mazhai veyilellaam eppadiyirukku

மழை வெயிலெல்லாம் எப்படியிருக்கு

சுட்டெரிக்கும் வெயில். நடுநடுங்க வைக்கும் குளிர். ஒரு எக்கச்சக்க மழை. மறுபக்கம் மழையே இல்லை. பனி கொஞ்சமாகப் பொழிகிறது. காற்றில் கார்பன் கொட்டிக் கிடக்கிறது. கிரிஸ்லி கரடி நெடுந்தூக்கம் போடவா வேண்டாமா என்று குழப்பத்தில் இருக்கிறது. பென்குவின் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவிக்கிறது. கங்காருவோ காட்டுத் தீயிலிருந்து தப்பிக்க வழி தேடுகிறது. சுறுசுறுப்பாகத் திரிந்துகொண்டிருந்த தேனீக்கள் பூச்சிக்கொல்லிகளால் சோம்பேறியாகித் தூங்கி வழிகின்றன. உலகமே பருவநிலை மாற்றத்தால் படாதபாடு படும்போது, மனிதர்கள் நாம் விழித்துக்கொள்ள வேண்டாமா?

- Veronica Angel

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அன்புள்ள வாசகரே,

ஒரு பிரச்சினை. ரொம்பவே பெரிய பிரச்சினை. அது எவ்வளவு பெரிதென்றால், நம் பூமி முழுவதையும் பாதிக்கக்கூடிய பிரச்சினை. அதுதான் பருவநிலை மாற்றம்.

பல பசுங்குடில் வாயுக்களையும் மாசுபடுத்தும் நுண்பொருள்களையும் நாம் வளிமண்டலத்துக்கு அனுப்பிக்கொண்டே இருக்கிறோம். அதனால் வெள்ளம், வறட்சி, வெப்ப அலை, புயல், இன்னும் பல இயற்கைச் சீற்றங்கள் உலகெங்கும் நிகழ்கின்றன. உங்களையும் என்னையும் சேர்த்து எல்லா உயிர்களையும் அவை பாதிக்கின்றன.

ஆனால், நம்மால் இதை மாற்ற முடியும்! மரங்கள் வெட்டப்படாமல் காப்பது, மறுசுழற்சி - மறுபயன்பாடு - குறைவான பயன்பாடு - பயன்பாட்டை மறுப்பது, எல்லா உயிர்களையும் மதிப்பது, சுற்றுச்சூழலுக்கு இணக்கமான செயல்பாடுகளைச் செய்வது ஆகியவற்றின் மூலமாக நம்மால் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

அர்ச்சனா (பகுதிநேர ஓவியர், முழுநேரமும் உயிரினங்களை நேசிப்பவர், மர-சிகிச்சையால் பலமுறை காப்பாற்றப்பட்டவர்)

நம் பூமிக்காக, பிஜல் (முணுமுணுக்கும் இந்த எழுத்தாளர், பருவநிலை மாற்றத்தால் கவனம் சிதறிப் போயிருக்கிறார்)

பின்குறிப்பு: இதை நாம் ஒன்றிணைந்து செய்வோம்!

அன்புள்ள பென்குவின்,

அங்கே வானிலை எப்படி இருக்கு? இங்கே ஒரே மந்தமாத்தான் இருக்கு.

ம்ம்... ம்ம்க்க்கும்!

கடல்நாய்கள் கூட தலைமறைவாயிடுச்சு. மத்தியான சாப்பாட்டு நேரமாச்சு… ஐயோ எப்போ எல்லாரையும் நான் கண்டுபிடிச்சு? சரி விடு.

ம்ம்ம்… ம்ம்க்க்கும்!

தகிக்கும் வெப்பத்துடன், பனியில்லா பனிக்கரடி. பி.கு: மொசைக் வால் எலியிடமிருந்து ஏதேனும் செய்தி உண்டா?

அன்புள்ள பனியில்லா பனிக்கரடியே

இங்கும் வெப்பம். வெப்பமோ வெப்பம்! ரொம்ப ரொம்ப வெப்பம். என்னால தாங்க முடியல. இங்க இருக்கவே முடியல. அட சுத்தமா எதுவுமே முடியல! துடுப்பு இறக்கை இரண்டையும் படக் படக்குனு அடிச்சுகிட்டே இரையைத் தேடிப் போறோம் நீந்தி நீந்தி மீனெல்லாம் ரொம்ப தூரம் போயிடுச்சு. தூரம்னா தூரம் ரொம்ப ரொம்ப தூரம். படக் படக்… மீனைத் தேடி நானும் தடக் படக்…

இப்படிக்கு, அ... (அய்யோ சுடுதே) அன்புள்ள பென்குவின் பி.கு. கொஞ்ச நாளாவே எலிகள் கண்ணுல படல. என்ன ஆச்சுன்னு பார்த்து சொல்லுறேன்

ஓஹோய்ய்…

யம்...ய்ம்... இங்க சூடு இல்ல. கொஞ்சம்கூட இல்ல. இங்க வேணுமுன்னா வர்றியா? பர்ர்ர்ர்… பறக்க முடியாத அளவு குளிர்ர்ர்ரு... (உன்னாலதான் பறக்க முடியாதே, அதனால பிரச்சினை இல்லையே! அப்படித்தானே பென்குவின்?)

