Naadagakaari

நாடகக்காரி

சென்ற ஆண்டில் சோழ நாட்டில் கடும் புயலுடன் சேர்ந்து வந்த பெருமழையைப் பற்றி நேயர்களுக்கு நினைவிருக்கலாம். சிலர் அதைக் 'கடவுளின் கருணை மழை' என்றார்கள். வேறு சிலர், "இப்படிப் பயங்கரமான புயலில் ஏறிக் கொண்டுதானா வர வேண்டும்? இனிய செந்தமிழையொத்த மெல்லிய தென்றல் காற்றிலே மிதந்து வரக் கூடாதா?" என்றார்கள். அவரவர்களுக்கு நேர்ந்த சௌகரிய - அசௌகரியங்களைப் பொறுத்து எதையும் முடிவு செய்வது தான் மானிட இயற்கை. எனக்கு அச்சமயம் கடவுளின் கருணையின் பேரில் வந்த கோபம் இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாது. ஏனெனில், அக்கருணையின் காரணமாக நான் நள்ளிரவில் மாயவரத்துக்கும் சீர்காழிக்கும் நடுவில் அகப்பட்டுக் கொண்டு திண்டாடும்படி நேர்ந்தது.

- அமரர் கல்கி

Source: சென்னை நூலகம்
Licesne: Creative Commons

பொருளடக்கம்

அத்தியாயம் - 1

சென்ற ஆண்டில் சோழ நாட்டில் கடும் புயலுடன் சேர்ந்து வந்த பெருமழையைப் பற்றி நேயர்களுக்கு நினைவிருக்கலாம். சிலர் அதைக் 'கடவுளின் கருணை மழை' என்றார்கள். வேறு சிலர், "இப்படிப் பயங்கரமான புயலில் ஏறிக் கொண்டுதானா வர வேண்டும்? இனிய செந்தமிழையொத்த மெல்லிய தென்றல் காற்றிலே மிதந்து வரக் கூடாதா?" என்றார்கள். அவரவர்களுக்கு நேர்ந்த சௌகரிய - அசௌகரியங்களைப் பொறுத்து எதையும் முடிவு செய்வது தான் மானிட இயற்கை. எனக்கு அச்சமயம் கடவுளின் கருணையின் பேரில் வந்த கோபம் இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாது. ஏனெனில், அக்கருணையின் காரணமாக நான் நள்ளிரவில் மாயவரத்துக்கும் சீர்காழிக்கும் நடுவில் அகப்பட்டுக் கொண்டு திண்டாடும்படி நேர்ந்தது.

கதையோ, கட்டுரையோ, விறுவிறுப்பாக ஓட வேண்டும் என்றால் அதை ரெயிலிலே ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. இந்தக் கதை என்னமோ ரெயிலிலேதான் ஆரம்பமாகிறது. அதிலும் ஸிலோன் போட் மெயிலில் ஆரம்பமாகிறது. ஆனாலும் என்ன பயன்? அதிவிரைவாகச் செல்ல வேண்டிய அந்த ரெயில் சீர்காழிக்கும் வைத்தீசுவரன் கோயிலுக்கும் நடுவில் சுமார் மூன்று மணி நேரம் ஸ்தம்பித்து நின்று விட்டது.

'ஸ்தம்பித்து நின்றது' என்றா சொன்னேன்? அர்த்தமில்லாத வழக்கச் சொற்கள் அப்படியாக நம்மை அடிமைப்படுத்தி விடுகின்றன. நான் ஏறியிருந்த போட் மெயில் முன்னாலும் போகாமல் பின்னாலும் போகாமல் நின்றதே தவிர ஸ்தம்பித்து நிற்கவில்லை. மணிக்கு என்பது மைல் வேகத்தில் அடித்த புயற்காற்று அதைத் தாக்கிக் கொண்டிருக்கும் போது ரெயில் எப்படி ஸ்தம்பித்து நிற்க முடியும்? பூமிக்குள்ளே நெடுந்தூரம் வேர் விட்டு நிலை பெற்றிருந்த பெரிய பெரிய மரங்கள் எல்லாம் தடால் தடால் என்று கீழே விழுந்து கொண்டிருந்த போது ரெயில் மட்டும் எப்படி அசையாமல் இருக்க முடியும்? ரெயில் இப்படியும் அப்படியும் ஆடிக்கொண்டுதான் இருந்தது. ரெயிலுக்குள் இருந்தவர்களின் உயிர்களும் ஊசலாடிக் கொண்டிருந்தன. இப்படி மூன்று யுகம் போலக்கழிந்த மூன்று மணி நேரத்துக்குப் பிறகு ரெயில் பின்னோக்கிச் செல்லத் தொடங்கியது. மிக மிக மெதுவாக ஊர்ந்து சென்று காலை ஐந்து மணிக்கு மாயவரம் ரெயில் நிலையத்தை அடைந்தது.

சீர்காழிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவில் ரெயில் பாதை மிகவும் சேதமாகி விட்டபடியால், இனி மூன்று நாள் அந்தப் பக்கம் ரெயில் போவதற்கில்லையென்றும், சென்னைக்குப் போகிறவர்கள் திருச்சிக்குத் திரும்பிப் போய் அங்கிருந்து விருத்தாசலம் வழியாகப் போக வேண்டும் என்றும் மாயவரத்தில் சொன்னார்கள். இதனால் எனக்கு ஏற்பட்ட மனச் சோர்வுக்கு அளவில்லை. ஆண்டவன் கருணை இப்படியா நம்மைச் சோதிக்க வேண்டும் என்று கிலேசப்பட்டுக் கொண்டு திருச்சிக்குத் திரும்பிப்போன முதல் ரெயிலில் ஏறினேன்.

அற்ப அறிவு படைத்தவர்களாகிய மானிடர்கள் நன்மை என்று குதூகலிக்கிற காரியங்கள் பெருந் தீமையாக முடிகின்றன. அவர்கள் தீமை என்று நினைத்து வருந்தும் காரியங்களிலிருந்து எதிர்பாராத நன்மைகள் விளைகின்றன. ஏற்கனவே பலமுறை இந்த உண்மையை வாழ்க்கை அநுபவத்தில் கண்டிருந்தும் அச்சமயத்தில் மறந்து போனேன். ஐயம்பேட்டை ரயில் நிலையத்தை அடைந்தபோதுதான் இருள் நீங்கி ஒளி உண்டாயிற்று. ஐயம்பேட்டை கந்தப்பப் பிள்ளையும் அவருடைய தவுல் வாத்தியமும் என் வண்டியில் ஏறி அமர்ந்ததும், அவருடைய தவுல் வாத்தியத்தின் இடி முழக்க நாதத்தைப் போலவே, இறைவன் கருணையின் உண்மை இயல்பு என் உள்ளத்தில் வெடித்துக் கொண்டு உதயமாயிற்று.

"வருக! வருக! அகில பூமண்டல தவுல் வாத்திய ஏக சக்ராதிபதியே! வருக!" என்று முகமன் கூறிக் கந்தப்பப் பிள்ளையை வரவேற்றேன்.

'திருவழுந்தூர்ச் சிவக்கொழுந்து', 'வீணை பவானி' போன்ற அருமையான கதைகளைச் சொன்னவரை இம்மாதிரிச் சந்தர்ப்பத்தில் பார்த்தால், உற்சாகம் பீறிக் கொண்டு கிளம்புவதற்குக் கேட்பானேன்!-ரெயிலும் உற்சாகமாக ஊதிக் கொண்டு கிளம்பியது.

ஐயம்பேட்டை கந்தப்பனும் சென்னைக்குத்தான் வருகிறார் என்று அறிந்ததும் என் மனச் சோர்வெல்லாம் பறந்துவிட்டது. நான் சீர்காழி வரையில் போய்த்திண்டாடிவிட்டுத் திரும்பியதைப் பற்றிச் சொன்னேன். அவர் புயலினால் அந்தப் பக்கத்தில் விளைந்த சேதங்களைப்பற்றிச் சொன்னார். பிறகு,

"இன்னல் கூட்டி இன்பம்
ஊட்டி
இந்திர ஜால வித்தை காட்டி"

என்று முனகும் குரலில் பாடி நிரவல் செய்யத் தொடங்கினார். திடீரென்று நிரவலை நிறுத்தி, "ஆமாம்; ஆண்டவனுக்கு இதெல்லாம் இந்திர ஜால வித்தை; அநுபவிக்கிற நமக்கோ சொல்லமுடியாத அவஸ்தை!" என்று சொன்னார்.

ஏதோ ஒரு கதையை மனதில் வைத்துக் கொண்டு தான் அவர் இப்படிப் பேசுகிறார் என்று ஊகித்துக் கொண்டேன். (ஐயம்பேட்டை கந்தப்பன் தம் வாழ்க்கையில் கண்டு கேட்ட வரலாற்றைத்தான் சொல்லுவார். ஆனால் அந்த வரலாறு கதையைக் காட்டிலும் அதிசயமாக இருப்பது வழக்கம். அதனாலேயே கதை என்று குறிப்பிடுகிறேன்.)

அவருடைய மனதில் உள்ளதை எப்படி வெளியே கொண்டு வருவது என்று யோசித்தேன்.

"பிள்ளைவாள்! நீங்கள் முன்னொரு தடவை சொன்ன 'வீணை பவானி' கதையை ரேடியோவில் நாடகமாகப் போட்டார்களே கேட்டீர்களா?" என்றேன்.

"உலக வாழ்க்கையே நாடகம். அதிலே சிலர் அரங்க மேடையில் ஏறி நாடகம் ஆடுகிறார்கள். அப்படி ஆடும் நாடகக்காரர்கள் - நாடகக்காரிகள் வாழ்க்கையிலும் எத்தனையோ நாடகங்கள்!" என்றார் கந்தப்பன்.

"எத்தனையோ நாடகக்காரர்கள் நாடகக்காரிகளை உங்களுக்குத் தெரிந்திருக்கும்" என்றேன்.

"பாலாமணி என்ற பிரசித்தமான நாடகக்காரியைப் பற்றி ஐயா கேள்விப்பட்டிருக்குமே?" என்றார் கந்தப்ப பிள்ளை.

"கேள்விப்பட்டிருக்கிறேன்; ஆனால் பார்த்ததில்லை."

"ஆனால் சின்ன பாலாமணி என்று கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள்!"

"கேள்விப் பட்டதில்லை. அப்படி ஒரு நாடகக்காரி இருந்தாளா, என்ன?"

"ஆமாம்; இரண்டு வருஷம் மிகப் பிரசித்தியாக இருந்தாள். பிறகு தெய்வத்துக்கே பொறுக்காமல் போய்விட்டது! ஆனால் தெய்வத்தைச் சொல்லி என்ன பயன்? மனிதர்களுடைய அறிவீனத்துக்குத் தெய்வம் என்ன செய்யும்?"

"மனிதர்களை ஏன் இவ்வளவு மூடர்களாகவும் துஷ்டர்களாகவும் கடவுள் படைக்கிறார் என்று அவர் பேரில் குற்றம் சொல்லலாம் அல்லவா? - அது போகட்டும். யாரோ சின்ன பாலாமணி என்கிறீர்களே? அது யார்? உங்களுக்குத் தெரியுமா?"

"ஏழு வயது முதல் எடுத்து வளர்த்தவன் ஆயிற்றே? எனக்குத் தெரியாமல் எப்படியிருக்கும்?" என்றார் கந்தப்பப் பிள்ளை.

இன்னும் சில கேள்விகள் அவரைக் கேட்டுத் தூண்டிய பிறகு கந்தப்பன் கதையைக் கூறலானார்.

அத்தியாயம் - 2

கும்பகோணத்தில் திருமருகல் நாதஸ்வரக்காரரின் கச்சேரிக்கு நான் தவுல் வாசித்துக் கொண்டிருந்த போது முதன் முதலில் அந்தக் குழந்தையைப் பார்த்தேன். விஜயதசமித் திருநாள் அன்று ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சூர சம்ஹாரத்துக்காக வீதி வலம் புறப்பட்டுப் போய்க் கொண்டிருந்தார். ஒவ்வொரு கோவிலிலிருந்தும் அன்றைக்குச் சுவாமி புறப்பாடு நடப்பது வழக்கம். ஆனாலும் சின்னக் கடைத் தெரு வியாபாரிகள் அந்தக் கடைத் தெருவில் இருந்த சிறிய கோயிலில் நடத்தி வந்த உற்சவந்தான் ஊரிலே பிரமாதப்படும். நவராத்திரி ஒன்பது நாளும் உற்சவம் நடத்துவார்கள். ஒவ்வொரு தினமும் சங்கீதக் கச்சேரிகளும் நாதஸ்வரக் கச்சேரிகளும் நடைபெறும். விஜயதசமிக்கு ஒவ்வொரு வருஷமும் நமது தமிழ்நாட்டிலேயே மிகப் பிரசித்தியடைந்த நாதஸ்வரக் கோஷ்டியைப் பல மாதங்களுக்கு முன்பே ஏற்பாடு செய்து விடுவார்கள். சின்னக் கடைத் தெரு வியாபாரிகள் அழைத்து விட்டால், நாதஸ்வர வித்வான்களும் அதை ஒரு பெருமையாகக் கருதுவார்கள். வேறு யார் அதிகப் பணம் கொடுத்து கூப்பிட்டாலும் போகமாட்டார்கள். கடைத்தெரு முழுவதும் அன்று அமோகமாக அலங்கரிக்கப்பட்டுக் காட்சி அளிக்கும் பல இடங்களில் பந்தல் போட்டிருப்பார்கள். ஒவ்வொரு பந்தலிலும் நாதஸ்வரக் கோஷ்டியார் நின்று வாசிக்க வேண்டும். அந்நாளில் கும்பகோணத்தாரின் சங்கீத ரஸனைக்கு இணையே கிடையாது போங்கள்! எவ்வளவோ அற்புதமாக முன்னலங்காரமும் பின்னலங்காரமும் செய்து முருகனை எழுந்தருளப் பண்ணுவார்கள். ஆனாலும், சுவாமி தரிசனம் செய்யும் கூட்டத்தைக் காட்டிலும் நாதஸ்வர கோஷ்டியைச் சூழ்ந்து நிற்கும் ஜனக் கூட்டந்தான் அதிகமாயிருக்கும்.

அன்றைக்கு இவ்வாறு ஒவ்வொரு பந்தலிலும் நின்று நின்று நாதஸ்வரக் கச்சேரி நடந்து கொண்டிருந்த போது, கச்சேரியைத் தொடர்ந்து வந்து கேட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒரு சிறிய பெண் குழந்தையைப் பார்த்தேன். அந்த சிறு குழந்தை கூட்டத்தில் எப்படியோ புகுந்து அடித்துக் கொண்டு வந்து எல்லாருக்கும் முன்னால் வந்து நின்றது. இது என் கவனத்தைக் கவர்ந்தது. நாதஸ்வர இசையைக் கேட்டுக் கொண்டு, அந்தக் குழந்தை சில சமயம் பூரித்து மலர்ந்த முகத்துடனே காணப்படும். சில சமயம் தவுல் வாத்தியத்தில் கவனம் செலுத்திக் கையினால் தாளம் போட்டுக் கொண்டிருக்கும். இன்னும் சில சமயம் மகுடி வாத்தியத்தைக் கேட்டு பாம்பு படம் எடுத்து ஆடுமே, அம்மாதிரி கண்களைப் பாதி மூடிக்கொண்டு, தலையை இலேசாக ஆட்டிக்கொண்டு நிற்கும். சில சமயங்களில் அதன் உடம்பு முழுவதுமே ஆடும். தாமரைக்குளத்தில் இலேசாகக் காற்றடிக்கும்போது பாதி மலர்ந்தும் மலராமலும் இருக்கும் தாமரைப் புஷ்பம் அதன் நீண்டு உயர்ந்த தண்டுடன் ஆடுமே, அந்தக் காட்சி எனக்கு நினைவு வரும். திருமருகல் நாதஸ்வரக்காரர் அன்றைக்கு அபாரமாகத்தான் வாசித்துக் கொண்டிருந்தார். ஆனால் என்னுடைய நினைவு முழுதும் அந்தச் சிறு பெண் குழந்தையின் பேரிலேயே இருந்தது. ஒவ்வொரு பந்தலுக்கும் நாதஸ்வர கோஷ்டி வந்து நின்றவுடனே, நான் அந்தக் குழந்தை வந்துவிட்டதா என்று பார்த்துக் கொண்டிருப்பேன். கூட்டத்தை விலக்கிக் கொண்டு, அந்தக் குழந்தை முன்னால் வந்து நின்ற பிறகுதான் எனக்கு என்னுடைய வாசிப்பில் கவனம் செல்லும். அப்போது அந்தப் பெண்ணின் பரவசமான முகத் தோற்றத்தைப் பார்த்துக் கொண்டுதான் வாசிப்பேன்.

