கதாபாத்திரங்கள்
அறிவிப்பாளர்
அன்னா
முன்னா
யஷ் அத்தை
இளம் ஆர்த்தி
லால் மாமா
வளர்ந்த ஆர்த்தி
நாசூக் என்னும் செடி
மிலிந்த் என்னும் மரம்
பெயரற்ற மரம்
தாத்தா
ஃபிரோஸ்
அபு
மன்னர் ஸான்டோ
இளவரசன் அவ்வல்
இளவரசன் தூஸ்ரா
இளவரசன் டீன்
அதிகாரிகள்
ராஜ்ஜியத்தின் குடிமக்கள் (குறைந்தது 6 பேர்)
மேடையில் இரண்டு கதைசொல்லிகள் தோன்றுகிறார்கள். அன்னா வளர்ந்த பெண். முன்னா இளம் பெண். அவர்கள் பேசத் தொடங்குகிறார்கள். இருவர் மீதும் ஒளி பாய்ச்சப்படுகிறது. மேடையில் வேறு எதுவும் இல்லை.
காட்சி 1
அன்னா: முன்னொரு காலத்தில், ஒரு ராஜா இருந்தார்.
முன்னா: நானும் ராஜாவாக விரும்புகிறேன்.
அன்னா: நீ ராஜாவாகப் போகிறாயா?
முன்னா: ஆமா. ஒரே வேடிக்கையா இருக்கும்.
அன்னா: நீ ராஜாவாக நினைச்சிருந்தா, அப்படிச் சொல்லியிருக்க மாட்டே.
முன்னா: சரி, தயவுசெஞ்சு அந்தக் கதைய சொல்லுங்களேன்...
அன்னா: சரி. நெடுங்காலத்துக்கு முன்பு இதே மண்ணில் ஒரு ராஜா வாழ்ந்து வந்தார்.
முன்னா: அது எப்படி நமக்குத் தெரியும்?
அன்னா: ஏன்னா, அவரது கதை ஒரு மரமாக வளர்ந்துவிட்டது.
முன்னா: எல்லா கதைகளும் மரமா வளர்ந்திடுமா?
அன்னா: சில மரங்கள் கதைகளாக மாறும்.
உன்னோட கதைப் புத்தகங்கள் மரங்களால் ஆனவையே.
முன்னா: நீங்கதான் என்னோட சிறந்த கதைப் புத்தகம்.
அன்னா: நன்றி. நானும் மரங்களால் ஆனவதான்.
முன்னா: இல்லை. நீங்க மனித இனத்தைச்
சேர்ந்தவராயிற்றே?
அன்னா: அது, நான் குழந்தையா இருந்தப்போ நிறைய பழங்களைச் சாப்பிட்டேன்.
நான் வளர்வதற்கு அவை உதவின.
அதனால, என் உடலோட சில பகுதிகளும் மரங்களால் ஆனவைதானே.
முன்னா: என்னோட கதையும் மரமா வளருமா?
அன்னா: உன் வாழ்க்கையில் பத்து மரங்களை நட்டு வளர்த்தேன்னா, பசுமை உலகம் உன்னையும் நண்பரா வரவேற்கும். அப்புறம் உன்னோட கதையும் ஒரு மரமா வளரும். நிழலுக்காக, பழங்களுக்காக, கட்டடங்கள் கட்டுவதற்காக, விறகுக்காகன்னு மரங்களின் மூலமா பலவிதமான பயன்களை நாம பெறுகிறோம். முன்னா: மரத்தை வெட்டும்போது, அதுக்கு வலிக்குமா? அன்னா: நான் மரமாக இருந்ததில்லையே. அதனால எனக்குத் தெரியாது. ஆனால், உனக்கு யஷ் அத்தையை ஞாபகம் இருக்கா?முன்னா: யஷ் அத்தை, லால் மாமா, ஆர்த்திதானே?
அறிவிப்பாளர்: முதல் மரத்தின் கதை
அன்னா பேசத் தொடங்கிய பிறகு அரங்க அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது: செடிகளும் பூந்தொட்டிகளும் நிறைந்த ஒரு தோட்டம். பிறகு யஷ் அத்தை, லால் மாமா, ஆர்த்தி ஆகியோர் மேடைக்கு வருகிறார்கள். யஷ் அத்தை தோட்ட வேலை செய்துகொண்டிருக்கும்போது, ஆர்த்தி பூக்களை முகர்ந்து பார்க்கிறாள். லால் மாமா மேடையிலிருந்து வெளியேறுகிறார்.
