எதுவும் சரியாக இருப்பதுபோல் தோன்றவில்லை. இந்நேரம், மேகங்கள் மழையைப் பொழிந்து மண் குளிர்ந்திருக்க வேண்டும். நீர்நிலைகள் எல்லாம் வறண்டு கிடக்கின்றன. கபினி காட்டின் உயிரினங்கள் எல்லாம் வெயிலில் வாடி, தாகத்துடன் திரிந்தன.
ஒருநாள், நிலைமை இன்னும் விசித்திரமானது. உயரமான மரங்களுக்குப் பின்னால், சூரியன் ஒளி வீசிக்கொண்டிருந்தது. ஆனால், ஏதோ ஒன்று குறைந்தது. ஜீப்புகளில் கானுலா வரும் மனித சுற்றுலாப் பயணிகள் எங்கே போனார்கள்? மழையோ வெயிலோ, எல்லா நாளும் வருவார்களே! சத்தமாக வண்டிகளை ஓட்டி தொந்தரவு செய்து திரிவார்கள்.
உயிரினங்களின் ஆர்வம் தீவிரமடைந்தது. நிச்சயமாக, ஏதாவது ஒரு பகுதிக்கு மனிதர்கள் வந்திருப்பார்கள் என்று நம்பின.
தேன்கரடிகள் தங்கள் நீள மூக்கால் மோப்பம் பிடித்துப் பார்த்தன. “அப்பா, இங்க இங்க… டீசல் வாசம்!” என்று குட்டித் தேன்கரடி கத்தியது. இதைக் கேட்டு மகனை நோக்கி நடந்து வந்த அப்பா கரடி, நன்றாக மோப்பம் பிடித்துப் பார்த்தது. “நன்றாக மோப்பம் பிடித்திருக்கிறாய் தங்கமே. ஆனால், இவை சமீபத்தியவை அல்ல. தொடர்ந்து தேடு” என்றது.
கபினியின் அனைத்துப் பகுதிகளிலும் உயிரினங்கள் தாங்களே கானுலாவைத் தொடங்கின - ஒரு மாபெரும் லானுகா. காணாமல் போன சுற்றுலாப் பயணிகளையும் கானுலா ஜீப்புகளையும் தேடிக் கிளம்பின. சுற்றுலாப் பயணிகளுக்குப் பிடித்த இடங்களில் தேட முடிவு செய்தன.
கபினி அணைக்கட்டின் நீர்த்தேக்கத்தில் தேடுவதற்கு சில யானைகளும் புள்ளிமான்களும் சென்றன. இங்கேதான் எங்காவது அவர்கள் இருப்பார்கள் என்று அவை கருதின. ஆனால், அங்கே எந்த ஜீப்பையும் பார்க்க முடியவில்லை.
காஜோல் என்னும் அழகான பெண்புலி, தன் இரு இளம் குட்டிகளை அழைத்துக்கொண்டு கோவில் குளத்தை நோக்கிச் சென்றது. ’நம்மைப் பார்ப்பதற்காக நிச்சயமாக அங்கே அவர்கள் காத்திருப்பார்கள்’ என்று அது நம்பியது. ஆனால் நீண்ட நேரம் காத்திருந்த பிறகு, தன் முயற்சியைக் கைவிட்டுத் திரும்பியது. அன்றைக்கு மனிதர்கள் வரவில்லை.
“கொண்டை ஊசி வளைவில் அவர்கள் நம் வருகைக்காகக் காத்திருப்பார்கள்” என்றது சுக்கி எனும் பெண்புலி. “சரி, அங்கே போய்ப் பார்ப்போம்” என்று தன் மூன்று இளம் குட்டிகளையும் அவற்றின் அண்ணனையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டது. ஆனால், உயரமான மின் கம்பங்கள் வரை நீண்டிருந்த அந்தப் பகுதி முழுவதும் அமைதி சூழ்ந்திருந்தது.
கபினி காடு முழுவதும் அனைத்து உயிரினங்களும் சுற்றிச்சுற்றித் தேடின. நீர்நிலைகள் அருகே தேடின. காட்டின் உயரமான பகுதிகளின் மேலேயும் ஆழமான பள்ளத்தாக்குகளின் கீழேயும் சென்று தேடின. மந்திகளும் குரங்குகளும் உயரமான மரங்களின் மேலிருந்து தொலைவில் உற்றுநோக்கின. பாம்புக் கழுகும் குடுமிக்கழுகும் மேகங்களுக்கு மேலே பறந்துபோய், நகரும் வாகனங்களைத் தேடின. ஆனால், ஜீப்புகளோ மனிதர்களோ தென்படவில்லை. கேமராக்களின் கிளிக், கிளிக், கிளிக்குகள் இல்லை. சூரிய ஒளியை பிரதிபலிக்கும் இரு கண்ணோக்கிகளையும் காணவில்லை. எதுவும் இல்லை.
