முன்பு பார்த்திருந்த ஓவியம்தான்.
எந்த ஓவியத்தின் கண்களிலிருந்து நவரசங்களுக்குப் பதில் கருணை ஒன்றே பெருகி அவன் உள் உணர்வுகளை அன்பு வெள்ளத்தில் நனைத்ததோ, அதே ஓவியத்தை நோக்கி இப்போது அவனுடைய கண்களிலிருந்தும் கருணை பெருகிச் சுரந்து முதலில் பெருகிய கருணையோடு கலப்பதற்கு முந்துவதுபோலத் தவித்தது. காலத்தின் இயக்கத்தையே தடுத்து நிறுத்தி ஓடாமற் செய்துவிட்டாற் போன்ற நித்தியமான விநாடிகளாயிருந்தன அவை. யார் யாரோ தன்னிடமிருந்து பெற்றுக்கொண்டு மகிழத் தவித்த அன்பையெல்லாம் அப்படித் தவித்தவர்களுக்கு அளிக்காமல் இந்த ஒற்றைக் கணத்துக்காகவே தான் சேர்த்துக் கொண்டு வந்ததுபோல் தோன்றியது அவனுக்கு. அப்போது அவனுக்கு ஏற்பட்டிருந்த பெருமிதத்திற்கு ஓர் அளவே இல்லை.
‘என்னுடைய தாய் தன் காலத்தில் தனது தலைமுறையிலேயே பேரழகு வாய்ந்தவளாக வாழ்ந்திருக்க வேண்டும். என்னுடைய தாயின் கண் பார்வையிலிருந்து தான் நவரசங்களுமே பிறந்ததாக யாரோ கவியுணர்வு உள்ளவர்கள் இந்த ஓவியத்தின் கீழுள்ள ஏட்டில் எழுதி யிருக்கிறார்கள். இந்த எழில் வாய்ந்த தாயின் கைகளில் நான் ஏதோ ஒரு காலத்தில் என் பிஞ்சுக் கால்களை உதைத்துக் கொண்டு மெல்லத் தவழ்ந்திருக்கிறேன். இந்த எழில் வாய்ந்த தாயின் கண்கள் பார்த்துப் பார்த்துப் பெருமைப்படும்படியாக நான் இவளுக்குக் குழந்தையா யிருந்திருக்கிறேன்’ என்று நினைத்துக் கொண்டே கண்களில் நீர் மல்க நின்ற அவனுக்குத் தன் தாயோடு தொடர்பு டைய வேறொரு ஞாபகமும் அப்போது வந்தது.
“நீங்கள் சான்றாண்மையாளராகப் புகழ் பெற்று நிற்பதை உங்கள் தாய் கண்டால் உங்களை ஈன்ற போதினும் பெருமகிழ்ச்சி அடைவாள்” என்று திருநாங்கூர்ப் பூம்பொழிலில் ஏதோ ஒரு நாள் காலை விசாகை கூறிய வார்த்தைகள் இந்தக் கணத்தில் அவனுக்கு நினைவு வந்தன. அத்தகைய பெரும் பாக்கியத்தைத் தன்னுடைய தாய்க்குத் தான் அளிக்க முடியாமல் போய்விட்டதை எண்ணியபோது மனத்தில் பொறுத்துக் கொள்ள முடியாத வேதனையை அடைந்தான் அவன்.
‘உன் மனத்தின் வலிமையை வளர்த்துக் கொள்வதற்கு நீ என்ன கற்றிருக்கிறாய்?’ என்று பல நாட்களுக்கு முன்பு இந்திர விகாரத்துத் துறவி தன்னைக் கேட்டபோது அவனது உள் மனத்திலிருந்து விழித்துப் பார்த்த அகக் கண் எதுவோ அந்த அகக் கண்ணிலேயே அவலம் கலங்கித் துயரம் மலிந்து கொண்டிருந்தது இப்போது.
“இவர் உன் தந்தை! இவரும் இப்போது இந்த உலகத்தில் இல்லை” என்று அந்த ஓவியத்தில் இருந்த வீர ஆடவரைச் சுட்டிக் காண்பித்தார் அருட்செல்வ முனிவர். அந்த ஓவியத்தைத் தன் கண்களால் பார்த்த முதல் கணத்திலேயே அதிலுள்ள காதலர்களை உமையாகவும், சிவனாகவும் பக்தி பாவித்துக் கொண்டு வணங்க வேண்டும் போலத் தனக்குத் தோன்றிய உணர்வை மீண்டும் இப்போது இளங்குமரன் எண்ணினான். இப்படி எண்ணிய போது தன்னுடைய அகக்கண் இன்னும் நன்றாக மலர்ந்து அங்கே ஆன்மாவின் உணர்ச்சிக்கு மட்டுமே புலப்படக் கூடியதொரு துக்க மயமான சுக விளைவு பெருகுவதை இளங்குமரன் அனுபவித்தான். அந்தப் பரிபூரணமான அநுபவத்தில் அவன் மெய்மறந்து நின்ற போது வளநாடுடையார் அவன் அருகில் வந்து கூறலானார்:
“குலபதி உன்னுடைய தாய்மாமன் மகன் என்பதை இப்போது நீயாகவே புரிந்து கொண்டிருக்கலாம் இளங்குமரா! இந்தப் படத்திலிருக்கிற பெண் தன் தந்தையோடு உடன் பிறந்தவள் என்று சிறிது நேரத்துக்கு முன் குலபதியே உன்னிடம் கூறியிருந்ததை மறுபடியும் நீ இப்போதும் நினைத்துக்கொள். இந்தக் குடும்பத்தின் புகழை உலகத்துக்குச் சொல்ல வேண்டிய சக்தி ஒன்று இதிலிருந்து தவறி எப்படியோ எங்கோ வெளியேறிப் போய்விட்டது! அதை மறுபடியும் கண்டுபிடித்து இங்கே சேர்க்கிற வரை எனக்கு இவ்வளவு செல்வமிருந்தும் நான் மனத்தினால் ஏழைதான் என்று இந்த ஓவிய மாடத்துக்குள்ளே நீ நுழைந்த போது உன்னிடம் குலபதி வருத்தப்பட்டது யாருக்காகத் தெரியுமோ? உனக்காகத்தான்! நீதான் இந்தக் குடும்பத்தின் பெருமையைக் காப்பாற்றப் போகிற சக்தி என்று குலபதியும் அருட்செல்வ முனிவரும், நானும் எல்லோருமே நம்பிக் கொண்டிருக்கிறோம். அந்த நம்பிக்கைதான் சாவதற்கு முந்திய விநாடியில் உன் தாயின் மனத்திலும் தோன்றியிருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. நீதான் எங்களுடைய நம்பிக்கைகளைக் காப்பாற்ற வேண்டும்.”
“ஐயா! இந்த உறவுகளையும் பற்றுதல்களையும் புரிந்து கொள்ளும் போதில் எனக்குப் பெருமையாக இருப்பதைப் போலவே தயக்கமாகவும் இருக்கிறது. இந்த உறவுகளை அங்கீகரித்துக் கொள்வதன் மூலமாகவே நான் வேறெந்த மனிதர்கள் மேலாவது உறவு மாறி வைரமும் பகைமையும் கொள்ள நேருமோ என்று எண்ணிக் கலங்குகிறேன்.”
“இனிமேல் கலங்கிப் பயனில்லை குழந்தாய்! இதோ இந்தச் சுவடிகளைப் பார். சக்கரவாளக் கோட்டத்துத் தவச்சாலையில் வசிக்கும்போது இவற்றை என் கையில் வைத்து நான் எழுத்தாணியால் கீறிக்கொண்டிருந்த பல சந்தர்ப்பங்களில் நீ இவற்றையும் என்னையும் சேர்த்துப் பார்த்திருக்கிறாய். ஆனால் அப்போதெல்லாம் இவற்றில் நான் எழுதிக் கொண்டிருப்பது என்னவாக இருக்கும் என்று அறியும் ஆவல் உனக்கு ஏற்பட்டதில்லை. நான் ஏதாவது பழைய நூல்களுக்கு உரையெழுதிக் கொண்டிருப்பதாக நீ நினைத்திருக்கலாம். ஆனால் இன்று இவற்றைப் படிக்கச் சொல்லி நானே உன்னைத் தூண்ட வேண்டிய நிலையில் பொறுப்புடையவனாக இருக்கிறேன். உன்னுடைய புகழ் வாய்ந்த குடிக்குத் துன்பம் நேர்ந்த சோக வரலாறு இந்தச் சுவடிகளில் அடங்கியிருக்கிறது. இதை நீ படித்து உணரும்போது உன் குடிக்குக் கேடு சூழ்ந்தவர்கள் யாரோ அவர்கள் மேல் நீ கோபமும் கொதிப்பும் அடைந்து தான் ஆகவேண்டும். நெருப்பையும் சந்தனத்தையும் ஒரே உணர்ச்சியோடு உடம்பில் தாங்கிக் கொள்கிற அளவு சாந்த குணத்தின் உயரமான எல்லையில் போய் நிற்கிறவனாகவே இருந்தாலும் இந்த ஏடுகள் கூறும் உண்மைகளைப் படிக்கும்போது உன் இரத்தம் சூடேறிக் கொதிக்கத் தான் செய்யும். அதை உன்னால் தவிர்க்க முடியாது. நீ தவிர்க்கவும் கூடாது.”
“அப்படிக் கொடிய அநுபவம் எனக்கு ஏற்படத்தான் வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்களா?”
“உன் தாயே அப்படித்தான் நினைத்தாள்; சொன்னாள். அவள் இன்று உயிருடன் இல்லாத காரணத்தால் அவள் மனம் எந்தக் காரியத்தை நீ செய்து நிறைவேற்றுவாய் என்று நம்பிக்கொண்டே அழிந்து இறந்ததோ, அந்தக் காரியத்தை உனக்கு நினைவூட்டும் பொறுப்பை நானே மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.”
“உங்களை நான் மறப்பதற்கில்லை. உங்களுக்கு நான் நிறையக் கடமைப் பட்டிருக்கிறேன். அதோ அந்த மாடத்திற்கு அப்பால் பேரொளிப் பக்கமாகிய சுக்கிர பட்சத்து நிலா எழுந்துவிட்டது. இந்த ஏடுகளை நாளை இதே வேளைக்குப் படிக்கிறேன். நான் இன்று இந்த வேளைக்கும் நாளை இதே வேளைக்கும் நடுவிலுள்ள ஒரே நாளை மட்டும் என் விருப்பம் போல் செலவழிக்க எனக்குப் பிச்சை கொடுத்தருளுங்கள்” என்று அருட்செல்வ முனிவருடைய கால்களில் வீழ்ந்து வணங்கியபடியே மன்றாடினான் இளங்குமரன். அவனுடைய பவித்திரமான கண்களிலிருந்து பெருகிய கருணை நீர்ப் பெருக்கில் அவருடைய தளர்ந்த பாதங்கள் நனைந்தன. அவர் அவனை நோக்கிக் கேட்டார்:
“பல நாட்களாகத் தீர்க்க வேண்டிய பழி சுமந்து கிடக்கும் போது இந்த ஒரே ஒரு நாளை என்னிடமிருந்து பிச்சை கேட்டு வாங்கிக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்?”
“வாழ்க்கைத் துன்பங்களுக்கு வேறு விதமான மருந்து காண வேண்டுமென்ற தாகம் ஒரு நாளில் ஏதோ ஒரு விநாடியில் தான் புத்தருக்கு உண்டாகியிருக்க வேண்டும். அந்தப் புனித ஞாயிறு பிறந்த ஒளி நாளைக்குப் பரவ இருக்கிறது. நாளைக்குக் காலையில் நான் மணிபல்லவத்துக்கு வருவதாக விசாகையிடம் சொல்லியிருக்கிறேன். நாளைக்கு ஒருநாள் மட்டுமாவது என்னைக் கோபமும் கொதிப்பும் அடையவிடாமல் என் போக்கில் வாழ அனுமதி தந்தருளுங்கள். நாளைக்கு இரவில் இதே நிலா உச்சி வானத்தை அடைவதற்குள் நான் மறுபடி இங்கே திரும்பி வந்து விடுகிறேன். அதன் பின்பு என்னை எந்த வழியில் நடத்த வேண்டுமோ அந்த வழியில் நீங்கள் நடத்திக் கொண்டு போகலாம். நாளைக்கு மறுநாள் பொழுது புலர்வதற்குள் என்னுடைய குடியின் வரலாறுகளெல்லாம் அடங்கிய இந்தச் சுவடிகளை நான் படித்து முடித்து விடுவேன். என் அறிவின் வலிமையால் இந்தச் சுவடிகளை நான் படிக்கும்போது என் மனம் யார் மேல் வைரமும் பகையையும் கொள்ள முடியுமோ, அவர்களைக் கூடப் பொறுத்து நிற்க நான் முயல்வேன்.”
“அப்படிப் பொறுத்து நிற்பதற்கு நீ முயலக் கூடாது குழந்தாய்! கோபத்தில் இரண்டு வகை இருக்கிறது. சீற்றம் என்பது ஒன்று. செற்றம் என்பதும் ஒன்று. சீற்றம் என்பது கோபம் விளைய வேண்டிய நிகழ்ச்சி நிகழ்ந்த உடனே தோன்றித் தீர்ந்த உடனே தீர்ந்து போகிற கோபம். செற்றம் என்பது மனத்தினுள்ளேயே நெடுங் காலமாக நிகழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கிற கோபம். நீ உன் எதிரிகள் மேல் அடைய வேண்டிய கோபம் இரண்டாவது வகையைச் சேர்ந்தது. அந்தக் கோபத்தை இன்னும் ஒருநாள் தாமத மாகத்தான் அடைய வேண்டும் என்று நீ விரும்பினால் அதற்கு நான் குறுக்கே நிற்கவில்லை. உன் விருப்பப்படியே வளநாடுடையாரையும் உடன் அழைத்துக் கொண்டு நீ புத்த பூர்ணிமைக்குப் போய்விட்டு வா. ஆனால் எனக்கு நீ வாக்குக் கொடுத்திருப்பதை மறந்து விடாதே. இதே இடத்தில் தீபத்தையும் சுவடிகளையும் வைத்துக் கொண்டு நாளைக்கு இரவு உனக்காக நான் காத்திருப்பேன்” என்று கூறி அவன் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்தார் அருட்செல்வ முனிவர்.
குலபதி அவர்களை வழியனுப்புவதற்குச் சங்கு வேலித்துறை வரை உடன் வந்திருந்தான். அவர்கள் பூம்புகாரிலிருந்து புறப்பட்டு வந்திருந்த பழைய கப்பல் மாலையிலேயே மணிபல்லவத்துக்குப் புறப்பட்டுப் போயிருந்தது. மணிமார்பனும் அவன் மனைவி பதுமையும் மாலையில் அந்தக் கப்பலிலேயே புறப்பட்டுப் போயிருக்க வேண்டுமென்றும் தோன்றியது. சங்குவேலித் துறையிலிருந்து மணிபல்லவத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த கீழை நாட்டு வாணிகக் கப்பல் ஒன்றில் இளங்குமரனும் வளநாடுடையாரும் இடம் பெற்றுக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.
“ஐயா! நாளைக்கு நிலாப் புறப்படும் நேரத்திற்கே நான் இந்தத் துறையில் வந்து உங்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பேன். உங்கள் ஓவிய நண்பரையும் திரும்பி வரும்போது இங்கே உடனழைத்து வந்து விடுங்கள்” என்று விடை பெறும்போது குலபதி மனம் நெகிழ்ந்து கூறினான். அவனுடைய வார்த்தைகளில் இப்போது உறவின் நெருக்கமும், உரிமையும் கலந்து தொனித்தன.
“அதைப் பற்றியெல்லாம் நீ ஒன்றும் கவலைப்படாதே குலபதி! நான் ஒருவன் துணையாகக் கூடச் செல்லும் போது இளங்குமரனைத் திரும்ப அழைத்து வருவது பற்றி உனக்குச் சந்தேகம் ஏற்படவே வழியில்லை” என்று உறுதி கூறினார் வளநாடுடையார். வெள்ளி வெண்குடம் போல் நிலா மிதக்கும் வானத்தின் கீழே கடலில் பயணம் செய்யும் அந்த அழகிய வேளையில் இளங்குமரனுடைய புறக் கண்கள் தாம் கப்பலையும், கடலையும் உடன் இருந்தவர்களையும் வானத்து நிலாவையும் பார்த்துக் கொண்டிருந்தன. புறக்கண்களை விட ஆற்றல் வாய்ந்த அவனது அகக்கண்ணோ மணிநாகபுரத்தின் ஓவிய மாடத்தில் பார்த்த தன் தாயையும் தந்தையையும் மறுபடி மறுபடி தன்னுடைய மனத்திற்குள்ளேயே உயிருருவமாகக் கற்பித்துப் பார்த்து மானசீகமாக அவர்களைப் பலமுறை வணங்கிக் கொண்டிருந்தது.
மணிநாகபுரத்திலிருந்து புறப்பட்டிருந்த கப்பல் ஒன்றரை நாழிகைப் பயணத்தில் மணிபல்லவத் தீவை அடைந்து விட்டது. மணிநாகபுரமும், மணிபல்லவமும் வேறு வேறு இடங்கள் என்று பிரித்துச் சொல்ல முடியாதபடி மிக அருகிலேயே இருந்தன. மணிநாகபுரத்து நகர எல்லை முடிகிற கோடியில் ஒரு சிறிய நீர்ச் சந்திதான் மணிபல்லவத்தைத் தனியே பிரித்தது. நீண்ட தொலைவிலிருந்து வருகிற பிறநாட்டு மக்கள் மணிநாகபுரம் சங்குவேலி, பெருந்தீவு, மணிபல்லவம் எல்லாப் பிரிவுகளையும் நாகநாடு என்ற ஒரே தொகுதியாக எண்ணிப் புண்ணியப் பெயராகிய மணிபல்லவம் என்பதனாலேயே அதனை அழைத்து வந்தனர். கடலில் மிதக்கும் மரகதப் பசுந்தளிராக நிலாக் கதிர்களின் கீழ் அந்தத் தீவு புண்ணியப் பயன்களெல்லாம் ஒன்றுபட்டு மிதப்பது போலத் தெய்வ நகரமாய்த் தெரிந்தது. இளங்குமரனும், வளநாடுடையாரும் மணிபல்லவத் தீவின் மேற்கு கரையில் இருந்த இறங்குத் துறையில் இறங்கிப் பகல் நேரமே போலக் கலகலப்பாக இருந்த வழியே நடந்தனர். வீதி நிறையப் பெளத்த சமயத் துறவிகளும், வேறு பல சமயங்களைச் சேர்ந்த ஞானிகளும், சீவர ஆடையணிந்த பெண் துறவிகளுமாக எங்கு நோக்கினும் ஒளி நிறைந்த முகங்களாகத் தென்பட்டனர். தீவே மணப்பது போல அகிற் புகையும், கற்பூரமும், நறுமண மலர்களும் சந்தனமும் மணந்தன.
கோமுகி என்னும் தாமரைப் பொய்கைக் கரையில் பெரிய பெரிய கல் தூண்களில் அமைந்த தீப அகல்களில் பந்தம் எரிப்பது போல் நெய்யூற்றப் பெற்றுப் பெரிதாய் எரிந்து கொண்டிருந்த விளக்கு சுடர்களில் கீழே பாலி மொழியில் எழுதப் பெற்ற புனித கிரந்தங்களைத் துறவிகள் உரத்த குரலில் படித்துக் கொண்டிருந்தனர். அவர்களைச் சுற்றிலும் பெருங்கூட்டம் நின்று கேட்டுக் கொண்டிருந்தது. மற்றொரு புறம் பெளத்த சமயக் காப்பியங்களை விளக்கும் நாடகங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருந்தனர். பெளத்த சமயத்து வழிபாடும் தானங்களாகிய விகாரைகளில் எல்லாம் தீபாலங்காரம் செய்திருந்தார்கள். நோக்குமிடமெல்லாம் தாமரைப் பூக்கள் அம்பாரம் அம்பாரமாகக் குவிக்கப்பட்டிருந்தன.
நாக நாட்டின் இரத்தினத் தீவு என்று பெயர் பெற்ற அந்தப் பெரும் தீவுப் பகுதிகளின் அழகெல்லாம் இன்று இந்தப் புண்ணிய நகரத்திற்கே தனியாக வந்து பொருந்தி விட்டாற்போல் தோன்றியது. மணிபல்லவத் தீவில் கோமுகிப் பொய்கையின் கரையைச் சுற்றிக்கொண்டே, வளநாடுடையாரோடு வந்தபோது விசாகை, ஓவியன் மணிமார்பன், அவன் மனைவி பதுமை எல்லாரையும் இளங்குமரன் அங்கே சந்திக்க நேர்ந்தது. ஒரு பெரிய கூட்டத்திற்கு நடுவே அமர்ந்து போதிமாதவர் படைத்தருளிய திரிபிடக நெறியை விசாகை விவரித்துச் சொற் பொழிவு செய்து கொண்டிருந்தாள். விசாகைக்கு அருகில் அவளைச் சூழ்ந்தாற்போல ஓவியனும் அவன் மனைவியும் அமர்ந்திருந்தார்கள். தானும் வளநாடுடையாரும் அங்கு வந்திருப்பதை அவர்களில் யாரும் அப்போதே கண்டுவிட முடியாமல் ஓர் ஓரமாக ஒதுங்கி நின்று விசாகையின் பிடக நெறி விளக்கத்தைச் செவிமடுத்தான் இளங்குமரன். அங்கே விசாகையின் எதிர்ப்புறம் தொண்டு கிழவராக வீற்றிருந்த பெளத்த சமயத்துத் துறவி யாரென்று இளங்குமரனால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவேளை அவர்தான் இளமையில் விசாகைக்கு சமய ஞானத்தைக் கற்பித்த சமந்த கூடத்துப் புத்த தத்தராக இருக்கலாமோ என்று எண்ணினான் அவன். விசாகையின் பிடகநெறி விளக்கம் முற்றுப் பெற்றதும் அவனுடைய சந்தேகம் தீர்ந்துவிட்டது. கூட்டம் கலையப் பெற்று விசாகையும் அவளோடிருந்தவர்களும் தனியான போது இளங்குமரனும், வளநாடுடையாரும் அவர்களுக்கு அருகிற் சென்று நின்றார்கள், விசாகை அவர்கள் இருவரையும் உற்சாகமாக வரவேற்றாள்.
“வரவேண்டும்! வரவேண்டும். ஒருவேளை நீங்கள் மணிநாகபுரத்திலிருந்து நாளைக்கு வைகறையில்தான் வருவீர்கள் என்று இந்த ஓவியரும் இவருடைய மனைவியாரும் கூறினார்கள். நல்ல வேளையாக நீங்கள் இப்போதே வந்துவிட்டீர்கள்” என்று கூறிவிட்டுத் தன் எதிரேயிருந்த மூத்த துறவியின் அருகே இளங்குமரனையும், வளநாடுடையாரையும் அழைத்துச் சென்று அவர்களை இன்னாரென்று சொல்லி அவருக்கு அறிமுகப்படுத்தினாள் விசாகை. அவன் நினைத்தபடியே அவர்தாம் புத்த தத்தராயிருந்தார். சமதண்டத்து ஆசீவகர்களை இளங்குமரன் வென்ற திறமை பற்றியெல்லாம் அங்கு வந்து சேர்ந்த உடனே விசாகை அவரிடம் நிறையப் பெருமையாகக் கூறியிருந்தாள் போல் இருக்கிறது. அவர் இளங்குமரனிடம் ஆர்வத்தோடும், அன்போடும் பேசினார்.
“குழந்தாய்! இந்தத் தீவில் நிகழ்கிற வைசாக பூர்ணிமை விழா என்பது தனியாக எங்களுடைய சமயச் சடங்கு மட்டும் அல்ல, கீழ்த்திசை நாடுகளின் அறிவுத்துறை வன்மைகளும், பண்பாட்டுப் பெருமைகளும் ஒன்று சேர்ந்து சந்தித்துக் கொள்வதற்கு இந்த நல்ல நாளும், இந்தத் தீவும் பன்னெடுங் காலமாகப் பயன்பட்டு வருகின்றன. இந்தத் தீவின் கரைகளில் அலைகள் ஒலிக்கத் தொடங்கிய நாளிலிருந்தே கீழை நாடுகளில் விதம் விதமான தத்துவங்களும் சேர்ந்து ஒலிக்கத் தொடங்கி விட்டன. நம்மைப் போன்றவர்கள் தலைமுறை தலைமுறையாகச் சந்தித்துக் கொள்ளவும், ஒரு பெரிய அறிவுப் பரம்பரை தொடர்ந்து சங்கமமாகிப் பெருகவும் இந்தத் தீவும் இந்த நாளும் இடமாயிருந்து வருகின்றன. விசாகை இந்த முறை புத்த பூர்ணிமைக்காக இங்கு வந்து இறங்கிய விநாடியிலிருந்து என்னிடம் உன்னைப் பற்றியே நெடு நேரமாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். திருநாங்கூரடிகள் என்னுடைய நெருங்கிய நண்பர். சமயவாதத்தில் நானும் அவரும் கடுமையாக எதிர்த்து நின்றிருக்கிறோம். அவர் என்னைப் பலமுறை வென்றிருக்கிறார். அவருக்கு நான் தோற்றிருக்கிறேன். ஆனால் நட்புச் செய்வதில் இருவருமே ஒருவருக்கொருவர் சிறிதும் தோற்றதில்லை. நீ அவருக்கு மிகவும் பிரியமான மாணவன் என்று விசாகையிடம் கேட்டறிந்த போது என் மனம் பூரித்தது. உலகில் நீ வாழும் நாட்கள் நிறைந்து பெருகுமாக” என்று அவனிடம் அன்பாக உரையாடி வாழ்த்தினார் அந்த முதியவர். அவன் அந்த முதுமைக்கும் ஞானத்துக்கும் தன் மனப்பூர்வமான பணிவையும் வணக்கங்களையும் செலுத்தினான்.
அன்றிரவு எல்லாரும் கோமுகிப் பொய்கைக் கரையிலிருந்த பெளத்த மடத்தில் தங்கினார்கள். களைப்பினாலும், பயணம் செய்த சோர்வினாலும் எல்லாரும் உறங்கிய பின்னும் விசாகையும் இளங்குமரனும் கோமுகிப் பொய்கைக் கரையில் போய் அமர்ந்துகொண்டு நெடுநேரமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது புத்த ஞாயிறு என்பது என்னவென்பதை அழகிய முறையில் ஒரு தத்துவமாக அவனுக்கு விளக்கிச் சொன்னாள் விசாகை,
“புத்த ஞாயிற்றின் தோற்றத்துக்குரிய சிறந்த நாளாக வைசாக பூர்ணிமையைக் கொண்டாடுவது மட்டும் எங்களுடைய சடங்கு அல்ல! ‘எல்லா உயிரும் எங்கும் எப்போதும் எல்லா விதத்திலும் நன்றாக இருக்க வேண்டும்’ என்ற முதிர்ந்த கருணை யார் மனத்தில் எந்த விநாடி தோன்றினாலும் அங்கே அந்த விநாடியில் புத்த ஞாயிறு பிறந்து விட்டது என்று தான் கொள்ள வேண்டும். உயிர் இரக்கம்தான் பெரிய ஞானம். அது யார் மனத்தில் இருந்தாலும் அவர்களைப் புத்தர் போற்றுகிறார். ஆசைகளால் தான் கோபமும், வெறுப்பும் உண்டாகின்றன. ஆசைகள் அழிந்தால் எதன் மேலும் கோபமில்லை. எதன் மேலும் வெறுப்பில்லை. எப்போதும் மனம் இந்த உலகத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே இருக்கிற உபசாந்தி நிலை சித்திக்கிறது” என்று விசாகை ஆர்வம் மேலிட்டுக் கூறிக் கொண்டே வந்தபோது இளங்குமரன் நடுவில் இடையிட்டுப் பேசினான்:
“இப்போது நான் கூறப் போகிற செய்தியைக் கேட்டு நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும் அம்மையாரே! ‘உபசாந்தி நிலை’யை அடைய வேண்டும். அடைய வேண்டும் என்று நான் தவித்த காலமெல்லாம் போய் என் மனம் அந்த நிலைக்குப் பக்குவமாகி நிற்கும் இந்தச் சமயத்தில் அதை நானே இழக்க வேண்டியவனாகி விட்டேன். நாளைக்கு இந்த வேளையில் இதே தீவின் வேறொரு பகுதியிலே என் மனத்தின் எல்லையெல்லாம் யார் மேலோ எதற்காகவோ கோபமும் வெறுப்பும் ஏற்படப் போகிறது. தீக்கடைகோலைப் போல என் எண்ணங்களைத் தூண்டிக் கடைந்து யாரோ யார் மேலோ என்நெஞ்சில் கனலை மூட்டப் போகிறார்கள். இந்தப் புண்ணியத் தீவுக்கு ஒரு முறை வந்து - இதன் மண்ணை மிதித்து நடந்தாலே உபசாந்தி நிலை கிடைக்கும் என்று உங்கள் சமயத்தைச் சேர்ந்த துறவிகள் சொல்கிறார்கள். எனக்கோ இங்கு வந்தபின் ஏற்கெனவே கிடைத்திருந்த மன அமைதியும் போய்விடும் போல் இருக்கிறது.”
இப்படித் தாங்க முடியாத ஏக்கத்தோடு இளங்குமரன் தன்னிடம் கூறிய சொற்களையெல்லாம் கேட்டு விசாகை சிரித்தாள்.
“தத்துவங்களைக் கண்டுபிடிக்கிறவர்களைக் காட்டிலும் கடைப்பிடிக்கிறவர்களை சிறந்தவர்கள் என்று நீங்கள் பல முறை என்னிடம் கூறியிருப்பதை மறந்திருக்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன். போதிமாதவருக்குப் பெருமை அவர் கண்ட தத்துவமாகவே அவருடைய வாழ்க்கை அமைந்தது என்பதுதான்! அறிவினாலும், மனத்தினாலும் வாழத் தொடங்கி விட்ட நீங்கள் மறுபடி உணர்ச்சிகளால் வாழவேண்டிய அவசியம் மீண்டும் எதற்காக நேர்கிறது?”
விசாகை தொடக்கத்திலிருந்து தன் மனத்தில் பவித்திரமான நினைவுகள் பிறக்கக் காரணமாயிருந்தவள். ஆகையினால் அவளிடம் எதையும் ஒளிக்காமல் சொல்லி விட வேண்டும் என்று தோன்றியது இளங்குமரனுக்கு. தான் மணிநாகபுரத்தில் குலபதியின் மாளிகைக்குச் சென்றதையும் அங்கே அருட்செல்வ முனிவரைச் சந்திக்க நேர்ந்ததையும் அவருடைய வேண்டுகோளையும் விசாகையிடம் கூறினான் இளங்குமரன்.
அவன் கூறியவற்றைக் கேட்டபின் விசாகை எதையோ ஆழ்ந்து சிந்திக்கிறவளாய் அமைதியான முகத் தோற்றத்தோடு இருந்தாள். இளங்குமரன் அவளிடம் மேலும் கூறலானான்:
“நீங்கள் உலகத்தின் கண்ணிரைத் துடைப்பதற்காக உங்கள் கண்களில் நீரைச் சுமந்துகொண்டு வாழ்கிறீர்கள். நானோ என் குடும்பத்தில் என்றோ இறந்து போனவர்களின் சினத்தைச் சுமக்க வேண்டியவனாகி இருக்கிறேன். மணிநாகபுரத்து மண்ணில் இறங்கி நின்றவுடன் உங்கள் மங்கலமான வாயைத் திறந்து ‘நிறைக நிறைக’ என்று வாழ்த்தினர்களே? அப்படி வாழ்த்தியபோது எது எப்படி என்னிடம் நிறைய வேண்டும் என்று நீங்கள் வாழ்த்தினீர்களோ? என் மனம் கோபத்தினால்தான் இனிமேல் நிறைய வேண்டும் என்று அருட்செல்வ முனிவர் கூறு கிறார். நானோ என் மனத்தில் எல்லையற்ற திரு நிறைய வேண்டும் என்று விரும்பினேன்.”
“நாம் ஆசைப்படுவதற்கும் அடைய வேண்டியதற்கும் நடுவில் தெய்வ சித்தம் என்று ஒன்று தனியாக இருக்கிறது. ஆசைப்பட்டவற்றையெல்லாம் அடைவது எளிதானால் இந்த உலக வாழ்க்கை இப்படியா இருக்கும்? ஆனால் இப்போதும் உங்களுக்கு நான் ஒன்று சொல்ல முடியும். உங்களுடைய வாழ்க்கையை விந்தையானது. வாழ்க்கைக் கடலின் எல்லாவிதமான அலைகளிலும் நீங்கள் ஒதுங்கிக் கரை கண்டிருக்கிறீர்கள். உங்களுடைய வாழ்க்கை இந்த மணிபல்லவத் தீவைப் போலவே நான்கு பக்கத்து அலைகளையும் தாங்கிக்கொண்டு அழியாத தத்துவமாக நிற்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். தத்துவம் கடந்த பொருள் எதுவோ அதை, தத்துவங்களால் அளக்க முடியாது என்று கருதி அதற்குக் கந்தழி என்று தமிழில் பெயரிட்டிருக்கிறார்கள். உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்திலும் நீங்கள் இதுவரை அனுபவங் களால் வளர்த்து அவற்றையே தத்துவங்களாகக் கொண்டு அனுபவங்களைக் கடந்து நின்றிருக்கிறீர்கள். இப்படிப்பட்ட வாழ்வைத்தான் காவியம் எழுதவல்ல மகா கவிகள் ஒவ்வொரு கணமும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நான்கு பக்கத்திலிருந்து மோதும் கடல் அலைகளையும் தாங்கிக் கொண்டு இந்தப் புண்ணியத் தீவு நிற்பதைப் போல, நீங்களும் நான்கு பருவத்து வாழ்க்கைச் சோதனைகளும் ஒன்று சேர்ந்தாற் போல் உங்களைத் தேடி வருகிற இந்தச் சமயத்தில் இவற்றைத் தாங்கி வென்று நிற்க வேண்டும். இந்த அநுபவத்திலும் நீங்கள் வளர்ந்து நிற்க வேண்டும். தெய்வீகமான பெரிய காவியங்களில் எல்லாம் அந்தக் காவியத்திற்குத் தலைவனாக இருப்பவனுடைய உயிர்க்குணம் அது நிறைகிற முடிந்த எல்லையில்தான் பிறந்து தொடங்கி ஒளிர்கிறது. இராமாயணம் முடிந்த பின்புதான் இராமனுடைய தரும வாழ்வைப் பற்றிய சிந்தனை தொடங்குகிறது. பாரதம் முடிந்த பின்புதான் பாண்டவர்களுடைய அறப்போரினது பெருமையைப் பற்றி எண்ணங்கள் பிறக்கின்றன. தன்னுடைய கதை எல்லை முடிந்த பின்பும் தன்னிலிருந்து பிறந்த சிந்தனை எல்லைக்கு முடிவே இல்லாமல் வளர்கிற புனிதமான காவியங்களைப் போல் நீங்கள் நிறைந்து நிற்க வேண்டும். இதுதான் திருநாங்கூரடிகளின் விருப்பம். என் விருப்பமும் இதுவே...” என்று விசாகை கூறியபோது இதைக் கேட்டுக் கொண்டிருந்த இளங்குமரனுக்கு மெய் சிலிர்த்தது. அவன் தன் கண்களை மூடிக் குருவை நினைத்துக் கொண்டான்.
“அதோ” என்று கிழக்கே காண்பித்தாள் விசாகை. இளங்குமரன் பார்த்தான். கீழ்த்திசை வெளுத்துக் கொண்டி ருந்தது. இருவரும் எழுந்து நீராடப் புறப்பட்டனர். போது கழிந்ததே தெரியவில்லை.
கிழக்கே அடிவானத்தைக் கிளைத்துக் கொண்டு எழும் சிவப்புக் கோளத்தைப் பார்த்துக்கொண்டே “ஞாயிறு பிறந்துவிட்டது அம்மையாரே!” என்றான் இளங்குமரன்.
“கீழ்த்திசையில் மட்டுந்தானா! அல்லது உங்கள் மனத்திலுமா?” என்று கேட்டாள் விசாகை.
“மனத்திலும் தான். மனத்தில் சிறிது போது சூழ்ந்திருந்த இருளைப் போக்கி ஒளி கொடுத்தவர் நீங்கள். உங்களிடம் பேசிக் கொண்டிருந்த போதே இருள் விலகிப் பொழுது புலர்ந்துவிட்டது” என்று கூறியபடியே கண்களில் பயபக்தி மலர விசாகையைப் பார்த்தான் இளங்குமரன்.
“உங்கள் வாழ்க்கை காவியமாக நிறைய வேண்டும்” என்று இரண்டாம் முறையாக அதே வாக்கியத்தைப் பொய்யைச் சிதைக்கும் தூய்மைப் புன்முறுவலோடு மறுபடி அவனை நோக்கிக் கூறினாள் விசாகை.
புத்த பீடிகை வணக்கமும், கோமுகிப் பொய்கைக் கரையில் தத்துவஞானிகளைச் சந்தித்துப் பேசுதலும், வைசாகப் பூர்ணிமையின் கோலாகலங்களில் கலந்து கொள்ளுதலுமாக அருட்செல்வ முனிவர் பிச்சை கொடுத்திருந்த அந்த ஒருநாளும் மெல்லக் கழிந்து போய்விட்டது, அன்று பகலில் மணிபல்லவத்து வீதிகளில் விசாகையும் புத்ததத்தரும் உடன்வர வளநாடுடையாரும் ஓவியனும் அவன் மனைவி பதுமையும் சூழ்ந்து துணையாகக் கொண்டு சுற்றியபோது இளங்குமரன் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த தத்துவ ஞானிகளையெல்லாம் சந்தித்தான். சிறிதும் பெரிதுமாக அலை எறியப் பெற்றும், அசையாமல் கலங்காமல் நான் நிற்பதுதான் எனக்கு நிலையான உறுதி என்று நிற்கும் இந்தத் தீவைப்போல் அறிவின் பலமே பலமாக எதையும் தாங்கி நின்று சிரிக்கும் அந்தத் தத்துவ ஞானிகளைப் பார்த்தபோது இளங்குமரனுக்குப் பெரிதும் ஆறுதலாக இருந்தது. மனிதனுடைய மனத்தில் ஏற்படும் நோய்களுக்கு மருந்து வேறெங்கோ இருப்பதாகத் தேடித் தவித்துக் கொண்டிருப்பது பேதைமை. தனக்குள்ளே ஏற்படும் திடமான சிந்தனைகளே தன் மனத்துக்குச் சுகம் என்பதைப் போலத் தங்கள் உள்ளத்தில் புதுமைகளைத் தேடி உலகத்துக்குத் தரும் அந்த ஞானிகளை எண்ணி எண்ணி வணங்கினான் இளங்குமரன். கடற்பரப்பின் மேலே தீவின் கீழ்க்கோடியில் நிலா எழுந்த போது, அந்த வேளை வருவதற்காகவே அது வரை அவனருகில் காத்துக் கொண்டிருந்தவர் போல், “மணிநாகபுரத்திற்குப் புறப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தம்பீ!” என்று நினைவூட்டினார் வளநாடுடையார். இளங் குமரன் புறப்படச் சம்மதம் என்பதற்கு அடையாளமாகத் தலையசைத்தான்.
‘இதுதான் வாழ்க்கை! நாம் ஏதோ ஒரு திசையில் ஏதோ ஒரு நோக்கத்தோடு நின்று கொண்டிருக்கும்போது நம்முடைய நினைவில் அந்த வினாடிவரை தோன்றாத ஏதேனும் ஒரு புதிய திசையைக் காண்பித்து அந்த வழியில் நாம் புறப்பட வேண்டியிருப்பதன் அவசியத்தை யாராவது நமக்கு நினைவு படுத்திக் கொண்டே வந்து சேருகிறார்கள்’ என்று எண்ணியபடியே விசாகையிடமும் புத்ததத்தரிடமும் விடைபெற்றுக் கொண்டான் இளங்குமரன். அவர்களும் மகிழ்ச்சியோடு அவனுக்கு விடை கொடுத்தார்கள்.
“நானும் எங்கள் பெளத்த சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கூட விரைவில் இங்கிருந்து பூம்புகாருக்குத் திரும்பி விடுவோம், திரும்பும்போது நாங்கள் மணிநாகபுரத்தில் இறங்கமாட்டோம். ஆயினும் நான் பூம்புகாரில் உங்களைச் சந்திப்பேன்” என்றாள் விசாகை.
புத்ததத்தர் இளங்குமரனை வாழ்த்தினார். ஓவியன் மணிமார்பன் அங்கிருந்தே பாண்டி நாட்டுக்குப் புறப் படுவதாகச் சொன்னான்.
“ஐயா! இங்கிருந்தே பாண்டிநாட்டுத் துறைமுகப் பட்டினமாகிய கொற்கைக்குப் பல கப்பல்கள் புறப்படுகின்றன. மணிபல்லவத் தீவையும், வைசாக பூர்ணிமை விழாவையும் பார்க்க வேண்டும் என்ற ஆசையால் இந்திர விழாவுக்கு வந்திருந்த நானும் என் மனைவியும் பூம்புகாரிலிருந்து உங்களோடு இங்கே புறப்பட்டு வந்தோம். விரும்பியபடி இந்தச் சிறிய ஞானத்தீவையும் இதில் நிகழும் அறிவுத் திருவிழாவையும் கண்டுகளித்தாயிற்று. இன்றோடு நாங்கள் மதுரையிலிருந்து புறப்பட்டு ஏறக்குறைய இரண்டு திங்கள் காலத்துக்கு மேல் கழிந்து விட்டது. என்னுடைய வயது முதிர்ந்த பெற்றோர்கள் நானும் என் மனைவியும் வருகிற நாளை எதிர்பார்த்து ஆவலோடு காத்தக் கொண்டிருப்பார்கள். கொற்கைத் துறைமுகப்பட்டினத்தில் இறங்கிப் போகிற போக்கில் அங்கு உள்ள சலாபத்தில் நடைபெறும் புகழ்பெற்ற முத்துக்குளிப்பு விழாவையும் பார்த்துவிட்டு நாங்கள் மதுரை திரும்பிவிடலாம் என்று எண்ணுகிறோம்...” என்றான் மணிமார்பன். அவன் குரலில் ஊர் திரும்பும் ஆவல் மிகுந்து தொனித்தது.
ஆனால், இளங்குமரனும் வளநாடுடையாரும் ஓவியனுக்கு விடை கொடுக்க மறுத்துவிட்டார்கள். இளங்குமரன் ஓவியனை அன்போடு தழுவிக் கொண்டு அவனிடம் கூறினான்:
“நீ எங்களோடு மணிநாகபுரத்திற்கு வரவேண்டிய அவசியம் இருக்கிறது மணிமார்பா! எனக்கு மிகவும் வேண்டியவனாகிய குலபதி என்னும் மணிநாகபுரத்து இரத்தின வாணிகனுடைய மாளிகையில் அற்புதமான ஓவிய மாடம் ஒன்றிருக்கிறது. அதை நீ காண வேண்டும். வேறு பல காரணங்களாலும் நீ இன்னும் சில நாட்களுக்கு என்னோடு உடனிருக்க வேண்டும்.”
