1975-ஆம் ஆண்டு வாக்கில் நான் எழுத்தாளரானேன். சுமார் 50 சிறுகதைகள், 'தாமரை', 'கலைமகள்' உள்ளிட்ட அனைத்து பத்திரிகைகளிலும் வெளியான சமயத்தில், 1976ஆம் ஆண்டில் நான் எழுதிய முதலாவது நாவலான 'பின்னோக்கிய ஒரு இலக்கியப் பயணம்... - ஒரு கோட்டுக்கு வெளியே' வெளியானது. கால் நூற்றாண்டிற்குப் பிறகு, இப்போது இந்த நாவலை மறுவாசிப்பு செய்தபோது, அப்போதைய பல்வேறு சமூக - இலக்கிய சங்கதிகள் நினைவுகளை மலர வைக்கின்றன. எழுத்தால், இந்த சமுதாயத்தை புரட்டிப் போடலாம் என்று எழுதத் துவங்கிய நான், இப்போது இந்த தனித்துவ குணத்தை இழந்து, இலக்கியத்தில் தடம் பதித்த எனது முன்னோர்களையும் பின்னோர்களையும், அவர்களின் சமூகச் சேர்மானத்தோடு நினைத்து, என்னை, ஒப்பிட்டுக் கொள்கிறேன். எனது இலக்கியப் பங்கு கணிசமானது. சமூக அளவில் கண்ணுக்கு தெரியாத மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. என்றாலும், ஒர் மார்க்ஸிம் கார்கியின் 'தாயை'ப் போல சமூகத்தில் தடம் பதிக்கவில்லை. இதற்கு நான் மட்டுமல்ல, இந்த சமூக அமைப்பும் காரணம்.
இந்த நாவல், எனது நாவல்களிலேயே இன்றளவும் அதிகமாகப் பேசப்படுகிறது. இதற்கு இணையாக எனது 'வாடாமல்லி' இப்போது பேசப்பட்டாலும், இந்தப் படைப்பு, இந்த நாவலின் வயதளவிற்கு வரும்போது பேசப்படுமா என்பது புதிர்தான். 'ஒரு கோர்ட்டுக்கு வெளியே'யின் சிறப்பு, எந்தப் பத்திரிகையிலும் தொடர்கதையாக வெளிவராமல், நேரடியாக எழுதப்பட்டது என்பதுதான். என்ன காரணத்தினாலோ, பதிப்பாளர்கள், இந்த நாவலை நூலகங்களுக்கு விண்ணப்பிக்கவே இல்லை. ஆனாலும், இந்த நாவலைப் போன்ற தாக்கத்தை, எந்த நாவலும் இந்த அளவிற்கு ஏற்படுத்தவில்லை.
அந்தக் காலக்கட்டத்தில், இந்தப் படைப்பைப் பற்றி விமர்சிக்காத பத்திரிகைகளோ, இலக்கிய அரங்குகளோ இல்லை என்று கூட சொல்லலாம். பிரபலம் இல்லாதவர்களாக இருந்தாலும் இலக்கியவாதிகள் என்று கருதப்படுபவர்களின் படைப்புகளை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், இந்த நாவலையும் எடுத்துக் கொண்டது. இதுவே இதன் முதலாவது கௌரவமாக கிடைத்தது.
சென்னை வானொலி நிலையத்தில், எழுத்தாளர் பாண்டியராசனால் நாடக வடிவம் பெற்ற இந்த நாவல், இப்போது நிலைய இயக்குநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற தோழர் கணேசன் அவர்களின் தயாரிப்பில், அப்போதைய நிலைய இயக்குநரான கவிஞர் துறைவன் அவர்களின் மேற்பார்வையில் ஒலிபரப்பானது. பின்னர் இந்த நாடகம் அகில இந்திய வானொலியில் பதினான்கு மொழிகளில் ஒலிபரப்பானது. இதோடு, 'நேசனல் புக் டிரஸ்ட்' என்ற மத்திய அரசு சார்ந்த வெளியீட்டு நிறுவனம் சார்பில் பதினான்கு மொழிகளில் வெளியிடப்படுவதற்கு கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. இதன் இந்தி மொழி வடிவம், நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகிவிட்டது. இலக்கியவாதியான திருமதி. விஜயலட்சுமி சுந்தரராஜன் அவர்களால் சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. இப்போது தெலுங்கிலும், மராத்தியிலும் வெளிவந்திருப்பதாக யூகிக்கிறேன். ஆனால், அந்த அலுவலகம் சென்று, பல தடவை கேட்டாலும் ஒரு தடவை கூட, 'ஆம்' 'இல்லை' என்ற பதில் இல்லை. இதுதான் அரசு சார்புள்ள இலக்கிய நிறுவனங்கள் நடந்து கொள்ளும் லட்சணம்.
இந்த நாவல் எழுதப்பட்ட போதும், வெளியான போதும், இலக்கிய உலகில் எனக்கு ஒரு சில திருப்பு முனைகள் ஏற்பட்டன. இந்த நாவலை நான் எழுதும் போது, கண்ணீர் விட்டு, படுக்கையில் குப்புறப்படுத்து அழுதிருக்கிறேன். இத்தகைய அனுபவம் என்னுடைய ஆத்மார்த்த குருவான 'லியோ டால்ஸ்டாய்க்கு' எற்பட்டதாகப் பின்னர் அறிந்தேன்.
இரண்டாவதாக, இந்த நாவலை, சென்னை வானொலியில் விமர்சித்த பிரபல இடதுசாரி சிந்தனையாளரும், இலக்கியவாதியுமான காலஞ்சென்ற ஆர்.கே. கண்ணன் அவர்கள், மிகவும் பாராட்டினார். கூடவே, ஒரு இலக்கியக் கருத்தை என்னுள் பதிய வைத்தார். "ஒரு படைப்பில், ஓர் அளவிற்கு எழுத்தாளன் பாத்திரங்களைப் படைக்கிறான். பின்னர் அந்தப் பாத்திரங்களே அவன் எழுத்தைப் படைக்கின்றன" என்றார். இது ஆழ்ந்த சிந்தனைக்குரிய கருத்து. என் அளவில் அனுபவமாக நேர்ந்தாலும், இந்தக் கருத்து விவாதத்திற்குரியது.
நான்காவதாக, இந்த நாவலை, ஒரு பிரபல இலக்கிய அமைப்பின் பரிசிற்காக எழுதினேன். 1950-களில் தோன்றிய 'தேசிய முழக்கம்' என்ற வார இதழின் ஆசிரியர்களில் ஒருவரும், எனது கல்லூரிக்கால சிந்தனையை வடிவமைத்தவர்களில் முக்கியமானவரும் உலக இலக்கியத்தை கரைத்துக் குடித்தவரும், ஸ்ரீராமுலு என்ற பெயரை நாட்டுப் பற்றின் உந்துதலால், 'பகத்சிங்' என்று மாற்றிக் கொண்டவருமான, காலஞ்சென்ற என் இனிய மூத்த தோழரிடம் படித்துக் காட்டுவதற்காக, அவர் வாழ்ந்த புரசைவாக்கத்திற்கு, ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒவ்வொரு தடவையாகப் போவேன். அவர், இவற்றைப் படித்துவிட்டு, இடையிடையே 'பிரமாதம்' 'அய்யய்யோ...' 'அச்சச்சோ...' என்று தன்னை அறியாமலேயே, தன்பாட்டுக்கு பேசுவதும், மீண்டும் நிறுத்தியதை வாசிப்பதுமாகவும் இருப்பார். எனக்கு கிடைத்த அளவுக்கு மேலாக, அந்த சிந்தனையாளருக்கு ஒரு வாசக அனுபவம் கிடைத்தது கண்டு வியந்து போனேன், மெய்சிலிர்த்தேன். இந்த படைப்பை, டைப் அடித்த அகில இந்திய வானொலியில் பணியாற்றிய என் இனிய தோழரும் இலக்கியவாதியுமான தோழர் ஜெயராமன், 'இந்த மாதிரி நாவலை நான் படிக்கல சார்' என்றார். டைப் அடித்த கட்டணத்தையும் வாங்க மறுத்தார். என்றாலும், இந்த நாவல், அந்த இலக்கிய அமைப்பின் பரிசைப் பெறவில்லை. இது கூடப் பெரிதில்லை. ஆனால், இதே அமைப்பு, முந்தைய ஆண்டு நிராகரித்த ஒரு நாவல் கைப்பிரதிக்கு, மறு ஆண்டு பரிசளித்தது. கேட்டால், 'அது வரைவு - இது அச்சு' என்று உப்பு சப்பில்லாமல் பதிலளித்தது.
இதே போல், எனது இலக்கிய ஆசான் கவிஞர் துறைவன் அவர்கள், கல்கத்தாவில் அகில இந்திய வானொலியின் தலைமை இணை இயக்குநராக பணியாற்றியபோது, இந்த நாவலை என்னிடம் கேட்க, நான் கொடுக்காமல் போக, உடனே அவர், சென்னை தொலைக்காட்சி நிலையத்திலிருந்து இயக்குநராக ஓய்வு பெற்ற என் இனிய நண்பர் நடராசன் அவர்கள் மூலமாக, இந்த நாவலை கல்கத்தாவிற்குத் தருவித்து, ஒரு முக்கியமான வங்காள இலக்கிய அமைப்பிடம் சமர்ப்பித்தார். ஆனாலும், நடுவர்கள், 'ஒரு வயதான எழுத்தாளரின் வாழ்நாள் குறைவாக இருப்பதால், அவருடைய படைப்புக்குப் பரிசு கொடுக்கலாம் என்றும், இளைஞனான நான் காத்திருக்கலாம்' என்றும், படைப்பை விட, படைப்பாளிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்று கவிஞர் துறைவன் அவர்களே என்னிடம் தெரிவித்தார். இதில் தவறில்லைதான். நானே நடுவராக இப்படி செய்திருக்கிறேன். ஆனாலும், பரிசுகள் படைப்புகளுக்காக மட்டும் கொடுக்கப்படவில்லை என்பதை அறிந்து கொண்டேன். அன்று முதல் இன்று வரை எந்த அமைப்பிற்கும் நான் எனது நூல்களை அனுப்புவதில்லை. ஒரே ஒரு தடவை எனது பதிப்பகம் ஒரு சிறுகதைத் தொகுப்பை அனுப்பி, 'ஸ்டேட் வங்கி' எனக்குப் பரிசளித்தது. நான் எழுதிய 'லியோ டால்ஸ்டாய்' நாடகத்தை, சோவியத் விருதுக்காக அனுப்பச் சொன்னார்கள், நான் மறுத்துவிட்டேன். பின்னர், இடதுசாரி இலக்கியத்தின் மூத்தத் தோழர்களான விஜயபாஸ்கரன், கவிஞர். கே.சி.எஸ். அருணாசலம் ஆகியோர் இவற்றை பதிப்பகத்திடமிருந்து வாங்கி அனுப்பி வைத்தார்கள். நான் எதிர்பார்த்தது போல், இங்கிருந்து நடுவராக மாஸ்கோ சென்ற, ஒரு இடதுசாரி எழுத்தாள சகுனி, அதற்கு பரிசு வராமல் பார்த்துக் கொண்டார். ஆகவே, பரிசுக்காக படைப்புகளை அனுப்புவதில்லை என்று 1970-களில் நான் மேற்கொண்ட முடிவை இன்றளவும் பற்றி நிற்கிறேன்.
இந்த நாவல், எனக்கு வழங்கிய பல இன்ப அதிர்ச்சிகளில் முக்கியமாக இரண்டைக் குறிப்பிட்டாக வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதுதில்லியில் உள்ள 'நேஷனல் புக் டிரஸ்ட்' அலுவலகம் சென்று, இந்திப் பதிப்பு ஆசிரியர் தியோ சங்கர் ஜா (Deo Shankar Jha) அவர்களை தேடிப் பிடித்து, என்னை அறிமுகம் செய்து கொண்டேன். உடனே அவர், 'உலகம்மா' என்று சொல்லிக் கொண்டே எழுந்தார். பல்வேறு இந்திப் பத்திரிகைகளில், இந்த நாவல் விமர்சிக்கப்பட்டதாகவும், புதுதில்லியில் எழுத்தாளர்கள் மத்தியில் இதற்காக ஒரு கருத்தரங்கம் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டார். செல்லும் இடமெல்லாம் கிராமப் பெண்களுக்கு, உலகம்மையின் போராட்டத்தைப் பற்றி தான் தெரியப்படுத்துவதாக தெரிவித்தார். என்றாலும், இந்த நிறுவனம் வெளியிட்ட 'மிகச் சிறந்த தமிழ் நாவல்கள்' என்ற நூலில், இந்த நாவல் இல்லை என்று அறிகிறேன். அந்த நிறுவனத்தில் உள்ள தமிழ் பிரதிநிதி யாராக இருந்தாலும், அவரை கைக்குள் போட்டுக் கொள்வது, 'நம்மவர்'களுக்கு கைவந்த கலை.
இரண்டாவது இன்ப அதிர்ச்சியாக, இப்போது சன் டி.வி.யில் 'அண்ணாமலை' தொடரில் சக்கைபோடு போடும் தோழர் பொன்வண்ணனை, ஒரு தோழர் எனக்கு சென்னையில் அண்மையில் அறிமுகப்படுத்தி வைத்தார். உடனே அவர், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, தான் படித்த இந்த நாவலை அப்படியே ஒப்பித்தார். இதற்கு திரைக்கதை எழுதி வைத்ததாகவும் தெரிவித்தார். பொன்வண்ணனே சிறந்த எழுத்தாளர். 'ஜமீலா' என்ற அற்புதமான கலைவழி திரைப்படத்தை இயக்கி தயாரித்தவர். அவருக்கு நெஞ்சம் நெகிழ்ந்து நன்றி சொன்னேன்.
அன்று முதல் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, இந்த நாவலைத் திரைப்படமாக்க அந்தத் துறையினர் கொடுத்த முன் தொகைகள், ஒரு திரைப்படக் கதாசிரியருக்குக் கிடைத்திருக்கக் கூடிய பணத்தை விட அதிகம். ஆனாலும், பலர் இதில் சாதி வருகிறது என்றும், கணிசமான காதல் இல்லை என்றும் இடையில் விட்டதுண்டு. அதே சமயம், சில பகுதிகளை அங்குமிங்குமாகத் திருடிப் பல படங்களில் சேர்த்துக் கொண்டதுமுண்டு. 'எங்கய்யா சாராயம் குடிச்சதுக்கும், ஏட்டையா மாரிமுத்துகிட்ட எளநி குடிச்சதுக்கும் என்ன எசமான் வித்தியாசம்' என்று உலகம்மை, ஒரு சப்-இன்ஸ்பெக்டரிடம் கேட்ட துணிவான கேள்வியை, பல்வேறு திரைப்படங்களில் உரையாடல்களாக அடிக்கடி கேட்டதுண்டு. உடனே, இந்த உரையாடல்களை நான் தான் திருடியிருப்பேனோ என்று இந்த நாவலைப் படித்த வாசகர்கள் கூட சந்தேகப்பட்டிருக்கலாம்.
இப்போது இந்த நாவலைப் படிக்கும் வாசர்களுக்கும், நான் சுட்டிக்காட்டும் குட்டாம்பட்டியைப் போன்ற ஒரு பட்டி இந்தக் காலத்தில் இருக்குமா என்று நியாயமான சந்தேகம் எழலாம். கிராமங்களின் வடிவம் மாறியிருப்பது உண்மைதான். வீடியோ, ஆடியோ கலாசாரத்தில் மண்வாசனை வார்த்தைகள், மண்ணோடு மண்ணாகின. 'அண்ணாச்சி' என்ற வார்த்தை 'அண்ணே' என்றாகிவிட்டது. 'மயினி' என்ற வார்த்தை 'அண்ணி'யாகிவிட்டது. அம்மன் விழாக்களில் கூட, வீடியோ ஆடியோ படங்களே அதிக நேரத்தை ஆக்கிரமிக்கின்றன. 'சாமியாடி'களுக்கு, இட ஒதுக்கீடும், நேர ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. முன்பிருந்த 'கமலை'யும் 'எருவண்டி'யும் 'மேவுக்கட்டை'யும், இன்றைய கிராமத்து இளைஞர்கள் கண்ணால் பாராதவை. மாட்டுக்கும் மனிதனுக்கும் இருந்த உறவுகள் கூட அற்றுப் போய்விட்டன. ஆனாலும், இந்த நவீன கிராமங்களில் கட்டைப் பஞ்சாயத்து, தீண்டாமை, காவல்துறை மாமூல், கள்ளச்சாராயம், சாதி சண்டைகள் இன்றும் கொடி கட்டிப் பறக்கத்தான் செய்கின்றன. வகுப்புகளை கொண்ட இந்த தமிழ்ச் சமூகத்தை, வர்க்கப் படுத்த வேண்டும் என்று இந்த நாவல் சொல்லாமல் சொல்வதற்கு, இன்றும் சமூகப் பொருளாதாரக் காரணிகள் உள்ளன. ஆகையால் இந்த நாவல், இப்போதும் தேவைப்படுகிறது.
இந்த நாவலைப் பற்றி, ஓராண்டுக்கு முன்பு, என்னிடம் பேசிய யாழ்ப்பாணத்து தமிழறிஞர் கா.சிவத்தம்பி அவர்கள், 'பின்னோக்கிய ஒரு இலக்கியப் பயணம்... - ஒரு கோட்டுக்கு வெளியே' படைப்பில் தலித்திய விதைகள் அப்போதே ஊன்றப்பட்டு விட்டதாக குறிப்பிட்டார். உண்மைதான்! தலித்துகளைப் பற்றி தலித்துகள் மட்டுமே எழுத வேண்டும் என்று இன்று பேசுகிறவர்கள், பிறப்பதற்கு முன்பே, அதிரடி தலித்தியமாக, யதார்த்தம் குறையாமல் வெளியான நாவல் இது. என்றாலும், பேராசிரியர் சிவத்தம்பி உள்ளிட்ட திறனாய்வாளர்கள் கூட, வாயால் இப்படி சொல்வார்களே தவிர, இலக்கியப்பதிவு என்று வரும்போது எழுத மாட்டார்கள். இதுதான் நமது விமர்சனத்தை பிடித்திருக்கும் குணப்படுத்த முடியுமா என்று நினைக்க வைக்கும் ஒரு நோய்.
இந்த நாவலை, நான் எழுதினேன் என்று சொல்ல மாட்டேன். இளமையில் நான் பங்கு பெற்ற, கண்ட, கேட்ட விசாரித்த நிகழ்வுகளை ஒன்று திரட்டி ஆங்காங்கே கத்தரித்து கொடுத்திருக்கிறேன். இதன் மெய்யான ஆசிரியர்கள் கிராமத்தில் பாவப்பட்ட 'உலகம்மா' போன்ற பெண்கள். 'மாரிமுத்து' போன்ற பண்ணையார்கள். 'பலவேசம்' போன்ற போக்கிரிகள். 'நாராயணசாமி' போன்ற இயலா மனிதர்கள். 'அருணாசலம்' போன்ற தலித் இளைஞர்கள். மதில்மேல் பூனைகளான ஊரார்கள்.
இன்று முரண்பட்டு மோதி நிற்கும் தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களை ஒன்று சேர்க்க வேண்டியது அவசியமாகிறது. இதற்கு, இந்த நாவல் துணையாய் நிற்கும் என்று நம்புகிறேன்.
நல்லது... வாசகத் தோழர்களே! நாவலுக்குள் போய் வாருங்கள். இதில், கண்டதையும், காணமுடியாமல் போனதையும் இயலுமானால் ஒருவரி எழுதிப்போடுங்கள்.
சு. சமுத்திரம்
ஊர்க்குளம் பெருகிவிட்டது.
எப்பேர்ப்பட்ட மழையிலும், தலைகீழாக நின்றால் கழுத்துவரை நிற்கும் நீரைக் கொண்ட குளம், இப்போது தலைகீழாக மாறிவிட்டது. ஆண்டுக்கணக்கில் வற்றிப் போயிருந்த அந்த மலட்டுக் குளம், இப்போது கர்ப்பிணிப் பெண் போல் தளதளத்தது. அரைக்கோள வடிவத்தில் அமைந்த அதன் கரையில் நின்று பார்த்தால், கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீர் நிரம்பிய நிலப்பரப்புகளில் 'தொழி வேலையும்', ஆங்காங்கே நடவு வேலையும், உழவு வேலையும் நடப்பது தெரியும். வெள்ளை வெளேரென்று இருந்த நீர்ப்பகுதியையும், அதன் இடையிடையே இருந்த நாற்றுக்களையும் பார்த்தால், வெள்ளைத் தாளின் சில இடங்களில் பச்சை மையில், ஒரு சில வாக்கியங்கள் எழுதப்பட்டிருப்பது போல் தோன்றும். கோணைத் தென்னை மரங்கள், அந்த வாக்கியங்களுக்குக் கேள்விக் குறிகள் போலவும், கிணறுகளை ஒட்டியிருந்த 'சரல்கள்' முற்றுப் புள்ளிகள் போலவும் காட்சியளித்தன.
குளம் பெருகியதை நம்ப முடியாதவர்கள் போல், ஊர்க்காரர்கள், நீருக்குள் கைகளை விட்டுப் பார்த்துக் கொண்டார்கள். சொல்லப் போனால், அது குளமுமல்ல; ஏரியுமல்ல. 'இரண்டுங் கெட்டான்' மைதானம் அது. மைதானம் என்று சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு. குட்டாம்பட்டியில் ஜனித்த ஒவ்வொருவரும், அறுபதாண்டுகள் வாழ்ந்தால், அந்தக் குளம் நிரம்புவதை இரண்டு மூன்று தடவை பார்க்கலாம். இப்போது பத்துப் பதினைந்து வயதில் இருக்கும் சிறுவர்கள் குளப்பெருக்கத்தை இப்போதுதான் பார்க்கிறார்கள். சிறு வயதில் பார்த்ததுபோல் தோன்றிய நீர்ப்பெருக்கை வாலிபர்களால் நினைவு படுத்திக் கொள்ள முடிந்தது.
வயற்பரப்பின் சில இடங்களில், எள் விதைத்திருந்தார்கள். அப்படி விதைத்ததால், அந்தப் பக்கமாக வரும் கணக்கப் பிள்ளைக்கு அடிக்கடி இளநீர் பறித்துக் கொடுப்பதும் உண்டு. அங்கே வரும்போதெல்லாம் பிள்ளைக்கு நீர்த்தாகம் எடுப்பதும் உண்டு. இப்போது பெருகிவிட்ட நீரில், 'ஆழ்ந்து போன நிலங்களையும்' எள்ளையும் சுட்டிக்காட்டி, இவர்கள் வாயிலும் வயிற்றுலும் அடித்துக் கொள்கிறார்கள். அவர்களைப் பொறுத்த அளவில் 'எள் விழ இடமில்லை' என்ற பழமொழி உண்மையாகிவிட்டது. அரசாங்கத்திடம் சொல்லி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு 'நிவாரணம்' அளிப்பதாக, கணக்குப்பிள்ளை வாக்களித்திருக்கிறாராம். அவருக்கு இதற்காக ஓசியில் நாற்றும், தலா ஒரு மூட்டை நெல்லும் கொடுத்து, 'பதில் நிவாரணம்' அளிப்பதாக 'பாதிக்கப்பட்டவர்கள்' வாக்களித்திருக்கிறார்களாம். எவர், எதை முதலில் கொடுப்பது என்ற பிரச்சினையில், விவகாரம் தொங்குவதாகக் கணக்குபிள்ளைக்கு வேண்டாத கிராம முன்சீப் பிரச்சாரம் செய்து வருகிறார்.
சில ஆசாமிகள் குளக்கரையையே ஒரு கை பார்த்தவர்கள். குளத்தை ஒட்டி நிலம் வைத்திருந்த அவர்கள், குளக்கரையில் பாதியைக் குடைந்து நிலமெடுத்தார்கள். ஏற்கனவே ஒடுங்கிப் போயிருந்த குளக்கரை மேலும் ஒல்லியாகி, நீர் கசிந்து கொண்டிருக்கிறது. நீரழுத்தத்தால், தங்கள் வயல் பக்கமுள்ள கரை உடைந்து வெள்ளம் புகுந்துவிட்டால், வெள்ளாமை வீணாகிவிடுமே என்று இப்போதுதான் ஞானோதயம் வந்தவர்கள் போலவும், அதே சமயம், வயலான கரைப் பகுதியை 'நெம்ப' மனமில்லா 'மாயை'யிலும் சிக்கித் தவிக்கிறார்கள். 'கர ஒடயாதுடா... கவலப்படாத' என்று அவர்களுக்கு சில சகுனி மாமாக்கள் ஆலோசனை சொன்னார்கள். கரை உடையாவிட்டால் "பாத்தியா... நான் சொன்னது மாதிரி உடையல" என்று சொல்லலாம். அப்படியே உடைந்தாலும் - குடி முழுகிவிடாது - ஆலோசனை வாதிகளின் குடி.
குளத்தை 'ஒரு கை பார்த்தவர்கள்', குளக்கரையையே 'இரு கை பார்த்தவர்களோடு' இன்னொரு ரக ஆசாமிகளும், கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்கள் வரப்பு வெட்டித் திலகங்கள். மடைக்கால்வாயை வெட்டி, தத்தம் வயல்களுக்கு 'குட்டி வயல்' சேர்த்தவர்கள். இப்போது மடை நீர் வாய்க்கால் இல்லாத வயலுக்குள் பாய்ந்து, கிட்டத்தட்ட குட்டிக் குளம் மாதிரி பெருகிவிட்டது. வயலுக்குக் குட்டி சேர்த்தவர்கள், குளமும் குட்டி சேர்ப்பதைப் பார்த்து, என்ன பண்ணலாம் என்று தத்தம் தலைகளைக் குட்டிக் கொண்டார்கள்.
லேசாக உடைந்த முட்டையிலிருந்து, வெள்ளைக்கரு கசிவது போல், குளத்தின் 'மடை' வழியாக நீர் கசிந்து கொண்டிருந்தது. இன்னும் நாலு 'பிடி' பெருகிய பிறகுதான், மதகைத் திறப்பது என்று ஊர்க்காரர்கள் தீர்மானித்திருக்கிறார்கள். ஆனால் இந்தக் குளத்து நீரை நம்பி, அதற்குக் கிழக்கேயுள்ள கொண்டலப்பேரி குளம் 'வயிறு காய்ந்து' கிடந்தது. கொண்டலப்பேரிக்காரர்கள், மதகைத் திறந்து விடும்படி, குட்டாம்பட்டிக்காரர்களை கெஞ்சிப் பார்த்தார்கள். பயனில்லை. இப்போது மிஞ்சிப் பார்க்கலாமா என்று நினைக்கிறார்கள். ஊரை ஒட்டி, குளத்துக் கரையின் வடமுனையில் இருக்கும் இந்த மடைக்குச் சற்றுக் கீழே ஒரு ஓடை துவங்குகிறது. இந்த ஓடை வழியாகத்தான் கொண்டலப்பேரிக்கு நீர் போக வேண்டும்.
அந்தக் குளத்துப் பாசனத்தில் முந்நூறு ஏக்கர் நிலமும் இருநூறு கிணறுகளும் இருக்கலாம். கிணறுகளில் நீர் பொங்கி வழிந்தது. அம்பாசமுத்திரம் பக்கம் கதிரறுக்கப் போய் நீச்சலையும் கற்றுக் கொண்டு வந்த வாலிபர்கள், கிணற்றின் 'குத்துக்காலில்' ஏறி நீருக்குள் பல்டி அடித்தார்கள். அவர்கள் அப்படிக் குதிப்பதை சில பையன்கள் ஆச்சரியப்படத்தக்க முறையிலும், சில முதியவர்கள் ஆச்சரியப்படத் தகாத முறையிலும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சில பையன்களுக்கு இடுப்பில் கயிறு கட்டப்பட்டு, பெரியவர்கள் கயிறுகளைப் பிடித்துக் கொள்ள, பையன்கள் கிணற்றுக்குள் நீச்சல் கற்றார்கள். 'எம்மா, எய்யா, வாண்டாம், தூக்கும் மாமா, தூக்கும் மாமா' என்று ஒரு பையன் கத்த, கயிற்றைப் பிடித்துக் கொண்டிருக்கும் மாமா சிரித்துக் கொண்டே பையனைக் கயிற்றின் மூலம் வெளியே தூக்கி விடுகிறார். உடனே மச்சான்காரன், 'அரவம்' தெரியாமல் பின்னால் வந்து, பையனைக் கிணற்றுக்குள் தள்ளிவிட்டு கைதட்டிச் சிரிக்கிறான். பையன் மீண்டும், 'எம்மா, எய்யா, செத்தேன், செத்தேன், தூக்கும், செத்தேன், எம்மா எய்யா' என்று நீருக்குள் புழுங்குகிறான்.
வேறு சில கிணறுகளில், நாற்று நட்டுக் கொண்டிருக்கும் பெண்களை 'வசியம்' செய்வது போல், சில வாலிபர்கள் போட்டிகளை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒருவன் கொழுஞ்சிச் செடியைக் கொண்டு போய் கிணற்றுக்குள் எவ்வளவு ஆழத்திற்குப் போக முடியுமோ, அவ்வளவு ஆழம் போய், விட்டுவிட்டு வர வேண்டும். இன்னொருவன், அதை எடுத்துக் கொண்டு வர வேண்டும். சிலர், தென்னை மரத்தில் பாதி தூரம் ஏறி நின்று கொண்டு, அங்கேயிருந்து கிணற்றுக்குள் குதித்தார்கள். இதுவரை அனாவசியமாகப் பார்த்துக் கொண்டிருந்த இளம்பெண்கள் இப்போது ஆச்சரியமாக அந்த இளைஞர்களைப் பார்த்தது மட்டும் அல்லாமல், 'ஏ... அப்பாவு! எப்படிக் குதிக்க முடியுது? கொளுப்ப பாத்தியளா?' என்று செல்லமாக ஒருவருக்கொருவர் சிணுங்கினார்கள். எல்லாப் பெண்களும் தென்னை மரங்களைப் பார்ப்பதைக் கவனித்த 'கொழுஞ்சிச் செடி' வீரர்களும் தென்னை மரங்களில் ஏறப் போனார்கள். 'பயல்கள் ஏறுகிற கையோட இளனியையும் புடுங்கினாலும் புடுங்கலாமுன்னு' நினைத்த அய்யாவுத் தாத்தா, 'ஏ பரதேசிப் பயமவன்களா, கீழே இறங்கி, ஒப்பமாருக்குப் போயி ஒத்தாசை பண்ணுங்கல' என்று கத்தினார்.
அந்த வயல் காட்டில் பதினெட்டாம் நூற்றாண்டும், இருபதாம் நூற்றாண்டும் ஒன்றாக இயங்கி வந்தன. மாரிமுத்து நாடார் வயலில் டிராக்டர் உழுதது. இழை தழைக்குப் பதிலாக 'சீம்' உரம் போடப்பட்டிருந்தது. கிணற்றில், கமலைக் கிடங்கிற்குப் பதிலாக, ஒரு சின்ன காரைக் கட்டிடம்; கிழட்டு மாடுகளுக்குப் பதிலாக 'பம்ப் ஸெட்'.
'குளத்தடி' நிலம் அவருடையது. சுமார் ஏழு 'கோட்டை' விதைப்பாடு இருக்கலாம். போதாக் குறைக்கு வேறு பகுதிகளில் சில வயல்களை 'ஒத்திக்கு' வாங்கியிருக்கிறார். ஒத்தி வைத்தவர்களில் பெரும்பாலோர் உருப்படாதவர்கள். 'கெரயத்துக்கு எடுத்துக்கிடும்' என்று முன்வருபவர்களை "ஏண்டா கிரயம் கிரயமுன்னு கிறுக்குத்தனம் பண்ணுத? ஒன்னோட பூர்வீக சொத்த விக்கலாமா? பேசாம ஒத்தி வையி. எப்ப முடியுதோ அப்ப மூட்டிக்க' என்பார். இவரின் கருணை வெள்ளத்தால் திக்குமுக்காடும் சில்லறை வியாபாரிகள், அவர் சொன்னபடியே ஒத்தி வைத்துவிட்டு, ஒரேயடியாய் உருப்படாமல் போய் விடுவார்கள். அப்படி அவர்கள் போவதைப் பார்க்கத் துடிப்பவர் போல், மாரிமுத்து நாடாரும் "இந்தா காக்கிலோ கறி, காசு வேண்டாம். ஒன் கணக்கிலே எழுதிக்கிறேன். இந்தா ஒனக்கு ஒரு வேட்டி வாங்கியாந்தேன். பணம் வேண்டாம், கணக்கு வச்சிட்டேன்" என்று சொல்லியே ஒத்திப் பணத்தை உப்புக்கும் புளிக்குமாகக் கொடுத்து உப்பிப் போனவர்.
அவர் வயல்களில் ஒன்றே ஒன்றைத் தவிர, எல்லா வயல்களிலும் 'நடவு' வேலை முடிந்து விட்டது. ஒரே ஒரு வயலில் மட்டும் பத்துப் பதினைந்து பெண்கள் 'நட்டுக்' கொண்டிருந்தார்கள். முக்கால்வாசி பேர் கல்யாணமாகாதவர்கள். கல்யாணமாகாத பெண்களில் எல்லோரும் இளம் பெண்கள் அல்ல. இளம் பெண்களில் எல்லோரும் அழகிகளும் அல்ல. அழகிகளில் எல்லோரும் அடக்கமானவர்களும் இல்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தால் நாலைந்து பெண்களுக்கு வயது, அழகு, பண்பு ஆகிய மூன்றிலும் முப்பத்தைந்துக்கு மேல் மார்க் போடலாம்.
கிணற்றடியில் நாற்றங்காலில் இருந்து பத்துப் பதினைந்து நாற்றுக்கற்றைகளை அருகில் வைத்துக் கொண்டு, ஒரே ஒரு நாற்றுக்கற்றையை மட்டும் இடது கையில் வைத்துக் கொண்டு, ஒவ்வொரு நாற்றையும் வலது கையால் எடுத்து வயலுக்குள் ஊன்றிக் கொண்டிருந்தார்கள். இரண்டரை ரூபாய் தினக்கூலி. விவசாயத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்சக் கூலியைப் பற்றி அதிகப் பட்சம் தெரிந்தவர்கள் எண்ணிக்கை கோழிமுட்டைதான். ஆகையால் மனக்குறை இல்லாமல் பெண்கள் நட்டுக் கொண்டிருந்தார்கள். காலையிலேயே கண்காணிப்புக்கு வரும் மாரிமுத்து நாடார் வராததால் சோம்பலாகவும், அதே நேரத்தில் அவர் வந்து விடுவார் என்று வேகமாகவும், மாறி மாறி இயங்கி வந்தார்கள். நாடாரின் அண்ணன் மகன் வெள்ளைச்சாமி கிணற்றடியில் இருந்து நாற்றுக்கற்றைகளைக் கொண்டு வந்து பெண்களிடம் கொடுத்தான். அப்பன் சொத்தை விற்றுத் தின்றுவிட்டு, சின்னையாவிடம் வேலை பார்த்து வருகிறான். அவனை எல்லோரும் 'பிராந்தன்' என்பார்கள். 'லூஸ்' என்ற பட்டணத்து வார்த்தை கிராமப் பிரவேசம் செய்தால், அதற்குப் பெயர் தான் 'பிராந்தன்' என்பது.
முழுக்கருப்பான வெள்ளைச்சாமி, "அகலமா நடுங்க, சேத்து நடாதிய" என்று வரப்பில் இருந்து கொண்டே அதட்டினான்.
அதைக் கேட்டு, உலகம்மை சிரித்தாள். அவளுக்கருகில் நட்டுக் கொண்டிருந்த ஒரு கிழவி, "எதுக்கு பூ சிரிச்ச" என்றாள்.
"பிராந்தன் பேசினது காதுல விழல பாட்டி?"
"என்ன சொன்னாள்?"
"அகலமா நடணுமாம்."
"அதுக்கென்ன நட்டாப் போச்சி. நமக்கும் முடிஞ்ச மாதிரி இருக்கும்."
"நீ தான் மெச்சிக்கணும். இந்த வேல முடிஞ்சிட்டுன்னா மாரிமுத்து மாமா வேற வேல குடுப்பார். சூரியன் சாயுறது வறக்கிம் விடமாட்டாரு. மஞ்ச வெயிலு அடிச்சாத்தான் மஞ்ச தேச்சிக் குளிக்க முடியும்."
வெள்ளைச்சாமி மீண்டும் கத்தினான். பிள்ளைக்குட்டி இல்லாத சின்னய்யா சொத்து தனக்குச் சேரும் என்று எண்ணுபவன். அவன் நினைக்காமல் இருக்கும்போதே, ஊர்க்காரர்கள், அப்படி அவனை நினைக்க வைத்து சும்மா கிடந்த பிராந்தன் காதை ஊதிக் கெடுத்தார்கள். ஆகையால் பெத்த அப்பனையே அப்பனாய் நினைக்காத அவன், சின்னய்யாவை சொந்த அய்யாவாக நினைத்துக் கொண்டு, மற்றவர்களும் அப்படி நினைக்க வேண்டும் என்பது போல் கத்தினான்.
"ஒன்னத்தான பாட்டி."
"எனக்கு இன்னும் முப்பது கூட முடியல. ஒனக்கு நான் பாட்டியா? இதுக்குத்தான் ஒன்னை பிராந்..."
"என்ன சொன்ன? பிராந்தன்னு சொல்றியா? உன்ன..."
"வெள்ளைச்சாமி, இந்த சட்டை நல்லா இருக்கே. எங்க எடுத்த? இது ஒன்ன ராசா மாதிரி காட்டு."
"இது தென்காசில எடுத்தேன்."
வெள்ளைச்சாமி கிணற்றுப் பக்கம் போய்விட்டான். பெண்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள். "பிராந்தன சமாளிச்சிட்ட" என்றாள் உலகம்மை.
"பிராந்தனுக்குக் கோபம் வந்ததுன்னா, நெலயா நிப்பான். நல்லவேள, பேச்ச மாத்திட்ட" என்றாள் இன்னொருத்தி.
குத்துக்காலில் சாய்ந்து கொண்டு, இளம் பெண்களை, குறிப்பாக உலகம்மையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த வெள்ளைச்சாமி, அவனைப் பார்த்து அவளும் சிரிப்பதை காதல் சகுனமாக எடுத்துக் கொண்டான். அவளிடம் 'பவுசு' காட்டும் வேகத்தோடு, "அகலமா நடுங்கன்னா, கேக்க மாட்டிங்கியள. அகலமா நடுங்க" என்றான்.
"இதுக்கு மேல அகலமா நட்டா, அடுத்த வயலுல போயி தான் நடணும். பிராந்தன் கத்துறதப் பாரு. உலகம்ம ஒனக்கு என்னழா கேடு? ஏன் இப்படிச் சிரிக்கிற?"
"விபரமாச் சொல்லிட்டுச் சிரியேன், பிள்ள."
"நேத்து நம்ம ஊர்ல யாரோ வந்து சினிமா போட்டாங்கல்ல. அதுல ஒரு ஆளு நாத்த அகலமா நடுறது மாதிரி பிள்ளியள இடவளிவிட்டுப் பெத்தா பிள்ளைக்கும் நல்லது, தாயிக்கும் நல்லதுன்னார். அதைப் பிடிச்சுக்கிட்டு இவன் குதிக்கிறான்."
"ஓ, அதுதான பார்த்தேன். பிராந்தனுக்கு நாத்த அகலமா நடுறது எப்டி தெரியுமுன்னு நெனச்சேன். சரியாச் சொல்லிட்ட. ஆமா, நீ பீடி சுத்திக்கிட்டு இருந்துட்டு இதுக்கு ஏன் வந்த? அதுல, இதவிட அதிக ரூபா வருமே?"
உலகம்மை பேசாமலும், நாற்றை நடாமலும் சிறிது தயங்கினாள்.
"சும்மா சொல்லு."
"அவன் பீடி ஏசெண்டு ராமசாமி இருக்காமுல்ல, அவன் பார்வ சரியில்ல. பீடி இலய குடுக்கிற சாக்குல ஒரு நாளு இலையோட சேத்துக் கையத் தேச்சான். தெரியாம பட்டிருக்குமுன்னு பேசாம இருந்தேன். இன்னொரு தடவை கணக்கப்பிள்ளகிட்ட பீடிய சோதித்தது மாதிரி என்ன இடிச்சான். நான் ஒதுங்கிக்கிட்டேன். பெறவும் லேசா இடிச்சான்."
"நீ என்ன பண்ணுன?"
"அறிவிருக்காடான்னு கேட்டேன். ஒன் அக்கா தங்கச்சிய போயி இடியேன்னு கேட்டேன். அவன் மொகஞ் சின்னதாய் போச்சு. பக்கத்துல நின்னவளுக ஏங்கா, ஏஜெண்ட்ட இப்படிப் பேசுறன்னு கேட்டாளுகளே தவிர, அவன் செஞ்சத ஒரு வார்த்த தட்டிக் கேக்கல. இந்த முண்டைங்க கண்ணுல முழிக்கப்படாதுன்னு இங்க வந்துட்டேன்."
ஏஜெண்ட் தன்னிடத்தில் தகாத முறையில் நடந்ததை விட, பக்கத்தில் இருந்த பெண்கள், அவனுக்கு 'சப்போர்ட்' செய்யும் தோரணையில் பேசியதையே பெரிதாக எடுத்துக் கொண்டவள் போல், உலகம்மை பேசாமல் நின்றாள். அவள் தோழி, ஆதரவாகப் பேசினாள்.
"பீடிக்கட வந்தாலும் வந்துது... இவளுவ, ஜிலுக்கிறதும், மினுக்கிறதும், குலுக்கிறதும், சொல்லி முடியல... ஏஜெண்டப் பார்த்து சிரிச்சி - சிரிச்சி எலய அதிகமா வாங்கறது, கணக்கப் பிள்ளகிட்ட பல்லக் காட்டி கழிவண்டலு இல்லாம செய்றது, பீடி ஒட்டுறவனப் பார்த்து சிரிச்சி, சே... சே... விடு பேச்ச."
"அதுக்கில்ல புஷ்பம், ஒரு வார்த்த தட்டித்தான் கேக்கல, சும்மாவாவது இருக்கலாமுல்ல?"
ஒரு கிழவி இடைமறித்தாள்.
"விடு களுதய, அவன சப்போட்டா பேசுனா பீடிய கழிக்க மாட்டான், பணத்தை ஒடனே குடுத்திடுவான். ஒங்கிட்ட என்ன இருக்கு குடுக்க? உலகமே மோசமா போயிட்டு. நாமுல்லாம் ஒன்ன மாதிரி இருக்கையில..."
"நீ ஒன் பிலாக்கணத்த நிறுத்து பாட்டி. ஒலகம்மா! நீ அவன அங்கயே செருப்ப வச்சி அடிச்சிருக்கணும்."
"நீன்னா அடிக்கலாம். ஒனக்கு அண்ணன் தம்பி சொக்காரன் சொகக்காரன் இருக்கு. எனக்கு யாரிருக்கா? அவன் திருப்பியடிச்சா கேக்க நாதியில்லிய. இல்லாதவன் பொண்ணு எல்லாத்துக்கும் மயினிதான்."
பாட்டி பிலாக்கணத்தைத் தொடர்ந்தாள்.
"அதத்தான் சொல்ல வந்தேன். இவா அதட்டிட்டா! ஒரு காலத்துல, பொம்பிள தப்பா நடந்தாலும் சரி, ஆம்பிள தப்பா நடந்தாலும் சரி, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, தலையில மணல் மூட்டையை ஏத்தி, தெருத்தெருவா கொண்டு போவாங்க. இப்பப் பாரு, நீயே சொன்ன, ஒன்ன அவன் இடிச்சா, இவளுவ அவனுக்குத்தான் பேசுறாளுக."
இன்னொரு பெண்ணும் குறுக்கிட்டாள். இவள் பீடி சுற்றத் தகுதி இல்லாதவள் என்று ஒதுக்கப்பட்டவள்.
"அந்தக் கழுதகள ஏன் பேசுறிய? நம்மள இடிக்கயில இனிக்குது. இவளுக்கு எப்படி கசக்குமுன்னு நெனச்சிருப்பாளுக."
"காலம் கெட்டுப் போச்சு. கன்னி கழியாதவளுகளும் கசட்டு முண்டையா போயிட்டாளுங்க."
பேசிக் கொண்டிருந்த பெண்கள், திடீரென்று வேக வேகமாக நடத்துவங்கினார்கள். மாரிமுத்து நாடார் கொஞ்சம் வேகமாகவே நடந்து வந்தார். "என்னம்மா குறுக்கு வலிக்கியெம்மா" என்று பாதி நிமிர்ந்த உலகம்மை. அப்பிடியே உடம்பைக் குனிந்து கொண்டாள். "எல்லாம் பொண்ணுகளயும் ஒட்டு மொத்தமா சொல்றது தப்பு பாட்டின்னு" சொல்ல வாயைத் திறந்த புஷ்பம். 'பூ'ன்னு ஊதிக் கொண்டே, நாற்றை எடுத்தாள். குத்துக்காலில் சொந்தத் தலையைச் சாய்த்தபடி நின்று கொண்டே தூங்கிக் கொண்டிருந்த வெள்ளைச்சாமி "வயலுன்னு நெனச்சியா? ஒன் வைப்பாட்டின்னு நினைச்சியா? குத்துக் காலுல சாயுறியே, வயலு சீதேவி. மூதேவி இல்ல, மூதேவி!" என்ற வார்த்தைகளைக் கேட்டு, விழித்துத் திடுக்கிட்டானா, திடுக்கிட்டு விழித்தானா என்பது தெரியவில்லை. நாடார் பல்லைக் கடித்துக் கொண்டு நிற்பது மட்டும் தெரிந்து, வெள்ளைச்சாமி, நாற்றுக்கட்டுகளை எடுத்துக் கொண்டு நடவுப் பக்கம் ஓடினான்.
மாரிமுத்து நாடாரும் நடவுப்பக்கம் வந்தார். அறுபது வயதைத் தாண்டப் போகிறவர். ஆனால் வயதை மறைத்தது உடற்கட்டு. அந்த உடல்கட்டில் எட்டு முழ மல்வேட்டி இறுகித் தழுவ, அரைக்கை சட்டை, தொளதொளன்னு காற்றில் ஆடியது. சிவப்பும் கருப்பும் இல்லாத மாநிறம் கொண்டவர். ஒரு பாக்கெட், ரூபாய் நாணயங்களின் கனம் தாங்காமல் தனியாகத் தொங்கியது. நரைத்துப் போன நறுக்கு மீசை, உதட்டையும் மீறி, வாய்க்குள் எட்டிப் பார்த்தது. இடது கையில் இரண்டு மோதிரங்கள் மின்னின.
நாற்று நட்டுக் கொண்டிருந்த பெண்களை உற்றுப் பார்த்தார். ஒவ்வொரு பெண்ணும் தன் வேலையைத் தான் அவர் கவனிப்பதாக நினைத்துக் கொண்டு, 'இந்த அகலத்த அதிகமுன்னு சொல்லுவாரோ, இவ்வளவுதான் நட்டுயளான்னு சத்தம் போடுவாரோ' என்று சிந்தனையை வேலையாக்கியதால் வேலையில் சிந்தனை ஓடாமல் இருந்தார்கள்.
அவருக்குப் பயந்தார்கள் என்றால், அதற்குக் காரணம் உண்டு. எவளாவது சரியாக வேலை பார்க்கவில்லையென்றால், அங்கேயே அவள் கணக்கை முடித்து, சில்லறையைக் கொடுத்து அனுப்பிவிடுவார். விவகாரம் அத்தோடு நிற்காது. அதற்குப்பிறகு, அவரிடம் நல்லதுக்கோ, கெட்டதுக்கோ 'கைமாத்து' வாங்க முடியாது. மற்ற விவசாயிகளிடமும் 'சின்னாத்தாவைக் கூப்பிடாத தட்டுக் கெட்டவ' என்று சொல்லி விடுவார்.
என்றாலும், மாரிமுத்து நாடார் யாரையும் திட்டவில்லை. உலகம்மையைச் சிறிது நேரம் உற்றுக் கவனித்து விட்டுப் பேசினார்.
"ஏய் உலகம்மா. ஒன்னத்தான். வீட்டுல கொஞ்சம் வேல இருக்கு. எங்கூட வா. ஏமுழா முழிக்க. முழுக் கூலியும் கெடைக்கும். நாத்த போட்டுடு, வாம்மா."
உலகம்மை என்ன வேலை என்று கேட்கவில்லை. அப்படிக் கேட்பது அவருக்குப் பிடிக்காது என்பது அவளுக்குத் தெரியும். இதர பெண்களிடமும் 'போறேன்னு' சொல்லாமலே, தலையை நிமிர்த்தினாள். இடுப்பில செருகிய கணுக்கால் சேலையை எடுத்து விட்டுக் கொண்டு, நாடார் பின்னால் நடந்தாள். இருவரும் கிணற்றுப் பக்கம் வந்தார்கள்.
"ஒலகம்மா கிணத்துல குளிச்சிடு. ஒடம்புல்லாம் சவதியா இருக்கு."
"மொகங்கால மட்டும் கழுவிக்கிறேன். சாயங்காலமாத் தான் குளிக்கணும்."
"சொல்றதச் செய்ழா. நான் சொல்லுறேன்னா காரணமுல்லாமலா இருக்கும்? சீக்கிரமா ஆவட்டும். ராகுகாலம் வந்துடப் போவது, ஜல்தி."
உலகம்மை தயங்கிக் கொண்டே கிணற்றுக்குள் இறங்கினாள். சேலையை அவிழ்த்து, மார்பு வரை கட்டிக் கொண்டு, 'மூலப்படியில்' உட்கார்ந்து கொண்டாள். தண்ணீர் இடுப்பு வரைக்கும் வந்தது. இரண்டு கைகளால் தண்ணீரை ஊற்றிக் கொண்டாள். குத்துக்காலைப் பிடித்துக் கொண்டு நின்ற மாரிமுத்து நாடார், அந்தப் பத்தொன்பது வயது மங்கையின் சிவந்த மேனியின் அழகைத் தற்செயலாகப் பார்த்து, லேசாகச் சலனப்பட்டார். அங்கேயே நிற்கலாமா வேண்டாமா என்பது போல், தலையைச் சொறிந்தார். பிறகு 'நம்ம வயசுக்குத் தகாது' என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு, உடம்போடு ஒட்டியிருந்த புடவையையும், அந்த ஈரத்துணிக்குள் எட்டிப்பார்த்த உடல் அழகையும் கண்களால் விழுங்கிக் கொண்டே 'கமலக்கிடங்கு' பக்கமாகப் போனார்.
மாரிமுத்து நாடார் அகன்றுவிட்டதை ஓரக்கண்ணால் பார்த்த உலகம்மை கிணற்றுக்குள் பாய்ந்தாள். மூக்கைப் பிடித்துக் கொண்டு 'முங்கினாள்'. பின்னர் மூக்கில் இருந்த கையை எடுத்து, இரண்டு கைகளாலும், தண்ணீரை மேல் நோக்கித் தள்ளிக் கொண்டு, அவள் கீழ் நோக்கிப் போனாள். கைகளிரண்டால் தலையைக் கோதி விட்டாள். கால்கள் இரண்டையும் தண்ணீருக்குள் மேலும் கீழுமாக உதைத்து அழுத்திக் கொண்டே உடம்பு முழுவதையும் தேய்த்து விட்டாள். மாரிமுத்து நாடார் பிராந்தனை அதட்டுவது அவளுக்குக் கேட்டது.
"சீக்கிரமா ஆவட்டும். இன்னுமா குளிக்க? ஏல, வெள்ளைச்சாமி! இங்க யாமுல வார? பொம்பிள குளிக்கிற இடத்துல ஆம்பிளக்கி என்னல வேலை? அங்கேய நில்லுல படவாப்பயல."
உலகம்மை நெற்றியில் விழுந்த முடிகளைப் பின்புறமாக விலக்கிக் கொண்டு, மூலப்படிக்கு வந்து, சேலையின் ஒரு நுனியைப் பிழிந்து, கசக்கிவிட்டு, பிறகு அதைக் கட்டிக் கொண்டே இன்னொரு முனையை அலசிக் கொண்டிருந்த போது, மாரிமுத்து நாடார் எட்டிப் பார்த்தார். அவளுக்கு வெட்கமாக இருந்தது.
"இன்னுமா முடியல? சீக்கரம்..."
"நீரு போம் மாமா. நான் பின்னாலயே வாரேன்."
"நீ எனக்குச் சொல்லித் தாறியோ. நல்லாயிருக்கு. நான் போயிட்டா, நீ வாரத்துக்குள்ளே ராகுகாலம் வந்துடும். உம் சீக்கிரம். அழுக்குத் தீர குளிச்சியளும் இல்ல, ஆச தீர..."
மாரிமுத்து நாடார் சொல்ல வந்ததை, இடம், பொருள், ஏவல் தெரியாமல் சொல்லப் போறோமே என்று நினைத்துக் கொண்டு பல்லைக் கடித்துக் கொண்டார்.
உலகம்மையும், மாரிமுத்து நாடாரும் கரைக்கு வந்து விட்டார்கள். குளத்தின் தெற்கு எல்லையான கைக்கண்டார் கோவிலில் இருந்து புறப்பட்ட அவர்கள், வடக்கு எல்லையான உதிரமாடசாமி கோவிலை உற்றுப் பார்த்தார்கள். இரண்டு கிலோமீட்டர் தேறும். 'இவ்வளவையும் ராகுகாலம் வாறதுக்குள்ள நடந்திட முடியுமான்னு' கணக்குப் பார்த்துக் கொண்டே மாரிமுத்து நாடார் முன்னால் நடக்க உலகம்மை எதுக்காக கூப்பிடுகிறார் என்று புரியாமல் பின்னால் போனாள்.
வெடவெடன்னு முள் தைக்கிறது மாதிரி பேசும் மாரிமுத்து நாடாரும் அவளிடம், பாசத்தோடு பேசிக் கொண்டு வந்தார்.
"ஏந்தாயி, பீடி சுத்துறத விட்டுட்ட...?"
ஏஜெண்டைப் பற்றிச் சொல்லலாமா என்று உலகம்மை நினைத்தாள். பிறகு, விஷயத்தைப் பெரிதாக்க வேண்டாமென்றும், ஏஜெண்ட் அவரின் சொந்தக்காரன் என்பதாலும் பேசாமல் நடந்தாள்.
"ஏம்மா, பீடிய விட்டுட்ட..."
"ஒரே இடத்துல இருந்தா, காலு பெருச்சாளி பத்திப் போவுது மாமா; இந்த வயசுல ஓடியாடி வேல பாக்கணுமுன்னு நெனைச்சேன்."
ஊரை நெருங்க நெருங்க, அவர் நடையில் வேகம் தெரிந்தது. உலகம்மையும் மான்குட்டி மாதிரி துள்ளிக் கொண்டும், கன்றுக்குட்டி மாதிரி பாய்ந்து கொண்டும், மாராப்புச் சேலை காய்ந்து விட்டதா என்று எடுத்து எடுத்துப் பார்த்துக் கொண்டும் நடந்தாள்.
"வேகமா நடம்மா" என்றார் நாடார்.
மாரிமுத்து நாடார் சகஜமாகப் பேசியதால், உலகம்மையின் இயல்பான குறும்புத்தனம் வெளியே தலைகாட்டியது.
"அகலக் கால் வச்சா, ஆபத்தாச்சே மாமா."
உலகம்மை அப்படிச் சொன்னாலும், அகலமாகத்தான் கால் வைத்தாள்.
மாரிமுத்து நாடாரும், உலகம்மையும் மடையின் கற்சுவர் வழியாக, மெள்ள நடந்தார்கள். ஓடையை அவர்கள் என்ன, யாராலும் தாண்ட முடியாது. பாசி படிந்த சுவரை அடி மேல் அடி வைத்துக் கடந்த போது, சின்னப் பையன்கள் குளத்து மதகுகளில் ஆனந்தமாகக் குளித்துக் கொண்டிருந்தார்கள். குறிஞ்சிப்பூ போல பல்லாண்டுகளுக்குப் பின்னர் குளத்து வெள்ளம், குட்டாம்பட்டியில் அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் குளிப்பாட்டியிருக்க வேண்டும். ஊரே அங்கு நின்றது. ஓடைக்குத் தென் பகுதியில் இருந்த சேரியில் முட்டளவிற்கு நீர் புகுந்து விட்டதால், சேரிப் பையன்கள், அதையே குளமாக நினைத்துக் கொண்டு விளையாடினார்கள்.
ஊரின் மேற்கு முனையில் இருந்த 'பிள்ளைமார் குடி' வழியாக இருவரும் நடந்தார்கள். காவல் கடவுள் போல முருகன் கோவில் கம்பீரமாக நின்றது. தோரணமலையில் இருக்கும் பாலமுருகனைத் தரிசிப்பதற்காக வந்த அகஸ்தியர் மலையேற முடியாமல், பிள்ளைமார் தெருப்பக்கம் உள்ள மடத்தில் தங்கியதாகவும், தோரணமலை முருகன் மனமிரங்கி, தந்தையின் நண்பரைப் பார்க்க இந்த இடத்தில் எழுந்தருளினான் என்பதும் ஐதீகம். 'இந்த எடத்தத் தாண்டி முருகன் ஆசாரிக் குடிக்குள்ளேயோ, நாடார் குடிக்குள்ளேயோ போகல' என்பது பிள்ளைமார்கள் வாதம். இந்த வாதம் முன்பு பகிரங்கமாகவும், இப்போது ரகசியமாகவும் நடந்து வருகிறது.
ஆலயமணி அடித்தது. ஊர்க்கணக்குப் பிள்ளை சிவசண்முகம், காதைப் பிடித்துக் கொண்டு 'ஓம் சரவணபவ, ஓம் சரவணபவ' என்று சொல்லிக் கொண்டிருந்தவர், "வாரும் நாடாரே, வாரும் நாடாரே" என்றார். நாடார், அவசர அவசரமாகக் கையை மேல் நோக்கி எடுத்துவிட்டு, நழுவப் பார்த்தார். உலகம்மை அந்தத் தெய்வச் சிலையையே உற்றுப் பார்த்தாள். உதிரமாடசாமியை உணர்ச்சி பூர்வமாகக் கும்பிட்டுப் பழகியவள், இப்போது முருகன் சிலையை அறிவு பூர்வமாகக் கும்பிட்டாள்.
நழுவப் போன நாடாரை பிள்ளை விடவில்லை.
"நாம் சொள்ளமாடன் வயல குளம் அழிச்சிட்டு, தாசில்தார் நாளைக்கு வாராரு. நீரும் சொல்லி நஷ்ட ஈடு கேக்கணும்."
"செஞ்சா போச்சி, வரட்டுமா?"
"அப்புறம், ஒம்ம பெரிய்யா மவன் நான் ரெண்டு மூட்ட நெல்லும் நாலு கோழியும் சொள்ளமாடங்கிட்ட கேட்டதா பொரளிய கிளப்பி இருக்கார். நல்லா இல்ல."
"நம்ம கிராம முனிசிப்பா? நான் கண்டிக்கிறேன். வரட்டுமா?"
"அப்புறம், ஒம்ம சின்னய்யா மகங்கிட்ட சொல்லி, என் மவளுக்கு பாலசேவிகா வேல வாங்கிக் கொடுக்கணும். பீ.டி.ஓவப் பார்த்தேன். பஞ்சாயத்துத் தலைவர் சொன்னா சரிங்றார்."
"சொல்றேன், வரட்டுமா?"
"அப்புறம்..."
"அப்புறம் இருக்கட்டும் பிள்ளைவாள். சட்டாம்பட்டி சங்கர நாடார் குடும்பம் எப்படி? ஒரு பையன் இருக்கானாம்."
"அந்த ஊர்ல அவன் எம்.ஏ. படிச்சவனாம். நல்ல பையன்னு கேள்வி. என்ன விஷயம்? அப்புறம் ஒம்ம கொழுந்தியா மவன்கிட்ட சொல்லும். வார லட்டர சீக்கிரமா கொடுக்க மாட்டேங்கறான்."
"சங்கர நாடார் குடும்பம் எப்படி?"
"கஷ்டப்பட்ட குடும்பம். ஒரு காலத்துல... பனை ஏறுனாங்களாம்."
"பனையேறிப் பய குடும்பமா?"
"ஒரு காலத்துல."
"இப்ப இல்லியே?"
"இல்ல."
"அப்படின்னா சரிதான்."
"என்ன விஷயம்?"
"நாளக்கி சாவகாசமா சொல்றேன், வரட்டுமா?"
"செய்யும். அப்புறம்..."
மாரிமுத்து நாடார் கணக்குப்பிள்ளையைத் திரும்பிப் பாராமல் நடந்தார். உலகம்மைக்குப் பகீரென்றது. 'பனையேறிப்பய குடும்பமான்னு மாமா நாக்கு மேல பல்லுப் போட்டுக் கேக்கறாரே. ஏன், இவரு தாத்தா பனையேறினாராமே. எங்க அய்யா மட்டுமா பனையேறினாரு? பனையேறுற நாடார் சாணான்னும் ஏறாதவங்க நாடார்னும் ரெண்டு சாதியா மாறிட்டு. இப்படித்தான் சாதிங்க வந்திருக்குமோ? இத்தன சாதி இல்லாம ஏழை சாதி, பணக்கார சாதின்னு ரெண்டு இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும். பறையன்ல பணக்காரன், பணக்கார நாடார் கூட போறான். ஆனால் நாடார்ல ஏழை பறையர்ல ஏழை கூட ஏன் சேரல? சாணான்னு இவனத் தள்ளி வச்சாக்கூட, இவன் ஏழ பறச்சாதி கூடச் சேராம நாடார் நாடார்னு சொல்றவங் கூட ஏன் ஒட்டிக்கணும்? பிராமணன்ல ஏழ பறையன் மாதிரி கஷ்டப்படுறான். பறையன்ல பணக்காரன், பிராமணன் மாதிரி குதிக்கிறான். ஏழப் பறையனும், ஏழ சாணானும், ஏழ பிராமணனும் ஒண்ணாச் சேந்தா, ஊரையே மாத்திப்பிடலாம். அம்மா! என் புத்தி ஏன் இப்படிப் போவுது? நமக்கென்ன! எந்த சாதி சந்தைக்குப் போனா நமக்கென்ன? முருவா, ஒன்ன ஒரு தடவை கும்பிட்டதுக்கா இப்படி புத்தியக் கெட வைக்கிற?'
இருவரும், 'ஆசாரிக்குடி' துவங்கும் பகுதிக்கு வந்தார்கள். உதிரமாடசாமி கோவில், கோட்டைச் சுவரோடு குளத்து முனையில் இருந்தது. நாடார், மாடனுக்கு ஒரு கும்பிடு போட்டார். வெட்டருவாளுடன் இருந்த மாடனைப் பார்க்க உலகம்மை கொஞ்சம் பயந்தாள். அந்த ஊரில் ஐந்தாறு மாடன் கோவில்கள் உண்டு. உதிரமாடனுக்கு இங்கே இருபது மாட தேவதைகள் 'எக்ஸ்ட்ரா' தேவதைகள். இதே போல் கோட்டை மாடசாமி கோவில். அங்கே உதிரமாடன் 'எக்ஸ்ட்ரா'. 'சொள்ளமாடன் கோவில்' - அங்கே 'ஹீரோ' சாமியான சுடலையாண்டிக்கு உதிர, கோட்டை மாடர்கள் 'எக்ஸ்ட்ரா'. கிராமத்தில் நாடார்கள் பல குடும்பப் பெயர்களால் அழைக்கப்பட்டார்கள். கன்னிமாடன் குடும்பம், சிவப்பன் குடும்பம், கருப்பன் குடும்பம், சங்கிலிக் குடும்பம், இப்படிப் பல குடும்பங்கள். உதிரமாடசாமி கோவில், கோட்டைச்சாமி கோவில் என்பது போய், இப்போதெல்லாம் சிவப்பன் கோவில், கருப்பன் கோவில் என்று கோவில் சாமிகளை குடும்பச் சாமிகளாக்கி விட்டார்கள்.
உதிரமாடனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே உலகம்மை நடந்தாள். உதிரமாடசாமி ஆடி மாசம் நடக்கும் 'அம்மங்குடையில்' 'சல்லடமும் குல்லாயும்' போட்டு, தட்டி வரிஞ்சிகட்டி, தாமரப்பூ சுங்கு விட்டு, ஆனப் பந்தம் ஒரு கையில், முறுக்குத்தடி ஒரு கையிலயுமா குளத்தப் பாத்து வேட்டைக்கிப் போவும் போது, வில்லுப் பாட்டாளி சொன்னது மாதிரி பாக்க நல்லா இருக்கும். குளத்துல தண்ணியிருக்கே, எப்படிப் போவாரு? அடுத்த ஆடிக்குள்ள தண்ணி வத்திடாது? ஒரு வேள தண்ணி வத்தாம சாமி ஊருக்குள்ள வந்தா, ஊரு தாங்காதே. வரட்டும், பீடிக்கடை ஏஜெண்ட்ட உயிரோட தூக்கிட்டுப் போவட்டும். 'மருவாதி கெட்ட பய'.
கலப்பைகளைச் சரி பார்த்த தச்சர், 'மம்பெட்டியை' அடித்துக் கொண்டிருந்த கொல்லர். தங்க நகைகளை 'ஒக்கட்டு' செய்த தட்டார் ஆகிய ஆசாரிக் குடும்பங்களைக் கடந்து, ஊரின் நடுப்பகுதிக்கு வந்தார்கள். மானேஜ்மெண்ட் பள்ளிக்கூடம், இரண்டு பக்கமும் டீக்கடைகள், வெத்தலை பாக்குக் கடைகள் அனைத்தையும் தாண்டி கிழக்கே வந்தார்கள். ஊர்க்கிணறு, அதன் பக்கம் எல்லா நாடார் ஜனங்களுக்கும் பொதுவான காளியம்மன் கோவில்.
அவர்கள் கோவிலை நெருங்கும் போது, ஒரு பெரிய கூட்டமே நின்று கொண்டிருந்தது. மத்தியில் ஒரு சைக்கிள். அதன் 'ஹாண்ட்பாரில்' இரண்டு பெரிய பைகள், இரண்டு பக்கமும் தொங்கின. உள்ளே ஊதுபத்திகள், கர்ப்பூரங்கள், சிகரெட்டுகள், பீடிக்கட்டுகள், பின்னால் கேரியரில் வெற்றிலைக்கட்டுகள். சைக்கிள்காரன் வெளியூர்க்காரன். அடிக்கடி, அந்த ஊர்க் கடைகண்ணிகளில் சாமான்கள் போட்டுவிட்டுப் போகிறவன்.
அவன் கழுத்தை மளிகைக் கடைக்காரர் ஒருவர் நெரிக்காத குறையாகப் பிடித்துக் கொண்டு, "செருக்கி மவன பொலி போடுகிறோம் பாரு" என்று மிரட்டினார். கூட்டத்தில் ஒருசிலர் "கழுத்தை நெரிடா" - என்றனர். ஒரு சிலர் "விட்டுடுடா பாவம்" என்றனர். மெஜாரிட்டி வேடிக்கை பார்த்தது.
மாரிமுத்து நாடாரைப் பார்த்ததும், கழுத்தைப் பிடித்தவன், அதை விட்டுவிட்டு சைக்கிள்காரனின் துண்டைப் பிடித்தான். உலகம்மை, தன்னைப் பார்த்துதான், அவன் சைக்கிள்காரனை விட்டுவிட்டதாகக் கற்பனை செய்து பார்த்தாள். அவளுக்கு அந்தப் போலித்தனம் பெருமையாக இருந்தது. அதே நேரத்தில் கண்கள் பிதுங்க, உடம்பெல்லாம் ஆட, வியர்வையால் நனைந்து போயிருந்த சைக்கிள்காரனைப் பார்க்க, அவளுக்குப் பாவமாக இருந்தது. அழுகை வரும் போலவும் இருந்தது.
மாரிமுத்து நாடார் அதட்டினார்.
"என்னடா விஷயம்? உலகம்மா, நீ மொதல்ல என் வீட்டுக்குப் போ. என்னப்பா விஷயம்?"
சைக்கிள்காரனின் துண்டைப் பிடித்தவன், பிடியை விடாமலே பேசினான்:
"இந்தச் செறுக்கி மவனுக்கு திமிறு மாமா! 'குட்டாம்பட்டிக் குளம் பெருகிட்டு. இனிமேல் குட்டாம்பட்டிக்காரங்கள தென்காசி கோர்ட்ல பாக்கலா'முன்னு சொல்றான். நாம மூளைகெட்டதனமா சண்ட போட்டுக்கிட்டு கோர்ட்ல போவுறது பாக்க, இந்தத் தேவடியா மவனுக்கு ஆசயப் பாரும். இவன இப்பவே கைய கால ஒடச்சிட்டு, போலீஸ்ல சரணாவலாம்னு பாக்குறேன். கோர்ட் வரைக்கும் வேணுமுன்னாலும் போகலாம். பரதேசிப்பய மவன், என்னமா கேட்டுட்டான்?"
மாரிமுத்து நாடார், சைக்கிள்காரனைப் பார்த்தார். அவன் நடுங்கிக் கொண்டே சொன்னான்:
"மொதலாளி அய்யா! ஒங்க ஊரோட தாயா பிள்ளையா பழவுனவன். பதினைஞ்சு வருஷமா நான் நெதமும் சைக்கிளில் சாமான் கொண்டு போடுறவன். பழகுன தோஷத்துல, தமாசுக்குச் சொல்லிட்டேன் அதுக்கு என்ன... என்ன..."
"பழகுன தோசத்துக்கு, அத்து மீறிக் கேட்ப, இல்லியால?"
சைக்கிள்காரன் ஏங்கி ஏங்கி அழுதான். மாரிமுத்து நாடார் கூட்டத்தைக் கண்களால் அடக்கிவிட்டுப் பேசினார்.
"நீ சொன்னது நல்லா இருக்கான்னு நீயே நெனச்சிப் பாரு. இந்த குட்டாம்பட்டிக்கு வடக்கே, கோவூர்ல ஆத்துப் பாசனம் இருக்கு. மேக்க, நித்தியப்பேட்டையில குத்தால ஆறு பாயுது. தெக்க, கடையத்துல இருந்து தெக்க போகப் போக ஆத்துப் பாசனம். கிழக்கே, ஆலங்குளத்துக்கு அங்கே நல்ல குளத்துப் பாசனம். இதுக்கு இடையில இருக்கது பொட்டல் காடா இருக்குது. இதில எங்க ஊருதான் கழிச்சிப் போட்ட பயவூரு. காளியாத்தா கிருபையில இந்த வருஷந்தான் குளம் பெருகியிருக்கு. எல்லாரும் சந்தாஷமா இருக்கோம். நீ அபசகுனமா கோர்ட் கீர்ட்டுன்னு பேசலாமா? இது ஒனக்கே நல்லா இருக்கா?"
"தப்புத்தான் மொதலாளி-"
"சரி, திரும்பிப் பார்க்காம போ. அவன விடுடா. ஏய் தங்கச்சாமி ஒன்னத்தாண்டா. ஒழிஞ்சிபோறான். விட்டுடு-"
சைக்கிள்காரன், பெடலை மிதிக்கக் காலைத் தூக்கப் போனான். கால் தரையிலிருந்து வர மறுத்தது. 'மொதலாளி, தங்கச்சாமி எனக்கு நூறு ரூபா கடன் பாக்கி தரணும். போன வருஷம் கேட்டேன். நாளக் கடத்துறாரு. 'ஒமக்கெல்லாம் எதுக்கய்யா வேட்டி சட்டைன்னு' கேட்டேன். அத மனசுல கருவிக்கிட்டு, மனுஷன் நான் தமாசுக்குச் சொன்னத பெரிசு படுத்துறான். நீங்களும் 'ஊரு ஊருன்னு' தலைய ஆட்டுறியள, நெயாயமா-' என்று கேட்க நினைத்தான். பிறகு, 'உடம்பு உருப்படியாக ஊர் போய்ச் சேர வேண்டும்' என்று நினைத்து சைக்கிளைத் தள்ளினான்.
மாரிமுத்து நாடார் வீட்டுக்கு வேகமாகப் போனார்.
அவர் வீடு பழைய காலத்து வீடு. சில பகுதிகளை நாடார் நாகரிகமாகப் புதுப்பித்திருந்தார். நான்கு பேர் படுக்குமளவிற்கு வெளியே திண்ணை அகலமாக இருந்தது. சிமிண்ட் திண்ணை. அதையொட்டி அணைத்தாற் போல் இருந்த மூன்று படிக்கட்டுகள், படிக்கட்டில் ஏறித்தான் வாசலுக்குள் நுழைய வேண்டும். அந்த அரங்கு வீட்டுக்குள் ஒன்றன் பின் ஒன்றாக ஏழெட்டு அறைகள்.
மாரிமுத்து நாடார் உள்ளே நுழையும் போது, தாழ்வாரத்துக்கு அடுத்து இருந்த அறையில், அவர் மகள் சரோசா, கோணிக் கொண்டும், நாணிக் கொண்டும் உட்கார்ந்திருந்தாள். அவளைச் சுற்றி அவள் அம்மா உட்பட நாலைந்து பெண்கள் அமர்ந்திருந்தார்கள். உலகம்மையும் அங்கே உட்கார்ந்திருந்தாள்.
சரோசாவுக்கு முப்பது வயதிருக்கலாம். திருமணம் நடக்கும் என்று பத்து வருடமாகக் கற்பனை செய்து அலுத்து, களைத்து சலித்துப் போனவள். சின்ன வயதில் எப்படி இருந்தாளோ? இப்போது கழுத்து குறுகிவிட்டது. தார்க்கம்பு மாதிரி பிடிக்கச் சதையில்லாத உடம்பு. கண்கள் அமாவாசை இரவு மாதிரி ஒளியிழந்து கிடந்தன என்றால், வாயே தெரியாதபடி நீண்ட கோரைப்பற்கள் அடைத்திருந்தன. உயரமோ, சராசரிக்கும் கீழே; மார்பகம், ஆண்களுக்குக் கூட சற்றுத் தடிப்பாக இருக்கும். என்றாலும் அவளைப் பார்க்கும் போது, அரூபி என்ற வெறுப்போ சிரிப்போ வருவதற்குப் பதிலாக, ஒரு விதப் பரிதாபமே வரும்.
இப்படிப்பட்டவளுக்கும் ஆறைந்து ஆண்டுகளுக்கு முன்பு, சொத்துக்கு ஆசைப்பட்டு மாப்பிள்ளைகள் வந்தார்கள். ஆனால் அவளுக்கு வாய்த்த அம்மாக்காரி, கிராமத்துப் பஞ்சாயத்துப் பாணியில் சொல்லப் போனால் 'விளங்காதவா' 'மஞ்சக்கடஞ்சவா' பி.ஏ. படித்த மாப்பிள்ளைப் பையன் ஒருவனின் அய்யா ஒரு காலத்தில் பனையேறினார் என்பதற்காக, "பனையேறிக் குடும்பத்திலயா சரோசாவ குடுக்கறது? இத விட அவள, எருக்குழியில வெட்டி பொதச்சிடலாம்" என்று சொல்லித் தட்டிவிட்டாள். பக்கத்து ஊர் மிராசுதார் தம் பையனுக்குக் கேட்டார். சம்பந்தப்பட்ட இந்த மிராசுதாரின் தாத்தா, ஒரு காலத்தில் திருமதி மாரிமுத்துவின் பாட்டி வீட்டில், தண்ணீர் பாய்ச்சியவராம்... "போயும், போயும், வேலக்காரக் குடும்பத்திலயா பொண்ணக் குடுக்கறது? இத விட 'பைரோன' வாங்கி அவளுக்குக் கொடுக்கலாம்" என்றாள். இதே போல் இன்னொரு பி.ஏ. வந்தது. அந்தப் பையனின் ஒன்றுவிட்ட பெரியம்மாவின் சின்ன மாமனாரின் அத்தையோட பேத்தி, ஒருவனோடு ஓடிப்போய் விட்டாளாம். "ஓடிப்போன குடும்பத்துலயா சம்பந்தம் வைக்கது? இதவிட சரோசா கழுத்த ஒம்ம கையாலே நெரிச்சிக் கொன்னுடும்" என்று புருஷனைப் பார்த்துச் சீறினாள். கழுத்துக்குத் தாலி வரும்போதெல்லாம், அதை நெரிக்கச் சொல்லும் அம்மாவை நினைத்து அழுதாள் சரோசா. அம்மாக்காரியோ "நான் பெத்த பொண்ணு, என்ன விட்டுட்டு போவணுமேன்னு அழுவுறாள். ஊரு உலகத்துல இருக்கது மாதிரி மினுக்காதவ, குலுக்காதவ, சிலுக்காதவ" - என்று பெருமையடித்துக் கொண்டாள்.
ஆனால், 'நாலு காடு சுத்திய' மாரிமுத்து நாடாரால் பெருமையடித்துக் கொள்ள முடியவில்லை. பெண்டாட்டி பேச்சைக் கேட்டால், பெண்ணுக்குத் தாலி ஏறாது என்பதைக் காலங்கடந்து தெரிந்து கொண்டவராய் ஒரு மாப்பிள்ளைக்கு ஏற்பாடு செய்து விட்டார். மாப்பிள்ளைப் பையனும், அவன் சித்தப்பாவும் பிள்ளையார் கோவில் ஆலமரத்திற்கு அருகில் அமர்ந்திருக்கிறார்கள். சரோசாவும் உலகம்மையும் கோவிலுக்குப் போகிற சாக்கில், அங்கே போக வேண்டும். பையன் பெண்ணைப் பார்த்த பிறகு தான் கட்டிக்குவானாம்.
"சீக்கிரம், ராகு வரப் போவுது" என்று அதட்டினார் மாரிமுத்து.
தாம்பாளம் ஒன்றில் தேங்காய், வெற்றிலைபாக்கு, ஊதுவத்தி ஆகியவற்றை வைத்துக் கொண்டு, உலகம்மை வாசற்படியைத் தாண்டினாள். சரோசாவும் கையில் ஒரு மாலையை வைத்துக் கொண்டு, அவள் பின்னால் நடந்தாள். "ஜோடியா நடங்க, சேந்தாப் போல போங்க" - என்றார் நாடார்.
சரோசா, சிவப்புக்கரை போட்ட பச்சைப் புடவை கட்டியிருந்தாள். உலகம்மை பச்சைக்கரை போட்ட சிவப்புச் சேலை கட்டியிருந்தாள்.
இருவரும், 'பிள்ளையார் பிடிக்கப்' போய்க் கொண்டிருந்தார்கள்.
உலகம்மையும், சரோசாவும் பிள்ளையார் கோவிலுக்குள் நுழையும் போது, கோவிலுக்கருகே கேட்பாரற்றுக் கிடந்த கருங்கல்லில் உட்கார்ந்திருந்த நான்கு பேர் எழுந்தார்கள். நால்வரில் ஒருவன் மாப்பிள்ளைப் பையன். இருபத்து நாலு வயதிருக்கலாம். கருப்பும், சிவப்பும் கலந்த புது நிறம். சுருட்டைக் கிராப்பு, நெட்டை நெற்றி. இரு கணகளையும், தனித்தனியாய்ப் பிரித்துக் காட்டும் செங்குத்தான மூக்கு. சிரிக்காமலும், சீரியஸாக இல்லாமலும் இருக்கும் வாய். பையன், தந்தைக்கு ஒத்தாசையாக வயலில் வேலை பார்த்திருக்க வேண்டும். இல்லையென்றால், இந்தக் காலத்துப் பையனான அவனுக்கு, உடம்பில் அப்படி வைரம் பாய்ந்திருக்க முடியாது. கிழவிகள் கூட திரும்பித் திரும்பிப் பார்க்கும்படி அமைந்த அவன் அழகை, பீடிக்கடை ஏஜெண்ட் ராமசாமி அள்ளிப் பருகிக் கொண்டிருந்தான். உலகம்மை வந்த பிறகும், அவளைப் பார்க்காமலே, இவனையே பார்த்தான் என்றால், அது நாகரிகத்தால், பண்பால் உந்தப்பட்ட செயலல்ல. பையனின் 'களையே' காரணம். 'பிராந்தன்' வெள்ளைச்சாமி, அங்கேயும் 'பராக்குப்' பார்த்துக் கொண்டிருந்தான். உலகம்மை, சரோசா, மாப்பிள்ளையைவிட அவனுக்குப் பிள்ளையாரின் வயிறுதான் பிடித்திருந்தது. நாலாவது மனிதரான பையனின் சித்தப்பா, நடுத்தர வயதுக்காரர். அந்த இரண்டு பெண்களையும், விழுங்கி விடுவது போல், கூர்மையாகப் பார்த்துவிட்டு, தன் சந்தேகத்தைக் கேள்வியாக்கினார்.
"இதுல எது பொண்ணு?"
"குட்டையா மாங்கா மூஞ்சி மாதிரி" என்று இழுத்தான் வெள்ளைச்சாமி. ராமசாமி, அவன் தொடையைக் கிள்ளி விட்டு "என்ன கேக்கரீக" என்று தெரியாதவன் போல் கேட்டான்.
"இதுல எது பொண்ணு? பச்சைச் சீலையா, செவப்புச் சீலையா?"
"செவப்புத்தான். ஏல, வெள்ளையா! கோவிலுக்குள்ள போயி விபூதி வாங்கிட்டு வால."
வெள்ளைச்சாமி விழுந்தடித்துக் கொண்டு ஓடினான். மாப்பிள்ளைப் பையன் இரண்டு பெண்களையும் பார்த்துக் கொண்டே நின்றான். பின்னர் கோவிலுக்குள் அவர்கள் தலைமறைந்ததும், நிதானத்திற்கு வந்தான். உலகம்மைதான் மணப்பெண்ணாக இருக்க முடியும் என்பதில் அவனுக்குச் சந்தேகமில்லை. 'இந்தச் சித்தப்பாவுக்கு மூளையே கிடையாது. பொண்ணு கூட வந்திருக்கிறவள் சித்தி - அதுதான் இவரோட பெண்டாட்டி - வயது இருக்கும். இப்படியா சந்தேகம் வாரது?'
சித்தப்பாக்காரர் விடவில்லை.
"வே ராமசாமி, கோயிலுல முன்னால நிக்கரவா பொண்ணா, பின்னால நிக்கரவளா?"
"ரெண்டும் பொண்ணுதான்."
ராமசாமி சிரித்து மழுப்பினான். சித்தப்பாக்காரர் சீரியஸாகவே பேசினார்:
"வே ஒழுங்காச் சொல்லும். யாருவே, பொண்ணு? செவப்பு சேலதான?"
