ஒரு நாள் தாராவும் அவளுடைய தம்பி அருணும் பாட்டி வீட்டு மாடியில் உள்ள பரணில் ஒரு பழைய பெட்டியைப் பார்த்தார்கள். அது ஒரு அழகான மரப்பெட்டி. தூசியும் சிலந்திக்கூடும் படிந்திருந்த அந்தப் பெட்டி க்ரீச் என்ற சத்தத்துடன் திறந்தது. இருவரும் அந்தப் பெட்டியில் இருந்த இரகசியங்களை ஆவலுடன் பார்த்தார்கள்.
"பெட்டி முழுவதும் பழைய புகைப்படங்களும் கடிதங்களும் இருக்கின்றன!" என்று ஆச்சரியத்துடன் சொன்ன அருண், மஞ்சள் நிறமாக மாறிவிட்ட காகிதக் குவியலைத் தன் விரல்களால் தடவினான்.
தாரா குனிந்து ஒரு புகைப்படத்தை எடுத்தாள். "இது நம் பாட்டியின் சிறு வயதில் எடுத்தது போல் இருக்கிறது. அவர்களுக்கு நான்கு அல்லது ஐந்து வயது இருந்திருக்கலாம்."
"பார், ஒரு பழைய செய்தித்தாள்!" என்று அதில் இருந்த தேதியை சற்று சந்தேகத்துடன் படித்தான் அருண். "26 செப்டம்பர் 1890?! வெகுகாலத்துக்கு முந்தையது போல் இருக்கிறதே."
தாரா குறுக்கிட்டு, "ஆமாம், வெகு காலத்துக்கு முந்தையது. அப்பொழுது நம் பாட்டியின் பாட்டி கூட பிறக்கவில்லை !" என்றாள்.
தாரா கவனமாக செய்தித்தாளின் ஒரு பக்கத்தில் இருந்த ஒரு செய்தியைச் சுற்றி சிவப்பு வளையம் இருப்பதைப் பார்த்து: "இதற்கு முன் இந்தச் செய்தியை படித்தவர்களுக்கு இது சுவாரசியமாக இருந்திருக்க வேண்டும். ஏன் அப்படி இருந்திருக்கும்?" என்றாள்.
அச்செய்தி என்ன சொல்கிறது?" என அருண் கேட்டான்.
சமீபத்திய தந்திகள்
[ ராயிட்டர் தந்திகள்]
மாயாஜால மாம்பழத்தின் செய்தி
லண்டன் , செப்டம்பர் 25
" தி டைம்ஶ் " பத்திரிக்கை , லண்டனில் ஒரு சிறுமி மாயாஜால மாங்கொட்டையைத் தேடிக் கொண்டிருக்கிறாள் என்று ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. உதவ விரும்புபவர்கள் தந்தி மூலம் கீழ்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்...
"மாயாஜால மாங்கொட்டையா? அப்படி என்றால் என்னவாக இருக்கும்"? என்று அருண் ஆச்சரியமாகக் கேட்டான். அவனுடைய வாழ்நாளில் நிறைய மாம்பழங்களைப் பார்த்தும் சாப்பிட்டும் இருக்கிறான். ஆனால் இதுவரை ஒரு மாயாஜால மாம்பழம் கூட சாப்பிட்டதில்லை.
"எனக்குத் தெரியாது" என்றாள் தாரா. "பாட்டியிடம் கேட்டுப் பார்க்கலாம்."
கீழ்தளத்தில் பாட்டி ஆடும் நாற்காலியில் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
"பாட்டி, பாட்டி! மாயாஜால மாம்பழம் என்றால் என்ன?" என்று இருவரும் ஆவலாகக் கத்தி கொண்டுவந்தனர்.
"மாயாஜால மாம்பழமா? எங்கே அதைப்பற்றி கேள்விப்பட்டீர்கள்?"
"பழைய செய்தித்தாள் ஒன்றை பரணில் பார்த்தோம். அதில் வெகு காலத்திற்கு முன்பு லண்டனில் ஒரு சிறுமி மாயாஜால மாங்கொட்டையைத் தேடிக் கொண்டிருந்தாள் என்ற செய்தி இருக்கிறது."
