காண்டாமிருக வண்டுக்கு எண்ணுவது என்றால் ரொம்பப் பிடிக்கும். அவன் பூ இதழ்களை எண்ணிக் கொண்டிருந்தான்.
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு – தொபுக்!
“பொறிவண்டே!” என்று கூவி அழைத்தான்.“என்னைக் கொஞ்சம் திருப்பி விடுகிறாயா, ப்ளீஸ்?”
பொறிவண்டு முக்கி முனகி தள்ளிப் பார்த்தாள். ஆனால் அவளால் காண்டாமிருக வண்டைத் திருப்ப முடியவில்லை.
“சிள்வண்டுகளே!” என்று அவள் அழைத்தாள்.
மூன்று சிள்வண்டுகள் உதவிக்கு வந்தனர். காண்டாமிருக வண்டு தன் நண்பர்களை எண்ணினான். “ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு! நான்கு என்பது இரட்டைப்படை எண்!”
நான்கு பூச்சிகள் முக்கி முனகி தள்ளிப் பார்த்தனர். ஆனால் அவர்களால் காண்டாமிருக வண்டைத் திருப்ப முடியவில்லை.
1+3=4
“விட்டில் பூச்சிகளே!” என்று பொறிவண்டு அழைத்தாள்.
ஐந்து விட்டில் பூச்சிகள் உதவிக்கு வந்தனர். காண்டாமிருக வண்டு நண்பர்களை எண்ணினான்.
“ஒன்பது பேர் எனக்கு உதவுகிறீர்கள். ஒன்பது என்பது ஒற்றைப்படை எண்!” ஒன்பது பூச்சிகள் முக்கி முனகி தள்ளிப் பார்த்தனர். ஆனால் அவர்களால் காண்டாமிருக வண்டைத் திருப்ப முடியவில்லை.
4+5=9
ஏழு குதிக்கும் சிலந்திகள் உதவிக்கு வந்தனர். டுப் டுப் டுப்.
காண்டாமிருக வண்டு நண்பர்களை எண்ணினான். “இப்போது பதினாறு பேர்! இரட்டைப்படை எண்!”
பதினாறு பூச்சிகள் முக்கி முனகி தள்ளிப் பார்த்தனர். ஆனால் அவர்களால் காண்டாமிருக வண்டைத் திருப்ப முடியவில்லை.
9+7=16
“கண்ணாடி இறக்கைப் பூச்சிகளைக் கூப்பிடுங்கள்!” என்று பொறிவண்டு கத்தினாள். ஒன்பது கண்ணாடி இறக்கைப் பூச்சிகள் உதவிக்கு வந்தனர்.
“ஹைய்யா! இப்போது இருபத்தி ஐந்து பேர்!” என்றான் சோர்வடைந்திருந்த காண்டாமிருக வண்டு. “இருபத்தி ஐந்து என்பது…”
“...ஒற்றைப்படை எண்!” இருபத்தி ஐந்து நண்பர்களும் கத்தினர்.
16+9=25
இருபத்தி ஐந்து பூச்சிகளும் முக்கி முனகி, தள்ளி… தள்ளி... திருப்பியாகிவிட்டது! ஒருவழியாக அவர்கள் காண்டாமிருக வண்டைத் திருப்பிவிட்டனர்.
இரட்டைப்படை எண்கள் இரட்டைப்படை எண்கள் 0, 2, 4, 6 அல்லது 8 போன்ற இலக்கங்களில் முடியும்.
ஒற்றைப்படை எண்கள் ஒற்றைப்படை எண்கள் 1, 3, 5, 7 அல்லது 9 போன்ற இலக்கங்களில் முடியும்.
இந்தப் பக்கத்தில், ஒற்றைப்படையில் இருப்பவற்றையும் இரட்டைப்படையில் இருப்பவற்றையும் எண்ணுங்கள்.
அவற்றைக் கூட்டினால் கிடைப்பது ஒற்றைப்படை எண்ணா, இரட்டைப்படை எண்ணா? ஒற்றைப்படை எண் + இரட்டைப்படை எண் = ? இரட்டைப்படை எண் + இரட்டைப்படை எண் = ? ஒற்றைப்படை எண் + ஒற்றைப்படை எண் = ?