கிருஷ்ணக் கோனான் இருபது வயதுக் காளைப் பிராயத்தை அடைந்திருந்தான். ஒரு தவறு செய்தால், பின்னால் அதிலிருந்து பல தவறுகள் நேரிடுகின்றன என்பதற்கு இது ஓர் உதாரணமல்லவா? இருபது வருஷத்திற்கு முன்னால் கிருஷ்ணன் இந்தப் பூமியில் பிறந்தான். அதன் பிறகு அவனுடைய அனுமதியைக் கேளாமலே வயது ஆகிக் கொண்டு வந்தது. இருபது பிராயம் நிரம்பும் காலம் சமீபித்தது.
நேற்று அவனுடைய மயிலைக்காளை கெட்டுப் போய் இன்று அதை அவன் தேடி அலையும்படி நேரிட்டதற்குக் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? என்னுடைய அபிப்பிராயம், அவனுடைய பிராயந்தான் அதற்குக் காரணம் என்பது. ஒரு வேளை நீங்கள் வித்தியாசமாய் நினைக்கக்கூடும். அவன் மாட்டை கவனிக்க வேண்டிய நேரத்தில் பூங்கொடியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தது தான் அதற்குக் காரணம் என்று சொல்லக்கூடும். உண்மைதான். ஆனால் அதற்கு காரணம் அவனுடைய பிராயந்தான் என்று நான் கருதுகிறேன்.
மாசி மாதம்; அறுவடை, போரடியெல்லாம் ஆகிவிட்டது. இந்நாட்களில் கிருஷ்ணன் மத்தியானம் சாப்பிட்ட பிறகு மாடுகளை ஓட்டிக் கொண்டு அவற்றை மேயவிடுவதற்காக போவது வழக்கம். சாதாரணமாய் அறுவடையான வயல்களிலே மாடுகள் மேயும், லயன்கரை மேஸ்திரி எவனும் வரமாட்டனென்று தோன்றுகிற சமயத்தில், கிருஷ்ணன், மாடுகளை இராஜன் வாய்க்காலுக்கு அப்பால் ஓட்டுவான். கொள்ளிடத்துக்கும் இராஜன் வாய்க்காலுக்கும் மத்தியிலுள்ள அடர்ந்த காட்டில் மாடுகள் மேயும், பொழுது சாய்வதற்குள் திரும்பி ஓட்டிக் கொண்டு வந்துவிடுவான். நன்றாக இருட்டுவதற்கு முன் வீட்டுக்கு வராவிட்டால் அவனுடைய தாயார் ரொம்பவும் கவலைப்படுவாள்.
நேற்று வழக்கம்போல் அவன் மாடுகளை வயல்களில் மேயவிட்டு இராஜன் வாய்க்காலின் கரையில் உட்கார்ந்திருந்தான். பூங்கொடியின் மேல் ஞாபகம் போயிற்று. அவளைப் பார்த்தே ஒரு மாதம் இருக்கும். நெருங்கிப் பேசி எத்தனையோ நாளாகி விட்டது. இப்போதெல்லாம் அவள் வெளியிலேயே வருவது இல்லை. பாவம் நோயாளி மாமனுக்குப் பணிவிடை செய்துகொண்டு வீட்டுக்குள்ளேயே அடைந்து இருக்கிறாள்.
பெருமாள் கோனான் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி செத்தும் சாகாமலும் கிடப்பான்? அவன் செத்துப் போனால் அப்புறம் பூங்கொடியின் கதி என்ன? அவள் பிறகு அந்த வீட்டில் இருக்க முடியுமா? பெருமாள் கோனான் பெண்டாட்டி பெரிய பிசாசு அல்லவா? அவளிடம் பூங்கொடி என்ன பாடுபடுவாள்? இப்போது-மாமன் இருக்கும் போதே இந்தப் பாடுபடுத்துகிறாளே?
என்னவெல்லாமோ யோசித்த பின்னர் கடைசியாக அவன் மனம் கல்யாணத்தில் வந்து நின்றது. ஏழைப் பெண் தான்; மாமன் செத்துவிட்டால் நாதியற்றவளாகி விடுவாள்.
இக்காரணத்தினால் தன் தாயார் ஒரு வேளை தடை சொன்னாலும் சொல்லலாம். ஆனால் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் தாயார் மறுத்துச் சொன்னால் கூடக் கேட்க முடியாது என்று அவனுக்குத் தோன்றிற்று...
இப்படி அவன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில் மயிலைக் காளை இராஜன் வாய்க்காலில் இறங்கி அக்கரை போவதை அவன் கண்கள் பார்த்தன; மூளைக்குச் செய்தியும் அனுப்பின. ஆனால், அந்தச் சமயம் அவன் மூளை வேறு முக்கிய விஷயத்தில் ஈடுபட்டிருந்தபடியால் அச் செய்தியை ஏற்றுக் கொள்ளவில்லை. வேறொரு சமயமாயிருந்தால் 'பொழுது போகிற சமயம்; இப்போது மயிலைக் காளையை அக்கரை போகவிடக்கூடாது; காட்டில் புகுந்துவிட்டால் தேடுவது கஷ்டம்' என்று சொல்லி உடனே ஓடிச்சென்று மறித்து ஓட்டியிருப்பான். 'த்தா! த்தா! ஏ மயிலை! என்று இரண்டு அதட்டல் போட்டால் கூட அநேகமாய் அது திரும்பியிருக்கும். இப்போதோ பார்த்துக் கொண்டே சும்மா இருந்துவிட்டான்.
கடைசியில், மயிலைக்காளை இல்லாமலே இரவு வீடு திரும்ப வேண்டியதாயிற்று. அதன் பலனாகத்தான் கிருஷ்ணன் இன்று ஊரெல்லாம் மாசிமகத்துக்காக ஓமாம்புலியூருக்குப் போயிருக்க, தான் மாத்திரம் காட்டிலே அலைந்து கொண்டிருக்க நேர்ந்தது.