காட்சி 2
அன்னா: ஆமா. யஷ் அத்தை, லால் மாமா, ஆர்த்தி எல்லாம் நீல மலையில வாழ்ந்து வந்தாங்க. யஷ் அத்தை ஒரு ஓவியர். இயற்கையை வரைவதும் தோட்டக்கலையும் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அழகழகான பூச்செடிகளை வளர்த்துவந்தார். எப்படி உங்களால மட்டும் இவ்வளவு பூச்செடிகளை வளர்க்க முடியுதுன்னு யாராவது கேட்டா, “நான் செடிகளோட பேசுவேன்” என்பார்.
அன்னாவும் முன்னாவும் மேடையைவிட்டு வெளியேறுகின்றனர்
விளக்குகள் அணைகின்றன, அடுத்த காட்சிக்கு மேடை தயார் செய்யப்படுகிறது. இந்தக் காட்சியை இரண்டு வகையாக அமைக்கலாம். நிஜமான பூந்தொட்டியை மேடையில் வைக்கலாம் அல்லது ஒரு குழந்தை பூந்தொட்டிப் பூவைப் போல நிற்க வைக்கப்படலாம். குழந்தையை நிற்கவைப்பதாக இருந்தால், பார்வையாளர்களுக்குத் தெரியாததுபோல் ஒரு பூவை அந்தக் குழந்தை மறைத்துவைத்திருக்க வேண்டும். பூந்தொட்டியாக இருந்தால், அந்தச் செடியில் பூ மறைத்து வைக்கப்பட்டு, பிறகு பூப்பதுபோல் செய்ய வேண்டும். இதற்கு அந்தப் பூவின் காம்பில் ஒரு ஸ்பிரிங்கை (சுருள்வில்) பொருத்தலாம்.
காட்சி 3 யஷ் அத்தை: என் அன்புமிக்கச் செடியே, உன்னை நாசூக் என அழைக்கப்போகிறேன். நாளைக்கு அழகான சின்னதொரு பூவைத் தருவாயா?
ஆர்த்தி: அட ஏதாவது நடக்குற மாதிரி பேசும்மா.
அத்தை: உனக்கு என்ன பிரச்சினை?
ஆர்த்தி: நீ பேசுறது அந்தச் செடிக்குக் கேட்காது.
யஷ்: நான் சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் நாசூக்குக்குக் கேட்கும்.
அந்தப் பூந்தொட்டியை ஆர்த்தி கவனமாகப் பார்க்கிறாள். இலையை மேலும் கீழுமாகத் தூக்கி, அதன் தண்டுப்பகுதியை உற்றுப் பார்க்கிறாள்.
அத்தை: என்ன செய்யறே? ஆர்த்தி: இந்த ஜெரானியம் செடியின் காது எங்க இருக்குன்னு தேடுறேன். ஹி ஹி ஹி. அத்தை: நாசூக் செல்லமே, இதற்கெல்லாம் நீ வருத்தப்படாதே. ஆர்த்தியும் யஷ் அத்தையும் மேடையிலிருந்து வெளியேறுகிறார்கள். அந்தப் பூச்செடி மலர்கிறது. இப்போது தொடங்கி எட்டாவது காட்சி முடியும் வரை இனிமையான மெல்லிசை ஒலிக்கிறது.
அன்னாவும் முன்னாவும் மேடைக்குத் திரும்புகின்றனர்.
அன்னா: ஒருநாள் இரண்டு அழகான சவுக்கு மரக்கன்றுகளை லால் மாமா வாங்கிட்டுவந்தார். அவற்றைத் தோட்டத்துல நட்டுவெச்சார்.
காட்சி 4
தோட்டத்தில் ஆர்த்தியும் யஷ் அத்தையும் இருக்கிறார்கள். இரண்டு பூந்தொட்டிகளை ஏந்தியபடி லால் மாமா உள்ளே நுழைகிறார்.
ஆர்த்தி: இதோ, உனக்குப் புதிய நண்பர்கள் கிடைச்சிட்டாங்க அம்மா. ஹி ஹி ஹி.
அத்தை: நான் பேசுறதை அவை கேட்குதுன்னு உனக்கு நிரூபிச்சுக் காட்டப்போகிறேன். என்ன நடக்குதுன்னு நீ பேசாமப் பார்.
