என்ன காரணத்தாலோ முதலிலிருந்தே அவள் மேல் அவர் மனத்தில் ஒரு வெறுப்புத் தோன்றிப் படர்ந்து விட்டது. நாளுக்கு நாள் அந்த வெறுப்பு அதிகமாகியதே ஒழியக் குறையவில்லை. அந்த வெறுப்பின் காரணத்தையோ மூலத்தையோ அவர் ஆராய்ந்ததில்லை.
சமய சந்தர்ப்பங்களும் அவள் காண்பித்த திறமைகளும் கூட அந்த வெறுப்பைத் தளர்த்தவோ மாற்றி அமைக்கவே முடியவில்லை. அவளது அபரிதமான அழகையும் மிஞ்சிய வெறுப்பாயிருந்தது அது. ஒரு பிரபலமான தினசரியில், திரைப்படம், நாடகம், நாட்டியம் போன்ற நுண்ணிய கலைகளுக்கு விமர்சனம் எழுதும் 'ஆர்ட் க்ரிடிக்' அவர். அவருடைய விமர்சனங்களுக்கு ஒரு மரியாதை இருந்தது. அவர் இரண்டு வார்த்தைகள் புகழ்ந்து எழுத மாட்டாரா என்ற ஏக்கமும் கலைஞர்களிடையே இருந்து வந்தது. பெரும்பாலான கலைஞர்கள் அவரை அண்ணா என்றே பவ்யமாக அழைத்தனர்.
அதற்கு அவர் எழுதி வந்த தினசரியும் ஒரு காரணம். தேசீய அளவில் பரந்த செல்வாக்கும், சர்வ தேச மரியாதையும் உள்ளதாயிருந்தது அது. அவரும் மூத்த அநுபவசாலியாயிருந்தார்.
புதிதாக வந்த சுகுணகுமாரியின் மேல் மட்டும் அவர் ஏன் அத்தனை வெறுப்பைக் காண்பித்து வந்தார் என்பது பெரும் புதிராயிருந்தது. பலருக்கு அது விளங்கவே இல்லை. படிப்படியாக முன்னேறிச் சுகுணகுமாரி நாடகத்தில் நடித்த போது, "இவள் நடிப்பது நாடகக் கலைக்கே அவமானம் உண்டாக்கக் கூடியது" என்று எழுதினார் அவர்.
பின்பு அவள் நடனம் கற்று அரங்கேறியபோது, "காக்கை வலிப்பு வந்த மாதிரி மேடை மேல் உதறி நடுங்கிக் கை கால்களை விதிர் விதிர்ப்பது எல்லாம் நடனம் ஆகிவிடுவதில்லை" என்று சுடச்சுட வெளுத்துக் கட்டியிருந்தார்.
நாடக அனுபவம், நாட்டியத் தகுதியாகிய இரண்டும் இளமையும் வனப்பும் கவர்ச்சியும் நிறைந்த உடலழகும் அவளைச் சினிமாவில் நாயகியாக நடிக்க வாய்ப்பளித்த போது, "இன்றைய சினிமா உலகம் எந்தத் தீமையையும் எந்த மோசத்தையும் எந்தச் சுமார் ரகத்தையும் ஏற்க முடியும். அது இப்போது சுகுணகுமாரியையும் ஏற்றிருக்கிறது" என்று கடுமையாக எழுதினார் அவர்.
பிற இளம் விமர்சகர்கள் சிலரும், இளம் கலைஞர்களும், "எல்லாவற்றையும் கடுமையாகத் தாக்கி எழுதினால் மற்றவர்களுக்குத் தம்மேல் பயமும் மரியாதையும் இருக்கும் என்ற எண்ணத்தில்தான் அவர் தாக்கி எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்" என்று தங்களுக்குள் பேசிக் கொள்வது கூட உண்டு. அவர்கள் தம்மைப் பற்றி அப்படிப் பேசிக் கொள்வது அவருக்கும் தெரிந்துதான் இருந்தது. ஆனால் பெரும்பாலான இளம் பத்திரிகையாளர்கள் அவரை மதித்தனர். அவருக்கு அஞ்சினர்.
