டென்ஜின் மற்றும் டாஷி இருவரும் இளம் திபெத்திய துறவிகள். அவர்கள் ஒரு அழகிய பச்சைமலை மீதுள்ள ஒரு சிறிய மடாலயத்தில் வசித்து வந்தனர். அந்த இடம் மழை பெய்த பின் பார்க்க மிக அழகாக இருக்கும்.
ஒரு முதிர்காலை வேளையில் டாஷி சாளரம் வழியாக வெளியே பார்த்தபோது ஜோராக மழை பெய்து கொண்டிருந்தது. சேற்றுப் பாதையில் தண்ணீர் ஓடி சின்னச்சின்ன நீர்க்கால்களை உருவாக்கி இருந்தது. பிற்பகலில் பொழுது போக்க, காகிதப்படகுகளைச் செய்து மிதக்க விடுவதைத் தவிர வேறு ஒரு சிறந்த வழி இருப்பதாக டாஷிக்குத் தோன்றவில்லை.
டாஷி மற்றும் டென்ஜின் இருவரும் பல காகிதப் படகுகளைச் செய்யத் தொடங்கினார்கள். மழை நின்றவுடன் சிறுவர்கள் வெளியே ஓடினார்கள். சிறியதும், பெரியதுமான காகிதப்படகுகளை அந்தச் சிறு நீர்க்கால்களில் மிதக்க விட்டனர். அவை அழகாக மிதந்து சென்றன. அந்த இரு இளம் துறவிகளும் மிக்க மகிழ்ந்தனர்.
அவர்கள் மடாலயத்திற்கு விரைந்து திரும்பும் வழியில் ஜென் லோப்சங்கைப் பார்த்தார்கள். ஜென்லாவும் மடாலயத்தில் வாழ்பவர். அவர் குழந்தைகளுக்கு அற்புதமான கதைகளைச் சொல்வார்.
“ஜென்லா!” டென்ஜின் இரைந்து கேட்டான், “படகுகள் ஏன் மிதக்கின்றன என்பதைப் பற்றி ஒரு கதை சொல்ல முடியுமா?”
ஜென் லோப்சங் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, “படகுகள்... அல்லது... கப்பல்கள்... இவை ஏன் மிதக்கின்றன என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதைத் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்” என்றார்.
ஜென்லா: திபெத்திய மொழியில் ஆசிரியரை மரியாதையுடன் அழைப்பதற்கான ஒரு சொல்.
ஜென்லாவும், சிறுவர்களும் அறிவியல் ஆசிரியை சோனம் மிஸ்ஸிடம் சென்று, படகுகள் ஏன் மிதக்கின்றன என்பது அவருக்குத் தெரியுமா என்று கேட்க முடிவு செய்தனர். டென்ஜின், டாஷி இருவரும் ஜென் லோப்சங்கை நாற்காலியில் இருந்து மெதுவாக எழுப்பினார்கள். அவர் நடந்து செல்வதற்கு உதவியாகக் கையைப் பிடித்துக் கொண்டார்கள். சோனம் மிஸ்ஸின் அறையை அவர்கள் அடைந்த போது, அவர் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார்.
“டாஷி டெலக்!” என்று ஜென்லா, டாஷி மற்றும் டென்ஜின் மூவரும் கூறினர்.
“டாஷி டெலக்!” என்று சோனம் மிஸ்ஸும் பதிலுக்குச் சொன்னார்.
“உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறோம்” என்று ஜென்லா கூறினார்.
டாஷி டெலக்: திபெத்திய மொழியில் ஒரு பொதுவான வாழ்த்தும் முறை. ‘டாஷி’ என்றால் ‘நல்ல அதிர்ஷ்டம்’; ‘டெலக்’ என்றால் ‘நன்றாக இருப்பது’ என்று பொருள்.
“ஆமாம்! படகுகள் தண்ணீரில் எதனால் மிதக்கின்றன என்று சொல்ல முடியுமா மிஸ்?’’ என்று டென்ஜின் கேட்டான்.
“என்னால் முடியும்,” என்று கூறிய சோனம் மிஸ், “ஆனால் நாம் எல்லோரும் சேர்ந்து அதைத் தெரிந்துகொள்வோமா?” என்றார்.
