minminigalaip pola minnalaama

மின்மினிகளைப் போல மின்னலாமா?

உங்களுக்கு மின்மினிப் பூச்சிகளைப் பிடிக்குமா? அவற்றின் மின்னும் ஒளி வெறும் அழகுக்கு அல்ல, அதைக்கொண்டு மின்மினிப்பூச்சிகள் தங்களுடைய எதிரிகளை விரட்டுகின்றன! இந்த அழகிய பூச்சிகளைப் பற்றி இன்னும் நிறைய சுவையான விவரங்களைத் தெரிந்துகொள்ள, இந்தப் புத்தகத்தை வாசியுங்கள்!

- N. Chokkan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நீங்கள் மின்மினிப் பூச்சிகளைப் பார்த்திருக்கிறீர்களா?

அவை, இரவில் சிறிய நட்சத்திரங்களைப் போல ஒளிரும், சிறிய இறக்கைகளுடைய பூச்சிகள் ஆகும்!  ஆனால், அவை ஏன் ஒளிர்கின்றன? அவற்றுக்குள் இந்த ஒளி எப்படி வருகிறது?

மின்மினிகளைப் பார்க்கும் போதெல்லாம், நாமும் அதுபோல மின்னவேண்டும் என்று எனக்கு ஆசை வரும். ஆனால் முடியாதே! யாராவது நம்மால் ஏன் மின்மினிப் பூச்சிகளைப் போல் மின்ன இயலுவதில்லை என சொல்லுங்களேன்.

ஒருநாள், நீங்கள் நண்பர்களுடன் காட்டுக்குள் முகாம் அமைத்துத் தங்குகிறீர்கள். இரவு நேரம், நிலா வெளிச்சம்கூட இல்லை. திடீரென்று நீங்கள் எங்கேயோ வழிதவறிச் சென்று விடுகிறீர்கள். அப்போது, உங்கள் நண்பர்களைத் தொடர்புகொள்ள என்ன செய்வீர்கள்? கையிலிருக்கும் டார்ச் லைட்டை பலமுறை எரியவிட்டும் அணைத்தும் அவர்களுக்குச் சமிக்ஞை கொடுப்பீர்கள், இல்லையா!

மின்மினிப் பூச்சிகளும் இதையேதான் செய்கின்றன. அந்தப் பூச்சிகளுக்குள் அளவற்ற வெளிச்சம் இருக்கிறது. விளக்கு வீணாகிவிடுமோ, மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்குமோ என்றெல்லாம் அவை கவலைப்பட வேண்டியதே இல்லை. ஆகவே, அவை மகிழ்ச்சியாக அங்குமிங்கும் பறந்து மின்னுகின்றன. ”ஹலோ, நான் இங்கே இருக்கிறேன்” என்று சொல்வதுபோல பறந்தபடியே மின்னுகின்றன.

மின்மினிப் பூச்சிகள் இப்படி மின்னுவதற்குக் காரணம், லுசிஃபெராஸ் என்ற புரதமும் லுசிஃபெரின் என்ற நிறமியும்தான். புரதங்கள் என்பவை நம்முடைய உடல் சதைகள், எலும்புகள், தோல் போன்றவற்றை உருவாக்க உதவும் ஒரு விசேச உணவு. நிறமிகள் என்பவை செடிகளிலும் விலங்குகளிலும் காணப்படுகிற இயற்கையான வண்ணமூட்டும் பொருள்கள். இந்த இரண்டும் மின்மினிப் பூச்சியின் சிறிய வயிற்றுக்குள் ஒன்றாகச் சேரும்போது, அங்கே ஏற்கனவே உள்ள ஆக்சிஜனுடன் அவை இணைந்து வேதிவினை புரிகின்றன.

கொண்டாட்டமான சிறிய வாணவேடிக்கை போல அப்போது ஒரு விசயம் தொடங்குகிறது. பிரகாசமான ஒரு வெளிச்சம் உண்டாகிறது. இதைத்தான் நாம் மின்மினிப் பூச்சியின் ’ஒளி’யாகக் காண்கிறோம். இதனால், மின்மினிப் பூச்சிகளை ’ஒளியுமிழும் உயிரிகள்’ என்பார்கள். இதேபோல், பலவகை மீன்களும் கடல்வாழ் உயிரினங்களும்கூட ஒளியை உண்டாக்குகின்றன!

மின்மினிப் பூச்சியின் ஒளி, ஒரு விளக்கு சுவிட்சைப்போலச் செயல்படுகிறது. அந்த மின்மினிப் பூச்சி விரும்பும்போது இந்த விளக்கைப் போடலாம், அணைக்கலாம். இதற்காக, மின்மினிப் பூச்சி தன்னுடைய மூளையிலிருந்து வயிற்றிலுள்ள பிரகாசத்தை உண்டாக்கும் உறுப்புக்கு ஒரு விசேச ’செய்தி’யை அனுப்புகிறது. இந்தச் செய்தி வந்து சேர்ந்தவுடன் வேதிவினை தொடங்கி, மின்மினிப் பூச்சி மின்னத் தொடங்குகிறது!