அன்று காலையில் எழுந்ததும்; அவன் பச்சை மிளகாயும், உப்பும் கடித்துக் கொண்டு பழைய சோறு சாப்பிட்டுவிட்டுக் கையில் புல்லாங்குழலுடன் கிளம்பினான். கிருஷ்ணன் புல்லாங்குழல் வாசித்தால் வெகு அபூர்வமாயிருக்கும். நல்ல சங்கீதம் கேட்டுப் பண்பட்ட காதுகளையுடையோரை அவனுடைய வேணுகானம் துரத்தி துரத்தி அடிக்கும் வல்லமையுடையது. ஆனால், அவனுடைய மாடுகளை அழைப்பதற்கு அந்த அபூர்வ கானமே போதுமாயிருந்தது. [இதை உத்தேசிக்கும் போது தான், பழைய பிருந்தாவன கிருஷ்ணனுடைய வேணுகான மகிமையிலும் எனக்குக் கொஞ்சம் சந்தேகம் உண்டாகிறது.]
இராஜன் வாய்க்காலைக் கடந்து அப்பாலுள்ள காட்டில் புகுந்தான். காடு என்றதும் வானமளாவிய விருக்ஷங்களையும், புலிகளையும், கரடிகளையும் எண்ணிக் கொள்ள வேண்டாம். நான் சொல்லும் கொள்ளிடக்கரைக் காட்டில் மூன்று ஆள் உயரத்துக்கு மேற்பட்ட மரம் ஒன்றுகூடக் கிடையாது. ஆனாலும் காடு காடுதான். முட்புதர்களும், மற்றச் செடி கொடிகளும் அடர்ந்து மனிதன் பிரவேசிப்பது அசாத்தியமாயிருக்கும். அபூர்வமாய் அங்குமிங்குமுள்ள ஒற்றையடிப்பாதை வழியாய் ஒருவன் உள் புகுந்துவிட்டால் அவனைத் தேடிக் கண்டுபிடிப்பது பிரம்மப்பிரயத்தனம் தான். பாம்புகள், கீரிகள், நரிகள் ஆகியவைதான் இந்தக் காட்டில் உள்ள துஷ்டப் பிராணிகள்.
இப்படிப்பட்ட காட்டில் கிருஷ்ணன் காலை நேரமெல்லாம் சுற்றி அலைந்தான். மத்தியானம் வரையில் தேடியும் பயனில்லை. கடைசியாக மாடு போனதுதான் என்று தீர்மானித்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினான். தண்ணீர் குடிப்பதற்காகக் கொள்ளிடத்தின் கரையோர மடுவில் இறங்கி முதலைக்கு இரையானாலும் ஆகியிருக்கலாம். அவனுடைய நெஞ்சில் பாறாங்கல்லை வைத்தது போல் பாரமாயிருந்தது.
இவ்வளவும் பூங்கொடியினால் ஏற்பட்டது என்பதை நினைக்க அவனுக்கு அவள் மேல் கோபம் வந்தது. எதற்காக அவளைப் பற்றித் தான் நினைக்க வேண்டும்? இவ்வளவுக்கும் அவள் தன்னைப்பற்றி நினைப்பதாகவே தெரியவில்லை. என்ன தான் வீட்டிலே வேலையென்றாலும், மனத்திலே மட்டும் பிரியம் இருந்தால் இப்படி இருப்பாளா? அவள் வீட்டுப்பக்கம் தான் போகும்போது கூட வெளியில் வந்து தலைகாட்டுவதில்லை. சே! அப்படிப்பட்டவளிடம் தான் ஏன் மனத்தை செலுத்த வேண்டும்? அருமையான மயிலைக் காளை நஷ்டமானதுதான் லாபம்! ('ஓய் கிருஷ்ணக் கோனாரே! உம்முடைய மூளைக் குழப்பத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வீர் போலிருக்கிறது! நஷ்டம் எப்படி ஐயா லாபம் ஆகும்?')
இருக்கட்டும்; ஆயாளையாவது திருப்தி செய்யலாம் நல்ல பணக்கார வீட்டுப் பெண்ணாகப் பார்த்துக் கட்டிக் கொள்ளலாம். இந்த அநாதைப் பெண் யாருக்கு வேண்டும். இவளை நினைக்காமல் விட்டுவிட வேண்டியதுதான். தள்ளு!
சலசலவென்று சப்தம் கேட்டது. கிருஷ்ணன் சப்தம் வந்த இடத்தை நோக்கினான். யாருடைய நினைவை ஒழிக்க வேண்டுமென்று தீவிரமாகத் தீர்மானம் செய்து கொண்டிருந்தானோ அந்தப் பெண்ணின் உருவம் புதர்களை நீக்கிக் கொண்டு வெளிவந்தது. கிருஷ்ணனைப் பார்த்ததும், திருதிருவென்று விழித்தது.
கிருஷ்ணன் - வேகமாய் நடந்துகொண்டிருந்த கிருஷ்ணன் - நின்று விட்டான்.
இரண்டு பேரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு கொஞ்ச நேரம் நின்றார்கள். பிறகு சமீபத்தில் வந்தார்கள்.
அவர்களுடைய சம்பாஷணை சாதாரணமாய் இத்தகைய சந்தர்ப்பங்களில் காதலர்களின் சம்பாஷணை எப்படியிருக்குமோ அப்படியில்லையென்பதை வெட்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொஞ்ச நேரம் சும்மா நின்றபின், கிருஷ்ணன், "நீ மகத்துக்குப் போகலையா?" என்று கேட்டான்.
"நீ போகலையா?"
"நான் தான் இங்கே இருக்கேனே; எப்படிப் போயிருப்பேன்?"
"நானுந்தான் இங்கே இருக்கேனே, எப்படிப் போயிருப்பேன்?"
"நீ என்ன, சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளையா?" என்று சிரித்துக் கொண்டே கிருஷ்ணன் கேட்டான்.
பூங்கொடி பெருமூச்செறிந்தாள். "கிளியாயிருந்தால் எவ்வளவோ நல்லாயிருக்குமே? ஒரு கஷ்டமுமில்லாமல் காட்டிலே சுகமாய் பறந்து திரிந்து கொண்டிருக்கலாமே?" என்றாள்.
