மர பூதங்கள் நெருங்கி வந்தன. “கிர்ர்ர்ர்!” அப்பொழுது மேகன், ஃபிரிட்ஸ், இளவரசி எழவுராணி மூவரும் வேர்கள், கொடிகளுக்கு நடுவில் ஒளிந்து கொண்டிருந்தனர். அந்த மர பூதங்கள், தங்கள் மர மூக்குத் துவாரங்களை விரித்து, சளி போன்ற பச்சையத்தை மூன்று பேர் மேலும் தெளித்தன.
“உவ்வே… எனக்கு பிடித்த உடை இது. வீணடித்து விட்டீர்கள். நீங்கள்… நீங்கள் முட்டாள்… முட்டக்கோசுகள்” என்று இளவரசி கதறினாள்.
மரக்கட்டைகளைப் போன்ற தங்கள் கைகளை வீசியபடி அந்த மர பூதங்கள் இன்னும் நெருங்கி வந்தன. மேகன், ஃபிரிட்ஸ், இளவரசி மூவரும் மயிரிழையில் தப்பினர். “இந்த வழியாகப் போகலாம்” என்று மேகன் சளி படிந்த இளவரசியின் சட்டையைப் பிடித்து இழுத்தாள்.
“நான் ஒரு இளவரசி. நான் யாரையும் பின்தொடர்ந்து செல்ல மாட்டேன்” என்றாள் இளவரசி எழவுராணி.
“கிர்ர்ர்ர்!” மர பூதங்கள் இன்னும் அதிகமான கொழகொழ பச்சையத்தை அவள் முகம் முழுதும் தெளித்தன.
“அய்யோ, சரி. நான் வருகிறேன்” என்றாள் இளவரசி.
“இங்கே, கீழே.” என பாலத்தின் மீது மண்டியிட்டவாறு மேகன் கிசுகிசுத்தாள். அங்கே, நுழைந்து தப்பிச் செல்லும் அளவுக்கு ஒரு வெடிப்பு இருப்பதை அவள் கண்டுபிடித்திருந்தாள்.
தொம். தொம். மர பூதங்கள் நெருங்கி வந்தன.
சாம்ப் ச்ச்சாம்ப். கொஞ்சம் ஏமாந்திருந்தால் மேகனின் மூக்கைக் கடித்திருக்கும்.
“ஹும்ம்ம்.. ஹூம்ம்ம்ம். ம்ம்ம்.” மேகன் பாட்டை முனகி தன்னை அமைதிப்படுத்திக் கொண்டாள். இளவரசி எழவுராணி, மேகனின் தோளைப் பிடித்து வெடிப்புக்குள் தள்ளிவிட்டாள். மூவரும் கீழே இருந்த பாலத்தை நோக்கி வழுக்கிச் சென்றனர். மரக்கிளைகளில் முட்டிக்கொண்டும், பாறைகளின் மேல் மோதிக்கொண்டும் சென்றனர்.
தரையில் விழுந்த மேகன் மேலே ஒட்டிய தூசியை தட்டிவிட்டுக்கொண்டு எழுந்தாள்.
“ஹூம்ம் ஹூம்ம் ஹும்ம்.”
தனக்கு எதிர்ப்பாட்டு பாடிய குரல்களைக் கேட்டு அதிசயித்தாள். குரல் வந்த திசையை நோக்கி ஓடினாள் மேகன்.
“பொறு!” என்றாள் இளவரசி. பின் வேர்களில் சறுக்கி, கொடிகளில் ஊஞ்சலாடி, பெரிய பிளவுகளைத் தாண்டிக் குதித்து, மேகனையும் ஃபிரிட்ஸையும் பின்தொடர்ந்தாள்.
மேகனும் இளவரசியும் பாலத்திற்கு நடுவில் வந்துவிட்டார்கள். “அற்புதம்!” இருவரும் ஒன்றாகக் கூச்சலிட்டார்கள். வேர்கள் வளைந்து, முறுக்கி, சுருண்டு, பின்னி சுவர்களாக, வளைவுகளாக, வாசல்களாக மாறியிருந்தன.
“அவை என்ன?” இளவரசி அறையின் மையத்தைக் காட்டி கேட்டாள். அங்கே, கிளைகளைப் போன்ற உடலும் காய்ந்த புல்புதரைப் போன்ற தலையும் கொண்ட மனிதர்கள் குறைந்தபட்சம் பன்னிரெண்டு பேர் இருந்தார்கள். அவர்கள் முணுமுணுத்துக்கொண்டும் பாடிக்கொண்டும், வேர்களை கொத்துக்கொத்தாக பிணைத்துக் கொண்டிருந்தனர்.
“நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” அவர்களின் தோளுக்கு மேலே பார்த்து மேகன் கேட்டாள்.
“நாங்கள் பாலத்தை பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம்” என்று கிளை மனிதன் பதிலளித்தான். “நீங்கள் யார்? இங்கே எப்படி வந்தீர்கள்?”
“என் பெயர் மேகன். என்னுடைய வீட்டிற்கு வழியை தேடிக் கொண்டிருக்கிறேன்” என்றாள் மேகன். “வீட்டிற்கு வழியா?” கிளை மனிதன் கேட்டான்.
“உங்களால் வீட்டிற்கு திரும்பிப் போகும் வழியைக் கண்டுபிடிக்கவே முடியாது”
“ஆனால்..ஆனால்.. இந்தப் பாலத்தின் வழியாக வீட்டிற்கு போக முடியும்!” மேகன் கத்தினாள். “இந்தப் பாலம்தான்!”
கிளைமனிதன் கொஞ்சம் வேர்க்கொத்துகளை எடுத்தான். “இதைப் பார்த்தாயா? இந்தக் கொத்தில் ஆயிரக்கணக்கான சிறிய வேர்கள் இருக்கின்றன. இவற்றில் ஒன்றே ஒன்றுதான் உன் உலகத்தை இணைக்கிறது.”
“ஆயிரக்கணக்கிலா?” மேகன் அதிசயித்துப் போனாள்.
“ஆதிச் செடிக்கு மட்டும்தான் இந்த வேர்கள் எங்கே செல்கின்றன என்று தெரியும். நீங்கள் ஆதிச் செடியைக் கேட்கலாம், ஆனால் உங்களுக்கு செடி மொழி தெரியாது என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்தான்.”
“ஆனால் என்னால் செடி மொழியைப் பேச முடியும்!” என்று மேகன் பொய் சொன்னாள்.
“நல்லது, இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை! இந்த வழியிலே வாருங்கள். உங்களால் செடி மொழியை பேச இயலவில்லை என்றால், வேறு உலகத்திற்குச் செல்ல நேரிடும். அங்கு நீங்கள் நிரந்தரமாக சிக்கிக் கொள்வீர்கள்!”
கிளைமனிதனைப் பின்தொடர்ந்து சென்றாள் மேகன். பாலத்திற்கு நடுவில் ஒரு மரம் இருப்பதைப் பார்த்தாள். அதன் வேர்கள் புடைத்து எல்லாத் திசைகளிலும் பரவியிருந்தன. “மதிப்புக்குரிய ஆதிச் செடியே,” மேகன் தொடங்கினாள், “எனக்கு வீட்டிற்குப் போக வேண்டும். தயவுசெய்து வழி காட்டுகிறீர்களா?”
“அவர் ஆதிச் செடியல்ல” கிளைமனிதன் இடைமறித்தான். “அதோ, அவள்தான்!” என்று அந்த மிகப்பெரும் மரத்தின் அடியில் இருந்த ஒற்றை தாத்தாப் பூவைச் சுட்டிக் காட்டினான்.
“அப்படியா” என்று மேகன் மீண்டும் கேட்டாள். “ஆதிச் செடியே! என் வீட்டிற்குச் செல்லும் வழியைச் சொல்கிறீர்களா?” என்றாள்.
ஆனால், செடி பதில் ஒன்றும் சொல்லவில்லை.
“உனக்குச் செடி மொழி பேசத் தெரியும் என்று நினைத்தேன்.” கிளை மனிதன் புருவங்களை உயர்த்திக் கேட்டான்.
மேகன் நடுங்கத் தொடங்கினாள். “நான்.. நான்…” அவளுடன் சேர்ந்து செடியும் நடுங்குவதைக் கவனித்தாள்மேகன். அவள் கைகளால் சிறகடித்தாள். செடியும் மெல்லிய காற்றோடு அசைந்தாடியது.
மேகன் குதித்தாள், நெளிந்தாள், இரண்டு முறை சுற்றிச் சுழன்றாள், தாத்தாப் பூ மிளிர்ந்தது. “நான் வீட்டிற்குச் செல்ல வேண்டும்” என்றாள் மேகன்.
ஆதிச் செடி காற்றில் தன்னுடைய சிறகு போன்ற விதைகளை விட்டது. அந்த விதைகள் மெதுவாக மிதக்கத் தொடங்கின. “ஆதிச்செடி வேலைசெய்யத் துவங்கிவிட்டது. நமக்கு வழி காண்பிக்கிறது!” மேகன் விதைகளின் பின்னே ஓடினாள்.
