Nisaptha Sangeetham

நிசப்த சங்கீதம்

அரசியல், அரசியலால் பாதிக்கப்படும் சமூக நியாயங்கள், மனிதர்கள் இவர்களைப் பற்றி எழுதுவதே தகாத காரியமாகக் கருதப்படுகிறது. எழுதுபவர்களால் கூசி ஒதுக்கவும் படுகிறது. கல்லூரி நாள் தொடங்கி நம் இளைய தலைமுறையை அரசியலும், அரசியல் தலைவ்ர்களும் எவ்வளவுதான் பாதித்தாலும் அதைக் கதையாக எழுத மட்டும் தயங்குகிறார்கள். வாழ்வில் நடக்கலாமாம். ஆனால் கதையில் மட்டும் எழுதக் கூடாதாம்.

- நா. பார்த்தசாரதி

Source: சென்னை நூலகம்
Licesne: Creative Commons

பொருளடக்கம்

முன்னுரை

அரசியல், அரசியலால் பாதிக்கப்படும் சமூக நியாயங்கள், மனிதர்கள் இவர்களைப் பற்றி எழுதுவதே தகாத காரியமாகக் கருதப்படுகிறது. எழுதுபவர்களால் கூசி ஒதுக்கவும் படுகிறது.

கல்லூரி நாள் தொடங்கி நம் இளைய தலைமுறையை அரசியலும், அரசியல் தலைவ்ர்களும் எவ்வளவுதான் பாதித்தாலும் அதைக் கதையாக எழுத மட்டும் தயங்குகிறார்கள். வாழ்வில் நடக்கலாமாம். ஆனால் கதையில் மட்டும் எழுதக் கூடாதாம்.

இந்தத் தயக்கத்தைக் கூடியவரை தவிர்த்திருப்பவன் நான். தகர்த்திருப்பவன் என்று கூடச் சொல்லிக் கொள்ளலாம்.

என்னுடைய நெஞ்சக்கனல், சத்திய வெள்ளம், பொய் முகங்கள், நிசப்த சங்கீதம் ஆகிய நாவல்கள் இதற்குச் சாட்சியாக நிற்பவை.

சும்மா கதை பண்ணுவது எனக்கு எப்போதுமே பிடிப்பதில்லை. வாழ்க்கையிலும் அதன் அன்றாட யதார்த்தங்களிலும் காலூன்றி நிற்காத கதாபாத்திரங்களால் எந்தப் பயனுமில்லை என்பதைப் படைப்பாளிகளுக்கும் படிப்பாளிகளுக்கும் புரிய வைத்தாக வேண்டும்.

இலஞ்சம், பதவிப் பித்து, பேராசை, ஏமாற்று, துரோகம், வஞ்சகம் ஆகிய எதிர் மறைக் குணங்களைப் பற்றி எதை எழுத முயன்றாலும் நம்முடைய அன்றாட யதார்த்தங்களைத் தொடாமல் அதைச் செய்ய முடியாது.

நம்முடைய அன்றாட யதார்த்தங்களை எழுதக் கூசினால் மேற்படி விவகாரங்களை எழுத்திலிருந்தே ஒதுக்கி விட வேண்டியதுதான்.

அன்றாட யதார்த்தங்களை ஒதுக்குவதோ, அவற்றிலிருந்து தானே ஒதுங்குவதோ சமூகப் பொறுப்புள்ள ஒரு படைப்பாளி செய்யக்கூடாத காரியமாகும்.

இப்படி ஒதுங்குவதாலும், ஒதுக்குவதாலும் தான் பல எழுத்தாளர்களுக்கு இப்போது கருத்துப் பஞ்சம் அல்லது உள்ளடக்க வறுமை (Poverty of Ideas) அல்லது சித்தாந்த மலட்டுத்தனம் ஏற்படுகிறது.

இந்தச் சித்தாந்த வறுமையின் காரணமாக ஓர் இளைஞனும், யுவதியும் சுற்றுப்புற உலகத்தைப் பற்றிய கவலையோ அக்கறையோ இன்றிப் பூங்காக்களிலும், கடற்கரைகளிலும் சந்தித்துச் சௌந்தரிய அவஸ்தைகளைப் பற்றி நுனி நாக்கால் உரையாடிக் கொள்ளும் பூஞ்சையான வெற்றுப் பொலிவுக் கதைகளையே தீட்டுவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

ஒரு வளமான மொழிக்கு இதைவிடப் பெரிய பஞ்சம் வேறு எதுவும் இருக்க முடியாது.

கதாபாத்திரங்கள் வெறும் செலூலாய்ட் பொம்மைகளாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன் நான். ஆனால் தமிழில் அதன் வலுவற்ற திரை உலகப் பிரதிபலிப்பாக இலக்கிய உலகின் கதாபாத்திரங்களும் செலூலாய்ட் படைப்புக்களாக மாறி வருகிறார்கள்.

இந் நாவலில் வரும் கதாபாத்திரங்கள் ஆற்றோடு அடித்துக் கொண்டு போகப்படும் சத்தில்லாத சோனி மனிதர்கள் இல்லை. இவர்கள் எதிர் நீச்சலிடும் சக்தி படைத்தவர்கள். எதிர் நீச்சலிடுகிறார்கள். இவர்களுடைய எதிர் நீச்சலே இந்த நாவல்.

வெறும் ஓய்வு நேர நொறுக்குத் தீனியாக அல்லாமல் வாசகர்களுக்கு வைட்டமின் சத்து நிறைந்த விருந்தாக இதைப் படைப்பதில் பெருமைப்படுகிறேன்.

முன்பு கதிரில் தொடர் நாவலாக வெளிவந்த இக் கதை இப்போது தமிழ்ப் புத்தகாலய வெளியீடாக நூல் வடிவில் வருகிறது.

கருத்துப் பஞ்சமில்லாத இலக்கியங்களைத் தேடி நுகர்ந்து மகிழும் ஆரோக்கியமான வாசகர் கூட்டத்துக்கு இதை உரிமையாக்குவதில் மகிழ்கிறேன்.

நா. பார்த்தசாரதி

சென்னை

31-12-81

அத்தியாயம் - 1

சொக்கத் தங்கம் உருகிப் பரந்து ஓடிய இளம் பெருக்குப் போல் மஞ்சள் நிறம் மாறி இன்னும் கரும்பசுமை படியாத நெற்பயிர் நாற்றங்கால்கள் காற்றில் சிலிர்ப்பதும் தணிவதுமாயிருந்தன. அதிகாலையின் மழலைக் காற்று சுகமாக வீசிக் கொண்டிருந்தது.

வேப்ப மரத்தடி மேட்டில் உட்கார்ந்து பேப்பரும் கையுமாக ஏதோ எழுத முயன்று கொண்டிருந்த முத்துராமலிங்கத்தைத் தந்தையின் வருகை நிமிர வைத்தது. எழுத முயன்றதன் கவனமும் கலைந்தது.

பக்கத்து நகரமான தேனியில் இன்னும் இரண்டு நாளில் நடக்க இருந்த முத்தமிழ் மன்றக் கவியரங்கத்துக்காக அவனையும் பாடக் கூப்பிட்டிருந்தார்கள். ஒரு வாரத்துக்கு முன்பு வெளிவந்த பரீட்சை முடிவுகளின்படி கிடைத்திருந்த எம்.ஏ. என்ற இரண்டு எழுத்துக்களையும் கூடப் பின்னால் சேர்த்து அழைப்பிதழில் அச்சிட்டு அவனை மகிழ்வித்திருந்தார்கள். 'பயிர்கள்' என்று அவன் பாட வேண்டிய கவிதைப் பொருளுக்கு நேரே கவிஞர் ப. முத்துராமலிங்கம் எம்.ஏ. என்றிருப்பதைப் பார்க்கும் போதே ஏதோ புதிதாக வாங்கிச் சேர்த்த ஒரு தீப்பெட்டிப் படத்துக்காகச் சந்தோஷப்படுகிற சிறுவனின் குதூகலம் உள்ளே சுரந்து ஊறியது.

"என்னடா? நீ பாட்டுக்கு வாய்க்கால் வரப்பைச் சுற்றிக்கிட்டிருந்தா எப்படீன்னேன்? ஏதாச்சும் வேலைக்கு வழியைப் பாரு! பசுங்கிளித் தேவர் மகன் வேலை கிடைக்காமச் சோம்பேறியாத் தெருச் சுத்திட்டிருக்கானாம்னு ஊரிலே நாலு பேர் பேசறத்துக்கு முந்தியாவது ஒரு வேலையைத் தேடிக்கப்பா!"

அவர் வேப்பங்குச்சியால் பல் தேய்த்தபடி நின்று கொண்டே பேசியதால் அவனும் மரியாதைக்காக எழுந்து நின்று கொள்ள வேண்டியதாயிற்று.

பிசிறு தட்டிய நூல் ஊசித் துவாரத்தில் நுழையாமல் விலகி, விலகி மடங்குவதைப் போல் அவனது கவியரங்கக் கவிதைக்கான சிந்தனைகள் விலகி மடங்கின. மனத்தை எதிர்காலக் கவலைகள் என்ற கனமான இருள் வந்து மூடிக் கவ்வியது.

"எதுக்கும் ஒரு வாட்டி மெட்ராஸ் போய் வரணும் ஐயா! அதுக்குக் கொறஞ்சது நூறு ரூவாயாச்சும் செலவழியுமேன்னுதான் பார்க்கிறேன்."

"மெட்ராஸ்லே என்னப்பா கொட்டிக் கிடக்குது? இங்ஙன மதுரையிலே தான் போய்த் தேடிப் பாரேன். ஏதாச்சும் வேலை கிடைக்காமலா போயிடப் போவுது?"

"ரிஸல்ட் வந்தண்ணைக்கி மதுரை போனப்பவே விசாரிச்சுப் பார்த்தேன் ஐயா! கம்பெனி வேலைக எதுவும் கெடைக்காதுன்னு தோணுது. அவங்க நாம அங்கே போய் நின்னதுமே தமிழ் எம்.ஏ.யானா வேண்டாம்கிறாங்க."

"அப்ப தமிழ் எம்.ஏ.க்கு வேற என்னதான் கெடைக்கும்? எங்ஙன கெடைக்கும்?"

"ஏதாச்சும் ஹையர் செகண்டரி ஸ்கூல்லே தமிழ் வாத்தியாராப் போகலாம்!"

"போறது போறப்பா காலேஜாப் பார்த்துப் போகலாமில்லே?"

"இப்ப அது முடியாதையா! காலேஜுங்கள்ளே வேலைக்குச் சேர்த்துக்க எம்.ஃபில். வேணுங்கறாங்க. இல்லாட்டி பி.எச்.டி. வேணுங்கறாங்க."

"அதெப்படிப்பா? நம்ம செக்கானூரணிக் குருநாதத் தேவர் மகன் வெறும் எம்.ஏ. தானே? அவன் காலேஜிலே தானே லெக்சரராவோ, என்னமோ இருக்கான்?"

"அது ஏழெட்டு வருசத்துக்கு முந்தின சமாசாரம் ஐயா! இப்பல்லாம் அப்பிடி முடியாது."

"ஏன்கறேன்?"

"காலேஜுங்கள்ளேருந்து பி.யூ.சி.யை எடுத்துப் போட்டு ஹைஸ்கூலுங்கள்ளேயே பிளஸ் டூன்னு ஒரு கிளாஸைச் சேர்த்தப் பெறவு இப்போ இப்படி மாத்திப்பிட்டாங்க. எம்.ஏ. மட்டும் படிச்சவங்க இந்த மாதிரி பிளஸ் டூ ஸ்கூல்லே தான் வேலைக்குச் சேர முடியும்."

"அது ஏன் அப்பிடியாம்? பொழுதண்ணைக்கும் யாராச்சும் ரெண்டு மந்திரிங்க தமிழைக் கட்டிக் காப்போம். தமிழ் படிச்சவங்களுக்கு வேலை வாய்ப்பைப் பெருக்குவோம்னு எங்கேயாவது பேசிக்கிட்டிருக்காங்களே? கட்டிக் காக்கிற லட்சணம் இதுதானா?"

"அதெல்லாம் ரொம்பத் தாராளமாகவே பேசுவாங்க ஐயா! பேசறதுக்கென்ன பஞ்சம் வந்திச்சு?"

அவ்வளவில் அவர் பல் விளக்கக் கிணற்றை நோக்கி நடக்கவே முத்துராமலிங்கம் மறுபடி வேப்ப மரத்தடியில் வந்து கவிதை எழுத உட்கார்ந்தான். ஆனால் முதலில் எழுத உட்கார்ந்த போது இருந்த மாதிரி மனம் இப்போது இலகுவாக இல்லை. அப்போது பூக்குடலையைச் சுமப்பது போலக் கனமற்றும் இதமாகவும் மென்மையாகவும் இருந்த மனம் இப்போது பாறாங்கல்லாகக் கனத்தது. எதுவும் எழுத வரவில்லை.

காகிதக் கற்றைகளை எதுவும் எழுதாமல் அப்படியே மடித்துச் சட்டைப்பையில் சொருகிக் கொண்டு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான் அவன்.

"ஆத்தா! ஒரு பத்து ரூபா பணம் குடு. மதுரைக்கிப் போயி யுனிவர்ஸிடியிலே கொஞ்சம் சர்டிபிகேட் எல்லாம் வாங்கணும்."

கிராமத்தை விட்டு வெளியேறி நகரத்துப் பழக்கங்கள் வந்த பின் ஒவ்வொரு தடவை தாயை விளிக்கும் போதும் இந்த 'ஆத்தா' வை விட்டு விட்டு 'அம்மா' என்பதாக மாற்ற வேண்டும் என்று எண்ணி அந்த மாற்றமும் புதுப் பெயரால் திடீரென்று விளிப்பதும் தன் தாயை அந்நியமாகவும் வித்தியாசமாகவும் உணரச் செய்து விடுமோ என்ற அச்சமும் தயக்கமும் மனத்தளவிலேயே தடுக்க நேர்ந்து, அதைச் செய்யாமல் தவிர்த்துக் கொண்டு பழையபடியே கூப்பிட்டிருக்கிறான் அவன். கேழ்வரகுப் பானையில் கையை விட்டுத் துழாவிப் பார்த்த பின்,

"இந்தாடா முத்துராமு! நல்லவேளையா இருந்திச்சு... நேத்தே தீர்ந்து போயிரிச்சோன்னு நெனைச்சேன்" என்று ஓர் அழுக்கடைந்த பத்து ரூபாய் நோட்டை நீட்டினாள் அவனுடைய தாய். அவளுடைய சேமிப்பின் கடைசிப் பகுதியாக இருக்க வேண்டும் அது. ரூபாயை வாங்கிக் கொண்டு மதுரைக்குப் புறப்பட பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான் முத்துராமலிங்கம். பக்கத்திலே வைகை அணைக்கட்டு வந்தாலும் வந்தது, ஆண்டிப்பட்டியிலிருந்து மேற்கே போகவும் சரி, கிழக்கே மதுரை போகவும் சரி, பஸ் கிடைப்பது மிக மிகச் சிரமமானதாகிவிட்டது. சமயங்களில் சைக்கிளில் தேனி வரை போய் அப்புறம் அங்கிருந்து மதுரைக்குப் பஸ் பிடிக்க வேண்டி வந்தது.

நல்லவேளை, அன்று அப்படி நேரவில்லை. உடனே பஸ் பிடித்து மதுரை ஊருக்குள் இறங்காமல் செக்கானூரணி தாண்டியதும் ஞாபகமாக யுனிவர்ஸிடி ஸ்டாப்பிலேயே இறங்கிக் கொண்டு புரொவிஷனல் சர்டிபிகேட்டையும், வேறு சில நன்னடத்தைச் சான்றிதழ்களையும் வாங்கி முடிக்கப் பகல் ஒரு மணிக்கு மேல் ஆகிவிட்டது.

அதை முடித்துக் கொண்டு அவன் மதுரை ஊருக்குள் போய்ச் சில கல்லூரி நண்பர்களைச் சந்தித்தான். அவனைப் போலவே தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ. தேறிய பலர் எந்த வேலைக்குப் போவதென்று புரியாமல் திகைத்துக் குழம்பிக் கொண்டு தான் இருந்தார்கள். சிலர் எம்.ஃபில். சேருவதற்கு அப்ளிகேஷன் போடத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். முத்துராமலிங்கம் எம்.ஃபில்லுக்காக மேலும் ஓராண்டு வீணாக்க விரும்பவில்லை. அவனுடைய குடும்பநிலை மட்டுமின்றி மனநிலையும் அதற்கு ஏற்றதாக இல்லை அப்போது.

நன்றாக சிந்திக்க வேண்டிய வளரும் பருவத்தில் அஸைன்மெண்டுகளையும், டெஸ்டுகளையும் எழுதிக் கொண்டு வகுப்பறைக்குள் அடங்கிக் கிடந்து தவிப்பதை அவன் வெறுத்தான். இன்டேர்னல் அசெஸ்மெண்ட் மார்க்குகளுக்காகப் பேராசிரியர்களின் அசட்டு ஜோக்குகளுக்கும் விளக்கெண்ணெய் ஹாஸ்யங்களுக்கும் அவர்கள் பார்வையில் படுகிற விதத்தில் சிரித்துக் கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு மேலும் ஆட்பட விரும்பவில்லை அவன். படிப்பும் வகுப்பறைகளும் அவனுக்கு அலுப்பூட்டின; சலிப்பு அடையச் செய்தன.

சமீபத்தில் நடந்த அசெம்பிளி தேர்தலில் எம்.எல்.ஏ. ஆக வெற்றி பெற்ற சிதம்பரநாதனின் மகளும் தன்னுடன் படித்த கல்லூரித் தோழியுமான மங்கையர்க்கரசியைப் பார்க்கப் போனான் அவன். அப்போதே சிதம்பரநாதன் மந்திரியாக வ்ரலாமென்று பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்தது. பண வசதியும் செல்வாக்கும் இருந்ததாலும் - ஒவ்வொரு ஜாதிக்கு ஒரு மந்திரி பதவி தந்தாக வேண்டிய அவசியமும் நிர்ப்பந்தமும் ஜாதி பேதமற்ற சோஷலிஸ சமுதாயத்தை அமைக்க முயலும் ஒவ்வோர் இந்திய அரசியல் கட்சிக்கும் இருந்ததனாலும் - அவர் மந்திரியாக வருவது நிச்சயம் என்று பேசிக் கொள்ளப்பட்டது. அது எப்படி இருந்தாலும் அவருடைய மகள் அவனுடைய கிளாஸ்மேட், சிநேகிதி.

சிதம்பரநாதனின் பங்களா சொக்கிகுளத்தில் இருந்தது. அவருடைய வீட்டில் காம்பவுண்டுப் புல்தரை, மரத்தடி, வராந்தா, வரவேற்பறை எல்லாவற்றிலும் ஆட்கள் நிறைந்து பிதுங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே மாலை ரோஜாப்பூக்களின் இதழ்கள் சிந்தி மிதிப்பட்டுக் கொண்டிருந்தன.

பல்கலைக் கழகத்தில் படிக்கும் போதே அவனும், வேறு நண்பர்களும் அந்த பங்களாவுக்குப் பல நாள் போயிருப்பதால், கூர்க்கா அவனை அடையாளம் புரிந்து கொண்டு புன்சிரிப்போடு உள்ளே போய்ப் பக்கவாட்டிலிருந்த வேறொரு வாசல் வழியே மங்கையர்க்கரசியை வெளியே அழைத்து வந்தான்.

மிஸ் மங்கா - படிக்கும் போது சக மாணவர்கள் அப்படித் தான் அவளை அழைப்பது வழக்கம் - அன்று ஷாம்பூ போட்டு நீராடியிருந்தாள் போலிருந்தது.

கரும்புயலாய் அலைபாய்ந்து சுழன்று குண்டலம் குண்டலமாகத் திரிந்த கூந்தலுக்கிடையே மறக்க முடியாத அவளது சிறப்பு முத்திரையான அந்தப் புன்னகையோடு அவனை எதிர்கொண்டு வரவேற்றாள் அவள்.

"நீங்க என்ன டிஸ்டிங்ஷன் வாங்கினீங்க மிஸ்டர் முத்துராம்? எனக்கு 'ரேங்க்' கிடைச்சிருக்கு... யுனிவர்ஸிடியிலேயே ஸெகண்ட் 'ரேங்க்'லே வந்திருக்கேன்..."

"கங்கிராஜுலேஷன்ஸ் மிஸ் மங்கா! நான் ரேங்க் ஒண்ணும் வாங்கலே... வெறும் ஹைஸெகண்ட் கிளாஸ் தான்..."

"மேலே என்ன பண்ணப் போறீங்க...?"

"நான் எம்.ஃபில்லோ பி.எச்.டி.யோ பண்ணப் போறதில்லை... வேலைதான் ஏதாச்சும் பார்க்கணும். வீட்டிலேயே வேலைக்குப் போகச் சொல்லித்தான் வற்புறுத்தறாங்க."

"என்னோட எல்டர் பிரதர் பர்மிங்ஹாம்லே இருக்காரு... சுபாஷ்சந்திரன்னு... முன்னேயே உங்ககிட்டச் சொல்லியிருக்கேனில்லே... அவர் என்னை லண்டன் யூனிவர்ஸிடியிலே வந்து பி.எச்.டி. பண்ணச் சொல்றாரு... யோசிச்சிக்கிட்டிருக்கேன். அப்பா போகச் சொல்றாரு..."

"உங்கப்பா மினிஸ்டரா வரப் போறாருன்னு பேப்பர்ல எல்லாம் பார்த்தேனே...?"

"வரலாம்... இன்னும் நிச்சயமாகத் தெரியலே... இருங்க காபி கொண்டாரச் சொல்கிறேன்" என்று கூறிவிட்டு உள்ளே போய்க் காப்பிக்குச் சொல்லிவிட்டு மறுபடி அவனருகே வந்தாள் மங்கையர்க்கரசி.

"காலேஜ் லைப் இவ்வளவு சீக்கிரமா முடிஞ்சிருக்கப் படாதுன்னு எனக்குத் தோணுது. நீங்க என்ன நினைக்கிறீங்க மிஸ்டர் முத்துராம்?"

"எனக்கு அப்படித் தோணலை. இந்த மட்டிலயாவது அந்த நாலு சுவருக்கு நடுவிலேருந்து விடுதலை கிடைச்சுதேன்னு ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கு..."

"இந்த நாட்டிலே சாதாரண சிடிசனா இருக்கிறதை விட ஸ்டூண்ட்ஸா இருக்கிறது இன்னிக்கு எத்தினியோ நிம்மதியான காரியம் மிஸ்டர் முத்துராம்! இல்லியா? நீங்க என்ன சொல்றீங்க...?"

"நீங்க பேசறதைப் பார்த்தா ஸ்டூடண்ஸா இருக்கிறவங்க இந்த நாட்டு சிடிஸன்ஷிப்பைப் பத்திக் கவலைப்பட வேண்டியதில்லைங்கிறீங்களா? அல்லது அவங்க இந்த நாட்டுக் குடிமக்களே இல்லீங்கறீங்களா? என்னாலே அதை ஒத்துக் கொள்ள முடியலியே?"

"அப்படியெல்லாம் டீப்பா எந்த அர்த்தத்திலேயும் நான் அதைச் சொல்லலே மிஸ்டர் முத்துராம்... ஸ்டூடண்ட் லைப் ஜாலி லைப்ன்னு மட்டும் தான் சொல்லவந்தேன்."

"நீங்க சொல்றதப் பார்த்தாக் கசப்பானதும், சீரியஸ்ஸானதுமாகிற பல அனுபவங்கள் அப்புறம் அந்த ஸ்டூடண்ட்ஸ் லைப் முடிஞ்சதும் மொத்தமா ஒண்ணொண்ணா அடுக்கடுக்கா வந்து வதைக்கும்னு இல்லே ஆகுது?"

அவள் பதில் சொல்வதற்குள் காபி வந்தது. டிரேயில் வைத்துக் கொண்டு வந்த தவசிப்பிள்ளை முத்துராமலிங்கத்தைப் பார்த்து முகம் மலர்ந்தான்.

"இன்னிக்கு இந்தத் தேசத்திலுள்ள மிகப் பெரிய குறை என்ன தெரியுமா மிஸ் மங்கா? நம்மைப் போல இளைஞர்கள் பொறுப்பு என்பது என்னன்னே தெரியாத அளவு கனவுகளிலே மிதக்க ஆசைப்பட்டுக்கிட்டிருக்கோம். முதியவர்கள் பலர் அளவற்ற பொறுப்பைப் பற்றி எந்நேரமுமே கசப்பான எல்லைவரை வெறும் பேச்சில் வற்புறுத்துகிறவர்களாக மட்டுமே இருக்கிறார்கள்."

"அடடே! நீங்க நிஜமாவே சீரியஸ்ஸா ஒரு விவாதத்திலே இறங்கிட்டீங்க போலிருக்கே... அதெல்லாம் யூனிவர்சிடி 'டிபேட்டிங் சொஸைடி'யோட போகட்டும்... இப்ப வேணாம்..."

"வேணாம்னா வேணாம்... நீங்க தான் ஆரம்பிச்சீங்க... இல்லாட்டி நான் பேசாமலே விட்டிருப்பேன்."

"ஆமா... நீங்க கதை, கட்டுரை, பொயட்ரி அது இதுன்னு நிறைய எழுதுவீங்களே, வர்ர வருஷம் யூனிவர்ஸிடியிலே டிப்ளமா இன் ஜர்னலிஸம் கோர்ஸ் இண்ட்ரொட்யூஸ் பண்றாங்க. பேசாம அதுலே சேர்ந்து பார்க்கிறதுதானே மிஸ்டர் முத்துராம்?"

"இல்லே... நான் மேலே எதுவும் படிக்கப் போறதில்லே. எங்க குடும்ப நெலைமை அதுக்கு ஒத்துவராது. மாசம் ஐநூறு ரூபாய்க்குக் குறையாத வருமானமுள்ள ஒரு வேலையை எத்தினி சீக்கிரமா நான் தேடிக்கிறேனோ அத்தினி சீக்கிரம் எங்க வீட்டுக்கு நல்லது..."

"நான் வேணா எங்கப்பா மூலமா ஏதாச்சும் டிரை பண்ணிப் பார்க்கட்டுமா?"

"அவசியமானா நானே வந்து மறுபடி உங்கப்பாவைப் பார்க்கிறேனே; இப்போ இன்னிக்கி ஒண்ணும் அவசரமில்லே... ஏகப்பட்ட கூட்டம் இங்கே காத்துக்கிட்டிருக்கே... எப்பவும் உங்க வீடே ஒரு பொதுக் கூட்டம் நடத்தப் போதுமான 'ஆடியன்ஸோடே' தயாரா இருக்கிற மாதிரியில்லே தோணுது?"

சொல்லிவிட்டு அவன் சிரித்த போது தேங்காய்ச் சில்லு போலப் பளீரென்ற வெண்மை மின்ன அவன் சிரித்த சிரிப்பு மங்காவின் கவனத்தைச் சிறைப்பிடித்து ஆண்டது; கவர்ந்தது.

ஆண்மையின் காம்பீர்யம் நிறைந்த அந்த அழகான சிரிப்பின் பிறப்பிடமான அவன் முகத்தை ஒருகணமாவது முழுமையாக நேருக்கு நேர் சந்தித்தே தீருவதென்று புறப்பட்ட அவளது பார்வை கை சுளுக்கிக் கொண்டவன் எறிந்த கல் மாதிரி அடைய வேண்டிய இலக்கை அடையுமுன்பே நடுவிலேயே துணிவிழந்து விழுந்துவிட்டது.

"மறுபடி பார்க்கிறேன். புரொவிஷனல் சர்ட்டிபிகேட் வாங்க யூனிவர்சிடி வரை புறப்பட்டு வந்தேன். அப்பிடியே உங்களை எல்லாம் பார்த்திட்டுப் போகணும்னு தோணிச்சு. அதான் வந்தேன்..." என்று அங்கிருந்து விடை பெற்றான் முத்துராமலிங்கம். அவன் புறப்படுவதற்குள் அந்தக் காம்பவுண்டில் கூட்டமும், மாலையேந்திய கைகளும், கார்களின் எண்ணிக்கையும் அதிகரித்தன. திடீரென்று 'அமைச்சர் சிதம்பரனார் வாழ்க!' - என்ற வாழ்த்தொலியுடன் ஒரு பெரிய ஊர்வலம் மாதிரிக் கட்சிக் கொடிகளுடன் கூடிய கூட்டம் ஒன்று காம்பவுண்டுக்குள் மிகவும் ஆரவாரமாக நுழைந்தது.

"உங்கப்பா மினிஸ்டராயிட்டாரு. இந்தா சாக்லேட்... ஒண்ணுக்கு ரெண்டா எடுத்துக்க..." என்று ஒருத்தர் தட்டு நிறைய சாக்லேட் குவித்துக் கொண்டு வந்து நீட்டினார். மங்கா தட்டை வாங்கி முத்துராமலிங்கத்திடம் புன்முறுவலோடு முதலில் நீட்டினாள்.

"மறுபடியும் பாராட்டுக்கள்" என்று ஒரே ஒரு சாக்லேட்டை எடுத்துச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான் முத்துராமலிங்கம்.

"என்ன பையிலே போட்டுக்கிட்டீங்க...? சாக்லேட் சாப்பிடறதில்லையா?"

"இல்லே. நாம சாப்பிடற் ஒவ்வொரு சாக்லேட்டும் நம்ம பல்லைச் சாப்பிட்டுப்போடும்னு பயப்படறவன் நான்! பொதுவா எனக்கு இனிப்புன்னாலே பிடிக்காது மிஸ் மங்கா!"

"பின்ன என்ன தான் பிடிக்கும்?"

"கசப்பு! காலையிலே எந்திரிச்சதும் பல்வெளக்கிப் போட்டு ஒரு கைநெறைய தளதளன்னு வேப்பங்கொழுந்தைப் பறிச்சுத் திம்பேன். பொழுது சாயறப்பவும் மறுபடி அதேமாதிரி..."

"ஐயையோ... கசந்து வழியும்... குமட்டிக்கிட்டு வருமே?"

"பழகிட்டா கசப்பைப் போலச் சுவையானதும் ஆரோக்கியமானதும் வேறே இருக்க முடியாது... மிஸ் மங்கா..."

அவன் பேசி முடிப்பதற்குள், "என்ன மங்கா! ஸ்வீட்டை வெச்சுக்கிட்டு இங்கேயே பேசிக்கிட்டு நின்னா எப்படி...? அப்பா மந்திரியாயிட்டாரு, கட்சிக்காரங்கள்ளாம் காத்துக்கிட்டிருக்காங்க... உங்கையாலே அவங்களுக்கெல்லாம் நீயே ஸ்வீட்ஸ் குடும்மா..." என்று ஒருத்தர் வந்து அவளை அழைத்துச் சென்றார். அவனுக்கு விடை கொடுத்துவிட்டு அவசர அவசரமாக அவரோடு உள்ளே விரைந்தாள் அவள்.

அன்று அந்தப் பங்களா காம்பவுண்டைக் கடந்து தெருவுக்கு வருவதற்கு முத்துராமலிங்கம் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. மக்கள் வெள்ளத்தில் நீந்தி மிதந்து சட்டை கசங்கித் தலைமயிர் கலைந்து கூட்டத்தில் தன்னைச் சொருகிக் கொண்டு நுழைந்துதான் அவன் வெளியே வர முடிந்தது.

ஆறடிக்கு மேல் உயரமாகவும், கட்டுமஸ்தாகவும் இருந்தானோ, பிழைத்தான். இல்லையென்றால் கூட்டத்தில் நசுங்கி மிதிபட்டு இறந்து போய் அடுத்த நாள் காலைப் பத்திரிகையிலும், மாலைத் தினசரியிலும் பரபரப்பான வெறும் செய்தியாகியிருப்பான் அவன்.

மூன்றரை மணிக்கு மேல் காத்திருந்து மதுரை மத்திய பஸ் நிலையத்தில் கம்பம் போகிற எக்ஸ்பிரஸ் பஸ் ஏறி விளக்கு வைக்கிற நேரத்துக்கு அவன் ஆண்டிப்பட்டிக்குத் திரும்பி வந்த போது ஏதோ காரியமாக பஸ் ஸ்டாண்டுக்கு வந்திருந்த பசுங்கிளித் தேவர் அங்கேயே மகனை எதிர்கொண்டார்.

"இந்தா முத்துராமு! உனக்கு ஒரு ஏற்பாடு பண்ணிப் போட்டேன். நீ சொன்னபடி நாளைக்கே மெட்ராஸ் போயி அங்கே நம்ம சர்க்கிள் இன்ஸ்பெக்டர் குருசாமி சேர்வையைப் பாரு. நான் கடுதாசி தர்றேன். அவரு ஒரு வழி பண்ணிக் கொடுப்பாரு. நமக்கு ரொம்பவும் வேணுங்கப் பட்டவரு. தட்டிச் சொல்லமாட்டாருன்னு நினைக்கிலேன். நாளன்னிக்கிக் காலையிலே ஏதோ புது மினிஸ்டரி பதவி ஏற்குதாம். அதுக்காவத் தேனியிலிருந்து அந்தக் கட்சி ஆளுங்க லாரிங்கள்ளே கூட்டம் கூட்டமா மெட்ராஸ் போறாங்க. லாரிக்காரங்களுக்குக் கட்சி ஆபீஸே பணம் குடுத்துடுது செலவு மிச்சம். நீயும் அதுலேயே போயிட்டுக் குருசாமி சேர்வையைப் பார்த்தேன் வந்தேன்னு திரும்பி வந்து சேருவியாம்."

"சரி ஐயா!" என்று இசைவதைத் தவிர அப்போது அவனுக்கு வேறு வழி இல்லை. சிதம்பரநாதன் வீட்டுக் கூட்டத்திலேயே முத்துராமலிங்கத்தின் கதர் அரைக்கைச் சட்டையைப் பார்த்து அங்கு கூடியிருந்த கூட்டம் வெறித்தது. இப்போது அதே கூட்டத்தில் ஒருவனாக லாரியில் விடிய விடியப் போக வேண்டும் என்று நினைத்த போது தயக்கமாயிருந்தது; ஆனால் பயமாயில்லை. வாழ்க்கையில் அவனுக்கு அறவே தெரியாத விஷயங்களில் ஒன்று பயம்.

அப்போது தன் தந்தைக்கு வீண் செலவைத் தவிர்க்க விரும்பி அவருடைய இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக் கொண்டான் அவன். தேனியில் கூப்பிட்டிருந்த கவியரங்கத்துக்குப் போக முடியாது. 'பரவாயில்லை, கவியரங்கங்களை விட வாழ்க்கை மிகவும் முக்கியமானது. சென்னைக்குப் போய் ஐயாவுக்கு வேண்டிய பெரிய உத்தியோகஸ்தரான குருசாமி சேர்வையைப் பார்த்துவிட்டு வரலாம். ஏதாவது வழி பிறந்தால் சரிதான்' என்று தீர்மானம் செய்தான் அவன்.

சென்னைக்குப் போக வேண்டும். எப்படிப் போனால் என்ன? யாரோடு போனால் என்ன? எதில் போனால் என்ன? நூறு ரூபாய்க்கு மேல் செலவாக வேண்டிய பயணம் இலவசமாகிறது. கைச்செலவுக்கு ஐயாவிடம் ஏதாவது கேட்டு வாங்கிக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்து கொண்டான் அவன். தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு இதுதான் அவனது முதற் பயணம். இதுவ்ரை வடக்கே திண்டுக்கல்லைக் கடந்து அதற்கப்பால் அவன் போக நேர்ந்ததே இல்லை.

அத்தியாயம் - 2

மறுநாள் பிற்பகலிலிருந்தே சென்னைக்கு லாரிகள் புறப்படத் தொடங்கியிருந்தன. கட்சிக் கொடிகள், எந்த ஊரினுடைய கட்சிக் கிளையின் சார்பில் அந்த லாரி வருகிறது என்பதை விளம்பரப்படுத்தி அறிவிக்கும் துணி பேனர் ஆகியவை எல்லாம் ஒவ்வொரு லாரியிலும் தாராளமாகவும் பெரிதாகவும் கட்டப்பட்டிருந்தன.

லாரிகள் எல்லாம் தேனியிலிருந்து பெரிய குளம், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, கொடை ரோடு, திண்டுக்கல் வழியாகச் சென்னை செல்லும் என்று அறிவிக்கப் பட்டிருந்ததினால் நண்பகலிலேயே முத்துராமலிங்கமும், அவன் தந்தையும், தேனிக்குப் புறப்பட்டு வந்திருந்தார்கள்.

அங்கே லாரிகள் நிறுத்தப்பட்டிருந்த மைதானத்தில் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. ‘சொந்தச் செலவுக்கும், கைச்செலவுக்கும் பணம் இருந்தால் போதும். சென்னை போகவும் திரும்பவும் பயணம் ஓசி’ என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் லாரிகள் கொள்ள முடியாத அளவுக்கு மேல் கூட்டம் பொங்கி வழியத் தொடங்கியிருந்தது.

அந்தக் கூட்டத்தில் மிகச் சில ஆட்களே கட்சிச் சின்னம், பேட்ஜ், அடையாளம் காட்டும் உடைகள் என்று அவற்றை அணிந்திருந்தனர். பெரும்பாலோர் ஒரு பாவமும் அறியாத பொதுமக்களாகவும், பட்டினம் பார்க்க ஆசைப்பட்டுப் புறப்படுகிறவர்களாகவும் இருந்தனர் என்பதை முத்துராமலிங்கம் கவனித்தான்.

அறுபது கோடி இந்திய மக்களையும் இரண்டே இரண்டு வகைகளில் பிரித்து அடக்கி விடலாம் என்று அந்தக் கணத்தில் அவனுக்குத் தோன்றியது. 90:10 என்ற விகிதாசாரத்தில் கொண்டாடுகிறவர்கள் : கொண்டாடப்படுகிறார்கள் என்பதாக அவர்களைப் பிரித்து விட முடியும். தலைவர்கள், பிரமுகர்கள், பணக்காரர்கள் என்று நாடு முழுவதும் பரவியிருக்கும் பத்து சதவிகித எஜமானர்களைக் காரணத்துடனோ, காரணமின்றியோ கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களே என்று தோன்றியது.

இருநூறு ஆண்டுகளுக்கு முன் இவர்கள் தேர் திருவிழா, சாமி புறப்பாடு, மண்டகப்படி என்று வேறு கொண்டாட்டங்களில் இலயித்திருந்தார்கள். இந்திய ரத்தத்தில் ஊறியிருக்கும் அந்தக் கொண்டாடும் உணர்வு இன்னும் போய் விடவில்லை, இடம் மாறி இன்றும் நிகழ்கிறது. அன்று தேரில் ஊர்வலம் வருகிறவர்களைக் கும்பிட்ட மக்கள் இன்று காரிலும் விமானங்களிலும் வருகிறவர்களைக் கும்பிட்டு மாலை அணிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

”இந்தா! பசுங்கிளித் தேவரே! உம்ம மகனை அந்த லாரியிலே ஏறிகிடச் சொல்லும்” என்று துரிதப்படுத்தினார் லாரிகள் சம்பந்தமான ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்த கட்சிச் செயலாளர். கல்லுடைப்பவர்கள் முதல் களையெடுப்பவர்கள் வரை பல தரத்து ஆட்கள் அந்த லாரியில் இருந்தார்கள். விசுவாசத்தோடு அல்லது கட்சிகளின் கொள்கைகளின் மேல் நம்பிக்கையோடு அவர்கள் லாரியில் ஏறியிருக்கவில்லை. ‘ஊர் சுற்றிப் பார்க்கிறோம்’ என்ற உற்சாகத்தில் சிலரும், ‘வேடிக்கைப் பார்க்கப் போகிறோம்’ என்ற களிப்பில் சிலரும் இருந்தார்கள். தங்கள் நிரந்தரக் கவலைகளையும், துன்பங்களையும் தற்காலிகமாக மறக்க இந்தப் பயணம் ஒருவேளை அவர்களுக்குப் பயன்படலாம்.

’வேடிக்கை பார்க்க வந்தவனுக்குச் சத்தியம் புலப்படாது’ என்று ஞானரதத்தில் பாரதி எழுதியிருப்பது முத்துராமலிங்கத்துக்கு நினைவு வந்தது. அரசியல், கலை, இலக்கியம், கல்வி, சமூகம் ஆகிய அத்தனை துறைகளிலும் வேடிக்கை பார்க்க வந்தவர்களே இன்று நிரம்பிக் கிடக்கிறார்களோ என்று கூடத் தோன்றியது. யாரும் எங்கும் எதையும், அக்கறையோடோ ஆர்வத்துடனோ செய்யவில்லை. வேறு எதையோ செய்ய முடியாத மனத்தாங்கலுடனும் குறையுடனுமே இதைச் செய்து கொண்டிருப்பது போன்ற செயல் தயக்கம் எல்லா இடங்களிலும் எல்லாத் துறைகளிலும் எல்லாரிடமும் தெளிவாகத் தெரிந்தது. அந்த லாரிப் பயணக் கூட்டத்திலும் அது தெரிந்தது.

அவன் தந்தை, சர்க்கிள் குருசாமி சேர்வைக்கான கடிதமும் அவனுடைய கைச் செலவுக்கென்று கொஞ்சம் பணமும் கொடுத்தார். சிரமப்பட்டு அலைந்து திரிந்து கைமாற்று வாங்கியது என்றும் தெரிவித்தார். அவ்வளவுதான் தரமுடிந்தது என்பதை நியாயப்படுத்தவும், அதையும் அவன் மிக மிக அவசியமானதற்கு மட்டுமே செலவழிக்க வேண்டுமென்பதற்கு எச்சரிக்கையாகவும், அவர் அதை அவனிடம் சொல்லியதாகப் பட்டது.

கட்சித் தொண்டர்கள் லாரியில் பயணம் செய்யும் போது என்னென்ன கோஷங்கள் போட வேண்டும் என்பதைக் கட்சிச் செயலாளர் விளக்கிச் சொல்லியிருந்தார். ஒவ்வொரு லாரியிலும் கோஷங்களை ஆரம்பித்து வைப்பதற்கும், கண்டிப்பாகக் கவனித்துக் கொள்வதற்கும் யாராவது ஒருவர் பொறுப்பு ஏற்க வேண்டி வந்தது.

”தம்பீ! இந்த லாரியை நீங்க கவனிச்சுக்கிறீங்களா?” என்று செயலாளர் முத்துராமலிங்கத்தை அணுகியபோது அவன் திடுக்கிட்டான். தனக்குப் பிடிக்காததும் தனக்குப் பொருந்தாததுமான ஒரு கொச்சையான காரியத்தைத் தன் தலையில் அந்த ஆள் கட்டி விடுவானோ என்ற அருவருப்பும், கூச்சமும், தயக்கமும், தற்காப்பு உணர்வுமாக அவன் திணறித் தவித்தபோது,

”அண்ணனை விட்டுடுங்க... அதையெல்லாம் நானே பார்த்துக்கிறேன்” என்று ஓர் இனிய பெண் குரல் முன் வந்து அவனைக் காப்பாற்றியது. முத்துராமலிங்கம் திரும்பிப் பார்த்தான். எங்கோ அடிக்கடி கேட்டுப் பழகிய குரல் போல இருந்தது.

அந்தக் கட்சியின் கலைநிகழ்ச்சிக் குழு ஒன்றின் தலைவியான கலையரசி குமாரி கண்மணி சிரித்தபடி நின்று கொண்டிருந்தாள். கொஞ்சம் அதிகப்படியான சிரிப்பு; கொஞ்சம் அதிகப்படியான கவர்ச்சி; அதிகப்படியான வார்த்தை அரட்டை. எல்லாம் அதிகப்படியாகவே இருந்தன அவளிடம்.

”அம்மா தாயே அல்லி ராணீ! நீ இருக்கியா இந்த லாரியிலே... கையிலே வெண்ணெயை வச்சுக்கிட்டு யாராவது நெய்க்கு அழுவாங்களா...?” என்று கட்சிச் செயலாளரே கண்மணியிடம் குழைந்தார்.

செயலாளர் அடுத்த லாரிக்கு நகர்ந்தபின், “நல்ல சமயத்திலே என்னைக் காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றியம்மா!” என்று கண்மணிக்கு நன்றி கூறினான் முத்துராமலிங்கம். அவள் அவனை ஏறிட்டுப் பார்த்துச் சிரித்தாள். சொன்னாள்:

”நீங்க இந்தக் கட்சி ஆளில்லே. இதிலே... வர்ரீங்கங்கறதுக்காக உங்களைக் கோஷம் போடச் சொன்னா எப்பிடி?”

கலையரசி கண்மணி என்கிற அந்தப் பெண்ணைப் பற்றித் தான் கேள்விப்பட்டிருந்தவற்றையும், அறிந்திருந்தவற்றையும் நினைத்தான் முத்துராமலிங்கம். ஒருமுறை அவளை எதிரே வைத்துக் கொண்டே ஓர் அரசியல் நண்பன், “உடல், பொருள், ஆவி அனைத்தையும் கட்சிக்காக ஈந்தவர்னு சொல்லுவாங்களே, அது இவங்களுக்குத் தான் பொருந்தும்! ஒரு சின்னத் திருத்தம். ‘ஆவி’யை மட்டும் இவங்க இன்னும் வழங்கலே! உடல் பொருள் முதலிய மத்ததை எல்லாம் அவ்வப்போது கட்சிக்கும், கட்சித் தலைவருங்களுக்கும் தாராளமா வழங்கியிருக்காங்க...!” என்று அறிமுகப்படுத்தியபோது, அதற்காக ஆத்திரப்படவோ, சீறவோ, கொதிக்கவோ, துள்ளிக் குதிக்கவோ செய்யாமல் சிரித்தபடி நின்றாள் இந்தக் கண்மணி. அந்த அறிமுக வார்த்தைகளில் இருந்த எதுவும் அவளுடைய மான உணர்வைக் கிளறச் செய்து ஆத்திரமூட்டவில்லை என்பது முத்துராமலிங்கத்துக்கு ஆச்சரியத்தை அளித்தது. மான உணர்வு முனை மழுங்கிப் போனவர்கள் அல்லது அறவே இல்லாதவர்கள் தான் இன்று பொது வாழ்வில் லாபகரமாக வாழ்கிறார்கள். அல்லது வாழ முடிகிறது என்றே பல வேளைகளில் அவனுக்குத் தோன்றியது. சிறுமை கண்டு பொங்குகிற - தவறுகளுக்குக் கூசுகிற, பொய்யைக் கண்டு சீறுகிற எவனையும், எந்தக் கட்சியும், எந்தத் தலைவரும், தன் அருகே நெருங்க விடுவதில்லை என்பதை அவன் கவனித்திருந்தான். எதற்கும் ஒத்துப் போகிற - எதிலும் அட்ஜஸ்ட் செய்து கொள்கிற, எதையும் சுலபமாக ஜீரணித்துக் கொள்கிற ஆட்களைத் தான் கட்சித் தலைமைகளும் தலைவர்களும் தங்களை அண்டி வளர அனுமதிக்கிறார்கள் என்றும் பச்சையாகப் புரிந்தது.

கலையரசி குமாரி கண்மணியும் அப்படித்தான் வளர்ந்திருந்தாள்; வளர்க்கப்பட்டிருந்தாள்; எதிர்க்கட்சிகளையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும், விமர்சித்தும் கண்டித்தும், நாடகம், இசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகளை நடத்தும் ஒரு சிறிய குழுவின் தலைவியான அவள் கட்சி மேலிடத்துக்கும், முக்கிய பொறுப்பில் உள்ள தலைவர்களுக்கும் ‘உடல், பொருள்’ அனைத்தையும் வழங்கி முன்னுக்கு வந்திருந்ததின் வரலாறும், நடைமுறையும் அவன் அநுமானத்தில் நன்கு பிடிபட்டிருந்தன. ஓர் ஊரில் கண்மணியின் கலை நிகழ்ச்சிக்கு அறுநூறு ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை கிடைத்தது. மாதம் முப்பது நாளும் அவள் ஏதாவது வெளியூரில் நிகழ்ச்சிக்குப் போய்க் கொண்டு தான் இருந்தாள். வருமானமும் புகழும் வந்து கொண்டிருந்தன.

அவளுடைய சொந்தக் கிராமம் தேனிக்கு அருகில் தான் இருந்தது. எனவே தான் அவளும் மற்ற கட்சித் தோழர்களைப் போல் தன் பகுதியிலிருந்து லாரியில் சென்னைக்குப் புறப்பட்டிருந்தாள்.

அந்த லாரியில் இருந்த கும்பலில் கண்மணி, தான் பேசுவதற்கும், பழகுவதற்கும் உரிய ஆளாகத் தேர்ந்தெடுத்தது முத்துராமலிங்கத்தைத்தான். அதில் அவனுக்கு மட்டும் லாரியில் உட்கார இடம் கிடைத்தது.

சிறிதும் அறிவுக் கலப்பற்ற உணர்ச்சிமயமான அந்தக் கூட்டத்தில் தண்ணீரில் மிதக்கும் எண்ணெய் போல் ஒட்டாமலும் ஒட்ட முடியாமலும் தவித்தான் அவன்.

”உங்கிட்ட இருக்கிற கொஞ்சத் தொகையில் வெளியில் எங்கேயும் தங்கக் கட்டுப்படி ஆவாது. குருசாமி சேர்வை வீட்டிலேயே ஒண்டிக்கிடப் பாரு. என் லெட்டரைக் குடுத்துப் பேசினா அவரு எதாச்சும் ஒரு வழி பண்ணுவாருன்னு நெனைக்கிறேன்.” லாரிகள் புறப்படப் போகிற சமயம் அறிந்து அவனுடைய தந்தை மறுபடி அவனுக்கு நினைவூட்டி விடை கொடுத்தார்.

”பீச்சிலே அண்ணா சமாதிக்குப் பக்கமா உள்ரோட்டிலே போய் லாரிங்க நிக்கணும். எல்லா லாரிக்கும் அங்கேதான் இடம் ஒதுக்கியிருக்காங்க... வழியிலே போலீஸ் தொந்தரவு எதுவும் இருக்காது... கட்சிக் கொடிங்க, பேனருங்களைப் பார்த்தாலே கண்டுக்காம விட்டுடுவாங்க.”

செயலாளர் சொற்பொழிவு மாதிரி உரத்த குரலில் எல்லாருக்கும் கேட்கும்படி சொன்னார். லாரிகள் புறப்பட்டன. பீடிப்புகை, சாலைப் புழுதி நெடி, டீஸல் நாற்றம், வியர்வை நாற்றம் எல்லாம் கலந்து சங்கமித்த வாடை போகிற வழியெல்லாம் நிறைந்திருந்தது. மற்ற ஊர்களிலிருந்தும் லாரிகள், பஸ்கள், வேன்கள், ஜீப்கள், கார்கள் என்று எங்கே பார்த்தாலும் எந்தச் சாலையில் பார்த்தாலும் சென்னையை நோக்கிப் பறந்து கொண்டிருந்தன.

எல்லாச் சாலைகளிலும், எல்லாரும், எல்லாமும் சென்னையை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். எங்கும் கட்சிக் கொடிகள், எங்கும் சின்னங்கள், எங்கும் கோஷங்கள் தான் நிரம்பியிருந்தன.

அந்தச் சூழ்நிலையில் அந்தக் கூட்டத்தில் அதில் ஒருவனாக ஒண்டிக் கொண்டு கூசிக் கூசிப் பயணம் செய்தான் முத்துராமலிங்கம்.

”அண்ணனைத் தொந்தரவு பண்ணாதே! அவரு பாட்டுக்கு ஒரு மூலையிலே உட்கார்ந்துப்பாரு” என்று அவன் மீது தனிப்பட்ட சலுகையையும், கருணையையும் பொழிந்து கொண்டிருந்தாள் கண்மணி.

இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் லாரியில் சென்று கொண்டிருந்தவர்களின் கோஷம் மங்கியது. குரல்கள் தூக்கத்தின் அடையாளத்தைத் தொனித்தன. உட்கார்ந்தபடி சிலரும், நின்றபடியே சிலரும், சாய்ந்தபடி சிலரும் தூங்கி வழியத் தொடங்கினார்கள்.

மணி ஒன்று, லாரி உளுந்தூர்ப்பேட்டையை நெருங்கிக் கொண்டிருந்தது. கோஷங்கள் அநேகமாக ஓய்ந்து எல்லாருமே தூங்கி வழிய ஆரம்பித்திருந்தார்கள்.

அத்தியாயம் - 3

லாரி ஒரு குலுக்குக் குலுக்கிக் கொண்டு அதிர்ந்து நின்றது. தூக்கக் கிறக்கத்திலிருந்த குமாரி கண்மணி அப்படியே கட்டித் தழுவினாற் போல முத்துராமலிங்கத்தின் மேல் நிலைகுலைந்து வந்து விழுந்திருந்தாள்.

”என்னது? என்ன ஆச்சு?” என்று பதறிப் போய்த் தான் எழ முயன்று தன் மேலே விழுந்திருப்பது ஒரு பெண் என்ற கூச்ச உணர்வுடன் அவளை எழுப்பி விட விரைந்த முத்துராமலிங்கத்துக்கு, அவள் எழுந்திருக்கவே விரும்பாதவள் போல் லாரி குலுங்கி நின்ற அதிர்ச்சியில் மூர்ச்சித்து மயங்கி விட்டாளோ என்ற சந்தேகத்தோடு பார்த்தால், கண்மணி கள்ளச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருந்தாள்.

அவளை மெதுவாக விடுவித்துத் தன்னை அவளிடமிருந்து நீக்கிக் கொண்டு சாலையில் என்ன நடந்தது என்று பார்க்க மற்றவர்களோடு லாரியிலிருந்து கீழே இறங்கினான் முத்துராமலிங்கம்.

சாலையில் முன்னால் போய்க் கொண்டிருந்த வேறு ஒரு லாரி நட்ட நடுவே குடை சாய்ந்து பாதையை மறித்தாற் போலக் கவிழ்ந்திருந்தது.

அதனால் ஏற்பட்ட கூக்குரல்களும், குழப்பமும் பின்னால் வரிசையாக வந்து கொண்டிருந்த பல லாரிகளையும் பஸ்களையும் பாதித்தன.

கவிழ்ந்த லாரியில் பின்புறம் இருந்தவர்களில் பெரும்பாலோர் குதித்துத் தப்பிவிட்டனர். சிலருக்குக் காயம், சிராய்ப்பு, ஊமை அடிகள். காபினில் இருந்த டிரைவர், கிளீனர் முதலிய ஆட்களுக்குச் சிறிது பலமான அடி.

அவர்கள் கட்சி ஆட்கள் என்பதற்காக அல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் முத்துராமலிங்கம் பம்பரமாக இயங்கி அவர்களுக்கு உதவினான். காயம் அடைந்தவர்களை வேறு ஒரு லாரியில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றான். ‘கட்சி’ - அதுவும் ஆளும் கட்சி அநுதாபிகள் ஏறி வந்த லாரி என்பதால் போலீஸ் கெடுபிடிகள் அதிகம் இல்லை. உதவிகள் கூட இருந்தன.

நடுச்சாலையில் அகாலத்தில் இம்மாதிரி விபத்து வேலைகளில் அறிவுப்பூர்வமாக உடனே செய்யப்பட வேண்டியது என்ன என்று புரியாமல் மலைத்தும் திகைத்தும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டும் உணர்ச்சி வசப்பட்டும் நின்ற அந்தக் கூட்டத்தில் சமயோசிதமாகச் செயல்பட்டு உரியதை நேரந்தவறாமல் செய்தவன் முத்துராமலிங்கம் தான். கண்மணி அவனை வியந்தாள். பாராட்டினாள்.

”அண்ணே! நீங்க இல்லாட்டி இது மாதிரி நடந்ததுக்கு எனக்குக் கையும் ஓடாது - காலும் ஓடாது. நல்லவேளை! சமய சஞ்சீவியாக இருந்து உதவினீங்க.”

”உங்க கட்சித் தலைவருங்கதான் எப்ப ஜனங்களுக்கு என்ன செய்யணும், ஏன் செய்யணும்னு தெரியாம முழிக்கிறாங்க! கஷ்டப்படறவனுக்கு எது உடனே தேவைன்னு புரியாம மலைச்சுப் போயிடறாங்க. அல்லது நான் தான் இதுக்குக் காரணம் நீதான் இதுக்குக் காரணம்னு சண்டை போட்டுக்கறாங்க.”

”தலைவர்கள் எவ்வழி அவ்வழிதான் தொண்டர்களும்னு வச்சுக்குங்களேன்.”

இதைச் சொல்லிவிட்டுச் சிரித்தாள் கண்மணி.

”தண்ணிப் பஞ்சத்தாலயும், சோத்துப் பஞ்சத்தாலயும், அறிவுப் பஞ்சத்தாலயும் ஜனங்க கஷ்டப்பட்டிட்டிருக்கறப்ப - மகாநாடு - ஊர்வலம், சிலை வைப்பது, ஊர்ப்பெயர், தெருப் பெயரை மாத்தறது, வறுமையை எதிர்த்து வாய்ப்பந்தல் பிரசங்கங்கள்னு நடத்திக்கிட்டிருக்கிற வகையிலே செயல்படற தலைவர்கள் தான் எல்லாக் கட்சிகளிலேயும் இன்னிக்கு இருக்காங்க...”

இதற்குப் பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பிச் சமாளித்தாள் கண்மணி. அருகே இருந்த ஒரு டீக்கடையிலிருந்து தனக்கும் அவனுக்குமாக டீ வரவழைத்தாள் கண்மணி. கட்சி ஆள் ஒருத்தன் போய் அவன் செலவில் வாங்கி வந்தான்.

”வியாபாரம் போல் நடக்கிற அரசியலும், அரசியலால் பாதிக்கப்பட்ட ஊழல் மயமான வியாபாரமும் உள்ள தேசத்தில் எதுவுமே உருப்படாது” என்று அந்தச் சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான் முத்துராமலிங்கம்.

இரவு இரண்டரை மணிக்குமேல் லாரிகள் மீண்டும் புறப்பட்டன. காற்றுக் குளிர்ந்து வீசலாயிற்று. திறந்த லாரியாக இருந்ததால் சில்லென்ற காற்று முகத்தில் வந்து அறைந்தது. களைப்பினால் முத்துராமலிங்கமும் சிறிது கண்ணயர்ந்து விட்டான்.

மறுபடி வெயில் முகத்தில் பட்டுச் சுள்ளென்று உறைத்த போது தான் அவன் கண்விழித்தான். லாரி சென்னைக்குள் வந்திருந்தது. பக்கத்தில் கடல் அலைகளில் வெயில் பட்டுப் பளபளத்ததால் அது கடற்கரைச் சாலையாக இருக்க வேண்டுமென்று அவனுக்குப் புரிந்தது.

நகரின் தெருக்கள் எல்லாம் கோஷங்களாலும், தோரணங்களாலும், கூட்டங்களாலும், பஸ்கள், லாரிகளாலும் நிரம்பி வழிந்தன. கடற்கரைச் சாலை முழுவதும், வெளியூர்களிலிருந்து வந்திருந்த பஸ்களும், லாரிகளும்தான் நிறைத்துக் கொண்டிருந்தன.

நீச்சல் குளத்தையும், மீன் காட்சிக் கூடத்தையும் ஒட்டியிருந்த ஓரிடத்தில் உள்பக்கமாகச் சாலையில் இறங்கி மணற்பரப்பை ஒட்டி இருந்த கடற்கரைத் தார் ரோட்டில் லாரி நின்றது.

”எல்லாரும் இறங்குங்க! அண்ணா சமாதி வந்தாச்சு. லாரி இங்கேயே நிக்கும். மறுபடி நாளைப் பொழுது சாயுறப்ப இங்கேயிருந்து ஊர் திரும்பும். அதுக்குள்ளார வந்திரணும்” என்று கண்மணி அறிவித்தாள்.

”அண்ணன் எங்கே போவணும்? தங்க வேற எடமில்லையானா எங்கூடவே வந்தா லாட்ஜ்லே தங்கிக்கலாம்! கட்சி ஆளுங்க இங்கியே பக்கத்துலே திருவல்லிக்கேணியிலே எனக்கு நான் வழக்கமாத் தங்குற ஒரு லாட்ஜ்லே இடம் போட்டு வச்சிருப்பாங்க” என்று முத்துராமலிங்கத்தையும் தன்னோடு கூப்பிட்டாள் கண்மணி.

”இல்லே! நான் என் வேலை விஷயமா எங்கப்பாரு சொல்லியனுப்பிச்ச ஒருத்தரைப் பார்க்கணும். நான் இந்த ஊருக்குப் புதிசு... இந்த அட்ரஸைப் பார்த்து எப்பிடிப் போகணும்னு மட்டும் சொன்னால் போதும்” என்று தன்னிடமிருந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் குருசாமி சேர்வையின் முகவரியைக் கண்மணியிடம் காண்பித்துக் கேட்டான் அவன். ‘எட்வர்ட் எலியட்ஸ் ரோடு’ - என்று குறித்திருந்தது அந்த முகவரியில்.

”இன்னிக்கு இருக்கிற கும்பலிலே டாக்ஸி ஆட்டோ எதுவும் கிடைக்கிறது கஷ்டம். பஸ்ஸிலே கும்பலா இருக்கும். அப்படியே இடம் பிடிச்சுப் போனாலும் உங்க இறங்கற இடம் புரிஞ்சு இறங்க முடியாது. உங்க உயரத்துக்குப் பஸ்ஸிலே நின்னீங்கன்னாக் கீழே தெருவைப் பார்க்க முடியறது சாத்தியமில்லே...” என்றாள், கண்மணி.

”வழி சொன்னீங்கன்னா நான் நடந்தே போயிறலாமில்லே?”

அவனுடைய துணிவையும் நம்பிக்கையையும் கண்டு கண்மணி புன்முறுவல் பூத்தாள்.

”ஏன் சிரிக்கிறீங்க...?”

”இல்லே! அண்ணனுக்கிருக்கிற நம்பிக்கையைப் பார்த்துச் சிரிப்பு வந்திச்சு...”

புத்தம் புதிய கட்சிக்கொடி பறக்கும் சைக்கிள் ரிக்‌ஷா ஒன்று அப்போது அங்கே எதிர்ப்படவே, ரிக்‌ஷாவைக் கைதட்டிக் கூப்பிட்டாள் கண்மணி.

”ரிக்‌ஷாவிலேயே போயிடறீங்களா? விவரம் சொல்லி அனுப்பறேன்.”

நகர நாகரிகத்தின் போலிச் சாயங்கள் புரியாத காரணத்தால் அத்தனை தொலைவுக்கு ரிக்‌ஷாவில் பயணம் செய்வது கொஞ்சம் தயங்க வேண்டிய காரியம் என்பதைக் கூட முத்துராமலிங்கம் உணரவில்லை.

ஆனால் அதற்கு என்ன செலவாகுமோ என்று மட்டுமே அவன் தயங்கினான்.

”அண்ணன் நடந்தே போய்ச் சேர்ரத்துக்குள்ளாரப் பாக்க வேண்டிய ஆளு வெளியே போனாலும் போயிறலாம். இங்கே மெட்ராஸ்லே உத்தியோகம் பாக்கற பெரிய மனுஷங்களைப் பார்க்கணும்னாக் காலையிலே ஒம்பது ஒம்பதரைக்குள்ளாரப் போயிரணும். இல்லாட்டி, வீட்டிலே அவுங்களைப் பார்க்க முடியாது.”

”அப்பச் சரி? நமக்குத் தோதுபடற வாடகையைப் பேசுங்க... என் கையில் வசதி அதிகம் இல்லே.”

”அடடே! அதுவா சங்கதி? நம்ம ஆளுக்கு ஒரு கஷ்டம்னா நாங்க விட்டுடுவமா? செலவுக்குப் பத்தாட்டி நான் தாரேன் அண்ணே! எங்கிட்ட வாங்கிப்பீங்கள்ளே...”

”இப்ப வேணாம்! அவசியம்னாக் கேட்டு வாங்கிப்பேன்.”

கண்மணி ரிக்‌ஷாக்காரனோடு பேரம் பேசி அவனை இரண்டு ரூபாய்க்குச் சம்மதிக்க வைத்தாள். கட்சி அனுதாபம் கொஞ்சம் துணை செய்திருந்தது.

”ரெண்டு ரூபா குடுங்கண்ணே! இடம் விசாரிச்சுப் பத்திரமாக் கொண்டு போய் சேர்த்துடுவாரு.”

என்ன காரணத்தாலோ பிடிக்காத பெண்ணைக் கழுத்தில் கட்ட நேரும் ஒரு கலியாணத்து மணமகன் போல அந்தப் பெருநகரம், அதன் ஜன நெரிசல் சந்தடி ஆரவாரம் அனைத்தையும் வெறுக்கும் ஒட்டாத மனநிலையில் அப்போது இருந்தான் முத்துராமலிங்கம்.

திரும்ப லாரி புறப்படுகிற தினத்தன்று ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து சேர்ந்து கொள்ளும்படி கண்மணி அவனுக்கு ஞாபகப்படுத்தி அனுப்பினாள்.

சைக்கிள் ரிக்‌ஷா கடற்கரைச் சாலையிலே தெற்கு நோக்கிச் சென்று கிழக்குப் பக்கம் கடற்கரை மேட்டில் இந்த ஊரையே வெறுத்து அவசரமாக எங்கோ ஓடிப் போகிறாற் போலிருந்த ஒரு காந்தி சிலையருகே வந்ததும் மேற்குப் பக்கமாகத் திரும்பியது.

அந்த சைக்கிள் ரிக்‌ஷாக்காரன் பேசிய கலப்பு மொழியைப் புரிந்து கொள்வது முத்துராமலிங்கத்துக்குச் சிரமமாயிருந்தது. ரிக்‌ஷாக்காரன் போதையிலிருக்கிறானா, சுய உணர்விலிருக்கிறானா என்று கூட நிதானிக்க முடியவில்லை.

உட்புறம் பசும் பாய் விரித்தாற் போன்ற புல்வெளி உள்ள தோட்டத்துக்கு அப்பால் பங்களா இருந்த ஒரு காம்பவுண்டுக்கு முன்னால் ரிக்‌ஷா நின்றது.

”இந்த ஊடுதான் சார்.”

இரண்டு ரூபாய் வாடகையை எடுத்துக் கொடுத்து விட்டு சூட்கேஸுடன் இறங்கிய முத்துராமலிங்கத்தை ரிக்‌ஷாக்காரனின் குழைந்த குரல் தடுத்து நிறுத்தித் திரும்பிப் பார்க்க வைத்தது.

”எதினாச்சும் மேலே போட்டுக் குடு சார்!”

”உனக்குப் பேசின தொகையைக் குடுத்தாச்சே ஐயா! நான் எதுவும் கொறைச்சுத் தரலியே...”

”போட்டுக் குடு சார்...!”

முத்துராமலிங்கத்துக்கு இது புதிய அனுபவம். பேசிய பேச்சை மீறும் வாடிக்கை இரு தரப்பிலும் இல்லாத ஒரு பிரதேசத்திலிருந்து வருகிற அவன், வாக்கு - வாக்குச் சுத்தம் - வார்த்தை நாணயம் - வார்த்தையைக் காப்பாற்றுவது - இவை பற்றி எல்லாம் அதிக அக்கறை காட்டக்கூடிய சுபாவமுடையவன். அவனுக்கு ரிக்‌ஷாக்காரனின் கெஞ்சல் தர்மசங்கடத்தையும் தயக்கத்தையும் உண்டாக்கியது.

தற்செயலாக அப்போது உள்ளேயிருந்து விறைப்பாக நிமிர்ந்த நடையுடன் கனமான பூட்ஸ்கள் ஒலிக்க ஒரு கான்ஸ்டபிள் நடந்து வரவே, “சரி, நா வரேன் சார்” என்று ரிக்‌ஷாக்காரன் தானாகவே அவசரப்பட்டு நழுவி விரையலானான்.

”சர்க்கிள் குருசாமி சேர்வை வீடு இதுதானே?”

”ஆமாங்க... நீங்க யாரு?”

”அவங்களுக்கு வேண்டிய உறவுக்காரங்க குடும்பத்தைச் சேர்ந்தவன்... பார்க்கணும்.”

”உள்ளார இருக்காரு! போங்க” - கூறிவிட்டுக் கான்ஸ்டபிள் வெளியே சென்று விட்டான்.

தோற்றத்திலேயே மிரட்டவும், எதிரே நிற்கிறவர்களை விரட்டவும் முடிந்த மீசையோடு கூடிய ஒரு நடுத்தர வயது மனிதர் வீட்டு உடையில் சோபாவில் அமர்ந்து ஆங்கிலத் தினசரியை உன்னிப்பாகப் படித்துக் கொண்டிருந்தார்.

ஆண்பிள்ளைகள் போல் இறுக்கமான சட்டையும் ‘பெல்சும்’ அணிந்திருந்த இளம்பெண் ஒருத்தி மாமிச மலையாக வளர்ந்திருந்த உயரமான நாய் ஒன்றிற்கு ரொட்டித் துண்டை உயரே உயரே தூக்கிப் பிடிக்க நாய் இரண்டு காலில் ஊன்றிக் கொண்டு மற்ற இரண்டு கால்களையும் உயர்த்தி ரொட்டியைத் தாவிப் பிடிக்க எம்பி முயன்று கொண்டிருந்தது.

இந்நிலையில் எப்படிக் கூப்பிடுவது - யாரைக் கூப்பிடுவது என்று தயங்கி நின்றான் முத்துராமலிங்கம்.

புது ஆள் வாடையை உணர்ந்து விட்ட நாய் குபீரென்று உச்ச ஸ்தாயியில் குரைத்தபடி திரும்பி அவனை நோக்கிப் பாய்ந்தது.

”ஹாய் டைகர்! கீப் கொயட்” என்று அப்போது அந்தப் பெண் அதைக் கூப்பிட்டுத் தடுத்தாள்.

அத்தியாயம் - 4

அவர் தான் குருசாமி சேர்வையாக இருப்பார் என்று முத்துராமலிங்கம் கருதிய மீசைக்கார மனிதர் ஆங்கிலத் தினசரியைப் படிப்பதிலிருந்து விலகி நிமிர்ந்து அவனைப் பார்த்தார். ‘பெல்ஸ்’ அவனை ஏதோ அபூர்வமான அதுவரை பார்த்திராத காட்டு மிருகம் ஒன்றைப் பார்ப்பது போல் பார்த்தது.

“ஹூம் டு யூ...” என்று தொடங்கி அப்புறம் இந்த ஆளுக்குத் தமிழில் கேட்டாலே போதுமென்று முடிவு செய்து கொண்டாற் போல், “யாரப்பாது? என்ன வேணும்?” - என்று கேட்டார் அவர்.

சாதாரணமாகக் கேட்ட போதே அதிகார தோரணையில் ஒரு குற்றவாளியை விசாரிப்பது போன்ற போலீஸ் கெடுபிடி தொனிக்கும் விசாரணைக் குரலாக இருந்தது அது.

“நான் ஆண்டிப்பட்டி - பசுங்கிளித் தேவரோட சன் சார்! இன்னைக்கிக் காலையில தான் இங்கே மெட்ராசுக்கு வந்தேன். அப்பாரு உங்களைப் பார்க்கச் சொல்லி லெட்டர் கொடுத்தனுப்பிச்சிருக்காரு சார்!”

போலீஸ் உயர் அதிகாரிகளின் முகமும் குரலும், இப்படித்தான் இருக்கும் - இருக்க வேண்டும் என்று மக்களிடம் ஏற்பட்டுவிட்ட குரூர உருவகத்தின் நிதர்சனம் போல் அவரது முகத்தில் புருவங்கள் ஏறி இறங்கிச் சுருக்கம் காட்டின. ஓர் அம்புப் பார்வையால் அவனைத் துளைத்தார் அவர்.

“கட்டுக்காவல் இல்லாம வாசக்கதவு தொறந்து கிடந்தா அந்தப் பட்டி இந்தப் பட்டி அவரோட மகன் இவரோட மகன்னு இப்பிடித்தான் யாராச்சும் உள்ளாரப் புகுந்துடறாங்க...”

முத்துராமலிங்கத்துக்குச் சுரீரென்று உறைத்தது. இங்கிதமும், மனிதாபிமானமும், பண்பாடுமில்லாத முரட்டு அதிகார வர்க்கத்தின் பிரதிநிதி ஒருவரை எதிரே சந்தித்தாற் போலிருந்தது.

எதற்கும் தந்தையின் கடிதத்தைக் கொடுத்துப் பார்க்கலாம் என்று பொறுமை இழந்து விடாமல் முயன்று பார்க்க நினைத்தான் அவன்.

சட்டைப் பையிலிருந்த கடிதத்தை எடுத்தான். அவர் அதைப் பார்க்காததைப் போல உட்பக்கமாக எழுந்து போய்விட்டார். நாயைக் கட்டிப் போட்டுவிட்டு அந்தப் பெண்ணும் உள்ளே போய்விட்டாள்.

நாய் அவன் காதைக் கிழிக்கிற குரலில் கத்திக் குரைக்கத் தொடங்கியது. தொடர்ந்து அங்கே நிற்பதா போவதா என்று அவனுக்குப் புரியவில்லை.

எதிரே வந்து நிற்கிற எந்த நாகரிகமான மனிதனையும் பிச்சைக்காரனாகவும், குற்றவாளியாகவும், தன்னை விடத் தாழ்ந்தவனாகவும் நினைக்கிற அற்ப மனப்பான்மை இந்திய அதிகார வர்க்கத்தின் புராதனமான குணங்களில் ஒன்றாக இன்னும் அப்படியே இருப்பதை அவன் கண்டான். மனம் கொதித்தது. சிரமப்பட்டு அடக்கிக் கொள்ள வேண்டியிருந்தது.

சராசரி இந்திய ‘புராக்ரட்’ என்பவன் இன்னும் ஒரு தனி ஜாதி என்றால், போலீஸ் அதிகாரிகள் அதில் மற்றொரு தனி ஜாதியாக இருந்தார்கள். எதிரே தென்படுகிற அனைவரையும் குற்றவாளிகளாகவும், கீழானவர்களாகவும், அற்ப ஜீவிகளாகவும், நினைக்கிற அவர்களது தாமச குணம் சுதந்திரமடைந்து முப்பதாண்டுகளுக்குப் பிறகும் போகவில்லை. பொதுமக்களின் சேவகர்கள் தாங்கள் என்ற எண்ணம் வராமல் பொதுமக்கள் தங்களுடைய சேவகர்கள் என்ற எண்ணமுள்ள அதிகார வர்க்கம் எந்த நாட்டில் இருக்கிறதோ அந்த நாட்டில் அடிமைத்தனம் நிரந்தரமாகவே கொலு இருந்து கோலோச்சி வாசம் செய்யும் என்று தோன்றியது.

மறுபடி சர்க்கிள் முன்பக்கமாக வந்தார்.

“சார் இந்த லெட்டரை...” என்று முத்துராமலிங்கம் தான் தொடங்கிய வாக்கியத்தை முடிக்காமல் அவர் கவனத்தைக் கவர முயன்று கொண்டிருக்கையில், வேலைக்காரன் ஒருவனைக் கூப்பிட்டு, “ஆஸ்க் ஹிம் டு கெட் அவுட்” - என்று அவர் இரைந்தார்.

“சார்! உங்க பழைய நண்பர் ஆண்டிப்பட்டிப் பசுங்கிளித் தேவர்...”

“எனக்கு எந்தத் தேவரையும் தெரியாது. எடத்தைக் காலி பண்ணுப்பா... தெனம் இப்பிடி நூறு பேர் தேடி வராங்க... உங்களுக்கெல்லாம் வேற வேலையில்லையா என்ன?”

பொறுமை இழப்பதைத் தவிர முத்துராமலிங்கத்துக்கு வேறு வழி இல்லை.

தன் இனத்தில் ஒரு பெரிய மனிதர் என்ற எண்ணத்திலும், பழைய சிநேகிதத்திலும் தந்தை இவருக்குக் கடிதம் கொடுத்தனுப்பியிருக்கிறார். ஆனால் இவரோ ஒன்றுமே தெரியாதது போல நடித்துக் கடிதத்தையே வாங்க மறுக்கிறார். ஒவ்வோர் இனத்திலும் அடித்தளத்தில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிற வர்க்கத்திலிருந்து உதவிகளும், உபகாரத் தொகைகளும் பெற்றுப் படித்துப் பணம் பதவி வசதியான வாழ்க்கை எல்லாம் அடைந்து மேல் தட்டுக்குப் போய்விட்டவன், அதற்குப் பின் அந்த உயரமான இடத்திலேயே இன்னொரு தனி உயர் ஜாதியாகி விடுகிறான். அவன் தான் எங்கிருந்து வந்தோமோ அந்த மக்களுடன் தன்னைச் சேர்த்து நினைக்கவே கூசுகிறான். தன்னைப் போல் வசதியும் பதவியுமுள்ளவர்களோடு மட்டுமே அதன் பின் தன்னைச் சேர்த்து நினைக்கப் பழகிக் கொள்கிறான் என்று புரிந்தது.

அந்தஸ்தும் பணமும் பதவிகளுமே இன்றைய புதிய ஜாதிகளைப் பிரிக்கின்றன என்று தோன்றியது. சராசரி இந்தியக் கிராமவாசியின் துரதிருஷ்டங்கள் பல. அவன் தேர்ந்தெடுத்து அனுப்புகிற அரசியல்வாதி தான் மேலே போனதும் அவனுக்குத் துரோகம் செய்கிறான். அவன் உருவாக்கி மேலே அனுப்புகிற உத்தியோக வர்க்கம் மேலே போனதும் அவனைப் புறக்கணிக்கிறது. அவன் உருவாக்கி அனுப்பிய பண்டங்களை நகருக்குப் போய் அவனே மீண்டும் வாங்கும் போது அதன் விலை அவனுக்கு எட்டாததாயிருக்கிறது.

முத்துராமலிங்கம் தன் தந்தையின் அந்தக் கடிதத்தை ஒரு தபால்காரன் போட்டுவிட்டு வருவதைப் போல அந்த வீட்டு முகப்பில் வீசிப் போட்டுவிட்டு வெளியேறினான். நகரில் இறங்கியதுமே அதன் மேல் ஏற்பட்ட வெறுப்பு - ஏக்கம் - கசப்பு எல்லாம் இன்னும் அப்படியே தொடர்வது போலிருந்தது.