இப்படிக்கு, பறக்கும் (ஆங்… இப்போ பறக்கல) அணில். பி.கு. மன்னிக்கவும். மொசைக் வால் எலியிடமிருந்து இதுவரை எந்த கீச்சிடும் சத்தமும் கேட்கவில்லை..

ஹலோ,

இங்க ஒரே மழை. பேய் மழை! நாங்க ஏதோ இருக்கோம், உயிரை கையில பிடிச்சுக்கிட்டு.

இப்படிக்கு, எறும்பு. பி.கு. என்னடா இது! எலி மட்டுமில்ல… என்னோட கல்கண்டையும்கூட காணலையே. சட்டுபுட்டுன்னு போலீசைக் கூப்பிடுங்க.

ஏம்பா ஏய்! சும்மா எதுக்கெடுத்தாலும் குறை சொல்லிகிட்டு… மழையில உன் கல்கண்டெல்லாம் கரைஞ்சு போயிருக்குமப்பா! உங்க மழை மேகத்த இங்க கொஞ்சம் அனுப்பி வெச்சா நல்லாயிருக்கும். ஆமா! கடல்நீரில் அமிலத்தன்மை கூடிப்போனதால என் வயித்துக்குள்ள ஒரே பொருமல். ஏர்ர்ர்வ்ப்ப்ப்… கடல்ல கார்பன் அளவு கூட கூடி போச்சு. ப்ருருப்ப்ப்… ஏய் யப்பா... சூடு ஏறுறதுக்குள்ள எனக்கேத்த ஓடு ஒன்னு கண்டுபிடிக்கணும். இல்லேன்னா, என் ஓடு உன் கல்கண்டைப் போல கரைஞ்சுடும். உஸ்ஸ்ஸ்!

இப்படிக்கு, எரிச்சலுடன், துறவி நண்டு பி.கு. ஆமா… தங்கத் தேரையக் கொஞ்சம் நாளா காணலியேப்பா. எனக்கென்னவோ எலியும் தேரையும் மழை பெய்யுற இடமா பார்த்து உல்லாசமா ஊர் சுத்த போயிருப்பாங்கன்னு தோணுது. ஹா ஹா!

கரடிக்கபடி… கபடிக்கரடி… கேளு! என் வாழ்க்கை ரொம்பவே குழப்பமா இருக்கு. இங்கே மரங்களும் குறைஞ்சிடுச்சு, தண்ணீரும் குறைஞ்சிடுச்சு. அதனால விதைகள் குறைஞ்சிடுச்சு. ஆனாலும் குஜாலு! என் அம்மா கரடி, கில்லாடி (பனிக்கரடி இல்ல. கிரிஸ்லி கரடி!) எப்படியோ தேடி விதைகளிருக்கும் இடத்தைக் கண்டுபிடிச்சிருச்சு. நான் மூக்கு முட்ட சாப்பிட்டதால வயிறு பந்து மாதிரி உருண்டையா பெருத்துக் கிடக்கு. கேளு… அப்புறம் பனி பெய்ஞ்சது. எப்பவும் என்ன பண்ணுவோம்? மூட்ட முடிச்சு எல்லாத்தையும் கட்டிக்கிட்டு குகைக்குள்ள நெடுந்தூக்கம் போடப் போயிடுவோம். ஆனா எப்பவும்போல, இப்போ இல்லையே? பனி ரொம்ப சீக்கிரமாப் பொழியுதே! நெடுந்தூக்கம் போடுறதுக்கு குகைக்கு நாங்க ஓடினோம். ஆனா, இன்னும் போதுமான அளவு சாப்பிடலையே! அதனால திரும்பவும், சாப்பாடு தேடி வெளியே ஓடினோம். இப்போ வயிறு கோளாறாயிடுச்சு. மனசும் குழம்பிக் கிடக்கு. இப்போ நெடுந்தூக்கம் போடணுமா? தூங்காம இருக்கணுமா?

இப்படிக்கு, பசியுடனும் குழப்பத்துடனும் கரடி. (பனிக்கரடி இல்ல. கிரிஸ்லி கரடி!) பி.கு. தூங்கி எந்திரிச்ச பிறகு தங்கத் தேரையையும் எலியையும் தேடிப் பாக்குறேன்! இனிய இரவு!

