nandhini enge ponaal

நந்தினி எங்கே போனாள்?

ஒரு பண்ணையில் வெவ்வேறு அளவிலான பசுக்கள் உள்ளன. மாலினி அந்தப் பசுக்களை புல்மேய அழைத்துச் செல்கிறாள். அப்போது மாலினியின் அத்தை மகளான குட்டிப் பெண் நந்தினி காணாமல் போய் விடுகிறாள். மாலினி நந்தினியை எப்படிக் கண்டு பிடித்தாள்? இந்தக் கதை ‘வரிசைப் படுத்துதலை’ அறிமுகம் செய்கிறது.

- Anitha Ramkumar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

மாலினி ஒரு பண்ணை வீட்டில் வசிக்கிறாள்.

அவளுக்கு வயது ஒன்பது.

அவளுடைய அண்ணன் சங்கர், அவளைவிட இரண்டு வயது மூத்தவன். அவர்களது ஒன்றுவிட்ட சகோதரன் கணேஷும் அத்தை மகள் நந்தினியும் அவர்களுடன் பண்ணையில் வசிக்கின்றார்கள். கணேஷ், மாலினியை விட மூன்று வயது இளையவன். நான்கு வயது நந்தினி தான் எல்லோரையும் விட  இளையவள்.

ஒரு நாள் அம்மா, மாலினியிடம் மாடுகளை மேய்ச்சலுக்கு

அழைத்துச் செல்லப் பணிக்கிறார்.

மாலினி பெருமையோடு மாட்டுக் கொட்டாயை நோக்கித்

துள்ளி ஓடுகிறாள்.

லக்ஷ்மி பெரிய பசு.

கங்கா சற்று சிறியவள்.

பத்மா தான் அங்கே மிகப் பெரிய பசு.

பத்மாவின் கன்று காவேரி தான் மிகச் சிறியவள்.

எந்தப் பசுவிற்கு மிக நீளமான கொம்புகள் உள்ளன?

“மாலு, நாங்களும் வருகிறோம்!” என்று கணேஷும் நந்தினியும் குரல் கொடுக்கிறார்கள்.

“என் பின்னாலேயே வரணும். அங்கே இங்கே ஓடக் கூடாது! இன்னிக்கு எல்லாம் என் பொறுப்பு” என்று மாலினி கண்டிப்பாக கூறுகிறாள்.

மாலினி பசுக்களை வயல்வெளிக்கு கூட்டிச் சென்று, கவனமாகப் பார்த்துக் கொள்கிறாள்.

“இங்கே பாரேன், எத்தனை அழகானப் பூக்கள்! நான் பூமாலை தொடுக்கப் போகிறேன்” என்கிறாள் நந்தினி.

“நானும் மாலை தொடுக்கப் போகிறேன்!” என்கிறான் கணேஷ். இரண்டு குழந்தைகளும் ஓடிப் போகிறார்கள்.

பசுக்கள் எல்லாம் அமைதியாகப் புல் மேய்ந்து கொண்டிருக்கின்றன. குளிந்த காற்று வீசுகிறது.

சிறிது நேரத்திற்குப் பிறகு கணேஷையும் நந்தினியையும் தேடிக் கொண்டு சங்கர் வருகிறான். மாலினி கூப்பிட்டதும் கணேஷ் ஓடி வருகின்றான்.

ஆனால் நந்தினி எங்கே? அவளை எங்கும் காணவில்லை!

“இங்கே பாருங்கள், காலடித் தடங்கள்!” என்று மாலினி ஈர மண்ணைக் காட்டுகிறாள்.

“நாம் இந்தத் தடங்களைப் பற்றிக் கொண்டு தேடலாம்” என்றான் சங்கர்.

“ஆனால் இவ்வளவு தடங்கள் இருக்கின்றனவே!” என்று கணேஷ் சொல்கிறான்.

பின்னால் உள்ள தென்னை மரங்களில் எது மிகவும் உயரமானது?

காலடித் தடங்களைக் காட்டி, “என்னுடையது கொஞ்சம் சின்னது,"என்றான் கணேஷ்.

“என் காலடித் தடம் இவ்வளவு  பெரியது!”

என்று கூறியபடி மாலினி அவள் காலை முன்னே வைக்கிறாள்.

“என்னுடையது மாலினியின் காலடியை விடப் பெரியது,"என்றான் சங்கர். “நந்தினியின் காலடித் தடம் உன்னுடையதை விடச் சிறியது, சரியா கணேஷ்?” என்று மாலினி கேட்கிறாள். அவர்கள் இருப்பதிலேயே சிறிய காலடித்தடத்தை தொடர்ந்து செல்கிறார்கள்.

அதோ! புல்லில் படுத்து

நன்றாக தூங்கிக் கொண்டிருக்கிறாள் நந்தினி.

கணேஷ் அவளைக் கிச்சு-கிச்சு மூட்டி எழுப்பி விடுகிறான்.

நந்தினி சட்டென்று விழித்துக் கொள்கிறாள்.

இதைக் கண்டு சங்கர் புன்னகைக்கின்றான்.

மாலினி நகைக்கின்றாள்.

கணேஷ் சிரிக்கின்றான்.

சத்தமாக சிரிக்கின்றாள் நந்தினி.