nooriyin mithivandip panthayam

நூரியின் மிதிவண்டிப் பந்தயம்

நூரி, மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொண்டு தன் நண்பன் வாசிமை பந்தயத்தில் ஜெயிக்க திட்டம் போட்டிருக்கிறாள். ஆனால், அவளது ஊரில் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவால் மிதிவண்டிப் பயிற்சியும் பந்தயம் நடப்பதும் கடினமாகிவிடுறது.

- Vetri | வெற்றி

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அதற்குள் விடிந்துவிட்டதா? ஏன் அம்மியோ அப்புவோ* இன்னும் என்னை எழுப்பவில்லை? நான் பள்ளிக்குப் போகவேண்டும் என்பதை மறந்துவிட்டார்களா? இல்லை, என்னையே மறந்துவிட்டார்களா? எல்லோரும் எங்கே போனார்கள்?

*அம்மி – அம்மா, அப்பு(Abbu)- அப்பா

“நூரெய்ன்! நீயாகவே எழுந்துவிட்டாயா!” என்று சிரித்தபடி அம்மி கேட்டார். வசதியாக அம்மியிடம் நெருங்கி உட்கார்ந்துகொண்டேன். ஏன் எல்லோரும் தீவிர யோசனையில் இருப்பதைப்போல முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? அம்மி, அப்பு, டாடூ, நானி* எல்லோரும் ஏன் இப்படிக் காலையிலேயே தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்! “அம்மி, இன்றைக்கு என்ன ஞாயிற்றுக்கிழமையா?” என்று கேட்டேன். அம்மி பள்ளியில் அறிவியல் ஆசிரியை. வழக்கமாக நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் பள்ளிக்குப் போவோம். “இல்லை நூரி! இன்று பள்ளிக்கு விடுமுறை கொடுத்துவிட்டார்கள்” என்றார் அம்மி. “ஓ!” முடிந்த அளவு என் முகத்தை ஏமாற்றத்தோடு வைத்துக்கொண்டேன். ஆனால், மனதுக்குள் உற்சாகம் பொங்கியது. “அப்போ நான் வாசிம் வீட்டுக்குப் போய் விளையாடலாம், இல்லையா?” *டாடூ- தாத்தா, நானி- பாட்டி

வாசிமும் நானும் இரண்டாம் வகுப்பு படிக்கிறோம்; ஆனால் வெவ்வேறு பிரிவுகள். நாங்கள் சிறு குழந்தையிலிருந்தே பக்கத்து வீட்டுக்காரர்கள். விளையாடியும் ஆப்பிள் மரங்களில் ஊஞ்சலாடியும் ரோஜா புதர்களின் இரு பக்கங்களிலும் இருந்து சத்தமிட்டுக் கத்தியும் பல விடுமுறை நாட்களைக் கழித்திருக்கிறோம். எங்கள் குடும்பத்தினர் திட்டும்வரை இதெல்லாம் தொடரும். அது மட்டுமில்லை, இருவரும் சேர்ந்து பதினான்கு புதிய விளையாட்டுகளைக் கண்டுபிடித்திருக்கிறோம், தெரியுமா? அவனே என்னுடைய சிறந்த நண்பன், நல்ல போட்டியாளனும்கூட.

அப்பு எனக்கு பாலும் அதில் நனைத்துத் தின்ன சோச்வோர் பிரெட்டும் தந்தார். வாசிமுடைய அப்புவின் சிறப்பான கைமணத்தில் அவர்கள் அடுமனையில் செய்யப்பட்டது அது. அந்த பிரெட்டில் எனக்கு மிகவும் பிடித்தமான உலர்ந்த திராட்சைகள் நிறைய இருந்தன.

“நூரி, வாசிம் வீட்டுக்குப் போவதால் பயனில்லை. அவனும் அவன் அம்மியும் ஜம்முவுக்குப் போயிருக்கிறார்கள். அவர்கள் திரும்பிவர சில நாட்கள் ஆகும்” என்று அப்பு சொன்னார்.

