oruvelai

ஒருவேளை…

ஷ்யாமுக்குக் காலையில் எழுந்து பள்ளிக்குச் செல்வதே பிடிக்காது. ஒருநாள், அவன் ஒரு கற்பனை உலகில் மூழ்குகிறான், அதன்மூலம் பள்ளியையும் வீட்டையும் ரொம்ப ஜாலியாக மாற்றிவிடுகிறான்!

- N. Chokkan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

என் பேர் ஷ்யாம். எனக்கு வயசு பத்து!

நான் கொஞ்சம் ஒல்லி. ஆனா தைரியம் அதிகம்!

ஸ்கூலுக்குப் போறதுன்னாலே எனக்குப் பிடிக்காது.

தூக்கத்தை விட்டுட்டு அங்கே போகணுமா? நடக்காது!

பல் தேய்க்கப் போறேன், ஆனா கண் ரெண்டும் சொக்குது,

அம்மா அவசரமா தோசை சுடற சத்தம் கேக்குது!

மெதுவா, நான் கற்பனையில மூழ்கறேன்.

விதவிதமாக் கனவு கண்டு மகிழறேன்!

ஒருவேளை, என் கழுத்து பத்து மடங்கு நீளமா இருந்தா எப்படியிருக்கும்?

இங்கே படுக்கையில பாதி உடம்பு, அங்கே வகுப்புல பாதி உடம்பு! அது ரொம்ப ஜாலியாயிருக்கும்!

ஒருவேளை, என் கால் ரெண்டு மரம்போல உயரமாகிட்டா?

என் பள்ளிக் கட்டடம் கூட என்னைவிடக் குட்டையாகிட்டா!

ஒருவேளை, என் கைகள் ரொம்பப் பலமாகிட்டா என்ன செய்வேன்?

அம்மாவை அப்படியே தூக்கிட்டுப் போவேன்!

ஒருவேளை, என் பற்களால எதையும் கடிக்க முடிஞ்சா நல்லாயிருக்குமே!

நான் பார்க்கறதையெல்லாம் தின்னு தீர்க்கலாமே!

ஒருவேளை, என் வயிறு பெரிய பந்தாக மாறினா என்ன ஆகும்?

நண்பர்களெல்லாம் என்மேலே குதிச்சி விளையாடமுடியும்!

ஒருவேளை, எனக்குப் பெரிய காது முளைக்குமா?

பக்கத்துல, தூரத்துல எல்லாரும் பேசறதெல்லாம் எனக்குக் கேட்குமா?

ஒருவேளை…. நான் யோசிக்கும்போதே அம்மா கத்துறாங்க,

”ஷ்யாம், இன்னும் ரெடியாகலையா? என்ன பண்றே?” என்று கூப்பிடுறாங்க.

நான் இன்னும் கையில பிரஷ்ஷோட நிக்குறேன்!

என்னோட ரகசிய உலகத்தை நினைச்சு மனசுக்குள்ளே சிரிக்குறேன்!