இளங்குமரனுடைய இந்த அன்பான வேண்டுகோளைப் புறக்கணிக்க முடியாமல் மணிமார்பனும் அவன் மனைவியும் அவர்களோடு மணிநாகபுரத்திற்குக் கப்பலேறினார்கள், அன்று மணிபல்லவத்தைச் சூழ்ந்துள்ள கடலில் நீர்ப்பரப்பே தெரிவதற்கு இடைவெளியின்றி எங்கு நோக்கினும் அலங்கரிக்கப் பெற்ற கப்பல்களும் மரக் கலங்களும் போய்க் கொண்டிருந்தன. நிலா ஒளியின் கீழ் அந்த அழகிய சூழ்நிலையில் அவர்கள் மணிநாகபுரத்திற்குப் புறப்பட்டிருந்தார்கள். பரபரப்பான சூழ்நிலையில் முதல்நாள் இரவு அருட்செல்வ முனிவரிடம் இந்த ஒரே ஒரு நாளைப் பிச்சை கேட்டுப் பெற்றுக் கொண்டு அவசரமாக இந்தத் தீவுக்குப் புறப்பட்டு வந்ததும் இந்த ஒருநாள் கழிந்துபோன வேகம் தெரியாமல் இப்படிக் கழிந்துபோனதும், இப்போது மீண்டும் மணிநாகபுரத்திற்குத் திரும்பிப் போய்க் கொண்டிருப்பதுமாக ஒவ்வொன்றாகவும் விரைவாகவும் நடக்கும் தன்னுடைய வாழ்க்கையின் நிகழ்ச்சிகளை எண்ணியபோது இளங்குமரனுக்கு மிகவும் விந்தையாக இருந்தது.
‘தாயின் கருவிலிருந்து புறப்பட்டு வந்து இந்த மண்ணில் குதித்த முதல் விநாடி தொடங்கி உயிர் வாழ்க்கையே ஒரு பெரிய யாத்திரைதான் போலிருக்கிறது! எங்கும் நடக்காமல் தங்கிவிடும் போது மனத்தினாலும், எங்கும் தங்காமல் நடக்கும்போது கால்களாலும் மாறிமாறி எதை நோக்கியோ யாத்திரை செய்துகொண்டே இருக்கிறோம். கால்களால் முடியாதபோது எண்ணங்களாலும், எண்ணங்களால் முடியாதபோது கால்களாலும் எங்காவது சென்று கொண்டே இருக்கிறோம் என்று எண்ணியபடியே நிலாவையும் வானத்தையும் ஏக்கத்துடனே பார்த்தான் இளங்குமரன். அப்போது அவனைப் போலவே நிலாவையும் கப்பல்கள் செல்லும் கடலையும் தீபாலங்காரங்களோடு நாற்புறமும் மின்னும் தீவுகளையும் பார்த்துக் கொண்டே அருகில் நின்ற மணிமார்பன் அதே ஏக்கத்தோடு தன் அனுபவம் ஒன்றை இளங்குமரனிடம் கூறினான்.
“இந்த உலகில் எத்தனையோ காட்சிகள் நம்முடைய பார்வைக்கும், நினைப்புக்கும், அழகாகவும் நயமாகவும் தோன்றிப் படைப்புக்கு மட்டும் உயர்ந்தவையாகவும் அரியவையாகவும் போய் மேலே நின்று கொள்கின்றன. இப்போது இந்த வானமும் கடலும், தீவுப் பகுதிகளும் ஓவியத்திற்கு உரிய அழகுக் காட்சிகளாக எனக்குத் தோன்றுகின்றன. இவற்றை நான் நினைப்பிற் கொண்டு வந்து படைக்க முயலும்போது எப்படியோ?”
“எப்படியானாலும் அதுதான் இயற்கையின் வெற்றி மணிமார்பா! உன்னுடைய நிறங்களை நீ இயற்கை யிலிருந்து கற்றாய். உன்னுடைய நிறங்களால் நீ வரையப் போவது எதுவோ அதையும் இயற்கையிலிருந்து காண்கிறாய். எல்லாவிதத்திலும் உனக்கு ஆசிரியனாக இருக்கும் ஒரு பொருள் உன்னைவிட உயர்ந்து நிற்பது இயல்பு தானே?” என்றான் இளங்குமரன். இவ்வாறே மணிமார்பனும் இளங்குமரனும் பல செய்திகளைப் பற்றி உரையாடிக் கொண்டே சென்றார்கள். மணிமார்பனின் மனைவி தொலைவில் தெரியும் நிலாவொளி அழகோடு கூடிய தீவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வீரசோழிய வளநாடுடையார் மனத்தில் ஏதோ திட்டமிடும் ஆழ்ந்த சிந்தனைகளோடு தளத்தில் அமர்ந்திருந்தார். அன்றைய நிலா உச்சி வானத்தை அடைவதற்கு ஓரிரு நாழிகைகளுக்கு முன்பே அவர்கள் மணிநாகபுரத்தை அடைந்து விட்டார்கள். அவர்களை எதிர்கொண்டு அழைத்துப் போவதற்காகக் குலபதி சங்குவேலித் துறையில் வந்து காத்திருந்தான். துறையிலிருந்து அவர்கள் எல்லாரும் குலபதியின் மாளிகைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அந்த மாளிகை ஒவ்வொரு கணமும் அவர்கள் வரவையே எதிர்பார்த்துக் கொண்டிருப்பது போல் பரபரப்பாயிருந்தது. மணிநாகபுரத்து மாளிகைக்குத் தன்னோடு உடன் வந்திருந்த எல்லாரையும் மாளிகையின் கீழ்ப்பகுதியில் முதற் கூடத்திலேயே தங்கியிருக்கச் செய்து விட்டு, இளங்குமரன் தான் மட்டும் ஓவிய மாடத்திற்குச் செல்லும் படிகளில் ஏறினான். எதை உணர்வதற்காகச் சென்று கொண்டிருந்தானோ, அதற்காக மனம் விரைந்தாலும், அந்தப் படிகளில் ஏறும்போது அவனுடைய கால்கள் தயங்கித் துவண்டன. கடைசிப் படியில் போய் அவன் தலை நிமிர்ந்தபோது அங்கு முன்பே வந்து நின்று கொண்டிருந்த அருட்செல்வ முனிவர் கைகளை நீட்டி அவனைத் தழுவிக்கொண்டார்.
“என்னிடம் சொல்லியபடியே திரும்பி வந்து விட்டாய்! இனி நான் சொல்லியபடி நீ செய்ய வேண்டும்” என்று கூறிக்கொண்டே அவனை அந்த ஓவிய மாடத்தின் ஒரு கோடியிலிருந்த தம்முடைய அறைக்கு அழைத்துக் கொண்டு போனார் முனிவர். அந்த அறையின் நடு மேடையில் ஓர் அகல்விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அருகே ஏட்டுச் சுவடியும் வைக்கப்பட்டிருந்தது. இளங்குமரனை அறைக்கு உள்ளே அழைத்துக் கொண்டு போன முனிவர் விளக்கின் அருகே மேடையில் அவனை அமரச் செய்தபின் அங்கே கிடந்த சுவடியை எடுத்து அவன் கைகளில் கொடுத்துத் தொடங்கலாம் என்றார். அவர் அளித்த அந்த ஏடுகளை கையில் வைத்துக் கொண்டே சலனம் அடைந்த மனத்தோடு எதற்காகவோ சிறிது தயங்கினான் இளங்குமரன்.
“எதற்காகவும் தயங்காதே! இந்த ஏடுகளில் நீ தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புக்களை இருநூறு வெண்பாக் களாகவும், உரைச் சுருக்கமாகவும் எழுதியிருக்கிறேன். அவற்றைப் படித்துப் பொருள் விளங்கிக்கொண்டு நீ தெளிவு பெறுவதற்கு நாளைக் காலை வரை ஆகலாம். அதோ நிலவும் உச்சி வானத்துக்குப் போய்விட்டது. இனியும் தாமதம் செய்யாமல் இந்த ஏடுகளைப் படிக்கத் தொடங்கிவிடு” என்று கூறிவிட்டு அந்த அறைக் கதவுகளை இழுத்து அடைத்து வெளியே தாழிட்டுக் கொண்டு போய் விட்டார் அவர். மனம் வெதும்பி வாட நேர்கிற துன்ப அநுபவங்களையும் தாங்கிக் கொண்டு தான் வளர வேண்டும் என்று தன் மனத்தை மீண்டும் உறுதி செய்து கொண்டவனாக அந்தச் சுவடியில் முதல் ஏட்டிலிருந்த முதல் பாட்டைப் படிக்கலானான் இளங்குமரன். அந்த முதல் ஏடானது மிகவும் அண்மையில் எழுத்தாணியால் கீறப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது.
“என் மனத்தில் சினம் கனல வேண்டும் என்ற உட்கருத்தோடு என்னை நோக்கிச் சொல்வது போலவே முனிவர் இந்த வெண்பாவை எழுதியிருக்கிறார் போலும்” என்று எண்ணியவாறே மறுபடியும் அதைப் படித்தான் இளங்குமரன்.
தாயைச் சிதைத்த தனிக்கொடுமை யொன்றன்றி நீயும் நினதரிய செல்வமுமே போயொழியத் தீமை பலசெய்த சீரழிவை நீறாக்கத் தீயென் றெழுக சினம்.
அடுத்த ஏட்டைப் புரட்டினான் இளங்குமரன். கோவை செய்யப்பட்டிருந்த பட்டுக் கயிற்றிலிருந்து ஒவ்வோர் ஏடாகக் கழன்றபோது அவன் மனத்தின் நீண்ட நாள் சந்தேகங்களும் ஒவ்வொன்றாகக் கழன்றன. கல்வியினாலும் தத்துவ ஞானத்தினாலும் அவன் தனக்குள் சேர்த்திருந்த மெல்லிய உணர்வுகள் நெருப்பு காயக் காய வற்றிக் குறையும் நீர் போலக் குன்றின. அந்த ஏட்டுச் சுவடிப் பாடல்களிலிருந்து காலவெள்ளத்தின் அடி ஆழத்தில் மூழ்கிப்போயிருந்த பல சம்பவங்கள் அவனுக்குத் தெரிந்தன. தான் பிறந்த கதையும் தன் தாய் தந்தை இருவரும் இறந்த கதையும் ஒருங்கு தெரிந்தது. தான் பூம்புகாரில் அருட்செல்வ முனிவரின் தவச் சாலையில் நினைவு தெரியாச் சிறு பருவத்தினனாக வளர்ந்து கொண்டிருந்தபோது தன்னைக் காண்பதற்காகவும் தனக்கு ஐம்படைத் தாலியும் பொன் அரைஞாணும் அணிவித்துப் பிறந்தநாள் மங்கலமும் வெள்ளணி விழாவும் கொண்டாடி மணிநாகபுரத்திற்குத் தன்னை அழைத்துப் போவதற்காகவும், நாக நாட்டிலிருந்து பூம்புகாருக்குப் புறப்பட்டு வந்த தன் அருமைத் தாய்மாமனாகிய காலாந்தக தேவரைக் கொலைகாரப் பாவிகள் ஏமாற்றி அழைத்துப் போய் வன்னி மன்றத்து இருளில் கொலை செய்ததையும் அறிந்தபோது துக்கமும் கொதிப்பும் ஒருங்கு அடைவதை இளங்குமரனால் தவிர்க்க முடியவில்லை. அந்த ஏடுகளில் அப்போது படித்து அறிந்து கொண்டவற்றிலிருந்து அவன் தெரிந்து கொண்டவற்றை ஒன்றாகக் கூட்டி வரிசையாக எண்ணியபோது அவை நிகழ்ந்த காலத்தில் எப்படி நிகழ்ந்திருக்குமோ அப்படியே அவன் கண்முன் காட்சிகளாகத் தோன்றலாயின.
அவனுடைய அருமைத் தாய்க்கு இளங்குமரன் மகனாகப் பிறப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சி இது. அந்தக் குடும்பம் பூம்புகாரின் பெரிய வாணிகர் ஒருவரைப் பகைத்துக் கொள்ள நேர்ந்ததும் அதன் காரணமாக ஆள் வலிமையும், செல்வாக்குமுள்ள அந்த வாணிகரின் மனத்தில் வெறுப்பும் குரோதமும் வளர்ந்ததும் மறக்க முடியாதவை. தொடர்ந்து கெட்ட கனவு காண்பது போன்ற வேதனையான அநுபவங்களை அந்தக் குடும்பத்துக்கு அளித்தவை. அந்த வேதனை தொடங்கிய நாளிலிருந்து அந்தக் குடும்பத்துக்கும் அதன் வழிமுறையினருக்கும் போதாத காலம் பிறந்தது. மனிதனுடைய வெறுப்புக்கு எவ்வளவு ஆற்றல் உண்டு என்பதைக் காட்டும் கதை அது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வைசாக பூர்ணிமைக்கு இரண்டு நாட்களிருக்கும் போது பூம்புகாரிலிருந்து அலங்கார மயமான பெரிய மரக்கலம் ஒன்று நாகநாட்டுப் பெருந்தீவுக்குப் புறப்பட்டிருந்தது. கடலில் மிதந்து கொண்டே நகரும் மாடமணி மாளிகை போன்ற அந்த மரக்கலத்தில் மூவரும் பயணம் செய்தனர். பயணம் செய் தவர்களில் முதன்மையானவர் பட்டினப்பாக்கத்து எட்டி குமரன் பெருநிதிச் செல்வர், அவருடைய நண்பராகவும் அமைச்சராகவும் சில சமயங்களில் ஊழியராகவும் சமயத்துக்கேற்றபடி அவருக்குப் பயன்படக்கூடிய ஒற்றைக் கண் மனிதர் ஒருவரும், மூன்றாவதாக ஏழைக் கவிஞன் ஒருவனும் அந்த மரக்கலத்தில் அவரோடு பயணம் செய்தார்கள். கப்பல் பயணத்தின் போது பெருஞ்செல்வரும் திருமணமாகாத இளைஞருமாகிய அந்தப் பெருநிதிச் செல்வருக்கு உற்சாகமூட்டும் படியான கவிதைகளைப் புனைந்து பாட வேண்டும் என்பது அந்தக் கவிஞனுக்கு இடப்பட்டிருந்த பணி. அரசர்களுக்கு அவைக் கவிஞர்களைப் போலப் பூம்புகாரின் வாணிக மன்னர்களும் இப்படித் தங்கள் மாளிகைகளில் எல்லாம் சிறந்த கவிஞர்களை வைத்துப் பேணி வருவது வழக்கமாயிருந்தது. சொந்த மகிழ்ச்சிக்காகக் கிளியையும் புறாவையும் கூண்டில் அடைத்து வளர்ப்பதைப் போலக் கவிகளையும் வளர்த்தார்கள் இந்தச் செல்வர்கள்.
சோழர் கோநகரான பூம்புகாரின் மிகப் பெரிய வாணிகரும், திருமணமாகாத இளைஞருமாகிய எட்டி குமரன் பெருநிதிச் செல்வரின் மாளிகையில் அவைக் கவிஞனாக வாய்த்திருந்த இளைஞன் தான் படைக்கும் கவிதைகளைப் போலவே வனப்பு வாய்ந்த கட்டெழில் தோற்றத்தையுடையவன். அமுதசாகரன் என்று தோற்றத்திலன்றிப் பெயரிலும் இனிமையைப் பெற்றிருந்தான் அவன். கடலைப் போலப் பரந்த மனம். குழந்தையைப் போலக் கள்ளங்கபடமறியாத வெள்ளைத்தனம். உலகத்து அழகுகள் எல்லாம் தன்னுடைய கவிதைக்கு மூலதனம் என்று உரிமையுடனே எண்ணும் வசீகரமான நினைவுகள். அந்த நினைவுகளோடு பரந்த அநுபவங்களைத் தேடி உலகத்தைப் பார்க்கும் வசீகரமான கண்கள். வசீகரமான முகம். இந்த உலகத்து அழகுகளையெல்லாம் எப்போதுமே ஒன்றுவிடாமல் அங்கீகரித்துக் கொள்வது போல வசீகரமான புன்னகை.இவையெல்லாம் சேர்ந்துதான் அமுதசாகரன் என்னும் இளம் பருவத்துக் கவியாயிருந்தன.
பட்டினப்பாக்கத்து எட்டிகுமரன் பெருநிதிச் செல்வரே இந்த அழகிய கவிஞனின் தோற்றத்திலிருந்த வனப்பைத் தன்னுடைய குலப் பகைமையாக எண்ணும் படியான விளைவு அந்த முறை அவர்கள் நாகநாட்டுப் பெருந் தீவுக்குக் கடற்பயணம் சென்றபோது ஏற்பட்டது. அந்த விளைவுக்குப் பின் கவியின் போதாத காலமும் எட்டி குமரனுடைய குரோதமும் ஒன்றாகப் பிறந்து வளரத் தொடங்கிவிட்டன.
கடல் கடந்த நாகநாட்டுப் பெருந்தீவிலுள்ள இரத்தின வாணிகர் குடும்பத்துப் பெண்ணொருத்தி இணையற்ற பேரழகி என்று கேள்விப்பட்டு அவளுடைய ஒவியத்தையும் இரகசியமாக வருவித்துப் பார்த்த பின் அவளைத் தான் மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலோடு எட்டிகுமரன் பயணம் புறப்பட்டிருந்தார். அந்தக் காலத்தில் சோழ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், பெரு மன்னர்களும் கூட இந்த வகையில் நாகநாட்டுப் பெண்களின் அழகில் மயங்கிப் போய் இரகசியமாக நாக நங்கையர்களைக் காந்தர்வ விவாகம் செய்து கொண்டு திரும்புவது வழக்கமாயிருந்தது. அவரும் அந்த ஆவலினால் தான் புறப்பட்டிருந்தார்.
வைசாக பூர்ணிமையன்று நாகநாட்டு மணிநாகபுரத்தில் போய் இறங்கிய பின்பே கவி அமுதசாகரனுக்கு அவர்கள் பயணத்தின் நோக்கம் தெளிவாகப் புரிந்தது. எல்லாக் கடற் பயணத்தின் போதும் உடன் புறப்படுகிற வழக்கப்படிதான் இந்தப் பயணத்தின்போதும் அவன் புறப்பட்டிருந்தான். மணிநாகபுரத்தில் இறங்கிப் பொன்னும், மணியும், முத்துமாகப் பரிசுப் பொருள்களை ஊழியர்கள் பின்னால் சுமந்துவர, அவர்கள் மணம் பேசப் புறப்பட்ட கோலத்தை உடன் சென்று கண்டபோது தான் கவி எல்லாவற்றையும் தெரிந்து கொண்டான். அந்த நாக நங்கையின் பெயர் மருதி என்று சொன்னார்கள். அவள் தமையனாகிய காலாந்தக தேவரை எட்டிகுமரன் முதலில் சந்தித்து மணம் பேசினார். காலாந்தக தேவரும் பெரிய இரத்தின வாணிகர் என்று அமுதசாகரன் அந்த மாளிகையைப் பார்த்ததுமே அறிந்து கொண்டான். விலை மதிப்பற்ற பரிசுப் பொருள்களை எதிரே வரிசையாகக் குவித்துக் கொண்டு எட்டிகுமரனும் அவருடைய அமைச்சராகிய நகைவேழம்பர் என்னும் ஒற்றைக்கண் மனிதரும், மருதியின் தமையனாகிய காலாந்தகதேவரிடம் மணப் பேச்சுப் பேசிக் கொண்டிருக்கும் போது தானும் அங்கு அவர்களோடு உடன் அமர்ந்திருக்கக் கூசிய கவிஞன் அந்த மாளிகையையும், அதன் சுற்றுப் புறத்திலுள்ள பூம்பொழில்களையும் சுற்றிப் பார்க்கலாம் என்ற ஆசையில் அவர்களை விட்டுத் தனியாய்ப் பிரிந்து புறப் பட்டான். பார்த்த இடமெல்லாம் இரத்தின மயமான அந்த மாளிகையின் காட்சிகள் அவன் மனத்தில் உல்லாச நினைவுகளை மலரச் செய்தன. அந்தக் காட்சிகளாலும் நெடுந்தொலைவு பயணம் செய்து வந்து காணும் புதிய நகரத்தின் தோற்றப் பொலிவுகளாலும் அவன் மனத்தில் வசீகரமான எண்ணங்கள் பொங்கி ஏதாவது கவிதை வடிவில் அந்த எண்ணங்களை வெளியிட வேண்டும் என்னும் தவிப்புப் பிறந்தது.
இப்படிப்பட்ட இங்கிதமான செளந்தரியத் தவிப்போடு அந்த மாளிகைக்கும் அதை அடுத்தாற்போல் இருந்த நாக தெய்வக் கோட்டத்துக்கும் நடுவிலே உள்ளதொரு மலர்ப்பொழிலில் அமுதசாகரன் நுழைந்தபோது அங்கே ஓர் அற்புதமான காட்சியைக் கண்டான்.
அந்தப் பொழிலில் பூத்த மலர்களுக்கு நடுவே உயிருள்ள பெண் மலராய்க் கந்தர்வ உலகத்திலிருந்து மண்ணில் இறங்கி வந்தவளைப் போன்ற தோற்றத்தை உடைய யுவதி ஒருத்தி தனக்குள் சிரித்துக் கொண்டும் பாடிக் கொண்டும் பந்தாடிய வண்ணம் இருந்தாள். அடர்ந்த பூங்கொடி ஒன்றின் பின் ஒதுங்கி நின்று இந்தக் காட்சியைச் சிறிது நேரம் பார்த்த அமுதசாகரன் தன்னை மறந்த நிலையில்,
சந்தநகை சிந்தியிதழ் கொஞ்சிவர இந்துதுதல் நொந்துவியர் முந்திவரக் கொந்தளக பந்திமிசை முல்லைமலர் தந்தமண மண்டியெழ முந்திவரு பந்துபயில் நங்கையிவள் கொண்டஎழில் நெஞ்சிலலை பொங்கியெழ வந்த மதியோ?
என்று தன் மனத்தில் தோன்றியதை மெலிந்த குரலில் பாடிவிட்டு நிமிர்ந்தபோது அந்தப் பெண்ணே பந்தாடுவதை நிறுத்திவிட்டு இவன் எதிரே வந்து நின்றாள். விநாடிக்கு விநாடி பார்வைக்குப் பார்வை புதிய ஆச்சர்யங்களைச் சிருஷ்டித்துக் கொண்டு பார்ப்பதுபோல் அவனை நோக்கி அவள் மருண்டாள். மகிழ்ந்தாள். ஆவலடங்காத கண்களால் பார்த்துப் பார்த்து அந்தப் பார்வையில் அவன் கண்களும் தன்னோடு எதிர்கொண்டு கலந்தபோது அவள் நாணித் தலைகுனிந்தாள். தரையைப் பார்த்தாள். நிமிர்ந்தும் நிமிராமலும் நாணமும் ஆசையும் போராடக் கடைக்கண்ணால் அவனை நோக்கித் தேன் வெள்ளமாய் இனித்துப் பெருகும் குரலில் ஒரு கேள்வி கேட்டாள் அவள்:
“யாரைப் பற்றிய பாட்டோ இது! இதில் வருகிற வருணனைக்குப் பொருளாகி அமைந்தவள் பாக்கியசாலி தான்.”
“அந்தப் பாக்கியசாலி இப்போது என் எதிரே தான் நிற்கிறாள்” என்றான் அமுதசாகரன்.
அவனிடமிருந்து இதைக் கேட்ட விநாடியில் தன் இரண்டு கண்களுமே சிருங்கார ரசத்தைப் பேசும் காவியங்களாக, மாறினாற்போல மலர்ந்திட அவனை நிமிர்ந்து நோக்கினாள் அந்தப் பெண். அப்படியே சில விநாடி கண்களால் பேசினாள். பின்பு நாவினாலும் பேசுவதற்குத் தொடங்கியவளாகி மாறிக் கூறினாள்.
“இந்தச் சொற்களுக்காக நான் என்னை அர்ப்பணம் செய்கிறேன். இவை அழகியவை, உயர்ந்தவை. இவற்றுக்கு என்னுடைய உணர்வுகளும் நானும் ஆட்படுகிறோம்!”
“மிக்க நன்றி, பெண்ணே!”
“இப்போதே உங்கள் நன்றியை நான் ஏற்றுக் கொள்வதற்கில்லை! ஏனென்றால் நீங்கள் என்னைப் பற்றி இன்னும் ஏதாவது பாட வேண்டும்.”
“நான் பாட வேண்டுமானால் நீயும் மறுபடி பந்தாட வேண்டும் பெண்ணே!”
அவன் இவ்வாறு கூறிய மறுகணமே அவள் கையில் பந்து சுழன்றது. இதழ்களில் சிரிப்பும் நெஞ்சில் பரவசமும் கண்களில் அநுராகமும், கைகளில் உற்சாகமும் சுழன்றன. மானைப்போல் விழித்துத் தேனைப் போலப் பேசி இளமயிலைப் போல் ஆடும் அவள் கோலத்தைக் கண்டு அமுதசாகரன் மேலும் பாடினான்:
“முத்துச் சிலம்பின் ஒலி தத்தித் தவழ்ந்துவரச் சித்தத் தலத்தின்மிசை மெத்தக் குழைந்துமலர் ஒத்துத் திகழ்ந்தவிழி கற்றுத் தெரிந்த நயம் சற்றுக் குறித்த தொனிபெற்றுப் புரிந்துவர மெல்லக் குழைந்தமொழி வெல்லப்பாகுசெயச் சொல்லில் உரைத்தகுறை கண்ணில் நிறைத்துவரக் கண்ணில் மறைத்தகுறை சிரிப்பிற் பிறந்துவரப் பெண்ணின் குலத்திலொரு புதுமை நிறைக்கின்றாய்.”
அமுதசாகரன் நிறுத்தியதும் அந்தப் பெண் பந்தாடுவதை நிறுத்தவிட்டு அவனருகில் வந்து நின்றாள். வார்த்தைக்கு வார்த்தை ஆச்சரியங்களைச் சிருஷ்டித்துக் கொண்டு மீண்டும் அவனை நோக்கிப் பேசினாள்.
“நவரசங்களில் சிருங்காரத்தை மட்டும் உங்கள் சொற்களுக்காகவே படைத்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.”
“எனக்கு அப்படித் தோன்றவில்லை பெண்ணே! நவரசங்களுமே உன் கண்களிலிருந்துதான் பிறந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது” என்று அமுதசாகரன் சொல்லிக் கொண்டிருந்த போது அந்தப் பெண்ணின் தோழி ஓடிவந்து அவள் காதருகில் ஏதோ கூறி அவளை அவசரமாகக் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு மாளிகைக்குள்ளே போய்விட்டாள். அவள் போன திசையைப் பார்த்துக் கொண்டே நின்ற அமுதசாகரன், ‘பாவம்! யாரோ நல்ல இரசிகையாக இருக்கிறாள்’ என்று எண்ணியபடியே மேலே நடந்தான். அவன் அந்தப் பூம்பொழிலைச் சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் மாளிகைக்குள்ளே வந்த போது பட்டினப் பாக்கத்து எட்டிகுமரனும் மணிநாகபுரத்து இரத்தின வணிகராகிய காலாந்தக தேவரும் மணப்பேச்சில் ஒரு முடிவுக்கு வந்திருந்தார்கள். மணப்பேச்சு நிகழ்ந்து கொண்டிருந்த கூடத்தின் ஒரு மூலையில் கவி அமுதசாகரனும் அடக்க ஒடுக்கமாகப் போய் நின்று கொண்டான். அங்கு நிகழ்வதைக் கவனிக்கலானான். “அன்புக்கு உரிய எட்டி குமரரே! நீங்களும் எனக்குச் சமமான ஒரு வணிகர். உங்களுக்கு மகட்கொடை நேர்வதில் எனக்கும் பெருமை உண்டு. என் தங்கையை நீங்கள் மணக்கக் கருதிப் பரிசுப் பொருள்களுடன் தேடி வந்திருக்கிறீர்கள். நாகநாட்டு வழக்கப்படி இப்போது என் தங்கை மருதியை அழைத்து உங்களுக்கு அடையாள மாலை சூட்டச் சொல்கிறேன்” என்றார் காலாந்தகர்.
அமுதசாகரன் தன் தலைவராகிய பெருவணிகருக்கு வாய்க்கப் போகும் மங்கல மனையாளைக் காண்பதற்கு ஆவல் கொண்டான். கையில் மாலையேந்திக் குனிந்த தலை நிமிராமல் தோழிகளோடு அந்தக் கூடத்துக்குள் நுழைந்த பெண்ணைப் பார்த்தபோது அமுதசாகரனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ‘சற்று முன் பூம்பொழிலில் பந்தாடிக் கொண்டிருந்த அந்தப் பெண்தானா மருதி?’ என்று மாலையை ஏந்திக்கொண்டு வரும் மற்றொரு பூமாலையாக அவள் வந்து கொண்டிருக்கும் கோலத்தை நோக்கி அமுதசாகரன் வியந்தான். அவன் வியப்பை அதிர்ச்சியாகவே மாற்றும் எதிர்பாராத காரியத்தைச் செய்தாள் அந்தப் பெண்.
அருகில் வந்ததும் தைரியமாக நிமிர்ந்து எல்லாரையும் ஏறிட்டுப் பார்த்த பின்பு, அந்த ஏழைக்கவி அமுதசாகரனின் கழுத்தில் மாலையிட்டுவிட்டுச் சிரித்துக் கொண்டே அவன் பக்கத்தில் நின்றுவிட்டாள் மருதி. மின்னல் வெட்டும் நேரத்தில் இது நடந்தபோது அந்தக் கூடத்தில் பிரளயமே வந்ததுபோல் சீற்றம் எழுந்தது. எட்டிகுமரன் பெருநிதிச் செல்வரும் அவருடைய அமைச்சராகிய நகை வேழம்பரும் கண் பார்வையாலேயே பொசுக்கி நீறாக்கி விடுவது போலக் கவிஞனைப் பார்த்தார்கள். அவள் தமையனார் காலாந்தக தேவரும் சினம் கொண்டு கூறினார். “மருதீ! இதென்ன காரியம் செய்தாய் அம்மா! இதோ அமர்ந்திருக்கும் இந்தப் பெருஞ்செல்வர் பொன்னும் இரத்தினமுமாகப் பரிசுப் பொருள்களுடன் உன்னை மணம் பேசி இங்கே வந்திருக்கும்போது இவரோடு வந்திருக்கும் ஊழியனான கவிஞனுடைய கழுத்தில் நீ மாலை சூடிவிட்டாயே!”
“நீங்கள் சொல்கிறவரிடம் இரத்தினங்கள் இருக்கலாம். ஆனால் இந்தக் கவியின் சொற்களே இவரிடமுள்ள இரத்தினங்களாக இருக்கின்றன. இவை விலைமதிப்பற்றவை. ஒவ்வொரு நாட்டுப் பெண்ணுக்கும் தனக்கு வேண்டிய நாயகனைச் சுயமாக வரித்துக் கொள்வதற்கு உரிமை உண்டு. நான் சிறிது நேரத்திற்கு முன்பு நமது பூம்பொழிலில் இவரைச் சந்தித்தபோது இவருக்கு என் மனத்தைத் தோற்கக் கொடுத்துவிட்டேன்” என்று மருதி பேசிய சொற்களைக் கேட்டபோது எட்டிகுமரன் பெருநிதிச் செல்வர் இரண்டு கண்களும் நெருப்பாகச் சிவந்து சினம் பொங்க அமுதசாகரனையும் அவன் அருகில் நின்ற மருதியையும் ஒரு பார்வை பார்த்தார். அவருடைய பார்வையைத் தாங்கிக் கொள்ளவே பயந்து கூசி நின்றான் அந்தக் கவி.
அந்தக் கணமே அடிபட்ட வேங்கைபோல் அவமானம் அடைந்து தலைகுனிந்து வெளியேறிய பெருநிதிச் செல்வரும், அவருடைய அமைச்சரும் அந்த மாளிகையின் கடைசி வாயிற்படியில் இறங்கி வெளியேறுமுன் செய்து விட்டுப் போன சூளுரை மிகவும் கொடுமையாக இருந்தது. காலாந்தக தேவர் அவர்களை ஆற்றுவிக்க முயன்றதும் வீணாயிற்று. கவி அமுதசாகரன் ஓடிப்போய்த் தன் தலைவரின் கால்களைப் பற்றிக்கொண்டு, “ஐயா! நான் ஒரு பாவமும் அறியேன். என்மேல் சினம் கொள்ளாதீர்கள். இந்த மாளிகையைச் சுற்றிப் பார்க்கும்போது இவளைப் பொழிலில் பார்த்தேன். நிர்மலமான மனத்தோடு சில கவிதைகள் பாடினேன்” என்று கதறினான். இப்படி அவன் அவர் கால்களில் வீழ்ந்தபோது உடனிருந்த ஒற்றைக் கண்ணர் தன் உடைவாளை உருவிக்கொண்டு அவனைக் குத்திவிடுவது போலப் பாய்ந்தார். அப்போது இதைப் பார்த்துக்கொண்டிருந்த நாகநங்கை மருதி மிகப் பெரிய வீராங்கனையாக ஓடிவந்து அவர் கையில் இருந்த வாளைப் பறித்து எறிந்துவிட்டு, “இவர் என் அன்புக்கு உரியவர்! இவரை நான் எனக்குரியவராக வரித்துக் கொண்டேன். நீங்கள் போகலாம். இவருக்குக் கெடுதல் செய்ய முயன்றால் நீங்கள் இருவரும் இந்தத் தீவின் எல்லையிலிருந்து உயிரோடு பூம்புகாருக்குத் திரும்ப மாட்டீர்கள்” என்று அறை கூவினாள்.
இதைக் கேட்டுப் பெருநிதிச்செல்வர் எரிமலையாகச் சீறினார்:
“யார் உயிரோடு வாழ முடியும், யார் உயிரோடு வாழ முடியாது என்பதைக் காலம் சொல்லும், பெண்ணே! என்னுடைய சூளுரையை ஞாபகம் வைத்துக்கொள். இந்த ஏழைக் கவிஞனுடைய உயிருக்கு நீ என்னிடமே வந்து மன்றாடிப் பிச்சை கேட்கிறபடி நான் செய்வேன் என்பதை மறந்துவிடாதே” என்று கூறிவிட்டு நகைவேழம்பரையும் கைப்பற்றி இழுத்துக் கொண்டு சங்குவேலித் துறையில் வந்து பூம்புகாருக்குக் கப்பலேறி விட்டார் எட்டிக் குமரன் பெருநிதிச் செல்வர். அருமைத் தங்கையின் ஆசைக்கு மறுப்புக் கூற முடியாத நிலையில் காலாந்தகன் அந்த கவிக்கே அவளை மணம் செய்துகொடுத்துத் தன் மாளிகையோடு அவனைத் தங்கச் செய்துகொண்டான்.
அமுதசாகரன் எட்டுத் திங்கட்காலம் மணிநாகபுரத்தில் காவிய வாழ்வு வாழ்ந்தான். மருதி அவனைத் தன் அன்பு வெள்ளத்தில் மூழ்கச் செய்தாள். அவனுடைய சொற்களுக்குத் தன் அழகை மூலதனமாக்கி எண்ணற்ற கவிதைகளைப் படைத்துக் கொண்டாள். ஒன்பதாந் திங்களில் தான் பூம்புகாருக்குப் போய்த் திரும்ப வேண்டும் என்று விரும்பினான் அமுதசாகரன்.
“பூம்புகாரில் யார் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்! அந்தக் கொடிய செல்வரைத் தேடிப் போய் மீண்டும் அவரைச் சந்திக்கும் கருத்து உங்களுக்கு இருக்கலாகாது” என்றாள் மருதி.
“எனக்கு வேண்டிய முனிவர்கள் பூம்புகாரின் சக்கரவாளத்துத் தவச்சாலையில் பலர் இருக்கிறார்கள். அருட்செல்வர் என்ற துறவியின் தவச்சாலையில் போய் நான் தங்கிக்கொள்வேன். ஒரு திங்கட்காலம் மட்டும் உன்னைப் பிரிந்து பூம்புகாருக்குப் போய் வர நீ எனக்கு விடை கொடு” என்று கேட்டான் அமுதசாகரன்.
அந்தப் பேதையும் அவனுக்கு விடை கொடுத்தாள். தமையனான காலாந்தகனிடம் சொல்லி ஒரு தனிக் கப்பலில் அளவிட முடியாத செல்வங்களை நிறைத்து அமுதசாகரனைப் பூம்புகாருக்கு அனுப்பினாள் மருதி. அவனுக்கு விடை கொடுக்கும்போது மருதி கருக் கொண்டிருந்தாள். கணவன் பூம்புகாரிலிருந்து திரும்பியதும் அவனிடம் அந்த மகிழ்ச்சிச் செய்தியைக் கூறி அவனைக் களிப்பு வெள்ளத்தில் ஆழ்த்த வேண்டும் என்று அவள் எண்ணியிருந்தாள். பேதைப் பெண்ணின் ஆசைக் கனவுகளுக்கு அளவு ஏது? பாவம்!
அமுதசாகரன் பூம்புகாரில் வந்து அருட் செல்வருடைய தவச்சாலையில் தங்கினான். மணநாகபுரத்தில் தன் வாழ்வில் ஏற்பட்ட மாறுதல்களையும் பெருநிதிச் செல் வரின் சீற்றத்தையும் அவரிடம் கூறினான். பூம்புகாரில் உள்ள வாணிகக் குடும்பத்து நங்கை ஒருத்தியையே பெருநிதிச் செல்வர் மணம் புரிந்து கொண்டுவிட்டார் என்ற செய்தியை முனிவர் அமுதசாகரனுக்குக் கூறினார். “திருமணமான பின்பு அவருடைய மனம் அமைதி யடைந்திருக்கும். நான் அவரைப் பார்த்து வரலாமல்லவா?” என்று முனிவரை வினவினான் அமுத சாகரன். அருட்செல்வர் அவன் கருத்தை அவ்வளவாக விரும்பவில்லை.
“உன் விருப்பம்! ஆனால் அந்த வாணிகனும் அவனோடு திரியும் ஒற்றைக் கண்ணனும் மிகவும் கெட்டவர்கள். நீ சூதுவாதில்லாத அப்பாவியாதலால் உனக்கு அவர்களுடைய உள்வேடம் தெரியாது. அவர்களுடைய மிகப்பெரிய வாணிகம் கடல் கொள்ளையும் கொலையும்தான்” என்றார் அவர்.
அமுதசாகரன் அதை ஒப்புக்கொள்ளவில்லை. முனிவருடைய அறிவுரையை மீறிக்கொண்டு பெருநிதிச் செல்வரைச் சந்திக்க புறப்பட்டான். அப்படிப் புறப்பட்டுப் போனவன் திரும்பவே இல்லை. எட்டுத் தினங்கள் வரை பொறுமையாக இருந்த அருட்செல்வர் ஒன்பதாவது நாள் காலையில் பொறுமை கலைந்து பட்டினப்பாக்கத்திற்குப் போய்ப் பெருநிதிச் செல்வரைச் சந்தித்துக் கேட்டார்:
“உங்களைத் தேடிக்கொண்டு எட்டு நாட்களுக்கு முன்பு இங்கே வந்த கவி அமுதசாகரன் இன்னும் திரும்ப வில்லையே?”
“திரும்பமாட்டான்! என்றும் திரும்ப முடியாத இடத்திற்கு அந்தத் துரோகியை அனுப்பியாயிற்று. நீங்களும் அந்த இடத்திற்குப் போக விரும்பினால் அங்கே உங்களையும் அனுப்பி வைக்கிறேன்” என்று முனிவரை இழுத்துச் சென்று அந்த மாளிகையின் பாதாள அறையில் புலிக் கூண்டுகள் இருந்த இடத்திற்குக் கொண்டு போய்க் குரோதத்தோடு காண்பித்தார் பெருநிதிச் செல்வர். “நீ நன்றாக இருப்பாயா பாவி” என்று குமுறி அலறிய அருட் செல்வரின் சாபங்களை அவன் இலட்சியம் செய்ய வில்லை. இடிஇடியென்று சிரித்தான்.
“நான் நன்றாக இருக்க வேண்டும் என்று தேடி மணந்து கொள்ளச் சென்ற பெண்ணைத் தான் கவர்ந்த நன்றி கெட்டவனின் அழகிய உடம்பையும் அதில் ஓடிய பச்சைக் குருதியையும் இந்தப் புலிகளின் வயிற்றில் தேடிப் பாருங்கள் முனிவரே!” என்று கொலை வெறியோடு கூவிக் கொண்டே அருட்செல்வ முனிவரைப் பிடரியில் கை கொடுத்துத் தள்ளியபடியே அந்த மாளிகையின் வாயிலில் கொண்டுவந்து வீழ்த்தினான் அவன். அன்று தவச் சாலைக்குத் திரும்பிய அருட்செல்வர் ஓராண்டு காலம் சக்கரவாளத்திலிருந்தே வெளியேறாமல் இந்தப் பாவத்தை எண்ணி எண்ணி வேதனைப்பட்டார். மோன விரதம் இருந்தார். கடுமையான தவங்களில் ஈடுபட்டார். அவருடைய மனப்புண் எதனாலும் ஆறவில்லை.
இரண்டாவது ஆண்டின் தொடக்கத்தில் இந்திர விழாவின் முதல் நாள் அதிகாலையில் எழுந்து அவர் தம்முடைய தவச்சாலையின் வாயிலுக்கு வந்தபோது அங்கே வைகறைப் பெண்ணான உஷையே எதிரில் வந்து நிற்பது போல் பேரழகு வாய்ந்த இளம் பெண்ணொருத்தி கையில் குழந்தையோடு நின்று கொண்டிருந்தாள்.
“நீ யார் அம்மா?”
“நான் மருதி! இந்தத் தவச் சாலையில் உங்களோடு தங்கியிருக்கும் கவி அமுதசாகரனைப் பார்க்க வேண்டும்.”
அவள் யாரென்று அருட்செல்வருக்குப் புரிந்தது. கண்களில் நீர் பெருகியது, பொற்சிலை போன்ற குழந்தை யோடு செளந்தரியவதியாக வந்து நிற்கும் அந்தப் பெண்ணிடம் நிகழ்ந்த கொடுமைகளை எப்படித் தொடங்கி எப்படிச் சொல்வது என்று அவருக்குத் தெரியவில்லை. அவருடைய நாவில் சொற்களே வரவில்லை. இருள் புலராத காலைப் போதாகையினால் தன்னுடைய கண்களில் நீர் அரும்புவதை அவள் பார்த்துவிடாமல் மேலாடையால் துடைத்துக் கொண்டு வேறு புறமாக முகத்தைத் திரும்பியபடி, “நீ இங்கே தங்கியிரு. அம்மா” என்று சொல்லிவிட்டு நீராடச் சென்றார் முனிவர். அவர் நீராடிவிட்டுத் திரும்பி வந்தபோது அவளுடைய பிள்ளைக் குழந்தை அந்த ஆசிரமத்தின் முன்புறம் தளர்நடை நடந்து கொண்டிருந்தது. அவரைப் பார்த்ததும் வேற்று முகம் நினையாமல் குறுஞ் சிரிப்போடு ஓடி வந்து கால்களைக் கட்டிக் கொண்டது. தெய்வமே குழந்தையாகப் பிறந்து வந்தது போல அழகு வடிவாயிருந்த அமுதசாகரனின் பிள்ளை தன்னுடைய கால்களைக் கட்டிக் கொண்டபோது கோவென்று கதறியழ வேண்டும் போலிருந்தது அந்த முனிவருக்கு. அமுதசாகரன் தான் புறப்பட்டு வந்திருந்த கப்பல் திரும்பி மணிநாகபுரத்திற்குப் புறப்பட்டபோது அதன் தலைவனிடம் பூம்புகார் துறையில் இறங்கியவுடனே மருதிக்கு ஓர் ஓலை எழுதிக் கொடுத்திருந்ததாக அருட்செல்வரிடம் சொல்லியிருந்தான். மருதி அந்த ஒலையைத் தானாகவே அவரிடம் காண்பித்தாள்.
“ஐயா! இங்கு வந்து இறங்கியதும் பூம்புகார்த் துறையிலிருந்தே அவர் எனக்குக் கொடுத்தனுப்பிய ஒலை இது.”
அவள் அளித்த அந்த ஒலையை வாங்கிப் படித்த போது முனிவருக்கு மேலும் அழுகை பொங்கியது. நவரசங்கள் உன் கண்ணிலிருந்து பிறந்தன... என்று தொடங்கி மீண்டும் அவளைச் சந்திக்கப் போகிற நாளை ஆவலுடன் எதிர்பார்த்து ஏங்கியிருப்பதாக அமுதசாகரன் பாலைத் தினைப் பொருளமைத்து மருதிக்காகப் பாடிய கவிச் சொற்கள் அந்த ஓலையில் இருந்தன.