"ஆ, அதுவா?!" பாட்டியின் முகம் பளிச்சிட்டது. "என் செல்லங்களே, அது ஒரு பழைய கதை. என் கொள்ளு தாத்தாவிடமிருந்து பல வருடங்களுக்கு முன் கேட்டது. அவருக்கு அந்த சிறுமியைத் தெரியும்."
"அவருக்குத் தெரியுமா? எப்படி?"
"அவர் ஒரு மாயாஜால மாங்ககொட்டையைக் கண்டுபிடிக்க அவளுக்கு உதவினார்|"
"கொள்ளு தாத்தாவிற்கு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும் பொழுது ஒரு நாள் , அவருடைய பெற்றோர் செய்தித்தாளில் படித்த மிகவும் விசித்திரமான துண்டுச் செய்தியைப் பற்றி தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்தனர்."
அருண் குறுக்கிட்டு, "நாங்கள் பார்த்த செய்தித்தாளா?" என்றான்.
"ஆம், அதேதான். லண்ட ன் என்ற பெரிய நகரத்தில் வசித்து வந்த ஒரு சிறுமி மாயாஜால மாங்கொட்டையைக் கண்டுபிடிக்க உதவ வேண்டும் என்று செய்திதாளுக்கு ஒரு கடிதம் அனுப்பினாள்! செய்தி நிருவனங்கள் அவளுடைய வேண்டுகோளை எடுத்து உலகத்தின் மூலை முடுக்குகளில் உள்ளவர்களுக்கு தந்தி அணுப்பினார்கள். பம்பாயில் 'தி டைம்ஶ் ஆப் இந்தியா'வில் கூட இது பிரசுரிக்கப்பட்டது."
"கொள்ளு தாத்தாவிற்கு லண்டன் எங்கு இருக்கிறது என்றோ, அங்கு உள்ளவர்கள் அவர்களாகவே ஏன் மாம்பழங்களை விளைவிப்பது இல்லை என்றோ தெரியாது. அது மட்டுமல்லாமல் மின்சாரத் தந்தி மூலம் எப்படி செய்தி அனுப்புவது என்றும் சரியாகத் தெரியாது. ஆனால் அந்த சிறுமிக்கு மாயாஜால மாங்கொட்டையைக் கண்டுபிடிக்க உதவ வேண்டும் என அன்று மாலை தீர்மானித்தார்."
"அதில் பிரச்சனை என்னவென்றால்," என்று பாட்டி தொடர்ந்தாள், "அப்படி ஒரு கொட்டையை எங்கே கண்டுபிடிப்பது என்ற அவருக்குத் தெரியவில்லை. சுற்றிலும் நிறைய மாமரங்கள் இருந்தன. எல்லாமே தனித்துவமான மாயாஜாலம் நிறைந்தவைையாக இருந்தன."
"தாத்தாவினுடைய தோட்டத்தில் கோடைக்கால வெயிலில் குழந்தைகளுக்கு நிழல் தந்து பாதுகாத்த ஒரு அழகான மாமரத்தின் பழம்... ஆஹா! அதனுடைய பழம் உண்மையிலேயே மாயாஜாலம் நிறைந்தது! அதன் கொட்டையை அந்தச் சிறுமிக்கு அனுப்ப முடிவு செய்தார்."
அடுத்த நாள் கொள்ளு தாத்தா மாங்கொட்டையை எடுத்துக் கொண்டு தந்தி அலுவலகத்திற்கு நடந்து சென்றார்.
அங்கிருந்த அலுவலரிடம் "லண்டனிற்கு இந்த கொட்டையை தந்தி மூலம் அனுப்ப வேண்டும்,' என்று கையில் இருந்ததைக் காண்பித்து தைரியமாகச் சொன்னார்."
அலுவலகர் சத்தமாக சிரித்தார். "ஒரு கொட்டையை மின்சார தந்தி மூலம் அனுப்ப முடியாது! தபால் மூலம் தான் அனுப்பமுடியும். நிச்சயமாக லண்ட ன் போய் சேர அதிக நாட்கள் ஆகும்!"
