கடலில் வினோதமான சில புதிய மீன்கள் சுற்றிவருகின்றன. இவை தோற்றத்திலும் நடந்துகொள்வதிலும் சாதாரண மீன்களைப் போலவே இருக்கின்றன. ஆனால் இவை உலோகம், பஞ்சு, துணி, பிளாஸ்டிக் போன்ற பொருட்களால் செய்யப்பட்டிருக்கின்றன.
பாப்!
பாஆஆஆப்!
உண்மையான சூரை மீன்களைப் போலவே, இயந்திர சூரை மீனும் மிக வேகமாகவும் தொலைதூரமும் கடலில் நீந்தி வருகிறது.
இது கடலடியில் வேலை செய்யும் ஒரு காவலராகவும் செயல்படுகிறது. கடத்தல்காரர்களையும் கடல் கொள்ளையர்களையும் துரத்துகிறது.
சர்ர்ர்ர்!
சர்ர்ர்ர்ர்ர்ர்!
சர்ர்ர்ர்ர்!
சோஃபி துடுப்புகளும் வாலும் கொண்ட ஒரு மென்மையான இயந்திர மீன். ஆழ்கடலில் இருக்கும் உயிரினங்களை இது படம் எடுக்கிறது. மற்ற மீன்களுக்கு சோஃபியைப் பார்த்து பயமில்லை. அவை சோஃபியோடு சேர்ந்து நீந்துகின்றன.
இயந்திர ஜெல்லிமீன், ஒளி ஊடுருவக்கூடிய ஜெல்லினால் செய்யப்பட்டிருக்கிறது. இது, தன் அருகில் வரும் மற்ற மீன்களைத் தனது மென்மையான கண்ணாடி போன்ற இழைகளால் பிடித்துவிடுகிறது. மற்ற உயிரினங்களின் கண்ணில் படாமல் நீந்தி சுற்றிவருகிறது.
இயந்திர விலாங்குமீன் சிவப்புக் கண்களும் நீண்ட கருப்பு உடலும் கொண்டது. ஒரு நாள் இவை கடலின் தரைப்பரப்பில் வாழலாம். அப்போது, அங்கிருக்கும் உடைந்த குழாய்களையும் பழுதடைந்த இயந்திரங்களையும் சரிசெய்வதற்குப் பயன்படுத்தப்படலாம்.
மேலும் ஆக்டோபாட் எனப்படும் எட்டுக்கால்களுடைய இயந்திரங்கள் சிறிய ஆக்டோபஸ்களைப் போலவே இருக்கின்றன. ஒரு நாள் கடலில் தொலைந்து போகும் மனிதர்களைத் தேடிக் கண்டுபிடிக்க இவை உதவலாம். இவை நீரிலிருக்கும் கிருமிகளைக் கொல்லவும் பயன்படலாம்.
ஒரு நாள் இந்தப் புதிய, வினோதமான இயந்திர மீன்கள் இன்னும் ஆழமாகவும் தொலைதூரமும் நீந்தும்.
இவை நமக்கு ஆழ்கடலின் ரகசியங்களைக் காட்டித் தரும்.
பாட்(Bot) என்பது எளிய செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்யக்கூடிய கணினி நிரல் அல்லது குட்டி இயந்திரம் ஆகும்.
இயந்திர சூரை மீன்
சோஃபி(SoFi)
இயந்திர ஜெல்லிமீன்
இயந்திர விலாங்குமீன்
ஆக்டோபாட்