இன்றைய செய்திகள் அச்சமூட்டுவதாக இருந்தன. தொலைக்காட்சியின் சத்தத்தை நானி அதிகரித்தார். அம்மி, அப்பு, தாது, நானி நால்வரும் குசுகுசுவென்று பேசிக்கொண்டார்கள். அம்மியின் புருவங்கள் உயர்ந்து கேள்விக்குறி போலாகின.அப்பு தலையை ஆட்டி உதட்டைப் பிதுக்கினார். டாடூ ஒரு வார்த்தையை மெல்ல உச்சரித்தார்: ஊ-ர-ட-ங்-கு உ-த்-த-ர-வு. எல்லோருமே கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டார்கள்.

வாசிம் ஏன் இப்போது ஜம்முவுக்குப் போனான்? சில நாட்களுக்கு முன், பள்ளியிலிருந்து வீட்டுக்கு நடந்துவந்து கொண்டிருந்தபோது, “நாம் இருவரும் ஒரு மாதத்துக்குள் மிதிவண்டி கத்துக்கலாம். அதுக்கு அப்புறம் பள்ளி வரைக்கும் பந்தயம் விடலாம். சரியா?” என்று வாசிம் கேட்டிருந்தானே! ஓ! அவன் மாமா பையன் ரஃபீக்கிடம் மிதிவண்டி கற்றுக்கொள்ள ஜம்முவுக்கு போயிருப்பானோ? அப்படியானால் நான் எப்படி மிதிவண்டி கற்றுக்கொள்வது? “வெளியில் வழக்கத்தைவிட அதிகமான மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) வீரர்கள் இருக்கிறார்கள். அதனால் அலுவலகத்துக்கு வரவேண்டாம் என்று என் பத்திரிகையாசிரியர் சொல்லிவிட்டார்” என்றார் அப்பு.

அப்பு வீட்டில்தான் இருக்கப் போகிறாரா? அப்படியானால், இனி ஒரு நொடியைக்கூட வீணாக்கக் கூடாது. “அப்பு! நான் மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொள்ள நீங்கள் உதவ முடியுமா, ப்ளீஸ் அப்பு!”

“நிச்சயம் சொல்லித் தருகிறேன் நூரி. முதல்ல நீ சாப்பிடு!” என்று அப்பு என்னிடம் சொன்னார்.நான் வேகவேகமாகச் சாப்பிட்டேன்! “ஓ! என் சத்தான பாலே! சோச்வோர் ரொட்டியே! உங்களது மாயாஜாலத்தைக் காட்டுங்கள். என்னை உறுதியாக்குங்கள்! மிதிவண்டிப் பந்தயத்துக்கு பலம் கொடுங்கள்!”

மிதிவண்டிப் பயிற்சி: நாள் ஒன்று ஈகைத் திருநாள் பரிசாக, அப்புவும் அம்மியும் வாங்கித் தந்த மிதிவண்டி அது. பளபளவென மின்னும் அளவுக்கு, அதைத் தேய்த்துத் துடைத்தேன். ட்ரிங், ட்ரிங்! மிதிவண்டி மணியின் கீச்சொலி எனக்குப் பிடிக்கும். “அப்பூஊ...!”“நூரி! ஏன் இப்படி ஊளையிடுகிறாய்? வெளியில் நிலைமை எப்படி இருக்கிறது எனத் தெரிந்துகொள்வதற்காக அப்பு போயிருக்கிறார்!” என்றார் நானி. “ஆனால் எனக்கு மிதிவண்டி ஓட்டக் கற்றுத் தருவதாக அப்பு சொல்லியிருந்தாரே.” தன் தோட்டக் கருவிகளை ஓரமாக வைத்துவிட்டு நானி வந்தார். “அட அதனால் என்ன, நானே உனக்குக் கற்றுத் தருகிறேன்” என்றார். “ஆனா, உங்களுக்கு முதல்ல மிதிவண்டி ஓட்டத் தெரியுமா நானி?”“என் பள்ளிக்கூடத்துலயே நான்தான் வேகமா மிதிவண்டி ஓட்டுவேன், என் நூரிப் பொண்ணே! இப்போ, உன் காலை பெடலில் சரியாக வை. எதிரே இருக்கும் அந்தச் சுவரைப் பார்த்துக்கிட்டு பெடல் செய்ய ஆரம்பி.”