"ஏன் முடியாது" என்று கொள்ளு தாத்தா எதிர்த்துக் கேட்டார். ஐரோப்பாவில் ஒரு பெண் தபால் நிலையத்திற்குச் சென்று வெகு தூரத்தில் போர் புரிந்து கொண்டிருந்த தன் மகனுக்கு துணிகளும், உணவும் தந்தி மூலம் அனுப்பினார் என்று தன் பெற்றோர்கள் பேசியதை அவர் கேட்டிருந்தார்.
"ஏனென்றால் தந்தி அவ்வாறு வேலை செய்வதில்லை!" என்றார் அலுவலகர். அவன் மனதில் ஓடும் எண்ணங்களைப் புரிந்து கொண்டு அவசரமாக, "துணி, உணவு, மாங்கோட்டை எதையும் அனுப்ப முடியாது" என்றார்."
"கொள்ளு தாத்தா ஏமாற்றமடைந்தார். மாங்கொட்டையை தந்தி மூலம் விரைவாக இந்தியாவிலிருந்து லண்டன் அனுப்ப முடியாது என்பதை தெரிந்து கொள்ளுவதற்காகவா மாயாஜால மாங்கொட்டையை எடுத்துக் கொண்டு இவ்வளவு தூரம் நடந்து தந்தி அலுவலகத்திற்கு வந்தார்? ஒரு மாங்க்கொட்டையை கூட லண்டன் அனுப்ப முடியாத தொழில்நுட்பத்தை தலை சிறந்தது என எல்லோரும் ஏன் நினைக்கிறார்கள்?"
"அலுவலகர் அவரை உற்சாகப்படுத்த முயற்சி செய்தார். 'தந்தி மூலம் கொட்டை அனுப்ப முடியாது. ஆனால் வேறு சிலவற்றை அனுப்பலாம். அல்லது சதுரங்கம் விலையாடலாம். நீ தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் மின்சாரக் குறியீடுகளாக மாற்றப்பட்டு, மின்சாரக் கம்பிகள் மூலம் பல நிலப்பகுதிகளையும், கடல்களையும் கடந்து லண்டன் செல்லும்."
"நான் உன் செய்தியை ஒரு துண்டு காகிதத்தில் எழுதி இந்த கருவியின் மூலம் அனுப்புகிறேன். செய்தி சுருக்கமாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். இல்லை யென்றால் செலவு அதிகமாகிவிடும்"
"நீங்கள் சொல்வது சரி என்று யூகி...... யூகிக்கிறேன். கொட்டையை தபால் மூலம் அனுப்பிவிட்டு அவ்வாறு அனுப்பியுள்ளேன் என்ற செய்தியை தந்தி மூலம் அனுப்பிவிடுகிறேன்."
"அதுதான் சரியெனப் படுகிறது" என்றார் அலுவலகர் நிம்மதியாக. பின் உட்கார்ந்து தன்னுடைய மேஜை மேல் இருந்த கருவியில் ஒரே சீராகத் தட்டத் தொடங்கினார். மாயா ஜால மாங்கோட்டை இந்தியாவிலிருந்து தபால் மூலம் வருகிறது. தயவுசெய்து கிடைத்தவுடன் உறுதி செய்யவும்!"
"இந்த செய்தி அதன் வழி போய்க் கொண்டிருக்கிறது. பம்பாயிலிருந்து நீருக்கு அடியில் கம்பி வடம் மூலம் அரபிக்கடலை கடந்து, அரபி தீப கற்பத்தின் நுனியில் இருக்கும் ஏடன் செல்லும். பின் எகிப்து, மால்டா, ஜிப்ரால்டர் வழியாக பிரிட்டன் சென்று அடைந்ததும், லண்டனில் என்னைப் போன்ற அலுவலர் காகிதத் துண்டில் அச்சிடப்பட்ட நிறைய புள்ளிகளையும் கோடுகளையும் பார்ப்பார்..."
"புள்ளிகளும் கோடுகளுமா? எப்படி என் செய்தியை மக்கள் புரிந்து கொள்வார்கள்?"