கிருஷ்ணனுக்கு அவனையறியாமல் அசட்டுத்தனமாய்ப் பேச வந்தது. "நாம் இரண்டு பேரும் கிளியாய்ப் போய் விடலாம்" என்றான். பிறகு, ஏதோ நினைத்துக் கொண்டவன் போல், "ஆமாம்! பூங்கொடி! நீ ஏன் முன்னைப் போலெல்லாம் வெளியிலேயே வருவதில்லை? உன்னைக் காணவே முடிகிறதில்லையே?" என்று கேட்டான்.
"உனக்குத் தெரியாதா? சொல்ல வேணுமா? ஒரு வருஷமாய்த்தான் என்னுடைய மாமன் பக்க வாயு வந்து படுத்த படுக்கையாய்க் கிடக்காரே. மாமி ஒன்றும் அவரைச் சரியாய்க் கவனிக்கிறதில்லை. நான் தான் எப்போதும் அவர் பக்கத்தில் இருக்க வேண்டியிருக்கிறது. கொஞ்சம் அக்கம் பக்கம் போனால் கூட மாமன் கூப்பிட்டு விடுகிறார். எப்படி வெளியே வருகிறது?"
"நிஜந்தான். ஆனால் இரண்டொரு தடவை என்னைப் பார்த்தபோது கூடப் பாராதது போல போய் விட்டாயே! அது ஏன்?" என்றான் கிருஷ்ணன்.
வெட்கத்துடன் கூடிய புன்னகை அவள் முகத்தில் ஒரு கணம் தோன்றியது. "நாம் இன்னும் சின்னப்பிள்ளைகளா, என்ன? ஆண்பிள்ளைகளுடன் பேசக் கூடாதென்று மாமி ஒரு நாள் கண்டித்தாள். அவள் சொல்கிறது நியாயந்தானே? யாராவது ஏதாவது சொல்ல மாட்டார்களா?" என்றாள்.
இப்போது கிருஷ்ணன் உள்ளத்தில் ஒரு முக்கியமான கேள்வி எழுந்தது. இன்றைய தினம் பூங்கொடி எதற்காக இக் காட்டுக்கு வந்தாள்? - இந்தக் கேள்வி முன்னமே தனக்கு தோன்றாதது அவனுக்கே ஆச்சரியமாயிருந்தது. ஒருகணம், "ஒரு வேளை நம்மைப் பார்க்கத்தான் வந்திருப்பாளோ?" என்று எண்ணினான். அந்த எண்ணமே அவன் உடம்பை ஓர் அங்குலம் பூரிக்கச் செய்தது. உடனே அப்படி இருக்க முடியாதென்று தெரிந்தது. தான் காட்டில் மயிலைக் காளையைத் தேடுவது அவளுக்குத் தெரிந்திருக்க இடமில்லை. மேலும் தன்னைப் பார்த்ததும் அப்படித் திடுக்கிட்டு நின்றாளே? ஏதோ மர்மம் இருக்க வேண்டும்.
"ஆமாம், இன்று எதற்காக காட்டுக்கு வந்தாய்?" என்று கேட்டான்.
"அதைச் சொல்லக் கூடாது" என்று கூறி பூங்கொடி பக்கத்திலிருந்த புதரிலிருந்து இலைகளைக் கிள்ளிப் போடத் தொடங்கினாள்.
கிருஷ்ணனுடைய மனத்தில் இப்போது பயங்கரமான ஒரு சந்தேகம் உண்டாயிற்று. வேறு யாரேனும் ஓர் ஆண்பிள்ளையைச் சந்திப்பதற்காக ஒரு வேளை வந்திருப்பாளோ? கண்ணால் கண்டிராத - வாஸ்தவத்தில் இல்லாத - ஒரு மனிதனின் பேரில் கிருஷ்ணனுக்கு அளவிலாத அசூயை உண்டாயிற்று; சொல்ல முடியாத கோபம் வந்தது.
பூங்கொடி சற்று நேரம் தரையில் கால் கட்டை விரலால் கோடு கிழித்துக் கொண்ட முகத்துடன் கூறினாள்.
"நான் ஒன்று சொல்கிறேன். கேள்; நான் தப்புக் காரியம் எதுவும் செய்யவில்லை. சத்தியமாகச் சொல்கிறேன்; தப்பு ஒன்றும் நடக்கவில்லை. ஆனால், நான் இன்று இந்தக் காட்டுக்கு வந்தது ஒருவருக்கும் தெரியக் கூடாது. ஒருவரிடமும் சொல்லாமல் இருப்பாயா?"
"ஒருவரிடமும் நான் சொல்லவில்லை. ஆனால் எதற்காக வந்தாய் என்று என்னிடம் மட்டும் சொல்லிவிடு," என்றான் கிருஷ்ணன்.
"அதுவும் இப்போது சொல்லமுடியாது. சமயம் வரும் போது நானே சொல்கிறேன். அதுவரையில் நீ என்னைக் கேட்கக்கூடாது. இது ஒரு முக்கியமான காரியம். என்னிடம் உனக்கு நம்பிக்கை இல்லையா? நான் தப்பான காரியம் செய்வேனென்று உனக்குத் தோன்றுகிறதா?"
இப்படிச் சற்று நேரம் வாக்குவாதம் நடந்தது. கடைசியில் பெண்மைதான் வெற்றி பெற்றது. "இதோ பார், பூங்கொடி! உன்னை நான் நம்புகிறேன். ஆனால், எனக்குத் துரோகம் செய்தாயென்று மட்டும் எப்போதாவது தெரிந்ததோ, அப்புறம் என்ன செய்வேனென்று தெரியாது" என்றான் கிருஷ்ணன்.
"துரோகமா? அப்படியென்றால் என்ன?" என்றாள், பூங்கொடி.
இருவரும் இராஜன் வாய்க்கால் வரையில் சேர்ந்து போனார்கள். அங்கே கிருஷ்ணன் பின் தங்கினான். பூங்கொடி போய்க் கொஞ்ச நேரத்துக்கு பிறகு வீடு சென்றான். வீட்டுக் கொல்லையிலே மயிலைக்காளை சாவதானமாய் அசை போட்டுக் கொண்டு நின்றது.