“இப்போது அவன் வாழ்வது இந்தக் கவிதைகளில் மட்டும்தான் அம்மா!” என்று அழுகை பொங்கச் சொன்னார் அவர்.
“ஐயா! நீங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் என் மனம் இங்கு வந்து இறங்கிய வேளையிலிருந்து எதற்காகவோ காரணமின்றிப் பதறுகிறது. வலக்கண் துடிக்கிறது. துறைமுகத்தில் நான் வந்து இறங்கிய போது அந்தப் பெருநிதிச் செல்வரும், அவருடைய அரைக் குருட்டு அமைச்சரும் என்னைத் தற்செயலாகச் சந்தித்து விட்டார்கள். அவர்கள் என் அருகில் வந்து இந்தக் குழந்தையையும் உற்றுப் பார்த்துவிட்டு ஏளனமாகச் சிரித்தார்கள். எனக்குப் பயமாக இருந்தது. துறைமுகத்திலிருந்து மீண்டும் அவர்கள் பார்வையிலே படாமல் தப்பி உங்களுடைய தவச்சாலைக்கு வழி கேட்டுக் கொண்டு இங்கு வந்து சேர்ந்துவிட்டேன். என் கணவர் மணிநாகபுரத்திலிருந்து புறப்படும்போது உங்கள் தவச் சாலையில் வந்து தங்கப் போவதாகத்தான் என்னிடம் கூறினார். உங்களையன்றி நான் வேறு யாரிடம் போய் அவரைப் பற்றிக் கேட்பேன்!”
“யாரிடம் கேட்டும் பயனில்லை, பெண்ணே! உன் மனத்தைத் திடமாக்கிக்கொள். பின்பு சொல்வதைக் கேள். உன்னுடைய காதல் உனக்குக் கொடுத்த செளபாக்கியம் இந்தக் குழந்தையோடு முடிந்துவிட்டது. இந்த உலகத்தில் நல்லவை நீடிப்பதில்லை” என்று தொடங்கிச் சொல்லி விட வேண்டும் என்று மனத்திற்குள் தவித்துக் கொண்டிருந்த உண்மையை மெல்ல மெல்ல அவளிடம் சொல்லி முடித்தார். அதைக் கேட்டபோது இடிவிழுந்த மரம் போலச் சில நாழிகை முகம் பட்டுப்போய் ஆடாமல் அசையாமல் சிலையாக வீற்றிருந்தான் மருதி. அப்போது அவள் சிறுவன் பசித்து அழுதான். எந்த நிலையிலும் கலங்காத கர்மயோகியைப் போல் குழந்தையை இடையில் எடுத்துக்கொண்டு அவள் பாலூட்டினாள். நெடுநேரம் குழந்தை அவள் இடுப்பிலேயே இருந்தது. முனிவர் எரியோம்புவதற்காக வேள்விச் சாலைக்குள்ளே சென்றிருந்தார்.
வேள்வி வழிபாடுகளை முடித்துக் கொண்டு இரண்டு நாழிகைப்போது கழித்து அவர் திரும்பிவந்து பார்த்தபோது மருதியின் குழந்தை தரையில் தூங்கிக் கொண்டிருந்தது. மருதியைக் காணவில்லை. குழந்தையின் அருகே ஓர் ஏடு கிடந்தது. பரபரப்போடு சென்று முனிவர் அதை எடுத்துப் பார்த்தார்.
“நான் எந்தக் காரியத்துக்காகப் போகிறேனோ அது என்னால் நிறைவேறவில்லையானால் என் மகனை வளர்த்து ஆளாக்கி அவனால் அதை நிறைவேற்றுங்கள். உங்கள் தவச்சாலையில் வேள்விக் காரியங்களுக்காக சந்தனமும் சமித்தும் வெட்டுவதற்கு நீங்கள் பயன்படுத்தும் கோடாரியை நான் என்னோடு எடுத்துச் செல்வதற்காக என்னைப் பொறுத்தருள்க. இந்த அவசரத்தில் வேறு ஆயுதங்கள் எவையும் எனக்குக் கிடைக்கவில்லை” என்று எழுதியிருந்தாள் மருதி.
“ஐயோ! இந்தப் பெண்ணும் அந்தப் பாவியிடம் தேடிப் போய் அழிந்துவிடப் போகிறாளே” என்று தவித்தார் முனிவர். அப்போது குழந்தை அழுதது. ஓடிப் போய் அந்தப் பெண்ணைத் திரும்பி அழைத்துவர எண்ணினார். குழந்தையை அந்தக் காட்டில் யாரிடம் விட்டுப் போவதெனத் தயங்க நேர்ந்தது. ‘தெய்வ சித்தப்படி நடக்கட்டும்’ என்று மனத்தை உறுதிப்படுத்திக் கொண்டு தவச்சாலையிலே குழந்தைக்குப் பாதுகாப்பாக அவர் இருந்துவிட்டார்.
மறுநாள் காலை சக்கரவாளத்துக் காவலர் தலைவரான வீரசோழிய வளநாடுடையார் மூலம் அந்தச் செய்தி அவருக்குத் தெரிந்தது.
“யாரோ முரட்டு நாகநங்கை ஒருத்தி பட்டினப் பாக்கத்து எட்டிகுமரனைக் கோடாரியால் காலில் ஓங்கி, அடித்துவிட்டு தானும் அங்கேயே வீழ்ந்து மாண்டு போனாளாம்” என்று வளநாடுடையார் வந்து தெரிவித்த போது அருட்செல்வர் அமைதியாக அதைக் கேட்டுக் கொண்டார். அந்தப் பெண்ணின் மரணத்துக்காக அவர் மனம் மட்டுமே அழுதது. அதற்குப் பின் அந்த ஆண்டு இந்திரவிழாவின் கடைசி நாளன்று பூம்புகார்த் துறையில் பெருநிதிச் செல்வரைத் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்த வேளையில் அவர் நேரே நடக்க முடியாமல் ஒரு காலைச் சாய்த்துச் சாய்த்து நடப்பதையும் அருட்செல்வர் தாமே கவனித்தார். அப்போது அருட்செல்வரை அவரும் கவனித்துவிட்டார். மிக அருகில் நெருங்கி வந்து அருட் செல்வரின் காதருகே குனிந்து, “அமுதசாகரனின் குழந்தை உங்களிடம்தான் வளர்க்கிறான் போல் இருக்கிறது” என்று குரோதம் தொனிக்கச் சொல்லிவிட்டுப் போனான் அந்தப் பாவி. அதுவே பயங்கரமான எச்சரிக்கையாகத் தோன்றியது முனிவருக்கு. மருதியின் மகன் தன்னிடம் பூம்புகாரில் வளர்வது கவலைக்குரியது என்று அஞ்சிய முனிவர் அன்றே மணிநாகபுரத்திற்குப் பயணம் புறப்பட்டிருந்த துறவி ஒருவரிடம் நிகழ்ந்தவற்றையெல்லாம் கூறியனுப்பிக் காலாந்தகனை உடனே புறப்பட்டு வந்து தன் மருமகனும் மருதியின் குழந்தையுமாகிய உயிர்ச் செல்வத்தை மணிநாகபுரத்திற்கு அழைத்துப் போய்விடுமாறு வேண்டிக் கொண்டிருந்தார். இரண்டு திங்கள் காலத்துக்குப் பின் மனம் நிறைந்த துக்கத்துடனும் மருமகனுக்குக் காப்பணிவிப்பதற்காக நவரத்தினங்கள் பதித்துப் பொன்னில் செய்த ஐம்படைத் தாலியுடனும் காலாந்தகன் பூம்புகாருக்குப் புறப்பட்டு வந்தான். அவன் வந்த கப்பல் முன்னிரவில் பூம்புகார்த்துறையை அடைந்திருந்தது. அதே நேரத்தில் துறையில் வேறு காரியமாக வந்து நின்றிருந்த பட்டினப்பாக்கத்துப் பெருநிதிச் செல்வரும், நகைவேழம்பரும் காலாந்தகன் அங்கு வந்திருப்பதைக் கண்டு கொண் டார்கள். காலாந்தகன், துறையில் இறங்கி சக்கரவாளக் கோட்டத்தில் அருட்செல்வ முனிவரின் தவச்சாலைக்கு வழி கேட்டுக் கொண்டிருந்தான். தனக்கு மிகவும் வேண்டியவளாகிய கபாலிகையான பைரவியை அனுப்பிக் காலாந்தகனுக்கு வழிகாட்டுவது போல அவனை அழைத்துச் சென்று வன்னிமன்றத்துக்குப் பின்புறம் கொண்டு போய் நிறுத்துமாறு ஏற்பாடு செய்த நகைவேழம்பர் பெருநிதிச் செல்வரோடு அங்கே பின் தொடர்ந்து போய்க் காலாந்தகனைக் கைப்பற்றினார். வஞ்சகமாகக் காலாந்தகன் அன்றிரவில் அவர்களால் கொல்லப்பட்டான். அவனிடமிருந்த செல்வங்களும், நவரத்தின ஐம்படைத் தாலியும் கொள்ளையடிக்கப்பட்டன.
நான்கு நாட்களுக்குப் பின்னர். இதை மறைந்து பார்த்துக் கொண்டிருந்த வேறொரு கபாலிகன் மூலம் இந்தப் பயங்கர இரகசியம் அருட்செல்வ முனிவருக்குத் தெரிந்தபோது, ‘இவ்வளவு கொடுமைகளுக்குப் பின்பும் இந்தக் குழந்தையை எப்படி வளர்த்து, ஆளாக்கப் போகிறேனோ?’ என்று அவர் பெருங்கலக்கம் கொண்டார். காலாந்தகனின் மனைவிக்கும் மகன் குலபதிக்கும் முனிவரால் அவனது சாவு தெரிவிக்கப்பட்டபின் அதே வேதனையில் நோய்ப் படுக்கையாகக் கிடந்து மாண்டாள் குலபதியின் தாய். தன்னிடம் வளர்ந்து வந்த மருதியின் பிள்ளைக்கு இளங்குமரன் என்று பெயர் சூட்டினார் முனிவர். நாளுக்கு நாள் அந்தப் பிள்ளையைப் பெருநிதிச் செல்வரும் அவருடைய துன்மந்திரியும் கழுகுகளாக வட்டமிடுவதைக் கண்டு அஞ்சிய முனிவர் வயது வந்ததும் அவனுக்குப் பாதுகாப்பாக இருக்கட்டும் என்று கருதி நீலநாகமறவருடைய படைக்கலச் சாலையில் அந்தப் பிள்ளையைச் சேர்த்துவிட்டார். பின்பு நாளடைவில் மணிநாகபுரத்து வாணிகக் கப்பல்களை எல்லாம் பெருநிதிச்செல்வரின் ஏவலர்கள் நடுக்கடலில் கடற் கொள்ளைக்காரர்களான கடம்பர் துணையோடு சூறையாடுவதாகப் பலமுறை கேள்விப்பட்டார் அருட்செல்வ முனிவர். இரண்டு பெண்களுக்குத் தந்தையாகி வாழ்ந்து மூத்த பின்பும் இந்த வெறுப்பை மறக்க முடியாத மனம் எட்டிகுமரனுக்கு இருப்பதைக் கண்டு அஞ்சினார் அவர்.
‘மருதியின் மகனான இளங்குமரன் வளர்ந்து பெரியவனான பின் இதற்கெல்லாம் சேர்த்துப் பழிவாங்கச் செய்யலாம் என்று தோன்றியது அவருக்கு. அந்தக் குடும்பத்தின் புதிய தலைமுறைக்குத் தன்னைப் பாதுகாவலராகப் பாவித்துக் கொண்டு குலபதி, இளங்குமரன் இரண்டு பிள்ளைகளின் வளர்ச்சிக்காகவும் இடை விடாமல் மனத்தினாலும் செயல்களாலும் தவம் செய்துகொண்டு வந்தார் அருட்செல்வர்.
அவ்வப்போது குலபதிக்குத் தக்கவர்கள் மூலம் செய்தி சொல்லியனுப்பிக் கொண்டிருந்தார் முனிவர். உதிர் சருகுகள்போல் ஆண்டுகள் பல கழிந்து கொண்டிருந்தன. அந்த முனிவர் மூத்துத் தளர்ந்தாலும் அவருடைய இலட்சியமும் உட்கருத்தும் தளரவில்லை.
படித்தவற்றிலிருந்து இவற்றை எல்லாம் உணர்ந்து கொண்டு இளங்குமரன் தலை நிமிர்ந்தபோது பொழுது புலர்ந்து மாடங்களின் வழியே ஒளிக்கதிர்கள் பாய்ந்து கொண்டிருந்தன. வெளியே தாழிட்டிருந்த கதவுகளும் அதே வேளையில் திறந்தன. திறந்த கதவுகளுக்கு அப்பால் அவன் ஒரு புதிய காட்சியைக் கண்டான்.
கிளர்ந்த உணர்வுகளும் விம்மிப் பூரிக்கும் தோள்களுமாக இளங்குமரன் எதிரே பார்த்தான். மணிநாகபுரத்து மாளிகையின் ஓவியமாடத்து அறையி லிருந்து நேர் கீழே தணிவாகத் தென்பட்ட முற்றத்தில் எமகிங்கரர்களைப் போன்ற தோற்றமுடைய முரட்டு நாகமல்லர்கள் ஐம்பது அறுபது பேர் - ஆயுத பாணிகளாக அணிவகுத்து நின்று கொண்டிருந்தனர். போர்க் கோலம் புனைந்து கொண்டாற் போன்ற தோற்றத்தோடு குலபதியும் அங்கே அவர்களுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தான். இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு உட்பக்கம் திரும்பி ஓவிய மாடத்தை நோக்கினான். அங்கே மணிமார்பன் சில ஓவியங்களைப் பிரதி செய்து கொண்டு நிற்பது தெரிந்தது.
‘இந்தக் காரியங்கள் எல்லாம் இவ்வளவு விரைவாக நிகழ்வதன் நோக்கமென்ன?’ என்று இளங்குமரன் தனக்குள் சிந்திக்கத் தொடங்கியபோதில்,
“எதிரே நிகழ்கிறவற்றையெல்லாம் பார்த்தாய் அல்லவா?” என்று கேட்டுக்கொண்டே அருட்செல்வர் வளநாடுடையாரோடு அங்கு வந்து சேர்ந்தார். அவன் இப்போது புதிதாகத் தெரிந்து கொண்டவற்றால் அந்த முனிவருக்கு அதிக நன்றிக்கடன் பட்டிருந்தான்.
“எப்போதோ நிகழ்ந்து முடிந்தவற்றையெல்லாம் இந்த ஏடுகளில் பார்த்தேன். இப்போது நிகழ்கிறவற்றை என் எதிரே பார்க்கிறேன். இழந்தவற்றுக்காக வேதனைப் படுகிறேன். பெற வேண்டியவற்றுக்காகக் கிளர்ச்சி அடை கிறேன். இவ்வளவையும் தெரிந்து கொண்ட பின் உங்கள் மேல் என் நன்றி பெருகுகிறது. என்னை வளர்த்து ஆளாக்கிய காலத்தில் என்னை வளர்ப்பதைத் தவிர வேறு தவங்களைச் செய்ய மறந்திருக்கிறீர்கள் நீங்கள். இது பெரிய காரியம். இதற்குக் கைம்மாறு செய்ய எனக்குச் சக்தியில்லை” என்று முனிவரை நோக்கி அவன் நாத் தழுதழுக்கக் கூறினான். முனிவர் அவன் அருகில் வந்து அவனுடைய கைகளைப் பற்றிக்கொண்டு அன்போடும் பாசத்தோடும் பேசலானார்:
“கைம்மாறு எதிர்பார்த்துக் கொண்டு நானும் இவற்றை யெல்லாம் செய்யவில்லையப்பா! இன்று உன் மேல் நான் கொண்டிருக்கிற இதே அபிமானத்தை உன் தந்தை அமுதசாகரன் வாழ்ந்த காலத்தில் அவன் மேலும் கொண் டிருந்தேன். உன் தந்தைக்கும் தாய்க்கும் ஏற்பட்ட கொடுந் துன்பங்கள் என்னை பற்றும் பாசமும் உள்ள வெறும் மனிதனாக்கிவிட்டன. அந்தக் கணத்திலிருந்து நான் உனக்காக மட்டும் தவம் செய்யத் தொடங்கி விட்டேன். அந்த தவம் இன்று நிறைவேறுகிறது. இனிமேல்தான் என்னுடைய மெய்யான தவங்களை நான் செய்யத் தொடங்க வேண்டும்.”
“உங்கள் தவம் நிறைவேறுகிற விநாடிகளில் என் தவம் அழிகிறது. நான் படித்துப் படித்துச் சேர்த்திருந்த பொறுமை இப்போது எவ்வளவோ முயன்றும் என்னிடம் நிற்காமல் நழுவுகிறது.”
“அப்படி நழுவ வேண்டுமென்றுதான் இவ்வளவு காலம் நானும் காத்திருந்தேன். இதோ கீழே உன்னுடைய தாய்மாமன் மகனாகிய குலபதி பட்டினப்பாக்கத்து ஏழடுக்கு மாளிகையையே இரவோடிரவாகச் சூரையாடிக் கொள்ளை யிட வேண்டுமென்று படை திரட்டிக் கொண்டு நிற்கிறான். நீ யாரைச் சந்தித்துப் பழிவாங்க வேண்டுமோ அவனிடம் காண்பிப்பதற்காக உன் நண்பனான ஓவியன் மணிமார்பனைக் கொண்டு இந்த ஓவியங்களைப் பிரதி செய்யச் சொல்லியிருக்கிறேன். நீ போகும்போது இவற்றையும் உன்னோடு கொண்டு போ. குலபதியும் அந்த நாகமல்லர்களும் உன்னோடு பூம்புகாருக்கு வருகிறார்கள். வளநாடுடையாரும் ஓவியனும் வேறு வருகிறார்கள். பூம்புகாரில் நீலநாகரும் இருக்கிறார்.”
“ஏன் நீங்கள் வரவில்லையா?”
“நான் இனிமேல் பூம்புகாருக்கு வருகிற எண்ணமில்லை. உனக்கு இவற்றையெல்லாம் உணர்த்தியபின் இன்று என் மனச்சுமை குறைந்துவிட்டது. இந்த விநாடியிலிருந்து நான் மெய்யாகவே எல்லாப் பாசங்களையும் உதறிய பூரணத் துறவியாகி விட்டேன். இங்கேயே சமந்த கூடத்துக் காட்டில் எங்காவது போய்க் கடுமையான தவ விரதங்களில் இனி ஈடுபட எண்ணியிருக்கிறேன். இன்று இப்போது நீ எனக்குச் செய்ய முடிந்த கைம்மாறு, என் வழியில் நான் போவதற்கு விடுவதுதான். மறுபடி உன்னைக் காண வேண்டுமென்று எனக்கு எப்போது தோன்றுகிறதோ, அப்போது நானே உன்னைத் தேடிக் கொண்டு வருவேன். கடமை நிறைவேறிய பின்னும் பற்றுப் பாசங்களை உதற முடியாமல் நான் இருந்து விடுவேனாயின் என்னுடைய துறவு நெறி பொய்யாகிவிடும்.”
“சுவாமீ! நீங்கள் எல்லாப் பற்றுப் பாசங்களையும் உதறிவிட்டுப் போகிற போக்கில் நான் எதையும் உதற முடியாமல் என்னைக் கோபதாப உணர்ச்சிகளில் பிணைத்து விட்டுப் போகிறீர்களே? இது நியாயமா?”
“நன்றாக விடுபட வேண்டுமானால் நன்றாகக் கட்டுண்டுதான் தீர வேண்டும். நீ இப்போது கட்டுப் படுவதும் அப்படித்தான். இரும்புக் கவசங்களாலும், ஆயுதங்களாலும் கட்டுண்டு உடம்போடும் விடுபட்ட மனத்தோடும் நீலநாகர் வாழவில்லையா? அப்படி நீயும் வாழ்வாய் எனக்கு விடை கொடு.”
அருட்செல்வருடைய பிரிவு வேதனையைக் கொடுத்தாலும் இளங்குமரன் அவருடைய விருப்பத்துக்குக் குறுக்கே நிற்க விரும்பாமல் விடை கொடுத்தான். எட்டு அங்கமும் தோய வீழ்ந்து வணங்கி அவருடைய பாதங்களைக் கண்ணில் ஒற்றிக் கொண்டான். மற்றவர்களிடமும் விடை பெற்றுக் கொண்டு அவர் சமந்த கூடத்திற்கு புறப்பட்டுப் போனார். அனலும் வெப்பமும் மிகுந்த நேரத்தில் எங்கிருந்தாவது நல்ல குளிர் காற்றுச் சில்லெனப் புறப்பட்டு வருவதுபோல் வேதனையும் துன்பமும் படுகிறவர்களின் வாழ்க்கையில் உதவி புரிவதற் கென்றே இப்படிச் சில ஞானிகள் நடுவாக வந்து பொறுப்புடனே துணை செய்துவிட்டுப் போகிறார்கள். இப்படிப் பயன் கருதாமல் உதவி செய்ய வருகிறவர்கள் கடவுளின் பிரதிநிதிகளாயிருக்க வேண்டும் என்று அருட் செல்வரைப் பிரிந்தபோது இளங்குமரன் எண்ணினான். எல்லாம் புரிந்துகொண்டு எவற்றை உணர வேண்டுமோ அவற்றை உணர்ந்து கிளர்ச்சியுற்ற மனத்தோடு நின்ற இளங்குமரன் தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து தன் வாழ்க்கையில் நேர்ந்த நிகழ்ச்சி மாறுதல்களை ஒவ்வொன்றாக நினைத்தான். படிப்படியாக நடந்து மலையேறி வந்தவன் உயரத்தில் போய் நின்று கொண்டு இனிமேல் போவதற்கு இதைவிட உயரமானது எதுவு மில்லையே என்று மலைப்போடு நடந்து வந்து வழியைத் திரும்பிப் பார்ப்பது போலிருந்தது அந்த நிலை.
முதன் முதலாகப் பட்டினப்பாக்கத்துப் பெரு மாளிகைத் தோட்டத்தில் அந்த பெருநிதிச் செல்வர் தன்னைச் சந்தித்ததையும் தன் கழுத்தின் வலதுபக்கத்துச் சரிவில் கருநாவற்பழம் போலிருந்த கருப்பு மச்சத்தை உற்றுப் பார்த்தபின், “அருட்செல்வ முனிவர் நலமா யிருக்கிறாரா?” என்று குறும்புத்தனமாகத் தன்னை நோக்கிக் கேட்டதையும், தான் அன்று அந்த மாளிகையிலிருந்து வெளியேறியபோது ஒற்றைக் கண்ணன் தன்னை இரகசியமாகப் பின் தொடர்ந்ததையும் இப்போது வரிசையாக நினைத்துப் பார்த்துப் புரிந்துகொண்டான் இளங்குமரன். இந்த எண்ணங்களையும் தன் குடியின் ஒரு தலைமுறை உயிர்களும் செல்வங்களும் அந்தப் பெருநிதிச் செல்வனால் அழிக்கப்பட்டிருப்பதையும் ஞாபகத்திற்குக் கொண்டுவந்து பார்த்தபோது அவனுடைய கருத்தில் கனல் மூண்டது. அந்த விநாடியில் அத்தகைய புதிய உணர்வுகளைத் தாங்கிக் கொண்டிருக்கும்போது தன் முகம் எப்படியிருக்கிறதென்று ஓவிய மாடத்தில் பதித்திருந்ததொரு கண்ணாடியில் பார்த்தான் இளங்குமரன். உணர்ச்சிகளின் சிறுமை எதுவும் படியாமல் பளிங்குபோல் இருந்த அவன் முகம் சற்றே கறுத்திருந்தது. இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்ததனால் ஏற்பட்ட உணர்ச்சிகள் ஒருபுறமும், இவை தெரிந்ததனால் இழந்த உணர்ச்சிகளை எண்ணி வருந்தும் வருத்தம் ஒருபுறமுமாக இளங்குமரன் சிறிது போது மலைப்படைந்து நின்றான். தன் தாயும் தந்தையும் சந்திப்பதாக வரையப்பட்டிருந்த ஓவியத்தின் அருகே சென்று சில விநாடிகள் கண்ணிமையாமல் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதன் கீழேயிருந்த ஏடுகளை எடுத்துப் பார்த்துத் தன் தந்தையின் சுவை நிறைந்த கவிதைகளைச் சிறிது நாழிகை உணர்ந்து மகிழ்ந்தான். கீழே போய்க் குலபதியை அழைத்துக் கொண்டு வந்து நின்றார் வளநாடுடையார்.
“தம்பீ! குலபதியின் இரகசியப் படையிலிருக்கும் மல்லர்கள் ஒவ்வொருவரும் பத்து எதிரிகளை அடித்துக் கொல்லுகிற ஆற்றலுடையவர்கள். இவர்களோடு நாம் எல்லோரும் இன்று மாலையே பூம்புகாருக்கு கப்பலேற வேண்டும்” என்று வளநாடுடையார் கூறியபோது சில கணங்கள் இளங்குமரன் மெளனமாயிருந்தான். பின்பு ஒவ்வொரு சொல்லாகச் சிந்தித்துப் பேசுகிறவனைப் போலப் பேசினான்:
“ஐயா! யாருடைய வெறுப்பினால் என்னுடைய குடி இப்படிச் சீரழிந்ததோ அவருடைய செல்வங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு அவற்றை நமது கப்பல் நிறைய நிரப்பியபின் பூம்புகாரிலிருந்து இரவோடிரவாகத் திரும்பிவிட வேண்டும் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் போலிருக்கிறது. என் விருப்பம் அது அன்று. இவ்வளவு கெடுதலும் செய்வதற்குக் காரணமாக அந்த மனத்தில் இருந்த தீய எண்ணங்களை ஒவ்வொன்தாக வெளியேற்றிப் பார்க்க நான் ஆசைப்படுகிறேன். பெண் சம்பந்தமாக ஏமாறியவர்களும், பொன் சம்பந்தமாக ஏமாறியவர்களும் அந்த ஏமாற்றத்துக்குக் காரணமாயிருந்தவர்கள் மேல் எவ்வளவு குரோதமுற முடியும் என்பதற்கு இந்த மனிதர் உதாரணமாயிருக்கிறார். என் தந்தையையும் தாயையும் இவர் அழித்துவிட்டதாக எண்ணிக் கொண்டிருப்பது தான் பேதைமை. உலகத்தில் பாடும் குலத்தின் கடைசிக் கவியின் கடைசிக் குரல் ஒலிக்கிற வரை அதில் என் தந்தையின் கருத்தும் தொனித்துக் கொண்டிருக்கும். உலகத்துப் பெண் குலத்தின் ஒவ்வொரு தலைமுறைப் பேரழகிலும் என் தாயின் அழகும் எங்கோ ஓரிடத்தில் எழில் பரப்பிக் கொண்டிருக்கும். படைப்பின் செல்வங்களிலிருந்து எதையும், எந்த மனிதர்களும் திருடி ஒளித்துவிடவோ, அழித்து நிர்மூலம் செய்துவிடவோ முடியாது. என் தாய்மாமன் காலாந்தக தேவரைத் துடிக்கத் துடிக்கக் கொன்றுவிட்டதாகத் திருப்திப்படலாம். இதோ அவரைப் போலவே அரும்பு மீசையும் அழகிய தோற்றமுமாக விளங்கும் குலபதியின் முகத்தில் தெரிகிற கவர்ச்சி அவரைத்தானே நினைவூட்டுகிறது, என் தாய் மாமனுடைய ஓவியத்தை இந்த மாடத்தில் பார்த்தபோது ஒரு தொடர்பும் தெரியாமலே குலபதியின் முகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டேன் நான். மனிதன் பிறரையும் பிறருடைய எண்ணங்களையும் கொல்ல முடியும். அந்த எண்ணங்களும் அதே எண்ணங்களைக் கொண்ட புதிய பரம்பரையும் தோன்றுவதைத் தடுக்க முடியாது. இவற்றையெல்லாம் அறியத் தவித்துத் தவித்து அந்த அறியும் ஆசையே என்னுடைய கருத்தில் கனன்று கொண்டிருந்த காலத்தில் இவை எனக்குத் தெரியவில்லை. குருகுல வாசம் செய்து ஞானப்பசி தீர்ந்து, கல்வியினாலும் தத்துவ மயமான எண்ணங்களாலும் அந்தக் கனல் அவிழ்ந்து போய் மனத்தில் அது இருந்த இடம் குளிர்ந்திருக்கும் என்று நான் நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால் இத்தனை காலமான பின்பும் அது அழியாமல் நீறுபூத்த நெருப்பாக அடிமனத்தில் என்னுள் எங்கோ எரிந்து கொண்டுதான் இருக்கிறது. எவ்வளவு காலம் எப்படி எவருக்குக் கடமைப் பட்டிருந்தாலும் தாம் ஒரு துறவி என்ற நினைப்பை இழந்துவிடாமல் ஒரே ஒரு கணத்தில் எல்லாப் பற்றுப் பாசங்களையும் உதறிவிட்டு அருட் செல்வர் விடை பெற்றுக் கொண்டு போய் விட்டார் பார்த்தீர்களா? அப்படி என்னால் போக முடியவில்லை என்பதை உணரும் போதே நான் ஏதோ ஒருவிதத்தில் பக்குவப்படவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அந்தப் பக்குவத்தை அடைவதற்கு இந்தச் சோதனையை நான் ஏற்றுக்கொள்வது அவசியம்தான். ஆனால், இந்தச் சோதனையில் நான் தனியாகப் புகுந்து வெளியேற வேண்டுமென்று விரும்புகிறேனே ஒழியப் பிறருடைய துணைகளை விரும்பவில்லை. குலபதியின் இரகசியப் படையிலிருக்கிற மல்லர்களும், குலபதியும் நம்மோடு, பூம்புகாருக்கு வரவே கூடாது.
“நான் ஒரு கவியின் மகன். கவிகள் வார்த்தைகளாலேயே பிறருடைய உணர்ச்சிகளையும் மனத்தையும் வென்றுவிடும் சத்தியப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய சொற்களே அவர்களுக்குப் பெரிய ஆயுதங்கள். நான் என்னுடைய குலப்பகைவனைத் தனியே நேருக்கு நேர் சந்திக்க விரும்புகிறேன். அப்படிச் சந்திக்கப் புறப்படுவதற்காக இன்று மாலை வரை தாமதம் செய்ய வேண்டியதுகூட அநாவசியம். நான் இந்த விநாடியே புறப்படுகிறேன்” என்று கூறிக்கொண்டே தன் தாயின் ஓவியத்தருகே இருந்த ஏடுகளையும், தான் முதல் நாளிரவு படித்திருந்த ஏடுகளையும் எடுத்துக்கொண்டு சில சித்திரங்களைப் பிரதி செய்துகொண்டிருந்த மணிமார்பன் அருகே சென்றான் இளங்குமரன். அவன் அதுவரை கூறியவற்றைக் கேட்டு மனக்குழப்பம் அடைந்திருந்த குலபதி, “ஐயா! இதென்ன என்னுடைய அத்தையின் அருமைப் புதல்வர் திடீரென்று இப்படி எல்லாத் திட்டங்களையும் மாற்றுகிறாரே! என்னையும் நான் இத்தனை காலமாக இந்தக் காரியத்திற்காகவே சோறிட்டு வளர்த்த இந்த மல்லர்களையும் பூம்புகாருக்கு வரக் கூடாதென்கிறாரே இவர்? என் அத்தையும் அவள் நாயகரான கவிஞர் அமுதசாகரும் என் தந்தையாரும் அந்தப் பட்டினப்பாக்கத்து மாளிகைச் செல்வரிடம் போய்த் தனிமையில் உயிரைப் பறிகொடுத்த வேதனைகள் போதாதென்று இவரும் போய் அப்படி ஏதாவது ஆகிவிட்டால் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது” என்று கலக்கத்தோடு வளநாடுடையாரிடம் கூறினான்.
“அப்படியெல்லாம் ஒன்றும் ஆகிவிடாது குலபதி! இளங்குமரனுக்குச் சிறுவயதிலிருந்தே இப்படிப் பிடிவாத குணம் உண்டு. நடுவில் ஒடுங்கியிருந்த அந்தக் குணம் இப்போது மறுபடி மெல்லத் தோன்றுகிறதோ என்னவோ? எப்படி இருந்தாலும் நீ இப்போது அவன் சொற்படியே நடந்துகொள்வதுதான் நல்லது. நானும் மணிமார்பனும் எப்படியும் அவனோடு பூம்புகாருக்குச் செல்வோம். அங்கே நீலநாகரைச் சந்தித்து அவரிடம் கலந்தாலோசித்த பின் இளங்குமரனுக்குப் பாதுகாப்பாக என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் அவனுக்கும் தெரியாமலே செய்துவிடுவோம். தவிர அறிவாளிகளின் பிடிவாதம் நல்ல முடிவைத்தான் தருமென்று என் அனுபவத்தில் நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். நீயும், உன்னைச் சேர்ந்த மல்லர்களும் எங்களோடு வர வேண்டாம். இளங்குமர னுடைய போக்குப்படியே போய்க் காரியத்தைச் சாதிக்கலாம்” என்று குலபதிக்கு மறுமொழி கூறினார் வளநாடுடையார். குலபதியும் அரை மனத்தோடு அதற்கு இணங்கினான்.
இளங்குமரன் பயணத்திற்கு முன்பு நீராடி விட்டுத் தூய்மையாக வந்து தன் பெற்றோர்களின் ஓவியத்தை வணங்கினான். தாய் மாமனாகிய காலாந்தக தேவனுடைய ஓவியத்தையும் வணங்கினான். பின்பு மணிமார்பனை நோக்கி, “நீ பிரதி செய்த ஓவியங்களை எடுத்துக்கொண்டு புறப்படு” என்றான். அப்போது குலபதி இளங்குமரன் அருகே வந்து, “ஐயா! பட்டினியாக வெறும் வயிற்றோடு போகாதீர்கள். இது உங்கள் மாளிகை. இங்கே நிரம்பிக் கிடக்கும் செல்வங்களையெல்லாம் ஆளவேண்டியவர் நீங்கள். என்னையும் இந்த மாளிகையின் செல்வங்களையும் தான் கைவிட்டு விட்டுப் போகிறீர்கள். நானும் என் வீரர்களும் உங்களோடு பூம்புகாருக்கு வரக்கூடாதென்றும் பிடிவாதமாக மறுக்கின்றீர்கள். மறுபடியும் நான் உங்களை எப்போது சந்திக்கப்போகிறேனோ? இன்று புறப்படுமுன் என்னோடு அமர்ந்து பசியாறிவிட்டுச் செல்லுங்கள்” என்று நெகிழ்ந்த குரலில் வேண்டிக் கொண்டான்.
சில கணங்கள் அந்த நெகிழ்ச்சிக்குக் கட்டுப்பட்டு ஒன்றும் சொல்லாத் தோன்றாமல் தயங்கி நின்றான் இளங்குமரன். அந்த வேண்டுகோளைச் சொல்லியவனுடைய முகத்தையும், அதைக் கேட்டுத் தயங்கி நிற்பவனுடைய முகத்தையும் பார்த்து அந்த விநாடியில் அங்கே சூழ்ந்து நின்ற எல்லாருடைய மனங்களும் தவித்துக் குமுறி மெளனமாகவே உள்ளுக்குள் அழுதன. தயங்கி நின்ற இளங்குமரன் மெல்ல நடந்து போய்க் கண்கலங்கி எதிரே நின்று கொண்டிருந்த குலபதியைத் தோளோடு தோள் சேரத் தழுவிக்கொண்டு அவனை நோக்கிப் புன்சிரிப்புடனே சொல்லலானான்:
“குலபதி என்னுடைய பசி மிகவும் பெரியது. அது மிக நீண்ட காலத்துப் பசி. பல பிறவிகளாக நிறையாமலே வருகிற பசி. அதன் ஒரு பகுதி திருநாங்கூரில் நான் குருகுல வாசம் செய்தபோது நிறைந்தது. இன்னொரு பகுதி பூம்புகாரில் சமயவாதிகள் அணிவகுத்து நின்ற ஞான வீதியில் அவர்களை நான் சந்தித்து வென்றபோது நிறைந்தது. இன்னொரு பகுதி இந்தத் தீவுக்கு வந்து என் குடிப்பிறப்பைப் பற்றி நான் தெரிந்து கொண்ட பின்பு நிறைந்தது. இனி மீதமிருக்கிற பசியும் நான் பூம்புகாருக்குப் போனவுடன் நிறைந்துவிடும். இந்த முறை என் பிறவி முழுமையடைந்து விட வேண்டுமென்று நான் இடை விடாமல் மனத்திற்குள்ளேயே விடுபட்டுப் பறப்பதற்குத் தவித்துக் கொண்டிருக்கிறேன். என் உடம்பில் அதிகமான சக்தியும் இரக்கமும் ஓடி நான் யாரைச் சந்தித்து நியாயம் கேட்க வேண்டுமோ அவரிடம் என் அந்தரங்கத்துக்கு மாறாக நடந்து கொண்டு விட நேருமோ என்ற பயத்தினால் அந்தச் சோதனை முடிகிறவரை விரதமிருக்க எண்ணு கிறேன். ஆகவே என்னை உண்பதற்கு அழைக்காதே. எனக்கு விடை கொடு.”
“இந்த மாளிகையும் இதன் செல்வங்களையும் ஆள வேண்டியவன் நான் என்று நீ கூறுகிறாய். என்னுடைய சிறு பருவத்திலிருந்தே இந்த வகையான செல்வங்கள் மதிப்புள்ளவையாக எனக்குத் தோன்றவில்லை. நான் தவச்சாலையில் ஒரு முனிவருடைய வளர்ப்புப் பிள்ளை யாக வளர்ந்தது இதற்குக் காரணமாக இருக்கலாம். அந்தத் தவச்சாலையும் பூம்புகாரின் மயானத்தருகே அமைந் திருந்தது. மனிதனுடைய ஆசைகளும், நினைவுகளும், கனவுகளும் நம்பிக்கைகளும் அழிந்து மண்ணோடு கலந்து விடுகிற பூமியில் நடந்து நடந்து அந்த மண்ணின் குணமே எனக்குப் படிந்து விட்டதோ என்னவோ? எனக்காகப் பிறரை அநுதாபப்பட விடுவது கூட என் தன்மானத்துக்கு இழுக்கு என்று கருதி மானமே உருவாக நான் நிமிர்ந்து நின்ற நாட்களும் என் வாழ்வில் உண்டு. எல்லோருக்காகவும் எல்லா வேளைகளிலும் அநுதாபப்படும் மனம் தான் ஞானபூமி என்று நானே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ தனது எண்ணத்தில் தவம்செய்த நாட்களும் என் வாழ்வில் உண்டு. என்னுடைய வாழ்க்கையே ஒவ்வொரு பருவத்திலும் எனக்குப் பாடமாக வாய்த்திருக்கிறது. ஆனால் எல்லாப் பருவத்திலும் சேர்ந்து நான் மொத்தமாக அலட்சியம் செய்த ஒரு பொருள் செல்வமும் சுகபோகங்களும் தான். துக்கமயமான அநுபவங்களுக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி எந்த வேளையிலும் நெருப்பில் இளகும் பொன்னாக ஒளிர வேண்டும் என்பதுதான் என் ஆசை” என்று தன் மனத்தைத் திறந்து பேசினான் இளங்குமரன். மேலே ஒன்றும் கேட்கத் தோன்றாமல் குலபதியின் நாக்கு அடங்கிவிட்டது. வளநாடுடையாரும், மணிமார்பனும், அவன் மனைவி பதுமையும் உடன்வர இளங்குமரன் அன்று நண்பகலில் பூம்புகாருக்குக் கப்பலேறினான். சங்குவேலித் துறைக்கு வழியனுப்ப வந்திருந்த குலபதி இளங்குமரனுக்கு விடைகொடுக்கும்போது உணர்ச்சி வசப்பட்டு அழுதுவிட்டான்.
“ஐயா! என் அத்தையின் புதல்வராகிய நீங்கள் உங்கள் வாழ்வின் ஒரு பருவத்தில் முரட்டு வீரராக வாழ்ந்திருக்கிறீர்கள்! மற்றொரு பருவத்தில் கல்விக் கடலாகப் பெருகியிருக்கிறீர்கள். பின்பு ஞானியாக நிறைந்திருக்கிறீர்கள்! இறுதியில் நெருப்பிலே இளகும் பொன்போலச் சான்றாண்மை வீரராக உயர்ந்திருக்கிறீர்கள். இவற்றை யெல்லாம் என் குடும்பப் பெருமையாக நான் எண்ணிப் பூரிக்கிறேன். ஆனால் மறுபடி எப்போது உங்கள் வீட்டுக்கு நீங்கள் வந்து சேரப் போகிறீர்கள்? வேற்று மனிதர் வந்து தங்குவது போல இரண்டு நாள் வந்து இருந்துவிட்டுப் பிரிவையும் ஆற்றாமையையும் எனக்கு அளித்துவிட்டுப் போகிறீர்களே? இது உங்களுக்கே நன்றாயிருக்கிறதா?” என்று குலபதி குமுறியபோது, “விரைவில் வருகிறேன் கவலைப்படாதே!” என்று கூறி அருள்நகை பூத்தான் இளங்குமரன்.
அதன் பின்னர் சில நாட்கள் கழித்துப் பூம்புகார்த் துறையில் வந்து இறங்கிய போதுதான் இளங்குமரன் குலபதியின் வேண்டுகோளையும் சொற்களையும் இரண்டாம் முறையாக நினைவு கூர்ந்தான்.
பூம்புகார்த் துறையில் இளங்குமரன் முதலியவர்கள் வந்து இறங்கியபோது இருள் பிரியாத வைகறை நேரமாயிருந்தது. துறைமுகத்தைச் சூழ்ந்துள்ள பகுதிகளையும் எதிரே பரந்து கிடந்த வெள்ளிடை மன்றம் என்னும் நிலப் பரப்பையும் மெல்லிருள் கவிந்து போர்த்தியிருந்தது. அலைகளின் ஓசையும் துறையை அடுத்த கரை நிலப் பரப்பில் குவிந்திருந்த பல்வேறு பண்டங்களைக் காவல் செய்வோர் இடையிட்டு இடையிட்டுக் கூவும் எச்சரிக்கைக் குரல்களுமாகத் துறைமுகம் வேறு ஒலியற்றிருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னைச் சிறு குழந்தையாகக் கைகளில் ஏந்திக்கொண்டு தன் தாய் ஆதரவும் துணையுமில்லாத பேதைப் பெண்ணாய் இதே துறைமுகத்தில் வந்து நின்ற போதாத வேளையை இப்போது கற்பனை செய்து பார்க்க முயன்றது இளங்குமரனின் மனம். கரையிலிருந்த பார்வை மாடத்தில் ஏறி விடிகாலையின் அமைதியில், மெல்ல மெல்ல உறங்கிச் சோர்ந்தபோன மணப் பெண்ணைப் போலத் தெரியும் நகரத்தைச் சிறிது நாழிகை பார்த்துக் கொண்டு நின்றான் இளங்குமரன். கப்பல் கரப்புத் தீவிலிருந்து சுரமஞ்சரியோடு திரும்பிய காலை வேளை ஒன்றில் நீண்ட நாட்களுக்கு முன்பு இன்று போல இதே பார்வை மாடத்தில் ஏறி நின்று நகரத்தைப் பார்த்த நிகழ்ச்சி அவனுக்கு நினைவுக்கு வந்தது. அன்று பார்த்த நகரத்திற்கும் இன்று பார்ப்பதற்கும்தான் எவ்வளவு வேறுபாடு?