அவர்கள் தயாராவற்குள்ளாக, சோனம் மிஸ் சில கட்டளைகளைப் பிறப்பித்தார்.
“டென்ஜின்! சமையலறையில் இருந்து ஒரு பிளாஸ்டிக் தொட்டியை கொண்டுவா.”
“டாஷி! ஒரு சிறிய வாளியில் தண்ணீர் கொண்டுவா.”
“ஜென்லா! இந்த ஆப்பிளை வைத்திருங்கள். தயவுசெய்து அதைச் சாப்பிட்டுவிட வேண்டாம்.”
சோனம் மிஸ், டாஷியிடம் தொட்டியின் விளிம்பு வரை நீரை நிரப்புமாறு சொன்னார்.
பின்னர், “ஜென்லா! இப்போது, தயவு செய்து ஆப்பிளைத் தொட்டி நீரில் முழுக வையுங்கள். அது தண்ணீரில் நன்றாக மூழ்கி இருக்க வேண்டும்” என்றார்.
ஜென்லா மெதுவாகத் தொட்டிக்குள் பழத்தைப் போட்டு, தன் சுண்டு விரலால் அதைக் கீழே அழுத்தினார். கொஞ்சம் தண்ணீர்வெளியே சிந்தியது.
டாஷியும், டென்ஜினும் “தண்ணீர் வெளியே வழிகிறது!” என்று கூச்சலிட்டார்கள். ஜென்லா விரலை எடுக்க ஆப்பிள்மேலே எழும்பியது.
சோனம் மிஸ் சிரித்தார். “இப்போது என்ன நடந்தது?” என்று கேட்டார்.
“ஜென்லா ஆப்பிளை தண்ணீருக்குள் அமிழ்த்தினார்” என்றான் டென்ஜின்.
“தண்ணீர் வெளியே சிந்தியது” என்றான் டாஷி.
“ஆப்பிள் மிதக்கிறது” என்றார் ஜென்லா.
“எல்லோருடைய விடைகளும் சரியே!’’ என்ற சோனம் மிஸ், “இப்போது எவ்வளவு தண்ணீர் கீழே சிந்தியது என்று சொல்ல முடியுமா, டென்ஜின்? அரை கோப்பை இருக்குமா? அல்லது ஒரு கோப்பை அளவா?” என்று கேட்டார்.
டென்ஜின் மேஜை மேலும், தரையிலும் சிந்தியிருந்த தண்ணீரைப் பார்த்தபடி, “ஒரு கோப்பை அளவு இருக்கலாம், மிஸ்” என்றான்.
“சரியாகச் சொன்னாய்” என்றார் சோனம் மிஸ்.
ஜென்லாவும், டாஷியும் ஒப்புதலாகத் தலையசைத்தனர்.
“டாஷி! இப்போது ஆப்பிளை வெளியே எடுத்து விட்டு, மீண்டும் தொட்டியை நிரப்பு. டென்ஜின்! இப்பொழுது நீ இந்தக் கரண்டியைத் தண்ணீரில் போடுகிறாயா?” என்றார் சோனம் மிஸ்.
டென்ஜின் சொன்னபடி செய்தான். கரண்டி நீரில் மூழ்கியது. “எடை அதிகம்” என்றார் ஜென்லா. “ஆனாலும் கடலில் மிதக்கும் ஒரு கப்பலின் எடை அளவைக் காட்டிலும் அதிகம் அல்லவே?!” என்றான் டென்ஜின்.
“மிகக் குறைவான தண்ணீர் தான் இப்போது சிந்தியது. கால் கோப்பை அளவு கூட இல்லை”என்று கொஞ்சம் வருத்தமுடன் சொன்னான் டாஷி.
“இப்போதும், நீங்கள் எல்லோரும் சொன்னது சரிதான்” என்றார் சோனம் மிஸ்.
“ஜென்லா தன் கையிலிருந்த ஆப்பிளைத் தண்ணீரில் போட்ட பிறகு, ஆப்பிள் மிதப்பதற்கு முன் சிறிது தண்ணீரைத் தள்ளிவிட்டதே, அதை நீங்கள் கவனித்தீர்களா?” என்று சோனம் மிஸ் கேட்டார்.
“சிந்தியதே, அந்தத் தண்ணீர்தானே?” என்று கேட்டான் டென்ஜின்.