"செவப்புதான், செவப்புதான்."
மாப்பிள்ளைப் பையனுக்கு, சித்தப்பாவின் போக்குப் பிடிக்கவில்லை.
"என்ன சின்னய்யா நீங்க? துருவித் துருவிக் கேக்கீங்க; இன்னுமா ஒங்களால பெண்ண பாக்க முடியல?"
சித்தப்பாக்காரர், அண்ணன் மகன் அந்நியர்கள் முன்னால் தன்னை மானபங்கப் படுத்திவிட்டதாக நினைத்தவர் போல், முகத்தைத் 'தொங்கப்' போட்டார். இதற்குள் சரோசாவும், உலகம்மையும், பூசாரியோடு வந்தார்கள். உலகம்மை நேராக உடையாமல், தாறுமாறாக உடைந்திருக்கிற தேங்காயைப் பார்த்துவிட்டு, "ஐயரே! தேங்கா ஒரு மாதிரி உடைஞ்சிருக்கே" என்றாள்.
"பீட கழியுதுன்னு அர்த்தம்" என்று அனர்த்தம் கூறினார் ஐயர்.
உலகம்மையும், சரோசாவும், அந்தக் கோவிலுக்கு வெளியே வந்து பிள்ளையாரை இறுதியாக வணங்குபவர்கள் போல் கைகளிரண்டையும் தலைக்கு மேல் தூக்கிக் குவித்து விட்டு மெள்ள நடந்தார்கள். சரோஜா, "மாப்பிள்ளன்னு ஒருவன் கிடச்சா சரிதான்" என்று நினைத்தவள் போல் பையனைப் பார்க்கவில்லை. உலகம்மை, மாப்பிள்ளைப் பையனை ஜாடைமாடையாகப் பார்த்தாள். 'சரோசாக்கா யோகக்காரிதான். பொறுத்தார் பூமியாள்வார்னு சொல்றது சரிதான். காத்துக் கிடந்தாலும் கச்சிதமா கெடச்சிருக்கு. எவ்வளவு 'அளகா' இருக்காரு. சட்ட எப்படி மினுங்குது! அதுக்குள்ள கையுந்தான் எப்படித் தளதளப்பா இருக்கு. துணிமணிய எவ்வளவு சீரா போட்டுருக்காரு! இந்த ராமசாமியும் இருக்கானே, தட்டுக்கெட்ட பய... பொம்பிளய ஜென்மத்துலயும் பாக்காதது மாதிரி வாயப் பிளந்துகிட்டுப் பாப்பான். ஆனால் இவரு சரோசாக்காவ பட்டும் படாம எப்படிப் பாக்காரு? அக்கா குடுத்துவச்சவா. பிள்ளையாருசாமி, எனக்கும் இவருல நாலுல ஒரு அளவாவது ஆம்பிள கெடைக்கணும். ராமசாமி மாதுரி பொந்தன் வரப்படாது. வெள்ளைச்சாமிப் பிராந்தன் மாதிரி 'ஒடக்கு' கூடாது...'
உலகம்மையும், சரோசாவும், பிள்ளையார் கோவிலில் இருந்து சற்று தூரம் நடந்திருப்பார்கள். உலகம்மை திரும்பிப் பார்த்தாள். முதலில் சரோசாவுக்காகப் பார்த்தவள், இப்போது தனக்காகப் பார்ப்பவள் போல், நாணத்தோடும் தலையை லேசாகச் சாய்த்துக் கொண்டும் பார்த்தாள். மாப்பிள்ளைப் பையன், முன் கால்களை ஊன்றி, பின் கால்களைத் தூக்கி, தன்னைச் சற்று உயரமாக்கிக் கொண்டு, அவளைப் பார்த்தான். உலகம்மை சட்டென்று தலையை திருப்பிக் கொண்டு சரோசா காதில் ஏதோ கிசுகிசுத்தாள்.
பிள்ளையார் கோவிலை மறைக்கும் குறுக்கத்திற்கு வந்து விட்டார்கள். திரும்புவதற்கு முன்னால், இறுதியாகப் பார்ப்பவள் போல், கழுத்தை மட்டும் திருப்பாமல், உடல் முழுவதையும் திருப்பினாள் உலகம்மை. பீடி ஏஜெண்ட் ராமசாமியின் பற்கள் தெரிந்தன. உடனே அவள் காறித் துப்பினாள். சரோசா நாணத்தோடு உலகம்மையிடம் பேச்சைத் துவங்கினாள்.
"எப்படி இருக்கார் ஒலகம்ம...?"
"தக்காளியப் பாத்தா இவரு நெறத்த பாக்காண்டாம். எலுமிச்சம் பழத்த பாத்தா மூக்க பாக்காண்டாம். தேக்கு மரத்தப் பாத்தா உடம்பப் பாக்காண்டாம். ஒங்க வீட்டுக் கிடாயப் பாத்தா அவரு தோரணயப் பாக்காண்டாம். ஒன் பெரியய்யா மவன் ராமசாமியோட மூஞ்ச பாத்தா அவரு செருப்பப் பாக்காண்டாம்."
சரோசா சிரித்துக் கொண்டு தலை கவிழ்ந்தாள்.
"நல்லா பாத்தியா?"
"நல்லாவே பாத்தேன். நீ பாக்கலியாக்கா?"
"என்னால பாக்க முடியல. வெக்கம் பிடுங்கித் தின்னுட்டு. ஒயரமா இருக்காரா?"
"ஒனக்குஞ்சேத்து வளந்துருக்காரு..."
"தடியா? ஒல்லியா?"
"ராமசாமி மாதுரி ஊதிப்போயி இல்ல. வெள்ளச்சாமி மாதுரி ஒடிஞ்சும் விழல. அளவான தடி."
"சும்மா சொல்றியா, நிசமாவா..."
"சொன்னதுல்லாம் சத்தியம். அவரோட செருப்பப் பத்தி சொன்னமில்லா அதுவும் நெசந்தான்..."
"பாக்காமே போயிட்டேன். நல்ல வேள நீ நல்லா பாத்திருக்க."
"இன்னும் பத்து நாளையில நீ வந்து... ஆற அமர ராத்திரியும் பகலுமா பாக்கப் போற. ஆக்கப் பொறுத்தவா ஆறப் பொறுக்காண்டாமா?"
"என் அம்மா மட்டும் இதையும் தட்டி விட்டான்னா தெரியும் சங்கதி. அவரு வீட்டுக்கே ஓடிப் போவேன்..."
சரோசா தலை குனிந்து கொண்டே சிரித்தாள். மாப்பிள்ளைப் பையன் வருகிறானா என்ற சந்தேகத்துடனும், வர வேண்டும் என்ற அபிலாஷையுடனும், உலகம்மை திரும்பித் திரும்பிப் பார்த்தா. பிறகு ஆவலை அடக்க முடியாமல் சரோசாவிடம் சில விவரங்களைக் கேட்டாள். சரோசாவும் சளைக்காமல் பதில் சொன்னாள்.
"மாப்பிள்ளக்கி எந்த ஊராம் அக்கா...?"
"சட்டாம்பட்டி..."
"எவ்வளவு படிச்சிருக்காராம்...?"
"எம்.ஏ.வாம்."
"பேரு என்னவாம்?"
"....."
"சும்மா சொல்லுக்கா. புருஷனா ஆன பெறவுதான் பேரச் சொல்லப்படாது. இப்பச் சொல்லலாம்..."
"இப்பச் சொன்னா அப்பறம் வரும்..."
"பரவால்ல சொல்லுக்கா..."
"மாட்டேன் வெட்க..."
"அட சும்மாச் சொல்லுக்கா. ஒங்களுக்குப் பேர்ப் பொருத்தம் இருக்கான்னு பாக்றேன்..."
"லோகநாதன்னு பேரு. லோகுன்னு கூப்பிடுவாவுகளாம்."
உலகம்மை ஒரு கணம் திடுக்கிட்டாள். எந்தப் பேருக்கு எந்தப் பேரு பொருத்தம். என்றாலும் இறுதியில் சுதாரித்துக் கொண்டாள்.
"பரவால்லிய. லோகநாதன் லோகாயிட்டாரு. சரோசா, சரோஜ்ஜாயிட்டா. சரோஜ், லோகு சரியான பொருத்தந்தான். எக்கா நீ நெசமாவே குடுத்து வச்சவ தான்..."
சரோசா முதன்முதலாக பெருமையோடு தலையைத் தூக்கிக் கொண்டு, உலகம்மையின் கையைப் பிடித்துக் கொண்டு அழுத்தினாள். "நான்... லோகில்லக்கா" என்று சொல்லிச் சிரித்தாள் உலகம்மை.
இருவரும், பண்ணை வீட்டுக்குள் நுழையும் போது "போயும்... போயும் பனையேறிப் பய மவளக்காட்டி என் பொண்ண கரயேத்தணுமாக்கும்" என்று மாரிமுத்து நாடாரின் கையைப் பிடித்தவள் சொல்லிக் கொண்டிருந்தாள். நாடார் உலகம்மையின் முகத்தைப் பார்த்தார். ஒரு சுழிப்பும் இல்லை. கேட்டிருக்காது... இருந்தாலும்... எனக்கு வாய்ச்ச இந்த 'பய பெண்டாட்டிக்கு இப்படி வாய் ஆகாது.' ஏதோ சொல்லப் போன மனைவிக்காரியை அடக்கினார்.
"சும்மா ஏன் மூளியலங்காரி, மூதேவி, சண்டாளி மாதிரி பிலாக்கணம் பாடுற?"
உலகம்மையும், சரோசாவும் மாரிமுத்து வீட்டுக்குள் போனபோது வெள்ளைச்சாமி வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்தான்.
"பெரிய்யால, பெரிய்யா! ஒலகம்மய மாப்பிள்ளைக்கு பிடிச்சிப்போச்சி, பிடிச்சிப்போச்சி. அவளத்தான் கட்டுவேன்னு சின்னய்யாகிட்ட ஒத்தக் கால்ல..."
மாரிமுத்து நாடார் திடுக்கிட்டாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
"ஏல பொண்ணு பிடிச்சிருக்குன்னாங்களா? ஒலகம்ம பிடிச்சிருக்குன் சொன்னாங்களா?"
வெள்ளைச்சாமி சிறிது யோசித்தான். பிறகு பேசினான்.
"பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொன்னாவ..."
மாரிமுத்து நாடாருக்குப் போன உயிர் திரும்ப வந்தது. 'எப்படியோ சமாளிச்சாச்சு. செவப்பு சேலதான பொண்ணுன்னு கேட்டிருப்பான். ராமசாமி ஆமான்னுருப்பான். மணவறையில் பொண்ண மாறாட்டம் பண்ணிட்டாங்கன்னு மாப்பிள்ள குதிச்சா இவளத்தான் காட்டினோம்னு சொல்லிடலாம். பொண்ணு செவப்பு சேலன்னு சொன்னியேன்னு கேட்டா, ஆமா செவப்புக்கரை சேலதான் கட்டியிருந்தான்னு சொல்லிடலாம். மணவறைக்கி வந்த பிறகு மாப்பிள்ளை மாற முடியுமா என்ன.'
முட்டுக்குள் தலையை விட்டுக் கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்த மாரிமுத்து நாடார், சத்தம் கேட்டு நிமிர்ந்தார். உலகம்மை போய்க் கொண்டிருந்தாள். இதற்குள் உள்ளேயிருந்து அவர் மனைவிக்காரி வெளியே வந்து, "ஒலவு, சேலய களஞ்சிட்டு ஒன் சேலய உடுத்துக்கிட்டு போ" என்றாள்.
அப்போதுதான் நினைவு வந்தவளாய், உலகம்மை விடுவிடுவென்று உள்ளே போய், பட்டுச் சேலையை அவிழ்த்து விட்டு தனது சேலையான அச்சடித்த சேலையைக் கட்டிக் கொண்டாள். அந்தப் பட்டுச் சேலையையே சிறிது வெறித்துப் பார்த்தாள். பிறகு 'அனாவசிய ஆச கூடாது' என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்வது போல், தலையைப் பலமாகப் பக்கவாட்டில் ஆட்டிக் கொண்டு வெளியே வந்து மாரிமுத்து நாடாரைக் கடக்கப் போனாள்.
"ஒலகம்மா சாப்பிட்டியா?" என்றார் நாடார்.
"ஆமா."
"பொய் சொல்ற. ஏய் கனகு, ஒலகம்மா சாப்புட்டாளா, சோறு போட்டியா?"
"வேண்டாம் மாமா, பசிக்கல."
"சாப்பிட்டுப் போழா. ஒனக்கும் சீக்கிரமா ஒரு வழி பண்ணுறேன்."
உலகம்மை தயங்கிக் கொண்டிருந்த போது, உள்ளேயிருந்து சரோசா வந்து, அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனாள். சாப்பிட்டு முடிக்க, மணி இரவு எட்டு மணி ஆகியிருக்கும். 'அய்யா பசியில துடிச்சிக்கிட்டு இருப்பாரு. பசிய பொறுக்க முடியாதவரு அய்யா. இந்தச் சாப்பாட்டப் பார்த்தா ஆசயோட சாப்பிடுவாரு. கேப்பமா? சீ! எனக்கு ஏன் பிச்சக்காரப் புத்தி? கேட்டா குடும்பாங்கதான். கெடைக்கிறது என்கிறதுக்காவ எல்லாத்தையும் கேக்கணுமா, என்ன? போயி நொடியில சோறு பொங்கலாம்."
அடுப்பில் தீ மூட்டி, அய்யாவின் பசித்தீயை அணைப்பதற்காக உலகம்மை கிட்டத்தட்ட ஓடிக் கொண்டிருந்தாள். வழியில் அவளுக்குத் தெரிந்த கிழவி ஒருத்தி, "யாரு ஒலக்கமாடி பேத்தி ஒலவுவா?" என்று குசலம் விசாரித்தாள்.
"பாட்டி சொல்றேன்னு தப்பா நெனக்காத. என் பாட்டி உலகம்ம பேரத்தான் ஒலக்கமாடின்னு சொல்லிப் பழகிட்ட. என் பெயரயாவது உலகம்மான்னு ஒழுங்காச் சொல்லேன். ஒலவுன்னு சொன்னா கேக்கதுக்கு நல்லா இல்ல."
"மொளச்சி மூணு இல விடல, வாய்ப்பாரு. நான் அப்படித்தாண்டி சொல்லுவேன். ஒலவு, ஒலவு. ஒன்னச் சொல்ல எனக்கு உரிமை உண்டு. ஒன் பாட்டியும் நானும் உயிர விட்டுப் பலகுனம். என்னழா நிக்காம போற? பாத்துப் போடி, எதுலயும் மோதிராத."
உலகம்மை வீட்டுக்குள் நுழைந்த போது, கிழவி சொன்ன மாதிரி அவள் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்தச் சின்ன ஓலைவீட்டில், அவள் அய்யா மாயாண்டி நாடார் கட்டிலில் முடங்கிக் கிடந்தார். மாரிமுத்து நாடாரின் தங்கை புருஷன் பலவேசம், "நீரு இந்த வீட்ல இருந்துடுறத பாத்துபுடலாம். ஒம்மவளுக்கு அவ்வளவு திமிரா? திமுர அடக்குறனா இல்லையான்னு பாரும்" என்று அவரை அடிக்காத குறையாகக் கத்திப் பேசினார்.
உலகம்மையைப் பார்த்ததும், அவர் குரல் பலமாகியது.
பலவேச நாடார், லேசுப்பட்டவரல்ல; எவரையும் கைநீட்டி அடித்து விடுவார். அவர் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் அனைத்தையும், ஆபாசம் என்று தாராளமாகச் சொல்லலாம். இதுவரை, பலரை அவர் அடித்து, அவமானப் படுத்தியிருந்தாலும், இன்னும் அவர் அடிபடவில்லை. பேசிக் கொண்டிருக்கும்போதே, அற்பக் காரணத்துக்கும், அவர் கைநீட்டி விடுவதால், ஊரில் அவரை 'நொட்டுக் கையன்' என்பார்கள். 'கோபம் இருக்கும் இடத்தில், குணம் இருக்கும்' என்பார்கள். ஆனால் இவரோ கோபம் ஒன்றை மட்டுமே குணமாகக் கொண்டவர். மச்சான் மாரிமுத்து நாடாரையே ஒரு தடவை அடிக்கப் போய்விட்டார்.
மூன்று வருடங்களுக்கு முன்பு வரை, மனைவியை "ஒங்கண்ணங்கிட்ட போயி நகப் பாக்கிய வாங்கிட்டு வா. ஆயிரம் ரூபா சுருள்னு பேசி முடிச்சி, மாறி, ஐநூறு ரூபா தான் தந்தான். மீதி ஐநூறு அப்பவ பேங்கில போட்டிருந்தா இந்நேரம் பத்தாயிரம் வந்துருக்கும். நகப் பாக்கியையும் சுருள் பாக்கியையும் வட்டியும் முதலுமா வாங்கிட்டு வா" என்று அடித்து அனுப்பியவர். போன வருஷமும் பெண்டாட்டியை அடிக்கப் போகும் போது, அவரது இரண்டாவது மகன் துளசிங்கம், "அம்மயத் தொட்டா கையி ரெண்டா போயிடும். அடியும் பாக்கலா"முன்னு அரிவாள் மணை ஒன்றை வைத்துக் கொண்டு சவாலிட்டான். அசந்து போன பலவேசம், அதிலிருந்து மனைவியுடன் பேசுவதையே நிறுத்தி விட்டார். 'பேசினால் திட்ட வேண்டியது வரும்; திட்டுனா, தட்ட வேண்டியது இருக்கும்; தட்டினா தோளுல எடுத்து வளத்த பயமவன் அருவா மணையை எடுப்பேங்கறான். காலம் கெட்டுப் போச்சி.'
கைச்சவடாலைக் குறைத்துக் கொண்ட பலவேசம் வாய்ச் சவடாலை அதிகமாக்கினார். மச்சினன் தரவேண்டிய நகைப் பாக்கிக்கும், சுருள் பாக்கிக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப் போவதாக ஊரில் பேசினார். மாரிமுத்து நாடார் 'கண்டுக்க'வில்லை. போதாக்குறைக்கு "மாப்பிள்ளை எங்க போயி முட்டணுமோ அங்க போயி முட்டட்டும்" என்று கோள் சொல்லிகளிடமும் தெரியப்படுத்தினார். இதை, பலவேசம் தன் தன்மானத்திற்கு விடப்பட்ட சவாலாக நினைத்தார். பெண்களுக்குச் சொத்துரிமை உண்டென்றும், அவர்களது சொத்து பாகத்தைக் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப் போவதாகவும் சொன்னார். மாரிமுத்து மச்சான் பனங்காட்டு நரி. போடான்னார். அதே சமயம் தங்கச்சிக்கு, தென்காசி அல்வாவை வாங்கிக் கொடுத்தார். பொறுக்க முடியாத பலவேசம், தென்காசியில் போணியாகாத ஒரு வக்கீலைப் பார்த்தார். அவர் மிஸ்ஸஸ் பலவேசம் தான் கையெழுத்துப் போட வேண்டும் என்று ஒரு தாளை நீட்டினார். மனைவியிடம் பேசுவதை நிறுத்திய பலவேசம், ஒரு நாள் மூத்த மகனிடம் பேசும் சாக்கில் "ஏல தங்கப்பழம், ஒன் மாமன் சொத்துல ஒம்மைக்கு உரிம இருக்கு. இதுல கையெழுத்துப் போடச் சொல்லுல. தேவடியா மவனை கோர்ட்டுக்கு இழுப்போம்" என்றார்.
அவர் மனைவிக்காரி ஒருவேளை கையெழுத்துப் போட்டிருப்பாள். அண்ணன் பொண்டாட்டி அவஸ்தப்படணும் என்பதற்காக, ஒருவேளை போட்டிருக்கலாம். ஆனால், அண்ணனை தேவடியாள் மவன் என்று புருஷன்காரன் சொன்னால், இவளும் தேவடியாள் மவள் தானே! நேராகவே, அந்தப் பூணிக்குருவியைப் பார்த்து "ஒமக்கு மூள ஏன் இப்டி கெட்டுப் போவுது? ஊரான் சொத்துக்கு ஏன் இப்படி நாய் மாதிரி அலையணும்" என்றாள்.
அவளுக்குத் திருப்தி. புருஷனிடம் பேசாமல் போய் விட்டதே என்று தவித்த நெடுநாள் ஏக்கம் தீர்ந்துவிட்டது. 'ஏய்' என்று யாராவது கூப்பிட்டா, அதை 'நாய்' என்று அர்த்தப்படுத்திக் கொள்ளும் பலவேசம் இப்போது அந்த ஒரு 'மாதிரி' வார்த்தையைக் கேட்டதும் "அட தேவடியா" என்று சொல்லிக் கொண்டு, சாட்டைக் கம்பை எடுக்கப் போனவர், வாயடைத்துப் போய் நின்றார். நடுலமகன் துளசிங்கம், அப்போது தான் வீட்டுக்குள் வந்தான். அரிவாள் மணையும் அங்கேதான் கிடக்கு.
வீட்டுக்குள் சொல்வாக்குக் குறைவதை ஈடுகட்டும் வகையில், பலவேசம் வெளியில் வாய்ச்சவடாலையும், வன்முறையையும் அதிகரித்துக் கொண்டார். இத்தனைக்கும் அவர் வெடவெடன்னு தட்டினால் பல்டி அடிப்பவர் போல் ஒல்லி மனிதர். ஊரில் 'வறையாடு' என்றும், அவருக்கு வக்கணை உண்டு. மகன் துளசிங்கம் மேல் அவருக்குக் கோபம் தணியவில்லை என்றாலும், சிறிது பெருமையும் உண்டு. அவரை மாதிரியே, அவனும் 'கைநீட்டுகிறவனாய்' உருவாவதில், அவருக்குச் சந்தோஷம். எந்தப் பயலையும் எப்ப வேணுமுன்னாலும் அடிக்கலாம் என்பதில் நம்பிக்கை. துளசிங்கம் விட்டுக் கொடுப்பானா என்ன?
அதே நேரத்தில் மூத்த மகன் தங்கப்பழம் மீது அவர் பாசத்தையும், பணத்தையும் கொட்டினாலும், அவநம்பிக்கைப்பட்டார். தங்கப்பழம் எஸ்.எஸ்.எல்.சி. பெயிலு. ஒன்று எஸ்.எஸ்.எல்.சி. தேறியிருக்க வேண்டும்; அல்லது படிக்காமலே இருக்க வேண்டும். ஆனால் இந்த எஸ்.எஸ்.எல்.சி. பெயிலு இருக்கே, அது ரொம்ப மோசம்; படித்தவன் என்ற முறையில், சர்க்கார் ஆபீசில் வேலைக்குப் போக முடியாது. படிக்காதவன் என்ற முறையில் வயல் வேலைக்கும் போக முடியாது. இந்தச் சமாச்சாரத்தில் மாட்டிக் கொண்ட தங்கப்பழம், 'இஸ்திரி' போட்ட சட்டைதான் போடுவான். சினிமாவில் கதாநாயகன்கள் காரில் போவதைப் பார்த்து, தனக்குச் சைக்கிள்தானே இருக்கு என்று சங்கடப்படுவான்.
வேளாவேளைக்குத் தின்னுப்புட்டு சீட்டு விளையாடுவதுதான், அவன் உத்தியோக லட்சணம். மூளையை வளர்க்காமல் முடியை வளர்த்துக் கொண்டே போனான். வாய்க்குப் 'பட்டை' தீட்டுவதாகக் கேள்வி. தமிழ்ச் சினிமாக்களில் வரும் கதாநாயகன் மாதிரி, இந்திப் படங்களில் வரும் வில்லன் மாதிரி, அவன் ஒருவன் தான் அந்த ஊரில் மனுஷன் என்றும், ஏதோ சொல்ல முடியாத மிகப்பெரிய காரியத்திற்குத் தான் தயாராகிக் கொண்டிருப்பது போலவும் நினைக்கிறவன்.
பலவேச நாடாரும், மச்சான் மாரிமுத்துவை நேரடிப் போரில் ஜெயிக்க முடியாது என்று உணர்ந்து, புதிய சூழ்நிலையை டைரெக்ஷன் செய்யத் தீர்மானித்து விட்டார். 'மச்சான்காரனுக்கு இரண்டரை லட்சம் ரூபாய்க்குச் சொத்து இருக்கு. 'கொள்ளி' இல்லை. (அப்பனுக்குக் 'கொள்ளி' வைக்கும் ஆண்பிள்ளை என்ற அர்த்தத்தில் இது தொழிலாகு பெயராகும்) ஒரே ஒரு பொண்ணு. ஒரு பயலும் ஏறிட்டுப் பார்க்க மாட்டான். பேசாம, தங்கப்பழத்துக்குக் கட்டி வச்சிட்டா?' இப்படித் திட்டம் போட்டார்.
மாரிமுத்து நாடாருக்கும் ஒரு ஆசை. 'மகள் முத்தத்து நிழலு முதுகுல படாம வீட்டுக்குள்ளேயே இருக்கணும்' என்கிற ஆசை. அது நிறைவேறணுமுன்னா இரண்டே இரண்டு தான் தோணியது. 'ஒண்ணு பொண்ண வீட்டுக்குள்ளேயே கல்யாணம் பண்ணாம வச்சிருக்கணும். இல்லன்னா சர்க்கார் உத்தியோகஸ்தனுக்குக் குடுக்கணும்.'
மாரிமுத்து நாடாரும் புத்திசாலி. முடியாத 'கச்சிக்கு' மகளை தங்கப்பழத்திடம் தள்ளிவிடலாம். அதுவரைக்கும் பல இடத்தைப் பார்க்கலாம் என்று நினைத்து, மச்சினனுக்கு "பார்க்கலாம், ஐப்பசி வரட்டும்" என்று மொட்டையாகச் சொல்லியனுப்பினார். மச்சான், இப்படி மொட்டையாகச் சொல்லியனுப்பியதை 'மொட்டைத்தனமாக' எடுத்துக் கொண்டார் பலவேசம். அதே நேரத்தில் "அங்க சுத்தி இங்க சுத்தி எங்கிட்டதான் சுத்தணும். வயலத் தின்ன எலி வரப்புக்குள்ளதான்... கிடக்கும்" என்று நம்பிக்கையானவர்களிடமும் சொல்லிக் கொண்டார். சரோசாவுக்கு வந்த சில 'பிள்ளை வீடுகளை' ஆட்களை வைத்துச் சொல்லியும், மொட்டைக் கடுதாசி போட்டும் குலைத்தார். மாப்பிள்ளை விட்டார் வருகிறார்கள் என்று தெரிந்தவுடன், ஊருக்கு வெளியே புளியந்தோப்புக்கருகிலேயே ஆட்களை உட்காரவைத்து, அவசியமானால் அவரும் உட்கார்ந்து, "நம்ம மாரிமுத்து மவளுக்குக் கல்யாணமாம். போவட்டும். அவளுக்கும் முப்பது வயசாச்சி. கூனிக்குறுகிப் போயிட்டா. ஆண்டவனாப் பாத்து புத்திமாறாட்டமான அந்தப் பொண்ணுக்கு புத்திசாலி மாப்பிள்ளையா குடுக்கணும்" என்று ஜாடைமாடையாகப் பேசுவார்.
இன்று பெண் பார்க்க வந்த கோஷ்டியையும், இப்படிக் கலைக்கத் திட்டம் போட்டிருந்தார். ஆனால், அவர் புளியந் தோப்பில் இருந்து 'கலைப்பு' வேலை நடத்துவது ஊரறிந்த ரகசியமாகி விட்டதால், "மச்சான் எப்படியும் நம்ம கிட்டதான் வருவாரு. வீணா எதுக்குக் கெட்ட பேரு" என்று நினைத்து, அவரும் கல்யாண சூழ்ச்சியைக் கைவிட்டார். 'சரோசாவப் பாத்துட்டு சரிங்கறவன் மனுஷனா இருக்க மாட்டான். படிச்ச பையன் மனுஷனா இல்லாமலா இருப்பான்?'
கல்யாணம் நிச்சயமாகாது என்று அசராமல் இருந்த பலவேச நாடார், அதிர்ந்து போனார். அறுபது கழிஞ்சி நகையும், முப்பதாயிரம் ரூபாச் சுருளும் கொடுக்கப் போறாங்களாம். அடுத்த வெள்ளிக்கிழமை கல்யாணமாம்.
பலவேச நாடாரால் சும்மா இருக்க முடியவில்லை. போதாக்குறைக்கு 'நடுல' மகன் துளசிங்கம், "யாரும் யாருக்கும் குடுத்துட்டுப் போறாவ... ஒமக்கு ஏன் சகுனி வேல? பேசாம முடங்கிக்கிடும்" என்று எச்சரித்தான். அவன் அப்படிச் சொன்னதுக்காகவே, முடங்காமல் முன்னேறிச் செல்லவேண்டும் என்று பலவேசம் துடித்தார். உலகம்மையை பெண்ணாகக் காட்டி சரோசாவை மணப்பெண்ணாக அமர்த்துவதற்கு நடந்த நாடகத்தைக் கேள்விப்பட்டதும், அவர் வெகுண்டெழுந்தார்.
'கடைசில இந்தப் பனையேறிப் பய மவா உலகம்மதானா கல்யாணப் பொண்ணா நடிச்சா? பய மொவளுக்கு, நம்ம வீட்டு மனையில குடியிருக்கிற வந்தட்டிப்பய மவளுக்கு, அவ்வளவு திமுரா? பாத்துடலாம்.'
பலவேச நாடார், உலகம்மையின் வீட்டுக்கு வந்தபோது அவள் அங்கே இல்லாததால், அவள் அய்யா மீது சீறி விழுந்தார். பாதி ஓலைகள் கலைந்தும், மீதி ஓலைகள் 'இத்தும்' போயிருந்த அந்த ஓலை வீட்டில், நார்க்கட்டிலில் கையைத் தலையணையாக்கிப் படுத்திருந்த மாயாண்டி அவர் பேசுவதையெல்லாம் வாங்கிக் கொண்டார். "சொள்ள மாடா, என் மவா இப்ப வரப்படாது. இந்தச் சண்டாளப்பய வாய்க்கு வந்தபடி பேசுறது அவா காதுல விழப்படாது" என்று மாடனை வேண்டிக் கொண்டார். மாடன், அவர் வேண்டிய வரத்திற்குச் செவி சாய்க்காமல் உலகம்மையைக் கொண்டு நிறுத்தியதில், மாடன் மீது கோபப்பட்டவர் போல், அவர் குப்புறப்படுத்துக் கொண்டார். பலவேச நாடார் பேசி முடிப்பது வரைக்கும் காத்திருந்து விட்டு உலகம்மை சாவகாசமாகக் கேட்டாள்:
"என்ன விஷயம் சின்னய்யா? ஏன் இப்படிக் குதிக்கிறாரு?"
"ஒண்ணுந் தெரியாதவ மாதுரி நடிக்கிறியா?"
"நான் நடிக்கவும் இல்ல தடிக்கவும் இல்ல."
"நீ எப்டி சரோசா கூட போவலாம்?"
"போறதும் போவாததும் என் இஷ்டம்."
"ஒரு குடும்பத்த கெடுக்கறது நியாயமா?"
"நீரு என்ன சொல்றீரு?"
"என் மவன் தங்கப்பழத்துக்கு அவள கட்டிடலாமுன்னு இருக்கையில நீ அவாகூட எப்டிப் போவலாம்?"
"இது என்னடா அநியாயம்? பொண்ணு கூட தொணைக்குப் போன்னு சொன்னாரு... தட்ட முடியல. போனேன், உமக்கென்ன வந்தது?"
"சும்மா ஜாலம் போடாத. ஒன்னப் பொண்ணுன்னு காட்டி, சரோசாவ மாப்பிள்ள தலையில கட்டப் போறாங்க. மாப்பிள்ளை நீன்னு நெனச்சி சம்மதிச்சிருக்கான்."
உலகம்மை திடுக்கிட்டுப் போனாள். அவளைக் கைராசிக்காரி என்று சொல்லி, சரோசாவை அழைத்துப் போகச் சொன்னார்கள். அவளை, மாப்பிள்ளைப் பையன் பெண்ணென்று தப்பாக நினைக்க வேண்டும் என்பதற்காக, ஒரு மோசடி நடந்திருப்பது, அவளுக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஏழைகள் அழகாய் இருப்பது கூட, ஆபத்தோ என்று ஆயாசப்பட்டாள். ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு கோபமாகி, அழுகையாகி, அவள் மௌனமாக நின்றாள். அந்த அவளின் மௌனத்தை, தான் சாட்டிய குற்றங்களுக்கு ஆதாரமாகக் கருதிய பலவேசம், எகிறினார். அவள், நடந்ததைச் சொல்ல விரும்பாத அளவிற்கு ஆர்ப்பாட்டம் செய்தார்.
"ஏமுழ பேசமாட்டக்க? ஒருமணி நேரம் பட்டுச் சேல கட்டணுங்கற ஆசையிலே, ஒரு வேள சோறு சாப்பிடணும் என்கிற எண்ணத்துல, பொண்ணுமாதிரி பாசாங்குப் பண்ணிட்ட. இதவிட வேற தொழிலு நடத்தலாம்."
"யோவ்! மானங்கெட்டத்தனமா பேசி மரியாதய கெடுத்துக்கிடாத. நான் அப்படித்தான் நடிச்சேன். நீ இப்ப என்ன பண்ணனுங்கற?"
"நீ யாருகிட்ட பேசுறங்கறது ஞாபவம் இருக்கட்டும்."
"நீ மொதல்ல வெளியே போறியா, கழுத்தப் பிடிச்சி தள்ளணுமா? என்னப் பாத்து தொழிலா நடத்தச் சொல்ற. ஒன் பொண்டாட்டிய வச்சி நடத்து. இல்லன்னா ஒன் மவள வச்சி நடத்து. பெரிய மனுஷன் பேசுற பேச்சாய்யா, இது?"
பலவேச நாடாரின் உடம்பெல்லாம் ஆடியது. ஒரு பொம்பிள, அதுவும் அவர் வீட்டு மனையில வீடு கட்டி பொளப்பு நடத்துற பனையேறிப் பய மவா, நீ நான்னு பேசிட்டா. உலகம்மையின் முடியைப் பிடித்து, கைக்குள் வைத்துக் கொண்டு, பிடறியில் போடலாமா என்பவர் போல லேசாகக் கையைத் தூக்கினார். உலகம்மையும் அதை எதிர்பார்த்தவள் போல், சேலையை இறுக்கிக் கட்டிக் கொண்டு, மண்வெட்டியை எடுத்து, அதிலிருந்து சேற்றைத் துடைப்பவள் போல், 'போக்குக்' காட்டினாள். பலவேசமும் புரிந்து கொண்டார். ஆம்பிள ஆயிரம் அடிச்சாலும் தெரியாது. ஒரு பொம்பிள ஒரு அடி அடிச்சிட்டா போதும், மதிப்பே அவுட்டாகி விடும். இப்போது, அவர் வார்த்தைகளில் அகிம்சை குடி கொண்டது.
"ஒரு குடும்பத்த கலச்சிட்ட பரவால்ல, நல்லா இருந்துட்டுப் போ. ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் மவனுக்குக் கட்டி வச்சி அந்தப் பொண்ண காப்பாத்தலாமுன்னு நெனச்சேன். நீ கெடுத்திட்ட. நீன்னு நெனச்சிக்கிட்டு இருக்கற மாப்பிள்ள அவளப் பாத்ததும் என்ன பாடு படப்போறானோ? எப்டில்லாமோ கெனவு கண்டிருப்பான். அவன் கனவுல நீ மண்ணள்ளிப் போட்டுட்ட. அது மட்டுமா? சரோசாவப் பிடிக்கலன்னு விரட்டியடிக்கப் போறான். அவ இங்க வந்து ஊர்ல நாலு பேரு நாலுவிதமாப் பேசும்படியா அலக்கழியப் போறா. இரண்டுல ஒண்ணு மாப்பிள்ள சாவான். அல்லன்னா என் மச்சினன் மவா சாவா. நீ மகராசியா வாழு. கடவுள் இருக்கான், கவனிச்சுக்குவான் பாரு... மாயாண்டி அண்ணே! என்னோட, ஒன் மவள் இவ்வளவு நேரமும் பேசியும் நீ ஒரு வார்த்த தட்டிப் பேசல. போவட்டும். எனக்கு இந்த இடம் வேணும். மாட்டுத் தொழு கட்டப் போறேன். நீ இன்னும் ஒரு வாரத்துல வேற இடத்தப் பாத்துக்க. இல்லன்னா, வீட்டத் தரமட்டமா பண்ணிடுவேன். உரசிப் பார்க்க ஆசையா இருந்தா உரசிப்பாரு."
பலவேச நாடார் போய்விட்டார். 'இதுவரை, எந்தப் பெண்ணும் அவரை அவமரியாதையாகப் பேசியதில்லை. என்னமாய்ப் பேசிவிட்டாள்! வெளிய தெரிஞ்சா வெக்கம். அடிச்சா, திருப்பியடிப்பா போலுருக்கே! அந்த முண்டய என்னாவது பண்ணணும். என்ன பண்ணலாம்?'
உலகம்மை வாயடைத்துப் போனாள். பலவேச நாடார் போய்விட்டாலும், அவர் சொன்ன வார்த்தைகள் போக மறுத்தன.
'மாப்பிள்ளய ஏமாற்றியது முறையா? பலவேசம் சொன்னது மாதிரி அவரு தனக்கு வாய்க்கிறவா எப்படியெல்லாம் இருக்கணும்னு நினைச்சிருக்காரோ? நாம ஏமாத்தல்ல ஒரு ஆளாயிட்டோமே! இந்தக் கல்யாணம் நடந்து அவரு ஏமாத்தத்த தாங்க முடியாம தூக்குப் போட்டுச் செத்தா அவரப் பெத்தவங்க மனம் என்ன பாடு படும்? ராசா மாதிரி இருக்கிற அவரு எப்டித் துடிச்சிப் போவாரு? நாலு 'எடத்துக்குத்தான்' பொண்டாட்டிய கூட்டிக்கிட்டுப் போவ முடியுமா? போறது இருக்கட்டும். ஒண்ணுகிடக்க ஒண்ணு பண்ணிட்டாருன்னா? திருமலாபுரத்துல ஒரு பையன் இப்டி ஆள் மாறாட்டம் நடந்ததுல விஷத்தக் குடிச்சிட்டுச் செத்துட்டான். இது மாதிரி இவரும்... அதுக்கு நாம காரணமா ஆவுறதா? முடியாது. மாப்பிள்ளை வீட்டுல போயி, நடந்தத எப்டியும் சொல்லிடணும். என்ன ஆனாலும் சரி.'
'எப்டிச் சொல்ல முடியும்? பாவம் சரோசாக்கா. எவ்வளவு ஆசையோட மாப்பிள்ளயப் பத்திக் கேட்டா. கல்யாணம் நின்னுபோனா அவா எப்டி அழுவா? மாரிமுத்து மாமா கூட 'சாப்பிட்டு போழான்னு' பெத்த மவளக் கேக்கது மாதிரி கேட்டாரு... உனக்கும் ஒரு வழி பண்ணுறேன்னு கூடச் சொன்னாரு. அவங்க வீட்டுக்கு நான் துரோகம் செய்ய முடியுமா? எது துரோகம்? அவங்க மட்டும் என் அழகுக்காக என்கிட்ட விஷயத்தச் சொல்லாம மூடிமறச்சி பொம்ம மாதிரி என்ன அனுப்பலாமா? அது மட்டும் துரோகமில்லியா? எல்லாம் போவட்டும். கல்யாணம் நடந்த பிறவு மாப்பிள்ள சரோசாக்காவ அடிச்சி விரட்ட மாட்டாருங்கறது என்ன நிச்சயம்? இங்க வந்து, அந்த அக்கா கஷ்டப்படுறத நம்ம கண்ணால பாக்கணுமா? ஒரு வேள, போய் நடந்ததச் சொல்லி சரோசாக்காவோட நல்ல குணத்தச் சொல்லுவோம். கட்டுனாலும் கட்டிக்குவாங்க. அப்டியே கட்டாட்டாலும் பலவேசம் மவன் தான் கட்டிக்கத் தயாராய் இருக்கானே. ஒண்ணும் ஓடமாட்டாக்கே. உதிர மாடசாமி, நீ தான் சொல்லணும்.'
குழம்பிப் போய்த் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்த உலகம்மை, கனைப்புச் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவள் அய்யா, இன்னும் அந்த நார்க்கட்டிலில் குப்புறப்படுத்தபடியே கிடந்தார். அவர் சாப்பிடவில்லை என்று அப்போதுதான் அவளுக்கு நினைவுக்கு வந்தது. கட்டிலுக்கருகேயே இருந்த அடுப்புக்குள் விறகுகளை எடுத்து, தலைகுப்புற வைத்துக் கொண்டு பூமியில் தட்டிவிட்டு, விறகுச் சுள்ளிகளை அடுப்பில் வைத்துவிட்டு, ஒரு ஈயப்பாத்திரத்தில், கொஞ்சம் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்துவிட்டு, தீப்பெட்டியைத் தேடுபவள் போல், அடுப்பங்கரையில் தேடினாள்.
நடப்பதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த மாயாண்டி திடீரென்று வெடித்தார். அவருக்கு எழுபது வயதிருக்கும். கண்பார்வை மங்கல். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பனையேறிக் கொண்டிருந்தார். ஒருநாள் பாதிப் பனையில் இருந்து கீழே விழுந்து, இடது கால் முறிந்து விட்டது. ஆஸ்பத்திரியில் போய் காலை ரிப்பேர் செய்து கொண்டாலும், பனையேறவும் முடியவில்லை. சரியாக நடக்கவும் முடியவில்லை. உலகம்மை, அவரைப் பனையேற விடவும் இல்லை. அப்பப்போ சொல்ல முடியாத துயரங்கள் வரும் போது, லேசாகப் 'பட்டை' போட்டுக் கொள்வார். அதுவும் மில்லிக் கணக்கில் தான்.
"அடுப்ப மூட்டாண்டாம்."
"ஏன்?"
"எனக்குச் சோறு வேண்டாம்."
"ஏன்?"
"வயிறு நிரஞ்சிட்டு, நீ வாரதுக்கு முன்னால பலவேசம் குடுத்ததுல வயிறு உப்பிட்டு, ரெண்டு நாளைக்கு ஒண்ணும் வேண்டாம்."
"அவன் கிடக்கான். கட்டயில போறவன். திக்கத்தவங்களுக்குத் தெய்வந்தான் துணை. ஒம்மப் பேசினதுக்கு உதிரமாடன் அவன கேக்காம விட மாட்டான்."
"நீ செய்தது சரியா? பெரிய இடத்துல ஆயிரம் நடக்கும். நமக்கென்ன வந்தது? நீ ஏன் மாரிமுத்து மவளோட போவணும்?"
"நானாப் போவல. எனக்கு ஒரு பாவமுந்தெரியாது. வேலக்காரி மாதிரி துணையாத்தான் போனேன். இப்படிக் குளறுபடி நடக்குமுன்னு தெரிஞ்சா போயிருக்கவே மாட்டேன். சோம்பேறிப்பய, தொழில் நடத்தலாமுன்னுலா கேட்டுட்டான். அவன் நாக்குல புத்துநோயி வர."
"நீயும் அவனக் கூடக்கூடப் பேசிட்ட. வீட்டு நிலத்த விடச் சொல்லுறான். அதுகூடப் பரவாயில்ல. கழுத்தப் பிடிச்சி தள்ளுவேன்னு வேற சொல்லிட்ட. அவன் என்ன பண்ணப் போறானோ? அவன் மொவன் துளசிங்கம் ஒண்ணுகிடக்க ஒண்ணு பண்ணிட்டா?"
"அடிப்பான்னு பயப்படுறீரா? அடிக்கும்போது பார்த்துக்கிடலாம்."
மாயாண்டி, பதில் சொல்லாமல், குலுங்கிக் குலுங்கி அழுதார். அவர் அழுகையில் ஏற்கனவே தொங்கிப் போயிருந்த நார்க்கட்டில், அசைந்து கொடுத்தது. இயலமையில் எழுந்த அந்த அவலத்தனமான அழுகை உலகம்மையை கலக்கிவிட்டது. அய்யாவின் அருகில் போய், அவர் தலையை மௌனமாகக் கோதிவிட்டாள். மாயாண்டி விம்மிக் கொண்டே பேசினார்:
"ஒன் அம்மாக்காரி என்ன நிர்க்கதியா விட்டுட்டு செத்துட்டா. என் அம்மா என்ன விட்டுட்டு அஞ்சு வயசுல போயிட்டா. ஒனக்காவத்தான் ஏறாத பனெல்லாம் ஏறுனே. இல்லன்னா எப்பவோ மண்டயப் போட்டுருப்பேன். அவன் பலவேசம் பணக்காரன், சல்லிப்பயல், ஒண்ணுகிடக்க ஒண்ணு..."
"நீரு ஏய்யா சொன்னதையே சொல்றீரு. அடிக்கும் போது பார்த்துக்கிடலாம்."
"அடிச்சா பரவாயில்லழா. நீ தனியா இருக்கும்போது ராத்திரி வேளையில அவமானப்படுத்திட்டா - பலவேசம் அப்பிடிப்பட்ட பயல்தான். சொந்த சித்தி மவளயே வச்சிக்கிட்டிருந்த பய."
உலகம்மை திடுக்கிட்டாள். இந்த மாதிரியும் ஒன்று நடக்கலாம் என்று அவள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அப்படி நினைக்கையில், அவள் உடம்பெல்லாம் ஆடியது. அய்யாவைப் பார்த்தாள். அவர் இன்னும் ஏங்கி ஏங்கி அழுதார். அய்யா, அவரின் அழுகைக்குக் காரணமான பலவேசம், அந்தப் பலவேசம் கோபப்படக் காரணமான மாரிமுத்து நாடார், அவரின் கல்யாணச் சூழ்ச்சி... அத்தனை பேர் மீதும் அவளுக்குத் தணியாத சினம் ஏற்பட்டது. ஆவேசம் வந்தவள் போல் பேசினாள்:
"அப்டி ஒண்ணும் நடக்காது. நடக்கவும் விடமாட்டேன். நீரு சீவுன பாள அரிவா இந்தா இருக்குய்யா. நல்லா நினைச்சிப்பாரும். அஞ்சி வருஷத்துக்கு முன்ன நான் பெரியாளாகு முன்னால கருப்பசாமி என்கிட்ட ஏதோ சொன்னாமுன்னு அவன் பணக்காரன்னு கூடப் பாக்காம இந்த அரிவாள வச்சிக்கிட்டு அவன ஓட ஓட விரட்டுனீரே, ஞாபகம் இருக்கா? நான் புலிக்குப் பொறந்தவா. ஒம்மோட மவள். எந்தப் பய வேணுமுன்னாலும் வாலாட்டிப் பாக்கட்டும். அவன் தலய வெட்டி ஒம்ம காலுல வைக்காட்டி, நான் உலகம்மல்ல. பொம்புள மாதிரி ஏய்யா அழுவுறீரு?"
மாயாண்டி அழுவதை நிறுத்திவிட்டு மகளைப் பெருமையோடு பார்த்தார். அடுப்பை மூட்டிய உலகம்மையை, அவர் தடுக்கவில்லை. தீமூட்டிக் குழலை வைத்து உலகம்மை ஊதினாள். தீப் பிடிக்கவில்லை. ஈரச்சருகு போலும். சிறிது நேரம் குழலை வைத்துவிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்தாள்.
குப்புறப்படுத்திருந்த மாயாண்டி, எழுந்து உட்கார்ந்து, சுவரில் தலையை வைத்துக் கொண்டே "நீ இவ்வளவு ஒத்தாசை பண்ணியிருக்க, இதனால பலவேசத்துக்கிட்ட கூட இழுபடுறோம். ஆனால் மாரிமுத்து சம்சாரம் 'பனையேறிப்பய மவளக்காட்டி என் பொண்ண கரயேத்த வேண்டியதிருக்குன்னு' லட்சுமிகிட்ட சொன்னாளாம். லட்சுமி இப்பதான் வந்து சொல்லிட்டுப் போனா" என்றார்.
உலகம்மை, அவர் சொல்வதை, காதில் வாங்காதது மாதிரி வாங்கிக் கொண்டாள். திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தா. இப்போது குழப்பம் இல்லை. அசாத்தியமான துணிச்சல் ஏற்பட்டது. "நமக்கா, இவ்வளவு தைரியம்" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டும், மெச்சிக் கொண்டும், உலகம்மை தீமூட்டிக் குழலை எடுத்து ஊதினாள்.
தீப்பிடித்துக் கொண்டது.
அந்தக் கிணற்றைச் சுற்றி ஏழெட்டுத் தென்னை மரங்கள் கோணல் மாணலாக நின்றன. சில குலைகளில் தேங்காய்கள் கீழே விழுந்து விடுபவை போல் தொங்கிக் கொண்டிருந்தன. பச்சைத் தென்னை ஓலைகளுக்கிடையே செவ்விளனிக்காய் காட்டு ஓணானைப் போல், பயமுறுத்தின. சில தேங்காய்கள் விழுந்து, கிணற்று நீரில் மிதந்தன.
ஒரு பக்கம் வாழைத்தோப்பு; இன்னொரு பக்கம் தக்காளிச் செடிகள், தக்காளிச் செடியில் 'நாளைக்கோ மறுநாளோ பெரியவளாகப் போகிற சிறுமிகள் மாதிரி' கன்னிக் காய்கள், பசும்பொன் நிறத்தில் இருந்து, சிவப்பு நிறமாக மாறும் 'அடோலசன்ஸ்' காய்களாக, பசுமை நிறத்தை செந்நிறம் விரட்டியடிக்கும் வேகத்தைக் காட்டுவது போல் காற்றில் ஆடின. கைக்குழந்தைகளை மார்பகத்தில் வைத்துப் பாலூட்டிக் கொண்டே, மார்பகத்தை மாராப்புச் சேலையால் மூடும் தாய்மார்களைப் போல, குலை தள்ளிய வாழைகள், அந்தக் குழைகளை, தன் இலைப் புடவையால் மறைத்தும், மறைக்காமலும் நிறைவுடன் நின்றன. வரப்புகளில், காவல் பூதங்கள் போல் நின்ற ஆமணக்குச் செடிகள், விளக்கெண்ணெய் தயாரிப்பதற்காக எடுக்கப்பட்ட கொட்ட முத்துக்களைப் பறிகொடுத்துவிட்டு, அமங்கலிப் பெண்கள் போல் காட்சியளித்தன.
ஒரு தோட்டத்தில், மிளகாய்ச் செடிகள் இருந்தன. வேண்டிய மட்டும் காய் காய்க்கும் போது, நீராலும் உரத்தாலும் நிறைவுடன் உண்ட அந்தச் செடிகள், இப்பொழுது உரமாகப் போகட்டும் என்று விட்டு வைக்கப்பட்டிருந்தன. நீரும் இல்லை. அவற்றை உண்ணும் ஆற்றலும் அவற்றிற்கில்லை. முழுநேரம் வயலில் உழைத்து முதியவனாகி, பின்னர் திண்ணையில் கேட்பாரற்றுக் கிடக்கும் கிழவர்களுக்கும், மங்கிப் போய் மண்ணோடு மண்ணாகக் கிடக்கும் அந்தச் செடிகளுக்கும் ஏதோ ஓர் ஒற்றுமை இருப்பது போல் தோன்றியது. கிழே விழுந்து கிடந்த பழுப்புற்ற பனையோலைகள், அவர்களின் இறுதி முடிவை அறுதியிட்டுக் கூறுவது போல் தோன்றின.
மொத்தத்தில் அந்தத் தோட்டமே, ஒரு கிராமத்து மனிதனின் முதலையும் முடிவையும் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது.
லோகு, சிந்தனையில் இருந்து விடுபட்டவனாய், கண்களில் இருந்து தென்னை மரங்களையும், வாழை மரங்களையும் வலுக்கட்டாயமாக விலக்கிக் கொண்டு, கையில் வைத்திருந்த நோட்டில் நோட்டம் செலுத்தினான். கவிதை எழுதுவதற்காக, அங்கே அவன் வரவில்லை. கவிதை எழுதுபவர்களை விட ஒருசில கவிதைகள் காட்டும் நீதி நெறிகள்படி வாழ்பவர்கள் தான் கீட்ஸை விட, ஷெல்லியை விட, கண்ணதாசனை விட மிகப்பெரிய மனிதர்கள் என்று எண்ணுகிறவன் அவன். திருமண அழைப்பை எப்படி எழுதலாம் என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.
அது, அவன் குடும்பத்துத் தோட்டம் அல்ல. அவன் அய்யா, அதை, கட்டுக் குத்தகைக்குப் பயிர் வைக்கிறார். அதுவும், இந்த நடப்பு வெள்ளாமை முடிந்ததும் முடிந்து விடும். அவனுக்கு நினைக்க நினைக்க சிரிப்பாக இருந்தது. தோட்டத்தின் உரிமையாளர், தன் மகளை, அவன் கட்டிக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். அவனும் சம்மதித்திருப்பான். ஆனால் பெண், 'ஒரு மாதிரி நடந்து கொண்டவள்' என்று பலர் சொல்லிவிட்டார்கள். ஒருவேளை திருமணம் ஆனபிறகு, விஷயம் தெரிந்திருந்தால், குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டிருக்க மாட்டான். ஆனால், கேள்விப்பட்ட பிறகு? ஆற்றுத் தண்ணீர் பல இடங்களில் அசுத்தப்பட்டிருக்கும் என்று தெரிந்தும் குளிக்கிறார்கள். அதே அசுத்தம், குளிக்கிற இடத்தில் இருந்தால்?
லோகு கட்டிக்க விரும்பவில்லை என்பதை உணர்ந்த தோட்டப்பிரபு, தன் தோட்டத்தை விட்டுவிட வேண்டும் என்று சொல்லிவிட்டார். "நீ என் மவள வேண்டாங்ற. அதனால, என் நிலமும் உனக்கு வேண்டாம்" என்று அவர் நேரடியாகச் சொல்லியிருக்கலாம். அப்படிச் சொல்லாமல் "பிள்ளைய பெரியதா ஆயிட்டு. நாங்களே பயிர் வைக்கப் போறோம்" என்று சொல்லி விட்டார்.
லோகு பி.யூ.சி.யில், விஞ்ஞானத்தில் 'ஏ' பிளஸ் வாங்கியிருந்தான். இதர பாடங்களிலும் நல்ல மார்க், ஹை பஸ்ட் கிளாஸ்; எம்.பி.பி.எஸ்ஸுக்கு விண்ணப்பித்தான். இவ்வளவுக்கும், பேக்வார்ட் கம்யூனிட்டி. கிடைச்சுதா? போகட்டும். டெப்டி கலெக்டர் பரீட்சை எழுதித் தேறினான். ரிசல்ட்? முன்கூட்டியே அதாவது பரீட்சைக்கு முன் கூட்டியே அடிபட்ட பெயர்கள் தான் லிஸ்டில் வந்தன.
ஒழியட்டும் 'இன்னார் இன்னாரின் மருமகனாகப் போகிறவர். ஆகையால் அவர் தான் அதிகாரியாகணும்' என்று பகிரங்கமாகச் சொல்லி இருந்தால் பிரச்சினையே இருக்காது. ஆனால் இந்த அப்பட்டமான அயோக்கியத்தனத்தை, யோக்கியப்படுத்துவதற்காக, பரீட்சை என்று ஒன்று வைப்பதும், ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்களின் பணத்தையும் நேரத்தையும் வீணாக்கி, அவர்களை ஏமாளிகளாக்கி, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவர்களுக்கு பதவிகள் கொடுப்பதையுந்தான் அவனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் நியாயப்படுத்த முடியவில்லை. அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் ஆசாமிகள், தங்களின் 'சிபார்சு காம்ப்ளெக்ஸை' மறைப்பதற்காக 'தாம் தூம்' என்று குதிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல். இத்தனையும் நடந்தாலும் நம் நாடு ஜனநாயகத்தின் காவலன் என்கிறார்கள். இது நேஷனல் ஜனநாயகம்; தீவிரமாகச் சிந்தித்தால் நாகரிகமான பிரபுத்துவம்.
திறமைக்கோ நேர்மைக்கோ மதிப்பில்லை என்று நினைத்து மனம் வெந்து போனவன் லோகு. அதற்காக ஒரு சில வசதிபடைத்த பையன்களைப் போல் ஹிப்பி முடியை வைத்துக் கொண்டு மிகப்பெரிய 'இன்டெலக்சுவலாக'க் காட்டுவதை அவன் வெறுத்தான். அப்படி இருப்பவர்கள் 'எக்ஸிபிசனிஸ்ட்' என்பது அவன் கருத்து.
திருமணத்திலும் அவன் ஒரு கொள்கை வைத்திருந்தான். சமுதாயப் பிரச்சினைகளை அலசிப் பார்ப்பதற்கு, தனக்கு வாய்ப்பவள், பட்டதாரிப் பெண்ணாக இருக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் பல பட்டதாரிப் பெண்களோடு பழகியபின், படிப்பிற்கும் சமுதாயப் பிரக்ஞைக்கும் சம்பந்தம் இல்லை என்பது மட்டுமல்ல, இந்த 'பட்ட' குவாலிபிகேஷனே அந்தப் பிரச்சினைக்கு ஒரு டிஸ்குவாலிபிகேஷன் மாதிரியும் அவனுக்குத் தென்பட்டது.
ஆகையால், அய்யா பார்க்கிற பெண்ணைக் கட்டிக் கொள்ள அவன் சம்மதித்தான். பெண்ணின் படிப்பைப் பற்றி கவலைப்படவில்லை என்றாலும், எஸ்.எஸ்.எல்.சியாவது இருக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அவன் தந்தை "மாரிமுத்து நாடார் முப்பதாயிரம் ரொக்கமாகத் தாரேங்கறார். பொண்ணுதான் படிக்கல. நமக்கும் நாலஞ்சி வயசுப் பொண்ணுங்க இருக்கு" என்று இழுத்தபோது, அதுவும் ஏழெட்டுப் பிள்ளைகளைப் பெற்று, இதர பிள்ளைகள் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காகவே, முதல் பிள்ளையை அவர்களின் சார்பாகக் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்த தந்தையின் பேச்சுக்கு மறுபேச்சுப் பேச அவன் விரும்பவில்லை. வரதட்சணை வாங்கக்கூடாது என்றும் அவன் வாதாடவில்லை. பெண்ணுக்கு, சட்டத்தில் இருக்கும் சொத்துரிமை வீடுகளில் அமலாகும் வரைக்கும், அப்படி அமலாக வேண்டும் என்று வற்புறுத்தப்படாத வரைக்கும், வரதட்சணை ஒழிப்பு இயக்கங்களும், ரேடியோப் பேச்சுக்களும், டெலிவிஷன் பேட்டிகளும், சம்பந்தப்பட்டவர்களின் 'ஈகோவை' திருப்திப்படுத்தும் 'பேஷன்' என்றும் அவன் உறுதியாக நம்பினான். பெண்ணுக்குச் சேரவேண்டிய சட்டப்படியான சொத்துக்குக் கொடுக்கப்படும் நாகரிகமான நஷ்ட ஈடுதான் வரதட்சணை என்று தப்பாகவோ சரியாகவோ நினைத்தான்.
கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் முதன் முதலாகப் படிப்பவன் ஒரு ஆட்டுக்கிடா மாதிரி! ஆட்டுக்கிடாவை, மற்றவற்றைவிடச் செல்லமாக வளர்த்து, அதன் தலையில் பூச்சூடி, கோவிலில் வெட்டுவது மாதிரி தான், ஏழைப் பெற்றோர்கள் ஒரு பையனையாவது படிக்க வைத்து, நல்ல உணவளித்து, பட்டம் என்ற பூவைத் தலையில் சூடி, பணக்காரவீட்டுக் கோவிலில் பலிகிடாவாக்குகிறார்கள். பணக்காரச்சாமி, கிடாக் கறியை, வளர்த்தவனுக்குக் கொடுக்காமல் தானே சாப்பிடுவதும் உண்டு. என்றாலும் ஏழைப் பையன்கள் படிப்பதே, கல்யாண மார்க்கெட்டில் ரேட்டைக் கூட்டத்தான். இது அநியாயம் என்றாலும், இதே அநியாயம், பல ஏழ்மை அநியாயங்களை ஒழித்து விடுகிறது என்பதும் உண்மை.
குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு லோகனுடையது. 'எனக்கு நான் பாக்குற பொண்ணுதான் வேணும்' என்று சொல்லி, இஷ்டப்படி கல்யாணம் செய்து கொண்டால், அதனால் பணம் கிடைக்காமல் போனால் சம்பளத்தால், அவன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாது. கிம்பளம் வாங்க வேண்டும். இது அவனுக்குப் பிடிக்காதது. ஆகையால் அய்யாவுக்கு வருமானம் கிடைக்கும் இடத்தில் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டான். என்றாலும், அதற்குக் குடும்பப் பொறுப்பு மட்டும் காரணமல்ல. எந்த வீட்டுப் பெண்ணாக இருந்தாலும், அதுவும் ஒரு ஜீவன் தான் என்று நினைப்பவன். அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவன் அல்ல. அதே சமயம் அவன் முற்றும் துறந்த முனியும் இல்லை. இதனால் தான் பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று வற்புறுத்தினான்.
பெண்ணைப் பார்ப்பதற்கு முன்பு, ஏதோ ஒரு பெரிய தியாகம் செய்வது போல் நினைத்திருந்தான். ஆனால் 'சரோசாவை'ப் பார்த்தபிறகு, யந்திர கதியில் செயல்பட்ட இதயத்தில் தென்றல் வீசியது. அவள் பார்த்த பார்வை - மருட்சியோ, அகந்தையோ இல்லாத கண்கள், பாசாங்கோ பண்பாட்டுக் குறைவோ இல்லாத நடை - அத்தனையும் அவனைக் கவர்ந்துவிட்டன. இந்தச் சின்ன வயதில் வர்த்தகக் கலாசாரம் கிராமங்களிலும் பரவிய சூழலில், இப்படி ஒரு பெண் இருக்கிறாள் என்றால், அது பழக்க தோஷம். அவள் கூட வந்த கட்டையான அந்த நடுத்தர வயதுப் பெண்மணி தான் காரணம் என்று அவன் அவளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டான். வாழையின் வாளிப்போடு ஆமணக்குச் செடி நிறத்தில் அளவான உயரத்தில் அமைந்த அவள், அவனுக்கு அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தாள். நாட்டுக்கட்டை மேனியில் பருவம் 'சன்மைக்கா' போல் பளபளக்க, படிக்காதவள் என்று பார்த்தவுடன் சொல்ல முடியாத நளினத்தையும், அன்பு செலுத்துவதற்காகவே வாழ்பவள் போலிருந்த சிரித்த முகத்தையும் கம்பீரமான, அதே சமயம் பெண்மை குறையாத பார்வையையும் அவன் தனக்குள்ளேயே இப்போதும் பார்த்துக் கொண்டு ரசித்தான்.
சிந்தனையில் ஈடுபட முடியாமலும், அதேசமயம், அதிலிருந்து விடபட முடியாமலும், அழைப்பிதழில் எந்த ஜிகினாவை எங்கே வைப்பது என்று புரியாமலும், லேசாகத் தலைநிமிர்ந்த லோகு, வேகமாகத் தலையைத் தூக்கி, தோட்டத்துப் பக்கமாக ஊருக்குப் போகும் ஒற்றையடிப் பாதையைப் பார்த்தான். அதில் வந்து கொண்டிருந்த பெண்ணின் மிடுக்கான நடையும், ஏதோ எங்கேயோ ரயிலைப் பிடிக்க ஓடுபவள் போல் சென்ற வேகமும், அவனை லேசாகப் புருவத்தைச் சுழிக்க வைத்தன. அந்த உருவம் நெருங்க நெருங்க, அவளை எங்கேயோ பார்த்தது போல் தோன்றியது - யார்? குட்டாம்பட்டிப் பெண் சரோசா மாதிரி இருக்கே! அவள் தானா? அவள் இங்கே ஏன் வாராள்...?
லோகு அவசர அவசரமாக வழிப்பாதைக்கு ஓடிவிட்டு, 'மூச்சு மூச்'சென்று இளைக்க, சற்றுத் தொலைவில் போய்க் கொண்டிருந்தவளை முந்திக் கொண்டு, வழிமறிப்பவன் போல் நின்றான். உலகம்மையும் அவனை அந்த இடத்தில் எதிர் பார்க்கவில்லை. அவனைப் பார்த்தவுடன், ஏனோ அழ வேண்டும் போலிருந்தது. அவனைப் பார்ப்பதும், சற்றுத் தொலைவில் இருந்த ஊரைப் பார்ப்பதுமாக இருந்தாள். வாயடைத்துப் போய் நின்ற லோகுதான் பேச்சைத் துவக்கினான்.
"நீ. நீங்க குட்டாம்பட்டி சரோசா தான?"
அவள் பேசாமல் அவனையே மௌனமாகப் பார்த்தாள்.
"சொல்லுங்க, நீங்க மாரிமுத்து நாடார் மவள் சரோசாவா? சொல்லுங்க. எனக்கு ஒன்றும் ஓடல. பிளீஸ்."
பிரிக்கப்பட விரும்பாததுபோல் ஒட்டிக்கிடந்த உதடுகளை வலுக்கட்டாயமாக விலக்கிக் கொண்டு அவள் சொன்னாள்:
"என் பேரு சரோசா இல்ல, உலகம்மை."
"மாரிமுத்து நாடார் மகள் தான?"
"இல்ல. வேலக்காரி."
"வேலக்காரியா? நீதான பச்சை பார்டர்ல சிவப்புப் புடவை கட்டிக்கிட்டு பிள்ளையார் கோவிலுக்கு வந்தது. நான் யார்னு தெரியுதா?"
"தெரியுது. சரோசாக்காவுக்கு மாப்பிள்ள."
"ஒன்கூட வயசான பெண் வந்தாளே அவள் பேருதான் சரோசாவா?"
அவள் தலையாட்டினாள். அவன் பித்துப் பிடித்தவன் போல் சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். அவன் இதுவரை ரசித்துக் கொண்டிருந்த பிடிபடாத அந்தத் தோட்டத்தின் சூட்சுமம் போல், புரிந்தது போலவும், புரியாதது போலவும் அவன் தன் தலையை மேலும் கீழும் பக்கவாட்டிலும் ஆட்டிக் கொண்டான். சிறிது நேரம் அந்த மௌனத்தில் நீர் உறைந்து விடலாம். நெருப்பு அணைந்து விடலாம்.
"எனக்கு ஒண்ணுமே புரியல. நான் ஒன்ன பொண்ணுன்னு நினைச்சிட்டிருந்தேன். நீ என்னடான்னா... சரி, இப்ப எங்க போற?"
"உங்க வீட்டுக்குத்தான்."
"எங்க வீட்டுக்கா? எதுக்கு?"
அவள் சொல்லலாமா வேண்டாமா என்று தயங்குபவள் போல் யோசித்தாள். 'நமக்கேன் வம்பு. உங்ககிட்ட கல்யாண வேல எதுவும் இருந்தா, செய்றதுக்காக மாரிமுத்து நாடார் அனுப்பினர்னு சொல்லி விட்டுப் போய்விடலாமா?' என்று கூட நினைத்தாள். ஆனால் அவன் முகத்தில் தெரிந்த இனந்தெரியாத பீதியைப் பார்த்ததும், அவன், ஒரு குழந்தையிடம் பேசுவது போல் தன்னிடம் பேசிய தோரணையைப் பார்த்ததும், அவளால் பேசாமல் இருக்க முடியவில்லை.
"என்னோட அய்யா பனையேறி. அம்மா சின்ன வயசுலயே செத்துட்டா. கஷ்டப்பட்ட குடும்பம். அய்யாவுக்கு கால் விளங்கல."
திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டு, உலகம்மை தன்னையே திட்டிக் கொண்டாள். 'அடி சண்டாளி! எதுக்கு வந்தியோ அத சொல்றத விட்டுப்புட்டு, மூணாவது மனுஷங்கிட்ட ஒன்னப்பத்தி ஏண்டி பேசுற? அவருகிட்ட சொல்லி ஒனக்கு என்னத்த ஆவப்போவது? அவரு என்ன ஒன் மாமனா மச்சானா?'
சிறிது நேரம் திணறிக் கொண்டிருந்த உலகம்மை. அவன் தன்னையே ஆச்சரியமாகவும், ஒருவித நடுக்கத்துடனும் பார்ப்பதை உணர்ந்ததும் மீண்டும் பேசினாள்.
"மாரிமுத்து மாமா என்ன சரோசாக்காவோட கோவிலுக்குப் போகச் சொல்லும் போது சும்மா தொணைக்குப் போகச் சொன்னாருன்னு நெனச்சேன். அப்புறந்தான் என்ன பொண்ணுன்னு ஒங்கள நம்பவச்சு சரோசாக்காவ ஒங்களுக்குக் கொடுக்கறதுக்காக 'கவுல்' பண்ணுனார்னு தெரிஞ்சுது. என் உடம்பக் காட்டி ஒருவர ஏமாத்தறது எனக்குப் பிடிக்கல. நெனச்சிப் பாத்தேன். நீங்களே விஷயத்தைக் கேள்விப்பட்டா... நிச்சயமா அது தெரிஞ்சுடும். எங்க சரோசா அக்காவ அடிச்சி விரட்டலாம். அதுல அக்கா செத்துப் போகலாம். இல்லாட்டி நீங்களே திருமலாபுரத்துப் பையன் மாதிரி விஷத்தக் குடிச்சிட்டு..."
அவளால் மேற்கொண்டு பேச முடியவில்லை. குரல் தழுதழுத்தது. கண்ணீர், இமைகளில் அணைக்கட்டு நீர் போல் தேங்கி நின்றது. அவன் இறந்து போவான் என்கிற வெறும் யூகத்தைத் தாங்க முடியாமலோ அல்லது சரோசாக்கா சாவதைப் பொறுக்க முடியாமலோ அழுதாள். எதுக்காக அழுதோம் என்பது அவளுக்கே தெரியாத போது, லோகுவுக்குச் சரியாகத் தெரிந்திருக்க முடியாது. இப்போது கிட்டத்தட்ட தொட்டுவிடும் தூரத்திற்கு அவன் இடைவெளியைக் குறைத்துக் கொண்டு, அவளை விழித்த கண் விழித்தபடி, திறந்த வாய் திறந்தபடி பார்த்தான். அவள் விம்மலுக்கிடையே பேசினாள்.
"நாலையும் யோசித்துப் பாத்தேன். இதனால ஊர்லயும் ஒரு மொள்ளமாறிப்பய என்னப் பாத்துக் கேக்கக்கூடாத கேள்வியக் கேட்டுட்டான். அதப்பத்தி எனக்குக் கவல இல்ல. ஆனால் பழி பாவம் வந்து அதுக்கு நான் காரணமாகக் கூடாதுன்னுதான் நடந்ததச் சொல்ல வந்தேன். அதோட இன்னொண்ணு. எங்க சரோசாக்கா அழகு இல்லாம இருக்கத மறைக்க விரும்பல. அழகு முக்கியமா? அஞ்சு விரலும் ஒண்ணா இருக்குமா? எங்க அக்கா குணத்துக்காகவே நீங்க கட்டலாம். யாரையும் நீன்னு கூடச் சொல்ல மாட்டா. குனிஞ்ச தல நிமுர மாட்டா. ஒரு ஈ காக்கா அடிபடக் கூடச் சம்மதிக்க மாட்டா. லட்சக்கணக்கா சொத்து இருந்தாலும் கொஞ்சங் கூட மண்டக்கெனம் கெடையாது. அவள மாதிரி ஒருத்தி இனிமதான் பிறக்கணும். அவள கட்டுறதுக்கு நீங்க குடுத்து வச்சிருக்கணும். ஒங்க மேல உயிரையே வச்சிருக்கா?"
அவன், அவளைப் பார்த்த விதத்தில் பயந்து போனவள் போல், உலகம்மை பேச்சை நிறுத்துவிட்டு, சிறிது விலகி நின்று கொண்டாள். 'அதிகப் பிரசங்கித்தனமா படிச்சவன்கிட்ட பட்டிக்காட்டுத்தனமா பேசிட்டோமோ!' என்று கூடச் சிந்தித்தாள்.
அவனோ அவளைப் பார்க்கவில்லை. ஆகாயத்தையே வெறிக்கப் பார்த்துக் கொண்டு நின்றான். 'தீமைக்கு மட்டும் சூழ்ச்சி சொந்தமல்ல. நன்மை கூட தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, தன்னைத் தீமைகளால் அலங்கரித்துக் கொள்ள விரும்புவது போல் அவனுக்குத் தோன்றியது. 'ஆயிரம் காலத்துப் பயிர் என்று போற்றப்படும் கல்யாணத்தில் கூட மனித சூழ்ச்சி எவ்வளவு கீழ்த்தரமாகப் போகிறது? கோழிக் குஞ்சை நக விரல்களுக்குள் வைத்துக் கொண்டு, மரண வேதனையில் அவதிப்படும் அந்தக் குஞ்சைப் பற்றிக் கவலைப்படாமல் பறக்கும் பருந்து, தன் குஞ்சுக்கு அதை உணவாகக் கொடுக்க வேண்டும் என்கிற தாய்மையில் தான் போகிறது. ஆனால் அந்தத் தாய்மையைக் காட்டிக் கொள்ள அது பேய்மையாகிறது. தாய்மையை பாராட்டுவதா? பேய்மையை நோவதா?
லோகு தன்னை ஒரு கோழிக்குஞ்சாக நினைத்துக் கொண்டான். சிறிது சிந்தனைக்குப் பின்னர் ஆகாயத்தில் உயரப் பறக்கும் எமப் பருந்தின் காலில் சிக்கிக் கொண்டு தவிக்கும் குஞ்சைக் காக்கும் வகையறியாது, பறக்கும் சிறகில்லாது, நின்ற இடத்திலேயே சுற்றிக் கொண்டு வரும் தாய்க்கோழியாக, உலகம்மையைக் கற்பனை செய்து பார்த்தான். அந்த எண்ணம் தவறு என்பது போல் உலகம்மை பேசினாள். அவன் பதில் பேசுவான் என்று கால்கடுக்கக் காத்து நின்றவள், அவன் பேசாமலிருப்பதால் பயந்தவள் போலவும், அப்படிப் பேசிவிட்டாலும் பயப்படுபவள் போலவும், தான் சொல்வதையே கேட்கமுடியாத செவிடு போல் பேசினாள்:
"அப்ப நான் வரட்டுமா?"
லோகு ஆகாயத்திலிருந்து கண்களை விலக்கிப் பூமியைப் பார்த்தான். பூமியில் படிந்த அவள் கால்களைப் பார்த்தான். பின்னர், அம்மாவையே அறியாமல், இடைப்பட்ட வயதில் ஒருத்தியை 'இவள் தான் ஒன் அம்மா' என்று சொன்னால் அவளை நெருங்கி மடியில் புரள முடியாமலும், அதே சமயம் நெருங்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தடுக்க முடியாமலும் தவிக்கும் எட்டு வயதுச் சிறுவனைப் போல், அவளைத் தவிப்போடு பார்த்தான். அவன் தவிப்பை விட அவன் காட்டிய மௌனத்தை, தான் சொன்னதை அவன் ஏற்றுக் கொண்டான் என்ற தன்னம்பிக்கையில் அவள் பேசினாள்:
"எங்க சரோசாக்காவ நோகாம காப்பாத்தணும். அவங்க மாதிரி லட்சத்துல ஒருவர் கெடைக்கது அபூர்வம். ஒரு சோத்துக்கு ஒரு அரிசி பதம் மாதிரி சொல்லுதேன், கேளுங்க. அக்காவோட வாறதுக்காக அவ சீலையைக் கட்டிக்கிட்டு நான் வந்தேன். வூட்டுக்கு வந்தவுடனேயே அவா அம்மா சீலய அவுக்கச் சொன்னா. அதுக்கு அக்கா என்ன சொன்னாத் தெரியுமா? 'அந்த சீலயே அவா கட்டியிருக்கதால தான், அது நல்லா இருக்கு. எனக்குத்தான் ஏழட்டுச் சீல இருக்க. இத, அவளே வச்சிக்கிடட்டு'முன்னு சொன்னா. வேற யாரும் இப்படிச் சொல்லுவாவுளா? ராசா மாதிரி மாப்பிள்ள கெடச்சதுல அக்காவுக்கு சந்தோஷம். நீங்க குடுத்துவச்சவிய, அவளும் குடுத்துவச்சவதான். ஒங்களமாதிரி ஒருவர் இந்த உலகத்துல்லே இருக்க முடியுமா? நான் வரட்டுமா?"
அவன் பேசாமல், அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். ஏழ்மையோடு மட்டுமில்லாமல் தன் இதயத்தோடும் போராடுவது போல் தோன்றிய அவளையே அவன் ஊடுருவிப் பார்த்தான். அவளால், அந்தப் பார்வையைத் தட்டவும் முடியவில்லை, தாளவும் முடியவில்லை.
சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டு நின்றவள், இறுதியில் 'வரட்டுமா?' என்று சொல்லாமல் மெள்ள நடந்தாள். அவள் அகன்றபின், அந்த வெறுமையில் தான் அவள் அருமையை அறிந்தவன் போல், லோகு, அவளைக் கைதட்டிக் கூப்பிட்டான்.
"எனக்கு நேரமாவுது. எதுக்கு கூப்பிட்டீய?"
"ஒரு இளநி பறிச்சித் தாரேன். சாப்பிட்டுட்டுப் போ."
"வேண்டாம்."
"எனக்குத் தென்னமரம் ஏறத் தெரியும். பனை மரத்துல கூட ஏறுவேன். ஒரே செகண்ட். இளனி சாப்பிட்டுப்போ."
அவளுக்குச் சிரிப்புக் கூட வந்தது.
"கல்யாணமாவட்டும். சரோசாக்கா, நீங்க, நான் மூணு பேருமா தோட்டத்துக்கு வந்து தேங்காய் சாப்பிடலாம்."
"அப்படின்னா ஒனக்கு இளநியே கிடைக்காது."
"நீங்க சொல்றதப் பாத்தா..."
"நான், நீதான் எனக்கு வரப்போறவன்னு சந்தோஷமா நெனச்சேன். மூன்று நாளாய்த் தூங்கக் கூட இல்ல. ஒன் முகத்தைத் தவிர எதுவுமே கண்ணுக்குத் தெரியாமக் கிடந்தேன். நீ என்னடான்னா என் கண்ணத் திறந்துட்ட. ஆனால் கண்ணுதான் திறந்திருக்கே தவிர பார்வை தான் தெரியல."
"நீங்க பேசுறதப் பாத்தா..."
"ஒன்ன என்னோட மெட்ராசுக்குக் கூட்டிக்கிட்டுப் போகணும். மெரீனாவுல சந்தோஷமா பேசிக்கிட்டு இருக்கணும். பாம்புப் பண்ணையப் பாக்கணும். மிருகக் காட்சி சாலைக்குப் போய்ப் பொறிகடலைய வாங்கிக் குடுத்திட்டு, அத நீ குரங்குக்குட்டிக்கிட்ட போடணும். அது சாப்பிடுகிற சந்தோஷத்துல நீ சந்தோஷப்படுறத நான் பார்க்கணுமுன்னு நெனச்சேன். ஆனா..."
உலகம்மை நாணத்தால் ஒருகணம் தலை குனிந்து கொண்டாள். பிறகு அப்படித் தலை குனிந்ததற்குத் தலைகுனிந்தவள் போல் அடித்துப் பேசினாள்:
"நீங்க என்னவெல்லாமோ பேசுறிய. எனக்கு ஒண்ணும் நீங்க நெனக்கிறது மாதிரி ஆசை கிடையாது. விரலுக்குத் தக்க வீக்கமுன்னு தெரிஞ்சவா நான்."
"நானும் நீ அப்டி நினைக்கதா சொல்லல. உன்னக் கல்யாணம் பண்ணிக்கப் போறதாவோ சொல்லலியே? என்னமோ தெரியலை. பைத்தியம் பிடிச்சவன் மாதிரி உளறுறேன்."
உலகம்மை லேசாகத் துணுக்குற்றாள். அவன் பேசிய தோரணை, ஏனோ அவளை ஒரு வினாடி வாட்டியது.
"அப்படின்னா சரோசாக்காவ கட்டிக்க மாட்டியளா?"
"அப்படியும் சொல்ல முடியாது. இப்படியும் சொல்ல முடியாது. இது யோசிக்க வேண்டிய பிரச்சினை. அந்தப் பொண்ண நினைச்சாப் பரிதாபமாயும் இருக்கு. கோழிக்குஞ்சை பிடிச்சுக்கிட்டுப் போற பருந்து கதை இது. பருந்தோட கொடுமைய நினைச்சி வருத்தப்படுறதா, இல்ல உணவுக்காகக் காத்துக்கிடக்கற பருந்துக் குஞ்சுக்காகப் பருந்தப் பாராட்டுறதா என்கிறத இப்பவே சொல்ல முடியாது. பருந்த விரட்டி குஞ்சைக் காப்பாத்துறதா, பருந்துக் குஞ்சை நினைச்சி அப்படியே நடக்கிறத, நடக்கிறபடி விடுறதா என்கிறத உடனே சொல்ல முடியுமா?"
"ஒண்ணு மட்டும் சொல்லுவேன். எங்க சரோசாக்கா கூட ஒரு நிமிஷம் பழகினா போதும். ஒங்களுக்குப் பிடிச்சிடும். அவளுக்கும் ஒங்களுக்கும் கல்யாணம் நடக்கும் போது அவள விட சந்தோஷப்படுகிறவா ஒருத்தி இருக்க முடியுமுன்னா அது நான் தா. சரி, நான் வாரேன்."
"இளநி?"
"சாப்புட்டா சரோசாக்காவோட தான். வாறேன்."
உலகம்மை மீண்டும் அவனை விட்டு விலகி நடந்தாள். அவன் கூப்பிடுவான் என்று எதிர்பார்த்தவள் போலவும், அப்படிக் கூப்பிடும்போது, அவன் குரல் கேட்க முடியாத தூரத்திற்குப் போக விரும்பாதவள் போலவும், அடிமேல் அடி வைத்து நடந்தாள். அவன் கூப்பிடவில்லை. அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. திரும்பிப் பார்த்தாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பது போல் தெரிந்ததும், ஏதோ ஒரு சுகம் தெரிந்தது. எதையோ நினைத்துக் கொண்டவள் போல் அவனிடம் ஓடி வந்தாள்.
"ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். நான் இங்க வந்தத யாருக்கிட்டயும் சொல்லிடாதிய. தெரிஞ்சா மாரிமுத்து மாமா என்ன உயிரோட எரிச்சிடுவாரு. அதவிட சரோசாக்கா என்ன தப்பா நெனப்பா. உயிரோட எரியக் கூடத் தயாரு. இது யாருக்கும் பிரயோஜனமில்லாத கட்டை. ஆனா சரோசாக்கா என்னைத் தப்பா நெனச்சா என்னால தாங்க முடியாது. கல்யாணத்துக்கு அப்புறமும் நீங்க இத அவாகிட்ட பேசப்படாது. இதுக்குத்தான் காலையில நாலு மணிக்கே எழுந்திருச்சி யாருக்கும் தெரியாம ஓடியாந்தேன். நான் வாறேன்."
உலகம்மை அவனைத் திரும்பிப் பார்க்காமலே, வேகமாக நடந்தாள். யாருக்கும் தெரியாமல், அவனிடம் மட்டும் 'ரகசியம்' பேசியது ஒருவித இன்பத்தை தன்னை மீறி, தனக்களிப்பதை உணர்ந்த உலகம்மை சரோசாவின் நல்ல குணங்களையும், அவள் புடவை கொடுக்க முன்வந்ததையும் நினைத்துக் கொண்டே, 'சரோசாக்கா நல்லவா, நல்லவா' என்று மனத்துக்குள் சொல்லிக் கொண்டே நடந்தாள். என்றாலும் ஒரே ஒரு சமயம், அவளால், திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவள் திரும்பிப் பார்த்தபோது, அவன் மீண்டும் தோட்டத்திற்குள் திரும்பிக் கொண்டிருந்தான். அவள் உடலெல்லாம் கரிப்பது போல், மேற்கொண்டு நடக்க முடியாத அளவுக்குக் கனத்தது போல் அவளுக்குத் தோன்றியது. ஏதோ ஒன்றைப் பறிகொடுத்தது போன்ற உணர்வுடன் அவன் திரும்பிப் பார்க்கவில்லையே என்ற ஆதங்கத்துடன், அந்த எண்ணத்திற்கு வெட்கப்பட்டு தன்னை வெறுப்பவள் போலவும், ஒரு தடவை காறி உமிழ்ந்துவிட்டு அவள் நடந்து கொண்டிருந்தாள்.
தோட்டத்திற்குப் போய் அங்கே குவிந்து கிடந்த சரலில் ஏறி நின்று கொண்டு தன்னையே அவன் பார்த்துக் கொண்டிருப்பது தெரியாமல் திரும்பிப் பாராமலே அவள் நடந்தாள்.
ஆனால் பீடி ஏஜெண்ட் ராமசாமி திரும்பிப் பார்க்காமல் போகவில்லை. குட்டாம்பட்டிக்கு பீடி இலை வராததால், சட்டாம்பட்டிக்காவது வந்திருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக சைக்கிளில் போய்க் கொண்டிருந்த அவன், 'உலகம்மையைப் போல் இருக்கே' என்று நினைத்தவன், அரை பிரேக் போட்டுக் கொண்டு, பெடலை மிதிக்காமல் மெள்ளப் போனான். பிறகு ஒரு பனை மரத்தடியில் 'ஒதுங்குபவன் போல' பாவலா செய்து கொண்டு நின்றவன், இப்போதுதான் சைக்கிளை உருட்டிக் கொண்டு, பெடலில் காலை வைத்தான்.
ஒரு நாள் முழுதும் உலகம்மைக்கு நிம்மதியில்லை... லோகுவைச் சந்தித்ததால், திருமணம் நின்று போன செய்தி வந்தாலும் வரலாம் என்று உள்ளூரப் பயந்து கொண்டிருந்தவளுக்கு, இப்போது போன உயிர் வந்துவிட்டது. மாரிமுத்து நாடார் வீட்டில், கல்யாண வேலைகள் தங்கு தடையின்றி நடந்துவந்தன. தினமும் காலையிலும், மாலையிலும், சரோசாவைப் பார்த்து, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, வேலை வெட்டிக்குப் போகும் அவளால் நேற்றுப் போக முடியவில்லை. ஏதோ ஒரு குற்றம் செய்துவிட்ட உணர்வில் தவித்தாள்.
ஆனால் அவள் பயந்தது மாதிரி எதுவும் நடக்காததால், மாரிமுத்து நாடாரின் வயலுக்குப் புறப்பட்டாள். போகிற வழியில் அவர் மகளைப் பார்க்கலாம் என்று நினைத்தாள். பிறகு சாயங்காலம் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று தட்டிக் கழித்தாள்.
நார்க்கட்டிலில் ஒருக்களித்தவாறு படுத்துக் கொண்டு, மூட்டைப் பூச்சிகளை நசுக்கிக் கொண்டிருந்த அய்யாவின் தலலயில், அவர் சற்றும் எதிர்பார்க்காத தருணத்தில், உலகம்மை சட்டியில் காய்த்து வைத்திருந்த விளக்கெண்ணையை எடுத்து, அரக்கத் தேய்த்தாள். அவர், "பாத்தும்மா, தல புண்ணாயிடும்" என்று சொல்லிக் கொண்டார். உலகம்மை, தலையைப் பிடித்தவிதம், அவருக்கு தனது தலை இன்னொரு மூட்டைப் பூச்சி போல் தோன்றியிருக்க வேண்டும்.
புறப்படப் போன உலகம்மை, அய்யா அவளை அர்த்தத்துடன் பார்ப்பதைக் கவனித்துவிட்டு, "என்னய்யா விஷயம்" என்றாள்.
"போறவள மறிக்கப்படாது, போயிட்டு வா."
"எதையோ சொல்ல வந்தியரு?"
"ஒண்ணுமில்ல, கலக்கமா இருக்கு."
"கலக்கலா? இனிமே ஒமுக்கு அதுக்குக் காசு கெடயாது. மெட்ராஸ்ல வார்னிஷையோ எதையோ குடிச்சிட்டு நிறய முட்டாப்பயமக்க செத்துப் போயிட்டாங்களாம். இனிமே அந்தச் சமாச்சாரமே பேசப்படாது."
உலகம்மை வீட்டிலிருந்து வெளியேறினாள். 'விளக்குழிக்குள்' இருந்த கலையத்திற்குள் இரண்டு மூன்று ரூபாய் இருப்பது அய்யாவுக்குத் தெரியும் என்பது அவளுக்குத் தெரியும். அதே நேரத்தில் அய்யா, ஆயிரந்தான் கலக்கம் வந்தாலும் அவளிடம் கேளாமல் அதை எடுக்க மாட்டார் என்பதும், அவளுக்குத் தெரியும். 'சாயங்காலம் கலக்கலுக்குக் குடுக்கிற காசுக்கு ஒரு முட்டை வாங்கி அடைபண்ணி அய்யாவுக்குப் போடணும்' என்று நினைத்துக் கொண்டு வயலைப் பார்த்து நடந்தாள்.
வயலில், இன்னும் மூன்று 'தட்டுகள்' நடாமல் கிடந்தன. அதோடு நாற்றங்கால் இருந்த ஒரு மரக்கால் விதப்பாட்டையும் இன்றைக்கு நடவேண்டும்.
கண்மாய்க்கு மேற்கே, குளத்துக்குள் குதித்துக் கொண்டிருந்த பெரிய பையன்களை 'காப்பி'யடிப்பது மாதிரி, கிழக்கே முட்டளவு ஓடிக் கொண்டிருந்த நீரிலே விளையாடிய சின்னப்பையன்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே அவள் நடந்தாள். அவளுக்கும் இப்டி ஒரு தம்பி இருந்தா எப்டி இருக்கும்? அய்யாவுக்கு காவலா இருக்கும்.
மடைவாய்க்குள் வலையை வைத்து மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒருவரிடம், "மாமா, நமக்கும் கொஞ்சம் மீன் குடுக்கக் கூடாதா? இன்னும் ஆறு மாசத்துக்கு ஒம்ம வீட்டில மீன் வாசன தான் இருக்கும். அப்புறம் கருவாட்டு வாசன" என்று கிண்டல் செய்து கொண்டே, அவள் வயலுக்குப் போன போது பத்துப் பன்னிரெண்டு பெண்கள் நட்டுக் கொண்டிருந்தார்கள்.
"என்னழா இன்னிக்கு ஒனக்கு வந்தது? ஏன் சீக்ரமா வரல" என்று எல்லோருக்கும் பிரதிநிதிபோல் பேசிய ஒரு கிழவியின் கேள்விக்கு, "என்ன பாட்டி, கண்ணு வீக்கமா இருக்கு" என்று பதிலளித்துக் கொண்டே, அவள் வயலுக்குள் நுழைந்து, ஒரு 'மொட்டைப் பாத்தியில்' அடுக்கப்பட்டிருந்த நாற்றுக் கட்டுகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு குனிந்தாள். "ஒலகு இந்தப் பக்கமா வா" என்று சில பெண்கள் தத்தம் பக்கம் அவளை இழுக்கும் முயற்சியை வார்த்தையாக்கினார்கள். ஏதோ ஒரு பக்கமாய் நின்று குனிந்து அவள் நட்டுக் கொண்டிருந்தாள்.
ஒரு மணி நேரம் ஆகியிருக்கும்.
"ஏய் உலகம்மா, ஒன்னத்தான் ஒன்னத்தான்" என்று கத்திக் கொண்டே வந்த வெள்ளைச்சாமி, குத்துக்காலில் சாய்ந்து கொண்டிருந்தான். அவன், எங்கிருந்து வந்தான் என்று தெரியவில்லை. கரை வழியாய் வந்தவன் மாதிரியும் இல்லை. பம்ப் செட்டுக்குள் படுத்துக் கொண்டிருந்தவன் மாதிரியும் தெரியவில்லை. திடீர் இட்லி, திடீர் காபி மாதிரி திடுதிப்பென்று வந்து நின்றான்.
"என்ன பூ, உலவு, ஒனக்கு லக்கி அடிக்கி. அன்னிக்கி என்னடான்னா மாரிமுத்து மச்சான் கூப்புட்டாரு. இன்னிக்கு பிராந்தன் கூப்பிடுறான். ஒன்பாடு தேவல. குறுக்க நிமுத்த முடியாம கஷ்டப்படாண்டாம்" என்றாள் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி.
"பிராந்தன அங்கயே போயி பாருக்கா. இங்க வந்தா முன்னா வேலயில இல்லாத குறல்லாம் சொல்லுவான்" என்றாள் இளம்பெண் ஒருத்தி. அவள் கல்யாணமாகி, ஒரு பிள்ளைக்குத் தாயானவள். கல்யாணமாகாத உலகம்மையை 'அக்கா' என்றழைத்து, தனக்கு இன்னும் இளமை இருக்கிறது என்பதைக் காட்டிக் கொள்பவள்.
"ஒன்பாடு லக்கிதான். கிளம்பு ஒலவு. இந்தப் பிராந்துப்பய இங்க கத்தறது மெட்ராஸுக்குக் கேக்கும் போலிருக்கு. மாரிமுத்து கல்யாண வீட்ல இவன ஆடச்சொன்னா நல்லா ஆடுவான். செலவும் மிச்சம். என்ன ஒலவு, எதுக்குக் கூப்பிடுறான்?"
உலகம்மை, நாற்றுக்கட்டுத் தீரட்டும் என்று நினைத்தவள் போல், அவன் கூக்குரலைப் பொருட்படுத்தாமல் நட்டுக் கொண்டிருந்தாள். கட்டில் மிச்சத்தை மற்றவர்களிடம் கொடுக்க அவள் இஷ்டப்படவில்லை. "மாரிமுத்து மாமா வீட்ல இன்னிக்கு சொக்காரங்க ஆக்கிப் போடுறாவுளாம். அண்டா குண்டா கழுவ கூட்டிக்கிட்டு வரச் சொல்லி இருப்பார்" என்று உரக்கச் சொல்லிக் கொண்டே, வயல் நீரில் நாற்றுமீது படாமல், கையைக் கழுவிக் கொண்டிருந்தாள்.
வெள்ளைச்சாமியால், இப்போது குத்துக்காலில் இருந்து கத்த முடியவில்லை. தொண்டை வலித்திருக்க வேண்டும். வயலுக்கே வந்தான்.
"ஏய் உலகம்மா, நான் சொல்றது காதுல விழல?"
"இரேன், அப்பாவு, என்ன மாடுன்னு நினைச்சியா மனுஷின்னு நினைச்சியா?"
"நீ மாடும் இல்ல. மனுஷியும் இல்ல. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யுற திருட்டுத் தேவடியா. அடுத்துக் கொடுக்கற பனையேறிச் செறுக்கி மவா. வயலுக்குள்ள ஏமுழா போனா? ஒப்பன் வயலாளா? இல்லன்னா ஒன் வைப்பாளன் வயலாளா? எத்தனாவது சட்டத்துலழா வயலுக்குள்ள வரலாம்? வாரியா, இல்ல..."
உலகம்மை திகைத்துத் திக்குமுக்காடிப் போனாள். அவளுக்கு ஒன்றும் ஓடவில்லை. தலை விண்ணென்று தெரித்தது. நெஞ்சு அடித்துக் கொள்ளும் சத்தம் அவளுக்கு நன்றாகக் கேட்டது. அவன், வேறு யாரையோ பேசுவது மாதிரியும் அவளுக்குத் தோன்றியது. இந்த மாதிரி யாருமே, அவளைப் பேசியதில்லை. கிராமத்து வாலிபப் பெண்கள் 'கெட்ட' வார்த்தைகள் பேசுவதை, வெறுப்பவள் அவள். 'நம்ம உலகு தான் நூத்துல ஒருத்தி. அவா வாயில மறந்து கூட ஒரு கெட்ட வார்த்த வராது' என்று பல 'கெட்ட வார்த்தை' பெண்களாலேயே புகழப்பட்டவள். வெள்ளைச்சாமி பேசியதைக் கேட்டும் சாகாமல் இருக்கிறோமே என்று வருத்தப்பட்டாள். அப்படிப் பேசிய அவனை, சாகடிக்காமலும் இருக்கிறோமே என்று கோபப்பட்டாள். 'ஒன்ன ராத்திரில அவமானப்படுத்திட்டா' என்று அவள் தந்தை சொன்ன நாளிலிருந்து, இடுப்பில் யாருக்கும் தெரியாமல் ஒரு சின்னக் கத்தியைச் 'செருகி' வைத்திருக்கும் அவள், இப்போது அந்தக் கத்தியை எடுத்து அவன் தொண்டைக் குழியைக் குத்தி நெஞ்செலும்பைத் 'தென்னி' எடுக்கலாமா என்று கூட நினைத்தாள்.
சில சினிமாப் படங்களைப் பார்த்திருக்கும் உலகம்மை, இத்தனை கலக்கத்திலும், லோகநாதன் அங்கே திடுமென்று வந்து, வெள்ளைச்சாமியை உதைப்பது போலவும், அவன் கழுத்தைப் பிடித்துத் திருகுவது போலவும், 'தேவடியா' என்று சொன்ன அவன் உதடுகளைப் பனைமரத்தில் வைத்துத் தேய்ப்பது போலவும், அது முடிந்ததும் அழுதுக் கொண்டிருக்கும் அவளை அணைத்துக் கொள்வது போலவும் கற்பனை செய்து பார்த்தாள். பிறகு 'இப்டி புத்தி கெட்டதனமா சரோசாவுக்குத் துரோகமா நெனக்கிற என்னை அவன் என்ன சொன்னாலும் தகும்' என்று நினைத்துக் கொண்டாள். இருந்தாலும் விட்டுக் கொடுக்காமல் பேசினாள்:
"ஒனக்கு நான் என்ன பண்ணுனேன் வெள்ளையா? ஏன் இப்டி அவமானமா பேசுற?"
"எனக்குப் பண்ணினா என்ன? எங்க பெரிய்யாவுக்குப் பண்ணினா என்ன? நாக்குமேல பல்லுப்போட்டுப் பேச ஒனக்கு வெக்கமா இல்லழா? வயல விட்டுவா நாய."
இதர பெண்களும், ஸ்தம்பித்துப் போய், நாற்றுக்கட்டுகளை நீருக்குள் போட்டுவிட்டு எதுவும் புரியாதவர்களாய் நின்றார்கள். குளக்கரையில் மாரிமுத்து நாடார் மனைவி பேச்சி வந்து கொண்டிருந்தாள். வெள்ளைச்சாமி, பெரியம்மைக்குக் கேட்க வேண்டும் என்பது போல், தன்னைக் கதாநாயகனாய் நினைத்துக் கொண்டு, பேச்சியின் திருப்தியைச் சம்பாதிக்கும் முறையிலும் மேலும் மேலும் கெட்ட கெட்ட வார்த்தைகளால் பேசிக் கொண்டே போனான். உலகம்மையால் பொறுக்க முடியவில்லை.
"வெள்ளையா, மரியாதி குடுத்து மரியாதி வாங்கு. முப்பத்திரெண்டு பல்லும் உடஞ்சி போவும். ஜாக்கிரத."
"யாருக்கு உடையுதுன்னு பார்த்துடலாமுழா."
"என்ன எதுக்குல அவமானமா பேசுற?"
"நீ எதுக்கிழா சட்டாம்பட்டிக்குப் போன? எந்தக் கள்ளப்புருஷனப் பாக்கப் போனழா? இந்த ஊர்ல ஆம்புள கிடைக்கலன்னா அந்த ஊருக்குப் போன? எச்சிக்கல தேவடியா. எங்க பெரிய்யா வயலுல்ல நாய் மாதிரி வேல பாக்கிற 'வாங்கிக் குடிச்ச' கூலிவேல பாக்கிற செறுக்கிக்கு இவ்வளவு திமுரு இருக்குமுன்னா எங்களுக்கு எவ்வளவு இருக்கும்? வயல்ல ஏமுழா நிக்கிற? பனையேறிப்பய மொவள."
நாற்றுக்கற்றைகளைப் போட்டுவிட்டு, வாய் பிளந்தவாறு நின்ற 'பொம்பிளைகளால்' இதற்குமேல் பொறுக்க முடியவில்லை. 'தனக்கு வந்தாத் தெரியும் தலைவலியும் நோயும்' என்பது மாதிரி; 'வாங்கிக் குடிச்சி', 'கூலிவேல பாக்குற செறுக்கி' என்பன போன்ற வார்த்தைகள் தங்களையும் தாக்குவதை உணர்ந்திருந்தார்கள். சிறிது நேரம் அந்த பிராந்துப் பூனைக்கு எப்படி மணிக்கட்டுவது என்று யோசிப்பது போல், கைகளை முஷ்டிகளாக்கி நெரித்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில், ஒரு கிழவி போர்ப்பரணி பாடினாள்:
"ஏய் வெள்ளயா! அறிவிருக்கால? அவள ஏமுல அப்பிடித் திட்டுற? நாய்க்குப் பிறந்த பயல."
"ஒனக்கென்னழா சும்மா கெடயேன், கிழட்டுச் செறுக்கி."
இன்னொருத்தி பிடித்துக் கொண்டாள்; அவள் கிழவியின் அண்ணன் மகள்.
"யாரப் பாத்துல செறுக்கின்ன? யாருல வாங்கித் தின்னவங்க? இருந்த சொத்தை எல்லாம் சைக்கிள் ஓட்டப் பழகுறதாயும் 'பூதுக்கடையிலயும்' தொலச்சிட்டு நாயிலயும் கேடு கெட்ட நாயா, பெரியப்பன் ஊத்துற எச்சிக் கஞ்சிக்கு அலையுற பயலால செறுக்கின்னு கேக்குற? சோம்பேறிப்பய மவன?"
"அந்தத் தேவடியாள பேசினா ஒனக்கென்னழா?"
இன்னொருத்தி இடைமறித்தாள்:
"யார்ல தேவடியா? இந்த இருபது வயசுலயும் ஒருத்தர் ஒரு வார்த்த பேசாதபடி நடக்கறவா அவா. இவள் தேவடியாளாம். தேவடியாங்கிறய, ஒன் தங்கச்சி கதை தெரியுமால? மேலத்தெரு சுந்தரம்பய, ஒன் வீட்டுக்கு வந்து ஒன்னையே சிகரெட்டு வாங்கப் போகச் சொல்லிட்டு ஒன் தங்கச்சிய கட்டிப்பிடிச்சான். அவ தேவடியாளா? இவா தேவடியாளா? எச்சி சிகரெட்டுக்கு ஆசப்பட்டு சொந்த தங்கச்சிய கூட்டிக் குடுக்கிற பயலுக்கு வாய் வேறயல? இவ்வளவு பேசுறியே, ஒன் அக்கா எப்படின்னு ஒனக்குத் தெரியுமால?"
"விட்டுத் தள்ளுக்கா."
"சும்மா இரு அலமு. நானும் பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன். பிராந்துப்பயமவன் முழுத்த பொம்புளப்புள்ளயப் பாத்து வாய்க்கு வந்தபடி பேசுறான். எல, மாரியம்மா சத்தியமா சொல்லுறேன். உலகம்மையோட பாவம் ஒன்ன விடாதுல. நீ புழுத்துத்தான் சாகப்போறல, ஒம்மைய மாதிரி."
"ஏழா, எங்க அம்மையப் பேசுனீன்னா ஒரே வெட்டா வெட்டி கிணத்துக்குள்ள ஆத்துப்புடுவேன்."
இப்போது மற்றொருத்தி சாடினாள்:
"ஏமுழா, கிறுக்குப்பய மவன்கிட்ட பேச்ச வளக்கிறிய? மம்பெட்டிக் கணயவச்சி சாத்தலாம் வாங்க. ஏல பிராந்தா! நீ ஆம்புளன்னா அங்கேயே நில்லுல. ஒன்மேல சாணிய கரச்சி ஊத்தாட்டி சொல்லு."
சில கிழவிகள் தடுத்தும் கேளாமல், பெண்கள், அவனை நோக்கி முன்னேறினார்கள். ஓடுவதா அல்லது சாடுவதா என்று தெரியாமல் வெள்ளைச்சாமி திண்டாடினான். "ஏல வெள்ளய்யா, உலகம்மா மோசம் பண்ணிட்டா. பனையேறீப்பய மவள வாய்க்கு வந்தபடி பேசி விரட்டுல" என்று பெரியப்பா சொன்னதை அமல் செய்ய வந்தால் ஏற்பட்ட ஆபத்தை உணர்ந்தவன் போல் அவன் தவித்துக் கொண்டிருந்த போது, விஷயத்தின் முதல் அத்தியாயத்தை அவன் 'லெவலில்' முடிக்க நினைத்த மாரிமுத்து நாடார், பிறகு ஒரு வேளை விபரீதமாகிவிடும் என்று நினைத்து மனைவி பேச்சியை அனுப்பி வைத்தார்.
அவள் வருவதற்கு ஒரு நிமிடம் தாமதம் ஏற்பட்டிருந்தால், வெள்ளைச்சாமி 'பொம்பிளைகளிடம் அடிபட்டிருப்பான். "முறுத்த ஆம்புளைய அடிக்கப் போறியளா? பிராந்தன்னு இளக்காரமா?" என்று சொல்லிக் கொண்டு வந்த பேச்சியைப் பார்த்ததும், முன்னேறிக் கொண்டிருந்த பெண் கூட்டம் பின்வாங்காலும் முன்வாங்காமலும் அப்படியே நின்றது.
பேச்சி, இன்று தான் அவர்களை நேருக்கு நேராகப் பார்த்துப் பேசுகிறாள். கூலிக்கு வேலை பார்க்கும் அத்தனை பேரும் அவர்கள் எந்த நாட்டில் எந்த கண்டத்தில் இருந்தாலும், அவர்கள் வேலைக்காரிகளே - அதுவும் தனது வேலைக்காரிகளே - என்று நினைப்பவள் அவள். "வேலைககாரப்பய ஒம்ம முன்னால பீடி குடிச்சான். பேசாம இருக்கியரே. வேலக்கார நாயிங்க கிட்ட சரிக்குச் சமமா பேசுனா இப்படித்தான். நாயக்கொஞ்சுனா மூஞ்ச நக்கும்" என்று புருஷனைக் கண்டிப்பாள். இந்த 'சரிக்குச்சம்' அதாவது சரி நிகர் சமத்துவத்தை தலைகீழாகப் பின்பற்றுவதில், தலைகீழாக நிற்கவும் தயங்காதவள். ஒரு சமயம் "ஏக்கா ஒங்க சரோசாவுக்கு எப்ப கல்யாணம்?" என்று எதேச்சையாகக் கேட்ட ஒரு விவசாயக் கூலிப் பெண்ணை, "ஆமா ஒங்கிட்ட யோசன கேட்டுட்டுத் தான் முடிக்கணும்" என்று முரட்டுத்தனமாகக் கேட்டவள்.
பேச்சி 'நாட்டாமை நல்லச்சாமி நாடார் மவள்'. அவள் பிறந்த ஊரில், அவள் அய்யா நாட்டாண்மைக்காரர். அதுவும், இப்போது படித்த இளைஞர்களால் பறி போய்விட்டது. அந்தக் காலத்தில், ஊரில் அம்மங்கொடையோ, ஆத்தாக் கொடையோ நடக்கும்போது, 'குடிசனங்க', அவருக்கு கோயிலில் வெட்டிய ஆட்டுக்கிடாவில் தொடைக் கறியைக் கொடுத்து விட வேண்டுமாம். குளத்தில் மீன் அழிந்தால், முதல் விரால் மீனும் அவருக்குத்தான். கல்யாணம் போன்ற நல்லது நடந்தால், அவரிடம் நாலுபடி அரிசியும், இரண்டு தேங்காயும் கொடுக்க வேண்டுமாம். கருமாந்திரம் மாதிரி கெட்டது நடந்தால், ஒரு துண்டுக் கருவாடும், பத்துப் பலக் கருப்புக்கட்டியும் கொடுக்க வேண்டுமாம். 'வாட்ச்மேன்' மாதிரி, கோவில் சாவியும் அவரிடம் தானாம்.
இப்படிப்பட்ட 'நாட்டாமைச்' சூழலில் வளர்ந்த பேச்சியம்மை ஐம்பதுக்கு மேல் வயதாகியும், இன்னும் 'கர்நாடகமாகவே' இருந்தாள். இதர பணக்காரப் பெண்கள் ஓரளவு தங்களை மாற்றிக் கொண்டதைக் கூட அவள் வெறுத்து, "கெட்டாலும் மேன்மக்க மேன்மக்கதான்" என்று தமிழ்ச் செய்யுளுக்கு அனர்த்தம் செய்து, கெட்டு நொறுங்கிப் போன அய்யா நிலையை நியாயப்படுத்துபவள். சரோசா கிழவியாகிப் போனதுக்கு இவளே காரணம்.
அப்படிப்பட்டவள், வேலைக்காரிகளின் எதிர்ப்பைக் கண்டதும், கொஞ்சம் திடுக்கிட்டாள். அவளைப் பார்த்ததும், அவர்கள் வயலுக்குள் விழுந்தடித்துப் போவார்கள் என்று நினைத்து, அப்படி எதுவும் நடக்காததால், அதிர்ந்து போனாள். 'பெருங்காய வாசனையை' கைவிடாமல் அதட்டினாள்.
"அவன அடிக்கப் போறியள, அடிக்க முடியுமா உங்களால?"
ஆவேசமாகப் பதில் வந்தது.
"அவனயும் அடிப்போம். அத தடுக்கிறவியலயும் அடிப்போம். ஏழ எழியவங்கன்னா கேவலமா?"
"உலகம்ம எங்களுக்குத் துரோகம் பண்ணிட்டா. அவள வயலுக்குள்ள விடுறதும் விடாததும் எங்க இஷ்டம். நீங்க யாரு அப்பண?"
"ஒருத்தி பாதி நேரம் வேல பாத்தப் பிறவு அவள மாத்த அதிகாரம் இல்ல. அதுவும் தேவடியான்னு சொல்லுறதுக்கு திறந்து கிடக்கல."
"அவா என் வயலுல மிதிக்க முடியாது."
"அப்படின்னா நாங்களும் வேல பாக்கல. அவளுக்கு இல்லாத வயலு எங்களுக்கும் வேண்டாம். வாங்கழா போவலாம். இந்த வயலுல யார் வந்து நடுறான்னு பாத்துப்புடலாம். ஓஹோ."
முப்பது நாழிகையில், இருபத்தெட்டை வீட்டுக்குள்ளே செலவழித்த பேச்சியம்மைக்கு உண்மை புரியத் துவங்கியது. 'காலம் மாறிப் போச்சி. அதுவும் கெட்டதுக்கு மாறிப் போச்சி. அட்டய பிடிச்சிக் கட்டுலுல கிடத்துற மாதிரி, நாயக் குளிப்பாட்டி நடுவீட்ல வச்சதுமாதிரி தெருவில சுத்துற வேலக்கார நாயுவளும் சட்டம் பேசுற காலம் வந்துட்டு, விட்டுப் பிடிச்சா தான் வாழலாம்.'
இப்போதுதான் பேச்சியம்மை, அந்தப் பெண்களை முதன் முறையாக மனுஷிகளாகப் பார்த்தாள். இப்போதுதான், அவளுக்கு அவர்களும், சேலை ஏன் கட்டுகிறார்கள் என்பதற்கு முழு அர்த்தம் புரிந்தது. இதனால் கொஞ்சம் பயந்து கூடப் போனாள். அதே நேரத்தில், எப்படியாவது உலகம்மையை 'டிஸ்மிஸ்' செய்து விடுவதில், அவளுக்கு மட்டும் வயலை 'லாக்கவுட்' செய்வதில் குறியாக இருந்தாள். அதற்காகச் சுருதியை மாற்றினாள். "இத்தனை பேசுறியள! அவன் எதுக்காவ அவள அப்படிப் பேசியிருப்பான்னு நெனச்சிப் பாத்திகளா?"
"ஆயிரம் இருக்கும். அதுக்காவ தேவடியா என்கிறதா? இவன் அம்மா மட்டும் யோக்கியமா?"
"சும்மா ஒங்களுக்குத்தான் பேசத் தெரியுங்குறது மாதிரி கத்தாதீங்க. ஆயிரம் பொய்யச் சொல்லி ஒரு கல்யாணத்த நடத்துன்னு சொல்லுவாக. இந்த உலகம்ம என்ன பண்ணினா தெரியுமா? சட்டாம்பட்டில நிச்சயம் பண்ணின மாப்பிள்ளகிட்ட போயி எதையோ பேசி கலைச்சிட்டா. என் பொண்ணு வயசுல இருக்கிறவளுக, மூணு பிள்ள, நாலு பிள்ள பெத்துட்டா. ஆனால், நான் பெத்த பொண்ணு முப்பது வயசுலயும் கன்னி கழியாம இருக்கா. இப்ப கூடி வந்ததையும் இந்தப் பாதகி கெடுத்திட்டா! சரின்னு சொல்லிட்டுப் போனவங்க, இன்னக்கிப் பொண்ணு வேண்டாமுன்னு சொல்லியனுப்பிட்டாங்க."
பேச்சியம்மைக்கு 'வேலைக்காரிகள்' மத்தியில் அழ விருப்பம் இல்லை. இருந்தாலும் அழுதாள். அந்த அழுகை, பெண்கள் மத்தியில் ஒருவித 'இரக்கத்தைக்கூட' ஏற்படுத்தியது.
பேச்சியம்மை, தன் மகள் கல்யாணம் நின்று போனதுக்காக அழுவதாகத்தான் அந்தப் பெண்கள் நினைத்தார்கள். அது உண்மையுங்கூட. அதே சமயம், 'கூலி வேல பாக்குற பொம்பிளைங்கிட்ட சரிக்குச் சமமா பேசும்படியாய் ஆண்டவன் வச்சிட்டாரே' என்று அதற்கும் சேர்த்து அழுதாள். 'என்ன! உலகம்மையா கலச்சா?' என்று கசமுசா என்று பேசிக் கொண்டே பெண்கள் அவளை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அதே நேரத்தில் உலகம்மை இல்லாமல் வயலுக்குள் போகவும் அவர்கள் விரும்பாதது மாதிரி இருந்தது. ஒருத்தி உலகம்மையிடமே, கேட்டாள்:
"நீ எம்மாளு கிடக்க முடியாம சட்டாம்பட்டிக்குப் போன?"
"போனாளோ போவலியோ? ஆயிரம் இருக்கும். அதுக்காக அவள வெளியேத்துறது நம்மள வெளியேத்துறது மாதிரி."
"இவளும் இப்படிப் போயிருக்கக்கூடாது. அதுக்காக அவனும் அப்படிப் பேசியிருக்கக்கூடாது."
"இவா போயிருக்க மாட்டா. யாரோ கோள் சொல்லிட்டாங்க."
உலகம்மை, சக 'வேலைக்காரிகள்' கொஞ்சம் வீக்காகி வருவதைப் புரிந்து கொண்டாள். அதே சமயம் அவர்களிடம் விளக்கமாகச் சொல்ல அவள் விரும்பவில்லை. சொன்னாலும், அவர்களுக்குப் புரியாது. புரிந்தாலும், அவள் செய்வதை அங்கீகரிக்க மாட்டார்கள். ஏன்? அவளே, இப்போது தான் செய்தது சரிதானா என்பது போல் யோசித்தாள். லோகநாதன் மீது அவளுக்குக் கோபம் வந்தது. 'படிச்சவன' நம்பக்கூடாது என்பது எவ்வளவு உண்மை! ஈரத்துணியைப் போட்டு கழுத்தறத்துட்டான். பாவி. சரோசாக்கா இப்போ எப்டி இருக்காளோ?'
பெண்கள் எந்த முடிவுக்கு வர முடியாமல் தவித்த போது, உலகம்மை ஒரு முடிவுக்கு வந்தாள். பொதுக்கூட்டத்தில் பேசுவது போல் பேசினாள்.
"நான் சட்டாம்பட்டிக்குப் போனது வாஸ்தவந்தான். அதுக்காவ வருத்தப்படவும் இல்ல. சந்தோஷப்படவும் இல்ல. ஏதோ என் போதாத காலம். இவ்வளவும் நடந்த பிறவு நான் இவங்க வயலுல நுழையுறது தப்புத்தான். எனக்காக நீங்க வராண்டாம். நான் போறேன்."
உலகம்மை விருட்டென்று நடந்தாள். அதுவரை அழாமல், கோபத்தால் கன்றிச் சிவந்த அவள் விழிகள் நீரைக் கொட்டின. அவள், 'சரோசாக்கா நம்மளப் பத்தி என்ன நினைப்பாள்!' என்று தான் வருத்தப்பட்டாளே தவிர, வெள்ளைச்சாமியைப் பற்றி அவள் அதிகமாக அலட்டிக்கவில்லை. அதற்காக, அவன் வார்த்தைகள் மறந்து போகக் கூடியவில்லை அல்ல. அவன் அப்படித் திட்டியபோது, இதர பெண்கள் தாயைப் போல பரிந்து பேசியது, அவள் இதுவரை அனுபவித்திராத புதிய பாசம். அவளையறியாமலே கண்ணீர் விட்டாள். ஐந்து வயதிலே அம்மாவை இழந்து தாய்ப்பாசத்தின் கனபரிமாணத்தை உணராத அவள், அந்தப் பெண்கள் அவளுக்காகப் பரிந்து பேசியபோது, அவள் அம்மாவே, பத்துக் கூறுகளாகி, ஒவ்வொன்றும் ஒரு தாயாக அங்கே நட்டுக் கொண்டிருந்தது போல், அவளுக்குத் தோன்றியது. அவளுக்காக அவர்கள் வேலையை விட்டுவிட்டு வரத்தயாராக இருந்ததும் அவளுக்குக் கொஞ்சம் இதமாகவே இருந்தது.
உலகம்மை, ஊருக்கருகே வந்து விட்டாள். என்ன நடந்தது என்பன தெரியாதவள் போலவும், என்ன நடக்கும் என்பது புரியாதவளைப் போலவும் தலையைக் கீழே தொங்கப் போட்டுக் கொண்டே நடந்தாள். 'லோகு சொல்லியிருப்பாரோ? சேசே, சொல்லியிருக்க மாட்டாரு. சரோசாக்காவ கட்ட மாட்டேன்னுட்டாரா? அது அவரு இஷ்டம். தங்க ஊசின்னு கண்ணுல இடிக்க முடியுமா? பாவம் சரோசாக்கா என்னப் பத்தி என்ன நினைப்பா? நான் செஞ்சது சரிதான்னா? அவங்க மட்டும் மாப்பிள்ளய ஏமாத்தப் பார்க்கலாமா? அவரும் பாவந்தான். அவளும் பாவந்தான். ஆனால் நான் தான் பாவி, பொறக்கக்கூடாத பாவி.'
தலை குனிந்து நடந்தவள் 'கனைப்புச்' சத்தங்கேட்டுத் தலை நிமிர்ந்தாள். பலவேச நாடார் அவளைப் பார்த்துச் சிரித்தார்.
"உலகம்மா உன்னோட உதவிய மறக்க முடியாது. நீ உண்மையிலேயே புலிக்குப் பொறந்தவா தான். நான் உன்ன என்னமோன்னு நெனச்சேன். அவன் மாரிமுத்துக்கு பயப்படாண்டாம். சின்னய்யா இருக்கேன். தைரியமா இரு. வீட்ட காலி பண்ணாண்டாம். அவன் வயலு போனா, என் வயலு இருக்கு. சட்டாம்பட்டிக்கு எப்ப போன? மாப்பிள்ளக் கிட்டயே சொல்லிட்டியா?"
உலகம்மை அவரை வெறுப்போடு பார்த்தாள்.
"நான் ஒண்ணும் ஒமக்குப் பயந்து போவல. எனக்கு அநியாயமா பட்டுது. அதனாலே போனேன். சொன்னேன். அவ்வளவுதான்."
உலகம்மை அவரை ஏறிட்டுப் பார்க்காமல் நடந்தாள் 'மானங்கெட்டவன், மானத்த வாங்குறது மாதிரி 'தொழில் பண்ணலாமுன்னு' சொல்லிட்டு, இப்ப அதே வாயால சின்னையாங்றான். மானங்கெட்டத்தனமா பேசுறதும், அப்புறம் மானங்கெட்டத்தனமா 'அலத்துறதும்'. தூ-'
'இந்த ஊர்ல எப்டித்தான் காலந்தள்ளப் போறோமோ' என்று தன்னை அறியாமல் மெதுவாகச் சொல்லிக் கொண்டாள்.
என்னவோ ஒன்று பயங்கரமாக நடக்கப் போகிறது என்ற அச்சத்தை விரட்டியடிப்பவள் போலவும், அதிலிருந்து ஓட விரும்புபவள் போலவும், அவள் வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாகப் போனாள்.
சரோசாவின் கல்யாணம் நின்று போனதே, ஊர்ப்பேச்சாக இருந்தது. உலகம்மையை, சிலர் வெறுப்போடு பார்த்தார்கள். வழக்கமாக அவளிடம் பேசும் பலர், அவளைக் கண்டதும், 'ஒதுங்கிப்' போனார்கள். சிலர் பேசினாலும் பழைய அந்நியோன்யம் இல்லை. ஒரு சிலர் "நீ இப்டி இருப்பன்னு கெனவு கூடக் காணல. ஒனக்கு இதுல என்ன கிடச்சது?" என்றும் கேட்டார்கள். இதே பலவேச நாடார், மச்சினன் மகள் கல்யாண முயற்சிகளைப் பலதடவை தடுத்த போது, ஊர்வாய் மூடிக் கிடந்தது. "பலவேச நாடாரு சமர்த்தன். அவரா கல்யாணத்த நடத்த விடுவாரு" என்று ஒருவித 'ஹீரோ ஒர்ஷிப்' முறையில் பேசிய ஊரார், இப்போது உலகம்மை கல்யாணத்தை நிறுத்தியது, தத்தம் வீட்டில் நடக்கவிருந்த கல்யாணம் நின்று போனதுபோல் பாவித்துக் கொண்டார்கள்.
உலகம்மை, தன் செயலுக்காக அதிகமாக வருந்தவில்லை. என்றாலும், ஒருவிதத் தனிமை அவளைப் பயங்கரமாக வாட்டியது. ஆனாலும், அவள் தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள். "ஒருவன் ஒரு கொல பண்ணியிருப்பான். அத பாக்காத ஜனங்க அவன போலீஸ் அடிச்சிழுத்துக்கிட்டு போவும்போது அந்தக் கொலகாரன் மேலயும் இரக்கப்படும். இது இயற்கை. சரோசாக்கா தங்கமானவா. அவா கல்யாணம் நின்னு போனதுல இரக்கப்பட்டு என்மேல் கோபப்படுவது இயற்கை. இத பெரிசா எடுத்துக்கக் கூடாது. போவப் போவ சரியாயிடும். 'நல்லவன் செய்றதவிட நாளு செய்றது மேலன்னு' சும்மாவா சொல்லுராவ?"
உலகம்மை, ஊர்க்கண்ணில் இருந்து 'கொஞ்ச நாளைக்கு' ஒதுங்கி இருக்க விரும்பினாள். 'மாரிமுத்து நாடார் வயல மறந்தாச்சி. பலவேசம் வயலுல வேல பார்க்கதவிட சாவலாம். பீடி சுத்துற பொழப்பும் போயிட்டு. பேசாம ரோசாபூக்கிட்ட பீடி சுத்திக் கொடுப்போம். அவள நெறய இல வாங்கச் சொல்லலாம்.'
அவள் ரோசாப்பூவை அணுகியபோது, "எக்கா ஒங்கள மாதிரி வருமா" என்று சொல்லும் அந்த ரோசாப்பூ, "இதுக்குத்தான் முன்னோசன வேணுங்கறது. அவன் ராமசாமி அப்டி என்ன பண்ணிட்டான்? அவனப் போயி, பேசாத பேச்சுல்லாம் பேசிட்டியே. அவனுக்குத் தெரிஞ்சா என் பீடி அவ்வளவையும் கழிச்சிப்புடுவான். பேசாம அவங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்க" என்று உபதேசம் செய்தாள்.
என்ன செய்யலாம் என்று உலகம்மை தவித்துக் கொண்டிருந்த போது, சட்டாம்பட்டியில் ஒரு மிராசுதார் வயலில் நடவு வேலை இருப்பதாகச் செய்தி வந்தது. அந்த ஊர்ப்பெயரைக் கேட்டதும், ஒரு பிடிப்பு ஏற்படுவதை, அவள் உணர்ந்தாள். அந்த ஊர்லே பிறந்து அந்த ஊர்லே வளர்ந்தது போன்ற ஒரு எண்ணம் ஏற்பட்டது. "ரெண்டார் ரூபா தான் கெடைக்கும். அஞ்சி மைலுவேற நடக்கணும். ஒனக்கு சம்மதந்தானா" என்று 'கூரோடி' சொன்னபோது "அதெல்லாம் பார்த்தா முடியுமா? ரெண்டு ரூபான்னா கூட வருவேன், நெலம அப்டி" என்று பதிலளித்தாள். 'கூரோடி' கூட 'ரெண்டுன்னு சொல்லியிருக்கணும். அர ரூபாய அடிச்சு மொச்சக் கொட்ட வாங்கி வறுத்திருக்கலாம்' என்று முன்யோசனை இல்லாமல் போனதற்காக, 'பின் யோசனை' செய்தார்.
வீட்டைவிட்டுப் புறப்பட்ட போதே, அவளுக்குத் தாங்க முடியாத உற்சாகம். என்றுமில்லாத வழக்கமாக, தலையை 'சீவிக்கொண்டாள்'. ஒரு சிரட்டையில் கருப்பாகக் கிடந்த 'பொட்டை' ஆள்காட்டி விரலால் அழுத்தி நெற்றியில் வைத்துக் கொண்டாள். அய்யாக்காரர், கனைத்துக் கொண்டு தலையைச் சொறிந்தார்.
"ஒம்மத்தான். அடுக்களப் பானைக்குமேல நெலக்கடல வறுத்து வச்சிருக்கேன். மத்தியானமா தின்னும். சோளச் சோறும், அவுத்திக் கீரையும் இருக்கு. சாப்புட மறந்துடாதேயும்."
"நான் சாப்புடுற நிலயிலா இருக்கேன்? ஊர்ல ஒன்னப் பத்தி பேசுறத கேட்டுக்கிட்டு இன்னும் சாவாம இருக்கேன்! ஒனக்கும் இந்த புத்தி ஆகாது. நாம உண்டு. நம்ம வேல உண்டுன்னு இருக்காம வழில போற சனியன மடியில போட்டுக்கிட்ட."
"போம்போது ஏய்யா மறிக்கியரு."
"நான் மறிக்கல. என் தலையே வெடிச்சிடும் போலிருக்கு. நீ வாரது வரைக்கும் எப்படித்தான் இருக்கப் போறேனோ? நீ வூட்டுக்கு வந்து சேருறது வரைக்கும் உயிர கையில பிடிச்சிக்கிட்டு இருக்கேன்."
"பேசாம தூங்கும்."
"தூங்க முடியலியே. கொஞ்சம் போட்டா ஒரு வேள..."
உலகம்மை லேசாகச் சிரித்துக் கொண்டாள். கலையத்திலிருந்து ஒரு ரூபாயை எடுத்தாலும், அதைக் கொடுக்க மனமில்லாமல், கையிலேயே வைத்துக் கொண்டு, "ஏய்யா ஒமக்கு இந்தப் புத்தி? சாராயம் குடிச்சி மெட்ராஸ்ல செத்துட்டாங்கன்னு சொன்னப் பொறவும் இதுக்கு ஆசப்படலாமா?" என்று கேட்டாள்.
உலகம்மைக்கு அப்போதிருந்த உற்சாகம், அய்யாவின் பேச்சைக் கேட்டு சிரிக்க வைத்தது. ஒரு ரூபாய் நாணயத்தை அவரிடம் நீட்டிவிட்டு, "வெளில சுத்தாம, பேசாமப்படும்; சொல்றது கேக்குதா" என்று கேட்டுவிட்டு, அவர் 'கேக்கு கேக்கலன்னு' சொல்லும் முன்னாலே, தெருவிற்கு வந்து விட்டாள்.
சட்டாம்பட்டிக்குக் கிழக்கே, ஊரை ஒட்டியிருந்த வயக்காட்டில் இதர உள்ளூர்ப் பெண்களுடன் அவள் நட்டுக் கொண்டிருந்தாள். லோகுவைப் பற்றி எப்படி விசாரிக்கலாம் என்று சிந்தித்துப் பார்த்தாள். அவன், அந்தப் பக்கம் வந்தாலும் வருவான் என்று, அவனைத் தேடுவது போல் நாலு பக்கமும் பார்த்தாள். ஒருத்தியிடம் லேசாக, சந்தேகம் வராதபடி பேச்சுக் கொடுத்தாள்.
"எக்கா, எங்க ஊரைவிட ஒங்க ஊர்ல படிச்சவங்க நிறயப்பேரு இருக்காங்க போலுக்கே."
"அதனாலதான் ஒங்க ஊரவிட எங்க ஊரு குட்டிச்சுவரா போயிக்கிட்டு வருது."
"ஏக்கா அப்படிச் சொல்லுத. ஒங்க ஊர்ல படிச்சவங்க பந்து விளையாட வல கட்டியிருக்காங்களாம். நாடகம் போடுறாங்களாம்."
"அதுக்கு மட்டும் குறச்ச இல்ல. இந்தப் பயபிள்ளிய தின்னுப்புட்டுக் கிடா மாதிரி ஊரச் சுத்துறதும், வயசுப் பொண்ணுகளப் பார்த்துக் கண்ணடிக்கதும் ஒரே பொரெளி! அய்யா காச திங்குதுங்களே, இதுங்க அப்புறம் என்ன பண்ணுது தெரியுமா? வேலையில சேர்ந்ததும் பய பிள்ளியளுக்கு கண்ணுந் தெரியமாட்டக்கு, காலுந் தெரியமாட்டக்கு. நாலு மொள வேட்டியக் கட்டிக்கிட்டு, நாயா ஊரச் சுத்துன பய பிள்ளியல்லாம் முழுக்கால் சட்டயப் போட்டுக்கிட்டு, கோயிலுக்குள்ள கூடச் செருப்போட போவுதுங்க! காலுல கரையான் அரிக்க."
இன்னொரு பெண்ணும் பேச்சில் கலந்து கொண்டாள்.
"படிக்காத பயலுவளப் பாத்தா இவனுக எவ்வளவோ தேவல தெரியுமா? நம்ம ஊர்ல பிச்ச எடுக்காத குறையா அலைஞ்சான முத்து, அவன் சங்கதி தெரியுமா? மெட்ராஸ்ல போயி பலசரக்குக் கட வச்சி பயமவனுக்கு காசு சேந்துட்டு போலுக்கு. போன மாசம் அம்மன் கொட சமயத்துல அவன் வந்து குலுக்குன குலுக்கு... இருட்டுலயும் கண்ணாடி! தாறு பாச்ச பய மவனுக்குப் பேண்டு! சட்ட! நல்லா இருக்கட்டும். ஆனால், பழயத மறந்து அந்தப்பய ஒரு வாழ மரத்த பாத்துட்டு 'இதுல என்ன காய்க்குமுன்னு' கேட்டானாம். எப்டி இருக்கு கதை? நம்ம மகராஜனும் இருக்காரு. படிச்சவர்தான்; அவரைப் பத்தி ஒண்ணு சொல்ல முடியுமா?"
"நீ தான் ஒன் அத்த மவன மெச்சிக்கிடணும். நீ என்னமோ அத்த மவன் ஒன்னக் கட்டுவான்னு நெனக்க. எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு. நீ வித்தியாசமா எடுக்காட்டா ஒண்ணு சொல்லுறேன். அவன் ஒன்னக் கெட்டிக்கிடுறேன்னு ஆசையா பேசுவான். நம்பி மோசம் போயிடாத... ஆம்புள ஆயிரம் சவதில மிதிச்சி ஒரு கொளத்துல கழுவிடலாம். ஆனால் பொம்பிள உஷாரா இருக்கணும். அதுவும் வெள்ளச் சட்டப் பயலுவகிட்ட ரொம்ப ஜாக்கரதயா இருக்கணும்."
"ஆமாக்கா, திருநெல்வேலில படிச்சான் பாரு, பெருமாள், அவன் அய்யா, மவனுக்கு ரூபாய எடுத்துக்கிட்டு போனாராம். பெருமாள் கிட்ட மத்த பையங்க அவர யாருன்னு கேட்டாங்களாம். இவன் அய்யாவுக்கு கேக்காதுன்னு நெனச்சிக்கிட்டு 'எங்க வீட்டு வேலைக்காரன். வீட்ல இருந்து ரூபா குடுத்து, அப்பா அனுப்பியிருக்கார்'ன்னு சொன்னானாம். எப்படி யக்கா?"
"சொல்லியிருப்பான். அவனுக்கு கவர்னர் மவன்னு மனசுல நெனப்பு. விளங்காத பயபுள்ள. அவன் அய்யா இப்போ படுத்த படுக்கையா கெடக்காரு."
உலகம்மை பொறுமையிழந்தாள். லோகுவைப் பற்றிப் பேச்சே வராதது, தன் லட்சியம் நிறைவேறாதது போலிருந்தது. அதே நேரத்தில், அவன் பெயர் அந்த சந்தர்ப்பத்தில் அடிபடாமல் இருப்பதில் ஒருவித ச்ந்தோஷமும் ஏற்பட்டது. மேலும் பேச்சுக் கொடுத்துப் பார்த்தாள். "அப்படின்னா ஒங்க ஊர்ல படிச்சவங்க எல்லாமே மோசமா?" என்றாள்.
"அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கு. மோசமான பய படிச்சா, ரொம்ப மோசமாயிடுறான். நல்ல பய படிச்சா, கொஞ்சம் மோசமாயிடுறான். காலேஜ்ல படிச்சவனும், சினிமா பார்க்கறவனும் கண்டிப்பா கெட்டுத்தான் போவான்."
"ஆமா, ஒங்க ஊர்ல இருந்து பையனுக்கு எங்க ஊர்ல கல்யாணம் நடக்கதா இருந்துதுல்லா?"
"அத ஏன் கேக்க? படிச்ச பயலுவள்ளே லோகன் தான் உருப்படியாவான்னு நெனச்சோம்! அவனும் மோசமான பயலாத்தான் இருந்திருக்கான்; ஒங்க ஊர்ல போயி பொண்ண கோயில் பக்கம் பாத்துட்டு 'சரி' சொல்லிட்டு வந்தான்! இப்ப கட்டமாட்டேன்னுட்டான். இவனுக்கு அஞ்சாறு தங்கச்சிய இருக்கு. அவளுவளுக்கு இப்டி ஆனா சம்மதிப்பானா?"
"ஏன் மாட்டேன்னாராம்?"
"பலர் பலவாறு பேசுறாங்க. ஒங்க ஊர்ல இருந்து எவளோ ஒருத்தி மோகினி மாதிரி அவன் கிட்ட தோட்டத்துல வந்து பேசுனாளாம். அந்தத் தேவடியா முண்ட பேச்சக் கேட்டுக்கிட்டு, இந்தப் பய, அய்யாகிட்ட முடியாதுன்னுட்டானாம். ஒரு காலத்தில் நாங்கெல்லாம் எங்க ஊருக்குப் போவும் போது வீட்டுக்காரர் கூட சேந்து போவ வெக்கப் படுவோம். ஊரு போறது வரைக்கும் சேந்து போனாலும் ஊரு வந்துட்டா ஒரு பர்லாங்கு தள்ளி நடப்போம். அவரு யாரோ நாங்க யாரோங்ற மாதிரி. இப்ப என்னடான்னா கல்யாணம் ஆகாத ஒரு முண்ட இவங்கிட்ட தளுக்கிப் பேசி ஒரு குடியக் கெடுத்திட்டா. பாவம் சங்கர நாடார்! மவளுவள கரையேத்த இந்தக் கல்யாணத்ததான் நம்பியிருந்தாரு."
உலகம்மையால் மேற்கொண்டு பேச முடியவில்லை. இடது கையில் வைத்திருந்த நாற்றுக்கட்டை எடுத்து, வலது பாதத்தில் அடித்துக் கொண்டாள். குறுக்கு வலியைப் போக்க நிமிர்ந்தவள் போல் நிமிர்ந்து லேசாகக் கண்களைத் துடைத்துக் கொண்டாள். நடந்த விபரம் முழுவதையும், அந்தப் பெண்களிடம் சொல்லி அழ வேண்டும் போல் இருந்தது. நீ 'செஞ்சது சரிதான்' என்று அவர்கள் சொல்ல வேண்டும் போலிருந்தது. என்றாலும் உலகம்மைக்கு எதுவும் ஓடவில்லை. அவள் தூரத்து உறவுப் பாட்டி ஒருத்தி சட்டாம்பட்டியில் இருக்கிறாள். இன்று சாயங்காலம் ஊருக்குப் போகிற வழியில் அவளைப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தாள். இப்போது அந்த எண்ணத்தையே கைவிட்டு விட்டாள். லோகு வருவதைப் பற்றி இப்போது அவளுக்கு அக்கறை இல்லை. ஆனால் இப்போதும் நாலுபக்கமும் பார்த்தாள். 'சட்டாம்பட்டிய மிதிக்காம ஊருக்குப் போறதுகு வேற வழியிருக்கான்னு' தெரிந்து கொள்வதற்காகப் பார்த்தாள். அல்லது அப்படிப் பார்ப்பதாக நினைத்தாள்.
வேலை முடிந்ததும், வழக்கமாக வாய்க்கால் நீரிலோ, கமலக்கிடங்கில் பெருகி நிற்கும் தண்ணீரிலோ கால் கைகளை அலம்பும் பழக்கத்தைக் கைவிட்டவளாக அவள் வரப்பு வழியாக நடந்தாள். மிகப் பெரிய சுமை ஒன்று தலையில் அழுத்துவது போல் இருந்தது. தீர்வு காண முடியாத ஒரு பழி பாவத்திற்கு ஆளாகி விட்டது போல், கூனிக் குறுகி நடந்தாள். 'ஏன் தான் பிறந்தோமோ? ஒரு பொண்ணோட உடம்ப காட்டி இன்னொரு பொண்ணோட கல்யாணத்தை நடத்த இருந்த கவுலப்பத்தி ஏன் ஒரு ஜனமும் பேச மாட்டக்கு? ஊரு உலகத்துல ஆயிரம் இருக்கும். நமக்கென்ன? நான் ஏன் எடாத எடுப்பு எடுத்து, படாதபாடு படணும்? பாவம் சரோசாக்கா! அவளுக்குத் துரோகம் பண்ணிட்டேனே.'
சிந்தித்துக் கொண்டே வந்ததால், குட்டாம்பட்டியை நெருங்கியது அவளுக்கே தெரியவில்லை. சண்முகமும் மாடுகளைப் 'பத்திக் கொண்டு' போனார். இவர் மலேயாவில் இருந்தவர். பிறந்த பூமியில் இறக்க வேண்டும் என்று நினைத்தவர் போல், ஆயிரக்கணக்கான ரூபாயோடு ஊருக்கு வந்தார். அவர் போட்டிருந்த சட்டை அப்படி மினுங்கியது. பெண்டாட்டி பிள்ளைகளை, என்ன காரணத்திற்காகவோ அங்கேயே விட்டுவிட்டு, இவர் மட்டும் இங்கே வந்தார். "ஒன்னப் பாக்க ஆசயா இருக்கு. ஒன் மொகத்த ஒரு தடவயாவது காட்டிட்டு போன்னு" கடிதங்கள் எழுதிய உறவுக்குக் கைகொடுக்க ஓடிவந்தவர். சூதுவாதில்லாத இவரிடம் இருந்த பணமெல்லாம் கறக்கப்பட்டு, இப்போது, வேண்டாம் ஆளாக, மலட்டுப் பசுவாக, வயிற்று நோயைத் தீர்க்க வேண்டிய அவசியத்தால் பண்ணையார் ஒருவரின் மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறார்.
முன்னால் போய்க் கொண்டிருந்த அவரையே பார்த்துக் கொண்டு, அவர் வரலாற்றில் தனக்குத் தெரிந்த பகுதியை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்த உலகம்மை, தன் நிலைமையை அவருடன் ஒப்பிட்டுப் பார்த்தாள். தலையில் கொஞ்சம் சுமை இறங்கியது போலிருந்தது. 'அய்யாவுக்குச் சோறு பொங்கணுமே' என்று நினைத்து, அவசரமாக நடக்க எண்ணி குறுக்கே வந்த ஒரு மாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டு, அவள் முந்தப் போன போது, மாடு மேய்ச்சியாக மாறிய மலேயாக்காரர், அவளைப் பார்த்துவிட்டு திடுக்கிட்டவர் போல் அப்படியே நின்றார்.
"ஒலகம்மா, ஒனக்கு விஷயந் தெரியாதா?"
"என்னது அண்ணாச்சி?"
"ஒங்க அய்யாவ காளியம்ம கோவில் முன்னால கோட்டக்கிழிச்சி நிறுத்தியிருக்காங்க. மாரிமுத்து நாடாருக்குக் கடன் குடுக்கணுமோ? அடக் கடவுளே. ஒனக்கு விசயம் தெரியாதா? பாவம் மத்தியானம் மாடுபத்திக்கிட்டு வரும்போது, சின்னய்யா அந்தக் கோட்டுக்குள்ள துடிச்சிக்கிட்டு இருக்கறத பாத்ததும் நான் அழுதுட்டேன். மலேயாவுல இப்படிக் கிடையாது."
உலகம்மையால் அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை. தலைவிரி கோலமாக ஓடினாள். ஊருக்குச் சற்று வெளியே இருந்த பிள்ளையார் கோவிலில் எந்தவித மாறுதலும் இல்லை. அந்தத் தெருவில் வசித்த பிள்ளைமார்களும், பண்டாரங்களும் "ஒங்கய்யா கோட்டுக்குள்ள இருக்காரு. மாரிமுத்து நாடார் கைய கால பிடிச்சி வெளில கொண்டு வா" என்று சாவகாசமாகச் சொன்னார்கள். ஆசாரித் தெருவிலும் மாறுதல் இல்லை. உதிரமாடசாமியும் அப்படியே இருந்தார்.
பள்ளிக்கூடத்தின் பக்கம் வந்தபோது, கிழக்கு மேற்காக இருந்த அந்தத் தெருவில், பலசரக்குக் கடைகள் வழக்கம் போல் தான் இயங்கிக் கொண்டிருந்தன. அந்தக் கடைகளுக்கு எதிர் வரிசையில் இருந்த நாலைந்து டீக்கடைகளில் வழக்கம் போல் உட்கார்ந்திருப்பவர்கள் 'இப்பவும்' அப்படியே உட்கார்ந்து பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். 'வாலிபால்' விளையாட்டும், 'லவ் சிக்ஸ், லவ் செவன்' என்ற வார்த்தைகளும் உருண்டோடிக் கொண்டிருந்தன. மைதானத்திற்குச் சற்றுக் கிழக்கே இருந்த பீடிக்கடையில் பெண்கள் இலைகளை வாங்கிக் கொண்டும், பீடிகளைக் கொடுத்துக் கொண்டுந்தான் இருந்தார்கள். அளவுக்கு மீறிய சிரிப்புச் சத்தங்கூடக் கேட்டது. அதைக் கடந்து அவள் வந்தபோது 'வாத்தியார்' வீட்டுத் திண்ணையில், நாலைந்து பேர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவளைப் பார்த்ததும், "சீக்கிரமா போ, காளியம்மன் கோவிலுக்குப் போ" என்று ஒருவர் சொல்லிவிட்டு, பின்னர் அப்படிச் சொன்னதில் எந்தப் பெரிய விஷயமும் இல்லை என்பது போல், மற்றவர்களோடு வேறு விஷயங்களைப் பேசத் துவங்கினார்.
காளியம்மன் கோவிலை அடுத்திருந்த ஊர்க்கிணற்றில் தண்ணீர் எடுத்துக் கொண்டு தலையில் ஒரு வெண்கலப் பானையையும், இடுப்பில் குடத்தையும், வலது கையில் 'தோண்டிப் பட்டைகளையும்' வைத்துக் கொண்டு பெண்கள் எந்த வித மாறுதலுமின்றிப் போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் மட்டும் "ஒய்யாவ கோட்டுக்குள்ள வச்சிருக்கு" என்று, "ஒய்யா சாப்பிடுகிறார்" என்று சொல்வது மாதிரி சொன்னார்கள்.
கோவிலுக்குத் தொலைவில் இருந்த ஒரு திட்டில், கருவாடு, மீன் வகையறாக்கள் கூறுபோடப்பட்டிருந்தன. அந்த ஊரில் விளையாத உருளைக்கிழங்குகளையும் கூட, கூடையில் வைத்துக் கொண்டு, ஒருவர் தராசில் நிறுத்துக் கொண்டிருந்தார்.
தராசை, அவர் சமமாகப் பிடித்திருந்தார்.
உலகம்மையால் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை. எழுபதைத் தாண்டிய ஒரு கிழவனை, நடக்க முடியாத காலோடும், குணப்படுத்த முடியாத நோயோடும் போராடிக் கொண்டிருக்கும் ஒரு வயசான மனுஷனை, 'அழிக்கப் பணமும் அம்பலத்துக்கு ஆளும் இல்லாமல்' தனிமரமாய்த் தவிக்கும் ஒரு அப்பாவியை, ஆயிரம் பேர் வசிக்கும் அந்தக் கிராமத்தில், எல்லோருக்கும் பொதுவான காளியம்மன் சந்நிதி முன்னால், ஒரு கோட்டுக்குள் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
இதைக் கண்டும் ஊரில் ஒரு மாற்றமும் இல்லை. ஊர் ஜனங்களிடம் எந்த வித எதிர்ப்பும் இல்லை. வாலிபால் விளையாட்டு நடக்கு; டீக்கடைகள் இருக்கு, கருவாட்டு வியாபாரம் நடக்கு; அன்றாட வேலைகள் அப்படியே நடக்கின்றன. தராசு கூட சமமாகப் பிடிக்கப்பட்டிருக்கிறது.
சொல்ல முடியாத ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஒருங்கே கொண்ட உலகம்மையிடம், 'தெல்லாங்குச்சி' விளையாடிக் கொண்டிருந்த சில பையன்களில் ஒருவன் அவள் கையைப் பிடித்துக் கொண்டு, "எக்கா, தாத்தாவ கோட்டுக்குள்ள வச்சிருக்காங்க, பாக்கப் பாவமா இருக்கு" என்று சொன்ன போது, அவள் அழுதே விட்டாள். அதே சமயம் சம்பந்தம் இல்லாதது போல் காட்டிக் கொண்ட அந்த ஜனங்களை, அவள் தூசு மாதிரி நினைத்துச் சேலையை இழுத்துவிட்டுக் கொண்டாள். காளியம்மன் கோவிலுக்கு வந்துவிட்டாள். எல்லோரும் வணங்கும் அந்தக் காளியம்மன் முன்னால், சண்டாளர்களைத் தண்டித்து, சான்றோர்களைப் பேணுவதாகக் கூறப்படும் அந்த லோகநாயகி முன்னால், சாக்பீஸால் வரையப்பட்ட வெள்ளைக் கோட்டுக்குள், மாயாண்டி முடங்கிக் கிடந்தார். கட்டாந் தரையில், கால்களை வயிற்றுடன் இடிப்பது போல் முடங்கிக் கொண்டு, அவர் படுத்திருந்தார். பக்கத்திலேயே ஒரு ஈயப் போணி.
'அய்யா' என்ற உலகம்மையின் குரலைக் கேட்டதும் அவர் கண்களைத் திறந்தார். அழவில்லை. ஒருவேளை மத்தியானமே அழுது முடித்துவிட்டாரோ என்னவோ? கண்ணீரை உண்டு பண்ண, உடம்பில் சத்து இல்லையோ என்னவோ? மகளைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டு, அவர் எழுந்து உட்கார்ந்தார்.
உலகம்மை, அய்யாவைப் பார்த்துவிட்டு, வடக்கே பார்த்தாள். நீர்க்குடத்துடன் செல்லும் பெண்கள், அவளையும் அவள் அய்யாவையும் ஜாடையாகப் பார்த்துவிட்டு பின்னர் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டு போனார்கள். உலகம்மை, காளியம்மன் சிலையைப் பார்த்தாள். கோவில் படிக்கட்டில் பீடி ஏஜெண்ட் ராமசாமியும், பிராந்தன் வெள்ளைச்சாமியும் நடக்க முடியாத மாயாண்டி ஓடாமல் இருப்பதற்காக காவல் இருந்தார்கள். உலகம்மை அவர்களை ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு, காளியம்மனைப் பார்த்தாள். பிறகு கத்தினாள்:
"அடியே காளீ! இவ்வளவு நடந்தப் பொறவும் ஒனக்கு அங்க இருக்க என்னடி யோக்கியத இருக்கு?"
பைத்தியம் பிடித்தவள் போல் கத்திய உலகம்மையைப் பார்த்து, ராம வெள்ளைச் சாமிகள் பயந்து எழுந்தார்கள்.
குட்டாம்பட்டியில் இன்றும் ஒரு வழக்கம் இருந்து வருகிறது. கடன்பட்டவரிடம் கொடுத்த கடனை கேட்டுப் பார்ப்பார்கள். அவன் 'இன்னிக்கு நாளைக்கி' என்று இழுப்பான். அவனிடம் பணத்தை வசூல் செய்ய முடியாது என்று தெரியும் போது, கடன் தந்தவர், சம்பந்தப்பட்டவனை இழுத்து வந்து அவனைச் சுற்றி ஒரு கோட்டைப் போட்டு முடக்கி விடுவார். வாங்கிய பணத்தை வட்டியோடு கொடுக்கு முன்னால், அவன் அந்தக் கோட்டைத் தாண்ட முடியாது. எத்தனை நாளானாலும் சரி, அவன் குடும்பத்தினர், அங்கேயே அவனுக்குச் சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கலாம். ஆனால் கிழித்த கோடு கிழித்ததுதான். அதைத் தாண்ட முடியாது. அதைத் தாண்டினால், கைகால்கள் சம்பந்தப்பட்டவனின் உடம்பிலிருந்து சம்பந்தப்படாதது மாதிரி தாண்டிவிடும்.
ஒரு காலத்தில் 'கொடி கட்டிப்' பார்த்த பரம்பரையினர், குட்டாம்பட்டிப் பரம்பரை. அதாவது கட்டாம்பட்டிப் பரம்பரை என்று ஆகுபெயராகக் கருதப்படும் அந்த ஊரில் உள்ள பணக்காரர்களின் பரம்பரை. முன்பெல்லாம், கருப்பன் கூட்டத்துக்கும், சிவப்பன் கூட்டத்துக்கும் சண்டையென்றால், ஒருவர் பனையில் ஏறி, கொடியைக் கட்டிவிட்டு 'அவிருடா பார்ப்போம்' என்பார். 'அவுக்கப் போறவன்' தலை விழும்; அல்லது அதைத் தடுக்கப் போறவன் தலை விழும். இப்போது 'நாகரிகம்' அந்த ஊரிலும் பரவிவிட்டதால் பனைமரத்தில் ஏறிக் கொடி கட்டிப் பார்ப்பதில்லை. பனை மரத்தில் பலருக்கு ஏறத் தெரியாது என்பதும் ஒரு காரணம். உயிரை ஒரு பொருட்டாக நினைக்காமல், மழையிலும், புயலிலும் முப்பதடிப் பனையில் ஏறி 'பயினி' இறக்கும் அந்தத் தொழில், இப்போது மட்டமாகி விட்டது. ஆகையால், 'நம் தொழில் இப்போது மட்டமாகி விட்டது. ஆகையால், நம்மால் பனையிலதான் ஏறி கொடிகட்ட முடியல. பனையேறிகளயாவது கோட்டுக்குள்ள நிறுத்தலாம்' என்று நினைத்ததுப் போல், குட்டாம்பட்டியினர் அதாவது குட்டாம்பட்டிப் பிரபுக்கள் கடன் கொடுக்காதவர்களை, கோட்டுக்குள் நிறுத்துவது, அங்கு அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையில் ஒன்று.
இதற்காக, எல்லோரையும் அவர்களால் கோட்டுக்குள் நிறுத்த முடியாது. அது கடன்பட்டவனின் குடும்பத்தைப் பொறுத்தது. பணபலம் இல்லாமல் ஆட்பலம் இருக்கும் நபர்களிடம், பணத்தை வசூலிக்கக் கோர்ட்டுக்குப் போவார்களே தவிர, கோட்டுக்குள் போக மாட்டார்கள். இவர்களுக்குக் கடன் கொடுக்கப்படுவதும் இல்லை. ஏழைகளிலும் ஆட்பலம் இல்லாத எளியவர்களுக்கு, கோட்டுக்குள் நிற்பதற்கு 'குவாலிபிகேஷன்' உள்ளவர்களுக்குத்தான் கடன் கொடுப்பதுண்டு. பல ஏழைகள், எளியவர்கள் மூலம் கடன் வாங்கிக் கொள்வதும் உண்டு.
என்னதான் கோட்டுக்குள் நிறுத்தினாலும், சில பெரியவர்கள் முன் வந்து 'தந்திடுவான் விட்டுடு' என்று சொல்வதும், அப்படி அவர்கள் சொல்வதைத் தட்ட மனதில்லாமலும், தானாக இரக்கப்பட்டும் சிலர் கிழித்த கோட்டை அழித்து விடுவதுண்டு.
மாயாண்டிக்கு, இந்தக் கோட்டுக்குள் இருக்க பல 'குவாலிபிகேஷன்கள்' இருக்கின்றன. இந்த வகையில், அவருக்கு அனுபவம் புதிது என்றாலும் கோடு கிழித்த மாரிமுத்து நாடாருக்கு, இது புதிதல்ல. மாயாண்டி, சில வருடங்களுக்கு முன்னால், பனையிலிருந்து விழுந்ததில் இறந்திருந்தால், பத்தாயிரம் ரூபாய் கிடைத்திருக்கும், கடன் பட வேண்டிய அவசியமும் இருந்திருக்காது. ஆனால், பாவி மனுஷன், மேற்கொண்டும் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதிருந்ததாலோ என்னவோ, சாகவில்லை. காலைக் குணப்படுத்த, அவர் மாரிமுத்து நாடாரின் காலைப் பிடிக்க அவரும் மாயாண்டி பல சில்லறை வேலைகளைத் தட்டாமல் செய்ததை நினைத்துக் கொண்டு, ஐம்பது ரூபாய் கொடுத்தார். வட்டி மாதம் ஐந்து ரூபாய் தான். ஆனால் வட்டியைத் தான் மாயாண்டியால் கட்ட முடிந்தது.
மாயாண்டி எங்கே கட்டினார்? அவர் மகள் உலகம்மை மாரிமுத்து வயலில் வேலை செய்வதில் கிடைக்கும் கூலியில் நாலணாவை, நாடாரிடமே விட்டு வைத்தாள். என்றாலும் அது வட்டியைத்தான் கழித்ததே தவிர, அசல் பக்கம் அண்டவில்லை. மாரிமுத்து நாடாரும், எப்போவாவது "ஏ உலகம்மா, கடன எப்ப குடுக்கப் போற?" என்பார். அவளும், "ரெண்டு மாசத்துல அடைக்கேன் மாமா" என்பாள். அத்தோடு சரி.
ஆனால் விஷயம் இப்போது அப்படி இல்லை. உலகம்மை செய்த காரியம் ஊரிலேயே கொஞ்சம் ரசனை கலந்த கோபத்தை உண்டாக்கி இருந்தது என்றால், பண்ணையார் மாரிமுத்து நாடாருக்கு ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பைப் பற்றிக் கூற வேண்டியதில்லை. மாயாண்டி நாடார், வாங்கிய கடனுக்காக வைக்கப்பட்டிருக்கிறார் என்று ஒவ்வொருவரும் வெளிப்படையாகப் பேசினாலும், அதன் உட்காரணம் எல்லோருக்கும் புரியும். ஆகையால் எவரும் சிபாரிசுக்குப் போகவில்லை. அப்படிப் போனால் 'நம்மையும் கல்யாணத்த உடச்சதுல சம்பந்தப்பட்டதா நினைப்பாவ' என்று பலர் நினைத்துக் கொண்டார்கள். சிபாரிசு செய்யத் துடித்த சிலரோ, மாரிமுத்து நாடாரிடம் கடன்பட்டவர்கள். அவர்களைச் சுற்றி தாங்களாகக் கோடுகள் போட்டுக் கொள்ளவோ, 'இந்தா கிழி' என்று மாரிமுத்து நாடாரிடம் சொல்லாமல் சொல்லவோ அவர்கள் விரும்பவில்லை.
உலகம்மை, கோட்டுக்குள் தவிக்கும் அய்யாவைப் பார்த்தாள். காளியம்மன் மாதிரி கோர சொரூபமாகி, மாரிமுத்து நாடார் வீட்டை நொறுக்கி, பீடி ஏஜெண்ட்டின் வயிற்றைக் கிழித்து, உள்ளே இருக்கும் குடலை எடுத்துத் தோள்மாலையாகப் போட்டுக் கொண்டு, வெள்ளைச் சாமியின் கழுத்தைக் கடித்து, ரத்தத்தை உறிஞ்சுவது போல் பாவித்துக் கொண்டாள். ஒரே ஒரு கணந்தான். மறுகணம், கற்பனைச் சிறகு ஒடிய, பிரத்யட்ச நிலையை உணர்ந்தவள் போல், கோட்டுக்குள் காலடி வைத்தாள்.
அவருக்குக் காவல் புரிந்து கொண்டிருந்த வீர மறவர்களில் ஒருவனான ராமசாமி, அந்தப் 'பொம்பிளையை' மிரட்டினான். அவன் அவ்வப்போது அரசியல்வாதியாகிறவன்.
"கோட்டுக்குள்ள நுழைந்த, ஒன் கூட்டுக்குள்ள இருந்து உயிரு போயிடும்."
வெள்ளைச்சாமி வெண்டையாகவே பேசினான்.
"தேவடியா செறுக்கி, போழா பாக்கலாம்."
உலகம்மை சிறிது தயங்கினாள். பிறகு வருவது வரட்டும் என்று நினைத்தவள் போல் கோட்டுக்குள் போனாள். வெள்ளைச்சாமி, அவளை அடிப்பதற்காகக் கிட்டே போனான். உள்ளூரப் பயந்தவனான ராமசாமி, அவன் வேட்டியைப் பிடித்து இழுத்துத் தடுத்தான்.
உலகம்மை, அய்யாவின் கன்னத்தைத் தடவிவிட்டாள். அவள் தடவியதும், அந்தக் கன்னத்தில் ஈரக்கசிவு ஏற்பட்டது. பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு, அவள் தலையைக் கோதிவிட்டாள்.
மாயாண்டி உளறிக் கொட்டினார்.
"நான் தான் படிச்சிப் படிச்சிச் சொன்னேன் கேட்டியா? பலவேசம் பேச்சக் கேட்டு அவருக்குப் பயந்து அப்படிப் பண்ணிட்டேன்னு, 'மாரிமுத்துகிட்ட சொல்லு'ன்னே கேட்டியா? சொல்லவுமுல்ல, என்னயும் சொல்லவிடல. என்ன பண்றது? ஒய்யா கோட்ட கட்டி ஆள நெனச்சான்; இப்போ கோட்டுக்குள்ள கிடக்கான். என்ன பண்றது? போன பிறவில யார நிறுத்துனனோ அதுக்கு காளியாத்தா இப்டி தண்டிக்கா."
உலகம்மை, அந்தக் கோட்டுக்குள் நின்று கொண்டு, அய்யாவைத் தூக்கி நிறுத்தப் போனாள். ராமசாமி, பேசப் போன பிராந்து சாமியை அடக்கிவிட்டு, "அவன வெளில கொண்டு வந்தியானா தெரியும் சேதி" என்றான்.
இதற்குள், அந்தப் பக்கமாக வந்த பலவேச நாடார், வேறு பக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு 'கண்டு கொள்ளாதவர் போல்' போனார். "பலவேசம், நா இருக்கியல எதுக்குங் கவலப்படாண்டாமுன்னு காலையில் கூட வீட்ல வந்து சொன்னியே - இப்ப ஏன்யா அப்டி மொகத்த வச்சிக்கிட்டுப் போற? ஓஹோ! நீ இருக்கையில தான் நான் கவலப்படக் கூடாது. இப்ப தான் நீ இருக்காம நடந்துதான் போற" என்று மாயாண்டி முணுமுணுத்தார்.
பலவேச நாடார், சிக்கலில் மாட்டிக் கொள்ள விரும்பாததற்குத் தைரியமின்மை காரணமல்ல. 'சரோசா கல்யாணம் நின்னது நின்னதுதான். எப்படியும் மவனுக்கு மடக்கிப் போட்டுடலாம்'. இந்தச் சமயத்துல வெண்ணெய் திரளும் போது, சட்டியை உடைக்க அவர் விரும்பவில்லை. அதோடு உலகம்மை 'ஒமக்குப் பயந்து போவலன்னு' - எவ்வளவு திமிரா பேசுனா? பய மவா படட்டும்.'
என்ன செய்யலாம் என்று புரியாமல், இடுப்பில் செருகியிருந்த சின்னக் கத்தியை அவ்வப்போது பிடித்துக் கொண்டே உலகம்மை நிலைகுலைந்து நின்றபோது, மாரிமுத்து நாடாரே அங்கே வந்தார். சுற்றி நின்ற சாட்சிக்காரர்களை விட, அந்தச் சண்டைக்காரரிடமே நேரடியாகப் பேசுவதென்று தீர்மானித்தாள், உலகம்மை.
"மாமா! நீரு செய்தது, உமக்கே நல்லா இருக்கா?"
மாரிமுத்து நாடார், அவளைக் கொலை செய்யப் போவது போல் பார்த்தார். 'சாப்பிட்டுப் போழா' என்று பாசத்தோடு ஒரு சமயம் அவளிடம் சொன்ன அந்த முகம், இப்போது அவளையே சாப்பிடப் போவது போல் உள்ளடங்கிய பற்களை நெறித்துக் கொள்ள வைத்தது.
"ஒம்மத்தான் மாமா."
"எந்த மொகத்தோட என்னை மாமான்னு கூப்பிடுறழா? பனையேறிப் பய மவளுக்கும் எனக்கும் என்னழா சம்பந்தம்?"
"ஒம்ம தாத்தாவும் பனையேறினவருதான். நீரு மறந்தாலும் ஊரு மறக்காது."
"கூடக்கூட வாயி பேசுன இங்கயே வெட்டிப் புதச்சிடுவேன். எந்தப் பய என் கையை மோந்து பாக்கான்னு பாத்துடலாம். வாங்குன கடன குடுக்க வக்குல்லாதவளுக்கு வாயி வேறயா?"
"நான் குடுத்திருக்கிற வட்டியே முப்பது ரூவா வரும். ரெண்டார் ரூபாய் சம்பளத்துக்குக் கூப்புட்டாலும் ஒம்ம வயலுல ரெண்டு ரூபாய்க்கு நடவுக்கு வந்தேன்னா நீரு குடுத்திருக்கிற கடன நெனச்சித்தான்."
"நானா ஒன் கையைப் பிடிச்சி இழுத்துக் கூப்பிட்டேன்?"
"வார்த்தய அனாவசியமா விடாதயும். நான் கேக்க முடியாம போனாலும் காளியாத்தா கேக்காம விடமாட்டா."
"சாபமாழா விடறே? சண்டாளி! உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்த துரோகி! ஒருத்தி வாழ்வயே பாழாக்கிட்டியாளா பாவி!"
"நான் பாழாக்க நெனச்சனா... வாழ வைக்க நெனச்சனான்னு அந்தக் காளிப்பய மவளுக்குத்தான் தெரியும்."
"ஜாலமாழா போடுற? கைகேயி! நீலி!"
"நீரு மட்டும் என்னக் காட்டி ஒருவன ஏமாத்தலாமா?"
"நான் ஏமாத்திட்டேன். நீ இப்ப அவங்கூட வேணுமுன்னா போழா."
"வாய் கெட்டு பேசுனீர்னா வாயில கரையான் அரிக்கும்."
"ஒங்கிட்ட எதுக்குழா நான் பேசணும்? ஏல வெள்ளய்யா! நீ வீட்டுக்குப் போல. அல்லன்னா தள்ளிப்போ. இப்ப சொல்றதுதான். வாங்குன கடன குடுத்திட்டு ஒப்பன கூட்டிக்கிட்டுப் போ."
"முன்ன பின்ன சொல்லாம திடீர்னு ஒரு கிழவன அடச்சி வச்சா எப்டி?"
"நீ மட்டும் முன்னபின்ன சொல்லிட்டுத்தான் சட்டாம்பட்டிக்குப் போனியோ? அவங்கூட படுத்துட்டு வந்தியா படுக்காம வந்தியா?"
"யோவ்! இதுக்குமேல் பேசுன மரியாதி கெட்டுப் போவும்."
