வினோதமான அந்த உலகில் மாட்டிக்கொண்ட மேகனும் ஃபிரிட்ஸும் தெருக்களில் அலைந்து திரிந்தார்கள். “இங்கிருந்து வீட்டுக்குச் செல்ல ஏதாவதொரு பாதை இருந்தே ஆகவேண்டும்” மேகன் முணுமுணுத்தாள். “ஏதாவது இருக்க வேண்டும், நிச்சயம் இருக்க வேண்டும்.”
“மியாவ்” என்று ஃபிரிட்ஸ் ஆமோதித்தது.
திடீரென்று, கார் ஒன்று அவர்களுக்கு அருகில் கிறீச்சிட்டு நின்றது. அதன் கதவு பட்டென திறந்தது. “சீக்கிரம் ஏறுங்கள்! உங்களை வீட்டுக்குக் கொண்டுபோவது எப்படி என்று எனக்குத் தெரியும்!” காருக்குள் இருந்து ஒரு குரல் சொன்னது.“வீட்டுக்குக் கொண்டுபோவீர்களா?” என்று மேகன் கேட்டாள்.
“ஆமாம். ஆமாம். நான் இளவரசி எழவுராணி. சட்டென்று காரில் ஏறுங்கள்.”
“சட்டென்று” என்றபடி மேகன் காரில் ஏறினாள். ஆனால் ஃபிரிட்ஸ் முரண்டுபிடித்தது. “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!” என்று சீறியது. கொஞ்சம் விட்டிருந்தால் இளவரசியின் முகத்திலிருந்து மூக்கைப் பிறாண்டி எடுத்திருக்கும்.
இளவரசி வண்டியை மிக வேகமாக ஓட்டினாள். மேகன் ஃபிரிட்ஸை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். “நாங்கள் வீட்டுக்குத்தான் போகவேண்டும் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டாள் மேகன். “பாறை உயிரினம்தான் சொன்னது. அசையாமல் இருங்கள். இல்லையென்றால் உங்களால் வீட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாது! இந்தா, இந்த நாணயத்தை உன் நெற்றியில் வைத்துக்கொள்” என்றாள் இளவரசி. இளவரசி விரல்களை சொடுக்கினாள். சொடக்கு.
அந்த விசித்திரமான உலகத்தில் இருந்து சொய்ங்கென வெளியே வந்த கார் ஒரு நீண்ட, இருட்டான குகைக்குள் சர்ர்ர்ரென நுழைந்தது.
“எனக்கு ஒன்றுமே தெரியவில்லை!” என்றாள் மேகன். “முர்ரோவ்” ஃபிரிட்ஸ் சீறியது, அதன் ஒளிரும் கண்கள் இருட்டில் தனித்துத் தெரிந்தன.
“ஹோப்பாவுக்கு உங்களை வரவேற்கிறேன்.” இளவரசி பெரிதாக முறுவலித்தாள். “இந்த இடத்தில் எங்காவதுதான் உங்கள் உலகத்திற்கு செல்வதற்கான கதவு இருக்கும். அதைக் கண்டுபிடிக்க நீங்கள் மூன்று காரியங்களை செய்துமுடிக்க வேண்டும். அதையும் நேரம் முடிவதற்குள் செய்ய வேண்டும்.” சொடக்கு.
திடீரென்று ஒரு மணற்கடிகாரம் எங்கிருந்தோ தோன்றியது. “நேரம் முடிவதற்குள்ளா?” மேகன் கேட்டாள்.
“ஆமாம்” என்றாள் இளவரசி. “நான் சொல்வதையெல்லாம் நீ திருப்பி சொல்லப் போகிறாயா? குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்காவிட்டால், ஃபிரிட்ஸும் நீயும் எரிந்து போவீர்கள்.” அவள் கொடூரமாகச் சிரித்தாள்.