அந்தப் பெருநகரம் புதிதாக வருகின்ற பாமரனுக்கு அது அளிக்கும் அலட்சியம், தோல்வி - முடிவான ஏக்கம் - எல்லாவற்றையும் மீறி அதை அடக்கி வெல்ல வேண்டும் போன்ற துடிப்பு இளைஞனான அவனுக்கு ஏற்பட்டது; எது எது எல்லாம் தன்னை அலட்சியப்படுத்தி ஏங்க வைக்கிறதோ அதை எல்லாம் உடனே முரட்டுத்தனமாக ஜெயித்து அடக்கி வெற்றிக் கொடி நாட்டி விட வேண்டும் போன்ற இளமைத் துறுதுறுப்பில் அவன் இருந்தான். ரிக்‌ஷாவில் தான் வந்த அதே வழியே திரும்பி நடந்தான் அவன். கிழக்கே போய்க் கடற்கரைச் சாலையில் திரும்பி மீண்டும் வடக்கு நோக்கித் திரும்பினான். காலில் அணிந்திருந்த செருப்புக்களில் ஒன்று நூலிழையில் அறுவதற்குக் காத்திருந்தது.

கடற்கரைச் சாலையில் வரும்போது இருந்ததை விட இப்போது கலகலப்பு அதிகமாயிருந்தது. வடக்கு நோக்கிக் கார்களும், சைக்கிள்களும் ரிக்‌ஷாக்களும் அதிக அளவில் விரைந்து கொண்டிருந்தன.

கால் செருப்புக்களில் ஒன்று இன்னும் சிறிது நேரத்தில் தன்னை கைவிட்டுவிடும் என்ற உணர்ச்சி முத்துராமலிங்கத்திற்கு எரிச்சலூட்டியது.

தலைநகரத்தில் இறங்கிய விநாடியிலிருந்து தனது துரதிர்ஷ்டங்கள் ஒவ்வொன்றாகத் தொடங்குவது போல் அவனுக்குத் தோன்றியது. கடிக்கப் படமெடுக்கும் ஒரு பாம்பை அடிக்க விரைவது போல் அந்தத் துரதிர்ஷ்டங்களை அடித்து நொறுக்கி விட வேண்டும் என்று முனைப்பாயிருந்தான் அவன்.

அதிகாலையில் பல் துலக்கிவிட்டு வழக்கமாக மென்று தின்னும் ஒரு கை வேப்பங்கொழுந்தை இன்று இன்னும் சாப்பிட முடியவில்லை. நேற்றுப் பொழுது சாய்கிற நேரத்துக்கு லாரியில் சென்னைக்குப் பயணம் செய்து வருகிற போது கூட ஒரு சாலையோர வேப்ப மரத்தில் அந்த ஆவலை நிறைவேற்றிக் கொள்ள முடிந்திருந்தது. ஆனால் சுற்றுமுற்றும் எங்கும் கசப்பே நிறைந்திருந்த சென்னை நகரத்தில் அவன் கண்களில் கொழுந்து பறித்து மென்று தின்ன இசைவாக இன்னும் ஒரு வேப்ப மரம்கூடப் படவில்லை.

இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போதே வேப்ப மரம் தென்பட்டுவிட்டது. குயின் மேரீஸ் காலேஜ் - ராணி மேரிக் கல்லூரி - என்று ஆங்கிலத்திலும் தமிழிலுமாக எழுதிப் பெயர்ப் பலகை நிறுத்தியிருந்த ஒரு காம்பவுண்டுச் சுவரின் உட்புறம் வேப்பமரம் ஒன்று தென்பட்டது.

வெளியிலும், உள்ளேயுமாகப் பட்டாம்பூச்சிகள் போல் கும்பல் கும்பலாக மாணவிகள் தென்பட்டார்கள். கல்லூரி தொடங்குகிற நேரம் போலிருக்கிறது.

வேப்ப மரத்துக்காக விரைந்தபோது அவனுடைய செருப்பு அறுந்து காலை வாரி விட்டது. இரண்டு செருப்பையுமே தெரு ஓரமாக வீசி எறிந்துவிட்டு வெறுங்காலோடு நடக்கலாமா அல்லது நன்றாயிருக்கிற மற்றொரு செருப்பை உத்தேசித்து அறுந்து போனதையும் சேர்த்துக் கையிலெடுத்துக் கொண்டு செருப்புத் தைக்கிற ஆளைத் தேடலாமா என்றெண்ணித் தயங்கிய முத்துராமலிங்கம் அடுத்த கணமே அரைகுறையாக உபயோகமிழந்தை பண்டத்தை அறவே தூக்கி எறிகிற பெருநகர மனப்பான்மைக்குத் தயாராகியிராத காரணத்தால் மற்றொரு செருப்பையும் சேர்த்துக் கையிலே எடுத்துக் கொண்டு வேப்ப மரத்தை நோக்கி நடந்தான்.

திடீரென்று ஒரு காரணமுமில்லாமல் அவனருகே கும்பலாக நின்றிருந்த கல்லூரி மாணவிகளின் கூட்டம் அவனைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தது.

வீண் பிரமையாக இருக்கும் என்ற எண்ணத்தோடு மேலே நடக்க முயன்றவனை, “ஹீரோ வித் ப்ரோக்கன் சப்பல்ஸ்” என்ற கீச்சுக் குரல் சொற்கள் காதில் விழுந்து தடுத்தன. முத்துராமலிங்கத்துக்கு அந்த நிலையைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

தனியாக அகப்பட்டுக் கொள்ளும் இளம் பெண்ணிடம் கூட்டமாக வாலாட்டும் ஆண் பிள்ளைகளை அவன் அறிவான். கூட்டமாக நிற்கும் பெண்களுக்கு நடுவே பெண்களை விட நாணிக்கோணி நெளியும் தனியான ஆண்களையும் அவன் அறிவான். அவன் இரண்டு வகையிலும் சேராதவன்.

உலகில் பெண்களைக் கண்டு நாணிக் கூசும் ஆண்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களால் ஆண்மைக்குப் பெருமை இல்லை. ஆண்கள் நாணிக் கூசும்படி ஒளிவு மறைவில்லாத பெண்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களால் பெண்மைக்குப் பெருமை இல்லை.

பெண்களைப் பொறுத்தவரை முத்துராமலிங்கம் சங்கோஜியும் இல்லை. வெட்கம் கெட்ட முரடனுமில்லை.

அப்படியே கையில் அறுந்த செருப்பை எடுத்துக் கொண்டு நேரே அந்தப் பெண்கள் கூட்டத்தை நோக்கி நடந்தான். அவன் நடையில் தயக்கமோ பதற்றமோ ஒரு சிறிதுமில்லை.

“இதைப் பார்த்து என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கிறது? இப்படி இன்று எனக்கு நேரலாம். நாளை உங்களுக்கும் நேரலாம். நடுத்தெருவிலே சகமனுஷன் ஒருத்தனுக்குக் கஷ்டம் வந்தா அதைப் பார்த்துச் சிரிக்கிறதுங்கிற காட்டுமிராண்டித்தனம். ஆர் யூ நாட் அஷேம்டு?”

அவர்கள் இதைக் கேட்டு அவனுக்கு மறுமொழி கூறாமல் தங்களுக்குள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். யாருக்கும் இப்போது சிரிக்க வரவில்லை. அதில் ஒரே ஒரு பெண் மட்டும் சிறிது மௌனத்துக்குப் பின் தயங்கித் தயங்கி மெல்ல “ஸாரி...” என்றாள். மற்றவர்கள் இடித்த புளி மாதிரி நின்றார்கள்.

“உங்களிலே யாராவது ஒருத்தர் நடுத்தெருவிலே மானபங்கப்பட்டு நின்னீங்கன்னு வெச்சுக்குங்க, நான் சரியான ஆம்பிளையா இருந்தா அதைப் பார்த்துச் சிரிச்சு இரசிக்க மாட்டேன். உடனே உங்க மானத்தைக் காப்பாத்தறது எப்படீன்னு தான் முதல்லே யோசிப்பேன்.”

அவனது அந்த முகத்திலிருந்த உண்மை ஒளியையும், குரலில் இருந்த தீர்மானத்தையும் பார்த்து அவர்களுக்கு ஒன்றும் பேச வரவில்லை. சற்று முன் சிரித்த அத்தனைப் பெண்களும் அப்படியே பயந்து கட்டுண்டு நிற்பது போல் மிரண்டு நின்றார்கள்.

“சிரிச்சதுக்காக நான் உங்களை மன்னிச்சிடலாம்! நீங்க என்னிடம் அப்படி மன்னிப்புக் கேட்கலைன்னாலும் நான் உங்களை மன்னிச்சித்தான் ஆவணும். ஆனால் நாகரிகம் உங்களை மன்னிக்காது. போங்க காலேஜ் மணி அடிக்குது... நேரமாச்சு.”

அவர்கள் போய் விட்டார்கள். சென்னை போன்ற பெருநகரங்களில் புறப்பட்டுக் கொண்டிருக்கிற ஒரு ரயிலில் அவசரத்தில் அள்ளித் திணித்தாற்போல்தான் மனிதர்களும் குணங்களும், மற்றவையும் நெருக்கடியோடு தாறுமாறாக இருந்தன. ஒழுங்கற்ற எதிலும், எதற்கும் எதனாலும் கட்டுப்படாத இந்தப் பெருநகர மனப்பான்மை அவனுக்கு எரிச்சலூட்டியது.

ஒரு கை வேப்பங்கொழுந்தைப் பறித்து மென்று தின்ற போது உணர முடியாத கசப்பைக் குருசாமி சேர்வை வீட்டு அநுபவத்திலிருந்து கல்லூரி மாணவிகளின் அநுபவம் வரை ஒவ்வொன்றாக அவனை உணர வைத்தன.

ஆனால் அந்தக் கசப்பு அவனைச் சோர்ந்து நலிய வைப்பதற்குப் பதில் அதிக உறுதியுள்ளவனாக்கியது.

அத்தியாயம் - 5

மனத்தின் கசப்புக்களை மறந்தவனாக வலது கைப் பக்கம் மிக அருகில் மணல் வெளியைக் கடந்து வெள்ளிப் பணமாக மின்னும் கடலைப் பார்த்தான் முத்துராமலிங்கம். உடனே உற்சாகத்துக்கும் வியப்புக்கும் பஞ்சமில்லாத குழந்தையாக மாறினாற் போலிருந்தது. வேறு பிணிப்புக்களிலிருந்து மனம் தானே கழன்று நீங்கி அந்த அழகில் இலயித்தது. பதிந்தது. கலந்தது.

கடலையும் மலையையும் பார்க்கும் போது மனம் விசாலமடையும் என்று எங்கோ படித்திருந்தது நினைவு வந்தது. தினசரி கடலைப் பார்க்கிற வாய்ப்புப் பெற்றிருந்தும் போலீஸ் அதிகாரி குருசாமிசேர்வைக்கு மனம் ஏன் இப்படிக் குறுகிப் போயிற்று என்று அவனுக்குப் புரியவில்லை.

சுற்றும் முற்றும் தினசரி கண்களில் அழகுகளைப் பொறுத்தவரை அவற்றைக் கவனிக்கவோ, பொருட்படுத்தவோ நேரமின்றி மனிதர்கள் மரத்துப் போகிறார்கள் என்று புரிந்தது. யாருக்கு மரத்துப் போகிறதோ அவர்களால் இயங்க முடியாது. யாருக்கு திகட்டுகிறதோ அவர்களால் எதையும் கலைக்க முடியாது. இயற்கை அழகு, இரக்கம், மனிதாபிமானம் இவற்றைப் பொறுத்தவரை அந்த நகரம் முழுவதுமே மரத்துப்போயும், திகட்டிப் போயும் இருப்பதாகப்பட்டது.

அங்கே எவருக்கும், யாரையும் நின்று கவனிக்க நேரமில்லை. ஏதோ ஒரு போர்க்களத்தில் எதற்கோ விரைவது போல் மனிதர்கள் விரைந்து கொண்டிருந்தார்கள்; அடுத்தவர் கவலைகளையோ, பிரச்னைகளையோ திரும்பிப் பார்க்க அவகாசமோ, அவசியமோ இல்லாத வகையில் அவரவர்களுக்கே போதிய பிரச்னைகளும், கவலைகளும் இருந்தன. இரத்தமும் சதையுமாக இயங்கும் ‘ஹ்யூமன் கம்ப்யூட்டர்களாக’ மனிதர்கள் இயங்கிக் கொண்டிருந்தார்கள் போல் தோன்றியது.

அந்த வேகத்தோடும், பரபரப்போடும், அவசரத்தோடும் உடனே கலக்க முடியாதபடி தன்னை ஏதோ தடுப்பது போல் உணர்ந்தான் முத்துராமலிங்கம். ‘அர்பனிஸேஷன்’ என்று சொல்லுகிறார்களே அந்த ‘நகர மயமாக்குதல்’ தன்னிடம் இன்னும் நிகழவில்லை என்பதாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

கல்லூரியில் படிக்கிற நாளிலிருந்து இந்தக் குருசாமி சேர்வைக்குத் தன் தந்தை புரிந்திருப்பதாகச் சொல்லிய உதவிகளும் உதவிய சந்தர்ப்பங்களும் நினைவு வந்தன. அதே குருசாமி சேர்வை இன்று தன்னை உதாசீனப்படுத்தியதும் தன் தந்தையின் கடிதத்தை அலட்சியப்படுத்தியதும் அவனுக்கு எரிச்சலூட்டின.

சர்க்கார் உத்தியோகத்துக்குப் போன பின் ஒருவர் விசுவாசம், பழமை பாராட்டல், எல்லாவற்றையும் கட்டிக் காப்பது சிரமசாத்தியமானதாயிருக்கலாம். தெரிந்தவர்கள், வேண்டியவர்கள், உறவினர்கள், இவர்களைக் காண்பதிலும், பேசுவதிலும், சொந்தம் கொண்டாடுவதிலும் உபசரிப்பதிலும் சராசரி இந்தியக் கிராமவாசியின் இயல்பான அக்கறை நகரவாசிக்கு இருப்பதில்லை. கிராமவாசி எதிலும் செயற்கையாயிருக்க முயலுவதில்லை. எதிலும் அரைகுறை அக்கறையோ முழு அக்கறையின்மையோ காண்பிக்க முயலுவதில்லை. ஆனால் நகரவாசியோ எல்லாப் பாசாங்குகளிலுமே தேர்ந்தவனாக இருக்கிறான். எதிலும் செயற்கையாயிருக்கிறான். ஒவ்வொரு கிராமவாசியும் சென்னை, பம்பாய், கல்கத்தா, டில்லி போன்ற நகரத்துக்கு வரும் போது தான் மனித உறவுகளை மதிக்காத செயற்கையான - போலியான சூழ்நிலையின் இடையே இருப்பதாக உணர்கிறான்.

சர்க்கிள் குருசாமி சேர்வையைச் சந்தித்த பின் முத்துராமலிங்கமும் அதே மனநிலையில் தான் இருந்தான். நகரம் என்பது ஏமாற்றக்கூடிய கலையில், விசுவாசத்தை இழக்கக் கூடிய கலையில் கைதேர்ந்து முதிர்ந்திருப்பதாக அவனுக்குப் புரிந்தது. அங்கு யாரும் நன்றி விசுவாசங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவில்லை.

நவீன அரசியல் பிரம்மோற்சவமாகிய பதவி ஏற்பு வைபவத்துக்காகத் தலைநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கும் கட்சித் தோரணங்கள், சுவரொட்டிகள், ‘வென்றது போதுமா? இன்னும் வேண்டுமா?’ - என்ற வாசகங்களைச் சுமந்த சுவர்கள், என்று, ஒரே கோலாகலத்தில் திளைத்திருந்தது நகரம். நகரமே வெறும் கோஷங்களாலும் சுவரொட்டிகளாலும் நிரம்பியிருந்தது. கல்லூரிக்குள் ஒடித்த வேப்பங்கிளையின் சிறு குச்சியினாலேயே பல் விளக்கிவிட்டுக் கடற்கரை உள்மணலில் இறங்கிய போது மணல் பள்ளம் ஒன்றில் ஊற்றுப் போல் தோண்டிப் பானையில் சேகரித்த நீரை ஒரு கிளாஸ் ஐந்து பைசா வீதம் விற்றுக் கொண்டிருந்த ஓர் ஆளிடம் இரண்டு கிளாஸ் தண்ணீர் வாங்கிப் பல்துலக்கிக் கொள்ள முடிந்தது.

பச்சைத் தண்ணீருக்குப் பத்துப் பைசாவைச் செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட போதே தான் இருப்பது சென்னை நகரம் என்று உறைத்தது முத்துராமலிங்கத்துக்கு. மறுபடி நடந்து ஐஸ்ஹவுஸும் திருவல்லிக்கேணியிலிருந்து கடற்கரையை நோக்கி வரும் சாலையும் சந்திக்கும் முனையில் பாதையோரத்து மேடையில் ஆப்பக் கடை போட்டிருந்த ஆயா ஒருத்திக்கு முன்னால் குத்த வைத்து உட்கார்ந்தான் முத்துராமலிங்கம். கொஞ்சம் நாகரிகமாக உடையணிந்த, சூட்கேஸுடன் கூடிய ஓர் இளைஞன் தன் கடை முன் குத்த வைத்து உட்கார்ந்தது அந்தக் கிழவிக்கே ஆச்சரியத்தை அளித்தது.

ஆனால் நகரவாசி அல்லாதவனுக்கே உரிய முன் ஜாக்கிரதையுடன் அவன் அப்பம், இட்லி வகையறாக்களின் விலையை விசாரித்த போதோ கிழவி முத்துராமலிங்கத்தை ஒரு தினுசாகப் பார்த்தாள்.

பின்பு அவள் நசுங்கிய அலுமினியத் தட்டில் வைத்துக் கொடுத்த இரண்டு ஆப்பங்களையும் இரண்டு இட்லியையும் சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்ட போது வெயில் சுள்ளென்று உறைக்க ஆரம்பித்திருந்தது.

சாலைகள், பூங்காக்களின் முகப்பு மைதானம், தெரு முனை எங்கு பார்த்தாலும் கொடிகள், துணி பேனர்களுடன் வெளியூரிலிருந்து வந்திருந்த லாரிகள், பஸ்கள் வேன்கள் தான் தென்பட்டன. எங்கே வந்தோம் எதற்காக வந்தோம் என்று புரியாத கூட்டம் நிரம்பி வழிந்தன. தேச பக்தியும், விவேகமும் நாட்டு நிலையும் புரிந்த யாராவது ஒரு தலைவன் மட்டும் இத்தனை பேரையும் ஒருநாள் ஓரிடத்தில் ஒன்று சேர்த்து ஓர் உருப்படியான காரியத்துக்காக உழைக்க வைக்க முடியுமானால் பல மைல் நீளம் ஒரு கால்வாயை வெட்டிவிடலாம். பெரியதொரு நீர்த்தேக்கத்துக்கான அணையைக் கட்டி விடலாம். ஆனால் இன்றைய இந்தியத் தலைவர்கள் தங்களுக்குக் கைதட்ட என்றே கோடிக்கணக்கான மக்களை ஒன்று திரட்டுகிறார்கள். நாட்டுக்கு உழைக்க என்று அவர்களை ஒன்று திரட்டுவதில்லை.

மாநிலக் கல்லூரி என்று பெயர்ப் பலகை தெரிந்த ஓரிடத்தில் அவன் சிறிது நின்றான். உள்ளே தென்பட அதிகம் கவனிப்பாரற்றிருப்பது போன்ற ஒரு சிலையை நிதானமாகப் பார்த்தான். தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் சிலை. ஆயிரக்கணக்கான தமிழர்கள் அதைப் பார்க்காமலே போய்க் கொண்டிருந்தார்கள். அவரை நிமிர்ந்து பார்க்கத் தோன்றாமலே அதே பாதையில் வடக்கு நோக்கியும் தெற்கு நோக்கியும் விரைந்து கொண்டிருந்தார்கள்.

வழியருகே மிகப் பக்கத்தில் அமைதியாக நிற்கும் புண்ணிய சீலர்களையும், தெய்வங்களையும் கவனிக்காமல் எங்கோ தொலை தூரத்தில் இருப்பதாகக் கற்பித்துக் கொண்ட கானல் நீர் போன்ற யாரையோ எதையோ நோக்கித் தமிழ் மக்கள் ஓடிக் கொண்டிருப்பதாக அவனுக்குப் பட்டது. தன்னைப் போல் பல்லாயிரம் மாணவர்கள் கற்பதற்காக என்றோ, போக்குவரத்து வசதிகளில்லாத குக்கிராமங்களுக்கு நடந்தும், கட்டை வண்டியேறியும் அலைந்தும் தமிழ்ச் சுவடிகளைத் தேடி வெளியிட்ட அந்தத் தமிழ் மூதறிவாளரைக் கை கூப்பி வணங்கினான் அவன்.

சுள்ளென்று வெயில் ஏறிவிட்டதால் பிடரியிலும் காதோரங்களிலும் வேர்வை பெருக்கெடுத்தது. ‘மாபெரும் தமிழ்ப் பேராசிரியராக விளங்கிய சாமிநாத ஐயரும் அன்றிலிருந்து தெருவில் நிற்கிறார். தமிழ் படித்து விட்டு வேலை தேடிப் பட்டினம் வந்த தானும் இன்று தெருவில் நிற்கிறோம். சுற்றியுள்ள சுவர்களிலெல்லாம் ‘தமிழ் வாழ்க’ என்று எழுதியிருக்கிறது. வேடிக்கைதான்!” என்று எண்ணி உள்ளூறச் சிரித்துக் கொண்டான் முத்துராமலிங்கம்.

அருகே இருந்த சாலையில் உட்பக்கமாகத் திரும்பி நடந்தான் அவன். அங்கேயே பிளாட்பாரத்திலிருந்த ஒரு பெட்டிக் கடைச் செருப்புத் தைப்பவனிடம் ஐம்பது காசு கொடுத்து அறுந்த செருப்பை ரிப்பேர் செய்து கொள்ள முடிந்தது. எதிர்ப்பட்டவர்கள் பேசிக் கொண்டதிலிருந்தும், சுவர்களே தெரியாமல் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களிலிருந்தும் புதிய மந்திரிசபை பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறதென்று தெரிந்தது.

கால் போன திசையில் நடந்து கொண்டிருந்தான் அவன். முன்னோர்களில் இராமநாதபுரம் சேதுபதி ஒருவரின் ஞாபகமாகவும் தந்தைக்குப் பிடித்த அபிமானம் நிறைந்த மாபெருந்தலைவரும், தேசபக்தருமான பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் மேலிருந்த பிரியத்தாலுமே அவனுக்கு முத்துராமலிங்கம் என்று பெயரிட்டதாகத் தந்தையே அவனிடம் பலமுறை சொல்லியிருக்கிறார்.

தென்னாட்டுச் சிங்கமாகத் திகழ்ந்த தேவரின் நினைவு வந்ததும் அவனுக்கு உடம்பு புல்லரித்தது. மதுரையில் தேவர் அமரரான தினத்தன்று சிறுவனான தன்னை அழைத்து வந்து குடும்பத்தில் ஒரு பெரியவர் மறைந்தது போல் பாவித்து உணர்ந்து மொட்டையடித்த தந்தையின் பாசம் மிக்க செயல் அவனுக்கு ஞாபகம் வந்தது. அந்தத் தீரர் மறைந்த நாளில் அப்படிப் பல்லாயிரம் பேர் மொட்டையிட்டுக் கொண்டு கண்ணீருகுத்த காட்சியை நினைவுக்குக் கொண்டு வர முயன்றான். தேவரையும், காமராஜையும் போல் குடும்ப வாழ்வையே ஏற்காமல் பாடுபட்ட தலைவர்களையும், தனக்கு வேண்டிய பல குடும்பங்களைக் கட்டிக்காக்கவே அரசியலுக்கு வரும் இன்றைய தலைவர்களையும் இணைத்து எண்ணினால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெரிந்தது.

பெல்ஸ்ரோடில் திரும்பி வாலாஜா சாலை வழியே மவுண்ட் ரோடில் நுழைந்த போது ஒரு பெரிய இம்பாலா கார் எதிர்பக்கம் வருவது தெரிந்தது. கார் முகப்பிலும் உள்ளேயும் பிதுங்கும் ரோஜாப்பூ மாலைகள் தெரிந்தன. ஓரமாக நின்ற அந்தக் காரிலிருந்து மங்கையர்க்கரசியின் தந்தை - அன்று மந்திரியாகப் பதவி ஏற்றவர் - கீழே இறங்கி யாரிடமோ பேசினார். மங்கையர்க்கரசியும் இறங்கினாள். உள்ளே அவள் தாய் அமர்ந்திருந்தாற் போலிருந்தது.

பிளாட்பாரத்தில் நடந்து போய்க் கொண்டிருந்த ஒரு கும்பலில் வேண்டிய யாரோ சிலரிடம் பேசினார் மந்திரி. காரில் கட்சிக்கொடி பறந்து கொண்டிருந்தது. சுற்றி ஒரு கூட்டம் கூடி விடவே, தன்னை அவர்கள் பார்த்து விட முடியாமல், தான் அவர்களைப் பார்க்க முடிகிற மாதிரி ஓரிடத்தில் நின்று கவனிக்க முத்துராமலிங்கத்திற்கு மிகவும் வசதியாயிருந்தது.

‘தன் தந்தை மூலம் ஏதாவது சிபாரிசு செய்ய வேண்டுமானால் செய்வதாக’ - மங்கையர்க்கரசி மதுரையில் சந்தித்திருந்த போது கூறியிருந்தது நினைவு வந்தது. இப்போதும் கூட அந்த மாதிரிச் சிபாரிசை ஏற்கிற மனநிலையிலே அவன் இல்லை. அது அவனுக்குப் பிடிக்கவும் பிடிக்காது.

மங்கையர்க்கரசியின் தந்தையை அவன் மதிக்கத் தயாராயில்லை. அவர் சந்தர்ப்பவாதியாக அரசியலில் நுழைந்தவர். பிரிட்டிஷ்காரன் இருந்தவரை அவர் ஜஸ்டிஸ் கட்சி. காந்தியடிகளைக் கிண்டல் செய்தவர். சுதந்திரம் வந்த பின் அவர் காங்கிரஸ். அதற்குப் பின் எந்தெந்தக் கட்சி எப்போது ஆட்சி வசதியைப் பெற்றிருக்கிறதோ அந்தந்தக் கட்சிகளில் அவர் பெரும்புள்ளி.

சீட்டாட்ட மேஜையில் பணவசதியுள்ளவனே தொடர்ந்து ஆட முடிந்த மாதிரி அரசியல் சூதாட்டத்தையும் வகையாக ஆடிக் கொண்டிருந்தவர் அவர். எந்தக் கட்சியும் அவரை உள்ளே ஏற்கத் தயங்கவில்லை. பண வசதியுள்ள அயோக்கியனை ஏற்காமலிருக்கவும், பணவசதியற்ற யோக்கியனை ஏற்கவும் துப்பில்லாத பல அரசியல் கட்சிகளே நாட்டில் நிரம்பியிருந்தன என்பது நிதர்சனமாகத் தெரிந்தது. பகல் உணவை ஒரு மலிவுரக ஹோட்டலில் முடித்துக் கொண்டான்.

அங்கே திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள வெங்கடேசுவரா ஹாஸ்டலில் தங்கியிருந்த ஒரு மதுரை நண்பனின் முகவரி பையில் இருந்தது. தேடிச் சென்றான். ஊர் புதிதாகையினால் வழி விசாரித்துக் கொண்டே போக வேண்டியிருந்தது. நண்பனின் அறை பூட்டியிருந்தது. நண்பன் ஊரில் இல்லையா அல்லது வெளியே போயிருக்கிறானா என்கிற விவரமும் தெரியவில்லை. எங்கே போய் யாரைப் பார்ப்பது என்று உடனடியாகத் தோன்றவில்லை. இருட்டுகிற வரை காத்திருந்தது தான் மிச்சம். நண்பன் வரவில்லை. கலையரசி குமாரி கண்மணி தங்கியிருக்கப் போவதாகக் கூறிய லாட்ஜின் பெயர் நினைவிருந்தாலும் அங்கே போக அவனுக்கு விருப்பமில்லை. அரசியல்வாதிகள் தங்கியிருக்கும் அறை எந்த லாட்ஜில் இருந்தாலும் அது ஆஸ்பத்திரி ஜெனரல் வார்டு மாதிரி ஆரோக்கியமற்ற நெருக்கடி நிரம்பியதாக இருக்கும் என்பது அவனுக்குத் தெரியும்.

யோசித்தபடி சாலைகளில் திரும்பி நடந்து சந்து போலத் தோன்றிய ஒரு காம்பவுண்டுக்குள் நுழைந்த போது கொஞ்சம் இருட்டாயிருந்த ஒரு பகுதியிலிருந்து, “இன்னாப்பா பட்டை... வோணுமா” - என்று குரல் வந்தது. கேள்வியும் பட்டினத்துப் பைந்தமிழும் புரியாவிட்டாலும் குப்பென்று வீசிய சாராய வாடை புரிய வைத்தது.

“இது எந்தத் தெரு?”

“தெருவா?... யார்ராவன்...? இது கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாடுப்பா...”

முத்துராமலிங்கத்துக்குத் திகைப்பு எதுவும் ஏற்படவில்லை என்றாலும் வழி தவறி வந்துவிட்டோம் என்று தோன்றியது. அவன் திரும்ப முயன்றதும் உட்பக்கமாயிருந்து டார்ச் லைட்டுடன் வந்த மற்றொரு மனிதன், “இன்னாப்பா அவசரம்? உள்ளே வா” என்று இவனை அழைத்தான்.

“எனக்கு இங்கே வேலையில்லை...” என்று வெளியேற முயன்ற அவனை அவன் மீண்டும் வற்புறுத்தி,

“அட சும்மா வாப்பா! நீ இன்னா ‘பிஸினஸ்’னு நம்பளுக்குப் புரியாமயில்லே... வா... சொல்றேன்” என்றான். டார்ச் லைட் ஆள் என்ன கூறுகிறான் எதைப் பற்றிக் கூறுகிறான் என்று முத்துராமலிங்கத்துக்குப் புரியவில்லை.

அத்தியாயம் - 6

முத்துராமலிங்கத்தின் கையிலிருந்த சூட்கேஸை வாங்க முயன்றுகை நீட்டியபடியே,

“சரக்கு வந்திருக்கா? இன்னிக்கு சரக்கு வரவேண்டிய நாள்னுதான் நானே காத்திருக்கேன்” என்றான் அந்த ஆள்.

இதைக் கேட்டு முத்துராமலிங்கத்துக்கு மேலும் குழப்பம் அதிகமாகியது. அவர்கள் அங்கு வேறு யாரையோ எதற்கோ எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும் என்றும் தோன்றியது.

உள்ளே இரண்டொரு பிணங்கள் வேகும் நாற்றமும் புகைக் குமட்டலும் குடலைப் புரட்டின. கார்ப்பொரேஷன் விளக்குக் கம்பங்களில் பல்புகள் பறிக்கப்பட்டிருந்தன. பல்புகள் உள்ள கம்பங்களோ அழுது வடிந்தன.

சூட்கேஸை அந்த ஆள் வலிந்து பறிக்க முயலவே தன் வலிமை முழுவதையும் ஒன்று திரட்டி அப்படியே அவனை நெட்டித் தள்ளினான் முத்துராமலிங்கம். அந்த ஆள் பத்தடி தள்ளிப் போய் ஒரு மரத்தடியில் நிலைகுலைந்து விழுந்தான்.

“என்னா வாத்தியாரே; சரக்குக் கொண்டாரலைன்னா கொண்டாரலைன்னு சொல்றதுதானே? அதுக்குப் போயி இத்தினி கோவமா?”

“....”

“நாலஞ்சு நாளாக் கஷ்டமருங்க தேடி வந்து சும்மாத் திரும்பிப் போறாங்க. அதான் கொஞ்சம் அவசரப் பட்டுட்டேன்.”

முதலில் ஒன்றும் புரியாமல் குழம்பிய முத்துராமலிங்கத்துக்குப் பின்பு விஷயம் மெல்ல மெல்லப் புரிந்தது.

அந்தக் கும்பலுக்குக் கஞ்சாவும், அபினியும் கடத்திக் கொண்டு வந்து தருகிற ஒருவன், வழக்கமாக இதே போல் ஒரு சூட்கேஸுடன் இதே நேரத்துக்குத் தேடி வருவது உண்டென்றும், அவன் அனுப்பித்தான் இவன் வந்திருக்கிறான் என்று தன்னைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவுதான் தன்னை அப்படி அவர்கள் நடத்தக் காரணம் என்றும் விளங்கியது.

மற்றவர்கள் சாகும் இடமான மயானத்தில் அவர்கள் இப்படி வாழ்ந்து கொண்டிருப்பதை அவன் புரிந்து கொள்ள முடிந்தது.

இலேசாக மழை தூறத் தொடங்கவே அங்கிருந்த ஒரு பாழ் மண்டபத்தில் அவன் உட்கார வேண்டியதாயிற்று. யாரோ ஒருவருக்குச் சமாதி மண்டபமாகக் கட்டப்பட்டு இன்று பாழடைந்திருந்த அந்தப் பழைய கட்டிடத்தில் நாலைந்து பேர் நனையாமல் உட்காரப் போதுமான இடமிருந்தது.

மிக அருகில் பிணங்கள் எரிந்து கொண்டிருந்ததைப் பற்றிய பிரக்ஞையோ பாதிப்போ இல்லாமல் மனிதர்கள் கள்ளச் சாராயத்துக்கும், கஞ்சாவுக்குமாக சகஜமாய் அங்கே வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

ஒவ்வோர் இந்திய நகரத்திலும் ‘அண்டர்வோர்ல்ட்’, எனப்படும் கீழ் உலகம் ஒன்று இப்படி இயங்கி வந்தது. இந்தக் கீழ் உலகத்தின் உதவியும், அடியாள் வலிமையும், பண பலமும், அரசியல் கட்சிகளுக்குக் கூடத் தேவைப்பட்டன. அரசியலால் கிடைக்கிற சில இலகுவான லாபங்களும், பாதுகாப்பும் இந்தக் ‘கீழ் உலகத்துக்கும்’ அவ்வப் போது தேவையாயிருந்தன.

அப்போது மழை பெரிதாக வந்துவிட்டால், மேலே கூடாரமில்லாமல் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருக்கும் பிணங்கள் முற்றாக எரிய முடியாமல் போய்விடுமே என்கிற கவலையோடு மயானத்தின் வாட்ச்மேனும் அவனுடைய உதவியாளனும் தங்களுக்குள் அதுபற்றிப் பேசிக் கொண்டார்கள்.

செத்த பிறகும் சில நாழிகை நேரத்துக்கு மழையும், வெயிலும் மனித உடலைப் பாதிப்பதைப் பற்றி நினைத்த போது வேடிக்கையாகத்தான் இருந்தது முத்துராமலிங்கத்துக்கு.

வாட்ச்மேனும் அவனுடைய உதவியாளனும், “மழை வேற, பேஜாராப் போச்சு, இன்னைக்குத் தூங்கினாப்லத்தான்... டீக்குக் காசு குடுப்பா” - என்று சாராயப் பிரமுகனிடம் காசு கேட்டார்கள்.

“இந்த வாரத்துக்குள்ளாரவே உனக்குப் பதினஞ்சு ரூபாய்க்கு மேலே குடுத்தாச்சு! இனிமே ஒரு பைசாக் கூடப் பேராதுப்பா” - என்று கறாராக மறுத்தான் சாராய ஆள். வாட்ச்மேனோ அவனை மேலும் மேலும் விடாமல் கெஞ்சினான்.

வயிற்றுப்பாட்டுக்காக ஓர் எட்டணாக் காசு வேண்டும் என்று மன்றாடி அவன் தவிப்பதும் கறாரான வியாபாரி அதைத் தர மறுத்துப் பிடிவாதம் பிடிப்பதும் முத்துராமலிங்கத்துக்கு என்னவோ போலிருந்தன.

வலுவுள்ள ஒரு முரட்டு மனிதன் இன்னொரு நலிந்த மனிதனைக் கழுத்தைப் பிடித்து நெரிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாத இரக்க குணம் நிறைந்த மற்றொரு வலியவனைப் போல் தன்னளவில் அவனுக்கு உதவ வேண்டும் என்று உணர்ந்தான் அவன்.

ஒன்றும் பேசாமல் பையிலிருந்து ஓர் எட்டணாக் காசை எடுத்து அவனிடம் நீட்டினான் முத்துராமலிங்கம்.

அதைக் கையில் வாங்கிக் கொண்டு நன்றியுணர்வோடு, “சார்! உனக்கும் ஒரு ‘சிங்கிள்’ வாங்கியாரட்டா?” என்று முத்துராமலிங்கத்தை வினவினான் மயானக் காவல்காரன். முத்துராமலிங்கம் வேண்டாமென்று சொல்லவில்லை. அவனுடைய மௌனத்தைச் சம்மதமாகப் புரிந்து கொண்ட வாட்ச்மேன் டீ வாங்கி வரப் போனான்.

மரபுகளிலும், பாரம்பரியத்திலும், பழமையான பழக்க வழக்கங்களிலும் தழும்பேறிப் போன அவனுடைய கிராமத்தில் மயானத்தில் வைத்துச் சாப்பிடுவது கூடப் பாவம் என்று நினைப்பார்கள்.

இங்கோ, சர்வசகஜமாகச் சகல இடங்களிலும் நடக்கிற சகலமும் மயானத்திலும் நடந்து கொண்டிருந்தன. உண்பது, பருகுவது, உறங்குவது, வாழ்வது எல்லாமே மயானத்திலும் நிகழ்ந்து கொண்டிருந்தன.

ஒவ்வொரு பெரிய நகரமுமே ஒரு கலாசார மயானம் என்பதுதான் முத்துராமலிங்கத்தின் கருத்து.

பழைய கலாசாரங்களின் இடுகாடுகளாகவும், மூத்த பழக்க வழக்கங்களின் சுடுகாடுகளாகவும் இன்று புதிய பெரு நகரங்கள் இருந்தன.

சுயதன்மைகளையும், வாசனையையும், அடையாளத்தையும், ஆதாரத்தையும் இழப்பதற்குத்தான், ‘காஸ்மாபாலிடனாக’ இருப்பது என அழகான பெயர் சூட்டப்பட்டிருப்பதாகத் தோன்றியது.

இந்தியாவின் நாட்டுப்புறத்து ஊர்களில் மயானங்கள் என்பவை ஊரிலிருந்து விலகியிருக்கும். சென்னையைப் போன்ற நகரங்களில் பகுதிக்கு ஒரு கறிகாய் மார்க்கெட், பகுதிக்கு ஒரு கோயில், பஜார் என்றிருப்பது போல் மயானங்களும் இருந்தன. மயானங்களும், மனிதர்களும் அருகருகே இருந்தார்கள்.

‘வாட்ச்மேன் அழுக்கடைந்த அலுமினியம் டம்ளரிலே கால் டம்ளருக்குச் சற்றே அதிக அளவு இருக்கும்படி சுடச் சுடத் தேநீரை ஊற்றிக் கொண்டு வந்து கொடுத்தான்.

அந்த நேரத்துக்கு, அந்தச் சூழ்நிலையில் தேநீர் மிகவும் இதமாகவும் ருசியாகவும் இருந்தது.

கடற்கரைப் பக்கமிருந்து ஒலிபெருக்கிக் குரல்கள் காற்றில் மிதந்து வந்தன.

“மீட்டிங் போகலாம் வாங்கப்பா...” என்றான் சாராயப் பிரமுகன். அந்த மழைத்தூறலிலும் கடற்கரையில் வெற்றி விழாக் கூட்டம் பிரமாதமாக நடந்து கொண்டிருந்தது போலிருந்தது.

முத்துராமலிங்கத்துக்குப் பொதுக் கூட்டத்தைக் கேட்கப் போகும் ஆசையை விட வழி தெரிந்த அவர்களோடு கடற்கரைக்கு நடந்து போய்விட்டால் அப்படியே தங்கள் ஊரிலிருந்து வந்த லாரி நின்று கொண்டிருக்கிற இடத்தையும் கண்டுபிடித்து விடலாம் என்று தோன்றியது. அவனும் அவர்களோடு புறப்பட்டான்.

கடற்கரையில் இரவைப் பகலாக்கியிருந்தார்கள். எங்கு பார்த்தாலும் குழல் விளக்குகளின் ஒளி கண்ணைப் பறித்தது. அப்பாவி மக்கள் மழையில் நனைந்தபடி ஆட்டு மந்தையாகக் கூடி அர்த்தம் புரியாமலே கைதட்டியும் கேட்டும் மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

“வறுமையை ஓட ஓட விரட்டி வேலையில்லாத் திண்டாட்டத்தைத் திண்டாட வைத்து நாடெங்கும் சுபிட்சம் பொங்கச் செய்வோம். தெருவெல்லாம் தமிழ்ப் பேரறிஞர்களுக்குச் சிலைகள் வைப்போம். ஊரெல்லாம் பட்டி மன்றங்களும், கவியரங்கங்களும் நடத்துவோம். கூவம் நதிக்கரை எங்கணும் குளிர்பானக் கடைகளைத் திறந்து வைப்போம்” என்று மகத்தான ‘பொருளாதாரத் திட்டங்களை’ மேடையில் முழங்கிக் கொண்டிருந்தார் ஒரு பேச்சாளர்.

முத்தராமலிங்கத்துக்கு மனம் குமுறியது.

வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற அத்தியாவசியப் பிரச்னைகளைக் கூட முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக வெறும் பிரசங்கப் பண்டங்களாகவே வைத்திருக்கும் இந்நாட்டு அரசியல்வாதிகள் அத்தனைப் பேரும் கடைந்தெடுத்த எத்தர்கள் என்று அவனுக்குத் தோன்றியது.

எதை எதை ஒழிக்கப் போவதாக அவர்கள் ஒவ்வொரு பிரசங்கத்திலும் கூறிக் கொண்டிருந்தார்களோ அதை வைத்தே சொந்தப் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ளுமளவுக்கு இந்நாட்டு மக்கள் திராணியற்றவர்களாகப் போய்விட்டார்களே என்றும் கொதித்தான் அவன். பொருளாதாரத் திட்டங்கள் போட்டு மக்களையும் நாட்டையும் முன்னுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தங்களது பதவிக் காலத்துக்குள் ‘வெரைட்டி என்டர்டெயின்மெண்டுகள்’ போலவும் ‘ஃபேன்ஸி டிரஸ் காம்பெடிஷன்’ போலவும் எதை எதையோ நடத்தி வாண வேடிக்கை காட்டிவிட்டுப் போகிறார்களே என்று உறுத்தல் மக்களுக்கே இல்லாமல் போய்விட்டதே என்று தான் அவனுக்குக் கவலையாயிருந்தது.

“இப்போது நீங்கள் வெகுநேரமாக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கலையரசி குமாரி கண்மணி பேசுவார்” என்று ஒலிபெருக்கியில் பெயர் அறிவிக்கப்பட்டதும் ஒரே விசில்கள் மயமாக எழுந்து எதிரொலித்தன. கூட்டத்தில் ஆவலோடு கூடிய வரவேற்கும் முறையிலான கைதட்டல் ஒலிகளும் வெள்ளமாக எழுந்தன.

முத்துராமலிங்கம் ஜகஜ்ஜோதியாக மின்னிய மேடையை நிமிர்ந்து பார்த்தான்.

அந்த வெளிச்சத்தில் மைக்கின் முன் கண்மணி தேவலோக சுந்தரியாக வந்து நின்று மினுக்கினாள்.

“அண்ணன் அவர்களுடைய காலத்தில் தமிழகம் தலை நிமிர்ந்து நடக்கும். நேற்று வரை ஆட்சியை நடத்திய ருத்திராட்சப் பூனைகளின் ஜம்பம் இனிமேல் சாயாது. யானைகள் இன்று ஆள வந்திருக்கிறார்கள், ஞாபகம் இருக்கட்டும்.”

ஒரே கைதட்டல் மயம், காது கிழிபடுகிறாற்போல் விசில் ஒலிகள். கண்மணிக்கு அந்தக் கூட்டம் அப்படி ஒரேயடியாக வசியப்பட்டு மயங்கியது.

“பேசாம இந்தப் பொம்பளையையும் ஒரு மந்திரியாகவே போட்டுப்பிடலாம்! என்ன அமர்க்களமாப் பேசுது பார்த்தியா?”

இது முத்துராமலிங்கத்தின் அருகே நின்ற ஒருவர் வியந்து கூறியது. முத்துராமலிங்கத்தையே ஒரு விநாடி அந்தச் சொல்லலங்கார வேகமும், வசீகரமும் தன்னை மறக்கச் செய்தன.

மிக அழகிய சொற்றொடர்களும், அலங்கார வார்த்தைப் பந்தல்களும் செயல் மலட்டுத்தனத்தை மறைக்கும் போர்வைகளாகவே இந்நாட்டில் பயன்பட்டு வருகின்றன என்பதை அவன் முயன்று நினைவூட்டிக் கொள்ள வேண்டியிருந்தது. செயல்களைக் கவனிக்காமல் வெறும் பேச்சிலே மயங்கிச் சோரம் போகிற இந்த மக்களை யாரும் எதுவும் காப்பாற்ற முடியாது என்று உறுதியாக எண்ணினான் அவன்.

கண்மணியின் பேச்சு அருவியாகக் கொட்டிக் கொண்டிருந்தது! மழையாகப் பொழிந்து கொண்டிருந்தது. மக்கள் மயங்கிக் கட்டுண்டு கேட்டுக் கொண்டிருந்தார்கள். அர்த்தம் புரியாமலே அடங்கிப் போய்ச் செவிமடுத்துக் கொண்டிருந்தார்கள்.

“நாளைக்கு எளிமையாக வாழ்வது எப்படி என்று மக்களை இன்று பயிற்றுவிக்க ஏழு கோடி ரூபாய்ச் செலவில் ஒரு திட்டம் தீட்டப் போகிறோம். வேலையில்லாத் திண்டாட்டத்தையும், ஏழ்மையையும் ஒழிப்பதற்கான பிரச்சார நாடகங்கள் போடப் பல கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறோம்.”

இதைக் கேட்டு முத்துராமலிங்கத்துக்குச் சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை.

மூன்று பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றவர்களுக்கே வேலை இல்லை. இன்னும் முப்பது பல்கலைக் கழகங்களைத் திறக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள்.

தவறுகளைக் களைய நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் தவறுகளையே நியாயங்களாக்கி விட முயற்சிகள் நடக்கின்றன. அநியாயங்களை ஒழிக்க முயல்வதற்குப் பதில் நியாயங்களையே ஒழிக்க முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன. உண்மைகளைப் புரியவைக்க முயலுவதற்குப் பதில் பொய்களைப் புரிய விடாமல் குழப்பி வைக்கவே முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன. பொய்களே உண்மைகள் போலப் பேசப்பட்டன.

இவர்களையும் இவற்றையும் எதிர் நீச்சலிட்டாவது ஒரு கை பார்க்க வேண்டுமென்று இளைஞனாகிய அவன் மனமும் கைகளும் துறுதுறுத்தன. தன் ஒருவனுக்கே ஆயிரம் - லட்சம் - கோடிக்கணக்கான கைகள் முளைத்து இவற்றையும் இவர்களையும் எதிர்த்துப் போரிட வேண்டுமெனத் துடித்தான் அவன்.

அவனையும் மீறி உணர்ச்சி வசத்தில் வாய் குரல் கொடுத்து விட்டது: - “பேசிப் பேசியே இப்படி ஊரை ஏமாத்தறாங்க...”

“டேய்! யார்ர்ராவன்... ஒதையுங்கடா சொல்றேன்...”

இரண்டு மூன்று பேர் முத்துராமலிங்கத்தை நோக்கி அவன் மேல் வெறியோடு பாய்ந்தார்கள்.

அறிவுக் கலப்பற்ற காரணகாரியச் சிந்தனையற்ற அந்த வறட்டு முரட்டுத்தனம் முத்துராமலிங்கத்திற்குக் குமட்டினாலும் தற்காப்புக்குத் தயாரானான் அவன். இம்மாதிரி வேளைகளில் வார்த்தைகளும் காரண காரிய வாக்கு வாதங்களும் மட்டுமே உதவி விடுவது இல்லை.

முத்துராமலிங்கம் சுதாரிப்பதற்குள் - அவனுடைய வலது முழங்கையில் பிளேடுக் கீறல் ஒன்று விழுந்து செங்கீற்றாய் குருதிக் கோடாகிக் கொப்புளித்தது.

அத்தியாயம் - 7

பிளேடால் கீறி விட்டு ஓட முயன்ற ஆளை நொடியில் தானே தாவிப் பிடித்துவிட்ட முத்துராமலிங்கம், சூட்கேசை கிருஷ்ணாம்பேட்டை ஆளிடம் கொடுத்துவிட்டு முஷ்டியை மடக்கி ஓங்கி ஒரு குத்து விட்டான்.

பிளேடால் கீறுவது, கத்திரிக்கோல் போடுவது போன்ற ஒளிவு மறைவான வஞ்சக வேலையில்லாத - நேரடியான அந்த அசல் நாட்டுப்புறத்துத் தாக்குதலைத் தாங்க முடியாமல், ‘ஐயோ’ என்று அலறிச் சுருண்டு விழுந்தான் எதிரி. கிருஷ்ணாம்பேட்டையிலிருந்து உடன் வந்திருந்த ஆட்களும் முத்துராமலிங்கத்தோடு சேர்ந்து கொள்ளவே சண்டை வலுத்தது.

தற்செயலாக அதே பகுதியில் முத்துராமலிங்கத்தோடு தேனியிலிருந்தே லாரியில் உடன் வந்திருந்தவர்கள் சிலரும் அமர்ந்திருக்கவே, அவர்களும் எழுந்து வந்து சேர்ந்து கொண்டார்கள். வேறு சில பொது மனிதர்கள் சண்டையை விலக்கி விட வந்தார்கள்.

“தோழர்களே! அமைதி, அமைதி! கட்டுப்பாடு காத்துக் கண்ணியத்தைப் போற்றி கடமை வழி நிற்க வேண்டுகிறேன்” - என்று மேடையிலிருந்தே ஒலி பெருக்கி மூலம் கண்மணி அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தபடி இருந்தாள். யாருக்கும் யாருக்குமிடையே கலகமென்று அவள் அறிந்திருக்க நியாயமில்லை.

கும்பல் கூடி முத்துராமலிங்கத்தைச் சூழ்ந்து கொண்டு விட்டதால், மேடையிலிருந்து கண்மணி அவனைப் பார்க்க முடியவில்லை.

இரண்டொருவர் ஓடோடிப் போய் கடற்கரை உள் சாலையில் வெற்றி விழாவுக்காக வந்து நிறுத்தப்பட்டிருந்த பஸ் ஒன்றிலிருந்து முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்து முத்துராமலிங்கத்தின் கையில் மருந்து தடவி பிளாஸ்திரி ஒட்டினார்கள்.

“அவன் தான் பேட்டை ரவுடி! எந்தக் கூட்டத்திலே யார் வம்புக்கும், சண்டைக்கும் கிடைப்பான்னே தேடிக்கிட்டு அலையறவன். நீ படிச்ச பிள்ளையாத் தெரியறே... நீயுமா பதிலுக்கு அவனைப் போய் அடிக்கணும்? நாய் கடிச்சா பதிலுக்கா நாம கடிக்கிறது...?”

“சும்மா வலுச்சண்டைக்குப் போறது காட்டு மிராண்டித்தனம்! அதே சமயத்தில் வந்த சண்டையை விடறதும் கோழைத்தனம்... நாய் நம்மைக் காரணமில்லாமல் கடிக்க வராது. ஆனால் சில மனுஷங்க அப்படியில்லை. அதினாலே பதிலுக்குக் கடிச்சாத்தான் அவங்களுக்குப் புத்தி வரும்.”

முத்துராமலிங்கத்தின் குரலில் இருந்த உறுதியைக் கண்டு பலர் வாய் அடைத்தது. இத்தகைய சிக்கலான சமயங்களில் தயங்கித் தயங்கி வருகிறாற்போல அவன் வார்த்தைகள் இல்லை. தீர்மானமாகவும், உறுதியாகவும் இருந்தன. ஒரு முதியவர் அவனுக்கு அறிவுரை கூறலானார்.

“நீ கூட அப்படிப் பேசியிருக்கக் கூடாதுப்பா! சிலதை நினைக்கலாம். பேசப்பிடாது. வேறு சிலதைப் பேசலாம். நினைக்கப் பிடாது.”

“ஒரு விஷயத்தை பகிரங்கமா ஒருத்தன் அளவு கடந்து பாராட்டலாம்னா - அதே விஷயத்தை இன்னொருத்தன் விமர்சிப்பான் - அப்படி விமரிசிச்சா அதைப் பொறுத்துக்கணும்கிற பொது நாகரிகம் இருக்கணும்.”

- இப்படிப் பேச்சு வளர்ந்ததே ஒழிய அவன் கூறியது என்ன என்பதை யாருமே மறுபடி விசாரிக்கவில்லை.

“நம்ப ஆளு மேலே ஒருத்தன் கையை வைச்சிட்டுத் தப்பறதாவது? கொலைகாரன் பேட்டை சின்னியின்னா எதிர்த்து வர்றவன் மரியாதையா ஒதுங்கிடணும்” என்றான் உடனிருந்த சாராயம். முத்துராமலிங்கம் வழி தவறிப் போய்த் தற்செயலாகக் கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாட்டில் சந்தித்தவர்கள் மிகச் சில விநாடிகளிலேயே அவனைத் தன் மனிதனாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள். ஆனால் அவனுடைய தந்தைக்கு வேண்டியவரான விலாசம் தேடிப் போய் அவன் சந்தித்த போலீஸ் உயர் அதிகாரி அப்படி அவனை ஏற்கவோ, முகமலர்ச்சியோடு வரவேற்கவோ தயாராயில்லை. புறக்கணித்து விட்டார்.

இந்த முரண்பாடு அப்போது அவன் மனத்தில் தோன்றியது. படித்தவர்கள், பெரிய பதவியிலுள்ளவர்களின் அநாகரிகமும், அநாகரிகமானவர்கள் என்று ஒதுக்கப்படுகிறவர்களின் படிப்பும் பண்பும் இடம் மாறியிருப்பதை அவன் உணர்ந்தான். படிப்பு, பணம், பதவி இவை மூன்றும் சிலரைப் பொறுத்தவரை மனிதாபிமானமற்ற வறட்டுத் தனத்தையும், கோழைத்தனத்தையும் தான் அவர்களிடம் வளர்த்திருக்கின்றனவோ என்றே அவனுக்குத் தோன்றியது.

முத்துராமலிங்கம் தன்னோடு கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாட்டிலிருந்து வந்திருந்த குழுவுக்கு விடைகொடுத்து அனுப்பி விட்டு அப்படியே ஊரிலிருந்து வந்திருந்த லாரிக்குப் போகத்தான் விரும்பினான். ஆனால் உடனிருந்த சாராயம் அவனை எச்சரித்தான்.

“நீ இங்கே தனியா இருக்கப்பிடாதுப்பா! உங்கிட்டே குத்து வாங்கிக்கிட்டுப் போனானே அரை பிளேடு, அவன் போய்த் தன்னோட கூட்டாளிங்களை இஸ்துக்கினு மறுபடி உன்னைத் தேடிக்கிட்டு இங்கே வம்புக்கு வருவான்...”

“வந்தா வரட்டுமே! செம்மையாகக் குடுத்து அனுப்பி வைக்கிறேன்...”

“அவனுக சும்மா வரமாட்டாங்கப்பா... சைக்கிள் செயின் இரும்புக் குழாய், கொம்பு, கடப்பாறைன்னு ஆப்ட்டதைத் தூக்கிக்கிட்டு கும்பலா ஆள் சேர்த்துகிட்டு ஒதைக்க வருவாங்க...”

“உடம்பிலே வலு இல்லாதவங்கதான் ஆயுதங்களை நம்பணும். எனக்கு உடம்பிலே வலு இருக்கு, ஒத்தைக்கு ஒத்தை வந்தா எப்படிப்பட்ட கொம்பனையும் புரட்டி முதுகுக்கு மண் காட்டி அனுப்புவேன்.”

பிசிறு தட்டாத - சிறிதும் வழவழப்பு இல்லாத - நம்பிக்கை நிறைந்த அந்தத் தெற்கத்திச் சீமை உறுதியைக் கண்டு அடிதடிகளிலேயே பழகி வளர்ந்த சாராயத்துக்கே வியப்பாய் இருந்தது. தந்திரமாக வயிற்றிலடிக்கிறவர்கள், வஞ்சகமாகத் தாக்குகிறவர்கள், ஏய்த்துப் பிழைப்பதாலேயே தங்களைத் திறமைசாலிகளாகக் காட்டிக் கொள்கிறவர்கள் பிறருடைய பேதமையை ஏணியாகப் பயன்படுத்தித் தங்களை மேதைகளாக உயர்த்திக் கொள்கிறவர்கள் என்று இப்படி ரகங்களையே பட்டினத்தில் பார்த்துப் பார்த்து மரத்துப் போயிருந்த சாராயம் சின்னிக்கு அசல் மானம், அசல் மரியாதை, அசல் ரோஷம், அசல் வலிமையோடு கூடிய ஒரு தெற்கத்திச் சீமைக்காரனை எதிரே சந்தித்த போது ஒரு உயர்ந்த மனிதனைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம் என்கிற பெருமை உணர்ச்சி தான் ஏற்பட்டது.

“அண்ணே, எப்படியோ நாம சந்திச்சு ஒருத்தருக்கொருத்தர் பழகிப்பிட்டோம். இப்ப தயவு பண்ணி நீதான் சொல்கிறபடி கேக்கணும். வெள்ளை சொள்லையாகச் சட்டைபோட்ட படிச்ச ஆளுங்கள்ளே உன்னை மாதிரி ஒரு தீரனை நான் இதுங்காட்டியும் கண்டுக்கிட்டதே இல்லே. இன்னிக்கு ராத்திரி நீ நம்ப விருந்தாளியா இருக்கணும்.”

“விருந்தாளியா இருக்கிற அளவு நான் அத்தனை பெரிய மனுஷன் இல்லை.”

“எனக்கு நீ தான் பெரிய மனுஷன் அப்பா! உன்னைப் போல் நான் யோக்கியன் இல்லே. எதை எதையோ பேஜார் புடிச்சதையெல்லாம் பண்ணி எப்படி எப்படியோ பிழைக்கிறவன். அதுனாலேயே எனக்கு உன்னைக் கண்டால் பயமாகவும், மரியாதையாகவும் இருக்குதுப்பா!”

சாராயச் சின்னியின் இந்த நெகிழ்ச்சியையும், மரியாதையையும் முத்துராமலிங்கம் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. பாசத்தோடு அவன் தோளில் தட்டிக் கொடுத்தபடி “சின்னி நான் பெரிய மனுஷன் இல்லே. ஆனா யோக்கியன். வேலை தேடிப் பட்டினத்துக்கு வந்திருக்கிற ஒரு கிராமாந்தரத்து மத்தியதர விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ரயில்லியோ, பஸ்ஸிலியோ வரப் பண வசதி பத்தாம லாரி ஏறி இங்கே வந்திருக்கிறவன்; என்னை நீ மதிச்சுக் கூப்பிடறே. அதுக்காக நான் வரேன்.”

“ரொம்ப சந்தோசம்ண்ணே!”

“உங்க ஊர்லே ‘அண்ணே’ன்னு கூப்பிடறது கூட எனக்குப் பிடிக்கலே. இங்கே அந்த வார்த்தைக்கு ‘டெப்ரஸியேஷன் வேல்யூ’தான் மீதமிருக்கு. தேய்மானம், இல்லாமே எந்த நல்ல வார்த்தையும் இங்கே தப்பிப் பிழைக்காது போலிருக்கு.”

“அட! நீயொண்ணு... ஆளுங்களோட ஒழுங்கு நாணயம்லாமே கொஞ்சம் கொஞ்சமாத் தேஞ்சி போற ஊர்ல வார்த்தைங்க மட்டும் தப்பிப் பிழைச்சுருமா, என்ன? அதெல்லாம் போகட்டும்... இப்ப நீ நம்பகூட வா... சொல்றேன்... சாப்பிட்டு முடிச்சதும் கொஞ்ச நேரம் குஷியாப் போதைக் கழிக்கலாம்.”

முத்துராமலிங்கத்தால் அவனைத் தட்டிக் கழிக்க முடியவில்லை.

தன்னோடிருந்த மற்றவர்கள் எல்லாரையும் அனுப்பிவிட்டு முத்துராமலிங்கத்தை மட்டும் அழைத்துக் கொண்டு பைகிராப்ட்ஸ் சாலையிலிருந்த ஒரு மதுரை முனியாண்டி விலாஸுக்குள் நுழைந்தான் சின்னி.

“உங்க ஊர்க்காரங்க கடையாவே பார்த்து இட்டாந்திருக்கேன்! உனக்குப் பிடிக்குமில்லே...?”

முத்துராமலிங்கம் புன்முறுவல் பூத்தான்.

“தண்ணி போடற பழக்கம் உண்டா?”

“இன்னிக்கு வரை இல்லே.”

“சரி! வாணாம்... அந்தப் பேச்சை வுட்டுடு.”

“அது சரி சின்னீ! உங்க ஊரு என்னன்னே சொல்லலியே?”

“மரக்காணம்... பாண்டிச்சேரிக்குப் போற வழியிலே கீது...”

முத்துராமலிங்கத்தால் அவனை முழுமையாக வெறுக்கவும் முடியவில்லை, விரும்பவும் முடியவில்லை. ‘இவனைப் போல் நல்லானாக இருக்க முடியாத காரணத்தால் சூழ்நிலையால் கெட்டுப் போனவர்களையாவது மன்னிக்கலாம். நல்லவர்களாக இருப்பது போல் உலகுக்குப் பாசாங்கு காட்டிக் கொண்டே கெட்டவர்களாக இருப்பவர்களை மன்னிக்கவே முடியாதென்று தோன்றியது. சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே பலர் வந்து வணங்குவதும், விசாரிப்பதும், குழைவதுமாகச் சின்னிக்கு அங்கே ஏகப்பட்ட மரியாதை உபசரனைகள் எல்லாம் நடந்தன.

“வந்தாக் கிடைக்குமா?... வரட்டுமா?” என்று ஒரு சில்க் ஜிப்பா ஆசாமி ஜவ்வாது வாசனையை வாரி இறைத்தபடி வந்து அருகே நின்று சின்னியைக் குழைவாக விசாரித்தார். சின்னி சிரித்தபடி பதில் கூறினான்:

“நம்பர் ‘ஒன்’லே புதுச்சரக்கு எதுவும் வரலே! நம்பர் டூவிலே புதுச்சரக்கு நெறையவே வந்திருக்கு சார்...”

“அப்ப நாளைக்கு வரேம்பா.”

அவர் போனதும், “இதுமாதிரி இந்த வட்டாரத்திலே, நமக்கு எத்தினியோ கஷ்டமருங்க...” என்று கண்களைச் சிமிட்டிச் சிரித்தபடியே சின்னி முத்துராமலிங்கத்திடம் கூறினான்.

“கஷ்டமர் இல்லே ‘கஸ்டர்மர்’னு சொல்லணும், சின்னி!”

“அந்த எளவைச் சொல்றதுக்குக் கஷ்டமாயிருக்குப்பா! அதான் ‘கஷ்டமர்’னே வச்சுப்புட்டேன்.”

“இப்போ வந்து கேட்டுட்டுப் போறாரே, இவரு யாரு?...”

“இந்தப் பேட்டையிலே வெள்ளிக்கடை வச்சிருக்காரு? பெரிய புள்ளி.”

இப்படிப் பெரிய புள்ளிகளின் அந்தரங்க ஆசைகளையும், சபலங்களையும், தாபங்களையும் தீர்க்கும் முயற்சியிலேயே பல அப்பாவிகள் பட்டினத்தில் சிறிய புள்ளிகளாக இருக்க நேரிடுகிறது என்று புரிந்தது அவனுக்கு. பல கீழ் மட்டத்து மனிதர்கள் மேல்மட்டத்து அயோக்கியர்களின் தேவையையும் அவசியத்தையும் உத்தேசித்தே கீழ்மட்டத்து வேலைகளில் ஈடுபட வேண்டியிருக்கிறது. தனிப்பட்ட முறையில் பார்க்கப் போனால் இந்தக் கீழ்மட்டத்து மனிதர்கள் ‘கர்மயோகி’களைப் போலக் கெட்டவர்களாக இயங்கி வந்தார்கள். அவர்கள் மேல் படிந்திருக்கும் துருவையும், களிம்பையும் நீக்கிப் பார்த்தால் உள்ளூரத் தங்கமாக இருந்தார்கள். தாங்கள் கெட்ட காரியங்களைத்தான் செய்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கூட உணராத அளவு நல்லவர்களாகத் தோன்றினார்கள்.

சாப்பாடு முடிந்ததும் முத்துராமலிங்கத்துக்கு ஸ்பெஷல் மசாலா பீடா வாங்கிக் கொடுத்தான் சின்னி. “அப்புறம், லாரியிலே வந்தேன்னு சொன்னேயில்லே... உன்னைச் சுகமாத் தூங்கப் பண்றேன்... வா” என்று சைக்கிள் ரிக்‌ஷாவில் அவனை அருகே உட்கார்த்தி அழைத்துச் சென்றான் சின்னி.

எங்கோ இருளடைந்த சந்து பொந்துகளைக் கடந்து ரிக்‌ஷா சென்றது. சில தெருமுனைகளில் ஒரே ஒரு விளக்கு மட்டும் இருந்தது. பல இடங்களில் மின் விளக்குக் கம்பங்கள் இருந்தன. விளக்கு எரியவில்லை.

கடைசியில் வாயிற்புறம் தடித்தமுரட்டு ஆள் காவல் நின்று கொண்டிருந்த, இரண்டு மூன்று நாய்கள் ஒரே சமயத்தில் குரைத்த முன் பகுதியும், தோட்டமும் இருளடைந்திருந்த ஒரு மாடி வீட்டின் முன் போய் ரிக்‌ஷா நின்றது. முதலில் சின்னி இறங்கியதும் கேட்டில் நின்ற ஆள் மரியாதையோடு அவனுக்குச் சலாம் வைத்தான். நாய் ஒன்று ஓடி வந்து சின்னியிடம் வாலைக் குழைத்தது. சின்னி அதைத் தடவிக் கொடுத்தான்.

“வாப்பா உள்ளாரப் போகலாம்” - முத்துராமலிங்கத்தை உள்ளே அழைத்துச் சென்றான் சின்னி. அங்கிருந்த ஆட்கள் எல்லாருமே சின்னிக்கு அபார மரியாதை செலுத்தினார்கள்.

வீடுதான் மனிதர்கள் அதிகம் பழகாத பாழடைந்த மாளிகை போல் இருந்தது. கூடத்தில் போய் உட்கார்ந்ததும் அங்கிருந்த வயதான ஆயா ஒருத்தியைக் கூப்பிட்டு, “வரச் சொல்லும்மா...” என்று சத்தம் போட்டுச் சொன்னான் சின்னி.

நன்றாக அலங்கரித்த நிலையிலும் அலங்கோலமான நிலையிலும் அழகான் உடற்கட்டோடும் அதைக் காண்பிக்கும் முயற்சியோடும் கும்பலாக ஏழெட்டு இளம் பெண்கள் முத்துராமலிங்கத்துக்கு முன் வந்து நின்று சிரித்தார்கள். சிரிப்பு இயல்பாக இல்லை. யாருக்கோ பயந்து வரவழைத்துக் கொண்ட சிரிப்பு மாதிரி இருந்தது.

“இவளுகள்ளே யாரை ஒனக்குப் பிடிக்குதுன்னு பாரு...?”

முத்துராமலிங்கம் சின்னியை நோக்கிச் சிரித்தான் பின்பு அந்தக் கட்டழகுக் கூட்டத்தின் அணிவகுப்பையும் அவர்களையும் இமையாமல் பார்த்தான்.

அத்தியாயம் - 8

கடற்கரையில் பொதுக் கூட்டம் கேட்டுக் கொண்டிருந்த போது தன் ஒருவனுக்கே ஆயிரம் கைகள் முளைத்து அவை அத்தனையையும் கொண்டு தீமைகளையும் பொய்களையும் எதிர்த்துச் சாட வேண்டும் என எண்ணினாற் போலவே இந்தக் கணத்திலும் எண்ணினான் முத்துராமலிங்கம்.

கலை, கலாச்சாரம், சாஸ்திரம், சங்கீதம், சாராயம், கதாகாலட்சேபம், அரசியல், பெண்கள் என்று பேதாபேதமின்றிச் சகலத்தையும் ‘ரேட்’டுப் போட்டு விற்கும் குரூரமான நகரங்களின் வியாபார மனப்பான்மையை அவன் வெறுத்தான். அதைப் பார்த்து அவனுக்கு அருவருப்பாகக் கூட இருந்தது.

இறைவனின் பாதங்களில் அர்ச்சிக்கப்பட வேண்டிய மலர்கள் அசந்தர்ப்பம் காரணமாகச் சாக்கடையில் கவிழ்ந்தது போல் நடுவழியில் கவிழ்ந்துவிட்ட அந்தப் பெண்களைக் கருணையோடு பார்த்தான் அவன்.

“சின்னி! இந்தத் தங்கச்சிகளை எல்லாம் முதல்லே உள்ளாரப் போகச் சொல்லு...”

“ஏம்ப்பா?... உன் செலக்சன்...”

“முதல்லே உள்ளாரப் போகச் சொல்லு...”

கட்டளையிடுவது போல் திட்டவட்டமாகவும், தீர்மானமாகவும் இருந்த அந்தக் குரலை மறுக்க முடியாமல் அந்தப் பெண்களை உள்ளே போகுமாறு சமிக்ஞை செய்தான் சின்னி. அவர்கள் போனதும் சின்னியின் பக்கம் திரும்பி, “இதெல்லாம் என்ன?” என்று ஆத்திரத்தோடு கேட்டான் முத்துராமலிங்கம்.

“அதான் அப்பவே சொன்னேனே, நம்பர் ஒன், நம்பர் டூன்னு ரெண்டு பிஸினஸ் நம்ப கைலே இருக்குதுன்னு!... நம்பர் ‘ஒன்’ கிருஷ்ணாம்பேட்டையிலே நடக்குது. இந்த நம்பர் ‘டூ’வுக்கு ஸிடிலே இது மாதிரி நாலஞ்சு பிராஞ்சுங்க இருக்குது.”

“பட்டினத்தில் எல்லாத்தையுமே விற்கிறீங்கப்பா.”

“ஆமா! எதெது காசு பணந்தருதோ அதை எல்லாம் இங்கே விக்கிறோம்...”

அந்த நகரம் என்கிற கலாசார - மயானத்தில் - நாகரிகக் கழிவறையில் எதற்கும், எவருக்கும், எந்த வகையிலாவது ஒரு விலை நிர்ணயிக்கப் பட்டிருப்பது தெரிந்தது அவனுக்கு. சின்னி தன் மேலும் அவசர அவசரமாக ஒரு முத்திரையைக் குத்தித் தனது பெறுமானத்தையும் விலையையும் நிர்ணயித்து விட முயல்வது கூட அவனுக்குப் புரிந்தது.

பட்டினத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விலை நிர்ணயிக்கப்படுவது போலவே ஒவ்வொரு விலைக்கும் ஒரு மனிதன் நிர்ணயிக்கப்படுகிறான். விலை நிர்ணயிக்கப்படுவதற்குத்தான் உத்யோகம், வாய்ப்பு, தகுதி என்றெல்லாம் ஏதேதோ பல வேறு பெயர்களைச் சொல்கிறார்கள்.

அந்த மாளிகையின் சுவர்கள் எல்லாமே உப்புப் பரிந்து ஈரம் கசிந்திருப்பதைக் கண்டான் முத்துராமலிங்கம். அபலைகளும், இளம் பெண்களும், அந்த இடத்தில் படும் துயரங்களைக் கண்டு அந்தச் சுவர்கள் கூட நீண்ட நாட்களாகக் கண்ணீர் வடித்திருந்தனவோ, என்னவோ?

“சின்னி! இப்படிப் பிழைக்க உனக்கு வெட்கம், மானம், ரோஷம், கூச்சம் எதுவுமே இல்லையா?”

“வேணாம் வாத்தியாரே! இந்த மாதிரிப் பேச்செல்லாம் இங்கே வச்சுப் பேசினா வந்து போற வாடிக்கைக்காரங்க சங்கடப்படுவாங்க... நாம வேணா மொட்டை மாடியிலே போய்ப் பேசுவோம்...”

சின்னியோடு அந்தக் கட்டிடத்தின் மொட்டை மாடிக்குப் போனான் முத்துராமலிங்கம். சின்னியே பேச்சைத் தொடர்ந்தான்.

“வெக்கம், மானம், ரோஷம், கூச்சம் எதுவுமே இல்லையான்னுதான்னே கேட்டே...?”

“ஆமாம்... ஏன்? அப்படிக் கேட்கவே கூடாதோ?”

“நல்ல ரேட்டுக் கெடச்சா இதையெல்லாம் கூட வித்துடறதுதான்... இங்கத்தையப் பளக்கம்! இதையெல்லாம் வித்து நான் குடுத்திருக்கிற ‘டொனேஷன்’ல தான் இந்தத் தொகுதி எம்.எல்.ஏ. ஜெயிச்சிருக்காரு. இதையெல்லாம் வித்து நான் குடுக்கிற லஞ்சத்திலே எத்தினி ஜனம் பொழைக்குது தெரியுமா?...”

“நான் என் படிப்பைச் சொல்லி மானம் மரியாதையா ஒரு வேலை தேடிப் பிழைக்கலாம்னு தான் இங்கே மெட்ராசுக்கு வந்தேன்! நீ சொல்றதை எல்லாம் கேட்டா மானம் மரியாதை உள்ளவனுக்கு இங்கே வேலை கெடைக்கறதே கஷ்டம்னு தெரியிது.”

“படிச்சவன் எல்லாம் உன்னை மாதிரி மானம், மரியாதையைப் பத்திக் கவலைப்படறவனாத் தெரியிலேப்பா... படிச்சவனாயிருந்தும் உன்னை மட்டும் போனாப் போகுதுன்னு மதிக்கலாம்னு இந்தச் சின்னிக்குத் தோணுது.”

“உனக்குத் தோன்றி என்ன கிடைக்கப் போகுது? எனக்கு ஒரு வேலையைக் கொடுக்கப் போற யாரோ ஒருத்தனுக்கு அது தோன்றினால் தான் நல்லது...”

“உனக்கு என்ன மாதிரி வேலை வேணும்?”

“என்னமோ நீ தான் எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்ஜ் நடத்தற மாதிரியில்லே கேட்கிறே?”

“இந்த லயன்லே இருக்கிறேனில்ல... அதுனாலே நாலு முக்கியமான புள்ளிங்களைத் தெரியும்... சொல்லிப் பார்க்கலாம்...”

“நீ சொல்ற புள்ளிகள் எப்படிப்பட்டவங்களோ?”

“டீஸண்ட் ஆளுங்க தான். பெரிய பெரிய கம்பெனி மானேஜருங்க... சினிமா ப்ரொட்யூஸருங்க... அரசியல் தலைவருங்க... பத்திரிகைக்காரங்க... எல்லாத்திலியும் நமக்கு வேண்டியவங்க இருக்காங்க! அது சரி... நீ இன்னா படிச்சிருக்கே...?”

“தமிழ் இலக்கியத்திலே எம்.ஏ. படிச்சிருக்கேன். அதுக்குக் கம்பெனி வேலை - கிம்பெனி வேலையெல்லாம் தர மாட்டாங்க... தமிழை நட்டமா நிறுத்தப் போறோம்னு பதவிக்கு வர்றவங்களையும் நம்பிப் பிரயோசனமில்லே. அவங்க தமிழைத் தான் வாழ வைப்பாங்களே ஒழியத் தமிழ் படிச்சவங்களை வாழ வைக்க மாட்டாங்க...”

“இன்னொருத்தனை வாழ வைக்கிறத்துக்காக எந்தப் பைத்தியக்காரனும் ஆட்சிக்கு வர்றதில்லே... தான் வாழறதுக்காகவும் வளர்றதுக்காகவும் தான் ஆட்சி, பதவி எல்லாம்னு உனக்குத் தெரியாதா?”

இப்படிக் கேட்டுவிட்டுச் சின்னி உரத்த குரலில் இடி இடியென்று முரட்டுச் சிரிப்புச் சிரித்தான். அவனோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அந்த மொட்டை மாடியிலேயே மழைக்கு ஒதுங்கிக் கொள்வதற்காகப் போடப்பட்டிருந்த ஓர் ஓட்டடுக்குத் தாழ்வாரத்தில் படுத்துத் தூங்கி விட்டான் முத்துராமலிங்கம். சின்னி விடியற்காலையில் அவனைச் சந்திப்பதாகக் கூறிவிட்டுப் படியிறங்கிக் கீழே சென்றான். முத்துராமலிங்கத்தின் மேல் மரியாதையும் பாசமும் சுரக்கும் மன நிலையில் இருந்த சின்னி வேலை விஷயமாக அவனுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற கனிவுடன் போனான்.

ஒரே நிமிஷத்தில் இரவு தீர்ந்து போய் விடிந்து விட்டதைப் போல பொழுது புலர்ந்திருந்தது. சின்னி வந்து எழுப்புவதற்குள் முத்துராமலிங்கமே சுற்றிலுமிருந்த மரங்களிலே பறவைகளின் குரலொளிகள் கேட்டு எழுந்திருந்து உட்கார்ந்தான். முந்திய இரவு தனக்கு இருந்த அசதியின் காரணமாகத்தான் இரவே விரைவில் முடிந்து விட்டதாகத் தோன்றுகிறது என்று அவனுக்குப் புரிந்தது.

அந்த மொட்டை மாடியின் சுற்றுப்புறத்தில் இயற்கை எழில் கொஞ்சியது. மாமரங்களும் தென்னை மரங்களுமாக ஒரே பசுமை. அந்தப் பசுமையை ஊடுருவிக் கொண்டு தென்னை ஓலைகளிடையே பரவிய கதிரொளிக் கற்றைகள் வைர ஊசிகளாய் மின்னின.

சின்னி இரண்டு கைகளிலும் ஆவி பறக்கிற சூட்டோடு டீ கிளாஸ்களை எடுத்து வந்தான். அவன் டீ கிளாஸுகளுடன் படியேறி வரவும், மாடி விளிம்புச் சுவரருகே வந்து உரசிக் கொண்டிருந்த ஒரு வேப்பமரத்திலிருந்து முத்துராமலிங்கம் கொழுந்துகள் பறிக்கத் தொடங்கவும் சரியாயிருந்தது.