இருவரும் வெளியேறுகிறார்கள். ஒவ்வொரு செடியின் மீதும் மங்கலான வெளிச்சம் விழுகிறது. காட்சி தொடரும்பொழுது, மிலிந்த் எனப்படும் செடியின் மீது விழும் வெளிச்சம் பிரகாசமாக மாறுகிறது.
அன்னா: அதற்கப்புறம் ஒவ்வொரு நாளும் தோட்டத்துக்குச் சென்று, ஒரு சவுக்கு மரக்கன்றிடம் மட்டுமே அவர் பேசினார். மற்றொரு சவுக்கு மரக்கன்றுடன் அவர் பேசவில்லை.
காட்சி 5
யஷ் அத்தை மேடையில் நுழைகிறார். காலம் கடந்துசெல்வதைக் காட்டுவதற்கு, தொப்பி/துப்பட்டா/கழுத்துத்துணி போன்ற ஏதேனும் ஒன்றை ஒவ்வொரு முறை அவர் வரும்பொழுதும் மாற்றி மாற்றி அணிந்திருக்க வேண்டும்.
யஷ் அத்தை: ஹலோ மிலிந்த். அந்த மரக்கன்றைப் பார்த்துப் புன்னகைத்து,
அதன் நடுமரப் பகுதியில் தட்டிக்கொடுக்கிறார்.
யஷ் அத்தை: போய்வருகிறேன் மிலிந்த் யஷ் அத்தை வெளியேறுகிறார்.
காட்சி 6
யஷ் அத்தை மேடையில் நுழைகிறார்.
யஷ் அத்தை: இன்றைக்கு வெயில் கதகதப்பா, இதமா இருக்கு, இல்லையா மிலிந்த். யஷ் அத்தை வெளியேறுகிறார்.
காட்சி 7
மழை பெய்துகொண்டிருக்கிறது.
யஷ் அத்தை உள்ளே நுழைகிறார்.
யஷ் அத்தை: நன்றாகத் தண்ணீர் குடி மிலிந்த் செல்லமே.
மிலிந்த் உயரமாகவும், திடகாத்திரமாகவும் செழித்து வளர்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. மற்றொரு மரம் குட்டையாகவும், களைகள் சூழ்ந்தும் காணப்படுகிறது. இந்த மரக்கன்றுகளுக்கு இரண்டு குழந்தைகளைப் பயன்படுத்தலாம். ஒரு மரக்கன்றுக்கு நிறைய கிளைகள் இருக்கின்றன, ஒவ்வொரு முறை யஷ் அத்தை பேசும்போதும், புதிய கிளை முளைக்கிறது. மற்றொரு மரக்கன்றோ இரண்டொரு கிளைகளை மட்டுமே கொண்டுள்ளது, அது பெரிதாக வளரவில்லை. கடைசியாக யஷ் அத்தையுடன் ஆர்த்தியும் மேடைக்கு வருகிறாள். இந்த இடத்தில் ஆர்த்தி, சற்று வளர்ந்த பெண்ணாகக் காட்டப்பட வேண்டும். ஏனென்றால், மரங்கள் வளர சிறிது காலம் எடுக்குமில்லையா.
யஷ் அத்தை: ஆர்த்தி, இதைப் பார்த்தியா..
வளர்ந்த ஆர்த்தி: நீ ஜெயிச்சிட்ட மா.
அத்தை: எப்பவுமே பாசம் காட்டுறது முக்கியம், அவை மரங்களாக இருந்தாலும்கூட.
யஷ் அத்தையும் ஆர்த்தியும் மேடையிலிருந்து வெளியேறுகிறார்கள்.
காட்சி 8
அன்னா: என்னோட அண்ணன் ஃபிரோஸை உனக்கு ஞாபகம் இருக்கா?
முன்னா: உங்களுக்கு அண்ணன் இருக்காரா? உங்களுக்குக் கூடப்பொறந்தவங்க யாருமில்லேன்னு நினைச்சேனே?
அன்னா: என்னோட பெற்றொருக்கு நான் ஒரே மகள்தான். ஆனால் இந்த உலகம் முழுவதும் எனக்குப் பல சகோதர, சகோதரிகள் இருக்காங்க. முன்னா: ஓ… அப்படி சொல்றீங்களா?
அன்னா: நாம ராம்பூருக்குப் போயிருந்தோமே, ஞாபகம் இருக்கா?
முன்னா: ஃபிரோஸ் மாமாவைச் சொல்றீங்களா?
