muththajjiyin vayathu enna

முத்தஜ்ஜியின் வயது என்ன?

முத்தஜ்ஜி மிகவும் வயதானவர் என்பது புட்டாவுக்கும் புட்டிக்கும் தெரியும். ஆனால் முத்தஜ்ஜியின் உண்மையான வயது என்னவென்று எப்படிக் கண்டுபிடிப்பது? வாருங்கள், நமது இரட்டைத் துப்பறிவாளர்களுடன் சேர்ந்து ஒரு அற்புதமான கணிதப் பயணத்தை மேற்கொள்வோம். முத்தஜ்ஜியின் நினைவுகளும் இந்திய வரலாறும் நமக்கு இந்தப் புதிரின் விடையை கண்டுபிடிக்கக் கண்டிப்பாக உதவும்.

- Sheela Preuitt

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

புட்டாவும் புட்டியும் படுக்கையிலிருந்து குதித்தெழுந்தார்கள். இன்று முத்தஜ்ஜியின் பிறந்த நாள், அவர்கள் இருவரும் இரயிலைப் பிடிக்க வேண்டும்!

இந்த இரட்டையர்களின் அம்மாவின் அம்மாவின் அம்மாவான முத்தஜ்ஜி, அவர்களின் பாட்டி அஜ்ஜியுடன் மைசூரில் வசித்து வருகிறார். முத்தஜ்ஜியின் உண்மையான பிறந்தநாள் என்னவென்று யாருக்கும் தெரியாததால், எப்போதும் மகர சங்கராந்தி விடுமுறையின்போதே அஜ்ஜி அதைக் கொண்டாடினார்.

"அம்மா, கேக் இருக்குமா?" என்று புட்டி கேட்டாள். "இளஞ்சிவப்பு ஐசிங் மேல் ஒரு ரோஜாவுடன் கூடிய பெரிய, பஞ்சுபோன்ற கேக்?"

"இல்லை. முதியோர்களின் பிறந்த நாளன்று கேக் இருக்காது. 200 மெழுகுவர்த்திகள் எந்தக் கேக்கின் மீது பொருந்தும்!" என்றான் புட்டா.

"முத்தஜ்ஜிக்கு 200 வயது ஆகியிருக்க சாத்தியமில்லை!" என்றாள் புட்டி. "அம்மா, முத்தஜ்ஜியின் வயது என்ன?"

"அவரைப் பார்க்கும்போது அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள்" என்று அம்மா புன்முறுவலுடன் சொன்னார்.

மைசூரில் அந்த பழைய பச்சை வீட்டை அடைந்த மறுகணம், இரட்டையர்கள் முத்தஜ்ஜியின் அறைக்குள் நுழைந்தார்கள். "பிறந்தநாள் வாழ்த்துக்கள், முத்தஜ்ஜி! இன்று உங்களுக்கு எத்தனை வயது?"

முத்தஜ்ஜி இரட்டையர்களைக் கட்டியணைத்தார். "என்னுடைய வயது என்னவாக இருக்கும்? யாருக்குத் தெரியும்? அதனால் என்ன ஆகப்போகிறது?"

"ஆனால், எங்களுக்கு அது முக்கியம்" என்று புட்டாவும் புட்டியும் சேர்ந்து ஆரவாரம் செய்தார்கள்.

முத்தஜ்ஜி சிரித்தார். "சரி, நான் பிறப்பதற்கு சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன், எங்கள் மகாராஜா, இந்திய மகாராஜாக்கள் மகாராணிகளுக்காக தில்லியில் நடந்த ஒரு பெரிய விருந்துக்குச் சென்றார் என்று எனக்குத் தெரியும். ஒரு பிரிட்டிஷ் ராஜாவும் ராணியும் வந்திருந்தார்கள். அப்போது எங்கள் மகாராஜாவுக்கு ஒரு தங்கப் பதக்கம் கிடைத்தது."