“ஆம்! ஆப்பிள் அதன் எடையைவிட அதிக அளவு தண்ணீரை வெளியே தள்ளியதால் மிதக்க முடிந்தது. அதாவது, ஆப்பிளின் எடை அது வெளியேற்றிய தண்ணீரின் எடையைவிடக் குறைவாக உள்ளது” என்றார் சோனம் மிஸ்.
“அப்படியானால் கரண்டி?” என்று ஜென்லா கேட்டார்.
“கரண்டியும் கொஞ்சம் தண்ணீரை வெளியே தள்ளிவிட்டது. ஆனால், மிகவும் குறைவாக. நிச்சயம் அதன் எடையைவிடக் குறைவாக. அதனால் தான் அது மூழ்கியது” என்று சோனம் மிஸ் பதிலளித்தார்.
“பல பயணிகள் இருக்கும் பெரிய கப்பல்கள் கடல் மீது மிதப்பதைக் குறித்து என்ன சொல்கிறீர்கள், மிஸ்?” என்று டென்ஜின் கேட்டான்.
“மேலும் அதில் பல மூழ்கும் கரண்டிகளும் இருக்குமே?” என்று டாஷி சொன்னான்.
“டாஷி! கரண்டிகள் ஒரு கப்பலை மூழ்கடிக்காது! நிறைய தண்ணீரை வெளியே தள்ளப் போதுமான அளவு கப்பல் பெரியது. தவிர, அது ஆப்பிளைப் போல, அது தனது எடை மற்றும் தான் சுமந்து செல்பவற்றின் எடையைவிட அதிக அளவு தண்ணீரை வெளியே தள்ளும். கடலில் மிக அதிக அளவு தண்ணீர் உள்ள காரணத்தால் நீங்கள் அதைக் கவனிக்க முடியாது” என்றார் சோனம் மிஸ்.
அவர்கள் எல்லோரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள்.
“எனக்குப் புரிந்து விட்டது என்று நினைக்கிறேன்” என்றான் டென்ஜின் மெதுவாக.
“இப்போது சில படகுகளை நாம் மிதக்கவிடுவோமா?” என்று கேட்டான் டாஷி.
“இது என் தேநீர் நேரம்!” என்றபடி ஜென்லா விடைபெற்றார்.
சோனம் மிஸ் புன்னகைத்தார்.
“சரி, ஆனந்தமாகச் செய்யுங்கள்!” என்று கூறி, படகுகள் செய்ய பல வண்ணக் காகிதங்களைக் கொடுத்தார்.
டென்ஜினும் டாஷியும் பல வண்ணமயமான படகுகளைச் செய்து தண்ணீரில் மிதக்க விட்டனர்.
“இப்போது தண்ணீர் வழிவதை என்னால் பார்க்கமுடியவில்லை,” என்று டாஷி கூறினான்.
“புரியாமல் பேசாதே! தண்ணீர் எப்போதும் வழிவது இல்லை. அது தள்ளப்படுகிறது” என்று விளக்கினான் டென்ஜின்.
“படகுகள் நீரோட்டத்தில் தமக்கென்று கொஞ்சம் இடத்தை உருவாக்கிக் கொண்டு அதில் மிதந்து செல்கின்றன” என்றார் அங்கு வந்த ஜென்லா.
நீலம் மற்றும் மஞ்சள் படகுகள், சிவப்பு மற்றும் பச்சைப் படகுகள் மற்றும் வெள்ளைப் படகுகள் மிதந்து செல்வதை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். அவை நீரோட்டத்தில் பிராத்தனைக் கொடிகள் போல தோன்றியதைக் கண்டு மகிழ்ந்தனர்.
புவிஈர்ப்பு என்றால் என்ன?
டாஷி, ஒரு மரத்தின் மேலிருந்து ஒரு கால்பந்தைக் கீழே எறிந்தால் என்ன ஆகும்? அது தரையில் விழுமா அல்லது வானத்தை நோக்கி எழும்புமா? சரியாகச் சொன்னீர்கள்! அது ‘புவிஈர்ப்பு’ எனப்படும் ஒரு சக்தியின் காரணமாகக் கீழே விழும். அந்தச் சக்தி எல்லாவற்றையும் பூமியை நோக்கி இழுக்கச் செய்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
மிதப்பாற்றல் என்றால் என்ன?