வேறு சமயமாயிருந்தால், கிருஷ்ணன் அதை நாலு அடி அடித்திருப்பான். மகத்துக்கு ஓமாம் புலியூர் போக முடியாமல் செய்துவிட்டதல்லவா? ஆனால், அச்சமயம் அவன் உள்ளம் மிகவும் குதூகலம் அடைந்திருந்தது. எனவே, மயிலைக் காளையின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அதன் கன்னங்களை தடவிக் கொடுத்தான்.
பெருமாள் கோனாரை நேயர்களுக்கு நான் அறிமுகப்படுத்தி வைக்க முடியாமல் இருப்பதற்காக வருந்துகிறேன். ஏனெனில், கதையில் அந்தக் கட்டத்திற்கு நான் வருவதற்கு முன்னால் அவர் காலமாகி விட்டார்.
அதற்காக வருத்தப்பட வேண்டாம். அவருக்குப் பதிலாக அவருடைய மனைவியைத் தெரிந்து கொள்ளுங்கள். அந்த அம்மாளுடைய உண்மைப் பெயர் என்னமோ நமக்குத் தெரியாது. ஊரிலே எல்லாரும் பிடாரி என்று அவளை அழைத்தார்கள். அந்தப் பெயரே நமக்குப் போதுமானது.
பிடாரி, பெருமாள் கோனாருக்கு இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டாள். முதல் மனைவியிடம் கோனார் ரொம்ப ஆசை வைத்திருந்தார். அவளுக்குக் குழந்தை பிறக்காதது ஒன்று தான் கோனாருக்குக் குறையாயிருந்தது. அவள் இறந்த பிறகு, நம்முடைய சொத்துக்கு வாரிசு இல்லாமல் போகிறதே என்பதற்காக இன்னொரு தாரத்தை மணந்து கொண்டார். இரண்டாவது மனைவி அவருடைய விருப்பத்தை என்னவோ நிறைவேற்றி வைத்தாள். மூன்று குழந்தைகள் பிறந்தன. ஆனாலும், இந்தப் பிடாரியை ஏன் கல்யாணம் செய்து கொண்டோ மென்று அவர் பலமுறை வருத்தப்பட்டதுண்டு. கோனார் இறந்ததும், பிடாரி தன் தலையிலிருந்த பெரிய பாரம் இறங்கியது போல் பெருமூச்சு விட்டாள். இனிமேல் வீடு வாசல் நில புலன் எல்லாவற்றிற்கும் தானே எஜமானி. ஐந்து வயதுப் பிள்ளை மேஜராகும் வரையில் தன் இஷ்டப்படி எல்லாம் நடக்கும். ஊரையே ஓர் ஆட்டு ஆட்டி வைக்கலாம்.
ஸ்ரீமதி பிடாரிதேவியிடம் நீங்கள் அனுதாபம் காட்ட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அவள் கட்சியிலும் கொஞ்சம் நியாயம் உண்டென்பதைக் கவனிக்க வேண்டும். கோனார் ரொம்பக் கண்டிப்புக்காரர். அவரிருந்த வரையில் அவளுடைய பிடாரித் தனத்தின் முழுச் சக்தியையும் வெளிக் காட்ட முடியாமலிருந்தது. அதிலும் அவர் நோயாய்க் கிடந்த காலத்தில் படுத்தி வைத்த பாடு சொல்லத் தரமல்ல. பூங்கொடி தான் அவர் பக்கத்தில் இருக்கலாம். வேறு யாராவது பக்கத்தில் போனாலும் 'வள்வள்' என்று விழுகிறது. இதனால் இந்தப் பெண்ணுக்குத்தான் எவ்வளவு கர்வம்! அந்தக் கொட்டத்தையெல்லாம் இப்போது பார்க்கலாம்.
கோனார் காலஞ்சென்று நான்கு நாள் ஆயிற்று. வர வேண்டிய உறவு முறையினர் எல்லாரும் வந்து போய் விட்டார்கள். பிடாரி அம்மாள், வீட்டில் ஒருவரும் இல்லாத சமயம் வாசல் கதவைத் தாழிட்டு விட்டு வந்தாள். கூடத்தின் மத்தியிலிருந்த களஞ்சியத்தண்டை சென்றாள். அதன் ஓர் ஓரத்தில் பெயர்த்திருந்த இரண்டு கல்லைப் பிடுங்கி அகற்றினாள். அவ்வாறு ஏற்பட்ட துவாரத்தில் கையை விட்டாள். அச்சமயம் அவளுடைய முகத்தைப் பார்த்தவர்களுக்கு ஆட்டுப் பட்டிக்குள் நுழையும் நரியின் முகம் ஞாபகத்துக்கு வந்திருக்கக் கூடும்.
ஆனால், அடுத்த நிமிஷம் அந்த முகத்திலேயே ஏமாற்றமும் திகிலும் கலந்து காணப்பட்டன. மறுபடியும் மறுபடியும் கையை விட்டுத் துழாவினாள். கந்தல் துணி ஒன்றுதான் அகப்பட்டது.
அந்தப் பணம் எங்கே போயிருக்கும்?
பத்து நாளைக்கு முன் நரசிம்மலு நாயக்கர் வந்திருந்தார். கோனார் பெட்டியிலிருந்து அவருடைய பிராமிஸர் நோட்டை எடுத்து வரும்படி சொல்லவே, பிடாரி கொண்டு போய்க் கொடுத்தாள். நாயக்கர் அதை வாங்கிக் கொண்டு ரூ.150 நோட்டுகளாக எண்ணி வைத்தார். கோனார் அதை வாங்கி ஒரு கடுதாசியில் சுற்றித் தலையணைக்குள் செருகி வைத்துக் கொண்டார். கொஞ்ச நேரம் கழித்துப் பிடாரி அவரிடம் வந்து, "பணத்தைப் பெட்டியில் வைக்கட்டுமா?" என்று கேட்டபோது "சீ! போ! உன் காரியத்தைப் பார்!" என்று எரிந்து விழுந்தார்.