"ஓ! விருந்தா! நிறைய கேக் இருந்திருக்குமே!" என்று புட்டி கூறினாள். "அந்த ராஜா யார், முத்தஜ்ஜி? உங்களுக்குத் தெரிந்தால், எங்களால் அவர் டில்லிக்குச் சென்ற ஆண்டைக் கண்டுபிடிக்க முடியும். அதில் ஐந்து ஆண்டுகள் சேர்த்தால், நீங்கள் எப்போது பிறந்தீர்கள் என்று தெரிந்துவிடும்!"

"மறந்துவிட்டேன், புட்டா" என்று முத்தஜ்ஜி சலித்துக்கொள்ள, புட்டாவின் முகம் சுருங்கியது.

"இருங்கள்! வேறு ஏதாவது நினைவுக்கு வருகிறதா பார்க்கிறேன். ஆங்! எனக்கு உங்கள் வயது, ஒன்பது அல்லது பத்து, இருக்கும்போது என் மாமா பம்பாயிலிருந்து வந்தார். அவர் அப்போது சுத்தமான இரயில்களைப் பற்றிக் கூறினார்."

"சுத்தமான இரயில்களா?"

"ஆமாம்!" முத்தஜ்ஜி உற்சாகமாகக் கூறினார். "அந்த ஆண்டுதான் பம்பாயில் அவை இயங்கத் துவங்கியிருந்தன. அதில் பயணம் செய்யும்போது உடைகளிலும் முகத்திலும் கருப்பு தூசு படியாது. அழுக்கு எதுவுமே ஒட்டாது!"

இரட்டையர்கள் அவரை உற்றுப் பார்த்தனர். இரயில் பயணத்தில் எப்படி அழுக்காக முடியும்?

முத்தஜ்ஜி தொடர்ந்தார், "சில ஆண்டுகள் கழித்து என் திருமணம் நடந்தது. அப்போதைய சட்டப்படி திருமணம் நடப்பதற்கு பெண்களுக்குக் குறைந்தது 15 வயதாவது ஆகியிருக்க வேண்டும். என் தந்தை சட்டத்தை மீற மாட்டார். அதனால், எனக்கு அப்போது 16 வயதாக இருந்திருக்க வேண்டும். திருமணம் நடந்தவுடனேயே உங்களது முத்தஜ்ஜாவுக்கு பம்பாயில் வேலை கிடைத்தது. உடனே நாங்கள் மைசூரை விட்டு பம்பாய் சென்று விட்டோம்."

"உங்களின் திருமணம் நடந்த ஆண்டில் முக்கியமான நிகழ்ச்சி ஏதாவது நடந்ததா, முத்தஜ்ஜி?" என்று புட்டா கேட்டான்.

"ஆமாம்! அந்த ஆண்டு, எங்கள் மகாராஜா தசரா திருவிழாவின் போது நமது பெரிய அணையையும் அதன் அருகிலுள்ள அழகான தோட்டங்களையும்  திறந்து வைத்தார். ஆனால், நான் பம்பாயில் இருந்ததால் அதைப் பார்க்க முடியவில்லை" என்று முத்தஜ்ஜி சோகமாகச் சொன்னார்.

"ஒரு பெரிய அணையா?" என்று புட்டா உற்சாகமாகக் கேட்டான். "அந்த அணை இப்பொழுதும் உள்ளதா?"

முத்தஜ்ஜி குதூகலமாகச் சிரித்தார். "நிச்சயமாக! மிகவும் திடமாகவும்கூட. காவேரி நதியை அடக்கிய அணை அது. மழைக்காலத்தில் வெள்ளம் வருவதில்லை. கோடைக்காலத்தில் வயல்களுக்கு எப்போதும் போதுமான தண்ணீர் கிடைக்கிறது."

அஜ்ஜி கதவருகிலிருந்து, "கே.ஆர்.எஸ் பற்றியா பேசுகிறீர்கள், அம்மா?" என்றார்.