“எனக்கு இப்ப டீ வேணாம்ப்பா! நீயே ரெண்டு கிளாஸையும் குடி!”

“அப்பிடியா சங்கதி? இப்பல்லே புரியுது காரணம்! வேப்பங்கொழுந்து துன்னு துன்னு ரம்பை மாதிரிப் பொம்பளைங்க எதிரே வந்து நின்னாக் கூடச் சாமியாருங்க மாதிரி மடிசஞ்சி ஆசாமி ஆயிப் போயிட்டேப்பா... நீ.”

“சாமியாராப் போறதுக்கு வேப்பங்கொழுந்து தின்னா மட்டும் போறும்னு யாருப்பா உனக்குச் சொன்னது?”

“யாருப்பா சொல்லணும்? எங்க ஆயாவே சொல்லும்ப்பா... அது இப்ப இல்லே. செத்துப் பூடுச்சி. வேப்பங் கொழுந்து துண்றவன் குடும்ப வாழ்க்கை நடத்த முடியாதுங்கும்... நாட்டு வைத்தியத்தில் படா கில்லாடிப்பா அது.”

“எங்க ஊர்லே பொன்னம்பலத் தேவர்னு ஒருத்தரு இதே கொழுந்தை அம்மியாலே அரைச்சு உருட்டி உருட்டித் திம்பாரு. சும்மா உடம்பு வைரம் பாஞ்ச தேக்குக் கட்டை மாதிரி மினுமினுக்கும். அவருக்கு மொத்தம் ஒம்பது குழந்தைங்க. நாலு பிள்ளைகள். அஞ்சு பெண்கள். போறுமா?”

சின்னி மறுத்துப் பதில் சொல்லாமல் தேநீரை ரசித்துப் பருகலானான். முத்துராமலிங்கத்தைக் கீழே குழாயடிக்கு அழைத்துச் சென்றான். கலியாணச் சத்திரங்களில் இருப்பது போல் பின்பக்கம் ஒரு கூடத்தில் வரிசையாக நாலைந்து துருப்பிடித்த குழாய்கள், குளியலறைகள் எல்லாம் அங்கே இருந்தன.

ஒரு மூலையில் முந்திய இரவு அவன் பார்த்த பெண்களில் சிலர் பல் விளக்கி முகம் கழுவிக் கொண்டிருந்தார்கள். தெலுங்கிலும், தமிழிலும், மலையாளத்திலுமாக இனிய சோகக் குரல்கள் காதில் விழுந்தன.

முத்துராமலிங்கத்தைக் கண்டதும் அவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பொருள் பொதிந்த நோக்கில் பார்வைகளையும், முணுமுணுப்புக்களையும், புன்னகைகளையும் பரிமாறிக் கொண்டனர். ஒரு ‘கான்சென்ட்ரேஷன் கேம்ப்’ அல்லது கைதி முகாமில் வாழ்வது போன்ற அவர்கள் வாழ்க்கைக்கு நடுவே சிரிக்கவும், மகிழவும் கூட இப்படிச் சில விநாடிகள் கிடைக்க முடியும் என்பது முத்துராமலிங்கத்துக்கு வியப்பை அளித்தது.

முத்துராமலிங்கம் அங்கேயே குளித்து உடை மாற்றிக் கொண்டு சின்னியோடு வெளியே புறப்பட்டான். அந்த பங்களாக் காம்பவுண்டுக்கு வெளியே வந்தவுடனே சுவரருகே பதுங்கினாற் போல ஒண்டிக் கொண்டிருந்த ஓர் இளம் பெண் கொஞ்சம் தலைவிரி கோலமாகக் கிழிந்த உடைகளும் அதனிடையே பொங்கும் அழகுகளும், கவர்ச்சியுமாக இருந்தவள், எழுந்து ஓடத் தலைப்பட்டாள்.

“ஐயோ! என்னை விட்டுடு... என்னை விட்டுடு... கொன்னுப்புடாதே...”

அவள் சின்னியைக் கண்டே அப்படி அலறி ஓடுவதாகத் தோன்றியது முத்துராமலிங்கத்துக்கு. பளிச்சென்று செண்பகப்பூ நிறம். கருமணலாக அலையோடி நெளி நெளியாகப் படிந்து தூசியுற்று மங்கிய கூந்தல்... சோகமும் அழகின் சுகமும் ததும்பும் கண்கள். நல்ல உயரம், கனிந்த உடல்வாகு... அவளுக்குப் பைத்தியம் பிடித்தது எதனால் என்று யோசித்து முத்துராமலிங்கம் மனம் குழம்பினான்.

சின்னியைக் கண்டதும் அவளுடைய ஓட்டமும், அலறலும் அதிகமாவதாக அவனுக்குத் தோன்றியது.

“நம்ப குட்டிதான். இங்கே இருந்தா... பைத்தியம் பிடிச்சப்புறம் இது மாதிரி ஆயிடிச்சு... ரொம்ப ஷோக்கான பொம்பிளை... பாவம்... இப்ப இப்படி அலையிறா...”

“எல்லாத்துக்குமே உன்னை மாதிரி ஆளுங்க தான் காரணம்... நல்லவங்களை எல்லாம் பைத்தியமாக்கறீங்க... பச்சைக் கிளிகளைப் பிடித்து வந்து பூனைக்கு விருந்து வைக்கிற மாதிரி இப்படி இளம்பெண்களைக் கொண்டாந்து இந்த நகரம்கிற பலி பீடத்திலே பலியிடறீங்க...”

“இந்த ஊர்லேயிருக்கற ரொம்பப் பெரிய மனுசங்க சிலருக்காகத்தான் என்னை மாதிரிச் சின்ன மனுசங்க இதெல்லாம் செய்ய வேண்டியிருக்கு.”

“மனிதன் ஒரு சமுதாய மிருகம்னு பழமொழி சொல்லுவாங்க... இந்த மாதிரி நகரங்களிலே சமுதாயத்தையே மிருகமயமாக்கி வச்சிருக்காங்க...”

சின்னிக்கு இந்த வாக்கியங்களின் சூடு உறைக்கவில்லை. புரியாததுதான் காரணமாயிருக்க வேண்டும். அபலைகள், அநாதைகள், ஏழைகள், புறக்கணிக்கப்பட்டவர்கள், வேலை கிடைக்காமல் தவிப்பவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், நியாயம் கிடைக்காமல் நசுங்கியவர்கள் அனைவருமே இந்தப் பெருநகரத்தில், “ஐயோ என்னை விட்டுவிடு!” என்று அந்தப் பைத்தியக்காரி போல் எதனிடமிருந்தோ எதற்கோ அஞ்சிப் போய் நிலைகுலைந்து நிரந்தரமாகவே ஓடிக் கொண்டிருப்பது போல் தோன்றியது முத்துராமலிங்கத்துக்கு. இந்தக் கோழைத்தனமான புறமுதுகிடும் ஓட்டத்தை - பயத்தை யாராவது ஒருவன் தடுத்து நிறுத்த வேண்டாமா என்று குமுறினான் அவன். விரித்த கூந்தலும் கிழிந்த ஜாக்கெட்டும் புடவையுமாகப் பித்துப் பிடித்தவளாய் ஓடிய அந்த ஓவிய அழகு இன்னும் அவன் கண்முன் நின்றது.

“நந்தவனத்தின் மலர்கலெல்லாம் - வெறும்
நாய்கள் பறிக்க விட்டுவிட்டார்.”

நவநீத கவியின் அழகிய வரிகள் அவன் நினைவுக்கு வந்தன. அவனும் சின்னியும் நடந்து கொண்டிருந்தார்கள். கார் ஒன்று அவனருகே உரசிவிடுவது போல் வந்து நின்றது.

“எங்கே இந்தப் பக்கம்?” - என்று வினவியபடி அதிலிருந்து புன்சிரிப்போடு மங்கா கீழிறங்கினாள்.

அத்தியாயம் - 9

“எப்ப வந்தீங்க? என்ன காரியமா வந்தீங்க... வாட் எ ப்ளஸண்ட் சர்ப்ரைஸ்? நான் உங்களை இங்கே எதிர்பார்க்கவே இல்லே.”

மங்காவுக்கு முத்துராமலிங்கம் பதில் சொல்லும் போது தான் சற்றே விலகி நிற்கலாம் என்றெண்ணியோ என்னவோ சின்னி பின்னுக்கு நகர்ந்து தெரு ஓரமாக ஒதுங்கிக் கொண்டான்.

“நீங்க இங்கே வந்திருப்பீங்கன்னு நான் எதிர்பார்த்தேன். உங்கப்பா மினிஸ்டராயிருக்காரில்லே?”

“அதுக்காக வந்தேன்கிறதை விட என்னோட லண்டன் ‘ட்யுப்’புக்காக ஏற்பாடெல்லாம் பண்ண வந்தேன்கிறது தான் சரியாயிருக்கும் மிஸ்டர் முத்டுராம்!”

தன்னுடைய பேச்சில் அவள் தானாகவே வார்த்தைக்கு வார்த்தை விநாடிக்கு விநாடி ஆச்சர்யத்தைப் படைத்துக் கொண்டு பேசுவது போன்ற மழலைத் தன்மையோடு பேசினாள். அது அவளுக்கு மேலும் அதிக அழகு ஊட்டியது.

“நான் பிழைப்பைத் தேடி வந்திருக்கேன். இன்னும் தேடி முடிக்கல்லே.”

“வாங்களேன் டிரைவ் - இன்னில் காபி குடிக்கலாம்.”

அவள் வேண்டுகோலை ஏற்பதா நிராகரிப்பதா என்று அப்போது யோசித்துத் தயங்கியபடியே சின்னியைப் பார்த்தான் முத்துராமலிங்கம். சின்னிப் பச்சைக்கொடி காட்டினான்.

“போய்ட்டு வாப்பா... கூப்பிடுறாங்க... நான் கிருஷ்ணாம்பேட்டையிலே கீறேன். சுளுவா வந்துடு” - என்று கூறிப் பெட்டையைக் கூட முத்துராமலிங்கத்திடம் கேட்டு வாங்கிக் கொண்டான் சின்னி.

காரில் ஏறி உட்கார்ந்ததும் அவள் அவனிடம் கேட்ட முதல் கேள்வி:

“வேலைக்கு எங்கப்பா மூலமா நான் ஏதாச்சும் பண்ணட்டுமா?”

“தயவு செய்து வேண்டாம்.” இதற்கு மேல் அவள் அவனை வற்புறுத்தவில்லை. அவளுடைய காரில் பிரயாணம் செய்வது மிதப்பது போல் சுகமான அநுபவமாயிருந்தது. இங்கிதமான நறுமணம் நிறைந்த உயிருள்ள பெரிய பூ ஒன்றைப் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு பேசுவது போன்ற அநுபவமாயிருந்தது அது. ஓர் அழகிய பெண் உடனிருக்கும் போது ஒவ்வோர் ஆணுக்குள்ளும் கிளுகிளுக்கும் பெயர் தெரியாத நளின சொப்பனங்கள் பல உண்டாகின்றன. அவற்றுக்குத்தான் காதல் என்பதாகத் தங்களுக்குத் தெரிந்த மொழியில் அவர்கள் பெயர் சூட்டிக் கொள்கிறார்கள் போலிருக்கிறது.

படித்த இளைஞர்கள் யதார்த்த நிலையைக் காண மறுத்துக் கற்பிதங்களில் திளைக்கக் கூடாது என்று எண்ணுகிறவன் முத்துராமலிங்கம். அவனுக்குத் தெரியாமல் அவனையே கற்பிதங்களில் திளைக்க வைத்திருந்தாள் அவள்.

‘இவள் சொக்கி மயங்க வைக்கும் ஒரு நறுமணக் கனவு. யதார்த்தங்களிலிருந்து நம்மை வெகு உயரத்துக்கு, அடிப்படையில்லாத பொய்யான ஓர் உயரத்துக்குத் தூக்கிச் செல்லும் ஒரு சுகந்த சொப்பனம்’ என்றெல்லாம் நினைத்திருந்தும் அவளைக் காண்கிற போதுகளில் அவற்றைத் தானே மறந்து கொண்டிருந்தான் முத்துராமலிங்கம்.

ஒரு விநாடி சாலையில் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடிய அந்தப் பைத்தியத்தின் நினைவு கண் முன் ஓடியது. அவளையும், மங்காவையும் ஒப்பிட்டான் முத்துராமலிங்கம்.

தந்தையின் பரம்பரையான பொருளாதார வசதியோடு கூடிய பெரிய மனித தன்மை, அரசியலில் செல்வாக்குள்ள பெரிய பதவி, இங்கிலாந்தில் வசதியான உத்தியோகத்திலிருக்கும் மூத்த சகோதரன் எல்லாரும் எல்லாமுமாகச் சேர்ந்து இந்த மங்காவுக்கு அளித்திருக்கும் வாழ்க்கைப் பாதுகாப்பையும் உற்சாகத்தையும், ஏழ்மையால் விபசார விடுதிக்கு வந்து பின்பு தெருவுக்கும் வந்துவிட்ட அவள் அடைய வழியின்றித் தான் அப்படிச் சீரழிந்து விட்டாள் என்று தோன்றியது. அவளது மிரண்ட பார்வையும் ‘என்னை விட்டுடு’ என்ற புலம்பலும் மீண்டும் அவனுக்கு நினைவு வந்தன.

பண வசதியும், செல்வாக்கும் இல்லாதவர்களின் வாழ்க்கைகளும் நியாயவாதங்களும் எவ்வளவிற்குப் பாதுகாப்பற்றவையாக இருக்கின்றன என்பதை நினைத்த போது அவனுக்கு இனம்புரியாத - விலாசம் புரியாத - யார் மேல், எதன் மேல், ஏன் என்றெல்லாம் பிரித்து விளக்க முடியாததோர் ஆத்திரம் தாறுமாறாக மூண்டது. அந்த ஆத்திரத்தின் செலுத்தப்பட வேண்டிய இலக்குப் புரியாவிட்டாலும் அப்போது அதைத் தவிர்க்க முடியவில்லை. டிரைவ் இன்னில் காரில் இருந்தபடியே சிற்றுண்டிக்கு ஆர்டர் செய்தாள் மங்கா. அவள் இழுத்த இழுப்புக்கு இழுபட்டுச் சொன்னபடியெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறோமோ என்ற உறுத்தல் முத்துராமலிங்கத்தின் மனத்தில் இருந்தது. அதனால் துணிந்து, “காரில் உட்கார்ந்து சாப்பிட வேண்டாம்! எனக்குப் பிடிக்கல்லே! கீழே இறங்கி நாற்காலி மேஜைக்குப் போகலாம்!” என்றான் அவன்.

“...ஓ.எஸ். தாராளமாக அப்படியே செய்யலாம்” என்று வெயிட்டரைக் கூப்பிட்டு ஆர்டரைக் கேன்ஸல் செய்த பின் அவனோடு இறங்கி நடந்தாள் மங்கா. “இந்த ஊர்ல ரொம்பப் பேர் கீழே இறங்கித் தெருவிலே வாழ்க்கை எப்படி இருக்கும்னு பார்க்காமலேயே சோஷலிஸம் அடித்தளத்து மக்களின் வாழ்க்கையை உயர்த்தறது. வறுமையை ஒழிக்கறது - அத்தனையும் பத்திப் பேசிடறாங்க. எனக்கு அது பிடிக்கலை.”

பதில் சொல்லாமல் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்துச் சிரித்தாள் மங்கா. தான் சுதந்திரமாகவும், நிர்த்தாட்சண்யமாகவும் இயங்குகிறோம் என்பதைக் காட்ட அவளிடம் - கருத்து வேறுபடும் உரிமையும் தனக்கு உண்டு என்பதை உணர்த்த - அவன் தயாராயிருந்தான். ஆனால் அவள் அதற்கு அப்படித் தயாராயில்லை. சிரித்து சிரித்து மயக்கினாள். அவன் சொன்னபடி எல்லாம் கேட்டாள்.

மனம் விட்டுப் பேசுவதற்குப் பதிலாகச் சிரித்து மழுப்புகிறவர்களும், சிரிப்பதற்குப் பதில் பேசி மழுப்புகிறவர்களும் யோசிக்கப்பட வேண்டியவர்கள் என்பது முத்துராமலிங்கத்தின் கணிப்பு. சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவளிடமே அதைக் கேட்டு விட்டான் அவன்.

“...தெருவில் இறங்கி நடக்காமலே இந்த ஊர்லே அதிகம் பேர் அடித்தளம் அது இதுன்னு பேசறாங்கன்னேனே, அப்ப நீ சிரிச்சதுக்கு என்ன அர்த்தம்?”

“சும்மா சிரிச்சேன் அவ்வளவுதான் - இதுக்கெல்லாம் அர்த்தம் பார்த்துக்கிட்டிருந்தா எப்படி?”

“அர்த்தமில்லாமேயோ சும்மாவோ எதையும் செய்யறது எனக்குப் பிடிக்காது. உங்கப்பா அரசியல் நடத்தற மாதிரி தான் உன்னோட சிரிப்பும் இருக்கு...”

இப்போது இதற்கும் அவள் பதில் சொல்லவில்லை. சும்மா சிரித்தாள். தன் தந்தையைப் பற்றிய அவனது தீவிரமான விமரிசனத்தை அவள் கண்டிக்கவுமில்லை, ஆதரிக்கவுமில்லை.

“நீங்க என்னிக்கி மதுரை திரும்பப் போறீங்க?”

“முதல்லே வந்த லாரியிலேயே திரும்பணும்னு தான் இருந்தேன். இப்ப அப்படிச் செய்யப்போறதில்லே...”

“என்னது? லாரியிலியா மெட்ராஸ் வந்தீங்க?”

“ஆமாம். உங்கப்பாவும் மத்த மந்திரிகளும் பதவியேத்துக்கிட்டதைக் கொண்டாட லாரி லாரியாக் கிராமத்து அப்பாவி மக்கள் வேடிக்கை பார்க்க வந்தாங்களே அதுலே ஒருத்தனாத்தான் நானும் வந்தேன்.”

“லாரியிலே முந்நூறு மைல் பிரயாணம் பண்றது ரொம்பக் கஷ்டமா இருக்குமே?”

“சாதாரண மக்களுக்கு ரொம்பக் கஷ்டமா இல்லாததுன்னு இன்னிக்கு இந்த நாட்டுலே என்ன தான் மீதமிருக்கு?”

“...”

“நாளைக்கோ உடனேயோ நான் மெட்ராஸை விட்டுத் திரும்பப் போறதில்லே! இங்கே நான் செய்ய வேண்டியது நிறைய இருக்கு...”

“நாளைக்கு எங்க கார் மதுரை போகுது. டிரைவரைத் தவிர நான் மட்டுந்தான் தனியாப் போறேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லாட்டி நீங்களும் வரலாம்.”

தனக்கு அப்போது ஊர் திரும்புகிற உத்தேசம் இல்லையென்று முத்துராமலிங்கம் திட்டவட்டமாக அவளிடம் கூறிவிட்டான். அவள் பர்மிங்ஹாம் யூனிவர்ஸிடியில் தான் பி.எச்.டி. பண்ணப் போவதைப் பற்றி, விவரிக்கத் தொடங்கினாள். இன்னும் இரண்டு மூன்று மாதத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் தன் வெளிநாட்டுப் பிரயாணம் நேரலாம் என்றும் சொன்னாள். அவள் அப்பாவுக்கு அமைச்சர் என்ற முறையில் தலைநகரில் கிரீன்வேய்ஸ் ரோடில் ஒதுக்கப்பட்டிருக்கும் பங்களாவின் முகவரியையும் டெலிபோன் நம்பரையும் அவனுக்குக் கொடுத்தாள். அவனுடைய முகவரியைக் கேட்டாள்.

காபியைப் பருகிக் கொண்டிருந்த அவன் கப்பை மேஜை மேல் வைத்துவிட்டு நிதானமாக அவளைப் பார்த்தபடி சொன்னான்:

“இதுவரை விலாசம் என்று எதுவும் எனக்கு கிடைக்கவில்லை. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ நிலைமைதான். கிடைத்ததும் உங்களுக்கு எழுதுகிறேன்.”

“எங்கப்பா மூலமாச் சொல்லி ஏதாவது யூத் ஹாஸ்டல் அல்லது ரிஸர்ச் ஸ்டூடண்ட்ஸ் ஹாஸ்டல்லே தங்க எடம் வாங்கித் தரட்டுமா?”

“வேண்டாம்! நான் பார்த்துக்கிறேன்.”

“நான்... முதல்லே பார்க்கறப்பக் கூட இருந்தாரே அவரு யாரு...?”

“அவனா? அவனோட முழுப் பேரு சின்னராஜ். செல்லப் பேரு சின்னி... புதுசா இங்கே சிநேகிதமானவன்! ரொம்ப நல்ல மாதிரி...”

கார் புறப்படும் போது அவனை எங்கே விட வேண்டுமென்று சிரித்தபடியே கேட்டாள் மங்கா. அவன் கிருஷ்ணாம்பேட்டைக்கு அருகே அடையாளமாக ‘வெங்கடேஸ்வரா ஹாஸ்டல் பக்கத்தில்’ என்றான்.

அவளுக்கு அந்த இடம் தெரியவில்லை. ஆனால் காரை ஓட்டி வந்த டிரைவர் சென்னைக்காரனாக இருந்ததால் அவனுக்குத் தெரிந்திருந்தது. டாக்டர் நடேசன் சாலையும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையும் சந்திக்கிற இடத்தில் போலீஸ் ஸ்டேஷன் அருகே முத்துராமலிங்கத்தை இறக்கி விட்டாள் மங்கா.

அவன் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு கிழக்கே கடற்கரை போகும் சாலையை நோக்கி நடந்து நேஷனல் கேர்ள்ஸ் ஹைஸ்கூல் முனையில் இருசப்ப கிராமணி தெருவுக்காகத் திரும்பிய போது அங்கு ஒரே கலவரமாக இருந்தது. நடுத்தெருவில் சோடா புட்டிகள் உடைந்து கண்ணாடிச் சில் சிதறியிருந்தது. கடைகண்ணிகள் அடைக்கப் பட்டிருந்தன. ஜன நடமாட்டம் குறைந்து ஆளரவமற்றிருந்தது. வீடுகளில் ஜன்னல்களில் ஆட்கள் பயந்தபடி எட்டிப் பார்ப்பது தெரிந்தது.

பொழுது விடிந்து சில நாழிகைக்குள்ளேயே இப்படி ஒரு கலவரமா என்று வியந்தபடி பிளாட்பாரத்தில் நின்றான் முத்துராமலிங்கம். அருட்பிரகாச வள்ளலார் ‘தருமமிகு சென்னை’ என்று தெரியாத்தனமாக ஏமாந்து போய்ப் பாராட்டி விட்டாரோ என்று இப்போது அவனுக்குத் தோன்றியது. இன்றைய சென்னையில் ‘இறந்த காலங்களையும்’ இறந்த காலத்துப் பண்டங்களை விற்கிற மூர் மார்க்கெட்டில் கூட தர்மம் கிடைக்காது போல் இருந்தது. ஒன்றும் புரியாமல் திகைத்துப் போய் நின்றான் அவன்.

அத்தியாயம் - 10

அந்தப் பக்கமாய்ப் பரபரப்பாக ஓடி வந்த மயானத்து வாட்ச்மேனைத் தடுத்து நிறுத்தி, “என்ன ஏது?” என்று விசாரிக்க முயன்ற முத்துராமலிங்கத்தை, “இங்க நிக்காதே! போலீஸ் புடிச்சிக்கினு போயிரும்” என்று பதற்றத்தோடு தணிந்த குரலில் எச்சரித்துவிட்டு மேலே ஓடினான் அவன்.

வேறோருவரிடம் விசாரித்ததில் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த இரு வேறு சாராய கோஷ்டிகளுக்கு நடுவே மூண்ட கலவரத்தின் விளைவுதான் அது என்று தெரிவித்தார் அவர். அப்படிச் சண்டைகள் அங்கு அடிக்கடி நடப்பதுண்டு என்றும் கூறினார்.

அந்தக் கிருஷ்ணாம்பேட்டைப் பகுதிக்குள்ளே அப்போது நுழைகிற விதத்தில் சூழ்நிலை இல்லை. தபால் ஆபீஸுக்குப் போய்த் தந்தைக்கு விரிவாக ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று தோன்றியது முத்துராமலிங்கத்துக்கு. பக்கத்தில் தபால் ஆபீஸ் இருக்கும் இடத்தை விசாரித்துக் கொண்டு சென்றான் அவன்.

பெரிய தெருவின் தெற்குக் கோடியில் இருந்த ஒரு தபால் ஆபீஸில் போய் இன்லண்டு கவர் ஒன்று வாங்கினான். சென்னை வந்ததிலிருந்து நடந்ததை எழுதி முடிவில் தான் ஊர்வலத்துக்கு வந்த லாரியில் ஊர் திரும்பப் போவதில்லை என்பதையும் குறிப்பிட்டு, ஒரு வேலை கிடைத்ததும் அடுத்த கடிதத்தைத் தானே எழுதுவதாகவும் அதை அவன் முடித்திருந்தான்.

தனக்குத் தன்னுடைய தந்தை ஏதாவது பதில் எழுத விரும்பினால் கூட அவருக்குத் தர அவனிடம் ஒரு விலாசமுமில்லை. அப்படி, வீடு, விலாசம் என்று எதுவும் இல்லாமலே ஆயிரக்கணக்கான மக்கள் நடைபாதைகளிலும், கட்டிடங்களின் முகப்புக்களிலும் பெரிய மாளிகைகளின் மாடிப்படி அடிப்புறத்திலுமாக ஆண்டுக் கணக்கில் வாழ்கிற நகரமாக அது இருந்தது.

கடிதத்தை ஒட்டித் தபாலில் சேர்த்துவிட்டுப் பெரிய தெரு என்ற அந்த நெருக்கடியான குறுகலான தெருவில் அவன் வடக்கு நோக்கி நடந்த போது ஒரு லாட்ஜின் மாடிப் பகுதியிலிருந்து தன் பரிவாரம் புடை சூழக் கீழே இறங்கி வந்து கொண்டிருந்த கலையரசி கண்மணியைச் சந்திக்க நேர்ந்தது. அவள் அவனைப் பிடித்துக் கொண்டாள்.

“என்னண்ணே! கூட்டத்திலே நடந்த கலாட்டாவிலே ஏதோ காயம்னாகளே?... எங்கே காயம்?... கூட்டம் முடிஞ்சதுமே நம்மூர் ஆளுக சொன்னாக... எனக்கு அப்படியே பதறிப் போச்சு. கையும் ஓடலே... காலும் ஓடலே... அப்படியே அந்தக் கடற்கரைக் கூட்டம் பூராச் சல்லடை போட்டுச் சலிச்சாப்ல அண்ணனைத் தேடிப் பார்த்தேன்... காங்கலை... ஒரே கவலையாப் போச்சு...”

“ஒண்ணும் ஆயிடலை! நல்லாத்தான் இருக்கேன். கவலை வேண்டாம்...”

“மேலே அறைக்கு வாங்க. அண்ணன் கிட்டக் கொஞ்சம் தனியாப் பேசணும்...”

“நான் லாரியிலே வரப் போறதில்லே... எனக்காகக் காத்துக்கிட்டு இருக்க வேணாம்...”

“ஏண்ணே...? வந்ததைப் போலவே எல்லாருமாச் சேர்ந்து திரும்பிப் போகலாமே...?”

“நான் வந்த காரியமே இன்னும் ஆகலியே...?”

“அண்ணனுக்காக வேணும்னா இன்னிக்கிப் புறப்படறதை மாத்தி நாளைக்குப் புறப்படறோம்.”

“வேணாம்! ஏற்பாடு பண்ணினபடி நீங்கள்ளாம் புறப்படுங்க. இந்த ஊர்லே என் வேலை இன்னிக்கோ, நாளைக்கோ முடிஞ்சிரும்னு தோணலை...”

கூட இருந்த கூட்டத்தை ஒதுங்கி நிற்கச் சொல்லி ஜாடை காட்டிவிட்டு முத்துராமலிங்கத்தை மட்டும் மாடிக்கு அழைத்துக் கொண்டு போனாள் அவள்.

மாடிக்குப் போகும் போதே படியில் எதிர்ப்பட்ட லாட்ஜ் ஊழியனிடம், “என் ரூமுக்கு ரெண்டு காபி நல்லதாக் குடுத்து அனுப்புப்பா” என்றாள் கண்மணி.

அந்த லாட்ஜிலேயே கண்மணியின் அறை தான் வி.ஐ.பி. ரூமாக இருக்கும் போல் தோன்றும் அளவுக்குச் சிறப்பாக இருந்தது. அறைக்குள்ளேயே டெலிஃபோன் வசதியும் இருந்தது.

“அண்ணே! உங்களுக்கு நான் என்ன கெடுதல் பண்ணினேன்? கடற்கரையிலே நான் மேடையிலே பேச ஆரம்பிச்சப்ப நீங்க கூட்டத்துக்கு நடுவே நின்னுக்கிட்டு, ‘பேசிப் பேசியே ஊரை ஏமாத்தறா’ன்னீங்களாமே...?”

“யார் சொன்னாங்க...?”

“ஏன்? நம்மூர் ஆளுங்களே சொன்னாங்க. முதல்லே நான் நம்பலே. அப்புறம் எல்லாருமே நீங்கதான் அப்பிடிக் கலாட்டாப் பண்ணினீங்கன்னு உறுதியா சொல்றாங்க...?”

“உண்மைதான்! ஆனால் நான் அதை உங்க பேச்சுக்கு எதிரா மட்டும் சொல்லலே... பொதுவா நேத்து மேடையிலே பேசின அத்தனை பேரோட பேச்சுக்கும் எதிராகத்தான் சொன்னேன்.”

“உங்களுக்கு ஏன் இத்தினி பிடிவாதம்?”

“கருத்து வேறுபாடு என்பது பிடிவாதமல்ல.”

“சில கருத்து வேறுபாடுகள் உங்களுக்கோ உங்களைப் போலொத்தவங்களோட சொந்த வாழ்க்கைக்கோ உதவறதில்லே.”

“உடனடியான பிரயோசனங்களுக்காகவோ உதவிகளுக்காகவோ, நீண்ட காலமாகக் காப்பாற்றி வந்த கொள்கைகளை அடகு வைக்கிறவன் விவேகி இல்லை... ஒரு விவேகியின் பிடிவாதத்தை பாமரர்கள் ‘முரண்டு’ என்று குறை கூறலாம். ஆனால் மற்றொரு விவேகியின் பார்வையில் அது ஞான வைராக்கியமாக விளங்கும்...”

“முரண்டுக்கும், பிடிவாதத்துக்கும் தான் சாமியாருங்களோட பாஷையிலே ‘ஞான வைராக்கியம்’னு பேர் சொல்லிக்குவாங்க...!”

“அது உங்க அபிப்பிராயம்! நான் ஒத்துக்கலை.”

“இப்பிடி அபிப்பிராய பேதப்பட்டுக்கிட்டே நீங்க உங்க வாழ்க்கை பூரா வீணடிச்சுக்கப் போறீங்க. உங்களை மாதிரிப் படிப்பு, பேச்சுத் திறமை, பெர்ஸனாலடியெல்லாம் உள்ள ஒருத்தர் எங்க கட்சிப் பக்கம் வந்தா ரெண்டே மாசத்திலே மந்திரியா ஆக்கிப்பிடுவோம்...”

“எங்கே அப்பிடிப் பண்ணிடுவீங்களோன்னு பயந்து தான் உங்க பக்கத்திலேயே நான் வர்ரதில்லே...”

“ஏனாம்? இதிலே பயப்படறதுக்கு என்னா இருக்காம்...?”

“அயோக்கியர்களுக்கு நடுவில் கிடைக்கிற தங்கச் சிம்மாசனத்தை விட, யோக்கியர்களுக்கு நடுவே அவர்களோடு கிடைக்கிற புழுதி படிந்த தரையையே சிலாக்கியமானதென்று விரும்புவேன் நான். ஆகவே தான் எங்கே உங்க ஆளுங்களுக்கு நடுவே வந்து தங்கச் சிம்மாசனத்தை அடைஞ்சிட நேருமோன்னு நடுநடுங்கிப் பயந்துக்கிட்டே வாழ வேண்டியிருக்கு...”

சொல்லிவிட்டு அவளை நோக்கிச் சிரித்தான் அவன்.

“பணம், பதவி, செல்வாக்கு எல்லாம் கிடைக்கிறதோட எங்க இயக்கத்துக்குள்ளே வந்து சேர்ந்திட்டா என்னை மாதிரி அழகான பொம்பளைங்களும் தாராளமாவே கெடைப்பாங்க” என்று விஷமத்தனமாகச் சிரித்துக் கொண்டே பதில் சொல்லிய கண்மணி திடீரென்று ஒரு வெறியோடு கைகளை நீட்டிக் கொண்டு அவனைத் தழுவிக் கொள்வதற்குப் பாய்ந்தாள்.

முத்துராமலிங்கம் நிதானத்தோடு பதறாமல் அவளைத் தடுத்து நிறுத்தினான். சொன்னான்:

“எனக்குப் பயம் வந்தது தப்பில்லேன்னு இப்பப் புரியுது.”

“பயப்படறத்துக்கு நான் என்ன பேயா, பிசாசா, பூதமா?”

“பேய், பிசாசு, பூதங்களுக்காகக் கூட நான் இவ்வளவு தூரம் பயப்படுவதில்லை.”

கண்மணி அடிபட்ட புலியாகச் சீறினாள். அவள் மனத்தின் மிக மிருதுவான உணர்வுப் பகுதியை அவமானப்படுத்திப் புறக்கணித்து விட்டதன் மூலம் அவளுடைய ஆக்ரோஷத்தைச் சீண்டி விட்டிருந்தான் முத்துராமலிங்கம்.

“நீங்க மனுஷனே இல்லே.”

“உங்க பார்வையிலே நான் அப்படிப் படறதைப் பற்றி ரொம்ப சந்தோஷம். நான் மிருகமில்லாத காரணத்தால் - நீங்கள் விரும்பிய போது விரும்பியபடி, உடனே மிருகமாக மாறாத காரணத்தால் இந்த நற்சான்றிதழை எனக்கு நீங்கள் தருகிறீர்கள்.”

காபி கிளாஸ்களோடு பையன் அறைக் கதவைத் தட்டினான். கண்மணி தாழிடாமல் ஒருக்களித்துச் சாத்தியிருந்த கதவைத் திறந்தாள்.

பையன் ஆவி பறக்கும் காபி கிளாஸ்களை மேஜை மேல் வைத்து விட்டு நகர்ந்தான்.

“காபி குடியுங்க...” அவள் காபி கிளாஸை எடுத்து அவனிடம் நீட்டினாள். சிரித்தபடியே அவன் அவளைக் கேட்டான். “மிருகம் காபி குடிக்குமா?”

“சே! சும்மா குத்திக் காட்டிப் பேசாதீங்க... நடந்ததை மறந்துடலாம்.”

“மறக்கறதுங்கிறது காபி குடிக்கிறதைப் போல அத்தினி சுலபமில்லே...”

“அண்ணன் கோபமாப் பேசறப்பக் கூட அழகாயிருக்கீங்க...”

“சினிமாவிலேயும், அரசியலிலேயுமாப் பங்கு போட்டுக்கிட்டு இந்த ‘அண்ணன்’கிற வார்த்தையை இந்த ஊர்லே ஏறக்குறைய மானபங்கப் படுத்திட்டீங்க. அண்ணன்னு கூப்பிடற பொம்பளைங்க தங்கை மாதிரி நடந்துக்கணும். அக்கான்னு கூப்பிடற ஆம்பிளை தம்பி மாதிரி நடந்துக்கணும். இங்கே ரெண்டுமே இல்லே.”

கண்மணி பதில் பேசாமல் தலை குனிந்தாள். அவளோடு கட்சி, அரசியல் பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சி என்று பழகுகிற வேறு பல ஆண்கள் எவரும் அவளை இப்படித் தலைகுனிய வைத்ததில்லை. மாறாகச் சில வேளைகளில் அவள் அவர்களைத் தலைகுனிய வைத்திருக்கிறாள்.

முத்துராமலிங்கம் காபியைப் பருகினான். காபி பருகுவதற்காகக் கையை மேலே உயர்த்திய போது அவனது கையிலிருந்த பிளேடு கீறின காயத்தை அவள் பார்த்தாள்.

“அதென்ன காயம்...?”

“இதுவா? இதுதான் பேசிப் பேசியே ஊரை ஏமாத்தறாங்கன்னு நான் கூட்டத்திலே சொன்னதுக்கு உங்க கட்சிக் கண்மணிகள் அளித்த பரிசு.”

“அடப் பாவிங்களா...”

“நீங்களே உங்க கட்சிக்காரங்களை இப்படி அவங்க பேரைச் சொல்லிக் கூப்பிடலாமா?”

கண்மணி சிரித்தாள். முத்துராமலிங்கம், “மறுபடி பார்க்கலாம்... வரேன்” என்று அப்போது விரைந்து அவளிடம் விடை பெற்றான்.

அவன் கீழே படியிறங்கித் தெருவுக்கு வந்து வடக்கு நோக்கிச் சிறிது தொலைவு நடந்ததும், அன்று வெங்கடேஸ்வரா ஹாஸ்டலுக்குத் தேடிச் சென்று காண முடியாத அந்த நண்பன் எதிர்ப்பட்டான். முத்துராமலிங்கத்தை எதிரே கண்டதுமே அந்த நண்பனின் முகம் மலர்ந்தது.

அத்தியாயம் - 11

நண்பனைச் சந்தித்த பின்பும், முத்துராமலிங்கத்தின் மனம் நடந்து முடிந்த நிகழ்ச்சியிலேயே இருந்தது. நண்பன் தன்னுடைய விடுதி அறைக்குப் போகலாம் என்று கூறி அழைத்துச் சென்றான்.

சென்னைக்குப் புறப்பட்ட சூழ்நிலையையும், வந்து சேர்ந்த பின் நடந்தவற்றையும் அவனிடம் விவரித்த பின் அவனைத் தேடி வந்து காணமுடியாமல் போய் விடுதி அறை பூட்டப்பட்டிருந்ததையும் குறிப்பிட்டான். நண்பன் அதிகமாகப் பதில் பேசவில்லை.

தொடர்ந்து முத்துராமலிங்கம் தான் பேசிக் கொண்டிருந்தான். நண்பன் மட்டும் படாமலும் ஒப்புக்கு ஏதோ மறுமொழி கூறிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது. ‘வந்திருப்பவன் எங்கே தன்னோடு உடன் தங்கித் தனக்குச் செலவு வைத்து விடுவானோ?’ என்ற பயத்தோடும், அதிகச் சுயநலமான தற்காப்பு உணர்வோடும் அவன் பழகுவது தெரிந்தது.

பொதுவில் வாழ்க்கைப் போராட்டமும் போட்டிகளும், வசதிக் குறைவுகளும் உள்ள நகரங்களில் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த அனைவரின் அறிவும் தற்காப்புக்கும், சுயநலத்துக்குமே செலவிடப்படுவது முத்துராமலிங்கத்துக்குப் புரிந்தது. நண்பன் தான் அப்போது புரிய வைத்திருந்தான். தன் நண்பன் மேல் அவனுக்குக் கோபம் வரவில்லை. அநுதாபம் தான் ஏற்பட்டது. நண்பனைப் புரிந்து கொண்ட பின் அவனிடம் மேலும் மனம் விட்டுப் பேச வரவில்லை. மனம் விட்டுக் கேட்க முடியாதவர்களிடம் மனம் விட்டுப் பேச முடியாது. அது பாறாங்கல்லில் தலையை மோதிக் கொள்வது போல் தான் முடியும். தண்ணீரை உறிஞ்ச வேண்டுமானால் அது பாயும் நிலம் ஈரத்தை உறிஞ்சக் கூடியதாக இருக்க வேண்டும். கருங்கல் பாறையில் பாயும் தண்ணீரை அது உறிஞ்சாது.

சென்னைக்கு வந்த பின் நண்பன் கருங்கல் பாறையாகி இருப்பது புரிந்தது. பிற்பகலுக்கு மேல் நண்பனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு மீண்டும் கிருஷ்ணாம்பேட்டைக்குச் சென்றான் அவன்.

கிருஷ்ணாம்பேட்டையில் இப்போது நிலைமையின் வேகம் குறைந்து தணிந்திருந்தது. சுடுகாட்டு வாட்ச்மேன் முத்துராமலிங்கத்தின் கைப் பெட்டியைக் கொண்டு வந்து கொடுத்து விட்டுச் சொன்னான்:

“எதிர்த்தரப்பு ஆளுங்க காமிச்சுக் கொடுத்துட்டாங்க. இங்கே போலீஸ் ரெய்டு... ஒரே ரகளையாப் போச்சு... சின்னி இதை உங்கிட்டக் கொடுக்கச் சொல்லிச்சு... அது வெளியே வர ரெண்டு மூணு நாளாவும்... அதுங்காட்டியும் உன்னை அந்தக் கொலைகாரன்பேட்டை வூட்லே தங்கிக்கச் சொல்லிச்சு... எங்ககூட வந்தீன்னா இட்டுக்கினு போய் வுட்டுடுவேன், கிளம்பு...”

“அங்கே எனக்கு யாரையும் தெரியாதே...”

“அதுக்குத் தான் நா கூட வரேனில்ல...?”

முத்துராமலிங்கம் அந்த ஆளோடு புறப்பட்டுச் சென்றான். கலகம் மூண்டு போலீசில் பிடிபடும் அந்தப் பதற்றமானதும் பரபரப்பானதுமாகிய சூழ்நிலையிலும் கூடச் சின்னி தான் தெருவில் நின்றுவிடக் கூடாதே என்று அக்கறையோடு தனக்குத் தகுந்த ஏற்பாடு செய்துவிட்டுப் போயிருப்பதை எண்ணி முத்துராமலிங்கத்துக்கு மனம் சிலிர்த்தது.

தன் தந்தையோடு நெருங்கிப் பழகியவருக்கு இல்லாத அந்த அக்கறை - தன்னோடு நெருங்கிப் பழகிய நண்பனுக்குக் கூட இல்லாத அந்த அக்கறை - எங்கோ தெருவில் சந்தித்த ஒரு கீழ் மட்டத்தைச் சேர்ந்த மனிதனுக்கு இருப்பதை எண்ணி எண்ணி வியந்தது அவன் மனம். சின்னி பணம் கொடுத்துவிட்டுப் போயிருப்பதாகச் சொல்லி முத்துராமலிங்கத்தை அப்போது ரிக்‌ஷாவிலேயே கூட்டிச் சென்றான் அந்த ஆள். ‘சின்ன் என்றைக்கு விடுதலையாகி வெளியே வருவான்’ என்று கேட்ட போது, ‘அவனுக்கு வேண்டிய மேலிடத்து அரசியல் ஆட்கள் தலையிட்டு விரைவிலேயே அவன் விடுதலைக்கு ஏற்பாடு செய்துவிடுவார்கள்’ - என்று பதில் கிடைத்தது.

யாரோ மேல் மட்டத்து மனிதர்களின் கொள்ளை லாப ஆசையைப் பூர்த்திச் செய்வதற்காகச் சாராயப் பானையை அது என்ன என்றே தெரியாமல் வண்டியில் வைத்து இழுத்துச் செல்லும் மாடு போலக் கர்மயோகிகளை ஒப்ப அவர்கள் உழைத்துக் கொண்டிருப்பதாகவே அப்போது முத்துராமலிங்கத்துக்குத் தோன்றியது.

தென் மாநிலங்களின் பல இனங்களைச் சேர்ந்த அழகிய உடல்வாகு மிக்க பெண்களின் காட்சிப்பட்டறையான அந்த வீட்டில் வாசலில் இருந்த காவற்காரனிடமும், நம்பகமான நாயிடமும் தான் எல்லாப் பொறுப்புக்களும் விடப்பட்டிருந்தன.

அந்த முரட்டுக் காவற்காரன் முத்துராமலிங்கத்திடம் மிக மரியாதையாகப் பழகினான். சின்னியோடு சேர்த்து முந்திய இரவு அவனைப் பார்த்திருந்தது ஒரு காரணம்.

“சின்னிக்கு மிகவும் வேண்டியவர் இவர். சின்னி விடுதலையாகி வருகிறவரை இங்கே இவரைத் தங்க வைத்துக் கவனித்துக் கொள்ள வேண்டும்” - என்று உடன் வந்திருந்த கிருஷ்ணாம்பேட்டை ஆள் காவற்காரனிடம் வற்புறுத்தித் தெரிவித்தது மற்றொரு காரணமாயிருக்க வேண்டும். அவனை அங்கே ஒப்படைத்து விட்டு உடன் வந்த சுடுகாட்டு வாட்ச்மேன் திரும்பிப் போய்விட்டான்.

உற்சாகமும், கலகலப்பும் நிறைந்த இரவுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது அந்த விடுதி. முகப்பவுடர், ஸ்நோ, வாசனைத் தைலங்கள், காலமைன் எல்லாம் கலந்த கூட்டான நறுமணம் கூடத்திலிருந்து கிளர்ந்து கொண்டிருந்தது.

வளையல் ஒலிகள், இனிய பெண்களின் குரல்கள், கலீர் கலீர் என்று சிரிப்பு ஊற்றுக்கள் - எல்லாம் காதில் விழுந்தன.

“ஐயோ என்னை விட்டுவிடு! கொன்னுடாதே” - என்று கதறியபடி தெருவில் பைத்தியமாக ஓடிய அந்தப் பெண்ணின் நினைவும் முத்துராமலிங்கத்தின் மனத்தில் வந்தது. மனத்தை விற்றுவிட்டவர்கள் ஏற்பாடு செய்து வைத்திருக்கும் விடுதியில் உடலை விற்றுக் கொண்டிருக்கும் அவர்களை எண்ணியபோது அவன் மனம் இருண்டது.

பொழுது சாய்ந்து ஒளி மங்கிக் கொண்டிருந்தது. அந்த நிலையில் அந்த வீட்டின் கீழ்ப்பகுதியில் தங்க விரும்பாமல் மொட்டை மாடிக்குச் செல்ல விரும்பினான் அவன்.

உள்ளே தங்கியிருந்த பெண்களுக்கு எல்லாம் தேநீர் கொடுத்துக் கொண்டிருந்த ஓர் ஆளை அவனருகே கூப்பிட்டுக் கொண்டு வந்து அவனுக்கும் தேநீர் வாங்கிக் கொடுத்தான் சின்னியின் காவற்காரன். தேநீரைப் பருகிவிட்டு முத்துராமலிங்கம் மொட்டை மாடிக்குப் போனான்.

அவனது கையில் பாரதியார் கவிதைத் தொகுதி இருந்தது. பெட்டியில் இருந்ததை எடுத்துக் கொண்டிருந்தான். அந்த வீட்டில் தங்குவதற்கு அவன் அருவருப்பு அடையவில்லை.

அழுக்கு மயமான குப்பைமேட்டில் கூச்சப்படாமல் அமர்ந்து எதிரே தேடி வந்து நின்ற அரசனிடம், “யாம் இருக்க நீர் நிற்க” - என்று சொல்லிய ஞானியைப் போல் அருவருப்பின்றி இருந்தான் அவன். எங்கே இருக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்று எண்ணினான் அவன்.

அதற்குத் தலைவனான சின்னியின் மரியாதைக்குரிய நண்பன் என்பதால் அங்கே எல்லோரும் அவனுக்குத் தலை வணங்கினார்கள். அவனுக்கு மரியாதை செய்தார்கள். மொட்டை மாடியிலிருந்து கொண்டு அவன் பாரதியார் கவிதையை இரசித்துப் படித்துக் கொண்டிருந்த போது - வெளிச்சத்துக்காக மாடியிலிருந்து கீழே கம்பிப் பலகணி வைத்திருந்த ஓரிடத்தின் வழியே, “நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?” என்ற பாரதி பாடலின் இனிய அடியைக் கீழேயிருந்து யாரோ பெண்குரல் ஒன்று மிக நளினமாகப் பாடுவது கேட்டது.

அந்த இனிய குரலாலும், அதில் கூப்பியிருந்த சோகச் சாயலாலும் முத்துராமலிங்கம் மிகமிகக் கவரப்பட்டான். வெறுங்குரலால் மட்டும் அவள் பாடுவதாகத் தோன்றவில்லை. மனத்தாலும் சேர்ந்து இசைப்பது போல் இருந்தது. கீழே இறங்கிச் சென்று அத்தனை அழகாகப் பாடுவது யார் என்று பார்க்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. அந்த ஆவலை அவனால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

பாரதியார் கவிதைப் புத்தகத்தைத் தான் படிப்பதற்குப் பிரித்தவுடன் உடனிகச்சியாக அந்தக் குரல் கேட்கவே அவன் பெருமகிழ்ச்சி அடைந்தான். அந்தக் கவிதைகளை அவன் ஊக்கத்துக்காகவும், மன உயர்வுக்காகவும் அடிக்கடி படிப்பது உண்டு. அக்கவிதைகள் அவனுடைய வாழ்வின் வழிகாட்டியாகவும், வேதபுத்தகமாகவும் அமைந்திருந்தன.

அவன் அந்தப் புத்தகத்துடன் அப்படியே கீழே படியிறங்கி வந்தான். கூடத்துக்குள் நுழைகிற கதவருகே ஆயாக் கிழவி பிரம்பு நாற்காலியைப் போட்டு உட்கார்ந்திருந்தாள். அவள் வாய் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டிருந்தது.

முத்துராமலிங்கத்தைப் பார்த்ததும் கிழவி மரியாதையாக எழுந்து நின்றாள்.

“இப்பப் பாடினது யாரு?”

“அதுவா அந்தச் சேலத்துப் பொண்ணு... புதுசா வந்திருக்குது... எப்பப் பார்த்தாலும் புஸ்தகமும் கையுமாத் திரியும். கஸ்டமருங்க வந்தாக் கூடப் புஸ்தகத்தைப் பிடுங்கி வச்சுப் போட்டு நாமதான் அதை உள்ளாரத் துரத்தணும்.”

“நல்லாப் பாடுது...”

“உள்ளாரப் போயி மறுபடி பாடச் சொல்லிக் கேளு தம்பீ! உனக்கில்லாததா!” என்று கூறியபடி கண்களைச் சிமிட்டினாள் கிழவி. அவள் கண்களைச் சிமிட்டிய விதம் முத்துராமலிங்கத்துக்குப் பிடிக்கவில்லையானாலும் அவன் அந்தப் பாடலைக் கேட்க விரும்பினான். கிழவியைப் பொருட்படுத்தாமல் மேலே நடந்து உள்ளே சென்றான் முத்துராமலிங்கம். அவன் அருகில் சென்றதும் தலை சீவிக் கொண்டிருந்த அந்தப் பெண் பயத்தினாலோ கூச்சத்தினாலோ பாடுவதை நிறுத்திவிட்டாள். அவளுடைய கண்களும் முகமும் பார்வையும் துறுதுறு என்று இருந்தன. கொஞ்சம் சுட்டித் தனமும் குறும்பும் கூடத் தெரிந்தன. அவன் அருகே சென்று கேட்டான்:

“யார் பாடினது?”

“ஏன்? நான் தான்! பாடக்கூடாதா? அல்லது பாடறதுக்கு இங்கே சுதந்திரம் கிடையாதா?”

“பாடியது நன்றாயிருந்தது என்று தான் தேடி வந்தேன்.”

“இங்கே இனிய குரலையோ இசையையோ பாராட்டவும் கேட்கவும் பொறுமையுள்ள மனிதர்கள் வருவது வழக்கமில்லை.”

“நான் குரலையும் இசையையுமே பாராட்ட மட்டும் தான் வந்திருக்கிறேன்.”

அவன் இப்படி அவளிடம் கூறிக் கொண்டிருந்த போதே இவர்களுக்குள் வாக்குவாதம் நடப்பதாகப் புரிந்து கொண்ட ஆயாக்கிழவி அருகே வந்து சேர்ந்தாள்.

“அடியே பைத்தியக்காரி! எதிர்த்துப் பேசி வாயாலே சீரழியாதே... ஐயாவுக்கு ரொம்ப வேண்டியவருடி?... பார்த்துப் பதனமா நடந்துக்கோ” என்று அந்த இளம் பெண்ணை எச்சரித்துவிட்டுப் போனாள் கிழவி.

கிழவி தொலைவுக்குப் போனது உறுதியானதும், முத்துராமலிங்கத்தைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்ட அவள், “என் உடம்பை எத்தனை மணி நேரத்துக்கு வாடகை பேசி வந்திருக்கிறீர்கள்?” - என்று கடுகடுப்பாக அவனிடம் கேட்டாள்.

முதலில் முத்துராமலிங்கம் திகைத்தான். தன்னைப் பற்றி அவளுக்கு எப்படி விளக்குவது என்று அவனுக்குப் புரியவில்லை. ஒருவாறு தட்டுத் தடுமாறி அவளுக்குத் தன்னைப் பற்றிய எல்லாவற்றையும் சொல்லி விவரித்தான். முதலில் குறுக்கிட்டுக் குறுக்கிட்டுப் பேசிய அவள் அப்புறம் மெல்ல மெல்ல அவன் கூறத் தொடங்கியவற்றில் நம்பிக்கை ஏற்பட்டுப் பொறுமையோடு கேட்கலானாள். அவன் தன்னை முற்றிலும் அறிமுகப்படுத்திக் கூறியதும் அவள் கேட்டாள்:

“யோக்கியர்கள் இந்தக் கட்டிடத்திற்குள் வரமாட்டார்களே?”

“நான் வந்திருக்கிறேன். இன்னும் யோக்கியனாகத்தான் இருக்கிறேன்.”

“தொடர்ந்து யோக்கியனாக இருக்க விரும்பினால் தயவு செய்து உடனே இங்கிருந்து போய்விடுங்கள்.”

அவள் நிர்த்தாட்சண்யமாகவும், கடுமையாகவும் பேசுவதைப் பார்த்து அவனுக்கு வியப்பாயிருந்தது. அந்தப் பாடலை மறுபடி ஒரு தடவை பாடுமாறு அவளை வேண்டினான் அவன்.

“இப்போ முடியாது! இது இங்கே சங்கீதமே புரியாத மனிதர்கள் கூட்டம் வந்து போகிற வாடிக்கை நேரம். வேண்டுமானால் நாளைக் காலையில் பாடுகிறேன். வந்து கேளுங்கள்” என்றாள் அவள். அவளது பெயரை விசாரித்தான். நளினி என்றாள். பூர்வோத்திரங்களைச் சொல்ல மறுத்து விட்டாள். அவனும் வற்புறுத்தவில்லை. மாடிக்குப் போய்விட்டான்.

மறுநாள் காலை சொன்னபடியே, ‘நல்லதோர் வீணை’ பாட்டை முழுவதும் அவனுக்காகவே அமுத மழையாகப் பாடிக் காட்டினாள் நளினி. அவனிடம் சிறிது நேரம் மனம் விட்டுப் பேசவும் செய்தாள். பேச்சில் விரக்தி தான் தொனித்தது. முத்துராமலிங்கத்தைத் தொடர்ந்து அங்கே தங்க வேண்டாம் என்றும் எச்சரித்தாள் அவள்.

பதிலுக்கு அவன் சிரித்தான். சின்னி அன்று மாலை வரை விடுதலையாகி வரவே இல்லை. ஆனால் முத்துராமலிங்கத்தின் உணவு உறையுள் தேவைகள் கவனித்துக் கொள்ளப்பட்டன.

இரண்டாம் நாள் நள்ளிரவு கூச்சலும், கூப்பாடுமாகச் சத்தம் கேட்டு அவன் கண் விழித்த போது வாசலில் நான் குரைத்தது. ஒரு பெரிய போலீஸ் வேன் வந்து நின்று கொண்டிருந்தது.

கீழ் வீட்டில் போலீஸ் ரெய்டு நடப்பதாகவும், அவன் மாடியிலேயே பதுங்கிக் கொள்ள வேண்டும், என்றும் ஒரு சிறுவன் அவசர அவசரமாக மூச்சிரைக்க மாடிக்கு ஓடி வந்து அவனை எச்சரித்து விட்டுப் போனான்.

அத்தியாயம் - 12

அந்தச் சிறுவன் வந்து எச்சரித்த போது தான் அதுவரை அங்கு தான் உணர்ந்திராத பதற்றத்தையும், பரபரப்பையும் முத்துராமலிங்கம் உடனடியாக உணர்ந்தான். ‘யோக்கியர்கள் இந்தக் கட்டிடத்தில் தொடர்ந்து தங்கியிருக்க முடியாது - கூடாது’ என்று அவள் - நளினி எச்சரித்தது அவனுக்கு நினைவு வந்தது. தொழிற் போட்டு - பகைமைகள் காரணமாகச் சின்னியின் சாராய வியாபாரத்தைக் காட்டிக் கொடுத்தது போல இதையும் யாரோ எதிரிகள் போலீசுக்குக் காட்டிக் கொடுத்திருக்க வேண்டும் என்று தோன்றியது. தன்னைப் போல் ஒருவன் எந்தத் தவறும் செய்யாமல் எதற்காக அப்படி அப்போது ஒளிந்திருக்கிறோம் என்று எண்ணிய போது அவனுக்கு மனம் கூசியது.

சமூக அமைப்பில் போலீஸ், சட்டம் எல்லாமே மிகப் பல சமயங்களில் செய்யாத தவறுகளுக்காகவே தொடர்ந்து பலரைத் தண்டித்துக் கொண்டிருப்பது போல் அவனுக்குத் தோன்றியது.

கீழே பெண்களின் கூக்குரல்களும் அலறல்களும், ஓடித் துரத்தும் காலடி ஓசைகளும், அடைபடும் கதவுகளுமாக ஒரே பரபரப்பு. முத்துராமலிங்கத்துக்கு மனம் தவித்தது. ஒரு பாவமுமறியாத அப்பாவிப் பெண்கள் போலீஸ் ரெய்டில் சிக்கித் தவிக்கும் போது ஆண் பிள்ளையாகிய தான் மாடியில் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் பதுங்கிக் கொண்டிருப்பது பேடித்தனம் என்று கருதினான் அவன். அவன் மனச்சாட்சி குமுறி எழுந்தது.

கீழே நாய் இடைவிடாமல் குரைக்கும் ஒலியில் போலீஸாரின் துரத்தும் அதட்டல்களும் கைவளை ஓசைகளும், பெண்களின் பயங்கலந்த குரல்களும் இணைந்து கரைந்தன. பல ரெய்டுகளைச் சந்தித்த அநுபவமும் பழக்கமும் உள்ள வாட்ச்மேன், ஆயா, ஏவல்கூவல் வேலைக்காக இருந்த எடுபிடிச் சிறுவர்கள் எல்லாருமே சுவரேறிக் குதித்துத் தப்பி ஓடியிருப்பார்கள் என்று தோன்றியது. அவர்களுடைய குரல்கள் கீழ்பக்கம் கேட்கவில்லை. துரத்தப்பட்டும், விரட்டப்பட்டும், யாராலோ, யாருக்கோ விற்கப்பட்டும் வந்திருந்த அந்த அபலைப் பெண்கள் மட்டும் மாட்டிக் கொள்வதா என்று சிந்தித்தான் அவன். சமூகத்தின் ஒட்டு மொத்தமான கூட்டுத் தவறுகளுக்குக் கூட அபலைகள், நிராதரவானவர்கள் அப்பாவிகள் மட்டுமே பொறுப்பாவதும் இப்படித்தான் என்று தோன்றியது.

தான் மட்டும் ஒளிந்து மறைந்து தப்ப வேண்டுமென்ற முனைப்புக்கும் பயத்துக்கும் என்ன காரணம் என்று தனக்குத் தானே சிந்தித்தான் அவன். ஒவ்வொரு பயத்துக்கும் ஒரு சுயநலம் தான் காரணம் என்று புரிந்தது. சுயநலம் தான் பயப்பட வைக்கிறது. சுயநலம் தான் தனது குற்றத்தைப் பிறர் கண்டு சொல்வதற்குள் முந்திக் கொண்டு தான் பிறரைக் குற்றம் சாட்ட வைக்கிறது. சுயநலம் தான் ஒளிந்து கொள்ள வைக்கிறது. சுயநலமும் பயமும் இல்லாவிட்டால் மனிதர்களின் உலகம் சொர்க்க புரியாக இருக்கும் என்று எண்ணினான் அவன்.

இப்படி எண்ணிய மறுகணமே அவனால் ஒளிந்திருக்க முடியவில்லை. தன்னை மட்டும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அக்கறை எடுத்துக் கொள்ள முடியவில்லை. பிறர் அகப்படும் போது தான் மட்டும் தப்ப வேண்டும் என்ற முனைப்பு அழிந்தது. அவன் மாடிப்படிகளில் விரைந்து இறங்கிக் கீழே சென்றான். அளவு பிசகாமல் அவனது வலிமை மிக்க கால்கள் இரண்டிரண்டு படிகளாகத் தாவி இறங்கின. வேகமாக இறங்கின.

கீழ்ப் பகுதியில் நடுக்கூடத்தில் அவன் கண்ட காட்சி முன்பே எதிர்பார்த்ததுதான். அங்கே நாலு பெண்கள் அலங்கோலமான நிலையில் நின்றார்கள். இரண்டு கான்ஸ்டேபிள்கள் அவர்களருகே காவலுக்கு நின்றார்கள். முன்பே அவன் அநுமானித்தது போல் ஆயாக் கிழவி உட்பட மற்ற எல்லோரும் தப்பி ஓடிவிட்டிருந்தார்கள். நாய் மட்டும் ஓடாமல் தோட்டத்தில் கட்டிய இடத்திலிருந்தே குரைத்துக் கொண்டிருந்தது. சுயநலமும் பயமுமே உள்ள மனிதர்களை விட அவை என்னவென்றே புரியாத நல்ல மிருகங்கள் எவ்வளவோ உயர்ந்தவையாக இருக்க வேண்டும் என்று அந்த நிலையில் அவனுக்குத் தோன்றியது!

“ஏய்! நில்லு... ஓடினா உதைப்படுவே” என்ற கூப்பாட்டுடன் ஒரு கான்ஸ்டபிள் முத்துராமலிங்கத்தைப் பிடிக்க விரைந்து ஓடி வந்தான். முத்துராமலிங்கம் திமிறிக் கொண்டு ஓடாததும் தப்ப முயலாததும் அந்தப் போலீஸ்காரனுக்கே ஆச்சரியத்தை அளித்தன. முத்துராமலிங்கம் அருகே வந்ததும் அந்தப் பெண்களின் கூட்டத்தில், ‘நல்லதோர் வீணை’ பாட்டுப் பாடிய அந்த நளினி இல்லாததைக் கவனித்தான். அவள் தப்பிவிட்டாளோ என்ற எண்ணத்தோடு கூடத்தின் இருபுறமும் இருந்த அறைகளைக் கவனித்த போது ஓர் அறை அடைந்திருந்ததும் அதன் வாயிலில் போலீஸ்காரன் ஒருத்தன் காவல் நிற்பது போல் கதவில் சாய்ந்திருந்ததும் பார்வையில் பட்டன. அந்த அறை வாயிலை நோக்கி நடக்கத் தொடங்கிய முத்துராமலிங்கத்தைப் பெண்களுக்குக் காவல் நின்ற போலீஸ் தடுத்தான்.

“ஏய்! இப்பிடி நில்லு! நீ அங்கே போகப்படாது...”

அவனது தடையுத்தரவைப் பொருட்படுத்தாமல் முத்துராமலிங்கம் அந்த மூடப்பட்ட அறை வாயிலை நெருங்கி, “உள்ளே யாரு இருக்காங்க...?” என்று வாயிற்படியில் காத்துக் கொண்டிருந்த கான்ஸ்டேபிளிடம் நிதானமாகக் கேட்டான்.

“யாரு இருந்தா உனக்கென்னப்பா? உங்கப்பன் இருக்கான் உள்ளார... போப்பா உன் வேலையைப் பார்த்துக்கிட்டு?”

முத்துராமலிங்கம் அசையாமல் அந்த அறை வாசலிலேயே நின்று கொண்டான். மற்றொரு கான்ஸ்டபிள் ஓடி வந்து, “நீ யாருப்பா இதெல்லாம் கேக்க? இப்ப உன்னையே அரெஸ்ட் பண்ணிக் கூட்டிக்கிட்டுப் போகப் போறோம்” என்று முத்துராமலிங்கத்தின் சட்டைப்பை, இடுப்பு, எல்லாவற்றையும் சோதனையிட்டு மணிபர்ஸ், சீப்பு, பேனா, கர்சீப் ஆகியவற்றை வெளியே எடுத்தான்.

“நான் இங்கே மாடியிலே தங்கியிருக்கேன். என்னை நீங்க அரெஸ்ட் பண்ண முடியாது; நான் எந்தத் தப்பும் பண்ணலே.”

“அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது? விபச்சாரத் தடைச் சட்டத்தின் கீழ் உன்னைக் கைது செய்யப் போறோம்.”

கான்ஸ்டபிள் இப்படித் திமிராகச் சொல்லிக் கொண்டிருந்த போதே அறைக் கதவு திறக்கப்பட்டது. உள்ளேயிருந்து முகத்தில் முத்து முத்தாக அரும்பிய வேர்வையுடன் யூனிபாரம் எல்லாம் கூட வேர்வையால் நனைந்த கோலத்தில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தயக்கத்தோடு வெளியே வந்தார்.

அறைக்குள் கட்டிலில் அலங்கோலமான நிலையில் அந்தப் பெண் நளினி தென்பட்டாள். முத்துராமலிங்கம் ஒரு விநாடி கூடத் தயங்காமல் கான்ஸ்டேபிள்களைப் பார்த்துச் சொன்னான்:

“விபசாரத் தடைச் சட்டத்தின் கீழே இங்கே நீங்க யாரையாவது கைது செய்யணும்னா முதல்லே இவரைத்தான் கைது செய்யணும்” என்று சப்-இன்ஸ்பெக்டரைச் சுட்டிக் காட்டினான். அடுத்த கணம் அவன் கன்னத்தில் பளீரென்று ஓர் அறை விழுந்தது. அறைந்தவன் கான்ஸ்டேபிள். மற்றொரு கான்ஸ்டேபிள் அறைக்குள் தலையை நீட்டி,

“சீக்கிரம் புறப்படும்மா, மத்தவங்கள்ளாம் காத்துக் கிட்டிருக்காங்க...” என்று அறைக்குள் கட்டிலில் கசங்கிய மலராகக் கிடந்த அந்தப் பெண்ணை விரட்டினான்.

எஸ்.ஐ. முத்துராமலிங்கத்தை முறைத்தபடி வினவினார்:

“யாருடா நீ?”

“இங்கே மாடியிலே தங்கியிருக்கேன்.”

“ஓகோ... பெர்மனென்ட் கஸ்டமரா?”

“சார்! மரியாதையாப் பேசுங்க...”

மற்றோர் அறை விழுந்தது அவன் கன்னத்தில்.

“பொம்பிளை பொறுக்கிக்கெல்லாம் என்னடா மரியாதை?”

முத்துராமலிங்கம் மேற்கொண்டு பேசவில்லை. விபசாரத்தைக் கண்டுபிடித்துக் குற்றம் சாட்ட வருகிற போலீஸ்காரர்களே விபசாரம் செய்பவர்களாகவும் திருட்டைக் கண்டுபிடித்து நியாயம் வழங்க வேண்டியவர்களே திருடுகிறவர்களாகவும் இருக்கிற சமூக அமைப்பில் சட்டத்தையும் ஒழுங்கையும் மக்கள் அலட்சியம் செய்வது கூடத் தவறில்லையோ என்று கூடத் தோன்றியது. போலீஸ்காரர்களே திருடர்களாக மாறும் சூழ்நிலையில் யாரும் எந்த நியாயத்தையும் சட்டத்தையும் மதிக்க மாட்டார்கள் என்பது நிதரிசனமாகத் தெரிந்தது.

பிடிபட்ட பெண்களில் சிலர் உரத்த குரலில் வாய் விட்டு அழ ஆரம்பித்தார்கள். சிலர் மௌனமாகத் தலை குனிந்தபடி கண்ணீர் சிந்தினர். விபசார விடுதிக்கு வருகிற பலவீனமான மனிதனாவது பணத்தைக் கொடுத்துத்தான் மகிழ்ச்சியை வாங்கிக் கொள்கிறான். போலீஸ்காரனோ எதையும் தராமலே பலாத்காரத்தால் பயமுறுத்தித் திருடுகிறான் என்பது புரிந்தது. எஸ்.ஐ. முத்துராமலிங்கத்தைச் சுட்டிக் காட்டிக் கூறினார்.

“நாம இங்கே ரெய்டு பண்றப்ப விபசாரம் நடந்துக் கிட்டிருந்திச்சுங்கறதுக்கு இந்த ஆள் மேலேயே எஃப்.ஐ.ஆர். போட்டுக்கலாம்.”

இப்படிக் கூறிவிட்டு முத்துராமலிங்கத்தின் பக்கமாகத் திரும்பி, “யாரிட்டப்பா காது குத்தறே? நீ இங்கே சும்மா தங்கியிருக்கிற ஆளுதான்னா அதை முட்டாள் கூட நம்ப மாட்டானே?...”

“இப்பிடி ஊர்லே ஒழுங்காயிருக்கிறவங்களைக் கெட்டவங்களா ஆக்க உங்களை மாதிரிப் பத்துப் போலீஸ்காரங்களே போதும்...”

“டேய் வாயை மூடு... உன்னைக் கேக்கலே” எஸ்.ஐ. கூப்பாடு போட்டார். குற்றவாளிகளை ஊர்வலமாக அழைத்துப் போவது போல், முத்துராமலிங்கத்தையும் அந்தப் பெண்களையும் தெருவில் நடத்திக் கொண்டு போய்ப் போலீஸ் லாரியில் ஏற்றிய போது சாலையில் போவோர் வருவோரும் அக்கம் பக்கத்து வீட்டாரும் கும்பலாகக் கூடி நின்று வேடிக்கைப் பார்த்தார்கள். முணு முணுத்தார்கள். சிரித்தார்கள். அந்தச் சூழ்நிலையிலும் முத்துராமலிங்கம் தலைகுனியவில்லை.

அடுத்து அவர்களைக் கொண்டு போய் இறக்கிய இடத்தில் முத்துராமலிங்கம் சந்திக்க விரும்பாத - சந்திக்கக் கூடாத ஒருவரை அங்கே சந்திக்கும்படி நேர்ந்து விட்டது. அவன் அங்கே அவரை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. அவரும் அவனை அங்கே எதிர்பார்த்திருக்க முடியாதென்றே தோன்றியது.

அத்தியாயம் - 13

தந்தை தனக்காக யாருக்குச் சிபாரிசுக் கடிதம் கொடுத்தனுப்பினாரோ அந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் குருசாமி சேர்வையை மீண்டும் அவன் சந்திக்க நேர்ந்தது. அவர் அவனைப் பார்த்ததும் அடையாளம் புரிந்து கொண்டார். ஆனால் தெரிந்ததாகக் காண்பித்துக் கொள்ளவில்லை.

அங்கே அவர் விசாரித்ததிலிருந்து குற்றப்பிரிவு, விசாரணை, இம்மாரல் டிராஃபிக் விவகாரங்கள் அவருடைய பொறுப்பில் இருப்பதாகப் பட்டது. கைது செய்யப்பட்டு வந்திருந்த பெண்களின் கன்னத்தில் தட்டுவது, தோளில் கையை வைத்துப் பேசுவது போன்ற செயல்களால் அவரும் யோக்கியரில்லை என்று புரிந்து கொள்ள முடிந்தது. ஒரே ஒரு பெண்ணை லாக்கப்பில் தள்ளி அவரும் உள்ளே போய்விட்டு வந்தார். பிடித்து வந்த பெண்களையும் முத்துராமலிங்கத்தையும் என்ன செய்வதென்று தெரியாமல் அல்லது வேண்டுமென்றே சாப்பிடக் கூட வழி செய்யாமல் பட்டினி போட்டிருந்தார்கள். நேரம் ஆகிக் கொண்டே இருந்தது.

இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இப்படி ‘ரெய்டு’ நடத்துவது போல் பாசாங்கு செய்வதும் விட்டு விடுவதும் வழக்கம் என்று உடன் இருந்த பெண்களில் ஒருத்தி முத்துராமலிங்கத்திடம் கூறினாள். அந்த ஒரு விபசார விடுதியில் மட்டுமல்லாமல் நகரின் வேறு விபசார விடுதிகளிலும் இவர்களுக்கு ‘மாமூலாக’ ஒரு கப்பம் கட்டி வருவதுண்டு என்றாள் அவள்.

சட்டத்தால் தடுக்கப்படும் கள்ளச் சாராயம், சட்டத்தால் தடுக்கப்படும் விபசாரம் எல்லாவற்றையும் ‘முதலீடாக’ வைத்தே சட்டத்தின் பாதுகாவலர்கள் சம்பாதிக்கவும் முயலுகிறார்கள் என்பதை அறிந்த போது அவனுக்கு ஆச்சரியமாகக் கூட இருந்தது. மாடியில் ஒளிந்து கொள்ளும்படி வேண்டப்பட்டிருந்த தான் நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல் வலுவில், போலீஸிடம் வந்து சிக்கி ஒரு குற்றமும் செய்யாமலே தண்டனை அனுபவிப்பது ஒரு விதத்தில் பலவற்றின் குரூரமான உண்மை முகங்களைத் தெரிந்து கொள்ளப் பயன்படும் என்றே அவனுக்குத் தோன்றியது. அநுபவங்களையும் அநுபவங்களிலிருந்தும் கற்க நேர்கிற இந்த வாய்ப்பை அவன் விரும்பினான்.

பொது மக்கள் தவறுகளைச் செய்து விடக் கூடாது என்பதைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்படும் ஒவ்வோர் அதிகாரமும், நிர்வாகமுமே தவறுகளைத் துணிந்து செய்யத் தொடங்குவது தான் ஊழலின் முகத்துவாரம் என்று அவனால் இப்போது உணர முடிந்தது.

இரவு பதினொன்றரை மணிக்கு மேல் சின்னி யாரோ ஒரு பெரிய அரசியல் பிரமுகரோடு அங்கே வந்தான். அவர்கள் அதிகாரிகளோடு பேசினார்கள். அரை மணி நேரத்தில் பெண்களையும், முத்துராமலிங்கத்தையும் விடுவித்து அழைத்துக் கொண்டு செல்ல அவனால் முடிந்தது.

“நீ எப்போ விடுதலையாகி வந்தே? உன்னைப் பிடிச்சிக்கிட்டுப் போயிட்டதாகச் சொன்னாங்களே?” என்று சின்னியைக் கேட்டான் முத்துராமலிங்கம்.

“எல்லாம் அப்புறமாகச் சொல்றேன்” என்று சின்னியிடமிருந்து சுருக்கமாகப் பதில் வந்தது. அவனது முழங்கையில் கட்டுப் போட்டுக் கழுத்தில் முடிந்திருந்த கோலம் கலவரத்தில் அவன் அடைந்த பரிசாக இருக்க வேண்டுமென்று தோன்றியது. சின்னியோடு கூட அரசியல் பிரமுகரும் இருந்தாலும் அவரைக் கடைசி வரை முத்துராமலிங்கத்துக்கு அவன் அறிமுகம் செய்து வைக்கவில்லை.

கொலைகாரன்பேட்டை பங்களா முகப்புக்கு வந்ததும், “இவளை நீங்க இட்டுக்கினு போங்க... காலம்பர அனுப்பி வைங்க... போறும்” என்று சிரித்தபடி கூறிய சின்னி தன் கும்பலில் கட்டழகு மிக்க ஒரு பெண்ணை அந்தப் பிரமுகரோடு காரில் அனுப்பி வைத்தான்.

பங்களாவில் எல்லாம் சகஜமாக இருந்தன. நாய் குரைக்காமல் சாதுவாகப் படுத்திருந்தது. சின்னியைக் கண்டதும் படு குஷியோடு எழுந்து வாலாட்டியது. சிறுவர்கள் தென்பட்டார்கள். ஆயாக்கிழவி முகப்பில் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி வெற்றிலையைக் குதப்பிக் கொண்டிருந்தாள்.

அதை விடப் பெரிய ஆச்சரியம் உள்ளே வேறு பல பெண்கள் வந்து சேர்ந்திருந்தார்கள். முத்துராமலிங்கம் சின்னியை அதுபற்றி விசாரித்தான். சின்னி சுலபமாகப் பதில் கூறினான்:-

“இந்த டெப்போவில் சரக்குத் தீர்ந்து போனா வேற டெப்போவில் இருந்து சரக்கு வரும். வியாபாரம் நிக்காது. இது நாங்கள் நடத்தற எல்லாத் தொழிலுக்குமே பொருந்தும்! எதனாலயும் எதுவும் நிக்காது.”

“அவரு யாரு?”

“அரசியல்லே செல்வாக்குள்ளவரு... சொன்னா நாலும் நடக்கும். அதுசரி... பொடியங்க ‘மாடியிலேயே பதுங்கிக்குங்கன்னு’ உனக்குச் சொன்னாங்களாமே; அதை மீறி ரெய்டு நடக்கறப்ப நீ ஏன் கீழாலே வந்தே?”

“என்னமோ தோணிச்சு... வந்தேன். இப்ப அதுக்காக நான் வருத்தப்படலே சின்னி...”

“அவங்களுக்கும் நமக்கும் சண்டை ஒண்ணுமில்லே... சும்மா ஊர் வாயை மூட இப்படி அஞ்சாறு மாசத்துக்கொரு வாட்டி ‘ரெய்டு’ன்னு பேருக்குக் கண் துடைக்க வருவாங்க.”

“அப்படியானால் கிருஷ்ணாம்பேட்டையில் நடந்த ரெய்டு...?”

“அது பங்காளிச் சண்டை! நம்ப மேலிடத்துக்கு வேண்டிய ரெண்டு எம்.எல்.ஏ. கட்சிமாறி எதிர்த் தரப்புக்குப் போயிட்டானுவ... அந்த ஆத்திரத்தில் நடந்திச்சு.”

“எம்.எல்.ஏ.யா ஆறதுக்காக ஓட்டை விலைக்கு வாங்கறாங்க. எம்.எல்.ஏக்களை கட்சிங்க விலைக்கு வாங்குது. கட்சிங்களைப் பணமுள்ளவன் விலைக்கு வாங்கறான். இப்படியே போனா விற்க முடியாததும், வாங்க முடியாததும் இந்த தேசத்துலே ஒண்ணுமே மீதம் இல்லேன்னு தானே ஆகுது...?”