ஊர்வலம் முடிந்து சுப்பிரமணியசுவாமி சூரசம்ஹாரம் செய்யும் இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்ட பிறகு, நான் என் தவுல் வாத்தியத்தைச் சிஷ்யப் பிள்ளையிடம் எடுத்துக் கொடுத்துவிட்டு, அந்தக் குழந்தையை அருகில் அழைத்து, "உன் பெயர் என்ன, குழந்தை?" என்று விசாரித்தேன். "என் பெயர் நீலமணி" என்றது அந்தக் குழந்தை. "உன் அப்பா, அம்மா யார்?" என்று கேட்டேன். "அப்பா இல்லை. அம்மா மட்டுந்தான் இருக்கிறாள். எங்கள் வீட்டுக்கு வருகிறீர்களா, மாமா! அழைத்துப் போகிறேன்! அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. நீங்கள் வந்து பார்த்தால் ரொம்பச் சந்தோஷப்படுவாள்!" என்றது அந்தக் குழந்தை.

"ஆகட்டும் அம்மா, வருகிறேன்" என்று வாக்குக் கொடுத்துவிட்டேன். அப்படிப்பட்ட சங்கீத ரஸனையுள்ள குழந்தையைப் பெற்ற தாயாரைப் பார்க்க எனக்கும் ஆவல் உண்டாகி இருந்தது.

என்னுடைய பதிலைக் கேட்டுவிட்டு அந்தக் குழந்தை குதூகலமாகக் குதித்துக் கொண்டு ஓடிப் போய் விட்டது.

பிறகு, பக்கத்திலிருந்தவர்களை விசாரித்ததில் நான் 'வருகிறேன்' என்று வாக்குக் கொடுத்தது அவ்வளவு உசிதமான காரியம் அல்ல என்று தெரிந்தது.

அந்தக் குழந்தையின் தாயாருக்கு மரகதமணி என்று பெயர். சங்கீதத்தில் கொஞ்சம் பயிற்சி உண்டு. சில காலம் கச்சேரிகள் கூடச் செய்து கொண்டிருந்தாள். தனிகர் ஒருவர் சிநேகமானார். கலியாணம் செய்து கொண்ட மனைவியைப் போலவே அவளை வைத்துப் பராமரிப்பதாகச் சொன்னார். மரகதமணி சங்கீதக் கச்சேரி செய்வதை விட்டுவிட்டாள். சிலகாலம் அந்யோந்யமாகத்தான் இருந்தார்கள்.

இந்த மாதிரிச் சிநேகமெல்லாம் அநேகமாக எப்படி முடியும் என்பது தெரிந்த விஷயமேயல்லவா? சில வருஷங்களுக்கெல்லாம் ஏதோ காரணத்தினால் ஒருவருக்கொருவர் பிடிக்காமல் போய்விட்டது. தனிகர் மரகதமணியின் வீட்டுக்கு வருவதை நிறுத்தி விட்டார். பெரிய ஆஸ்தி படைத்த செல்வர் அந்தப் பெரிய ஆஸ்தியிலிருந்து ஏதோ கொஞ்சம் மரகதமணிக்கு எழுதி வைத்து விடுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். சொல்லிக் கொண்டிருந்தாரே தவிர காரியத்தில் நடைபெறவில்லை. கடைசியாக, அவர் இம்மாதிரித் தொல்லைகளுக்கு இடமில்லாத மறு உலகத்துக்குப் போய்விட்டார்.

மரகதமணி தன் சின்னஞ் சிறு குழந்தையுடன் வறுமை வாழ்க்கை நடத்தி வந்தாள். எப்படியோ காலம் போய்க் கொண்டிருந்தது. மனக்கவலையினால் உடம்பிலும் நோய் வந்து விட்டது. படுத்த படுக்கையாகி விட்டாள். தாயும் பெண்ணும் இப்போது நிராதரவாக இருக்கிறார்கள்...

இந்த வேதனை தரும் வரலாற்றை அறிந்த பிறகு, "இப்போது அவர்களுக்கு ஜீவனம் எப்படித்தான் நடக்கிறது?" என்று கேட்டேன்.

"தாயாரிடம் இருந்த நகை நட்டுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போய் வருகின்றன. அந்தக் குழந்தைக்கு நல்ல குரல். எங்கேயாவது பாட்டுக் கச்சேரி, நாதஸ்வரக் கச்சேரி என்றால் போய்விடும். கேட்ட பாட்டுக்களை பாடம் பண்ணிவிடும். ரெயிலிலே ஏறிப் பாட்டுப்பாடி பிச்சை எடுத்துத் தினம் எட்டணா பத்தணா சம்பாதித்துக் கொண்டு வரும். அந்தக் குழந்தையின் குரல் இனிமையையும் முகக்களையையும் பார்த்து ரெயில் அதிகாரிகள் சும்மா விட்டுவிடுவார்கள். சில சமயம் இம்மாதிரி உற்சவ காலங்களில் முச்சந்திகளில் நின்று பாட்டு பாடுவதும் உண்டு. சங்கீத ரஸனையும் தாராள உள்ளமும் படைத்தவர்கள் ஓர் அணா - இரண்டு அணா கூடக் கொடுத்துவிட்டுப் போவார்கள்" என்று பதில் கிடைத்தது.

இதையெல்லாம் கேட்டு எனக்கு மிகவும் வருத்தமாயிருந்தது. அந்தக் குழந்தையின் நிலைமை இப்படியா இருக்க வேண்டுமென்று இரங்கினேன். ஆனாலும், இம்மாதிரி இடங்களுக்கு உதவி செய்வதாக எண்ணிப் போனாலும் ஏதாவது சங்கடத்தில் வந்து முடியும் என்று நினைத்து அங்கே போகும் எண்ணத்தை விட்டுவிட்டேன். உள்ளூரிலும் சரி, வெளியூரிலும் சரி, கடவுள் அருளால் எனக்கு நல்ல அந்தஸ்து ஏற்பட்டிருந்தது. கௌரவம் வாய்ந்த பெரிய மனிதர்களின் சிநேகமெல்லாம் கிடைத்திருந்தது. அசட்டுத்தனமாக எங்கேயாவது போய்க் காலை விட்டுக் கொண்டு வீண் தொல்லைக்கு ஆளாகக்கூடாது என்று மனத்தை உறுதிப்படுத்திக் கொண்டேன்.

இந்த உறுதியில் நிலைத்திருந்தேனானால் பின்னால் எவ்வளவோ சங்கடங்களுக்கு உள்ளாகாமல் தப்பித்துக் கொண்டிருப்பேன். அந்தச் சின்னஞ்சிறு குழந்தை ஒரு நிமிஷத்தில் என் மன உறுதியைக் குலைத்து விட்டது. நான் தங்கியிருந்த ஜாகைக்கே அது வந்துவிட்டது. "மாமா! எங்கள் வீட்டுக்கு வருவதாகச் சொன்னீர்களே, எப்போது வருகிறீர்கள்? அம்மா ரொம்பச் சந்தோஷப்பட்டாள். கேட்டுவரச் சொன்னாள்!" என்றது.

அந்தக் குழந்தையின் உள்ளத்தைப் புண்படுத்த நான் விரும்பவில்லை. "அதற்கென்ன, சாயங்காலம் வருகிறேன், குழந்தை!" என்றேன். பக்கத்திலே இருந்த இரண்டொருவர் சிரித்ததைக் கேட்டதும் எனக்கு முனைப்பு அதிகமாகிவிட்டது. என் சுபாவந்தான் ஐயாவுக்குத் தெரியுமே? நல்லது, கெட்டது என்று என் பகுத்தறிவுக்குப் பட்டபடிதான் செய்வேனே தவிர, நாலுபேர் ஏதாவது சொல்லிவிடுவார்களே என்று பயந்து எதுவும் செய்யமாட்டேன். ஊருக்குப் பால் குடிக்கிற வழக்கமே என்னிடம் கிடையாது. யாராவது வம்பு பேசுகிறார்கள், அவதூறு சொல்லுகிறார்கள் என்று அறிந்தால், அந்தக் காரியத்தில் எனக்கு இன்னும் அதிக ஊக்கம் உண்டாகிவிடும்.

பக்கத்திலிருந்தவர்களின் சிரிப்பையுங் கேட்டு குழந்தையின் முகத்தில் தோன்றிய ஏமாற்றத்தையும் பார்த்ததும், "சாயங்காலம் என்ன? இப்போதே உன்னுடன் வருகிறேன்" என்று சொல்லிவிட்டு எழுந்து போனேன்.

குழந்தையைப் பார்த்தபோது உண்டான இரக்கத்தைக் காட்டிலும் தாயைப் பார்த்தபோது அதிக இரக்கம் உண்டாயிற்று. அந்த அம்மாளின் பேச்சும் குணமும் அவ்வளவு உயர்வாயிருந்தன. ஆனால் தேக நிலைமை மிக மோசமாயிருந்தது. அதிக காலம் உயிர் வாழ்ந்திருக்கமாட்டாள் என்றே தோன்றியது. மூச்சு திணறிக் கொண்டு, உயிரைக் கையிலே பிடித்துக் கொண்டு பேசுகிறவளைப் போல், மெல்லிய குரலில் பேசினாள். ஊர் வம்பு பேசவில்லை; தன்னுடைய சோகக் கதையைச் சொல்ல ஆரம்பிக்கவும் இல்லை. பழைய காலத்து சங்கீதக்காரர்கள் - நாதஸ்வரக்காரர்களைப் பற்றியே பேசினாள். அப்போது அவள் முகம் மலர்ச்சி அடைந்ததைப் பார்த்து எனக்கும் திருப்தியாய் இருந்தது. இந்த மட்டும், சீக்கிரத்தில் இறந்து போகப் போகிற ஓர் அநாதை ஸ்திரீக்கு இந்த உதவியாவது நம்மால் செய்ய முடிந்ததே என்று சந்தோஷப் பட்டேன். நீலமணி பக்கத்தில் உட்கார்ந்து வெகு சுவாரஸ்யமாக எங்கள் பேச்சுக்களை கேட்டுக் கொண்டிருந்தாள். விடைபெற்று புறப்படவேண்டிய சமயம் நெருங்கிய போது, நாஸுக்காக வீட்டுச் செலவு பற்றிக் கவலைப் படவேண்டாமென்றும் எனக்குத் தெரிந்த டாக்டரை அனுப்பி வைத்தியம் பார்க்கச் சொல்வதாகவும் கூறினேன். கடைசியாக, "அம்மா! நீ எவ்வளவோ நன்றாயிருந்தவள்; இப்போது இந்த கதிக்கு வந்து விட்டாய். ஆனாலும் இந்தக் குழந்தையைப் பிச்சை எடுக்கப் போகச் சொல்வதை மட்டும் நிறுத்தி விடு. பள்ளிக்கூடத்துக்கு அனுப்பு!" என்றேன்.

"நானா போகச் சொல்கிறேன், ஐயா! வேண்டாம் வேண்டாம் என்று தான் முட்டிக் கொள்கிறேன். கேட்காமல் போய்விடுகிறாள்!" என்று மரகதமணி கண்ணீர் ததும்பக் கூறினாள்.

அப்போது நீலமணி, "மாமா! நான் பிச்சை எடுக்கப் போவதாக யார் உங்களுக்குச் சொன்னார்கள்?" என்று கணீர் என்ற குரலில் கேட்டாள்.

நான் சிறிது திகைத்துப் போனேன். குழந்தையைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு இந்தப் பேச்சை எடுத்திருக்கக்கூடாது என்று எண்ணினேன்.

மறுபடியும் அந்தக் குழந்தை, "ஏன் மாமா! பதில் சொல்லுங்கள். நான் பிச்சை எடுப்பதாக யார் சொன்னார்கள்? நான் ஒன்றும் பிச்சை எடுக்கவில்லை! கச்சேரி செய்து பணம் சம்பாதித்துக் கொண்டு வருகிறேன். இருநூறு ரூபாய் முந்நூறு ரூபாய் வாங்கிக் கொண்டு பாடினால் அது மட்டும் கச்சேரியா? இரண்டு அணா, மூன்று அணா வாங்கிக் கொண்டு பாடினால் அது பிச்சையா?" என்றாள்.

நான் அதற்குப் பதில் சொல்ல முடியாமல் திணறிப் போனேன். என்னை அறியாமல் பூரிப்புப் பொங்கி வந்தது. அவள் தாயாரின் முகத்திலும் கொஞ்சம் புன்னகையைக் கண்டேன். கலகலவென்று சிரித்துக் கொண்டே குழந்தையைக் கட்டி அணைத்துக் கொண்டு "நீ ரொம்பக் கெட்டிக்காரப் பெண்! பலே சமர்த்து! என்னுடன் வந்துவிடு! உன்னைப் பெரிய சங்கீதக்காரியாக்கிவிடுகிறேன்" என்றேன்.

அப்போது மரகதமணி "அப்படியே செய்யுங்கள் ஐயா! இவளைச் சமாளிக்க என்னால் முடியவில்லை! நீங்கள் அழைத்துக் கொண்டு போங்கள்!" என்றாள்.

பேச்சு வாக்கில் ஏதோ சொல்லி வைத்தேன். அவ்வாறு காரியத்தில் நடந்தேறும்படி கடவுள் செய்து விட்டார். ஆறு மாதத்துக்கெல்லாம் மரகதமணி இறந்து போனாள். இந்தக் குழந்தை பட்ட துயரத்தை என்னால் சொல்ல முடியாது. நல்ல வேளையாக அச்சமயம் நான் கும்பகோணத்தில் இருக்கும்படி கடவுளின் அருள் இருந்தது. தாயின் ஈமக்கடன்களை முடித்துவிட்டுக் குழந்தையை என் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய்ச் சேர்ந்தேன்.

முதலில் என் வீட்டைச் சேர்ந்தவர்கள் கொஞ்சம் அருவருப்புக் காட்டினார்கள். யாரோ வீதியிலே திரிந்த பிச்சைக்காரப் பெண்ணைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டதாக முணுமுணுத்தார்கள். அதை நான் பொருட்படுத்தவில்லை. சில நாளைக்குள்ளேயே நிலைமை மாறி விடும் என்று அறிந்திருந்தேன். குழந்தை நீலமணி என் குடும்பத்தாரைச் சொக்குப்பொடி போட்டு மயக்குவது போல் மயக்கிவிட்டாள். அவளுடைய குறுகுறுப்பான கண்களும், சுறுசுறுப்பான நடத்தையும், மழலைப் பேச்சும், இனிய பாட்டும் எல்லாரையும் வசீகரித்து விட்டன. "குழந்தையைக் கவனித்துக் கொள்ளுங்கள்" என்று நான் சொல்ல வேண்டிய அவசியமில்லாமலே போய்விட்டது. அதற்குப் பதிலாக நான் நீலமணியை எதற்காவது கண்டிக்கும்படி நேர்ந்தால் என் வீட்டில் எல்லாரும் என் பேரில் பாய ஆரம்பித்து விடுவார்கள். சிறு குழந்தைகளுக்கு அளவுக்கு மீறிச் செல்லம் கொடுப்பது தவறு என்பதை நான் அறிவேன். அப்படி இடங்கொடுத்து கெட்டுப் பாழாய்ப்போன பெரிய மனிதர்கள் வீட்டுக் குழந்தைகள் எத்தனையோ பேரையும் எனக்குத் தெரியும். நீலமணியினுடைய குழந்தை வாழ்க்கையை உத்தேசிக்கும்போது அவளை ரொம்பவும் கண்டித்து வளர்க்க வேண்டிய அவசியத்தையும் உணர்ந்திருந்தேன். ஆனாலும் ஒன்றும் பயன்படவில்லை. எனக்கே அந்த அநாதைக் குழந்தையைக் கண்டிக்கச் சாதாரணமாய் மனம் வருவதில்லை. எப்போதாவது அருமையாக அவளைக் கோபித்துக் கொண்டால் என் வீட்டில் எல்லோரும் என் பேரில் சண்டைக்கு வந்தார்கள்.

எப்படியோ குழந்தைக்கு நல்ல வார்த்தை சொல்லித் தாஜா பண்ணிப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வந்தேன். வெகு நன்றாகப் படிப்பும் வந்து கொண்டிருந்தது. ஆனால் நடுநடுவில் பழைய பழக்க வழக்கங்கள் வந்து கொண்டிருந்தன. திடீரென்று ஒரு நாள் பள்ளிக்கூடத்திலிருந்து காணாமற் போய் விடுவாள். ஊரில் உற்சவம் ஏதாவது நடந்தால் அங்கே வேடிக்கைப் பார்க்கப் போய் விடுவாள். பாட்டுப் பாடிக் காசு வாங்கவும் ஆரம்பித்து விடுவாள். சில சமயம் ரெயில்வே நிலையத்துக்குப் போய் ரெயில் ஏறிப் பாடத் தொடங்கி விடுவாள். இரண்டு மூன்று ஸ்டேஷன் பாடிக்கொண்டு போய்விட்டு, "குழந்தையைக் காணோமே?" என்று எல்லோரும் கவலையுடன் தேடிக் கொண்டிருக்கும் சமயத்தில் கையில் எட்டணா ஒரு ரூபாய்க் காசுடன் திரும்பி வருவாள்.

நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். "குழந்தை! நான் இந்த ஊரில் கௌரவமாய் வாழ்க்கை நடத்துகிறேன்! என் மானத்தை வாங்காதே!" என்று அடிக்கடி எடுத்துச் சொன்னேன்.

"நான் எங்கேயோ கிடந்து வந்தவள் என்று தான் எல்லோருக்கும் தெரியுமே, மாமா! உங்களுக்கு என்னால் கௌரவக் குறைவு எப்படி ஏற்படும்?" என்று அவள் ஒரு சமயம் பதில் சொல்வாள்.

இன்னொரு சமயம், "ஏன், மாமா! நீங்கள் கச்சேரிக்குப் போய் நூறு இருநூறு சம்பாதித்துக் கொண்டு வருகிறீர்களே? அதில் கௌரவக் குறைவு ஒன்றும் இல்லையே? அதுபோல் நானும் எனக்குத் தெரிந்த பாட்டைப் பாடிக் கச்சேரி செய்து என்னால் இயன்றதைச் சம்பாதித்துக் கொண்டு வருகிறேன். இதில் என்ன பிசகு?" என்பாள்.

இன்னும் ஏதாவது நான் கடுமையாகப் பேசி விட்டால், ஒரு நாள் என் வீட்டை விட்டு, ஊரைவிட்டே ஓடிப்போய்விடப் போகிறாளே என்ற பயம் எனக்கு உண்டாகி விட்டது.

அதற்குப் பிறகு, "நடக்கிறது நடக்கட்டும்; கடவுள் இருக்கிறார்!" என்று விட்டு விட்டேன்.

அத்தியாயம் - 3

ஏழெட்டு வருஷ காலம் என் பராமரிப்பிலேயே நீலமணி வளர்ந்து வந்தாள். அந்தக் குழந்தைக்குச் சங்கீதத்தில் இயற்கையாக உள்ள ஞானத்தை அறிந்திருந்த படியால் பாட்டு வாத்தியார் வைத்துப் பாட்டுச் சொல்லிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தேன். சங்கீதம் என்னமோ அவளுக்கு நன்றாகத்தான் வந்தது. ஆனால் பாட்டு வாத்தியார்களோடு எப்போதும் சண்டைதான். ஸரலி வரிசை, கீதம், வர்ணம் என்று வரிசைக் கிரமமாகப் பாட்டு ஆரம்பிப்பார். அவைகளையெல்லாம் நீலமணி சரியாகப் பாடம் பண்ணமாட்டாள். "அந்தக் கீர்த்தனத்தைச் சொல்லிக் கொடுங்கள்!" "இந்தப் பாட்டைப் பாடிக் காட்டுங்கள்!" என்று ஆரம்பித்து விடுவாள். பாட்டு வாத்தியார்களுக்குப் போதும் என்று ஆகிவிடும். "இந்தப் பெண்ணுக்குச் சொல்லிக்கொடுக்க எங்களால் ஆகாது" என்று போய் விடுவார்கள். இம்மாதிரி ஐந்து பாட்டு வாத்தியார் மாற வேண்டியதாயிற்று.

நானும் சில சமயம் சொல்லிக் கொடுக்கப் பார்ப்பேன். அதாவது, சொல்லிக் கொடுக்கிற பாவனையாக நீலமணியைப் பாடச்சொல்லிக் கேட்பேன். "பாட்டு வாத்தியார்கள் கெட்டார்கள்! இந்தக் குழந்தைக்கு வந்திருக்கிற சங்கீதம் வேறு யாருக்கு வந்திருக்கிறது? பெரிய பெரிய வித்வான்கள் பிரமிக்கும்படியான பாட்டு அல்லவா இது? சங்கீததெய்வத்தின் அருளினால் வந்த சங்கீதம் அல்லவா இது?" என்று மனத்தில் எண்ணிக் கொள்வேன். வெளிப்படையாகச் சொன்னால் குழந்தை கொஞ்சம் முறையாகக் கற்பதும் நின்று விடப் போகிறதேயென்று பயந்து மனத்திற்குள்ளேயே வைத்துக் கொள்வேன்.

நீலமணிக்கும் பதினேழு வயது ஆயிற்று. "இந்தப் பெண்ணை இனிமேல் என்ன செய்வது?" என்ற கவலை என் மனத்தில் உண்டாகத் தொடங்கியது.

இந்த நிலைமையில் நான் யாழ்பாணத்துக்கு ஒரு கச்சேரிக்குப் போகும்படி நேரிட்டது. யாழ்பாணத்துக்காரர்கள் நல்ல சங்கீத ரஸிகர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தது தானே? சங்கீதத்திலேயும் நாதஸ்வர சங்கீதத்தில் அவர்களுக்கு மோகம் அதிகம். வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற வேற்றுமை மனோபாவம் அவர்களிடம் கிடையாது. தமிழ் நாட்டிலிருந்து பிரபல நாதஸ்வர வித்வான்கள் எல்லாரையும் அடிக்கடி கோயில் உற்சவங்களுக்கு வரவழைப்பார்கள். எல்லாருடைய வாசிப்பையும் நன்றாக கேட்டு ஆனந்திப்பார்கள். நாதஸ்வர வித்வான் யாரைக் கூப்பிட்டாலும் தவுலுக்கு மட்டும் தவறாமல் என்னைக் கூப்பிடுவார்கள்.

என் குடும்பத்தார் அடிக்கடி தங்களையும் ஒரு முறை இலங்கைக்கு அழைத்துப் போகும்படி கேட்பதுண்டு. நானும் 'ஆகட்டும்' 'ஆகட்டும்' என்று தட்டிக் கழித்து வந்தேன். இந்தத் தடவை மூன்று உற்சவக் கச்சேரிகள் சேர்ந்தாற்போல் வந்தபடியால் சுமார் இருபது நாள் வரை இலங்கையில் நான் தங்க வேண்டியதாயிருந்தது. குடும்பத்தை அழைத்துப் போவதற்கு இதை விட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்று எண்ணி எல்லோருமாகப் போகத் தீர்மானித்தோம். சில காலமாக நீலமணி மிக்க உற்சாகக் குறைவுடன் கிறுக்குப் பிடித்தவள் போல் இருந்தாள். "ஒரு நாள் நம்முடைய மானத்தை வாங்கிவிட்டு ஓடிப் போய்விடுவாளோ?" என்று கூட எண்ணினேன். உண்மையைச் சொல்லப் போனால் நீலமணியை உத்தேசித்தே குடும்பம் முழுவதையும் அழைத்துப் போக முடிவு செய்தேன்.

இலங்கைப் பிரயாணச் செய்தி அறிந்ததும் நீலமணி உற்சாகம் அடைந்தாள். "பிரயாணம் என்றைக்கு மாமா?" என்று அடிக்கடி கேட்டுத் துளைத்துக் கொண்டிருந்தாள். கடைசியாகப் பிரயாண நாளும் வந்தது.

இந்த காலத்தைப் போல் ஆகாச விமானத்தில் ஏறிச் சில மணி நேரத்தில் இலங்கை போய் இறங்குகிற வசதி அப்போது கிடையாது. பிரயாணத்தில் எவ்வளவோ அசௌகரியங்கள் இருந்தன. சில சமயம் நரக வேதனையாகவே இருந்தது. எங்கள் கோஷ்டியில் அசௌகரியம் ஒன்றையும் பொருட்படுத்தாமல் ஒரே உற்சாகத்துடன் இருந்தவள் நீலமணி ஒருத்திதான்.

இதன் காரணம் எனக்குப் பின்னால் தெரிந்தது. நீலமணியின் தாயார் மரகதமணி அம்மாள் சந்தோஷமாக வாழ்ந்த நாளில் அவளும் நீலமணியின் தகப்பனாரும் இலங்கைக்கு வந்திருந்தார்களாம். அந்த அழகான தீவில் பல இடங்களுக்குப் போயிருந்தார்களாம். அங்கே அவர்கள் பார்த்த அதிசயங்களையெல்லாம் பற்றி அடிக்கடி மரகதமணி தன் அருமை மகளுக்குச் சொல்வதுண்டாம். "அப்போதெல்லாம் அம்மாவின் முகமே தனியான களை பெற்று விளங்கும்" என்றாள் நீலமணி. சின்னஞ்சிறு பிராயத்தில் கேட்டிருந்த இலங்கைத் தீவின் அதிசயங்கள் நீலமணியின் உள்ளத்தை அவ்வளவுக்குக் கவர்ந்து விட்டிருந்தன. அதனாலேதான் இலங்கைப் பிரயாணம் என்றதும் அவ்வளவு துடிதுடித்தாள். இதையெல்லாம் கொழும்புக்குச் சென்ற பிற்பாடு தான் நீலமணி சொல்லி நான் தெரிந்து கொண்டேன்.

ஆம்; முதலிலே கொழும்பிலேதான் எனக்குக் கச்சேரி இருந்தது. நாலு நாளைக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் கச்சேரி. கொழும்புக் கச்சேரி முடிந்ததும் நீலமணியையும் என் குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு அந்த அழகிய நகரைச் சுற்றிக் காட்டப் புறப்பட்டேன்.

இதற்கிடையில் கொழும்பில் அப்போது தமிழ் நாட்டில் பிரபலமாயிருந்த நமச்சிவாயம் கம்பெனியாரின் நவீன நாடகங்கள் நடந்து கொண்டிருந்தன என்று கேள்விப்பட்டேன்.

சில காலம் தமிழகத்தில் மிகப் பிரசித்தி பெற்றிருந்த நமச்சிவாயம் நாடகக் கம்பெனியைப் பற்றி நீங்கள் அவசியம் அறிந்திருப்பீர்கள். நமச்சிவாயம் சிறுபிள்ளை. வசீகரமான நல்ல குணம் வாய்ந்த பிள்ளை. முதலில் அவன் "புதுக்கோட்டை மீனலோசனி கானவர்த்தினி ஒரிஜினல் பால மோகன பரமானந்தா டிராமா கம்பெனி"யில் நடித்துக் கொண்டிருந்தான். சீக்கிரத்தில் பெயரும் புகழும் பெற்றான். அவனை எத்தனையோ போட்டி நாடகக் கம்பெனிகள் அதிகப் பணம் கொடுத்துக் கொத்திக் கொண்டு போகத் தயாராயிருந்தன. ஆனால் அப்போதே பையன் நமச்சிவாயம் தன் வாழ்க்கையின் துருவ நட்சத்திரத்தைத் தெரிந்து கொண்டிருந்தான். சொந்தத்தில் நாடகக் கம்பெனி வைத்து நடத்தி உலகத்தையே ஓர் ஆட்டு ஆட்டி வைத்துவிட வேண்டுமென்று இலட்சியத்தைக் கொண்டிருந்தான். ஆகையால் மைனர் பருவம் முடிந்தவுடனேயே நாடகக் கம்பெனி நடத்திப் பெயர் வாங்கினான். 'அதிரூப மோகனாங்கி', 'குலோப்ஜான் வைஜயந்தி', 'பூலோக அற்புத அரம்பை' முதலிய புதுமையான நாடகங்களை அரங்கேற்றிப் புகழ் பெற்றான். தமிழ நாட்டிலேதான் இப்படியென்றால் இலங்கையிலுள்ள தமிழர்களையெல்லாம் அவனுடைய நாடகங்களின் மூலம் பைத்தியமாக அடித்துவிட்டான்!

அப்படிப்பட்ட ஜகப் பிரசித்தி பெற்ற நமச்சிவாயம் கொழும்பு நகரில் நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தான். என் கச்சேரி நடந்த மறுநாள் குடும்பத்துடன் நான் நாடகம் பார்க்க போயிருந்தேன். நமச்சிவாயத்தை எனக்கு முன்னாலேயே நன்றாகத் தெரியும். பழைய மீனலோசனி கம்பெனியில் என் கையினால் ஒரு தடவை மெடல் வாங்கியிருக்கிறான். கொட்டகையில் என்னை அவன் பார்த்துவிட்டு கண் பார்வையினாலே வியப்பையும் மரியாதையையும் தெரிவித்துக் கொண்டான். மறுநாள் நாங்கள் தங்கியிருந்த ஜாகையில் எங்களைப் பார்க்கவும் வந்துவிட்டான். விதி என்று சொல்லுகிறார்களே, அது இதுதான் என்று பிற்பாடு தெரிந்து கொண்டேன்.

ஏனெனில், நாடகம் பார்த்து விட்டதிலிருந்து நீலமணி எங்கள் ஜாகையில் அதைப் பற்றியே ஓயாமல் பேசிக்கொண்டிருந்தாள். நாடகத்தில் நடித்தவர்கள் போல் நடித்துக் காட்டினாள்; பாடியவர்களைப் போல் பாடிக் காட்டினாள். பேசியவர்களைப் போல் பேசிக் காட்டினாள். எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தோம். முக்கியமாக, அந்த நாடகத்தில் கதாநாயகி வேஷம் போட்டவனைப் போல் நீலமணி பேசிப்பாடி நடித்துக் காட்டியது எங்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பை உண்டாக்கிக் கொண்டிருந்தது.

இப்படி நாங்கள் சிரித்துக் கொண்டிருந்த சமயத்திலே தான் நமச்சிவாயம் வந்து சேர்ந்தான். எல்லாரும் அவசரமாகச் சிரிப்பை அடக்கிக் கொண்டோ ம். நமச்சிவாயம், "என்ன, மாமா! நான் வரும்போது ஒரே சிரிப்பாயிருந்ததே!" என்று கேட்டான். "எல்லாம் உன்னுடைய பிரபாவத்தைப் பற்றித்தான்!" என்று பொதுப்படையாகச் சொன்னேன்.

நமச்சிவாயம் இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சிறிது நேரம் விழித்துவிட்டு "நீங்கள் நாடகம் பார்க்க வந்ததற்கு ரொம்பச் சந்தோஷம், மாமா! அதற்கு வந்தனம் செலுத்தவே வந்தேன். நாடகம் எப்படி இருந்தது? உங்களுக்குப் பிடித்ததா?" என்று கேட்டான்.

"நாடகம் நன்றாயிருந்தது. எனக்கு மட்டுமல்ல; என் குடும்பத்தார் எல்லாருக்கும் ரொம்ப ரொம்பப் பிடித்திருந்தது. ஆனால் ஏதோ புதுமையான நாடகம் என்று விளம்பரம் செய்திருந்தாயே; பழைய நாடகந்தானே?" என்றேன்.

"யார் சொன்னது? புது நாடகந்தான், மாமா! எங்கள் கம்பெனி வாத்தியாரே புதிதாக எழுதியதல்லவா?" என்றான்.

"அது என்னமோ, அப்பா! உங்கள் வாத்தியாரே ஒருவேளை 'காப்பி' அடித்து உன்னை ஏமாற்றி விட்டாரோ, என்னமோ? இந்த நாடகம் ஏற்கெனவே நான் பார்த்திருக்கிறேன். என் மகள் கூடப் பார்த்திருக்கிறாள். சந்தேகமிருந்தால் இதோ நிரூபித்துக் காட்டுகிறேன், பார்!" என்று சொல்லிவிட்டு நீலமணியைக் கூப்பிட்டு, "குழந்தை நாம் இந்த நாடகத்தை முன்னால் ஒரு தடவை தஞ்சாவூரில் பார்த்திருக்கிறோமல்லவா? சில பாத்திரங்களைப் போல் நீ நடித்துக் காட்டு! அப்போது தான் இவர் நம்புவார்" என்று சொன்னேன்.

முதலில் நீலமணி கூச்சப்பட்டாள். கொஞ்சம் தாஜா செய்த பிற்பாடு, திடீரென்று கூச்சத்தை உதறித் தள்ளிவிட்டு, 'பூலோக அற்புத அரம்பை'யில் யார் யார் எப்படிப் பேசினார்கள், பாடினார்கள், நடித்தார்கள் என்று கொஞ்சம் கொஞ்சம் செய்து காட்டினாள். கதாநாயகி வேஷம் போட்ட பையனைப் போல் நீலமணி நடித்துக் காட்டிய போது எங்களுடன் சேர்ந்து நமச்சிவாயமும் விழுந்து விழுந்து சிரித்தான்.