"ஆமாம், கே.ஆர்.எஸ்தான்" என்று முத்தஜ்ஜி அன்பாகக் கூறினார். "உங்கள் அஜ்ஜி என் ஐந்தாவது கடைக்குட்டி, ஆனால் மிகவும் சுட்டி! மணியடித்தது போல் இரண்டு பருவமழைக்காலங்களுக்கு ஒருமுறை எனது குழந்தைகள் பிறந்தன. பிள்ளைப்பேற்று சமயத்தில் அஜ்ஜி வெளிவரவிருக்கும் நாளில் உங்களது முத்தஜ்ஜாவைக் காணவே இல்லை. பின்னாளில் கோவாலியா டாங்க் மைதானத்தில் காந்திஜியின் பேருரையைக் கேட்கப் போனதாகக் கூறினார். அவர் மிகவும் உற்சாகமாக, “வெள்ளையனே வெளியேறு!” என்று நாள் முழுவதும் கோஷம் போட்டுக்கொண்டிருந்தார்.  சிறுபிள்ளைத்தனமான அவரது கூச்சலுக்கிடையில் குழந்தையால் எப்படித் தூங்க முடியும்?"

"வெள்ளையனே வெளியேறு!" புட்டியின் கண்கள் சந்தோஷத்தில் பெரிதாக விரிந்தன. "நாம் வரலாற்றில் இதைப்பற்றி படித்தோம், புட்டா! இந்த இயக்கம் 1942இல் துவங்கியது! அப்படியானால் 1942இல்..."

"... பிறந்தது அஜ்ஜி, முத்தஜ்ஜி அல்ல" என்று புட்டா முகத்தைச் சுளித்தான்.

"அது ஒரு தொடக்கம்தான்!" என்று புட்டி கூறினாள். "நீங்கள் எந்த ஆண்டில் பிறந்தீர்கள் அஜ்ஜி?"

"இந்த ஆண்டில் எனக்கு 74 வயதாகிறது" என்றார் அஜ்ஜி. "ஆகவே, நான் பிறந்தது?" புட்டி விரைவாகக் கணக்கிட்டு, "1942!*" என்றாள். அஜ்ஜி ஆம் என்று தலையாட்டினார்.

* (2016 - 74 = 1942)

"அஜ்ஜி நம் முத்தஜ்ஜியின் ஐந்தாவது குழந்தை. முத்தஜ்ஜியின் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் இடையே இரண்டு ஆண்டுகள் இடைவெளி!" என்று புட்டா கூறினான். "அஜ்ஜி 1942இல் பிறந்தார்

என்றால்..."

"முத்தஜ்ஜியின் நான்காவது குழந்தை பிறந்தது 1942 - 2 = 1940இல். மூன்றாவது குழந்தை 1940 - 2 = 1938இல், இரண்டாவது 1938 - 2 = 1936இல் , முதல் குழந்தை 1936 - 2 = 1934இல்!"

"ஆகையால், முத்தஜ்ஜியின் திருமணம் 1932இல் நடந்திருக்க வேண்டும்!” என்று புட்டி கூறினாள்.

"சற்று பொறு புட்டி" என்று புட்டா கூறினான். "தனக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கழித்து அவரது முதல் குழந்தை பிறந்ததாக முத்தஜ்ஜி சொல்லவில்லையே. திருமணம் நடந்த ஆண்டு மைசூர் கே.ஆர்.எஸ் அணை கட்டப்பட்டது என்று சொன்னார் அவ்வளவுதான்."

"ஒருவேளை இது உதவக்கூடும், இரட்டையர்களே" என்று கூறிக்கொண்டே அஜ்ஜி, முத்தஜ்ஜிக்குப் பிரியமான சேமியா பாயசத்தை கிண்ணங்களில் பரிமாறினார்.