“நல்லாச் சொன்னேப்பா - அது தான் நெஜம்” சிறிது நேரம் கழித்து முத்துராமலிங்கத்தின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு இன்னொரு காரியமும் செய்தான் சின்னி. சில்க் ஜிப்பாவும் கழுத்தில் தங்கச் செயினுமாக ஓர் அறையிலிருந்து வெளிப்பட்ட ஒரு நடுத்தர வயது மனிதரை அழைத்து வந்து முத்துராமலிங்கத்துக்கு அறிமுகப்படுத்தினான்.

“நம்ப வைரவன் சார் இந்த ஊர்லியே பெரிய பப்ளிஷர். கொண்டிச் செட்டி தெருவிலே பெரிய புக் ஷாப் வேற வச்சிருக்காரு. இவரு மனசு வச்சா உனக்கு ஒரு வேலை தர முடியும்.”

அவர் சின்னியைக் கேட்டார்: “தம்பி யாருன்னு சொல்லலியே...?”

“முத்துராமலிங்கம், நமக்கு ரொம்ப வேண்டியவரு... எம்.ஏ. படிச்சிருக்காரு... நீங்க தான் பார்த்து ஒரு வேலை போட்டுக் குடுக்கணும்...”

“எந்தப் பக்கம்?...”

“மதுரை - ஆண்டிப்பட்டி...”

“மதுரைன்னா... வந்து...?”

- எந்த ஜாதி என்று தெரிந்து கொள்ளத் தவித்து வெளிப்படையாக அதைக் கேட்கவும் முடியாமல், தவிப்பையும் விட முடியாமல் அவர் திணறுவது முத்துராமலிங்கத்துக்குப் புரிந்தது. அவரை அப்படியே இன்னும் சிறிது நேரம் தவிக்க விடலாமென்றும் முத்துராமலிங்கத்துக்குத் தோன்றியது. ஆனால் அடுத்த கணமே, ‘நீங்க இன்னாரோட சன் தானே?’ என்று தப்புத் தப்பான பெயர்களைக் கூறிக் கேட்டு அவனைத் திணற அடித்தார் அவர். முத்துராமலிங்கம் அவர் மேலும் பல பொய்யான தகப்பனார்களைத் தனக்குக் கற்பிப்பதற்குள் தன்னுடைய நிஜத் தகப்பனாரின் பெயரை விரைந்து சொல்லி விட விரும்பி, “எங்கப்பா பேரு பசுங்கினித் தேவர்” என்று கூறி விட்டான்.

எவ்வளவுதான் நாகரிகமாக உடையணிந்து நாசூக்காகப் பழகினாலும் ஒவ்வொரு மனிதனிலிருந்தும் ஒரு காட்டுமிராண்டி ஏதாவது ஒரு சமயத்தில் மெல்லத் தலையைத் தலையை நீட்டுகிறான். அதில் ஒன்றுதான் பிறரது ஜாதியைப் பற்றி அறிய விரும்பும் சமயமும் என்று புரிந்தது.

வைரவன் மறுநாள் தன்னை வந்து பார்க்குமாறு முத்துராமலிங்கத்திடம் கூறினார். பின் உட்புறம் ஓர் அறை வாசலுக்குப் போய் வாயிற்படியில் நின்றவண்ணமே, “இந்தா உன் மாமூலை வாங்கிக்க” என்று ரூபாய் நோட்டுக்களை நீட்டினார். உள்ளே இருந்து தோள் புடைவை முற்றிலும் சரிய ஓர் இளம் பெண் வந்து அதை வாங்கிக் கொண்டு போனாள்.

“வைரவன் சார் நம்ம கஷ்டமர்” என்றான் சின்னி. அவன் அப்படிக் கூறியதை அவர் அவ்வளவாக ரசிக்கவில்லை என்று பட்டது. அவர் புறப்பட்டுப் போன பின் “இந்த மாதிரி வந்த எடத்துலே சிபாரிசு சொன்னா எப்படி? அவருக்கும் இது பிடிக்கலேன்னு நினைக்கிறேன்” என்றான் முத்துராமலிங்கம். சின்னி இதைக் கேட்டுப் புன்னகை புரிந்தான்.

“அதெல்லாம் இல்லே... செய்வாரு... உனக்கு வேலை கெடைக்கும்.”

“ஜாதி ஊரு பேரெல்லாம் விசாரிக்கிறாரே...?”

“எல்லாரும் பொதுவாகக் கேக்கிறதைத் தானே கேட்டாரு.”

“இதெல்லாம் அநாகரிகம். தப்புன்னு பேசிக்கிட்டே இதைப் பற்றிப் பூடகமா விசாரிக்கிற ஆசாரக் கள்ளனுகளை விட நேரடியாகவே என்ன ஜாதின்னு கேட்கிறவனே தேவலாம்.”

“ஜாதி, கட்சி, பிரதேசம், மொழி இதையெல்லாம் வச்சுத்தான் இன்னிக்கு உலகத்திலே எல்லாமே நடக்குதுப்பா.”

மறுநாள் காலை வைரவனைப் பார்க்கக் கொண்டிச் செட்டித் தெருவுக்குப் போனான் முத்துராமலிங்கம்.

அங்கே போக வழி, பஸ் நம்பர் முதலிய விவரங்களைச் சின்னியிடம் கேட்டுக் கொண்டு வந்திருந்தான் அவன்.

அவன் போய்ச் சேர்ந்த போது கடையில் வைரவன் இல்லை. இளம்பெண் ஒருத்தி யாரோ வாடிக்கைக்காரருக்குப் புத்தகங்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். மற்றோர் இளம்பெண் டெலிஃபோனில் யாருடனோ குழைந்து கொஞ்சிக் கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தாள்.

அலமாரிகளிலும், புத்தக அடுக்குகளிலும், பஸ் ஸ்டாண்டுகள், ரயில் நிலைய பிளாட்பாரங்களில் விற்பனையாகும் தலைப்புகளே அதிகமாகத் தென்பட்டன. ஓடிப் போன ஒய்யாரி, தேடிப் போன சிங்காரி, சீரழிந்தவளின் சிறுகதை, போன்ற புத்தகங்கள் கொச்சை கொச்சையான மலிவு வர்ண அட்டைகளோடு பல்லிளித்தன.

அங்கே ஓடாமலும், தேடாமலும், சீரழியாமலும் ஒரு புத்தகத்துக்குக் கூடத் தலைப்பு இல்லை. பஸ் நிலைய விற்பனைகளுக்கும், இரயில் நிலைய விற்பனைகளுக்கும் சில்லறை விற்பனை செய்யும் மொத்த விற்பனைக் கூடமாகத் தெரிந்தது அது.

ஓடுவதற்கும், தேடுவதற்கும், சீரழிவதற்கும் பஸ்கள், இரயில்கள் அவசியமென்று கருதியோ என்னவோ புத்தகங்கள் எல்லாமே அப்படித் தலைப்புக்களோடு தான் விளங்கின.

காலை பத்தரை மணி சுமாருக்கு வைரவன் கடைக்கு வந்தார். ஆனால் அவருக்கு முத்துராமலிங்கத்தை ஞாபகமில்லை. அதற்குள் மறந்து போயிருந்தது. அவனாகச் சொல்லி நினைவுபடுத்திவிட வேண்டியிருந்தது.

அப்படி நினைப்பூட்டியது அவருக்குப் பிடிக்கவேயில்லை. சின்னியின் பெயரைக் கேட்டதுமே முகத்தைச் சுளித்துக் கொண்டார் அவர்.

‘உங்க நண்பர் சின்னி’ என்று முத்துராமலிங்கம் கூறிய சொற்கள் அவருக்கு எரிச்சலூட்டியிருக்க வேண்டும்.

அத்தியாயம் - 14

முதல் நாளிரவுச் சந்திப்பையும் - சின்னியையும் அவன் நினைவூட்டியது அவருக்குப் பிடிக்கவில்லை என்று புரிந்தது. முத்துராமலிங்கத்தை உறுத்துப் பார்த்தார் வைரவன். பார்வையில் சுமுகத் தன்மை அறவே கலவாத கடுகடுப்புத் தெரிந்தது. அந்தக் கடுகடுப்போடு அவனை வினவினார் அவர்.

“என்ன சொன்னே...? காதிலே சரியா விழலே. இன்னொரு வாட்டி சொல்லப்பா.”

“உங்க நண்பர் சின்னி அனுப்பிச்சாருன்னேன்” என்று சற்று இரைந்த குரலிலேயே சொன்னான் அவன்.

“கண்ட கண்ட ஆளுங்கள்ளாம் ரெண்டு நாளு எங்கயாவது பார்த்துப் பேசிட்டாலே உடனே நண்பர்னுடறாங்க...”

செலுத்தவும் முடியாமல் அடக்கவும் முடியாமல் நமுட்டுக் கோபத்தோடு அவர் சிரமப்படுவதை முத்துராமலிங்கம் கவனித்தான்.

“உனக்கு என்ன வேலை தெரியும்?”

“உங்ககிட்ட என்ன வேலை கிடைக்கும்னு தெரிஞ்சா அது என்னாலே முடியுமா முடியாதான்னு நான் பதில் சொல்லிடலாம்.”

“இப்ப நான் அவசரமா வெளியிலே போகணும். நீ நாளைக்கி இதே நேரத்துக்கு வர முடியுமா?”

பதில் பேசாமல் தலையாட்டிவிட்டு ஒரு தாளில் தன்னுடைய படிப்பு - தகுதி முதலிய விவரங்களை எழுதி அவரிடம் கொடுத்து விட்டு ஒன்றும் பேசாமல் அங்கிருந்து வெளியேறினான் அவன். ‘குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு’ என்பது போலச் சின்னியிடம் ஏதோ ஓர் அவசரத்தில் எப்படியோ ஒரு சந்தர்ப்பத்தில் கொடுத்து விட்ட வார்த்தைக்காக அவர் பூசி மெழுகுவது முத்துராமலிங்கத்துக்குப் புரிந்தது. பட்டணத்தில் யாரிடமிருந்தும் எதற்கும் தெளிவான பதில் கிடைக்காததை அவன் தொடர்ந்து கவனித்துக் கொண்டு தான் வந்தான். தீர்க்க முடியாதவற்றையெல்லாம் தவிர்க்க முயலுவதும், தீர்மானிக்க முடியாதவற்றை எல்லாம் பூசி மெழுகுவதுமாக நாகரிகமாய் உடையணிந்த மனிதர்களே நகரம் முழுவதும் நிறைந்திருப்பதாகத் தெரிந்தது. யாருக்கும் எதிலும் வைராக்கியமோ, அக்கறையோ, முனைப்போ தெரியவில்லை.

நேரே திரும்பிப் போய்ச் சின்னியிடம் நடந்ததைச் சொன்னான் முத்துராமலிங்கம். சின்னி அதைக் கேட்டுக் கோபப்படவோ, அதிர்ச்சியடையவோ இல்லை. சிரித்துக் கொண்டே முத்துராமலிங்கத்துக்குப் பதில் கூறினான் அவன்:

“ராத்திரி இங்க வர்றப்பத் தெரியற வைரவன் வேறே. மத்த நேரத்து வைரவன் வேறே! சரி, விட்டுத் தள்ளு... நான் வேற எடத்துலே உனக்கு ஏற்பாடு பண்றேன். வா... சாப்பாட்டை முடிச்சிக்கிட்டுப் போகலாம்...”

எதற்கும் அதிர்ச்சியோ, ஆத்திரமோ அடையாத சின்னி ஒரு ஞானியைப் போல் அந்தக் கணத்தில் முத்துராமலிங்கத்துக்குத் தோன்றினான். குறையும் பலவீனமும் உள்ள மனிதர்களைப் பொறுத்துக் கொள்ளவும், ஏற்கவும் முடியாமல் தவிக்கும் தன்னையும், மனிதர்கள் குறையும் பலவீனமுள்ளவர்களாக இருப்பதுதான் இயல்பு என்று புரிந்து பொறுத்துக் கொண்டு, அதை ஏற்கத் தயாராயிருக்கும் அந்தப் பாமரனையும் ஒப்பிட்டான் அவன். வாழ்க்கை அனுபவங்களிலேயே பழுத்துச் சின்னி வேதாந்தியாகி விட்டானோ என்று கூட வியப்பாயிருந்தது அவனுக்கு.

“இவ்வளவு பேரையும் இவ்வளவையும் நீ பொறுத்துக்கிட்டு அட்ஜஸ்ட் பண்றது பெரிய காரியம் சின்னி...”

“பெரிசோ, சிரிசோ... இங்கே தான் காலந்தள்ளணும்... இவர்களோட தான் காலந்தள்ளணும்... மொறைச்சிக்கிட்டுப் போயிட முடியாது” என்றான் அவன். ஏதோ ஒரு விதத்தில் உலகை அந்தப் பாமரன் தன்னை விடச் சரியாகவே கணித்திருக்கிறானோ என்று எண்ணினான் முத்துராமலிங்கம். கௌடியா மடத்துக்கு எதிரே இருந்த ஒரு மிலிடரி ஹோட்டலில் பகல் உணவை முடித்துக் கொண்டு ஓர் ஆட்டோ ரிக்‌ஷாவில் புறப்பட்டார்கள் அவர்கள்.

கோடம்பாக்கத்தில் வடபழனி தாண்டி ஒரு பிரபல திரைப்பட ஸ்டூடியோவின் பெயரை ஆட்டோ டிரைவரிடம் சொல்லியிருந்தான் சின்னி. கையில் காயத்துக்காகக் கட்டுப் போட்ட நிலையில் அவன் அலைவதைப் பரிவோடு குறிப்பிட்டுப் பேசினான் முத்துராமலிங்கம். “கையை இந்த நிலையிலே வச்சுக்கிட்டு எனக்காக நீ அலையறதைப் பார்த்துச் சங்கடமா இருக்கு சின்னி!”

“பலவிதமா வாழ்க்கையிலே அடிபட்டு அடிபட்டுச் சுகம் எது சங்கடம் எதுன்னு பிரிச்சுப் புரிஞ்சுக்கறதே எனக்குச் சிரமமாப் போச்சுப்பா...”

“நீ ஒரு சமுதாய ஞானி... அனுபவ ரீதியில் பழுத்த யதார்த்த ரிஷி... அதான் இப்பிடி உன்னாலே பேச முடியுது. அதற்குச் சின்னி பதில் சொல்லவில்லை. ஆட்டோ ஓசையில் தொடர்ந்து உரையாடுவது இயலாத காரியமாயிருந்தது. கால்மணி நேரம் ஆட்டோ பயணம் தொடர்ந்தது.

ஸ்டூடியோ கேட்டிலேயே தான் பார்க்க வேண்டிய ஆளைப்பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு ஆட்டோவுக்குக் கணக்குத் தீர்த்துத் திருப்பி அனுப்பிவிட்டான் சின்னி.

“ஒம்பதாம் நெம்பர் ஃப்ளோருக்குப் போகணும். அதுக்கு முன்னாடியே மேக்கப் அனெக்ஸ் ஒண்ணு இருக்கும், அந்தப் பொம்பிளை அங்கே தான் இருக்காம்.”

“எந்தப் பொம்பிளை சின்னி?”

“அதான்ப்பா கவர்ச்சி நடிகை குமார் ஜெகஜ்ஜோதீன்னு பேப்பர்ல எல்லாம் பெரிசு பெரிசாப் படம் வருதே...?”

“ஆமாம்... அது யாரு...?”

“முதல்லே... நம்ப கொலைகாரன்பேட்டை வீட்லதான் இருந்திச்சி. அப்ப இந்தப் புரொட்யூசர் அங்கே வரப்போக இருந்தான். அப்ப அவன் கூடவே இட்டுக்கிட்டுப் போயி ஸ்டாராக்கிட்டான்... நம்ப மேலே விஸ்வாசம் உண்டு... ஒரு வார்த்தை சொன்னாக் கேக்கும்.”

“மத்தவங்களுக்கு விசுவாசம் இருக்கோ இல்லையோ... எல்லாருக்கும் அது இருக்கும் - இருக்கணும்னு உனக்கு ஒரு நம்பிக்கை இருக்கு...”

“அப்படியில்லேப்பா! சின்ன வயசிலே கஷ்டப்பட்டு மேலே வந்தவனுக்கெல்லாம் அது இருக்கும்; இருக்கணும்.”

ஒன்பதாம் நம்பர் ஃப்ளோர் வாசலில் அனெக்ஸுக்கு வெளியே வேப்ப மரத்தடியில் ஒரு பிரம்பு நாற்காலியில் காபரே நடனத்துக்குரிய ஜிகினாப் போல மினுமினுக்கும் கவர்ச்சி உடையுடன் உடலழகு விட்டுத் தெரியும் இள நடிகை ஒருத்தி மேக்கப்போடு அமர்ந்திருந்தாள்.

சின்னியைப் பார்த்ததும் அவள், “வாங்கண்ணே! ஏது இப்படி... இந்தப் பக்கம் அபூர்வமா...?” என்று புன்னகையோடு எழுந்து அவனை வரவேற்றாள்.

“உங்களவரு ஊர்ல இருக்காராம்மா? இவருக்கு ஏதாச்சும் ஒரு வேலை கேக்கணும் அவரிட்ட... நீ ஒரு வார்த்தை சொன்னீன்னா நிச்சயம் நடக்கும் தங்கச்சீ!”

“கட்டாயம் சொல்றேன்... அண்ணனுக்கு இல்லாததா?” என்று கூறியபடி முத்துராமலிங்கத்தின் பக்கமாகப் புன்னகையோடு திரும்பிக் கும்பிட்டாள் அவள்.

“இது நம்ம ஜெகஜோதி... இவரு முத்துராமலிங்கம்... எம்.ஏ. படிச்சிருக்காரு... கதை - பாட்டு - வசனம் எழுதறதுலே எல்லாம் தெறமை உண்டு” என்று சின்னியே துணிந்து ஜோடித்து அறிமுகத்தைச் செய்து வைத்தான்.

“அது உள்ளே ஷூட்டிங்கிலே இருக்குது! இப்ப இங்கே வரும்... நான் சொல்லி வழி பண்ணிடறேன்.”

“நான் இருக்கணுமா...?”

“ஏன் வேற எங்கேயாச்சும் போவணுமா?”

“எங்கேயும் போக வேணாம்? நானும் இருக்கணுமா? வேண்டாமான்னு தான் கேட்டேன்.”

“இருங்கண்ணே... காபி கொண்டாரச் சொல்லட்டுமா?”

சின்னியின் பதிலை எதிர்பாராமலே ஒரு பையனைக் கைதட்டி அழைத்துக் காபிக்குச் சொன்னாள் அவள். அப்போதிருந்த காபரே நடனக்காரிக்கான ஒப்பனையில் அவள் ஒரு வனதேவதை போல அழகாயிருந்தாள்.

“நல்லா வச்சிருக்காரில்லே...? நடுப்பெற வேற ஒண்ணு ஊடாடிச்சுன்னியே...? இப்ப அதெல்லாம் இல்லியே தங்கச்சி...?”

“அவளும் தான் குலுக்கி மினுக்கிப் பார்த்தா... அவளாலே இவரைக் கவர முடியலே அண்ணே!” என்று கர்வமும் கம்பீரமும் நிறைந்து மிளிரும் ஓர் அழகிய புன்னகையை உதிர்த்தாள் அவள்.

“உன்னை மாதிரி வருமா தங்கச்சி?” முத்துராமலிங்கத்துக்குத் தெரியும்படி கூச்சமோ தயக்கமோ இன்றி இதைச் சின்னியால் விசாரிக்க முடிந்தது. அவளால் பதில் சொல்ல முடிந்தது. சினிமா உலகின் அதிக வெளிச்சம் பழகிப் பழகி அவர்களுக்குக் கூச்சமே மரத்துப் போயிருக்குமோ என்று எண்ணினான் முத்துராமலிங்கம்.

இப்படி உறவுகள் சினிமா உலகின் பை-புராடக்டா அதாவது துணை உற்பத்தியா - அல்லது சினிமா உலகமே இப்படி உறவுகளின் துணை உற்பத்தியா என்று அந்த விநாடியில் சந்தேகமாயிருந்தது அவனுக்கு. பெண்ணின் கவர்ச்சி அல்லது பணத்தின் கவர்ச்சிதான் அந்த உலகை நடத்திக் கொண்டிருப்பதாகப் பட்டது. அந்தக் கவர்ச்சிகளின் மோதல்களுக்கு நடுவே இயல்பான திறமையுள்ள சில நல்ல கலைஞர்கள் சிக்கிக் கொண்டிருப்பதும் புரிந்தது.

பையன் ட்ரேயில் கொண்டு வந்த காபியைச் சின்னிக்கும், முத்துராமலிங்கத்துக்கும் தானே எடுத்து வழங்கினாள் ஜெகஜோதி. அவளது அந்தச் செயலில் விநயமும் குழைவும் தெரிந்தன. தொந்தியும் தொப்பையுமான உருவத்துக்குப் பொருத்தமில்லாமல் டீ ஷர்ட் பேண்ட் அணிந்த ஒரு நடுத்தர வயதுக் கருப்புக் கண்ணாடி ஆசாமி சிகரெட் புகைத்தபடி ஷெட்டிலிருந்து வெளியே வந்தார்.

கூடவே கையில் வெள்ளி வெற்றிலைப் பெட்டியும் சிகரெட் டப்பாவுமாக ஒரு லைட்பாயும் உடன் வந்தான்.

“டியர்... யாருகிட்டே பேசிக்கிட்டிருக்கே அங்கே?” என்று கேட்டுக் கொண்டே வந்த அவர் சின்னியும், முத்துராமலிங்கமும் எதிரே நிற்கிறார்களே என்பதற்காகத் தயங்காமல் அப்படியே அவளைத் தோளில் கை போட்டுத் தழுவிக் கொண்டார்.

“இந்த மேக் அப்லே... நீ பிரமாதமாயிருக்கே போ... அசந்து மறந்தா... நானே வேற யாரோ புது உருப்படீன்னு உடனே மயங்கி விழுந்திடுவேனோன்னு பயமாயிருக்கு.”

“அப்போ இன்னும் புது உருப்படீன்னா உடனே மயங்கிப் போயிடற புத்தி இருக்குன்னு சொல்லுங்க...”

“சே! சே! சும்மா பேச்சுக்குச் சொன்னேன்... எந்தக் கழுதையும் உன்னை மாதிரி ஆகுமா?” என்று மறுபடியும் தோளில் கை போட்டு அவளைத் தழுவிக் கொண்டார் அவர்.

“சின்னி அண்ணன் வந்திருக்குப் பாருங்க...”

இப்படி அவள் சொல்லிய பிறகுதான் திரும்பிப் பார்ப்பது போல் அவன் பக்கமும் முத்துராமலிங்கத்தின் பக்கமும் அவரது பார்வை திரும்பியது...

“வணக்கங்க முதலியாரே.”

“அட... வாப்பா... உன்னை நான் பார்க்கவே இல்லையே...?”

“அதெப்படி? தங்கச்சி இப்பிடி ஒரு மேக்-அப்போட எதிராலே நிற்கறப்ப சாருக்கு வேற யாருதான் கண்ணிலே பட முடியும்?...”

“எப்பிடிப்பா இருக்கே...? நல்ல எக்ஸ்ட்ராங்க வந்தாச்... சொல்லுப்பா? ஒரு குரூப் டான்ஸுக்கு ஆள் வேண்டியிருக்கு...”

“இன்னம் எக்ஸ்ட்ராக்களத் தேடற புத்தி போவலியே...?”

அவள் வேடிக்கையாகக் குறுக்கிட்டாள்.

“பின்னென்ன? எக்ஸ்ட்ரா ஸ்ப்ளையர் கிட்டப் பேசறப்ப ஒரு கூடை கத்திரிக்காயா வேணும்னு கேப்பாங்க...”

இதுதான் நல்ல சமயமென்று சின்னி வந்த காரியத்தை ஆரம்பித்தான்.

அத்தியாயம் - 15

அவரிடம் தான் வந்த காரியத்தைப் பக்குவமாக எடுத்துச் சொல்கிற சாமர்த்தியம் சின்னிக்கு இருந்தது.

“இந்தத் தம்பி பேரு முத்துராமலிங்கம்! தமிழிலே கதை, பாட்டு எல்லாம் நல்லா எழுத வரும். நம்ப கையிலே ஒரு வேலை போட்டுக் குடுத்தா உபகாரமா இருக்கும்...”

“ஆமாங்க! சின்னி அண்ணனுக்குக் கட்டாயம் நாம உதவி செய்யணும்... அவரு தான் நம்பளை இப்பிடி ஒண்ணு சேர்த்து வச்ச தெய்வம்...”

- ஒரு மூன்றாந்தரப் படத்தின் நாலாந்தர ‘டயலாக்’ போலச் செயற்கையாயிருந்தன அவளுடைய சிபாரிசு வார்த்தைகள். ஆனால் அவற்றுக்கு உரிய செல்வாக்கு இருப்பது உடனே தெரிந்தது.

‘அண்ணன்’ என்கிற வார்த்தைக்கு அடுத்தபடி ‘தெய்வம்’ என்னும் வார்த்தைக்கும் இப்போது ‘டெப்ரசியேஷன் வேல்யூ’ மட்டுமே கிடைத்திருப்பது போல் பட்டது முத்துராமலிங்கத்துக்கு.

“சரி! நம்ப ஜோதியே சொல்லிடிச்சு!... நீ நாளையிலேருந்து இங்கே ஃப்ளோருக்கே நேரா வந்துடு... முதல்லே மாசம் முந்நூறுக்குக் குறையாம ஏதாச்சும் போட்டுத் தரேன்... அப்பாலே பார்க்கலாம்.”

இப்படி அவர் கூறியதைக் கேட்டு முத்துராமலிங்கம் வியந்து நிற்கையில் சின்னி அவருக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தான்.

“எப்பவுமே நம்ப ஐயா கை ரொம்ப ராசியானதுங்க... முதல் வேலை இங்கே கெடைச்சாலே வேகமா முன்னுக்கு வந்துடலாங்க... தங்கச்சியையே எடுத்துக்குங்க... ஐயா கையிலே இட்டாந்து விட்டப்பெறவுதான் இப்பிடி ஜொலிக்குது!”

இப்படிச் சின்னி புகழ்வதை அவரும் விரும்பி ஏற்று மகிழ்ந்து இரசிப்பது நன்றாகப் புரிந்தது. பட்டனம் என்ற அந்தக் கலாசார மயானத்தில் புகழ் பலரை முட்டாள்களாகவும், மன நோயாளிகளாகவும், அடிமைகளாகவும் ஆக்கி வைத்திருப்பது புரிந்தது. புகழ் பொருள் காரணமாக அயோக்கியர்களும், அக்கிரமக்காரர்களும் நிமிர்ந்து நடந்து ஜொலித்துக் கொண்டிருந்தார்கள். புகழும் பொருளும் இல்லாத காரணத்தால் யோக்கியர்களும் நியாயவான்களும் கூனிக்குறுகித் தவித்துக் கொண்டிருந்தார்கள். இந்த முரண்பாடு வெளிப்படையாகவே அங்கு தெரிந்தது.

கவர்ச்சி நடிகை ஜெகஜோதிக்கும் அவளுக்கு வேண்டிய அந்தப் பிரபல படத் தயாரிப்பாளருக்கும் நன்றி சொல்லிவிட்டு அவர்களிடம் விடைபெற்றுக் கொள்ளுமாறு முத்துராமலிங்கத்திடம் ஜாடை காட்டினான் சின்னி.

சற்றே சிக்கனமான புன்னகையோடு கூடிய ஒரு வணக்கத்தை அவர்களுக்குச் செலுத்தி விடைபெற்றான் முத்துராமலிங்கம். புறப்படுமுன் சின்னியிடம் அவர் கூறினார்:

“செட்ல பாபுராஜ் இருக்கான். உன் ஆளை அவங்கிட்ட இண்ட்ரொட்யூஸ் பண்ணி வுட்டுடூ...”

“சரிங்க...”

சின்னி முத்துராமலிங்கத்தை அழைத்துக் கொண்டு ‘செட்’க்குள் நுழைந்தான். முத்துராமலிங்கம் சின்னியோடு உடன் நடந்து கொண்டே, “அது யாரு பாபுராஜ்?” என்று சின்னியைக் கேட்டான்.

“அவன் தான் இவுங்க கதை இலாகா ஆளு... அவனோட தான் நீ வேலை பார்க்கணும்!”

“அது சரி! என்ன வேலைன்னே சொல்லலியே சின்னி?”

“கதை வசனம் இதுவெல்லாம் நீ பாபுராஜுக்கு உதவியா இருக்கணும்னு நெனைக்கிறேன்.”

“உதவியா இருக்கிறதுன்னா...?”

“என்ன செய்யணும்னு பாபுராஜையே கேட்டுட்டாப் போவுது...”

“அங்கே ஜெகஜோதியும், நீயும் அறிமுகப்படுத்தினீங்களே அதான் அந்தப் ப்ரொட்யூசரு... அவர் பேரு என்ன?”

“கன்னியப்ப முதலியாரு... முதலியாருன்னுதான் ஃபீல்டிலே எல்லாரும் கூப்பிடுவாங்க... அவரோட கம்பெனி... ஜெய் அங்காள பரமேஸ்வரி பிக்சர்ஸுங்கறது. இதுலதான் கதை இலாகாவில் உனக்கு வேலை...”

“பாபுராஜுங்கறவர் ரொம்பப் படிச்சவரோ...!”

“ரொம்ப படிச்சவனா இல்லியாங்கறது எனக்குத் தெரியாது... ஆனா ரொம்பப் படிச்சவனா இருக்க முடியாதுன்னு தோணுது... ரொம்ப நாளா முதலியாரு கூடவே இருக்கான்...”

பேசிக் கொண்டே செட்டுக்குள் நுழைந்திருந்தார்கள் அவர்கள்.

உள்ளே ஒரு ரேப் ஸீனுக்கான ஒத்திகையை இயக்குநர் உதவி இயக்குநர்கள் சரி பார்த்துக் கொண்டிருந்தார்கள். படத்தின் பொருளாதார வெற்றியும், வசூலும், வியாபாரமும் எல்லாமுமே அதில் தான் முழுவதும் அடங்கியிருப்பது போல் அத்தனை அக்கறை காட்டிக் கொண்டிருந்தார்கள். அது தத்ரூபமாக வரவேண்டுமென்று மாய்ந்து கொண்டிருந்தார்கள்.

அரசியல், கலை, இலக்கியம், சமூகம் முதலிய சகல துறைகளிலும் அந்தந்தத் துறைகளைக் கற்பழிப்பதற்கான ஒரு திட்டமிட்ட ஒத்திகை இப்படித்தான் பல்வேறு மட்டங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ என்று கூட அவனுக்குத் தோன்றியது.

பலவீனங்களுக்கும், நைப்பாசைகளுக்கும் நச்சுத் தீனி போடும் முயற்சியே ‘பாபுலர் ஆர்ட்’ என்ற பிரமையோடு எல்லாரும் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். சமூகத்துக்குப் பயன்படாததெல்லாம் பிரசித்தப் படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன.

கையில் நோட்டுப் புத்தகத்துடன் இருந்த கழுத்து எது என்று தெரியாமல் இறுகிப்போன ஒரு குள்ளமான பருத்த மனிதனிடம் போய், “பாபுராஜ் சார்! ஒரு நிமிஷம்...” என்று மெல்லக் குழைந்தான் சின்னி.

“அட ஏன்ப்பா உயிரை வாங்கறீங்க... இந்த ‘ரேப்ஸீன்’ நல்லா வரவிட மாட்டீங்க போல்ருக்கே...?” என்று அலுத்துக் கொண்டே திரும்பிய பாபுராஜ் சின்னியைப் பார்த்ததும், “அடேடே நீயா? வாப்பா... என்ன சங்கதி?” என்றான்.

“ஒண்ணுமில்லேப்பா! முதலியாரைப் பார்த்துச் சொல்லியாச்சு... இந்தத் தம்பியை இங்க வேலைக்கி எடுத்துக் கிட்டிருக்காரு... உன் கையில் ஒரு வார்த்தை சொல்லிக் கதை இலாகாவில் வுட்டுடச் சொன்னாரு.”

“தம்பி யாரு...?”

“நம்பளுக்கு ரொம்ப வேண்டியவரு... எம்.ஏ. படிச்சிருக்காரு.”

“அடி சக்கைன்னானாம். அத்தினி பெரிய படிப்புப் படிச்சவருக்கு இங்கென்னப்பா காரியம்?”

சின்னி அறிமுகப்படுத்திய அறிமுகத்தை மதித்து அந்த மனிதருக்கு ஒரு கும்பிடு போட்டு வைத்தான் முத்துராமலிங்கம்.

கலைகளிலோ, திருந்திய முழுமையைத் தேடுவதிலோ அக்கறையும் சத்தியவேட்கையுமில்லாத மனிதர்களே அங்கு நிரம்பியிருந்தார்கள். பணம், திடீர்ப் புகழ், அதிர்ஷ்டம், யோகக்காரனாவது போன்ற தவிப்புக்களோடு ஊடாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாருக்கும் கடினமாக உழைப்பதில் அதிக நம்பிக்கை இருந்ததாகத் தெரியவில்லை.

பாபுராஜின் கையிலிருந்த வசனக் கோப்புக்கள் அடங்கிய நோட்டுப் புத்தகத்தில் விரித்திருந்த பக்கத்தை எட்டிப் பார்த்தன முத்துராமலிங்கம்.

“தமில்த்தாயின் தணிப்பெருமைக்கு உறிய கர்ப்புக் கறசிகளின் இறத்தம் எண் உடலிலும் ஓடுகிரதடா பாவீ!”

என்று எழுதியிருந்தது. கற்பழிக்க வந்த முரடர்களிடம் அகப்பட்டுச் சிக்கிக் கொண்ட பெண் பேச வேண்டிய வசனம் போலும் அது. புரிந்தாலும் ஆவலை அடக்க முடியாமல்,

“என்னங்க இது?” - என்று பாபுராஜையே கேட்டு வைத்தான் முத்துராமலிங்கம்.

“டயலாக்... அந்தப் பொம்பிளை அவனுகளை எதிர்த்துப் பேசவேண்டியதுப்பா.”

“டயலாக்லே கற்பு ரொம்பப் பலவீனமா இருக்குதுங்களே?... அழுத்தமே இல்லியே?”

“எதைச் சொல்றே...?”

“இல்லே கர்ப்புன்னு இருக்கே...?”

“ஆமா இருந்தா என்ன?...”

“இப்போ நாம காப்பாத்த வேண்டியது ரெண்டு பேரோட கற்புன்னு தெரியுதுங்க. ஒண்ணு அந்தப் பொண்ணோடது. இன்னொண்ணு தமிழ் மொழியோடது.”

முத்துராமலிங்கத்தின் இந்தக் கிண்டலைப் புரிந்து கொள்ள முடியாமல் வேறு யாரோ அவசரமாக வந்து டைரக்டர் கூப்பிடுவதாகக் கூறிப் பாபுராஜைக் கூட்டிக் கொண்டு போய்விட்டதால் ஒரு சிறு ஆரம்ப விரோதம் தவிர்க்கப்பட்டது.

“ரொம்ப முரண்டும், பிடிவாதமும் பண்ணி எடுத்த எடுப்பிலேயே விரோதம் சம்பாதிக்க வேணாம் தம்பீ!” என்று சின்னி மெல்ல எச்சரித்து வைத்தான்.

வாய் நிறைய வெற்றிலை போட்டுக் கொண்டு அந்தச் செக்கச்செவேரென்ற வெற்றிலைச் சாற்றையே இரண்டு கடைவாயும் நிறைய வழிய விட்டபடி, “ஐயோ! பாவியைப்பாருங்கய்யா. ரத்தங் கக்கிச் சாகறதுக்குள்ளே ரெண்டு காசு தர்மம் பண்ணுங்கய்யா” என்று குறக் குளித்தனம் பண்ணிக் காசு கேட்கும் ஒரு கல்லடி மங்கனைப் போல அந்த உலகம், கற்பழிப்பு, வறுமை, கன்ஃபைட், ஸ்டண்ட் என்று ஏதேதோ பண்ணிக் காசு சேர்த்துக் கொண்டிருப்பது போல் புரிந்தது.

“யோவ் சின்னீ! இன்னிக்கி நேரம் நல்லால்லேப்பா. என்னான்னுப்பா இந்த ஆளை இட்டாந்தே... சரியான ராகுகாலமாப் பார்த்தியா?... புதன்கிழமை வரச்சொல்லு. அன்னிக்கி நல்ல நாளு” என்று பாபுராஜ் வந்து சொன்னான்.

சின்னியும் அதற்கு ஒப்புக் கொண்டான்.

“இந்த ரேப்ஸீனுக்கு நாளு, நட்சத்திரம், நேரம்லாம் சரிபார்த்துப் பண்ணியே இன்னும் நல்லாப் புடிபடாமத் தவிக்கிறோம்...”

“ரேப்ஸீனுக்கு நாள் நட்சத்திரமா?”

“ஆமான்னேன்! வடபழநிக் கோயிலாண்டே நம்ப முதலியாருக்கு ஆஸ்தான ஜோசியர் ஒருத்தரு இருக்காரு. அவருதான் குறிச்சுக் குடுத்தாரு...”

சின்னியும் முத்துராமலிங்கமும் அதைக் கேட்டுச் சிரித்தார்கள். திரும்பும் போது மாலை நேரமாகியிருந்தது.

“வடபழநிக்குப் போயி முருகனைக் கண்டு ரெண்டு நல்ல வார்த்தை சொல்லிக் கும்பிட்டுப் போட்டுப் போகலாமா தம்பீ!”

“போகலாம் சின்னீ! எனக்கும் அந்தக் கோயிலுக்குப் போகணும்னு ஆசை.”

அத்தியாயம் - 16

இருவரும் அங்கிருந்து பஸ் ஏறி வடபழநி முனையில் வந்து இறங்கினார்கள்.

கோயிலுக்குத் திரும்புகிற தெருமுனையில் ஒரு பொதுக்கூட்டம் நடப்பதற்கான பெரிய மேடை தயாராகிக் கொண்டிருந்தது. குழல் விளக்குகளின் வெளிச்சத்தில் ‘மக்கள் முன்னேற்றப் பேரணி’ என்ற பேனர் பளிச்சிட்டது.

அங்கங்கே கிழிசல் தெரிந்த கதர்ச் சட்டையும், அரையில் பழுப்பேறிய கதர் வேஷ்டியுமாகப் பயில்வான் போல் தோற்றமுள்ளவரான ஒரு ஸ்டாலின் மீசைக்காரர் மைக் முன் நின்று மக்களை அறைகூவி அழைத்துக் கொண்டிருந்தார்.

“அன்பர்களே! பெருமக்களே! நடைபெறுகிற ஆட்சியின் லஞ்ச ஊழல்களை விவரித்துத் தேசத் தொண்டர் சிவகாமிநாதன் இன்னும் சிறிது நேரத்தில் இங்கே முழங்கப் போகிறார்...”

“சிவகாமிநாதன்கிறது வேற யாருமில்லே, பேசறாரே... அவரே தான்” என்றான் சின்னி.

“அப்பிடியா...?” என்று ஆச்சரியத்தோடு மேடைப் பக்கம் பார்த்தான் முத்துராமலிங்கம்.

பேசிக் கொண்டிருந்த சிவகாமிநாதனே மைக்கை இடது கையால் பொத்திக் கொண்டு பக்கவாட்டிலிருந்த டீக்கடையைப் பார்த்து,

“யாருப்பா? டீக்கடைப் பையன்... உடனே ஒரு ஸ்பெசல் டீ போட்டு மேடைக்குக் கொண்டா... தொண்டை வறளுது” என்று நடுவே ஓர் அவசர ஆர்டரும் கொடுத்தார்.

“அப்பழுக்கில்லாத மனுசன். சொத்துச் சுகமெல்லாம் தேசத்துக்காகச் செலவழிச்சே ஏழையானாரு. கடவுளே எதுத்திக்கிட்டு எதிரே வந்தாலும் நெசத்தைப் பேசப் பயப்படமாட்டாரு. யதார்த்தவாதி வெகுஜன விரோதீம்பாங்களே... அப்படித்தான் ஆச்சு இந்த மனுசன் கதையும். சுதந்திரம் வந்தப் பெறவு காங்கிரஸுக்கு வந்த பெரிய மனுசன்களும், புதுப்பணக்காரங்களுமா, இந்தப் பழைய ஆளைக் காங்கிரஸிலேருந்து வெளில துரத்திட்டாங்க...”

“அப்புறம்...?”

சின்னி தொடர்ந்தான்:

“மனுசன் அசரலே! ‘மக்கள் முன்னேற்றப் பேரணி’ன்னு தொடங்கி லஞ்ச ஊழலுங்களையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் எதிர்த்து தனி ஆளா நின்று இப்பிடி போராடிக்கிட்டிருக்காரு. இந்த ஆளுகிட்டப் பட்டம் பதவி பணம்லாம் இல்லேன்னாலும் ஜனங்க இவரைக் கடவுளா மதிக்கிறாங்க...”

மைக்கில் மிஸ்.மங்காவின் தந்தையான அந்த மந்திரி பெயரைச் சொல்லி அவரது லஞ்ச ஊழல்களைப் பற்றிப் பேசப் போவதாக அப்போது சவால் விட்டுக் கொண்டிருந்தார் சிவகாமிநாதன்.

ரகசிய போலீஸ் பிரிவைச் சேர்ந்த சுருக்கெழுத்தாளர் ஒருவர் டீக்கடையை ஒட்டிக் கார்ப்பொரேஷன் விளக்குக் கம்பத்தருகே பெஞ்சில் அமர்ந்து குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.

சாதாரண உடையிலிருந்த அவரை மேடையிலிருந்தபடியே சுட்டிக்காட்டி, “இங்கே வந்திருக்கும் சி.ஐ.டி.த் தோழர் நான் சொல்லுவதை ஒன்று விடாமல் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்” என்று முழங்கிக் கொண்டிருந்தார் சிவகாமிநாதன். முத்துராமலிங்கம் சின்னியை வினவினான்:

“யாருக்கும் பயப்படமாட்டாரு போல்ருக்கே...”

“யாரிட்ட இருந்தும் எதையும் எதிர்பார்க்காதவரு எதுக்காவப் பயப்படணும்? பேட்டைக்குப் பேட்டை அவருக்குன்னு ஒரு தொண்டர் பட்டாளம் உண்டு. குடும்பம்னு பெரிசா ஒண்ணுமில்லே... சம்சாரம் கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் தவறிப் போச்சு... ஒரு பையன், கல்யாணங்கட்டற வயசிலே ஒரு வயசுப் பொண்ணு... ரெண்டு பேரும் இங்கே கூட்டத்துக்கே வந்திருப்பாங்க...”

“எங்கே இருக்காரு?... என்ன பண்றாரு?”

“சிந்தாதிரிப்பேட்டையிலே சாமிநாயக்கன் தெருன்னு இருக்குது... அங்கதான் வூடு... பேருக்கு ஒரு சின்ன அச்சாபீஸ் வூட்லியே நடக்குது... அச்சாபீஸ்லே வெளி ஆளுங்க யாருமில்லே... அவுரு பொண்ணு, பிள்ளை எல்லாருமே பார்த்துக்கிறாங்க. அச்சாபீஸ் வேலைகள்ளாம் இவங்களுக்கே நல்லா அத்துபடி.”

“ரொம்ப அதிசயமான குடும்பம்...”

“இன்னொண்ணு சொல்ல மறந்திடிச்சே... ‘தியாகியின் குரல்’னோ என்னமோ ஒரு வாராந்திரப் பத்திரிகையும் அந்த அச்சாபீஸ்ல இருந்து போடறாங்க...”

கூட்டம் முறையாகத் தொடங்கியது. தலைவர் பேச்சாளர் எல்லாமே சிவகாமிநாதன் தான். எல்லாக் கூட்டங்களிலும் தொடக்கத்தில் பாடுவது போல் கடவுள் வாழ்த்து பாடாமல்,

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-

வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்

விழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டோம் - வெறும்

வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம்”

என்று கம்பீரமான குரலில் பாடிவிட்டுப் பிரசங்கத்தைத் தொடங்கினார் சிவகாமிநாதன். இப்படி மேடைச் சொற்பொழிவுகளுக்கென்றே வாய்த்தாற் போல் கணீரென்று பிசிறு தட்டாத வெண்கலக் கடையில் யானை புகுந்ததை ஒத்த குரல் அவருக்கு வாய்த்திருந்தது.

தனித்தனியே திரள் திரளாகவும், கொத்துக் கொத்தாகவும் நின்றிருந்த மக்கள் மேடைக்கு முன் வந்து தரையில் உட்காரத் தொடங்கினார்கள். தரையில் உட்காரக் கூசியவர்கள் ஓரங்களில் நின்றே கேட்கத் தொடங்கினார்கள். மந்திரம் போட்டு வரவழைத்த மாதிரிச் சிவகாமிநாதன் பேச ஆரம்பித்த சிறிது நேரத்தில் பெருங்கூட்டம் கூடிவிட்டது. சின்னி முத்துராமலிங்கத்தைக் கோயிலுக்குப் போக அழைத்தான்.

“வாப்பா! உள்றப் போயி சாமி கும்பிட்டுட்டு வந்தப் பெறவு கேக்கலாம்.”

“பெருமக்களே! அந்தக் காலத்திலே என்னைப் போன்ற தேசபக்தர்கள் வீடு வாசலை விற்றுத் தேச சுதந்திரத்துக்காகப் போராடினோம்! இன்றோ தேசத்தையே விலைக்கு வித்து அந்தப் பணத்திலே சொந்த உபயோகத்துக்கு வீடு வாசல் கார் எல்லாம் வாங்கிக்கிறாங்க. வீட்டை விற்று நாட்டைக் காப்பாற்றின தலைமுறைக்கும் நாட்டையே விற்று வீடு வாங்கிச் சம்பாதிக்கிற தலைமுறைக்கும் எத்தனை வித்தியாசம் பாருங்க...”

சின்னியும் முத்துராமலிங்கமும் வடபழநி கோயிலுக்குள் நுழையும் போது ஒலிபெருக்கியில் சிவகாமிநாதனின் குரல் இப்படி முழங்கிக் கொண்டிருந்தது.

கோவிலின் உள்ளே சந்நிதிக்கு மிக அருகே மந்திரியின் மகளான மிஸ். மங்காவும், அவள் அன்னையும் தரிசனத்துக்காக நின்றிருப்பதைக் கவனித்தான் முத்துராமலிங்கம். நல்ல வேளையாக அவள் இவனைப் பார்க்கவில்லை. சின்னிதான் பார்த்துவிட்டுச் சொன்னான்.

“அன்னிக்கி நம்ம கொலைகாரன்பேட்டை வூட்டாண்டே கார்லே வந்து உன்னைப் பார்த்திச்சே, அந்தப் பொண்ணு நிக்கிது...”

“அதுக்கென்ன? நிக்கட்டும்.”

“அவங்க யாரு தம்பீ? போலீஸ் பாரா - கோவில் எக்ஸிக்யூடிவ் ஆபீஸரு - எல்லாமாச் சுத்தி ஒரே தடபுடல் பட்டுக்கிட்டிருக்கே? யாரோ மினிஸ்டரோட பொண்ணுன்னு ஜனங்க பேசிக்குதே...?”

“சாமி கும்பிட வந்த இடத்திலே... அதுலே மனசைப் போகவிடாமே, மத்தவங்களைப் பத்தி என்ன பேச்சு வேண்டிக் கெடக்கு?”

தற்காலிகமாகச் சின்னியின் வாயை அடக்க இது போதுமானதாயிருந்தது.

அரை மணி நேரம் வடபழநிக் கோயிலுக்குள் செலவழித்துவிட்டு வெளியே தெருவுக்கு வந்த போது பொதுக்கூட்டத்தில் விறுவிறுப்பு அதிகமாயிருந்தது. கூட்டமும் அதிகரித்தது. தியாகி சிவகாமிநாதன் உச்ச ஸ்தாயியில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தார்.

மிஸ். மங்காவின் தந்தையான அந்த மந்திரியின் சந்தர்ப்ப வாதங்களையும், லஞ்ச ஊழல்களையும் அவர் பன்னிரண்டு லட்ச ரூபாய்க்குச் சென்னை அடையாற்றில் அரண்மனைபோல் ஒரு வீட்டைப் புதிதாக விலைக்கு வாங்கியிருப்பதையும் சொல்லி விளாசிக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் கோவிலுக்குள்ளிருந்து வெளியே வந்து முகப்பிலேயே போலீஸ் காவலோடு நின்ற காரில் ஏறப் போன மங்கையர்க்கரசியின் காதிலும் அவள் தாயின் காதிலும் இது விழுந்திருக்க வேண்டும்.

அப்போது முத்துராமலிங்கம் தானும், சின்னியும் நின்ற இடத்திலிருந்தே இதைக் கவனித்தான். கூட்டம் சாலை கொள்ளாமல் முழு அளவிலும் அதற்கு மேலும் கூடி விட்டதால் கார் எப்படியும் அங்கிருந்து வெளியேறிப் பிரதான சாலையாகிய கோடம்பாக்கம் ஹைரோடுக்குப் போக முடியாதபடி ஆகியிருந்தது.

போலீஸை விட்டுக் கூட்டத்தை விலக்கிக் கார் போக வழி செய்யலாம் என்றால் எந்த மந்திரியின் லஞ்ச ஊழல்களைப் பற்றிக் கூட்டத்தில் காரசாரமாகப் பேச்சு நடந்து கொண்டிருக்கிறதோ அந்த மந்திரியின் காரே கூட்டத்தை வகிர்ந்து கொண்டு போவதால் ஏற்படும் விளைவுகள் என்னவாயிருக்கும் என்றும் புரியவில்லை. அந்தச் சமயத்தில் சிவகாமிநாதனின் மகனும், மகளும் கூட்டச் செலவுகளுக்காக உண்டியல் ஏந்தி வந்தனர். தெரிந்தோ தெரியாமலோ மந்திரியின் காரருகே நின்றிருந்த மிஸ். மங்காவிடம் போய் உண்டியலை நீட்டினாள் சிவகாமிநாதனின் மகள். அருகே நின்ற போலீஸ் அவளைத் துரத்த முயல்வதையும், மங்கா போலீஸைக் கையமர்த்தித் தடுத்துவிட்டு ஒரு முழு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து உண்டியலில் போடுவதையும் முத்துராமலிங்கம் கண்டான். மங்காவின் தாய் அவளைக் கடிந்து கொண்டு முகத்தைத் திருப்பிக் கொள்வதையும் கூட அவனால் காண முடிந்தது.

நாட்டிற்காகப் பாடுபட்டுச் சிறை சென்ற தியாகி சிவகாமிநாதனின் மகள் காசுக்காக உண்டியல் ஏந்தி நிற்பதையும், நாட்டு விடுதலைக்கு எதிராக இருந்த பாரம்பரியத்தில் வந்த ஒரு சந்தர்ப்பவாதியின் மகள் ஐந்து ரூபாய் நோட்டை அலட்சியமாக எடுத்துத் தருகிற நிலையில் இருப்பதையும் மனத்துக்குள் ஒப்பிட்டுப் பார்த்தான் முத்துராமலிங்கம். சின்னி சிரித்தபடியே கூறினான்:

“படா கில்லாடிப் பொண்ணுப்பா! அப்பாக்காரரு எந்த மந்திரியைத் திட்டிப் பேசிக்கிட்டிருக்காரோ அந்த மந்திரி மகளுட்டவே அஞ்சு ரூபா கறந்திடிச்சே?”

“குடுக்கட்டுமே! எல்லாம் இவுங்க மாதிரித் தியாகிங்க வவுத்திலே அடிச்சுப் பறிச்ச காசுதானே!”

“இந்தக் கூட்டத்தை இதே ‘ஜோர்’ல ஏவி விட்டா... லஞ்சப் புலிங்களா இருக்கிற மந்திரிகளை அப்படியே போயிப் பந்தாடிப் புடுவாங்க...”

“அப்பன் பண்ற தப்புக்கு அப்பாவி மகளோ, மனைவியோ எப்படிப் பொறுப்பு ஆவாங்க?”

“நாட்டிலே எல்லாத்திலியும் இன்னிக்கு நெலைமை இப்படித்தான் இருக்கு! யாரோ உயிரை விட்டு உழைக்கிறான். வேற யாரோ அழுக்குப் படாம வந்து திடீர்னு பூந்து அனுபவிக்கிறான்.”

அதெல்லாம் இனிமே நடக்காது. அதான் பாடினாரே, வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்னு.”

“எவன் நிந்தனை செய்யிறான்? எங்கே செய்யிறான்? உண்டு களித்திருப்போர்தானே இன்னம் பவிஷா ஆண்டுக்கிட்டிருக்காங்க...”

அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே கூட்டத்தின் மறுமுனையில் ஒரு சலசலப்பு எழுந்தது. திரும்பிப் பார்த்தபோது ஒரு போலீஸ் லாரி வந்து நின்று கொண்டிருப்பதை முத்துராமலிங்கமும் சின்னியும் கவனித்தார்கள்.

அத்தியாயம் - 17

மிகவும் அமைதியாக நடந்து கொண்டிருந்த கூட்டத்தில் போலீஸார் லத்திக் கம்புகளுடன் இறங்கி மந்திரியின் காருக்கு வழி உண்டாக்க முயன்றார்கள். சிவகாமிநாதன் மைக்கில் முழங்கினார்: “பெருமக்களே! இது முறைப்படி முன் அநுமதியும் லைசென்ஸும் பெற்ற பொதுக்கூட்டம். இதைக் கலைக்க யாருக்கும் உரிமை இல்லை. யார் சொன்னாலும் கேட்காதீர்கள். அப்படியே அவரவர்கள் இடத்தில் உட்காருங்கள்.”

அங்கே கூடியிருந்த மக்கள் அவருடைய அந்தக் கட்டளைக்கு வசியப்பட்டார்கள். அதன்படியே செய்தார்கள். கார் செல்லப் பாதை கிடைக்கவில்லை. உள்ளே செல்லும் போது கூட்டம் அதிகம் இல்லாத காரணத்தால் மந்திரியின் கார் சுலபமாகப் போய்விட முடிந்திருந்தது. இப்போது அப்படி முடியவில்லை. அமைதியாகக் கூடிக் கேட்டுக் கொண்டிருக்கும் மக்களை விலக்க விருப்பமின்றி மிஸ் மங்கா தயங்கினாலும் அவள் தாயும் டிரைவரும் வேறுவிதமாக நினைத்துச் செயல்பட்டார்கள். டிரைவர் அருகே தேவஸ்தான ஆபீசுக்குள்ளே போய் மந்திரிக்கே டெலிபோன் செய்தான். கார் போக வழி இல்லை என்பதை மட்டும் சொல்லாமல் சிவகாமிநாதன் மேடை மேல் நின்று கொண்டு மந்திரியின் மானத்தைக் கப்பலேற்றிக் கொண்டிருப்பதையும் சேர்த்துச் சொல்லி வைத்தான் அவன்.

அப்போது எதையாவது சாக்கு வைத்துக் கூட்டத்தைக் கலைக்க வேண்டும் என்ற ஆசை மந்திரிக்கே உண்டாயிற்று. ஓர் எதிர்ப்பைக் கண்டு தங்களைத் திருத்திக் கொள்கிறவர்களை விட எதிர்ப்பவர்களையே நசுக்கிவிட முயலும் மூன்றாம் தரமான அரசியல்வாதிகள் தான் இன்று அரசியலில் பெரிய இடங்களில் இருக்கிறார்கள். அதிகாரத்தையும் பதவியையும் அடைகிறவரை வாக்காளர்களின் காலில் விழுவதும், அதிகாரமும் பதவியும் கைக்கு வந்த பின் தங்களை யாரும் அசைக்க முடியாது என்ற திமிரோடு எந்த மக்களின் காலில் விழுந்து பதவிக்கு வந்தார்களோ, அந்த மக்களையே ஓங்கிக் காலால் மிதித்து உதைப்பதும் வழக்கமாயிருக்கிறது.

ஜனநாயக யுகத்தின் மிகப் பெரிய பாவம் என்பது அதிகார துஷ்பிரயோகம் தான். ஒவ்வோர் அரசியல் கட்சியும் தன் பங்குக்குக் குறைவின்றி அந்தப் பாவத்தைச் செய்து கொண்டிருந்தன. வெளியே இருக்கிறவரை எது சரி, எது தவறு என்று துல்லியமாகப் பிரித்து உணரவும் உரைக்கவும் முடிகிற விவரந் தெரிந்த அரசியல் தலைவர்கள் கூட ஆட்சிக்குப் போய்ப் பதவியில் உட்கார்ந்து விட்டால் நல்லது கெட்டது புரியாதவர்களாகவும் தெரியாதவர்களாகவும் மாறிவிடுகிறார்கள்.

ஜலதோஷம் பிடித்தவனுக்கு வாசனைகள் தெரியாதது போல் கட்சி அரசியல் மூலமாகப் பதவியில் இருப்பவன் யாரோ அவனுக்குப் பொது நியாயங்கள் எவையுமே பிடிபடாமல் போய்விடுகின்றன. இந்தியாவில் கட்சி அரசியலில் இருக்கிறவரை ஒவ்வொருவருக்கும் இந்த வகை ஜலதோஷம் இருந்தே தொலைகிறது.

அப்போது முத்துராமலிங்கமும் சின்னியும் கவனித்துக் கொண்டிருந்த போதே போலீசார் அந்த அமைதியான கூட்டத்தின் மீது அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விட்டனர்.

கூட்டம், தடியடி, கண்ணீர்ப் புகை வீச்சு மூலம் கலைக்கப்பட்டது. மந்திரியின் காரைக் கொளுத்துவதற்குத் தூண்டியதாகவும் முயன்றதாகவும் தியாகி சிவகாமிநாதன், அவர் மகள், மகன் மூவரும் கைது செய்யப் பெற்றுப் போலீஸ் லாரியில் கூட்டிக் கொண்டு போகப் பட்டிருந்தார்கள்.

கூட்டத்துக்கும் போலீஸாருக்கும் மோதல் ஏற்பட்ட போது கூட்டத்தாரோடு கலந்து கொள்ளத் துறுதுறுத்த முத்துராமலிங்கத்தைச் சின்னி தடுத்து நிறுத்தியிருந்தான்.

“பொழைப்புக்கு வேலை தேடிக்கிட்டிருக்கிற நீ அடிக்கடி ஜெயிலுக்குள்ளாரப் போயிட்டாக் கிடைக்கிற வேலையும் எகிறிப் பூடும்.”

“அதுக்காகக் கண்ணெதிரே நடக்கிற அக்கிரமத்தைப் பார்த்துக்கிட்டுச் சும்மா நிக்க முடியாது.”

“இன்னிக்கு நாட்டுல நடக்கிற இது மாதிரி அக்கிரமங்களைத் தடுத்து நிறுத்திட எந்தத் தனி ஆளாலேயும் முடியும்னு தோணலை தம்பீ!”

நடுவே உண்டாக்கப்பட்ட வழியில் மந்திரியின் குடும்பத்தினரோடு கூடிய அந்தக் கார் போலீஸ் பாதுகாப்போடு பத்திரமாகச் சென்றது. பரபரப்பிலும் கலவரத்திலும் அந்தப் பகுதிகளில் எல்லாக் கடைகளையும் அடைத்து விட்டிருந்தார்கள். தெரு வெறிச்சோடியிருந்தது. கூட்ட மேடையைச் சுற்றி இரண்டொரு போலீஸ்காரர்கள் நின்று கொண்டு மைக்காரனையும் மேடை ஏற்பாடு செய்திருந்தவனையும் விரட்டிக் கொண்டிருந்தார்கள்.

மணி இரவு ஒன்பதுக்கு மேலாகியிருந்தது. கோடம்பாக்கம் ஹைரோட்டிலேயே ஒரு ஹோட்டலில் இரவு உணவை முடித்துக் கொண்டு சின்னியும், முத்துராமலிங்கமும் திருவல்லிக்கேணிக்குத் திரும்பியிருந்தார்கள். பஸ்ஸில் வருகிற போது இருவரும் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. முத்துராமலிங்கத்தின் மனமோ வடபழநியில் சிவகாமிநாதனுக்கும் அவர் மக்களுக்கும் நேர்ந்தவற்றை எண்ணியே குமுறிக் கொண்டிருந்தது.

அன்று வெள்ளைக்காரன் காலத்தில் இருந்த போலீஸும் தியாகி சிவகாமிநாதன் போன்ற தேச பக்தர்களையும் தொண்டர்களையும் இப்படித்தான் அடித்து விரட்டியது. இன்று இந்தச் சுதந்திர இந்தியாவின் போலீஸும் இவர்களை அடித்து விரட்டுகிறது. இவர்களுக்கு என்றுதான் விடியப் போகிறது? இந்தியர்களை அடிமைப்படுத்தி மகிழ்வதிலும் அடக்கி மகிழ்வதிலும் அந்நியர்களை விடச் சக இந்தியர்களே மேலும் மிக மோசமாக அல்லவா இருக்கிறார்கள்? அன்று வெளியாருக்கு அடிமைப்பட்டு அடங்கியிருந்தோம். இன்று வேண்டியவர்களுக்கே அடிமைப்பட்டு அடங்குகிறோம் என்பதுதான் வித்தியாசமாக இருந்தது.

அங்கிருந்து கொலைகாரன் பேட்டை வீட்டில் போய் தூங்கலாமா அல்லது கிருஷ்ணாம்பேட்டை மயானத்திலேயே இரவைக் கழித்துவிடலாமா என்று சின்னி முத்துராமலிங்கத்தைக் கேட்டான். முத்துராமலிங்கம் பதில் சொன்னான்:

“மனசு சரியில்லே! வா! கொஞ்ச நேரம் ‘பீச்’சிலே போய்ப் பேசிக்கிட்டிருக்கலாம். அப்புறம் தூங்கறதைப் பத்தி யோசிப்போம்.

“ஏன் மனசுக்கென்ன வந்திச்சு?”

“வா! போகலாம்” - என்று கடற்கரையை நோக்கி நடந்தான் முத்துராமலிங்கம். சின்னி பின் தொடர வேண்டியதாயிற்று. கடற்கரைக்குச் சென்று மணலில் அமர்ந்த பின்னும் சின்னிதான் முதலில் பேச்சை ஆரம்பித்தான்.

“இந்த ஃபீல்டிலே உனக்கு நல்ல எதிர் காலம் இருக்குப்பா! நாளைக்கு நீயே தனியாக் கதை வசனம் பாடல் எல்லாம் எழுதலாம். பேர் வாங்கலாம்.”

“எந்த ஃபீல்டைச் சொல்றே?”

“அதான் சினிமா ஃபீல்டு?”

“என்ன பாவம் பண்ணினேனோ பாபுராஜ் மாதிரி நிரட்சர குட்சிங்களுக்குப் போயி அசிஸ்டெண்டா இருக்கச் சொல்றே?”

“அவன் முதலியாருக்கு ரொம்ப வேண்டியவன். இந்த ஃபீல்டுலே ரொம்ப நாளா இருக்கான்.”

“அது போகட்டும்! இந்த ஊரே ரொம்ப வேடிக்கையான ஊரா இருக்குதப்பா. இங்கே தகுதியும் திறமையும் உள்ளவனை ஒதுக்கறாங்க. ஒதுக்கப்பட வேண்டிய கழிசடைகளைத் தகுதியும் திறமையும் உள்ளவனாகக் காண்பிச்சுப் பாசாங்கு பண்றாங்க.”

“நெளிவு சுளிவு தெரியாத முழு நல்லவங்களை விட நெளிவு சுளிவு தெரிந்த மோசமானவங்களே போதும்னு எடுத்துக்கிறாங்க... அதுலே என்ன தம்பி தப்பு?”

“இல்லே! தேச விடுதலைப் போராட்டத்துலே குடும்பத்தையும் வாழ்க்கையையும் சொத்துச் சுகங்களையும் தியாகம் பண்ணின சிவகாமிநாதன் மாதிரி ஆளுங்க இன்னும் சிரமப் பட்டுக்கிட்டே இருக்காங்க... சிரமப்படாம எப்போ எந்தக் கட்சி ஜெயிக்குமோ அதுக்கு ஜால்ரா போட்டுடறவன் வசதியா இருக்கான்.”

“இதெல்லாம் நெனைச்சுப் பார்த்தாக் குழப்பம் தான் மிஞ்சும் தம்பி! நமக்கு எதுக்கு இந்த வம்பெல்லாம்? புதன் கிழமையிலிருந்து நீ முதலியார் சினிமாக் கம்பெனியிலே பாபுராஜுக்கு உதவியாய்ப் போய்ச் சேரு. மத்ததை அப்புறம் பார்த்துக் கிடலாம்.”

தன்னைப் போல் சின்னி அவற்றையெல்லாம் பற்றி அதிகம் சிந்தனை செய்து மனத்தை அலட்டிக் கொள்ளத் தயாராயில்லை என்பது புரிந்தது.

கடற்கரை மணற் பரப்பில் பேசிக் கொண்டிருந்த - படுத்துக் கொண்டிருந்த ஆட்களைப் போலீஸ்காரர்கள் வந்து கிளப்பி விரட்டுகிறவரை அவர்கள் அங்கே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்புறம் போய்க் கிருஷ்ணாம்பேட்டை மயானத்தின் பாழ்மண்டபத்திலே தான் இரவைக் கழிக்க நேர்ந்தது. சின்னி ஆதங்கப்பட்டுக் கொண்டான்.

“அங்கே கொலைகாரன் பேட்டைக்குப் போயிருந்தா கொஞ்சம் வசதியாப் படுக்கலாம்.”

“பரவாயில்லே வசதிக்கென்ன வந்திச்சு இப்போ?”

“அதுக்கு இல்லே. நான் எங்கே வேணாப் படுப்பேன். எனக்கு எல்லாம் பழக்கம் தான்... நீ படிச்ச ஆளு... நாளைக்கு ஒரு வேலைக்குப் போகப் போறவன் இப்பிடி எல்லாம்?...”

“நான் படிச்சவன் தான். ஆனா சொகுசுக்கு அடிமைப்பட்டுப் போனவன் இல்லே. எத்தினியோ ராத்திரி தலையிலே உருமால் கட்டிக் கிட்டு பருத்திக் காட்டுக்குக் கையிலே அருவாளோட காவல் காக்கப் போயிருக்கேன்...”

முத்துராமலிங்கம் இப்படிக் கூறியதற்குச் சின்னி பதிலெதுவும் சொல்லவில்லை.

அத்தியாயம் - 18

எப்போது பொழுது விடிந்ததென்றே தெரியவில்லை.

முத்துராமலிங்கம் கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்திருந்த போது சின்னி ஒரு பீடியைப் பற்ற வைத்துப் புகை இழுத்தபடி காலைத் தினசரிப் பத்திரிகையோடு வந்து கொண்டிருந்தான்.

தினசரியை வாங்கிப் பார்த்தபோது முதல் நாள் இரவு வடபழநிப் பொதுக் கூட்டம் பற்றியும் தடியடி பற்றியும் சிவகாமிநாதனும் அவருடைய மகளும் மகனும் கைதான விவரம் பற்றியும் அவர்கள் ஜாமீனில் விடுதலையானது பற்றியும் செய்திகள் வெளிவந்திருந்தன. மற்றொரு பக்கத்தில் சட்டத்துக்குப் புறம்பான முறையில் தம்மைக் கைது செய்ததைக் கண்டித்துக் கமிஷனர் ஆபீஸ் முன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகச் சிவகாமிநாதன் அறிக்கை விட்டிருந்தார்.

அவர் என்று உண்ணாவிரதம் என்பதாக அறிவித்திருந்தாரோ, அன்று காலையில் தான் புதன் கிழமை. பாபுராஜ் முத்துராமலிங்கத்தை முதல் முதலாக வேலையில் சேரச் சொல்லியிருந்த நான்.

ஆனாலும் ஸ்டூடியோவுக்குப் புறப்படு முன் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் போய்ச் சாமி கும்பிட்டு விட்டு நேரே பைகிராப்ட்ஸ் ரோடும் திருவல்லிக்கேணி ஹைரோடும் சந்திக்கிற ஜாம் பஜார் முனையில் இருந்த பூக்கடையில் மாலை வாங்கிக் கொண்டு சிவகாமிநாதன் உண்ணாவிரதம் இருந்த இடத்துக்கு ஆர்வத்தோடு புறப்பட்டுப் போனான் முத்துராமலிங்கம்.

சின்னி அந்தச் செயலை அவ்வளவாக இரசிக்கவில்லை.

“வேலையிலே சேர்ற, நேரத்திலே இதுக்குப் போயி அலையிறியேப்பா... கிடைச்ச வேலை போயிடப் போவுது. பாபுராஜ் ஒரு கிறுக்குப் பய... மறுபடி இராகுகாலம்னு உன்னை வெளியே நிறுத்திடப் போறான்.”

“அதில்லே சின்னி! ஒரே ஒரு நிமிஷம் பொறுத்துக்கோ...! இத்தனை பெரிய ஊர்லே அரசியல்ங்கற புதர்க் காட்டிலே ஒரே ஒரு தீரனை - ஒழுக்கமுள்ள நாணயஸ்தனை நான் முதல் முதலா இப்பத்தான் பார்க்கிறேன். அந்த மனுஷனுக்கு மரியாதை பண்ணிட்டு வந்துடறேன்.”

“போ... சுருக்க வந்து சேரு” - என்று உண்ணாவிரதப் பந்தலுக்கு, எதிர் பிளாட்பாரத்திலேயே விலகி நின்று கொண்டான் சின்னி.

உண்ணாவிரதத்துக்காகப் போடப்பட்டிருந்த கிடுகுப் பந்தலில் கிடுகு பற்றாக் குறையால் வெய்யில் ஒழுகியது. சிவகாமிநாதன், அவர் மகள், மகன், தொண்டர்கள் சூழ உண்ணாவிரதமிருந்தார்.

முத்துராமலிங்கம் அவருக்கு மாலையை அணிவித்து வணங்கிவிட்டு வந்தான். அப்போதே காலை பத்து மணிக்கு மேலாகியிருந்தது. பஸ் ஏறிச் சின்னியும் அவனும் கோடம்பாக்கம் போய்ச் சேர்ந்த போது ஏறக்குறையப் பதினோரு மணி ஆகிவிட்டது. ஸ்டூடியோவில் பாபுராஜ் இல்லை. யூனிட்டோடு அவன் காந்தி மண்டபத்தில் அவுட்டோருக்குப் போயிருப்பதாகக் கூறினார்கள்.

சின்னி சொன்னது போலவே ஆகிவிட்டது என்பதை உணர்ந்த போது முத்துராமலிங்கத்துக்கு வருத்தமாக இருந்தது. தியாகி சிவகாமிநாதன் உண்ணாவிரதம் இருந்த இடத்தைத் தேடிப் போய் அவருக்கு மாலையணிவித்ததில் ஏற்பட்ட திருப்தி வேலையைக் கோட்டை விட்டுவிட்டோம் என்ற ஏமாற்றத்தில் மெல்லக் கரையைத் தொடங்கியது. ஒரு தற்காலிகமான பதற்றமும் ஏற்பட்டது. சின்னி விடவில்லை. உடனே ஸ்டூடியோவிலிருந்து வெளியேறி மெயின் ரோட்டுக்கு வந்து ஆட்டோ ரிக்‌ஷா பிடித்து இருவருமாக பாபுராஜ் அவுட்டோர் யூனிட் போயிருந்த காந்தி மண்டபத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

அவர்கள் போய்ச் சேர்ந்திருந்த போது காந்தி மண்டபப் புல் வெளியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

“சொன்னாச் சொன்ன நேரத்துக்கு வரணும்! நீ என்னாப்பா ஆளு!” என்று பாபுராஜ் ஒரேயடியாகக் கூப்பாடு போட்டான். சின்னி அவனைச் சமாதானப்படுத்தி முத்துராமலிங்கத்தை வேலைக்குச் சேர்த்து விட்டுப் போனான்.

அந்த வேலை ஒன்றும் பிரமாதமாகவோ பெருமைப்படும் படியாகவோ இல்லை. படப்பிடிப்பு விவரங்கள், வசனக்கத்தைகள் அடங்கிய ஐந்தாறு நோட்டுப் புத்தகங்களைச் சுமந்து கொண்டே பாபுராஜுக்குப் பக்கத்தில் அணுக்கத் தொண்டன் மாதிரி சதா நிற்க வேண்டியிருந்தது. அவன் எப்போதாவது எதையாவது சொல்லிக் கேட்டால் நோட்டுப் புத்தகத்தில் அந்தப் பக்கத்தைப் பிரித்துக் காட்ட வேண்டியதுதான் வேலை.

அவன் கைநாட்டுப் பேர்வழியோ, கத்துக் குட்டியோ உரிமையாளரான முதலியாருக்கு வேண்டியவன் என்ற முறையில் அங்கே எல்லாரும் பாபுராஜுக்குப் பயந்தார்கள். மரியாதை காட்டினார்கள். ஒத்துப் பாடினார்கள்.

“ஏதுடா நாம ரொம்பப் படிச்சவனாச்சே, இவன் நம்மை அதிகாரம் பண்றதாவது ஒண்ணாவதுன்னா நினைக்காதே! பணிவா அடக்க ஒடுக்கமா இருக்காட்டி இந்த ஃபீல்டிலே நீ எதுவுமே கத்துக்க முடியாது! ஜாக்கிரதை!” என்று முப்பது நிமிஷங்களுக்குள் இருபது தடவையாவது முத்துராமலிங்கத்தை எச்சரித்து விட்டா பாபுராஜ்! அதிலிருந்து பாபுராஜின் ‘காம்ப்ளெக்ஸ்’ புரிந்தது.

அன்று காலை பதினொரு மணியிலிருந்து முத்துராமலிங்கத்தின் வாழ்க்கை சென்னை நகரோடும், அந்தத் தொழிலோடும் பிணைக்கப்பட்டது. அங்கே உதவிக் காமிராமேன் சண்முகம் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டது. கோடம்பாக்கம் ஹைரோடிலேயே கீழ்ப்பகுதி கடைகளாகவும், மாடிப்பகுதி முழுவதும் திருமணமாகாத தனிக்கட்டைகள் வாடகைக்குக் குடியிருக்கும் அறைகளாகவும் அமைந்திருந்த ஒரு கட்டிடத்தில் சண்முகம் வசித்து வந்தார். தனது அறையில் தங்கிக் கொள்ள வருமாறு அவரே முத்துராமலிங்கத்தைக் கூப்பிட்டார். முத்துராமலிங்கத்துக்கு அவரைப் பிடித்துப் போய்விட்டது. சண்முகம் மதுரைக்காரர். நன்றாகப் பழகினார். நல்ல சுபாவங்கள் உள்ளவராகத் தெரிந்தது.

“வழக்கமாக ஒவ்வொரு ரூம்லேயும் ரெண்டு பேர் தான் இருக்காங்க. நூத்தி எழுபது ரூபா மாச வாடகை. என் சௌகரியத்துக்காக நான் இதுவரை தனியாத்தான் இருந்தேன். இப்ப உங்களைக் கூட இருக்கலாம்னு கூப்பிடறேன். என் வாடகை குறையும்கிறதுக்காக இல்லே. உங்க நட்புக்காகத்தான் கூப்பிடறேன்” என்று முத்துராமலிங்கத்திடம் சொன்னார் அவர்.

முத்துராமலிங்கம் அன்றிரவு கொலைகாரன் பேட்டைக்குப் போய்ச் சின்னியிடம் சொல்லி விடைபெற்ற பின் தன்னுடைய சூட்கேஸ் முதலிய சாமான்களோடு கோடம்பாக்கம் ஹைரோடு மாடி லாட்ஜுக்குக் குடியேறிச் சண்முகத்தோடு தங்கிவிட்டான்.

லாட்ஜ் உரிமையாளர் அந்த லாட்ஜ் திறக்கப்பட்ட சமயத்தில் பிரமாதப்பட்டு ஓடிய ‘இளைஞர் உலகம்’ என்ற தமிழ் சினிமாப் படத்தின் பெயரையே அந்த விடுதிக்குச் சூட்டியிருந்தார். மாடிப் பகுதியில் இருந்த முப்பது அறைகளில் இருபத்தைந்துக்கு மேல் சினிமா ஸ்டூடியோ படப்பிடிப்புக் கம்பெனிகளோடு தொடர்புடையவர்களே நிரந்தர அறைவாசிகளாகத் தங்கியிருந்தனர். சில நாட்களிலேயே முத்துராமலிங்கத்துக்கு இடமும் மனிதர்களும் நன்றாகப் பிடிபட்டு விட்டார்கள். ஸ்டூடியோவிலும் அவுட்டோரிலும் வேலைக்காகச் செலவழிந்த நேரங்களைத் தவிர மாலை வேளைகளிலும், இரவிலும், தியாகி சிவகாமிநாதனின் கூட்டங்கள் எங்கு நடந்தாலும் தேடிச் சென்று விருப்பத்தோடு கேட்டுவிட்டு வந்தான் அவன்.

சிந்தாதிரிப் பேட்டைக்குத் தேடிச் சென்று தானே தன்னை அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு அவருடைய ‘தியாகியின் குரலுக்’குச் சந்தா கட்டினான்.

“உங்களைப் போலத் துடிப்பும் துணிவுமுள்ள இளைஞர்களைப் பார்க்கறப்பத்தான் கொஞ்சம் ஆறுதலாயிருக்குத் தம்பீ! எதிர் நீச்சல் போட்டே என் வாழ்க்கையைக் கழிச்சாச்சு. ஆனா இன்னும் எதிர் நீச்சல் போடறதிலே நான் சலிப்படைஞ்சிடாமத்தான் இருக்கேன்” என்றார் சிவகாமிநாதன்.

பத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவன் தற்செயலாக நேருக்கு நேர் மிஸ்.மங்காவைச் சந்திக்க நேர்ந்தது. நகரின் பிரபலமான நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் அவன் சார்ந்திருந்த கம்பெனியின் படத்திற்காக ஷூட்டிங் ஏற்பாடாகியிருந்தது. வழக்கமாக வாடிக்கையாளர்கள் குளித்துக் கொண்டிருந்த போதே கதாநாயகனும், கதாநாயகியும் அங்கே சந்திப்பது போலப் படப்பிடிப்பு நடைபெற்றாக வேண்டும்.

அன்று ஹோட்டலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நீச்சல் குளத்தைப் பொறுத்தவரை மிக மிகக் குறைவாயிருந்தது. அந்த நீச்சல் குளத்தில் வெளியார்களும் கட்டணம் கட்டிவிட்டுக் குளிக்கலாம். படப்பிடிப்பு நடக்கப் போகிறது என்பது தெரியாமல் தற்செயலாக மங்காவும் அங்கே நீச்சல் குளத்திற்கு வந்திருந்தாள். ஒருவரை மற்றொருவர் அங்கே அந்த உடையில் எதிர்பாராததால் இருவருக்குமே ஆச்சரியம் தான். சமாளித்துக் கொள்ளச் சில விநாடிகள் ஆயின. முத்துராமலிங்கம் தான் முதலில் அவளைக் கேட்டான்.

