"நான் கொஞ்சம் லட்டு எடுத்துக்கவா, பாட்டி?" என்று என் பாட்டியிடம் கேட்டேன் "இப்ப வேண்டாம் கண்ணா! நாளைக்கு எடுத்துக்கோ!" என்று சொன்னாள் .ஆனால் எனக்கு நாளை வரை பொறுத்திருக்க விருப்பம் இல்லை.
"நான் வெளியே சென்று என் நண்பர்களுடன் விளையாடவா, தாத்தா?" என்று கேட்டேன்."இப்ப வேண்டாம் கண்ணா! தூங்கி எழுந்து நாளைக்கு போகலாம்!" என்று சொன்னார் .ஆனால் எனக்கு தூங்கி எழும் வரை பொறுத்திருக்க விருப்பம் இல்லை.
"நான் இந்த புது துணிமணி போட்டுக்கவா, அம்மா?" என்று என் அம்மாவிடம் கேட்டேன்."இப்ப வேண்டாம் செல்லம்! நாளைக்கு நாம் வெளியே போகும் போது நீ போட்டுக்கலாம்" என்று சொன்னாள்.ஆனால் எனக்கு நாளை வெளியே செல்லும் வரை பொறுத்திருக்க விருப்பம் இல்லை.
"அந்த அழகான பெட்டியை நான் திறந்து பார்க்கட்டுமா, அப்பா?" என்று கேட்டேன்."இப்போது வேண்டாம், இப்போது வேண்டாம். பொறுத்திரு மகனே!" என்று அப்பா சொன்னார். ஆனால் எனக்கு காத்திருக்க விருப்பம் இல்லை.
'ஏன் இந்த பெரியவர்கள் எப்போதும் - "இப்போது வேண்டாம், இப்போது வேண்டாம்!" - என்று சொல்கிறார்கள்!?' மிகவும் கோபத்துடன் நான் இரவு தூங்க போனேன்.
அடுத்த நாள் காலை நான் எழுந்து, சமையல் அறைக்குள் நுழைந்தேன். என் பாட்டி, "இப்போது நீ லட்டு சாப்பிடலாம்" என்று சொன்னாள்.
என் தாத்தா "இப்போது நீ விளையாட போகலாம்" என்று சொன்னார்.என் அம்மா "இப்போது நீ இந்த புது துணிமணியை போட்டுக்கொள்ளலாம்" என்று சொன்னாள்.என் அப்பாவும் "இப்போது நீ இந்த அழகான பெட்டியை திறந்து பார்க்கலாம்" என்று சொன்னார்.பிறகு அனைவரும் "இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என்று சொன்னார்கள்.