பார்வை மாடத்திலிருந்து கீழே இறங்கி உடனிருந்த மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு நீலநாகருடைய ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலைக்குச் சென்றான் இளங்குமரன். போகும்போது வளநாடுடையார் அவனிடம் கூறலானார்:
“தம்பீ! நீ பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகைக்குச் சென்று அங்கே உன்னுடைய குலப் பகைவரைச் சந்திக்கும் போது அந்த ஓவியனையும் உன்னோடு அழைத்துப் போவது அவசியம். இந்த ஓவியன் அந்த மாளிகையில் சில நாட்கள் தங்கியிருந்த காரணத்தால் அதன் ஒவ்வொரு பகுதிகளைப் பற்றியும் இவனுக்கு ஓரளவு தெரியும்.”
இதைக் கேட்டு இளங்குமரன் பதில் சொல்லாமல் சிரித்தான். பின்பு மெளனமாக மேலே நடந்தான். அவர்கள் எல்லாரும் ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையை அடைந்தபோது நீலநாகர் நீராடி முடித்துத் திருநீரு துலங்கும் நெற்றியோடு கோவிலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அந்த அருங்காலை நேரத்தில் அவர்கள் எல்லாரும் வரக்கண்டு நீலநாகர் பெருமகிழ்ச்சி கொண்டார்.
“இளங்குமரா! இதற்கு முன்பு எப்போதும் இல்லாதபடி இந்த முறை உன் பிரிவு என்னை மிகவும் வேதனைப் படுத்திவிட்டது. ஒவ்வொரு நாளும் நீ எப்போது திரும்பி வரப்போகிறாய் என்று நினைத்து நினைத்துத் தவித்துப் போய்விட்டேன் நான். நல்லவேளையாக நான் எதிர் பார்த்த காலத்துக்கு முன்பே நீ மணிபல்லவத்திலிருந்து திரும்பி வந்துவிட்டாய்” என்று கூறி இளங்குமரனை அன்போடு வரவேற்றார். அவர். இளங்குமரன் அவரை வணங்கிவிட்டுச் சிறிது நேரம் வாயிலில் நின்றபடியே அவரிடம் பேசிக்கொண்டிருந்த பின்பு உள்ளே சென்றான். அவனைப் பின் தொடர்ந்தாற் போல் ஓவியனும் அவன் மனைவியும் கூட உள்ளே சென்றுவிட்டார்கள். வளநாடுடையார் மட்டும் நீலநாக மறவரிடம் ஏதோ தனியாகப் பேச விரும்புகிறவர் போல் நின்றார். அவர் நிற்கும் குறிப்பு நீலநாகருக்குப் புரிந்துவிட்டது. உடனே “என்ன வளநாடுடையாரே! இந்தப் பிள்ளை ஏன் இப்படிக் கலங்கிக் கறுத்துப் போயிருக்கிறான்?” என்று நீலநாகர் இளங்குமரனைப் பற்றி அவரைக் கேட்டார்.
“நாமிருவரும் பேசிக்கொண்டே போகலாம். நீங்கள் கோவிலுக்குப் புறப்படுமுன் ஆலமுற்றத்து மரத்தடியில் உங்களோடு சிறிது நேரம் நான் தனியாகப் பேச வேண்டும்” என்றார் வளநாடுடையார். நீலநாகரும் அதற்கு இணங்கிய பின் இருவரும் நடந்தனர்.
கடலருகேயுள்ள ஆலமுற்றத்துக் கரையில் மரகதத் தகடு வேய்ந்து பசும் பந்தலிட்டது போலப் பரந்திருந்த ஆலமரத்தின் கீழே மணற்பரப்பில் வளநாடுடையார் நீலநாகரோடு அமர்ந்துகொண்டார்.
“நீலநாகரே! இதுவரை உங்களிடம் மாற்றிச் சொல்லியிருந்த பொய் ஒன்றை இப்போது உண்மையாகவே வெளியிட நேருகிறது. அதறக்காக முதலில் நீங்கள் என்னைப் பொருத்தருள வேண்டும். அருட்செல்வ முனிவர் இறந்து போய்விட்டதாக நான் நீண்ட நாட்களுக்கு முன்பு உங்களிடம் வந்து கூறியது பொய். அவர் மணிபல்லவத் தீவில் உயிரோடு வாழ்ந்து வருகிறார். இளங்குமரன் இந்தப் பயணத்தின்போது அவரைச் சந்தித்தான். தன் பிறப்பைப் பற்றிய பல உண்மைகளை அவரிடமிருந்து தெரிந்து கொண்டான். முனிவர் எனக்கும் அவற்றைக் கூறினார்...” என்று தொடங்கிச் சொல்லிக் கொண்டே வந்தார். தாம் சொல்லியவற்றால் நீலநாகருடைய முகத்தில் என்ன மாறுதல் விளைந்திருக்கிறதென்று அறிய விரும்பி யவராகப் பேச்சை நிறுத்திக் கொண்டு அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தார். நீலநாகர் சிரித்துக்கொண்டே அவருக்கு மறுமொழி கூறினார்:
“உடையாரே! இந்தச் செய்தியை நீங்கள் என்னிடம் மறைத்ததனால் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. அருட் செல்வருடைய தவச்சாலை தீப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்னால் அவரே என்னைச் சந்தித்துச் சில பொறுப்புக்களையும் இளங்குமரனைக் கவனித்துக் கொள்ளும் கடமையையும் என்னிடம் ஒப்படைத்தார். அன்று அவர் என்னிடம் பேசிய பேச்சுக்களிலிருந்தே இவர் எங்கோ நீண்ட தொலைவு விலகிச் செல்ல விரும்புகிறார் என்று நான் அவரைப் பற்றிப் புரிந்து கொண்டேன். ஆனால் சில நாட்கள் கழித்துத் தவச்சாலையில் பற்றிய நெருப்பிலே அவரும் மாண்டு போனார் என்று நீங்கள் வந்து கூறியபோது அந்தச் செய்தி எனக்குப் பேரிடியாக இருந்தது. அதை நம்பவும் முடியவில்லை, நம்பியும் ஆக வேண்டியிருந்தது. அதனால் என்ன? நாம் உயிரோடு இருப்பதாக நினைத்து நம்பிக் கொண்டிருந்த ஒருவர் இறந்து போய் விட்டால் தான் நமக்கு ஏமாற்றம், துக்கம் எல்லாம் உண்டாகின்றன. நாம் இறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்த ஒருவர் உயிரோடிருக்கிறார் என்றால் நமக்கும் மகிழ்ச்சிதானே?”
“இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் இப்போது நமக்குத் தெரிந்துவிட்டது நீலநாகரே! இன்னாரென்றும் எதற்காகவென்றும் தெரியாமல் இந்தப் பூம்புகாரில் இளங்குமரனுக்குக் கேடு சூழ்ந்ததற்கு மூலகாரணமானவர் யாரென்று தெரிந்துவிட்டது. நீங்கள் அந்தக் கபாலிகை யிடம் போய் விசாரித்துத் தெரிந்துகொள்ள முயன்றீர்கள். அதைவிடத் தெளிவாக இப்போது அருட்செல்வர் எல்லா வற்றையும் கூறிவிட்டார்...” என்று தொடங்கி எல்லாச் செய்திகளையும் நீலநாகருக்குச் சொல்லி முடித்தார் வளநாடுடையார்.
எல்லாவற்றையும் கேட்ட நீலநாகர் கொதிப்படைந்தார். இவ்வளவையும் தெரிந்துகொண்ட பின்னுமா இந்தப் பிள்ளை இளங்குமரன் இப்படி அமைதியாயிருக்கிறான்? பூம்புகார்த் துறையில் வந்து இறங்கிய மறுகணமே அந்தப் பெருமாளிகைக்குப் போய்ச் சூறையாடியிருக்க வேண்டாமோ?”
“நீங்களாகவோ நானாகவோ இருந்தால் அப்படிச் சூறையாடியிருப்போம் நீலநாகரே! இளங்குமரனை என்னால் புரிந்து கொள்ளவே முடியவிலலை. எந்த நோக்கத்துடனோ அவன் பெரிதும் அமைதியாயிருக்கிறான். ‘உன் கடமைகளை உனக்கு நினைவுபடுத்தியாயிற்று. இனி நான் என் வழியில் போக வேண்டும். சமந்த கூடத்துக் காட்டில் போய்த் தவத்தில் மூழ்கப் போகிறேன். எனக்கு விடை கொடு’ என்று அருட்செல்வ முனிவரும் மணிநாகபுரத்திலிருந்தே விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார். இந்தப் பிள்ளையின் தாய்மாமன் மகன் குலபதி பட்டினபாக்கத்துப் பெருநிதிச் செல்வனைப் பழிவாங்குவதற்காக ஒரு படையே திரட்டி வைத்திருந்தான். அவனையும் அவன் படைகளையும்கூடத் தன்னோடு வரக் கூடாதென இவன் மறுத்து விட்டான். மணிநாகபுரத்திலிருந்து கப்பலில் திரும்பி வரும்போது ‘மேலே செய்ய வேண்டி யவைகளைப் பற்றி இனி என்ன திட்டம்’ என்று கேட்டுப் பலமுறை நான் பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன். இவன் அப்போதெல்லாம் நன்றாக முகம் கொடுத்துப் பேச வில்லை. ‘பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகைக்குப் போவதாயிருந்தால் தனியாகப் போகாதே, உன்னோடு ஓவியனையும் துணையாய் அழைத்துக்கொண்டு போ’ என்று இங்கு வந்து கரை சேர்ந்ததும் கூறினேன். அதற்கும் மறுமொழி கூறாமல் மெளனமாயிருந்து விட்டான். கருணை, பரிவு, சாந்தம் என்றெல்லாம் இந்தப் பிள்ளை வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் எனக்குத் தயக்கமாயிருக்கிறது. கொலை பாதகங்களுக்கும் அஞ்சாத எதிரியிடம் இவன் வெறுங்கையோடு போய் நிற்கப் போகிறானே என்று எண்ணினால்தான் எனக்குப் பயமாயிருக்கிறது. இதைத்தான் உங்களிடம் தனிமையில் சொல்ல விரும்பினேன். இன்று பகலிலோ, மாலையிலோ, இளங்குமரன் பட்டினப்பாக்கத்திற்குப் புறப்பட்டால் அவனுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ, எப்படியாவது நீங்கள் அவனுக்குப் பாதுகாப்பாகப் பின்தொடர வேண்டும். இந்தப் பொறுப்பை உங்களிடம் கொடுத்து விட்டேன். இனி நான் நிம்மதியாகப் புறவீதியில் என்னுடைய இல்லத்திற்குச் சென்று என் மகளைப் பார்த்து இளங்குமரன் திரும்பி வந்திருக்கிற செய்தியை அவளுக்குச் சொல்லலாம். அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிற செய்தியாயிருக்கும் இது” என்று சொல்லிவிட்டு எழுந்திருந்தார் வளநாடுடையார்.
“உங்களுக்கு இதைப்பற்றிய பயமே வேண்டாம், வளநாடுடையாரே! எல்லாம் நான் பார்த்துக் கொள்ளுகிறேன்” என்று கூறி வளநாடுடையாருக்கு விடை கொடுத்து அனுப்பினார் நீலநாகர்.
பின்பு கோவிலுக்குப் போய் வழிபாட்டை முடித்துக் கொண்டு படைக்கலச் சாலைக்குத் திரும்பினார். ஓவியன் மணிமார்பனை மட்டும் தனியே அழைத்து, “நான் படைக்கலச் சாலையின் உட்புறம் இளைஞர்களுக்கு வாட்போர் பயிற்சி அளித்துக் கொண்டிருப்பேன் தம்பீ! உன்னால் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும். நீ இளங்குமரனை அருகிலிருந்து கவனித்துக் கொண்டேயிரு. அவன் எங்காவது வெளியேறிச் சென்றால் உடனே அதை நீ என்னிடம் வந்து சொல்ல வேண்டும்” என்று கூறி அவனிடம் வேண்டிக் கொண்டு படைக்கலச் சாலையின் உள்ளேயிருந்த தோட்டத்துப் பக்கமாகச் சென்றார் நீலநாக மறவர். படைக்கலச் சாலையில் அதன் பின்பு அன்று மாலைப் போது அமைதியாகக் கழிந்தது.
மணிமார்பன் இளங்குமரனுக்கு அருகிலேயே இருந்தான். இளங்குமரன் அன்று உணவு உண்ணவில்லை. ஏழெட்டு முறை திரும்பத் திரும்ப குளிர்ந்த தண்ணிரில் மூழ்கி நீராடிவிட்டு வந்தான். மெளனமாக உட்கார்ந்து தியானம் செய்தான். சிறிதுபோது ஏதோ உள்முகமான ஆனந்தத்தில் ஈடுபட்டதுபோல் அவன், இதழ்கள் சிரித்தன. இன்னும் சிறிதுபோது தாங்க முடியாத தவிப்பினால் உள்ளே குமுறுவதுபோல் அவனுடைய கண்கள் கலங்கி நீர் மல்கின. அருகில் இருந்து இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டே இளங்குமரனைக் கவனித்து வந்த மணிமார்பனுக்கு அந்த நிலையில் அவனிடம் பேசவே பயமாயிருந்தது. அன்று அவனுடைய முகத்தில் காண்பதற்கரிய தெய்வீகமான அமைதியைக் கண்டான் மணிமார்பன்.
“ஐயா! மணிநாகபுரத்தில் புறப்பட்ட நாளிலிருந்து இப்படிக் கொலைப் பட்டினி கிடக்கிறீர்களே? இது எதற்காக? உடம்பில் வெம்மையை அழிக்க விரும்பும் கடுந் துறவியைப் போல் கணத்துக்கு கணம் குளிர்ந்த நீரில் மூழ்கிவிட்டு வருகிறீர்களே? இதெல்லாம் என்ன கொடுமைகள்?” என்று பொறுக்க முடியாத தவிப்போடு இளங்குமரனைக் கேட்டான் ஓவியன். இளங்குமரன் இதழ்கள் பிரியாமல் மோன நகை புரிந்தான். பின்பு மணிமார்பனை நோக்கிச் சொன்னான்:
“நண்பனே! மணிநாகபுரத்திலிருந்து புறப்பட்ட வேளையிலிருந்து என் மனத்திலும் உடம்பிலும் நெருப்புப் போல் ஏதோ ஓருணர்வு விடாமல் கனன்று கொண்டேயிருக்கிறது. உண்ணா நோன்பிலும், நீராடலிலும், தியானத்திலுமாக இந்தக் கனலை அவித்துவிட்டு என் மனத்தில் கனிந்த அருள் போய்விடாமல் நான் காத்துக் கொள்ள முயல்கிறேன். எந்த எந்த நிலைகளில் எந்த எந்தக் காரணங்களால் குரோதமும் கோபமும் கொண்டு கொதிக்க முடியுமோ அப்போதும் மனத்தைக் கவிழவிடாமல் சம நிலையில் வைத்துக்கொள்ள முயல்வதுதான் மெய்யான சான்றாண்மை. இரசங்களுக்கெல்லாம் மேலானதும் முதிர்ந்தும் முடிந்த முடிபாக நிற்பதுமாகிய நிறைகுணம் இந்தச் சாந்தரசம்தான். நம்முடைய கோபம் தன் முழு உருவமும் கிளர எழவேண்டிய இடம் எதுவோ அங்கேயும் கூட அதை அடக்கி நின்று சிரிப்பதுதான் உயர்ந்த அடக்கம். என்னால் அப்படி அடங்கி நிற்க முடியுமா என்று முயன்று பார்க்கிறேன் நான். முடியும் என்று தோன்றும்போது என் இதழ்களில் சிரிப்பு மலர்கிறது. முடியாதோ என்று சந்தேகம் வரும்போது என் கண்கள் கலங்குகின்றன.”
“உங்கள் கோபம் நியாயமாயிருக்கும்போது நீங்கள் ஏன் அதை அடக்க வேண்டும்? எனக்குத் தெரிந்த நாளிலிருந்து அந்தப் பெருநிதிச் செல்வரின் முயற்சிகளில் உங்களைக் கொன்று அழிப்பதும் ஒன்றாயிருக்கிறது. உங்கள் கழுத்தின் வலது பக்கத்திலுள்ள மச்சத்தைக்கூட அடையாளத்திற்காக அந்த ஒவியத்தில் வரையவேண்டுமென்று என்னிடம் பிடிவாதம் பிடித்தார்களே அந்தக் கொடி யவர்கள்! நல்ல வேளையாக அந்த ஓவியம் இங்கே படைக்கலச் சாலைக்கு வந்து சேர்ந்துவிட்டது. இல்லா விட்டால் அதை அடையாளமாகக் கொலையாளிகள் கையில் கொடுத்து அனுப்பி உங்களைத் தேடித் தீர்த்து விடுவது அவர்கள் நோக்கமாக இருந்தது.”
இதைக் கேட்டு இளங்குமரன் சிரித்தான்.
“நான் எந்தக் கோபத்தை அழிக்க விரும்புகிறேனோ அதே கோபத்தை வளர்க்க நீ உன் சொற்களால் முயல் கிறாய் மணிமார்பா!” என்று கூறியபடியே எழுந்து போய் விட்டான் இளங்குமரன். மறுபடி அவன் திரும்பி வந்த போது நீராடிய ஈரம் புலராத கோலத்தில் அவனைப் பார்த்தான் மணிமார்பன்.
அப்போது படைக்கலச் சாலையில் மரங்களிடையே மாலைவெயில் சரிந்திருந்தது. சிறிது நேரத்தில் மணி மார்பனிடமிருந்து ஓவிய மாடத்தில் பிரதி செய்து கொண்டு வந்த ஓவியங்களைக் கேட்டு வாங்கிக் கொண்டு மாலை வெயிலினிடையே நெருப்புப் பிழம்பு நடந்து போவது போல் நடந்து போய்ப் படைக்கலச் சாலையின் வாயிலைக் கடந்து வெளியேறினான் இளங்குமரன். பின்னாலேயே சிறிது தொலைவு அவனைத் தொடர்ந்து சென்ற மணிமார்பன், “பசியோடும் தளர்ச்சியோடும் எங்கே புறப்பட்டு விட்டீர்கள் இப்போது?” ' என்று கேட்டான். இந்தக் கேள்விக்கும் இளங்குமரன் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே விரைந்து போய் விட்டான். ஆனாலும் மணிமார்பனுக்கு அப்போது இளங்குமரன் போகுமிடம் புரிந்துவிட்டது. உடனே நீலநாக மறவரிடம் போய்ச் சொல்வதற்காகப் படைக்கலச் சாலையின் உட்பக்கம் விரைந்தான் அவன். படைக்கலச் சாலையின் முன்முற்றத்தில் இருந்த பவழ மல்லிகை மரத்தடியில் தற்செயலாக வந்து நின்று கொண்டிருந்த பதுமை, “அவர் எங்கே இவ்வளவு அவசரமாகப் போகிறார்?” என்று பின்தொடர்ந்து போய்விட்டுத் திரும்பி உள்ளே வந்து கொண்டிருந்த தன் கணவரிடம் கேட்டாள். அந்தக் கேள்வி தன் காதில் விழுந்தும் அப்போதிருந்த பரபரப்பான மனநிலையில் அவளுக்குப் பதில் சொல்லிக் கொண்டு நிற்கத் தோன்றாமல் நீலநாகரைத் தேடிக் கொண்டு அவன் ஓட வேண்டியிருந்தது.
இளங்குமரன் பட்டினப்பாக்கத்தை அடையும்போது இருட்டிவிட்டது. அவனுடைய உடல் தளர்ந்திருந்தாலும் மனம் துய்மையான உணர்வுகளால் உறுதிப்பட்டிருந்தது. இதே பட்டினப்பாக்கத்து வீதிகளில் தான் நடக்கும் போதே தரையதிர முன்பு நடந்த காலத்தை நினைத்துச் சிரித்துக்கொண்டே சென்றான் இளங்குமரன். பசிச் சோர்வினால் அவன் கால்கள் மெல்ல மெல்ல நடந்தன.
‘என்னுடைய வாழ்க்கையே முடிவில்லாததொரு பெரிய வீதிதான். அதன் கடைக்கோடியில் அது நிறைகிற எல்லையை நோக்கி இப்போது நான் நடந்து கொண்டிருக்கிறேன். இந்த முடிவில்லாத பெரிய வீதியில் திருநாங்கூரில் ஒதுங்கியபோதும், விசாகை என்னும் புனிதவதியரிடம் பழகியபோதும் நான் கற்று நிறைந்த குணச் செல்வங்களை இதன் எல்லைக்குப் போவதற்குள் என்னிடமிருந்து யாரும் கொள்ளையடித்து விடக் கூடாது. எந்தக் கீழான உணர்ச்சித் துடிப்பினாலும் நான் என்னுடைய உயர்ந்த பாவனைகளை இழந்துவிடக் கூடாது. நான் நிறைய வேண்டும். நிறைவுக்கும் இப்போது நடந்து கொண்டிருக்கும் இடத்திற்கும் நடுவில் எந்த விதத்திலும் நான் குறைபட்டுப் போய்விடக்கூடாது.’
இப்படி எண்ணிக்கொண்டே தன்னுடைய குலப் பகைமை குடியிருக்கும் ஏழடுக்கு மாளிகைக்கு முன்னால் போய் நின்றான் இளங்குமரன். சில கணங்கள் அவனுடைய கால்கள் உள்ளே நுழைவதற்குத் தயங்கின. மனத்தில் ஏதோ ஓர் உணர்ச்சி மலையாக வந்து வீழ்ந்து கனத்தது. ‘இந்த மாளிகையின் எல்லையில்தான் என் தந்தையும் தாயும் அல்பாயுளாக இறந்து போனார்கள்’ என்ற வேதனை நினைவு வந்து உடம்பைச் சிலிர்க்க வைத்தது. நெஞ்சு கனன்றுவிட முயன்றது. கைகள் துடிக்கத் தவித்தன. நடுநிலையிலிருந்து பிறழ்ந்து சரிந்துவிட முயன்ற தன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அவன் அந்த மாளிகைக்குள் நுழைந்தான். வாயில் நின்று காத்துக் கொண்டிருந்த காவலர்கள் ஓடிவந்து அவனைத் தடுத்தனர்.
“யார் நீங்கள்? எதற்காக உள்ளே போக வேண்டும் என்று சொல்லுங்கள்?”
“நான் இப்போது என்னை யாரென்று சொல்வதென எனக்கே புரியவில்லை. யாரோ ஓர் இளந்துறவி உங்களைக் காண வந்திருக்கிறான் என்று உள்ளே போய் இந்த மாளிகைக்கு உரியவரிடம் நீங்கள் சொல்லுங்கள்.”
“இந்த மாளிகைக்கு உரியவர் நோயுற்றுப் படுத்த படுக்கையாயிருக்கிறார். இந்தத் தளர்ந்த நிலையில் அவர் யாரையும் சந்திக்க மாட்டார்.”
“என்னைச் சந்திப்பார். என்னை அவரும், அவரை நானும் சந்தித்தாக வேண்டிய அவசியம் இருக்கிறது. நீ போய்ச் சொல்.”
காவலர்களில் ஒருவன் உள்ளே போனான். காவலன் உள்ளே போனபின் தற்செயலாக அந்த மாளிகையின் மேற்புரம் சென்ற இளங்குமரனின் பார்வை அங்கே ஒரு மாடத்தின் நுனியில் சித்திரம்போல் அசையாமல் நின்று கீழ்நோக்கி இமையாத கண்களால் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் சுரமஞ்சரியைச் சந்தித்தது. இந்தப் பார்வைக்காக, இந்தச் சந்திப்புக்காக இவற்றுக்கென வாய்க்கும் விநாடிகளுக்காகவே யுக யுகாந்தரமாகக் காத்துக் கொண்டிருந்தது போன்ற ஆசையும் காதலும் அவள் கண்களில் தெரிந்தன. ‘என்னுடைய தவிப்பு - என்னுடைய வேட்கை எல்லாம் உங்களுடைய அழகிலிருந்து பிறந்தவை. உங்களுடைய கண்களையும் தோள்களையும் நான் சந்திக்க நேர்ந்த கணங்களிலிருந்து நான் உங்களுக்காகவே நெகிழ்ந்து போய்த் தவிக்கிறேன்’ என்று அந்தக் கண்கள் அவனிடம் பேசின. முகத்தையே ஆர்வம் மணக்கும் பூவாக மலர்த்திக் கொண்டு காலில் விழுந்து அர்ப்பணமாகிவிடத் தவித்துக் கொண்டு நிற்பது போல நிற்கும் அவள் கண்களைத் தொடர்ந்து சந்திக்கப் பயந்து தலை குனிந்து கீழே பார்க்கத் தொடங்கினான் இளங்குமரன்.
உள்ளே போயிருந்த காவலன் திரும்பி வந்து தன்னைப் பின்தொடர்ந்து வருமாறு இளங்குமரனை அழைத்தான். அவனைப் பின்தொடர்ந்து உள்ளே போவதற்கு முன் கடைசியாக இளங்குமரன் மேலே நிமிர்ந்து பார்த்தபோது சுரமஞ்சரியின் கவர்ச்சி நிறைந்த கண்களில் ஈரம் பளபளத்து மின்னியது. அவளுடைய மயக்கும் கண்கள் இப்போது மழைக் கண்களாயிருந்தன. இதயத்தில் ஏதோ ஒரு மென்மையான பகுதிவரை ஊடுருவித்தாக்கும் அந்தப் பார்வையிலிருந்து தன்னைத் தானாகவே விடுவித்துக் கொண்டு உள்ளே புகுந்தான் இளங்குமரன்.
அந்தக் காவலன் அவனைப் பெருநிதிச் செல்வர் நோய்ப் படுக்கையில் இருந்த கூடத்திற்குள் அழைத்துக் கொண்டு போய்விட்டான். அந்த கூடத்திற்குள் முதல் அடி பெயர்த்து வைத்தபோது அவன் கால்கள் நடுங்கின. அவன் எந்தப் பக்கமாக அந்தக் கூடத்திற்குள் நுழைந்தானோ அந்தப் பக்கம் தலைவைத்துத் தான் கட்டிலில் அவரும் படுத்திருந்தார். தலையைத் திருப்பாமலே உள்ளே யாரோ அடிபெயர்த்து வைத்து வரும் ஓசையைக் கேட்டு உணர்ந்தே அவர் படுக்கையிலிருந்தபடி வினவினார்.
“யார் நீங்கள்?”
“நான் ஒரு கவியின் மகன்!”
“கவியின் மகனுக்கு இங்கென்ன வேலை? கவிகள் இந்த மாளிகையின் வாயிற்படியில் துணிவாக ஏறிவந்து நிற்க முடியாதே? அப்படி யாராவது கவிகள் என்று சொல்லிக்கொண்டு இந்த மாளிகையின் படிகளில் ஏறினால் கடைசி படிகளில் ஏறுவதற்குள் அவர்கள் காலை முறித்துவிடச் சொல்லிக் காவலர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறேனே? பல ஆண்டுகளாக இந்த மாளிகையின் வழக்கமாயிற்றே இது?”
“கவிகளின் பரம்பரைமேல் உங்களுக்கு ஏன் இத்தனை குரோதம்?” என்று இளங்குமரன் சிரித்துக்கொண்டே கேட்டான். அவனுடைய இந்தக் கேள்வியைச் செவியுற்று, “இது எங்கோ கேட்ட குரல்போல் இருக்கிறதே? நீ யார் அப்பா? இப்படி என் முகத்துக்கு முன்னால் வந்து நின்று பேசு. யாரோ சந்நியாசி என்னைத் தேடி வந்திருப்பதாக அல்லவா காவலன் கூறினான்?” என்றார் பெருநிதிச் செல்வர். சிறிது நேரம் பேசியதிலேயே அவர் குரல் கரகரத்துத் தளர்ந்திருந்தது. இளங்குமரன் தான் நின்ற இடத்திலிருந்தே அவருக்கு மறுமொழி கூறலானான்.
“நீங்கள் எங்கோ கேட்ட குரல்தான் இது! நியாயத்தின் குரல். எந்தப் பிறவியிலாவது உங்கள் செவிகளில் விழுந்திருக்கும். இப்போது மறுபடி அதைக் கேட்கிறீர்கள். இப்போது, உங்களிடம் பேசுவது என் குரல் அல்ல. இது நியாயத்தின் குரல். கவி அமுதசாகரருக்கும் அவருடைய காதலி மருதிக்கும், காலாந்தகருக்கும் நீங்கள் புரிந்த அநியாயங்கள் எல்லாம் பார்த்த காலத்தில் கூடப் பொறுமையாயிருந்து விட்ட நியாய தேவதை இன்று உங்களைத் தேடிவந்து இப்போது என் குரலில் பேசுகிறது” என்று அவன் கூறியபோது படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து திரும்பினார் அவர். அவருடைய கண்கள் பின்புறம் வேகமாகத் திரும்பிப் பார்த்தன.
பசித்துக் கிடந்த புலி இரை கண்டு பாய்வது போல் பாய்ந்து திரும்பிய பெருநிதிச் செல்வரின் கண்களில் முதல் காட்சியாகத் தென்படும்படி தன் தாயின் ஓவியத்தைக் காட்டினான் இளங்குமரன். படுத்திருந்த கட்டிலுக்கு அருகில் ஒற்றைக் காலின் பலத்தினாலும் ஊன்றுகோலின் பலத்தினாலும் தளர்ந்தும் தயங்கியும் நின்ற அவர் வியப்பும் அச்சமும் மாறி மாறித் தெரியும் கண்களால் அந்த ஓவியத்தைப் பார்த்தார். எந்தப் பெண்ணுடைய கண்களின் அழகைத் தான் அடைய முடியாமல் பல ஆண்டுகளுக்கு முன் அமுதசாகரன் என்ற கவி தன்னை ஏமாற்றினானோ அந்தக் கண்களை இப்போது மீண்டும் இந்த ஓவியம் தனக்குக் காட்டுவதை உணர்ந்தார் அவர். ‘இந்த மயக்கும் விழிகளில் என்னை நோக்கி மலர்ந்திருக்க வேண்டிய கனவு அப்படி மலராமற் போனதால் தான் அன்று என் மனத்தில் குரோதம் பிறந்தது. அந்தக் குரோதம் ஏற்கெனவே பலவகையில் கொடியவனாயிருந்த என்னை இன்னும் கொடிய அரக்கனாக மாற்றியது. உள் நெருப்பாக வீழ்ந்து விட்ட தீய உணர்ச்சிகள் இன்னும் என்னுள் எங்கோ கனன்று கொண்டிருக்கின்றன. இல்லா விட்டால் இந்தப் பிள்ளையை இப்போது எதிரே காண்கிற நிலையிலும் என் நினைவுகள் இப்படிக் கொதிப்பதற்குக் காரணமில்லையே?’ என்று தனக்குள் விரைந்து எழும் எண்ணங்களோடும், அந்த எண்ணங்களின் மாறுபட்ட சாயல்கள் சிறிதும் தெரியாத முகத்தோடும் நின்றார் பெருநிதிச் செல்வர். அப்படி நின்றபோது அவருடைய செவிகளில் மறுபடியும் நியாயத்தின் குரலாய் இளங்குமரனுடைய பேச்சு எதிரேயிருந்து ஒலிக்கத் தொடங்கியது”
“இதோ இந்த ஒவியங்களையும் பாருங்கள். இவர்களை யெல்லாம் உங்களுக்கு நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன். நினைவில்லாவிட்டால் நினைவு படுத்துவதற்காகவே நான் வந்திருக்கிறேன் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறியபடியே தன் தந்தை அமுதசாகரருடைய ஓவியத்தையும், தாய்மாமனான காலாந்தக தேவருடைய ஓவியத்தையும் அவர் முன்பு காட்டினான் இளங்குமரன். அந்த விநாடி வரை அவன் முகத்தில் சிரிப்புக் குன்றவில்லை. ஆனால் எதிரே நின்றுகொண்டு அவற்றை யெல்லாம் பார்க்கும்போது அவருக்கோ பதில் பேச நா எழாமல் உள்ளேயே கட்டுண்டு அடங்கிப் போய்விட்டாற் போலிருந்தது. நகைவேழம்பருடைய சாவுக்குப் பின்பு அருவாள மறவனும், அவனுடைய தோழனும் தன்னைப் புறக்கணித்துவிட்டுச் சென்றதிலிருந்து உலகமே தனக்கு முன் இருண்டு போய் அவநம்பிக்கைகள் சூழ்வதுபோல் பிரமை கொண்டு தளர்ந்து படுத்த படுக்கையாகியிருந்தார் அவர். இவ்வளவு காலம் கொடுமைகளும், சூழ்ச்சியும் செய்வதற்குக் காரணமாகத் தன் மனத்தில் இறுகிப் போயிருந்த உணர்வுகள் இப்போது எதற்கோ உடைந்து தளர்ந்து விட்டாற் போல அவருக்கே அச்சமாக இருந்தது. ஏதோ ஒரு வழியில் ஏதோ ஒரு காரணத்துடன் மூச்சு இரைக்கும்படி ஓடத்தொடங்கிய கால்கள் அந்த முடிவு தெரியாத வழியின் மேல் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றவுடன் நெஞ்சுத் துடிப்பின் வேகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத தளர்ச்சியாலோ, இனிமேலும் ஒரு முடிவும் தெரியாத இந்த வழியில் தொடர்ந்து எதற்காகப் போவது என்று மலைப்பதனாலோ அப்படியே சோர்ந்து நின்றுவிடுவதைப் போன்று தமது பயங்கரமான வாழ்க்கையில் மேலே என்ன செய்வதெனத் தோன்ற முடியாத மலைப்போடு வழி தெரியாமல் இன்று மயங்கி நின்றார் பெருநிதிச் செல்வர்.
‘இன்று இந்த முன்னிரவுப் போதில் இளங்குமரன் எனக்கு முன்பு இப்படிச் சிரித்துக் கொண்டே வந்து நிற்பதற்குப் பதில் ஆறாத சினத்துடன் உருவிய வாளும் கையுமாக என் எதிரியாக வந்திருந்தால்கூட நான் பயமின்றி நிமிர்ந்து நின்றிருப்பேன். இப்படிச் சிரித்துச் சிரித்து இந்தப் பொறுமையையும் நிதானத்தையுமே ஆயுதங்களாகக் கொண்டு என்னைக் கொல்கிறானே இந்தப் பிள்ளை?’ என்று எண்ணி, அந்தப் பொறுமையாலும், நிதானத்தாலும் கூடத் தாக்கப்பட்டவராய்த் தளர்ந்து போய் நின்றார் அவர்.
தனக்கு முன்னால் அவருடைய தொடர்ந்த மெளனத்தையும் திகைப்பையும் கண்டு உணர்ந்த இளங்குமரன் தன் வசமிருந்த ஓவியங்களையும் சுவடிகளையும் ஒரு புறமாக வைத்துவிட்டு இன்னும் அருகில் நெருங்கிச் சென்று அவரோடு பேசினான்:
“ஐயா! நீங்கள் ஏன் இப்படி வாய்திறந்து மறுமொழி கூறாமல் எனக்கு முன் திகைத்து நிற்கிறீர்கள்? நான் ஏழை. என் கைகளில் இப்போது ஆயுதங்கள் இல்லை. மனத்தில் கோபமும் இல்லை. என் குடும்பத்தின் இணையற்றதொரு தலைமுறையைச் சேர்ந்த முன்னோர்களின் உயிர்களையும், செல்வங்களையும், நம்பிக்கைகளையும், நீங்கள் அழித்து நிர்மூலமாக்கியிருக்கிறீர்கள். அப்படியிருந்தும் உங்களை மலர்ந்த முகத்தோடும், சிரித்த வாயோடும் சந்திக்க வேண்டுமென்றுதான் ஆசையாயிருக்கிறது எனக்கு. இந்த மாளிகைக்குள்ளே இன்று நான் நுழையும்போது உங்கள் காவலாளிகள் நீங்கள் நோயுற்றுப் படுத்த படுக்கையா யிருப்பதாகக் கூறினார்கள். உங்களுக்கு வந்திருக்கும் நோய் எதுவோ அதற்காகவும் நான் அநுதாபப்படுகிறேன்.”
“உன்னுடைய அதுதாபத்திற்காக நான் ஏங்கித் தவித்துக் கொண்டு கிடக்கவில்லை. நீ இங்கிருந்து உடனே வெளியேறிப் போய்விடு. நீ இங்கே தாமதித்து நின்றால் உன் உயிரே என் நோய்க்கு மருந்தாக வேண்டுமென்று கூட நான் ஆசைப்பட நேரலாம். இப்படிச் சிரித்துக் கொண்டு என் கண்களுக்கு முன் நிற்காதே. இந்தச் சிரிப்பு என்னை என்னவோ செய்கிறது. நான் கொலைக்கு அஞ்சாதவன், சில நாட்களாக என் மனமும் ஒரு நிலையில் இல்லை. நான் எந்தக் கணத்தில் எப்படி மாறுவேன் என்று சொல் வதற்கும் முடியாது. மறுபடியும் நான் கொலைகாரனாவதற்கு வாய்ப்பளிக்காதே. வந்த வழியே திரும்பிப் போய் விடு.”
அவருடைய இந்த வார்த்தைகளைக் கேட்டு இளங்குமரன் முன்னிலும் நிறைவாகச் சிரித்தான். சிரித்துக் கொண்டே முகத்துக்கு முகம் சந்திக்க முடிந்த அண்மையில் இன்னும் அவரை நெருங்கி நின்று கொண்டு மறுமொழி கூறினான்:
“ஐயா! இப்போது எனக்குப் புரிந்துவிட்டது. உங்களுக்கு வந்திருக்கும் நோய் என்னவென்று நான் விளங்கிக் கொண்டேன். செய்த தீவினைகள் பழுத்து அவற்றின் விளைவை அநுபவிக்கும் காலம் வரும்போது மனிதர்களுக்கு இந்தத் தவிப்பு ஏற்படத்தான் செய்யும். சில நாட்களாக உங்கள் மனம் ஒரு நிலையில் இல்லை என்பதை நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள். ஆனால் உங்கள் மனம் ஒருநிலைப்படாத தன்மை இப்போது சில நாட்களாக மட்டும் உங்களைப் பற்றியிருப்பதாய் நீங்கள் நினைப்பது தான் தவறு. தொடக்கத்திலிருந்தே உங்கள் மனத்திற்கு அந்த நிலையில்லாத் தன்மை உண்டு என்று தான் நான் நினைக்க முடிகிறது. ஒருநிலைப்பட்ட மனம் உங்களுக்கு இருந்திருந்தால் தொடக்க நாளிலிருந்தே நீங்கள் வேறு விதமாக வாழ்ந்திருக்க முடியும். தான் மட்டும் வாழ ஆசைப்படுகிற மனிதர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். எல்லோரும் வாழ ஆசைப்படுகிற சான்றோர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். பிறரை அழித்துக் கொண்டே தான் மட்டும் வாழ ஆசைப்படும் விலங்குக் குணம் பெற்றவர்களும் இருக்கிறார்கள். இந்த மூன்றாவது வகை மனிதர்களுக்கு இக்குணமே நாளுக்கு நாள் வெளிப்படாத நோயாய்ப் பெருகி உள்ளுக்குள்ளேயே வளர்கிறது. இந்த நோய் முற்றி இதை வளர்த்துக் கொண்டவன் தன்னுடைய தீயசக்திகள் எல்லாம் தனக்குப் பயன்படாமல் ஒவ்வொன்றாய்த் தன்னைக் கைவிடுகின்றன என்பதை உணரும்போது தன் முன் தனக்கு எதிரே அதுவரை தெரிந்து கொண்டிருந்த உலகமே இருண்டுபோய் விடுகிறதாக எண்ணி மலைக்கிறான். இந்த இருளில் சிக்கிக் கொண்டவர் யாராயிருந்தாலும் பரிதாபத்துக்குரியவர். உங்களைச் சுற்றி இப்போது சூழும் இருள் அத்தகையது. இப்போது இந்த இருளில் நீங்கள் தவிப்பதைப் பார்த்து நீங்கள் பகைக்குலத்தின் கடைசிக் கொழுந்தாகிய நான் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைந்து கொண்டிருக்கிறேனோ என்று நீங்கள் என்மேல் சந்தேகப்படலாம். அப்படிச் சந்தேகப்படுவதும் மனித இயற்கைதான். ஆனால் என் மேல் அந்தச் சந்தேகம் உங்களுக்கு வேண்டாம். உங்கள் மேல்கூட நான் கருணை காண்பிக்க முடியும். உங்களைப் பகைமையின் எல்லையாகக் குறி வைத்துக்கொண்டு குமுறுவதற்குப் பதில் என்னால் எவ்வளவு அதுதாபப்பட முடியுமோ, அவ்வளவு அநுதாபத்திற்கும் உங்களையே எல்லையாக்கிக் கொண்டு நான் கருணை வெள்ளமாய்ப் பெருகி, அதில் நீங்களும் மூழ்கி எழுதுவதற்கு இடமளிக்க முடியும். நீங்கள் என் தந்தையை இந்த மாளிகையின் நிலவறையில் துடிக்கத் துடிக்கக் கொன்றிருக்கிறீர்கள். என் தாயின் இனிய நினைவுகளும் மங்கல நம்பிக்கைகளும் அழிவதற்கும் அவள் இறப்பதற்கும் காரணமாயிருந்தீர்கள். என்னுடைய தாய் மாமன் காலாந்தக தேவரை ஏமாற்றி அழைத்துப் போய்க் கொலை செய்துவிட்டு அவர் எனக்கு அணிவிக்கக் கொண்டு வந்திருந்த நவரத்தின ஐம்படைத் தாலியையும் பிறவற்றையும் கொள்ளையடித்தீர்கள். என்னையும் எனக்குப் பாதுகாப்பாயிருந்து வளர்த்த அருட்செல்வ முனிவரையும் பலமுறை கொன்றுவிட முயன்றீர்கள். இப்போது இன்று இந்த நிலையிலும் என்னைக் கொன்று விடுவதாகப் பயமுறுத்துகிறீர்கள். என் குலத்து முன்னோர்களைக் கொன்றாற் போலவே என்னையும்கூட உங்களால் கொன்றுவிட முடியும். ஆனால் ‘நாம் இன்னாரைக் கொன்றோம்’ என்று ஒவ்வொரு நாளும் உங்கள் மனச்சாட்சியின் ஞாபகக் குரல் இடை விடாமல் உங்களுக்குள்ளேயே ஒலித்துக் கொண்டிருக்குமே, அந்த ஒலியை உங்களால் ஒருபோதும் கொல்ல முடியாதே?...”
இவற்றைக் கேட்டுப் பெருநிதிச் செல்வரின் உடல் நடுங்கியது. உடம்பு முழுவதும் பாதாதி கேசபரியந்தம் தீப்பற்றி எரிவதுபோல் வெம்மைப்பட்டு வேர்த்தது. எதிரே வந்து நின்றுகொண்டு நியாயத்தைப் பேசுகிறவனுடைய சொற்களே ஒவ்வொன்றாகப் புறப்பட்டுப் பாய்ந்து துளைக்கும் அம்புகளாக வந்து தாக்கித் தன்னை வீழ்த்தி விட்டாற் போல ஒரு கையால் நெஞ்சை அழுத்திக் கொண்டு தளர்ந்து போய்ப் பின்னால் சிறிது சிறிதாக நகர்ந்து கட்டிலில் அமர்ந்தார் அவர். அமர்ந்தபடியே மற்றொரு கையிலிருந்த ஊன்றுகோலை நெஞ்சருகே கொண்டுபோய் இரண்டு கைகளும் நடுங்கிடப் பிடியைத் திருகி அந்த ஐம்படைத் தாலியை எடுத்து இளங்குமரனுக்கு முன்னால் வீசி எறிந்தார்.