அன்றிரவு கபினிக் காட்டின் உயிரினங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அடுத்த நாளும் அதற்கு அடுத்த நாளும் அப்படியே கழிந்தது. மனிதர்கள் சட்டென்று காணாமல் போய்விட்டார்கள்.
சில உயிரினங்கள் சிறிது காலத்துக்கு அமைதியை அனுபவித்து மகிழ்ந்தன. எல்லாம் நல்லதாயிற்று என்று நினைத்துக்கொண்டன. இப்போது அவை சுதந்திரமாக உலாவலாம். பாதையில் படுத்துக்கொள்ளலாம். இரைகொல்லிகள் திறந்தவெளிகளில் வேட்டையாடலாம். எல்லாரும் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம்.
ஆனால் விரைவிலேயே, ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு கதையைக் கூறத் தொடங்கின.
“என் குட்டிகள் ஓடியாடி விளையாட விரும்புகின்றன. அப்படி விளையாடும்போது சில நேரம் நான் கண்டுபிடிப்பதற்கு முன்னரே மனிதர்கள் அவற்றைப் பார்த்துவிடுவார்கள். மனிதர்கள் விரைவில் திரும்ப வருவார்கள் என்று நம்புவோம்” என்று தான் நினைத்ததைச் சொன்னது பெண் புலி நாமா.
அதை ஆமோதித்து அம்மா யானை பிளிறியது. “மனிதர்கள் சில நேரம் எரிச்சல் மூட்டுவார்கள். அதே நேரம், நாம் காடுகளைக் கடப்பதற்கான பாதைகளையும் அமைத்துத் தருகிறார்கள். அதனால் முட்களைக் கொண்ட உன்னிச்செடிகளை மிதிக்காமல் செல்ல முடிகிறது” என்றது.
“ஹஹ்! நானும்கூட சில நேரங்களில் அவர்களைத் தாக்குவதுபோல் நடிப்பேன்” என்று சிரித்த குட்டி யானை தம்பு, “ஆனால், அவர்கள் வராமல் சலிப்பாக இருக்கிறது” என்றது.
இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று கபினி காட்டு உயிரினங்கள் தீர்மானித்தன. பல ஆண்டுகளுக்குப் பிறகு, காட்டு சபை கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
நீண்ட தந்தங்கள் கொண்ட பெரிய முதிய ஆண் யானை போகேஸ்வரா பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அவைக் கூட்டத்துக்கு அனைத்து உயிரினங்களையும் வரவழைக்கச் சொல்லி மந்திகளுக்கு உத்தரவிட்டது. உடனே, மந்திகளின் கணக்கற்ற செருமல், கத்தல் ஒலிகளால் காடு நிறைந்தது. “நடக்கவுள்ள ஒரு முக்கியக் கூட்டத்திற்கு அனைவரும் வாருங்கள். எல்லோருடைய பாதுகாப்புக்கும் உத்தரவாதம் தரப்படுகிறது. இரைகொல்லிகள் உங்களைத் தாக்காது. அணையின் நீர்த்தேக்கப் பகுதிக்கு உடனே வாருங்கள்” என்று அறிவித்தன.
அனைத்து உயிரினங்களும் நீர்தேக்கத்துக்கு அருகிலிருந்த புல்வெளிக்கு வந்து சேர்ந்தன. யானைகள், புலிகள், சிறுத்தைகள், மான்கள், குரங்குகள், அணில்கள், காட்டுக்கோழிகள், கரடிகள், காட்டு மாடுகள், நீர்நாய்கள், முதலைகள். என்ன ஒரு கண்கொள்ளாக் காட்சி அது!