அன்றிரவு பிடாரி சமையலறைக் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு படுத்தாள். தூங்குவது போல் பாசாங்கு செய்தாலேயொழிய கண் கொட்டவேயில்லை. இரவு ஜாமத்துக்குக் கோனார் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து சுற்று முற்றும் பார்த்தார். எல்லாரும் தூங்குகிறார்களா என்று பார்த்துவிடுத் தலையணைக்குள்ளிருந்து ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டார். பிறகு மெள்ள மெள்ள நகர்ந்து சென்று களஞ்சியத்தை அடைந்தார். அந்தக் கல்லுகளைப் பெயர்த்தெடுத்த பின்னர் உள்ளே கையை விட்டு ஒரு சின்னஞ்சிரு தகரப் பெட்டியை எடுத்தார். அதற்குள் நோட்டுகளை வைத்த பிறகு மறுபடியும் முன்போல் அதைத் துவாரத்துக்குள் வைத்து மூடி விட்டுத் திரும்பப் படுக்கைக்கு வந்து படுத்துக் கொண்டார்.
இவ்வாறு கோனார் ரொக்கம் வைத்திருந்த இடத்தைப் பிடாரி கண்டு கொண்டாள். கோனார் இருக்கும் வரை அதை எடுப்பதற்கு வழியில்லை. சீக்காளி மனிதன்; களஞ்சியத்துக்கு எதிரிலேயே படுத்திருந்தார். நன்றாய்த் தூங்குவதும் கிடையாது. ஆனாலும் பணம் எங்கே போய் விடப் போகிறதென்று பிடாரி தைரியமாயிருந்தாள். அவர் இறந்த பிறகு பிடாரி விட்டை விட்டு நகரவில்லையாதலால் யாரும் எடுத்திருக்க முடியாது. பின் எப்படி அந்தப் பெட்டி மாயமாய்ப் போயிருக்கும்?
வீட்டிலுள்ள சந்துபொந்து எல்லாவற்றையும் பிடாரி சோதனை செய்து பார்த்தாள். ஒன்றும் பயன்படவில்லை. போனது போனதுதான்.
சட்டென்று பூங்கொடியின் மேல் அவளது சந்தேகம் வந்து நின்றது. 'அவள் தான் எடுத்திருக்க வேண்டும். திருடி; சாகஸக்காரி. அவளை ஒரு கை பார்க்கிறேன்' என்று பிடாரி மனதுக்குள் எண்ணினாள்.
மறுநாள் பூங்கொடியைக் கூப்பிட்டு, "இதோ பார்! நிஜத்தைச் சொன்னாயானால் பேசாமல் விட்டு விடுகிறேன். நீ ஏதாவது பணம் எடுத்தாயா?" என்று கேட்டாள். பூங்கொடி அதற்கு, "நான் ஒருத்தர் பணத்தையும் எடுக்கவில்லை. பிறத்தியார் பணம் எனக்கு எதற்கு?" என்றாள். எவ்வளவோ நயத்திலும் பயத்திலும் கேட்டும் வேறு பதில் அவளிடமிருந்து வரவில்லை.
கோனாருக்குப் பதினாறாம் நாள் சடங்கு முடிந்தது. அதற்கு மறுதினம் பிடாரி பூங்கொடியைக் கூப்பிட்டு, "அடியே, இங்கே பார்! நீதான் பணத்தை எடுத்திருக்க வேண்டும். வேறு யாரும் திருடன் வந்து விடவில்லை. பணத்தைக் கொடுத்தாயோ இந்த வீட்டில் இருக்கலாம். இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியேறிவிடு!" என்றாள்.
"அப்படியே ஆகட்டும். நீ இப்படிச் சொல்ல வேண்டுமென்றுதான் காத்துக் கொண்டிருந்தேன். என் மாமன் இருந்த வீட்டில் அவர் இல்லாமல் கொஞ்ச நேரமும் இருக்கச் சகிக்கவில்லை. இப்பொழுதே போய் விடுகிறேன்" என்றாள் பூங்கொடி.
அன்று காட்டில் பூங்கொடியைச் சந்தித்துப் பேசியதிலிருந்து கிருஷ்ணக் கோனாருடைய மனம் ரொம்பக் குழம்பியிருந்தது. காரியமெல்லாம் தாறுமாறாகச் செய்து வந்தான். பிண்ணாக்கைக் கொண்டு போய்த் தொட்டியில் போடுவதற்குப் பதிலாகக் கிணற்றில் போட்டான். எருமைக் கன்றுக் குட்டியை பசுமாட்டில் ஊட்டவிட்டான். கறவை மாட்டுக்கு வைக்க வேண்டிய பருத்திக் கொட்டையைக் கடாமாட்டுக்கு வைத்தான்.
தனக்குத்தானே பேசிக்கொள்ளத் தொடங்கினான்.
"நாம் இரண்டு பேரும் கிளியாய் பறந்து போய்விடுவோமா?" என்று இறைந்து சொல்லிவிட்டுக் கலகலவென்று சிரிப்பான். "எனக்கு மட்டும் துரோகம் செய்தாயோ?" என்று கூறிப் பல்லை நறநறவென்று கடிப்பான். அன்று இராஜன் வாய்க்கால் கரையில் பூங்கொடியைப் பிரிந்த சமயத்தில் ஒரு கையினால் அவளுடைய மோவாய்க்கட்டையை நிமிர்த்திப் பிடித்துக் கொண்டு தன்னுடைய முகத்தை அருகில் கொண்டு போனதும், அவள், "சீச்சீ! நாம் இன்னும் சின்னப் பிள்ளைகளா?" என்று உதறிக் கொண்டு ஓடிப்போனதும் எப்போதும் அவன் மனக்கண்முன் நின்றது. சில சமயம் அவளுடைய உருவம் அதே நிலையில் எதிரில் நிற்பதுபோல் தோன்றும். அப்போது அவனுடைய கைகளும் முகமும் கோரணிகள் செய்யும் "தெரியுமா? என்னை மறக்கக்கூடாது!" என்பான்.