கதாநாயகனாக நடித்த நமச்சிவாயத்தைப் போல மட்டும் நீலமணி செய்து காட்டக் கண்டிப்பாக மறுத்து விட்டாள்.

பழைய நாடகம் என்று நான் சொன்னது இந்தத் தமாஷுக்காகத்தான் என்பதை நமச்சிவாயம் ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டான்.

விடை பெற்றுச் செல்லும்போது, "மாமா! எங்கள் நாடகத்தில் இவ்வளவு குறைகள் இருக்கின்றன என்பதை இன்றைக்குத்தான் நன்றாக அறிந்தேன். ஆனால் என்ன செய்வது? கிடைக்கிற நடிகர்களைக் கொண்டுதானே நடத்த வேண்டியிருக்கிறது? ஆனால் ஜனங்களுக்கு என்னமோ பிடித்திருக்கிறது!" என்றான் நமச்சிவாயம்.

"அது தான், தம்பி, வேண்டியது! மற்றது எப்படி இருந்தால் என்ன?" என்றேன் நான்.

நமச்சிவாயம் போன பிறகு நீலமணி, "இது என்ன மாமா? இப்படி என்னைச் சந்தியில் இழுத்து விட்டீர்கள்? அவர் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வார் 'அதிகப் பிரசங்கி, அடங்காப் பிடாரி' என்றெல்லாம் எண்ணிக் கொண்டு போகமாட்டாரா?" என்று கேட்டாள்.

"எண்ணிக் கொண்டு போவது என்ன? உண்மையும் அப்படித்தானே? நீ அதிகப் பிரசங்கி - அடங்காப் பிடாரிதானே? அதில் என்ன சந்தேகம்?" என்றேன் நான்.

வழக்கமாக நீலமணியிடம் பேசுகிறபடி வேடிக்கையாகத்தான் சொன்னேன். ஆனால் அவள் வழக்கம் போல் சிரித்துவிட்டுப் போகாமல், குப்புறப்படுத்துக் கொண்டு விம்மி விம்மி அழத் தொடங்கி விட்டாள். "இது என்னடா வம்பு?" என்று எனக்கு வேதனையாகப் போய்விட்டது. அவளை ஒருவாறு சமாதானப் படுத்தினேன். அன்றிரவு நாங்கள் யாழ்ப்பாணத்துக்குப் புறப்பட்டு விட்டபடியால், அந்தச் சம்பவம் அதோடு போய்விட்டது என்று நினைத்தேன். ஆனால் அது போகவில்லை; விடாமல் எங்களைத் தொடர்ந்து வந்தது.

யாழ்ப்பாணத்திலேதான் நாங்கள் அதிக நாள் தங்கினோம். ஒரு கோயில் உற்சவம் முடிந்து இன்னும் ஓர் உற்சவத்திற்காகக் காத்திருந்த சமயத்தில் நமச்சிவாயம் வந்து சேர்ந்தான்; முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்தான். கொழும்பில் நாடகம் நடத்திக் கொண்டிருந்த நமச்சிவாயம் கம்பெனியை யாழ்ப்பாணத்தார்கள் ஒரு 'ஸ்பெஷல்' நாடகத்துக்காகத் தருவித்திருந்தார்கள். வரும் வழியில் ஸ்திரீ வேஷக்காரனுக்கு சுரம் வந்துவிட்டது. அதைப்பற்றி வெளியில் சொன்னால் வேறுவிதமான இடைஞ்சல்கள் ஏற்படும். இந்தியாவிலிருந்து வந்தவர்களில் யாருக்காவது சுரம் வந்துவிட்டதாகத் தெரிந்தால், இலங்கையில் தொத்து வியாதிச் சிறைச்சாலையில் கொண்டு போய்ச் சேர்த்து விடுவார்கள். அப்புறம் உயிர் பிழைத்து வெளியில் வருவதற்கு எவ்வளவு நாள் ஆகுமோ தெரியாது!

இந்த நிலைமையில் என்ன செய்வது? 'ஸ்பெஷல்' நாடகத்தை ரத்து செய்வதா? என்ன காரணத்தைச் சொல்லி ரத்து செய்வது? நாடகத்துக்கு அழைத்திருந்தவர்கள் ஏராளமாகப் பணம் செலவிட்டு விளம்பரப்படுத்தியிருந்தார்கள். அவர்களுக்குப் பண நஷ்டம். நமச்சிவாயத்துக்குப் பெயர் நஷ்டம்.

அழமாட்டாக் குறையாக இந்த விவரங்களையெல்லாம் நமச்சிவாயம் என்னிடம் சொன்னான்.

"நாளைக்குத்தானே, தம்பி நாடகம்? அதற்குள் ஸ்திரீ வேஷக்காரனுக்குச் சுரம் சரியாகிவிடுகிறது!" என்றேன்.

"அப்படித் தோன்றவில்லை, மாமா! நூற்றைந்து டிகிரி சுரம். மேடைக்கு வந்து மயக்கம் போட்டு விழுந்து விட்டால் என் கதி என்ன ஆகிறது?" என்றான்.

"அதுவும் ஒரு நடிப்பு என்று வைத்துக் கொள்கிறது" என்று சொல்லிவிட்டு நகைத்தேன்.

நமச்சிவாயத்துக்கு நகைப்பு உண்டாகவில்லை. அழுகையும் ஆத்திரமுந்தான் வந்தன.

அச்சமயத்தில் என் நாவில் எந்தக் குட்டிச்சாத்தான் வந்து உட்கார்ந்து கொண்டதோ, என்னமோ தெரியவில்லை.

"நம் நீலமணியை வேண்டுமானால் நடிக்கச் சொன்னால் போகிறது!" என்றேன்.

உடனே நமச்சிவாயத்தின் முகம் மலர்ந்தது; "தங்களிடம் அதைக் கேட்கலாமென்றுதான் வந்தேன்; ஆனால் கேட்பதற்கு என்னவோ தைரியம் வரவில்லை" என்றான்.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. தமாஷ் பேச்சு சில சமயம் எவ்வளவு இக்கட்டுகளில் கொண்டு வந்து விட்டு விடுகிறது!

அதிகம் வளர்த்துவதில் பயனில்லை, நமச்சிவாயம் தான் வந்த காரியத்தை நிறைவேற்றிக் கொண்டு தான் போனான். தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் கச்சேரி செய்வதாகவோ, நாடகம் போடுவதாகவோ இலங்கையில் விளம்பரம் செய்துவிட்டு, அப்படி நடக்காமற் போனால் தமிழ்நாட்டுக் கலைஞர்கள் எல்லோருக்குமே கெட்ட பெயர் உண்டாகும். இம்மாதிரி சில முறை இலங்கையில் நடந்து, தமிழ்க் கலைஞர்கள் கெட்டப் பெயர் வாங்கியிருக்கிறார்கள். ஆகையால் இவ்வளவு விளம்பரம் செய்த பிறகு நாடகம் நடந்தால் தான் நல்லது என்பதைப் பற்றிச் சந்தேகமில்லை. நமச்சிவாயத்துக்கு ஏதாவது ஒத்தாசையாயிருப்பதில் எனக்கும் திருப்திதான். ஆனால் நீலமணியை நாடக மேடை ஏறி நடிக்கச் செய்யலாம் என்கிற எண்ணம் அந்த நிமிஷத்துக்கு முன்னால் என் கனவிலே கூடத் தோன்றியதில்லை.

நீலமணியிடம் இதை நாங்கள் தயங்கிப் பிரஸ்தாபித்ததும், அவள் ஒரு நிமிஷ நேரங் கூட தாமதிக்காமல் சம்மதித்தது என்னை ஆச்சரியத்தில் முழுக அடித்துவிட்டது. கொழும்பில் வேடிக்கையாக நடித்துக் காட்டச் சொன்ன போது அவள் தயங்கிய அளவு கூட இப்போது தயங்கவில்லை. பூர்வ ஜன்ம வாசனை என்று இதைத் தான் சொல்லுகிறார்கள் போல் இருக்கிறது. அவளுடைய உடம்பிலும், உடம்பில் ஓடிய இரத்தத்திலும், உள்ளத்திலும், உயிரின் ஒவ்வோர் அணுவிலும் நாடகக் கலையின் ஜீவசக்தி ததும்பித் துடித்துக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிடில், ஒரு வருஷ காலத்திற்குள்ளே தமிழ் நாடெங்கும் 'சின்ன பாலாமணி' என்று பெயர் வாங்கியிருக்க முடியுமா?

உடனே ஒத்திகையும் ஆரம்பமாகி விட்டது. பாட்டு கூத்து இம்மாதிரி காரியங்களில் நீலமணிக்கு அபாரமான ஞாபக சக்தி உண்டு. இப்போதோ அவளுக்கு ஒரு புது ஆவேசம் உண்டாகியிருக்கிறது. ஒரு பகல் ஒரு ராத்திரி ஒத்திகையில் எல்லாவற்றையும் பாடம் செய்துவிட்டாள். நூறு தடவை அந்த நாடகத்தில் நடித்தவள் போல் அவ்வளவு இயற்கையாகப் பாடவும், பேசவும் செய்தாள். நடிப்போ அவளுக்கு இயற்கையாக வந்தது.

ஒத்திகையில் திருப்திகரந்தான்; மேடையில் ஏறிப் பெரிய ஜனத்திரளைப் பார்த்தவுடன் பயந்து போகாமல் இருக்க வேண்டுமே என்று எனக்குத் திக்குத் திக்கு என்று அடித்துக் கொண்டிருந்தது. ஆனால் நாடகத்தில் திரை தூக்கிச் சிறிது நேரத்திற்குள்ளேயே என் பயம் தீர்ந்துவிட்டது. நீலமணியிடம் சபைக் கூச்சம் என்பதே தென்படவில்லை. சபையில் கூடியிருந்த யாழ்ப்பாணத்துப் பொறுக்கி எடுத்த ரஸிகர்களோ ஆண்பிள்ளை பெண் வேஷம் போட்டுக் கொண்டு வந்து நடிப்பதற்குப் பதிலாக ஒரு பெண்ணே கதாநாயகியாக நடிக்கிறாள் என்று தெரிந்தவுடனேயே கரகோஷத்தின் மூலம் தங்கள் உற்சாகத்தைக் காட்டிவிட்டார்கள். அப்புறம் நீலமணி மேடைக்கு வரவேண்டியது தான். சபையிலே ஒரே ஆராவாரம் எழுந்தது. போகப் போக நீலமணியின் உற்சாகம் அதிகமாகி வந்தது. நாடகம் யாரும் எதிர்பாராத அளவில் அமோகமான வெற்றியுடன் முடிந்தது.

மறு நாள் நமச்சிவாயம் என்னிடம் வந்து, "மாமா! என் மானத்தை காப்பாற்றினீர்கள்!" என்று காலைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் சொரிந்தான். பற்பலவிதமாகத் தனது நாடகத் திறமையையெல்லாம் காட்டி எனக்கும் நீலமணிக்கும் நன்றி செலுத்திவிட்டுக் கொழும்புக்குப் பிரயாணமானான். வழக்கமாக ஸ்திரீ வேஷம் போடுகிற பையனுக்கு சுரம் இறங்க ஆரம்பித்து விட்டது என்று தெரிந்த நானும் மனநிம்மதி அடைந்தேன். யாழ்ப்பாணத்தில் என்னுடைய கச்சேரிகள் முடிந்ததும் ஊருக்குத் திரும்பினேன்.

அத்தியாயம் - 4

நீலமணியின் வருங்காலத்தைப் பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன் அல்லவா? அந்தக் கவலை என் மனத்திலிருந்து தீர்ந்து போய் விட்டது. நீலமணி விரைவில் என் பொறுப்பிலிருந்து போய் விடுவாள் என்று நிச்சயம் செய்து கொண்டேன். அந்தப்படியே நடைபெறவும் செய்தது. ஆனால் அன்று எழுதிய எழுத்தை அழித்து எழுத வல்லவர் யார்? சில காலம் வரைக்குந்தான் நான் நீலமணியை மறந்து அவளைப் பற்றிய கவலை அதிகம் இல்லாமல் இருக்க முடிந்தது.

சீக்கிரத்திலேயே நமச்சிவாயம் ஐயம்பேட்டையில் என்னுடைய வீடு தேடி வந்து சேர்ந்தான். அவன் வந்த சமயம் நான் வீட்டில் இல்லை. நமச்சிவாயமும் நீலமணியும் ஒருவாறு பேசி முடிவு செய்துகொண்டு என்னிடம் சம்மதம் கேட்பதற்காகக் காத்திருந்தார்கள் என்று தோன்றியது.

நமச்சிவாயம் கம்பெனியில் பிரதான ஸ்திரீவேஷம் போட்டுவந்த பையன் சண்டை பிடித்துக்கொண்டு போய்விட்டானாம்! நீலமணியுடன் நடித்த பிறகு வேறு யாருடனும் நடிப்பதற்கு நமச்சிவாயத்துக்கும் பிடிக்கவேயில்லையாம். இப்படி அப்படி என்று ஏதேதோ சுற்றி வளைத்துச் சொல்லிக் கொண்டு போனான்.

அவனுடைய பேச்செல்லாம் எனக்கு தேவையாயிருக்கவில்லை. ஏற்கனவே நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். இந்தப் பெண்ணுக்குக் கலியாணம் பண்ணிவைப்பதென்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இவள் சாதாரணக் குடித்தனக்காரப் பையன் ஒருத்தனைக் கலியாணம் செய்து கொண்டு அவனுக்குச் சமையல் செய்து போட்டுக் கொண்டு வீட்டில் நிம்மதியாக வாழக் கூடியவளும் அல்ல. இவளை இப்படியே வெகுகாலம் கலியாணம் இல்லாமல் என் வீட்டில் வைத்துக் கொண்டிருக்கவும் முடியாது. ஆகையால் கடவுளே பார்த்துத்தான் எங்களை அச்சமயம் இலங்கைப் பிரயாணம் அனுப்பி வைத்திருக்க வேண்டும். நீலமணியை நமச்சிவாயத்தின் கையில் பிடித்துக் கொடுத்து அனுப்பிவிட வேண்டியதுதான். நமச்சிவாயமும் அறிவாளியான பிள்ளை. அப்படியொன்றும் ஒழுக்கம் கெட்டவன் என்று பெயர் வாங்கவில்லை. அவனுடைய நாடகக் கம்பெனியில் சேர்த்துவிட்டால் சீக்கிரத்தில் ஒருநாள் இவர்களுக்குத் திருமணம் நடந்துதான் தீரும். கலியாணத்துக்குப் பிறகும் இவளை நாடக மேடையில் ஏற்றி நடிக்கச் செய்வானா என்பது இவர்கள் இருவரையும் பொறுத்த காரியம். அவ்வளவு தூரத்துக்கு நான் இப்போது அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பானேன்? தெய்வ சித்தத்தின்படி எல்லாம் நடந்துவிட்டுப் போகிறது..."

இவ்வாறு மனத்தில் எண்ணிக் கொண்டு, முதலில் கொஞ்ச நேரம் ஆட்சேபிப்பது போல் ஆட்சேபித்தேன். பிறகு "நீலமணி இஷ்டப்பட்டால் சரிதான்; நான் குறுக்கே நிற்கவில்லை" என்றேன். கடைசியில் என்னுடைய சம்மதத்தையும் கொடுத்தேன்.

நமச்சிவாயத்தைத் தனிமையில் அழைத்து, "விலையில்லாத பொக்கிஷத்தை உன்னிடம் ஒப்புவிக்கிறேன். அதைப் போற்றிப் பாதுகாப்பது உன் கடமை. அவசரப்பட்டு ஒரு தீர்மானத்துக்கும் வந்து விடாதீர்கள். கொஞ்ச நாள் நாடக மேடையோடு உங்கள் உறவு இருந்து வரட்டும். ஐந்தாறு மாதத்துக்குப் பிறகு இரண்டு பேரும் பரிபூரணமாக இஷ்டப்பட்டால் கலியாணம் செய்து கொள்ளுங்கள். அதுவரையில் என் வயதான தமக்கையை நீலமணியுடன் அனுப்பி வைக்கிறேன். அவர்கள் தனி ஜாகையில் வசிக்க வேண்டும். நானும் அடிக்கடி வந்து உங்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன்" என்றேன்.

நமச்சிவாயத்துக்கு அப்போதிருந்த பரவசத்தில் நான் எது சொன்னால் தான் ஆட்சேபிக்கப் போகிறான்? எல்லா நிபந்தனைகளையும் ஒப்புக் கொண்டான்.