பீடி ஏஜெண்டும், பிராந்தனும் அவளை நெருங்கினார்கள். அவர்களை இதுவரை தடுத்த மாரிமுத்து நாடார் கையைக் கட்டிக் கொண்டு பேசாமல் நின்றார். உலகம்மை இடுப்பில் செருகியிருந்த கத்தியை எடுக்கப் போனாள்.
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களால் இதற்குமேல் பொறுக்க முடியவில்லை. ஒண்ணுகிடக்க ஒண்ணு நடந்தா சாட்சி சொல்ல வேண்டியது வரும். அதோடு பொம்பிளைய அடிக்க ரெண்டு ஆம்பிளைகள் போவதை, அந்த ஆம்பிளைகளால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. பிரமுகர்களில் ஒருவர் முன்னால் வந்தார்.
"ஏய், வெள்ளயா! இந்தப் பக்கமா வாடா! ஏழா ஒலகம்மா! நீ கடன் பட்டுருக்கறது வாஸ்தவம். மாரிமுத்து மச்சான் கைய கால பிடிச்சி கட்டாயமா தந்துடுறேன்னு சொல்றத விட்டுப்புட்டு ஏமுழா கத்துற?"
மாரிமுத்து நாடார் 'மத்தியஸ்தருக்கு'ப் பதில் சொன்னார்:
"எனக்கு கையக்கால பிடிக்க பெண்டாட்டி இருக்கா."
உலகம்மை இறுதி எச்சரிக்கை விடுபவள் போல் பேசினாள். இப்போது அவள் மனதில் அச்சமில்லை. 'முடியாமல் போனால் இடுப்பில் இருக்கவே இருக்கு கத்தி!'
"மாமா! மாரிமுத்து நாடாரால அய்யாவ விட முடியுமா, முடியாதான்னு கேட்டு சொல்லும்! நான் ஒண்ணும் பிச்ச கேக்கல. குடுத்த கடன தரமுடியாதுன்னு சொல்லல. அவரால முடியுமா முடியாதான்னு கேளும். அப்புறம் நீங்க என் மேல வருத்தப்படக் கூடாது."
"நீ இப்டி பேசுனா அவரு எப்டி விடுவாரு? பெரிய மனுஷங்கிட்ட பேசுற பேச்சா இது?"
மாரிமுத்து நாடாரும், தான் பெரிய மனுஷன் என்று நினைத்தவராய் அழுத்தமாகவும் ஆபாசமில்லாமலும் மத்தியஸ்தரிடம் பேசினார்.
"மச்சான் அவளால இப்ப பணத்த குடுக்க முடியுமா முடியாதான்னு கேளும். பணத்துல ஒரு பைசா குறையாம வருமுன்னால, அவன விட மாட்டேன். நீரு வேணுமுன்னா இந்த மூதேவிக்கு பணம் குடும்... பணங்குடுக்காம மட்டும் அவா அவளோட அப்பன கோட்டுக்கு வெளில இழுத்தான்னா தெரியும் சேதி... அப்புறம் பொம்பிளய அடிச்சேன்னு நீங்க வருத்தப்படக்கூடாது. ஆமாம்."
இதற்குள் உட்கார்ந்திருந்த மாயாண்டி மீண்டும் படுத்துக் கொண்டார். உடனே, என்னமோ ஏதோ என்று கீழே குனிந்த உலகம்மையிடம், "தண்ணி வேணும், தண்ணி வேணும், தாகமா இருக்கு" என்று முனங்கினார். பிறகு கத்தினார்.
சுற்றி நின்ற கூட்டத்தினர், தத்தம் இயலாமைக்கு பிராயச்சித்தம் தேடுபவர் போல் "ஏ தண்ணி கொண்டாங்க, தண்ணி கொண்டாங்க" என்றார்கள். மாரிமுத்து நாடார் கூட வெள்ளைச்சாமியைப் பார்த்து, தண்ணீர் கொண்டுவரச் சொல்வதற்காக, தன்னையறியாமலே, லேசாக வாயைக் கூடத் திறந்தார். ஒருவர் பக்கத்தில் இருந்த ஊர்க்கிணற்றைப் பார்த்துப் போனார்.
உலகம்மை அய்யாவின் காலைப் பிடித்து விட்டாள். தொண்டையை நீவி விட்டாள். முதுகைத் தடவி விட்டாள். தலையைக் கோதி விட்டாள். நெற்றியை வருடி விட்டாள். தோளைத் தேய்த்து விட்டாள். பிறகு கம்பீரமாக வெளியே வந்தாள்.
"யாரும் தண்ணி குடுக்காண்டாம். எங்க அய்யாவுக்கு என்ன குடுக்கணுமுன்னு எனக்குத் தெரியும்."
உலகம்மை, கூட்டத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு, வேகமாக நடந்தாள். அவள் போவதையே, கூட்டத்தில் பெரும் பகுதி பச்சாதாபமாகப் பார்த்துக் கொண்டு நின்றது. அவள் அய்யாவுக்குத் தண்ணீர் கொண்டு வர, வீட்டுக்குப் போவதாக எல்லோரும் நினைத்துக் கொண்டார்கள்.
'கோணச்சத்திரம்' டவுனா? கிராமமா?' என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். அந்த அளவிற்கு டவுன் மாதிரி விரிந்தும், கிராமம் மாதிரி மரம் மட்டைகளோடும் அந்த ஊர் இருந்தது.
மயானத்திற்கு அருகே, செவ்வகம் மாதிரியும், கூம்பு மாதிரியும் அமைந்த மதில் சுவருக்கு மத்தியில், செங்கற் படிவங்களால் கட்டப்பட்ட சிவப்புக் கட்டிடம் உள்ளது. மதிலுக்கும், அந்தக் கட்டிடத்திற்கும் இடையே பல மரங்கள். குறிப்பாக மதில் வாசலிலிருந்து உள்ளே போனால், பெரிய பெரிய மரங்கள் தெரியும். "இதுக்குமேல் நீ உள்ளே போறத விட எங்ககிட்ட வந்து தூக்குப் போட்டுச் சாவலாம்" என்று குறிப்பால் உணர்த்தும் கழுத்தை வலிக்க வைக்கும் பெரிய ஆலமரங்கள் இரண்டு உண்டு. வாடிக்கைக்காரர்களுக்கு ஞாபகப்படுத்துவது போல், மதிலை ஒட்டி சில கருவேல மரங்களும் 'பட்டைகளை'க் காட்டிக் கொண்டு நின்றன.
இரண்டு பக்கமும் சின்னச் சின்ன செங்கற்களால் நடப்பட்டிருந்த பாதை வழியாக, கண்ணை மூடிக் கொண்டு போனால் கூட, நேராய் அந்தக் கட்டிடத்தின் படிக்கட்டில் முட்டலாம். படிக்கட்டுக்கு மேல் இந்த வராண்டாவில் ஒரு நாற்காலி. எதிரே ஒரு ஹைதர் அலி மேஜை. நாற்காலியில், ஒரு காலை முக்கோணம் மாதிரி மடித்து வைத்துக் கொண்டு, அதில் தலையை வைத்துத் துயில் கொண்டிருந்தார் ஹெட்கான்ஸ்டபிள். வெறும் பனியனும், டவுசரும் போட்டிருந்தார். டவுசர் பட்டையைக் கிழிப்பது போல், அவர் வயிறு துருத்திக் கொண்டிருந்தது. எதிரே மேஜையில் காக்கிச் சட்டை கிடந்தது. கனத்த அந்தக் காக்கிச் சட்டையை, காற்றோ அல்லது ஒருவேளை வாடிக்கைக்காரனோ தூக்கிக் கொண்டு போய் விடக்கூடாது என்ற இயல்பான சந்தேகப்புத்தி போகாதவர் போல், ஹெட்கான்ஸ்டபிள், தன் தொப்பியை அதன் மேல் வைத்திருந்தார். தொப்பியும் தொலைந்து விடக் கூடாது என்று, தன் வலது கை அதைப் பிடித்திருக்க, லத்திக்கம்போடு இருந்த இடது கையை, இன்னொரு பக்கம் வைத்திருந்தார்.
மயானத்திற்கருகே இருந்த அந்தக் கட்டிடத்தில், ஏறக்குறைய செத்து விட்டவர் போல், அவர் தூங்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் உள்ளங்கை, எதையோ வாங்கத் தயார் நிலையில் இருப்பது போல், கிண்ணம் மாதிரி போதிய இடைவெளியுடன் குவிந்து கிடந்தது.
உள்ளே முதலாவது அறையில், சுவரோடு ஒட்டிப் போடப்பட்டிருந்த நாற்காலியில் 'ரைட்டர்' எதையோ எழுதிக் கொண்டிருந்தார். எதிர்ச்சுவரில் பல துப்பாக்கிகள், பல்லி மாதிரி அப்பிக் கிடந்தன. உண்மையிலேயே, அவர் ரைட்டர்தான். அந்த வார்த்தையின் தமிழ் மொழிபெயர்ப்பின்படி, அவரும் சிறந்த எழுத்தாளர் தான். எப்.ஐ.ஆரில், என்னென்ன காரணங்களை எப்படி எப்படிச் சிருஷ்டிக்கலாம் என்று நினைப்பவர். என்றாலும், சிருஷ்டிக்கும் பிரமனை, சிவன் தலையைக் கிள்ளியது போல், புதிய சப்-இன்ஸ்பெக்டர் பையன் இவரையும், இவரது சிருஷ்டியையும் அவ்வப்போது 'கிள்ளி'க் கொண்டிருந்தாலும், அவரது சிருஷ்டித்தல், திருஷ்டிபடும் அளவிற்கு சுறுசுறுப்பாக மீண்டும் வளரும்.
இரண்டாவது அறையில், விசாலமான மேஜையும், அதன் மேல் என்னவெல்லாமோ கிடந்தன. ஆளில்லாத நாற்காலி. அதற்கு வலது பக்கத்தில், குறுக்கு நெடுக்கான கம்பிகளைக் கொண்ட "லாக்கப் அறை". உள்ளே நாலைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். கம்பிகளுக்கு வெளியே ஒரு கான்ஸ்டபிள் லத்திக் கம்போடு உலாத்திக் கொண்டிருந்தார்.
உள்ளே நின்று கொண்டிருந்தவர்கள், கான்ஸ்டபிளிடம் மாமன் மச்சான் மாதிரி பேசிக் கொண்டிருந்தார்கள்.
"எஸ்.ஐ. எப்ப ஸார் வருவார்?"
"நாளக்கி மந்திரி வரார். அதுக்காவ எங்கெல்லாமோ அலைஞ்சிக்கிட்டிருக்கார். சர்க்கிளும் அவரும் டி.எஸ்.பி. கிட்ட போயிருப்பாங்கன்னு நினைக்கிறேன். ஒன் சம்சாரத்துக்கு இப்ப உடம்பு எப்படிடா இருக்கு? இப்ப அவா காய்க்காளா."
"அவளால முடியல ஸார்? எப்ப ஸார் விடுவிங்க?"
"எஸ்.ஐ. வரட்டும்."
"இவன்கிட்ட படிச்சிப் படிச்சி சொன்னேன். கேக்கல ஸார். மாதக் கடசி. வாண்டாண்டான்னு சொன்னேன். உளுவத்தலயன் கேக்கல."
"மாதக்கடசில நாமதான் ஒங்களுக்கு கைகொடுக்கணுமுன்னு சொன்னேன். சரிதானே ஸார்? நேத்து செங்கோட்டை பஸ்ல வந்திறங்கினியளே. எங்க ஸார் போயிருந்தீங்க?"
"மாமியாருக்கு உடம்பு சரியில்ல. ஒரு நட போயிட்டு வந்தேன். ஏய் அடுத்த வாரம் கொஞ்சம் மலத்தேனு வேணும். கிடைக்குமா? மாமியாருக்கு மருந்துக்கு வேணும்."
"ஒங்களுக்கு இல்லாததா? இப்ப செத்த நேரம் விடுங்க. நொடியில கொண்டு வாரேன். நாளக்கின்னா கிடைக்காது."
"பரவாயில்ல, நீ பெரிய ஆளுதாண்டா. ஒனக்குப் பதிலா நான் உள்ள போயி நிக்கணுமுன்னு கூடச் சொல்லுவே."
லாக்கப்பிற்குள் இருந்தவர்களும், வெளியே நின்றவரும் சிரித்த சிரிப்பு, ரைட்டரின் சிருஷ்டி வித்தையைக் கூட லேசாகக் கலைத்தது. லேசாக, முகத்தைச் சுழித்துக் கொண்டார்.
வெளியே தூங்கிக் கொண்டிருந்த ஹெட்கான்ஸ்டபிள், வாசல் கேட் திறக்கப்படும் சத்தம் கேட்டுப் 'படக்கென்று' விழித்தார். சின்ன வயசில், பாட்டி கூடப் படுத்து, பல பேய்க் கதைகளைக் கேட்டுக் கெட்டுப் போன அவர், தன்னை நோக்கி வந்து கொண்டிருப்பவள் மோகினிப் பிசாசாக இருக்கலாமா என்று சந்தேகப்பட்டார். திடீரென்று எழுந்து லத்திக்கம்பை எடுத்துக் கொண்டு "யாரது யாரது" என்றார்.
'பதுங்கிவிட்டு வெட்டினான்' என்று எழுதலாமா, அல்லது 'வெட்டிவிட்டுப் பதுங்கினான்' என்று எழுதலாமா என்று தனக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்த ரைட்டரும், அவர் போட்ட கூச்சலில் வெளியே வந்தார். கான்ஸ்டபிளும் அங்கே ஓடிவந்தார். நெருங்கி வந்து நின்று கொண்டு, போலீஸ் படிக்கட்டில் 'ஏறலாமா, வேண்டாமா?' என்று யோசிப்பது போல் நின்ற பெண்ணைப் பார்த்ததும், அவர்களுக்குக் கொஞ்சம் திகிலாகவே இருந்தது. 'கொலைக் கேஸா?'
ஹெட்கான்ஸ்டபிள் அதட்டினார்.
"ஏய் யார் நீ? மரியாதியா சொல்லு."
"என் பேரு உலகம்மை. குட்டாம்பட்டியில் இருக்கேன். எங்க அய்யாவ வாங்குன கடன குடுக்கலன்னு கோட்டுக்குள்ள நிறுத்தி இருக்காங்க."
"கோட்டுக்குள்ளன்னா?"
"நீங்க இங்க ஜெயிலுக்குள்ள போட்டு அடைக்கது மாதிரி, ஒரு கோட்ட வரஞ்சி, அதுக்குள்ளேயே நிக்க வைக்கறது. மத்தியானத்துல இருந்து எங்க அய்யா கஞ்சி தண்ணி குடிக்காம அங்கேயே கிடக்காரு."
உலகம்மையால் அழாமல் இருக்க முடியவில்லை. ரைட்டர் அவள் பேசுவதில், ஏதாவது சிருஷ்டிக்க முடியுமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். ஹெட்கான்ஸ்டபிள் அதட்டினார்.
"சரி கம்ளெயிண்ட் எழுதிக்குடு. நாளைக்குப் பாக்கலாம்."
"இன்னிக்கு நீங்க வராட்டா அவரு அங்கேயே செத்துப் போவாரு."
"இப்ப முடியாது. நாளைக்கு மந்திரி வரார். அவனவன் நாயாய் அலைஞ்சிக்கிட்டு இருக்கோம். நீ நாளைக்கி வா."
"அய்யா அப்டிச் சொன்னா எப்டிங்க? அங்க என் அய்யா இந்நேரம் செத்துக் கூட போயிருப்பாரு. இல்லன்னா இந்த நேரத்துல மூணு மைலு நடந்து வருவேனா?"
"நீ எப்டி வந்தங்கிறது முக்கியமல்ல. இப்ப நாங்க வர முடியாதுங்கறதுதான் முக்கியம்!"
"இப்டிப் பேசினா எப்படி அய்யா? வலியார் மெலியார வாட்டாம இருக்கத்தான் நீங்க இருக்கிய? மந்திரிமாரு கூட இதத்தான் சொல்லுதாவ?"
"ஏய், அனாவசியமா பேசாத. நாளைக்கு வான்னா வா. ஒனக்கு ஒப்பன் பெரிசு. எங்களுக்கு மந்திரி பெரிசு."
"அப்புறம் என் மேல வருத்தப்படக் கூடாதுங்க. மந்திரி எங்க ஊருக்கும் வாராரு. நான் அவருகிட்டயே சொல்லுவேன். அப்படின்னா நான் போவட்டுமா? தண்ணி கேட்டவருக்கு அதக் குடுக்காம வந்துட்டேன்."
ஹெட்கான்ஸ்டபிள் விறைப்பாக நின்றார். கான்ஸ்டபிள் வயிற்றைத் தடவி விட்டுக் கொண்டார். 'ஸ்டேஷன் இன்சார்ஜான' ரைட்டர் மிடுக்காகப் பேசினார். அவருக்கு ஹெட்கான்ஸ்டபிளை அதிகமாகப் பிடிக்காது.
"அந்தப் பொண்ணு சொல்றதப் பாத்தா கேஸ் சீரியஸ் போலத் தோணுது. கோட்டுக்குள்ள ஒருவர நிறுத்தி வைக்கிறது சட்டப்படி பெரிய குற்றம். ரெண்டு வருஷம் ஜெயில் போடலாம். அது அநியாயம்! ரெண்டு பேரும் போயிட்டு ஜல்தியா வந்திடுங்க."
ஹெட்கான்ஸ்டபிளும், கான்ஸ்டபிளும், இரண்டு லைட் இல்லாத சைக்கிள்களை உருட்டிக்கொண்டு, அழாக் குறையாகப் புறப்பட்டார்கள். உலகம்மை, முன்னால் வழி காட்டிக் கொண்டிருந்தாள். ரைட்டர் தன்னைத்தானே தனக்குள்ளேயே மெச்சிக் கொண்டார். 'ஒருவேள மந்திரிய அவள் பார்த்தாலும், அவள மந்திரி பார்த்தாலும் நம்மப் பத்தி அவா சொல்லாண்டாமா? சொல்லுவா-'
தூரத்தில் தெரிந்த இரண்டு சிவப்புத் தொப்பிகளைப் பார்த்ததும், கோட்டுக்கு வெளியே நின்ற கூட்டத்தில் ஒரு பகுதி நழுவி, இன்னொரு பக்கம் தங்களால் பார்க்கக் கூடிய அதே சமயம் பிறரால் பார்க்க முடியாத இடத்தில் போய் நின்று கொண்டது. வெள்ளைச்சாமி, ஓடுவதற்குத் தயாராய் இருந்தான். ஏற்கனவே போலீஸில் அடிபட்டவன். பீடி ஏஜெண்ட் ராமசாமி அங்கே தெரிந்த போலீஸ்காரர்களுக்கு இப்பவே, இங்கேயே மரியாதை காட்டுவது போல் மடித்துக் கட்டிய வேட்டியை எடுத்துக் 'கரண்டை'க் கால்வரைக்கும் இழுத்துப் போட்டான். மாரிமுத்து நாடார் அவசர அவசரமாக கோட்டை அழித்துவிட்டார். அவருக்கும் எங்கேயாவது போய்விட வேண்டும் போலிருந்தது. 'இவ்வளவு நேரமும் வீறாப்பாய் நின்னுட்டு இனிமே போனால் எப்டி?'
"என்னய்யா ஒங்க ஊர்ல பெரிய இழவாப் போச்சி" என்று கத்திக் கொண்டே, ஹெட்கான்ஸ்டபிள், கான்ஸ்டபிளுடன் அங்கே வந்த போது துடித்துக் கொண்டிருந்த மாயாண்டி அவர்களை ஏறிட்டுப் பார்த்து எழுந்தார். அவரால் நிற்க முடியவில்லை. மீண்டும் அந்தக் கட்டாந்தரையில் உட்கார்ந்தார்.
உலகம்மை, அய்யாவை ஆதரவாகப் பிடித்துக் கொண்டே "இவருதான் மாரிமுத்து. இவருதான் ராமசாமி. இவன் தான் வெள்ளைச்சாமி. இவங்க மூணு பேருமாத்தான் எங்கய்யாவை இழுத்துக் கோட்டுக்குள்ள நிறுத்தினவங்க" என்றாள்.
ஹெட்கான்ஸ்டபிள், மாரிமுத்து நாடாரை ஏறிட்டுப் பார்த்தார். பிறகு, "அடடே நாடாரா? நீங்களா இப்டிப் பண்ணுனது?" என்றார்.
மாரிமுத்து நாடார் சிரிப்பை வரவழைத்துக் கொண்டார்.
"நான் ஒண்ணும் பண்ணலிங்க. குடுத்த கடன கேட்டேன். அதுக்கு இந்த மனுஷன் இங்க வந்து புரள்றான். குடி வெறில அவனே புரண்டா நான் என்னங்க பண்றது? ஏய் பிராந்தா! அய்யாமாருக்கு ரெண்டு காளிமார்க் கலர் வாங்கியாடா. ராமசாமி ரெண்டு நாற்காலி கொண்டு வா! வேற எதும் வேணுங்களா?"
"ஒண்ணும் வேண்டாம். நாங்க சீக்கிரமா போவணும்."
உலகம்மை சோற்றுக்குள் மறைத்து வைத்த முழுப் பூசணிக்காயை வெளியே எடுக்கத் துடித்தாள். ஹெட்கான்ஸ்டபிளோ சாவகாசமாக வயிற்றை நெளித்து விட்டுக் கொண்டு நின்றார்.
"பொய் சொல்லுறாரு. மத்தியானத்தில இருந்து இவர இங்கயே நிறுத்தி வச்ச பாவி மனுஷன், இப்ப என்னமாப் பேசுறாரு? வேணுமுன்னா இங்க நிக்கவங்களக் கேட்டுப் பாருங்க."
ஹெட்கான்ஸ்டபிள் சுற்றி நின்றவர்களைக் கேட்பதற்காக வாயெடுத்தார். இதற்குள் காளிமார்க் கலரை பிராந்தனிடமிருந்து வலுக்கட்டாயமாக வாங்கி, மாரிமுத்து நாடார் நீட்டினார். இந்தச் சிறு இடைவெளி நேரத்தில், 'நமக்கென்ன வம்பு' என்று நினைத்து கூட்டத்தில் பெரும் பகுதி கலைந்து விட்டது.
"கலர் நல்லா இருக்கே" என்று சொல்லிக் கொண்டே "ஏய்யா ஒங்களத்தான். இவர நாடாரு கோட்டுக்குள்ள நிறுத்தி வச்சாரா? சொல்லுங்க உம் ஜல்தி" என்றார் ஹெட்.
கூட்டத்தில் யாருமே பேசவில்லை.
"அட சொல்லுங்கய்யா. நாடார் பொய் சொல்லுறாரா? இந்தப் பொண்ணு பொய் சொல்றாளா?"
கூட்டம் மௌனம் சாதித்தது. பிறகு ஒருவர் ஒரு சலாம் போட்டுக்கொண்டே, பொதுப்படையாகப் பேசினார்.
"எங்களுக்கு ஒண்ணுந் தெரியாதுங்க. வயலுக்குப் போயிட்டு இப்போதான் வந்தோம்."
இதற்குள் ராமசாமி கொண்டு வந்த நாற்காலிகளில் இரு போலீஸ்காரர்களும் உட்கார்ந்தார்கள்.
உலகம்மைக்கு ஒன்றும் ஓடவில்லை. 'இது ஊரா அல்லது காடா?' என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டாள். "எலியும் பூனையும் மாதிரி சண்டட போடுறாக" என்ற பழமொழியை ஊரார் சொல்லும் போதெல்லாம், அவள் யோசித்துப் பார்த்தவள். 'எலி, பூனை கூட எப்பவும் சண்டைக்குப் போகாது. உயிர் பிழைச்சா போதுமுன்னு பூனயப் பார்த்ததும் ஓடுகிற ஜீவன் அது. இருந்தாலும் அடிச்சிக் கொல்லுற பூனயயும், துடிச்சிச் சாவுற எலியையும், 'ஒரே தட்ல' வச்சு 'எலியும் பூனயும் மாதிரி' என்று சொல்வதன் உட்பொருள் இப்போதுதான் அவளுக்குப் புரிய வேண்டாத அளவுக்கு புரிந்தது. போலீஸ்காரங்க என்னடான்னா கலர் குடிக்காங்க!'
ஊராரைப் பார்த்தே அவள் கேட்டாள்.
"சொல்லுங்கய்யா! துரைச்சாமி மாமா நீரும் பாத்துக்கிட்டுத் தானே இருந்தீரு? சொல்லுமே. சீம முத்துமாமா! நீரு தான என்ன மாரிமுத்து நாடாரோட காலு கைய பிடிக்கச் சொன்னீரு? நான் கோட்டுக்குள்ள போனதுக்குப் பிராந்தன் என்னமா கேட்டான்? சொல்லுமேன் சின்னையா, பேச மாட்டீரா? மச்சான் மவராசா ஒம்மத்தான். நீருதானே அய்யாக்குத் தண்ணி குடுக்கக் கிணத்துப் பக்கம் போனீரு? போலீஸ் அய்யாமாருக்கிட்டச் சொல்லுமே. யாருமே சொல்ல மாட்டியளா. ஒங்க வாயி செத்துப் போச்சா? லிங்கையா மச்சான், நீரு கூடவா பேசாம இருக்கியரு?"
கூட்டத்தினர் மனச்சாட்சியால் உந்தப்பட்டதுபோல் முன்னுக்கும் பின்னுக்குமாக நடந்தார்கள். உண்மையைச் சொல்லத் துடித்த சிலர் கூட, போலீஸ்காரர்கள் கலரைக் குடித்த தோரணையைப் பார்த்ததும், தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டார்கள். உலகம்மை, இப்போது போலீஸ்காரர்களைப் பார்த்து அழுது கொண்டே பேசினாள்.
"இந்தா வடக்கப் பாக்குற காளியம்ம சத்தியமாக சொல்லுறேன், எங்கய்யாவ இந்த ஆளு கோட்டுக்குள்ள நிறுத்துனது வாஸ்தவம். மாரிமுத்து நாடாரே! ஏய்ய்யா பயந்துட்டீரா? இவ்வளவுதான் ஒன் வீரமா? இப்ப கோடு கிழியுமேய்யா. ஆம்புளன்னா உள்ளதச் சொல்லுமேய்யா."
ஹெட்கான்ஸ்டபிள் அதட்டினார். இதற்குள் இரண்டு இளநீர் அங்கே வந்துவிட்டன.
"ஏய் அனாவசியமா பேசாத. பொம்புளைக்கு இவ்வளவு வாயி ஆவாது."
"நீரும் ஓரம்சாஞ்சிப் பேசுறியருய்யா. இவங்கள ரகசியமாக் கூப்புட்டு விசாரிச்சா உள்ளதச் சொல்லுவாங்க. பப்ளிக்கா கேட்டா பயப்படத்தான் செய்வாங்க. ஏன்னா இந்த ஆளு அவங்கள கருவறுத்திடுவான்னு தெரியும். ஒவ்வொரு ஆளும் ஒவ்வொரு விஷயத்துல அவருகிட்ட மாட்டிக்கிட்டவங்க. ஏட்டய்யா ரகசியமா விசாரியும். என் அய்யாவ படுத்துனபாடு அப்பத் தெரியும்."
ஹெட்கான்ஸ்டபிள், இளநீரைத் தம்பிடித்துக் குடித்துவிட்டுச் சீறினார். மீசையில் சில இளநீர்த்துளிகள் புல்லில் படர்ந்த பனிபோல் மின்னின.
"ஏ பொண்ணு! எனக்கு முப்பது வருஷ போலீஸ் சர்வீஸ். எப்டி விசாரிக்கணுமுன்னு எனக்கு நீ சொல்லிக் குடுக்கிறியா. பொம்பிளேன்னு பாக்கறேன். இல்லன்னா லத்தி பிஞ்சிருக்கும்."
மாரிமுத்து நாடார் இந்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட விரும்பவில்லை. இளநீர் குடித்தவர் காதில் எதேச்சையாகச் சொல்பவர் போல் பேசினார்.
"அவா என்னைக்கும் அடங்காப்பிடாரிதான்! பொம்புள பேசுறத பெரிசா எடுக்காதிங்க. ஒண்ணுமில்ல, ஏட்டு ஸார், இவா அப்பன் மாயாண்டிக்கு அண்ணாடம் குடி. அந்தப்பக்கமா குடிச்சிட்டுத் தள்ளாடிக்கிட்டு வந்தான். 'ஏய்யா குடிக்கக் காசிருக்கு, கொடுத்த கடன அடைக்கக் காசில்லையான்னு' கேட்டேன். அதுக்கு குடிவெறில இங்கேயே புரண்டுக்கிட்டுக் கத்தினான். இவா நான் கோடு கிழிச்சேன்னு கத்துறா. இந்தச் சாக்குல வாங்குன கடன ஏப்பம் போடலாமுன்னு நெனச்சி நடிக்கிறா. நாட்ல சர்க்கார் நடக்குங்கறத மறந்துட்டா."
ஹெட்கான்ஸ்டபிள், எஸ்.பி.யைக் கண்டவர் போல் திடுக்கிட்டு எழுந்தார். மாயாண்டிப் பக்கம் போனார்.
"ஏய், ஊதுய்யா பாக்கலாம். போதும் ஊதுனது. தண்ணி நெறயா போட்டுருக்கான். ஏ பிள்ள! ஒப்பன சாராயத்த குடுத்துத் தெருவுல விட்டதுமுல்லாம பெரிய மனுஷங்கள அவமானப்படுத்தப் பாக்கியா? குடிக்கது சட்ட விரோதமுன்னு தெரியாதா? கான்ஸ்டபிள், இந்த ஆளைத் தூக்கும். மாயாண்டி நடப்பா ஸ்டேஷனுக்கு."
கான்ஸ்டபிளும், ஹெட்கான்ஸ்டபிளும் ஆளுக்கொரு கையாக, மாயாண்டியைப் பிடித்து நிறுத்தினார்கள். பிறகு ஒரு கையில் தத்தம் சைக்கிளை உருட்டிக் கொந்து, இன்னொரு கையால், மாயாண்டியின் கையைத் தோளோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டு புறப்பட்டார்கள். மாயாண்டி, பரக்கப் பரக்க விழித்தவராய், "ஒலகம்மா ஒலகம்மா!" என்று புலம்பிக் கொண்டே, அந்த போலீஸ்காரர்களுக்கு மத்தியில் நடக்க முடியாமல் நடந்தார்.
உலகம்மை வாயடைத்துப் போனாள். பெரிய அநியாயத்தைத் தண்டிக்க வந்த போலீஸ்காரர்கள், அந்த ஆளைத் தண்டிக்க மனமில்லாமல், அதை மூடி மறைக்க, ஒரு அப்பாவியைக் கூட்டிப் போவதை நினைத்து, அவளால் பேசக்கூட முடியவில்லை. 'இப்படியும் நடக்குமா' என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டு, கண்களைக் கசக்கிக் கொண்டாள்.
சிறிது தூரம் போவது வரைக்கும் அப்படியே ஸ்தம்பித்துப் போன உலகம்மை, பிறகு சுயநினைவுக்கு வந்தவள் போல் "அய்யா, அய்யா, இவ்வளவு நாளும் காசு குடுக்காம இருந்துட்டு இன்னைக்கு குடுத்து ஒம்ம கெடுத்திட்டனே, கெடுத்திட்டனே" என்று புலம்பிக் கொண்டு, இழுத்துச் செல்லப்படும் தாய்ப்பசு பின்னால் கதறியோடும் கன்று போல் ஓடினாள்.
மாரிமுத்து நாடார், வெள்ளைச்சாமியும், ராமசாமியும் புடை சூழ ஹெட்கான்ஸ்டபிளிடம் பேசிக் கொண்டு போனார்.
"நாளக்கி மந்திரி வரார். ஐயாவுக்கு டூட்டி எங்க?"
"மேடப் பக்கம்."
"அப்படின்னா நாளக்கி அங்க பாக்கலாம்."
"நீங்க வாரியளா?"
"ஆமாம். நானும் பேசுறேன்."
"நீங்க வேற கட்சியாச்சே. மாறிட்டிங்களா?"
"மாறல. ஆனால் மந்திரி எல்லாருக்கும் பொதுத்தானே."
"அதுவுஞ்சரிதான். யோவ் மாயாண்டி! ஜல்தியாய் நடய்யா. ஒன்னோட பெரிய இழவாப் போச்சி."
மாரிமுத்து நாடார், ஹெட்கான்ஸ்டபிள் கையை உரசிக் கொண்டே பேசினார். பத்து ரூபாய் நோட்டு ஒன்று கைமாறியது. பாம்புக் கண்ணனான கான்ஸ்டபிளுக்கே தெரியவில்லை.
மாரிமுத்து நாடார் விடைபெற்றுக் கொண்டார். மாயாண்டி தள்ளாடிக் கொண்டே நடந்தார். போலீஸ்காரர்கள் இப்போது அவரைக் கம்புகளால் கூட லேசாகத் தட்டிப் பார்த்தார்கள். "கட்டயில போற வயசுல ஒனக்குப் பட்ட வேணுமா?" என்று சுற்றி நிற்பவர்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காகத் தமாஷ் செய்தார்கள். உலகம்மை 'அய்யா அய்யா' என்று புலம்பிக் கொண்டே பின்னால் நடந்தாள். ஊர்க்கூட்டமும் அவர்கள் பின்னால் ஊர்வல அணிவகுப்பு மாதிரி போயிற்று.
உலகம்மை பள்ளிக்கூடத்தின் பக்கம் சிறிது நின்றாள். தள்ளாடிக் கொண்டும், தள்ளப்பட்டுக் கொண்டும் போன தகப்பனைப் பார்த்தாள். அவள் கண்களில் ஒருவித வெறி. உடம்பில் ஒருவித முறுக்கு. தலையில் ஒருவித நிமிர்வு.
முன்னால் போகும் அய்யா, வெறும் அய்யாவாக, இப்போது அவளுக்குத் தெரியவில்லை. ஏழையாகப் பிறந்த ஒருவனை, எந்த வம்புதும்புக்கும் போகாத ஒருவனை, கிட்டத்தட்ட அனாதையாக இருக்கும் ஒரு அப்பாவியை, அநியாயம் நியாய வேடம் பூண்டு, அக்கிரமம் போலீஸ் உருவமாகி, கொண்டு போவதாக நினைத்துக் கொண்டாள்.
உலகம்மை, வேடிக்கை பார்ப்பது போல வரும் கூட்டத்தை ஒருமுறை அலட்சியமாகப் பார்த்தாள்.
உபதேசம் செய்த சீமமுத்து மாமா, தண்ணீர் எடுக்கப் போன மவராசா மச்சான், வழக்குப் பேசப்போகும் லிங்கையா மச்சான், 'வம்புச் சண்டைக்குப் போவக்கூடாது; வந்த சண்டய விடக்கூடாதுன்னு' அடிச்சிப் பேசும் ஆறுமுக ஆசாரி, 'ஏழையென்றும், கோழையென்றும் எவருமில்லை ஜாதியில்' என்று ஒரு பாரதியாக மாறும் சீமைச்சாமி வாத்தியார், அக்கிரமக்காரர்களை அடக்குபவராக 'பாவக்கூத்து' நாடகத்தில் குரலை மாற்றிப் பேசும் சண்முகம் பிள்ளை - அத்தனை பேரையும் அலட்சியமாகப் பார்த்த உலகம்மைக்கு, இப்போது அசாத்திய தைரியம் வந்துவிட்டது போல் தோன்றியது. அத்தனை பேரும் அவளுக்குப் புழுக்களாகத்தான் தெரிந்தனர். நாடி நரம்புகளெங்கும் வியாபித்திருந்த தைரிய அணுக்கள் அனைத்தும் ஒன்றிரண்டாய், இரண்டு நான்காய், நான்கு பதினாறாய், பதினாறு இருநூற்று ஐம்பத்தாறாய் பிரிந்து, அதுவே அடக்க முடியாத அணுப்பிளப்பாகி அணுகுண்டை அடிவயிற்றில் வைத்திருப்பவள் போல், கூட்டத்தைப் பார்த்துப் பேசினாள்:
"நீங்களெல்லாம் மனுஷங்களாய்யா? ஒங்களுக்கு எதுக்குய்யா வேட்டி, சட்டை? பொட்டையிலயும் கேடுகெட்ட பொட்டப்பயலுக! ஏன் பின்னால வாரீக? உள்ளதச் சொல்லப் பயப்படுற நீங்களெல்லாம் எதுக்காவ மனுஷன்னு பூலோகத்துல லாந்தணும்? போங்கய்யா, ஒங்க வேலயப் பாத்துக்கிட்டு."
கூட்டத்தினர் முணுமுணுத்துக் கொண்டே, கோபத்துடன் பின் வாங்கினர். ஒருவேளை போலீஸ்காரர்கள் இருந்ததும் நல்லதாய்ப் போயிற்று. இல்லையென்றால், அவளை அடித்தாலும் அடித்திருப்பார்கள்.
உலகம்மை போலீஸ்காரர்கள் பின்னால் கம்பீரமாக நடந்து கொண்டிருந்தாள்.
'லாக்கப்' அறைக்குள், மாயாண்டியைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட்டு, வெளியே பூட்டுப் போட்டுக் கொண்டே, பின்னால் வந்து நின்ற உலகம்மையைப் பார்த்து, "ஊர்ல எதித்துப் பேசினது மாதிரி இப்பப் பேசு பாக்கலாம்... ஒன்ன மொட்ட அடிக்காட்டாக் கேளு" என்று கொக்கரித்தார் ஹெட்கான்ஸ்டபிள். புகார் செய்தவளையே மடக்கிப் போட்ட ஹெட்கான்ஸ்டபிளின் சிருஷ்டி விநோதத்தைக் கண்களால் மெச்சிக் கொண்டே, ரைட்டர், அவரைப் பார்த்தார். ஹெட்கான்ஸ்டபிள் விளக்கினார்:
"இவன் குடிச்சிட்டுக் கலாட்டா பண்ணியிருக்கான். அப்பன அடக்க வக்குல்லாம இவா ஆடுறா. ஒருவேள இவளும் குடிச்சிருக்காளோ என்னவோ? ஏய் ஊது பாக்கலாம்."
உலகம்மை சற்று விலகிப் போய் நின்று கொண்டாள். ரைட்டர், 'புரபஷனலாய்'ப் பேசினார்.
"டாக்டர் சர்டிபிகேட் வாங்கிட்டிங்களா?"
"வாங்காம வருவனா? ஏய் ஒன் பேரு என்ன? உலவா? இங்க நிக்கப்படாது. வெளில போ மொதல்ல."
"அய்யாவ எப்ப விடுவிங்க?"
"ஆறு மாசம் வாங்கிக் குடுக்காம விடப் போறதுல்ல. அப்பதான் ஒன் வாயி அடங்கும். சரி சரி போ."
ரைட்டர் இழுத்து இழுத்துப் பேசினார்.
"இங்கயே இருக்கட்டுமே."
ரைட்டர் தன்னைப் பார்த்துச் சிரித்த தோரணை, உலகம்மைக்குப் பிடிக்கவில்லை. போலீஸ் நிலைய 'ரகசியங்களைப்' பற்றித் தப்பாகவோ, சரியாகவோ ஒரு மாதிரி கேள்விப்பட்டிருந்தாள். என்ன தான் ஹெட்கான்ஸ்டபிள் மோசமானவராக இருந்தாலும் 'ரைட்டருக்கு'ப் பயந்துதான், தன்னை விரட்டுவதாக அவளுக்குத் தெரிந்தது.
உலகம்மை, உள்ளே தவியாய் தவித்த அய்யாவைப் பார்த்தாள். அவர், ஏற்கெனவே செத்துப் போனவர் போல், தலையில் கையை வைத்துக் கொண்டு கம்பிக்கிராதியில் சாய்ந்து கொண்டு பரிதாபமாக நின்றார். உலகம்மைக்கு நெஞ்சை அடைத்தது.
"எதுவும் வேணுமாய்யா?"
"ஒண்ணும் வேண்டாம். நான் சொன்னதை நீ கேட்டுருந்தா இப்டி ஆவாது."
"எல்லாத்துக்கும் கடவுள் இருக்கான். கோட்டுக்குள்ள இருக்கையில தண்ணி தண்ணின்னு தவிச்சீரே. நான் பாவி மறந்து போயி இங்க வந்துட்டேன். தண்ணி குடிச்சீரா? யாரு குடுத்தா?"
"ராமசுப்பு தந்தான். இன்னும் தாகம் தீரல."
ஹெட்கான்ஸ்டபிள் குறுக்கே புகுந்தார்.
"பட்ட போட்டா தாகமாகத்தான் இருக்கும். ஹி ஹி."
'ஒமக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்கப் போன உலகம்மை, வீரியத்தை விட காரியம் முக்கியமானது என்பதை உணர்ந்து பேசாமல் நின்றாள். இதர நான்கு பேரோடு நின்ற மாயாண்டியை, அந்த நால்வரில் ஒருவன், "தாத்தா, இந்தப் பக்கமா வந்து உட்காரும்" என்று ஆதரவோடு சொன்னான். அப்படிச் சொன்னதால் திருப்திப்பட்டாள் உலகம்மை. அதே சமயம் அய்யாவைப் பார்த்துக் கொண்டு நின்றால், முதல் பாடை தனக்குத்தான் என்று நினைத்தவளாய் வெளியே வந்தாள். போலீஸ் காம்பவுண்டுக்குள் ஒரு வேப்ப மரத்தடியில் ஐந்தாறு பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். உலகம்மை, அவர்களில் ஒருத்தியானாள்.
"நீ யாரும்மா?"
"ஊரு குட்டாம்பட்டி. பேரு உலகம்மா. பெரிய பேரு தான். அய்யாவ பட்டைச் சாராயம் போட்டார்னு இழுத்துக்கிட்டு வந்துட்டாங்க. சாராயங்குடிச்சா ஜெயிலுல போடுவாங்களோ?"
"மொதல் தடவயா?"
"பிடிபடுறது மொதல் தடவைதான்."
"சப் இன்ஸ்பெக்டர் வருவாரு. காலுல கைல விழு விட்டுடுவாரு."
"அவரு எப்ப வருவாரு?"
"இன்னிக்கும் நாளைக்கும் மந்திரி கூட இருப்பாரு. நாளக்கழிச்சிதான் கெடைப்பாரு."
"அது வரக்கிம் எங்கய்யா அதுலதான் இருக்கணுமா?"
"நீ யோகக்காரி. எங்க வீட்டுக்காரரு நாலு நாளா இருக்காரு. இங்க வாரது லேசி, போறதுதான் கஷ்டம்."
"ஆமா இங்க எப்பவாவது பணக்காரங்க வாரதுண்டா?"
"வருவாங்க, சிபாரிசுக்கு வருவாங்க."
"குடிச்சவனுக்கு ஆறு மாசமுன்னா குடிக்க வச்சவனுக்கு எத்தன மாசம்?"
"ஒனக்கு வயசு எவ்வளவு?"
"இந்த புரட்டாசியோட பத்தொம்பது முடியுதுன்னு அய்யா சொன்னாரு."
சகஜமாகவும், சரசமாகவும் பேசிக் கொண்டிருந்த பெண்கள், தங்களுக்குள் 'தொழில் விவரங்களை' பேசத் துவங்கினார்கள். உலகம்மைக்கு முதலில் புரியவில்லை. அது புரியத் துவங்கியதும், அந்த இடத்தை விட்டு புறப்படத் துவங்கினாள். அய்யாவுக்கு டீ ரொட்டி வாங்கிக் கொடுக்கலாமா என்று நினைத்தவள் போல், லாக்கப் அறைப் பக்கம் போனாள். மாயாண்டியோ, முதன்முறையாக, கரடு முரடில்லாத தரையில் படுத்த 'சுகத்தில்' குறட்டை விட்டுத் தூங்கினார். 'ஒன்றும் ஓடாத போது, எதுவும் செய்ய முடியாது என்ற நிலை வரும்போது, கடவுளே வந்தாலன்றிக் கதியில்லை என்ற சந்தர்ப்பம் வரும்போது, ஏற்படுமே பெருந்தூக்கம்' - அது இப்போது மாயாண்டியை அரவணைத்துக் கொண்டது.
உலகம்மை, சிறிது நேரம் அங்கேயே நின்றாள். ரைட்டர் பார்வை, பீடி ஏஜெண்ட் ராமசாமியின் பார்வை மாதிரி இருந்தது. வெளியே வந்த உலகம்மை அந்தப் பெண்கள் பக்கம் போனாள். அவளை அந்த சந்தர்ப்பத்தில் விரும்பாதவர்கள் போல், பேசிக் கொண்டிருந்த அவர்கள், பேச்சை நிறுத்திவிட்டு அவளையே பார்த்தார்கள்.
உலகம்மை போலீஸ் காம்பவுண்டிற்கு வெளியே வந்தாள். லேசாகப் பசியெடுப்பது போல் தோன்றியது. நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்த சோதனை. இப்போது சாதாரணமாகத் தெரிவதைப் பார்த்து, அவள் ஆச்சரியப் பட்டாள். மெள்ள நடந்தாள். பஸ் நிலையத்திற்கு அருகே வந்தாள். இரவு ஒன்பது மணி இருக்கும். நல்லவேளை, அவளிடம் மூன்று ரூபாய் இருந்தது. முந்தாணிச் சேலையில் 'முடிச்சி'ப் போட்டு வைத்திருந்தாள். டீக்கடைப் பக்கமாகப் போனாள். பிறகு 'நம்ம நிலம இப்படி ஆயிட்டே. அம்மா மட்டும் இருந்திருந்தா' என்று கொஞ்சம் சத்தமாகவே புலம்பிவிட்டு, அங்கே இருந்து, தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதைப் பார்ப்பதற்காக பஸ் நிலையத்திற்கு வந்தாள்.
அவளால், தன் பார்வையை நம்ப முடியவில்லை. கண்களை அழுத்தித் தேய்த்துவிட்டுக் கொண்டு, மீண்டும் பார்த்தாள்.
லோகு, கையில் ஒரு 'சூட்கேஸுடன்' நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் திரும்பிப் போய்விடலாமா என்று கூட, உலகம்மை நினைத்தாள். 'ஏற்கெனவே அவரிடம் பேசியதால் படும் பாடும் போதும்.' ஆனால் அவளால் திரும்பி நடக்க முடியவில்லை. 'பராக்குப்' பார்ப்பவள் மாதிரி, அங்கேயும் இங்கேயுமாய் நடந்து, கடைசியில் பஸ்ஸுக்குள் இருப்பவர் தங்கதுரை சின்னய்யாதானா என்று பார்ப்பதற்குப் போகிறவள் போல், தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு தன்னை மீறி அவன் முன்னால் வந்து நின்றாள். அவன் பார்வை எங்கேயோ இருந்தது. அவள் லேசாக இருமிக் கொண்டாள்.
ஏறிட்டுப் பார்த்த லோகு, அப்படியே பார்த்துக் கொண்டு நின்றான். நழுவி விழப்போவது போல் இருந்த சூட்கேஸை லேசாகத் தூக்கியபடி ஆட்டி, அதைப் பிடித்துக் கொண்டு, அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். சிறிது நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். மௌனம் மொழியாயிற்று. விழிகள் வாயாயின. உலகம்மைக்கு, அவன் மார்பில் தலைசாய்த்து அழவேண்டும் போல் தோன்றியது. அவள், அவன் மனைவியாக அங்கே வந்து நிற்பது போலவும், இருவரும் சென்னைக்குப் புறப்படுவது போலவும் கற்பனை செய்து கொண்டாள். நேரத்தை வீணாக்க விரும்பாதவன் போல், லோகுதான் பேசப் போனான். பேச்சு வரவில்லை. இறுதியில் எப்படியோ வந்தது.
"சரோசாவா?"
"என் பேரு உலகம்ம."
"நீ ஊருக்கு உலகம்மையா இருக்கலாம். ஆனால் எனக்கு எப்போதும் சரோசாதான்."
"எங்க போறீங்க?"
"மெட்ராஸு. இங்க பஸ் ஏறி தென்காசி போகணும். தென்காசில இருந்து ரயிலு."
"கடைசியிலே எங்க சரோசாக்காவ கைவுட்டுட்டிய."
"ஒன்ன மனைவியாய் நினச்ச பிறகு இனிமே எந்தப் பொண்ணோடேயும் நல்லபடியாக் குடும்பம் நடத்த முடியுமாங்கறது சந்தேகந்தான்."
"சும்மாச் சொல்றீங்க. பட்டணத்துக்காரர் வார்த்த கிராமத்தோட சரி. நினைக்கமாட்டீய."
"அதுவுஞ்சரிதான். மறந்தால்லா நினைக்கதுக்கு? நீதான் மறந்துடுவே."
"நெனச்சால்லா மறக்கதுக்கு?"
அவன் முகத்தைச் சுழித்தான். அவள் வேண்டும் என்று தான் பொங்கி எழுந்த இதயப் பிரவாகத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசினாள். அவனை, அவன் பொருட்டு, அதிகமாகத் தன்னிடம் ஈடுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை. இதனால் தான் 'லாக்கப்பில்' இருக்கும் அய்யாவைப் பற்றிக் கூட அவள் சொல்ல விரும்பவில்லை. அவளுக்காக, அவன் போராட வருவான் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் ஏழெட்டுத் தங்கைகள் அவனை நம்பியிருக்கும் போது, அவன் ஒன்பதாவது தங்கை மாதிரிதான் நடந்து கொள்ள வேண்டும். அது முடியாததுதான். அதனால், அவனிடம் தன்னைப் பிணைத்துக் கொள்ளாமல், குறைந்தபட்சம் அவளைச் சுற்றி அவன் கட்டி விட்ட பிணைப்புக் கயிற்றின் முனையை, அவள் காட்டிக் கொள்ளலாகாது. இருவருக்குமே தர்மசங்கடமான நிலைமை. அதைப் போக்குவது போல், சப்-இன்ஸ்பெக்டர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். லோகுவைப் பார்த்து விட்டு 'ஹலோ' என்றார். ஒரே கல்லூரியில் படித்தவர்கள்.
"என்ன மெட்ராஸுக்கா?"
"ஆமாம். ரொம்ப பிஸியா?"
"அத ஏன் கேக்றீங்க. மினிஸ்டர் டி.பி.யில் இருக்கார்."
உலகம்மைக்கு ஒரு சந்தேகம்.
"மந்திரிக்கு டி.பி.யா? அட கடவுளே, அப்போ நாளக்கி எங்க ஊருக்கு வர மாட்டாரா?"
மற்ற இருவரும் சிரித்தார்கள். உலகம்மை, தன் பட்டிக்காட்டுத் தனத்தைக் காட்டிவிட்டதற்கு வருந்துபவள் போல், முகத்தைச் சுழித்த போது அதைப் புரிந்து கொண்டு, அந்தக் 'காம்ப்ளெக்ஸை' விலக்கும் விதத்தில், லோகு விளக்கினான். உலகம்மை, லோகுவைப் பார்த்துக் கேட்டாள்:
"ஐயா தான் இன்ஸ்பெக்டரா?"
"ஆமா."
"சப்-இன்ஸ்பெக்டர்னு சொல்லுங்க. சர்க்கிள் காதுல விழப்போவுது."
"நான் எப்பவாவது கஷ்டம் வந்தா ஐயாகிட்ட வருவேன்னு சொல்லுங்க. ஆனால் நியாயத்துக்குத்தான் போவேன்."
"என் பேர சொல்லிக்கிட்டுப் போ. நிச்சயம் உதவுவார். இல்லையா ஸார்?"
"ஷூர், ஓ.கே. டாடா."
சப்-இன்ஸ்பெக்டர் போய்விட்டார். மீண்டும் மௌனம். உலகம்மை மொத்தமாக ஒரே நேரத்தில் பேசிவிடுவது போல் இனிமேல் அப்படிப்பட்ட இனிய சந்தர்ப்பம் கிடைக்காதது போல் பேசினாள்.
"எங்க சரோசாக்காவ பண்ணியிருக்கலாம். நீங்க செய்றது நல்லா இல்ல. போதாக்குறைக்கி என் பேர வேற இழுத்து விட்டுட்டீங்க. ஊர்ல ஒரே சண்ட."
"அதனால தான் சப்-இன்ஸ்பெக்டரப் பற்றிக் கேட்டியா? கலாட்டா பண்ணுறாங்களா? சொல்லு. நொடியில கம்பி என்ன வைக்கலாம். என்ன நினைச்சிட்டாங்க?"
அவன் துடித்த துடிப்பில், அவள் கிறங்கிப் போனாள். சொல்லி விடலாமா என்று கூட நினைத்தாள். கூடாது, கூடவே கூடாது. அவளுக்கு ஏனோ, மீண்டும் அழ வேண்டும் போலிருந்தது. சமாளித்துக் கொண்டு சமாதானப்படுத்தினாள்.
"அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது. நீங்க பண்ணுன கலாட்டாவுல நான் ஒங்கள, ஒங்கள 'வச்சிக்கிட்டு' இருக்கதா கூடப் பேசுறாங்க, அவ்வளவுதான்."
'வச்சிக்கிட்டு' என்ற வார்த்தை அவனுக்கு இன்பத்தையும், அவளுக்குப் பேரின்பத்தையும் கொடுத்திருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் பார்த்து, புன்னகை செய்து கொண்டார்கள். ஆண்டாண்டுக் காலமாகக் குடும்பம் நடத்தி பிள்ளை பெற்று பேரன் பேத்திகளை எடுத்தவர்கள் போல் சிரித்துக் கொண்டார்கள். அந்த எண்ணத்தை அவள் வளர விட விரும்பாதது போல் பேசினாள்.
"சரோசாக்காவதான் வேண்டான்னுட்டிங்க."
"நான் வேண்டான்னோ பிடிக்கலன்னோ வெளிப்படையா சொல்றது மிருகத்தனமுன்னு எனக்குத் தெரியும். அதனால பொதுப்படையா இப்பக் கல்யாணம் வேண்டாம்னு தான் சொன்னேன்."
"எப்ப பண்ணிப்பீங்க?"
"கடவுளுக்குத்தான் தெரியும். ஏற்கனவே ஒன்கிட்ட சொன்னது மாதிரி நான் கொம்பில பூச்சூடிய கிடா. எப்ப கோவிலுல வெட்டினாலும் சரிதான். ஆனால் என்னப் பொறுத்த அளவுல கல்யாணம் நடந்து, நடந்த வேகத்திலேயே முடிஞ்சி போயிட்டு! இனிமேல் நடந்தாலுஞ் சரிதான். நடக்காட்டாலுஞ் சரிதான். சொல்லுறது புரியுதா சரோசா?"
உலகம்மை அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் உதடுகள் துடித்தன. இமைகளில் நீர் தேங்கி நின்றது. அவன் சொன்னது புரிந்தது போலவும், புரியாமல் இருந்திருந்தால் தேவலாம் என்பது போலவும், அவள் அவனை ஏக்கமாகப் பார்த்துக் கொண்டு, அவனையும் ஏங்க வைத்து, இறுதியில் மௌனமாகக் கண்ணீர் விட்டாள்.
அவள் கண்ணீரைத் துடைத்து விடத் துடித்த லோகு, கைகளைப் பின்பக்கமாகக் கொண்டு போய்க் கட்டிக் கொண்டான். அதற்குள் பஸ் வந்துவிட்டது. அவன் கண்களும், இப்போது நீரைச் சுமந்தன. கைக்குட்டையை எடுத்துக் கண்களைத் துடைத்துக் கொண்டான்.
"ஒனக்குப் படிக்கத் தெரியுமா?"
"ஆறு வரக்கிம் படிச்சேன். எளுத்துக் கூட்டி படிச்சிடுவேன்."
அவன் மடமடவென்று ஒரு தாளில் எழுதினான். பிறகு "இதுதான் என் அட்ரஸ். என் உதவி எப்பவாவது தேவன்னா எழுது" என்று சொல்லி விட்டு, தாளை அவளிடம் கொடுத்தான்.
அவன் கொடுத்த காகிதத்தை வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டு, பிறகு அதைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டாள். இதற்குள் பஸ் டிரைவர் ஹாரன் மூலம் கத்தினார்.
"வரட்டுமா சரோசா?"
"ஒரு தடவயாவது உலகம்மான்னு சொல்லுங்க."
"வரட்டுமா உலகம்மா. இதுதான் கடைசி பஸ். இதுல போனாத்தான் ரயில பிடிக்கலாம். வரட்டுமா? பேசேன் சரோசா."
பஸ் நகரத் துவங்கியதால், அவன் அதற்குள் முண்டியடித்து ஏறிக் கொண்டிருக்கையிலேயே, அவன் கையாட்டி விடைபெறு முன்னாலேயே பஸ் போய்விட்டது.
"கடைசி பஸ்ஸா கடைசி சந்திப்பா" என்று தனக்குக் கேட்கும்படி சொல்லிக் கொண்டே, பஸ் போன திக்கையே பார்த்துக் கொண்டு நின்றாள் உலகம்மை.
உலகம்மை போலீஸ் ஸ்டேஷனுக்குள் போய் அய்யாவைப் பார்த்தாள். அவர் இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருந்தார். ஓங்கி உயர்ந்த பனையில் அனாவசியமாக ஏறிய மனிதர், இப்போது சாய்ந்துபோன பனைபோல், மனிதர்களைப் பார்க்க விரும்பாதவர் போல், கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தார்.
சிறிது நேரம் அவரையே பார்த்துக் கொண்டு நின்றுவிட்டு, வெளியே வந்தாள். இரவுப் பொழுதை 'எப்படிக் கழிப்பது?' என்று யோசித்தாள். கோணச்சத்திரத்தில் இரவு முழுவதும் இயங்கும் டீக்கடைகள் உண்டு. வருவோர் போவோர்க்கு, குறிப்பாக லாரிக்காரர்களுக்குச் 'சரக்கு'க் கொடுக்கும் 'பலசரக்கு'க் கடைகளும் அங்கே உண்டு. அங்கே போய்ப் படுத்துக் கொள்ள அவள் விரும்பவில்லை. போலீஸ் நிலையக் காம்பவுண்டுக்குள் இருந்த பெண்களும், இப்போது போய்விட்டார்கள். மணி பத்துக்கு மேலாகி விட்டது.
எவரிடமும் பேசாமல், தனித்திருக்க விரும்பிய உலகம்மை, அந்தப் பயங்கரத் தனிமையின் அசுரத்தனத்தில் அகப்பட்டவள் போல் துடித்தாள். மயானத்தில் ஏதாவது பிணம் எரிந்தால் கூடத் தேவலை. அது தனிமையை அகற்றும் என்பது போல், அருகே இருந்த அந்தப் பிண பூமியைப் பார்த்தாள். மாண்டு முடிந்தோரின் மரணக் கதையைப் பறைசாற்றும் பணக்காரச் சமாதிகளும், தொட்டால் விழுந்து விடுவது போல் இருந்த கல்லைக் கிரீடமாக வைத்துக் கொண்டிருந்த ஏழைச் சமாதிகளும், ஆழ்ந்த நித்திரையில் இருப்பது போல், பயங்கரமான மௌனத்தை வெளியிட்டுக் கொண்டு இருந்தன.
'எங்கே போவது? காம்பவுண்டில் தூங்கலாமென்றால் ரைட்டர் 'ரைட்டாய்' நடக்க மாட்டான் போல் தோணுது. டீக்கடைப் பக்கம் போனால், அவளையும் பலசரக்கில் ஒரு 'சரக்காக'க் கருதலாம். இருபதை எட்டும் உலகம்மை இரண்டு வயதுச் சிறுமியாகி 'அம்மா அம்மா' என்று அரற்றினாள். தாயின் மடியில் தலைவைத்துப் படுக்க விரும்பியவள் போல், போலீஸ் காம்பவுண்ட் சுவரில், தலையைத் தேய்த்து தேய்த்து அழுதாள். அழுகை திடீரென்று சினமாகியது. ஓட்டமும் நடையுமாக ஊருக்குப் போய், தூங்கிக் கொண்டிருக்கும் மாரிமுத்துவையோ, ராமசாமியையோ, இடுப்பில் செருகியிருக்கும் சின்னக்கத்தியால் கீறலாமா என்று நினைத்தாள். இடுப்புக் கத்தியை நினைத்ததும், அதன் அருகில் செருகியிருக்கும் லோகன் கொடுத்த காகிதம் நினைவுக்கு வந்தது. அந்தக் காகிதத்தை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்ட போது "இதுதான் கடைசி பஸ். இதுல போனாத்தான் ஸ்டேஷன்ல ரயில பிடிக்கலாம்" என்று அவன் சொன்ன இறுதி வார்த்தைகள் அப்போதுதான் பேசியது போல், அவள் காதில் ஒலித்தன. 'ரயில்வே டேஷனில் இந்நேரம் ரயில் ஏறியிருப்பாரோ?'
'ரயில்வே டேஷன், ரயில்வே டேஷன்.'
'ஆமாம், கோணச்சத்திரத்துலயும் ஒரு ரயில்வே டேசன் இருக்கிறதே. அங்கே போய் ஏன் ஆட்களோடு ஆளாகப் படுத்திருக்கக் கூடாது? கடவுளா பாத்துதான் 'அவர' அனுப்பி இந்த மாதிரி பேச வச்சிருக்கான்!'
லோகனை நினைத்தவுடனேயே, தன் இரவுப் பிரச்சினைக்கு வழி கிடைத்திருப்பதை நினைத்து, அவள் அந்த நிலையிலும் மகிழ்ந்து போனாள். அவன் நினைவே, இப்படி ஒரு நல்லதைச் செய்தால், அவன் எப்படிப்பட்டவனாய் இருக்க வேண்டும்! எவளுக்குக் குடுத்து வச்சிருக்கோ? இந்நேரம் யாராவது ஒருத்தி எதிரில் உட்கார்ந்து, அவரை விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டிருப்பாள்!
உலகம்மை சிந்தித்துக் கொண்டே நிற்கவில்லை. ஆட்களை அடைக்கும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, அவர்களை, அப்புறப்படுத்தும் ரயில்வே ஸ்டேஷனுக்கு நடந்தாள். அவளைச் சந்தேகத்துடன் பார்த்து "நீ யார்?" என்று கேட்ட போலீஸ்காரரிடம் "கடயத்துக்குப் போறேன்" என்று கூசாமல் சொன்னாள். அப்படிச் சொன்னதற்காக அவளே ஆச்சரியப்பட்டாள். 'நாலு இடம் பழகினால், பொய் தானா வரும் போலிருக்கே. இதனால் தான் விவசாயிங்கள விட, வியாபாரிங்களும், வியாபாரிகள விட படிச்சவங்களும் அதிகமாப் பொய் சொல்றாங்க. கஷ்டம் தானாக வந்தா பொய்யும் தானாக வரும் போலிருக்கு. அப்படின்னா கஷ்டப்படாம ஜேஜேன்னு வாழ்றவங்களும் எதுக்காவ பொய் சொல்றாங்க?'
லோகுவின் இன்ப நினைவும், அய்யாவின் துன்ப நினைவும் மாறிமாறித் துரத்த, அவற்றைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தூக்கதேவனிடம் அடைக்கலமானாள். காலையில் கண்விழித்த உலகம்மை, ஓட்டமும் நடையுமாக அய்யாவைப் பார்க்க ஓடினாள். அவர் 'குத்துக்கால்' போட்டு உட்கார்ந்து இருந்தார். அப்படி இருந்தால், அவர் பசியைப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். அவளுக்கும் பசி. நல்ல வேளை முந்தாணியில் ரூபாய் 'முடிச்சி' இருந்தது.
ஹோட்டலில் போய், இரண்டு இட்லி தின்னலாமா என்று நினைத்தாள். இதுவரை ஹோட்டல் பக்கம் போகாதவள், இப்பவும் போக விரும்பாதவள் போல், ஒரு டீக்கடையில், இரண்டு 'பன்கள்' வாங்கிக் கொண்டாள். ஒரு டீயையும் கண்ணாடி கிளாசில் வாங்கிக் கொண்டு, கிளாஸிற்கு பிரதியாக ஐம்பது பைசாவை, 'டிபாசிட்டாக'க் கொடுத்துவிட்டு, அய்யாவிடம் வந்தாள். கண்ணாடி டம்ளரைக் கொடுக்கப் போகும் போது, மூன்று பழங்களை வாங்கி மடியில் வைத்துக் கொண்டாள். அங்கே சாப்பிட அவளுக்குக் கூசிற்று. எவரும் பார்க்காத இடத்திற்குப் போய்ச் சாப்பிடலாம் என்று நினைத்து, பின்னர் பசியையும் மறந்தவளாய், அலுவலகத்திற்கு வருவது போல், 'கரெக்டாக' வந்து, போலீஸ் ஸ்டேஷனில், ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்த பெண்களுடன் அவளும் சேர்ந்து கொண்டாள்.
அப்படியும் இப்படியுமாக ஒருநாள் உருண்டோடி விட்டது. சப்-இன்ஸ்பெக்டரைக் காணவில்லை. மறுநாள் அவர் எப்போது வருவார் என்று, வருகிற மோட்டார் சைக்கிள்களைப் பார்த்துக் கொண்டிருந்த உலகம்மை, அவர் ஜீப்பில் இருந்து இறங்கியதைப் பார்த்ததும், எதிர்பாராத மகிழ்ச்சியில் எழுந்தாள். "கொஞ்சம் பொறு. வந்தவரு இருக்கவங்கள திட்டி முடிச்சி அலுத்துப் போவட்டும். அப்ப போனாத்தான் காரியம் குதிரும்" என்று சொன்ன ஒரு பெண்ணின் அறிவுரையை ஏற்காமல், ஒரு துள்ளலில் படிக்கட்டுகளைத் தாவி, விசாலமான அந்த அறைக்குள் போய் "கும்பிடுறேனுங்க" என்றாள். ஹெட்கான்ஸ்டபிள் தலையைச் சொரிந்து கொண்டும், ரைட்டர் வயிற்றைச் சொரிந்து கொண்டும் அங்கே நின்றார்கள்.
சப் இன்ஸ்பெக்டர் பையன், புருவத்தை உயர்த்திக் கொண்டு "நீ நீ" என்றான். சட்டென்று பதில் சொன்னாள்:
"லோகுவுக்கு... லோகுவுக்கு வேண்டியவள். அய்யாவப் பாக்க வந்தேன்."
"என்னம்மா விஷயம்?"
"அதோ அவருதாங்க என்னோட அய்யா. ஏட்டய்யா இழுத்துக்கிட்டு வந்து வச்சிருக்காரு. ரெண்டு நாளா அவரு துள்ளத் துடிக்கக் கிடக்காரு."
சப் இன்ஸ்பெக்டர் கேள்விப் புருவத்தோடு பார்த்தார்.
"குட்டாம்பட்டில சாராயம் குடிச்சிட்டு கலாட்டா பண்ணுனான். என்னால இழுக்காம வரமுடியல. ஒரே கலாட்டா உருள்றான், ஒம்மாங்றான், ஒக்காங்றான், என்னயே போடா வாடான்னுட்டான். அப்டி இருந்தும் அடிக்காம கூட்டியாந்தேன்."
உலகம்மை எரிச்சலோடு சொன்னாள்.
"அவரு சொல்றதுல குடிச்சாங்றது மட்டும் வாஸ்தவம். மத்ததெல்லாம் அண்டப்புளுவு, ஆகாசப் புளுவுங்க!"
"ஆமா நீ லோகுவோட என்னைப் பாத்தியே, அப்போ சொல்லி இருக்கலாமே? அவரும் எங்கிட்ட சொல்லலையே!"
"நான் அவருகிட்ட இதச் சொல்லவே இல்ல. மெட்ராஸுக்குப் புறப்பட்டு நிக்கறவர்கிட்ட அபசகுனமா எங்கதையைச் சொல்ல விரும்பல. அவரு, அவரோட சொமையையே சுமக்க முடியாம இருக்கயில, நான் என் சுமைய எப்படிய்யா தூக்கிக் குடுக்க முடியும்?"
சப் இன்ஸ்பெக்டர், அவளை ஆச்சரியமாகப் பார்த்தார். அவள் வார்த்தை, சத்திய ஒலியாய் முழங்குவது கண்டு புன்னகை செய்தார். அந்தப் புன்னகை தந்த தைரியத்தில் உலகம்மை மடமடவென்று பேசினாள்:
"எங்கய்யாவ, மாரிமுத்து நாடார் குடுத்த கடன சாக்கா வச்சி கோட்டுக்குள்ள நிறுத்திட்டாரு. நானும், போலீஸ் ஏழ மக்களோட தொணைவன்னு சொல்றாகளேன்னு இங்க வந்து, இந்த அய்யாகிட்டச் சொன்னேன். கோட்டுக்குள்ள அய்யா துடியாய்த் துடிச்சி கதறிக்கிட்டுக் கிடந்தாரு. என்ன வேற கெட்ட வார்த்தையில பேசுனாங்க. அதனால் இந்த அய்யாகிட்ட வந்து சொன்னேன். இந்த அய்யாவும் வந்தாரு. கோட்டுக்குள்ள நிறுத்தினவங்கிட்டயே கலர் குடிச்சிட்டு, பட்ட போட்டார்னு அய்யாவ இழுத்துக்கிட்டு வந்துட்டாரு. நானும் கேக்குறேன், எங்கய்யா சாராயம் குடிச்சதுக்கும் இவரு மாரிமுத்தோட கலர் குடிச்சதுக்கும் என்ன வித்யாசம்? சொல்லுங்க எசமான்?"
ஹெட்கான்ஸ்டபிள் முகத்தில் 'கலர்' மாறியது. பல்லைக் கடித்துக் கொண்டு, ஏதோ சொல்லப் போனார். சப்-இன்ஸ்பெக்டர் தனக்கு வந்த சிரிப்பையும், பேசப் போன ஹெட்கான்ஸ்டபிளையும் ஒரே சமயத்தில் அடக்கினார். உலகம்மையால் பேசாமல் இருக்க முடியவில்லை.
"கோட்டுக்குள்ள வச்சாரா இல்லியான்னு பக்கத்துல இருக்கவங்கள ரகசியமா விசாரிக்கச் சொன்னேன். இவரு ரகசியமா உண்ம தெரிஞ்சாலும் அத மாத்திச் சொல்லுவார்னு தெரிஞ்சும் சொன்னேன். கேட்டாரான்னு கேளுங்க. ஏழன்னா இளக்காரம். பணக்காரன்னா முப்பத்திரண்டு பல்லும் தானா சாயுது."
சப் இன்ஸ்பெக்டருக்கும் லேசாகக் கோபம் வந்தது. அவள், தன் 'டிபார்ட்மென்ட் சபார்டினேட்டை' ஓவராய் பேசுவது போல் தோன்றியது. கொஞ்சம் அதட்டிப் பார்த்தார்.
"நீ பேசுறது நல்லாயில்லை. அதிகாரிங்கள அனாவசியமா பேசுற. மரியாத குடுக்காம பேசுற."
"நான் சொல்றது தப்புன்னா ஒங்க காலுல கிடக்கிற பூட்ஸக் கழத்தி அடியுங்க பட்டுக்கிறேன். ஆனால் நியாயத்துல அடிக்காதிய. சாராயம் குடிச்சதா அய்யாவ கூட்டியாந்தாரே! அவருக்கு யாரு குடுத்திருப்பான்னு விசாரிச்சாரா? காய்ச்சுனவங்களையும் பிடிச்சாரான்னு கேளுங்க."
ஹெட்கான்ஸ்டபிள் சங்கடப்பட்டார். சப் இன்ஸ்பெக்டர் உள்ளூரச் சந்தோஷப்பட்டாலும், அவளைக் கோபமாகப் பார்ப்பது போல் பார்த்தார். அவர் வேலையில் சேர்ந்து ஒரு மாதந்தான் ஆகிறது. ஆகையால் இன்னும் கெட்டுப் போகவில்லை.
உலகம்மைக்கு இன்னும் ஆவேசம் நின்றபாடில்லை. லாக்கப்பிற்குள் இருந்த மாயாண்டி கூட "போதுமுழா, போதுமுழா" என்றார். அவளுக்குப் போதாது போல் தோன்றியது.
"ஒங்களப் பாத்தா நல்லவங்க மாதிரி தோணுது. அதனாலதான் சொல்லுதேன். தைரியமிருந்தா மாரிமுத்து நாடார இங்கக் கூட்டியாந்து விசாரிங்க பாக்கலாம். ஏழங்க தானா ஒங்க காக்கிச் சட்டைக்கு பயப்படணும்?"
உலகம்மை நிறுத்திக் கொண்டாள். சப்-இன்ஸ்பெக்டர், மேஜை மீதிருந்த பேப்பர் வெயிட்டை உருட்டிவிட்டுக் கொண்டு, சிறிது யோசித்தார். பிறகு உத்தரவிட்டார்.
"ஹெட்கான்ஸ்டபிள், உடனே மாரிமுத்து நாடாரக் கூட்டியாங்க."
சப்-இன்ஸ்பெக்டர் இப்போது கத்தினார்.
"இலய எடுக்கச் சொன்னா எத்தன பேரு சாப்பிட்டான்னு எண்ணுறீங்க. குயிக்கா போயி கொண்டு வாரும், எனக்கு எல்லாந்தெரியும். லாக்கப்புல இருக்கவன் மேடைக்குப் போறதும் மேடையிலே இருக்கவன் லாக்கப்புக்கு வரதும் சகஜம். நமக்கு சம்பந்தமில்லாதது. 'குயிக்'."
ஹெட்கான்ஸ்டபிள் விறைப்பாக 'சல்யூட்' அடித்துக் கொண்டே புறப்பட்டார். போனவரை திரும்பக் கூப்பிட்டார் சப்-இன்ஸ்பெக்டர்.
"ஒங்களத்தாய்யா, சைக்கிள்ல போகாண்டாம். ஜீப்ப எடுத்துக்கிட்டுப் போங்க. ஆசாமி இல்லன்னு சொல்லிட்டு வரப்படாது. அந்த ஆளு எங்க இருந்தாலும் எப்படி இருந்தாலும் தூக்கிட்டு வாங்க. பணக்காரன் ஏழைங்க முற்றுகையிடுற 'கெரோவையே' சட்ட விரோதமுன்னு சொல்லும் போது, ஏழையை முற்றுகையிடுற பணக்காரனும் சட்ட விரோதி தான். விஷயம் சீரியஸ். நீங்களே அவனுக்குச் சொல்லிக் கொடுக்காமல், மாமூலா வாரது மாதிரி வராமல் ஆளோடு வரணும். அண்டர்ஸ்டாண்ட்? புரிகிறதா? போங்க குயிக், டபுலப்."
சப் இன்ஸ்பெக்டர் மாமூலான அதிகாரியல்ல. ஆகையால் 'மாமூலா' என்கிற வார்த்தைக்கு மாமூலுக்கு மேலான அழுத்தத்தைக் கொடுத்தார்.
உலகம்மை, அவர் காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும் என்று நினைத்தாள். பிறகு தவறு என்று நினைத்தவள் போல், கண்களால் அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு அய்யாவிடம் போனாள். அவர், அந்த நிலையிலும் அவளைப் 'பெருமையோடு' பார்த்து, கம்பிகளுக்கிடையே கன்னத்தைப் பதித்து, அவள் தலையைக் கோதிவிட்டார்.
ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். போலீஸ் ஜீப், மாரிமுத்து நாடாரோடு வந்திறங்கியது. வழி நெடுக, நாடாரிடம் சப் இன்ஸ்பெக்டரிடம் எப்படி எப்படிப் பேசவேண்டும், அவரைப் பற்றி எப்படி எப்படி எஸ்.பி.க்கு (கவர்னருக்கு நகலோடு) கம்ப்ளெயின்ட் எழுத வேண்டும் என்று 'பாடஞ்' சொல்லிக் கொடுத்த ஹெட்கான்ஸ்டபிள், இப்போது 'இறங்கும்வே' என்று லேசாக அதட்டினார்.
ஜீப்பை விட்டு இறங்கி, படிமீது ஏறிய மாரிமுத்து நாடார் உள்ளே போய்க் கொண்டிருந்த போதே, "சப் இன்ஸ்பெக்டர் ஸார், பிரமாதம். போலீஸ் ஏற்பாடு ஏ கிளாஸ். மந்திரியே என்கிட்டே சொன்னார்" என்று சொல்லிக் கொண்டு, விசாலமான அறைக்குள் நுழைந்தார். உலகம்மை, தன் கைகளை நெரித்துக் கொண்டாள்.
சப் இன்ஸ்பெக்டர், அவர் பேசியதை 'இக்நோர்' செய்துவிட்டு, "மாயாண்டி நாடார எதுக்காவ கோட்டுக்குள்ள அடச்சிங்க?" என்று நிதானமாகவும், அழுத்தமாகவும் கேட்டார். மாரிமுத்து நாடார் எடுத்த எடுப்பிலேயே, இதை எதிர்பார்க்கவில்லை. "மந்திரி வேற ஏதும் சொன்னாருங்களா" என்பார். நாம் உடனே, "ஆமா, உங்க பெயரக் கூடக் கேட்டார். நான் தங்கமான பையன்னு சொன்னேன்" என்று 'பேச்சு வார்த்தை' நடைபெறும் எனக் கற்பனை செய்து கொண்ட மாரிமுத்து நாடார் அடிபட்டவர் போல் மிரண்டு போனார். சப் இன்ஸ்பெக்டர் இப்போது கடுமையாகக் கேட்டார்:
"சொல்றது காதுல விழுந்துதாங்க? எதுக்காக மாயாண்டிய மாடுகள அடைத்து வக்கிற மாதிரி அடச்சி வச்சீரு? சொல்லும்!"
"நான் அப்படி ஒண்ணும் பண்ணலிங்க."
உலகம்மை, சப் இன்ஸ்பெக்டருக்கு ஒத்தாசை செய்தாள்:
"எசமான்! கர்ப்பூறத்த ஏத்துறேன். அவரு மவள் சத்தியமா அப்படிப் பண்ணலன்னு அணைக்கட்டும் பாக்கலாம்."
சப் இன்ஸ்பெக்டர் அவளைத் தட்டிக் கேட்பார் என்று எதிர்பார்த்த நாடார் எதிர்பார்த்தது நடக்காததால் கோபமாகப் பேசினார்.
"என்ன ஸார், அவள் சின்னப்பிள்ள மாதிரி பேசுறா. நீங்களும் சின்னப்பிள்ள மாதிரி சும்மா கேட்டுக்கிட்டு இருக்கீங்க?"
சப் இன்ஸ்பெக்டர் கோபத்தோடு எழுந்தார்.
"எதுய்யா சின்னப் பிள்ளைத்தனம்? வயசான மனுஷன கோட்டுக்குள்ள அடைக்கறது பெரிய மனுஷத்தனமோ? இந்தாய்யா, லாக்கப்பைத் திற. இவர இதுக்குள்ள அடக்கி வைக்கலாம். அப்பதான் இவருக்கு பிறத்தியாரோட கஷ்டந் தெரியும். போய்யா உள்ள. நீ யாராய் இருந்தாலும் எனக்குக் கவல இல்லை. இப்ப நான் போலீஸ்காரன். நீ ஒரு கிரிமினல் குற்றவாளி. போய்யா உள்ள! இல்ல, கழுத்தப் பிடித்து நானே தள்ளணுமா?"
ஆடு கோழிகளைக் கொடுத்தே அதிகாரிகளைச் 'சரிகட்டி'ப் பழகிப்போன மாரிமுத்து நாடார், அறுக்கப்படப் போகும் ஆடு மாதிரி விழித்தார். அவருக்கு, சப் இன்ஸ்பெக்டர் திட்டியதை விட, அவர் திட்டுவது உலகம்மைக்கும் தெரிகிறதே என்றுதான் அதிக வருத்தம்.
சப் இன்ஸ்பெக்டர், கோபந்தணிந்தவர் போல், நாற்காலியில் உட்கார்ந்தார். மாரிமுத்து, லாக்கப் அறைக்குப் போகாமலும், வெளியே நிற்காமலும் நரசிம்ம அவதாரம் மாதிரி, வாசலில் நின்றார். இதுவரை இந்த வயது வரைக்கும், இப்படி நடத்தப்படாத தன்னை, 'ஒரு சின்னப்பயமவன் சின்னத்தனமா நடத்துறதில' அவருக்கு ஏகப்பட்ட கஷ்டந்தான்.
சப் இன்ஸ்பெக்டர் அவரைப் பார்த்துக் கூப்பிட்டார்.
"நாடாரே, இங்க வாருமய்யா."
நாடார் வந்தார்.
"அந்த ஆளப்பாத்தா ஒமக்குப் பாவமா இல்ல? வயசான மனுஷன இப்படிப் பண்ணலாமா? பேசாதேயும். நான் ரகசியமா விசாரிச்சேன். நீரு பண்ணினது தப்பு. நீரு அவர அவமானப் படுத்துனது மாதிரி நான் ஒம்ம அவமானப்படுத்த விரும்பல. ரெண்டு பேரையும் விட்டுடுறேன். சமாதானமாகப் போங்க. இனிமேல் அந்தக் கிழவன் வழிக்கு நீரு போகக் கூடாது. இல்லன்னா அவருக்கு ஆறு வாரமும், ஒமக்கு ஆறு மாசமும் வாங்கித்தர முடியும். என்ன சொல்றீரு?"
மாரிமுத்து நாடார், அப்போதைக்கு தப்பித்தால் போதும் என்று நினைத்தார்.
"நீங்க என்ன சொன்னாலும் சரிதாங்க."
"ஆல்ரைட். ஒலகம்மா, நீயும் வாங்குன கடன குடுத்திடனும். மொத்தமா முடியாட்டாலும் கொஞ்சம் கொஞ்சமா குடுத்திடலாம்."
"சரிங்க எசமான்."
"ஆல்ரைட். மாயாண்டிய விடுய்யா. யோவ் இனிமே குடிப்பியா?"
"சத்தியமா மாட்டேன்."
"சரி போங்க."
இதற்குள், மாரிமுத்து நாடார் 'அரெஸ்ட்' செய்யப்பட்டார் என்ற செய்தி ஊரெங்கும் பரவ, வெள்ளைச்சாமி, ராமசாமியோடு ஒரு பெரிய பட்டாளமே அங்கு வந்து விட்டது. பலவேச நாடாரும், 'மச்சினனை'ப் பார்க்க வந்துவிட்டார். சப் இன்ஸ்பெக்டர் கூட, என்னமோ என்று கொஞ்சம் பயந்து போனார். மாரிமுத்து நாடாருக்கு அருகே, அய்யாவுடன் போய்க் கொண்டிருந்த உலகம்மையை, சைகை செய்து வரும்படி சொன்னார். அவள், அய்யாவையும் கூட்டிக் கொண்டு வந்தாள்.
தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு போன மாரிமுத்து நாடார், கூட்டத்தைப் பார்த்ததும், தலை நிமிர்ந்தார். சப் இன்ஸ்பெக்டரிடம் கொஞ்சம் எகிறியிருக்கலாம் என்று கூட நினைத்தார். மச்சான் பலவேசத்தைப் பார்த்து சங்கடத்துடன் சிரித்தார். அவர் "ஒம்ம சப் இன்ஸ்பெக்டர் லத்திக் கம்ப வச்சி அடிச்சானாமே. இத விடக்கூடாது. ஹைகோர்ட் வரைக்காவது போயி ரெண்டுல ஒண்ண பாத்துடணும்" என்றார். 'அடிபடல' என்று சொன்னால் கூட யாரும் நம்பத் தயாராக இல்லை. மாரிமுத்து நாடாரைச் சூழ்ந்து கொண்டு, போலீஸ் ஸ்டேஷனையே எரித்து விடுவது போல், பார்த்த கூட்டம், ஒரு கான்ஸ்டபிள் துடைப்பதற்காக எடுத்த துப்பாக்கிக்குத் தப்பர்த்தம் கொடுத்துக் கொண்டு, வேகமாக ஊரைப் பார்த்து நடந்தது.
கால் மணி நேரம் ஆனதும், உலகம்மையைப் பார்த்து "சரி நீயும் போவலாம்" என்றார் சப் இன்ஸ்பெக்டர்.
"ஒங்க உதவிய இந்த கட்டையில உயிரு இருக்கது வரைக்கும் மறக்க மாட்டேன் எசமான். அஞ்சு பத்து தரக் கூடப் பணமில்ல. தெய்வம் மாதிரி நீங்க! ஒங்கள மாதிரி லட்சத்துல ஒரு அதிகாரி இருக்கதனால தான் ஜனங்களும் கட்டுப்பாடா இருக்காங்க!"
சப் இன்ஸ்பெக்டர் சிரித்துக் கொண்டார்.
உலகம்மை, அய்யாவை ஆதரவோடு பிடித்துக் கொண்டு நடந்தாள். அதே சமயம் பலவேச நாடார் வந்திருப்பதைப் பார்த்தாள். அவரைப் பற்றி அவளுக்கு நன்றாகத் தெரியும். 'மகனுக்குப் பெண் கிடைப்பதற்காக மச்சினனிடம் நெருங்குகிறார். நிச்சயம் அந்த ஆளு அவரு நிலத்துல வீடு இருக்கக் கூடாதுன்னு சொல்லத்தான் போறாரு. அப்ப என்ன செய்யலாம், எங்க போறது' என்று நினைத்துக் கொண்டே, எண்ணம் இயலாமையாக, இயலாமை பெருமூச்சாக, அவள் 'ஒரே மூச்சில்' அய்யாவை ஆதரவாகப் பிடிக்கிறாளா அல்லது ஆதரவிற்காகப் பிடித்திருக்கிறாளா என்பது புரியாமல் ஊரைப் பார்த்து நடந்து கொண்டிருந்தாள்.
குட்டாம்பட்டிக்கு, கருத்துக் கணிப்பு நிலையங்கள் போல் அமைந்தவை அந்த ஊர் டீக்கடைகள். பள்ளிக்கூடத்திற்கு அருகே 'மெயின் பஜாரில்' இருந்த காத்தமுத்துவின் 'டீக்கடை' இதர கடைகளுக்கு வழிகாட்டுவது போல் அமைந்திருந்தது. அது 'டீக்கடை' என்று அழைக்கப்பட்டாலும், அங்கு தோசை, வடை, இட்லி முதலியவைகளும் விற்கப்படுவதுண்டு. கொஞ்சநாள் ஆட்டுக்கறி கூட இருந்தது. "ஊர்க்காரனுக்கு வயிறு பெரிசா இருக்கது மாதிரி சட்டப்பையி பெரிசா இல்ல" என்று சொல்லிவிட்டு, அதை நிறுத்தி விட்டான் காத்தமுத்து. இன்னொரு விசேஷம். அங்கு தோசை இட்லி வகையறாக்கள் அரிசியால் தயாரிக்கப்படுவதுபோல், கடைக்கு வரும் அக்கப்போர்கள், பொய்கள், புனைச்சுருட்டுகள், யூகங்கள், அபிலாஷைகள், அத்தனையும் 'ரா மெட்டிரியலாக' அதாவது கச்சாப் பொருட்களாகச் சேர்க்கப்பட்டு, அபாண்டமாகவும், சூடான செய்தியாகவும், சுவையான சம்பவக் கோவைகளாகவும் தயாரிக்கப்படுவதுண்டு.
'ஊர் வாய்க்கு உலமூடி இல்ல' என்ற பழமொழியை 'காத்தமுத்துவின் கடை வாய்க்கு' என்று திருத்திக் கொள்ளலாம். என்றாலும், காத்தமுத்து பலே ஆசாமி. எந்தவிதக் கருத்தையும் சொல்லமாட்டான். அப்படிச் சொன்னாலும் சிரிப்பான். இப்படிச் சொன்னாலும் சிரிப்பான். நெடிய மௌனம் ஏற்பட்டால், லேசாக எடுத்துக் கொடுப்பான். விஷயம், அவனே வரையறுத்திருக்கும் 'லெவலைத்' தாண்டுவது மாதிரி தெரிந்தால் பேசுபவனிடம் பாக்கியைக் கேட்பான். பெரிய மனிதராக இருந்தால், அவரது குடும்பத்தில் நடப்பதாகக் கருதப்படும் நல்ல சங்கதிகளை மட்டும் கேட்டு வைப்பான். எப்படியோ, அந்தக் கடைக்கு 'மைனாரிட்டியினரே' வந்தாலும், அவர்களே வம்பு தும்புக்குப் போகாமல் அன்றாட வாழ்க்கையே பெரிய போராட்டமாக நடத்தும் 'சைலண்ட் மெஜாரிட்டிக்கும்' பேசுவது போல் தோன்றும்.
ஊரில் சூடான செய்தி சுவையாக அடிபட்டுக் கொண்டிருந்தது. "மாரிமுத்து நாடாருக்கு சரியான அடியாம். சப் இன்ஸ்பெக்டர் பெல்ட் சுழத்தி அவர வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாராம். அதனால் நாடாரு முதுகு வீங்கிப் போயி படுத்த படுக்கையா கிடக்காராம். உலகம்மையும் சட்டாம்பட்டிப் பையனும் ராத்திரி தென்காசில ஒரு ரூம் எடுத்து தங்குனாங்களாம். அப்புறம் உலகம்ம சப் இன்ஸ்பெக்டரையும் மயக்கிட்டாளாம். மாரிமுத்து நாடாரு புறப்படும்போது புறப்பட்ட உலகம்மையை சப் இன்ஸ்பெக்டர் கண்ணடிச்சி நிக்க வச்சானாம். அப்புறம் அரைமணி நேரம் அவளோட ஜாலியா இருந்திட்டு அனுப்பி வச்சானாம். காலம் கலிகாலம். முன்னெல்லாம் இப்படியா?"
மேற்கூறிய சூழ்நிலையில், எந்த அம்சத்தை எப்படி எடுக்கலாம் என்று சிறிது யோசித்துக் கொண்டிருந்தது மசால் வடைக் கூட்டம். அதோடு விவகாரம் போலீஸ் வரைக்கும் போய்விட்டதால் யாரும் வாயை அதிகமாக விற்க விரும்பவில்லை. காத்தமுத்துவால் தாங்க முடியவில்லை. பேச்சு சூடானால்தான், ஆறிப்போயிருக்கும் அவன் டீயில் 'சூடில்லன்னு' யாரும் சொல்லமாட்டார்கள். அதோடு ஒவ்வொருவனும் 'மூணு சிங்கிளாவது' குடிக்கணுமுன்னா பேச்சில் தீப்பத்தணும். ஆகையால் காத்தமுத்துவே இப்போ வழிமொழிந்தான். அதோடு உலகம்மையைப் பற்றி அவன் என்ன பேசினாலும், அவனை "என்ன?" என்று கேட்க அவளுக்கு ஆள் கிடையாது.
"இந்த சப் இன்ஸ்பெக்டர் இருக்கது வரைக்கும் நம்ம உலகம்மய ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொல்லுதாவ."
மசால் வடையைத் தின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி, அதை வைத்துக் கொண்டே சொன்னார்.
"காலம் கெட்டுப் போச்சிவே. இல்லன்னா ஊர் விவகாரத்தை ஊரோட முடிக்காம முழுத்தப் பொம்புளப்பிள்ள முன்னப்பின்ன தெரியாதவன் கிட்ட படுத்துட்டு ஊர் மானத்த இப்படி வாங்குவாளா?"
"நாமளல்லாம் பொட்டப் பயலுவன்னு வேற சொல்லிட்டா."
"அப்ப நாமளும் அவளப் பிடிச்சி இழுத்து பொட்டப் பயலுவ இல்லங்கறத நிரூபிக்க வேண்டியதுதான்."
"செறுக்கி மவா, காலக்கைய ஒடிக்க ஆளுல்லாமப் போனதால காலத்தென்னிக்கிட்டு நடக்கா. உண்மையிலே நம்மைப் பொட்டப் பயலாத்தான் ஆக்கிட்டா."
ஒரு டம்ளர் டீயை குடித்துவிட்டு, பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த நாராயணசாமியால் பொறுக்க முடியவில்லை. போலீஸ்காரர்கள் மாயாண்டியை இழுத்துக் கொண்டு போன தினத்தில், அவர் வெளியூர் சந்தையில் கருவாடு விற்றுக் கொண்டிருந்தவர். ஆகையால் உலகம்மை சொன்ன 'பொட்டை லிஸ்டில்' தான் இல்லை என்பது அவரது அனுமானம். மாரிமுத்து நாடார், அவருக்குப் போகிற 'வாய்க்காலு' தண்ணியைத் தடுக்க முடியாது. ஏனென்றால் அவருக்கு நிலமே கிடையாது. அதோடு மாரிமுத்து நாடாரிடம் கடன்படாதவர். உலகம்மைக்குக் கொஞ்சம் தூரத்துச் சொந்தமுங்கூட. நாராயணசாமி எதிர்த்துப் பேசினார்.
"என்னய்யா பேசுறிய? பேச்சா இது? அவரு ஒரு வயசான மனுஷனைக் கோட்டுக்குள்ள நிறுத்தியிருக்காரு. வந்த போலீஸ் அடச்சவர விட்டுப்புட்டு அடைப்பட்டவரக் கூட்டிக்கிட்டுப் போவுது. ஆயிரம் ஜனத்துல ஒரு ஜனங்கூட ஏன்னு கேக்கல. அவா சொன்னதுல என்ன தப்பு? சும்மா ஒரு பொண்ணப்பத்திக் கண்டபடி பேசாதிக. நமக்கும் அக்கா தங்கச்சி இருக்கு."
தட்டாசாரி பஞ்சாட்சரம் குறுக்குக் கேள்வி கேட்டார்:
"அன்னிக்கு நீரு கேக்க வேண்டியதுதான நாடாரே?"
"நான் இருந்திருந்தா கேட்டிருப்பேன். அந்த இடத்துல உயிரக்கூட விட்டிருப்பேன். இல்லாதவன் பொண்ணுன்னா எப்படின்னாலும் பேசலாமா?"
கூட்டத்தில் ஒரு நிசப்தம். சிலர் உலகம்மையிடம் பயந்தார்கள். சப் இன்ஸ்பெக்டருக்கு 'வேண்டிய', அவளிடம், கொஞ்சம் மரியாதை கூட ஏற்பட்டது. 'பய மவா ஒண்ணுக்கிடக்க ஒண்ணா இன்ஸ்பெக்டர் கிட்ட வத்தி வச்சிப் புட்டான்னா நம்ம பொழப்பு என்னாவுறது? அதோடு நாளக்கி மாரிமுத்து நம்மையும் இப்படிப் பண்ண மாட்டாங்கறது என்ன நிச்சயம்? அப்படிப்பட்ட சமயத்துல உலகம்மய பிடிச்சி இன்ஸ்பெக்டரப் பிடிக்கலாம்.'
"நாராயணசாமி சொல்றதும் ஒரு வகையில் சரிதான். வயசான மனுஷன் மாரிமுத்து பெரிய்யா அப்டிப் பண்ணியிருக்கக் கூடாதுதான்."
ஆசாரியால் பொறுக்க முடியவில்லை.
"என்னய்யா, செத்தப் பேச்சுப் பேசுறிய? ஒங்க பேச்சில உப்பு இருக்கா? உரப்பு இருக்கா? வாங்குன கடன குடுக்காதது மட்டுமில்ல, ஒரு பொண்ணோட வாழ்வ பாழாக்கிட்டா... யாருக்குத்தான் கோவம் வராது! ஒம்ம மவள இப்படிப் பண்ணுனா இப்டிச் சம்மதிப்பீரா? அதனால அவரு அடச்சாரு. அதுக்காக பெரிய மனுஷனை இன்ஸ்பெக்டர வச்சி அடிக்க வைக்கிறதா? என்னய்யா நியாயம் பேசுறிய, நியாயம்! தேவடியா முண்டய செருப்பக் கழத்தி அடிக்காம."
நாராயணசாமி நாடாருக்குச் சொல்ல முடியாத கோபம். அவரே செருப்பால் அடிபட்டது போல் புழுங்கினார். விவகாரத்திற்குக் கொஞ்சம் 'கம்யூனல் கலர்' கொடுத்தார்.
"வே ஆசாரி மரியாதியா பேசும். ஒம்ம சாதிப் பொம்பிளய தேவடியா முண்டன்னு பேசினா பொறுப்பியா? ஒம்ம சின்னய்யா மவள தேவடியா முண்டன்னு பேசினா பொறுப்பியா? ஒம்ம பெண்டாட்டிய தேவடியா முண்டன்னு பேசினா பொறுப்பியா? ஒம்ம மவள பேசினா பொறுப்பியா? நாடார் பொண்ணுன்னா தெருவில கிடக்கு, அப்படித்தானே? தங்கத்த திருடுறதுதான் திருடுறீரு. அத இப்டிப் பேசித்தான் திருடணுமா? இனிமேல் நாடார் பொம்புளங்கள கேவலமாப் பேசினீர்னா கேவலப்பட்டு போயிடுவீரு."
காத்தமுத்து, தான் வரையறுத்துக் கொண்டிருக்கும் 'லெவலை' நாராயணசாமி தாண்டிவிடுவார் என்பதை உணர்ந்து, 'லெவலைக்' கொஞ்சம் கூட்டிக் கொண்டாலும் இப்போது அதை, அதற்குமேல் உயர்த்துவது அபாயம் என்பதை உணர்ந்து கொண்டான். இடையே விழுந்து பேசினான்:
"என்ன நாராயணசாமி மாமா நீரு பேசுறது? இங்க ஆசாரி வாராவ! பண்டாரம் வாராவ! பிள்ளமாரு வாராவ! செட்டி வாராவ! கோனாரு வாராவ! தேவரு வாராவ! சொந்த அண்ணந்தம்பி மாதுரி ஜாதி வித்தியாசமில்லாமப் பழகுறோம். நீரு சாதிச் சண்டயக் கிளப்புறது நியாயமா? அப்டி என்ன ஜாதி வாழுறது? குத்திப் பாத்தா ஒரு ரத்தம், கூடியழுதா ஒரு சத்தம்."
இந்தச் சமயத்தில், மேல் ஜாதிக்காரர்கள், கடையோடு சேர்ந்து கட்டப்பட்ட திண்ணையில் இருக்கும்போது, பாய்லர் அடுப்புத் திட்டுக்குக் கீழே, பிரத்யேகமான கண்ணாடி கிளாசில், ஒரு 'கப்' டீயை உறிஞ்சிக் கொண்டிருந்த சின்னான், காத்தமுத்துவை ஆச்சரியமாகப் பார்த்தார். 'திண்ணையில் ஏறி உட்காரலாமா?' என்று கூட 'தமாஷாக' நினைத்துக் கொண்டார்.
ஒரு சமயம், அவர் கீழே உட்கார்ந்திருந்த போது, மழை அதிகமாகி, உடம்பை நனைத்ததும், மேல் ஜாதிக்காரர்கள் உட்கார்ந்திருக்கும் இதே திண்ணையில் தொடையைச் சாய்த்துக் கொண்டு நின்றார். இதைப்பார்த்த பலவேச நாடாரும், பஞ்சாட்சர ஆசாரியும், இவ்வளவு பேசுகிற இதே காத்தமுத்துவும், "ஏண்டா பறப்பய மவனே, என்னதான் நினைச்சிக்கிட்ட? பெரிய குதிர ஏறலாமுன்னு நினைக்கியா? முக்காலும் காக்கா முழுவிக் குளிச்சாலும் அது கொக்காயிடுமா?" என்று கேட்டு, கொட்டும் மழை பெய்த போது அவரைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியதை நினைத்துப் பார்த்துக் கொண்டார். அப்போது அப்படி தனக்குள்ளேயே பேசிக் கொண்டார்.
"குத்திப் பார்த்தா ஒரே ரத்தம். கூடியழுதா ஒரே சத்தமுன்னு ஒரேயடியா அழுவுறாங்களே, ரத்தங் கெட்ட பயலுவ!"
ஆசாரியை இன்னொரு ஆசாமி விரட்டினார்.
"ஒமக்கென்ன தாத்தா வம்பு? யாரும் எப்படியும் போறாக. பேசாம வீட்ல போயி வேலயப்பாரும்."
ஆசாரி, சில பெண்கள் காதில் தொங்கும் 'பாம்படம்' மாதிரி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு போன போது, காத்தமுத்து, நாராயணசாமியை எப்படி அனுப்புவது என்று விழி பிதுங்குமளவிற்கு யோசித்துக் கொண்டிருந்தான். ஆசாரி, நேராக வீட்டுக்குப் போகவில்லை. பலவேச நாடார் வீட்டு வழியாக, மாரிமுத்து நாடாரின் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார். அவருக்குத் தலை வெடித்து விடும் போல் இருந்தது.
நாராயணசாமி, கூட்டம் எதிர்க்காததை விட 'அமைதியாக' இருந்ததை, அங்கீகாரமாக நினைத்துக் கொண்டு, என்னவெல்லாமோ பேசிக்கொண்டு போனார். அவர் அப்படிச் சத்தம் போட்டுப் பேசியதை, வெளியே பலவேச நாடார் கேட்டுக் கொண்டிருந்தார். ஆசாரியைப் பார்த்து விட்டுத்தான் அவர் வந்தார். "மாரிமுத்து செய்ததும் அக்ரமம்" என்று அவர் சொன்ன போது, பலவேச நாடார் உள்ளே பாய்ந்து வந்தார். எடுத்த எடுப்பிலேயே, நாராயணசாமியின் அருகே போனார். இருவருக்கும் பழைய தகராறு வேறு.
"என்னல ஒரேயடியாய் அளக்குற? என்ன அக்கரமத்தல கண்டுட்ட? மாரிமுத்துன்னு பேருசொல்லிக் கூப்புடுற அளவுக்கு நெஞ்சில கொழுப்பு வந்துட்டோ? நாய்க்குப் பொறந்த பேய்ப்பய மவன, விக்கது கருவாடு, இதுல வேற திமுரால?"
பலவேச நாடார் அவரை அடிக்கப் போவது போல் துள்ளினார். நாராயணசாமியும் எழுந்தார்.
"நான் கருவாட்டு வியாபாரி தாமுல. ஒன்ன நெத்தலிக் கருவாட்ட நசுக்குற மாதிரி நசுக்கறனா இல்லியான்னு பார். ஒன் தொட்டுக் கைய வேற எங்கேயும் வச்சிக்கல! இங்க நடக்காது."
பலவேச நாடாருக்குத் தெரியும். நாராயணசாமியை, தான் ஒருத்தனால் அடிக்கமுடியாது என்று. அதற்குள் சின்னையா பெரிய்யா மக்கள், 'கைகொடுக்க' வருவார்கள். வந்தவுடன் 'கைநீட்டலாம்'. அவர் எதிர்பார்த்தது போல் சத்தங்கேட்டு, அவரது 'சொந்தக்காரர்கள்' ஓடிவந்து "செருக்கி மவன இங்கேயே புடம் போடணும்" என்று நாராயணசாமியை சூழ்ந்தார்கள். நாராயணசாமி, வயிற்றுக்குள் இருந்த பிச்சுவாக் கத்தியை எடுத்த போது, லேசாக வழி கிடைத்தது. டீக்கடையில் இருந்தவர்கள் அவரை அவசரத்தோடு தள்ளிக்கொண்டே, "விடுடே. அவரு சங்கதிதான் தெரிஞ்சதாச்சே. பெத்த தாயையே தேவடியான்னு கேக்குறவரு. நீயுமா கெட்ட வார்த்த பேசுறது" என்று தாஜா செய்து கொண்டே, அந்தச் சாக்கில் அவர்களும் போய்விட்டார்கள்.
எட்டுமுழ மல்வேட்டி கட்டி, 'பாப்ளேன்' சட்டை போட்டு, கழுத்தில் 'மேரியல்' மடிப்புக் கலையாமல் பாம்பு மாதிரி தொங்க, கையில் குடையுடன் போய்க்கொண்டிருந்த மாரிமுத்து நாடார், பால் பாக்கியைக் கேட்பதற்காக வந்தார். மைத்துனர், தனக்காகப் போராடுவது கண்டு, அவர் கண்கள் பனித்தன. லேசாக, நீர் கூட - அவர் கொடுக்கும் 'தண்ணீர் பால் மாதிரி' அரும்பியது. மச்சானைப் பார்த்ததும் பலவேசம் ஆவேசங் கொண்டார்.
"எல்லாம் எங்க அத்தானால வந்தது. செருக்கி மவள கையக்காலக் கட்டி கிணத்துக்குள்ள அமுக்காம போலீஸ்ல அடிபட்டுட்டு வந்திருக்காரு."
மாரிமுத்து நாடாருக்குத் துணுக்கென்றது. 'இவனே இல்லாத விஷயத்தக் கிளப்புவான் போலுக்கே! உண்மையிலேயே துடிச்சிப் போனானா? அல்லது அடிபட்டார்னு விளம்பரப்படுத்துறதுக்காக ஜாலம் போடுறானா? இத விடக் கூடாது.' மச்சானப் பார்த்து, நேரடியாகவே கேட்டார். நீண்ட காலத்திற்குப் பிறகு இப்போதுதான் நேரிடையாக அவர் பேசினார்.
"ஆமா ஒம்மயும் மாயாண்டி மவா வாடா போடான்னு பேசுனாளாமே, நீரு சும்மா விட்டுட்டீரே?"
பலவேசத்தின் ஆவேசம் கொஞ்சம் தணிந்தது. பதிலளிக்கையில் மட்டும், லேசாய் ஆவேசம் எட்டிப் பார்த்தது.
"பொம்புளயாச்சேன்னு பேசாம வந்துட்டேன். அதுக்கும் ஒரு 'பிளான்' வச்சிருக்கேன். ஆமா திருநெல்வேலிதானே போறீரு?"
"ஆமாம் வாரியரா?"
"நீரு போயிட்டு வாரும். பாக்க வேண்டிய ஆட்களப் பாத்து, இன்ஸ்பெக்டர் பய மவன ஒரு வாரத்துல மாத்திடணும்! இல்லன்னா நீரு இருந்ததுல பிரயோசனமில்ல. மந்திரியப் பாக்கப் போறீரா? எம்.எல்.ஏ.வையா?"
மாரிமுத்து நாடார், தனது போர் வியூகத்தை அங்கே தெரிவிக்க விரும்பவில்லை.
"வாருஞ் சொல்றேன். செறுக்கி மவன் என்ன பாடு படப்போறாமுன்னு அவனுக்கே இப்பத் தெரியாது. பாத்துடலாம் ஒரு கை வாரும்."
பலவேச நாடார், மாரிமுத்து நாடாருக்கும் டீ கொடுப்பதற்காக "ரெண்டு டீ போடுய்யா. ஒண்ணுல சக்கர வேண்டாம். எங்க அத்தானுக்கு சர்க்கர நோயி" என்று, ஏற்கனவே தெரிந்த விஷயத்தைத் தெரியப்படுத்தினார்.
இதற்குள், மாரிமுத்து நாடாரின் முதுகு வீங்கியிருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொண்டிருந்த, சில சமரச சன்மார்க்க சீலர்களில் ஒரு சிலர், உரக்கத் தொடைகளைத் தட்டிக் கொண்டே ஒரு தீர்மானம் கொண்டு வந்தனர்.
"போற போக்கப் பாத்தா நம்ம ஊர்ல கொலயே விழும் போல் இருக்கு! மாயாண்டி மவா வேற அத்தன பேரயும் பொட்டப் பயலுகன்னு சொல்லிட்டா. ஊர்க்கூட்டம் போட்டு ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வரணும். ஊர்னா ஒரு கட்டுப்பாடு இருக்கணும்."
உடனே ஒருவர், "ஏ, மச்சான் சொல்றத நல்லா கேட்டுக்குங்க! அப்படித்தான் பண்ணணும்! இல்லன்னா ஊரில் கழுத மேயும்" என்றார்.
பதட்ட நிலை தணிந்து சகஜ நிலை வந்தது. மாரிமுத்து நாடாரிடமும், பலவேச நாடாரிடமும் மாறிமாறிக் கடன் வாங்கி, அடைக்க முடியாமலும், கோட்டுக்குள் அடைபட விரும்பாமலும், சீட்டு விளையாடுவதற்காகச் சில மணி நேரங்களைச் செலவிடும் ஒருவர், இன்னொரு தீர்மானத்தை முன்மொழிந்தார்.
"ஆமா, நீங்க ரெண்டு பேருமே, பெரிய மனுஷங்க. ஒண்ணுக்குள்ள ஒண்ணு, கண்ணுக்குள்ள கண்ணு. பேசாம சரோசாவ தங்கப்பழத்துக்கு முடிச்சிடுங்க. என்ன நான் சொல்றது? நீரு யாரு? அவரு யாரு? எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு."
மாரிமுத்து நாடாரும், பலவேச நாடாரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். பிறகு ஜோடியாகப் பேசிக் கொண்டே போனார்கள்.
டீக்கடையில் எஞ்சியிருந்தவர்களில் ஒருவர், கொஞ்சம் பயந்து கொண்டே சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு பெரிய இடத்து ஆட்கள், அப்போது அங்கே இல்லை என்று தீர்மானித்ததும், திருமணத் தீர்மானம் கொண்டு வந்தவரை அதட்டினார்.
"எவண்டா இவன்? அவங்க ரெண்டு பேரும் ஒண்ணாயிட்டா நாம சின்னாபின்னமாயிடுவோம். இது தெரியாம மடத்தனமா பேசுறிய. அறிவிருக்கா?"
அவர் சொல்வதில் மிகப்பெரிய உண்மை இருப்பது போல், கூட்டத்தினர் மௌனமாக, மசால் வடைகளைத் தின்று கொண்டிருந்தார்கள்.
ஒரு மாத காலம், ஊரார்க்கு வேகமாகவும், உலகம்மைக்கு மெதுவாகவும் ஓடித் தீர்ந்தது.
மாரிமுத்து நாடார் காட்டில் 'சீஸன் மழை' தூரத் துவங்கியது போல் தோன்றியது. இந்த மாரிமுத்தால் வந்ததோ அல்லது தானாக வந்ததோ தெரியவில்லை. அந்த சப்-இன்ஸ்பெக்டர் மாற்றப்பட்டுவிட்டார். ஹெட்கான்ஸ்டபிள் சொன்னபடி சப்-இன்ஸ்பெக்டர், பெண் மோகம் கொண்டவர் என்றும், பல பெண்களைப் பலவந்தமாகக் கெடுத்தவர் என்றும், எதிர்கட்சிகளுக்கு உதவுகிறவர் என்றும், தட்டிக் கேட்கப் போன தன்னை அடிக்க வந்தார் என்றும், ஜனாதிபதி, பிரதம மந்திரி, உள்துறை மந்திரி, கவர்னர், முதல் மந்திரி, கலெக்டர், ஐ.ஜி., எஸ்.பி., டி.எஸ்.பி., - ஆக ஐ.நா. சபை தவிர, அத்தனை பேருக்கும் கையெழுத்துப் போட்டு, மாரிமுத்து நாடார் மனு அனுப்பியிருந்தார். இது போதாதென்று, பலவேச நாடார், சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்களைக் கொண்டு, காசு கொடுத்து மொட்டை மனுக்களைத் தட்டிவிட வைத்தார். விஷயம் பழமானதும், என்னாலதான் ஆச்சி, என்னாலதான் ஆச்சி என்று எப்போது பார்த்தாலும் அவர் பேசியதை மாரிமுத்து நாடார் அவ்வளவாக ரசிக்கவில்லை.
எப்படியோ, மாரிமுத்து - பலவேசக் கூட்டு, சப்-இன்ஸ்பெக்டரை ஒழித்துக் கட்டிவிட்டது என்று குட்டாம்பட்டியே பேசியது. அதோடு 'சப்-இன்ஸ்பெக்டர சஸ்பென்ட் பண்ணியாச்சி' என்று பலவேசம் இன்னொரு புரளியைப் புழங்கவிட்டார்.
ஊரே பயந்துவிட்டது. மாரிமுத்து நாடாரை 'ஹீரோ மாதிரியும், 'நறுக்குமீசை'ப் பலவேசத்தை 'ஹீரோயின்' மாதிரியும் பார்த்துக் கொண்டார்கள். இப்போது யாருமே மதில் மேல் இருக்கவில்லை. மாரிமுத்துப் பக்கமே இருந்தார்கள். அவரிடம், வலிய வலியப் பேசினார்கள். டீக்கடையில் 'புரட்சி' செய்த கருவாட்டு வியாபாரி நாராயணசாமி கூட, நிலைமையைக் கண்டு பயந்து, மாரிமுத்து நாடாரிடம் "மச்சான் ஒம்மப்பத்தி நான் ஒண்ணும் பேசல. பலவேச அண்ணாச்சிதான் பழைய தகராற மனசில வச்சி வாயில வந்தபடி பேசிட்டார்" என்று சொல்லி, நேச ஒப்பந்தம் செய்து கொண்டார். ஹெட்கான்ஸ்டபிள் வேறு, மாரிமுத்து நாடார் வீட்டில் அடிக்கடி தன் 'ஹெட்டை' காட்டிக் கொண்டிருந்தார்.
காத்தமுத்துவின் கடையில் "ஊர்க்கூட்டம் போடணும்" என்று உரக்கப் பேசிய சமரச சீலரின் யோசனையில், ஊர்க்கூட்டமும் கூடியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வரை, ஊர்க்கூட்டம் நடைபெற்றுதான் வந்தது. பலவேச நாடார், ஒரு பனையேறியை அடித்து விட்டதற்காகக் கூடிய சபை, மாரிமுத்து நாடாரின் தூண்டுதல் பேரில், பலவேசத்துக்கு 'நாலு தேங்காய்' அபராதம் போட்டது. ஆனால் பலவேச நாடாரோ, "அபராதம் கட்ட முடியாது. செய்யுறத செய்யுங்க" என்று சொல்லிவிட்டு 'வாக்கவுட்' செய்தார். அவரை ஒன்றும் செய்ய முடியாத ஊர் சபை, அவரிடம் இருந்து தேங்காய்களை வாங்கிப் பிள்ளையார் கோவிலில் உடைக்க முடியாத அந்தச் சபை, தன்னைத் தானே உடைத்துக் கொண்டது. சர்வதேச சங்கம் மாதிரி, அது உடைந்து போன பிறகு, உலகம்மையை, ஹிட்லராக நினைத்துக் கொண்ட ஊராரால், ஐ.நா. சபை மாதிரி புதிய சபை உருவாகியது.
நாவிதர் மூலம் ஒவ்வொரு வீட்டிலும், சபை கூடுவது பற்றித் தெரிவிக்கப்பட்டது. ஊரே பள்ளிக்கூட மைதானத்தில் கூடியது. உலகம்மையோ, மாயாண்டியோ அங்கு போகவில்லை. கூடிய கூட்டத்தில், பலவேச நாடாரும், மாரிமுத்து நாடாரும் ஜோடியாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்கருகே இன்னும் இரண்டு மூன்று பெரியவர்கள். மாரிமுத்து, பலவேசம் அருகில் இருக்கக் கிடைத்ததை மிகப் பெரிய புண்ணியமாக நினைத்தவர்கள் போல், அந்த இரண்டு பேருடைய 'மூஞ்சியையே' அடிக்கடிப் பார்த்துக் கொண்டும், அவர்கள் சிரித்தால் சிரித்துக் கொண்டும், புருவத்தைச் சுழித்தால், இவர்கள் வாயைச் சுழித்துக் கொண்டும் இருந்தார்கள்.
கூட்டம், முதலில் பலவிவகாரங்களைப் பொதுப்படையாகப் பேசியது. பலவேச நாடார் "எஸ்.பி.யக்கூட மாத்துறதா இருந்தோம். அவன் கடைசியில் எங்க கையில காலுல விழுந்தான். போனாப் போறதுன்னு விட்டுட்டோம்" என்றார். மாரிமுத்து நாடாருக்கும் கொஞ்சம் திருப்திதான். "எங்க அத்தான் கால்ல விழுந்தான்னு சொல்லியிருக்கலாம்! சொல்ற பொய்ய, உருப்படியாவது சொல்லியிருக்கலாம். பரவாயில்ல. என் கால்ல விழுந்தான்னு சொல்லாம எங்க காலுன்னு சொன்னாரே, அதுவே பெரிய விஷயம்."
கூட்டத்தில் கொலு கொண்ட இதர பெரியவர்கள், "ஊரே குட்டிச் சுவராய்ப் போச்சி. ஒரு பைசல் காணணும். மாயாண்டி இருக்காரா?" என்று தற்செயலாகச் சொல்வது போல் சொன்னார்கள். பிறகு நாவிதர் மூலம் மாயாண்டியும் உலகம்மையும் வரவழைக்கப் பட்டார்கள்.
ஊர்ப்பெரியவர்கள் 'பழமும் போட்டு கொட்டையும் தின்னவர்கள்'. உலகம்மை சட்டாம்பட்டிக்குப் போய், சரோசா கல்யாணத்தை நிறுத்தியதை எடுத்துக் கொண்டால், அவள் தன்னை சரோசாவாகக் காட்டியதை எடுத்துக் கொள்வாள். மாரிமுத்து நாடாருக்கு 'அடிவாங்கி'க் கொடுத்ததை எடுத்தால், அவள் கோட்டுக்குள் பாய்வாள். ஆகையால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் பிடித்துக் கொண்டார்கள்.
உலகம்மை தைரியமாக, அந்தக் கூட்டத்தைப் பார்த்தாள். 'நாமினேட்டட் எம்.பி.' மாதிரி, 'வாய்ஸ்' இல்லாத பெரியவர் அய்யாவு நாடார், தன்னுடைய 'வாய்ஸை'க் காட்டினார்.
"ஒலகம்மா! நீ எதுக்காக ஊர்ல இருக்கவங்கள பொட்டைப் பயலுவன்னு சொல்லணும்? சொல்லு. ஊர்னா மட்டுமரியாதி இல்லாமப் போயிட்டு."
உலகம்மை, திடுக்கிட்டுப் போனாள். அவள், அப்படிச் சொல்லப்படாதுதான். இருந்தாலும் பதிலளித்தாள்:
"வயசான மனுஷன் கோட்டுக்குள் அடப்பட்டுக் கிடந்ததப் பாத்தும் சாட்சி சொல்லாத சனங்கள எப்டிச் சொல்லுததாம்?"
"ஒலகம்மா, ஒண்ண மறந்துடாத... ஒரு குத்தத்தச் சரிப்படுத்த இன்னொரு குத்தம் செய்யாத. ஊர்க்காரங்க பொட்டப்பயலுவ இல்லன்னு காட்டுறதுக்கு நினைச்சா நீ தாங்குவியா?"
இதற்குள் மாயாண்டி, நெடுஞ்சாண் கிடையாகக் கூட்டத்தின் முன்னால் குப்புற விழுந்தார். பிறகு, தலையை மட்டும் தூக்கிக் கொண்டு பேசினார்:
"என் மவா முட்டாப்பய மவா. தெரிஞ்சி, தெரியாமப் பேசிட்டா. தப்புதான். கையில் அடிச்சி காலால உதறிடுங்க. இனிம இப்டிப் பேச மாட்டா. நான் பொறுப்பு."
கூட்டத்தில் கொஞ்சம் உருக்கம் ஏற்பட்டது. அது நெருக்கமாகாமல் இருப்பதற்காக, மாரிமுத்து நாடார் தன் மோதிரக்கைகளை ஆட்டிக்கொண்டு, அய்யாவு நாடாரிடம் காதில் ஏதோ பேசினார். அது ஒப்பித்தது:
"நீ சொன்னா போதுமா? ஒன் மவா சொல்லட்டும்."
"நான் ஆம்புள சொல்லுறேன். போதாதா? ஒம்ம மவா குத்தம் செய்தாலும், நீருதான ஜவாப் சொல்லணும். பொம்பள பொம்புளதான் மச்சான்."
"அதுக்காவ பொட்டப்பயலுவன்னு சொல்றதா வே?"
கூட்டத்தில் உருக்கம் கலைந்து, கோபம் கொந்தளித்தது. கசாமுசான்னு பேச்சுக் கேட்டது. சில இடங்களில் 'செறுக்கி மவா' என்ற வார்த்தையும் கேட்டது. மாயாண்டி 'புஜங்காசனம்' செய்பவர் போல் நிமிர்த்தி வைத்த தலையை, மீண்டும் தரையில் போட்டுக் கொண்டு கும்பிட்டார். அய்யாவு நாடாருக்கு அதுவே போதுமானதாயிருந்தது. எவன் எப்படிப் போனாலும், தான் பெரிய மனுஷனாய் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் அவர். இதுக்காக, 'ஊர்ல சண்டக்கூட இல்லியேன்னு' வருத்தப்படுபவர். தீர்ப்பு வழங்கினார்.
"யாருடா கூட்டத்துல பேசுறது? சளபுளா சளபுளான்னு பேசாதீங்க... மாயாண்டி! ஒன் பொண்ணு கேக்கக்கூடாத கேள்வியைக் கேட்டுட்டா. நீ குத்தத்த ஒப்புக் கொண்டதுனால, அம்பது ரூபாய் அபராதம் போடுறேன். என்ன எல்லாத்துக்கும் சம்மதந்தானா?"
கூட்டம் நிசப்தத்தின் மூலம் அங்கீகரித்தது. மாயாண்டி கெஞ்சினார்:
"குருவி தலையில பனங்காய வச்சா எப்டி? குறையுங்க சாமி?"
"சரி முப்பது ரூவா. இனிமே பேசப்படாது. பத்து நாளையில கட்டிடணும்."
மாயாண்டி பேசவில்லை. ஏதோ பேசப்போன உலகம்மை, கூட்டத்தில் ஒருவர் கூட, தனக்காக ஒரு வார்த்தையும் பேசாததால், பேசிப் பிரயோஜனமில்லை என்று நினைத்து நின்று கொண்டிருந்தவள், கொஞ்சம் தள்ளிப் போய்த் தனியாக உட்கார்ந்து கொண்டாள்.
ஊர்க்காரர்கள் பேசாமல் இருந்ததற்கு ஒரே காரணம், பயம்! பயம்! நொண்டிக் கொண்டிருக்கும் வாழ்க்கை மண்டிப் போகாமல் இருக்க வேண்டும் என்கிற சுயநலப் பயம்! ஊர்க்கொடுமைகளை, 'கான்ஷியஸாக' உணராத அறியாமைப் பயம்! அவற்றை ஒழிக்க முடியாது என்பதை உணர்ந்த இயலாமைப் பயம்! 'பூன எலியப் பிடிக்கதப் பத்தி வருத்தப்படுறோமா? அப்டி வருத்தப்பட்டா பயித்தியந்தான் பிடிக்கும்!' அந்த வகையில் அமைந்த 'எவனும் எப்டியும் போறான்' என்னும் பயம்!
இந்தியாவில், பொருளாதார சக்தி, ஒரு சில தொழிலதிபர்களுடன் முடங்கிக் கிடப்பதாக, பொருளியல் நிபுணர்கள் முதல் பெட்டிக்கடை முனுசாமி வரை பேசுகிறார்கள். இதே போல் அரசியல் அதிகாரமும் ஒரு சிலரிடம் முடங்கியதாக 'இன்டலெக்சுவல்ஸ்' அறிக்கை விடுகிறார்கள். நாட்டில் முடங்கியிருக்கும் 'கான்ஸென்டிரேஷன் ஆப் பவரை'ப் பற்றிப் பேசும் இவர்களுக்கு, பாரத முதுகெலும்பான பெரும்பாலான கிராமங்களில், எல்லா 'பவர்களும்' ஒரு சில உறவுக்காரர்களிடமே முடங்கியிருப்பது தெரியாது. இதனால் ஜனங்கள் வாயிருந்தும் ஊமையைப் போல இருப்பதும் புரியாது.
குட்டாம்பட்டியை எடுத்துக் கொண்டால், கிராம முன்சீப், மாரிமுத்து நாடாரின் பெரியய்யா மகன், பலவேச நாடாருக்கு 'அய்யா கூடப் பொறந்த' அத்தை மவன். 'ஒலகம்மைக்காகப் பேசிட்டு அவருகிட்ட போனா எந்த சர்டிபிக்கட்டாவது குடுப்பாரா? நிலவரிய நிறுத்துனா பானசட்டிய வெளில நிறுத்த மாட்டாரா? பஞ்சாயத்துத் தலைவர், மாரிமுத்து நாடாரோட சின்னையா மவன். அவருகிட்ட 'யூனியன்' லோனுக்குப் போவாண்டாமா? அப்புறம் பள்ளிக்கூடத்து மானேஜர் பலவேச நாடாரோட அண்ணன் மவன். உலகம்மகிட்ட போனா, பையங்க அவரு பள்ளிக்கூடத்துல போவ முடியுமா? தென்காசில கம்பெனியில வேல இருக்குன்னு வச்சுக்குவோம். 'ரெண்டாப்பா எட்டாப்பா' காட்டணும். மானேஜர் அப்டி நிறையப் பேருக்குக் குடுத்திருக்கார். நம்ம பையனுக்கும் குடுக்காண்டாமா?'
'போவட்டும். போஸ்ட் மாஸ்டர் இருக்காரே, அவுரு மாரிமுத்துக்குக் கொளுந்தியா மவன். வேண்டாதவங்களுக்கு வர்ற லட்டர கிழிச்சிப் போடுறதுல மன்னன்! 'கிழிச்சான்னு' அவர நெசமாவே சொல்லலாம். சண்ட இல்லாதபோதே லெட்டர கிழிக்கவன்... உலகம்மைக்கு ஒரு தடவ ஒத்துப் பேசினா பத்து லட்டரக் கிழிப்பான். கணக்குப்பிள்ள, மாரிமுத்து நாடாரும் பலவேச நாடாரும் எடுக்கும் கைப்பிள்ள. இவங்க நம்மகிட்ட பேசாம இருக்காங்கன்னு தெரிஞ்சா அவன் பேசாம இருக்கமாட்டான்! திட்டுவான்! சொத்துல வில்லங்கத்தக் கிளப்புவான். கணக்கன பகைச்சுட்டா காணி போயிடுமே. இன்னும் ஒண்ணே ஒண்ணு. இந்தக் கூட்டுறவு சங்கம் இருக்கே அதுக்குத் தலைவரு மாரிமுத்து நாடாரு. ஒலகம்மா எதுல இருக்கா? எப்டி இருக்கா?'
மாயாண்டி, தலை தப்பினால் தம்பிரான் புண்ணியம் என்று நினைத்தவர் போல், கூட்டத்தை விட்டு நடந்தார். மகள் எங்கே இருக்கிறாள் என்று பார்க்கவில்லை. அவ்வளவு கோபம். உலகம்மையும் எழுந்து அவர் பின்னால் போனாள். அய்யா, 'குப்புறப்படுத்து'க் கும்பிட்டது அவளுக்கு அடியோடு பிடிக்கவில்லை. கொஞ்சம் நினைத்துப் பார்த்தால், அதைத் தவிர வேற வழியில்லை.
உலகம்மையின் கவனமெல்லாம் அபராதத்தை எப்படி அடைப்பது என்பதுதான். அன்றாடக் கூலி வயிற்றுக்கே சரியாய் இருந்தது. அபராதம் கட்ட வேண்டிய ஊரார்க்கு அவள் எப்டி அபராதம் கட்டுறது? நிமிர்ந்த பனையில் நேராக ஏறிய அய்யா இப்போ குறுகிய மனுஷங்க முன்னால அடியற்ற பனைபோல் விழவேண்டியது வந்துட்டு. நடக்கட்டும், நடக்கட்டும்.
என்றாலும், உலகம்மைக்கு ஒரு வகையில் நிம்மதி! எப்படியோ பிரச்சினை, ஒருவழியில் முடிந்துவிட்டது. பலவேச நாடார், நிலத்தைக் காலி பண்ணச் சொன்னால் ஊரிலும் முறையிடலாம். மாரிமுத்து நாடாரும் ஒண்ணும் பண்ண முடியாது.
வீட்டுக்குப் போன உலகம்மை, வழக்கம் போல் லோகு கொடுத்த காகிதத்தை எடுத்துக் கண்ணில் ஒத்திக் கொண்டாள். அவன் தொட்டுக் கொடுத்த காகித 'ஸ்பரிசத்தில்' சிறிது நேரம் வசமிழந்து போனாள். 'அவரு எந்த நேரத்துல குடுத்தாரோ என்னோட கஷ்டம் கொஞ்சங் கொஞ்சமா தீருது' என்று சொல்லிக் கொண்டாள். பிறகு காகிதத்தை எடுத்து, காசு போட்டு, இப்போது காலியாக்கப் பட்டிருந்த உலமடிக்குள்ள வைத்துவிட்டு, காகிதம் பறந்துவிடக் கூடாது என்பதற்காக, ஒரு சின்னக் கல்லை எடுத்து, அதன் மேல் வைத்தாள்.
மாரிமுத்து நாடார் பல்லைக் கடித்தாரென்றால், பலவேச நாடார் வேகமாக மூச்சு விட்டார். 'கடைசில இந்த அய்யாவு நாடாருக்கு மரியாத குடுத்து வெங்கப் பயல ஊரு முறைக்காக அம்பலத்துல வச்சா அவன் எப்பவும் யோசன கேக்கது மாதிரி கேக்காம உலகம்மய லேசா விட்டுட்டான். இருக்கட்டும், இருக்கட்டும்.'
'இந்த உலகம்ம எங்க போயிடப் போறா?'
புயலுக்குப் பின் அமைதி வருமோ, வராதோ, உலகம்மைக்கு, அந்த அமைதிக்குப் பிறகு புயல் வந்தது. ஒரு வாரம் வரைக்கும் ஒன்றுந் தெரியவில்லை. பின்னர், ராத்திரி வேளையில் அவள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, அவள் வீட்டுக் கூரையில் திடீர் திடீரென்று கற்கள் விழுந்தன. இடுப்பில் எப்போதும் இருந்த கத்தியுடன், மாயாண்டி சொல்வதைக் கேட்காமல் அவள் வெளியே போவாள். யாருங் கிடையாது. எதுவும் கிடையாது.
உலகம்மை, ஊரில் சொல்லாமல் பொறுத்துக் கொண்டாள். ஆனால் நாளுக்கு நாள் கற்கள் அதிகமாக விழத் துவங்கின. ஒரு கல், ஏற்கெனவே ஓட்டையாய்க் கிடந்த கூரை வழியாக உள்ளே விழுந்தது. மாயாண்டியின் தலைக்கும் அதற்கும் அரை அங்குலந்தான் இடைவெளி. உலகம்மையும் ஒரு கல்லை வைத்துக் கொண்டு, வெளியே உட்கார்ந்தாள். கல் விழவில்லை. கண்ணயர்ந்து வீட்டுக்குள் போய் படுக்கும் போது, உடனே சரமாரியாகக் கற்கள் விழும். முதலில் கூரையில் மட்டும் விழுந்த கற்கள், போகப் போகச் சுவர்களிலும், வாசல் பக்கமும் விழுந்தன. 'ஊராங் கிட்ட பிச்சக்காரி மாதுரி சொல்லாண்டாம்' என்று தீர்மானித்தாள். சொல்லப் போன அய்யாவையும் அடக்கி விட்டாள்.
வீட்டுக்குள் இப்படி என்றால், வெளியேயும் அப்படித்தான். அவள் சட்டாம்பட்டி வயக்காட்டில் தான் வேலை பார்த்து வந்தாள். அவள் போகும் போதும், வரும் போதும் மாரிமுத்து நாடாரின் 'மனசாட்சி கீப்பர்' பீடி ஏஜெண்ட் ராமசாமியும், பிராந்தன் வெள்ளைச்சாமியும் ஆபாசமாகச் சினிமாப் பாட்டுக்களைப் பாடத் துவங்கினார்கள். ஆபாசமில்லாத பாடல்களை 'எடிட்' செய்தும் பாடினார்கள்.
"மெதுவா மெதுவாத் தொடலாமா - உன் மேனியிலே கை படலாமா"
என்று ராமசாமியும்,
"மெதுவா மெதுவா விழலாமா உன் மேலே மேலே விழலாமா"
என்று வெள்ளைச்சாமியும் பாடும் கவிஞர்களாக மாறினார்கள். அதைப் பொருட்படுத்தாமல் உலகம்மை போவதைக் கண்டு, ஒருநாள், "இன்னிக்கு அவா எத்தன பேரு கூடல படுத்திருப்பா" என்று ராமசாமியும், அதற்கு வெள்ளைச்சாமி "பத்துப் பேருட்ட போயிருப்பா, பைத்தஞ்சு அம்பது ரூபா" என்றும் லாவணி போட்டார்கள்.
உலகம்மை பதிலுக்கு ஜாடையாகப் பேசலாமா என்று பார்த்தாள். காறித்துப்பலாமா என்று நினைத்தாள். பிறகு 'சந்திரனைப் பாத்து நாயி குலைச்சுட்டுப் போவட்டுமே!' என்று நினைத்துக் கொண்டு, பேசாமல் போவாள்.
அய்யாவிடம்கூட பலநாள் சொல்லவில்லை. இறுதியில் அவரிடம் சொல்லிவிட்டாள். "காறித் துப்பட்டுமா?" என்று யோசனை கேட்டாள். அவரோ "கூடாது, நாம் சொல்றது தான் கடைசில நிக்கும். ஏழ சொல் இந்த மாதிரி விஷயத்தில் தான் அம்பலமேறும். குத்தம் எப்பவும் ஒரு பக்கமாகவே இருக்கணும். நாமளும் குத்தம் பண்ணக்கூடாது" என்று சொல்லிவிட்டார்.
விஷயம் அத்தோடு நிற்கவில்லை.
ஒருநாள் பலவேச நாடார், அவள் வீட்டுப்பக்கமாக நின்று கொண்டு "மாயாண்டி, நெலம் எனக்கு வேணும். வீடு கட்டப் போறேன். பதினைஞ்சு நாளையில நெலத்த தராட்டா நானே எடுத்துக்கிடுவேன்" என்று போர்க் குரலே கொடுத்தார். உலகம்மையும் "முப்பது வருஷமா இருக்கிற பூமி, சட்டப்படி நமக்குச் சொந்தமுன்னாலும் காலி பண்ணிடுறோம். ஆனால் பதினைஞ்சி நாளுல முடியாது. ஒரு வருஷத் தவண வேணுமுன்னு சொல்லுமய்யா" என்று அய்யாவுக்குச் சொல்வது போல், பலவேச நாடாருக்குச் சொன்னாள்.
பலவேச நாடார், அப்போதே கூரையைப் பிய்த்து எறிந்து விடலாமா என்று நினைத்தார். பிறகு எதுக்கும் "அத்தாங்கிட்ட (மாரிமுத்து) கேட்டுக்குவோம்" என்று நினைத்து, "தேவடியாச் செறுக்கியவளுக்கு திமிரப்பாரு. எங்கப்பன் சொத்து, அவருக்கா இவா பொறந்திருக்கா" என்று வழி முழுவதும் சொல்லிக் கொண்டே போனார்.
சில நாட்கள் சென்றன. இப்போதுதான் உச்சக்கட்டம் வந்தது.
உலகம்மையின் வீடு, ஊருக்கு வடகோடியில் இருந்தது. கூம்பு மாதிரி இருந்த அந்தக் குடிசையின் நான்கு பக்கமும் நிலம் வெறுமனே கிடந்தது. வீட்டில் இருந்து, எந்தப் பக்கம் வேண்டுமானாலும் போகலாம்.
அந்த வீட்டுக்குக் கிழக்கே இருந்த நிலம் பலவேச நாடாருடையது. அந்த நிலத்தின் 'பொழியை' பலவேசம் பனை ஓலைகளால் 'செருவை' வைத்து அடைத்தார். மேற்குப் பக்கத்து நிலம், பீடி ஏஜெண்ட் ராமசாமியுடையது. அவன், அதில் வேலிக்கரையான் செடிகளை வைத்தான். உலகம்மை அதையும் மீறி நடக்கக்கூடாது என்பதற்காக, 'கறுக்கு மட்டைகளை' வைத்ததோடு, கருவேல மர முட்களையும் கொண்டு வந்து போட்டான். தெற்குப் பக்கத்து நிலம், பிராந்தனுடையது. அவன் சார்பில் மாரிமுத்து நாடார், மூன்றடி நீளச் சுவரைக் கட்டி, அதற்குமேல் சில முட்கம்பிகளை வைத்து அதன் இரண்டு பக்கத்தையும் சுவரையொட்டி இருபக்கமும் நட்ட கம்புகளில் கட்டிவிட்டார். ஆக உலகம்மை மூன்று பக்கமும் போகமுடியாது. ஊரில் என்ன நடக்கிறது என்று பார்க்கவும் முடியாது. 'ஏன் இப்படி' என்று கேட்கவும் முடியாது. அவர்கள் பூமி, அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.
வடக்குப் பக்கத்தில் நிலம் கிடையாது. மேற்குப் பக்கத்து நிலமும் கிழக்குப் பக்கத்து நிலமும் ஒன்றாகச் சேர்ந்த முக்கோணத்தின் முனை மாதிரி இருந்த ஒற்றையடிப் பாதை அது. மூன்றடி அகலம் இருக்கும். ஐம்பதடி தாண்டியதும், ஒருவருடைய தோட்டம் வரும். தோட்டத்திற்கு அதன் சொந்தக்காரர், கிழக்கே இருந்தோ, தென்மேற்கிலிருந்தோ வருவார். ஆனால் உலகம்மை இப்போது அந்த வழியாகத்தான் நடந்தாக வேண்டும். மேற்குப் பக்கம் அடைக்கப்பட்டு விட்டதால், 'எமர்ஜன்சி எக்ஸிட்டாக' இருந்த அந்த ஒற்றையடிப் பாதைதான் இப்போது ஒரே பாதை. அதன் வழியாக அவள் நடந்து அதை அடுத்திருக்கும் தோட்டத்துச் சுவரில் ஏறி, தோட்டத்தின் வரப்பு வழியாக நடந்து, கிழக்கே இருக்கும் புளியந்தோப்புக்கு வந்து அதற்குக் கிழக்காக இருக்கும் இன்னொரு தோட்டத்திற்குப் போய், அதை ஒட்டியுள்ள 'யூனியன்' ரோடில் மீண்டும் மேற்கே நடந்தால், அவள் ஊருக்குள் வர முடியும்.
உலகம்மை, எட்டுத் திசைகளில் ஏழு அடைபட்டுப் போனாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் போய்க் கொண்டிருந்தாள்.
உலகம்மை அயராததைக் கண்ட, மாரிமுத்து - பலவேச நாடார்கள் முதலில் அசந்தார்கள். "பயமவா கோலத்துக்குள்ள பாஞ்சா நாம குடுக்குக்குள்ள பாய மாட்டோமோ?"
பாய்ந்தார்கள்.
கேட்பாரற்றும், நடப்பாரற்றும் கிடந்த அந்தப் பாதையில், முதலில் சின்னப் பிள்ளைகளை வைத்து மலங்கழிக்கச் சொன்னார்கள். இரவில் மாரிமுத்து கோஷ்டியின் ஆட்களும், இளவட்டங்களும் அங்கே 'ஒதுங்கினார்கள்.'
உலகம்மை ஒதுங்கி ஒதுங்கிப் போனாள். அப்படி ஒதுங்கிப் போன ஒரு மாத காலத்தில் அந்தச் சின்ன இடம் தாங்கமுடியாத அளவுக்கு அசிங்கமாயிற்று.
பொந்துக்குள் அடங்கிய பெருச்சாளியை 'மூட்டம் போட்டால்' புகை தாங்காமல், அது வெளியே வருவது போல், அவளும் ஊராரிடம் முறையிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
'வழக்குப் பேசி' பைசல் செய்த அய்யாவு நாடாரைப் பார்த்தாள். ஏற்கெனவே, மாரிமுத்து நாடாரிடம் குட்டுப்பட்ட அவர் 'பார்க்கலாம்' என்றார். பார்க்கலாம் என்றால் 'மாரிமுத்து நாடாரைப் பார்த்து கலந்த பிறவு பார்க்கலாம்' என்று அர்த்தம். 'ஊரைக் கூட்டுங்க மாமா' என்று அவள் சொன்னதற்கு, "நீ நெனச்சா கூட்டணுமா" என்று எதிர்க் கேள்வி கேட்டார். அப்படிக் கேட்டதை, உடனே மாரிமுத்து நாடாரிடம் சொல்ல வேண்டும் என்று துடித்தார். உலகம்மை கணக்கப் பிள்ளையைப் பார்த்து, "பொதுப் பாதையிலே இப்டி 'இருக்க'லாமா?" என்று முறையிட்டாள். அவரோ "அவனவன் தாசில்தார பாக்கதுக்கும் கலெக்டர பாக்கதுக்கும் நேரமில்லாம கிடக்கான். நீ அந்த அசிங்கத்தப் பாக்கச் சொல்றியாக்கும்?" என்று சீறினார். அவள் கிராம முன்ஸீப்பைப் பார்த்தாள். வீட்டு வாசலில் 'பழி' கிடந்தாள். தலையாரி, அவர் சார்பில் வந்து மிரட்டினான். "ஒனக்கு வேற வேல கெடயாதா? அய்யா என்ன பண்ணுவாரு?"
உலகம்மை, மாரிமுத்து நாடாரின் சின்னையா மவனான பஞ்சாயத்துத் தலைவரையும் விட்டு வைக்கவில்லை. அவரோ பட்டுக் கொள்ளவில்லை. அதோடு அவர் 'லெவலில்' பேசக்கூடிய விவகாரமாக அது படவில்லை. உலகம்மை, கிராம சேவக்கைத் தேடிப் பார்த்தாள். ஒரு மாதத்திற்கு ஒரு தடவை வரும் அவரும், அவள் கண்களுக்கு அகப்படவில்லை.
'என்ன பண்ணலாம்?' என்று யோசித்துக் கொண்டிருந்த போது, பஞ்சாயத்து அலுவலகம் முன்னால், ஜீப் வந்து நின்றது. பஞ்சாயத்து யூனியன் கமிஷனரை அவளுக்குத் தெரியும். குட்டாம்பட்டியில் நடந்த ஒரு விழாவில் "சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்று பேசியதைக் கேட்டிருக்கிறாள். அன்றைக்கும் 'என்வரன்மென்ட் வீக்கை' எங்கே வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானிப்பதற்காக, பஞ்சாயத்துத் தலைவரைப் பார்க்க வந்தார். உலகம்மை நேராக அவரிடம் போனாள்.
"கும்பிடுறேன் ஸார். என் வீட்டுக்கு வடக்க இருக்க ஒரே பாதையிலயும் வேணுமுன்னு அக்கிரமமா அசிங்கமாக்குறாங்க. ஒரே நாத்தம். யாருகிட்டல்லாம் சொல்லணுமோ அவங்ககிட்டெல்லாம் சொல்லியாச்சு. ஒண்ணும் நடக்கல. அய்யாதான் ஏதாவது செய்யணும்."
பெரிய ஆபீசரிடம், இந்த சின்ன விஷயத்தைச் சொன்னதற்காக, சுற்றி இருந்த கிராம சேவக், கணக்கப் பிள்ளை முதலிய பிரமுகர்கள் சிரித்தார்கள். அவளைப் பைத்தியம் மாதிரியும் பார்த்தார்கள்.
உலகம்மை இப்படிப் பேசுவாள் என்று பஞ்சாயத்துத் தலைவர் எதிர்பார்க்கவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டார். கமிஷனரும், அசந்து போனார். 'கண்டுக்காமலும்' இருக்க முடியாது. கலெக்டர் தப்பித்தவறி வந்தா அவருகிட்டேயும் சொல்லுவாள். அந்த மனுஷனும் இத பெரிய விஷயம் மாதிரி கேட்பான். அப்புறம் இதுக்குன்னு ஒரு பைல் போடணும். ஆகையால் ஆணையாளரான கமிஷனர் சிந்திக்காமலே வேகமாகப் பேசினார்.
"தலைவரே, இந்தப் பொண்ணு சொன்னத பாத்தியரா?"
"இன்னும் பாக்கலங்க. நாளைக்குப் பாத்துடுறேன்."
"உடனே பாத்துடணும். இப்படி இருக்கது தப்பு. பூச்சி கிருமி வரும். கிருமி வந்தா ஜுரம் வரும். ஜுரம் வந்தா தப்பு. நம்ம அரசாங்கம் அதனாலதான் சுத்துப்புறத்த சுகாதாரமா வைக்கச் சொல்லுது. இதுக்காக பல லட்சம் ரூபாய் பட்ஜெட்ல ஒதுக்கி இருக்காங்க."
உலகம்மைக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.
"ஐயா, வந்து ஒரு நட பாத்திடுங்களேன்."
பஞ்சாயத்துத் தலைவர் கமிஷனரைப் பேச விடாமல் பேசினார்.
"நான் தான் நாளைக்கி வந்து பாக்கேன்னு சொல்லியிருக்கேன."
கமிஷனர், தலைவருக்குத் தலையாட்டினார். பிறகு இருவரும், இன்ன பிறரும், யூனியன் ஜீப்பில் ஏறி, மாரிமுத்து நாடார் வீட்டுக்குப் போனார்கள். அங்கே கோழிக்கறியோடு சாப்பாடு.
'நாளை வரும்' என்ற நம்பிக்கையோடு உலகம்மை வீட்டுக்குப் போனாள்.
'நாளை' வந்தது. பஞ்சாயத்துத் தலைவர் வரவில்லை. மறுநாளும் வரவில்லை. மறுவாரமும் வரவில்லை.
உலகம்மை, அவரைப் பார்க்க நடையாய் நடந்தாள். ஒருநாள் வயக்காட்டு வேலைக்குக் கூட போகாமல், காத்துக் கிடந்தாள். வெள்ளைச்சாமியும், ராமசாமியும் இளக்காரமாகச் சிரித்துக் கொண்டே, தலைவர் வீட்டு நாற்காலிகளில் உட்கார்ந்திருக்க, உலகம்மை உருவத்தை ஒடுக்கிக்கொண்டு வெளியே நின்று கொண்டிருந்தாள்.
காலையில் போன அவளுக்கு மாலையில் 'தரிசனம்' கிடைத்தது. வெளியே போய்விட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்த தலைவர், வீட்டுக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தார். உலகம்மை, ஒரு கும்பிடு போட்டுக் கொண்டாள்.
"வந்து பாக்கேன்னு சொன்னியரு. வரலிய மச்சான்."
தலைவர் எகிறினார்:
"சொன்னா சொன்னபடி வரணுமா? ஒன் வேலைக்காரனா நான்?"
"வேலைக்காரர் இல்ல. எனக்குஞ் சேத்துத் தலைவரு"
"கிண்டல் பண்றியா?"
"கிண்டல் பண்ணல மச்சான். என்னால தாங்க முடியல. வந்து பாத்தாத் தெரியும்."
உலகம்மை அவளே வெட்கப்படும் அளவிற்குக் கேவிக் கேவி அழுதாள். உலகத்துப் பாவ மல மூட்டைகள், அந்த நிர்மலத் தலையில் வந்து அழுத்தும் சுமை தாங்க மாட்டாது, அதை இறக்கும் வழியும் தெரியாது, கலங்கிப் போன குளம் போல, உள்ளக்குளம் கண்ணணைகளை உடைத்துக்கொண்டு, அருவி போல் பொங்கியது. அரசியலில் அனுபவப்பட்டு, பல 'அழுகைகளை'ப் பார்த்த தலைவருக்கு, அவள் அழுகை ஆச்சரியத்தை அளிக்கவில்லை. அவரே இப்படி அழுதிருக்கிறார். ஆகையால் அவள் அழ அழ, அவருக்கு கோபம் கூடிக் கொண்டே வந்தது.
"இந்தா பாரு, விளக்கு வைக்கிற சமயத்துல நீலி மாதிரி அழாத."
"என்னால தாங்க முடியல மச்சான். ஒண்ணுந் தெரியமாட்டக்கு."
"சட்டாம்பட்டிக்குப் போவ மட்டும் தெரிஞ்சுதோ?"
பஞ்சாயத்துத் தலைவர் சொல்லிவிட்டு, ஏன் சொன்னோம் என்பது மாதிரி உதட்டைக் கடித்தார். இதுவரை அவளிடம் பஞ்சாயத்துத் தலைவர் என்கிற தோரணையில் பேசிய அவர், தன்னை அறியாமலே, மாரிமுத்து அண்ணாச்சியின் தொண்டன் போல் - பேசியதற்காகச் சிறிது சிறிதாகவே வெட்கப்பட்டார். அந்த வெட்கத்திற்குக் காரணமான உலகம்மை மீது அளவுக்கு மீறி ஆத்திரம் வந்தது.
உலகம்மையும் அவர் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டாள். 'மச்சான்' என்று அவரை விளிக்காமல், ஆவேசம் வந்தவள் போல் ஒரு பிரஜை என்ற முறையில், அதே சமயம் பிரஜை என்றால் என்னவென்று தெரியாத அவளின் பேச்சு, வார்த்தைக்கு வார்த்தை வெடிகளாயின.
"பஞ்சாயத்துத் தலைவரே! நீரும் மாரிமுத்து நாடார் கூட சேர்ந்துக்கிட்டியரா? நீரு எப்ப எனக்கும் தலைவர் என்கிறத மறந்துட்டீரோ அப்பவே நீ எனக்குத் தலைவராயில்ல."
அவள் தொடர்ந்தாள்:
"எத்தனையோ பேரு ஆடாத ஆட்டம் ஆடுனாங்க. அவங்கெல்லாம் எப்டி ஆயிட்டாங்க! கண்ணாலேயே பாத்தோம். இப்ப நீங்க எல்லோருமா ஆடுறீங்க. அவ்வளவு பெரிய ராவணன் ஆடாத ஆட்டமா ஒங்க ஆட்டம்? ஆடுனவங்க அமுங்கிப் போன இடத்துல புல்லு கூட முளைச்சிட்டு... யானைக்கு ஒரு காலமுனா பூனைக்கு ஒரு காலம் வரத்தான் செய்யும்."
"ஊர்க்காரங்க ஒங்களக் கேக்காமப் போவலாம். ஆனால், காளியம்மா ஒங்களக் கேக்காதவங்களயும் கேக்காம போமாட்டா. இது கலிகாலம். நாம செய்யுறத நாமே அனுபவிச்சுதான் ஆவணும். பத்ரகாளி பத்தினின்னா, ஒங்கள நீங்க என்னைப் படுத்துற பாட்டுக்குக் கேக்காமப் போவமாட்டா. அவா பத்தினியா இல்லியான்னு பாத்துடலாம் கடைசிவரைக்கும் நல்ல இருப்போமுன்னு நினைச்சிடாதீங்க. என் வயத்துல எரியுற தீ ஒங்களப் பத்தாமப் போவாது."
அசாத்தியமான தைரியத்துடன், வானத்துக்கும், பூமிக்குமாக வளர்ந்தவள் போல், விஸ்வரூபியாக, உலகம்மை போய்க் கொண்டிருந்தாள்.
பஞ்சாயத்துத் தலைவர் பயந்துவிட்டார். அடுத்த தேர்தலிலும், தலைவர் போட்டிக்குப் போட்டி போடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஏற்கெனவே சேரி ஜனங்கள் தங்கள் ஆள் ஒருவரை நிறுத்தப் போவதாகச் செய்தி அடிபடுகிறது. உலகம்மை வேறு, இப்போது பார்க்கிறவர்களிடத்தில் எல்லாம் "பஞ்சாயத்துத் தலைவரு ஒரு பங்காளிக் கூட்டத்துக்கு மட்டும் தலைவரா மாறிட்டாரு" என்று பேசிக் கொண்டிருக்கிறாள். கருவாட்டு வியாபாரி நாராயணசாமி வேறு "தலைவரு அவங்க ஆளுங்க இருக்க இடமாப் பாத்து லைட் போட்டுக்கிட்டார். குழாய்கள் வச்சிக்கிட்டார்" என்று பேசிக் கொண்டு வருகிறார்.
உலகம்மையை, இப்படியே விட்டு வைத்தால், பலபேர் நாராயணசாமிகளாக மாறி விடலாம். ஆகையால் அவள் பிரச்சினையைக் கவனிக்க வேண்டும் அல்லது கவனிப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார். அவருக்குத் 'தங்க ஊசியான' மாரிமுத்து நாடாரை, தன் கண்ணில் எடுத்துக் குத்திக் கொள்ள விருப்பமில்லை. அதோடு பலவேச நாடார், மாரிமுத்து நாடாரிடம் பேசிவிட்டதால், இப்போது இவருக்கு முக்கியத்துவம் குறைந்து விட்டது. இதனால் கிடைக்கிற ஓட்டுக்களும் கிடைக்காமல் போகலாம். எல்லாத்துக்குந் தலையாட்டுகிற ஊர்ஜனங்கள், ஓட்டு என்று வரும் போது, அவரை ஓட்டி விடலாம்.
'நாலையும்' யோசித்த பஞ்சாயத்துத் தலைவர், மாரிமுத்து அண்ணனிடம், ஊர்க் கூட்டத்தைக் கூட்டி, உலகம்மைக்கு எந்த வகையிலாவது 'ஒரு வழி வாய்க்கால்' பண்ண வேண்டும் என்று வாதாடினார். மாரிமுத்து நாடாரைக் கடத்திக் கொண்டு வந்தார். அவர் சம்மதித்தாலும், பலவேச நாடார் முடியாது என்று வாதிட்டார். 'பல காட்டில்' 'பல தண்ணி' குடிச்ச பலவேச நாடாருக்கு, இப்படி ஒருநாள் வாதிட்டுக் கொண்டிருக்கும் போது, திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. அதை 'அத்தானிடம்' சொன்னார். அருமையான கிரிமினல் யோசனை அது.
ஊர்க்கூட்டம் அவசர அவசரமாகக் கூட்டப்பட்டது. இப்போதும் 'குட்டுப்பட்ட' அய்யாவுதான் அதற்குத் தலைவர் போல் தோன்றினார். 'மாரிமுத்து மனங்கோணாம எப்டி வழக்குப் பேசலாம்?' என்று பரீட்சைக்குப் படிக்கும் பையன் மாதிரி, யோசித்து வைத்திருக்கிறார். ஊர்க்கூட்டத்திற்கு ஒரு அந்தஸ்து வேண்டும் என்பதற்காக, ஆசாரி ஒருவரும், கணக்கப்பிள்ளையும், ராமையாத் தேவரும் அவரோடு இருந்தார்கள்.
ஊர்க்காரர்களும் திரண்டு வந்தார்கள். பலபேருக்கு உலகம்மை படும் அவதி நெஞ்சை உருக்கியது. இந்தத் தடவை கொஞ்சம் எதிர்த்துப் பேச வேண்டும் என்று கூட நினைத்துக் கொண்டார்கள். உலகம்மையும், முற்றுந்துறந்த முனியைப் போல் அய்யாவை இழுத்துக் கொண்டு வந்திருந்தாள்.
முதலில் வழக்கம் போல் பல பொதுப்படையான விஷயங்கள் பேசப்பட்டன. 'குளம் உடையுமா, மதகைத் திறக்கணுமா' என்பதிலிருந்து ஜனதா அரசாங்கம், அதிமுக, திமுக, காங்கிரஸ், வெளியூரில் நடந்த ஒரு கொலை, மாரிமுத்து நாடாரின் சர்க்கரை நோயின் இப்போதைய தன்மை முதல் பல விவகாரங்கள் பரவலாகப் பேசப்பட்டன. அய்யாவு, ஒரு தடவை கனைத்துக் கொண்டார். கூட்டம் அமைதியாகியது. பிறகு உலகம்மையை வரச்சொல்லி சைகை செய்தார். அவள், அவர் அருகில் வந்து நின்றாள். தன் இக்கட்டைப் பற்றி அவர் கேட்கப் போகிறார் என்று நினைத்து, கஷ்டங்கள் கொடுத்த கம்பீரத்துடன் அவள் நின்றாள். அய்யாவு, அதைக் கேட்காமல் எவரும் எதிர்பார்க்காத இன்னொன்றைக் கேட்டார்.
"ஒலகம்மா ஒன் மனசுல என்னதான் நெனச்சிக்கிட்டிருக்க? முப்பது ரூபா அபராதம் போட்டோமே, ஏன் கட்டல? இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு தெரியணும்."
எதிர்பாராமல் அடிபட்ட திக்குமுக்காடலில் தவித்துப் போன உலகம்மை, அப்படியே ஸ்தம்பித்துப் போனாள். ஆட்டுக்கு ஓநாய் நியாயம் பேசிய கதைதான். அவளால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
"என்னய்யா நியாயம் பேசுறிய, நியாயம்? என் வீட்ட ஜெயிலு மாதிரி அடச்சாச்சி. இருக்கிற ஒரு வழியிலயும் கழிசல போடுறானுவ! போற வழியில ராமசாமியும் வெள்ளச் சாமியும் அசிங்கமா தேவடியா செறுக்கின்னு என்னப் பாத்துப் பாடுறாங்க. அவனுகளைக் கேக்க நாதியில்ல..."
தலைவர் இடைமறித்தார்:
"இந்தா பாரு ஒலகம்மா! ஆம்புளைங்கள அவன் இவன்னு பேசப்படாது. இது ஊர்ச்சப. ஒன் வீடுல்ல."
உலகம்மை தொடர்ந்தாள்:
"அவங்க என்னத் தேவடியா செறுக்கின்னு பேசுறாங்கன்னு சொல்லுதேன். அதை ஏன்னு கேக்காம நான் அவன்னு வாய்தவறிச் சொல்லி விட்டத பிடிச்சிக்கிட்டியரு. பரவாயில்ல. என்ன நாயாய் கேவலப்படுத்துறாங்க. பேயாய் அலக்கழிக்கிறாங்க. ராத்திரி வேளயில கல்லையும் கட்டியையுந் தூக்கி எறிறாவ. இதுவள கேக்க வந்துட்டாரு. ஊர் நியாய முன்னா எல்லாத்துக்கும் பொதுதான். எனக்கு ஒத்தாச பண்ணாத சபைக்கு நான் எதுக்கு அபராதங் கட்டணும்? கையோட காலோட பிழைக்கிறவா, வயசான மனுஷன கவனிச்சிக்கிட்டு இருக்கவா, எப்டி உடனே அபராதத்த கட்ட முடியுமுன்னு, யோசிச்சி பாத்தீரா? ஒம்ம பொண்ணாயிருந்தா இப்டிக் கேட்பீரா?"
அய்யாவு, ஏதோ பேசுவதற்கு வாயெடுத்த போது, பலவேச நாடார், "ஒன்னால கட்ட முடியுமா? முடியாதா? வசூலிக்கிற வெதமா வசூலிக்கத் தெரியும்" என்றார்.
பீடி ஏஜெண்ட் ராமசாமி "ஒனக்குப் பணமுல்லன்னு சொல்லுறத யாரும் நம்ப மாட்டாங்க. ஒன் சங்கதியும் வருமானமும் எனக்குத் தெரியும்" என்றான்.
அவன், எதை மறைமுகமாகச் சொல்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட உலகம்மை, "ஒன் அக்காள மாதிரி புத்தி எனக்குக் கிடையாது" என்றாள். ராமசாமியின் அக்கா ஓடிப் போய்விட்டாள். அதுவும் கல்யாணம் ஆன பிறகு.
உடனே, சபையில் பெருங்கூச்சல்.
"உலகம்மை, எப்படி அவன் அக்காளை இழுக்கலாம்? அவன் ஏதோ தற்செயலாய் அவள் சட்டாம்பட்டியில் தினமும் வேலைக்குப் போய்க் கூலி வாங்குவதைச் சொல்கிறான். திருடிக்குத் திருட்டுப் புத்திங்கறது மாதிரி இவா ஏன் வேற அர்த்தத்துல எடுத்துக்கணும்?"
சில நிமிடங்கள் வரை, யார் என்ன பேசுகிறார்கள் என்பது புரியவில்லை.
"அவா என் அக்காள எப்டி இழுக்கலாம்? நீங்க கேட்டுத்தாறியளா, நானே கேட்கட்டுமா?" என்று ராமசாமி குதித்தான். "பொறுல பொறுல" என்று மாரிமுத்து நாடார் பெரிய மனுஷன் தோரணையில் பேசினார். "அவா தான் அறிவு கெட்டுப் பேசினா நீயுமா பேசுறது? இருடா இருடா" என்று பலவேச நாடார் பாசாங்கு போட்டார்.
கூட்டத்தினர் தங்களுக்குள் பேசியதை அடக்குவதற்காக, அய்யாவு இரண்டு தடவை கனைத்துக் கொண்டு, அந்த வேகத்திலேயே பேசினார்.
"ஒலகம்மா! ஒனக்கு வாயி வளந்துகிட்டே போவுது. ராமசாமி அக்காளப் பத்திப் பேச ஒனக்குச் சட்டமில்ல. இப்ப விவகாரம் என்னென்னா, நீ ஏன் அபராதங் கட்டலங்கறதுதான். அவங்க, அவங்க நிலத்த அடச்சிக்கிட்டது ஊரு விவகாரம் இல்ல. பாதையில கழிசல் கிடக்குங்றது சின்ன விஷயம். அதையும் பேசுவோம். அதுக்கு முன்னால நீ ஏன் அபராதங் கட்டல என்கிறது தெரியணும். அதுக்கு அடுத்தபடியா ராமசாமியோட அக்காள ஏன் அனாவசியமா சப மத்தியில பேசுனங்கறது தெரியணும். அப்புறம் நீ சொல்றத விசாரிக்கணும். பதில் சொல்லு எதுக்காவ அபராதம் கட்டல?"
உலகம்மையால், எரிச்சலை அடக்க முடியவில்லை. அவள் படுகிற பாடும் படுத்தப்படுகிற விதமும், ஒவ்வொருவருக்கும் தெரியும். 'எல்லாத்துக்கும் தெரிஞ்ச விஷயத்த தெரியாதது மாதிரி மூடி மறைக்கப் பாத்தா என்ன அர்த்தம்? எண்ணக்குடம் போட்டவனையும் தண்ணிக்குடம் போட்டவனையும் ஒண்ணாச் சேத்தா எப்டி?'
"சப நியாயம் பேசணும். என் விஷயத்த மொதல்ல எடுக்கணும்."
"நீ சபைக்கு உபதேசம் பண்றியா? அனாவசியமாப் பேசப்படாது. நீ அபராதம் கட்டல, போவட்டும். ஒன்னால கட்ட முடியுமா, முடியாதா? ரெண்டுல ஒண்ண ஒரே வார்த்தையில சொல்லு."
உலகம்மை சிறிது யோசித்தாள். ஒன்றும் புரியாமல் மாயாண்டி அவள் கையைப் பிடித்துக் கொண்டு நின்றார். அவருக்கும் ஊர்க்காரர்கள் போக்கைப் பார்த்து அலுத்து விட்டது. உலகம்மை யோசிப்பதைப் பார்த்ததும் அவள் 'கட்டிடுறேன்' என்று எங்கே சொல்லிவிடப் போகிறாளோ என்று பயந்து, கணக்கப்பிள்ளை தற்செயலாகச் சொல்வது போல் சொன்னார்.
"நீரு ஒண்ணு. அவா எங்கயா கட்டுவா? நாமெதான் அபராதம் குடுக்கணும்பா. ஒரு சபை போட்ட அபராதத்த விட அவளுக்கு போற வழியில எவனோ ரெண்டுக்கு இருக்கானாம், அதுதான் முக்கியமாம். சப போட்ட அபராதத்தையும் எவனோ ஒரு பய 'வெளிக்கி' இருந்ததையும் சோடியா நினைக்கிறாள். அந்த அளவுக்குச் சபையக் கேவலமா நினைச்சிட்டா! நீங்க ஒண்ணு வேல இல்லாம."
கணக்கப்பிள்ளையும், அந்தப் பிள்ளையைப் பிடித்து வைத்திருந்த மாரிமுத்து - பலவேசம் கோஷ்டியும் எதிர்பார்த்தது போலவே, உலகம்மை சீறினாள். கணக்கப்பிள்ளை பொதுவான மனுஷன். அவருக்குக் 'கவுல்' கற்பிக்க முடியாது. அதோடு அந்தப் பிள்ளையை நிலம் வச்சிருக்கும் எவனும் கீரிப்பிள்ளையாய் நினைக்க முடியாது. கீறிப்புடுவார். அவர்களுக்குச் சந்தோஷம். உலகம்மை கணக்கன் போட்ட கணக்கில் ஜெயித்து, விவகாரக் கணக்கில் தோற்றுக் கொண்டிருந்தாள். இது புரியாமல் உலகம்மை 'நாலு ஊருக்குக்' கேட்கும்படியாகவே கத்தினாள்:
"என்ன கணக்கப்பிள்ளய்யா! நீரும் அவங்ககூட சேர்ந்துக்கிட்டு ஆடுறீரு. மூணு பக்கமும் அடச்சி நாலாவது பக்கம் நாத்தம் வரும்படியாப் பண்ணியிருக்காங்க. இது ஒமக்கு இளக்காரமா இருக்கா? ஒம்ம வீட்ல யாரும் இப்டிச் செய்தா தெரியும். ஒமக்கென்ன அரண்மன மாதிரி வீடு. என் குடிசய நெனச்சிப் பேசாம, அரண்மனய நெனச்சிப் பேசறீரு."
இந்தச் சமயத்தில் கணக்கப்பிள்ளை, "நமக்கு இந்தக் கத வேண்டாய்யா. பொது மனுஷன்னு பேசினா என்னப் பேச்சுப் பேசிட்டா? இன்னும் போனா என்னவெல்லாமோ பேசுவா! இந்த மாதிரி என் அம்பது வயசுல யார்கிட்டயும் பேச்சு வாங்கல. இது ஊராய்யா? ஒரு பொம்புளய அடக்க முடியாத ஊரு ஊராய்யா? நமக்கு ஒங்க வாடையே வேண்டாம். நான் வாரன். ஆள விடுங்க" என்று சொல்லிக் கொண்டு வெளியேறினார்.