தரையில் மின்னல் விழுந்து நெளிவதைப் போலத் தனக்கு முன் வீழ்ந்து கிடந்த அந்தப் பொருளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அவன் நின்றபோது அதை அவனுக்கு முன் வீசி எறிந்ததைவிட வேகமாகத் தன்னுடைய சொற்களை வீசி எறிவதுபோல் குமுறிக் குமுறிப் பேசலானார் அவர்:
“உன்னுடைய தாய்மாமனிடமிருந்து நான் கொள்ளை யடித்து விட்டதாக நீ சொல்லிக் குறைபட்டுக் கொள்கிற பொருளை இதோ உன் காலடியில் தூக்கி எறிந்து விட்டேன். இதை எடுத்துக் கொண்டு போய்விடு. என்னுடைய கோபத்தை வளர்க்காதே. நான் மிகவும் பலவீனமான நிலையிலிருக்கிறேன். இந்நிலையில் எப்படி நடந்து கொள்வேனென்று எனக்கே தெரியாது! சந்தர்ப்பம் மறுபடி என்னைக் கொலைகாரனாக்கி விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.”
“உங்களுடைய கோபத்தைப் பார்த்து எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. ஏனென்றால் இந்த விதமான கோபம் கோழைகளுக்குத்தான் சொந்தமானது. யாரிடம் தவிர்க்க முடியாத காரணத்திற்காகக் கோபப்பட வேண்டுமோ அங்கே கூட அந்தக் கோபத்தை இழந்து விட்டு நிற்கவும், சிரிக்கவும் பக்குவமான வீரனால் முடியும். எல்லாவற்றுக்கும் பிடிவாதமாக முயல்வதைப் போலவே எல்லா ஆசைகளையும் விட்டுவிடுகிற தைரியமும் வீரனுக்கு இருக்க வேண்டும். நான் இப்போது உங்களுக்கு முன்னால் வந்து நிற்பது என்னுடைய செல்வங்களை உங்களிடம் இருந்து மீட்டுக்கொண்டு போவதற்காக அன்று. எப்படி வாழக்கூடாதோ அப்படி நீங்கள் இதுவரை வாழ்ந்துவிட்டீர்கள். இதற்காக உங்களைப் பாராட்ட முடியாது. ஆனால் மன்னிக்கலாம். மன்னிக்க முடியும். அளவுக்கு மீறிய வறுமையைப் போலவே நீங்கள் கொடுமையும் துரோகமும், சூழ்ச்சியும் புரிந்து சேர்த்திருக்கும் அளவுக்கு மீறின செல்வமும் உங்களைச் சார்ந்துள்ள நோய்தான். நோயாளிகள், துன்பப்படுகிறவர்கள், ஏழைகள் ஆகியோர் மேல் எல்லாம் சிறுபிள்ளைப் பருவத்திலிருந்தே எனக்கு நிறைய அநுதாபம் உண்டு. இலஞ்சி மன்றத்திலும், உலக அறவியலிலுமுள்ள நோயாளிகளுக்காக நான் என் மனத்தின் உள்ளேயே அநுதாபப்பட்டு அழுவதுண்டு. அப்படி உங்களுக்காகவும் நான் அநுதாபப்பட்டு அழ முடியும். இதோ ஒருகணம் இப்படி என் பக்கமாகத் திரும்பித் தலை நிமிர்ந்து பாருங்கள். என்னுடைய உறவுகளையும், செல்வங்களையும், உங்களுடைய குரோதத் திற்கும் கொடுமைக்கும் சிறிது சிறிதாக இழந்து பறி கொடுத்துவிட்ட நான் அப்படி இழந்துவிட்ட உண்மையைத் தெரிந்துகொண்ட பின்னும் உங்களுக்கு முன்னால் உங்களைவிட நிம்மதியோடும், நிதானத்தோடும் சிரித்துக் கொண்டு நிற்க முடிகிறது. நீங்களோ இவ்வளவு பெரிய மாளிகையில் எவ்வளவு என்று கணித்துச் சொல்ல முடியாத அவ்வளவு செல்வத்தைச் சேர்த்து ஆண்டு கொண்டிருந்தும், இப்போது எனக்கு முன்னால் நிம்மதியும் நிதானமும் இழந்து தோன்றுகிறீர்கள். உங்களைப் பார்த்து நான் கோபப்பட ஒன்றுமில்லை. ஆனால் இரக்கப்படுவதற்கும் கருணை கொள்வதற்கும் உங்களிடம் நிறையப் பலவீனங்கள் இருக்கின்றன...” என்று சொல்லிக்கொண்டே வந்த இளங்குமரனை மேலே பேச விடாமல் செய்யும் ஆத்திரத்தோடு துள்ளி எழுந்து பின்னால் பிடித்துத் தள்ளிவிட முயன்றார் பெருநிதிச் செல்வர். அவருடைய கைகள் அவனை நோக்கி மேலெழுந்து ஓங்கின.
ஆனால் அவர் அப்படிச் செய்வதற்கு ஆத்திரத்தோடு கைகளை ஓங்கிக் கொண்டு நின்றபோது அந்தக் கைகள் இரண்டும் அதே நிலையில் மரத்துப் போனாற் போல் தயங்கிவிட, அவர் செயலிழக்கும்படிச் செய்யவல்ல கம்பீர ஆகிருதி ஒன்று அந்தக் கூடத்துக்குள் புயல் புகுந்தது போலப் பிரவேசித்தது.
“நிறுத்து! இளங்குமரனுக்கு இந்த மாளிகையில் ஏதாவது நேர்ந்தால் உன்னுடை குலத்தையே பூண்டோடு அழித்து விடுவேன். இந்தப் பெரிய நகரத்தையே என் கைகளால் ஆட்டிப் படைக்கிற வலிமை இருந்தும், நான் இவ்வளவு காலமாக எதற்கும் வைரம் கொண்டு குமுறியதில்லை. என்னைப் போன்றவர்களின் கோபத்திற்கு எவ்வளவு சக்தி உண்டு என்று நானே நிரூபித்துக் காட்ட வேண்டிய காலம் வந்து விட்டது போலிருக்கிறது” என்று எரிமலையாகக் கொதித்து பேசும் சொற்களோடு நீலநாக மறவர் மணிமார்பன் பின் தொடர அங்கு வந்து நின்றார்.
சோழநாட்டிலேயே பெரிய வீரராகிய நீலநாகர் அங்கு வந்து நின்றதைக் கண்டபோது பெருநிதிச் செல்வரின் உணர்வுகள் ஒடுங்கின. கண்களுக்கு முன்னால் உலகம் இன்னும் அதிகமாக இருண்டு போவதுபோல் தோன்றியது. அந்தத் தோற்றத்தை நிமிர்ந்து பார்க்கக் கூசிக் கொண்டு கீழே குனிந்து தரையைப் பார்த்தார் அவர்.
“தம்பீ! இந்த மனிதனிடம் வாயினால் பேசி நியாயம் கேட்டுப் பயனில்லை. கைகளால் பேச வேண்டும். எவ்வளவு பாவங்களைச் செய்யக் கூடாதோ அவ்வளவு பாவங்களையும் செய்துவிட்டு மேலும் செய்வதற்குப் பாவங்களைப் தேடிக் கொண்டிருக்கிறவன் இவன்” என்று சொல்லிக் கொண்டே தனக்கு அருகில் வந்த நீலநாகரை இளங்குமரன் அவ்வளவாக மகிழ்ச்சியோடு வரவேற்கவில்லை. உள்ளடங்கிய மெளனத்தோடு சில விநாடிகள் அசையாது நின்றபின், ஒரு காலத்தில் தனக்கு வீரத்தைக் கற்பிக்கும் ஆசிரியராக இருந்த அந்தப் பெருவீரரை நோக்கி இளங்குமரன் இப்போது ஒரு கேள்வி கேட்டான்.
“ஐயா! யாருடைய துணையுமில்லாமல் நம்முடைய பகையை நாமே தனியாக எதிர்கொள்ளலாம் என்று திடமான எண்ணத்தோடு புறப்பட்டு வந்திருக்கிற வீரனுடைய பெருமிதம் உயர்ந்ததா, இல்லையா?”
“உயர்ந்தது மட்டுமில்லை, இணையில்லாமல் உயர்ந்தது! அப்படிப்பட்ட வீரமுள்ளவர்கள் தங்களைப் பெருமைப்படுத்திக் கொள்வதோடு தங்களைச் சார்ந்துள்ள வீரம் என்னும் குணத்தையே பெருமைப் படுத்துகிறார்கள், இளங்குமரா!”
“மிகவும் நல்லது ஐயா! அத்தகைய தன்னம்பிக்கை வாய்ந்த வீரன் தன் எதிரியைத் தான் மட்டும் சந்திக்க வேண்டிய களத்தில் தனக்குத் துணையாக எவரேனும் பின்தொடர்வதைப் பொறுத்துக் கொள்ள முடியுமோ?”
நீலநாகர் இந்தக் கேள்விக்கு மறுமொழி கூறமுடியாமல் அப்படியே அயர்ந்துபோய் நின்றுவிட்டார். மேல் நோக்கி ஏறிட்டுப் பார்த்துக் கொண்டிருந்த அவருடைய பார்வை கூசித் தாழ்ந்தது. இளங்குமரனிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை அவர் எதிர்பார்க்கவே இல்லை. இதனால் சுட்டிக் காட்டப்படுகிற குற்றம் தன்னுடையது என்பதை உணர்ந்தபோது அவருக்கு மிகவும் நாணமாயிருந்தது. அப்போது இளங்குமரனுக்கு அவர் கூறிய மறுமொழிச் சொற்கள் ஒலி குன்றித் தன் தவற்றைத் தானே அங்கீகரித்துக் கொண்டது போன்ற தொனியோடு வெளிப்பட்டன.
“தம்பீ! என்னைப் பொறுத்துக்கொள். நான் உனக்குத் துணையாயிருக்க வேண்டுமென்ற ஆவலோடு இங்கு வந்ததை நீ இப்படி உன் பெருமைக்குக் குறைவாக நினைப்பதாயிருந்தால் என்னைப் பொறுத்துக்கொள். பிறர் மேல் நமக்குள்ள மிகுதியான வெறுப்பினால் சில வேளைகளில் தாம் தவறு செய்து விடுவதைப் போலவே, பிறர் மேல் நமக்குள்ள அதிகமான அன்பினால் சில தவறுகளைச் செய்து விடுகிறோம். உன் மேலுள்ள அன்பின் மிகுதியால் உனக்கு இங்கே என்னென்ன கெடுதல் நேருமோ என்று எண்ணிக் கொண்டு நான் பின் தொடர்ந்தேன். மேலும் எந்தவிதமான ஆயுதமும் இல்லாமல் பசித்துத் தளர்ந்த உடம்பும் உணர்வுகள் நெகிழ்ந்த மனமுமாக நீ இங்கே புறப்பட்டதாக மணிமார்பன் என்னிடம் வந்து கூறினான். அவன் என்னிடம் வந்து கூறிய சூழ்நிலையும் என்னை ஆத்திரமடையச் செய்து விட்டது.”
“உங்களுடைய அன்புக்கும் பாசத்திற்கும் நான் நிறைந்த நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்தப் பெருமாளிகைச் செல்வரை வெற்றி கொள்வதற்கு நான் ஆயுதங்களோடு வரவில்லையே என்று நீங்கள் கவலைப் பட்டு எனக்குத் துணையாக என்னைப் பின் தொடர்ந்திருக்க வேண்டியதில்லை. எனக்கு நான் இவரிடம் பேச முடிந்த சொற்களை விடப் பெரிய ஆயுதங்கள் வேறு எவையும் இருக்க முடியாது. என்னை எதிர்ப்பதற்கு என் சொற்களை விடப் பெரிய வேறு ஆயுதங்கள் எவையும் இவரிடம் இருக்க முடியாது.”
“உயிரை அழிப்பதில் சொற்களைக் காட்டிலும் விரைந்து முயலும் இயல்பு ஆயுதங்களுக்கு இருப்பதைக் கண்கூடாகக் காண்கிறோம் தம்பீ”
“ஒப்புக் கொள்கிறேன். ஆனால் என் நாவிலிருந்து பிறக்கும் நியாயமான சொற்களுக்கு மறுமொழி சொல்ல முடியாதவரை இவர் எனக்குத் தோற்றுப் போய்க் கொண்டிருப்பதாகத்தான் அர்த்தம். இவர் வேண்டுமானால் என் உடம்பை அழிக்கலாம். ஆனால் அப்படி அழித்தோம் என்ற நினைவைத் தன் மனத்திலிருந்து என்றுமே இவரால் அழிக்க முடியாது. இந்த நிலையில் நீங்கள் எனக்குச் செய்யும் பெரிய துணை என்னை இவரோடு தனியே விடுவதுதான். இவரை என்னுடைய எதிரி என்று நான் நினைக்கவில்லை. என் வாழ்க்கையிலேயே நான் இதுவரை அநுதாபம் கொள்ள நேர்ந்தவர்களை யெல்லாம் விட அதிகமாக அநுதாபம் கொள்ளுவதற்கு உரியவர் இவர் என்று தான் எண்ணுகிறேன். என்னுடைய இந்தப் பரந்த அதுதாபத்தைச் சான்றாண்மை எனக்குத் தந்திருக்கிறது. இதை இவர் மேல் நான் செலுத்த முடிவதற்குத் தடையாக உங்கள் வரவு எனக்குத் தோன்றுகிறது.”
“என்னை மன்னித்துவிடு. நான் இங்கே உனக்கு அத்தகைய தடையாக நிற்க விரும்பவில்லை” என்று கூறி விட்டு மறுபடியும் இளங்குமரனுடைய முகத்தை ஏறிட்டுப் பார்ப்பதற்குக் கூசியவராக மணிமார்பனையும் கைப்பற்றி இழுத்துக் கொண்டு நீலநாகர் அங்கிருந்து வேகமாக வெளியேறினார். எவ்வளவு ஆவேசமாகவும் ஆத்திரமாகவும் அவர் அந்த மாளிகைக்குள் நுழைந்தாரோ அவ்வளவிற்குத் தளர்ந்து துவண்டு குனிந்த தலையோடு திரும்பிச் சென்று கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியால் தன் தந்தைக்குச் சமமான அந்தப் பெருவீரரின் மனம் புண் பட்டிருக்குமோ என்று உள்ளூர வருந்தினாலும் அப்பொழுது தான் நிற்கும் சூழ்நிலையில் இதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை என்று மனத்தைத் தேற்றிக் கொண்டவனாகத் தான் எதிர்க்க விரும்பாத தன் எதிரியின் பக்கம் பார்த்தான் இளங்குமரன். முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக் கொண்டு நின்றிருந்தார் பெருநிதிச்செல்வர். இளங்குமரன் சிரித்துக் கொண்டே நிதானம் மாறாத குரலில் அவரைக் கேட்டான்:
“இப்போது இங்கிருந்து வெளியேறிச் செல்கிறாரே, இந்த ஆலமுற்றத்துப் பெரியவர் குறிக்கிட்டிராவிட்டால் நீங்கள் என்னைக் கீழே பிடித்துத் தள்ளியிருப்பீர்கள். அப்படித் தள்ளி விட்ட பின்பு இன்னும் கொடுமையாக ஏதேனும் செய்து என்னை அழிக்கவும் முயன்றிருப்பீர்கள் அல்லவா? இப்போதும் உங்கள் முயற்சிக்குப் பழுதில்லை. நான் தனியாகத்தான் உங்கள் முன் நிற்கிறேன். எந்த விதமான கோபதாபங்களும் இல்லாமல், நீங்கள் அதிக பட்சமாக எனக்குச் செய்ய முடிந்த பெருங்கொடுமை எதுவாயிருந்தாலும் அதற்கு என்னை இலக்காக்கிக் கொள்ளத் துணிந்து தான் நிற்கிறேன். உங்களுக்குத் தோன்றுவதைச் செய்யலாம்.”
இளங்குமரனின் இந்தச் சொற்களைக் கேட்டு அவர் அவன் பக்கமாகத் திரும்பினார். அவ்வாறு திரும்பிய போது அவர் முகம் வெளிறினாற் போலப் பயந்து தோன்றியது. கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன. உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. முகத்திலும் கழுத்திலும் வேர்த்துப் பெருகியிருந்தது. பிச்சை கேட்டது போல் ஒடுங்கி நலிந்த குரலில் அவனருகே வந்து மன்றாடினார் அவர்.
“தயைகூர்ந்து நீ என் எதிரே நிற்காமல் போய்விடு! உன்னைப் பார்ப்பதற்குப் பயமாயிருக்கிறது. உன் கண்களின் பார்வை கணத்துக்குக் கணம் நெருப்பாகி என்னைச் சுடுகிறது. உன்னுடைய சொற்கள் என்னைக் கொல்வதற்கு முன் உன் பார்வையே கொன்றுவிடும்போல் இருக்கிறது. நான் என் வாழ்வில் இப்படிப்பட்ட எதிரியை இதுவரை சந்தித்ததில்லை. என் மனம் உன் முன்னால் பதறி நடுங்குகிறது. எனக்குள்ளேயே ஏதோ நெருப்பு மூண்டது போல் பற்றி எரிகிறது. நீ சொல்லியது உண்மை தான். எப்படி வாழக்கூடாதோ அப்படி நான் வாழ்ந்து விட்டேன். இப்படி வாழ்ந்து விட்டதைப் பாராட்ட முடியா விட்டாலும் மன்னிக்க முடியும் என்று நீ சொல்கிறாய். ஆனால் உன்னுடைய மன்னிப்பை ஏற்றுக் கொள்ள எனக்குத் துணியவில்லை. நான் மன்னிப்பதற்குக் கூடத் தகுதியற்றவன். நீ என்மேல் அநுதாபம் செலுத்துவது உண்மையானால் எனக்கு ஒர் உதவி செய். இந்த உதவியைத் தவிர வேறு எதையும் இனிமேல் நீ எனக்குச் செய்ய முடியாது.”
“சொல்லுங்கள், உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும்?”
“பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். என்னுடைய செல்வமும், பீடும் போய்விட்டால் இந்தப் பெரிய நகரத்தில் அரசனிலிருந்து ஆண்டி வரை என்னை யாரும் மதிக்கமாட்டார்கள். ஏனென்றால் செல்வம் ஒன்றைத் தவிர என்னை மதிப்பதற்குரிய வேறு நிலையான காரணங்களை நான் பெறவில்லை. இந்தச் செல்வங்கள் என்னை விட்டுப் போகும்போது நானும் உலகத்தை விட்டுப் போய்விட வேண்டும். இனிமேல் நான் வாழக்கூடாது. நல்ல நண்பர்களும், நல்ல குணங்களும் இருந்திருந்தால் நான் இப்படியெல்லாம் கெட்டுப் போயிருக்க மாட்டேன். இவ்வளவு பாவங்களுக்கு அதிபதியாகவும் ஆகியிருக்க மாட்டேன். பூர்வ புண்ணியம் உள்ளவர்களுக்குத் தான் நல்ல குணங்களும் நல்ல நண்பர்களும் வாய்ப்பார்கள் போல் இருக்கிறது. எனக்கு அவையெல்லாம் கொடுத்து வைக்கவில்லை. நான் பிறவியிலேயே கெட்டவன். உன் தாயின் அழகை அடைய முடியாமல் ஏமாற்றம் அடைந்த போது அந்தச் சிறிய ஏமாற்றத்தைக் கூடத் தாங்கிக் கொள்ள இயலாமல் மேலும் கெட்டவனாக மாறினேன். சுற்றியிருந்தவர்கள் என்னைக் கொடிய வழியிலேயே தூண்டி விட்டு விட்டார்கள். இனி நான் மாற முடியாது. ஆனால் சாக முடியும்.
“என்னைத் துடிக்கத் துடிக்கக் கொன்று பழிவாங்க வேண்டிய நீயோ என் முன்னால் வந்து சிரித்துக் கொண்டு நிற்கிறாய். என் மேல் கூட அநுதாபப்படுவதாகச் சொல்கிறாய். என்னுடைய இந்தச் செல்வங்கள் உனக்குப் பெரியவையாகத் தோன்றவில்லை. நீ உன் மனத்தையே செல்வமாக வளர்த்துக் கொண்டிருக்கிறாய். இருப்பினும் நீ ஒன்று செய்ய வேண்டும். என்னைக் கொன்றுவிட்டு இந்தச் செல்வங்களையெல்லாம், உனக்குரியவையாக்கிக் கொண்டு நீ வாழவேண்டும். நானே என்னைக் கொன்று கொள்ள முடியும். ஆனால் அதற்கும் எனக்கு உறுதியான மனம் வாய்க்கவில்லை. உன்னுடைய பரிசுத்தமான கண்பார்வை, சத்தியமான சொற்கள், எதிரியையும் வசப்படுத்திவிடும் புன்னகை இவற்றாலேயே நீ என்னை முக்கால் பகுதி கொன்று விட்டாய். மீதமிருக்கும் கால் பகுதியையும் உன் கைகளாலேயே நீ அழித்துவிடு! கடைசி வேளையில் நான் மனம் மாறி உனக்குத் தோற்றுப் போக ஆசைப்படுகிறேன். உன்னைப் போன்று தூய்மையான மனம் உள்ளவன் என்னை வெற்றி கொள்ள அநுமதித்து நான் தோற்பதனால், வருகிற பிறவியிலாவது எனக்குப் புண்ணியம் வாய்க்கும். இதோ நீ என்னைக் கொன்று கொள். என்னை வென்றுகொள்” என்று கதறிக் கொண்டே பொறியற்ற பாவைபோல் தளர்ந்து அவனுக்கு முன் முழந்தாள்களை மண்டியிட்டுக் கொண்டு அமர்ந்தார் அவர்.
அவருடைய சொற்களைக் கேட்டு இளங்குமரன் கைகட்டி நின்று கொண்டு நகைத்தான். அவர் நிலையைக் கண்டு பரிதாபமாயிருந்தது அவனுக்கு. இந்த மாறுதலை வியந்து கொண்டே அவருக்கு மறுமொழி கூறினான் அவன்.
“ஐயா! பிறரை வென்றுவிட வேண்டும் என்ற ஆசை கூடத் துறவிக்கு இருக்கக்கூடாது. வெற்றிக்கும் ஆசைப் படாத மனம்தான் துறவியின் செல்வம். அந்தச் செல்வம் தோல்வியினாலும் குறையாது. உங்கள் மனத்தில் இவ்வளவு காலமாக இப்படிக் கொடுமை செய்து வாழக் காரணமாக நின்ற பலம் எது என்று பரிசோதனை செய்து பார்க்க மட்டும் தான் நான் விரும்பினேன். உங்களை வெல்லவும், கொல்லவும் நான் விரும்பவில்லை. வெற்றியைக்கூட என்னால் விட்டுக் கொடுக்க முடியும். அப்படிப் பலமுறை என் வாழ்வில் நேர்ந்திருக்கிறது.
“முகுந்தபட்டர் என்ற ஞானி எனக்கு அறிவில் தோற்றுப் போக ஆசைப்பட்டார். உங்கள் மகள் சுரமஞ்சரியும், வீரசோழிய வளநாடுடையார் மகள் முல்லையும் எனக்குக் காதலில் தோற்றுப்போக ஆசைப்பட்டார்கள். இன்று நீங்கள் எனது சொற்களுக்குத் தோற்றுப் போய்விட்டதாகச் சொல்கிறீர்கள். இப்படித் தற்செயலாக நேரும் தோல்வி களை அங்கீகரித்துக் கொள்வதே வெற்றியாகி விடுமோ என்று வெற்றி அகங்காரத்திற்குப் பயந்து கொண்டிருக்கிறேன் நான். எல்லா ஆசைகளையும் விட்டுவிடுகிற தைரியமும் வீரனுக்கு வேண்டுமல்லவா? யாரை அதிகமாக வெறுக்க வேண்டுமோ அவர்கள் மேல் கூட அன்பு செய்யத் துணிந்து விட வேண்டும். அந்த நிலைதான் கருணையின் இறுதி எல்லை. உங்கள் பாவங்களை நீங்களே உணர்கிறீர்கள். அந்த உணர்ச்சி மாறுதலை வாழ்த்துகிறேன். அவ்வளவு போதும் எனக்கு. நான் வருகிறேன்” என்று அவரை வாழ்த்திவிட்டு மாபெரும் தியாகியாய் அவன் அங்கிருந்து வெளியேற முற்பட்டான். ஆனால் அவன் அந்தக் கூடத்திலிருந்து வெளியேறி மாளிகையின் பிரதான வாயிலைக் கடப்பதற்குள் கண்ணிரும் கம்பலையுமாய்ச் சுரமஞ்சரி ஓடிவந்து அவனுடைய வழியை மறித்துக் கொண்டுவிட்டாள்.
கார்காலத்து மலைச் சிகரத்தின் இரு புறமும் மேகங்கள் படிந்தாற் போல் சுரமஞ்சரியின் நெற்றியின் மேல் இரு புறமும் சுருண்டு குழன்று சரிந்திருந்த கருங்கூந்தல் கவர்ச்சி மிகுந்த அவள் முகத்துக்குச் சோகமயமானதோர் அழகைத் தந்து கொண்டிருந்தது. ஊற்றுக் கண்களைப் போல் அவளுடைய விழிகளில் நீர் பெருகிற்று. பட்டின் மென்மையும் பவழத்தின் செம்மையும் பொருந்திய அவள் இதழ்கள் அப்போது அவனிடம் பேசுவதற்குச் சொற்களைத் தேடித் துடிப்பது போல் துடித்துக் கொண்டிருந்தன. நிலாவிலிருந்து தளிர்த்த தளிர்கள் போல் மென்மையாகவும் பொன்னிற் கொழுந்து முளைத்தாற் போல் கவரும் நிறமுடையனவாகவும் இருந்த அவள் கைவிரல்கள் வணங்குகிற பாவனையில் அவனை நோக்கிக் குவிந்தன. அந்த ஆற்றாமையை, அந்தத் தவிப்பைக் கண்டும் காணாதது போல எப்படிக் கடந்து மேலே தன் வழியில் போவதென்று புரியாமல் இளங்குமரன் தயங்கி நின்றான். உலகத்திலுள்ள பரிசுத்தமான பூக்கள் எல்லாம் எதிரே வந்து நிற்கும் அவளுடைய உடம்பிலிருந்து மணப்பது போல் ஒரு நறுமணம் சூழ்ந்து கொண்டு கிளர்வதை இளங்குமரன் உணர்ந்தான். அந்தப் பரிமள நறுமணம் வலையைப் போல் தன்னைப் பிணித்து விட முயன்ற வேளைகளை ஒவ்வொன்றாய் நினைத்துக் கொண்டு நன்றாகத் தலை நிமிர்ந்து நிர்ப்பயமாக அவள் கண்களைச் சந்தித்தான். பின்பு வேண்டினான்.
“என்னுடைய வழியை எனக்கு விடு.”
“விட்டுவிடுகிறேன். ஆனால் அப்படி விடுவதற்குமுன் எனக்கு உங்களிடமிருந்து ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்த வழியில் நானும் உங்களோடு சேர்ந்து நடந்து வர அனுமதி அளியுங்கள். அதற்கு மனம் இல்லா விட்டால் இதே வழியில் விழுந்து சாவதற்காவது ஒப்புக் கொள்ளுங்கள். இப்படி இந்த வழியில் விழுந்து இறந்து போனால் அடுத்த பிறவியிலாவது நீங்கள் நடந்து போகிற பாதையில் புல்லாக முளைத்து உங்கள் பாதங்களில் மிதிபடுவேன். இல்லை இல்லை. புல்லாக முளைத்தாலும் யாராவது வேரோடு பறித்து எறிந்து விடுவார்கள். கல்லாகவே கிடந்து உங்கள் கால்களில் மிதிபட வேண்டும் நான். உங்கள் கால்கள் என்மீது மிதிபடுகிற ஒவ்வொரு முறையும் அகலிகை மேல் இராமன் திருவடி பட்டதும் நிகழ்ந்தது போல் எனக்கு உயிர் வரவேண்டும். உங்கள் பாதங்கள் என்மேல் படாத நேரங்களில் மறுபடி நான் உயிரற்ற கல்லாகிவிட வேண்டும்.”
“உன் ஆசை விநோதமானதாயிருக்கிறது. சாவதைவிட உயர்ந்த இலட்சியம் ஏதாவது உன் வாழ்க்கையில் உனக்கு இருக்க வேண்டும்.”
“அப்படி ஓர் இலட்சியம் எனக்கும் இருக்கிறது. ஆனால் அந்த இலட்சியத்திற்குப் பொருளானவருக்கு என்னைக் காண்பதற்கே அலட்சியமாயிருக்கும் போது நான் வாழ்ந்துதான் என் பயன்? உலகத்திற்கெல்லாம் அநுதாப மழை பொழிகிற அந்தக் கருணை முகில் என்னுடைய விருப்பத்திற்கு மட்டும் வறண்டு போகக் காரணமென்னவென்று புரியாமல் தவிக்கிறேன் நான்.”
“உனக்குப் புரியாமல் நீ தவிப்பதற்கெல்லாம் நான் எப்படி மறுமொழி கூற முடியும்?”
“இந்தத் தவிப்பு உங்களிடமிருந்து பிறந்தது. உங்களோடு இணைந்து நிறைந்து விடக் காத்திருப்பது. உங்களுடைய புறக்கணிப்புக்கு அப்பால் சாவைத் தவிர இந்தத் தவிப்புக்கு வேறு மருந்தில்லை.”
“நான் யாரையும் புறக்கணிக்கவில்லை! என் வழியில் தடையாக நிற்க வேண்டாமென்று மட்டும் சொல்கிறேன்.”
அவனோடு மேலே பேசுவதற்குச் சொற்கள் கிடைக்காமல் கண்ணிர் பெருகும் விழிகளோடும் வணங்குவதற்காகக் கூப்பிய கைகளோடும் நின்றாள் சுரமஞ்சரி. எதிரே போவதற்கு முந்திக்கொண்டு நிற்கிற அவனுடைய கண்களையும் தோள்களையும் பார்த்து இத்தனை கால மாக அவற்றை எண்ணி அவற்றுக்காகவே தவம் செய்து வந்த தன் மனத்தின் நம்பிக்கைகள் தளரப் பெரு மூச்செறிந்தாள். கப்பல் கரப்புத் தீவில் இருண்ட மழை நாள் ஒன்றில் இந்தக் காவிய நாயகனின் பொன்நிறத் தோள்கள் மீது தலைசாய்த்து உறங்க முயன்ற வேளை நினைவு வந்தது அவளுக்கு. அந்த விநாடியை வாழ்த்திக் கொண்டுதான் இத்தனை காலமாக அவள் வாழ்ந்திருக்கிறாள்.
ஒவ்வொன்றாய்த் தளர்ந்து கொண்டிருந்த தன் நம்பிக்கைகளை விட்டு விடாமல் இளங்குமரனுடைய பாதங்களுக்கு முன் பூமாலை சரிவதுபோல் முழந்தாளிட்டு அமர்ந்து கொண்டு அவள் பேசலானாள்:
“இப்போது இந்த உணர்ச்சிமயமான வேளையில் உங்கள் பாதங்களில் இடுவதற்கு வேறு பூக்கள் என்னிடம் இல்லை. என் உயிரையே பூவாகக் கருதிக் கொண்டு உங்கள் பாதங்களில் அர்ப்பணம் செய்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. உங்களோடு இணைந்துவிடும் ஒரே இலட்சியத்திறக்காகத்தான் இந்த உயிரும் இதன் நினைவுகளும் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன. உங்களோடு இணைவதற்கு முடியாத உயிர் வாழ்க்கை எனக்கு இனி வேண்டியதில்லை. என்னுடைய இந்த உயிரைப் போக்கிக் கொள்ளுமுன் மனத்தில் இந்தக் கணத்தில் தவிக்கிற தவிப்பு ஒன்றை உங்களிடம் வெளிப் படையாகக் கேட்டுத் தெரிந்து கொண்டுவிட வேண்டும்.”
அவளுடைய தவிப்பு, கண்ணிர், வேதனை எல்லாவற்றையும் கண்டு தயங்கி நின்றான் இளங்குமரன். முதல் முதலாக இந்தப் பெண்ணிடமிருந்து ஓவியன் மணி மார்பன் மடல் கொண்டு வந்தபோதும், கப்பல் கரப்புத் தீவில் நெகிழ்ந்த உணர்ச்சிகளோடு இவள் நெருங்கி நின்ற போதும் தன் மனத்தில் தாழம்பூ மணம் பரப்பிய வேளைகளை நினைத்துக் கொண்டான். தன்னையே அந்தப் பெண்ணுக்கு ஆளக் கொடுப்பதைத் தவிர வேறு எந்த மருந்தினாலும் தணிக்க முடியாத அவள் வேதனையைக் கண்டு அவன் மனமும் அனுதாபப்பட்டது. ஆனால் இத்தனை காலம் வளர்த்த மனத்தை ஒரு பெண்ணின் அழகுக்கு விட்டுக் கொடுப்பதா என்று ஒர் எண்ணம் தயங்கியது. தடுத்தது. அவனுள்ளே இப்படி இந்த மனப்போராட்டம் நடந்து கொண்டிருந்த போது அவள் அவனைக் கேட்டாள்:
“உங்களைச் சந்தித்த நாளிலிருந்து, நான் உங்களுக்காகச் சிறிது சிறிதாகத் தோற்றுப்போய்க் கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்களா?”
“இருக்கலாம். ஆனால் உன்னை வெற்றிகொள்ள முயன்றதாகவோ வென்றதாகவோ எனக்கு நினைவில்லையே!”
“இது ஒரு விசித்திரமான தோல்வி! இந்தத் தோல்வியை எப்படி நிரூபிப்பதென்று எனக்குத் தெரியவில்லை. நான் பெண், பேதைத் தன்மை நீங்காதவள். அநுதாபத் திற்குரியவள். பிறர்மேல் அநுதாபப்படும் மனம்தான் பெரிய செல்வம் என்று நீண்ட நாட்களுக்கு முன்பு நாளங்காடிக் கூட்டத்தில் அந்தத் தொழுநோய் முதிய வளைக் காப்பாற்றும் போது நீங்களே கூறினர்களே, அந்த விதமான அநுதாபத்திற்கு நான் மட்டும் பாத்திரமாக முடியாதவளா? நானும் ஒரு நோயாளிதான். எனக்கு வந்திருக்கிற நோய்க்குப் பெயர் ஆசை, வேட்கை, காதல் என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். இந்த நோய்க்கு மருந்தாவதற்குக் கூசிக்கொண்டு நீங்கள் மேலே நடந்து போகத்தான் விரும்புகிறீர் களானால், உங்களைத் தடுக்கும் ஆற்றல் எனக்கில்லை. ஆனால் இந்தக் கடைசி விநாடியிலும் நான் துணிவாக இன்னொரு காரியம் செய்ய முடியும். வேறொரு விதத்தில் முயன்று உங்கள் அநுதாபத்திற்கு நானும் பாத்திரம்தான் என்பதை நிரூபிக்க முடியும்!”
“அது எப்படியோ?”
“சொல்கிறேன், உலகத்தில் மிகவும் துன்பமான முயற்சி நம்மிடம் அன்பு செலுத்தாதவர் மேல் நாம் உயிரையே வைத்து அன்பு செய்து தவிப்பதுதான். நீங்கள் அந்தக் கூடத்தில் என் தந்தையோடு பேசிக் கொண்டிருந்தவற்றை யெல்லாம் கதவோரமாக ஒதுங்கி நின்று நானும் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். இறுதியாக நீங்கள் அவரிடம் சொல்லிய வார்த்தைகளை மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். யாரை அதிகமாக வெறுக்கிறோமோ அவர்கள் மேல்கூட அன்பு செய்யத் துணிய வேண்டும். அதுதான் கருணையின் இறுதி எல்லை என்று கூறினர்களா, இல்லையா?”
“கூறினேன். ஆனால் உன்னை நான் வெறுக்கவும் இல்லை; விரும்பவும் இல்லை. உன்னைப் போல் பேரழகு வாய்ந்த பெண்கள் இந்த உலகத்தில் பலர் இருக்கிறார்கள். இந்த அழகிலும் நான் உன் பெருமையைக் காணவில்லை. உன்னைப் படைத்த கடவுளின் பெருந்தன்மையைத் தான் காண்கிறேன். ஒரே உடம்பில் இவ்வளவு அழகையும் நிறைத்து அனுப்பியவனுடைய பெருந்தன்மை சிறந்தது தான். இந்த அழகை உன் செல்வமாகக் கருதி இதற்காக நான் என்னை இழந்துவிட வேண்டும் என்று நீ எதிர்பார்ப்பது பேராசையல்லவா?”
“பேராசையாகவே இருக்கட்டும்! நான்தான் பேதைப் பெண். கல்வியின் பலமோ, தத்துவங்களால் தெளிந்த மனமோ, வைராக்கியங்களோ இல்லாதவள். நீங்கள் ஞான வீரர். வெற்றிக்குக் கூட ஆசைப்படாதவர். வெற்றியைக் கூட விட்டுக் கொடுக்கவும், தோல்வியைச் சிரித்த முகத்தோடு அங்கீகரித்துக் கொள்ளவும் முடியுமென்று பெருமைப் படுகிறவர். அப்படி இருந்தும் எனக்காக விட்டுக் கொடுப்பதற்கு மட்டும் உங்கள் மனம் துணியத் தயங்குகிறது. இந்த உலகத்தில் சுரமஞ்சிரயைத் தவிர எல்லா உயிர்களின் மேலும் அன்பு செலுத்த உங்களால் முடியும். அப்படித் தானே? உங்களைப் போல் அன்பு செலுத்துவதில் கூட பட்சதாபம் வைத்துக் கொண்டிருக்கிறவரை நான் எப்படித் துறவியாக ஏற்றுக் கொள்ள முடியும்?”
இதைக் கேட்டு இளங்குமரன் சிரித்தான்.
“நீ என் வழியை விடமாட்டாய் போலிருக்கிறது. உன் பேச்சு முடிவில்லாத வாதமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இதழ்கள் துடிக்க, கண்கள் கலங்கிப் பெருக நீ வந்து நிற்கிற கோலத்தைப் பார்த்தாலும் எனக்குப் பரிதாபமாயிருக்கிறது. உன் வழியும் உனக்குக் கிடைக்காமல், என் வழியும் எனக்குக் கிடைக்காமல், இரண்டு பேரும் இப்படி ஒருவருடைய வழியை மற்றொருவர் மறித்துக்கொண்டு எவ்வளவு நேரம் தவிக்க முடியும்? இந்தத் தவிப்புக்கு முடிவு இருவருக்குமே தெரிய வேண்டும். அதற்கு ஒரே வழிதான் இருக்கிறது பெண்ணே! நீ எதைக் கேட்க வந்தாயோ. அதையே பொருளாகக் கொண்டு என்னிடம் வாதத்தைத் தொடங்கு. பல்லூழி காலத்துக்கு முன்பு ஆயிரம் பிரம்ம ஞானிகள் கூடியிருந்த பெருஞ்சபையில் ஞானமலையாகிய யாக்ஞவல்கியரைத் தன்னோடு பிரம்ம வாதம் புரிய முன்வருமாறு கார்க்கி என்ற பெண்மணி தனியாய் நின்று அழைத்திருக்கிறாள். அப்படி நீயும் என்னை அழைக்க முடியும்.”
“ஐயா! நீங்கள் என்னை ஏளனம் செய்கிறீர்கள் போலும். வெறுங்கையோடு வந்திருக்கிற எதிரியை வாட் போருக்கு வா என்றழைப்பது போலிருக்கிறது உங்கள் செயல். மைத்திரேயி, கார்க்கி போன்ற வேத காலத்துப் பெண்கள் எங்கே? பேதைத் தன்மையைத் தவிர வேறொன்றும் தெரியாத நான் எங்கே? எனக்கு அவ்வளவு அறிவு வலிமை இருந்தால் உங்கள் மேல் வைத்த மனத்தை மீட்டுக் கொண்டு நான் துறவியாகப் போய்விட முடியும். ஆனால் இப்போதுள்ள நிலையில் நான் பெரும் பேதை. உங்களை அடைய முடியாவிட்டால் சாவதைத் தவிர வேறெதுவும் நோக்கமில்லாதவள்.”
“பேதைகள் கூடச் சில சமயங்களில் வெற்றி பெற முடியும். விதிமட்டும் நல்லதாக இருக்க வேண்டும்.”
“எதை வெற்றி பெற முடியுமென்கிறீர்கள்.”
“எதை விரும்புகிறார்களோ அதைத்தான். விரும்பியதை விரும்பியபடியே அடைவதைவிடப் பெரிய வெற்றி ஏதும் பேதைகளுக்கு இருக்க முடியாது.”
“அப்படியானால் உங்கள் மேல் ஆசைப்படுவதைத் தவிர வேறெதையும் கற்காத பேதையான என்னோடு வாதிடவும் நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?”
“மறுக்கவில்லை.”
“ஒருவரிடம் கைகூப்பி ஒரு பொருளை ஈயென இரத்தல் இழிந்தது தானே?”
“ஆமாம்! இழிந்ததுதான்.”
“இரப்பவருக்கு ஈயமாட்டேனென்று மறுப்பது?”
“அதைவிட இழிந்தது.”
“இழிந்த செயலைச் செய்ய விரும்புவது உயர்ந்த மனிதர்களுக்குத் தகுமா?”
“தகாது! தகாது!”
“அப்படியானால் நான் கேட்கும் ஒன்றை நீங்கள் எனக்கு ஈந்தருள வேண்டும்.”
“நான் துறவி. என்னிடம் ஈவதற்கு ஒன்றுமில்லை. நானே கொடுப்பவர்களைத் தேடிக் கொண்டிருப்பவன்.”
“பொய்! இது பெரிய பொய்! முதன் முதலாக உங்களை மற்போரில் வென்ற வீரராகப் பூம்புகார் கடற்கரையில் சந்தித்தபோது நான் கொடுக்கிறவளாக இருந்தேன். நீங்கள் நான் கொடுத்ததை வாங்கிக் கொள்ள மறுக்கும் அளவு மானத்தின் எல்லையில் போய் நின்று கொண்டு என் பரிசைப் புறக்கணித்தீர்கள். இப்போது நான் உங்களிடமிருந்து பிச்சை கேட்கிறவளாக இருக்கிறேன். கேட்கிற பிச்சையும் அன்புப் பிச்சை. கொடுக்க முடிந்த பிச்சையைத் தான் மண்டியிட்டுப் பணிந்து கேட்கிறேன். இந்தப் பிச்சையையும் கொடுக்க முடியாதென நீங்கள் மறுக்கிறீர்கள். நான் கொடுக்க முடிந்தவளாக இருந்த காலத்தில் நீங்கள் பெற்றுக் கொள்ள மறுத்தீர்கள். நான் கையேந்திப் பிச்சை கேட்டுக் கொண்டு நிற்கிற காலத்தில் நீங்கள் கொடுக்க மறுக்கிறீர்கள். நிறைந்த மனமுடையவர்களுக்குக் கொடுக்க மறுப்பதும் இழிவு அல்லவா!”
“ஒன்றுமே இல்லாதவன் எதைக் கொடுக்க முடியும் பெண்ணே?”
“பொய் சொல்லாதீர்கள். நீங்கள் கொடுக்க முடிந்தவர். கொடுப்பதற்கு உங்களிடம் வள்ளன்மை இருக்கிறது.”
“இருந்தால் கேள். அப்படி இருப்பது எதுவானாலும் தருகிறேன்” இந்த வார்த்தைகளைச் சொல்லும்போதே தான் மெல்ல மெல்ல அவளுக்குத் தோற்றுக் கொண்டிருப்பது போன்ற தளர்ச்சியை இளங்குமரன் அடைந்து விட்டான். அந்தப் பெண்ணின் தந்திரமான கேள்விக்கு முன்னால் தான் பேதையாகிவிட்டாற் போலவும், அவள் தன்னை வீழ்த்தும் புத்திக் கூர்மையைப் படிப்படியாகப் பெற்று விட்டாற் போலவும் உணர்ந்து சோர்ந்தான் அவன்.
அதுவரை அழுது கொண்டிருந்த சுரமஞ்சரி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு சிரித்தாள். அவள் கண்களில் நளினமான உணர்வுகள் பிறந்தன. அவனுடைய மனத்தின் தளர்ச்சி அவளுக்குப் புரிந்தது.
