naanthaan pei

நான்தான் பேய்!

தினசரி யாரையாவது பயமுறுத்தறதையே ஒரு பேய் வேலையா வைச்சிருந்துச்சு. ஒருநாள், யாரையாவது ஈஸியா ஏமாத்தமாலாம்னு தேடுச்சு... நம்ம எலி மாதிரி! ஆனா எல்லாரையும்போல எலியும் பேயப் பார்த்து பயப்படுமா?

- Vetri | வெற்றி

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

முன்னொரு காலத்தில, ஒரு பேய் இருந்துச்சாம். எல்லோருக்கும் தன்னப் பார்த்தா பயமுன்னு அதுக்கு நெனப்பு.

தெனமும், யாரயாவது பயமுறுத்தும்.

ஒருநாள், பயங்கரமான சிங்கம் ஒண்ண பயமுறுத்துச்சு.

இன்னொரு நாள், பெரிய யானைய.

அடுத்த நாள், பலசாலியான குஸ்தி வீரன் ஒருத்தன.

வேற ஒருநாள், பெரிய மீசை வெச்சிருக்க போலீஸ் கான்ஸ்டபிள பயமுறுத்துச்சு.

மத்தவங்க பயந்து ஓடுறத பார்க்க அதுக்கு ரொம்பப் பிடிக்கும்.

யாரையாவது பயமுறுத்தாம அதுக்கு தூக்கமே வராது.

ஒருநாள், அதுக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு.

ஆனாலும் யாரையாவது பயமுறுத்தியே ஆகனும்னு தேடுச்சு.

எலிய பயமுறுத்துறது ரொம்ப ஈஸி அப்படின்னு நினைச்சுகிட்டு, ஒரு எலிய பயமுறுத்தப் போச்சு.

நடுராத்திரியில எலி வீட்டுக்குள்ள போச்சு.

எலி நல்லா நிம்மதியா தூங்கிக்கிட்டு இருந்துச்சு.

தொம்... தொம்...

அப்படின்னு பேய் நடந்துச்சு. அதக் கேட்டு எலி முழிச்சுகிச்சு.

பயத்துல நடுங்கிகிட்டே,

”யா...யார்ரு... அங்க யாரு?” அப்படின்னு திக்கித்திக்கி கேட்டுச்சு எலி.

இருக்கதிலேயே நல்லா பயமுறுத்துற குரல்ல, நம்ம பேய் சொன்னுச்சு.“நான்... ஒரு... பேய்ய்ய்ய்ய்!”

”ஓஓ! பேய்தானா. நான் கூட பூனைன்னு நினைச்சுட்டேன்.” அப்படின்னு சொன்னுச்சு எலி.

எலி திரும்ப போர்வைய இழுத்து போர்த்திகிட்டு தூங்கிடுச்சு.