நீனா முதல்முறையாக இரயிலில் போகிறாள்!
ஆனால் நீனாவின் முகத்தில் கொஞ்சம் கூட மகிழ்ச்சியைக் காணோம். அவள் குடும்பம் கொல்கத்தாவிலிருந்து புதுதில்லிக்கு இடம்பெயர்கிறது.
“நாம் கண்டிப்பாக ஊரை விட்டுப் போகவேண்டுமா? என் நண்பர்கள், தாத்தா, பாட்டி எல்லாரும் நான் இல்லாமல் தவித்துப் போவார்கள். மேலும், சுவையான புச்கா(பானிபூரி) சாப்பிட நான் எங்கே போவேன்? உங்களுக்கு கொல்கத்தாவிலேயே வேறு வேலை கிடைக்காதா, அப்பா?” என்று நீனா கேட்டாள்.
“வருத்தப்படாதே நீனா. உனக்கு புது நண்பர்கள் கிடைப்பார்கள். ஒரு புது புச்காகாரரையும் கண்டுபிடித்துவிடலாம்” என்று அப்பா கூறினார்.
ஆனால், நீனாவிற்கு இந்த சமாதானத்தைக் கேட்கப் பிடிக்கவில்லை. அம்மாவும் அப்பாவும் அவளை உற்சாகப்படுத்த முயன்றார்கள்.
"ஐஸ்கிரீம் சாப்பிடுகிறாயா, நீனா?” “கோன் ஐஸ்கிரீம்?”“குச்சி ஐஸ்கிரீம்?” “வெள்ளரிக்காய்?”“மிட்டாய்?” “வேண்டாம் என்றால் வேண்டாம்!” என்று நீனாதலையை ஆட்டுகிறாள்.
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை.
திடீரென்று அப்பா புன்னகைத்தார்.
“அங்கே ஏதோ தெரியுதே...” என்று ஆரம்பித்தார்.
“ஹையா! எனக்குப் பிடித்த விளையாட்டு” என்றார் அம்மா.
“அங்கே பழுப்பு நிறத்தில் ஏதோ தெரியுதே!” என்றார் அப்பா.
“என் செருப்பா? மலைகளா? சாமான் பெட்டியா?” என்று அம்மா கேட்டார்.
“சாமான் பெட்டிதான் சரி!” என்று அப்பா கைத்தட்டினார்.
நீனா புத்தகத்தை கீழே வைத்துவிட்டு விளையாட்டை கவனிக்க ஆரம்பித்தாள்.
“இப்போது என் முறை. அங்கே மஞ்சள் நிறத்தில் ஏதோ தெரியுதே” என்றார் அம்மா.
“கடுகு வயலா?” என்று அப்பா கேட்டார். “என் ஹேர்பேண்ட்!” என்றாள் நீனா. “ரொம்ப சரி” என்று அம்மா கைத்தட்டினார்.
நீனா சிரித்தபடி விளையாட்டில் கலந்து கொண்டாள்.
“அங்கே நீல நிறத்தில் ஏதோ தெரியுதே” என்றாள்.“ஆகாயம்!” என்றார் அம்மா.
“அங்கே பழுப்பு நிறத்தில் ஏதோ தெரியுதே,” என்றார் அம்மா.
“அந்த மலை!” என்றார் அப்பா.
“அங்கே வெள்ளை நிறத்தில் ஏதோ தெரியுதே” என்றார் அப்பா.அதற்கு, “பசு!” என்று நீனா சொன்னாள்.
“அங்கே பச்சை நிறத்தில் ஏதோ தெரியுதே” என்று நீனா சொல்ல, “புல்!” என அம்மாவும் அப்பாவும் சொன்னார்கள்.
“எனக்கு கறுப்பு நிறத்தில் ஏதோ தெரியுதே” என்றார் அம்மா.“காக்கா!” என்றாள் நீனா.
“பழுப்புநிறப் புள்ளிகளோடு ஏதோ ஒரு உயரமான மிருகம் தெரியுதே” என்றார் அப்பா. “ஹா! சிறுத்தையையா பார்த்தீர்கள்?” என்று கேட்டார் அம்மா. ”இல்லை, ஒட்டகச்சிவிங்கி!” என்றார் அப்பா.
நீனா ஜன்னல் வழியே வெளியே பார்த்துவிட்டு, “இந்தியக் காடுகளில் ஒட்டகச்சிவிங்கிகளே கிடையாது. நன்றாக ஏமாற்றப் பார்க்கிறீர்கள், அப்பா” என்று கத்தினாள்.
எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தார்கள்.
அப்பாவும் அம்மாவும் இருக்கையில் ஒரு கம்பளியை விரித்தார்கள். நீனாவுக்காக தலையணையில் காற்றை ஊதிக் கொடுத்தனர். “நாம் தில்லிக்கு சென்றபிறகு இந்த விளையாட்டை மீண்டும் விளையாடலாமா?” என்று கேட்டு நீனா புன்னகைத்தாள். “நிச்சயமாக. புது இடத்தில் இந்த விளையாட்டு இன்னும் ஜாலியாக இருக்கும்!” என்றார் அப்பா.