வளர்ந்த மின்மினிப் பூச்சிகள் இந்த ஒளியைப் பயன்படுத்தித் தங்களுடைய துணையை அழைக்கின்றன. சொல்லப்போனால், பெண் மின்மினிப் பூச்சிகள் நெடு நேரம் மின்னுகின்ற அல்லது விரைவாக மின்னுகின்ற ஆண்களைத்தான் விரும்புகின்றன. இந்த சிறப்பு ஒளியைப் பார்த்தவுடன், பெண் பூச்சிகளும் தங்களுடைய விளக்குகளைப் போட்டுக் காட்டுகின்றன. அதன்பிறகு இந்த மின்மினிப் பூச்சிகள் ஜோடியாகின்றன. அவற்றுக்குக் குழந்தைகள் பிறக்கின்றன!

சிறிய மின்மினிப் பூச்சிகளை ’லார்வா’ என்பார்கள். தங்களுடைய பெற்றோரைப் போல் இல்லாமல், இந்த லார்வாக்கள் தங்களுடைய ஒளியைப் பெரும்பாலும்  தங்களை தின்னவரும் உயிரினங்களை விரட்டவே பயன்படுத்துகின்றன. இவற்றின் உடல்களுக்குள் உள்ள வேதிப்பொருள்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவை. அவற்றின் சுவையும் மிக மோசமானது. ஆகவே, இந்தப் பூச்சிகளைத் தின்ன நினைக்கும் உயிரினங்கள் மோசமான சுவையைப் பார்த்து வெறுத்துப்போய் வேறு சுவையான இரையைத் தேடிச் சென்றுவிடுகின்றன!

மின்மினிப் பூச்சிகள் எப்போதும் தனியாக இருப்பதே இல்லை! உலகில் 2000த்திற்கும் மேற்பட்ட மின்மினிப் பூச்சி வகைகள் உள்ளன. வசந்த காலத்தில், குறிப்பாக இரவு நேரங்களில் இந்த மின்மினிப் பூச்சிகள் அங்குமிங்கும் பிரகாசமாகத் திரிந்துகொண்டிருப்பதை நீங்கள் காணலாம்!

மின்மினிப் பூச்சிகள் மிகவும் சிறியவை. அவை உங்களுடைய விரல் அளவுகூட இருக்காது. ஆனால், பல மின்மினிப் பூச்சிகளை ஒன்றாகச் சேர்த்தால் அவற்றிலிருந்து வரும் ஒளியால் ஒரு பெரிய தோட்டத்துக்கே இலவசமாக வெளிச்சம் கிடைக்கும்!பிரமாதம்தான், இல்லையா?

மின்மினிகளைப் பற்றிய சில வியப்பூட்டும் தகவல்கள்:1. மின்மினிகள் உண்மையில் ஈக்கள் இனத்தைச் சேர்ந்தவையல்ல; அவை வண்டு இனத்தைச் சேர்ந்தவை. ‘ஒளிரும் பூச்சிகள்’ என அழைக்கப்பட்டாலும், அவை பூச்சிகளும் அல்ல.

2. வெவ்வேறு இன மின்மினிகள் வெவ்வேறு நிறங்களில் ஒளிரும். மஞ்சள் நிறத்திலிருந்து பச்சை நிறம் வரை அவை வேறுபடும். இரவில் பறக்கும் மின்மினிகள் பச்சை நிறத்திலும் அந்தியில் பறப்பவை மஞ்சள் நிறத்திலும் ஒளிரும்.

3. சில மின்மினிகள் அசைவம்தான் சாப்பிடும்! அவை பிற மின்மினிகள் மற்றும் பூச்சிகளை உண்டு வாழ்பவை.4. வளர்ந்த மின்மினிகள் மட்டுமின்றி, அவற்றின் முட்டைகள் மற்றும் லார்வாக்களும் கூட ஒளிரும் தன்மையுடவை. மின்மினிகளின் முட்டையை இலேசாகத் தட்டினால், பதிலுக்கு அவை ஒளிர்வதைக் காணலாம்.

5. அண்டார்டிகா தவிர மற்ற எல்லாக் கண்டங்களிலும் மின்மினிகளைக் காணலாம். அவை வெப்ப மண்டலத்திலும் சம தட்பவெப்பப் பகுதிகளிலும் வளரக்கூடியவை. அங்குள்ள காடுகளிலும் புல்வெளிகளிலும் மேலும் வனங்களிலும் மின்மினிகள் மின்னுவதைக் காணலாம். மிகுந்த குளிர்ப் பிரதேசமான அண்டார்டிகாவில் மட்டும் அவற்றால் வாழமுடியாது.

செய்து பாருங்கள்

1. மின்மினிப் பூச்சிகளைப்போல இருட்டில் ஒளிரும் சிலவற்றின் பெயர்களைப் பட்டியலிடுங்கள். அவை உயிருள்ளவையாகவும் இருக்கலாம், உயிரில்லாப் பொருள்களாகவும் இருக்கலாம்.

2. நண்பர்களுடன் விளையாடும்போது உங்களை ஒரு மின்மினிப் பூச்சியாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். கையில் ஒரு சிறிய டார்ச்சை எடுத்துக்கொண்டு மின்மினிப் பூச்சிகளைப்போல விதவிதமான தோற்றங்களை உண்டாக்குங்கள்.

3. குப்பையில் கிடக்கும் பொருட்களைக் கொண்டு, உதாரணமாக ப்ளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வைத்து, மின்மினிப் பூச்சிகளை உருவாக்குங்கள்.