இவற்றையெல்லாம் கவனித்த அவனுடைய தாயார் "ஐயோ! என் மகனுக்கு மோகினி பிடித்து விட்டதே!" என்று தவித்தாள். அவளுடைய உறவு முறையாருக்குள் கலியாணத்துக்குத் தகுதியாயிருந்த பெண்களைப்பற்றியெல்லாம் விசாரிக்கத் தொடங்கினாள்.
இலையிலே சோற்றை வைத்துக் கொண்டு சாப்பிடாமல் மகன் என்னவோ யோசனை செய்து கொண்டிருப்பதைக் காணும்போது, "அடே அப்பா! உனக்கென்னடா இப்படி வந்தது?" என்பாள். கிருஷ்ணன், "சீ! போ! உன்னை யார் கேட்டது?" என்று வள்ளென்று விழுவான். "ஐயோ! என் மகன் இப்படி ஒரு நாளும் இருந்ததில்லையே, மாரியாத்தா என் மகனைக் காப்பாற்றடி! உனக்குப் படையல் வைக்கிறேன்," என்று வேண்டிக் கொள்வாள்.
பெருமாள் கோனார் செத்துப் போனதிலிருந்து கிருஷ்ணனுடைய மனக்குழப்பம் இன்னும் அதிகமாயிற்று. பூங்கொடி தாய் தந்தையற்ற அநாதையென்பதும் அவளுக்கு மாமன் வீட்டைத் தவிர வேறு போக்கிடம் கிடையாதென்பது ஊரில் எல்லாருக்கும் தெரியும். பெருமாள் கோனார் உயிரோடிருக்கும் வரை அபிமானமாய் வைத்துக் கொண்டிருந்தார். இனிமேல் அவளை யார் கவனிப்பார்கள்? பிடாரி அவளை வதைத்து விடுவாளே?
ஒரு நாள் கிருஷ்ணன் தாயாரிடம் "ஏன், ஆயா பெருமாள் கோனார் செத்துப் போனாரே? இனி மேல் அந்தப் பெண் என்ன செய்யும்?" என்று கேட்டான்.
"எந்தப் பெண்ணடா?"
"அதுதானம்மா, பூங்கொடி!"
"அவளை அந்தப் பிடாரி துரத்தி விடுவாள் சீக்கிரம். இப்போதே திருட்டுப்பட்டம் கட்டி விட்டாளே, தெரியாதா உனக்கு?"
"அது என்ன, அம்மா?" என்று கிருஷ்ணன் பரபரப்புடன் கேட்டான்.
"கோனார் ரொக்கப் பணம் வைத்திருந்தாராம். அதைக் காணுமாம். பிடாரி அந்த அநாதைப் பெண் மேலே பழியைப் போடுகிறாள். அவள் தான் எடுத்து விட்டாள் என்கிறாள். அந்தப் பெண் அப்படிச் செய்திருக்கவே செய்திருக்காது. ஏதாவது பழிவைத்துத்தானே வீட்டை விட்டுத் துரத்த வேண்டும்?"
கிருஷ்ணனுடைய நெஞ்சில் முள் தைத்தது போல் சுருக்கென்றது. அன்றைய தினம் காட்டிற்கு அவள் தனியாக வந்திருந்ததும், தன்னைக் கண்டு திகைத்து நின்றதும், எதற்காக வந்தாய் என்று கேட்டதற்குப் பதில் சொல்லாமல் மூடு மந்திரம் செய்ததும் ஞாபகத்திற்கு வந்தன. உண்மையில் அந்தப் பெண் திருடிதானோ? இந்த எண்ணம் அவனுடைய நெஞ்சில் அளவிலாத வேதனையை உண்டாக்கிற்று.
எவ்வளவுதான் யோசித்தாலும், அவன் ஒரு முடிவுக்கே வர வேண்டியிருந்தது. பிடாரி சொல்வது நிஜந்தான். பூங்கொடி தான் பணத்தை எடுத்திருக்க வேண்டும்! அதை எங்கேயோ ஒளிப்பதற்குத்தான் அன்று காட்டிற்கு வந்திருக்கிறாள். இந்தச் சந்தேகம் தோன்றவே, அன்றைய தினத்திலிருந்து கிருஷ்ணன் மாடுகளை ஓட்டிக் கொண்டு காட்டிற்குப் போன போதெல்லாம் சுற்று முற்றும் பார்த்த வண்ணம் இருந்தான். பூங்கொடி பணம் ஒளித்து வைத்திருக்குமிடம் தன் கண்ணில் ஒரு வேளை பட்டுவிடுமோ என்று அவனுடைய நெஞ்சில் திக்குத்திக்கென்று அடித்துக் கொண்டேயிருந்தது.
பெருமாள் கோனாரின் கருமாதிக்கு மறுநாள் காலை கிருஷ்ணன் பழையசோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது அடுத்த வீட்டுக்காரி, "அமிர்தம்! சங்கதி கேட்டாயா?" என்று சொல்லிக் கொண்டு வந்தாள்.
"என்ன சமாசாரம்?" என்று அமிர்தம் கேட்டாள்.
"பிடாரி, பூங்கொடியை வீட்டை விட்டுப் போகச் சொல்லிவிட்டாள். அந்தப் பெண் அழுதுகொண்டே கிளம்பிப் போகிறது."
"ஐயோ பாவம்! அது எங்கே போகும்?" என்றாள் அமிர்தம்.
"அது என்ன கர்மமோ? போக்கிடம் ஏது அதற்கு? எங்கேயாவது ஆத்திலே குளத்திலே விழுந்து செத்து வைத்தாலும் வைக்கும்..."
கிருஷ்ணன் அதற்குமேல் கேட்கவில்லை. சட்டென்று எழுந்திருந்து கையலம்பிவிட்டு வாசலில் வந்து பார்த்தான். பூங்கொடி தெருவைத் தாண்டி அப்பாலுள்ள பாதையில் போவதைக் கண்டான். இவன் குறுக்கு வழியாக வயல்களில் விழுந்து சென்று அந்தப் பாதையில் அவளுக்கு முன்னால் சென்று ஏறினான்.