எதிரே இருக்கும் சுவரைப் பார்க்கிறேன். அந்த மரத்தில் இருக்கும் ஒரு குழிப்பேரிக்காயில் என் கவனத்தைக் குவித்தேன். கவனம்… கவனம். . . கவனம்! நானி எங்கே போனார்? நான் திரும்பிப் பார்க்க,

தடால்!

அந்தச் சுவரை நான் பார்க்கவே இல்லை. நானி ஓடிவந்தார், “நூரி! அடிபட்டுவிட்டதா?” தேடிப் பார்த்தேன். காயம் எதுவுமில்லை. ஆனாலும் அழுகை வந்தது. “மிதிவண்டி ஓட்டுவது ரொம்ப கஷ்டம் நானி.” “சும்மா உளறாதே” என்றார் நானி. பிறகு என் நெற்றியில் முத்தம் கொடுத்தார். “மிதிவண்டி ஓட்டும்போது முதல்ல தெரிஞ்சுக்க வேண்டியது என்னன்னா, எப்போதும் முன்னாடி என்ன இருக்குன்னு கவனமா பார்க்கணும். இரண்டாவது, கீழ விழறது ரொம்ப சாதாரணமான விஷயம். அப்பத்தான் கத்துக்க முடியும்.” மீண்டும் மிதிவண்டியில் ஏறினேன்.

மிதிவண்டிப் பயிற்சி: நாள் இரண்டு “நான் சொன்னதும் ஓட்டு. தயாரா இரு... ம்… போ!”

மிதிவண்டிப் பயிற்சி: நாள் மூன்று மிதிவண்டிப் பயிற்சி முடிந்ததும், நானியும் நானும் ஆப்பிள்களைப் பொறுக்கினோம். அவருக்குத் தெரியாமல் மெதுவாக தெருவை எட்டிப் பார்த்தேன் – தெருவில் யாருமே இல்லை. “அப்புவுக்கு உன் வயசு இருக்கும்போது, நாங்க இப்படி வீட்டுக்கு உள்ளேயேதான் அடைஞ்சு கிடக்க வேண்டியிருக்கும்” என்று நானி சொன்னார். அம்மிக்கும் மாசி*க்கும் அவர்தான் மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொடுத்திருக்கிறார். அவர்கள் அடிக்கடி கீழே விழுந்துவிட்டு அவரிடம் ஓடி வருவார்களாம்.“என் நூரி ரொம்ப தைரியசாலி. நீ ரொம்ப நல்லா மிதிவண்டி ஓட்டப்போற.” “வாசிமைவிட வேகமாவா?” என்று கேட்டேன். “எல்லோரையும்விட வேகமா!” *மாசி - சித்தி

மிதிவண்டிப் பயிற்சி: நாள் நான்கு ”நானீஈ!” அடடா! குளிர்காலம் என்பதால் நானி காய்கறிகளை மொட்டை மாடியில் உலர்த்தப் போய்விட்டார். இப்போது யார் எனக்கு மிதிவண்டி ஓட்ட கற்றுத்தருவார்கள்?

“நான் கற்றுத் தரவா?” என்று செய்தித்தாளில் இருந்து கண்களை எடுக்காமலேயே டாடூ கேட்டார். இந்த நேரத்தில் டாடூ வீட்டில் இருப்பதைப் பார்க்க விநோதமாக இருந்தது. வினோதமானதுதான், ஆனால் நல்லதும்கூட! “டாடூ, நீங்க உங்க நண்பர்களுடன் நடக்கப் போகலையா?”“போக முடியாதே. ஊரடங்கு உத்தரவு போட்டிருக்காங்களே, பேத்தி பின்னாடி ஓடினாலும் கொஞ்சம் உடற்பயிற்சி செஞ்சதுபோலத்தான் இருக்கும்.”

ஹையா! நான் மறுபடி குழிப்பேரிக்காயில் கவனம் வைக்கத் தயாரானேன். கீழே விழுவதைப் பற்றி யோசிக்காமல் இருக்கவும் முயற்சித்தேன். அப்போது அச்சமூட்டும் யோசனை ஒன்றை டாடூ சொன்னார்– என் மிதிவண்டியின் பின்பக்கம் இருக்கும் இரு சிறிய பயிற்சி சக்கரங்களை கழற்றிவிடலாம் என்றார்.