அன்னா: ஆமா. அந்த மாமரத்தையும் நீ மறந்திடலையே?
முன்னா: ஆமா, அதோட கிளைகள்ல ஒளிஞ்சுக்கிட்டு கண்ணாமூச்சி விளையாடியது ஞாபகமிருக்கு.
அன்னா: நானும் சின்னப் பொண்ணா இருந்தப்ப, ஃபிரோஸோட அதே மரத்துல ஏறி விளையாடியிருக்கேன்.
முன்னா: ஓ அப்படியா! நீங்க மரத்துல ஏறி விளையாடுறதை நான் கற்பனை செஞ்சுகூட பார்க்கல.
அன்னா: நீ விளையாட மாட்டியா?
காட்சி அமைப்பு: மரங்கள் நிறைந்த திறந்தவெளித் தோட்டம். அன்னா பேசிக்கொண்டிருக்கும்போது, அரங்க அமைப்பை ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேடையில் உணவு அறையும் உண்டு, ஆனால் அங்கே வெளிச்சமிருக்கக் கூடாது. தாத்தாவும் ஃபிரோஸும் மேடைக்குள் நுழைகிறார்கள்.
அறிவிப்பாளர்: இரண்டாவது மரத்தின் கதை
காட்சி 9
அன்னா: எப்படியோ, ஃபிரோஸ் அண்ணனுக்கு அந்த மரம் பிடித்திருந்தது. அந்த மாமரம் அவருக்கு மாமாவைப் போல. ஆனால், அந்த மரம் பல வருடங்களுக்கு பழங்களையே தராமல் இருந்ததும் உண்டு. அதனாலதான் ஃபிரோஸின் தாத்தா ஃபிரோஸை கூப்பிட்டிருத்தார்.
அன்னாவும் முன்னாவும் வெளியேறுகிறார்கள்
தாத்தா: ஃபிரோஸ், நீ ஒரு சிறந்த நடிகனா?
ஃபிரோஸ்: கடந்த வருடப் பள்ளி நாடகத்தில் நீங்கள் என்னைப் பார்த்திருக்க வேண்டுமே!
நவரச உணர்வுகளையும் மிகைப்படுத்தி நடித்துக்காட்டுகிறான் ஃபிரோஸ்.
ஃபிரோஸ்: இது காதல், இது நகைச்சுவை, இது கருணை, இது கோபம், இது வீரம், இது அச்சம், இது அருவருப்பு, இது ஆச்சரியம், இது அமைதி.
தாத்தா: சுபானல்லா! இன்றைக்கும் நீ நன்றாக நடிக்க வேண்டும். இல்லேன்னா உன்னோட அப்பா மாமர மாமாவை, எழுத்து மேசையாக மாத்திடுவார். ஃபிரோஸ்: என்னது? தாத்தா: ஆமா, அவரது கடைக்கு ஒரு புது எழுத்து மேசை வேணும்னு சொல்லிக்கிட்டிருந்தார். ஆனா, மரப்பலகைகளின் விலை அதிகமா இருக்காம். அதனால் மாமர மாமாவை வெட்டி, அதை மேசையாக மாற்றப்போவதாகச் சொல்லியிருந்தார். ஃபிரோஸ்: முடியவே முடியாது!
தாத்தா: எனக்குப் புரிகிறது ஃபிரோஸ். அதனால இப்படித்தான் நாம செய்யப்போறோம். (ஃபிரோஸின் காதில் தாத்தா கிசுகிசுக்கிறார். ஃபிரோஸ் மகிழ்ச்சியுடன் தலையாட்டுகிறான்)
காட்சி 10
மேடையில் உள்ள உணவறை பகுதியில் ஒளி பாய்ச்சப்படுகிறது. இரவு உணவின்போது, அப்பாவிடம் எதையோ சொல்ல ஃபிரோஸ் முயல்கிறான். ஆனால், உதட்டின் மீது விரலை வைத்து தாத்தா சைகைகாட்டுகிறார். ஃபிரோஸ் விழிக்கிறான்.
காட்சி 11
மேடை இருள் சூழ்ந்திருக்கிறது. மரத்தின் மீது மட்டும் மங்கிய ஒளி விழுகிறது. நிலவு எழுவதையும், பிறகு முதிர்ந்த மாமரத்தின் கிளைகளுக்கு இடையே விட்டுவிட்டு அது தெரிவதையும் பார்க்க முடிகிறது. வீட்டிலிருந்து இருவர் வெளியே வருகிறார்கள்: அது தாத்தாவும் ஃபிரோஸும். கைகளில் கோடாலி வைத்திருக்கிறார் தாத்தா.