“இன்னும் பர்மிங்ஹாம் போகலியா? டிரிப் என்ன ஆச்சு?”

“போகலே! டிரிப் ஒரு மாசம் தள்ளிப் போச்சு! நீங்க எங்கே இப்பிடி...?”

“நானா? நான் இந்த சினிமா கம்பெனியிலே வேலை பார்க்கறேன். இன்னிக்கு இங்க ஷூட்டிங்... குரங்காட்டிக்கு குரங்கை எப்பிடி வேணாலும் ஆட்டி வைக்கிற உரிமை இருக்கிறாப்ல எங்க முதலாளியும் என்னையும் ஷூட்டிங்கிலே நாலு பேர் குளிச்சிட்டிருக்கிற மாதிரி வர்றதுக்காகக் குளிக்கச் சொல்லி ஆட்டி வைக்கிறாரு...”

“ஐயையோ! ஷூட்டிங்கா...? அப்படீன்னா நான் சீக்கிரம் டிரஸ்ஸை மாத்திக்கிட்டு ஓடணும். இந்த ஸ்விம்மிங் டிரஸ்ஸிலே நான் படத்திலே விழுந்து வச்சேன்னா ‘மந்திரி மகள் நீச்சல் உடையில் படப்பிடிப்பில் தோன்றினார்’னு எந்தப் பேப்பர்க்காரனாவது போட்டுடப் போறாங்க.”

“இது இல்லாட்டி உங்கப்பாவைப் பத்திப் பேப்பர்ல வர்றத்துக்கு வேற ஒண்ணுமே இல்லியா என்ன? நாள் தவறாமதான் லஞ்சம், ஊழல், சந்தர்ப்பவாதம்னு பேப்பர்லே உங்கப்பா பேரு நாறிக்கிட்டிருக்கே? போறாத கொறைக்கு அந்த மனுசன் சிவகாமிநாதன் கூட்டம் போட்டு இதையெல்லாம் சொன்னாருங்கறத்துக்காக... அவரோட கூட்டத்தைக் கலைச்சு அரெஸ்ட் பண்ணி அவர் மேலே பொய் வழக்கு வேறப் போட வச்சிருக்காரு.”

“நீங்க அந்த வடபழநிக் கூட்டத்துக்கு வந்திருந்தீங்களா? நான் கூட அன்னிக்கு அம்மாவோடக் கோயிலுக்கு வந்திருந்தேன். திரும்பறப்ப அவரு பேச்சைக் கேட்டேன். பிரமாதமாப் பேசறாரு! எனக்கு அவரை ரொம்பப் பிடிச்சிப் போச்சு.”

“வந்திருந்தது மட்டுமில்லை. உன்னையும் உங்கம்மாவையும் கூடத் தூரத்திலிருந்து பார்த்தேன். தியாகி சிவகாமிநாதன் மகள் உண்டியல் குலுக்கிட்டு வந்தப்ப மந்திரி சிதம்பரநாதன் மகளான நீ அதிலே அஞ்சு ரூபா போட்டதையும் பார்த்தேன். உங்க காருக்குப் போக வழியில்லேன்னுதானே அன்னிக்குக் கூட்டத்தையே கலைச்சீங்க?”

“ஐயையோ நான் கூடவே கூடாதுன்னேன்! டிரைவர் தான் என் பேச்சைக் கேட்காமே அப்பாவுக்கு ஃபோன் பண்ணி அன்னிக்கி அத்தனை கலாட்டாவும் பண்ணி வச்சான்.”

“இந்தத் தேசத்து அரசியல்லே உங்கப்பா மாதிரி ஆளுங்க கை ஓங்கியிருக்கிறவரை என் போன்ற இளைஞர்களும், சிவகாமிநாதன் போன்ற முதியவர்களும் இன்னும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்தியே ஆகணும் போலிருக்கு.”

“இளையத் தலைமுறையைச் சேர்ந்தவள்ங்கற முறையிலே எங்கப்பாவோட அரசியல் எனக்கும் கூடத்தான் பிடிக்கலே.”

“பிடிக்கிறதோ பிடிக்கலியோ, நீ அவரோட மகள். அவரை எதிர்க்க முடியாது.”

“எக்ஸாக்ட்லி... அப்பிடித்தான் நான் இருக்கேன். மறுபடி எப்பப் பார்க்கிறது?” என்று கேட்டுக் கொண்டே பெண்கள் உடை மாற்றும் அறையை நோக்கி விரைந்தால் மங்கா. அவன் அவளுக்கு விடை கொடுத்து அனுப்பினான்.

அவள் அந்த உடையில் மிக மிக அழகாக இருந்தால். அதைப் பற்றி அவன் அவளிடமே ஒரு வார்த்தை புகழ்ந்து சொல்லியிருந்தால் ஒரு வேளை அது அவளுக்கு மகிழ்ச்சியா யிருந்திருக்கலாம். அதை விட்டு விட்டு அவளுடைய அப்பாவின் லஞ்ச ஊழலையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் பற்றியே நேரில் பேசிவிட்டு அவள் சென்ற பிறகு அவளுடைய அழகைப் பற்றி நினைக்கும் தன் செயலைத் தானே வியந்து கொண்டான் முத்துராமலிங்கம். பாபுராஜ் நீச்சல் உடையணிந்த ஏழெட்டு எக்ஸ்ட்ரா நடிகைகள் சூழ அதே போல உடையணிந்த அல்லது அதை விடக் குறைவான உடையணிந்த கதாநாயகியோடு ஒரு வேனிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தான்.

“என்னப்பா...? யாரோ பொம்பளை கூடப் பேசிக் கிட்டிருந்தியே, யாருப்பா அது?”

“என் கூடக் காலேஜிலே படிச்சவ.”

“அவளை ஏன்ப்பா விட்டே... ஷோக்கா இருந்தாளே... இந்த ஸீன்லே அவளையும் குளிக்க வச்சுக் காமிராவுக்குள்ளே பிடிச்சுப் போட்டிருக்கலாமே...?”

“அவ மந்திரி எஸ்.கே.சி. நாதனோட மக. நீங்க எங்கே காமிராவிலே பிடிச்சிடப் போறீங்களோன்னு பயந்து தான் அவளே இத்தினி அவசர அவசரமாப் போறா.”

“ஐயையோ! பெரிய இடத்து விவகாரம். பேசறதே ஆபத்து! வா வேலையைப் பார்க்கலாம்” என்று மந்திரி என்ற பேரைக் கேட்டதுமே பாபுராஜ் பயந்து உதறினான்.

‘எல்லா வகையிலும் கெட்டவர்கள் பெரிய பதவியில் இருக்கிறார்களே என்பதற்காக அவர்களுக்குப் பயந்து பதறி மரியாதை செலுத்தும் இந்த அடிமைக்குணம் இந்த நாட்டை விட்டு என்று தான் போகப் போகிறதோ?’ என்ற ஏக்கத்தோடு நீச்சல் குளத்தில் இறங்கினான் முத்துராமலிங்கம்.

அத்தியாயம் - 19

முதல் மாதச் சம்பளம் கைக்கு வந்ததும் மிகவும் சிரமப்பட்டு முயன்று மிச்சம் பிடித்து ஐம்பது ரூபாய் ஊருக்கு மணியார்டர் செய்திருந்தான் முத்துராமலிங்கம். தந்தை அவனைச் சென்னைக்கு அனுப்பியதே ஏதாவது பணம் சம்பாதித்து உபயோகமாகக் குடும்பத்துக்கு அனுப்புவான் என்பதற்காகத்தான். மிகக் குறைந்த தொகையான இந்த ஐம்பது ரூபாய் அவரைத் திருப்திப் படுத்தப் போவதில்லை என்றாலும் ஒன்றும் அனுப்ப முடியாமல் போவதற்கு இதையாவது அனுப்ப முடிந்ததே என்ற திருப்தி அவனுக்கு இருந்தது.

தமிழ்ச் சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் ஒரு கதையிலே விரக்தியோடும் கோபத்தோடும், சென்னையை மகாமசானம் (பெரிய சுடுகாடு) என வர்ணித்திருப்பது நினைவுக்கு வந்தது அவனுக்கு.

‘அஸிஸ்டெண்ட் - ஸ்டோரி டிபார்ட்மெண்ட்’ என்று அவன் பெயரை ஒரு வவுச்சரில் எழுதிக் கையெழுத்து வாங்கிக் கொண்டு முந்நூறு ரூபாயைக் கொடுத்தவுடன் வாங்கிக் கொண்டு நேரே உதவிக் காமிரா மேனும் அறை நண்பருமான சண்முகத்திடம் தான் போனான் முத்துராமலிங்கம்.

“அண்ணே! அறை வாடகைன்னு என் பங்குக்கு ஒரு தொகையைச் சொல்லுங்க... முழு வாடகையும் நீங்களே தரவேண்டாம்.”

“இப்ப வேணாம்! சொன்னாக் கேளுங்க. பின்னாலே பார்த்துக்கலாம். இந்த முந்நூறு ரூபாயிலே ஊருக்கும் அனுப்பிச்சி அறை வாடகையும் கொடுத்திட்டீங்கன்னா அப்புறம் உங்களுக்குச் சாப்பிட ஒண்ணும் மிச்சமிருக்காது...”

“பரவாயில்லை! நீங்க இதை வாங்கிக்குங்க... மீதத்தை நான் எப்படியோ நிரத்திக்கிறேன்...”

“வாடகை வேணாம்னு சொல்ற இந்த உரிமையையும் நெருக்கத்தையும் அந்நியோந்நியத்தையும் நீங்க எனக்குத் தரத் தயாராயில்லேன்னா உடனே நீங்க தனியா வேற ரூம் பார்த்துக்கறதே நல்லது...”

“நான் தப்பா ஒண்ணும் சொல்லல்லே...”

“தப்பாவது சரியாவது? முதல்லே பணத்தை உள்ளே வையிங்க... என் கூட இந்த அறையிலே தங்க நீங்க எதுவும் இப்போ தர வேண்டாம்.”

வேறு வழியின்றி முத்துராமலிங்கம் நண்பர் சண்முகத்தின் அன்புக் கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது. திருவல்லிக்கேணி - ராயப்பேட்டைப் பகுதியிலிருந்து அவன் கோடம்பாக்கத்துக்குக் குடிபெயர்ந்து சண்முகத்தோடு அறையில் தங்க ஆரம்பித்த பின்பு சின்னியை அடிக்கடி பார்க்க முடியவில்லை. எப்போதாவது ஸ்டூடியோவிலோ, சினிமாக் கம்பெனி அலுவலகத்திலோ, அறையிலோ வந்து பார்த்துக் கொண்டிருந்தான் சின்னி.

அவனைப் பார்க்கும் போதெல்லாம் முத்துராமலிங்கம் ஒன்றை நினைப்பது வழக்கமாயிருந்தது. அவனைப் போன்ற நல்லவர்கள் கர்மயோகிகளைப் போல் யாருக்காகவோ மாற்று ஆட்களாக இருந்து லாபம் தரும் கெடுதல்களைச் செய்து வாழ்வதுதான் இந்த நகரில் வழக்கமும் நடைமுறையுமாக இருந்தது.

அங்கே சிலர் தங்களுக்காக மட்டும் கெட்டவர்களாக இருந்தார்கள். வேறு சிலர் தங்களுக்காகவும் பிறருக்காகவும் சேர்த்துக் கெட்டவர்களாக இருந்தார்கள். மற்றும் சிலர் பிறருக்காகவே கெட்டவர்களாக இருந்தார்கள். கெட்டவர்களாக இராவிடிலோ அப்படிக் காண்பித்துக் கொள்ளாவிட்டாலோ தங்களைத் தலையெடுத்து வாழ விடாமல் மிதித்து நசுக்கிக் கொன்று விடுவார்கள் என்ற முன்னெச்சரிக்கை கலந்த தற்காப்பு உணர்வினால் சிலர் அப்படி இருக்க முயன்றார்கள்.

அந்த வடபழநிக் கூட்டம் தொடர்பாகப் போலீஸாரின் அத்துமீறலைக் கண்டித்தும், நியாயம் கோரியும் தியாகி சிவகாமிநாதன் உண்ணாவிரதம் இருந்தும் உடனே நல்ல விளைவுகள் எதுவும் நடந்து விடவில்லை. மந்திரியும் சிவகாமிநாதனின் அரசியல் எதிரிகளும் அவர் மேல் ஏராளமான பொய் வழக்குகளைப் போட்டிருந்தார்கள். வக்கீலுக்கும், வழக்குக்கும், கோர்ட்டுகளுக்கும், செலவழித்துக் கொண்டே ‘தியாகியின் குரல்’ பத்திரிகையை வெளிக்கொணரத் திணறினார் அவர்.

ஒரு நல்ல மனிதனைப் பொது வாழ்க்கைத் துன்பங்கள் போதாதென்று பொருளாதாரத் தொல்லைகளும் பிடுங்கித் தின்றன.

முத்துராமலிங்கமே தியாகி சிவகாமிநாதனைத் தேடிச் சென்று ஒரு யோசனை சொன்னான். வழக்கு நிதிக்காக ஒரு பொதுக் கூட்டம் போட்டு அந்தக் கூட்டத்திலேயே துண்டு ஏந்தி வசூல் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தைச் சூளைமேடு பகுதியில் வைத்துக் கொள்ள ஏற்பாடாயிற்று. சிவகாமிநாதன் திடீரென்று முத்துராமலிங்கத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கேட்டார்:

“தம்பீ! கல்லூரி நாட்களிலே மேடையிலே முழங்கியிருக்கிறதாகச் சொல்றீங்க! கவியரங்களிலே பிரமாதமாப் பாடியிருக்கிறதாச் சொல்றீங்க... இப்ப மட்டும் என்ன ஆச்சு? சூளைமேடு பொதுக் கூட்டத்திலே எனக்கு முன்னாடி நீங்க பேசணும்...”

“நான் வேற எதுக்குங்க...? முழு நேரமும் நீங்களே எடுத்துக்கிட்டீங்கன்னா நல்லா இருக்கும். ஜனங்க உங்க பேச்சைக் கேக்கத்தான் ஆர்வமா வந்து கூடுவாங்க...”

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் தம்பீ! நானே உங்களைப் பத்தி எடுத்துச் சொல்லிக் கூட்டத்திலே உங்களை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்... நீங்க பேசுங்க... நீங்க பேசினப்பறம் தான் நான் பேசப் போறேன்...”

“நீங்க விரும்பினால் நான் மறுக்கலே...”

“நான் விரும்பறேன்! நீங்க மறுக்கக் கூடாது, மறுக்க முடியாது. நீங்களும் பேசறீங்க... போஸ்ட்டர்லே உங்க பேரைப் போடச் சொல்லிடறேன்...”

தியாகி சிவகாமிநாதனின் பேரோடு முத்துராமலிங்கத்தின் பேரையும் சேர்த்துப் பெரிய பெரிய வண்ணச் சுவரொட்டிகள் அடித்து நகரெங்கும் ஒட்டப்பட்டன. சூளைமேடு, வடபழனி, கோடம்பாக்கம் பகுதிகளில் பெரிய பெரிய சுவரொட்டிகளில் முத்துராமலிங்கத்தின் பெயரைப் பார்த்ததும் ஒரு நாள் காலை பாபுராஜ் மெல்ல ஆரம்பித்தான்.

“இன்னாப்பா! பெரிய ஸ்பீக்கர் ஆயிட்டியாமே?”

“...”

முத்துராமலிங்கம் உடனே இதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை.

“ஊர்ல இருக்கற சுவர்ல எல்லாம் பெரிசு பெரிசாப் போஸ்டர் அடிச்சு உன் பேரை ஒட்டியிருக்குதே?”

“...”

“இந்த சிவகாமிநாதன்கிற ஆளு பொழைக்கத் தெரியாத மனுசன்... அவங்க கட்சி இங்கயும், டெல்லியிலேயும் செல்வாக்கா இருந்தப்பவே யாரையாவது பிடிச்சுக் கையிலே கால்லே விழுந்து கெஞ்சிக் கதறி மந்திரியா வந்திருக்கலாம். அதுக்குக் கையாலாகாமே ஊருல இருக்கறவங்களை எல்லாம் பத்திக் கொறை சொல்லிக் கொறை சொல்லியே உருப்படாமப் போயிட்டாரு...”

“மேய்ப்பவன் பாதையில் இழுபட்டு, அடிபட்டுப் பலியாகப் போகும் ஒரு மந்தை கொழுத்த செம்மறி ஆடுகளை விடச் சுதந்திரமாகக் கர்ஜிக்கும் ஒரு சிங்கத்தின் பசி உயர்ந்தது. சிவகாமிநாதன் ஒரு மந்தை ஆடுகளில் ஓர் ஆடு இல்லை. ஒற்றைத் தனிச் சிங்கம் அவர்...”

“சிங்கமோ, அசிங்கமோ பொழைக்கத் தெரியாத மனுசன்.”

“இங்கே பொழைக்கத் தெரிஞ்சவங்கிறதுதான் யாரு? கயவர்கள், கோழைகள், இடைத்தரகர்கள், அடிவருடிகள், சந்தர்ப்பவாதிகள், அரைகுறைத் திறமைசாலிகளான முழுப்பாசாங்குக்காரர்கள்... இவங்க தானே பொழைக்கத் தெரிஞ்சவங்க? சிவகாமிநாதன் இவங்கள்ளே ஒருத்தர் இல்லைங்கிறது அவருக்குப் பெருமைதானே ஒழியக் குறைவில்லை.”

“சரி! சரி! போதும்ப்பா... உங்கிட்டப் பேசி மீள முடியாது. இந்தத் தெர்க்கத்திக்கார ஆளுங்கள்லாமே ஒரே வாயாடிங்கப்பா...” என்று சிரித்து மழுப்பியபடி விவாதத்திலிருந்து நழுவித் தன்னை விடுவித்துக் கொண்டான் பாபுராஜ்.

சூளைமேடு, கூட்ட நாளன்று மாலையிலேயே சிந்தாதிரிப்பேட்டை சென்று சிவகாமிநாதனையும் அழைத்துக் கொண்டு பொதுகூட்ட மேடைக்குச் சென்றான் முத்துராமலிங்கம். அன்று பிரம்மாண்டமான கூட்டம் திரண்டிருந்தது. முதலில் சில கல்லூரி மாணவர்கள் பேசினார்கள். சட்டக்கல்லூரி, மருத்துவக் கல்லூரி, நகரின் பொறியியற் கல்லூரி, கலைக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தியாகி சிவகாமிநாதனின் போராட்டங்களுக்கும் இலட்சியங்களுக்கும் தங்கள் ஆதரவு உண்டு என்பதைத் தெரிவித்தார்கள்.

அவர்கள் முடித்ததும் முத்துராமலிங்கத்தைப் பேச அழைக்குமுன் தியாகி சிவகாமிநாதனே அவனைக் கூட்டத்துக்கு அறிமுகப்படுத்திச் சில வார்த்தைகள் முன்னால் பேசினார்.

“நண்பர்களே! பொதுமக்களே! லஞ்ச ஊழல்களையும் சந்தர்ப்பவாத அரசியலையும் எதிர்த்துச் சுமார் முப்பதாண்டுக் காலமாகத் தனித்துப் போராடி வருகிற எனக்குத் தற்செயலாக ஓர் அரிய இளம் நண்பர் சமீபத்தில் கிடைத்திருக்கிறார். அவர் அஞ்சாதவர். அறிவுக் கூர்மை உள்ளவர். சிந்திக்கத் தெரிந்தவர். தென்னாட்டுச் சிங்கமாக விளங்கிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைப் பெற்றவர். தார்மீகக் கோபங்கள் நிறைந்த இளைஞரான அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகின்றேன்! எனது இயக்கம் சமூக சுத்திகரிப்புத் தன்மை கொண்டது. சமூகத்தைத் துப்புரவு செய்யப் புறப்படுகிறவனின் சொந்த வாழ்க்கை அபாயங்களும் எதிர்ப்புக்களும் சூழ்ந்ததாகத்தான் இருக்கும். வசதிகளும் கிடைக்காது. வசதியும், புகழும் இல்லாத இந்த அறப் போராட்ட இயக்கத்தில் என்னோடு துணிந்து இறங்க முன் வரும் இளைஞர்களைப் பார்க்கும்போது எதிர்காலத்தில் இந்த நாடு உருப்பட்டு விட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டாகிறது. இன்ஸ்டண்ட் காபி, இன்ஸ்டண்ட் டீ என்பது போல் பொது வாழ்வில் சகல துறைகளிலும் நீடித்த உழைப்போ, தியாகமோ இல்லாமல் உடனே ‘இன்ஸ்டண்ட்’ புகழுக்கு ஆசைப்படுகிறவர்கள் காத்து நிற்கிறார்கள். அப்படிச் சூழ்நிலையில் அதிகப் புகழும் விளம்பரமும் இல்லாத என்னைத் தங்கள் தலைவனாக ஏற்கும் இந்த இளைஞர்களைப் பார்த்து நான் வியந்து நிற்கிறேன். இந்த இளைஞர்களில் என்னை அதிகம் கவர்ந்திருக்கும் துணிச்சல்காரரான திரு.முத்துராமலிங்கத்தை இப்போது உங்கள் சார்பாக இங்கே பேச அழைக்கிறேன்.”

இப்படிக் கூறித் தியாகி சிவகாமிநாதன் அறிமுகப்படுத்தி வைத்த போது முத்துராமலிங்கம் பேச எழுந்ததும் அவனை வரவேற்கும் கரகோஷம் வானைப் பிளந்தது.

அப்படிக் கைதட்டியவர்களில் ஒரு மூலையில் பெண்கள் பகுதியில் மிஸ்.மங்காவையும் பார்த்தான் முத்துராமலிங்கம். அவளுடைய முகத்தின் மலர்ச்சியும் கைதட்டும் போது சிறுகுழந்தைபோல் அவள் காட்டிய அதிக உற்சாகமும் அவனுக்கு வியப்பளித்தன. அவளோடு சேர்ந்து ஜோடியாக இன்னும் யாரோ தெரியாத ஓர் அழகிய இளம் பெண்ணும் அங்கே நின்று கொண்டிருந்தாள். அவள் வந்திருக்கிறாள் என்ற உற்சாகமும் சேர்ந்து கொண்டது. முத்துராமலிங்கத்தின் பேச்சில் உணர்ச்சி, ஆவேசம், கருத்து மூன்றும் கலந்து திரிவேணி சங்கமாகப் பெருக்கெடுத்தது.

“இன்று நாம் புதிய குருட்சேத்திரத்தில் நிற்கிறோம். இலஞ்ச ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும் செய்கிறவர்கள் நமக்கு மிகவும் வேண்டியவர்கள் என்று தயங்கி உணர்வு தளர்ந்து நம் கையிலுள்ள படைகளைக் கீழே போட்டு விட்டு நின்று விடுகிறோம். அப்போது நம்மைத் தைரியப்படுத்தி எழுப்பி நிறுத்தி, ‘வில்லினை எடடா கையில் வில்லினை எடடா - அந்தப் புல்லியர் கூட்டத்தினைப் பூழ்தி செய்திடடா!’ என்று வில்லை எடுத்துக் கொடுத்து ஊக்கப்படுத்த ஒரு துணிவான கீதாசாரியன் நமக்குத் தேவையாயிருக்கிறான். இன்று இந்தத் தமிழ்நாட்டில் எனக்கும் உங்களுக்கும் அப்படித் துணிவூட்டக்கூடிய ஒரே தலைவர் நம்முடைய சிவகாமிநாதன் அவர்கள் தான்.”

இந்த வாக்கியத்தைப் பேசியபடியே மங்கா நின்றிருந்த திசையில் பார்வையை ஓடவிட்டான் முத்துராமலிங்கம். அவள் அதே பழைய உற்சாகத்தோடுதான் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“முன்பு வெள்ளைக்காரர்கள் நம்மைச் சுரண்டிக் கொண்டிருந்தார்கள். இன்று நம்மவர்களே நம்மை ஆள்வதன் மூலம் சுரண்டப் பார்க்கிறார்கள். சுரண்டுகிறவன் விதேசியாயிருந்தால் என்ன? சுதேசியாயிருந்தால் என்ன? சுரண்டல் இருக்கிறவரையில் என்றும் நாம் பெருமைப்பட முடியாது. சுரண்டல் அடிமைத்தனத்தின் பேரால் நடந்தால் என்ன? ஜனநாயகத்தின் பேரால் நடந்தால் என்ன? சுரண்டல் என்பது ஒரு தேசத்தின் ஆரோக்கியத்தையே நலியச் செய்கிறது. சிலர் கட்சிகளின் பேரால் சுரண்டுகிறார்கள். வேறு சிலர் மந்திரி பதவியை ஒரு கேடயமாகப் பயன்படுத்தித் தங்களைக் காத்துக் கொண்டு சுரண்டுகிறார்கள்.”

மறுபடியும் மங்கா நின்று கொண்டிருந்த திசையில் பார்வையை மிக அவசரமாக ஓட விட்டான் முத்துராமலிங்கம். “சிலர் மந்திரி பதவியின் பேரால் சுரண்டுகிறார்கள்” என்ற வாக்கியத்திற்காக அவளும் அவளுடைய தோழியும் மற்றவர்களோடு சேர்ந்து பலமாகக் கைதட்டிக் கொண்டிருந்தார்கள். முத்துராமலிங்கத்தின் உற்சாகம் அதிகமாகியது. அவன் மேலும் பேச்சைத் தொடர்ந்தான்.

அத்தியாயம் - 20

இளைஞன் முத்துராமலிங்கம் பேசி முடித்த பின் தியாகி சிவகாமிநாதன் பேசத் தொடங்கினார். “திருடர்களையும் கொலைகாரர்களையும், கொள்ளையடிப்பவர்களையும், பதுக்கல், கள்ள மார்க்கெட் கலப்படப் பேர்வழிகளையும், லஞ்ச ஊழல் மன்னர்களையும் அரெஸ்ட் செய்து உள்ளே தள்ளத் துப்பில்லாமல் உண்மையை அஞ்சாமல் பேசுகிறோம் என்ற ஒரே காரணத்துக்காக என் போன்ற ஏழைத் தேச பக்தர்களை அரெஸ்ட் செய்கிறார்கள். சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன. நல்லவர்களும், நல்லதைச் சொல்பவர்களும் ஒடுக்கப்படுகிறார்கள். சமூகத்தின் எந்தப் பெரிய அல்லது சிறிய அமைப்புக்களிலும் லஞ்ச ஊழல்களும், தவறுகளும் புரிகிற பெரும்பான்மையோருக்கு - யோக்கியர்களாக ஊடாடும் சிறுபான்மையோர் இடையூறாகி விட்டார்கள். லஞ்சமும், ஊழலும், சுயநலமும், திட்டமிட்டு மக்களை ஏமாற்றுவதும் முன்பெல்லாம் தனிமனிதர்களின் குற்றங்களாக இருந்தன. இன்று அவையே சில இயக்கங்களாகவும், அமைப்புக்களாகவும், கட்சிகளாகவும் கூட வளர்ந்து விட்டன. என்னைப் போல இதை எடுத்துச் சொல்பவர்கள் எப்போதும் அபாயத்துக்குள்ளாகிறார்கள். ஆபத்துக்குள்ளாகிறார்கள்.

பொதுமக்கள் அயரும் நேரத்தில் அவர்களைத் தாக்கும் கொசுக்கள் போல மூட்டைப்பூச்சிகள் போலச் சமூக விரோத சக்திகள் எங்கும் நிறைந்திருக்கின்றன. சமூக ஆரோக்கியம் என்ற இரத்தத்தை இவை மறைந்திருந்து வந்து உறிஞ்சிவிட்டு மறுபடி மறைந்து கொள்வது என்பது வழக்கமாக இருந்து வருகிறது...”

இப்படித் தொடங்கியவருடைய பேச்சில் சூடு ஏறிக் கொண்டே போய் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு முடிந்தது. கூட்டம் முடியும் போது இரவு பதினொன்றே முக்கால் மணி. மக்கள் ஆர்வமிகுதியினால் தியாகி சிவகாமிநாதனின் வழக்கு நிதிக்கு மோதிரங்கள், கைக்கடிகாரங்கள், செயின்கள் என்று கழற்றிக் கொடுத்திருந்தனர். சிவகாமிநாதன் பேசத் தொடங்கிய பதினைந்து நிமிஷங்கள் கழித்து இளைஞர்கள் வசூலுக்காகத் துண்டுகளுடன் கூட்டத்தில் இறங்கினார்கள். அப்படி வசூலுக்கு இறங்கி இளைஞர்களில் முதல் ஆளாக முத்துராமலிங்கம் இருந்தான்.

அந்தக் கூட்டத்தில் அப்படி வசூலுக்காகப் புகுந்து புறப்பட்ட போது அவனுக்கு அங்கே ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. மங்கா தன் கையில் அணிந்திருந்த தங்க வளையல்கள் இரண்டையும் கழற்றி அவன் விரித்து ஏந்தி வந்த துண்டில் போட்டாள். அவளோடு கூட வந்திருந்த மற்றோர் இளம் பெண் ஒரு முழுப் பத்து ரூபாய் நோட்டைப் போட்டான்ள். முத்துராமலிங்கம் குறும்புத்தனமாகச் சிரித்துக் கொண்டே, “என் கண்களையே நம்பமுடியலியே?” என்று மங்காவைக் கேட்டான். அவள் பதிலுக்குக் கேட்டாள்:

“தாங்கள் நம்ப முடிந்தவை மட்டும்தான் நடக்க முடியும் என்று நினைப்பவர்கள் தான் இப்படி எல்லாம் ஆச்சரியப்படுவார்கள்.”

“அப்பாவை எதிர்த்துப் பேசுகிறவர்களுக்கு மகள் நன்கொடை கொடுத்தால் ஆச்சரியப்படாமல் வேறு என்ன செய்ய முடியும்?”

“நீங்களே உங்களுடைய பேச்சில் சொன்ன குருட்சேத்திர உதாரணப்படி இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.”

கூட்டத்துக்கு நடுவே விவாதத்தையும் உரையாடலையும் வளர்த்த விரும்பாமல் மேலே வசூலுக்காக நகர்ந்தான் முத்துராமலிங்கம்.

சிறிது தூரம் நகர்வதற்குள்ளேயே மங்காவுடன் கூட இருந்த மற்றோர் இளம் பெண் ஓடி வந்து நாலாக மடித்த ஒரு துண்டுக் காகிதத்தை அவனிடம் நீட்டினாள்.

அவசர அவசரமாக மடிப்புக்களை பிரித்துக் காகிதத்தை மலர்த்திப் படித்த போது, ‘நாளை மாலை மூன்று மணிக்கு அமெரிக்கன் சென்டர் லைப்ரெரியில் அல்லது மூன்றரை மணிக்கு ‘டிரைவ் இன்’னில் சந்திக்க முடியுமா?’ என்று கேட்டிருந்தாள் மங்கா. அவளுடைய சிநேகிதி அவளது வாய் மொழியில் அல்லது ஜாடையில் பதில் கிடைத்தால் கூடப் போதும் என்று கூட்டத்தின் நடுவிலே தயங்கி எதிர்பார்த்து நின்றாள்.

“வர டிரை பண்றேன்னு சொல்லுங்க... நாளை எனக்கு வேலை எப்படியிருக்கோ... தெரியலே.”

இதைச் சொல்லிவிட்டு மறுபடி வசூலுக்காகக் கூட்டத்தினுள் கலந்து கரைந்தான் அவன்.

அன்றைக்குச் சூளைமேடு பொதுக் கூட்டத்தில் ரூபாயாக இரண்டாயிரத்து எழுநூற்றுச் சொச்சமும் தங்க மோதிரங்கள், கைக்கடிகாரங்கள் போன்றவற்றினால் மேலும் பத்தாயிரம் மதிப்புள்ளவையும் வசூலாகி இருந்தன. பேச்சாளர்கள் கூட்டத்தை உணர்ச்சிக் கொந்தளிப்பின் எல்லைக்கே கொண்டு போயிருந்தார்கள்.

மறுநாள் குன்றத்தூருக்குப் பக்கத்தில் எங்கேயோ ஒரு தென்னந்தோப்பில் ஸ்டண்ட் காட்சி ஒன்றிற்காக உதைக்கிறவர்கள், உதைபடுகிறவர்கள் சகிதம் அவுட்டோர் யூனிட் புறப்பட்டுப் போயும் வெயில் வருவதற்கு மறுத்து மப்பும் மந்தாரமுமாக இருந்ததால் ஷூட்டிங் கான்ஸலாகிப் பகல் பன்னிரண்டு மணிக்கே எல்லாரும் சென்னை திரும்பி விட்டார்கள். உதவிக் காமிராமேன் சண்முகம் அதை இப்படிக் கிண்டல் செய்தார்.

“இவங்க ஹீரோ, ஹீரோயின், வில்லன், ஸ்டண்ட் ஆளுங்க எல்லாரிட்டவும் கால்ஷீட் வாங்கினாங்க... சூரிய பகவான் கிட்ட மட்டும் வாங்கலே! மறந்துட்டாங்க... அவரு தகராறு பண்ணிட்டாரு.”

சண்முகமும் அவனும் அறைக்கு வந்து ஓய்வெடுத்துக் கொண்டார்கள். முதல் நாள் மங்கா கேட்டுக் கொண்டபடி அவளை அன்று மாலை சந்திக்க முடியும் என்று எண்ணிக் கொண்டிருந்தான் முத்துராமலிங்கம்.

பகல் இரண்டு மணிக்கு மேல் அவன் மங்காவைச் சந்திக்கப் புறப்பட்ட போது லாட்ஜிலுள்ள டெலிபோனில் பாபுராஜ் அவனைக் கூப்பிடுவதாகப் பையன் வந்து சொன்னான்.

எரிச்சலோடு போய் ஃபோனை வாங்கிப் பேசினான் முத்துராமலிங்கம்.

“நீ உடனே இங்கே வர முடியுமா?”

“எங்கேன்னு சொல்லலியே?”

பாபுராஜ் இடத்தைச் சொன்னதும், “இன்னிக்கு இனிமே நான் எங்கேயும் வரமுடியாது. குன்றத்தூர் அவுட்டோர் இல்லேன்னதும் வீட்டுக்குப் போலாம்னிட்டீங்க... அதை நம்பி நான் எனக்கு ரொம்ப வேண்டிய ஆள் ஒருத்தரைப் பார்க்க வரேன்னிட்டேன். இதோ புறப்பட்டுக்கிட்டேயிருக்கேன்.”

“வேலை முக்கியமா? யாரோ ஆளைப் பார்க்கிறது முக்கியமா?”

முத்துராமலிங்கம் பதில் சொல்லாமலே டெலிஃபோனை வைத்துவிட்டுப் புறப்பட்டான். ஓடவும் விடாமல் நிற்கவும் விடாமல் பாபுராஜ் கழுத்தறுப்புச் செய்கிறானோ என்று சந்தேகமும் எரிச்சலும் வந்தன அவனுக்கு. மறுபடி ஃபோன் மணி அடிப்பதற்குள் அங்கிருந்து கிளம்பிவிட வேண்டும் என்று விரைந்தான் அவன்.

சாலைக்கு வந்து பரக்கப் பரக்கப் பஸ் பிடித்துப் போன போது மூன்றே கால் மணிக்கு மேல் ஆகிவிட்டது. சன் தியேட்டர் அருகில் இறங்கி நடந்து போய் ஜெமினி வளைவு திரும்பிய போதே அமெரிக்கன் சென்டர் வாசலிலிருந்து அவள் ‘டிரைவ்’ இன்னை நோக்கிச் செல்வது தெரிந்தது.

சாலையில் பட்டுப்பூச்சியாக நடந்து கொண்டிருந்தால் அவள். அவன் அருகே போய்ச் சேர்ந்து கொண்டான். ‘ஹலோ’க்களும் மெல்லிய புன்முறுவல்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

“வர மாட்டீங்களோன்னு நெனைச்சேன்.”

“வேலை ஒண்ணுமில்லே, ‘அவுட்டோர்’ கேன்ஸல் ஆயிடிச்சு. நேத்து நீ கொடுத்த நன்கொடைக்கு ‘ஸ்பெஷலா’ நன்றி சொல்லணும்னு தோணிச்சு, வந்தேன்.”

“கைவளை எங்கேன்னு அம்மா காலையிலே கேட்டாங்க. பொய்யா என்னமோ கதை சொல்லிச் சமாளிச்சேன்.”

“குடுத்திட்டமேன்னு வருத்தமா இருந்தாக் குடுத்திருக்கவே வேண்டாமே?”

“வருத்தமோ பயமோ, இருந்தா அந்தக் கூட்டத்துக்கே நான் வந்திருக்க முடியாது. நான் யாருன்னு தெரிஞ்சவங்க அங்கே கூட்டத்திலே ரெண்டொருத்தர் இருந்தாங்க. அவங்களுக்குள்ளே நான் அங்கே வந்து கேட்டுக்கிட்டிருக்கிறதைப் பத்திப் பேசிக்கிட்டாங்க. உடனே அதுக்காக நான் பயந்து கூசி ஓடிப் போயிடலே...”

“உன்னோட அந்தத் துணிச்சல் தான் என்னை இன்னிக்கி இங்கே தேடி வரவழைச்சிருக்கு மங்கா!”

“உள்ளதை உள்ளபடியே சொல்லணுமானா ‘பர்மிங்ஹாம்’ போறதுக்குக்கூட எனக்குப் பிரியமில்லே... “சீக்கிரம் புறப்படப்பாரு... நான் மினிஸ்டரா இருக்கற பீரியடிலேயே நீ போனாத்தான் பலதுக்கும் வசதி”-ன்னு அப்பாதான் வற்புறுத்தறாரு.”

“அந்நிய நாட்டுக் கல்வி, அந்நிய நாட்டு உத்தியோகம்னு நாயா அலையிற குடும்பங்கள் சுதந்திரத்துக்கப்பறமும் பெருகிப் போச்சு...”

“நீங்க அதைப்பத்தி என்ன நெனைக்கிறீங்க முத்துராம்?”

“வசதி உள்ள குடும்பங்களுக்கும், மத்திய தர வர்க்கத்தினருக்கும் வருகிற புதிய நோய்களில் இதுவும் ஒன்று. உள்நாட்டில் படித்தவர்கள் கேவலம் என்று நினைப்பதும் வெளிநாட்டில் படித்தவர்களும், படிப்பவர்களும் உயர்வு என்று நினைப்பதும் ராவ்பகதூர் திவான்பகதூர் மனப்பான்மை ஜஸ்டிஸ் கட்சியின் மிச்சம் மீதாரிகள் இந்நாட்டில் பரப்பும் நோய்.”

“உங்களுக்குப் பிடிக்கலைன்னா நான் போகப் போறதில்லே...”

“நான் என் அபிப்பிராயத்தைத் தான் சொன்னேன். நீ போகக் கூடாதுன்னு சொல்ல நான் யார்...?”

“என்னைப் பிடிக்கலைன்னாப் பிடிக்கலைன்னு நேருக்கு நேராவே சொல்லிடலாம். அதுக்காக இப்படி நான் யாரோ நீ யாரோங்கிற மாதிரிப் பேச வேண்டியதில்லை.”

முத்துராமலிங்கம் வியப்புடன் அவளை ஏறிட்டுப் பார்த்தான். முதல் நாளிரவு தான் ஆற்றிய சொற்பொழிவில் அவள் அறவே மயங்கிப் போய்க் கட்டுண்டிருக்கிறாள் என்பது புரிந்தது. ஆனால் புரிந்ததை அப்படியே அப்போதே நம்பிவிடாமல் மேலும் மேலும் சோதித்து உறுதி செய்துகொள்ள விரும்பினான் அவன். அவளோடு உரையாடலைத் தொடர்ந்தான்.

“ஒழுக்கம், நாணயம், உழைப்பு, சமூகநலனுக்குப் பாடுபடுவது இவையெல்லாம் மிகமிக அவசியம் என்று நினைக்கிற ஒரு தரப்பையும் தலைமையையும் சார்ந்து நிற்க விரும்புகிறவன் நான். ஒழுக்கம், நாணயம், உழைப்பு, சமூகநலன் இவை எல்லாமே ‘நியூஸன்ஸ்’ என்று கருதும் தடாலடி முன்னேற்றப் பேராசையுள்ள ஒருத்தரின் மகள் நீ...”

“இருக்கலாம்! ஆனால் எனது பகவத் கீதை நேற்றைய கூட்டத்தின் பிரசங்கத்தில் எனக்குக் கிடைத்து விட்டது. நான் இன்று இப்போது மிகவும் தெளிவாக இருக்கிறேன்.”

“அப்படியானால் இப்போதே என்னோடு கிளம்பி வா! தியாகி சிவகாமிநாதனிடம் போகலாம். அவர் முன்னால் நீ பிரதிக்ஞை எடுத்துக் கொள்ள வேண்டும். இன்றைக்கு இந்த நாட்டிலுள்ள எல்லா அரசியல் இயக்கங்களிலும் ஒழுக்கத்திற்கும் நேர்மைக்கும் ‘நியூஸன்ஸ் வேல்யூ’ தான் தரப்படுகிறது. அடிப்படை ஒழுக்கத்தையும் நேர்மையையும் தேசபக்தியையும் முதலில் வற்புறுத்துகிற ஒரே மனிதர் சிவகாமிநாதன் தான்.”

“நீங்கள் கட்டளையிடும் பட்சத்தில் நானே அவருடைய இயக்கத்தில் பிரதிபலன் எதிர்பாராத ஒரு சேவகியாகச் சேரத் தயார்!”

“அது உன்னைப் பலவகைகளில் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும்.”

“தர்மசங்கடங்கள் தவிர்த்து தெளிவு ஏற்பட்டு எதை எதிர்க்க வேண்டும் எதை ஆதரிக்க வேண்டும் என்ற ஞானம் பிறக்கிற ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வோர் இடத்திலும் ஒரு பகவத் கீதையே பிறக்குதுன்னு நீங்க தானே நேத்து பேசினீங்க...?”

“அந்தப் பேச்சின் கூர்மையையும், நிர்தாட்சண்யத்தையும் நீ சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறாய் அல்லவா?”

“தவறாகவோ அரைகுறையாகவோ புரிந்து கொண்டிருந்தாள் நான் இன்று இங்கே தேடி வந்து உங்களைச் சந்தித்திருக்கவே மாட்டேன்.”

காபியைப் பருகிவிட்டு அவளைச் சிந்தாதிரிப் பேட்டைக்கு அழைத்த போது மலர்ந்த முகத்தோடு துணிந்து அவள் அவனோடு புறப்பட்டாள். காரை அமெரிக்கன் சென்டர் வாசலிலிருந்தே திருப்பி அனுப்பி விட்டதாகவும் சொன்னாள்.

அத்தியாயம் - 21

அவளுடைய மனமாற்றமும், உறுதியும் அவனுக்கு வியப்பை அளித்தன. நடைமுறையில் அது அவளை எந்த அளவு பாதிக்கும் என்று எண்ணிய போது, கவலையாகவும் இருந்தது. பெரிய பதவியிலுள்ள சொந்தத் தந்தையைப் பகிரங்கமாக எதிர்ப்பதற்கு அவள் என்னென்ன விலைகள் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை அவனால் கற்பனையே செய்ய முடியவில்லை.

மந்திரி சிதம்பரநாதன் தன் மகள் தன்னை ஆதரிக்காமல் ஒதுங்கியிருப்பதைக் கூட மன்னிக்கலாம். ஆனால் தனது எதிரிகளோடு அவள் சேருவதைப் பொறுத்துக் கொள்ளவோ மன்னிக்கவோ அவரால் முடியாது என்பதை அவன் முன்கூட்டியே அனுமானம் செய்து கொள்ள முடிந்தது. அவள் துணிந்து தன்னைச் சோதனைக்குள்ளாக்கிக் கொள்கிறாள் என்பதும் அவனுக்குப் புரிந்தது.

‘டிரைவ் இன்’னிலிருந்து முத்துராமலிங்கமும், மங்காவும் சிந்தாதிரிப்பேட்டைக்குப் போய்த் தியாகி சிவகாமிநாதனைச் சந்தித்த போது பொழுது சாய்ந்து இருட்டத் தொடங்கியிருந்தது. நன்றாக இருட்டத் தொடங்கியிருந்த அந்த நேரத்தில் தான் மங்காவின் மனத்தில் ஒளி பரவிக் கொண்டிருந்தது. தான் செல்வாக்குள்ள ஆளுங்கட்சி மந்திரி ஒருவரின் மகள் என்பதை மறந்து ஆகாசத்தில் மிதப்பது போன்ற உல்லாசத்தோடு முத்துராமலிங்கத்துடன் சென்றாள் அவள். பஸ்ஸிலும், நடந்தும் அவனோடு செல்ல அவள் தயங்கவில்லை.

அவர்கள் போய்ச் சேர்ந்த போது வீட்டின் ஒரு பகுதியாயிருந்த அச்சகத்தில் - அச்சக உடையில் அச்சுக் கோக்கும் வேலை செய்து கொண்டிருந்தார் சிவகாமிநாதன்.

“இது என் சிநேகிதி... நேத்துக் கூட்டம் கேட்டப்பறம் நம்ம இயக்கத்திலே சேரணும்னு ஆசையோட புறப்பட்டு வந்திருக்காங்க...”

“சிநேகிதியா? காதலியா?”

அவர் இப்படிக் கேட்டதும் அவள் முகம் மலர்ந்து சிவந்தது. முத்துராமலிங்கம் அவரது குறும்புக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் புன்னகை புரிந்தான்.

அவரே மேலும் பேசினார்: “எல்லாக் காதலிகளும் முதலில் சிநேகிதிகளே! ஆனால் எல்லாச் சிநேகிதிகளும் காதலிகள் ஆகி விட முடியாது.”

“சிநேகிதியா காதலியா என்பதை விட முக்கியமாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வேறு ஓர் உறவு இருக்கிறது ஐயா!”

“அது என்ன உறவு அப்படி?”

“இவள் மந்திரி சிதம்பரநாதனின் மகள்.”

சிவகாமிநாதன் ஒரு வினாடி என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றுவிட்டார். இதை அவர் எதிர்பார்க்கவில்லை. முத்துராமலிங்கமே குறுக்கிட்டுச் சொன்னான்.

“ஆனாலும் இவங்க அப்பாவோட போக்கு இவங்களுக்குப் பிடிக்கலே... பொது வாழ்க்கையிலே இருக்கிறவங்க சுத்தமா இருக்கணும்னு நெனைக்கிறாங்க...”

சிவகாமிநாதன் மங்காவை நேருக்கு நேராகவே கேட்டார்.

“புரியுது! ஆனா இதுலே பல தர்மசங்கடங்களும் சோதனைகளும் வருமே! அதைத் தாங்கிக்கிற சக்தி உனக்கு இருக்காம்மா...”

“இருக்கு... துணிஞ்சு தான் இந்த முடிவுக்கு நான் வந்திருக்கேன்.”

“நீ புதுசா எதையும் பண்ணலேம்மா! இரணியனை எதிர்த்துப் பிரகலாதன் போர்க்கொடி உயர்த்தின மாதிரியும், இராவணனை எதிர்த்து விபீஷணனும், கும்பகர்ணனும் போர்க்கொடி உயர்த்தின மாதிரியும் தான் இதுவும்! விபீஷணனுக்குத் தன் சொந்த அண்ணனை எதிர்த்துவிட்டு வெளியேறி நியாயத்தின் பக்கம் சேர முடிந்தது. கும்பகர்ணனுக்கோ அண்ணனின் கொள்கையை எதிர்த்துவிட்டு அவனுக்கு நன்றிக்கடன் கழித்துவிட முடிந்தது.”

“நேத்து உங்க ரெண்டு பேர் பேச்சையும் கேட்டப்பறம் என் மனசு அறவே மாறிப்போச்சு. வந்தது வரட்டும்னு என் கையிலிருந்த தங்க வளையலைக் கூடக் கழட்டி வழக்கு நிதிக்குக் கொடுத்திருக்கேன்...”

“எல்லாம் சரி! நான் இப்பிடிக் கேட்கிறேனேன்னு கோவிச்சுக்காதேம்மா. துணிச்சல்லே ரெண்டு வகை இருக்கு... அசல் துணிச்சல்... அசட்டுத் துணிச்சல்னு...”

“என்னோடது அசட்டுத் துணிச்சல் இல்லே...”

“எந்த நிலைமையிலும் தாக்குப் பிடிக்குமா?”

“இந்த மனமாற்றம் என் வாழ்க்கைத் திட்டத்தையே மாத்திடிச்சு. நான் மேற்படிப்புக்கு இங்கிலாந்து போறதுக்கு ஏற்பாடு நடக்குது. அதுக்கே நான் போகப் போறதில்லே...”

“ஏன்... அப்படி?...”

“நான் இங்கே இருந்து போராடப்போறேன்...”

“போராடறதுக்குத் தைரியம் மட்டுமில்லே, ரொம்பப் பொறுமை வேணும். இங்கே எந்தப் போராடப் பொறுமையும், கொள்கைப் பிடிப்பும் இல்லாத காரணத்தாலே தான் பல அரசியல்வாதிங்க வெற்றி தங்களைத் தேடி வர்றதுக்குள்ளே பொறுமை இழந்து வெற்றி எங்கே இருக்கோ அங்கே அதைத் தேடிக் கட்சி மாறிப் போயிடறாங்க... உங்க அப்பா மாதிரி...”

“பொறுமையையும் இலட்சியப் பிடிப்பையும் நீங்க தான் எனக்குக் கத்துக் குடுக்கணும்...?”

“நம்புவதற்கும் பின்பற்றுவதற்கும் உயர்தரமான நல்ல தலைவர்கள் இல்லாத தேசத்தில், இல்லாத சமயங்களில் இப்படித்தான் இருக்கும். நான் இளைஞனாயிருந்த போது அன்று என் போன்ற இலட்சக்கணக்கான இளைஞர்களை நம்பச் செய்து பின்பற்ற வைப்பதற்குத் திலகர், காந்தி, பாரதியார், வ.உ.சி. சிவா, நேரு என்று பலபேர் இருந்தார்கள் அம்மா...”

“இப்போது எங்கள் அதிர்ஷ்டம் நீங்கள் இருக்கிறீர்கள் ஐயா...”

“நான் வெறும் தொண்டன். இன்றைய அரசியலுக்குத் தேவையான பணவசதி, டமாரம் அடித்தல், இரண்டும் இல்லாதவன். மனோ தைரியத்தை மட்டுமே செல்வமாக வைத்திருப்பவன்.”

அவருடைய பணிவும், எளிமையும் நிறைந்த பேச்சுக்கள் அவளை ஈடுபாடு கொள்ளச் செய்தன. ஒரு பிரமுகருக்குச் சுற்றிக் காண்பிப்பது போல் அவளுக்கு அவர் தமது சிறிய அச்சுக்கூடத்தைச் சுற்றிக் காண்பித்தார். அவரது வீட்டுடன் இணைந்திருந்த அந்த அச்சுக்கூடத்தில் அவருடன் அவருடைய மகள் மகன் எல்லாருமே அச்சக யூனிஃபாரம் அணிந்து வேலை செய்து கொண்டிருந்தனர்.

மாலை வேளைகளில் நகரின் பொது மேடைகளில் பல்லாயிரம் மக்களைக் கவரும் அந்தச் சிங்கக் குரலுக்குரிய தலைவர், தம்முடைய குடிசைத் தொழில் போன்ற அச்சுக் கூடத்தில் ஓர் எளிய தொழிலாளியாகக் காட்சியளிப்பது அவள் மனத்தைத் தொட்டது.

டிரடிலில் ரத்தச் சிவப்பான நிறத்து மையில் அந்த வாரத்துத் ‘தியாகியின் குரல்’ இதழுக்கான டைட்டிலை அச்சிட்டுக் கொண்டிருந்தார் அவர். ‘ஊழல் மந்திரியும் உபயோகமில்லாத அரசியலும்’ என்று அவளுடைய தந்தையைப் பற்றிய காரசாரமான தலையங்கம் அச்சாகிச் சூடாக அங்கே இருந்தது.

அப்போது அங்கே தற்செயலாக வந்த ஒரு பிரமுகருக்குச் சிவகாமிநாதன் அவளை அறிமுகப்படுத்தி வைத்த போது, அவர் தமது அறிமுக வார்த்தைகளை முடிப்பதற்குள்ளேயே... “இவங்க எப்படி இங்கே...? அமைச்சர் நாதனோட மகளாச்சே...?” என்று நம்பமுடியாமல் இழுத்தார் வந்தவர்.

“ஏன்? இவங்களை இங்கே பார்க்கிறதை உங்களாலே நம்ப முடியலையா? வேடிக்கைதான்! நீங்க இவங்களை இங்கே பார்க்கறதையே நம்ப மாட்டேங்கறீங்க! இவங்க என்னடான்னா என்னையும் என்னோட ஊழல் ஒழிப்பு இயக்கத்தையும் நம்பி இங்கே தேடி வந்திருக்காங்க. ஆச்சரியமா இல்லையா இது?” என்று சிரித்தபடியே அவளைச் சுட்டிக்காட்டி வந்திருந்த அந்தப் புது மனிதரிடம் வினவினார் சிவகாமி நாதன். மங்காவோ ஆர்வம் தணியாத மனநிலையோடு தந்தையின் ஊழல்களைத் தாக்கி எழுதப்பட்ட ‘தியாகியின் குரல்’ அச்சுப்படிகளைப் படிக்கத் தொடங்கினாள். சிவகாமிநாதன் செல்லமாக அவளைக் கடிந்து கொண்டார்.

“இதெல்லாம் எதுக்கம்மா இப்ப? அப்புறம் படிக்கலாமே?”

“நீ தியாகியின் குரலுக்கு ஒரு சந்தாக் கட்டிடணும்! நான் எப்பவோ கட்டியாச்சு” என்றான் முத்துராமலிங்கம்.

உடனே அவள் தன் கையிலிருந்த டம்பப் பையைத் திறந்து ஒரு புது நூறு ரூபாய் நோட்டை எடுத்து முத்துராமலிங்கத்திடம் நீட்டினாள்.

“ஒரு வருஷத்துச் சந்தா இருபத்திநாலு ரூபாய்தான்.”

“அப்படீன்னா நாலு வருசத்துக்கு எடுத்துக்குங்க.”

“ஒரு வருஷம் படிச்சுப் பாருங்க. உங்களுக்குப் பிடிச்சா அப்புறம் தொடரலாமே?” என்று குறுக்கிட்டார் தியாகி சிவகாமிநாதன்.

“பரவாயில்லே! நாலு வருசமே எடுத்துக்குங்க.”

“சரி! தொண்ணூத்தாறு ரூபாய்க்கு ஒரு ரசீது போட்டு மீதி ரூபாய் நாலைத் திருப்பிக் குடு.”

சிவகாமிநாதனின் மகன் வந்து ரூபாயை வாங்கிக் கொண்டு ரசீது போடப் போனான்.

“இங்கே நாங்களே எல்லா வேலையும் செய்யிறோம். தேதிக்குப் பத்திரிகையைக் கொண்டு வந்துடறதுதான் எங்க முக்கிய நோக்கம்கிறதாலே சில சமயங்களிலே பொது கூட்டங்கள் முடிஞ்சப்புறம் ராத்திரிப் பதினோரு மணிக்குக் கூட இங்கே வந்து நான் பிரஸ் வேலையைக் கவனிக்க வேண்டியிருக்கும்...”

“இனிமே எங்களையெல்லாம் அந்நியமா நெனைக்காமே உங்க வேலையைப் பகிர்ந்து குடுக்கணும் நீங்க.”

“என்னிடம் பகிர்ந்து கொடுப்பதற்கு வசதிகள் இல்லேன்னாலும் சிரமங்கள் நெறைய இருக்கும்மா.”

“அதை மகிழ்ச்சியோடு பங்கிட்டுக் கொள்ள நானும் இவரும் எப்போதும் தயாராயிருக்கோம்” என்று அருகே நின்று முத்துராமலிங்கத்தையும் சேர்த்து உளப்படுத்திக் கொண்டு சொன்னாள் அவள்.

அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே வாசலில் ஒரு போலீஸ் ‘ஜீப்’ சர்ரென்று வந்து நின்றது.

ஒரு சப் இன்ஸ்பெக்டரும் இரண்டு மூன்று போலீஸ்காரர்களும் ஜீப்பிலிருந்து இறங்கி அச்சகப் பகுதிக்குள் அட்டகாசமாக வந்தார்கள். சிவகாமிநாதன் அவர்களை எதிர்கொண்டு முன்சென்று வினவினார்.

“உங்களுக்கு என்ன வேணும்?”

“நீங்க தானே சிம்மக்குரல் சிவகாமிநாதன்?”

“ஆமாம், அதுக்கென்ன?”

“இந்தப் பிரஸ்ஸிலே திருட்டுச் சாமான்கள் ஒளிச்சு வைக்கப்பட்டிருக்குன்னு எங்களுக்குத் தகவல் வந்திருக்கு. நாங்க இப்போ ‘ரெய்டு’ பண்ணப் போறோம்.”

அத்தியாயம் - 22

போலீஸ் இன்ஸ்பெக்டருக்குச் சிவகாமிந்தான் பதில் சொல்வதற்குள் மங்காவே முன் வந்து குறுக்கிட்டு விசாரித்தாள்:

அவள் ஏதோ விசாரிக்க வாய் திறப்பதற்குள்ளேயே அந்த இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டுப் பதற்றத்தோடு, “எக்ஸ்க்யூஸ் மீ மேடம்! நீங்க... மினிஸ்டர் எஸ்.கே.சி. நாதனோட டாட்டர் இல்லியா?” என்று அவசர அவசரமாக வினவினார்.

“ஆமாம்! ஆனா மினிஸ்டரோட டாட்டர் இல்லாட்டாலும் நியாயத்தைக் கேட்க எனக்கு உரிமை உண்டு.”

“இங்கே ஃபோன் இருக்கா?”

“ஏன்? இல்லியே...!”

“அப்ப நீங்க கொஞ்சம் தயவு பண்ணி சிந்தாதிரிப்பேட்டை ஸ்டேஷனுக்கு வந்து உங்க ஃபாதரோட ஃபோன்லே பேசிடுங்க... நீங்களே ‘ஸெட்டில்’ பண்ணிட்டா எங்களுக்குப் பிரச்னை இல்லே...”

“ஃபோன்லே என்ன பேசணும்?”

“நீங்களே உங்க ஃபாதரோட பேசுங்க... எல்லாம் புரியும்... வீணா எங்களைத் தர்மசங்கடத்தில் கொண்டு போய் விடாதீங்க...”

“வந்து பேசுங்க... புரியும்... ப்ளீஸ்... வாங்க ஜீப்பிலேயே போயிட்டு வந்துரலாம்.”

முத்துராமலிங்கத்துக்கும், சிவகாமிநாதனுக்கும் ஒன்றும் புரியவில்லை.

“கொஞ்சம் இருங்க!... இவங்களோட ஸ்டேஷனுக்குப் போய் என்ன தான் விஷயம்னு தெரிஞ்சிட்டு வரேன்” - என்று மங்கா அவர்களோடு புறப்பட்டாள். புறப்படும் போது,

“மிஸ் மங்கா! ஒரு விஷயம் ஞாபகம் வச்சுக்குங்க! எனக்குச் சிபாரிசு எதுவும் தேவையில்லை. என் பக்கம் நியாயம் இருப்பதே போதும்” - என்று சற்றே கடுமையான குரலில் இரைந்து சொன்னார் சிவகாமிநாதன்.

அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்காவிடம் மிகவும் மரியாதையாகவும், விநயமாகவும் நடந்து கொண்டார். ஜீப் புறப்பட்டதுமே அவர் அவளிடம் சொல்லத் தொடங்கி விட்டார்.

“நேத்து ஏதோ கூட்டத்திலே வழக்கு நிதி வசூலுக்குன்னு உங்க கை வளையலைக் கழட்டிப் போட்டீங்களாம். சிவகாமிநாதன் கிட்டத்தான் அந்த வளையல்கள் இருக்கும். அதை அவர் வீட்டிலே தேடி எடுத்து அவர் மேலே திருட்டுக் குற்றம் சாட்டி உள்ளே தள்ளப் பாருங்கன்னு மினிஸ்டர் சொல்றாரு. நீங்களோ இங்கே சிவகாமிநாதன் வீட்டிலேயே அவரோட சிஷ்யை மாதிரிப் பழகிக்கிட்டிருக்கீங்க... எங்களுக்கு என்ன செய்யிறதுன்னு இப்பத் தர்ம சங்கடமா இருக்கு...?”

“நானே விரும்பிக் குடுத்தது எப்படித் திருட்டாகும்? இது திருட்டுன்னாக் கட்சி நிதி, சிலை வைக்க நிதி, நினைவு மாளிகை நிதி, சிறப்பு மாநாட்டு வசூல்னு எங்கப்பா அடிச்சிருக்கிற ஒவ்வொரு கொள்ளைக்கும் அவரை நீங்க நிரந்தரமா ஜெயில்லேயே வச்சிருக்கணும். வெளியிலேயே விட்டிருக்கக் கூடாது.”

மந்திரியாயிருக்கும் தந்தையைப் பற்றி மகள் இப்படிப் பேசியது இன்ஸ்பெக்டரையும் போலீஸ்காரர்களையும் திகைக்க வைத்தது. அப்பாவுக்கும் பெண்ணுக்கும் ஏதோ தகராறு என்று மட்டும் அவர்களுக்கு அப்போது புரிந்தது.

“தயவு செய்து உங்க சண்டையிலே எங்களை வம்புலே மாட்டி வச்சிடாதீங்கம்மா! மந்திரியை விரோதிச்சுக் கிட்டாத் தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திப்பிடுவாங்க...”

“ஆளுங் கட்சிக்கும், மந்திரிங்களுக்கும் மட்டுமே நீங்க காவலர்னு நினைச்சுக்கிட்டுச் செயல் படறதாலே வர்ற வினை இது. ஒரு கட்சி இன்னிக்கி ஆள வரும். நாளைக்கிப் போகும். ஜனங்க நிரந்தரமா இருப்பாங்க. ஜனங்களுக்குத் தான் நீங்க காவலரா இருக்கணும்” - என்று மங்கா கூறியதை எதிர்த்துச் சொல்லவும் முடியாமல், ஆதரித்து ஏற்கவும் இயலாமல் இன்ஸ்பெக்டர் நடுவாக இருந்தார். சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் முன்பாகப் போய் ஜீப் நின்றது.

சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்காத குறையாக அவளை மிகவும் மரியாதையாகவும் பவ்யமாகவும் ஸ்டேஷனுக்குள் அழைத்துச் சென்றார் அவர்.

“காபி குடிக்கிறீங்களாம்மா?”

“இல்லை, வேண்டாம்.”

முதலில் இன்ஸ்பெக்டர் ஃபோன் செய்து பேசிவிட்டு அப்புறம் ஃபோனை மங்காவிடம் கொடுத்தார்.

அவள் ஃபோனை வாங்கிக் காதருகே கொண்டு செல்வதற்குள்ளேயே தந்தையின் குரல் சீறி வெடித்தது.

“உனக்கு எதுக்கும்மா இந்த வம்பெல்லாம்; வெளிநாட்டிலே படிக்கப் போறவ லோகல் பாலிடிக்ஸ்ல எல்லாம் ஏன் தலையிடறே? எல்லா ஏற்பாடும் முடிஞ்சாச்சு... ரிஸர்வ் பாங்க் விவகாரம் கூடச் சரியாயிடிச்சி. பாஸ்போர்ட் கூட ரெடி. அடுத்த வாரமே புறப்படலாம்.”

“நான் போகப் போறதில்லே அப்பா. நீங்களே பர்மிங்ஹாம் அண்ணனுக்கும் இதை எழுதிடலாம்.”

“என்னம்மா இது? திடீர்னு இப்படிக் கல்லைத் தூக்கிப் போடறே? ஏன் உனக்கு என்ன வந்திச்சு?”

“நான் உறுதியாத்தான் சொல்றேன். மேற்படிப்புக்காக நான் பர்மிங்ஹாம் போகப் போறதில்லை.”

“ஏன்?... நான் வேணா அந்தச் சிவகாமிநாதனோ சிங்கக் குரல் நாதனோ... அவனை விட்டுடறேன்... ஏம்மா உனக்கே வெக்கமா இருக்க வேணாமோ? மினிஸ்டரோட டாட்டரா இருந்துக்கிட்டுச் சேரி குப்பத்து ஆளுங்க மாதிரிக் கண்ட கண்ட எதிர்க்கட்சிப் பொதுக்கூட்டத்திலே போயி நீயும் கேட்டுக் கைத்தட்டிக்கிட்டு நிக்கறது உனக்கே நல்லா இருக்கா? என்னை நாக்கிலே நரம்பில்லாமத் திட்டிப் பேசற கூட்டத்திலே என் மகளே போய் வளையைக் கழட்டிக் குடுத்து, கைதட்டிக்கிட்டு நின்னான்னா எனக்குக் கோபம் வருமா இல்லியா? நீயே சொல்லு.”

“அதுக்குக் கோபம் என் மேலே தானே வரணும்ப்பா? பேசினவர் மேலே கோபப்பட்டு அவர் வீட்டுக்குப் போலீஸ்காரர்களை அனுப்பி ‘ரெய்டு’ பண்ணச் சொல்றது என்ன நியாயம்? இன்னிக்கி இந்த தமிழ்நாட்டுலே ஜனங்களுக்குத் தலைவன்னு தெரியிறவங்கள்ளே ஒரே ஒரு யோக்கியமான நல்ல மனுஷர் சிவகாமிநாதன் தான்.”

“ஏதேது... பேசறதைப் பார்த்தா... இன்னும் கொஞ்ச நாளிலே நீயே அவங்கூடச் சேர்ந்துக்கிட்டு மேடையிலே என்னை எதிர்த்துப் பேசினாலும் பேசுவே போலிருக்கே.”

“சரியாத்தான் சொல்றீங்கப்பா; நாளைக்கே நான் அதைச் செய்தாலும் ஆச்சரியப் படறதுக்கில்லேப்பா. நான் அதையும் முடிவு பண்ணியாச்சு...”

“இதெல்லாம் ஒண்ணுமே நல்லா இல்லேம்மா? அமெரிக்கன் சென்டரிலிருந்தே ‘டிரைவ் இன்’னுக்குப் போறதாச் சொல்லிக் காரையும் டிரைவரையும் வீட்டுக்குத் திருப்பியனுப்பிவிட்டு நீ பாட்டுக்குக் கண்டவனோட கிளம்பிக் கண்டவன் வீட்டுக்கெல்லாம் போறது நம்ம ஸ்டேட்டஸுக்குச் சரியா இருக்காது.”

டிரைவர் வீட்டுக்குப் போய் அப்பாவிடம் எல்லாம் சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றியது. அவள் அதற்காக அஞ்சவோ பதறவோ இல்லை.

“நான் பச்சைக் குழந்தையோ வாயில் விரலை வைத்தால் கடிக்கத் தெரியாத பாப்பாவோ இல்லை அப்பா! எங்கே போகலாம் யாரைப் பார்க்கலாம் எங்கே போகக் கூடாது, யாரைப் பார்க்கக் கூடாது என்றெல்லாம் எனக்குத் தெரியும்பா!”

“முடிவா நீ என்னதான் சொல்றேம்மா?”

“அநாவசியமா நீங்க சிவகாமிநாதனுக்குத் தொந்தரவு குடுத்தா நானே கோர்ட்டில் படியேறி வந்து அந்தத் தங்க வளையல்களை அவருக்கு மனம் விரும்பிக் கொடுத்தது நான் தான்னு சொல்லத் தயங்க மாட்டேன்ப்பா!”

“அதை மட்டும் தான் சொல்லுவியா? அப்புறமும் ஏதாவது சொல்லுவியா?”

“அவசியமானா அதுக்கு மேலேயும் சொல்லத் தயங்க மாட்டேன்.”

“உண்ட வீட்டுக்கும் பெத்த தகப்பனுக்கும் துணிஞ்சு துரோகம் செய்யப் போறியா?”

“நீங்க செய்துக்கிட்டிருக்கிற சமூகத் துரோகங்களை விட இது ஒண்ணும் அத்தனை பெரிசு இல்லே...”

“உன்னை யாரோ நல்லா ‘பிரெய்ன் வாஷ்’ பண்ணியிருக்காங்க.”

“ஆமா! என் ப்ரெய்ன்ல இருந்த அழுக்கை எல்லாம் வாஷ் பண்ணிச் சுத்தமா இப்போ ஆக்கியிருக்காங்க.”

“நீ உருப்படப் போறதில்லே... நாசமாத்தான் போகப் போறே.”

“உங்க ஆசீர்வாதம் அப்பா...”

டெலிபோனை ரெஸ்டில் அழுத்தி வைத்தாள் அவள்.

“அடடே! ஃபோனை வெச்சிட்டீங்களா? நான் பேசணும்னு இருந்தேனே...?” என்று இன்ஸ்பெக்டர் அது வரை விலகித் தொலைவில் இருந்தவர் அவளருகே வந்தார். அவள் புறப்படத் தொடங்கியதைக் கவனித்து, “ஜீப்பிலேயே கொண்டு போய் விட்டிடச் சொல்றேம்மா! எங்கே வீட்டுக்குத்தானே?” என்றார்.

“இல்லே! எனக்குப் போகத் தெரியும்! நான் போக வேண்டிய இடத்துக்குப் போயிப்பேன்.”

அவள் தெருவில் இறங்கி விரைந்து நடந்தாள். மறுபடி அவள் சாமிநாய்க்கன் தெருவுக்குப் போய் முத்துராமலிங்கத்தையும் சிவகாமிநாதனையும் சந்தித்த போது அவர்கள் சிந்தாதிரிப்பேட்டையிலேயே ஒரு பெரிய பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். ‘காட்டு தர்பார் ஆட்சியையும் போலீஸின் காட்டுமிராண்டித்தனத்தையும் கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம்’ - என்று சுவரொட்டி அடிக்க விவரம் எழுதிக் கொண்டிருந்தான் முத்துராமலிங்கம். ‘பேசுவோர் சிம்மக்குரல் சிவகாமிநாதன், முத்துராமலிங்கம்’ என்று அவன் எழுத ஆரம்பித்திருந்த பேனாவை அவன் கையிலிருந்து வாங்கி ‘மங்கையர்க்கரசி’ என்று மூன்றாவது பேராகத் தன்னையே எழுதிக் கொண்டாள் அவள். சிவகாமிநாதனும் அதைப் பார்த்துக் கொண்டுதானிருந்தார்.

“நல்லா யோசனை பண்ணிக்கோம்மா! இது ஒரு தர்ம யுத்தம். வர்ற தர்மசங்கடங்களைத் தவிர்ப்பதற்காக இப்போ நானே நீ குடுத்த தங்க வளையல்களைத் திருப்பித் தந்து விடலாம்னு பார்க்கிறேன்” என்றார் சிவகாமிநாதன்.

“அப்படிச் செஞ்சா நீங்க என்னை எங்கப்பாவுக்குக் காண்பிச்சுக் குடுத்துடறீங்கன்னு அர்த்தம்! அந்த வளையலை வச்சுத்தான் அவரே உங்க மேலே திருட்டுக் குத்தம் சுமத்தறத்துக்குப் போலீஸை அனுப்பி வச்சிருக்காரு... நான் ‘அது திருட்டு இல்லே. நானே விரும்பி நன்கொடையாக் குடுத்தது தான்’னு போலீஸுக்கும் எங்கப்பாவுக்கும் பதில் சொல்லிவிட்டு வந்திருக்கேன். இப்போ நீங்க அதைத் திருப்பிக் குடுத்து என்னை எங்கப்பாவுக்கும் போலீஸுக்கும் முன்னாடி ‘லெட் டவுன்’ பண்ணப் போறீங்களா சார்?”

சிவகாமிநாதன் யோசித்தார். முத்துராமலிங்கம் அவர் முகத்தையே பார்த்தபடி இருந்தான். சில விநாடிகள் யோசனைக்குப்பின் அவர் முத்துராமலிங்கத்தையும் மங்காவையும் பார்த்துத் தீர்மானமான குரலில் நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாய் அளந்து எண்ணிச் சொன்னார்.

“சரி! என்ன வந்தாலும் வரட்டும். நான் அந்த வளையல்களைத் திருப்பித் தரலே! நீயும் சிந்தாதிரிப்பேட்டைக் கூட்டத்திலே எங்களோட மேடையிலே பேச அனுமதிக்கிறேன். ஆனா ஒண்ணு மட்டும் ஞாபகம் வச்சுக்கோம்மா! இதுவரை இருந்ததை விட இனிமேல் தான் பொது வாழ்க்கையிலே எனக்குச் சோதனைகளும், விரோதங்களும், அபாயங்களும் அதிகம்கிறதை நீ புரிஞ்சுக்கணும். ஒரே காரணம் நீ இப்போ எங்களோட வந்திருக்கிறதுதான். அதுக்காக எத்தனை உறுதி வேணுமோ அத்தனை உறுதி உங்கிட்டக் குறையாம இருக்கணும். நீயே உறுதியா இல்லாட்டிக் கஷ்டம் தான் அம்மா.”

அத்தியாயம் - 23

இரவு ஒன்பது மணி ஆனதும் முத்துராமலிங்கம் சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து கோடம்பாக்கம் புறப்படத் தயாரானான். மங்கா வீடு திரும்பப் போகிறாளா அல்லது சிவகாமிநாதன் குடும்பத்தினருடனேயே தங்கப் போகிறாளா என்பது தெரியவில்லை. அவளுடைய தந்தையாகிய மந்திரி எஸ்.கே.சி.நாதனின் மேல் அப்போது அவளுக்கிருந்த கோபத்தில் வீடு திரும்ப மாட்டாள் என்றே தோன்றியது.

“நான் அறைக்குப் புறப்படறேன். பத்துமணிக்கு மேலே இங்கேயிருந்து பஸ் கிடையாது. மறுபடி நாளைக்குச் சாயங்காலம் தான் நான் இங்கே வருவேன்” என்றான் அவன்.

“நான் வீட்டுக்குப் போய் எங்கப்பா முகத்திலே விழிக்கிற எண்ணத்திலே இல்லே. ஒண்ணு இங்கே தங்கிக்கணும். அல்லது சிநேகிதிங்க யாருக்காவது ஃபோன் பண்ணிச் சொல்லிட்டு அங்கே போகணும்” என்று மங்கா முத்துராமலிங்கத்திடம் சொல்லும் போது சிவகாமிநாதனும் அதைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தார். அவரே அவளிடம் சொன்னார்:

“உனக்கு வசதிக் குறைவு இல்லேன்னா நீ தாராளமா இங்கே என் மகளோட தங்கிக்கலாம் அம்மா! எந்தச் சிநேகிதியையும் தேடிப் போகணும்கிறது இல்லே. என் வீட்டிலே சௌகரியங்கள் குறைச்சல். அசௌகரியங்கள் தான் அதிகம்.”

“தவறுகளும் தீமைகளும் கலந்த சௌகரியங்களை விட ஒழுக்கமும் நேர்மையும் உள்ள அசௌகர்யங்களே போதும் என்கிற முடிவுக்கு நான் வந்தாச்சு ஐயா!”

“பல பேர் அப்படி முடிவுக்கு வரத் துணியாத காரணத்தால் தான் இன்னிக்கிப் பொது வாழ்க்கையிலே லஞ்சமும், ஊழலும், முறை கேடுகளும் மலிஞ்சு போயிருக்கு அம்மா!”

முத்துராமலிங்கமும் அவர்களிடம் கூறி விடைபெற்றுக் கொண்டு பஸ்ஸுக்குப் புறப்பட்டான். மங்காவின் புதிய திடீர் முடிவினால் தானும், சிவகாமிநாதனும், அவளும் என்னென்ன சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற சிந்தனையே அப்போது அவன் மனத்தை நிறைத்துக் கொண்டிருந்தது. அவள் இவ்வளவு விரைவில் இப்படி மனம் மாறிவிடுவாள் என்பதை இன்னும் கூட அவனால் நம்பி ஒப்புக் கொள்ள முடியாமல் இருந்தது. வெளிநாட்டுப் படிப்பிலும் பகட்டிலும் ஆசையுள்ள ஒரு பணக்காரக் குடும்பத்தின் சராசரிப் பெண்ணாகவே அவளைக் கற்பனை செய்து வைத்திருந்தான் அவன். அதனால் தான் அவளது மனமாற்றம் அவனைத் திகைக்கச் செய்திருந்தது.

சிவகாமிநாதனின் வீடு என்பது முக்கால்வாசி அச்சகத்திற்கும், கால்வாசி மற்ற உபயோகங்களுக்குமாக இருந்த ஒரு பழைய காலத்து ஓட்டடுக்குக் கட்டிடம். நவீன வசதிகள் எதுவும் இல்லாதது. சொல்லப் போனால் அத்தியாவசியமான சில சௌகரியங்கள் கூட அங்கே கிடையாது. அங்கே வருகிற விருந்தினர்கள் உபசரணைகளை அடைய முடியாது. மாறாக அங்கு நிறைந்திருக்கிற சிரமங்களைத் தான் பங்கிட்டுக் கொள்ள முடியும்.

மங்கா தன் தந்தையோடு கோபித்துக் கொண்டு தியாகியின் குரல் அலுவலகத்திலேயே தங்குகிறேன் என்று சொன்ன போது அதை ஏற்கவும் இயலாமல் மறுக்கவும் இயலாமல் இருந்தார் சிவகாமிநாதன்.

அங்கே வீட்டில் இருப்பவர்களுக்கே சரியான படுக்கை, விரிப்பு, தலையணை என்று எதுவும் கிடையாது. அழுக்கடைந்து கிழிந்த இரண்டொரு பாய்களும், தலைக்கு உயரமாக வைத்துக் கொள்ள மரக்கட்டைகளுமே இருந்தன.

அங்கிருந்த வசதிக் குறைவுகள் காரணமாகச் சிவகாமிநாதனுக்கு அவளை அங்கே தங்கும்படி முகமலர்ச்சியோடு ஏற்றுக் கொள்ளத் தயக்கமாக இருந்தது. பண்பாடு, நாகரிகம் காரணமாகத் ‘தங்குகிறேன்’ என்று கூறுகிறவளைத் ‘தங்காதே’ என்று மறுக்கவும் முடியவில்லை. பரந்த மனமும் குறுகிய பொருளாதார வசதிகளும் உள்ள ஒவ்வொரு நல்ல மனிதனுக்கும் ஏற்படக்கூடிய சோதனை தான் இது.

