காலை நேரம்.
காட்டில் சூரியனின்
மென்மையான வெளிச்சம் பரவியது.
பறவைகள் தூங்கி எழுந்தன.
ஒரு பெரிய இலைக்குக் கீழே
ஒரு மரவட்டை சுருண்டு படுத்துத்
தூங்கிக்கொண்டிருந்தது.
பறவைகளின் சத்தத்தைக்
கேட்டு அது எழுந்தது.
அந்த மரவட்டைக்கு இன்னும் தூக்கம் கலைந்திருக்கவில்லை.
மெல்ல முனகியது, “நான் இன்னும் சிறிதுநேரம்
தூங்கவேண்டும். ஏன் கத்துகிறீர்கள்?
என்னைத் தூங்கவிடுங்கள்”
என்று பறவைகளிடம் சொன்னது.
ஒருவழியாகத் தூங்கி எழுந்த மரவட்டை,
இலைக்குக்கீழேயிருந்து
கொஞ்சம் வெளியே வந்தது.
தன்னுடைய பதினைந்து
ஜோடிக் கால்களையும் நீட்டிப்
பெரிதாகக் கொட்டாவி விட்டது.
அந்த மரவட்டைக்கு
மிகவும் பசித்தது.
உணவைத் தேடி நடக்க
ஆரம்பித்தது.
அவசரமாக நடந்ததால், அது ஒரு பாறையின்மீது தடுக்கி விழுந்துவிட்டது. “அய்யோ! என் கால் உடைந்துவிட்டது”
என்று கத்தியது.
அங்கே ஒரு சிட்டுக்குருவி தானியங்களைப் பொறுக்கிக்கொண்டிருந்தது. அது இந்த
மரவட்டையைப் பார்த்து, “ஏன் கத்துகிறாய்? உனக்குதான் இத்தனை கால்கள்
இருக்கிறதே, அதில் ஒன்று உடைந்தால் என்ன
போச்சு?” என்று அலட்சியமாகக் கேட்டது.
“சிட்டுக்குருவி, எனக்கு உதவி செய்வாயா?” என்று கெஞ்சியது மரவட்டை.
“காலை நேரத்தில் எனக்கு ஆயிரம் வேலைகள் இருக்கின்றன. உனக்கு உதவி செய்ய எனக்கு நேரமில்லை” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து பறந்துசென்றது சிட்டுக்குருவி.
அடுத்து, அங்கிருந்த தேனீக்களிடம் உதவி கேட்டது மரவட்டை.
அவை மலர்களில் தேன் சேகரிப்பதில் மும்முரமாக இருந்தன, மரவட்டைக்கு உதவவில்லை.
மரவட்டை சில தட்டாம்பூச்சிகளிடம் உதவி கேட்டது. அவை அதனைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. சத்தம் போட்டபடி அங்கிருந்து சென்றுவிட்டன.
ஒரு நத்தை மரவட்டையின் அருகே வந்தது, “நீ ஏன் வேகமாக நடந்தாய்? அதனால்தான் உன் கால் உடைந்துவிட்டது. நீ என்னைப்போல் மெ-து-வா-க நடக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்” என்றது.பட்டாம்பூச்சியொன்று மரவட்டையை நெருங்கிப் பறந்தது, “உனக்குதான் இத்தனை கால்கள் இருக்கிறதே, அதில் ஒன்று உடைந்தால் என்ன கஷ்டம்? சும்மா நடிக்காதே” என்றது.
இப்போது, மரவட்டை மிகவும் சோகமாகிவிட்டது,
“எனக்கு யாரும் உதவமாட்டீர்களா?
நான் மீண்டும் எப்படி எழுந்து நடப்பேன்?”
அப்போது, அங்கே மகிழ்ச்சியாக
வலை பின்னிக்கொண்டிருந்த
ஒரு சிலந்தி, மரவட்டையின்
அழுகுரலைக் கேட்டது,
“ஏன் அழுகிறாய்?”
“என் கால் ஒன்று உடைந்துவிட்டது,
அது மிகவும் வலிக்கிறது”
என்றது மரவட்டை.
“நீ எனக்கு உதவி செய்வாயா?”
“கவலைப்படாதே,
நான் உனக்கு உதவுகிறேன்”
என்றது சிலந்தி. ”ஆனால்,
“இத்தனை காலில் உடைந்த கால்
எது என்று எனக்குத் தெரியவில்லையே!” என்று சொன்னது
“நான் அதைக் கண்டுபிடிக்கிறேன்”
என்றது மரவட்டை. தன் கால்களை எண்ணத்
தொடங்கியது, “ஒன்று... ஏழு... இருபத்து
மூன்று... ஐம்பத்து எட்டு... தொண்ணூற்று
இரண்டு... நூற்றுப் பதினைந்து…”
என்று எண்ணிக்கொண்டே வந்தது.
திடீரென்று மரவட்டை அலறியது,
“இந்தக் கால்தான், என்னுடைய
நூற்று முப்பத்து ஏழாவது கால்தான்
உடைந்திருக்கிறது.”
சிலந்தி மரவட்டையின் அருகே வந்தது.
தன் வலையிலிருந்து பட்டு இழைகளை
எடுத்து அந்த நூற்று முப்பத்து ஏழாவது
காலைச் சுற்றிக் கட்டியது. “இப்போது எப்படி
இருக்கிறது?” என்று கேட்டது சிலந்தி.
மரவட்டை மகிழ்ச்சியாகச் சிரித்தது.
“சிலந்தியே, உனக்கு நன்றி”
என்றது மரவட்டை.
“பரவாயில்லை. ஆனால்,
இனிமேல் கவனமாகப் பார்த்து நட,
எங்கேயும் தடுக்கி விழாதே”
என்று சொல்லிவிட்டுக் கிளம்பியது சிலந்தி.
மரவட்டையும் தன் புதிய நண்பனைப் பார்த்து
மகிழ்ச்சியுடன் கையசைத்தது.