போகேஸ்வரா பிளிறியது. “நண்பர்களே, சில எதிரிகளே! நம் அனைவரையும் பாதிக்கின்ற ஒரு விசயத்திற்காக இன்று நாம் இங்கே கூடியிருக்கிறோம். மனிதர்கள் ஒரு பெரும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அருகிலுள்ள உயிரியல் பூங்காவில் வாழும் என்னுடைய தூரத்து உறவினர்கள் இதைப் பற்றித் தெரிவித்தார்கள். கோவிட்-19 என்று மனிதர்கள் அழைக்கும் நோய் மிகவும் ஆபத்தானது என்பதால் அவர்கள் வீடுகளுக்குள் ஒளிந்திருக்கிறார்கள். இந்நோய்க்கு முன்னர் எங்களைப் போல வாழ்ந்தார்கள்” என்று கூறி தன்னைச் சுற்றி நின்ற யானைகளைப் பார்த்தது. “முன்னர் அவர்கள் கூட்டமாக வாழ்ந்துவந்தார்கள். ஆனால், இப்போது அவர்கள் உன்னைப் போல் வாழ்கிறார்கள், சுக்கி” என்று அம்மா பெண்புலியை நோக்கிச் சொன்னது. பின்னர், “அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மட்டுமே இருக்கலாம். நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் காட்டுக்கு வராமல் இருக்கிறார்கள் போலிருக்கிறது. இதுவும் அன்பின் வெளிப்பாடுதானே? நம்மைப் பார்க்க இப்போதைக்கு அவர்கள் வருவார்கள் என்று தோன்றவில்லை” என்று கூறி முடித்தது.
“அப்படியானால், இப்போ நாம சுதந்திரமா சுற்றலாமா?” என்று தழும்பன் சிறுத்தை சீறியது. “ஏன்னா, அன்னைக்கு ஒரு நாள் ஒரு ஜீப் என்னை நசுக்கிவிடற மாதிரி உரசிக்கிட்டு போச்சு,” என்று நடுங்கிக்கொண்டே தன் அனுபவத்தைப் பகிர்ந்தது.
அப்போது டோயி என்கிற குட்டி மான் முன்னே வந்து, “ஆனால், எனக்கு மனிதர்களைப் பிடிக்கும். எப்போது என்னைப் பார்த்தாலும் புன்னகைப்பார்கள், கைகளை ஆட்டி மகிழ்வார்கள். அவர்கள் அருகில் இருக்கும்போது எந்தப் புலியும் எங்களை வேட்டையாடுவதில்லை,” என்று துணிச்சலாகக் கூறியது.
“எனக்கும் சுற்றுலாப் பயணிகளைப் பிடிக்கும். அவர்கள் என் அழகை மனதாரப் பாராட்டுவார்கள். நான் ஆடும்போது எப்படியெல்லாம் ஆர்வமாகப் படமெடுப்பார்கள் தெரியுமா?” என்று பாரா என்கிற மயில் அகவியது.
மந்திகள் பற்களை வெளியே காட்டிச் சிரித்தன. இருப்பதிலேயே பெரிய மந்தியான லங்கா, “மனிதர்களை நாங்கள் எளிதாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடுவோம். நாங்கள் குரல் கொடுத்தவுடன் எங்களைச் சுற்றிக் குழுமிவிடுவார்கள். நீளநீளமான லென்ஸுகள் கொண்ட கேமராக்களை எங்களை நோக்கித் திருப்புவார்கள். நான் அடிக்கடி போலியான எச்சரிக்கை ஒலிகளை எழுப்பி அவர்களைக் குழப்பிவிடுவேன். ஒரே வேடிக்கையாக இருக்கும்” என்றது.
“சரி, நேரடியாக விசயத்துக்கு வருவோம். மனிதர்களைப் பார்க்காமல் நம்மால் இருக்க முடியவில்லை” ஸ்பானர் என்கிற புலி அழுத்தமாகக் கூறியது. பெரும்பாலான உயிரினங்கள் தலையை ஆட்டி ஆமோதித்தன.
“என்னது? அவர்களைப் பார்க்காமல் இருக்க முடியலையா?” புதர்களுக்குள் இருந்து ஒரு ஏளனக் குரல் ஒலித்தது. நீல வானம் ஓர் திரைபோல் கவிந்திருக்க, கரியா என்கிற உலகப் புகழ்பெற்ற கருஞ்சிறுத்தை பளபளக்கும் நிழலைப் போல வெளியே வந்தது. “எல்லோரும் ஒரு நிமிடம் பொறுங்கள். அவர்களைப் பிரிந்து நான்தான் பெரிதும் வாடிக்கொண்டிருக்கிறேன். உலகெங்கும் இருந்து ஆறு ஆண்டுகளாக மக்கள் எனக்காக, எனக்காக மட்டுமே இந்தக் காட்டுக்கு வந்தார்கள். நான் சும்மா கொட்டாவி விட்டால் போதும். துப்பாக்கி ரவை சீறிப் பாய்வதுபோல், ஒளிப்படக் கருவிகள் படபடவென்று என் படங்களை சுட்டுத்தள்ளும். உங்களைப் பார்ப்பதெல்லாம்” என்று சொல்லி சுற்றியிருப்பவர்களை அலட்சியமாகப் பார்த்துவிட்டு, ”வெறும் கொசுறுதான். ஏனென்றால், இந்தக் காட்டில் அவர்கள் பார்ப்பதற்கு ஒரேயொரு கருஞ்சிறுத்தையாக நான் மட்டுமே இருக்கிறேன்” என்றது.