தாத்தா: நாளைக்கு நாம் மாமர மாமாவை வெட்டியாக வேண்டும்! ஃபிரோஸ்: முடியாது, முடியாது! தாத்தா: வெட்டப் போறோம், வெட்டப் போறோம்! ஃபிரோஸ்: ஏன்? ஏன்? எதுக்கு? எதுக்கு? தாத்தா: ஏன்னா, இதுவரை அது நமக்குப் பழங்களே தரவில்லை. அதோட, உன் அப்பாவுக்கு புது மேசை வேண்டுமாம். ஃபிரோஸ்: முடியாது முடியாது. இந்த வருடம் மாமர மாமா நிறைய பழங்களைத் தருவார். எவ்வளவுன்னா, அதை விற்றுக் கிடைக்கும் தொகையில் அப்பாவுக்கு புதிய மேசையே வாங்கிவிடலாம். தாத்தா: ஆனால், ஃபிரோஸ்… ஃபிரோஸ்: இல்லை, நான் சத்தியம் பண்றேன்.
மாமர மாமாவும் சத்தியம் பண்ணுவார். அப்படித்தானே மாமர மாமா? மாமர மாமாவின் கிளைகளைத் தென்றல் காற்று அசைக்க, அது கிளைகளை அசைத்து சம்மதம் தெரிவிப்பதுபோல இருந்தது. வெளிச்சம் மங்குகிறது.
காட்சி 12
மரத்தில் மஞ்சள் நிறப் பூக்கள் மலர்ந்திருக்கின்றன
அறிவிப்பாளர்: பிப்ரவரி மாதம் தாத்தா: ஃபிரோஸ் அங்கே பார், மாம்பூ! ஃபிரோஸ்: பாம்பூவா? எங்கே? தாத்தா: பாம்பு இல்லை, மாம்பூ. மாமரத்தில் பூக்கள் மலரும் இல்லையா? அதை மாம்பூன்னு சொல்லுவோம்! ஃபிரோஸ்: கொத்துக்கொத்தான பூக்கள், மயில் தோகை விரித்ததைப் போலிருக்கும்.
வெளிச்சம் மங்குகிறது.
காட்சி 13
மரத்தில் மலர்ந்திருக்கும் மஞ்சள் பூக்கள், பச்சை நிறத்தில் மாம்பிஞ்சுகளாக மாறுகின்றன.
அறிவிப்பாளர்: மார்ச் மாதம் ஃபிரோஸ்: தாத்தா, அங்கே பாருங்க.
மாமரத்தில் சிறு மாம்பிஞ்சுகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன.
தாத்தா: உஷ்ஷ்ஷ். மாமர மாமா அந்த மாம்பிஞ்சுகளைகெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்.
ஃபிரோஸ்: மாமர மாமா, கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள்!
வெளிச்சம் மங்குகிறது.
காட்சி 14
தற்போது மரம் முழுவதும் மாம்பழங்கள் பழுத்துத் தொங்குகின்றன. அருகிலுள்ள வராந்தா பகுதியில் நாற்காலிகளும் மேசைகளும் போடப்பட்டிருக்கின்றன. மரம் முழுவதும் மாம்பழங்கள் தொங்குகின்றன. எல்லாரும் மாம்பழங்களைச் சுவைக்கிறார்கள். வராந்தா பகுதியில் இருக்கும் பெட்டிகளில் மாம்பழங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இப்போது இரவு உணவுக்காகக் கூடியிருக்கிறார்கள்.
அறிவிப்பாளர்: மே மாதம்
ஃபிரோஸ்: அப்பா, புது மேசை வாங்குவதற்கு
எவ்வளவு பணம் வேண்டும்?
அப்பா: யாருக்குப் புது மேசை?
ஃபிரோஸ்: உங்களுக்குத்தான்!
அப்பா: எனக்கா? எனது பழைய மேசைக்கு என்ன குறை?
ஃபிரோஸ்: ஆனா, தாத்தா சொன்னாரு...
ஒரு மாம்பழத் துண்டை வெட்டி ஃபிரோஸின் வாயில் தாத்தா திணிக்கிறார். அப்பா சிரிக்கத் தொடங்குகிறார்.