சில துணிச்சலான இளம் விமர்சகர்களும் கலைஞர்களும் அவருக்குக் 'கிழட்டுப் புலி' என்று கூட ஒரு பட்டப் பெயர் சூட்டியிருந்தார்கள். சமயா சமயங்களில் தமக்குத் தாமே நினைத்துப் பார்க்கும் போது கூட அந்தக் காரணம் பொய் அல்ல என்று அவருக்கே தோன்றியது. ஆனால் உள்ளூறச் சில சந்தேகங்களும் அவருக்கே உண்டு தான். தாமாகவே மற்றவர்களிடம் பேசும்போது சவடாலாக ஏதாவது சொல்லி வந்தார். தம்முடைய பெருமையையும் மரியாதையையும் உயர்த்திக் கொள்வதற்காகப் பிறருடைய பெருமையைக் குறைத்துச் சொல்லவும் அவர் தயங்கியதில்லை. அது ஒரு பழக்கமாகவே கூட ஆகியிருந்தது.
"இப்போ, புதுசா யாரோ ஒரு அழகான குட்டி, அவ பேரென்ன? சுகுணகுமாரியோ சகுணகுமாரியோ, யாரோ ஒருத்தி, அவ என்னை 'பர்ச்சேஸ்' பண்ணிடனுன்னு ப்ளாங் 'செக்' கொடுத்து ரகசியமா ஆளனுப்பினா, ஓய்! நானா மசிவேன்?" என்பார்.
"என்னைத் தனியா மகாபலிபுரம் 'கோல்டன் ஸாண்ட்ஸ் பீச் ஹோட்டலில் போய் 'வீக் எண்டு'க்குத் தங்கலாம்னு அவளே ஒரு தினுசாச் சிரிச்சுக்கிட்டே கூப்பிட்டாங்காணும்! அதுக்கு வேற ஆள் பாருடீன்னுட்டேன்" என்று இன்னொரு சமயம் கூறுவார்.
ஐம்பத்தேழு வயது நிறைந்து தலை பூரண சந்திரன் மாதிரி பளீரென்று வழுக்கையாகிப் போன 'ஆர்ட் கிரிட்டிக்' ஜம்புநாதனா இப்படிப் பேசுகிறார் என்று பலருக்கு நம்ப முடியாமல் கூட இருக்கும்.
எந்தச் சமயத்தில் எப்படி மனநிலை இருக்கிறதோ அப்படி மற்றவர்கள் அவர் வாயில் அரைபடுவார்கள். சிலர் அவருடைய வாய்க்குப் பயந்தே அவரிடம் மரியாதையாக நடப்பது போல் நடித்தார்கள். பலர் நிஜமாகவே மதித்ததும் உண்டு.
ஆனால் உண்மையில் இளைஞர்கள் அவரைப் பற்றிக் கோபமாக இருந்தார்கள். சுகுணகுமாரியை அவர் கறுப்பா, சிவப்பா என்று கூட நேரில் பார்த்ததில்லை. படங்களில் பார்த்தபோது மிக மிக அழகாயிருந்தாள். அபரிமிதமான அழகுள்ளவர்கள் மேலெல்லாம் அவருக்கு இனம் புரியாததொரு புகைச்சல் உண்டு. காரணம் அவர் குரூபி. தெற்றுப் பல். முகம் நிறைய அம்மை வடு. ஒரு கண் கொஞ்சம் பூ விழுந்தாற் போல் மாறு கண்ணாகத் தெரியும்.