இளவரசி அடித்த சீட்டியின் சத்தத்தைப் போல் ஒரு உரத்த சத்தத்தை மேகன் இதுவரை கேட்டதில்லை. “நீ செய்யவேண்டிய முதல் காரியம் இந்தப் படகோட்டியை அக்கரைக்கு நம்மை படகில் அழைத்துச் செல்லுமாறு செய்ய வேண்டும். ஆனால் ஒரு வார்த்தைகூட பேசக் கூடாது” என்றாள். “டிக் டாக், டிக் டாக்.”
மேகனுக்கு இளவரசி தன்னுடைய நெற்றியில் வைத்த நாணயம் ஞாபகத்திற்கு வந்தது. அதை படகோட்டியிடம் கொடுத்தாள். அதை வாங்கிக் கொண்டு அவர் அவர்களை அக்கரைக்கு கொண்டுபோய்ச் சேர்த்தார்.
“அது ரொம்ப எளிதான காரியம். அடுத்ததை உன்னால் நிச்சயம் செய்ய முடியாது! உலகத்தில் உள்ள எந்த உயிருள்ள மனிதனாலும் கால் வைக்க இயலாத அந்தப் பாலத்தை நீ கடக்க வேண்டும்” என்றாள் இளவரசி. “டிக் டாக், டிக் டாக்.”
“எந்த உயிருள்ள மனிதனும். எந்த உயிருள்ள மனிதனும். எந்த உயிருள்ள மனிதனும்“ மேகன் இளவரசியின் வார்த்தைகளை தனக்குள் சொல்லிப்பார்த்துக் கொண்டாள். அவள் இடது காலை எடுத்து பாலத்தில் வைத்தாள் பின்னர் தன் வலது காலை வைத்தாள். “நான் ஒரு சிறுமி, ஃபிரிட்ஸ் ஒரு பூனை, எங்களால் கடக்க முடியும்.” மேகனும் ஃபிரிட்ஸும் பாலத்தைக் கடந்தார்கள்.
இளவரசி இப்பொழுது கடும் கோபத்தில் குதித்துக் கொண்டிருந்தாள். “கடைசிக் காரியம்தான் இருப்பதிலேயே கடினமானது. டிக் டாக், டிக் டாக் ” என்றாள்.
மூன்று தலை கொண்ட ராட்சச நாய் ஒன்று தோன்றியது. அது உறுமியது. அதன் வாயில் எச்சில் வடிந்தது. அது குரைத்தது. “உன்னிடம் ஒரு பிஸ்கட்தான் இருக்கிறது. அதை மூன்று தலைகளுக்கும் கொடுக்க வேண்டும்” இளவரசி குசுகுசுத்தாள். “ நீ ஒன்றுக்கு மட்டும் கொடுத்தால், மற்ற இரண்டும் உன்னையும் உன் பூனைக் குட்டியையும் தின்றுவிடும். என்ன செய்யப் போகிறாய்? டிக் டாக், டிக் டாக்.”
மேகன் பிஸ்கட்டை மூன்றாக உடைத்து அதை மூன்று தலைகளுக்கும் தூக்கிப் போட்டாள். “இதை சாப்பிடுங்கள், நாய்க்குட்டிகளா” என்றாள்.
கறுகறு, நறு நறு, முறுமுறு! மூன்று தலைகளும் பிஸ்கட்டை மென்றன.
“நாம் எல்லா விடுகதைகளுக்கும் விடை கண்டுபிடித்து விட்டோம் ஃபிரிட்ஸ்.” மேகன் கைகளால் சிறகடித்தாள். “இப்பொழுது நாம் வீட்டிற்கு போகலாம்.” “இல்லை” இளவரசி சீறினாள். “ஆனால் நாங்கள் எல்லாப் புதிர்களையும் விடுவித்து விட்டோமே!” மேகன் எதிர்ப்பு தெரிவித்தாள். “இல்லை!” இளவரசி கத்தினாள். “ நான் ஒரு இளவரசி. நான்தான் எப்பொழுதும் வெல்ல வேண்டும்.” மேகனுடைய தோளைப்பிடித்து உலுக்கினாள். “ஆனால் நீ சொன்னாய், நீ சொன்னாய். நீ சத்தியம் செய்தாய்.” மேகனின் கன்னங்களில் கண்ணீர்த்துளிகள் உருண்டன.