அப்பா: உன்னோட மாமரத்தை நாங்க வெட்டப்போறோம்னு அவர் சொன்னாரா? ஃபிரோஸ்: உங்களுக்குப் புது மேசை வேணும்னு அவர் சொன்னாரே. அப்பா: நான் சிறுவனாக இருந்தபோது, இதே மாமரத்தை வெட்டி நமக்குப் புது நாற்காலிகள் வேணும்னு அவர் என்கிட்ட சொன்னார். தாத்தா: உன்னோட நடிப்புத் திறனை வெளிப்படுத்துவதற்காகத்தான், அப்படி ஒரு கதைவிட்டேன். நாம ரெண்டு பேரும் சேர்ந்து மாமர மாமாவுக்கு ஒரு புதுக் கதையையே சொல்லிட்டோம். தவறு செய்துவிட்டதுபோல் முகத்தை மூடிக்கொண்டு தாத்தா பாசாங்கு செய்கிறார். ஃபிரோஸ் நவரசங்களையும் வெளிப்படுத்துகிறான். அவர்கள் மேடையிலிருந்து வெளியேறுகிறார்கள். அன்னாவும் முன்னாவும் மேடைக்கு வருகிறார்கள்
காட்சி 15
அன்னாவும் முன்னாவும் பேசிக்கொண்டிருக்கும்போது, அரங்க அமைப்பு கலைக்கப்பட்டு மூன்றாவது கதைக்கான அரங்கம் அமைக்கப்படுகிறது.
அன்னா: நான் ஏற்கெனவே சொன்னபடி, ‘முன்னொரு காலத்தில் ஒரு ராஜா இருந்தார்’.
முன்னா: ராஜாக்களின் கதைளைக் கேட்க எனக்குப் பிடிக்கலை. மரத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.
அன்னா: ராஜா சொன்ன கதை மரமாக வளர்ந்தது பற்றி சொல்லிக்கிட்டிருந்தேன், இல்லையா.
முன்னா: ஆமா, அதுபோலச் சொல்லுங்கள்!
அறிவிப்பாளர்: மூன்றாவது மரத்தின் கதை
அன்னா: முன்னொரு காலத்தில், முதுமையான ஒரு ராஜா இருந்தார். அவர் பெரிதும் சலிப்படைந்திருந்தார். தான் ராஜாவாக இருந்தது போதும் என நினைத்தார். முன்னா: ஏன்? அன்னா: ராஜாவாக இருந்தால் நிறைய வேலை இருக்குமில்லையா. சரி, அவரது வார்த்தைகளிலேயே கதையைக் கேட்போமே.
காட்சி 16
அன்னாவும் முன்னாவும் வெளியேறுகிறார்கள். ஸான்டோ என்னும் மன்னரும் மூன்று இளவரசர்களும் நுழைகிறார்கள்.
மன்னர் ஸான்டோ: இனிமேல் நான் ஆட்சி செய்யப் போவதில்லை என முடிவெடுத்துவிட்டேன். மலைப்பகுதிக்குச் சென்று, ஒரு எளிமையான வாழ்க்கையை வாழப் போகிறேன்.
இளவரசன் அவ்வல்: நான்தான் மூத்தவன். அதனால் நான்தான் இனிமேல் மன்னராக இருக்கவேண்டுமில்லையா?
இளவரசன் தூஸ்ரா: அந்த அதிர்ஷ்டம் உனக்கு இல்லை அவ்வல். சிறந்த இளவரசன்தான் மன்னராக வேண்டும் என சட்டம் சொல்கிறது.
இளவரசன் டீன்: இதைப் பற்றி அப்பா முடிவெடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.
மன்னர் ஸான்டோ: உங்களுக்கு நான் வைக்க நினைத்த பரிட்சை இதுதான். மன்னராக இல்லாதபோதும், நான் நினைவுகூரப்பட வேண்டுமென விரும்புகிறேன். அதை நீங்கள் எப்படி சாத்தியப்படுத்துவீர்கள்?
இளவரசன் அவ்வல்: இதற்காக நான் ஒரு சட்டம் இயற்றுவேன். சிறந்த மன்னர் ஸான்டோ நினைவுகூரப்பட வேண்டும் என்பேன். அதன்படி, ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தில் உங்களைப் பற்றி அவர்கள் நினைத்தாக வேண்டும்.
காட்சி 17
அரசு அலுவலர் ஊதுகொம்பை எடுத்துக்கொண்டு வந்து, அதை ஊதூகிறார்.
அலுவலர்: மன்னர் ஸான்டோவைப் நினைவுகூரும் நேரம் இது.