டென்ஜின், ஒரு வாளித் தண்ணீரில் ஒரு கால்பந்தைப் போட்டால் என்னாகும்? புவிஈர்ப்புச் சக்தி, கால்பந்தை வாளியின் அடியை நோக்கி இழுக்குமா? ஆம், ஆனால் நீரில், புவிஈர்ப்புச் சக்தியை எதிர்க்கும் ஒரு மேல் உந்தும் சக்தி உள்ளது. இது ‘மிதப்பாற்றல்’ என்று அழைக்கப்படுகிறது. புவிஈர்ப்புச் சக்தி கால்பந்தைக் கீழே இழுக்க முயற்சிக்கும் போது, மிதப்பாற்றல் அதை மேலே தள்ள முயற்சிக்கிறது. கால்பந்தைப் பொறுத்தவரை, மிதப்பாற்றல் புவிஈர்ப்புச் சக்தியைவிட வலுவானது. அதனால் அது மிதக்கிறது. ஆனால், ஒரு செங்கல்லை வாளிக்குள் போட்டால் என்னாகும்? ஏன்?
இடப்பெயர்வு என்றால் என்ன?
நாம் ஒரு பொருளைத் தண்ணீரில் போடும்போது, அது தேவையான அளவுத் தண்ணீரைப் பக்கங்களில் தள்ளிவிட்டு, தனக்கான இடத்தை உருவாக்கிக் கொள்கிறது. வேறுவிதமாய் இதைக் கூறுவதானால், பொருள் தண்ணீரை ‘இடம் பெயர ’ச் செய்து தனக்கான இடத்தை உருவாக்கிக் கொள்கிறது எனலாம். கூடைப்பந்து போன்ற பெரிய பொருள், ஒரு கிரிக்கெட் பந்து போன்ற சிறிய பொருளைவிட, அதிகமாக தண்ணீரை இடமாற்றம் செய்யும்.
வெகுகாலத்திற்கு முன்பே, ஆர்க்கிமிடிஸ் என்ற கிரேக்க விஞ்ஞானி ஒரு பொருளின் வாயிலாக ‘இடப்பெயர்வு’ செய்யப்பட்ட நீரின் எடை, பொருளின் எடையைவிட அதிகமாக இருந்தால், அது மிதக்கிறது என்று கண்டுபிடித்தார். அதனால் தான் ஆப்பிள் தண்ணீரில் மிதக்கிறது! ஆனால் மற்ற பொருள்கள் ஏன் மூழ்கிவிடுகின்றன என்பதை யூகிக்க முடிகிறது அல்லவா?
அடர்த்தி என்றால் என்ன?
நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு பொருளும் கண்ணுக்குத் தெரியாத சிறிய துகள்களால் ஆனது. இந்தத் துகள்கள் ஒரு பொருளில் எவ்வளவு நெருக்கமாக நிரம்பியுள்ளன என்பதே ‘அடர்த்தி’ என்பதாகும். டாஷியின் சிறிய கண்ணாடிக்கோலியின் எடை சோனம் மிஸ்ஸின் ஆப்பிளின் எடை அளவே இருக்கலாம். ஆனால் ஆப்பிள் ஏன் பெரியதாக உள்ளது? ஏனெனில் ஆப்பிளில் உள்ள துகள்களுக்கு இடையே இடைவெளி அதிகமாக உள்ளது. கண்ணாடிக்கோலியில் துகள்கள் ஒன்றுக்கொன்று மிகவும் நெருக்கமாக உள்ளன. ஆப்பிள் ஒரு கண்ணாடிக்கோலியைவிட அடர்த்தி குறைவாக உள்ளது. பொதுவாக, அடர்த்தியான பொருட்கள் தண்ணீரில் மூழ்கும்.
உங்கள் நண்பர்களுடன் விளையாடுவதற்கான ஒரு விளையாட்டு இங்கே: நான்கு அல்லது ஐந்து பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் எவை மிதக்கும், எவை மூழ்கும் என்று யூகிக்கவும். பின்பு அவற்றை ஒரு வாளி அல்லது தொட்டித் தண்ணீரில் போட்டுப் பார்க்கவும். விளையாடி மகிழுங்கள்!