marathadiyil muyal

மரத்தடியில் முயல்

முயல் தூங்கிக் கொண்டிருந்தபோது மரத்திலிருந்து ஆப்பிள் ஒன்று விழுந்தது, கூடவே ‘ஓடு முயலே ஓடு!’ என்று ஒரு குரல் கேட்டது. அடுத்து என்ன களேபரம் நடந்தது தெரியுமா?

- Vetri | வெற்றி

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒருநாள் முயல் மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது மரத்திலிருந்து ஆப்பிள் ஒன்று விழுந்தது.

”ஓடு முயலே ஓடு!” என்று ஒரு குரல் கேட்டது. முயல் விழித்துக்கொண்டு வேகமாக ஓடத் தொடங்கியது.

வழியில் கோழியைப் பார்த்தது. “ஏன் ஓடுகிறாய்?” என்று கேட்டது கோழி. “தெரியலை. ஏதோ விழும் சத்தம் கேட்டது, அப்புறம் ‘ஓடு முயலே ஓடு!’ என்று ஒரு குரல் சொன்னது” என்றது முயல்.

கோழிக்கும் முயல் சொன்னதைக் கேட்டதும் பயம் வந்துவிட்டது. அதுவும் சேர்ந்து ஓடத்தொடங்கியது.

அவர்கள் நாயைப் பார்த்தனர். “ஏன் ஓடுகிறீர்கள்?” என்று நாய் கேட்டது. “எனக்குத் தெரியாது. முயல் சொன்னது மட்டும்தான் எனக்குத் தெரியும், அதுக்கும் ஏனென்று தெரியாது. ஏதோ விழும் சத்தம் கேட்டதாம், பின் ‘ஓடு முயலே ஓடு!’ என்று ஒரு குரல் சொன்னதாம்” என்றது கோழி.

நாயும் அதைக்கேட்டு ஆச்சரியம் அடைந்தது. அதுவும் முயல், கோழியோடு சேர்ந்து ஓட ஆரம்பித்தது.

அவர்கள் குதிரையைப் பார்த்தனர். குதிரை நாயைக் கேட்டது, “ஏன் ஓடுகிறீர்கள்?” என்று.

”தெரியலையே. எனக்கு கோழி சொன்னதுதான் தெரியும், அதுக்கும் ஏன்னு தெரியாது. அது முயல் சொன்னதக் கேட்டுது, முயலுக்கும் ஏன்னு தெரியாது. அது எதுவோ விழுற சத்தத்த கேட்டுது, எதோ ஒரு குரல் ‘ஓடு முயலே ஓடு!’ என்று சொன்னதாம்” என்றது நாய்.

குதிரையும் மற்றவர்களோடு சேர்ந்து ஓடத் தொடங்கியது.

அடுத்து அவர்கள் கழுதையைப் பார்த்தனர். “ஏன் ஓடுகிறீர்கள்?” என்று கழுதை கேட்டது. “தெரியலையே. எனக்கு நாய் சொன்னதுதான் தெரியும், அதுக்கு ஏன்னு தெரியாது. அதுக்கு கோழி சொன்னதுதான் தெரியும், கோழிக்கு ஏன்னு தெரியாது. கோழிக்கு முயல் சொன்னதுதான் தெரியும், முயலுக்கும் தெரியாது. முயல் எதோ விழுற சத்தத்த கேட்டுதாம். யாரோ ‘ஓடு முயலே ஓடு!’ன்னு சொன்னாங்களாம்” என்றது குதிரை.

எனவே கழுதையும் ஓடத் தொடங்கியது.

அவர்கள் மாட்டைப் பார்த்தனர். “ஏன் ஓடுகிறீர்கள்?” என்று மாடு கேட்டது. “தெரியலை. எனக்கு குதிரை சொன்னுச்சு, அதுக்கு ஏன்னு தெரியாது. குதிரைக்கு நாய் சொன்னுச்சு, அதுக்கும் ஏன்னு தெரியாது. நாய், கோழி சொன்னதக் கேட்டுச்சு. அதுக்கும் ஏன்னு தெரியாது. கோழி முயல் சொன்னத கேட்டுச்சு. அதுக்கும் ஏன்னு தெரியாது. முயல் எதோ விழுற சத்தத்தையும், யாரோ ‘ஓடு முயலே ஓடு’ன்னு சொல்றதையும் கேட்டுச்சு” என்றது கழுதை.

மாடும் கவலைகொண்டு ஓடத் தொடங்கியது.

அவர்களை பூனை பார்த்தது. “ஏன் ஓடுகிறாய்?” என்று கேட்டது.“தெரியலை, நான் கழுதை சொன்னதக் கேட்டேன். அதுக்கு ஏன்னு தெரியாது. அது நாய் சொன்னதக் கேட்டுது, நாய்க்கும் ஏன்னு தெரியாது. நாய், கோழி சொன்னதக் கேட்டுது. கோழிக்கு ஏன்னு தெரியாது, அது முயல் சொன்னதக் கேட்டுது. முயல் எதோ விழுற சத்தம் கேட்டுச்சாம். யாரோ ‘ஓடு முயலே ஓடு!’ன்னு சொன்னாங்களாம்” என்றது மாடு.

பூனையும் மற்ற விலங்குகளோடு சேர்ந்து ஓடத் தொடங்கியது.

மிதிவண்டி ஓட்டிக்கொண்டிருந்த ஒரு பையனை அவர்கள் பார்த்தார்கள். “ஏன் ஓடுகிறீர்கள்?” என்று கேட்டான்.“தெரியலையே. எங்களுக்கு முயல் சொன்னதுதான் தெரியும், அதுக்கும் ஏன்னு தெரியாது. ஏதோ விழும் சத்தம் கேட்டுதாம், ஒரு குரல் ’ஓடு முயலே ஓடு!’ என்று சொன்னதாம்” என்றன.

அந்தப் பையன் சிரித்துக்கொண்டே சொன்னான்: “காற்று அடித்ததால் ஒரு ஆப்பிள் மரத்தில் இருந்து விழுந்தது. நான்தான் ‘ஓடு முயலே ஓடு!’ என்று சொன்னேன்.”