பூங்கொடியின் எதிரில் சென்று வழிமறித்து நின்று கொண்டு, "எங்கே போறே?" என்று கேட்டான்.
"நான் எங்கே போனால் யாருக்கென்ன?" என்று பூங்கொடி சொல்லிக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
"சொல்லாது போனால் நான் விடமாட்டேன்," என்றான் கிருஷ்ணன்.
"சீர்காழிக்குப் போறேன்; அங்கே மில்லிலே வேலை செய்து பிழைக்கலாமென்று"
"ஏன் இத்தனை நாள் இருந்த ஊரை விட்டுப் போக வேணும்?"
"போகாதே பின்னே எங்கேயிருக்கிறது? மாமி வீட்டை விட்டுப் போகச் சொல்லிவிட்டாள்."
"ஏன் அப்படிச் சொன்னாள்? அவளுக்கு உன் மேலே என்ன கோபம்?"
பூங்கொடி சற்று நேரம் சும்மா இருந்தாள். பிறகு, "உனக்கென்ன அதைப்பற்றி? எனக்கும் அந்த வீட்டிலே இருக்கப் பிடிக்கலை; நான் போகிறேன்," என்றாள்.
"நான் சொல்கிறேன் கேள் பூங்கொடி! அந்த நாயின் பணம் உனக்கு வேண்டாம். ஒருத்தருக்கும் தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து அந்த வீட்டிலேயே எறிந்துவிடு...நாம்"
"நீ கூட என்னைத் திருடி என்று தானே நினைக்கிறாய்? நான் எதற்காக உயிரோடு இருக்கவேணும்? விடு நான் போகிறேன்" என்று சொல்லிப் பூங்கொடி அழத் தொடங்கினாள்.
கிருஷ்ணன் சிறிது நேரம் சும்மா இருந்தான். பிறகு, "சரி, வா! போகலாம்!" என்றான்.
"எங்கே?"
"வீட்டுக்கு."
"எந்த வீட்டுக்கு?"
"எந்த வீட்டுக்கா? என் வீட்டுக்குத்தான். சீர்காழிக்கு நீ போகவும் வேண்டாம்; மில்லில் வேலை செய்யவும் வேண்டாம். நானிருக்கிற வரையில் அது நடக்காது."
"உன் வீட்டுக்கு வந்தால்...அப்புறம்?"
"புரோகிதரைக் கூப்பிட்டுக் கல்யாணத்துக்கு நாள் வைக்கச் சொல்றது!"
"திருடியைக் கட்டிக் கொண்டாய் என்று ஊரிலே சொல்ல மாட்டார்களா? உனக்கு வெட்கமாயிராதா?"
"யாராவது உன்னை அப்படிச் சொன்னால் அவர்கள் நாக்கை அறுத்துவிடுவேன். அவர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது."
"உன் ஆயா சம்மதிப்பாளா? அங்கே போய் மறுபடியும் வீட்டை விட்டுப் போகச் சொன்னால்?"
"ஆயா அப்படிச் சொன்னால் உன்னோடு நானும் வீட்டை விட்டுக் கிளம்பி வந்துவிடுகிறேன். அப்பொழுது இரண்டு பேருமாய்ப் போவோம்."
"சத்தியமாய்ச் சொன்னால் தான் வருவேன்."
"சத்தியமாய்ச் சொல்றேன். வா, போகலாம்!"
சுபதின, சுபலக்னத்தில் கிருஷ்ணக் கோனானுக்கும் பூங்கொடிக்கும் விவாக மகோற்சவம் நடந்தேறியது. ஸ்ரீமதி பிடாரி அம்மாளைத் தவிர மற்றபடி ஊராரெல்லாம் விஜயம் செய்து தம்பதிகளை ஆசீர்வதித்தார்கள். இவ்வளவு நல்ல பெண்ணின் பேரில் திருட்டுப் பழியைச் சுமத்தி வீட்டை விட்டுத் துரத்திய பிடாரியைத் தூற்றாதவர்கள் இல்லை. அவ்வாறே கிருஷ்ணனைப் புகழ்ந்து போற்றாதவர்களும் அந்த ஊரில் கிடையாது. எல்லாரிலும் அதிக குதூகலத்துடன் விளங்கியவள் கிருஷ்ணனுடைய தாயார் அமிர்தம்தான். தனக்குப் பேச்சுத் துணைக்கும், ஏவின வேலை செய்வதற்கும் மருமகள் ஆச்சு; பிள்ளைக்கும் புத்தி தெளிந்து முன்னைப் போல் நன்றாயிருப்பான்.
கலியாணச் சந்தடி அடங்கிய அடியோடு ஒரு நாள் காலையில் பூங்கொடி கிருஷ்ணனிடம் "காட்டுக்குப் போய் விட்டு வரலாம், வா!" என்று சொன்னாள்.
"இப்போது எதற்குக் காட்டுக்கு?"
"ஒரு காரியம் இருக்கிறது. 'நீ ஒன்றும் என்னைக் கேட்காதே; நானாகச் சொல்கிறேன்' என்று அப்போது சொல்லவில்லையா? அந்தச் சமாசாரத்தை இன்று தெரிவிக்கிறேன், வா!"
கிருஷ்ணனுக்கு விஷயம் தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆவலாயிருந்தது; ஆனால் காரியம் என்னவோ சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. வேண்டா வெறுப்பாய் வருவதாக ஒத்துக் கொண்டான்.
பூங்கொடி இராஜன் வாய்க்காலில் குளிக்கச் செல்வது போல் முதலில் போனாள். கிருஷ்ணன் பின்னோடு மாடுகளை ஓட்டிக் கொண்டு சென்றான்.