சபையிலிருந்து 'வாக்கவுட்' செய்த கணக்கப் பிள்ளையை, சமாதானப் படுத்துவது போல் மாரிமுத்து - பலவேச நாடார் கோஷ்டி அவர் பின்னால் போனது. அவரோ அவர்களை 'உதறிக் கொண்டு' போனார்.
அய்யாவு முகத்தில் இப்போது கடுகடுப்பு. கூட்டத்தினரும் உலகம்மையை கோபத்தோடு பார்த்தார்கள். அதைப் பிரதிபலிப்பது போல் அவர் பேசினார்:
"பொது மனுஷன் கணக்கப் பிள்ளையையும் கேக்காத கேள்வி கேட்டு விரட்டிட்ட. ஒன்ன இப்படியே விட்டு வைக்கது தப்பு. முன்னால போட்ட அபராதம் முப்பது. ராமசாமியோட அக்காள இழுத்ததுக்கு இருபது, கணக்கப்பிள்ளய விரட்டுனதுக்கு முப்பது, ஆக, முன்ன முப்பது, பின்ன அம்பது, மொத்தம் எம்பது ரூபாய் அபராதங் கட்டணும்."
உலகம்மைக்கு இப்போது சொல்லமுடியாத தைரியம். தப்பிக்க வழியில்லாமல் மூலையோடு மூலையாக முடக்கப்பட்டு மரணத்தை அறிந்து கொண்ட ஒரு எலியின் தைரியம் அது.
"இவ்வளவுதானா, இன்னும் போடப் போறீரா?"
அய்யாவு, இப்போது எழுந்து நின்று கொண்டு பேசினார்:
"என்ன... கிண்டலா பண்ணுத? நாங்க ஒனக்கு அவ்வளவு இளக்காரமாப் போச்சி! இல்லாட்டா ஊர்க்காரங்கள பொட்டப்பயலுவன்னு கேட்ப? ஒன் கண்ணுக்கு இவங்கெல்லாம் பொட்டப்பயலுவ, அப்படித்தானே? ஒனக்குப் பிடிக்காட்டா மாரிமுத்தச் சொல்லு. பலவேசத்தச் சொல்லு. ஒன்பாடு... அவங்கபாடு... ஒட்டுமொத்தமா எல்லாத்தையும் நீ பொட்டப்பயலுவன்னு சொல்லணும். அதுக்குப் போட்ட அபராதத்தையும் கட்டமாட்ட? பொட்டப் பயலுவளாம் பொட்டப் பயலுவ."
'கணக்கப்பிள்ளையும் கொஞ்சம் ஓவராத்தான் பேசுனாரு. ஒலகம்மையும் அவத அப்டிப் பேசியிருக்காண்டாம். இருந்தாலும் கோபத்துல பேசுவது பெரிசில்ல' என்று நினைத்துக் கொண்டு, அதை எந்தச் சமயத்தில் எப்படிச் சபையில் வைக்கலாம் என்றும், 'எவரும் பேசாதபோது நாம ஏன் பேசணும்' என்றும் யோசித்துக் கொண்டிருந்த கூட்டத்தினர் இப்போது அய்யாவு நாடாரின் உணர்ச்சிப் பிழம்பில் வெந்து வேக்காடாகி, உலகம்மை மீது கட்டுக்கடங்காச் சினத்தைக் கக்கத் துடித்தனர். அய்யாவு, இன்னொரு ஊசியை வாழைப்பழத்தில் ஏற்றினார்.
"இப்ப என்ன சொல்ற? இவங்கள பொட்டப்பயலுவன்னு இன்னும் நினைச்சா அபராதங் கட்டாண்டாம். சொல்லு."
உலகம்மை சிறிது யோசித்தாள். வயக்காட்டில், பிராந்தன், மானபங்கமாகப் பேசிய போது, தோள் கொடுத்தவர்கள் அந்த ஊர்ப் பெண்கள். இங்கே கண்டும் காணாதது மாதிரி ஒரு அனாதைப் பெண் படாதபாடு படுவது தெரிந்தும் தெரியப்படுத்தாமல் இருக்கும் ஆண்களை விட அவர்கள் எவ்வளவோ மேல்.
அய்யாவு இறுதி எச்சரிக்கை விடுத்தார்:
"சொல்லும்மா இவங்க பொட்டப்பயலுவ தானா இல்லியா?"
உலகம்மைக்கு தலைக்கு மேல் சாண் போன தண்ணீர் முழம் போனால் என்ன என்கிற விரக்தி. வயக்காட்டுப் பெண்களை நினைத்துக் கொண்டாள். வாய் செத்த, இந்த ஆண்களையும் நினைத்துக் கொண்டாள்.
"நான் பொட்டப் பயலுவன்னு சொன்னது தப்புத்தான். பொட்டச்சிங்க தைரியமாயும் நியாயமாயும் இருக்கத என் கண்ணால பாத்துருக்கேன்."
உலகம்மை சொன்னதன் பொருள், உடனடியாக சபைக்குப் புரியவில்லை. அது புரிந்ததும் ஒரே அமளி. ஒரே கூச்சல்! கூட்டமே எழுந்தது.
"எவ்ளவு திமிரு இருந்தா இப்டிப் பேசுவா? இவள விடக்கூடாது. கொண்டைய பிடிங்கல. தலயச் சீவுங்கல. சீலயப் பிடிச்சி இழுங்கல. மானபங்கப் படுத்துங்கல. ஏமுல நிக்கிய? செறுக்கிய இழுத்துக் கொண்டு வாங்கல."
மச்சான்கள் பலவேச நாடாரும், மாரிமுத்து நாடாரும் கூட்டத்தைச் சமாதானப் படுத்தினார்கள். அதட்டிக் கூடப் பேசினார்கள்.
"உக்காருப்பா. உட்காருங்க. அவா தான் அறிவில்லாம பேசினதுக்காவ நாமளும் அறிவில்லாம நடந்தா எப்டி? அட ஒங்களத்தான். உட்காருங்கடா, உட்காருங்கப்பா."
கூட்டம் உட்கார்ந்தது; அய்யாவு தீர்ப்பளித்தார்:
"ஒலகம்மா கட்டுப்பட மாட்டேன்னுட்டா, அது மட்டுமல்லாம பொட்டப் பயலுகன்னு ஒங்களச் சொன்னத சரிங்றது மாதிரி பேசிட்டா. பொம்பளைய அடிச்சா அசிங்கம். அவள யாரும் தொடப்படாது. எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் பிரயோசனமுல்ல."
"அதனால அவள ஊர்ல இருந்து இன்னையில இருந்து தள்ளி வைக்கிறோம். யாரும் அவா கூடப் பேசப்படாது. நல்லது கெட்டதுக்கு யாரும் போவக்கூடாது. அவளயும் கூப்புடக் கூடாது. எந்தக் கடன்காரனும் அவளுக்கு தட்டுமுட்டுச் சாமான் குடுக்கக் கூடாது. வண்ணான் வெளுக்கக் கூடாது. ஆசாரி அகப்ப செய்யக் கூடாது. யாரும் கூலிக்குக் கூப்புடக் கூடாது. ஒரு தண்ணி கூட அவளுக்குக் குடுக்கக் கூடாது. அவா குடுக்கத வாங்கக் கூடாது. அப்படி யாராவது மீறி நடந்தா அவங்களயும் தள்ளி வச்சிடலாம். அப்ப தான் ஊர்க்காரங்க பொட்டப் பயலுவ இல்லன்னு அர்த்தம். என்ன, நான் சொல்றது சரிதானே."
"சரிதான். சரியேதான். இது மட்டும் போதாது."
அய்யாவு இறுதியாக பேசினார்:
"இப்போதைக்கு இவ்ளவு போதும். பொறுத்துப் பார்க்கலாம்."
உலகம்மை மேற்கொண்டு அங்கே நிற்கவில்லை. ஒன்றும் புரியாமல் குழந்தையாகி நின்ற மாயாண்டியின் கையைப் பிடித்துக் கொண்டே நடந்தாள். மாயாண்டிக்குத் தண்டனையின் தன்மை இப்போதுதான் முழுவதும் புரிந்தது.
"தள்ளி வச்சிட்டாங்களே உலகம்மா, நம்மள தள்ளி வச்சிட்டாங்களே."
உலகம்மை கம்பீரமாகச் சேலையில் படிந்த தூசியைத் தட்டிவிட்டுக் கொண்டு சொன்னாள்:
"நாமதான் ஊர தள்ளி வச்சிருக்கோம். சரி நடயும்!"
ஊர் விதித்த தண்டனையின் கடுமையை உணரத் துவங்கினாள் உலகம்மை. எந்தப் பெண்ணும் அவளிடம் பேசுவது இல்லை. எதிரில் சந்தித்த பல பெண்களிடம் இவளாக வலியப் பேசினாலும், அவர்கள் ஒதுங்கிப் போனார்கள். ஒரு சில பெண்கள், குறிப்பாக, 'அடியே, அடியே' என்று உரிமையாகப் பேசும் பெண்கள், அவளைப் பார்த்ததும் அழுது விடுவது போல் முகத்தை வைத்துக் கொண்டார்கள். சிலர், அவளைப் பார்க்கும் போது கண்களைக் கூடத் துடைத்துக் கொண்டார்கள். ஆனால் யாரும் பேசவில்லை. பீடி ஏஜெண்ட் ராமசாமிக்கு இவர்கள் பேசுவது தெரிந்தால், பீடி இலை கிடைக்காது.
ஊர்க்கிணற்றுக்கு, வடக்குப்புறமாகச் சுற்றித்தான் அவள் தண்ணீர் எடுக்கப் போவாள். அங்கே தான், சில நிமிடங்களாவது கவலையை மறக்கும் அளவிற்கு, இதரப் பெண்களோடு அவள் சிரித்துப் பேசுவது வழக்கம். சில சமயம் 'நான் ஒண்ணும் இவங்க கஷ்டப்படுத்துறதுல அசறுறவள் இல்ல' என்று அவளை அறியாமல் எழும் உணர்வை வெளியே காட்டுபவள் போல், கொஞ்சம் அதிகமாகவே சிரித்துப் பேசுவாள். அவளுக்கு, ஊரின் ஆண்கள் மீதுதான் கோபமே தவிர, அவர்கள் மனைவிமார்கள் மீதல்ல. ஆனால் அங்கேயும் அவளைப் பார்த்தும் 'போழா ஒனக்குத் தோண்டிபோட இடமுல்ல' என்று செல்லமாகப் பேசும் பெண்களில் ஒருத்தி கூட, அவளிடம் பேசவில்லை. அவளைப் பார்த்ததும், கிணற்றுச் சுவரில் போதுமான இடத்தை விட்டுக் கொடுத்தார்கள்.
ஒருநாள் அவள் 'தோண்டி' மூலப்படியில் மோதிக் கிழிந்து விட்டது. பனை ஓலையில் செய்த 'தோண்டியில்' நீர் ஏற முடியாத அளவிற்குப் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. என்ன செய்வது என்று புரியாமல் யோசித்துக் கொண்டிருந்தாள் உலகம்மை. மற்ற சமயமாக இருந்தால் யாராவது தம் தோண்டியைக் கொடுத்திருப்பார்கள். இப்போது அவளுக்குக் கேட்க மனமிருந்தும், மார்க்கம் தெரியவில்லை. ஒரு பெண் அதுவும் மாரிமுத்து நாடாருக்குச் சொந்தக்காரப் பெண், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, அவளுக்குத் தன் தோண்டியைக் கொடுக்கப் போனாள். அதற்குள் 'பிராந்தன்' வந்துவிட்டான். உலகம்மையிடம் யாரும் பேசுகிறார்களா என்பதைப் பார்வையிட வந்தவன் போல், தன்னை, அடிக்கடி வரும் ஹெட்கான்ஸ்டபிளாக நினனத்துக் கொண்டு, ஊர்க்கிணற்றையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண் புருஷனிடம் உதைப்பட விரும்பவில்லை. அதுவும், அவள் கருத்துப்படி - 'உருப்படியில்லாத பயல்' பிராந்தன் மூலமாக. உலகம்மையின் கண்ணீர் அந்தக் கிணற்று நீருக்குள்ளும் விழுந்தது. மௌனமாக, உடைந்து போன தோண்டியைத் தோளில் போட்டுக் கொண்டு, வெறும் பானையுடன் வீட்டுக்குள் வந்தாள். தோண்டி அவளுக்குச் செய்யத் தெரியாது. செய்யத் தெரிந்த ராமையாத் தேவர், செய்து கொடுக்க மாட்டார். ஐயாவுக்கோ கை விளங்கல. சட்டாம்பட்டிக்கு, எப்படியாவது ஒரு பனை ஓலையை எடுத்துக் கொண்டு போக வேண்டியதுதான்.
ஒருநாள் மாலையில் வீடு திரும்பியதும், அடுப்புப் பற்ற வைக்கப் போனாள். வீட்டிலிருந்த வத்திப் பெட்டியில் ஒரே ஒரு குச்சிதான் இருந்திருக்கிறது. அதுவும் அணைந்துவிட்டது. தீப்பெட்டிக்கு எங்கே போவது? ஊரில் உள்ள கடைக்காரர்களிடம் கேட்க முடியாது. அக்கம் பக்கத்துக்காரர்களிடம் கேட்கவும் முடியாது. அப்படிக் கேட்குமளவிற்கு ரோஷங் கெட்டவளுமல்ல. இருட்டு வேறு துவங்கி விட்டது. மாயாண்டி வேறு, பசியால் துவண்டு கொண்டிருப்பவர் போல், வயிற்றுக்குள் இரண்டு கைகளையும் அணையாகக் கொடுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். ஒரே ஒரு தீக்குச்சி இருந்தால் போதும், எங்கே போவது?
அந்தச் சின்ன விஷயம், அவளுக்கு அன்றைய ஜீவனத்தின் பெரிய விஷயம். அதோடு அந்த இருட்டில், அந்த ஒற்றையடிப் பாதையில், இப்போது சரமாரியாக உட்கார்ந்திருப்பார்கள். எப்படியோ, அவர்கள் போவது வரைக்கும் இவள் காத்திருந்தாள். எழுந்து விட்டார்களா என்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒருவர் மாற்றி ஒருவராக அவசரமாக உட்கார்ந்திருந்தார்கள். என்றாலும், அந்த அனாச்சாரம் பிடித்த வழியாக நான்கு கிலோமிட்டர் தொலைவிலுள்ள கொண்டலப்பேரி கிராமத்திற்கு நடந்தாள். ஒரே ஒரு தீப்பெட்டிக்காக அப்படி அவள் நடக்கும் போது, அவள் வயிற்றில் ஒரு தீக்குச்சியை வைத்திருந்தால், அதில் தீப்பிடித்திருக்கும்!
அவளுக்கு இரண்டே இரண்டு புடவைகள் தான். ஒரே ஒரு ஜாக்கெட் புடவைக்கு 'ஷிப்ட் டூட்டி'; ஜாக்கெட் மார்க்கண்டேயர்; ஒரு புடவையைக் கட்டிக் கொண்டு, இன்னொரு புடவையைத் தோட்டத்துக் கிணற்றில் 'துவைத்து' விட்டு வந்து கொண்டிருந்தாள். தோட்டத்துச் சுவரில் தம்பிடித்து ஏறிய போது, ஏற்கெனவே இற்றுப் போயிருந்த ஜாக்கெட் 'டார்ரென' கிழிந்து விட்டது. அவளுக்கு வெட்கமாகவும் வேதனையாகவும் இருந்தது. மாராப்பு முனையை எடுத்து இடுப்பைச் சுற்றி 'மறைத்துக்' கொண்டாள். அது வயிற்றைக் காட்டிக் கொண்டு இருந்தது என்னவோ போலிருந்தது. எப்படியோ யாரும் பார்த்து விடக்கூடாது என்பதற்காக ஓடி வந்தாள். நல்ல வேளை, அவள் வீட்டின் மூன்று பக்கமும் அடைக்கப்பட்டிருந்ததால், ஜாக்கெட்டால் அடைக்கப்படாமலிருந்த அவள் மேனியின் முதுகிற்கு அந்த வேலிக்காத்தான் செடிகளும், மூன்றடிச் சுவரும், அதன் மேலுள்ள முட்கம்பிகளும் கண்ணபிரான் போல் அபயமளித்தன. வீட்டுக்கு வந்ததும், இன்னொரு புடவையைச் சுற்றிக் கொண்டு, கிழிந்த ஜாக்கெட்டைத் தைப்பதற்காக ஊசியைப் பார்த்தாள். ஊசி இருந்தது. நூலில்லை. பொதுவாக அவள் நூல் வாங்கி வைப்பதில்லை. ஊரில் நாலைந்து டெய்லர் பையன்கள் இருக்கிறார்கள். பத்து பைசாவுக்கு 'ரப்' போட்டு விடுவார்கள்.
இப்போதோ - நூல் கொடுக்க ஆளில்லை. நாலைந்து தையல் மிஷின்கள் இருந்தாலும், மானத்தைக் காக்கும் அந்த ஒரே ஒரு ஜாக்கெட்டின் கிழிசலைத் தைக்க, அவற்றிற்கு 'ரோஷம்' கெட்டுப் போகவில்லை. ஒரு 'ஊக்கைப் போட்டு, பின்புறத்தை மறைக்கலாமா' என்று கூட நினைத்தாள். முடியாது. ஊக்கு, இன்னொரு சின்ன ஓட்டையைப் போட்டு, அதுவும் இறுதியாகப் பெரியதாகிவிடும். என்ன செய்யலாம்? அவள் யோசித்தாள். வயக்காட்டிற்கும் போயாக வேண்டும். பானையில், அரைக்கால்படி அரிசி கூட இல்லை. ஜாக்கெட் இல்லாமல் போக முடியாது.
ஆனால் வயலுக்குப் போய் கூலி வாங்கி வந்தால் தான் அடுப்பு எரியும். அப்போது தான் அய்யாவின் வயிறும் பசியால் எரியாது. ஏற்கெனவே, நாலைந்து நாள் பெய்த மழையில், வேலைக்குப் போகாமல் வெட்டியாக இருந்தாயிற்று. ஆனால் வயிறு வெட்டியாக இருக்கவில்லை. 'பானையில் இருந்த அரிசியும் தீர்ந்து போச்சு. என்ன செய்யலாம்?'
மாயாண்டி ஒரு யோசனை சொன்னார். அதன்படி, அவர், தான் கட்டியிருக்கும் வேட்டியின் முனையை, லேசாகக் கிழித்துவிட்டு, அதிலிருந்து நூலை உருவப் பார்த்தார். அது மிகக் கஷ்டமான காரியம். நெருக்கமாக இருந்த நூலிழைகள் வர மறுத்தன. அப்படி வந்தவை, ஓரங்குலம் வந்ததும் அறுந்து போயின. இற்றுப் போயிருந்த வேட்டியில் நூலகள் ஏற்கெனவே அற்றுப் போயிருந்தன. இயலாமை, கைகாலை நடுங்க வைக்க, "நீ இழுத்துப் பாரும்மா" என்று மகளிடம் வேட்டியைக் காட்டினார். நாற்றுக் கட்டுகளில் இருந்து ஒரு சின்னஞ்சிறு நாற்றைப் பக்குவமாகவும், வேகமாகவும் எடுக்கும் உலகம்மையால், நூலைப் பிரிக்க முடியவில்லை. அவளைப் போல், நூலிழைகளும் அற்றுக் கொண்டே போயின. நேரம் முன்னேறிக் கொண்டிருந்தது. இதற்கு மேலும் நேரங் கடந்தால் வயலில் சேர்க்க மாட்டார்கள்.
வந்தது வரட்டும் என்று நினைத்தவள் போல, ஜாக்கெட்டை எடுத்து 'விளக்குழியில்' வைத்துவிட்டு புடவை முந்தானையை மார்போடு மார்பாக இழுத்துப் போர்த்தினாள். அது மார்பகத்தை மறைக்கும் போது, வயிற்றைக் காட்டியது. வயிற்றை அவள் மறைக்கப் பார்த்தால், அது மார்பகத்தின் மானத்தை வாங்கியது. எதை அதிகமாக மறைக்க வேண்டும், எதை குறைவாக மறைக்க வேண்டும், எந்த அளவிற்கு மார்பகமும், வயிறும் அந்தத் துணியால் மறைக்கப்பட வேண்டும் என்று விகிதாச்சார கணக்குப் போட்டாள். பிறகு வயிற்றைக் காட்டிக் கொண்டு அந்த வயிற்றுக்காக அவள் ஓடினாள். பிறர் கண்களில் இருந்து தப்புவதற்காக வேகமாக ஓடினாள்.
அவள் மாலையில் திரும்பி வரும் போது, புளியந்தோப்பில் நின்று கொண்டிருந்த 'பிராந்தனும்' 'பொந்தனும்' மார்புச்சேலைக்குள் 'அடுத்தவக நிலத்தில் அவள் கட்டிய வீட்டைப் போல' மார்பகங்கள் விம்மிப் புடைத்திருப்பதைப் பார்த்தார்கள். மழைச்சாரல் வேறு. சேலை ஒட்டிக் கிடந்தது. பிராந்தனுக்கு நல்ல வெறி கூட. முண்டியடித்துக் கொண்டிருந்தவனை, பீடி ஏஜெண்ட் தடுத்தான். ஆனால், அவனும், 'பார்த்தால் முகம் தெரிவதுபோல்' கண்ணாடி மாதிரி ஜொலித்த அவள் வயிற்றைப் பார்த்து கொஞ்சம் கிறங்கிப் போனான். அவள், சட்டாம்பட்டியில் பல சாமான்களை வாங்கி மடியில் போட்டிருந்ததால் மடியில் தோண்டி மாதிரி மாறிய புடவை முந்தானை, மார்புத்திரட்சிகளை அதிகமாக மறைக்கவில்லை. அந்த உடம்பு கிடைக்காமல் போன நிலையை நினைத்துக் கொண்டான் பொந்தன். அவனுக்குக் கோபம் தாங்க முடியவில்லை. ஜாடையாக லாவணி போட்டான்.
"ஏல இப்பல்லாம் ஜாக்கெட் போடாம போறாளுவள ஏமுல?"
பிராந்தன் இன்னும் வெறியில் இருந்ததால், அவனால் பதிலளிக்க முடியவில்லை. வெறி இல்லையென்றாலும் அவன் குதர்க்கப் பேச்சில் ஒரு பிச்சைக்காரன். அவனுக்கு வெண்டை வெண்டையாகத்தான் பேச வரும். ஆகையால் பீடி ஏஜெண்டே தான் போட்ட கேள்விக்குத் தானே பதிலளித்தான்.
"ஏன்னு தெரியுமால? இதுதான் வசதியா இருக்கும். ஜாக்கெட்டுன்னா இழுக்கணும் மூடணும். இதுன்னா ரொம்ப வசதி. நிறயப் பேரச் சமாளிக்கலாம்."
உலகம்மையின் முன்னால் அவள் தூக்கும் அளவிற்குள்ள பாறாங்கல் ஒன்று கிடந்தது. அதைத் தூக்கி பொந்தன் மேல் எறிகிற தைரியம் இருந்தது. வீம்பு இருந்தது. சிறிது யோசித்து கீழே குனிந்தாள். "பொந்துப்பயல இன்னைக்கே தீர்த்துடலாம்!" குனிந்தவள், அதன் விளைவுகளை நினைத்தவள் போல் அவர்களை வெறித்துப் பார்த்துக் கொண்டு எழுந்து, சிறிது நேரம் நின்றாள். பேடிகள் மாதிரி அந்த இருவரும் வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்கள். இதைப் பார்த்ததும், உலகம்மாவுக்குச் சிறிது சிரிப்புக் கூட வந்தது.
வீட்டிற்கு வந்ததும், என்னென்ன பொருட்களெல்லாம் இல்லை என்று பார்த்தாள். ஒவ்வொரு பொருளையும் அவள் வெளியூரிலிருந்து வாங்கியாக வேண்டும். அதோடு, முன் எச்சரிக்கையாக 'ஸ்டாக்' வேறு வைத்திருக்க வேண்டும். பானை உடையலாம். இன்னொரு பானை இருக்க வேண்டும். தீப்பெட்டி மழையில் நனைந்து போகலாம். இன்னொன்று தயாராக வைத்திருக்க வேண்டும். முன் மாதிரி, 'சுள்ளி' பொறுக்க முடியாது. சோளத்தட்டையாவது இருக்க வேண்டும்.
உலகில் எந்த நாடுமே தன்னிறைவு பெறாத நிலையில், தொழில் துறையில் மேலோங்கி வரும் ஆனானப்பட்ட ஜப்பானே, கச்சாப் பொருட்களில் குறிப்பாக பெட்ரோலியத்தில், தன்னிறைவு இருக்கட்டும், ஓரளவு கூட இல்லாமல் இருக்கும் இந்தக் காலத்தில், அமெரிக்கா, ரஷ்யா முதலிய வல்லரசுகள் கூட எல்லா விஷயத்திலும் சுய தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத தற்காலத்தில் பாரதம் முதலிய மேம்பாடு அடைந்து வரும் நாடுகள் அனைத்தும், தன்னிறைவு என்பதை 'எல்லாவற்றிலும் அல்ல பெரும்பாலானவற்றில்' என்று பிரத்யட்ச வியாக்கியானம் செய்து வரும் இந்தச் சமயத்தில், மேம்பாடடைய முடியாத அந்த ஒற்றைப் பெண், எல்லா விஷயத்திலும் தன்னிறைவு பெற வேண்டிய புதிய பொருளதாரச் சிறையில் வைக்கப்பட்டாள். அதோடு, வீட்டுச் சாமான்கள், 'சர்பிளஸாகவும்' இருக்க வேண்டிய அவசியம். 'எகனாமிக் பிளாக்கேட்' வேறு.
நாட்டுக்கே முடியாத ஒன்றை, வீட்டுக்குச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டாலும், உலகம்மையால் அத்தனை கஷ்டங்களையும் தாங்கவும் முடிந்தது. தாக்குப் பிடிக்கவும் முடிந்தது. ஆனால் ஊரிலிருந்து தனிமைப்படுத்தப் பட்டதைத் தான் அவளால் தாங்க முடியவில்லை. கொடிய சிறைச்சாலையில் தனிமையில் இருந்துவிடலாம். அத்துவானக் காடுகளில் தனிமையில் இருந்துவிடலாம். ஆனால் மனிதர்களுக்கு மத்தியில் வழிந்தோடும் மக்கள் பெருக்கத்திற்கு முன்னால், தனிமையில் இருப்பதென்பது, அதை அனுபவித்த உலகம்மைக்கு மட்டுமே தெரியும். அந்த ஜன சமுத்திரத்தில், அவளுக்குத் தனிமைத் தாகத்தைப் போக்க ஒரு மனிதத் துளி கூடக் கிடைக்கவில்லை. தனிமை என்றாலும் பரவாயில்லை. இது தனிமையாக்கப்பட்ட தனிமை. கண்ணுக்குப் புலப்படும் சுவர்களை விடக் கெட்டியான புலனாகாத சிறைச்சாலை அது.
ஒருவரும் பேசாமல் இருப்பது, அவளைப் பெரிதும் பாதித்தது. எப்போதும் பேசும் நாராயணசாமி கூட, லேசாகச் சிரித்தாரே தவிரப் பேசவில்லை. இந்தச் சமயத்தில் சரோசாவிற்கும் பலவேச நாடார் மகன் தங்கப்பழத்திற்கும் நிச்சய தாம்பூலம் ஆகிவிட்டது. இதனால் சமாதானம் அடைந்த பலவேச நாடார், உலகம்மையைப் பற்றி அதிகமாக அலட்டிக்கவில்லை. ஆனால், "போயும் போயும் குடிகாரப் பய மவனுக்கு என் மவா 'வாக்கபட' வேண்டியதாயிட்டே!" என்று மாரிமுத்து நாடார் மனைவி, வாயிலும் வயிற்றிலும் அடித்ததோடு, "அந்தப் பனையேறிப் பயமவா கடைசில பனயேறிப் புத்தியக் காட்டிட்டாளே! காட்டிட்டாளே!" என்று தன் அழுகையைக் கணவனிடம் காட்டினாள். அவருக்கும் மனைவி சொல்வது சரியாகத் தெரிந்தது. 'எம்.ஏ. படிச்ச லோகு எங்கே? எதுக்கும் உதவாத தங்கப்பழம் எங்கே? பட்டம் பெற்ற அவன் எங்கே? 'பட்டை' தீட்டிய இவன் எங்கே?'
மாரிமுத்து நாடாருக்கு, தலைகால் புரியாத ஆவேசம். மகளைப் பாழுங்கிணற்றிலே தள்ளியதற்குக் காரணமான உலகம்மையை ஒழிக்காதது வரைக்கும், அவருக்கும் உறக்கம் பிடிக்காதது போல் தோன்றியது. பலவேச நாடாரின் காதை அடிக்கடி கடித்தார். உலகம்மையின் வீட்டுக்கு வடக்கே இருந்த தோட்டத்தின் சொந்தக்காரனைப் பார்த்தார்.
ஆனால் உலகம்மைக்கு, அந்தத் துன்பத்திலும் நிச்சய தாம்பூலம் ஒரு இன்பத்தைக் கொடுத்தது. 'பாவம் சரோசாக்கா, கடைசில அவளுக்கும் ஒரு வழி கிடச்சிட்டு. காலு, கையி தெரியா இருக்கணும்.'
உலகம்மைக்கு ஆச்சரியமாக இருந்தது. முன்பு லோகுவைப் பற்றி 'அப்போ இப்போவாக' நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு, இந்த நிச்சயதாம்பூலத்திற்குப் பிறகு அடிக்கடி அவன் நினைவு வந்தது. துன்ப அழுக்கை, அந்த இன்பச் சோப்பால் போக்கிக் கொண்டிருந்தாள்.
சட்டாம்பட்டியிலிருந்து, ஒரு நாள், வீட்டுக்குப் புளியந்தோப்பு வழியாக வரும்போது, பொதுவாக வெளியே போகாமல், 'அரங்கு' வீட்டுக்குள்ளேயே முடங்கி முடங்கிக் குறுகிப் போன சரோசா, அங்கே நின்று கொண்டிருந்தாள். லோகுவுடன் நடக்கவிருந்த கலியாணம் நின்று போன பிறகு இப்போது தான் இவள், அவளைப் பார்க்கிறாள். உலகம்மை, மான் குட்டி மாதிரி துள்ளிக் கொண்டு சரோசாக்காவைப் பார்த்து ஓடினாள். இவ்வளவு நாளும் அக்காவைப் பார்க்க முடியாமல் அடக்கி வைக்கப்பட்டிருந்த சக்தி, இரண்டு இறக்கைகளாகி, அவள் இடுப்பின் இருமருங்கிலும் ஒட்டிக் கொண்டது போல 'பறந்தாள்'.
ஆனால், சரோசா இவளை முறைத்துப் பார்த்தாள். பிறகு, "தூ வெட்கங்கெட்ட நாயிங்க! அடுத்துக் கெடுக்கிற முண்டைங்க! மானங்கெட்ட கழுதைங்க!" என்று தன் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டே, மாறி மாறிக் காறித் துப்பினாள். உலகம்மையின் சிவப்பு முகம், கறுத்தது. வழியே போன அவமானத்தை வாங்கிக் கட்டிக் கொண்ட பேரவமானத்தில், அவள் வீட்டைப் பார்த்து மெதுவாக நடந்தாள். அய்யாவிடம் சொல்லக்கூடாது என்று இருந்தாலும் அவளால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. மாயாண்டி, சமாதானம் சொன்னார்:
"சரோசாவ தப்பா நினைக்காத. தங்கப்பழத்த கட்டிக்கிட அவளுக்கு இஷ்டமில்லன்னு தெரியுது. அதனால், ஒன்னாலதான் இந்த நிலமன்னு கோபப்பட்டிருப்பா! அவா ஒன்னத் துப்பல! தங்கப்பழத்தத்தான் துப்பியிருக்கா."
மாயாண்டி கூட, சொல்லிவிட்டு நெடுநாட்களுக்குப் பிறகு, வேதனையோடு சிரித்தார். அந்த வேதனையில் ஒரு பகுதி சரோசாவிற்காகச் சேர்ந்து கொண்டது.
உலகம்மையும் ஓரளவு சமாதானம் அடைந்தாள். இருந்தாலும், சரோசா அக்கா, அவள் மதிப்பிலிருந்து நான்கைந்து குண்டுமணி தாழ்ந்து விட்டாள். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ஏனோ அவள் லோகுவை சதா நினைத்தாள். "சரோசாக்காவுக்கு துரோகம் பண்ணப்படாது" என்று அடக்கி வைத்திருந்த காதல், இப்போது அவளுக்கு 'லைன்' கிளியராகி விட்டதாகவும், காறித் துப்பிய சரோசாவைப் பழிவாங்குவது மாதிரியும், பொங்கி வரும் காட்டாறாய் வெளிப்படுவது அவளுக்குத் தெரியாது.
ஊரார் ஒதுக்குகிறார்கள் என்பதற்காக, நாளடைவில் தானாக ஒதுங்கிக் கொண்ட உலகம்மைக்கு, இப்போது தனிமை ஒரு பெரிய பிரச்சினையாகத் தெரியவில்லை. லோகு, அவளோடு எப்போதும் இருந்தான். ஆடை உடுக்கும் போது கூட, லோகு உற்றுப் பார்ப்பது மாதிரி அவளுக்குத் தெரியும். அவளை அறியாமலே, கன்னங்கள் சிவக்கும். மலக்காட்டுப் பாதையைக் கடந்து தோட்டத்துச் சுவரில் ஏறும் போது, ஏற்கெனவே லோகு அதில் ஏறிக் கொண்டு, அவள் கையைப் பிடித்துத் தூக்கிவிடுவது போல் நினைத்துக் கொள்வாள். சட்டாம்பட்டி ஜனங்கள் அனைவரையும், சொந்தக்காரர்களைப் போல் பார்ப்பாள். லோகுவின் அய்யாவை, அவருக்குத் தெரியாமல் தெரிந்து வைத்திருந்தாள். அவரைப் பார்க்கும் போதெல்லாம், இவள் வழிவிடுவது போல், மரியாதையாக ஒதுங்கிக் கொள்வாள்.
லோகு, அவளுக்கு பட்டுச்சேலை எடுத்து வந்தான். அதை அவனே, கட்டிவிட்டான். அவனுக்கு அவள் சோறு போட்டாள். செல்லமாகச் சிணுங்கிய அவன் வாயில் ஊட்டிவிட்டாள். அவன், ஒரே தட்டில் அவளும் 'சாப்புடணும்' என்று அடம் பிடித்தான். அவள் இறுதியில் சம்மதித்தாள். உணவைப் பிடிக்கிற சாக்கில், அவள் கையைப் பிடித்தான். அவள் சிணுங்கினாள். 'சாப்பிட மாட்டேன்' என்று கையை வெளியே எடுத்தாள். அவன் உடனே, அவளுக்கு ஊட்டி விட்டான். இருவரும் தங்கள் குழந்தைகளின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு குற்றாலத்திற்குப் போனார்கள். ஈரப் புடவையோடு எக்கச்சக்கமாக நின்ற அவளிடம், அவன் 'டிரங்க் பெட்டியில்' இருந்த புடவையை எடுத்து நீட்டினான். "இவ்வளவு நேரமும் என்ன பண்ணுனிங்க?" என்று அவள் அதட்டினாள். இருவரும் கைகோத்தபடி மலையருவிக்கு எதிரே இருந்த புல்வெளிக்குப் போனார்கள். குழந்தையைத் தோளில் வைத்துக் கொண்டு நின்ற அய்யாவையும், 'நேரமாயிட்டு' என்று சொன்ன மாமனாரையும், செல்லமாகத் திட்டிக் கொண்டே, அவர்கள் எழுந்திருக்க ம்னமில்லாமல் எழுகிறார்கள். கிழவர்களுக்குத் தெரியாமல், அவள் இடுப்பைக் கிள்ளினான். அவள் சிணுங்குகிறாள். அவன் சிரிக்கிறான். பிறகு அவளும் கிள்ளுகிறாள். அவன் பதிலுக்குக் கிள்ளுமுன்னால் கிழவர்களுக்கு முன்னால் போய் நின்று கொண்டு, பின்னால் நிற்கும் அவனுக்கு 'அழகு' காட்டுகிறாள்!
வாழ்வே மாயம் என்கிறார்கள். மாயையான வாழ்வில் வாழும் போது, இன்னொரு மாயையான கற்பனையில் ஏன் அவள் வாழக்கூடாது? அதில் சூதில்லை, வாதில்லை. சுற்றுப்புற மலக்காடும் இல்லை; ஒற்றையடிப் பாதையில்லை. மூன்று பக்கம் மூடப்பட்ட குடிசையும் இல்லை. ஒதுக்கவும் இல்லை. நனவைப் போல், மாயையான கற்பனை நிலையில் ஏன் அவள் வாழக்கூடாது?
அவள் வாழ்ந்தாள்.
சில சமயம் அவளுக்குச் சந்தேகம் வருவதுண்டு. 'நாம இப்டி நினைக்குறமே. அவரும் இப்படி நினைப்பாரா? ஆமா, அவருந்தான் எவ்ளவு ஆசை ஆசையா பாத்தாரு. அப்டின்னா, ஒரு லட்டரு போட்டிருக்கலாம். சீச்சி அது எப்டி முடியும்? போட்டா என்ன? ஆமாம்! நீ எனக்கு எப்பவும் சரோசாதான்னு சொன்னாரே. ஒருவேள சரோசா பேருக்கு ஞாபகமறதியா லட்டர் போட்டிருப்பாரோ? இருக்காது. அப்டி இருந்தா மாரிமுத்து வந்து இந்நேரம் குதிச்சிருப்பான். அவன் பொறுத்தாலும் பலவேசம் கத்தியிருப்பான். லெட்டர் போட்டிருக்கலாம். எப்டி? அவருதான் பூப்போட்ட ஆட்டுக்கடான்னு சொல்ல வேண்டியதச் சொல்லாமச் சொன்ன பிறவு, எப்டி லெட்டர் போடுவாரு? மொடவன் கொம்புத்தேனுக்கு ஆசப்பட்ட கததான் நம்ம கத. சும்மா எழுதியிருக்கலாம். சொகத்த மட்டுமாவது விசாரிச்சிருக்கலாம். ஒருவேள எழுதி அப்டி வந்த லட்டர போஸ்டாபீஸ் தடியன் கிழிச்சிருப்பானோ?'
இத்தகையச் சந்தேகங்களைத் தாங்க முடியாமல் அவள் மனம் அல்லோல கல்லோலப்பட்டது. அடிக்கடி, தபால்காரர் வருகிறாரா என்று கூட எதிர்பார்த்தாள். அப்படி எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம் என்று அவளுக்கே தெரிந்தாலும், அந்தப் 'பைத்தியக்காரி'யால் அந்த எண்ணத்தைத் தடுக்கவும் முடியவில்லை. கிட்டத்தட்ட தபால்காரரைப் பார்த்ததும் லோகு கடிதம் வந்தாலும் வந்திருக்கும் என்று அவள் அனிச்சையாகவே நினைக்கத் துவங்கிவிட்டாள். வயக்காட்டில் இருந்து வரும்போது, லோகுவின் லெட்டர் வந்திருக்கும் என்ற இன்ப எதிர்பார்ப்புடன் வருவதும், அது இல்லாமல் போவதால் எதையோ பறிகொடுத்தது போல் ஏங்கிப் படுப்பதும் அவளுக்கு வழக்கமாகி விட்டது.
அன்று லோகுவைக் கூட நினைக்க முடியாத இக்கட்டான சூழ்நிலை! அவள் வீட்டின் வடக்குத் தோட்டத்துக்காரர், இனிமேல் அவள் அந்தத் தோட்டத்து வழியாக நடக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார். ஊர்க்காரர்கள் அவரைக் குற்றஞ் சொல்கிறார்களாம். அவர் தோட்டத்துச் சுவரில் முள்கம்பி போடாட்டால், அவர முள்ளா நெனச்சி தள்ளி வைக்கப் போறதா மிரட்டுறாங்களாம்! உலகம்மை, இன்னும் ஊர்க்காரங்க காலுல கையில விழாம இருக்கதுக்கு அவர் தோட்டத்துச் சுவரு சும்மா இருக்கதுதான் காரணமாம்! தோட்டத்துக்காரர் அவளிடம் தீர்மானமாகச் சொல்லிவிட்டார். மாரிமுத்து நாடாரின் 'பிரஷ்ஷர்' அதிகமானதை, அவர் பொருட்படுத்தாமல் இருந்தார். இதனால் மாரி ஊரைக் கிளப்பி விட்டுவிட்டார். அதோடு தோட்டக்காரர், தன் பொண்ணுக்குப் பலவேச நாடார் மகன் துளசிங்கத்தை குறி வச்சிக்கிட்டு இருக்கார். மாரிமுத்து மூலமாத்தான் பலவேசத்தைப் பிடிக்க முடியும்.
கூண்டுக்குள் அடைபட்ட கிளிபோலவும், சிலசமயம் புலி போலவும், உலகம்மை அழுது கொண்டும், உறுமிக் கொண்டும் இருந்த போது, அவளே எதிர்பாராத அந்தச் சமயத்தில், தபால்காரப் பையன் 'ஒலகம்மா ஒனக்கு லெட்டர்' என்றான்.
உலகம்மைக்குப் பூமியோடு சேர்ந்து மேலே பறப்பது போல் தோன்றியது. தோட்டத்துக்காரர் சொன்னது கூட இப்போது தூசி மாதிரி தோன்றியது. லோகுவே அங்கு வந்து விட்டதைப் போல் பரபரத்து தெற்குச் சுவரின் முட்கம்பியின் ஓட்டை வழியாகக் கையை நீட்டினாள்.
"குடு."
"கையெழுத்துப் போடணும்."
"லெட்டருக்கும் கையெழுத்து வேணுமா?"
"இது ரிஜிஸ்டர் லட்டர்."
உலகம்மை சிறிது யோசித்தாள். 'அவரு ஏன் ரிஜிஸ்டர்ல லெட்டர் எழுதணும்? இல்லேன்னா வேற யாராவது உடச்சிப் படிச்சிட்டா? தபால்காரன் குடுக்காம இருந்துட்டா? படிச்சவரு படிச்சவருதான்!'
தபால்காரப் பையன் நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு, உறையை வேகமாகப் பிரித்தாள். அப்படிப் பிரித்ததில் உள்ளே இருந்த காகிதங்கூடச் சிறிது கிழிந்தது. அவசர அவசரமாக எடுத்தாள்.
எழுத்து, இங்கிலீஷில் டைப் அடிக்கப்பட்டிருந்தது. அவளுக்கு 'இங்கிலீஸ்' தெரியாது. ஆனால் எழுதியிருப்பது 'இங்கிலீஸ்' என்பது தெரிந்தது. 'டைப் ஏன் அடிக்காரு?'
உலகம்மை சிரித்துக் கொண்டாள். 'அவரு ஆபிஸரு. அஞ்சாறு 'பத்தாப்பு படிச்ச' ஆட்கள கட்டி மேய்க்கலாம். அவங்க டைப் அடிச்சி குடுத்திருக்கலாம். இல்லன்னா அவரே அடிச்சிருக்கலாம். இவருக்குத்தான் எல்லாந் தெரியுமே! என்ன எழுதியிருப்பாரு? சரோசான்னா...? ஒலகம்மான்னா?'
உலகம்மை, படிக்க முடியாத கடிதத்தைப் படிக்கத் துவங்கினாள். முட்கம்பிக்கு வெளியே எட்டிப் பார்த்தாள்.
தபால்காரப் பையன், பத்து வரைக்கும் படித்தவன். உள்ளூர் பார்ட்டைம் போஸ்ட் மாஸ்டரின் சார்பில், தபால்களைப் பட்டுவாடா செய்து கொண்டிருக்கிறான். அவர் தயவில் போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாக மாறிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பவன்; கழண்டு போன சைக்கிள் செயினை அவன் மாட்டிக் கொண்டிருந்தான். உலகம்மை அவனிடம் பேசினாள். அப்படிப் பேசும் போது நாணினாள்.
"அப்பாவு! இதுல என்ன எழுதியிருக்குன்னு படிச்சுக் காட்டேன்! சீக்கிரமாப் படி! செயின அப்புறமா மாட்டலாம். ஒன்னத்தான, ராசா."
தபால் பையன், இதற்குள் செயினைப் போட்டுவிட்டு, 'ஸ்டாண்ட்' போட்ட சைக்கிளை உருட்டப் போனான். உலகம்மை சொன்னது கேட்காதது மாதிரி, சைக்கிள் பெடலில் கால் வைத்தான். உலகம்மை விடவில்லை.
"ஒன்னத்தான் தம்பி! என்ன ஒன் அக்கா மாதிரி நெனச்சுக்க. படிப்பா!"
தபால் பையன், அவளைக் கூர்ந்து நோக்கினான்.
"என்ன நீ பேசுறது? ஒன்கிட்ட பேசுனாலே உத குடுப்பாவ. லட்டர வேற படிச்சிக் காட்டச் சொல்றியா? நான் ஊர்ல நல்லபடியா லாந்துறது ஒனக்குப் பிடிக்கலியா?"
தபால் பையன் பெடலை அழுத்தி, சைக்கிளில் ஏறினான். சக்கரங்கள் சுழன்றன - உலகம்மையைப் போல.
'யாரிடமாவது காட்ட வேண்டுமே? யாரிடம் காட்டலாம்? பாவி மனுஷன் தமிழில் எழுதித் தொலைச்சா என்ன?'
'சுயதேவைப் பூர்த்திக்கும்' 'தன்னிறைவுக்கும்' ஒரு யுகமே ஒரு நிமிடமாக வரவேண்டிய அளவிற்கு இயங்கி வந்த உலகம்மைக்கு, இப்போது ஒவ்வொரு நிமிடமும், ஒரு யுகமாகத் தோன்றியது.
அன்று இரவு முழுவதும் அவள் தூங்கவில்லை. அந்தக் கடிதத்தை நான்கைந்து மடிப்புகளாக மடித்து, ஒட்டுத்துணி போட்டுத் தைத்த ஜாக்கெட்டுக்குள், அய்யாவுக்குத் தெரியாமல் 'ரகசியமாக' வைத்துக் கொண்டாள். சந்தோஷம் தாங்க முடியாமல், நெடுநேரம் வரை, தூங்காமல் 'சுவரில்' சாய்ந்து கொண்டிருந்தாள். ஒரு சமயம் கண் விழித்த மாயாண்டி கூட, "ஏம்மா கலங்குற? ஊர்க்காரங்க பண்ணுறது வரைக்கும் பண்ணிப் பாக்கட்டும். காளியம்மா இருக்கா. அவா பொறுத்தாலும் சொள்ளமாடன் பொறுக்க மாட்டான்!" என்று ஆறுதல் சொல்லிவிட்டு, மகள் தூங்காமல் இருப்பதற்கு மனங்கலங்கி அவரும் கட்டிலில் எழுந்து உட்கார்ந்தார்.
உலகம்மைக்குச் சிரிப்புத் தாங்க முடியவில்லை. 'அய்யா தூங்கட்டும்' என்பதற்காக, அவளும் தன் ஓலைப்பாய் 'மெத்தையில்' படுத்தாள். அய்யா தூங்கிவிட்டார் என்று தெரிந்ததும், மீண்டும் எழுந்து உட்கார்ந்து கொண்டாள். விதவிதமான கற்பனைகள்! நடக்காத விஷயங்களைக் கற்பனை செய்த அவளுக்கு, நடந்த பயங்கரமான விஷயங்கள் கூட, அவ்வப்போது கற்பனனயாகத் தோன்றின. அவள், பல தடவை நினைத்துக் கொண்டாள். 'சும்மாவா சொல்லுதாவ, மனந்தான் எல்லாத்துக்கும் காரணமுன்னு.'
நீண்ட நெடுநேரத்திற்குப் பிறகு, அவள் தூங்கினாள். கண்கள் மூடியிருந்தாலும் உதடுகள் சிரிப்பது போல் பிரிந்திருந்தன. இரவில் கடைசியாக அவள் மனதில் நின்ற அந்தக் கடிதத்தின் எண்ணம், தூங்கியெழுந்ததும் முதலாவது வந்தது. சின்னக்குழந்தை மாதிரி, 'கடிதம் தொலைஞ்சிருக்குமா?' என்று 'பயப்பட்டு' அதை எடுத்து வைத்துக் கொண்டாள். எழுத்துக்கள் அழிந்திருக்குமோ என்பது போல், அதை உற்றுப் பார்த்துக் கொண்டாள்.
'யாரிடம் காட்டலாம்? வயக்காட்டுக்குப் போகிற வழியில், சட்டாம்பட்டியில், படித்துவிட்டு வேலையில்லாமல் திரியும், எவனாவது ஒருவனிடம் காட்டலாமா? வேறு வினையே வேண்டாம். 'எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல' என்கிறது மாதிரிதான். யார்கிட்டக் காட்டலாம்? யாரு நம்பிக்கையான ஆளு?'
திடீரென்று உலகம்மைக்கு, குட்டாம்பட்டிச் சேரியில் பி.ஏ. படித்துவிட்டு, வேலை தேடிக் கொண்டிருக்கும் அருணாசலம் ஞாபகம் வந்தது. அவன் அவளை விட ரெண்டு வயது அதிகமாகவே இருப்பான். நல்ல பையன். அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவள் படும் கஷ்டங்கள் அத்தனையும் தெரிந்தவன் போல், அனுதாபமாகப் பார்த்துக் கொண்டும், ஒருவித நமட்டுச் சிரிப்பை உதிர்த்துக் கொண்டும் போவான்.
அந்தச் சேரி ஊருக்குத் தெற்கே சற்றுத் தள்ளி, குளத்துக் கரையின் கிழக்குப் பக்கமாக இருந்தது. நெல்லிக்காய்கள் குவியலிலிருந்து சிதறி ஓடிய காய்கள் போல் ஐம்பது, ஐம்பத்தைந்து குடிசைகளும் நாலைந்து 'காரை' வீடுகளும் அங்கேயும் இங்கேயுமாக இருந்தன. ஓடைத் தண்ணிக் கசிவு, அந்தச் சேரியின் சந்து பொந்தெங்கிலும் கணுக்கால் உயரத்துக்குப் பரவியிருந்தது.
பாரதம் கிராமங்களில் வாழ்வதாகப் பல தலைவர்கள் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். படித்த இளைஞர்களுக்கு உபதேசம் செய்கிறார்கள். ஆனால், அந்தக் கிராமங்கள் - சேரிகளில் வாழ்கின்றன என்கிற உண்மை, இன்னும் பலர் காதுக்கு எட்டவில்லை!
அடம்பிடிக்கும் சில சின்னஞ்சிறு குழந்தைகள், அந்தத் தண்ணீருக்குள் விழுந்து மீன் மாதிரி புரண்டு கொண்டும், தவளை மாதிரி கத்திக் கொண்டும் கிடந்தன. பலமான மழையினால் பல சுவர்களில் நீர்க்கசிவு ஏற்பட்டிருந்தது. சுவர்களை ஒட்டிய சின்னத் திண்ணைகளில், பக்கத்தில் இருந்த ஈயப் போணிகளில் கைகளை விட்டுக் கொண்டே, பல குழந்தைகள் கைகளை நக்கிக் கொண்டிருந்தன. சில பிள்ளைகளின் வயிறுகள் உப்பிப் போயும், கழுத்துக் குறுகிப் போயும், கைகால்கள் குச்சிகள் போல் ஓணானின் கால்கள் மாதிரி துவண்டும் கிடந்தன. பெரும்பாலான குழந்தைகள் 'அரணைக்' கயிறுகள் கூட இல்லாமல் நிர்வாணமாக உட்கார்ந்திருந்தன. ஓலைக் கூரைகளில் இருந்து விழும் இற்றுப் போன ஓலைப் 'பாசில்களும்' மண்கட்டிகளும் தலைகளிலும், தோள்களிலும் விழுந்து, ஆடையில்லாத அந்தக் குழந்தைகளின் மேனிக்கு ஆபரணங்கள் போல் தோன்றின. காலையில் போன அம்மாக்கள், மாலை வரும் வரை, ஈயப் போணிகளில் கைகளை விட்டுக் கொண்டும், பிறகு வயிறு நிறைந்த குஷியில், கழிவு நீரில், புரண்டு விளையாடிக் கொண்டும் இருப்பது அந்தக் குழந்தைகளின் வாடிக்கையான வேடிக்கை. குடும்ப நலத் திட்டத்துக்காக, சத்துணவு இல்லாத குழந்தைகள் எப்படி இருக்கும் என்பதை பாரதப் பிரஜைகளுக்கு விளக்குவதற்காக, 'பிலிம் டிவிஷனும்' மாநில அரசின் திரைப்படப் பிரிவும், அங்கே போயிருக்கிறார்களாம். சில பெண்கள், பனையோலை நாரால் 'கொட்டப் பெட்டிகள்' பின்னிக் கொண்டிருந்தார்கள். சிலர் பனை ஓலையில் 'சாணிப்பெட்டி', 'கருப்பட்டிப் பெட்டி', 'கிண்ணிப் பெட்டி' ஆகியவற்றைச் செய்து கொண்டிருந்தார்கள். விவசாய ஹரிஜனக் கூலிப் பெண்களின் கண்ணோட்டத்தில் இந்தப் பெண்கள் 'மேட்டுக் குடியினர்'; பலவித வண்ணக் கலவை நீரில், பல ஓலைகள் முக்கி வைக்கப்பட்டிருந்தன.
பொருளாதாரக் குவியல் போல், நான்கைந்து காரை வீடுகள் சேர்ந்து இருந்தன. இவற்றில் 'தம்பூறு மேளம்', 'தவில் மேளம்', 'பம்பை மேளம்', 'நையாண்டி மேளம்' முதலிய பல மேளங்களும், நாதஸ்வரங்களும், 'சிங்கிகளும்' சுவரில் தொங்கிக் கொண்டிருந்தன. இந்த வீடுகளில் இருப்பவர்கள் தான் அந்தச் சேரியின் 'அண்ணாவிகள்'. இவர்கள் கோவில், கல்யாண விசேஷங்களின் போது, வெளியூர்களில் போய் மேளமடிப்பார்கள். ஒருவர் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் கூட 'மேளம்' அடித்திருக்கிறார்.
மொத்தத்தில், கிராமத்து மக்கள் அதுவும் ஏழை பாழைகள் 'குடித்துக் கெட்டும், கெட்டுக் குடித்தும், கெட்டு நொறுங்கிப் போன சேரி' என்று ஊர்க்காரர்களால் கைவிடப்பட்ட பகுதி அது. அதே நேரத்தில், மேல் ஜாதிகள் அவ்வப்போது வந்து, 'பட்டை தீட்டிக் கொள்ள' வசதியாக இருக்கும் இடமும் இதுதான். தென்காசி போய், பல மாட மாளிகை கூட கோபுரங்களைப் பார்த்துவிட்டு, 'நாமுந்தான் இருக்கோமே' என்று நினைக்கும் கிராமத்து மக்கள் இந்தச் சேரிக்கு வரும்போதெல்லாம் தங்களை அறியாமலே, தங்களை ராக்பில்லர்களாகவும், டாடா, பிர்லாக்களாகவும் நினைத்துக் கொள்வார்கள். அப்படி அவர்களை நினைக்க வைக்கும் ஆற்றல் இந்தச் சேரிக்கு உண்டு. போலீஸ் கால்களிலும், தாசில்தார் கால்களிலும் 'எசமான் எசமான்' என்று மந்திரம் போல் சபித்துக் கொண்டே விழுந்து கும்பிட்டுவிட்டு, 'நாமும் இப்டி இருக்க வேண்டியதுருக்கே' என்று சங்கடப்படும் கிராமத்து மக்கள், இவர்களைப் பார்த்ததும், தங்களை ராஜசிம்ம நரசிம்ம பல்லவர்களாகவும், கரிகால் பெருவளத்தானாகவும் நினைத்துக் கொள்ளலாம். இந்த அளவிற்கு, இந்த ஜனங்கள், அவர்களைப் பார்த்து அவர்கள் வெங்கர்களாக இருந்தாலும், 'மொதலாளி, மொதலாளி' என்று நொடிக்கொரு தடவை சொல்வார்கள்.
இந்தச் சேரியால் பலனில்லை என்றும் சொல்ல முடியாது. 'தொழில் கல்வி வேண்டும்' என்று சொல்லும் கல்வி நிபுணர்கள், இங்கே வந்து சிறுமியர், சிறுவர் பெட்டிகளைப் பின்னிக் கொண்டும், மேளங்களுக்குச் 'சிங்கி' அடித்துக் கொண்டும், வயக்காட்டில் புரளும் அம்மா அய்யாக்களுக்குக் கஞ்சி கொண்டு போய்க் கொடுத்துக் கொண்டும், தொழிலையே ஒரு கல்வியாக நினைத்து ஈடுபட்டிருப்பதைக் கண்டால், ஒரு வேளை மகிழ்ந்து போகலாம். 'பலனை பகவானிடம் விட்டுவிட்டு கர்மமே கண்ணாயிரு' என்ற உயர்ந்த தத்துவத்தைப் போதிக்கும் மகாபாரத பகவத் கீதைக்கு பிராக்டிகல் உதாரணம் போல், பெரும்பாலான மக்கள், மேல் ஜாதிக்காரர்களின் சின்னப் பையன்கள் கூட "ஏய் மதுர! ஒன்ன எங்கய்யா கூட்டிக்கிட்டு வரச் சொன்னார்" என்று சொல்வதைக் கூட ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதவர்கள்; சொல்லப் போனால், அறுபது வயது மதுரைக்கும், அந்த ஆறு வயதுச் சிறுவன், அப்படிச் சொல்வதில் சந்தோஷமாம்! கொஞ்ச காலத்திற்கு முன்னால், 'ஏய்', என்பதற்குப் பதிலாக, 'சின்ன மொதலாளிகள்', 'ஏடா' என்று கூப்பிடுவார்களாம். மதுரையின் அய்யா எழுந்திருக்காமல் இருந்தால் "ஏண்டா எங்க அய்யாகிட்ட உதபடணுமா" என்று, 'அந்தக் காலத்துச் சிறுவர்கள்' கேட்பார்களாம்.
இப்படிச் சொல்வதாலேயே, அங்கே இருப்பவர்கள், பதினெட்டாம் நூற்றாண்டு நீக்ரோக்கள் மாதிரி இருக்கிறார்கள் என்றும் சொல்ல முடியாது. பல இளவட்டங்கள், மேல் ஜாதிக்காரர்களை அளவுக்குமேல் பொருட்படுத்தாதவர்கள். சில சமயம், "நமக்கு எதுக்காவ டீக்கடையில் தனிக் கண்ணாடி டம்ளர் வைக்கணும்? இவங்கள விட நாம் எந்த வகையில குறஞ்சிட்டோம்? நாமளும் பல் துலக்குறோம். வேட்டி கட்டுறோம். பிள்ளியள பெத்துக்கிடுறோம்" என்று தங்களுக்குள்ளே சொல்லிக் கொண்டும் வருகிறார்கள். தங்களின் இளஞ்சந்ததியினர், நாடார், முதலியார், தேவர் வகையறாக்களை, 'அவன் இவன்' என்று சேரிப் பகுதிக்குள் பேசுவதைக் கேட்டு, பல கிழவர்கள் கிடுகிடுத்துப் போய்விட்டார்கள். "காலம் கலிகாலம், கெட்டுப் போச்சி, இல்லன்னா 'ஊர் முதலாளிகள' இந்த ஊர்மேல போன பய பிள்ளிக 'அவன் இவன்'னு பேசுமா? இது மதுர வீரனுக்கு அடுக்குமா?"
'காலேஜ்' படித்த அருணாசலம் தலைமையில் பல இளைஞர்கள், தங்கள் ஜாதியினருக்கு, ரோஷம் வரவில்லையே என்று அலுத்துப் போய் விட்டார்கள். இவர்களைக் கரையேற்றுவது கடவுளாலும் முடியாது என்று அவர்களை 'கைவிடப்பட்ட கேஸ்களாக' நினைத்து விட்டார்கள். எந்த மனிதனுக்கும் அல்லது சமூகத்திற்கும் தன்னைச் சுற்றி உள்ளவற்றை 'கான்ஷியஸ்ஸாகப்' பார்க்கும் உணர்வை ஏற்படுத்திய பிறகுதான், இதர உணர்வுகள் ஏற்பட முடியும் அல்லது ஏற்படுத்த முடியும் என்று இந்த இளைஞர்களுக்குத் தெரியாது. பிரச்சினைகளை உணர்வுப்பூர்வமாகச் சிந்தித்து, அறிவுப்பூர்வமாகப் பார்க்க மறந்த இவர்களும், இவர்களுக்கு முந்திய ஜெனரேஷனைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் போல், நகரங்களில் போய் ஒரு வேலையில் முடங்கிக் கொள்ளலாம் என்றாலும் இப்போதைக்கு, அப்படி முடங்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல், அவ்வப்போது 'அதட்டிக்' கொண்டிருப்பவர்கள் இவர்கள். ஆனால் அருணாச்சலம் இப்போது கொஞ்சம் சிந்திக்கத் துவங்கி விடுகிறான்.
ஊரையும் சேரியையும் பிரித்து வைக்கும் ஓடைக்கரைகளுக்குக் குறுக்கும் நெடுக்குமாக, அந்தக் கரைகளை இணைப்பது போல் நெருங்கிப் போடப்பட்டிருந்த நான்கைந்து பனங்கம்புகள் வழியாக நடந்து, எலிவளை போல், கோணல் மாணலாக இருந்த 'தெருக்கள்' வழியாக உலகம்மை நடந்து போன போது, "நாடாரம்மாவா, நாடாரம்மாவா, வாங்க! ஏய், யார் வந்திருக்கான்னு பாருங்க, பாருங்க" என்று பல பெண்கள் அவளைச் சுற்றிக் கொண்டார்கள். "மாயாண்டி நாடார் மவளா? வாங்கம்மா" என்று சொல்லிக் கொண்டே சில கிழவர்கள் மரியாதை தெரிவிக்கும் வகையில், நீட்டி வைத்திருக்கும் கால்களை, இழுத்துக் கொண்டார்கள். மாயாண்டி பனையேறிக் கொண்டிருக்கும் போது, அவரிடம் போய் 'கூட மொனைய' பனையோலைகளை வாங்கிக் கொண்டிருந்ததையும், நாடாரே, பனை மட்டைகளில் இருந்து நாரைப் பிரித்து அவர்களுக்குக் கொடுத்ததையும், அவர்கள் நினைவு படுத்துக் கொண்ட போது, உலகம்மை, 'எல்லா மனுஷனும் மோசமல்ல' என்று அய்யா ஒரு தடவை சொன்னதை ஞாபகப்படுத்திக் கொண்டாள்.
ஒரு பெண், ஓலைத்தடுக்கு ஒன்றைத் திண்ணையில் போட்டு அவளை உட்கார வைத்தாள். சுற்றிலும் பெண்கள் நின்று கொண்டார்கள். பெரிய ஆடவர்கள், கொஞ்சம் தூரத்தில் நின்று, தங்களுக்குள் பேசிக் கொண்டாலும், அவர்கள் கண்கள் என்னமோ, உலகம்மை மீதும், அவளைச் சுற்றி நின்ற கூட்டத்தின் மீதும் மொய்த்தன. உலகம்மை கூட அவர்கள் காட்டிய அன்பில், வந்த வேலையில் அதிக அவசரம் காட்டவில்லை. சரமாரியாக அவளிடம் கேட்கத் துவங்கி விட்டார்கள்:
"ஏம்மா ஒங்களுக்கு வம்பு? சாதியோட சனத்தோட சேராம இப்டி தள்ளியிருக்கது மொறையா?"
"நாடாரம்மா ஒண்ணுந் தள்ளியிருக்கல. ஊருக்காரங்க தான் தள்ளி வச்சிருக்காக."
"இவுக, அவுக கால் கையில் விழுந்து ஊரோட ஒத்துப் போவ வேண்டியதுதான. இவுக வீம்பு பண்ணுதும் தப்புதான். என்ன ராமக்கா நான் சொல்றது?"
திடீரென்று ஒரு ஆண்குரல் முழங்கியது:
"ஊர்லயே உருப்படியா இருக்கது இது ஒண்ணுதான். அதுவும் கெடுக்கப் பாக்கிங்களா?"
தலையைத் தாழ்த்திக் கொண்டு, அந்தப் பெண்கள் சொல்வதை ரசிகத் தன்மையுடனும், சிறிது சங்கடத்துடனும் கேட்டுக் கொண்டிருந்த உலகம்மை, கம்பீரமான அந்தக் குரலைக் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தாள். அருணாச்சலம் சிரித்துக் கொண்டு நின்றான். அவளுக்குக் கோபங்கூட. 'நாடாரம்மாள்'னு சொல்லாண்டாம். அவுக இவுகன்னாவது சொல்லலாம். மேல் சாதி பொம்பிளய அது இதுன்னு மாடு மாதிரி நெனச்சிச் சொன்னால் என்ன அர்த்தம்?'
உலகம்மை, சற்று ரோஷத்தோடு அவனைப் பார்த்தாள். ஆனால் அவன் முகத்தில் படர்ந்த அனுதாபத்தைப் பார்த்ததும், கள்ளங்கபடமற்று அவன் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், அவளுக்குக் கோபம் புன்னகையாகியது.
"பரவாயில்ல. ஒங்களமாதிரி ஒவ்வொரு பெண்ணும் நடந்துகிட்டா ஆயிரக்கணக்கான வருஷமா கர்நாடகமா இருக்கிற இந்தக் கிராமம் ஒரே வருஷத்துல பழயத உதறிப் போட்டுடும்! கவலப்படாதிங்க! ஊரே ஒங்கள எதிரியா நெனச்சிருக்கதுக்கு, நீங்க பெருமைப்படணும்! ஏன்னா அவங்க எல்லாரும் ஒண்ணாச் சேர்ந்தா தான் ஒங்களுக்கு இணையாய் ஆக முடியுமுன்னு தெரியுது. என்னைக் கேட்டா அப்படியும் அவங்க ஒங்களுக்கு இணையாவ முடியாது! இதுங்க பேச்சக் கேட்டு கையில காலுல விழுந்துடாதிங்க. விழமாட்டிங்கன்னு எனக்குத் தெரியும்!"
அருணாசலம் மேற்கொண்டும், பேசிக் கொண்டே போயிருப்பான். சுற்றி நின்ற பெண்கள், அவனைப் பேச விடாமல், இடைமறித்தார்கள்.
"இவன், 'அவன் தம்பி அங்குதன் மாதிரி!' இவன் பேச்சைக் கேளாதிக நாடாரம்மா. கோளாறு பிடிச்ச பயல்! போன வருஷம் இந்த மாதிரித்தான் ஒரு அடாவடி பண்ணிட்டான்! எங்க சேரில தீண்டாமக் கூட்டமுன்னு ஒண்ணு போட்டாங்க. பெரிய பெரிய ஆபீசருங்க, மாரிமுத்து நாடாரு, அவரு சின்னய்யா மொவன் எல்லாரும் வந்திருந்தாங்க. இவன் என்ன பண்ணுனான் தெரியுமா? 'சாதி வித்தியாசம் இல்லங்றத காட்டுறதுக்காவ எங்க வீட்டுச் சட்டியில போட்ட காப்பிய ஆபீசருங்க குடிப்பாங்கன்னு' சொல்லி ஒவ்வொரு பெரிய மனுஷனுக்கும் ஒவ்வொரு லோட்டாவும் குடுத்துட்டான். அந்த மனுஷங்க குடிக்க மனமில்லாமலும் குடிக்காம இருக்க முடியாமலும் மூஞ்ச சுழிச்சிக்கிட்டு குடிச்சத நெனக்கையில இப்ப கூடச் சிரிப்பு வருது. பெரிய மனுஷங்களப் பாத்தா போதும், உடனே அவமானப்படுத்தாட்டி இவனுக்குத் தூக்கம் வராது."
உலகம்மை விழுந்து விழுந்து விழப் போகாதவள் போல் சிரித்தாள். அதில் ஊக்குவிக்கப்பட்டவன் போல் அருணாசலம் அடித்துப் பேசினான்:
"பின்ன என்னம்மா? ஒங்க ஜாதிக்காரங்களும் மற்ற தேவர், பிள்ளமார் சாதிக்காரங்களும் பண்றது அசல் 'ஹிப்போக்ரஸி'. அதாவது, உள்ளொன்று வச்சிப் புறமொன்று பேசுறாங்க. குளத்துல தண்ணி பெருகிக்கிட்டே போவுது. மதகத் திறங்கன்னு எங்க ஆட்கள் காலுல கையில விழுந்தாச்சு. தண்ணீரை விடாட்டா எங்க சேரிதான் மொதல்ல அழியும். ராம நதில ஒரே வெள்ளம். இவங்க என்னடான்னா பயிர் பச்சைக்குத் தண்ணி வேணுமுன்னு கிராக்கி பண்ணுறாங்க! தண்ணி இருக்குமுன்னு - எஞ்சினியர் கூடச் சொல்லிட்டாரு! மதகத்திறக்க மாட்டங்கறாங்க! எங்க சேரிய விட அவங்களுக்குப் பயிர் பச்சதான் முக்கியம். நானும் கலெக்டருக்குப் பல பெட்டிஷன் எழுதிப் போட்டாச்சு."
அருணாசலம் பெருமூச்சு விடுவதைப் பார்த்துவிட்டு "அப்புறம் ஒண்ணும் நடக்கலியா?" என்றாள் உலகம்மை.
"நடந்தது! கலெக்டர், ஆர்.டி.ஓ.க்கு அந்த பேப்பர அனுப்புனாரு. ஆர்.டி.ஓ. தாசில்தாருக்கு அனுப்ப, தாசில்தார் ரெவின்யு இன்ஸ்பெக்டருக்கு அனுப்ப, அவரு நம்ம ஊரு முன்சீப் நாடாருக்கு அனுப்பியிருக்காரு. வேலிக்கு ஓணான் சாட்சிங்கற கதைதான்! நீங்க ஒண்டிக்கு ஒண்டியாய் ஊரையே எதிர்த்துப் போராடுறீங்க. எங்க ஆட்கள் கிட்ட நாமே போயி மதக உடப்போமுன்னா, இவங்க ஊரில் சம்பந்தி போஜனம் நடக்கப் போவுதாம். மந்திரி தலைமையில நடக்கப் போவுதாம். சாப்பிடப் போறோமுன்னு சொல்றாங்க. ஊர்க்காரங்க சேரி ஜனங்களுக்கு சாப்பாடு போட்டே அவங்கள சாப்புட்டுட்டாங்க என்கிறது உறைக்கவே மாட்டேங்குறது! இதனால தான் ஒங்களப் பார்க்கும் போது எனக்குப் பெருமையா இருக்கு. எங்க ராமக்கா புருஷன் இங்க தான் அண்ணாவி! மேல் ஜாதிக்காரர்களுக்கு அவரு போடுற சலூட்டு கண்றாவி!"
உலகம்மை உட்பட, எல்லாப் பெண்களும் சிரித்தார்கள். ஆனால் ராமக்காவால் அதிக நேரம் சிரிக்க முடியவில்லை. கொஞ்சஞ் சிரித்ததுக்கு ஈடுகட்டுவது மாதிரி எகிறினாள்:
"ஒன்ன மாதிரி ஏட்டுச் சொரக்காய்க எத்தனை பேர இந்தச் சேரி பாத்துருக்கு தெரியுமா? இப்ப இவ்வளவு பேசுற? வேல கெடச்சதும் ஊரையே மறந்துடப் போற. அவன் கருப்புசாமி ஒன்னவிட அதிகமாக் குதிச்சான். இப்ப மெட்ராஸ்ல முதலியார்னு சொல்லிக்கிட்டு ஊரையே மறந்துட்டான். அவனாவது பரவாயில்ல. செங்குந்தன் மெட்ராஸ்ல ஆபீசரா இருக்கான். நாடார்னு சொல்லிக்கிடுறானாம். ஊர் ஜனங்க நம்மள வெளில நிறுத்துறது மாதிரி அவனப் பாக்க போன சேரியாளுவள வெளியில நிறுத்திப் பேசி அனுப்பிடுறானாம். சும்மா குலவாத ராசா. மொதல்ல எல்லாரும் பட்டையில போட்ட நண்டு மாதுரிதான் துடிப்பாங்க. அப்புறம் முதலியாரு, நாடாரு, இல்லன்னா செட்டியாரு!"
உலகம்மை, அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்பதை அறியும் ஆர்வத்தில், அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் பேசாமல் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்தான். "நீ, நீங்க இதுக்கு என்ன சொல்ற... சொல்றீக" என்று நாக்கைக் கடித்துக் கொண்டே கேட்டாள். அவன் மீண்டும் சிலிரித்துக் கொண்டு பேசினான்:
"அவங்க சொல்றது சரிதான். நாம எல்லாரும் ஹரிஜன்னு சொல்லிக்க பெருமப்படலாம். ஆயிரக்கணக்கான வருஷமா அடக்கப்பட்டிருந்தவங்க அடிமைத்தனத்தையும் மீறி, முன்னுக்கு வாரத நெனச்சி பெருமைப் படணும். வாழ்க்கை ஓட்டப்பந்தயத்தில் கால்ல விழுந்த விலங்கோட ஓடி ஜெயிச்சதுக்கு பெருமைப்படணும். ஆனால் எங்க ஆட்கள் பி.ஏ.ன்னு சொல்லிக்கதை விட முதலியார்னு சொல்லிக்கதுல பெருமப்பட்டுக்கிறாங்க. படிக்காத ஹரிஜங்கள, மேல்சாதிக்காரங்களை விட கேவலமா நடத்துறாங்க. இவங்களால ஹரிஜன சமுதாயத்துக்கே கெட்ட பேரு. அவங்க உத்தியோகத்துக்கு ஏதாவது இடஞ்சல் வரும்போது தான், ஹரிஜன்னு சொல்லி கவர்னர் கிட்ட மனுக்குடுக்கராங்க. அரசாங்கம் ஹரிஜனங்களுக்குச் சலுகை பண்றது, இவங்க சேரிக்கும் பணத்த வெட்டிக் குடுப்பாங்கன்னு நினைத்து அல்ல. ஹரிஜனங்க படிச்ச அவங்க சமுதாயத்துக்கு ஒரு 'ஸோஷியல் ஸ்டேடஸ்' - அதாவது ஒரு மரியாதை வரணுமுன்னு நினைத்துதான் உதவி பண்றாங்க. நாடார் ஒருவன் படிக்காவிட்டாலும், அவனுக்குச் சமூகத்துல ஒரு மரியாத இருக்கு! இதே மாதிரி முதலியாருக்கும்! ஆனால், ஹரிஜன் படிக்காட்டா மரியாதையே கிடையாது! உதாரணமா ஒண்ணு சொல்றேன். தப்பா எடுக்காதிக. நான் ஒங்களவிட ரெண்டு வயசு பெரியவன்னு எங்க அப்பா சொல்வார். எனக்கு எப்டித் தெரியுமுன்னு நினைக்கிங்களா? ஒங்கய்யா பனையேறும் போது எங்க அப்பா என்னை எடுத்துக்கிட்டு ஓலை வாங்கப் போவாராம். ஒங்கய்யா என்னைப் பறையன்னு கூடப் பாக்காம எடுத்து முத்தங் கொடுப்பாராம்!"
"எதுக்குச் சொல்றேன்னா நீங்க கூட ஒங்களவிட வயசுல பெரிய என்னை 'நீன்னு' சொல்ல வந்துட்டு, அப்புறம் உதட்டக் கடிச்சீங்க! ஏன்? நான் படிச்சிருக்கதுனால. இதனால போகப் போக எங்க ஆட்களையும் நீங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிடுவிங்க. இதுக்குத்தான் - இந்த மாற்றம் வரணுமுன்னு தான் ஹரிஜனங்கள, சர்க்கார் படிக்க வைக்குது. ஆனால் எங்க ஆட்களே இதப் புரிஞ்சிக்க மாட்டேங்கறாக! இதனால மொதல்ல இங்கேயே ரெண்டு வருஷம் வேலைக்குப் போகாம தங்கி ரெண்டுல ஒண்ணு பாக்கப் போறேன்."
அருணாச்சலம் சொல்வதையே பல்லெல்லாம் தெரிய கேட்டுக் கொண்டிருந்த ராமக்கா, திருப்தியடையவில்லை; இன்னும் எதிரித்துப் பேசினாள்:
"நீதான் ஒன்ன மெச்சிக்கணும். வண்ணாரு, நாவிதருக்குத் துணி வெளுக்க மாட்டேங்காரு. நாவிதரு, வண்ணானுக்குச் செறைக்கதவிட, கழுதக்கிச் செறைக்கலாமுன்னு சொல்றாரு! சக்கிலியங்க நமக்குச் செருப்புத் தைக்க மாட்டேன்னுறாக! நாம அவங்களுக்குப் பெட்டி செய்ய மாட்டேங்கறோம்! ஹரிஜனங்களே ஒருத்தருக்கொருத்தர் முதலியார் நாடார் மாதிரி வித்தியாசம் வச்சிருக்கும் போது, மேல் சாதிக்காரங்களக் குத்தம் சொல்ல எத்தனாவது சட்டத்துல இடமிருக்கு? பேச வந்துட்டான் பேச."
அருணாசலமும், விட்டுக் கொடுக்கவில்லை:
"போகப் போகப் பாரு. நீ சொன்ன அத்தன பேரயும் ஒண்ணாச் சேக்கப் போறேன். நம்ம இனத்துல மேல் சாதி மாதிரி நடக்கிற பணக்காரங்களைத் தள்ளி வச்சுப்புட்டு மேல் ஜாதியில இருக்கிற ஏழை எளியவங்கள நம்மோட சேக்கப் போறேன்! ஏன்னா ஹரிஜனங்களை விட மோசமான நிலையில் பலர் மேல்சாதியில இருக்காங்க. இவங்க சாதி மயக்கத்த கலச்சிட்டா உரயே கலக்கிடலாம்."
உலகம்மைக்கு அவன் பேச்சில், இப்போது அதிகச் சூடு இருப்பது போலவும், அவளுக்குத் தெரிந்தும் தெளிவில்லாமலும் 'மங்கிப்' போயிருக்கும் விஷயங்கள் வெளியே வரத் துவங்கியது போலவும் தோன்றியது. ஏதோ கேட்கப் போனாள். அதற்குள் இதரப் பெண்கள் அவளிடம் பேசத் துவங்கினார்கள்.
"நாடாரும்மா! ஏதாவது சாப்புடுறிங்களா? ஒங்களப் பறக்குடியில சாப்புடச் சொன்னத தப்பா நெனைக்காதீக. ஒங்க வயிறு 'கொலுக்கா' இருந்ததப் பார்த்ததும் மனசு கேக்கல. சாப்புடுறியளா? ஏல ராமு. வாழ இல பறிச்சால."
உலகம்மை வேண்டாம் என்பது போல் தலையை ஆட்டி விட்டு, கடிதத்தை எடுத்து, அருணாசலத்திடம் கொடுத்துவிட்டு, "தெரிஞ்சவங்க ஒருவர் எழுதியிருக்கார்னு நெனக்கேன்" என்று சொல்லிவிட்டு, அருணாசலம் 'பப்ளிக்கா' பானையை உடைக்கது மாதிரி உடைத்து விடக் கூடாதே என்று பயந்தாள். படித்த பையனான அருணாசலம், அவளிடம் தனியாகச் சொல்லுவான் என்று நினைத்துக் கொண்டு ஆறுதல் அடைந்தாள்.
அவன் அந்தக் கடிதத்தைப் படிக்கும் போது, அவள் தன் இதயத்தைப் பிடித்துக் கொண்டாள். அது அடித்துக் கொண்டது. உடம்பெல்லாம் இன்பக் கிளுகிளுப்பில் துள்ளியது.
படித்து முடித்த அருணாசலம், சிறிது நேரம் பேசவில்லை. 'அப்படின்னா அவருதான் ஆசைய சொல்லி எழுதியிருக்காரு' என்று உலகம்மை நினைத்த போது இதர பெண்கள் "சத்தமா படிச்சிச் சொல்லேன். அப்பாவு ஏன் முனங்குற. மெத்தப் படிச்சவன் சுத்தப் பயித்தியங்கறது சரிதான்" என்றார்கள்.
அருணாசலம் உலகம்மையையே உற்று நோக்கினான்.
"மனச தைரியமா வச்சுக்குங்க. பலவேச நாடாரு வக்கீல் நோட்டீசு அனுப்பி வெச்சிருக்காரு. அவரோட இடத்த ஆக்ரமிச்சி, அதாவது என்குரோச்மென்ட் செய்து குடிசை போட்டிருக்கிங்களாம். இந்த நோட்டீஸ் கிடைத்த பதினைந்தாவது நாளையில காலி பண்ணலன்னா, வழக்குப் போடுவாராம். கவலப்படாதீங்க. பதில் நோட்டீஸ் கொடுக்காண்டாம். பலவேசம் வழக்குப் போடட்டும். எப்படியும் ஒரு வருஷம் தள்ளும். அதுக்குள்ளே ஏதாவது வழி பிறக்கும்."
உலகம்மைக்கு, தான் எங்கே இருக்கிறோம் என்று புரியவில்லை. கனவாக இருக்கும் என்று சுற்றுமுற்றிலும் பார்த்தாள். தலை தெறித்துத் தனியாக விழுந்து விட்டது போன்ற பிரமை; நெற்றி கனத்து, கண்ணிமைகளை மேல் நோக்கி இழுத்தது.
சேரிப் பெண்களுக்கும் கோபம் ஏற்பட்டது.
"கட்டயில போறவனுக. ஒரு பொம்பளய கொடுமப் படுத்துறதுக்கு அளவு வேணாமா? ஒதுங்கிப் போற மனுஷியையும் ஓட ஓட விரட்டுனா எப்டி? ஓடுற நாயக் கண்டா விரட்டுற நாய்க்குத் தொக்குங்றது சரிதான். அருணாசலம், இத நீ சொம்மா விடப்புடாதுடா."