சிவகாமிநாதனின் மகள் மங்காவைத் தன்னோடு அழைத்துச் சென்றாள். படுப்பதற்கென்று தனி அறை. குளிப்பதற்கென்று தனி அறை. இதெல்லாம் அந்த வீட்டில் இல்லை. சுதந்திரம் அடைந்து இருபது ஆண்டுகளுக்குப் பின் அரசியலைத் தொடங்கி அதை ஒரு லாபம் தரும் வியாபாரமாக மாற்றிக் கொண்டு அதன் மூலம் மாட மாளிகைகளைக் கட்டிக் கொண்டு வாழும் பலரையும் சிவகாமிநாதனையும் ஒப்பிட்டு நினைத்தாள் அவள்.

அன்று இரவு பதினோரு மணிக்குமேல் இருக்கும். வாசலில் கார் வந்து நிற்கும் ஓசையைத் தொடர்ந்து அவளுக்குப் பழக்கமான அந்த ஹார்ன் ஒலியும் கேட்டது. தன் வீட்டிலிருந்துதான் கார் வந்திருக்கிறது என்று மங்காவுக்குப் புரிந்தது. வேண்டுமென்றே எழுந்திருக்காமல் அயர்ந்து தூங்குவது போல் பாசாங்கு செய்தாள் மங்கா. சிவகாமிநாதனின் மகள் தான் எழுந்திருந்து போய்ப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து, மங்காவை எழுப்பி, “உங்கம்மா உன்னைத் தேடிக்கிட்டு வந்திருக்காங்க... வாசல்லே காரிலே காத்துக்கிட்டிருக்காங்க” என்றாள்.

“ஏன்? உள்ளே வரமாட்டாங்களாமா?”

“தெரியலே! நான் கதவைத் தெறந்து போய்ப் பார்த்தப்பக் கூட, ‘உடனே என் பெண் மங்காவைப் பார்க்கணும்னு’-எங்கிட்டவே எரிஞ்சு விழுந்தாங்க. ‘உள்ர வாங்க’ன்னு கூப்பிட்டுப் பார்த்தேன். ‘நான் உள்ளே எல்லாம் வர முடியாது! என் பெண்ணை வெளியிலே அனுப்பு’ன்னு கத்தினாங்க.”

அந்த வீட்டையும் அந்த வீட்டு மனிதர்களையும் பற்றி மிகவும் குறைவாக நினைத்துக் கொண்டு அங்கே படியேறி உள்ளே வருவது கூடத் தன் அந்தஸ்துக்குக் குறைவான காரியம் என்று அம்மா நினைப்பதாகப் பட்டது மங்காவுக்கு.

“நீங்க மறுபடி வெளியிலே போய் அவங்களை உள்ளே வரச் சொல்லிக் கூப்பிட வேண்டாம். வரணும்னா வந்துக்கட்டும். இல்லாட்டி எப்படியும் போகட்டும்.”

“வந்திருக்கிறது வேற யாரோ இல்லியே? உங்கம்மா தானே? நீங்களே போய்ப் பார்க்கறதிலே தப்பு ஒண்ணுமில்லியே...?”

சிவகாமிநாதனின் மகள் சுபாவமாகத்தான் இப்படிக் கூறினாள். ஆனால் மங்கா அதைச் சுபாவமாக எடுத்துக் கொள்ளும் மனநிலையில் அப்போது இல்லை. விறுவிறுவென்று எழுந்து போய் வாயிற் கதவைப் படீரென்று அடைத்து உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டு வந்தாள் மங்கா.

“நீங்க தூங்கலாம். இனிமேல் வாசற் கதவை யாராவது தட்டினா நான் போய்ப் பார்த்துக்கிறேன்” என்று சிவகாமிநாதனின் பெண்ணிடம் சொல்லிவிட்டுப் பாயில் உட்கார்ந்து கொண்டாள் அவள்.

“நீங்க கோபத்திலே கதவை அடைச்சிட்டீங்க! நாங்க தான் தெருவிலே தடுத்து நிறுத்தி வச்சுக் கதவைச் சாத்தி அவமானப்படுத்தறோம்னு உங்கம்மா நினைச்சுக்கப் போறாங்க, பாவம்!” என்றாள் சிவகாமிநாதனின் மகள்.

அவளுடைய பண்பாடு காரணமாக எழுந்த பயத்தை மங்கா புரிந்து கொண்டாலும் அம்மாவின் திடீர் வருகை காரணமாக அவளுக்கு ஏற்பட்ட கடுமை ஒரு சிறிதும் தணியவில்லை.

வெளியே கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. சாதாரணமாகவோ, நாகரிகமாக அல்லாமல் முரட்டுத்தனமாக அது தட்டப்பட்டது. அம்மாவே இறங்கி வந்து தட்டுகிறாளா அல்லது டிரைவரை விட்டுத் தட்டச் சொல்கிறாளா என்பது புரியவில்லை. அகாலத்தில் இன்னொருவர் வீட்டுக் கதவை இப்படி அசுரத்தனமாகவும், அநாகரிகமாகவும் தட்டுகிற மமதையும், அதிகார போதையும் அவளுக்கு எரிச்சலூட்டின. எரிச்சலோடு எழுந்து போய்க் கதவைத் திறந்தாள் மங்கா.

அம்மாவும், டிரைவரும் கதவருகே நின்று கொண்டிருந்தார்கள். அம்மா சொல்லித்தான் டிரைவர் கதவை அப்படிப் பலமாகத் தட்டியிருக்க வேண்டுமென்று புரிந்தது. அம்மா சீறினாள்:

“என்னடீ இது? இதெல்லாம் உனக்கே நல்லாருக்கா? வீடு வாசலை விட்டு இப்படி யார் வீட்டிலேயோ வந்து உட்கார்ந்துக்கிட்டுக் கிளம்பமாட்டேன்னு அடம் பிடிக்கிறியே?”

“எனக்கு வரப்பிடிக்கலே. வரமாட்டேன்.”

“அப்படி நீ சொல்ல முடியாதுடீ! சொல்லவும் கூடாது... நல்லதோ கெட்டதோ பொண்ணுங்கறவ வயது வந்தப்புறம் அப்பா அம்மாவோட தான் இருந்தாகணும்... இல்லாட்டி மானம் போயிடும்.”

“அப்பாவுக்கு இருக்கிற மானத்தை விட இங்கே ஒண்ணும் கொறைஞ்சி போயிடலே அம்மா!”

“வாயை அடக்கிப் பேசுடீ! யாரைப் பத்தி எங்கே நின்னு என்ன பேசறோம்னு நினைச்சுப்பாரு... ஏண்டீ, இப்படித் திடீர்னு புத்தி கெட்டுப் போனே?”

“யாரு சொன்னா? போன புத்தியே எனக்கு இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா வந்துக்கிட்டிருக்கு...”

“நீ இப்போ எங்கூடப் பொறப்பட்டு வரப் போறியா இல்லியாடீ? உனக்காக நடுத்தெருவிலே நின்னு கத்தி என் மானம் போய்த் தொலையிது!”

“நீ விடிய விடியக் கத்தினாலும் நான் வரப் போறதில்லே அம்மா! நீ போகலாம். என் சண்டையோ, கோபமோ உன்னோட இல்லே. அப்பாவோடத்தான்...” என்று சொல்லி மீண்டும் கதவை முகத்தை முறித்தாற் போல அடைத்து உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டாள் அவள்.

தொடர்ந்து சிறிது நேரம் கதவு தட்டப்பட்டது. ஆனால் மங்கா பிடிவாதமாகத் திறக்காமல் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்துவிட்டாள்.

சிறிது நேரத்தில் தட்டுவது நின்று போய்விட்டது. அம்மாவும், டிரைவரும் பொறுமை இழந்து வீட்டுக்குத் திரும்பிப் போயிருக்க வேண்டும் என்று மங்கா அனுமானித்துக் கொண்டாள்.

பளீரென்று வெளிச்சம் பரவியது. யாரோ சுவிட்சைப் போட்டிருந்தார்கள். யார் என்று திரும்பிப் பார்த்தால் சிவகாமிநாதனே நின்று கொண்டிருந்தார்.

“நீங்களா? யாரோன்னு பயந்து போனேன். எங்கம்மா தேடி வந்து கூப்பிட்டாங்க... நான் பிடிவாதமா வரலேன்னுட்டேன்...”

“தெரியும் அம்மா! நான் எல்லாத்தையும் என் ரூம் ஜன்னல் வழியாகக் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன். உனக்கும் இத்தனை பிடிவாதம் கூடாது! உன்னைக் கண்டிச்சு நாலு வார்த்தை கடுமையாப் பேசி ‘வீட்டுக்குப் போ’ன்னு என்னாலேயும் சொல்ல முடியலே. நானே வேண்டா வெறுப்போட உன்னைத் தட்டிக் கழிக்கிறேன்னு நீ என்னைத் தப்பாப் புரிஞ்சுக்கக் கூடாதேன்னும் பயமா இருக்கு...”

“தயவு செய்து என்னையும் உங்களோட இன்னொரு பெண்ணா நினைச்சு நடத்துங்க... அந்நியமாப் பாவிக்காதீங்க...”

“நான் ஒரு காலத்திலியும் உன்னை அந்நியமா நினைக்க மாட்டேன் அம்மா! ஆனா உன்னாலே எனக்கு வர்ற சோதனைகள் கொஞ்சம் அதிகமாகத் தான் இருக்கும். காரணம் உங்கப்பா மந்திரி. நானோ அவருடைய அரசியல் எதிரி.”

இதற்கு அவள் பதிலெதுவும் கூறவில்லை.

“போய்த் தூங்கும்மா! நேரமாகுது. காலையிலே பேசிக்கலாம்” - என்று அவரே விளக்கை அணைத்துவிட்டுப் போய்விட்டார்.

மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த வீட்டிலேயே பிறந்து வளர்ந்து அதிக நாள் பழகியவளைப் போல் சேலைத் தலைப்பை வரிந்து கட்டிக் கொண்டு கூடத்தைப் பெருக்குவது, தரையை மெழுகுவது, பாத்திரங்கள் தேய்ப்பது போன்ற வீட்டுக் காரியங்களில் சகஜமாக அவள் ஈடுபட்ட போது சிவகாமிநாதனும், அவர் மகளும் மகனும் அவளைச் செல்லமாகக் கடிந்து கொண்டு தடுத்தார்கள்.

“நீ எதுக்கும்மா இதெல்லாம் செய்யறே? ரொம்ப அவசியமா எதாவது செஞ்சுதான் ஆகணும்னாப் பிரஸ்ஸுக்கு வா... புரூப் திருத்தக் கத்துக் குடுக்கறேன்... பழகிக்கோ... போறும்” - என்றார் சிவகாமிநாதன்.

ஆனால் அவள் அவர்கள் சொல்லியபடி அந்த வேலைகளிலிருந்து தன்னைத் தவிர்த்துக் கொள்ளவோ, விலகிக் கொள்ளவோ இல்லை. அவற்றையும் செய்துவிட்டு அதன் பின்பு அச்சகப் பகுதிக்குள் நுழைந்து பிழை திருத்தக் கற்றுக் கொடுக்குமாறு சிவகாமிநாதனிடம் கேட்டாள்.

சிறிதும் எதிர்பாராதவிதமாக மாலையில் வருவதாக முதல் நாளிரவு கூறிச் சென்றிருந்த முத்துராமலிங்கம் பகல் பதினோரு மணிக்கே அங்கே வந்து சேர்ந்திருந்தான். மங்கா அவனைக் கேட்டாள்:

“சாயங்காலம்தானே வருவேன்னீங்க? இன்னிக்கும் ‘அவுட்டோர்’ கேன்ஸல் ஆயிடிச்சா?”

“அவுட்டோர் கேன்ஸல் ஆகலே! என் வேலையே கேன்ஸல் ஆயிடிச்சு. பாபுராஜ் முதலியாரிட்டக் கோள் சொல்லி வத்தி வச்சு என் வேலைக்குச் சீட்டுக் கிழிச்சுப்புட்டான்.”

அத்தியாயம் - 24

“நான் கூட்டங்களிலே பேசறது - கொள்றதெல்லாம் பாபுராஜுக்குப் பிடிக்கலே. நேத்து மூணு மணிக்கு உன்னைச் சந்திக்கிறதுக்காக நான் ‘டிரைவ் இன்’னுக்குக் கிளம்பிக்கிட்டிருந்தப்ப அவன் ‘லாட்ஜுக்கு’ ஃபோன் பண்ணி உடனே தன்னை வந்து பார்க்கணும்னான். நான் போகலே, அதுலே கோபம் போல்ருக்கு.”

“சனி விட்டதுன்னு பேசாம இருங்க. வேற வேலை பார்த்துக்கலாம்” - என்றாள் மங்கா. சிவகாமிநாதனும் முத்துராமலிங்கத்துக்கு ஆறுதலாகவே இரண்டு வார்த்தைகள் சொன்னார்;

“இந்த வேலை போச்சேன்னு கவலைப்பட வேண்டாம். பார்த்துக்கலாம். என்னாலே முடிஞ்சதைச் செய்யிறேன். இன்னிக்கு இந்த நாட்டிலே வேலை கிடைக்காதோ என்ற எதிர்கால பயத்திலும் கிடைத்த வேலை போய்விடுமோ என்ற தற்காப்பு அச்சத்திலுமே முக்கால்வாசி இளைஞர்கள் வீரியமிழந்து நடைப் பிணங்களாகி விடுகிறார்கள். இளைஞர்களால் நாடு அடைய வேண்டிய உத்வேகத்தை அடைய முடியாமலே போய்விடுகிறது.”

“உங்களுடைய வழிகாட்டுதல் இருக்கிறவரை நானோ மங்காவோ உத்வேகத்தை இழந்து விடமாட்டோம் ஐயா!”

“நாளைக்குக் கூட்ட ஏற்பாட்டைக் கவனிக்கணும். சுவரொட்டி யெல்லாம் இன்னிக்கே ஒட்டியாகணும். மந்திரியை எதிர்த்துக் கூட்டம் போடறோம். ஏரியாவும் ஒரு மாதிரி. மந்திரி மகளே பேசப் போறாங்கன்னு வேற விளம்பரம் பண்ணியிருக்கோம். கொஞ்சம் கலாட்டாக் கூட இருக்குமோன்னு சந்தேகப்படறேன்.”

“ஏற்பாடெல்லாம் தயாராயிருக்கு. நானும் நண்பர்களும் இன்னிக்கிப் போஸ்டர் ஒட்டப் போறோம்” - என்றான் முத்துராமலிங்கம். சிவகாமிநாதன் மங்காவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கூறினார்.

“தன் மகனையே தன்னை எதிர்த்து மேடையேறிப் பேச வச்சிட்டோமேன்னு எங்க மேலே உங்கப்பாவுக்கு ஒரே எரிச்சலா இருக்கும்.”

“அதைப் பத்தி நான் கவலைப்படலே...”

“நீ படற கவலையையும் சேர்த்து உங்கப்பா படப் போறாரு. பதவிகளில் சுகம் காணும் தகுதியும் நேர்மையும் இல்லாத ஒவ்வொருத்தனும் அதுக்காகப் பயந்து பயந்து சாகிறதுதான் வழக்கம். பயப்படுகிறவன் எல்லாம் பிறரைப் பயமுறுத்தியே வாழ்ந்து கொண்டிருப்பான். தீரன் தானும் பயப்படுவதில்லை; பிறரையும் பயமுறுத்துவதில்லை. ஆனால், தீரர்கள் இன்றைய அரசியலிலும் பொது வாழ்விலும் குறைந்து போய்விட்டார்கள்.”

உள்ளே அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே வாசலில் யாரோ முத்துராமலிங்கத்தைத் தேடி வந்திருப்பதாகச் சிவகாமிநாதனின் மகள் வந்து தெரிவித்தாள்.

தேடி வந்திருப்பது யாராயிருக்கும் என்ற யோசனையுடனும் தயக்கத்துடனும் வெளியே வந்த முத்துராமலிங்கம் அங்கே சின்னி நிற்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்தான். சின்னி பேசினான்: -

“பார்த்திட்டுப் போகலாம்னுதான் வந்தேன்... அவசரமா ஒரு தகவல் சொல்லணும்.”

“உள்ளே வாயேன்... உட்கார்ந்து பேசலாம்... என்ன அவசரம்?”

“இங்கேயா? வேணாம்... இத்தினி பெரிய மனுஷங்க வீட்லே எல்லாம் நுழையறதுக்கு எனக்கு யோகியதை இல்லே...”

சின்னி கிண்டலுக்காகவோ வம்புக்காகவோ இல்லாமல் உண்மையான பயபக்தியுடனே இப்படிச் சொன்னதை முத்துராமலிங்கம் உணர்ந்தான். நல்லவர்களை எல்லாரும் மதிக்கிறார்கள். ஆனால் வாழவைப்பதில்லை. நல்லவர்களிலிருந்து ஒதுங்கியும் ஒதுக்கியும் வாழ விரும்புகிறவர்களாகவே சராசரி மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதைச் சின்னியின் செயல் காண்பித்தது.

அப்போது சின்னியைச் சிவகாமிநாதனின் வீட்டுக்குள்ளே வரச் சொல்லி மேலும் வற்புறுத்த முடியாமல் அவனோடு நடந்து போய்த் தெருக்கோடியில் நின்று பேசுவதைத் தவிர முத்துராமலிங்கத்தால் வேறெதுவும் செய்ய முடியவில்லை.

பாமர இந்திய மக்கள் ஒன்று நல்லவர்களைப் பக்தி செய்து வணங்குகிறார்கள். அல்லது வெறுக்கிறார்கள். நேசிக்கவும் காப்பாற்றவும் முன் வருவதில்லை. சிவகாமிநாதனைப் போன்றவர்கள் மேல் சின்னியை ஒத்த அடித்தளத்து மக்களுக்கு மதிப்பும் பயபக்தியும் இருக்கின்றனவே ஒழிய நேசம் ஏற்படுவதில்லை என்பதை முத்துராமலிங்கம் கவனித்தான். தெருக்கோடிக்குச் சென்றவுடனே சின்னி குரலைக் கடுமையாக்கி,

“கடைசியிலே நான் பயந்தபடியே ஆயிடிச்சு! உன்னை பாபுராஜ் துரத்திப்பிட்டான். கூட்டம் பேசற ஆசையிலே வேலையைப் பறிகொடுத்துப்புட்டே! நீ செய்யிறது ஒண்ணுமே நல்லா இல்லே. தொடர்ந்து ஒண்ணொண்ணா வம்புலே மாட்டிக்கிட்டு வர்றே! நம்பளுக்கு வேண்டியே ஆளாச்சேன்னு உன் கையிலே சொல்லிட்டுப் போக வந்தேன். மந்திரி நாதனை எதிர்த்துக் கூட்டம் கீட்டம் போட்டுப் பேசாதே! கலாட்டாவுக்கு ஆள் ஸெட்-அப் பண்றாங்க. ஸோடா புட்டி வீச, கல்லெறிய எல்லாத்துக்கும் ஏற்பாடாகுது.”

“இது உனக்கு எப்படித் தெரியும் சின்னி?”

“நம்ப பேட்டை ஆளுங்கதான் பண்ணப் போறாங்க... காதிலே உளுந்திச்சு... அதான் வந்தேன்.”

“உங்க பேட்டை ஆளுங்களுக்கு மானமாப் பிழைக்க வேற தொழில் இல்லியா?”

“அவங்க எந்த ‘ஸைடும்’ இல்லே! யார் வந்து காசு குடுத்து யார் மேலே ஏவினாலும் போவாங்க... அவுங்களை ஏவி விடறவங்களுக்கே மானம் இல்லாமப் போறப்ப அவுங்களுக்கு மட்டும் எதுக்காக அதெல்லாம் இருக்கணும்?”

சின்னியின் இந்தக் கேள்வியில் ஓரளவு நியாயம் இருப்பதாகவே பட்டது. சென்னை என்கிற கலாசார மயானத்தில் அடியாட்கள் கூட வாடகைக்குக் கிடைத்தார்கள். நல்ல வாடகை கொடுக்க முடிந்தவர்கள் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். நல்ல வாடகை கொடுக்க முடியாதவர்கள் எல்லாம் அடிபடுகிறவர்களாக இருந்தார்கள். சின்னி ஆதங்கப்பட்டுக் கொண்டான்.

“நீ மெட்ராஸுக்குப் பொழைக்க வந்தவனாகத் தெரியிலே... இங்கே வந்து நீ வம்பைத்தான் விலைக்கு வாங்கிக்கிட்டிருக்கே.”

“பொழைக்கிறது அவசியம்தான் சின்னீ; ஆனா மானமில்லாமப் பொழைக்கிறதை விட அதை எதிர்த்துப் போராடிச் செத்துப் போயிடறதுகூட மேல்னு நினைக்கிறவன் நான்.”

முத்துராமலிங்கம் மிகக் கடுமையான குரலில் இதைச் சொல்லவும் சின்னி எதிர்த்துப் பதில் கூற முடியாமல் நின்று விட்டான். சிறிது நேரம் வேறு எதை எதையோ பேசிக் கொண்டிருந்த பின்,

“என்னமோ, பழகின தோசத்துக்குச் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன். அப்புறம் பார்ப்போம்” - என்று கூறிவிட்டுப் போய்ச் சேர்ந்தான் சின்னி. சின்னி புறப்பட்டுப் போன சிறிது நேரத்துக்கெல்லாம் அரசாங்க முத்திரையிட்ட கொடி பறக்கிற பெரிய கார் ஒன்று சிவகாமிநாதனின் வீட்டு வாசலில் வந்து நின்றது. அமைச்சர் எஸ்.கே.சி.நாதனே வந்து விட்டாரோ என்றெண்ணி அவர்கள் பார்த்த போது அமைச்சரின் பி.ஏ.யும், ஆளுங்கட்சியின் செல்வாக்குள்ள அரசியல் பிரமுகர் ஒருவரும் காரிலிருந்து கீழே இறங்கினார்கள்.

வந்தவர்கள் சிவகாமிநாதனைச் சந்திக்க வேண்டும் என்றார்கள். அவர் அச்சகப் பகுதியில் இருந்தார். அவர்களை அச்சகத்துக்குள் அழைத்துச் சென்றான் முத்துராமலிங்கம். கம்போஸிங் செய்ய ஏற்ற உடையில் இருந்த சிவகாமிநாதன் அவர்களை மிகவும் மரியாதையாக வரவேற்றார்.

அச்சுப் பிழை திருத்தப் பழகியவாறு அங்கே அமர்ந்திருந்த மங்கா இவர்களைப் பார்த்ததும் வெறுப்போடு உள்ளே எழுந்து செல்ல முயன்றாள்.

“நீ எதுக்கும்மா எந்திரிச்சுப் போறே! நீயும் இரு” என்று அவளைக் கையமர்த்தி அமரச் செய்தார் சிவகாமிநாதன்.

வந்த பிரமுகர் சற்றே கோபமாகத் தொடங்கினார்: “அரசியல்லே நாம ஒருத்தருக்கொருத்தர் எதிரெதிர்த் தரப்பிலே இருக்கோம். ஆனா அதுக்காக ஒருத்தரோட குடும்பத்திலே இன்னொருத்தர் தலையிட்டு லாபம் தேடறதுங்கறது அவ்வளவு நல்லாப் படலே... மினிஸ்டர் இதை ரொம்பக் கடுமையா நினைக்கிறாரு. அதைச் சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்.”

“நீங்க தப்பாப் புரிஞ்சிக்கிட்டிருக்கீங்க... எனக்கு யார் குடும்பத்திலேயும் தலையிடணும்னு அவசியமில்லே. அதே சமயத்திலே பொதுவாழ்வில் லஞ்ச ஊழலை ஒழிக்க நான் தொடங்கியிருக்கிற இயக்கத்திலே யாராவது அந்தரங்க சுத்தியோட வந்து சேர்ந்தா அவங்களை நான் சேர்த்துக்க மாட்டேன்னும் சொல்ல முடியாது.”

“உங்க மக எங்க கட்சியிலே வந்து சேர்ந்து எங்க கூடத் தங்கிட்டா நீங்க அதைச் சும்மா விட்டுவிடுவீங்களா?”

“என் மகள் அப்படிச் செய்ய மாட்டாள். எது நல்லது எது கெட்டதுன்னு அவளுக்கு நல்லாத் தெரியும். அதையும் மீறி அவ அப்படி எனக்குப் பிடிக்காத தரப்பிலே சேர்ந்தா அதிலே நான் தலையிட மாட்டேன்.”

“இதெல்லாம் உங்களுக்கே நல்லா இல்லீங்க! பேசாம மினிஸ்டரோட டாட்டரைக் கூப்பிட்டு ரெண்டு வார்த்தை புத்தி சொல்லி வீட்டுக்குத் திருப்பி அனுப்பி வையுங்க.”

“அதெல்லாம் நான் ஏற்கெனவே சொல்லியாச்சு! அவ கேக்கலை. இப்பவும் நான் சொல்லத் தயார்! உங்க வீட்டுப் பெண்ணை நீங்க கூப்பிட்டுக்கிட்டுப் போக நான் குறுக்கே நிற்க மாட்டேன். ஆனா அதே சமயம் உங்களை வெறுக்கிற ஒரு பெண்ணை நீங்க பலவந்தமா இழுத்துக்கிட்டுப் போகவும் நான் ஒத்துழைக்க மாட்டேன்.”

- என்று கூறிவிட்டு உள்ளே ப்ரூஃப் எடுத்து வரப் போயிருந்த மங்காவைக் கூப்பிட்டு, “இந்தாம்மா! உங்கப்பா கூட்டிக்கிட்டு வரச்சொன்னார்னு இவங்க இங்கே தேடி வந்திருக்காங்க. உன்னை நான் இங்கே தடுத்து நிறுத்தி வச்சுக்கிட்டு ஏதோ ‘பிளாக் மெயில்’ பண்ணி உங்கப்பாவை மிரட்டற மாதிரி இவங்க எங்கிட்டப் பேசறாங்க. எனக்கு அது பிடிக்கல்லே. உனக்குச் சம்மதமானா இவுங்க கூட நீ தாராளமாத் திரும்பி வீட்டுக்குப் புறப்பட்டுப் போகலாம். சம்மதமில்லேனாலும் நான் உன்னை வற்புறுத்தித் துரத்த மாட்டேன்” என்றார் சிவகாமிநாதன். மங்கா பதில் கூறினாள்; “நீங்க என்னை இங்கே வரச் சொல்லிக் கூப்பிடலே ஐயா! நான் தான் உங்க கிட்ட வந்து அடைக்கலம் புகுந்திருக்கேன்... அடைக்கலமா வந்தவங்களை நீங்க துரத்தவோ வெளியேற்றவோ மாட்டீங்கங்கிற நம்பிக்கை எனக்கு உண்டு ஐயா.”

“கேட்டுக்குங்க! இதுதான் உங்களுக்கு அவ பதில். இதில் நான் செய்ய என்ன இருக்கிறது?”

“அப்பாவுக்கும் பெண்ணுக்கும் ஆகவிடாமல் நீங்க தான் அவ மனசைக் கெடுத்து வச்சிருக்கீங்க.”

“என்னிக்கும் யார் மனசையும் கெடுக்கிற தொழிலை நான் செஞ்சதில்லை - செய்யவும் மாட்டேன்.”

“நாங்க பயமுறுத்தறதா நெனைக்காதீங்க. பின்னாலே இதுக்காக நீங்க ரொம்ப வருத்தப்பட வேண்டியிருக்கும்.”

சிவகாமிநாதன் இதற்குப் பதில் கூறவில்லை. அவர்கள் விருட்டென்று வெளியேறினார்கள். அன்று இரவு முத்துராமலிங்கமும் பிறரும் சுவரொட்டிகள் ஒட்டும் போதே, சில எதிர்ப்புக்களும், சில்லறைத் தகராறுகளும் உண்டாயின.

அவர்கள் மறுநாள் மாலை பொதுக் கூட்டத்திலும் தகராறுகளை எதிர்பார்த்தார்கள். ஆனால் கூட்டம் அவர்களுக்கு ஆதரவான வகையில் பெரிய அளவு கூடியிருந்தது.

கடல் போல் பெரிய அந்தக் கூட்டத்தில் யாராவது கலகத்துக்கு வந்தால், மக்களே அவர்களைச் சூறையாடி விடுவார்கள் போல் தோன்றியது.

கூட்டத் தொடக்கத்தில் சில இளைஞர்கள் பேசினார்கள்.

அப்போது கூட அமைதியான முறையில் மக்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். மங்கா பேசுவதாக அறிவித்து அவளைக் கூட்டத்துக்கு அறிமுகம் செய்து வைத்தார் சிவகாமிநாதன்.

அவள் ஆவேசமாகப் பேச ஆரம்பித்த சில கணங்களில், “டாய்! துரோகியோட மகளெப் பேசவிடாதே” என்று கத்தியபடி சோடாப் புட்டியோடு ஆவேசமாகப் பாய்ந்தான் ஒரு முரட்டு ஆள். அதே போன்ற குரலோடு வேறு சிலரும் கிளம்பினார்கள். கூட்டத்துக்கும் சிவகாமிநாதனுக்கும் அப்படிக் கிளம்பியவர்கள் தங்களுக்கு ஆதரவாளர்களா, எதிரிகளா என்று புரிந்து கொள்ள முடியாமல் குழப்பம் ஏற்பட்டது.

அத்தியாயம் - 25

கலகம் செய்வதற்கென்று கூட்டத்தில் ஊடுருவியிருந்தவர்களே மிகவும் தந்திரமாகச் செயல்பட்டிருந்தார்கள். அவர்கள் மந்திரி எஸ்.கே.சி.நாதனால் ஏவப்பட்டு வந்திருந்தாலும் சிவகாமிநாதனின் ஆதரவாளர் போல் பாவித்து மந்திரியின் மகளாகிய மங்காவை எதிர்த்துக் கலகம் புரிவதாக நடித்தார்கள். கூட்டத்தினரும் முதலில் அதை அப்படித்தான் புரிந்து கொள்ள நேர்ந்திருந்தது.

தியாகி சிவகாமிநாதன் ஒருவருக்கு மட்டுமே அதில் ஏதோ சூது இருக்க வேண்டும் என்ற சந்தேகம் வந்தது. தன் தரப்பு ஆட்களில் யாரும் எக்காரணத்தை முன்னிட்டும் இப்படிப்பட்ட வன்முறைகளில் இறங்கக் கூடியவர்கள் இல்லை என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். மந்திரியின் மகளாகிய மங்கா தங்கள் மேடையில் பேசுவது பிடிக்கவில்லை என்றால் அதைத் தன்னிடம் வந்து விவாதித்து ஆட்சேபிப்பார்களே யொழிய இப்படிச் சோடாபுட்டியை வீசிக் கொண்டு தன் தரப்பு ஆட்கள் குதிக்க மாட்டார்கள் என்று அவர் அறிவார். எனவே தான் யாரோ மிகவும் தந்திரமாகத் திட்டமிட்டுத் தங்களை ஏமாற்றுகிறார்கள் என்று புரிந்து கொண்டு உஷாரானார் அவர்.

ஆனால் அவர் உஷாராவதற்குள் காரியம் கை மீறிப் போய் விட்டது. கலகம் செய்யக் கிளம்பியவர்கள் வெளியிலிருந்து வந்த எதிரிகள் என்று தெரிந்திருந்தால் சிவகாமிநாதனின் ஆதரவாலர்களும் மக்களும் அவர்களை அடக்கி ஒடுக்கியிருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு முதலில் அது தெரிந்திருக்கவில்லை.

அங்கே அப்போது கலகம் செய்தவர்கள் ‘சிவகாமி நாதன் வாழ்க!’ என்றும் ‘ஊழல் ஒழிப்பு இயக்கம் ஓங்குக!’ என்றும் அவர்களுக்கு ஆதரவான கோஷங்கள் போட்டுக் கொண்டே எதிரான காரியங்களில் இறங்கி மங்காவை மட்டுமே பகிஷ்கரிப்பது போல் நடந்து கொண்டதால் எல்லாருமே என்ன செய்வதென்று அறியாமல் குழம்பிப் போனார்கள். சோடா புட்டிகளும், கற்களும், பழைய செருப்புக்களும் மேடையை நோக்கிப் பறந்தன. ஒரே கூச்சல் - ஆர்ப்பாட்டம்.

மேடையில் தியாகி சிவகாமிநாதன் எழுந்து நின்றார். அவர் மேலும் மங்கா மேலும் எதுவும் பட்டுவிடாமல் தடுக்கிற முயற்சியில் முத்துராமலிங்கம் மேடையில் முன்னால் பாய்ந்து கவசம் போல் கைகளை மறித்து நின்று காத்தான். பறந்து வந்த சோடா பாட்டில்களில் ஒன்றும் கற்களில் சிலவும் அவன் மண்டையில் தாக்கின. மேடையில் இரத்தம் ஒழுக நின்றான் அவன். ஒரு கையால், காயமுற்ற மண்டையை அழுத்திப் பிடித்துக் கொண்டே, ‘தோழர்களே! அமைதி! அமைதி” என்று உரத்த குரலில் முழங்கிக் கொண்டிருந்தான் அவன்.

சிவகாமிநாதன் பதறிப் போனார். சிந்தாதிரிப்பேட்டையிலேயே கூட்டம் நடந்து கொண்டிருந்த இடத்துக்கருகில் இருந்த ஒரு டாக்டரின் தனியார் மருத்துவமனிக்கு முத்துராமலிங்கத்தை அவசர அவசரமாக ஒரு டாக்ஸியில் அழைத்துச் சென்றார் அவர். தேசியப்பற்றும் சிவகாமிநாதன் மேல் அபிமானமும் உள்ள அந்த டாக்டர் முத்துராமலிங்கத்தின் காயத்துக்கு மருந்து போட்டுக் கட்டினார். மங்கா அழத் தொடங்கி விட்டாள். சிவகாமிநாதனின் மகளுக்கும் மகனுக்கும் அவளைத் தேற்றுவது சிரமமான காரியமாக இருந்தது.

கூடியிருந்த கூட்டம் கலைய மறுக்கவே முத்துராமலிங்கத்தையும் மற்றவர்களையும் மருத்துவமனையில் விட்டு விட்டுச் சிவகாமிநாதன் மறுபடி பொதுக்கூட்ட மேடைக்குப் போனார்.

திடீரென்று புயல் ஒன்று வந்து ஓய்ந்து போயிருந்த மாதிரிக் கலகங்கள் ஓய்ந்து கூட்டம் அமைதியடைந்திருந்தது. கலகம் செய்வதற்கென்றே வந்து ஊடுருவியிருந்த கும்பல் தப்பி ஓடியிருந்தது. காத்திருந்த கூட்டத்திற்குச் சிவகாமிநாதன் பேசினார்.

எல்லாப் பக்கங்களிலும் நெடுந்தொலைவுக்கு ஒலிபெருக்கியைக் கட்டியிருந்ததால் மருத்துவமனையிலிருந்தபடியே முத்துராமலிங்கமும் மற்றவர்களும் கூட அதைக் கேட்க முடிந்தது.

மங்காவை அவள் தந்தைக்கு எதிராகப் பேச விடாதபடி தடுக்கவே அத்தனை தந்திரமான கலக ஏற்பாடு என்பது அதற்குள் பலருக்குப் புரிந்திருந்தது.

“இப்படி ஆயிரம் கலகங்களும் கலகக்காரர்களும் வந்தாலும் நானும் எனது இயக்கமும் ஒடுங்கி ஓய்ந்து விட மாட்டோம். நரித்தனமும் வஞ்சகமும் வேஷம் போடுவதும் எனக்குத் தெரியாதவை. ஆதரவோ எதிர்ப்போ எதானாலும் நேராகவும் நேர்மையாகவும் வரவேண்டுமென்று நினைக்கிறவன் நான். பொதுவாழ்வில் வஞ்சக வேடங்கள் கூடாது. பச்சை மண் குடத்தில் அது காய்ந்து குடமாவதற்கு முன் தண்ணீர் நிரப்பி வைத்தால் அது கரைந்து விடும். உருத் தெரியாமல் சிதைந்து விடும். லஞ்ச ஊழல்களினால் பணம் சேர்த்துக் கொண்டு அரசியல் நடத்துவதும் அப்படித்தான். வேண்டியவர்களைப் போல் உள்ளே நுழைந்து கொண்டு கோஷங்கள் போட்டு வேண்டாதவர்களின் வேலைகளைச் செய்கிறீர்கள். என் அருமை மகனைப் போன்ற முத்துராமலிங்கத்தை மண்டையைப் பிளந்து மருத்துவமனையில் படுக்க வைத்து விட்டீர்கள். அவரை இரத்தம் சிந்த வைத்து விட்டீர்கள். இன்று இந்த மேடையில் அவர் சிந்திய இரத்தத்திற்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். அடியாட்கள் வைத்து அரசியல் நடத்தும் உங்களுக்கு மந்திரிப் பதவி ஒரு கேடா?” என்று தொடங்கி விளாசி விட்டார் சிவகாமிநாதன்.

கூட்டத்தின் முழு விவரங்களையும் முதலில் இருந்தே ஒரு சி.ஐ.டி. குறிப்பெடுத்துக் குறித்துக் கொண்டிருந்தார். தம்முடைய சொற்பொழிவு ஒரு வரி விடாமல் அப்படியே மந்திரிக்குப் போகும் என்பதும் அவருக்குத் தெரிந்துதான் இருந்தது. சோடாபுட்டி கல்லெறிக்குப் பயந்து கூட்டம் நடத்த முடியாமல் போயிற்று என்று யாரும் சொல்லக் கூடாது என்பதற்காகவே முத்துராமலிங்கத்தையும் மற்றவர்களையும் மருத்துவமனையில் விட்டுவிட்டு அவர் வந்து தனியாகப் பேசிக் கூட்டத்தை நடத்தியிருந்தார்.

கூட்டம் கலைந்து ஒலிபெருக்கி மேடை ஏற்பாட்டுக்காரர்களுக்குப் பணம் கொடுத்து அனுப்பிவிட்டு அவர் மீண்டும் மருத்துவமனைக்குப் போய்ச் சேர்ந்த போது இரவு மணி பன்னிரண்டு. மண்டைக் காயத்தின் வலியினால் தூங்க முடியாமல் தவித்த முத்துராமலிங்கத்துக்குத் தூக்க மருந்து கொடுத்து உறங்கச் செய்திருந்தார்கள்.

மௌனமாகக் கண்ணீர் சிந்தியபடி அமர்ந்திருந்த மங்காவுக்குத் துணையாகச் சிவகாமிநாதனின் மகளும் அமர்ந்திருந்தாள்.

“நீ ஏம்மா அழுதுகிட்டிருக்கே... ஏதோ போறாத வேளை. நடக்க வேண்டியது நடக்கலே... நடக்கக் கூடாதது நடந்திரிச்சு... அழுது என்ன ஆவப்போவுது?”

“எனக்குத் தெரியும் ஐயா! இன்னிக்கிக் கூட்டத்திலே நான் எங்கப்பாவை எதிர்த்துப் பேசுவேன்னு அறிவிச்சதாலே தான் இத்தினி கலாட்டாவும் வந்திச்சு. நான் தான் இத்தனைக்கும் காரணம்...”

“அசடே இதெல்லாம் என்ன பேச்சு? கலாட்டாவுக்கும் எதிர்ப்புக்கும் பயந்தாப் பொது வாழ்க்கையிலே எதுவுமே செய்ய முடியாது. எல்லாம் எதிர் கொண்டு சமாளிச்சுத் தான் ஆகணும்.”

“என்னைப் பேசவிடாமல் பண்ணணும்கிறதுக்காக இப்படிக் கலாட்டாப் பண்ணி இவர் மண்டையை உடைச்சுட்டாங்களே பாவிகள்.”

“என்ன செய்வது? ஒவ்வொரு தர்மயுத்தத்திலும் முதலில் அதர்மம் தான் ஜெயிப்பது போல் தோன்றும்... தர்மவான்கள் தான் சிரமப்படுவார்கள். பொறுத்திருந்து தான் ஜெயிக்கணும்! அதான் சோதனை நிறைய வரும்னு முதல்லியே சொன்னேனே.”

“எல்லாம் எங்கப்பா ஏற்பாடாத்தான் இருக்கும்! இந்த மாதிரிக் காரியத்துக்காக ஆயிரம் இரண்டாயிரம் செலவழிக்கக் கூடத் தயங்க மாட்டாரு அவரு.”

“முதல்லே எனக்குக் கூடப் புரியல்லே. நீ நம்ம மேடையிலே பேசறதை எதிர்த்து எங்க ஆளுங்க தான் கூப்பாடு போடறாங்களோன்னு சந்தேகப்பட்டேன். அப்புறம்தான் விஷயமே புரிஞ்சுது. எங்களைப் பத்தியோ எங்க பேச்சைப் பத்தியோ உங்கப்பா கவலைப்படலே. நீ இந்த மேடையிலே அவரைப் பத்திப் பேசறதை மட்டும் அவர் விரும்பலே, அதைத் தடுக்கத்தான் எல்லா ஏற்பாடும்னு புரிந்தது. நாங்க எப்பவும் போல வழக்கமா அவரை எதிர்த்துத்தான் பேசுவோம். ஆனா நீ பேசினா ‘அவரோட சொந்த மகளே பேசறப்ப நிஜமாத்தான் இருக்கணும்னு’ ஜனங்க தன்னைப் பத்தி வெறுக்க ஆரம்பிச்சுடுவாங்களோன்னு பயப்படறாரு. அதான் இப்படிக் கலாட்டாவுக்கு ஏற்பாடு பண்ணிக் கூட்டத்தையே கலைக்கறாரு...”

“இப்படி எத்தனை நாளைக்கிக் கலாட்டாப் பண்ணியே சமாளிச்சிட முடியும்?”

“பணமும், பதவியும் இருக்கிற வரை முடியும். போலீஸ்காரங்க பதவி இருக்கற வரை அவரு சொன்னபடி கேட்பாங்க...”

“கலாட்டாப் பண்ணினவங்களையும் சோடா பாட்டில் எறிஞ்சவங்களையும் போலீஸ் - ரவுண்ட்-அப் பண்ணிப் பிடிச்சாங்களா இல்லியா?”

“பிடிக்கலே... வசதியாத் தப்ப விட்டுட்டாங்க... எல்லாம் முன் கூட்டியே ஏற்பாடு தான்.”

அன்றிரவு சிவகாமிநாதனின் மகளும், மங்காவும், மருத்துவமனையிலேயே தங்கினார்கள். சிவகாமிநாதனும் அவர் மகனுமே வீட்டிற்குச் சென்றார்கள். இரவு வீட்டில் தூங்கவே முடியவில்லை. பல தொல்லைகள் தொடர்ந்தன.

அன்றிரவு வீட்டிலும் அச்சகத்திலும் கூடக் கல்லெறி சோடா புட்டி வீச்சு எல்லாம் தொடர்ந்தன. போலீஸில் போய்ப் புகார் செய்தும் பாதுகாப்புக்காக யாரும் வரவில்லை. சிவகாமிநாதனையும் அவரது இயக்கத்தையும் கூண்டோடு அழித்து விடுவது என்று மந்திரி கிளம்பியிருப்பது அவர்களுக்குப் புரிந்தது.

மறுநாள் காலைப் பத்திரிகைகளில் விதம் விதமான தலைப்புக்களுடன் செய்திகள் பிரசுரமாகி இருந்தன. மந்திரிக்கு வேண்டிய தரப்புப் பத்திரிகைகளில் எல்லாம் “அமைச்சரின் மகளைக் கடத்திக் கொண்டு போய் அவருக்கு எதிராகப் பேசச் செய்யச் சதி. முயற்சி முறியடிக்கப்பட்டது. கூட்டம் குழப்பத்தில் முடிந்தது. சதிகாரர்களை மக்கள் ஓட ஓட விரட்டியடித்தனர்” என்கிற பாணியில் எழுதப்பட்டிருந்தது.

எந்தத் தரப்பையும் சாராத பத்திரிகைகளில் ‘அமைச்சரின் லஞ்ச ஊழல்கள்’ பற்றி அவரது சொந்த மகள் பிரசங்கம். கூட்டத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக மேடையில் ஒருவருக்குக் காயம். பிரசங்கம் பாதியில் முடிந்தது” என்று வெளியிடப்பட்டிருந்தது.

தீவிரமாக அமைச்சரையும் அவரது கட்சியையும், ஆட்சியையும் எதிர்க்கும் பத்திரிகைகள், “அமைச்சரின் முகமூடியை அவரது மகளே கிழிக்க முன் வருகிறார். மக்கள் மனக்குமுறல் - கோட்டை கலகலக்கிறது” என்கிற பாணியில் காரசாரமாக வெளுத்துக் கட்டியிருந்தார்கள். எப்படியோ எல்லாப் பத்திரிகைகளிலுமே தலைப்புச் செய்தி அந்தக் கூட்டமாகத்தான் இருந்தது. முத்துராமலிங்கம், மருத்துவமனையில் காலைப் பத்திரிகைகளைப் படித்துக் கொண்டிருந்தான். மங்கா அருகே இருந்தாள். சிவகாமிநாதனின் மகள் வீட்டுக்குச் சென்று முத்துராமலிங்கத்திற்குக் கஞ்சி, வெந்நீர் முதலியன தயாரித்து வர எண்ணிப் போயிருந்தாள். பேப்பர்களைப் படித்துக் கொண்டிருந்த முத்துராமலிங்கம்,

“உன்னாலே எத்தனை பிரச்னை பார்த்தியா?” என்று மங்காவைக் கேட்டான்.

“எங்கப்பா மனுஷனே இல்லே... ரொம்ப ரொம்ப ராட்சஸத்தனமாப் போறாரு...”

“மனுஷங்க யாரும் அவரு கட்சியிலேயே கிடையாதே? அப்புறம் அவரு மட்டும் எப்பிடி மனுஷனா இருக்க முடியும்?”

இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே கையில் பிளாஸ்குடனும் பையுடனும் அங்கே வந்த சிவகாமிநாதனின் மகள் பதற்றமாக அவனிடம் தெரிவித்தாள்.

“கலகத்துக்கும் தீ வைப்புக்கும் தூண்டுதல்னு குற்றம் சாட்டி அப்பாவைக் காலம்பர மூணரை மணிக்குப் போலீஸ் வந்து அரெஸ்ட் பண்ணிட்டுப் போயிட்டாங்க...”

“இதென்ன அக்கிரமாயிருக்கு? கலகத்தை எல்லாம் அவங்க ஏற்பாடு பண்ணிப்பிட்டு ஒரு பாவமுமறியாத இவரைப் பிடிச்சுக்கிட்டுப் போறதா? இதை ரெண்டுலே ஒண்ணு பார்த்துடணும்” என்று படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தான் முத்துராமலிங்கம்.

அத்தியாயம் - 26

காலைப் பத்திரிகையைப் படித்துவிட்டு - விசாரித்து விவரம் தெரிந்து கொண்டு அறை நண்பர் சண்முகம் அவனைப் பார்ப்பதற்குத் தேடி வந்திருந்தார். அவரை மற்றவர்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்தினான் முத்துராமலிங்கம். தியாகி சிவகாமிநாதன் அநியாயமாகக் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து பரபரப்பாகக் கிளம்பிக் கொண்டிருந்த முத்துராமலிங்கத்தைத் தடுத்து நிறுத்தி அமைதியும் நிதானமும் அடையச் செய்ததே சண்முகம்தான். இல்லாவிட்டால் மங்காவோ சிவகாமிநாதனின் மகளோ அப்போது அவனைத் தடுத்து நிறுத்தியிருக்க இயலாமற் போயிருக்கும்.

“அவரைக் கவனிச்சுக்க ஆளுங்க இருக்காங்க! தொண்டருங்க கொஞ்சமா, நஞ்சமா? நீ மண்டையை உடைச்சுக்கிட்டுப் படுக்கையிலே கிடக்கிறவன் போயி என்னப்பா பண்ண முடியும்? அவரை ஜெயில்லே போயி விசாரிச்சுக்கிறதுக்கோ, ஜாமீன்ல எடுக்கிறதுக்கோ ஏற்பாடு பண்ணுவாங்க - நீ கவலைப்படாதே.”

“நடக்கிற அநியாயங்களையும் அக்கிரமங்களையும் பார்த்து என் நெஞ்சு கொதிக்குதுப்பா? கேள்வி முறை இல்லாமப் போச்சே. இதென்ன மனுஷங்க வாழற நாடா இல்லே காடா...?”

“சிரங்கு கூட நல்லாப் பழுத்து முத்தினப் பெறவு தாம்ப்பா ஒடையும்! நம்ம சமூகமும் ஆட்சியும் அரசியலும், எல்லாம் இப்ப சிரங்கு மாதிரியும் புண்ணு மாதிரியும் உள்ளே சீழ் வச்சுப் பழுத்திருக்கு. உடையணும். உடைய வேண்டியதுதான் மீதம். எப்ப உடையும்னு தான் தெரியலே முத்துராமலிங்கம்!”

“புரையோடிப் போய் அழுகாமல் அது உடையணும். இன்று முதல் தரமான மனிதனுக்கும், முதல் தரமான எதிரிக்கும் போட்டி இல்லை இங்கே! பொது வாழ்க்கையிலே சகல துறைகளிலேயும் முதல் தரமான மனிதர்களுடனும் நான்காந்தரமான எண்ணங்களுடனும் மோதிச் சமாளிக்க வேண்டிய துரதிர்ஷ்டமான நிலையிலே இருக்கிறோம். அப்பழுக்கில்லாத சிவகாமிநாதன் போன்ற உத்தமர்கள், தியாகிகள் அறிவாளிகள் எல்லாம் ரௌடிகளிடமும் பிம்ப்களிடமும் பணத்துக்காகவும், சுய நலத்துக்காகவும், எதையும் செய்யத் தயாராயிருக்கும் மட்டமான மனிதர்களிடத்தில் எதிர்த்துப் போரிட வேண்டியிருக்கிறது.”

“செய்யறதையும் செஞ்சுப்புட்டு அமைதியை நாடும் அவதார புருஷர் மாதிரிக் காலம்பரப் பேப்பர்லே அறிக்கை வேற விட்டுப் புட்டாரு...”

“யாரைச் சொல்றீங்க...?”

“மந்திரியைத்தான்! கருத்து வேறுபாட்டைத் தெரிவிக்க கூட்டங்களில் வன்முறையை மேற்கொள்ளக் கூடாது. நேற்று இரவு தியாகி சிவகாமிநாதனின் பொதுக் கூட்டத்தில் புகுந்து கலவரம் நிகழ்த்திய காலிகளை வன்மையாகக் கண்டிக்கிறே’ன்னு அவரே ஒரு அறிக்கையும் விட்டிருக்காரே.”

“பார்க்கலியே...?”

அந்த மாதிரி மந்திரி நாதனின் அறிக்கை வெளியாகியிருந்த அவர் சார்புக் கட்சிப் பத்திரிகை ஒன்றை ஆள் அனுப்பி வாங்கி வரச் செய்து முத்துராமலிங்கத்திடம் காண்பித்தார் சண்முகம்.

“குழியைப் பறிச்சதுமில்லாமே குப்புறத் தள்ளியும் விட்ட கதையாவில்லே இருக்கு? இப்படிப் புத்தர் வேஷம் வேற போடணுமா?”

“வேஷம் போடறதுங்கறது இன்னிக்கு அரசியல்லே அன்றாடத் தொழிலாவே போயிரிச்சுப்பா! மிகத் திறமையா வேஷம் போடறவங்க நடிக்கிறவங்க எல்லாருமே இன்னிக்கு அரசியலுக்குள்ளே வந்திருக்காங்க. இத்தனை வேஷதாரிங்களுக்கு நடுவே உன் குருநாதர் திணறத்துக்குக் காரணம் இப்பப் புரியுதில்லே?”

சண்முகம் இப்படிக் கேட்டது நியாயமென்றே பட்டது முத்துராமலிங்கத்துக்கு. பொதுமக்களுக்கும் சமூகத்துக்கும் காண்பித்துப் புகழ் பெற ஒரு கருணை வடிவான புத்தர் முகமும் அந்தரங்க வாழ்வுக்கும், நடைமுறைக்கும் கடைவாய்ப் பற்கள் முளைத்த, கோர ராட்சஸ முகமுமாக வாழ்வது என்பது இன்றைக்கு மிகவும் சகஜமாகப் போயிருக்கும் ஒன்று என்பது புரிந்தது. சண்முகம் நடுநடுவே மந்திரி எஸ்.கே.சி.நாதனின் சொந்த மகளான மங்காவைப் பார்த்து, “நான் சொல்றேனேன்னு நீங்க தப்பா நெனைச்சுக்காதீங்க! உள்ளதைத் தான் சொல்றேன்” என்று தயங்கிய தொனியில் கூறியது அவளுக்கே பிடிக்கவில்லை.

“இதிலே எனக்கு வருத்தம் இல்லீங்க! எங்கப்பாவைப் பத்தி எனக்குத் தெரியாத எதையும் நீங்க சொல்லிடலே! எல்லாம் உள்ளதை உள்ளபடியே தான் சொல்றீங்க... கசப்பா இருக்குங்கிறதாலே உண்மை பொய்யாயிடாது. இந்த உண்மையை எல்லாம் நானே பகிரங்கமாகப் பேசி அவரைக் குற்றம் சாட்டத் தயார்னு தானே நேத்து மேடையேறினேன். அதுக்காகத்தானே இத்தினி கலாட்டாவும் நடந்திச்சு?”

“உங்க தைரியத்தைப் பாராட்டறேன்! ஒவ்வொரு சமூக விரோதியோட குடும்பத்திலேருந்தும் இப்பிடி ஒருத்தர் துணிஞ்சு கிளம்பி முன் வந்தா நாட்டை மாத்திப்பிடலாம்.”

அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த நர்ஸிங் ஹோமின் டாக்டர் வந்தார். முத்துராமலிங்கத்தைப் பார்த்தார். பரிசோதித்தார். மனந்திறந்து பேசினார்.

“பப்ளிக் செர்விஸ், பொதுப்பணி அது இதெல்லாம் எத்தினி அபாயகரமானதா ஆயிடிச்சுப் பாருங்க... நீங்க யாருக்கும் கெடுதல் செய்யவே வேணாம். சும்மா நல்லவங்களா இருந்து நல்ல காரியம் பண்ணணும்னு முயற்சி பண்ணினீங்கன்னாலே போதும், ‘உங்களுக்குக் கெடுதல் பண்ண ஆள் வரும். உங்களாலே யாருக்கும் கெடுதல் பண்ண முடியாதுன்னாலே போதும், உங்களுக்குக் கெடுதல் பண்ண ஓடி வந்துடுவாங்க. அதுதான் இன்னிக்கு நடை முறை. இந்த நடைமுறை புரியாம நம்ப சிவகாமிநாதன் சார் எதிர் நீச்சல் போடறார். அதனாலதான் இத்தினி கஷ்டமும்.”

“பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்னு பாரதியார் பாடியிருக்காரு.”

“அந்த மகாகவியோட வார்த்தைகள் சரியான தீர்க்க தரிசனம். அதுக்கு அட்சர லட்சம் குடுக்கணும்” என்ற டாக்டரை இடைமறித்து, முத்துராமலிங்கம் வினவினான். “நான் வெளியிலே மூவ் பண்ணலாமா டாக்டர்? விடிகாலையிலே தியாகி சாரை அரெஸ்ட் பண்ணிக் கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க... ஜெயில்லே போயி அவரைப் பார்க்கணும் முடியுமா? ப்ளீஸ்...”

“நானும் கேள்விப்பட்டேன். மந்திரிங்க வார்த்தையைக் கேட்டுப் போலீஸ் ரொம்பத்தான் அக்ரமம் பண்றாங்க... நானும் கூட அவரைப் பார்க்க வரணும்... ரவுண்ட்ஸ் போயிட்டு வந்தப்புறம் சேர்ந்தே போகலாம். எல்லாரும் பதினோரு மணிக்கு ரெடியா இருங்க! நானே ஜெயில் சூப்ரண்டுக்குப் போன் பண்ணி ஏற்பாடு செய்யறேன்.”

டாக்டரே இப்படிக் கூறியதும் எல்லாரும் சம்மதித்தார்கள். கூட்டத்தில் நடந்த வன்முறைகளுக்கு வருத்தம் தெரிவிப்பது போல் மிகவும் பெருந்தன்மையாக அறிக்கை விட்டுவிட்டு உள் ஏற்பாடாக சிவகாமிநாதன் மேல் பொய்க்குற்றம் சுமத்தி அவரை அரெஸ்ட் செய்து ஜெயிலிலே வைத்திருக்கும் கொடுமையை எண்ணி வியந்தார்கள் அவர்கள்.

பெருந்தன்மை, நேர்மை ஒழுக்கம் முதலிய நற்பண்புகளை எதற்கோ ‘அலிபி’யாகவே வைத்திருக்கும் இந்திய அரசியல்வாதிகளின் இலக்கணத்திற்கு ஏற்பத்தான் மங்காவின் தந்தையும் நடந்து கொண்டிருந்தார். இரட்டை வேஷம் போட்டிருந்தார்.

அவரது நேர்மை, ஒழுக்கம், மதச்சார்பின்மை, பிறர் நலம் பேணல் எல்லாமே ஓர் ‘அலிபி’ ஏற்பாடாக அவ்வப்போது தெரிந்தனவே ஒழிய இயல்பாயில்லை.

உதவிக் காமிராமேன் சண்முகமும் முத்துராமலிங்கமும் நிலைமையைப் பற்றித் தங்களுக்குள் விரிவாக விவாதித்தனர்; இளைஞர்களைச் சிவகாமிநாதன் தலைமையில் ஒன்று திரட்டி லஞ்சம், ஊழல், சந்தர்ப்பவாதம் ஆகியவற்றைத் தீவிரமாக எதிர்த்துப் போரிட வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள் அவர்கள்.

இத்தனை கொடுமைகளையும், எதிர்ப்புக்களையும் இடையூறுகளையும் தாங்கிக் கொண்டு கால் நூற்றாண்டுக் காலமாகப் போராடி வரும் தியாகி சிவகாமிநாதன் முள்முடி தாங்கி முழு வேதனையோடு அங்கமெல்லாம் ஆணியால் குத்தப்பட்டுப் புண்ணாகி நின்ற ஏசுபிரானைப் போல் பொறுமையாகத் தன் வேதனைகளைச் சகித்தபடி எதிர் நீச்சலிடுவதாக அவர்களுக்குத் தோன்றியது.

“தங்களை ஏமாற்றுகிறவர்களையே தலைவர்களாக நினைக்கும் மௌட்டீக மனப்பான்மை தீர்ந்து மக்கள் விழிப்படையாதவரை இங்கே எதையும் சாதிக்க முடியாது! சாத்வீகப் போராட்டத்துக்கு வேண்டிய ஆன்ம பலமும் இல்லாமல் வன்முறைப் புரட்சிக்கு வேண்டிய வைரமும் இல்லாமல் இரண்டுங்கெட்டானாக இருக்கும் மக்கள் சமுதாயத்தில் இப்படித்தான் நடக்கும். இதுதான் நடக்கும்” என்றார் சண்முகம்.

பதினொரு மணிக்கு டாக்டர் வந்தார். அவர் காரிலேயே எல்லாரையும் அழைத்துக் கொண்டு மத்திய சிறைச்சாலைக்குச் சென்றார். முத்துராமலிங்கம், சண்முகம், மங்கா, சிவகாமிநாதனின் மகள் மகன் ஆகியோருடன் டாக்டர் சென்றிருந்தார்.

சிறையில் அவருக்கு உரிய வகுப்புக் கொடுக்கப்படவில்லை. அரசியல் காரணமாகக் கைதானவர்களுக்குக் கொடுக்கப்படும் - வசதிகளும் செய்து தரப்படவில்லை. கேடிகள், திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் ஆகிய ரகத்தினரோடு சிவகாமிநாதனும் அடைக்கப்பட்டிருந்தார். முத்துராமலிங்கத்தைக் கனிவாக விசாரித்தார் அவர்.

“இந்த மண்டைக் கட்டோட நீ ஏன்ப்பா வந்தே? ரெஸ்ட் எடுத்துக் கொள்ளக் கூடாதா?”

“உங்களைப் பார்க்காம இருக்க முடியாதுன்னு தோணிச்சு, வந்தேன்.”

“நான் எங்கே போறேன்?... நீ உடம்பைக் கவனிச்சுக்கப்பா... டாக்டரிட்ட எல்லாம் சொல்லியிருக்கேன். பார்த்துக்குவாரு! ‘தியாகியின் குரல்’ ஒரு இஷ்யூ கூட நிக்கப்பிடாது! பயந்து நிறுத்திட்டோம்னு ஆயிடும்...”

“அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்... நீங்க கவலையில்லாம இருக்கலாம்”... என்று மங்காவும், அவருடைய மகனும், மகளும் முந்திக் கொண்டு உறுதி கூறினார்கள். சண்முகம் வந்ததற்காக அவரிடம் நன்றி சொல்லிப் பாராட்டினார் சிவகாமிநாதன். டாக்டர் அவரை ஜாமீனில் விடுவிப்பதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கப் புறப்பட்ட போது, “எனக்கு அவசரம் ஒன்றுமில்லை! என்னைக் கைது செய்தது பச்சை அயோக்கியத்தனம். பழி வாங்கும் செயல் தவிர இது வேறு ஒன்றும் இல்லை என்று பொதுமக்களுக்குப் புரிய வைப்பதற்காகவாவது நான் இன்னும் கொஞ்ச நாள் ஜெயிலேயே இருந்துடலாம்னு நெனைக்கிறேன்” என்றார் சிவகாமிநாதன்.

“உங்களுக்குக் குடுக்க வேண்டிய கிளாஸைக் குடுக்காம இப்படிக் கொலைகாரங்களோடவும் கொள்ளைக்காரங்களோடவும் போட்டிருக்காங்களே!”

“வெளியிலே இல்லாத கொலைகாரங்களும் கொள்ளைக்காரங்களுமா உள்ளே இருந்துடப் போறாங்க? அவங்களோடவே சேர்ந்து வாழறதைத் தவிர்க்க முடியாதப்போ, இவங்களோட சேர்ந்து வாழறது மட்டும் எந்த விதத்தில் கேவலம்?”

சிரித்துக் கொண்டே தான் இப்படிக் கேட்டார் சிவகாமிநாதன். கண்கலங்க நின்று கொண்டிருந்த மங்காவைப் பார்த்துத் தனியாக அவளுக்கென்றே அவர் பேசினார்.

“தைரியமா இரும்மா! தர்மயுத்தத்திலே இறங்கியாச்சு... ஜெயிக்கிற வரை இனிமேல் போராட்டம் தான்... இதில் புறப் போராட்டத்தை விட மனப்போராட்டம் தான் அதிகமாயிருக்கும்...”

“என்னாலே உங்களுக்குப் புதுப் புதுச் சங்கடங்களும், கஷ்டங்களும் வர்றதைப் பார்த்துத்தான் மனசுக்கு வேதனையாயிருக்கு.”

“மனசை உறுதியா வச்சுக்கப் பழக்கு அம்மா! எல்லாம் சரியாகும். நமக்கு வேண்டாதவர்களிலுள்ள அயோக்கியர்களை எதிர்க்கிறது எல்லாராலேயும் எங்கேயும் முடியற காரியம் தான். நமக்கு ரொம்ப வேண்டியவர்களிலுள்ள அயோக்கியர்களை எதிர்க்கத்தான் அபாரமான மனோ தைரியம் வேண்டும். கீதையின் சாரமே அப்படி எதிர்ப்புத்தான்.”

நேரமாகி விட்டது என்று சிறை அதிகாரி வந்து அவசரப்படுத்தினார். அவர்கள் அவரிடம் சொல்லிப் பிரிய மனமில்லாமல் விடைபெற்றுக் கொண்டு பிரிந்து வெளியே வந்தார்கள். வெளியே சென்ட்ரல் ஸ்டேஷன் என்ற முகத்துவாரத்தில் ஜன ஊற்றுப் பெருகிப் பிரவாகமாகப் பாய்ந்து வந்து கொண்டிருந்தது.

அத்தியாயம் - 27

சிறையில் சிவகாமிநாதனைப் பார்த்துவிட்டுத் திரும்பிய பின், “இனிமேல் நீங்கள் நர்ஸிங்ஹோமில் படுக்கையில் தான் இருந்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டிலேயே ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். கட்டுப் பிரிக்கிற போது மட்டும் இங்கே நர்ஸிங்ஹோமுக்கு வந்தால் போதுமானது” என்று டாக்டர் முத்துராமலிங்கத்திடம் சொன்னார்.

அறை நண்பர் சண்முகம் அவனைத் தம்மோடு கோடம்பாக்கத்துக்கே வந்து விடச் சொன்னார். சிவகாமிநாதனின் மகன் பாண்டித்துரையும், மகள் கஸ்தூரியும் முத்துராமலிங்கத்தை நர்ஸிங்ஹோம் பக்கத்திலிருந்த காரணத்தால் சிந்தாதிரிப்பேட்டையிலேயே தொடர்ந்து தங்கச் சொன்னார்கள்.

“அப்பா ஜெயில்லே இருக்கிறதாலே அது பத்திரிகையைப் பாதிக்கக் கூடாது. நீங்களும் மங்கா அக்காவும் இங்கேயே கூட இருந்தீங்கன்னாப் பத்திரிகை வேலைக்கு எங்களுக்கு ரொம்ப உதவியாயிருக்கும்” என்றார்கள் சிவகாமிநாதனின் மக்கள்.

அப்போ அவர்களுக்குப் பாதுகாப்பாகவும், பத்திரிகைக்குப் பாதுகாப்பாகவும் உடனிருக்க வேண்டியது அவசியம் என்று முத்துராமலிங்கத்துக்கே தோன்றியது. சிவகாமிநாதனுக்கு வாக்குக் கொடுத்திருப்பது நினைவு வந்தது. அவன் சிந்தாதிரிப்பேட்டையிலேயே தங்க முடிவு செய்தான்.

உதவி காமிராமேன் சண்முகம் இரண்டு மூன்று நாட்களுக்கு ஷூட்டிங் வேலைகள் எதுவுமில்லை என்று சொன்னதால், அவரையும் ‘தன்னோடு தற்காலிகமாகத் தங்க முடியுமா?’ என்று கேட்டான் முத்துராமலிங்கம். சண்முகம் அதற்குச் சம்மதித்தார். மங்கா தங்களோடு அந்த வீட்டில் தங்குகிற வரை தங்களுக்கு அவள் தந்தையான மந்திரியிடமிருந்து ஆபத்துக்களும், எதிர்ப்புக்களும் நிறைய இருக்குமென்று முத்துராமலிங்கத்துக்கும் மற்றவர்களுக்கும் நன்றாகப் புரிந்துதான் இருந்தது. ஆபத்துக்கோ, அபாயத்துக்கோ பயந்து, அடைக்கலம் புகுந்து வந்தவளைக் கைவிடுவதற்கும் அவர்கள் தயாராயில்லை.

தான் தந்தைக்கு எதிராகப் புறப்பட்டு வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டதால் தான் அவர்களுக்கு இத்தனை தொல்லைகள் என்பதை மங்காவே மெல்ல மெல்ல உணரத் தொடங்கியிருந்தாள். முதலிலேயே இதை எதிர்பார்த்து அநுமானித்த சிவகாமிநாதனின் தீர்க்கதரிசனத்தை இப்போது அவள் வியந்தாள்.

சண்முகம் இரண்டு மூன்று நாட்கள் சிந்தாதிரிப்பேட்டையில் முத்துராமலிங்கத்தோடு தங்கினாராயினும் வெளியிலே ஹோட்டலிலே போய்த்தான் சாப்பிட்டுவிட்டு வந்தார். வீட்டிலேயே சாப்பிட அவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் கேட்கவில்லை. முத்துராமலிங்கத்துக்கு அவர் ஆறுதல் சொன்னார்.

“சினிமாவிலே வேலை போயிரிச்சேன்னு வருத்தப்பட வேண்டாம். என்னைப் போலொத்தவன் ஏதோ தாமரை எலைத் தண்ணி மாதிரி அங்கே இருந்துக்கிட்டிருக்கேன். உனக்கு இந்த ஃபீல்டு ஒத்துக்காதுன்னு நீ சேர்ந்தப்பவே நான் நினைச்சேன். தேனா இனிக்கிற சொளை உள்ளே இருந்தாலும் பலாப் பழத்தைப் பிரிச்சதும் சாக்கடைக்கு அடியிலேருந்து வர்ற மாதிரி அடிக்குமே ஒரு துர்வாடை, அதுபோல இந்த ஃபீல்டோட கவர்ச்சியிலிருந்து பிரித்து எடுக்க முடியாதபடி பொய், வஞ்சகம், ஏமாற்று, வேஷம், ஒழுக்கக் குறைவு, நாணயமின்மை, குழி பறிக்கிறது எல்லாம் சேர்ந்து நாத்தமடிக்கும். உன்னாலே இந்த நாத்தத்துலே காலந்தள்ள முடியாது.”

“பாபுராஜ் எனக்குச் சீட்டுக் கிழிச்சதுக்காக நான் கொஞ்சங்கூட வருத்தப்படலே. ஊருக்குக் கொஞ்சம் பணம் அனுப்பிக்கிட்டிருந்தேன். இனிமே அதை அனுப்ப வழியில்லே! வேற வேலை கெடச்சுக் கையிலே மிஞ்சினாத் தான் அனுப்பலாம்.”

“வேற வேலை கெடைக்கிற வரை நான் வேணும்னாப் பணம் தரேன். ஊருக்கு அனுப்பு, கெடைச்சதும் திருப்பிக் குடு. போறும். அனுப்பிக்கிட்டிருந்ததைத் திடீர்னு நிறுத்துவானேன்?”

‘நான் செய்கிறேன். நான் இருக்கிறேன். என்னால் தான் முடியும்’ என்பது போலெல்லாம் முனைப்போ செருக்கோ தெரியாமல் சகஜமாகவும், இயல்பாகவும் சண்முகம் தனக்கு உதவிகள் செய்ய முன்வருவதை நினைத்து முத்துராமலிங்கம் உள்ளூர வியந்தான். அப்படி உதவ முன் வருகிறவர்கள் இன்றைய சமூக அமைப்பில் மிக மிகக் குறைவாகவே தென்பட்டதுதான் காரணம். மறுநாளே டாக்டரின் முயற்சியால் சிவகாமிநாதன் விடுதலை செய்யப்பட்டு வெளியே வந்துவிட்டார். ஏற்கெனவே மங்காவும், முத்துராமலிங்கமும் மற்றவர்களும் நிறைவேற்றி வைத்திருந்ததால் ‘தியாகியின் குரல்’ தாமதமின்றி வெளிவந்தது. சிறையில் அதிக நாட்கள் வைத்தால் அது அவருக்குப் புகழ் தேடித் தரும் என்று கருதியோ என்னவோ தான் இரண்டொரு நாட்களில் சிவகாமிநாதனையும் அவர்கள் விடுதலை செய்துவிட்டிருந்தார்கள்.

சிந்தாதிரிப்பேட்டையில் அவர்கள் எந்த இடத்தில் கூட்டம் நடத்தினார்களோ, அதே இடத்தில் மந்திரி எஸ்.கே.சி.நாதனின் கட்சியும் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. மந்திரிக்கு அடுத்தபடி இருந்த பேச்சாளர்கள் பட்டியலில் கலையரசி கண்மணியின் பெயரும் காணப்பட்டது.

அரசியல் எதிரிகளோடு போய்த் தங்கித் தனது குட்டுக்களை உடைத்துக் கொண்டிருக்கும் தன் மகள் மங்காவை அவர்கள் ‘கிட்நாப்’ செய்து கொண்டு போய்ப் பலவந்தமாகத் தன்னை எதிர்த்து மேடையில் பேசவைப்பதாகக் குற்றம் சாட்டி நடவடிக்கை எடுக்க முயற்சிகள் செய்து அவள் மேஜரான பெண் என்பதால் அதைக் கைவிட்டு விட்டு இப்படி எதிர்ப்பு முயற்சிகளில் தந்தை இறங்கியிருக்கிறார் என்பது நம்பகமான உள்மனிதர்கள் மூலம் மங்காவுக்குத் தெரிந்தது. அவள் உறுதியாயிருந்தாள். தந்தை அழுக்கடைந்து நாறிக் கொண்டிருக்கிற முடை நாற்ற அரசியலை அவள் மனப்பூர்வமாகவே வெறுக்கத் தொடங்கியிருந்தாள். அவரையும் அவரது முறைகேடுகளையும், ஊழல்களையும் நினைத்தாலே அவளுக்குக் குமட்டிக் கொண்டு வந்தது.

பொதுக் கூட்டத்தில் கலவரம் காரணமாகப் பேச இயலாமற் போன கருத்துக்களைத் தியாகியின் குரலில் தொடர்ந்து எழுதத் தொடங்கியிருந்தாள் மங்கா. “ஊழலின் உதாரண புருஷர்கள்” என்று அந்தக் கட்டுரைத் தொடருக்குத் தலைப்பு இடப்பட்டிருந்தது. இந்தக் கட்டுரைத் தொடர் ஆரம்பமான அந்த இதழ் ‘தியாகியின் குரல்’ பிரதிகள் எல்லாவற்றையும் ஆட்களையும் போலீஸையும் விட்டே விலைக்கு வாங்கிவிட்டார் எஸ்.கே.சி.நாதன்.

மந்திரியின் கூட்டம் நடைபெற இருந்த தினத்தன்று காலை யாரும் எதிர்பாராத விதமாகக் கண்மணி முத்துராமலிங்கத்தைத் தேடி வந்து சேர்ந்தாள். அவளோடு ஒரு பெரிய கும்பலே கூட வந்தது. சின்னி கூட அதில் இருந்தான். கசாப்புக் கடைக்காரர்கள் இராமலிங்க வள்ளலார் மன்றத்தைத் தேடி வந்த மாதிரி அந்தக் கூட்டம் சிவகாமிநாதனின் வீட்டைத் தேடி வந்திருப்பதைக் கண்டு சுற்றுப்புறம் ஆச்சரியத்தில் மூழ்கியது. தாக்க வந்திருக்கிறார்களோ என்று கூடச் சிலருக்குச் சந்தேகமாக இருந்தது.

“அண்ணே, பத்திரிகையிலே சங்கதி பாத்ததிலேருந்து மனசு பதறிப் போச்சு! எந்தப் பாவி இப்பிடிப் பண்ணினான்” - என்று ஆறுதல் வினாவோடு அவனை அணுகினாள் கண்மணி.

“வேற யாரு? எல்லாம் உங்க கட்சிக்காரங்கதான்! அடி, உதை, கலாட்டா, கல்லெறி, சோடா புட்டி வீச்சு, எல்லாத்தையுமே தேசிய நாகரிங்களாக்கினதே உங்க கட்சி தானே?”

“அப்பிடியா சொல்றீங்க? நான் வேற மாதிரியில்லே கேள்விப்பட்டேன்? உங்க மேடையிலே எங்க கட்சி மந்திரியோட பொண்ணு பேசறேன்னு முன் வந்ததாலே உங்க தொண்டருங்களே கொதிப்படைஞ்சு ஆத்திரத்திலே எதிர்த்துக் கலாட்டாப் பண்ணிட்டாங்கன்னிலே சொன்னாங்க...?”

இதைக் கேட்டு இன்னும் யாரென்று அறிமுகமாகாமல் அருகே நின்று கொண்டிருந்த மங்கா கண்மணையை முறைத்துப் பார்த்தாள். கண்மணியின் சிரிப்பும், கண்ணசைப்பும், விட்டுத் தெரிந்த கவர்ச்சிகளும், முத்துராமலிங்கத்திடம் அவள் காட்டிய அந்நியோந்நியமும் ஏற்கெனவே மங்காவுக்கு எரிச்சலூட்டியிருந்தன. பரஸ்பரம் ஏற்பட்டுவிடக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட கடுமைகளைத் தவிர்ப்பதற்காக உடனே இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தான் முத்துராமலிங்கம்.

“உங்க பேரு தான் கண்மணீங்கறதா? நீங்க இன்னிக்கு சாயங்காலம் எங்களை எதிர்த்துக் கூட்டத்திலே பேசப் போறீங்கன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டியிருக்காங்களே?”

“ஆமா தங்கச்சீ! நானேதான். அரசியல் ரீதியாதான் அண்ணனுக்கு எதிர்ப்பக்கத்திலே இருக்கேன்... ஆனாலும் தனிப்பட்ட முறையில் அண்ணன் நம்ம ஏரியா ஆளுங்கறதாலே ஒரு ‘இது’ உண்டு.”

அந்த ‘இது’வுக்கு என்ன அர்த்தம் என்று புரிந்து கொள்ள மங்கா மனதிற்குள் தீவிரமாக முயன்று கொண்டிருந்தாள்.

“அண்ணனைப் பார்க்க இங்கே தேடி வந்திருக்கேன்னு என்னோட கட்சி விசுவாசத்தைப் பத்தித் தப்புக் கணக்குப் போடாதீங்க... சாயங்காலம் கூட்டத்திலே வந்து கேட்டீங்கன்னா அண்ணனையும், தியாகி சாரையும் பிச்சுக் குதறிக்கிட்டிருப்பேன்.”

பொறுமை மீறிச் சண்முகம் குறுக்கிட்டார்.

“எதுக்குக் கட்சி விசுவாசன், அது இதுன்னு பெரிய பெரிய வார்த்தைகளையெல்லாம் பேசறீங்க... ரெண்டு பெரிய கள்ளச் சாராய கோஷ்டிகளுக்கு நடுவிலே சிக்கிக் கிட்டுத் திணறது நம்ப ஊரு! எதுக்கு உண்மையை மறைச்சிக்கிட்டு ரெண்டு பேரும் அநாவசியமா புத்தர் வேஷம் போட்டு ஊரை ஏமாத்தணும்?”

“ஏதேது? தியாகி சார் மாதிரியே பேசறீங்களே!”

“தியாகி சார் கட்சி நடத்தலே. தேர்தலுக்கு நிக்கலே... ஊரை ஏமாத்தலே... லஞ்சம் வாங்கலே. அதுனாலே தைரியமா மனசிலே பட்டதைச் சொல்றாரு.”

“எங்க தலைவர் அப்படி இல்லே! நாங்க கொள்கைக்காகத் தீக்குளிக்கவும் தயார்.”

“அதான் கொள்கைகள் எல்லாத்தையும் தீக்குளிக்க வச்சுச் சாம்பலாக்கிப் பத்துப் பதினாலு வருசம் ஆச்சே? இன்னும் என்ன மிச்சமிருக்கு இங்கே...?”

“இதுக்கெல்லாம் பதில் சாயங்காலக் கூட்டத்திலே சொல்றேன்... கேட்டுக்குங்க...”