மற்ற உயிரினங்கள் கரியனை திரும்பிப் பார்த்தன. அது கீழே விழுந்துகிடந்த ஒரு மரத்தின் மீது தாவி ஏறி நின்றிருந்தது. ஒளிரும் மஞ்சள் நிறக் கண்களுடனும், சுருண்ட வாலுடனும் அது பார்க்க மிக அழகாகத்தான் இருந்தது. ஆனாலும், இவ்வளவு ஆணவம் தேவையில்லை. சில புலிகள் அதை வேடிக்கையாகப் பார்த்தன., சிறுத்தைகள் அப்படிப் பார்க்கவில்லை.
அப்போது, தழும்பன் சிறுத்தையின் பார்வையில் வெளிப்பட்ட கோபத்தைக் கவனிக்காமல், “சரி அவங்க எப்பத்தான் திரும்ப வருவாங்க? என்னைப் பார்க்க அவங்க ஏங்கவில்லையா?” என்று கரியா கேட்டது. பதிலாக, காட்டில் மயான அமைதி நிலவியது.
“அப்படியானால் மனித சுற்றுலாப் பயணிகள் நமக்குத் தீங்கு விளைவிப்பதில்லை என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம். சரி வாருங்கள், காட்டுக்கு அவர்கள் திரும்ப வரும்வரைக்கும் அவர்கள் பாதுகாப்பாக இருக்கப் பிரார்த்தனை செய்வோம். அவர்கள் வரும்வரை நாம் நமது கானுலாவைத் தொடர்வோம்” என்று பிளிறியது போகேஸ்வரா.
கபினி காட்டின் உயிரினங்கள் தங்கள் தலையைத் தாழ்த்தி வணங்கின. பெரிய யானைகள் முதல் சின்ன கீரிப்பிள்ளைக் குட்டிகள்வரை அனைத்து உயிரினங்களும் மனிதர்களின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்தன. காடு ஒருநிமிடம் சலனமின்றி இருந்தது.
அன்று கபினி காட்டின் உயிரினங்கள் ஏதோ மாயாஜாலம் நிகழ்த்திவிட்டன என்றே தோன்றுகிறது. நகரங்களிலும், சிற்றூர்களிலும் வாழ்ந்த மனிதர்களும் காடுகளுக்குச் செல்ல வேண்டுமென ஏங்கினார்கள். தங்கள் அன்பு உறவுகளின் நலனுக்காக பிரார்த்தனை செய்கையில், தாங்கள் பாதுகாக்க முயன்ற காட்டு உயிரினங்களுக்காகவும் வேண்டிக் கொண்டார்கள்.
ஒரு வழியாக, வைரஸுக்கு எதிராக அறிவியலாளர்கள் தடுப்பூசிகளைக் கண்டுபிடித்தார்கள்! பெருந்தொற்று குறைந்து, பொது முடக்கம் விலக்கிக்கொள்ளப்பட்டபோது, இயற்கை விரும்பிகள் கபினியைத் தேடி ஓடிவந்தார்கள்.
ஒரு நாள் காலை கானுலாவில் இருந்த சில உயிரினங்களுக்கு ஜீப்புகளின் இரைச்சல் சத்தம் கேட்டது. யானை மந்தை “ஹைய்யா” என்று பிளிறியதில் மனிதர்கள் காடுகளுக்குத் திரும்பவந்த செய்தி மொத்தக் காட்டுக்கும் அறிவிக்கப்பட்டது.
அன்று வந்த சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரும் வியப்பு காத்திருந்தது! புலிகள், கரடிகள், ஏன் எளிதில் முகம் காட்டிவிடாத கரியாவும்கூட ஜீப்புகளுக்கு அருகே வந்து நின்றன. அது, “திரும்ப வந்ததற்கு நன்றி! உங்களுக்கு எங்களைப் பிடிக்கும் என்பது தெரியும். நாங்களும் உங்களைப் பார்க்காமல் ஏங்கிப் போய்விட்டோம்,” என்று கூறுவதுபோல் இருந்தது.
இதோ, மனிதர்களின் கானுலா தொடங்கிவிட்டதால், உயிரினங்கள் தங்கள் லானுகாவை நிறுத்திக்கொண்டன.