அந்த நேரம் தன் வாழ்க்கையில் தனக்கு நல்வினைப் பயன் விளைய வேண்டிய மங்கல வேளையாக இருந்ததனாலோ பூர்வ புண்ணிய வசத்தினாலோ சுரமஞ்சரியின் நாவில் புத்தியும் யுக்தியும் கலந்து திறமை வாய்ந்த சொற்களாகவும், கேள்விகளாகவும் இளங்குமரனை நோக்கிப் பிறந்தன. தன் காதலை இன்னும் அதிக உரிமையோடு நிலைநாட்ட வேண்டும் என்ற துணிவு அவனுடைய சோர்விலிருந்து அவளுக்குக் கிடைத்தது. ‘பேதைகள் கூடச் சில சமயங்களில் வெற்றி பெற முடியும். விதி மட்டும் நல்லதாக இருக்க வேண்டும்’ - என்று சற்று முன் அவனே தன்னிடம் கூறிய சொற்களை நினைத்துக் கொண்டாள் அவள். அந்தச் சொற்களை நினைவு கூர்வதன் மூலம் அவனைத் தானும் வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவளுக்குக் கிடைத்தது. தன்னுடைய விதி நன்றாகத்தான் இருக்கிறது என்றாற் போல் அப்போது அவள் மனத்தில் ஒரு துணிவும் தோன்றியது. அந்தத் துணிவோடு அவள் அவனை நோக்கிப் பேசினாள்.
“நான் கேட்பது எதுவாயிருந்தாலும் அது உங்களிடம் உள்ளதானால் தருவதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள்!”
“ஆம்! தருவதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறேன். கேட்டுப் பெற்றுக்கொள்.”
“உங்களையே எனக்குத் தந்துவிடுங்கள்! இந்த அழகிய உடம்பை நான் ஆள்வதற்கு அளியுங்கள். கண்டு நிறைவடைய முடியாத நயங்கள் பிறக்கும் இந்தக் கண்கள், மெளனமாய் எந்நேரமும் முறுவல் பூத்துக்கொண்டே யிருக்கும் இந்த இதழ்கள், அழகு செழித்து நிமிர்ந்த பரந்த இந்தச் சுந்தரமணித் தோள்கள்- இவையெல்லாம் எனக்கு உரிமையாக வேண்டும். கொடுப்பதற்கு அவசியம் நேரும்போது உயிர் உடம்பு மனம் முதலிவற்றையும் கூடக் கொடுத்து விடுவது தான் கொடையின் உயர்ந்த இலட்சணம் என்பார்கள். கொடுக்க முடிந்தவராக இருந்து கொண்டே கொடைக்கு மறுப்பது உங்களைப் போன்றவருக்கே அழகில்லை” என்று கூறியவாறே தாமரை மலர்களை இடுவதுபோல் தன் கைகளை அவனுடைய பாதங்களில் இட்டு மேலே நடந்து போவதற்கிருந்த அந்தத் தங்க நிறத் தாள்களைத் தடுத்து நிறுத்தும் தடையானாள் சுரமஞ்சரி. சில்லென்று பூவிழுந்தாற்போல, தன் பாதங்களைப் பற்றிக் குளிர்ந்த உணர்வைப் பாய்ச்சும் அந்தக் கைகளின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளத் தோன்றாமல் திகைத்து நின்றான் இளங்குமரன்.
மிகுந்த பசியினாலும் மனத்தின் பரிபூரணமான பாவனைகளாலும் நடந்து போவதே காற்றில் மிதப்பது போல் கனமற்றிருந்த அந்த வேளையில் சுரமஞ்சரியின் வேண்டுகோளைத் தடுக்கவும் முடியாமல், அங்கீகரித்துக் கொள்ளவும் முடியாமல் தயங்கி நின்றான் அவன். எப்படியெப்படி எல்லாமோ வளர்த்த மனத்தையும், பிடிவாதங்களையும் இப்படி இந்தப் பெண்ணின் தந்திரமான வாதத்தில் தோற்று விட்டதை நினைத்த போது அவனுள் அழுகை பொங்கியது. இவ்வளவு காலம் தன் வைராக்கியத்துக்குத் துணை நின்ற விதி இன்று தன்னைக் கைவிடப் போவதை எண்ணி வேதனை கொண்டான் அவன். எந்தவிதத்தினாலும் தன்னை வெற்றி கொள்ளத் தகுதியில்லாத ஓர் எதிரிக்குத் தான் தோற்றுப் போய்விட்டதாக அவன் மனம் தவித்தது. தனக்குத்தானே நினைப்பும் துணையுமின்றித் தனியாய் அமைந்தது.
எல்லாப் பற்றுக்களையும் களைந்துவிட்டுத் தன் வழியில் விரைந்து நடக்கும்போது இன்று இந்த வேளை யில் தன்னுடைய பாதங்களைச் சுற்றி வளைக்கும் பூங்கரங்களின் பற்றில் இருந்து மீள முடியாத விதத்தில் தான் சிறைப்பட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்தான் அவன். தோல்வியின் தளர்ச்சியால் கலங்கும் மனத்தோடு மேலே இளங்குமரன் நிமிர்ந்து கொண்டு வானத்தைப் பார்த்தான். ‘நான் முற்றிலும் இருண்டு விடவில்லை’ என்பது போல நட்சத்திரங்கள் அங்குமிங்குமாக மின்னிக் கொண்டிருந்தன. அந்த வானத்தில் தோன்றும் மேகங்கள் மறுபயன் கருதாமல் உலகத்துக்கு மழையைக் கொடுத்துக் கொண்டிருப்பது அவனுக்கு நினைவு வந்தது. அதே வானில் பயன் கருதாமல் சூரிய சந்திரர்கள் மாறி மாறி ஒளியைப் கொடுப்பதும், வேற்றுமை ஏற்றத் தாழ்வுகளை பாராமல் காற்று வீசுவதும் ஆகிய உலகின் நிரந்தரமான தியாகங்களை நினைவு கூர்ந்தான் இளங்குமரன். ‘இவளுக்கு என் மன்த்தையும் உடலையும் நான் தோற்பதா?’ என்று உள்ளே கலங்கும் கருத்தைத் திடப்படுத்திக் கொண்டு அவளுக்குத் தோற்றுப் போகவும் துணிந்தான் அவன். உயர்ந்த கொடையாளியின் பரந்த மனப்பக்குவத்தோடு அவள் கேட்டதற்கு மறுப்பின்றித் தன்னைக் கொடுத்து விடவும் குழைந்தது அவன் கருத்து. தன் உடம்பையும், மனத்தையும் கூடக் கேட்கிறவளுக்கு மறுக்காமல் தியாகம் செய்துவிடத் துணிந்தான் அவன். ‘உடம்பும் மனமும் தூய்மையாய் நிறைந்த செல்வங்கள், அவற்றை யாருக்காகவும் இழக்கக் கூடாது’ என்று தன் வாழ்வில் கடைசியாகத் தான் சேர்க்க ஆசைப்பட்ட செல்வங்களையும்கூட அவளிடம் அவன் தோற்றுப் போய்க் கொடுத்துவிட இசைந்து விட்டான். இந்த முடிவுக்கு வந்த பின் நிர்மலமான உள்ளத்தோடும் எதை இழக்கிறானோ அதை இழக்கிற துன்பமும்கூடத் தெரியாத சிரித்த முகத்தோடும் கீழே குனிந்து சுரமஞ்சரியைப் பார்த்தான் இளங்குமரன். அவள் அவன் காலடியில் பூவாக விழுந்து கிடந்தாள். பூமாலையை எடுப்பது போல் முதன் முதலாக அவளைத் தன் கைகளால் தொட்டுத் தூக்கி நிறுத்தினான். அப்படி அவனுடைய கைகள் தன்னைத் தீண்டியபோது சுரமஞ்சரி இந்த உலகத்தில் தன்னைப் போல் பாக்கியசாலி வேறு யாருமே இல்லை என்று எண்ணிப் பெரு மிதப்பட்டாள். மேலேயிருந்து யாரோ பணிபுலராத பூக்களை மலை மலையாக அள்ளித் தன்மேல் சொரிவது போல் அவள் உடல் சிலிர்த்தது. அந்த விநாடிகள் முடிவு பெறாமல் நித்தியமாகி அப்படியே பல யுகங்களாகத் தொடர்ந்து வளரலாகாதா என்ற தாபத்தோடு, கண்களில் மகிழ்ச்சி மலர அவள் அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் அவளிடம் பேசினான்.
“உன்னுடைய வார்த்தைகளுக்கு நான் தோற்றுப் போய்விட்டேன். என்னுடைய தோல்வியை நானே ஒப்புக் கொள்கிறேன்.”
“இல்லை! இல்லை! அப்படிச் சொல்லாதீர்கள், நான்தான் தொடக்கத்திலிருந்து உங்களுக்குத் தோற்றுப் போய்க் கொண்டு வருகிறேன். என்னுடைய தோல்வி நேற்று வரை அங்கீகரிக்கப் படவில்லை. அது யாரால் அங்கீகரிக்கப்பட வேண்டுமோ அவரால் இன்று அங்கீகரிக்கப்பட்டு விட்டது அவ்வளவுதான். இதை என் வெற்றி யாகக் கூறினீர்களானால் ‘பேதைகள் கூடச் சில சமயங்களில் வெற்றி பெற முடியும். விதி மட்டும் நல்லதாக இருக்க வேண்டும்’ என்று நீங்களே சிறிது நேரத்துக்கு முன் சொன்னாற் போல என் விதி நன்றாக இருந்தது என்பதற்கு மேல் நான் பெருமைப்பட இதில் எனது முயற்சி வேறு ஒன்றுமில்லை.”
“உன் விதி உனக்கு நன்றாயிருந்த வேளையில் என் விதி என்னைக் கைவிட்டு விட்டது. சுரமஞ்சரி! நீ இந்த வெற்றியை நன்றாகத் கொண்டாடலாம். ஏனென்றால் இந்த நகரத்தில் நாளங்காடி ஞான வீதியில் கூடிய பல நூறு தத்துவ ஞானிகளுக்கும், சமயவாதிகளுக்கும் கூட அவர்களுடைய அறிவின் பலத்தால் அடைய முடியாமற் போன வெற்றி இது. நீ உன்னுடைய உணர்ச்சிகளின் பலத்தாலேயே இந்த வெற்றியை என்னிடம் அடைந்து விட்டாய். ஆனால் இப்படி இப்போது உன்னுடைய வார்த்தைகளுக்குத் தோற்றவனின் மனத்தில் பெருகும் பரிதாபத்தை மட்டும் அளக்கவே முடியாது...”
“இன்று எந்த வார்த்தைகளால் உங்களை நான் வென்றதாகச் சொல்கிறீர்களோ அவை நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்த வார்த்தைகள்தாமே ? நம்முடைய முதல் சந்திப்பின்போது கடற்கரையில் நான் உங்களுக்கு மணி மாலை பரிசளிக்க முன்வந்த சமயத்தில், கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தது. கொள்ளமாட்டேன் என மறுப்பது அதைவிட உயர்ந்தது என்று அன்றைக்கு நீங்கள் என்னிடம் கூறிய வார்த்தைகளைத் தான் இன்றைக்கு நான் உங்களிடம் பேசினேன். அன்று நீங்கள் என்னை வென்று விடக் காரணமாயிருந்த அதே வார்த்தைகள் இன்று நான் உங்களை வெற்றி கொள்ளக் காரணமாயிருந்தனவோ என்னவோ? எப்படியிருந்தாலும் வெற்றி உங்களுடைய வார்த்தைகளுக்குத்தானே?”
“வார்த்தைகள் பூக்களைப் போன்றவை. யார் நன்றாகத் தொடுத்தாலும் அவை அழகாயிருக்கும். வென்றவர்கள் பெருமைப்படவும் தோற்றவர்கள் துயரப் படவும் ஒரே விதமான வார்த்தைகளே காரணமாயிருக்குமானால் என்ன செய்யலாம்?”
“வென்றவர் தோற்றவர் என்ற பிரிவே நமக்குள் இங்கு இல்லை அன்பரே! இந்தத் தோல்வியிலும் நீங்கள் தான் என்னை வென்றிருக்கிறீர்கள். என்னுடைய வாழ்வில் கடைசி விநாடி வரை உங்களுக்குத் தோற்றுக் கொண்டிருப்பதைவிட வேறெந்தப் பெருமையும் எனக்கு வேண்டாம். தலைமுறை தலைமுறையாகப் பெண்கள் அன்பினால் பிறருக்குத் தோற்றுப் போவதைத்தான் பாக்கியமாகக் கருதி வந்திருக்கிறார்கள். ஆண்களின் வாழ்வில் வேண்டுமானால் வெற்றியடையவதனால் பெருமை இருக்கலாம். பெண்ணின் வாழ்க்கையில் அன்புக்காகத் தோற்றுக் கொண்டேயிருப்பதை விடப் பெரிய நிகழ்ச்சி வேறொன்றும் இல்லை. வாழ்க்கை முழுவதும் துணையாக்கிக் கொண்டு நடப்பதற்காக வளைகள் குலுங்கும் கையால் நாங்கள் எந்த ஆண்மகனின் கையைப் பற்றுகிறோமோ அந்த விநாடியிலிருந்து எங்கள் மனம் அவனுக்கு மட்டும் தோற்றுப் போவதில் சுகம் காணத் தொடங்கி விடுகிறது. மலையிலிருந்து கீழே இறங்கும் அருவி அப்படித் தாழ்ந்து கீழே வீழ்வதனாலேதான் உல்லாசமடைகிறது. செடிகளில் அழகும் மணமும் நிறைந்த பூக்கள் சூடிக் கொள்வோர் காலடியில் உதிர்வதற்காகவே பூக்கின்றன. உதிர்ந்த பூ திரும்பவும் கிளைக்குப் போக ஆசைப்பட முடியுமோ? வீழ்ந்த அருவி மறுபடி தான் பிறந்து வந்த இடமான நீல மலைச் சிகரத்துக்கு ஏறிப் போக ஆசைப்பட முடியுமோ? பெண் தன்னை இழந்து விடுவதில்தான் சுகம் பெறுகிறாள்” என்று கூறியவாறே தன் வளைக் கரத்தால் அவன் கரத்தைப் பற்றினாள் சுரமஞ்சரி. அவன் அவள் கையைத் தடுக்கவில்லை.
“நீ பெற வேண்டிய சுகங்களுக்காக உன் தெய்வத்தை மனமார வணங்கி வேண்டிக்கொள் சுரமஞ்சரி!”
“நேற்று வரை பல வேறு தெய்வங்களை நான் வணங்கியிருக்கிறேன். இன்று நான் வணங்குவதற்கு வேறு தெய்வங்கள் இல்லை. நீங்கள் ஒருவரே என் தெய்வமாகி விட்டீர்கள்.”
“உன்னுடைய தெய்வத்தை நீ எந்த வழியில் நடத்திக் கொண்டு போக வேண்டுமோ அந்த வழியில் நடத்திக் கொண்டு போ!”
“கட்டளையே தவறானதாயிருக்கிறதே? தெய்வ மல்லவா தன்னைச் சேர்ந்தவர்களை வழி நடத்திக் கொண்டு போக வேண்டும்? இன்னொரு நிகழ்ச்சியும் எனக்கு நினைவு வருகிறது. ஓவியர் மணிமார்பனோடு நீங்கள் இந்த மாளிகையில் நுழைந்த முதல் நாள் ‘பிறருடைய வழிக்கு அடங்கி நடந்து நமக்குப் பழக்கமில்லை. எந்த இடத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் நாம் எப்படி நடந்து போக வேண்டுமென்று நமக்குத் தெரியும்’ என்று தணியாத தன்மான உணர்ச்சியுடனே என்னிடம் பேசினர்கள். அதே மனிதர்தானா இன்று இப்படி என் முன் ‘எந்த வழியில் நடத்த வேண்டுமோ அந்த வழியில் என்னை நடத்திக் கொண்டு போ’ என்று கூறுகிறீர்கள். இந்த மாறுதலை என்னால் நம்பவே முடியவில்லையே?”
“ஓர் எல்லையின் கடைசிப் புள்ளியில் போய் நிற்பவர்கள் அங்கிருந்து திரும்பி நடந்தால் அதற்கு நேரேயுள்ள எதிர் எல்லைக்குத்தான் நடக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் கடைசியாக ஏறிப்போய் நிற்கிற எல்லை எதுவோ அதற்கு அப்பால் போவதற்கும் நோக்கமாகக் கூறிக்கொள்வதற்கும் ஒன்றுமே இருப்பதில்லை. என்னுடைய எல்லையிலிருந்து நான் திரும்பி நடக்க வேண்டுமென்று தானே நீ இந்தக் கையால் என்னைப் பற்றி இழுக்கிறாய்?”
“அவனுடைய இந்த வார்த்தைகளைக் கேட்டுச் சுர மஞ்சரி கண் கலங்கினாள். சில விநாடிகள் ஏதோ வேதனைக்குரிய சிந்தனைகளினால் மனம் வருந்துகிற சாயல் அவள் முகத்தில் தெரிந்தது. பின்பு தனக்குள் ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாக அவன் கையைப் பற்றியிருந்த தன் வளைக்கரத்தை மெல்ல விடுவித்துக் கொண்டு “இப்படி உள்ளர்த்தம் நிறைந்த வார்த்தைகளால் என்னைக் கொல்லாதீர்கள். உங்கள் வழியில் நீங்கள் விரும்புகிறார் போல என்னை அழைத்துச் செல்லுங்கள். தோற்றவர் களை அழைத்துச் செல்லும் முறையை வென்றவர்கள் தானே முடிவு செய்ய வேண்டும்” என்றாள்.
“அப்படியானால் என்னோடு என் வழியில் புறப்படு.”
“இதோ புறப்படுகிறேன்” என்று சொல்லியபடியே பெருமாளிகையின் வாயிற்படியருகே போய்த் தன் உடலின் பல பகுதிகளைப் பிணைத்துக் கொண்டிருந்த பொன் சுமைகளை ஒவ்வொன்றாகக் கழற்றி அந்தப் படியில் குவித்தாள் சுரமஞ்சரி. இறுதியாகக் கால்களின் மாணிக்கச் சிலம்புகளையும் கழற்றி வைத்துவிட்டு அவற்றைப் பற்றிய மனத்தின் ஆசைகளும் அறவே கழன்று போய் அவள் எழுந்து புறப்படுவதற்காக நிமிர்ந்தபோது அவளுடைய முன் நெற்றியில் மேலேயிருந்த கண்ணிர் வெதுவெதுப்பாகச் சிந்திச் சிதறியது.
திடுக்கிட்டுப் போய் நிமிர்ந்து பார்த்தாள் சுரமஞ்சரி. அவள் அந்த அணிகலன்களையெல்லாம் கழற்றி வைத்த படிக்கு ஒருபடி மேலே அவளுடைய தந்தை கண்கலங்கி நீர் பெருக வந்து நின்றுகொண்டிருந்தார்.
“இப்படித் தோற்றுப் போகத் துணிகிற மனம் உன் தந்தைக்கு இல்லையே, சுரமஞ்சரி! உன் தந்தைக்கு இந்தக் குணம் இருந்திருந்தால் தன் வாழ்வில் அவர் தொடக் கத்திலிருந்தே செம்மையாக வாழ்ந்திருக்கலாம் அம்மா...” என்று நாத் தழுதழுத்து நெகிழ்ந்த குரலில் அவர் அவளை நோக்கிக் கூறியபோது, அவருக்கு என்ன மறுமொழி சொல்வதென்று தெரியவில்லை அவளுக்கு. தான் அப்போது நின்று கொண்டிருந்த படிக்கு அடுத்த மேற் படியில் ஏறித் தன் தந்தைக்கு ஏதாவது ஆறுதலாய்ச் சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் என்ன சொல்வதென்று புலப்படவில்லை. அந்தப் பாசத்தையும் மனத்திலிருந்து கழற்றினாள் அவள்.
“இன்று அமைதியான இந்த இரவு வேளையில் என் தாயும், சகோதரி வானவல்லியும், தோழி வசந்தமாலையும் நன்றாக உறங்கிவிட்டார்கள் போலிருக்கிறது! ‘சுரமஞ்சரி எந்த வழியில் யாருடன் நடந்து போவதற்காக இத்தனை காலம் தவம் செய்து கொண்டிருந்தாளோ அந்த வழியில் அந்தத் துணையோடு இந்த இருளில் புறப்பட்டுப் போய் விட்டாள்’ என்று எல்லாரிடமும் நாளைக்கு விடிந்ததும் சொல்லி விடுங்கள் அப்பா. மனம் இருந்தால் இப்போது எங்களுக்கு ஆசியும் கூறி அனுப்புங்கள்” என்று சொல்லிக் கொண்டே படிகளில் இறங்கித் திரும்பிச் சென்று தன்னை வென்றவனுக்கு அருகில் நின்றபடி தன் தந்தையை நோக்கி வணங்கினாள் சுரமஞ்சரி.
“ஆசி கூற மனம் இருக்கிறதம்மா! ஆனால் தகுதி இல்லையே?” என்று இளங்குமரனின் பக்கமாகத் திரும்பிக் கைகளைக் கூப்பினார் அவர். அந்த நிலையில் அவரைக் கண்டு இளங்குமரனுக்கும் அநுதாபம் பெருகியது.
பெருமாளிகைத் தோட்டத்திலிருந்து முன் இரவிலேயே மலர்ந்து விட்ட பூக்களின் மணம் பரவத் தொடங்கியிருந்தது. சுரமஞ்சரியைக் கைப்பற்றி அழைத்துக் கொண்டு அங்கி ருந்து வெளியேறுவதற்காக மெல்ல நடந்தான் இளங்குமரன். இருவரும் மாளிகையின் கடைசி வாயிலையும் கடந்து இருள் உறங்கும் பட்டினப்பாக்கத்துத் தெருவில் இறங்கிச் சென்றபோது, “சுரமஞ்சரி! இன்று மாலை இந்த மாளிகைக்குள் நுழையும்போது நான் துறவியாக நுழைந்தேன். இப்போது ஒரு பெண்ணின் கையையும் நினைவையும் சுமந்து கொண்டு மிகப் பெரிய வாழ்க்கைச் சுமையோடு திரும்புகிறேன்” என்று அவளுடைய காதருகே சிரித்துக் கொண்டே சொன்னான் இளங்குமரன். அவன் அந்த வார்த்தைகளைச் சிரித்துக் கொண்டே சொல்லியிருந்தாலும், அவளுக்கு அவற்றைக் கேட்டு வேதனையாகத்தான் இருந்தது. அவன் தன்னுடைய தோல்வியையே திரும்பத் திரும்ப எண்ணி உருகுவது அவளுக்குப் புரிந்தது.
“தோற்றுப் போனதற்காக வருந்திக்கொண்டே பேசுவது போல் அடிக்கடி பேசுகிறீர்கள் நீங்கள். இந்த விதமான பேச்சு என்னைப் புண்படுத்துகிறது” என்று தன் மனக் குறையைச் சொன்னாள் அவள்.
அந்தச் சொற்கள் இனியும் அப்படிப் பேசவிடாமல் அவன் நாவைக் கட்டுப்படுத்தி அடக்கி விட்டன, மெளன மாக மேலே நடந்தான் அவன். விடுபட்ட பறவைகள் போல அமைதியான அந்த இரவு நேரத்தில் பூம்புகாரின் வீதிகளில் சுற்றினார்கள் அவர்கள்.
நீண்ட நேரத்துக்குப் பின் நடந்து நடந்து களைத்த நிலையில் பெளத்த மடத்துக்கு முன்னாலிருந்த ஒரு மகிழ மரத்தடியில் சுரமஞ்சரியோடு அமர்ந்தான் இளங்குமரன். அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சுரமஞ்சரி அங்கே பசிக் களைப்பைக் கண்டாள்.
“உங்களுடைய முகத்தில் பசிச் சோர்வு தெரிகிறது! நீங்கள் பல வேளைகளாக உண்ணவில்லை போலிருக்கிறது?”
“பல வேளைகளாக அல்ல; பல நாட்களாகவே உண்ணவில்லை. இப்போது தான் என் பசி எனக்குத் தெரிகிறது. நீயும் என்னைப்போலவே பசிச் சோர்வோடு தான் தெரிகிறாய்!”
“நம்முடைய இல்லறம் இருவர் வயிற்றிலும் இப்படிப் பசியோடு தொடங்குகிறது. ஆனால் என்னை விட அதிகம் பசித்துப் போயிருக்கிறீர்கள். நீங்கள்” என்று சொல்லிச் சிரித்தாள் சுரமஞ்சரி. அடுத்த கணம் அவளுடைய சிரிப்பை அவன் சொற்கள் அடக்கின. அவளை அந்தச் சொற்களால் பரிசோதனை செய்தான் அவன்.
“எந்தவிதமான செல்வங்களும் இல்லாத ஓர் ஏழையைக் காதலிப்பதால் எவ்வளவு வேதனைகள் பார்த்தாயா? என் பசிக்கும் சோறில்லை. உன் பசிக்கும் சோறில்லை. இருவர் பசிக்கும் இருவர் துயரத்துக்கும் இந்த மரத்தடி மண்தான் புகலிடம் போலிருக்கிறது!”
“ஏன் இல்லை? கணவனுடைய வயிறு நிரம்புவதை விடப் பெரிய திருப்தி மனைவிக்குக் கிடையாது. இன்று நீங்கள் எனக்குக் கிடைத்த புண்ணிய தினம். இதை நான் கொண்டாட வேண்டும். உங்களுக்கு என் கையால் நான் சோறு படைக்க வேண்டும்! பிச்சை எடுத்து வந்தாவது அதைச் செய்வேன்” என்று கூறிக்கொண்டே அவள் ஆவேசத்தோடு அங்கிருந்து எழுந்து சென்றாள்.
சுரமஞ்சரி பெளத்த மடத்துக்கு அருகே யாத்திரிகர்களுக்குச் சோறிடுவதற்காக இருந்த அறக்கோட்டம் ஒன்றில் போய் ஒரு பெரிய வாழை இலை நிறையச் சோறு வாங்கி வந்து இளங்குமரனுக்கு முன்னால் வைத்தாள். தன் கையால் ஒவ்வொரு பிடியாக எடுத்து அந்தச் சோற்றை அவன் கையில் இட்டபோது அவள் மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது. இலையிலிருந்த மீதத்தைத் திரட்டிக் கடைசிப் பிடியை அவள் அவன் கையில் வைத்தபோது அந்தச் சோற்றை அப்படியே கைமறித்து அவள் வாய்க்கு இடுவதற்குக் கொண்டு போனான் இளங்குமரன், சுரமஞ்சரி அவன் கையால் அதை உண்பதற்கு நாணித் தலையைக் குனிந்து கொண்டாள். தன்னிடம் அன்பு செய்வதை விடப் பெருமைப்படத் தக்க செல்வங்கள், உறவுகள், பாசங்கள், வேறெவையுமே இல்லை என்பதை நிரூபித்து விட்ட அந்தப் பேரழகுப் பேதையை மலர்ந்த விழிகளால் நோக்கி அவளை ஏற்றுக் கொண்ட நாயகன் என்ற உரிமையோடு இளங்குமரன் முதல் முறையாகப் பார்த்தான். அந்தப் பார்வையே அப்போது அவளை மணப்பெண்ணாக அலங்கரிக்கத் தொடங்கியது.
“சுரமஞ்சரி! என்னுடைய சோதனைகளில் எல்லாம் நீ வெற்றி பெற்றுவிட்டாய். எல்லாப் பற்றுக்களையும் இழந்துவிட்டு ஏதாவது ஒரு பற்றில் மட்டும் இலயிப்பவனைத் துறவி என்கிறார்கள். நீயும் அப்படி உன் செல்வங்களையும் உறவுகளையும் இழந்து விட்டு என்னில் கலந்து என்னோடு மட்டும் இலயித்து விட்டாய். உன்னுடைய இந்தத் தவத்தை நான் ஏற்றுக்கொண்டு அருள் செய்துதான் ஆக வேண்டும்” என்று இந்த வார்த்தைகளைச் சொல்லியபோது அவனுடைய மனம் நிறையப் பரிவு பெருகியிருந்தது. அந்தப் பரிவைச் சுரமஞ்சரிக்கும் அளிக்க அவன் மனம் இணங்கிற்று. அந்த எல்லையற்ற பரிவு வெள்ளத்தில் அவள் மூழ்கவும் இடம் கொடுத்தான் அவன். இரண்டாம் முறையாக அவன் கையிலிருந்த சோற்றை அவள் உண்ணும்போது சிறு குழந்தைபோல் அவன் தோளில் சாய்ந்திருந்தாள்.
“இந்த ஒருகை சோற்றில் என்னுடைய நெடுங் காலத்துப் பசி தணிந்துவிட்டது அன்பரே! என்னிடமிருந்து என் கையால் எதையுமே ஏற்றுக் கொள்ள மறுத்த நீங்கள் இன்று ஏற்றுக் கொண்டீர்கள். கொடுக்க வேண்டும் என்ற மெய்யான பரிவோடு எனக்கும் உங்கள் கையால் உண்ணக் கொடுத்தீர்கள். இந்த விநாடியோடு செத்துப் போய்விட்டாலும் இனி எனக்குக் கவலையில்லை. இந்த ஒரே ஒரு விநாடியில் ஆயிரம் ஊழிகள் உங்களோடு வாழ்ந்து அநுபவங்களைப் பெற்றுவிட்டாற் போன்ற திருப்தி எனக்குக் கிடைத்துவிட்டது” என்று மகிழ்ச்சி மிகுதியினால் சுரமஞ்சரியின் சொற்கள் முற்றாத மழலைச் சொற்களாய்க் குழைந்து ஒலித்தன.
“பேதைப் பெண்ணே! இப்போதுதான் நீ வாழத் தொடங்கியிருக்கிறாய். அதற்குள் ஏன் சாவதற்கு ஆசைப் படுகிறாய்?” என்று கேட்டுக்கொண்டே இளங்குமரன் தன்மேல் சாய்ந்திருந்த அவளுடைய குழற் கற்றையைப் பரிவோடு கோதினான். மேலே மரத்தின் கிளையிலிருந்து குயில் ஒன்று கூவியது. காற்றில் ஆடியசைந்த மகிழ மரத்தின் கிளைகள் அவர்கள் மேல் பூக்களைச் சிந்தின.
“இந்தக் குயில் ஏன் இப்படிக் கூவுகிறது சுரமஞ்சரி?”
“விடிவதற்காக...”
“யாருக்கு விடிவதற்காக?”
“ஒரு பேதைப் பெண்ணுடைய வாழ்க்கையில் விடிந்து ஒளி கிடைப்பதற்காகத்தான்!”
இந்தக் குறும்பு நிறைந்த பதில் வார்த்தைகளைக் கூறிவிட்டுத் தன் சிரிப்பைத் தானே அடக்கிக்கொள்ள முடியாமல் சுரமஞ்சரி சிரித்தபோது அவனுடைய சிரிப்பும் பிறந்து அதில் கலந்து எதிரொலித்து இணைந்தது.
விடிகின்ற நேரத்துக்கே உரிய சில்லென்ற குளிர் காற்று உடம்பில் பட்டு இளங்குமரன் கண்விழித்தான். மரத்தடியில் பொற்காசுகள் சிதறினாற் போல் மகிழம் பூக்கள் உதிர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தன. விடியப் போகிறது, விடியப் போகிறது என்று! இந்த உலகத்துக்குத் திரும்பத் திரும்பச் சொல்லி மங்கல வாழ்த்தெடுப்பது போலப் பறவைகள் காலைக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. கதிரவனின் முதற்கதிர்கள் மண்ணில் படுவதற்குள்ளேயே நீராடித் தவ ஒழுக்கங்களை முடித்து விடும் ஆவலோடு காவிரிக்குச் செல்லத் தொடங்கியிருந்த அந்த நகரத்து மறையவர்களின் மந்திர ஒலிகளும், பெளத்தர்களின் அற முழக்கமும் அங்கங்கே பூம்புகாரின் வீதிகளிலிருந்து ஒலிக்கத் தொடங்கியிருந்தன. இன்னும் இருள் புலரவில்லை. அறிந்தும் அறிய முடியாதபடி தெரிந்தும் தெரிய முடியாதபடி பேதை இருட்டு என்பார்களே அப்படி எங்கும் ஓர் இருட்டு சூழ்ந்திருந்தது. வழக்கம்போல் இந்த வேளையில் இளங்குமரனுக்குக் கண்கள் விழித்துக் கொண்டன. எழுந்திருந்து நீராடப் போவதற்கு ஆசையா யிருந்தது. ஆனால் எழுந்திருப்பதற்கும் முடியவில்லை.
தாயோடு ஒன்றிக் கொண்டு உறங்கும் சிறு குழந்தை போல் சுரமஞ்சரி அவனுடைய வலது தோளைத் தன் தலைக்கு அணையாகக் கொண்டு குளிருக்கு ஒடுங்கினாற் போல் ஆழ்ந்து கண்ணயர்ந்து கொண்டிருந்தாள். ஏழு உலகங்களையும் வென்று ஆளும் இணையற்ற வெற்றி போல் கவலையில்லாமல் உறங்கும் அந்தப் பேதையைப் பார்த்தபோது அவளுடைய உறக்கத்தைக் கலைக்கும் துணிவை இழந்து அப்படியே அசையாமல் இருந்தான் இளங்குமரன். அவளுடைய எழில் நிறைந்த உடல் அவன் தோளில் சரிந்த மல்லிகை மாலையாய் மணந்து கொண்டிருந்தது. சந்திர பிம்பமாய்த் தெரிந்த அவள் முகம் அந்த உறக்கத்திலும் ஏதோ நல்ல கனவு காண்பது போலச் சிரிப்பைக் காண்பித்துக் கொண்டிருந்தது. மனத்திலும், கண்களிலும் அவளுக்காகவே நிறைந்த பரிவோடு தனக்காக எல்லாச் சுகங்களையும் இழந்துவிட்டு எல்லாச் செல்வங்களையும் தோற்றுவிட்டு இப்படி இந்த மரத்தடியில் வந்து வெறுந்தரையில் உறங்கும் அந்தப் பேதையைப் பார்த்துக் கொண்டே வியந்தான் இளங்குமரன். அந்தப் பொன்னுடலில் வைகறைக் குளிர் படாமல் தன்னுடைய மேலாடையை எடுத்து மெல்லப் போர்த்தினான். ‘விரும்பியதை விரும்பியபடியே அடைவதைவிடப் பெரிய வெற்றி எதுவும் பேதையர்களுடைய வாழ்வில் இருக்க முடியாது’ என்று முதல் நாள் அவளைக் கடுமையாக வெறுத்துப் புறக்கணிப்போடு கூறியிருந்த தானே இப்போது இப்படி அவளைக் குழந்தை போல் பேணிப் போற்றி உறங்கச் செய்வதையும், அவளுடைய உறக்கம் கலையலாகாதே என்று கவலைப்படுவதையும் எண்ணியபோது அவன் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான். அந்தத் தோல்வியை உணர்ந்த போது அவனுக்கு வெட்கமாக இருந்தது. அதே சமயத்தில் சுகமாகவும் இருந்தது. பொழுது புலர்ந்தும் புலராமலும் இருந்த அந்த நேரத்தைப் போலவே அவன் மனமும் குளிர்ந்து மணந்து கொண்டிருந்தது. இப்படி ஒரு காலைப்போது அவன் வாழ்க்கையில் இதுவரை விடிந்ததில்லை.
‘என்னை அடைவதற்காக இவள் செய்த தவம் பெரியது! என்னைப் பெறுவதற்காக இவள் இழந்த சுகங் களும் செய்த தியாகமும் இணையற்றவை’ என்று தனக்குள் தானே சொல்லிக் கொண்டவனாகச் செந்தாமரைப் பூவைப்போல் தன் மார்பின்மேல் படர்ந்து பற்றிக் கொண் டிருந்த அவள் கையை மெல்ல எடுத்து இளங்குமரன் தன் கண்களில் ஒற்றிக் கொண்டான். அந்தக் கையின் மென்மையும், தண்மையும், நளினமுமான நீண்ட விரல்களும், பவழமல்லிகை மணப்பது போன்ற மயக்கமும் ஒருகணம் அவனுடைய நினைவிலிருந்து விலகின. அவனுள் ஓடும். இரத்தம் தன் குலப் பகைவரையும் அவர் கொடுமைகளையும் நினைவூட்டிற்று. உயர்ந்த பாவனைகளால் அந்தத் தீய நினைவை அடக்கிக் கொண்டு பரிவுடனே மறுபடி அவளது கையை எடுத்து அவன் தன் கண்களில் ஒற்றிக் கொண்டபோது அவளே விழித்துக் கொண்டுவிட்டாள். அவனுக்கு வெட்கமாகி விட்டது. வெட்கத்தோடு அவள் கையை மெல்ல விடுவித்தான் அவன். அவளோ அவன் விடுவித்த கையை அவனிடமிருந்து மீட்டுக் கொள்ளவே முயலாதவளாய் அந்த நிலையில் தான் விழிப்பதைவிட உறங்குவதே நல்லதென்று திருட்டுத் தீர்மானமும் செய்து கொண்டவளாகப் பொய் உறக்கம் உறங்கினாள். அதைப் புரிந்துகொண்டு அவன் புன்னகை பூத்தான்.
அவளுக்கு அந்த விளையாட்டைத் தொடரும் ஆசையிருந்தும் தொடர முடியாத சூழ்நிலையில் அடக்க முடியாத சிரிப்போடு எழுந்து உட்கார்ந்தாள். “இந்தக் கை எந்தப் பிறவியிலோ சக்தி வாய்ந்த தேவதைகளின் கோவில்களுக்குப் பூச்சுமந்து பூச்சுமந்து புண்ணியம் சேர்த்திருக்க வேண்டும். அதன் பயன் சற்றுமுன் இதற்குக் கிடைத்துவிட்டது. இது பாக்கியம் செய்த கை” என்று சிவப்பு நிறம் படரும் கிழக்கு வானத்தைப் பார்த்துக் கொண்டே அவனுக்குச் சொன்னாள் சுரமஞ்சரி. அவன் தொட்டு ஆண்ட நினைவின் சுகம் அவளுடைய கையிலும் மனத்திலும் நிறைந்திருப்பதை அவளுடைய வார்த்தைகள் பரிபூரணமாய்த் தொனித்துக் கொண்டு பேசின. முறுவல் கிளரும் முகத்தினனாய்த் தன் கைகள் நிறையக் கீழே உதிர்ந்திருந்த மகிழம் பூக்களை அள்ளிக் கொண்டு அவள் பக்கம் திரும்பிப் பாக்கியம் செய்த அந்தக் கையை மலர்த்தி அதில் நிறைத்தான் இளங்குமரன்.
இப்போதும் அவனுடைய கண்களின் பார்வையே அவளைப் புதுமணப் பெண்ணாக அலங்கரித்தது.
“புறப்படு! நீராடப் போகலாம். பொழுது நன்றாக விடிவதற்கு முன்பு காவிரியில் போய் நீராடிவிட்டு வர வேண்டும்” என்று எழுந்து நடந்தான் அவன். அவள் மெளனமாய் அவனைப் பின்தொடர்ந்தாள். எல்லாரும் எழுவதற்கு முன்பு நகரமே அந்தரங்கமாக எழுந்து நீராடி விட்டு இன்னும் ஈரம் புலராமல் இருப்பது போல் வீதிகளில் எங்கும் மென்குளிர் பரவியிருந்த அந்த வேளையில் நடந்து போவதே சுகமாக இருந்தது.
புறவீதிக்கு அருகே இலவந்திகைச் சோலையின் மதிலை ஒட்டியிருக்கும் காவிரிப் படித்துறையில் போய் நீராடலாம் என்ற கருத்துடன் சுரமஞ்சரியை அழைத்துச் சென்றான் இளங்குமரன். புறவீதியில் நுழைந்ததும் பக்கத்திலிருந்த மலர் வனங்களின் மணமும் சேர்ந்து அவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்த வழி நடைக்கு இங்கிதமான சூழலைப் படைத்தது.
“இப்படி ஒரு காலைப் போது என் வாழ்வில் இதுவரை விடிந்ததில்லை” என்று அவன் கண் விழித்ததும் தானாகவே எதை நினைத்தானோ அதை அந்த வீதியில் புகுந்தபோது சுரமஞ்சரியும் அவனிடம் கூறினாள். இதே போலப் பணி புலராத காலை வேளை ஒன்றில் இந்தக் காவிய நாயகனை அடைவதற்காகத் தான் விரத மிருந்து இருகாமத்திணையேரியில் நீராடிக் காமன் கோட்டத்தை வலம் வந்த நிகழ்ச்சியை இன்று நினைவு கூர்ந்தாள் அவள். அந்த நினைவு இன்று தன் வாழ்வில் கைகூடிவிட்டதை உணர்ந்த பெருமையோடு புதிய கிளர்ச்சி பெற்றவளாகப் புறவீதியில் புகுந்தபோது அவள் அவனுடைய கையைப் பற்றிக்கொண்டு அவன் அருகில் இன்னும் நெருக்கமாக நடக்கலானாள். அவளுடைய கையை அவனும் அப்போது விலக்கிவிட்டுத் தனியே நடக்க முடியவில்லை.
மறக்குடி மக்கள் மிகுந்து வசிக்கும் புறவீதியில் அந்த வைகறை வேளையில் மனைப் பெண்கள் வாயில்கள் தோறும் தண்ணிர் தெளித்துக் கோலமிடும் காட்சிகள் விதியில் இருசிறகிலும் நிறைந்து தோன்றின.
காவிரியில் நீராடுவதற்காகச் சுரமஞ்சரியோடு கை கோத்து நடந்து சென்று கொண்டிருந்த இளங்குமரன் அந்த வீதியின் நடுப்பகுதியில் ஏதோ ஒரு வீட்டருகே வந்ததும் மேலே நடக்கத் தோன்றாமல் சோர்ந்தாற் போலக் கால்கள் தயங்கிட நடுவழியில் நின்றான்.
“ஏன் நின்றுவிட்டீர்கள்? நடக்கத் தளர்ச்சியாக இருக்கிறதா?” என்று சுரமஞ்சரி கனிந்த குரலில் அவனைக் கேட்டாள்.
“தளர்ச்சிதான்! இந்த இடத்தில் தளர்ந்து நிற்பதைத் தவிர வேறொன்றும் எனக்குத் தோன்றவில்லை” என்று அவனிடமிருந்து அவளுக்குப் பதில் வந்தது.
இவர்களுடைய அந்த உரையாடலில் கவரப்பட்டவளாக வீதியில் அந்த வீட்டு வாயிலில் உற்சாகமாகப் பாடியபடி கோலமிட்டுக் கொண்டிருந்த பெண் ஒருத்தி நிமிர்ந்து பார்த்தாள். பார்த்தவள் அப்படியே திகைத்து நின்றாள். அவளுடைய தனிமையின் உல்லாச வெளியீடாகிய பாட்டு இதழ்களில் அப்படியே அடங்கிப் போய் நின்றது.
“முல்லை! நீ நலமாயிருக்கிறாயா?” என்று அன்புடனே அவளை நோக்கிக் கேட்டான் இளங்குமரன். கோலமிட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண் யார் என்று இப்போது சுரமஞ்சரிக்கும் புரிந்தது. தான் இட்டுக் கொண்டிருந்த கோலத்தை அரைகுரையாக நிறுத்திவிட்டு ஆவலோடு இளங்குமரனுக்கு அருகே வந்த அந்தப் பெண் அவன் தன்னை நலம் விசாரித்ததற்கு மறுமொழி கூறாமல், அதிக அக்கறையோடு அவனை வேறொரு கேள்வி கேட்டாள்:
“உங்கள் பக்கத்தில் நிற்பது யார்?”
“என்னுடைய வாழ்க்கைத் துணைவி சுரமஞ்சரி.”
இளங்குமரனுடைய நாவிலிருந்து மிகத் தெளிவாக ஒலித்த இந்த வார்த்தைகளைக் கேட்டு முல்லையின் கையில் இருந்த கோலப் பேழை கீழே நழுவி விழுந்து உடைந்தது. இளங்குமரன் இதைக்கண்டு அதிர்ச்சி யடைந்தான்.