அருணாசலம், உதடுகளைக் கடித்துக் கொண்டான். சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு "கவலப்படாதிங்க. கோர்ட்டுனுன்னு வந்தாலும் வரட்டும். நான் கலெக்டருக்கு மனுப்போடுறேன். எப்பவாவது கலாட்டா பண்ண வந்தாங்கன்னா, ஒரு வார்த்த அய்யாகிட்டச் சொல்லி அனுப்புங்க. பின்னிப்புடலாம் பின்னி. சமபந்திப் போஜனத்துக்கு இங்க வந்து ஆள்பிடிக்க வருவாங்க! அப்போ புடிச்சிக்கிறேன். மொத்தத்துல இந்தச் சேரி ஒங்க வீடு மாதிரி. எப்ப வேணுமுன்னாலும் வரலாம்; என்ன வேணுமுன்னாலும் கேக்கலாம். ஒங்க அய்யா எங்க ஆட்களுக்குக் கொடுத்த பனை ஓலையையும் பனங்குருத்தையும் இன்னும் எங்க பெரியவங்க சொல்லிக்கிட்டே இருக்காங்க. என்ன வந்தாலுஞ்சரி, கால்ல கையில மட்டும் விழுந்திடாதிங்க. கலகம் நடந்தாலும் கவலப்படாதிங்க. கலகம் பிறந்தாதான் நியாயம் பொறக்கும்."
ராமக்காவால் அழுகையை அடக்க முடியவில்லை. உலகம்மையை தன் நெஞ்சத்தோடு சேர்த்து அணைத்துக் கொண்டே "இந்த முகத்தப் பாருங்க. பச்ச மதல. இதப் பாத்தா அழுவுற பிள்ளயும் சிரிக்கும். இதைப்போயி நாசமாப் போறவனுக நாசம் பண்ணுறாங்கள. அவங்க காலுல கரையான் அரிக்க, நடுராத்திரியில துள்ளத் துடிக்கச் சாவ. அவனுக பிள்ளிகளுக்கு இப்டி வராமலா போவும்? எடாத எடுப்பு எடுக்கிறானுக. படாதபாடு படாமப் போகமாட்டாங்க. நீ... நீங்க ஏன் நாடாரும்மா அழுவுறிக? ஏழைங்க கண்ணீரு அவங்கள கடலுல போயி ஆக்கும்! அழாதம்மா. அழாதிங்கம்மா."
இன்னொரு பெண்ணாலும் கண்ணீரை அடக்க முடியவில்லை. "அழாதம்மா அழாதம்மா" என்று அழுதுகொண்டே சொன்னாள்.
"இன்னிக்கே எங்க குலதெய்வம் மதுரவீரனுக்கு ஊதுபத்திக் கொளுத்திக் கேக்கிறேன், கலங்காதீங்க" என்றாள் மற்றொரு பெண்.
"வக்கீல் நோட்டிஸ் எங்கிட்டவே இருக்கட்டும்" என்றான் அருணாசலம்.
உலகம்மை எழுந்து கொண்டாள். மெள்ள நடந்தாள். தேங்கி நின்ற நீருக்குள், நீர்படாமல் இருப்பதற்காக ஆங்காங்கே ஊன்றி வைக்கப்பட்ட கருங்கற்கள் மீதும், செங்கல்கள் மீதும் நடக்காமல் நீருக்குள்ளேயே நடந்து கொண்டிருந்தாள்.
பெரும்பான்மையான பெண்கள், அவளை ஓடை வரைக்கும் வந்து வழியனுப்பினார்கள். "நாங்க சாதில தாழ்ந்தவங்க. அதனால எங்கள ஒங்க அக்கா தங்கச்சி மாதிரி நினைக்காட்டாலும் பழகுனவளுன்னு நினைச்சி அடிக்கடி வாங்கம்மா" என்று ஒருத்தி சொல்ல, இதர பெண்கள் தலையை ஆட்டினார்கள். தூரத்தில் அவள் போவதையே பார்த்துக் கொண்டு அருணாசலம் நின்றான்.
மெள்ள மெள்ள நடந்த உலகம்மை, ஓடையைக் கடந்ததும் வேகமாக நடந்தாள். உடலுறுப்புகள் அனைத்தும் அறுந்து, அக்குவேர் ஆணிவேராக ஆனது போல் வலியெடுத்தது. கால்கள் இரண்டும் மேல்நோக்கி வருவது போலவும், ஒருவித வலி தோன்றியது. அங்கங்கள் அனைத்தும் சிதறி, சின்னாபின்னமாகி, ஒன்றோடொன்று மோதி, கூழாகி, வெறும் முண்டமாக, பிசைந்து போடப்பட்ட கேழ்வரகு மாவைப் போல் உருவந்தெரியாமல் கரைந்து போவது போன்ற நரக வேதனையுடன் அவள் நடந்தாள்.
'இதுக்கு மேல் என்ன நடந்தாலும் அது பெரிதாக இருக்க முடியாது' என்ற உணர்வு ஒருவித நிம்மதியைக் கொடுத்தது. வக்கீலின் நோட்டீஸ் என்பதை விட, அது லோகுவிடம் இருந்து வராத கடிதம் என்ற உண்மை, அவள் மனதைப் பெரிதும் மாய்த்தது. ஏனோ மெட்ராஸ் போகவேண்டும் போல அவளுக்குத் தோன்றியது. அங்கிருந்து குரல் கொடுத்தே, அய்யாவை அழைத்துக் கொண்டு, அங்கிருந்தே, அந்த நேரத்திலேயே, அப்படியே போக வேண்டும் போல் நினைத்தாள்.
சரோசாவின் திருமண நாள் நெருங்க நெருங்க, உலகம்மை மீது மட்டில்லாக் கோபங்கொண்ட மாரிமுத்து நாடார் என்ன பண்ணினாலும் கவலைப்படாமல் திரியும் உலகம்மையைப் பழி வாங்க முடியாதது போல் தோன்றியதை, தன்மானத்திற்கு விடப்பட்ட சவாலாக எடுத்துக் கொண்டார். சரோசா வேறு, "கடைசில தங்கப்பழந்தானா எனக்குக் கிடைக்கணும்?" என்று அய்யாவுக்குக் கேட்கும்படியாய் அழுததை, அவரால் மறக்க முடியலாம்; ஆனால் உலகம்மையை மன்னிக்க முடியாது.
ஊர்க்கூட்டத்தில் அய்யாவுவை கைக்குள் போட்டுக் கொண்டு, ராமசாமியின் மூலமும், கணக்கப்பிள்ளையின் மூலமும் உலகம்மையை, திட்டமிட்டபடி, உசுப்பிவிட்டு வெற்றிபெற்ற அவர், பலவேச நாடாரிடம் தோற்றுப் போனதை நினைத்து உள்ளுக்குள்ளே புழுங்கிக் கொண்டார். ஊர் பகிஷ்காரம், குறிப்பிட்ட காலம் வரைதான் நீடிக்கும் என்பது அவருக்குத் தெரியும். சிலர் "கொசுவ அடிக்கதுக்கு கம்பு தேவையா? ஒருத்திய தள்ளி வைக்கது ஊருக்குத்தான் கேவலம்" என்று பேசுவதாகக் கேள்விப்பட்டார். அவர் அப்பப்போ 'பொட்டப் பயலுகன்னு' சொல்லிவிட்டாளே என்று ஊர்க்காரர்களுக்கு உத்வேகம் மூட்டினாலும், கொஞ்சம் பயப்படத் துவங்கினார். யாரையும் அதட்டிப் பேச முடியவில்லை. ஒருசமயம், வாங்குன கடனைக் கொடுக்காத ஆசாமி ஒருவர் "நீரு இப்டி திட்டினா உலகம்மையோட வீட்டுக்குப் போவேன்" என்று கூட அதட்டினார். ஆக, உலகம்மையோடு யாராவது பேசினால், அது மாரிமுத்து நாடாருக்கு எதிரான செயலாக, அவர் நினைக்காமலே, ஊர் நினைக்கத் துவங்கியது. பச்சையாகச் சொல்லப் போனால், மாரிமுத்து - உலகம்மையின் தனிப்பட்ட விவகாரம் ஊர் மீது அனாவசியமாகச் சுமத்தப்பட்டது போலவும், போனால் போகிறது என்று ஊர்க்காரர்கள் பற்களைக் கடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் ஒரு அபிப்பிராயம் நிலவி வருவதாக, பலவேச நாடார், அவரிடம் தம் அபிலாஷையை அதில் சேர்த்துச் சொன்னார். உலகம்மை அந்த ஊரில் இருக்கும்வரை, அவரது மரியாதை நிலையாக நீடிக்காதது போல் அவருக்குத் தோன்றியது.
ஆகையால் தான், பலவேச நாடாரிடம் உலகம்மையின் வீட்டுக்கூரையைப் பிய்த்துப் போட்டுவிடும்படி சொன்னார். பலவேசத்திற்கு, அது அதிகப்படியாகத் தெரிந்தது. அதே சமயம் நிச்சயதாம்பூலமான பின்னும் நின்று போன கல்யாணங்களும் நினைவிற்கு வந்தன. சேரியில் வேறு, அருணாசலம் பெட்டிஷன் எழுதுவதற்கென்றே பிறந்தவன் போல், முழு நேர விண்ணப்பதாரனாக மாறிவிட்டான். ஆகையால் "செருக்கி மவள கோர்ட்டு வழக்குன்னு இழுத்தா அலைய முடியாம ஓடிப்போயிடுவா. நம்மளையும் ஒரு பயலும் குற சொல்ல முடியாது" என்று அத்தான்காரரிடம் சொல்லி, அவரது அரைகுறை சம்மதத்தைப் பெற்ற பின்னர் வக்கீல் நோட்டீஸ் விட்டுவிட்டார்.
இதற்கிடையே, உலகம்மையை குட்டாம்பட்டிக்காரர்கள் கொடுமைப் படுத்துகிறார்கள் என்றும், கோணச்சத்திரம் போலீஸ் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும், அருணாசலம் பெட்டிஷன் போட்டான். போலீஸ் ஸ்டேஷன் சார்பில், 'காளிமார்க் கலர் புகழ்' ஹெட்கான்ஸ்டபிள் யோசித்தார். ஏற்கெனவே உலகம்மையைப் பழிவாங்க வேண்டும் என்று நினைத்து, பல்வேறு அலுவல்கள் நிமித்தத்தால், அதை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போன அவர், பெட்டிஷனைப் பற்றிக் கேள்விப்பட்டதும், உலகம்மை மீதிருந்த பழைய விரோதத்தைப் புதுப்பித்துக் கொண்டார். இவ்வளவுக்கும் உலகம்மைக்கு, இந்த பெட்டிஷன் விவகாரம் இதுவரை தெரியாது.
ஹெட்கான்ஸ்டபிளே, மாரிமுத்து நாடார் வீட்டிற்கு வந்தார். உலகம்மையைச் சமூக விரோதியாகச் சித்தரித்தாலொழிய, சமூகம் அவளுக்கு எதிரியாக இருக்கும் விஷயத்தை மறைக்க முடியாது என்று மறைக்காமல் சொன்னார். அதோடு ஐ.ஜி. லெவலுக்குப் போயிருக்கும் பெட்டிஷனால் கோணச்சத்திரப் போலீஸ் நிலையத்திற்கே கெட்ட பெயர் என்றும், இந்தக் கெட்டப் பெயரை நீக்க வேண்டுமானால், போலீஸ் நடவடிக்கை எடுக்கக்கூடிய அளவிற்கு உலகம்மை சமூக விரோதச் செயல் செய்து வருபவள் என்று 'ரிக்கார்ட்' பூர்வமாக நிரூபிக்க வேண்டும், என்றும் எடுத்துரைத்தார். அப்படி நிரூபிக்கத் தவறினால், 'கோடு கிழித்த' பழைய சமாசாரங்கள் கூட கிளப்பப்பட்டு, தனக்கு மட்டுமில்லாமல் மாரிமுத்து நாடாருக்கும் மானபங்கத்தோடு மற்ற பங்கங்களும் வரும் என்றும் சற்று மிரட்டினார்.
போலீஸை எதிர்ப்பவர்கள் சமூக எதிரிகளாக சித்தரிக்கப்பட வேண்டும் என்ற - (போலீஸ் நிலைய) 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றி நின்ற' - வழிவழி மரபை ஹெட்கான்ஸ்டபிள் பிடித்துக் கொண்டே, லாக்கப்பில் செத்த ஒருவனை, தப்பியோடித் தகாத செயலைச் செய்யும் போது 'தற்காப்புக்காகச்' சுட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாகச் சொல்லித் தப்பித்த நிகழ்ச்சி ஒன்றையும் அவர் நினைவு படுத்திக் கொண்டார்.
சமூக விரோதியாவதற்குரிய தகுதிகள் என்ன என்பதைத் தீர்மானிக்க நினைத்தவர்கள்போல், மாரிமுத்து நாடாரும், பலவேச நாடாரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த போது இருவர் முகத்தையும் பார்த்த ஹெட்கான்ஸ்டபிள், எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிட்டார்.
"பட்டைச் சாராயம், விபச்சாரம், சாமி சிலையைக் கடத்துவது, திருட்டு."
இறுதியில், ஊரில் பிரபலமாகியிருக்கும் பட்டைச் சாராயமே எடுத்துக் கொள்ளப்பட்டது. சமயம் வாய்க்கும் போது, காய்ச்சிய சாராயமும், சட்டியும் உலகம்மையின் வீட்டில் வைக்கப்பட வேண்டும் என்றும், தகவல் அறிந்ததுமே, ஹெட்கான்ஸ்டபிள், தானாக வருபவர் போல், வருவார் என்றும் போர் வியூகம் வகுக்கப்பட்டது. அந்த வியூகத்தைக் கலைக்கும் எதிர் வியூகமாக, கான்ஸ்டபிளுக்கு 'காளி மார்க்கை' உடைக்கிற சாக்கிலும், வெற்றிலை பாக்கு வாங்கிக் கொடுக்கிற சாக்கிலும், தலையைச் சொறிந்து கொண்டு நின்ற ஒரு ஹரிஜனப் பண்ணையாள், நேராகப் போய் அருணாசலத்தின் காதைக் கடித்தார். அருணாசலம் பல்லைக் கடித்துக் கொண்டு, பல பெட்டிஷன்களைத் தட்டி விட்டான். உலகம்மையின் வீட்டுக்கு வந்து, தனியாக இருந்த மாயாண்டியையும் எச்சரித்துவிட்டுப் போய்விட்டான். பல அட்டூழியங்களை இதுவரை 'இம்பெர்ஸனலாக'ச் செய்துவந்த கான்ஸ்டபிள், கள்ளச்சாராய அட்டூழியத்தை 'பெர்ஸனலாக' நடத்த நினைத்து, மாரிமுத்து நாடாரின் சமிக்ஞைக்காகக் காத்திருந்தார். அப்போது அருணாசலம் போட்ட மனு அவருக்கு எஸ்.பி.யால் அனுப்பப்பட்டதுடன், அவரது விளக்கமும் கேட்கப்பட்டிருந்தது. நிச்சயம் டிரான்ஸ்பர் வந்துவிடும் என்பதைப் புரிந்து கொண்ட ஹெட்கான்ஸ்டபிள், அது வருவதற்குள், உலகம்மைக்கும் அருணாசலத்திற்கும் ஒரு பாடத்தைச் சொல்லிக் கொடுத்துவிட வேண்டும் என்று துடியாய்த் துடித்தார்; தவியாய்த் தவித்தார்.
இந்தச் சமயத்தில், உலகம்மையின் வீட்டுக்குப் பல ஹரிஜனப் பெண்கள் வந்து போகத் துவங்கினார்கள். ஓரளவு அமைதியும், அனுதாபமும் கொண்டிருந்த ஊர் ஜனங்கள், இதைப் பார்த்ததும் மீண்டும் கோபாவேசமாகத் தத்தளித்தார்கள். ஒரு மேல் ஜாதிப் பெண்ணோட வீட்டுக்கு, பள்ளுப் பறையுங்க வருதுன்னா அதுவும் ஊர்க்கட்ட மதிக்காம வருதுன்னா அது பெரிய விஷயம்! இது அந்த ஊரை மதிக்காமல் மட்டுமல்ல அவமரியாதையாகவும் நடத்தக் கூடிய செயலாகக் கருதப்பட்டது.
இதற்கிடையே நிலமில்லாத சிலர், உலகம்மை வீட்டுக்குப் போகும் ஹரிஜனங்களையும் பகிஷ்கரிக்க வேண்டும் என்றார்கள். நிலமுள்ள மாரிமுத்து வகையறாக்கள், "ஊர் விவகாரம் வேற, வயல் விவகாரம் வேற" என்று சொல்லி விட்டார்கள். அவ்வளவு லேசான கூலிக்கு, அந்தச் சேரி ஆட்களை மாதிரி, வேறு யாரும் கிடைக்க மாட்டார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில், ஒரு பெரிய விஷயமும் நடந்தது. பயங்கரமான வெள்ளத்தால், நெல்லை மாவட்டம், இதர மாவட்டங்கள் போல பலமாகப் பாதிக்கப்பட்டது. குட்டாம்பட்டிக் குளத்திற்கு, ராம நதியின் உபரி நீர் விரைவில் வெள்ளமாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், குளம் உடையாமல் இருக்க, மதகைத் திறக்கும்படி ஹரிஜனங்கள் சொன்னதை - அதனால் தங்கள் சேரி அழியும் என்று சொன்னதை - நிலப்பிரபுக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதை ஆட்சேபித்து, அருணாசலம், மதகுக்கருகே ஒரு கட்டிலைப் போட்டு படுத்துக் கொண்டு, சேரி மக்களின் பேச்சையும் கேட்காமல், சாகும்வரை அல்லது மதகுகள் திறக்கப்படும் வரை, இந்த இரண்டில் எது முன்னால் வருகிறதோ அதுவரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக, படுத்துக் கொண்டே அறிவித்தான். அந்த அறிவிப்பு இரண்டு தெருக்களுக்கு மேல் பரவாமல் இருந்த சமயத்தில், எப்படியோ அதைப் பற்றிக் கேள்விப்பட்ட ஹெட்கான்ஸ்டபிள், வயதான சப் இன்ஸ்பெக்டரிடம் சொல்லி, அருணாசலத்தை அரசாங்க விருந்தாளியாக்கினார்.
இதுவரை "கிறுக்குப்பய மவன், எக்கேடாவது கெடட்டும், பட்டாத்தான் தெரியும்" என்று முனங்கிக் கொண்டிருந்த சில 'பட்டுப்போன' சேரிக்கிழவர்கள் கூட கிளர்ந்தெழுந்தார்கள். ஒருவர் கூடப் பாக்கியில்லாமல், போலீஸ் நிலையத்தில் அருணாசலத்தைப் பார்க்கப் போனார்கள். அதை முற்றுகையாகக் கருதிய வயதான சப்-இன்ஸ்பெக்டர், ஒழுங்காக 'ரிட்டயராக'க் கருதி அருணாசலத்தை விடுதலை செய்தார். அருணாசலம், மீண்டும் வந்து மதகுப் பக்கம் படுத்துக் கொண்டான். இப்போது சேரிமக்கள், அவன் பக்கத்திலேயே நின்றார்கள். சேரி அழியாமல் இருப்பதற்காக, அவன் தன்னை அழித்துக் கொள்ளத் தயாராக இருக்கிறான் என்பதை உணர்ந்ததும், அவர்களும் இரண்டிலொன்றைப் பார்த்துவிடுவது என்று தீர்மானித்தவர்களாக ஒன்று திரண்டு, அவனருகேயே நின்றார்கள். ஆனாலும் அவர்களுக்குக் கோஷங்கள் தெரியாது. சிலர், பண்ணையார்கள் வயல்களைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்றும் துடித்தர்கள். மதகுகளை உடைக்க வேண்டும் என்று இளவட்டங்கள் வட்டமடித்தனர்.
மேல் ஜாதிக்காரர்களையும் சும்மா சொல்லக்கூடாது. பிள்ளைமார், நாடார், தேவர் என்ற ஜாதி வித்தியாசமில்லாமல், ஒருதாய் மக்கள் போல் ஒன்று திரண்டார்கள். வாயில்லாப் பூச்சிகளாய்க் கிடந்த சேரியர், விஷப் பூச்சிகளாய் மாறிய விந்தையை இன்னும் அவர்கள் ஜீரணிக்க முடியாமல் திண்டாடினாலும், "பறப்பய மக்கள ஓடோட விரட்டாட்டா நாம இருந்ததுல புண்ணியமில்ல" என்று சொல்லி, மரம் வெட்டும் தேவர்களையும், ஆடுமேய்க்கும் கோனார்களையும், பனையேறும் 'சாணார்'களையும், கிணறுவெட்டும் இதர மேல் ஜாதிக்காரர்களையும், நிலப்பிரபுக்கள் ஒன்று திரட்டினார்கள். மதகுகள் உடைக்கப்பட்டால் அவற்றை உடைக்கும் மண்டைகளை உடைப்பதற்காக மாரிமுத்து நாடார், பஞ்சாட்சர ஆசாரி, மாரிமுத்துச் செட்டியார் ஆகியோர் மண்வெட்டிகளையும், கோடாரிகளையும், வெட்டரிவாட்களையும் விநியோகித்தார்கள்.
இதற்கிடையில், நெல்லையில் வெளியாகும் பத்திரிகை ஒன்று, அருணாசலம் கைதாகி விடுதலையானதையும், அவன் விடுதலையாகி உண்ணாவிரதம் இருப்பதையும், ஊரில் பதட்ட நிலை நிலவுவதையும் 'மூன்று காலத்திற்கு'ச் செய்தியாக வெளியிட்டது. பெட்டிஷன்களை 'ரொட்டீனா'க் கவனித்து வந்த மாவட்ட அதிகாரிகள், அந்தப் பத்திரிகையைப் பார்த்ததும் பதைபதைத்தார்கள்; படபடத்தார்கள். விஷயம் மந்திரிகளுக்கும், பெரிய அதிகாரிகளுக்கும் போகும் முன்னால் ஏதாவது செய்தாக வேண்டும்!
மாவட்டக் கலெக்டரே, அங்கு வந்துவிட்டார். பி.டபிள்யூ. எஞ்சினியர்களும், குளத்து மதகைத் திறந்துவிட வேண்டும் என்று சொன்னார்கள். கொஞ்சம் திமிறிப் பார்த்த மேல் ஜாதி நேச ஒப்பந்தக்காரர்களை, ரிசர்வ் போலீஸுடன் வந்திருந்த கலெக்டர், இறுதியில் மிரட்டிப் பணிய வைத்தார். சாம, பேத, தானம் போய்விட்டால் அவர்கள் 'தண்டத்திற்கு' இருப்பதாகக் கருதப்பட வேண்டும் என்று சுருங்கக் கூறி விளங்க வைத்தார்.
எப்படியோ, தாசில்தார், அவருக்கு 'அபிஷியல் மச்சானான' ஆர்.டி.ஓ., எஸ்.பி., டி.எஸ்.பி., ஆகியோர் புடை சூழ நின்ற கலெக்டர், படுத்துக் கிடந்த அருணாசலத்திற்கு ஒரு கண்ணாடி டம்ளரில் தயாராக இருந்த 'ஆரெஞ்சு ஜூஸை' நீட்டினார். அருணாசலம், மடக்கென்று குடிக்கவும், மதகுகள் படக்கென்று திறக்கவும் சரியாக இருந்தது. உண்ணாவிரதம் நின்று விட்டதாகக் கேள்விப்பட்டு வீட்டில் இருந்து ஓடிவந்த உலகம்மை, கையில் வைத்திருந்த இரண்டு வாழைப் பழங்களை, அவனிடம் நீட்டினாள். அவன் ஒன்றை வாய்க்குள் வைத்துக் கொண்டு இன்னொன்றை அவளிடம் திருப்பிக் கொடுத்து விட்டான்.
குட்டாம்பட்டிக்காரர்கள் உலகம்மையின் இந்த 'சேரிச் செயலை', மிக சீரியஸாக எடுத்துக் கொண்டார்கள். எதிரிகளுக்கு உதவும் 'எட்டம்மையான' அவளை, எப்படியாவது நிர்மூலப்படுத்தி விட வேண்டும் என்பதில் அவர்களுக்கு இப்போது கருத்து வேற்றுமை இல்லை. மேல் ஜாதியில் பிறந்து, மேல் ஜாதியில் வளர்ந்து, மேல் ஜாதியில் வாழும் ஒரு 'பொம்பிளை', மேல் ஜாதியினரைக் கிள்ளுக்கீரையாகக் கருதும் 'கழுத களவானிப்பய மவனும்', 'காவாலிப்' பயலுமான அருணாசலத்திற்கு, எல்லார் முன்னிலையிலும், வாழைப்பழத்தைக் கொடுக்கிறாள் என்றால், அவளை வாழைக்குலையைச் சாய்ப்பது போல், சாய்க்கவில்லை யென்றால், அவர்கள் இருந்ததில் பிரயோஜனமில்லை. குலத்தைக் கெடுக்க வந்த அந்தக் 'கோடாரிக்காம்பை', கோடாலியால் கூட வெட்டியிருப்பார்கள். அருணாசலத்தையும், அவன் பெட்டிஷன்களையும் கருத்தில் கொண்டு, உலகம்மையை வேறு வழியில் மடக்கப் பார்த்தார்கள்; நினைத்தார்கள். இப்போது ஊரே ஒரு மனிதனாகி, உலகம்மைக்கு ஜென்ம விரோதியாக மாறிவிட்டது. சேரி மக்களிடம் பட்ட அவமானத்தை, அவளிடம் பட்ட அவமானமாகக் கருதினார்கள். காசு கேட்டு, அது கிடைக்காத சிறுவன், கையில் இருக்கும் கண்ணாடியை வீசியெறிவது மாதிரி.
கொஞ்சம் மனமாறி வந்த பலவேச நாடார், 'பள்ளுப் பறைகளோடு' அவள் சேர்ந்து கொண்டதை அறிந்ததும், வெகுண்டார். "அருணாசலத்த வச்சிகிட்டு இருக்காள்" என்று இரண்டு மூன்று இடங்களில் பிரச்சாரம் செய்தார். இந்தப் பிரச்சாரத்தைக் கேள்விப்பட்ட மாரிமுத்து நாடார், பஞ்சாட்சர ஆசாரி, ராமையாத்தேவர் ஆகியோர், "வே, ஒமக்கு மூளை இருக்கா? அருணாசலத்த வச்சிக்கிட்டிருக்கான்னு சொன்னா, நமக்குத்தான் அசிங்கம்! அடுத்த ஊர்க்காரங்க, வச்சிக்கிட்டு இருந்தவள் உலகம்மன்னு அட்ரஸ்ஸா வச்சிக்கிட்டு இருப்பாங்க? மேல் ஜாதிப் பொண்ணைக் கீழ் ஜாதிக்காரன் வப்பாட்டியா வச்சிக்கிட்டிருக்கான்னு எல்லாருடைய பொண்ணையும் தான் தப்பா நினைப்பாங்க! இது ஏன்வே ஒம்ம களிமண் மண்டையில் உரைக்கல?" என்று பலவேச நாடாரை நாயைப் பேசியது மாதிரி பேசி, அவர் வாயை ஆளுக்கொரு பக்கமாக அடைத்தார்கள். 'புலி வருது புலி வருதுன்னு' சொல்றது மாதிரி வச்சுக்கிட்டிருக்கான்னு சொல்லப் போய் அவள் நிஜமாகவே அருணாசலத்தை 'வச்சிக்கிட்டு' இருக்கத் துவங்கினால், கேவலம் உலகம்மைக்கு மட்டுந்தானா? அவளைச் சேர்ந்த ஜாதிக்கும் பங்கு கிடைக்காமலா போகும்? 'மேல் ஜாதிக்காரங்க எங்களுக்கு மச்சினங்கன்னு சேரிப்பசங்க பேசினா சேதம் யாருக்கு?"
ஆகையால் குட்டாம்பட்டியார், "பாம்பும் சாகணும். பாம்படிக்கிற கம்பும் நோகக்கூடாது" என்று நினைத்தவர்கள் போல், உலகம்மையை எதிர்த்து, பகிஷ்காரத்தைப் பலப்படுத்தினார்கள். சிலரை அதற்காகப் பலவந்தப்படுத்தினார்கள். உலகம்மை வட எல்லையான தோட்டத்துக் கிணற்றில் குளித்து வந்தாள். அங்கே அவள் குளிக்கக் கூடாது என்று தோட்டக்காரரைச் சொல்ல வைத்தார்கள். விரைவில், தோட்டச்சுவரை முட்கம்பிகளை வைத்து அடைக்கவேண்டும் என்றும், அவரிடம் ஆணையிடப்பட்டது. உலகம்மை சட்டாம்பட்டிக் கிணறுகளில் ஒன்றில் குளித்தாள். இரண்டு நாள் கழித்து, தோட்டக்காரர், அவள் அருகேயுள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார். உலகம்மை அசரவில்லை. சேரிக்கிணற்றில் போய்த் தண்ணீர் எடுத்தாள். ஊர்க்கிணற்றுக்குத் தண்ணீருக்காகப் போவதை, அங்கேயுள்ள பெண்களின் நிசப்தத்தைத் தாங்க மாட்டாது ஏற்கெனவே விட்டுவிட்டாள்.
என்றாலும், ஊரில் நிலவிய பதட்ட நிலையைக் கருதி ஹரிஜனப் பெண்கள் அவள் வீட்டுக்கு வருவதை நிறுத்திக் கொண்டார்கள். சேரியில் உள்ள சில கிழங்கள் கூட "எல்லாம் ஒங்களாலத்தான் நாடாரம்மா. நீங்க தான் எதுக்கும்மா ஒங்க சண்டையில இழுக்கிய?" என்று தண்ணீர் எடுக்கப் போன அவளிடம் நேரிடையாகவே கேட்டு விட்டார்கள். உலகம்மைக்கு என்னவோ போலிருந்தது. அவர்களைப் பற்றி அருணாசலத்திடமோ, இதர பெண்களிடமோ சொல்ல அவள் விரும்பவில்லை. அப்படிச் சொன்னால், அந்த கிழங்கட்டைகளுக்கு 'செமத்தியாக' வசவு கிடைக்கும் என்பதும் அவளுக்குத் தெரியும்.
உலகம்மை சட்டாம்பட்டி வயக்காட்டுக்கு போகும் போது, வீட்டில் இருந்த ஒரு செப்புக்குடத்தையும் கையோடு கொண்டு போனாள். இதையறிந்த குட்டாம்பட்டியார், சட்டாம்பட்டி நிலப்பிரபுக்களிடம், உலகம்மையை வயலில் சேர்க்கக் கூடாது என்று பக்குவமாகச் சொல்வதற்குத் தருணத்தை எதிர்பார்த்திருந்தார்கள்.
உலகம்மைக்கு மீண்டும் பயங்கரத் தனிமை வாட்டியது. மெட்ராஸுக்குப் போகலாம் என்று அய்யாவிடம் சொன்ன போது, அவர் மறுத்துவிட்டார். உலகம்மையும் சேரி மக்கள் காட்டும் அன்பில், கட்டுண்டவளாய் அந்த எண்ணத்தைக் கைவிட்டாள். இப்போது ஊர் நிலைமை காரணமாக, சேரி மக்கள் ஒதுங்கி இருப்பதால், தனிமைப்பட்ட அவள், அய்யாவிடம் மீண்டும் பட்டணப் பிரவேசத்தைப் பற்றிச் சொல்லும் போது, அவரோ, "எந்தவித பலமும் இல்லாமல், அழக மட்டும் வச்சிக்கிட்டு இருக்கிற ஏழப்பொண்ணு மெட்ராஸ்ல மானத்தோடு வாழ முடியாது" என்று சொன்னார். அவள் மீண்டும் வற்புறுத்திய போது, "நான் செத்த பிறவு என்னைக் குழிமுழிவிட்டு அப்புறமா வேணுமுன்னா போ! என் கண்ணால நீ மெட்ராஸ்ல மானத்துக்குப் போராடுறத பாக்க முடியாது" என்று இறுதியாகச் சொல்லிவிட்டு, வேறு பக்கமாக முகத்தை வைத்துக் கொண்டார். உலகம்மையால் அதற்கு மேல் வற்புறுத்த முடியவில்லை. அதோடு ஒரு லெட்டர் கூடப் போடாத லோகு இருக்கும் மெட்ராஸுக்குப் போக, அவளுக்கு விருப்பமில்லை. அவனை நினைக்காமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வலிய தன்னை மீறி வரவழைத்துக் கொண்டு, அதை இறுதியில் வீம்பாக மேற்கொண்டாள்.
இத்தனை அமளிக்குள்ளும், சரோசா - தங்கப்பழம் கல்யாணம், வாணவேடிக்கைகளோடும், கொட்டு மேளத்தோடும் நடந்தேறியது.
கல்யாணமாகி பத்து நாட்களுக்குப் பிறகும், சரோசா கண்ணைக் கசக்குவதைப் பார்த்து மாரிமுத்து நாடார் திடுக்கிட்டார். போகப் போகச் சரியாகி விடும் என்று நினைத்தவர், மகள் களையிழந்து இருப்பதைப் பார்த்துக் கலங்கினார். முதலிரவிலேயே, தங்கப்பழம், 'பட்டை' போட்டுக் கொண்டு, அவளை நெருங்கினான் என்றும், சாராய நாற்றத்தைத் தாங்க முடியாத சரோசா, கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து அழுதாள் என்றும், தங்கப்பழமும் வெளியே வந்து, அவள் தலைமுடியைப் பலவந்தமாகப் பிடித்து, இழுத்துக் கொண்டு உள்ளே போனான் என்றும், மனைவி மூலம் கேள்விப்பட்ட மாரிமுத்து நாடாருக்கு, மார்பை என்னவோ செய்தது. இது போதாதென்று, மச்சினன் பலவேசம் "அத்தான், அடுத்த போகத்துல கரையடி வயலுல கடல போடப்படாது, தக்காளி தான் போடணும்" என்று, அவர் நிலத்துக்காரர் மாதிரியும், இவர் குத்தகைக்காரர் மாதிரியும் பேசிவருவது அவரை வாட்டி வதைத்தது.
'இத்தனைக்கும் காரணமான அந்த உலகம்மை, இன்னும் உலாத்துறாள். காலை நீட்டி நீட்டி நடக்கிறாள். கையை ஆட்டி ஆட்டிப் போகிறாள். இனிமேயும் அவள விட்டு வைக்கது மகா தப்பு! விட முடியாது, விடக்கூடாது!'
மாரிமுத்து நாடார், வட எல்லைத் தோட்டக்காரர் ஐவராசாவிடம் தோட்டச்சுவரை அடைத்துவிட வேண்டும் என்று வாதாடி, ஊர்க்காரர்களை எதிர்த்த சேரிப்பயலுக்கு, உலகம்மை வாழைப்பழம் கொடுத்ததை புள்ளிவிவரமாகக் காட்டினார். "அது எப்டி மச்சான் முடியும்? அனார்க்கலி சினிமாவுல உயிரோட சமாதி கட்டுனது மாதுரி இருக்குமே" என்று இழுத்துப் பேசிய ஐவராசாவிடம், தோட்டச்சுவரை அடைக்கவில்லையானால், அவர் வயலுக்குப் பச்சைத் தண்ணீர் போகாது என்று பச்சையாகச் சொல்லிவிட்டார்.
பொது வாய்க்காலில் இருந்து, நீர் போகமுடியாத 'முக்கடி முனங்கடியில்' மாரிமுத்து நாடார் வயல் வாய்க்காலை நம்பியிருக்கும் இடத்தில், 'ரெண்டு மரக்கால்' விதப்பாட்டை வைத்திருந்த ஐவராசா, இறுதியில் இணங்கிவிட்டார். 'எப்டி வெளில போவா? எப்டியும் போவட்டும். நம்ம தோட்டத்த நாம அடைப்போம்!
மாரிமுத்து நாடாருக்கு இன்னும் ஆத்திரம் தீரவில்லை. பலவேச நாடார் இப்போது அவரை மதிப்பதே இல்லை. உலகம்மையை, ஊரைவிட்டு விரட்டவில்லையானால், அவர் இருப்பதில் அர்த்தமில்லை. வீட்டுக்காரி வேறு, "நீங்க ஒரு ஆம்புளயா? ஒரு அன்னக்காவடி பொம்புளய அடக்க முடியாத நீங்க ஒரு ஆம்புளயா?" என்று இரவில் கொடுத்த 'அடி' அவருக்கு பகலிலும் வலித்தது.
அந்த வலி தாங்க முடியாமல், அவர் பல்லைக் கடித்துக் கொண்டார். அவர் மூளை தீவிரமாகச் சிந்தித்து இறுதியில் ஒரு முடிவை மேற்கொண்டது.
'ஒண்ணுக்கும் முடியாமல் போனால், பிராந்தன ஏவி அவள கற்பழிக்கச் சொல்லணும். இதனால் (பிராந்தனுக்கு) எட்டு வருஷம் ஜெயில் கிடச்சாலும் பரவாயில்ல.'
உயிரையே பணயமாக வைத்த ஒருவனுக்கு வாழைப்பழம் கொடுத்ததால் புதிய விரோதம் முளைத்து, அது பழைய விரோதத்துடன் சேர்ந்து கொண்டதைப் புரிந்து கொண்ட உலகம்மைக்கு ஒன்றும் ஓடவில்லை. தெருக்களில் அவளிடம் பேசாவிட்டாலும், சிநேகித பாவத்துடன் சிரித்துக் கொண்டு போகும் சிலர் கூட, இப்போது அவளைப் பார்த்ததும், பல்லைக் கடித்துக் கொண்டு போவதைப் பார்த்துத் திடுக்கிட்டாள். ஒற்றையடிப் பாதைக்கு அசிங்கம் மேலும் பயங்கரமாகியது. இதுவரை வெள்ளைச்சாமியும், ராமசாமியுந்தான் அவள் போகும் போது கீழ்த்தரமாகப் பாடுவார்கள், ஆடுவார்கள். இப்போதோ, பாதிப்பேர் 'காலிகளாகவும்', அடுத்த மீதிப் பேர் நல்லவர்களாகவும் இருந்த இதர பிள்ளையாண்டான்களும், 'முழுக்காலிகள் போல்' அவளைப் பார்க்கும் போதெல்லாம் ஆபாசமாகப் பேசுவது, நன்றாக அளவுக்கு அதிகமாகக் கேட்டது. அந்தப் பிள்ளையாண்டான்களின் அய்யாமார்களில் சிலரும் இந்தக் கோரஸில் சேர்ந்து கொண்டார்கள்.
உலகம்மை, 'அருணாசலத்திற்கு ஏன் 'வாழைப்பழம்' கொடுத்தோம்?' என்று கூட நினைத்துக் கொண்டாள். பிறகு, அப்படி நினைப்பது நன்றி கெட்டத்தனமாகவும் அவளுக்குத் தெரிந்தது.
'அய்யா கோட்டுக்குள்ள நிக்கையில ஏன்னு கேக்கல. நடந்த விஷயத்துல பாதியக் கூட போலீஸ்ல சொல்லல. அய்யாவ ஏட்டு இழுத்துக்கிட்டுப் போகையில ஒருவன் கூட நியாயம் பேசல. ஏன்னு கேட்டவள அபராதம் குடுன்னு சொல்லும் போது, ஊர்சனமே ஒண்ணாயிட்டு... ஓடோட விரட்டுறானுக. ஒருவனுக்குக்கூட நியாயம் தெரியல... தெரிஞ்சவனும் ஒதுங்கிப் போறான். இவங்களுக்குப் பயந்துகிட்டு எதுக்காவ இருக்கணும்? அப்பப்போ வந்து ஆறுதல் சொல்லிட்டுப் போற அருணாசலத்தவிட இவனுக எந்த விதத்துல உசத்தி?'
உலகம்மை, தன் செயலை நியாயப்படுத்திக் கொண்டாலும், எந்த வித விரோதத்திற்கும் காரணமில்லாத, அவளைப் போன்ற ஏழை எளியவர்கள் கூட, அவளைப் பயங்கர எதிரியாகக் கருதுவதைத்தான் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. புரிந்து கொள்வதற்காக அவள் சிந்தித்த போது தலை வலித்தது தான் மிச்சம்.
ஆண்டாண்டுக் காலமாக, வறுமைக் குப்பையில் நெளியும் புழுக்களாக மாறிப் போன ஏழை எளியவர்கள், தற்காப்பு உணர்வும், தன்னம்பிக்கையும் இல்லாமல் தாழ்வு மனப்பான்மையில் ஊறிப்போய் விடுவார்கள் என்பதும், அவர்கள் வெளிமனம் அந்த பிரத்யட்ச நிலையை ஒப்புக் கொள்ள மறுக்கும். இப்படி அடிமனதில் அடிவாங்கிப் பழகிப் போன அவர்கள், வலுவான மனிதர்களோடு, தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டு, தங்களையும் வலுவான மனிதர்களாகக் காட்டிக் கொள்வார்கள். மனோதத்துவ ரீதியில் சொல்லப் போனால் அடிமை மனோபாவத்திற்கு 'காம்பென்ஸேஷன்' தேடிக் கொள்ளும் 'எஜமானத்துவ' வகையில் பெரிய இடத்தாரோடு ஒட்டிக் கொண்டு தங்களையும், பெரியவர்களாகக் காட்டிக் கொள்வார்கள். இந்த மனோ நுணுக்கம் உலகம்மைக்குத் தெரிய நியாயமில்லை. இதை அறியாமலேயே, 'வெங்கனுக்கு வீம்பு அதிகம்' என்ற பழமொழியின் உள்ளர்த்தம், பலரைப் போல் அவளுக்கும் தெரியாது.
தொட்டிலிலேயே 'ஆனைக்கட்டிப் போரடிச்சார் உங்களய்யா. கைகட்டி வாய் புதைத்துக் காசினியார் நிற்கையிலே கப்பலுலே வந்திறங்கும் கண்மணியே, தாலேலோ' என்ற பாடலைக் கேட்டு, அதற்கேற்ப, 'சீமைத்துரை', 'வெள்ளைத்துரை', 'பாண்டியராஜன்', 'ராசாக்கண்ணு' என்று பெற்றோர்களால் பெயர்கள் வைக்கப்பட்டு, அவர்கள் சொன்னபடி நடக்காமல், எதிர்மறையில் நடந்தாலுங் கூட ஒவ்வொருவனும் தன்னைச் சக்கரவர்த்தியாக - தன்னையறியாமலே அங்கீகரித்துக் கொண்டு, அப்படிச் 'சக்கரவர்த்தி' மாதிரி இருப்பவர்களோடு ஒட்டிக் கொள்வார்கள் என்பதும், இந்த அடிப்படை மனோபாவத்தை உலுக்கித் தள்ளும் வகையில் இலக்கியங்களும், செயல்களும் துவக்கப்படாதது வரை, நிலைமை இப்படியேதான் இருக்கும் என்பதும், 'உயர்ந்தோர் மாட்டே உலகு' என்ற அந்த உலகிற்கே இதைச் சரியாகக் கணிக்கத் தெரியாத போது, உலகம்மைக்கு தெரிய வேண்டிய நியாயமில்லை. என்றாலும், அவள் உள்ளுணர்வு, 'பட்டிதொட்டி பதினாறிலும்' ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது என்பதை மட்டும் உணர்த்திக் கொண்டிருந்தது.
இதோடு இன்னொரு வேலையும் அவளுக்கு. வீட்டில் பட்டைச் சாராயம் வைக்கப்படுகிறதா என்று அவள் கண்காணிப்பு வேறு செய்ய வேண்டியிருந்தது. தள்ளாமையில் தள்ளாடும் அவள் அய்யாவும், அவள் இல்லாதபோது விழிப்போடு இருக்க வேண்டும் என்ற நிலை. இந்தச் சமயத்தில், லோகுவின் எண்ணமும், உள்ளத்தில் எட்டிப் பார்ப்பதை அறிந்து, அவள் தன்னைத்தானே நொந்து, தனக்குள்ளேயே எரிச்சல் பட்டுக் கொண்டாள். என்றாலும், அவள் ஒன்றை மட்டும் விடவில்லை.
நம்பிக்கை! நம்பிக்கை!
'ஊரில் பதட்டநிலை முடிந்ததும், சேரி மக்கள் மீண்டும் 'வரப்போக' இருப்பார்கள். இந்தப் பயங்கரத் தனிமை நிரந்தரமாக இருக்காது. சரோசாவை, தங்கப்பழம் ஒருமாதிரியாக நடத்தினாலும், இப்போது கொஞ்சம் அவன் அன்பு காட்டுவதாகக் கூறப்படுகிறது. மாரிமுத்து நாடாருக்குக் கோபம் தணிந்து விடும். சேரி மக்களைப் பகைக்கக் கூடாது என்பதற்காகவே, ஊர்க்காரர்கள் போகப்போக அவளிடம் குரோதத்தைக் குறைத்துக் கொள்ளலாம். ஒருவேளை லோகுவே அவளை வந்து பார்க்கலாம். ஒருவேளை அவன், அவளை...'
உலகம்மை மேற்கொண்டும் நினைத்ததைத் தொடராமல் சட்டாம்பட்டி வயக்காட்டுக்குப் புறப்பட்டாள். இப்போது மெட்ராஸுக்குப் போகும் எண்ணமே ஏற்படவில்லை. 'இந்த ஊர்க்காரன் என்னதான் பண்றான்னு கடைசிவரை பாத்துடலாம்' என்றே வைராக்கியமும் பிறந்தது. ஊர்க்கொசுவுக்குப் பயந்து, கோட்டை இருக்கும் சென்னைக்குப் போக அவள் விரும்பவில்லை.
உலகம்மை தோட்டச்சுவரில் ஏறிக்குதித்துப் போவதை பார்த்துவிட்டு, மாயாண்டி மீண்டும் கட்டிலில் வந்து படுத்தார். அவரையும், தனிமை வாட்டியது. அடிக்கடி வந்து பேசிக் கொண்டிருந்த அருணாசலத்தை, தற்சமயத்துக்கு வரவேண்டாம் என்று அவர் தான் சொல்லியிருந்தார். கலகத்திற்குக் காரணமாகக் கருதப்படும் அவனை, எவனாவது 'ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணிடப்படாது' என்கிற பயத்தில் சொன்னவர், இப்போது தனிமையே ஒரு பயங்கரமாக வடிவெடுக்க, அதைத் தாங்க மாட்டாது, சேரிக்குப் போகலாம் என்று யோசித்துப் பின்னர், தோட்டத்துச் சுவரில் ஏற முடியாத இயலாமையை நொந்து கொண்டு கண்ணயர்ந்தார்.
வெளியே சத்தம் கேட்பதைக் கேட்டதும், எவனோ சாராயப் பானையை வைக்க வருவதாக நினைத்துக் கொண்டு மாயாண்டி வெளியே வந்தார். அவராலேயே நம்ப முடியவில்லை.
தோட்டத்திற்கு உரிமையாளராக இருந்தும், தனக்குத் தானே உரிமையாளராக இருக்க முடியாமல் போன ஐவராசா, தோட்டச்சுவரை ஒட்டி, நாலைந்து கம்புகளை நட்டுவிட்டு, சுவரில் போடப்பட்டிருந்த முட்கம்பிகளை எடுக்க முடியாமல் எடுத்துக் கொண்டிருந்தார். சில பனைவோலைகளும் சுவரில் கிடந்தன. மாயாண்டிக்கு, 'இப்டிச் செய்ய இவனால எப்டி முடிஞ்சுது?' என்று உள்ளத்துக்குள் கேள்வி ஓங்கியது. வேகமாக ஐவராசாவை நெருங்கினார். ஆனால் ஐவராசாவால் மாயாண்டியை நேருக்கு நேராகப் பார்க்க முடியவில்லை. கம்பியை எடுக்கிற சாக்கில், தலையைத் தாழ்த்திக் கொண்டார்.
"என்ன மாப்பிள்ள, எதுக்குக் கம்பி நடுறீரு?"
"என்னோடத் தோட்டத்த அடைக்கப் போறேன். அடிக்கடி பன்னி வந்து மேஞ்சிட்டுப் போவுது."
"எந்தப் பன்னிய சொல்றீரு. மனுஷப் பன்னியயா? மிருவப் பன்னியயா?"
ஐவராசா, அவரை நிமிர்ந்து பார்த்தார். என்ன பதிலளிப்பது என்று அவருக்குத் தெரியவில்லை. மீண்டும் மும்முரமாக வேலையில் இறங்கினார். மாயாண்டி பேசுவது, காதில் நன்றாகத்தான் கேட்டது.
"மாப்பிள, நல்லா யோசிச்சுப்பாரும். மொட்ட மரமா நிக்கறோம். வீட்டச் சுத்தி அடச்சிப்புட்டானுவ. ஒம்ம தோட்டத்தையும் அடச்சுட்டா நாங்க எங்க போவ முடியும்? ஒம்ம தோட்டத்துல குருவி நாயி கூடப் போவுது; நாங்க போவக் கூடாதா? மாப்பிள, மாப்பிள! நீரு செய்யுறது முறயில்ல மாப்பிள்ள! என் மொகத்த ஏறிட்டுப் பாரும்! அதுக்குப் பிறவும் ஒமக்கு அடைக்கணுமுன்னு நெனச்சா அடையும்! ஒம்மத்தான் மாப்பிள்ளை, வீட்டையே ஜெயிலா மாத்திட்டா, நாங்க எங்க போவம்? மாட்ட பவுண்டில அடைக்கது மாதிரி எங்கள அடச்சா எப்டி மாப்பிள்ள?"
ஐவராசா, 'கண்டுக்காமல்' முட்கம்பியின் கீழ்முனையை, ஒரு கம்பில் கட்டிக் கொண்டிருந்தார். கிழவர் பேச்சைத் தாங்க முடியாதது போலவும், அது தன் இதயத்தைத் தாக்குவதற்கு முன்பாக, வேலியைப் போட்டுவிடுவதென்றும் நினைத்தவர் போல், அவசர அவசரமாக, முட்கம்பியின் மேல் முனையைத் தூக்கி, கம்பியின் நுனியில் கட்டிக் கொண்டிருந்தார். அதையே பார்த்துக் கொண்டிருந்த மாயாண்டி, வெளியே போன மகள் உள்ளே வரமுடியாது என்பதை நினைத்ததும், ஒரு குழந்தையாகவும் ஆகிவிட்டார்.
"அய்வராசா! நான் சொல்றதக் கேளும். மாப்பிள்ள! இது கடவுளுக்கே பொறுக்காது மாப்பிள்ள. ஊரு ஒலகத்துல எங்கேயும் இப்டி நடக்காது! நல்லா நெனச்சிப் பாரும் மாப்பிள்ள. ஒருகாலத்துல ஒய்யா வீட்டச்சுத்தி 'செருவ' அடைக்க என்னக் கூப்பிட்டார். நானும் கறுக்குமட்டய வச்சி பன ஓலயச் சாத்தி நல்லா அடச்சிக் குடுத்தேன். ஒடனே ஒங்கய்ய ஒரு எட்டணாவ நீட்டுனாரு. 'நான் கூலிக்காரன் இல்ல மாமான்னு' ஒய்யாகிட்ட சொல்லிட்டு, 'மருமவன் பேர்ல 'செருவ' இருக்கட்டுமுன்னு' தமாஷா சொல்லிட்டு வந்துட்டேன். வேணுமுன்னா ஒய்யாகிட்ட கேட்டுப் பாரும். எனக்கே வேலி வந்துட்டா, எப்டி மாப்பிள்ள? ஒம்ம மனசு இளகாதா? ஒய்யாவுக்கும் இப்டி வராதுன்னு நினைக்கியா? நீரு கொண்டு வந்திருக்கிற ஓலை சாதாரண பனையோலை இல்ல! என் சாவச் சொல்ல வந்துருக்கிற துஷ்டி ஓல மாபிள்ள, துஷ்டி ஓல!"
ஐவராசாவிற்கு மாயாண்டியின் கெஞ்சலைக் கேட்டதும் அதற்கு மேல் மனங்கேட்கவில்லை. ஊர்க்காரன்களை சபித்துக் கொண்டார். குளத்து வாய்க்கால் இல்லாத தன் வயல் வரப்பைத் திட்டிக் கொண்டார். முள் கம்பியால் பாதி இடத்தை அடைத்துவிட்ட அவர், மேற்கொண்டு வேலையைத் தொடராமல் மாயாண்டியைப் பார்க்காமலே பேசினார்:
"நான் செய்யுற வேலையில எனக்கொண்ணும் சந்தோஷம் இருக்கதா நெனைக்காண்டாம்! ஊர்க்காரங்க பேச்சைக் கேட்காட்டா ஒம்ம மவா வயசுல இருக்கிற என் மவளைக் கரையேத்த முடியாது! இந்த வேலிய நான் அடைக்காட்டா, ஊர்ஜனம் என்னச் சுத்தி வேலி போட்டுடும்! இப்பவும் குடி முழுகிடல. பேசாம ஊர்க்காரங்க காலுல கையில போயி விழும்! செய்ததுல்லாம் தப்புன்னு தோப்புக்கரணம் போட்டாலும் பாதகமுல்ல! அவங்க வந்து, என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னாப் போதும்! நீரு ஊரோட ராஜிய போயிட்டீர்னா இந்தத் தோட்டத்துல வேணுமுன்னாலும் குடிச போட்டுக்கும். நானும் மனுஷன் தான் மாமா."
மாயாண்டி, அந்த 'மனுஷனையே' பார்த்தார். அவன் சொல்வதில் 'மனுஷத்தனம்' சாகாமல் துடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தார். ஆனால் எண்சாண் உடம்பை எப்டி ஒரு சாணாக்குவது?
ஒரு காலத்தில் ஒரு சாண் கயிற்றில் உயர்ந்தோங்கிய பனைமுகட்டில் நின்று, ஒரு மனிதப் பனையே நிற்பது போல் பனைமட்டையோடு, தன் மண்டையை அழுத்தி வைத்துக் கொண்டிருந்த மாயாண்டி, உடம்பு ஒரு சாணாகக் கூச, ஊர்க்காரர்களிடம் கெஞ்சுவதற்காக, அந்தத் தோட்டச்சுவரில் ஏற முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தார். சந்தர்ப்பம் சரியாக இருந்ததால் நல்லவராக இருக்கும் ஐவராசா, கிழவரின் கையைத் தூக்கி அவரை தோட்டச்சுவரில் 'கரையேற்றினார்'. "சீக்கிரமா வாரும். ஊர்க்காரணுக ஒரு வார்த்த சொல்லாட்டா நீரு என்னைக் குத்தம் சொல்லக்கூடாது" என்றும் அவரை உஷார் படுத்தினார்.
நடக்க முடியாத மாயாண்டியால், இப்போது எப்படித் தான் ஓட முடிந்ததோ! 'கைதூக்கி' விட்டு 'கரையேற்றி' விட்ட ஐவராசாவைத் திரும்பிப் பார்க்காமலே, அப்படித் திரும்பிப் பார்த்தால், ஒரு நொடி வீணாகிவிடலாம் என்பது போல், ஓட்டமும் நடையுமாக, உடம்பெல்லாம் ஆட, பூமி குலுங்க, பறவைகள் பயத்துடன் இறக்கைகளைச் சிலிர்த்துக் கொண்டு பறந்தோட, அவர் பாய்ந்தோடிக் கொண்டிருந்தார். நாலு திசையும் முட்ட, எட்டுக் கோணமும் தட்ட, தட்டுத்தடுமாறி, வழிபார்த்து ஓடாமல், கால்பட்ட இடத்தையெல்லாம் வழியாக நினைத்து, கண்பட்ட ஆட்களையெல்லாம் உண்மையிலேயே மனிதராக நினைத்து, அவர் ஓடினார். வேர்க்க விறுவிறுக்க உயிர் அவரைப் பிடித்திழுப்பது போலவும், உயிரை அவர் பிடித்திழுப்பது போலவும், கொலை செய்தவனைத் துரத்தும் போலீஸ்காரனைப் போல, அந்தப் போலீஸில் இருந்து தப்பித்து ஓடும் கொலைகாரனைப் போல, அவர் ஓடினார். அத்துவானக் காட்டில் நரிமுகங்களையும், பரிமுகங்களையும் பார்த்து அலுத்துப் போன ஒருவர், மனித முகத்தைப் பார்க்க ஏங்கிக் கிடந்த ஒருவர், அது கிடைக்காமல், இறுதியில் பார்த்த முகங்களையே மனித முகங்களாகப் பாவித்துக் கொண்டு, அவற்றைப் பார்க்கப் போகும் மனிதனைப் போல் தள்ளாடிக் கொண்டும் ஓடினார். தன்னையே தான் தள்ளிக் கொண்டும் ஓடினார். உலகம்மைக்கு இரு மடங்காகவும் தனக்கு ஒரு மடங்காகவும் அந்த வயோதிகர் மும்மடங்காக ஓடினார்.
புளியந்தோப்பில், முன்பெல்லாம் உலகம்மையைச் சீண்டிப் பார்ப்பதை மட்டுமே ஒரு கடமையாகவும், இப்போது அதை ஒரு இனிமையான பொழுது போக்காகவும் கொண்ட ராமசாமி, வெள்ளைச்சாமியிடம் அவர்கள் யாரென்றும் தெரிந்தும் ஓடினார். அவர்கள் முன்னால் போய் நின்று கொண்டு, "என் வீட்டு ஒரே வழியயும் ஐவராசா அடைக்கிறான். நீங்க சொன்னா கேட்பானாம். ஒரு வார்த்த வந்து சொல்லுங்க. சொல்லுங்க" என்று கெஞ்சினார். சாமிகள் இருவரும், அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்று நினைத்தார்கள். அவர் நிர்வாணமாக இல்லாமலும், குறைந்த பட்சம் வேட்டியைக் கிழிக்காமலும், இருப்பதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். பிறகு ஐவராசாவை உற்சாகப்படுத்த, ஒரே சமயத்தில் இருவரும் நினைத்து, தோட்டத்தைப் பார்த்து நடந்தார்கள்.
மாயாண்டி நிற்கவில்லை. "சிரிக்கவாடா செய்யுறிக. ஒங்களப் பாத்து சொள்ளமாடன் சிரிக்கத மறந்துடாதிகடா" என்று சொல்லிக் கொண்டே, தலைதெறிக்க ஓடினார். புளியந் தோப்பில் இருந்து, தென்கிழக்கே உள்ள ஒரு தோட்டத்து வழியாக ஓடினார். விழுந்து போன சோளதட்டைகளை நாலைந்தாகச் சேர்த்து, செங்குத்தாக வைத்துக் கட்டிக் கொண்டிருந்த ராமையாத் தேவரைப் பார்த்து, "தேவரைய்யா, என் வீட்டு வாசப்பாதைய ஐவராசா அடச்சிக்கிட்டு இருக்கான். ஒம்ம மாதிரிப் பெரிய மனுஷன் வேண்டான்னா விட்டுடுவானாம். தயவு செஞ்சி வாரியரா?" என்று படபடப்பாகப் பேசிக்கொண்டு நின்றார். ராமையாத் தேவர், அவர் முகத்தைப் பார்க்கவில்லை. தேவர் யோசிப்பதாக நினைத்த மாயாண்டி, "ஏல சோமு, தக்காளி வயலுக்கிட்ட எருமமாடு தெரியுது. ஓடிபோயி விரட்டுல" என்று எங்கேயோ ஒருவனுக்குச் சத்தம் கொடுப்பதை உணர்ந்த அவர், தேவர் தன்னைத்தான் ஒருவேளை எருமை மாடுன்னு சொல்கிறாரோ என்று நினைத்து, அங்கிருந்து ஓடினார்.
யூனியன் ரோடிற்கு அவர் வந்தபோது, இரண்டு பேர் ஒரு கட்டை வண்டியில் உட்கார்ந்திருக்க, ஒருவர் மாடுகளின் மூக்கணாங் கயிறுகளை லாவகமாக இழுத்துக் கொண்டே 'இம்மா இம்மா' என்று மாடுகளை விரட்டிக் கொண்டிருந்தார். முன்னால் போய் நின்ற மாயாண்டியைப் பார்த்ததும் 'பிரேக்கான' மூக்கணாங் கயிற்றை பிடித்திழுத்து மாடுகளை நிறுத்தினார் வண்டியோட்டி.
"மாடக்கண்ணு மச்சான், சிவசாமி கோனார! என் வீட்டு வழிய ஐவராசா அடைக்கான். அடைச்சிட்டாமுன்னா வெளிலயும் வரமுடியாது. உள்ளயும் போகமுடியாதுய்யா. பெரிய மனசு பண்ணி கொஞ்சம் வந்து சொல்லுங்கய்யா. அவன் கேக்குறேங்குறான்."
வண்டிக்காரர்கள் சிறிது யோசித்தார்கள். "இந்த புத்தி மொதல்லவே இருக்கணும். தும்ப விட்டுட்டு வாலப்பிடிச்சா எப்டி?" என்று சிவசாமிக்கோனார் 'கீதோபதேசம்' செய்ய, இன்னொருவர் "சரி சரி நகரும். ஒம்ம பாடு ஊருபாடு" என்று சொல்ல, வண்டியின் முன் பகுதியான 'சட்டத்தில்' உட்கார்ந்திருந்த வண்டியோட்டி, வண்டி மாடுகளை சாட்டைக் கம்பால் விளாசினார். வண்டிச்சக்கரம் காலில் படாமல் இருப்பதற்காக, மாயாண்டி துள்ளிக் குதிக்க வேண்டியதாயிருந்தது.
மாயாண்டி தலைவிரி கோலமாக, ஊர்க்கிணற்றுப் பக்கமாக, காளியம்மன் கோவிலுக்கு முன்னால் வந்து, "காளியாத்தா, இன்னும் பொறுத்துக்கிட்டுத்தான் இருக்கியா?" என்று ஊரே அதிரும்படி கதறிவிட்டு, ஒரு ஓரத்தில் மேடாக இருந்தத் திட்டில் உருளைக்கிழங்கு கருவாடு வகையறாக்களை விற்றுக் கொண்டிருந்த பகுதி நேர வியாபாரிகளிடம் விஷயத்தைச் சொல்லிக் கெஞ்சினார். அந்தப் பக்கமாகக் குடங்களை இடுப்பில் வைத்துக் குலுங்காமல் போய்க் கொண்டிருந்த பெண்களிடம் "ஒங்க வூட்டுக்காரங்கள வரச்சொல்லுங்கம்மா. ஐவராசாகிட்ட சொல்லச் சொல்லுங்கம்மா" என்று கெஞ்சினார். அந்தப் பெண்கள் பரிதாபப்பட்டார்களே தவிர, பதிலளிக்கவில்லை. வியாபாரிகள், தராசுத் தட்டுகளைக் கொஞ்சம் விட்டுப் பிடித்தார்களே தவிர, விடையளிக்கவில்லை.
கிழவர், அதைரியப்படாமல், 'வாலிபால்'காரர்களிடம் வந்தார். அவர்களிடமும் விஷயத்தைச் சொன்னார். அந்த 'மைனர்கள்' பந்தை பிடித்துக் கொண்டு சிறிது யோசித்து விட்டு, பிறகு, 'விவகாரம் பெரியவர்கள் சம்பந்தப்பட்டது' என்று நினைத்துக் கொண்டு, எது அவர்களிடம் இல்லையோ அதையே 'சர்வீஸ்' போடுபவர் சொல்லிக் கொண்டு பந்தை அடித்தார்.
"லவ் ஆன். ஒன் லவ். லவ் ஒன்."
கைப்பந்து அங்குமிங்குமாக உருண்டோடிக் கொண்டிருந்தது மாயாண்டியைப் போல. ஒரு கணம் திகைத்து, மறுகணம் ஊர்ப்பிரமுகர்கள், கூடித்தின்னும் காத்தமுத்துவின் டிக்கடைக்கு முன்னால் வந்து கத்தினார்:
"அய்யாமாருங்களே! தர்மப் பிரபுமாருங்களே! என்னோட வீட்டு வழிய ஐவராசா அடச்சிக்கிட்டு இருக்கான். நீங்க என்ன சொன்னாலும் கட்டுப்படறேன். ஒங்க காலுல வேணுமுன்னாலும் செருப்பா கிடக்கேன். தயவு செஞ்சி இப்பவே வாங்கய்யா. அவன அடைக்காண்டாமுன்னு சொல்லுங்கய்யா. நான் செஞ்சதுல்லாம் தப்புத்தாய்யா... நீங்க என்ன சொன்னாலும் கட்டுப்படுறேன்... தயவு செஞ்சி வாங்க! பழயதப் பாக்காம வாங்கய்யா! ஒங்களுக்குக் கோடிப் புண்ணியம் உண்டுய்யா! காளியாத்தா ஒங்க காலுகைய நல்லா வைப்பாயா! சொள்ளமாடன் சுகங்குடுப்பான்யா! வாங்கய்யா, வந்து கேளுங்கய்யா! தர்மப் பிரபுக்களே! ஒங்களத்தாய்யா."
கூட்டத்தில் ஒரு குலுக்கல் ஏற்பட்டது; ஒரு அப்பாவியால் பொறுக்க முடியவில்லை.
"வயசான மனுஷன் வாளுவாளுன்னு கத்துறான்; ஒழிஞ்சி போறான். பாலப்பாக்கதா, பால் காய்ச்சிற சட்டியப் பாக்கதா? பலவேச மச்சான், அய்வராசாவ போயிச் சத்தம் போடும்."
"நான் எப்டியா போவ முடியும்? பறப்பயலுக்கு அவன் மவா வாழப்பளத்தக் குடுத்து நம்மள எல்லாம் கேவலப்படுத்துனா! அது ஒனக்குப் பெரிசாத் தெரியலியா?"
"பொம்பிளையோட புத்தி பின்புத்திதான? போவட்டும். போயிச் சொல்லிட்டு வாரும். ஆசாரி, நீராவது போயிட்டு வாருமே!"
"என்னவே செத்தப் பேச்சிப் பேசுறீரு? மவள இவரால அடக்க முடியல! சேரிப்பக்கம் போவாம தடுக்க முடியல! பொண்ணஞ்சட்டி மாதிரி, பொண்ண ஒழுங்கா நடத்தத் தெரியாம, இப்பக் கையக்காலப் பிடிச்சா எப்டிவே? ஊருன்னா கிள்ளுகீரையா? இல்ல தெரியாமத்தான் கேக்கேன்."
"அப்போ நான் போவட்டுமா?"
"மானத்த உதித்திட்டு வேணுமுன்னா மகாராசனா போவும்! அப்புறம் வருத்தப்படாதேயும். அவ்வளவுதான் சொல்லுவேன்."
"என் மானங்கெட்டாலும் பரவாயில்ல, நான் போகத் தான் போறேன்!"
"நானும் வாரேம்பா."
"நானும் வாரேன்."
"நானும்."
"நா."
கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் மாரிமுத்து நாடார் எங்கிருந்தோ பிரசன்னமானார். அவரைப் பார்த்ததும், அவர் அங்கேயே வட்டி கேட்பார் என்று பயந்து சலசலப்பு அடங்கியது. மாரிமுத்து நிதானமாக, அழுத்தந்திருத்தமாக, நறுக்குத் தெறித்தாற் போல் பேசினார்.
"ஆக்கப் பொறுத்தது ஆறப் பொறுங்கப்பா. ரெண்டு நாளைக்கி விட்டுப் பிடிப்போம்! ஒலகம்மையும் இவர மாதிரி தெருத்தெருவா பிச்சக்காரி மாதிரி அலைஞ்சி கண்டவன் காலுலல்லாம் விழுந்து, கடைசில நம்ம கால்ல விழணும்! விழுந்திடுவா. அதுவரைக்கும் பொறு. இல்லன்னா ஊர்க்காரன பொட்டப்பயலுவன்னு சொன்னதும் பத்தாம, பறப்பயலுக்கு வாழப்பழத்தக் குடுத்து நம்ம மானத்த வாங்குனவா இன்னும் என்னவெல்லாமோ செய்வா! செறுக்கிமவா கையில காலுல விழுறது வரைக்கும் பல்லக் கடிச்சிக்கங்க! என் மனசுகூடத்தான் இளகுது! எளகிட்டா எப்டி? ஊருன்னா நாளக்கி ஒரு பயம் வராண்டாமா? என்ன நான் சொல்றது, செட்டியார?"
"சரியாச் சொன்னீக. அவள் நம்ம கால்ல விழுறது வரைக்கும் நாம இருதயத்தக் கல்லா வச்சிக்கிடணும் இல்லியா ஆசாரியார?"
"நான் நெனச்சத நீரு சொல்லிட்டீரு."
'நம்ம காலுல விழணும்' என்ற வார்த்தை, எல்லாருக்கும் இதமாக இருந்தது. அதோடு 'ரெண்டு நாளைக்குக் கிழவன் கஷ்டப்பட்டாதான் அந்தக் குமரிக்குப் புத்திவரும்' என்று எல்லோரும் நினைத்தார்கள்.
ஊர்க்காரர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், நல்ல முடிவு கிடைக்கும் என்று கையைப் பிசைந்து கொண்டிருந்த மாயாண்டி, இறுதியில் அவர்கள் கைகழுவி விட்டது போல், முகங்களைத் திருப்பிக் கொண்டதைப் பார்த்ததும், மீண்டும் புலம்பினார்:
"ஒங்களத்தான். தயவு செஞ்சி என்னோட குத்தத்த மறந்துடுங்கய்யா. இந்நேரம் ஐவராசா அடச்சி முடிச்சிருப்பான். ஒரு நட வந்து சொல்லிட்டு வந்துடுங்க. இந்தக் கெழவன் பேசுறது கேக்கலியாய்யா? ஒங்களத்தான் மவராசாமாரே."
பொறுமைக்குப் பெயர் போகவே போகாத பலவேச நாடாரால் பொறுக்க முடியவில்லை; அதட்டிப் பேசினார்:
"என்ன மாயாண்டி நாடாரே! ஒரேயடியாய் குழுவஞ்சி போடுறீரு. வயசுப் பொண்ண ஒம்மால அடக்க முடியல. பட்டப்பகல்ல பப்ளிக்கா பறப்பய மவனுக்குப் பழம் கொடுக்கா! அதத் தடுக்க ஒம்மால முடியல! கண்கெட்ட பிறவு சூரிய நமஸ்காரம் பண்ணுனா எப்டி?"
"பழயத மறந்துடும், பலவேசம், ஒன்கூடப் பொறக்காத அண்ணன் மாதிரி என்ன நினைச்சு ஒரு நட வா, ராசா! மாரிமுத்து! உன்னையுந்தாப்பா. சின்னப் பயமவா சின்னத்தனமா பேசுனத நீ பெரிய மனுஷன் பெருந்தன்மையா விட்டுடுப்பா! வாப்பா, வந்து ஐவராசாகிட்டச் சொல்லு ராசா. ஒன்ன இடுப்பில எடுத்தவன்டா நான். இப்போ இடுப்பு ஒடிய நிக்கதப் பாக்கதுக்கு ஒனக்கே நல்லா இருக்கா மாரிமுத்து? ஆசாரியார, ஒமக்கு எத்தன தடவை நொங்கு வெட்டி தந்திருக்கேன்! தின்னத மறந்துட்டீரா?"
மாரிமுத்து நாடார், கூட்டம் மீண்டும் சலசலப்பு அடையாமல் இருப்பதற்காக, வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகப் பேசாமல், 'ஈரத்துணியைச் சுத்திக் கழுத்தை அறுக்கப்' பேசினார்:
"ஒம்ம மேல எங்க யாருக்குமே வருத்தங் கிடையாது. ஆனால் ஊர்க்காரன பொட்டப்பயலுவன்னு சொல்லிட்டு, நாயி, ஆட்டக்கடிச்சி மாட்டக்கடிச்சி கடைசில மனுஷனையே கடிக்கிற மாதிரி, சாப்புடுறதுக்கு மட்டும் வாய் வச்சிக்கிட்டு பேசத் தெரியாமக் கிடந்த பறப்பயலுவ கூட சேந்துகிட்டு, குலங்கோத்திரம் தெரியாம அருணாசலம் பயலுக்கு வாழப்பழத்தக் குடுத்து நம்ம எல்லாத்தையும் அவமானப்படுத்திட்டா! நாங்க இருந்ததுலயும் கணக்கில்லாம செத்ததுலயும் கணக்கில்லாம தலயத் தொங்கப் போட்டுக் கிட்டு இருக்கோம்."
மாரிமுத்து பேசியதும், அதுவரை தலைகளைத் தொங்கப் போடாத தலையர்கள், இப்போது அவற்றைத் தொங்கப் போட்டுக் கொண்டார்கள். மாரிமுத்து நாடார், "அதனால" என்று பேசத் துவங்கிய போது, அவரை அதிகமாய் மதிக்காத பலவேசமும் "அதனால" என்று சொல்லிவிட்டு, அதற்கு மேலும் பேசினார்:
"அதனால இப்ப சொல்றதுதான் எப்பவும் சொல்றதும்! ஒம்ம மவா, அந்த அடங்காப்பிடாரி, ஊர்ல இருக்கிற ஒவ்வொரு ஆளுடைய கால்லுலயும் விழுந்து 'அய்யா சாமி'ன்னு கெஞ்சணும். நடையாய் நடந்து, காலு கரையணும். பாத்துப் பாத்துக் கண்ணு பூக்கணும்! நின்னு நின்னு நடவாசல் தேயணும். அப்புறந்தான் ஐவராசா மச்சாங்கிட்டச் சொல்லலாமா, வேண்டாமா என்கிறத ஊரு யோசிக்கும்! நீரு வீணாப்புலம்புறதுல புண்ணியமில்ல!"
மாயாண்டியும், "புண்ணியமில்லை" என்று சொல்லிக் கொண்டிருந்தார். அந்தப் புண்ணியவான்களையே அவர் பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது புலம்பவில்லை. தன்னைத்தானே அதட்டி, அடக்கிக் கொண்டார். இந்தச் சமயத்தில், பஞ்சாட்சர ஆசாரியார், "ஒரு பொம்புள முண்டைக்கு இவ்வளவு திமுரு ஆவாதுப்பா! நீரும் அதிகமாக இடங்குடுத்திட்டீரு! அவள வந்து இவங்க கையில காலுல விழச் சொல்லும்! வீணா நேரத்தப் போக்காதேயும்" என்றார்.
மாயாண்டி பிடரியைச் சிலிரித்துக் கொண்டார். உலகம்மை, அவர்கள் கையில காலுல விழுவதாக இருந்தால், அவரே அவள் கைகாலை வெட்டிவிடப் போகிறவர் போல உடம்பை ஒரு தடவை உதறிக்கொண்டு, அனாவசியமாகப் பேசினார்:
"என்ன சொன்ன ஆசாரி? உலகம்ம வந்து ஒங்க காலுல விழணுமா? அவா நடந்துபோற தூசில அறுந்துபோற தூசிக்கு நீங்க பெறுவியளாடா? என்னமோ எளியவன் சொன்னான்னு இளக்காரமா பண்ணுறீய?"
"நீங்க வந்தாலும் சரிதான். வராம நாசமாப் போனாலுஞ் சரிதான். ஆனால் ஒண்ணு... நான் 'நாடு நகர்' சுத்தாத பனையேறிதான். அறிவுகெட்ட முண்டந்தான். ஆனால் மாரிமுத்து மாதிரி கசாப்புக்கறியக் குடுத்து காணி நிலத்த வாங்கல. ஒம்ம மாதிரி தங்கத்துல பித்தளயச் சேக்கல! அய்யாவுவ மாதிரி அரவட்டி வாங்கி ஏழபாழ வயத்துல அடிக்கல! பலவேசத்த மாதிரி சித்தி மவளயே வச்சிக்கிட்டு இருக்கல! கடவுளே கதின்னு நான் உண்டு என் பனைவுண்டுன்னு இருந்தவன்! என் வயித்துல அநியாயமா நெருப்பக் கொட்டிட்டிய! நீங்க இப்ப செய்றதுக்கு எப்பவாவது வாதத்துல விழுந்தாவது, லாரில கைகாலு போயாவது துள்ளத்துடிக்கக் கிடக்கலன்னா நான் ஒரு அப்பனுக்குப் பிறக்கல. "வாயாடா பேசுறீய?" மாயாண்டி சிறிது மூச்சுவிட்டுக் கொண்டு மேலும் தொடர்ந்தார்:
"பொண் பாவம் பொல்லாததுடா. அது ஒங்களக் கேக்காம போவாதுடா! பாப்பமோடா, பன்னாடப் பயலுகளா."
மாயாண்டி தரையில் குனிந்து ஒரு பிடி மண்ணெடுத்து அதை உள்ளங்கையில் ஏந்தி ஊதிவிட்டார்.
"இந்த மாதிரி நீங்க மண்ணாப் போவாட்டா, என் பேரு மாயாண்டி இல்லடா."
கூட்டத்தினர், எதிர்பாராத இந்த வசவில் மாட்டி என்ன பதிலளிப்பது, யார் முதலில் பதிலளிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கையில், மாயாண்டி போட்ட மண் துகள்கள், எல்லார் தலையிலும் ஏறின.
மாயாண்டி, வீட்டைப் பார்த்து ஓடினார். இதுவரைக்கும் வீராப்பாய் இருந்துகிட்டு, இப்பப்போய் 'முடிச்சி மாறிப்' பயலுவ காலுல விழுந்துட்டமே, என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு, அதற்கு வெட்கப்பட்டவர் போல் ஓடினார். ஒரே நாளில் மொத்தமாக ஓடிவிட்டு உலகைவிட்டு ஓடப்போகிறவர் போல் ஓடினார். தோட்டச்சுவரில், அனாவசியமாக ஏறி, அலட்சியமாகக் குதித்தார். ஐவராசாவையே, வெறிபிடித்தவர் போல், சூன்யமாகப் பார்த்தார். அந்தச் சூனியத்தின் சூடு தாங்கமுடியாத வேலிக்காரர், "என்ன மாமா யாரும் வாராங்களா?" என்று கேட்டார். அவருக்கும், ஆள் தேவையாக இருந்தது.
மாயாண்டிக் குரலில் இப்போது கெஞ்சல் இல்லை. கேவல் இல்லை. பிசிறு இல்லை. பிலாக்கணம் இல்லை. அவர் குரல் கம்பீரமாக ஒலித்தது. ஆலய மணியைப் போல முழங்கியது:
"ஐவராசா, தோட்டத்த அடைக்கறதும் அடைக்காததும் உன்னோட இஷ்டம். நான் ஒண்ணும் ஒன்கிட்டப் பிச்சை கேக்கல! நீ அடச்சாலுஞ் சரிதான். அடைக்காட்டியும் சரிதான்! ஒனக்கு நீயே குழிவெட்டிக்கிட்டா நான் என்ன பண்ன முடியும்? அவனவன் கர்மவினய அவனவன் அனுபவிச்சுத்தான் ஆவணும்! நான் உள்ள போறேன்."
மாயாண்டி வீட்டுக்குள் போனார். பிறகு ஒரு நிமிடத்தில் திரும்ப ஐவராசாவின் அருகில் வந்தார்.
"ஐவராசா! ஒரே ஒரு உதவி. அதுவும் முடிஞ்சா. இஷ்டமிருந்தா செய்யி! என் மவள் இன்னுங் கொஞ்ச நேரத்துல வந்துடுவா. அவள உள்ள அனுப்பிட்டு அப்புறமா நல்லா அடச்சிக்க! அதுவரைக்கும் உன்னால பொறுக்க முடியாதுன்னா, அடச்சிடு! வெளில நிக்கப்போற என் மவாகிட்ட மட்டும், 'அவசரப்பட்டு ஒண்ணும் பண்ணாண்டாமாம். காளியாத்தா வாசல்ல போயிப் பழியாய்க் கிடக்கணுமாமுன்னு' நான் சொன்னேன்னு மட்டும் சொல்லிடு! வாரேன். ஐவராசா, ஐவராசான்னா அர்த்தம் தெரியுமாடா? தர்மத்துக்குக் கட்டுப்பட்டு வனவாசம் போன பஞ்சபாண்டவங்கன்னு அர்த்தம்! தர்மத்துக்குக் கட்டுப்பட்ட கெழவன் வீட்ட வனமா ஆக்கினவன்னு அர்த்தமில்ல. மாமாவால நிக்க முடியல. வேல செய்யுற ஒனக்குப் பேச்சுத்துணை கொடுக்க முடியல! வரட்டுமா?"
"நான் போறேன் ஐவராசா. உலகம்மகிட்ட மறக்காமச் சொல்லிடு. சரிசரி உன் வேலயப் பாரு."
மாயாண்டி கம்பீரமாக, சிங்கத்தைப் போல் பார்த்துக் கொண்டு அடிமேல் அடிவைத்து, நூலிழை பிறழாத இடைவெளியுடன், நிர்மலத்துடனும், நிர்க்குணத்துடனும், முன்னாலும் பார்க்காமல், பின்னாலும் பார்க்காமல், கைகளிரண்டையும் முதுகுக்குப் பின்னால் கட்டிக்கொண்டு, தன் பாதங்களின் பெருவிரல்களை மட்டுமே பார்த்துக் கொண்டு, வீட்டுக்குள் சென்றார்.
அவரையே பார்த்துக் கொண்டிருந்த ஐவராசாவிற்கு, மனம் கேட்டதோ இல்லையோ, அதில் பயம் கேட்டது. உண்மையிலேயே அவர் நடுங்கிவிட்டார். தோட்டச் சுவரில் ஒரு பாதி அடைக்கப்பட்டிருந்தது. சன்னமான கம்பி வலையால் பின்னப்பட்டு, இடையிடையே பெரிய முட்கம்பிகளால் சேர்த்துக் கட்டப்பட்டிருந்த கம்பிவலை மடிப்புக் கலைந்து காற்றில் ஆடியது. கம்பி வலையோடு சேர்த்து, பனையோலைகள் திணிக்கப்படாமல், சுவரிலேயே கிடந்தன. நாலைந்து மூங்கில் கழிகள் வேறு.
ஐவராசா பயந்து விட்டார். போட்டதைப் போட்டபடி விட்டுவிட்டு, அரிவாளையும், மண்வெட்டியையும் மட்டும் எடுத்துக் கொண்டு போய்விட்டார்.
அந்தக் கம்பிவலை, காற்றில் லேசாக ஆடி, பிறகு பிரிந்து, பாடை மாதிரி விரிந்தது.
வயக்காட்டில், நீலப்பச்சை நிறத்தில் நின்ற நெற்பயிர்கள், இப்போது பஞ்சலோக நிறத்தில், லேசாகப் பழுத்தும், சிவந்தும் போயிருந்த கதிர் வயிற்றில், நெல் கருக்களைச் சுமந்து கொண்டு, பிரசவ வேதனையில் துடிப்பவை போல் ஆடின. 'கர்ப்பிணிப் பெண்களுக்குக் கண்டதைத் தின்ன ஆசை' என்பது போல், ஆணென்று இல்லாமல் அத்தனையும் பெண்ணென்ற விதத்தில், சூல் கொண்ட நெற்பயிர்களுக்கும், இதரப் பெண்களைப் போல, உலகம்மையும், இடது கையில் வைத்திருந்த ஓலைபெட்டியிலிருந்து, உரத்தை எடுத்துத் தூவிக் கொண்டிருந்தாள்.
