muyalum aameyum meendum

முயலும் ஆமையும் (மீண்டும்)

நிதானமான, அதேசமயம் தளராத முயற்சியுடைய ஆமை, கர்வம் பிடித்த முயலை வென்ற பந்தயம் பற்றி நினைவிருக்கிறதா? இப்பொழுது மீண்டும் அதே இருவர் இணைந்து, ஒரு செயலை செய்ய வேண்டிய தேவை. ஒருவரின் உதவியின்றி மற்றவர் செயல்பட முடியாதென்பது இருவருக்கும் தெரியும். ஆனால் இந்தப் பழைய எதிரிகள் இணைந்து செயல்படுவது சாத்தியமா?

- S. Jayaraman

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

முயலுக்கும் ஆமைக்கும் இடையே நடந்த அந்த மாபெரும் ஓட்டப்பந்தயம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? மொத்த விலங்குகள் சாம்ராஜ்ஜியத்திலும் பல நாட்களுக்கு, பந்தயம் பற்றியும் அதில் பங்குபெற்ற இருவரையும் பற்றியே பேச்சு!

பல மாதங்கள் உருண்டோடின. ஆமையும் முயலும் வசித்து வந்த காட்டின் ராஜாவான சிங்கத்துக்கு, பக்கத்துக் காட்டின் சிங்க ராஜாவுடன் சில விஷயங்களை விவாதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அப்போது சிங்கத்தால் காட்டைவிட்டு வெளியே செல்ல முடியாத நிலை. எனவே, தனக்கு பதிலாக பேச்சு வார்த்தை நடத்த, தன் பிரதிநிதிகளாக ஆமையையும் முயலையும் அனுப்ப முடிவு செய்தது.

முயலும் ஆமையும் சிங்கராஜா அழைத்ததின் பேரில் அதன் முன் வந்து நின்றனர். “பக்கத்துக் காட்டுக்கு உங்களில் யாராவது ஒருவர் போகத்தான் வேண்டும்” என்று சிங்கம் கட்டளையிட்டது. “சில முக்கியமான விஷயங்களை அந்த ராஜாவிடம் நீங்கள் விவாதிக்க வேண்டும்.”

“பிறகு அந்த விஷயங்களைப் பற்றிய அவரது கருத்துக்களைத் தெரிந்து கொண்டு திரும்பி வரவேண்டும். இப்பொழுது கிளம்புங்கள்” என்று கட்டளை பிறப்பித்தது சிங்கராஜா.

“நினைவிருக்கட்டும்! உங்கள் வேலையை முடிக்க ஒரு நாள்தான் அவகாசம்” என்றும் சொன்னது. பக்கத்து காட்டுக்கு செல்லும் பாதை கடினமானது. கற்களும் முட்களும் நிறைந்திருந்தன. வழியில் இரண்டு ஆறுகளைக் கடக்க வேண்டும்.

கொஞ்ச நேர யோசனைக்குப்பின், இந்த வேலையை தனியாக செய்ய முடியாதென்பதை முயலும் ஆமையும் உணர்ந்தன. ஆகவே இருவரும் சேர்ந்தே பயணம் செய்ய முடிவு செய்தன. முள் நிறைந்த பாதையில் முயல் ஆமையைத் தன் முதுகில் சுமந்து செல்லவும், ஆற்றைக் கடக்க ஆமை முயலை முதுகில் சுமக்கவும் முடிவு செய்து கொண்டன. இம்முடிவு இருவருக்குமே பிடித்திருந்தது.

அடுத்த நாள், சிங்கராஜாவிடமிருந்து சேகரிக்க வேண்டிய செய்திகளையெல்லாம் பெற்றுக் கொண்டு, இருவரும் புறப்படத் தயாரானார்கள். முதலில் முயல் ஆமையைத் தன் முதுகில் சுமந்து, முள் நிறைந்த பாதையை, தாவித்தாவி வேகமாகக் கடந்தது. ஆமையோ முயலின் முதுகில் உயிரைப் பிடித்துக் கொண்டு இருந்தது.

ஆற்றுப்பக்கம் வந்ததும் நிலைமை மாறியது. ஆமையின் முதுகில் முயல் ஏறிக் கொண்டது. ஆமை ஆற்றின் குறுக்கே விரைவாக, அதே சமயம் எச்சரிக்கையாக நீந்திச் சென்றது. இரண்டு ஆறுகளையும் கடந்த பின், அடுத்த காட்டை அடைவதற்குக் குறைந்த நேரமே தேவைப்பட்டது.

தங்களது சிங்கராஜா கேட்டிருந்த விஷயங்களைப் பற்றி பக்கத்துக் காட்டின் சிங்கராஜாவுடன் விரிவாக விவாதித்த பின்னர், முயலும் ஆமையும் தங்கள் காட்டிற்கு திரும்பிச் செல்லத் தயாரானார்கள்.

சென்ற பொழுதைக் காட்டிலும், திரும்பி வரும்பொழுது பயணம் இன்னும் எளிதாக இருந்தது. ஏனென்றால், முயலுக்கும், ஆமைக்கும் வழியைக் கடப்பதில் அனுபவம் உள்ளதே! முதலில் எதிரிகளாக இருந்த இருவர் இப்போது ஒன்றாக செயல்பட்டு, தங்களின் சிங்கராஜா கொடுத்த வேலையை, கொடுத்த காலக்கெடுவுக்கு முன்னதாகவே முடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்.

உங்களுக்குப் பிடித்த வகையில் வண்ணம் தீட்டுங்கள்.

உங்களுக்குப் பிடித்த வகையில் வண்ணம் தீட்டுங்கள்.