“இதென்ன காரியம் செய்தாய் முல்லை? கோலப் பேழையைக் கீழே போட்டு உடைத்துவிட்டாயே?”
“ஆம், உடைத்துத்தான் விட்டேன்.”
“அரைகுறையாக நிறுத்தியிருக்கிற இந்தக் கோலத்தை இனி எப்படி முடிப்பாய்...”
“...”
“உனக்கு எப்போதுமே இந்தப் பரபரப்பும் பதற்றமும் கூடாது முல்லை.”
“...”
பதில் பேசாமல் தன் முகத்தையே பார்த்துக் கொண்டு சிலையாக நின்ற முல்லையின் கண்களில் நீர் பெருகி வருவதை இளங்குமரன் கண்டான். இப்படி நடக்கும் என்றுதான் அவன் எதிர்பார்த்தான். அவன் எதிர்பார்த்த படியே நடந்தது. ஏதோ கோபம் நிறைந்த பேச்சைப் பேசுவதற்குத் துடிப்பது போல் முல்லையின் செவ்விதழ்கள் துடித்தன. எதிரே நிற்கிற அவளுடைய முகம் உணர்ச்சிகளின் மயானமாகி அங்கே எந்த ஆசைகளோ எரிந்து அழிவதையும் அவன் புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு கணம் பின்னால் திரும்பிப் பக்கத்தில் நின்ற சுரமஞ்சரியின் மேல் அவன் தன் பார்வையைப் படரவிட்டான். அவள் பயந்தாற்போல் அவன் முதுகுக்குப்பின் ஒண்டி நின்று கொள்ள முயன்று கொண்டிருந்தாள். மறுபடி அவன் முன் பக்கமாக முல்லையைத் திரும்பிப் பார்த்தபோது,
“ஒரு விநாடி நில்லுங்கள். இதோ வருகிறேன்” என்று அவனிடம் சொல்லிவிட்டு நடைப்பிணம் போலத் தளர்ந்து வீட்டின் உள்ளே சென்றாள் முல்லை. அவள் வீட்டுக்குள்ளே சென்றிருந்த நேரத்தில் சுரமஞ்சரி மெல்லிய குரலில் அவன் காதருகே ஒரு கேள்வி கேட்டாள்:
“இது என்ன வேதனை? இந்தப் பெண் ஏன் இப்படிக் கண் கலங்குகிறாள்?”
“இதன் காரணம் உனக்குத் தெரியத்தான் வேண்டுமோ?”
“அப்படி ஒன்றுமில்லை. கேட்கத் தோன்றியது கேட்டேன்.”
“நீ எதைப் பெற்று மகிழ்ந்து கொண்டிருக்கிறாயோ அதைப் பெற முடியாமல் அழுகிறாள் அவள்.”
அவன் சுரமஞ்சரிக்கு இப்படிப் பதில் கூறிக் கொண்டிருக்கும்போதே முல்லை உள்ளிருந்து திரும்பி வந்துவிட்டாள். ஒன்றும் பேசாமல் புயல் புறப்பட்டு வருவது போல் நடந்து வந்து, தனக்கு முன்னால் அவள் கைநீட்டித் தன்னிடம் அளித்த பொருள்களை வாங்கிக் கொண்டு அவைகளை என்னவென்று பார்த்தான் இளங்குமரன்.
திருநாங்கூரில் குருகுலவாசம் செய்த காலத்தில் அவளுடைய பிறந்த நாள் மங்கலத்துக்குப் பரிசாக அவன் அளித்த பாடல் உள்ள ஏட்டையும் அப்போது அவன் கொடுத்திருந்த நாகலிங்கப் பூவையும் இப்போது அவனிடமே திருப்பி அளித்திருந்தாள் அவள். அந்தப் பூவின் இதழ்கள் வாடிச் சருகாகியிருந்தன.
“முல்லை! நீ என்னுடைய நன்றிக்கு உரியவள். சிறு வயதிலிருந்தே உன் கைகளால் நான் பல நாள் உணவு பெற்றிருக்கிறேன். என்னுடைய உடம்பில் நான் புண்பட்டு வந்த போதெல்லாம் நீ என் காயங்களை மருந்திட்டு ஆற்றி யிருக்கிறாய். அப்படியெல்லாம் நன்றிக் கடன் பட்டிருந்தும் என்னுடைய இந்த உடம்பை நான் உனக்குக் கொடுக்க முடியாமல் போய்விட்டது. என் உடம்பையும் மனத்தையும் நான் இந்தப் பெண் சுரமஞ்சரிக்குத் தோற்றுப் போய் இவளுக்காகத் தியாகம் செய்துவிட்டேன். யாரை அதிகமாக வெறுக்கிறோமோ அவர்கள் மேலும் கூட அன்பு செலுத்தத் துணிந்துவிட வேண்டுமென்றுதான் இந்தப் புதிய வாழ்க்கைக்கு நான் என்னைத் தியாகம் செய்தேன். அதே போல நீயும் இப்போது ஒரு தியாகம் செய்ய வேண்டும். நான் என்னால் அதிகமாக வெறுக்கப் பெற்ற இவளுக்கே என்னை விட்டுக் கொடுத்துத் தியாகம் செய்தது போல நீ உன்னால் அதிகமாக விரும்பப்பட்ட என்னை உன் விருப்பங்களிலிருந்தும், ஆசைகளிலிருந்தும், கனவுகளிலிருந்தும் விட்டுக் கொடுத்துத் தியாகம் செய்து விட வேண்டும். இது உன்னால் முடியும். என்னுடைய நன்றியின் நினைவாக இந்தப் பாடலும், இந்தப் பழம் பூவும் உன்னிடம் இருப்பதைக்கூட நீ விரும்பவில்லையா?”
“நன்றி என்ற வார்த்தைக்கு இனிமேல் அர்த்தமில்லை. என்னை ஏமாற்றிவிட்டு என்னுடைய அழகைப் புகழ்கிற நன்றி எனக்கு வேண்டாம். இந்த ஏட்டிலிருக்கும் பாடலில் அப்படிப்பட்ட நன்றிதான் இருக்கிறது. நன்றியை எதிர் பார்க்கிற இடத்திலிருந்தும் கூட ஏமாற்றங்கள் மட்டுமே கிடைக்கிற உலகம் இது. மெய்யான நன்றி இந்த உலகத்திலேயே இல்லை. ஏட்டிலும் எழுத்திலும் புகழ்கிற இந்தப் போலி நன்றிக்காகவா இத்தனை காலம் நான் ஏங்கிக் கிடந்தேன்? எதை எதையெல்லாம் ஆசைப்பட்டுத் தவித் தேனோ அதையெல்லாம் கூடத் தியாகம் செய்யச் சொல்லுகிறீர்களே? இந்த நன்றியைத் தியாகம் செய்வதுதானா எனக்குப் பெரிய காரியம்?”
“உன்னைப் போன்றவர்களின் தியாகம்தான் இந்த உலகத்துக்கு அழகிய சரித்திரங்களைக் கொடுக்கிறது முல்லை! கணவன் மனைவி என்ற உறவுகளை அடைவதும் இழப்பதும் நம்முடைய உடம்பின் வாழ்க்கைக்கு அப்பால் பொய்யாய் மறைந்து போகிற சாதாரண அநுபவங்கள். குணங்கள் தான் என்றும் நிலைத்து வாழப் போகின்றவை. குணங்களால் வரும் புகழ்தான். காவியங்களில் வாழும். காலமெல்லாம் வாழும். அந்த நிறை வாழ்வுக்குத்தான் நான் ஆசைப்படுகிறேன்.”
“என்னைப் போன்ற பேதைப் பெண்ணுக்கு என்றும் எதனாலும் தணியாத குறைவாழ்வை அளித்துவிட்டு நீங்கள் மட்டும் நிறைவாழ்வு வாழ ஆசைப்படுகிறீர்களே?” என்று அவனை நோக்கிக் கூறிக் கொண்டே வந்தபோது முல்லையின் குரலில் அழுகை ஊடுருவிப் பேச்சைத் தடைப்படுத்திற்று. கண்களில் இடையறாத நீர்ப்பெருக்கு உடைந்து பெருக, அவள் தனக்குமுன் தவித்துக் கொண்டு நிற்பதைப் பார்த்து இளங்குமரன் திகைத்தான்.
அழுகையால் உடைந்து தளரும் குரலில் அவளே மேலும் அவனை நோக்கிக் கூறினாள்:
“நீங்கள் என்னுடைய வாழ்வில் இறுதிவரை எனக்குத் துணையாக வர முடியாமல் இந்தப் பெரு மாளிகைப் பெண் உங்களை நடுவழியிலேயே என்னிடமிருந்து பிரித்துக் கொள்வாள் என்பது அன்றே எனக்குத் தெரியும். முதன் முதலாக இந்திர விழாவின் போது பூத சதுக்கத்தில் படையலிடுவதற்காக என்னுடன் எனக்குத் துணையாக வந்து முழு வழிக்கு துணை வராமல் பாதி வழியிலேயே என்னை மறந்துவிட்டு இவளோடு இவள் பல்லக்கில் ஏறிப் போனவர்தானே நீங்கள்?”
“உன்னுடைய துக்கத்தில் சிறு குழந்தைபோல் நீ எதை எதையோ இணைத்துப் பேசி என்மேல் குற்றம் சுமத்துகிறாய். உன் வேதனைகளை நான் உணர்கிறேன். ஆனால் உன்னை எப்படி ஆறுதல் கொள்ளச் செய்வதென்றுதான் எனக்குத் தெரியவில்லை.”
“எனக்கு யாருடைய ஆறுதலும் வேண்டாம். நான் அழுது அழுது சாவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை” என்று கூறிவிட்டுக் கிளர்ச்சியற்ற தளர் நடையாய் நடந்து அவள் தன் வீட்டுக்குள் போவதற்குத் திரும்பியபோது,
“இந்தக் கோலத்தை முடிக்காமல் இப்படி அரை குறையாக விட்டுப் போகிறாயே முல்லை?” என்று இளங்குமரன் அவளைக் கேட்டான்.
“இந்தக் கோலத்துக்குத் தொடக்கம்தான் உண்டு. இறுதி தெரியவில்லை. முடிவும் இல்லை. நான் இதை முடிக்கப் போவதுமில்லை” என்று போகிற போக்கில் அழுகைக்கிடையே அவள் கூறிவிட்டுப் போன மறுமொழி அவனுடைய நெஞ்சின் ஆழத்தில் போய்த் தைத்துப் புண்படுத்தியது.
அவளுடைய அந்த மறுமொழியில் அவனுடைய வாய்ச் சொற்கள் கேட்ட கேள்விக்கும் பதில் இருந்தது. மனம் கேட்ட கேள்விக்கும் பதில் இருந்தது. அந்தச் சொற்களின் பொருள் எல்லை எவ்வளவுக்கு நீள்கிறது என்று புரியாமல் தவித்து நின்றான் அவன். சுரமஞ்சரியும் அவனுக்குப் பின்னால் மருண்டு போய் நின்றாள்.
தான் இட்ட கோலத்தைத் தானே மிதித்துக் கொண்டு வீட்டுக்குள்ளே திரும்பிப் போய்விட்டாள் முல்லை. அவளுடைய சொல்லம்புகளால் தாக்கப் பெற்றுத் தலை தாழ்ந்து போய்த் தன்மனமும் உணர்வுகளும் அவளுக்குப் பட்ட நன்றிக் கடனைத் தீர்க்க வழியின்றி முடிவு தெரியாமல் மனத்தின் உள்ளேயே அழுது புலம்பிடத் தயங்கி நின்றான் இளங்குமரன். அவனுடைய கைகளில் அவள் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போயிருந்த அந்தப் பழைய ஏடும் காய்ந்த பூவும் மலையத்தனை சுமையாய் மாறிக் கொண்டு கனத்தன.
‘நன்றிச்சுமை இவ்வளவு கனமானதா?’ என்று எண்ணியபடியே கையிலிருந்த பொருள்களையும் தரையிலிருந்த முடிவடையாத கோலத்தையும் பார்த்துக் கொண்டே நின்றான் அவன். தனக்குள்ளே மட்டும் கேட்கிற குரலில் அவன் மனம் பெரிதாய் ஓலமிட்டு அழுதது.
தாழ்ந்துபோன தலை நிமிராமல் முடிவற்ற பல கணங்களாக அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தக் கோலத்தை மிதித்துக்கொண்டு இன்னும் நான்கு கால்கள் உள்ளேயிருந்து முன்னால் நடந்து வந்தன. வருகிறவர்கள் யார் என்று அறிவதற்காக அவன் எதிரே நிமிர்ந்து பார்த்தான். உள்ளேயிருந்து வளநாடுடையாரும், அவர் மகன் கதக்கண்ணனும் வந்து நின்று கொண்டிருந்தார்கள்.
அந்தக் கிழவருடைய கண்கள் அவனை நோக்கி நெருப்புக் கோளங்களாகக் கனன்றன. மீசை துடிதுடித்தது. இந்த முதுமையில் இவ்வளவு கோபத்தையும் கொதிப்பையும் தாங்கிக்கொள்ள எனக்கு ஆற்றலில்லை என்பது போல அவருடைய உடல் நடுங்கியது. இந்த நிலையில் அந்தக் கிழட்டுச் சிங்கத்தைப் பார்ப்பதற்கே அவனுக்குப் பயமாயிருந்தது. தன் நாவிலிருந்த தைரியத்தையெல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு பேசுவது போல அவருடைய கண்களை நேருக்கு நேர் பாராமல் மூன்றே மூன்று வார்த்தைகளை ஒவ்வொன்றாக எண்ணி அவரிடம் பேசினான் இளங்குமரன்:
“நீங்கள் என்னை மன்னித்துவிட வேண்டும்.”
“உன்னை நான் ஒருக்காலும் மன்னிக்க முடியாது. நீ பெரிய ஞானியாயிருக்கலாம். திருநாங்கூரில் பல ஆண்டுகள் புற உலக நினைவே இன்றிக் கல்வி கற்றிருக்கலாம். ஆனால் உனக்கு எல்லாவற்றையும் கற்பித்த உன்னுடைய குருவினிடம் நீ ஒன்றுமட்டும் கற்க மறந்து விட்டாய். அதற்குப் பெயர் நன்றி.”
“அதைக் கற்க இன்னொரு பிறவி எடுக்கிறேன் ஐயா! இந்தப் பிறவியில் அது முடியாமல்தான் போய்விட்டது. நினைத்துப் பார்த்தால் நான் உங்கள் குடும்பத்துக்கும் உங்களுக்கும் நிறைய நன்றிக் கடன் பட்டிருப்பது எனக்கே தெரிகிறது. ஆனால் அந்தக் கடனை எந்த விதத்தில் நான் தீர்க்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதே விதத்தில் தீர்ப்பதற்கு இந்தப் பிறவியில் நான் இயலாதவனாகி விட்டேன். இந்தப் பிறவியில் என்னுடைய அனுபவங்கள் எல்லாம் சத்திய சோதனைகளாகி விட்டன. சத்திய சோதனைகளில் இறங்குகிறவர்கள் தங்களுக்கு மிகவும் வேண்டியவர்களைக் கூட ஏமாறச் செய்து விடும் படியான சந்தர்ப்பங்களைத் தவிர்க்க முடியாமல் அடைந்துதான் ஆக வேண்டியிருக்கிறது. என்னுடைய குலப்பகைவரான எதிரியை நான் பழி வாங்கும் நோக்குடன் படைதிரட்டிப் புறப்பட மறுத்தபோது என் மாமன் மகனான குலபதிக்கு அது பெரிய ஏமாற்றமா இருந்தது. என் எதிரியை நான் சந்தித்து நியாயம் கேட்கிற முறையில் கொடுமையும் வன்மையும் வேண்டும் என்று எனக்குத் துணையாய்ப் பின் தொடர்ந்த நீலநாகரை நான் மறுத்துத் திருப்பி அனுப்பிய போது அவருக்கு ஏமாற்றமா இருந்தது, உங்கள் மகள் முல்லையை நான் மணம் புரிந்து கொள்ளாமற் போனது உங்களுக்கு ஏமாற்றமாயிருக்கிறது. சத்தியத்தை ஏமாற்றக் கூடாதென்று நாம் ஏதோ செய்தால் அதன் மறுபுறம் அந்தச் செய்கையால் ஏமாறிய மனிதர்கள் வந்து நிற்பதைக் காண்கிறோம். மனிதர்களுக்கு மட்டும் திருப்தியாக நடந்து கொண்டால் சத்தியத்தை ஏமாற்றியதாக முடிகிறது. சத்தியத்துக்குத் திருப்தியாக நடந்து கொண்டுவிட்டதாக நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தால் அந்தச் சமயத்தில் அதே காரணத்தால் தாங்கள் ஏமாறியதாகச் சொல்லிக் கொண்டு மனிதர்கள் வந்து கண்கலங்கி நிற்கிறார்கள்.”
“உபதேசம் போதும்! இவற்றை எல்லாம் புரிந்து கொள்ளுவதற்கு நாங்கள் கற்றுத் துறை போகவில்லை. பொது மனிதர்களையும் பொதுவான மனித உறவுகளையும் தவிர எங்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது. எங்களுடைய வாழ்க்கையிலே இரண்டே இரண்டு எல்லைகள்தான் உண்டு. ஒன்று வீரம், மற்றொன்று அன்பு. இந்தக் குடும்பத்தில் எவரும் இந்த விநாடி வரை வீரத்தில் ஏமாறியதில்லை. ஆனால் இன்று இந்தக் குடும்பத்துப் பெண்ணொருத்தி அன்பில் ஏமாறிவிட்டாள். வெற்றியைத் தவிர வேறு வளர்ச்சிகளைக் கண்டறியாத இந்த வீரக் குடியின் வாழ்க்கையில் இன்று என் மகள் காதலிலே தோற்றுப் போய் வீழ்ந்து விட்டாள். இன்று காலையில் உலகத்துக்கெல்லாம் பொழுது விடிந்தது. என் மகளுக்கு மட்டும் இருண்டு போய்விட்டது. உன்னுடைய இதயத்துக்கு உணரும் சக்தி இருந்தால் அறுபட்டு வீழ்ந்த பூங்கொடிபோல உள்ளே அவள் குமுறிக் குமுறி அழுது கொண்டிருப்பதை நீயும் உணர முடியும். ஆனால் நீ கல்நெஞ்சன். பகைவர்களுக்கு நல்லவனாகி உறவினர்களை ஏமாற்றும் வஞ்சகன்.
“நீ மணிபல்லவத்திலிருந்து திரும்பி வந்துவிட்ட செய்தியை நான் இங்கு வந்து கூறியவுடனே என் மகள் இன்று காலை இந்த வீட்டின் படிகளில் நீ ஏறி வருவாய் என்று ஆவலோடு எதிர்பார்த்து நேற்றிரவிலிருந்தே எப்போது விடியும் எப்போதும் விடியும் என்று விடிவதற்காகவே இரவெல்லாம் கண் விழித்துக் காத்திருந்து விடிந்ததும் வாயிலில் தண்ணிர் தெளித்துக் கோலமிட்டுக் கொண்டிருந்தாள். அந்தக் கோலம் இதோ இப்படி முடியாமல் முடிந்துவிட்டது.”
“...”
சிறிது நேரம் மேலே ஒன்றும் பேச வராத மெளனத் தவிப்புக்குப் பின் வளநாடுடையார் முகத்தைத் திருப்பிக் கொண்டு வெறுத்தாற் போல் உள்ளே போய்விட்டார். மீண்டும் அவன் முகத்தைப் பார்த்து அவனோடு பேசும் விருப்பமே இல்லாதவராகத் திரும்பிப் போவது போலிருந்தது அவர் நடை. அப்படிப் போவதற்கு முன் இளங்குமரன் தன் வாழ்க்கைத் துணைவியோடு அவரை வணங்க முற்பட்டதும் வீணாயிற்று. அந்த வணக்கத்தையும் ஏற்றுக் கொள்ளாமலே அவர் விரைந்து உள்ளே போய்விட்டார்.
கதக்கண்ணன் மட்டும் தன்னுடைய அகன்ற பெரிய விழிகளிலே கோபம் கனல இளங்குமரனையே இமையாமல் பார்த்துக் கொண்டு நின்றான். அவனுடைய அந்தப் பார்வை இளங்குமரனைச் சுட்டெரித்தது. அவன் கூசி நின்றான். சிறிது நேரத்தில் தந்தையைப் போலவே, கதக்கண்ணனும் வெறுப்போடு உள்ளே திரும்பியபோது பின்புறமிருந்து பழைய நண்பனாகிய இளங்குமரனின் நெகிழ்ந்த குரல் அவனைத் தடுத்து நிறுத்தியது:
“கதக்கண்ணா! உன் தந்தையைப் போலவே நீயும் என்னை மன்னிக்க விரும்பவில்லையென்று தெரிகிறது. உன்னாலும் என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை. பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை. நீலநாகருடைய படைக் கோட்டத்தில் நீயும் நானும் ஒருசாலை மாணவர் களாக இருந்து பயின்ற நாட்களும், அப்போது தொடங்கிப் பழகிய நட்பும், உறவுகளும் மறந்து இப்போது இந்த ஒரே ஒரு கணத்தில் என்னை வெறுத்துப் பிரிகிற துணிவை உன்னால் எவ்வாறு அடைய முடிந்ததோ? இதைக் கண்டு நான் வியப்படைகிறேன். குடி வழி வந்த பரம்பரை வீரம் இப்படிக் கடுமையான துணிவையும் உனக்குத் தந்திருக்கிறதோ என்னவோ? உன்னுடைய இந்த வெறுப்புக்காகவும் நான் வருத்தப்படவில்லை. நீங்கள் வெறும் மனித உறவுகளுக்காக மட்டுமே நட்புச் செய்யத் தெரிந்தவர்கள். அந்த உறவுகள் உடையும்போது உங்கள் மனங்களும் மாறி விடுகின்றன. உங்களுடைய வாழ்வில் வீரமும் அன்புமே உங்களுக்கு எல்லைகள். அதில் ஓர் எல்லையை அழிப்பதற்கு என்னையறியாமலே நான் காரணமாயிருந்திருக்கிறேன். எனக்குப் புரிகிறது. அதற்காக என் மனமும் நோகிறது. மறுபடியும் பிறந்து இந்தப் பழங் கடனைத் தீர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவது தவிர இப்போது நான் வேறொன்றும் முடியாதவனாக இருக்கிறேன். இந்த நிலையில் என்னுடைய வறுமை எனக்கே தெரிகிறது.
“முடிந்தால் உன் தங்கை முல்லையிடம் சொல்! நான் என்னுடைய தோள்களிலும் மார்பிலும் பட்டுக்கொண்டு வந்த புண்களை எல்லாம் முன்பு, ஒரு காலத்தில் அவள் தன் கைகளால் மருந்திட்டு ஆற்றியிருக்கிறாள். ஆனால் இன்று இந்தக் காலை வேளையில் அவளே என் மனத்தில் உண்டாக்கியிருக்கிற புண்ணை எங்கே எப்படி எந்தப் பிறவியில் ஆற்றிக் கொள்வது என்ற வேதனையோடு தான் நான் போகிறேன் என்று சொல். இதைத் தவிர இப்போது அவளுக்குச் சொல்ல என்னிடம் வேறு ஒன்றுமில்லை.”
இவ்வாறு கூறிவிட்டுச் சுரமஞ்சரியோடு தன் வழியில் விலகி நடந்தான் இளங்குமரன். வீதியில் சிறிது தொலைவு சென்றபின் அவன் மறுபடி திரும்பிப் பார்த்தபோது வரிசையாய் எல்லா வீடுகளின் முன்பும் முழுமையாயிருந்த கோலத்துக்கு நடுவே அந்த ஒரே ஒரு கோலம் மட்டும் அரைகுறையாயிருந்து தனியாய்த் தெரிந்தது. ஆம்! அந்தக் கோலம் முடியவில்லை. அதைத் தொடங்கியவளுக்கே எப்படி முடிப்பதென்று தெரியவில்லை.
அந்த வீதியின் கோடியில் திரும்பியபோது அதுவரை அடங்கிக் கொண்டிருந்த துயரம் கட்டுடைந்து வெடித்தாற் போல் அழுகை பொங்கும் குரலில் சுரமஞ்சரி அவனிடம் கூறினாள்:
“நான் ஒருத்தி உங்கள் வாழ்வில் குறுக்கிட்டு உங்களை அடைந்ததால் உங்களுக்கு எவ்வளவோ துன்பங்களை யெல்லாம் உண்டாக்கிவிட்டேன்.”
இதைக் கேட்டு அவன் சிரித்தான்.
“நானே விரும்பி ஏற்றுக் கொண்ட துன்பம் தானே இது? என்னைத் தோற்கக் கொடுத்து எனக்கு இன்பமாக நானே அங்கீகரித்துக் கொண்ட துன்பம் நீ! இப்போது மட்டும் திடீரென்று உன் மனத்தில் ஏன் இந்தக் கலக்கம் ஏற் படுகிறது? உனக்குக் கிடைத்த வெற்றிக்காக நீயே பயப்படுகிறாயா? என்னோடு வாதிட்டு முறையாக நீ என்னை வென்றதாக நினைத்துப் பெருமை கொள்வதை விட்டு விட்டுப் பேதை போல் நீ ஏன் வருந்துகிறாய்? உன் மேல் எனக்கு ஒரு கோபமும் இல்லை. உனக்குத் தோற்ற இடமே என்னுடைய வாழ்வில் சத்திய சோதனையின் நிறைவான இடமாகவும் இருக்கலாம். அந்த விநாடியில் நான் என்னுடைய சத்தியத்துக்கு மிகவும் அருகே நின்றிருக்கிறேன். என்னுடைய குணங்கள் தோல்வியிலும் நான் வெற்றியே பெற எனக்கு உதவியிருக்கின்றன. ஆற்றோடு மிதந்து வந்த பூமாலை நீராடிக் கெண்டிருந்தவன் மூழ்கியெழுந்தபோது அவனுக்கு நோக்கமும் எண்ணமும் இல்லாதபடியே அவன் கழுத்தில் நேர்ந்தது போலத்தான் எனக்கு நீயும் கிடைத்திருக்கிறாய்.”
“அப்படி உங்களை அடைந்தது என் பாக்கியம்தான்.”
பேசிக்கொண்டே நடந்து நடந்து அவர்கள் காவிரிக் கரையை அடைந்திருந்தார்கள். பொழுது நன்றாகப் புலர்ந்து விட்டது. காவிரிக்கரை மரக் கூட்டங்களில் இளம் கதிரொளி பொன்வெயில் தூவிக் கொண்டிருந்தது.
“இப்படித் தனியாக ஓர் ஆண்பிள்ளையோடு கால்கள் நோவ நடந்து துணை செய்வோரும், தோழிமாரும் இன்றி வந்து காவிரியில் நீராடும் சந்தர்ப்பம் இதற்கு முன் உன் வாழ்வில் என்றுமே நேர்ந்திருக்காது சுரமஞ்சரி.”
“இன்று இவ்வளவு பெரிய துணையோடு நேரவேண்டு மென்பதற்காகவே இதுவரை இப்படி நேரமால் இருந்தது போலும்.”
“தெரிந்துகொள்! இப்படி எதிர்பாராதது நேர்ந்து கொண்டே இருப்பதுதான் வாழ்க்கை. இந்த வாழ்க்கை வீதியில் நம்மோடு நெருங்கிய துணையாக வரத் தவிப்பவர்கள்கூட ஏதேதோ கோபதாபங்களால் பாதி வழி யிலேயே நின்று போகிறார்கள். துணையாய் எப்போது எதற்காக வந்தார்கள் என்று தெரியாமல் நாமே சிலரை மறந்து விடுகிறோம். கடைசிவரை உடன் வருவதற்கு எவரேனும் சிலரால்தான் முடிகிறது. இந்த யாத்திரையில் நாமே சிலரை நடுவழியில் தவிக்கத் தவிக்க விட்டுவிட்டு மேலே நடந்து வந்துவிடுகிறோம். அதற்காகக் கலங்கி அந்த இடத்திலேயே நின்று அழிந்துகொண்டிருக்கவும் முடிவ தில்லை. கலங்காமல் மேலே நடந்து விடவும் தயக்கமாயிருக்கிறது. அந்தத் தயக்கம் நாம் இன்னும் மனிதர்கள் தான் என்பதை நமக்கு நினைவு படுத்துகிறது. நம்முடைய கல்வி, மனப்பக்குவம், பயிற்சியடைந்த உணர்வுகள் எல்லாம் அந்த விநாடிகளில் நம்மைக் கைவிட்டு விடுகின்றன. நாம் முயன்று சேர்த்துக் கொண்ட ஞானங்கள் எல்லாம் நம்மிடமிருந்து பிரிந்து நின்று கொண்டு அதோ அதுதான் உன் பிறப்பிலேயே நீ கொணர்ந்த சொந்த ஞானம் என்று நம்மிடம் மீதமிருக்கும் புத்தியைச் சுட்டிக் காட்டிச் சிரிக்கின்றன. ஈரேழு பதினான்கு புவனங்களையும் ஆட்டிப் படைக்கிற தவவலிமை பெற்ற பெரு முனிவர்களும் இந்த விதமான தளர்ச்சியைத் தங்கள் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறார்கள்.”
“நீங்கள் கூறுவது எனக்குப் புரியவில்லை. ஆனால் நிறைகுடமாகிய உங்கள் மனமும் இப்போது எதற்காகவோ கலங்கித் தவிக்கிறதென்று மட்டும் புரிகிறது.”
“உனக்கு அவ்வளவு புரிந்தால் போதும் சுரமஞ்சரி!” என்று கூறிவிட்டுக் காவிரி நீரில் குளிப்பதற்கு இறங்கினான் இளங்குமரன். அவளும் இறங்கினாள்.
இருவரும் நீராடி கரையேறிய வேளையில் “இப்போது என் கண்கள் எதிரே காண்பது கனவில்லையே?” என்று பழகிய குரல் ஒன்று மிக அருகிலிருந்து அவர்களைக் கேட்டது. இளங்குமரன், சுரமஞ்சரி இருவருமே அந்தக் குரலைப் புரிந்து கொண்டு நிமிர்ந்து பார்த்தார்கள்.
மேலேயிருந்து ஓவியன் மணிமார்பனும், அவன் மனைவி பதுமையும் காவிரியில் நீராடுவதற்காகப் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தார்கள். நீண்ட நாட்களுக்குப்பின் ஓவியன் மணிமார்பனைச் சந்தித்த சுரமஞ்சரிக்கு அவனிடம் பேசவும் நலம் தெரிந்து கொள்ளவும் ஆவல் எழுந்தது. அந்த ஆவலும் நாணமும் போராடக் கணவ னோடு ஒன்றினாற்போல நின்றாள் அவள். நினைத்த சொற்களைப் பேச வரவில்லை. அதற்குள் ஓவியனே அவர்களை நோக்கிப் பேசினான்:
“ஐயா! நீங்கள் இருவரும் இப்படியே சிறிது நேரம் நில்லுங்கள். இந்தக் காட்சி என் கண்களில் நிறையட்டும். உமையொரு பாகனாகச் சிவபெருமான் நிற்பதுபோல் இந்தக் காலை வேளையில் எங்களுக்குக் காட்சியளிக்கிறீர்கள். இந்தப் புனிதமான வைகறை வேளையில் இதைக் கண்ட கண்கள் வாழ்க. ஓவியத்தில் பல முறை இப்படி உங்களை ஒன்று சேர்த்து எழுதி மகிழ்ந்திருக்கிறேன் நான். எனக்குத் திருமணமாகிய சில தினங்களில் நானும் என் மனைவியும் இயற்கை வளம் காண்பதற்காக பொதிகை மலைக்கு மகிழ்ச்சி உலாப் புறப்பட்டுப் போயிருந்தோம். அன்று என் மனைவி பதுமை என் மனத்துக்குப் பெரிதும் விருப்பமான ஓவியம் எதையாவது நான் அந்த மலைச் சூழலில் வைத்து வரைய வேண்டுமென்று என்னைக் கேட்டுக் கொண்டாள். என் மனத்தில் முதல் முறையாக நான் பூம்புகாருக்கு வந்து திரும்பிய காலத்திலிருந்து நாளும் இடைவிடாமல் எழுதிக் கொண்டிருக்கிற ஓவியம் எதுவோ அதையே அன்று பொதிகை மலையில் அவளுக்கும் வரைந்து காண்பித்தேன். அந்த ஓவியத்தில் காதலர் இருவர் கற்பனையாய் ஒன்று சேர்ந்திருந்தனர். அவர்கள் மெய்யாகவே ஒன்று சேர்ந்திருப்பதை இன்று நானும் என் மனைவியும் இப்போது எங்கள் கண் எதிரே காண்கிறோம். நீங்கள் இருவரும் வாழ்க்கைப் படகில் இன்று ஒன்றாகவே பயணம் செய்யத் தொடங்கியிருக்கிறீர்கள். காதற் படகில் நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து பயணம் செய்வதாக நான் என் மனைவியிடம் முன்பே வரைந்து காட்டி மகிழ்ந்த ஓவியங்கள் கணக்கற்றவை.”
“மணிமார்பா! நீ பரிசுத்தமான கலைஞன். அதனால் தான் உன்னுடைய பழைய கற்பனைகள் எல்லாம் இன்று உன் கண்களே காணும்படி மெய்யாக மலர்கின்றன. இதோ என் பக்கத்தில் நாணி நிற்கிற பெருமாளிகைப் பெண் இப்படி என்னை அடைந்ததற்காக நன்றி செலுத்த வேண்டியவர்கள் யாராவது இருப்பார்களானால் அது நீ மட்டும்தான். நீண்ட காலத்துக்கு முன்பு அன்று இந்திர விழாக் கூட்டத்தில் நீ என்னைச் சந்தித்தபோது என் உருவத்தை ஒரே ஒருமுறை வரைந்து கொள்வதற்கு மட்டும் உன்னிடம் நான் இணங்கினேன். ஒன்றும் தெரியாத அப்பாவிக் கலைஞனைப் போலிருந்து கொண்டே என் வாழ்க்கையை இப்படி வேறு விதமாக மாற்றி வரைந்து முடித்திருக்கிறாய் நீ! யாரை அதிகமாக வெறுத்தேனோ அவளுக்குப் பக்கத்திலேயே இன்று இப்படி நெருங்கி நின்று விடும்படியான சந்திப்புக்கள் தொடக்கத்தில் அன்று உன் காரணமாகவே நேர்ந்தன.
“இன்று இவ்வளவு காலத்துக்குப் பின்பு எண்ணிப் பார்க்கும்போது நான் உனக்கும் சிறிது தோற்றுப் போயிருப்பதை உணர்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு சுரமஞ்சரி எணாக்கு எழுதிய மடலை என்னிடம் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, ‘இப்படிப் பெண்களின் அன்பினால் உலகத்தில் மகாகாவியங்கள். பிறந்திருக்கின்றன ஐயா!’ என்று நீ என்னிடம் கூறியபோது ‘அப்படி மகா காவியங்களைப் படைக்கின்ற அன்பை அந்த ஏழடுக்கு மாளிகையி லிருந்து எதிர்பார்க்க முடியாது’ என மறுமொழி கூறி உன்னை மறுத்தேன் நான். ‘அன்பின் சக்தி அளப்பரியது. அதற்குமுன் சாதாரண உணர்வுகள் தோற்று விடுகின்றன. ஒரு காலத்தில் இதே பெண்ணின் சிரிப்புக்கு - நீங்கள் தோற்றுப்போனால்கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன்’ என்று அன்றைக்கு என்னிடம் அறைகூவி விட்டு அதன் விளைவாக நான் உணர்ச்சி வசப்பட்டு உனக்குச் செய்த துன்பத்தையும் நீ ஏற்றுக் கொண்டு போயிருந்தாய். சொன்னபடியே இன்று எங்களை இந்தக் கோலத்தில் சேர்த்துப் பார்த்த பின்பும் நீ ஆச்சரியப்படாமல்தான் நிற்கிறாய். நேற்றிரவு நீலநாகரை அழைத்துக் கொண்டு பட்டினப்பாக்கத்து மாளிகைக்கு வந்தபோதும் நீ என் நிலைகளைக் கண்டு ஆச்சரியப்படவில்லை. இன்று இந்த மாறுதலைக் கண்டும் சிரித்துக் கொண்டுதான் நிற்கிறாய்!”
“அப்படி எல்லாம் என் வார்த்தைகளுக்குப் பெரிய பெரிய அர்த்தங்களைக் கற்பிக்காதீர்கள். ஏரல் எழுத்துப் போல் நான் நினையாததெல்லாம், நினைத்துத் திட்டமிட்டதை ஒப்பத் தற்செயலாக நடந்திருக்கின்றன. அந்தப் பெருமாளிகைச் செல்வருக்கும் உங்களுக்கும் உள்ள பகைமைகள் உங்களுக்கே நன்றாகத் தெரிந்த பின்பும் நீங்கள் இப்படி விட்டுக் கொடுத்துக் கருணை மறவராக நிற்பதுதான் இந்த வாழ்வுக்குக் காவியப் பெருமையைத் தருகிறது. ஆனால் நீலநாகரைப் போன்றவர்கள் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.”
“அவர் இதை ஒப்புக் கொள்ளாததற்கும் அவருக்கு என் மேலுள்ள அன்புதான் காரணம் மணிமார்பா! அவர் ஒரு பெரிய மலைச்சிகரம். அதே உயரத்துக்கு நீ வேறு சிகரங்களைத் தேடக் கூடாது. எல்லா மனிதர்களுடைய மனத்தையும் அந்தச் சிகரத்தின் உயரத்தினால் அளக்கவும் முயலக்கூடாது. கருங்கல்லாய் இறுகிப் போயிருக்கும் அந்தச் சிகரத்தின் உச்சியிலிருந்து கூடப் பாசமும், அன்பும் ஊறிப் பெருகுவதுண்டு.”
“உண்மைதான் ஐயா! வயிற்றுப் பசியும் கவலைகளும் இல்லாத உலகம் ஒன்று ஏற்பட்டால் அங்கே அன்புதான் விலை மதிப்பற்ற செல்வமாக இருக்கும். மற்ற எல்லாச் செல்வங்களும் மதிப்பிழந்து போகும். மற்ற எல்லாச் செல்வங்களும் மதிப்போடு இருக்கிற காரணத்தால்தான் சில சமயங்களில் பசி, கவலை, குரோதங்களினால் அன்பைப் பற்றி மறந்து போகிறோம். இந்தப் பெரு மாளிகைச் சகோதரியாருடைய தந்தையும் அவரைச் சேர்ந்தவர்களும் இத்தனை காலம் குரோதத்தினால் தான் அன்பை மறந்து போயிருந்தார்கள் போல் இருக்கிறது. ஆனால் இப்போது உங்களருகே நாணி நிற்கும் இந்தச் சகோதரியார் தன் குடும்பத்தின் வரலாற்றையே மாற்றி விட்டுப் புது வழியில் உங்களோடு இறங்கி வந்துவிட்டார்” என்று கூறிக்கொண்டே நீராடுவதற்காக கீழே படிகளில் இறங்கினான் மணிமார்பன்.
அவனும் பதுமையும் நீராடிவிட்டு வருகிறவரை இளங்குமரனும் சுரமஞ்சரியும் கரையில் காத்திருந்தார்கள்.
தன்னருகே நீராடிய ஈரம் புலராமல் மேகக் காடாய்ச் சரிந்த சுரமஞ்சரியின் கூந்தலிலிருந்து கிளரும் நறுமணங்களை உணர்ந்து இளங்குமரன் தன் கண்களால் அவளை நன்றாகப் பார்க்கத் தொடங்கியபோது, எல்லா அணி கலன்களையும் இழந்த பின்பும் பிறந்த போதே உடன் பிறந்து, வளர்ந்த போதே உடன் வளர்ந்து நிறைந்த இயற்கை வனப்புகளையே போதுமானவைகளாகக் கொண்டு பேரழகியாய் மணந்து கொண்டிருந்தாள் அவள். ‘இவற்றில் தெரியும் அழகு மிகுதியா? நாணம் மிகுதியா?’ என்று பிரித்துக் காண முடியாத கவர்ச்சி நிறைந்த கண்கள், ‘நான் கனிந்திருக்கிறேன்! நான் கனிந்திருக்கிறேன்’ என்பதைச் சொல்ல மொழியின்றித் துடிப்பதுபோல மெல்ல அசையும் செல்லச் செவ்விதழ்களின் நகைக் கனிவு வார்த்தைகளால் பேச முடியாததைப் பேசும் நளினமான சிரிப்பு, இவ்வளவும் நிறைந்து தோன்றினாள் சுரமஞ்சரி. காலைக் கதிரொளியில் அவள் முகமும் கைகளும் பாதங்களும் மெருகிட்ட செம்பொன்னாகி மின்னின.
எத்தனை அழகுகள்! எத்தனை அழகுகள்! அத்தனை அழகுகளையும் புதிதாய் இன்றுதான் புரிந்துகொள்வது போல் அவளைப் பார்த்தான் இளங்குமரன்.
இப்போது மூன்றாவது முறையாகவும் அவனுடைய பார்வையே அவளைப் புதுமணப் பெண்ணாக அலங்கரிக்கத் தொடங்கியது.
“சுரமஞ்சரி ! உன்னுடைய நாணமே உனக்குப் பெரிய அணிகலன்.”
“அது உங்களுடைய பார்வையிலிருந்துதான் எனக்குக் கிடைக்கிறது. உங்கள் கண்களின் பார்வையாலேயே நான் அலங்கரிக்கப்படுகின்றேன்.”
“அப்படியானால் வேறுவிதமான அலங்காரங்களுக்கு நீ ஆசைப்படவில்லை போலும்.’
இந்தச் சொற்களைக் கேட்டு அவளுடைய இதழ்களில் அதுவரை சுரந்திருந்த நகை சற்றே மலர்ந்து புன்னகையாய்ப் பிறந்தது. பின்பு பெருநகையாகவும் வளர்ந்தது. மெல்ல நெகிழ்ந்த பவழச் செவ்வாயில் பற்கள் முத்துக்களாய் ஒளி வீசின. விடிகாலையில் ஒவ்வோர் இதழாய் மலரும் பூவைப்போல் அவள் முகத்தில் உணர்ச்சிகள் மலர்ந்து கொண்டும் மணந்து கொண்டும் நின்றன. கன்னங்களில் குங்குமச் சிவப்பு பரவியது. கால் விரல் தரையைக் கிளைக்கலாயிற்று.
‘இன்று இந்த வேளையில் தன் முன் இப்படி நாணிக் குலைந்து நிற்கிற இதே பெண்தானா நேற்று அப்படி யெல்லாம் ஆற்றல் வாய்ந்த சொற்களைத் தேடித் தனக்கு முன் வாதிட்டாள்?’ என்று எண்ணி வியந்தான் இளங்குமரன். அவள் அழகுகள் ஒவ்வொன்றும் இப்போதுதான் புரிந்த புதுமைகளாய் அவன் மனத்தில் நிறைந்தன.
மணிமார்பனும் அவன் மனைவியும் நீராடிவிட்டுக் கரைக்கு வந்தபின்பு எல்லாருமாக அங்கிருந்து ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலைக்குப் புறப்பட்டுப் போனார்கள். எல்லாரும் படைகலச் சாலைக்குள் நுழைகிறபோது சுரமஞ்சரி மட்டும் வாயிலிலேயே தயங்கி நின்றாள்.
முன்பு ஒருநாள் பின்னிரவு வேளையில் நகரமே உறங்கிக் கிடந்த பேரமைதியினிடையே வசந்தமாலையும் தானுமாகத் தேர் ஏறி வந்து இதே படைகலச் சாலையில் இளங்குமரனைத் தேடியபோது, வாயிற்கதவருகே நின்று தன்னைத் தடுத்த அந்த இரும்பு மனிதரை நினைத்துக் கொண்டு பயந்தாள் அவள்.