கண்மணி உடம்பைக் கவனித்துக் கொள்ளச் சொல்லி முத்துராமலிங்கத்தை வேண்டி விடைபெற்றுக் கொண்டு போய்ச் சேர்ந்தாள். சண்முகம் அவள் போவதைப் பார்த்து மங்காவையும் முத்துராமலிங்கத்தையும் நோக்கி அர்த்த புஷ்டியுள்ளதாகச் சிரித்தார்.

சாயங்காலக் கூட்டத்தில் அமைச்சரும், கலையரசி கண்மணியும் வந்து முதலிலேயே மேடையில் அமர்ந்து விட்டார்கள். முதலில் கட்சியைச் சேர்ந்து நாலைந்து பேட்டை ரவுடிகள் பேசினார்கள்.

உபயோகப்படுத்தும் சொற்கள், மொழி நடை ஆகியவற்றின் தராதரம் முற்றிலும் மரத்துப் போகிற அளவிற்கு அவர்கள் பேசு முன் சாராயத்தில் மூழ்கி முக்குளித்து எழுந்து வந்திருந்தார்கள் போலிருக்கிறது.

முத்துராமலிங்கத்தையும், தியாகியின் மகளையும் சம்பந்தப்படுத்தித் தாறுமாறாகப் பேசினார்கள். வீட்டிலிருந்தபடியே கேட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் எரிச்சலாயிருந்தது. தியாகி சிவகாமிநாதனின் குடும்ப விஷயங்களைக் கொச்சைப்படுத்திப் பேச்சுக்கள் தொடர்ந்தன.

“அண்ணே, வாங்க போய் எலும்பை நொறுக்கிப் போட்டு வரலாம்” என்று கொதித்துச் சண்முகத்தையும் அழைத்தபடி எழுந்தான் முத்துராமலிங்கம்.

“பொறு தம்பீ, பதறாதே! தெரு நாய்களும், சொற் நாய்களும் குறைப்பதற்கு அஞ்சிச் சூரியன் அஸ்தமித்து விடுவதில்லை” என்று அப்போது அவனைத் தடுத்து உட்கார வைத்தார் சிவகாமிநாதன்.

அத்தியாயம் - 28

மேலும் அந்தப் பேச்சுக்களைக் கேட்டபடியே அங்கேயே தொடர்ந்து இருந்தால் முத்துராமலிங்கம் பொறுமை இழக்கக்கூடும் என்று அநுமானித்த சிவகாமிநாதன் அவனையும் மங்காவையும், சண்முகத்தையும் கடற்கரைக்குப் போய்க் காற்றாட உட்கார்ந்து பேசிவிட்டு வரலாம் என்று அழைத்துச் சென்றார். அவர்கள் ஒரு டாக்ஸியில் கடற்கரைக்குச் சென்றார்கள்.

“அரசியல்லேயும், பொது வாழ்விலேயும் ஈடுபட்டிருக்கிறவர்களுக்கு அந்தரங்க சுத்தி இல்லே. பத்துப் பேரைக் கூட்டி வச்சுக்கிட்டு நடுத்தெருவிலே வித்தை காட்டற பாம்பாட்டிங்க மாதிரிதான் கட்சித் தலைவருங்களும் கட்சிக் கூட்டங்களும் ஆயிடிச்சுப்பா. இந்த அரசியல் பாம்பாட்டிங்க பேசறது, செய்யிறது எல்லாத்தையும் பார்க்கறப்ப நமக்கு அருவருப்பா இருக்கு - கோபம் வருது- ஆனாலும் பொறுத்துக்கத்தான் வேண்டியிருக்கு” என்று வருந்தினார் சிவகாமிநாதன். முத்துராமலிங்கம் அதற்கு மறுமொழி கூறினான்:

“அதுக்காக நாக்கிலே நரம்பில்லாமே எதை வேணுமானாலும் பேசறதா? கேள்வி முறையே இல்லியா?”

“நாக்கிலே நரம்பில்லாமே - வாக்கிலே வரம்பில்லாமே - எதை வேணாலும் எப்படி வேணாலும் பேசறதே ஒரு கலையா வளர்ந்துக்கிட்டிருக்கே இன்னிக்கி” என்று சண்முகம் முத்துராமலிங்கத்தை நோக்கி எதிர்க் கேள்வி போட்டார். மங்கா சுடச்சுடச் சொன்னாள்:

“மந்திரீன்னு பேரையும் வச்சுக்கிட்டு வெக்கமில்லாமே மேடையிலே உட்கார்ந்து இதையெல்லாம் ரசிச்சுக்கிட்டிருக்காங்களே, அதைச் சொல்லணும்?”

“யாரை? உங்கப்பாவைத்தானே சொல்றே?”

“அவரைத்தான்! வேற யாரை?” என்று சிரித்தபடியே முத்துராமலிங்கத்துக்கு மறுமொழி கூறினாள் மங்கா. அவனும் பதிலுக்கு நகைத்தான்.

அவர்கள் கடற்கரையில் உழைப்பாளிகள் சிலை அருகே கீழிறங்கி மணற்பரப்பில் நடந்தனர். சண்முகம் அலையருகே போய் நிற்பதற்கு எண்ணிக் கடலை நோக்கி நடந்தார். மங்காவும் முத்துராமலிங்கமும் சிவகாமிநாதனும் மணற்பரப்பில் அமர்ந்தார்கள். சிவகாமிநாதன் தான் முதலில் தொடங்கினார்.

“அந்தக் கூட்டம் முடிஞ்சப்புறம் நாம வீடு திரும்பினாப் போதும்! அதுவரை அங்கே இருக்கறது நல்லதில்லே. உங்கப்பா உன் மேலேயும் எங்க மேலேயும் ரொம்ப ஆத்திரத்தோட இருக்காரு. நீ மேஜரான பொண்ணுங்கறதாலே சட்டப்படி உன்னை ஒண்ணும் செய்ய முடியலே. அதுனாலே கும்பலா வந்து தாக்கலாம். உன்னைக் காரிலே தூக்கிப் போட்டுக்கிட்டுப் போக முயற்சி பண்ணலாம்... என்ன வேணும்னாலும் நடக்கும்.”

“நான் அதுக்குச் சம்மதிச்சாத்தானே?”

“பலவந்தமா வீடு புகுந்து தூக்கிக்கிட்டுப் போகலாம்னு நெனைக்கிறப்ப உன் சம்மதத்தை யாரும்மா கேட்டுக்கிட்டு வரப்போறாங்க. இப்போ என்னையும் என் மகளையும் பத்திக் கன்னா பின்னான்னு மேடையிலே பேசிக்கிட்டிருக்காங்களே, அதுக்கு என்ன நோக்கம் தெரியுமா? எனக்கும் முத்துராமலிங்கத்துக்கும் ஆத்திரமூட்டணும், அந்த ஆத்திரத்திலே நாங்க உன் மேலே வெறுப்படைஞ்சு, ‘எல்லாத்துக்கும் உங்கப்பாவை விட்டு நீ இங்கே வந்ததுதாம்மா காரணம். பேசாமே நீ திரும்ப வீட்டுக்குப் போயி உங்கப்பாறோட இரு’ன்னு சொல்லி உன்னை அங்கே அனுப்பிடுவோம்னு எதிர்பார்க்கிறாரு.”

“உயிர் போனாலும் நான் அப்படிச் செய்யப் போறதில்லே.”

“அடடே... விஷயத்தைப் புரிஞ்சுக்காமப் பேசறியேம்மா. நீ போயிடுவேன்னு நான் சொல்ல வரலே... உன்னை எப்பிடியாவது எங்க தரப்பிலேருந்து பிரிச்சுக் கொண்டு போயிட அவங்க முயற்சி பண்ணுவாங்கன்னு தான் சொன்னேன்.”

“நீங்க சொல்றது சரிதான். இப்பிடி ஏதாவது செய்துடலாம்னு அவங்க புத்தி குறுக்கு வழியிலே தான் வேலை பண்ணும். உங்களுக்கோ எனக்கோ முதல்லே மறைமுகமாகவும் அப்புறம் நேரடியாகவும் தொந்தரவு கொடுத்தா நாம ரெண்டு பேருமே இவளைக் கைவிட்டுடுவோம்னு அவங்களுக்குத் தோணும்” என்றான் முத்துராமலிங்கம்.

“அப்பாவோட அரசியல் தகிடுதத்தங்களும் ஊழலும் பிடிக்காமேதான் எங்கண்ணன் வெளிநாட்டிலேயே தங்கிடிச்சு. நா வேணா பர்மிங்ஹாம் அண்ணனுக்கு ஒரு கேபிள் குடுத்து இப்ப வரவழைக்கட்டா?”

“செய்யலாம் அம்மா! ஆனா அதுக்கு எப்பிடியும் பத்துப் பதினைஞ்சு நாள் ஆகும். இப்ப உடனடியாக நாம ஒரு ஏற்பாடு பண்ணிப் பாதுகாப்புத் தேடியாகணும்.”

“நீங்க என்ன சொன்னாலும் அதுக்கு நான் கட்டுப்படுவேன் ஐயா” என்றாள் மங்கா. முத்துராமலிங்கமும் அதையே சொன்னான். அவர் தொடர்ந்தார்.

“தயவு செய்து உங்களுக்காக ஒரு நியாயமான பாதுகாப்புக்காக நான் கவலைப்படறேன்னு மட்டும் புரிஞ்சுக்குங்க. பயப்படறேன்னு நெனைக்காதீங்க. தைரியம், வீரம், துணிவு எல்லாத்துக்கும் ஏதோ ஒரு விதத்திலே சரியான அடிப்படை நியாயம் இருக்கணும்னு நெனைக்கிறவன் நான். இப்ப நான் சொல்லப் போறதை அந்த அடிப்படையிலே தான் நீங்க எடுத்துக்கணும்.”

“அடிப்படையில் நியாயமில்லாத தைரியமும், துணிவும், வீரமும் யாருக்கு இருந்தாலும் அது சரியில்லை! இந்தத் தர்ம யுத்தத்தை நாம் தொடர்ந்து நடத்தியாகணும்னா அதுக்கு முதல்லே நம்மைத் தயார் செய்து கொள்ள வேணும். இப்பிடி உதிரி உதிரியாத் தணிச்சு நின்னு போராடறப்ப வீண் பழிகளும், அபவாதமும் வரத்தான் வரும். நான் சொல்றதை நீங்க ரெண்டு பேரும் தப்பா நினைக்கலேன்னு நம்பித்தான் இதைச் சொல்றேன். உங்க சிநேகிதத்தை அல்லது நெருக்கத்தை நீங்க ஏன் சட்டப்பூர்வமானதாக்கிக் கொள்ளக்கூடாது? அப்படிப் பண்ணிக்கிட்டா நாம் இன்னும் நிமிர்ந்து நின்னு போராடலாம். உங்களுக்குச் சம்மதமானா நானே தலைமை வகிச்சு உங்க திருமணத்தை நடத்தி வைக்கிறேன்.”

இதைக் கேட்டு மங்கா நாணித் தலைகுனிந்தாள். முத்துராமலிங்கம் அவளை மௌனமாகப் பார்த்தான். அவன் அவளுடைய மறுமொழியை எதிர்பார்க்கிறான் என்று தெரிந்தது.

“நீ சொல்லும்மா முதல்லே. இதிலே உன் பதில்தான் எனக்கு முக்கியம்!”

“நீங்க சொல்றதிலே எனக்கு முழுச்சம்மதம் ஐயா!” என்று அவள் பதில் சொல்லிய போது வார்த்தைகள் மகிழ்ச்சி நிறைவில் தடுமாறின.

“எங்கேயாவது ஆடம்பரமில்லாமே ஒரு கோவில்லே தாலியைக் கட்ட ஏற்பாடு பண்ணுவோம். அப்புறம் திருமணத்தைச் சட்டப்படி பதிவும் பண்ணிடலாம்! அவங்க இதைக் கொச்சைப்படுத்தியோ, கேவலப்படுத்தியோ பேசறத்துக்குள்ள நாம இப்படி நியாயப்படுத்திக்கலாம். மங்கா மேஜரான பொண்ணு! நீயும் மேஜரான பையன்! இந்த ஏற்பாட்டுக்கு அப்புறம் உங்களைப் பிரிக்கவோ, அவதூறு பேசவோ அவங்க முயற்சி பண்ணினாச் சட்டமும், முறைகளும் உங்களுக்கு ஆதரவா இருக்குமே ஒழிய அவங்களுக்கு ஆதரவா இருக்காது!”

ஒரு போராட்டத்துக்கு முன் தம்மைத் திட்டமிட்டுத் தயாரித்துக் கொள்ளும் முன்னேற்பாடும் ஒழுங்குமே அவர் பேச்சில் தொனிப்பதை முத்துராமலிங்கம் கவனித்தான்.

ஆளும் கட்சி, போலீஸ், பணபலம், பதவிச் செல்வாக்கு எல்லாம் உள்ள ஒரு வலுவான முரட்டு எதிரியுடன் போரிடத் தொடங்குமுன் இந்த ஆயத்தம் அவசியம் தான் என்று அவனுக்கும் தோன்றியது. அவரே அவனை மேலும் கேட்டார்:

“தம்பீ! இது விஷயமா நீ உன் பெற்றோரிடம் கலந்து பேச வேண்டிய அவசியம் உண்டா?”

“இல்லே! அவங்களுக்கு இதைப் புரியவைக்கறதே கஷ்டம்! அதுனாலே என் தந்தை ஸ்தானத்திலே இருந்து இதைச் செய்யிற பொறுப்பை உங்ககிட்டயே விட்டுடறேன் ஐயா!”

முத்துராமலிங்கம் இதை மனப்பூர்வமாகவே கூறினான். அவர் எடுத்துக்காட்டிய சூழ்நிலையின் அவசரமும் அபாயமும் அவனுக்குப் புரிந்தன. அதிலுள்ள நியாயமான ராஜதந்திரமும் புரிந்தது. பக்கா சந்தர்ப்பவாதியான மந்திரி எஸ்.கே.சி.நாதன் அப்போதிருந்த கட்சியின் கொள்கைக்கு ஏற்பக் கலப்பு மணம், சீர்திருத்த மணம், காதல் மணம், பெண்ணுரிமை எல்லாவற்றையும் ஆதரித்து மிகவும் தாராளமாகவே பல மேடைகளில் முழங்கிக் கொண்டிருந்தார். அதனால் மங்கா - முத்துராமலிங்கம் திருமணத்தை இடையூறு செய்து நிகழவிடாமல் தடுக்க முயன்றால் அவரே ‘எக்ஸ்போஸ்’ ஆகிவிடுவார். அவரே கலப்பு மணத்தை எதிர்க்கின்றார் என்று பத்திரிகைகளும் எதிரிகளும் அவரைச் சாடும்படி ஆகிவிடும். அதனால் அவர் இந்த மணத்தைத் தடுக்க முயலவே மாட்டார். திருமணம் ஆனபிறகோ தலையிடுவதும், கெடுதல்கள் புரிவதும் சட்டப்படியே சாத்தியமில்லாதவை. இவற்றை எல்லாம் நன்கு யோசித்தே தியாகி சிவகாமிநாதன் இந்த யோசனையைக் கூறுகிறார் என்று இருவருக்குமே புரிந்தது. இருவருமே அந்த ஏற்பாட்டினால் தங்களுக்குக் கிடைக்கிற விருப்பத்துக்கிசைந்த வாழ்வையும் இயல்பான சமூகப் பாதுகாப்பையும் உணர்ந்தார்கள்.

கடல் அலைகளை வேடிக்கை பார்க்கக் கரையருகே நெருங்கிச் சென்றிருந்த சண்முகம் திரும்பி வந்தார். சிவகாமிநாதனே இந்த யோசனையைச் சண்முகத்திடம் விவரித்தார். கேட்ட பின் சண்முகமே மங்காவையும், முத்துராமலிங்கத்தையும், “இப்ப இருக்கிற சூழ்நிலையிலே இதை விடப் பிரத்யட்சமானதும், பாதுகாப்பானதுமாக வேறொரு யோசனை இருக்க முடியாது. இதனாலே நீங்க மகிழ்ச்சியை மட்டும் அடையலே... பத்திரமான வாழ்க்கையையும் அடையறீங்க...” என்றார்.

காதும் காதும் வைத்தாற்போல ஏற்பாடுகள் நடக்க வேண்டும் என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். சண்முகம் தனது முழு ஒத்துழைப்பையும் அவர்களுக்குத் தருவதாகக் கூறினார். மங்கா முத்துராமலிங்கம் குடும்ப வாழ்க்கையைப் பற்றியும், தியாகியின் குரல் பத்திரிகையின் வளர்ச்சித் திட்டங்கள் பற்றியும் இரவு பதினோரு மணி வரை கடற்கரையில் பேசிக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் வீடு திரும்பினார்கள் அவர்கள். பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்துக்கு வடபுறம் கூவத்தின் கரையை ஒட்டி மவுண்ட்ரோடு செல்லும் சாலை வழியே நடந்தே போய் ஜிம்கானா கிளப் அருகே தெருவைக் கடந்து நேப்பியர் பூங்கா வழியே அவர்கள் சிந்தாதிரிப்பேட்டைக்குள் புகுந்த போது சிவகாமிநாதனின் இயக்கத் தொண்டர்கள் கூட்டமாக ஓடி வந்து அவர்களை எதிர்கொண்டார்கள்.

மந்திரி எஸ்.கே.சி. நாதனின் பேச்சுக்குப் பின் அந்தப் பொதுக்கூட்டம் முடிந்த போது திரும்பிய ரௌடிக் கும்பல் ஒன்று வன்முறையில் இறங்கித் தியாகியின் குரல் அச்சகத்தைச் சூறையாடி அச்சகப் பகுதியில் நெருப்பு வைத்து விட்டதாகவும், பலத்த சேதம் ஏற்பட்டும், போலீஸோ, தீயணைக்கும் படையோ உதவிக்கு வரவில்லை என்றும் தொண்டர்களாகிய தாங்களே தீயை அணைத்ததாகவும் எதிர்கொண்டவர்கள் தெரிவித்தார்கள்.

அத்தியாயம் - 29

அச்சகத்துக்குக் காலிகள் நெருப்பு மூட்டிச் சூறையாடி விட்டுப் போயிருப்பதாக எதிர்கொண்டு வந்த தொண்டர்கள் கூறியவுடன் மங்காவும், முத்துராமலிங்கமும் பதறிப்போய்,

“ஐயையோ, பாண்டித்துரையும், கஸ்தூரியும் வீட்டிலே இருந்தாங்களே...?” என்று சிவகாமிநாதனின் மகனையும் மகளையும் பற்றிக் கவலை தெரிவித்தார்கள்.

“அவங்களை முதல்லேயே பத்திரமா ரெண்டு வீடு தள்ளிப் பக்கத்திலே வேற மனுஷாளோடு தங்க வச்சிட்டோம். இல்லாட்டி ஆபத்தாப் போயிருக்கும்” என்றார்கள் எதிர்கொண்டு ஓடிவந்தவர்கள்.

சிவகாமிநாதன் மட்டுமே அதிகமாகப் பதற்றமோ பரபரப்போ காண்பிக்கவில்லை.

“இவ்வளவும் நான் எதிர்பார்த்ததுதான்! இதை எல்லாம் தவிர்க்க நெனைச்சுத்தான் உங்க ரெண்டு பேரையும் கடற்கரைக்குக் கூட்டிக்கிட்டுப் போனேன்” என்றார் சிவகாமிநாதன்.

எல்லோரும் வீட்டை நோக்கி விரைந்தார்கள். போய்ப் பார்த்ததில் அச்சகத்துக்கு ஏற்பட்டிருந்த சேதங்கள் அதிகமாயிருந்தன. அவர்கள் எதிர்பார்த்ததையும் விட அதிகமாயிருந்தன. இன்னும் சில வாரங்களுக்குத் ‘தியாகியின் குரல்’ பத்திரிகையையே வெளியிட முடியாதபடி செய்து விடும் குரூர நோக்குடன் அத்தனை பயங்கரமான சேதங்கள் அங்கே விளைவிக்கப்பட்டிருந்தன.

இப்படிப் பயமுறுத்திக் கலவரங்களை உண்டாக்கினால் அஞ்சி நடுநடுங்கி மங்காவை வெளியே அனுப்பி விடுவார்கள் என அவர்கள் எதிர்பார்ப்பது புரிந்தது. மங்கா தன் தந்தையான மந்திரியை எதிர்த்துக் கொண்டு தங்கள் தரப்பில் சேர்ந்து தங்களோடு தங்குவதால் என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படும் என்று எதிர்பார்த்தார்களோ, அவை ஒவ்வொன்றாக ஏற்படத் தொடங்கியிருந்தன. மந்திரியும் அவருடைய கட்சி ஆட்களும் காட்டுமிராண்டிகளைப் போல் புகுந்து சூறையாடியிருந்தார்கள்.

சேதங்களைப் பார்த்த போது முத்துராமலிங்கத்துக்கும் மங்காவுக்கும், சண்முகத்துக்கும் நெஞ்சு கொதித்தது. வயது முதிர்ச்சியும் மனப்பக்குவமும் துயரங்களைக் கண்டு கலங்காத திண்மையும்தான் சிவகாமிநாதனை அந்த நிலையிலும் நிமிர்ந்து நிற்கச் செய்திருந்தன.

மங்கா கேட்டாள்: “தயவுசெய்து நீங்க என்னைத் தடுக்கக் கூடாது! நானே எங்கப்பா கிட்டப்போயி இந்த அக்கிரமத்தை ஏன்னு கேட்கப் போறேன். பதில் சொல்லாட்டி, சீ! நீயும் ஒரு மனுசன் தானான்னு மூஞ்சியிலே காறித் துப்பப் போறேன்.”

“வேண்டாம்! அதனால் ஒரு பிரயோசனமும் ஏற்படாது” என்றார் சிவகாமிநாதன். அவரது அன்பர்கள் சொன்னார்கள்:

“போலீஸோ, தீயணைப்புப் படையோ எத்தனையோ ஃபோன் பண்ணியும் முதல்லே வரலே. கலவரமெல்லாம் முடிஞ்சு ரௌடிங்க தப்பிப் போய்ச் சேர்ந்தப்பறம் தான் போலீஸ் தீயணைக்கிறவங்க எல்லாம் வந்தாங்க. அக்கம்பக்கத்துக்காரங்களும், நம்ம தொண்டர்களுமாக அவங்க வாரத்துக்குள்ளேயே தீயை அணைச்சிட்டாங்க.”

அச்சகத்தைத் ‘துவம்சம்’ செய்ததிலிருந்து தந்தையாகிய மந்திரியின் ஊழல்களைப் பற்றி மகள் எழுதும் கட்டுரைத் தொடரை வரவிடாமற் செய்வதுதான் கலவரம் புரிந்தவர்களின் முக்கிய நோக்கமாயிருப்பது தெரிந்தது.

“கற்பைப் பற்றிப் புகழ்ந்து பேசும் விபசாரிகளைப் போல் ஜனநாயகத்தைப் பற்றிச் சிலாகித்துப் பேசும் சர்வாதிகாரிகள் நிறைந்து விட்டார்கள் இந்த நாட்டில். பதவிப் பசி மிகுந்தவர்களும், பணப்பசி மிகுந்தவர்களும் நல்லவர்களை வேட்டையாடும் காலம் இது. பொறுமையும், சகிப்புத் தன்மையுமே இவர்களை எதிர்க்கப் போதுமானவை இல்லை” என்று சீறினான் முத்துராமலிங்கம். வயதுக்கேற்ற ஆத்திரமும் சீற்றமும் அவன் குரலில் இருந்தன. எல்லாருக்கும் நிழல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு பாவமுமறியாத ஓர் ஆலமரத்தை யாரோ வெட்டி வீழ்த்த முயன்றாற் போல் உணர்ந்து குமுறினான் அவன்.

சிவகாமிநாதன் மேல் பற்றும் அன்பும் ஆதரவும் உள்ள வேறோர் அச்சக அதிபர் சில வாரங்களுக்குத் ‘தியாகியின் குரலை’த் தாமே அச்சிட்டுக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டார். அவருடைய அச்சகமும் சிந்தாதிரிப்பேட்டையிலேயே பக்கத்துத் தெருவில்தான் இருந்தது. சிவகாமிநாதன் அவரைத் தடுத்துப் பார்த்தார்.

“ஏன் வம்பை விலைக்கு வாங்குகிறீர்கள்? என் அச்சகத்துக்கு ஏற்பட்ட கதி உங்கள் அச்சகத்துக்கு ஏற்பட வேண்டாமே என்று பார்த்தேன்?”

“உங்களுக்கு உதவுவதால் எனக்கு அப்படி நேரும் என்றால் அதை என் பாக்கியமாகக் கருதுவேன்.”

அவருடைய உறுதிமொழியைக் கேட்டுச் சிவகாமிநாதனுக்கு ஆறுதலாக இருந்தது. அவரது அச்சகத்தின் அன்பர்களும், தொண்டர்களும் சேதங்களைச் சரிசெய்து கொடுக்க விரைந்து முன் வந்தனர்.

பாதிக் கிணறு தாண்டிய நிலையில் இப்படி எவ்வளவு தான் தொல்லைப்படுவது என்று சிந்தித்துச் சிந்தித்துக் குழம்பிய மங்கா முத்துராமலிங்கம் திருமணத்தைத் துரிதப்படுத்துவதைத் தவிர வேறு வழியே இல்லை என்று சிவகாமிநாதனுக்குத் தோன்றியது. வெளியே செய்தியைப் பரவ விடுவதால் மங்காவின் தந்தையிடமிருந்து வரும் புதிய அபாயங்களைக் கருத்தில் கொண்டு இரகசியமாகத் திருமண ஏற்பாடுகளைச் செய்தார்கள்.

ஏதாவது கோயிலில் திருமணத்தை முடித்துக் கொண்டு உடனே பதிவும் செய்துவிட முன்னேற்பாடு நடந்தது. சண்முகமும், சிவகாமிநாதனும், மங்காவும், முத்துராமலிங்கமும் மட்டுமே விவரம் அறிந்திருந்தனர். மந்திரி எஸ்.கே.சி.நாதன் மந்திரியாக நடந்து கொள்ளவில்லை. பதவியிலுள்ள ஒரு ரௌடியாகவே நடந்து கொண்டார். எல்லாக் கலவரங்களையும், எல்லாச் சேதங்களையும் திட்டமிட்டுச் செய்த பின் காலைப் பத்திரிகையில் “கொள்கைகளை எதிர்த்துப் போராட வேண்டுமே ஒழிய நபர்களை எதிர்த்துப் போரிடக் கூடாது. பழம்பெரும் தியாகியும், பத்திரிகையாளருமான சிவகாமிநாதனின் அச்சகத்தைக் காலிகள் தீ வைத்துத் தாக்கியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்! இப்படிப்பட்ட செயல்களை நாகரிக உலகம் மன்னிக்காது” - என்று புத்தரின் மறு அவதாரம் போல மறுநாள் மந்திரி எஸ்.கே.சி.நாதன் ஓர் அறிக்கையும் விட்டு விட்டார். இதைப் படித்ததும் நிகழ்ச்சிகளை நேரிலேயே பார்த்து உண்மையைப் புரிந்து கொண்டிருந்தவர்களுக்குச் சிரிப்புத்தான் வந்தது. திருடியவனே, தன்னைத் தப்புவித்துக் கொள்வதற்கு ஒரு மார்க்கமாக, “ஐயோ திருடன்! ஐயோ திருடன்!” என்று கூப்பாடு போட்டுக் கொண்டே திருடிய பொருளுடன் மெல்ல நழுவுவதைப் போல இருந்தது மந்திரியின் அறிக்கை.

“பயந்தோ, தளர்ந்தோ, தொடர்ந்து போராடுவதற்குச் சலிப்படைந்தோ, பாதி வழியில் திரும்பிப் போய்விடச் சிவகாமிநாதன் தயாராயில்லை.

எதற்கும் ஒரு பாதுகாப்பு ஏற்பாடாக இருக்கட்டும் என்று திருமண நாளன்று உடல் வலிமையும், மன வலிமையும் உள்ள தன் இயக்கத் தொண்டர்கள் இருபத்தைந்து பேரை அழைத்திருந்தார் சிவகாமிநாதன். அவர்களிடம் கூட திருமணம் என்பது தெரிவிக்கப்படவில்லை.

“நான் பொறுப்பேற்றுச் செய்யப் போகிற ஒரு மிக முக்கியமான நிகழ்ச்சிக்காக உங்களை எல்லாம் அழைக்கிறேன்” என்று மட்டுமே சிவகாமிநாதன் அவர்களிடம் கூறியிருந்தார். பல திருமணங்களில் திருவும் இல்லாமல் மணமும் இல்லாமல் அவை வெறும் பட்டுப்புடவை, நகை எக்ஸிபிஷனாக இருப்பதைக் கண்டு மனம் வெதும்பி இருக்கிறார் சிவகாமிநாதன். மேல்தட்டு இந்துக்களிடையேயும் அவர்களைப் பார்த்து அனாவசியமாகக் கடன் வாங்கிக் காப்பியடிக்கும் மற்றவர்களிடையேயும் திருமணம் என்பது ஒரு புதிய சமுதாய ஊதாரித்தனமாக நிகழ்ந்து வருவதைப் பலமுறை பகிரங்கமாகக் கண்டித்திருந்த அவர் மங்கா முத்துராமலிங்கம் திருமணத்துக்கு மிக எளிய ஏற்பாடுகளையே செய்திருந்தார். முத்துராமலிங்கத்துக்கு ஒரு நாலு முழம் கோடி-கதர் வேஷ்டி, அங்கவஸ்திரமும், மங்காவுக்கு ஓர் எளிய கைதறிப் புடவையும், இரண்டு மாலைகளும், தாலியும், மஞ்சள் கயிறும் தான் ஏற்பாடு பண்ணியிருந்தார். வேறு எந்த ஆடம்பர ஏற்பாடும் கிடையாது.

பத்துநாள் கழித்து ஓர் அதிகாலை ஐந்து மணியிலிருந்து ஆறரை மணிக்குள்ளான நல்லவேளையில் மாங்காடு அம்மன் கோயிலில் மங்காவுக்கு முத்துராமலிங்கம் தாலி கட்டினான். இருவரும் தியாகி சிவகாமிநாதன் ஆசீர்வதிக்க அவருக்கு முன்னால் மாலை மாற்றிக் கொண்டார்கள். திருமணம் எளிமையாகவும் கச்சிதமாகவும் முடிந்து விட்டது. அநாவசியமான சடங்குகள் எதுவும் அங்கே இல்லை.

மாங்காடு ஆலயத்தில் கூடியிருந்த இருபது முப்பது தொண்டர்களுக்கு நடுவே சிவகாமிநாதன் சில வார்த்தைகள் பேசினார்.

“இது ஏறக்குறைய அடைக்கலத் திருமணம். இதை நான் எந்த விதத்திலும் தட்டிக் கழிக்க முடியவில்லை, முடியாது. பெண்ணின் தந்தை என் அரசியல் எதிரி. பெண்ணோ என் அரசியல் சிஷ்யை. பெண்ணின் காதலனோ என் அரசியல் தொண்டன். இவர்களுக்கு வரும் கஷ்ட நஷ்டங்களை இனி என் கஷ்ட நஷ்டமாக ஏற்பேன். என் மேல் நம்பிக்கையுள்ள நீங்களும் அப்படி ஏற்க வேண்டும் என்பது என் விருப்பம். நம்மைச் சுற்றிலும் தென்படுகிற அல்லது நாம் பார்க்கிற சினிமாக்களில் வருகிற காதலர்களைப் போல் இவர்கள் இருவரும் பூங்காக்களில், குளக்கரையில், மரத்தடியில் நதிக்கரையில் சந்தித்துப் பழகிய சராசரிக் காதலர்கள் இல்லை.

இவர்களை இணைத்ததே இவர்களிருவருக்கும் எனது இலட்சியங்களில் இருந்த பிடிப்புதான். என் காரணமாக இணைந்த இவர்களை நான் கைவிட மாட்டேன். இவர்கள் இன்று சாதாரணத் தம்பதிகள். ஆனால் இப்படித் தம்பதிகளானதன் மூலம் இவர்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கும் எதிரிகள் என்னவோ சாதாரணமானவர்கள் இல்லை. அந்த அசாதாரணமான எதிரிகளிடமிருந்து இவர்களைக் காக்கும் கடமை உங்களுக்கும் எனக்கும் இருக்கிறது. என் அழைப்பை ஏற்று இந்தத் திருமணத்துக்கு வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி.”

அன்று காலையிலேயே பத்து மணிக்கு அவர்களுடைய திருமணப் பதிவும் முடிந்து விட்டது.

மாங்காட்டிலிருந்து பூவிருந்தவல்லி போய் அங்கே சிவகாமிநாதனின் நண்பர் வீட்டில் எல்லாரும் எளிமையான திருமண விருந்து உண்டார்கள். சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டார்கள்.

விருந்து ஓய்வு எல்லாம் முடிந்ததும், “இன்னும் ஒரு வாரம் நீங்கள் சென்னையில் இருக்க வேண்டாம் என்பது என் அபிப்ராயம். பெங்களூர் போய் நிம்மதியாக ஒரு வாரம் கழித்து விட்டு வாருங்கள். இங்கிருந்தே பஸ் ஏறி விடலாம்” என்று யோசனை கூறித் தன் சொந்தச் சேமிப்பிலிருந்து தயாராக எடுத்து வைத்திருந்த ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்தார் உதவிக்காமிராமேன் சண்முகம், சிவகாமிநாதனும் அதையே வற்புறுத்தினார். ஆனால் முத்துராமலிங்கம் அதற்கு இணங்கவில்லை. அதை மறுத்துப்பேசி அவர்களோடு வாதாடினான்.

அத்தியாயம் - 30

“யாருக்கோ பயந்துக்கிட்டு எங்கேயோ ஓடறது எனக்குப் பிடிக்காது! இப்ப இருக்கற நெலைமையிலே எங்களுக்குத் தேனிலவு ஒண்ணுதான் கொறைச்சல். ஐயாவையும் மத்தவங்களையும் தனியே விட்டுட்டு நாங்க போக மாட்டோம்” - என்றான் முத்துராமலிங்கம்.

தினப் பத்திரிகையில் படித்துத் தகவல் தெரிந்தோ அல்லது கலையரசி கண்மணி போன்ற யாராவது நேரில் போய்ச் சொல்லியோ முத்துராமலிங்கத்தின் பெற்றோருக்கு அவன் கூட்டத்தில் அடி உதைபட்டு ஆஸ்பத்திரியில் இருந்தது பற்றிய தகவல் எட்டிவிட்டது.

திடுதிடுப்பென்று அவர்கள் சென்னைக்குப் புறப்பட்டு வந்து விட்டார்கள். முத்துராமலிங்கம் தியாகி சிவகாமிநாதனோடுதான் தங்கியிருக்கிறான் என்று பசுங்கிளித்தேவர் கேள்விப்பட்டிருந்ததால் அவர்களெல்லாரும் கல்யாணத்துக்காக மாங்காடு போயிருந்த தினத்தன்று அவர் சிந்தாதிரிப்பேட்டைக்குத் தேடிக் கொண்டு வந்திருந்தார்.

அங்கே அன்று தியாகி சிவகாமிநாதனின் வீடும் அச்சுக் கூடமும் பூட்டியிருந்தன. அக்கம்பக்கத்தாருக்கும் அவர்கள் எங்கே போயிருக்கிறார்கள் என்ற விவரம் தெரிந்திருக்கவில்லை. குடும்பத்தோடு ஏதோ ஒரு மகாநாட்டுக்கோ பொதுக்கூட்டத்துக்கோ போயிருக்கிறார்கள் என்று தான் அவர்கள் கூறினார்கள். அந்த அளவுக்கு மங்கா-முத்துராமலிங்கம் திருமணத்தை மிகவும் இரகசியமாக வைத்திருந்தார் சிவகாமிநாதன்.

அதனால் தேடிவந்திருந்த முத்துராமலிங்கத்தின் பெற்றோருக்குக் குழப்பமாயிருந்தது. மறுநாள் வந்து மீண்டும் தேடலாம் என்று அம்பத்தூரிலிருந்த உறவினர் ஒருவர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்கள் அவர்கள்.

திருமணத்துக்காக மாங்காட்டுக்கும் பூந்தமல்லிக்கும் போயிருந்த முத்துராமலிங்கம் முதலியவர்கள் பொழுது சாய்ந்த பின்பே சென்னைக்குத் திரும்பியிருந்தார்கள். பெற்றோர்கள் சென்னைக்கு வந்திருப்பதோ, தன்னைத் தேடி விட்டுப் போயிருப்பதோ அவனுக்குத் தெரியாமல் போயிற்று. சிவகாமிநாதனும் சண்முகமும் எவ்வளவோ வற்புறுத்தியும் முத்துராமலிங்கமும் மங்காவும் வெளியூர் செல்ல மறுத்து விட்டார்கள். அவர்களிருவரும் உள்ளூரிலேயே எங்காவது ஒரு பெரிய ஹோட்டலில் இரண்டு மூன்று நாள் தங்கி மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வரலாம் என்று சண்முகம் அடுத்த யோசனையைக் கூறினார். அதையும் அவர்கள் நிராகரித்து விட்டார்கள். சிவகாமிநாதனும் சண்முகமும் முத்துராமலிங்கத்தைத் தனியே அழைத்தனர். இதமாக எடுத்துச் சொல்லி அறிவுரை கூறிப் பார்த்தனர். சிவகாமிநாதனே கூட வற்புறுத்திச் சொல்லிப் பார்த்தார்.

“உன்னைப்பத்திக் கவலை இல்லேப்பா! உன்னை மணந்துக்கிட்டிருக்கிற பொண்ணோட நெலைமையைக் கொஞ்சம் யோசிச்சுப்பாரு. பரம்பரையாகவே வசதியுள்ளவங்க வீட்டிலே வளர்ந்த பொண்ணு. வாழ்க்கையைப் பத்தி என்னென்ன கற்பனைகள் பண்ணி வச்சிருந்திருச்சோ? இங்கே என்னோட இந்த வீட்டிலே தனி அறையோ, கட்டிலோ, மெத்தையோ எதுவும் கிடையாது. இருபத்தஞ்சு வருஷமா ஆசிரம வாழ்க்கை மாதிரி ஆயிரிச்சு இங்கே. நாலஞ்சு கோரைப்பாயி, கிழிஞ்ச சமுக்காளம் தவிர வேறு எதுவும் இங்கே கிடையாது. சுதந்திரம் வர்றதுக்கு முந்தி ஜெயில்லே கஷ்டப்பட்டேன். இப்ப வீட்டிலேயே கஷ்டப்படறேன். பிரஸ், பத்திரிகைன்னு பலதும் வீட்டிலேயே சேர்ந்து போயிட்டதாலே தனி அறைன்னு கூட எதுவும் இங்கே இல்லை. எங்கே பார்த்தாலும் காகிதம், புத்தகம் அச்சடித்த ஃபாரம்னு வீடு பூராக் குவிஞ்சு கெடக்கு.”

“அறிவாளியின் வீடு புஸ்தகங்களாலேதான் நெறைஞ்சிருக்கும். முட்டாள்களோட வீடுகள் பணம், பாத்திரம், பண்டம், நாற்காலின்னு எதுனாலே வேணுமானாலும் நெறைஞ்சிருக்கும்.”

“நீ சொல்றதைக் கேக்கறப்பப் பெருமையா இருக்குப்பா! ஆனா மத்தவங்க சௌகரியத்தையும் யோசிக்கணும் இல்லியா? எதிரிகளோட அபாயங்களிலேயிருந்து உங்களைப் பாதுகாக்கணும் இல்லியா? அதனாலேதான் சண்முகம் சொல்றாப்பிலே ஒரு ரெண்டு நாள் எங்கேயாவது தனியாப் போயித் தங்கிட்டு அப்புறம் வாங்கன்னு நானும் சொல்றேன்...”

“அபாயங்களைப் பத்தி நான் கவலைப்படலே ஐயா! பயம் தான் சாவு. கோழையாகத் தொடர்ந்து வாழ்ந்து வருவதை விட வீரனாகச் செத்து விடுவது எத்தனையோ மேல்.”

“இப்போது வாழ்வதும் சாவதும் உன்னைப் பொறுத்த விஷயம் மட்டுமில்லை. புதிதாக இன்னொருத்தியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் உன்னிடம் இருக்கிறது.”

“அந்தப் பொறுப்பை நான் ஏத்துக்கிட்டதுக்குக் காரணமே வாழ்க்கையின் இத்தகைய பிரச்னைகளில் எனக்கும் அவளுக்கும் இருக்கிற கருத்து ஒற்றுமைதான் ஐயா!”

“சரி! இதற்கு மேல் நான் உங்களை வற்புறுத்த விரும்பவில்லை. நீங்கள் இரண்டு பேரும் விவரம் தெரிந்தவர்கள், நான் ஏன் சொல்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டாலே போதுமானது! இரண்டு மூன்று நாட்களாக உங்கள் திருமண வேலையில் கழிந்துவிட்டதால் அச்சாகி வந்திருக்கிற ‘தியாகியின் குரல்’ அப்படியே ஃபாரம் ஃபாரமாகக் கிடக்கிறது. இன்று இரவுக்குள் ஃபாரங்களை மடித்துப் பின் பண்ணி அனுப்பியாகணும்” - என்று கூறிவிட்டு, மகன், மகள் சண்முகம் ஆகியோருடன் அச்சகப் பகுதிக்குப் புறப்பட்டார் சிவகாமிநாதன்.

“நாங்களும் வருகிறோம் ஐயா!” என்று மங்காவும் முத்துராமலிங்கமும் கூட, அவர்களோடு கிளம்பத் தயாரானார்கள். சிவகாமிநாதன் அவர்களைத் தடுத்தார்.

“நாங்க எல்லாருமே அச்சகப் பகுதிக்குப் போறோம். நீங்க ரெண்டு பேரும் இங்கேயே இருக்கலாம். கல்யாணங் கழிஞ்ச இரவு. இன்னிக்கே ‘பிரஸ்’ வேலையில தள்ளி உங்களைக் கஷ்டப்படுத்தக் கூடாதுங்கறது என் விருப்பம்.”

தங்களைத் தனியே விட்டுவிட வாய்ப்பாகவே அவர்கள் எல்லோரும் வேலையைச் சாக்கிட்டு அச்சகப் பகுதிக்குப் போகிறார்களோ என்று சந்தேகமாயிருந்தது முத்துராமலிங்கத்துக்கு.

“ஐயா வாழ்க்கையிலே தான் சுகம் இருக்கணும். சுகத்துக்காகவே வாழ்க்கை இருக்கணும்கிற சொகுசு மனப்பான்மை எனக்கும் இல்லை. இவளுக்கும் இல்லை. நீங்கள்ளாம் கஷ்டப்பட்டுத் தூக்கத்தைக் கெடுத்துக்கிட்டு வேலை செய்யப் போறப்போ... நாங்க மட்டும் எதுக்குச் சும்மா இருக்கணும்?” என்று கூறியபடியே அவர்கள் எல்லாருமே தடுத்தும் கேளாமல் அச்சகத்துக்குள் நுழைந்து வேலை செய்யச் சேர்ந்து கொண்டார்கள் மங்காவும் முத்துராமலிங்கமும்.

பில் போடுதல், சந்தாப் பிரதிகளை உறையில் போடுதல் ஆகியப் பணிகளை அவர்கள் முதலில் செய்தனர்.

பெண்களான கஸ்தூரியும், மங்காவும் அச்சிட்ட ஃபாரங்களை மடித்தார்கள். முத்துராமலிங்கம் பின் அடித்துத் தள்ளினான். சண்முகம் ‘கட்டிங்’ மிஷின் வேலையைப் பாண்டித்துரையின் உதவியோடு கவனித்துக் கொண்டார். சிவகாமிநாதன் விலாசங்கள் ஒட்டிய மேலுறையில் இட்டுப் பிரதிகளைத் தயாரித்து அனுப்ப ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.

தியாகியின் குரலுக்கு நாடு முழுவதுமாக ஓர் இரண்டாயிரம் சந்தாதாரர்கள் இருந்தார்கள். கடைகள், ஏஜண்டுகள் மூலமாக மேலும் ஒரு மூவாயிரம் பிரதிகள் விற்பனை ஆயின. ஆனால் பத்திரிகைக்கு நாடு முழுவதும் ஒரு நன்மதிப்பும், மரியாதையும் இருந்தன. அதற்குக் காரணம் தியாகி சிவகாமிநாதனிடம் இருந்த தார்மீக லட்சியங்களும், சத்திய ஆவேசமுமே.

அரசியல் இலக்கிய உலகின் சில உன்னதக் கோட்பாடுகளுக்காக வாதிடும் குரலாக அது இருந்தது. எதையாவது எப்படியாவது எழுதிப் பணம் பண்ணும் வியாபார மாய்மாலம் அதில் இல்லை. அதனால் சிவகாமிநாதன் தம்முடைய பல வசதிக் குறைவுகளுடன் அந்தப் பத்திரிகை என்ற சிரம ஜீவனத்தையும் சேர்த்து நடத்தி வர வேண்டியிருந்தது.

ஒரு முழு ‘நைட் ஷிப்ட்’ வேலை செய்வது போல் அன்றிரவு எல்லாருமே பத்திரிகை வேலைகளில் மூழ்கிவிட நேர்ந்திருந்தது. பதினொன்றரை மணி சுமாருக்குச் சண்முகம் மீண்டும் முத்துராமலிங்கத்திடம் வந்து கெஞ்சினார். “தயவு பண்ணி நீங்க ரெண்டு பேரும் தூங்கப் போங்க... மத்ததை எல்லாம் நாங்க பார்த்துக்கறோம். இனிமே இங்கே வேலை ஒண்ணும் அதிகமா இல்லே...”

“எல்லோரும் தூங்கப் போகலாம்னா நாங்களும் போறோம்... எங்களுக்கு மட்டும் தனிச் சலுகை காட்டாதீங்க...” - என்று பிடிவாதமாக மறுத்தான் முத்துராமலிங்கம்.

அதற்கு மேல் யாராலும் அவர்களை வறுபுறுத்திப் பணிய வைக்க முடியவில்லை. தந்தையின் அரசியல் - அதிகாரப் பதவி ஊழல்களைப் பற்றி மங்கா எழுதியிருந்த இரண்டாவது பகுதிக் கட்டுரை அந்த இதழ் தியாகியின் குரலில் வெளி வந்திருந்தது. இந்தக் கட்டுரைகள் எதிர்த்தரப்புக் கட்சிகள், மனிதர்களிடம் உண்டாக்கியிருந்த பரபரப்பை விட மந்திரி எஸ்.கே.சி.நாதன் சார்ந்திருந்த ஆளுங்கட்சித் தரப்பிலேயே அதிகப் பரபரப்பை உண்டாக்கியிருந்தன.

ஆளுங்கட்சியிலிருந்த பிரமுகர்கள், தலைவர்கள், எஸ்.கே.சி.நாதனின் சக மந்திரிகள் ஆகியோருக்குத் ‘தியாகியின் குரல்’ பத்திரிகையைப் பார்ப்பதிலும் படிப்பதிலும் இப்போது ஒரு தனி அக்கறை ஏற்பட்டிருந்தது. ஒருவருக்குத் தெரியாமல் மற்றொருவர் தியாகியின் குரல் பத்திரிகையை இரகசியமாக வாங்கிப் படிக்கத் தலைப்பட்டார்கள். இவை போன்ற விளைவுகளுக்காகத்தான் மந்திரி எஸ்.கே.சி.நாதன் பயப்பட்டுப் பதறினார். சொந்தக் கட்சியிலேயே அவருக்கு எதிரிகள் இருந்தனர்.

ஒவ்வோர் இந்திய அரசியல் கட்சியின் பிரமுகருக்கும் இந்தியாவில் இரண்டு வித எதிரிகள் உண்டு. ஒருவகை எதிர்ப்பு - எதிர்க் கட்சிகளிலிருந்து வருவது. மற்றொரு வகை எதிர்ப்பு - சொந்தக் கட்சியிலேயே உள்ள எதிரிகளிடமிருந்து வருவது. இதில் அபாயகரமான எதிர்ப்பு உட்கட்சிப் பூசல்காரர்களிடமிருந்து வருவதுதான். தியாகியின் குரல் கட்டுரைகள் மந்திரி எஸ்.கே.சி.நாதனுக்கு எதிராக உட்கட்சிப் பூசல்காரர்களைப் பயங்கரமாகக் கிளப்பி விட்டன. அவரது வளர்ச்சியைத் தடுத்து ஒடுக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்த அவரது அரசியல் எதிரிகள் இந்தக் கட்டுரைகளால் உற்சாகமடைந்து செயல்பட்டனர். குதிரை கீழே தள்ளியதோடு விட்டுவிடாமல் குழியையும் பறித்ததாம் என்கிற கதையாக மகள் தன்னைப் பிரிந்து தன் எதிரியிடம் சரணடைந்ததோடு போகாமல் இப்படித் தாக்குதல் கட்டுரைகளை வேறு எழுதத் தொடங்கியது அவரைப் பெரிதும் பாதித்தது.

அன்றிரவு சிவகாமிநாதன் முதலியவர்கள் தூங்கச் செல்லும் போது இரவு மூன்று மணி - அதனால் மறுநாள் காலை எல்லோருமே தாமதமாக எழுந்தனர். வாசல் கதவை யாரோ தட்டுகிற சத்தம் கேட்டு முதலில் எழுந்தவர் சிவகாமிநாதன் தான்.

முதல் நாள் தேடி வந்து அம்பத்தூரில் உறவினர் வீட்டுக்குப் போயிருந்த முத்துராமலிங்கத்தின் பெற்றோர் தான் அப்போது தேடி வந்திருந்தனர்.

முதலில் சிவகாமிநாதன் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். அவர்கள் அங்கே வந்த போது மங்காவும் முத்துராமலிங்கமும் மற்றவர்களும் எழுந்திருக்கவில்லை. பசுங்கிளித் தேவர் சிவகாமிநாதனை விசாரித்து மகனின் க்ஷேம லாபத்தை அறிந்து கொண்டார்.

யாரையும் எழுப்பாமல் தானே போய்ப் பால் வாங்கி வந்து அவர்களுக்குக் காபி போட்டுக் கொடுத்தார் சிவகாமிநாதன். பசுங்கிளித்தேவர் தம்பதிகள் - முத்துராமலிங்கத்தின் இரகசியத் திருமணம் பற்றி அறிந்தால் என்ன சொல்லுவார்களோ என்ற தயக்கம் சிவகாமிநாதனுக்கு ஏற்பட்டது. முத்துராமலிங்கம் எழுந்திருக்கட்டும் என்று காத்திருந்தார் அவர்.

அத்தியாயம் - 31

சிவகாமிநாதன் எவ்வளவோ உபசாரமாகவும் வற்புறுத்திக் கூறியும் கேட்காமல் பசுங்கிளித் தேவரும், அவர் மனைவியும் ஓர் ஓரமாகத் தரையிலேயே குத்த வைத்து உட்கார்ந்தார்கள். பசுங்கிளித் தேவரை மட்டும் கையைப் பிடித்து இழுத்து வந்து எப்படியோ கட்டாயப்படுத்திப் பிரம்பு நாற்காலியில் உட்கார வைத்து விட்டார் சிவகாமிநாதன். ஆனால் திருமதி தேவர் மட்டும் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் கூசினாற் போலத் தரையிலேயே ஒதுங்கி உட்கார்ந்து விட்டாள். தேவர், நாற்காலியில் உட்கார்ந்திருந்தாலும் தரையில் உட்கார்ந்திருப்பதை விட அதிகக் கூச்சமும் ஒடுக்கமுமாகத்தான் உட்கார்ந்திருந்தார். இன்னும் நவீன மேஜை நாற்காலிக் கலாசாரத்துக்குப் பலியாகிவிடாத அசல் இந்திய கிராமவாசிகளை அப்போது தம்மெதிரே பார்த்தார் சிவகாமிநாதன். அவர்களை அவர் இரசித்துப் பழகினார்.

“சர்க்கிள் இன்ஸ்பெட்கர் குருசாமி சேர்வை எனக்கு ரொம்ப வேண்டியவன்” என்று நாட்டுப்புறத்து மனிதர்களுக்கே உரிய ‘பெரிய உத்தியோகஸ்தர்களை எல்லாம் தெரியும்’ என்கிற பாணியில் பேச்சைத் தொடங்கினார் தேவர். அதில் மிகவும் வறண்டு போன நாட்டுப்புறத்துக் கர்வம் தான் தொனித்தது. உளுத்துப்போன இந்திய அதிகார வர்க்கமும் பதவிக்கு வருகிறவர்களுக்கு சலாம் போட்டுப் போட்டே கை தளர்ந்து போன உத்தியோக சாதியும் இன்னும் கிராமவாசிகளிடமும், நாட்டுப்புறத்து மக்களிடமும் கொஞ்சம் மரியாதைக்குரியனவாகவே இருப்பதைப் பற்றி யோசித்தார் சிவகாமிநாதன்.

“கூட்டம், பேச்சு, அடிதடி, கலவரம்னு சீரழியவா அவனைப் பட்டணத்துக்கு அனுப்பினேன்? ஒரு நல்ல வேலையாகப் பார்த்துக்கிட்டு எனக்கு நாலு காசு அனுப்புவானின்னு பார்த்தேன், அவன் என்னடான்னா...?”

பேசிக் கொண்டிருந்த சிறிது நேரத்திலேயே முத்துராமலிங்கத்தின் தந்தையைச் சரியாகப் புரிந்தது சிவகாமிநாதனுக்கு.

“என்னமோ கூட்டத்திலே பேசி அதுலே கல்லடி பட்டு மண்டையிலே கட்டுப் போட்டுக்கிட்டுக் கெடக்கான்னு அந்தப் பொம்பளை வந்து சொல்லிச்சே ஐயா?”

“எந்தப் பொம்பளை?”

“அதான் கலையரசி கண்மணீன்னு எங்க பக்கத்துப் பொம்பளை ஒண்ணு அரசியல்லே அலையிதுங்களே?”

“அப்பிடியா?” என்று அந்தப் பேச்சை வளர்க்காமல் விட்டார் சிவகாமிநாதன். கிராமாந்தரத்துப் பெற்றோர்களுக்கும், நகரங்களில் பட்டப் படிப்பை முடித்துவிட்டுத் திரும்பும் இளைஞர்களுக்கும் நடுவேதான் சிந்தனையிலும் செயல்களிலும் தலைமுறை இடைவெளியே உருவாகிறது என்று அவருக்குத் தோன்றியது.

முத்துராமலிங்கம் எழுந்திருந்து வந்தான். அவனையும் அவன் பெற்றோரையும் முன் அறையில் தனியே விட்டு விட்டுச் சிவகாமிநாதன் அச்சகப் பகுதிக்குச் சென்றார்.

முதல் சில விநாடிகள் பரஸ்பர க்ஷேமலாப விசாரணையில் கழிந்தன.

“இதுக்காகவா பணத்தை வீணாச் செலவழிச்சிக்கிட்டு ரெண்டு பேரும் இங்கே பொறப்பட்டு வந்தீங்க? இங்கே என்ன மனுஷாளே இல்லாத காட்டிலியா இருக்கேன்? கூட இருக்கறவங்க கவனிச்சுக்க மாட்டாங்களா?”

“அதில்லேடா, கண்மணி வந்து சொன்னதைக் கேட்டப் பெறவு உனக்கு ஆளுக்கே ஆபத்தோன்னு பயமாயிரிச்சு!”

“அதுமாதிரி இருந்தா நானே தாக்கல் எழுதியிருப்பேனே!”

“சரி குருசாமி சேர்வையை மறுவாட்டி பார்த்தியா, பாக்கலியா?”

“அவருக்கு நீங்க யாருன்னே ஞாபகம் இல்லே! அப்புறம் என்னை எங்கே கவனிக்கப் போறாரு...?”

“இப்போ நானும் உங்க ஆத்தாளும் அவரைப் பார்க்கப் போறோம்... நீயும் எங்க கூடப் பொறப்பிடு. இன்னிக்கே அவருகிட்டச் சொல்லி உனக்கு ஒரு வேலை வாங்கிக் குடுத்துடறேன்.”

“நான் வரலே ஐயா! நீங்களும் ஆத்தாவும் மட்டும் போயிட்டு வாங்க.”

“ஏண்டா வரமாட்டியா...?”

“அவர் எதுவும் செய்வார்னு எனக்குத் தோணலை.”

“சரி நாங்க போக வழியாச்சும் சொல்லி அனுப்பு.”

போலீஸ் அதிகாரி குருசாமி சேர்வையைத் தேடிக் கொண்டு தன் பெற்றோர் போவதற்கு வழி விவரம் சொல்லி ஒரு சைக்கிள் ரிக்‌ஷாவில் ஏற்றி வாடகையையும் கொடுத்தான் முத்துராமலிங்கம்.

“இதெல்லாம் எதுக்குப்பா பக்கத்திலே இருந்தா நாங்க நடந்தே போய்க்குவோம்” என்று மறுத்துப் பார்த் தார் அவன் தந்தை.

“நீங்களா அலைஞ்சு விசாரிச்சு எடம். கண்டுபிடிக்கிறது கஷ்டம் ரிக்‌ஷான்னா அவங்களே கொண்டுபோய் விட்டுடுவாங்க” என்று சொல்லிச் சமாதானப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்தான் முத்துராமலிங்கம்.

“நல்லாருக்கியா முத்துராமு!” என்று அவன் தாய் தான் மிகவும் கனிவாக அவனை அருகே வந்து விசாரித்தாள். புது இடம் என்கிற சங்கோஜம் தடுக்க அந்நியர் முன்னிலையில்கூட விட்டுக் கொடுக்க முடியாத பாசம் உந்த அருகே வந்து அவன் தலையைத் தொட்டுப் பார்த்து மயிர்க்கற்றைகளிடையே தடவி, “எங்கேடா காயம்? ரொம்ப வலுவாப் பட்டிரிச்சோ என ஆதரவாகவும் ஆறுதலாகவும் கேட்டாள் அன்னை.

“அதெல்லாம் ஒண்ணுமில்லே ஆத்தா” என்று அவனிடமிருந்து தலையை மெதுவாக விடுவித்துக் கொண்டான் முத்துராமலிங்கம்.

தன்னை வந்து பார்த்துவிட்டுப் போன கலையரசி கண்மணி ஊருக்குத் திரும்பிப் போய்த் தந்தையிடம் உள்ளதும் இல்லாததுமாகத் திரித்துவிட்டிருப்பாள் எனத் தோன்றியது. சிவகாமிநாதன் தான் முத்துராமலிங்கத்தை உருப்படாமல் அடிக்கிறார் என்பது போலவும் அவள் தந்தையிடம் சொல்லியிருப்பாள் என்று பட்டது.

போலிஸ் சர்க்கிள் குருசாமி சேர்வையைப் பார்ப்பதற்காக ரிக்‌ஷா ஏறியபோது, “ஏம்பா, காலையிலே நான் வர்றப்ப இருந்தாரே அந்தப் பெரியவருதான் , உங்க தியாகியா?” என்று அவனை விசாரித்தார் தந்தை.

“ஆமாம் ஐயா” என்று செல்லிவிட்டுப் பேசாமல் இருந்த முத்துராமலிங்கத்தை மேலும் விடாமல் கண்டிக்கிற தொனியில், “பொழைப்பைத் தேடிக்கிட்டுத்தான் மெட்ராஸ் வந்தியா? இல்லே தியாகிங்களையும் தொண்டருங்களையும் தேடிக்கிட்டு இங்கே வந்தியா? புரியாமத்தான் கேட்கிறேன். சொல்லு” என்றார். அவனுக்கு அவர் அப்படிக் கேட்டது பிடிக்கவில்லை என்றாலும் அப்போது தந்தையோடு வாதிட்டுக் கொண்டிராமல், “நீங்க போயிட்டு வாங்க. அப்புறம் பேசிக்கலாம்” என்று கூறி அவரை அனுப்பி வைத்தான். அவர்களை அனுப்பிவிட்டு அவன் வீட்டுக்குள் வந்ததுமே சிவகாமிநாதன் அவனை எதிர்கொண்டார். அவரே இதமாக அவனிடம் சொன்னார்.

“நாம் எவ்வளவோ மறைச்சி வச்சிருந்தும் போலீஸுக்கு விஷயம் தெரியும். எப்ப ரிஜிஸ்தர் பண்ணினோமோ அப்பவே அது பகிரங்கமும் ஆகிவிடுகிறது. உங்கப்பா சர்க்கிள் இன்ஸ்பெக்டரைப் பார்த்தால் இந்தக் கலியான விஷயத்தை எப்படியும் தெரிஞ்சுக்கப் போறாரு! நாமதான் சொல்லாம மறைச்சோம்னு இருப்பானேன்? அவர் திரும்பி வந்ததும் உள்ளதைச் சொல்வி நீயும், மங்காவுமாக அவரையும் உங்கம்மாவையும் கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கிக்கிறது தான் முறை. ஆயிரம் இருந்தாலும் அவங்க உன்னைப் பெத்தவங்க.”

“எங்கப்பா கோபக்காரரு. இதைக் கேட்டா ஆகாசத்துக்கும் பூமிக்குமாக் குதிப்பாரு! வீணா உங்க வீட்டுக்குள்ளாரச் சண்டையும் சத்தமும் வேணாம்னுதான் பார்த் தேன் ஐயா?”

“சண்டையோ சத்தமோ எது வந்தாலும் பரவாயில்லை! நடந்ததை நடந்தபடியே அவங்ககிட்டச் சொல்லிடறதுதான் நல்லது.”

“அவர் மனசை யாரோ போய்ச் சொல்லிக் கலைச்சு இங்கேஅனுப்பி வச்சிருக்காங்க. என்னைப் பத்தியும் உங்களைப் பத்தியும் கூடத் தப்பாச் சொல்லியிருப்பாங்க போலிருக்கு. நான் உங்க பேச்சைக் கேட்டுத்தான் வேலை தேடிக்காம இருக்கேன்கிற மாதிரிப் பேசினாரு. மறுபடியும் உங்க முன்னாடியே அப்படிப் பேசினாருன்னா என் மனசு பொறுக்காது. உண்மையிலே உங்களை நான் என்னோட் ஞானத் தந்தையா நெனைச்சுக்கிட்டிருக்கேன்.”

“இருக்கலாம்ப்பா! ஆனால் பெற்ற தந்தைக்கு எந்த உரிமையும் இல்லேன்னு சொல்லிட முடியாதே” என்று சிரித்துக் கொண்டே அவனைப் பதிலுக்கு வினவினார் சிவகாமிநாதன்! அவன் அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டான். எதிர்த்துப் பதில் எதுவும் சொல்லவில்லை. சண்முகம் வேறு அப்போது கூட இல்லை. முந்திய இரவு தான் கோடம்பாக்கம் போயிருந்தார். அவர் இருந்தால் இந்த மாதிரியான சூழ்நிலையில் மிகவும் உதவியாக இருக்கும். அவரை விட்டே தன் தந்தையிடம் பேசச் செய்யலாம். அவரும் நிதானமாக எடுத்துச் சொல்லுவார். இப்போது அதற்கு வழி இல்லை. சிவகாமிநாதன்தான் இவ்வளவுக்கும் காரணம் என்று தந்தையே அவர் மீது காரணம் புரியாத கோபத்தோடு இருப்பதனால் அவரை விட்டுப் பேசுவது சரியில்லை என்று தோன்றியது. சிவகாமிநாதனும் அதற்கு மனம் இணங்கவில்லை.

“உங்கப்பா வந்ததும், சர்க்கிள் இன்ஸ்பெக்டரைத் தனக்குத் தெரியும்கிற பாணியில் பேச ஆரம்பிச்சதே எனக்குப் பிடிக்கலேப்பா... நான் அவரிட்ட உனக்காகப் பரிஞ்சுப் பேசறது நல்லா இருக்காது. நீயே பேசிக்கிறது தான் சரீன்னு படுது” என்றார் அவர்.

“பணத்தையும், உத்தியோகத்தையுமே மதிக்கிற நாட்டுப்புற மனப்போக்கு அவருக்கு.”

“அது தப்பு இல்லேப்பா! முக்காவாசி ஜனங்க அப்பிடித்தான் இருக்காங்க. இருப்பாங்க... ஆனா அந்த ரெண்டையும் தவிர எதுவுமே வேண்டாம்னு நெனைக்கிற மனப் பான்மைதான் கெடுதல். அப்படி மனப்பான்மையாலேதான் பணம் இல்லாத யோக்கியனைக் கேவலப்படுத்தறாங்க. பதவி இருந்தா மோசமானவனையும் மதிக்கிறாங்க. பதவி இல்லாட்டா முதல்தரமான மனிதனைக்கூட உதாசீனப்படுத்தறாங்க.”

“பிரிட்டிஷ் ஆட்சியின் பழக்க தோஷத்தாலே ஏற்பட்டு விட்ட நிரந்தர நோக்காடு இது! பணத்துக்கும், அதிகாரத் துக்குமே மரியாதை தரப் பழக்கப்படுத்தியதே அந்த ஆட்சி தான். அது சுதந்திர இந்தியாவிலேயும் தொடருது. ஜனநாயகவாதியான நேரு காலத்திலேயே பணக்காரங்களை நம்பி-அவங்க பணத்திலேதான் கட்சி, தேர்தல் செலவு எல்லாத்தையும் சமாளிச்சிருக்காங்க!”

“உண்மை! இன்றுள்ள நிலையில் நமது அரசியல் ஜன நாயகம், கட்சி தேர்தல் எல்லாமே பணத்தையும் அதிகாரத்தையும் அடைவதற்காகப் பணத்தையும் அதிகாரத்தையுமே துஷ்பிரயோகம் செய்கிற ஏற்பாடுதானப்பா...”

பகல் ஒரு மணிக்குமேல் பசுங்கிளித் தேவரும், அவர் மனைவியும் சிந்தாதிரிப்பேட்டைக்குத் திரும்பி வந்தார்கள். சிவகாமிநாதன் அச்சகப் பகுதியில் இருந்தார். தாக்குதலுக்கு ஆளான அச்சகப் பகுதி அப்போதுதான் செம்மைப்படுத்தப் பெற்றிருந்தது.

முத்துராமலிங்கம்தான் அவர்களை எதிர்கொண்டான். பசுங்கிளித் தேவர் ஒரேயடியாகக் கூப்பாடு போட்டார்.

“மந்திரி மகளைக் கடத்திக்கிட்டுப் போயித் திருட்டுத் தாலி கட்டினியாமே? உனக்கு ஏண்டா இப்பிடிப் புத்தி போச்சு? துப்புக் கெட்டுப் போனியா? ஏதோ நாம ஏழைப் பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவங்க. நீ படிச்சு மானமா ஒரு உத்தியோகம் பார்த்து எங்களைக் காப்பாத்துவேன்னு பார்த்தாத் தலைக்குக் கல்லைக் கொண்டாந்திட்டியே!... இதெல்லாம் எங்கே போயி நிக்கப் போகுதோ?”

அவரது கூப்பாட்டைக் கேட்டு மங்கா வெளியே வந்தாள். அவரைக் கும்பிடும்படி அவளுக்கு ஜாடைகாட்டி விட்டுத் தானும் அவளருகே சென்று நின்று கொண்டு பெற்றோரை அவளோடு சேர்ந்து வணங்கினான். முத்துராமலிங்கம்.

“திருட்டுக் கலியாணம் பண்ணிக்கிட்டதோடப் போகாம என்னைக் கும்பிட வேறவா செய்யிறீங்க?” என்று சீறினார் பசுங்கிளித் தேவர்.

“கொஞ்சம் மெதுவாகத்தான் பேசுங்களேன். எதுக்கு இப்படிக் கத்தணும்?... ஊரைக் கூட்டாதீங்க” என்று முத்துராமலிங்கத்தின் தாய் அவரைச் சிறிது சமாதானப்படுத்த முயன்றாள். ஆனால் அவர் கேட்கிற வழியாயில்லை.

“இதுக்காகவா பட்டணத்துக்கு வேலைமெனக்கெட்டு உன்னை அனுப்பி வெச்சேன். ‘உங்க மவன் உருப்படவே மாட்டான். அதான் உருப்படாத ஆளுங்களோட போய்ச் சேர்ந்துக்கிட்டு அலையிறான்’னு குருசாமி சேர்வையே சொல்றான்.”

“அப்பா நிறுத்துங்க... இது உங்க வீடு இல்லே! இன்னொருத்தர் இடத்திலே வந்து நின்னுக்கிட்டு அவங்களையே இப்படியெல்லாம் நீங்க விவரம் புரியாமப் பேசப்பிடாது”... என்று முத்துராமலிங்கம் குறுக்கிட்டபோது, “யாரைடா விவரம் புரியாதவன்னு சொல்றே? என்னைத் தானே? நீ செஞ்சிருக்கிறதெல்லாம் ரொம்ப விவரமான காரியமில்லே? அதான் பேசறே ஏன் பேச மாட்டே? இதுவும் பேசுவே, இன்னமும் பேசுவே... என்ன திமிருடா உனக்கு?” - என்று பதிலுக்கு மேலும் கூப்பாடு போட்டு ஆத்திரப்பட்டார் அவர்.

அத்தியாயம் - 32

அறிவும், இலட்சியமும், கொள்கை உன்னதமும் கொடுத்துத் தன்னை உயர்த்திய ஞானத் தந்தை சிவகாமிநாதனைச் சார்ந்து நிற்பதா. பணம், உத்தியோகம், பிழைப்பு என்று இவற்றைப் பற்றி மட்டுமே சதா கவலைப் பட்டுப் பேசும் சொந்தத் தந்தையைச் சார்ந்து நிற்பதா என்று முத்துராமலிங்கம் ஒரு விநாடி கூட மனம் குழம்பவில்லை. எதைச் சார்ந்து யாரருகே நிற்க வேண்டும். எதை எதிர்த்து யாரை விரோதித்துக் கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் அவன் ஏற்கெனவே தீர்மானமாகவும், திடமாகவும் முடிவு செய்திருந்தான்.

இயல்பாகவே குழம்பிப் போயிருந்த தந்தையின் மனத்தை சர்க்கிள் குருசாமி சேர்வை மேலும் குழப்பிவிட்டிருக்கிறார் என்று புரிந்தது. சிவகாமிநாதனின் சேவாசிரமம் போன்ற புனிதமான வீடு தன்னால் சண்டைக்களமாக மாறுவதை முத்துராமலிங்கம் விரும்பவில்லை.

அப்போது அவன் தன் பெற்றோரிடம் கறாராகப் பேசினான். “இதோ பாருங்க இங்கே வந்து நின்னுக்கிட்டு அநாவசியமாகக் கத்தக்கூடாது. எனக்கும் இவளுக்கும் இது தெய்வ சந்நிதானம் மாதிரி. இங்கே இருக்கிறது வெறும் மனுஷன் இல்லே, களையையும், காளான்களையுமே பயிர் செய்து பிழைக்கிற இன்றைய உலகில் ஒரு சத்திய விவசாயியை இங்கே நாங்க அபூர்வமா வச்சுக் கும்புட்டுக்கிட்டிருக்கோம். என்னைப் பெத்து வளர்த்த முறைக்கு நான் உங்களுக்கு என்ன செய்யணுமோ அதை மாசந் தவறாமச் செஞ்சிடத் தயாராயிருக்கேன். மூட்டை தூக்கியோ, கை வண்டி இழுத்தோ கூட உங்களுக்குப் பணம் அனுப்ப என்னாலே முடியும்...”

“உன் பணத்துக்காக ஒண்ணும் நாங்க காத்துக்கிடக்கலேடா! இப்பிடி உருப்படாமப் போறியேன்னுதான் சொல்ல வந்தேன்.”

இதற்கு அவனும் ஏதோ கடுமையாகப் பதில் சொல்ல முற்பட்டபோது அவனுடைய தாய் அருகே வந்து வாயைப் பொத்தினாள். தந்தையும் மகனும் இன்னொருவருடைய விட்டில் அடித்துக்கொண்டு நிற்பது அந்த அம்மாளுக்குப் பிடிக்கவில்லை. பசுங்கிளித்தேவரோ அப்போது அவன் மேல் கடுங்கோபத்தோடு இருந்தார்.

அன்று மாலை வரை வாய்ப்பேச்சும், மனஸ்தாபமுமாக சண்டை நீடித்தது. மாலையில் அவர்களை எழும்பூர் சென்று இரயிலேற்றிவிட்டு வந்தான் முத்துராமலிங்கம். தந்தை அவனோடு பேசுவதையே நிறுத்தியிருந்தார். முகத்தைத் திருப்பிக்கொண்டார். தாய்க்காகத்தான் அவன் வழியனுப்பப் போயிருந்தான். பெற்றோரது கோபத்துக்கும் எரிச்சலுக்கும் அஞ்சி அவன் இரயில் நிலையத்துக்கு மங்காவை உடனழைத்துச் செல்லவில்லை.

இரயில் நிலையத்திலிருந்து விடு திரும்பியதும், முத்துராமலிங்கம் தானே சிவகாமிநாதனிடம் சென்று, “ஐயா உங்களிடம் தனியாக ஐந்து நிமிஷம் பேசவேண்டும்” என்று வேண்டினான்.

“அதற்கென்ன தாராளமாகப் பேசலாம்” என்று அவர் அவனோடு எழுந்திருந்து வாசல் பக்கமாக வந்தார்.

“ஐயா! நானும் மங்காவும் உங்களோட இருக்கிறதால உங்களுக்குப் பல சிரமங்களும், தர்ம சங்கடங்களும் வருது. ஏதோ உங்களாலேதான் நான் கெட்டுக் குட்டிச்சுவராய்ப் போய்விட்ட மாதிரி நெனைச்சுகிட்டு எங்கப்பா இங்கேயே வந்து கூப்பாடு போடறாரு. இதெல்லாம் பார்த்து எனக்கு மனசு சங்கடப்படும். கஷ்டமோ, நஷ்டமோ தயவு செய்ஞ்சு எங்க ரெண்டு பேரையும் தனியா இருக்க அனுமதியுங்க. குடிசையோ, ஒண்டுக்குடித்தனமோ ஏதோ ஒரு சின்ன இடமா பார்த்துக்கிட்டுப் போயிடறோம்.”

இதைக் கேட்டுவிட்டு அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்தார் அவர். அப்புறம் சிரித்தபடியே பதில் சொல்லலானார்.

“அது நீ சொல்றமாதிரி அத்தனை சுலபமில்லே முத்துராமலிங்கம்! மந்திரியும் எதிர்தரப்பு ஆட்களும் உன்னையும் மங்காவையும் தொல்லைப்படுத்தணும்னே நாலா பக்கமும் வேட்டை நாய்களை ஏவி விடற மாதிரி அபாயங்களை ஏவி விட்டிருக்காங்க. அவங்களுக்கு இருக்கிற கோபத்திலே கொலை பண்ணக் கூடத் துணிஞ்சிருப்பாங்க! இந்த சமயத்திலே உங்களைத் தனியா இருங்கன்னு அனுப்ப நான் சம்மதிச்சேன்னா என்னைப் போலப் பொறுப்பில்லாதவன் வேறொருத்தன் இருக்க முடியாது. உன்னாலே எனக்குக் கஷ்டம் வரும்னா அதுவே எனக்குச் சந்தோஷம்னு ஏத்துக்க நான் தயார். உங்களுக்கு சுகமும் சௌக்கியமும் வரப்போ வேணுமானா நீங்க தனியாப் போய்க்குங்க கஷ்ட காலத்திலே மட்டும் கண்டிப்பா எங்கூடத்தான் நீங்க இருந்தாகணும். கஷ்டம் வரப்போ விட்டுடறதும், வசதி வர்றப்போ அரவணைச்சுக்கறதும்தான் இந்தக் காலத்து நடை முறையாயிருக்கு. ஆனா நான் இந்தக் காலத்து மனுசன் இல்லே. உங்க கஷ்டத்திலே எனக்குப் பங்கு கொடுங்க. என் கஷ்ட நஷ்டங்களில் நீங்களும் பங்கெடுத்துக்குங்க... வீணா மனசு குழம்பாதிங்க...”

“ஐயா! நீங்க ரொம்பப் பாரத்தைச் சுமக்கணுமேன்னு தான்...?”

“சத்திய விவசாயத்தில் பாரம் சுமந்துதானப்பா ஆகணும். முடிகிறவரை சுமப்போமே...?”

அவனுக்கும் அவருக்கும் இடையே நடந்த இந்த உரையாடல் மங்காவுக்குத் தெரியாது. அவருடைய எல்லையற்ற பெருந்தன்மையை அவன் வியந்தான். இப்படி ஆலமரம் போல் பலரை நிழலில் அமர்த்திக் குளிர்விக்கும் பண்புள்ள மனிதர்கள்தான் தலைவர்களாக இருக்கவேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாகத் தங்கள் நிழலில் புதிதாக யாருமே அமரக்கூடாது என்று நினைக்கிற சுயநலமிகளே இந்தத் தலைமுறையில் தலைவர்களாக வந்திருக்கிறார்களே என்று ஒப்பிட்டு எண்ணினான் முத்துராமலிங்கம்.

அன்றிலிருந்து அவருடைய இயக்க வேலைகள், தியாகியின் குரல் பத்திரிகைப் பணிகள், அச்சக அலுவல்கள் அனைத்திலும் ஈடுபட்டுத் தீவிரமாக உழைத்தார்கள் மங்காவும் அவனும்.

மந்திரி எஸ். கே. சி. நாதனுக்கு வேண்டிய தரப்பு மஞ்சள் பத்திரிகைகள் சில அவர்கள் திருமணத்தைப் பற்றியும் அதற்குத் தியாகி சிவகாமிநாதன் முன் நின்று உதவியதைப் பற்றியும் தாறுமாறாக எழுதியிருந்தன. ‘கடத்தல் கல்யாணத்துக்குத் தலைமை வகித்த தியாகி’ என்றும் ‘தியாகிக்கு புதிய உத்தியோகம்’ என்றும் தலைப்புக்கள் போட்டு அவரைக் கிண்டல் செய்திருந்தன. மங்காவின் தந்தையோ இந்தத் திருமணத்தை எதிர்க்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் குமுறிக் கொண்டிருந்தார். அவருடைய ஆத்திரமெல்லாம் சிவகாமிநாதன் மேலும் முத்துராமலிங்கத்தின் மேலும் தான். எங்காவது வகையாகச் சிக்கினால் ஆள் ஏற்பாடு பண்ணி முத்துராமலிங்கத்தின் கையைக் காலை முறித்து விடக்கூட அவர் தயாராயிருந்தார். வகித்துக் கொண்டிருந்த மந்திரி பதவி மட்டும் தடுத்திராவிட்டால் நேரடியாகவே வன்முறையில் இறங்கியிருப்பார் அவர்.