அப்புறம் சில மாத காலம் நமச்சிவாயம் - நீலமணி நாடகம் தமிழ் நாட்டையே அல்லோலகல்லோலப் படுத்திக் கொண்டிருந்தது. ரெயிலிலே, திருவிழாவிலே, திருமணக் கூட்டங்களிலே, நாலுபேர் சந்திக்கும் இடங்களிலெல்லாம் நமச்சிவாயம் - நீலமணி நாடகங்களைப் பற்றியே பேச்சாயிருந்தது. முக்கியமாக, 'கனவு' என்னும் ஒரு நாடகம் தமிழ் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. இந்தக் காலத்தில் 'சமூக சித்திரம்' என்று சொல்லுகிறார்களே; அம்மாதிரிப் பாணியில் அமைந்தது 'கனவு' என்னும் ஒரு நாடகம் தமிழ் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. இந்தக் காலத்தில் 'சமூக சித்திரம்' என்று சொல்லுகிறார்களே; அம்மாதிரிப் பாணியில் அமைந்தது 'கனவு' என்னும் நாடகம். அதில் ஒரு கதாநாயகனும் கதாநாயகியும் சந்திக்கிறார்கள்; காதலிக்கிறார்கள். சில காலம் சந்தோஷமாக வாழ்கிறார்கள். பிறகு அவர்களைத் தொல்லைகள் தொடர்கின்றன. வாழ்க்கைத் தொல்லைகளின் காரணமாகக் காதலும் கசந்து போகிறது. கதாநாயகியின் பேரில் அகாரணமாகச் சந்தேகப்பட்டுக் கதாநாயகன் அவளைத் துன்புறுத்தி வருகிறான். இதற்கிடையில் அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. கதாநாயகன் பேரில் பொய் வழக்கு ஜோடிக்கப்படுகிறது. அவன் சிறையில் தள்ளப்படுகிறான். கதாநாயகி பல இன்னல்களுக்கு உள்ளான பிறகு அவளுடைய அருமைக் குழந்தையுடன் நடுத்தெருவில் பிச்சையெடுத்து ஜீவிக்கும்படி நேரிடுகிறது.

கேளுங்கள், வேடிக்கையை! நீலமணி சிறு குழந்தையாயிருந்தபோது ரெயிலில் பாட்டுப்பாடிப் பிச்சை எடுத்தாள் அல்லவா? நாடகத்திலும் அந்த வழக்கம் அவளை விடவில்லை. நாடக மேடையில் நீலமணி பிச்சை கேட்டுப் பாடிக்கொண்டு வந்த போது சபையோர்களில் கண்ணீர் விடாதவர்கள் யாருமில்லை. அவர்களில் பலர் காசுகளையும், கால் ரூபாய் அரை ரூபாய்களையும் மேடையின் மீது எறிவார்கள். நீலமணியைத் தொடர்ந்து வந்த அவளுடைய சின்னஞ்சிறு மகன் (நாடகக் கதையிலே வரும் மகனைத்தான் சொல்கிறேன்) அந்தக் காசுகளைப் பொறுக்கிச் சேர்ப்பான். சிலர் ரூபாய் நோட்டுகளை மேடை மீது எறிவதுண்டு. சில நாளைக்கு இப்படி மேடையில் எறியப் படும் பணமே ஐம்பது அறுபது ரூபாய் ஆகிவிடும்.

பிச்சை எடுக்கும் காட்சிக்குப் பிறகு கதாநாயகி தன் மகனுடன் தன்னந்தனியான காட்டுப் பாதையில் வழி நடந்து போவாள். இருவரும் ஒரு மரத்தடியில் உட்காருவார்கள். நீலமணி களைப்புத் தாங்காமல் மரத்தில் சாய்ந்தபடி தூங்கிவிடுவாள்.

அப்போது ஆகாச மார்க்கத்தில் கந்தர்வன் ஒருவன் தேவ ரதத்தில் ஏறிக்கொண்டு வருவான். அவன் தன் மனைவியுடன் சண்டைப் பிடித்துக் கொண்டு வந்தவன். மரத்தில் சாய்ந்து கிடந்த நீலமணியைப் பார்ப்பான். இவளைக்கொண்டு தன் மனைவிக்கு ஒரு பாடங் கற்பிக்க எண்ணுவான். அதாவது, அவளைக் காட்டிலும் அழகான பெண்கள் பூலோகத்திலே உண்டு என்று நிரூபித்துக் காட்ட விரும்புவான். உடனே பூமியில் இறங்கி நீலமணியின் தூக்கம் கலையாமல் அவளைத் தூக்கிக்கொண்டு கந்தர்வலோகத்தில் அவனுடைய மாளிகையின் பூந்தோட்டத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பான். அங்கே நீலமணிக்கு அவன் உபசாரம் செய்வதைக் கந்தர்வப் பெண் வந்து பார்ப்பாள். கந்தர்வனைக் கோபித்து அவனை அப்பாற் போகச் செய்துவிட்டு நீலமணியிடம் அவளுடைய கதையைக் கேட்பாள். கேட்ட பிறகு அவளிடம் அனுதாபப்பட்டு "நீ இங்கேயே என்னுடன் இருந்துவிடு. உனக்கு ஒரு குறைவுமின்றி நான் பார்த்துக் கொள்கிறேன்" என்பாள்.

நீலமணி கந்தர்வபுரியின் அற்புத அழகு வாய்ந்த பூந்தோட்டங்களில் சித்திர விசித்திரமான பல வர்ண மலர்களையும் அந்த மலர்களைச் சுற்றிச் சுற்றிப் பறந்த பட்டுப் பூச்சிகளையும் பார்த்துக் கொண்டு உலாவி வருவாள். ஆனாலும் அவளுடைய மனத்தில் நிம்மதி ஏற்படாது. பூத்துக் குலுங்கிய மந்தார விருட்சத்தின் அடியில் நின்று ராகமாலிகையில் ஒரு விருத்தம் பாடுவாள். அந்தப் பாடலை நீங்கள் அவசியம் கேட்டிருப்பீர்கள்.

"பெற்ற தாய்தனை மக(வு)
மறந்தாலும்
பிள்ளையைப்
பெறுந் தாய் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள்
நின்றிமைப்பது மறந்தாலும்
உற்ற தேகம் உயிர் மறந்தாலும்
உயிரை
மேவிய உடல் மறந்தாலும்
நற்றவத்தவர் இதயத்தே ஓங்கும்
நமச்சிவாயத்தை
நான் மறவேனே..."

இதுதான் பாடல், இதன் கடைசி அடியான "நமச்சிவாயத்தை நான் மறவேனே" என்று நீலமணி பாடும் போது உடலும் உள்ளமும் உயிரும் உருகும்படி உணர்ச்சியுடன் பாடுவாள். அதைக் கேட்டுச் சபையோர் மனங் கசிந்து கண்ணீர் பெருக்கும் நிலையில் இருக்கும் போது, பூலோகத்தில் விடப்பட்ட கதாநாயகனையும் கந்தர்வன் அங்கே கொண்டு வந்து சேர்ப்பான். மூன்றாவது முறை நீலமணி, "நமச்சிவாயத்தை நான் மறவேனே" என்று பாடும்போது, நமச்சிவாயமே அவள் பின்னால் வந்து நின்று அவளுடைய கண்களைப் பொத்துவான்.

இந்தக் கட்டத்தில் நாடகக் கொட்டகையில் உண்டான ஆரவாரத்துக்கு இணையாகத் தமிழ்நாட்டு நாடகமேடை சரித்திரத்தில் எப்போதும் ஏற்பட்டதில்லை. அதற்கு முன்னுமில்லை; பின்னுமில்லை.

மரத்தடியில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்த பிச்சைக்காரப் பெண் கண்ணை விழித்துப் பார்ப்பாள். அவ்வளவும் கனவு என்று உணர்ந்து ஏமாற்றம் அடைவாள். அருகிலிருந்த தன் அருமை மகனைக் காணாது திகைப்பாள், பைத்தியம் பிடித்தவள் போல ஓடுவாள். அப்போது எதிரே ஒரு சிப்பாய் அவள் மகனை அழைத்துக் கொண்டு வருவான். அந்தச் சிப்பாய் அன்று தன்னை விட்டுப் போன கணவன் தான் என்பது அறிந்து கதாநாயகி மகிழ்வாள். இத்துடன் நாடகம் முடிவுறும்.

இந்தக் 'கனவு' என்னும் சமூகசித்திரம் தமிழ் நாட்டுப் நாடகப் பிரியர்களை அந்த நாளில் பைத்தியமாக அடித்துக் கொண்டு வந்தது.

நமச்சிவாயம் - நீலமணியின் நாடகமேடை வெற்றியைப் பற்றிக் கேட்கக் கேட்க எனக்கு எவ்வளவோ பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. ஆனால் அவர்களுடைய சொந்த வாழ்க்கை அவ்வளவு திருப்திகரமாக இல்லையென்று அறிந்து உற்சாகக் குறைவு உண்டாயிற்று. ஓயாமல் அவர்கள் சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், எந்தச் சமயத்தில் என்ன நேருமோ என்று தனக்குப் பயமாயிருக்கிறதென்றும் என் தமக்கை எனக்கு அடிக்கடி சொல்லி அனுப்பிக் கொண்டிருந்தாள். முதலில் சில காலம் நான் அதை அலட்சியம் செய்து வந்தேன். காலப்போக்கில் எல்லாம் சரியாய்ப் போய்விடும் என்று மனத்தைத் திருப்தி செய்து கொண்டிருந்தேன். ஆனால் தமக்கைசொல்லி அனுப்புவது நின்றபாடில்லை.

கடைசியாக, இனி அலட்சியம் செய்வதற்கில்லையென்று தோன்றி, ஒரு நாள் சென்னைக்குப் போய்ச் சேர்ந்தேன். அப்போது சென்னை ஒற்றைவாடையில் நாடகம் நடந்து கொண்டிருந்தது. பார்க்டவுன் சந்து ஒன்றில் நாடகக் கம்பெனியின் ஜாகை பக்கத்திலேயே நீலமணியின் வீடு. நான் அங்கே போன போது உள்ளேயிருந்து பெருங் கூக்குரல் வந்து கொண்டிருந்தது. நீலமணி - நமச்சிவாயம் இவர்களுடைய குரல்கள் தான். வீட்டுக்குள் நுழையும் போது எனக்கு நெஞ்சு திக் திக்கென்று அடித்துக் கொண்டது. என்னை பார்த்ததும் இருவரும் சண்டையை நிறுத்தி முகமலர்ச்சியுடன் என்னை வரவேற்றார்கள். சாமான்கள் உள்ளே வந்து சேர்ந்து வண்டிக்காரனைத் திருப்பி அனுப்பிய பிறகு, "நான் வரும்போது ஒரே கூக்குரலாயிருந்ததே, என்ன விசேஷம்?" என்று கேட்டேன்.

"நீங்களே கேளுங்கள், மாமா! உங்கள் அருமை மகளை நீங்களே கேளுங்கள்" என்றான் நமச்சிவாயம்.

"ராகமாலிகையை எந்த ராகத்தில் முடித்தால் என்ன மாமா! 'பேஹாக்' கில் முடிக்காமல் மத்திய மாவதியில் முடித்துவிட்டதாகச் சண்டை பிடிக்கிறார்?" என்றாள் நீலமணி.

"எந்த ராகத்தில் முடிந்தாலுந்தான் ஒன்றுமில்லையே? மத்தியமாவதியில் முடிக்காமல் நான் சொன்னபடி 'பேஹாக்' கில் முடிப்பதுதானே?" என்றான் நமச்சிவாயம்.

"பாடுகிறது நான் தானே? எனக்கு இஷ்டமான ராகத்தில் நான் பாடுகிறேன்" என்றான் நீலமணி.

"பாடுகிறவர்களுக்காகப் பாட்டா? கேட்கிறவர்களுக்குப் பாட்டா? நீங்கள் சொல்லுங்கள், மாமா!" என்றான் நமச்சிவாயம்.

"கேட்கிறவர்கள் அப்படியொன்றும் மத்தியமாவதியைக் கேட்டுக் காதைப் பொத்திக் கொள்ளவில்லையே? கொட்டகை இடிந்து விழும்படி கரகோஷ ஆரவாரம் செய்து மகிழ்ந்தார்களே!" என்றாள் நீலமணி.

"உன் பாட்டைக் கேட்டா கரகோஷம் செய்தார்கள்? நான் மேடையில் அச்சமயம் தோன்றியதற்காக அல்லவோ கரகோஷம் செய்தார்கள்!" என்றான் நமச்சிவாயம்.

"அப்படி இருக்கும் போது, நான் எந்த ராகத்தில் பாடினால் என்ன? எப்படிப் பாடினால் என்ன?" என்றாள் நீலமணி.

"மாமா! உங்கள் மகளுக்குக் கர்வம் அசாத்தியமாகத் தலைக்கேறிவிட்டது. இனி உருப்படப் போவதேயில்லை. ஊரில் உள்ள முட்டாள் பயல்கள் எல்லம் 'ஆஹு' என்று புகழ்ந்து இப்படி இவளைக் கர்வம் பிடிக்கச் செய்துவிட்டார்கள்!" என்று குறைப்பட்டான் நமச்சிவாயம்.

"ஊரில் உள்ளவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்றால் அவர்களுக்குத்தானே நாம் நாடகம் ஆடுகிறோம்? நாம் மட்டும் என்ன?" என்றாள் நீலமணி.

"கேட்டீர்களா, மாமா! இவள் எனக்கு முட்டாள் பட்டம் சூட்டுவதை! இவளை மேடையில் ஏற்றி நாடெங்கும் புகழ்பெற்ற நாடகக்காரியாக்கியதற்கு எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்! இல்லையா?" என்றான் நமச்சிவாயம்.

அதற்குப் பதில் நீலமணி என்னமோ சொல்லத் தொடங்கிச் சொல்ல முடியாமல் விம்மி விம்மி அழ ஆரம்பித்து விட்டாள்.

இதையெல்லாம் கேட்டு எனக்கு உண்மையிலேயே சிரிப்பதா, அழுவதா என்று தெரியாமல் போய்விட்டது. அந்தச் சந்தேகமான நிலையில் சிரித்துத்தான் வைப்போமே என்று உடம்பு குலுங்கச் சிரித்தேன்.

"அட அசட்டுக் குழந்தைகளா!" என்று இரண்டு பேரையும் மாற்றி மாற்றிப் பார்த்துப் பார்த்துச் சிரித்தேன்.

"மாமா! எங்களைப் பார்த்து நீங்கள் மட்டுந்தானா சிரிப்பீர்கள்? ஊரே சிரிக்கும்" என்றான் நமச்சிவாயம்.

"ஆமாம், தம்பி! நீங்கள் இப்படி அற்ப விஷயத்துக்குப் பெரிய சண்டையாகப் போடுகிறீர்கள்! இதன் உண்மை தெரியாதவர்கள் ஒன்றைப் பத்தாக்கி ஊசியை உலக்கையாக்கி ஊரெல்லாம் டமாரம் அடித்து வீண் வதந்திகளைப் பரப்பி விடுவார்கள். பிறகு ஊரே உங்களைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கி விடும்! ஜாக்கிரதை!" என்றேன்.

உடனே பேச்சை மாற்றினேன், யோக க்ஷேமங்களை விசாரித்தேன். அவர்களுடைய நாடகங்களைப் பற்றி நாடெல்லாம் புகழ்வதையும் கூறினேன்.

இரண்டு பேரையும் தனித்தனியாகப் பார்த்து நல்ல வார்த்தையாகப் புத்திமதி கூறினேன். நான் கூறியவற்றை இரண்டு பேரும் அப்படி அப்படியே ஒப்புக் கொண்டார்கள். தங்களுடைய குற்றத்தை உணர்ந்தவர்கள் போல் பேசினார்கள்.

"ஒரு நல்ல நாள் பார்த்து ஏதாவது ஒரு கோயிலுக்குப் போய்க் கலியாணம் செய்து கொண்டு விடுங்கள். குழந்தை ஒன்று பிறந்து விட்டால் அப்புறம் சின்ன விஷயங்களைப் பற்றிச் சண்டைபோட அவகாசம் இராது" என்றேன்.

இருவரும் ஒப்புக்கொண்டு என்னையே முகூர்த்த நாள் பார்க்கும்படி சொன்னார்கள். நான் உடனே மறுவாரத்திலேயே முகூர்த்த நாள் குறிப்பிட்டேன். இரண்டு பேரையும் பொறுக்கியெடுத்த சில சிநேகிதர்களையும் மட்டும் திருநீர்மலைக்கு அழைத்துச் சென்று திருமணத்தைச் சுருக்கமாக முடித்து வைத்தேன். பிறகு, நிம்மதியுடன் ஊருக்குத் திரும்பினேன்.