அக்கரைச் சேர்ந்ததும், பூங்கொடி துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடத் தொடங்கினாள். மெதுவாகத் தயக்கத்துடன் நடந்த கிருஷ்ணனைச் சில சமயம் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள். கிருஷ்ணனுடைய நெஞ்சு மேலும் மேலும் படபடவென்று அடித்துக் கொண்டது. கடைசியாக ஓர் ஆலமரத்தடியில் போய்ச் சேர்ந்ததும், பூங்கொடி கிருஷ்ணன் கையை விட்டுவிட்டு அந்த மரத்தின் மேல் தாவி ஏறினாள். இரண்டு கிளைகளுக்கு மத்தியில் புல்லுருவிகளால் மூடப்பட்டிருந்த ஒரு பொந்தினுள் கையைவிட்டு, அதற்குள்ளிருந்து ஒரு சிறு தகரப்பெட்டியை எடுத்தாள். "இந்தா!" என்று கிருஷ்ணனிடம் நீட்டினாள்.
"என்ன அது?"
"வாங்கிப் பாரேன்"
கிருஷ்ணன் பெட்டியை வாங்கித் திறந்து பார்த்தான். உள்ளே ரூபாய் நோட்டுகளும் பவுன்களும் இருந்தன.
'கடைசியில், இவள் திருடிதானா?' என்று கிருஷ்ணன் எண்ணினான். அந்த நினைப்பை அவனால் சகிக்கவே முடியவில்லை. அதிலும் 'பிடாரி சொன்னதும் நிஜம். அவள் இவளை வீட்டைவிட்டுத் துரத்தியதும் நியாயம்' என்று எண்ணியபோது அவனுடைய தலையை யாரோ பிளப்பது போலிருந்தது.
"இதை எதற்காக என்னிடம் கொடுத்தாய்?" என்று கிருஷ்ணன் கோபமாய்க் கேட்டான்.
"சொத்தைச் சொத்துக்குரியவர்களிடம் கொடுத்து விடவேண்டுமென்று நீ அப்போதே சொல்லவில்லையா?"
"ஆமாம்; என்னைக் கொண்டு போய்ப் பிடாரியிடம் கொடுக்கச் சொல்கிறாயா?"
"நீ என்ன வேண்டுமானாலும் செய்; யாரிடம் வேண்டுமானாலும் கொடு. உன்னுடைய சொத்தை உன்னிடம் நான் சேர்ப்பித்து விட்டேன்," என்றாள்.
கிருஷ்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னவோ புதிர் போடுவது போலிருந்தது. "என்ன உளறுகிறாய்?" என்று கேட்டான்.
"நான் ஒன்றும் உளறவில்லை. அதற்குள் ஒரு கடுதாசி இருக்கிறது; எடுத்து வாசித்துப் பார்!" என்றாள் பூங்கொடி.
கிருஷ்ணன் ஆவலோடு கடுதாசை எடுத்து வாசித்தான். அதில் பின் வருமாறு எழுதியிருந்தது;
"முத்துக் கோனான் மகன் பெருமாள் கோனான் சுயப் பிரக்ஞையுடன் மனப்பூர்வமாய் எழுதி வைப்பது என்னவென்றால் இந்தப் பெட்டியில் நானூற்றிருபது ரூபாய் பணமும், பன்னிரண்டு முழுப்பவுனும் இருக்கின்றன. இந்தப் பணம், பவுன் எல்லாம் என்னுடைய சுயார்ஜிதம். இந்தத் தொகை முழுவதையும் என்னுடைய கண்ணான மருமகள் பூங்கொடிக்குக் கலியாணப் பரிசத்துக்காக எழுதி வைக்கிறேன். அவளைக் கலியாணம் பண்ணிக் கொள்கிறவன் இது எல்லாவற்றையும் அடைய வேண்டியது. பணத்தை வீண் செலவு செய்யாமல் நிலம் வாங்குவதற்காவது வீடு கட்டிக் கொள்ளவாவது உபயோகிக்க வேண்டியது.
"இந்த விஷயம் வெளியில் தெரிந்தால், பூங்கொடியை என்னுடைய பெண்சாதி கஷ்டப்படுத்தி ஒருவேளை உயிருக்கே அபாயம் செய்வாளென்று பயந்தும், இன்னும் பணத்துக்கு ஆசைப்பட்டு யாராவது உபயோகமற்றவன் அவளைக் கலியாணம் செய்து கொள்ள முயற்சிக்கலாமென்று நினைத்தும் பூங்கொடிக்குக் கலியாணம் ஆகும்வரை இந்த விஷயத்தை வெளிப்படுத்தாமல் இரகசியமாய் வைத்திருக்கவேணுமென்று சத்தியம் வாங்கியிருக்கிறேன். பெட்டியை எங்காவது பத்திரமாய் ஒளித்து வைத்திருக்கும்படி பூங்கொடியிடம் ஒப்புவித்திருக்கிறேன்.
"இந்தச் சொத்தை அடைகிறவன் என்னுடைய மருமகளுக்கு ஒருவித மனக்குறையுமின்றி எப்போதும் சந்தோஷமாய் வைத்திருக்க வேண்டியது."
மேற்படி கடிதத்தைப் படித்துவிட்டுச் சற்றுநேரம் யோசித்ததில், கிருஷ்ணனுக்கு எல்லாம் விளங்கிவிட்டது. மாசி மகத்தன்று வீட்டில் ஒருவரும் இல்லாத சமயத்தில் பெருமாள் கோனார் பூங்கொடியிடம் அந்தப் பெட்டியைக் கொடுத்துப் பத்திரப்படுத்தும்படி சொல்லியிருக்க வேண்டும். மயிலைக் காளை கெட்டுப் போன அன்று, தான் காட்டில் அவளைச் சந்தித்தன் இரகசியம் அதுதான்.
பூங்கொடியும், அவளுடைய சீதனமும் தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்துக்கெல்லாம் மூலகாரணம் மயிலைக் காளை தான் என்பது கிருஷ்ணனுடைய நம்பிக்கை. யாராரோ வந்து நல்ல விலைக்கு அதை வாங்கிக் கொள்வதாகச் சொன்னார்கள். கிருஷ்ணன் அதை விற்க மறுத்து விட்டான். ஒரு சின்ன வண்டி வாங்கி அதில் மயிலைக் காளையை ஓட்டிப் பழக்கினான். தன்னையும் பூங்கொடியையும் தவிர அந்த வண்டியில் வேறு யாரும் உட்காருவதற்கு அவன் அனுமதிப்பதில்லை.