வெவ்வேறு எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வாசகங்கள் கொண்ட தட்டிகளுடன் குழந்தைகள் மேடைக்கு வருகிறார்கள். தங்கள் வசனத்தைச் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது தட்டியில் எழுதப்பட்டுள்ளது. அவர்களது மனதில் தோன்றும் எண்ணங்களை அறிவிப்பாளர் வாசிக்கிறார்.
பெண்: அட ஆமாம். மன்னர் ஸான்டோவை நான் நினைவுகூர்கிறேன் (அவருடைய எண்ணம்/அறிவிப்பாளர்: என் தங்கக் காதணி எங்கே போனது?) ஆண்: அட ஆமாம், நல்ல மன்னர் ஸான்டோ. (அவருடைய எண்ணம்/அறிவிப்பாளர்: நான் ஒரு ஆட்டை வாங்கியாக வேண்டும்)
குழந்தை: ஆமாம், மன்னர் மான்டோ. (அதன் எண்ணம்/அறிவிப்பாளர்: எனது பிறந்தநாளுக்கு எந்த வகை இனிப்புகள் கிடைக்கும்?) பெண்: மன்னர் ஸான்டோ. எவ்வளவு நல்ல மனிதர் அவர்! (அவருடைய எண்ணம்/அறிவிப்பாளர்: இது என்ன முட்டாள்தனம்?) முதிய ஆண்: ஆஹா, எவ்வளவு சிறந்த மன்னர் அவர்! (அவருடைய எண்ணம்/அறிவிப்பாளர்: எனக்கு முழங்கை வலிக்கிறது) முதிய பெண்: மன்னர் ஸான்டோ ஆசிர்வதிக்கப்படட்டும்! (அவருடைய எண்ணம்/அறிவிப்பாளர்: என்ன ஒரு முட்டாள்தனமான சட்டம்?) வெளிச்சம் மங்குகிறது. அனைவரும் வெளியேறுகிறார்கள்.
காட்சி 18
மன்னர் ஸான்டோவும் மூன்று இளவரசர்களும் மேடையில் நுழைகிறார்கள்.
இளவரசன் தூஸ்ரா: உங்களுக்காக ஒரு அழகிய சிலையை அமைப்பேன். பீடம் ஒன்றை ஒருவர் கொண்டுவருகிறார்.
மன்னர் அதன் மீது ஏறி நிற்கிறார். பிறகு ஒரு கையைத் தோரணையாக வைத்துக்கொள்கிறார்.
ஒரு ஆணும் பெண்ணும் நுழைகிறார்கள்.
ஆண்: இது நல்ல யோசனை. எனது அப்பாவுக்கும் இப்படி ஒரு சிலையை வைப்பேன்.
அவர் ஒரு பீடத்தைக் கொண்டுவருகிறார். அவரது தந்தை அதன் மீது ஏறி நின்று, தொலைவில் ஏதோ ஒன்றை சுட்டிக்காட்டுகிறார்.
பெண்: என் அம்மாவுக்கும் இப்படிச் செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன் அவரே ஒரு பீடம் போலக் குனிந்து நிற்கிறார்.
அவரது அம்மா அதன் மீது ஏறி நின்று, மன்னரை நோக்கிக் கைகாட்டுகிறார். எத்தனை குழந்தைகள் இருக்கிறார்களோ, அத்தனை முறை இதே காட்சியை நடிக்க வைக்கலாம். கடைசியில் அங்கிருக்கும் மன்னரின் சிலை பார்வையாளர்களுக்குத் தெரியாமல் மறைப்பதுபோல், இது அமைய வேண்டும்.
வெளிச்சம் மங்குகிறது. அனைவரும் வெளியேறுகிறார்கள்.
காட்சி 19
இளவரசன் டீன்: உங்களுக்காக நான் ஒரு மரத்தை நடுவேன்.
அவர் தன் உள்ளங்கையைத் திறந்து காட்டுகிறார். அதில் ஒரு சிறிய விதை இருக்கிறது. அதை மண்ணில் விதைத்து, தண்ணீர் ஊற்றுவதைப் போல நடித்துக் காட்டுகிறார். அது வளர்வதை கவனிக்கிறார். அதன் வேரைச் சுற்றி குழிவெட்டுகிறார். மரத்தைச் சுற்றி சுத்தப்படுத்துகிறார். உடலை நன்றாக வளைத்து நிமிர்த்தக்கூடிய குழந்தைகள், வளரும் மரத்தை நடிப்பில் உருவாக்கிக் காட்டலாம். அப்படி இல்லையென்றால் காகிதம், மரக்கட்டைகளைக் கொண்டு மரத்தைப் போல உருவாக்கி, மேடைக்கு கொண்டு வரலாம்)
இளவரசர்களும் மன்னரும் உறைந்து நிற்கிறார்கள்.
