muttaigalai ennuvomaa

முட்டைகளை எண்ணுவோமா

ரகு, முட்டைகளை எண்ணும்போது அடிக்கடி எண்ணிக்கையை விட்டுவிட்டு தடுமாறுகிறான். எண்ணுவதற்கு ஒரு எளிமையான வழி காவ்யாவுக்குத் தெரியும்.

- Nivedha

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

காவ்யாவுக்கு ஆறு வயதாகிறது. பறவைகளை விரட்டி விளையாடுவதும் பண்ணையில் உள்ள மாடுகளுக்கு தீனி வைப்பதும் அவளுக்குப் பிடிக்கும்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரமே, “நான் எழுந்துட்டேன்” என்று கத்தியபடியே வந்தாள் காவ்யா.

“காவ்யா, இங்கே வாம்மா!” என்று அழைத்தார் அவளது பாட்டி.

“முட்டைகளை எண்ணி எடுத்துவர ரகுவுக்கு கொஞ்சம் உதவி செய்வாயா?”

வி ர் ர் ர்…

ரகு முட்டைகளை எண்ண ஆரம்பித்தான். “ஒன்று, இரண்டு, மூன்று… பதினான்கு... ஓய்! சீனா, என் செருப்பை எடுக்காதே!”

பின்னர் மீண்டும் எண்ண ஆரம்பித்தான். “பன்னிரெண்டு, பதிமூன்று… ஐயோ, எங்கு விட்டேன் என்று தெரியவில்லையே! பதிமூன்றா பன்னிரெண்டா?” என்று குழம்பினான். ரகு தன் கூடையில் இருந்த முட்டைகளை எடுத்து முதலில் இருந்து எண்ண ஆரம்பித்தான்.

“ஒன்று, இரண்டு… பதினாறு, டேய் புனீத்! என் சைக்கிள் மேலிருந்து கையை எடு!”

“பதினைந்து, பதினாறு… போச்சு, எங்கே விட்டேன்? சரி, இப்போது முட்டைகளை எடுத்துச் செல்வோம். பிறகு எண்ணிக் கொள்ளலாம்” என்றான். “எண்ணுவதற்கு ஒரு எளிய வழியை என் பள்ளிக்கூடத்தில் நான் கற்றுக்கொண்டேன்!” என்றாள் காவ்யா. “பத்து வரை எண்ணுவது, பெரிய பெரிய எண்கள் வரை எண்ணுவதை விட சுலபம்தானே?”“ஹும்! நான் கோடி வரை கூட எண்ணுவேன்!” என்றான் ரகு.

“ஆனால், பத்து வரை எண்ணுவது மிகவும் சுலபமாயிற்றே! ஒரு கூடையில் பத்து முட்டைகளைப் போடு. இன்னொரு கூடையை எடுத்து அதிலும் பத்து முட்டைகளைப் போடு. கடைசி முட்டையை கூடையில் போடும்வரை இதைத் திரும்பத் திரும்பச் செய். கடைசியில், உன்னிடம் பத்து முட்டைகள் உள்ள பல கூடைகள் இருக்கும்.” ரகு காவ்யாவிடம் ஒழுங்கு காட்டிவிட்டுப் போனான்.

ரகு பத்து முட்டைகளை எண்ணி அவற்றை ஒரு கூடையில் வைத்தான். அடுத்த கூடையை எடுத்து அதிலும் பத்து முட்டைகளை வைத்தான். சற்று நேரத்தில், “நான் எல்லா முட்டைகளையும் வைத்துவிட்டேன்! இப்போது நம்மிடம் எத்தனை முட்டைகள் இருக்கின்றன? சொல்லு பார்க்கலாம்” என்றான்.

“உன்னிடம் எத்தனை கூடை முட்டைகள் உள்ளன?” எனக் கேட்டாள் காவ்யா.“ஐந்து கூடைகள். ஒவ்வொன்றிலும் பத்து முட்டைகள்” என்றான் ரகு.“ஐம்பது முட்டைகள்!” எனக் கூவினாள் காவ்யா.

“எப்படி இவ்வளவு வேகமாக எண்ணினாய்?” என வியந்தார் பாட்டி.

“அஜ்ஜி! ஒரு கூடையில் பத்து முட்டைகள் உள்ளன. நம்மிடம் மொத்தம் ஐந்து கூடைகள் உள்ளன. அப்படியென்றால் பத்து முட்டைகள் கொண்ட ஐந்து குழுக்கள். அதாவது பத்து கூட்டல் பத்து கூட்டல் பத்து கூட்டல் பத்து கூட்டல் பத்து. ஐம்பது! ஐம்பது முட்டைகள்” எனக் கூறினாள் காவ்யா.

காவ்யாவும் ரகுவும் அஜ்ஜியுடன் சந்தைக்குச் சென்று முட்டைகளை விற்றனர். அது அவர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

வீட்டிற்கு வந்ததும் முட்டை விற்ற பணத்தை எண்ண அஜ்ஜிக்கு உதவினர். அன்றிரவு அனைவரும் சோறும் சுவையான முட்டை குருமாவும் சாப்பிட்டனர்!

ஒன்றுகளும் பத்துகளும்

பத்து என்பது பத்து ஒன்றுகள் கொண்ட குழு

ஒரு முட்டை, ஒரு கோழி, ஒரு கூடை

11 = ஒரு பத்து + ஒரு ஒன்று

23 = இரண்டு பத்துகள் + மூன்று ஒன்றுகள்

12 = ஒரு பத்து + இரண்டு ஒன்றுகள்