“ஆதிச் செடி என்ன சொன்னது?” இளவரசி மேகனிடம் கேட்டாள். மேகனைப் பின்தொடர்வது இளவரசிக்குக் கடினமாக இருந்தது.
“நம்மை விதைகளைப் பின்தொடரச் சொல்லியிருக்கிறது” என்றாள் மேகன். “நமக்கு அதிக நேரம் இல்லை!” அவர்கள் வளையங்களுக்குள் தாவினார்கள். தாழ்வான இடங்களில் ஊர்ந்து சென்றார்கள், வெடிப்புகளுக்குள் சறுக்கிச் சென்றார்கள். கடைசியில் பழைய வேர்களால் ஆன மிகப்பெரிய ஏணியை அடைந்தார்கள்.
விதைகள் மேலெழுந்து நகரத்தொடங்கின. அவர்கள் பின்தொடர்ந்து சென்றார்கள்.
ஒருவர் பின் ஒருவராக மேல் பகுதிக்கு வந்தார்கள். மேகன் ஒளிரும் விதைகளை பின் தொடர்ந்து இருட்டுக்குள் போனாள். அந்தப் பாலத்தின் மறு பக்கத்தில் வெளிச்சம் தெரிந்தது. “ஃபிரிட்ஸ், நாம் வீட்டை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டோம்” என்று கீச்சுக் குரலில் சொன்னாள். ஆனால் ஃபிரிட்ஸ் பதிலளிக்கவில்லை.
மேகன் திரும்பிப் பார்த்தாள். ஃபிரிட்ஸையோ இளவரசியோ பின்னால் காணவில்லை.
கிறீச்! கிறீச்! பாலம் குலுங்கத் தொடங்கியது. அது மரபூதங்கள்தான். இவர்களை மோப்பம் பிடித்துவிட்டன போலும்.
மேகன் உறைந்து நின்றாள். அவள் நகரம் கண்முன்னே தெரிந்தது. பின்னால் மரபூதங்களின் சத்தம் கேட்டது. மேகன் ஆழமாகச் சிந்தித்தாள். விதைகள் நிச்சயம் கதவுகளைத் திறந்து விடும். அவர்கள் இல்லாமல் மேகனால் போக முடியாது. மேகன் தன்னுடைய நகரத்தை நோக்கி காலடி எடுத்து வைத்தாள். ஆனால், அப்போது இளவரசியின் கதறலைக் கேட்டாள்.
“மிர்ரொவ்வ்வ்!” ஃபிரிட்ஸ் வலியின் வேதனையால் கூக்குரலிட்டது. கடைசி விதைகளும் நகர்ந்து சென்றுவிட்டன. கதவுகள் சாத்தப்படுவதைக் கேட்டபோது அவள் இதயம் வேதனையில் விம்மியது.
“ஃபிரிட்ஸ், நான் வருகிறேன், இரு” மேகன் தான் வந்த வழியே திரும்பிப் போனாள். அவள் அழுகிக் கொண்டிருக்கும் வேர்களுக்குள் புகுந்து, பாலத்தில் சறுக்கிச் சென்றாள்.
“உதவி செய்யுங்கள்” இளவரசி அழுது கொண்டிருந்தாள். காயமடைந்த மர பூதமொன்று பாலத்தின் ஒரு பக்கத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. ஃபிரிட்ஸும் இளவரசியும் அதன் மேல் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் அதன் கையின் மேல் ஏறிநின்று முயன்றவரை அதைப் பாலத்தில் இருந்து தள்ளிவிட முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஃபிரிட்ஸ் மரபூதத்தின் மரப்பட்டை போர்த்திய விரல்களை பிறாண்டிக் கொண்டிருந்தது. இளவரசி அதை உதைத்துக் கொண்டிருந்தாள்.
“நிறுத்து!” மேகன் உரக்கக் கத்தினாள். ஃபிரிட்ஸையும் இளவரசியையும் மரபூதத்தின் கைகளின் மேலிருந்து தள்ளிவிட்டாள்.
“கிர்ர்ர்” மரபூதம் முனகியது. அது மெதுவாக மேலே ஏறிவந்து நிமிர்ந்து தன் முழு உயரத்தில் நின்றது. “கிர்ர்ர்” அது உறுமியது. எல்லாப்பக்கமும் பச்சை நிற சளியைச் சிதறியடித்தது.
மேகன் மர பூதத்தின் முன்னால் நின்று, முன்னும் பின்னுமாக அசைந்தாடினாள், கைகளை சிறகடித்தாள். “கிர்ர்ர்” மரபூதம் உறுமியது, இம்முறை மிருதுவாக.
“அது நமக்கு தீங்கு செய்ய விரும்பவில்லை!” மேகன் கத்தினாள். “அது இந்தப் பாலத்தைப் பாதுகாக்கத்தான் இருக்கிறது.”
