முகில் அன்று நாள் முழுவதும் படுக்கையிலேயே இருந்தாள். அவளுக்கு காய்ச்சல். அவள் மிகவும் சோர்வாக இருந்தாள். ஆனால், அவளது மண்டையை ஏகப்பட்ட கேள்விகள் துளைத்துக் கொண்டிருந்தன. 'நாளைய கணிதத்தேர்வை தவறவிட அம்மா சம்மதிப்பாரா? விளையாட்டு நேரத்தில் நண்பர்களுடன் விளையாட சோர்வாக இருக்குமோ? எனது அறை எப்பொழுது இவ்வளவு குளிராக ஆனது?'
அம்மா அரிசிக்கஞ்சி கிண்ணத்துடன் அறைக்குள் வந்தார்.
லொக்! லொக்! லொக்!
அம்மா கவலையுடன் இருந்தார். முகிலின் காய்ச்சல் அளவை பார்த்தார்.
“102 டிகிரியா? அய்யோ!”
முகிலின் உடம்பு சுடுகிறது; ஆனால் அவளுக்குக் குளிர்கிறது!
“நாம் இரத்தப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்” என்றார் அம்மா.
முகில் அதிர்ச்சியுடன் எழுந்து அமர்ந்தாள். 'இரத்தப் பரிசோதனையா?' “ஆனால் நான் எந்த சோதனைத் தேர்வுக்கும் படிக்கவில்லையே!” என்றாள்.
“இது அந்த மாதிரி சோதனை இல்லை!” என்று அம்மா சிரித்தார். “மருத்துவர் உன்னிடமிருந்து சிறிதளவு இரத்தத்தை எடுத்து அதை நுண்ணோக்கி(Microscope) வழியே சோதித்துப் பார்ப்பார்.”
“ஆனால் என் இரத்தம் முழுவதும் வெளியே சொட்டி சொட்டி, காலியாகிவிட்டால்?” என்று கேட்டாள் முகில். அவள் பயந்து போயிருந்தாள்.
“பயப்படாதே! ஒரு மனிதனின் உடலில் சுமார் ஐந்து லிட்டர்கள் அளவு இரத்தம் இருக்கும், நீ சிறிய பெண் என்றாலும் உன் உடலில் சுமார் மூன்று லிட்டர்கள் அளவு இரத்தமாவது இருக்கும். அதாவது 600 தேக்கரண்டிகள் அளவு இரத்தம் இருக்கும். அதில் சில துளிகள் மட்டுமே மருத்துவருக்கு தேவைப்படும்" என்றார் அம்மா.
அன்று மதியம் முகில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது அவள் இரத்தத்தை உறிஞ்ச ஒரு பேய் வெள்ளை அங்கி அணிந்து வருவதைப் பார்த்தாள். அதற்குத்தான் எவ்வளவு நீளமான பற்கள்!
முகில் குளிரோடு நடுங்கிக்கொண்டு எழுந்தாள்.
அப்பாடி! இது வெறும் கனவுதான்!
மாலையில் அம்மா முகிலை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஒரு செவிலி அவர்களை நோக்கி ஒரு பெரிய ரப்பர் வடத்துடன் வந்தார்.
“இவர் என்னைக் கட்டிப்போடப்போகிறாரா, என்ன?” என்று அலறினாள் முகில்.
மருத்துவர் சிரித்தார். “இல்லை இல்லை! இதுதான் குருதியடக்கு வடம்(Torniquet). இங்கே வா, உட்கார்! இப்போதுஉன் இடதுகை விரல்களை மடக்கி முஷ்டி பிடித்துக்கொள்” என்றார்.
அந்தச் செவிலி குருதியடக்கு வடத்தை முகிலின் இடது பின்னங்கையை சுற்றி இறுக்கமாகக் கட்டினார்.
“இந்த வடம் அவருக்கு இரத்தம் எடுப்பதை எளிதாக்கும்” என்றார் மருத்துவர்.
அடுத்து செவிலி ஒரு ஊசியை எடுத்தார். “இதற்கு சிலநொடிகளே ஆகும்” என்றார்.
முகில், ஊசியைப் பார்த்தவுடன் இருக்கையிலிருந்து விருட்டென எழுந்தாள்.
“முகில்! நீ தைரியமாக இருக்கவேண்டும்” என்றார் அம்மா.
