mittai kadai muradan

மிட்டாய்க் கடை முரடன்

சமருக்கும் நிவ்யாவுக்கும் மிட்டாய்க் கடை முரடனைப் பார்த்தால் ஒரே நடுக்கம். ஆனால் அவன் தோற்றத்திற்கேற்ப அவ்வளவு பயங்கரமானவனா என்ன? சின்னச் சின்ன நாய்க்குட்டிகளை, சிற்றுண்டியாக உண்பவனா அவன்?

- Bhuvana Shiv

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இரட்டையர்கள் சமரும், நிவ்யாவும் பள்ளிப் பேருந்துக்காக காத்திருந்தனர்.

“திரும்பிப் பார்க்காதே! அவன் நம்மையே முறைத்துக் கொண்டிருக்கிறான்” என்று தன் சகோதரி நிவ்யாவிடம் கிசுகிசுத்தான் சமர்.

மிட்டாய்க் கடைக்காரன், தெருவின் மறுபக்கத்தில் இருந்த தன் கடையிலிருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் பெரிதாக, பார்க்க பயங்கரமாக இருந்தான்.

“அவன் முகம் முரட்டு நாயைப் போல இருக்கிறது!” என்று கடுமையாக சொன்னான் சமர்.

“அவன் மூக்கைப் பார்த்தால் சமோசா மாதிரி இருக்கிறது! அவன் விரல்கள் மயிர் படர்ந்த வெண்டைக்காய் போல் இருக்கின்றன!” என்றாள் நிவ்யா.

மிட்டாய்க் கடை முரடன், பார்க்க வேண்டுமானால் பயங்கரமாக இருக்கலாம். ஆனால் அவனது லவ்லி இனிப்பு மற்றும் பொம்மைக் கடை போன்ற அருமையான இனிப்பு, பொம்மை மற்றும் இதர சாமான்களின் கடை வேறெதுவுமே இல்லை.

வண்ண வண்ண இனிப்புகளும் மிட்டாய்களும் அங்கு மலை போல குவிந்திருந்தன.

மற்ற சிறுவர்கள் அந்தக் கடைக்குள் போவதைப் பார்த்தாலும், சமருக்கும் நிவ்யாவுக்கும் அவனிடமிருந்து எதுவும் வாங்க பயம்.

ஒரு முறை அந்தக் கடையில் ஒரு புது சாக்லேட், குவியல் குவியலாக இருப்பதைப் பார்த்தனர்.

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

“எங்… எங்களுக்கு அந்த மிட்டாய் கொடுப்பீங்களா?” என்று சமர் முணுமுணுத்தான்.

கல்லாவிலிருந்த அந்த முரடன் முன்னால் சாய்ந்து, மலைப்பாம்பு போன்ற பெருத்த கைகளை அவர்களை நோக்கி நீட்டினான். “உங்க பல்லெல்லாம் கொட்டிடும்!” என்று மெதுவாக முனகினான்.

மேலும், கல்லாப் பெட்டியிலிருந்து கோரமான  செயற்கைப் பல் வரிசையை எடுத்து ஆட்டிக் காட்டினான். சமரும் நிவ்யாவும் அதைப் பார்த்ததும் ஓட்டமெடுத்தனர்.

பாதுகாப்பாய் வீட்டிற்குள் நுழைந்ததும் நிவ்யா,  “அவன் அந்தப் பற்களைக் கொண்டு நம்மை கடிக்கப் பார்த்தான்” என்று நடுங்கிக் கொண்டே கூறினாள். அதன்பின், அவர்கள் அங்கே செல்லத் துணியவில்லை.

ஆனால், இன்று சமரும் நிவ்யாவும் மேலும் பயங்கரமான காட்சி ஒன்றைக் கண்டனர். மிட்டாய்க் கடை முரடன், திமிறிக் கொண்டிருந்த ஒரு நாய்க்குட்டியைத் தன் முகத்தினருகே பிடித்துக் கொண்டு, மென்மையாகக் குரலெழுப்பிக் கொண்டிருந்தான்.  பின்னர், நாய்க்குட்டியோடு கடைக்குள்ளே சென்று மறைந்து போனான்.

“அய்யோ! அவன் அந்த நாய்க்குட்டியை சமைத்து தின்னப் போகிறான்!” என்று நிவ்யா கிறீச்சிட்டாள்.

சமரும் நிவ்யாவும், தங்களுடைய நாய் லோலோவுக்கும் அவளது ஆறு குட்டிகளுக்கும் கூட ஆபத்து என்று உறுதியாக நம்பினர்.

“உங்களை அந்த மிட்டாய்க் கடை முரடன் சமைக்க ஒருபோதும் விட மாட்டோம்” என்று சொல்லிக் கொண்டாள் நிவ்யா.

ஆனால் அடுத்த நாள், அம்மா சந்தைக்குச் செல்லும்போது வாசல் கதவைத் திறந்து வைத்துவிட்டு சென்று விட்டார்.

ஆறு நாய்குட்டிகளும் வெளியில் ஓடி நேராக, லவ்லி இனிப்பு மற்றும் பொம்மைக் கடைக்குள் நுழைவதை, பெரும் திகிலுடன் பார்த்து நின்றனர் சமரும் நிவ்யாவும்.

“இப்போது, அவன் நம் நாய்க்குட்டிகளையும் தின்று விடுவான்! நாம் அவற்றைக் காப்பாற்ற வேண்டும்!” என்று சமர் அழுதான்.

சமரும்  நிவ்யாவும் கைகளைக்  கோர்த்துக் கொண்டு மெதுவாக, இருண்ட குகை போலிருந்த அந்தக் கடைக்குள் நுழைந்தனர்.  உள்ளே யாருமே இருக்கவில்லை!

கடையின் பின்னால் இருந்த ஒரு கதவு பாதி திறந்திருந்தது. நடுங்கிக் கொண்டே அதைத் தள்ளி முழுதும் திறந்தனர்.

அங்கே இருந்த மிட்டாய்க் கடை முரடன் அவர்களைப் பார்த்ததும் முகம் மலர்ந்தான்.

தன் கரகரப்பான குரலில், “இங்கே பாருங்கள்! இந்தக் குட்டிகளுக்குப் பயமே இல்லை!” என்றான்.