என்னால் இரண்டு சக்கரங்களில் மட்டுமே மிதிவண்டியை ஓட்டமுடியுமா? அது சர்க்கஸில் ஓட்டுவதுபோல இருக்குமே! இதை நான் டாடூவிடம் சொன்னதும், அவர் வழக்கம்போல வெடித்துச் சிரித்தார். “தெருவில் எல்லோரும் அப்படித்தான் ஓட்டுறாங்க, நூரி! நீயும் பழகிட்டா ஓட்டலாம்” என்றார். பழுதுபார்க்கும் கருவிகளின் துணையோடு, நானும் டாடூவும் அந்தச் சிறிய சக்கரங்களைக் கழற்றி வைத்தோம்.

மிதிவண்டிப் பயிற்சி: நாள் ஐந்து

ஆஆஆஆஆ!

மிதிவண்டிப் பயிற்சி: நாள் ஆறு வீட்டைவிட்டு நாங்கள் வெளியே செல்ல இன்னமும் அனுமதி அளிக்கப்படவில்லை. “இந்தக் கதவு உயரமாகிட்டே போகுதோ?” என்று அம்மியிடம் கேட்டேன்.

மிதிவண்டிப் பயிற்சி: நாள் ஏழு “எனக்கு வீட்டில போர் அடிக்குது! நான் பள்ளிக்கூடம் போகணும்! கதவைத் திறங்க! தயவுசெஞ்சு திறங்க!” “மன்னிச்சுக்கோ நூரி! உன்னை வெளியக் கூட்டிட்டுப் போக எனக்கும் ஆசையாகத்தான் இருக்கு. அதைவிட இந்தக் கொடுமையெல்லாம் உனக்குத் தெரியக்கூடாதுன்னும் ஆசைப்படுகிறேன்!” என்றார் அம்மி.

மிதிவண்டிப் பயிற்சி: நாள் எட்டு “டாடூ, ஊரடங்கு உத்தரவுன்னா என்ன?” என்று கேட்டேன். டாடூ சங்கடத்துடன் காணப்பட்டார். “தெருக்களில் மனிதர்கள் நடமாடுவதற்கு பாதுகாப்பு இல்லாததால, நாம வெளிய போகக்கூடாதுன்னு அரசாங்கம் போட்டிருக்கிற சட்டம்” என்றார். “நாம எவ்வளவு நாள்தான் வீட்டுக்குள்ளேயே இருக்கணும்?”  நான் என் நண்பர்களைப் பார்க்கவேண்டும், என் ஆசிரியர்களையும்தான். எனக்கு வெளியே போகவேண்டும்போல இருக்கிறது. “தெரியலையே நூரி” சோகமாகப் பெருமூச்சுடன் சொன்னார் டாடூ. ‘தெரியவில்லை’ என்று சொல்ல, பெரியவர்களுக்குப் பொதுவாக பிடிக்காது. அப்படியானால், இது ஒரு பெரிய பிரச்சினையாகத்தான் இருக்கவேண்டும். டாடூ சோகமாக இருப்பதைப் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை, அதனால் நான் எழுந்துகொண்டேன். “சரி சரி, ஒய்வெடுத்தது போதும்! வாங்க, வாசிமை நான் ஜெயித்தாகணும்!”

மிதிவண்டிப் பயிற்சி: நாள் பத்து இன்று அம்மியின் முறை, எப்படி சரியாக பிரேக்கைப் பிடித்து வண்டியை நிறுத்துவது என்று சொல்லித் தந்தார். மதியம் முழுக்க நாங்கள் பயிற்சி செய்தோம். டாடூவும் நானியும் தேநீர் குடிக்க வெளியே வருவார்கள். அந்த நேரத்தில் மிதிவண்டியை ஓட்டிக் காண்பித்து பெருமையடித்துக்கொள்ள நான் தயாரானேன். அப்போது ஒரு பயங்கரமான சத்தம் கேட்டது. டொம்! டொம்! ஆட்கள் கோஷம் போடுவது கேட்டது, ”ஹம் க்யா சாஹ்தே? நமக்கு என்ன வேண்டும்?” எனக்கு அடுத்த வார்த்தை தெரியும்: ஆசாதி! சுதந்திரம்! என் கண்கள் எரிய ஆரம்பித்தன. அம்மி என்னைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் ஓடினார். மாடியில் எழுதிக்கொண்டிருந்த அப்புவும் கீழே ஓடிவந்தார்.