அவளை ஜாடையாகப் பார்த்துக் கொண்டே ஒருத்தி "நம்ம லோகு அடுத்த மாசம் வரானாம். மெட்ராஸ்ல கல்யாணமாம்! பெரிய பணக்காரங்களாம். கார் இருக்காம். வீடு இருக்காம். பொண்ணும் படிச்சிருக்காம். முப்பதாயிரம் ரூபாய் ரொக்கமாக் கொடுக்கவளாம். சங்கர மாமாவுக்கு அடிக்கிது யோகம்" என்றாள்.
மற்றப் பெண்களும், உலகம்மையை ஜாடையாகப் பார்த்தார்கள். குட்டாம்பட்டி சங்கதிகள் இப்போது அவர்களுக்கு அத்துபடி. 'தோட்டத்துல மோகினி மாதிரி' என்று முன்பு சொன்னவர்கள், உலகம்மையுடன் பழகிய பிறகு, அவள் அப்படிப்பட்டவள் இல்லை என்பதை உணர்ந்ததுடன், அவள் அப்படிச் செய்ததிலும் ஒரு தர்ம நியாயம் இருப்பதை உணர்ந்து, அவளுக்கு ஒரு வகையில் தனிப்பட்ட மரியாதையையும் கொடுத்தார்கள். உலகம்மை பேசுவாளா என்று அவள் வாயையே பார்த்தார்கள்.
உலகம்மை பேசவில்லை.
உடம்பில் ஏதோ ஒரு இடத்தில் வலிப்பது மாதிரி தெரிந்தது. சின்ன வலியா, பெரிய வலியா என்று தெரியவில்லை! அவள் அந்த நெற்பயிர்களையே வெறித்துப் பார்த்தாள். முன்பு தொட்டால் துவண்டு விடுவது போல் இருந்த அதே பயிர்கள், இப்போது உறுதியோடு நிற்கின்றன. முன்பு குனிந்துகொண்டு பயிர்களுக்குக் களையெடுத்தவள், இப்போது நிமிர்ந்து நின்று உரம் போடுகிறாள். உரம் போடும் அவள் மனதும், 'உரமாகியிருந்தது.' இலையும், செடியும், மண்ணும், மரமும், பூமிக்குள் ஒன்றோடொன்று மோதி அவை அற்றுப் போயும், இற்றுப் போயும், உரமாகி விடுவதுபோல், அவள் உள்ளத்து உணர்வுகள் 'இனியொரு எண்ணம் விழ இடமில்லை' என்பதைப் போல் உள்ளத்தை நெருக்கமாக அடைத்திருந்த எண்ணங்கள், ஒன்றோடொன்று மோதி, உருக்குலைந்து, அற்றும் இற்றும், இறுதியில் அவள் உள்ளத்திற்கு உரமாகிவிட்டன. ஏமாற்றங்கள் ஏற்பட்டு ஏற்பட்டு, இப்போது ஏமாற்றம் இல்லாமல் வாழவே முடியாது என்கிற மாதிரி எதிர்மறையில் பழகிப்போன அவள், வேலையில் மும்முரமாக இருந்தாள். லோகுவை மனதில் இருந்து உதறுபவள் போல், உரத்தைக் கையிலிருந்து உதறிக் கொண்டே தூவினாள்.
வேலை முடிந்ததும், வீட்டுக்குப் புறப்பட்டாள். சக பெண்கள் மத்தியில் தெரியாமல் இருந்த ஒருவித சோகம், லேசாக எட்டிப் பார்த்தது.
'லோகுவுக்குக் கல்யாணமாமே! நல்லா நடக்கட்டும். ஒரே ஒரு தடவை அவரப் பாத்துட்டா போதும்! நிச்சயம் அவரப் பாக்கலாம். கல்யாண நோட்டீஸ் வீட்டுக்குக் கொண்டு வரத்தான் செய்வாரு! அப்போ பாக்கலாம்!'
கற்பனா எண்ணத்தை விரட்ட முடியாத உலகம்மை, நடையை எட்டிப்போட்டாள். திடீரென்று அய்யா ஞாபகம் வந்தது. தோட்டக்காரனின் இறுதி எச்சரிக்கை வந்தது. பட்டச்சாராய விவகாரம் தோன்றியது. 'பட்டகால்லயே படும்' என்கிற எண்ணமும் வந்தது.
அவள் உள்ளத்திற்கே ஒரு தர்மசங்கடம். எந்த எண்ணத்திற்கு முதலிடம் கொடுப்பது? பட்டைக்கா? லோகுவுக்கா? வேலிக்கா? வம்பு பேசும் காலிகளுக்கா?
எந்த எண்ணத்திற்கும் முதலிடம் கொடுக்க முடியாமல் தவித்த அவள் உள்ளம், இறுதியில், 'எதுக்குமே இடங் கொடுக்காண்டாம்' என்று நினைத்து மரத்துப் போனது.
ஊர் முனைக்குச் சற்றுத் தள்ளி, மலேயாவில் பிரமுகராகவும், பிறந்த பூமியில் மாடு மேய்ப்பவராகவும் இருக்கும் 'மலேயாக்காரர்', மாடுகள் இல்லாமல் தன்னந்தனியாகப் பூவரசு மரம் ஒன்றில் சாய்ந்து கொண்டு நின்றார். உலகம்மையைப் பார்த்ததும், அவளிடம் ஓடிவந்தார். அவர் மூலமாகத்தான் மாரிமுத்து நாடாருக்குக் கொடுக்க வேண்டிய கடனை, உலகம்மை கொஞ்சங் கொஞ்சமாகக் கொடுத்து வந்தாள். கடன் அடைபட்டு விட்டது. மலேயாக்காரர் மூச்சை இழுத்துக் கொண்டே பேசினார்.
"ஒனக்காவத்தான் காத்திருக்கேன். ஒன் வீட்டு வாசல, அதுதான் தோட்டச்சுவர ஐவராசா அடைக்கப் போயிருக்கான்! உடனே ஒங்க அய்யா ஊர்க்காரனுக கால்ல கையில விழாக்குறையா அழுது புலம்பினாரு! மாரிமுத்தயும் பலவேசத்தயும் பார்த்து கூடக் கெஞ்சுனாரு. ஆனால் ஊருக்காரன்ல ஒருத்தன் கூட ஆம்புளயா நடந்துக்கல! ஒரு பய கூட ஏன்னு கேக்கல! நீ அவங்க கால்ல விழணுமாம்! இதக் கேட்டதும் ஒய்யா வூட்டுக்குப் போயிட்டாரு! அவரு ஊர்க்காரங்களைப் பாத்துக் கெஞ்சினத நினைச்சு இவ்வளவு நேரமும் அழுதேன். நான் கூட இங்க இருக்கப் போறதுல்ல! ரெட்டியார் பட்டியில மாடு மேய்க்கப் போவப் போறேன்! அங்கயாவது மனுஷங்க இருக்காங்களான்னு பாக்கப் போறேன்! ஒய்யாவ நினைச்சா, அவரு கெஞ்சினதப் பாத்தா இன்னும் என் மனசு அடிச்சிக்கிறது! 'என் மவா நடந்து போற தூசில அறுந்து போற தூசிக்குப் பெறுவியளாடா'ன்னு சொல்லிக்கிட்டே போனாரு."
உலகம்மை, மலேயாக்காரர் சொன்னதை நம்ம முடியாதவள் போல, அங்கேயே ஸ்தம்பித்து நின்றாள். வேலி போடும் முயற்சியை விட, அய்யா, ஊர்க்காரர்களிடம் சரணாகதி அடைந்ததை அவளால் பொறுக்க முடியவில்லை. அய்யாவுக்காகச் சிறிது வருத்தப்பட்டவள் போல் நின்றாள். பிறகு அவர் மீது சொல்லமுடியாத, தாங்க முடியாத கோபம் ஏற்பட்டது. எழுபது வ்யது வரைக்கும் வளையாத முதுகு வளைந்து விட்டதை நினைத்து கோபாவேசம் கொண்டாள். வளைந்ததா அல்லது வளைக்கப்பட்டதா என்ற ஆராய்ச்சியில் இறங்காமல், ஊர்க்காரன் காலுல விழுந்த அய்யா மீது, அடங்காத சினத்தோடு, அவரை அடிக்கப் போகிறவள் போல் ஆத்திரத்தோடு நடந்தாள்.
வீட்டை நெருங்கியதும், தோட்டச்சுவரில் பாதி அடைபடாமல் இருப்பதைப் பார்த்ததும் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. வீட்டுக்குள் போனவள், அய்யாவைப் பார்க்காதது மாதிரி பார்த்தாள். அவர் கட்டில் மேல் கிடந்தார். அவரை, எப்படி எல்லாமோ திட்ட வேண்டும் என்று ஒத்திகை பார்த்துக் கொண்டவளுக்கு, இப்போது திட்டத் தோன்றவில்லை. ஆனால் கோபமும் அடங்கவில்லை. முகத்தைத் 'தூக்கி' வைத்துக் கொண்டு, சிம்னி விளக்கை ஏற்றினாள். அடுப்பை மூட்டி, ஒரு ஈயப் போணியை வைத்தாள். கொஞ்சம் கருப்பட்டியையும் எடுத்துப் போட்டாள். அய்யாவின் 'மொகத்தை'ப் பார்க்கவே அவளுக்கு இஷ்டமில்லை; அவர் பேசட்டும் என்று நினைத்தாள்.
அவர் பேசவில்லை.
மனங்கேளாத உலகம்மை, அடுப்பைப் பார்த்துக் கொண்டே, அய்யாவிடம் கேட்டாள்:
"எதுக்காவ ஊர்க்காரனுக காலு கையப் பிடிக்கணும்? அடச்சா அடச்சிட்டுப் போறான்! செத்தாப் போயிடுவோம்? அப்படியே செத்தாத்தான் என்ன? ஊர்க்காரன் கால்ல விழுவுறதவிட நாம சாவுறது எவ்ளவோ மேலு."
மாயாண்டி பதில் பேசாமல் இருப்பதை பார்த்து, அவரால் துக்கத்தில் பேச முடியவில்லை என்று நினைத்து, அய்யாவைப் பார்த்தாள். அவர் ஆடாமல் கிடந்தார். "அய்யா அய்யா" என்று கூப்பிட்டாள். பிறகு அவரை நெருங்கி, நெற்றியில் கையை வைத்துக் கொண்டு, "ஒம்மத்தாய்யா" என்றாள். பிறகு திடுக்கிட்டு நிமிர்ந்தாள். தொட்டுப் பார்த்தாள்; அவர் உடம்பு, அவள் உள்ளம் போல், 'ஜில்'லென்று இருந்தது.
எழுபது வயது மாயாண்டி, ஏறாத பனையெல்லாம் ஏறிய முதியவர், 'பயினியில்' கிடக்கும் ஈ எறும்புகளை எடுத்துப் போட்டுவிட்டு, வருவோர் போவோர்க்குப் பட்டை செய்து பயினி கொடுத்த அந்தப் பனையேறி, திறந்த வாயில் ஈ எறும்புகள் மொய்க்க, கைகளிரண்டும் வயிற்றில் இருக்க, உடம்பெல்லாம் விறைத்திருக்க, உதடுகள் லேசாகப் பிளந்து புன்னகை செய்து கொண்டிருக்க, ஒரு யோகி மாதிரி அடிவயிற்று நெருப்பை அடக்கி வைப்பது போல், வயிற்றின் மேல் கைகள் ஒன்றோடொன்று கோத்து நிற்க, செத்துக் கிடந்தார். மிரண்டு நிற்கும் கண்கள், மிரட்டுவது போல் காட்சியளிக்க, அவர், அந்த நார்க்கட்டிலில் மல்லாந்து கிடந்தார்.
உலகம்மை, அய்யாவையே பார்த்துக் கொண்டு நின்றாள். சிறிது நேரப் பிரமைக்குப் பிறகு, "நான் திட்டுவேன்னு பயந்து போயி செத்துட்டீரா அய்யா, ஒம்ம மவள பாருமய்யா! பாக்க மாட்டீரா! அய்யா என்னப் பெத்த அய்யா! கோழி மிதிச்சி குஞ்சு சாவாதுன்னா குஞ்சி மிதிச்சிக் கோழி சாவுமாய்யா? என் அய்யா, என்னப் பெத்த அய்யா?" என்று ஆவேசத்துடன் சொல்லிவிட்டு, அவர் காலில் தலையை வைத்துத் தேய்த்தாள். நார்க்கட்டிலில் தலையை மோதினாள். அய்யாவின் மார்பில் புரண்டாள். நெற்றியை அழுத்தினாள். உலகமே இறந்துவிட்டது போலவும், அவள் மட்டும் தன்னந்தனியாக இருப்பது போலவும் தோன்றியது. பயிர்ப் பச்சைகள் எல்லாம் பட்டுப்போய், வீடுகள் எல்லாம் இடிந்து, மலை மலையோடு மோதி, கடல் கடலோடு மோதி பூமியெல்லாம் பொடிப்பொடியாய் ஆனதுபோல் தோன்றியது. பூமி பிளந்து, வானம் வெடித்து, அதில் விழுந்தது போல் ஒரு பிரமை ஏற்பட்டது.
ஆறு வயதுக் குழந்தையாகவும், அறுபது வயதுப் பாட்டியாகவும், தன்னைத்தானே மாற்றிக் கொண்டு, அவள் அய்யாவைப் பார்த்தாள். "நான் இவ்வளவு 'தங்காரப் புள்ளியா' இன்னும் சாவாம இருக்கனே" என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள்.
அந்த வீட்டோடு அவளும், அவள் அய்யாவும், கண்ணுக்கெட்டாத உயரத்தில், மனதுக்கு எட்டாத வேகத்தில், மனிதர்க்கெட்டாத தூரத்தில் பறப்பது போல நினைத்தாள். அந்த அறைக்குள், அவள் அம்மாவும் வந்து அவளை இடுப்பில் வைத்துக் கொண்டு, அய்யாவின் தோளில் தலையைச் சாய்த்துக் கொள்ள அந்த மூவரும் பூமியை, பந்தை உதைப்பது மாதிரி உதைத்துத் தள்ளிவிட்டு, உயரே போய்க் கொண்டிருப்பது போல், தோன்றியது.
மனிதர்கள் தள்ளி வைக்க முடியாத பெருவெளிக்குள் - கனபரிமாணம் காண முடியாத பரவெளிக்குள் - வேலிபோட முடியாத வெற்றிடத்திற்குள் - வெற்றிடத்தையும் நிரப்பும் பரம்பொருளுக்குள், அவர்கள் போய்க் கொண்டிருப்பதாக நினைத்தாள்.
பிறகு புத்தி பேதலித்து விட்டதோ என்று, சுற்றுப் புறத்தையும் பார்த்துக் கொண்டாள். 'அய்யா செத்துத்தான் போயிட்டாரா' என்று தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் விதத்தில், அந்தப் பிணத்தை ஆட்டிப் பார்த்தாள். இப்போதும், அது அவள் இழுத்த இழுப்பிற்கு வந்து கொண்டிருந்தது.
'அய்யா, எப்டி எப்டியெல்லாம் கெஞ்சியிருப்பாரோ?' என்று நினைத்துப் பார்த்தாள். அப்படி அவர் கெஞ்சியது தனக்காகத்தான் என்று அனுமானித்துக் கொண்டாள். அப்படி நினைத்த போது, அடக்க முடியாத ஆவேசம் ஏற்பட்டது. அந்த ஆவேச சக்தி, சிறிது நேரத்திற்குப் பிறகு, வெடிக்க விரும்பாத அணுசக்தியாக ஐக்கியமாகியது.
உலகம்மை தலையைச் சுருட்டிக் கட்டிக்கொண்டாள். ஊரில் சொல்லலாமா? வேண்டாம்; ஏற்கனவே அவர்களுக்கு நடைபிணமாகத் தெரிந்த அய்யா, இப்போ வெறும் பிணம். 'ஐவராசாவுடைய குரல்வளைய நெரிக்கலாமா? வேண்டாம். இவன், அவ்வளவு சீக்கிரமாய்ச் சாவக்கூடாது. கை அழுவி, கால் அழுவி, உடம்பு முழுதும் கொஞ்சங் கொஞ்சமாக அழுவிச் சாவணும்! சேரி ஜனங்களிடம் சொல்லலாமா? இன்னைக்கு வேண்டாம்... சொன்னா இப்பவே அய்யாவைத் தூக்கிடுவாங்க.'
அய்யாவை இப்பவே அனுப்ப அவளுக்கு இஷ்டமில்லை. இரவு முழுவதும் அவரை வைத்திருந்து பார்க்க வேண்டும். இருபது வயது வரை, தாய்க்கோழி போல இறக்கைக்குள் வைத்துக் காத்த அந்த அய்யாவை - அந்த அம்மாவை - அந்தச் சினேகிதனை - அந்தத் தெய்வத்தை - இன்று ஒரு இரவு முழுவதுமாவது பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அவள் மட்டுந்தான் அவருக்கு மகள். இந்த இரவு வேளையில், அவள் மட்டுமே அவரோடு இருக்க வேண்டும்.
உலகம்மை, அய்யாவையே பார்த்துக் கொண்டு நின்றாள். பின்பு காலில் தலையை வைத்துச் சாய்த்தாள். சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்தக் கட்டிலில் அவளும் படுத்துக் கொண்டு, அய்யாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கண் மூடினாள். அவர் நெஞ்சைக் கண்ணீரால் குளிப்பாட்டினாள். பிறகு திடீரென்று எழுந்து கட்டிலின் முனையில் உட்கார்ந்து கொண்டு, அவர் தலையைத் தன் மடியில் வைத்தாள். பிறகு மீண்டும் எழுந்து, அவரை விட முடியாதவள் போல், அவர் கைகளோடு தன் கைகளை இணைத்துக் கொண்டாள்.
அய்யாவை விட்டுத்தான் ஆக வேண்டும் என்பது போல், சிறிது விலகி நின்று பார்த்தாள். பிறகு அடியற்ற மரம்போல் அவர் மேல் விழுந்தாள். விழுந்தவள் எழுந்து, அய்யாவின் கன்னங்களுக்கு முத்தங் கொடுத்தாள். பிறகு மூலையில் போய் சாய்ந்தாள். அரை மணி நேரத்திற்குப் பிறகு, அய்யாவை வந்து கட்டிப் பிடித்தாள். அவர் காலை எடுத்துத் தன் தலையில் வைத்துக் கொண்டாள்.
அதற்குள் இரவு முடிந்தது. பொழுது புலர்ந்து விட்டது.
புள்ளினங்கள் ஆர்த்தெழுந்து, மாடு கனைத்து, மனித நடமாட்டம் துவங்கிய வேளையிலே, மீதமின்றி எடுக்காமல், மீதியென்று வைக்காமல், சரியாக வராமல், சமத்துவத்தையும் மறக்காமல், தன்னை நினைப்போர்க்கும் தன்னை நினைவூட்டி கனியாய் இருப்பதைப் புவி ஈர்ப்பால் இழுத்தும், காயாய் இருப்பதைக் காற்றால் முடித்தும் தனக்கென்றும் சாவில்லாத மரணதேவனின் மடியில் துயில் கொண்ட மாயாண்டியின் வாய் இன்னும் சிரித்துக் கொண்டே இருந்தது.
இப்போது அய்யாவைப் பயபக்தியோடு பார்த்துக் கும்பிட்டுக் கொண்டாள் உலகம்மை. பானையில் இருந்த நீரை எடுத்து வீட்டுக்குள்ளேயே முகத்தை அலம்பிவிட்டு, முந்தானைச் சேலையை முக்காடாகப் போட்டுக் கொண்டு ஊருக்குள் நுழைந்தாள். கிராம முன்சீப்பைப் பார்த்துவிட்டு, சேரியில் போய் சேதி சொல்லிவிட்டு, வருவதற்காகப் புறப்பட்டாள். நேராக முன்சீப் வீட்டு வாசலில் வந்து நின்றாள்.
வாசல் பக்கத்துத் திண்ணையில் உட்கார்ந்து ஏதோ ஒரு நோட்டுப் புத்தகத்தையோ அல்லது நமூனாவையோ கண்களால் குடைந்து கொண்டிருந்த கிராமத் தலையாரி, அவளைப் பார்த்ததும், குறுகை நிமிர்த்தியதோடு, "இங்க எதுக்கு வந்த?" என்று எரிந்து விழுந்தார். உலகம்மை, சாவகாசமாக, ஆவேசத்தை அடக்கிவைத்த நிதானத்துடன் கேட்டாள்:
"யோவ் தலயாரி! முன்சீப்ப வரச் சொல்லுய்யா!"
தலையாரி எழுந்தே விட்டார். ரெவின்யூ இன்ஸ்பெக்டரையும், சில சமயம் முன்சீப்பையும் 'எசமான்' என்று அழைக்கும் ஜனங்கள், தன்னை அப்படி அழைகக்வில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருப்பவர் அவர். இருந்தாலும் இவளைப் போல் யாரும் அவரை, இதுவரை 'தலையாரி' என்று அழைத்ததில்லை - அதுவும் 'யோவ்' என்ற அடைமொழியுடன். அவருக்குக் கோபம் வார்த்தைகளாக வடிவெடுத்தது.
"நீ ஒன்னப்பத்தி என்னதான் நினைச்சிக்கிட்ட? நான் யார்னு தெரியுமா?"
"தெரிஞ்சிதாய்யா கேக்குறேன். நீரு கிராம ஜனங்களுக்கு ஒத்தாசை பண்றதுக்கு மட்டுமே இருக்கிற தலையாரி. முன்சீப் வீட்டுப் பால்மாட்டை கறக்கிறதுக்கு இருக்கிற பால்காரன் இல்ல!"
முன்சீப் வீட்டு கறவை மாடுகளின் மடுக்களைத் தடவி விட்டுப் பழகிப் போன தலையாரி, அதிர்ந்து போனார். அருகே கிடந்த டவாலியை எடுத்துப் பூணூல் மாதிரி போட்டுக் கொண்டார்.
"உலகம்மா நீ பேசுறது உனக்கே நல்லதா முடியாது!"
"இப்பமட்டும் நல்லதா முடிஞ்சிட்டாக்கும்? மரியாதியா போயி முன்சீப்ப நான் சொன்னேன்னு கூட்டிக்கிட்டு வாரும். சீக்கிரமா போம். நீர் போறீரா இல்லியா? சரிசரி, வழிவிடும், நானே போறேன்."
உலகம்மைக்குப் பைத்தியம் பிடிக்கப் போகிறது என்றும் அதற்குத் தான் பொறுப்பாகக் கூடாது என்றும் நினைத்து, தலையாரி உள்ளே போய், முன்சீப்பிடம், "நாயே பேயே" என்று வாங்கிக் கட்டிக் கொண்டார். வாங்கியதை உலகம்மையிடம் திருப்பிக் கொடுக்க ஓடோடி வந்தார்.
"இப்ப அவரால் பார்க்க முடியாது! வந்த வழியப் பாத்து மரியாதியா போ. இல்லன்னா கழுத்தப் பிடிச்சித் தள்ளுவேன். இன்னும் ஒன் அடங்காப்பிடாரித்தனம் போவல பாரு!"
"யோவ்! தள்ளிப் பாருய்யா பாக்கலாம்! ஒன்னத்தான் தலையாரி!"
"என்னழா ஒன்னோட பெரிய இழவாப் போச்சி."
உலகம்மை தலையாரியை ஒரு பொருட்டாக கருதவில்லை. வாசல்படியில் நின்றுகொண்டு, "கிராம முன்சீபு, சீக்கிரமா வாரும்! ஒம்மத்தாய்யா! உடனே வாரும்! வாரியரா? நான் வரட்டுமா? காது கேக்குதா, கேக்கலியா? யோவ் முன்சீப்" என்று ஊருக்குக் கேட்கும்படி கத்தினாள். இதைக் கேட்டு அக்கம்பக்கத்து ஆசாமிகள் கொஞ்சம் தொலைவில் வந்து நின்று கொண்டார்கள்.
முன்சீப், முப்பத்திரெண்டு பற்களைக் கடித்துக் கொண்டும், வேட்டியை உடுத்துக் கொண்டும் வெளியே வந்தார். அவர் பெண்டு பிள்ளைகள் கூட, என்னமோ ஏதோ என்று நினைத்து, வாசலுக்கு உள்ளே நின்று கொண்டு, தலைகளை மட்டும் வெளியே நீட்டினார்கள். 'யோவ் முன்சீப்பா? செறுக்கி மவா பேசுறதப்பாரு.'
கிராம முன்சீப்புக்குச் சொல்லமுடியாத கோபம்.
"ஒனக்கு பைத்தியம் பிடிச்சுட்டா? கிராம முன்சீப்புன்னா ஒன் வீட்டுக் கிள்ளுக்கீரையா?"
உலகம்மை சளைக்காமல் பதில் சொன்னாள்:
"அப்டி நினைச்சா நான் வரவே மாட்டனே!"
"எதுக்காவ வந்த? சட்டுப்புட்டுன்னு விஷயத்தச் சொல்லு."
"எங்க அய்யா செத்துப் போயிட்டாரு. சொல்லிவிட்டுப் போவ வந்தேன்."
கூடிநின்றவர்களும், முன்சீப்பும் திடுக்கிட்டார்கள். 'பாழாப்போற இந்த முண்டையால அந்த மனுஷன் கட்டயப் போட்டுட்டான். பிள்ள குலமழிச்சா பெத்தவன் என்ன செய்வான்? எல்லாம் இவளால, இவளால!'
முன்சீப் கடுமையாகக் கேட்டார். 'எப்படிச் செத்தார்?' என்று சகஜ பாவத்துடன் வந்த வார்த்தைகளை விழுங்கிவிட்டு, அதட்டிக் கொண்டு கேட்டார்:
"உன்னோட அப்பன் செத்தா என்கிட்ட எதுக்கு வந்த? ஊரே தள்ளி வச்சிருக்கயில என்கிட்ட எதுக்காவ வந்த? நான் என்ன வெட்டியானா?"
உலகம்மை, அவரைப் புழுவைப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டு பேசினாள்:
"ஒம்ம வெறும் குட்டாம்பட்டிக்காரரா நெனச்சி வரலய்யா. நீரு இந்த ஊருக்கு முன்சீப்பு! சர்க்கார்ல சம்பளம் வாங்குற வேலக்காரன்! நாங்க ஏவுற வேலயச் செய்யுறதுக்கு இருக்கிற உத்தியோகஸ்தன்! கிராமத்துல நடக்கிற நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாயி மாதிரி இருக்க வேண்டிய சர்க்கார் ஆளு. அதுக்காவத்தான் இங்க வந்தேன்! எங்கய்யா செத்துப் போயிட்டாரு! நாளக்கி மாரிமுத்தோ, பலவேசமோ நான் தான் எங்கய்யாவ அடிச்சிக் கொன்னுட்டேன்னு போலீஸ்ல கூடச் சொல்லலாம்! அதனால் நீரு வந்து பாத்து சந்தேகத்தப் போக்கணும்! அதுக்காவத்தான் வந்தேன்."
முன்சீப்பின் மீசை, அறுந்து விழுந்து போவது போல் துடித்தது. உலகம்மை சொல்வது உண்மையாக இருந்ததால், அவரால் கோபப்படாமலும், கோபமாகப் பேசாமலும் இருக்க முடியவில்லை.
"என்னமோ சொன்னான் கதையில, 'எலி ரவிக்க கேட்குதாம் சபையில' என்கிற மாதிரி, அப்பனப் பறிகொடுத்தாலும், ஒன் திமிரு அடங்கல! நான் வரமுடியாது! ஒன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்க. ஊரு ஒன்னத் தள்ளி வச்சது மாதிரி என்னயும் தள்ளி வைக்கணுமா என்ன? போ போ."
முன்சீப் வீட்டுக்குள் போகப் போனார். உலகம்மை, விடுவிடென்று விட்டாள்:
"போணுமுன்னா போம்! அதுக்குள்ள, நான் சொல்றத கேட்டுட்டுப் போம். நீரு சர்க்கார் உத்தியோகஸ்தர். மாரிமுத்துவோட பெரிய்யா மவனுல்ல! நான் ஊர்ல தள்ளி வச்ச உலக்கம்மையல்ல! வரி கட்டுற பொம்பள! ஒமக்குத் தள்ளி வச்ச விவகாரத்துல சம்பந்தப்பட்ட அதிகாரம் கிடையாது. இன்னுஞ் சொன்னா, அதத் தீர்த்து வச்சிருக்கணும்! போவட்டும். தள்ளி வச்ச ஊருகூட நீரு சேருறதா இருந்தா, போம்! ஆனால் உத்தியோகத்துல இருந்து ஒம்மத் தள்ளி வைக்கத பாராம ஓயமாட்டேன்! இது சத்தியமான வார்த்த! நேரா அருணாசலத்தோட கலெக்டர்கிட்ட போவப் போறேன்! அப்புறம் வருத்தப்படக் கூடாது! என்ன சொல்றீரு? ஒம்மோட கடமயத்தான் நான் செய்யச் சொல்றேன்! என்ன சொல்றீர்? முன்சீப் அய்யா, வாரீரா? போவலாம்!"
முன்சீப்பால் எதுவும் சொல்ல முடியவில்லை. வாசலில் மிதித்த காலை உள்ளேயும் கொண்டு போக முடியவில்லை; வெளியேயும் இழுக்க முடியவில்லை. 'அருணாசலம் பயலோட இந்த மூளி சேந்துக்கிட்டு ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணிட்டா, உத்தியோகம் போயிட்டா, நாயி கூட திரும்பிப் பாக்காது. என்ன பண்ணலாம்?'
உலகம்மை சிறிது நேரம் அவரையே பார்த்துக் கொண்டு நின்றாள். பிறகு "சரி ஒம்மிஷ்டம். இன்னும் கால் மணி நேரம் வர பாப்பேன்! அதுக்குள்ள வரலன்னா வருத்தப்படக் கூடாது" என்று சொல்லிக் கொண்டே, நிதானமாகத் திரும்பி வேகமாக நடந்தாள். உணர்ச்சி வேகத்தில் சேரிப்பக்கம் போகவில்லை. அதோடு முன்சீப் வரும்போது, அருணாசலம் வந்தால் கைகலப்பே ஏற்படலாம் என்று அவள் நினைத்ததும் ஒரு காரணம். வீட்டிற்கு வந்து, அய்யாவின் வேட்டியைச் சரிப்படுத்தினாள். வெளியே போய், இரண்டு மூன்று தங்கரளிப் பூக்களைப் பறித்துக் கொண்டு வந்து, அய்யாவின் நெஞ்சில் வைத்து விட்டு, பின்னர் தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு, முட்டுக்கால் போட்டு அதற்குள் தலையை வைத்துக் கொண்டு, முடங்கிப் போய் உட்கார்ந்திருந்தாள்.
'என்ன பண்ணலாம்' என்று யோசித்துக் கொண்டும், எல்லாரும் தன்னை, தான் கொண்ட முன்ஸீப் உத்தியோகத்தைப் பெரிதாக நினைத்து, எஜமானனாக நினைக்கையில், 'ஒரு எச்சிக்கலப்பய மவா, வந்தட்டிப்பய பொண்ணுகிட்ட, வேலைக்காரன் மாதிரி போவ வேண்டியதிருக்கே' என்று முன்ஸீப் முனங்கிக் கொண்டிருக்கையில், சுற்றி நின்ற கூட்டத்தில் ஒருவர், "அவா சொல்றது மாதிரி நீரு எல்லாத்துக்கும் பொதுவான மனுஷன். போயிட்டு வாரும்" என்று உபதேசம் செய்தார்.
முன்ஸீப்பும் "அதெப்படி?" என்று சொல்லிக் கொண்டே, கூட்டத்தைத் திருப்திப்படுத்துவதற்காக, பெரிய மனது பண்ணிப் போவதாகப் போக்குக் காட்டிக் கொண்டு புறப்பட்டார். புறப்பட்டவருக்கு, தனியாகப் போகப்பயம். இன்னொரு உத்தியோகஸ்தரான கணக்கப்பிள்ளையைத் தேடியலைந்து கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்து, நழுவப்போன கர்ணத்திடம், உலகம்மை பாணியில் பேசி, நண்டுப்பிடி போட்டுப் பிடித்துக் கொண்டார். இருவரும் ஓட்டுக்கணக்கில் லயித்திருந்த பஞ்சாயத்துத் தலைவரையும், பலவந்தமில்லாமல் சேர்த்துக் கொண்டு, கால எமதூதன் போல் போனார்கள்.
தலைவர்கள் தலைதெறிக்கப் போவதைப் பார்த்ததும் விஷயத்தைக் கேள்விப்பட்ட ஊர்மக்களும், ஒன்றாகத் திரண்டு, அவர்கள் பின்னால் போனார்கள். பின்னால் போனவர்கள் பிறகு முன்னால் போய், தலைவர்கள் தோட்டச்சுவரில் ஏற முடியாததை உணர்ந்து கொண்டு உலகம்மையின் வீட்டுக்குக் கிழக்கே இருந்த 'செருவையை' இடித்து நொறுக்கி, தலைவர்களுக்கு வழியமைத்துக் கொடுத்தார்கள். பிறகு, சற்றுத் தொலைவில் போய் நின்று கொண்டார்கள்.
மூன்று தலைவர்களும், உலகம்மையின் குடிசைக்குப் போனார்கள். மாயாண்டியை உற்றுப் பார்த்தார்கள். கணக்கப்பிள்ளை மட்டும், 'சிவ சிவா' என்று சொல்லிக் கொண்டு, அவர்களைப் பார்த்தும் எழுந்திருக்காமல், மூலையோடு மூலையாகச் சாய்ந்து கிடந்த உலகம்மையை நோட்டம் விட்டுக் கொண்டார். கிராம முன்சீப், தான் உலகம்மைக்கு ஒன்றும் வேலைக்காரன் இல்லை, ஒரு முன்சீப் என்பதைக் காட்டிக் கொள்ளும் வகையில், பிரேத விசாரணைக்கு வந்திருப்பவர் போல், அதட்டிக் கொண்டார்:
"உலகம்மா! அய்யா எப்படிச் செத்தார்? எப்போ செத்தார்?"
உலகம்மை உட்கார்ந்து கொண்டே பதில் சொன்னாள்:
"நான் சாயங்காலம் வந்து பாத்தா செத்துக் கிடந்தார். அவரு சாவும்போது பக்கத்துல இருக்க முடியாத பாவியாயிட்டேன்! எதுக்கும் ஐவராசாவ கேட்டுப் பாருங்க. அவரு, ஒரு வேள மாரிமுத்து நாடாரக் கேக்கச் சொல்லுவாரு."
நெடிய மவுனம். பயங்கரமான சத்தத்தையும் உறைய வைக்கும் அசுரத்தனமான மௌனம். இறுதியில் தலைவர்கள் மூவரும், தங்களுக்குள் முனங்கிக் கொண்டார்கள். உலகம்மை வெடித்தாள்:
"அய்யா செத்ததுல திருப்திதான? சந்தேகம் இருந்தா தென்காசி ஆஸ்பத்திரில வேணுமுன்னாலும் அவர அறுத்துப் பாத்து சந்தேகத்த அறிஞ்சுக்கிடுங்க. எனக்குச் சம்மதந்தான். உயிரோட இருக்கையிலே அறுத்திங்க! இனுமே செத்த பிறகும் அறுக்கதுல கவலயில்ல!"
கணக்கப்பிள்ளையால் கையைக் கட்டிக் கொண்டோ, வாயைக் கட்டிக் கொண்டோ இருக்க முடியவில்லை.
"என்ன பொண்ணு நீ, அகராதி பிடிச்சிப் பேசுற? நாங்களும் மனுஷங்கதான்."
"ஓ நீங்க மனுஷங்க தான்" என்று உதட்டைப் பிதுக்கினாள் உலகம்மை.
இதற்குள், "பொம்புளகிட்ட என்ன பேச்சி? பிணத்த அப்புறப்படுத்துற வேலயப் பாக்காம?" என்று பஞ்சாயத்துத் தலைவர் சொல்லிக் கொண்டே வெளியே போனார். அவரைத் தொடர்ந்து மற்ற இருவரும் வெளியே வந்தார்கள்.
தலைவர்களின் சமிக்ஞைக்குக் காத்துக் கிடந்த கூட்டத்தினர், பஞ்சாயத்துத் தலைவர், "பிணத்தத் தூக்க வாங்க"ன்னு சத்தம் போட்டதும், திபுதிபென்று ஓடி வந்தார்கள். உலகம்மை வீட்டுக்குள் நுழையப் போனார்கள். மூலையில் சாய்ந்திருந்த உலகம்மை, முயல்குட்டி போல் துள்ளிக் கொண்டு எழுந்து, வாசலை மறித்துக் கொண்டு நின்றாள்.
"யாரும் என் வாசலுக்குள்ள நுழயக் கூடாது! நீங்க என்னிக்கி எங்களத் தள்ளி வச்சியளோ, அன்னிக்கே ஒங்கள நான் தள்ளி வச்சிட்டேன்! எங்கய்யா உயிரோட இருக்கையில தொடாதவங்க இப்ப எதுக்குத் தொடணும்? யாரும் தொடப்படாது. கொலைகாரங்களே, குத்திப் போட்ட ஆள தூக்கினா எப்டி? யாரும் நுழையப்படாது. அவரு கால்ல விழாத குறையா கெஞ்சையில அவர உயிரோட கொன்ன ஜனங்க! அவரு பொணமான பிறவு வரவேண்டியதில்ல! அடச்சிப் போட்டுக் கொன்ன ஜனங்க! இப்ப பூமியில அடச்சிப்போட வந்தியளாக்கும்? அவரு உயிரக் கொன்ன ஆச தீராம, ஒடம்பையும் கொல்ல வந்தியளாக்கும்? யாரும் வரப்படாது! எங்கய்யாவ எப்டி அடக்கம் பண்ணணுமுன்னு எனக்குத் தெரியும்."
நுழையப் போன கூட்டம், தயங்கி நின்று, தலைவர்களின் முகங்களைப் பார்த்தது. கணக்கப்பிள்ளை ஆணையிட்டார்:
"ஏய்யா பாத்துக்கிட்டு நிக்கிய? ஊர்ல பொணம் கிடந்தா எப்டி? வீட்டில அழுவுற பொணம் ஊர்ள நாறணுமா? பொம்புள அதுலயும் இவா அடங்காப்பிடாரி! அப்படித்தான் பேசுவா. கழுத்தப் பிடிச்சித் தள்ளிவிட்டு உள்ள நுழையுங்கப்பா? நீங்களும் பொணம் மாதிரி நின்னா எப்டி? உம் ஜல்தி."
கூட்டத்தினர் மீண்டும் நுழையப் போனார்கள். உலகம்மை இரு கைகளையும் இரண்டு பக்கமும் அகலமாக விரித்து வாசலை அடைத்தாள்.
"யாரும் நுழையப்படாது! மருவாதியோடப் போங்க! இது ஊருல்ல. என்னோட வீடு! நீங்க தள்ளிவச்ச வீடு! அப்டி நுழைஞ்சிங்கன்னா என் உயிர இப்பவே இந்த நொடியிலயே மாய்ச்சிடுவேன்! பாழாப்போன உயிரு போகலன்னா, நேரா கலெக்டர் கிட்ட போயி நீங்க எப்டி எப்டி அவரச் சித்ரவத பண்ணிக் கொன்னிங்கன்னு சொல்லிடுவேன்! ஏய்யா ரோஷங்கெட்டு நுழையுறிங்க? பொணத்த நாறாமப் பாக்க வேண்டியது என் பொறுப்பு! நீங்க ஒண்ணும் பயப்படாண்டாம்! போங்கய்யா, கோடி நமஸ்காரம்! போங்கய்யா, நல்ல மாட்டுக்கு ஒரே அடி, நல்ல மனுஷக்கு ஒரே சொல்லுதான்! போங்கய்யா வேலயப் பாத்துக்கிட்டு! ஒங்கள யாருய்யா வெத்தல பாக்கு வச்சி அழச்சது?"
கூட்டம் இப்போது தலைவர்கள் ஆணையை எதிர்பார்க்காமலே பின்வாங்கியது. "இவ்வளவு இருந்தும் இவா திமிரு அடங்கல பாரேன்!" என்று ஒருசிலர் முணுமுணுக்க, பலர் அதற்குப் பதிலளிக்காமலே நகர, ஆணும், பெண்ணுமாக நிறைந்த கூட்டத்தில் அத்தனை பேரும், கிழக்குப் பக்கம் வந்து, தங்கள் 'மாஜி' இடத்தில் நின்று கொண்டார்கள்.
உலகம்மை, ஆவேசப்பட்டாள். ஐவராசாவையும், பஞ்சாட்சர ஆசாரியையும், பலவேச நாடாரையும், ராமையாத் தேவரையும், ராமநாதன் செட்டியாரையும், பீடி ஏஜெண்ட் ராமசாமியையும், கூட்டத்தில் பார்த்த அவளிடம் அடங்கிக் கிடந்த அணுசக்தி ஆவேச சக்தியாகியது. அய்யாவை மயானத்திற்கு எப்படித் தூக்கிக் கொண்டு போகலாம் என்று சிறிது யோசித்தாள். மல்லாந்து கிடக்கும் கட்டிலில், மல்லாந்து கிடக்கும் அய்யாவை, உயிரற்ற அந்தச் சடலத்தை அப்படியே அந்த உயிருள்ள சடலத்தால் தூக்க முடியாதுதான்.
உலகம்மை யோசித்தாள். ஒரே நொடியில் விடை கிடைத்தது. விடை கிடைத்த வேகத்தில், தோண்டிப்பட்டைக் கயிற்றை, நாலைந்து துண்டுகளாக, இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து நறுக்கினாள். அய்யாவின் பிடரியில் ஒரு கையையும், கால்களுக்குள் ஒரு கையையும் அணையாகக் கொடுத்து, அவரைத் தூக்கி தரையில் வைத்தாள். பிறகு கட்டிலைப் பக்கவாட்டில் சாய்த்தாள். பிறகு யோசித்துவிட்டு, மீண்டும் 'மல்லாக்க'ப் போட்டாள். சடலத்தை, குழந்தையைத் தூக்குவது மாதிரி கட்டிலின் மத்திய இடத்தில் வைத்தாள். பின்னர் இரு கைகளையும், இரண்டு கட்டில் கால்களிலும் வைத்துக் கட்டினாள். கால்கள் இரண்டையும், ஒன்றோடொன்றுச் சேர்த்துக் கட்டி, பின்பு அதைக் கட்டில் 'சட்டத்தில்' கட்டினாள். கழுத்தைச் சுற்றிக் கயிற்றைப் போட்டு, அந்தக் கயிற்றை, கட்டிலின் கயிற்று வலைகளுக்கிடையே 'கண்கண்ணாக' இருந்த ஒரு ஓட்டைக்குள் விட்டு, பின்னர் அந்தக் கட்டிலின் மேல் 'சட்டத்திற்கு'க் கொண்டு வந்து கட்டினாள். இதே போல் இடுப்பைச் சுற்றி ஒரு கயிற்றைக் கட்டி, அதைக் கீழே இருக்கும் சட்டத்தோடும், மார்பைச் சுற்றி ஒரு கயிற்றைக் கட்டி, அதை மேல் இருக்கும் சட்டத்தோடும் பின்னினாள். கயிறு போதவில்லை. 'உரிக்கயிற்றை' அறுத்து, அதை இரண்டு துண்டுகளாக்கி, ஒவ்வொரு துண்டையும் வலது தோளுக்கும் இடது காலுக்கும் - இடது தோளுக்கும் வலது காலுக்கும் குறுக்காகப் போட்டு, அவற்றைக் கட்டிலின் பின்புறமாகக் கொண்டு வந்து, சட்டங்களில் நாலைந்து தடவை சுற்றிக் காட்டினாள். பின்னர், கட்டிலை பக்கவாட்டில் சாய்த்து, மேல் சட்டத்தை வலது கைக்குள் வைத்துத் தூக்கிக் கொண்டு வாசலுக்கு வெளியே வந்தாள். மாயாண்டி, சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர் மாதிரி காட்சியளித்தார்.
வெளியே வந்ததும், கூட்டத்தை ஒரு தடவை இளக்காரமாக ஏறிட்டுப் பார்த்துவிட்டு, கட்டிலின் சட்டத்தின் மத்தியப் பகுதியை, ஓரடி இடைவெளியில் இரண்டு கைகளாலும் பிடித்துத் தூக்கி, முதுகில் சாய்வாக வைத்துக் கொண்டு நடந்தாள். முதுகுப் பக்கம் 'தொட்டிலைக்' கட்டி அதில் குழந்தையை வைத்துச் செல்லும் மலைஜாதிப் பெண் போல், அய்யாவை கட்டிக் கொண்டிருந்த அந்த கட்டிலை, அனாசியமாகவும், அலட்சியமாகவும் தூக்கிக் கொண்டு போனாள்.
கூட்டத்திற்கு என்னவோ போலிருந்தது. இறந்து போன அய்யாவையும், இறக்காமல் இருக்கும் மாமியாரையும் நினைத்து ஒப்பாரி வைக்கத் தயாராக இருந்த ஒரு சில பெண்கள் தங்களுக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டார்கள். சில பெண்கள், உண்மையிலேயே கலங்கிப் போயிருந்தார்கள். இன்னும் சில பெண்கள், குறிப்பாகப் பிராந்தனை, அவள் சார்பில் அடிக்கப் போன சக கூலிக்காரிகள், வாய்விட்டே அழுதார்கள். உலகம்மையின் மாஜி பீடிக்கடை தோழிகள் கூட கண்களைத் துடைத்துக் கொண்டு, கழுவாய் தேடினார்கள். சரோசா கூட அங்கே இருப்பது போல் தெரிந்தது.
பெண்கள் கூட்டம் இப்படி என்றால், ஆண்கள் கூட்டமும் அப்படித்தான். ஒவ்வொருவரும், குறிப்பாகப் பஞ்சாட்சர ஆசாரி, ஐவராசா, ராமையாத்தேவர் முதலியோர் பின்னால் இருத்திக் கட்டப்பட்ட சடலத்தைப் பார்த்துத் திடுக்கிட்டார்கள். மிரட்டும் கண்களோடு, லேசாகச் சிரித்துக் கொண்டிருப்பது போல் இருந்த மாயாண்டி, அவர்கள் ஒவ்வொருவரையும் உற்றுப் பார்ப்பது போல் தெரிந்தது. 'இரு இரு ஒன்னக் கவனிச்சுக்கிறேன்' என்று ஒவ்வொருவரையும் அவர் சொல்லாமல் சொல்வது போல் ஒவ்வொருவரும் நினைத்துக் கொண்டார்கள். இதற்குள், கூட்டத்தில் இருந்த ஐவராசா மயக்கம் போட்டு விழுந்ததால், அவருக்குத் துண்டை எடுத்து ஒருவர் வீசிக் கொண்டிருந்தார்.
இந்த அமளிக்குள்ளும் அல்லது அமளியில்லாத அந்த நிசப்தத்திலும் பலவேசம், "பொம்புளக்கி இவ்வளவு பிடிவாதம் ஆவாது! சொல்றத கேக்காமப் போனா எப்டி? இவ்ளவு வீம்பு பிடிக்கவா ஊர்ச் சுடுகாட்டுலயும் பொணத்த அடக்கம் பண்ணப்படாது!" என்று இரைந்து பேசினார். யாரும் அவர் பேசியதை ஒட்டியோ வெட்டியோ பேசவில்லை.
உலகம்மை மௌனமாக நடந்து போனாள். கண்ணீர் சிந்தாமல் நடந்தாள். 'என் மவா நடந்து போற தூசியில அறுந்து போற தூசிக்குப் பெறுவியளாடான்னு' அய்யா சொன்னதாக மலேயாக்காரர் சொன்னதை நினைத்துக் கொண்டு, கூட்டத்தைத் தூசியாகக் கருதிக் கொண்டு சென்றாள்.
அத்தனை வேதனையிலும், மலேயாக்காரர் இருக்கிறாரா என்று பார்த்தாள். அந்த யோக்கியனும் இல்லை. மாரிமுத்து நாடாரும் அங்கே இல்லை. பெற்றவனைக் குழந்தையாக்கி, அந்தக் குழந்தை, பெற்றவளைப் போல் நடந்தது. தொட்டிலில் போட்டு கண்குளிரப் பார்த்தவனை, கட்டிலில் கட்டி, அவள் நடந்தாள். தூக்கி வைத்துச் சிரித்தவனைத் தூக்கிக்கொண்டு அவள் துக்கத்தையும் சுமந்து கொண்டு போனாள். ஊரார் அசையாமல் நின்ற இடத்திலேயே நின்றனர்.
சில பெண்கள் சத்தம்போட்டே அழுதார்கள். "உலகம்மா! ஒனக்கா இந்த கதி?" என்று கதிகலங்கிப் போய் கதறினார்கள். உலகம்மை யாரையும் பார்க்காமல், எதையும் நோக்காமல், பற்றற்று துறவி போல், பளு தாங்கிய முதுகைக் காட்டிக் கொண்டே நடந்தாள். அய்யாவின் கனத்தை விட, நெஞ்சின் கனவே அதிகமாக இருந்தது.
அவள் வெகுதூரம் நடந்திருக்க மாட்டாள். ஒரு புளிய மரத்திற்கருகே நின்ற சேரிக் கூட்டம் ஓடிவந்தது. 'இதற்குமேல் போனால் கைகலப்பு வரும்' என்று நினைத்துப் புளிய மரத்தை, 'எல்லைப் போஸ்டாக' நினைத்துக் கொண்டு அங்கே நின்ற சேரி ஜனங்கள், அவளை நோக்கி ஓடிவந்தார்கள். "ஏம்மா, நாங்கெல்லாம் ஒங்கய்யாவோட ஒய்யாவா செத்துட்டோமுன்னா நினைச்சிக" என்று சொல்லி, கட்டிலை வாங்கிக் கயிறுகளை அவிழ்த்து, பிணத்தைக் கட்டிலில் மல்லாந்து படுக்கப் போட்டு, நான்கு பேர் தூக்கினார்கள். பெண்கள் ஒலகம்மையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, "ஓசியில பனவோலை தந்த மகராசா, ஒனக்கா இந்த கதி?" என்று புலம்பிக் கொண்டே போனார்கள்.
அருணாசலம் அங்கே வரவில்லை. அவன் வந்தால் விபரீதம் ஏற்படலாம் என்று அஞ்சிய பெரியவர்கள், அவனை வீட்டிலேயே பலவந்தமாகப் பிடித்து வைத்திருந்தார்கள்.
மாயாண்டி நாடார் அருணாசலத்தின் வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டார். நான்கு மூங்கில் கழிகளை, நேர்க்கோடுகள் போல் போட்டு, பத்துப் பதினைந்து வாத மடக்கிக் கம்புகளை குறுக்கும் நெடுக்குமாகப் போட்டுக் கட்டினார்கள். அதற்குமேல் தென்னை ஓலைகள் போடப்பட்டன. ஓலைகளுக்கு மேல் அப்போதுதான் முனையப்பட்ட ஓலைப்பாய் விரிக்கப்பட்டது. மாயாண்டிக்குப் புதுவேட்டி கட்டப்பட்டது. கண்ணை மறைக்கச் சந்தனம் அரைத்து அப்பப்பட்டது. இதற்குள் கோணச்சத்திரம் போய், ஒருவன் வாங்கி வந்த ரோஜாப்பு மாலை சடலத்திற்கு போடப்பட்டது.
சடலத்தை, பாடையில் வைத்து, மேல் ஜாதிக்காரர்களின் மயானத்தைப் பார்த்துத் தூக்கிக் கொண்டு போனார்கள். மையற்ற பேனா போல், உணர்வின்றி நடந்து கொண்டிருந்த உலகம்மை, அய்யாவை, ஹரிஜனங்களுக்கென்று தனியாக உள்ள சுடுகாட்டில், மனிதன் செத்த பிறகும் சாதி சாவாது என்பதைக் காட்டுவதுபோல் தனியாக இருந்த சுடுகாட்டிற்குக் கொண்டு போக வேண்டும் என்று வற்புறுத்தினாள்.
பிள்ளையார் கோவிலுக்கு மேற்குப் பக்கமாகப் போனவர்கள் திரும்பி நடந்து, குளத்தங்கரைப் பக்கம் இருந்த சேரி சுடுகாட்டுக்குப் போனார்கள். அவசர அவசரமாக, பூவரசு மரக்கட்டைகள் போடப்பட்டு, வறட்டிகள் அடுக்கப்பட்டன. மாயாண்டியை, அதில் வைத்து, அதற்கு மேலும் வறட்டிகளை வைத்தார்கள். மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டது. "யாராவது ஆம்புள கொள்ளி போடாட்டா நல்லதுல்ல" என்று ஒருவர் சொன்னார். உடனே, மேளக்காரரான அருணாசலத்தின் தந்தை "ஒன்ன சின்னப்பிள்ளையில ஜாதி வித்தியாசமில்லாம பெத்த மவன மாதிரி மடில வைச்சிக் கொஞ்சின மவராசன் இவரு. நீ கொள்ளி வைடா!" என்று அருணாசலத்திடம் சொன்னார். அவன் உடனே குத்துக்கால் போட்டு, உட்கார்ந்தான். அவனுக்குத் தலைமுடி இறக்கப்பட்டது.
உலகம்மை எடுத்துக் கொடுத்த நெருப்பை வாங்கிக் கொண்டு, அருணாசலம் சடலத்திற்குத் தீ வைக்கப் போனான். அழுது தீர்ந்தவள் போல் இருந்த உலகம்மையால், இப்போது உணர்வற்று உயிரற்று இருக்க முடியவில்லை. அய்யாவின் பிணத்தோடு பிணமாகச் சேரப் போகிறவள் போல், முண்டியடித்துக் கொண்டு ஓடிப்போனாள். சிலர், அவளைப் பிடித்துக் கொண்டார்கள். அவள் ஓலமிட்டாள்:
"என்னப் பெத்த அய்யா, எப்டிய்யா என்ன விட்டுட்டுப் போவ மனம் வந்தது? என்னையும் கூட்டிகிட்டுப் போவும். எப்பய்யா வருவீரு? ஒம்ம, சாவையில பக்கத்துல இருக்க முடியாத பாவியாயிட்டேனே. அய்யா, என்னப் பெத்த அய்யா, பெத்து வளத்து, பேருட்ட அய்யாவே, நீரு செத்து மடியயிலே சண்டாளி இல்லியே."
உலகம்மையை யாரும் தடுக்கவில்லை. அவள் போக்கிலேயே அழ விட்டார்கள். நெருப்பு வைக்கப் போன அருணாசலம், நெருப்பை வைக்காமலே அங்கேயே அழுது கொண்டு நின்றான். அவன் கையைத் தூக்கி, அதிலிருந்த நெருப்பை ஒருவர் சிதையில் வைத்தார்.
நெருப்பு மாயாண்டியைத் தள்ளி வைக்காமல் உடனே பற்றிக் கொண்டது.
நாலைந்து நாட்கள் கடந்தன.
மாயாண்டிக்கு இறுதிச் சடங்குகள் முடிவடைந்து விட்டன. அவர் உடம்பு எரிக்கப்பட்ட இடத்தில் நான்கு சதுர அடிப் பரப்பிற்கு ஒரு மணல்மேடை வந்தது. அதைச் சுற்றி ஓரடி உயரச் சுவரை எழுப்பினார்கள். மணல் மேட்டின் ஓரத்தில் ஒரு சாதாரண லிங்கத்தின் உயரத்திற்கு ஒரு கல்லை நட்டார்கள். அதன் அருகில் எருக்கிலைச் செடிகள் நடப்பட்டன. அருணாசலத்திற்கே, காப்புக் கட்டுவது முதல் அதைக் களைவது வரை எல்லாச் சடங்குகளும் செய்யப்பட்டன.
உலகம்மை, அருணாசலத்தின் வீட்டிலேயே தங்கியிருந்தாள். அது அவளுடைய வீட்டைவிட வசதியான வீடு. ரேடியோ கூட இருந்தது. சேரி மக்களின் ஆறுதலில், சின்னப் பிள்ளைகளின் விளையாட்டில், தன் துக்கத்தைக் கரைத்துக் கொண்டிருந்தாள். வேலைக்குப் போகவேண்டிய தருணம் வந்துவிட்டதையும் உணர்ந்தாள்.
எத்தனை நாளைக்குத்தான் அய்யாவின் 'சமாதியையே' பார்த்துக் கொண்டு இருக்க முடியும்? மாயாண்டி, மகளின் போக்குப் பிடிக்காமல் தான் தற்கொலை செய்து கொண்டதாக ஊரில் அடிபட்ட ஒரு செய்தி வேறு அவள் காதுக்கும் வந்தது.
ஒரு நாள் அருணாசலம், சாவகாசமாகக் கேட்டான்.
"ஏம்மா, வீட்டுக்குப் போகலியா?"
உலகம்மைக்கு என்னவோ போலிருந்தது. முகங்கூடச் சுண்டிவிட்டது. விருந்தும் மருந்தும் மூணுநாளென்று சும்மாவா சொல்லுகிறார்கள்? அருணாசலத்தை - வெடவெடென்று ஒடிந்து போகப் போவது போலவும், 'அண்டங்காக்கா' நிறத்திலும் அதே சமயம் 'களையோடும்' இருந்த உடம்புக்காரனையே சிறிது கூர்ந்து பார்த்துவிட்டுக் கேட்டாள்:
"நான் இங்கே இருக்கது ஒனக்குப் புடிக்கலியா?"
அருணாசலம், வாயிலும் வயிற்றிலும் செல்லமாக மாறி மாறி அடித்துக் கொண்டான்.
"அநியாயம், அக்ரமம். எம்மா ஒன்னப் போகச் சொல்ல எனக்கு மனம் வருமுன்னு ஒனக்கு நெனப்பு வந்ததே தப்பு! மேல் ஜாதியைச் சேர்ந்த பெண்ணை எத்தனை நாளைக்குத் தான் இங்க வைக்க முடியும்? வீட்டுக்குப் போகணுமுன்னு நினைச்சி அத எப்டிச் சொல்றதுன்னு யோசிக்கியோன்னு எண்ணிக் கேட்டேன்? என்ன இருந்தாலும் சேரியில் நீ இருக்க முடியுமா? நானுந்தான் இருக்கச் சொல்லலாமா? சொல்லப் போனால் உன்ன நீன்னு சொல்றதே தப்பு. எப்டியோ பேசிப் பழகிட்டேன்."
"ஒனக்கு இவ்வளவு ஞாபக மறதி இருக்கே. எப்டி படிச்சி தேறின?"
"என்ன அப்டிச் சொல்ற முதல் ஆளு நீதான்... ஒருவனப் பாத்துட்டா அவன் மூக்கு எப்டி இருக்கு, வாய் எப்டி இருக்குன்னு சாவது வரைக்கும் நினைவில் வைக்கிறவன் நான்! அதாவது, அவன் சாவது வரைக்கும்... என் பார்வ அவ்வளவு மோசம். நீண்ட நாளக்கி நினைவுல வைக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆசாமி அவுட்டாயிடுவான்!"
"அதுக்குல்ல. மேல் ஜாதியில இருக்கிற ஏழை பாளைங்களும் ஹரிஜனங்கதான். அவங்களும் ஹரிஜனங்களோடே சேரணுமுன்னு நீ சொல்லிட்டு, இப்ப இந்த ஹரிஜனப் பொண்ண துரத்தாத குறையாத் துரத்துறது நியாயமான்னு கேக்குறேன்."
"நீ என்னம்மா சொல்றே? புரியுது, புரியாமலும் போவுது."
"நான் இங்கேயே இருக்கலாமுன்னு நெனைக்கேன். ஒனக்கு இஷ்டந்தானா அண்ணாச்சி? ஒன் தங்கச்சிய இப்டிப் போன்னு சொல்றது நியாயமா?"
அருணாசலம் ஆனந்தமயமாய் அதிர்ந்து போனவன் போல், அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். 'உண்மையிலேயே இவள் அசாதாரணமானவள் தான். ஊரை செண்டிமென்டலா மட்டும் பகைக்கல. ஐடியலாஜிகலாகவும் பகைச்சிருக்காள்! மேல் ஜாதி நெருப்புல புடம்போட்ட ஹரிஜன பொண்ணா மாறியிருக்காள்!'
"ஒன்னப் பார்த்ததும் என் உடன்பிறவாச் சகோதரியா நினைச்சவன் நான்! என்னைக்கு அய்யாவுக்கு கொள்ளி போட்டேனோ அன்னைக்கே நீ என் உடன்பிறந்த சகோதரியாயிட்டே. நீ எடுத்த முடிவும் நியாயந்தான் தங்கச்சி! ஒனக்கு ஒரு தொல்லையும் வராமப் பாத்துக்கிட வேண்டிய பொறுப்பு என்னோடயது! நிஜமாவே நீ இங்கே வந்து தாழ்ந்த ஜாதியாகி, தாழ்ந்த ஜாதிய மேல் ஜாதியாக்கிட்ட! இந்த நாட்ல, ஹரிஜனங்களை மேல் ஜாதியாக்குறது இந்த ஜென்மத்துல நடக்காது. ஆனால் மேல்ஜாதி ஏழை எளியவங்களை ஹரிஜனங்களாய் மாத்துறது லேசு. பிரபுத்துவ மனப்பான்மையில், தங்களோட நியாயமான நிலையைப் புரிஞ்சிக்காத மேல் சாதி ஏழை பாளைங்களை, கீழ் சாதி ஹரிஜனங்களாய் மாத்தணும். ராமானுஜர், ஹரிஜனங்கள, ஐயங்கார்களா மாத்துனதா ஐதீகம். அவரு, வைணவத்துக்காக மாத்துனாரு. நாம, பாட்டாளி வர்க்கத்துக்காக தலைகீழாய் மாத்தணும். நாட்ல நிலவுற வகுப்புக்கள வர்க்கப்படுத்தணும். மேல்சாதி ஏழையும், கீழ்சாதி ஹரிஜனங்களும் ஒரே வர்க்கமாய் போற காலம் வரத்தான் போவுது. இதே முறையில பார்த்தால், நீ சேரியிலே சேரப்போற காரியம், எதிர்காலத்தில் ஒருவேளை நடக்கப்போற ஒரு சமதர்மப் புரட்சிக்கு ஒரு காரணமாய் அமையலாம். இந்த வகையில் இந்த ஊர்ல ஒரு புரட்சி ஏற்படுறதுக்கு ஒரு தாயாய் மாறிட்ட. உண்மையிலேயே நீ - என் தாயை விட... என் தாயை விட..." அருணாசலத்தால் மேற்கொண்டு பேச முடியவில்லை. குரல் தழுதழுத்தது. கண்ணீர் கூட வரும் போல் தோன்றியது. அவன் உணர்ச்சி வயப்பட்டதைப் பார்த்ததும், உலகம்மையாலும் பேச முடியவில்லை. அங்கு, மௌனமே மோனமாகி, அந்த மோனமே, மானசீகமாகப் பேசிக் கொண்டது. சிறிது நேரத்திற்குப் பிறகுதான், அருணாசலம், தன்னைப் புகழ்ந்தது அவளுக்கு முழுமையாகத் தெரிந்தது. லேசாகக் கூச்சப்பட்டாள்.
அருணாசலம் தலைதெறிக்க வெளியே ஓடினான்.
அன்றே, சற்று மேடான ஒரு இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடிசை போடுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தன. இரண்டடி ஆழத்திற்கு வாணம் தோண்டப்பட்டு, இரண்டு மூன்று நாட்களில், கல்லாலும் மண்ணாலும் ஆளுயரச்சுவர் எழுப்பப்பட்டது. பெண்களும், ஆண்களும் குழந்தைகளுமாகப் போட்டி போட்டுக் கொண்டு வேலையில் இறங்கினார்கள். வயற்காட்டிற்குப் போக வேண்டிய 'கூலிக்காரிகள்' கூட ஒரு நாள் சிரமதானம் செய்தார்கள். பனங்கம்புகள் சுவரில் ஏற்றப்பட்டு. அவை பனையோலைகளால் வேயப்பட்டு விட்டன.
நான்கைந்து நாட்களில், சேரி மக்களின் உழைப்பு 'ஹவுஸாகவும்', அவர்களின் நேரம் 'ஹோம்' ஆகவும் மாறிவிட்டது.
வெள்ளிக்கிழமையில் நல்ல நேரத்தில், குடிசையில் 'பால் காய்ச்சப்பட்டது'. அதிகாலையிலேயே அய்யாவின் சமாதிக்குப் போய் இரண்டு மூன்று தங்கரளிப் பூக்களை வைத்துவிட்டு வந்த உலகம்மை, சேரி மக்களின் அன்பு வெள்ளத்தில் திக்குமுக்காடினாள். குடிசைக்கு இருபுறத்திலும், வாழை நடப்பட்டு, உள்ளூர் மேளம், நாதஸ்வரத்தோடு, ஊருக்குக் கேட்கும்படியாக ஒலித்தது.
அருணாசலத்தின் வீட்டிலிருந்து ஒரு குத்துவிளக்கு அன்பளிப்பாக வந்தது. மற்றவர்கள், கும்பா, 'கொட்டப்பெட்டி', 'ஓலைப்பாய்கள்' ஆகியவற்றையும் அன்பளிப்பாக கொடுத்தார்கள். உலகம்மைக்கு ஒரு வாரத்திற்குப் போதுமான 'அரிசி, புளி, பருப்பு' கொடுக்கப்பட்டன. கொட்டுமேளக் குதூகலத்தைப் பார்த்துப் பல சிறுவர்கள் நாட்டியங்கூட ஆடினார்கள். அருணாசலத்திற்குப் பெருமை பிடிபடவில்லை. 'சே, முன்னாலேயே இங்க வந்திருக்கலாம். அய்யாவும் செத்திருக்க மாட்டார்' என்று நினைத்துக் கொண்டாள் உலகம்மை. அவள் கண்கள், அவள் கண்ட அன்புக்காகவும், அய்யாவிற்காகவும் மாறி மாறிக் கலங்கின. அய்யா, அங்கேயே அவளைப் பார்த்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது.
மறுநாள் ஊரில் இருக்கும் 'முன்னாள்' வீட்டில் உள்ள தட்டுமுட்டுச் சாமான்களை எடுத்து வருவதற்காக, உலகம்மை புறப்பட்டாள். 'கூடமாட' உதவி செய்ய முன்வந்த அருணாசலத்தையும், ஒருசில பெண்களையும் வேண்டாமென்று அவள் தடுத்துவிட்டு, ஓடையைக் கடந்து ஊருக்குள் நுழைந்தாள். எவர் கண்ணிலும் பட விரும்பாதவள் போல், வேகமாக நுழைந்து வீட்டுக்குள் போனாள். வீட்டைச் சிறிது நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள். பிறகு மடமடவென்று செப்புக்குடத்தை, தலைகீழாக எடுத்து, தேங்கிப் போயிருந்த தண்ணீரைக் கொட்டிவிட்டு, குடத்திற்குள், ஈய டம்ளர்களை எடுத்துப் போட்டுவிட்டு, கரண்டியையும் அதில் போட்டாள். பானைக்குள் இருந்த அரைக்கால்படி அரிசியையும் அதில் கொட்டிவிட்டு, இறுதியில் அரிவாள்மணையை அதற்குள் திணித்தாள்.
வீட்டுக்குள் கிடந்த ஒரு சின்னக் கோணிப்பைக்குள், அம்மியைப் பெயர்த்துப் போட்டாள். பிறகு, பருப்பு, புளி வகையறாக்களுடன் இருந்த சில டப்பாக்களையும் இரண்டு 'கும்பாக்களையும்' எடுத்துப் போட்டாள். 'விளக்குமாற்றை' எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பது போல், அதை அங்குமிங்குமாக ஆட்டிப் பார்த்துவிட்டு, பிறகு அதையும் உள்ளே போட்டுச் 'சாக்கைக்' கட்டினாள்.
பானை சட்டிகளை எடுக்கவில்லை. 'உலமடியில்' இருந்த காகிதத்தை எடுத்தாள். லோகு, தன் கைப்பட எழுதிக் கொடுத்த முகவரி அது. அதைக் கிழிக்கலாமா என்று யோசித்தாள். பிறகு எடுத்ததை, இடுப்பில் செருகிக் கொண்டாள். ஒரு சட்டிக்குள் இருந்த இரண்டு ரூபாய் சில்லறைக் காசுகளை எடுத்து, முந்தானைச் சேலையில் முடிந்து கொண்டாள். கொடியில் தொங்கிய அய்யாவின் வேட்டியையும், துணியையும், தன் பழைய சேலையையும் எடுத்துச் சுருட்டிக் கொண்டு, கோணிப்பையை அவிழ்த்து, அதற்குள் திணித்து விட்டு, பிறகு மீண்டும் அதைக் கட்டினாள்.
ஓலைப்பாயை, அங்கேயே விட்டுவிட்டாள். வாசல் கதவையும், 'நிலப்படியையும்' பெயர்க்கலாமா என்று நினைத்தாள். மூங்கில் கழிகளால் ஆன தட்டிக்கதவுதான் அது. ஆனால், 'சுண்டக்காய் கால்பணம்; சுமக்கூலி முக்கால் பணம்' என்ற பழமொழியை ஞாபகப்படுத்திக் கொண்டு விட்டுவிட்டாள்.
செப்புக் குடத்தையும், கோணிப்பையையும், தூக்கப் போனவள் அப்படியே அசந்து போய் நின்றாள்.
அய்யா, இருந்து - இறந்த அந்த இடத்தைக் கண் கொட்டாது பார்த்தாள். அவள் பிறந்த இடமும் அதுதான். எத்தனை ஆண்டு காலமாக இருந்த வீடு அது! அய்யாவும் - அம்மாவும் கூடிக்குலவி வாழ்க்கை செய்த திருத்தலம் அது! உலகம்மைக்கு அழுகை அழுகையாக வந்தது. கண்ணில் ஈரக்கசிவு நிற்கும்வரை அழுது கொண்டே இருந்த அவள், அய்யா உட்கார்ந்து சாப்பிடும் இடத்தையும், கட்டில் இருந்த இடத்தையும் தொட்டுக் கும்பிட்டுக் கொண்டாள். அந்த வீட்டை விட்டுப் பிரிவது என்னவோ போலிருந்தது. அங்கேயே இருந்து விடலாமா என்று கூட நினைத்தாள்.
வீட்டுக்கு வெளியே சத்தங்கேட்டு எட்டிப் பார்த்தாள். மாரிமுத்து நாடார், கணக்கப்பிள்ளை உட்பட, ஒரு பெருங்கூட்டம் அவள் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. 'எதுக்காக வாரானுக?' என்று நினைத்த உலகம்மை சிறிது பயந்துவிட்டாள். கூட்டத்தில் மாரிமுத்து பலவேச நாடார்களையும், பஞ்சாட்சர ஆசாரியையும் தற்செயலாகப் பார்த்த அவள் முகம் இறுகியது. அவர்கள் முன்னால் அழுவது இருக்கட்டும், அழுததாகக் கூடக் காட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைத்தவளாய், கண்களை முந்தானையால் துடைத்துக் கொண்டாள். செப்புக் குடத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு, கோணிப்பையையும், அதனருகே இருந்த மண்வெட்டியையும் ஒரு சேரப் பிடித்துத் தோளில் போட்டுக் கொண்டு வெளியே வந்தாள்.
வழிமறித்து நிற்பதுபோல் நின்ற கூட்டத்தை விட்டு விலகிப் போக முயற்சி செய்தாள்.
ஏற்கனவே சேரி மேளத்தைக் கேட்டு ஆடிப் போயிருந்த ஊர்க்காரர்கள் அங்கே வந்து கூடி நின்றார்கள். உலகம்மை, வீட்டுச் சாமான்களை எடுப்பதற்காக வந்திருப்பதைப் பண்ணையாள் சின்னான் மூலம் கேள்விப்பட்ட ஊர்ஜனங்கள் ஒன்று திரண்டு வந்தார்கள். காத்தமுத்து டீக்கடையில், இப்போது சின்னான் மட்டுந்தான் (கீழே) உட்கார்ந்திருந்தார். காத்தமுத்துவே இங்கு வந்துவிட்டான்.
போகப் போன உலகம்மையைப் பார்த்த கூட்டம், அவள் தூரத்து உறவினரும், அவளுக்காக ஒரு காலத்தில் வக்காலத்துப் பேசி உதைபடப் போனவருமான கருவாட்டு வியாபாரி நாராயண சாமியை, முன்னால் தள்ளிவிட்டது. அவர் லேசாக இருமிக் கொண்டு, உலகம்மையின் பார்வை கிட்டியதும் பேசினார்:
"ஒலகம்மா, நீ செய்யுறது உனக்கே நல்லாயிருக்கா?"
"எது சின்னய்யா?"
"மேல் ஜாதியில பிறந்துட்டு ஹரிஜனங்களோடு போயி இருக்கது நல்லா இருக்குமா? நீ மேல் ஜாதிப் பொண்ணுங்கறத மறந்துட்டியே! நியாயமா?"
"இப்படிப் பேச ஒமக்கு எப்படி மனம் வந்தது? வார்த்தைக்கு வார்த்த 'பனையேறிப்பய, பனையேறிப்பயன்னு' பனையேறிங்கள, அவங்களோட பெரியய்யா மக்களே ஒதுக்கி வைக்கிறதப் பாத்தாச்சு! நானும் பனையேறி மவள் - போவ வேண்டிய இடத்துக்குத்தான் போறேன். வழிய விடும் சின்னையா."
"ஒலகம்மா! ஒன் கோபம் நியாயந்தான். இனிமே ஒன்னக் கவனிச்சிக்க வேண்டியது சின்னய்யா பொறுப்பு. நீ இங்கேயே இரு. ஒன் மேல் ஒரு தூசி விழாம பாத்துக்கிட வேண்டியது என் பொறுப்பு. ஊரோட பொறுப்பு."
"பாறாங்கல்லே விழுந்திச்சு... அப்பப் பாக்காத ஊர் ஜனங்களா இப்பப் பாக்கப் போவுது?"
"ஊர விடு. நானிருக்கேன். நான் ஜவாப்!"
"என்ன சின்னய்யா, நீரு? எனக்காவ ஒரு தடவை பேசப்போயி பலவேச நாடார்கிட்ட உதபடப் போனீரு! ஒம்மக்கூட 'கருவாடு விக்கற பயன்னு' கேவலமாப் பேசுறாங்க. ஒரு சின்னச் சண்டையிலும் ஒம்ம கருவாட்ட பிடிச்சிக்கிற மேல் ஜாதி கூட நீரு ஏன் ஒட்டிக்கிட்டு இருக்கணும்? பேசாம எங்கூட சேரிக்கு வாரும் சின்னய்யா! அங்க ஒம்ம மேல ஒரு தூசி கூட விழாம இருக்க, நான் பொறுப்பு."
நாராயணசாமியால் அவளின் கேள்விக்குப் பதிலளிக்க முடியவில்லை. முகத்தில் திடீரென்று வேர்வை பொங்கியது. ஒதுங்கிக் கொண்டார். உலகம்மை லேசாக நடக்கப் போனாள். ராமையாத் தேவர் முன்னால் வந்தார்.
"ஒலகம்மா! நான் மூணாவது மனுஷன் சொல்றதக் கேளு. நம்ம ஜாதிகளயே நீ தல குனிய வைக்கது மாதிரி நடக்கப்படாது. இனிமே ஒன்ன ஒருத்தரும் ஒண்ணுஞ் சொல்ல மாட்டாங்க!"
"நீரு எங்கய்யா கெஞ்சும் போது ஒண்ணுஞ் சொல்லாம இருந்தீரே, அது மாதிரியா?"
ராமையாத் தேவருக்கு நம்பிக்கை போய்விட்டாலும், அய்யாவு நாடாருக்குப் போகவில்லை. முன்வந்து மொழிந்தார்:
"ஒலவு, நம்ம சாதியயே தலைகுனிய வச்சுட்டியே. பட்டிதொட்டி பதினெட்டு எடத்துலயும் குட்டாம்பட்டின்னா, ஒரு தனி மதிப்பு இருக்கு. நாங்களெல்லாம் தலை நிமிர்ந்து நடக்க முடியாம, குனிஞ்ச தல நிமிர முடியாமப் பண்ணலாமா? நம்ம ஜாதில யாரும் இப்டி நடந்துக்கல! பெரியய்யா சொல்றதக் கேளு. நடந்தது நடந்து போச்சி! நீ அபராதமும் முழுசையும் கட்டாண்டாம். அடயாளமா நாலணாவுக்குக் கோவிலுக்கு எண்ணெய் வாங்கி ஊத்திடு ஒண்ணாயிடலாம்."
'ஒங்க புண்யத்துல எண்ணய அபராதமா குடுத்திட்டேன்'. அய்யாவு நாடார் கணக்கப்பிள்ளை காதைக் கடித்ததும், அவருக்கு வாயில் நமைச்சல் ஏற்பட்டது.
"ஏ பொண்ணு! என்னோட அனுபவமும் ஒன்னோட வயசும் ஒண்ணு. நான் ஒனக்கு நல்லதுக்குத்தான் சொல்றேன். ஒனக்கு இங்க இருக்க இஷ்டமுல்லாட்டா ஆசாரிக் குடியில போயி இரு. செட்டியார் குடியில போயி இரு. அதுவும் முடியாதுன்னா எங்க பிள்ளளமார் குடியில வந்து இரு. ஆனால் பறக்குடியில போயி இருக்காதே! அது ஒனக்கும் கேவலம். எங்களுக்கும் கேவலம்."
"கணக்கப்பிள்ளை, என் ஜாதியப் பத்திக் கவலப்படாண்டாம். நான் இப்போ பறச்சிதான். அப்படி ஆனதுனால சந்தோஷம் இல்லாம போவல. நான் ஒருத்தி போறதால மேல் ஜாதி எல்லாம் போயிடுமுன்னா, ஒங்க சாதிங்க எவ்வளவு இத்துப் போயிருக்கணும்? மொதல்ல அதக் கவனிங்க."
கணக்கப்பிள்ளைக்குக் கோபந் தாங்க முடியவில்லை. "இது ஊராய்யா, இது ஊராய்யா?" என்று சொல்லிக் கொண்டே 'வாக்கவுட்' செய்தார். இப்போது, அவர் 'அவுட்டானதை' யாரும் பொருட்படுத்தவில்லை. இறுதி முயற்சி போல், தட்டாசாரி பஞ்சாட்சரம் பரபரப்போடு பேசினார்.
"ஒனக்கு இந்த ஊர்ல இருக்கப் பிடிக்காட்டா வேற எங்கேயாவது போயிடு! ஊர்ல அஞ்சிபத்துன்னு தலைக்குக் கொஞ்சமா வேணுமுன்னாலும் ரூபா வசூலிச்சித் தாரோம். கண்காணாத சீமையிலே போயி, கையோட காலோட பிழச்சிக்க! அத விட்டுப்புட்டு காலனில போயி இருக்கது நல்லா இல்ல. ஊரக் கேவலப்படுத்துறது சாமிக்கே பொறுக்காது! ஊர்மானத்த விக்கப்படாது. பொட்டச்சிக்கு இவ்வளவு திமிரு ஆவாது."
"ஏன் ஆசாரி துடிக்கியரு? சப் இன்ஸ்பெக்டர வச்சிக்கிட்டு இருந்த ஒரு தேவடியா முண்ட ஊரை விட்டுப் போறதுனால ஊரு துப்புரவாயிடும்! நீரு சந்தோஷப்படாம சடச்சிக்கிடுறீரே!"
உலகம்மை, சற்று வேகமாக நடக்கத் துவங்கினாள். மேல் ஜாதிகளின் மானத்தைக் காப்பதற்காக, ஒவ்வொருவரும் தத்தம் தன்மானத்தை இழக்கத் தயாராக இருப்பது போல், உலகம்மையைப் பார்த்துக் கண்களால் கெஞ்சினார்கள். எதிர்காலத்தில் வேறு ஒரு பட்டியுடன் சண்டைக்குப் போக வேண்டிய நிலைமை வந்தால், 'ஒங்க ஊரு சங்கதி தெரியாதா?' என்று உலகம்மையின் சேரிச் சங்கதியைக் கோடிட்டுக் காட்டுவது போல் காட்டினால், சொல்லுபவர்களின் பல்லை உடைக்க முடியாமல் போய்விடுமே என்பதற்காக, அவர்கள் உலகம்மையிடம் பல்லைக் காட்டினார்கள். அவள், அதை உடைக்காமல் உடைப்பதைப் பார்த்து, முகத்தைச் சுழித்த போது, பலவேச நாடார் வாயைச் சுழித்தார்:
"ஆசாரியாரே! அவ வேணுமுன்னா அருணாசலத்தோட தொடர்ப விடாண்டாம். தென்காசி கிங்காசில ரூம் கீம் எடுத்துக்கிட்டு எப்டி வேணுமுன்னாலும் வாரத்துல ஒரு நாளக்கி தெரியாமத் தொலையட்டும்! அதுக்காவ, நம்மள மனுஷங்களா நெனக்காம சேரில நிரந்தரமா இருந்து கொஞ்ச வேண்டாமுன்னு சொல்லுமய்யா."
உலகம்மை, பலவேசத்தை ஏறிட்டுப் பார்த்தாள். உதடுகள் கோபத்தால் துடித்தன.
"பலவேசம் ஒன் வாயி அழுவாமப் போவாது. அருணாசலம் என்னைக் கூடப்பிறந்த தங்கச்சியா நினைக்கான்! நீரு ஒம்ம சித்தமவள நினைச்சீராமே அது மாதுரியில்ல."
பலவேசம், துடித்துக் கொண்டும், பல்லைக் கடித்துக் கொண்டும், அவளைத் திட்டுவதற்காக வாயைத் திறக்குமுன்னால், இரண்டு பேர் அவர் தோளைப் பிடித்து உலுக்கிக் கொண்டு, "ஒம்மாலத்தான்வே வினயே வந்தது. ஏன்வே நாக்குல நரம்பில்லாம பேசுறீரு?" என்று அதட்டினார்கள்.
உலகம்மை, அந்தச் சமயத்தைப் பயன்படுத்திக் கொள்பவள் போல் வேகமாக நடந்தாள். சற்றுத் தள்ளி நின்ற பெண்கள் கூட்டம் அவளைப் பரிதாபமாக பார்த்துவிட்டு, பின்பு தன்னையும் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டது. தொலைவில் போய்த் திரும்பிப் பார்த்தாள் உலகம்மை. பிறகு பொதுப்படையாகச் சொன்னாள்.
"என்னைப் பத்திக் கவலப்படாம ஒங்களப் பத்தி மட்டுமே கவலப்படுங்க. நான் மேல் ஜாதியில செத்து, கீழ் ஜாதியில பிழச்சிக்கிட்ட பொம்பிள!"
உலகம்மை, சேரியை நோக்கி வேகமாக நடந்தாள்.