அன்னாவும் முன்னாவும் நுழைகிறார்கள்.
அன்னா: யார் மன்னராக இருக்க வேண்டும் என நீ நினைக்கிறாய்? முன்னா: பார்வையாளர்களையே கேட்போமே. அன்னா (பார்வையாளர்களை நோக்கி): யார் மன்னராக இருக்க வேண்டுமென நினைக்கிறீங்க? பதில் கூறுபவர்களை சத்தமாகச் சொல்லச் சொல்ல வேண்டும்.
அன்னா: ஆமாம், நீங்கள் நினைப்பதுபோல் மூன்றாவது மகன் டீன்தான் மன்னரானார். மூன்றாவது மகன் முதுமையடைந்த பிறகு, தினமும் அந்த மரத்துக்கு அடியில் அமர்ந்திருப்பார். பறவைகளின் பாடல்களையும், கிளைகளை அசைத்துக் கிசுகிசுக்கும் தென்றல் காற்றையும் அவர் அனுபவிப்பார். அவர் குழந்தையாக இருந்தபோது, அவரது தந்தை தூக்கி வைத்திருந்ததைப் போல அந்த இடத்தை அவர் பாதுகாப்பாக உணர்ந்தார். அதற்குப் பிறகு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், தங்களுடைய பெற்றோருக்காகக் குழந்தைகள் மரங்களை நடத் தொடங்கினர். அவர்களுடைய நாடு மேலும் மேலும் பசுமை சூழ்ந்து செழிப்பான நாடாக மாறியது.
இளவரசன் டீன் மரத்துக்கு அடியில் உட்கார்ந்து, மேலே பார்க்கிறார். மேடையில் இருக்கும் மற்றவர்கள் அப்படியே உறைந்து நிற்கிறார்கள்.
காட்சி 20
அரங்க அமைப்பு: மீண்டும் அன்னாவும் முன்னாவும் மட்டும் மேடையில் இருக்கிறார்கள்.
முன்னா: உங்களுக்காக ஒரு மரக்கன்று நட வேண்டுமென நினைக்கிறேன். நீங்க மறைஞ்ச பின்னாடியும் உங்களை நினைவுகூரலாம், இல்லையா.
அன்னா: அது எனக்குப் பிடித்திருக்கிறது.
முன்னா: உங்களோட பிறந்தநாளன்று அதைச் செய்யலாமா?
அன்னா: அவ்வளவு நாள் எதற்காகக் காத்திருக்க வேண்டும்? இதோ ஒரு புளிய மர விதை. வெளியே மண் தயாராயிருக்கு. மழையும் வரப்போகுது..
அனைத்துக் கதாபாத்திரங்களும் மேடைக்கு வந்து ஒருபாடலைப் பாடுகிறார்கள்
மரக்கன்று நடுங்கள்
உள்ளூர் மரக்கன்றையே தேர்ந்தெடுங்கள்
நீங்கள் அவற்றை மறக்காமல் இருந்ததற்காக.
பறவைகள் உங்களுக்கு நன்றி பகிரும்
மரக்கன்று நடுங்கள்
அன்றாடம் நீரூற்றுங்கள்
அடிமரத்தைச் சுற்றி குழிவெட்டுங்கள்
அதன் வழியாகத்தான் அவை சுவாசிக்கின்றன
மரக்கன்று நடுங்கள் மரக்கட்டைக்காக மட்டுமல்ல மரக்கன்று நடுங்கள் உலகிற்கு நன்மை செய்யுங்கள்
மரக்கன்று நடுங்கள் அழகுணர்ச்சியுடன் கூடிய இன்பத்தைப் பெறலாம் சுத்தமான காற்றையும் அவசியமான ஆக்சிஜனையும் அது உங்களுக்குத் தரும்
மரக்கன்று நடுங்கள் ஒரு நாள் அது நிழல் தரும் மரக்கன்றை நட்டுவிட்டீர்களா? சிறந்த மாற்றத்தை நீங்கள் விதைத்திருக்கிறீர்கள்!