naan valarndhadhum

நான் வளர்ந்ததும்

என் பெயர் பாப்போரி. நான் வளர்ந்து பொறியாளர் ஆகப் போகிறேன். இந்தப் புத்தகம் நான் உருவாக்கப் போகும் அனைத்தையும் பற்றியது. இதில் கடினமான சொற்கள் பல உள்ளன. அதேசமயம் வீரதீர சாகசங்களுக்கும் குறைவில்லை. வாருங்கள், என்னுடன் சேர்ந்துகொள்ளுங்கள்!

- Livingson Remi

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நான் வளர்ந்ததும் பலவிதமான பொருட்களை உருவாக்குவேன். பெரிய, சிறிய பொருட்கள். வினோதமான, ஆச்சரியப்படுத்தும் பொருட்கள்.

இணையத்தைப் பாதுகாக்கும்போது, ​​நான் ஒரு இணையப் பாதுகாப்புப் பொறியாளராக இருப்பேன்.

முதலில், நான் ஒரு பாலம் கட்டுவேன். பிறகு, ஒரு மிக உயரமான கோபுரத்தை உருவாக்குவேன். அதன்பின், உலகின் மிக நீளமான சாலையை உருவாக்குவேன். அது என் வீட்டில் தொடங்கி நேராக நிலவுக்குச் செல்லும்!

இந்தக் கட்டமைப்புகளை உருவாக்கும்போது, ​​நான் ஒரு கட்டடப் பொறியாளராக இருப்பேன்.

நான் இயந்திரப் பொறிகளையும் உருவாக்குவேன். சில இயந்திரப் பொறிகள் ராக்கெட்டுகளிலும், சில விமானங்களிலும் இருக்கும்.

விமானங்கள் நம்மை பல நாடுகளுக்கு அழைத்துச் செல்லும், ராக்கெட்டுகள் நம்மை ஏற்றிக்கொண்டு செவ்வாய் கிரகத்துக்குப் பறந்து செல்லும். எல்லாப் பயணங்களிலும் என் பாட்டி கூடவே வருவார்!

பறக்கும் பொறிகளை உருவாக்கும்போது, ​​நான் ஒரு விண்வெளிப் பொறியாளராக இருப்பேன்.

நான் கடலுக்கடியில் பயணிக்கும் வாகனம் ஒன்றைக் கட்டுவேன். அது எஃகினாலும் அலுமினியத்தினாலும் செய்யப்பட்டிருக்கும். மிக வேகமாகச் செல்லும். நாங்கள் மீன்கள், சுறாக்கள், திமிங்கலங்களுடன் நீந்துவோம்.

பாட்டி, “மெதுவாகப் போ, பாப்போரி!” என்பார். ஆனால் இரகசியமாக, அவருக்கும் அந்த வேகம் பிடித்திருக்கும்.

எனது நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கும்போது, நான் ஒரு கடல்துறைப் பொறியாளராக இருப்பேன்.

அத்துடன் நிறுத்திவிட மாட்டேன். சிறிய துகள்களிலிருந்து மின்சாரம் தயாரிப்பேன். ஒரு சிறிய துகள் எங்கள் கிராமம் முழுவதையும் ஒளிரச் செய்யும். பாட்டி மகிழ்ச்சியின் உச்சத்தில் பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்வார்!

அத்தகைய சக்தியை உருவாக்கும்போது, நான் ஒரு அணுசக்திப் பொறியாளராக இருப்பேன்.

நான் இன்னும் முடிக்கவில்லை! அடுத்து ஒரு ரோபோவை உருவாக்குவேன். அவளுக்கு கோகோ என்று பெயர் சூட்டுவேன்.

கோகோவும் நானும் பல சாகசங்கள் செய்வோம். நாங்கள் சுவர்களுக்கு வண்ணம் அடிப்போம். பாத்திரங்களைச் சுத்தம் செய்வோம். நாங்கள் பாட்டிக்கு நிறைய நிறைய மீன்களைப் பிடித்துக் கொடுப்போம்!

எனது ரோபோவை உருவாக்கும்போது, ​​நான் ஒரு ரோபோட்டிக்ஸ் பொறியாளராக இருப்பேன்.

கோகோவும் நானும் ஒரு தீச்சுவரை உருவாக்குவோம். மற்றவர்களின் இரகசியங்களைத் திருட முயற்சிக்கும் கெட்டவர்களிடமிருந்து கணினிகளையும் இணையத்தையும் அந்த மென்பொருள் பாதுகாக்கும். நான் ஒரு அதிசூரனைப் போல இருப்பேன்! பாட்டி பெருமைப்படுவார்!

இணையத்தைப் பாதுகாக்கும்போது, ​​நான் ஒரு இணையப் பாதுகாப்புப் பொறியாளராக இருப்பேன்.

நான் கடலைச் சுத்தம் செய்ய ஓர் இயந்திரத்தை உருவாக்குவேன். காற்றைச் சுத்தம் செய்யும் இயந்திரம் ஒன்றும் உருவாக்குவேன். விலங்குகள் ஆரோக்கியமாக இருக்கும். மக்கள் எளிதாக சுவாசிப்பார்கள்.

நான் என்னுடைய இயந்திரங்களால் பூமியைக் காப்பாற்றுவேன்!

பூமியைச் சுத்தம் செய்ய இயந்திரங்களை உருவாக்கும்போது, நான் ஒரு சுற்றுச்சூழல் பொறியாளராக இருப்பேன்.

நான் பெம்பெம்மிற்காக ஒரு புதிய காதை உருவாக்குவேன் (அவள் ஒரு சண்டையில் அதை இழந்துவிட்டாள்... அவ்வ்வ்வ்வ்). பின்னர் பாட்டிக்கு புதிய பற்களை உருவாக்குவேன். இறுதியாக, எனக்காக இறக்கைகளை உருவாக்குவேன்!

செயற்கை உடற்பாகங்களை உருவாக்கும்போது, நான் ஒரு உயிரியல் மருத்துவப் பொறியாளராக இருப்பேன்.

அதன்பிறகு நான் மேலும் உருவாக்க வேண்டிய பல விஷயங்களைத் தேடி உலகம் முழுக்கப் பறந்து திரிவேன்!

உலகைச் செதுக்கும் பொறியாளர்கள்

பொறியாளர்கள் திட்டமிட்டு, வடிவமைத்து நம்மைச் சுற்றி‌ இருக்கும் உலகை உருவாக்குகிறார்கள். நம் வாழ்க்கையை எளிதாக்கும் கணினிகள், இயந்திரங்கள், கட்டமைப்புகள் மற்றும் பல்வேறு பொருட்களை உருவாக்குகிறார்கள். உங்கள் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சியை உருவாக்கியவர் யார்? தெருக்களில் ஓடும் கார்களையும் பேருந்துகளையும் உருவாக்கியவர்கள் யார்? மருத்துவமனை எக்ஸ்ரே இயந்திரங்களை யார் செய்தது? அவை அனைத்தும் பொறியாளர்கள் திட்டமிட்டு உருவாக்கியவை.