சாப்பாட்டு அறையில் சிறிய வட்டமாக நாங்கள் நெருங்கி உட்கார்ந்துகொண்டோம். எல்லோரும் இருமிக் கொண்டிருந்தார்கள். “அம்மி, என்னது அது?” என்று கேட்டேன். அம்மி என்னை அணைத்துக் கொண்டார். “வெளியில சண்டை போடறாங்க நூரி, நாம அவங்களிடமிருந்து விலகியே இருக்கணும்.” அவர் என் கண்களைத் துடைத்தார். கண்களில் இருந்து நீர் வடிந்து கொண்டிருந்ததை உணர்ந்தேன்! அம்மியின் கண்களிலும்தான். “இப்படி நடக்கும்போது கைக்குட்டையை எடுத்து மூக்கையும் வாயையும் மூடிக்கணும் சரியா?” அவரை இறுக்கிக் கட்டிக்கொண்டேன். நான் சோர்வடைந்திருந்தேன். பயமாக இருந்தது. நான் மட்டுமில்லை, எல்லோருமே பயந்துபோய்தான் இருந்தார்கள்.

முதல் நாள் மிதிவண்டி ஓட்டத் தொடங்கும்போது நானி சொன்னதை நினைவு படுத்திக்கொண்டேன். தைரியமாக இருக்கவேண்டும்.

மிதிவண்டிப் பயிற்சி: நாள் பதினொன்று அடுத்த நாள் காலையில் அப்பு என்னை எழுப்பினார். “எழுந்திரு சோம்பேறி. இன்னிக்கு நான் உனக்கு மிதிவண்டி ஓட்டக் கத்துத் தர்றேன்.” “இப்போது ஆபத்தில்லையா அப்பு?” என்று கேட்டேன். “ஏதாவது நடந்தா நான் உன்னை பத்திரமா பார்த்துப்பேன், இது சத்தியம். சரியா? அப்புறம், கொஞ்ச நாள்ல வாசிம் திரும்பி வந்துடுவான். நீ பந்தயத்துக்குத் தயாராக வேண்டாமா?” என்று அப்பு கேட்டார். அப்பு பார்த்துக்கொண்டிருக்க, டாடூவும் நானியும் அம்மியும் சொல்லிக் கொடுத்ததுபோல நான் மிதிவண்டியை ஓட்டினேன். வண்டியை எப்படித் திருப்புவது என்று கற்றுக்கொண்டேன். கால்களை கீழே வைக்காமல் எட்டு போடவும் முயற்சித்தேன்.

நான் தனியாக மிதிவண்டி ஓட்டி சலிப்படையத் தொடங்கிய நேரத்தில் வாசிம் வீட்டுக்குத் திரும்பிவிட்டான். ஒருவழியாக! ராணுவம் சில மணி நேரத்துக்கு ஊரடங்கு உத்தரவை விலக்கிக் கொண்டபோது வாசிமின் அம்மி வேகமாக ஸ்ரீநகருக்குத் திரும்பிவிட்டார்கள் என்றார் அப்பு. அவனது அப்பு செய்த சோச்வோர் பிரெட்டை கைநிறைய தூக்கிக்கொண்டு வாசிம் என் வீட்டுக்கு வந்தான். மிதிவண்டிப் பயிற்சியின்போது நான் கவனம் வைத்த குழிப்பேரிக்காயை அவனுக்குத் தந்தேன். அவன் பத்திரமாக இருந்ததைப் பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. “வாசிம் போ, போய் உன் மிதிவண்டியை எடுத்துட்டு வா” என்றேன். வாசிம் சோகமானான். “அவசரத்தில் அதை தெருவிலேயே விட்டுட்டுப் போய்ட்டேன். சண்டையில் என் மிதிவண்டி நசுங்கிடுச்சு.” அய்யோ! அப்படின்னா நம்ம மிதிவண்டிப் பந்தயம் எப்படி நடக்கும்?இரு! இரு! என்கிட்ட ஒரு யோசனை இருக்கு.

மிதிவண்டிப் பந்தய நாள்