"ஹிஹி, அதைப் பற்றி நீ கவலைப்படாதே" என்றார் அலுவலர். "எங்கள் தந்தி அலுவலர்கள் மிகவும் இரகசியமான செய்திகளை புரிந்து கொள்ள பயிற்சி பெற்றவர்கள். ஒவ்வோரு எழுத்தும் எத்தனை புள்ளிகளும் கோடுகளும் கொண்டது என மிகச் சரியாகத் தெரிந்து வைத்துள்ளார்கள். இந்தக் கருவியின் கீச்சொலியைக் கேட்டே செய்தி என்னவென்று புரிந்து கொள்வார்கள்!"
"போகும் வழியில் செய்தி தொலைந்து விட்டால் என்ன செய்வது?" என்று கொள்ளு தாத்தா வலியுறுத்திக் கேட்டார். அவருடைய செய்தி பயணிக்கும் தூரம் மிகவும் அதிகமாக இருப்பதால் நிச்சயமாக ஏதேனும் தவறு நடந்து விடும்.
"ஆம், எந்த தொழில் நுட்பமும் முற்றிலும் சரியாக இருக்க முடியாது. சில சமயங்களில் போகும் வழியில் செய்திகள் தொலைந்து போய்விடும். அந்த வழியில் செல்லும் கப்பலின் நங்கூரத்தினால் நீருக்கு அடியில் உள்ள கம்பிவடம் அறுபட்டு போகலாம். அல்லது கம்பிவடத்தில் வளரும் ஒட்டுமீன்கள், பவளப் பாறைகள் ஆகியவற்றின் கனத்தினால் அறுந்து போகலாம். நிலத்தின் மேல் உள்ள கம்பி வடம் சில சமயங்களில் புயலினாலோ காட்டு மிருகங்களாலோ அழிந்து போகலாம். ஆனால் மக்கள் செய்திகளை உலகத்தின் ஒரு மூலையிலிருந்து மற்ற இடங்களுக்கு அனுப்பிக் கொண்டே இருப்பதற்காக எங்கள் பொறியாளர்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கரம் பழுது பார்த்து சரி செய்து விடுவார்கள்."
அருண் குறுக்கிட்டு, "இன்றுள்ள இணையதளம் போலவா? சில சமயங்களில் தொடர்பற்று போகும். ஏன் என்று யாருக்கும் தெரியாது" என்றான்.
"ஆம்," என்றாள் தாரா துடுக்குடன். "ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒவ்வொருவரும் அவர்கள் வீட்டில் தந்தி சேவை வைத்திருக்கவில்லை."
"இப்பொழுதும் எல்லோரிடமும் கணினி இல்லை. ஆனால் சிலர் தங்கள் கைபேசியுடன் மிகவும் நெருக்கமாக ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்" என்றார் பாட்டி ஒரு விஷமச் சிரிப்புடன்.
அருண் பேச்சை மாற்றும் ஆர்வத்துடன், "அடுத்தது என்ன நடந்தது? மாங்கொட்டை லண்டன் போய் சேர்ந்ததா?" என்றான்.
"ஆம். அது போய் சேர்ந்தது. தந்தியும் போனது. அந்த சிறுமி அவள் தோட்டத்தில் கொட்டையை விதைத்து அது வளர்வதற்காக காத்திருந்தாள், காத்துக்கொண்டே இருந்தாள். ஆனால் கொட்டை மரமாக வளரவில்லை. லண்டனில் பார்த்த ஒரு மாயாஜாலக் காட்சியில் மரம் வளர்ந்த வேகத்தில் இந்த மரம் வளரவில்லை. இந்தியாவிற்கு சுற்றுலா சென்று சமீபத்தில் திரும்பி வந்திருந்த ஒரு புகழ் பெற்ற மந்திரவாதி மாயாஜால மாம்பழ வித்தையை செய்து காட்டினார்."
"மாயாஜால மாம்பழ வித்தையா?"
"ஆம், அந்த புகழ்பெற்ற வித்தை தெருவிலே மந்திரவாதிகளால் பழங்காலத்திலிருந்து காட்டப்பட்டு வந்தது. மாமரத்தை கொட்டையிலிருந்து உடனடியாக வளரவைத்து விடுவார்கள். நானே அதை இருமுறை பார்த்திருக்கிறேன்."