அத்தியாயம் - 5

திருமணத்துக்கு நான் குறிப்பிட்ட முகூர்த்த நாளில் என்ன கோளாறு இருந்ததோ தெரியவில்லை. நான் ஊருக்குத் திரும்பிச் சில நாளைக்குள்ளே இடி விழுந்தாற் போன்ற செய்தி சென்னையிலிருந்து வந்து விட்டது. நீலமணி கடித்தத்துக்கு மேல் கடிதமாக எழுதியிருந்த நாலைந்து கடிதங்களையும் சுசீந்திரம் உற்சவக் கச்சேரிக்குப் போய்த் திரும்பி வந்த பிறகு சேர்ந்தாற்போல் படித்ததில் துயரமும் பீதியும் கொள்ளும்படி நேர்ந்தது.

நான் சென்னைக்குப் போயிருந்த போதே நமச்சிவாயத்தின் தொண்டை கம்மியிருந்ததையும் அவன் கமறிக் கமறி அடிக்கடி இருமியதையும் கவனித்தேன். உடம்பும் சிறிது இளைத்திருந்தது. சென்னையில் நாள்தோறும் இடைவிடாமல் நாடகம் நடந்து வந்தது தான் இதற்குக் காரணம் என்று எண்ணிக் கொண்டேன்.

சில நாளைக்கெல்லாம் நமச்சிவாயத்துக்கு உடம்பு ரொம்ப பலவீனமாகிச் சுரமும் வந்து விட்டதாம். டாக்டரை அழைத்துப் பார்த்ததில் அவர் அந்தப் பயங்கரமான செய்தியைச் சொன்னாராம். பையனுக்கு டி.பி.வியாதி என்றும், உடனே நாடகம் ஆடுவதை நிறுத்தி பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், தகுந்த சிகிட்சையும் செய்து கொள்ள வேண்டும் என்றும், இல்லாவிடில் வியாதி முற்றி உயிருக்கே அபாயம் வந்து விடும் என்று சொன்னாராம். அந்த நாளில் இப்போது வந்திருப்பது போன்ற 'ஸ்ட்ரெப்டோ மைஸின்' முதலிய மருந்துகள் இல்லை. டி.பி. வியாதி வந்து விட்டது என்றால் பிழைப்பது துர்லபம் என்று தான் அர்த்தம்.

ஆனால் நமச்சிவாயமோ டாக்டர் சொன்னதை நம்பாமல், 'எனக்கு டி.பி.யும் இல்லை; கி.பி.யும் இல்லை" என்று சொல்லி, மேடை ஏறியே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்தான். இதன் பலனாக, ஆளை அடியோடு கிழே தள்ளி விட்டது.

"மாமா உடனே புறப்பட்டு வாருங்கள்! தாமதித்தால் எங்களை உயிரோடு காணமாட்டீர்கள்!" என்று நீலமணி அலறிப் புடைத்துக் கொண்டு கடைசிக் கடிதத்தில் எழுதியிருந்தாள்.

நானும் அலறிப் புடைத்துக் கொண்டு புறப்பட்டுப் போனேன். அங்கே எல்லாம் அல்லோலகல்லோலமாகத்தான் இருந்தது. நாடகத்தை நிறுத்தி ஒருவாரம் ஆயிற்று. நாடகக் கம்பெனியைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் மாதக்கணக்காகச் சம்பளம் கொடுக்கப்படவில்லை. கொட்டகை முதலாளியும் இன்னும் பலரும் தங்களுக்குச் சேரவேண்டிய பாக்கிக்காக வந்து கொண்டிருந்தார்கள்.

நாடகக் கம்பெனிகளுக்குப் பெயரும் புகழும் பெருகுவதையொட்டிப் பணச் செலவும் அதிகமாகிக் கொண்டுவரும். ஆட்கள் அதிகமாகச் சேர்ந்து கொண்டுவருவார்கள். ஆடம்பரம் பெருகிக் கொண்டு வரும். காட்சி ஜோடனைகளில் பணம் ஏராளமாகப் போய்க் கொண்டேயிருக்கும்; சுற்றி உள்ளவர்கள் பிய்த்துப் பிடுங்கிக் கொண்டிருப்பார்கள்.

திடீரென்று ஒரு நாள் கம்பெனியை மூடும்படி நேர்ந்தால், கம்பெனிச் சொந்தக்காரரின் கதி அதோகதிதான்.

ஏதோ கடவுள் என்னை அச்சமயத்தில் அங்கே கொண்டு போய்ச் சேர்த்தார். நான் கணக்கு வழக்குகள் பார்த்து, கொடுக்க வேண்டியவர்களுக்கெல்லாம் ஒன்றுக்குப் பாதி கொடுத்துத் தீர்த்தேன். மொத்த முடிவில், நமச்சிவாயத்துக்குக் கடன்பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் தங்கி நின்றது.

கும்பகோணத்தில் எனக்குத் தெரிந்த நல்ல டாக்டர் இருப்பதையும், அவரிடம் வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம் என்றும் சொல்லி நமச்சிவாயத்தையும், நீலமணியையும் அழைத்துக் கொண்டு போனேன். கும்பகோணத்தில் எனக்கு ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டிலேயே அவர்களுக்கு ஜாகை ஏற்படுத்திக் கொடுத்தேன்.

டாக்டர் ஒரு மாதம் வைத்தியம் பார்த்தபின், "நெருக்கடியான நிலைமை தீர்ந்து விட்டது; இனி மேல் நான் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. நமச்சிவாயத்தை மதனப்பள்ளிக்கு அழைத்துப் போய் அங்கே இரண்டு வருஷம் இருக்கச் செய்ய வேண்டும்" என்று சொன்னார்.

இந்தக் காலத்தில் புண்ணியவான்கள் ஜில்லாவுக்கு ஒரு க்ஷயரோக வைத்தியசாலை ஏற்படுத்தி வருகிறார்கள். அப்போதெல்லாம் மதனப் பள்ளிக்குப் போனால் தான் அந்தக் கொடிய வியாதிக்கு சிகிச்சை என்று இருந்தது.

மதனப்பள்ளிக்குப் போய் இரண்டு வருஷம் இருப்பதற்கு ஐயாயிரம் ரூபாய் பணம் வேண்டும். இதற்கு எங்கேபோவது என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்கையில் எதிர்பாராத உதவி ஒன்று கிட்டியது. கும்பகோணத்தில் அப்போது வேறொரு நாடகக் கம்பெனியார் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார்கள். நமச்சிவாயத்தின் நிலைமையை அறிந்து அவனுக்கு உதவிசெய்யும் முறையில் அவர்கள் ஒரு யோசனை கூறினார்கள். அதாவது, நீலமணி அவர்களுடைய கம்பெனியில் பத்து 'ஸ்பெஷல்' நாடகங்களில் நடித்தால் நாடகத்திற்கு ஐந்நூறு ரூபாய் வீதம் ஐயாயிரம் முன் பணமாகவே தருவதற்கு முன்வந்தார்கள்.

நாடகத்துக்கு வசூலே சாதாரணமாக ஆயிரம் ரூபாய்க்குமேல் ஆகாது. நீலமணிக்கு மட்டும் ஐந்நூரு ரூபாய் என்றால், உதவி செய்யும் நோக்கத்துடனே தான் அவர்கள் சொன்னார்கள் என்பதைப் பற்றிச் சந்தேகமே இல்லை. இதை நமச்சிவாயமும் உணர்ந்துதான், 'ஸ்பெஷல்' நாடகங்களில் நீலமணி நடிப்பதற்கு அவன் சம்மதம் கொடுத்தான்.

ஆனால் நீலமணி பிடிவாதமாக மறுதளித்தாள். நமச்சிவாயம் இருக்கும்போது இன்னொருவருடன் மேடையில் ஏறி நடிக்க முடியாது என்று சொன்னாள்.

"அப்படியானால் நான் செத்துத் தொலைந்து போய் விடவேண்டும் என்கிறாயா? அதற்குப் பிறகு இன்னொருவனுடன் நடிப்பாயா?" என்று ஏடாகூடாமாகப் பேசினான் நமச்சிவாயம். நீலமணி ஆத்திரம் தாங்காமல் பொருமி அழுதாள்.

மறுபடியும் நான் தலையிட்டுத் தகராறைத் தீர்த்து வைத்தேன். நீலமணியைச் சமாதானப்படுத்தி அவள் நடிக்க ஒப்புக் கொள்வதுதான் உசிதம் என்றும் நமச்சிவாயத்தினிடம் அவளுடைய உண்மை அன்புக்கு அது தான் ருசுவாகும் என்றும் எடுத்துக் கூறி ஒப்புக் கொள்ளச் செய்தேன்.

நீலமணியின் 'ஸ்பெஷல்' நாடகங்கள் பத்தும் இரண்டு மாதத்துக்குள் நடைபெறுவதாக ஏற்பாடு. ஒன்றைவிட ஒன்று மிஞ்சிய மகத்தான வெற்றியாக, நாடகங்கள் நடந்து வந்தன. இந்த 'ஸ்பெஷல்' நாடகங்களின் போதுதான் நீலமணிக்குச் 'சின்ன பாலாமணி' என்று சிலர் பெயர் கொடுத்தார்கள். கடலூரிலிருந்தும் திருச்சிராப்பள்ளியிலிருந்தும் மதுரையிலிருந்தும் நாகப்பட்டினத்திலிருந்தும் நாடகம் பார்க்க ஜனங்கள் வந்தார்கள். இந்த ஜனங்கள் வழக்கமாக வரும் ரெயில்களுக்கு 'நீலமணி ஸ்பெஷல்' என்ற பெயரும் ஏற்பட்டது.

இவ்வளவு அமோகமான வெற்றிக்கு மத்தியில் நமச்சிவாயத்தின் மனோநிலை மட்டும் நாளுக்கு நாள் கெட்டுப் போய் வந்தது. முதலில் நீலமணி நடிப்பதற்குச் சம்மதம் கொடுத்தவன், தான் இல்லாமலே அவள் நாடகத்தில் வெற்றி அடைந்து வருகிறாள் என்பதைப் பார்க்க பார்க்க எரிச்சல் அடைந்தான். அவனுடைய எரிச்சலை வளர்ப்பதற்கு முக்கியமாக ஒரு காரணம் ஏற்பட்டது. "பெற்ற தாய்தனை மக(வு) மறந்தாலும்" என்னும் பாட்டில் தன்னுடைய பெயர் வருவதால் அதை மட்டும் நீலமணி பாடக்கூடாது என்று அவன் சொல்லியிருந்தான். பாடுவதில்லையென்று அவளும் உறுதி கொண்டிருந்தாள். ஆனால் நாடகத்துக்கு வரும் மகாஜனங்களின் இயல்பு அபூர்வமானது. அவர்களுக்குத் தங்கள் அதிகாரத்தை நிலை நாட்டுவதில் ஆர்வம் அதிகம். அவர்கள் கோரிக்கையை நடிகர்கள் நிறைவேற்றாவிட்டால் ரகளைசெய்து விடுவார்கள். முதல் நாள் நாடகத்திலேயே சிலர், "பெற்ற தாய்தனை" என்று கத்தினார்கள். அதை நீலமணி பொருட்படுத்தாமல் வேறொரு விருத்தம் பாடி சமாளித்தாள். மறுநாள் சபையோர் அதற்கு இடங் கொடுக்கவில்லை. மூலைக்கு மூலை எழுந்து நின்று "பெற்ற தாய் பாடு!" என்று கட்டளையிட்டதுடன் பாடாவிட்டால் உட்காரமாட்டோ ம் என்று பிடிவாதம் பிடித்தார்கள். நாடக நிர்வாகிகள் நீலமணியிடம், "பாடாவிட்டால் கலகம் உண்டாகும்" என்று எச்சரித்ததன் பேரில் அவளும் பாட நேர்ந்தது. அந்தப் பாட்டைப் பாடும் போது இயற்கையாக அவளுடைய உணர்ச்சி மிகுந்திருந்தபடியால் ராகமாலிகை பிரமாதமாக அமைந்துவிட்டது. ஜனங்களும் கையைக் கொட்டித் தீர்த்துவிட்டார்கள்.

அதற்குப் பிறகு நீலமணி ஒவ்வொரு நாளும் சபையோர் கேட்பதற்கு இடம் வையாமல் அந்தப் பாடலைப் பாடிவிட்டாள்.

"பாடாவிட்டால் கலகம் நேர்ந்து நாடகம் குழப்பத்தில் முடிந்திருக்கும்" என்பதை நமச்சிவாயத்துக்கு அவள் எடுத்துச் சொன்னாள். அதை அவனும் வெளிப்படையில் ஒப்புக்கொண்டான். இருந்தாலும் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தான்.

நீலமணி நாடகக் கொட்டகைக்குப் போய் வெற்றி மாலை சூடிக் கொண்டு வருவதும் தான் வீட்டிலேயே உட்கார்ந்திருக்க வேண்டியிருப்பதும் அவனுடைய மனவேதனையையும் எரிச்சலையும் நாளுக்கு நாள் அதிகமாக்கிக் கொண்டே வந்தன.

இரண்டொரு முறை அவனை நான் பார்க்கப் போயிருந்தேன். நாஸுக்காக நாடகத்தைப் பற்றிய பேச்சையே எடுக்காமல், மேலே அவனுக்கு நடக்க வேண்டிய சிகிச்சையைப் பற்றிப் பேசினேன். டாக்டரைக் கொண்டு மதனப்பள்ளிக்குக் கடிதம் எழுதச் சொல்லியிருப்பதாகக் கூறினேன்.

"மதனப்பள்ளிக்கு நான் எங்கே போகப் போகிறேன்? மரணப் பள்ளிக்குத்தான் போகப் போகிறேன்!" என்றான் அவன்.

"சீச்சீ! இது என்ன பேச்சு? தம்பி!" என்று சமாதானமாக ஏதோ அவனுக்குச் சொல்லிவிட்டு ஊருக்குத் திரும்பினேன்.

எனக்கும் என்னுடைய ஜோலிகள் இருந்தன. நான் இவர்களையே எப்போதும் கட்டிக் காத்துக் கொண்டிருக்க முடியாது அல்லவா? என்னுடைய சம்பாத்தியத்தைக் கொண்டு பிழைக்க வேண்டிய ஜீவன்கள் பதினைந்து பேர் என் குடும்பத்தில் இருந்தார்கள். நான் கச்சேரிக்குப் போய் வராவிட்டால் என் குடும்பம் நடப்பது எப்படி?

'ஸ்பெஷல்' நாடகங்கள் எட்டு முடிந்த பிற்பாடு, சிக்கல் உற்சவத்துக்குப் போய்விட்டு நான் ஐயம்பேட்டைக்குத் திரும்பி வந்தேன். கும்பகோணத்தில் நிலைமை மிக்க நெருக்கடி என்று தெரிந்தது. என் தமக்கை, "அந்தப் பையன் ஒவ்வொரு சமயம் பெட்டியைத் தூக்கிக் கொண்டு தேசாந்திரம் போகிறேன்" என்று கிளம்புகிறான். ஒரு சமயம் நீ மருந்து வைத்துத்தான் என் உடம்பு கெட்டுவிட்டது என்கிறான். துப்பாக்கியை எடுத்துக் காட்டிச் சுட்டு விடுவேன் என்று பயமுறுத்துகிறான். இன்னொரு சமயம் கையில் அக்கினித் திராவகத்தை வைத்துக் கொண்டு 'குடித்துச் செத்துப் போகிறேன்' என்கிறான். வீடு ஒரே பயங்கரமாயிருக்கிறது. எந்த நிமிஷம், என்ன விபரீதம் நேருமோ தெரியவில்லை. நீ உடனே போய்ப் பார், தம்பி! அவர்களைப் பிரித்துத் தனித்தனியே விட்டு விட்டால் கூடத் தேவலை போல் இருக்கிறது!" என்றாள்.

என் இரட்டை மாட்டுப் பெட்டி வண்டியை உடனே பூட்டச் சொல்லிக் கும்பகோணத்துக்குக் கிளம்பினேன். அன்றைக்குத் தீபாவளிக்கு முதல் நாள். கும்பகோணத்து வீதிகள் ஒரே கோலாகலமாக இருந்தன. எங்கே பார்த்தாலும் டப் டுப், டப் டபார் என்று சீன வெடிகள் வெடித்துக் கொண்டிருந்தன. கம்பி மத்தாப்பூக்களிலிருந்து பொழிந்த வர்ண ஒளிப்பொறிகள் கண்களுக்கு விருந்தாக இருந்தன. விஷ்ணு சக்கர வாணங்கள் பூமியிலிருந்து சுழன்று சுழன்று வானை நோக்கிச் சென்று படாரென்று வெடித்து மறைந்தன. இவற்றிலிருந்து வெளி வந்து கொண்டிருந்த புகை மூக்கில் ஏறி மூச்சுத் திணறும்படி செய்தது. ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் புது வஸ்திரங்களும் வாணங்களும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். கடைத்தெருக்கள் ஜே ஜே என்று இருந்தன.

