“தாரா! தூங்கப் போகும் நேரம் இது! இவ்வளவு நேரமாக எங்கே போயிருந்தாய்?” என்று கோபமாகக் கேட்டார் அம்மா.
“அம்மா! எங்கள் பள்ளிக்கூடத்தின் வெளியே, நெடிதுயர்ந்த மரம் ஒன்று இருப்பது தெரியும்தானே?
நான் அதில் ஏறினேன். அதுதான் எவ்வளவு உயரம்! அதன் உச்சி வானத்தைத் தொடுகிறது!” என்று பதிலளித்தாள் தாரா.
“நான் அதன் உச்சியிலிருந்து கீழே பார்த்தபோது மேகக்கூட்டங்கள் பஞ்சுப்பொதிகள் போல் காட்சி அளித்தன. நான் மேலே பார்த்தபோது சிரிக்கும் இலைகளைக் கண்டேன்!”
“இலைகள் சிரிக்குமா எனவும் யோசித்தேன். அப்போதுதான் இலைகளின் நடுவே மறைந்தபடி சிரித்துக் கொண்டிருந்த அணில்களைப் பார்த்தேன்.”
“பெரிய அணில்கள் எனக்கு தின்பதற்கு நிறைய கொட்டைகளைத் தந்தன. குட்டி அணில்கள் என் தலைமுடிக்குள் ஒளிந்து கண்ணாமூச்சி விளையாடின.”
“நாங்கள் மணிக்கணக்கில் விளையாடிக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று வீடு திரும்பும் ஞாபகம் வந்தது. ஆனால், எனக்கு மரத்திலிருந்து கீழே இறங்கத் தெரியவில்லை!”
“அதனால், அணில்கள் உதவி கேட்டு சத்தம் போட்டன. அவை எனக்காக எழுப்பிய கூக்குரலை நீங்கள் கூட கேட்டிருப்பீர்கள், அம்மா! கீ, கீஇ, கீஈ!”
“நல்லவேளை! அப்போது அங்கே மேலே ஒரு ஊதா நிற விமானம் பறந்து வந்தது. அணில்கள் போட்ட கூச்சல் அந்த விமான ஓட்டிக்குக் கேட்டது தெரியுமா, அம்மா!”
“அந்த விமான ஓட்டி தாழ்வாகப் பறந்து வந்து என்னை ஏற்றிக் கொண்டார். பின்னர் வேகமாகப் பறந்து வந்து என்னை வீட்டில் விட்டார்.
”அதனால்தான் நான் வீட்டிற்கு வர நேரமாகிவிட்டது, அம்மா!” என்றாள் தாரா.
“தாரா! இது போல கட்டுக்கதைகளை சொல்வதை நிறுத்து!” என்றார் அம்மா.
“கீ, கீஇ, கீஈ!”