"கே.ஆர்.எஸ் என்பது கிருஷ்ண ராஜ சாகரா அணையாகும். பிருந்தாவன் பூங்கா அந்த அணையுடன் இணைக்கப்பட்ட தோட்டம். போன வருடம் நாம் அங்கு சென்றோம். அங்கே இசை நீரூற்று காட்சியைப் பார்த்த நினைவிருக்கிறதா?"

இரட்டையர்கள் இருவரும் ஆனந்தத்துடன் தலையசைத்தார்கள். "ம்ம்ம்ம், உங்கள் பாயசம் மிகவும் ருசியாக இருக்கிறது, அஜ்ஜி!" என்று புட்டி கூறினாள்.

"கே.ஆர்.எஸ் எந்த வருடம் கட்டப்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமா, அஜ்ஜி?”

அஜ்ஜி சந்தேகத்துடன் தலை அசைத்தார். "எனக்கு சரியாக நினைவில்லை. ஆனால் மதிய உணவருந்திய பிறகு அஜ்ஜா உங்களை மத்திய நூலகத்திற்கு அழைத்துச் செல்வார். அங்கு உங்களால் விடை கண்டுபிடிக்க முடியும்."

நூலகத்தில், புட்டி மைசூர் வரலாறுப் புத்தகம் ஒன்றைக் கண்டுபிடித்தாள். "இதோ இங்கே உள்ளது!" என்று புட்டி மெல்ல கிசுகிசுத்தாள். "மைசூரின் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலங்களான கே.ஆர்.எஸ் அணையும் அருகிலுள்ள பிருந்தாவன் பூங்காவும் 1932இல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டன! ஆகையால், உண்மையில் 84 * ஆண்டுகளுக்கு முன்பு, 1932இல்தான் முத்தஜ்ஜி திருமணம் செய்து கொண்டார்!" இரட்டையர்கள் குதூகலமாகச் சிரித்தனர்.

* (2016 - 1932 = 84)

"முத்தஜ்ஜி தோராயமாக அவரது 16 ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டதாகக் கூறினார். ஆனால், அப்போது அவருக்கு 15 அல்லது 17 அல்லது 18 வயதாகக்கூட இருந்திருக்கக் கூடும்" என்றாள் புட்டி.

"அவர் தனது பம்பாய் மாமா சுத்தமான இரயிலைப் பற்றிச் சொன்னபோது தனக்கு சுமார் 9 அல்லது 10 வயதாக இருந்திருக்கும் என்றார் அல்லவா?" என்று புட்டா கூறினான். "அந்த இரயிலைப் பற்றி அஜ்ஜாவுக்குத் தெரிந்திருக்கும்."

அஜ்ஜா படிப்பகத்தில் இருந்தார். "அஜ்ஜா!" புட்டி மெல்லப்பேசினாள், "பழங்காலத்தில் இரயில் பயணம் செல்லும்போது தூசும் அழுக்கும் மக்களின்மேல் ஒட்டுமா?" அஜ்ஜா ஆம் என்று தலையசைத்தார். "நீராவி என்ஜின்கள் மின்சாரத்தில் இல்லாமல் நிலக்கரியில் ஓடின" என்று அவர் கூறினார். "கருப்பு நிலக்கரி தூசி புகைபோக்கி வழியாக எல்லாவற்றிலும், எல்லார் மேலும் வந்து படியும். அப்பப்பா!"

"அட, அதேதான், புட்டி! மின்சார இரயில்கள்தான் சுத்தமான இரயில்கள்!" புட்டா உற்சாகமாகக் கூறினான்.

இந்திய இரயில்வே பற்றிய புத்தகம் ஒன்றை தேடிப்பிடித்தார் அஜ்ஜா. "இந்தியாவின் முதல் மின்சார இரயில் 1925ஆம் ஆண்டு பம்பாயில் வந்திறங்கியது!" என்று சுட்டிக்காட்டினார்.