‘ஊராருக்கெல்லாம் பெண்ணுரிமையைப் பற்றியும் பெண் விடுதலையைப் பற்றியும் வாய் கிழியப் பேசிய இவருடைய மகளுக்கு மட்டும் விரும்பிய கணவனை அடைய உரிமை இல்லையா?’ என்பதாக யாரும் கேட்டு விடக் கூடாதே என்ற பயம் தான் இப்போது மந்திரியைத் தடுத்தது. ஆனால் அதற்காக அவர் முழுமையாக வாளா இருந்து விடவும் இல்லை. தன் பெயரோடும், தன்னோடும் நேரடியாகத் தொடர்பு படுத்தி விட முடியாத மறைமுகமான கெடுதல்களைச் சிவகாமிநாதனுக்கும், முத்துராமலிங்கத்துக்கும் செய்து கொண்டுதான் இருந்தார்.

அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை மவுண்ட்ரோடு எல்.எல்.ஏ. பில்டிங் மாடி ஹாலில் ஒரு கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கத்தின் தலைப்பு ‘எங்கள் இந்தியா’ என்பது. தேசபக்தியும், முற்போக்கு எண்ணமும் கொண்ட பல கவிஞர்கள் பாடினார்கள். முத்துராமலிங்கமும் பாடினான்.

“எங்கள் இந்தியா ஆம்! இது எங்கள் இந்தியா!
மியூஸியங்களும் மிருகக் காட்சி சாலைகளும்
மிகுந்த இந்தியா!
சீர்த்திருத்தவாதிகள் சிலரும் செப்பிடு வித்தைக்காரர் பலரும்
செறிந்த இந்தியா!
தியாகிகள் சிலரும் திருடர்கள் பலரும்
நிறைந்த இந்தியா!
சத்தியம் என்றொரு பொருளினை அலங்கரித்தே வெறும்
சாட்சியாய்க் கூண்டில் பூட்டி வைத்தோம்
காந்தி என்றொரு மகாத்மாவைக் காட்சிப் பொருளாய்க்
காட்டி வைத்தோம்
சுவர்களில் மாட்டி வைத்தோம்
நேரு என்றொரு மனிதர் தம்மை
நித்தம் பேசியே அலுத்து விட்டோம்
மாநில வாரியாய்க் கட்சிகள் தாவும்
மாபெரும் இந்திய சர்க்கஸ்
புதியதோர் அற்புதம்
நல்லவை எல்லாம் வெறும் காட்சிப் பொருளாய்
தடையிழந்திருக்கத்
தீயவை எல்லாம் சேர்ந்தே எழுந்தே
தெருவில் இயங்கும்
பகடைகளாய் வளர்கிற பாரத தேசம்
பதவியே சுகமெனப் பரமானந்தத்திளைப்புடனிருக்கும்
பஞ்சணை வாசிகள் கொஞ்சி மகிழும் பாரத தேசம்
முப்பது வருடம் சுதந்திரமாக வாழ்ந்த பின்னும்
தண்ணீர் குடிக்கத் தவிக்கும் ஏழைகள்
கண்ணீர் வடிக்கும் கவலைகொள் தேசம்
உண்ணச் சோறும் உடுக்கத் துணியும்
கண்ணியமாகப் பார்த்திட வேலையென்றொன்றும்
கனவில் கூடப் பெற முடியாத காவிய பூமி
இந்தியா எங்கள் இந்தியா ஆம் இது எங்கள் இந்தியா
மனிதர்களைக் காட்டிலும் மனிதர்களைப் பார்க்கிலும்
மியூஸியங்களும், மிருகக் காட்சிசாலைகளும் மிகுந்த இந்தியா.”

கவிதை பலத்த கைதட்டலுடன் வரவேற்கப்பட்டது. கூட்டத்திற்கு இந்தக் கவிதை மிகவும் பிடித்திருந்தது. பாடி முடித்தவுடன் கல்லூரி மாணவர்களைப் போல் தோன்றிய இளம் பெண்கள் சிலரும் இளைஞர்கள் சிலரும் கும்பலாக வந்து முத்துராமலிங்கத்தைச் சூழ்ந்து நின்று கையெழுத்து வாங்கிக்கொண்டு பாராட்டினர்.

கூட்டத்தில் சில இரகசியப் போலீஸாரும் வந்திருந்தது முத்துராமலிங்கத்துக்குத் தெரியாது. அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு அங்கு அனுப்பப்பட்டிருப்பதும் அவனுக்குத் தெரியாது.

அன்று அந்தக் கூட்டத்திற்கு மங்காவும் அவனுடன் வந்திருந்தாள். கல்லூரி நாட்களில் அவனுடைய விவாதங்கள், பேச்சுக்கள், கவிதைகளை அவள் நிறையக் கேட்டு இரசித்திருந்தாலும் கணவனின் கவிதை என்ற புதிய உரிமையோடு அந்தக் கவிதைக்காக அன்று அவனைப் பலர் பாராட்டிய போது அவளுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. இரண்டு மூன்று மணி நேரத்துக்குப் பின் கவியரங்கம் முடிந்து முத்துராமலிங்கமும் மங்காவும் படியிறங்கி எல்.எல்.ஏ. கட்டிட முகப்புக்கு வந்த போது யூனிஃபாரம் அணியாத ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கத்தின் அருகே வந்து தமது அடையாள அட்டையைக் காண்பித்து, “சார்! களம்பூர் மிராசுதார் கொலை சம்பந்தமாகச் சந்தேகத்தின் பேரில் உங்களைக் கைது செய்கிறோம்” என்றார். முத்துராமலிங்கம் அவர்களைப் பதிலுக்குக் கேட்பதற்கு முன் மங்காவே முந்திக் கொண்டு “நான்ஸென்ஸ்! அதற்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?” என்று விசாரித்தாள்.

“களம்பூர் மிராசுதாரைக் கொன்ற நக்ஸலைட்டுகள் அவரது சடலத்தைச் சுற்றித் தூவியிருந்த பிரசுரங்களில் ஒன்றில் காணப்பட்ட ஒரு வாக்கியமும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருக்கிறது மிஸ்டர் முத்துராமலிங்கம்!”

“எந்த வாக்கியம்?”

“அதெல்லாம் இப்போது இங்கே உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. யூ ஆர் அண்டர் அரெஸ்ட்! விசாரணையின் போது எல்லாம் தானே தெரியும்.”

மங்கா அந்தப் போலிஸ் அதிகாரியை நோக்கி, “இந்தத் தவறான காரியத்துக்காகப் பின்னால் நீங்கள் வருந்த வேண்டியிருக்கும்” என்று கூறியதைப் பொருட்படுத்தாமல் முத்துராமலிங்கத்தினருகே போலீஸ் ஜீப்பைக் கொண்டு வந்து நிறுத்தினார் அவர். கூட்டம் தடுத்தும் பொருட்படுத்தாமல் பலவந்தமாக முத்துராமலிங்கத்தைப் போலீஸ் ஜீப்பிலும் ஏற்றிவிட்டார் அவர். மங்காவும் கூட்டத்தினரும், “போலீஸ் கெடுபிடி ஒழிக! முத்துராமலிங்கத்தை விடுதலை செய்!” என்ற கோஷங்களை எழுப்பினாலும் அதைப் பொருட்படுத்தாமல் ஜீப் மெல்ல நகரத் தொடங்கியது.

அத்தியாயம் - 33

யாரையும் எப்போதும் எந்த சந்தேகத்திற்காகவும் உடனே கைது செய்யலாம் என்ற வகையில் இயற்றப்பட்டிருந்த ஒரு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முத்துராமலிங்கம் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிந்தது. நடந்ததை எல்லாம் பார்த்தால் ஏதோ திட்டமிட்டுக் கெடுதல் செய்ய, யாரோ முயன்று செயலாற்றுவதுபோல்தான் தோன்றியது.

மங்காவும், தொண்டர்களும் எல்.எல்.ஏ. பில்டிங்கிலிருந்து விடு திரும்பித் தியாகி சிவகாமிநாதனிடம் நடந்த விவரங்களைக் கூறினார்கள். முத்துராமலிங்கம் பாடிய கவிதையின் மற்றொரு பிரதி மங்காவிடம் இருந்தது. அதை அவள் அவரிடம் கொடுத்தாள். வாங்கிப் படித்துவிட்டு. “இந்தக் கவிதையில் தேசவிரோதமாகவோ சட்ட விரோதமாகவோ எதுவுமே இல்லையே அம்மா தேசத்தைப் பற்றிக் கவலைப்பட்டு அக்கறை காட்டும் தொனி அல்லவா இதில் கேட்கிறது? எதற்காகவோ கைது செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். ‘நொண்டிக் கழுதைக்குச் சறுக்கினது சாக்கு’ என்று இதை வைத்துக் கைது செய்திருக்கிறார்கள்” என்றார் அவர்.

அப்பாவுக்கு நேரடியாக டெலிஃபோன் செய்து, ‘ஏன் இப்படி எங்களை வதைக்கிறீர்கள்? உங்களுக்குப் பிடிக்கவில்லையானால் உங்கள் அடியாட்களை ஏவி எங்களை ஒரேயடியாகக் கொன்று விடுவதுதானே?’ என்று ஆத்திரத்தோடு ஆத்திரமாகக் கேட்டுவிடலாம் போலத் தோன்றியது மங்காவுக்கு.

உடனே மங்காவை அழைத்துக் கொண்டு போய்த் தம்மேலும் தமது இயக்கத்தின் மேலும் ஈடுபாடுள்ள ஒரு வக்கீலைச் சந்தித்தார் சிவகாமிநாதன். முத்துராமலிங்கத்தின் மேல் போலீஸார் தொடுத்துள்ள வழக்கோ, குற்றச்சாட்டுக்களோ செல்லுபடியாகாதென்று வக்கீல் உறுதியாகக் கூறினார். தாமே வாதாடுவதாகவும் ஒப்புக் கொண்டார்.

முத்துராமலிங்கத்தைச் சென்று சந்திப்பதாகச் சிறையில் அவர்கள் முயன்றது வீணாயிற்று. அவன் பாடிய கவிதையில் ஒரு வார்த்தையும் எங்கோ நடந்த ஒரு கொலையில் சடலத்தைச் சுற்றித் தூவியிருந்த துண்டுப் பிரசுரங்களில் காணப்பட்ட ஒரு வார்த்தையும் ஒன்றாக இருக்கிறது என்பதற்காக அவனை இப்படி ஓர் ஆள் தூக்கிச் சட்டத்தின் கீழ்க் கைது செய்து கொண்டு போயிருப்பது அதியமாகப் பட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அன்று போராடியதை விடச் சொந்த ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இன்று போராடுவது அதிகக் கொடுமை நிறைந்ததாக இருந்தது. அரசியல் உலகிலும் சமூகத்திலும் செல்வாக்கு நிறைந்தவர்களாக இருக்கும் பலர் மூலம் முயற்சி செய்தும் முத்துராமலிங்கத்தை ஜாமீனில் வெளியே அழைத்து வருவதற்கு மிகவும் சிரமப்பட்டார். சிரமப்பட்டு முயற்சி செய்தும் அந்த விஷயத்தில் அவருக்குத் தோல்வியே கிடைத்தது.

“இப்படிப்பட்டவர்களைக் கொலை செய்து இவர்களின் மண்டை ஓடுகளை மியூஸியங்களில் வைத்தால் தான் சமூகப் புரட்சி விளைந்து சமத்துவம் மலரும்” என்று செந்நிறக் கையெழுத்துக்களால் கிறுக்கப்பட்ட பிரசுரங்கள் கொல்லப்பட்ட களம்பூர் மிராசுதாருக்கு அருகே கிடந்தனவாம். ‘அதிலும் மியூஸியம் என்று வருகிறது. ஆகவே தான் சந்தேகப்படுகிறோம்’ என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டவாதம் திட்டமிட்ட கட்டுக்கதை போலிருந்தது. எல்லாமே திட்டமிடப்பட்ட பயமுறுத்தல்தான் என்பது போகப் போகப் புரிந்தது. முத்துராமலிங்கம் கைது செய்யப்பட்ட தினத்தன்று இரவு ‘நேரில்தான் பார்க்க அநுமதி இல்லை. நீங்கள் விரும்பினால் அவரோடு ஃபோனில் பேசலாம். அங்கே அவரைச் சிறைக் கண்காணிப்பாளர் அறையிலுள்ள ஃபோனில் வந்து உங்களோடு பேச ஏற்பாடு செய்திருக்கிறோம்! இதையும் நாங்கள் செய்யக்கூடாது. செய்யமுடியாது. உங்களுக்காகத்தான் இதையே செய்கிறோம் என்று நைச்சியமாகச் சொல்லிப் போலீஸ் தரப்பிலிருந்தே வந்து மங்காவைக் கூப்பிட்டார்கள்.

சிவகாமிநாதன், மங்கா, இருவருமே அதை நம்பி னார்கள். போலீஸ்காரர்கள் கூட மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் போனால் போகிறதென்று உதவ முன் வருகிறார்கள் போலிருக்கிறது என்று தோன்றியது அவளுக்கு. அரசாங்க கெடுபிடிகளையும் மீறிச் சில போலீஸ் அலுவலர்களும் உத்தியோகஸ்தர்களும் நல்லவர்களாக இருப்பதில் இரக்க குணமுள்ளவர்களாக இருப்பதையும் சிவகாமிநாதனே பொது வாழ்வில் அடிக்கடிப் பார்த்திருக்கிறார். இதைப் பற்றியும் அவர் அப்படித்தான் எண்ணினார். முதலில் தாமே போலிஸ் ஸ்டேஷனுக்கு அவளோடு கூடப் போய் வரலாமா என்று எண்ணினார். அப்புறம் மகன் பாண்டித்துரையையும், மகள் கஸ்தூரியையும் கூப்பிட்டு, “மங்கா அக்காவோட போலிஸ் ஸ்டேஷன் வரை கூடப் போயிட்டு வாங்க” என்று உடன் அனுப்பினார்.

அவர்கள் மூவரும் ஜீப்பில் தேடி வந்திருந்த போலீஸ் தரப்பு ஆளோடு ஸ்டேஷனுக்குச் சென்றார்கள். ஸ்டேஷனில் அவர்களுக்குப் பிரமாதமான உபசாரம் நடந்தது. மங்காவோடு உடன் வந்திருந்த பாண்டித்துரையையும், கஸ்தூரியையும் வெளியே அமர வைத்துவிட்டு மங்காவை மட்டும் தனியே_டெலிஃபோன் இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.

எதிர்ப்புறம் யாரோ லயனில் ஏற்கெனவே பேசக் காத்திருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக ரிஸீவர் தயாராக எடுத்து மேஜைமேல் வைக்கப்பட்டிருந்தது.

“பேசுங்கம்மா! உங்களுக்குத்தான்...” என்று எடுத்து வைத்திருந்த ரிஸீவரைச் சுட்டிக்காட்டி மரியாதையாக அவளிடம் கூறினார் அழைத்து வந்த போலீஸ் அலுவலர். அவரது பவ்யமும் பணிவும் செயற்கையாக இருந்தன.

ஆருயிர் கணவன் முத்துராமலிங்கத்தினிடம் பேச லாம் என்று ஃபோனை எடுத்தால் எதிர்பாராத அதிர்ச்சியாக மறு முனையிலிருந்து தந்தையின் குரல் சிறியது.

“கோயில்லே தாலி கட்டினது முதல் ரிஜிஸ்திரார் ஆபீஸ்லே கலியாணத்தைப் பதிவு பண்ணினது வரை எல்லாம் என்னைக் கொலை பண்ணிடுவேன்னு பயமுறுத்தி நடத்தினாங்க. எனக்கு இதிலே சம்மதமே இல்லை. என் விருப்பத்துக்கு எதிரா என்னைப் பலாத்காரமாகக் கடத்திக் கிட்டுப் போய்த்தான் இதெல்லாம் நடத்திச்சுன்னு இப்பவே ஒரு கம்ப்ளெயிண்ட் குடுத்திட்டு நேரே இங்கே வந்து சேரு! இல்லாட்டி நீயும் உருப்படமாட்டே, உன்னை இழுத்துக்கிட்டுப் போனவனும் உருப்பட மாட்டான். உருப்பட விட மாட்டேன். ஞாபகம் வச்சுக்கோ. கடைசியா எச்சரிச்சு வைக்கலாம்னுதான் உன்னைக் கூப்பிட்டனுப்பிச்சேன்.”

“சீ! நீங்களும் ஒரு மனுஷனா? என்னை ரவை ரவையா வெட்டினாலும் அது நடக்காது” என்று கூறி எரிச்சலோடு ஃபோனை வைத்தாள் மங்கா. தான் ஏமாற்றப்பட்டு அழைத்து வரப்பட்டிருக்கிறோம் என்று அவளுக்குப் புரிந்து விட்டது. முத்துராமலிங்கத்தோடு பேச வேண்டும் என்ற ஆசையோ, சந்திக்க வேண்டும் என்ற ஆசையோ தனக்கு இருக்கும் என்ற அநுமானத்தை வைத்துப் போலீஸ்காரர்களின் உதவியோடு தந்தை தன்னை மிரட்டியிருக்கிறார் என்பதை உணர்ந்த போது அவள் குமுறினாள். அழைத்துச் சென்றது போலவே மிகவும் மரியாதையாக போலீஸ் ஜீப் மூலம் அவர்கள் வீட்டில் கொண்டு வந்து விடப்பட்டார்கள்.

ஸ்டேஷனில் நடந்ததைச் சிவகாமிநாதனிடம் சொன்னாள் அவள்.

கேட்டுவிட்டு நிதானமாக மறுமொழி கூறினார் அவர்.

“உங்கப்பா அரசியல் நடத்துகிற மாதிரியே குடும்ப விஷயங்களையும் அரட்டி மிரட்டிச் சமாளித்துவிடலாம்னு நெனைக்கிறார் போல்ருக்கு.”

“இனிமே இந்த ஜென்மத்திலே நான் அவர் சொல்றதைக் கேக்கப் போறது இல்லே.”

“உனக்கு அந்த உறுதி இருக்கிறதுன்னாச் சந்தோஷம் தான் அம்மா.”

இங்கே மங்காவின் மனத்தைக் கலைக்க இப்படி முயன்ற அதே நேரத்தில் சின்னியும் வேறு சில நண்பர்களும் மந்திரியின் ஆசியுடன் விசேஷ அநுமதி வழங்கப்பட்டுச் சிறைச்சாலைக்குச் சென்று முத்துராமலிங்கத்தைச் சந்தித்தார்கள்.

“உனக்கு ஏனப்பா இந்தப் பேஜார் புடிச்ச வேலையெல்லாம்? பேசாம கம்னு எனக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லே. சிவகாமிநாதன் தான் என்னைப் பயங்காட்டி மிரட்டி இந்தக் கண்ணாலத்தைப் பண்ணி வச்சாருன்னு ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதிக் குடுத்தியானா - நிம்மதியா வெளியிலே வந்துடலாம். உன் மேலே ஒருத்தன் கை வைக்க மாட்டான். ஒரு வேலையைத் தேடிக்கினு நீ பாட்டுக்கு மெட்ராஸ்லே நிம்மதியா இருப்பே. இது இன்னாத்துக்குப்பா இந்தப் பெரிய எடத்து விவகாரத்திலே போய்த் தலையை விட்டே! கழுத்துக்குக் கத்தி வைக்கிற விரோதத்தைப் பார்த்துத் தேடிக்கிட்டியேப்பா?” என்று மிகவும் உரிமையோடு ஆரம்பித்தான் சின்னி.

“நீயா வந்தியா? யாராவது சொல்லி ஏவிவிட்டு வந்தியா?” என்று கோபமாகப் பதிலுக்கு அவனைக் கேட்டான் முத்துராமலிங்கம்.

“யார் சொல்லியும் நான் வரலேப்பா! நம்ம தோஸ்தா கொஞ்ச நாள் பழகின ஆளாச்சேன்னு உன் கையிலே சொல்லிட்டுப் போக வந்தேன்.”

“உன்னைப் பார்த்ததுலே ரொம்ப சந்தோஷம் சின்னீ! ஆனா இது மாதிரி விஷயத்திலே உன்னோட யோசனை - அறிவுரை எதுவும் எனக்குத் தேவைப் படாது. நீயும் தெரிஞ்சுக்க. உன்னை இங்கே அனுப்பிச்சு வச்சவங்களுக்கும் நல்லாத் தெரிகிற மாதிரிப் போய்ச் சொல்லு.”

“இன்னா வாத்தியாரே! இதுக்குப் போயி இத்தனை கோபிக்கிறீயே...?” என்று பல்லை இளித்தான் சின்னி. அவனுடைய சாராய வியாபாரம் - விபசார விடுதி நடத்துவது எல்லாவற்றுக்கும் கட்சியும் கட்சி மேலிடமும் உதவியாயிருந்து வந்ததனால் கட்சி மேலிடத்தில் யாராவதோ அல்லது மந்திரியோ அவனைத் தூண்டிவிட்டு இங்கே அனுப்பியிருக்கக்கூடும் என்று புரிந்தது முத்துராமலிங்கத்துக்கு.

தனது எஜமானர் தூண்டிவிட்டு வந்ததாக மட்டும் முத்துராமலிங்கம் கருதி விடக் கூடாது என்று எண்ணியோ என்னவோ சொந்த முறையில் அக்கறை காட்டுவது போலவும் அவனிடம் பேசினான் சின்னி. அவனைச் சுலபமாகத் தவிர்த்து அனுப்பிவிட்டான் முத்துராமலிங்கம். சிவகாமிநாதனை நம்பினால் பிழைத்துப் பணம் காசு சேர்த்து முன்னுக்கு வர இயலாது என்கிற தொனியில் சின்னி பேசியதை முத்துராமலிங்கம் இரசிக்கவில்லை.

ஒரு குறிப்பிட்ட நாள் கெடுவுக்குள்ளாக முத்துராமலிங்கத்தைக் கோர்ட்டில் ஆஜர் செய்து குற்றச்சாட்டை நீதிபதிக்கு முன் ஆதாரத்துடன் நிரூபித்து அவனைக் கைது செய்தது சரியே என்று நிறுவ வேண்டிய நேரம் வந்தது. போலீசுக்காக அரசாங்க வக்கீல் ஆஜரானார். முத்துராமலிங்கத்துக்காகச் சிவகாமிநாதனின் நண்பரான அந்தத் தேசபக்த வக்கீல் ஆஜரானார். நியாயவுணர்வில் கனிந்த மனமும் யாருக்கும் எதற்கும் அஞ்சாத ஆண்மையும் உள்ள ஒரு நீதிபதிக்கு முன் வழக்கு விசாரணைக்குப் போயிற்று. அரசாங்க வக்கீல் முத்துராமலிங்கத்தின் மேலுள்ள குற்றச்சாட்டை விவரித்தார். களம்பூர் மிராசுதாரின் சடலத்தருகே கிடைத்த துண்டுப் பிரசுரத்தினையும் முத்துராமலிங்கத்தின் கவிதையையும் ஒப்பிட்டார் அவர்.

“ஒரே ஒரு வார்த்தைக்காக குற்றம் சாட்டிக் கைது செய்வதானால் நாட்டிலுள்ள புத்தகங்கள், பத்திரிகைகள் அகராதிகள் எல்லாவற்றிலும் எங்கெங்கே அந்த வார்த்தை வருகிறதோ அந்த வார்த்தையை அப்படி எழுதியவர்களை எல்லாம் ‘பிருவெண்டிங் டிடென்ஷனில்’ பிடித்து உள்ளே போட வேண்டியிருக்கும்! என்னைப் பொறுத்தவரை முத்துராமலிங்கத்தின் இந்தக் கவிதையை விட தேசத்தின் நலனில் அக்கறை காட்டிக் கவலைப்படும் இலக்கிய உத்வேகமுள்ள பகுதி வேறொன்று கிடைக்க முடியாது. இதை எழுதியவரைத் தேச விரோதியாகவும் சமூக விரோதியாகவும் சித்தரித்து வழக்குத் தொடுப்பதைப் போல அக்கிரமம் வேறு இருக்க முடியாது” - என்று வாதிட்டார் முத்துராமலிங்கத்தின் வக்கீல்.

கோர்ட் மறுநாளைக்கு ஒத்து வைக்கப்பட்டுக் கலைந்தது. மறுநாள் தீர்ப்பைக் கேட்கக் கோர்ட்டில் பெருங் கூட்டம் கூடிவிட்டது.

குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லாததால் முத்துராமலிங்கத்தை விடுதலை செய்வதாகத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி - தமது தீர்ப்பில் துணிந்து அவனது அந்தக் கவிதையைத் ‘தேசப் பக்தியை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த மனப்பாங்கோடு உள்ளமுருகி எழுதப்பட்டது’ - என்று வருணித்து ‘அதில் மோசம் காண முயன்றது கவிதையைப் புரிந்து கொள்ள இயலாத அறியாமையினால்தான் இருக்க வேண்டும்’ என்று பாராட்டியிருந்தார். மாலைப் பத்திரிகைகள் தீர்ப்பை முதல் பக்கத்தில் பிரசுரித்தன. காலைத் தினசரிகள் கோர்ட் வாசலிலேயே முத்துராமலிங்கத்தைப் பேட்டி காண முந்தின போது அங்கே ஆவல் அலை மோதியது.

அத்தியாயம் - 34

ஒரு கவிதையை எழுதியதற்காகச் சிறை சென்று மீண்ட அநுபவமும், தன்னை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கிய நீதிபதியின் வார்த்தைகளாலேயே அந்தக் கவிதை வானளாவப் புகழப்பட்டிருந்ததும் முத்துராமலிங்கத்தைப் பிரபலமாக்கின. அவன் பெயர் எங்கும் பரவியது. அவனை இரசிகர்கள் சுற்றிச் சூழ்ந்தனர். பின்பு, காமிராமேன் சண்முகத்தின் உதவியால் புதிய தயாரிப்பாளர் ஒருவருடைய படத்துக்குச் சில பாடல்கள் எழுதினான் அவன். நன்றாக வாய்த்துவிட்ட காரணத்தால் படம் பிரபலமாகி வெளிவருவதற்குள் பாடல்கள் வெளிவந்து பிரபலமாகி விட்டன. பாடல்களுக்கு இருந்த வரவேற்பைப் பார்த்து வேறு சில தயாரிப்பாளர்களும் அவனைத் தேடி வந்தனர்.

முன்பு எந்தத் திரை உலகில் முந்நூறு ரூபாய்க்காகப் பாபுராஜ் போன்ற கைநாட்டுப் பேர்வழிகளுக்கு முன்னால் கைகட்டி வாய் பொத்தி நிற்க நேர்ந்திருந்ததோ அதே திரை உலகில் அவன் பெயர் இப்போது பரவிச் சுதந்திரமாகக் காலூன்றி நிற்க அவனுக்கு இன்று ஓர் இடம் கிடைத்திருந்தது.

இப்போது முத்துராமலிங்கம் மாதம் தவறாமல் ஊருக்குப் பணம் அனுப்பினான். அவனும் மங்காவும் தொடர்ந்து சிவகாமிநாதனோடு கூடவே வசித்தார்கள். அவருக்காக உழைத்தார்கள். பொழுது விடிந்து பொழுது போனால் பத்திரிகைக் கடன்களுக்கும் அரசாங்கமும் ஆளுங்கட்சியும் தம்மேல் ஜோடிக்கும் பொய் வழக்குகளுக்கும் பதில் சொல்லவே சரியாயிருந்தது அவருக்கு. அத்தனை சிரமங்களுக்கும் வேதனைகளுக்கும் நடுவிலும் கூடச் சிறுமை கண்டு பொங்கும் இயல்பும், தீமைகளைச் சாடும் கோபமும் குறையாமல் அவர் வாழ்ந்ததைக் கண்டு முத்துராமலிங்கம் அவரை வியந்தான். வணங்கினான்.

பாடல்களோடு இரண்டொரு படங்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதும் வாய்ப்பும் சண்முகத்தால் அவனைத் தேடி வந்தன.

“உன்னை யார் யாரோ சினிமா ஆளுங்க கார்லே தேடி வராங்க. அவங்களை வாங்கன்னு உள்ளே கூப்பிட்டு உட்காரச் சொல்லக் கூட வசதி இல்லாத வீடு இது! இப்ப உன்னாலே உன் கால்லே நிற்க முடியும்னா நீ அடையாறிலேயோ, மைலாப்பூர்லியோ ஒரு தனி வீடு பார்த்துக்கிட்டு போகலாமே?” என்று மெல்ல ஆரம்பித்தார் சிவகாமிநாதன். முத்துராமலிங்கம் கறாராகப் பதில் சொல்லிவிட்டான்.

“முடியாது ஐயா! இங்கே தான் இருப்பேன். வசதியில்லாதப்ப இங்கே ஒண்டிக்கிறதும், கொஞ்சம் வசதி வந்தப்ப ஒண்டியிருந்த எடத்தை உதறித் தள்ளிட்டுப் போறதும் என்னாலே முடியாது... எனக்கு இங்கே ஒரு வசதிக்குறைவும் இல்லே. என்னைத் தேடி வர்றவன் இங்கே வந்தா வரட்டும்... வராட்டிப் போகட்டும்.

முத்துராமலிங்கமும், மங்காவும் தொடர்ந்து அங்கேயே இருந்தார்கள். வழக்கம் போல் அவருக்கு எல்லா விதங்களில் உதவினார்கள். எல்லா வேலைகளையும் சுபாவமாகச் செய்தார்கள்.

மந்திரி எஸ்.கே.சி.நாதன் எதைப் பற்றிய நிலைமைகளையோ கண்டறிந்து வர அமெரிக்காவுக்கு ஒரு மாதப் பயணம் போயிருந்தார். மந்திரியாக வந்ததுமே சர்க்கார் செலவில் இப்படி நாலு பிரயாணம் போவதுதானே நடைமுறை, அவர் ஊரில் இல்லாததால் இவர்களுக்கு அதிகத் தொல்லைகள் இருக்கத்தான் செய்தன. ஒருநாள் மாலை இருட்டிய பின் கிரீன்வேஸ் ரோட்டிலிருந்து அம்மா மங்காவைத் தேடி வந்து பார்த்துவிட்டுப் போனாள்.

வழக்கம் போல் தெருவில் காரிலிருந்தபடியே, டிரைவர் மூலம் அவளைக் கூப்பிட்டனுப்பித்தான் பேசினாள் அவள்.

வழக்கமான திட்டு, வசவு, சாபம் எல்லாம் முடிந்த பின், “அப்பா தான் ஊரில் இல்லையே? நாலு நாள் எங்க கூட வீட்டிலே வந்து இரேன்... நான் தனியா இருக்கேன்” என்று அம்மா ஆரம்பித்த போது, மங்கா கண்டிப்பாக அதற்கு மறுத்து விட்டாள்.

அமெரிக்காவிலிருந்து அப்பா திரும்பும் போது லண்டன் வந்து பர்மிங்ஹாம் போய் அண்ணனோடு ஒருவாரம் தங்கி விட்டு வரலாம் என்று அம்மா தெரிவித்தாள். மங்காவை எப்படியாவது நைச்சியமாகப் பேசி மனமிளகச் செய்து தன்னோடு வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய் விட வேண்டுமென்று அவளுடைய அம்மா செய்த முயற்சி அவ்வளவும் வீணாகி விட்டது.

“என்னடீ இப்படிக் கறுத்து முகமெல்லாம் குழி விழுந்து இங்கே பஞ்சத்தில் அடி பட்டவ மாதிரி ஆயிட்டியே? சரியாச் சாப்பிடறியா இல்லியா?” என்று அம்மா கேட்ட போது கூடத் தன்னைத் தாழ்வு உணர்வில் சிக்க வைக்க அவள் முயல்வதை மங்கா சரியாகப் புரிந்து கொண்டாள்.

“நான் நல்லாத்தான் இருக்கேம்மா! உன்னைப் பார்த்தாத்தான் எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்கு?”

“ஆமாண்டீ பேச மாட்டியா பின்னே? பறிகொடுத்ததாலே தானே இப்பிடிக் கண்ட கண்ட எடத்துக்கெல்லாம் நான் உன்னைத் தேடி அலைய வேண்டியிருக்கு!”

“இன்னொரு வாட்டி அப்படிச் சொல்லாதேம்மா! முன்னே ஒரு வாட்டி கூட இது மாதிரித்தான் ‘கண்ட கண்ட எடம்’னு சொன்னே? நீயும் அப்பாவும் இருக்கிற எடத்தை விட இது ஒண்ணும் கொறைவான இடம் இல்லே, ஞாபகம் வச்சுக்கோ...”

“நான் யாரையும் கொறைச்சுச் சொல்லலேடீ.”

“பின்னே நீ பாட்டுக்கு கண்ட கண்ட இடம்னா என்ன அர்த்தம்?”

அம்மா விடை பெற்றுக் கொண்டு போய்ச் சேர்ந்தாள். சிறிது நேரத்துக்கெல்லாம் முத்துராமலிங்கம் கோடம்பாக்கத்திலிருந்து வந்தான்.

“மங்கா! இன்னிக்கு நான் கொஞ்சம் ஃப்ரீ! மறுபடி நாளைக்குக் காலைல தான் எனக்கு வேலை. கடற்கரைக்கு போயிட்டு வரலாமா?”

இந்த மாதிரி ஓய்வு கிடைத்து அவன் இப்படி அவளைக் கேட்பதே அபூர்வம். அவள் மலர்ச்சியோடு சம்மதித்தாள். தியாகி சிவகாமிநாதன் அப்போது வீட்டில் இல்லை. வக்கீல் வீட்டுக்கு ஒரு வழக்கு விஷயமாகப் பேசப் போயிருந்தார். கஸ்தூரியும், பாண்டித்துரையும் மட்டுமே வீட்டிலிருந்தார்கள். கஸ்தூரியும் சமையலறையில் ஏதோ கைக்காரியமாக இருந்தாள். பாண்டித்துரை அச்சகத்தில் அச்சுக் கோத்துக் கொண்டிருந்தான்.

மங்காவும் முத்துராமலிங்கமும் அவர்கள் இருவரையும் கூடக் கடற்கரைக்குக் கூப்பிட்டுப் பார்த்தார்கள்.

“வீட்டைப் பூட்டிக்கிட்டுப் போறத்துக்கில்லே. யாராவது தேடி வருவாங்க... அப்பாவும் வக்கீல் வீட்டுக்குப் போயிருக்காரு... நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க... நாங்க வீட்டைப் பார்த்துக்கிறோம்” என்று மறுத்துவிட்டார்கள் அவர்கள் இருவரும்.

முத்துராமலிங்கமும் மங்காவும் கடற்கரைக்குப் புறப்பட்டார்கள். கடற்கரையில் கூட்டமே இல்லாமல் ஓர் ஒதுக்குப்புறமான மூலையைத் தேடி அவர்கள் அமர்ந்த போது இரவு எட்டு மணிக்கு மேலாகியிருந்தது.

அன்று என்னமோ கடற்கரை அவர்களுக்காகவே ஒழித்து வைத்த மாதிரி இருந்தது. கூட்டமே இல்லை.

தன் வீட்டிலிருந்து அம்மா தேடி வந்து விட்டுப் போனதை அவனிடம் சொன்னாள் அவள். அவள் வீட்டுக்குக் கூப்பிட்டதையும் தெரிவித்தாள். அமுத்தலாக அவன் பதிலுக்குக் கேட்டான்.

“உனக்கு இஷ்டம்னாப் போயிட்டு வர்றதுதானே!”

“எனக்குன்னு தனி இஷ்டம் எதுவும் கிடையாது! உங்களுக்கு இஷ்டமில்லாதது எனக்கும் இஷ்டமா இராது. உங்களுக்கு இஷ்டம்னா அது எனக்கும் இஷ்டமாத்தான் இருக்கும்.”

“உள்ளதைச் சொன்னா உங்கம்மாவோட நீ போகாததுலேதான் எனக்குத் திருப்தி மங்கா.”

“அம்மா அப்பா மாதிரி மோசம் இல்லே. ஆனால் அந்த வீட்டுக்குப் போக எனக்கு இஷ்டம் கிடையாது. தந்திரமா அம்மா மூலம் கூப்பிட்டுக் கொண்டு போய் அங்கே வேற விதமா ஏற்பாடு பண்ணி, என்னை ஒரு ரூம்லே தள்ளிக் கதவைப் பூட்டினாலும் பூட்டிடுவாங்க.”

“உங்க வீட்டைப் பத்தி நீயே இப்படிப் பயப்படும்படி அத்தினி மோசமா இருக்கு மங்கா அது! இல்லியா... என்ன நான் சொல்றது... சரிதானே...?”

“எங்கப்பா வெளிநாடு போயிருந்தாலும் அவரை நம்பறதுக்கில்லே. இப்பிடித் தந்திரமா ஏற்பாடு பண்ணிட்டுப் போனாலும் போயிருப்பாரு...”

“பின்னென்ன? தியாகி சார் மாதிரியா எல்லாரும் இருப்பாங்க?... நாம கஷ்டப்பட்டப்ப ‘எங்ககூடத் தான் இங்கே இருக்கணும்’னாரு. இப்ப நான் கொஞ்சம் சம்பாதிக்கிறதைப் பார்த்து, ‘நீ ஏன் இங்கே இருந்து சிரமப்படணும் அப்பா? தனியா ஒரு வீடு பார்த்துக்கிட்டுப் போகலாமே’ங்கிறாரு?”

“ரொம்பப் பெரிய மனுஷன்...”

“ஆனா உங்கப்பா மாதிரிச் சின்ன மனுஷங்களுக்குத் தானே இது காலமாயிருக்கு?”

“...”

அதன் பிறகு தியாகியின் குரல் பத்திரிகை, வரப்போகும் தியாகி சிவகாமிநாதனின் மணி விழாவை எப்படிக் கொண்டாடுவது போன்ற பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர்கள் இருவரும் கடற்கரையிலிருந்து புறப்பட்டார்கள். இப்போது அவர்கள் மனத்தில் எந்தக் கவலையும் எந்தப் பயமும் இல்லை.

கடற்கரை உட் சாலையில் ஒரே ஒரு அம்பாஸிடர் காரும் சுற்றி நாலைந்து ஆட்களும் சிதறினாற் போல் நின்று கொண்டிருந்தனர்.

அவர்கள் அந்தக் காரருகே நடந்த போது உள்ளே இருந்த டிரைவர் கார் ஹெட்லைட்டைப் போட்டு அணைத்தான்.

அடுத்த நிமிஷம் அந்த நாலைந்து பேரும் ஒன்று சேர்ந்து குபீரென அவர்களை வளைத்துக் கொண்டனர். இருவர் இடுப்பிலிருந்து கத்தியை எடுத்துக் காட்டி மிரட்டி, “மூச்சு விடக் கூடாது! நீங்க ரெண்டு பேரும் உடனே காரில் ஏறியாகணும்” என்றார்கள்.

மங்கா நடுங்கிப் போனாள். முத்துராமலிங்கம் இதை எதிர்பார்க்கவில்லை. ஆனாமும் தைரியமாக நின்று தப்பும் வழியை யோசித்தான். சட்டைப் பையிலிருந்து மணிபர்ஸை வெளியே எடுப்பது போல் அதை மணலில் வேண்டுமென்றே நழுவ விட்டான். நழுவிய மணிபர்சை எடுக்கக் கீழே குனிவது போல் குனிந்து இமைக்கிற வேகத்தில் மணலை அள்ளி எதிரே நின்றவர்கள் முகத்தை நோக்கி வீசினான். இன்னொரு கையால் ஒருவனைக் காலை வாரி விட்டான். எல்லாம் படுவேகத்தில் நடைபெற்றன... அவனால் காலை வாரி விடப்பட்டு விழுந்தவனிடமிருந்து நழுவிய கத்தியைக் கையிலே எடுத்துக் கொண்ட முத்துராமலிங்கம் புயலாக மாறி அவர்களைத் தாக்கத் தொடங்கினான். அவர்களும் அவனைத் தாக்கினார்கள். அப்போது டூரிஸ்ட் பஸ் ஒன்று கடற்கரைச் சாலைக்குள் புகுந்து அங்கே வரவே முரடர்கள் காரில் ஏறிக்கொண்டு ஓட்டமெடுத்தார்கள். முத்துராமலிங்கம் அந்தக் கார் நம்பரைக் குறிக்க முயன்றான். அது மிக மங்கலாக இருந்ததால் பாதி நம்பர் தான் தெரிந்தது.

அத்தியாயம் - 35

அவர்கள் இருவரும் கடற்கரை உழைப்பாளிகள் சிலையருகே மேலே ஏறி வந்திருந்தார்கள். “என்ன நடந்திச்சுப் பார்த்தியா? உங்கப்பா இன்னும் ஓய்ந்து அமைதியடைந்து விடவில்லை. வெளிநாட்டுக்குப் போயிருந்தாலும் நமக்கு ஆள் ஏற்பாடு பண்ணித் தொல்லை கொடுத்துக்கிட்டுத் தான் இருக்காரு...”

“இந்த டூரிஸ்ட் பஸ் மட்டும் சமய சஞ்சீவியா வரலேன்னா நம்மைக் கடத்திக்கிட்டே போயிருப்பாங்க.”

“என் உடம்பிலே உயிர் உள்ளவரை அப்படி நடக்க முடியாது. விடமாட்டேன் மங்கா.”

அவன் குரலில் நிச்சயமும் இரும்பின் உறுதியும் ஒலித்தன.

பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தின் அருகே சவாரி இறக்கி விட்டுவிட்டுக் காலியாகத் திரும்ப இருந்த ஓர் ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறி வீடு திரும்பினார்கள் அவர்கள்.

அவர்கள் வீடு திரும்பியபோது சிவகாமிநாதன் வீட்டில் இருந்தார். வழக்கமாக அவர் இரவு உணவை முடிக்கும் நேரத்துக்குமேல் ஆகியிருந்தும் அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது மெதுவாக நடந்ததை அவரிடம் விவரித்தான் முத்துராமலிங்கம். இரண்டு சுக்கா சப்பாத்தியும், கொஞ்சம் வேக வைத்த காய்கறியும் அரை டம்ளர் பாலும் மட்டுமே இரவில் சாப்பிடும் பழக்கமுடையவர் அவர். முதலிலேயே உண்டு முடித்திருந்தும், அவர்களோடு சேர்ந்து எழுந்திருக்கலாம் என்ற எண்ணத்தோடு பேசியபடியே உடன் அமர்ந்திருந்தார். அவர் மங்காவைப் பார்த்துச் சொன்னார்:

“உங்க ரெண்டு பேரையும் பழி வாங்கற வேலையை ரௌடிகளிடம் ஒப்படைச்சிட்டுத்தான் உங்கப்பா வெளிநாடு போயிருக்கார் போலிருக்கு.”

“எங்கப்பாவே ஒரு ரௌடிதானே ஐயா?”

“கொஞ்சம் உயர்தரமான ரௌடிங்க பெரிய பெரிய பதவிகளிலே இருக்காங்க. சுமாரான ரௌடிங்க அவங்களுக்கு உதவிபுரியிற நிலையிலே இருக்காங்க. அதுதான் இன்னிக்கு இந்த நாட்டு நிலை. நீ சொல்றது சரிதான்.”

“எங்கம்மா இங்கே தேடி வந்திருந்தப்பச் சொன்னாங்க! ‘தியாகியின் குரலை’ வாரம் வாரம் வரவழைச்சு அவரைப் பத்தி நான் எழுதற கட்டுரையை அப்பா இரகசியமாப் படிக்கிறாராம். ரொம்பக் கோபமாம்.”

“இந்தச் சண்டை தகராறு அடிபிடி எல்லாம் நிற்கணுமானா நீ இனிமே அதை எழுதாம விட்டுட்டாலே போதும்னு எனக்குத் தோணுது.”

கூறிவிட்டு அவளுடைய முகத்தை உற்றுப் பார்த்தார் சிவகாமிநாதன். அவர் தன்னுடைய உறுதியைச் சோதிக்கிறார் என்று தோன்றியது அவளுக்கு.

“அவர் திருந்தறவரை அல்லது மக்கள் அவரது அசல் உருவத்தைப் புரிஞ்சுக்கறவரை அதை நான் நிறுத்தப் போறதில்லே...” என்று அவருக்கு அப்போது உறுதியாக மறுமொழி கூறினாள் அவள்.

முத்துராமலிங்கத்தையும், மங்காவையும் அதிகமான கவனத்துடனும் ஜாக்கிரதை உணர்வுடனும் இருக்குமாறு எச்சரித்தார் அவர். இரவு உணவு முடிந்த பின்னும் நெடு நேரம் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.

மறுநாள் காலை கபாலீஸ்வரர் கோவிலுக்குப் போக வேண்டும் என்று முத்துராமலிங்கத்தை உடனழைத்தாள் மங்கா. முதல்நாள் இரவு கடற்கரையில் தங்களை காரில் கடத்திக் கொண்டு போக முயன்ற ரௌடிகளிடம் இருந்து தப்ப வழியருளும்படி அவள் கற்பகாம்பிகையை மனத்துக்குள் வேண்டிக் கொண்டிருந்தாளாம். அம்பிகையின் அருள் தான் அந்த வேளையில் ஒரு டூரிஸ்ட் பஸ்ஸாக வந்து தங்களைக் காப்பாற்றியது என்று அவள் நம்பினாள். அதனால் விடிந்ததும் உடனே போய் அங்கே அர்ச்சனை செய்து வழிபட வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.

அவளைத் தனியே அனுப்புவது பாதுகாப்பில்லை என்று அவனுக்குப்பட்டது. அவனும் அவசர அவசரமாக நீராடி உடை மாற்றிக் கொண்டு புறப்பட்டான்.

கோவிலில் அர்ச்சனை தரிசனம் எல்லாம் முடிந்து வலம் வரும்போது பிராகாரத்தில் தற்செயலாக அம்மாவைச் சந்திக்க நேர்ந்தது. எதிரெதிரே பார்த்துக் கொண்ட போது இருவருக்கும் ஒரு நிமிஷம் என்ன பேசுவதென்று தெரியவில்லை. இருவரும் சில விநாடிகள் அப்படியே திகைத்துப் போய் நின்று விட்டனர். தாய்க்கும் மகளுக்கும் நடுவே குறுக்கிட விரும்பாமல் முத்துராமலிங்கம் ஒதுங்கி நின்று கொண்டான். ஒருவேளை தான் மங்காவுடன் அருகே நின்றால் அவள் தாயின் கோபம் அதிகமாகலாம் என்ற தயக்கமும் அவன் மனதில் அப்போது இருந்தது. அவன் விலகி ஒதுங்கி நின்று கொண்டதற்கு அதுவும் ஒரு காரணம்.

அம்மா தான் முதலில் பேசினாள்:

“நீ நல்லா இருக்கணும்னு தாண்டீ அம்மனை வேண்டிக்கிட்டேன்.”

“உன் நல்லெண்ணத்துக்கு நன்றி அம்மா! ஆனா அது பலிக்குமா இல்லையான்னுதான் எனக்குச் சந்தேகமா இருக்கு. அப்பா என்னடான்னா எங்களைக் கடத்திக்கிட்டுப் போறத்துக்கும், உதைக்கறத்துக்கும், அடிக்கிறத்துக்கும் ரௌடிப் பசங்களை ஏற்பாடு பண்ணித் துரத்திக்கிட்டிருக்காரு. நீ நினைக்கிறது நடக்குமா, அவர் நினைக்கிறது நடக்குமான்னு தெரியலே!” என்று தொடங்கி முந்திய இரவு கடற்கரையில் நடந்ததை விவரித்தாள்.

கேட்டு முடிந்ததும் அம்மா அழத் தொடங்கிவிட்டாள்.

“ஐயோ! எனக்கு அப்படிக் கெட்ட எண்ணம்லாம் கெடையாதுடீ! நீ எங்க இருந்தாலும் பூவும் பொட்டுமா நல்லா இருக்கணும்டீம்மா” என்று பொது இடத்தில் கண்ணீருகுத்து அழ ஆரம்பித்திருந்த அவளைத் தேற்றி அழுகையை அடக்கிச் சமாதானப்படுத்த முயன்றாள் மங்கா. அம்மா பேசிய பேச்சிலும், வார்த்தைகளிலும் தொனித்த ஆதங்கத்திலிருந்து அப்பாவின் பணத்தாசை, பதவி ஆசை, லஞ்ச ஊழல் மயமான அரசியல், எதுவுமே அவளுக்கும் பிடிக்கவில்லை என்று தெரிந்தது.

“தனியா எங்கேயும் போகாதே! ஜாக்கிரதையா இரு. உடம்பைக் கவனிச்சுக்க” என்று ஜபம் பண்ணுவது போல் திரும்பத் திரும்பக் கூறிவிட்டுப் போனாள் அம்மா.

அம்மாவை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு வந்து முத்துராமலிங்கத்துடன் சேர்ந்து கொண்டாள் மங்கா.

கபாலீஸ்வரர் கோயிலிலிருந்து வீடு திரும்பும் போது அம்மாவுக்கும் அப்பாவின் போக்குகள் பிடிக்கவில்லை என்று முத்துராமலிங்கத்திடம் விவரித்துக் கொண்டு வந்தாள் மங்கா. அவன் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டு மங்காவிடம் சொன்னான்:

“பதவியில் இல்லாத காலத்துக்குப் பணம் சேர்த்துக் கொள்வதற்காகப் பதவியைப் பயன்படுத்துவது என்பது இங்கு ஒரு வழக்கமாகவே வந்துவிட்டது. துரதிர்ஷ்டவசமாக உன் தந்தை இதில் இன்று முன்னணியில் இருக்கிறார்.”

அவர்கள் கோயிலிலிருந்து வீடு திரும்பிய போது சிவகாமிநாதனிடம் யாரோ ஒரு சேட் வாயிலிலேயே நின்று கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார்.

“பணத்துக்கு வழி சொல்லலேன்னா பிராப்பர்ட்டி மேலே அட்டாச் பண்ணி இந்த வீட்டை ஜப்திக்குக் கொண்டாந்துட வேண்டியதுதான்” என்று இரைந்து கொண்டிருந்த அவனைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார் சிவகாமிநாதன். சேட் போகிறவரை ஒதுங்கி நின்றிருந்த முத்துராமலிங்கம் அந்த சேட் எதற்காக இரைந்துவிட்டுப் போகிறார் என்று சிவகாமிநாதனிடமே விசாரித்தான். அவர் பதில் சொல்லாமல் மழுப்பினார்.

“உனக்கு எதற்கு அதெல்லாம்? என் சிரமங்களைக் கூடிய வரை நான் பிறரிடம் சொல்கிற வழக்கமில்லை.”

“என்னையோ, மங்காவையோ, சண்முகத்தையோ நீங்க அந்நியமா நெனைக்கக் கூடாது ஐயா! காரணம், நாங்க உங்களை ஒரு விநாடி கூட அந்நியமா நெனைக்கிறதில்லே...”

“நீங்க அப்படி நெனைக்கலேங்கிறதுக்காக என் கஷ்டங்களை எல்லாம் உங்க தலையிலே திணிக்கிறது நியாயமா இருக்காது அப்பா!”

“உங்க கஷ்டங்களை நீங்க எங்களுக்குச் சொன்னா அதைச் சுமக்கிறதிலே எங்களுக்கும் பங்கு உண்டுன்னு அந்தச் சுமையைச் சந்தோஷமா நாங்க ஏத்துப்போம் ஐயா! தயவுசெய்து சொல்லுங்க...”

“பிரஸ், வீடு எல்லாத்து மேலேயும் கடன் இருக்கு. எல்லாத்தையும் ஏலத்துக்குக் கொண்டாந்துடுவேன்னு தான் கூப்பாடு போட்டுட்டுப் போறான்.”

முத்துராமலிங்கத்துக்கு அவர் கூறிய செய்தி வேதனையளிப்பதாக இருந்தது. தேசபக்தியும், பொதுத்தொண்டும் வீசை என்ன விலை என்று கேட்கக்கூடிய சந்தர்ப்பவாதிகளான பலர் கோடி கோடியாகப் பணம் பண்ணக்கூடிய காலத்தில் சிவகாமிநாதன் போன்ற சத்ய விவசாயிகள் வீடு வாசலைக் கடனுக்குப் பறி கொடுக்கக் கூடிய நிலையில் இருப்பது நெஞ்சைப் பிழிந்தது. என்ணத்தை உருக்கி அழ வைத்தது.

அரசாங்கம் தானே அவருக்குத் தியாகிகளுக்குரிய மாதாந்திரப் பென்ஷன் கொடுக்க முன் வந்து விவரங்களை விசாரித்த போது கூட, “என் தியாகம் நாட்டுக்காக நானே விரும்பிச் செய்த தொண்டு ஆகும். அதற்கு விலை தர உங்களுக்கும் தகுதியில்லை. பெற எனக்கும் விருப்பமில்லை” என்று கடுமையாக மறுத்துப் பதில் எழுதிவிட்டார் அவர்.

விலை மதிக்க முடியாத உயர்ந்த சாதனைகளைச் சுலபமாக அவமதிக்கும் வழி அதற்கு மிகவும் மலிவான ஒரு விலையை நிர்ணயிக்க முயல்வது தான்” - என்று சிவகாமிநாதனே அடிக்கடி கூறுவது உண்டு.

அன்று மாலையிலேயே முத்துராமலிங்கமும் காமிராமேன் சண்முகமும், வேறு சில நண்பர்களும் ஓரிடத்தில் சந்தித்து ஆலோசனை செய்தார்கள்.

“இன்றுள்ள சூழ்நிலையில் சிவகாமிநாதனைப் போன்ற உத்தமர்களைக் காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. எல்லாருக்கும் பயன்படக்கூடிய நல்ல மருந்து மரம் ஒன்று ஊர் நடுவே இருப்பது போல் இன்று நம்மிடையே அவர் இருக்கிறார். இன்று அவரைப் பாதுகாக்க வேண்டியது அவர் நலனுக்காக மட்டுமல்லாமல் நம் நலனுக்காகவும் நாட்டு நலனுக்காகவும் கூட அவசியமாகிறது” என்று தொடங்கி அவருடைய கடன் தொல்லைகளை விளக்கினான் முத்துராமலிங்கம். அவருக்கு வயது வந்த மகள் ஒருத்தி கலியாணத்துக்குக் காத்திருப்பதையும் கூறினான்.

அன்றே எல்லாருமாக முடிவு செய்து சில உதவி நாடகங்கள் மூலம் தாங்களே முயன்று பெரிய அளவில் டிக்கெட் விற்பனை செய்து அவருக்குக் கணிசமாக ஒரு நிதி திரட்டிக் கொடுத்துக் கடன்களை அடைக்கத் திட்டமிட்டனர். சில நாடகக் குழுக்களின் தலைவர்கள் சிவகாமிநாதன் மேல் அபாரபக்தி வைத்திருந்தனர். அவர்கள் இந்த ஏற்பாட்டுக்கு உடனே இசைந்தனர். ‘சிவகாமிநாதன் இப்படி நிதி வசூலை ஏற்பாரோ மாட்டாரோ’ என்ற சந்தேகத்தை மட்டுமே அவர்கள் முதலில் தயக்கத்தோடு தெரிவித்தார்கள். அவர் ஏற்பதாக இருந்தால் அவருக்கு உதவுவதைப் போல் தங்களுக்கு மனநிறைவு அளிக்கும் காரியம் வேறு எதுவும் இருக்க முடியாது என்பதையும் உற்சாகமாகத் தெரிவித்தனர்.

‘தியாகியின் குரல்’ உதவி நாடகங்களுக்கு ஏற்பாடாயிற்று. சண்முகமும் முத்துராமலிங்கமும் மங்காவும் டிக்கெட் விற்பனையில் முழு மூச்சாக இறங்கினார்கள். எப்படியோ விவரம் அறிந்து தியாகி சிவகாமிநாதன் அவர்களைக் கூப்பிட்டுக் கண்டித்தார். கடிந்து கொண்டார்.

“இது எனக்குப் பிடிக்கவில்லை! இப்படி எல்லா அரசியல் கட்சிகளும் செய்கின்றன. எனக்காகவும் இப்படி மடிப்பிச்சை எடுக்கக் கிளம்புகிறீர்களே?”

முத்துராமலிங்கமும், சண்முகமும், மங்காவும் பல மணி நேரம் விவாதித்து அவரை அதற்குச் சம்மதிக்க வைக்க வேண்டியிருந்தது. அவர்களுடைய வற்புறுத்தலுக்கும், விவாதத்துக்கும் பிறகு வேண்டா வெறுப்பாக அவரும் அதற்குச் சம்மதித்திருந்தார்.

அத்தியாயம் - 36

சிவகாமிநாதனின் கடன் பளுவை குறைப்பதற்காக அவர்கள் ஏற்பாடு செய்த நேரம் அவரது மணிவிழாச் சமயமாகவும் இருந்தது. பண்பட்ட அறிவாளிகளும் பெரியோர்களும் தங்கள் சொந்தக் கஷ்டங்களைப் புன்னகை மாறாத மலர்ந்த முகத்தாலும் பெருந்தன்மையாலும் உலகுக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டு விடுகிறார்கள் என்பதற்கு அவர் சரியான உதாரணமாயிருந்தார்.

முத்துராமலிங்கமும், சண்முகமும், மங்காவும் பிற தொண்டர்களும் இராப்பகல் பாராமல் ஓடியாடி மிகவும் உழைத்தார்கள், உதவி நிதிக்கான நாடகங்களுக்கு டிக்கெட் விற்றார்கள். வசூல் செய்தார்கள். விழா ஏற்பாடுகளை கவனித்தார்கள். பம்பரம் போல் சுழன்று உழைக்கும் சேவகர் பட்டாளம் ஒன்று சிவகாமிநாதனுக்காகக் காத்திருந்தது. அவர்களுடைய ஒத்துழைப்பு இப்போது முத்துராமலிங்கத்துக்குப் பயன்பட்டது.

பொதுவான சமூக அரசியல் பிரச்னைகளில் எதிர்நீச்சலிட்டாவது நியாயம் காண வேண்டும் என்ற துடிதுடிப்போடு பல ஆண்டுகளாக வாழ்ந்து சிரமப்பட்டுக் கொண்டிருந்த அந்த தியாகியிடம் முத்துராமலிங்கத்தைப் போல் அதே எதிர் நீச்சல் குணமுள்ள பல இளைஞர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.

ஒவ்வோர் ஆரோக்கியமான ஜனநாயக நாட்டிற்கும் இப்படிச் சில எதிர்நீச்சல்காரர்கள் வேண்டுமென்று முத்துராமலிங்கம் முதலிய இளைஞர்கள் உறுதியாக நம்பினார்கள். இந்த எதிர்நீச்சல்காரர்களுக்கு உதவி இவர்களைக் கட்டிக் காக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.

நிதி உதவிக்கான நாடகங்கள் மூலமாகவும், பிற வசூல்கள் மூலமாகவும் சேர்ந்த தொகையை ஓர் எளிய விழாவில் தியாகி சிவகாமிநாதனிடம் அளித்தார்கள். அவர்கள் பாராட்டுவிழா, புகழுரை, மாலை, முகஸ்துதி இதெல்லாம் அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதால் அவற்றை அவர்கள் தவிர்த்திருந்தார்கள். “இன்றைய உலகில் மூன்று விதமான லஞ்சங்கள் அதிகக் கவர்ச்சியோடு வழங்கவும் விரும்பவும் படுகின்றன. பணம், பெண், புகழ் மூன்றையுமே இடமறிந்து பாத்திரமறிந்து லஞ்சமாகப் பயன்படுத்துகிறார்கள். நியாயங்களும், உண்மைகளும் இந்த லஞ்சங்களுக்குப் பலியிடப்படுகின்றன. நவீன உலகில் முகஸ்துதி என்பது, பாதி விபசாரமாகப் பயன்படுகிறது” என்று அடிக்கடி சிவகாமிநாதனே மனம் கசந்து கூறுவதுண்டு.

அதனால் அவருக்கு உதவுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட அந்த மணிவிழாவை அவர்கள் மிக எளிமையாக நடத்தி முடித்தார்கள்.

வீடு அச்சகம் ஆகியவற்றை உடனே கடனிலிருந்து விடுவிடுத்து ஜப்தியாகாமல் காப்பாற்றினார்கள். பத்திரிகைக்காக ஓர் அச்சியந்திரம் வாங்கப்பட்டது.

மறுமாதமே தம் மகள் கஸ்தூரிக்கு எளிய முறையில் திருமணம் முடித்தார் சிவகாமிநாதன். முத்துராமலிங்கம், மங்கா திருமணத்தைப் போலவே அதுவும் மாங்காடு கோவிலில் தான் நிகழ்ந்தது. பெங்களூரில் ஏதோ ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நாணயமான நல்ல தொழிலாளி ஒருவனுக்குத்தான் தன்னுடைய மகளை மணமுடித்துக் கொடுத்திருந்தார் அவர். மகளைக் கணவன் வீட்டுக்கு அனுப்பிய பின்பு பத்திரிகை வேலைகளிலும், பொதுப்பணிகளிலும், போராட்டங்களிலும் தீவிரமாக இறங்கினார் அவர். இப்போது வீட்டில் அவருக்கு உதவியாக மகன் பாண்டித்துரையும், மங்காவும், முத்துராமலிங்கமுமே இருந்தார்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மங்கா ஏற்றுக் கொண்டிருந்தாள். அரசாங்கத்தையும், ஆளும் கட்சியையும் விமர்சிக்கும் பத்திரிகையாக இருந்ததனால் ‘தியாகியின் குரல்’ பத்திரிகை பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருந்தது. மங்கா தன் தந்தையாகிய மந்திரியின் ஊழல்களை விமர்சித்து எழுதுகிறாள் என்பது அந்தப் பத்திரிகையின் மேல் மக்களின் கவனம் திரும்புவதற்கான மற்றொரு புதிய காரணமாயிருந்தது.

நாடு முழுவதுமே பொது நலனுக்காக உழைப்பவர்களின் தொகை குன்றிக் கட்சிகளின் நலனுக்காகவும் சுயநலனுக்காகவுமே உழைப்பவர்கள் பெருகியிருந்தார்கள். மக்கள் நலனை விடப் பதவி நலன் தான் எங்கும் எல்லாருக்கும் பெரிதாயிருந்தது. கட்சிகள் என்பவை கொள்ளைக் கூட்டங்களை போல் செயலாற்றிக் கொண்டிருந்தன. தன் கட்சிக்காரன் என்ன தவறு செய்தாலும் கொண்டாடின, எதிர்க்கட்சிக்காரனின் தவறுகளைப் பெரிதுபடுத்தின. தவறு செய்த தன்னவர்களைப் பாதுகாக்கும் நிரந்தர ஏற்பாடுகளாகவே சில கட்சிகள் இருந்தன. தவறு செய்பவர்கள், லஞ்சம் வாங்குபவர்கள், ஊழல் புரிகிறவர்கள் எந்தக் கட்சியிலிருந்தாலும் கெட்டவர்களே என்ற முனைப்போடு செயல்பட்டது சிவகாமிநாதனின் இயக்கம், “நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே” - என்று அந்த நெற்றிக்கண் பார்வையின் சூட்டில் வெதும்பிக் கொண்டே நிமிர்ந்து நின்று கூக்குரலிட்டுக் கொண்டிருந்தார்கள் அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் அதனால் இவர்களுடைய குற்றச்சாட்டால் பாதிக்கப்பட்ட அத்தனை தலைவர்களும் கட்சிகளும் இவர்களைச் சபிக்கவும் வெதுப்பவும், துன்புறுத்தவும் தீவிரமாக முனைந்தனர்.

சிவகாமிநாதனின் மணிவிழாவை அவர்கள் கொண்டாடிய ஐந்தாறு மாதங்கள் கழித்து முன்பே எப்போதோ அரசாங்கம் அவர் மேல் போட்டிருந்த ஒரு பொய் வழக்கு விசாரணைக்கு வந்தது. பத்திரிகைகள் அது பற்றி அன்றாடம் பரபரப்பாகச் செய்திகளை வெளியிட்டன.

அரசாங்கமும், ஆளும் கட்சியும் பயமுறுத்திப் பலரைப் பொய்ச்சாட்சி சொல்லச் செய்திருந்தார்கள். துரதிர்ஷ்டவசமாக வழக்கு அவருக்கு எதிராகத் தீர்ப்பாகி அவர் இரண்டாண்டுகள் சிறைச்சாலைக்குச் செல்லவேண்டும் என்று முடிந்திருந்தது. சிறைக்குள் போகுமுன் முத்துராமலிங்கம் முதலியவர்களிடம் சிரித்தபடியே கூறினார் அவர்:

“மகாத்மா காந்தி தலைமையில் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகப் பிரிட்டீஷ்காரர்களை நான் எதிர்த்துப் போராடின போதும் சிறைவாசம் தான் எனக்குப் பரிசாகக் கிடைத்தது. என் போன்றவர்கள் போராடிப் பெற்ற சுதந்திர நாட்டிலும் இப்போது சிறைவாசம் தான் எனக்குப் பரிசாகக் கிடைக்கிறது.”

பத்திரிகையையும் இயக்கத்தையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை முத்துராமலிங்கம், மங்கா, சண்முகம், மகன் பாண்டித்துரை ஆகியவர்களிடம் ஒப்படைத்து விட்டு சிறிதும் கலங்காமல் சிறைக்குச் சென்றார் அவர்.

நீதிமன்றத்திலிருந்து அவரைச் சிறைச்சாலைக்கு வழியனுப்பிவிட்டு முத்துராமலிங்கமும், மங்காவும், சண்முகமும், பாண்டித்துரையும் மற்றத் தொண்டர்களும் வீடு திரும்பிய போது நகரமே நிசப்தமாகி விட்டதுபோல் ஒரு பிரமை நிலவியது...

வேலை தேடிச் சென்னை நகருக்குள் நுழைந்த முதல் தினத்தன்று இருந்த அதே உணர்ச்சி தான் இன்றும் முத்துராமலிங்கத்துக்குள்ளே இருந்தது.

ஆயிரம் கைகள் முளைத்து அந்த ஆயிரம் கைகளாலும் அநீதியை எதிர்த்துப் போரிட வேண்டும். ஓயக் கூடாது. ஒழியக் கூடாது! வீழக் கூடாது. தாழக் கூடாது, தயங்கவும் கூடாது! தளரவும் கூடாது.

சிவகாமிநாதனின் வழக்கு விசாரணைத் தீர்ப்பும் சிறைவாச விவரமும் வெளியாகி இருந்த அன்றைய மாலைத் தினசரியில் மற்றொரு பத்தியில், ‘இராயப்பேட்டை விபசார விடுதியில் நளினி என்னும் இளம்பெண் மண்ணெண்ணையை ஊற்றித் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை’ - என்ற செய்தியையும் முத்துராமலிங்கம் தற்செயலாகப் படிக்க நேர்ந்தது.

“நல்லதோர் வீணை செய்தே அதை நலங்

கெடப் புழுதியில் எறிவதுண்டோ?”

என்ற அந்த இனிய குயிற் குரல் அவன் நினைவில் மீண்டும் ஒலித்தது. அவளுடைய முகம், புன்னகை, சோகம் கலந்த பார்வை எல்லாமே அவனுக்கு நினைவு வந்தன.

அதே விபசார விடுதி வாசலில் தலைவிரி கோலமாகக் கிழிந்த உடைகளோடு, “ஐயோ! என்னை விட்டுடு விட்டுடு கொன்னுப்புடாதே” - என்று அபலைகள், அநாதைகள், ஏழைகள், புறக்கணிக்கப்பட்டவர்கள், வேலைகள் கிடைக்காமல் தவிப்பவர்கள் அனைவருமே அந்தப் பெருநகரம் என்கிற கலாசாரச் சுடுகாட்டில் மௌனமாகவோ அல்லது வாய்விட்டுக் கதறியோ, எதனிடமிருந்தோ, எதற்காகவோ, அஞ்சிப் போய் நிலை குலைந்து அந்தப் பைத்தியக்காரியைப் போல நிரந்தரமாக ஓடிக் கொண்டிருப்பதாக அன்று தன் மனத்தில் தோன்றியதையும் இப்போது இந்தக் கணத்தில் திரும்பவும் நினைத்துப் பார்த்தான் அவன்.

பின்பு வயிற்றுப் பிழைப்புக்காக வேலை தேடி ஒரு ஸ்டூடியோவுக்குள் நுழைந்த போது அங்கு ‘ரேப் சீனுக்காக’ நடந்து கொண்டிருந்த ஓர் ஒத்திகையைக் கண்டுவிட்டு, “இந்தப் பெருநகரத்தில் அரசியல், கலை, இலக்கியம் முதலிய சகல துறைகளிலும் அந்தந்தத் துறைகளின் நியாயங்களையும், உன்னதங்களையும் கற்பழிப்பதற்காக ஒரு திட்டமிட்ட ஒத்திகை இப்படித்தான் பல்வேறு மட்டங்களில் நடந்து கொண்டிருக்கிறதோ” - என்று தான் மனம் கொதித்து நினைத்ததையும் இப்போது எண்ணிப் பார்த்தான்.

என்ன காரணத்தாலோ முன்பு தான் தங்கியிருந்த அந்த இராயப்பேட்டை விடுதிக்குப் போய்விட்டு வரவேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது.

யாரிடமும் எங்கே போகிறேன் என்பதைச் சொல்லாமலே அவன் புறப்பட்டான்.

இராயப்பேட்டை விடுதி வாசலில் சின்னி தென்பட்டான்.

“என்ன? ‘உங்க ஆளை’ மறுபடி உள்ரத் தள்ளிட்டாங்க போல்ருக்கே?” என்று சிவகாமிநாதனின் சிரை வாசத்தைப் பற்றி விசாரித்தான் சின்னி.

“ஆமாம்! உங்க ஆளுங்க சாம்ராஜ்யத்திலே நல்லவனை வெளியிலே வுட்டா வைப்பீங்க?” என்று கேட்டுவிட்டு, “அதிருக்கட்டும் சின்னி! நான் பேப்பரிலே படிச்சது நெசந்தானா...?” என்றான்.

“எதைக் கேட்கிறே?...”

“அதான்ப்பா... அந்தச் சேலத்துப் பொண்ணு நளினி... விஷயம்...?”

“ஆமாம்பா...! முதல்லேருந்தே அது இந்த ‘லயன்லே’ ஸெட் ஆகலே... ரொம்பத் தகராறுதான்! கடைசியிலே இப்படி ஆயிப்போச்சு...”

“கொஞ்சம் கூட வருத்தப்படாமச் சர்வசாதாரணமாச் சொல்றியே அதை? உனக்கு அக்கா, தங்கச்சி இருந்து அது இப்படி மண்ணெண்ணையெ ஊத்தி உடம்புல நெருப்பு வச்சுக்கிட்டுப் போயிருந்தா இப்படிச் சொல்வியா...?”

“அதானோ என்னவோ... எனக்கு உடம் பெறப்பே இல்லேப்பா” - இதையும் மிகவும் சகஜமாகத்தான் சொன்னான் சின்னி. அவனையும் உடனழைத்துக் கொண்டு உள்ளே சென்று தீப்பெட்டி தீப்பெட்டியாகத் தடுக்கப்பட்டிருந்த அந்த விடுதி அறைகளில் அவளுடைய அந்த அறைமுன் அடையாளம் கண்டு தயங்கி நின்றான் முத்துராமலிங்கம்.

அங்கே அன்று அந்த அறையும், அதே வரிசையிலிருந்த மற்ற அறைகளும் சகலமும் சாவு வீடு போல் நிசப்தமாயிருந்தன. ஒரு குரூரமான சோக அமைதி நிலவியது. ஆளரவமே இல்லை.

“இன்னும் பத்து நாளைக்கு இங்கே பேச்சு மூச்சு இருக்காது...” இது சின்னி.

அந்த நிசப்தத்திலிருந்து தான் முன்பு ஒருமுறை ஒரு சிறிய சங்கீதம் பிறந்தது - ஒலித்தது - தன்னைச் சில விநாடிகள் மகிழ்வித்தது என்பதை நினைத்த போது முத்துராமலிங்கத்தின் கண்கள் நெகிழ்ந்தன.

எங்கோ எப்போதோ, ஏதோ ஓர் அவசரத்தில் சந்தித்த கேட்ட ஒருத்தியின் குரலாக அதை அவன் மறந்துவிட முடியவில்லை. கவியுள்ளம் படைத்தவனாகிய அவன் மனம் குமுறியது.

சின்னி தன்னிடம் ஏதோ விசாரித்ததை - வினாவியதைக் காதில் வாங்கிக் கொள்ளாமலே அங்கிருந்து வெளியேறித் தெருவுக்கு வந்தான் அவன்.

“ஐயோ என்னை விட்டுடு, என்னை விட்டுடு... கொன்னுப்புடாதே” - என்ற குரல் தெருவின் எதிர்ச்சிறகிலிருந்து கேட்டது. இப்போது அந்தப் பைத்தியம் தலைவிரிகோலமாக ஓடிக்கொண்டிருந்தாள்.

ஏற்கெனவே மயானமான அந்த நகரம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தும் இப்போது ஓசை ஓலியற்று அடங்கி நிஜம் மயானமாகவே ஆகிவிட்டது போல் அவனுக்குத் தோன்றியது. எல்லாவிதமான ஓசைகளிலிருந்தும் சப்தங்களிலிருந்தும் உடனடியாக விடுபட விரும்பிய அவனுக்கு அந்தச் சோக நிசப்தம் கற்பனையே ஆனாலும் அப்போது இதமாக இருந்தது. ஓசைகளைக் கொன்றபின் எஞ்சும் இதமான மௌனத்தையும் சப்தங்களை அழித்த பின் எஞ்சும் இலகுவான நிசப்தத்தையும் அந்தப் பலவீனமான வேளையில் ஒருகணம் அவன் மனம் தற்காலிகமாக நாடியது. ஓசையில் கரைந்து போவதை விட, இந்த மௌனத்தில் கரைந்து போவதை அந்த நொடியில் விரும்பினான் அவன். சப்தத்தில் கரைந்து உருத்தெரியாமல் போவதை விட நிசப்தத்தில் உருத் தெரியாமல் கரைந்து போவது நல்லதென்று அவன் எண்ணினான்.

ஆனால் எல்லாம் ஒரே ஒரு கணம் தான்! அடுத்த கணமே அவன் மனம் விசுவரூபம் எடுத்தது. அவன் நினைவுகள் உயர்ந்து நின்றன. ஆயிரம் கைகளை அடைத்து அவை அத்தனையாலும் நல்லவற்றுக்காகப் போராட தர்மயுத்தம் நடத்தத் தயாராக வேண்டுமென்று தன் ஞானத்தந்தையாகிய சிவகாமிநாதனுக்கு வாக்களித்திருப்பது அவனுடைய நினைவில் வந்து உறுத்தியது.

‘ஒவ்வொரு சோக நிசப்தமும் ஒரு கவிதையைக் கருக்கொண்டிருக்கிறது. ஒவ்வோர் அமைதியும் ஒரு சலனத்தைக் கருக்கொண்டிருக்கிறது. அதைத் துணிந்து கலைக்கிறவரை காத்திருக்க வேண்டும்’ என்ற மன எழுச்சியோடு அவன் வீடு திரும்பினான்.

அவன் சிந்தாதிரிப்பேட்டையை அடைந்து விட்டுப் படியேறிய போது உள்ளே வானொலியிலிருந்து ‘ஒளி படைத்த கண்ணினாய் வா வா... உறுதி கொண்ட நெஞ்சினாய் வா...” என்று பாரதியாரின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. வீட்டின் நிசப்தத்தை ஏற்கெனவே கலைத்திருந்த அந்த நம்பிக்கைச் சங்கீதம் இப்போது அவன் மனத்தின் நிசப்தத்தையும் முழுமையாகக் கலைத்தது. அவன், மங்கா, சண்முகம் முதலிய அனைவருமே அடுத்துச் செய்ய வேண்டிய செயல்களுக்காகத் தயாரானார்கள்.

நிறைவுரை

நடந்த கதைக்குத்தான் சம்பிரதாயமான முடிவுகள், சுபங்கள், மங்களங்கள் எல்லாம். இது நடந்த கதையோ நடந்து முடிந்துவிட்ட கதையோ இல்லை. எங்கோ நடக்கிற கதை... அல்லது இங்கேயே நம்மைச் சுற்றி நடக்கிற கதை. இன்னும் பச்சையாகச் சொல்லப் போனால் நடந்து கொண்டிருக்கிற கதை. நடந்து கொண்டிருக்கிற கதைகள் எப்படி முடியும்? எவ்வாறு முடிய இயலும்?

ஆகவே இது நடக்கிறது. இன்னும் நடக்கிறது! இந்தக் கதாபாத்திரங்களை நீங்கள் கூட உங்கள் அருகருகே எப்போதாவது சந்திக்கலாம்! சந்தித்தால் அடையாளம் கண்டு கொள்ளுங்கள். ஆதரியுங்கள் அல்லது அனுதாபப்படுங்கள்.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

என்று மகாகவி பாரதி பாடியது போல் மூத்த தழல் வீரரான சிவகாமிநாதனையும் - இளைய தழல் வீரர்களான முத்துராமலிங்கம், சண்முகம் முதலியோரையும் இந்த நகரத் தீமைகள் வெந்து தணிவதற்காக இதனிடையே பொதித்து வைத்து விட்டு விடைபெறுகிறேன்.

தந்தையின் பதவி, பணம், சுகங்களில் மயங்காமல் அவரது ஊழல்களை வெறுத்து, அவரிடமிருந்து வெளியேறும் ஒரு மகள்; சொந்தத் தந்தையை விடத் தன் ஞானத் தந்தையை மதிக்கும் ஒரு மகன், பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்றும், ‘சுதந்திரப் போராட்டம் இன்னும் முடியவில்லை’ என்று தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் ஒரு சத்ய விவசாயி - இவர்களை எல்லாம் ஞாபகம் வைத்துக் கொள்வது உங்களுக்கு அப்படி ஒன்றும் சிரமமாயிருக்காது என்று நினைக்கிறேன்.

சத்ய விவசாயங்களில் அறுவடையும் மகசூலும் கூட அவ்வளவு சீக்கிரமாகக் கைக்குக் கிடைக்காது. சிறுகீரை பயிரிடுகிறவன் பலனுக்காகப் படுகிற அவசரத்தைத் தென்னை பயிரிடுகிறவன் பட முடியாது. படவும் கூடாது. பொது நலனுக்குப் போராடுகிற சத்ய விவசாயிகள் தென்னை பயிரிடுபவர்களைப் போன்றவர்கள் என்பது உங்களுக்கும் புரிந்திருக்க வேண்டியது அவசியம். வணக்கம். நன்றி.