naan enna paarkkiren

நான் என்ன பார்க்கிறேன்

மஞ்சுவும் ஹமீதும் ஏரியின் அருகே 'நான் என்ன பார்க்கிறேன்' என்ற விளையாட்டை ஆடினார்கள். ஆனால், விளையாடும்போது ஏன் வருத்தமடைந்தார்கள்? அதற்கு அவர்கள் என்ன செய்ய முடியும்? சுற்றுச்சூழல் மாசுபடுவதையும் நீர்நிலைகள் சீர்குலைவதையும் பற்றிய ஒரு கதை.

- Rajam Anand

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

மஞ்சுவும் ஹமீதும் நண்பர்கள். அவர்களில் யார் அதிகம் பஜ்ஜி சாப்பிடுகிறார்கள், மரக்கிளையில் தலைகீழாகத் தொங்குவது போன்ற பல விளையாட்டுகளை விளையாடுவார்கள். அன்று ஏரிக்கு அருகே, ‘நான் என்ன பார்க்கிறேன்’ விளையாட்டை ஆடிக்கொண்டிருந்தனர்.

“நான்தான் முதலில்” என்றாள் மஞ்சு. எல்லாவற்றிலும் அவள்தான் முதலில் ஆடவேண்டும்! ஹமீது எப்போதும் விட்டுக்கொடுத்து விடுவான்.

“அங்கே பச்சை நிறத்தில் ஒன்றை நான் பார்க்கிறேன்.”

“மரத்தின் மீதுள்ள இலைகளா?” என்று கேட்டான் ஹமீது. “இல்லை! அந்தக் குழாயில் வடியும் இசுக்கு பிசுக்கு, நாற்றமடிக்கும் கொழகொழ சாக்கடை.” ஹமீது வருத்தமடைந்தான்.

“வெயிலில் மின்னும் ஒரு பொருளை நான் பார்க்கிறேன்” என்றான் ஹமீது.

“அதோ, அந்த பிளாஸ்டிக் குப்பிகள்தானே!” என்றாள் மஞ்சு.

“இல்லை, உன் காலருகில் கிடக்கும் கூழாங்கற்கள்.”

ஹமீது இப்போது மேலும் வருத்தமடைந்தான்.

“நான் ஏதோ வெண்மையான ஒன்றைப் பார்க்கிறேன்” என்றாள் மஞ்சு. “வானில் பறக்கும் அந்தப் பறவைகளா?” என்று ஆவலுடன் கேட்டான் ஹமீது.

“ஊஹூம். நான் பார்த்தது என் கண்களை உறுத்தும் அந்த அழுக்கு நீர் நுரையை!” அதைக் கேட்டு மேலும் வருத்தமடைந்தான் ஹமீது.

“நமது ஏரிக்கு அருகில் வெறும் அழுக்கு, பிசுக்கு, நுரை, அரிக்கக்கூடிய, குமட்டக்கூடிய பொருட்களே உள்ளன. நல்லவை, அழகானவை எல்லாம் காணாமல் போய்விட்டன” என்றான் ஹமீது. இப்போது மஞ்சுவும் வருத்தமடைந்தாள்.

“ஏரியில் ஏதோ மிதப்பது என் கண்ணுக்குத்தெரிகிறது” என்று சொன்னாள் மஞ்சு. “என்னது? அந்த சிலையா?” “இல்லை. அந்த வாத்துகள்! அங்கே பார்” என்று கூவினாள் மஞ்சு. அதைப் பார்த்த ஹமீது லேசாக சிரித்தான்.

“சிலர் மரங்களை வெட்டிய பிறகு, நீ முன்பு பார்த்த கொக்குகள் இங்கிருந்து போய்விட்டிருந்தன.

நமது பள்ளி மாணவர்கள் இங்கு புதிய மரங்களை நட்டு, வளர்க்க ஆரம்பித்ததும் அவை திரும்பி வந்துவிட்டன.” ஹமீது இன்னும் கொஞ்சம் சிரித்தான்.

“உனக்கு ஞாபகமிருக்கிறதா, உன் அம்மியும் என் அம்மாவும் சேர்ந்து இங்கே குப்பை எரிக்கப்படுவதை எப்படி தடுத்து நிறுத்தினார்கள் என்று? இப்போது நம்மால் நன்கு சுவாசிக்க முடிகிறது, இல்லையா?” ஹமீது ஆமாமென்று தலையை ஆட்டினான்.

அப்போது யாரோ ஏரியின் அருகில் குப்பை கொட்டுவதைப் பார்த்ததும் ஹமீதின் புன்னகை மறைந்தது.

“இன்னும் நாம் சரிசெய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. வா, போகலாம்” என்று ஹமீது மஞ்சுவிடம் கூறினான்.