“உனக்கு எப்படித் தெரியும்?”
“இந்த இடத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது. இப்பொழுது என்னால் செடிமொழியைப் பேச முடியும். அந்த மரபூதம்... பயந்து போயும் கோபமாகவும் இருக்கிறது. அது மனிதர்கள்
மரங்களைக் கொல்வதாகச் சொல்கிறது.”
மேகன் மரபூதத்தின் முகத்தைத் தொட்டாள். அது வலியால் ஒடுங்கியது. அந்த உருவத்தின் மூக்கை மெதுவாக வருடிக் கொடுத்தாள். “எங்களுக்கு வீட்டிற்குச் செல்ல வேண்டும், அவ்வளவுதான்” என்று சொன்னாள்.
மரபூதம் மேகனைக் கவலையுடன் பார்த்தது. அது தன் கைகளை ஆட்டியது. அது விதைகள் சென்று விட்டதைப் பற்றிச் சொல்லியது. மரபூதம் கீழே பார்த்தது - அங்கே அதன் கால் பெருவிரலில் தாத்தா பூ ஒன்று முளைவிட்டிருந்தது. ஆனால் அது, ஆதிச் செடியைப் போல் இல்லாமல், ஒரே ஒரு விதை மட்டும் கொண்டதாக இருந்தது. மரபூதம் அதைப் பிடுங்கி மேகனிடம் கொடுத்தது. மரபூதத்தின் கிளைகள் வெடிப்புவிட்டன. அதன் வேர்கள் உலரத்தொடங்கின. அதன் உடற்பகுதி முழுதும் தூசாகிப் போனது.
மேகன் தன் உள்ளங்கையில் இருந்த விதையைப் பார்த்தாள். அது ஒளிர்ந்தது- முதலில் லேசாக, பின்னர் பிரகாசமான பேரொளியாக மாறியது.
மேகன் கேபிள் காருக்கு பக்கத்தில் விழித்தாள். சொரசொரப்பான ஒரு நாக்கு வலிக்கும்படி அவளை நக்கிக் கொண்டிருந்தது. “மியாவ்” என்ற ஃபிரிட்ஸ், தன் உடலை அவள் மேல் உரசிக் கொண்டு நின்றது. “ஃபிரிட்ஸ்” மேகன் புன்னகைத்தாள்.
அவள் தலையை மெதுவாக உயர்த்திப் பார்த்தாள். மூக்கின் நுனியில் காலணியின் நாடா கட்டப்பட்ட பாறை நிற்பதைக்கண்டாள்.
மேகன் முறுவலித்தாள், காணாமல் போன பூனைகள் அந்தப் பாறையுடன் விளையாட விரும்பியதைப் பற்றி சரியாகத்தான் யூகித்திருந்தாள். ஆனால், எப்படியோ அவளால் அந்த மற்ற பூனைகளைக் கண்டுபிடிக்க இயலவில்லை.
மேகன் எழுந்து நின்று தன் ஆடைகளில் இருந்த தூசியைத் தட்டிவிட்டாள். “இது என்ன?” தன் விரல்களுக்கிடையில் சிக்கிக்கொண்ட முடி படர்ந்த விதையைப் பார்த்துக் கேட்டாள். “இது ஒரு மர்மமான விதை, ஃபிரிட்ஸ்! இது என்னவென்று தெரிய வேண்டுமா?”
மேகன் ஃபிரிட்ஸைத் தூக்கிக்கொண்டாள். “மியாவ்” என்று ஃபிரிட்ஸ் பதில் சொன்னது.
“ராகி மிக்க மகிழ்ச்சி அடைவாள். இது ஒரு அழகான நாள். இல்லையா, ஃபிரிட்ஸ்?” மேகன் தன் கைகளை சிறகடித்தபடி சூரியன் மறைவதைப் பார்த்துக்கொண்டே சென்றாள்.
ஆனால் ஃபிரிட்ஸ் மேகமூட்டத்தையே பார்த்துக் கொண்டு நின்றது.
கேபிள் காருக்கு அருகில், முழுவதும் கருப்பு உடை அணிந்த உருவம் ஒன்று நின்றது. அம்மாதிரியான உருவங்களை பூனைகளால் மட்டுமே பார்க்க இயலும். அந்த உருவம் மகிழ்ச்சியோடு கையசைப்பதை ஃபிரிட்ஸ் பார்த்தது. “மியாவ்” பிரியாவிடை கொடுத்து ஃபிரிட்ஸ் சொன்னது.
இளவரசி தன்னுடைய விரல்களை ஒன்றாகச் சேர்த்தாள்.
சொடக்கு.