"இப்பொழுது விளங்குகிறது!" என்று மகிழ்ச்சியாக அருண் சொன்னான்.
"ஆம்" என்று தாரா யோசனையுடன் தலை ஆட்டினாள். "மாயாஜால மாமரமாக இருந்தாலும் வளர்வதற்கு பல வருடங்களாகும்."
உங்களுக்குத் தெரியுமா?
இந்தியாவில் 1855 ஆம் ஆண்டு மின்சாரத் தந்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. 1866 ஆம் ஆண்டு பிரிட்டனும் அமெரிக்காவும் அட்லாண்டிக் மாகடல் வழியாக கம்பிவடம் மூலம் இணைக்கப்பட்டன. இந்தப் புதிய தொழில்நுட்பத்தை பிரிட்டிஷ் காலனியின் நிர்வாகம், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பலவிதமான தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தினர். ராய்ட்டர் போன்ற செய்தி அமைப்புகளும், செய்தித்தாள்களும் இந்தியாவிலிருந்தும். உலகின் மற்ற இடங்களிலிருந்தும் செய்திகளை அனுப்ப தந்தியைப் பயன்படுத்தின.
புள்ளிகள் கோடுகள் என்று இரண்டு விதமான மின்சாரத் தொடர் இயக்க நீளங்களால் செய்திகள் அனுப்பப்பட்டன. புள்ளிகள் மற்றும் கோடுகளின் தனித்துவமான சேர்க்கை வெவ்வெறு எழுத்துக்களையும், எண்களையும் குறித்தன. தந்திக் கருவியில் புள்ளி மற்றும் கோடுகளால் வரும் கிச்சொலியைக் காதுகளால் கேட்டு அந்த ஒலியின் மூலமே செய்திகளை அறிய தந்தி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர், கருவிகள் நீண்ட நாடா போன்ற காகிதத்தில் புள்ளிகளையும், கோடுகளையும் அச்சிட்டன. சில நேரங்களில் தந்தி அலுவலர்கள் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்த சக அலுவலர்களுடன் மின்சாரக் கம்பிகள் மூலம் அளவளாவியோ, சதுரங்கம் விளயாடியோ பொழுதைப் போக்கினார்கள்.
உங்களுக்குத் தெரியுமா?
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவில் மந்திரவாதிகள் வீதிகளில் செய்த மாயாஜால வித்தைகளுள் மிகவும் பிரசித்தி பெற்றது மாம்பழ வித்தை. ஐரோப்பியர்கள் இந்தியாவில் பயணம் செய்தது பற்றி எழுதிய கட்டுரைகளில் இந்த வித்தையை விவரித்திருக்கின்றனர். ஒரு கொட்டையை பூமியில் புதைத்து, தண்ணீர் ஊற்றி ஒரு கூடையில் கவிழ்த்து மூடினர். இவ்வாறு சில முறை செய்தவுடன். கொட்டை சிறிய மரமாக வளர்ந்து, மாங்காய் காய்த்தது.
நன்றியுரை
இந்தக் கதை ஆக்ஶ்பர்ட் பல்கலைக் கழகத்தின் "தற்காலத்திய வாழ்க்கையின் நோய்கள்" செயல்திட்டத்திற்கு பொதுமக்கள் இணைந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக எழுதப்பட்டது.
இதற்கு ஐரோப்பிய ஆய்வு ஆலோசனைக் குழு நிதியளித்தது (பணக்கொடை ஒப்பந்த எண் 340121)
எழுத்தாளர், தன்னுடன் இணைந்து டாக்டர். ஜீன்-மிக் கேல் ஜான்ச்டன் கதைக் கருவை உருவாக்கி, கதையை எழுதியதற்கும், பேராசிரியர். சாலி ஷிட்டில்வொர்த் மற்றும் டாக்டர். அரவிந்த தாஶ் ஆகியோரின் பெரும் ஆதரவுக்கும் நன்றி கூற விழைகிறார்.