"மேலும், அந்த ஆண்டில் முத்தஜ்ஜி தனக்கு 9 வயது என கூறினார் அல்லவா? அவர் சொன்னது சரி என்றால், முத்தஜ்ஜி 1916இல்  பிறந்திருக்க வேண்டும்” என்றான் புட்டா.“ஆனால், அவர் தவறாகவும் சொல்லியிருக்கலாம், அல்லவா?” என்று முகத்தைச் சுளித்தாள் புட்டி. “இதை உறுதிசெய்ய ஒரே வழிதான் இருக்கிறது. தான் பிறந்த ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகள் முன்பு, இந்திய மகாராஜாக்கள் மகாராணிகளுக்கான பெரிய விருந்து தில்லியில் நடந்தது என்றார் முத்தஜ்ஜி. அந்த விருந்து 1911இல் நடந்ததா என்று கண்டுபிடிக்க வேண்டும்" என்றான் புட்டா.

அவர்கள் மீண்டும் அஜ்ஜாவிடம் ஓடினார்கள்.

*(1925 - 9 = 1916);   ** (1916 - 5 = 1911)

"அஜ்ஜா, இந்தியா வந்த வெளிநாட்டு ராஜா ஒருவருக்கான பிரம்மாண்டமான விருந்து ஒன்று சுமார் 1911இல் நடந்ததா?"அஜ்ஜா நெற்றி சுருங்க யோசித்தார். "1911ஆ? எனக்கு இந்தத் தேதி தெரிந்ததுபோல இருக்கிறதே? ஆ, ஆமாம். அந்த ஆண்டுதான் ‘கேட்வே ஆஃப் இந்தியா’ பம்பாயில் கட்டப்பட்டது. பிரிட்டிஷ் பேரரசரான ஐந்தாம் ஜார்ஜ் அவர்களை வரவேற்கக் கட்டப்பட்டது! பல பெரும் விருந்துகள் நடந்திருக்க வேண்டும், ஒன்றிரண்டல்ல." அஜ்ஜா தனது நெற்றியைத் தட்டிக்கொண்டே, “இந்த பழைய மூளையின் நினைவுத்திறன் எப்படி? அசத்துகிறதா?” என்று பெருமை பொங்கக் கூறினார்."அற்புதம், அஜ்ஜா!" இரட்டையர்கள் பாராட்டினார்கள். "நன்றி, அஜ்ஜா!" இப்பொழுது  முத்தஜ்ஜியின் சரியான வயது என்னவென்று தெரிந்துவிட்டது!

ஐந்து நிமிடங்கள் கழித்து, இரட்டையர்கள் வீட்டை நோக்கி ஓடினார்கள்.

"முத்தஜ்ஜி" என்று அழைத்துக்கொண்டே நேராக அவர் அறைக்குச் சென்றார்கள். "மைசூர் மகாராஜா, பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ் அவர்களிடமிருந்தா தங்கப் பதக்கம் பெற்றார்?"

"ஆம்!" என்று முத்தஜ்ஜி மகிழ்ச்சியுடன் கூறினார். "அவர்தான்! ஜார்ஜ்தான்! புத்திசாலிக் குழந்தைகள் நீங்கள்!"

"அப்படியானால், முத்தஜ்ஜி, நீங்கள் 1916இல் பிறந்தீர்கள்! இன்று உங்களுக்கு சரியாக 100* வயது ஆகிறது!"

* (2016 - 1916 = 100)

"மிகச்சிறந்த துப்பறியும் வேலை, இரட்டையர்களே!" என்று அம்மா சிரித்துக்கொண்டே கூறினார். "உங்களிருவருக்கும் முத்தஜ்ஜிக்கும் சேர்த்து ஒரு விசேஷப் பரிசு தயார்! அது இளஞ்சிவப்பு ஐசிங் போட்ட ஒரு பெரிய, பஞ்சு போன்றது, மேலே ரோஜாவுடன்."

"ஹுரே!" என இரட்டையர்கள் ஆரவாரம் செய்தனர்.