அதனால், முகில் இருக்கையில் ஏறி அமர்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.
ஊசி ஏறியது. அம்மா..!
முகில் ஒற்றைக்கண்ணை மட்டும் திறந்து பார்த்தாள். ஊசியில் அவள் ரத்தம் நிரம்பிக்கொண்டிருந்தது. அது கருஞ்சிவப்பாக, கிட்டத்தட்ட அரக்கு நிறமாயிருந்தது!
செவிலி மெதுவாக ஊசியை வெளியே எடுத்து, கையிலிருந்த ஒரு ரத்தத்துளியை உறிஞ்சிக்கொள்ளப் பஞ்சை வைத்து அழுத்தினார்.
பிறகு, “முழங்கையை மடக்கி அப்படியே சில நிமிடங்கள் வைத்திரு” என்றார் செவிலி.
“அவ்வளவுதானா?” என்று முகில் மருத்துவரிடம் கேட்டாள். அப்படி ஒன்றும் இது சிரமமாக இல்லை என்று நினைத்தாள். இப்போது அவள் இரத்தம் ஒரு நெகிழிக் குழலுக்குள் இருப்பதைப் பார்த்தாள். “அவ்வளவுதான்! நாளை வந்து முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். பரிசோதனைக் கூடத்தில் உன் இரத்தத்தை சோதித்து, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று தெரிவிப்பார்கள்,” என்றார் மருத்துவர்.
வீடு திரும்பும் வழியில் அம்மா முகிலுக்கு இனிப்பிட்ட செர்ரிப்பழங்களை வாங்கித்தந்தார்.
அவையும் இரத்தத்தைப் போலவே அரக்கு நிறத்திலேயே இருந்தன.
முகில் அவ்வளவையும் தின்று தீர்த்தாள்.
அடுத்தநாள், அம்மா பரிசோதனை முடிவுகளை வாங்கிவந்தார்.
“நான் தேறிவிட்டேனா?” முகில் கவலையுடன் கேட்டாள்.
“ஆம்! இது சாதாரண காய்ச்சல்தானாம். சீக்கிரமே சரியாகிடும் என்று மருத்துவர் சொன்னார்” என்றார் அம்மா.
முகிலின் முகத்தில் புன்னகை பூத்தது. அவளுக்கு இப்போதே சரியாகிவிட்டது போல் தோன்றியது.
தனது முதல் இரத்தப் பரிசோதனையில் தான் வெற்றிபெற்றதை நண்பர்களிடம் சொல்லும்வரை காத்திருக்கமுடியாமல் தவிக்கத்தொடங்கினாள் முகில்.
வண்ண வண்ண இரத்தம்
மனிதர்களுக்கும் மற்றும் சில விலங்குகளுக்கும் இரத்தம் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் சில விலங்குகளின் இரத்தம் வேறு நிறத்தில் இருக்கும்.
சில கடல்வண்டுகளுக்கும், கடல் வெள்ளரி என்னும் கடல்வாழ் உயிரிக்கும் மஞ்சள் நிறத்தில் இரத்தம் இருக்கும் என்பது உனக்கு தெரியுமா?
கடலில் வாழும் சில புழுக்களுக்கு பச்சை நிற இரத்தமும், சில புழுக்களுக்கு ஊதா நிற இரத்தமும் இருக்கும்.
ஆக்டோபஸின் இரத்தம் என்ன நிறம் தெரியுமா? (பதில் பக்கம் 17இல் உள்ளது.)
உங்கள் இரத்தவகை என்ன?
இரத்தத்தில் உள்ள புரதத்தைப் பொருத்து, பல்வேறு இரத்தவகைகள் மனிதருக்கு இருப்பது, உங்களுக்குத் தெரியுமா? அவை ஓ பாசிடிவ், ஓ நெகடிவ், ஏ நெகடிவ், ஏ பாசிடிவ், பி பாசிடிவ், பி நெகடிவ், ஏபி பாசிடிவ், ஏபி நெகடிவ் என்பவையாகும்.
உங்கள் இரத்தவகை என்ன? உங்கள் நண்பர்களுக்கு வேறு இரத்தவகைகள் இருக்கிறதா என்பதைக் கண்டறியுங்கள்.
பதில்: நீலம்