ஆஹா! கொடுத்து வைத்த கரடியே (பனிக்கரடி இல்ல. கிரிஸ்லி கரடி!),

குளிர்காலம் முழுவதும் இங்கு சரியாகப் பனி பொழியவில்லை. அதனால் நான் மேலே ஏறினேன், மேலே மேலே ஏறிப் போனேன், பனியில் நனைய. அதனால், என் இரையோ கீழே, கீழே இறங்கிப் போனது. அதன் உணவைத் தேடிக்கொண்டு. நானும் இறங்கினேன். மீண்டும் ஏறினேன். ஏறிய நான் இறங்கினேன். இறங்கிய பின் ஏறினேன். அய்யகோ! இந்த அடர்ரோமத்தை வைத்துக்கொண்டு வெயிலில் உலவ வேண்டி இருக்கிறதே! அப்புறம் சேற்று மண்ணில் உருளுவது பனியில் உருளுவதற்கு ஈடாகுமா?

இப்படிக்கு, சிடுசிடுப்புடன் பனிச்சிறுத்தை பி.கு. தேரையையும் எலியையும் பார்க்கவில்லை. சிறிது ஓய்வெடுத்த பின் பார்த்து சொல்கிறேன். பங்குனி ஆமையிடம் கேட்டுச் சொல்கிறேன்.

தீ.... காட்டுத் தீ....! சுற்றிலும் புகை எங்களைச் சூழ, நாங்களோ அங்குமிங்கும் பயந்து ஓட, பசித்த பூதம் போல அது பாயுது.

டிஷ் டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்! சூழ்ந்த தீயோடு குத்துச்சண்டை போட்டேன். பொசுங்கிவிட்ட கை. இப்போ எழுத முடியாது.

சிடுசிடு பனிச்சிறுத்தையே. மன்னிச்சிக்கோ! ஹைக்கூ கவிதை எழுதக்கூடிய பருவநிலை இங்கே இல்லை. கவிக்குட்டி கங்காரு. பி.கு. பங்குனி  அக்கா என்ன சொல்லுச்சுன்னா, நம்ம கோலா

அன்புள்ள சுறுசுறுப்பான தேனீயே,

நாங்கள் எங்கே போவோம்? நீயே சொல்லு! இங்கேயுள்ள ஏரி நீரும் உப்புக் கரிக்குது. அங்கேயுள்ள ஏரி நீரும் உப்புக் கரிக்குது. எங்கே போனாலும் ஏரி நீர் உப்புத்தான் கரிக்குது. உப்பு கரிக்காத ஏரியை நோக்கி நாங்கள் பறந்து செல்கிறோம்.

இப்படிக்கு, சிறுசிறு பிராத்தனைகளுடன் பறந்துகொண்டே. ஊசிவால் வாத்து. பி.கு. பங்குனி ஆமை புதிய கடற்கரைக்குச் சென்றிருக்குமோ? என் கடிதங்களுக்கு பதில் எழுதுவதை, அது நிறுத்திவிட்டது. மன்னிக்கவும், தேரை, எலியை எனக்குத் தெரியாது.

உய்ங்ங்ங்… உப்ஸ்ஸ்ஸ் உய்ங் உய்ங்… உப்ஸ்ஸ்ஸ் ஸ்வைங்ங் ஸ்ஸ்ஸ்ஸ்

மன அழுத்தத்துடன் தூங்கி வழியும் தேனீ... பி.கு. பஸ்ஸ்ஸ்

பெறுநர் தங்கத் தேரை

பெறுநர் மொசைக் வால் எலி

பெறுநர் மொசைக் வால் எலி

அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பவும்

அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பவும்

அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பவும்

பெறுநர் பங்குனி ஆமை

அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பவும். நீரின் வெப்பம் அதிகரித்ததால் இப்போ கடற்கரைக்கு வருவதில்லை. புதிய முகவரி தெரியவில்லை.

மனிதர்களுக்கு

நம் அனைவரின் வீடான பூமிக்கு ஒரு கடிதம் எழுதுங்கள்: பருவநிலை மாற்றத்துக்கு எதிரான சாம்பியன் ஆகலாம் வாருங்கள்.

உலக இயற்கை நிதியத்தின் இந்தியக் கிளை (WWF-India), பிரதம் புக்ஸின் ‘மழையும் வெயிலும் எப்படியிருக்கு?’ புத்தகத்தை ஆதரிக்கிறது. இந்த ஓவியப்புத்தகம், பருவநிலை மாற்றம் போன்ற சிக்கலான சூழலியல் பிரச்சினைகள் குறித்து, இளம் வாசகர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த எழுதப்பட்டிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல், பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவற்றைக் குறித்து சிறாரிடம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இவற்றைப் புரிந்துகொண்டால்தான், அனைவருக்குமான ஒளிமயமான எதிர்காலத்தை அவர்களால் உருவாக்க முடியும்.