மகாராஜாக்கள் மகாராணிகளுக்கான பெரிய விருந்து (மற்றும் இந்திய வரலாற்றில் இருந்து மற்ற வேடிக்கையான சம்பவங்கள்)

இந்தக் கதையில் முத்தஜ்ஜி பல முக்கிய வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி பேசினார், அல்லவா? அவை அனைத்தும் உண்மையில் நடந்தவை! அவைகுறித்த சில தகவல்களை இங்கே காணலாம்.

மகாராஜாக்கள்  மகாராணிகளுக்கான பெரிய விருந்து  (1911) -

பிரிட்டிஷ் பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் அவரது மனைவி ராணி மேரி இருவரும் முதல் முறையாக இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது, அவர்கள் ஒரு பெரும் விருந்தை அளித்தார்கள். அதில் 400க்கும் மேற்பட்ட இந்திய மகாராஜா மற்றும் மகாராணிகள் பங்கேற்றனர். அது தில்லி தர்பார் என்று அழைக்கப்பட்டது. 200,000 விருந்தினர்களுக்கு உணவளிக்க, பேக்கரிகளிலிருந்து 20,000 ரொட்டிகள் ஒவ்வொரு நாளும் உற்பத்தியாகின. மேலும் ஒவ்வொரு வேளை உணவுக்கும் 1000க்கும் மேலான ஆடு மாடுகள் கொல்லப்பட்டன! நமது மைசூர் மகாராஜாவான நான்காம் கிருஷ்ணராஜ உடையார் உட்பட பல இந்திய மகாராஜாக்கள் பேரரசரிடமிருந்து தங்கப் பதக்கங்களைப் பெற்றனர்.

சுத்தமான இரயில்கள் (1925) - பிப்ரவரி 3, 1925 அன்று இந்தியாவின் முதல் மின்சார இரயில் மும்பை விக்டோரியா டெர்மினஸிலிருந்து புறப்பட்டு குர்லா இரயில் நிலையத்திற்குச் சென்றது. இந்தியா, இரயில்வே மின்மயமாக்கப்பட்ட நாடுகளுள் ஆசியாவின் 3ஆம் நாடாகவும் உலகத்தின் 24ஆவது நாடாகவும் ஆனது.

காவேரியை கட்டுப்படுத்திய அணை (1932) - காவேரி நதி தெற்கு கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வழியாக ஓடுகிறது. எப்போதும் மைசூரை வளமாக வைக்கும் இந்த ஆறு, மற்ற ஆறுகளைப் போலவே, ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்குடனும் கோடைக்காலத்தில் வறட்சியாகவும் இருந்தது. ஆனால், ஆற்றின் குறுக்கே ஒரு அணை கட்டப்பட்டு கிருஷ்ண ராஜ சாகரா (கே.ஆர்.எஸ்) நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டபோது அந்த நிலைமை மாறியது. இந்த நீர்த்தேக்கம் இன்றும் பெங்களூர் நகர மக்களுக்கு குடிநீர் வழங்குகிறது.

மகாத்மா காந்தியின் பேருரை (1942) - 8 ஆகஸ்ட் 1942 அன்று காந்திஜி பம்பாயில் கோவாலியா டேன்க் மைதானத்தில் 'வெள்ளையனே வெளியேறு’ என்ற உரையை ஆற்றினார். வன்முறை இல்லாமல், அமைதியான முறையில், வெள்ளையரின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியாமல் போராட வேண்டும் எனக் கூறினார் காந்திஜி. ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர், ஆகஸ்ட் 15, 1947 அன்று, அந்த வன்முறையற்ற போர், காந்திஜி விரும்பிய முடிவுகளைத் தந்தது. பிரிட்டிஷார் திரும்பிச் சென்று விட்டனர், இந்தியா சுதந்திரம் அடைந்தது. இன்று, அந்த அமைதியான புரட்சியின் நினைவாக, கோவாலியா டாங்க் மைதானம்,  ‘ஆகஸ்ட் கிராந்தி மைதான்’ என்று அழைக்கப்படுகிறது.