“ஹூம், நான் பொய் சொன்னேன். அப்படி எந்தக் கதவும் இல்லை.” இளவரசி நாக்கைத் துருத்திக் காட்டினாள்.
மேகன் இடிந்து போய் தரையில் சாய்ந்தாள். ஃபிரிட்ஸ் அவளை நோக்கி ஓடி வந்தது. அது நெருங்கும் நேரத்தில்-- பட்ட்ட்டாம் பூபூபூம்ம்ம்ம்! வெடிச்சத்தத்தில் காற்று அதிர்ந்தது. டும் டமால்! குகை குலுங்கியது.
“இங்கு என்ன நடக்கிறது?” அந்த குரலுக்கு சொந்தமான பெண்மணி இரண்டு பனை மர உயரம் இருந்தார்.
“நான் எல்லாக் காரியங்களையும் முடித்து விட்டேன். ஆனால் இளவரசி என்னை வீட்டிற்கு விட மாட்டேன் என்கிறார்” என்று மேகன் புகார் கூறினாள்.
“இது உண்மையா?” அவர் கண்டிப்புடன் கேட்டார். “ம்ம்ம், ஆமாம். ஆனால் அம்மா…” இளவரசி முனகினாள். “நான் மகாராணி பொணத்தாய். என்னிடம் ஆனால் மானால் எல்லாம் செல்லாது!” என்று ராணி கத்தினார். “இந்தச் சிறுமியை வீட்டில் கொண்டுபோய் விடு!” “ஆனால் அம்மா, இவள் விசித்திரமானவள். வினோதமான செயல்களை செய்கிறாள். நான் என்ன சொன்னாலும் அதை திரும்பச் சொல்கிறாள்!” என்றாள் இளவரசி. “எல்லா காரியங்களைய் செய்துவிட்டாள், இல்லையா? நான் பதட்டமாக இருக்கும்போது நாற்காலியில் விரல்களால் தட்டுவேன். அதனால் நான் விசித்திரமானவளா, என்ன?” ராணி கேட்டார். இளவரசி இல்லை என்று தலையாட்டினாள். ஆனால் அப்போது, சொட—
—டக்கு. மேகன், ஃபிரிட்ஸ், இளவரசி மூவரும் ஹோப்பாவில் இருந்து சொய்ங்கென மறைந்து சர்ர்ர்ரென ஒரு புதிய உலகத்துக்கு வந்தார்கள்.
அவர்கள் தடினமான வேர்களாலும் பச்சை கொடிகளாலும் சூழப்பட்டிருந்தார்கள். செடிகள் நடந்து கொண்டிருந்தன.
“ஆஆஆஆ! என்னுடய அம்மா மிகவும்... ஆஆஆஆ!” இளவரசி முனகினாள். விரல்களைச் சொடுக்கினாள். ஒன்றும் நடக்கவில்லை. மீண்டும் முயன்றாள்.
தொம். தொப். தொம்.
“உஷ்ஷ்ஷ்! சத்தம் போடாதீர்கள்” இளவரசி சொன்னாள். ”எல்லா பக்கமும் மர பூதங்கள் இருக்கின்றன. ” “சத்தம் போடாதீர்கள்” மேகன் திருப்பி சொன்னாள். “முர்ரோவ்வ்” ஃபிரிட்ஸும் தன் பங்கிற்குக் கத்திவிட்டு மேகனின் தோளில் ஏறிக்கொண்டது. மர பூதங்கள் ஆடியபடியே அருகில் வந்தன. மேகனும் இளவரசியும் நெருக்கமாக நின்றிருந்தனர்.
தொம். தொப். தொம்.
மேகனும் மற்றவர்களும் இந்த மர பூதங்களிடம் இருந்து எப்படித் தப்பினார்கள்?
தெரிந்துகொள்ள மேகனும் உயிர்ப் பாலமும் கதையைப் படியுங்கள்.