தேங்கிய நீரைத் தெறிக்க வைத்து
பெய்திடும் மழையில் பேயாட்டம் போட்டு
வானில் இருந்து வகையாய் விழுந்திடும்
மழைத்துளி ஏறிப் பயணமும் செய்வோம்.
மண்ணில் விழுந்திடும் மழைத்துளி மெதுவாய்
பாதாளம் வரைக்கும் பாய்ந்திடும் பார்ப்பாய்
புழுக்கள் எல்லாம் புகலிடம் கொள்ளும்
கரையான் தோண்டிடும் இடத்தையும் தாண்டி
பாம்புகள் நெளிந்திடும் எறும்புகள் ஊர்ந்திடும்
இடத்தையும் தாண்டிச் சென்றிடும் மழைத்துளிகள்.
கற்களின் இடையே கசிந்திடும் துளிகள்
வெடிப்புகள் உள்ளே புகுந்து சென்றிடும்
ஈரம் மாயமாய் காணாமல் போய்விடும்
பூமிக்கடியில் சென்று மறைந்திடும்.
பூமியில் இருந்து பொங்கிடும்
ஓடையில் சேர்ந்து ஓட்டமாய் ஓடிடும்
நீண்டே சென்றிடும் நிலப்பரப்பின் மேலே
மீன்களோடு பந்தயம் போட்டிடும்.
சூரிய வெப்பம் சுள்ளெனச் சுடும்
மெல்ல நீர்த்துளிகள் ஆவியாய் மேலேறும்
வானத்தில் பறந்து வெகுதூரம் சென்றபின்
ஆவியும் மாறிடும் ஆகாய மேகமாய்!
விண்ணில் மேகமும் விரைந்தே வளர்ந்திடும்
மின்னலும் இடியுமாய் மிரட்டவும் செய்திடும்
தண்ணீர் தாரையாய் தரைநோக்கிக் கொட்டிடும்
மழையாய் மீண்டும் மண்ணில் சேர்ந்திடும்.
நீர் சுழற்சியில் பயணிப்பது எப்படி?
நீர் தன் சுழற்சிப் பாதையில் பல வடிவங்களில் வெகுதூரம் பயணிக்கிறது.
நீர் வானில் இருந்து மண்ணில் மழையாய்ப் பொழிகிறது. அது நதிகளை நிறைத்து, பின் நிலத்தினுள் சேர்கிறது. நிலத்தடியில் ஒரு நதி போல ஓடும் நீர், பின் ஊற்றுகளாகவும் ஏரிகளாவும் நிலத்துக்கு மேலே வருகிறது. சூரியனின் வெப்பத்தால் ஆவியாகி வானில் சேர்ந்து வெண்மேகமாக வடிவம் கொள்கிறது. நீராவிச் சேரச் சேர அந்த மேகங்கள் கருமேகங்களாக மாறி மழை பொழியத் தொடங்குகின்றன. இப்படியாக நீர் மீண்டும் நிலம் வந்து சேர்கிறது.