ரிங்க்கிக்கு அவள் அண்ணனின் கையெழுத்து மிகவும் பிடிக்கும். அவன் ஒரு தனிச்சிறப்பான, பளபளப்பான மை பேனாவால் எழுதுவான்.
ஒருநாள், வீட்டில் அண்ணன் இல்லாத நேரத்தில், ரிங்க்கி அவனுடைய பேனாவைத் தேடினாள். அவள் அண்ணனுடைய மேசை இழுப்பறையைத் திறந்தாள்.
அவனுடைய புத்தகங்கள், ஒரு ‘ஸ்டேப்ளர்’ மற்றும் ஒரு உலோக அளவுகோல் இவை எல்லாம் ஒவ்வொன்றாக வெளியே வந்தன.
இழுப்பறையின் உள்ளே ரிங்க்கி தன் அண்ணனுடைய அந்தத் தனிச்சிறப்பான பேனாவைக் கண்டுபிடித்தாள். ஆனால் இது என்ன? அதனோடு ஏதோ ஒரு புதுவிதமான கருப்புநிறக் கட்டி ஒன்று ஒட்டிக்கொண்டிருக்கிறதே!
ரிங்க்கி பேனாவையும் அந்தக் கட்டியையும் இழுத்துப் பிரித்தாள். ஆனால் அப்போது...
பிளிங்! க்ளக்!
ஒரு பாட்டில் மூடி குதித்து வந்து அந்தக் கட்டியில் ஒட்டிக் கொண்டது! ரிங்க்கி மகிழ்ச்சியுடன் சிரித்தாள்.
மாயாஜாலம் போல மற்ற பொருட்களும் இந்தக் கட்டியில் ஒட்டிக்கொள்ளுமா?
ஸ்டேப்ளர் இந்தக் கட்டியில் ஒட்டிக்கொள்ளுமா? பிளிங்! க்ளக்! ஆமாம்! ஒட்டிக்கொள்கிறது!
மென்மயிர் கொண்ட இந்தப் பூனைக்குட்டி இதனுடன் ஒட்டிக்கொள்ளுமா?இல்லை! ஒட்டவில்லை!
இந்த உலோக அளவுகோல் இதனுடன் ஒட்டிக்கொள்ளுமா? பிளிங்! க்ளக்! ஆமாம்! ஒட்டிக்கொள்கிறது!
நாருடன் உள்ள இந்தப் பழுப்புநிறத் தேங்காய் இதனுடன் ஒட்டிக் கொள்ளுமா? இல்லை! ஒட்டவில்லை!
தேங்காயின் நார் ரிங்க்கியின் நாசியில் கிச்சுக்கிச்சு மூட்டியது. ஆ...ச்சூ..! அவள் சத்தமாக தும்மினாள். அவள் கையிலிருந்த பேனா பறந்துபோய் கட்டிலின் அடியில் மறைந்தது. அண்ணன் விரைவில் திரும்பி வந்து விடுவானே என்று ரிங்க்கி கவலைப்பட்டாள்.
அவள் கட்டிலின் அடியில் கையை நீட்டித் தேடினாள். ஆனால், அந்த பேனா அவள் கைக்கு எட்டவில்லை!
அவள் அளவுகோலை உபயோகித்து பேனாவை எட்ட முயற்சித்தாள். முடியவில்லை! பேனா இன்னும் தூரமாக நழுவிச் சென்றது. பேனாவை அவளருகில் கொண்டுவர மட்டும் ஏதாவது ஒரு வழி இருந்தால்..!
திடீரென ரிங்க்கிக்கு ஒரு யோசனை வந்தது!
அது மிகச்சிறந்த யோசனை!
ரிங்க்கி அந்தக் கருப்புநிறக் கட்டியை அளவுகோலின் அருகில் கொண்டு வந்தாள். பிளிங்! க்ளக்! இரண்டும் ஒட்டிக்கொண்டன! அதன் பிறகு அளவுகோலை கட்டிலின் அடியில் நீட்டினாள். கையை இன்னும் சிறிதே நீட்டினாள்.
நீட்டி… நீட்டி… நீட்டி…
பிளிங்! க்ளக்! அந்தக் கட்டியில்என்ன ஒட்டிக்கொண்டது, ஊகியுங்கள்?
சீக்கிரம், சீக்கிரம்! அண்ணன் விரைவில் வீட்டுக்கு வந்துவிடுவான்.
பேனாவும் கருப்புநிறக் கட்டியும் இழுப்பறைக்குள்ளே சென்றன. பின்னர் புத்தகங்கள், ஸ்டேப்ளர், அளவுகோல் என ஒவ்வொன்றாக உள்ளே சென்றன.
ரிங்க்கி இழுப்பறையை மூடினாள்.
சரியான நேரம்! கதவருகே காலடி ஓசை கேட்டது. அண்ணன் அறைக்குள்ளே வந்தான். “ரிங்க்கி! தேங்காய் ஏன் தரையில் கிடக்கிறது?” என்று கேட்டான்.
மாயக்கட்டியின் இரகசியம்
‘மாயஜாலக் கட்டி’ என்று இந்தக் கதையில் அழைக்கப்படுவது ஒரு ‘காந்தக்கட்டி' ஆகும். காந்தங்கள் வட்டம், செவ்வகம், சதுரம் மற்றும் ‘U’ வடிவம் என பல வடிவங்களில் இருக்கின்றன.
காந்தம் அனைத்துப் பொருட்களையும் கவர்வதில்லை. சிறப்புத்தன்மை கொண்ட தனிமங்கள் உள்ள ஒரு சில பொருட்களோடு மட்டுமே காந்தம் ஒட்டிக்கொள்ளும்.
ஒட்டிக்கொள்ளஅனுமதிக்கும் சிறப்புத்தன்மையுடைய தனிமங்கள் இரும்பு, நிக்கல் மற்றும் கோபால்ட் ஆகும்.
இப்படத்தில் உள்ளவற்றில் எவையெல்லாம் காந்தத்தில் ஒட்டிக்கொள்ளும்என நீங்கள் நினைக்கிறீர்கள்?