ஆனால் என் நெஞ்சு மட்டும் திக், திக் கென்று அடித்துக் கொண்டிருந்தது. அந்தப் பாவி சண்டாளன் என் அருமைக் குழந்தையை என்ன செய்யப் போகிறானோ, என்னமோ என்று எண்ணிய போதெல்லாம் அடி வயிறு விம்மி எழுந்து மார்பை அடைத்தது. ஒவ்வொரு தடவை பட்டாசு வெடித்த போதும் என் தலையில் ஏதோ வெடித்தது போல் தோன்றியது.

கடைத் தெருவில் சிறிது வண்டியை நிறுத்தி, நமச்சிவாயத்துக்குப் புது வேஷ்டியும், நீலமணிக்குப் புதுச் சேலையும் வாங்கிக் கொண்டு போனேன். வீட்டை நெருங்க நெருங்க, என் நெஞ்சுத் துடிப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது.

உடனேயே ஐயம்பேட்டைக்குத் திரும்ப நான் விரும்பியபடியால், வண்டியைப் பூட்டு அவிழ்க்காமல் அப்படியே நிறுத்தி வைக்கச் சொல்லிவிட்டு புது வஸ்திரப் பொட்டணங்களுடன் வீட்டுக்குள் நுழைந்தேன்.

உள்ளே இரைச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. வீட்டு நடையில் சிறிது தயங்கி நின்றேன்.

"விடுகிறாயா மாட்டாயா?"

"விடமாட்டேன்!"

"என்னைத் தடுக்க உனக்கு என்ன அதிகாரம்?"

"என்னைத் தாலி கட்டி நீங்கள் கல்யாணம் செய்து கொள்ளவில்லையா? அந்த அதிகாரந்தான்!"

"நீ எனக்கு மனைவியும் அல்ல; நான் உனக்குப் புருஷனும் அல்ல, உன் மாமாவுக்காகச் செய்த காரியம். நான் இப்போது புறப்பட்டுத்தான் போவேன். ரெயிலுக்கு நேரமாகிவிட்டது. வழியை விடு! இப்படி அதைக்கொடு!"

"விடமாட்டேன்; கொடுக்க மாட்டேன்!"

"கொடுக்காவிட்டால் உன்னை இதோ இந்தக் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவேன்!"

"பேஷாகச் சுட்டுக் கொன்றுவிட்டுப் போங்கள்!"

நமச்சிவாயம் துப்பாக்கியால் சுடுவதாகப் பயமுறுத்தியதை நான் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. நாடக மேடைகளில் உபயோகப்படுத்தும் விளையாட்டுத் துப்பாக்கி ஒன்று அவன் வைத்திருந்தான். அதில் குண்டு கிடையாது. சுட்டால் வெளிச்சமும் புகையும் தான் வரும்!...

டப்! டுப்! டப்! டபார்!...

"வீல்" என்று ஒரு கோரமான குரல் காதில் விழுந்தது. யாரோ தடால் என்று விழும் சத்தமும் கேட்டது.

அலறிப் புடைத்துக் கொண்டு உள்ளே ஓடினேன். நீலமணி அலங்கோலமாகத் தரையில் விழுந்துகிடந்தாள். அவள் உடம்பு துடித்துக் கொண்டிருந்தது. அவள் முகத்தைப் பார்த்ததும் "ஐயையோ!" என்று நான் அலறினேன். உடனே அவள் அருகில் பாய்ந்து சென்று உட்கார்ந்தேன்.

"என்ன, மாமா? என்ன?" என்று கேட்டுக் கொண்டே நமச்சிவாயம் அருகில் உட்கார வந்தான்.

"அட பாவி! சண்டாளா! துரோகி! என்ன காரியம் செய்துவிட்டாய்?" என்று அவன் தோளைப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்கித் தூரத் தள்ளினேன்.

நமச்சிவாயம் ஆவேசம் வந்தவன் போல், "அடே நீ யாரடா என்னைப் பிடித்துத் தள்ளுவதற்கு?" என்று பலமாகக் கூச்சலிட்டுக் கொண்டு திரும்பி வந்தான்.

என்னுடைய கோபம் எல்லையைக் கடந்து விட்டது. உடனே குதித்து எழுந்து நமச்சிவாயத்தின் கழுத்தைப் பிடித்துக் கொண்டு, "அடே பாதகா. அவளுடைய வாழ்க்கையைத்தான் பாழாக்கி விட்டாய்! அவள் உயிரோடிருப்பது கூட உனக்குப் பொறுக்கவில்லையா?" என்று சொல்லிக் கொண்டே அவன் கழுத்தைப் பிடித்து இறுக்கத் தொடங்கினேன். நான் செய்வது என்னவென்று எனக்கே தெரியவில்லை. நமச்சிவாயத்தின் விழிகள் பிதுங்கின. அவன் தொண்டையிலிருந்து உருத்தெரியாத பல மாதிரியான சத்தங்கள் எழுந்தன.

கடவுள் என்னைக் கொலைகாரன் ஆக்காமல் தடுத்தாட் கொண்டார்! விசித்திரமான, எதிர்பாராத முறையில் குறுக்கிட்டார்.

அண்டகடாகங்கள் வெடித்துவிட்டன என்று சொல்லும்படியான ஒரு சத்தம் எழுந்தது. வீட்டின் முன் புறத்திலிருந்துதான், ஆயிரம் பேரிடிகள் சேர்ந்தாற்போல் நீடித்து இடித்தது போன்ற சத்தம். நூறு எம்ட்டன் குண்டுகள் ஒருமிக்க வெடித்தது போன்ற சத்தம். என் காதின் நரம்புகள் தெறித்து அறுபட்டுவிட்டதாகத் தோன்றியது. என் மண்டையே ஆயிரம் சுக்கலாகிவிட்டது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. அந்த வெடிச் சத்தத்தின் அதிர்ச்சியினால் நமச்சிவாயத்தின் கழுத்திலிருந்து என் கைகள் வெளிவந்தன. இரண்டு பேரும் தூர தூரப் போய் விழுந்தோம். ஒரு நிமிஷ மூளைக் குழப்பத்துக்குப் பிறகு நேர்ந்தது என்ன என்பது என் அறிவுக்குப் புலனாகிவிட்டது. அந்த வீட்டின் முன் அறை மட்டும் என் சிநேகிதர் ஒருவர் வசத்தில் இருந்தது. அவர் பலசரக்கு வியாபாரி. தீபாவளி சமயத்தில் அவர் பட்டாசுக்கட்டுக் கடையும் நடத்துவார். பெரிய பெரிய கள்ளிப் பெட்டிகளில் வரும் பட்டாஸ் கட்டுகள், மத்தாப்புப் பெட்டிகளை அந்த அறையில் போட்டுப் பூட்டி வைத்திருப்பார். கொஞ்சங் கொஞ்சமாகத் தேவைப்படும்போது சில்லறை விற்பனைக் கடைக்கு எடுத்துப் போவார்.

அந்த அறைக்குள் எப்படியோ நெருப்புப் பொறி பறந்து விழுந்து, பட்டாசுப் பெட்டிகளில் தீப்பிடித்து விட்டது என்பதை அறிந்து கொண்டேன்.

மறுநிமிஷம் வீடு ஒரே புகை மயமாகி விட்டது. முன் அறையின் கூரை தீப்பற்றி எரிவதையும் கண்டேன். வீட்டைப்பற்றி நான் அப்போது கவலைப் படவில்லை. வெடி விபத்தினால் விளையக்கூடிய மற்ற தொல்லைகளைப் பற்றியும் சிந்திக்கவில்லை. உடனே குதித்து எழுந்து நீலமணியை எடுத்துத் தோளின் மீது போட்டுக் கொண்டு புகை நெருப்பின் வழியாக வாசற் பக்கம் ஓடினேன். தயாராய் நின்ற வண்டியில் அவளைப் போட்டுவிட்டு நானும் ஏறிக்கொண்டேன். "ஓட்டு! ஓட்டு! டாக்டர் வீட்டுக்கு ஓட்டு!" என்று கத்தினேன்.

பத்து நிமிஷத்துக்கெல்லாம் வண்டி டாக்டர் ராமசர்மாவின் வீட்டுவாசலில் போய் நின்றது. அந்த புண்ணியவான் - அவரைப் போல் தயாள குணமுள்ள டாக்டர் இப்போது யார் இருக்கிறார்கள்? - நீலமணியை வண்டிக்குள்ளேயே பார்த்துவிட்டு "நேரே ஆஸ்பத்திரிக்கு விடுங்கள்!" என்றார். அவரும் மோட்டாரில் இன்னொரு டாக்டரையும் நர்ஸையும் கூட்டிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தார். தீபாவளி ராத்திரியாயிற்றே என்று பாராமல் இரவெல்லாம் கண் விழித்து நீலமணிக்குச் சிகிச்சை செய்தார்கள்.

நான் உணர்ச்சியும் உயிரும் அற்றவனாக ஆஸ்பத்திரி வாசலிலேயே காத்திருந்தேன்.

"பிழைத்தால், புனர் ஜன்மந்தான்!" என்றார் டாக்டர். ஆனாலும் பிழைக்க வைத்துவிட்டார். ஒரு வாரத்துக்கெல்லாம் உயிருக்கு அபாயமில்லை என்று தெரிவித்தார்.

ஆயினும் ஆஸ்பத்திரியிலிருந்து நீலமணியை ஐயம்பேட்டைக்கு அழைத்துப் போவதற்கு ஆறுமாதம் ஆயிற்று.

கும்பகோணத்தில் என் வீட்டில் லைசென்ஸ் இல்லாமல் வெடிக்கும் சாமான்களை வைத்திருந்ததற்காக என்பேரில் ஒரு வழக்கு வந்தது. அதற்கு நான் பொறுப்பாளி இல்லையென்று வக்கீல் வைத்து வாதாடித் தப்பித்துக் கொண்டேன்.

ஆறுமாதத்திற்கு பிற்பாடு இன்னொரு தொல்லை நேர்ந்தது; திருப்பிக் கட்டப்பட்ட அதே வீட்டில் நாட்டு வெடி குண்டுகள் இரண்டு வெடித்தன. 'கும்பகோணம் வெடி குண்டு வழக்கு' என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த வழக்கிலும் என்னைப் போலீஸார் சம்பந்தப்படுத்தினார்கள். நான் மகாத்மா காந்திக் கொள்கையில் பக்தியுள்ளவன் என்றும் அஹிம்சாவாதி என்றும் ஊரில் நூறு பிரமுகர்கள் சாட்சி கூறினார்கள். இதனால் அந்த வழக்கிலிருந்தும் தப்பிப் பிழைத்தேன்.

பிற்பாடு, ஒரு தப்புத் தண்டாவுக்கும் போகாமல் மற்றவர்கள் காரியத்தில் தலையிடாமல், 'நான் உண்டு; என் தொழில் உண்டு' என்று மானமாகக் காலட்சேபம் செய்து வருகிறேன்.

அத்தியாயம் - 6

கந்தப்பப் பிள்ளையின் கதை முடிந்தது. எழும்பூர் ரெயில் நிலையமும் வந்து சேர்ந்தது.

நாங்கள் பிரிந்து போக நேர்ந்த போது, "கந்தப்பப் பிள்ளை! இப்போது நீலமணி எங்கே இருக்கிறாள்? என்ன செய்து கொண்டிருக்கிறாள்?" என்று கேட்டேன்.

"சில வருஷ காலம் பிரம்மஹத்தி பிடித்தவள் போல இருந்தாள். பிற்பாடு சங்கீதத்தில் கவனம் செலுத்தினாள். நல்ல திறமை பெற்றுவிட்டாள். ஆனால் வெளியில் வந்து பாடுவதில்லை. எப்படி வருவாள்? ரேடியோ என்பதாக ஒன்றைக் கண்டுபிடித்தார்களே, அந்தப் புண்ணியவான்கள் நன்றாயிருக்கவேணும்! சில சமயம் நல்ல சங்கீதத்துக்கும் ரேடியோவில் இடங் கொடுக்கிறார்கள். மூன்று மாதத்துக்கு ஒரு தடவை போய் ரேடியோவில் கச்சேரி செய்து விட்டு வருகிறாள். சங்கீதம் ஒன்று தான் இப்போது அவளுக்கு ஜீவாதாரமாயிருந்து வருகிறது!" என்றார் கந்தப்பப் பிள்ளை.

"சங்கீதத்துடன் தங்களுடைய அன்பும் ஆதரவும் சேர்ந்திருக்கின்றன அல்லவா?" என்றேன் நான்.

"அடுத்தவாரத்தில் கூட நீலமணியின் ரேடியோக் கச்சேரி இருக்கிறது; முடிந்தால் கேளுங்கள்!" என்றார் கந்தப்பப் பிள்ளை.

"அவசியம் கேட்கிறேன். ஆனால் நீலமணிக்கு என்ன தான் நேர்ந்தது? அந்த முக்கியமான விஷயத்தை நீங்கள் சொல்லவில்லையே?" என்று கேட்டேன் நான்.

"தெரியவில்லையா, ஐயா! வேறு யாருடனும் அவள் நாடகமேடையில் ஏறி நடிக்கக் கூடாது என்பதற்காக அந்தச் சண்டாளப் பாவி அக்கினித் திராவகத்தை அவள் முகத்தில் ஊற்றிக் குரூபியாகச் செய்து விட்டான்! அவன் எப்பேர்ப்பட்ட ராட்சஸனாயிருக்கவேண்டும்? இவ்வுலகில் மனித உருக்கொண்ட ராட்சஸர்களும் இருக்கிறார்கள்!" என்றார் கந்தப்ப பிள்ளை.

நான் ஊகித்ததை தான் அவர் சொன்னார் என்றாலும் என் உள்ளத்தில் அப்போது சொல்ல முடியாத அருவருப்பும் பயங்கரமும் தோன்றின.

"ஆனால் இந்தச் செய்தி ஊரில் ஒருவருக்கும் தெரியாது. பட்டாசுப் பெட்டிகள் வெடித்த விபத்தினால் நீலமணிக்கு இப்படி நேர்ந்தது என்றே நம்பினார்கள். டாக்டர் ராமசர்மாவுக்கு மட்டும் தெரியும். என்னுடைய வேண்டுகோளின் பேரில் அவர் யாரிடமும் சொல்லவில்லை. இன்றைக்குத்தான் முதன் முதலாகத் தங்களிடம் சொன்னேன்!" என்றார் கந்தப்பப் பிள்ளை.

"அந்த ராட்சஸன் - நமச்சிவாயம் பிற்பாடு என்ன ஆனான்?" என்று கேட்டேன்.

"யார் கண்டார்கள்? நான் திரும்பிப் போய் இடிந்து விழுந்து எரிந்து கொண்டிருந்த வீட்டில் தேடிப் பார்த்த போது அவனைக் காணவில்லை. அவன் என்ன ஆனான் என்று விசாரிக்கவும் இல்லை. பல மாதம் கழித்து நீலமணி என்னிடம் அவனைப் பற்றிக் கேட்டதற்கு 'அவன் க்ஷயரோகத்தினால் செத்து ஒழிந்துவிட்டான்' என்று சொல்லி விட்டேன்.

"ஒரு வேளை உண்மையிலேயே செத்துத்தான் போய் விட்டானோ, என்னமோ?"

"அவ்வளவு பொல்லாதவர்களுக்கு இந்த உலகில் சாவு வருகிறதில்லை. ஐயா! எங்கேயோ உயிரோடு தான் இருக்கிறானாம். வேறு நாடகக் கம்பெனியில் அன்றாடச் சம்பளத்துக்கு நடிக்கப்போய் வருகிறானாம், கதாநாயகனாத் தோன்றி ஆர்ப்பாட்டம் செய்த காலம் போய்விட்டது. இப்போது திரை தூக்கக் கூப்பிட்டாலும் போகிறானாம். பெயரைக் கூட மாற்றி வைத்துக் கொண்டிருப்பதாகக் கேள்வி. அவ்வளவு கொடூரமான காரியம் செய்தவனுக்குத் தன் பெயரைச் சொல்லவே வெட்கமாகத் தானே இருக்கும்?" என்றார் கந்தப்பப் பிள்ளை.

கல்கத்தாவில் தமிழர்கள் சேர்ந்து நடத்தும் விழாவுக்காகக் கந்தப்பப் பிள்ளை அன்றிரவு கல்கத்தா மெயிலில் போகிறார் என்று தெரிந்து கொண்டு அவரிடம் விடை பெற்றுக் கொண்டேன்.