தம் அழகினால் பிறரைக் கவர்ந்து மயக்க முடியாத காரணத்தால் அவருக்குள் அடங்கிப் போன தாகங்கள், தாபங்கள் எல்லாம் பேச்சுக்களாகவும் வம்புகளாகவும் வாயிலிருந்து புறப்பட்டன. யாரை அவர் அதிகமாகத் தாக்குகிறாரோ அவர்களைப் பற்றியே நினைத்து நினைத்து அவர் உருகுகிறார் என்பது பிறருக்குத் தெரியாவிட்டாலும் அவருக்கே தெரியும். அவர் அந்தரங்கத்துக்கு அது மிக மிக நன்றாகத் தெரியும்.
கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்விக்கும் கனவுக்கன்னியான சுகுணகுமாரியை அவர் தாக்கி விமர்சித்தாலும் உள்ளூற அவர் மனம் அவளுக்காக ஏங்கியது. அவளையே நினைத்தது. 'அவள் என்னைச் சரிகட்டுவதற்காக மகாபலிபுரத்தில் தனியே அந்தரங்கமாகத் தங்க அழைத்துப் போவதாகக் கூறினாள்' என்று கற்பித்து மகிழ்ந்து அதைப் பிறரிடமும் வாயரட்டை அடித்தார் அவர்.
இனிய அவரது அடிமன ஓட்டம் இப்படித்தான் இருந்தது. ஆனால் பிறர் என்னவோ அவரைப் பற்றி அப்படி நினைக்கவே இல்லை. காரணம் அவரது வயதுதான்; அவரது முதிர்ச்சிதான்.
அவரது முழுப்பெயர் வி.வி. ஜம்புநாதன். பத்திரிகை உலகில் வி.வி.ஜே. என்று இனிஷியல் எழுத்துக்களைச் சொன்னாலே போதும். அவ்வளவு தூரம் அவர் பிரபலமாகியிருந்தார். எல்லாருக்கும் அவரைத் தெரிந்திருந்தது.
"வி.வி.ஜே.யை நேரே பார்த்தால் சுகுணகுமாரி அப்படியே கதறி அழுதுவிடப் போகிறாள்" என்று சகப் பத்திரிகையின் விமர்சகர்கள் அவரிடம் கிண்டலாகக் கூறுவதும் உண்டு.
அதனால் அவருக்கும் உள் மனத்தில் ஒரு பிரமை. என்றாவது எங்காவது சுகுணகுமாரியைச் சந்திக்க நேருவது போலவும், அவள் தன் முன் கதறியழுது, "நான் உங்களுக்கு ஒரு கெடுதலும் பண்ணலீங்களே! ஏன் இப்படி என்னைக் கரிச்சு கொட்டறீங்க?" என்று மன்றாடுவது போலவும் கற்பனை செய்தே மகிழத் தொடங்கிவிட்டார்.
ஆனால் அந்தக் கற்பனை நீண்ட காலம் நீடிக்கவில்லை. சில மாதங்கள் கழித்துச் சினிமா உலகுடன் தொடர்பு உள்ள வி.வி.ஜே.க்குப் பிடித்தமான ஒரு சங்கீத வித்துவான் காலமானார். வி.வி.ஜே.யும் வேறு சில பத்திரிகையாளர்களும் அந்த வித்துவானின் வீடு சென்று அவருடைய மனைவியிடம் துக்கம் விசாரித்துக் கொண்டிருந்த போது, அந்த இழவு வீட்டிலும் முண்டியடித்துக் கொண்டு நெருக்கும் ஒரு கூட்டம் புடை சூழ சுகுணகுமாரியும் அங்கே துக்கம் கேட்க வந்து சேர்ந்தாள்.
அன்று அப்போது வி.வி.ஜே.யை அவள் கண்டு கொள்ளவே இல்லை. அவள் சரியாகப் பார்க்கவில்லையோ என்ற தயக்கத்தில் உடன் இருந்த ஓர் இளம் பத்திரிகையாளன், "சுகுண அம்மா! சாரைத் தெரியுமில்லே? ஸார் தான் பிரபல..."
