நீந்தக் கற்றுக் கொள்ளுங்கள்! நன்றாக நீந்தக் கற்றுக் கொள்ளுங்கள். மீன்களைப் பிடிக்கும் அளவுக்கும் ஆபத்திலிருந்து தப்பிக்கும் அளவுக்கும் திறமையாக நீந்தக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய துடுப்பு போன்ற நீளமான வாலும் சவ்வுப் பாதங்களும் இதற்கு உதவும்.
மென்முடிகளாலான உங்கள் ரோமத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். அது நீரை உள்ளே விடாது, குளிர்ந்த நீரில் நீந்தும்போது உங்களை கதகதப்பாக வைத்திருக்கும்.
மீன் வகைகளை நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். மீன் வாசமும் வாசமுள்ள மீன்களும் உங்களுக்குப் பிடிக்கத் தொடங்கும். சின்ன மீன்கள், பெரிய மீன்கள், பாம்பு போல் தோன்றும் மீன்கள், பூனை மீசையுடைய மீன்கள் என பலவகைப்பட்ட மீன்களைப் பார்ப்பீர்கள். எல்லா மீன்களையும் எளிதில் பிடித்துவிட முடியாது! ஆனால், ஞாபகம் இருக்கட்டும். இறந்த மீனை மட்டும் ஒருபோதும் சாப்பிடக்கூடாது.
நதியே உங்கள் வீடு. இங்கே, நதிக் கரைகளில், உங்கள் குடும்பத்துக்கான குகையைத் தோண்டுவீர்கள்.
நீங்கள் கூட்டத்தோடு ஒரு குடும்பமாக வாழ்வீர்கள். எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து விளையாடவும் வேட்டையாடவும் செய்வீர்கள். அதுபோலவே, ஒருவரையொருவர் காப்பாற்றவும் செய்வீர்கள்.
குடும்பத்தின் மூத்தவர்கள் குட்டிகளைப் பாதுகாப்பார்கள். மூத்தவர்களின் பேச்சைக் கேளுங்கள். அவர்களுக்கு நதியை நன்றாகத் தெரியும்.
நதிதான் உங்களுக்கு விளையாட்டு மைதானமும். இங்கே நீங்கள் தோண்டி விளையாட மணலும், ஒளிந்துகொள்ள இடங்களும், குட்டித்தூக்கம் போட பாறைகளும் உண்டு.
உங்கள் இடத்தைப் பகிர்ந்துகொள்ள கற்றுக் கொள்ளுங்கள். பெரிய நாரைகளோடும், கூச்ச சுபாவமுடைய ஆமைகளோடும், அமைதியான கூழைக்கடாக்களுடனும், சத்தமிடும் வாத்துகளோடும், முரட்டு குணமுள்ள சதுப்புநில முதலைகளோடும் நீங்கள் நதியைப் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கும்.
சதுப்புநில முதலைகள் தனித்திருக்க விரும்பும். அவற்றைத் தொந்தரவு செய்யாதீர்கள்!
மீனவரோடு நீங்கள் நட்பாக இருக்கலாம். ஆனால், அவருடைய வலைகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள். தன் குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்காக, நம்மைப் போலவே மீனவரும் மீன் பிடிக்க வேண்டும். அவரிடமிருந்து விலகி இருங்கள். அவரும் உங்களிடமிருந்து விலகி இருப்பார்.
நதியோடு தொடர்பில்லாதவற்றிடம் இருந்து விலகி இருங்கள். அது பொறியாகவும் இருக்கலாம். பளபளப்பான உலோகப் பொருட்கள்மீது ஆர்வம் காட்டாதீர்கள்.
நதி மாறிக்கொண்டே இருக்கும். உங்கள் விருப்பத்திற்குரிய மணற்கரை நாளையே காணாமல் போய்விடலாம். மழைக்காலத்திற்குப் பிறகு அது தானாக திரும்பியும் வரலாம். நீங்கள் வேகமாகக் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் உள்ளுணர்வுகளை நம்ப வேண்டும். ஞாபகத்தில் இருக்கட்டும், எப்போதுமே நதிதான் உங்கள் வீடு.