சுரமஞ்சரி மருண்டு போய்த் தயங்கி நிற்பதன் காரணம் இளங்குமரனுக்குப் புரிந்தது.
“பயப்படாமல் என்னோடு உள்ளே வா. உலகத்தில் எல்லாரும் அன்புக்கும் பாசத்துக்கும் கட்டுப்பட்டவர்கள் தாம். நீலநாகரும் அகற்கு விதிவிலக்கில்லை. நீ இப்போது இங்கே என் வாழ்க்கைத் துணையாகி என்னுடனே வருகிறாய்...” என்று இளங்குமரன் அவளைக் கைப்பற்றி உள்ளே அழைத்துக்கொண்டு போனான்.
அவனையும் சுரமஞ்சரியையும் சேர்த்துப் பார்த்ததும் நீலநாகர் வெறுப்போடு அலட்சியமாகத் தலையைக் குனிந்து கொண்டார். பின்பு இளங்குமரனிடம் நேருக்கு நேர் பேச விரும்பாதவர் போல மணிமார்பனை விளித்துப் பேசினார்:
“மணிமார்பா! உன்னுடைய நண்பன் இப்போது இங்கே எதற்காக வந்திருக்கிறான்? தன்னுடைய தோல்வியைக் கொண்டாடுவதற்காக இப்படி இங்கே திரும்பி வந்திருக்கிறானா என்று அவனைக் கேள்!”
“எந்தத் தோல்வியைச் சொல்கிறீர்கள்?” என்று இளங்குமரனே சிரித்தபடி அவரை எதிர்க்கேள்வி கேட்டான். எனினும் அவர் அவன் பக்கம் திரும்பாமலே பேசினார். முதலில் இருந்த கடுமை மட்டும் சற்றே குறைந்து விட்டாற் போல அவருடைய பேச்சு அவனை நோக்கியே பிறந்தது.
“இதே ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் கற்றுப் பயின்று உரமேறிய இணையற்ற வீரமும், திருநாங்கூர் அடிகளிடம் குருகுலவாசம் செய்து பெற்ற வரம்பிலா ஞானமும் இப்படி இந்தப் பகைவன் மகளின் வளை சுமக்கும் கைகளுக்காகத் தோற்றுப்போய் விட்டாற் போலிருக்கிறது. இந்தத் தோல்விக் கோலத்தை நானும் காண வேண்டும் என்று என் முன்னாலே வந்து இப்படி நிற்க வெட்கமாக இல்லையா உனக்கு?”
“வெட்கமாக இல்லை. பெருமையாகத்தான் இருக்கிறது. என் பெருமைக்குக் குறைவின்றி நானே விரும்பித் தோற்ற தோல்விதான் இது. இந்தத் தோல்வியில் எந்த விதமான தாழ்வையும் நான் உணரவில்லை. பெருமைப் படத்தக்க தோல்வி இது. எல்லாவற்றையும் வென்று கைப்பற்றி நிமிர்ந்து நிற்கும் துணிவைப் போல எல்லாவற்றையும் விட்டு விடுகிற துணிவும் வீரனுக்கு இருக்க வேண்டும் என்று நீங்களே என்னிடம் அடிக்கடி கூறியிருக்கிறீர்கள். யாரை மிக எளிதாக நம்மாலே வென்றுவிட முடியும் என்று நாம் உணர்கிறோமோ அவர்களுக்கே தோற்றுப்போய், விட்டுக் கொடுத்து விடுவதிலும் ஒரு சுகம் இருக்கிறது. பரிபூரணமான தெய்வீக இன்பம் அது. இந்த விதமான தோல்விக்குக் காரணமாக இருப்பது நமது கருணைதானே ஒழியப் பலவீனமன்று. தங்களால் வெல்ல முடிந்தவர்கள் மேலும் கருணை கொண்டு அவர்கள் தங்களுக்கு ஒப்பான நிலையில் தங்களை எதிர்த்து வெற்றி பெற முடியாததை எண்ணி இரங்கி அவர்களுக்கும் வெற்றி மகிழ்ச்சியை அளித்துப் பார்க்கலாமே என்ற பெருந்தன்மையோடு தோற்கிற தோல்வியைச் சான்றோர்கள் கொண்டாடுகிறார்கள். இந்தத் தோல்வி சான்றாண்மையின் இலக்கணம். இதில் வெற்றியைவிட அதிகமான சுகம் உண்டு. அந்தச் சுகத்தை இப்போது நான் அடைந்து விட்டேன்.
‘சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல்.’
என்று சால்பின் பண்பு சொல்லப்பட்டிருக்கிறது. பெரிய காரியங்களைச் சாதிப்பதற்காகவே மனத்தை ஆள வேண்டும் என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். பிறருக்காக விட்டுக் கொடுத்துத் தியாகம் செய்கிற இந்தத் தோல்வி பெரிய காரியமில்லை என்று நீங்கள் எப்படிக் கூற முடியும்? அன்பையும் வீரத்தையும் தவிர, எங்கள் வாழ்வுக்கு வேறு எல்லைகள் இல்லை என்கிறார் வளநாடுடையார்! நீங்களோ நெகிழ்ச்சியில்லாத முரட்டு வீரம் ஒன்றைத் தவிர உங்கள் வாழ்வுக்கு வேறு எல்லையே இல்லை என்கிறீர்கள். தியாகப் பண்பு என்ற ஒன்று எனது வாழ்க்கையின் இணையற்றதொரு பேரெல்லையாக இருப்பதை நீங்களெல்லாம் மறந்துபோய் விட்டீர்களோ, என்னவோ? நெகிழ்ச்சியே சிறிதும் இல்லாத கொடுமை மறவராக நீங்கள் உங்களுடைய வாழ்க்கையைப் பழக்கிக் கொண்டுவிட்டீர்கள்.”
“என்னை நான் அப்படிப் பழக்கி வைத்துக் கொண்டிருந்தது உண்மைதான்! ஆனால் உன்மேல் பாசமும் அன்பும் கொள்ளத் தொடங்கிய நாளிலிருந்து அந்த இறுகிய குணத்தினின்றும் நான் என்னைத் தளர்த்திக் கொள்ளும்படி ஆகிவிட்டது. அப்படித் தளர்த்திக் கொள்ள நேராமல் நான் என் போக்கிலேயே இருந்திருந்தால் எவ்வளவோ விதங்களில் எனக்கு நன்றாயிருக்கும். உன் மேல் அன்பு கொண்ட காரணத்தால் எனக்கு உண்டாகிய கவலைகள் ஏற்பட்டிருக்காது. நான் என்னுடைய கடமைகளைத் தவிர வேறு எந்தவிதமான உலக பந்தங்களிலும் சிக்கியிருக்க மாட்டேன். உன்னைப் போல் அழகும் வீரமும் ஞானமும் நிறைந்த இளைஞன் ஒருவனை என் மாணவனாக இந்த வாழ்க்கை வழியில் சந்தித்திருக்கா விட்டால் நான் எந்த மனிதன் மேலும் அன்பு, நெகிழ்ச்சி, பாசம், நமக்கு வேண்டியவனுக்கு இன்ன இடத்திலே இன்னது நேரிட்டு விடுமோ என்ற கவலை இவற்றை யெல்லாம் உலகத்தில் நான் உணர்வதற்குக் காரணமாக இருந்த முதல் மனிதன் நீ; கடைசி மனிதனும் நீதான்.
“மறுபடியும் உன்னிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நீ மீண்டும் என் வாழ்க்கையில் குறக்கிடாதே. அன்பையும் பாசங்களையும் என்னை உணரச் செய்யாதே. கடுமையான வீரத் துறவியாகவே என்னை வாழவிடு. உன்னைச் சந்திப்பதற்கு முன்பு எப்படியிருந்தேனோ அப்படிக் கர்ம வீரனாக வாழவிடு. நீ இங்கிருந்தால் எனக்கு உன்மேல் ஏற்பட்டுவிட்ட பாசங்களாலேயே நான் என் வழியில் கடுமையான இறுக்கத்தோடு வாழ முடியாமல் போய்விடலாம். உன்னுடைய வாழ்வு எப்படி யிருந்தாலும் நீ மலர்ந்த மனத்தைப் பெற்றவன். கட்டுகளுக்கு நடுவேயும் விடுபட்டு வாழ முடிந்தவன். நான் இப்போது எதை உன்னுடைய தோல்வியாக நினைத்து ஏளனம் செய்கிறேனோ அதையே நீ உன்னுடைய வெற்றியாக என்னிடம் நிரூபிக்கிறாய். அப்படி நிரூபிப்பதற்கு நீ கற்றிருக்கிற கல்வியும், தத்துவங்களும் உனக்குத் துணை செய்கின்றன. நீ நிரூபிப்பதை மறுப்பதற்கு என்னிடம் சொற்கள் இல்லை.”
எப்படியோ கோபத்தோடு பேச்சைத் தொடங்கிக் கொதித்தவர் இறுதியில் இப்படித் தன்னை நோக்கிக் கண் கலங்கி நின்றபோது, இளங்குமரனுக்கு அவருடைய உண்மை நிலை புரிந்தது. அந்தப் பெரு வீரருடைய கண்களையும் கலங்கச் செய்துவிட்ட பாவத்துக்கு வருத்தியவனாகிய அவன் தயங்கி நின்றான். முல்லையைப் போலவே இவரும் வேறு ஒருவிதமான அன்புப் பிடிவாதத்தினால் தான் தன்னிடம் இந்தச் சினமும் இந்தக் கலக்கமும் அடைந்து நிற்கிறார் என்பது அவனுக்குப் புரிந்தது. தன்மேல் அவர் வைத்துவிட்ட அன்பே அவரை இந்த இரண்டுங் கெட்ட நிலைக்கு ஆளாக்கி வேதனைப் படுத்துகிறது என்பதை அவன் விளங்கிக்கொண்டான்.
அந்த நிலை விளங்கியவுடனே தான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவனால் தெளிவாக உணர முடிந்தது. அப்படி உணர்ந்த உடனே சுரமஞ்சரியோடு அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான் அவன். பின்பு நிதானமாக எழுந்து நின்றுகொண்டு, “எங்களுக்கு விடை தந்தருளுங்கள் ஐயா! உங்களுடைய கடுமையான வீர வாழ்க்கைக் கடமை மறுபடி உங்களுடைய கிடைக்கட்டும். கடுமையான வாழ்க்கையினால் இந்தச் சோழநாட்டுக்கு அந்த ஆயிரமாயிரம் புதிய வீரர்கள் தோன்ற வேண்டும். அதற்கு நான் ஒருவன் தடையாக இருக்க விரும்பவில்லை. என்மேல் அன்பு கொள்வதன் காரணமாக வீரர்களைத் தோற்றுவிக்கிற பெருவீரரின் மனம் அப்படிச் சலனமடைய நேர வேண்டாம்” என்று நெகிழ்ந்த மனத்தோடு அவரை வேண்டிக்கொண்டு தன் மனைவியுடனே புறப்பட முற்பட்டான் இளங்குமரன்.
நீலநாகர் இளங்குமரனுக்காக மட்டும் இதுவரை சற்றே நெகிழ்ந்து திறந்திருந்த தம் மனத்தின் உணர்ச்சிக் கதவுகளை இப்போது நன்றாக இறுக்கி அடைத்துக் கொண்டு மறுபடியும் கர்ம வீரராக மாறி அவர்களை வாழ்த்தி விடை கொடுத்தார். அப்படி விடை கொடுத்த போது அவர் கண்களில் நீர் கலங்கவில்லை. மனத்தில் எந்தப் பாசமும் இல்லை. சலனங்களே இல்லாமல் மனம் தெளிந்திருந்தது. இளங்குமரனும் சுரமஞ்சரியும் படைக் கலச் சாலையிலிருந்து வெளியேறிய போது மணிமார்பனும் அவன் மனைவியும் கூட அவர்களோடு சேர்ந்தே புறப்பட்டுவிட்டார்கள்.
அன்று மாலை பூம்புகார் நகரம் நான்கு பேர்களுக்குத் தன் எல்லையிலிருந்து மானசீகமான விடைகொடுத்தது. இந்த நால்வரும் தன் மண்ணின் மேல் நின்றும் நடந்தும் ஆடியும் ஓடியும் பழகிய நாட்களை அந்தப் பழம் பெரும் நகரம் என்றுமே மறக்க முடியாதுதான். இவர்கள் அங்கு வாழ்ந்த நாட்களில் இவர்களுக்கு ஏற்பட்ட சுகதுக்கங்களும் வெற்றி தோல்விகளும் அந்த நகரத்துக்கு நன்றாக நினைவிலிருக்கும். அதன் மண்ணிலும் காற்றிலும் அந்த நிகழ்ச்சிகள் சுவடுகளாய் அழியாமல் மணந்துகொண்டே யிருக்கும்.
ஓவியன் மணிமார்பனும் அவன் மனைவி பதுமையும், பாண்டிய நாட்டுக்குப் புறப்பட்டார்கள். “நண்பனே! மறுபடியும் வாழ்க்கை வீதியில் எங்காவது என்றாவது சந்திப்போம்” என்று கூறி அவர்களுக்கு விடை கொடுத் தான் இளங்குமரன். சுரமஞ்சரி நன்றி நிறைந்த கண்களால் ஓவியனை நோக்கிக் கைகூப்பினாள். அவர்கள் செல்ல வேண்டிய வழிகள் பிரிந்தன. வீதியில் மட்டுமல்ல; வாழ்க்கையிலும் தான். நெருங்கிப் பழகிய பல பேர்களுடைய வழிகளிலிருந்து இவர்களும் இவர்களுடைய வழிகளிலிருந்து அந்தப் பல பேரும் இன்று இந்த மாலை வேளையில் இப்படிப் பிரிந்து விலகிப் போய்விட்டார்கள். மறுபடி சந்திக்க நேர்கிற வரை இவையெல்லாமே பிரிவு தான். மறுபடி சந்தித்தாலும் அதன் பின்னும் மறுபடி பிரிவு இருக்கும். இப்படிச் சந்திப்பும் பிரிவும்தான் வாழ்க்கை. சந்தித்தால் பிரிவதையும், பிரிந்தால் சந்திப்பதையும் தவிர்க்க முடியாது.
“விரைவில் வருகிறேன், கவலைப்படாதே” என்று மணிநாகபுரத்திலிருந்து தான் புறப்பட்டு வரும்போது தன் தாய் மாமன் மகனான குலபதியிடம் கூறிவிட்டு வந்திருந்த சொற்களை நினைவு கூர்ந்தவனாகத் தன் துணைவி சுரமஞ்சரியோடு மணிபல்லவத் தீவுக்குப் புறப்பட்டான் இளங்குமரன்.
அன்று மாலை இளங்குமரன் சுரமஞ்சரியோடு கப்பல் ஏறுவதற்காகப் பூம்புகார்த் துறையில் நின்று கொண்டிருந்த சமயத்தில் அப்போதுதான் மணிபல்லவத்திலிருந்து வந்து கரை சேர்ந்த கப்பல் ஒன்றிலிருந்து விசாகை எதிரே இறங்கி வந்துகொண்டிருந்தாள். இந்தச் சந்திப்பு வியக்கத் தக்கவாறு அங்கே நேர்ந்தது. இளங்குமரன் சுரமஞ்சரியை விசாகைக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டுத் தன் வாழ்வில் நிகழ்ந்த புது மாறுதல்களை எல்லாம் அவளிடம் சொன்னான்.
அவையெல்லாவற்றையும் கேட்டுவிட்டு விசாகை புன்முறுவல் பூத்தாள். பின்பு அவனை நோக்கிச் சொல்லலானாள்:
“இப்போது நாம் இங்கே எதிரெதிர்த் திசைகளில் எதிரெதிர் வழிகளில் பிரிவதற்காக இந்த மாலை வேளையில் விடை பெறுகிறோம். நெடுங்காலத்துக்கு முன் இப்படி ஒரு வாழ்க்கையை நான் வாழ வேண்டும் என்றுதான் என் தந்தை என்னைச் சுயம்வர மண்டபத்துக்குள் அழைத்துப் போய் நிறுத்தினார். அன்று நான் இந்த வாழ்வின் வாயிற்படிக்கருகே போய் விட்டுத் திரும்பி வேறு வழியில் வந்தேன். நீங்களோ இதற்கு எதிர் வழியிலிருந்து நடந்து வந்து இந்த வழிமேல் நின்று கொண்டீர்கள். உங்களை வாழ்த்துகிறேன். உங்களுடைய இந்தத் தோல்விக்கும் எல்லையற்ற கருணைதான் காரணமாக இருக்கிறது. இதே வாழ்க்கையோடு இந்த உலகத்தில் நான் தனியாக என்னால் முடிந்த அறங்களைச் செய்து கொண்டிருக்கிறேன். இந்த உடம்பில் உயிரும், கைகளில் பிச்சைப்பாத்திரமும் இருக்கிற வரை விசாகையின் தருமம் குறைவில்லாமல் நடைபெறும். நீங்களும் இல்லற வாழ்வில் உங்களால் முடிந்த தருமங் களைச் செய்யுங்கள். என் துறவு நெறி நான் மட்டும் தனியாகச் செய்கிற அறம். உங்கள் மனைவாழ்வோ நீங்கள் இரண்டுபேரும் சேர்ந்து செய்கிற அறம். ஆகவே நீங்கள் தான் என்னைக் காட்டிலும் அதிகமான அறங்களை இனிமேல் உலகத்துக்குச் செய்ய வேண்டும்.
“நான் புத்த பூர்ணிமைக்காக யாத்திரை புறப்பட்டு வருகிறபோதெல்லாம் மணிநாகபுரத்துக்கும் வந்து உங்களைக் காண்பேன். நான் கூறியபடியே அலைகளைக் கடந்து அலைகளின் நடுவே போய் நீங்கள் வாழப் போகிறீர்கள். நீங்கள் பிறந்த தீவைப் போலவே உங்கள் வாழ்வும் தத்துவமாக நிலைத்து நிற்கட்டும். ஞானிகள் மணிபல்லவத் தீவைச் சக்தி பீடமாகக் கூறுகிறார்கள். முறையாகச் சுற்றி நிலை திரும்புகிற தேர்போல உங்கள் வாழ்வு அங்கே போய் நிறைகிறது” என்று கூறி விசாகை அவர்களை வாழ்த்தி விடை கொடுத்தாள்.
அப்போது, விசாகை தன்னைப் பிரிந்து செல்வதற்கு இருந்த அந்தக் கடைசி விநாடியில் இளங்குமரன் அவளிடம் ஓர் உதவி கோரினான்.
“அம்மையாரே! பாத்திரத்திலிருந்து இட முடியாத பிச்சை ஒன்று இந்தக் கடைசி விநாடியில் உங்களிடமிருந்து எனக்கு வேண்டும்.”
“என்ன பிச்சை அது?”
“பசிக்கிற வயிறுகளுக்கும், தவிக்கிற மனங்களுக்கும் ஆறுதல் அடையத்தக்க நிறைவு உங்களிடமிருந்தே கிடைக்க வேண்டும். இந்தப் பூம்புகாரின் புறவீதியில் உங்களுடைய ஆறுதலுக்காக ஒரு பேதைப் பெண் காத்துக் கொண்டிருக்கிறாள். முதலில் நீங்கள் அவளுடைய துக்கத்தைப் போக்க வேண்டும். அதன்பின் அவளை வேறு விதமான வாழ்க்கைக்குத் துணியும்படி பயிற்ற வேண்டும்?”
“யார் அந்தப் பேதைப் பெண்?”
“வீரசோழிய வளநாடுடையார் மகள் முல்லை. அவளைச் சந்தித்து அவளுடைய துன்பங்களுக்கு நீங்கள் அடிக்கடி ஆறுதல் கூற வேண்டும்.”
“அவளுக்கு என்ன துன்பம்?”
“உங்களைப் போன்ற புனிதவதிகளுக்குப் பெரிதாகப்படாத துன்பம் அது! அந்தத் துன்பத்தை என் சொற்களால் நான் உங்களிடம் சொல்ல விரும்பவில்லை. அப்படிச் சொல்வதற்கு நானும் என் மனமும் கூசி நிற்பதற்குரிய செய்தி அது. அந்தப் பெண்ணின் துன்பங் களுக்கு இனிமேல் உங்கள் வார்த்தைகள் தான் மருந்தாக வேண்டும். ஆனால் இந்த வேண்டுகோளை நான் உங்களிடம் வேண்டியதாக அவளுக்குத் தெரியலாகாது.”
“புரிகிறது! துக்கமும் வேதனையும் நிறைந்து கிடக்கும் இந்த உலகத்தின் பொது வழிகளிலிருந்து பிரித்து என்னுடைய வழியில் நான் அழைத்துக் கொண்டு போவதற்கு ஒரு பெண்ணை நீங்கள் எனக்குச் சுட்டிக் காட்டுகிறீர்கள். அவளை அந்த வழியில் அழைத்துச் செல்ல எனக்கு ஒரு மறுப்பும் இல்லை. இந்த உதவியை அவசியம் உங்களுக்கு நான் செய்கிறேன்” என்று ஒப்புக் கொண்டாள் விசாகை, தன் கண்களின் பார்வையாலேயே புண்ணியத்தைப் பரப்பவல்ல அந்தத் தெய்வீகப் பெண்ணுக்கு இப்போது மீண்டும் வணக்கம் செலுத்தி விடை கொடுத்தான் இளங்குமரன். சுரமஞ்சரியும் பயபக்தியோடு விசாகையை வணங்கினாள். “நீ கொடுத்து வைத்தவள் பெண்ணே! எவராலும் வெல்ல முடியாத மனத்தை உன் அறிவினால் வென்றிருக்கிறாய்” என்று தன்னை வணங்கிய சுர மஞ்சரியை வாழ்த்திவிட்டுச் சென்றாள் விசாகை.
இளங்குமரன் சுரமஞ்சரியோடு அந்தக் கப்பலில் ஏறிய போது பூம்புகார் நகரின் மேல் அந்திமாலை சூழ்ந்து கவிந்து கொண்டிருந்தது. நகர வீதிகளின் மாடங்களில் எல்லாம் அந்தி விளக்குகள் மின்னத் தொடங்கியிருந்தன.
“இந்த நகரத்தையும் இதன் உறவுகளையும் விட்டுப் பிரிவதனால் உன் மனம் எந்த விதத்திலும் கலங்க வில்லையா, சுரமஞ்சரி?”
“நான் அடைந்திருப்பது பெரிதாக இருக்கும்போது இழந்ததை எண்ணி வருந்த முடியாது.”
“இழந்ததை எண்ணி வருந்தத்தான் வேறு ஒருத்தி இருக்கிறாளே” என்று கூறியபடி இளங்குமரன் சுரமஞ்சரியைச் சோதனை செய்யும் குறிப்போடு அவள் முகத்தைக் கூர்ந்து கவனித்தான். அவளுடைய கண்களில் கலக்கம் தெரிந்தது. அதே கலக்கத்தை அப்போது தன் கண்களுக்கு முன் அங்கே இல்லாத இன்னொரு முகத்திலும் கற்பனை செய்து பார்த்தான் அவன். அந்தக் கற்பனையே வேதனை அளிப்பதாயிருந்தது.
கப்பல் நகர்ந்தது. கரை மெல்ல மெல்ல விலகியது. விசாகையின் வார்த்தைகளை நினைத்துக் கொண்டான் அவன். எவ்வளவு பொருத்தமான வார்த்தைகள் அவை!
‘முறையாகச் சுற்றி நிலைதிரும்புகிற தேர்போல் உங்கள் வாழ்க்கை அங்கே போய் நிறைகிறது.’
அப்போது சுரமஞ்சரி மெல்லிய குரலில் அவனைக் கேட்டாள்:
“நம்முடைய பயணம் எப்போது முடியும்? என்றைக்கு நாம் கரை சேருவோம்?”
“எந்தப் பயணத்தைப் பற்றிக் கேட்கிறாய் சுரமஞ்சரி? நம்முடைய இந்தப் பயணம் இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும். அதற்கு அப்புறம்தான் நம்முடைய சொந்தப் பயணம் தொடங்குகிறது. அந்தப் பயணத்திலிருந்து நாம் கரை சேர எவ்வளவு காலமாகுமோ? விசாகையைப் போல் நான் தனியாகவே நடத்த முடியாமல் போய்விட்ட பயணம் அது. இனிமேல் அதற்காகக் கவலைப்பட்டும் பயனில்லை. நன்றாக விடுபட வேண்டுமானால் நன்றாகக் கட்டுண்டு தான் தீரவேண்டுமென்று அருட்செல்வ முனிவர் அன்றொரு நாள் சிரித்தபடியே என்னிடம் கூறிவிட்டுப் போனார். அந்த சில வார்த்தைகளுக்குள் இவ்வளவு பெரிய விளைவுகள் அடங்கியிருக்கு மென்று நான் எதிர்பார்க்கவே இல்லை. உன்னை ஏற்றுக் கொண்டதோடு என் பாசங்கள் முடிந்து விடவில்லை. இனிமேல்தான் ஒவ்வொரு பாசமாகத் தொடரப் போகிறது, என் தாய்மாமன் மகனான குலபதி மணிநாகபுரத்தில் எனக்காகவே என்னை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டி ருப்பான். நாமும் அங்கே போய்த்தான் இனிமேல் வாழப் போகிறோம். நம்முடைய வாழ்க்கையைப் பார்த்தே இனி அவன் தன்னுடைய பழைய துக்கங்களை எல்லாம் மறந்து விடுவான்...” என்று கூறி நெட்டுயிர்த்தான் இளங்குமரன்.
கடலில் அலைகள் சரிந்து சரிந்து மீண்டு கொண்டிருந்தன. பூம்புகார் தொலைவில் மங்கியது. அதன் சதுக்க நினைவுகள் அவர்கள் மனங்களில் தங்கின. தன்னருகே கரையைப் பார்த்தபடி கண் கலங்கி நின்று கொண்டிருந்த சுரமஞ்சரியை நோக்கிச் சிரித்தான் இளங்குமரன்.
அவனுடைய அந்தப் பார்வை அவளை மணப் பெண்ணாக அலங்கரிக்கத் தொடங்கியது. அதற்கு நாணி நிமிர்ந்தும் நிமிராமலும் நளினமாகத் தலையைச் சாய்த்து கடைக்கண்களால் அவனைக் காண முயன்றாள் அவள்.
அவள் அப்படிப் பார்க்க முயன்ற முகம் எதுவோ அதிலிருந்து அவளுடைய வாழ்க்கை பிறந்தது. அவ னுடைய கண்பார்வையினால் அவள் மலர்ந்து நின்றாள். பின்பு அந்த மலர்ச்சி வாடவே இல்லை. அப்படியே நெடுங்காலத்துக்கு வாழ்கின்ற நித்தியமான மலர்ச்சியாய் அது வளர்ந்தது.
காவிரியின் நீர்ப்பெருக்கைப் போல வற்றாமல் ஓடிக் கொண்டிருந்த கால வெள்ளத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு அப்பால் மறுபடியும் ஒரு நிகழ்ச்சி.
நாற்பது ஆடிப் பெருக்குகளும், நாற்பது இந்திர விழாக்களும் கனவுகளாய் விரைந்து ஓடி மறைந்த பின் நாற்பத் தொன்றாவது ஆண்டின் சித்திரை மாதமும் பிறந்துவிட்டது!
அதோ! அந்த வள்ளுவ முதுமகன் வச்சிரக்கோட்டத்து முரசை யானை மேலேற்றி முரசறைந்து கொண்டே ‘பசியும் பிணியும் நீங்கி வளம் சுரக்க வேண்டும்’ என்ற மங்கல வாக்கியத்துடன் தொடங்கி இந்த ஆண்டிலும் இந்திர விழா வரப்போவதை நகரத்துக்கு அறிவிக்கிறான்; தேச தேசாந்திரங்களில் இருந்தெல்லாம் இந்திர விழாவுக்காக மக்கள் வந்து பூம்புகாரில் கூடுகிறார்கள். நகரம் திருவிழாக் கோலம் கொண்டு பொலிகிறது. அந்த ஆண்டு இந்திர விழாவின் கோலாகலத்தில் சமயவாதிகளின் பங்கு வழக்கம்போல் நிறைந்திருந்தது.
அந்தத் திருவிழாவின் இடையே ஒருநாள் சமயவாதிகள் மிகுந்து கூடியிருக்கும் நாளங்காடி வானவீதியில் இப்படி ஒரு விநோதமான சம்பவம் நடைபெறுகிறது.
அன்று காலையில் போது விடிந்ததிலிருந்து அந்த ஞான வீதியில் கூடியிருந்த சமயவாதிகள் யாவரும் ஒரு பெண்ணின் வாதத்துக்கு எதிர் நிற்க முடியாமல் தொடர்ந்து தோற்றுப் போய்க் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்ணைக் கண்டு அதிசயப்படாதவர் இல்லை. வரிசையாய்ப் பல பேர்களுடைய நாவற்கிளைகளை வீழ்த்திவிட்டு வெற்றி முழக்கமிட்டுக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். அவள் பெளத்த சமயத்தைச் சேர்ந்தவள் என்று கூட்டத்தில் இருந்தவர்கள் கூறிக் கொண்டனர்.
அந்தப் பெண்ணைப் பற்றியச் செய்திகள் நகர் முழுவதுமே பரபரப்பாகப் பரவியிருந்தன. அவள் சமயவாதிகளை வென்று வெற்றி மேல் வெற்றி பெறும் இந்த அதிசயத்தைக் காண நாளங்காடியில் இடம் போதாமல் பெருங் கூட்டம் கூடிவிட்டது. அந்த அதிசயப் பெண்மணியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலில் கடல் கடந்த நாடுகளிலிருந்து இந்திர விழா பார்க்க வந்தவர்கள் எல்லாம் கூட நகரின் வேறு இடங்களைச் சுற்றிப் பார்ப்பதை மறந்து விட்டு நாளங்காடியில் வந்து கூடியிருந்தனர். அவ்வளவு சிறப்பாக இந்திர விழாவுக்குப் பெருமையூட்டிக் கொண்டிருந்தது அவளுடைய அறிவுப்போர். காலையிலிருந்து பொழுது சாய்கிற நேரம் நெருங்குகிற வரை அவளை எதிர்த்து வெல்வதற்கு யாரும் இல்லை. எதிர்த்து வந்து கொடியை ஊன்றியவர்கள் எல்லாம் அவளுக்குத் தோற்றுக் கொண்டேயிருந்தார்கள்.
சாயங்கால வேளை, தோற்றவர்கள் கைகளிலிருந்து வரிசையாய்ச் சரிந்து வீழ்ந்து கிடந்த நாவற் கிளைகளுக்கு நடுவே மதம் பிடித்த பெண் யானை போன்ற அறிவுச் செருக்குடனும் “என்னை எதிர்த்து வந்து வாதிடுவதற்கு இன்னும் யாரேனும் உண்டோ?” என்ற வினாவுடனும் நிமிர்ந்து நிற்கிறாள் அந்தப் பெண். அவளுடைய வயதைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதபடி துறவு ஒழுக்கங் களாலும் புலனடக்கத்தாலும் பொலிவு பெற்ற முகத் தோற்றம் அவளுக்கு வாய்த்திருக்கிறது. அவளுடைய தழல் நிற மேனியைத் துறவு நெறிக்குறிய சீவர ஆடை அணி செய்து கொண்டிருக்கிறது.
கையில் கொடியேந்தி நின்று கொண்டு மலர்ந்த முகமும் தூய சிரிப்புமாக வாதுக்கு வருகிறவர்களை எதிர்பார்க்கிறாள் அவள். அவளுக்கு எதிரியே கிடைக்கவில்லை. அந்த ஞான வீதியில் அவளே தன்னிகரற்று நின்று கொண்டிருக்கிறாள்.
மனைவியோடும் குழந்தை குட்டிகளோடும் இந்திர விழா பார்க்கக் கடல் கடந்து வந்திருந்த நாகநாட்டு முதியவர் ஒருவர் அவளை நோக்கி குனிந்து தலை நிமிராமல் கூட்டத்தின் ஒரு கோடியிலிருந்து விரைந்து நடந்து வருகிறார்.
அருகே வந்து அவள் முகத்தை ஏறிட்டு நிமிர்ந்து பாராமலே, “நான் உன்னோடு வாதிட வந்திருக்கிறேன்” என்றார் அவர்.
இதைக் கேட்டு அவள் அலட்சியமாகச் சிரிக்கிறாள்.
“முதியவரே! இந்த வயதில் மனைவி மக்களோடு இந்திர விழாப் பார்க்க வந்த இடத்தில் இங்கே என்னைப் போல ஒரு பெண்ணுக்குத் தோற்க ஆசையாக இருக்கிறதா உமக்கு!”
“நீ என்னை வென்று பின்னர் பேச வேண்டிய வார்த்தைகள் இவை!”
“இத்தனை பேர்களை வென்ற எனக்கு உங்களை வெல்வது ஒன்றும் பெரிய காரியம் இல்லை.”
“முடிந்தால் வென்றுகொள். ஒரு காலத்தில் உன்னைப் போல் நானும் இந்த வீதியில் வெற்றி நடை நடந்திருக் கிறேன்.”
“இன்று தளர்நடை நடக்கிறீர்கள்.”
இந்த வார்த்தைகளால் தாக்கப்பட்டுக் கோபத்தோடு அவளருகில் நெருங்கி வந்து நன்றாக அவளை நிமிர்ந்து பார்த்தார் அவர்.
அவள் அந்த மனிதரின் முகத்தைப் பார்த்துவிட்டு அப்படியே அயர்ந்து போய் நின்றாள். அவளுடைய கையிலிருந்த கொடி நழுவியது. மனத்திலிருந்து பகைமை நழுவியது, மனமும் உடம்பும் புல்லரித்து நடுங்கின.
“முல்லை! நீயா?” என்று அந்த மனிதர் தாங்கொணாத வியப்போடு தன்னை நோக்கிக் கேட்ட கேள்விக்கு அவள் மறுமொழி கூறவில்லை. விழிகளில் கண்ணிர் பெருக நின்றாள். எந்த மனிதரை எண்ணி எண்ணிப் பல ஆண்டுகளுக்கு முன்பே அவள் தன்னைத் தோற்றுப் போயிருந்தாளோ அந்த மனிதரே இப்போது இப்படி முதியவராய் வந்து எதிரே நிற்கிறார். அந்த மனிதரின் அருகே நின்ற மக்களையும் சிறுவர் சிறுமிகளையும் அவர்களின் தாயையும் ஏக்கத்தோடு திரும்பிப் பார்த்தாள் முல்லை.
“ஐயா! உங்களுக்கு நீண்ட நாட்களுக்கு முன்பே ஒரு முறை எதற்கோ தோற்றுப் போயிருக்கிறேன் நான். மீண்டும் என்னைப் புண்படுத்தாமல் இங்கிருந்து போய் விடுங்கள்” என்று வாதத்தைத் தொடங்காமலே தான் அவனிடம் தோல்வியடைந்து விட்டதாகச் சொன்னாள் அவள். சுற்றிலும் கூடியிருந்த கூட்டத்துக்கு இது வியப்பாக இருந்தது. பெரிய பெரிய ஞான வீரர்களின் கொடிகளை யெல்லாம் துணிந்து வாதிட்டுச் சாய்த்த வீராங்கனை இன்று இந்தத் தளர்ந்த மனிதருக்கு முன் ஏன் இப்படித் தன் கொடியைத் தானே சாய்த்துக் கொண்டு தோற்றுப் போய் நின்றாள் என்று கூட்டத்தில் கூடியிருந்தோர் புரியாமல் மருண்டனர்.
“இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இன்னும் ஒருமுறை என்னை அறிவில் தோல்வியடையச் செய்து பார்க்க உங்களுக்கு ஆசையாயிருக்கிறதா? உங்களிடம் முன்பு நான் அன்பில் தோற்றதை மறக்கவே எனக்கு இத்தனை ஆண்டுகள் போதவில்லை. நான் படித்த நூல்களும் என்னுடைய துறவும், விசாகை எனக்குச் சொல்லிப் பயிற்றிய தத்துங்களும் கூட இன்னும் என் உள்ளத்தின் பழைய நெருப்பை அவிக்க முடியவில்லை. அதே நெருப்பை இன்று நீங்கள் மேலும் வளர்க்க விரும்புகிறீர்களா?” என்று அவள் தன்னை நோக்கிக் கேட்ட கேள்விக்கு மறுமொழியின்றித் தலையைக் குனிந்து கொண்டு வந்தது போலவே திரும்பினான் இளங்குமரன்.
தன் மனைவி மக்களை உடனழைத்துக் கொண்டு அவன் அந்தக் கூட்டத்திலிருந்து வெளியேறியபோது, “சுரமஞ்சரி நாம் திரும்பவும் இன்றே மணிநாகபுரத்துக்குக் கப்பலேறி விடுவோம். இவ்வளவு காலத்துக்குப் பின்பு இந்த நகரத்துக்கு நாம் புறப்பட்டு வந்த வேளை நல்ல வேளையில்லை போலிருக்கிறது” என்று மனைவியிடம் கூறினான்.
“ஏன்?” என்று அவன் மனைவி சுரமஞ்சரி திகைத்துப் போய் அவனைக் கேட்டாள்.
“உனக்கு இவளைத் தெரிகிறதா சுரமஞ்சரி?” என்று பதிலுக்குத் தன் மனைவியைக் கேட்டான் அவன்.
அவள் ஒன்றும் புரியாமல் விழித்தாள்.
“நாற்பது ஆண்டுகளுக்கு முன் இந்த நகரின் புறவீதியில் ஒரு காலை வேளையில் நீயும் நானும் காவிரிக்கு நீராடப் போய்க் கொண்டிருந்தபோது தன்னுடைய கோலத்தை முடிக்கத் தெரியவில்லை என்று அழுது கொண்டு ஓடினாளே; அவளுடைய புதுக்கோலம் இது.”
“பாவம்! இத்தனை காலத்துக்குப் பின்னும் அவளுடைய மன நெருப்பு ஆறவில்லை போலிருக்கிறது” என்ற சுரமஞ்சரியும் அவனோடு சேர்ந்து கொண்டு அந்தப் பெண்ணுக்காக அநுதாபப்பட்டாள்.
ஆனால் மற்றொரு புறம் அவனுக்கு முன் தன் நாவற் கிளையைத் தானே சாய்த்த அந்தப் பேதைப் பெண்ணோ நாளங்காடியின் ஒரு மூலையில் யாருமில்லாததொரு மரத்தடியில் போய் கண்ணிர் பெருக வீற்றிருந்தாள்.
அவளுடைய துயரத்துக்கு முடிவு ஏது! பாவம்! காலம் அதை ஆறச் செய்யட்டும்!
சோழ நாட்டு நகரங்களில் எல்லாம் பெருநகரமான பூம்புகாரின் செல்வச் செழிப்புமிக்க வாழ்க்கையில் இன்னும் எத்தனையோ இந்திர விழாக்களை அறிவித்து வள்ளுவ முதுமகன் நகருக்கு முரசறைவான்! இன்னும் எத்தனையோ ஆடிப்பெருக்குகளுக்குக் காவிரியில் வெள்ளம் வரும்; தணியும். மழை பெய்யும். வெயில் காயும். பருவ காலங்களால் விளையும் புதுப்புது மாறுதல்கள் காவிரிக்கரை வாழ்க்கையில் எத்துணை எத்துணையோ நிகழ்ச்சிகளைப் படைக்கும். சமயவாதிகளும் ஞானிகளும் சந்திப்பார்கள், அளவளாவுவார்கள், பிரிவார்கள். அறிவும் செல்வமும் ஓங்கி வளரும். அந்தக் கோநகரத்துக் கவிகளின் நாவில் புதுப்புதுக் கவிதைகள் பிறக்கும். இளம் பிள்ளைகள் பலர் தோன்று வார்கள். மூத்துத் தளர்ந்தவர்கள். பலர் இறப்பார்கள். அரசர்கள் மாறுவார்கள். அரசாட்சி மாறும், ஏறும், தாழும். வாணிகருடைய வாழ்க்கை வளரும், தளரும், மாபெரும் துறைமுகத்தில் கப்பல்கள் வரும், போகும், நிற்கும், மிதக்கும்.
ஆனால்...?
என்ன சொல்வது? அதை எப்படிச் சொல்வது? அதோ! நாளங்காடியில் ஒரு கோடியில் அந்த மரத்தின் கீழ் வாடியிருந்து கண்ணிர் சிந்துகிறாளே முல்லை, அவளுடைய நெஞ்சின் கனம் எப்போது தணியும்? அவளுடைய தாகம் எந்தப் பிறவியில் தீரும்? நூறு நூறு சமய ஞானிகளை வென்று பெற்ற வெற்றிப் பெருமிதத்தினாலும் அவள் மனம் நிறையவில்லை. யாரோ ஒருவனுக்கு என்றோ ஒருநாள் தோற்றதையே அவள் இன்னும் எண்ணி வருந்துகிறாள். எந்தக் கோலத்தையோ அரை குறையாக நிறுத்திவிட்டு இந்தத் தவக்கோலத்தை மேற்கொண்டாள் அவள். இந்தக் கோலமும் நிறையாதபடி இப்போது மனம் தவிக்கிறது. தனக்கு உள்ளேயே அடங்காமல் உள் நெருப்பாய்க் கொதிக்கிறது.
மறுபடியும் அவள் இளங்குமரனைச் சந்திக்க விரும்புகிறாள். ஆனால் இந்தப் பிறவியில் இன்று நாளங்காடியில் சந்தித்தது போல இதே ஏமாற்றங்களோடு அல்ல. தன்னுடைய நிறைவடையாத நினைவுகளை நிறைவு செய்துகொள்வதற்காக அவள் இன்னொரு பிறவி எடுக்க ஆசைப்படுகிறாள். அப்போது இதே பூம்புகாரின் புற வீதியில் ஏதாவதொரு வீரக் குடும்பத்தில் இளங்குமரனும் கட்டழகனாகப் பிறந்திருப்பான். அவனை அவள் அடைவதற்கு எந்தப் பகைமையும் இருக்காது. எந்தப் போட்டியும் இருக்காது.
அந்தப் பிறவி வாய்க்கிறவரை அவள் இந்த உலகத்துச் சுகங்களுக்கெல்லாம் தன்னிடமிருந்து நிரந்தரமாக விடை கொடுக்கிறாள்.
“வாழ்வதற்கென்று வாய்க்கும் சுகங்களே! உங்களுக்குப் பிரியா விடை கொடுக்கிறேன். மீண்டும் அடுத்த பிறவியில் என்னை வந்து சந்தியுங்கள். அப்போது நானும் அவரும் உங்களை எதிர்பார்த்துக் காத்திருப்போம்” என்று கற்றும் கற்காத பேதையாய்த் தனக்குத்தானே கூறிக்கொண்டு அந்த மரத்தடியிலிருந்து எழுந்து நடக்கிறாள் அவள். சில கணங்களில் அவள் தோற்றமும் பார்வையிலிருந்து மறைந்துவிடுகிறது. இந்திர விழாவின் பெருங்கூட்டத்தில் யாரோ ஒருத்தியாக அவளும் கலந்துவிடுகிறாள். தனியாய்த் தெரியாமல் பலரிடையே ஒருத்தியாய் மறைந்து போய்விடுகிறாள். பன்மையில் கலந்த பின்பு ஒருமையும் தனித்தன்மையும் ஏது?
அவ்வளவு பெரிய கூட்டத்தில் அவளைப் போலவே வாழ்வில் விரும்பியது கைகூடாமல் துக்கப்படுகிறவர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம். ஆனாலும் அவளுடைய துக்கம் பெரியது. அதற்கு இணையாக வேறு ஒன்றும் இருக்க முடியாது.
அதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. வார்த்தைகளால் சொல்ல முடியாத அந்தத் துக்கத்துக்கு விடிவு பிறக்கட்டும் என்று தெய்வங்களை வேண்டிக் கொண்டு முல்லைக்கு இப்போது இந்தப் பிறவியில் விடை கொடுக்கலாம்.