"ஸார் யாரு? தெரியாதுங்களே!"
"ஸார் பிரபல விமர்சகர். வி.வி.ஜே. இவர் தான்!"
"....."
"....விலே ஆர்ட் கிர்ட்டிக்கா இருக்கார்."
"அப்படிங்களா? எனக்குத் தமிழ் பேச வரமாதிரி படிக்க வராது. இங்கிலீஷும் படிக்கிற பழக்கம் வரலே. தெலுங்கு மட்டும் எழுத்துக் கூட்டிப் படிப்பேன்."
"....."
"ரொம்ப வணக்கமுங்க."
உண்மையிலேயே பணிவாகத்தான் அவரை அவள் வணங்கினாள்.
படத்தில் பார்த்ததை விட நேரில் அதிரூப சுந்தரியாக விளங்கினாள் அவள்.
அதனால் ஏற்பட்ட மயக்கத்தை விட அவள் தம் விமர்சனங்களையோ தம்மையோ பற்றி அறிந்திராதவள் என்ற அதிர்ச்சியில் அயர்ந்தே போனார் வி.வி.ஜே.
அவளைப் பற்றித் துணிந்து தாம் தம்மைச் சுற்றியிருக்கும் இளம் பத்திரிகையாளர்களிடம் அடித்து வைத்திருந்த 'டூப்'களை எல்லாம் அவர்கள் முன்னாலேயே தற்செயலாகப் பொய்யாக்கிவிட்டாளே என்ற எரிச்சலும் கையாலாகாத் தனமானதொரு வெறுப்பும் மனத்தில் மூண்டன, அப்போது.
அந்த அழகின் முன் அவர் மனமும், அவரும் குன்றிப் போவதைத் தவிர வேறு வழியில்லை. பத்திரிகை உலகில் அவரைப் போல் ஜாம்பவானாக இருக்கு ஓர் 'ஆர்ட் கிரிட்டிக்' இருப்பதே அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை!
அவள் 'ப்ளாங்க்' செக் அனுப்பித் தம்மைப் 'பர்ச்சேஸ்' செய்ய முடியாதது பற்றியும், மகாபலிபுரத்துக்குத் தனியே உடன் வரக் கூப்பிட்டது பற்றியும் தாம் கற்பனை செய்து அளந்த கதைகளுக்காக வெட்கப்பட்டு நண்பர்கள் முன்னால் அந்தக் கணமே தாம் செத்துவிட்டது போல உணர்ந்தார் அவர்.
ஒரு சௌந்தரியத்தை நிந்தாஸ்துதி செய்தே வேறொரு விதமாக வழிபட்டு வந்திருக்கும் பலவீனத்தின் விளைவாகக் கட்டிவிட்டு மகிழ்ந்த கதைகள் அவரையே இப்போது கூனிக் குறுகிக் கூச வைத்தன. அவரையே திரும்ப வந்து தாக்கிப் புடைத்தன. 'விமர்சகர் என்பவன் நடப்பது எப்படி என்று கற்றுக் கொடுக்க முயல்கிற ஒரு நொண்டி' என்று யாரோ எங்கோ கூறியிருப்பது வி.வி.ஜே.க்கு நினைவு வந்தது இப்போது.
தமது வெறுப்பின் மறுபக்கச் சுவர் அப்போது மடமடவென்று சரிவதை அக்கணத்தில் அவரே உணர்ந்தார்.
யாருடைய மறைவுக்கோ துக்கம் கேட்க வந்த இந்த இடத்தில் தமக்குத் தாமே அந்தரங்கமாகத் துக்கம் கேட்டுக் கொண்டு உள்ளூற அழுது ஒப்பாரி வைக்க வேண்டும் போலிருந்தது அவருக்கு. ஆனால் வீம்பும் ஜம்பமும் அவரை அப்படி அழவிடாமல் இப்போதைக்குத் தடுத்துக் காப்பாற்றி வைத்தன.