நாலு நாளைக்கெல்லாம் திரும்பவும் கந்தப்பப் பிள்ளையைப் பார்க்க நேரிடுமென்று நான் எதிர் பார்க்கவில்லை. திடுதிப்பென்று அவர் என வீடு தேடி வந்து சேர்ந்தார்.

"இது என்ன? கல்கத்தாவில் இருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன்?" என்று கேட்டேன்.

"வழியில் விஜயவாடா அமளியில் சிக்கிக் கொண்டேன். ரெயில் மேலே போகவில்லை. திரும்பி வந்து விட்டேன்" என்றார்.

"அடிதடி காயம் ஏதாவது உண்டோ ?"

"எனக்கு ஒன்றுமில்லை. அந்தத் தடிப்பயல் நமச்சிவாயத்துக்கு நல்ல அடி. முன்னொரு நாள் அவன் நீலமணிக்குச் செய்த கொடுமைக்கு விஜயவாடா ஆந்திரர்கள் பழி வாங்கி விட்டார்கள். செம்மையாக வெளுத்துவிட்டார்கள்!" என்று எக்களிப்புடன் சொல்லிப் பிறகு விவரங்களையும் கூறினார்.

கந்தப்பப் பிள்ளையின் நாதஸ்வரக் கோஷ்டி பிரயாணம் செய்த அதே ரெயிலில், கல்கத்தாவில் நடந்த அதே விழாவுக்காகத் தமிழ் நாட்டிலிருந்து ஒரு நாடகக் கோஷ்டியாரும் சென்றார்களாம்.

பொட்டி ஸ்ரீராமுலுவின் மரணத்தையடுத்து ஆந்திர நாட்டில் ரெயில் நிறுத்தும் படலமும் கலவரப் படலமும் நடந்தனவல்லவா? இவர்கள் சென்ற ரெயில் விஜயவாடா சேர்ந்த போது, அங்கே ரெயில்வே நிலையத்தில் அமளி துமளி சிகரத்தை அடைந்திருந்ததாம். ரெயிலில் ஒவ்வொரு வண்டிக்குள்ளும் ஆந்திர சகோதரர்கள் ஏறி, "ஆந்திர ராஜ்யமு காவல!" என்று கத்தினார்கள். யாராவது தமிழர்கள் வண்டியிலிருப்பதைப் பார்த்தால், "அரவவாடு சாவல" என்றும் சேர்த்துக் கொண்டார்கள்.

நமச்சிவாயம் முன்னமே முரடன் என்பது தெரிந்த விஷயம். அவனுடைய முரட்டுக் குணம் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகும் மாறவில்லை. அவனுடைய வண்டியில் ஏறிய ஆந்திரர்கள், "ஆந்திர ராஜ்யமு காவல!" என்று கத்தியபோது, "என்னிடம் ஆந்திர ராஜ்யமு லேது. சோதரலாரா, லேதவே லேது! இல்லவே இல்லை! வேண்டுமானால் என் பெட்டியை நீவே சோதித்துப் பார்த்துக்கவல!" என்று நமச்சிவாயம் தெலுங்கும் தமிழும் கலந்து கேலியாகச் சொன்னானாம். அவன் தமிழன், கேலி செய்கிறான் என்று அறிந்து ஆந்திரர்கள், "அரவவாடு சாவல!" என்று கத்தினார்கள். உடனே நமச்சிவாயத்துக்கும் கோபம் வந்தது. "உனக்கு ஆந்திர ராஜ்யமு காவல என்றால், அதற்கு அரவவாடு எதற்காகச் சாக வேண்டும்? நீ சாவல! உங்கப்பன் சாவல! உங்க பாட்டன், பூட்டன் சாவல!" என்று இரைந்தானாம். உடனே அவர்கள் வண்டியில் புகுந்து அவனை வெளியில் பிளாட் பாரத்தில் இழுத்துப் போட்டு அடி அடி என்று அடித்துவிட்டார்களாம். முகம் உடம்பு எல்லாம் இரத்த விளாறாகிவிட்டதாம். நாடகக் கோஷ்டியைச் சேர்ந்த மற்றவர்கள் விஜயவாடாவிலிருந்து மறுநாள் புறப்பட்ட வேறு ரெயிலில் ஏறிப் போய் விட்டார்கள். தவுல் கந்தப்பப் பிள்ளையோடு போன நாதஸ்வர வித்துவான் மிரண்டு போய் ஊருக்குத் திரும்பி விட்டார். கந்தப்பப் பிள்ளையும், படுகாயம் பட்டுக் கிடந்த நமச்சிவாயத்தை எடுத்துப் போட்டுக் கொண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

"சில பேருக்கு உயிர் ரொம்பக் கெட்டி, ஐயா! நமச்சிவாயம் டி.பி. வியாதியில் சாகாமல் பிழைத்தான். இப்போது ஆந்திரா வெறியிலும் சாகாமல் பிழைத்து விட்டான். ஆஸ்பத்திரியிலேதான் இருக்கிறான். அவனுடைய குணம் மட்டும் இன்னும் மாறியதாகத் தெரியவில்லை. கேளுங்கள், இந்த வேடிக்கையை! - நேற்றிரவு ரேடியோவில் நீலமணியின் கச்சேரி கேட்டீர்களா?" என்றார் கந்தப்ப பிள்ளை.

"ஆமாம்; கேட்டேன்! மிக்க நன்றாயிருந்தது! உயர்ந்த சங்கீதம்!" என்றேன்.

"கேட்டதற்கு ஏதேனும் அடையாளம் சொல்லுங்கள், பார்க்கலாம்!" என்றார் கந்தப்பன்.

"கடைசியில் ராகமாலிகையாக அந்தப் பழைய பாடலையே பாடினாள். மத்தியமாவதியில் முடித்தாள். 'நமச்சிவாயம்' என்ற பெயரைச் சொல்ல எப்படித்தான் அவளுக்கு மனம் வந்ததோ என்று நான் ஆச்சரியப்பட்டேன்" என்றேன்.

"சில பேருடைய தலையெழுத்து அது! இந்தப் போக்கிரி அதைக்கேட்டு என்ன சொன்னான் தெரியுமா? ஆமாம்; ஆஸ்பத்திரியில் ரேடியோ இருக்கிறது. நீலமணியின் கச்சேரியின் போது திறந்து வைத்திருந்தார்கள். ராகமாலிகை முடிந்ததும் நமச்சிவாயம் என்னிடம் 'மாமா! அவளை மன்னித்துவிட்டேன் என்று சொல்லுங்கள்!' என்றான். அது போதாது என்று, 'மாமா! எப்படியாவது அவளை நான் ஒரு தடவை பார்க்க வேண்டும், மாமா! நேரிலேயே அவளை நான் மன்னித்து விட்டதாகச் சொல்லவேண்டும்' என்றான். எப்படியிருக்கிறது கதை? இவன் அவளை மன்னிப்பதாம்! எப்படிப்பட்ட கிராதக உள்ளம் படைத்தவனாயிருக்க வேண்டும்? உலகில் எந்தக் கெட்ட குணத்துக்கும் மன்னிப்பு உண்டு, ஐயா! அகங்காரம் என்கிற பேய்க் குணத்துக்கு மட்டும் மன்னிப்பே கிடையாது!" என்றார் கந்தப்பப் பிள்ளை.

"உண்மைதான்; நீங்கள் இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்டேன்.

"நான் எதற்காகக் குறுக்கே நிற்பது என்று யோசிக்கிறேன். நீலமணியிடம் போய்ச் சொல்லி விடுகிறேன்! அப்புறம் அவள் இஷ்டம்! இன்னும் அவள் சிறு குழந்தையா என்ன? யோசித்து விருப்பம் போல் முடிவு செய்யட்டும்! மேலும், இந்த துஷ்டன் பிழைப்பதே துர்லபம் என்கிறார்கள். சாகப் போகிறவனிடம் நமக்கு என்னத்திற்காக வன்மம்?" என்றார் கந்தப்பப் பிள்ளை.

"அதுதான் சரி! உங்கள் முடிவை மெச்சுகிறேன். நீலமணியிடம் பேசும்போது, அன்றைக்கு என்ன நடந்தது என்பதை மறுபடியும் விவரமாய்க் கேட்டு விடுங்கள்!" என்றேன்.

"என்றைக்கு நடந்ததைக் குறிப்பிடுகிறீர்கள்?"

"தீபாவளிக்கு முதல் நாள், கும்பகோணத்தில் உள்ள உங்கள் வீட்டில் வெடி வெடித்த அன்று, நீங்கள் நீலமணியை வண்டியில் தூக்கிப் போட்டுக் கொண்டு டாக்டரிடம் ஓடிய அன்றுதான்."

சில தினங்களுக்கு முன்னால் ஸ்ரீ கந்தப்பப்பிள்ளையைக் கடைசியாகச் சந்தித்தேன். அவர் சிறிது முக மலர்ச்சியுடனே காணப்பட்டார்.

"ஐயா சொல்லியனுப்பியது மிகவும் நல்லதாய்ப் போயிற்று!" என்று சந்தோஷமாகக் கூறினார்.

"எதைப் பற்றிச் சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டேன்.

"நீலமணியிடம் நன்றாய் விசாரிக்க வேண்டுமென்று சொன்னீர்களே, அதைப்பற்றித்தான்! விசாரித்துத் தெரிந்துகொண்டது நான் முன்னம் எண்ணியதற்குக் கொஞ்சம் மாறாக இருந்தது. கொஞ்சம் என்ன? ரொம்பவும் மாறுதலாக இருந்தது. அன்றைக்கு நமச்சிவாயம் நீலமணியைவிட்டு விட்டு எங்கேயாவது கண்காணாத தேசத்துக்கு ஓடிப் போய்விடப் போகிறேன் என்று வற்புறுத்திச் சொன்னானாம். சொன்னதோடல்லாமல், வீட்டு வேலைக்காரப் பையனை வண்டி கொண்டுவரச் சொல்லி அதில் பெட்டி - படுக்கை முதலிய சாமான்களையும் ஏற்றி அனுப்பி விட்டானாம். அவனுடைய கைப்பெட்டியை மட்டும் நீலமணி பிடுங்கி வைத்துக் கொண்டு கொடுக்க மாட்டேன் என்றும், போகக் கூடாது என்றும் பிடிவாதம் பிடித்தாளாம். அவன் மீறிப் போவதாயிருந்தால், அவன் கண் முன்னாலேயே உயிரை விட்டுவிடுவதாகக் கூறினாளாம். அந்த முட்டாள் எதற்காக அக்கினித் திராவகம் வாங்கி வைத்திருந்தானோ, கடவுளுக்குத்தான் தெரியும். தன் உயிரைத் தான் வாங்கிக் கொள்வதற்கோ, அல்லது நீலமணியைச் சும்மா பயமுறுத்துவதற்கோ தெரியாது. அதை நீலமணி கையில் எடுத்துக் கொண்டு நமச்சிவாயம் ஓர் அடி எடுத்து வைத்தாலும் அக்கினி திராவகத்தைச் சாப்பிட்டு உயிரை விட்டு விடுவேன் என்று கூறினாளாம். நமச்சிவாயம் அதை அவள் கையிலிருந்து வாங்குவதற்காக என்னவெல்லாமோ சாமர்த்தியமெல்லாம் செய்து பார்த்தான். விளையாட்டுத் துப்பாக்கியை எடுத்து அவளைச் சுட்டுவிடுவதாகப் பயமுறுத்தினான். "நல்லதாய்ப் போயிற்று; உங்கள் கையாலேயே கொன்று விடுங்கள்!" என்றாள் அவள். 'உன்னைக் கொன்று என்ன பயன்? உன்னைக் கலியாணம் செய்து கொண்ட என்னைச் சுட்டுக் கொள்கிறேன்' என்று சொல்லித் தன் பேரிலேயே துப்பாக்கியைத் திருப்பி சுட்டுக் கொண்டான். அந்தப் பேதைப் பெண் அதை உண்மை என்று நம்பி அக்கினித் திராவகப் புட்டியை வாயண்டை கொண்டுபோய் விட்டாள். நமச்சிவாயம் சட்டென்று அவள் கையிலிருந்த திராவகப் புட்டியைத் தட்டிவிட்டான். புட்டி தூர விழுந்தது என்றாலும் அதிலிருந்து சில துளிகள் அவள் முகத்தில் சிந்தி விட்டன. அவள் நினைவிழந்து விழுந்து விட்டாள். பிறகு நடந்தது ஒன்றும் அவளுக்குத் தெரியாது. இவையுங் கூட வெகு நாளைக்குப் பிறகு தான் ஒவ்வொன்றாக அவள் நினைவுக்கு வந்தன. நமச்சிவாயம் செத்து விட்டான் என்று சொன்னதை அவள் நம்பி விட்டாள். பட்டாசுக்கட்டுப் பெட்டிகள் வெடித்து வீடு எரிந்ததில் அவன் இறந்ததாக நான் சொன்னது கொஞ்சம் அவளுக்கு ஆறுதலாய் இருந்தது. இல்லாவிடில் அவனை இவளே கொன்றுவிட்டதாக எண்ணி மறுபடியும் பிராணத்தியாகம் செய்ய முயன்றிருப்பாள். இப்போது நமச்சிவாயம் உயிரோடிருப்பதைப் பற்றி நான் சொன்னதும் உடனே புறப்பட்டு என்னோடு வந்து விட்டாள். இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இருவரையும் சேர்த்து வைத்துவிட்டு வந்தேன். 'பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?' என்று கம்பர் சொன்ன பிரகாரம் அவர்கள் இருவரும் ஆனந்தக் கடலில் மூழ்கித் திளைத்திருப்பதைப் பார்த்துவிட்டு வந்தேன்!" என்று சொன்னார் கந்தப்பப் பிள்ளை.

"அப்படியானால், நமச்சிவாயம் இந்தக் கண்டத்துக்கும் பிழைத்துக் கொள்வான் என்று சொல்லுங்கள்!" என்றேன்.

"சிலருடைய உயிர்தான் ரொம்பக் கெட்டி என்று சொன்னேனே, ஐயா! நமச்சிவாயமும் நீலமணியும் இன்னும் பல்லாண்டு ஆனந்த வாழ்க்கை நடத்தப் போகிறார்கள்."

"ததாஸ்து! ரொம்ப ரொம்பச் சந்தோஷம்! கந்தப்பப் பிள்ளை! இன்னும் ஒரு விஷயம் தாங்கள் சொல்லாமல் பாக்கி வைத்திருக்கிறீர்கள். அந்த வெடிகுண்டு வழக்கைப் பற்றிச் சொல்லுகிறேன். அதன் உண்மை என்ன?"

"அப்படி இப்படி என்று அடி மடியில் கையைப் போடப் பார்க்கிறீர்களே?" என்றார் கந்தப்பப் பிள்ளை.

"சொல்லலாம் என்றால், சொல்லுங்கள். இல்லாவிட்டால் ஒன்றும் சொல்ல வேண்டாம்!" என்றேன்.

"இனிமேல் சொல்வதற்கென்ன? தாராளமாகச் சொல்லலாம். நான் வெடிகுண்டு தயாரிப்பதில் ஈடுபட்டது உண்மைதான். வெள்ளைக்காரன் மேல் போடுவதற்காகவும் அல்ல; பிரிட்டிஷ் கவர்ன்மெண்டைத் துரத்துவதற்காகவும் அல்ல. அரசியலில் நான் காந்தி மகானுடைய கட்சியைச் சேர்ந்தவன். என் மகள் மீது அக்கினித் திராவகத்தை ஊற்றிய பஞ்சமாபாதகன் மேல் வெடிகுண்டைப் போட்டு அவனைக் கொன்று விடுவதென்று முடிவு கட்டிக் கொண்டேன். இதற்காகவே, வேறு அரசியல் நோக்கத்துடன் வெடிகுண்டு தயாரிக்க முன் வந்த பிள்ளைகளுக்கு இடவசதி முதலியவை தந்து உதவினேன். தெய்வாதீனத்தைப் பாருங்கள்! தயாரான வெடிகுண்டுகள் தாமே வெடித்துக் கொண்டு இரகசியத்தை வெளிப்படுத்தி விட்டன. என்னையும் பெரும்பாவம் செய்யாமல் காப்பாற்றின. நான் உத்தேசித்திருந்தபடி செய்திருந்து, பிறகு நீலமணியிடம் உண்மையை அறிந்து கொண்டிருந்தால் என் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? கடவுள் தடுத்தாட் கொண்டார்! முருகனின் கருணையே கருணை!" என்று கூறிய கந்தப்பப் பிள்ளை, கண்களைப் பாதி மூடிய வண்ணம் மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டு பின் வரும் பாடலைப் பாடினார்:

வருவாய் மயில்மீ தினிலே!
வடிவே லுடனே வருவாய்!
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும்
முருகா! முருகா! முருகா!